காவிமயமாகும் சி.பி.எம்.
தமிழ்நாட்டில் இருக்கும் சி.பி.எம். அணியினர் இனிமேல் இருமுடி கட்டிக் கொண்டு ""சாமியே சரணம் அய்யப்பா'' என கோசமிட்டபடியே சபரிமலை ஏறலாம். செய்வினை, பில்லிசூனியம் வைப்பதற்கென்றும் குறி சொல்வதற்கென்றும் தனிப்பிரிவை கட்சியே இனி அமைக்கலாம். எல்லாவற்றிற்கும் ""கேரளத்தைப் பார்'' என நமக்கு வழிகாட்டும் இவர்களது கேரள சி.பி.எம். கட்சி காட்டும் பாதை அப்படித்தான் உள்ளது.
சென்ற டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று சபரிமலையில் தேவசம் போர்டால் கட்டப்பட்ட மருத்துவமனையைத் திறந்து வைக்கச் சென்ற கேரள முதல்வர் அச்சுதானந்தன் 6 கி.மீ. வரை பாதயாத்திரையாகவே நடந்து மலை ஏறியுள்ளார்.
கால்நடையாக நடக்கும் பக்தர்களின் சிரமத்தை அறிந்து கொள்ளத்தான் "காம்ரேட்' நடந்து சென்றதாக இச்செயலை நியாயப்படுத்துகின்றனர். அவருக்கு அப்படியே தீக்குழி இறங்குவதன் வேதனையையும், வேப்பிலை கட்டி கையில் தீச்சட்டி எடுப்பதன் மகிமையையும் அறிந்து கொள்ளக் கோரி யாராவது ஆலோசனை சொன்னால் பொருத்தமாயிருக்கும். எப்படியும் அடுத்த ""பொலிட் பீரோ'' கூடும் முன்பே செய்து முடித்து விடுவார்.
மருத்துவமனையைத் திறக்கத்தான் சென்றார் என்றால், அதனை ஒரு ரிப்பன் வெட்டியே செய்திருக்க முடியும். ஆனாலும் ""கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை'' எனப் பாடாத குறையாக நடந்த தோழர், கேரள வகைக் குத்துவிளக்கை ஆன்மீக முறைப்படி ஏற்றிவைத்து, அய்யப்பன் கோவிலுக்கு வந்த முதல் "கம்யூனிஸ்ட்' தலைவராகி இருக்கிறார்.
அங்குள்ள அய்யப்பன் கோவிலில் வெடி வெடித்தும் வழிபட்டிருக்கிறார் "தோழர் அச்சு சுவாமி'. இவரை இனி "தோழர்' என்று அழைப்பதா, "குருசாமி தோழர்' என்று அழைப்பதா என்று சி.பி.எம்.காரர்கள் விவாதித்துக் கொண்டுள்ளார்களாம்!
சிறு குழந்தைகளைப் பார்ப்பன முறைப்படி பள்ளிக்கூடங்களில் சரஸ்வதி பூசை அன்று சேர்க்கும்போது, மந்திரங்கள் ஓதி குழந்தையின் நாக்கில் எழுதிடும் "அட்சர' பூசைச் சடங்கையும் ஏற்கெனவே நடத்தியவர்தான் அச்சுதானந்தன்.
இவர் மட்டும் என்றில்லை. இவருக்கு எதிராக செயல்படும் பினாரயி விஜயன் கோஷ்டியும் மூடநம்பிக்கையில் மூழ்கி முத்தெடுப்பவர்கள்தான். சென்ற ஆண்டு விஜயனின் குடும்பத்தினர் அவரது மகன் தலைமையில் இரகசியமாக "சத்ரு சம்கார' பூசை ஒன்றை அச்சுதானந்தனுக்கு எதிராக நடத்தி இருக்கின்றனர். தனக்கு வேண்டாத ஒருவனை இப்பூசை மூலம் சாகடித்து விட முடியும் என்ற பார்ப்பன நம்பிக்கை கேரளத்தில் நிலவுகிறது. அதற்காகத்தான் இந்த "சிவப்புப் பூசை'!
அச்சுதானந்த சுவாமியின் குருசாமியான மறைந்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாடோ, பழனிக்கு பாதயாத்திரை வந்தவர்தான். சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்ட முன்னணியினர் பலரும் பூணூல் பூசை நடத்தி பார்ப்பனியத்திற்கு பாதபூசை செய்பவர்கள்தான்.
கேரளத்தில் பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை ஓட்டுக்காக இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக சி.பி.எம். இளைஞர் அமைப்பினர் களத்தில் இறங்கித் திரும்பித் தாக்கிடும் அளவிற்கு செயல்பட்டிருக்கின்றனர். இன்று நிலைமை மாறி இருக்கின்றது. இன்றோ இந்து மதவெறியுடன் அனுசரித்துப் போகின்றது கட்சியின் தலைமை. அதனால்தான் இன்றைக்கு வெளிப்படையாகவே அச்சுதானந்தன் தனது பக்தியை ஊரறியச் செய்கிறார்.
சபரிமலை தந்திரி கண்டரேரு மோகனருவின் காமவெறிக் களியாட்டங்கள் புழுத்து நாறியபோதும் அவர் சம்பந்தப்பட்ட வழக்குகளை அப்படியே அமுக்கி விட்டது போலி கம்யூனிஸ்ட் அரசு. அவ்வளவு பக்தி! இப்போது பக்தி முற்றிப்போய், பக்தர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாதென்று, சபரிமலைக் கோவில் அமைந்திருக்கும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மண்டல பூசை நடைபெறும் இரண்டு மாதங்களுக்கு எவ்வித ஆர்ப்பாட்டமோ அரசியல் இயக்கங்களோ நடத்தமாட்டோம் என்று பா.ஜ.க.; காங்கிரசுக் கட்சியுடன் சேர்ந்து சி.பி.ஐ., சி.பி.எம். கட்சியினரும் மாவட்ட ஆட்சியரிடம் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து அதனை நடைமுறைப்படுத்தியும் உள்ளனர்.
மக்கள் போராட்டங்கள் அய்யப்பனுக்குச் சரணம். கட்சியோ தரகு முதலாளிகளுக்குச் சரணம். நல்ல முன்னேற்றம்தான்!
No comments:
Post a Comment