போராட்டப் பாதையில் வாகன ஓட்டுநர்கள்
மாணவர்களிடம் பல லட்ச ரூபாய்களைக் கறந்து கல்வி வியாபாரம் நடத்தும் ஜேப்பியார், எஸ்.ஆர்.எம். மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளின் முதலாளி பச்சைமுத்து, ஓம்சக்தி டிராவல்ஸ் முதலாளி சரவணன் ஆகியோரின் சட்டவிரோத நடவடிக்கைகளால் இவர்களது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் வாகன ஓட்டுநர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தி வரும் இம்முதலாளிகள், சட்டப்படி தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய சலுகைகள் உரிமைகள் அனைத்தையும் மறுத்துக் கொக்கரிக்கிறார்கள்.
சேமநல நிதியை தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து அதை அரசுக்குச் செலுத்தாமல் கொள்ளையடிப்பது, தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவ வசதிகளைச் செய்துதர மறுப்பது, சட்டப்படி போனசு தராமல் ஏய்ப்பது, 8 மணி நேரத்திற்குப் பதிலாக 1012 மணி நேரம் கட்டாயமாக வேலை வாங்குவது, கூடுதல் உழைப்பு நேரத்திற்கேற்ப கூடுதல் சம்பளம் தர மறுப்பது என இம்முதலாளிகளின் அட்டூழியங்கள் கேள்விமுறையின்றித் தொடர்கின்றன. குறிப்பாக, இந்நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக ""புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்க''த்தைத் தொடங்கிப் போராடியதும், ஆத்திரமடைந்த இம்முதலாளிகள் பழிவாங்குதலையும் அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
தொழிற்சங்கம் தொடங்கியதற்காக, வாகன ஓட்டுநர்களுக்குச் சட்டப்படி உணவு தருவதை ஜேப்பியார் கல்லூரி நிர்வாகம் நிறுத்திவிட்டது. ஜேப்பியார் ஸ்டீல் நிறுவனம் 30 தொழிலாளர்களைச் சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்துள்ளது. எஸ்.ஆர்.எம். கல்லூரி நிர்வாகமோ சங்க நிர்வாகிகள் அனைவரையும் தனது கல்லூரியே இல்லாத உ.பி. மாநிலத்துக்குத் தூக்கியடித்துள்ளது. தொழிற்சங்கத்தைக் கலைத்து விடுமாறு இந்நிறுவனங்களின் தொழிலாளர்கள் மிரட்டப்படுவதோடு, சித்திரவதை செய்யப்படுகிறார்கள். போலீசோ, இம்முதலாளிகள் விட்டெறியும் எலும்புத் துண்டுகளுக்கு விசுவாசமாக வாலாட்டுகிறது.
இம்முதலாளிகளின் சட்டவிரோத அடக்குமுறைகளுக்கும், பழிவாங்குதலுக்கும் எதிராகக் குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கடந்த 25.11.07 அன்று சென்னை சைதை பனகல் மாளிகை அருகே, பொதுச் செயலர் வெற்றிவேல் செழியன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். சட்டவிரோதக் கொள்ளையர்களான இம்முதலாளிகளைக் கைது செய்து தண்டிக்கக் கோரியும், சட்டப்படி தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்டக்கோரியும் செங்கொடி ஏந்தி 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தோடு அணிதிரண்டு நடத்திய இந்த எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில் சங்க முன்னோடிகளும் தோழமை அமைப்பின் பிரதிநிதிகளும் கண்டன உரையாற்றினர். கல்வி வள்ளல்களாகவும் கனதனவான்களாகவும் உலாவரும் இக்கொடிய முதலாளிகளின் முகத்திரையைக் கிழித்து, வர்க்க உணர்வோடு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், உழைக்கும் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
— பு.ஜ. செய்தியாளர்கள்
No comments:
Post a Comment