தமிழ் அரங்கம்

Sunday, April 13, 2008

ஜே.வி.பியை பிளந்த அரசியல் எது?

ஜே.வி.பியை பிளந்த அரசியல் எது?


பி.இரயாகரன்
13.04.2008

மார்க்சியம், புரட்சி பற்றிப் பேசிய ஒரு இனவாதக் கட்சியில் ஒரு பிளவு. இந்தப் பிளவுக்கான அரசியல் பின்னணி என்ன?

இந்த பிளவோ புரட்சி, மார்க்சியம், ஜனநாயக் கோரிக்கையை முன்னெடுப்பது தொடர்பானதல்ல. மாறாக பேரினவாத அரசியலை எந்த வகையில் முன்னெடுப்பது என்பது தொடர்பான முரண்பாடே, பிளவாகியது. இதில் தனிநபர் அதிகாரம், தலைமைத்துவம் போன்ற பல்வேறு கூறுகளும் பக்கபலமாகவுள்ளது.

இன்று இலங்கையில் அனைத்துமே இனவாத எல்லைக்குள் சிந்திப்பதும், செயல்படுவதும், என்ற எல்லைக்குள் தான், அரங்கேறுகின்றது. இதற்கு வெளியில் அரசியல் என்பது மறுதலிக்கப்படுகின்றது. அதைப் புலி என்றும் அல்லது பேரினவாதம் என்றும் உரித்தாக்கி, அதில் ஒன்றை அரசியல் ரீதியாக ஆதரிக்கின்றனர். இது தான் தமிழ் சிங்கள வேறுபாடற்ற, பொது இனவாத அரசியல் தளமாக உள்ளது.

மார்க்சியம், புரட்சி என்று வாய் சவடால் அடிக்கின்ற ஜே.வி.பி, சிங்கள பேரினவாதத்தின் நலன்களுடன் பின்னிப்பிணைந்ததாகவே இயங்கியது, இயங்குகின்றது. அவர்களின் வர்க்கப் புரட்சி என்பது, சிவப்புக் கொடி, தலைவர்களின் படங்கள், புரட்சிகர வார்த்தைகள் என்ற எல்லைக்கு அப்பால் எதுவும் கிடையாது. இந்த பின்னணியில் அவர்கள் வெளிப்படுத்தி நிற்பது, பச்சை இனவாதம் தான்.

எப்படிப் புலிகளோ, அப்படித் தான் பேரினவாத அரசும். ஆனால் இரண்டையும் வேறுவிதமாக அவர்கள் அணுகினர். பேரினவாதத்தை ஆதரித்ததுடன், அந்த பேரினவாதத்தை பலப்படுத்திய அரசியலைத் தான், ஜே.வி.பி புரட்சியாக நடத்தியது.

ஒரு நாட்டில் வர்க்கப்புரட்;சி என்பது என்ன? பெரும்பான்மை மக்களை புரட்சிக்கு தயார்படுத்தி, அவர்களை தலைமை தாங்குவது தான் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கடமையாகும். இந்த வகையில் வேறுபட்ட சமூகப்பிரிவுகளின், வர்க்கப்பிரிவுகளின் ஜனநாயக கோரிக்கையை ஏற்பது முதல் அதற்காக போராடுவதும், புரட்சிக்கான முதல் நிபந்தனையாகும். பரந்துபட்ட மக்களின் ஜனநாயக கோரிக்கைக்கு, தலைமை தாங்குவதில் இருந்து, இது தொடங்குகின்றது. இதை ஜே.வி.பி தொடர்ச்சியாக நிராகரித்து வந்துள்ளது. மாறாக ஜனநாயக கோரிக்கைக்கு எதிராகவே, எப்போதும் இருந்து வந்துள்ளது. யாருக்கு எதிராக இந்த கோரிக்கை எழுந்ததோ, அவர்களை ஜே.வி.பியின் அரசியல் ஆதரித்து வந்தது. இப்படிப் பல.

தமிழ்மக்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டும், ஒடுக்கப்படுகின்ற இன்றைய நிலைவரை, இதற்கு எதிராக ஜே.வி.பி போராடியது கிடையாது. மாறாக தமிழ் மக்களை ஒடுக்குபவனுக்கு, அரசியல் ரீதியாக உதவியது அல்லது அதை மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரித்தது. இதில் புலிக்கும், ஜே.வி.பிக்கும் அடிப்படையில் வேறுபாடு கிடையாது. இன்றைய மகிந்தவின் சர்வாதிகார இராணுவ அரசை, ஆட்சியில் கொண்டு வந்தவர்களும் இந்த இருவரும் தான்.

பேரினவாதத்துக்கு உதவுவதை, புலிப் பாசிசத்;தை ஒழித்துக்கட்டுவதன் பெயரில் நியாயப்படுத்தியே ஜே.வி.பி அரசியல் செய்தனர், செய்கின்றனர். இந்தவகையில் தான், சிங்கள பேரினவாத கட்சியான, சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் உடன்பாட்டுக்கு வந்தனர். தமிழ் விரோத உணர்வுடன், ஒரு நீண்ட தேன் நிலவையே அவர்களுடன் நடத்தினர், நடத்துகின்றனர். அவர்களின் ஆட்சியை நிறுவ உதவியவர்கள், இதன் மூலம் அவர்கள் தமிழ் மக்கள் மேல் நடத்துகின்ற யுத்தத்துக்கு பக்கபலமாகவும் துணையாகவும் நின்றனர், நிற்கின்றனர். இப்படித் தான் ஜே.வி.பியின் இனவாத அரசியல், மேலும் நுட்பமாக சீரழியத் தொடங்கியது.

ஒரு இனவாதக் கட்சி கடுமையான இனவெறுப்பை வெளிப்படையாக கூட கக்காத அரசியல் சூழலில், ஜே.வி.பி அதை ஒங்கி ஒலித்தது. அனைத்தையும் புலிப் பாசிசத்தின் பெயரால், தமிழ் மக்களுக்கு எதிராகவே கையாண்டனர். இதுதான் சமகாலத்தில், ஜே.வி.பியின் ஒரேயொரு அரசியலாகியது.

சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய தொடர்ச்சியான இனவொடுக்கு முறைக்கு, எதிரான போராட்டம் நியாயமானது. இந்த நியாயத்தை ஏற்க மறுத்தது ஜே.வி.பி. பின் அந்த மக்களுக்காக அவர்கள் போராடுவது எப்படி? தமிழ்மக்கள் தாமே தான், இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதைத் தவிர வேறு வழி கிடையாது. இது பாசிச புலியை ஆதரிப்பதல்ல. ஜே.வி.பி என்ன செய்தது? தமிழ் மக்களை ஒடுக்குவதையே, அரசியல் ரீதியாக ஆதரித்த வரலாறு, நீண்டு கிடக்கின்றது. இதற்கு எதிராகப் போராடியது கிடையாது. இப்படிப்பட்டவர்கள் வர்க்கப் போராட்டத்தையோ, மார்க்சியத்தையோ நினைத்துக் கூட பார்க்க முடியாது.

தமிழ்மக்களின் மேலான ஒடுக்குமுறையைக் களைவதற்கும், தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை அங்கீகரிப்பதற்கும் மறுக்கின்ற எந்த இயக்கமும், பேரினவாதத் தன்மை கொண்டதுதான். சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறைகளை இனம்கண்டு, அதற்கு அரசியல் ரீதியாக தீர்வை வைக்கவும், இதற்கு அரசியல் ரீதியாக தலைமை தாங்கி போராடவும் மறுக்கின்ற யாரும், அடிப்படையில் அரசியல் நேர்மை அற்றவர்கள்.

இலங்கையை இனவாத புதைகுழியில் அழித்துக்கொண்டு இருக்கின்ற இனவாதிகளின் அடக்கு முறைகளுக்கு எதிராக, ஜே.வி.பி ஒரு துரும்பைக் கூட எடுத்து போட்டது கிடையாது. மாறாக தமிழ் மக்களுக்கு எதிராக, புலிகளின் பெயரில் இனவாதக் கூத்தாடினர், கூத்தாடுகின்றனர்.

தமிழ் மக்களின் நியாயமான போராட்டமும் அதன் ஜனநாயக கோரிக்கையும், புலிகளின் கோரிக்கையில் இருந்து வேறானது. இந்த வேறுபாட்டையே அங்கீகரிக்க மறுத்தனர் ஜே.வி.பி. தமிழ் மக்களின் அனைத்து நியாயமான கோரிக்கையையும் மறுத்து, அதைப் புலியாக பார்ப்பதே ஜே.வி.பியின் அரசியலாகியது. புலிகளின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி மவுனித்துப் போன மக்களின் மௌனத்தை, தமது அரசியலாக்குவதே ஜே.வி.பியின் இனவாத அரசியல் கபடத்தனமாக உள்ளது.

இப்படி இனவாதிகளாகிவிட்ட ஜே.வி.பி அரசியல் என்பது, தீவிரமான இனவிரோத அரசின் நிலையால் இன்று தடுமாறுகின்றது. அமைதி, சமாதானம் என்ற பெயரில், புலிகளுடன் அரசு கொண்டிருந்த உறவை எதிர்த்து, தீவிர இனவாத நிலையெடுத்தது ஜே.வி.பி. அரசு யுத்தம் மூலம் தீர்வு என்ற நிலையெடுத்த போது, ஜே.வி.பி அரசியல் ரீதியாக தடுமாறி, சிதைந்து வருகின்றது.

இந்த சீரழிவு தான், இது தான் பிளவின் மையம்;. தீவிர இனவாத நிலையைக்கொண்டு அரசியல் சதி மூலம் புரட்சி செய்ய எண்ணிய ஜே.வி.பியின் அரசியல் தளத்தை, சிங்கள பேரினவாத அரசு மீள சுவீகரித்துள்ளது. புலிகளோ திணறுகின்றனர். இதனால் அமைதி, சமாதானம், பேச்சுவார்த்தை என்ற அரசியல் தளம், ஆட்டம் கண்டு நிற்கின்றது.

இதை ஆதரித்த மேற்கத்தைய நிலைப்பாடுகளையே, ஏகாதிபத்தியம் என்ற ஜே.வி.பி நிலைப்பாட்டையும் அரசு ஏற்று அதை அமுல்படுத்தியுள்ளது. யுத்தத்தை ஆதரிக்கின்ற, மேற்கு அல்லாத தரப்பின் ஆதரவையும், அனுதாபத்தையும் பெற்று, போலியான தேசியத்தையும் தன் பின்னால் உருவாக்கியுள்ளது. ஜே.வி.பியின் போலித் தேசியம், அரசின் தேசியமாகியது. இப்படி ஜே.வி.பியின் கோரிக்கைகன், அரசியல் வழிகள், இன்று அரசின் வழிகளாகியது.

ஜே.வி.பியோ இதனால் அரசியல் நெருக்கடியில் சிக்கியது. ஜே.வி.பி செய்த அரசியல், அரசின் நடைமுறை அரசியலாகியது. யுத்தம் மூலம் புலியை தோற்கடித்தல் என்ற ஜே.வி.பி அரசியல், அரசின் மைய அரசியலாகிவிட்டது. இதன் மூலம் தேசியவாதம், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற போலியான ஜே.வி.பி விம்பத்தையே, அரசு பிரதிபலித்து நிற்கின்றது.

இப்படி புரட்சியை போலியாக்கி அதை இனவாத சேற்றில் புரட்சியாக்கிய ஜே.வி.பி, அந்த சேற்றில் புதைவதைத் தவிர மாற்று வழி அதற்கில்லை.

இதனால் தீவிர பிளவு உருவாகியது. தீவிர இனவாத வலதுசாரிய நிலை எடுக்கும் விமல்வீரசிங்கவும், மிதவாத இனவாத வலதுசாரிய நிலை எடுக்கும் சோமவன்ச பிரிவின் பிளவும், தத்தம் இனவாத அரசியல் இருப்பு சார்ந்து எழுந்ததே. இந்தப் பிளவு புரட்சி, மார்க்சியம், ஜனநாயகக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் ஏற்பட்டதல்ல. மாறாக இதற்கு எதிராக, நடந்த ஒரு உட்பிளவு.

புலியை ஒழிக்கும் இனவாத அரசியலை எப்படி, யாருடன் கூட்டுச் சேர்ந்து முன்னெப்பது, என்ற அடிப்படையில் இந்தப் பிளவு உருவானது. இனவாதத்தை அவர்கள் மட்டும் உச்சரித்த, அமைதி சமாதான காலத்தில் தீவிர இனவாதம் தான் கட்சியை ஒன்றுபடுத்தியது. இதனால் தீவிர இனவாதமே, அவர்களின் அரசியலாக வளர்ச்சிபெற்றது. சிந்தனையால், செயலால், கோசங்களால் இது புளுத்தது.

அரசு இந்த கோசங்களை தனதாக்க, அதை ஜே.வி.பியின் ஒரு பிரிவு ஆதரிக்க பிளவு அரங்கில் வருகின்றது. இது தனிப்பட்டவரின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டதல்ல, மாறாக அது கொண்டிருந்த அரசியல் தான், பிளவின் மூலமாகும்.

இந்த அரசியல் பிளவை மிகவும் திட்டமிட்ட வகையில் ஒடுக்கி ஓரங்கட்டவே சோமவன்ச தலைமையிலான ஜே.வி.பி விரும்பியது. ஆனால் முந்திக்கொண்ட விமல் வீரவன்சா, அதை பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தியதன் மூலம், ஜே.வி.பியின் அரசியல் தளம் இனவாத சேற்றில் ஆட்டம் கண்டுள்ளது. இதன் விளைவே வன்முறையாக ஆங்காங்கே நடந்தது. பலர் தலைமறைவானார்கள்.

பொது அரசியல் கோரிக்கையிலேயே, ஜனநாயக கோரிக்கையை ஏற்கும் ஜனநாயக பன்மைத்துவம் இல்லாத கட்சிதான் ஜே.வி.பி. இப்படி சமூகத்தின், மக்களின் ஜனநாயக கோரிக்களையே மறுக்கின்ற ஒரு இனவாதக் கட்சியில், உட்கட்சி ஜனநாயகம் என்பது அறவே இருப்பதில்லை. இதுவோ வெளிப்படையானது. சதி, தலைமை வழிபாடு, விசுவாசம், வெற்றுக் கோசம் மற்றும் நம்பிக்கைகளுக்கு அப்பால், வர்க்க கட்சி பற்றிய தெளிவான சிந்தனை புரட்சிகரமான நடைமுறைகளும் ஜே.வி.பியை ஒன்று இணைக்கவில்லை.

இதனால் இந்த பிளவு இனவாத சேற்றில் மக்களை மேலும் அழுத்தத் தான் உதவுகின்றது.

No comments: