தமிழ் அரங்கம்

Monday, April 14, 2008

விடுதலைப் போரில் புதிய உத்தி


விடுதலைப் போரில் புதிய உத்தி

ந்தவொரு அடக்குமுறையும் மக்கள் சக்தியின் முன் நிற்க முடியாது என்ற வரலாற்று உண்மை, மீண்டும் பாலஸ்தீனத்தில் நிரூபணமாகி இருக்கிறது. குண்டு வீச்சாலும், ராக்கெட் தாக்குதல்களாலும் வெல்ல முடியாத பாலஸ்தீன மக்களைப் பட்டினி போட்டுப் பணிய வைக்க இசுரேல் அமெரிக்கா கூட்டணி திட்டம் போட்டது. பாலஸ்தீன மக்கள், இப்படுகொலைத் திட்டத்தை எளிதாக, ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் முறியடித்து, ஏகாதிபத்தியக் கும்பலை அதிர வைத்துவிட்டனர்.

2005ஆம் ஆண்டு இறுதியில் பாலஸ்தீன ஆணையத்திற்கு நடந்த தேர்தலில், ஏகாதிபத்திய கும்பலின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, இசுலாமிய மத அடிப்படைவாத அமைப்பான ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றது. பாலஸ்தீன ஆணையத்தை ஹமாஸ் இயக்கம் கைப்பற்றிக் கொண்டாலும், அதிபர் மற்றும் அதிகார வர்க்கப் பதவிகள் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஓர் அங்கமான ஃபதா அமைப்பின் கைகளில் இருந்தன.

ஃபதா இயக்கத்தின் தலைவரும், பாலஸ்தீன அதிபருமான முகம்மது அப்பாஸூம், மேற்குலக ஏகாதிபத்தியங்களும், இசுரேலும் ஹமாஸின் தேர்தல் வெற்றியை அங்கீகரிக்க மறுத்ததோடு, ஹமாஸின் ஆட்சியைக் கவிழ்க்கவும் சதி செய்தன. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஹமாஸை அழிக்க, ஃபதா இயக்கத்திற்கு ஆயுதங்களும், பயிற்சியும் அளித்து சகோதரச் சண்டையைத் தூண்டிவிட்டு வந்தது. அதிபர் முகம்மது அப்பாஸ், கடந்த ஆண்டு மத்தியில் தன்னிச்சையாக பாலஸ்தீன ஆணையத்தைக் கலைத்ததையடுத்து, மேற்குக் கரையை ஃபதா இயக்கமும்; காசாமுனையை ஹமாஸ் இயக்கமும் தங்களுக்குள் பாகப் பிரிவினை செய்து கொண்டன.

பாலஸ்தீனம் இப்படி இரண்டாகப் பிளவுபட்டதை வரவேற்ற அமெரிக்க ஏகாதிபத்தியம், ""காசாவைக் கசக்கிப் பிழிவதன் மூலம் ஹமாஸைத் தோற்கடிப்போம்'' என வெளிப்படையாக அறிவித்தது. இசுரேல் காசாமுனைப் பகுதியை, ""எதிரிப் பகுதி'' என அறிவித்துத் தனது ஆக்கிரமிப்புப் போரைத் தொடர்ந்தது.

காசாமுனை, மூன்று புறங்களில் இசுரேலையும்; நான்காவது பக்கத்தில் எகிப்தையும் எல்லையாகக் கொண்ட நிலப்பகுதி ஆகும். இசுரேல் இந்தப் பூகோள அம்சத்தைப் பயன்படுத்திக் கொண்டு, காசாமுனையைத் திறந்தவெளி சிறைச்சாலையாகவே மாற்றியமைத்து விட்டது. 2005ஆம் ஆண்டே காசா முனைகளில் இருந்து இசுரேல் இராணுவம் வெளியேறி விட்டாலும், அதன்மீது குண்டு வீச்சு மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்துவதை இசுரேல் நிறுத்திக் கொள்ளவேயில்லை. இவ்வான்வழித் தாக்குதல்கள் மூலம் பாலஸ்தீன மக்களின் குடியிருப்புகளை மட்டுமின்றி, காசாமுனையில் நடந்து வந்த விவசாயத்தையும், சிறு தொழில்களையும் அழித்தொழித்தது, இசுரேல். இதனால், காசா முனையில் வாழும் 15 இலட்சம் பாலஸ்தீனர்களும் அடுத்த வேளை உணவுக்கும், அடிப்படைத் தேவைகளுக்கும் ஐ.நா.வின் உதவியை அண்டியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இப்படிப்பட்ட அவலமான நிலையிலும் கூட, பாலஸ்தீன மக்களின் போராட்ட உணர்வு பிசுபிசுத்துப் போய்விடவில்லை. இதனால் ஒருபுறம் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்திக் கொண்டே, இன்னொரு புறம், தனது எல்லை வழியாக காசா முனைக்குச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களைத் தடுக்கத் தொடங்கியது, இசுரேல்.

இசுரேலின் வழியாக காசா முனைக்குத் தினந்தோறும் 900 லாரிகள் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்று வந்தன. இந்தச் சரக்குப் போக்குவரத்தின் எண்ணிக்கை, கடந்த 18 மாதங்களில் படிப்படியாக 15 ஆகக் குறைக்கப்பட்டதோடு, காசாவுக்குச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் எண்ணிக்கையும் 15 ஆகக் குறைக்கப்பட்டது. இப்பொருளாதார முற்றுகையை கடந்த சனவரி 2008 முதல் முழுமையாக அமல்படுத்தத் தொடங்கியது, இசுரேல். உயிர் வாழ்வதற்கே அடிப்படையான உணவுப் பொருட்களும், மருந்துப் பொருட்களும், எரிபொருளும், மின்சாரமும் காசாவுக்குக் கிடைப்பது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டது.

எரிபொருளும், மின்சாரமும் தடை செய்யப்பட்டதால், காசாமுனையில் வாழும் பாலஸ்தீன மக்கள் குளிரில் விறைத்துச் சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்; மின்சாரம் இல்லாததால், தண்ணீரைச் சுத்திகரித்துக் குடிதண்ணீர் வழங்குவது நின்று போனது; மேலும், கழிவு நீரைச் சுத்திகரிக்க முடியாமல் போனதால் கிருமிகள் பெருகி, தொற்று நோய் பரவும் அபாயம் நேரிட்டது. இதன் மூலம் காசாமுனை மீது ஓர் உயிரியல் போரையும் கட்டவிழ்த்து விட்டது, இசுரேல்.

பாலஸ்தீன விடுதலைப் போராளிகள், காசாமுனை எல்லையில் அமைந்துள்ள சிடரோட் என்ற கிராமப்புற பகுதி மீது ராக்கெட் குண்டுகளை வீசி இசுரேலியர்களைக் கொன்று வருவதாகவும்; அதனைத் தடுக்கும் முகமாகத்தான் இப்பொருளாதாரத் தடையை காசாவின் மீது விதித்திருப்பதாகவும் கூறி, இசுரேல் தனது இனவெறிப் பிடித்த போர் நடவடிக்கையை நியாயப்படுத்தி வருகிறது.

ஆனால், ""இது பச்சைப் பொய்'' என்கிறார், இசுரேலின் அமைதிக் குழுவைச் சேர்ந்த யுரி அவ்நேரி. ""இசுரேல் வகைதொகையின்றி காசா முனை மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி வருவதற்குப் பதிலடியாகத்தான் பாலஸ்தீனப் போராளிகள் சிடரோட் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இசுரேலின் குண்டு வீச்சுத் தாக்குதல்களினால், 2007இல் மட்டும் 53 சிறுவர்கள் உள்ளிட்டு 290 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேசமயம், சிடரோட் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல்களினால் 2007இல் வெறும் இரண்டு யூதர்கள்தான் கொல்லப்பட்டுள்ளனர்.

""ராக்கெட் தாக்குதல்களை நிறுத்துவதற்காக மட்டும் இப்பொருளாதார முற்றுகை காசாமுனை மீது திணிக்கப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் போகும் பொழுது, பாலஸ்தீன மக்கள் ஆத்திரமடைந்து ஹமாஸ் இயக்கத்திற்கு எதிராகப் போராடத் தொடங்குவார்கள். அப்போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஹமாஸ் இயக்கத்தை காசா முனையில் இருந்து வெளியேற்றுவதில் வெற்றி பெறலாம் என்பதுதான் இசுரேலின் நோக்கமேயன்றி, சிடரோட் கிராம மக்களைக் காப்பாற்றுவது அதன் பிரதான நோக்கமல்ல. சிடரோட் கிராம மக்களை ராக்கெட் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றுவதுதான் இசுரேலின் பிரதான நோக்கமாக இருந்திருந்தால், ஹமாஸ் இயக்கம் முன்வைத்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை இசுரேல் ஏன் ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது?'' எனக் கேள்வி எழுப்பி, யுரி அவ்நேரி இசுரேலின் ஆக்கிரமிப்புப் போர்வெறியை அம்பலப்படுத்தியுள்ளார்.

இப்பொருளாதார முற்றுகையால் ராக்கெட் தாக்குதல் நிற்கும்; பாலஸ்தீன மக்கள் ஹமாஸுக்கு எதிராகப் போராடத் தொடங்குவார்கள் என்ற இசுரேலின் இரண்டு கணிப்புகளும் பொய்த்துப் போய்விட்டன. ""எரிபொருளும், மின்சாரமும் கிடைக்காமல் காசாமுனை இருளில் மூழ்கிப் போன பிறகு, சிடரோட் மீது 17 ராக்கெட் தாக்குதல்கள் நடந்துள்ளன. தமது குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் திண்டாடிப் போன பாலஸ்தீன தாய்மார்கள் ஹமாஸ் இயக்கத்தை வெறுத்தொதுக்கவில்லை. மாறாக, இசுரேலின் பிரதமர் ஓல்மெர்ட்டையும்; இசுரேலோடு கூட்டணி சேர்ந்துள்ள பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸையும்தான் திட்டித் தீர்த்தார்கள்'' என யுரி அவ்நேரி குறிப்பிடுகிறார்.

இசுரேல் காசாமுனை மீது பொருளாதார முற்றுகையைத் திணித்தவுடனேயே பாலஸ்தீன மக்கள் எல்லையைக் கடந்து எகிப்துக்குள் நுழைய முயன்றனர். எகிப்தின் எல்லைக் காவல் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டினால், அவர்களின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதற்கு அடுத்த நாளே, ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் எகிப்துகாசாமுனை எல்லைப்புறத்தில் அமைந்துள்ள ரஃபா எனுமிடத்தில் குவிந்ததோடு, எல்லைப்புற வேலியை குண்டு வைத்துத் தகர்த்துவிட்டு, எகிப்துக்குள் நுழைந்தனர். அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்வதற்காக பாலஸ்தீன மக்கள் எகிப்துக்குள் நுழைந்த இந்த நடவடிக்கையை, பாலஸ்தீன விடுதலையை நேசிக்கும் அனைவரும் ""மூன்றாவது இண்டிஃபதா'' என்று வருணித்தனர்.

இந்த ""எல்லை தாண்டிய விடுதலை நடவடிக்கை'' இசுரேல் அமெரிக்கக் கூட்டணியை மட்டுமல்ல, அவர்களின் அரேபியக் கூட்டாளிகளையும் திகைக்க வைத்துவிட்டது. ""எல்லைப் புறத்தை உடனடியாக மூடாவிட்டால், அமெரிக்கா எகிப்துக்கு வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்திவிடும்'' என அமெரிக்கா எகிப்தை எச்சரித்தது. எனினும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக எகிப்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் காரணமாக, எகிப்து அரசால் அமெரிக்காவின் கட்டளையை நிறைவேற்ற முடியவில்லை. எல்லைப்புற வேலி உடைக்கப்பட்டு 11 நாட்கள் கழித்து, ஹமாஸுக்கும், எகிப்து அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையை அடுத்துதான் காசாமுனை எகிப்து எல்லைப் பகுதி மூடப்பட்டது.

பாலஸ்தீன மக்களின் அதிரடி நடவடிக்கையால், இப்பொருளாதார முற்றுகை பிசுபிசுத்துப் போய்விட்டதாலும்; சர்வதேச மக்களின் முன் இசுரேலின் ஆக்கிரமிப்புப் போர்வெறி மீண்டும் அம்பலப்பட்டுப் போய்விட்டதாலும், காசாமுனைக்கு எரிபொருளும், மின்சாரமும் வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையைத் தற்பொழுது ஓரளவு தளர்த்திவிட்டது, இசுரேல். அதேசம யம், இப்பொருளாதார முற்றுகையை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளாவிடில், எகிப்துக்குள் நுழைந்ததைப் போல இசுரேலுக்குள் நுழைவோம் என பாலஸ்தீன மக்கள் எச்சரித்துள்ளனர்.

""சர்வதேசச் சட்டங்கள் ஒப்பந்தங்களின் படி பார்த்தால், பாலஸ்தீன மக்களின் மீது இசுரேல் திணித்த இப்பொருளாதார முற்றுகைப் போரை இனப்படுகொலை என்றுதான் கூற முடியும்'', எனச் சர்வதேசச் சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், அமெரிக்காவோ, இப்பொருளாதார முற்றுகையைக் கண்டித்து ஐ.நா. மன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரும் முயற்சியை, தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்தியது. இந்தியாவோ, ஒருபுறம் இசுரேலை பெயரளவுக்குக் கண்டித்துவிட்டு, மறுபுறம் ஈரானை வேவு பார்ப்பதற்காகவே இசுரேல் தயாரித்திருந்த உளவு செயற்கைக் கோளை, சிறீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணிற்குச் செலுத்தி, இசுரேலுக்கு உதவியது. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் என்ற போர்வையில் திரியும் இனத் துரோகி முகம்மது அப்பாஸோ, எவ்வித நிபந்தனையும் இன்றி இசுரேல் அமெரிக்கப் போர்க் குற்றவாளிகளோடு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.

பாலஸ்தீனக் குழந்தைகள் பாலுக்காகக் கதறிக் கொண்டிருக்கும் பொழுது, அம்மக்கள் குளிரில் விறைத்துச் செத்துக் கொண்டிருக்கும்பொழுது, அவர்களால் எப்படி அமைதியாய் இருக்க முடியும்? இப்பொருளாதார முற்றுகை, ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தியிருப்பதோடு, விடுதலை இயக்கங்கள், தங்களின் போராட்டத்தின் ஊடாகவே சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தியிருக்கிறது.

·ரஹீம்

No comments: