போதையில் நடந்த மாநாடு :
மார்க்சிஸ்டுகளின் கலாச்சாரப் புரட்சி
புரட்சி பேசும் சி.பி.எம். கட்சியானது, முதலாளித்துவக் கட்சியாகச் சீரழிந்துவிட்ட பிறகு, அதனிடம் காலிப் பெருங்காய டப்பாவாக இருந்த பாட்டாளி வர்க்கப் பண்பாடும் இப்போது இல்லாதொழிந்து விட்டது.
கோவையில் நடைபெறவுள்ள சி.பி.எம். கட்சியின் அனைத்திந்திய மாநாட்டுக்கு முன்னதாக, அக்கட்சி செயல்பட்டு வரும் மாநிலங்களில் மாநில மாநாடுகள் நடந்து வருகின்றன. கேரளத்தில் நடந்த மாநில மாநாட்டின் முடிவில், கோட்டயத்தில் மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி பிப்ரவரி 14ஆம் தேதியன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. சி.பி.எம். கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் உள்ளிட்டு அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் மேடையில் வீற்றிருக்க, கட்சி ஊழியர்களோ சாராய போதையில் "புரட்சிகர' ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். கேரள சி.பி.எம். முதல்வர் அச்சதானந்தன் உரையாற்றியபோது, அவரது ஒவ்வொரு வார்த்தைக்கும் கைதட்டி ஆர்ப்பரித்த இந்த ஊழியர்கள், ஒரு கட்டத்தில் காலிச் சாராய புட்டியை மேடையை நோக்கி வீசியெறிந்து, தமது "புரட்சிகர' உற்சாகத்தை நாட்டு மக்களுக்கு நிரூபித்துக் காட்டினர்.
அடுத்து பேசிய சி.பி.எம். கட்சியின் கேரள மாநிலச் செயலாளரான பினாரயி விஜயன், ""இது கம்யூனிஸ்ட் கட்சி கூட்டமா, அல்லது உஷாஉதுப் நடத்தும் நிகழ்ச்சியா'' என்று போதையேறிய கட்சி ஊழியர்களின் காலித்தனத்தைக் கண்டனம் செய்ததோடு, மாநாட்டுத் தொண்டர்களிடம் அவர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். தொண்டர்கள் அவர்களை வெளியேற்ற முயற்சிக்கும்போது, அது அடிதடியாக முற்றி, நாற்காலிகளும் காலிச் சாராய புட்டிகளும் பறந்துள்ளன. இந்நேரத்தில், எதிர்பாராத விதமாக மழை வலுக்கத் தொடங்கியதால், கூட்டம் அதோடு முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஊழியர்களிடம் போதையில் பொங்கிவழிந்த புரட்சிகர ஆரவாரமும் சுருதி குறைந்து ஒரு வழியாகத் தணிந்தது.
முதலாளித்துவத்துடன் கூட்டணி சுகம் தேடும் தலைவர்கள்; புரட்சிகர உணர்வை சாராய புட்டியில் தேடும் ஊழியர்கள். அடடா! எப்பேர்ப்பட்ட கட்சி! எப்பேர்ப்பட்ட புரட்சி!
·
2 comments:
பணம், சாராயம் மற்றும் பிரியாணி கொடுத்து கூட்டம் கூட்டி பொதுக்கூட்டம் நடத்தும் பிற கட்சிகளை விட சித்தாந்தங்களின் அடிப்படையில் அரசியல் நடத்தும் தோழர்கள் எவ்வளவோ மேல்.
அய்யா அந்த சித்தாந்தத்தை கொஞம் விளக்க முடியுமா ?
Post a Comment