இந்திய பங்குச் சந்தையைக்
கவிழ்த்தது அமெரிக்கா
கடந்த சனவரி மாத இறுதியில் இந்தியாவில் நடந்த பங்குச் சந்தை வீழ்ச்சியை, ""பொருளாதார சுனாமி'' என்றே கூறலாம். இப்பங்குச் சந்தை வீழ்ச்சி ஒரே சமயத்தில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு ஆகிய ஏகாதிபத்திய நாடுகளிலும்; இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு ஏழை நாடுகளிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்று விட்டது.
இவ்வீழ்ச்சி குறித்துப் பல்வேறு முதலாளித்துவப் பத்திரிகைகள் வெளியிட்டு வரும் புள்ளி விவரங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, இந்தியாவில் மட்டும் இவ்வீழ்ச்சியினால் நடுத்தர வர்க்கம் முதலீட்டாளர்களுக்கு 6 முதல் 18 இலட்சம் கோடி ரூபாய் வரை நட்ட மேற்பட்டிருக்கக் கூடும்.
பங்குச் சந்தை வியாபார வளர்ச்சியைக் குறிக்கும் குறியீட்டு எண், 2007 சனவரியில் 16,000 புள்ளியாக இருந்தது; கடந்த ஒரு ஆண்டிற்குள், இவ்வளர்ச்சி 21,000 புள்ளிகளைத் தொட்டது; குறிப்பாக, கடந்த நான்கு மாதங்களில் மட்டும், மும்பய் பங்குச் சந்தையில் வியாபாரம் 40 சதவீதம் வளர்ச்சியடைந்ததாம்.
இந்த "வளர்ச்சி', ஒரு வீழ்ச்சியைச் சந்திக்கும் என பங்குச் சந்தை வர்த்தகச் சூதாடிகள் எதிர்பார்த்தே இருந்தனர். அதனால்தான், சனவரி மாத மூன்றாவது வாரத்தில் பங்குச் சந்தை குறியீட்டு எண் 5,000 புள்ளிகள் சரிவடைந்த பொழுது, பொருளாதார நிபுணர்கள் அவ்வீழ்ச்சியைக் கண்டு ஒப்பாரி வைக்காமல், ""பங்குச் சந்தை தன்னைத் திருத்திக் கொள்ளும்'' வாய்ப்பாக, இவ்வீழ்ச்சியை வர்ணித்தார்கள். திருடப் போனவனைத் தேள் கொட்டிவிட்டால், அவன் அலறித் துடிக்கவா முடியும்?
அமெரிக்க அரசின் கடன் கொள்கையும்; அதனால் அமெரிக்க வங்கிகளுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியும்தான் இந்தியப் பங்குச் சந்தை வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அமெரிக்க அரசின் அதே கடன் கொள்கைதான், இந்தியப் பங்குச் சந்தையின் அபரிதமான வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்தது என்பதையும் மறுக்க முடியாது. இந்தியப் பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கு எது வரமாக அமைந்ததோ அதுவே சாபக்கேடாகவும் அமைந்து விட்டது என்பதே உண்மை.
செப்.2001இல், அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டபொழுது, அமெரிக்கா பொருளாதாரத் தேக்கத்திலும் சிக்கிக் கொண்டிருந்தது. இத்தேக்கத்தை உடைக்க, இத்தாக்குதலைப் புத்தசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டது, புஷ் கும்பல். ""இசுலாமிய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றால், அமெரிக்கப் பொருளாதாரம் வளர வேண்டும்; எனவே, அமெரிக்காவின் நலனுக்காக நுகருங்கள்'' (குடணிணீ ஞூணிணூ அட்ஞுணூடிஞிச்) என்ற முழக்கத்தை முன்வைத்து, அமெரிக்காவில் ஒரு பிரச்சார இயக்கமே நடத்தப்பட்டது. அதாவது, நுகர்வு வெறி, தேசபக்தியாக உருமாற்றம் செய்யப்பட்டது.
அமெரிக்க மக்களைக் கடைகளை நோக்கி இழுக்க வேண்டும் என்பதற்காகவே, புஷ் கும்பலால், ஒரு புதிய கடன் கொள்கையும் அறிவிக்கப்பட்டது. தான் வாங்கும் கடனைத் திருப்பி அடைக்கும் தகுதி ஒருவருக்கு இருக்கிறதா என்பது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் கடன் கொடுக்கும் வண்ணம், கடன் கொள்கையில் தாராளமயம் புகுத்தப்பட்டது. இந்த அடிப்படையிலேயே, இக்கடன் கொள்கைக்கு, ""தரமில்லாதவர்களுக்கு வழங்கப்படும் கடன்'' எனப் பொருள்படியான ""சப்பிரைம் லோன்'' என்ற பெயர் சூட்டப்பட்டது. இக்கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டியும் ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டது.
ஒருவர் 50 இலட்சத்திற்குக் கடன் வாங்கி வீடு வாங்கியிருந்தால், அவரது வீட்டின் மதிப்பு ஒரு கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டு, அவருக்கு மீண்டும் கடன் வழங்கப்பட்டது. இந்தத் தான்தோன்றித்தனமான கடன் கொள்கையின் கீழ், 2002லிருந்து 2006க்குள், அமெரிக்கச் சந்தையில் 60 இலட்சம் கோடி ரூபாய் கொட்டப்பட்டது.
நெல்லுக்குப் பாயும் நீர், புல்லுக்கும் புசிவதைப் போல, அமெரிக்காவின் ""சப்பிரைம்'' கடன் கொள்கையால், இந்தியா உள்ளிட்ட சில ஏழை நாடுகளும் பயனடைந்தன. ஒருபுறம், அந்நாடுகளின் அமெரிக்காவுடனான ஏற்றுமதி வர்த்தகம் கணிசமாக அதிகரித்தது. இன்னொருபுறம், ""சப்பிரைம்'' கடனுக்காக அமெரிக்க வங்கிகளின் வட்டி வீதம் குறைக்கப்பட்டதால், முதலீடுகள் அதிக இலாபம் தரும் சந்தைகளை நோக்கித் திரும்பின.
இந்தச் சூழ்நிலையில், இந்தியா அந்நிய முதலீட்டு நிறுவனங்களைக் கவரும் வண்ணம், நீண்டகால முதலீடுகள் மூலம் கிடைக்கும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டு வந்த வரியை நீக்கியது; சமூகப் பயன்பாட்டுக்காக, ஒவ்வொரு பங்கு பரிமாற்றத்தின் மீதும் ஒரு சதவீத வரி விதிக்கும் ""ரோபின் வரி'' முறையைப் புகுத்தவும் மறுத்து விட்டது.
இச்சீர்திருத்தங்களையடுத்துதான், அந்நிய நிதி நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தையை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தன. 2003ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்தியப் பங்குச் சந்தையில் வெறும் 74 கோடி அமெரிக்க டாலராக இருந்த அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு, 2003இல் 660 கோடி அமெரிக்க டாலராகவும்; 2004இல் 850 கோடி அமெரிக்க டாலராகவும்; 2005இல் 1070 கோடி அமெரிக்க டாலராகவும்; 2006இல் 800 கோடி அமெரிக்கா டாலராகவும்; 2007இல் 1720 கோடி அமெரிக்க டாலராகவும் அதிகரித்தது. இதற்கேற்ப, இந்தியப் பங்குச் சந்தையின் வளர்ச்சி குறியீட்டு எண், கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,000 புள்ளியில் இருந்து 20,000 புள்ளியாக அதிகரித்தது.
இந்த ""வளர்ச்சி''யை முகவரியே இல்லாத உப்புமா கம்பெனிகள் கூட மூலதனத்தைத் திரட்டப் பயன்படுத்திக் கொண்டன. ""ரூ. 40 கோடியே மதிப்புள்ள நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு 8,000 கோடி ரூபாயாக உயர்ந்தது; வெறும் 4 கோடி ரூபாய் மட்டுமே இலாபம் பார்க்கும் சொத்து நிர்வாகக் கம்பெனிகள் (அண்ண்ஞுt ட்ச்ணச்ஞ்ஞுட்ஞுணt) கூட 5,000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிந்தது; ஒட்டு மொத்த லாபமாக ரூ. 1,000 கோடியைக் கூடப் பார்க்க முடியாத மீடியா கம்பெனிகளின் மதிப்பு 75,000 கோடி ரூபாயாக அதிகரித்தது'' என இந்தியாடுடே வார இதழே அங்கலாய்த்துக் கொள்கிறதென்றால், இதை வளர்ச்சி என்று சொல்ல முடியுமா? இல்லை, சூதாட்டம் என்று சொல்ல முடியுமா?
இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியின் (எஈக) மதிப்பே 40 இலட்சம் கோடி ரூபாய்தான்; ஆனால், பங்குச் சந்தைச் சூதாட்டமோ மும்பய்ப் பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள 4,687 நிறுவனங்களின் மதிப்பை 68 இலட்சம் கோடி ரூபாயாக வீங்க வைத்திருக்கிறது மும்பய்ப் பங்குச் சந்தை. வளர்ச்சியைக் குறிக்கும் ""சென்செக்ஸ்'' புள்ளி, ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், ஏர்டெல் உள்ளிட்ட ஒரு 30 நிறுவனங்களின் பங்குகளுக்கு இருக்கும் கிராக்கியை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்களின் வருடாந்திர உற்பத்தி மதிப்பு 40,000 கோடி ரூபாய்தான். ஆனால், பங்குச் சந்தைச் சூதாட்டமோ இந்நிறுவனங்களின் பங்கு மதிப்பை 30 இலட்சம் கோடி ரூபாயாக ஊதிப் பெருக்கியிருக்கிறது.
ஒன்றுக்குப் பத்தாக வீங்க வைக்கும் இச்சூதாட்டத்தால்தான், அம்பானி சகோதரர்களும், விப்ரோ நிறுவன அதிபர் அசிம் பிரேம்ஜியும் உலகப் பணக்காரர்களுள் முதல் பத்து பேரில் ஒருவராக "உயர' முடிந்திருக்கிறது.
···
அந்நிய நிதி நிறுவனங்கள், மும்பய்ப் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள 1,597 நிறுவனங்களின் பங்குகளில் செய்துள்ள முதலீடு 8,70,122 கோடி ரூபாய்; அப்பங்குகளின் சந்தை மதிப்பு 12 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேலிருக்கும் என ""பிசினஸ் வேர்ல்டு'' (11 பிப்., 2008) என்ற வார இதழ் குறிப்பிடுகிறது. மும்பய்ப் பங்குச் சந்தையில் தினந்தோறும் நடைபெறும் வர்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவனங்களின் பங்கு ஏறத்தாழ 15.5 சதவீதமாகும். மும்பய்ப் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள முக்கியமான 500 நிறுவனங்களின் 23 சதவீதப் பங்குகள் அந்நிய நிதி நிறுவனங்களின் பிடிக்குள் இருக்கின்றன. அந்நிய நிதி நிறுவனங்கள் நிøனத்தால் இந்தியப் பங்குச் சந்தையை ""வளர்ச்சி''யை நோக்கித் தள்ளவும் முடியும்; வீழ்த்தவும் முடியும் என்பதைத்தான் இப்புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
அமெரிக்காவில் வழங்கப்பட்டு வரும் ""சப்பிரைம்'' கடனால், அமெரிக்க வங்கிகள் / நிதி நிறுவனங்களின் வாராக் கடன் அதிகமாகி, அவை கடந்த ஆறு மாதங்களாகவே கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. அந்நிறுவனங்கள், சப்பிரைம் கடனால் தங்களுக்கு ஏற்பட்டு வரும் நட்டத்தை ஈடுகட்ட பங்குச் சந்தை ""வளர்ச்சி''யைப் பயன்படுத்திக் கொண்டன. இந்தியப் பங்குச் சந்தையின் ""வளர்ச்சி'' 21,000 புள்ளிகளைத் தொட்டபொழுது, அந்நிய நிதி நிறுவனங்கள் 10,500 கோடிரூபாய் பெறுமான பங்குகளை முன்றே நாட்களில் விற்று, இலாபத்தைச் சுருட்டியதையடுத்துதான் இந்தியப் பங்குச் சந்தை 5,000 புள்ளிகள் சரிந்தது. ""எச்.என்.ஐ.எஸ்.'' என்ற பொருளாதார நிபுணர்கள் குழு, இந்தியப் பங்குச் சந்தையில் கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்டுள்ள ""வளர்ச்சி''யையும், சனவரி 2008இல் ஏற்பட்டுள்ள சரிவையும், வியாபார நடவடிக்கையாகப் பார்க்க மறுக்கிறது; மாறாக, இதனை, 1992இல் நடந்த அர்சத் மேத்தா ஊழலோடு ஒப்பிடுகிறது.
இந்தியப் பங்குச் சந்தையைத் தங்களின் விருப்பப்படி ஆட்டிப் படைக்கும் அந்நிய நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த முடியாமல், மைய அரசு திணறுகிறது என்பதே உண்மை. வெளிநாடுகளைச் சேர்ந்த சிறு முதலீட்டாளர்கள், தங்களின் அடையாளத்தை வெளிகாட்டிக் கொள்ளாமல், அந்நிய நிதி நிறுவனங்களின் மூலம் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு ""பங்கேற்பு பத்திரம்'' (கச்ணூtடிஞிடிணீச்tணிணூதூ ணணிtஞுண்) என்ற வழிமுறை இருக்கிறது. இந்த வழிமுறை பல்வேறு விதமான மோசடிகளுக்கு வாய்ப்பாக இருப்பதால், இதனைப் படிப்படியாகத் தடை செய்ய வேண்டும் என இந்தியப் பங்குச் சந்தை வாரியம் அரசுக்கு ஆலோசனை வழங்கியது. இந்த ஆலோசனையை முளையிலேயே கிள்ளியெறிய விரும்பிய அந்நிய நிதி நிறுவனங்கள், கடந்த அக்.2007இல், பங்குச் சந்தையில் 1,000 புள்ளிகள் சரிவை ஏற்படுத்தி, அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தன. இம்மிரட்டலால் அரண்டு போன ப.சிதம்பரம், அந்த ஆலோசனையைக் கைவிடுவதாக அறிவித்தார்.
கேதான் பாரேக் என்பவன் தலைமையில் 2001இல் நடந்த பங்குச் சந்தை ஊழலால், கொல்கத்தா பங்குச் சந்தையை மூட வேண்டிய நிர்பந்தம் எழுந்தது. நிதி நிறுவனங்கள், தங்களிடம் இல்லாத பங்குகளை, வாடிக்கையாளர்களுக்குப் பிற்பாடு வாங்கித் தருவதாக ஒப்புக் கொண்டு போட்டுக் கொள்ளும் வர்த்தக ஒப்பந்தமும்; நிதி நிறுவனங்கள் தாங்கள் கொடுக்க வேண்டிய கடனுக்கு ஈடாகப் பங்குகளை அடமானமாகக் கொடுப்பதும்தான் இந்த ஊழலுக்கு அடிப்படையாக அமைந்ததால், நிதி நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டது.
இத்தடையை டிச.2007இல் நீக்கிவிட்ட மைய அரசு, இந்திய நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, அந்நிய நிதி நிறுவனங்களும் இவ்வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி அளித்திருக்கிறது. பங்குச் சந்தை வீங்கிக் கொண்டே செல்லும்போது, இத்தடை நீக்கம் வம்பை விலை கொடுத்து வாங்குவது போலாகிவிடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்ததை, மன்மோகன் சிங் கும்பல் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
அந்நிய நிதி நிறுவனங்கள் நினைத்தால், இந்தியப் பங்குச் சந்தையை மட்டுமல்ல, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பையும் ஆட்டம் காண வைத்து விட முடியும். இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, அக்.2007இல் 26,100 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. அந்நிய நிதி நிறுவனங்கள், தங்களின் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டால், இக்கையிருப்பு வெறும் 4,000 கோடி அமெரிக்க டாலராகக் கரைந்துவிடும். அதனால்தான், அந்நிய நிதி நிறுவனங்கள் எள் என்பதற்குள், மன்மோகன் சிங் கும்பல் எண்ணெயாக நிற்கிறது.
···
தாராளமயத்தின் பிறகு இந்தியப் பங்குச் சந்தை பலமுறை வீழ்ச்சியடைந்திருக்கிறது. தாராளமயத்தின் ஆரம்ப கட்டத்தில் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தால், அதில் ஊழல் நடந்திருக்கிறதா என்பதைப் புலனாய்வு செய்ய ஒரு கமிட்டியாவது நியமிக்கப்படும். இப்பொழுதோ, அப்படிப்பட்ட ""கண்காணிப்புகள்'' எல்லாம் பழங்கதையாகி விட்டன. விசாரணைக்குப் பதிலாக பங்குச் சந்தையைத் தூக்கி நிறுத்த அரசின் கஜானா திறந்து வைக்கப்படுகிறது.
அந்நிய நிதி நிறுவனங்கள் அக்.2007இல் 6,000 கோடி ரூபாயை வெளியே எடுத்து, பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்படுத்திய பொழுது, மைய அரசு 3,300 கோடி ரூபாயைச் சந்தையில் கொட்டியது. தற்பொழுது, பொதுத்துறை வங்கிகளும், இந்தியக் காப்பீடு நிறுவனமும் 4,600 கோடி ரூபாயைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து சரிவைச் சரிகட்ட முயன்றன.
பங்குச் சந்தையை வளர்க்கவும், அது சரிவடைந்தால் முட்டுக் கொடுக்கவும், பொது மக்களின் சேமிப்பு எவ்விதத் தடையும் இன்றி பங்குச் சந்தையில் பாய வேண்டும் என்பதற்காகவே, மைய அரசு சேமநல நிதியைத் தனியார்மயப்படுத்த முயன்று வருகிறது. பொதுத்துறை வங்கிகள், சேமிப்புக் கணக்குகளுக்குத் தரும் வட்டி வீதம் குறைக்கப்பட்டு பங்குச் சந்தை முதலீடு கவர்ச்சிகரமானதாக நடுத்தர வர்க்கத்தின் முன் நிறுத்தப்படுகிறது. பேராசை கொள்ளாமல், நிதானமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நட்டமே ஏற்படாது என நடுத்தர வர்க்கம் மூளைச் சலவை செய்யப்படுகிறது. 199192இல் அர்சத் மேத்தா, வங்கிப் பணத்தைப் பங்குச் சந்தையில் போட்டுச் சூதாடியது ஊழலாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இப்பொழுதோ, பொதுத்துறை வங்கிகள் பங்குச் சந்தையில் சூதாடுவதற்காகப் பரஸ்பர நிதி நிறுவனங்களைத் தொடங்கி நடத்துவதன் மூலம், ஊழலைச் சட்டபூர்வமாக்கி விட்டன.
அமெரிக்க அரசு, தனது நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க, 15,000 கோடி அமெரிக்க டாலர்களைச் சந்தையில் கொட்டியிருப்பதோடு, கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டி வீதத்தையும் 25 சதவீதம் குறைத்துவிட்டது. இதனால் ஏற்படும் பணப்புழக்கம், இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் சரிவில் இருந்து வளர்வதற்கான வாய்ப்புகளை அள்ளி வழங்கத்தான் செய்யும். எனினும், அந்த ""வளர்ச்சி'', ஒரு வீழ்ச்சியை தன் வயிற்றில் சுமந்து கொண்டேதான் வரும். உலகமயமான இந்தியா, இந்த நச்சுச் சூழலில் இருந்து தப்பிக்கவே முடியாது.
· செல்வம்
4 comments:
தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
நண்பர் ஒருவர் "அமெரிக்க பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கான காரணத்தை"
அமெரிக்க அரசு நிதித்துறை மற்றும்
வங்கி நடைமுறைகளின் செயல்முறைக் கோளாறு என்னும் விதமாக அணுகியிருக்கும் கட்டுரை இதோ...
http://perfectperceptions.blogspot.com/2008/04/rotten-american-banking-system-let-me.html
இன்றைய அமேரிக்க வங்கி அமைப்பே பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய முதலாளிகளால் தங்கள் சுயலாபத்திற்காக சீரழிக்கப் பட்டிருக்கிறது. அமேரிக்காவின் மத்திய வங்கியான Federal Reserve ல் 80 சதவிகித பங்குகள் தனியார் முதலாளிகள் கையில் இருக்கிறது.
இந்த உண்மையை தோலிருக்கும் ஆவணப் படம் Google Video ல் உள்ளது. வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கவும்.
http://video.google.com/videoplay?docid=-515319560256183936&q=source:017738947022138781647&hl=en
மேலே ஒரு நண்பர் அமெரிக்க அரசு நிதித்துறை மற்றும் வங்கி செயல்முறைக் கோளாறு என்னும் விதமாக சொல்லும் கட்டுரையை கொடுத்துள்ளார்.
அது உண்மையில் அவ்வாறு அல்ல. அது திட்டமிட்ட செயல்முறைக் கொளாறு. இப்படிப்பட்ட கோளாறுகள் இல்லாமல் ஏகாதிபத்திய மூலதனத்தால் உயிர் வாழ முடியாது.
முதலாளித்துவத்தின் அராஜக உற்பத்தியும் அதனை ஈடுகட்ட போலியாக உருவாக்கும் நுகர்வும்(கிரிடிட் கார்ட், வீட்டுக்கடன், பெர்சனல் லோன், EMI etc) குறிப்பாக உலகமயச் சூழலில் நிதி மேலாதிக்கம் வேறு ஒரு பரிணாமத்தை அடைந்திருப்பதும், தொழில் துறையின் மீது நிதியின் மேலாதிக்காம் என்பது உயர்ந்த ஒரு வடிவத்திற்க்கு சென்றுள்ள நிலையை கவனத்தில் கொண்டு இந்த ஒட்டு மொத்த நிகழ்வை பார்க்கும் பொழுது மிகச்சரியாக மேற்சொன்ன விசயம பொருந்துகிறது, அதாவது அராஜக உற்பத்தியும் அதனை சரிக்கட்ட போலியாக உருவாக்கப்படும் நுகர்வும்.
குறிப்பாக அமெரிக்காதான் அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு என்ற உண்மையும், அமெரிக்காதான் அதிகமாக கடன் வாங்கும் நாடு என்ற உண்மையும், அமெரிக்காவில்தான் உலகம் முழுவதும் திரளும் மூலதனத்தின் பெரும்பகுதி நிலைகொண்டுள்ளது(இந்தியா போன்ற நாடுகளின் அன்னிய செல்வானி கூட அமெரிக்க பப்ளிக் பாண்டுகளில் முதலீடு செய்யப்படுகின்ற்ன) என்ற உண்மையும் கவனத்தில் கொண்ட பிற்பாடே இதனை தைரியமாக சொல்ல முடிகிறது.
இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை.
அசுரன்
முதலாளித்துவத்தின் உச்சகட்டமாகிய ஏகாதிபத்தியத்தால் திட்டமிட்டு செயல்பட முடியுமா? முடியாது. ஆயினும் திட்டமிட்டு என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியதன் அர்த்தம்,
தனது அராஜக உற்பத்தியும் அதனை மூடி மறைக்கும் தந்திரங்களும் பெரும் கேடுகளை விளைவிக்கிறது என்று தெரிந்தும் அவ்வாறே நடந்தேறவதற்க்கு வசதிகள் செய்து கொடுப்பதன் மூலம் தனது அராஜக உற்பத்தியை ஏகாதிபத்தியம் தொடர்கிறது. இந்த அர்த்த்தில் திட்டமிட்டு என்று உபயோகப்படுத்தியிருந்தேன்.
அசுரன்
Post a Comment