பி.இரயாகரன்
29.11.2007
புலியெதிர்ப்பை அரசியலாக கொண்டவர்கள் முதல் ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தான். அ.மார்க்ஸ் இதை ஒரு தனி நூலாக கொண்டு வந்த போது, அதை நான் அம்பலப்படுத்தினேன். அது ஒரு நூலாகவே வெளிவந்தது. அந்த நூல் இதுதான்.
தேசியம் எப்போதும் எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல.
இதுவரை அவரால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை.
இந்த நிலையில் இன்று புலியெதிர்ப்பு அரசியலே, புலிக்கு மாற்று என்று கூறுகின்ற ராகவன் போன்றவர்கள் கூட, தம் பங்குக்கு தேசியம் கற்பிதம் என்ற கோட்பாட்டை முன் வைக்கின்றனர். அறிவு நேர்மை எதுவுமின்றி, கறுப்பு வெள்ளையாக இதைச் சொற்களில் செய்கின்றனர்.
கற்பிதம் என்பது என்ன? இல்லாத ஒன்றை கற்பிப்பது. பொருள் அல்லாத ஒன்றை, இருப்பதாக கற்பிப்பது. தேசம், தேசியம் என்பதை கற்பிதம் என்பது, உள்ளடக்க ரீதியாக அதை கருத்து முதல்வாதத்தை அடிப்படையாக கொண்டதாக்கி விடுகின்றது. தேசம், தேசியம் பற்றி பேசிய மார்க்ஸ் முதல் அனைவரையும், இது கருத்து முதல் வாதமாக்கிவிடுகின்றது. பொருள் வகைப்பட்ட தேசம், தேசியம் என்பதே, இல்லையென்பது எவ்வளவுக்கு இது அறிவுத் தன்மை கொண்டது?
தேசம், தேசியம் என்பது இந்த மனிதனாலான இந்த சமூக அமைப்பில் உருவாகவில்லையா? அது பொருள் வகைப்பட்ட ஒன்று இல்லையா? இன்று தேசங்களாக இருப்பவை எவை. அவை என்ன? அவை பொருள் வகைப்பட்ட ஒரு சமூகப் பொருளாதார ஒழுங்கில் இயங்கவில்லையா? இதை கற்பிதம் என்பது, அபத்தத்திலும் அபத்தம். உண்மையில் இருப்பதை மறுப்பதே, கருத்துமுதல் வாதம் தான்.
இப்படி இருப்பதை இல்லை என்பது, மனித குலத்துக்கு எதிரானது. இல்லாததை இருப்பதாக காட்டுகின்றது, அரசியல் நயவஞ்சகத் தன்மை கொண்டது.
கற்பிதத்தின் மற்றொரு கூற, ஒரு பொருள் நீடித்த எல்லையில் அது அதுவாக இருப்பதில்லை. அதாவது தொடர்ந்தும் அது இருப்பதில்லை என்பது. ஒன்று இன்னொன்றாக மாறுகின்றது. இது இயங்கியல் அம்சம். இங்கும் மாற்றம் நிகழ்கின்றதே ஒழிய, பொருள் இல்லாமல் போய்விடுவதில்லை.
இங்கு தேசம் அழிந்தால் பாட்டாளி வர்க்க சர்வதேசியமும் அல்லது ஏகாதிபத்திய உலகமயமாதலுமாக மாறுகின்றது. இதில் இன்னொன்று பற்றி எந்த அனுமானமும், பொருள் வகைப்பட்ட இன்றைய உலகில் இதுவரை கிடையாது. இங்கு மாற்றம் நிகழ்கின்றது. பொருள் கற்பிதமாகி விடுவதில்லை. அது மற்றொன்றாக மாறுகின்றது.
இயற்கையின் எந்தக் கூறும் மற்றொன்றாக மாறக் கூடியது தான். இதில் மனித முயற்சிகளும், ஏன் அவன் உருவாக்கிய அனைத்தும் மாறக் கூடியதுதான். நிலையானது, அறுதியானது என்ற எதுவும் கிடையாது. ஆனால் எதார்த்த உலகில், பொருள் வகைப்பட்ட ஒன்று எதார்த்தத்தில் நிலவுகின்றது. அதை கற்பிதமாக கற்பிக்க முனைவதே உண்மையில் கற்பிதம்.
தேசங்கள், தேசியங்கள் இந்த உலகில் நிலவுகின்றன. இதனால் தேசியங்கள் எழுகின்றன. இது கற்பிதமல்ல. கற்பிதமாக காட்டுபவன், அதை என்னவென்கின்றான். அதை அவன் சொல்வதில்லை.
ஒரு தேசத்தினுள் அல்லது தேசியத்தினுள்ளான சமூக ஒடுக்குமுறைகள், எதையும் கற்பிதமாக்கி விடுவதில்லை.
1.சமூக ஒடுக்குமுறைகள் அதையே உறையவைத்து பிற்போக்கு தேசமாக நீடிக்கின்றது அல்லது பரிணாமிக்கின்றது.
2. போராட்டத்தின் மூலம் முற்போக்கு தேசமாக இருக்கின்றது அல்லது பரிணமிக்கின்றது.
தேசம் என்ற சமூகபொருளாதார அமைப்பு (அது ஸ்ராலின் வரையறையிலான, குறைந்தபட்சம் ஒரு மக்கள் கூட்டத்தின் பொருளாதாரம், அவர்கள் கொண்டுள்ள நிலத் தொடர், இதன் மேலான ஒரு பண்பாடு, அவர்கள் பேசும் ஒரு மொழி) இருக்கும் வரை, அது கற்பிதமாக கற்பிக்க முனைபவன் தான் கற்பிதவாதியாகி விடுகின்றான்.
இதன் பின்னுள்ள அரசியல் என்பது, தேசத்தை அழிக்க விரும்பும் ஏகாதிபத்திய உலகமயமாதலை ஆதரிப்பது தான். இதற்கு அப்பால் வேறு எந்த அரசியல் முகாந்திரமும் இதற்கு கிடையாது. புலியெதிர்ப்பு அரசியல் இதை தூக்கி முன்நிறுத்துகின்றது என்றால், அதனிடம் இதற்கு மாற்றாக எதுவுமில்லை என்பது தான். புலியை விமர்சிக்க எந்த அரசியல் அடிப்படையும் இல்லை என்பதால், தேசியத்தை கற்பிதம் என்று சொல்வது புலியெதிர்ப்புக்கு அவசியமாகின்றது.
ஆக அரசியலாக காட்ட ஜனநாயகத்தை மட்டும் வைக்கின்றனர். ஜனநாயகத்தை கோருவது என்பது ஒரு அரசியலாகிவிடாது. அது அவர் நோக்கத்துக்கும், வர்க்க எல்லைக்கும் உட்பட்ட எல்லையில் அது திரிபுபட்டு காணப்படுகின்றது. புலிகள் இலங்கை அரசிடம் ஜனநாயகம் கோருவது போல், புலியெதிர்ப்போ புலிகளிடம் ஜனநாயகத்தைக் கோரலாம். இந்த ஜனநாயகம் மக்களுக்கானதல்ல.
தேசத்தை கற்பிதமாக காட்டுவது, தேசத்துக்கு முற்போக்கு தன்மை கிடையாது என்று காட்டுவது, இவர்களின் விருப்பமான சொந்த குறுகிய அரசியல் விளையாட்டாகவுள்ளது.
மக்களின் விடுதலை என்பதும், மக்கள் தேவை என்பது, தேசத்தின் முற்போக்குத் தன்மையில் உள்ளது. அது மட்டும் தான், சமூகத்தில் உள்ள ஒடுக்குமுறைகளை தீர்க்கவல்லது.
பின் குறிப்பு:
இதை நாம் தொடர்ந்து ராகவனின் வாதங்கள் மூலம் மற்றொரு கட்டுரை மூலம் காண உள்ளோம்.
No comments:
Post a Comment