பி.இரயாகரன்
01.12.2007
'இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை: தீர்வும் வழிமுறையும் " லண்டன் (08.12.2007) கூட்டமாகட்டும், இது போன்றவைகள், எதைத்தான் தமிழ் மக்களுக்கு தீர்வாக வைக்கின்றனர்.
இதை கூர்ந்து பார்த்தால், புலிகளுக்கும் இவர்களுக்கு இடையில் வேறுபாடுகள் கிடையாது. பிரபாகரனின் மாவீர தினச் செய்தி போல் தான், இவர்களின் தீர்வுகளும் கூட்டம் உள்ளடக்கமும் அமைகின்றது. எப்படி பிரபாகரனின் மாவீரர் தினச் செய்திகள் மக்களைப்பற்றி பேசுவதில்லையோ, அப்படித்தான் புலியெதிர்ப்பு தீர்வுகளும் மக்களைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. புலிகள் சொந்த நலனில் இருந்து புலம்பல். புலியெதிர்ப்பு பேரினவாத நலன் சாhந்த புலம்பல்கள்.
சரி புலியெதிர்ப்பு தீர்வுகளும் வழிமுறைகளும் எந்த எல்லைக்குள் வைக்கப்டுகின்றது என்று பார்த்தால், அவை எதுவும் மக்களின் நடைமுறை போராட்ட எல்லைக்குள் வைக்கப்படுவதில்லை. மாறாக இலங்கையும் இந்தியாவும் ஏகாதிபத்தியமும் எதை தமது தீர்வு வழிமுறையாக கொள்கின்றதோ, அதையே புலியெதிர்ப்பு மீள வைக்கின்றது. இதுவே எதார்த்தமான உண்மை. இதற்கு வெளியில் வேறு எதையும் அவர்கள் தீர்வாக வைப்பதில்லை. அவர்கள் தாமாக மக்களுக்கு எதையும் வைப்பது கிடையாது.
இலங்கையும் இந்தியாவும் ஏகாதிபத்தியமும் முன்மொழிகின்ற எந்தத் தீர்வும், மக்களின் அரசியல் உரிமைகளை அங்கீகரிப்பதில்லை. இந்த அரசுகள் என்பது, மக்களை ஒடுக்கும் மக்கள் விரோத இயந்திரங்கள் தான். இப்படி இருக்க, அவர்களின் தீர்வுகளையே தமிழ் மக்களின் தீர்வு என்று விவாதிக்கவும், வைக்கவும் முற்படுவது நிகழ்கின்றது. தமிழ் மக்களை பண்ணைகளில் அடைத்துவிட்டு, அவர்களை பற்றி சுற்றி நின்று கதைக்கின்றனர். இப்படிக் கதைப்பதையே, இவர்கள் தமது ஜனநாயக உரிமை என்கின்றனர்.
மக்கள் அன்றாட சமூக வாழ்வியல் பிரச்னைகளுடன் சம்மந்தப்படாத வகையில், தீர்வுகளையும் வழிமுறைகளையும் மக்கள் மேல் திணிக்க முனைகின்றனர். உண்மையில் தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை, இவர்கள் முன்வைப்பதில்லை. தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையாகட்டும், பிரதேசப் பிரச்சனையாகட்டும், பாலின ஒடுக்குமுறையாகட்டும், சாதிய ஒடுக்குமுறையாகட்டும், இப்படி சமூகத்தின் அனைத்து சமூக ஒடுக்குமுறைகளையும் தீர்க்கும் தீர்வுகளை, இவர்கள் தமது தீர்வில் திட்டவட்டமாக நிராகரிக்கின்றனர்.
இதை முன்வைப்பவர்களை அன்னியமான, விசித்திரமான பிறவிகளாக காட்ட முனைகின்றனர். இதை நடைமுறை சாத்தியமற்றதாக காட்ட முனைகின்றனர். வேடிக்கை என்னவென்றால் மக்களின் பிரச்னைகள் இவையாக இருக்க, இதை நடைமுறை சாத்தியமற்றதாக கூறி வைக்கும் தீர்வுகளோ ஆலோசனைகளோ மக்களுக்கு எதிரானதாகவுள்ளது. இதனால் இனமாக, சாதியாக, பிரதேசவாதமாக, மதமாக, பாலாக சமூகம் மேலும் ஆழமாக பிளந்து கொண்டு போகின்றது. மற்றவனை ஒடுக்காத இணக்கத்தை ஒரு தீர்வாக உருவாக்குவதற்குப் பதில், ஒடுக்கு முறைகளை பரஸ்பரம் அங்கீகரித்த ஒரு தீர்வுகளையே தேடுகின்றனர்.
இவர்கள் அரசியல் செய்யும் தளம் மக்களல்ல என்பதும், ஒடுக்குபவனிடம் கூடிச் செய்யும் அரசியல் என்பதால், பரஸ்பரம் ஓடுக்குவதை அங்கீகரித்த தீர்வையே இவர்கள் தேட முனைகின்றனர்.
இப்படித் தான் தமிழ் மக்களுக்கு தமது தீர்வைத் தேடுகின்றனர். மக்களோ இலகுவாக தமக்குள் தீர்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் சேர்ந்து இணங்கி வாழ தயாராக உள்ள போது, மக்களுக்கு வெளியில் தீர்வை தேடுபவர்கள் அவர்களை பிரித்து வைக்கவே தீர்வைத் தேடுகின்றனர். இது தான் அரசியல் உண்மை.
மக்கள் வடக்கான் கிழக்கான் என்ற பிரிவினையை விரும்புகின்றனரா? தமிழ் முஸ்லீம் என்ற பிரிவினையை விரும்புகின்றனரா? தமிழன் சிங்களவன் என்ற அடிதடியை விரும்புகின்றனரா? தாழ்ந்தவன் நீ உயர்ந்தவன் நான் என்ற சாதியை மக்கள் விரும்புகின்றனரா? பெண் ஆணின் அடிமை என்பதை மனிதம் விரும்புகின்றதா. இல்லை மக்கள் அப்படி விரும்பவில்லை.
மக்கள் இணங்கி வாழும் தீர்வையே தமக்குள் கொண்டுள்ளனர். இல்லை மக்கள் இப்படி இணங்கி வாழக் கூடாது என்பதைத் தான், ஆதிக்க சக்திகள் விரும்புகின்றனர். அதைத் தான் தீர்வு என்ற பெயரில் மக்கள் மேல் மறுபடியும் திணிக்க முனைகின்றனர். இதற்கே ஆலோசனைகளை, கூட்டங்களை, விவாதங்களை செய்கின்றனர். மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளைப் பேசவும், சமூகப் பிரச்சனைகளை தீர்க்கவும் இவர்கள் கூட்டங்களை நடத்துவதில்லை. இது தான் உண்மை.
No comments:
Post a Comment