தமிழ் அரங்கம்

Tuesday, November 27, 2007

கறுப்பு வெள்ளைக் கோட்பாடே ராகவனின் புலியெதிர்ப்பு

பி.இரயாகரன்
27.11.2007


புலியெதிர்ப்புத் தளத்தில் இருந்த ஓருவர், சிலவற்றையாவது விவாதிக்க முற்படுகின்றார். அது ராகவன் தான். ராகவனின் நோக்கம் தெளிவானது. எப்படியென்றாலும் பரவாயில்லை, புலியை ஒழிக்க வேண்டும். புலியை ஒழிப்பதில் நடைமுறை சாத்தியமானதாக தான் நம்பும் வழிக்கு தடையானதை மறுத்தல் தான், ராகவனின் புலியெதிர்ப்பு கோட்பாடு. புலியை ஒழிக்கும் அந்த நடைமுறை சாத்தியமான தனது வழியை கூறுவதில்லை. ஏனென்றால் அது பேரினவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்தை சார்ந்து நின்று ஒழித்தலாகும். வேறு எந்த அரசியல் மார்க்கமும் வழியும் இவர்களிடம் கிடையாது.

மாற்றுகள் அனைத்தையும் அதன் உள்ளார்ந்த கோட்பாட்டையும் மறுத்தல் மூலம், மறுக்கின்ற புலியெதிர்ப்பு உத்தி. மக்கள் போராட்டத்தை மறுக்க வேண்டும். வெளிப்படையாக அதை செய்ய முடியாது. அது மார்க்சியம் சார்ந்தது என்பதால், மார்க்சியத்தை வரட்டுவாதமாக, ஸ்ராலினிசமாக சொற்களில் இழிவாடிக் காட்டுவது. ராகவனின் உத்தியே இதுதான்.

வேடிக்கை என்னவென்றால் புலியெதிர்ப்புக்கு சிவலிங்கம் குழையைக் காட்டி அழைத்து செல்லுகின்றார். ராகவன் தான் அந்த குழையை வெட்டும் ஒரு புலியெதிர்ப்பு தத்துவ மரமாக இருக்க முயலுகின்றார்.

தனக்கு எதிரான கோட்பாட்டை வரட்டுத்தனதாக கூறிக்கொண்டு, வரட்டுத்தனமாகவே ஒற்றைப் பரிணாமத்தில் அனைத்தையும் கறுப்பு வெள்ளையாக்குகின்றார். அது அல்லது இது என்று காட்ட முனைகிறார். புலி அல்லது புலியெதிர்ப்பு என்று அனைத்தையும் இதற்குள்ளாக்கி, கறுப்பு வெள்ளையாக்குகின்றார்.

இந்த முயற்சியில் அனைத்தையும் மறுத்தல் என்ற, மறுப்பியல் மூலம் விமர்சன அரங்கில் தலையிடுகின்றார். இதன் மூலம் தனது புலியெதிர்ப்புக்கு ஒரு தத்துவ முலாம் கொடுக்க தீவிரமாக முனைகின்றார். பல்வேறு இணையங்களில் அவர் தெரிவித்த கருத்துகளைக் கொண்ட இந்த புலியெதிர்ப்பு தத்துவசாரமோ, உள்ளடக்க ரீதியாக ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு உட்பட்டது தான். இதை தெரிந்து கொள்வது தான், இதன் பின்னணியையும் அதன் அரசியல் புலத்தையும் புரிந்த கொள்ள உதவும்.

மறுப்பியல் மூலம் தன்னை நிலைநிறுத்தும் உத்தி என்பது, புலியெதிர்ப்புக்கு எதிரான மாற்றுக் கருத்தை மறுப்பது தான். தாம் ஒன்று தான், புலிக்கு எதிரான மாற்று என்று காட்டமுனைவதாகும். அதாவது புலி மற்றும் புலியெதிர்ப்புக்கு மாற்றான மூன்றாம்தரப்பு கருத்தை மறுத்தலாகும். இதற்குள் தான் அவரின் மறுப்புக் கோட்பாடு இயங்குகின்றது.

இதனடிப்படையில் மார்க்சிய வாதங்களையும், அதன் அரசியல் அடிப்படைகளையும் மறுத்தலாகும். மார்க்சியத்தை வரட்டுத்தனமானதாக காட்டுவது, ஸ்ராலினிசமாக கற்பிப்பது, பழையவாதமாக காட்டுவது, வர்க்கம் என்று கூற முடியாது, வாதங்கள் நடைமுறை சாத்தியமற்றது, கடந்து காலத்தில் தோற்றப்போனது, என்று அவற்றை மறுப்பது. இப்படி மாற்றுகளை மறுத்து, தாம் மட்டுமே புலிக்கு மாற்று என்று சொல்ல முனைகின்றார். இப்படி மறுத்தல் மூலம், தமக்கு ஒரு புலியெதிர்ப்பு முற்போக்கு தத்துவம் உண்டு என்று காட்டுகின்ற உத்தி. எப்படி என்று மட்டும் வெளிப்படையாக அவர்களால் சொல்ல முடியாது உள்ளது. புலிக்கு மாற்று என்று இவர்கள் கூறும், அதாவது நடைமுறை சாத்தியமான கருத்தும் நடைமுறையும் வெளிப்படையானது. சிங்களப் பேரினவாத புலி ஒழிப்பு தத்துவத்தை, ஏகாதிபத்திய புலியொழிப்புத் தத்துவத்தையும், சாரமாகவும் நடைமுறையாகவும் கொண்டது. இவர்கள் இதை மட்டும் மறுக்க முடியாது என்பது தான், இதன் உட்சாரமாகும்.

இதனால் மக்கள் போராட்டத்தை வலியுறுத்தும் மார்க்சியத்தை எப்படி சிதைப்பது என்பது, இவர்களின் தத்துவமாகின்றது. நீங்கள் கூறுவது போல் வரட்டு மார்க்சியமாக அது இருந்து விட்டு போகட்டும். அது அதை முன்னெடுப்பவனின் பிரச்சனை.

தலித்தியம், தேசியம், ஆணாதிக்கம்.. போன்ற எல்லாப் பிரச்சனைகளும் இந்த சமூகத்தில் உள்ளது. இந்த சமுதாயத்தில் ஊடுருவியுள்ள இந்தப் பிரச்சனைகளை வரட்டுத்தனமானவர்கள் அதை எப்படியும் வைத்திருக்கட்டும். நீங்கள் எப்படி இந்த பிரச்சனை தீர்ப்பீர்கள். அதை முதலில் சொல்லுங்கள். அதைவிட்டு விட்டு அவர்களைச் சொல்லி, அரசியல் செய்ய முனைவது கேவலமல்லவா?

புலி இதைப் பாதுகாக்கின்றது. புலியொழிப்பில், இதை எப்படி நடைமுறைப்படுத்துவது? இது மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகள் அல்லவா? இதை ஒழிக்க, மக்கள் எப்படி நடைமுறையில் பங்கு பற்றுவது? அந்த அரசியல் கொள்கை, மற்றும் வேலைத்திட்டங்கள் என்ன?

மாhக்சிய வாதிகள் வரட்டுத்தனமாக பார்க்கின்றனர் என்று சொல்லுகின்றவர்கள், தான் எப்படி பார்க்கின்றோம் என்று எதையும் சொல்வதில்லை. புதிய ஆய்வுகள் தேவை, புதிய சூழலுக்கு ஏற்ற போராட்டம் தேவை, மார்க்சியத்தை விடுவிக்க வேண்டும் என்று பலதைக் கூறும் இந்த புலியெதிர்ப்பு கனவான்கள், அது என்னவென்று சொல்வது கிடையாது.

ஒவ்வொன்றையும் மறுக்கும் போது, மற்றொன்றை வைக்க தவறுகின்ற மறுப்பியல் வாதம். இது அவதூறையே அரசியலாகிப் போனவர்களின் செய்முறை அரசியல். மறுப்பியல் என்பது ஆதிக்கத்தில் உள்ளதையே மாற்று தீர்வாகின்றது. அதுவே ஏகாதிபத்திய உலகமயமாதல் தான் தீர்வாகின்றது. தேசத்தை, தேசியத்தை மறுத்தால், மாற்று என்பது நவகாலனித்துவமும் உலகமயமாதலும் தான். இதற்கு இடையில் வெற்றிடம் ஒன்றும் இருக்காது.

இதைத் தான் மறுப்புக் கோட்பாட்டில் ராகவன் கூறுகின்றார். மார்க்சியத்துக்கு வெளியில் மாற்று அரசியல் அரங்கு என்பது, எகாதிபத்திய உலகமயமாதல் அரசியல் தான். இதற்கு வெளியில் உந்த சுயதீனமான சிந்தனை முறையும் கிடையாது. ஏன் நடைமுறையும் கூட கிடையாது. இன்று உலகம் ஒற்றைப்பரிணாமத்தில், உலகத்தை எகாதிபத்தியமாகவே மாற்றி வருகின்றது. இது தேசம் மற்றும் தேசிய எதிர்ப்பிற்கான சிந்தனை முறையின் அரசியல் சாரமாகும். இப்படி சிந்தனை முறையும் இது அல்லது அது என்ற கறுப்பு வெள்ளை நிலைக்குள் மாறிவிடுகின்றது.

இதனால் ராகவன் மார்க்சியத்தை மறுப்பதன் மூலம், உலகமயமாதலை ஆதரிக்கின்றார். அவர் நாம் இதை ஒற்றைப் பார்வையில் பாhப்பதாக கற்பிக்க முனைகின்றார். நாம் இதைப் பார்க்கவில்லை, உலகம் அப்படித்தான் பொருள்வகைப்பட்டு இயக்கப்படுகின்றது. சர்வதேசியம் ஊடாக யார் தேசியத்தை உயர்த்துகின்றனரோ, அதாவது நாங்கள் பன்மைத்தன்மை பாதுகாக்க போராடுபவர்கள். இவர்கள் தான் மார்க்சியவாதிகள். சாதாரணமாக இலகுவாக இதை புரிந்து கொள்ள, இன்றைய விவசாயப் பொருட்கள் அதன் விதைகளையும் எடுத்தால், இதில் கூட தேசியம் உண்டு. தேசிய மறுப்பும் உண்டு. ஒற்றை விதையை, ஒற்றை மரபை, ஒரே பொருளை உலகம் திணிக்கின்றது. இதை தேசியம் மறுக்கின்றது. மார்க்சியம் பன்மையான விதைகளை, பன்மையான மரபை, பன்மைப்பொருளை பாதுகாக்கப் போராடுகின்றது. இதுபோல் தான் மொழியை எடுத்தால், உலகம் ஒற்றை மொழியை, ஒற்றைப் பண்பாட்டை, ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்கின்றது. நாங்கள் சர்வதேசியவாதிகள் தேசியம் சார்ந்து பன்மை மொழியை, பன்மைக் கலாச்சாரத்தை பாதுகாக்க போராடுகின்றோம்.

சமூகத்தின் அறிவியலை, அதன் சரியான அனைத்து சமூகக் கூறுகளையும், அதன் பன்மைத் தன்மையையும் தேசிய மறுப்பாளர்கள், உலகமயமாதல் ஆதரவாளர்கள் உலகமயமாதலுக்கு இரையாகின்றனர். உண்மையில் ஜனநாயக விரோதிகளாகவே இதிலும் உள்ளனர்.

இப்படி ராகவன் பின்னுள்ள அரசியல் என்பது, வெறும் புலியெதிர்பு மட்டுமல்ல, ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தவை.

பின் குறிப்பு:

இதை நாம் தொடர்ந்து அவரின் வாதங்கள் மூலம் மற்றொரு கட்டுரை மூலம் காண உள்ளோம்.

No comments: