தமிழ் அரங்கம்

Friday, November 30, 2007

எமது போராட்டத்தில் ஏகாதிபத்திய தலையீடு இருக்கவில்லையாம்!

பி.இரயாகரன்
01.12.2007


ப்படி புலியெதிர்ப்பு ராகவன் கூற முற்படுகின்றார். இன்றைய அவர்களின் ஏகாதிபத்திய பின்னணியை மறைக்க இது அவசியமாகின்றது.


இதை மூடிமறைக்க புலியெதிர்ப்பு ராகவன் கூறுவதைப் பாருங்கள். 'தேசிய இனமாக தமிழினம் வளர்வதற்கான போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் அது முற்போக்கானது என்பதற்கு என்ன அர்த்தம். வெறும் அருவமாக சொல்வதில் பயனேதும் கிடையாது. விவசாயி தொழிலாளி தலைமை தாங்க முற்போக்காக வந்து விடுமென்றால் ஏன் அதற்கு முடியவில்லை. இது நடைமுறை சாத்தியமா?" இங்கு ராகவன் இப்படிக் கேட்கின்ற 'இது நடைமுறை சாத்தியமா?" என்பது, ஒரு அற்பவாதியால் மட்டும் தான் கேட்க முடியும். நடைமுறைச் சாத்தியமான அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தான், இந்திய இலங்கை ஏகாதிபத்திய புலியொழிப்பு வேலைத் திட்டத்தை நடைமுறை சாத்தியமானதாக காட்டுகின்றது. மக்கள் தமது சொந்த விடுதலைக்காக போராடுவதை, நடைமுறை சாத்தியமற்றதாக காட்டுகின்றது.


இங்கு சரி பிழை என்பது, புலியெதிர்ப்பு அற்பவாதிக்கு முன் தனது நிலைக்கு ஏற்ப குறுகிவிடுகின்றது. நடைமுறை சாத்தியமானது மட்டும் தான் சரி என்று, யார் தீர்மானிப்பது? அரசியல் அடிவருடிகளா? அல்லது மக்களா? மக்களிடம் அரசியல் ரீதியாக போகாதவர்கள், அதை சாத்தியமற்றது என்று கூறுகின்றனர். அதாவது இலங்கை இந்திய ஏகாதிபத்திய நலன்களுடன் இருக்கின்ற சாத்தியமான அரசியலை பாதுகாப்பதே, புலயெதிர்ப்பின் மூல உபாயம்.


உண்மையில் ஒரு பிரச்சனை மீதான, வெளிப்படையான அரசியல் அணுகுமுறையின்றி 'இது நடைமுறை சாத்தியமா?" என்பது, திட்டவட்டமாக மனித குலத்துக்கு எதிரானது. புலிப் பாசிசத்தில் இருந்து மக்கள் விடுதலை அடைதல் என்பது, அவர்களின் சொந்தப் போராட்டத்தில் மட்டும் தான் சாத்தியமானது. இந்த வகையில் இயங்காத, இதை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளாத அனைவரும், படுபிற்போக்குவாதிகள் தான்.


தமது சொந்தப் பிற்போக்கு அரசியல் நடைமுறையை உயர்த்தவே, 'முற்போக்கானது என்பதற்கு என்ன அர்த்தம். வெறும் அருவமாக சொல்வதில் பயனேதும் கிடையாது" என்கின்றார். இப்படி ராகவன் உளறுகின்றார். அருபமாக சொல்லாத அந்த முற்போக்கு என்று, எதை நீங்கள் கருதுகின்றீர்கள்? உங்கள் அரசியலில் அரிச்சுவடியில், அப்படி ஒன்று கிடையாதா?


எங்கள் மார்க்சிய அரசியலில் அது உண்டு. மக்கள் நம்பி, அவர்களின் விடுதலைக்கு அவர்களே போராடுவது தான், முற்போக்கின் முதலாவது அடிப்படை அம்சம். ஆனால் அதுவே உங்களுக்கு, நடைமுறை சாத்தியமற்ற ஒன்று.


இன்று புலியெதிர்ப்பு மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளைப் பற்றி பேசுவது கிடையாது. இப்படி புலியெதிர்ப்பே அருபமாவது, இது எந்த முற்போக்குத் தன்மையுமற்றது.


புலிகள் மற்றும் அரசின் சமாதான நாடகங்களின் பின்பாக, அதாவது 2001க்கு பின் ஜனநாயகம் ஜனநாயகம் என்று சொல்லுகின்றீர்களே, அது என்ன? யாருக்கு ஜனநாயகம், எதற்கு ஜனநாயகம்? அது எப்படி நடைமுறையில் இயங்கும்? இப்படி ஜனநாயகத்தை அருபமாக்கி, அதைக்கொண்டு அரசியல் செய்பவர்கள் தான் புலியெதிர்ப்பு. ஜனநாயகத்தின் முற்போக்கு கூறை நிராகரித்து, அதில் உள்ள பிற்போக்கை கோருவதல்லவா புலியெதிர்ப்பு ஜனநாயகம். இப்படி புலிகளிடம் கோரும் புலியெதிர்ப்பு ஜனநாயகம் என்பது, மக்களின் ஒரு நேரக் கஞ்சிக்கு கூட உதவாது.


இப்படி புலியெதிர்ப்புக்கு தத்துவம் வழங்க முனையும் ராகவன், வைக்கும் புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய அரசியலைப் பாருங்கள். 'தமிழ் தேசிய உருவாக்கம் எவ்வாறு ஏகாதிபத்தியங்களால் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டது என்பதற்கு எந்தவித திண்ணியமான ஆதாரங்களும் கிடையாது." என்று கூறுகின்றார். என்ன அறிவு? என்ன நேர்மை? ஏகாதிபத்தியத்தை பாதுகாப்பதன் மூலம் தான், புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய தளத்தை பாதுகாக்க முடியும் என்ற எதிர்நிலைத் தர்க்கவாதம் தான் இது. இவை எல்லாம் வேடிக்கை தான்.


இவர் முன்னின்று வழி நடத்திய புலி இயக்கமே ஏகாதிபத்தியத்தால் வளர்க்கப்பட்ட ஒரு இயக்கம். எந்த உளவு அமைப்பும் நேரடியாக களத்தில் வருவதில்லை. அது வௌவெறு வழிகளில், சுற்றுவழிகளில் வருகின்து.


இந்தியா புலிகள் உள்ளிட இயக்கத்துக்கு பயிற்சிகளை வழங்கவில்லையா? வழங்கியது ஏன்? ஆயுதம் பணம் கொடுக்கவில்iயா? ஏன் இப்படி இயக்கங்களை வீங்க வெம்ப வைத்தனர். இந்தியா சில இயக்கத்தை குறிப்பாக்கி வளர்த்த போது, புலிகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அனுசரிக்கப்படவில்லையா? இஸ்ரேல் இராணுவ முகாமிலேயே புலிக்கு பயிற்சி அளிக்கப்படவில்லையா? எம்.ஜீ.ஆர் பெட்டி பெட்டியாக கொடுத்த பணம் யாருடையது. எம்.ஜீ.ஆர், மோகன்தாஸ் அமெரிக்க நலனைப் பிரதிபலிக்க வில்லையா? இந்தியா கூற, அநுதாரபுர படுகொலையை புலிகள் நடத்தவில்லையா?


இன்று இலங்கை இந்திய உளவாளிகள் செயல்படவில்லையா? அது அருபமானதா? ஆதாரமற்றதா? அவதூறா? ஏன், உங்கள் அரசியல் நலன்கள் அவர்களின் வேலைத்திட்டத்துக்கு உட்பட அதை பிரதிபலிக்கவில்லை? இவை எதுவும் அவதூறுகள் அல்ல. அன்றில் இருந்து இன்று வரையிலான எமது ஆதிக்க அரசியலே இது.


மக்கள் இயக்கம் உருவாகாத வகையில், இந்தியா ரூசியா ஏகாதிபத்திய பின்னணியிலும், மறுபக்கத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் இயங்கியது. இப்படி இரண்டு கூலிக் குழுக்கள் எம் மண்ணில் உருவாகின. உள்ளியக்க களையெடுப்புகள், அதாவது மக்கள் நலன் சார்ந்தவர்களின் படுகொலை என்பது, ஏகாதிபத்திய வழிகாட்டலுடன் தான் நடைபெற்றது. இப்படி உருவான இயக்க நலன்கள் ஏகாதிபத்திய நலன்களாகி, மக்களின் விடுதலைக்கு எதிரானதாக மாறியது.


அன்று முதல் இன்று வரை, இயக்க பின்னணியில் ஏகாதிபத்திய செயற்பாடுகள் இல்லையா? இலங்கை இந்திய உளவு அமைப்புகள் செயற்படவில்லயா? இன்று அவை இல்லையென்று, சொல்ல யாராலும் முடியுமா? புலியெதிர்ப்பு அரசியல், அதன் நடைமுறைகள், அதன் பின்னணிகள் அனைத்தும், ஏகாதிபத்திய மற்றும் இந்திய இலங்கை உளவு அமைப்புகளின் வழிகாட்டலுக்கு உட்பட்டதே. அவர்களின் நலன்களுக்கு இசைவானது. இதை எதிர்க்காத அனைவரும், அதற்கு துணை போபவர்கள் தானே. நீங்கள் யார் இதை எதிர்க்கின்றீர்கள். சொல்லுங்கள். உங்கள் பின்னணி முன்னணி எல்லாம் அவர்கள் தான்.


சரி கருணாவை புலியில் இருந்து பிளந்தது யார்? பிளவுக்கு முன்பே அன்னிய சக்திகளுடன் அவருக்கு தொடர்பு இருக்கவில்iயா? கருணாவின் பிளவின் பின்பான செயற்பாடுகள் முதல் இன்று வரை உளவு அமைப்புகள், அவரின் பின்னணியில் இல்லையா? இதே கருணா இந்தியா சென்றதும், இந்தியக் கூலிக் குழுவான ஈ.என்.டி.எல்.எவ் உடன் சேர்ந்து, கிழக்கு வாழ் தமிழ் மக்களை வேட்டையாடவில்லையா. எல்லாம் தலைமறைவில் நடக்கின்றது. ஏதோ தெரியாத மாதிரி கேட்பது, தமது பின்னணி முன்னணியை மறைப்பதற்காகத்தான்.


ரீ.பீ.சீக்கு பின்னால் ஈ.என்.டி.எல்.எவ்வும் இந்திய உளவு அமைப்பான ரோவும் இல்லையா? டக்கிளஸ் ஐயாவுக்கு பின்னால்! இப்படி இருக்க 'தமிழ் தேசிய உருவாக்கம் எவ்வாறு ஏகாதிபத்தியங்களால் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டது என்பதற்கு எந்தவித திண்ணியமான ஆதாரங்களும் கிடையாது." என்பது, உங்களின் இன்றைய அதே நிலையை பாதுகாக்க வைக்கும் தர்க்கமல்லவா.


இயக்கங்களின் பின்னணியில் அவர்கள் செயல்படுமளவுக்கு, இயக்க அரசியல் அதை ஆதரித்து நிற்கின்றது. இந்த வகையில் இலங்கை முதல் உலகம் வரை, தமிழ் மக்களுக்கான போராட்டத்தை, அவர்கள் சிதைத்து சீரழித்து வருகின்றனர். இன்றும் தமிழ் மக்கள் ஒரு சுயமான சொந்த அரசியலை வைப்பதற்கு எதிராக, சர்வதேச தலையீடுகள், வழிகாட்டல்கள் உண்டு. இதை எதிர்கொண்ட போராட்டம் எமது போராட்டம்.


பின் குறிப்பு:


தொடாந்து ராகவனின் வாதங்கள் மூலம் மற்றொரு கட்டுரையைக் காண உள்ளோம்.




No comments: