வரலாறு காணாத அளவுக்கு விவசாய உற்பத்தியில் பின்னடைவு; மிரள வைக்கும் அளவுக்கு உணவு உற்பத்தியில் தேக்கம்; புவிசூடேற்றத்தின் விளைவாக நிச்சயமற்ற பருவகாலங்கள்; விவசாயத்தையே விட்டு விரட்டப்படும் விவசாயிகள். இதன் ஊடாகவே விவசாயத்திற்கு மானிய வெட்டு; இடு பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு; மண் வளம் இழப்பு; நீர் பற்றாக்குறை என்று தொடர்தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது ஒட்டு மொத்த விவசாயம்.
தொடரும் இந்தத் தீராத சிக்கலிலிருந்து மீள, ஒப்பந்த (காண்டிராக்ட்) விவசாயம் செய்யுமாறு விவசாயிக ளுக்கு வழிகாட்டுகிறது, இந்திய அரசு. ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவிப்பதை 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கொள்கையாகவே அறிவித்திருக்கிறது, மன்மோகன் சிங் அரசு. ""விதையும் உரமும் பன்னாட்டு முதலாளிகள் கொடுப்பார்கள்; விளைபொருளுக்கான விலையையும் முன்கூட்டியே அவர்கள் தீர்மானித்து விடுவார்கள்; நிலமும் உழைப்பும் மட்டுமே விவசாயிக்குச் சொந்தம்'' இதுதான் ஒப்பந்த விவசாயம்.
இதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் பெப்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு பாசுமதி நெல்லைப் பயிரிட்டார்கள் விவசாயிகள். பன்னாட்டு கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கடுகும் உருளைக்கிழங்கும் பயிரிட்டார்கள். ஆனால், விளைந்த நெல்லும் கடுகும் கிழங்கும் தரமில்லை என்று கூறி ஒப்பந்தப்படி விலைதர மறுத்து ஏய்த்தன பன்னாட்டு நிறுவனங்கள். ஒப்பந்த விவசாயிகளோ போண்டியாகிப் போனார்கள். விவசாயிகளின் அதிருப்தியும் குமுறலும் போராட்டமாக வெடிக்கத் தொடங்கியதும், இப்போது இந்திய ஆட்சியாளர்கள் இன்னுமொரு மோசடி உத்தியுடன் களத்தில் இறங்கியுள்ளார்கள். அதுதான் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை(Agricultural Technology Management Agency - ATMA) என்கிற திட்டம்.
.
No comments:
Post a Comment