"புதிய இரு சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும்; அது குறித்து சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகள் தொடங்குவதாகக் கூறிக் கொண்டு, ரியல் எஸ்டேட் தொழில் நடக்கிறது; புதிய தொழிற்சாலைகள் தொடங்கும் போது பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; வெளிநாட்டினர் அல்லாமல் தமிழர்கள் தொழில் தொடங்க அரசு ஊக்குவிக்க வேண்டும்'' என்று கடந்த மே முதல் நாளில் காட்டமாக அறிக்கை வெளியிட்டார், இராமதாசு.
இதற்கு விளக்கமளித்து கேள்வி பதில் வடிவில் முதல்வர் கருணாநிதி ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டார். அதில், தவறான தகவல்களின் அடிப்படையில் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளதை அம்பலப்படுத்தியதோடு, கடந்த ஈராண்டுகளில் 13 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, அதில் 6 நிறுவனங்கள் பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 1 லட்சத்து 26 ஆயிரத்து 610 பேருக்கு வேலை கிடைத்துள்ளதாகவும் புள்ளி விவரங்களை அடுக்கி, எதையும் சந்தேகக் கண்ணோடு பார்க்காதீர்கள் என்று இராமதாசுக்குப் பதிலளித்தார். இராமதாசு இப்படியெல்லாம் கேள்வி எழுப்பிக் கொண்டிருப்பது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சியின் விசை ஒடிந்திடும் நிலைக்கு உள்ளாக்கும் என்றும் இடித்துரைத்தார். தூத்துக்குடி டைட்டானியம் ஆலை முதல் ஓசூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் வரை பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததே இராமதாசுதான் என்று சாடினார்.
உடனே இராமதாசு, ""நானா தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறேன்?'' என்று எதிர்கேள்விக் கேட்டு அறிக்கை வெளியிட்டார். ""வெள்ளை அறிக்கை கேட்டால் மவுனம் சாதிக்கிறார்கள். எத்தனை பேருக்கு, என்ன மாதிரியான வேலை கிடைத்துள்ளது என்று கேட்டால் பதில் இல்லை. வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு வேலையின்றி தவிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. கணினி தொழில்நுட்பத் துறை மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் வேலை வாய்ப்பைப் பெருக்கும்படி தொழிற்கொள்கை அமைய வேண்டும். வெளிநாட்டு உதவியுடன் வரும் முதலாளிகளுக்கு இங்குள்ள நிலங்களைத் தாரை வார்க்கக் கூடாது'' என்றெல்லாம் அதில் பொருமித் தீர்த்தார்.
.
1 comment:
இருவர் பேச்சிலும் அவர்களது சுயலாபம் பற்றி எரிகிறதோ.
Post a Comment