தமிழ் அரங்கம்

Tuesday, March 17, 2009

புலிகள் அழிவும், புலியிசமாகும் இலங்கையும்

புலி அழியவில்லை, மற்றொன்றாகவே பிரதியிடப்படுகின்றது. இலங்கை எங்கும் கட்டவிழ்த்து விடப்படும் பாசிசமே, புலி அழிப்பின் ஊடாக மேலெழுந்து வருகின்றது. சாதாரணமான பத்திரிகைச் சுதந்திரம் முதல் போலித் தேர்தல்கள் வரை பாசிசக் கும்பலின் அதிகாரத்தின் எல்லைக்குள் அதை முடக்கி வருகின்றது. அனைத்தும் பாசிசக் கும்பல்களின் அதிகாரத்துக்கானதும் இருப்புக்கானதுமாகி, அதுவே நாட்டின் ஜனநாயகமாகின்றது.

புலிகளிடம் தமிழ் மக்கள் எதை இழந்து இன்று அரசியல் அனாதைகளானார்களோ, அது இன்று இலங்கை முழுக்க உருவாகின்றது. மக்கள் மக்களுக்காக சிந்திக்கக் கூடாது, இது இன்று ஒரு தேசக் குற்றம். இதுதான் மகிந்த சிந்தனை. ஆம், புலிகள் அழியவில்லை, மற்றொரு புலியாகி, இலங்கை முழுக்கவே அதுவாகின்றது. மகிந்த சிந்தனை என்ன செய்கின்றது, தம்மை யாரும் எதிர்க்காத வண்ணம் அனைத்தையும் கருவறுக்கின்றது. புலியின் பெயரில், இதை செய்கின்றது. யுத்தத்தை வெல்ல இது தடையாக இருப்பதாக கூறி, புலி முத்திரை குத்தியும் தன் பாசிசத்தை சமூகத்தில் திணித்து வருகின்றது.

No comments: