தமிழ் அரங்கம்

Saturday, December 31, 2005

வியட்நாம், ஈராக் மீதான

ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள்

வியட்நாம்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் போராளிகளின் சிந்தையில் உற்சாகத்தைத் தோற்றுவிக்கும் மாபெரும் ஊற்று. இந்தோசீன தீபகற்பத்தில் இருக்கும் இந்தச் சிறிய நாடு கோலியாத் போன்ற அமெரிக்க வல்லரசை 1975ஆம் ஆண்டு வீழ்த்தி 30 ஆண்டுகள் முடிந்துவிட்டது. கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் வியட்நாமிய மக்கள், குறிப்பாக, விவசாயிகள் போராடிப் பெற்ற இந்த வெற்றி உலக வரலாற்றில் ஒரு சகாப்தம். அமெரிக்க அதிபர்கள் கென்னடி முதல் நிக்சன் வரை 10 ஆண்டுகளாக 50 சதவீத தரைப்படை, விமானப்படைகள், 15 விமானம் தாங்கிக் கப்பல்கள் என 10 லட்சம் துருப்புக்களைக் குவித்துக் கொண்டும், ஒரு கோடி டன் வெடிகுண்டுகள்; என வெறிகொண்டு தாக்கியும் அமெரிக்கா படுதோல்வியடைந்தது.

தங்களைத் தாங்களே ஆள்வதற்கும், போர் புரிவதற்கும் வியட்நாம் லாயக்கற்ற நாலாந்தர நாடு என்று 1970இல் அமெரிக்காவின் 37வது அதிபர் நிக்சன் எகத்தாளம் பேசினார். கடைசியில் முதல் தர நாடான அமெரிக்கா தனது படுதோல்வியை ஒப்புக் கொண்டு 1975இல் சமாதான ஒப்பந்தம் போட பாரீசு நகருக்கு வந்தது. இராணுவ ரீதியாக மட்டுமல்ல் அரசியல், உளவியல் மற்றும் தார்மீக ரீதியாகவும் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புப் போர் நடத்திய 10 ஆண்டு காலத்தில் அமெரிக்காவால் ஒரு வியட்நாமிய கம்யூனிசத் தலைவரைக் கூடப் பிடிக்க முடியவில்லை. அவர்களின் மறைவிடத்தையும் தாக்க முடியவில்லை. பதிலாக நூற்றுக்கணக்கான வியட்நாமிய கிராமங்களை சின்னாபின்னமாக்கி அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்கா.

அமெரிக்க இராணுவத்தின் மனதில் வியட்நாமிய மக்களின் வீரம் ஏற்படுத்திய பீதி நெடுங்காலம் ஆட்சி செய்தது. அதனால்தான் தற்போது ஈராக்கை கற்காலத்திற்கு அனுப்பும் வகையில் குண்டுவீசி அழித்துக் கொண்டிருக்கும் புஷ்ஷின் தகப்பன் 'அப்பா புஷ்' ஒருமுறை சொன்னார்: ''கடவுளே, இறுதியாக வியட்நாமிய பீதியை உதைத்து அனுப்பிவிட்டோம்.'' பாவம், புஷ் பரம்பரையின் வேண்டுதல் பலிக்கவில்லை. இப்போது ஈராக்கியப் போராளிகள் ஈராக்கிய பீதியை அமெரிக்காவின் மனதில் அடித்தல் திருத்தலில்லாமல் அழகாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

கணினியும், செயற்கைக்கோளும், பி52 எனும் பிரம்மாண்டமான குண்டுவீச்சு விமானங்களும் மனிதனின் விடுதலை உணர்வை வெல்ல முடியாது என்பதை உலகிற்கு உணர்த்தியது வியட்நாம். அதற்காக வியட்நாம் மக்கள் அளித்த விலையும் தியாகமும் ஒப்பிட முடியாத ஒன்று. போரில் வியட்நாமை நேரடியாக வெல்ல முடியாத அமெரிக்க இராணுவம் பல்வேறு இரசாயனக் குண்டுகளை வீசி வியட்நாமை மறைமுகமாக சுடுகாடாக்கியது. இந்தப் பேரழிவு ஆயுதங்கள் ஏற்படுத்திய பாதிப்பு குறித்த உண்மைகள் இன்றுவரை அமெரிக்காவால் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்த அநீதிக்காகவே இனிவரும் அமெரிக்க அதிபர்களையும் சேர்த்து சிரச்சேதம் செய்தால்கூட நீதியின் கணக்கு வழக்கு தீராது.

1950களில் மலேயாவிலிருந்து பிரிட்டிஷ் இராணுவம் கம்யூனிசப் போராளிகளை அழிக்க டயாக்சின் கலந்த இரசாயனக் குண்டுகளை முதன்முதலாகப் பயன்படுத்தியது. இதனால் நாட்டுப்புறங்கள் மற்றும் காடுகளில் மரங்கள், பயிர்கள் பட்டுப்போய் விவசாயப் பொருளாதாரம் அழிவுக்குள்ளானது. இதிலிருந்து பரிசோதனை செய்து ஏஜெண்ட் பர்ப்பிள், ஏஜெண்ட் ப்ளூ, ஏஜெண்ட் ஆரஞ்சு போன்ற பேரழிவு இரசாயனக் குண்டுகளை உருவாக்கியது அமெரிக்க இராணுவம். இவற்றை 1965 முதல் 1975 வரை கப்பல் கப்பலாகக் கொண்டு போய் வியட்நாமில் இறக்கியது. இதைப் பற்றி தெற்கு வியட்நாமில் இருந்த அமெரிக்க ஆதரவு பொம்மை ஆட்சியாளர்களுக்குக் கூடத் தெரியாமல் செய்தது அமெரிக்கா.

ஏஜெண்ட் ஆரஞ்சு எனப்படும் டயாக்சின் கலந்த இந்த வெடிகுண்டு 28 வகையான நோய்களை உருவாக்கும். இந்த நோய்கள் உடனடியாகவும் வரும். அல்லது 10,20 ஆண்டுகள் கழித்தும் வரலாம். டயாக்சின் நோய்களுக்கான சிகிச்சை செலவு மிக மிக அதிகம். நோய் இருப்பதைக் கண்டுபிடிக்கும் பரிசோதனைச் செலவு மட்டும் 45 ஆயிரம் ரூபாய் (45,000). வியட்நாமின் அமெரிக்க விமான ஓட்டிகள் பறந்த சென்சஸ் கணக்குப் படி 3,000 கிராமங்களில் 42,00,000 மக்கள் மீது ஏஜெண்ட் ஆரஞ்சு வீசப்பட்டுள்ளது. இதில் 5,00,000 மக்கள் கொல்லப்பட்டார்கள்; 7,00,000 மக்கள் டயாக்சின் பாதிப்பினால் நடைப்பிணமானார்கள். மொத்த வியட்நாமின் பரப்பளவில் 10 சதவீத நிலம் நஞ்சாக்கப்பட்டது. இந்த நச்சுத்தன்மை 7 அடி ஆழம் வரை நிலத்தில் ஊடுருவி முப்பது ஆண்டுகள் வரை அதனை பட்டுப்போன நிலமாக ஆக்கி விடும். ஏஜெண்ட் ஆரஞ்சின் பயங்கரத்தை ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் நியூயார்க் நகரத்தின் குடிநீர்த் தொட்டியில் இந்த வெடிமருந்தின் 80 கிராம் அளவு கலக்கப்பட்டால் அந்த நகரத்தின் 70,00,000 மக்களும் கொல்லப்பட்டு விடுவார்கள்.

வியட்நாமில் எவ்வளவு வீசினார்கள் என்ற கணக்கு எவருக்கும் தெரியாது. தற்போதைய ஆய்வின்படி சுமார் 600 கிலோ ஏஜெண்ட் ஆரஞ்சு வீசப்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படியென்றால் வியட்நாமின் பாதிப்பை நினைத்துப் பார்க்கவே நடுங்க வைக்கிறது. இரத்தத்தைக் கொதிக்க வைக்கும் இந்த உண்மை குறைந்தபட்சம் மேற்கத்தியச் செய்தி ஊடகங்களில் கூட வெளிவரவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது வியட்நாமிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய நட்ட ஈடு குறித்து எவரும் மறந்தும் கூடக் கேட்டதில்லை. ஆனாலும் உலகில் ஜனநாயகமும், ஐ.நா. சபையும் இன்னபிற இழவுகளும் இருப்பதாய்ச் சொல்கிறார்கள்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ஏஜெண்ட் ஆரஞ்சின் பயங்கரம் குறித்த உண்மைகள் வியட்நாம் மக்களை முன்னிட்டுப் பேசப்படவில்லை. மாறாக, வியட்நாமில் போரிட்ட 3,00,000 அமெரிக்க வீரர்களுக்கு டயாக்சின் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்து, அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. பாதிக்கப்பட்ட அமெரிக்க வீரர்களுக்கு நட்டஈடாகத் தரப்பட்ட 1,000 கோடி ரூபாய் மேற்குலகின் ஜனநாயகக் கண்களைத் திறந்துவிட்டது. ஏஜெண்ட் ஆரஞ்சு குறித்த பயங்கரம் உலகத்தின் தோலில் உறைத்தது. குண்டு வீசிய விமான ஓட்டுனர்களுக்கே இப்படியொரு பாதிப்பு என்றால் அதற்கு இலக்கான வியட்நாமிய மக்களின் நிலைமை எவ்வளவு பயங்கரமாக இருக்கும்.

அமெரிக்க இராணுவத்திற்கு டயாக்சின் எனும் இந்த இரசாயனப் பொருளைத் தயாரித்து அளிப்பது யார் தெரியுமா? நமக்கு அறிமுகமான மான்சான்டோ எனும் பன்னாட்டு நிறுவனம்தான். தற்போது பருத்தி விதைகளில் டெர்மினேட்டர், பி.டி. காட்டன் எனும் புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்தி நமதுநாட்டு பருத்தி விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளியதும் இந்நிறுவனம்தான். டயாக்சினைத் தயாரித்து அமெரிக்க இராணுவத்திற்கு சப்ளை செய்வதன் மூலம் கோடி கோடியாகச் சம்பாதிக்கிறது. இந்தக் கொலைகார நிறுவனத்திற்கு இந்தியாவிலும் ஆய்வகங்கள் இருக்கின்றன. மான்சான்டோவிற்கும் அமெரிக்க இராணுவத்திற்கும் உள்ள வர்த்தக உறவு முற்றிலும் இரகசியமானது. டயாக்சின்போல இன்னும் வேறு என்னென்ன இரசாயனக் கொலைப் பொருட்களை அந்த நிறுவனம் தயாரிக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

உண்மைகளின் மேல் ஏறி நின்று சளைக்காமல் பொய் சொல்வதில் அமெரிக்கர்களை யாரும் விஞ்ச முடியாது. அமெரிக்காவின் அரசுத்துறைச் செயலராக இருந்த காலின் பாவெல் இப்படிச் சொன்னார். ''முதல் உலகப் போருக்குப் பிறகு இரசாயன உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தியது ஈராக்கின் சதாம் உசேன்தான்.'' வியட்நாம் போரின்போதே இரசாயன ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தி விதிகளை மீறியது. இது ஒருபுறம் இருக்க, இரசாயன உயிரியல் ஆயுதங்களை இராணுவ இலக்குகளைத் தாக்குவதற்குக் கூடப் பயன்படுத்தக் கூடாது என்று 1980இல் ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்தத் தடையை ஈராக்கில் அமெரிக்கா வெளிப்படையாகவே மீறி இருப்பது அம்பலமாகியுள்ளது.

இத்தாலியின் அரசுத் தொலைக்காட்சி நிறுவனமான ஆர்.ஏ.ஐ. ''ஃபலூஜா மறைக்கப்பட்ட படுகொலை'' என்ற ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இதில் அமெரிக்க இராணுவம் எம்.77 எனும் வெள்ளை பாஸ்பரசைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இரசாயனக் குண்டை பலூஜா நகரத்தில் மக்கள் குடியிருப்பில் வீசியிருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது. பாஸ்பரஸ் குண்டு விழுந்த மாத்திரத்திலேயே 150 மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் எரிந்து, உருகி, இறந்து போனார்கள். பெண்கள், குழந்தைகளின் சட்டைகள் அப்படியே இருக்க சதையும், எலும்பும் சாம்பலாகும் கோரக் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. குண்டுவீசிய வீரர்களின் நேர்காணலும் படத்திலுள்ளது. இதை ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ளாத அமெரிக்க அரசு தற்போது ''ஆமாம், வீசினோம், அதனால் என்ன?'' என்று திமிராகப் பேசி வருகிறது.

அமெரிக்காவின் பிரம்மாண்டமான இராணுவ பலத்தை வெறும் மூங்கில் ஆயுதங்களைக் கொண்டு விரட்டியடித்தார்கள் வியட்நாமிய மக்கள். தங்கள் உடலையே ஆயுதமாக்கி அமெரிக்காவை எதிர்கொண்டு தாக்குகிறார்கள் ஈராக்கியப் போராளிகள். வியட்நாமிலும், ஈராக்கிலும் அமெரிக்கா ஏற்படுத்தியிருக்கும் பேரழிவுகளுக்கு வருங்கால வரலாறு நிச்சயம் கணக்குத் தீர்க்கும். வீரம் செறிந்த வியட்நாமின் 30 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறே அதை நிரூபித்திருக்கிறது.

மு வேல்ராசன்நன்றி புதியகலச்சாரம்

Thursday, December 29, 2005

ஏழை நாடுகளின் அந்நியக் கடன்

ஏழை நாடுகளின் அந்நியக் கடன் தள்ளுபடி:
மறுகாலனியாதிக்கத்தின்
'மனித முகம்'


வறுமை, பஞ்சம், பட்டினிச் சாவுகள் உலகெங்கிலும் பரவலாகக் காணப்பட்டாலும், இந்த மூன்றும் மற்ற நாடுகளைவிட, ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த மிகவும் வறியஏழை நாடுகளை ஒரு சாபக்கெடு போல பிடித்தாட்டி வருவதை யாரும் மறுக்க முடியாது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு எத்தியோப்பியர் பத்தாண்டுகளுக்கு முன்பு சோமாலியர் இப்பொழுது நைஜர், பர்கினோ ஃபாஸோ, மாலி, மொரிதானியா ஆகிய மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் பட்டினிச் சாவின் பிடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளன.

இந்நாடுகளில் வயதுக்கு வந்த பெரியவர்கள் காட்டுக் கிழங்குகளைத் தின்று உயிரைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளுக்கு ஒரு சொட்டு பால்கூடக் கிடைக்காததால், பட்டினியால் கொத்துக் கொத்தாக மடிந்து கொண்டிருக்கின்றன. வயல்வெளியெங்கும் செத்துப் போன ஆடு, மாடுகளின் எலும்புகள் சிதறிக் கிடப்பதைப் பார்க்கும் பொழுது, ''திறந்தவெளி இறைச்சி வெட்டும், கூடத்தில்'' நுழைந்துவிட்டதைப் போன்ற பீதி ஏற்படுகிறது.

அதிகார வர்க்கத்தின் கணக்குப்படியே நைஜரில் 36 இலட்சம் பேர்; பர்கினோ ஃபாஸோவில் 5 இலட்சம் பேர்; மாலியில் 11 இலட்சம் பேர்; மொரிதானியாவில் 8 இலட்சம் பேர் பட்டினிச் சாவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்க கண்டத்தில் நடக்கும் இப்பட்டினிச் சாவுகளைத் தடுத்து நிறுத்தக் கோரி, ஐரோப்பாவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்த பிறகுதான், ஏகாதிபத்திய நாடுகளின் எடுபிடியான ஐ.நா.மன்றம் ''கஞ்சித் தொட்டி''யைத் திறக்க முன்வந்தது; — அதுவும் நைஜரில் மட்டும்.

இதே சமயத்தில் ஸ்காட்லாந்தின் க்ளென்ஈகிள்ஸ் என்ற நகரில் கூடிய ஜி8 நாடுகளின் (அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ரசியா, கனடா, ஜப்பான்) தலைவர்கள், ஆப்பிரிக்காவில் இருந்து மட்டுமல்ல, உலகில் இருந்தே வறுமையை ஒழித்துக் கட்டப் போவதாகச் சபதம் எடுத்துக் கொண்டார்கள். இதற்காக, மிகவும் வறிய 18 ஏழை நாடுகள் தர வேண்டிய கடன்களை ரத்து செய்யப் போவதாக அறிவித்தார்கள். தற்பொழுது பட்டினிச் சாவுகள் நடந்து கொண்டிருக்கும் நான்கு ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்டு, 12 ஆப்பிரிக்க நாடுகள் இக்கடன் தள்ளுபடியால் பயன்பெறும் என்று ஜி8 மாநாட்டில் ஆரவாரமாக அறிவிக்கப்பட்டது.

மேலும், ''2010க்குப் பிறகு ஏகாதிபத்திய நாடுகள், ஏழை நாடுகளுக்குச் செய்யும் உதவி 4,000 கோடி அமெரிக்க டாலர்கள் (ஏறத்தாழ 1,80,000 கோடி ரூபாய்) அதிகரிக்கும். இதில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு 2,500 கோடி அமெரிக்க டாலர்கள் (1,12,500 கோடி ரூபாய்) கூடுதலாக உதவி கிடைக்கும்'' என்றும் ஜி8 நாடுகளின் தலைவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

இதைக் கேட்கும்பொழுது, 18 ஏழை நாடுகளின் வெளிநாட்டுக் கடன்கள் அனைத்தும் அடியோடு ரத்து செய்யப்படும்; இக்கடன் தள்ளுபடி போக, நிதியுதவி கிடைக்கும் என்று நாம் கற்பனை செய்து கொண்டால், நம்மைவிட ஏமாளி வேறு யாரும் இருக்க முடியாது.

''உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி ஆகிய நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்கள்தான் ரத்து செய்யப்படும். இதிலும் கூட, இந்த நிதி நிறுவனங்களிடமிருந்து வணிக நோக்கத்திற்காகப் பெறப்பட்ட கடன்கள் ரத்து செய்யப்படமாட்டாது. இந்த நிதி நிறுவனங்கள் அல்லாது, வேறு சர்வதேச நிதி நிறுவங்களிடமிருந்து பெறப்பட்ட கடன்களும் தள்ளுபடியாகாது. இதற்கும் மேலாக, இக்கடன் தள்ளுபடியால், இந்த மூன்று நிதி நிறுவனங்களுக்கும் ஏற்படக்கூடிய நட்டத்தை ஈடு செய்வதற்கு ஏற்றவாறு, ஏகாதிபத்திய நாடுகள் நிதி அளித்தால்தான் கடன் தள்ளுபடி நடைமுறைக்கு வரும்'' இவையனைத்தும் கடன் தள்ளுபடி என்ற டாம்பீக அறிவிப்பின் பின் மறைந்துள்ள நிபந்தனைகள்.

இது ஒருபுறமிருக்க, ரசிய ஏகாதிபத்தியம் தனது சார்பாக எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்படுகிறதோ, அதையே தனது கூடுதல் நிதியுதவியாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறிவிட்டது. பிரான்சு ஏகாதிபத்தியம், தான் அளிக்க வேண்டிய கூடுதல் நிதியுதவியில், மூன்றில் ஒரு பங்கு கடன் தள்ளுபடியாக இருக்கும் எனக் கூறிவிட்டது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், 18 ஏழை நாடுகளின் வறுமையை ஒழிக்க ஏகாதிபத்திய நாடுகள் அறிவித்துள்ள கடன் தள்ளுபடி கூடுதல் நிதியுதவி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத் தான் இருக்கும் என முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களே நையாண்டி செய்கிறார்கள்.

ஆப்பிரிக்காவைப் பிடித்தாட்டும் வறுமைக்கும், பஞ்சத்திற்கும் அக்கண்டத்து நாடுகளில் நடைபெறும் சர்வாதிகார ஊழல் ஆட்சி, இனக்குழுக்களுக்கு இடையேயான சண்டை இவைதான் காரணம் என ஏகாதிபத்திய நாடுகள் குற்றஞ் சுமத்துகின்றன. எனவே, கடன் தள்ளுபடி பெற விரும்பும் ஆப்பிரிக்க ஏழை நாடுகள், வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் இட்டுச் செல்லும் நல்லாட்சி நடைபெற உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கின்றன.

''எண்ணெய் வயல் நிறைந்த நைஜீரியாவில் நடந்த இராணுவ சர்வாதிகார ஆட்சியை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தேசங்கடந்த எண்ணெய் தொழிற்கழகமான ''ஷெல்'' தான் தாங்கிப் பிடித்தது; காங்கோவில் நடந்த மொபுடுவின் சர்வாதிகார ஆட்சிக்கு, பன்னாட்டு சுரங்கத் தொழிற்கழகங்கள்தான் முட்டுக் கொடுத்தன் ருவாண்டாவில் நடந்த ஹூடு டுட்ஸி இன மோதலுக்கு பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிதான் காரணமாக அமைந்தது; சியாரா லியோனின் வைரச் சுரங்கங்களைக் கைப்பற்றிக் கொள்ளுவதற்காகவே, அந்நாட்டில் ஏகாதிபத்தியங்களால் உள்நாட்டுக் கலவரம் தூண்டிவிடப்பட்டது'' என நீளமாகப் போகும் இந்தப் பழைய வரலாற்றை மறந்துவிட்டால், நாமும் ஏகாதிபத்தியங்களின் நல்லாட்சி திட்டத்திற்கு ''ஜெ'' போடலாம்.

ஆப்பிரிக்காவை இருண்ட கண்டமாக்கிய ஏகாதிபத்தியங்களின் சதி ஒருபுறம் இருக்கட்டும். ''வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் இட்டுச் செல்லும் நல்லாட்சி'' என்பதன் உண்மையான பொருள் என்ன தெரியுமா?

ஏகாதிபத்தியங்கள் அறிவித்துள்ள கடன் தள்ளுபடி சலுகையைப் பெறப் போகும் 18 நாடுகளுள் ஜாம்பியாவும் ஒன்று. இந்தச் சலுகையைப் பெறுவதற்காக, ஜாம்பியா, ஏகாதிபத்தியங்களின் கட்டளைப்படி, சமூக நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் தொகையை மேலும், மேலும் வெட்டித் தள்ளுகிறது.

இந்தப் பதினெட்டு நாடுகளுள் ஒன்றான கானா, தனது நாட்டின் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்புத் தொழிலையும் பாதுகாக்க, சிறப்புச் சட்டமொன்றினை இயற்றி வைத்திருந்தது. இச்சட்டத்தை நீக்கினால்தான் கானாவிற்குக் கூடுதல் நிதியுதவி கிடைக்கும் என உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் நெருக்குதல் கொடுத்ததையடுத்து, இச்சட்டம் நீக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் அந்நாட்டின் அரிசிச் சந்தையில் 40 சதவீதத்தைக் கைப்பற்றிக் கொண்டதால், அந்நாட்டின் உள்நாட்டு அரிசி உற்பத்தியே நிலைகுலைந்து போய்விட்டது.

கடன் தள்ளுபடி பெற விரும்பும் ஏழை நாடுகள் தனியார்மயம் தாராளமயத்தை மேலும் தீவிரப்படுத்தினால்தான், ஏகாதிபத்தியங்களிடமிருந்து நல்லாட்சி சான்றிதழைப் பெற முடியும். இதை, ''ஆப்பிரிக்க வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள்'' என்ற அமெரிக்கச் சட்டம் மிகவும் பச்சையாகவே கூறுகிறது:

''தனியார் சொத்துரிமையைப் பாதுகாக்கக் கூடிய சந்தைப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும்; அமெரிக்காவின் வர்த்தகத்திற்கும், மூலதனத்திற்கும் தடையாக இருக்கக் கூடியச் சட்டங்களை நீக்க வேண்டும்; அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு நாடு பிடிக்கும் மேலாதிக்கப் போர் வெறிக்கு ஒத்துழைப்பு தரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.''
தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் ஏகாதிபத்தியங்கள் திணிக்கும் இந்த சந்தை பயங்கரவாதம்தான், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பஞ்சத்தையும், பட்டினிச் சாவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த உண்மையை நைஜர் நாட்டு நிலைமை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது.

நைஜர் நாட்டு மக்கள் அரைக்கவளம் சோறு கிடைக்காமல் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும்போது, அந்நாட்டு அரசும், தரகு முதலாளிகளும் அண்டை நாடான நைஜீரியாவுக்கு அரிசியை ஏற்றுமதி செய்கிறார்கள்.

நைஜர் நாட்டு ஏழை விவசாயிகள், தங்களின் குழந்தைகளுக்குப் பால் கூட வாங்க முடியாமல் போண்டியாகி நிற்கும் பொழுது, அந்நாட்டுத் தலைநகரில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் ஒரு காபிக்கு ஏழு வகையான ஜீனி பரிமாறப்படுவதைக் குறிப்பிட்டு, அந்நாட்டில் செல்வம் ஒரு பக்கமும்; ஏழ்மையும் பட்டினியும் ஒரு பக்கமும் குவிந்து கிடப்பதை அம்பலப்படுத்துகிறார், ஒரு பத்திரிகையாளர்.

கடந்த ஏப்ரல் மாதம் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்க வேண்டும் எனக் கோரி, அந்நாட்டு தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பொழுது, ஐ.நா. மன்றமும், நைஜர் அரசும், ''இலசமாக அரிசி வழங்கினால், சந்தை பாதிக்கப்படும்'' என்ற மனிதத் தன்மையற்ற, இலாபவெறி பிடித்த காரணத்தைக் கூறி, இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்க மறுத்துவிட்டார்கள். இதற்குப் பரிசாகத்தான் ஏகாதிபத்திய நாடுகள், நைஜருக்குக் கடன் தள்ளுபடி என்று சலுகையைத் தூக்கிக் கொடுத்துள்ளன.

உண்மை இப்படியிருக்க ஏகாதிபத்தியங்களோ மழையின்மை, வெட்டுக் கிளி படையெப்பு போன்ற இயற்கை சீற்றங்களின் மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்ள முயலுகின்றன.


1970 தொடங்கி 2002 வரையில், ஆப்பிரிக்க நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து வாங்கிய கடன் 54,000 கோடி அமெரிக்க டாலர்கள்; இந்த 32 ஆண்டுகளில், வாங்கிய கடனுக்கு வட்டியாகவும், அசலாகவும் அந்நாடுகள் திருப்பிச் செலுத்தியிருக்கும் தொகை 55,000 கோடி அமெரிக்க டாலர்கள். வாங்கிய கடனுக்கு மேலே 1,000 கோடி அமெரிக்க டாலர்கள் (45,000 கோடி ரூபாய்) திருப்பிச் செலுத்திய பிறகும், கந்துவட்டிக்காரன் கணக்குப் போல, ஏகாதிபத்திய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் இன்னும் திருப்பி அடைக்க வேண்டிய அசல் 29,500 கோடி அமெரிக்க டாலர்கள் எனக் கணக்கு காட்டுகின்றன.

ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவனத்தையொட்டி அமைந்துள்ள நாடுகளில் இருந்து மட்டும், தாராள இறக்மதி என்ற பெயரில், கடந்த இருபது ஆண்டுகளில் 27,200 கோடி அமெரிக்க டாலர்களை (12,24,000 கோடி ரூபாய்) ஏகாதிபத்திய நாடுகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளன. இந்தப் பணம் அந்நாடுகளின் கஜானாவில் இருந்திருந்தால், ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து வாங்கிய கடனை மட்டுமல்ல, அந்நாட்டு மக்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து, வறுமையையும், பஞ்சத்தையும் ஓட ஓட விரட்டியிருக்க முடியும்.

ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், தனியார்மயம் தாராளமயத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் ஆப்பிரிக்க கண்ட நாடுகளில் இருந்து 10,400 கோடி ரூபாயை இலாபமாகக் கொள்ளையடித்துச் செல்கின்றன. இது, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏகாதிபத்திய நாடுகள் வழங்கும் வருடாந்திர நிதி உதவியை விட 14 மடங்கு அதிகம்.

இந்தப் புள்ளிவிவரங்கள் ஆப்பிரிக்காவின் வறுமைக்கும், பஞ்சத்திற்கும் ஏகாதிபத்தியச் சுரண்டல்தான் காரணம் என்பதை மட்டும் எடுத்துக் காட்டவில்லை. ஏகாதிபத்திய நாடுகள் அறிவித்துள்ள கடன் தள்ளுபடி, கூடுதல் நிதியுதவி என்பதெல்லாம் மிகப் பெரிய மோசடி என்பதையும் அம்பலப்படுத்திக் காட்டுகின்றன.

மாட்டை இரண்டு முறை தோலுரிப்பது என்பார்களே, அதைப்போல, ஏற்கெனவே ''கடன்'' என்ற போர்வையில் ஏழை நாடுகளை அடிமைப்படுத்திவிட்ட ஏகாதிபத்திய நாடுகள், இப்பொழுது தங்களதுச் சுரண்டலையும், மேலாதிக்கத்தையும் தொடரவும், தீவிரப்படுத்தவும் ''கடன் தள்ளுபடி'' என்ற முகமூடியை மாட்டிக் கொண்டு வருகிறார்கள். போலி கம்யூனிஸ்டுகளின் மொழியில் சொன்னால், ''கடன் தள்ளுபடி'' என்பது ஜி8 நாடுகள் மறுகாலனியாதிக்கத்திற்கு மாட்டிவிட்டுள்ள ''மனித முகம்!''

மு ரஹீம்
நன்றி புதியஜனநாயகம்

Tuesday, December 27, 2005

ஜெயதேவனும் ரி.பி.சியும் புலியின் பெயரால் நடத்தும் மக்கள் விரோத அரசியல்

மிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ரி.பி..சி யின்) அரசியல் என்ன? அதன் அரசியல் நோக்கம் என்ன? அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? இந்த வகையில் நேரடியாகவே நாம் இந்தக் கேள்வியை எழுப்பி, இவர்களின் மக்கள்விரோத செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளமுனைவோம்.

நாம் ஒருவனின் நேர்மையான அரசியல் செயல்பாட்டை, ஏன் அவனின் அரசியலை நாம் எப்படி புரிந்துகொள்வது? இதை நாம் முதலில் தெரிந்து கொள்ளும் முனைப்புவேண்டும். மக்கள் பற்றிய எமது மற்றும் உனது நிலைபாடு என்ன என்பதே, அனைத்துக்குமான அடிப்படையாகும். எமது அரசியல், எமது மற்றும் உனது நடைமுறை என அனைத்தும் மக்களின் நலன்கள் சார்ந்து, மக்களை செயலில் இறங்கக் கோருவதாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் சிந்திக்க, கருத்துரைக்க வேண்டும். அரசியல் ரீதியாக இதை முன்வைக்காத அனைத்தும் மக்கள் விரோதத் தன்மை கொண்டவையே. மக்களுக்கு வெளியில் நாம் பேசும் அரசியல், அந்த மக்களுக்கு எதிரான திட்டமிட்ட சதிகள் தான். அந்த மக்களின் பெயரில் நடத்தும் அரசியல் மோசடிதான். இங்கு மக்கள் நலன் என்பது, எப்போதும் எங்கும் பரந்துபட்ட மக்களின் சமூக பொருளாதார நலன்கள் தான்.

பேரினவாதம் மக்கள் என்ற பெயரில் தான் அனைத்தையும் செய்கின்றது. புலிகள் மக்கள் என்ற பெயரில் தான் அனைத்தையும்; செய்கின்றார்கள். இதில் இருந்து மாறுபட்ட வகையில் ரி.பி.சி கும்பல் செயற்படுகின்றதா? உங்களைப் பார்த்துத்தான் தான், இதை நான் கேட்கின்றேன். ரி.பி.சி கும்பல் மக்கள் நலன் சார்ந்தது என்று நம்பிய நீங்கள், அதன் கருத்துக்களை கிளிப்பிள்ளை போல் உள்வாங்குகின்றீர்கள். நான் உங்களை கேட்கின்றேன், ரி.பி.சி மக்கள் நலன் சார்ந்தது என்று உங்களால் உறுதி செய்யமுடியுமா?

புலிக்கும், ரி.பி.சி க்கும் கொள்கையளவில் என்ன வேறுபாடு உள்ளது. உங்களால் இதை வேறுபடுத்திக் காட்ட முடியுமா? ரி.பி.சி கூறுவது போல் புலிகளை ஒழித்தால், அதில் மாற்றீடாக எந்தவகையான ஒரு மாற்றீட்டை கொண்டுவர முனைகின்றனர். ரி.பி.சி கும்பல் ஆயுதம் ஏந்தினால் என்ன செய்வார்கள்;. பதிலை நீங்களே கேட்டுப் பாருங்கள். அவர்கள் இன்னுமொரு புலியாகவே இருப்பார்கள். ஏன்? இதை நீங்கள் என்றாவது கேட்டுபார்த்தது உண்டா! நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு ரி.பி.சி கும்பலுக்கு ஆதரவு அளிக்கும் போது, என்றாவது புலியின் அரசியலில் இருந்து எந்த வகையில் இவர்கள் வேறுபட்டவர்கள் என்று நீங்கள் கேட்டுப் பார்த்தது உண்டா? புலி ஆதரவாளர்கள் போல் அல்லவா நாங்களும் இருக்கின்றோம் என்பதை, நீங்கள் என்றாவது உணர்ந்ததுண்டா! இதை நீங்களே உங்களைப் பார்த்துக் கேட்டுக் கொள்ளுங்கள்.

புலிகள் என்பது தனிப்பட்ட பிரபாகரனின் கண்டுபிடிப்பல்ல. இதையே அவர்கள் சொல்வதற்கு அப்பால், இதையே ரி.பி.சி கும்பலும் கூறுகின்றது. புலிகள் என்பது அவர்கள் முன் வைக்கும் மக்கள் விரோத அரசியல் (வர்க்க) உருவாக்கியது. இந்த இடத்தில் பிரபாகரன் இருந்தாலும் சரி, ஜெயதேவன் இருந்தாலும் சரி, ஒரே மாதிரியான அரசியல் அணுகுமுறைதான் இருக்கும்;. இந்த இடத்தில் "நான்" இருந்தாலும் அதுதான் நிகழும். தனிப்பட்ட தலைமைக்குரிய ஆளுமை சில செல்வாக்கை செலுத்தினாலும், மக்கள் விரோத அரசியல் (வர்க்க) உள்ளடக்கம் மாறிவிடாது. மக்கள் நலன் சார்ந்த தலைமை என்பது, மக்கள் நலன் சார்ந்த அரசியலுடன் (வர்க்க நலன்) தொடர்புடையது. புலியின் மக்கள் விரோத வர்க்க அரசியலுக்கு பதில், மக்கள் நலன் சார்ந்த வர்க்க அரசியலுக்கு பிரபாகரன் தலைமை தாங்கினால், மிக சிறந்த பண்புள்ள மக்கள் தலைவராக இருப்பார். இங்கு பினாமிகள் யாரும் வந்து "மேதகு" என்று போற்ற வேண்டிய அவசியமில்லை. மக்களே தமது மேதமை கொண்ட தலைவர்களை ஆழமாக நேசிப்பர்.

ரி.பி.சி அரசியல் பேசும் பாதிரிமாரும் அவர்களின் எடுபிடிகளான அலுக்கோசுகளும் சொல்வது என்ன? புலிக்கு மாற்று புலியைப் போன்ற அரசியலுடைய மற்றொரு மக்கள் விரோதக் கும்பலையே முன்வைக்கின்றது. இதற்காக புலியை ஒழிக்க ஏகாதிபத்திய துணையை நாடுகின்றனர். அதாவது ஈராக்கில் என்ன நடந்ததோ, அதையே இங்கு அமுல் செய்ய துடிக்கின்றனர். ஈராக்கில் இறக்குமதி செய்யப்பட்ட புதிய திடீர் கைக்கூலி அரசியல் தலைவர்கள் போல், தாம் இருக்க (குறிப்பாக ஜெயதேவன் போன்றவர்கள்) விரும்புகின்றனர். அந்த அரசியலைத்தான் இன்று ரி.பி.சி கும்பல் செய்கின்றது. இதை யாரும் மறுத்து நிறுவமுடியாது.

இதை புலியின் மனிதவிரோத அரசியல் மீது கொடிகட்டி ஏற்றுகின்றனர். புலிகளின் ஈவிரக்கமற்ற பாசிச நடைமுறைகள், இரத்தமும் சதையும் கொண்ட அவலமான சமூக அராஜகத்தை உருவாக்குகின்றது. மனிதன் நிமிர்ந்து கூட பார்க்க முடியாத மனித அவலங்கள் எங்கும் தலைவிரித்தாடுகின்றது. எங்கும் சுவாசிக்கும் காற்றுக் கூட இரத்த வாடையுடன் வீசுகின்றது. பாக்குமிடமெங்கும் உயிருடன் சிதறிய சதைப்பிண்டங்கள். மனிதன் தான் மட்டுமே, மற்றவர் பாராது ஒழித்து நின்றே கண்ணீர் வடிக்கின்றான். இந்தக் கண்ணீரோ இரத்தமாகி ஒடுகின்றது. இதை ரி.பி.சி தனது ஏகாதிபத்திய ஆதரவு அரசியலுக்கு பயன்படுத்த நினைப்பதன் மூலம், எதை தமிழ் மக்களுக்கு கொடுக்க முனைகின்றனர். இதை நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?

தமிழ் மக்களின் இன்றைய பிரச்சனைகள் பேரினவாத வழியில் வந்தாலும் சரி, குறுந்தேசிய புலிகள் வடிவில் வந்தாலும் சரி, மக்கள் தாம் தமது சொந்தப் பலத்தில் நின்றே இதை எதிர்கொள்ள வேண்டும். இது புலிக்கும் பொருந்தும். ரி.பி.சிக்கும் பொருந்தும். இந்த அரசியல் உண்மையை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் புலியெதிர்ப்பு கும்பல் இதை திட்டவட்டமாக நிராகரிக்கின்றது. உண்மையில் இவர்களின் சோரம் போகும் அரசியல் என்பது, தமிழ் மக்களுக்கு புதிய அடிமை விலங்கை அணிவிக்க முனைகின்றது. இது அன்னிய சக்திகளின் தயவில் அரங்கேற்றப்படுகின்றது. சமூக கொந்தளிப்புகளுக்கும், சமூக அவலங்களுக்கும் தீர்வுகள் என்பது, மக்கள் மத்தியில் இருந்து அவர்களே தாமே தீர்;த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்படவேண்டும். இதில் ஒவ்வொருவரும் ஒரு உறுப்பினராக இருக்க முடிமே ஒழிய, அன்னிய எடுபிடிகளாக இருக்க முடியாது.
இதை மறுத்து இது சாத்தியமில்லை என்று கூறும் அரசியல், மாறாக எதைத்தான் முன்மொழிகின்றது. இந்த கேள்விக்கும் விடைக்கும் இடையில் உள்ள அரசியலை புரிந்து கொள்ளத் தவறுவோமாயின், பாலசிங்கத்தின் கூட்டத்தில் விசிலடித்த ஆதரவாளர்கள் நிலையில் தான் புலியெதிர்ப்பு அணி உள்ளது என்பதே உண்மை. அதாவது புலியெதிர்ப்பு அணியும் கூட, விசிலடிக்கின்ற கூட்டம் தான்.

மக்கள் தமது சொந்த பிரச்சனைகளை தாமே தீர்க்கும் வகையில் முன்னெடுக்காத அரசியல் செயல்பாடுகள் தான் என்ன? இதை சுயஅறிவுள்ளதாக கருதும் நீங்கள் யாராவது சுயமாக கேட்டுப் பாhத்ததுண்டா? மக்கள் சம்பந்தப்படாது எதுவாக இருந்தாலும், அது மக்களுக்கு எதிரானது தான். அது மக்களுடன் தொடர்பற்றது. அவை மக்களின் வாழ்வுடன் எந்தவிதத்திலும் ஒன்றியிருப்பதில்லை.

ரி.பி.சி யின் கும்பல் அரசியல் என்பது தெளிவாக மக்களைச் சார்ந்து நிற்காத ஒரே காரணத்தினாலேயே அவை மக்களுக்கு துரோகம் செய்பவை. இந்த அரசியல் துரோகம் என்பது, புலியை அழித்தல் என்ற பெயரில் புலியல்லாத அனைவருடனும் கூட்டுச் சேருகின்றது. இதை யாரும் இல்லை என்று இன்று மறுக்கமுடியாது. புலியல்லாத அன்னிய சக்திகளுடன், சிங்கள பேரினவாதத்துடன் தமது சொந்த அரசியலை அடையாளப்படுத்தியே, இந்த புலியெதிர்ப்பு கும்பல் வளர்ச்சியுறுகின்றது. ஏகாதிபத்தியங்களின் எடுபிடிகளாக செயல்படுவதையே, இவர்களின் அரசியல் தெளிவாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. புலியின் நடவடிக்கை ஒவ்வொன்றையும் கடுமையாக எதிர்நிலையில் வைத்து எதிர்க்கும் இவர்கள், பேரினவாதத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்டும் காணாமல் அல்லது அதை ஆதரிக்கும் தர்க்க வாதங்களை முன்வைக்கின்றனர். அதேநேரம் ஏகாதிபத்தியம் முன்வைப்பதை தீர்வாக முன்மொழிகின்றனர். இதுதான் புலியெதிர்ப்பு கும்பலின் அரசியல் எல்லை. ஏகாதிபத்தியங்களுடன் மிக நெருக்கமாக கூட்டாக செயல்படத் தொடங்கியுள்ளனர். அதை அவர்கள் பிரகடனம் கூட செய்து வருகின்றனர்.

புலம்பெயர் நாடுகள் பெருமளவில் ஏகாதிபத்தியங்களாக உள்ள நிலையிலும் கூட, தனிப்பட்ட நபர்களின் மீதான வன்முறைகள் மற்றும் இது போன்றவற்றில் இந்த நாட்டின் சட்டத் திட்டத்துக்கு அமைவாக போராடுவது துரோகத்தனமானவையல்ல. அதாவது அந்த நாட்டு மக்கள் எப்படி ஒரு வன்முறையை எதிர்கொள்கின்றனரோ, அதுவே எமது உயர்ந்தபட்ச எல்லையாகும். இதுவல்லாத அனைத்தும் துரோகத்தனமாகும்;. உதாரணமாக இலங்கை இனப்பிரச்சனையில் ஏகாதிபத்திய தலையீட்டை நடத்தவும், புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கோரியும் ஏகாதிபத்திய அரசுடன் கூடிக்குலாவும் அரசியல் துரோகத்தனமானது. இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும், இலங்கையின் முழு மக்களுக்கும் கூட இது எதிரானது. தனிமனிதனிடம் புலிகள் நிர்ப்பந்தித்து பணம் வாங்குதல் என்பதை, இங்குள்ள சட்டத்திட்டத்தின் அடிப்படையில் தனிமனிதனாக எதிர்கொள்வது அரசியல் செயல்பாடல்ல. மாறாக இலங்கையின் மொத்த அரசியலை எடுத்து, ஏகாதிபத்திய தலையீட்டைக் கோரும் போதே, அது மக்கள் விரோத அரசியல் பரிணாமத்தைப் பெறுகின்றது. தனிமனிதனின் தனிப்பட்ட செயல்பாடுகள், அந்த நாட்டின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டது. அரசியல் செயல்பாட்டில் உள்ளவர்களின் செயல்பாடுகள் அந்த நாட்டின் சட்டதிட்டத்தைக் கடந்து, அந்த நாட்டின் உலகளாவிய மக்கள் விரோத அரசியல் சதிக்கு துணையாக அமையக் கூடாது.

இந்த ரி.பி;சி கும்பல் கைக்கூலிகள் அல்ல என்றால், குறிப்பாக ஏகாதிபத்திய நாட்டில் கைக்கூலிகள் எப்படி இருப்பார்கள். அவர்கள் என்ன செய்வார்கள். தமிழ் மக்களின் போராட்டத்தில் கைக்கூலிகள் என்ன மாதிரி தகவலை ஏகாதிபத்தியத்துக்கு வழங்குவர். ஏகாதிபத்திய அமைப்பு என்னமாதிரியான தகவலை பெற முனைவர்?. அவர்கள் எதைச் செய்யக் கோருவர். இதை நீங்கள் உங்களையே கேட்டு பதிலை தெரிந்து கொண்டு, விடையத்தை புரிந்து கொள்ள முயலுங்கள்.

தமிழ் மக்களின் முதுகில் குத்தும் ஜெயதேவனின் அரசியல்

ஜெயதேவன் தமிழ் மக்களுக்கு செய்ய முனைவது, அன்னிய ஆக்கிரமிப்பை இலங்கையில் நடத்துவது தான். இதை எப்படி நடத்துவது என்பதை, அவர் வெளிப்படையாகவே செய்கின்றார். அன்னிய ஏகாதிபத்திய சக்திகளுடன் அன்றாடம் இதற்காகவே கூடிக் கூலாவுகின்றார். ஒரு காலத்தில் அன்னிய சக்திகளை பயன்படுத்தி புலியின் பாசிசத்தை நியாயப்படுத்தவும், பாதுகாக்கவும் இதையே செய்தார். இன்று இதை எதிர்நிலையில் புதிய பாசிச சக்திகளை புலிக்கு மாற்றாக கொண்டுவர முனைகின்றார். இந்தவகையில் அன்னியக் கைக்கூலியாக செயல்படுகின்றார்.

உண்மையில் ஜெயதேவன் ரி.பி.சிக்கு வருகை தந்த பின்பான அரசியல் பரிணாமம், மிகத் துல்லியமாக ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தை அப்பட்டமாக செய்யத் தொடங்கியுள்ளது. உதாரணமாக அதை அவர் வெளிப்படுத்தவும் செய்தார். இலங்கையில் எண்ணை எதுவும் இல்லை. அதனால் ஜனநாயகத்தின் பெயரில் ஏகாதிபத்தியம் தலையிடாது. இதனால் நாம் முயன்று தலையிட வைக்க வேண்டும் என்றால், புலியெதிர்ப்பு ஆர்பாட்டங்கைள நடத்த வேண்டும் என்றார். இது பத்து பேரில் இருந்து ஆயிரமாக வேண்டும். அன்னிய தலையீட்டை நியாயப்படுத்த, நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இந்தச் செய்தி. இந்த வகையில் தான் முதலாவது ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஐரோப்பியயூனியன் முன் ரி.பி.சிக்கு ஊடாக நடத்தினார். இந்த விடையத்தை ஜெயதேவன் மட்டும் தான், புலியெதிர்ப்புக் கும்பலில் தெளிவாக புரிந்துள்ளார். எது நடக்கவேண்டுமோ, அதை நோக்கி அவரின் முன்னெடுப்புகள் தெளிவாக உள்ளது.

ஜெயதேவன் புலிகளினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நிலையில், பிரிட்டிஸ் ஆளும் வர்க்கத்தால் கருசனையுடன் மீட்கப்பட்டவர். இந்த அடையாளத்துடன் தான் ரி.பி.சிக்கு வருகை தருகின்றார். நான் புலிகளினால் கைது செய்யப்பட்டது எப்படி நியாயமாகும் என்ற வாதங்கள் மூலமும், எந்த நீதி விசாரணையும் கிடையாது என்ற தர்க்கத்துடன் தன்னை நிலைப்படுத்தத் தொடங்கினார். அங்குள்ள மனிதவிரோத நடைமுறைகளுடன் அணுகுகின்றார். பண்பாக பேசுதல், தம்பி போட்டு கதைத்தால் (புலிகள் அண்ணை போட்டு கதைப்பார்கள்) மூலம், தமிழ் மக்களின் அரசியல் அறியாமை மீது ஒரு பிற்போக்கு அரசியலை திட்டமிட்ட வகையில் நகர்த்துகின்றார். அத்துடன் படித்தவர், பண்பாளர், நேர்மையானவர், புலியின் துன்பத்தை நேரில் அனுபவித்தவர், புலிகளுடன் நேர்மையாக கதைக்கச் சென்றவர், புலிக்கு பல வழிகளில் உதவியவர், பிரிட்டிஸ் ஆளும் வர்க்க அரசியல்வாதி, சாதிமான், கோயில் நிர்வாகி என சமூகத்தை ஏமாற்றக் கூடிய, பற்பல பொது அங்கீகாரம் பெறத்தக்க சமூகத் தகுதிகள். இதைக் கொண்டு அவர் சொல்ல வரும் அரசியல் அன்னிய தலையீடுதான். புலிக்கு பதில் தன் தலைமையிலான (தன்னைப் போன்ற) புதிய தலைமை. புலிகளின் அதே வர்க்க அரசியலே, அவரின் அரசியல். இதில் முரண்பாடில்லை. முரண்பாடு தன்னைப் போன்றவர்கள் மீதான நடவடிக்கை அவசியமற்றது என்பதே. அதில் இருந்து முரண்பாடான அரசியல் முன்னெடுப்புகள். புலியை அன்று பிரிட்டிஸ் தடைசெய்த போது, அதை எதிர்த்து நீதிமன்றம் வரை செல்ல முயன்றவர், இன்று ஐரோப்பிய யூனியன் முன் சென்று புலியை தடை செய்யக் கோருகின்றார்.

இப்படி அரசியலின் மற்றொரு கோடிக்குச் சென்று மக்கள் விரோத அரசியலைச் செய்கின்றார். அன்று புலியை ஆதரித்த போது மக்கள் விரோத அரசியலே அவரின் அரசியலாக இருந்தது. இன்று ஏகாதிபத்தியத்தின் பின்நின்று, அதே மக்கள் விரோத அரசியலையே அவர் பண்பாகச் செய்கின்றார். ஐரோப்பிய யூனியன் முன்னான புலியெதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னனியில் ஜெயதேவனின் திட்டமிட்ட அரசியல் நகர்வுள்ளது. இது ஜெயதேவன் போன்றவர்களின் சொந்தக் கண்டுபிடிப்பல்ல. மாறாக இலங்கையை நேரடியாகவே மறுகாலனியாக்க, விரும்பும் ஏகாதிபத்தியங்களின் தெளிவான ஆலோசனைகள் தான் இவை. இதற்கு மேல் எதுவும் இவர்களின் அரசியலில் கிடையாது. துல்லியமாக யாரையும் விட, ஏகாதிபத்திய தலையீட்டுக்குரிய சூழலை உருவாக்குவது எப்படி என்பதை ஜெயதேவனால் மட்டும் தான் வழிகாட்டமுடிகின்றது. கடந்துவந்த வரலாற்றில் இந்தியா, இலங்கை கைக்கூலிகளாக ஒரு தலைமுறையை சிதைத்த சில தலைமைகள் போல், இன்று புலி அம்பலமாகி வரும் வெற்றிடத்தில் ஏகாதிபத்திய கைக்கூலிகளே அந்த இடத்தை நிரப்ப முனைகின்றனர். இது ஒரு ஆச்சரியமான உண்மை.

ஏகாதிபத்திய கைக்கூலியாக செயல்படும் ஜெயதேவன், இன்று ரி.பி.சி ஊடாக சமூக அரங்கில் வரமுன்னம் என்னசெய்தார். புலிகளின் அனைத்து மக்கள் விரோத செயல்பாட்டையும் ஆதரித்து நின்றவர். சகல மனிதயுரிமை மீறலையும் பூசி மெழுகும் ஒரு மக்கள் விரோத செயலைச் செய்தவர். புலிகள் செய்த ஒவ்வொரு கொலைக்கும், ஒவ்வொரு மனிதயுரிமை மீறலுக்கும் ஜெயதேவன் போன்றவர்களின் ஆதரவு இன்றி, இவர்களின் நிதி வளங்களுமின்றி எதுவும் நடக்கவில்லை. இன்று அதையே எதிரணியில் நின்று செய்கின்றார். பாதிக்கப்பட்டது அன்று மக்கள் தான், இன்றும் அதே மக்கள் தான்.

அவரை கைது செய்த புலிகள், அவருக்கு ஞானப்பாலைக் கொடுத்து ஞானம் கொடுக்க முன்பாக, பல ஆயிரம் இளைஞர்களை புலிகள் கொன்று குவித்திருந்தனர். அப்போதெல்லாம் ஜனநாயகம் பொத்து கொண்டு வரவில்லை. அவர் கூறுவது போல் தேசியத்தை ஆதரிக்க வேண்டியிருந்தது அதனால் ஆதரித்தோம், அதேபோல் தான் தேசியத்துக்காக கொலைகளை நியாயப்படுத்தினோம். இதை மட்டும் அவர் நேரடியாக சொல்லவில்லை, மறைமுகமாக சொல்ல முனைகின்றார். இதில் வேடிக்கை என்னவென்றால் அப்போதும் இன்றைய பிரிட்டிஸ் தொழில் கட்சியின் உறுப்பினர். தற்போதும் அக்கட்சியின் உறுப்பினர். இது எதைச் சொல்லுகின்றது. அவர் அரசியல் ரீதியாக தன்னை மாற்றவில்லை என்பதையே. அரசியல் ரீதியாக ஒரே அரசியல். தனிப்பட்ட முரண்பாடு, எதிர் அரசியலாக வருகின்றது. அதாவது எதிர்கட்சி அரசியல் வகைப்பட்டது. இது தெளிவாக மக்கள் விரோத அரசியல் தான்.

இப்படி சொந்த நலன் சார்ந்து குத்துக்கரணமடித்து, ஜனநாயகம் பற்றிய திடீர் அக்கறை போலியானது. சாதாரண மனிதன் இப்படி உணர்வது வேறு, அரசியல்வாதிகள் இப்படி திடீர் வேஷம் கட்டியாடுவது வேறு. திடீர் ஜனநாயகவாதியாக முன் மற்றவனுக்கு ஜனநாயகம் மறுக்கப்பட்ட போது, அதற்கு தூணாக துணை நின்றவர் தான் இவர். இன்று அதுதான் அவரின் நிலை. இன்று அவர் திடீர் ஜனநாயகத்தை மீட்க பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள், இலங்கையில் தலையிட வேண்டும் என்ற கொள்கையை அவர் முன்வைக்கின்றா. இந்த வகையில் அவர் ஒரு ஜனநாயக விரோதியாகவே உள்ளார். மக்களின் ஜனநாயகத்தை, அவர்களின் போராடும் ஜனநாயகத்தை மறுப்பவராகவும் உள்ளார். ஈராக்கின் கைக்கூலி பிரதமர் போல், வடக்கு கிழக்கு அதிகாரத்தில் தலைவராக வேண்டும் என்ற கனவுடன் செயல்படுகின்றார். இதனால் தான் அவர் ஒரு விவாதத்தில், தான் நிச்சயமாக வன்னி செல்வேன் என்று ஆணித்தரமாக சொல்லுகின்றார். அன்னிய தலையீட்டு மீதான ஆழ்ந்த நம்பிககையுடன் செயல்படுகின்றார்.

சரி இந்த திடீர் ஜனநாயகக் கனவான், திடீர் ஜனநாயகவாதியாக முன் ஏன் வன்னிக்குச் சென்றார். இங்கு எம்முன் நெருடுவது என்ன. புலியின் நம்பிக்கைக்குரிய ஒரு பினாமிதான் நான் என்பதைச் சொல்லத்தான், வன்னிக்கு சென்றார். இதை யாரும் மறக்கமுடியாது. பிரிட்டிஸ்சில் புலிகளுக்கு இடையில் உள்ள முரண்பாட்டில் தான் புறக்கணிக்கப்படுவதை முறையிடவும், தனக்குரிய தகுதியை அங்கீகரிக்க கோரிய ஒரு நேர்த்தியாகவே வன்னி சென்றார். பக்தன் எடுத்துச் சென்ற பூசைப் பொருட்களை (பெரும் தொகை பணம் கொடுக்கப்பட்டது) காலடியில் வைத்த நிலையிலும், கடவுளோ கண்ணைத் திறந்து முறையிடச் சென்றவரை ஏறெடுத்து பார்க்கவில்லை. மாறாக நெற்றிக் கண்ணை திறந்து எரியூட்டுவதற்காக, பலிபீடத்துக்கு அழைத்துச் சென்றனர். இப்படித் தான் திடீர் ஜனநாயகவாதியாகி ஞானம் பெற்றவர். ஈராக்கில் சகல மனிதயுரிமை மீறலுக்கும், ஏன் ஈரான் மீதான படையெடுப்பை தூண்டி பெருமளவில் இராணுவ பொருளாதார உதவியை வழங்கிய அமெரிக்கா, பின் திடீர் ஜனநாயகவாதியாக ஈராக்கை ஆக்கிரமித்த அதே உத்தி அதே அரசியல் தான் ஜெயதேவனின் நடத்தையிலும் நாம் காணமுடியும். இது தான் பிரிட்டிஸ் தொழில் கட்சியின் நிலையும் கூட.

வழமையாக புலிகள் பல்லைக்காட்டி வாலையாட்ட வைக்க, பெரும் தொகை பணம் கைமாறுவது வழக்கம். இந்த உத்தியைத் தான் ஜெயதேவன் வன்னிக்கு போனபோது செய்ய முனைந்தவர். பெரும் தொகை பணத்துடன், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தை துடைக்க என்று சொல்லி எடுத்துச்சென்றார். இப்படித் தான் புலிகளின் கடைக்கண் பார்வைக்காக விமானமேறி தானாக வன்னி சென்றார். ஆனால் புலிகள் இவர் அல்லாத லண்டன் தரப்பை ஆதரிக்கவும், இவர் நடுவீதியில் கைவிடப்பட்டார். அவர்களின் பொறிக்குள் சிக்கிய நிலையில், அவர்கள் வழமையான அணுகுமுறைக்கு ஏற்ப சிறைவைத்தனர்.

இப்படி திடீர் ஜனநாயகத்தை அவர் பேச புலிகளே காரணமாகவே இருந்தார்கள். ஒரு கணம் எதிர்நிலையில் சிந்தித்து பாருங்கள். புலிகள் ஜெயதேவனை வாங்கோ, நீங்கள் தான் எல்லாம் என்று வழமைபோல் தமிழ்ச்செல்வன் பல்லைக்காட்டி இருந்தால் என்ன நடக்கும். ஊரார் வீட்டுப் பணத்தின் நல்ல விருந்துபசாரம் செய்து இவர்களை திருப்பி அனுப்பியிருந்தால் இவர்கள் இன்று ஐரோப்பாவில் என்ன செய்வார்கள். நேர்மையாக நீங்களே கேள்வியை கேட்டு பதிலை சொல்லுங்கள்.
தமிழ்பேசும் மக்களின் ஜனநாயகம் பற்றி பேசுவார்களா!. சொல்லுங்கள். நிச்சயமாக இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியெனின் ஏன் தலையில் தூக்கிவைத்து ஆடுகின்றீர்கள். உங்களுக்கு சூடுசுரணை எதுவும் கிடையாதா? இவரை தனிப்பட்ட ரீதியில் புலிகள் அணுகிக் கொண்ட அனுகுமுறையின் பின்பு தான் திடீர் ஜனநாயகவாதியானர். இவர் இன்று தமிழ் மக்களின் அரசியல் ஆய்வாளர். தமிழ் மக்களின் ஜனநாயகத்தை மீட்கும் தலைவர். தமிழ் மக்களை வழிநடத்த, புலி அல்லாத தரப்பு தலைவர்களில் ஒருவர். கொஞ்சம் யோசியுங்கள், ஜெயதேவன் வன்னி செல்லாவிட்டால் அல்லது புலிகள் அவரை நல்லவிதமாக நடத்தியிருந்தால் என்ன நடந்து இருக்கும். உங்களுக்கு எந்த ஆச்சரியமும் இருக்காது. பாலசிங்கம் கூட்டத்தின் முன்வரிசையில் அமர்ந்து இருந்து விசிலடித்து இருப்பார். இல்லை என்கின்றிர்களா!

இவர் சொல்லுகின்றார் தனக்கு இப்பதான் எல்லாம் தெரியுமாம். நம்புங்கள்! இப்படி கூறுபவர் எப்படி தமிழ் மக்களின் தலைவனாக இருக்கமுடியும். இப்படி கூறுவதே, அதே புலி அரசியலாகும். இப்படி சொல்பவன் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியும், மோசடிக்காரனுமாவான். அவர் சொல்லுகின்றார் மாத்தையா கொலைக்கு முன் நடந்த கொலைகள் எதுவும் தனக்கு தெரியாதாம். மாத்தையாவே பலரைக் கொன்ற கதைகள் பல. ஏன் நான் புலிகளின் வதைமுகாமில் சித்திரவதை செய்யப்பட்ட போது, அதை மாத்தையாவே நேரடியாக செய்தவன். அந்த வதைமுகாமில் இருந்து, சிறையுடைத்து தப்பியவன்தான் நான். நான் பல்கலைக்கழக மாணவர் தலைவராக இருந்ததால், மாணவர் போராட்டத்தை தணிக்க எனக்கு உயிர் உத்தரவாதத்தை மாத்தையா, தீலிபன் போன்றோர் பகிரங்கமாக பல்கலைக்கழக மேடையில் வழங்கியவர்கள் தான். இவை அனைத்தும் பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தவைதான். எனக்கு வதைமுகாமில் என்ன நடந்தது என்பதை, 300 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாக "வதை முகாமில் இருந்து தப்பிய தூக்கு மேடைக் கைதியின் நினைவுகள் அழிவதில்லை" என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். இன்றைய நிலையில் இந்த நூல் எனது மரணத்தின் பின் வெளிவரும் வகையில் பாதுகாத்து வைத்துள்ளேன்.

இப்படி பல நூறு சம்பவங்கள் நடந்த போதும் அவை எதுவும் ஜெயதேவனுக்கு தெரியாதாம். இது ஜெர்மனிய நாசிகள் நடத்திய யூதப் படுகொலைகளைப் பற்றி எதுவும் தெரியாது என்று, தனிப்பட்ட நாசிகள் பின்னால் கூறி பிழைக்க முனைந்தது போன்றது. இதைத் தான் ஜெயதேவன் செய்ய முனைகின்றார்.

புலிகளின் மனிதஉரிமை மீறல்கள், அன்றாடக் கொலைகள், இயக்க அழிப்புகள் 1970 களிலேயே தொடங்கியது. 1980க்கு முன்னமே இயக்க உட்படுகொலைகள் இயக்கத்தில் தொடங்கி இருந்தது. 1980 க்கும் 1986 க்கும் இடையில் இயக்க உட்படகொலைகள், இயக்க மோதல்கள் அன்றாடம் நடந்தது. மக்களின் கதி அதைவிட மோசமானது. மக்கள் இயக்கத்துக்கு எதிராக பல நூறு போராட்டங்களை நடத்தினர். யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் முதல் பல நூறு போராட்டங்கள் அன்றாடம் நடந்தவண்ணம் இருந்தது. ஜனநாயகத்துக்கான குரல்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது. அப்போது எல்லாம் இதை மழுங்கடிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் யார். நீங்களும் உங்களைப் போன்றவர்களுமே. பல நூறு இளைஞர்கள் இதன் போது கொல்லப்பட்டனர். அவர்களை எல்லாம் இன்று புலியெதிர்ப்பு அணி, புலியைப் போல் முதலில் புதைகுழிக்கு அனுப்புகின்றனர். அவர்கள் மக்களுடன் நிற்க, முன்வைத்த அரசியலை காலில் போட்டு மிதிக்கின்றனர். இலக்கியச் சந்திப்பு முதல் ரி.பி.சி வரை இதைத் தான் செய்கின்றது. 1985தின் பின் புலிகள் இயக்கங்களையே அழித்து, அவர்களை உயிருடன் வீதியில் இட்டு கொழுத்திய போது, முன்னாள் பின்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எரித்த களைப்புத் தீர கொக்கோலோ உடைத்து கொடுத்தவர்கள் தான். அதாவது மனிதப் படுகொலைகள் மூலம் மனிதயுரிமை மீறலை புலிகள் செய்த போது, ஜெயதேவன் போன்றோரே அதன் தூணாக இருந்தவர்கள்.

இன்று ஜெயதேவனின் தனிப்பட்ட அதிகாரம் சார்ந்த பாதிப்பு, இன்று திடீர் ஜனநாயகமாகிய போது புலியல்லாத தலைமைபற்றி கூறி அதன் தலைவர்களில் ஒருவராக முனைகின்றார். புலியல்லாத தலைவராக பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின் தோளில் அமர்ந்து இருந்தபடி, புலியால் பாதிக்கப்படும் மக்களே தம் பின்னால் வாருங்கள் என்று அழைக்கின்றார்.
இதற்கு கடிவாளம் கொடுக்கும் ரி.பி.சியின் கதையும் இப்படித் தான். முதன் முதலில் ஐரோப்பாவில் மாவீரர் தின உரையை தாமே நேரடியாக வன்னியில் இருந்து ஒளிபரப்பியதாக பெருமைப்படும் ராம்ராஜ்க்கும், புலிக்கும் இடையில் ஒரு தேனிலவு ஒரு காலத்தில் இருந்தது. அதாவது ஒரு பினாமிய உறவு இருந்தது. புலிகளின் அனுமதியுடன், புலியின் தயவுடன் வன்னியில் இருந்து மாவீரர் தின உரையை ஐரோப்பாவுக்கு முதன் முதலில் ஒளிபரப்பிய பெருமையை நினைவு கூரும் இவர்கள், புலிகளின் ஜனநாயக விரோதச் செயலைப் பற்றி அப்போது அவர்கள் பேசியது கிடையாது. அரசியல் ரீதியாக ஒரே அரசியல், ஒரே கொலைக் கலாச்சாரம் என்ற தொழில்முறைக் கூட்டாளிகள் என்பதால், அப்போது இவர்களுக்கு ஜனநாயகம் பிரச்சனையாக இருக்கவில்லை.

அந்த வகையில் தான் மாவீரர் செய்தியை ஒளிபரப்பியவர்கள். புலி அல்லாத போராளிகளின் நினைவை போற்றவில்லை. அன்று புலிக்கு விமர்சனம் வைத்தவர்களை, வானொலியில் இருந்தே வெளியேற்றினர். இன்று பூகோளம் இணையத்தளத்தைச் சேர்ந்த அழகுகுணசீலன் மற்றும் ஜெயந்திமாலா போன்றோர், புலிகளை அரசியல் ரீதியாக விமர்சித்ததால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இன்றைய அரசியல் கலந்துரையாடலை, அவர்கள் தான் தமது பணியில் தொடங்கிவைத்தவர்கள். ஆனால் அவர்கள் இன்று அதில் இல்லை. இதுபோல் தான் இலக்கியச் சந்திப்பும். தொடக்கியவர்கள் அதில் இல்லை. சீரழிவின் வக்கிரம் இப்படித் தான் எங்கும் அரங்கேறியது. தமிழ் மக்களின் மாற்றுத் தலைமையாக திடீர் ஜனநாயகவாதி ஜெயதேவன் வந்தது போல் தான், திடீர் சிவலிங்கமும் அரசியல் ஆய்வாளராக அரங்கில் வந்தார். கடந்த 25 வருடமாக ஜனநாயகத்துக்கான போராட்டம் ஒன்று நடந்து வந்ததை மறுப்பது தான், இவர்களின் முதல் வேலை. மக்கள் இப்பதான் சிந்திக்கின்றனர் என்று கூறுவதே, அரசியல் விபச்சாரம் தான். புலிகள் மக்களானது போல் தான், ஜெயதேவன் மக்களாகின்றார்.

இப்படி கடிவாளம் கொடுக்கும் ரி.பி.சி புலியெதிhப்பு அரசியலைக் கூட புலிகளுடன் விபச்சாரம் செய்தபோது அன்று வைக்கவில்லை. இப்படி புலி சார்பு ஜனநாயக விரோத நிலைப்பாட்டுடன் தான் ரி.பி.சி புலியாகவே இயங்கியது. புலிகளின் கடைக்கண் பார்வைக்காகவும், புலியின் உத்தியோகபூர்வமான பினாமியாக ரி;பி.சி இருக்கமுயன்றது. ராம்ராஜ் இந்தியக் கைக்கூலியாக, இந்திய இராணுவத்தின் எடுபிடியாக தமிழ் மண்ணில் வக்கரித்து திரிந்த போது, இதே ஜனநாயகத்தைச் சொல்லித் தான் தமிழ் மக்களை அடக்கியொடுக்கினர். பின் சந்தர்ப்பவாதியாக புலியின் பினாமியாக இலங்கை இராணுவத்திடம் இருந்து ஜனநாயகத்தை பெறப் போவதாக கூறி புலியின் பினாமியானவன். இன்று ஏகாதிபத்திய துணையுடன், இலங்கை அரசின் துணையுடன் புலியிடமிருந்து ஜனநாயகத்தை மீட்கும் போராட்டத்தை நடத்துகின்றாராம். நீங்கள் முட்டாளாக இருக்கும் வரை, இதை அவர்களால் செய்யமுடியும்.

புலியுடனான ரி.பி.சியின் தேனிலவு எப்படி தகர்ந்து போனது. அதே ஜெயதேவன் வரலாறு படிதான். புலிகள் அணுகும் விதமே அபகரிப்பு வழிமுறைதான். ரி.பி.சி யை புலிகள் தமதாக்க முற்பட்ட போது முரண்பாடு எற்பட்டது. உதாரணமாக இன்றைய ரி.ரி.என் கூட புலிகளால் உருவாக்கப்பட்டதல்ல. அதுவும் மோசடி செய்து ஏமாற்றி அபகரிக்கப்பட்டது. இன்றைய எரிமலை கதையும் அப்படித்தான். புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சபாலிங்கம் தொடங்கியதே எரிமலை. இலங்கையில் இதற்கு வேறு வரலாறு உள்ளது. புலிகள் ஜ.பி.சியை கைப்பற்றிய பின்பாக, ரி;.பி.சிக்கும் புலிக்கும் இடையில் முரண்பாடு உருவானது. இது ஐ.பி.சியைக் கைப்பற்றியதில் அல்ல, புலி ரி.பிசிக்கு எதிரான நிலைப்பாட்டால் உருவானது. ஒரு கட்டத்தில் தமிழ்செல்வனுடன் (ரி.பி.சியின் பத்திரிகை தொடர்பாக) தொடர்பு கொண்டு, புலிப்பினாமியாக இருக்கவும் முரண்பாட்டை தணிக்கவும் முனைந்தனர்.

ஆனால் பல்லைக்காட்டிவிட்டு இரகசியமாக தமிழ்ச்செல்வன் ரி.பி.சிக்கு எதிராக எழுதி கடிதம் தீடிரென ஐ.பி.சியில் வாசிக்கப்பட்ட பின்பே, ரி.பி.சி திடீர் ஜனநாயகவாதியாக மாறியவர்கள். இப்படி இவர்களின் திடீர் ஜனநாயக வேஷங்கள், அவதாரங்கள் பலவாகும். இதுவே பின்னால் புலியெதிர்ப்பு அரசியலாக மாறியது. இன்று புலியை அழிக்கும் யாருடனும் கூட்டுச் சேரும் அரசியலே இவர்களின் மையச் செயல்பாடாகியுள்ளது.

இன்று இந்தியா, இலங்கை, ஏகாதிபத்தியங்களுடன் நெருங்கிய தொடர்புடன் இயங்குகின்றனர். இதை அவர்கள் கூறவும் செய்கின்றனர். இன்று ஜெயதேவன் பின்னும், ரி.பி.சி வானொலியின் பின்னால் செயல்படும் பல ஏகாதிபத்திய நாடுகளில் அரசியல்வாதிகளும், பொலிசும், உளவுத்துறையும் நெருக்கமாக செயல்படுகின்றனர். இதை இவர்கள் சட்டஒழுங்கு பிரச்சனைக்கு உட்பட்டதாகவே காட்டமுனைகின்றனர். இன்று தகவல்களை வழங்குதல், புலம்பெயர் நாட்டு செயல்பாடுகளை காட்டிக் கொடுத்தல் (புலிகள் அல்லாத எல்லைவரை) என்ற விரிந்த தளத்தில் இவர்கள் கைக்கூலிகளாக செயல்படுகின்றனர். பிரான்சின் உள்துறை அமைச்சின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசியல் பொலிஸ், என்னை அழைத்து உலகில் உள்ள எந்த அரசுகளைப்பற்றியும் எழுதுவதை உடன் நிறுத்தக் கோரியது. தமக்கு தகவல்களை தரக் கோரியது. தேசியம் என்பது சாத்தியமில்லை என்றதுடன், பல நாடுகளின் உதாரணத்தைக் கூறி அதை தாம் அனுமதிக்க மாட்டோம் என்றனர். இப்படிப் பல. இதன் பின்னால் புலியெதிர்ப்பு அரசியல் பிரிவுகளின் செயல்பாடுகள் உள்ளன. இந்த வகையில் இன்று புலியெதிர்ப்பு என்பது, ஏகாதிபத்தியம் எமது நாட்டை ஆக்கிரமிக்க எது தேவையோ, அதை நிறைவு செய்யும் செயல்பாட்டில் இவர்கள் உள்ளனர். அதை இவர்களால் மறுக்கவே முடியாது. இவர்கள் நடத்தும் அரசியல் சந்திப்புகள், பொலிஸ்சுடனான தொடர்புகள், பத்திரிகை சந்திப்புகள், கடிதங்கள், மகஜர்கள் எங்கும் இதுவே நிகழ்கின்றது. தமிழ் மக்களுடன் அவர்கள் விடுதலையை அவர்களே போராடிப் பெறவேண்டும் என்று எப்படி பேசுவதில்லையோ, அப்படி ஐரோப்பிய மக்களுடன் இவர்கள் பேசுவது கிடையாது. பேசுவது, கூடி நிற்பது ஆக்கிரமிப்பு சதிகாரர்களுடன் தான்.

ஜெயதேவன் அடிக்கடி கூறுகின்றார் உண்மையைக் கண்டு கொள்ளும்படி. கண்ணதை திறந்து அங்கே என்ன நடக்கின்றது என்பதை பாருங்கள் என்கின்றார். புலிகள் பொய்களையும், அவதூறுகளையும் கூறுவதால், உண்மையை கண்டறியக் கோருகின்றார். சிந்திக்கக் கோருகின்றார். நல்லது.
ஆனால் அவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இதற்கு எதிராகச் செயல்பட்டவர்தான். சரி கடந்த ஒரு வருடத்தின் பின் என்ன செய்கின்றார். அவர் புலிகள் விடையத்தில் மட்டும் இப்படி செய்யக் கோருகின்றார். இது ஒரு அரசியல் மோசடி அல்லவா! ஏன் சமூகத்தின் அனைத்து விடையத்திலும் இதைக் கோரவில்லை. ஏன் அவர் தான் இதைச் செய்யவில்லை. புலிகள் விடையத்தில் மட்டும் அவர் தன்னை மாற்றியவர், மற்றைய விடையங்களில் பழைய அதே நிலைப்பாடு. இது எப்படி சரியானது. இங்கு மாற்றம் எதுவும் நிகழவில்லை. ஒரு மோசடி, சதி அரசியலாகின்றது. இதுவே புலியெதிர்ப்பு அரசியலின் பின்னுள்ளவர்களின் நிலையாகும்.

ஜெயதேவன் மக்களை முட்டாளாக்கும் ஒரு பார்ப்பனிய கோயிலை நடத்துகின்றார். இங்கு உண்மையைக் கண்டறியக் கோரவில்லை. கடவுள் உண்டு என்று கூறி, கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி உண்டியல் பணத்தை வசூலிக்கும் கயவர்கள் தான் இவர்கள். எப்படி உண்மையானவராக இருக்கமுடியும். இவர்கள் எப்படி நேர்மையானவர்கள். கோயில்களுக்கும், உண்டியல்களுக்கும் கதைகளுண்டு. மக்கள் தமது பிரச்சனைக்கு உண்டியலில் பணம் போடுவதால் எதுவும் நிகழ்வதில்லை என்பது, உண்மையைக் காணும் ஆய்வாளனுக்கு ஏன் இவை தெரிவதில்லையா? இதுவரை தெரியாவிட்டால் இன்றே தெரிந்துகொண்டு, அந்த கயவாளித் தொழிலை ராஜினமா செய்யும். கோயில்கள் என்பன மக்கள் சிந்திக்கவிடாது அடிமைப்படுத்தும் ஒரு மக்கள் விரோத நிறுவனம் தான். இதனால் தான் புலிகள் பிரதேசத்திலும் இது செழிப்புற்று வளருகின்றது.

தனிப்பட்ட மனிதன் வழிபட முனைவது என்பது இதில் முற்றிலும் வேறுபட்டது. சமூகத்தின் அவலமான நிலையைக் கண்டு அஞ்சி, தனிப்பட்ட மனிதன் இன்னுமொரு சக்தியிடம் முறையிடுவதாக இது அமைகின்றது. அதாவது இன்றைய சமூகம் காது கொடுத்து கேட்கமறுக்கும் நிலையில், அதை தீர்க்க முன்வராத போது, அதை இல்லாத ஒன்றிடம் கூறி ஒப்பாரி வைப்பதுதான் வழிபாடு. உண்மையானவன் நேர்மையானவன் மக்களின் பிரச்சனை தீர்க்கும் வகையில் வழிகாட்ட வேண்டுமே ஒழிய, இல்லாத ஒன்றிடம் ஒப்பாரி வைக்க துணை நிற்கமுடியாது. இவர்கள் எப்படி நேர்மையாக புலிகளுக்கு மாற்றாக தமிழ் மக்களை வழிநடத்துவர்.

கோயில் வைத்து மக்களை ஏமாற்றி வாழ்வோர், மதப்பிரச்சாரம் செய்வோரின் நோக்கம் தனிமனித வழிபாட்டில் இருந்து வேறுபட்டது. கோயிலும் அது சார்ந்த தத்துவங்களும். மக்களை மந்தையாக்கி, பணம் கறக்கும் நிறுவனங்;கள் தான். அத்துடன் ஆளும் மக்கள் விரோத அரசின் அடக்கு முறைக்கு, மக்களை வழிபாட்டின் மூலம் அடிபணிய வைப்பவைதான். உண்மையில் கோயில் அது சார்ந்த மதக்கோட்பாடு என்பது புலிகளைப் போல், பணத்தை கறப்பதுடன் மக்களை அடிமையாக வைததிருக்க விரும்பும் ஆளும் வர்க்கத்தின் கருவியாகவேயுள்ளது. இங்கு பணம் வசூலிப்பு என்பது கடவுளின் பெயரால், பக்தியின் பெயரால் நடக்கின்றது. புலிகளின் பணவசூலிப்பு பிரபா என்ற கடவுள் பெயரால், தேசியத்தின் பெயரால் நடக்கின்றது. மக்களின் பெயரில், கடவுளின் பெயரில் மனிதர்கள் ஏமாற்றப்படுகின்றனர். மனிதவுழைப்பு உருவாக்கும் செல்வத்தையே புடுங்குகின்றனர். இதில் ஜெயதேவனி;ன் கோயிலும் இதைத்தான் செய்கின்றது. மனிதன் தான் சிந்தித்து செயலாற்றும் உணர்வை, ஜெயதேவனின் கோயிலும் அதன் நோக்கமும் மறுதலிக்கின்றது. பின்பு வேடிக்கையாக உண்மையைக் கண்டறிய சமூகத்தைக் கோருகின்றார்.
உண்மையானவர் நேர்மையானவர் என்ற போலித்தனத்துடன் திடீர் ஜனநாயகவாதியான ஜெயதேவன், மற்றொரு மக்கள் விரோத சர்வதேச அரசியலில் ஈடுபடுகின்றார். பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை ஆளும் தொழில் கட்சியின் ஒரு விசுவாசமிக்க கட்சி உறுப்பினர். பிரிட்டிஸ் தொழில்கட்சி பிரிட்டனிலும், உலகளாவிலும் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. அதாவது புலிகள் தமிழ் மக்களை மட்டும் தான் மொட்டை அடிக்கின்றனர். ஆனால் பிரிட்டிஸ் அரசு உலகெங்கும் உள்ள மக்களையே மொட்டை அடிக்கின்றது. ஆட்சிகவிழ்ப்புகள், அரசியல் சதிகள், ஆக்கிரமிப்புகள், படுகொலைகள் என்று அனைத்தையும் செய்கின்றது. பல சந்தர்ப்பத்தில் இதை நாகரிகமாக செய்கின்றது, புலிகள் இதை காட்டுமிராண்டித்தனமாகச் செய்கின்றது.

பிரிட்டிஸ் தொழில்கட்சி பிரிட்டிஸ் ஏகாதிபத்திய என்ற அதிகாரத் திமிருடன், உலக ஜனநாயகத்துக்கு புறம்பாக ஈராக் ஆக்கிரமிப்பை முன்னின்று நடத்தியது. ஒரு கட்டத்தில் ஒரே நாளில், ஒரு கோடி மக்கள் உலகெங்கும் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பொது கூட இந்த ஜெயதேவன் மக்கள் பக்கம் இருக்கவில்லை. புலிகளைப் போல் மக்களுக்கு பொய்யையும் புரட்டையும் திணித்து, யுத்தத்தை ஈராக் மக்கள் மீது நடத்த துணை நின்றவர். பிரிட்டிஸ் மக்கள் வீதியில் இறங்கி போராடிய போது, பிரிட்டிஸ் தொழிற் கட்சிகள் மக்கள் விரோத ஆக்கிரமிப்பை நடத்த அன்று உதவினார், இன்று உதவுகின்றார். உலக ஆக்கிரமிப்பாளக் கட்சியின் உறுப்பினர் தான் இவர். அன்றும் சரி, இன்றும் சரி கட்சியை விட்டு வெளியேறி பிரிட்டிஸ் மக்களுடன் இணைந்து தனது கட்சியை எதிர்த்து இந்த ஜெயதேவன் போராடவில்லை. ஆனால் புலியில் இருந்து விலகி தமிழ் மக்களை, புலிக்கு எதிராக போராடக் கோருகின்றார். இதில் ஏன் இரட்டை வேடம். இரண்டும் மக்களுக்கு எதிரானது தான். ஆனால் ஆக்கிரமிப்பாளனுக்கு துணையாகவே இன்று, ஏன் இந்தக் கணம் வரை உள்ளார்.

ஈராக்கின் எண்ணைக்காக எண்ணை முதலாளிகள் ஜனநாயகத்தின் பெயரில் சதாம்குசைனை ஆட்சியில் இருந்து அகற்றி ஈராக்கை ஆக்கிரமித்தவர்கள் எப்படிப்பட்ட ஜனநாயகத்தை அங்கு நிறுவினார்கள். ஏகாதிபத்திய நாடுகளில் வைத்து கைக்கூலிகளாக்கியவர்களையே, ஆட்சியில் அமர்த்தினர். இதுதான் இன்று ரி;பி.சி கும்பல் தமிழ் மக்களுக்கு மாற்றுப்பாதையாக உங்களுக்கு வழிகாட்டு பாதை. ஈராக்கை ~ஜனநாயக ஆக்கிரமிப்பாளன் ஆக்கிரமித்த பின்பாக 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள் இவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். எங்கும் அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களின் சிறைகளில் அரசியல் கைதிகளாக பல ஆயிரம் பேரை அடைத்து வைத்து, சித்திரவதை செய்கின்றனர். பல நூறு பெண்கள் உட்பட ஆண்களைக் கூட பாலியல் ரீதியாக வதைத்துள்ளனர், வதைக்கின்றனர். சதாம்குசைன் காலத்தில் நடக்காத அளவுக்கு மிகப் பெரிய மனித உரிமை மீறலை இவர்கள் செய்கின்றனர். ஆனால் இதை எல்லாம் ஆதரித்து தான், அவர் பிரிட்டிஸ் தொழில் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.

இன்று இலங்கையில் அன்னிய ஆக்கிரமிப்பு நடக்கவேண்டும் எனக், கூறுவதில் ஜெயதேவன் மிக முக்கியமானவர். எண்ணை வளம் இருந்தால் அதை உடன் செய்துவிடலாம்; என்று கூறும் இவர், அதை எப்படிச் செய்யலாம் என்று கூறுவதே அவரின் இன்றைய அரசியலாகியுள்ளது.. இதன் மூலம் ஈராக்கில் செய்ததை இலங்கையில் செய்வதை, இவர் கொள்கை ரீதியாக ஆதரிக்கின்றார்.

உண்மை, நேர்மை என்ற இவர்கள் கூறுவது எல்லாம், புலிகளைப் போல் தமது சொந்த நலன் சார்ந்தவை தான். மக்கள் நலன் என எதுவும் கிடையாது. மக்கள் என்பது புலிகளைப் போல், தமது சொந்த நலனை அடையும் ஒரு கருவி மட்டும் தான்.

இவர்கள் எப்படி மக்கள் விரோத அரசியலை ரி.;பி.சியில் வைக்கின்றனர். ஒரு சில உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.

1.அண்மையில் மீண்டும் பேச்சுவார்த்தை என்றும் அதை ஜரோப்பாவில் நடத்த வேண்டும் என்று புலிகளும், ஆசியாவில் நடத்தவேண்டும் என்று அரசும் வாதாடியது. இதில் ரி.பி.சி புலிகளுக்கு எதிராக வழமை போல் தமது குறுகிய புலியெதிர்ப்பு அரசியல் நிலையையெடுத்தது.

ஏன் ஐரோப்பாவில் நடத்த முடியாது? ஏன் ஆசியாவில் நடத்த வேண்டும்;? முதலில் இந்த பேச்சுவார்த்தையை தடுக்கும் அரசியல் குதர்க்கத்துடன் இனவாதிகளான ஜே.வி.பியும், சிங்கள உறுமயவும் தான் ஆசியாவில் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று முன்மொழிந்தனர். இந்த முன்மொழிவை அல்லவா இவர்கள் கண்டித்து விவாதத்தை நடத்தியிருக்க வேண்டும். அதை அவர்கள் உள்நோக்குடன் செய்யவில்லை. ஜே.வி.பியைப் போல் பதிலளிக்க விரும்பிய புலிகள், பேச்சுவார்த்தை ஐரோப்பாவில் என்றனர்.

இதில் என்ன தவறுள்ளது. அரசியல் நேர்மையீனம் கொண்டதாகவும், சதிகளை அடிப்படையாக கொண்ட பேரினவாத அரசு, அதனுடன் உள்ள அரசியல் கும்பலும் அணுகும் போது, அதையே தொழிலாக கொண்ட புலிகள் சும்மாவிடுவார்களா!

பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டால், இருதரப்பும் தாமே பேசி எங்கே என்று முடிவு எடுக்க வேண்டும். இல்லாது நிபந்தனையுடன் கூடிய இடத்தெரிவை முதலில் வைத்தது அரசு அல்லவா! இதில் பேச்சுவார்த்தைக்கு தடையாக உள்ளவர்கள் யார். இப்படி பல விடையங்கள் உள்ள போது, ரி.பி.சி கும்பல் விடையத்தையே திரித்து காட்டுகின்றனர். ஏன்? உங்களுக்கு புரிந்தால் சரி.


2.புலிகள் மாற்றுத் தீர்வு என்று எதை வைக்கின்றனர் என்று புலிகளுக்கு எதிராக விவாதத்தை தொடங்குகின்றனர்.

மரமண்டைகளே புலிகள் தானே தமிழ் ஈழத்தை முன்வைக்கின்றனர். அவர்கள் அதற்கு குறைந்த ஒரு தீர்வை முன்வைத்து உடன்பட வைக்கவேண்டும் என்றால், அரசு அல்லவா தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். இதை புலிகள் ஏற்றுக் கொள்கின்றார்களா அல்லது நிராகரிக்கின்றார்களா என்பது வேறு விடையம். இன்று தீர்வுத் திட்டத்தை பகிரங்கமாக மக்கள் முன் வைக்க வேண்டியது அரசே ஒழிய புலிகள் அல்ல. அதற்கு பின்தான் புலிகள் வைக்கவேண்டும். இலங்கையில் பேரினவாதக் கட்சிகள் எதுவும் தமது அரசியல் வேலைத்திட்டத்தில் தமிழ்மக்களுக்கு என எந்தத் தீர்வையும் முன்வைக்கவில்லை. தமிழ்மக்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை கடந்த காலத்திலும் நிகழ்காலத்தில் முன் கூட்டியே வைக்கின்றனர். ஆனால் இந்த புலியெதிhப்புக் கும்பல் அரசு சார்பாக நிலையெடுத்து புலிக்கு எதிராகவே விடையத்தை மாற்றுகின்றனர். புலிகளின் மக்கள் விரோத தவறுகளை பயன்படுத்தி, தமிழ் மக்களின் அறிவையே புலிகளைப் போல் மலடாக்குகின்றனர். இந்த வகையில் உள்நோக்கம் கொண்ட சதிகளில் ஈடுபடுகின்றனர்.

இப்படி அனைத்து விவாதமும் புலிகளுக்கு எதிராகவே முன்னெடுக்கின்றனர். உண்மைகளின் மீது அல்ல. புலிக்கு மாற்று அன்னிய தலையீட்டின் மூலமான இலங்கை பேரினவாத அரசின் ஊடாக இவர்கள் முன்மொழிகின்றனர். இதுவே இவர்களின் அரசியல் முன்னெடுப்புகளின் மைய விடையமாக உள்ளது. இந்த வகையில் தான் புலிக்கு மாற்று என்ற பெயரில், ரி.;பி.சி வானொலி தன்னை புலி அல்லாத தரப்புகள் அனைத்தினதும் ஏகபிரதிநிதியாக்க முனைகின்றது. இந்த வகையிலான முயற்சிகள் ஒருபுறம். இதனால் ஈ.பி.டி.பி யுடான முரண்பாடு, இவர்களுக்கு இடையில் நடக்கின்றது. இந்த வகையில் புலியெதிர்ப்பு இணையங்கள் பல ரி.பி.சி.க்கு பக்கபலமாக உள்ளது.
இவை அனைத்துக்கும் புலிகளின் மக்கள் விரோத அரசியலே துணைநிற்கின்றது. புலிகளின் பாசிச போக்கு, மக்கள் விரோத நடத்தைகள் ரத்தமும் சதையுமாகிவிட்டது. இந்தநிலையில் இதை எதிர்ப்பவர்கள் ஒரு அணியில் இணைய வேண்டும் என்ற கோசத்தை, மிக இலகுவாக ரி.பி.சியால் முன்வைக்கப்படுகின்றது. இதில் அவர்கள் கணிசமான வெற்றி பெற்று வருகின்றனர்.

இப்படி தமிழ் மக்களின் சமூக பொருளாதார நலனுக்கு ஆபத்து இரண்டு தளத்தில் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் புலிகள். மறுபுறம் புலியெதிர்ப்பு அணி. மக்களின் சமூக அறியாமை மீது, கண்முடித்தமான நம்பிக்கைகள் மீது மக்கள் விரோத அரசியல் புகுத்தப்படுகின்றது. சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள், இதைப் புரிந்து எதிர்வினையற்ற வேண்டிய வரலாற்று காலத்தில் நாம் வாழ்கின்றோம்.

Sunday, December 25, 2005

அரசியல் என்பது

அரசியல் என்பது கொலைகளை, கற்பழிப்புகளை, வன்முறைகளை, பொய்களை, சதிகளை எல்லாம் கூட்டி அள்ளி எம்முகத்தில் எறிகின்றது. இதைப் பார்த்து, தெரிந்துகொள் என்கின்றது.

தமிழ்மக்களின் தலைவீதி ஒரு சிலரால், தமது சொந்த குறுகிய நோக்கில் கையாளப்படுகின்றது. அரசியல் கொலைகள் தொடருகின்றன. இந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரறாஜசிங்கம் நேற்று (இன்று) படுகொலை செய்பப்பட்டார். இப்படியான ஒவ்வொரு கொலையும் மக்களுக்கு மீண்டும் மீண்டும் அறைந்து சொல்லும் செய்தியென்ன.

வாயை மூடு என்பது தான். அடிமையாய் இரு என்பதைத் தான் சொல்லுகின்றது. இதைத் தாண்டி எதுவுமல்ல. இது தேசியத்தை பெற்றுத் தரப்போவதுமில்லை. கைக்கூலிகளை ஒழித்துவிடப் போவதுமில்லை. புலியின் அராஜகத்தை ஒழித்துவிடப் போவதுமில்லை.

அடிமை மக்கள் கைகட்டி, வாய் பொத்தி, மௌனமாக இரு என்று ஒவ்வொரு கொலையும் எமக்கு உரைக்கின்றது. உண்பதற்காக வாயை திற, அதற்காக மாடுமாதிரி உழை, கொலைகாரர்களை உருவாக்க புணர்ந்த பிள்ளையைப் பெறு. இது தான் கொலைகாரர்கள் மக்களுக்கு சொல்லும் ஒருயொரு செய்தி. கொலையை கண்டிக்காதே. அதை விமர்சனம் செய்யாதே. நாம் சொன்னால் கர்த்தால் செய், ஊர்வலம் போ. இது கொலைகாரனின் அதிகாரத்துடன் கூடிய செய்தி.

அமைதி சமாதனம் வேஷம் போட்டு மீண்டும் கொலைகளை தொடங்கியவர்கள் புலிகள். அதே பாணியில் அண்மைக்காலத்தில் எதிர்தரப்பும் மீண்டும் கொலைகளை செய்யத் தொடங்கியுள்ளனர். ஜோசப் பரறாஜசிங்கம் இந்த வகையில் கொலப்பட்டுள்ளார். இதற்கு முன் நிகழ்ந்த பல படுகொலைகளை இவர் கண்டித்தவர் அல்ல, ஆதாதரித்தவர் கூட. அந்த அரசிலுக்கு இவர் பலியாகியுள்ளார். கொல்லப்படும் பலரின் சோகம் இப்படி உள்ளது. இதை எப்படி நாம் புரிந்து எதிர்கொள்வது.

கொலை செய்யப்படுவர்கள் சமூகத்தின் மேல் மட்டத்தில் இருந்து சமூகத்தின் கீழ் மட்டம் வரை உள்ளடங்குகின்றனர். மிக மோசமான மக்கள் விரோதிகள் முதல் அன்றாடம் கஞ்சிக்கே வழி இல்லாது எதிர்வினையாற்றுபவர்கள் கூட கொல்லப்படுகின்றனர்.

நடக்கின்ற தொடாச்சியான நிகழ்வுகள், எந்தக் கொலையையும் நாம் மௌனமாக ஏற்றுக் கொண்டு இருக்க முடியாத நிலையை உருவாக்கின்றது. நடப்பவை எல்லாம் தமிழ் மக்களை மேலும் அழிவுக்கு இட்டுச் செல்லுகின்றது. தமிழ் மக்கள் என்ற அடையாளம் சிதைந்து, சிராழிந்து போகும் அளவுக்கு இவை மாறிவிட்டது. கொலைகளை இன்று கண்டிப்போர் பலவிதமாக செயலாற்றுகின்றனர். புலிகள் தாம் செய்யும் கொலைகளை கண்டிப்பதில்லை. புலியெதிர்ப்பு அணியினர் தாம் செய்யும் கொலைகளைக் கண்டிப்பதில்லை. பரஸ்பரம் இதில் ஒரு இனம் காணமடியாத ஒற்றுமை. கொலை செய்தவர்கள், அதை கொலை செய்யப்பட்ட தரப்பே செய்தாக புணாந்து செய்தி வெளியிடுகின்றனர்.

உண்மை, நீதி, மனிதத்துவம் என என எதுவுமற்ற அராஜகத்தில் அரசியல், தேசியம், மனித உரிமை எல்லாம் சிதைந்து சின்னபின்னமாகின்றது. கொலையைக் கண்டிப்பது கூட சிலருக்கு (ரி.பி.சி புலியெதிர்ப்பு அணிக்கு) உள்நோக்கம் கொண்ட அரசியலாகிவிட்டது. கொலைக்கான சமூகக் காரணங்களை கேள்விக்குள்ளாக்காத கண்டிப்பது போலித்தனமானவை.

ஒரு தரப்பு கொலையைக் கண்டிப்பது அதை விடக் கேவலமானது. அரசியல் கொலைகளை, கற்பழிப்புகளை, வன்முறைகளை, பொய்களை, சதிகளை எல்லாம் கூட்டி அள்ளி எம் முதத்தில் எறிகின்றது. இதைப் பார்த்து, தெரிந்துகொள் என்கின்றது. ஒரு பக்கம் பேரினவாதத்தால் ஊட்டிவளர்க்கப்படும் கைக்கூலி கொலைகாரக் கும்பல்கள், மறுபக்கம் குறுந்தேசியத்தின் பெயரில் அலையும் வெறிபிடித்த கொலைகாரர்கள். இதுவே எம் அரசியலாகிவி;ட்டது. அங்கு இங்கும் சமரை வீசுவதும் எமது நக்குத் தனமாகிவிட்டது.

பாவம் மக்கள். மிரண்ட விழியுடன் பரபரக்க தமக்குள் தாமே குசுகுசுக்கின்றனர். இந்த கொலைகள் அனைத்தும் மக்களுக்கு எதிரானவை. கொல்லப்பட்டவர் எந்தளவு பெரிய சமூக விரோதியாக இருந்தாலும், இன்று இதுவே எமது மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த கொலைகளின் பின்னால் எந்த தர்மிக பலமும், குறைந்தபட்ச அரசியல் நேர்மையும் கிடையாது. ஒரு தலைப்பட்சமாக கொலைகளை கண்டிப்பதையும் நாம் அனுமதிக்க முடியாது. மக்கள் மட்டும் தான், தமது சொந்த தீர்வுகளை வழங்க முடியுமே ஒழிய, மக்களை அடிமைப்படுத்தும் கொலைகாரக் கும்பல்கள் அல்ல.

அனைத்து கொலைகளையும் நாம் எதிர்ப்போம்!
இதற்கான அரசியல் சமூக வேரை இனம் கண்டு, அதை அம்பலம் செய்வோம்!
மக்கள் மட்டும் தான் வரலாற்றை தீர்மாணிக்க முடியும்;. கொலைகாரர்கள் அல்ல!