தமிழ் அரங்கம்

Saturday, January 28, 2006

வெள்ள நிவாரணம்

வெள்ள நிவாரணம் :"அரசியல் பண்ணுவது" தவறா?

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரணம் பெறப் போனவர்களில் 42 பேர் கொல்லப்பட்டு, அவர்களின் உற்றார்உறவினர் கதறி எழும் ஓலத்தை விட ஓங்கி ஒலிப்பது, அந்தக் கொடுமையை தூர நின்று வேடிக்கை பார்த்து, ''ச்ச்சு''க் கொட்டும் நடுத்தர, மேட்டுக்குடி அறிவாளிகளின் வேறு வகையான, வழக்கமான ஒப்பாரிதான்:

''ஐயோ, அரசியல் பண்ணாதீங்க!'', ''அரசியல்வாதிங்கதான் எல்லாத்துக்கும் காரணம்!'', ''அரசியல்வாதிங்க தலையீடு செஞ்சுதான் எல்லாத்தையும் கெடுக்கிறாங்க!'', ''இந்தத் துயரச் சம்பவத்திலும் அரசியல் ஆதாயம் தேட முயல்றானுங்க!'', ''அழுகைச் சத்தத்திலும் ஓட்டுத் தேடும் அரசியல்கள்.''

எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சிகளும் குறிப்பாக கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒருவர் மீது மற்றவர் குற்றச்சாட்டுகள் எதிர்க் குற்றச்சாட்டுக்கள் வீசிக் கொள்வதைத்தான் இப்படிச் சொல்லி ஒப்பாரி வைக்கிறார்கள். முக்கியமாக இப்படிப்பட்டவாதப் பிரதிவாதங்களைச் செய்திகளாக்கிக் காசு பார்க்கும் செய்தி ஊடகம்தான், தங்களின் பெரும்பான்மை நேயர்கள் வாசகர்களான நடுத்தர, மேட்டுக்குடியின் சார்பாக இத்தகைய ஒப்பாரி வைப்பதில் முன்னணிப் பாத்திரம் வகிக்கின்றது. இதுவும் ஒரு வியாபாரத்துக்காகத்தான்!

உண்மையில் ''அரசியல் பண்ணுவது'' அரசியல் கட்சிகளின் முக்கியமான வேலைகளில் ஒன்று! அப்படிச் செய்யாமல் இருக்கும் அரசியல் கட்சி அரசியல் அரங்கில் நீடிக்கவே முடியாது, அழிந்து போகும்! அவை ''அரசியல் பண்ணு''வதால்தான் மக்களுக்குக் கொஞ்ச நஞ்சமாவது அரசியல் தெரிகிறது. இதுவும் ஒருவகையான அரசியல் விழிப்புணர்வுதான். அதனால் தான், எங்கே தன் ''குட்டு'' அம்பலப்பட்டு போகுமோ, மக்களிடையே தம் செல்வாக்கு மங்கிப் போகுமோ என்று ஓரளவு அஞ்சி அஞ்சி, அரசியல் கட்சிகள் குறிப்பாக, ஆளும் கட்சிகள் பயந்து நடக்கின்றன. கருணாநிதியோ, ஜெயலலிதாவோ யாராக இருந்தாலும் அவர்களின் செயல்பாடுகள், இலஞ்சஊழல், அதிகார முறைகேடுகள், நிர்வாகச் சீர்கேடுகள், குற்றங்குறைகள் ஆகியவை மக்களிடையே வைத்து அலசப்படும்போதுதான் ஓரளவாவது உண்மைகள் தெரியவருகின்றன.

''அரசியல் பண்ணப்''படுவதால்தான் சுனாமி நிவாரணத்தில் நடந்த ஊழல்கள், வெள்ள நிவாரணம் வழங்குவதில் நடந்த படுகொலைகள் போன்றவற்றுக்கு எந்த அளவு யார், யாருக்குப் பொறுப்பு இருக்கிறது என்பது தெரிய வருகிறது. இல்லையென்றால், இந்த உண்மைகள் எல்லாம் அடையாளம் தெரியாத பிணங்களாக வகைப்படுத்தி புதைக்கப்படும் அல்லது அதிகாரவர்க்க ஆவணக் குவியல்களுக்குள் புதைந்து போகும்.

இதுபோன்ற விவகாரங்கள் பொதுமக்கள் முன்பு வைத்து அலசப்படாமல் போவதால் அதிகபட்சம் ஆதாயம் அடையப்போவது போலீசும் அதிகாரவர்க்கமும்தான். ஏற்öகனவே, ஓட்டுக்கட்சிகளைப் போல மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு ஏதுமில்லாத இவர்கள் மேலும் கொழுத்துத் திரிவார்கள். உங்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை என்று ஏற்கெனவே திமிராகப் பேசித்திரிகிறார்கள்.

கொஞ்சங்கூட அரசியல் அறிவும் ஈடுபாடும் இல்லாமல், தானுண்டு, தன்வேலை, தன் மனைவிமக்கள் உண்டு என்று பிழைப்புவாதத்தில் மக்கள் இருப்பதும், பொறுக்கித் தின்னுவதே அரசியல் என்றும் போராட்ட உணர்வு எதுவும் இல்லாது தலைவர்களின் காலில் விழுந்து கும்பிடுவதும் என்று தொண்டர்கள் இருப்பதும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற பாசிஸ்டுகளுக்கு வசதியாக இருக்கிறது.

பேருந்துக் கட்டண உயர்வு உட்பட ஒரே சமயத்தில் திடீரென்று 4000 கோடி ரூபாய் சுமையைத் தமிழக மக்கள் மீது மூன்றாண்டுகளுக்கு முன்பு ஏற்றி வைத்து அப்படியே அமுக்கினார், ஜெயலலிதா. இது வெறும் பொருளாதார சீரமைப்பு, கசப்பு மருந்து, இதை அரசியல் படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால், இது கருணாநிதி ஆட்சியின் சீர்கேட்டால், கருவூலம் காலியாக்கப்பட்டதன் விளைவு என்று தானே ''அரசியல்'' பண்ணினார். அன்று ஜெயலலிதாவுக்கு எதிராக பிற அரசியல் கட்சிகளும் தொழிலாளர், மாணவர் என்று பிற இயக்கங்களும் கடும் எதிர்ப்புக் காட்டியதால்தான் ஜெயலலிதா ஒரு உண்மையைப் போட்டுடைத்தார். ''தமிழ்நாட்டுக்கு நேரடியாகவும், மத்திய அரசு மூலமாகவும் கடன்தரும் உலக வங்கியும், சர்வதேச நிதியமும் கட்டண உயர்வு, வரி விதிப்பு போன்ற பல நிபந்தனைகள் விதிக்கின்றன. கடன் பெற வேண்டுமானால் அதன்படி செய்ய வேண்டியிருக்கிறது'' என்றார்.

அதேபோலத்தான் சுனாமி நிவாரணத்துக்காக ஒதுக்கப்பட்ட செலவிடப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய்களில் ஒரு சிறு துளி அளவுதான் பிரதமர் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்தும் ''பொதுமக்கள்'' வழங்கிய நன்கொடையும் ஆகும். மிகப் பெரும் அளவிலான மீதித் தொகை எங்கிருந்து, எதற்காக வந்தது என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாக உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து போன தி.மு.க. உள்ளிட்ட எம்.பி.க்களும், அமைச்சர்களும் இந்த மாநிலத்திற்காக எதுவும் செய்யவில்லை; மத்திய அரசிடம் தான்தான் போராடிப் பல கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதாக ஜெயலலிதா அடிக்கடி குற்றஞ்சாட்டுகிறார். அதேபோல, பல அந்நிய நாட்டு முதலீடுகளைப் பெற்று தனது சொந்த முயற்சியால் தமிழகத்தை தொழில்மயமாக்கி வருவதாக ஜெயலலிதா உரிமை பாராட்டிக் கொள்கிறார்.

இது உண்மையல்லவென்று மறுக்கும் தி.மு.க. காங்கிரசு தரப்பு, தாம் எவ்வளவு அந்நிய முதலீடுகள், தொழில்கள் வருவதற்கு காரணமாக இருக்கிறோம் என்று பட்டியல் போடுகிறார்கள். சுய உதவிக் குழுக்களுக்கான திட்டம் கடன், மத்திய அரசு உதவியிலானது என்றாலும் தமது சொந்த முயற்சியிலானது என்று கூறி அரசியல் ஆதாயம் தேடுகிறார், ஜெயலலிதர் அதேபோல சுனாமி நிவாரணத்துக்குப் பல ஆயிரம்கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது; இருந்தபோதும் அவை நிர்வாகச் சீர்கேடு, ஊழல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படாமல் போகிறது என்கிறது எதிர்த்தரப்பு.

இப்படி இவர்கள் ''அரசியல் பண்ணுவதில்'' கொஞ்சமாவது அரசு இரகசியங்கள் வெளிப்படுகின்றன என்றாலும் வெளியே தெரியாமல் போகும் மறைக்கப்படும் முக்கியமான உண்மைகளும் உள்ளன. எப்படி இவர்கள் போட்டி போட்டு, கொண்டு வரும் அந்நிய முதலீடுகள் தொழில்கள் ஏகாதிபத்தியப் பன்னாட்டுத் தொழில் கழகங்களின் சுரண்டலுக்காக செய்யப்படுகின்றனவோ, அப்படித்தான் சுய உதவிக் குழுக்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், சுனாமி நிவாரண வெள்ள நிவாரண உதவிகள் பணிகள் எல்லாமே ஏகாதிபத்திய சேவைக்காக உலக வங்கி ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற அந்நிய நிதி நிறுவனங்களின் கடன்கள் திட்டங்களுக்காகவே திட்டமிட்டு செய்யப்படுகின்றன.

சுனாமி நிவாரணத்துக்காக வழங்கப்படும் நிதி, மீனவர்கள் மீன்பிடிப் படகுகள் வலைகள் மற்றும் மீனவர்களின் குடியிருப்புகள் போன்ற மக்கள் நல்வாழ்வுக்காகச் செலவிடப்படுகின்றன என்றே பலரும் எண்ணுகின்றனர். அதேபோல மழை வெள்ள நிவாரணம் என்பது குடும்பத்துக்கு ரூ. 2,000, ரூ.1000 என்றும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு இவ்வளவு என்றும் ரொக்கமாகவும், வேட்டிசேலை, அரிசி, மண்ணெண்ணெய், சோற்றுப் பொட்டலம் ஆகியவற்றுக்காக செலவிடப்படுவதாகவும் பலரும் நம்புகிறார்கள்.

சுனாமி நிவாரணத்திற்காக இதுவரை மைய அரசு மூலம் வந்தது ரூ.679.61 கோடி ரூபாய். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிவாரணம் வழங்குவதற்கு மாறாக, சுனாமியால் பாதிக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்புகளைச் சீர்செய்வதற்காக என்றே உலகவங்கி ரூ. 1903.5 கோடியும், ஆசிய வளர்ச்சி வங்கி ரூ. 646.88 கோடியும், வேளாண் வளர்ச்சிக்கான உலக நிதியம் ரூ. 67.50 கோடியும் கொடுத்துள்ளன. இவையும் கடனுதவி தாமே தவிர நன்கொடை உதவி அல்ல. இவற்றிலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை சீரமைக்க ரூ. 28 கோடியும், மீன்பிடிப்பு தொழிலை சீரமைக்க ரூ. 87.60 கோடியும் நான்கு, ஐந்து தவணைகளில் தரப்படும். மீதம் பெரும்பாலான தொகை சுற்றுலா வளர்ச்சி முதலிய வேறு தொழில்களுக்காக ஒதுக்கப்படும்.

இப்போது, ஜெயலலிதா கோரியிருக்கும் வெள்ள நிவாரணமும் இதே வகையானதுதான். வெள்ள நிவாரணமாக ஜெயலலிதா கோரியிருக்கும் ரூ.13,685 கோடியில் அடங்கியுள்ள விபரங்கள்; கூட்டுறவு சங்கங்களுக்கு விவசாயிகள் அசலும் வட்டியுமாக கட்ட வேண்டிய தொகையைத் தள்ளுபடி செய்யும் வகையில் ரூ. 4626 கோடி, சாலைகளைச் சீரமைக்க 2,523 கோடி, நீர்ப்பாசன ஆதாரங்களை சீரமைக்க774 கோடி, ஊரணிகள் மற்றும் குளங்களை புனரமைக்க 60 கோடி, வெள்ளப் பேரழிவால் வேலையிழந்துள்ள விவசாயத் தொழிலாளர்கள், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு உடல் உழைப்பு வேலைவாய்ப்பு (தினக்கூலி) வழங்க ரூ. 77 கோடியே 33 லட்சம் என்று கணக்கு சொல்கிறது, ஜெயலலிதா அரசு.

கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட சத்துணவுத் திட்டம் எம்.ஜி.
ஆரின் உள்ளத்தில் சுரந்த கருணை மழையின் விளைவு என்று பலரும் எண்ணுகிறார்கள்; ஆனால், அது உலகவங்கியின் மூளையில் உதித்த திட்டம் என்பது அவர்களுக்குத் தெரியாது. மகளிர் சுயஉதவித் திட்டம் என்பது உலகவங்கி முதலிய ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் நுண்கடன் வழங்கு திட்டத்தின் கீழ் வருவது என்பதும் அவர்களுக்குத் தெரியாது. ஏதோ சில தொண்டு உள்ளம் படைத்த மனிதர்களின் முயற்சியால் உருவாக்கப்படுபவை அல்ல, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்; ஏகாதிபத்தியத்தின் திட்டமிட்ட சதித்தனமான ஏற்பாடுதான்.

இவைபோலவே, சுனாமி நிவாரணம், வெள்ள நிவாரண வேலைகளிலும் உலக வங்கி முதலிய ஏகாதிபத்தியங்களின் நிதி, தொழில் நிறுவனங்களின் சதித்திட்டங்கள் ஒளிந்து கொண்டு வருகின்றன. குடிசைப் பகுதிகளையும், குப்பங்களையும் அகற்றுவது; அங்கே அந்நிய நிதி தொழில் தேவைக்கான கட்டமைப்புகளை உருவாக்குவது என்று அடாவடித்தனமாக ஜெயலலிதா செய்த முயற்சி ஏற்கெனவே முழுமையாக நிறைவேற்றப்பட முடியவில்லை. இப்போது சுனாமி வெள்ள நிவாரணம், மறுசீரமைப்பு என்ற பெயரில் செய்யப்படுகிறது.

வரலாறு காணாத வெள்ள பேரழிவில் தமிழக மக்கள் உயிரோடு அடித்துச் சென்ற அதேசமயம் தயாநிதி மாறனும் ஜெயலலிதாவும் அமெரிக்க பில்கேட்ஸ், ஜெர்மனியின் பி.எம்.டபுள்யூ முதலாளிகளோடு புதிய தொழில்களுக்கான ஒப்பந்தம் போடுகின்றனர். உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜெர்மனியின் பி.எம்.டபிள்யூ.வின் துணைத் தலைவர் கிளாஸ் பெர்னிங், ''இதுவரையில் பி.எம்.டபிள்யூ நிறுவனம் கண்டிராத அதிவேகமான பதிலுக்காகவும், இந்த நிறுவனம் முதலீடு செய்வதற்கு வசதியாக தமிழக அரசு காட்டிய வேகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

''வெள்ளத்திற்கு அணை போட முடியாது. ஆண்டுதோறும், போதிய அளவு மழை பெய்யும் என்று இனி திட்டவட்டமாக கூறவும் முடியாது. இந்நிலையில் விவசாயிகள் வருமானத்திற்கு உத்திரவாதம் வேண்டும் என்றால் மரபுவழி விவசாயத்தை உடனடியாக கைவிட வேண்டும். அரசு அறிமுகப்படுத்தும் ஒப்பந்த பண்ணை விவசாயத்திற்கு மாற வேண்டும். பயோபெட்ரோல் தயாரிக்கப் பயன்படும் சக்கரைக் கிழங்கு, சக்கரைச் சோளம், பயோடீசல் தயாரிக்கப் பயன்படும் காட்டாமணக்கு மற்றும் ஏற்றுமதிக்கான மலர், பழம், மூலிகை பண்ணைகளாக விவசாயத்தை மாற்றுவதுதான் ஒரே தீர்வு என்கிறது, ஜெயா அரசு. அதற்காக தனியார் முதலாளிகளுடனான ஒப்பந்த பண்ணை சாகுபடிதான் செய்ய வேண்டும் என்று விவசாயிகளை நிர்பந்திக்க, கடன், நிவாரணம் மற்றும் மானியங்களைப் பயன்படுத்தி சதி வலையைப் பின்னுகிறது, அரசு.

வெள்ளப் பேரழிவை தங்கள் கண்ணாடி மாளிகைகளிலிருந்து பார்த்து ரசிக்கும் ஏகாதிபத்திய அடிவருடிகளுக்குத் தும்மல் வந்தாலும் துடித்துப் போகிறது, பாசிச ஜெயா கும்பல்.

குறிப்பாக, சென்னையைத் தாக்கிய வெள்ளத்திற்கு முக்கிய காரணம், 17 கி.மீ. நீளத்திற்கு சென்னைக்குள் ஓடும் பக்கிங்காம் கால்வாய்! ஆக்கிரமிப்பால் அது சுருங்கி போனதால், பிதுங்கிய பெருவெள்ளம் ஏகாதிபத்திய நிறுவனங்கள் மண்டி கிடக்கும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையை மூழ்கடித்து போக்குவரத்தை குலைத்து விட்டது. வெள்ளத்தால் முற்றுகையிடப்பட்ட ஏகாதிபத்திய நிறுவனங்கள் உடனடியாக நிலைமையைச் சரிசெய்யுமாறு ஜெயலலிதாவிற்கு ஆணை பிறப்பித்தன. ஜெயலலிதாவின் பட்டாளம் அவ்விடத்திற்குப் பதறிக் கொண்டு ஓடியது. அடுத்த சில நிமிடங்களில், பக்கிங்காம் கால்வாயில் இருந்து கடலுக்கு புதிய கால்வாய் வெட்ட, வரைபடத்தோடு உத்தரவு பிறந்தது.

சுனாமி நிவாரணமோ, வெள்ள நிவாரணமோ, தவறாமல் ''அரசியல் பண்ணும்'' ஆளும் கட்சிகள்எதிர்க்கட்சிகள், ஓரளவு உண்மைகள் வெளிவர உதவினாலும், தமது ஏகாதிபத்திய சேவை பற்றிய இரகசியங்கள் மட்டும் வெளிவராமல் எச்சரிக்கையாக இருக்கின்றன.

நன்றி புதியஜனநாயகம்

Friday, January 27, 2006

இங்கேயும் ஒரு அபுகிரைப்

இங்கேயும் ஒரு அபுகிரைப்
வீரப்பனைத் தேடுவது என்ற பெயரால் மலைவாழ் மக்களின் மீது அதிரடிப்படை ஏவிவிட்ட சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள் சதாசிவம் கமிசனால் உறுதி செய்யப்பட்டுள்ளன


சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பலை வேட்டையாடுவதற்காக, தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படைகள், சத்தியமங்கலம், தாளவாடி, கொள்ளேகால் பகுதிகளைச் சேர்ந்த மலைவாழ் மக்களின் மீது நடத்திய மனித உரிமை மீறல்களைப் புதிதாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. வீரப்பனைக் ''கொன்ற'' தமிழக அதிரடிப்படையின் ''வீர சாகசத்தை''ப் புகழ்ந்து தள்ளிய முதலாளித்துவ பத்திரிகைகளால்கூட, அதிரடிப் படைகளின் அட்டூழியங்களைப் பூசி மெழுகிவிட முடியவில்லை.

தமிழக கர்நாடக அதிரடிப் படைகள் நடத்திய பாலியல் வன்முறைகள், சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்கள், இரத்த சாட்சிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பவானி நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் ச.பாலமுருகன், அதிரடிப்படையால் நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்களின் வாழ்க்கை நிர்மூலமாக்கப்பட்டதை, ''சோளகர் தொட்டி'' என்ற நாவல் மூலம் இலக்கிய சாட்சியமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தேசிய மனித உரிமை கமிசனால் நியமிக்கப்பட்ட சதாசிவம் கமிசன், தமிழககர்நாடக அதிரடிப் படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்திய பொழுது, இந்த அதிரடிப் படைகள் மலைவாழ் மக்களின் மீது ஏவிவிட்ட சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், போலி மோதல் கொலைகள் அம்பலமாகி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கின.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சதாசிவா, மையப் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் நரசிம்மன் ஆகியோரைக் கொண்டு 1999ஆம் ஆண்டு ஜூனில் உருவாக்கப்பட்டது இந்த கமிசன். மலைவாழ் மக்களில் 193 பேர், தமிழக கர்நாடக அதிரடிப் படைகளைச் சேர்ந்த 28 போலீசு அதிகாரிகள் உள்ளிட்டு 243 பேரிடம் விசாரணை நடத்தி, சதாசிவம் கமிசன் 2003ஆம் ஆண்டு டிசம்பரில் தனது அறிக்கையை தேசிய மனித உரிமை கமிசனிடம் ஒப்படைத்தது.

இந்த கமிசன் உருவாக்கப்பட்டதையும், விசாரணை நடத்துவதையும் ஏற்றுக் கொள்ளவே மறுத்து வந்த தமிழக கர்நாடக மாநில அரசுகள், வீரப்பனோடு சேர்த்து சதாசிவம் கமிசன் அறிக்கையையும் புதைத்துவிட கடந்த இரண்டு ஆண்டுகளாகவே முயன்று வந்தன. எனினும், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களும், மனித உரிமை அமைப்புகளும் கமிசனின் அறிக்கையை வெளியிடக் கோரித் தொடர்ந்து போராடி வந்தனர். இதனால் மனுதாரர் என்ற அடிப்படையில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.பி.குணசேகரனுக்கு, சதாசிவம் கமிசன் அறிக்கை தேசிய மனித உரிமை கமிசனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

''தமிழக கர்நாடக அதிரடிப் படைகளால் அக்.3 1990க்கும் ஜூலை 18, 1998க்கும் இடைப்பட்ட எட்டு ஆண்டுகளில் 66 பேர் போலி மோதல் படுகொலைகள் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும்; இந்தச் சட்ட விரோதமான படுகொலையை மறைக்க, வீரப்பன் கும்பலோடு நடந்த மோதலில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தமிழக கர்நாடக அதிரடிப்படைகள் நடத்திய நாடகத்தையும் கமிசனின் அறிக்கை தக்க ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறது.

''அதிரடிப் படைக்கும், வீரப்பன் கும்பலுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் இம்மோதல்களின் உண்மைத் தன்மை குறித்து, பல்வேறு சாட்சியங்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களை ஆதாரமற்றவை என ஒதுக்கித் தள்ளிவிட முடியாது'' எனக் குறிப்பிட்டுள்ள சதாசிவம் கமிசன், ''ஒரு மோதல் நடந்தால், அதில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பும், ஒருவரை நோக்கி ஒருவர், மிக விரைவாக, குறுக்கும் நெடுக்குமாகச் சுட்டுக் கொண்டிருப்பது நடந்திருக்கும். ஆனால் இந்த மோதல்களில் அப்படி இங்கொன்றும் அங்கொன்றுமாக, பல்வேறு திசைகளில் துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை'' என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த 66 பேரும், தலையின் முன்புறமோ, பின்புறமோ அல்லது உடம்பின் முன்புறமோ, பின்புறமோ சுடப்பட்டு இறந்து போயிருப்பதை ஆதாரமாகக் காட்டி, இவை அனைத்தும் போலி மோதல் படுகொலைகள்தான் என்பதை சதாசிவம் கமிசன் ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.

பெங்களூரில் இயங்கி வரும் தடய அறிவியல் பரிசோதனைக் கூடத்தின் துணை இயக்குநர் என்.ஜி.பிரபாகர், ''இந்த 66 பேரில், 28 பேர் ஆறு தப்படியில் இருந்து அறுநூறு தப்படி தூரத்திற்குள் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும்; மூன்று பேர் 550 மீட்டர் தொலைவிற்குள் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும்; ஆறு பேர் மிக மிக அருகாமையில் இருந்து அதாவது, ஆறு தப்படிக்கும் குறைவான தொலைவில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும்'' சதாசிவம் கமிசனில் சாட்சியமாக அளித்து, அதிரடிப் படையின் மோதல் நாடகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

மிக மிக அருகாமையில் இருந்து சுடப்பட்ட இந்த ஆறு பேரில், புட்டா என்பவர், வாய்க்குள் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். குமத்ஸா என்பவரின் உடலில் பாய்ந்துள்ள ஒரு குண்டு, மூன்று இன்ஞ் தூரத்தில் இருந்தும், குஞ்சப்பா என்பவரின் உடலில் பாய்ந்துள்ள ஒரு குண்டு ஒன்பது இன்ஞ் தூரத்தில் இருந்தும் சுடப்பட்டுள்ளது. இவர்களைப் போல, வீரப்பனின் நம்பகமான கூட்டாளியாக இருந்த சேத்துக்குளி கோவிந்தனின் மனைவி பாப்பாத்தியும்; மணி என்ற மற்றொரு பெண்ணும் மிக அருகாமையில் இருந்து சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

''மோதலில் நடந்த மரணம் என்றால், இறந்தவர்களின் உடலில் துப்பாக்கி தோட்டாவின் புகைபடிய வாய்ப்பில்லை; ஆனால், இந்த 66 பேரின் உடலில் தோட்டாவின் புகை இருந்திருக்கிறது.''

''அதிரடிப்படை கூறும் ஒரு மோதல் மரணம், மாதேஸ்வரன் மலைப்பகுதியில் அதிகாலை 5.30 மணிக்கு நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அன்று காலை 7 மணிக்கே மைசூர் ஆர்.டி.ஓ. மோதல் நடந்த இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. மைசூரில் இருந்து மாதேஸ்வரன் மலை 140 கி.மீ தூரத்தில் உள்ளது. அதற்குள் ஆர்.டி.ஓ. அந்த இடத்திற்கு எப்படி வர முடியும்? எனவே, இந்த 'மோதலை' போலீசாரே உருவாக்கியுள்ளனர்.''

''மோதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இந்த 66 பேரின் நெருங்கிய உறவினர்கள் கூறியவற்றைப் பற்றித் தீர விசாரிக்காமல், ஒதுக்கித் தள்ளியிருப்பது ஒன்றே, அதிரடிப்படையின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் கொள்ள வைக்கிறது'' எனப் பல்வேறு கோணங்களில் இருந்து, அதிரடிப் படையின் மோதல் நாடகத்தை சதாசிவம் கமிசன் அம்பலப்படுத்தியிருக்கிறது.

''ராஜேந்திரன் என்பவரது மனைவி லட்சுமியைச் சட்டவிரோதமாகக் காவலில் வைத்து, அவரை அதிரடிப்படை பாலியல் பலாத்காரப்படுத்தியிருக்கிறது. இவரைப் போல பல பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, மானபங்கப்படுத்தப்பட்டு, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பல பெண்களின் உடம்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய பாலியல் வன்முறை, மின்சாரத் தாக்குதலால் ஏழு பெண்கள் நிரந்தர ஊனமடைந்துள்ளர். ராஜப்பா என்பவரது மனைவியை வயதான பெண் என்றும் பாராமல் 4 அதிரடிப்படை போலீசார் அடித்தே கொன்றுள்ளனர். விசாரணை என்ற பெயரில் கூட்டிச் செல்லப்பட்ட பெண்களில் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்'' என அப்பாவி மலைவாழ் பெண்களின் மீது ஏவிவிடப்பட்ட சித்திரவதைகளும், அதிரடிப்படையின் காமவெறியும், களியாட்டங்களும் அறிக்கையில் பட்டியல் போட்டுக் காட்டப்பட்டுள்ளன.

''ஒர்க்ஷாப்'' என்று அழைக்கப்பட்ட அதிரடிப்படையின் மாதேஸ்வரன் மலை முகாம் சட்டவிரோதமான சிறையாகவும், சித்திரவதைக் கூடமாகவும் செயல்பட்டு வந்ததையும் சதாசிவம் கமிசன் அம்பலப்படுத்தியிருக்கிறது. ''அப்பாவி மலைவாழ் மக்கள் பலரை தடா வழக்கில் சேர்ப்பதற்கு முன்பாக, இந்த ஒர்க்ஷாப்பில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து ஆண்பெண் என்ற வேறுபாடின்றி, அவர்களின் உடம்பிலும், பிறப்புறுக்களிலும் கிளிப்புகளைப் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்யப்பட்டிருப்பதை கமிசனின் அறிக்கை உறுதி செய்திருக்கிறது.

''தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட அதிரடிப் படைகள் என்பது ஆயுதப் படைப் பிரிவு போன்றதுதான். அப்படைகளுக்கு போலீசு நிலையம் போலச் செயல்படக் கூடிய அதிகாரம் கிடையாது. அதாவது, அதிரடிப் படைக்கு யாரையும் கைது செய்யவும், காவலில் அடைத்து வைக்கவும் அதிகாரம் இல்லாதபொழுது, அப்படைகள் தங்களின் அதிகார எல்லைகளை மீறிச் சட்டவிரோதமாக நடந்து கொண்டுள்ளன'' என சதாசிவம் கமிசன் குற்றஞ் சுமத்தியுள்ளது.

இச்சட்டவிரோதக் காவல், கைது குறித்த கமிசனின் குற்றச்சாட்டுகளுக்கு, தமிழகப் போலீசு துறையின் இயக்குநர் மற்றும் அதிரடிப் படைகளின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தேவாரம், ''தனக்கு நாடு முழுவதும் யாரையும் கைது செய்யும் அதிகாரம் உண்டு; அதனால் தனக்குக் கீழ் பணியாற்றும் அதிரடிப் படைக்கும் கைது செய்யும் அதிகாரம் உண்டு'' எனப் பதில் அளித்தார். ஆனால், கமிசன் தேவாரத்தின் ''வானளாவிய அதிகாரம்'' குறித்த இந்தப் பதிலை ''சட்டரீதியாகச் செல்லத்தக்கதல்ல'' எனக் கூறி, ஒதுக்கித் தள்ளிவிட்டது.

வீரப்பனைத் தேடிப் பிடிக்க முடியாத அதிரடிப் படை, 121 பேரை வீரப்பன் கூட்டாளிகள் என்ற குற்றச்சாட்டின் கீழ் ''தடா''வில் கைது செய்து, மைசூர் சிறையில் அடைத்தது. ''போலீசின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்கு முன்னரே இவர்கள் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதக் காவலில் அடைக்கப்பட்டு, அருவெறுக்கத்தக்க வகையில், மிருகத்தனமாகச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். தங்களின் சட்டவிரோதமான கைதை நியாயப்படுத்துவதற்காகவே, இவர்களைப் பொய் குற்றச்சாட்டின் கீழ் தடாவில் கைது செய்துள்ளனர்'' என சதாசிவம் கமிசன் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ''தடாவின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 121 பேரில், 38 பேரின் வழக்குகளை மாநில அரசின் தடா மறுஆய்வு கமிட்டி முறைப்படி தீர விசாரித்திருந்தால், அந்த 38 பேரும் நீண்டகாலம் சிறையில் இருந்திருக்க வேண்டியிருக்காது'' எனச் சுட்டிக் காட்டியுள்ள சதாசிவம் கமிசன், ''செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்த இந்த 38 பேருக்கும் உரிய நட்டஈடு வழங்க வேண்டும்'' என்றும் பரிந்துரை செய்துள்ளது.

அதிரடிப் படையால் ''தடா''வின் கீழ் கைது செய்யப்பட்ட 121 பேரில், 14 பேர் தவிர மீதி அனைவரும் எவ்விதக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுள் 46 பேரின் மீது தடாவை ஏவியதற்கு, அவர்கள் அதிரடிப்படையிடம் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தைத் தவிர, வேறு எந்த ஆதாரத்தையும் போலீசால் காட்ட முடியவில்லை. இந்த ஒப்புதல் வாக்குமூலம் கூட நம்பத்தகுந்ததாக இல்லை என்பதை சதாசிவம் கமிசன் மட்டுமல்ல, இவர்களை விடுதலை செய்த தடா நீதிமன்றமும் சுட்டிக் காட்டியுள்ளது.

முமுமு
பல ஆண்டுகளுக்கு முன் போலீசின் அத்துமீறல்களை விசாரித்த ஒரு நீதிமன்றம் ''போலீசார் காக்கிச் சட்டை போட்ட கிரிமினல்கள்'' எனத் தீர்ப்பளித்தது. அது மறுக்க முடியாத உண்மை என்பது சதாசிவம் கமிசன் விசாரணையில் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

அதிரடிப்படை வீரர்களைத் தூண்டிவிட்டு சதாசிவம் கமிசன் நியமிக்கப்பட்டதையே எதிர்த்து வழக்குப் போட வைத்த கர்நாடக மாநில அரசு, ''அதிரடிப்படை நடத்திய மோதல்கள் போலியானவை என்று கூற போதிய ஆதாரம் இல்லை; தடய அறிவியல் பரிசோதனைக் கூட துணை இயக்குநர் பிரபகாரன் சாட்சியம் அளிக்க, எந்தவொரு சமயத்திலும் அழைக்கப்படவேயில்லை'' எனக் கூறி சதாசிவம் கமிசன் அறிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது.

பாசிச ஜெயா தலைமையில் உள்ள தமிழக அரசோ, ''சதாசிவம் கமிசன் குறிப்பிடும் அத்துமீறல்கள் 199394ஆம் ஆண்டில் நடந்தவை; சட்டப்படி இந்த அத்துமீறல்களை, அவை நடந்த ஒரு வருடத்திற்குள் விசாரித்திருக்க வேண்டும்; ஆனால் சதாசிவம் கமிசனோ 1999ஆம் ஆண்டில்தான் விசாரணையை நடத்தியது. எனவே, கமிசனின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது'' எனச் சட்டவாதத்திற்குள் புகுந்து தப்பித்துக் கொள்ள முயலுகிறது.

ஈராக்கின் அபுகிரைப் சிறைச்சாலையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அமெரிக்கச் சிப்பாய்களில் ஒருசிலர் தவிர்க்க முடியாமல் தண்டிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அபுகிரைப்புக்கு இணையாக மலைவாழ் மக்களின் மீது சித்திரவதைகளை ஏவிவிட்ட அதிரடிப்படை வீரர்களுள் ஒருவர் கூடத் தண்டிக்கப்படாமல், அரசாலேயே காப்பாற்றப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, தமிழக கர்நாடக மாநில அரசுகள், அதிரடிப் படைக்குப் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெகுமதிகளை அளித்து, காக்கிச் சட்டை கிரிமினல்களுக்குக் கொம்பு சீவி விடுகின்றன. அரசு பயங்கரவாதம் என்ற சட்டபூர்வ பாசிசம் அரங்கேறி வருவதைத்தான் இது எடுத்துக்காட்டுகிறது.

சதாசிவம் கமிசன் கூட, தன்னிடம் சாட்சியம் அளித்த 243 பேரின் வாக்குமூலங்களில், 89 பேரின் வாக்குமூலங்களைத்தான் ஏற்றுக் கொண்டுள்ளது. மீதியுள்ளவர்களின் வாக்குமூலங்களை ஏற்றுக் கொள்வதோடு, போலீசாரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி கமிசன் முன் சாட்சியம் அளிக்க வர முடியாமல் போனவர்களின் வாக்குமூலங்களையும் சேகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்பொழுது மலைவாழ் மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடிவரும் அமைப்புகளால் முன்வைக்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த சதாசிவம் கமிசன் அறிக்கையை, மலைவாழ் மக்கள், மனித உரிமை அமைப்புகள், ஜனநாயக சக்திகளின் தொடர்ச்சியான போராட்டம்தான் வெளி உலகிற்குக் கொண்டு வந்தது. இப்படிப்பட்ட மக்கள்திரள் போராட்டங்களை நடத்துவதன் மூலம் மட்டும்தான், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியும், நட்டஈடும் கிடைக்கவும்; தேவாரம் உள்ளிட்ட அதிரடிப்படை கிரிமினல்களைத் தண்டிப்பதற்கான நிலைமையையும் உருவாக்க முடியும்.
மு ரஹீம்
நன்றி :புதியஜனநாயகம்

Thursday, January 26, 2006

புலிகள் செய்வதை நியாயப்படுத்தி உருவானதே புலிகள் அரசியல்

புலிகள் செய்வதை நியாயப்படுத்தி உருவானதே புலிகள் அரசியல்

பி.இரயாகரன்
25.01.2006


திட்டமெதுவுமின்றி புலிகள் அன்றாடம் தாம் செய்தவற்றை, நியாயப்படுத்தி தாமே கூறுவதே புலிகள் அரசியலாகியது. திட்டமாக வெளியிடப்பட்டவை எவையும், அவர்கள் தமது சொந்த இயக்க நடைமுறையாக கொண்டது கிடையாது. அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதையும், அவர்களாக வெளியிட்ட சொந்த வேலைத்திட்டம் எதையும் அவர்கள் கடைப்பிடிப்பது கிடையாது. இந்த வகையில் கட்டுரையில் சில பகுதிகளை எடுத்துக் காட்டியுள்ளேன். அன்ரன் பாலசிங்கம் எழுதிய "விடுதலை" என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் இந்த வகையில் அமைந்ததே. புலிகள் தாம் செய்ததை நியாயப்படுத்த, தம்மை மறுக்கின்ற முரணை உள்வாங்கியதே இந்த நூல். உண்மையில் புலிகளின் லும்பன் தனமான நடத்தைகளுக்கு, அரசியல் முலாம் பூசுவதே புலியின் அரசியலாக உள்ளது. பாலசிங்கமே அதன் பிதாமகன். இந்த நூலின் முன்பகுதி மீதான, சுருக்கமான விமர்சனத்தை இக்கட்டுரை அவர்களின் மக்கள் விரோத அரசியல் அம்பலம் செய்கின்றது.

தமிழ்மக்களின் தலைவிதியை தீர்மானித்ததும், தீர்மானித்துக் கொண்டிருக்கும் புலிகளின் நடவடிக்கைகளில் அன்ரன் பாலசிங்கத்தின் தலையீடே விசித்திரமானது. எப்போதும் புலிகளின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் அரசியல் வாதங்களை கண்டுபிடிப்பதைத் தான், அவரின் மதிநுட்பமாக புலிகள் காட்டிவந்தனர். இந்தப் போக்கே புலிகளின் இன்றைய அரசியலாகியது. லும்பன் தனத்தில் புலிகள் செய்வதை நியாயப்படுத்தும் அனைத்து வாதங்களும், இதற்குள் தான் மண்டிக் கிடக்கின்றது. புலிகளின் அன்றாட இராணுவ நடிவக்கைகளை நியாயப்படுத்தும் அரசியல், எந்த வித்திலும் மக்களின் சமூக பொருளாதார நலன் சார்ந்தவையாக என்றும் அமையவில்லை. மக்களின் சமூகப்பொருளாதார வாழ்வாதாரங்கள் சார்ந்த, அதற்கேற்ற இராணுவ வடிவங்கள் எதையும் புலிகள் என்றும் கொண்டிருக்கவில்லை. இதுவே இன்றைய எதார்த்தம்.

இந்த எதார்த்தம் ஆயிரக்கணக்கான மக்களின் தலைகளை உயிருடன் உருட்டிவிடுவதில் முடிகின்றது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், புலிக்கு இசைவானதாக்கி திரித்து விளக்குவதில் முடிகின்றது. தமிழ்மக்களின் நியாயமான போராட்டம் சிதைந்து சீரழிந்து அது என்னவென தெரியாது உருக்குலைந்து அழுகத் தொடங்கியுள்ளது. மக்களின் சமூகப் பொருளாதார நலன்கள் மறுக்கப்பட்டு, புலிகளின் நலன்கள் முதன்மைபெற்ற ஒரு அரசியல் வடிவமே வெம்பி வீங்கி காணப்படுகின்றது.

இதையே ~~விடுதலை என்ற பாலசிங்கத்தின் நூலின் முதல் கட்டுரை தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது. "எம்.ஜி.ஆரும் புலிகளும்" என்ற பாலசிங்கத்தின் முதல் கட்டுரை, எம்.ஜி.ஆர் என்ற நடிகனை, மக்கள் விரோதியை, காம வெறியனை, ஒரு ஊழல் பேர்வழியை நியாயப்படுத்துவதில் இருந்து அரங்கேறுகின்றது. அதே தளத்தில், தமது சொந்த கைக் கூலித்தனத்தை; சிறப்பாக எடுப்பாக எடுத்துக் காட்டுகின்றனர்.

இந்த எம்.ஜி.ஆர் சினிமா என்ற விளம்பர கவர்ச்சி ஊடகம் ஊடாக மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்த ஒரு கைதேர்ந்த நடிகன். இவன் ஒரு மக்கள் விரோத பாசிட் கூட. தமிழக மக்களை அடக்கியாண்ட, அவர்களை சூறையாடிய ஒரு கொடுங்கோலன். இந்தக் கொடுங்கோலனை பற்றி புலிகளும், பாலசிங்கமும் கொடுக்கும் படிமமே விசித்திரமானது. பாலசிங்கம் கூறுகின்றார் "… இல்லாதோருக்கு வாரி வழங்கும் மன வளமும் இருந்தது. ஏழை மக்கள் அவரை ஒரு தெய்வமாகப் பூசித்தனர்… அதிசயமான குணவியல்புகள் கொண்டவர். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு உன்னதமான மனிதாபிமானி" இதுதான் எம்.ஜி.ஆர் பற்றிய புலிகளின் சொந்த அரசியல் மதிப்பீடு. இந்த எம்.ஜி.ஆர் மக்களுக்காக என்னதான் செய்தான். சாதியம், ஆணாதிக்கம், சுரண்டல் முதல் சாராயம் காய்ச்சி கொள்ளையடிப்பது வரை அனைத்தினதும் ஏகபிரதிநிதியாக இருந்தவன். அரசு சொத்தையும், மக்களின் சொத்துகளையும் முறைகேடாக பயன்படுத்தியவன்;. பல மக்கள் போராட்டங்களை அடக்கியொடுக்கியவன். சில துப்பாக்கி சூட்டை போராட்டங்கள் மீது நடத்தி பலரைக் கொன்றவன். பல பத்தாயிரம் மக்களை போராட்டங்களின் போது கைது செய்து சிறைகளில் தள்ளி தாலியறுத்தவன்;. எம்.ஜி.ஆர் மோகன்தாஸ்சும் தேவாரமும் இணைந்து வடஆர்காடு, தர்மபுரி, ராமநாதபுரம் மாவட்டத்தில் கம்யூனிச புரட்சியாளர்கள் 21 பேரை மோதல் என்ற பெயரில் சுட்டு படுகொலை செய்த ஒரு பாசிட். இப்படி பற்பல.

இவனைத்; தான் புலிகள் ஒரு மாமனிதனாக, விடுதலை விரும்பியாக காட்டுகின்றனர். "தலைவர் பிரபாகரனது புரட்சிகரமான வாழ்வும் வீர வரலாறும் எம்.ஜி.ஆரை வெகுவாக கவர்ந்தது" என்கின்றனர். இப்படி புலிகள் ஒரு தலைப்பட்சமாக கூறுவது நிகழ்கின்றது. ஏன் இப்படி கூற முடிகின்றது என்றால் புலிகளின் குறித்த நலன் சார்ந்த நிலைப்பாட்டில் இருந்து, ஒரு மக்கள் விரோதியை மக்களின் தோழனாக காட்டுகின்றனர். புலிகளுக்கு பணமும், அவர்களின் நடவடிக்கைகளை பினாமியாக ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை மாமனிதர்களாக காட்டுவதே புலிகளின் அரசியல். இதுவே இன்றைய புலிகளின் எதார்த்தப் போக்கும் கூட. அதன் அடிப்படையில் தான் எம்.ஜி.ஆரைப் புகழ்கின்றனர்.

புலிகளுக்கு சட்டத்துக்கு புறம்பாக கோடிக்கணக்கில் கொடுத்த பணம், இந்திய துறைமுகத்தில் இருந்து ஆயுதங்களை கடத்திக் கொடுத்த விவகாரம், மற்றைய இயக்கங்களிடம் இருந்து ஆயுதங்களை பறித்து புலிகளிடம் கொடுத்த நிகழ்ச்சி போன்ற பலவே, புலிகள் எம்.ஜி.ஆர் பற்றி கொண்ட அரசியல் நிலைப்பாட்டுக்கு காரணம். எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதோ செய்தார் என்ற அடிப்படையில் புலிகள் புகழவில்லை. தமது சொந்த நலனை அடிப்படையாக கொண்டு, பொது அரசியல் நலனை திரித்து விடுவது நிகழ்கின்றது. இந்த அரசியல் வழியைப் போற்றி புகழ்வது நிகழ்கின்றது. நல்லதொரு உதாரணமாக, சிங்கள பேரினவாத கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என தமிழக மக்கள் வழங்கிய நிதியை, புலிகளின் குறுகிய நோக்கத்துக்கு முறைகேடாக எம்.ஜி.ஆர் வழங்க முற்பட்டதும், அதை புலிகள் பெற்றுக் கொண்டதுமான நிகழ்வு எதைக் காட்டுகின்றது என்றால் மக்கள் விரோதத் தன்மையின் கூட்டுப் பண்பை வெளிப்படுத்துகின்றது. இந்த மோசடிக்காகவே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை உருவாக்கி, மருத்துவமனை ஒன்றை அமைக்க உள்ளதாக கூறி, உலகத்தை ஏமாற்றி நாலு கோடி ரூபா பணத்தை பெற்ற நிகழ்வையும், அந்த மோசடியையும் இந்த நூல் கூறத் தவறவில்லை. இது அம்பலமான போது, அதை திருப்பிக் கொடுத்தது ஒருபுறம் நிகழ, எம்.ஜி.ஆர் அதற்கு பதிலாக கறுப்பு பணமாக அதை வழங்கியதை இந்த நூல் சொல்லுகின்றது. இந்த மோசடிப் பணம் எங்கிருந்து எப்படி எம்.ஜி.ஆருக்கு கிடைக்கின்றது?.

ஏழைகளின் நண்பனாக நடித்தபடி மக்களின் பணத்தை கொள்ளை அடித்ததையும், சட்டத்துக்கு புறம்பாக பணமூட்டைகளின் பின்னால் பதுங்கிக் கிடந்த எம்.ஜி.ஆரின் வேஷம் அருவருக்கத்தக்கவை. இதை விமர்சனமின்றி புலிகள் புகழ்வது எதைத்தான் காட்டுகின்றது. ஆம் மக்களின் பணத்தை எப்படியும் சூறையாடி பயன்படுத்தலாம் என்ற புலிகளின் சொந்த சிந்தாந்தத்தையே நியாயப்படுத்துகின்றது. அன்று ஒரு நிதி மோசடிக்காக உருவான அதே புனர்வாழ்வுக்கழகம் தான், இன்று வரை புலிப் பினாமியமாக உலகெங்கும் அத்தொழிலை செய்கின்றது. மக்களுக்கான நிவாரணம் என்ற பெயரில் நடப்பது அப்பட்டமான ஒரு மோசடி. நூல் பெருமையாக பீற்றி ஒத்துக் கொள்வது போல், எம்.ஜி.ஆர் ஆசியுடன் தொடங்கிய மோசடி எம்.ஜி.ஆரின் வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு அம்சமாக இருந்தது.

எம்.ஜி.ஆரின் சமூகப் பாத்திரம் பொதுவாழ்வில் கோமாளியாகவே இருந்தது. எதை எப்படி செய்வான் என்று யாரும் கூற முடியாத ஒரு பச்சோந்தியாகவே இருந்தவன். தற்புகழ்ச்சிக்காக தனக்குத் தானே நிறைய பட்டங்களை சூட்டிக் கொண்டவன். இதைத்தான் இன்று புலிகள் செய்கின்றனர். அரசு சொத்துகளை முறைகேடாக தனிப்பட்டவர்களுக்கு தாரை வார்த்தவன். பல நடிகைகளை மிரட்டி தனது வைப்பாட்டியாகவே வைத்திருந்தவன். அதற்காகவே தனது அதிகாரத்தையும், பணப்பலத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தியவன். அவன் உருவாக்கிய வாரிசு பற்றி, மிகச் சரியாக புதியகலாச்சார இதழில் குறிப்பிட்டது போல் "ஒரு மேட்டுக்குடிப் பார்ப்பனப் பெண் என்ற முறையில் ஜெயலலிதாவிடம் குடிகொண்டிருக்கும் வர்க்கத் திமிரும் சாதிய இறுமாப்பும் அசாத்தியமானவை. ஆங்கிலக் கான்வென்டிலிருந்து ஆணாதிக்கம் கோலோச்சும் கோடம்பாக்கம் திரையுலகிற்குள் திடீரெனத் திணிக்கப்பட்டு, அங்கே ஒரு அரைக் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு, எம்.ஜி.ஆரின் பாசிசக் குரூரங்களை அனுபவித்து, பின்னர் அவற்றையே தானும் உட்கிரகித்துக் கொண்டு எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக ஜெயலலிதா தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கதை நெடியது." என்கின்றது. இதே குரூரங்கள் தான் எம்.ஜி.ஆரின் பண்பு.

தனக்கு பின்னால் ஒரு பொறுக்கி தின்னும் கூட்டத்தையே உருவாக்கி அதில் தன்னைத்தான் மிதப்பாக்கியவன். பெரியாரியவாதியாக கூறிக் கொண்டு, குறி கெட்ட அனைத்தையும் செய்த ஒரு ஏமாற்று பேர்வழி. மக்களுக்காக அழுவதற்காகவே தனது கண்கள் இரண்டிக்கும் "கிளிசரினை" விட்டு அழும், கைதேர்ந்த ஒரு நடிகனாகவே வலம்வந்தவன். தமிழீழப் போராட்டத்தை தனது சொந்த பிழைப்புவாத போட்டி அரசியலுக்கு ஏற்ப திறமையுடன் பயன்படுத்தியவன். அதில் புலிகள் இணைந்து கொண்ட நிகழ்வை, நியாயப்படுத்தும் அரசியல் விளக்கம் தான் பாலசிங்கத்தின் இந்தக் கட்டுரை.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.ஆர் பாத்திரமே ஏகாதிபத்திய சதி; தான். சோவியத் ஏகாதிபத்தியத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட உலகளாவிய முரண்பாட்டில், அமெரிக்கா சார்பாக இலங்கைப் பிரச்சனையில் களமிறக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். இந்திய அரசு சோவியத் ஏகாதிபத்தியத்தின் துணையுடன் இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநாட்டிய காலத்தில், அது சார்பான தமிழ் இயக்கங்களை உருவாக்கியதுடன் இருந்தவற்றை வளர்த்தெடுத்தனர். இதனடிப்படையில் அமெரிக்காவும் தனது பங்குக்கு தனக்கேற்ற குழுக்களை வளர்த்தெடுக்க முனைந்தன. இதன் போதே எம்.ஜி.ஆர் என்ற நடிகனூடாக, புலிகளுக்கு தீனிபோட்டு வளர்த்தெடுக்கப்பட்டனர். இந்த உண்மையின் ஒரு பக்கத்தை மூடிமறைத்தபடியே இந்த நூல் வெளிக்கொண்டு வருகின்றது.

புலிகள் இயக்க வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர் வழங்கிய பணமும், ஆயுதங்களுமே மூலகாரணம் என்பதை இந்த நூல் ஒத்துக் கொள்கின்றது. தமிழ்மக்கள் தான் புலிகளை இந்த நிலைக்கு கொண்டு வந்தனர் என்று பின்னால் கூறுவது அபத்தமாகும். அன்னிய நிதிகளும், அன்னிய ஆயுதங்களும் தான், லும்பனான புலிகளைப் புலிகளாக்கியது. புலிகளின் அனைத்து நடவடிக்கையும் இதைத் தாண்டி நகரவில்லை. மக்களின் சமூக பொருளாதார உறவுக்கு வெளியில் இப்படிதான் புலிகள் உருவாக்கப்பட்டு களமிறக்கப்பட்டனர். அவர்களின் எடுபிடிகளாக கூட இருந்தனர். 14.05.1985 இல் அனுராதபுரத்தில் அப்பாவி மக்கள் மேலான தாக்குதலில் 120 பேர் கொல்லப்பட்டனர். அன்று வில்பத்தில் நடந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். புலிகளின் இத் தாக்குதலை நடத்தியதன் பின்னனியில் இந்திய அரசு இருந்ததை, பின்னால் பாலசிங்கம் இந்தியாவுக்கு எதிரான பேட்டியொன்றில் குறிப்பிடுகின்றார். இந்த தாக்குதலை அந்தநேரம் புலிகள் மறுத்றுவிட்ட மறுப்பறிக்கையும், பின்னால் அதை இந்தியா சொல்லி செய்ததாக கூறியதையும் நாம் எப்படிப் சுய அறிவுடன் புரிந்து கொள்வது.

முதலில் தாக்குதலை தாம் செய்யவில்லை என்றதும், பின் அதை இந்தியா சொல்லி செய்ததாக கூறியதும் இங்கு அரசியல் நேர்மையற்ற போக்கை அம்பலமாக்குகின்றது. மறுபக்கத்தில் இந்த தாக்குதலை செய்ய புலிகள் எதை இலஞ்சமாக பெற்றனர் என்பது மர்மமாகவே உள்ளது. இப்படி சோரம் போகும் அரசியல் வழியும், பின் அதை நியாயப்படுத்தும் அரசியலும் தான் இன்று வரை புலி அரசியலாக உள்ளது. இதைத்தான் பாலசிங்கத்தின் இந்த கட்டுரை செய்கின்றது. தமிழ் மக்களின் போராட்டம் மக்கள் நலன் சாhந்ததாக அமையாத வரலாற்றுக்கு, இந்த இரண்டு பிரதான ஏகாதிபத்திய தலையீடும் முக்கியமான காரணமாகவே அமைகின்றது.

ஆனால் மக்களை ஏமாற்றவும், தம்மை மக்கள் நலன் சார்ந்ததாக காட்டவும் புலிகள் பின்நிற்கவில்லை. புலிகளின் அரசியல் வேலைத்திட்டத்தை உள்ளடங்கிய கொள்கை விளக்க நூலை (இது ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளிவந்தது.) "சோசலிச தமிழீழம் எனறே தலைப்பிடுகின்றனர். அதில் புலிகளின் அரசியல் இலட்சியம் என்ற பகுதியில் ~~தேசிய விடுதலை, சோசலிச சமூகப் புரட்சி ஆகிய இரு … அடிப்படையான அரசியல் இலட்சியம்" என்கின்றனர். ஆனால் அதையா இன்று அவர்கள் கொண்டுள்ளனர்? அதில் அவர்கள் தொடர்ந்தும் கூறகின்றனர் "தேசிய விடுதலை எனும் பொழுது ….ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மாணத்தையுமே" தமது இலட்சியம் என்கின்றனர். அதை அவர்கள் மேலும் விளக்கும் போது "சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடனும், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும்… " ஆட்சியாக அமையும் என்கின்றனர். மேலும் அவர்கள் விளக்கும் போது "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்" என்றனர். அத்துடன் "தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. … வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு… பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" இப்படி அந்த அறிக்கை நீண்டு செல்லுகின்றது.

இதை நாங்கள் சொல்லவில்லை. விடுதலைப்புலிகளின் அடிப்படையான ஆரம்ப அரசியல் ஆவணம் இப்படித் தான் சொல்லுகின்றது. இப்படித் தான் போராட்டம் அறிவிக்கப்பட்டு, அணிதிரட்டப்பட்டனர். இன்று இந்த இலட்சியத்தையே கைவிட்டுவிட்டனர். இன்று புலிகளில் உள்ள 99 சதவீதமானவர்களுக்கு தாங்கள் இப்படி ஒரு அரசியல் அறிக்கை விடட்தே தெரியாது. ஏன் பாலசிங்கத்துக்கே இது ஞாபகம் இருக்காது. மக்களின் நலன்களை கூறி இயக்கம் கட்டியவர்கள், அதை அப்படியே புதைகுழிக்கு அனுப்பினர். தமது சொந்த திட்டத்தை மட்டுமல்ல, அந்த கருத்தை கோரியவர்களையும் கூட புதைகுழிக்கு அனுப்பினார்கள். மக்கள் நலனை இந்த திட்டத்தின் ஒரு பகுதி தெளிவாக எடுத்துரைக்கின்றது. அதை கைவிட்ட அனைத்து செயல்பாடும் மக்கள் விரோதமானவையே. இன்று புலிகளின் திட்டத்தில் உள்ளவற்றையே வலியுறுத்தினால் கிடைப்பது மரணதண்டனை. புலியின் எதிரியாக, துரோகியாக, எட்டப்பனாக, கைக்கூலியாக பலவாக புலிகள் வருணிப்பது அன்றாட விடையமாகிவிட்டது. சொல்லப்போனால் முன்னைய புலிகளின் திட்டத்தை முன்னிறுத்தி போராட்டத்தைக் கோரினால் அல்லது போராடினால் அதற்கு பரிசாக கிடைப்பது மரண தண்டனைதான்;

இதனடிப்படையில் ஏற்பட்ட முரண்பாடுதான் புலிகளின் முன்னைய பிளவாகியது. அதை மறைக்க பாலசிங்கம் முனைகின்றார். அதை அவர் "இயக்கத்தின் ஒழுக்க விதிகளை மீறி ஒரு பெண்ணுடன் தகாத உறவு கொண்டதால் அவர் (உமாமகேஸ்வரன்) அமைப்பிலிருந்து விலக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் புளாட் என்ற புதிய அமைப்பை உருவாக்கி விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றார்" என்று கூறுகின்றார். உண்மையில் உமாமகேஸ்வரன் இயக்கப் பிளவில் சம்பந்தப்படவேயில்லை. உமாமகேஸ்வரன் இயக்கத்தைவிட்டு பாலசிங்கம் கூறும் காரணத்தின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு இருந்தவர். அவர் தனிமனிதனாகவே வெளியேற்றப்பட்டு வெளிச் சென்றவர். உமாமகேஸ்வரன் புலிகளில் இருந்தது வரை, அவர்தான் அதன் தலைவராக இருந்தவர்.

இயக்கப் பிளவு பின்னால் ஏற்பட்டது. மேற்கூறிய கோட்பாட்டின் அடிப்படையில் பிளவாகியது. இந்தப் பிளவில் சுந்தரம், நாகராஜா வாத்தி, ஐயர், நெப்போலியன் … என இருபது பேரளவில் விலகினர். இதன் பின்பு இவர்கள் கூட குறிப்பிட்ட கோட்பாட்டில் இயங்காமல், பழையபடி புலிப் பாணியில் இயங்கியதால் பலர் (சுந்தரம் போன்றவர்களைத் தவிர) விலகினர். இதன் போதும் பின்புமே உமாமகேஸ்வரனை சுந்தரம் தன்னுடன் இணைத்துக் கொண்டவர். பழையபடி புலிப்பாணியில் இயங்கத் தொடங்கியது.

இங்கு ஒரு வரலாற்றையே பாலசிங்கம் திரித்துக் காட்டுவதுடன், முதல் பிளவை அரசியலுக்கு வெளியில் ஒரு பொம்பிளைப் பிரச்சனையாக காட்டமுனைகின்றார். அதனால் ஏற்பட்ட உடைவாக காட்டுவது நிகழ்கின்றது. இதை எம்.ஜி.ஆர் என்ற பொம்பளை பொறுக்கி அங்கீகரித்தாக, பாலசிங்கம் தானாகவே கூறுகின்றார். புலிகளில் ஏற்பட்ட பிளவு அரசியல் ரீதியானது. அந்த அரசியல் மக்கள் நலனை கோரியது. ஆனால் அது தொடர்நது அப்படி இயங்க முடியவில்லை. உண்மையில் புலிகள் வெளியிட்ட "சோசலிச தமிழீழம்" என்ற அரசியல் அறிக்கையின் உள்ளடகத்தை புலிகளே சமகாலத்தில் எப்படி மறுக்கின்றனர் என்பதற்கு பாலசிங்கமே இந்த நூலில் அதை தன்னையறியாமலேயே விளக்குகின்றார்.

அவர் அதை எம்.ஜி.ஆர்க்கு கூறும்போது "விடுதலைப் புலிகள் கம்யூனிஸ்ட்டுகள் அல்லர். விடுதலைப் புலிகள் புரட்சிவாதிகள், சுதந்திரப் போராளிகள். தமது தாயகமான தமிழீழத்தின் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள். சாதியக் கொடுமை, பெண் அடிமைத்தனம் மற்றும் சமூக முரண்பாடுகள் நீங்கிய சமத்துவமும் சமூக நீதியும் நிலவும் ஒரு உன்னதமான, சுதந்திரமான சமுதாயத்தைப் படைக்கவே நாம் போராடுகின்றோம்…. ஏழைகளின் சுபீட்சத்திற்காகவும் ஒடுக்கப்படும் மக்களின் விடிவிற்காகவும் நாம் ஆயுதமேந்தி போராடுகின்றோம்" என்கின்றார். கம்யூனிஸ்ட்டுகள் அல்ல என்றால் எப்படி "சோசலிச தமிழீழம்" வரும். புலிகள் வர்க்கமற்ற சமுதாயத்தை படைக்கப் போவதாக கூறிய இயக்கம். ஆனால் தாம் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல என்கின்றார். ஒன்றுக்கு பின் ஒன்று முரணாகவே மக்களையும் சமூகத்தை ஏமாற்றும் ஒரு அரசியல் மோசடியைத் தவிர, வேறு எதையும் இது கூற முனையவில்லை. ஏன் நான்கு அமைப்புகளும் ஒன்றிணைந்து விடுத்த கூட்டு அறிக்கையில் "தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு சோசலிச புரட்சியையும் முன்னெடுத்து, சுதந்திர தாய்நாட்டில் சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்" தமது இலட்சியம் என்று கூறியே பிரபாகரன் கைnழுத்திட்டார். இன்றைய அரசியல் துரோகிகளும் அன்றைய விடுதலை இயக்கமும் கூடத்தான் கையெழுத்திட்டனர். இதே சமகாலத்தில் தான் பாலசிங்கம் தாங்கள் சோசலிச இலட்சியத்தை முன்னெடுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல என்கின்றார். சாதி ஒழிப்பு, உழைக்கும் மக்களின் சுபீட்சம் என்று எதையும் பெற்றுத்தர புலிகள் போராடப் போவதில்லை என்பதையே பாலசிங்கம் இந்த நூலில் மூடிமறைத்து கூறுகின்றார். அவை மக்களையும், உலகத்தையும் ஏமாற்றும் மோசடியான வார்த்தைப் பிரயோகங்களே என்பதைத் தான், முன்னைய தமது சொந்த அறிக்கையை மறுத்து கூறமுனைகின்றார். இப்படி நூற்றுக்கணக்கான எடுத்துக் காட்டுகளை புலிகளின் முன்னையதுக்கும் பிந்தியதுக்கும் இடையிலும், சமகாலத்திலும் எடுத்துக் காட்டமுடியும். ஒரு கட்டத்தில் இந்த மோசடியை எம்.ஜி.ஆரின் நிலையுடன் ஒப்பிட்டுக் காட்டுகின்றார். "… நீங்கள் ஏழைகளின் துயர் துடைக்கத் தொண்டாற்ற வில்லையா? நீங்கள் சினிமா உலகில் சாதித்ததை விடுதலைப் புலிகள் நிஜவுலகில் சாதிக்கிறார்கள். எங்களுக்கும் புலிகளுக்கும் இலட்சியம் ஒன்றுதான்?.. உங்களையும் பிரபாகரனையும் சமூகப் புரட்சிவாதிகள் என்று தான் சொல்ல வேண்டும்" என்று புல்லரிக்கும் வார்த்தைகள் மாயாஜாலத்தை அடிப்படையாக கொண்டது. எம்.ஜி.ஆர் எதை தனது மக்களுக்கு எப்படி செய்தாரோ, அதையே பிரபாகரன் எமது மக்களுக்கு செய்ய முனைகின்றார். இதைத்தான் பாலசிங்கம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றார். தமிழகத்தின் கதியே எமது கதி என்று பாலசிங்கத்தை விட யாரும் இதை திறம்பட விளக்கமுடியாது. தமிழகத்தில் சாதியம், ஆணாதிக்கம், சுரண்டலும் கோலோச்சும் வக்கிரமே, எமது போராட்டத்தின் இறுதி முடிவு என்பதைத் தான் இது பறைசாற்றி நிற்கின்றது.

பாலசிங்கம் மற்றைய இயக்கத்தில் இருந்து தமது அரசியல் வேறுபாட்டை விளக்குவதே, தாம் அறிவித்த சொந்த இலட்சியத்துக்கு முரணாது. பாலசிங்கம் மற்றைய இயக்கத்தில் இருந்து தமது அமைப்பு வேறுபாட்டை விளக்கும் போது "சாவுக்குத் துணிந்தவர்கள். எதிரியின் கையில் உயிருடன் சிக்காதிருக்க நஞ்சுக் குப்பிகளை அணிந்திருப்பவர்கள். தமிழீழத் தாயக விடுதலை என்ற இலட்சியத்திற்க்காகத் தமது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாரானவர்கள். இந்த அற்புதமான பண்புகள் இலட்சிய உறுதிப்பாடும் எவையும் மற்றைய அமைப்பினரிடம் காணமுடியாது" மற்றைய இயக்கத்தில் இருந்து புலிகள் இதனடிப்படையில் வேறுபடுவதாக கூறுவது, அரசியலின் செயலாற்றல் இல்லாமையின் ஒரு வெளிப்பாடாகும். இங்கு அவர்கள் தமது சிறப்பு தகுதியாக உயிரை அர்ப்பணிக்கும் இயல்பு என்ற பண்பு, போராட வந்த அனைத்து இயக்க உறுப்பினர்களினதும் பண்பாகவே இருந்தது. இதை புலிகள் உருவாக்கவில்லை. போராட வந்த மனிதர்களிடம் அது இருந்தது. அதனால் அவர்கள் போராட வந்தனர். அதை யாரும் கொச்சைப்படுத்த முடியாது. புளாட்டுக்குள் நடந்த நூற்றுக்கணக்கான உட்படுகொலையின் (1983-1986) போது, உயிரைத் தியாகம் செய்யும் உன்னதமான பண்புடன், மக்களின் உயரிய நலனுக்காக அவர்கள் போராடி மரணித்தனர். இப்படி பல தளத்தில் பலர் புலிகளின் வரலாறு எங்கும், புலிகளின் மக்கள் விரோத போக்குக்கு எதிராகவும் மாண்டுள்ளனர். மக்களுக்காக போராடுவது இன்று பொதுவாக புலிசார்பு, புலியெதிர்ப்பு அரசியலில் காணமுடியாத ஒன்று. இலட்சிய மனப்பாங்குடன் போராட வந்த அனைவரும் தமது உயிரை தியாகம் செய்யும் உயர் பண்புடன் தான் போராடினர். எம்.ஜி.ஆரை அரசியலுக்கு கொண்டு வந்த தமிழன் என்ற போராட்ட மரபை எப்படி எம்.ஜி.ஆர் தனது சொந்த பிழைப்புவாத அரசியலுக்கு குழிதோண்டி புதைத்து அதில் வக்கரித்து கிடந்தானோ, அதையே புலிகளும் செய்கின்ற ஒரு வரலாற்று சாட்சியாகவே இந்த நூல் உள்ளது.
24.08.2005

Wednesday, January 25, 2006

ப.வி.சிறிரங்கன் மீதான அற்பத்தனமான தாக்குதல்

ப.வி.சிறிரங்கன் மீதான அற்பத்தனமான தாக்குதல்

மனித நேயத்தை, மனிதத்துவத்தை விரும்பும் ஒருவனுக்கு இவை நிகழ்வது உண்டு. அற்பர்கள் முதுகுக்கு பின்னால் மறைந்து நின்று கொண்டு எறியும் அவதூறுகள், வரலாற்றின் குப்பையில் தான் வீழ்கின்றன. சிறிரங்கன் பற்றிய பதிவொன்று, மிகவும் கேடுகெட்ட வகையில் பதிவிடப்பட்டு இருந்தது. திண்ணையில் பதிவிடப்பட்ட ஒரு கட்டுரை தொடர்பான விடையமாக இருந்தது. சிறிரங்கன் திண்ணைக்கு குறித்த கட்டுரையை அனுப்பிய போது, அதில் பரமுவேலனின் பெயர் இல்லாமையை அடிப்படையாக கொண்டு, பரமுவேலனும் சிறிரங்கனும் ஒரே ஆட்கள் என்று கூறியதன் பின்னால், வக்கிரமான பதிவுகள் இடப்பட்டன.

சிறிரங்கனின் கருத்துகளை கருத்தாக எதிர்கொள்ள முடியாத அரசியல் கோழைகள் எல்லாம், இதை ஏதோ ஒரு பெரிய விடையமாக ஊதிப்பெருக்கி வம்பளந்தனர். இந்தளவுக்கும் பரமுவேலன் எந்த ஆட்சேபனையும் இதில் எழுப்பவில்லை. சிறிரங்கன் பல்வேறு விடையங்களை பற்றிச் சொந்தமாக, சொந்தப் பெயரில் எழுதுபவர். அவர் ஒன்றும் பினாமியாக பதிவிடுபவரோ, எழுதுபவரோ அல்ல. தனக்கென்ற கருத்துதளத்தை தனது சொந்த ஆளுமையுடன் எழுத முற்படுபவர். அவரின் கருத்தை கருத்தாக எதிர்கொண்டு விவாதிக்க வக்கற்றவர்கள், இணைய விவாதத் தளத்தில் வம்பளக்கவே விரும்புகின்றனர். அறிவும் நேர்மையுமற்ற, சொந்தக் கருத்து வளமற்றவர்கள், எப்போதும் உருப்போடும் மதவாதிகள் போல, துப்பாக்கியின் பலத்தை நம்பி கருத்தையே விபச்சாரம் செய்ய விரும்புகின்றனர்.

இங்கு சிறிரங்கன் தெளிவாக விளக்கிய போது, அவர் விரும்பும் கட்டுரைகளை திண்ணைக்கு அனுப்பிய போதும், திண்ணையில் சம்பந்தப்பட்டவர்கள் கட்டுரையாளரின் பெயரை வெளியிடத்தவறிவிட்டனர். இப்படியான ஒரு காரணத்தைப் பற்றி அக்கறையின்றி பதிவிட முனைந்தவர்கள் அறிவோடு நேர்மையாக எதையும் எழுத முற்படவில்லை. சம்பந்தமில்லாத வகையில் சொந்த நேர்மையீனத்தை, ஒழுங்கீனத்தை வம்பளந்தனர்.

இரண்டாவது விடையமாக அப்படித்தான் பரமவேலனும் சிறிரங்கனும் ஒரே நபர்கள் என்று வைப்போம், அதில் என்ன தவறு காண்கின்றீர்கள். ஐயா தூற்றிய புண்ணியவான்களே, ஒழுக்கவாதிகளே அதில் என்ன தவறு உண்டு? ஒருவர் பல பெயரில் தளம் வைத்திருந்தால் தேசவிரோதக் குற்றமோ? தமிழ் மணம் அப்படி கூறுகின்றதோ!

ஒன்றுக்கு மேற்பட்ட தளம் வைத்திருந்தால், ஒன்றுக்கு மாற்றாக மற்றொன்றில் கருத்திட்டால் நானும் தான் விமர்சிப்பேன். அப்படி இருந்தால் விமர்சிக்கலாமே ஒழிய தூற்ற முடியுமா!

இதைப் பற்றிப் பதிவிடப் போனவர்கள் அவரின் மணைவி, குழந்தைகள் எல்லோரையும் இழுத்து வைத்து விவாதிப்பதில் என்ன நேர்மை உங்களிடம் உண்டு. இங்கு அப்படி கூறுவதன் மூலம், மிரட்டும் வக்கிரம் அரங்கேறியது. பதிவுகளின் நல்லபிள்ளையாக வேஷம் போடுவதும், அனாமதேயங்களாக வேஷம் போட்டு வரும் போது தூசணம் முதல் சகல வக்கிரத்தையும் தமிழ் தேசிய மொழியில் கொட்டித் தீர்ப்பது எந்த வகையில் நேர்மையானது.

இதை புலித் தேசியத்தின் பெயரில் நிகழ்த்துவது அன்றாடம் நடக்கின்றது. தமிழ் மணம் அதை நன்றாகவே கண்டு உணருகின்றது. கருத்தால் எதிர்கொள்ள வக்கற்று, கருத்துத் தளத்தின் மீது துப்பாக்கி முனையை நீட்டியபடி, தமிழ் மணத்தில் வந்த வக்கரிப்பது தான் உங்கள் நீதியோ!

சிறிரங்கன் பல்வேறு சமூகம் சார்ந்த விடையங்களை விவாதிப்பவர். புலித் தேசியத்தை மட்டும் விமர்சித்தால் சீறிக் கொண்டு வரும் உங்கள் பின்னால் இருப்பது, உருப்போடும் மலிவு அரசியல் தான். அது தர்க்க ரீதியாக கூட பலமற்றது. சிறிரங்கனின் நேர்மையை, ஒழுக்கத்தை கேள்வி கேட்பது தவறல்ல, அதற்கு முன் அதை நீங்கள் நேரடியாக நேர்மையாக உங்களை அறிமுகப்படுத்திபடி கேளுங்கள். உங்களை நீங்கள் யார் என்று அறிமுகம் செய்தபடி கேட்பது தான் நேர்மை. அது தான் ஒழுக்கம். அதைவிடுத்து முதுகுக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டு தூற்றுவது தான் இன்றைய புலித் தேசியம் என்றால், அது தான் உங்கள் மனித நாகரீகமோ!

தமிழ் மணத்தில் புலித் தேசியத்தின் பெயரில் எத்தனை தூசணங்கள், எத்தனை வக்கிரங்களை அரங்கேற்றும் போது, அங்கு ஒழுக்கம் பற்றியும் நேர்மை பற்றியும் எதுவும் தெரியாத பூனைமாதிரி இருந்து பால்குடிப்பவர்கள், திடீர் என்று பாய்ந்து குதறுகின்றனர்.

குதறும் போது கூட அறிவு நேர்மை எதுவுமற்ற வக்கிரப் புத்தியைக் காட்டுகின்றனர். கார்ல் மார்கஸ் கூறியது போல் அற்பவாதிகள் சொந்தக் கருத்தற்றவர்கள் "தன்னுடைய மிகவும் முட்டாள்தனமான அற்பக் கருத்துரைகளையும், சாதாரணச் செய்திகளையும் தத்துவஞானிகளுக்கு எதிர் நிலையில் நிறுத்துவதற்குத் தனக்கு உரிமை இருப்பதாக நம்புகின்றது" சொந்த வக்கிரங்களை, தாங்கள் அன்றாடம் உருப்போடும் வழிபாட்டு நம்பிக்கையை, தமது சொந்த அறிவிலித்தனத்தை, தலையில் சுமந்து வைத்துள்ள முட்டாள் தனத்தை எல்லாம் மூட்டைகட்டி குதியம் குத்துகின்றனர்.

சிறிரங்கனின் கருத்துக்களில் விமர்சனங்கள் எனக்கு உண்டு. ஆனால் அவர் சமூகத்தை நேசித்து எழுதுகின்றார். மக்களின் நல்வாழ்வை முன்னிறுத்த முனைகின்றார். அவர் சமூகத்தின் பல்துறை சார்ந்து நின்று எழுத முனைகின்றார். அவரின் மனித நேயத்தை, மனிதப்பற்றை இழிவுபடுத்துகின்ற நீங்கள், எப்போதும் எல்லாவிடையத்திலும் அக்கறைப்படுபவர்கள் அல்ல. புலித்தேசியத்தின் விசுவாசிகளாக, உருப்போடப்பட்ட மதஉபதேசங்களைப் போன்று அற்ப மனிதர்களாக மட்டும் ஏன் நீங்கள் காட்சியளிக்கின்றீர்கள்.

Tuesday, January 24, 2006

உலக வர்த்தகக் கழக

உலக வர்த்தகக் கழக(W.T.O)த்தின் ஹாங்காங் ஒப்பந்தம் :
மறுகாலனியாதிக்கத்தின் பிடி இறுகுகிறது

தனியார்மயம் தாராளமயத்தின் மூலம் இந்திய விவசாயமும், சிறுதொழிற்துறையும், வங்கி, காப்பீடு, கல்வி போன்ற சேவைத்துறையும் பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுவது, தங்கு தடையின்றி நடந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி, இந்தியா போன்ற ஏழை நாடுகள் அனைத்திலும் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் இந்த மாற்றங்கள்தான் திணிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில், ஏழை நாடுகளின் இம்மூன்று துறைகளையும் ஒரே அடியில், முற்றிலுமாகத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர, ஏகாதிபத்திய நாடுகள் உலக வர்த்தகக் கழகத்தின் மூலம் முயன்று வருகின்றன.

கத்தார் நாட்டில் உள்ள தோஹா நகரில் 2001ஆம் ஆண்டு நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் நான்காவது அமைச்சர்கள் மாநாடு தொடங்கியே, இத்துறைகள் குறித்து உலக வர்த்தகக் கழகத்தில் ஓர் உடன்பாட்டுக்கு வர, ஏகாதிபத்திய நாடுகள் ஏழை நாடுகளுக்கு நிர்பந்தம் கொடுத்து வருகின்றன. ஏழை நாடுகளின் ஆளும் கும்பலுக்குச் சில சலுகைகளைக் கொடுப்பதன் மூலம், உடன்பாட்டைச் சாதித்துவிட ஏகாதிபத்திய நாடுகள் முயன்று வருகின்றன. இந்தச் சதித் திட்டத்திற்கு உலக வர்த்தகக் கழகம் சூட்டியுள்ள பெயர்தான் ''தோஹா வளர்ச்சி சுற்று பேச்சுவார்த்தை!''

இந்த நோக்கத்தை மையமாக வைத்து, மெக்சிகோ நாட்டில் உள்ள கான்கன் நகரில் 2003ஆம் ஆண்டு உலக வர்த்தகக் கழகத்தின் ஐந்தாவது அமைச்சர்கள் மாநாடு கூட்டப்பட்டது. இந்த மாநாட்டிற்கு எதிராக உலகு தழுவிய அளவில் எழுந்த எதிர்ப்பாலும்; ஏழை நாடுகளைப் பிரித்தாளும் ஏகாதிபத்திய நாடுகளின் சதி வெற்றி பெற முடியாமல் போனதாலும்; ஏழை நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் எதிர்பார்த்த சலுகைகள், ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து கிடைக்காததாலும் இந்த ஐந்தாவது மாநாடு தோல்வியில் முடிந்தது.

இதன்பின், 2004 ஜூலையில் நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் கூட்டத்தில் ''தோஹா வளர்ச்சி சுற்றுப் பேச்சுவார்த்தைகள்'' குறித்து, ஏகாதிபத்திய நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் இடையே ஓர் சமரச உடன்படிக்கை ஏற்பட்டது.

இதன்படி, அரசாங்கம் நடத்தும் ஏலங்களில் பன்னாட்டு நிறுவனங்களும் உள்நாட்டு நிறுவனங்களைப் போல கலந்து கொள்ளும்படி, ஏழை நாடுகளின் அரசாங்கக் கொள்முதல் கொள்கையை மாற்றியமைப்பது

ஏழை நாடுகளின் எந்தத் தொழிலிலும் பன்னாட்டு நிறுவனங்கள் 100 சதவீதம் மூலதனம் போடுவதற்கு முழுச் சுதந்திரம் அளிப்பது

ஏழை நாடுகளின் தொழிற் போட்டி சட்டத்தை மாற்றியமைப்பது ஆகிய அம்சங்களைப் பேச்சு வார்த்தையில் இருந்து விலக்கிக் கொள்வது என்றும்; விவசாயம், தொழிற்துறை காப்பு வரிகள், சேவைத் தொழில் குறித்து மட்டும் பேசுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இச்சமரச ஏற்பாட்டின் பின், ஹாங்காங் நகரில் டிசம்பரில் மாதம் இரண்டாவது வாரம் நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் ஆறாவது அமைச்சர்கள் மாநாட்டில், இந்த அம்சங்கள் குறித்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தங்களின் வேளாண் பொருட்களுக்குக் கொடுத்து வரும் ஏற்றுமதி மானியத்தை 2013ஆம் ஆண்டோடு நிறுத்திவிட வேண்டும்.

வேளாண் பொருட்கள் ஏழை நாடுகளில் அளவுக்கு அதிகமாக இறக்குமதியாகும் பொழுது, அல்லது அந்நாடுகளின் வேளாண் பொருட்களின் விலை வீழ்ச்சியடையும் பொழுது, இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள், வேளாண் பொருட்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதித் தீர்வையை உயர்த்திக் கொள்ளலாம்.

தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகள், தீர்வைகளைக் குறைப்பதில் ஏழை நாடுகளுக்குச் சலுகைகள் வழங்கப்படும். குறிப்பாக, குறிப்பிட்ட சில உற்பத்திப் பொருட்களை, தீர்வை குறைப்பு வட்டத்துக்குள் கொண்டு வராமல் இருக்கும் சலுகை ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்.

இவற்றை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து அடுத்த ஆண்டிற்குள் முடிவு எடுக்கப்படும். தாவர வகைகள், நுண்ணுயிர்களின் மீது காப்புரிமை கோருவது; சேவைத் தொழிலைத் தாராளமயமாக்குவது குறித்து ஏழை நாடுகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என இந்த ஹாங்காங் அறிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஹாங்காங் அறிக்கை உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ள 149 உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அறிக்கை தொடர்பாக உலக வர்த்தகக் கழகத்தில் நடந்த விவாதங்களைக் காட்டி, உலக வர்த்தகக் கழகத்தை ஜனநாயக அமைப்பாகச் சிங்காரிக்கிறார்கள். ஆனால், ஏகாதிபத்திய நாடுகள் விவசாயத்திற்குக் கொடுத்துவரும் ஏற்றுமதி மானியத்தை 2010ஆம் ஆண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஏழை நாடுகளின் சாதாரண கோரிக்கையைக்கூட ஏகாதிபத்திய நாடுகள் விவாதத்தின் பொழுது ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டன.

ஐரோப்பிய யூனியன், தனது பொது விவசாயக் கொள்கையை 2013ஆம் ஆண்டில் பரிசீலிக்கும் வரை, மானியக் குறைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என அறிவித்திருந்தது. அமெரிக்கா, 2008 தொடங்கி 2013க்குள் தனது ஏற்றுமதி மானியத்தில் 53 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக, ''உலக வேளாண் வணிகத்தில் துணிச்சலான சீர்திருத்தங்கள்'' என்ற திட்டத்தில் அறிவித்திருந்தது. இதன்படிதான், ஏற்றுமதி மானியத்தை நிறுத்திக் கொள்ளும் இலக்காக 2013ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய யூனியன், கடந்த 200203ஆம் ஆண்டில் மட்டும் தனது நாடுகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கும், விவசாய கம்பெனிகளுக்கும் கொடுத்துள்ள மொத்த மானியம் 3,60,000 கோடி ரூபாய். இதில், ஏற்றுமதிக்காக கொடுக்கப்பட்ட மானியம் 15,750 கோடி ரூபாய்தான். அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் விவசாயத்திற்குக் கொடுத்துவரும் பல்வேறு விதமான மானியங்களில், 5 சதவீதம் கூடப் பெறாத இந்த ஏற்றுமதி மானியத்தை மட்டும்தான், 2013ஆம் ஆண்டில் நிறுத்திக் கொள்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளன. மலையைக் கிள்ளி எலியைப் பிடித்த கதையாக, இந்த அற்பமான சலுகைதான் உலக வர்த்தக கழகத்தைச் சேர்ந்த 125 ஏழை நாடுகளுக்குக் கிடைத்திருக்கிறது.

அமெரிக்கா, தனது நாட்டு பருத்தி விவசாயிகளுக்குக் கொடுத்துவரும் மானியத்தை மட்டும் 2008ஆம் ஆண்டு முதல் நிறுத்திக் கொள்வதாக, இம்மாநாட்டில் டாம்பீகமாக அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் இந்தப் ''பெரிய மனதால்'' பலன் அடையப் போவது நான்கே நான்கு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏற்றுமதி வணிகர்கள்தான்.

இது ஒருபுறமிருக்க, உலக வர்த்தகக் கழகத்தில் எவ்வளவுதான் சலுகைகள் வழங்கப்பட்டாலும், 40 மிகவும் வறிய ஏழை நாடுகளுக்கு, எந்தவொரு பலனும் கிட்டப் போவதில்லை என உலக வங்கியே வெளிப்படையாகக் கூறியிருக்கிறது.

உண்மை இப்படியிருக்க, தாராளமயத்தின் ஆதரவாளர்களோ, இந்த மாநாட்டு அறிக்கை ஏழை நாடுகளின் விவசாயிகளுக்கு சொர்க்க வாசலையே திறந்து விட்டதைப் போலப் பீற்றிக் கொள்கிறார்கள். ''சமனற்ற போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருந்த கட்டாயத்தில் இருந்து இந்திய விவசாயிகள் தப்பித்து விட்டதாகவும்; அவர்கள் ஏற்றுமதி செய்வதற்குப் புதிய சந்தைகள் கிடைத்திருப்பதாகவும்'' இந்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

தாராளமயத்திற்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள், அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்ய முடியவில்லையே என்று கவலைப்பட்டா பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்கள்? ஒரிசாவையும், மகாராஷ்டிராவையும் சேர்ந்த பழங்குடி இன மக்களும், அவர்களின் குழந்தைகளும் ஒருவேளை சோறுகூடக் கிடைக்காமல் பட்டினியால் செத்த பொழுது, அவர்களுக்கு ரேசன் அரிசியை இலவசமாகத் தர மறுத்தது, மைய அரசு. அதேசமயம் வெளிநாடுகளுக்கு மானிய விலையில் அரிசியையும் கோதுமையையும் ஏற்றுமதி செய்தது. அந்நியச் செலாவணிக்காக நடந்த அந்த வியாபாரத்தை நியாயப்படுத்துபவர்களால் மட்டுமே, ஹாங்காங் அறிக்கையைக் கொண்டாட முடியும்.

தாராளமயத்தின் பின் விவசாயத்தில் நுழைந்துள்ள ஐ.டி.சி. போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்கள்; ஏற்றுமதிக்காகவே விவசாயம் செய்யும் புதுப்பணக்கார விவசாயிகள் இவர்களுக்குத்தான் ஹாங்காங் அறிக்கை இலாபகரமானதாக இருக்குமேயொழிய, கந்துவட்டிக்காரனிடம் கடன்பட்டு விவசாயம் செய்யும் சிறிய நடுத்தர விவசாயிகளுக்கு இதனால் எந்தப் பலனும் கிட்டப் போவதில்லை.

உலக வங்கியின் கட்டளைப்படி, கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும், விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியம் படிப்படியாக வெட்டப்பட்டு, ஏதோ பெயரளவிற்குத்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. விவசாய மானியம் என்பதே கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்ட நிலையில், அதில் இனியும் வெட்டுவதற்கு மிச்சம் எதுவும் கிடையாது. இப்படிப்பட்ட நிலையில்தான், இதுவரை மானியத்தை வெட்ட மறுத்துவந்த அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் 2013இல் ஏற்றுமதி மானியத்தை நிறுத்தும்பொழுது, இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் மானியத்தைக் குறைக்க வேண்டியதில்லை என்ற ''சலுகை'' வாரி வழங்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைப்படி, ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பே, இறக்குமதிக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, 1,429 வேளாண் பொருட்களை, எங்கிருந்து வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்ற ''சீர்திருத்தம்'' நம்நாட்டில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இந்தத் தாராள இறக்குமதி, ரப்பர், தேயிலை, காபி, பருத்தி, தென்னை, எண்ணெய் வித்துக்கள், பழங்கள், பால் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பல இலட்சக்கணக்கான விவசாயிகளைப் போண்டியாக்கி, அவர்களை விவசாயம் செய்ய முடியாமல் முடக்கிப் போட்டு விட்டது.

விவசாயத்திற்கு அடுத்து மிகப் பெரும் வேலைவாய்ப்புகளை வழங்கிவந்த சிறு தொழிற்துறைக்குக் கொடுக்கப்பட்டு வந்த சலுகைகளும், பாதுகாப்பும் தாராளமயத்தின் பின் நீக்கப்பட்டதால், இந்தியாவெங்கும் பல இலட்சக்கணக்கான சிறு தொழில்கள் மூடிக் கிடக்கின்றன. இப்படி விவசாயமும், சிறு தொழில் துறையும் அரசால் கைவிடப்பட்டு, அழிக்கப்பட்ட பிறகு, தாராள இறக்குமதியில் இருந்து இத்தொழில்களைப் பாதுகாக்க உலக வர்த்தகக் கழகத்தால் சலுகைகள் வழங்கப்படுவது குரூர நகைச்சுவையாகத்தான் இருக்க முடியும்!

அதனால்தான், இந்த மாநாட்டை எதிர்த்து ஹாங்காங் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட விவசாயிகளும், உழைக்கும் மக்களும், ''உலக வர்த்தகக் கழகம், மரணத்தை ஏற்படுத்தக் கூடிய பறவைக் காய்ச்சலைவிட மிகவும் அபாயகரமானது'' என முழக்கமிட்டார்கள்.

வெறும் மூங்கில் கழிகளைக் கொண்டு ஹாங்காங் போலீசாரோடு மோதிய தென்கொரிய நாட்டைச் சேர்ந்த விவசாயி ஒருவர், ''நாங்கள் தீவிரவாதிகள் கிடையாது. எங்களின் வாழ்க்கை எப்படிச் சீரழிந்து போய்விட்டது என்பதைக் காட்டுவதற்காகவே இங்கே வந்திருக்கிறோம்'' என்றார்.

ஹாங்காங் நகரத் தெருக்களில் உலக வர்த்தகக் கழகத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகள், சலுகைகள் கேட்டோ, அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளைத் திறந்துவிடக் கோரியோ போராடவில்லை. மாறாக, ஒரு மோசமான ஒப்பந்தத்தைவிட, ஒப்பந்தம் போடாமல் கலைவதே மேலானது என்று தான் அவர்கள் கோரினார்கள்.

''தோஹா வளர்ச்சி சுற்றுப் பேச்சு வார்த்தையின் தலையெழுத்து முடிந்துவிட்டது'' எனக் கை கழுவி விடப்பட்ட நிலையில், அதற்கு ஹாங்காங் ஒப்பந்தம் உயிர் ஊட்டியிருக்கிறது. உலக வர்த்தகக் கழகம் உருவாக்கப்பட்டதற்கு அடிப்படையாக அமைந்த உருகுவே சுற்றுப் பேச்சு வார்த்தைக்கு இணையாக, தோஹா வளர்ச்சி சுற்றுப் பேச்சு வார்த்தை கருதப்படுகிறது. எனினும், இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே, ஹாங்காங் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டிருக்கிறது, நயவஞ்சக காங்கிரசு கும்பல். இந்திய நாடாளுமன்றம், ஏகாதிபத்தியங்கள் ஆட்டிப் படைக்கும் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தான் என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபணமாயிருக்கிறது.

காங்கிரசு கூட்டணியை முட்டுக் கொடுக்கும் போலி கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் ஹாங்காங் மாநாடு குறித்து வர்த்தக அமைச்சர் கமல்நாத்துக்கு ஆலோசனைகள் வழங்கிவிட்டு, இன்னொருபுறம் அதை எதிர்த்து அறிக்கை போர் நடத்தும் பித்தலாட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். திராவிடக் கட்சிகள் உள்ளிட்டு மற்ற கட்சிகளுக்கோ, உள்ளூர் பொறுக்கி அரசியலைவிட, ஹாங்காங் ஒப்பந்தம் ஒன்றும் முக்கியமான தலைபோகும் விசயமாகத் தெரியவில்லை.

1999ஆம் ஆண்டு அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடந்த உலக வர்த்தகக் கழகத்தின் மூன்றாவது அமைச்சர்கள் மாநாடு தொடங்கியே, உலக வர்த்தகக் கழகத்திற்கு எதிராக உலகின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும், போலி கம்யூனிஸ்டுகள், தன்னார்வக் குழுக்கள், பின் நவீனத்துவவாதிகள், அராஜகவாதிகள் என்ற வானவில் கூட்டணியால்தான் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.

''இந்த உலகம் விற்பனைக்கு அல்ல'' போன்ற கவர்ச்சிகரமான ஜனரஞ்சகமான முன் வைத்து இப்போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், உலக வர்த்தகக் கழகம் ஏழை நாடுகள் மீது திணிக்கும் மறுகாலனி ஆதிக்கத்திற்கான தீர்வை, இந்த ஏகாதிபத்திய கட்டமைப்பிற்குள்ளேயே இவை தேடுகின்றன. இதன் காரணமாகவே, ஏழை நாட்டு விவசாயிகளையும், மாணவர்களையும், இளைஞர்களையும் திரட்டி நடத்தப்படும் இந்தப் போராட்டங்கள், ஒரு அடையாள எதிர்ப்பு என்பதைத் தாண்டி வளர்த்துச் செல்லப்படுவதில்லை. இது மட்டுமின்றி, ஏழை நாட்டு மக்களின் மறுகாலனி ஆதிக்கத்திற்கான எதிரான கோபத்தை மழுங்கடிக்கும் பாதுகாப்பு ''வால்வு''களாகவும் இப்போராட்டங்கள் மாறிவிடுகின்றன.

இதற்கு மாற்றாக, ''சோசலிசமே ஒரே தீர்வு'' என்ற முழக்கத்தின் கீழ், புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் தலைமையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை அணிதிரட்டிப் போராடும் பொழுதுதான், உலகமயம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாதிக்கத்தை முறியடிக்க முடியும்.
மு செல்வம்
நன்றி புதியஜனநாயகம்