தமிழ் அரங்கம்

Saturday, June 24, 2006

மக்களையே நிராகரிக்கும் போக்கிரி அரசியல்

மக்களையே நிராகரிக்கும் போக்கிரி அரசியல்

பி.இரயாகரன்
24.06.2006


போக்கிரிகள் வேஷம் போடுவதில் தலை சிறந்தவர்கள். சமூக அக்கறையாளனாக தன்னை காட்டிக் கொண்டு நடிப்பதில் கூட, மிக மோசமான அற்பர்களாகவே உள்ளனர். சமூகத்தில் மோசமானதை தாம் ஏற்றுக் கொள்வதில்லை என்பார்கள், ஆனால் கவனமாக திட்டமிட்டே அதைப் பாதுகாப்பர். உண்மையில் போக்கிரியாகவே இருப்பதன் மூலம் மோசமானதை விமர்சிப்பதில்லை, கண்டிப்பதில்லை, அதை மாற்றப் போராடுவதில்லை.



மக்களை நிராகரிப்பது இவர்களின் மையமான அரசியல் வழியாகும். தனிநபர்களை, குழுக்களை முன்னிறுத்தி குலைப்பதே, இவர்களின் நாய் குணமாகவுள்ளது. சமகாலத்தின் இந்த அரசியல் போக்குகளை (போக்கிரிகளை) புலி சார்பு, புலியெதிர்ப்பு கோட்பாட்டுக்குள் இனம் கண்டு புரிந்து கொள்வது அவசியம். மக்கள் அரசியலை நிராகரிக்கும் (புலி ஆதரவு அல்லது புலியெதிர்ப்பு) அரசியல், பாசிசம் துரோகி போன்ற சொற்கள் ஊடாக அரசியல் செய்வோரை விமர்சிக்கவோ, அதை சொல்லி அரசியல் செய்யும் தகுதி இந்த சமூக விரோத அற்பர்களுக்கு கிடையாது.



சமகாலத்தில் புலிகள் மீதான உலகளாவிய நிர்ப்பந்தமும், மறுபுறம் தமிழ் மக்கள் மத்தியில் புலிகளுக்கு ஏற்பட்டு வரும் கடும் எதிர்ப்பும் 'புலித் தேசியம்" மீதான சிதைவாகவும் அழிவாகவும் மாறிவருகின்றது. புலிகள் ஆயுதத்தை அதீதமாக காதலித்தபடி, பணத்தை அதியுயர்ந்தளவில சூறையாடியபடி, வலது பாசிச வன்முறையை தமிழ் மக்கள் மேல் ஏவுகின்றனர். தமிழ் மக்கள் முதல் சர்வதேசம் வரையான பாரிய அரசியல் நெருக்கடியில் இருந்து மீள்வதற்குப் பதிலாக, மேலும் நெருக்கடியையும் தமது சொந்த அழிவையும் நோக்கிய அரசியல் பாதையில் வலிந்து பயணிக்கின்றனர்.



இதில் இருந்து மீள்வதற்கு ஒரேயொரு மாற்றுப் பாதை தான் உண்டு. அது போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதாகும். அதாவது புலிகள் தமது கடந்தகாலம் முழுவதையும் சுயவிமர்சனம் செய்வதன் மூலம், தமது தவறுகளை ஏற்றுக் கொண்டு வலதில் இருந்து இடதுக்கு திருந்துவதுதான். இதன் மூலம் போராட்டத்தை மக்கள் மயப்படுத்தி, சொந்த நடைமுறை ரீதியான போராட்டங்கள் மூலம், மக்களே தமது தலைவிதியை தீர்மானிக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கும் வகையில் அவர்களே தலைமை தாங்க வேண்டும். இதுமட்டும் தான் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான ஓரேயொரு வழியாக உள்ளது. நாம் இதைக் கோருவதையும், இதனடிப்படையில் புலிகளை விமர்சிப்பதை அவர்கள் துரோகமாக முத்திரை குத்தி, தமிழ் மக்களின் வாழ்வின் மீது அதிபயங்கரமான அழிவையும் சிதைவையும் ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் தாம் மட்டும் அழியவில்லை. தமிழ் மக்கள் தாம் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையான உண்மை அனைத்தையும், பேரினவாதத்துக்கு சாதகமாகமே தமிழர் தரப்பாக நின்று அழித்து வருகின்றனர்.



தமிழ் மக்களின் வாழ்வு சார்ந்த அந்த இனத்தின் இருப்பின் அழிவை கண்டு நாம் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கின்றோம். அதையும் புலிகளை நோக்கிவைக்கின்றோம். இது எந்த விதத்திலும் பேரினவாதத்தை ஆதரிப்பதல்ல. பேரினவாதிகள் தமிழ் மக்களின் அழிவில் தான், தனது சூழ்ச்சிமிக்க அரசியலை நடத்துகின்றனர். இந்த நிலையில் தமிழனைக் கொண்டே தமிழ் இனத்தை அழிக்க நடத்தும் முயற்சி இரண்டு பொது தளத்தில் நடக்கின்றது. புலிக்கு எதிரான புலியெதிர்ப்பு அணியைக் கொண்டு நடத்துகின்றது. புலியைக் கொண்டு அதாவது புலியின் வலதுசாரிய மக்கள் விரோத மூலம் தமிழ் மக்களின் இன இருப்பை இல்லாததாக்க முனைகின்றான். இதனால் இரண்டு மக்கள் விரோதப் போக்கு மீதும் நாம் கடும் விமர்சனத்தை முன்வைக்கின்றோம். மக்களின் வாழ்வியல் நிலைக்கு எதிரான இரண்டு எதிர்ப்புரட்சிகர அரசியல் பாத்திரத்தை விமர்சிப்பதன் மூலம், சரியானதை நாம் கோரி நிற்கின்றோம்.



மக்களின் நலன்கள் ஓருபுறம் ஆழ்சேற்றில் புதைந்து தத்தளிக்கின்றது. ஆனால் புலிகள் இதற்கு எதிர்திசையில் தான் செல்லுகின்றனர். நிலைமைக்கு ஏற்ப வழமையான சூழச்சிமிக்க அணுகுமுறைகள் மூலம் நடித்து, சர்வதேச நெருக்கடியில் இருந்து மீள்வதையே இராஜதந்திரமாக கருதி நடைமுறைப்படுத்த முனைகின்றனர். மக்களுக்கு நேர்மையாக இருந்து, அதையும் நேர்மையாக கையாண்டு மீள்வதற்கு பதில், குதர்க்கம் பொய் சூழ்ச்சி சதி சூக்குமம் மூலம் தமிழ் மக்கள் வாழ்வின் மீதான அழிவை துரிதமாக்குகின்றனர். இதுவே நாளாந்த சம்பவமாகின்றது. இனப்பிரச்சனையில் ஏகாதிபத்திய ஆதிக்கம் நிறைந்துள்ள இன்றைய நிலையில், புலிகளின் கபடம் நிறைந்த நடத்தைகளை, அவர்களும் சொந்த அனுபவம் மூலம் புரிந்து எதிர்வினையாற்றுகின்றனர். ஒரு தலைப்பட்சமாகவே புலிகள் மீதான அதீதமான நெருக்குவாரத்தை புலிகளுக்கு கொடுத்த வண்ணம் உள்ளனர். பேரினவாதம் புலிகளின் நடத்தையால், மேலும் மேலும் ஏகாதிபத்திய ஆசி பெற்று பாதுகாக்கப்படுகின்றது. புலிக்கு எதிராக சர்வதேச ரீதியான ஐ.நா தலையீட்டையே ஏற்படுத்திவிடும் அபாயத்தை இது உருவாக்கியுள்ளது.



தமிழ் மக்களின் இனவொடுக்கு முறைக்கு சிங்களப் பேரினவாதிகள் தமது உயர்ந்தபட்ச திட்டத்தைக் கூட வைக்காத இன்றைய நிலையில், அதை புலிகள் கோராத நிலையில், இதுவே பேரினவாதத்தின் வெற்றிகரமான ராஜதந்திரமாக மாறி அதுவே உலக அங்கீகாரத்தை வலிந்து பெற உதவுகின்றது. கெரில்லா தாக்குதல் அல்லது இராணுவ தாக்குதலில் பலவீனமான இடத்தின் மீது தாக்குவது எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததோ, அப்படி அரசியல் ரீதியாகவும் பலவீனமான அரசில் தளத்தின் மீது தாக்குவது அவசியமானது. அந்த அரசியல் வழிமுறையை கையாளாமையால், சர்வதேச ரீதியான ஒரு தலைபட்சமான அதீதமான அழுத்ததுக்கு புலிகள் தொடாச்சியாக உள்ளாகின்றனர்.



இன்று தமிழ் மக்கள் மீதான ஏகாதிபத்திய அடக்குமுறை, புலிகளின் பெயரில் விரிவான அளவில் விரிந்து வலிந்து பாய்கின்றது. புலிகளை அரசியல் ரீதியாக அல்ல இராணுவ ரீதியாக ஒழித்துக்கட்டவும், எகாதிபத்திய தடையற்ற தலையீட்டை நடத்தவும் முனைகின்றது. ஏகாதிபத்தியத்துக்கு இன்று தடையாக இருப்பது, புலிகள் என்ற ஆயுதம் ஏந்திய குழுவல்ல. மாறாக தலையீட்டுக்கான ஆதரவை குறைந்தபட்சம் ஒருபகுதி மக்களிடமாவது ஏகாதிபத்தியம் பெறுவது அவசியம். இதற்கு பேரினவாதத்தின் நெகிழ்ச்சியற்ற போக்கு காரணமாக உள்ளது. தமிழ் மக்களுக்கு உயர்ந்தபட்சம் எதை பேரினவாதம் பிச்சையாக போடத் தயாராக உள்ளனர் என்பதைப் பொறுத்தே, இது அடங்கியுள்ளது. இதை ஏகாதிபத்தியம் உறுதி செய்யாமை தான், புலி அழிப்புக்கான தலையீடுகள் நெருக்கடிக்குள்ளாகின்றன. பேரினவாதம் தானே ஒரு தீர்வை முன்வைத்து அதை ஏகாதிபத்தியங்கள் அங்கீகரிக்கின்ற ஒரு நிலையில், புலிகள் அதை ஏற்றாக வேண்டும் அல்லது அவர்கள் அழிக்கப்படுவார்கள். இந்த எதார்த்தத்தை நோக்கியே ஏகாதிபத்தியம் காய் நகர்த்துகின்றது. புலிகள் இன்று அதை கோராத ஒரு நிலையில் ஏகாதிபத்திய வழிகாட்டலில் வைக்கப்படும் ஒரு தீர்வை ஏகாதிபத்தியம் அங்கீகரித்தால், அதன் பின் தீர்வு பற்றி புலிகளுடன் எதுவும் பேசப்படமாட்டாது. ஓப்புக்குத்தான் பேசப்படும். இதை அமுல்படுத்துவது பேரினவாத அரசல்ல, ஏகாதிபத்தியமாகிவிடும். இந்த அரசியல் சதி நகர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. இது தான் சர்வகட்சி மாநாடுகள். இந்த எதார்த்தத்தைக் கூட இன்று புலிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் தம் இருப்பின் அடிப்படையில், குறுகிய குறுக்குவழியூடாக அரசியல் கோமாளிகளாக குதித்துக் காட்டவே முனைகின்றனர்.



கடந்த எமது வரலாற்றில் நடந்த இந்திய ஆக்கிரமிப்பு முதல், உலகில் ஏகாதிபத்திய தலையீட்டுடன் குறிப்பாக படை நகர்வுடன் நடந்த பல சம்பவங்களில் இந்த உண்மை பளிச்சென்று காணப்படுகின்றது. புலிகள் மக்களிடம் இருந்து அன்னியப்பட்ட ஒரு நிலையில், அடக்குமுறையூடாகவே தமது அதிகாரத்தை தமிழ் மக்கள் மேல் தக்கவைத்துள்ளனர். இந்த நிலைமை ஏகாதிபத்திய தலையீட்டை இலகுபடுத்தக் கூடியதாக இருப்பதுடன், ஏகாதிபத்திய தலையீட்டின் முதல் நாளில் அது இயல்பாக மக்கள் ஆதரவை பெற்றுவிடும்.



புலிகள் தமிழர் தரப்பின் அனைத்து மாற்றுத் தளத்தையும் அழித்ததாலும், அழித்து வருவதாலும், சர்வதேச தலையீட்டை எதிர்கொள்ளும் ஆற்றலையே தமிழ் சமூகம் முற்றாக இழந்து வருகின்றது. தமிழ் சமூகம் சந்திக்கவுள்ள நெருக்கடிகள், அதன் அழிவுடன் தான் முடிவுறும். மீட்சியற்ற வகையில் புலிகள் அழிக்கப்படும் போது, தமிழ் மக்கள் தேசிய எதிர்ப்பாளராக என்றுமில்லாத வகையில் எதிர்நிலைப் பாத்திரத்தையே வகிப்பார்கள். அந்தளவுக்கு புலிகளின் தேசியம் மீதான வெறுப்புணர்வை, தம்மளவில் தமக்குள் மூட்டையாகவே சுமந்த வண்ணமுள்ளனர். வேண்டாத சுமையை தூக்கியெறியும் நிலையில் தான் தமிழ் மக்களின் அரசியல் உணர்வு காணப்படுகின்றது. அதை புலிகள் அன்றாடம் தமிழ் மக்களின் தலையில் மேலும் மேலும் சுமத்தி வருகின்றனர். தமிழ் மக்கள் சந்தர்ப்பவாதிகளாகி, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். சாதாரண பொதுமக்கள் இயல்பான உரையாடல்களின் போது அன்றாடம் வெளிப்படும் அதிருப்தியும், வெறுப்பும் மறுபக்கத்தில் புலிகள் முன் வெளிப்படுத்தும் நடிப்பும் இதை தெளிவாகவே எமக்கு துல்லியமாக உணர்த்தி நிற்கின்றது.



நாம் போராட்டத்தையும், தமிழ் மக்களின் உண்மையான தேசியத்தையும் பாதுகாக்கவே, அதற்கு எதிராக செயற்படும் புலிகள் மீது எமது தொடர்ச்சியான விமர்சனத்தை முன்வைக்கின்றோம். இதன் மூலம்



1. புலிகள் அதை உணர்ந்து தம்மை திருத்திக் கொள்ள கோருகின்றோம். இது உள்ளார்ந்தமான மாற்றமாக கூட இருக்கலாம்.



2. உண்மையான தேசியத்தின் பின் (மக்கள் நலன்களின் முன்வைத்து) சுயாதீனமாகவும் தனித்துவமாகவும் அணி திரளுவதை நோக்கியே நாம் கருத்தை எடுத்துச் செல்லுகின்றோம்.



பேரினவாதத்தையும், ஏகாதிபத்தியத்தையும், தமிழ் மக்கள் தமது சொந்த தலைமையில் எதிர்த்து நிற்பதை இது அடிப்படையாக கொண்டது. இந்த வகையில் போலிகளையும், புரட்டுப் பேர்வழிகளையும், பிழைப்புவாதிகளையும், அவர் சார்ந்த இழிந்த வக்கிரங்களையும் நடைமுறைகளையும் நாம் தோலுரிக்கின்றோம். இந்த விமர்சனத்தில் யாரும் தப்பவில்லை. சலுகைகள் எதையும் நாம் வழங்க முற்படவில்லை. மக்கள் நலன் இதுவே எமது உயர்ந்த இலட்சியம். இதை யார் நேர்மையாக பின்பற்றினாலும், அவர்களுடன் நாம் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்.



வேஷம் கட்டும் மிதவாதப் புலிகள்



மக்கள் நலனைப்பற்றி பேசாத புலி மிதவாதிகளின் அரசியல் சூழ்ச்சி எப்படி முன் வைக்கப்படுகின்றது என்பதை இனம் காண்போம். மக்களை பற்றி புலிப்பாணியில் மூக்கால் சிணுங்கிக் கொள்ளும் சிலர், புலித்தேசியத்தின் பின்னால் நின்று குலைத்துக் கொண்டு அங்குமிங்குமாக நடுநிலை வேஷம் போடுகின்றனர். சொந்த வாலை நிமிர்த்த வேஷங்கள் போடுகின்றனர். சொந்த வாலை தாம் நிமிர்த்தி நிமிர்ந்து தான் நிற்கின்றது, அதில் சில அழுக்குகள் படிந்து தான் உள்ளது என்று கூறி அதை அகற்ற முடியுமென்கின்றனர். அதைக் கழுவிவிட்டால் எல்லாம் சரி என்று சாதிப்பதே, இவர்களின் விடாக்கண்ட முயற்சியாகும். புலி அரசியலின் உள்ளடக்கம் மீதான மயக்கத்தையும், பிரமையையும், பிரமிப்பையம் விதைக்கவும், சிதைந்து கொண்டிருக்கும் புலி பாசிச அரசியலை நிமிர்த்த முனைகின்றனர். இங்கு அவர்கள் அதை திருத்த முனையவில்லை. புலிகள் செய்வதை அங்குமிங்கும் புணர்ந்து போட்டு, ஒட்டி விடவே சதா முனைகின்றனர்.



அவர்கள் தம்மை ஜனநாயகத் தன்மை கொண்ட அப்பழுக்கற்ற மிதவாதிகளாக காட்டிக் கொள்கின்றனர். புலியை விமர்சிப்பவராக வேஷம் போடுகின்றனர். புலியின் நடத்தைகள் சிலவற்றை தாம் ஏற்றுக் கொள்வதில்லை என்கின்றனர். புலிகளை விட்டால் இன்று எதுவும் இல்லை, அதனால் தவிர்க்க முடியாது ஆதரிக்கின்றோம் என்கின்றனர். மக்கள் மக்கள் என்கின்றீர்களே, நீங்கள் புலியை விமர்சிக்காது அணிதிரண்டு போராடுங்கள் என்று மெதுவாக நக்கல் செய்ய முனைகின்றனர். நீங்கள் புலியில் இணைந்து அவர்களை திருத்தலாமே என்கின்றனர். இப்படி பலவகையான மிதவாத வண்ணப் புலிகள், நடுநிலை வேஷம் போட்டபடி உள்ளனர்.



இவர்கள் தாம் கொலைகளை ஏற்றுக் கொள்வதில்லை என்கின்றனர். நிதர்சனம் டொட் கொம் போன்ற இழிவான அநாகரிகமான புலிசார்பு கருத்துத்தளங்களை ஏற்றுக் கொள்வதில்லை என்கின்றனர். கட்டாயப்படுத்தி நிர்ப்பந்தம் கொடுத்த நிதி சேகரிப்பை தாம் ஏற்றுக் கொள்வதில்லை என்கின்றனர். இப்படி பலவற்றைக் கூறிக் கொண்டும், இவர்கள் புலியாக இருக்கின்றனர். புலியெதிர்ப்பு கும்பலுக்கும், புலி ஆதரவு கும்பலுக்கும் இடையில் தாம் இருப்பதாக காட்டிக் கொண்டு, மக்கள் நலனை முன்னிறுத்தும் மாற்று அரசியல் செயற் தளத்தின் மீது, தமது சொந்த பாசிச புலிக் கருத்தை முத்திரையிடும் முயற்சியில் அதீதமாக ஈடுபடுகின்றனர். இவர்கள் மிக நுட்பமாகவே புலியை விமர்சிப்பதில்லை. புலியின் சில நடவடிக்கையை ஏற்றுக் கொள்வதில்லை என்பார்கள், அது தவறு என்பார்கள் ஆனால் அதை அவர்கள் விமர்சிப்பதில்லை. அதை அவர்கள் விமர்சித்தால், அடுத்த கணமே பிரதிபலிக்கும் அதன் விளைவு.



இப்படி புலியை விமர்சிக்காத நிலையில் தம்மை புலியெதிர்ப்பு அல்லாத, புலியாதரவு அல்லாத 'நடுநிலைவாதிகள்" என்று நாமம் சூட்டி, தமது புலி ஆதரவு நிலைக்கு சாதகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றனர். பின் நாசூக்காக குசுவிடும் வழியில், தாம் புலி ஆதரவாளர் என்றும் கூறிக் கொள்கின்றனர். இப்படி இருக்கும் இவர்கள், நாய்வாலின் மறு தொங்கலில் பிடித்து தம்முடன் சேர்ந்து நிமிர்த்தக் கோருகின்றனர். புலி சார்பு புலியெதிர்ப்பு கோஸ்டிகளுக்கு விரோதமானதும், மக்கள் நலனை உயர்த்தும் அரசியலையே இவர்கள் 'நடுநிலை" அடையாளம் வழங்கி தம்பக்கம் (புலியின் பக்கம்) வரக் கோருகின்றனர் அல்லது அதைக் கடித்துக் குதற முனைகின்றனர். உண்மையில் இவர்களால் புணரப்படும் கருத்துக்கள் மாற்று அரசியலைக் கோருகின்றதே ஒழிய, புலி சார்பாகவோ அல்லது புலியெதிர்ப்பாகவோ இருப்பதில்லை. இவர்கள் மக்களை நலனை முன்வைக்க, அதை உயர்த்த முன்வருவதில்லை.



மக்கள் நலனை முன்னிறுத்தி வெளிவரும் கருத்துக்கள், புலிசார்பு புலியெதிர்ப்பு எதிர்புரட்சிகர மக்கள் விரோத போக்குக்கு எதிராக வைக்கின்றது. இதை புலி மிதவாதிகள் விரும்புவதில்லை. சொல்லப்போனால், மக்கள் நலனை அவர்கள் விரும்புவதேயில்லை. மக்கள் நலனை முன்னிறுத்தி, அதற்கு எதிரான புலியின் நடத்தை மீது தமது சொந்த விமர்சனத்தை அவர்கள் கொண்டிருப்பதில்லை. குறிப்பாக தாம் ஏற்றுக் கொள்வதில்லை என்று கூறும் புலி நடத்தைகளை, அந்த சொற்களுக்கு வெளியில் விமர்சிப்பதில்லை. தாம் அதை 'ஏற்றுக் கொள்வதில்லை" என்ற சொல்லை மிகவும் கபடமாகவே, ஏமாற்றும் நுட்பமான மோசடித்தனத்துடன் அவாகள் கையாளுகின்றனர். புலிக்கு எதிராக எதையும் மக்கள் சார்பாக முன்னிறுத்தி இவர்கள் கருத்துரைப்பதில்லை. புலியின் தவறுகளை திருத்தக் கூட எந்த ஆலோசனையையும் முன்வைப்பதில்லை. தாம் விரும்பாத போக்குகளை, புலிகள் அனுமதிக்க கூடாது என்று கூறுவதற்கு கூட அவர்கள் தயாராகவில்லை. கபடமான நடிப்பும், மோசடியும் இவர்களின் தந்திரமாகின்றது.



இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் கட்டமுனைவது போல் புலிகள் இருப்பதில்லை என்ற எதார்த்த உண்மை தான். கொலையிலும், சூறையாடலிலும் புலிகள் தமது சொந்த வக்கிரத்தையே அன்றாடம் கையாளுகின்றனர். நிதர்சனம் டொட் கொம் போன்ற உள்ளடகத்தில் தான், அரசியல் விபச்சாரத்தை புலிகள் செய்கின்றனர். டி.ஜே.தமிழன் போன்ற புலி ஆதரவு நடுநிலைவாதி கூறுவது போல் 'தேனீ தளத்தை வாசித்திருந்தால் நிறையத் தெரிந்திருக்கும். ஆனால் நான் நிதர்சனம் போன்ற தீவிர புலி ஆதரவுத்தளங்களை வாசிக்காதது போல தேனீப்பக்கமும் போகாமல் என் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றேன்" என்கின்றார். இவர்கள் போன்றவர்கள் தம்மை வெளிபடுத்திக் கொள்வது,நிதர்சனம் போன்றவற்றை நான் பார்க்காத ஒரு தூய்மையான ஜனநாயக நடுநிலைவாதி என்பதையே, எமது மண்டைக்குள் தேனீ பற்றிய கூற்றின் ஊடாக செருக விரும்புகின்றனர்.



இதுவே ஒரு மோசடி. நிதர்சனம் போன்றவற்றை மட்டுமல்ல, தேனீ போன்றவற்றையும் விமர்சிக்கும் நேர்மை, ஏன் அதற்கான நேர்மையான அரசியல் தகுதி இருக்கின்றதா என்பதே உங்களைப் போன்றவர்கள் முன்னுள்ள அடிப்படைக் கேள்வி. உங்களைப் போன்றவர்களின் அரசியல் நேர்மை பற்றிய, உங்கள் நடுநிலைத்தன்மை பற்றிய பிரமையின் பின்னுள்ள கேள்வி இதற்குள் தான் உள்ளது. இதை கேட்கவும், அதை செய்வதற்குரிய வக்கு, அரசியல் நேர்மை இவர்களுக்கு இருப்பதில்லை. அதை மூடிமறைக்கத் தான், இவற்றைப் பார்ப்பதில்லை என்று அரசியல் மூகமூடி வேஷம் உருவாகின்றது. நிதர்சனம் டொட் கொம்மை டி.ஜே.தமிழன் போன்றவர்களால் விமர்சிக்க முடியாது. இதுதான் புலி மனம். விமர்சனத்தை தவிர்க்க அதை பார்ப்பதில்லை என்று நாகரிகமாக சொல்லிவிடுவதே, அவர்களின் நரிப் புத்தி.



இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் காட்டும் சினிமாவைத் தாண்டி, நிதர்சனம் டொட் கொம் தான் புலிகள். இதில் அளவு மற்றும் பண்பில் வேறுபாடு கிடையாது. புலிகள் புலிகளாகவே இருக்கின்றனர். அதை மீறிய நிதர்சனமும் கிடையாது. எல்லாவிதமான மனித விரோத வக்கிரமும் ஒருங்கே இணைந்ததே புலிகள். இதற்கு வேஷம் போட்டு டி.ஜே.தமிழன் போன்றவர்களால் ஆடிக்காட்ட முடியாது. அது இந்து மத காமச் சாமிகள் போல், சொந்த வக்கிரத்துடன் நிர்வாணமாகவே விபச்சாரம் செய்தபடி உள்ளது.



இதை மூடிமறைத்து வேஷம் கட்டும் மிதவாதப் புலிகள் முன்வைக்கும் எதிர்நிலைக் குற்றச்சாட்டு, புலிகளை விமர்சிப்பது போல் பேரினவாதிகளை விமர்சிப்பதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இது உண்மையா?



பேரினவாதிகளும் நாங்களும்



மிகவும் அதிசயக்கத்தக்க வகையில், தம்மைத் தக்கiவைத்துக் கொள்ள இந்தக் கருத்தைக் கூறுவதில் அவர்கள் முனைப்புக் கொள்கின்றனர். புலிகள் இதைச் சொல்லி அனைத்தையும் அழித்தனர், மேலும் மேலும் அழித்துவருகின்றனர். அதையே இந்த மிதவாதப் புலிகளும் சூழ்ச்சியுடன் சொல்லுகின்றனர்.



ஆனால் உண்மை என்ன? தாம் அரசியல் ரீதியாக யாரை விமர்சிக்காமல் இருப்பதையும், சம்பவங்கள் ரீதியாக நிகழச்சிகளை போட்டுடைத்தபடி, புலிகளை ஆதரிப்பதை மூடிமறைக்கும் ஓரு சூழ்ச்சியாகும். இங்கு இவர்கள் ஆதரிப்பது என்பது மக்கள் விரோதப் புலிப் போக்கைத் தான் என்பதும், ஆனால் அதை இல்லை என்பது இவர்களின் சூழ்ச்சியுமாகும். புலிக்கு அப்பால் சென்று மக்கள் நலனை உயர்த்தி பேரினவாத அரசையும், அதன் ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தை கூட விமர்சிக்க தகுதியற்றவர்களின் உளறலாகும் இவை. ஏகாதிபத்திய எதிர்வினை மீது, புலிப் பாணியில் திட்டுவதற்கு அப்பால் ஏகாதிபத்திய விசுவாசிகளாகவே இவர்கள் உள்ளனர்.



அதை மூடிமறைக்கவே பேரினவாதத்தை நாம் விமர்சிப்பதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். எம்மை இப்படி குற்றம் சாட்டுபவர்களை விட, பேரினவாதத்தை விமர்சிப்பவர்களில் நாமே முதன்மையானவர்கள். நாங்கள் விமர்சித்த அளவுக்கு, ஆயுதம் ஏந்திச் சண்டையிடும் புலிகள் கூட பேரினவாதத்தை விமர்சிப்பது கிடையாது. புலிகள் அவர்களைத் திட்டுவதே ஒழிய, தமிழன் சிங்களவன் என்ற குறுந்தேசிய அரசியல் எல்லைக்கு அப்பால், அரசை அரசியல் ரீதியாகவே விமர்சிப்பதில்லை. பெரும்பாலும் இவை கேலிக்குரிய வடிவில் சிதைந்து உள்ளது. பேரினவாதத்தின் சொந்த முகத்தை, தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார வாழ்வு மீதான உள்ளடகத்தை சார்ந்து, அரசியல் ரீதியாக விமர்சனமாக செய்யும் தகுதியை இழந்தவராகவே புலிகள் உள்ளனர். பின் எம்மீது அந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.



நாங்கள் பேரினவாதத்தை புலிகள் எதிர்க்கின்றார்களோ இல்லையோ, பேரினவாதம் இலங்கையின் ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரி என்பதை அரசியல் ரீதியாக சொல்பவர்கள். இந்த பேரினவாத அரசியல் என்பதே, ஏகாதிபத்தியத்தின் எடுபிடி கைக்கூலி அரசியல் என்கின்றோம. அதாவது உலகமயமாதல் என்ற மக்கள் விரோதக் கும்பலின் எடுபிடி தான் அரசு. சொந்த மக்களையே அடக்கியொடுக்கும், ஒரு மக்கள் விரோத அரசு என்று கூறுபவர்கள் நாங்கள். நீங்கள் அப்படி சொல்பவர்கள் அல்ல. மக்களின் சொந்த அதிகாரம் தான், உண்மையான மக்கள் நலன் அரசு என்று கூறுபவர்கள் நாம். இந்தக் கருத்தை புலிகள் கூறுவதில்லை. ஏன் நடுநிலை புலி ஆதரவு மிதவாதக் கும்பல் கூட இதைக் கூறுவதில்லை.



இதில் சிங்கள பேரினவாதம் என்பது, மக்கள் விரோத அரசின் ஒரு பண்பு வடிவம் மட்டும் தான். ஏன் புலிகள் மக்களுக்கு துரோகம் செய்து சோரம் போய் இனமோதல் முடிவுக்கு வந்தாலும் கூட, இந்த அரசு ஒட்டு மொத்த மக்களுக்கு தொடர்ந்தும் எதிரானதே. ஏகாதிபத்திய கைக்கூலிக் கும்பல் அரசியலைத் தான், அது மக்களுக்கு எதிராக முன்நிறுத்தியுள்ளது என்பதே அடிப்படையான அரசியல் உண்மை. அரசை எதிர்ப்பதாக கூறும் பொய்யர்களும், போலிகளும் இந்த அரசியல் உண்மையின் அடிப்படையில் அதைக் கூறுவதில்லை. இதனால் தான் அவர்களே சொந்த மக்களின் விரோதிகளாகவே, எப்போதும் எங்கும் இருக்கின்றனர்.



நாங்கள் உங்களைப் போல் ஏகாதிபத்தியத்திடம் மண்டியிடுவது கிடையாது. அவர்களிடம் சலுகையைக் கோருபவர்கள் அல்ல. அவர்கள் விதிக்கும் தடைகளை நீக்கக் கோரி பிச்சை பாத்திரம் ஏந்துபவர்கள் அல்ல நாம். அவர்கள் என்றும் எங்கும் மக்களின் எதிரிகளே என்பவர்கள் நாம். மக்களை பாதுகாக்க, மக்களின் பரம எதிரிகளான அவர்களிடம் நாங்கள் எதையும் கையேந்தி கோருவதில்லை. அவர்களுக்கு எதிராக போராடுபவர்கள். அவர்களின் அரசியல் இருப்பை ஒழித்துக்கட்டவே, உலகமக்களுடன் ஒருங்கிணைந்து போராட முனைபவர்கள் நாங்கள்.



சொந்த நாட்டில் அவர்களின் பலம்பொருந்திய தலையீட்டை எதிர்கொள்ள, எமது சொந்த அணுகுமுறை உங்களை விட தனித்துவமானது, புரட்சிகரமானது. ஏகாதிபத்திய மக்களிடம் எமக்கு ஆதரவான அரசியல் போராட்டத்தை, அவர்களை அடக்கியாளும் அந்த ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக போராடக் கோருகின்றோம். மக்கள் நலன் கொண்ட சரியான போராட்டத்தின் எல்லாத் தளத்திலும், இது நிகழ்கின்றது. நாங்கள் ஏகாதிபத்தியம் வழங்கும் உதவி என்ற பெயரிலான கடனை வாங்கி, நாட்டை ஆள்வதையும் அரசியல் விபச்சாரம் செய்வதையும் கடுமையாக எதிர்ப்பவர்கள். அமைதி சமாதானத்தின் பெயரில் பணம் வாங்கி, விபச்சாரம் செய்பவர்கள் அல்ல நாங்கள். மக்கள், தாமே தாம் வாழும் வாழ்வை முன்னிறுத்தி போராடுவதை மட்டும் தான் நாங்கள் ஆதரிப்பவர்கள். அதையொட்டிய கருத்துகளை நாம் முன்னிலைப்படுத்துபவர்கள். இது தமிழனாக இருந்தாலும், சிங்களவனாக இருந்தாலும், இது தான் எமது பொது அரசியல் நிலை.



எமது பிரதான எதிரி யார்



இலங்கையில் இனப்பிரச்சனையே முதன்மை முரண்பாடாக உள்ள இன்றைய நிலையில், எமது பிரதான எதிரி இலங்கை அரசு தான் என்பதை நாம் தெளிவாக கூறுகின்றோமே ஒழிய, புலிகள் அல்லவென்று தெளிவாக கூறுகின்றோம். புலிகள் இலங்கைப் பேரினவாத அரசைப் போல் பாசிட்டுகளாக இருந்த போதும் கூட, மக்களின் முதலாவது எதிரி இலங்கை அரசு என்று தெளிவாகவே கூறுகின்றோம். புலிகள் தேசியத்தையும், அதன் உள்ளடகத்தையும் எட்டியுதைத்து, ஒரு மாபியாக் கும்பலாகி பாசிட்டுகளாகவே எதார்த்தத்தில் உள்ளனர். இதையொட்டிய நடவடிக்கையில் மட்டும் ஈடுபடுகின்ற இன்றைய நிலையிலும் கூட, எமது பிரதான எதிரி பேரினவாத அரசு தான் என்பதை அடிப்படையாக கொண்டே நாம் செயற்படுகின்றோம். இதில் மற்றொரு உண்மை, நாம் புலிகளால் கொல்லப்படுவோம் என்ற இன்றைய நிலையிலும் கூட, இது அரசால் அல்ல என்ற போதும் கூட, எமது பிரதான முதலாவது எதிரி அரசு தான். தனிப்பட்ட எமது நிலை, விருப்பங்கள் இதை தீர்மானிப்பதில்லை. மாறாக மக்கள், மக்களின் சமூக பொருளாதார உறவுகளே இதைத் தீர்மானிக்கின்றது.



ஒரு உதாரணத்தை தரமுடியும். நான் புலிகளின் வதை முகாமில் இருந்து 1987 இல் தப்பிய பின், எனது உயிருக்கு உத்தரவாதத்தை பல்கலைக்கழக மாணவர்கள் தன்னியல்பாக திரண்டெழுந்து புலிகளிடம் கோரினர். புலிகள் பல்கலைக்கழக மேடையில் உயிருக்கான உத்தரவாதத்தை வழங்குவதாக அவர்களின் பாசிச வழியில் குதர்க்கம் செய்த போதும், திடீரென அன்று தலைமறைவு வாழ்வில் இருந்து வெளிப்பட்ட நான் அதே மேடையில் உரையாற்றினேன். அதில் எமது எதிரி இலங்கை அரசும் இந்திய ஆக்கிரமிப்பாளனும் என்று தெளிவாக கூறியவன். எமது அரசியல் தனிப்பட்ட பழிவாங்கும் உணர்வு, திட்டி தீர்க்கும் உணர்வு கிடையாது. மாறாக அனைத்தும் அரசியல் ரீதியானவை. கேட்கவும் அன்று புலிகள் நிகழ்த்திய உரை மற்றும் எனது உரையை.



புலிகளில் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை



எதிரி பற்றிய குழப்பத்தை, புலியெதிர்ப்பு அணியின் கையாலாகாத்தனம் தனது ஏகாதிபத்திய ஆதரவு இருப்பு சார்ந்து விதைக்கின்றது. புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள், புலியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாது போனவர்கள், தமது சொந்த எதிரியாக புலியைக் காண்கின்றனர். இது எதார்த்தத்தில் புலிகளால் பாதிக்கப்பட்டவர் சார்ந்த ஒரு உண்மையாக இருந்த போதும் கூட, பாதிக்கப்பட்டவர் சார்ந்த எதார்த்தம் சமூகம் சார்ந்த எதார்த்தமாகிவிடாது. புலிகளின் இன்றைய இருப்பு முதல் அதன் பாசிச சதிராட்டங்கள் வரையான அனைத்தும் பேரினவாதத்தின் இருப்புடன் தொடர்புடையது. பேரினவாதம் இனவொடுக்கு முறையை கைவிட்டால், புலிகளின் பாசிச குறுந் தேசிய அரசியலும் முடிவுற்றுவிடுகின்றது.



புலியை பிரதான எதிரியாக காட்டுபவர்கள், அரசிடம் இனவொடுக்குமுறையைக் கை விடக் கோருவதில்லை. மாறாக அரசுக்கு ஆதரவாகவோ அல்லது அரசு சார்ந்த சர்வதேச ஏகாதிபத்திய நடத்தைகளுடன் ஒன்று சேர்ந்து தமிழ் மக்கள் மேலான இனவொடுக்குமுறையைப் பலப்படுத்துகின்றனர். பேரினவாதத்தின் இனவொடுக்கு முறையை எதிர்த்து போராடியபடி, புலியின் பாசிசத்தை இவர்கள் எதிர்ப்பதில்லை.



உண்மையில் புலிகளின் அரசியல் இருப்பு பேரினவாதத்தின் இருப்புடன் தொடர்புடையது. தனிமனிதர்கள் சமூக எதார்த்தத்தில் சந்திக்கின்ற பிரச்சனைகளில் இருந்து, சமூகத்தின் ஓட்டு மொத்த எதிரி அடையாளம் காணப்படுவதில்லை. தனிநபர்களின் விருப்பங்கள், இதை தீர்மானிப்பதில்லை. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழரை எடுத்தால், பேரினவாதத்தை நேரடியாக எதிர்கொள்வதில்லை. புலிகளைத் தான் அன்றாடம் எதிர் கொள்கின்றனர். வரிகள் முதல் கட்டாய நிதி சேகரிப்பு வரை பல முரண்பாடுகளை அது புலிகளுடன் உருவாக்குகின்றது. இதனால் புலிகள் இலங்கை வாழ் தமிழரின் பிரதான எதிரியாகி விடுவரா? இல்லை. சரி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், யுத்தம் இல்லாத சூழலில், புலிகள் தான் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளில் முரண்படுகின்றனர். இதனால் தமிழ் மக்களின் பிரதான எதிரி புலிகளாகி விடுவார்களா? இல்லை.



புலிகளின் இருப்பு என்பது அது யாழ் மையவாதமாக இருந்தாலும் கூட, தேசிய இனச்சிக்கலின் அடித்தளத்தின் மீது உள்ளது. இது நீடிக்கும் வரை, இந்தப் பிரச்சனை தீர்க்கப்படாத வரை, புலிகளின் இருப்பு பொது அரசியல் நெருக்கடி ஊடாக தக்கவைக்கப்படுகின்றது. புலிகள் மக்களின் முழுமையான அங்கீகாரத்தைப் பெற முடியாவிட்டாலும், மறைமுகமான இருப்பை தக்கவைக்கும் அரசியல் அடிப்படையை இன முரண்பாடு வழங்கிவிடுகின்றது. மறுபக்கத்தில் புலிகள் இருக்கின்றனரோ இல்லையோ, இலங்கை அரசு ஒட்டு மொத்த மக்களின் எதிரியாக இருப்பது இல்லாததாகிவிடாது. அரசு மக்களின் எதிரியாகவே புலிகளைக் கடந்து உள்ளனர். இந்த அரசியல் உண்மையை குழிதோண்டிப் புதைத்து, புலியை பிரதான எதிரியாக காட்டுவது நயவஞ்சகத்தனமானது. தேசிய இனப்பிரச்சனையில் அரசும் புலிகளும் உடன்பாடு கண்டாலும், மக்களின் எதிரியாகவே அரசு தொடர்ந்தும் நீடிக்கும்.



உதாரணமாக தன்னை மிதவாதியாக காட்டிக் கொள்ளும் புலி ஆதரவு டி.ஜே.தமிழன் 'புலியைத் தடைசெய்ததை உற்சாகமாய் உரையாடிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கும் நமது நண்பர்களுக்கு (அடிக்கடி கூறும்) சோபாசக்தியின் மேற்கோளான,"நான் புலிகளை 100சதவீதம் எதிர்க்கின்றேன். ஆனால் இலங்கை அரசாங்கத்தை 200 சதவீதம் எதிர்க்கின்றேன" என்பதை இன்னொருமுறை நினைவூட்டி இப்படியிருத்தல் நியாயந்தானா என்று கேட்கவேண்டுமா என்றும் தெரியவில்லை." என்கின்றார்.



இங்கு சோபாசக்தியின் அரசியல் வரையறை தெளிவற்றது. அவர் தன்னளவில் அதை சரியாக சொன்னாலும், அதை திரிக்க கூடியதாகவே உள்ளது. பொதுவாக எடுத்தஎடுப்பில் சரியாக தெரிந்தாலும், உள்ளடகத்தில் தவறானதே. அதனால் தான் நீங்கள் விரும்பியவாறு அதை உங்களுக்கு இசைவாக கையாள முடிகின்றது. உண்மையில் நீங்கள் அதை எடுத்துக் கொண்ட விதத்துக்கும், சோபாசக்தி அதை சொன்னதற்கும் இடையில் வேறுபட்ட அரசியல் உள்ளடக்கம் உள்ளது.



சோபாசக்தி 200 சதவீதம் அரசு எதிரி என்றால், அதைத் தாண்டி 300 சதவீகிதம் அதைத் தொடர்ந்து உள்ள மதிப்பீடுகள் எல்லாமே கேள்விக்குள்ளாகிவிடும். விரும்பியவர்கள் அதை விரும்பியவாறு மொழி பெயர்க்கலாம். சோபாசக்தியின் பல கருத்து தளத்தில் தெளிவற்ற இந்த குறைபாடு உள்ளது. உண்மையில் சோபாசக்தி பிரதான எதிரி யார் என்று சொல்லவே இதைக் கையாண்டுள்ளார். இதை எல்லையற்ற விதத்தில் விளக்கி குதர்க்கம் செய்ய முடியாது. 100 சதவீதம் என்று அதை மட்டுநிறுத்தி கூறுவதே குறைந்தபட்சம் சரியானது. ஆனால் அரசியல் ரீதியாக அல்ல. எதிரி பற்றிய வரையறை சதவீதக்கணக்கில் வரையறுக்க முடியாது. இது அரசியல் திரிபை புகுத்திவிடுகின்றது.



அரசு எமது எதிரி என்றால், எந்த வகையில் எதிரி? இதை சோபாசக்தி பார்க்கும் விதமும், உங்களைப் போன்றவர்கள் பார்க்கும் விதமும் முற்றிலும் முரணானது. அரசை புலிகள் பார்க்கின்ற வகையில் சோபாசக்தி பார்ப்பதில்லை. உங்களைப் போன்றவர்கள், புலி பார்க்கும் வகையில் அரசைப் பார்க்கின்றீர்கள். நாங்கள் அப்படி அல்ல. இந்த அடிப்படையான விடையத்தை டி..ஜே.தமிழன் போன்றவர்கள் சூக்குமமாக்கி பொத்தாம் பொதுவில் விபச்சாரத்துக்கு விடுகின்றனர். புலிகள் அரசுடன் ஒரு இணக்கப்பாடான அரசியல் உடன்பாட்டைக் கண்டால், டி..ஜே.தமிழன் போன்றவர்களின் நிலைப்பாடே அரசு எதிரியற்றதாகி விடும். ஆனால் எமக்கோ, சோபாசக்திக்கோ அப்படி ஒரு நாளும் இருக்காது. இது உள்ளடகம் சார்ந்து, 200 சதவீதக் கோட்பாட்டில் குறைபாடுள்ளதாக மாறிவிடுகின்றது.



மக்களுக்கு (எமக்கு) எதிரியாக இருப்பவர்களின் உள்ளடக்கம் என்ன? உயர்சாதிய கட்டமைப்பை பாதுகாக்கும் ஒரு அரசு இயந்திரம். ஆணாதிக்கத்தை பாதுகாக்கும் ஒரு அரசு இயந்திரம். இனவொடுக்கு முறையை பாதுகாக்கும் ஒரு அரசு இயந்திரம், பிரதேச வேறுபாட்டை உருவாக்கி பாதுகாக்கும் ஒரு அரசு இயந்திரம். வர்க்க அமைப்பையும் அதன் ஊடாக சுரண்டலைப் பாதுகாக்கும் ஒரு அரசு இயந்திரம். இப்படி எதிரிக்கு பல முகம் கொண்ட ஒரு தலை உண்டு. மக்களின் சமூக முரண்பாடுகள் முடிவுக்கு வரும் வரை, மக்களின் (எமக்கு) எதிரி எதிரியாகத்தான் உள்ளான். ஆனால் அது உங்களுக்கு அப்படி இருப்பதில்லை. சோபாசக்தி 200 சதவீகிதக் கோட்பாட்டை நீங்கள் ஏற்றுக் கொள்வது என்பது, திரித்த வடிவில் மட்டும் தான். குறைந்தபட்சம் இந்த சமூக முரண்பாட்டை தீர்ப்பதில் இருந்து, அதற்கு எதிராக போராடுவதில் இருந்து, நீங்கள் புலிகளை ஆதரிக்கவில்லை. இந்த உண்மை பளிச்சென்று தெரிகின்றது. வலதுசாரிய பாசிச கட்டமைப்பின் பின், எதற்காக வாயில் எலும்பைக் கவ்விக் கொண்டு நீங்கள் ஒடுகின்றீர்கள். சமூக இழிவுகளையும், சமூக ஒடுக்கு முறைகளையும் பாதுகாக்கத்தான், புலிகளை ஆதரிக்கின்றிர்கள்.



உங்கள் எதிரி நீங்கள் கூறுவது (புலிகள்) போல் உண்மையில் இருப்பதில்லை. இது குறுகிய சந்தர்ப்பவாத கண்ணோட்டம் கொண்டது. மாறாக எதிரி என்பவன் மிக மோசமாகவே, ஒட்டுமொத்த மக்களின் சமூக பொருளாதார வாழ்வையே அழிக்கும் எதிரியாகவே எதார்த்தத்தில் உள்ளான்.



நாம் எதிரி என்ற வகைப்படுத்தும் போது, அதை மக்கள் தழுவியதாக அவர்களின் சமூக பொருளாதார உறவுடன் ஒன்றிணைத்துப் பார்க்கின்றோம். புலியாதரவு மிதவாதிகள் அப்படிப் பார்ப்பதில்லை. மாறாக புலிகள் தழுவியதாக, அவர்களின் சுயநல அரசியலுக்குட்பட்டதாக பார்க்கின்றனர். அதற்குள் ஓட்டைச் சட்டியை ஒட்டவும், மற்றவர்களுக்கு அதைப் பொருத்திக் காட்டவும் படாத பாடுபடுகின்றனர்.



ஆனால் அவை பொருந்திவிடுவதில்லை. இந்த புலி ஆதரவு மிதவாதிகளை எடுத்தால், மிகக் கவனமாக புலிகளின் அரசியலை விமர்சிப்பதில்லை. மாறாக சில நடிவடிக்கைகளை தவறுதான் என்பார்கள். அதை தான் ஏற்றுக் கொள்வதில்லை என்று பொத்தாம் பொதுவிலான இசையை மீட்டியபடி, தம்மை அங்கும் இங்குமாக காட்டியபடி புலியாகவே இருக்கின்றனர். இதுவே ஒரு முரண்நிலை. புலிகளின் நடத்தைகள், அவர்களின் செயல் சார்ந்த சம்பவங்கள் அனைத்தும், அவர்களின் மொத்த அரசியல் கோட்பாடு சார்ந்தது. மக்கள் விரோதச் செயல்கள் என்பது அவர்களின் அரசியல் சார்ந்தது. இதில் விமர்சனம் என்று கூறி பின் புலிகளை ஆதரிப்பவர்கள், உலகத்தையே தமது கண்களை மூடிக் கொண்டு ஏமாற்ற முனைகின்றனர். உண்மையில் அரசியல் ரீதியான விமர்சனத்தையும், அந்த மக்கள் விரோத அரசின் உள்ளடகத்தையும் விமர்சிக்க முடியாத, இவர்களின் அரசியல் நேர்மை என்பது விபச்சார தரகனுக்கேயுரியது. தரகன் தான் தூய்மையானவனாகவும் ஒழுக்கமுள்ளவனாகவும் எப்போதும் எங்கும் கூறிக்கொள்கின்றான். அப்படித் தான் இவர்களும் முனைகின்றனர். இங்கு இந்த வெங்களாந்திகளின் அரசியல் பாத்திரம், மக்கள் விரோத்தன்மை கொண்டவை. எதிர் நிலையில் மற்றொரு பிரிவு இதையே தனக்கு சாதகமாக கொண்டு, தன்னை முற்போக்கானதாக காட்டிக் கொள்ள முனைகின்றது. அந்த படுபிற்போக்கான அரசியல் கோமாளித்தனத்ததைப் பார்ப்போம்.



புலியெதிர்ப்பு அணி புலியை விட முற்போக்கனதா?



சர்ச்சைக்குரியதும் பலருக்கும் அதிருப்தியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தக் கூடிய விவகாரம் இது. ஒன்றாக கூடி அரசியல் விபச்சாரம் செய்யும் ஒரு தளத்தில் இந்தக் கேள்வி இன்று எழுப்புவது அவசியமானதாகிவிடுகின்றது. புலியைவிட புலியெதிர்ப்பு அணி அரசியல் ரீதியாக எந்த விதத்தில் முற்போக்கானது. இதற்கு அவர்கள் யாரும் பதிலளிக்கப் போவதில்லை.



புலிகளின் படுகொலை அரசியல் முதல் பாசிசம் சார்ந்த எதார்த்த சூழலில் மற்றவர்கள் அனைவரும் ஒரு அணி என்பது இந்த பிற்போக்குவாதிகளின் அதியுயர் கண்டுபிடிப்பாகும். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவுகளான பாட்டாளிவர்க்கம், பெண்ணியம், தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவுகள் அனைத்தையும் உள்ளடக்கிய வகையில், ஏகாதிபத்தியத்தை ஆதரித்து நிற்கும் ரீ.பீ.சீ கும்பலுடனும், அரசுடன் கூடிக் குலாவும் ஈ.பி.டி.பியும் மற்றும் அரசு மற்றும் அன்னிய சக்திகளின் ஆதரவுடன் சீரழிந்து செல்லும் கருணா தரப்பையும் ஒரு அணியாக, ஒரு அரசியல் மூட்டையாக காட்டுவது மாபெரும் அரசியல் மோசடியாகும். இதை புலியெதிர்ப்பு அணி வலிந்து செய்ய முனைகின்றது.



ஒடுக்கப்பட்ட சமூக பிரிவுகளுக்காக போராடும் நாங்கள் இதை மறுக்கின்றோம். நீங்கள் புலியை விட எந்தவிதத்திலும் இந்த மக்களின் நண்பர்கள் அல்ல. மிகவும் கடுமையான எதிரிகள் என்று பிரகடனம் செய்கின்றோம். அந்த மக்களின் வாழ்வியலை சிதைக்கும் அரசியல் இருப்பு, உங்களின் உயர்ந்தபட்ச குறிக்கோளாகும்.



இங்கு தமிழ் மக்களின் முதல் எதிரி அரசுதான். புலிகள் அல்ல. முதல் எதிரியுடன் இணைந்து நிற்கும் அனைவரும், தமிழ் மக்களின் முதன்மை எதிரியாக உள்ளனர். புலிப் பாசிசத்தை முதன்மையானதாக காட்டி, அரசுடன் அதற்கு வழிகாட்டி ஆளும் ஏகாதிபத்தியத்துடன் கொஞ்சிக் குலாவும் அனைத்து பிற்போக்குவாதிகளும் தமிழ் மக்களின் முதன்மை எதிரிதான். தமிழ் மக்களின் முதன்மை எதிரி, அந்த மக்களுக்காக குரல் கொடுத்து நிற்கும் எமக்கும் முதன்மை எதிரிதான். சர்ச்சைக்குரிய இந்த எதார்த்தம் சார்ந்த உண்மை, புலிக்கு எதிரான அணிகளிடையே இருப்புக் கொள்ள முடியாத பதைபதைப்பை உருவாக்குகின்றது, உருவாக்கும். அவர்களின் அரசியல் நம்பிக்கைகளையே கேள்விக்குள்ளாகி விடுகின்றது.



இவர்கள் கடந்த காலத்தில் அதாவது புலிகள் மற்றைய இயக்க அழிப்பை தொடங்க முன்னம் இலங்கை அரசைத் தான் பிரதான எதிரியாக பிரகடனப்படுத்தி இருந்தவர்கள். அப்படித்தான் மக்களிடம் கூறி அணி திரட்டியவர்கள். அந்த அரசியல் நிலை, எப்படி புலியின் மற்றைய இயக்க அழிப்புடன் இல்லாமல் போனது. இதை இவர்கள் எப்போதாவது சொன்னார்களா!, இனியாவது சொல்லமுடியுமா? அவர்களால் சொல்ல முடியாது, விளக்க முடியாது. உண்மை மற்றொன்றாக இருக்கும் வரை, மக்களை மந்தைகளாகவே தம் பின்னால் வரக் கோருகின்றனர்.



புலிகளின் அரசியல் நிலைக்கு மாற்றாக கடந்தகால பெரிய இயக்கங்கள் கொள்கை ரீதியாக என்ன அரசியல் வேறுபாட்டை கொண்டிருந்தார்கள். மக்களைப் பற்றி எந்த விதத்தில் வேறு விதமாக சிந்தித்தார்கள். 'ஜனநாயக" வாயைத் திறந்து சொல்லுங்கள். இன்று புலிகளை விட வேறு எந்த விதத்தில், மக்களை அரசியல் ரீதியாக அணுகுகின்றீர்கள். வாயைத் திறவுங்கள். உலகத்தையும் ஊரையும் ஏமாற்றிப் பிழைப்பது போதும்.



நீங்கள் கண்டுபிடித்த 'ஜனநாயகம்" மோசடியானது. அன்று மக்களுக்கான ஜனநாயகத்தை உண்மையாக வைத்த போது, அவர்களை வேட்டையாடியவர்கள் புலிகள் மட்டுமல்ல நீங்களும் தான். நீங்கள் தான் அன்று அதிக ஜனநாயகக் கொலைகளை செய்தவர்கள். கொலையில் அண்ணனுக்கு ஒரு காலம் என்றால், தம்பிக்கு ஒரு காலம் வந்தது. அன்று கொல்லப்பட்டவர்கள் முன்வைத்த மக்கள் ஜனநாயகத்தை திரித்து, நீங்கள் முன்வைக்கும் 'ஜனநாயகம்" மக்களுக்கானதல்ல. மக்களுக்கானது என்றால் எப்படி என்று உங்களால் கூறமுடியுமா?



மக்களுக்கு ஜனநாயகத்தை மறுப்பதை அடிப்படையாகக் கொண்டே, புலியின் பாசிச அரசியலில் விபச்சாரம் செய்கின்றனர். புலிகள் தேசியம் என்கின்றனர். புலியெதிர்ப்பு கும்பல் ஜனநாயகம் என்கின்றது. இருவரும் ஒன்றை ஒன்று எதிர்க்கின்றனர். எப்படிப்பட்ட ஒரு கடைந்தெடுத்த அரசியல் மோசடி. ஜனநாயகத்தையும் தேசியத்தையும் பிரிக்க முடியுமா? முடியும் என்பதே இருவரினதும் மையக் கருத்தாகும். இருவரினதும் அரசியல் கோட்பாடும் இதற்குள் தான் உள்ளடங்கி காணப்படுகின்றது.



ஜனநாயகத்தையும் தேசியத்தையும் பிரிக்க முடியும் என்ற நடைமுறை சார்ந்த செயல்கள், இயல்பாக மக்களை இதற்கு எதிராகவே நிறுத்துகின்றது. இயல்பாகவே தேசியத்தில் இருந்தும், ஜனநாயகத்தில் இருந்தும் மக்களை பிரித்துவிடுகின்றது. இது இயல்பாக மக்களையே எதிரியாக மாற்றுகின்றது. மக்களை எதற்கும் லாயக்கற்றவராக காண்பது நிகழ்கின்றது. மக்களை தமது மந்தைக் கூட்டமாக மாற்றி, அவர்களை மேய்ப்பதையே அரசியலாக கொள்கின்றது.



ஜனநாயகம் தேசியம் என்பது பிரிக்கப்பட முடியாத ஒன்று. இன்றைய பொருளாதார கட்டமைப்பில் தேசியமின்றி ஜனநாயகம் இருக்க முடியாது. அதேபோல் ஜனநாயகம் இன்றி தேசியம் இருக்க முடியாது. இருக்க முடியும் என்பது, அது உண்மையாக இருக்கவில்லை என்பதே அர்த்தம். அவை திரிக்கப்பட்டு குதர்க்கத்துக்கு உள்ளாகி உள்ளது. எதார்த்தத்தில் அது யாருக்கு தேவையோ, அந்த மக்களுக்கு அவை மறுக்கப்படுவதாக மாறிவிட்டது.



மக்களுக்கு ஒரு தேசியம் தேவை. மக்களுக்கு ஒரு ஜனநாயகம் தேவை. ஆனால் இவை இரண்டும் அந்த மக்களுக்கு இருவராலும் மறுக்கப்படுகின்றது. இது சிறுகுழுவின் அற்ப நலன்களுக்கானதாக மாறி, இவை அர்த்தமிழந்த நிலையில் குறுகிய எல்லைக்குள் வக்கிரப்படுகின்றது. மக்களுக்கு எதிரானதாக நிலைநிறுத்தி பாதுகாக்கப்படுகின்றது.



இந்த மக்கள் விரோத அரசியல் இயல்பாக மக்களுக்கு சில எதிரிகளை காட்டுகின்றனர். புலிகள் பேரினவாதத்தை எதிரியாக காட்ட, புலியெதிர்ப்பு அணி புலியை எதிரியாக காட்டுகின்றனர். ஒவ்வொருவரும் தத்தம் தர்க்க நியாயத்துடன் களத்தில் இறங்குகின்றனர். பாதிக்கப்படும் ஒரு பிரிவு மக்களை மந்தைகளாக தம் பின்னால் கொண்டு வர முனைகின்றனர். இது தேசியத்தின் பெயரிலும், ஜனநாயகத்தின் பெயரிலும் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்தி நடக்கின்றது. மக்களுக்கு எதிராகவே மக்களை நிறுத்துகின்றனர்.



மக்களின் தேசியம் என்ன? மக்களின் ஜனநாயகம் என்ன?



உள்ளடக்க ரீதியாகயும், அரசியல் ரீதியாக இவை பிரிக்கமுடியா ஒன்று. எவ்வளவுக்கு இதை மோசமாக பிரிக்கின்றோமோ, அதே போல் ஒன்றுக்கு எதிராக மற்றதை நிறுத்துகின்றோமா அந்தளவுக்கு மக்கள் விரோத தன்மை அதிகரிக்கின்றது. மக்களின் சாதாரணமான இந்த அடிப்படை உரிமையை மறுப்பது, அதை பிரித்து மக்களை மோதும் வகையில் ஒரு பகுதி மக்களுக்கு எதிராக மற்றொரு பகுதி மக்களை நிறுத்துவது கடைந்தெடுத்த அரசியல் மோசடியாகும். மக்கள் விரும்பும் தேசியத்தை, மக்கள் விரும்பும் ஜனநாயகத்தை வெறுப்பவர்கள், நிச்சயமாக மக்கள் விரோதிகளாக மட்டும் தான் இருக்கமுடியும். இதுவே எதிர்புரட்சிகரவாதிகளின் சுயநலம் கொண்ட அரசியலாகப் பரிணாமிக்கின்றது.



ஜனநாயகம் என்பது அனைவரும் ஏற்றத் தாழ்வின்றி முடிவுவெடுக்கும் உரிமையை அடிப்படையாக கொண்டது. அனைவரும் சுதந்திரமாக சுயாதீனமாக தீர்மானங்களை எடுக்கவும், அதை அமுல்படுத்தவும் உள்ள அடிப்படை உரிமையே ஜனநாயகம். இந்த ஜனநாயகம் அனைவருக்கும் கிடைத்து விட்டால், அந்த சொல்லுக்குரிய அரசியல் அர்த்தமே இயல்பாக இழந்துவிடும்.



ஜனநாயகத்தை மக்கள் பெறுவதற்கு, அதை அமுல் செய்வது என்பது, சமூக முரண்பாடுகள் ஒழித்தல் என்பதுடன் நேரடியாகவே தொடர்புடையது. சமூக முரண்பாடுகள் உள்ள ஒரு அமைப்பில், அதை ஒழித்துகட்டும் போராட்டத்தின் உள்ளடக்கமே ஜனநாயகம். அதாவது சமூகத்தில் உள்ள சமூக ஏற்றத் தாழ்வுகளையும், சமூகத்தின் மேல் திணிக்கப்படும் அனைத்து அடக்குமுறையையும் எதிர்த்து போராடுவதே ஜனநாயகம். ஜனநாயகத்தை பெறுவது என்பது சமூக ஒழுக்குமுறையை ஒழித்துக்கட்டுவது தான். இதைவிடுத்து தன்னை அடக்கி ஆள்வதற்கு வாக்கு போடுவதோ, மக்களை அடக்கியாள்வதோ, மக்களை சுரண்டுவதோ, இது போன்ற சமூக இழிவுகளை புகுத்துவதற்கான உரிமைகளை ஜனநாயகம் என்பதோ மாபெரும் மக்கள் விரோத ஜனநாயக மோசடியாகும்.



இங்கு தேசியம் என்பது ஒரு தேசிய இன மக்களின் மேலான அனைத்து ஒடுக்குமுறையையும் களைவதை அடிப்படையாகக் கொண்டது. தேசியம் என்பது, அந்த மக்கள் தாம் சொந்தமாக அடிமையாக வாழ்வதென்பதல்ல. ஒவ்வொரு தேசிய இனமக்களும், ஜனநாயக ப+ர்வமாக முடிவெடுக்கும் உரிமையை பெறுவதை உள்ளடக்கியது. இது அந்த தேசியத்தின் சகல சொந்த ஒடுக்குமுறையையும் களைவதை அடிப்படையாகக் கொண்டது.



சாராம்சத்தில் தேசம், ஜனநாயகம் என பிரித்து பார்ப்பது, அதை ஒன்றுக்கு எதிராக ஒன்றை நிறுத்துவது என்பது மக்களைப் பிளந்து அவர்களை அடிமைப்படுத்துவதையும், அவர்களின் மேல் சுமத்தியுள்ள சமூக இழிவுகளை சிதைவின்றி பாதுகாப்பதையும் அடிப்படையாக கொண்டது. இதைத் தான் புலிகளும் புலியெதிர்ப்புக் கும்பலும் செய்கின்றது. நாங்கள் மட்டும் தான் ஜனநாயகம் தேசியம் இரண்டினதும் பிரிக்க முடியாத அம்சத்துடன், இவர்களுக்கு எதிராக ஒருங்கே உயர்த்திப் போராடுகின்றோம்.



புலிக்கு எதிரானதெல்லாம் எல்லாம் முற்போக்கு என்பது, புலியின் பாசிசத்தின் எதிர்வினையை எம்மீது திணித்ததாகும். புலிகளின் படுகொலைகள் முதல் மக்கள் விரோத அரசியல் வரையான அனைத்து நடத்தைகள் மீதான எதிர்வினையை முற்போக்காக காட்டிய மோசடியே இந்த முற்போக்கு முலாமாகும். இந்த மோசடி உண்மையான மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளையும், அது சார்ந்த அரசியல் கோட்பாடுகளையும் அரித்தே தின்றுவிட்டது. புலிகள் மீதான அனைத்தும் முற்போக்கு என்ற மாயை, புலிக்கு எதிரான இலங்கை அரசு முதல் ஏகாதிபத்தியம் வரை தவண்டு சென்றே நக்கவைத்தது.



புலிகள் அல்லாத அனைவரையும் துரோகி என்ற ஒரே முத்திரை புலிகள் குத்திய போது, அனைவரும் முற்போக்காக தமக்குத் தாமே மகுடம் சூட்டிக் கொண்டனர். முன்னாள் தீவிர கொலையாளிகள் முதல் மக்கள் விரோத களிசடைகள் ஈறாக ஒரே குட்டையில் புரண்டு எழத் தொடங்கினர். வலது இடது அற்ற, ஒரு குட்டையில் இறங்கி, பன்றிகளைப் போல் தமக்குத் தாமே சேற்றை அள்ளி அப்பிக் கொண்டனர். இந்த சேற்றுக் கவசம் தான், அவர்களின் போலி முற்போக்காகியது. புலிகளை எதிர்ப்பதே முற்போக்கின் அடையாளம் என்று கூறியபடி, பாட்டாளி வர்க்க கோட்பாடு முதல் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் கருத்துகளையும் எட்டியுதைத்தனர். இந்த அரசியல் வெற்றிடத்தில் தான் இந்த புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய மற்றும் இலங்கை அரசு ஆதரவுடன் தீவிரமான அரசியல் நிலையை எடுத்துள்ளது. ஏகாதிபத்திய நலனை பூர்த்தி செய்யவும், புலியை ஒழித்துக்கட்டுவதையும் ஜனநாயகம் என்கின்றது. ஆனால் மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஜனநாயகத்தை மறுக்கின்றது. இயல்பில் ஏகாதிபத்திய ஆதரவு என்பதே, மக்களுக்கு ஜனநாயகத்தை அங்கீகரிப்பதை மறுக்கின்றது. புலிகள் மக்களுக்கு ஜனநாயகத்தை மறுப்பது போல் தான், இவர்களும் சாராம்சத்தில் தமது அரசியலைக் கொண்டுள்ளனர். மக்கள் விரோதிகள் புலிகள் மட்டுமல்ல புலியெதிர்ப்பு அணியும் கூடத் தான். இந்த நிலையில் புலிமிதவாதிகள் முன் உள்ள கேள்வி வெளிப்படையானது.



உண்மை என்பது வெளிப்படையானதே



புலி ஆதரவாளராகிய நீங்கள் ஆதரிப்பது எதை? ஆதரிக்காது எதை? இதை வெளிப்படையாக விவாதியுங்கள். புலிகள் செய்பவை எவையெல்லாம், அவை எப்படி மக்களுக்கு சார்பானதாக உள்ளது? எவையெல்லாம் மக்களுக்கு சார்பற்றதாகவுள்ளது.? புலிகள் தமிழ் தேசியம் என்று எதைச் சொல்லுகின்றனர்? எப்படி எங்கே அதை சொல்லுகின்றனர்? புலிகள் அன்றாட கருத்துகள், உரைகள், நடவடிக்கைள் எல்லாம் சரியானவையா? அவை மக்களுக்கு சார்பானதாக உள்ளதா? எப்படி?



புலிகளின் போராட்ட உத்தி சரியானதா? எப்படி? தமிழ் தேசியத்தின் எதிரி யார்? நண்பன் யார்? இதைப் புலிகள் சரியாக கையாளுகின்றார்களா? புலிகள் தமிழீழம் பெற்றால், எதைத்தான் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பார்கள்.



புலிகளின் போராட்டம் சாதியம், பிரதேசவாதம், சுரண்டும் வர்க்கம், ஆணாதிக்கம் முதல் சிறுபான்மை இனங்களின் முரண்பாடுகள் உட்பட, இது போன்ற சமூக அவலங்களை எப்படி மக்கள் சார்பாக தீர்க்கின்றனர். மக்களின் பிரச்சனைகள் என்ன என்று, நீங்கள் கருதுகின்றீர்கள். இதை எப்படி புலித் தேசியம் கையாளுகின்றது. ஏகாதிபத்தியத்தையும், இந்திய பிராந்திய ஆக்கிரமிப்பாளனையும் அரசியல் ரீதியாக எப்படிப் பார்க்கின்றனர். மக்களின் எதிரி என்றா? அல்லது நண்பன் என்றா? இதை எப்படி அரசியல் மயப்படுத்தியுள்ளனர்.



மக்கள் நேசமுள்ள ஒரு நேர்மையான ஒரு தேசப்பற்றாளன், இவற்றுக்கு நேர்மையாக பதிலளிக்க வேண்டும். நேர்மையாக இவை அனைத்தையும் விமர்சிக்க வேண்டும். அங்குமிங்கும் உளறாமல் நேர்மையாக, மக்கள் நலனை முன்னிறுத்தி விவாதியுங்கள். புலிச் சார்பை எடுத்த பின், மக்கள் சார்பை அதற்குள் ஒரு நாளும் தேட முடியாது. மக்கள் சார்பில் நின்று புலியைப் பாருங்கள், புலியெதிர்ப்பைப் பாருங்கள்.



இன்றைய தெரிவு என்பது பேரினவாத அரசு அல்லது புலிகள் என்பதல்ல. அப்படித் தான் அவர்கள் எப்போதும் நிலவைக் காட்டியபடி, வாய்க்குள் அமுக்கித் திணிக்கின்றனர். அதை வாந்தியாக்கி, மீண்டும் மீண்டும் அதை விழுங்கச் சொல்லி எங்களுக்கு சொல்ல முனையாதீர்கள். மாறாக மக்களை சார்ந்து இருத்தல் என்ற ஒரு தெரிவு தான், உண்மையானது, நேர்மையானது. நாங்கள் அதை தெரிந்து, அதன் பக்கத்தில் உறுதியாக உள்ளோம். மக்களுக்காக அவர்களின் நலனுக்காக உயிரைவிடத் தயாராகவே உள்ளோம்.



புலியை ஏன் நாம் கடுமையாக விமர்சிக்கின்றோம்?



தனிப்பட்ட பாதிப்போ அல்லது தனிப்பட்ட விருப்புகள் வெறுப்புகள் போன்ற சொந்த உணர்வினால் அல்ல. தனிப்பட்ட பாதிப்புகள் மற்றும் அது எதுவாக இருந்தாலும் கூட, நாம் அதை முன்னிலைப்படுத்தி கருத்துரைப்பதில்லை. மாறாக புலியின் அரசியல், மக்களை எப்படிக் கையாளுகின்றது என்பதே எமக்கு முதன்மையானதாக உள்ளது.



மக்களை எதிர்மறையில் நிறுத்தி, அவர்களுக்கு எதிராக அம்பை எய்தபடி முன்வைக்கும் புலி அரசியலை நாம் அங்கீகரிக்க முடியாது. உள்ளடகத்தில் எதிரியின் அதே மக்கள் விரோத அரசியல் தான் புலிகளின் அரசியலும் கூட. ஏகாதிபத்திய விசுவாசிகளாக, உலமயமாக்கலை தமது சொந்த பொருளாதாரக் கொள்கையாக கொண்ட, ஏகாதிபத்திய கைக்கூலிகளாக இருக்கவே புலிகள் விரும்புகின்றனர். இலங்கைப் பேரினவாத சிங்கள் அரசுக்கு கட்டுப்படாத, அவர்களைப் போன்று ஏகாதிபத்திய கைக்கூலிகளாக தாம் சுதந்திரமாக இருப்பதையே புலிகள் கோருகின்றனர். இதனால் மக்களுக்கு என்ன நன்மை? மக்கள் இருப்பதையும் இழப்பதைத் தாண்டி, எதையும் பெறப்போவதில்லை.



உண்மையில் மக்களுக்கு எதிராக இருக்கக் கூடிய சர்வதேச சமூக பொருளாதாரத்துக்குள், புலிகள் மக்களை எதிரியாக்கியபடி அதற்குள் செயற்படுகின்றனர். இந்த வகையில் அரசும் சரி, புலிகளும் சரி மக்களின் எதிரியாகவே இருக்கின்றனர். அரசு அதை சட்டப+ர்வமாக கொண்டுள்ளது. புலிகள் அதைக் கோரி நிற்கின்றனர். இதுதான் வேறுபாடு. புலிகளின் வார்த்தையில் சொன்னால், ஏகாதிபத்திய கைக்கூலியாக இருக்கும் அரசியல் 'இறைமையைக்" கோருகினறனர்.



இதைவிடுத்து மக்கள் நலன் என்று எதையும் புலிகள் முன்வைப்பதில்லை. அப்படி உண்டு என்று யாரும் எதையும் காட்டமுடியாது. அப்படியெனின் நாம் ஏன் புலிகளை முதன்மை எதிரியாக, பேரினவாத அரசுடன் ஒப்பிட்டு அல்லது சமப்படுத்தி கூறுவதில்லை.



தமிழ் மக்களின் எதிரியால், அவனின் சொந்த அடக்குமுறையால் உருவாக்கப்பட்டதே புலிகள். புலிகள் போல் சில பத்து குழுக்கள் உருவானது. எதிரி உள்ள வரை தான் புலிகள். புலிகள் போன்ற வலதுசாரிக் குழுக்களின் அரசியல் இருப்புக் கூட, எதிரியுடன் மோதிக் கொண்டிருப்பதாக காட்டுவதன் மூலம் தன்னை தக்கவைக்கின்றது. பிரதான எதிரி ஒழிக்கப்படாத வரை, புலிகள் போன்ற அரசியல் வடிவங்கள் இருந்து கொண்டே இருக்கும்.



நாங்கள் எந்தக் கருத்தையும் மக்களுடனான சமூக பொருளாதார அரசியல் உறவில் இருந்தே வரையறுக்கின்றோம். மக்களுக்கும் பேரினவாத அரசுக்கும், மக்களுக்கும் புலிக்கும் இடையில் உள்ள உறவு முற்றிலும் வேறுபட்டவை. இவை ஒன்றாக இருப்பதில்லை. பிரதான எதிரியான பேரினவாத அரசு முழு தமிழ் மக்களையும் எதிரியாகவே காண்கின்றது. புலிகள் அப்படி முழு மக்களையும் எதிரியாக காண்பதில்லை. இன முரண்பாடு சார்ந்து இதை எதிர்நிலையில் எடுத்தால், தமிழ் மக்கள் பேரினவாத அரசை ஒரு சிங்கள அரசாக தமிழருக்கு எதிரானவராகவே காண்கின்றனர். எதார்த்தம் அதை அவர்களுக்கு சதா உறுதிசெய்கின்றது. புலிகளை அப்படி தமிழனுக்கு எதிரானவராக காண்பதில்லை. புலிகள் மக்களின் ஒரு பிரிவைச் சார்ந்து நிற்கின்றது. ஒரு நடத்தை அல்லது சம்பவங்களை கையாளும் போது, தமிழ்மக்களை அணுகும் விதமே இரண்டுக்கும் வேறுபட்டது. உதாரணமாக பேசாலையில் சிங்கள இராணுவம் கண்ணை மூடிக்கொண்டு சுடவும், எரிக்கவும் முடியும். ஆனால் புலிகள் அப்படி தமிழ் மக்களை செய்யமுடியாது. அதை இரகசியமாகவே செய்ய முடியும். இதுதான் அடிப்படை வேறுபாடு. தமிழ் மக்களுடன் கொண்டுள்ள உறவு, அது கட்டமைக்கப்பட்டுள்ள அரசியல் வடிவங்கள், இதை தெளிவாகவே கோடு பிரிக்கின்றது.



சமூகங்களிடையே பிளவுகளையும், முரண்பாடுகளையும் கட்டமைத்து, மக்களை எதிரி நிலையில் நிறுத்திவிடுகின்றனர். அரசு என்பது பேரினவாத சிங்கள அரசாக இருக்கும் வரையில், புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான கூர்மையான ஏற்றத் தாழ்வான முரண்பாடுகள் கூட, முதன்மை முரண்பாடாக அந்த மக்களிடம் இருப்பதில்லை. இது ஒரு எதார்த்தம் சார்ந்த உண்மை. தனிப்பட்ட நபர்கள் இதில் இருந்து வேறுபட்டாலும், சமூகம் என்ற ரீதியில் அப்படி இருப்பதில்லை.



பேரினவாத அரசு ஏகாதிபத்திபத்தின் கைக்கூலிகளாக இருக்கும் நிலையில், அதை மூடிமறைத்து மக்களை ஏமாற்றவே இனவாதக் கூதலில் தன்னை தக்கவைக்கின்றது. இனங்களை பிரித்து ஒடுக்கியதன் மூலம், தனது சொந்த அதிகாரத்தை சிங்கள் பேரினவாத அரசு தக்கவைக்கின்றது. இதனால் தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டனர். இங்கு தமிழன் என்பதால் அவன் ஒடுக்கப்பட்டான். மற்றைய சிறுபான்மை இனங்களுடன் சலுகைக்கு உட்பட்ட இரட்டை உறவைப் பேணியபடி பேரினவாத ஒடுக்குமுறை தமிழ் மக்கள் மேல் பாய்ந்தது. சிங்கள மக்களுடன் அதிகாரத்துக்கு போட்டியிடும் தமிழன் மீதான, இந்த திடட்மிட்ட அதியுயர் ஒடுக்குமுறை, எந்த விதத்திலும் இன்று மாற்றம் கண்டுவிடவில்லை. புலிகளின் பாசிசம் இதை மாற்றிவிடவில்லை. சிலருக்கு இந்த கசப்பான உண்மை, தமது அரசியல் பிழைப்புக்கு அருவருப்பாக இருப்பதை கண்டு கண்ணை மூடிக் கொள்கின்றனர்.



இந்த இனவாத அரசுக்கு எதிரான போராட்டத்தை நாம் முன்னெடுக்கவும், அதேநேரம் ஜனநாயக கோரிக்கைகளுக்கு உட்பட்ட எல்லையில் அதை ஆதரிக்கவும் வேண்டியது, ஒரு போராட்டத்தின் அடிப்படையான உள்ளடக்கமாகும். இந்த வகையில் இனவாத அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தும் ஆதரித்தும் நடத்தும் போராட்டம், எதிரியை மட்டும் குறிவைக்கின்றது. இது அந்த இனத்தைச் சேர்ந்த மக்களை அல்ல. எதிரியான பேரினவாதி, யாருக்கு எதிராக இனவாதத்தைக் கையாளுகின்றானோ, அவனுக்கு எதிராக அந்த மக்கள் தவிர்க்க முடியாமல் போராட நிர்ப்பந்திக்கின்றனர். இது புலிகளின் சுயநலப் போராட்டத்தை குறிக்கவில்லை. மக்கள் தமது சொந்த அதிகாரத்தைக் கோரிய போராட்டத்தையே குறிக்கின்றது. மக்களின் தேசியம் என்பது, அந்த மக்களின் சொந்த பொருளாதார வாழ்வியல் கோரிக்கையை உள்ளடக்கியதே. புலிகள் விசுவாசமாக முன்னெடுக்கும் ஏகாதிபத்திய உலகமயமாதல் பொருளாதாரத்தை மக்கள் நிராகரிக்கின்றனர்.



பேரினவாத அரசுக்கு எதிராக போராடிய குழுக்கள் மக்கள் பொருளாதாரத்தை முன்வைக்கவில்லை. இப்படி முன்வைத்தவர்கள், முன்வைக்க முனைந்தவர்கள், 1980 க்கு பிந்திய பத்து வருடத்தில் முதலில் பலியானவர்களாவர். உள் இயக்க படுகொலைகள், சில நூறு பேர் இப்படித்தான் காவுகொள்ளப்பட்டனர். இதுவே உள்ளியக்க வெளியியக்க கொலையான போது, இதுவே ஆயிரக்கணக்காக மாறியது. அதிக கொலைகளை அன்று புளாட்டே செய்தது. பின்னால் அதை புலிகள் குத்தகைக்கு எடுத்து, எகப்பிரதிநிதிகளாகி கொன்று குவித்தனர், குவிக்கின்றனர்.



இப்படி தொடங்கிய போராட்டம் படிப்படியாக, மொத்த தமிழ் மக்களுக்கு எதிராகவே வளர்ச்சியுற்றது. மனிதம் சார்ந்த கொள்கைகளை எல்லாம் இழந்து, வெறும் கொள்ளைக்கார இயக்கமாக கொலைகார இயக்கமாக மாறியது. மக்களின் வாழ்வு சாHந்த சமூக பொருளாதார அரசியல் உறவுடன் மக்களை இவர்கள் அணுகுவதில்லை. மக்களை வெறுத்து ஒடுக்கினர். மக்களையே எதிரியாக கண்டனர். மக்கள் வேறு, இயக்கம் வேறு என்ற பிளவு ஆழமாகி அகன்றே சென்றது, செல்லுகின்றது.



இது இயல்பில் மாபியாத்தனத்தையும் புலித் தேசிய பாசிசத்தையும் அடிப்படையாக கொண்டு, சமூகத்தையே கட்டுப்படுத்தி கொள்ளையிடும் ஒரு பொறுக்கிகளின் கும்பலாக சீரழிந்துள்ளது. இருந்த போதும் கூட, பேரினவாத நிலைக்கு புலிகளை நாம் சமப்படுத்த முடியாது. பேரினவாத அரசு, தமிழ் மக்கள் என்ற ஒரே காரணத்தினால் அவர்களை ஒடுக்குகின்றது. தண்டனைகளையும், சூறையாடல்களையும் விரிவுபடுத்துகின்றது. பாசிசத்தின் எல்லா வக்கிரத்தையும், சூழ்ச்சியையும் அரசு என்ற ஒரு உயர் வடிவத்தில் நின்று ஒரு இனத்துக்கு எதிராக செய்கின்றது. தமிழன் என்ற ஒரு காரணம் கொலை செய்யவும், கற்பழிக்கவும், கொள்ளையடிக்கவும், சிறையில் அடைக்கவும் போதுமான காரணமாக உள்ளது. தமிழ்மக்களின் ஒரு பொது எதிரியாகவே, எதார்த்தத்தில் தனது சொந்த செயல் மூலம் சிங்கள அரசு நிறுவுகின்றான். இனவாதக் கட்டமைப்பை கைவிடாத வரை, அவன் தமிழ் மக்களின் சிறப்பு எதிரியாகவே எதார்த்தத்தில் உள்ளான்.



ஆனால் புலிகள் பாசிட்டுகளாக இருப்பதால், மாபியக் கும்பலாக செய்ல்படுவதால், இயல்பில் லும்பன்களாக இருந்த போதும் கூட, அவர்கள் தமிழ்மக்களின் முதல் எதிரியாக இருப்பதில்லை. புலிகள் தமிழர்கள் என்பதால், தமக்கு அடங்கி ஒடுங்கி இருக்கவும், தமது சுயநல கொள்கைக்கு இணங்கிப் போகவும், மக்கள் விரோத செயலுக்கு எதிர்பற்ற விட்டில் பூச்சியாக இருப்பதையும் நடைமுறையில் புலிகளின் பாசிசம் கோருகின்றது. தனக்கு எதிரானதாக அவர்கள் கருதுபவர்களை எதிரியாகவே கருதி, பொறுக்கியெடுத்து கொல்லவும், கைது செய்யவும், சித்திரவதை செய்வது முதல் பலவிதமான வன்முறைகளை தொடர்ச்சியாக அனுதினமும் கையாளுகின்றனர். இது பண்பியல் ரீதியாக பேரினவாதத்தின் செயலில் இருந்து வேறுபட்டது.



பேரினவாதத்தின் இருப்பு தமிழ் மக்களின் மொத்த எதிர்ப்பை புலிகள் பெறுவதை தடுத்து நிறுத்துகின்றது. ஒரு பகுதி மக்கள் வெறுக்கத்தக்க வகையில், புலிகள் அன்றாடம் சீராழிந்த வண்ணம் உன்ளனர். மேலும் ஒவ்வொரு நாளும் அவர்களின் சொந்த மக்கள் விரோத நடிவடிக்கைகள் மூலம், தமிழ் மக்களின் எதிரியாக தம்மை மாற்றிவருகின்றனர். இது அனுதினமும் நடந்த வண்ணம் உள்ளது.



இதில் இருந்து தப்பிப்பிழைக்க தேசியத்தை ஊனமாக்கிய பின் அதை முன்னிறுத்துகின்றனர். அவர்கள் கூறும் தேசியம் பசுத் தோல் போர்த்திய புலித்தேசியமாக இருக்கின்றது. மக்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த தேசியத்தை அவர்கள் அழித்த போதும், தேசியம் பற்றி பொதுவான சூக்குமான வரையறையை அவர்கள் இன்னமும் எதிரிக்கு எதிராக நிறுத்தி வைத்துள்ளனர். இந்த மக்கள் விரோத சூக்குமத்தை அரசியல் ரீதியாக புரிந்தவர்கள் நிலை வேறு, ஆனால் மக்களின் நிலை வேறானதாகவே உள்ளது. உண்மையில் புலியெதிர்ப்புக் கும்பல் ஜனநாயகத்தின் பெயரில் தேசியத்தை எதிராக நிறுத்தி அதை எதிர்க்க, தேசியத்தின் சூக்குமத் தன்மை புலிக்கு சார்பாக மாறுகின்றது. புலிகளின் தேசிய விரோதப் போக்கு மக்கள் முன் அம்பலமாவது தடுக்கப்படுகின்றது.



இன முரண்பாடு இலங்கை சமூகத்தின் முதன்மை முரண்பாடாக உள்ள நிலையில், மக்கள் முன் பிரதான முதன்மை எதிரியாக அரசாகவே இருக்கின்றது. இரண்டாவது எதிரியாக புலிகள் உள்ளனர். இதை படிப்படியாக சிதைத்து வரும் புலிகளின் சொந்த நடத்தைகள், நடவடிக்கைகள், எதார்தத்தின் அருகருகே நடக்கத்தான் செய்கின்றது.



தமிழ் மக்களின் நண்பனாக இனியும் புலிகள் இல்லை என்ற உண்மை, அவர்கள் நட்பு சக்திகள் என்ற அரசியல் எல்லையை இல்லாததாக்கிவிட்டது. நட்பு சக்திகள் என்பது குறைந்தபட்சம் தேசியத்தின் முதலாளித்துவக் கோரிக்கைக்கு உள்ளடக்கியதாகும். இந்த வகையில் போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில், புலிகளின் அரசியல் பொருளாதார தேசிய உள்ளடக்கம் எதையும் கொண்டிருப்பதில்லை. இதனால் நாம் அவர்களை கடுமையாக விமர்சிக்கின்றோம். விமர்சிப்பதன் மூலம் சரியான போராட்டத்தைக் கோருகின்றோம்.



புலிகள் பாசிட்டுகளே என்ற கருத்தின் மீது



புலிகளின் பாசிசம் குறித்த கருத்துகள், மிதவாத புலிகளுக்கு அதிர்ச்சியூட்டுவனவாக உள்ளது. இதையே புலியெதிர்ப்பு அணியும் பயன்படுத்துவதாக எம்மீது குற்றம் சாட்டுகின்றனர். உண்மை என்ன? இது போன்ற பல சொற்களை நாம் அங்கிருந்து எடுக்கவில்லை. நாம் அரசியல் ரீதியாக சொன்னவற்றில் இருந்து தான் அவர்கள் எடுக்கின்றனர். இது போல் புலியெதிர்ப்பு அணி மீதான எமது சொல்லாடல்களை புலிகளும் எடுக்கின்றனர். நாம் செல்லாடல்களை அரசியல் ரீதியாக பயன்படுத்த, அதை சம்மந்தப்பட்ட இரு தரப்பும் திரித்து தமது குறுகிய நோக்கில் கொச்சையாகவே பயன்படுத்துகின்றனர். இப்படி பல நூறு அரசியல் பதங்கள், எமது கடந்த கால அரசியல் எழுத்துகளின் மீது திருடப்பட்டு திரிக்கப்பட்டுள்ளது.



புலிகள் பாசிட்டுகள் என்பதை விளக்கி எழுதிய எனது கட்டுரை, விரிவாக ஆழமாகவும் படிக்க முடியும். 'இரக்கமில்லாமல் நடத்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும். (இக் கட்டுரை புலிகளின் வதைமுகாமில் நான் சந்தித்த அனுபவங்களை அடிப்படையாக கொண்டு எழுதிய நூலில் ஒரு பகுதியே. இந்த நூல் இன்னமும் வெளிவரவில்லை.)



பாசிசம் குறித்த அடிப்படை கருத்தைக் கண்டு பலர் புலம்புகின்றனர். தமது புலியாதரவு பாசிச வேஷத்தை நியாயப்படுத்த அங்குமிங்கும் புரண்டெழுகின்றனர். புலிப்பினாமிகளாகவே குலைத்தபடி, அறிவுஜீவிகளின் மகுடத்தை சூட்டிக் கொள்ளவும் ஆசைப்படுகின்றனர். தம்மைப் போன்ற இழிந்துகெட்ட சந்தர்ப்பவாதிகளின் பாசிச முகத்தை தோலுரிக்கும் போது, இப்படிக் கூறலாமா என்று அங்கலாய்கின்றனர்.



உதாரணமாக டி.ஜே.தமிழன் தனது கட்டுரை ஒன்றில் எனது பெயரைக் குறிப்பிடாத எனக்கு எதிராக எழுதிய கட்டுரையில், பாசிட் சிவத்தம்பியைப் பற்றி 'தனிமனிதராய் மட்டும் இருந்து, வெளிநாடு வந்து சுமுகமாய் வாழ்வதற்கு வசதி இருந்தும் (அல்லது நமது நடுநிலையாளர்களின் வாதத்தின்படி சொல்வதாயிருந்தால், வன்னியில் புலித்தலைமை பொங்கிப்படைக்க வெட்டி ஏப்பமிட்டு எழுதிக்குவிக்க வசதியிருந்தும்) தான் விரைவில் கொல்லப்பட அனைத்துச் சாத்தியமிருக்கும் என்றும் தெரிந்தும் ஒரு மனுசன் கொழுப்பில் இருந்திருக்கின்றான் என்றால் அவனின் மரணத்தை மரியாதை செய்யவேண்டும் என்ற அவசியமில்லாமல் இருந்தாற்கூட கேலிக்குரியதாக்கச் செய்யத்தேவையில்லை. அதே போல ஒரு மார்க்சியவாதி, சிவத்தம்பி பாஸிஸ்ட் என்று தொடங்கி ஒரு கட்டுரை எழுத சிரிப்போடு அரைகுறையாய் வாசித்துவிட்டு விலகிவந்தாயிற்று. (அடுத்ததாய் பாஸிஸ்ட் பட்டியலில் சிவசேகரம் வருவதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன). சிவத்தம்பியோடு, அவரது இலக்கிய அரசியல் விமர்சனப்பார்வையுடன் எனக்கு மிகுந்த விமர்சனமுண்டு. ஆனால் இன்றும் கொழும்பில் ஒரு இடர்பாடுடைய வீட்டில், அரசாங்க ஓய்வூதியம் எதுவுமின்றி தனது நம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதரை பாஸிஸ்ட் என்று பொத்தாம் பொதுவில் கூறினால் நமது மனித விழுமியங்களின் அளவீடுகள்தான் என்ன?" என்று டி..ஜே.தமிழன் எழுதுகின்றார்.



டி.ஜே.தமிழனின் அரசியல் நோக்கம் என்ன? புலிகளுக்கு சார்பாக விளக்கு பிடிக்கும் பந்சோந்தி பாசிட்டுகளை, இது போன்ற மக்கள் விரோத புலி சார்பு அரசியல் பேர்வழிகளை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்த வேண்டாம் என்பதேயாகும். இதனால் புலம்பல் ஓவென்று வருகின்றது. அவருக்கு இதைப் பார்த்து சிரிப்பு வருகின்றதாம்! பாசிசத்தின் கொடூரங்களை மனித இனத்துக்கு எதிராக நிகழ்த்துவதைக் கண்டுகொள்ளாது, அதை அங்கீகரிக்க கோரும் புலி ஆதரவுப் பினாமிகள் சிரிக்காமல் என்னதான் செய்வார்கள். மனிதனை எதிரியைக் கொண்டு வலிந்து கொடுமைப்படுத்துவது, எதிரி செய்ததாக காட்டும் கொடுமைகளைச் திட்டமிட்டு செய்வது பாசிசத்தின் குணாம்சமாகும்! கொடுமை சார்ந்த மக்களின் அனுபவங்கள், போராட்டத்தையே கூர்மையாக்கும் என்ற புலித்தத்துவமே இங்கு சிரிப்பாக அலட்சியமாக மாறுகின்றது.



டி.ஜே.தமிழன் சிவத்தம்பியை விமர்சிப்பதைக் கண்டு 'நமது மனித விழுமியங்களின் அளவீடுகள்தான் என்ன?" என்கின்றார். சரி ஐயா உங்கள் மனித விழுமிய அளவீடுகளைக் கூறுங்களேன். மனித விழுமியங்கள் என்றால் என்ன என்று! புலி ஆதரவு தெரிவிக்கும் உங்களுக்கு ஒரு மனித விழுமியம் உண்டு என்பதே உலகில் மிகச் சிறந்த நகைச்சுவை தான். மனித விழுமியங்கள் எதுவுமற்ற புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நீங்கள், சிவத்தம்பியின் பெயரால் நடிக்கவேண்டியதில்லை. அவரின் மனித விரோத கோட்பாடு மற்றும் அவரின் மனித விரோத நடைமுறைக்கு எதிராக நாம் 1980 களிலேயே அவரை எதிர்த்துப் போராடியவர்கள். அவரின் பாசிச முகத்தை அன்றே நாம் இனம் கண்டவர்கள். விரையில் அவர் பற்றிய ஒரு கட்டுரை தனியாக எழுதும் தயாரிப்பில் உள்ளோம். முன்பு அவரின் பாசிசத்தை அம்பலப்படுத்தி எழுதிய சில கட்டுரைகளை பார்வைக்கு தருகின்றேன். இன்னும் பல உண்டு.



புலிகள் சுயவிமர்சனம் செய்துள்ளனராம் விமர்சனம் செய்ய கருத்துச் சுதந்திரம் வழங்கியுள்ளனராம் , பச்சோந்தி சிவத்தம்பி கூறுகிறார் கேட்டுப்பாருங்கள்



உள்ளடகத்தை கேள்விக்கு உள்ளாக்கப்படும் போது மறுக்கப்படும் கருத்து சுதந்திரம் இராணுவ மூல உபாயத்தில் ஐக்கியமும், அரசியலில் முரண்பாடும்.



தேசியம் புறநிலை சாராத அகநிலை சார்ந்த, வர்க்கம் சாராத நடுநிலை கற்பனைப் பெருளாம்! -இது ஓர் உயிர்ப்பின் வாதம்



ஒடுக்குமுறையை நேரில் அனுபவிப்பவனே ஒடுக்குமுறையை செய்கின்ற போது அதன் காரணத்தை ஆராய்ந்து விளக்காத படைப்புகள் எதைத் தான் சாதிக்கின்றது.



ஏகாதிபத்திய பயங்கரவாதமே, அனைத்து பயங்கரவாதத்துக்குமான அச்சாணி



டி.ஜே.தமிழன் கூறகின்றார் 'தான் விரைவில் கொல்லப்பட அனைத்துச் சாத்தியமிருக்கும் என்றும் தெரிந்தும் ஒரு மனுசன் கொழுப்பில் இருந்திருக்கின்றான் என்றால் அவனின் மரணத்தை மரியாதை செய்யவேண்டும் என்ற அவசியமில்லாமல் இருந்தாற்கூட கேலிக்குரியதாக்கச் செய்யத்தேவையில்லை." தனிமனிதர்களின் மரணங்களை யாரும் கேலிசெய்வதில்லை. தனிமனித மரணங்களின் மேல் நீங்கள் ஆதாரிபவர்கள் செய்வது போல் நாங்கள் அரசியல் நடத்தியது கிடையாது. மரணங்களின் மேல், அந்த பிணங்களின் மேல் நாங்கள் பணம் பண்ணியதும் கிடையாது. இந்த அளவுக்கு பிணங்களை வைத்து இழிவாக நடத்தும் அரசியலின் ஆதாரவளராக இருந்தபடி, அதை துளியளவும் விமர்சிக்காது, அதற்கு பக்கவாத்தியம் வாசிக்கும் அரசியல் நடுநிலை செம்மறிகள் தான் உங்களைப் போன்றவர்கள். இதனால் டி..ஜே.தமிழன் போன்றவர்கள் துடித்த பதைத்து பாசிசத்தை வக்களத்துவாங்க விவாதிக்க முற்படுகின்றீர்கள்.



மரணங்கள் மேலான போலி ஒப்பாரிகள், அந்த துன்பத்தின் மீது அரசியல் விபச்சாரம் செய்வதை நாம் அடியோடு வெறுக்கின்றோம். இந்த இழிந்த விபச்சார பண்பாட்டினை பின்பற்றறும் அரசியலை வேரறுக்க போராடுபர்கள் நாங்கள் மட்டும் தான். மனிதனின் சமூக பாத்திரத்தையே மரணத்தின் மேலும் நாம் இனம் கணமுற்படுகின்றோம். 'தான் விரைவில் கொல்லப்பட அனைத்துச் சாத்தியமிருக்கும் என்றும் தெரிந்தும் ஒரு மனுசன் கொழுப்பில் இருந்திருக்கின்றான்" என்ற ஒருவனை நாங்கள் விமர்சிப்பதில்லை. நாங்கள் யாரை விமர்சிக்கின்றோம். கொல்லப்படுகின்ற அதாவது மரணங்களுக்கு எல்லாம் பச்சையாக பாசிச கொள்கை விளக்கம் எழுதிய காட்டமிராண்டி புத்திஜீவிகளை, தமது சொந்த பாசிச அரிப்புகளை பச்சையாக பினாற்றும் கொலைகாரன் சிவராம், சிவத்தம்பி, சோதிலிங்கம் போன்ற பச்சோந்திகளையே நாம் விமர்சிக்கின்றோம். மாறாக புலிகளுக்கு பயந்தோ, அல்லது அரசுக்கு பயந்தோ வாயை மூடிக் கொண்டவர்கள் மீது நாம் கருத்துரைக்கவில்லை. நேர்மையாக அனுக முற்படும் யாரையும் நாம் விமர்சிக்கவில்லை.



'அரசாங்க ஓய்வூதியம் எதுவுமின்றி தனது நம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதரை பாஸிஸ்ட் என்று பொத்தாம் பொதுவில் கூறினால்.." என்ன மனிதாபிமானம். புல்லரிக்கின்றது. அரசு வழங்கிய 50000 ரூபா இலக்கிய பரிசையே வாங்கிய மனம் கூசாத பொறுக்கி தான் சிவத்தம்பி. இலங்கை அமெரிக்க தூதரகத்தில் ஆய்வு என்ற பெயரில் சிவராமுடன் சிவத்தம்பியும் நக்கியது எதை?



டி..ஜே.தமிழன் ஐயா அவர்களே, துரோகி என்று முத்திரை குத்திய நிலையில், சொந்த மண்ணில் வாழவழியற்ற கொழும்பு போன்ற பிரதேசத்தை நோக்கி ஓடிவருபவர்கள் சந்திக்கும் வேதனைகள் பல ஆயிரம். தங்கி வாழ இடமின்றி உயிருக்கு பயந்து, ஒரு நேர சோத்துக்கு வழியின்றி ஆயிரக்கணக்கானவர்கள் இழிந்து வாழ்கின்றனரே, அவர்களைப்பற்றி சிந்தியுங்கள். இதை எதிரி சாதகமாக பயன்படுத்தி அணி திரட்டுகின்றானே அதை சிந்தியுங்கள்! அரசுடனும், புலியுடனும், ஏகாதிபத்தியத்துடனும் கொஞ்சி விளையாடும் சிவத்தம்பிக்காக எழுத்தை நக்காதீர்கள்.



சமகால அரசியல் மீது நேர்மையாக கருத்துச் சொல்ல மறுத்தவர்கள் மீதே நாம் விமர்சிக்கின்றோம். நேர்மையாக கருத்துக் கூறுவதால் மரணம் என்று தெரிந்தால், நேர்மையாக கருத்து கூறி மடிவதே மேல். அதையே நாங்கள் போற்றுவோம். அங்கு இழிவாடவோ, கேலிக்குரியதெனவோ எதுவும் கிடையாது. மக்களுக்காக நேர்மையாக போராடி ஒரு மனிதன், பாசிச மாமனிதன் பட்டமின்றி மடிந்து போவான். ஒரு மாமனிதனை விட, உண்மையான மனிதன் காலத்தால் அந்த மக்களிடம் வாழ்வான்.



காலம் இன்றைய பாசிச 'மாமனிதர்களை" அங்கீகரிக்கப் போவதில்லை. பாசிச பிரமைகள் எல்லாம் ஒவ்வொன்றாக, தும்புதும்பாக சிதைந்து சின்னபின்னமாகி வருகின்றது. இதை புலிகளே தமக்குத் தாமே வலிந்து ஏற்படுத்தி வருகின்றனர். இதை நாங்கள் செய்யவேண்டிய அவசியமின்றி அவர்கள் தாங்களாகவே செய்து முடிக்கின்றனர். இதனால் புலியெதிர்ப்பு அணி அதில் பிழைப்பதை கடுமையாக நாம் ஈவிரக்கமின்றி விமர்சிக்கத் தொடங்கியுள்ளோம்



'தனிமனிதராய் மட்டும் இருந்து, வெளிநாடு வந்து சுமுகமாய் வாழ்வதற்கு வசதி இருந்தும் (அல்லது நமது நடுநிலையாளர்களின் வாதத்தின்படி சொல்வதாயிருந்தால், வன்னியில் புலித்தலைமை பொங்கிப்படைக்க வெட்டி ஏப்பமிட்டு எழுதிக்குவிக்க வசதியிருந்தும்) தான் விரைவில் கொல்லப்பட அனைத்துச் சாத்தியமிருக்கும் என்றும் தெரிந்தும்" ஐயா புலிக்காக வன்னியில் குடிபெயரமுடியாது. அங்கு, அங்குமிங்கும் அலைபாய்ந்த அரசியல் விபச்சாரத்தை செய்யமுடியாது. திறந்து விட்ட ஒட்டையால் ஊளையிடவே முடியும் என்பதும், இவர்களுக்கு நன்கு தெரியும்.



இதைவிட ஓணான் போல் வேலிக்கு ஏற்ப நிறம்மாறி வாழும் வாழ்க்கையே இவர்களின் இரத்தமும் சதையும் கொண்ட அரசியல் பிழைப்பாகும். கிடுகுவேலி யாழ் சமூகம் பற்றி எழுதிய சிவத்தம்பி, வேலிமேல் ஏறி அங்குமிங்கும் எட்டிப்பார்த்து வாழ்வதையே வாழ்க்கையாக்கியவர். வேலி ஒணானாக புலிகளின் பாசிச முகம் காட்ட முன்னமே, இப்படித்தான் விபச்சாரம் செய்தவர்கள் இவர்கள், எப்படித் தான் வன்னியில் வாழமுடியும்.



புலம் பெயர் நாட்டில் என்றால் இலகுவாக வந்துவிடமுடியாதது. வந்துவிட்டாலும் என்னத்தை செய்வார்கள். அங்குமிங்கும் அரசியல் பிழைப்பு வேஷம் தான் செய்வார்கள். டி..ஜே.தமிழன் கூறுகின்றார் 'அவரது இலக்கிய அரசியல் விமர்சனப்பார்வையுடன் எனக்கு மிகுந்த விமர்சனமுண்டு" அட என்ன பக்குவமான பொடிவைப்பு. இப்படிக் கூறுவதை பலர் செய்கின்றனர். எதுக்கும் இப்படிச் சொல்லி வைப்பது, தமக்கு பின்னால் உதவும் என்ற நம்பிக்கை. இதேபோல் பலர் புலியின் மேல் விமர்சனம் உண்டு என்பார்கள்? அனைத்துடனும் உடன்பாடில்லை என்பார்கள். இப்படி பலரை நீஙகள் இன்று சதா வாழ்க்கையில் பல தளத்தில் சந்திக்கின்றோம்.



இது கூட பாசிசத்தின் சொந்த நெருக்கடியின் போது வளைந்து நெளிந்த வக்கிரம் தான். கடவுள் இல்லையென்றாலும் கும்பிட்டுவிட்டால் பிரச்சனையில்லை என்று கருதும் பாசிச யாழ்ப்பாணியமல்லவா எமது தேசியம்.



டி..ஜே.தமிழனே உங்கள் விமர்சனம் என்ன? நீங்கள் யாருடைய காதுக்கும் ப+ வைக்க முனையாதீர்கள். விமர்சனம் உண்டு என்றால், அதைச் சொல்லுங்கள். புலிகளின் நடவடிக்கைகளில் உடன்பாடுகளில்லை என்றால், அது என்ன என்று சொல்லுங்கள். உடன்பாடானவை என்னவென்று சொல்லுங்கள். அது எப்படி மக்களுக்கு உதவுகின்றது, உதவவில்லை என்று நேர்மையாக சொல்லுங்கள். மோசடிக்காரர் போல் மக்களின் தலையில் அம்மியை வைத்து அரைக்க வேண்டாம். பாசிசத்தை ஆதரித்தபடி, இதை நீங்கள் நேர்மையாக ஒரு நாளும் செய்யப் போவதில்லை. இதுதான் இந்த மிதவாதிகளின் மேதமை பொருந்திய அரசியல் மகுடித்தனமாகும். உண்மையில் இவர்கள் செய்வது மிதவாத விமர்சன வேஷம் போட்டு, அதாவது புலியெதிர்ப்பு ஜனநாயகவாதிகள் போல் தம்மை நம்பவைத்து, பாசிசத்தை முகத்தில் அப்பி அனுப்பிவிடும் நரித்தனம் இது. பொதுவான அரசியல் விவாதத் தளத்தில் மற்றொரு போக்கு உண்டு.



புலிகள் தவறு செய்கின்றார்கள் தான், ஆனால் அவர்களை விட்டால் வேறு யார்?



தவிர்க்க முடியமாலே நாம் புலிகளை ஆதரிக்கின்றோம் என்று கூறிக்கொள்ளும் கூட்டம் பெருகி வருகின்றது. புலிகள் விரிந்த தளத்தில் அம்பலமாகி வருகின்ற நிலையில், அதைக் கண்டு அங்கலாய்க்கும் கூட்டமே இப்படி உளறுவது நிகழ்கின்றது. புலிகள் தவறு செய்கின்றார்கள் தான், ஆனால் அவர்களை விட்டால் தமிழ் மக்களுக்கு வேறு யார் உள்ளனர்? என்கின்றனர். புலிகளால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாற்று இயக்க உறுப்பினர்கள் முதல், தம்மை படித்த அறிவுஜீவிகளாக காட்டிக் கொள்ளும் பலரும் இப்படி கூறுவது நிகழ்கின்றது.



உண்மையில் இப்படிக் கூறிக் கொள்ளும் இந்த பிரிவும் பாசிட்டாகவே இருந்தபடி தான், இதைத் தர்க்கிக்கின்றது. பாசிசத்தின் நெருக்கடிகள் இயல்பாகவே பாசிசத்தின் கோர முகங்கள் எதையும் நியாப்படுத்த முடியாத வகையில், தன்னைத் தான் அம்பலமாக்கி வருகின்றது. ஒருபுறம் இந்த பாசிசத்தை தடுத்து நிறுத்த முடியாத ஒட்டுண்ணித்தனம். இந்த பாசிச ஒட்டுண்ணித் தனத்தை சிதைவின்றி பாதுகாக்கவே, பாசிசம் தன்னை இப்படி கூறி தக்கவைக்க முனைகின்றது.



இவர்கள் விவாதிக்க முற்பட்டவுடன் புலிகளில் தவறு உண்டு என்பார்கள், ஆனால் அது என்னவென்று விமர்சிக்க மாட்டார்கள். அதை என்னவென்று கூற மாட்டார்கள். விவாதிப்பவனின் கருத்தையே அப்படியே ஒத்துக் கொள்வார்கள். இதை அவர்கள் ஓத்தூதி விமர்சித்தாலும் தனிப்பட்ட நபருடன் மட்டும் கமுக்கமாகவே அதை முடித்துக் கொள்வார்கள். பகிரங்கமான தளத்தில், நாலு பேருக்கு முன்னால் இந்த விமர்சனத்தை செய்ய மாட்டார்கள். உண்மையில் புலிகளின் தவறை ஒரு கருத்தாகவே அவர்கள் கொண்டிருப்பதில்லை. மாறாக நிலைமைக்கு ஏற்ப பாசிசத்தை நியாயப்படுத்தும் சந்தர்ப்பவாதிகளாகவே இவர்கள் நடிக்கின்றனர்.



புலிகள் பணம் சேகரிக்கும் போதும் இதையே செய்கின்றனர். பணம் சேகரிப்பவன் புலிகளைத் திட்டினாலும் பரவாயில்லை, பணத்தைத் தந்தால் சரி என்று கூறி கமுக்கமாவே பணம் அறவிடும் காரியவாத உள்ளடகத்தில் இவை அனைத்தும் புரையோடிப் போய் வெளிவருகின்றது.



சந்தர்ப்பவாதத்துடன் கூடிய காரியவாதம், சொந்த சுயநலம் சார்ந்த இழிந்த இழிவான உள்ளடகத்தில் இந்தத் தர்க்கம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் என்ற போலிப் புலம்பல்கள். தமிழனுக்கான விடிவு பாசிச புலியை விட்டால் வேறு மாற்று எதுவும் இல்லை என்பார்கள்.



மாற்று எதையும் அனுமதிக்காத பாசிசம் இப்படி அனுதினமும் சதா கூறிக்கொள்கின்றது. தவறையே தேசியமாக்கி அதுவே புளுத்துப் பெருகுகின்றது. சொந்தத் தவறை நிறுத்தவும், மாற்றை அங்கீகரிக்கவும் மறுக்கின்ற பாசிசத்தையே கொடிகட்டிப் பறக்க விடும் வக்கிரமே வண்ணம் வண்ணமாக அரங்கேறிய வண்ணம் உள்ளது. மக்களை நேசிக்கவும், அவர்களை அனுசரித்து அவர்களுடன் இணங்கிச் செல்லவும் மறுக்கின்ற குரங்கு புத்தியுடன், பாசிசம் குதிராட்டம் போடுகின்றது. அதை சுற்றி நின்றி கைதட்டி பாராட்டி நிற்கும் கும்பல், இப்படி புலம்புவது, புலம்ப வைப்பது தமிழ் மக்களின் விடிவுக்காக அல்ல. அதன் அழிவுக்காகவே தனது கோர முகத்தை அசிங்கமாக்கி கொண்டிருக்கின்றது. நாம் அழிந்தால் இலங்கைத் தீவையே அழித்துவிடுவோம் என்பதும், மறுபக்கத்தில் இதன் எதிர்வினையில் சொல்லாமல் உள்ள செய்தி உலகின் வேறு சில புள்ளிகளையும் அழித்துவிடுவோம் என்பதே. இப்படி கூறுவதே மனித நேசமற்ற இழிந்த பாசிச கண்ணோட்டமாகும். மீட்சிக்கான மாற்றுப் பாதையை வெற்றிகரமாக செய்யக் கூடிய வழிகள் அகன்று கிடக்கின்றது. இந்த உண்மையைக் கண்டுகொண்டு பார்க்க மறுக்கின்ற, வலது பாசிச மக்கள் விரோதக் கண்ணோட்டமே இப்படி வக்கிரமாக சிந்திக்கவும் சொல்லவும் தூண்டுகின்றது.



தமிழ் மக்களின் உண்மையான விடிவை நோக்கி, நாம் உண்மையாகவே செயற்பட முனைந்தால், எதிரியை தனிமைப்படுத்திய மீட்சிக்கான மாற்று வழி சாத்தியமானது. இன்றைய நிலையிலும், இதில் இருந்து நிச்சயமாக மீள முடியும். முதலில் சொந்த சுயவிமர்சனமே அடிப்படையான நிபந்தனையாகும். குறைந்தபட்சம் சிலவற்றை நிறைவு செய்வதன் மூலம், மக்களை நேசிக்கக் கற்றுக் கொள்வது அடிப்படையான கல்வியாகும். இதன் மூலம் புலிகள் இயக்கம் பாதுகாக்கப்படவும், புலித்தலைவர்கள் தமது எதிர்கால இருப்பை உறுதி செய்யவும் முடியும். ஆகவே முதலில் அ, ஆ னாவில் இருந்து மக்களை நேசிப்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.



1.முதலில் மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருத்தல் அடிப்படையான நிபந்தனையாகும்.



2.பாசிசத்தின் அனைத்து மக்கள் விரோத செயலை உடன் நிறுத்துவது நிபந்தனையற்ற கடமையாகும்.



3.பாசிசத்தின் அனைத்துக் கூறுகளையும் நிபந்தனையின்றி அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வது அவசியமானது.



4.இதன் மூலம் புலிகள் தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளல் அல்லது இதற்குள் புதிய தலைமை ஒன்று இடது தன்மை கொண்டதாக உருவாகுதல். இதனடிப்படையில் விமர்சனங்களை செய்தல்.



5.இதற்கு வெளியில் தமிழ்மக்களின் உண்மையான நலன்களுடன் சுயாதீனமாக அணிதிரளுதல்.



இந்த அடிப்படையில், இந்த நோக்கில், மக்கள் நலன் கருதி நிகழ்கின்ற சம்பவங்கள் அனைத்தையும், அரசியல் ரீதியாக விமர்சிப்பதன் மூலம் நாம் சரியாக சமூகத்தை வழிநடத்த முடியும். இந்த அரசியல் பணி என்பது மக்களுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் இருத்தலில் மட்டும் தங்கியுள்ளது. மக்களுக்கு மறுக்கும் தேசியத்தையம், ஜனநாயகத்தையும் உத்தரவாதப்படுத்தும் வகையில், அனைத்து திரிபுகளையும் இனம் காட்டி அம்பலப்படுத்துவதன் மூலம் மட்டும் தான், பேரினவாத ஏகாதிபத்திய கூட்டுச் சதி வலைகளை தகர்க்க முடியும். அதன் எடுபிடி மக்கள் விரோத துரோக அரசியலை இனம்காட்டி அவர்களை தனிமைப்படுத்தி அழிக்கமுடியும். புலிகளின் தவறான ஏகாதிபத்திய வலது பாசிச கண்ணோட்டத்தை மாற்றவும், தகர்க்கவும் முடியும். இதற்கு வெளியில் தமிழ் மக்களுக்கு விடிவு என்பது எந்த விதத்திலும் சாத்தியமற்றது.



Friday, June 23, 2006

இலவச – கவர்ச்சி அரசியலின் விபரீதம்

இலவச – கவர்ச்சி அரசியலின் விபரீதம்


ந்நிய ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகளின் மறுகாலனியாதிக்கமே நாட்டின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளைத் தீர்மானிப்பது என்றாகி விட்டது. அதன் விளைவாக, நாட்டின் இறையாண்மையும் மக்களின் வாழ்வுரிமைகளும் சூறையாடப்பட்டு வரும் சூழலில் நாடாளுமன்ற சட்டமன்ற ஜனநாயகமும் தேர்தல்களும், தனிநபர்வாதமாகவும் கலாச்சாரச் சீரழிவாகவும் மாறி வருவதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது, தமிழக அரசியல்.



உலகவங்கி, ஐ.எம்.எஃப், உலக வர்த்தகக் கழகம் மட்டுமல்ல; மேல்நிலை வல்லரசுகளின் அரசு இராணுவ அதிகாரிகளே இந்த அரசு நிர்வாகத்தில் தலையீடு செய்து ஆட்டுவிப்பது என்றான பிறகு, நாடாளுமன்ற சட்டமன்ற ஆட்சியமைப்பும் தேர்தல்களும் முக்கியமாக ஒரே நோக்கத்துக்குத்தான் பயன்படும். ""நாம் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள்தாம் இன்னமும் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள். நம்ம ஆட்சிதான் நடக்கிறது'' என்ற தோற்றத்துக்குத்தான் பயன்படும். இந்த மாயத்தோற்றத்தைப் பராமரிக்கும் வகையிலான ஓட்டுக் கட்சி அரசியல் மட்டுமே நடத்தப்படுகிறது. அரசியல் கட்சிகள் என்னதான் சாணக்கியத்தனம் மிக்கதாக இருந்தபோதும், இந்த வரம்புகளுக்குட்பட்டு தான் செயல்பட வேண்டும் என்று வால் நறுக்கப்பட்டபிராணிகளாக வளைய வருகின்றன.



இதனால்தான் காந்தியிசம், கம்யூனிசம், அண்ணாயிசம், இந்துயிசம், அம்பேத்கரிசம், பெரியாரிசம் போன்ற கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் ஆகியவற்றின் இடத்தைக் கவர்ச்சித் திட்டங்களும் கவர்ச்சி நடிகர்நடிகைகளும் பிடித்துக் கொண்டார்கள். தனிநபர்வாதம், கவர்ச்சிவாதம், பிழைப்புவாதம், சாதியவாதம், பொறுக்கி அரசியல் என்று எல்லா வகையிலும் முன்னோடியாக விளங்குகிறது, ஜெயலலிதா கும்பல். கருணாநிதியின் குடும்பவாரிசு அரசியலை எதிர்த்த போராட்டம் என்பதே கூட, தொட்டுக் கொள்ளும் ஊறுகாயாகவே பயன்படுத்தப்படுகிறது.



ஜெயலலிதா கும்பலின் ""எதேச்சதிகார ஆட்சி எதிர்ப்பு'' என்ற முழக்கம் வைத்திருந்தாலும் ஜெயலலிதாவின் அரசியலையே தானும் பின்தொடர்ந்து செல்லுகிறார், கருணாநிதி. இனம், மொழி, சமூகநீதி எல்லாவற்றுக்குமான முழக்கங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, ""சர்வாதிகார எதிர்ப்பு ஜனநாயக மீட்பு'' என்று விலையும் மதிப்பும் கூடுதலான பொருளை விற்பதற்கே கூட, தள்ளுபடி விற்பனை இலவச இணைப்புகளை சேர்த்துக் கொண்டு வந்தபோதுதான் கருணாநிதியின் உடன்பிறப்புகளே கூட எழுச்சியுற்றார்கள்.



தேர்தல் களத்தில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் எந்த இலட்சியத்தோடு எப்படிச் செயல்பட்டார்கள் என்பதை இரத்தினச் சுருக்கமாக இரண்டே பத்திகளில் பின்வருமாறு புதிய ஜனநாயகம் மே மாத இதழில் குறிப்பிட்டிருந்தோம்.



""தோற்பது நானாக இருந்தாலும் வெல்வது பொறுக்கி அரசியலாக இருக்க வேண்டும். வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது சீரழிவாக இருக்க வேண்டும்'' என்ற கொள்கையுடன் ஓட்டுப் பொறுக்கி அரசியலை அடியாழம் காணமுடியாத அதல பாதாளத்தை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார், புரட்சித்தலைவி.



முதல்வர் நாற்காலியிலமர்ந்து மக்கள் தொண்டாற்றிய நிலையிலேதான் தனது உயிர் பிரிய வேண்டும் என்ற "கொள்கை வெறி'யுடன் களத்திலிறங்கியிருக்கும் கருணாநிதி, எந்தப் பாதாளத்திலும் பாய்ந்து பதவி நாற்காலியில் அமர்ந்துவிடத் துடிக்கிறார்.



இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ஜெயலலிதா கும்பலைத் தனிமைப்படுத்தி, அனைத்துக் கட்சிக் கூட்டணி அமைப்பதிலும் தமிழகம் புதுவை இரண்டிலுமாக 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவதிலும் சாதனைபடைத்தார், கருணாநிதி. ஆனால் தமிழக சட்டபேரவைக்கான இந்தத் தேர்தலில் கடுமையாக முயற்சித்தும் கூட தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. உளவுத்துறையும், களவுத்துறையும், துதிபாடிகளும் வழங்கிய ""ஆலோசனை'' களைக் கேட்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்ற போதையில் ஜெயா கும்பல் மிதந்து கொண்டிருந்த அதேசமயம், கள நிலைமையைச் சரியாகக் கணித்த கருணாநிதி, கூட்டணிக் கட்சிகளின் தயவோடாவது ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்ற உறுதியோடு செயல்பட்டு, அதில் வெற்றியும் பெற்றார்.



எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் வெற்றிக் கனியைக் கைப்பற்றியபோதும் கீழே விழுந்து கால் முறிந்து போனது போலாகிவிட்டது. குழுச்சண்டையும் பதவி வெறியும் நிறைந்த காங்கிரசு மற்றும் காலை வாரி விடுவதிலும் அணிமாறுவதிலும் பெயரெடுத்துள்ள பா.ம.க. இராமதாசையும் நம்பி, சிறுபான்மை ஆட்சி அமைத்திருக்கிறார், கருணாநிதி.



ஜெயலலிதா, வைகோ, சோ போன்ற தனது அரசியல் எதிரிகள் குற்றஞ்சாட்டுவதுபோல தனது குடும்ப அரசியல் ஆதிக்கம் ஒன்றையே குறியாக வைத்துச் செயல்படும் ""சுயநலமிக்க தீயசக்தி'' தான் கருணாநிதி என்ற முத்திரையைப் பொய்ப்பித்து, தனது அரசியல் வாரிசான ஸ்டாலினை அரியணையேற்றுவதற்குச் சாதகமான சூழலை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளார். குடும்பசுயநல அரசியலுக்கு அப்பாற்பட்ட பழுத்த அனுபவமும் நிர்வாகத் திறமையும் மிக்க ஜனநாயக அரசுத் தலைவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார், கருணாநிதி.



இதனால்தான், இதுவரை மக்கள் கண்டிராதவாறு போலி வாக்குறுதிகளை வீசி, ஓட்டுப் பொறுக்கிக் கொண்டு போய் பதவியேற்றதும், ஏய்த்துவிடும் அரசியல் தலைவர்கள் போன்றவர் தானல்ல என்று காட்டும்விதமாக பதவியேற்ற நாளன்றே, 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கூட்டுறவுக் கடன்கள் ரத்து, பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவில் வாரம் இரண்டு முட்டை ஆகிய உத்தரவுகளில் கையொப்பமிட்டார்.



அடுத்து அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் தீர்மானத்தை அமைச்சரவை நிறைவேற்றியது. வேலை நிறுத்தத் தடைச் சட்டம் (டெஸ்மா), மதமாற்றத் தடைச்சட்டம் ஆகியவற்றை நீக்குவது, சாதனை மாணவர்களுக்கு கல்வியைத் தொடர உதவி, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி, உழவர் சந்தைகள் திறப்பு, கல்லூரிக் கட்டணங்கள் குறைப்பு என்று ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டன. தமிழ் மொழி கற்பதைக் கட்டாயமாக்குவது, கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவது, சிவாஜிக்குச் சிலை வைப்பது, இலவச கலர் டி.வி, ஏழை விவசாயிக்கு 2 ஏக்கர் நிலம், இலவச காஸ் அடுப்பு எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்வதாக, தேதி குறிப்பிட்டு ஆளுநர் அறிக்கை வாசிக்கச் செய்தார், கருணாநிதி. மொத்தத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் நல்லதே செய்யும் பண்பான அரசு தலைவர் என்று பெயரெடுப்பதற்கு எத்தணிக்கிறார். இப்படிப்பட்டவரின் வாரிசு அரியணையேற்றப்படுவதில் தவறொன்றும் இல்லை என்ற எண்ணத்தை விதைக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார், கருணாநிதி.



ஆனால், ""மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன்'' என்று தேர்தல் முடிவு குறித்து அறிவித்த ஜெயலலிதா, தோல்வியை ஜீரணிக்க முடியாமல் முடிவு தெரிவதற்கு முன்பிருந்தே படுத்துப் புரளத் தொடங்கிவிட்டார். இறுதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பலமணி நேரம் சென்ற பிறகும் கூட, பெரும்பான்மையான இடங்களில் ஜெயலலிதா கட்சிதான் வாக்கு எண்ணிக்கையில் முன்னணியில் இருப்பதாக ஜெயா டி.வி. ரபி பெர்ணார்ட் செய்தி சொல்லிக் கொண்டிருந்தார். ஜெயலலிதாவைச் சுற்றி நெருக்கமாக உள்ள துதிபாடிகளே கூட தோல்வியடைந்துவிட்ட உண்மையைச் சொல்ல முடியாது பயந்து புளுகி வந்தனர் என்றால் பாருங்கள்!



வாக்குப் பதிவுக்கு முந்தின நாளிலிருந்து தி.மு.க.வின் ""சன்'' தொலைக்காட்சி ""ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!'' என்ற தலைப்பில் கருணாநிதி கைது, ஜெயலலிதா ஆட்சியில் மாணவர்கள்போக்குவரத்துத் தொழிலாளர்கள்அரசு ஊழியர்கள் மீதான போலீசு தாக்குதல்கள், தர்மபுரியில் மாணவிகளை எரித்துக் கொன்றது மற்றும் எலிக்கறிகஞ்சித் தொட்டி ஆகிய காட்சிகளை தொகுத்து ஒளிபரப்பியது.



அதேபோல தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா கைது, நீலகிரி தேயிலைத் தோட்டத்து இளைஞர்கள் நிர்வாணமாக்கித் தாக்கப்பட்டது, தாமிரவருணிப் படுகொலைகள் போன்ற சம்பவங்களை ஜெயா டி.வி.யும் தொகுத்துக் கொடுத்திருக்க முடியும். ஆனால் அதை விடுத்து, செய்தித் தொகுப்பு என்ற பெயரில் ""கலைஞர் கைமாறு'' என்ற ஒன்றை வாக்குப்பதிவுக்கு முன்பிருந்து ஆட்சி மாற்றத்துக்குப் பின்பும் பல நாட்கள் திரும்பத் திரும்ப ஜெயா டி.வி. ஒளிபரப்பியது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற நளினியின் தங்கை கணவருக்கும் மாமனாருக்கும் ""கைமாறு'' செய்யும் வகையில் கருணாநிதி, ""கண்ணம்மா'' திரைப்படம் எடுத்து கொடுத்ததாகச் சொல்லுகிறது அந்த செய்தித் தொகுப்பு. ராஜீவ் கொலை வழக்கில் நளினி தண்டனை பெற்றார் என்பதற்காக அவரது குடும்பத்தையே கொலைகாரக் குடும்பமாகச் சித்தரிப்பதும், அக்குடும்பத்துடன் எந்தவித உறவும்தொடர்பும் வைப்பதே உள்நோக்கம் கொண்டதாகச் சித்தரிப்பதும் ஜெயலலிதாவின் பாசிசவக்கிரத்தையே காட்டுகிறது. சென்னை தி.நகரில் உள்ள தியாகராயர் மாநகராட்சி அரங்கில் நளினியின் சகோதரர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்ததற்காகவே தான் ஆட்சிக்கு வந்ததும் அந்த அரங்கை மூடிவிடும்படி உத்திரவு போட்டவர்தான் இந்த ஜெயலலிதா. விடுதலைப் புலிகளின் உறுதியான ஆதரவாளர்களாகக் காட்டிக் கொள்ளும் வைகோவும், திருமாவும் இதற்கெல்லாம் என்ன சொல்லப் போகிறார்களோ!



டெல்லியிலும், பாண்டியிலும் கூட்டணி ஆட்சி நடத்தும் கட்சிகளின் ஆதரவோடுதான் இங்கே கருணாநிதி அரசு அமைந்துள்ளது. ஆனாலும் தி.மு.க.வின் சிறுபான்மை அரசு இன்னும் ஓராண்டு கூட நீடிக்காது என்றும் நடந்து முடிந்த தேர்தலில் தன் கட்சி தோற்கவே இல்லை; தி.மு.க.தான் சரிவைச் சந்தித்துள்ளது என்றும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார், ஜெயலலிதா. தன் கட்சிக் கூட்டத்திலேயே தானிருக்கும் மேடையில் வேறொருவர் அமர்வதைக் கூட சகிக்க முடியாத ஜெயலலிதா, தானே தனது பரம்பரை எதிரியென அறிவித்த ஒருவர் தனது எதிரிலேயே முதலமைச்சராக அமர்ந்திருப்பதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?



மேலும், தனது ""பரம்பரை எதிரி'' ஆட்சியில் நீடித்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் எந்த நேரத்தில் எந்தக் குற்றச்சாட்டின் கீழ் சிறையிலடைக்கப்படுவோமோ என்ற பீதியில் வேறு தவித்துக் கொண்டிருக்கிறார், ஜெயலலிதா. எனவே, இந்த ஆட்சியைக் கலைப்பதற்கு பஞ்சமாபாதகங்களை மட்டுமல்ல, அதற்கு மேலும் போகவும் தயாராக உள்ளார். அதற்கான ""திறமை''யும் அவரிடம் நிறையவே உள்ளது. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோதே, அவர் செயலிழந்து போய்விட்டார், அவரது ஆட்சியைக் கலைத்துவிட்டு தன்னை முதலமைச்சராக்கும்படி ஆளுநரிடம் மனுக் கொடுத்தவர்தான் ஜெயா. ஜானகி எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, தமிழக சட்டமன்றத்தையே தனது விசுவாசிகளை வைத்து ரணகளமாக்கி அராஜக வெறியாட்டம் போட்டு ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்திக் காட்டினார். அப்போதைய ஆளும் அ.தி.மு.க. கட்சியில் தனது அணி சிறுபான்மையாக இருந்தும் கூட ஆர்.வெங்கட்ராமன், ராஜீவ் காந்தி போன்றவர்களிடம் தனக்கிருந்த செல்வாக்கை வைத்தே இதைச் சாதித்தார்.



அடுத்து அமைந்த கருணாநிதியின் பெரும்பான்மை ஆட்சியை அடாவடியாகக் கலைக்கும்படி செய்தார். சந்திரசேகர், ராஜீவ் காந்தியிடம் தனக்கிருந்த தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் வெங்கட்ராமன், டி.என். சேஷன் , சுப்ரமணிய சுவாமி போன்ற பார்ப்பன கும்பலின் ஆதரவுடன் இதைச் சாதித்தார். 1996 தேர்தலுக்குப் பிறகு அமைந்த கருணாநிதி ஆட்சியைக் கலைக்கும்படியும் தன் மீதான கிரிமினல் வழக்குகளை இரத்து செய்து விடும்படியும், பா.ஜ.க.வுடன் மத்தியில் கூட்டணி அரசில் பங்கேற்றபோது நிர்பந்தித்தார். அதுமுடியாதபோது மத்தியக் கூட்டணி ஆட்சியையே சு.சாமி துணையோடு கவிழ்த்தார். தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, தானும் பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேர்ந்தார், கருணாநிதி.



தனது சொந்த ஆதாயத்துக்காக யாருடனும் கூட்டுச் சேருவதில் நாட்டிலேயே முன்னோடியாக விளங்குபவர்தான் ஜெயலலிதா. ஒருபுறம் பா.ஜ.க.ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, அத்வானி, நரேந்திர மோடி ஆகிய பார்ப்பன கும்பலோடும் மறுபுறம் தேவகவுடா, முலயம், லல்லு ஆகிய பிழைப்புவாத சமூக நீதிக் கும்பலுடனும் உறவு வைத்துக் கொண்டிருக்கிறார். அதேபோல, தனது சொந்த ஆதாயத்துக்காக பச்சையாகப் புளுகக் கூடியவர்தான் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரை நஞ்சு வைத்து ஜானகி கொன்றுவிட்டார், கோவில் பிரசாதத்தில் நஞ்சு வைத்தும், தனது கார் மீது லாரி ஏற்றியும் கருணாநிதி கொல்ல முயன்றார், ஆளுநர் சென்னாரெட்டி தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றார், தனது ஆட்சியில் நடக்கும் கொள்ளைகளெல்லாம் தி.மு.க.வினரே திட்டமிட்டுச் செய்பவை, போலீசு நிலையக் கற்பழிப்புப் புகார்களெல்லாம் நட்ட ஈடுபெறுவதற் காக சில பெண்கள் கூறும் பொய்கள், எம்.ஜி.ஆர். நகரில் நடந்த வெள்ள நிவாரண நெரிசல் சாவுகள் தி.மு.க. வதந்தியால் ஏற்பட்டவை, "டான்சி' நிலத்தை வாங்கிய பத்திரத்தில் உள்ளது தனது கையெழுத்தே கிடையாது என்று அடுக்கடுக்காகப் புளுகினார். பயங்கரவாத, பிளவுவாத பீதியூட்டி, போலீசு பார்ப்பன அதிகாரிகளை வைத்து அரசியல்நிர்வாகம் நடத்தி ஆதாயம் தேடுவதையே தனது ஒரே கொள்கையாகக் கொண்டிருப்பவர், ஜெயலலிதா.



மேற்படி அணுகுமுறைகளைக் கொண்டு அடாவடி, அராஜக, தாக்குதல் அரசியல் நடத்தாவிட்டால், கிரிமினல் குற்றவழக்குகளில் இருந்து தான் தப்பிக்க முடியாது என்று தொடர்ந்து திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார், ஜெயலலிதா. 1989இல் தமிழக சட்டமன்றத்துக்குள், கருணாநிதி ஒரு கிரிமினல் என்று ஏசி, பட்ஜெட் உரையைக் கிழித்து அவர்மீது விசிறியடித்து விட்டு, தானே தனது ஆடையைக் கிழித்துக் கொண்டு, மயிரைப் பிய்த்துப் போட்டுக் கொண்டு அனுதாப அரசியல் நாடகமாடினார். ராஜீவ் கொலைக்குக் காரணம் கருணாநிதிதான் என்று அவதூறு பரப்பி, அனுதாப அரசியல் நடத்தி ஆதாயம் தேடினார். அதே நாடகங்களை மீண்டும் அரங்கேற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு இப்போதும் ஜெயலலிதா எத்தணிக்கிறார். ஜெயலலிதா கட்சியின் சமீபத்திய சட்டமன்ற அராஜகமும், ""கலைஞரின் கைமாறு'' என்ற ஜெயா டி.வி.யின் ஒளிபரப்பும் இதை உறுதி செய்கின்றன.



ஜெயலலிதாவின் இந்த பார்ப்பன பாசிச வக்கிரமும் பயங்கரவாதமும் வெற்றி பெறுவதற்கு அவரது துதிபாடிகள் கூறுவதைப் போன்று அவரது துணிச்சல் தைரியம் அறிவுத்திறமை தெளிவு காரணமல்ல. நிலவிவரும் நாடாளுமன்ற சட்டமன்ற ஜனநாயகத்தின் தன்மையே இதுதான். ஜெயலலிதாவின் மக்கள் விரோத ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுவதற்குப் பதில் கண்டன அறிக்கைகள் விடுவது, ஆளுநரிடமும் நீதிமன்றங்களிலும் மனுப் போடுவது என்ற கருணாநிதியின் கோழைத்தனமும், வைகோ, திருமா, ராமதாசு மட்டுமல்ல; போலி கம்யூனிஸ்டுகள் உட்பட அரசியல் பிழைப்புவாத, சந்தர்ப்பவாத சக்திகள் மாறி மாறி விலை போய் விடுவதும் அவருக்கு முக்கிய பலமாக இருக்கிறது. ஆகவேதான், பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பலை போலவே, ஜெயலலிதாவும் விரைவில் தற்போதைய ஆட்சி கவிழும், அடுத்த சுற்றில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கின்றார்.



மு ஆர்.கே.

Thursday, June 22, 2006

நீறாய்ப் போக விலங்குகள் இராச்சியம்!

நீறாய்ப் போக விலங்குகள் இராச்சியம்!

சிறி
23.06.06


ரத்தம் விற்பனைக்கு!
தமிழ் இரத்தம்
சிங்கள இரத்தம்
ஓதி
வெட்டப்பட்ட முசுலீம் இரத்தம்!



துரோகி இரத்தம்
தியாகி இரத்தம்
மக்கள் இரத்தம்
மாவீரர் இரத்தம்
மாமனிதர் ஆன இரத்தம்!



குழந்தை இரத்தம்
கருவறையில் குடியிருக்கும்
உருத்தெரியா உயிரின் இரத்தம்!



கொத்தாகக் கொன்றொழித்த
கெப்பிற்றிக் கொல்லாவ இரத்தம்!



அல்லை வங்காலை
பிணத்தின்னிப் பேய்கள்
குதறிக் களித்த இரத்தம்!



காட்சிக்கு வைத்து
விலை நிர்ணயிக்க
போட்டா போட்டி!



விற்பனை முகவர்கள்
தேசங்கள் சென்று
மூடிய அறைகளுக்குள்
பேசிக் கொள்கிறார்கள்!



சந்தை விலை நிர்ணயத்தில்
ஏகாதிபத்திய எஐமானர்களுக்கு
இணக்கம் வராவிடில்
விலை வீழ்ச்சிக்காய்
இரத்த உற்பத்தியை
இன்னும் பெருக்குக!



வெட்டிச்சரித்து குத்திக்குதறி
காட்சிக்கு வைத்த
ஆவேச விளம்பரங்கள்
போதாது போதாது!



சிரசுகள் சரிய செந்நீர் சொரியும்
காட்சிச்சாலைகள் தேசமெங்கும்
திறக்கப்படட்டும்!.
தேவாலயங்கள் பள்ளிவாசல்கள்
விதிவிலக்காமென யாரெவர் சொன்னார்!
தமிழன் சிங்களன் முஸ்லீம்
பேதங்கள் தெரியா
பிரேதங்கள் புரளுக!
நானா நீயா நடக்கட்டும் போட்டி!



விழி வழி தேங்கிய மனவெதுப்புகள் உடைப்பெடுத்து
சுனாமியும் தோற்றுப்போகும் பேரலையாய்
ஆட்சி கொண்டோரை ஒருநாள்
அள்ளிச்செல்லும்!



அது எதுவென நீவிர் அறியும் நாழியில்
வாழ்வின் ஒளி மீளும் தெருக்களில்
நீறாய்ப் மண்ணாய் நீர்த்துப்போகும் விலங்குகள் இராச்சியம்



Wednesday, June 21, 2006

மறுகாலனியாதிக்கத்திற்கு உணவும் ஒரு ஆயுதம்

கோதுமை இறக்குமதி : மறுகாலனியாதிக்கத்திற்கு உணவும் ஒரு ஆயுதம்

டநாட்டில் இப்போது கோதுமை அறுவடைக் காலம். விவசாயிகள் அறுவடைத் திருவிழாக்களைக் கொண்டாடும் நேரம். அத்திருவிழாக்களைத் தொடர்ந்து, பல விவசாயக் குடும்பங்களில் இளைஞர்களுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கும் காலம். ஆனால், ஆயிரமாயிரம் கனவுகளோடு அறுவடையை முடித்த விவசாயிகளின் நெஞ்சில் இடியென இறங்கியுள்ளது விலை வீழ்ச்சியும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கோதுமையும்.


அறுவடை தொடங்கிய போது, கிலோ 89 ரூபாய்க்கு விலைபோன கோதுமை, இன்று கிலோ 5 ரூபாய்க்கும் கீழாக வீழ்ச்சியடைந்து விட்டதால், விவசாயிகள் வேதனையில் துடிக்கிறார்கள். அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையான ரூ. 6.50 பைசாவுக்குக் கூட அரசு கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் கோதுமையை வாங்க மறுக்கிறார்கள். ""கோதுமையில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது; உமி அதிகமாக உள்ளது; தரம் குறைந்துள்ளது'' என்றெல்லாம் ஆயிரத்தெட்டு காரணங்களைச் சொல்லிக் கொள்முதல் செய்ய மறுப்பதால், விவசாயிகள் வேறு வழியின்றி அடிமாட்டு விலைக்குக் கோதுமையை வியாபாரிகளிடம் விற்கிறார்கள்.


அரசாங்கமோ கோதுமையைக் கொள்முதல் செய்யாமல் தட்டிக் கழிக்கிறது. இதனால் அரசாங்கக் கிடங்குகளில் கோதுமை கையிருப்பு குறைகிறது. கையிருப்பில் கோதுமை குறைவாக உள்ளதைக் காரணம் காட்டி, பொது விநியோகத்துக்கு (ரேஷன் கடைகளுக்கு) இன்னும் கோதுமை தேவை என்று வாதிடும் அரசாங்கம், வேறு வழியின்றி வெளிநாடுகளிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்வதாகக் கூறுகிறது. ஆனால், தற்போதைய பருவத்தில் கோதுமை விளைச்சல் கடந்த ஆண்டை விட ஒப்பீட்டு ரீதியில் அதிகமாக இருக்கும் என்றும் ஏறத்தாழ 125 லட்சம் டன் அளவுக்கு கோதுமை கிடைக்கும் என்றும் அரசின் புள்ளியியல் துறை கணக்கு கொடுக்கிறது. பொது விநியோகத்துக்கு ஏறத்தாழ 88 லட்சம் டன் கோதுமைதான் தேவை. அதைத் தாராளமாக விவசாயிகளிடமிருந்தே அரசாங்கம் கொள்முதல் செய்திருக்க முடியும். விவசாயிகளுக்கும் கோதுமைக்கு உரிய விலை கிடைத்திருக்கும். ஆனால், மைய அரசும் மாநில அரசுகளும் விவசாயிகளிடமிருந்து கோதுமையைக் கொள்முதல் செய்ய மறுக்கின்றன. மறுபுறம், மலைபோல் கோதுமை குவிந்து கிடக்கும் சூழலில், வெளிநாடுகளிலிருந்து 35 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்ய மைய அரசு தீர்மானித்துள்ளது.


இதனடிப்படையில் கடந்த மே மாதத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து 5 லட்சம் டன் கோதுமை சென்னை துறைமுகத்திற்கு வந்திறங்கியுள்ளது. அதன் தரத்தைச் சோதித்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இறக்குமதியாகும் உணவு தானியங்களில் அதிகபட்சமாக 0.02 சதவீத அளவுக்குள் நச்சுத்தன்மை இருந்தால் மட்டுமே அதை அனுமதிப்பது வழக்கம். ஆனால், ஆஸ்திரேலிய கோதுமையில் 0.25 சதவீத அளவுக்கு நச்சுத்தன்மை உள்ளது. சென்னை மட்டுமின்றி, மைசூரிலுள்ள பரிசோதனைக் கூடத்திலும் சோதித்தறியப்பட்டு இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பூச்சிக்கொல்லி மருந்தின் எச்ச அளவும் இரசாயன உரங்களின் பின்விளைவால் தோன்றும் நச்சுத்தன்மையின் அளவும் இந்தக் கோதுமையில் அதிகமாக உள்ளது. மேலும், இந்தக் கோதுமையில் ஏறத்தாழ 20% அளவுக்கு ஈரப்பதம் உள்ளது. (ஆனால், கொள்முதல் நிலையங்களில் 12%க்கு மேல் ஈரப்பதம் இருந்தால் விவசாயிகளிடமிருந்து அதிகாரிகள் வாங்க மறுக்கிறார்கள்). இவை தவிர, இக்கோதுமையில் வளர்ச்சி குன்றிய தானியங்களின் விகிதம் அதிகமாக இருப்பதோடு, பூஞ்சைத்தன்மையின் விகிதம் அதிகமாகவும் காளான் வகைப்பட்ட கூலநோய் தாக்கிய தானியங்களின் விகிதம் அதிகமாகவும் உள்ளது.


ஆனாலும், தரம் குறைந்த நச்சுத்தன்மை மிகுந்த இந்தக் கோதுமையை இந்திய அரசு நிராகரித்துத் திருப்பி அனுப்பவில்லை. அதற்கு மாறாக, இந்திய அரசு தனது தரக்கட்டுப்பாட்டு விதிகளையே தளர்த்தி இந்த நச்சுக் கோதுமையை நல்ல கோதுமைதான் என்று நியாயப்படுத்தக் கிளம்பிவிட்டது. இந்தக் கோதுமை தென்மாநிலங்களில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது. இந்த நச்சுக் கோதுமையால் இனம் புரியாத நோய்கள் மனிதனைத் தாக்கும்; குழந்தைகளுக்குப் பேராபத்தை விளைவிக்கும் என்று உணவியலாளர்களும் அறிவியலாளர்களும் எச்சரித்த போதிலும், இந்திய ஆட்சியாளர்கள் அவற்றையெல்லாம் துச்சமாக மதித்து, அடுத்த கப்பலுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர்.


விவசாயிகளிடம் கிலோ


ரூ. 6.50க்குக் கூட கொள்முதல் செய்ய மறுக்கும் அரசு, ஆஸ்திரேலிய நச்சுக் கோதுமையை ஏறத்தாழ கிலோ


ரூ. 11.00க்கு வாங்கியிருக்கிறது. இவ்வளவு அதிக விலை கொடுத்து நச்சுக் கோதுமையை வாங்குவதற்குப் பதிலாக, விவசாயிகளிடமே கோதுமையைக் கொள்முதல் செய்யலாமே என்று கேட்டால், ""போக்குவரத்துச் செலவுகளைக் கணக்கிட்டால் விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் கொள்முதல் செய்யும் கோதுமையின் விலை இதைவிட அதிகமாகும். எனவேதான், அதைவிட மலிவான விலையில் கோதுமையை இறக்குமதி செய்கிறோம்'' என்கிறார் உணவு அமைச்சர் சரத்பவார். அப்படியானால், உள்நாட்டில் உற்பத்தியாகிக் குவிந்து கிடக்கும் கோதுமையை யார் வாங்குவார்கள்? கடன் வாங்கி பாடுபட்டுப் பயிரிட்ட விவசாயி என்ன செய்வது? என்று கேட்டால் உதட்டை பிதுக்குகிறார் உணவு அமைச்சர்.


இது ஒருபுறமிருக்கட்டும். போக்குவரத்து வசதி நிறைந்துள்ள இன்றைய நிலையில், உலகின் எந்த நாட்டிலிருந்தும் ஏறத்தாழ 1520 நாட்களில் எவ்வளவு டன் உணவு தானியத்தையும் இந்தியாவுக்குக் கொண்டு வர முடியும். அவ்வாறிருக்க, அறுவடைக் காலத்தில், விளைந்த கோதுமையை விற்க முடியாமல் விவசாயிகள் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவசரம் அவசரமாக வெளிநாட்டிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன? விவசாயிகளிடம் கொள்முதல் செய்தபிறகு, சேமிப்பில் பற்றாக்குறை ஏற்பட்டால் அதற்கேற்ப கோதுமையை இறக்குமதி செய்வதை விடுத்து, இப்படி அவசர அவசரமாக இறக்குமதி செய்து, விவசாயிகளின் வயிற்றில் ஏன் அடிக்க வேண்டும்? இவையெல்லாம் மைய அரசின் நிர்வாகக் குளறுபடிகளோ, அல்லது கமிசன் மூலம் கிடைக்கும் ஆதாயத்துக்காக அதிகாரிகளும் அமைச்சர்களும் செய்யும் தில்லுமுல்லு மோசடிகளோ அல்ல. இவையெல்லாம் உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுகள். பன்னாட்டு ஏகபோக கம்பெனிகளின் கட்டளைகள். அவற்றுக்கு விசுவாசமாகச் சேவை செய்வதுதான் எங்கள் வேலை என்கின்றனர் ஆட்சியாளர்கள்.


ஏழை நாடுகளின் உணவுச் சந்தையைக் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செலுத்த ஏகாதிபத்திய நாடுகளின் உணவு வர்த்தகக் கழகங்கள் நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றன. உணவு தானியங்களை ஏழை நாடுகளில் இறக்குமதி செய்து ஆதிக்கம் செய்வதில் அவை குறியாக இருக்கின்றன. எனவேதான் உணவு உற்பத்தியைக் குறை; மானியங்களை நிறுத்து என்று உத்தரவிடுகிறது உலக வங்கி. "மலிவான' விலையில் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யுமாறும்; உணவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெயரளவிலான சுயசார்பையும் கைவிடுமாறும் பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகள் நிர்பந்திக்கின்றன. இதனடிப்படையில் ரேஷனில் விநியோகிக்கப்படும் உணவு தானியங்களின் விலைகள் படிப்படியாக உயர்த்தப்பட்டன. அரசாங்க கொள்முதல் படிப்படியாகக் கைவிடப்பட்டு, விவசாயிகள் வர்த்தகச் சூதாடிகளிடம் அடிமாட்டு விலைக்கு உணவு தானியங்களை விற்று போண்டியாகிப் போயினர். இப்போது அடுத்த கட்டமாக வெளிநாடுகளிலிருந்து உணவு தானிய இறக்குமதி தொடங்கி விட்டது.


இனி இந்திய விவசாயிகள் என்ன செய்வது? ""கோதுமையையும் நெல்லையும் விட்டுத் தொலையுங்கள்; தோட்டப் பயிர், மலர்ப் பண்ணை, எண்ணெய் வித்துக்கள் போன்று நல்ல ஏற்றுமதி வாய்ப்புள்ள உற்பத்திக்கு மாறுங்கள். உலகச் சந்தையின் தேவைகளுக்கேற்ப விவசாயத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்'' என்று 2001ஆம் ஆண்டிலேயே அரியானா விவசாயிகளுக்கு உபதேசித்தார், அன்றைய பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய். இப்போது, ஜெட்ரோபா எனும் மூலிகை எரி எண்ணெய்ச் செடியைப் பயிரிடச் சொல்கிறார் மைய அமைச்சர் மணிசங்கர் அய்யர். கோலியாஸ் கிழங்கும் கற்றாழையும் பயிரிட்டு லட்சாதிபதிகளாகிவிட்ட விவசாயிகளின் "பிசினஸ் வெற்றிக் கதை'களைப் பரபரப்பாக வெளியிட்டு, நீங்கள் எப்போது லட்சாதிபதியாகப் போகிறீர்கள் என்று கேட்கிறது, ""நாணயம் விக டன்.''


ஆனால், இந்திய விவசாயிகளோ குமுறிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மே மாதத்தில் உலக வர்த்தகக் கழகத்தின் தலைவரான பாஸ்கல் லாமே இந்தியாவுக்கு வந்தபோது, தமிழக உழவர் உழைப்பாளர் கட்சியும் பாரதிய கிஸான் யூனியனும் சேர்ந்து டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் நாசமாக்கும் உலக வர்த்தகக் கழகத்துக்கு எதிராகவும், இந்தியாவில் கோதுமை உற்பத்தி குவிந்துள்ள நிலையில் இறக்குமதி செய்யும் இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.


கோதுமை இறக்குமதி மட்டுமல்ல; உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைப்படி இனி அடுத்தகட்டமாக நெல், சோளம், எண்ணெய் வித்துக்கள் முதலானவையும் இறக்குமதி செய்யப்படவுள்ளன. ஏற்கெனவே பாமாயில் இறக்குமதியால் கேரளத்தின் தென்னை விவசாயமும் விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பால் பொருட்களின் தாராள இறக்குமதியால் நாடெங்கும் பால் உற்பத்தியாளர்கள் வாழ்விழந்து நிற்கின்றனர். சூரியகாந்தி, சோயா மொச்சை, சர்க்கரை, பருப்பு வகைகள் என நீண்டு கொண்டே போகும் இறக்குமதி, இப்போது நெல், கோதுமை என அடிப்படையான உணவு தானியங்களையே இறக்குமதி செய்வதாக வளர்ந்துவிட்டது.


இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தை நாசமாக்கி, மராமத்துப் பணிகளைப் புறக்கணித்து, மிகப்பெரிய பஞ்சத்தை விளைவித்து இலட்சக்கணக்கான மக்களைக் காவு வாங்கியது அன்றைய காலனியாதிக்கம். இன்று, விவசாயத்தை நாசமாக்கியும் சுயசார்பை ஒழித்து உணவு தானியங்களை இறக்மதி செய்தும் விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கியும் பேரழிவை விளைவித்து வருகிறது மறுகாலனியாதிக்கம். நாட்டையும் மக்களையும் ஏகாதிபத்தியங்களுக்கு அடிமைப்படுத்தி இன்னுமொரு பஞ்சபூமியாக மாற்றும் துரோகத்தனத்தை வேகவேகமாகச் செய்து வருகிறது காங்கிரசு கூட்டணி அரசு. அதற்கு முட்டுக் கொடுத்து ஆதரித்து வரும் போலி கம்யூனிஸ்டுகள் உணவு அமைச்சருக்குக் கடிதம் எழுதி விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


மு பாலன்

நேபாளத்தில் மக்கள் யுத்தம்

நேபாளத்தில் மக்கள் யுத்தம் ஓட்டுக் கட்சிகளின் சந்தர்ப்பவாத சமரசம்

"வெற்றி! மகத்தான வெற்றி! நேற்றுவரை மன்னரின் தயவில் மக்கள்; இன்று எங்கள் தயவில்தான் மன்னர்!'' என்று எக்காளமிட்டு நேபாளத் தலைநகர் காத்மண்டுவிலுள்ள நாராயணன்ஹிதி அரண்மனை வாயிலருகே தர்பார் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்ட வெற்றியை குதூகலத்துடன் கொண்டாடினர். ""இனி இந்த அரண்மனை மன்னரது சொர்க்கபுரி அல்ல; இதை மக்கள் மன்றம் என்று அறிவிப்போம்! இந்த அரண்மனையில் நாங்கள் பதவியேற்பு விழா நடத்துவோம்! மக்கள் குடியரசு நீடுழி வாழ்க என்று முழங்குவோம்!'' என்று ஆர்ப்பரித்தனர் இளைஞர்கள்.

கடந்த ஏப்ரல் 25ஆம் தேதியன்று அரண்மனை நெடுஞ்சாலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். புத்தாடை அணிந்து குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாகத் திரண்டு ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் தாங்கள் அடைந்த முதற்கட்ட வெற்றியைத் திருவிழாவைப் போலக் கொண்டாடினர்.

ஏறத்தாழ இரண்டேகால் கோடி மக்கள் தொகை கொண்ட சின்னஞ்சிறு ஏழை நாடான நேபாளத்தில் அண்மையில் நடந்த மக்கள் திரள் எழுச்சியானது, அந்நாட்டின் வரலாற்றில் புரட்சிகரமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. 1950இல் ஆட்சிக்கு வந்த அன்றைய நேபாள மன்னர், அரசியல் நிர்ணய சபையை நிறுவி மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கப் போவதாக வாக்குறுதி அளித்து ஏய்த்தார். 1990 வரை பல வகையான மோசடிகள் பித்தலாட்டங்கள், அடக்குமுறைகள் மூலம் நேபாளத்தின் நிலப்பிரபுத்துவ பிற்போக்கு சக்திகள் மன்னராட்சியைத் தக்க வைத்துக் கொண்டன. 1990களில் ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கம் வெடித்தெழுந்தபோது, சில சில்லரை சீர்திருத்தங்கள் வழங்கப்பட்டனவே தவிர, அரசியல் நிர்ணயசபை தேர்ந்தெடுக்கப்படவில்லை. பெயரளவிலான நாடாளுமன்றமும், நாடாளுமன்றத்தை விஞ்சிய வரம்பற்ற அதிகாரத்தை மன்னருக்கு வழங்குவதாகவே நேபாள அரசியல் சட்டம் அமைந்திருந்தது.

மன்னராட்சிக் கொடுங்கோன்மையும் நேபாள அரசியல் கட்சிகளின் துரோகமும் சமரசமும் தொடர்ந்த நிலையில் 1996இல் கம்யூனிசப் புரட்சியாளர்களான மாவோயிஸ்டுகள் மன்னராட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை அறிவித்தனர். மாவோயிஸ்டுகள் போராட்டம் காட்டுத் தீயாகப் பற்றிப் படர்ந்து முன்னேறத் தொடங்கியதும், மாவோயிஸ்டுகளை ஒடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டி 2002இல் நாடாளுமன்றத்தைக் கலைத்து வரம்பற்ற அதிகாரத்தைக் கையிலேந்தி இராணுவ ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது மன்னர் ஞானேந்திரா கும்பல். அடுத்தடுத்து நான்கு பிரதமர்கள் பதவியிலிருந்து விரட்டப்பட்டு, நாடாளுமன்றம் கேலிக் கூத்தாகியது.

மன்னராட்சிக் கொடுங்கோன்மைக்கு எதிரான மாவோயிஸ்டுகளின் போராட்டம் விரிவடைந்து, ஆகப் பெரும்பான்மையான பகுதிகள் அவர்களின் செல்வாக்கின் கீழ் வந்தன. கம்யூனிச அபாயத்தை முறியடிக்க அமெரிக்காவும் இந்தியாவும் ஆயுத உதவி பயிற்சிகள் கொடுத்து மன்னராட்சியை முட்டுக் கொடுத்து ஆதரித்தன. ஆனாலும், இற்று விழுந்து கொண்டிருக்கும் மன்னராட்சியை தூக்கி நிறுத்த முடியவில்லை. உள்நாட்டுப் போருக்கான அபாயம் நிலவுவதாகக் கூறி, இன்னும் 3 ஆண்டுகளுக்கு மன்னராட்சி அமல் செய்யப்படுவதாக அறிவித்து, அரசியல் கட்சித் தலைவர்களைக் கைது செய்து, தொலைபேசி இணையத் தொடர்புகளைத் துண்டித்து, பத்திரிகைகள் வானொலி தொலைக்காட்சிகளை இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து, இராணுவமுடியாட்சிக் கொடுங்கோன்மையைக் கட்டவிழ்த்து விட்டது ஞானேந்திரா கும்பல்.

அதற்குப் பிறகும் மாவோயிஸ்டுகளால் தொடங்கி வைக்கப்பட்ட புரட்சியைத் தடுக்க முடியவில்லை. மாவோயிஸ்டுகளின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றக் கட்சிகளின் அணிகளே தமது தலைமையை நிர்பந்திக்கத் தொடங்கியதும், வேறு வழியின்றி ஏழு நாடாளுமன்றக் கட்சிகள் இணைந்து மன்னராட்சிக் கொடுங்கோன்மையை வீழ்த்த, கடந்த ஆண்டு நவம்பரில் மாவோயிஸ்டுகளுடன் ஐக்கிய முன்னணியைக் கட்டியமைத்தன. மன்னராட்சியை வீழ்த்துவது, புதிய அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவது என்ற மையமான கோரிக்கைகளுடன் முன்னேறிய போராட்டம், கடந்த ஏப்ரல் முதலாக நாடு தழுவிய மக்கள் பேரெழுச்சியாக வெடித்தெழுந்தது.

மக்கள் போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதும், அது நாடு முழுவதும் காட்டுத் தீயாகப் பரவத் தொடங்கியதும், அடக்குமுறைகளைத் துச்சமாக மதித்து அது தீர்மானகரமான முடிவோடு முன்னேறத் தொடங்கியதும், வேறு வழியின்றி கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதாகவும், சிறையிடப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலை செய்வதாகவும் மன்னர் அறிவித்துள்ளார். மன்னராட்சிக்கு எதிராகப் போராடி வரும் ஏழு கட்சிகளின் கூட்டணி இதை வரவேற்று, போராட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், நேபாள காங்கிரசுக் கட்சியின் மூத்த தலைவரான கொய்ராலாவை ஏகமனதாக பிரதமராகத் தேர்வு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளன.

ஆனால் கம்யூனிசப் புரட்சியாளர்களான மாவோயிஸ்டுகள், அதிகாரமில்லாத நாடாளுமன்றம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படுவதை நிராகரிப்பதாக அறிவித்து, மக்கள் இயக்கத்துக்குத் துரோகமிழைத்து மன்னராட்சியின் சதிவலையில் ஏழு கட்சிகளின் கூட்டணி வீழ்ந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். தம்மைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக இக்கூட்டணி, மன்னரது முடிவை ஆதரிப்பதானது, ஐக்கிய முன்னணியின் ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்றும், அரசியல் நிர்ணய சபைக்கான நிபந்தனையற்ற தேர்தல் அறிவிக்கப்படும்வரை தமது போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதன் மூலம் மக்கள் எழுச்சியைச் சாந்தப்படுத்தி, ஏழு கட்சி கூட்டணியை நைச்சியமாக விலைபேசி, மாவோயிஸ்டுகளுக்கும் இக்கூட்டணிக் கட்சிகளுக்குமிடையிலான ஐக்கிய முன்னணியைத் தகர்த்து, இற்று விழுந்து கொண்டிருக்கும் மன்னராட்சியைத் தக்க வைக்கலாம் என்பது மன்னர் ஞானேந்திரா போடும் கணக்கு. சட்டவாத மன்னராட்சி, அதிகாரமில்லாத நாடாளுமன்றம் என்கிற இரட்டை குதிரைகளில் நேபாளம் பயணம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறது இந்தியா. எனவேதான், மன்னரது இராணுவம் போராடும் மக்களைச் சுட்டுக் கொண்டிருக்கும்போது, தனது பொருள் பொதிந்த மவுனத்தின் மூலம் மன்னராட்சிக்கு முட்டுக் கொடுத்து ஆதரித்துவந்த இந்தியா, இப்போது காற்று திசைமாறி வீசத் தொடங்கியதும், நேபாள மக்களின் போராட்டத்தை உச்சிமுகர்ந்து, நாடாளுமன்றம் மீண்டும் நடைமுறைக்கு வருவதை ஆதரித்து "ஜனநாயக' நாடகமாடுகிறது. அதேநேரத்தில், அரசியல் நிர்ணய சபை நிறுவுவதைப் பற்றி வாய்திறக்க மறுக்கிறது.

ஈராக்கை ஆக்கிரமித்து நரவேட்டையாடிவரும் அமெரிக்கா, கௌரவப் பதவியுடன் மன்னரை ஒதுங்கிக் கொள்ளுமாறும் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிறுவுமாறும் உபதேசித்து ஜனநாயக அரிதாரம் பூசிக் கொள்கிறது. அண்டை நாடான சீனா, அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்ட மன்னர் ஞானேந்திரா எடுத்துள்ள நேர்மறையான முயற்சியை வரவேற்கிறது.

ஆனால், இச்சதிகாரர்கள் போடும் தப்புக் கணக்கு ஒருக்காலும் வெற்றி பெற முடியாது. ஏனெனில், வரலாற்றைப் படைக்கும் உந்துசக்தியான நேபாள மக்கள் வரலாற்றின் சக்கரத்தை பின்னுக்கு இழுத்துச் செல்லத் தயாராக இல்லை. மாவோயிஸ்டுகளின் ""அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை நடத்து!'' என்ற முழக்கம் இப்போது மக்கள் முழக்கமாக எங்கும் எதிரொலிக்கிறது. ஏழு கட்சி கூட்டணியினர் தேர்வு செய்துள்ள கொய்ரலா வீட்டு முன்பு, ""தலைவர்களே, எச்சரிக்கை! எங்களு க்கு அரசியல் நிர்ணய சபைதான் வேண்டும்! துரோகம் வேண்டாம்!'' என்று எழுதப்பட்ட பதாகையை போராடும் நேபாள மக்கள் கட்டி வைத்துள்ளனர்.

போராட்டத்தின் முதற்கட்ட வெற்றிவிழா கூட்டங்களில் உரையாற்றும் ஜனநாயகத்துக்கான இயக்கத்தின் முன்னணியாளர்கள், ""அரசியல் கட்சிகள் எங்களை வஞ்சித்தால், மன்னராட்சியோடு சேர்த்து அவற்றையும் குப்பைத் தொட்டியில் வீசியெறிவோம்! அரசியல் கட்சிகளே, எச்சரிக்கை! துரோகமிழைத்தால் உங்களைத் தூக்கில் தொங்க விடுவோம்!'' என்று பகிரங்கமாக அறிவிக்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால் ஜனநாயகம் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுப் போடும் சடங்கு அல்ல; அது மக்கள் தமது கரங்களில் ஏந்திச் சுழற்றும் அதிகாரமாக மாறவேண்டும் என்ற வேட்கைதான் நேபாள மக்களின் நெஞ்சங்களில் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் புரட்சிப் பேரலையைத் தடுத்து நிறுத்த முடியாத நிலையில், ""நாடாளுமன்றம் கூடியதும் முதல் நிகழ்ச்சி நிரலாக அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் பற்றி விவாதித்து முடிவு செய்வோம்'' என்று ஏழு கட்சி கூட்டணியினர் உறுதியளித்துள்ளனர். ஆனால், கடந்த நவம்பர் வரை ""மாவோயிச பேரபாயத்திலிருந்து நாட்டைக் காப்போம்'' என்று மன்னராட்சிக் கொடுமையையும் மாவோயிஸ்டுகளின் புரட்சிகரப் போராட்டங்களையும் சமமாகச் சித்தரித்து வந்த ஏழு கட்சி கூட்டணியினர், வாக்குறுதி அளித்தபடி அரசியல் நிர்ணய சபையை நிறுவுவார்களா அல்லது மன்னரது சூழ்ச்சிகளுக்குப் பலியாகி துரோகமிழைப்பார்களா என்று உறுதியாகக் கூற இயலாது. நிபந்தனையற்ற முறையில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை அக்கூட்டணி நடத்த முன்வந்தாலும், அதை அமெரிக்க வல்லரசும் நேபாளத்தின் அண்டை நாடுகளான சீனாவும் இந்தியாவும் அங்கீகரிக்குமா, ஒரு சிவப்பு புரட்சியை எவரெஸ்ட் சிகரத்தின் மீது செங்கொடி பட்டொளி வீசிப் பறப்பதை அனுமதிக்குமா என்பதற்கு உத்தரவாதமில்லை. நேபாள மக்களின் புரட்சியை நசுக்க எதிரிகளும் துரோகிகளும் எதையும் செய்வார்கள்.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் கம்யூனிசத்தை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டம் நடந்தபோது, அவற்றை "ஜனநாயகத்துக்கான எழுச்சி' என்று ஓடோடிச் சென்று வரவேற்று ஆதரித்த ஏகாதிபத்தியங்கள், நேபாள மக்கள் இராணுவ அடக்குமுறையை எதிர்த்து ஜனநாயகத்துக்காக 18 நாட்களாக வீதிகளில் போராடியபோது கைகட்டி நின்றன. மன்னராட்சியை தூக்கி நிறுத்த அதிநவீன போர்த் தளவாடங்களைக் கொண்டு வந்து குவித்தன. ஆனால், எந்தவொரு ஏகாதிபத்திய நாட்டின் ஆதரவு இல்லாமல், அண்டை நாடுகளின் தார்மீக ஆதரவு கூட இல்லாமல் தமது சொந்தக் காலில் நின்று தன்னந்தனியே போராடி முதற்கட்ட வெற்றியைச் சாதித்துள்ளார்கள் நேபாள மக்கள். அம்மக்களின் புரட்சிப் போரை ஆதரித்து இமயத்தின் உச்சியில் உயரும் செங்கொடி தாழாமல் தாங்கிப் பிடித்து நிறுத்த வேண்டியது உலகெங்குமுள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமை; நம் கடமை.

மு குமார்

தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரை விட

தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரை விட காகித வாக்குச் சீட்டு பெரிதா?வன்னிய சாதிவெறியர்களைக் காக்கும் 'ஜனநாயகம்'


மிழக சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட முகாசபரூர் என்ற கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோர் வாந்திபேதி நோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்ததால் வாந்திபேதி ஏற்பட்டதாக உள்ளூர் பத்திரிகைகள் வாந்தியெடுத்தன. ஆனால், முகாசபரூர் கிராம தாழ்த்தப்பட்ட மக்களோ, தங்களை ஓட்டுப் போட விடாமல் தடுப்பதற்காக வன்னிய சாதி வெறியர்கள் குடிநீரில் விஷம் கலந்திருக்கக் கூடும் எனக் குற்றஞ் சுமத்துகின்றனர்.



இதற்கு ஆதாரமாக, வன்னிய சாதி வெறியர்கள் ஒவ்வொரு தேர்தலின் பொழுதும் தங்களை ஓட்டுப் போடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததையும்; 2004இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது, தாழ்த்தப்பட்டோருக்குக் குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியின் மின் மோட்டார் அறையில் உயிருடன் நாகப்பாம்பைக் கட்டித் தொங்கவிட்டதையும் குறிப்பிடுகின்றனர்.



மேலும், ""இதுவரை ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதிகளில் அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்றுதான் நாங்கள் ஓட்டுப் போடும் நிலை இருந்து வந்தது. இந்தச் சட்டமன்றத் தேர்தலின் பொழுது, நாங்கள் வசிக்கும் பகுதியிலேயே தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் எனக் கோரி, அதில் அடைவதில் நாங்கள் வெற்றியும் பெற்று விட்டோம். இதனால் கூட, ஆதிக்க சாதி வெறியர்கள் ஆத்திரமடைந்து, குடிநீரில் நஞ்சைக் கலந்திருக்கலாம்'' என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.



இப்பகுதியில் செயல்பட்டு வரும் விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர்கள் இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டு, மக்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமிருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க நேரடி விசாரணைகளை நடத்தினர். முகாசபரூர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்துதான் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இந்த இடைபட்ட தூரத்தில் மூன்று காற்றழுத்த வால்வுகள் உள்ளன. இதிலொன்று பழுதடைந்துள்ளது. எஞ்சிய இரு வால்வுகள் உள்ள இடத்தில், அவ்வால்வுகள் வழியே பீறிட்டு வரும் தண்ணீர் படும் தரை, அதன் அருகில் உள்ள தழை, செடி, கொடிகளில் வெள்ளை நிறத்தில் மாவு படிந்திருந்தது. இதே போன்ற வெள்ளை நிறப் படிவு, தாழ்த்தப்பட்ட மக்கள் பிடித்து வைத்திருந்த நீரிலும் மிதந்தது. இதற்கு முன் இப்படிப்பட்ட படிவுகள் உருவானதில்லை எனப் பகுதி மக்கள் கூறினர். இந்த சம்பவம் நடந்து முடிந்த பின், இரண்டு, மூன்று நாட்கள் கழித்துப் பிடித்த நீரிலும், இதே போன்ற படிவு ஏற்படவில்லை. கண்ணுக்குப் புலப்பட்ட இந்த ஆதாரத்தை வைத்து, மக்கள் குற்றஞ்சுமத்துவது போல, குடிநீரில் ஏதாவதொரு இரசாயன நஞ்சைச் சமூக விரோதிகள் கலந்திருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வி.வி.மு.வும், ம.உ.பா. மையமும் வந்தன.



இவ்வமைப்பினர், தாழ்த்தப்பட்ட இளைஞர்களைத் திரட்டிக் கொண்டு, கோட்டாட்சியர் திரு. ஜான் லூஸைச் சந்தித்து, குடிநீரில் நஞ்சுப் பொருள் கலந்திருக்கக் கூடும் என்பதற்கான ஆதாரங்களைக் காட்டி, இது பற்றி விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்ட சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவரோ தாழ்த்தப்பட்டோர் வைத்த கோரிக்கைகளை அதிகாரத் திமிரோடு அலட்சியப்படுத்தியதோடு, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்வதற்குக் கூட மறுத்துவிட்டார். இந்த நிலையில், தங்களுக்கு நீதி கிடைக்காத பொழுது, தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வந்தனர்.



குடிநீரில் நஞ்சு கலக்கப்பட்டிருப்பதை முறையிட்டபொழுது, அது பற்றிஅக்கறை காட்டாமல் அலட்சியமாக நடந்து கொண்ட கோட்டாட்சியர், முகாசபரூர் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் ஒரு வாக்குகூடப் பதிவாகவில்லை என்பதைக் கேள்விப்பட்டு பதறிப் போய், மக்களைச் சமாதானப்படுத்தி, ஓட்டுப் போட வைக்க குடிநீர் வடிகால் வாரிய கீழ்நிலை அதிகாரியை அனுப்பி வைத்தார். அந்த அதிகாரியோடு ஒட்டிக் கொண்டு வந்த தி.மு.க.வைச் சேர்ந்த விருத்தாசலம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசன் தாழ்த்தப்பட்ட மக்களை மூளைச் சலவை செய்ய முயன்றார்.



அதிகார வர்க்கத்தின் இந்த முயற்சியைக் கேள்விபட்ட தோழர்கள், முகாசபரூருக்குச் சென்று, மக்கள் முன்னிலையிலேயே, ""தாழ்த்தப்பட்ட மக்கள் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடியபொழுது வராத நீங்கள்; குடிநீரில் நஞ்சு கலந்த சாதி வெறியர்களைக் கைது செய்யக் கோரிய தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்திய நீங்கள், இப்பொழுது வந்து, அவர்களை ஓட்டுப் போடச் சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது?'' என அம்பலப்படுத்தினர். அதுவரை அன்பாகப் பேசிய குழந்தை தமிழரசன், ""ஓட்டுப் போடாவிட்டால், என்னிடமிருந்தோ, அரசிடமிருந்தோ எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியாது'' என மிரட்டவே, தாழ்த்தப்பட்ட மக்களே அவரை விரட்டியடித்தனர்.



இவர்கள் ஓடிப் போன பிறகு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்தார். ""மக்களை முதலில் ஓட்டுப் போடச் சொல்லுங்கள்; மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்'' என நைச்சியமாகப் பேசினார். பகுதி தோழர்களோ, ""முதலில் குடிநீரில் நஞ்சு கலக்கப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யுங்கள்; ஓட்டுப் போடுவதா, வேண்டாமா என்பதை அதன்பிறகு மக்கள் தீர்மானித்துக் கொள்வார்கள்'' என உறுதியாகக் கூறிவிட்டனர். வழக்குப் பதிவு செய்யாமல், மக்களைச் சமாதானப்படுத்த முடியாது எனப் புரிந்து கொண்ட போலீசு கண்காணிப்பாளர், கிராம நிர்வாக அதிகாரியிடம் புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்ததோடு, இச்சம்பவம் பற்றி போலீசு துணை கண்காணிப்பாளர் தேர்தல் முடிந்த மறுநாளே விசாரணை நடத்துவார் என்றும் அறிவித்தார்.



இந்தச் சமயத்தில், ஓட்டுப் பொறுக்கி அரசியலில் புதிய வரவான விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் விஜயகாந்த் வந்தார். சம்பவத்தைக் கேட்டுக் கொண்டு அவருக்கு, சினிமாத்தனமான ஆத்திரம் கூட வரவில்லை. மாறாக, மக்களை அமைதியாக இருக்கும்படி ஊமை ஜாடை காட்டிவிட்டுப் பறந்து போனார்.



மற்ற ஓட்டுக் கட்சிகளை விடுங்கள், தாழ்த்தப்பட்டவர்களின் ஒரே பிரதிநிதி என்று தங்களைக் கூறிக் கொள்ளும் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கூட, இந்தச் சம்பவம் பற்றிக் கடுகளவும் அக்கறை காட்டவில்லை. எல்லாம் முடிந்தபின், அவர்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றுள்ள ""தலித் வரலாற்றாசிரியர்'' ரவிக்குமாரை வைத்து, இச்சம்பவம் பற்றி ""ஆழமாக'' ஆய்வு நடத்தலாம் என விடுதலைச் சிறுத்தைகள் எண்ணியிருக்கலாம். பார்ப்பன பாசிச ஜெயாவோடு கூட்டணி வைத்துக் கொள்ளும் அளவிற்கு ஓட்டுப் பொறுக்கி அரசியலில் வளர்ந்துவிட்ட விடுதலைச் சிறுத்தைகளிடம், தாழ்த்தப்பட்டவர்கள் இந்தத் துரோகத்தைத் தவிர வேறெதைப் பெற முடியும்?



சட்டசபைத் தேர்தல்கள் முடிவு வெளியாகி, புதிய அரசு அமைந்து மூன்று வாரங்கள் ஓடிப் போய் விட்டன. எனினும், நஞ்சு கலந்த குடிநீரை எடுத்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தபின் கிடைத்த முடிவுகளைக் கூட அதிகார வர்க்கம் வெளியிட மறுத்து வருகிறார்கள். இதன் மூலம், அவர்கள் உண்மையை மூடி மறைக்க முயலுகிறார்கள். உண்மையை மூடி மறைப்பதன் மூலம், தாழ்த்தப்பட்ட மக்கள் குற்றஞ்சுமத்துவது போல, அதிகார வர்க்கம் வன்னிய சாதி வெறியர்களைக் காப்பாற்ற முயலுகிறார்கள் என்ற முடிவுக்குத்தான் எவரும் வரமுடியும். அதேசமயம், முகாசபரூர் தாழ்த்தப்பட்ட மக்களோ, குடிநீரில் நஞ்சைக் கலந்த வன்னிய சாதி வெறியர்களைத் தண்டிக்கக் கோரித் தீவிரமாகப் போராடினால், அது மேலும் தங்களுக்கு ஆபத்தாக முடிந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள்.



நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் ஓட்டுக் கட்சிகள், போலீசு, அதிகாரவர்க்கம் அனைத்தும் உழைக்கும் ஏழை மக்களை, உணர்வும், உரிமையும் கொண்ட மனிதர்களாக, குடிமக்களாகப் பார்ப்பதற்குப் பதில், வெறும் ஓட்டுப் போடும் ஜடங்களாகத் தான் நடத்துவார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் இன்னுமொரு சான்று. இந்த உண்மையை உணர்த்தி, தாழ்த்தப்பட்டோரையும், பிற உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி, வன்னிய சாதி வெறியர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவும்; அவர்களைச் சட்டப்படி தண்டிக்கவும் கோரும் போராட்டங்களை நடத்துவதற்கு வி.வி.மு. முயன்று வருகிறது.



தகவல்:



வி.வி.மு., விருத்தாசலம் வட்டம்.