தமிழ் அரங்கம்

Saturday, July 8, 2006

நாங்கள் நடுநிலைவாதிகள் அல்ல

நாங்கள் நடுநிலைவாதிகள் அல்ல

பி.இரயாகரன்
08.07.2006


புலித்தேசியம் ஜனநாயகத்தை மறுக்கின்றது. புலியெதிர்ப்பு ஜனநாயகம் தேசியத்தை மறுக்கின்றது. இதற்குள் நடுநிலை என்பதும் அல்லது இதில் ஒன்றை ஆதரிக்க கோருவதுமான விமர்சனங்கள் அர்த்தமற்றவை. இந்தப் போக்குகள் அனைத்தும் மக்களுக்கு எதிரானவை. புலியை அழிப்பது ஜனநாயகமும் அல்ல, புலியெதிர்ப்பை அழிப்பது தேசியுமுமல்ல.


அண்மையில் "தாயகத்தின் கண்ணீரையும் துயரையும் உலகுக்குச் சொல்ல புலம்பெயர் படைப்பாளிகளே! வாருங்கள்" என்று புதுவை இரத்தினதுரை அழைக்கின்றார். விசித்திரமான கோணங்கித்தனமான அழைப்பு. யாரைத் தான் அழைக்கின்றார்? அவர் சார்பு ஊடகங்கள் நடத்தும் புலிப் பல்லவிக்கு அப்பால், வேறு எதைத்தான் அவர் படைக்கக் கோருகின்றார். சரி எதைத்தான் ஒரு மனிதன் சுதந்திரமாக படைக்க முடியும்?


சரி, தமிழ் மக்களின் கண்ணீர் கதைகளை உலகுக்கு சொல்வது என்பதானால், எந்த உலகத்துக்குச் சொல்வது? சரி, எந்தக் கண்ணீர் கதையைக் கூறுவது? மக்களின் கண்ணீர் பற்றி மூக்கால் சிந்தி நடிப்பதற்கு அப்பால், புலிக்கு மனிதம் பற்றிய கோட்பாடே கிடையாது. மக்களின் சமூக பொருளாதார வாழ்வு மீது எந்த சமூக அக்கறையும் அவர்களிடம் கிடையாது. புலிகளின் மாபியாத்தனத்தையும், பாசிசத்தையும் கேள்விக்கு இடமின்றி ஆதரிக்கும், மந்தைக்குரிய இழிபிறவிகளாக மக்களைக் கருதி நடத்துவதே புலிக்கோட்பாடாகும். இதற்கு வெளியில் தமிழ் மக்களின் நலன் சாhந்த பேச்சுக்கு அங்கு இடமேயில்லை. அவர்கள் மொழியில் கூறுவதானால் அதாவது "மேதகு" தலைவர் பிரபாகரன் பெயரில் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் "விடுதலைப் புலிகளை அரசியல் அனாதைகளாக்கக் கூடிய மேலும் இரு கோரிக்கைகள்" என்று புலிகள் அறிவித்து நிராகரித்த இரு கோரிக்கையும் என்ன எனப் பார்த்தால்


1.மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்.


2.மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்.


இந்த இரு கோரிக்கைகளும் "புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்" என்று கூறியவர்கள் புலிகள். மக்கள் விரோதியான புலிகள் இதை மக்களுக்கு மறுத்தார்கள். பின் மக்களுக்காக எதைத் தான் அவர்கள் தரமுடியும். மக்கள் அடிமைகள் தான். உலகுக்கு எதைப்பற்றிச் சொல்வது. அடக்கப்பட்ட அடிமை நிலையில், சுதந்திரமான மூச்சுக் கூட வெளிவர முடியா நிலையில் மக்களின் நலன் சார்ந்த செயற்பாடுகள் நடைபெறமாட்டாது. புலியைப் பயன்படுத்தி நக்கித்தின்னும் ஓட்டுண்ணிகள் தான், தமது ஓட்டுண்ணியத் தரத்துக்கு ஏற்ப இலக்கியப் பிரச்சாரம் என்ற பெயரில் புலம்பமுடியும்.


புதுவை கூறுகின்றார் "இன்று உலகம் முழுமைக்கும் நாம் அறிந்தவரையில் 40 ஊடகங்கள் ஈழத் தமிழர்களால் நடத்தப்படுகின்றன. இதைத்தவிர பல்லாயிரக்கணக்கான படைப்பாளிகள் உள்ளனர்." என்கின்றார். இதில் எது சுதந்திரமானவை. மக்கள் நலனை எவை எப்படி வைக்கின்றன. இந்த ஊடகத்தின் நிலை என்ன? பேந்துவிடுவதைத் தவிர வேறு எதையும் உயிர்ப்பிக்கும் ஆற்றலற்றது. இதற்கு எல்லாம் செய்திகள் வழங்குவது நிதர்சனம் டொட் கொம் என்ற இழிவான மலிவான கட்டுக்கதைகள் உள்ளடங்கிய புலி செய்தி ஊடகம் தான். நிதர்சனம் டொட் கொம் பெத்துப் போட்ட, புலிகளின் பாலியல் வக்கிரத்தைக் கொட்டும் நெருப்பு டொட் ஓர்க் என்ற கேடுகெட்ட இணையங்கள் தான், இந்த 40 செய்தி ஊடகங்களையும் வழிகாட்டுகின்றனவே. இந்த கேடுகெட்ட அசிங்கத்தை தேசிய விடுதலை என்று, புதுவை நன்றி விசுவாசத்துடன் தலையில் வைத்துக் கொண்டாடலாம். ஆனால் மக்கள் அப்படி அல்ல.


நெருப்பு டொட் ஓர்க் பாலியல் வக்கிரங்களை தேசியத்தின் பெயரில் வக்கிரமாக வைக்கின்றது. இந்த மாதிரியான புலி வழிகாட்டிகள் உள்ளவரை, எப்படித் தான் தாயகத்தின் கண்ணீரை உண்மையாக எடுத்துச் சொல்ல முடியும். ஜெயதேவன் போன்றவர்கள் மீதான் பாலியல் அசிங்கங்களை முகம் மாற்றி ஓட்டி தேசியத்தின் பெயரால் அரங்கேற்றுகின்ற அரசியல், எப்படித் தான் உலகத்துக்கு எந்த நியாயத்தை சொல்லும். இந்த அரசியலுக்கு தார்மீக வலு கிடையாது. ஜெயதேவன் போன்றவர்களின் அரசியலை, அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாது வக்கற்றுப் போனவர்கள், அவரை இழிவுபடுத்த பாலியல் ரீதியான அசிங்கத்தை சொந்த நீலப்பட தேசிய ரசனையுடன் செய்கின்றனர். இதைத் தான் தமிழ் தேசியம் வழிகாட்டுகின்றது என்றால், அதன் அர்த்தம் என்ன? தேசியத்தின் நியாயத் தன்மையை புலிகள் இழந்து நிற்கின்றனர் என்பதே அர்த்தம். இதற்கு வெளியில், அதாவது பாலியல் ரீதியாக தேசியத்தை நியாயப்படுத்துவதற்கு அப்பால் எந்த அரசியலும் கிடையாது என்று தான் அர்த்தம். தன்னுடைய எதிரியையே அரசியல் ரீதியாக அணுக முடியாத புலிகளின் அரசியல் வறுமையைக் கொண்டு, எப்படித் தான் தமிழ் மக்களின் கண்ணீரை உலகின் முன் வைத்துப் பேச முடியும். எதை வைத்து உலகுக்கு முன்னால் அழுவது? புதுவை நன்றி விசுவாசத்துடன் படங்களைக் காட்டி புலம்பலாம், ஆனால் அரசியல் ரீதியாகவல்ல. விரும்பினால் நிதர்சனம் டொட் கொம் வழிகாட்டி நடத்தும் நெருப்பு டொட் ஒர்க் போல் பாலியல் படங்களைப் போட்டு, உலகுக்கு பிரச்சாரம் செய்து பாருங்களேன். படுகொலைக்கு வெளியில் கருத்தை கருத்தாக பிரச்சார ரீதியாக எதிர்கொள்ள உங்களிடம் உள்ள ஓரே ஆயுதம் பாலியல் தான். சிலர் கொஞ்சம் நாகரீகமாக புலம்புகின்றனர். நிதர்சனம் டொட் கொம், நெருப்பு டொட் ஓர்க் புலிகளினுடையதல்லா (இதை அவர்களும் சொல்லுகின்றனர்) என்று கூறிக் கொள்வதன் மூலம், நாகரீகமாக நடிக்க முனைகின்றனர். அது அவர்களுடையதில்லை என்று விவாதிப்பதை விடுத்து, முடிந்தால், அந்த அரசியல் பாலியல் வக்கிரத்தை விமர்சித்து பாருங்களேன். அதை மட்டும் யாரும் செய்வதில்லை.


இன்று புலம்பெயர் செய்தி ஊடகங்களை வழிகாட்டுவது நெருப்பு டொட் ஒர்க்கும், நிதர்சனம் டொட் கொம்மும் தான். அதை வைத்துக் கொண்டு, அதை அனுசரித்துக் கொண்டு போராடக் கோருவதும், ஊடகத்தின் எண்ணிக்கையைக் காட்டி பீற்றிக் கொள்வதும் எதற்கும் உதவாது.


புதுவை ஒரு உண்மையை தனக்குத் தானே உறைக்கும் வகையில் ஒத்துக் கொள்கின்றார். "எங்களுடைய குரலை உங்களுடைய குரலினூடாக உலகத்துக்குச் சொல்லுங்கள். எங்களுக்குத் திருப்பிச் சொல்லாதீர்கள். நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதையே எங்களுக்குத் திருப்பிச் சொல்வதில் அர்த்தமில்லை. உலகுக்கு உங்கள் மொழியில் சொல்லுங்கள்." நல்லதொரு நகைச்சுவையான வேண்டுகோள். ஒரு உண்மை இப்படி அம்பலமாகின்றது. புலிகள் கட்டிவிடும் செய்திகள், தகவல்களை தமக்குள் தாம் பேசிக் கொள்வதையே புதுவை சொல்லாமல் சொல்லிவிடுகின்றார். இதைத் தாண்டி எதையும் யாரும் படைப்பதில்லை என்பதைத் தான் இங்கு மறபடியும் நாம் காண்கின்றோம். புலிக்குள் மட்டும், அவர்கள் தமக்குள் பரஸ்பரம் கூறிக்கொண்டு திருத்திபடுத்துவதற்கு அப்பால் இந்த புலி ஊடகங்கள் எதையும் செய்வதில்லை. உலகுக்கு சொல்வதற்கு முன், தமிழ் மக்களுக்கு சொல்வதற்கு கூட எதுவும் லாயக்கற்றது. மாட்டில் உள்ள உண்ணிகள் போல், சந்தர்ப்பவாத படைப்புலகம் புலியில் மொய்க்கின்றது. புதிதாக சமூக ஆற்றலுடன் படைக்க எந்த அரசியல் ஆற்றலுமற்று மண்டிக்கிடக்கின்றது. தமிழ்பேசும் மக்களுக்கு தேசியம் என்றாலே என்னவென்று தெரியாத அவலம், இதைப் போல் புலிகளின் எந்த படைப்பாளிக்கும் இதை விளக்க முடியாத அரசியல் அவலம். பிரபாகரன், புலிகள் இரண்டையும் சுற்றி மாரடிக்கின்ற ஒரு கும்பல், தனிமனித புகழ்பாடும் போர்பறையைத் தான் ஒப்பாரியாக முன்வைக்க முடியும்.


மக்களின் தேசிய வாழ்வுடன் ஒட்டும் உறவுமற்ற ஊனமான ஊமைகளின் பேச்சுத்தான் படைப்பாகின்றது. அதற்கு எந்த உயிர்துடிப்பும் இருப்பதில்லை. ஒப்புக்கு மாரடிக்கின்ற கூலி எழுத்தாளராக, சுயநலத்தின் பின்னால் நிற்பவர்கள் புலம்பத் தான் முடிகின்றது.


இந்த ஒப்புத்தனத்தை சார்ந்த உண்மையை புதுவை போகிற போக்கில் கூறிக் கொள்கின்றார். "சும்மா வெறுமனே அடித்தான் - கொத்தினான் என்று இல்லாமல் படைப்பாளியின் நெஞ்சுக்குள் ஆழப் பதிந்து இறங்குவதுபோல் சொல்ல வேண்டும். படைப்பின் மூலமே போராட்டங்கள் வெற்றி பெறுகின்றன." "அடித்தான் - கொத்தினான்" என்று புலித் தேசியம் அதையே செய்கின்ற போது, படைப்பும் அப்படித் தானே வெளிவரும். அல்லது சமாதானம் பற்றி நடிப்பதற்கு தமிழ்செல்வனின் விளம்பரப் பல்லுப் போல், தமிழ் நாட்டுச் சினிமா பாணி தேவை.


ஆழப்பதித்தல் என்கின்றீர்களே அது என்ன? "அடித்தான், கொத்தினான்" என்ற எல்லைக்குள் தேசியமே வரையறுக்கப்பட்ட நிலையில், இதைத் தாண்டி எப்படித்தான் சுயாதீனமாக சுதந்திரமாக படைப்பு வெளிவரும். வெட்டுவதும், சுடுவதும், கொத்திக் கிளறுவதும், பாலியல் வக்கிரத்தை சுமத்துவதும் சார்ந்த பொய்யும் புரட்டும் தேசியமாகிப் போன நிலையில், இந்த ஊடகங்களைச் சுற்றி பொறுக்குகின்ற கும்பல் இதற்குள் தான் மிதக்கின்றன. அன்றாடச் செய்திகள் கொத்துவதும், வெட்டுவதும், அடித்தல் பற்றியே வம்பளக்கின்றது. இதற்குள் எந்த தேசிய உணர்வும் இருப்பதில்லை. சிங்களவன் என்று ஒருமையிலும், அரசுடன் சம்பந்தப்படுத்தி அனைத்தையும் அடையாளம் காணும் கும்பல் பல்லிளித்து கொண்டாடும் நிலையில், தேசியம் இதற்குள் இசைவாகி புழுத்துக் கிடக்கின்றது. இதுவே தேசியத்தின் மொழியாகி, இதுவே படைப்பாகின்றது. மக்கள் நலன்களுடன் தொடர்பற்ற இழிசெயல்களாக, சமூக விரோத செயலாகவே மாறி நிற்கின்றது.


இந்த நிலையில் புதுவை இரத்தினதுரை கூறுகின்றார் "ஒட்டுமொத்தமாக இந்த விடுதலைப் போராட்டத்தை ஏற்கவில்லை என்று கூறுகிற படைப்பாளிகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. விடுதலைப் புலிகள் என்பது வெறும் சொல் அல்ல. விடுதலைப் போராட்டத்தின் சொல் தான் விடுதலைப் புலிகள். அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கட்டும். நானில்லாமல் விடுதலைப் போராட்டமா? வெற்றி பெறுமா? என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள்- பழைய போராளிகள் என்ற போர்வையில். அவர்கள் இருக்கட்டும்." என்ன அலட்சியமான, ஆனால் குதர்க்கமான பாசிசப் பதில். அவர்கள் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை? அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமைக்கு தாங்கள் காரணமில்லையோ? அதை ஆராய்ந்து தீர்க்க முனைவது தேசியக் குற்றமோ? விடுதலைப் போராட்டத்தை ஏற்கவில்லை என்பதை சொல்வது சரியா பிழையா என்பதற்கு அப்பால், இந்த நிலைமைக்கான அரசியல் காரணத்தை தெரிந்து அதை நிவர்த்தி செய்வதற்குரிய பொறுப்பை அலட்சியப்படுத்துகின்ற வழிகாட்டல், தேசிய விடுதலைப் போராட்டமல்ல. இதனால் எதையும் மக்களுக்காக படைக்க முடியாது.


அந்த காரணத்தை ஆராய்வதும், அதில் நியாயமான கூறுகளை அதாவது தவறுகளை சுயவிமர்சனம் செய்வதும் மட்டும் தான், உண்மையானது நியாயமானது நேர்மையானது. மாறாக அதை செய்ய மறுப்பது என்பது, நேர்மையற்ற போராட்டத்தை துதிபாடி தக்கவைக்கும சொந்தக் குதர்க்கமாகவே வெளிப்படுகின்றது. நக்கித்தின்னும் தனது சொந்த விசுவாசத்தையே இது பறைசாற்றுகின்றது.


இப்படி நக்கியபடி புதுவை இரத்தினதுரை முக்கியமான விடையத்தை கூறுகின்றார். "நீதிக்கும் அநீதிக்கும் இடையே "நடு" என்ற ஒரு வார்த்தை உண்டா? சுத்தத்துக்கும் அசுத்தத்துக்கும் இடையே "நடு" என்ற ஒருவார்த்தை உண்டோ? அளவான சுத்தம் - அளவான அசுத்தம் என்று உள்ளதோ? அது போக்கிரித்தனம். இந்தப் போராட்டத்தை எதிர்க்கிறவர்கள் நேர்மையானவர்கள். நடுநிலைமை என்பதற்கு தமிழிலே வார்த்தைகளே இல்லை. தன்னுடைய இயங்கும் தன்மையை வைத்துக்கொண்டே நடுநிலைமையாளன் உருவாகிறான். எவன் தனியே எழுதிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் மட்டும்தான் இருப்பேன் என்பவர்கள்தான் நடுநிலை பற்றி பேசுவார்கள். காலாவதியான பொருட்களை கையில் எடுத்து வைத்திருப்பார்கள். அவர்கள் புதிதாகச் செய்வதே காலாவதியான பொருட்களை வைத்திருப்பதுதான்."


இந்த விமர்சனம் நேரடியாக எம்மை நோக்கி எமக்கு மட்டும் வைக்கப்படுகின்றது. காலாவதியான பொருள் என்பது மக்கள் என்று கூறுவதும், அவர்களின் விடுதலைத் தத்துவமான மார்க்சியத்தையே. சமாதானம் அமைதி என்று நடிக்கத் தொடங்கிய காலத்தில் புதுவை இரத்தினதுரை "நான் இன்றும் மார்க்ஸீயவாதியே" என்று பத்திரிகையில் அறிவித்தவர். அவர் இன்று அந்தக் கோட்பாடு காலாவதியானது என்கின்றார். சந்தர்ப்பவாதிகள் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நக்கிப் பிழைப்பவர்கள் தான். முன்னர் புலம்பெயர் வாழ் தமிழனை வெள்ளையனை நக்கித்தின்னும் கூட்டம் என்றவர், பின் வெள்ளையனை நக்கித் திண்னும் கூட்டம் பணம் கொடுத்த போது, போராட்டத்தின் செம்மல்கள் என்றவர் இவர். இது போல் தான் காலாவதியான கோட்பாடு பற்றி அவரின் சந்தர்ப்பவாத பிதற்றலாகும். "நான் இன்றும் மார்க்ஸீயவாதியே" என்று கூறியதன் பின்னுள்ள போலித்தனத்தையம் நான் முன்பே விமர்சித்தேன். அதையும் பொருத்தமாகவே இணைத்துப் படிக்கவும்.


"சந்தர்ப்பவாதத்துடன் கூடிய பிழைப்புவாதம் பித்தலாட்டத்தை பிரகடனம் செய்கின்றது"


மக்களை வெறுக்கின்ற அவருக்கு மக்கள் கோட்பாடுகள் காலாவதியாகியிருக்கலாம். மக்களின் வாழ்வு சார்ந்து எவையும் காலாவதியாகிவிடுவதில்லை. இங்கு நடுநிலை என்பதை விடுதலைப்புலிகளை ஆதரிப்பது, எதிர்ப்பது என்ற எல்லைக்குள், வைத்து பேசுகின்றார். அவரின் பாசிச அறிவு அப்படி உள்ளது. விடுதலைப் புலிகளை விமர்சிக்கின்ற, புலியெதிர்ப்புக் கும்பலை எதிர்க்கின்றவர்களை குறித்துப் பேசுகின்றார். உண்மையில் இவர்கள் நடுநிலைவாதிகளல்ல.


புலிகளை ஆதரிக்க வெண்டும் அல்லது எதிர்க்க வேண்டும். இதேபோல் புலியெதிர்ப்புக் கும்பல் தம்மை ஆதரிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும். இப்படித் தான் இந்த இரண்டு பகுதியும், தமக்கு இடையில் வேறுபாடின்றி மாற்றுக் கருத்தையே மறுதலித்து நிற்கின்றது. உள்ளடக்கத்தில் புலியை ஆதரிப்பது தேசியம் என்கின்றனர். புலியை எதிர்ப்பது ஜனநாயகம் என்கின்றனர். மிக நுணுகிப் பாhத்தால் புலியை ஒழிப்பது ஜனநாயகம் என்கின்றனர். புலியை ஆதரிக்க மறுப்பவர்களை கொல்வது தேசியம் என்கின்றனர். இப்படி உள்ள ஒரு நிலையில் புதுவை நடுநிலை பற்றி புலம்புகின்றார். உண்மையில் நடுநிலையை ஒன்றுக்கு சார்பாக மாற்றி எடுக்க கோருகின்றார். இவர்கள் தம்மையும் ஆதரிப்பதிலலை, புலியெதிர்ப்பு அணியையும் ஆதரிப்பதில்லை என்று கூறி புலம்புகின்றார். இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களை ஆதரிப்பதாகவும், காலாவதியான கோட்பாட்டுக்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறுகின்றார்.


அவர் கூறுவது போல் "காலாவதியான பொருட்களை கையில் எடுத்து வைத்திருப்பார்கள். அவர்கள் புதிதாகச் செய்வதே காலாவதியான பொருட்களை வைத்திருப்பதுதான்" என்ற உளறுகின்றார். அதாவது ஒடுக்கப்பட்ட மக்களின் கோட்பாட்டை வைத்திருப்பதாக கூறுகின்றார். இதையே அவர் எள்ளி நகையாடுகின்றார். இதை வைத்திருப்பவர்கள் எப்படி நடுநிலைவாதிகள் என்று கூறமுடியுமா? இதை வைத்திருப்பவர்களைப் பற்றி முரண்பாடாகவே நடுநிலை என்று கூறுவது, உளறலாகவே வெளிவருகின்றது. நடுநிலைபற்றிய புதுவையின் உள்ளடகத்தில் தான், புலியெதிர்ப்பு அணியும் கருத்துரைக்கின்றது. காலாவதியான பொருளை வைத்து புதிதாக செய்வதைக் கண்டு, ஏன் மினக்கெட்டு அழவேண்டிக் கிடக்கு. நீங்கள் கருதும் காலாவதியான பொருள், மக்கள் வாழ்வு சார்ந்து புத்தம் புதிதாகவே இருக்கின்றது என்ற உண்மையே புதுவையை புலம்ப வைக்கின்றது.


உள்ளடகத்தில் பார்த்தால் நீங்கள் உங்களை அறியாமல் ஒத்துக் கொண்டது போல், நிங்கள் மட்டும் தனியாக உங்களுக்குள் பேசிக் கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்கின்றீர்கள் என்ற உண்மையை இது மறுதலித்துவிடவில்லை. அதை மாற்றக் கோரியே கருத்துரைக்கும் நீங்கள், மற்றவன் பற்றி புலம்புவது தான் முரண்பாடு.


காலாவதியான ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை உயர்த்துகின்ற கோட்பாடு சார்ந்தோர் புதுவை கூறுவது போல் "போக்கிரி"களாகவே இருக்கட்டும். வரலாறும் காலமும் யார் போக்கிரிகள் என்பதற்கு பதிலளிக்கும். புதுவை கூறுவது போல் "தன்னுடைய இயங்கும் தன்மையை வைத்துக்கொண்டே நடுநிலைமையாளன் உருவாகிறான். எவன் தனியே எழுதிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் மட்டும்தான் இருப்பேன் என்பவர்கள்தான் நடுநிலை பற்றி பேசுவார்கள்" என்று நடுநிலைபற்றிக் கூறுவதை கண்டு நகைக்கத்தான் முடியும். "தனியே எழுதிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் மட்டும்தான்" இருப்பவனைக் கண்டு, ஏன் புகைந்து வெடிக்கின்றீர்கள். 40 மேற்பட்ட ஊடகத்தை வைத்துக் கொண்டு இயங்கும் நீங்கள், தனியாக பாடுபவனைக் கண்டும், ஆடுபவனைக் கண்டும், காலாவதியான கோடபாட்டைக் கண்டு ஏன் குமுறிப் புலம்புகின்றீர்கள். போராட்டத்தை எதிர்ப்பவர்களை நேர்மையாளன் என்று கூறும் நீங்கள், உங்களை "காலாவதியான" கோட்பாடு சார்ந்து விமர்சனம் செய்பவர்களை "போக்கிரித்தனம்" என்கின்றிர்களே, இதன் அரசியல் தாற்பரியம் தான் என்ன?


நடுநிலை என்பது சாராம்சத்தில் கிடையாது. உண்மையில் புலிகளை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்று உலகத்தை இதற்குள் வரையறுத்து வைத்துக் கொண்டு கேட்பது நகைச்சுவையானது. தமிழ் மக்களின் அவலமான வாழ்வை வைத்து சூதாடுவது தான் நடக்கின்றது. விடுதலைப்புலிகள் என்றால், அதை ஏன் எதற்காக நாம் ஆதரிக்க வேண்டும்?


விடுதலைப் புலிகளுக்கும் தேசிய விடுதலைக்கும் என்ன சம்மந்தம்? தேசிய விடுதலை என்றால் என்ன? மக்களின் தேசியம் என்றால் என்ன? புலியின் தேசியம் தான் என்ன? மக்கள் போராடுகின்றனர் என்கின்றனர். மக்களுக்காகத் தான் போராடுகின்றோம் என்கின்றனர். ஆனால் அந்த மக்களுக்கு ஜனநாயகம் கிடையாது. மக்கள் வாய்பொத்தி, கண்ணைக் கட்டி, கையைக் கட்டியபின், சொல்வதை கேட்கும் அடிமைகள் தான் என்பது தான் புலியின் தேசிய சித்தாந்தம். மக்களின் சமூக பொருளாதார வாழ்வு சார்ந்த தேசியம் வேறு, புலித் தேசியம் வேறு.


போராட்டத்தை ஆதரிப்பது என்பது விடுதலைப் புலிகள் எந்தளவுக்கு மக்கள் நலனை முன்னெடுக்கின்றனர் என்பதுடன் தொடர்புடையது. அதை புதுவை விளக்க வேண்டும். அதை உலகுக்கு விளக்க வேண்டும். கிளிநொச்சி மருத்துவமனைக்கு ஒரு இலட்சம் தலைவர் கொடுத்ததை காட்டிப் பீற்றும் உங்கள் 40 ஊடகத்துறையும், ஒரு இலட்சத்தைப் போல் பல இலட்சங்களை தமிழ் மக்கள் கொடுத்துள்ளனரே அதைப்பற்றி நாம் இதனுடன் ஓப்பிட்டு சிந்திக்கின்றோம். போயும் போயும் ஒரு இலட்சத்தை பெரிதாக படம் பிடித்து காட்டுகின்றார்கள் என்றால், எப்படிப்பட்ட மக்கள் விரோதிகளாக இருக்கின்றனர் என்பதையே காட்டுகின்றது.


இராணுவம் செய்த நாலு கொலை, இனம் தெரியாத நபர்கள் செய்த சில கோரக் கொலைகள், இதைவிட்டால் புலம் பெயர்ந்தவன் பிரச்சாரம் செய்ய வேறு அரசியல் கிடையாது. அதாவது படுகொலையை விட்டால் புலிக்கு அரசியல் கிடையாது போல், மலிவான சில கோரப் புகைப்படங்களை விட்டால் பிரச்சாரம் செய்ய வேறு அரசியல் கிடையாது. இந்த நிலையில், இந்த நிலையைத் தக்கவைத்துக் கொண்டு, நிலத்துக்குள் தலையை புதைக்கத் தான் முடியும். இந்நிலையில் இவர்கள் காலாவதியான கோட்பாட்டின் நிழலைப் பற்றி புலம்புகின்றனர்.


நாங்கள் வைப்பது மக்கள் அரசியல். புலி ஆதரவுமல்லாத புலி எதிர்ப்பும் அல்லாத அரசியல். மக்களுக்கு எது தேவையோ, எதை அவர்கள் தமக்குள் சிந்திக்கின்றனரோ, அதை அரசியலாக நாம் முன்வைக்கின்றோம். நாங்கள் தனித்துவமாக மக்களின் பிரச்சனைகள் மீது போராடுகின்றோம். இதைப் புலிகளோ, புலியல்லாத புலியெதிர்ப்புக் கும்பலோ செய்வதில்லை. இது நடுநிலையல்ல. ஒரு சார்பானவையல்ல. மக்கள் சார்பானவை.


புதுவையின் குருட்டுக் கண் புலித் தேசியக் கண்ணாடிக் ஊடாக பார்ப்பது போல் அல்ல. அவர் "அப்படியான படைப்பாளிகள் எங்கும் இருப்பார்கள். நடுநிலைமை என்பது தப்பித்துக் கொள்ளுதல். நடுநிலைமையை மீறி பட்டுப்படாமல் செல்லும் போக்கும் உண்டு. பின்பக்கம் பார்த்தால் கிளிபோலும் முன்பக்கம் பார்த்தால் காகம் போலும் இருக்கும். அப்படியான படைப்பாளிகளும் இருக்கிறார்கள்." என்று இப்படி விளக்குவது அபத்தமாகும். அனைத்தையும் தமக்குள் சம்பந்தப்படுத்திவிடுவது இங்கு நிகழ்கின்றது. காலாவதியான கோட்பாடு பற்றி கூறும் இவர் தான், இப்படி கிளி காகம் பற்றி தனது சொந்தப் பார்வை கோளாற்றை இப்படி வெளிப்படுத்துகின்றார். அங்கு உண்மையில் காகமும் இருப்பதில்லை, கிளியும் இருப்பதில்லை என்ற உண்மையே நிதர்சனமானது. மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் போக்கு, வாலும் மூஞ்சையும் விதவிதமாக தெரிவதில்லை. அப்படி யாருக்குத் தெரிகின்றது என்றால், மக்களை எதிரியாக கருதி அனுதினமும் செயற்படுகின்ற அனைத்து தரப்புக்கும் இப்படித் தெரிவது இயல்பு. சொந்த அரசியல் பலவீனம், எதிரியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத அவலம், மக்கள் சார்பான எமது நேர்மையான போராட்டத்தில் தமக்கு சார்பாக வாலையும் மூஞ்சையையும் கண்டு கொள்கின்றது.


அண்மையில் சத்தியக் கடதாசி விவாதத்தளத்தில் "இரயாகரன் அவர்களே! புலி எதிர்ப்புக்கும்பல் எதிர்ப்புக்கும்பல் என்று ஆரவாரிக்கிறீர்களே? நீங்கள் என்ன புலி ஆதரவுக் கும்பலா?" என்று கேட்கின்றனர். இப்படித் தான் புதுவையும் யோசிக்கின்றார். சற்று மேலே சென்று நடுநிலைவாதிகள் என்கின்றார். சொந்த போராட்டத்தின் நியாயத்தன்மையை சொல்ல முடியாத கையறுநிலை, தேசியத்தை புரிந்து விளக்கும் எமது நிலையை நடுநிலையாகக் காட்டத் தோன்றுகின்றது. புலிகளின் தேசியம் வேறு, தமிழ் மக்களின் தேசியம் வேறு. தமிழ் மக்களின் ஜனநாயகம் வேறு. புலியெதிர்ப்புக் கும்பலின் ஜனநாயகம் வேறு.


புலித் தேசியம் தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் அவசியமில்லை என்கின்றது. புலியெதிர்ப்புக் கும்பல் தமிழ் மக்களுக்கு தேசியம் அவசியமில்லை என்கின்றது. நாங்கள் இரண்டும் தமிழ் மக்களுக்கு அவசியமானது என்கின்றோம். இரண்டுபக்க உண்மையையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள், எம்மை அங்குமிங்குமாக தேடியலைவதும், நடுநிலை என்பதும் புலி ஆதரவு என்பதும் புலி எதிர்ப்புக்கு ஆதரவு என்பதும் இன்று பொதுவான கருத்தாக வைக்கப்படுகின்றது. மாற்றுக் கருத்தே இருப்பதை மறுதலிப்பதாகும். அவர் அவர் போட்டுள்ள குருட்டுக் கண்ணாடிக்கு ஏற்ற வகையில் அரங்கில் கூத்தாடுகின்றனர்.


புதுவை மேலும் கூறுகின்றார். "இந்த விடுதலைப் போராட்டத்தைப் பற்றியான விமர்சனங்கள் உண்டு. இந்த விடுதலைப் போராட்டம் சரிக்கும் பிழைக்கும் இடையேதான் ஓடுகிறது. ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் தாயகத்திலே உட்கார்ந்து கொண்டு புல்லாங்குழல் வாசிக்கவில்லை. பூப்பறிக்கவில்லை. உயிரோடு விளையாடுகின்ற சாவோடு விளையாடுகின்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டத்தின் நியாயத்தன்மையை கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும். சரியும் பிழையும் இருக்கலாம். விகிதாசாரத்தில் எது அதிகம் என்று பார்க்க வேண்டும்.


எல்லோருக்கும் சரியானதான ஒரு போராட்டத்தை - எல்லோரும் கூடி ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்துவது என்றால் "விடுதலைப் புலிகள்" என்ற பெயரைக் கூட தலைவர் இன்னமும் வைத்திருக்க முடியாது. கதைத்துக் கொண்டே இருந்திருப்போம்.

இந்த விடுதலை என்பது வேண்டுமா இல்லையா? நாய்க்கும் மரத்துக்கும் இருக்கிற விடுதலை ஈழத் தமிழனுக்கும் வேண்டும் அல்லவா?"
புலிகள் பற்றிய விமர்சனத்தின் மீதான பொதுத் தன்மையை, அதன் உண்மையையும் மறுக்க முடியாத இன்றைய நிலையில் தான், விமர்சனம் உண்டு என்பது அண்மையில் முன்வைக்கப்படுகின்ற புலிகளின் அரசியல் மோசடியாகும். புலிகளின் மிதவாத பிரிவுகள் புதுவை இரத்தினதுரையைப் போல் கூற முனைகின்றனர். இதை ஒப்புக்கு பாடுவது நிகழ்கின்றது.


விமர்சனங்கள் உண்டு என்றால் அது என்ன? அந்த விமர்சனங்களை உங்கள் அமைப்பில் உள்ளவர்கள் எப்போது எங்கே ஏற்றுக்கொண்டார்கள்? அந்தத் தவறே என்னவென்று தெரியாத சூக்குமநிலை. உண்மையில் சூக்குமமாக நடுநிலையாக கருத்தை மையப்படுத்தி அங்குமிங்குமாக வெட்டியோடுவதே புலியின் அரசியல் மோசடியாகும். விமர்சனம் உண்டு என்றால், நேர்மையாக அதை சுயவிமர்சனம் செய்யுங்கள். அதன் அடிப்படையில் நாம் உங்களைச் சீர்தூக்கி ஆராயமுடியும்.


"சரிக்கும் பிழைக்கும் இடையேதான் ஓடுகிறது" என்றால் நடுநிலையாக ஒடுகின்றதோ? "அளவான சுத்தம் - அளவான அசுத்தம் என்று உள்ளதோ?" என்ன தடுமாறி முரண்படுகின்றீர்கள். உங்கள் சரி என்ன? பிழை என்ன? இடையில் அது என்ன? அது எப்படி ஒடுகின்றது. மற்றவனை நடுநிலை பட்டம் கட்டியபடி, ஊரையும் உலகத்தையும் ஏமாற்ற நடுநிலை வேஷம் தேவையாக இருக்கின்றது. நல்ல நடிப்பத் திறனும் மோசடித்தனம் உதவுகின்றது. சரி தவறு என்ற தெரிந்த பின்பு, எப்படி அதை வைத்துக் கொண்டு நடுவிலே ஒடுவது! தவறைச் சரி செய்ய மறுப்பது என்ன அரசியல்.


இப்படி தவறையே பாதுகாத்தபடி கூறுகின்றார் "நாங்கள் தாயகத்திலே உட்கார்ந்து கொண்டு புல்லாங்குழல் வாசிக்கவில்லை. பூப்பறிக்கவில்லை. உயிரோடு விளையாடுகின்ற சாவோடு விளையாடுகின்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். " போராட்டம் என்றால் என்ன என்பதையே இது மறுக்கின்றது. முன்பு பாலகுமார் அமைதி சமாதானம் பேசி நடித்தபோது யாழ். பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் "எமது போராளிகளுள் அநேகமானவர்கள் வயதில் கூடியவர்களாக உள்ளனர். அவர்கள் தமது மன உளைச்சல்களை ஆசைகளைக் கட்டுப்படுத்தியுள்ளனர். இங்குள்ளவர்கள் என்றால் சுதந்திரமாக விசில் அடிக்க, பீடிபிடிக்க, கள் குடிக்க முடியும். ஆனால், எமது போராளிகள் அப்படிச் செய்ய முடியாது" என்றார். என்ன மனநிலை. சுதந்திரம் பற்றி வக்கிரம். இதைத் தான் புதுவை இரத்தினதுரையும் கூறுகின்றார்.


புல்லாங்குழல் வாசிப்பதையும், பூப்பறிப்பதைக் கூட போராட்டத்தின் ஒரு அங்கமாக எற்றுக் கொள்ளாத வக்கிரம். மக்களின் வாழ்வுடன் சம்மந்தப்படாத தனிமையான மக்கள் விரோதப் போக்கு. அனைத்துவிடையமும், போராட்டதுடன் சம்பந்தப்பட்டதே. இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களின் தலைமை முக்கினாலும், இலக்கியம் பற்றி பேசினால் எப்படி இருக்கும். அதன் அவலம் சமூக மயமாகிவிடும்.


புதுவை கூறுகின்றார் "இந்தப் போராட்டத்தின் நியாயத்தன்மையை கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும். சரியும் பிழையும் இருக்கலாம். விகிதாசாரத்தில் எது அதிகம் என்று பார்க்க வேண்டும்.


எல்லோருக்கும் சரியானதான ஒரு போராட்டத்தை- எல்லோரும் கூடி ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்துவது என்றால் "விடுதலைப் புலிகள்" என்ற பெயரைக் கூட தலைவர் இன்னமும் வைத்திருக்க முடியாது." என்கின்றார்.


அந்த நியாயத்தை நீங்கள் சொல்லுங்கள்? நீங்கள் சொல்லும் நியாயம் தான் என்ன? நீங்கள் நியாயத்தை மதிக்கின்றீர்களா? மக்களின் நியாயத்தை அங்கீகரிக்கின்றீர்கள? மக்களை எப்படி நடத்துகின்றீர்கள்? விகிதாசாரத்தின் அடிப்படையில் எது அதிகம் என்று, உங்கள் சரிக்கும் பிழைக்கும் இடையில் வரையறுத்து எடுத்துக் காட்டுங்கள். எது கூட? எது குறைவு? என்று முன்வையுங்கள். தவறை ஏன் திருத்த முடியாது. பிழையை ஏன் திமிராக மறுக்கின்றீர்கள். அந்த பிழை தான் என்ன என்று நீங்கள் அடையாளம் காண்கின்றீர்களா?


"எல்லோரும் கூடி ஒரு விடுதலைப் போராட்டத்தை" ஏன் நடத்த முடியாது என்பது நகைச்சுவையான வாதத்துக்கு அப்பால், இது வெட்கக் கேடானது. மக்களின் நலனை முன்வைக்கும் படியே நாம் மீண்டும் மீண்டும் கோருகின்றோம். நிதர்சனம் டொட் கொம் நெருப்ப டொட் ஓர்க்கும் நடத்துகின்ற அரசியல் இழிநிலைக்கு நீங்கள் இணங்கி போகும் வரை, விடுதலைப் போராட்டம் மக்களுக்கு எதிரான அனைத்துடனும் சங்கமமாகின்றது.

"முழுமையான விடுதலைக்கான எல்லைகளைத் தொட்டு நிற்கும் தூரத்தில் நிற்கிறோம் நாம்.

உங்களது விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

விடுதலைப் போராட்டத்தின் பக்கத்தில் எரிகின்ற நெருப்புக்குப் பக்கத்தில் தயவு செய்து தண்ணீர் ஊற்றிவிடாதீர்கள். தீக்குளித்துக் கொண்டிருக்கிற தேசத்திலிருந்து நாம் இதைக் கேட்கிறோம்."


நீங்கள் விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு அதை நடைமுறைப்படுத்துங்கள், நாங்கள் உங்களை ஒருநாளும் அணையவிட மாட்டோம். "உங்களது விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்." என்ற சொல்லி மக்களை அடிமைப்படுத்துவதை, அவர்களின் வாழ்வை இழிவுபடுத்துவதை எப்படி நாம் அனுமதிப்பது.


மக்களுக்காக போராடுங்கள். தியாகங்களை மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் இணையுங்கள். அப்போது அதைப் புலிகள் செய்தால், அதன் தலைவர்கள் அதற்கு உண்மையாக இருந்தால் வாழ்வார்கள். இதைவிடுத்து புலிக்காக தனிமனிதனுக்காக மட்டும் சிந்தித்தால், அதை தமிழ் மக்கள் ஒருநாளும் ஆதரிக்க மாட்டார்கள். தமிழ்மக்களுக்காக அனைத்தையும் மாற்றுங்கள். மக்களின் சமூக பொருளாதார உறவுகளில் இருந்து தேசியத்தை முன்வையுங்கள்.


Friday, July 7, 2006

தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்சாரம்

தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்சாரம் : புரட்சிப் பாதையில் பீடுநடை

ட்டுப் பொறுக்கிகளின் அனல் பறக்கும் பிரச்சாரத்துக்கிடையே, ""ஓட்டுப் போடாதே! புரட்சிசெய்!'' என்ற முழக்கத்துடன் தமிழகமெங்கும் நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரத்தை வீச்சாக கடந்த ஏப்ரல் மே மாதங்களில் நடத்தின. ஓட்டுப் போடுவதும் ஓட்டுப் போடாமல் தேர்தலைப் புறக்கணிப்பதும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை. ஆனால், தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம் செய்வதையே ஏதோ சட்டவிரோத தேசவிரோத பயங்கரவாதச் செயலாகச் சித்தரித்து, போலீசு பல பகுதிகளில் தடைவிதித்ததோடு, முன்னணியாளர்கள் மீது பொய்வழக்கு சோடித்து கைது செய்து சிறையில் அடைத்தது.


ஓசூரில் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம் செய்த "குற்றத்திற்காக பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த பரசுராமன், சீனு. இரவிச்சந்திரன் ஆகிய தோழர்கள் அரசைக் கவிழ்க்கச் சதி செய்ததாக பொய் வழக்கு சோடிக்கப்பட்டு சிறையிடப்பட்டனர். திருப்பத்தூர் அருகே கந்திலியைச் சேர்ந்த வி.வி.மு. தோழர் பெரியசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றாம்பாளையம் வி.வி.மு. தோழர் சக்தி ஆகியோர் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டு, பொய் வழக்கு சோடிக்கப்பட்டு சிறையிடப்பட்டனர். தர்மபுரியில் ""போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்!'' என்ற அறைகூவலுடன் தட்டி கட்டிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதவிர துண்டுப் பிரசுரங்களையும், ""ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!'' என்ற சிறு வெளியீட்டையும் பிரச்சாரம் செய்து விநியோகித்த போதும் பல தோழர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். கோவை, திருச்சி, உடுமலை, சிவகங்கை, கடலூர், நெய்வேலி ஆகிய ஊர்களில் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம் சட்டவிரோதமானது என்று எழுத்துப்பூர்வமாக அறிவித்த போலீசு, துண்டுப் பிரசுரம் விநியோகிக்கக் கூட தடை விதித்தது. இருப்பினும் இச்சட்ட விரோத அடக்குமுறை அச்சுறுத்தல்களைத் துச்சமாக மதித்து தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்சாரத்தை இப்புரட்சிகர அமைப்புகள் தமக்கே உரித்தான வீரியத்தோடு நடத்தியுள்ளன.


""ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!'' எனும் சிறு வெளியீடு ஏறத்தாழ 40,000 பிரதிகள் இப்புரட்சிகர அமைப்புகளால் மக்களிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பல வடிவங்களில், பல பத்தாயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்கள் மக்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளது. சென்னை, தஞ்சை, மதுரை, நெய்வேலி, நாமக்கல், ஓசூர் ஆகிய நகரங்களில் 15க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களும் பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன.


திருச்சியில் தெருமுனைக் கூட்டங்கள் கூட தடை விதிக்கப்பட்ட நிலையில், தேர்தல் புறக்கணிப்பு அரசியல் முழக்கங்கள் ஒட்டப்பட்ட பெரிய அட்டைப் பெட்டிகளைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு பேருந்து நிலையம், கடைவீதிகளில் பிரசுரங்களை விநியோகித்தபடியே தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். புதிய வடிவிலான இப்பிரச்சாரத்தை உழைக்கும் மக்கள் ஆர்வத்துடன் வரவேற்றதோடு, சில நாளேடுகளும் இதனை புகைப்படத்துடன் செய்தியாக வெளியிட்டன. இதே பாணியில், விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வி.வி.மு. தோழர்கள் பிரச்சாரம் செய்தது சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்றது.


திருச்சி உறையூர் பகுதியில் தெருநாய் ஒன்றைக் குளிப்பாட்டி, வேட்பாளரைப் போல வேட்டி துண்டு மாலை அணிவித்து தட்டு வண்டியில் அமர்த்தி, ""இதோ, உங்கள் வேட்பாளர் உங்களை நாடி வருகின்றார்'' என ஒலிபெருக்கியில் அறிவித்து தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக தோழர்கள் இழுத்து வந்தனர். விநோதமான இந்த வேட்பாளரை மக்கள் கூடி நின்று பார்த்து கை கொட்டி சிரித்தபோது ""நீங்கள் போடும் வாக்கு, நாய்க்கு போடும் வாக்குதான்; உலக வங்கியின் உத்தரவுக்கு விசுவாசமாக வாலாட்டுவதுதான் ஓட்டுக் கட்சிகளின் வேலை'' என்று உரையாற்றிய தோழர்கள், போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டிய அவசியத்தை விளக்கினர். இந்த நூதன பிரச்சாரம் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றதோடு, புரட்சிகர அரசியலை மக்களின் நெஞ்சங்களில் விதைப்பதாக அமைந்தது.


கோவை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமான பவானி ஆற்றை காகித ஆலை முதலாளிகளும் சாயப்பட்டறை அதிபர்களும் நஞ்சாக்கி நாசப்படுத்தும் கிரிமினல் நடவடிக்கையை எதிர்த்து, இப்பயங்கரவாதிகளை ஓட்டுச்சீட்டால் தண்டிக்க முடியாது; மக்கள் சர்வாதிகார மன்றங்கள் மூலம்தான் தண்டிக்க முடியும் என்பதை விளக்கி கோவை தோழர்கள் ""வேன்'' மூலம் தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் வட்டாரங்களில் விரிவான பிரச்சார இயக்கத்தை நடத்தினர். உழைக்கும் மக்கள் இப்பிரச்சார இயக்கத்தை உற்சாகமாக வரவேற்று ஆதரித்ததோடு, தேர்தலைப் புறக்கணித்து பயங்கரவாத முதலாளிகளை எதிர்த்துப் போராட உறுதியேற்றுள்ளனர்.


ஓட்டுப் பொறுக்கிக் குண்டர்களின் அச்சுறுத்தல்கள், போலீசின் அடக்குமுறை கைதுகள் என அனைத்தையும் எதிர்கொண்டு, உழைக்கும் மக்களின் பேராதரவோடு புரட்சிகர அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்சார இயக்கம் தமிழகமெங்கும் புரட்சிப் பயலாக வீசியுள்ளது. கோடிகோடியாய் வாரியிறைத்து ஓட்டுப் பொறுக்கிகள் நடத்திய ஆரவாரப் பிரச்சாரத்துடன் ஒப்பிடும்போது, இது மிகக் குறைவானதுதான் என்றாலும், இப்புரட்சிகர அரசியல் பிரச்சாரம் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் மிக உயர்வானது.


பு.ஜ. செய்தியாளர்கள்

Tuesday, July 4, 2006

பங்குச் சந்தை வீழ்ச்சி தேசியத் துயரமா?

பங்குச் சந்தை வீழ்ச்சி தேசியத் துயரமா?

ந்திய நாட்டைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, மே 22ஆம் தேதி வழக்கம் போலவே விடிந்து, வழக்கம் போலவே முடிந்துபோன சாதாரண நாள். ஆனால், பங்குச் சந்தை தரகர்களோ அந்த நாளை, ""கருப்பு திங்கட்கிழமை'' என அழைக்கிறார்கள். அன்றுதான், வீங்கிப் போய்க் கொண்டே இருந்த மும்பய் பங்குச் சந்தை, 1,100 புள்ளிகள் சரிந்து விழுந்தது. பங்குச் சந்தை சூதாட்டத்தின் தலைநகராக விளங்கும் அகமதாபாத்தில் திவாலான பங்குச் சந்தை வியாபாரிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க, அந்நகரிலுள்ள கங்காரியா ஏரியைச் சுற்றிலும் போலீசாரைக் குவிக்க வேண்டிய அளவிற்கு, இந்தச் சரிவு கடுமையாக இருந்தது. இந்தச் சரிவினால், முதலீட்டாளர்களுக்கு ஏறக்குறைய ஐந்து லட்சம் கோடி ரூபாய் நட்டமேற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.வழக்கம் போலவே, பெரிய முதலைகள் யாரும் இந்தச் சரிவினால் போண்டியாகிவிடவில்லை. நேரடியாகவும், பரஸ்பர நிதி நிறுவனங்களின் மூலமும் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த நடுத்தர வர்க்கப் பேராசைக்காரர்களின் தலையில் தான் இந்த இடி இறங்கியது.மும்பய் பங்குச் சந்தையின் வீக்கத்திற்கு எந்த அந்நிய நிதி நிறுவனங்கள் காரணமாக இருந்தனவோ, அவையேதான் இந்தச் சரிவுக்கும் காரணமாக இருந்தன. அமெரிக்க நாட்டில் வங்கிகளின் வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டதையடுத்து, இந்த நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் போட்டிருந்த முதலீட்டில் கணிசமான தொகையைத் திரும்பப் பெற்றுக் கொண்டு பறந்துவிட்டன.இது ஒருபுற மிருக்க, பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அந்நிய நிதி நிறுவனங்கள் தங்களின் இலாபத்தில் வெறும் 10 சதவீதத்தைத்தான் வரியாக கட்டி வருகின்றன. சிறு முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தச் சலுகையை (இலாபத்தின் மீது 10 சதவீத வரி) அந்நிய நிதி நிறுவனங்களும் அனுபவித்து வருவதை ஏற்றுக் கொள்ளாத மைய அரசின் நேரடி வரி விதிப்பு வாரியம், ""சிறு முதலீட்டாளர்கள் யார்?'' என்பதைக் கண்டுபிடிப்பதற்குப் புதிய வரையறைகளைத் தயாரித்து, அதனைச் சுற்றறிக்கையாக அனுப்பியிருக்கிறது.இந்த வரையறைகளின்படி அந்நிய நிதி நிறுவனங்கள் தினசரி வர்த்தகர்களாகக் கருதப்படுவதோடு, அந்நிறுவனங்கள் 30 சதவீதம் அளவிற்கு வரி கட்ட வேண்டியிருக்கும் என அந்தச் சுற்றறிக்கை சூசகமாகக் குறிப்பிட்டுள்ளதாம். இந்தச் சுற்றறிக்கைக்கு எதிர்வினையாக அந்நிய நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பங்குகளை விற்கத் தொடங்கியதையடுத்துதான் இந்தச் சரிவு ஏற்பட்டதாகப் பங்குச் சந்தை தரகர்களே கூறுகின்றனர்.இந்தச் சரிவை ஏற்படுத்திய அந்நிய நிதி நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நிதியமைச்சர் ப.சிதம்பரமோ, ""நேரடி வரி விதிப்பு வாரியத்தின் சுற்றறிக்கைக்கும், அந்நிய நிதி நிறுவனங்களுக்கும் சம்பந்தம் கிடையாது'' என அறிக்கைவிட்டு, இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்த அந்நிய நிதி நிறுவனங்களின் காலைப் பிடித்தார்.அந்நிய நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பங்குகளை விற்றதை, வெறும் வர்த்தக நடவடிக்கையாகப் பார்க்க முடியாது. அந்நிய நிதி நிறுவனங்களின் விருப்பத்திற்கு எதிராக எதையும் செய்யக் கூடாது என இந்திய அரசுக்கு அந்நிறுவனங்கள் வெளிப்படையாக விடுத்துள்ள மிரட்டல் இது. அன்று ஒரு கிழக்கிந்திய கம்பெனியின் மிரட்டலுக்கு அடிபணிந்து கிடந்த சுதேசி மன்னர்களைப் போல, இன்று அந்நிய நிதி நிறுவனங்களின் மிரட்டலுக்கு இந்த "சுதேசி' ஆட்சியாளர்கள் அடிபணிந்து கிடக்கிறார்கள்.மேலும், இந்த அந்நிய நிதி நிறுவனங்களின் விருப்பப்படி, ""முழு முதலீட்டு நாணய மாற்று'' என்ற நிதி சீர்திருத்தத்தை அமல்படுத்துவதற்கு மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் துடியாய்த் துடிக்கிறார்கள். இந்தச் சீர்திருத்தம் ஏற்கெனவே நடைமுறைக்கு வந்திருந்தால், இந்தப் பங்குச் சந்தை சரிவையடுத்து, இந்திய நாடே போண்டியாகக் கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கும். இந்த நிதிச் சீர்திருத்தத்தைப் பயன்படுத்திதான், 1997இல் தென் கிழக்காசி நாடுகளை, அந்நிய நிதி நிறுவனங்கள் போண்டியாக்கின. இப்பொழுது தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு தப்பியுள்ளது.மேல்தட்டைச் சேர்ந்த வெறும் 2 சதவீத இந்தியர்கள்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றனர். இவர்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை, ஏதோ நாடே மூழ்கிவிட்டது போல, முதலாளித்துவ பத்திரிகைகள் துக்கம் தொண்டையை அடைக்க எழுதிக் குவித்தன. மும்பய் பங்குச் சந்தை சரிவதற்கு பன்னிரெண்டு நாட்களுக்கு முன்னதாக, மே 9ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில் மட்டும், 10 பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்கள். இதனை எந்த "தேசிய' பத்திரிகைகளிலாவது நீங்கள் படித்ததாக நினைவு கூற முடியுமா?மைய அரசின் உணவுத்துறை அமைச்சர் சரத்பவார், 1998க்கும் 2003க்கும் இடைபட்ட ஐந்து ஆண்டுகளில் மட்டும், நாடெங்கிலும் ஒரு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போயிருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். பங்குச் சந்தை சரிவைப் பற்றி, ப.சிதம்பரத்தைக் கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்ட பத்திரிகையாளர்களுக்கு, இந்தத் தற்கொலைச் சாவுகள் தீண்டத்தகாதவை ஆகிவிட்டன.மும்பய் பங்குச் சந்தை அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பகுதியில் மட்டும், கடந்த ஒரே ஆண்டிற்குள் (ஜூன் 2005 தொடங்கி மே 2006க்குள்) 520 பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அப்பகுதியில் கடந்த மூன்று மாதத்திற்குள் தற்கொலை செய்து கொண்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 220. தாராளமயத்தின் பின், விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் பற்றிய புள்ளி விவரத்தில் சரிவே ஏற்படவில்லை.மும்பய் பங்குச் சந்தையின் சரிவைத் தடுத்து நிறுத்த, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கஜானாவைத் திறந்து வைத்திருப்பதாக அறிவித்தார், ப.சிதம்பரம். தங்கள் இலாபத்தின் மீது கூடுதல் வரி விதிக்கக் கூடாது என்ற பன்னாட்டு நிறுவனங்களின் மிரட்டலுக்கு, இந்திய அரசு உடனடியாக அடிபணிந்தது.ஆனால், சாவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ள இந்திய விவசாயிகள், ""தங்களுக்குக் குறைந்த வட்டியில் அரசாங்கம் கடன் கொடுக்க வேண்டும்; விதைகள், உரம், பூச்சி மருந்து ஆகிய உள்ளீடு பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும்; விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலையை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும்'' எனக் கடந்த பதினைந்து ஆண்டுகளாகக் கோரி வருவது மட்டும் இந்தச் ""செவிடர்களின்'' காதில் விழவில்லை.விதர்பா பகுதியைச் சேர்ந்த 22 இலட்சம் விவசாயிகளுக்கு வங்கிகள், கூட்டுறவு சொசைட்டிகள் மூலம் கடன்தரப் போவதாக கடந்த ஆண்டு மகாராஷ்டிரா அரசு அறிவித்தது. இந்த ஆண்டோ, விதர்பா பகுதியைச் சேர்ந்த 12 இலட்சம் விவசாயிகளுள் 8 இலட்சம் விவசாயிகளுக்கு அரசாங்கக் கடன் தரப்போவதாக அறிவித்திருக்கிறது. மீதமுள்ள 4 இலட்சம் விவசாயிகள் யாரிடம் போய் கடன் வாங்குவது என்பது ஒருபுறமிருக்க, அரசாங்கமே 10 இலட்சம் பருத்தி விவசாயிகளை மாயமாய் மறையச் செய்துவிட்டது. அரசாங்கம் அறிவிக்கும் கடன் திட்டங்களே, பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகளைக் கந்துவட்டிக் கும்பலிடம் மாட்டி விடுகிறது என்பதே உண்மை.விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிவிடும் கந்துவட்டியை ஒழிக்க, மகாராஷ்டிரா அரசு புதிய சட்டமொன்றைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டம் உள்ளூர் அளவில் கடன் கொடுக்கும் சிறிய லேவாதேவிக்காரர்களை வளைத்துப் பிடித்ததே தவிர, பெரிய முதலைகளைக் கண்டு கொள்ளவேயில்லை. அதேசமயம், பருத்தி விவசாயிகளுக்கு அரசாங்கக் கடனும் கிடைக்காமல் போகவே, அவர்கள் புதிய வகையான கந்துவட்டிக் கும்பலிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள்.பருத்தி விவசாயிகளின் வீடு தேடி வந்து கடன் கொடுக்கும் இக்கந்து வட்டிக் கும்பலை, விவசாயிகள் ""அண்ணா'' என அன்போடு அழைக்கிறார்கள். ஆனால், இந்த ""அண்ணன்மார்கள்'' கடனை வசூலிப்பதில் தங்கள் ""தம்பிகளிடம்'' எள்ளளவும் கருணை காட்டுவதில்லை. பருத்தி விதைப்பு தொடங்கும் ஜூன் மாதத்தில், இந்த அண்ணன்களிடம்ரூ. 10,000/ கடன் வாங்கினால், அடுத்த ஆறு மாதத்திற்குள்ரூ. 15,000/ திருப்பித் தரவேண்டும். இல்லையென்றால், இந்த அண்ணன்மார்கள், விவசாயிகளின் நிலத்தையோ, உழவு மாடுகளையோ, வீட்டையோ தங்க ளுக்குப் பிடித்திருப்பது எதையோ, அதை விவசாயிகளிடமிருந்து பறிமுதல் செய்துவிடுவார்கள்.இப்படி ஒரு கடன்காரக் கும்பலிடமிருந்து தப்பிக்க இன்னொரு கடன்கார கும்பலிடம் மாட்டிக் கொண்டு சாக வேண்டிய நிலைக்குப் போய்விட்டது, விவசாயிகளின் வாழ்க்கை. கடனில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பது என்ற பெயரில், அவர்களைப் பிச்சைக்காரர்களைப் போல அவமானப்படுத்துகிறது, மகாராஷ்டிர மாநில அரசு. கோல்ஜாரி கிராமத்தைச் சேர்ந்த துளசிராம் சவான் என்ற விவசாயிக்குக் கிடைத்த நிவாரணம் 78 ரூபாய்தான். இந்தக் கிராமத்தில் வெறும் ஐந்து ரூபாயை நிவாரணமாகப் பெற்ற விவசாயிகள் கூட இருக்கிறார்கள் என்கிறார், அவர். இந்த "நிவாரணத்தை'க் கூட அரசாங்கம் தனது சொந்தப் பணத்தில் இருந்து கொடுக்கவில்லை. விதர்பா விவசாயிகளிடமிருந்து பருத்தியைக் கொள்முதல் செய்தபொழுது பிடித்துக் கொண்ட பணத்தில் இருந்து கொடுத்துவிட்டு, தன்னைத் தர்மவானாகக் காட்டிக் கொள்கிறது, ஆளும் கும்பல்.விவசாயிகளுக்கு வழங்கப்படும் இந்த அற்ப நிவாரணத்தோடு, பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும் அரசாங்கம் கொடுக்கும் வரிச் சலுகைகளை ஒப்பிட்டுப் பாருங்கள். அப்பொழுதுதான் இந்திய ஜனநாயகத்தின் உண்மை முகத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.பங்குச் சந்தை, தங்க நாற்கரணச் சாலை, மேம்பாலங்கள், தகவல் தொழில் நுட்ப பூங்காங்கள் ஆகியவற்றின் மினுமினுப்பில் விவசாயிகளின் துயரம் நிறைந்த வாழ்க்கை மூடிமறைக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் கடன் வாங்கி, அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் விவசாயிகளின் துயரம், அவர்களது சொந்தத் துயரம் போலவும்; மேட்டுக்குடி பங்குச் சந்தை சூதாட்டக்காரர்களுக்கு ஏற்படும் நட்டம் தேசியத் துயரம் போலவும் சித்தரிக்கப்படுவதைவிட, மோசடித்தனம் வேறெதுவும் இருக்க முடியுமா?மு குப்பன்

Monday, July 3, 2006

இராஜீவ் கொலை பற்றிய குறிப்புகள்

இராஜீவ் கொலை பற்றிய குறிப்புகள்

1991 முதல் சமரில் எழுதிய சில கட்டுரைகள்


இரயாகரன்


வாசகர்களும் நாங்களும்


சமர் 03


ரு தேசவிடுதலைப் போராட்ட காலகட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார் என்ற ஒரு மிகப்பெரும் தத்துவார்த்தப் பிரச்சனை தொடர்பாக "முரண்பாடு பற்றி" என்ற நூலில் மாவோ தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். மக்கள் மத்தியிலுள்ள தவறிழைப்பவர்களையும் மக்கள் அல்லாத ஒரு வர்க்கத்தினுடைய பிரதிநிதிகளையும் ஒரே பார்வையலிருந்து நாம் பார்க்க முடியாது. இந்த நிலையில் "மக்கள் யார்" துரோகிகள் யார்" எனத் தீர்மானிப்பது என்பது ஒரு பக்கப் பிரச்சனை. ஆனால் எந்த வகையிலும் ஒரு தேசவிடுதலைப் போராட்டக் காலகட்டத்தில் அதிகார வர்க்கத்தின் பக்கத்திலும். ஏகாதிபத்தியத்தின் பக்கத்திலும் சார்ந்து நிற்கின்ற எந்த சக்திகளையும் மக்கள்- என்ற வரையறைக்குள் அடக்கி விடமுடியாது. இந்த வகையில் தான் நாம் குறிப்பிட்ட பத்மநாபா, சிறிசபாரத்தினம், உமாமகேஸ்வரன் போன்ற நபர்களை பார்க்கிறோம. "மக்கள்" என்ற வரையறைக்குள் அடக்க முடியாத இந்த நபர்களை எவ்வாறு சமூகத்திலிருந்தும், மக்கள் மத்தியிலிருந்தும் அகற்றுவது என்பது குறித்த ஒரு பிரச்சனை ஆகும். அது பற்றி நாங்கள் இங்கு விவாதிக்கவில்லை. ஆனால் இவ்வாறான நபர்கள் தமக்கிடையில் உள்ள உள் முரண்பாடுகள் காரணமாக அழிக்கப்படும் போது அவர்களுடைய இறப்பு அநாவசியமானது என்றோ அல்லது அதற்காக ஒப்பாரி வைப்பதோ தேவையற்றது ஆகும். மேலும் ஒரு உயிரின் கொலைக்காக கண்ணீர் வடிக்கும் ஆன்மீகவாதத்தின் அதீத மனிதாபிமான தன்மை வாய்ந்ததாகும். இப்போது தூண்டிலில் (பத்திரிகை) நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ராஜீவ் கொலை தொடர்பான ஆக்ரோசமான ஆனால் அநாவசியமான விவாதங்கள் தொடர்பாகவும் எமது கருத்து இதுவே!


ராஜீவ் கொலை தொடர்பாக


சமர் 04


ராஜீவ் கொல்லப்பட்டது வெறும் பழிவாங்கல் நடவடிக்கையல்ல, அதே நேரம் அந்தக் கொலையை செய்தது புலிகள் தான் என்று நீங்கள் எப்படி கூறுகின்றீர்கள் எனப் புரியவில்லை? என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இக் கொலை தொடர்பாக இந்திய ஆளும் வர்க்கத்தின் முதலாளித்துவ தொடர்பு சாதனங்களினூடாகவே பொதுவான தகவல்கள் வெளிவந்த போதிலும. விடுதலைப்புலிகள் தான் இக்கொலையைச் செய்திருக்கின்றனர் என்பதிற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் பல தற்போது இந்தியாவில் வெளியாகியிருகிறன. இங்கு கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியும், கொலையாளியும் ஆயிரக்கணக்கான மக்களை கொலை செய்தும், அவர்களின் ஆதிக்கதிற்கு கீழ் உள்ள மக்களை மரணத்திற்கு தள்ளி தாம் ஏகபோகத்தை அனுபவித்தார்கள். ராஜிவைக் கொலை செய்தது விடுதலைப்புலிகள் தான் என்பதை பிரபாகரன் உரிமை கோரினால் தான் ஏற்றுக்கொள்ளலாம் என்பதில்லை. ராஜீவ் காந்தியை கொலை செய்ய வி-பி-சிங்கின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திலேயே சிவராசன் ஒத்திகை பார்த்ததையும் ராஜீவ் கொலை செய்யப்பட்ட இடத்தில், பிரச்சார மேடையருகில் விடுதலைப்புலிகளின் சிவராசனும் அவனது சகாக்களும் நின்றதும், குண்டு வெடித்ததும், இந்தியபுலனாய்வுத் துறையால் வெளியிடப்பட்ட தகவல்களும், இறுதியாக கொலையாளிகளின் மறைவிடம் பெங்களுரில் முற்றுகைக்கு உள்ளான போது அவர்கள் தற்கொலை செய்துகொண்டதும் உண்மை. ஏன் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் ராஜீவ்காந்தியை கொன்றது நாங்கள் இல்லை என்று அறிவித்ததும் உண்மைதான். ஆனால் கொலையை செய்து முடித்த சிவராசன், சுபா போன்றோர் தமது அமைப்பு இல்லை என்று எந்த சந்தர்ப்பத்திலும் பாலசிங்கமோ-பிரபாகரனோ குறிப்பிடவில்லை.


ராஜீவ் கொலைக்கு அரசியல் காரணம் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளீர்கள் விடுதலைப்புலிகள் என்ற தரகுமுதலாளித்துவ பாசிசக்கும்பலுக்கும் ராஜீவ்காந்திக்கும் இடையிலான முரண்பாடு என்பது பல்வேறு அரசியல் .பூகோள, இராணுவ நலன்களுக்கு உட்பட்டதே! இலங்கை-இந்தியா இந்தியா-பாக்கிஸ்தான் ஆகியவற்றிற்கிடையிலான முரண்பாடுகளுடைய அரசியல் அடிப்படையும் விடுதலைப்புலிகள்-இந்திய அரசு ஆகியவற்றின் நலன்களுக்கு இடையிலான அரசியல் அடிப்படையும் ஒரே பிரச்சனைத்தளத்திருந்தே பார்க்கபட முடியும். இது தவிர புலிகளின் இராணுவ நலன்களும் இதற்கு உட்பட்டதே! இந்தியாவின் பிராந்திய வல்லரசு மனோபாவம், ஏகாதிபத்தியங்களுடனான இந்தியாவிற்கு இருந்த சுயாதீனமுள்ள உறவும், இந்திய புலிகள் முரண்பாட்டுக்கு மேலும் வலுவுள்ள காரணங்களாக அமைந்திருந்தன. இது தவிர ராஜீவ் கொலையினூடாக சாதிக்கக்கூடியதாக இருந்ததும் குறிப்பிடத் தக்கது.


இந்திய தேசியத்தை கட்டிகாத்து வரும் நேரு பரம்பரையின் இறுதி நாயகன் தெற்காசிய தேசியத்தின் கவர்ச்சி மிகுந்த தலைவன், இவரை கொலை செய்வதன் மூலம் மேலும் இந்திய தேசியத்தையும், தெற்காசியாவில் இந்தியாவின் உறுதியான ஆதிக்கத்தையும் குலைக்க முடியும். உங்களது இந்தக்கூற்றை சரியென்று கூறினால் துரோகத்தனம் பிழையென்று கூறினால் வரட்டுத்தனம். இந்தியாவானது, தனது தேவைக்கு அதிகமான சந்தையை கொண்டுள்ள ஒரு நாடு. இந்த ஒரு காரணம் இந்தியாவுற்கு வலுவையும், சுயாதீனத்தையும் கொடுத்துள்ளது. இந்திய தரகு முதாலாளித்துவம் ஏனைய மூன்றாம் உலக நாடுகளிலுள்ள தரகு முதலாளித்துவத்தை விட சற்று வித்தியாசமான இயல்புகளை, இதன் அடிப்படையிலேயே கொண்டுள்ளது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான உள்முரண்பாடுகளை தனது நலன்களுக்கு சாதகமாக இந்திய தரகு முதலாளித்துவம் பாவித்துக்கொள்கிறது. எந்த ஏகாதிபத்தியம் இந்திய தரகு முதலாளித்துவத்தின் நலன்களை கட்டுபடுத்த முயல்கிறதோ, தரகு முதலாளித்துவம் இன்னொரு ஏகாதிபத்தியத்துடன் குறித்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறவை வளர்த்துக்கொள்கிறது. இது இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ஓரு சுயாதீனம் இருப்பதைப் போன்று வெளித்தோற்றம் ஒன்றை கொடுக்கின்றதே ஒழிய உண்மையில் இந்த ஆளும் வர்க்கம் இந்திய தேசியத்திற்கு எதிரானதே! இந்தியாவிற்கு இருக்கின்ற இந்த சுயாதீனத்தின் அடிப்படையில் இருந்து எழுகின்ற பிராந்திய வல்லரசு மனேபாவமும், தெற்காசியாவின் மொத்த நலனுக்கும் எதிரானது. இதுவே எமது கருத்து!


80 கோடி மக்களின் வாழ்வுடன் விளையாடியவர்கள் நேரு பரம்பரையினர். தமிழகத்தில் பிரிவினைவாதம் வளர காரணமாக இருந்தவர்கள். தெலுங்கானா மக்களின் சுயநிர்ணய உரிமையை நசுக்கியவர்கள் கஷ்மீர் மக்களை யுத்தநிலைக்கு தள்ளியவர்கள். பஞசாப்பில் காங்கிரஸ் என்றாலே காறி உமிழ்கின்ற அளவுக்கு காங்கிரசின் தேசியத்தன்மை வளர்ந்து உள்ளது அசாமில் தோன்றிவுள்ள பதட்டநிலை வடகிழக்கிந்தியாவில் தோன்றியுள்ள பிரிவினைவாதப் போக்கு இவற்றை எல்லாம் நோக்கும் போது, இந்திய தேசியம் என்றால் என்னவென்று கேட்கத்தோன்றுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் பாக்கிஸ்தானுடன் மூன்று யுத்தத்தை நடாத்தியது, சீனாவுடன் யுத்தம் நடத்தி தோல்வியை கண்டது, பங்களாதேசத்தினை சூறையாடியது, ஈழமக்களை கொன்று குதறியது, பூட்டான் மீது ஏற்படுத்தும் நெருக்கடி, நேபாளத்திற்கு எதிரான பொருளாதார தடை இதையெல்லாம் நோக்கும்போது தென்கிழக்காசியாவில் இந்திய விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட ஒரு பேட்டை ரவுடியாக பரிணமிப்பதை பார்க்கலாம்.


எமது கட்டுரையில் தென்கிழக்காசியா விடுதலையை நோக்கி.... என்று குறிப்பிட்டிருப்பது தொடர்பாக ஈழவிடுதலைப் போராட்டம் என்பது உலகப்புரட்சியின் ஒரு பகுதியே. இது உடனடித்தேவையாக தென்கிழக்காசிய விடுதலையுடன் தவிர்க்க முடியாமல் பிணைக்கப்பட்டுள்ளது.


எந்த அடிப்படையில் பிரச்சனையைத்தீர்ப்பது என்பது குறித்த உங்கள் கருத்து தொடர்பான சகல பிரச்சனைகளுமே ஆழமான கருத்து விவாதங்களுக்கு உட்படுத்த வேண்டிய உடனடிப்பிரச்சனைகளாகும்.


சமர் 05-06


இந்திராவைக்கொன்ற சீக்கியரை மதவெறிப்படுகொலையாளர் என வர்ணித்த புலிகள் தான் ராஜீவையும் கொன்றார்கள் இது புலிகளின அரசியலுக்கும், அதன் நலன்களுக்கும் உகந்த விதத்தில் என்ற விவாதத்தில் புலிகள் இந்தியாயை பயன்படுத்தும் நோக்கில் 1984 வெளியிட்ட கருத்தே. அதாவது புலிகள் ஏகாதிபத்தியத்திடம் முழுமையாக சரணடையாத நிலையில், இந்தியாவின் கால்களில் விழும் நிலையிலிருந்த காலகட்டத்தில் நடந்தவை. இராஜிவ்வின் கொலை என்பது வெறும் புலியின் பழிவாங்கல் என்ற நிலைக்கப்பால், மேற்கத்தைய ஏகாதிபத்தியத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் நிகழ்த்தப்பட்டது


சமர்11


இலங்கையை விட்டோடும் இலங்கையர்


தங்களது தாய் நாட்டை விட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு ஓடுகின்றனர்கள் என்றால் அதற்குப் பல காரணங்கள் உண்டு. போர், பாசிச சர்வாதிகாரிகளின் அடக்குமுறை, பஞ்சம், பட்டினி, உயர்வருமானம் ஈட்டல் என்ற பல காரணங்கள் உண்டு. இவ்வாறு பெருந்தொகையான மக்கள் தமது சொந்த நாட்டைக் கைவிட்டு வெளியேறும் முதல் 10 இல் இலங்கையும் ஒன்றென்பது விசனத்துக்குரியதாகும். முன் ஒருபோது இந்து சமுத்திரத்தின் முத்தெனவும், இலங்கைச் சீமை எனவும் வர்ணிக்கப்பட்ட நாட்டை விட்டு சுகாதாரமான இந்த சூழலை விட்டு, சந்தோசமான சீதோஷ்ண நிலையை இழந்து மெல்லெனத் தவழும் இளந் தென்றலை மறந்து அந்நிய நாடுகளில் பனிக் குளிரின் மத்தியில் ஒரு அடைத்த வாழ்வுக்கு மூன்றாந்தர பிரசைகளாக அடிமைகளாக வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்றால் மிகையாகாது.


இலங்கையின் தரகு முதலாளித்துவ பாசிச அரசின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கையிலும் பாசிசப் புலிகளின் ஏனைய துரோக இயக்கங்களினதும் படுகொலைகளாலும் சாதாரணமாக ஜந்து இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளார்கள். இவர்களில் இரண்டு இலட்சம் பேர் தமிழ் நாட்டில் தஞசம் அடைந்துள்ளார்கள். . தமிழ் நாட்டில் தஞ்சம் அடைந்தவர்களில் பெரும் பான்மையானோர் மிகவும் வறியவர்கள். இவர்களில் அனேகர் குடும்பங்களாக அகதி முகாங்களில் அவல வாழ்க்கையில் அல்லறுகின்றனர். மீதி 3 லட்சம் பேர் ஜேர்மனி சுவிஸ்,கனடா,பிரான்ஸ்,.... என்று அகதிகளாக பரவியுள்ளனர். பின்னையவர்கள் அகதிவாழ்வில் பொருளாதார ரீதியில் ஒரளவு வசதியாக வாழ்ந்தாலும் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டே உள்ளனர். ஆனால் முன்னையவர்களின் நிலையே மிகவும் பரிதாபத்துக்குரியது. ஆரம்பத்தில் தமிழ்நாட்டு அரசு தமிழீழ அகதிகளுக்கு சில வசதிகள் செய்த போதும் பாசிட் ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னர் உதவிகள் நிறுத்தப்பட்டு பொலீஸ் அடக்கு முறை அதிகாரிகளின் உதாசீனம் என்று பல நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டனர். இவ்வாறான நெருக்கடிகளால் தமிழீழ மக்களின் போராட்ட உணர்வு மழுங்கடிக்கப்பட்டு விரக்தி நிலையின் விளிம்பிற்கே தள்ளப்பட்டுள்ளனர்.


மேற்கத்தைய பணக்கார நாடுகளில் குடியேறியவர்களில் பலர் அங்கேயே தங்கி அந்த நாடுகளின் பிரசைகளாக வரலாம் என்ற கற்பனையில் திளைத்துள்ள போதிலும் நடைமுறையில் இது சாத்தியமற்றது என்பது மட்டுமல்ல புதிய நாசிகளின் தாக்குதல் தொடர்வதைப் பார்த்தால் இவர்களுக்கு அந்நாடுகளை விட்டு ஓடுகின்ற நிலை விரைவில் உருவாகலாம். மீதி 10 இலட்சம் பேரில் 6 இலட்சம் பேர் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் செய்கின்றனர். இவர்களில் 60 வீதமானோர் வீட்டு வேலையாட்களாக பல விதமான இம்சைகள், சித்திரவதை, பாலியல் பலாத்காரங்கள் போன்ற நெருக்கடிக்கு மத்தியில் தம்மை இழந்து தமது குடும்பங்களின் உயிர் வாழ்வுக்காக உழைக்கின்றார்கள். மீதி 4 இலட்சம் பேர் திறைமைசாலிகளாக இஞ்சினியர்கள், டாக்டர்கள், எக்கவுண்டன்கள், ஆசிரியர்கள் தாதிகள் சேவையர்கள், தொழில்வல்லுனர்கள் வெளிநாடுகளில் சிதறுண்டு வாழ்கிறார்கள்.


இவ்வாறு வெளியேறிய டாக்டர்கள் இலங்கையின் முழு டாக்டர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறிய மூளைசாலிகளான டாக்டர்கள், 10 இலங்கையருக்கு ஒருவர் என்ற ரீதியில் வெளிநாட்டில் உள்ளனர். தொழிநுட்பவியலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெரும்பான்மையினமான சிங்கள இனத்தவர்கள். நாட்டை விட்டு ஓடும் பெரும்பான்மையினர் தமிழ் மக்கள் தான். இதேவேளை ஸ்ரீலங்கா இனவெறி பாசிச அரசின் இன அழிப்புக்கு எதிராக போராடுகின்ற தமிழ் மக்களின் போராட்டத் தலைமையை தரகு முதலாளித்துவ, பாசிச புலிகள் வடக்கு, கிழக்கு வாழ் முஸ்லீம் மக்களின் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ள கொலை வெறி, பாசிச நடவடிக்கைகளும் அவர்களைத் தமது வாழ்விடங்களை விட்டு துரத்தி அடித்த போக்கிலித்தனமும் முஸ்லீம் மக்களை தமது சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலைய வைக்கின்றது.


1992ம் ஆண்டில் அரசின் புள்ளிவிபரத்தின்படி வெளிநாட்டிலிருந்து இலங்கையர்களால் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பணம் 700 மில்லியன் டொலர்களாகும். இதில் 500 மில்லியன் டொலர்கள் அரபு நாடுகளிலிருந்து வந்ததாகும். இலங்கையின் பாசிச அரசு உதவி வழங்கும் ஸ்தாபனத்திடமிருந்து பெறுவது 800 மில்லியன் டொலர்களாகும். எனவே உதவி வழங்கும் நாடுகளின் பணத்தை விட எம்மவர்கள் உதிரம் கொட்டி நாட்டுக்கு அனுப்புவது குறைந்தது அல்ல என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இவ்வாறு பெறப்பட்ட பணம் தரகு முதலாளித்துவத்தால் ஒட்டுமொத்தமாக உறிஞ்சப்பட்டு ஏப்பமிடப்படுகின்றது. தரகு முதலாளித்துவ இனவெறி அரசின் இருப்புக்காக பாதுகாப்பு செலவீனம் என்ற பெயரில் எமது நாட்டு மக்களின் பொருளாதாரம் சீரழிக்கப்படுகிறது.


விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம, ஜனநாயகமறுப்பு, பொருளாதார மந்தநிலை என்ற சுமைகள் யாவும் முழு இலங்கை மக்களின் தோள்களை அழுத்துகின்ற பெரும் சுமைகள் ஆகிவிட்டன. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இவற்றுடன் கூட இனஅழிப்பு, பொருளாதாரத் தடை என்ற இருபெரும் சுமைகள் அவர்களை மூச்சு விடக்கூட முடியாத நிலையில் மரண அவஸ்தைப் பட வைத்துள்ளனர். இன்று தமிழ்மக்களின் போராட்டத்தை தலைமையை கைப்பற்றியுள்ள பாசிசப்புலிகளால் இம் மரண அவஸ்தைலிருந்து மீட்க முடியாதது மாத்திரமல்ல அவர்களும் தமது இருப்புக்காக பல சுமைகளை ஏற்றி வைத்துள்ளனர். இவை யாவற்றையும் உடைத்தெறிந்து மக்களை அவர்களிடம் இருந்து மீட்க புதிய புரட்சிகரமான தலைமையை உருவாக்க வேண்டிய உடனடியான கடமை தமிழ் புரட்சிகர சக்திகளின் முன்னாள் உள்ள பெரும்பணியாகும். உண்மையான மனிதன் வசதியான பாதையை நாடமாட்டான். கடமையுள்ள பாதையையே தேடுவான். அவன் தான் செயற்றிறன் உள்ள மனிதன். அவனது இன்றைய இலட்சியங்கள் தான் நாளைய சட்டங்கள்.


சமர்12


சரிநிகர் பிரதான ஆசிரியர் சேரனுக்கு சபாலிங்கம் படுகொலை கம்யூனிச எதிர்ப்புக்குப் பயன்படுகிறது


சபாலிங்கம் படுகொலையை கண்டிக்கும் ஒவ்வொருவரும் தமது அரசியல் நோக்கை மையமாக வைத்தே செய்கின்றனர். இந்த வகையில் சரிநிகர் பிரதான ஆசிரியர் சேரனுக்கு இக் கொலை கம்யூனிச எதிர்ப்பாக வெளிப்படுகிறது. இதன் ஊடாக சரிநிகரின் அரசியல் போக்கையும் நாம் இனம் காணமுடியும். சபாலிங்கம் கொலையை நாம் சமர்11 இல் கண்டித்தோம். அக்கொலை மாற்றுக்கருத்துக்களின் மீதான மிரட்டல் என்பதுடன் இது எதிர்காலத்தில் ஜரோப்பாவில் மாற்றுக் கருத்துக்கள் மீதான நடவடிக்கையின் முன்னோடி என்பதாலும் இதைக் கண்டித்தோம். இதே நேரம் சபாலிங்கம் வாழ்வியல், அவரின் நோக்கம் என்பவற்றை நாம் விமர்சிப்பதை தவிர்த்தோம். ஏனெனில் கொலையும் அதன் நோக்கமும் எல்லாவற்றையும் விட முதன்மையானது என்பதால் ஆகும். அந்த வகையில் இக்கட்டுரையில் சபாலிங்கம் பற்றிய விமர்சனத்தை கைவிட்டு அக் கொலையை நாம் கண்டிப்பதுடன் அதன் மீதான ஆழமான தாக்கத்தை எடுத்துச் செல்கிறோம். ஆனால் சேரன் கம்யூனிச எதிர்ப்பு உயர்த்தப்படுவதன் ஊடாக சபாலிங்கம் போனறோரை புரட்சிகர புனிதர்களாக காட்டிவிட முனைகிறார்.


சபாலிங்கம் படுகொலையை சாதாரணமாக கண்டிப்பது வேறு. அதை விடுத்து இதை கம்யூனிச எதிர்ப்பாக வளர்த்துச் செல்ல முனைவதன் நோக்கம் கபடத்தனமானது. உலகம் வர்க்கங்களால் உருவானது. நாள் தோறும் மோதல்கள் ஊடாகவும் சுரண்டுவோர், சுரண்டப்படுவோரை அழிப்பதன் ஊடாகவும் உயிர் வாழ்கின்றனர். சர்வதேச மனித உரிமை சங்கங்கள் பிரசன்னமாவதுடன் மனித உரிமை பற்றிப் பீற்றுகின்றன. மனித உரிமை பற்றி ஒரு பக்கம் மட்டும் உயர்த்தி ஏகாதிபத்தியங்களின் நேரடிக் காலனியாதிக்துக்கு மறைமுகமாக உதவி வருகின்றன. மேலெழுந்த வாரியாக பல மனித உரிமை மீறல் பற்றி குரல் எழுப்பும் இவர்கள், இன்று உலகை மறுபங்கீடு செய்ய அங்கு ஜக்கிய நாட்டுப் படைகளை இறக்க அதற்கு இசைவாக்கம் செய்த மனித உரிமை பற்றி அடிக்கடி உரத்து குரல் எழுப்புகின்றனர்.


அண்மைக்காலம் வரை இன்று ஜக்கிய நாட்டு படைகள் என்ற வகையில் இவ் ஏகாதிபத்தியங்கள் மனித உரிமைப் பெயரால் இறங்கி உலகை மறுகாலனியாக்க இம் மனித உரிமை சங்கங்கள் துணை போகின்றன. இன்று உலகில் எல்லா யுத்தங்களின் பின்பும் உள்ளது பொருளாதார நலன்களே. இந் நலன்கள் அனைத்திலும் இவ் ஏகாதிபத்திய நலன்கள் இறுகிப் பிணைந்துள்ளது. இந் நலன்களும் கொள்ளையுமே யுத்தத்திற்கான அடிப்படையாகும். உலகில் உள்ள மனிதவுரிமை மீறல்கள் அனைத்தின் அடிப்படையும் இப் பொருளாதார நலன்களே. இதை மாற்ற, எதிர்க்க, கண்டிக்க மறுக்கும் அனைத்து சர்வதேச மனித உரிமை ஸ்தாபனங்களுமே இதன் ஊற்று மூலமாகும்.


இந்த நிலையில் வர்க்கங்களால் உருவான உலகில் வாக்கங்கள் இல்லாது போகும் வரை யுத்தங்களும் முடிவற்ற வன்முறையும் இருக்கும். ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கம் மீது வன்முறையைக் கையாளும். இது சரிநிகர் பிரதான ஆசிரியருககு தெரிய நியாயமில்லைதான். அதனால் தான் அவர் சரிநிகர் 48இல் இப்படிக் கூறுகிறார்.


உண்மையில் இத்தகைய கொலைகள் பயனுடையது மட்டுமின்றி அவசியமானதும் கூட இத்தகைய படுகொலைத் தீர்ப்புக்கள் நாங்கள் எவ்வித ஈவு இரக்கமின்றித் தொடர்ந்தும் போராடுவோம். எதற்கும் தயங்கமாட்டோம் என்பதை உலகுக்குக் காட்டுகிறது. எதிரிகளை அச்சுறுத்தவும், கிலிகொள்ள வைக்கவும், நம்பிக்கை இழக்கச் செய்யவும் மட்டுமின்றி நமது சொந்தப் போராளிகளை உலுப்பவும் முழுமையான வெற்றி , பூரணமான அழிவு இரண்டில் ஒன்றைத் தவிரப் பின்வாங்குதல் என்ற பேச்சே இல்லை எனபதை அவர்களுக்குக் காட்டவும் இத்தகைய படுகொலைகள் அவசியம். சோவியத் புரட்சியின் பின்பு சார் மன்னரும் அவருடைய மனைவியும் ஜந்து பிள்ளைகளும். வீட்டு வேலைக்காரனும், வீட்டு மருத்துவரும் சமையல்காரரும், பிள்ளைகளின் வளர்ப்பு நாயும் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தித் தன்னுடைய நாடகுறிப்புக்களில் ரொட்ஸ்கி எழுதியுள்ளவற்றில் ஒரு பந்தி மேலுள.ளது. ரொஸ்கினுடைய மகன் லியோன் ஸேதவ் பின்பு ஸ்டாலினுடைய கையாட்களால் பரீஸ் நகரில் வைத்துச் சுட்டுக் கொல்ப்பட்டார். ரொக்ஸ்கியும் மெக்ஸிக்கோவில் வைத்துச் சுட்டுக்கொல்ப்பட்டார். ரொஸ்க்கியும் மெக்சிக்கோவில் வைத்து ஸ்டாலின் ஆட்களான மொக்ஸ்க்சிகோ இடதுசாரிகளாள் படுகொலை செய்யப்பட்டார். ஒரு வரலாற்றுக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக எத்தகைய படுகொலையையும் புரியலாம் என்று நம்பியவர்களுள் ரொக்சியும் ஒருவர். அத்தகைய தர்க்கம் அவருடைய படுகொலையில் மட்டுமின்றி ஸ்டாலினை விரோதித்த இலட்சக்கணக்கானோரின் படுகொலைகளிலும் முடிந்தது. விசுவாசமும் நம்பிக்கையும் எல்லாவகையான படுகொலைகளையும் நியாயப்படுத்தும் என்பதும் எமது தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஊடுபாவாக ஓடி நிற்கிறது. எனினும் இது எங்களுடைய தேசியத் தற்கொலை என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய படுகொலையைப் புரிபவர்கள் நியாயப்படுத்துபவர்களும் திரிகரண சுத்தியாக நம்புவது என்னவென்றால் இத்தகைய படுகொலைகள் தாம் சார்ந்த குறிக்கோளை எய்த அவசியம் மட்டுமல்ல இந்தக் குறிக்கோள் புனிதமானது, தெய்வீகமானது அல்லது உன்னதமானது என்பதால் இத்தகைய படுகொலைகளைப் புரிபவர்கள் சாதாரணமான ஒழுக்கத்தளைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதையுமாகும். இது ஒரு ஆழ்ந்த கேள்விக்குட்படுத்த முடியாத ஒரு நம்பிக்கையாகும். மூடுண்ட மனமும் கோட்பாடுகளுடன் சார்ந்து இறுகிப்போன சிந்தனையின் உறுதிப்பாடும் விமர்சனங்களை வெறுக்கும் போக்கும் அரசபலத்துடனும் இராணுவபலத்துடன் ஒன்றிணையும் போது கிடைப்பது கிட்லர், பொல்போட், ஸ்டாலின்.


கிறிஸ்த்துவின் பெயரில் நான் உங்களை வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் தவறிழைப்பது சாத்தியம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள் குறோம்வெல் அவர்களுடைய இந்த அறிவுரையை சபாலிங்கம் மிகவும் மதிப்பு கைத்திருந்த ரெஜி சிரிவர்த்தன அவர்களின் கட்டுரையொன்றிலிருந்து நான் பெற்றுக் கொண்டேன்.


என சேரன் தனது கம்யூனிச எதிர்ப்பு கட்டுரை ஊடாக இச்சமூக அமைப்பை கிறிஸ்துவின் பெயரால் கோருகின்றார். கம்+னிச எதிர்ப்பை ஸ்டாலின், பொல்போட் பெயரில் திரிகரண சுத்தியாக ஏகாதிபத்தியங்களுடன் இணைந்து உயர்த்தி உள்ளார். லெனின், மாவோ, மார்க்ஸ் ஏங்கல்ஸ் என எல்லோரும் வன்முறையை ஏற்றதுடன் அவர்களின் புரட்சிகாலத்தில் அதை நடைமுறையில் கைக்கொண்டனர். பிரஞ்சுப் பரட்சியின் போதும் மார்க்ஸ்சும், ஏங்கல்ஸ்சும் ரசியபுரட்சியின் போது லெனினும் சீனாப்புரட்சியின் போது மாவோவும் வன்முறையை ஏற்றனர். ஆனால் ஏகாதிபத்தியங்கள் முதல் சேரன் போன்ற கம்யூச விரோதிகள் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோவை கடவுள்கள் ஆக்கிவிட்டு ஸ்டாலின், பெல்போட் பெயரால் கம்யூனிசவிரோத பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளனர்.


தம்மீதுள்ள சுரண்டல் சுமையை ஒழிக்க போராட முனையும் மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்த, திட்டமிட்ட சேரனின் கம்யுனி+சவிரோத கனவு, அவர் சார்ந்துள்ள மனித உரிமை என்ற பெயரில் உள்ள ஏகாதிபத்திய பொருளாதாரத்தை நியாயப்படுத்தும் அடிப்படையிலானது. ஒரு கொலை நிகழும்போது எப்படி அதை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வது? அதில் சரி பிழைகளை ஆராய்வது என்பது சமூகத்தை விஞ்ஞான ரீதியில் புரிந்து கொள்வதில் இருந்தே எடுக்க முடியும். மாறாக கிறிஸ்துவின் கோட்பாட்டின் அடிப்படையில் கருத்து முதல்வாத கோட்பாட்டில் அல்ல. மக்கள் கூட்டம் வர்க்கங்களால் பிளவுண்டுள்ளது. அங்கு நாள் தோறும் போராட்டம் நிகழ்கிறது. அப்போராட்டம் சகிக்க முடியாதபோது மக்கள் ஆயுதம் ஏந்துகின்றனர். எதிரிவர்க்கத்தை அழிக்கின்றனர். ஒரு கொலையை மதிப்பிட அங்கு சுரண்டலின் வடிவம் பற்றி ஆராயப்பட வேண்டும். சுரண்டும் வர்க்கம் தனது கொள்ளையைப் பாதுகாக்கவும், பெருக்கவும் செய்யப்படும் கொலைகள் மொத்த மக்கள் சமூகத்துக்கும் எதிரானது அதே நேரம் மக்களை கொன்றும் கொள்ளையடித்தும் தமது சுகபோகத்தில் வாழும் பிரிவினர் கொல்லப்படும்போது ஆதரிக்கப்பட வேண்டும். உதாரணமாக பிரேமதாச 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள மக்களைக் கொன்றும், ராஜீவ் ஈழப்போராட்டம் முதல் பல நாடுகளில் மக்களை கொன்றும் ஆண்டவர்கள். இவர்கள் கொல்லப்படும் போது ஆதரிக்கப்பட வேண்டும். ஆனால் இதைச் செய்தவர்களின் தனிமனித பயங்கரவாத அரசியலை விமர்சிக்கவேண்டும்.


இந்த வகையில் சபாலிங்கம் கொலை சுரண்டும் வர்க்க கனவுகளுக்காக, இதை செய்தவர்களை அம்பலப்படுத்தும் அடிப்படையில் அமைந்ததால் கண்டித்தோம். பிரேமதாச கொலையை நாம் ஆதரிக்க காரணம் அவனின் மக்கள் விரோத செயற்பாடே. அதேநேரம் பிரேமதாசவைக் கொன்றவர்களின் அரசியலையும், தனிநபர் பயங்கரவாதத்தையும் விமர்சிக்கிறோம். வர்க்கம் அற்ற சமூகம் உருவாகும் வரை சுரண்டுவோர்க்கும், சுரண்டப்படுபவர்களுக்குமிடையில் மோதல் இருக்கும், அதுபோல் சுரண்டுவோர்க்குள்ளும், ஜக்கியத்துடன் மோதல் இருக்கும். இதில் எது சரி எது பிழை என ஆராயும் போது எது மக்களின் நலன் சார்ந்தது என்பதில் தான் உள்ளது. கொலைகளை நாம் நேசிக்கவில்லை. அதுபோல் எந்த கம்யூனிஸ்டும் நேசிப்பதில்லை. ஆனால் அவர்கள் மீது பலாத்காரம் பிரயோகிக்கப்படும் போது பலாத்காரத்தை நாடவேண்டி ஏற்படுகிறது. சிங்கள இனவாதிகள் தமிழ்மக்கள் மீது தாக்குதலைத் தொடுத்தபோது தமிழ் மக்கள் போராடமுற்படுகின்றனர். இதில் பலாத்காரம் பயன்படுகின்றது. இதை ஆதரித்த சேரனின் கவிதைகளில் மட்டும் கொலைக்கு அங்கீகாரம் இருக்கவில்லையோ? அல்லது காலத்தால் பக்குவப்பட்டு பழைய கவிதையில் புகழ் பெற்றபடி அதில் உமது இன்றைய சர்வதேச வெளிநாட்டு நண்பர்களின் கனவுகளை எம்மண்ணில் நிலை நிறுத்த முயற்சியோ? சார் மன்னனின் குடும்பம், குடும்ப மருத்துவர், குடும்ப வேலைக்காரி, பிள்ளைகள், நாய் கொலை செய்யப்பட்டதாக அழும் சேரன் சாதாரண மக்களின் நிலையில் சார் மன்னனைக் கொண்டு வந்து ஒரு அனுதாபத்தின் ஊடாக ரசியப்புரட்சியின் மீதும் லெனின் மீதும் தனது காழ்ப்புணர்ச்சியை சேரன் வெளிப்படுத்தியுள்ளார். மனித உரிமையாளருடன் இணைந்து கூக்குரல் இட்டு ஏகாதிபத்தியத்தின் சிறந்த சேவகனாகியுள்ளார். சார் மன்னன் ஒரு சாதாரண குடிமகன் அல்லன். மாறாக பலகோடி மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக்குடித்த ஒரு அட்டை. சார் மன்னனினதும் அவனது குடும்பத்தவர் ஆடம்பர வாழ்வுக்காகவும் செய்யப்பட்ட கொலைகள் பற்றி கண் மூடியயபடி, அவனின் வர்க்க நோக்கம் பற்றி கண்மூடியபடி ஆக்கிரமிப்பு பற்றி கண்மூடியபடி சேரன் நியாயப்படுத்தும் மனித உரிமை மீறல் எந்த வர்க்க கனவு என நாம் கூறத்தேவையில்லை. வாசகர்கள் தீர்மானிப்பார்கள். நேருவின் மகள் என்பதால் இந்திராவும், இந்திராவின் மகன் என்பதால் ராஜீவும், ராஜீவின் மனைவி எனபதால் இத்தாலிய சோனியா காந்தியும் நாட்டை ஆள தகுதி உண்டு எனின் அவர்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டும். இதுபோல் செல்வநாயகத்தின் கார் ஒட்டும் வேலைக்காரன் என்பதால் வாமதேவன் புளோட் இல் ஒரு தலைவனாக முடியும் எனின் வேலைக்காரனும் அழிக்கப்படவேண்டும். சிவபெருமானின் வாகனம் பசு என்பதாலும், நந்தியின் வாகனம் எலி என்பதாலும் பசுவையும் எலியையும் விழுந்து தொட்டுக் கும்பிட முடியும் எனின் சாரின் வளர்ப்பு நாய் அரசு ஆளமுடியும் எனின் அழிக்கப்படவேண்டும். அந்த நாய் உயிர் தப்பியிருப்பின் சில வேளை சோவியத் புரட்சிக்கு எதிராக அதன் தலைமையில் (பொம்மையாக நிறுவி) அணிதிரண்டிருப்பர். இல்லையெனில் அந்தநாய் பலகோடி பெறுமதியான ஏலத்துக்கு அரசியல் நோக்கோடு விலையாயிருக்கும். உயிருடன் இருந்திருப்பின் அதன் வாரிசுகள் இன்று உலவும். இன்று அவை ஏலத்துக்கோ அல்லது மீண்டும் சோவியத்தில் ஒரு ராஜாவாக வாழும் வாய்ப்பையோ பெற்றிருக்கும். சார் மன்னன் கொல்லப்பட்ட நிகழ்வு அந்தக் கணத்தில் தவிர்க்க முடியாததாக இருந்தது. சார் மன்னனை மக்கள் முன் விசாரித்து கொல்ல வேண்டும் என கட்சி விரும்பியபோது சார் மன்னன் இருந்த இடத்தை எதிரப்புரட்சி வாதிகளும், ஏகாதிபத்தியவாதிகளும் சுற்றி வளைத்த போதே கொல்லப்பட்டனர். எதிர்பாராமல் தப்பியிருப்பின் முரண்பாடு இல்லாத ஒரு தலைவனின் கீழ் எதிர் புரட்சிவாதிகள் அணிதிரண்டு புரட்சியை முளையில் அழித்திருப்பர்.


சேரனின் கனவும் அதுதான். அதுதான் ரொக்சியின் பெயரால் சார் மன்னன் பற்றி ஒரு ஒப்பாரி. ரொக்சி பற்றிய பிரச்சனையில் கூட ஒரு வர்க்க அரசியலே உள்ளது. ரொக்சியே தனது வாழ்க்கை வரலாறு என்ற நூலில் தனது மகன் சட்டவிரோத நடவடிக்கையில் 1924இல் ஈடுபட்டார் என்கின்றபோது ஒரு வர்க்க அரசியலுக்கு எதிராக இன்னொரு வர்க்க அரசியல் போராடுகின்றது. சோவியத்தில் கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சியை கைப்பற்றிய பின் சகல எதிர்ப்புரட்சிவாதிகளும் கட்சிக்குள் குழுமினர். ஆட்சியைப் பிடித்தபின் அனைத்து வர்க்க எதிரிகளும் கட்சிக்குள் பாட்டாளி வர்க்கம் என்ற கோசத்தின் கீழ் அணிதிரள்வர். இதை நாம் சோவியத், சீனாவில் தெளிவாகக் காணமுடியும். ஸ்டாலின் ஆட்சியின் பின் எவ்வளவு களையெடுப்பின் பின்பும் குருசேவ், பிரஸ்னோவ் திரிபுகும்பல் உள்ளிருந்து சோவியத்தைச் சிதைத்தனர். சீனாவில் மாவோ மாபெரும் கலாச்சாரப்புரட்சி ஊடாக கட்சி விரோதிகளை ஒழித்தபோதும் கட்சிக்குள் திரிபுகள் இருந்து சீனாவை இன்று சிதைத்துள்ளனர். வர்க்க எதிரிகள் ஆட்சியைப் பிடித்தபின் கட்சிக்குள் அணிதிரள்கின்றனர். இதை எப்படி நிவர்த்திப்பது என்பதும் தொடர்ந்து புரட்சியை நடத்துவதும் என்பதும் அவசியமானது.


இந்த வகையில் கலாச்சாரப் புரட்சி இது போன்று பல வழிகளில் புரட்சி தொடரப்பட வேண்டும். இது தொடரப்படும் போது வர்க்க எதிரிகள் அழிக்கப்படுவர். இந்த வகையில் ஸ்டாலின் வர்க்க எதிரிகளை இனம் கண்டபோதும், அதை மக்களை கொண்டு அழிப்பதில் முன் அநுபவம் இன்மையால் தவறிழைத்தார். ஆனால் பல எதிரிகள் அழிக்கப்பட்ட போது பல எதிரிகள் கட்சிக்குள் ஒளித்துக்கொண்டனர். சில நல்ல சக்திகளும் மக்களுக்கூடாக புரட்சியை நகர்த்தாததால் அழிக்கப்பட்டனர். பெல்போட் கூட ஆட்சியைக் கைப்பற்றிய பின் சோவியத், அமெரிக்கா என்ற இரு ஏகாதிபத்தியத்தை முகம் கொள்ளவேண்டிய நிலையில் சுயபொருளாதரத்தின் தேவையை அதிகளவில் உணர்ந்தார். இந்நிலையில் நகர் புறத்தில் குவிந்திருந்த மக்கள் கூட்டத்தில் 10லட்சம் பேரை கிராமப்புறத்துக்கு மாற்றவேண்டிய நிலை கட்சிக்கு இருந்தது. இதைச் செய்வதன் ஊடாகவே சுயபொருளாதாரத்தை கட்டமுடியும் என்ற நிலையில் கிராமப்புறத்தை நோக்கி மக்கள் பலாத்கார வழிகளில் இடம் பெயர்க்கப்பட்டனர். இது வன்முறையில் எழுந்தபோது படுகொலைகள் தொடர்ந்தன. பொல்போட்டும் கட்சியும் புதிய ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தை தவறாக மதிப்பிட்டதும் சோசலிச காலகட்டத்தை நோக்கிய இடைவெளி பற்றிய தவறான மதிப்பீடும் இக்கொலைக்கு காரணமானது. மக்கள் சார்பான இவ்வரசுகள் சில தவறுகள் செய்யும் போது பாரிய விளைவுகளை ஏற்படுத்தின. இது ஒரு கோட்பாட்டுத் தவறு. சேரன் திசை திருப்புவது போல் மாற்றுக் கருத்துக்கள் என்பதால் அல்ல. மாறாக சுரண்டும் வர்க்கத்தை எதிர்த்து ஸ்டாலின், பொல்போட் போராடியபோது கோட்பாட்டுத் தவறுகள், தவறுகளை இழைக்க வைத்தன. இதுபோன்றவற்றை வரலாற்றுப் பாடமாகக் கொண்டு புரட்சியாளர்கள் சுயவிமர்சனமாகப் பார்க்கவேண்டும்.


சார் மன்னன் கொலைக்கு உள்ள காரணமான சுரண்டல் அடிப்படையில் பொல்போட், ஸ்டாலின் தவறிழைக்கவில்லை. மாறாக சுரண்டலை ஒழித்துக்கட்டும் பணியில் தவறிழைத்தனர். இத் தவறுகளை யாரும் நியாயப்படுத்த முடியாது. இவை படிப்பினையாகும் புரட்சியாளருக்கு. ஆனால் சேரனுக்கு இது ஏகாதிபத்திய கனவுகளுக்கு உதவும் கம்யூனிச எதிர்ப்பாக மாறுகின்றது. கிறிஸ்துவின் வாரிசுகள் கூறும் நீங்கள் தவறு இழைக்க வாய்ப்புண்டு என்பதன் ஊடாக சுரண்டல் அமைப்பு பாதுகாக்கப்படுகின்றது. அதாவது தவறுகள் இழைக்க வாய்ப்பு உண்டு என்ற கோட்பாடு சுரண்டும் வர்க்கம் சார்பானது. சுரண்டப்படும் வர்க்கம் எதிர்த்து போராடும் போது சுரண்டும் வர்க்கம் அடக்குமுறையைக் கையாளுகின்றது. அப்போது இந்த கிறிஸ்து வாரிசுகள் கண்மூடியபடி பால் குடிக்கின்றனர். சுரண்டும் வர்க்கத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சுரண்டப்படும் வர்க்கம் வீறுநடை போடும் போது இந்த கிறுஸ்து வாரிசுகள் நிறுத்துங்கள் எல்லாம் கிறிஸ்துவே தீர்மானிப்பார் எனக் கூறி சுரண்டும் வர்க்கத்தை பாதுகாக்கின்றனர்.


கலிலியோ பூமி உருண்டை என அறிவித்த போது இதே கிறிஸ்து வாரிசுகள் மரணதண்டனையைப் பரிசாகக் கொடுத்தனர். வெள்ளைத்தோல் ஆண்டவனின் பிறப்பு எனவும் கறுப்புப்தோல் சாத்தானின் பிறப்பு எனவும் கூறும் கிறிஸ்து பைபிள் வாரிசுகள் தவறு இழைக்க வாய்ப்பு உண்டு எனக்கூறி இச்சுரண்டல் சமூகத்தை பாதுகாக்கப் போராடுகின்றனர். இதில் சேரன் என்ன விதிவிலக்கா? தவறுகள் சுரண்டும் வர்க்கத்தை எதிர்க்கும் போது அங்கு அவை சுயவிமர்சனமாக அமையும். இது ஸ்டாலின் பொல்போட்டுக்கு பொருந்தும். ஆனால் சார் மன்னனுக்கு பொருந்தாது. சார் மன்னன் தவறு இழைக்கவில்லை. மாறாக அது ஒரு கோட்பாடு. இதுபோல் ராஜீவ், பிரேமதாச........ தவறு இழைக்கவில்லை. இவர்கள் சுரண்டும் வாக்கப் பிரதிநிதிகள். அதன் கோட்பாட்டின் பாதுகாவலர். இவை தவறு அல்ல. கோட்பாட்டின்படி இம் மதவாதிகள், உட்பட இவர்கள் சுரண்டல் வாதிகள் அதன் பாதுகாவலர். சபாலிங்கம் வாழ்வியல் தவறுகளைக் கொண்டிருந்த போது அவை திருத்தப்படக்கூடியன. விமர்சனம், சுயவிமர்சனத்துக்கு உட்பட்டவை. அவை எதிர்ப்புரட்சிகரமானது அல்ல. இக்கொலை சுரண்டும் வர்க்கக் கனவுடன் செய்யப்பட்டன. அந்த வகையில் இதை நாம் எதிர்க்கிறோம். ஆனால் கிறிஸ்துவின் பெயரால் அல்ல. ஆனால் பிரேமதாச, ராஜீவ்.... போன்றோர் கொலையை ஆதரிக்கிறோம். ஆனால் இக்கொலையைச் செய்தவர்களின் அரசியலை விமர்சிக்கின்றோம்.


கொலையை கண்டிப்பவர்களுக்கும் வர்க்க நோக்கம் இருக்கும். அது அவர் சொல்லவரும் கருத்துக்களைக் கொண்டு பார்க்கமுடியும். சுத்தியல் ஒடுக்கும் வர்க்க கனவுகளை நசுக்கும் ஒரு கருவியே. இச் சுத்தியல் மீது சேரனுக்கு வெறுப்பு ஏற்படக் காரணம் அவரின் வர்க்க கனவுகளை நொருக்குவதால். சுரண்டப்படும் வர்க்கம் தமது கைகளில் அரிவாள் சுத்தியல் உடன் எழும்போது இந்த சேரன் முதல் அனைத்து ஏகாதிபத்தியங்களும் வெருண்டு மனித உரிமை பற்றி கூறியபடி ஆக்கிரமிப்பை அடக்குமுறையை தொடர்கின்றனர். ஆனால் சுரண்டும் வர்க்க கனவுகளை நீடிக்க முடியாது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறது.


சமர் 24


சிறுபான்மை அதிகார வர்க்கப்


பின்நவீனத்துவ கோட்பாடு


அப்பாவிகளுக்கு வழங்கிய


மரணதண்டனை


அண்மையில் இந்திய நீதிமன்றம் சிறுபான்மை ஆளும் வர்க்கத்தின் நீதியின் பெயரால், உன்னதமான ஜனநாயகத்தின் பெயரால் அப்பாவிகள் இருபத்தியாறு பேருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புகள் உலகுக்கு புதியனவா? ஜனநாயகத்தைப் பற்றிய பிரமைக்குள் நீடிக்கும் நம்பும் பிரிவுக்கு இவை ஆச்சரியமான அதிசயமான அதிர்ச்சியான விடையங்களாக மாறிவிடுகின்றது. இந்த தீர்ப்பையொட்டி, இந்தியாவிலும் புலம்பெயர் நாடுகளிலும், நாட்டிலும் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தனிவெளியீடுகள் இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வெளியிட்டதுடன், தீர்ப்புக்குள் தமது அதிருப்தியை வெளியிட்டு இந்த சிறுபான்மை ஆளும் வர்க்க ஜனநாயகம் அதிராமல் இருக்க கருத்துரைத்துள்ளனர்.


இந்தியா என்ற பிராந்திய வல்லரசு பற்றி மௌனத்துடன் அதன் ஆக்கிரமிப்பு பற்றி அலட்டிக் கொள்ளாது கருத்துரைத்துள்ளனர். இந்த முதலாளித்துவ அரசு அமைப்பு என்பது சிறுபான்மை சுரண்டும் வர்க்க நலன்களை மட்டும் பேசுவது என்பதை காணமறுத்து, கருத்து வெளியிட்ட நிகழ்வு, இந்திய மற்றும் முதலாளித்துவ ஜனநாயக அரசுகள் தொடர்பான நம்பிக்கைகளை நீடிக்க வைக்கும் முயற்சியாக உள்ளது.


இன்று இருக்கக் கூடிய அரசுகள் மக்களுக்கானதோ, அவர்களின் ஜனநாயகத்தினை அடிப்படையாக கொண்டதல்ல. சிறுபான்மை ஆளும்வர்க்க சுரண்டல் பிரிவுக்கானதாக, அதன் ஜனநாயகத்துக்கானதாக நீடிக்கின்றது நீடிக்கமுடியும். இருக்கும் சட்டம் இந்த வர்க்க அமைப்பு நீடிக்கவைக்கும் எல்லைக்குள் மட்டும் ஜனநாயகத்தை வழங்குகின்றது. இது சிறுபான்மை பிரிவின் நலனுக்காக மட்டும் உருவாக்கப்பட்டது. இச்சிறுபான்மை மீதான தாக்குதல் வன்முறைகளை இந்த ஜனநாயகமும் அதன் ஆளும் அமைப்பும் அதன் சட்டமும் ஈவிரக்கமின்றி ஒடுக்கும்.


இது வரலாறு முழுக்க நீடித்தன, நீடிக்கின்றன. இதன் தொடர்ச்சியில் கொலையாளியின் மூச்சுப்பட்டவர்கள் முதல் ஏதோ ஒரு தொடர்பைக் கூட குற்றமாக காட்டி மரணதண்டனை விதிக்க இந்த சிறுபான்மை ஆளும்வர்க்கம் பின்நிற்கவில்லை. பார்ப்பானிய ஆளும் சுரண்டல் வர்க்கத் தலைவன் ராஜீவ்காந்தி மீதான விசுவாசம், அதன் அருவருடித்தனம், அரசியல் பிழைப்புத்தனமாக எல்லாம் சேர்ந்துதான் மரணதண்டனையை விதித்த போக்கு வரலாறு முழுக்க ஆளும்வர்க்க குணாம்சமாக உள்ளது.


அநியாயமான வகையில் அப்பாவிகள் மீது மரணதண்டனை தீர்ப்பு வழங்கிய பின் வெளியாகிய எதிர்ப்பு அறிக்கைகள் முதலாளித்துவ அரசு அமைப்பையோ, இந்திய ஜனநாயகத்தையோ கேள்விக்குள்ளாக்கவில்லை மாறாக விமர்சிக்க முற்ப்பட்டனர். இதன் மூலம் இந்திய ஜனநாயகத்தை தூக்கி எறியாத வகையில் சீர்திருத்த மனிதாபிமான ஜனநாயகத்தை, நீதிபதி கண்டுகொள்ளாத உண்மை மீது அதிருப்தி மீதான, ஜனநாயகத்தைக் கோருவதாகவேயிருந்தது.


இந்த தீர்ப்பு மூலம, இத்தீர்ப்பு எப்படி அ.மார்க்ஸ் கும்பலின் பின்நவீனத்துவம் சிறுபான்மை ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்வதன் மூலம் இந்த மரணதண்டனையை எப்படி நியாயப்படுத்துகிறது என்பதை பின்நவீனத்துவ கோட்பாட்டு மூலம் பார்ப்போம்.


அ.மார்க்ஸ் நந்தன் இதழுக்கு (15 மாசி 1998) "கார்த்திகேயன் கண்டுபிடித்த உண்மைகளும் கண்டு கொள்ளாத உண்மைகளும்" எனத் தலைப்பிட்ட கட்டுரையை "ஏது செய்தோம் நாம்" என்று தலைப்பிட்ட இவ் மரணதண்டனை தொடர்பான வெளியீட்டில் மறுபிரசுரம் செய்திருந்தனர். இத்தலைப்பிலேயே பின்நவீனத்துவ மோசடி தொடங்குகிறது. கார்த்திகேயன் கண்டுபிடித்த உண்மைகள் என அ.மா எதைச் சொல்கிறார். குற்றவாளிகள் என மரணதண்டனை வழங்க சோடித்தவைகளையே கார்த்திகேயன் கண்டுபிடித்த உண்மையாக அ.மார்க்ஸ் எடுத்து முன்வைக்கின்றார். இந்த உண்மை என்பது ஆளும் வர்க்க உண்மையும், அதைப் பாதுகாக்கும் உண்மையே ஒழிய ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மைகளல்ல அ.மா உண்மை என்கிறார். உண்மை என்பது பின்நவீனத்துவம் கூறுவது போல் குறித்ததுக்குள் காணமுடியாது. காணமுடியும் என்பது சிறுபான்மை பிரிவின் உண்மையாக ஆளும் வர்க்க உண்மையாகத்தான் இருக்கிறது. மாறாக உண்மை என்பது முழுமையில் மட்டும்தான் சாத்தியம். இதை மறுக்கும் பின்நவீனத்துவம் சிறுபான்மை உண்மை மீது (குறித்ததில்) உண்மையை போற்றுகிறது இதனால் பொதுமையை மறுக்கின்றது.


பின்நவீனத்துவ கோட்பாட்டில் கொலையாளியுடன் தொடர்பு குற்றவாளியாக்க காரணமாகிவிடுகிறது. மறுவாசிப்பு, வேறுபட்ட பார்வை பார்க்க முடியுமென்றால், பொதுவான உண்மை என்று ஒன்று இல்லை என்றபின் பின்நவீனத்துவ கோட்பாட்டின் பிரதிநிதி கார்த்திகேயன் போன்ற ஆளும்வர்க்க சிறுபன்மை பிரிவு அப்பாவிகளை குற்றவாளியாக்கிவிடுகிறது.


கண்டுகொண்ட உண்மையும் கண்டு கொள்ளாத உண்மையும் நேர் எதிரானவை ஒன்றுடன் ஓன்று இணங்க முடியாதவையாகும். ராஜீவ் ஏன் கொல்லப்பட்டான்?, அவனின் குற்றம் என்ன?, அவனின் அரசியல் என்ன?, அவன் சிறுபான்மையின் பிரதிநிதியா? அல்லது பெரும்பான்மையின் பிரதிநிதியா?, கொலையாளி ஏன் கொன்றான்?, கொலையாளியின் அரசியல் என்ன?, என விரிந்த தளத்தில் மட்டும்தான் முழுமையான ஆய்வும் உண்மையான தீர்வும் பிறக்கிறது. இது எல்லாவற்றுக்கும் எல்லாப் போராட்டங்களுக்கும் பொருந்தும். இதைப் பின்நவீனத்துவம் மறுத்து சிறுபான்மைக்காக குரல் கொடுக்கும்போது பகுதியில் தீர்வுகாண கோரும்போது கர்த்திகேயன் பின்நவீனத்துவ வாரிசாக இருப்பதுடன் மரணதண்டனையை கோட்பாட்டுரீதியில் பின்நவீனத்துவம் அங்கீகரிக்கின்றது.


"அவன் ஒரு ஈழத்துப்பையன். பெற்றோர் இராணுவத்தாக்குதலில் செத்துப்போயிட்டாங்களாம். அகதி. அவன் பேசுகிற தமிழ் எனக்கு ரொம்பப்பிடிக்கும். என் மகனுக்கு நண்பன். இந்த வயதில் இத்தனை இழப்புகளைச் சந்தித்த அவனுடைய சோகமான முகம் என்னை எப்போதும் வாட்டும். வீட்டுக்கு வரும் நேரங்களில் ஒரு வேளை சோறு போடுவதில் எனக்கொரு ஆறுதல். அன்றும் அவன் வந்தான். முகமெல்லாம் வேர்த்திருந்தது. பரபரப்பாக இருந்தான். சாப்பிடச் சொன்னேன். படுக்கச் சொன்னேன். மாத்திரை வாங்கி வந்து கொடுத்தேன். இரண்டு நாள் கழித்து ஊருக்குப் போகிறேன் என்றான். பெங்களுருக்கு ஒரு டிக்கட் வேண்டுமென்றான் அவனிடம் காசு இல்லை என்பது எனக்குத்தெரியும். நான் டிக்கட் வாங்கி வந்து கொடுத்தேன். அவன் போய்விட்டான்."


இந்தச் சொற்குவியலை ஒரு "கலிடாஸ் கோப்பு"க்கு ஒப்பிடலாம். வௌவேறு கோணங்களில் சாய்க்கும் போது வௌவேறு அர்த்தங்கள். மனிதநேய எழுத்தாளர் ஒருவருக்கு இது ஒரு பாசமுள்ள அன்னையின் பரிவு மிக்க சொற்கள். இந்தச் சொற்குவியல் அவருக்கு ஒரு மனிதநேயக் கதையாடலுக்கான கச்சாப்பொருள். ஓரு புலனாய்வுக் குழுத்தலைவருக்கோ இது ஒரு சட்ட ஒழுங்குக் கதையாடலுக்கான கச்சாப்பொருள்! ஏற்கனவே "குற்றச்செயல்" என வரையறுக்கப்பட்ட ஒரு நிகழ்வுதொடர்பான உண்மை! சொற்கூட்டத்தில் அதன் வௌவேறு அர்த்தங்களுக்குமான உறவில் ஒன்றை மட்டும் உருவி எடுத்து "சட்டபூர்வமான உண்மை" இங்கே கட்டமைக்கப்படுகிறது." எனத் தொடர்ரும் அ.மார்க்சின் வாதம் அவரின் பின்நவீனத்துவ வழியில் மரணதண்டனையை மறைமுகமாக அங்கீகரிக்கின்றது.


இதை அவரின் "பின்நவீனத்துவம் இலக்கியம் அரசியல்" என்ற நூலில் உள்ள கோட்பாட்டில் ஆராய்வோம். அந்த நூலின் 68ம் பக்கத்தில் "உண்மை, நீதி, அறம் எதையும் பின்நவீத்துவம் மறுக்கவில்லை.------------ இவற்றை எல்லாம் தீர்மானிப்பதற்கான அடிப்படையான பொது ஆதாரம் ஏதுமில்லை என்பதை பின்நவீனத்துவம் சொல்கிறது. பேருண்மை, பெருநீதி, பேரறம் என எதுவும் இருக்கமுடியாது." என்கிறார் அந்தோணிசாமி மார்க்ஸ்.


அதாவது பின்நவீனத்துவ கோட்பாட்டின்படி உண்மை, நீதி, அறம், பெருநீதி, பேரறம், பேருண்மை என்பன இருபத்தியாறு மரணதண்டனை கைதிகளின் பக்கத்தில் பொது ஆதாரத்தில் இருக்கமுடியாது. இதன் மூலம் மரணதண்டனை வழங்கிய சிறுபான்மையின் பக்கம் நீதி, அறம், உண்மை இருக்கும் என மறைமுகமாக அங்கீகரிக்கின்றார்.


இதை மேலும் எப்படி பின்நவீனத்துவ சாக்கடையால் அங்கீகரிக்கின்றார் என்பதை அ.மார்க்ஸ்சின் அதே நூலில் பக்கம் 56இல்


" பெரும்பான்மைக்கு எதிரான தனிநபரின் கருத்துரிமை என்கிற தாராளவாதக் கோட்பாடு மீண்டும் அழுத்தம் கொடுத்து பரிசீலிக்க வேண்டிய ஒன்று" என்கிறார். குற்றவாளிகளாக மாற்றப்பட்ட கைதிகள் தொடர்பாக பெரும்பான்மை மக்களின் நீதியின் பாலான கருத்துரிமையை அ.மார்க்ஸ் பின்நவீனத்துவ சாக்கடையால் மறுத்து தனிநபர் உரிமையின் பெயரில் கார்த்திகேசனினதும் மற்றும் இந்தியா ஆளும்வர்க்க கருத்துகளை அழுத்தம் கொடுத்து பரிசீலிக்க வேண்டும் என்பதன் மூலம், அப்பாவிகள் மீது வழங்கிய மரணதண்டனையை எதிர்த்த மக்களின் அபிப்பிராயத்தை அ.மார்க்ஸ் பின்நவீனத்துவ வழியில் மறுத்து கார்த்திகேசனின் தீர்ப்புதான் நீதியை விட முக்கியமானது என்கிறார்.


உண்மையில் பின்நவீனத்துவம் சிறுபான்மையின் பெயரால் சிறுபான்மை ஆளும்வர்க்கம் சார்பாக பெரும்பான்மை மக்களுக்கு எதிராக உள்ளது. அதே நேரம் பொது ஆதாரம் எதுவும் இல்லை என்பதன் ஊடாக குற்றவாளிகளாக மாற்றப்பட்டவர்களின் பொது உண்மையை மறுத்து, இந்திய நீதிமன்றம் பின்நவீனத்துவ வழியில் பொது உண்மை எதுவும் இருக்க முடியாது என மறுத்து வழங்கிய தீர்ப்பு தான், இருபத்தியாறு அப்பாவிகளுக்கான மரணதண்டனை. உண்மையின் பொது ஆதாரங்களை மறுப்பது என்பது பின்நவீனத்துவ அடிப்படைக் கோட்பாடேயாகும். இந்திய நீதித்துறையும், ஆளும்வர்க்கமும், அதன் ஐனநாயக அமைப்பும் பொது ஆதாரத்தை மறுத்து நிற்பதற்கான அடிப்படைக் கோட்பாட்டை பின்நவீனத்துவம் வழங்கி பாதுகாக்கின்றது. பின்நவீனத்துவத்தின் சிறப்பான பிரதிநிதிகளாக முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ பிரதிநிதிகள் மட்டும்தான் உலகில் இருக்கமுடியும் என்பதை ஆதாரமாக நாம் நிர்வாணமாக காணமுடிகின்றது. இதன் சிறப்பான பிரதிநிதியாக அ.மார்க்ஸ் அளவெடுத்து வெட்டினால் போல் உள்ளார்.


இதை மேலும் அதே நூலில் பக்கம் 61 இல் "....... கருத்தொருமிப்பு என்பதைக் காட்டிலும் கருத்து வேறுபாடு (Dissension) உரிமையை சனநாயகம் எனப் பின்நவீனத்துவம் வற்புறுத்துகின்றது." என்கிறார். சனநாயகம் என்பது மரணதண்டனை வழங்குவதன் மூலம் அதற்கு எதிரான போராட்டத்தில் இருக்க முடியும் என்கிறார். இதுமட்டும்தான் சனநாயகத்தின் அடிப்படைக் கூறு என்கிறார். மரணதண்டனை இருக்கும்வரை தான் சனநாயகம் நீடிக்கமுடியும் என்கிறார். அதாவது இதில் கருத்து முரண்பாடு நீடிக்கும்வரை தான் சனநாயகம் நீடிக்க அடிப்படையானவையாக உள்ளது என்கிறார். எனவே மரணதண்டனை நீக்க கோருவது கருத்துமுரண்பாட்டை நீடிக்க வைக்கும் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது. மரணதண்டனை நீக்காதவரை தான் சனநாயகம் நீடிக்கும் என்பதே பின்நவீனத்துவ கோட்பாட்டு விளக்கம். எனவே சனநாயகம் நீடிக்க வேண்டின் மரணதண்டனை நீக்கக்கூடாது என்பதும் பொது உண்மையில் விசாரணை நடக்க கூடாது என்பதும், இந்த கனவானின் பின்நவீனத்துவ விளக்கமாகும். மரணதண்டனை நீடிக்கும் வரைதான் கருத்துமுரண்பாடு கொண்ட சனநாயகம் நீடிக்கும் எனவே சனநாயகம் நீடிக்க வேண்டுமாயின் மரணதண்டனை நீக்கக்கூடாது இதுதான் பின்நவீனத்துவ கோட்பாட்டு விளக்கமாகும். இதை மேலும் அதே பின்நவீனத்துவ நூல் பக்கம் 85 உள்ளபடி பார்ப்போம். ".......'உண்மை" எல்லாக் காலத்திற்கும் எல்லா இடத்திற்கும் எல்லா மக்களுக்கும் ஒன்றாகவே இருக்க முடியும் என்றும் நம்பினோம்." எனக் கூறி மறுத்ததன் மூலம் உண்மை என எதுவுமில்லை எனப் பின்நவீனத்துவ வழியில் கூறுகின்றார். அப்பாவிக் கைதிகள் குற்றவாளிகள் அல்ல என்பது உண்மை இல்லை என்கிறார். இங்கு உண்மை இடத்துக்கும், எல்லா மக்களுக்கும், காலத்துக்கும் ஒன்றாக இருக்கமுடியாது என்கிறார்.


தமிழர்க்கு உண்மையானது சிங்களவர்க்கு உண்மையாக இருக்க வேண்டியதில்லை என்கிறார். இந்திய ஆளும் வர்க்கத்துக்கு உண்மையானது மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டியதில்லை என்கிறார். மரணதண்டனையை கேட்டு கொதித்த மக்களின் உண்மை மற்றவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டியதில்லை என்கிறர். ஏனெனின் உண்மை என்ற ஒன்று எல்லோருக்கும் இருக்காது என்பதன் மூலம் ஆளும் வர்க்க ஓடுக்குமுறைக்கு எதிரான பொது உண்மையல்ல என்பதால் நாம் அதை எதிர்க்கமுடியாது என்கிறார். ஆணால் இது சனநாயகத்தின் உயிர் மூச்சு என்பதால் இதை எதிர்ப்பதாக கூறுவோம். ஆனால் உண்மையின் அடிப்படையில் அல்ல. இங்கு உண்மை உயிர் வாழ வேண்டும் என்பது எமது நோக்கமல்ல. நாம் கதைப்போம் சனநாயகம் உயிர்வாழ வேண்டும் என்பதற்காக மட்டும். இது நீடிக்கும்வரைதான் முதலாளித்துவ சுரண்டல் நீடிக்கும். அது உள்ளவரைதான் சனநாயகமும் உயிர் வாழும் எனவே சுரண்டலை பாதுகாப்போம். ஆணால் எதிர்ப்பதாக பாசாங்கு செய்வது சனநாயகத்தின் பின்நவீனத்துவ வழியாகும்.


உண்மை என்ற ஒன்று மரணதண்டனைக்கு எதிராக இருக்கமுடியாது என்பதால் பின்நவீனத்துவ வாதிகள் எப்படி குரல் கொடுப்பார். இதனால்தான் ஆளும் வர்க்கம் சார்பாக இந்தியா ரூடே, துக்ளக்........போன்ற பத்திரிகைகள் சிறுபான்மையின் சனநாயகத்தைப் பாதுகாக்க பின்நவீனத்துவ வழியில் மரணதண்டனை சரியானது என வாதிடுகின்றன. இவ்மரணதண்டனை சனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி எனப் பிரகடனம் செய்து, பின்நவீனத்துவவாதிகளின் கோரிக்கைக்காக யதார்த்தமாக உண்மையாக விசுவாசமாக குரல் கொடுக்கின்றனர். அதாவது மாறுபட்ட இன்றைய சனநாயகத்தில் மட்டும்தான் மாறுபட்ட கருத்து, மாறுபட்ட மக்கள் என அனைத்தும் நீடிக்கும் என்பதால் இந்த சமூதாய இருப்புக்காக நனவாக விசுவாசமாக பின்நவீனத்துவவாதிகள் செயல்பாடுகின்றனர்.


இருபத்தியாறு பேரின் மரணதண்டனை மாறுபட்ட கருத்தில், மாறுபட்ட மக்களில், மாறுபட்ட இடத்தில் சனநாயமாக மையமிடுவதால் இதுபோன்றவை நீடிக்க பாதுகாக்க நனவாக போராடவேண்டும் என்கிறார். சனநாயகத்தை ஒழித்துக் கட்ட கோரும் பாட்டாளிவர்க்க சமுதாய கோரிக்கையை எதிர்த்து இன்றைய உலக ஒழுங்கு மட்டும்தான் சனநாயகத்தின் ஒரேயொரு பாதுகாப்பான பாதை என்பதால் அப்பாவிகள் மீதான மரணதண்டனை போன்றவை அவசியமானது, இது சனநாயகத்தை உயர்த்த, குரல் கொடுக்க உள்ள இறுதியான உள்ள ஒரே மார்க்கம் என்பதால் மரணதண்டனையை பாதுகாக்க வேண்டும், அதே நேரம் எதிர்ப்பதாக சனநாயக வழியில் பின்நவீனத்துவ வழியில் பேசுவோம் என்கின்றார். தொடர்ந்தும் அதே நூல் பக்கம் 55 இல் கூறுவதைப் பார்ப்போம்.


"பெரும்பான்மையின் கருத்துக்கு எதிராகச் சிறுபான்மை அல்லது ஒரு தனி மனிதர் தனது கருத்தை முன்வைப்பதற்கும் காப்பாற்றுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்க்குமான உரிமையே சனநாயகம்." என அ.மார்க்ஸ் பின்நவீனத்துவ வழியால் எடுத்து முன்வைக்கின்றார்.


இதற்கு அண்மையில் துக்ளக் (27.5.98) இதழில் சிறுபான்மை தனிநபர் சனநாயகத்துக்காக குரல் கொடுத்ததைப் பார்ப்போம். "நினைத்ததை எழுதுகிறேன்" பகுதியில் " போக வேண்டிய சட்டம்" எனப்போட்டு "நில உச்சவரம்புச் சட்டத்தை மத்திய அரசு நீக்கியிருக்கிறது........... கம்யூனிஸ ஆட்சியில் ஒரு சர்வாதிகாரத்தின் கீழ் வேண்டுமானால் இம்மாதிரி சட்டம் செல்லுபடியாகக் கூடுமே தவிர, ஒரு ஐனநாயக நாட்டில் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய சட்டம் அல்ல இது............ பொது உடமை என்ற பெயரில், பொதுக் குழப்பத்தை மட்டும் விளைவித்துக் கொண்டிருந்த இந்தச் சட்டம், போக வேண்டிய சட்டம்தான்." இந்த வாதம் எப்படி ஐனநாயகத்தை வரையறுக்கின்றது என்றதற்கு நல்ல உதாரணம். சிறுபான்மை , தனிநபர் ஐனநாயகம் என்பது பெரும்பான்மை ஐனநாயகத்துக்கு எதிரானது என்பதை நிலஉச்சவரம்பு சட்டநீக்கம் தெளிவாக காட்டுவதையே அ.மார்க்ஸ் பின்நவீனத்துவ கோட்பாட்டால் கோருகின்றார். மக்களுக்கு சொத்துரிமை இருப்பது ஐனநாயக விரோதம் இது கம்யூனிச சர்வாதிகாரம் எனக் கூறுவதையே அ.மார்க்ஸ் தனிமனித உரிமையாகவும், சிறுபான்மை உரிமையாகவும் முன்வைக்கின்றார். இதையே லண்டனில் இருந்து எழுதும் யமுனாவும் எழுதுகின்றனர்.


இந்த சிறுபான்மை ஐனநாயகத்தை அமுல்படுத்தக் கோரி இந்தியா ரூடே (மே 27 98) ஆசிரியர் குறிப்பில் "வெடித்தது குண்டு அடுத்தது?" எனத்தலைப்பிட்ட செய்தியில் அணுகுண்டு வெற்றி போலி மயக்கத்தில் பெரும்பான்மை மக்கள் தங்களை மறந்து கூத்தாடிக் கொண்டிருந்த நிலையை சிறுபான்மை பிரிவுக்கு சாதகமாக மாற்றும்படி எழுதுவதைப் பார்ப்போம்.


"முதல் வாக்குறுதியை நிறைவேற்றியாகி விட்டது. இரண்டாவது வாக்குறுதியையும் நிறைவேற்ற இதுவே சரியான தருணம். இதற்கு சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் இப்போது உள்ள மனநிலை வெகு சாதகம்" என்கிற போது ஐனநாயகம் எது என்பதையும், சிறுபான்மை ஐனநாயகத்தின் மறுகாலனியாக்கத்துக்காக போராடும் இந்தியா ரூடே, துக்ளக் போன்றவற்றின் குரல்களுக்கும், அ.மார்க்ஸ்சின் குரலுக்கும் எந்த வேறுபாடும் இருக்கவில்லை. சிறுபான்மை நலனுக்காக பாரதிய ஐனதா அரசு அணுக்குண்டை வெடிக்க வைத்தது. குண்டுவெடிக்க முன் அ.மார்க்ஸ்சின் சிறுபான்மை ஐனநாயகத்துக்காக இறககுமதி தீர்வையை ஏப்பிரல் 13 இல் 340 பொருளுக்கும், ஏப்பிரல் கடைசியில் 300 பொருளுக்கும் (இதில் வேடிக்கை என்னவென்றால் சிலஅடிப்படை நுகர்வுப் பொருளுக்கும் நீக்கி மக்களின் வயிற்றில் அடித்த சுதேசி வேடம் போட்டு குண்டு போட்டதுதான்) இறக்குமதி தீர்வை நீக்கி சிறுபான்மைக்காக சேவை செய்த அரசு, தமது சுதேசி வேடம் கிழியாது இருக்கவும், மக்களை திசைதிருப்பவும் அணுக்குண்டு போட்டு திசைதிருப்பியது என்பது அ.மார்க்ஸ்சின் அதே தொழிலாக ஏகாதிபத்திய நலன்களான சிறுபான்மையை திருப்தி செய்யத்தான்.


இதைப் போல் கார்த்திகேசனினதும் இந்திய ஆளும் வர்க்க சிறுபான்மையும் தனது ஐனநாயக விரோத தீர்ப்பை வழங்கவும், நடைமுறைப்படுத்தவும் உள்ள உரிமையை மறுப்பது உள்ளவரை அது ஐனநாயக விரோதமானது, எனவே அதைப் பாதுகாக்கும் உரிமைதான் ஐனநாயகம் என்கிறார். மரணதண்டனை வழங்கும் உரிமை ஐனநாயகம் என்பதால் அதைப் பாதுகாத்தபடி அதை எதிர்க்கும் உரிமையும் ஐனநாயகம் என்பதால் எதிர்த்தபடி இரண்டையும் பாதுகாப்போம் என்கிறார். மரணதண்டனையை எதிர்த்த இவரின் அறிக்கை மரணதண்டனையை பாதுகாக்கும் உரிமையினை எதிர்த்தல்ல. இரண்டின் மேலாக மட்டும்தான் பின்நவீனத்துவம் உள்ளதால் நனவாக இருக்கும் சமுதாய அமைப்பை நனவாக பாதுகாக்க பின்நிற்காத அறிக்கைகளை விடுவது அவசியமாகிவிடுகின்றது. மரணதண்டனையை எதிர்த்தல்ல ஐனநாயகத்தைப் பேசிக் கொள்ள மட்டும் பேசுகின்றனர்.


பின்நவீனத்துவம் பொது உண்மையை மறுத்து, சிறுபான்மையினதும், தனிநபரினது உரிமையை பாதுகாத்தும் பெரும்பான்மை மக்களையும், பெரும்பான்மை பொது உண்மையையும் மறுத்து நிற்பதால் பெரும் தத்துவத்தை மறுத்த நனவாக சிறுபான்மை ஆளும் வர்க்கத்துக்கும் அதன் தனிநபர் பிரதிநிதிகளுக்கும் ஐனநாயகத்தின் பெயரில் முண்டு கொடுக்கின்றது. எல்லா மனிதர்க்கும் ஐனநாயகம் இருந்தால் எப்படி ஐனநாயகக் கோரிக்கை எழமுடியும்?. ஐனநாயகம் என்பது குறித்த பிரிவுக்கு மட்டுமானதாகவே எப்போதும் வர்க்க சமுதாயத்தில் நீடிக்கும். எல்லோருக்கும் ஐனநாயகம் இருப்பின் ஐனநாயகம் மறைந்துவிடும். அ.மார்க்ஸ்சின் ஐனநாயகம் என்பது உண்மையில் சிறுபான்மை சுரண்டும் ஐனநாயகத்தைப் பாதுகாப்பதில் எழும் குரலாக மட்டும் உள்ளது.


ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை


இப்படி தமிழ் மக்களினதும், போராளிகளினதும் அரசியலை நலம் அடித்த பின்பு, ஏகாதிபத்தியம் எல்லாவற்றையும் புரிந்துள்ளனர் என்று கூற புலிகளால் முடிகின்றது. அதாவது ஏகாதிபத்தியம் தனது கொள்கையை புலிகளின் கொள்கையாக்கும் போது, என்ன நடக்கும் என்பதை புலிகளே சொல்லிவிடுகின்றனர். "சர்வதேச நாடுகள் இலங்கைப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்பதில் அக்கறையாக இருக்கின்றன. அதன் வெளிப்பாடாகத் தான் இந்த அக்கறை ஆர்வம் அனைத்தும்" என்ன அரசியல் ஞானம்! புல்லரிக்க வைக்கும் துரோகத்தை தவிர, வேறு எதையும் தமிழ் மக்களுக்கு பெற்றுத்தரப் போவதில்லை. ஏகாதிபத்தியங்களின் ஆர்வங்கள், விருப்பங்கள், அக்கறைகள் எல்லாம் தமது சொந்த நலன் தான். அதாவது தமிழ் மக்களை எப்படி அடிமைப்படுத்தி கொள்ளையடிப்பது என்பது தான். இதையே புலிகள் தீர்வு எனக் கூறிய பின்பு, புலிகள் இனியும் தமிழ் தேசிய தலைவர்கள் அல்ல. மாறாக ஏகாதிபத்தியத்தின் தரகுத் தலைவராகவே இருக்கின்றனர் என்ற உண்மையை பளிச்சென்று நிர்வாணமாக்கிவிட்டது.


இந்த ஏகாதிபத்தியத்துக்கு துணைபோகும் துரோகத்தை புலிகள் சார்பாக தமிழச்செல்வன் உலகறிய நியாயப்படுத்தும் விதமோ கேவலமானது. "இன்று இலங்கை விவகாரம் சர்வதேசமயமாகியுள்ளது. இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் போரினால், பயத்தினால் புலம் பெயர்ந்து பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இது அந்த நாடுகளுக்கு பிரச்சனையாக உள்ளது. அவர்களுக்கென தீர்வினைக் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை அந்த நாடுகளுக்கு உள்ளது. இதற்கு அப்பால் அந்தந்த நாடுகளின் நலன்களும் உள்ளன. எனவே தான் அமைதி திரும்புவதை இந்நாடுகள் விரும்புகின்றன." என்று கூறும் புலிகள், இதற்காக தமிழ் மக்களின் நலன்களை தியாயம் செய்ய உள்ளதாக கூற முடிகின்றது. அப்பட்டமாகவே சோரம் போகக் கூடிய அனைத்து தர்க்க விளக்கங்களையும், ஏகாதிபத்திய சார்பாக அவர்களின் நலன்களில் இருந்து வைக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்த நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களை திருப்ப அனுப்பவும், ஏகாதிபத்திய உலகமயமாதல் நலன்களை அடைய மக்களை அடிமைப்படுத்தவும் விரும்பும் ஏகாதிபத்திய நலன்களை, புலிகள் ஏற்றுக் கொண்டு சோரம் போக தயாராக இருப்பதை புலிகள் ஒத்துக் கொள்கின்றனர். இதை நாகரிகமாக முடிமறைத்தபடி களமாடுகின்றனர்.


தமிழ் மக்களின் பிரச்சனைக்கு நேரடியாகவே எதிராக இருக்கும் இந்தியா பற்றி, புலிகளின் சார்பாக தமிழ்ச்செல்வனின் கூற்று அனைத்தையும் மறந்துவிடவும், மக்களை அடிமைப்படுத்தும் ஒரு நிலைக்கு தாம் தயாராக இருப்பதை புலிகள் வலிந்து முன்வைக்கின்றனர். முன்னைய இந்திய ஆக்கிரமிப்பும், ராஜீவ் கொலையையும் பற்றி பேசிக் கொள்ளாத வகையில் உலகமயமாதல் நிகழ்சியில் இணங்கிப் போகத் தயாராக இருப்பதை புலிகள் கோடிட்டுக் காட்டுகின்றனர். "நாம் இந்திய தேசத்துக்கோ, இந்திய மக்களுக்கோ எதிரானவர்கள் அல்ல" என்று கூறி, இந்திய மக்களையும், அரசையும் ஒன்றாக காட்டி விடுகின்றனர். இதன் மூலம் இந்திய அரசுடன் கூடிக்குலாவ விரும்புவதை புலிகள் மீண்டும் வெளிப்படுத்திவிடுகின்றனர்.


எந்த அமைதியும் சமாதானமும் இந்திய அரசின் அடிப்படையான கொள்கையுடன் தொடர்புடையவை. ராஐPவ் கொலை தொடர்பாக புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய நபர்கள் பற்றிய பிரச்சனையில், பிரபாகரனின் பாதுகாப்பு உறுதிப்படும் பட்சத்தில் தான், அமைதி மற்றும் சமாதானத்தின் ஆயுள் தங்கிக் கிடக்கின்றது. இங்கு தமிழ் மக்களின் பிரச்சனைகள் அல்ல. அவை இரண்டாம் பட்சமானவை. முதலாம் பட்டசமாக இருப்பவை புலித் தலைவர்களினதும், அவர்களின் குழுவினது நலன்கள் தான். இந்த குழுக்களின் நலன்கள் பூர்த்தி செய்யப்படும் போது, அமைதி என்பது தமிழ் மக்கள் மேலான துரோகத்தில் பூத்துக் குலுங்கும். தமது துரோகத்தை பயங்காரவாத பட்டியலில் இருந்து நீங்குவதன் மூலம் நிறைவு செய்ய முடியும் என்கின்றார் தமிழ்ச்செல்வன். "சர்வதேச பயங்கரவாத நிகழ்ச்சி நிரல்களுக்குள் விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைப் புலிகளையும் இணைத்துக் கொண்டு செல்வது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்று தெரியவில்லை" என்பதை தெளிவாகச் சொல்லிவிடுகின்றார். சமாதானம், அமைதி எதுவாக இருந்தாலும், புலிகள் என்ற குழுவின் அடிப்படை நலன் சார்ந்தாக இருப்பதை தௌளத் தெளிவாக கூறிவிடுகின்றார்.


விடுதலைப் புலிகளின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் தான், தமிழ் மக்களின் தேசிய போராட்டத்தை காட்டிக் கொடுப்பதற்கான அடிப்படையான நிபந்தனை. நீடித்த இழுபறியாக நடக்கும் பேரங்கள் அனைத்தும், புலிகளின் எதிர்காலம் என்ன என்றதில் இருந்து, தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கை அனைத்தையும் காட்டிக் கொடுக்க தயாராக இருப்பதை புலிகள் எப்போதும் பிரகடனம் செய்து வருகின்றனர். தமிழ் மக்களின் எந்த ஜனநாயக கோரிக்கையையும் மக்கள் மத்தியில் புலிகள் முன்வைப்பதில்லை. குழுநலனை அடிப்படையாக கொண்டு, அதை தமிழ் மக்களின் பிரச்சனையாக காட்டுவதே அண்மைய குறிப்பான அரசியலாகியுள்ளது.


சர்வதேச ரீதியாக அமெரிக்காவின் அத்துமீறிய ஆக்கிரமிப்புகள் உலகளவில் வேகம் பெற்றுள்ள நிலையில், புலிகள் மேலான அமெரிக்காவின் அச்சுறுத்தல் ஒரு இராணுவத் தாக்குதலாகும் எல்லையைத் தொட்டு நிற்கின்றது. அமெரிக்கா புலிகளுக்கு கொடுக்கும் நிர்ப்பந்தம், புலிகளை அமைதியாக சரணடையக் கோருகின்றது. இந்த நிலையில் புலிகள் சார்பாக தமிழ்ச்செல்வன் "ஒரு சுதந்திர இயக்கமான விடுதலை அமைப்பாக செயற்படும் விடுதலைப் புலிகள் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கப்போவதில்லை" என்று கூறியதன் மூலம், தம் மீதான அங்கீகாரத்தை கோருகின்றார். தமிழ் மக்களின் தேசிய பிரச்சனை எக்கேடு கெட்டாலும் அதைப்பற்றி புலிகள் பேச முன்வரவில்லை. ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்கு புலிகள் அச்சசுறுத்தலாக இருக்க மாட்டோம் என்பதை சொல்லிவிடுகின்றனர். உலகமயமாதலையே தமது கொள்கையாக்கி கொள்வதை உறுதி அளிக்கின்றனர். அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியத்துக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டோம் என்பது, சாராம்சத்தில் இலங்கையில் ஏகாதிபத்திய தலையீட்டை அனுமதிப்போம் என்பதை ஒத்துக் கொள்கின்றது. உலகளவில் உலகமயமாதல் என்பது, ஏகாதிபத்திய அத்துமீறலை தேசிய எல்லைக்குள் அங்கீகரிப்பதை அடிப்படையாக கொண்டது. இதை வெளிப்படையாக புலிகள் ஆதரித்து நிற்பதும், அதற்கு துணை போக தயாராக இருப்பதாக பிரகடனம் செய்யும் போது, தம்மை அங்கீகரித்து அதை முன்னெடுக்க அனுமதிக்கக் கோருகின்றனர். இதைத் தான் தமிழ் மக்கள் சார்பாக புலிகள் வைக்கும் உயாந்தபட்ச கோரிக்கையாகும்.