தமிழ் அரங்கம்

Wednesday, July 26, 2006

இலவச கவர்ச்சித் திட்டங்கள்:"தமிழன் கையேந்தியாவதா"

இலவச கவர்ச்சித் திட்டங்கள்:"தமிழன் கையேந்தியாவதா"


ப்படியாவது ஓட்டு வாங்கி, தேர்தல்களில் வெற்றி பெற்று பதவியைப் பிடிக்க வேண்டும்; அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் அரசியல் கட்சிக்காரர்கள். வாக்காளர்களின் கால்களைப் பிடித்தும் கெஞ்சுவார்கள் அப்படியும் செய்திருக்கிறார்கள்! ஆனால், ஒன்றை மட்டும் செய்யவே மாட்டார்கள்!



தேர்தல்களின்போது அள்ளி வீசும் வாக்குறுதிகளை, குறைந்தபட்சம் அரசியல் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கையில் எழுத்துபூர்வமாகத் தரும் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தண்டிக்கப்படுவார்கள்; அவர்களின் அரசியல் கட்சிகள் தடை செய்யப்படும்; குறைந்தபட்சம் அவர்களின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என்று சட்டம் கொண்டு வருவோம் என்று வாக்குறுதி வாக்குறுதிதான் தருவார்களா? மாட்டார்கள்!



ஏனென்றால், ஓட்டுக் கட்சிகள் எல்லாவற்றுக்குமே நன்றாகவே தெரியும் எல்லாம் ஒரு ஏமாற்று என்பது! அவர்கள் ""அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா'' என்று சொல்லும்போது போலி வாக்குறுதிகளும் அதில் அடங்கும். அவர்கள் ஓட்டுப் பொறுக்குவதற்காக எதையும் செய்வார்கள், சொல்வார்கள். செய்யாவிட்டால், யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்றும் தெரியும். வாக்காளர்களையும் இதற்குப் பழக்கப்படுத்தி விட்டார்கள்.



ஜனநாயக அமைப்பு முறையைப் பலப்படுத்துவது என்ற பெயரில் எவ்வளவோ சீர்திருத்தங்கள் முன்மொழியப் படுகின்றன; கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஒரு சார்பாக நடந்துவிடக் கூடாது என்பதற்காகக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டதைப் போலக் கண்காணித்து உத்தரவுகள் போடுகிறது, தேர்தல் ஆணையம்; புகார் மனுக்கள் குவிகின்றன, விசாரணைகள் ""தூள்'' பறக்கின்றன. வாக்காளர் பதிவுகள் சரிபார்த்தல்கள் திரும்பத் திரும்ப நடக்கின்றன; போலி வாக்காளர்களைத் தடுப்பதற்குப் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன; அதையும் மீறுவதால் புகைப்பட வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றன. வேட்பாளர் செலவுகளையும், வாக்குப்பதிவையும் கண்காணிப்பதற்கு மேற்பார்வையாளர்கள் போடப்படுகிறார்கள். கள்ள ஓட்டுக்களைத் தடுப்பதற்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்துவிட்டன. வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது, கள்ள ஓட்டுப் போடுவது, ஓட்டு எண்ணிக்கையின்போது நடக்கும் அராஜகம் எல்லாவற்றையும் கண்காணிக்க ""டிஜிட்டல் காமிரா'' மூலம் படப்பிடிப்பும் வந்துவிட்டது. கட்சித்தாவல் தடைச் சட்டம், கட்டாய உட்கட்சித் தேர்தல்கள் கூட வந்துவிட்டன.



இவை எந்தளவு ஜனநாயக அமைப்பு முறையைப் பலப்படுத்தியுள்ளன என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், பெயருக்குக் கூட ஒரு விசயம் வலியுறுத்தப்படுவதில்லை. அதுதான் ""தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்; தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இந்த இந்த சட்டதிட்டங்களைத்தான் அமலாக்குவோம் என்று முன்கூட்டியே தத்தமது தேர்தல் அறிக்கையில் அறிவித்து விடவேண்டும். அவற்றை மீறினால் தண்டிக்கப்படுவார்கள், அரசியல் கட்சிகள் தடை செய்யப்படும், அங்கீகாரம் இரத்து செய்யப்படும்'' என்பதற்கு மட்டும் சட்டமோ சீர்திருத்தமோ வாக்குறுதியோ இல்லை.



""சீட்டுக் கம்பெனி'' நடத்துபவர்கள், பணம் வசூலித்துக் கொண்டு வாக்களித்தபடி பணமோ, பரிசோ தராமல் மோசடி செய்துவிட்டால் அவர்களைத் தண்டிக்க சட்டத்தில் இடமுண்டு. கம்பெனிகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் மீறப்பட்டால் ஒப்பந்த மீறல், நம்பிக்கைத் துரோகம் என்று கூறி வழக்குப் போடமுடியும். இன்சூரன்சு காப்பீட்டுக் கழகங்கள் வாக்களித்தபடி தொகை தராமல் போக முடியுமா? அதேபோல வாக்குறுதிகள் கொடுத்து ஓட்டுக்களை அள்ளிக் கொண்டு போய், அவற்றை நிறைவேற்றாமல் மோசடி செய்வது நம்பிக்கைத் துரோகம், ஒப்பந்த மீறல் குற்றம் என்று கருதப்படுவதில்லையே, ஏன்?



இதைவிட மிகப் பெரிய கிரிமினல் குற்றங்கள் புரிவதற்கு இந்த அரசியல் அமைப்பு முறை ஓட்டுப் பொறுக்கிகளுக்குச் சாதகமாக இருக்கிறது. ஒருமுறை ஓட்டுக்களை வாங்கிக் கொண்டு போய் ஆட்சியில் அமர்ந்துவிட்டால், இது இதைத்தான் செய்யவேண்டும் என்று கட்டாயம் இல்லாததைப் போல, நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக எது எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று வெற்றுத்தாளில் கையொப்பம் போட்டுக் கொடுப்பதாகத்தான் இருக்கிறது.



தேர்தல்களின்போது கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதேசமயம், 2001இல் ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா அரசு ஒரே சமயத்தில் நாலாயிரம் கோடிக்கு மேல் மின்சாரம், பேருந்துக் கட்டணம், வரிச்சுமைகள் போன்றவற்றை ஏற்றியது. மாணவர்களைக் கொள்ளையடிக்கவும், அரசு ஊழியர்கள் உரிமைகளைப் பறிக்கவும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதை இரத்து செய்யவும், ரேசன் விலையேற்றம், போராடிய அரசு ஊழியர்கள், பேருந்துத் தொழிலாளர்கள், மாணவர்களை ஒடுக்கவும், அரசு ஊழியர்கள், சாலைப் பணியாளர்களை வேலை நீக்கம் செய்யவும், ஆடுகோழி வெட்டத் தடை, மதமாற்றத் தடை, பொடா சட்டம் என்று ஒடுக்குமுறைகளை ஏவி ஒடுக்கவும் செய்தார்.



மத்தியில் காங்கிரசு கூட்டணி அரசாக இருந்தாலும் பா.ஜ.க. கூட்டணி அரசாக இருந்தாலும் தவறாமல் தனியார்மயம் தாராளமயம் உலகமயக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அரசுத் துறைத் தொழில்கள் உள்நாட்டுவெளிநாட்டு ஏகபோக முதலாளிகளுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. நாட்டையும் மக்களையும் பாதிக்கும் வகையில் அந்நியத் தொழில் கழகங்களுக்கு எல்லாத் தொழில்களும் திறந்து விடப்படுகின்றன. நாடாளுமன்றத்துக்குத் தெரியாமலேயே இராணுவ, அணுசக்தி, விவசாய தொழில் ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. இப்படித்தான் செய்வோம் என்று தேர்தல் அறிக்கைகளில் பகிரங்கமாக அறிவிக்காமலேயே வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்குவதைப் போல வாக்குகளை வாங்கிப் போகிறார்கள்.



தற்போது தொகுதி நிலவரம் வெற்றிவாய்ப்புகள் குறித்த மதிப்பீடுகளை எழுதும் ""கிசுகிசு'' பத்திரிக்கைகள் கூடச் சொல்லுகின்றன. ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் உள்ளூரளவில் நிறைவேற்றுவதாக கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளுள் நான்கில் ஒன்றைத்தான் நிறைவேற்றியிருக்கிறார்கள். அதுவும் பெரும்பாலும் தார்ச்சா லைகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான்! மீதி ""அம்போ'' தான்! 2001 தேர்தல்களில் ஆட்சிக்கு வருவதற்காக ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள் நீர்மேல் எழுத்தாகி விட்டதாக ஜெயலலிதா ஆதரவு ஏடான ""இந்தியா டுடே'' மதிப்பீடு சொல்கிறது.



தேர்தல் வாக்குறுதிகள் என்பவை வெற்றுக் கோஷங்கள் என்பதை மக்கள் கண்டு கொண்டும், அரசியல் கட்சிகளின் நம்பகத் தன்மை பறிபோயும் ஆண்டுகள் பலவாகி விட்டன. அரிசியே அரசியலாவதும், சாதியை வைத்து ஓட்டுப் பொறுக்குவதும் கூட தமிழக மக்களுக்குப் புதிதல்ல. இந்தத் தேர்தலில் முதன்முறையாக ஓட்டுப் போடப்போகும் இளைஞர்கள் தங்கள் பெற்றோரைக் கேட்டுப் பார்த்தால் அவர்கள் சொல்வார்கள். அவர்கள் முதன்முறையாக ஓட்டுப் போட்டபோதே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றியது அரசியல் அல்ல; ""அரிசியியல்தான்.'' அதற்கு முன்பு வரை சாதியமும் பண்ணை அரசியலும்தான் ஆதிக்கம் வகித்து வந்தன. தேசியத் தலைவர் என்று பொய்யுரைத்துப் புகழப்படும் ""பெருந்தலைவர்'' காமராசரே, தன் பெயரை ""கு.காமராஜ் நாடார்'' என்று சொல்லித்தான் ஓட்டுக் கேட்டார். திராவிடப் பேரறிஞர் என்று கழகங்கள் பெருமை பாராட்டும் அண்ணாவே ""சி.என். அண்ணாதுரை முதலியார்'' என்ற பெயரில்தான் 1957இல் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.



வாரம் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கும்படி உபதேசித்த காங்கிரசு அரசு, ரேசனில் தலைக்கு ஒரு ""அவுன்சு'' (தலைக்கு நூறு மில்லி அளவு) அரிசி போட்டது. அந்தச் சமயத்தில் அரிசியியலின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட அண்ணா தலைமையிலான ""ஒரிஜினல்'' தி.மு.க, ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி தரப்போவதாகவும் கடல்பாசியிலிருந்து அல்வா தயாரித்துத் தரப்போவதாகவும் தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடாவிட்டால் முச்சந்தியில் நிறுத்தி வைத்துச் சவுக்கால் அடியுங்கள் என்று வீராவேசம் பேசினார் ""பேரறிஞர்''. பிறகு அவரே சுருதியை இறக்கிக் கொண்டு, ""மூன்றுபடி இலட்சியம்; ஒருபடி நிச்சயம்'' என்று அடுக்குமொழியில் வசனம் பேசினார்.



அதையும் நம்பி 1967 தேர்தல்களில் தி.மு.க.வை வெற்றிபெறச் செய்து, ""அண்ணா''வை முதலமைச்சராக்கினார்கள் தமிழக வாக்காளர்கள் (""இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி'' என்று வாக்குறுதி கொடுத்து ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த என்.டி. இராமராவுக்கு ""அண்ணா'' என்று பட்டப் பெயர் உண்டு) பதவியேற்ற அண்ணா வாக்குறுதியை மறந்துவிடவே, எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய பிறகு சென்னையிலும், கோவையிலும் மட்டும் ""படியரிசித் திட்டம்'' அமுலாக்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு நிதிப் பற்றாக்குறையைக் காரணங்காட்டி அத்திட்டமும் கைவிடப்பட்டது.



இன்று அண்ணாவின் அரசியல் வாரிசு என்று உரிமை பாராட்டும் கருணாநிதியும், அண்ணாவைக் கொடியில் பொறித்துக் கொண்டு அண்ணா பெயரில் கட்சி நடத்தி வரும் ஜெயலலிதாவும் போட்டிப் போட்டுக் கொண்டு அரிசியியல் நடத்துகிறார்கள். விவசாயிகள் எலிக்கறியையும், நெசவாளிகள் கஞ்சித் தொட்டியையும் தேடிப் போகும் இன்றைய நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு ஒரே வழி சுனாமி நிவாரணம், வெள்ள நிவாரணம், மகளிர் சுயஉதவிக் குழு, இலவச சைக்கிள், விவசாயிகள் நலத்திட்டம் என்றெல்லாம் ஆயிரம், ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களை விசிறியடிக்கும் ஜெயலலிதாவை முறியடிப்பதற்கான ஒரே வழி அரசியல் அல்ல, அரிசியியல்தான் என்று முடிவு செய்த கருணாநிதி, இலவச கலர் டி.வி. பெட்டி, இலவச எரிவாயு அடுப்பு, ஏழைப் பெண்களின் திருமணச் செலவுக்கும், பிரசவத்துக்கு முன்னும் பின்னும் ஆயிரக்கணக்கில் நிதி உதவி, விவசாயிகளுக்குக் கடன் ரத்து, விவசாயிகளுக்கும் விசைத்தறி முதலாளிகளுக்கும் இலவச மின்சாரம், வேலையற்ற இளைஞர்களுக்கு மாத ஊதியம் ஆகியவற்றோடு, அவற்றைவிட முக்கியமாக, இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ தரமான அரிசி வழங்கும் திட்டத்தைத் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார். இதைப்பார்த்த நடிகர் விஜயகாந்த் மாதம் இருபது கிலோ இலவச அரிசி என்று அறிவித்தார்.



இந்த அறிவிப்புகளுக்கு முன்பு வரை, ஜெயலலிதா அளித்த ரொக்கம் இலவசங்கள் ஆகியவையே தேர்தல் பிரச்சாரங்களில் முக்கியப் பேச்சாக இருந்தன. கருணாநிதியின் இலவச அறிவிப்புகளுக்குப் பிறகு தேர்தல் பேச்சே மாறிப் போய்விட்டது. இதெல்லாம் சாத்தியமே இல்லை என்ற ஜெயலலிதா அணி அதிர்ச்சியுற்று, தானும் மாதம் பத்து கிலோ அரிசி இலவசமாகத் தரும் வாக்குறுதியை அறிவித்தார். யாருடைய அறிவிப்பு மேலானது, நம்பத்தகுந்தது என்ற இலாவணிதான் இப்போது முக்கியமாகிவிட்டது.



மூன்று வருடங்களுக்கு முன்புதான் ""கஜானா காலி'' என்று அறிவித்து பல ஆயிரங்கோடி வரிகட்டணச் சுமைகளை ஏற்றிய ஜெயலலிதா, இதுவரை அமலாக்கிய நிவாரண இலவசத் திட்டங்களுக்கே நிதியளித்தது மத்திய அரசுதான் என்று தி.மு.க. அணி உரிமை பாராட்டிக் கொள்கிறது; நேற்றுவரை கருணாநிதியின் அரிசிஇலவசத் திட்டங்களைக் கேலி செய்த ஜெயலலிதா, தானே அரிசி இலவச அறிவிப்புகள் தருவது மோசடிதான் என்கிறது தி.மு.க. அரிசி உட்பட மக்களின் அடிப்படை தேவைகளுக்கான, விவசாயம் நெசவு போன்ற தொழில்களுக்கான, மருத்துவம் கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கான மானியங்களைக் கடுமையாக வெட்டும் மத்திய காங்கிரசு அரசோடு சேர்ந்துள்ள கருணாநிதி பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும் இலவசத் திட்டங்களை அறிவித்திருப்பதும் மோசடிதான் என்கிறது, ஜெயா வைகோ திருமா அணி.



கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, விஜயகாந்தோ அறிவித்துள்ள இலவச வாக்குறுதிகள் தேர்தல்கால பித்தலாட்டங்கள்தாம் என்பதில் சந்தேகமில்லை. இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும், சில இலவசத் திட்டங்கள், சில காலம் மட்டுமே அமலுக்கு வரும். அவையும் ஏதாவது காரணங்காட்டி கிடப்பில் போடப்படும் என்பதில் சந்தேகமில்லை. ""சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டுகள்'', ""அரசியலில் நிரந்தரப் பகையும் கிடையாது, நட்பும் கிடையாது'' என்பவைபோல, ஓட்டுப் பொறுக்குவதற்காக எதையும் பேசலாம், செய்யலாம் என்பதும் வழக்கமாகிவிட்டது; தேர்தல் கால வாக்குறுதிகளை ""சீரியசாக'' எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதும் விதியாகி விட்டது. ""சினிமாக் கதையில் தர்க்கம் பார்க்கக் கூடாது; எல்லாம் ஒரு பொழுதுபோக்கு, என்று பேசப்படுவதைப் போல தேர்தல் வெறும் கேலிக் கூத்தாக்கப்படுகிறது.



ஆனாலும், "சோ', ரஜினி, ஞாநி போன்ற தேசியவாதிகள் அறிவாளிகள் மட்டும் இத்தகைய இலவச அரசியல் என்பதே திராவிடக் கட்சிகளின் கவர்ச்சி அரசியலால் வந்தது என்றும், நீண்டகால தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என்ற சிந்தனையற்ற கீழ்த்தரமான, சுயநல அரசியல்வாதிகளால் வந்தது என்றும் உபதேசிக்கிறார்கள். தமிழகத்தில் "அவுன்சு' அரிசித் திட்டம் ""பெருந்தலைவர் தியாகச் செம்மல்'' ஆட்சிக் காலத்தில் தான் வந்தது. நிரந்தரமான பஞ்சபூமியான ஒரிசா, பீகார், மத்தியப்பிரதேசத்தில் மட்டுமல்ல, வேகமான தொழில் வளர்ச்சி காணும் ஆந்திரா, கர்நாடகாவிலும், தமிழகத்தை விட மிகவும் முன்னேறிய மராட்டியத்திலும் கூட தேசியக் கட்சிகளின் ஆட்சிக் காலத்திலேதான் பட்டினிச் சாவுகளும், விவசாயிகள் தற்கொலைகளும் நடக்கின்றன.



எல்லாம் எதனால்? 1947க்குப் பிறகு நிலவுடைமை பண்ணை ஆதிக்கம், தரகு முதலாளிகள் ஏகாதிபத்திய கொள்ளை நீடித்தது; கடந்த 15 ஆண்டுகளாக தனியார்மயம் தாராளமயம் உலகமயம், பொருளாதார சீர்திருத்தம், நவீனமயம் என்ற பெயரால் உலகவங்கி, உலக வர்த்தகக் கழகம் பன்னாட்டு தொழில் கழகங்கள் திணிக்கும் வளர்ச்சித் திட்டங்கள் அமலில் உள்ளன. புதிய பொருளாதாரக் கொள்கை சீர்திருத்தங்களின் பலன்கள் கசிந்து அடித்தட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்திவிடும் என்ற வாக்குறுதி பொய்த்துப் போனது. வறுமையும், பட்டினிச் சாவும், தற்கொலையுமே மிஞ்சியது. உழைக்கும் மக்கள் அடியோடு மாண்டு போனால் மலிவான உழைப்புக்கு பன்னாட்டு முதலாளிகள் எங்கே போவது? அல்லது அவர்கள் பொங்கி எழுந்தால் பன்னாட்டு முதலாளிகள் சுரண்டலும் ஆதிக்கமும் என்ன ஆவது? இலவசங்கள் மூலம் உழைக்கும் மக்களை மயக்கி வைப்பதுதான் அவர்களின் நலனுக்கு உகந்தது. அதைத்தான் மு.க.வும், ஜெயாவும், கேப்டனும் செய்கிறார்கள்.



மு ஆர்.கே.

Tuesday, July 25, 2006

பொறுக்கி அரசியலில் சி.பி.எம். இன் புதிய பரிணாமங்கள்

'தேர்தல் என்றாலே இதெல்லாம் சகஜம்பா!..." பொறுக்கி அரசியலில் சி.பி.எம். இன் புதிய பரிணாமங்கள்

க்களுக்காகப் போராடும் ஒரே கட்சி, உழைக்கும் மக்களின் கட்சி என்றெல்லாம் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளும் வலது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணு, ""அரசியல சாக்கடை சாக்கடைன்னு சொல்லிகிட்டு இருந்தா, அப்புறம் யார்தான் அத அள்றது? நாமதான் தோழர்களே தூர் வாரணும்! எனவே கம்யூனிஸ்டு கட்சிக்கு வாக்களிக்க வாருங்கள்!'' என்று ""ஆனந்த விகடன்'' இதழில் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த ஓட்டுப் பொறுக்கித் திருவிழாவில் அடிதடி வெட்டு குத்து வேட்டி கிழிப்பு, கொலை மிரட்டல், குண்டு வீச்சு, கட்சித் தாவல், ஹீரோ ஹீரோயின் காமெடியன்களின் கொள்கை விளக்கப் பிரச்சாரம் முதலானவற்றுக்கு மத்தியில், சாக்கடையைத் தூர்வாரி ஓட்டைப் பொறுக்க ""காம்ரேடுகள்'' என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தோம். முடைநாற்றம் தாங்க முடியாமல் நமது மூக்கே நம்மைத் திட்டுகிற அளவுக்குக் குமட்டி விட்டது. சாக்கடையில் புரண்டு எழுந்து ""காம்ரேடுகள்'' செய்து கொண்டிருக்கும் "புரட்சி' நம்மைப் புல்லரிக்கச் செய்து விட்டது.

சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளரான வரதராஜன், தனது பெயர் மட்டும் வரத"ராஜா'வாக இருந்தால் போதாது; தோற்றமும் ராஜாவைப் போல் இருக்குமாறு செய்ய வேண்டும் என்று கட்சித் தொண்டர்களுக்கு ஆணையிட்டுள்ளார் போலும். திண்டுக்கல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் அசத்திவிட்டார்கள். மன்னர் பரம்பரையில் வந்த வாரிசு போல ஆளுயர மலர் மாலை, மலர்கிரீடம், கிரீடத்தின் உச்சியில் கட்சியின் சின்னம் சூட்டிக் கொண்டு பல்லைக் காட்டிக் கொண்டு அவர் தரிசனம் தந்துள்ளார். கையிலே செங்கோல் மட்டும் தான் பாக்கி! அதையும் அடுத்த கூட்டங்களில் ஏந்தி நிற்பார் என்று எதிர்பார்க்கலாம்.

உலகில் எந்த நாட்டிலும் போலி சோசலிஸ்டுகள் கூட இப்படி கிரீடம் தரித்துக் கொண்டு கொண்டாடி மகிழ்வதில்லை. இதர ஓட்டுப் பொறுக்கிகளும், சங்கராச்சாரிகள் ஆதீனங்களும், சாதி மதவெறியர்களும், ""தாதா''க்களும் கருப்புப் பண பேர்வழிகளும்தான் இப்படி ஆளுயர மலர் மாலை, கிரீடம், பொன்னாடை, வீரவாள் அணிந்து கொண்டு, துதிபாதிகளை வைத்து பாராட்டு விழா நடத்தி வக்கிரமாக சுய இன்பம் காண்கிறார்கள் என்றால், அவர்களுக்கு எங்கள் கட்சி சற்றும் சளைத்ததல்ல என்று மார் தட்டுகிறார் சி.பி.எம். "ராஜா'வான வரதராஜன்.

மாநிலச் செயலாளரே இப்படியென்றால், மத்தியக் கமிட்டி உறுப்பினர் இன்னும் ஒருபடி முன்னேறியிருக்க வேண்டும் அல்லவா? எனவேதான் திருவாளர் சீத்தாராம் யெச்சூரி, தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் ரூபாய் நோட்டு மாலை அணிந்து கொண்டு, தைரியமாக போட்டோவுக்கு ""போஸ்'' கொடுத்து அசத்துகிறார். இப்போதைக்கு ரூபாய் நோட்டு மாலை; எதிர்காலத்தில் டாலர் நோட்டு மாலையாக அது மாறலாம். ரூபாயைவிட டாலருக்குத்தான் மதிப்பு அதிகம் என்பது ""காம்ரேடு''களுக்குத் தெரியாதா என்ன?

மலர்கிரீடம், ரூபாய் நோட்டு மாலை... இன்னும் என்ன பாக்கியிருக்கிறது? பரிவட்டம், பூர்ணகும்ப மரியாதை, கற்பூரம் கொளுத்தி ஆரத்தி, நல்ல நேரத்தில் வேட்பு மனு தாக்கல்... அவற்றையும் செய்து விட்டால் சி.பி.எம். கட்சி உண்மையான "மக்கள்' கட்சியாகி விடும். ஏற்கெனவே 2005இல் நடந்த கேரள உள்ளாட்சித் தேர்தலின் போது சி.பி.எம். வேட்பாளர்கள் வாஸ்து சாஸ்த்திர முறைப்படி தமது பெயர்ராசிக்கு ஏற்ற வண்ணத்தில் சிவகாசியில் சுவரொட்டிகளை அச்சிட்டு "புரட்சி' செய்துள்ளார்கள். அதிருஷ்டம் கை கொடுக்கும்போது, அதையும் பயன்படுத்திக் கொள்ள தமிழக ""காம்ரேடுகள்'' வாஸ்து போஸ்டர்கள் அச்சிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்தக் கூத்துக்கள் இருந்தால் மட்டும் போதுமா? கோஷ்டிச் சண்டைகள் இருந்தால்தானே ஓட்டுக் கட்சி அரசியல் களை கட்டும்! அதிலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று திருப்பரங்குன்றம் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் வெங்கடேசனுக்கு எதிராக அதிருப்தி கோஷ்டியினர் கலகம் செய்து கொண்டிருக்கிறார்கள். ""கட்டுப்பாடு மிக்க கட்சி என்கிறீர்களே, இங்கேயும் கோஷ்டி சண்டைதானா?'' என்று நாம் முகத்தைச் சுளித்தால், ""இது கோஷ்டி சண்டை அல்ல தோழரே! உட்கட்சி ஜனநாயகத்துக்கான உரிமைக் குரல்'' என்று சித்தாந்த விளக்கமளிக்கிறார்கள் இப்போலி கம்யூனிஸ்டுகள்.

""காம்ரேடு''களின் ஜனநாயகத்துக்கான உரிமைக் குரல் மே.வங்கத்தில் எப்படி இருக்கிறது என்று எட்டிப் பார்த்தோம். உரிமைக்காகப் போராடுவதாகக் கூறிக் கொள்ளும் சி.பி.எம். கட்சி, அங்கே ஜனநாயக உரிமையைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் திணறும் பரிதாபக் காட்சி, கோமாளிக் கூத்தாக முடிந்துள்ளது.

தேர்தல் ஆணையம், எந்தக் கட்சியும் சுவரில் எழுதிப் பிரச்சாரம் செய்யக் கூடாது, டிஜிட்டல் பேனர் வைக்கக் கூடாது, இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி வைத்து பிரச்சாரம் செய்யக்கூடாது என்று சர்வாதிகாரமாக உத்தரவு போடுகிறது. எல்லா ஓட்டுக் கட்சிகளும் இச்சர்வாதிகாரத்தை எதிர்க்காமல் மேல்வாயையும் கீழ்வாயையும் மூடிக் கொண்டு கிடக்கின்றன. மற்ற கட்சிகள்தான் பூர்ஷ்வா கட்சிகள்; ஜனநாயகத்துக்காகக் குரலெழுப்பும் சி.பி.எம். கட்சி, தேர்தல் ஆணையத்தின் சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடலாமே?

"அப்படிச் செய்தால் மக்களிடம் கலக உணர்வு பிறந்துவிடும்; அப்புறம் இந்த மோசடி ஜனநாயகத் தேர்தல் முறையையே மக்கள் எதிர்க்கக் கிளம்பிவிடுவார்கள். அப்புறம் நம்ம பொழப்பும் கந்தலாகிவிடும் தோழரே!' என்று தேர்தல் ஆணையத்தின் சர்வாதிகாரத்தைச் சகித்துக் கொண்டு அடங்கிப் போனார்கள். இந்த மோசடி ஜனநாயகத்தையே உலகின் மாபெரும் ஜனநாயகம் என்று இப்போலி கம்யூனிஸ்டுகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது தேர்தல் ஆணையமோ, தனது வானளாவிய அதிகாரத்தைக் கொண்டு, சி.பி.எம். அலுவலகத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்று ""ரெய்டு'' நடத்தி அடாவடித்தனம் செய்கிறது. ஆனாலும் இந்த "ஜனநாயகக் காவலர்கள்' தேர்தல் ஆணையத்தின் சர்வாதிகாரத்தையோ, அடாவடி அத்துமீறல்களையோ எதிர்த்துப் போராட முன்வரவில்லை. மாறாக, தேர்தல் ஆணையத்துக்கு இப்படிச் செய்ய அதிகாரம் உண்டா, இல்லையா என்று மயிர் பிளக்கும் வாதங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.

""ஏன் இப்படி?'' என்று கேட்டால், ""இதெல்லாம் ஒரு டேக்டிக்ஸ் (தந்திரம்) தோழரே! நாங்கள் அமைதியாக இருப்பதாகத் தோன்றினாலும் வேறு வழியில் போராடி தேர்தல் ஆணையத்தின் முகத்தில் கரிபூசி விட்டோம் தோழரே!'' என்கிறார்கள் சி.பி.எம். கட்சிப் பிரமுகர்கள். அப்படி என்ன போராட்டம் நடத்தியுள்ளார் என்று பார்த்தால், தமது கோழைத்தனம் அம்பலப்படாமல் இருக்க, தாங்கள் ஏதோ தந்திரமாகப் போராடுவதாகக் காட்டிக் கொண்டு ஊர் முழுக்க இருக்கிற ஆடு, மாடு, கோழி, நாய் என்று ஒரு பிராணியையும் விடாமல் விரட்டிப் பிடித்து தமது தேர்தல் சின்னத்தை வரைந்து தள்ளிவிட்டார்கள். ""பார்த்தீங்கள, இப்ப தேர்தல் கமிஷனால என்ன பண்ண முடி யும்?'' என்று பெரு மிதம் கொள்கிறார்கள்.

கட்சித் தொண்டர்களோ தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் தமது தலைமுடியை கட்சி சின்னம் கொண்டதாக ""கிராப்'' வெட்டிக் கொண்டு கால்நடையாகத் திரிகிறார்கள். பாமர மக்களிடம் கட்சியின் தேர்தல் சின்னத்தைப் பிரபலப்படுத்தும் நூதனப் பிரச்சாரம் என்று கட்சித் தலைவர்கள் இதை வரவேற்று ஆதரிக்கிறார்கள். ஆனாலும் எந்த சி.பி.எம். தலைவரும் இப்படி ""கிராப்'' வெட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்யவில்லை. தொண்டர்களுக்கு மட்டும்தான் இப்படி கோமாளித்தனமாகத் திரிவதற்கு கட்சியில் "சுதந்திரம்' வழங்கப்பட்டுள்ளது.

மக்களின் கரங்களில் அதிகாரத்தைக் குவிக்கும் ஜனநாயகத்துக்காக, நேபாளத்தில் கம்யூனிஸ்டுகள் மக்களைத் திரட்டி வீதிகளிலே போராடுகிறார்கள். மே.வங்கத்திலோ ஓட்டுச் சீட்டு ஜனநாயகத்துக்காக சி.பி.எம். கட்சியினர் ""கிராப்'' வெட்டிக் கொண்டு கோமாளித்தனமாகத் திரிகிறார்கள். இதிலே யார் கம்யூனிஸ்டுகள் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

இதர ஓட்டுக் கட்சிகளைப் போலவே பணநோட்டு மாலை, மலர்கிரீடம், கோஷ்டிச் சண்டை, கட்சிச் சின்னம் கொண்ட ""கிராப்'', தேர்தல் ஆணையத்தின் சர்வாதிகாரத்துப் பணிந்துபோகும் கோழைத்தனம் என எல்லாவற்றிலும் ஒன்பது பொருத்தமுள்ள இப்போலி கம்யூனிஸ்டுகளுக்கும் மற்ற ஓட்டுப் பொறுக்கி பிழைப்புவாதிகளுக்கும் அப்படி என்னதான் வேறுபாடு இருக்கிறது செங்கொடியைத் தவிர?

மு பாலன்

Sunday, July 23, 2006

ஓட்டுப் போடாதே புரட்சி செய்!" ஏன் இந்த முழக்கம்?

ஓட்டுப் போடாதே புரட்சி செய்!" ஏன் இந்த முழக்கம்?



னல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே, ""ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!'' என்று ஒரு குரல், உறுதியான குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஒன்றில்லாவிட்டால், மற்றொரு கட்சிக்கோ, அணிக்கோ ஓட்டுப் போடுவதற்குப் பதில் ஒட்டு மொத்தமாகத் தேர்தல்களையே புறக்கணிக்கக் கோருகிறது. ஏன் இப்படி வித்தியாசமான குரல், தனித்த குரல்? அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை இழந்து, ஆத்திரம் பொங்கி, வெறும் விரக்தியால் எழுப்பப்படும் முழக்கமா? அரசியல் கட்சிகளும் அரசும் கூறுவதைப் போல வேலையற்றவர்களின் வெறும் தீவிரவாத முழக்கமா? இல்லை, ஓட்டுக் கேட்டு வரும் அரசியல் கட்சிக்காரர்களைப் போல, ஏதாவது ஆதாயம் தேட முன்வைக்கப்படும் முழக்கமா? ""தவறாமல் ஓட்டுப் போடுங்கள்'' என்று அரசு பிரச்சாரம் செய்வதிலாவது ஒரு உள்நோக்கம் இருக்கிறது. ஒருமுறை ஓட்டுப் போட்டு விட்டால், உங்கள் சம்மதத்தோடுதான் இந்த அரசு செயல்படுகிறது என்று எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்து கொள்ளலாம். ""எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்'' என்று அரசியல் கட்சிகள் கேட்பதிலாவது அவற்றுக்கு ஆதாயம் இருக்கிறது.



ஆனால், ""ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!'' என்ற முழக்கம் ஆழ்ந்த சிந்தனை, அறிவியல்பூர்வமான ஆய்வு அடிப்படையிலான, ஆக்கபூர்வமான அரசியல் முழக்கமாகும். ""போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!'' என்ற அரசியல் முழக்கத்தின் சுருக்கம்தான் ""ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!'' என்ற அறைகூவல். தேர்தல்கள், தில்லுமுல்லுகளும் முறைகேடுகளும், சந்தர்ப்பவாதங்களும் மோசடிகளும், ஆடம்பர ஆபாசத்தனங்களும் ஊதாரித்தனங்களும் நிறைந்ததாகி விட்டது என்கிற காரணத்துக்காக மட்டும் அவற்றைப் புறக்கணிக்கச் சொல்லவில்லை. தற்போதைய ஆட்சி, அரசமைப்பை ஜனநாயகம் என்று சொல்வதே போலித்தனமானது; தேர்தல்கள் இந்த உண்மையை மூடி மறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் கவர்ச்சித் திருவிழாதான். ஜனநாயகம் மக்களாட்சி என்று கருதக்கூடிய அளவுக்கு ஆட்சிஅரசமைப்பில் மக்களுக்கு ஏதாவது அதிகாரமோ, உரிமையோ, பங்கோ இருக்கிறதா? மனு தரலாம், வழக்குப் போடலாம், அவ்வளவுதான்!



வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ""பிரதிநிதி''களுக்குத்தான் எந்த அளவுக்கு அதிகாரமும் உரிமையும் இருக்கிறது? உள்ளூராட்சி முதல் சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள்வரை சட்டதிட்டங்களுக்கும் வரவு செலவுகளுக்கும் கைதூக்கி ஆதரவு, மறுப்பு தெரிவிக்கலாம்; முறைகேடுகள் செய்து பொறுக்கித் தின்னலாம். மக்களுக்கு எந்த வகையிலும் கட்டுப்படாத அதிகாரவர்க்கம், போலீசு, நீதிபதிகளுக்குத்தான் எல்லா நிர்வாக அதிகாரங்களும் இருக்கின்றன. இவர்களையும் பண்ணை நில முதலைகள், தரகு அதிகார முதலாளிகள் மற்றும் பன்னாட்டுத் தொழிற்கழகங்கள், உலகவங்கி உலக வர்த்தகக் கழகம் முதலிய ஏகாதிபத்திய நிறுவனங்கள்தாம் இயக்குகின்றன. நடப்பது இந்த ஆதிக்க சுரண்டல்காரர்களின் சர்வாதிகாரம்தானே தவிர, உண்மையான ஜனநாயகமோ மக்களாட்சியோ அல்ல.



மின்னணு இயந்திரத்தின் பொத்தானை அழுத்திவிட்டு, மக்கள் தமது சிந்தனையையும் செயலையும் சிறைப்படுத்திக் கொண்டு, அதிகாரிகள்அரசியல்வாதிகளின் தயவிற்காக காத்திருக்க வேண்டியதில்லை. அவற்றுக்கு மாறாக, ஒரு புதிய உண்மையான மக்கள் ஜனநாயக அரசமைப்பை உருவாக்குவது சாத்தியமானதுதான் என்று பல உலக நாடுகளின் அனுபவங்கள் காட்டியுள்ளன. ஒவ்வொரு கிராமவட்டார அளவிலும் மக்கள் சபைகள் நிறுவப்பட்டு, அக்கிராமவட்டார நிர்வாகிகளைத் தேர்வு செய்வதும், அவர்களே நீதிநிர்வாகம், உடைமைஉரிமை, காவல் பணிகளை மேற்கொள்வதும் அதேபோல் நகர்ப்புறங்களில் பகுதிகள் மற்றும் தொழிலகங்கள் அடிப்படையில் மக்கள் சபைகளும் நிர்வாக அமைப்புகளும் நிறுவிக் கொள்வதும் சாத்தியமே. இவற்றைத்தான் மக்கள் சர்வாதிகார மன்றங்கள்உண்மையான ஜனநாயக அமைப்புகள் என்று கருதமுடியும். இவற்றின் மூலம் உள்ளூர் அளவிலும் இவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட மாநில, மத்திய மன்றங்களும் நிர்வாக அமைப்புகளும் நிறுவிக் கொள்வதும் சாத்தியமே.



தேர்தல்களைப் புறக்கணித்துவிட்டு வேறு என்ன செய்வது? இன்றைய ஆட்சி, அரசமைப்பு இல்லாமல் நிர்வாகம் எப்படி நடக்கும் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். வெறுமனே தேர்தல்களை புறக்கணிப்பது மட்டுமல்ல, தற்போதைய ஆட்சிஅரசமைப்பு, நிர்வாகம் அனைத்தையும் ஒழித்துக் கட்டிவிட்டுதான் மக்கள் சர்வாதிகார அரசமைப்புகளை நிறுவ முடியும். இதுவும் ஒரு மாபெரும் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலமாக சாத்தியமாகும். இந்த மக்கள் சர்வாதிகார அரசமைப்பை உடனடியாக நிறுவ முடியாது என்பது உண்மைதான். என்றாலும், அதற்கான கருத்துருவாக்கம் முதற்பணி என்கிற முறையில்தான் தேர்தலைப் புறக்கணிக்கும் இயக்கத்தினூடாக மக்களை அணிதிரட்ட வேண்டியிருக்கிறது. இதற்காகத்தான் ""போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!'' என்ற முழக்கம், இயக்கம் முன்வைக்கப்படுகிறது.