1. வேலைவாய்ப்புகளும் தமிழ் தேசியமும்- பகுதி எட்டு
2. யாழ் உயர் வர்க்க தமிழர்களின் ஆதிக்கமும் தேசியமும் -பகுதி ஒன்பது
பகுதி ஒன்று பகுதி இரண்டு
பகுதி மூன்று பகுதி நான்கு
பகுதி ஐந்து பகுதி ஆறு
பகுதி ஏழு
கல்வியைப் போல் வேலை வாய்ப்பு பிரச்சனைகளையும் முன்வைத்தே தமிழ் தேசியம் தன்னை முன்னிலைப்படுத்தியது. அனைவருக்கும் வேலை வழங்கு என்ற அடிப்படையான கோசத்துக்கு பதில், சிலருக்கான வேலையில் அதிகம் எமக்கு வேண்டும் என்ற இன அடிப்படைவாதமே இந்த தேசிய பிரச்சனையில் மையமான கோசமாகியது. தேசியத்தை கட்டமைக்கும் போது தமிழ் மக்கள் என்ற பொதுமைப்படுத்தல் ஊடாகவே, தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்குமுறையை சுட்டிக்காட்டினார்கள். தமிழ் மக்களிடையே உள்ள பின்தங்கிய பிரதேசங்கள், சிறுபான்மை இனங்கள், தாழ்ந்த சாதிய மக்களின் விகிதத்துக்கு ஏற்ப, அவர்களின் வேலை வாய்ப்பு பற்றி மூச்சுவிடவில்லை. இங்கும் கல்வியைப் போல் யாழ் உயர் வர்க்கங்களின் ஆதிக்கத்தைக் கோரினார்களே ஒழிய, அனைத்து தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தவில்லை. வேலைவாய்ப்பை குறிப்பாக காட்டி முன்னிலைப்படுத்திய எமது தேசிய போராட்டம், பின்வரும் அடிப்படையான வழிகளில் பிற்போக்கான அம்சத்தை தேசியத்தில் வளர்த்தெடுத்தது.
1.தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையை தவறாக இதன் மூலம் இனம் காட்டி இதை முன்னிலைப்படுத்தியது.
2.தமிழ் மக்களின் வேலை வாய்ப்பில் யாழ் அல்லாத மக்களின் நலனை மூடிமறைத்ததுடன், அவர்களுக்காக போராட தயாரற்று இருந்தது.
3.அனைத்து மக்களுக்கும் வேலைக்கான உத்தரவாதத்தை வழங்கு என்று கோரிப் போராட மறுத்தது.
4.வேலையில் காணப்படும் அதிகார வர்க்கப் போக்கை மாற்ற கோரியிருக்க வேண்டும். (இந்த அதிகார வர்க்கப் போக்கு ஒட்டு மொத்த இலங்கையில்; தமிழர்கள் ஆதிக்கத்தில் இருந்த போது, யாழ் உயர் குடிகள் மற்றும் உயர் வர்க்கங்கள் அல்லாத மற்றைய மக்களின் மேல் முறைகேடாகவே அதிகாரத்தைக் கையாண்டனர். இது சாதி, பிரதேசவாதம், இனவாதம் என்ற அனைத்துத் துறையிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனவாத விரிவாக்கத்தில் இதன் பங்கு கணிசமானது.)
இதை அடிப்படையில் தமிழ் தேசியம் மறுத்து, யாழ் ஆதிக்க பிரிவுகளின் நலன் சார்ந்து குறுந்தேசிய போராட்டமாகியது. தேசியத்துக்கான யுத்தம் தொடங்கியதில் இருந்து, சிங்களம் ஆட்சி மொழியாகியதில் இருந்தும், ஆங்கில அறிவுபெற்ற யாழ் தமிழரின் உத்தியோகங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டது. இது யுத்த சூழலுக்குள் ஆழமான வேலை இழப்பை தமிழர் தரப்பில் சந்தித்துள்ளது. வேலையில் இருந்தோர் கூட நாட்டை விட்டு வெளியேறிய நிகழ்வு (இது இனவாதப் போக்கு முகம் கொடுக்க முடியமாலும் ஒருபுறம் நிகழ மறுதளத்தில் குட்டி பூர்சுவா வர்க்க நலன் சார்ந்தும் நடந்தது.), தமிழரின் வேலை வாய்ப்புகள் சமகாலத்தில் குறைந்து செல்கின்றது. இவை அனைத்தையும் வரலாற்று ரீதியாக ஆராய்வோம்.
யாழ் உயர் வர்க்க தமிழர்களின் ஆதிக்கமும் தேசியமும் இலங்கையில் மக்கள் தொகையில் சிங்களவர் 72 சதவீதமாகவும், இலங்கைத் தமிழர் 11.2 சதவீதமாகவும், மலையகத் தமிழர் 9.3 சதவீதமாகவும், முஸ்லீம்கள் 7.1 சதவீதமாகவும், ஏனையோர் 0.5 சதவீதமாகவும் இருந்த போதும், உயர் வர்க்க தமிழர்களின் அரசு வேலை வாய்ப்புகள் மொத்த மக்கள் தொகையில் ஆராயும் போது ஒரு சமூகத்தின் அதிகாரத்தை தெளிவாக்குகின்றது. இதைத் தனியாக ஆராய்வோம்.
மருத்துவதுறையையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.
| சிங்களவர் | தமிழர் | முஸ்லிம் | பறங்கியர் |
1870 | 8.7 | - | - | 91.3 |
1907 | 24.6 | 14.7 | - | 60.7 |
1910 | 21 | 28 | - | 51 |
1920 | 31 | 36 | - | 32 |
1925 | 42.5 | 30.8 | - | 26.7 |
1930 | 47 | 33 | - | 19 |
1935 | 55.1 | 25.8 | - | 19.1 |
1936 | 59.4 | 33.3 | - | 7.3 |
1956 | 54.1 | 38.1 | 1.5 | 6.3 |
1962 | 53.4 | 41.1 | 2.1 | 3.5 |
குடியியல் துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.
| சிங்களவர் | தமிழர் | முஸ்லிம் | பறங்கியர் |
1870 | 7 | - | - | - |
1907 | 33.3 | 16.7 | - | 50 |
1925 | 43.6 | 20.5 | - | 35.9 |
1935 | 40.0 | 33.3 | - | 27.3 |
1936 | 59.5 | 26.7 | - | 13.8 |
1956 | 57.1 | 29.4 | 1.7 | 11.8 |
1962 | 73.7 | 17.9 | 2.3 | 6.0 |
1975 | 81.3 | 15.9 | 2 | 0.8 |
பொது துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.
| சிங்களவர் | தமிழர் | பறங்கியர் |
1907 | 20 | 10 | 70 |
1910 | 24 | 16 | 60 |
1920 | 26.8 | 17 | 56 |
1925 | 32.2 | 7.1 | 60.1 |
1930 | 28.1 | 29.6 | 42 |
1935 | 34.3 | 28.6 | 37.1 |
1936 | 32.2 | 25.4 | 22.4 |
நீதித் துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.
| சிங்களவர் | தமிழர் | முஸ்லிம் | பறங்கியர் |
1935 | 26.7 | 33.3 | - | 40 |
1936 | 49.1 | 26.4 | - | 26.5 |
1956 | 57.6 | 30.3 | 6.1 | 6.1 |
1962 | 60.3 | 26.4 | 10.2 | 2.6 |
1973 | 77.6 | 18.8 | 3.3 | 0 |
பொறியியல் துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.
| சிங்களவர் | தமிழர் | முஸ்லிம் | பறங்கியர் |
1956 | 42.1 | 47.7 | 1.9 | 8.4 |
1962 | 49.6 | 44.2 | 1.5 | 4.7 |
கணக்காளர் துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.
| சிங்களவர் | தமிழர் | முஸ்லிம் | பறங்கியர் |
1956 | 35.8 | 60.2 | 0 | 3.9 |
1962 | 38.6 | 60.2 | 0 | 1.2 |
அரசு சேவையில் 1921 இல் சிங்களவர் 46 சதவீதமும் தமிழர் 31.6 சதவீதமாக காணப்பட்டனர். 1946 இல் நிர்வாக சேவை அரைப்பகுதியையும் நீதிச் சேவையில் மூன்றில் இரண்டு பங்கினையும் தமிழர்கள் கொண்டிருந்தனர். நடைமுறை ரீதியாகவே 11.2 சதவீதமான தமிழ் மக்களினதும் அதிலும் குறிப்பாக யாழ் பிரதேசத்தைச் சேர்ந்த மேட்டுக் குடிகளின் அதிகாரத்தைக் காட்டுகின்றது. யாழ் குடா நாட்டில் 40 சதவீதமான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுத்த யாழ் மேட்டுக்குடிகள் பெண்களையும் அடக்கியொடுக்கியபடி தான் உயர் சாதிய வரிசைப்படிகளில் நின்றே பிரிட்டிஸ்சாரின் கைக் கூலிகளாகி இலங்கையையே ஆண்டனர். யாழ் மேட்டுக்குடி பண்பாட்டுக் கலாச்சார கூறில் மிக மோசமான ஆதிக்க பிரிவாக திகழ்ந்தமையால் இலங்கையில் அனைத்து மக்களின் எதிர்ப்புக்கும் உள்ளாகினர். சொந்த தாழ்த்தப்பட்ட மக்கள் முதல் சொந்த இன பிரதேச மக்களாலும் சிறுபான்மை இனங்களாலும் பெரும்பான்மை இனங்களாலும் வெறுக்கப்படுமளவுக்கு ஒரு ஆளும் பிற்போக்கு வர்க்கமாக திகழ்ந்தனர். சுதந்திரத்துக்கு முன்பாக நீதிச் சேவையில் மூன்றில் இரண்டு பங்கை வைத்திருந்த இந்த ஆங்கிலம் கற்ற தமிழ் மேட்டுக் குடிகள் எப்படி இலங்கையில் நீதியாக நிர்வாகம் செய்திருப்பார்கள் இன்று எம் மக்கள் முதல் சிறுபான்மை இனங்களையும் அப்பாவி சிங்கள மக்களையும் ஆயுதமுனையில் அடக்கியாளும் போது எமது மூதாதையர்கள் பண்பாட்டு கலாச்சார அதிகார வடிவங்கள் மூலம் இலங்கையையே அடக்கியாண்டனர். இங்கு மனிதத்துவம் நீதி ஜனநாயகம் என்பதெல்லாம் சொந்த வர்க்கத்துக்கானதாகவே இருந்துள்ளது.
ஜி.ஜி.பொன்னம்பலம் 1939 இல் ~~இப்பாழாய்ப்போன டொனமூர் அரசியல் அமைப்பு வருவதற்கு முன்னர் அரைகுறை அறிவு படைத்த சிங்களவர் எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தார்கள் என்று கூறுமளவுக்கு அதிகாரத்தை இலங்கை முழுவதும் யாழ் மேட்டுக்குடிகள் கொண்டிருந்தனர். சுதந்திரத்துக்கு முன் பின் தமிழரின் அதிகாரத்துவ பங்கு எப்போதும் இலங்கையில் உச்சத்தில் இருந்துள்ளது. இந்த அதிகாரத்தை தக்கவைக்கவே ஐp.ஐp.பொன்னம்பலம் 50 க்கு 50 என்ற கோரிக்கையை மேட்டுக் குடிகள் சார்ந்து தமிழ் தேசிய இனவாதியாகவே முன்வைத்தார். மேட்டுக் குடிகளின் அதிகாரத்தை மற்றைய மக்களுடன் ஜனநாயக பூர்வமாக பகிர்வதை மறுத்த தமிழ் மேட்டுக்குடிகள் அதைத் தக்கவைக்கவே இனவாதத்தை தமிழ் காங்கிரஸ் மூலம் அன்று முன்வைத்தனர். இலங்கையில் இனவிகிதம் கடந்த நிலையில் பல்வேறு துறைகளில் 50 சதவீதத்துக்கு அதிகமாக அல்லது அதற்கு சற்றுக்குறைவான அதிகார பீடங்களில் யாழ் மேட்டுக் குடி தமிழரின் ஆதிக்கத்தில் இருந்தது. இது பிரிட்டிஸ்சாருக்கு குண்டி கழுவி விடுவதன் மூலம் நக்கிப் பெறப்பட்டது. சிங்கள மக்களின் காலனித்துவ எதிர்ப்பை ஒடுக்கவும் தமிழரின் கைக்கூலித்தனமே பிரிட்டிஸ்சாரின் காலனித்துவ நீடிப்புக்கு அத்திவாரமாகியது. அதாவது பிரிட்டிஸ்சார் பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டனர். சிங்கள மக்களின் நீடித்த காலனித்துவ எதிர்ப்புக்கு அவர்களின் நிலப்பிரபுத்துவ சொத்துரிமை சார்ந்த சுய உற்பத்தி ஒரு காரணமாகும். பிரிட்டிஸ்சாரின் கீழ் கூலி வேலை செய்வதை இழிவாகக் கருதி அதை எதிர்த்து நின்றனர். இதனால் இலங்கையை முழுமையாக ஆங்கிலேய காலனித்துவவாதிகள் பிடித்த பின்பும் இரண்டு எழுச்சிகளை கண்டி சிங்கள மக்களால் நடத்த முடிந்தது. இதற்கு எதிராக செயற்பட்ட யாழ் மேட்டுக்குடிகள் காலனித்துவத்தை தொடரவும் அதன் மூலம் இலங்கையையும் அயல் நாடுகளையும் சுரண்டவும் உலகளவில் செல்வாக்கு மண்டலங்களை பேணவும் யாழ் மேட்டுக்குடியின் கைக் கூலித்தனம் முண்டு கொடுத்தது என்றால் மிகையாகாது. இந்த கைக்கூலிகள் மூலம் காலனித்துவத்தை கட்டி பாதுகாக்க அதற்கு காலனித்துவக் கல்வி அவசியமாகியது. இந்த வகையில் காலனித்துவம் நவீன பாடசாலைகள் யாழ் குடா நாட்டில் உருவாக்கியது.
இதன் தொடர்ச்சியில் இலங்கையில் 1911ம் ஆண்டில் ஆங்கில அறிவு பெற்றவர்களில் தமிழர் 4.9 சதவீதமாகவும் கரையோரச் சிங்களவர் 3.5 சதவீதமாகவும் கண்டிச் சிங்களவர் 0.7 சதவீதமாகவும் இருந்தனர். இது காலனித்துவ நோக்கத்தையும் கல்வியின் பிரிட்டிஸ்சார் மையப்படுத்தி முன்னுரிமை கொடுத்த பிரதேசத்தையும் தெளிவாக காட்டுகின்றன. அதே நேரம் இதற்கு இசைவாக 1911 ம் ஆண்டில் அரசு வேலைகளில் தமிழர் 5.1 சதவீதமும் கரையோர சிங்களவர் 3.6 சதவீதமும் கண்டிச் சிங்களவர் 1.3சதவீதமாக இருந்தனர். காலனித்துவ கல்வி அது சார்ந்த அதிகாரத்துவம் யாழ் மேட்டுக்குடியின் கையில் குவிந்ததை இது காட்டுகின்றது. கல்வியுடன் தொடர்புடைய தமிழ் அதிகார வர்க்கம் ஒரு ஆளும் வர்க்கமாக உருவானது. இந்த வர்க்கம் தனது இழிந்த மனித விரோத நடத்தைகளை ஆதாரமாகக் கொண்டே இலங்கையை அடக்கியாண்டது. இந்த அதிகாரத்துவம் சுதந்திரத்தின் போது உச்சத்தில் இருந்தது. சுதந்திரத்தின் பின்பும் இனவிகிதத்தை விட அதிகமான அதிகாரத்துவ மையங்களில் வீற்றிருந்தனர். 1970 வரையிலும் இனவிகிதத்தை தாண்டியே இலங்கை அதிகார வர்க்கத்தில் தமிழர் இன விகிதத்தை கடந்து இருந்தனர். இதை கீழ் தொடர்ந்து வர உள்ள புள்ளிவிபரமும் தெளிவாக நிறுவுகின்றது. இந்த அதிகார வர்க்கத்தை உருவாக்கிய காலனித்துவ கல்வியே இன்றைய இன தமிழ் தேசிய சிக்கலுக்கு மையமான கூறாகியது. பெரும்பான்மை இனம் அதிகாரமிழந்த ஒரு பிரிவாக இருந்தமையால் சிங்கள இனவாதத்தை முன்வைப்பது சிங்கள தலைவர்களிடம் ஒரு போக்காக மாறியது. இதை தமிழ் தலைமைகளும் சரி சிங்கள தலைமைகளும் சரி எதிர் நிலை இனவாதத்தை ஊற்றி வளர்த்து இன்றைய நிலைக்கு இட்டுச் செல்வதில் பரஸ்பரம் ஒரு முனைப்புடன் போட்டியிட்டனர். தமிழ் தலைமை இலங்கை அதிகார வர்க்கத்தின் தமிழ் இன ஆதிக்க விகிதத்தை பாதுகாக்கவும் சிங்கள தலைமை சிங்கள இன அதிகாரத்தை நிறுவவும் நடத்திய போராட்டம் இனமோதலாக இனவழிப்பாக வளர்ச்சி பெற்றது. காலனித்துவம் இதில் குளிர் காய்ந்தது. பிரித்தாளும் இனக் கண்ணோட்டத்தை பிரிட்டிஸ்சார் முன்வைத்து தமிழ் அதிகார வர்க்கத்தை உருவாக்க கல்வியை ஒரு தலைபட்சமாக யாழ் தமிழருக்கு சலுகையாக வழங்கியது. இதன் போக்கு மிக மோசமான இன ஒடுக்குமுறையை சிங்கள இனவாதம் தமிழ் மக்கள் மேல் இன்று கையாண்ட போதும் இன்று வரை யாழ் மேலாதிக்கத்தை கல்வியில் நிறுவ முடிகின்றது.
காலனித்துவ காலத்தில் பிரிட்டிஸ்சார் திட்டமிட்டு இனப்பிளவை வித்திட்டு பிரித்தாண்ட போக்கில் அதன் கைக்கூலிகளாக இருந்த தமிழ் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை மற்றும் சுரண்டலின் தொடர்ச்சியே இலங்கையில் இனப்பிளவுக்கு வித்திட்டது. இந்த தமிழ் பிரிவு அரசியல் அதிகாரத்தில் இருந்து சுருட்டுக் கடை ஈறாக சிங்கள மக்களை படுமோசமாக சுரண்டிக் கொழுத்தது. இதற்கு எதிராக குறுந்தேசிய சிங்கள இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட சிங்கள பிரிவுகள் வளர்ச்சி பெற்றது. காலனித்துவத்தையும் அதன் தொங்கு சதைகளையும் எதிர்ப்பதற்கு பதில் தமிழர்களை எதிர்த்தே தனது தேசியத்தை சிங்கள குறுந்தேசியம் கட்டமைத்தது. அதாவது இன்று தமிழ் குறுந்தேசியம் எப்படி நவகாலனித்துவ மற்றும் மறுகாலனித்துவ முயற்சியை எதிர்க்காது ஏகாதிபத்தியத்துக்கு இசைவாக சிங்கள மக்களை எதிராகக் காட்டி தமிழ் இனவாதிகளாக தம்மை நிலை நிறுத்துகின்றனரோ அதேபோல் அன்று தமிழ் மக்களை எதிரியாகக் காட்டியே சிங்கள இனம் தனது சிங்கள குறுந் தேசியத்தைக் கட்டமைத்தது.
சிங்கள இனவாதிகள் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழ் இனத்துக்கு எதிரான திட்டமிட்ட இன அழிப்பை நடைமுறைப்படுத்தினர். இது சுதந்திரத்துக்கு முன் பின்னிருந்தே இது தொடங்கியது. பெரும்பான்மை மக்கள் சிங்கள மொழி பேசுபவர்களாக இருந்ததால் அதிகாரத்தில் கிடைத்த வசதிகள் அனைத்தையும் இன அழிப்புக்கு வசதியாக பயன்படுத்திக் கொண்டனர். இன அழிப்பை தொடங்கிய போது பலவீனமான இனப்பிரிவுகள் மேலும் பலவீனமான மக்கள் கூட்டங்கள் மேலும் இன அழிப்பு தொடங்கப்பட்டது. இதற்கு தமிழ் கைக்கூலிகள் மற்றும் அறிவித்துறையினரின் நடவடிக்கைகள் ஊக்கியாக இருந்தது. ஒன்று நேரடியாக அவர்களின் முயற்சிக்கு ஒத்துழைத்தனர். இரண்டாவதாக சொந்த சுயநலத்திற்காக சிங்கள மக்களை சூறையாடினர். மூன்றாவதாக பலவீனமான தமிழ் மக்களையிட்டு தமிழ் உயர்பிரிவுகள் கொண்டு இருந்த இழிவான கண்ணோட்டம் அழிப்பை ஊக்கியாக்கியது. இந்தப் போக்குகள் சிங்கள இனவாதிகளுக்கு சாதகமாக இருந்தது. இதை தெளிவாகவே பண்டாரநாயக்கா 1939ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசும் போது ~~நாவலப்பிட்டி சிங்கள மகாசபா பொன்னம்பலத்திற்கு ஒரு சிலை எடுக்க வேண்டும். நாவலப்பிட்டியில் சிங்கள மகாசபாவின் கிளையொன்றை ஸ்தாபிப்பதற்கு நாம் பொன்னம்பலத்திற்கு நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம். என்றார். தமிழ் மேட்டுக்குடிகளின் இனவாத முயற்சிகளே சிங்கள இனவாதத்துக்கு அன்று தீனியாக அமைந்தது. சிங்கள இனவாதம் தமிழ் மேட்டுக்குடிகளின் இனவாதத்தின் மேலும் தமிழ் அதிகார வர்க்க மக்கள் விரோத நடத்தைகளில் இருந்தும் தன்னை கட்டமைத்தது. பெரும்பான்மை இனம் சார்ந்த சிங்கள இனவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து தமிழர்களை எதிரியாகச் சித்தரிக்க தயங்கவில்லை. சிறுபான்மையினத்தினை ஒடுக்குவதில் தன்னை சிங்களமயமாக்கியது. அரசு நிர்வாகத்தில் தனது அதிகாரத்தை நிறுவுவதில் இனவாத அடிப்படையையே தனது கொள்கையாகக் கொண்டது. இதில் தமிழ் முஸ்லீம் மலையக தேசிய தலைவர்கள் முதல் போலி இடதுசாரிகள் ஈறாக கூட்டு அரசு அமைத்தே நடைமுறைப்படுத்தினர். இலங்கையை ஆட்சி செய்த அதிகார வர்க்கம் எப்படி தமிழரின் இனவாதிகள் கையில் இருந்து சிங்கள இனவாதிகளின் கைக்கு மாறியதை கீழ் உள்ள புள்ளி விபரம் தெளிவாக்குகின்றது. இலங்கையை நிர்வாக ரீதியாக ஆண்டவர்கள் முதல் அரசதுறையில் வேலை வாய்ப்பை பெற்ற தமிழர்களின் பங்கை இனவாத நடவடிக்கையால் படிப்படியாக குறைந்து வந்ததையும் நாம் பார்ப்போம்.
| 1950 சதவீகிதத்தில் | 1965 சதவீகிதத்தில் | 1970 சதவீகிதத்தில் |
இலஙகை நிர்வாக சேவை | 30 | 20 | 05 |
எழுதுவினையர் | 50 | 30 | 05 |
நிபுணத்துவ சேவை | 60 | 30 | 10 |
ஆயுதப்படை | 40 | 20 | 01 |
தொழிலாளிகள் | 40 | 20 | 05 |
இது சுதந்திரத்துக்கு பின் திட்டமிட்ட வகையில் இனவாதம் கட்டமைக்கப்பட்ட வடிவத்தைக் காட்டுகின்றது. இந்த வரலாற்று காலகட்டத்தின் தொடர்ச்சியில் தமிழ் தேசியவாதிகள் முதல் எல்லா சிறுபான்மை இனப்பிரதிநிதிகளும் இந்த பச்சை இனவாத அரசுக்கு முண்டு கொடுக்க தயங்கவில்லை. இதில் போலி இடதுசாரிகள் படிப்படியாக இணைந்து கொண்டு, இதை ஊக்குவித்தனர். போலி இடதுசாரிகள் பாராளுமன்ற வழியில் சிங்கள வாக்குகளை பெற்று பாராளுமன்ற கதிரைகளில் சுகம் காண இனவாதத்தை ஆயுதமாக்கி இனவாதிகளாக மாறினர். இலங்கையில் முற்போக்கு நடவடிக்கையாக வருணிக்கப்படும் அனைத்து தேசியமயமாக்கல் நடவடிக்கையின் பின்னும் இனவாதம் அங்கு கொழுவேற்றது. அரசமயமாக்கல் நடத்திய இனவாதிகள் அதை போலி இடதுசாரிகளின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்திய அதே நேரம், அரசுதுறையை சிங்கள இனவாதமாக்குவதில் வெற்றி கண்டனர். இதற்கு போலி இடதுகள் ஆசி வழங்கினர். இலங்கையில் நிர்வாக மற்றும் ஆளும் அதிகார வர்க்கத்தை சிங்கள இனவாதமாக்குவதின் மூலம் அதை சமூக மயமாக்கியுள்ளது. இது தமிழரின் வேலை வாய்ப்பை முற்றாகவே மறுத்துவிடுகின்றது. ஏதாவது தமிழருக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக வெளிப்படுவது கல்வித்துறை சார்ந்து மட்டுமேயாகும்.
1956க்கும் 1970க்கும் இடையில் 189000 பேர் அரசு கூட்டுத்தாபனத்தில் வேலை வழங்கப்பட்டது. இதில் 99 சதவீதமானவர்கள் சிங்களவராவர். 1948 இல் அரசாங்க பொதுச் சேவையில் 82 000 பேர் இருந்தனர். இதில் 30 சதவீதமானோர் தமிழராவர். இதில் பெரும்பான்மையானவை யாழ் மேட்டுக்குடியினராவர். 1970 இல் 2 25 000 வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போது அரசு கூட்டுத் தாபனத்தில் தமிழர் சதவீதம் 6 சதவீதத்தால் குறைவடைந்தது. 1971க்கும் 1974 க்கும் இடையில் 22 374 ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போது அதில் சிங்களவர் 18000 பேரும், தமிழர் 1807 பேரும், முஸ்லீம்கள் 2507 பேரும் நியமிக்கப்பட்டனர். முஸ்லீம்களின் அதிகரித்த நியமனம் கல்வி அமைச்சு முஸ்லீமாக இருந்ததால் நிகழ்ந்தது. அரசுத்துறையில் திட்டமிட்ட இனவாதம் அடிப்படை கொள்கையாக இருந்தது.
1972 இல் அரசதுறையில் வேலை பெற்றோர்
சனத்தொகை | சிங்களவர் | தமிழர் | ஏனையோர். |
1971 இல் சனத் தொகை | 72.0 | 20.5 | 7.5 |
நிர்வாகம் நிபுணத்துவம் தொழில்நுட்பம் | 67.7 | 28.5 | 3.8 |
இடைத்தரங்கள்; | 81.2 | 15.3 | 3.5 |
ஆசிரியர் | 81.5 | 11.6 | 6.9 |
சிற்றூழியர் | 86.4 | 10.6 | 3.0 |
தொழிலாளர் | 85.5 | 11.6 | 2.9 |
ஏனைய பிரிவுகள் | 82.6 | 12.9 | 4.5 |
அரசாங்க வேலை வாய்ப்புகள் 1977-1981க்கு இடைப்பட்ட கால கட்டத்தில்
| மொத்த வெற்றிடம் | சிங்களவர் | தமிழர் | ஏனையோர் |
எழுதுவினைஞர் | 9965 | 9326 (93.6) | 492 (4.9) | 147 (1.5) |
ஆசிரியர் | 29 218 | 25 553 (87.6) | 2084 (7.1) | 1581 (5.3) |
மொத்தம் | 39 183 | 34879 (87.6) | 2576 (6.6) | 1728 (5.8) |
அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் 1980 இல் வேலை செய்வோர். இங்கு தமிழர் என்பது மலையக தமிழரை உள்ளடக்கியது. 1981இல் சனத்தொகை கணக்கெடுப்பில் 74 வீதம் சிங்களவரும் 12.7 வீதம் இலங்கைத் தமிழரும் 5.5 மலையகத் தமிழரும் 7 வீதம் முஸ்லீம்களும் 0.8 சதவீதம் ஏனையோருமாவர்.
| மொத்தம்; | சிங்களவர் | தமிழர் | முஸ்லீம்; | ஏனையோர் |
அரசுதுறை | 3 68 849 | 84.34 | 11.61 | 3.33 | 0.72 |
கூட்டுறவுத்துறை | 2 28 531 | 85.75 | 10.67 | 2.56 | 1.03 |
மொத்தம் | 5 97 380 | 84.88 | 11.25 | 3.03 | 0.84 |
1980 ஆண்டு அரசுதுறை வேலை வாய்ப்பு
தொழில் | சிங்களவர் | தமிழர் | ஏனையோர் |
தொழிலடிப்படையிலான சிறப்பு தொழில் | 82 | 12 | 6 |
நிர்வாக உத்தியோகம் | | 16 | 3 |
ஏனைய தொழில்கள் | 84 | 12 | 4 |
1980ம் ஆண்டு அரசு கூட்டு ஸ்தாபனங்களில் வேலை வாய்ப்பு
தொழில் | சிங்களவர் | தமிழர் | ஏனையோர் |
தொழிலடிப்படையிலான சிறப்பு தொழில் | 82 | 13 | 5 |
நிர்வாக உத்தியோகம் | 83 | 14 | 3 |
ஏனைய தொழில்கள் | 85 | 11 | 4 |
அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் 1985லான வேலை செய்வோர்.
| மொத்தம்; | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | மலையகத் தமிழர் | முஸ்லீம்; | ஏனையோர் |
அரசுதுறை | 4 06 359 | 85.64 | 9.9 | 0.25 | 3.44 | 0.9 |
கூட்டுறவுத்துறை | 3 22 617 | 85.54 | 9.38 | 1.25 | 2.35 | 1.48 |
மொத்தம் | 7 28 976 | 85.8 | 9.67 | 0.64 | 2.95 | 1.14 |
அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் 1990லான வேலை செய்வோர்.
| மொத்தம்; | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | மலையகத் தமிழர் | முஸ்லீம்; | ஏனையோர் |
அரசுதுறை | 1 98 425 | 91.2 | 5.9 | 0.1 | 2.0 | 0.3 |
மாகாணத்துறை | 2 22 584 | 87.7 | 7.1 | 0.2 | 4.6 | 0.4 |
கூட்டுறவுத்துறை | 2 79 584 | 88.1 | 8.2 | 0.5 | 2.2 | 1.0 |
மொத்தம் | 7 00 593 | 88.8 | 7.2 | 0.3 | 2.9 | 0.8 |
வெளிநாடுகளில் இலங்கை தூதரகங்களில் 1994 இல்.
| மொத்தம் | சிங்களவர் | தமிழர் | முஸ்லீம் | ஏனையோர் |
தூதுவர்கள் | 32 | 65.6 | 9.4 | 18.8 | 6.2 |
ஏனைய ஊழியர்கள்; | 216 | 88.4 | 4.2 | 6.0 | 1.4 |
1994 இல் இலங்கையில் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் வேலை வாய்ப்பு பகிரப்பட்ட விதம்.
பிரிவு | ஜனத் தொகை விகிதாசாரம் | அரசு துறையில் வேலைகள்; | மாகாணசபையில் வேலைகள் | அரசு உதவி பெறும் வேலைகள்; |
சிங்களவர் | 73.9 | 91.2 | 87.7 | 88.1 |
இலங்கைத் தமிழர் | 12.7 | 5.9 | 7.1 | 8.2 |
மலையகத் தமிழர் | 5.5 | 0.1 | 0.2 | 0.5 |
முஸ்லீங்கள் | 7.0 | 2.0 | 4.6 | 2.2 |
ஏனையவர்கள்; | 0.9 | 0.8 | 0.4 | 1.0 |
இலங்கையில் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் சிறுபான்மை இனங்கள் வேலை இழப்பை ஆராய்வோம்.
| 1980 | 1985 | 1990 |
சிங்களவர் | 84.8 | 85.8 | 88.8 |
தமிழர் | 11.25 | 9.67 | 7.2 |
மலையகத் தமிழர் | - | 0.64 | 0.3 |
முஸ்லீம் மக்கள் | 3.03 | 2.95 | 2.9 |
ஏனையோர் | 0.84 | 1.14 | 0.8 |
அரசு மற்றும் கூடடுறவுத்துறையில் மொத்த வேலைகள் | 597 380 | 728 976 | 700 593 |
1980 குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களத்தால் இன அடிப்படையிலாக தொழில்கள் பற்றி வெளியிட்ட அறிக்கையைப் பார்ப்போம். இங்கு தமிழர் என்பது மலையகம் உள்ளிட்டது. மலையர், பறங்கியரும், மற்றவர்களும் உள்ளடக்கப்படவில்லை.
அரசு துறையில் சதவீகிதத்தில்
| சிங்களவர் | தமிழர் | முஸ்லீம் | மொத்த வேலை |
உயர்தொழில் நுட்பம் ஏனையவை | 82.4 | 12.11 | 5.09 | 141387 |
நிர்வாக முகாமைத்துவம்; | 81.3 | 15.54 | 1.91 | 3705 |
எழுதுவினையர் அது தொடர்பானதும்; | 83.7 | 13.21 | 2.16 | 72997 |
விற்பனையாளர் | 83.1 | 14.81 | 2.19 | 2094 |
சேவைத்துறை | 86.9 | 9.01 | 2.43 | 27428 |
விவசாயம் மிருக வளர்ப்பு காட்டு தொழில் மீன்பிடி வேட்டை | 73.2 | 21.09 | 4.98 | 2930 |
உற்பத்தி போக்குவரத்து எநதிர இயக்குநர்கள் | 85.5 | 11.05 | 2.32 | 100841 |
மற்றவர்கள் | 93.8 | 3.28 | 1.29 | 17467 |
மொத்தம் | 84.3 | 11.43 | 3.33 | 368849 |
மக்கள் தொகை | 73.98 | 18.16 | 7.12 | 100 |
கூட்டுத்தாபன வேலை சதவீகிதத்தில்
| சிங்களவர் | தமிழர் | முஸ்லீம் | மொத்தம் |
உயர்தொழில் நுட்பம் ஏனையவை | 75.5 | 21.33 | 1.87 | 10801 |
நிர்வாக முகாமைத்துவம் | 83.3 | 12.51 | 2.33 | 5448 |
எழுதுவினையர் அது தொடர்பானதும் | 86.5 | 9.92 | 2.32 | 72323 |
விற்பனையாளர் | 87.2 | 8.31 | 2.15 | 1022 |
சேவைத்துறை | 87.6 | 8.39 | 2.93 | 13240 |
விவசாயம் மிருக வளர்ப்பு காட்டுதொழில் மீன்பிடி வேட்டை | 60.8 | 35.81 | 1.15 | 7458 |
உற்பத்தி போக்குவரத்து எநதிர இயக்குநர்கள் | 88.0 | 8.36 | 2.83 | 115735 |
மற்றவர்கள் | 69.7 | 26.27 | 2.59 | 2504 |
மொத்தம் | 85.74 | 10.66 | 2.55 | 228531 |
இனவாதம் கூர்மையடைந்ததன் விளைவை நாம் மேலே காண்கின்றோம். படிப்படியாக இனவிகிதத்துக்கு கீழாக அனைத்து சிறுபான்மை இனங்களும் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் வேலை இழந்து செல்லுகின்றன. மாறாக பெரும்பான்மை இனம் அதிக சலுகை பெற்று வருகின்றது. அத்துடன் உலகமயமாதல் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் தனியார் மயமாக்கலையும், வேலை நீக்கத்தையும் கோருகின்றது. இதனால் வேலை வாய்ப்பு வேகமாக குறைந்து செல்லுகின்றது. பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனங்களை விட அதிக சலுகைகளை இனவாத அரசிடம் தொடர்ந்து பெறுகின்றது. உலகமயமாதலின் விளைவை சிறுபான்மை இனங்கள் மேல் இனவாத அரசு சுமத்துவதன் மூலம், ஒட்டுமொத்த சமூக நெருக்கடியில் இருந்து அரசு தப்பிச் செல்லுகின்றன. இந்த நிலையில் தேசிய இனங்களுக்கிடையில் ஐக்கியப்பட்ட நாட்டில் ஒன்றாக வாழ்வதற்காக, குறைந்த பட்சம் இனவிகித அடிப்படையில் வேலை வாய்ப்புகள் பகிரப்பட முடியாத உலகமயமாதல் நிபந்தனை உள்ளது. அரசு துறையில் வேலை வாய்ப்பை குறைக்கக் கோரும் நிபந்தனையும், வேலை நீக்கக் கோரும் நிபந்தனையும், அரசுதுறையில் தமிழருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை வழங்குமளவுக்கு, உலகமயமாதல் சகாப்தத்தில் நிலவும் சமூக அமைப்பால் சாத்தியமில்லை. தமிழருக்கு இனவிகித அடிப்படையில் வேலை வழங்க அரசு முன்வந்தால், சிங்கள மக்களை வேலையில் இருந்து நீக்கவேண்டும். உண்மையில் இனப்பிரச்சனையை இந்த உலகமயமாதல் நிபந்தனைக்குள், ஜனநாயக கோரிக்கையின் அடிப்படையில் தீர்க்க முடியாது. மாறாக ஐக்கியப்பட்ட ஒரே நாட்டில் தீர்க்க இரண்டு தரப்பும் உடன்பட்டால், தமிழரும் சிங்களவரும் இணைந்து மலையக மற்றும் முஸ்லீம் மக்களுக்கு, மற்றும் யாழ் அல்லாத பிரதேசத்துக்கும் நியாயமாக கிடைக்க வேண்டியதை சூறையாடியே அமைதியை ஏற்படுத்துவர். இதையே தமிழ் குறுந் தேசியம் தனது அரசியலாக ஆணையில் வைத்துள்ளது. வேறு எந்த வழியிலும் தீர்க்க முடியாது.
இதை நான் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமாயின் 1981 ஆண்டு சனத் தொகை அடிப்படையில், 1990ம் ஆண்டில் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் உள்ள வேலை செய்வோரை இனவிகித அடிப்படையில் பகிரப்பட வேண்டுமாயின் என்ன நடக்கும் எனப் பார்த்தாலே போதும். 1981ம் ஆண்டு மக்கள் தொகையடிப்படையில் சிங்களவர் 74 சதவிகிதமும், தமிழர் 12.7 சதவிகிதமும், முஸ்லீம்கள் 7 சதவிகிதமும், மலையகத்தார் 5.5 சதவிகிதமாகவும், ஏனையோர் 0.8 சதவிகிதமாகவும் இருந்தனர். 1990 இல் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் மொத்தமாக வேலை செய்தோர் அண்ணளவாக 700593 பேராவர். இதில் சிங்களவர் 622126 பேரும், தமிழர் 50442 பேரும், முஸ்லீம்கள் 20317 பேரும், மலையகத்தார் 2101 பேரும், ஏனையோர் 7005 பேரும் வேலை செய்தனர். ஆனால் இன விகித அடிப்படையில் வேலை செய்திருக்க வேண்டியவர்கள் சிங்களவர் 518438யும், தமிழர் 88957யும், முஸ்லீம்கள் 49041யும், மலையகத்தார் 38532யும், ஏனையோர் 5604ம் ஆகும். இனவாதத்தால் இதில் உள்ள இடை வெளியை சிங்களவர் 103688 கூடுதலாகவும், தமிழர் 38533 குறைவாகவும், முஸ்லீம்கள் 28724 குறைவாகவும், மலையகத்தார் 36431 குறைவாகவும், ஏனையோர் 1401 அதிகமாகவும் காணப்படுகின்றனர். அதாவது இனவிகிதத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டுமாயின் சிங்களவர் 103688 பேரின் வேலையை பறிக்கவேண்டும். இது மொத்தமாக வேலை செய்வோரில் 14.8 சதவிகிதமாகும். இது சாத்தியமில்லை. மற்றொரு வழியில் வேலை செய்யும் சிங்களவர் எண்ணிக்கையை இனவிகிதமாக்கி, சிங்களவர் அல்லாதவருக்கு வேலை வாய்ப்பை கொடுப்பதாயின் மொத்த வேலைசெய்வோரை 840710 யாக அதிகரிக்க வைக்க வேண்டும் இது மேல் அதிகமாக சிறுபான்மை இனங்களுக்கு 140117 வேலை வாய்ப்பை அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் வழங்க வேண்டும். இதுவும் இந்த உலகமயமாதல் சமூக அமைப்பில் சாத்தியமில்லை.
தமிழீழம் கிடைக்குமாயின் கூட இது சாத்தியமில்லை. யாழ் அல்லாத பிரதேசத்துக்கு பிரதேச ரீதியில் பெரும் தொகையான வேலை வாய்ப்பை தமிழீழம் வழங்காது மட்டுமின்றி வழங்க முடியாது. தமிழீழம் உலகமயமாதலை ஆதரிப்பதாக பிரகடனம் செய்கின்றது. உண்மை யதார்த்தத்தில் வெட்ட வெளிச்சமாக எம்முன் உள்ளது. சிங்கள, தமிழ் ஆளும் வர்க்கங்கள் செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள், சாதிய ரீதியாகவும், சிறுபான்மை இனங்களையும், பிரதேசங்களையும் சூறையாடியே இன ஒற்றுமையை அல்லது இனப் பிளவை வித்திடுகின்றன.