தமிழ் அரங்கம்

Saturday, December 16, 2006

ஈழத்து கோயபல்ஸ்சின் மரணம்!

ஈழத்து கோயபல்ஸ்சின் மரணம்!

பி.இரயாகரன்
16.12.2006


'பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனித வாழ்வு நிலைக்கிறது" என்பது, பாசிசத்தின் பிறப்புக்கும் இறப்புக்கும் கூட சமகாலத்தில் பொருந்திப் போகின்றது. பாலசிங்கம் சமகாலத்தில் தனது நோயால் செத்துக் கொண்டிருந்தது போல், பாசிசம் என்னும் புற்றுநோயால் புலிகள் மரணித்துக் கொண்டிருக்கின்றார்கள். வரலாறு இப்படி கோயபல்ஸ்சின் மரணத்துடன் பின்னிப்பிணைந்து செல்வது எம் முன்னால் அனுதினம் நிகழ்கின்றது. மனித தியாகங்கள் எல்லாம் வருத்தத்துக்குரிய ஒன்றாக எம் மண்ணில் இழிந்து போகின்றது.


இந்த நிலையில் தான் பாசிசத்தின் குரலை, பாசிசம் இழந்து நிற்கின்றது. தமிழ் மக்கள் இதனால் எதையும் இழக்கவில்லை. இந்த ஈழத்து பாசிசக் குரலை 'தேசத்தின் குரல்" என்று பாசிட்டுக்கள் அழைப்பது, சாலப் பொருத்தமானதே. ஏனென்றால் அது அவர்களின் சொந்த இழப்பே ஒழிய, மக்களின் இழப்பல்ல. பாசிசத்தின் சகல இலக்கணத்துக்குமுரிய வகையில் ஒரு கோயபல்ஸ்சாகவே வாழ்ந்தும், இழிவுக்குரிய ஒரு மக்கள் விரோத பாசிட்டாக வாழ்ந்து மடிந்தவர். இவரை 'மதியுரை"யர் என்பது, மக்களுக்கு எதிராகவே சதா சதி செய்வதைத் தான். வேறு எதைத்தான் அவர் செய்தார்? சூனியக்காரியாக, சூழச்சிக்காரனாகவே வாழ்ந்து மடிந்து போனார்.


இவர்கள் மக்களுக்கு செய்தது என்ன? இந்த சூனியக்காரனின் மரணம் பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதற்கு, இதுவே அடிப்படையான கேள்வி? மக்களின் நன்மைக்காக எதையும் இவர்கள் தமது வாழ்வில் செய்யவில்லை. அவர்களால் எதையும் பட்டியலிடவே முடியாது. ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் புலிகளால் என்ன நன்மை கிடைத்தது என்ற கேள்வியை எழுப்பி, யாராலும் பதில் சொல்ல முடியுமா எனின், முடியாது.


தமிழ் மக்களுக்கு பாசிசப் புலிகள் கொடுத்த தீமைகளே அளவற்றது, எல்லையற்றது. தமிழ் மக்களின் கண்ணீரே வாழ்வாகி அது பெருக்கெடுக்கின்றது. துன்ப துயரங்கள் ஆறாக பெருகுகின்றது. மனித அவலத்தை தவிர, தமிழ் மக்கள் கண்டது எதுவுமில்லை. மக்கள் சுமப்பதோ, தமது சொந்தப் பிணத்தைத் தான். இதைத்தான் பாலசிங்கம் ஒரு கோயபல்ஸ்சாக நின்று, மக்கள் மேல் சுமத்தினார். இதை செய்வதில் கிட்லரின் பிரச்சார மந்திரியான கோயபல்ஸ்சுக்கு நிகராகவே பாலசிங்கம் வாழ்ந்ததை, எந்த வரலாறும் மறுதலிக்காது.


சாதாரண மக்களின் அடிப்படை உரிமைகள் ~~புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும் என்று கூறி, 1986 இல் இந்த பாசிட்டுகள் தமது மேன்மையை துண்டுப்பிரசுரமாக விட்டவர்கள். அவர்களின் 'மதியுரையர்" தான் இவர். இப்படி மக்களுக்கு எதிராகவே சூழ்ச்சியும் சதியுமாக வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் இந்தப் புலிகள்.


இப்படிப்பட்ட பாசிட்டுகளின் மரணம் தமிழ் மக்களின் சொந்த இழப்பா? இல்லை, ஒரு நாளுமில்லை. அப்படி தமிழ் மக்களின் இழப்பு என்றால் எப்படி? எந்த வகையில்?


தனிப்பட்ட அந்த மனிதனின் மரணத்தையும், அதனால் உற்றார் உறவினரின் துன்பம் துயரத்தையும் இதில் இருந்து நாம் வேறுபடுத்துகின்றோம். ஆனால் அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக பார்த்தால், தமிழ் மக்களின் மரணங்களே இவர்களின் அரசியல் வாழ்வாகியது. சதா மரணங்களையே விரும்பியவர்கள். மரணங்களிலேயே மகிழ்ச்சி கண்டவர்கள். மக்களின் மரணங்களே இவர்களின் அரசியலாகியது. மனிதம், மனித நேயம் எதுவுமற்று, சூழ்ச்சிகாரர்களாக, சதிகாரர்களாகவே வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இதையே அரசியலாக கொண்ட ஒரு மக்கள் விரோதக் கும்பல் தான் புலிகள். மக்கள் விரோத செயலை நியாயப்படுத்தவே, பாலசிங்கம் என்ற கோயபல்ஸ் உருவாக்கப்பட்டார்.


இந்த தெரிவு அசாதாரணமானது. சொந்தமாக எதையும் முன்வைக்க திராணியற்ற ஒரு பந்சோந்தி, ஒரு விஸ்கி போத்தலுக்குள் எதையும் முண்டி விழுங்கி வாழும் விலாங்கு மீன், குடியிலேயே மிதக்கும் ஒருவன். இப்படி சமூகத்தை வழிகாட்ட எந்த திராணியுமற்ற ஒருவனை தெரிந்தெடுத்து கோயபல்ஸ்சாக்க முடிந்தது. பாலசிங்கத்தை கோய்பல்ஸ்சாக தெரிந்தது என்பது ஒரே நாளில், இலகுவாக நடக்கவில்லை. இந்த பதவிக்காக போட்டியிட்டு தோற்றவர் வேறு யாருமல்ல மு.நித்தியானந்தன். தோற்க முன்பு புலிகளின் கோயபல்ஸ்சாக இருந்தவர். ஆனால் நித்தியானந்தன் பாலசிங்கம் போல் வெகுளித்தனமற்ற ஒரு குள்ளநரியன் என்பதால், பிரபாகரன் அவரைக் கழற்றி விட்டவர்.


இப்படி வன்மமும் வக்கிரமும் கொண்டு சூழச்சியையும் சதியையும் கொண்டு, நியாயப்படுத்திய திறனுக்கு 'மதியுரையர்" என்றும் 'தத்துவாசிர்pயர்" என்றும் 'மேன்மைகள்" என்றும் அவற்றை, பாசிட்டுகள் பறைசாற்றினர். உண்மையில் இந்த பாசிச தத்துவ கோயபல்ஸ், பாசிசத்தை நியாயப்படுத்த முனைந்த போதெல்லாம் தோற்றுப் போனார்கள். எப்படி தோற்றுப்போனார்கள்?


இப்படி நியாயப்படுத்தப்பட்ட தோல்விகள் தான், முடிவேயற்ற வகையில் தமிழ்மக்கள் மேலான படுகொலைகளாகும். தமிழ் மக்களிடமே தோற்றுப் போனவர்கள் (போன 'மதியுரையர்",) கொலைகளின்றி உயிர்வாழ முடியாத ('தத்துவ") மேதைகளாகினர். புலிகள் தமது சொந்தப் போராட்டத்தை நியாயப்படுத்த முடியாது போனமையே, படுகொலைகளின் வரலாறாகின்றது. இப்படித்தான் வரலாறு எழுதப்படும். இந்த 'மதியுரை"யர்கள் பாசிசம் நீடிக்கும் வரைதான், கோயபல்ஸ் தொப்பி அணிந்தபடி வரலாற்றை தாமே தீர்மானிப்பவராக கொட்டமடிக்கின்றனர்.


தமிழ் மக்களின் உரிமைகள் ~~புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும் என்பது புலிப்பாசிசத்தின் மைய அரசியலாகவுள்ளது. இதற்கு அரசியல் விபச்சாரம் செய்வதே, அன்ரன் பாலசிங்கத்தின் கோயபல்சுக்கேயுரிய தொழிலாகியது. பிரபாகரன் இதைத் தான் அழகாக 'தேசத்தின் ஒளிவிளக்கு" என்கின்றார். இப்படி ஒளிவிளக்காகி பாசிசத்துக்கு ஒளி கொடுக்க வெளிக்கிட்டவர். ஆனால் ஒளியைத் தான் ஏற்ற முடியவில்லை. புலிகளால் கொல்லப்பட்ட பத்தாயிரம் பேரின் மரணங்கள், இந்த இருண்ட பக்கத்ததைக் காட்டுகின்றது. தமிழ் மக்களின் அவலங்களும், கண்ணீர்க் கதைகளும் நீண்டு நெடிந்து கிடக்கின்றது. வரலாறு இந்த மனித அவலத்தை பாசிச சமாதி மீது அறைந்து கூறும்.


இந்த பாசிசத்திற்கு தலைமை தாங்கும் தலைவர் கூறுகின்றார் 'சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது." ஆம் உண்மை. சாதாரண மனித உறவுக்கு அப்பால் வாழ்பவர்கள் தான் நீங்கள். அதில் ஒன்றுபட்டீர்கள். சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்டு, யார் யாருக்கு வழிகாட்டி என்பதில் தொங்கி நிற்பது உங்கள் சூழ்ச்சிகள் தான். 'சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது." என்ற உங்கள் வாழ்வியல் உண்மை, மனித அவலத்தினை எடுத்துக்காட்டுகின்றது. அடுத்த நேர கஞ்சிக்கு வழியற்றவர்கள், மனிதனாக வாழ வழியற்றவர்கள், மனித உறவுகளைக் கூட பேண முடியாதவர்கள், தமது நிலையை எண்ணி வாய்விட்டு புலம்ப முடியாதவர்கள், அச்சமும் பீதியும் வாழ்க்கையாகி மிரண்டு கிடப்பவர்கள், தமது சொந்த சுயத்தை இழந்து நடைப்பிணமானவர்கள் யார்? மக்கள் தான். நீங்கள் இதையே தொழிலாக செய்யும் போது, 'சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்"டுத்தான் இருக்க, (வாழ) முடியும். மனிதத்தை புதைகுழியின் முன் நிறுத்தி, சுட்டு வீழ்த்தி, அதை கால்களாலேயே மூடிவிட்டு வந்து துப்பாக்கி முனையில் நியாயம் பேசும் நீங்கள் யார்? 'சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்ட" பாசிட்டுக்கள் தான். இதை நீங்களே சொல்லும் போது, நாங்கள் எப்படி நிராகரிக்க முடியும்.


இப்படி தமிழ் மக்களின் பெயரில் தினம்தினம் நீங்கள் அழுது புரண்டதால், தமிழ் மக்கள் கண்டது என்ன? சாதாரண மனித வாழ்வும் உறவும் மறுக்கப்பட்ட நிலையில் மக்கள் வாழ்ந்தார்கள். எதைத்தான்?, எப்படி? உங்களிடம் பெற்றுவிட முடியும். சிங்களப் பேரினவாதி எதை தமிழ் மக்களுக்கு செய்தானோ, அதைச் செய்தது, செய்வது யார்?


இப்படிப்பட்ட ஒருவன் இன்று மரணித்துள்ளான். பொய்மையையே வாழ்வாக கொண்டு, பொய்யாகவே கதைத்து, மக்களை ஏமாற்றிய ஒருவன் மரணித்துள்ளான். அன்றாடம் எந்த பொய்களுமின்றி, புலிகளின் பாசிசம் மக்களின் முன் அரங்கேறுவதில்லை. இப்படி மக்களையே ஏமாற்றி வாழ்ந்த ஒருவன், கடந்த வரலாறு முழுக்க மரணங்களின் மகழ்ச்சியுற்றவர்கள். அன்றாடம் கேட்கும் வெடியோசையும், மரண அழுகுரலும் தான், இவர்களின் புத்துணர்ச்சிக்குரிய டொனிக்காகியது. தமிழ் மக்களின் மரணமே புலிகளின் அன்றாட நடப்பு அரசியலாகியது. தமிழ் மக்களை புலிகள் கொன்றாலும் சரி, இராணுவம் கொன்றாலும் சரி, அதை அரசியலாக கொண்டு பிழைக்கக் கற்றுக்கொண்டனர். இப்படி தமிழ் மக்களின் மரணத்தில் மகிழ்ச்சியடைந்தவர்கள் (ஒருவனைப்) பற்றி, நாம் எப்படி புரிந்து கொள்வது.


தமிழ் மக்களின் மரணங்களே டொலராகவும், ஈரோக்களாகவும் மாறிய போது, அதில் சொகுசாக வாழ்ந்தவர்கள் யார்? நீங்களே உங்களைக் கேட்டுப்பாருங்கள்! மரணத்தைக் கொண்டு அரசியல் செய்தவர்கள் யார்? மக்களா! இன்று அதே பாசிசத்தின் குரலின் மரணத்தையே கடை விரித்து அரசியல் செய்வது யார்? தமிழ்மக்களா! தமிழ் மக்களுக்கும் போராட்டத்துக்கும் என்னதான் சம்பந்தம்?. தமிழ்மக்களின் உரிமைகள், அதற்கான போராட்டம் ~~புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும் என்றவர்கள் நீங்கள். இப்படிப்பட்ட உங்களின் மரணம், மக்களுக்கு ஒரு துயரத்தை ஏற்படுத்துமா? எப்படி? நீங்களே உங்கள் மனதைத் திறந்து பதில் சொல்லுங்கள்.


பேரினவாதம் தமிழ் மக்களை கொன்று குவித்த போதெல்லாம், பாசிச (பாலசிங்கத்தின்) அரசியல் இருப்புக்கே அது உதவியது. புலிகள் தமிழ் மக்களை கொன்று குவித்த போதே, அவர் புலியின் 'மதி"யுரைஞரானார். பழைய இலக்கியத்துக்கு உரை எழுதுவது போல், பாசிசத்துக்கு உரையெழுதி 'மதி"யுரைஞரானார்.


பாலசிங்கம் புலிகளின் ஒரு கோயபல்ஸ்சே ஒழிய, அவர் புலிகளின் தத்துவவாதியல்ல. இந்த மாபியா கொலைகார செயற்பாட்டுக்கு என்று தத்துவமும் அவர்களின் சொந்த வழி மீது கிடையாது. பிரபாகரனின் படுகொலை அரசியலுக்கு, கோயபல்ஸ்சாக மாறி அதை குலைத்துக் காட்டியவர். இப்படி பாசிசத்தின் குரலாக இருக்கவும், இசைக்கவும் முனைந்தவர். இதையே தத்துவம் என்பது நகைச்சுவைதான்.


தமிழ் மக்களின் துன்பம் துயரமே, இவர்களின் மகிழ்ச்சியான வாழ்வாகியது. மக்களுக்காக ஏதாவது செய்துள்ளார்களா? மக்களுக்காக புலிகள் ஏதாவது செய்துள்ளார்கள் என்று, ஒரு உண்மையைக் கூட எடுத்துவைக்க முடியாது. பல பத்தாயிரம் கோடி பணத்தை கடந்த காலம் முழுக்க வரவுசெலவாக கொண்ட மாபியா புலிகள் இயக்கத்தின் கோயபல்ஸ்கள், எதையும் மக்களுக்காக கூற முடியாது.


பாலசிங்கத்தின் கோயபல்ஸ் தத்துவம் அம்மணமானது. ஆரம்ப காலத்தில் இந்த கோயபல்ஸ் சோசலிசத்தை எல்லாம் பாசிசத்தினுள் புகுத்தி பேசியது. சோசலிசம், வர்ககம், தொழிலாளி, விவசாயி என்று பல சொற்களை இணைத்து மக்களை ஏமாற்றி விபச்சாரம் செய்தமைக்கு இந்த கோயபல்ஸ்சே முன்நிலை வகித்தவர்.


புலிகளின் ஒரேயொரு அரசியல் திட்டமாக அது வெளிவந்தது. அதற்கு 'சோசலிச தமிழீழம்" என்று இந்த பாசிட்டுக்கள் தலைப்பிட்டனர். 'தேசிய விடுதலை, சோசலிச சமூகப் புரட்சி ஆகிய இரு அடிப்படையான அரசியல் இலட்சியம்" என்றனர். இப்படி மக்களை ஏமாற்ற பொய்கார கோயபல்ஸ்சால் மட்டும் தான் கூறமுடியும்.


இந்த கோயபல்ஸ் கும்பல் அதனுடன் மட்டும் தமது மோசடியை நிறுத்தவில்லை. 'தேசிய விடுதலை எனும் பொழுது .ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மாணத்தையுமே" தமது இலட்சியம் என்கின்றனர் 'சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடனும், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும" ஆட்சியாக அமையும் என்றனர். மேலும் அவர்கள் 'சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்" என்றனர். அத்துடன் ~~தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒருபொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" என்றனர் இந்த பாசிட்டுகள். எப்படிப்பட்ட ஒரு பொய். இந்த மோசடியை, பொய்யை மக்களுக்கு எதிராக (புலிகளால்) கோயபல்ஸ் பாலசிங்கத்தால் தான் செய்ய முடிந்தது.


இவரை போற்றும் புலித் தலைவர் பிரபாகரன் 'ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்." என்று கூறுவது உண்மை தான். மக்களை ஏமாற்றி மோசடி செய்தாலன்றி, புலிகள் தப்பிப்பிழைக்க முடியாதல்லவா! அதைத்தான் இந்த பாலசிங்கம் என்ற கோயபல்ஸ் செய்தார். அதற்காகவே அவர் வாழ்ந்தார். அதைத் தான், எப்படிப்பட்ட மோசடி என்பதை, அவர்கள் இன்று கண்டு கொள்ளமறுக்கும் புலிகளின் நூலில் இருந்து பார்த்தோம்.


எப்படிப்பட்ட ஒரு கோயபல்ஸ்சாக பாசிசத்தின் குரலாக இருந்தார் என்பதற்கு, பாலசிங்கம் எழுதிய விடுதலை என்ற நூலே சாட்சியம். அதில் அவர் தமது கோயபல்ஸ் அரசியலை எம்.ஜி.ஆர்க்கு எடுத்துக் கூறும்போது 'விடுதலைப்புலிகள் கம்யூனிஸ்ட்டுக்கள் அல்லர். விடுதலைப் புலிகள் புரட்சிவாதிகள், சுதந்திரப் போராளிகள். தமது தாயகமான தமிழீழத்தின் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள். சாதியக் கொடுமை, பெண் அடிமைத்தனம் மற்றும் சமூக முரண்பாடுகள் நீங்கிய சமத்துவமும் சமூக நீதியும் நிலவும் ஒரு உன்னதமான, சுதந்திரமான சமுதாயத்தைப் படைக்கவே நாம் போராடுகின்றோம். ஏழைகளின் சுபீட்சத்திற்காகவும் ஒடுக்கப்படும் மக்களின் விடிவிற்காகவும் நாம் ஆயுதமேந்தி போராடுகின்றோம்" என்றாரே. அத்துடன் 'நீங்கள் ஏழைகளின் துயர்துடைக்கத் தொண்டாற்றவில்லையா? நீங்கள் சினிமா உலகில் சாதித்ததை விடுதலைப் புலிகள் நிஜவுலகில் சாதிக்கிறார்கள். உங்களுக்கும் புலிகளுக்கும் இலட்சியம் ஒன்றுதான்?.. உங்களையும் பிரபாகரனையும் சமூகப் புரட்சிவாதிகள் என்று தான் சொல்ல வேண்டும்" என்ன புல்லரிக்கும் வார்த்தைகள். கோயபல்ஸ்சுக்கேயுரிய மாயாஜாலத்தை அடிப்படையாக கொண்டது. ஏமாற்றல் மோசடி, பொய், புனைவு, மாயாஜாலம், இழிவு, அச்சுறுத்தல், கொலை மிரட்டல், இழிவான பாலியல் இரசனை என்று, மனிதத்துவத்தை இழிவுபடுத்தும் அனைத்தையும் கூட்டியள்ளி, தமிழ் மக்களின் மேல் பாசிசத்தின் குரலாக அறைந்தவர் தான் இந்த ஆன்ரன் பாலசிங்கம்.


www.tamilcircle.net



Thursday, December 14, 2006

அமெரிக்க விசுவாசமே அடிமையின் சுவாசம்!

அமெரிக்க விசுவாசமே அடிமையின் சுவாசம்!

க்டோபர் 9ஆம் நாள், ஹவதேரி என்ற இடத்தில் வடகொரியா வெற்றிகரமாக அணுசக்தி சோதனையை நடத்தியது. அச்செயல் கிழக்கு ஆசியாவின் அமைதிக்கும் உறுதிப்பாட்டுக்கும் பேராபத்தானது என்றும் கடும் கண்டனத்துக்குரிய இரகசியமான அணு ஆயுதப் பரவல் என்றும் முதன்முதலாகக் குரலெழுப்பிய நாடு இந்தியாதான். அதைத் தொடர்ந்து வடகொரியாவின் அண்டை நாடுகளும், உலகின் அணு ஆயுத வல்லரசுகளும் அதை அப்பட்டமான, மிக மோசமான ஆத்திரமூட்டும் செயல் என்று வன்மையாகச் சாடின. உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு வடகொரியாவுக்கு எதிராக பல தடைகளை விதித்து, உலக வல்லரசுகளின் முன்பு மண்டியிடும்படி உத்திரவு போட்டது. வடகொரியா அதை ஏற்கவில்லை என்பது வேறு விசயம்.


ஆனால், இப்போது அணுசக்தி சோதனை நடத்தியதற்காக வடகொரியாவிற்கு எதிராக முதலில் தனது கடும் எதிர்ப்பைக் காட்டியது இந்தியாதான்; 1974இல் முதன்முறையாகவும் 1998இல் மீண்டும் அணுசக்தி சோதனை நடத்தியதன் மூலம் நீண்ட காலத்துக்குப் பிறகு அணு ஆயுதப் பரவலுக்குக் காரணமாக இருந்தது இந்தியாதான்; ஆனால், ""இந்தியாவோடு வடகொரியாவை ஒப்பிடவே கூடாது, இரண்டும் வேறு வேறு வகையான செய்கைகள்'' என்று மூர்க்கமாக வாதிடும் இந்தியா,


""இரகசியமான அணு ஆயுதப்பரவல்'' என்று சாடுகிறது. அதாவது, வடகொரியா தனது அணுசக்தி சோதனை முழுக்க முழுக்க தனது சொந்தத் தொழில்நுட்ப அடிப்படையிலானது என்று கூறியபோதிலும், அது பாகிஸ்தானுடன் கூட்டுச் சேர்ந்து நடத்தியது என்று சாதிக்கிறது, இந்தியா.


பாகிஸ்தானைவிட எல்லா இராணுவத் துறைகளிலும் வலிமையான நாடு இந்தியா என்று மூன்று போர்களில் இந்தியாவின் மேலாண்மை நிரூபிக்கப்பட்டு விட்டது. இருந்தபோதும் பாகிஸ்தானை உருட்டி மிரட்டிப் பணிய வைக்கவும், தெற்காசியாவில் தனது பிராந்தியத் துணை வல்லரசு மேலாதிக்க விரிவாக்க நலன்களுக்காகவும் இந்தியா மீண்டும் மீண்டும் அணுசக்தி சோதனைகளை நடத்தியது. ஆனால், இந்தியாவின் இந்தச் செயல், உடனடியாகவே பாகிஸ்தானையும் அணுசக்திச் சோதனையிலும் இரண்டு நாடுகளும் மேலும் மேலும் ஆயுதக் குவிப்பு போட்டியிலும் ஈடுபடவே வழிவகுத்தன.


இப்போது இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுமே அணு ஆயுத முனைகளைக் கொண்ட ஏவுகணை சோதனைகளும் உற்பத்திகளும் செய்வதில் ஒருவரை ஒருவர் விஞ்சுவதற்கான போட்டியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தெற்கு ஆசிய அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளின் அணு ஆயுதஏவுகணை சோதனைகளுக்கும் உற்பத்திக்கும் எவ்வித நியாயமான காரணங்களும் இல்லாத அதேசமயம், இவ்விரு நாடுகளின் எஜமானனாகவும் அணு ஆயுத மேல்நிலை வல்லரசாகவும் உள்ள அமெரிக்காவின் மேலாதிக்கப் போர்வெறிதான், வடகொரியாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனை மற்றும் உற்பத்தி முயற்சிகளுக்கு மூலகாரணமாகவும் தூண்டுதலாகவும் இருக்கிறது.


கம்யூனிச சீனா மற்றும் ரசிய சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் அணு ஆயுதக் கவசத்தின் கீழ் இருந்தவரை வடகொரியா அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளில் இறங்கவில்லை. சீனாவில் முதலாளியம் நிலைநாட்டப்பட்ட பிறகு, அமெரிக்காவுடனான பனிப்போரில் சோவியத் ஒன்றியம் தோற்றுப்போன பிறகு, அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொண்ட வடகொரியா, 1985இல் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. 1992இல் சர்வதேச அணுசக்தி முகமையோடு ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டது. இதற்குக் காரணம் ஜப்பானிலும், கொரிய வளைகுடாவிலும் அமெரிக்கா குவித்து வைத்திருக்கும் அணு ஆயுதங்களை விலக்கிக் கொள்வதாக வாக்களித்தது. ஆனால் அமெரிக்கா அவ்வாறு செய்யாததோடு, வடகொரியாவில் உள்ள அணு ஆயுதம் அல்லாத வசதிகளையும் மேற்பார்வையிட வேண்டும் என்று நிர்பந்தித்து, ஆப்ஃகான், ஈராக்கோடு வடகொரியாவையும் சேர்த்து ""சாத்தான்களின் அச்சு நாடுகள்'' என்று அறிவித்தது. அமெரிக்காவின் ஆட்சி மாற்றத் திட்டத்துக்கான இலக்குகளில் ஒன்றாக வடகொரியாவை வைத்தது.


கொசாவோ, ஆப்ஃகான், ஈராக் என்று அடுத்தடுத்து பாசிச ஆக்கிரமிப்புப் போர்களை அமெரிக்கா தொடுத்ததோடு, வடகொரியாவும் அதன் தாக்குதலுக்கு இலக்காகும் என்று அச்சுறுத்தப்பட்டது. இந்த நிலையில் 2003ஆம் ஆண்டே அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய வடகொரியா, அணு ஆயுத சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி வெற்றியும் கண்டுள்ளது.


""அணு ஆயுதப் போரில் வெல்லும் ஆற்றல் பெற்றிராத எந்தவொரு நாட்டு மக்களும் ஒரு சோகமான சாவையே எதிர்கொள்ள வேண்டி வரும்; அந்த நாட்டின் இறையாண்மை வெட்டிச் சிதைக்கப்படும். இது உலகின் பல்வேறு நாடுகளுக்கும், அமெரிக்காவின் காட்டாட்சி இரத்தம் சிந்தி புகட்டியுள்ள கசப்பான அனுபவம்'' என்று தமது அணு ஆயுதச் சோதனையை ஆறு நாட்களுக்கு முன்பே அறிவித்த வடகொரிய அயலுறவுத்துறை அமைச்சர் கூறினார். இது அமெரிக்க விசுவாசிகளான மன்மோகன் சிங்குகள் மறுக்க முடியாத அப்பட்டமான உண்மை நிலையாகும்.


அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின்படியே கூட, ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் மோசமான அச்சுறுத்தல் வரும்போது, அந்த நாடு அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவதற்குத் தடையில்லை. அதன் 10வது பிரிவின்படி, ""தனது நாட்டின் அதீத நலன்களுக்குக் குந்தகம் ஏற்படும் எனில், இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தோடு தொடர்புடைய மிகமிக முக்கியமான நிகழ்வுகள் நடந்துவிட்டதாக கருதினால், எந்தவொரு நாடும் தனது தேசிய இறையாண்மையைப் பயன்படுத்தி இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம். ஒப்பந்த நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலுக்கும் மூன்று மாதங்கள் முன்னதாக அந்த நாடு தனது விலகலைக் குறித்துத் தெரிவிக்க வேண்டும்.'' இங்கே குறிப்பிடப்படும் வகையிலான பேராபத்தை எதிர் கொண்டுள்ள வடகொரியா, மூன்றாண்டுகளுக்கு முன்னதாகவே அறிவித்து, அந்த தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகி விட்டது.


ஆனால், வடகொரியாவைப் போன்றதொரு ஆபத்து எதுவும் இல்லாத இந்தியா, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தையே ஏற்காத இந்தியா, 30 ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுதப் பரவலுக்குக் காரணமாக இருந்த இந்தியா, வடகொரியாவின் மிகவும் அவசியமான தற்காப்பு முயற்சியை கடுமையாகக் கண்டிக்கிறது. வடகொரியாவைப் போலவே, அமெரிக்க பாசிச ஆக்கிரமிப்புப் போர் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ள ஈரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி முகாமையில் இந்தியா ஓட்டளித்திருக்கிறது. அதன்மூலம் அமெரிக்கா, ஈரானை உருட்டி மிரட்டவும் ஆக்கிரமிப்புப் போர்தொடுக்க சாக்குப் போக்குச் சொல்வதற்கும் துணை புரிந்திருக்கிறது. இதன் விளைவாக, ஈரானுடனான இந்தியாவுக்கான தரை வழி எண்ணெய்க் குழாய் திட்டம் முறிந்து போனபோதும், அமெரிக்க விசுவாசமே முக்கியமானது என்று கருதி அதன் நிர்பந்தத்துக்குப் பணிந்து போயுள்ளது.


அக்.9 அணு ஆயுத சோதனையின் மூலம், உலகின் அணு ஆயுத "வல்லரசு' நாடாகியிருக்கும் வடகொரியா, அந்த வரிசையில் எட்டாவது நாடுதான். ஏற்கெனவே, ஏழு நாடுகள் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் செய்து குவித்து வைத்திருக்கின்றன. இவை தவிர இருபது நாடுகளில் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் அமெரிக்கா நிறுத்தி வைத்திருக்கிறது. உலகின் பெருங்கடல்வழித் தடங்களில் கூட அமெரிக்கப் போர்க் கப்பல்கள் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் ஏராளமாகச் சுமந்து திரிகின்றன. அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் முற்றாக ஒழிப்பதற்கான வழிவகையின்றி, அணு ஆயுதப் பரவலுக்கு எதிராக வெறுங்கூச்சல் போடுவது, சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது; பாசிசப் போர் வெறிபிடித்த அமெரிக்காவுக்குத் துணை போவதுதான்.


எண்பதற்கும் மேலான அமெரிக்க சி.ஐ.ஏ.வின் படுகொலை முயற்சிகளைக் கண்டும் அஞ்சாத, எண்பது வயதுக்கும் மேலான கிழவன் ஃபிடல் கேஸ்ட்ரோவும், அமெரிக்காவின் வாசலில் நின்று கொண்டு அதன் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûக்கு சவால் விடும் வெனிசுலா அதிபர் சாவேசிடம் தெரியும் நெஞ்சுரம் கண்டு உலகமே வியக்கிறது.


ஆனால், இந்தியப் பிரதமர் மன்மோகனின் கோழைத்தனமும் துரோகத்தனமும் கண்டு உலகமே கைகொட்டிச் சிரிக்கிறது. ஈரானுக்கு எதிராக வாக்களிக்கும்படி அமெரிக்க அயலுறவுச் செயலர் கண்டலிசா ரைஸ் உத்தரவு போடுகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு உறுப்பினர் தேர்தலில் வெனிசுலாவுக்கு எதிராக வாக்களிக்கும்படி அதிபர் புஷ் தொலைபேசியில் கூப்பிட்டு மிரட்டுகிறார். மன்மோகன் சிங்கோ தண்டனிட்டு தலைமேற்கொண்டு செய்து முடிக்கிறார். மும்பை குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின் பங்கு குறித்த ஆதாரங்களை அமெரிக்க அதிகாரிகளின் காலடியில் சமர்ப்பிக்கிறது, இந்தியா ஏதோ அமெரிக்க சி.ஐ.ஏ.வுக்குத் தெரியாத இரகசியம் போல!


எல்லாம் அமெரிக்காவுடனான இந்தியாவின் இராணுவ ஆயுத ஒப்பந்தங்களை குறிப்பாக, அணுசக்தி ஒப்பந்தத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் என்று மன்மோகன் சிங்கும் அவரது கோயபல்சுகளும் பிரச்சாரம் செய்கின்றனர். இந்தியாவின் இந்த ஒப்பந்தமே எவ்வளவு துரோகத்தனமானதென்று இந்திய அணுசக்தி அறிஞர்களே கடும் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்; அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் திருத்தங்களே அதை பறைசாற்றுகின்றன (பார்க்க ஆக. 2006 புதிய ஜனநாயகம் தலையங்கம்). சரியாகச் சொல்வதானால், செத்துப் பிறந்த குழந்தையான இந்திய இறையாண்மைக்கு ""திவசம்'' கொடுக்கும் புரோகிதர் வேலையைத்தான் மன்மோகன் சிங் செய்து கொண்டிருக்கிறார்.


Wednesday, December 13, 2006

முல்லைப் பெரியாறு: சிக்கலும் தீர்வும்

முல்லைப் பெரியாறு: சிக்கலும் தீர்வும்

காவிரி ஆற்று நீர் சிக்கலைப் போல முல்லைப் பெரியாறு அணை சிக்கலில் நிறைய வாதப் பிரதிவாதங்களுக்கு அவசியமில்லை. உண்மை விவரங்களே தமிழகத்தின் நியாய உரிமைகளையும் கேரள அரசின் அடாவடித்தனங்களையும் நிலைநாட்டுவதாக உள்ளன. இன்றைய கேரள மாநிலத்தின் ஒரு பகுதியான திருவி தாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் செய்து கொண்டு, அன்றைய ஆங்கிலேய காலனிய அரசு முல்லைப் பெரியாறு அணையை 1895இல் கட்டி முடித்தது. திருவிதாங்கூர் மன்னருடனான ஒப்பந்தத்தின்படி பெரியாறு அணையின் 482 சதுர மைல் பரப்பளவு பகுதி மீது தமிழகத்திற்கு முழு உரிமை உள்ளது. அணையைப் பராமரிப்பது, பாதுகாப்பது, நிர்வகிப்பது ஆகிய உரிமைகள் தமிழகத்திற்கே உண்டு. இந்த வகையில் முல்லைப் பெரியாறு அணை முழுக்கவும் தமிழகத்திற்கே உடைமையானது என்று அவ்வொப்பந்தம் தெட்டத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. 1942ஆம் ஆண்டு பெரியாறு அணையில் மின் உற்பத்தி செய்வது என்று சென்னை மாநில அரசு முடிவு செய்து, பெரியாறு அணையைப் பலப்படுத்தவும், நீர்வளத் துறை தலைவர் சான்றிதழுடன் 152 அடி வரை நீரைத் தேக்கி வைக்கும் உரிமையையும் பெற்றது. இதற்கான ஒரு ஒப்பந்தத்தையும் கேரள அரசுடன் போட்டுக் கொண்டது.


1976இல் மின்னுற்பத்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் 555 அடி உயர இடுக்கி அணையை கேரள அரசு கட்டியது. அதன்பிறகுதான் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையாக்கப்பட்டது. 1979இல் முல்லைப் பெரியாறு அணையில் நீர்க்கசிவு இருப்பதாக மலையாள மனோரமா ஏடும், இன்றைய சி.பி.எம். முதல்வர் அச்சுதானந்தனும் முன்னின்று ஒரு புரளியைக் கிளப்பி விட்டனர். இந்தப் புரளியின் அடிப்படையில் அணையில் நீர்தேக்குவது 136 அடியாகக் குறைக்கப்பட்டு, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் 38,000 ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக்கப்பட்டன. தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வந்த வறட்சி நிலை காரணமாக மீண்டும் முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர்தேக்கிக் கொள்வதற்கான உரிமையைப் பெற உச்சநீதி மன்றத்தை தமிழக அரசு நாடியபோது, அது, இதற்கான தீர்வு காணும்படி மத்திய அரசிடம் பரிந்துரைத்தது. அப்போதிருந்து பேச்சுவார்த்தை என்கிற பெயரில் இழுத்தடிப்பு வேலையைத்தான் கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. நடுநிலையான ஆய்வாளர்களின் முடிவின் படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்திற்கு நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் உரிமையை கடந்த மார்ச் மாதம் உச்சநீதி மன்றம் வழங்கியது. ஆனாலும் அந்த அணை உடைந்துவிடும் ஆபத்தில் இருப்பதாக கேரள மக்களிடையே பீதியைக் கிளப்பி உச்சநீதி மன்றத் தீர்ப்பை அமலாக்க விடாமல் கேரள ஓட்டுக் கட்சிகள் தொடர்ந்து முயன்று வருகின்றன. பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் அணையின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவுமான ஒரு தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்கள். மத்திய இராணுவ மந்திரி யாக உள்ள கேரளத்தைச் சேர்ந்த அந்தோணியின் முயற்சியால் கடற்படையை வைத்து புதிய ஆய்வுக்கு முயன்றது.


தமிழக அரசு மீண்டும் உச்சநீதி மன்றத்தை அணுகியபோது, பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ளும்படி அது பரிந்துரைத்தது. தமிழகத்தின் நியாயத்தை அங்கீகரித்து உரிமை வழங்குவதற்குப் பதில், பேச்சு வார்த்தை, தேசிய ஒருமைப்பாடு என்றெல்லாம் பார்ப்பனபனியா இந்தியத் தேசியவாதிகள் கூப்பாடு போடுகிறார்கள். நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்கள் இனங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சினையாகட்டும், ஆற்றுநீர் பகிர்வுப் பிரச்சினையாகட்டும் குறுகிய அரசியல் ஆதாயத்தை முன்வைத்து, இனவெறியைக் கிளப்பி அடாவடி செய்கின்றன, சில மாநில ஓட்டுக் கட்சிகள். ஆனால், அச்சிக்கல்களில் உள்ள நியாய அநியாயங்களைப் பரிசீலித்து உரிமைகளை வழங்குவதற்குப் பதில் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் காணும்படி உச்சநீதி மன்றமும், சம்மந்தப்பட்ட மாநிலங்களிடையே சந்தர்ப்பவாத தட்டிக் கழிப்பு வேலைகளை மத்திய அரசும் மேற்கொள்கின்றன. பாதிக்கப்பட்ட இனமக்கள் நியாய உரிமைக்காகப் போராடும் போது, பிரிவினைவாத முத்திரைக் குத்தி ஒடுக்கப்படுகின்றனர். வெறும் ஆற்றுநீர் பிரச்சினை என்பதாக அல்லாமல், ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை இருந்தால்தான் இதுபோன்ற சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஆயுதமாக பாதிக்கப்பட்ட இன மக்கள் பயன்படுத்த முடியும். அதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்குப் பதில் சந்தர்ப்பவாதம் பேசி ஓட்டுக் கட்சிகள் ஏய்க்கின்றன. தேசிய இனவாதிகளும் வலுவான மக்கள் இயக்கங்களைச் சுயமாகக் கட்டி வளர்ப்பதற்குப் பதில் ஓட்டுக் கட்சிகளின் நிழலில் நின்று கூப்பாடு போடுகின்றனர்.

Tuesday, December 12, 2006

பேரழிவின் விளிம்பில் நிற்கும் பூவுலகம்

புவி வெப்ப நிலை உயர்வு:
ஏகாதிபத்திய இலாபவெறியின் கொடூரம்!
பேரழிவின் விளிம்பில் பூவுலகம்!


பேரழிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது உலகம். வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள நிரந்தரப் பனிப்பாளங்கள் உருகத் தொடங்கி, கடலை நோக்கி வேகமாக ஓடுகின்றன. கடலுக்குள் விழும் பனியாறுகளின் பருமம் தொடர்ந்து அதிகரித்து, கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவின் தென்மேற்கே உள்ள மாலத் தீவுகளும் இன்னும் பல சிறிய தீவுகளும் கடலில் மூழ்கி அழிந்து போகும். வளி மண்டல வெப்பநிலை உயர்வால், வறட்சியும் வெள்ளமும் அடுத்தடுத்து நிகழும்; காடுகள் பற்றியெரியும், பூமத்திய ரேகைப் பகுதியில் கடல் கொதித்து ஆவியாகிக் கொண்டிருக்கும்; கடலிலிருந்து பல்லாயிரம் கோடி டன் அளவுக்கு கரிம வாயுக்கள் பொங்கி வெளிப்பட்டு, வளிமண்டலம் எங்கும் புகைமயமாகும்; பல கோடி உயிரிச் சிற்றினங்கள் முற்றாக அழிந்து போகும்.


""உலக அழிவு சமீபித்து விட்டது; ஏசு வரப் போகிறார்'' என்று கிறித்துவ மதபோதகர்கள் செய்து வரும் பிரச்சாரமல்ல இது. சுற்றுச்சுழல் அறிவியலாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை! மீள முடியாத வரம்புகளைத் தாண்டி உலகின் வளி மண்டலமும் சுற்றுச் சூழலும் சென்று விட்டது; தொடர்ந்து இதேநிலை நீடித்தால், இன்னும் பத்தே ஆண்டுகளில் உலகம் பேரழிவைச் சந்திக்கும் என்று அறுதியிடுகிறார்கள், அறிவியலாளர்கள்.


பூவுலகின் வட துருவத்திலும், தென்துருவத்திலும் 2 முதல் 3 கிலோ மீட்டர் வரை தடிமனுள்ள நிரந்தரப் பனிப்பாளங்கள் உள்ளன. உலகளாவிய வெப்பநிலை உயர்வால் இவை உருக பத்தாயிரம் ஆண்டுகளாவது ஆகும் என்று அறிவியலாளர்கள் மதிப்பிட்டார்கள். ஆனால் உலகளாவிய வெப்பநிலை தாறுமாறாக உயர்ந்து, துருவப் பகுதிகளில் நிரந்தரப் பனிப்பாளங்களில் விரிசல்கள் ஏற்பட்டு, மேல்பரப்பில் உருகும் நீர் விரிசல்களில் இறங்கி, பனிப்பாளங்களுக்கு அடியில் உள்ள தரைப்பரப்பை எளிதில் எட்டி விடுகின்றன. பனிப்பாளம் தரையை விட்டு நீரில் மிதக்கத் தொடங்கி வேகமாக கடலை நோக்கி நகர ஆரம்பித்து விடுகிறது. இப்படி, வட துருவத்தை ஒட்டியுள்ள கிரீன்லாந்து, சைபீரியா ஆகியவற்றிலிருந்து பனியாறுகள் வேகமாக உருகிக் கடலில் கலப்பது அதிகரித்து வருகிறது.


எரிக் ரிக்நோட் மற்றும் பன்னீர் கனகரத்தினம் ஆகிய ஆய்வாளர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஓராண்டில் மட்டும் கிரீன்லாந்திலிருந்து 224 கன கிலோமீட்டர் பருமம் அளவுக்கு பனி உருகி அட்லாண்டிக் கடலில் கலந்துள்ளது. 1996இல் இது ஏறத்தாழ 100 கன கிலோமீட்டர் பருமம் என்பதாக இருந்தது. கிரீன்லாந்தின் வடபகுதியிலுள்ள பனி உருகிவிட்டால் கடல் மட்டம் மேலும் 23 அடிக்கு உயரும். தெற்கேயுள்ள அண்டார்டிகாவின் பனி உருகிவிட்டால் உலகின் கடல் மட்டம் மேலும் 215 அடிக்கு உயர்ந்துவிடும். கடந்த ஓராண்டில் மட்டும் கடல்மட்டம் 4 முதல் 8 அங்குல அளவுக்கு உயர்ந்து பசிபிக் தீவுகளில் உள்ள பல சிறிய திட்டுகள் நீரில் மூழ்கிவிட்டன.


கனடாவின் வடக்கு கியூபெக் மாநிலத்தின் நுனாவிக் வட்டத்து மக்கள், இவ்வட்டாரத்தில் அடிக்கடி பனிப்புயல் சூறாவளிகள் திடீரென நிகழ்ந்து பெரும் விபத்துக்களால் பலர் மாண்டு போயுள்ளதாகக் குமுறுகிறார்கள். இத்துருவப் பகுதியில் கடந்த ஆண்டில் 100 டிகிரி அளவுக்கு வெய்யிலும் இடியுடன் புயலும் வீசியது. இப்பகுதிவாழ் மக்கள் இதுவரை கண்டிராத புதியவகை பறவைகளும் விலங்குகளும் அங்கு குடியேறின. புதிய வகை தாவரங்கள் முளைத்தன. துருவக் கரடிகள், வேட்டைக்கு ஒன்றும் கிடைக்காமல் மனிதக் குடியிருப்புகளை அடிக்கடி முற்றுகையிடுகின்றன. கம்பளி ஆடை அணியும் இம்மக்கள், குளிர்காலத்தில்கூட சூரிய ஒளி தடுப்பு களிம்பை உடலில் பூசிக் கொள்ளுமளவுக்கு வெப்பம் அங்கு வாட்டுகிறது. அவர்களில் பலருக்குத் தோல்வெடிப்பும் கொப்புளங்களும் தோன்றியுள்ளன.


கிரீன்லாந்தின் எஸ்கிமோக்கள் ""இக்லூ'' எனப்படும் தமது கொப்பரை வடிவிலான பனி வீடுகள் வெப்பநிலை அதிகரிப்பால் நொறுங்கி விடுவதாகவும், இதனால் தாங்கள் புலம்பெயர நேர்ந்துள்ளதாகவும் வேதனையுடன் குறிப்பிடுகிறார்கள். ""21ஆம் நூற்றாண்டின் தட்ப வெப்பநிலை முறைகுலைவுப் பேரழிவுக்குப் பலியாகும் முதலாவது மனித சமூகம் நாங்கள்தான். எங்களது தொன்மை வாய்ந்த வாழ்க்கை முறையும் பண்பாட்டு அடையாளங்களும் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளது'' என்று விம்முகிறார்கள், எஸ்கிமோக்கள்.


வட,தென் துருவங்களிலுள்ள பனிப்படலங்கள் தம்மீது விழும் சூரிய வெப்பத்தில் 80 சதவீதம் வரை வானில் திருப்பியனுப்புகின்றன. கடல்நீர் 7 சதவீத வெப்பத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது. பனிப்படலங்களின் பரப்பு குறைவதாலும், கடல்களின் பரப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் இப்படித் திருப்பியனுப்பப்படும் வெப்பம் குறைந்து, உலகளாவிய வெப்பநிலை அதிகரித்து வருகிறது. துருவப் பகுதிகளின் நிரந்தர பனிப்பாளங்களில் பலகோடி டன் அளவுக்குக் கரிமவாயுக்கள் புதைந்துள்ளன. கரியமிலவாயு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு, கந்தக டை ஆக்சைடு, குளோரோ ப்ளோரா கார்பன் முதலான கரிம வாயுக்கள், பசுமைக் குடில் வாயுக்கள் என்றழைக்கப்படுகின்றன. பனிப்பாளங்கள் உருகினால் அவற்றிலிருந்து ஏராளமான பசுமைக்குடில் வாயுக்கள் வெளிப்பட்டு பூமியின் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும். உலகளாவிய வெப்பநிலை மேலும் 3 செல்சியஸ் டிகிரி உயர்ந்தால், உலகிலுள்ள காடுகள் அழிந்து சிதைந்து கரிம வாயுக்களை வெளியிடத் தொடங்கிவிடும். அத்தகைய நிலைமை ஏற்பட்டால், 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்ததோ, இன்று வெள்ளிக்கிரகம் எப்படி இருக்கிறதோ, அப்படி எங்கும் வெப்பமும் புகைமண்டலும் நீராவியுமாகவே இருக்கும். மனித இனம் உயிர்வாழ்வதைப் பற்றி கற்பனை செய்யக் கூட முடியாது.


மேலாதிக்க வல்லரசுகளின் ஆக்கிரமிப்புப் போர்கள், அரசு பயங்கரவாதம், உலக வர்த்தகக் கழகத்தின் கெடுபிடிகள், பசி பஞ்சம் பட்டினிச்சாவுகள் இவை எல்லாவற்றையும் விஞ்சும் வண்ணம் புவியின் வெப்பநிலை அதிகரிப்பு எனும் பேரபாயம் இன்று உலகைக் கவ்வியுள்ளது. புவியின் வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணம் என்ன?


இது பல நூறு ஆண்டுகளுக்கொருமுறை நிகழும் இயற்கையின் பெருஞ்சீற்றமல்ல. தொழிற்புரட்சி தொடங்கிய காலத்திலிருந்து, கரியும் எண்ணெயும் எரிக்கப்பட்டு அவை வளிமண்டலத்தில் கரிம வாயுக்களைப் பரப்பத் தொடங்கி விட்டன. உலகம் மேலும் மேலும் தொழில்மயமாகி ஆலைகளும் வாகனங்களும் பெருகுவதன் விளைவாக, அவை வெளியேற்றும் கரிம வாயுக்களால் உலகம் மேலும் மேலும் வெப்பமடைந்து கொண்டே போகிறது. சூரியனிடமிருந்து வெளிப்படும் கடுமையான வெப்பத்தையும், புற ஊதாக் கதிர்களையும் பூமியைத் தாக்காமல் தடுத்து, பூமியின் மேல் குடைபோலச் சூழ்ந்துள்ள ஓசோன் வாயு மண்டலமே, கரிம வாயுக்களின் பெருக்கத்தால் ஓட்டையாகி விட்டது.


உலக மக்கட் தொகையில் 4.73 சதவீதத்தைக் கொண்ட அமெரிக்க வல்லரசு, உலகளாவிய அளவில் 26 சதவீத கார்பன்டைஆக்சைடையும் 20 சதவீத மீதேன் வாயுவையும் நச்சுக் கழிவாக வெளியேற்றி முதலிடம் வகிக்கிறது. பிற ஐரோப்பிய நாடுகளும் ரசியாவும் அதற்கடுத்த நிலையில் உள்ளன. உலக மக்கட் தொகையில் 24 சதவீதத்தைக் கொண்ட தொழில் வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகள் ஏறத்தாழ 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருட்களைப் பாவிக்கின்றன. மொத்த எரிசக்தியில் முக்கால் பங்கை விழுங்கும் இந்நாடுகளிலிருந்துதான் 75 சதவீத கார்பன்டைஆக்சைடு வெளியாகிறது. அதேசமயம், ஏழை நாடுகள் கரிம வாயுக்களை வெளியேற்றுவதில் கடைசி வரிசையில்தான் இருக்கின்றன.


இது தவிர, பின் விளைவுகளைப் பற்றி ஆராயாமல் இலாபவெறியோடும் போர்வெறியோடும் ஏகாதிபத்திய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பலவித பொருட்களாலும் அவற்றின் கழிவுகளாலும் சுற்றுச் சூழலும் புவியின் உயிரியல் சூழலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, அணு உலைக் கழிவுகளையும் சில இரசாயனக் கழிவுகளையும் அவற்றின் நச்சுத்தன்மையைப் போக்கி முற்றாக அழித்து விட முடியாது. இக்கழிவுகளின் நச்சுத்தன்மையைப் போக்க கோடிக்கணக்கில் செலவிட வேண்டியிருப்பதால், பல ஏகாதிபத்திய நிறுவனங்கள் அவற்றை இரகசியமாகக் கடலில் கொட்டி வருகின்றன. இத்தகைய நச்சுக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களைப் பின்தொடர்ந்து சென்று இக்கொடுஞ்செயலை உலகுக்கு அம்பலப்படுத்தியதற்காக, பசுமை அமைதி இயக்கத்தினரின் படகுகள் மீதே குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்துமளவுக்கு ஏகாதிபத்திய மாஃபியா கும்பல்களின் அட்டூழியம் பெருகிவிட்டது.


சுருக்கமாகச் சொன்னால், புவி வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான பசுமைக் குடில் வாயுக்களைப் பெருமளவில் வெளியேற்றி, பேரழிவை விளைவித்துக் கொண்டிருப்பவை ஏகாதிபத்திய நாடுகள்தான். இந்நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் ஒரு சதவீதத்தை ஒதுக்கினால், 2050க்குள் கரியமில வாயுப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திவிட முடியும் என்கிறார் உலகவங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணரான நிக்கோலஸ் ஸ்டெர்ன்.


ஆனால், உலகமே அழிந்தாலும் பரவாயில்லை; எங்களது இலாப விகிதத்தை கால் சதவீதம் கூட குறைத்துக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள் ஏகாதிபத்தியவாதிகள். 1992இல் ஐ.நா மன்றத்தின் தட்பவெப்ப நிலை மாற்றம் பற்றிய மாநாடு தொடங்கி, பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோடி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் உயிரியல் பாதுகாப்பு மாநாடு, 1997இல் ஜப்பானின் கியோட்டோ நகரில் நடந்த மாநாடு, 2000வது ஆண்டில் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகள், அதைத் தொடர்ந்து கருத்தரங்குகள், கடந்த அக்டோபர் மாதத்தில் கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடந்த கூட்டம் என புவி வெப்பநிலை அதிகரிப்பைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பலமுறை பல மாநாடுகள் நடந்துள்ள போதிலும், அவை வெங்காயத் தோலை உரித்த கதையாகவே முடிந்துள்ளன. 2012ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக 141 நாடுகள் கையெழுத்திட்டுள்ளனவே தவிர, அதற்கான நிபந்தனையோ நிர்பந்தமோ கிடையாது.


சுற்றுச்சூழல் பாதிப்பினால் நஞ்சாகிப் போயுள்ள உலகைச் சீரமைக்க ஏகாதிபத்திய நாடுகளை நிதி ஒதுக்கீடு செய்யக்கோரும் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ள போதிலும், பல நாடுகள் மிக அற்பமான நிதியையே ஒதுக்கியுள்ளன. ஏகாதிபத்தியங்கள் ஒதுக்கீடு செய்யும் நிதியை ஐ.நா. மன்றத்தின் மூலம் உலகவங்கி கட்டுப்படுத்தி நிர்வகிப்பதால், உலக வங்கியின் கட்டளைக்கேற்ப ஏகாதிபத்திய கொள்ளைக்கு கதவை அகலத் திறக்கும் ஏழை நாடுகளுக்கு மட்டுமே அந்த நிதி கிடைக்கும். அதுவும் ரொக்கமாக அல்லாமல், காடு வளர்ப்புத் திட்டம், அரிய வகை விலங்கினப் பாதுகாப்புத் திட்டம் முதலான ஏகாதிபத்திய நலனுக்கேற்ற திட்டங்களாகவே செயல்படுத்தப்படுகின்றன.


பசுமைக் குடில் வாயுக்களை பெருமளவில் வெளியேற்றும் முதன்மைக் குற்றவாளிகளான ஏகாதிபத்திய நாடுகள், இப்போது தொழில் வளர்ச்சியடைந்து வரும் ஏழை நாடுகளுக்கும் இதில் பங்கு உள்ளது என்று கூறி அந்நாடுகள் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்க நிர்பந்தித்து வருகின்றன. ஏழை நாடுகளில் நெல் பயிரிடுவதாலும் கால்நடைகளின் சாணத்தாலும் மீதேன் வாயு பெருகுவதாகவும், ஏழை நாடுகளில் அதிகமாக விறகு அடுப்பு எரிப்பதால் வளிமண்டலத்தில் கரியமில வாயு பெருகுவதாகவும் ஏகாதிபத்திய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. சீனா, இந்தியா போன்ற நாடுகள், பசுமைக் குடில் வாயுக்களை வெளியேற்றுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றன.


""நீ மட்டும் யோக்கியமா?'' என்று ஏழை நாடுகள் மீது குற்றம் சாட்டி தப்பித்துக் கொள்ளும் உத்திதான் இது. இந்தியா போன்ற ஏழை நாடுகள் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்காவிடில், கியோட்டோ ஒப்பந்தத்தைச் செயல்படுத்த மாட்டோம் என்று கொக்கரிக்கிறது அமெரிக்கா. கியோட்டோ ஒப்பந்தத்தைச் செயல்படுத்தி பசுமைக்குடில் வாயுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பல்லாயிரம் கோடிகள் செலவாகி, பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் என்று வாதிடும் அமெரிக்கா, தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்தப் போவதாகக் கூறுகிறது. ஆனால் இதற்கான இலக்கோ, காலவரையறையோ, கட்டுப்பாடோ கிடையாது.


புவி வெப்பநிலை அதிகரிப்புக்கும் சுற்றுச் சூழல் நஞ்சாவதற்கும் ஏகாதிபத்திய இலாபவெறியும் போர்வெறியுமே முதன்மையான காரணம். ஏகாதிபத்திய உற்பத்தி முறையை ஒழித்துக் கட்டாமல், காடு வளர்ப்புக்கும் மாசு கட்டுப்பாட்டுக்கும் கூடுதல் நிதி ஒதுக்குவதன் மூலம் புவி வெப்பநிலை அதிகரிப்பையும் பேரழிவுகளையும் தடுத்து நிறுத்திட முடியாது. ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான சுயசார்பான தேசிய உற்பத்தியை, இலாபவெறியற்ற மக்கள் நலன் சார்ந்த சோசலிச உற்பத்தி முறையை நிறுவி வளர்க்காதவரை, ஏழை நாடுகள் மீது ஏகாதிபத்திய நரிகள் போடும் பழியையோ, புவி வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் பேரழிவுகளையோ ஒருபோதும் தடுத்து நிறுத்திட முடியாது.


பேரழிவின் விளிம்பில் நிற்கும் பூவுலகம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

· மனோகரன்

Monday, December 11, 2006

கருப்பு அங்கிகளுக்குள் ஒளிந்துள்ள காவிப்படை

நாடாளுமன்றத் தாக்குதல்
கருப்பு அங்கிகளுக்குள் ஒளிந்துள்ள காவிப்படை


நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நால்வரில், கீலானி, அஃப்ஸான் குரு ஆகிய இருவரின் விடுதலையை உறுதி செய்தும்; ஷெளகத் ஹூசைன் குருவிற்கு அளிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை 10 ஆண்டு கால கடுங்காவல் தண்டனையாகக் குறைத்தும்; முகம்மது அப்சலுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உறுதி செய்தும் உச்சநீதி மன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பின் அடிப்படையில் கடந்த அக்டோபர் 20 அன்று அப்சலைத் தூக்கில் போட நாள் குறிக்கப்பட்டது. எனினும், அப்சலின் உறவினர்கள் அரசுத் தலைவர் கலாமிடம் கொடுத்த கருணை மனுவின் அடிப்படையில், இத்தூக்கு தண்டனை மறு தேதி குறிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


ஐந்தாண்டுகளுக்கு முன்பு, டிச.13, 2001 அன்று நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடந்த இரண்டாவது நாளிலேயே டிச. 15, 2001 அன்றே எஸ்.ஏ.ஆர். கீலானி, முகம்மது அப்சல், ஷெளகத் ஹூசைன் குரு, ஷெளகத்தின் மனைவி அஃப்ஸான் குரு ஆகிய நால்வரும் தில்லி சிறப்புப் போலீசுப் படையால் கைது செய்யப்பட்டனர். போலீசின் குற்றச்சாட்டின்படியே இந்த நால்வரும் இச்சதித் திட்டத்தைத் தீட்டிய மூளைகள் கிடையாது. தாக்குதலை நிறைவேற்ற உதவியவர்கள் தாம்.


தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட ஐந்து பேரும் சம்பவம் நடந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். தாக்குதலுக்குத் திட்டம் போட்டுக் கொடுத்து இயக்கிய மூவரில், காசி பாபா காசுமீரில் போலீசுடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாகவும்; மௌலானா மசூத் அஸார், தாரிக் அகமது ஆகிய இருவரும் பாகிஸ்தானில் இருப்பதாகவும் போலீசார் கூறி வருகின்றனர்.


""நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர்'' எனக் கூறப்படும் இந்தத் தாக்குதல் பற்றிய புலன் விசாரணையை தில்லி சிறப்புப் போலீசார் 17 நாட்களிலேயே முடித்துவிட்டனர் இதற்குக் காரணம், தில்லி போலீசின் துப்பறியும் திறமை அல்ல. தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேரும், போலீசாரால் "கண்டுபிடிக்கப்பட்ட' சாட்சியங்கள் அனைத்தையும், தங்களின் சட்டைப் பைகளில் வைத்துக் கொண்டுதான் தாக்குதலே நடத்தியிருக்கிறார்கள்!


நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு அவர்கள் வந்த காரின் கண்ணாடியின் மீது, ""முட்டாள் வாஜ்பாயியையும், அத்வானியையும் நாங்கள் கொல்வோம்'' என ஒட்டப்பட்டிருந்த ""ஸ்டிக்கர்''; தாக்குதலுக்கு முன்பாக, தீவிரவாதிகள் தொடர்பு கொண்ட தொலைபேசி எண்; தீவிரவாதிகள் யார் என்ற விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை இப்படி இந்த வழக்கின் முக்கிய சாட்சியங்கள் அனைத்தும் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்தே கைப்பற்றப்பட்டுள்ளன. நகைச்சுவை படத்தில் கூட இப்படிப்பட்ட அப்பாவி சதிகாரர்களை நாம் பார்த்திருக்க முடியாது.


···


வழக்கின் முக்கிய கட்டமான சிறப்பு நீதிமன்ற விசாரணையின்பொழுது, அப்சலுக்கு உதவி செய்ய அனுபவம் அற்ற ஒரு இளம் வழக்கறிஞர் சட்ட உதவுனராக (ச்ட்டிஞிதண் ஞிதணூடிச்ஞு) நியமிக்கப்பட்டார். இந்த வழக்கறிஞர், அப்சலுக்கு எதிராகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட போலீசு சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்யாமல், அரசு தரப்புக்குச் சார்பாக நடந்து கொண்டார். ""சட்ட உதவுனரை எதிர்தரப்பு வழக்குரைஞராகப் பார்க்க முடியாது; அவர், நீதிமன்றத்தின் நண்பனாகத்தான் நடந்து கொள்வார்'' என்கிறார், பிரபல கிரிமினல் வழக்கறிஞரான ராம் ஜேத்மலானி.


""சிறப்பு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இளம் வழக்குரைஞர் இந்துமத உணர்வுள்ளவர்; அவர் ஒருமுறைகூடச் சிறைக்குச் சென்று எனது கணவரைச் சந்திக்கவில்லை. சிறப்பு நீதிமன்ற நீதிபதி திங்க்ராவும் கூட நீதிமன்றத்திலேயே வெளிப்படையாக தனது மத உணர்வை வெளிப்படுத்தினார்'' என அப்சலின் மனைவி தபஸ்ஸூம் விசாரணையின் நேர்மையை அம்பலப்படுத்தியிருக்கிறார்.


அப்சல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுதே, தனது சட்ட உதவுனரை மாற்ற வேண்டும் எனக் கோரியதோடு, எட்டு வழக்குரைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுள் யாரையாவது ஒருவரைத் தனக்கு நியமிக்கும்படிக் கேட்டுக் கொண்டார். இந்து மதவெறியர்களால் தாக்கப்படுவோமோ என அஞ்சிய அந்த வழக்குரைஞர்களுள் (அப்சலுடன் குற்றஞ்சாட்டப்பட்ட கீலானிக்கு வாதாடப் போவதாக ராம் ஜெத்மலானி அறிவித்ததையடுத்து, அவரது அலுவலகம் இந்து மதவெறியர்களால் தாக்கப்பட்டது) ஒருவர் கூட அப்சலுக்காக வாதாட முன் வரவில்லை. நீதிபதி திங்க்ரா, ""இதற்கு மேல் நான் எதுவும் செய்ய முடியாது'' எனக் கூறி, அப்சலை நிர்க்கதியாகத் தவிக்க விட்டார்.


இது மட்டுமன்று; ""நீதி விசாரணையின் போது சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட கூற்றுகளை எனக்குக் காட்டாமலும்; பல்வேறு சாட்சிகள் மற்றும் எனக்கெதிராக அவர்களின் சாட்சியங்கள் குறித்த எனது மறுப்புகளையும், பதில்களையும் பதிவு செய்யாமலும், சிறப்பு நீதிமன்றம் தனது குரலை மவுனமாக்கி விட்டதாக'' அப்சல், ""விசாரணைக் கைதிகள் மற்றும் சிறைக் கைதிகளின் பாதுகாப்பிற்கான கழகத்திற்கு'' எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை அப்சலிடமிருந்து பறித்ததன் மூலம், சிறப்பு நீதிமன்றம் அவரது கழுத்தில் சுருக்கை மாட்டியது.


···


தில்லி உயர்நீதி மன்றத்திலோ இந்த வழக்கு, விநோத முரண்பாடாக நடந்து முடிந்தது. குற்றவாளிகள் நான்கு பேரும் தில்லி சிறப்பு போலீசிடம் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை, உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. குற்றவாளிகளிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதில் சட்டபூர்வ வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது. அதாவது, கொடூரமான சித்திரவதைகள், மிரட்டல்கள், உறவினர்களைப் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்து கொண்டு அச்சுறுத்துவது போன்ற சட்டவிரோதமான வழிமுறைகள் மூலம்தான் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது என்பது வழக்கு விசாரணையில் மீண்டும் அம்பலமானது. இதன் அடிப்படையில்தான், சிறப்பு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கீலானியும், ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அஃப்ஸான் குருவும் விடுதலை செய்யப்பட்டனர். எனினும், இந்த இருவரின் விடுதலைக்குப் பொருந்திய இந்த நியாயத்தை, முகம்மது அப்சலுக்கும், ஷெளகத் குருவிற்கும் பொருத்த உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது.


···


உச்சநீதி மன்றமோ, தீர்ப்பை முன்கூட்டியே எழுதி வைத்துவிட்டு விசாரணை நாடகத்தை நடத்தியிருக்கிறது. ""அப்சல், ஏற்கெனவே சரணடைந்துவிட்ட தீவிரவாதி, அவருக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் தற்பொழுது எந்தவிதமான தொடர்பும் கிøடயாது'' என்பதை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டாலும், ""அப்சல் இந்த நாட்டிற்கு எதிரான சதிச் செயல்களை மீண்டும் மீண்டும் நடத்துவதற்குத் துணிந்தவர்'' என்று தானே இட்டுக் கட்டிய பழியை அவர் மீது சுமத்தியிருக்கிறது. ""பொடா சட்டத்தின் கீழ் அப்சல் மீது வழக்குத் தொடர ஆதாரம் இல்லை'' எனக் கூறியுள்ள உச்சநீதி மன்றம், அச்சட்டத்தின் கீழ் அப்சலிடமிருந்து பெற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களையும்; சந்தர்ப்ப சாட்சியங்களையும் ஆதாரமாகக் காட்டி, அவரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

அப்சல் கைது செய்யப்பட்ட விதம் குறித்து தில்லி சிறப்பு போலீசாரும், காசுமீர் போலீசாரும் அளித்துள்ள சாட்சியங்களில் உள்ள முரண்பாட்டை தில்லி உயர்நீதி மன்றமும், உச்சநீதி மன்றம் தீர விசாரித்திருந்தால், இந்த வழக்கில் அப்சல் பலிகடா ஆக்கப்பட்டிருக்கும் உண்மை அம்பலத்துக்கு வந்திருக்கும்.


தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் உள்ளிட்ட பொருட்களைத் தங்களிடம் அப்சல் வாங்கியதாக தில்லியைச் சேர்ந்த சில கடைக்காரர்கள் அப்சலுக்கு எதிராகச் சாட்சியம் அளித்துள்ளனர். இவர்களிடம் இருந்து சாட்சியம் பெறுவதில் போலீசு, அடையாள அணி வகுப்பு நடத்துவது போன்ற சட்டபூர்வமான வழிகளைப் பின்பற்றவில்லை என உச்சநீதி மன்றத்தில் எடுத்துக் கூறப்பட்டது. ஆனால், உச்சநீதி மன்றமோ, ""சாதாரண பொதுமக்கள் அப்சலை ஏன் குற்றவாளியாக்க வேண்டும்?'' என்ற கேள்வியை இட்டுக் கட்டி கேட்டு, போலீசின் சட்ட விரோத சாட்சியங்களைச் சட்டபூர்வமாக்கி விட்டது.


அப்சல், தில்லி உயர்நீதி மன்றத்திடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ""போலீசின் நிர்பந்தித்தினால்தான், நான் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளை, போலீசு சொல்லியபடி அடையாளம் காட்டியதாக''க் கூறியிருக்கிறார். அதேசமயம், உயர்நீதி மன்றத்தில் அப்சலுக்காக வாதாட நியமிக்கப்பட்ட காலின் கோன்ஸால்வ்ஸ் என்ற வழக்குரைஞர்தான், தீவிரவாதிகளை அடையாளம் காட்டி போலீசிடம் அப்சல் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறி, அரசு தரப்பின் வேலையை எளிதாக்கினார்.

காலின் கோன்ஸால்வ்ஸ் என்ற அந்த வழக்குரைஞர் இதை மட்டுமா சொன்னார். ""தூக்கில் போடப்பட்டுச் சாவதைவிட, விஷ ஊசி போட்டு அப்சல் சாக விரும்புவதாக'' நீதிமன்றத்தில் தெரிவித்தார். தனது வக்கீலே தனக்குக் குழி பறித்ததை அப்சல் அப்பொழுது அறியவில்லை. ஏனென்றால், அப்சலுக்குத் தண்டனை எப்படித் தரவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குரைஞர் குழி பறித்த பொழுது, அப்சலோ, திகார் சிறையில் தனிமைக் கொட்டடியில் அடைபட்டுக் கிடந்தார்.


ஷெளகத், அப்சல், கீலானி, முகம்மது ஆகியோருக்கு இடையே, தாக்குதலுக்குச் சற்று முன்புவரை செல்போன் தொடர்பு இருந்தது என்பதற்கு போலீசு தரப்பில் முன் வைக்கப்படும் சாட்சியம், சான்றளிக்கப்படாத சில ""பில்'' பதிவுகள்தான். ஒரே நேரத்தில் ஒரே "சிம் கார்டில்' இருந்து இரு அழைப்புகள் செய்யப்பட்டுள்ளது என இப்பதிவு தெரிவிக்கிறது. இரு வெவ்வேறு எண்ணுள்ள செல்போன்களில் இருந்து இவை பேசப்பட்டுள்ளன. ஒரே சிம் கார்ட் இரண்டு வெவ்வேறு செல்போன்களிலிருந்து ஒரே நேரத்தில் எப்படி இயங்க முடியும் என்ற கேள்வியை மெத்தபடித்த நீதிபதிகள் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை.


அப்சலுக்கு எதிரான சந்தர்ப்ப சாட்சியங்களில் உள்ள இவை போன்ற முரண்பாடுகளை, சட்டவிரோத நடைமுறைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டுத்தான், உச்சநீதி மன்றம் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டு தன் முன் நிறுத்தப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளுள் ஒருவரையாவது கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்பது நீதிபதிகளின் நோக்கமாகவே இருந்திருக்கிறது. இந்தப் பழிவாங்கும் வெறியை அவர்கள் மறைத்துக் கொள்ளவும் இல்லை. ""குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்குவதன் மூலம் மட்டுமே சமூகத்தின் பொது மன சாட்சியைத் திருப்திபடுத்த முடியும்'' எனப் பச்சையாகவே நீதிபதிகள் கூறியுள்ளனர்.


உச்சநீதி மன்றம் குறிப்பிட்டுள்ள சமூகத்தின் பொது மனசாட்சி என்பவர்கள் யார்? அப்சலைத் தூக்கில் ஏற்றிவிடத் துடிக்கும் வாஜ்பாயி அத்வானி போன்ற இந்து மதவெறியர்கள்; அக்கும்பலைத் தூக்கிப் பிடிக்கும் இந்தியாடுடே, துக்ளக் போன்ற பத்திரிக்கைகள்; முசுலீம் எதிர்ப்பு இந்த மதவெறியாலும், பாக். எதிர்ப்பு இந்திய தேசிய வெறியாலும் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ள மேல்தட்டு மேல்சாதி நடுத்தர வர்க்கம் இவர்கள்தான் அந்தப் பொது மனசாட்சி. இந்தக் காவி மனச்சாட்சியின் உருவகம்தான் உச்சநீதி மன்றம் என்பதை இத்தீர்ப்பு பச்சையாக எடுத்துக் காட்டிவிட்டது.


···


நாடாளுமன்றத் தாக்குதல் பற்றி தில்லி போலீசு கட்டமைத்த கதைதான் ஊடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அத்தாக்குதலுக்கு மர்மங்கள் நிறைந்த இன்னொரு பக்கம் உண்டு. அப்சல், உச்சநீதி மன்றத்தில் தனக்காக வாதாடிய வழக்குரைஞர் சுசில்குமாருக்கு எழுதிய கடிதத்தில், மர்மங்கள் நிறைந்த அந்தப் பக்கத்தை எடுத்துக் காட்டியிருக்கிறார்.


""சரணடைந்த போராளியான தன்னை மிரட்டிப் பணம் பறிக்கவும்; போலீசின் ஆள்காட்டியாகச் செயல்படக் கூறியும் காசுமீரின் சிறப்பு அதிரடிப் படை தொடர்ந்து தன்னைச் சித்திரவதை செய்து வந்ததையும்; காசுமீரின் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த துணைக் கண்காணிப்பாளர் திராவிந்தர் சிங்கின் கட்டளைப்படி தான், நாடாளுமன்றத் தாக்குதலின்போது சுட்டுக் கொல்லப்பட்ட முகம்மதுவை தான் தில்லிக்கு அழைத்து வந்ததையும்; திராவிந்தர் சிங் செல்போன் மூலம் தனக்குக் கொடுத்த கட்டளைப்படிதான், கார் உள்ளிட்டு பல பொருட்களை முகம்மதுவுக்குத்தான் வாங்கிக் கொடுத்ததையும்; தனது தம்பி ஹலால் அஹமத் குருவைப் பிணையக் கைதியாக வைத்துக் கொண்டு, தில்லி சிறப்பு போலீசு சொல்வதை ஒத்துக் கொள்ள வேண்டும் எனத் தான் தில்லியில் சித்திரவதை செய்யப்பட்டதையும்; தனது மனைவி தபஸ்ஸும்; தனது தம்பி ஆகியோரின் பாதுகாப்புக்காக, தில்லி சிறப்புப் போலீசைச் சேர்ந்த துணை கமிசனர் ராஜ்பீர் சிங் சொன்னபடி தான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததையும்,'' அப்சல் அந்தக் கடிதத்தில் விரிவாக எழுதியிருக்கிறார்.


முகம்மதுவுடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பை சாட்சியமாக ஏற்றுக் கொண்டுள்ள நீதிமன்றம், முகம்மதுவைத் தனக்கு அறிமுகப்படுத்தி வைத்து உதவச் சொன்ன சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகளை விசாரிக்க மறுப்பது ஏன்? முகம்மதுவுடன் தான் செல்போனில் பேசிய பேச்சுக்களைச் சாட்சியமாக ஏற்றுக் கொண்டுள்ள நீதிமன்றம், அதே செல்போன் மூலம் காசுமீர் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் தன்னைத் தொடர்பு கொண்டு விசாரித்து வந்ததைக் காது கொடுத்து கேட்க மறுப்பது ஏன்? இப்படி அடுத்தடுத்து அப்சல் எழுப்பும் பல கேள்விகள் இன்று திகார் சிறையில் புதையுண்டு கிடக்கின்றன.


···

""அப்சல் என்ற தனிமனிதனின் கதை அல்ல இது; காசுமீரிலுள்ள பல இளம் தம்பதியினரின் கதை இது.... காசுமீரில் நிலவும் சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். தாம் ஈடுபடாவிட்டால்கூட, காசுமீரில் உள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும், குழந்தையும் கூட இயக்கங்கள் குறித்த ஏதேனும் தகவலை அறிந்திருப்பார்கள். மக்களை உளவு சொல்பவர்களாக மாற்றுவதன் மூலம், சகோதரரைச் சகோதரருக்கு எதிராகவும்; மனைவியைக் கணவனுக்கு எதிராகவும்; குழந்தைகளைப் பெற்றோர்களுக்கு எதிராகவும் பாதுகாப்புப் படையினர் மாற்றுகின்றனர். அவர்கள் மக்களை நிம்மதியாக, சுதந்திரமாக வாழ அனுமதிக்க மாட்டார்கள்'' என்கிறார், அப்சலின் மனைவி தபஸ்ஸும்.


இந்த பரிதாபகரமான கதைகளைத் தோண்டித் துருவினால், இந்திய ஆளும் கும்பல் அதிகார வர்க்கம் அனைத்தையும், ஏன் தாங்களே கூட குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டியிருக்கும் என்பது உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்குத் தெரியும்; சதாம் ஹுசைனைத் தூக்கில் போடக் கூடாது என ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் போலி கம்யூனிஸ்டுகள், அப்சல் பிரச்சினையில் வாயை மூடிக் கொள்கிறார்களே, அந்த மௌனத்திற்கும் இந்தக் கதை தெரியும்.


நாஜிகளின் ஆட்சியின் பொழுது, ஜெர்மன் நாடாளுமன்றத்திற்கு அவர்களே தீ வைத்துவிட்டு, பழியை கம்யூனிஸ்டுகள் மீது போட்டார்கள். இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் பற்றி பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணை நடக்குமானால், இந்திய பாசிச சக்திகளின் சதிகளும் அம்பலத்துக்கு வரலாம்!


இந்தத் தாக்குதல் நடந்து முடிந்த இரண்டொரு நாட்களிலேயே அப்பொழுது ஆட்சியில் இருந்த பா.ஜ.க. கூட்டணி ஆட்சி பொடா சட்டத்தை நிறைவேற்றியது; அதோடுகூட, பாக். மீது படையெடுக்க எல்லைப்புறத்தில் இராணும் குவிக்கப்பட்டு, 10,000 கோடி ரூபாய் புஸ்வாணமாக்கப்பட்டது. இவை இரண்டையும் நிறைவேற்ற நாடாளுமன்றத் தாக்குதல் காரணமாக அமைந்ததா, இல்லை, இவை இரண்டையும் நிறைவேற்றுவதற்காகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற உண்மைகூட வெளிச்சத்துக்கு வரலாம்!

· குப்பன்

Sunday, December 10, 2006

சாதிவெறியர்களின் வக்கிரம்-கொடூரம்

கயர்வாஞ்சி தாழ்த்தப்பட்டோர் படுகொலை :
சாதிவெறியர்களின் வக்கிரம்-கொடூரம்!

மது சொந்த நிலத்தைப் பறிக்க முயன்ற ஆதிக்க சாதிவெறியர்களின் அக்கிரமத்தை எதிர்த்துப் போராடிய தாழ்த்தப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு நேர்ந்த கோர முடிவு இது.


அம்பேத்கர் பிறந்த மகர் சாதியைச் சேர்ந்த பைய்யாலால் போட்மாங்கே சுரேகா தம்பதியினர், கடந்த 1617 ஆண்டுகளாக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகருக்கு அருகில் உள்ள கயர்லாஞ்சி கிராமத்தில் வசித்து வந்தனர். அக்கிராமத்தில் போட்மாங்கே குடும்பத்துக்குச் சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் இருந்தது. இவர்களுக்கு 19 வயதான கல்லூரியில் படித்து வந்த ரோஷன்; 21 வயதான ஓரளவே பார்வைத்திறன் கொண்ட சுதிர் என்ற இரு மகன்களும்; மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்ட 17 வயதான பிரியங்கா என்ற மகளும் இருந்தனர். தமது சொந்த நிலத்தில் இருந்தும்; வெளி வேலைகளுக்குச் செல்வதன் மூலமும் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இந்தக் குடும்பம், ஆதிக்கச் சாதியினரை அண்டியிராமல், ஓரளவு பொருளாதார சுதந்திரத்தோடு, சுயமரியாதைமிக்க வாழ்க்கையை நடத்தி வந்தனர். போட்மாங்கே குடும்பம் இந்து மதத்தின் சாதி ஆதிக்கத்தில் இருந்து விடுபட, அம்பேத்கர் வழியில் புத்த மதத்தைத் தழுவிய பொழுதிலும் ஆதிக்க சாதிவெறியர்கள் இவர்களைச் சாதி ரீதியில் ஒடுக்கி வைக்கவே முனைந்தனர்.


கயர்லாஞ்சி கிராமத்தில் வசித்து வரும் 125 குடும்பங்களில், மூன்றே மூன்று குடும்பங்கள்தான் தாழ்த்தப்பட்ட சாதியினர். பிற குடும்பங்கள் அனைத்தும் குன்பி, தெலி ஆகிய ஆதிக்க சாதியினைச் சேர்ந்தவை. அந்தக் கிராமத்திலேயே, பைய்யாலாலின் மகன் ரோஷனும், மகள் பிரியங்காவும்தான் அதிகம் படித்தவர்கள். பிரியங்கா பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பைய்யாலாலின் மனைவி சுரேகா கடுமையான உழைப்பாளி மட்டுமல்ல, தினந்தோறும் ஆதிக்க சாதியினர் கொடுத்து வந்த தொல்லைகளை எதிர்த்து நிற்கும் மனோதிடமும் உடையவர். பைய்யாலால் குடும்பம் கல்வியறிவோடும், சுயமரியாதையோடும் சொந்தக் காலில் நின்று வாழ்ந்து வருவது ஆதிக்க சாதிவெறியர்களின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது.

பைய்யாலால் குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கத் திட்டம் போட்ட ஆதிக்க சாதியினர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்துக்குச் சாலை போட வேண்டும் எனக் கூறி எவ்வித நட்டஈடும் இன்றி பைய்யாலால் நிலத்தில் இருந்து கணிசமான பகுதியை எடுத்துக் கொண்டனர். இப்படியாக கிராம பொதுக் காரியம் என்ற பெயரில், ஐந்து ஏக்கரில் ஏறத்தாழ இரண்டு ஏக்கர் நிலம் கொஞ்சம் கொஞ்சமாக பைய்யாலாலிடமிருந்து அபகரிக்கப்பட்டது. கயர்லாஞ்சி கிராம பஞ்சாயத்துத் தலைவனும், சாதிவெறி பிடித்தவனுமான உபாஸ்ராவ் காந்தேட்தான் இந்த அபகரிப்புக்கு மூளையாக இருந்து வந்தான். எனினும், இதற்கு மேலும் நிலத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் பைய்யாலால் குடும்பம் உறுதியாக நின்றுவிட்டது.


இது ஒருபுறமிருக்க, கயர்லாஞ்சி கிராமத்திற்கு அருகேயுள்ள துஸாலா கிராமத்தைச் சேர்ந்த சித்தார்த் கஜ்பியே, சுரேகாவுக்குச் சகோதரர் முறை கொண்ட நெருங்கிய உறவினர். மகாராஷ்டிரா போலீசுத் துறையில் ""பட்டீல்'' எனும் கௌரவ வேலை பார்த்து வரும் சித்தார்த், சுற்று வட்டார கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். சித்தார்த் கொடுக்கும் தைரியத்தில்தான் பைய்யலால் குடும்பம் தங்களுக்குப் பயப்படுவதில்லை எனக் கருவிக் கொண்டிருந்த ஆதிக்க சாதி வெறியர்கள், அக்காள் தம்பி உறவு முறை கொண்ட சித்தார்த் சுரேகா இடையே கள்ள உறவு இருப்பதாகக் கதை கட்டி விட்டனர்.

இந்நிலையில், சித்தார்த் கஜ்பியே, செப்.3 அன்று கயர்லாஞ்சியைச் சேர்ந்த ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்டார். இத்தாக்குதல் பற்றி போலீசில் அவர் புகார் கொடுத்தார். அவரைத் தாக்கியவர்களை சுரேகாவும், பிரியங்காவும் அடையாளம் காட்டினர். எனினும், குற்றவாளிகள் தாக்குதல் நடந்து 26 நாட்கள் கழித்துதான் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடராமல், சாதாரண அடிதடி வழக்கே போடப்பட்டதால், குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்ட அன்று மாலையே (செப். 29) பிணையில் விடப்பட்டனர்.


அன்றே, ஆதிக்கசாதி வெறியர்கள் ஒன்றுகூடி, சித்தார்த், அவரது சகோதரர் ராஜேந்திரா, போட்மாங்கே குடும்பத்தினரைப் பழி வாங்கத் திட்டம் போட்டுக் கொண்டனர். அச்சதியின்படி, அன்று மாலை பைய்யாலால் வீட்டிற்கு வந்த சாதிவெறி கும்பல், "ஒட்டு மொத்த குடும்பத்தையே ஒழித்து விடுவோம்' என எச்சரித்துவிட்டு, சித்தார்த்தையும், அவர் தம்பி ராஜேந்திராவையும் தேடிச் சென்றது. அவர்களைக் கண்டறிய முடியாததால் மேலும் ஆத்திரமாகி மறுபடியும் பைய்யாலாலின் குடிசைக்கு வந்த அந்தக் கும்பல், குடிசையின் கதவைப் பிய்த்து எறிந்தது. பைய்யாலால் அப்போது வீட்டில் இல்லை. இரவு உணவைச் சமைத்துக் கொண்டிருந்த சுரேகாவையும், மகள் பிரியங்காவையும் இரு மகன்களையும் பலவந்தமாக வீட்டிற்கு வெளியே இழுத்துப் போட்டனர். அவர்களின் வீட்டு வாசலிலேயே, சுரேகாவும், பிரியங்காவும் நிர்வாணமாக்கப்பட்டு, கிராமத் திடலுக்கு ஊர்வலமாக, அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர்.


பைய்யாலால் குடும்பம் தண்டிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க ஊரில் இருந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த அனைவரும் கிராமத் திடலில் கூடி நின்றனர். சைக்கிள் செயின், கோடாரி, மாடு ஓட்டப் பயன்படுத்தப்படும் தார்குச்சி எனக் கையில் கிடைத்தவற்றை எல்லாம் கொண்டு கண்மண் தெரியாமல் தாயும், மகளும் தாக்கப்பட்டனர். அவ்விரு பெண்களையும், ஆதிக்கசாதி பெண்கள் சிறுவர்கள் முன்பாக ஆதிக்கசாதி ஆண்கள் அனைவருமே வன்புணர்ச்சி செய்து கொன்றனர். இருவரும் பிணமான பின்னரும் வன்புணர்ச்சியில் ஈடுபட்டன அம்மிருகங்கள். பிணங்களின் பிறப்புறுப்புக்களில் மூங்கில் குச்சிகளைச் செருகினர். சுதா எனும் ஒரே பெண்ணைத்தவிர எந்தப் பெண்ணும் இதை எதிர்க்க முன்வரவில்லை. எதிர்த்த அந்தப் பெண்ணும் மிரட்டப்பட்டதால், சம்பவத்தின்போதுதான் அந்த இடத்திலேயே இல்லை என்று சாதித்தார்.


கண் எதிரேயே தன் தாயையும், தங்கையையும் ஆதிக்க சாதிவெறியர்கள் சீரழித்துக் கொண்டிருந்தபோது, சுதிர் தனது செல்போனில் போலீசை அழைக்க முயன்றார். உடனே செல்போனைப் பிடுங்கி நொறுக்கிய கும்பல், சுதிரையும் ரோஷனையும் கொடூரமாகத் தாக்கி, அவர்களின் முகங்களை உருத்தெரியாமல் சிதைத்தனர். அவர்களின் பிறப்புறுப்புக்களை அறுத்தெறிந்தனர். பின்னர் அவர்களை வானத்துக்கும், பூமிக்குமாகத் தூக்கிப் போட்டுப் பந்தாடியே கொன்றனர்.


அந்த நால்வரின் மூச்சு அடங்கிய பிறகு, அவர்களின் உடல்களில் இனி தாக்கிக் காயப்படுத்துவதற்கு இடமேஇல்லை என்ற பிறகு, சாதிவெறிக் கும்பலின் காமவெறியும், பழி தீர்த்துக் கொள்ளும் இரத்த வெறியும் அடங்கிய பிறகு, நால்வரின் பிணங்களும் மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டு அக்கிராமத்திற்கு அப்பாலுள்ள கால்வாயில் வீசியெறியப்பட்டன. ""பைய்யாலாலா, அப்படியொருவர் இக்கிராமத்தில் வசிப்பது எங்களுக்கே தெரியாதே'' என மேல்சாதி பெண்கள் சாதிக்கும் அளவிற்கு, தாக்குதலுக்குப் பிறகு கயர்லாஞ்சியில் சாதிக் கட்டுப்பாடு நிலவுகிறது.


இச்சம்பவம் போலீசுக்குத் தெரியாமல் நடந்துவிட்டதாகக் கூற முடியாது. செப். 29 மாலை தனது வயல் வேலைகளை முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த பைய்யாலால், கிராமச் சதுக்கத்தில் தனது குடும்பமே மேல்சாதி வெறியர்களால் தாக்கப்படுவதைப் பார்த்தவுடன், அந்தக் கொலைகாரர்களின் பார்வையில் பட்டுவிடாமல், அருகில் உள்ள துஸாலா கிராமத்திற்குத் தப்பியோடி, தனது உறவினர் சித்தார்த் வீட்டில் இருந்து போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். இதற்கு முன்பாகவே, பைய்யாலாலின் மனைவி சுரேகா, ஆதிக்க சாதி வெறியர்களால் மிரட்டப்பட்டவுடனேயே வார்தி கிராமத்திலுள்ள தனது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்ததோடு, சித்தார்த்தின் சகோதரர் ராஜேந்திராவுக்கும் ஆபத்தை உணர்த்தித் தகவல் கொடுத்துள்ளார். பைய்யாலால் போலீசுக்குத் தகவல் கொடுக்கும் முன்பாகவே, ராஜேந்திரா போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்.


அநாதரவான நிலையில் இருக்கும் இத்தாழ்த்தப்பட்டோரின் குரல்களை உள்ளூர் போலீசார் வேண்டுமென்றே அலட்சியப்படுத்தினர். சம்பவம் நடந்து முடிந்து ஏறத்தாழ ஒரு மணி நேரம் கழித்து பாபன் மேஷ்ராம் என்ற ஒரேயொரு போலீசுக்காரர், சம்பிரதாயத்துக்காக கயர்லாஞ்சி கிராமத்தை எட்டிப் பார்த்துவிட்டு உடனே திரும்பி விட்டார். பைய்யாலாலும், ராஜேந்திராவும் போலீசுக்குத் தகவல் கொடுத்தது பற்றியும் போலீசின் கோப்புகளில் எந்தப் பதிவும் செய்யாமல் மறைத்து விட்டனர்.

மறுநாள் (செப்.30) கயர்லாஞ்சி கிராமத்தில் இருந்து 12 கி.மீ தொலைவு தள்ளி பிரியங்காவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனை விபத்தாக போலீசார் பதிவு செய்தனர். இதனிடையே பைய்யாலால் மீண்டும் போலீசாரை அணுகி, தனது குடும்பத்தினரைக் காணவில்லை எனப் புகார் செய்தார். இதன்பிறகுதான், போலீசார் சடலங்களைத் தேடத் தொடங்கினர்.


இத்தாக்குதல் பற்றிய விவரங்கள் மெதுவாக வெளியுலகுக்குத் தெரிந்து, பல்வேறு ஜனநாயக அமைப்புகளும், தாழ்த்தப்பட்டோரும் போராடிய பிறகுதான், மகாராஷ்டிரா காங்கிரசு அரசு அசைந்து கொடுத்தது. இத்தாக்குதல் தொடர்பாக இதுவரை 44 பேர், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்டு பல்வேறு கிரிமினல் குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் மீது ""கற்பழிப்பு'' குற்றச்சாட்டோ, சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டோ சுமத்தப்படவில்லை.


சுரேகா, பிரியங்காவின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்த அரசு மருத்துவர், ""அவர்கள் கற்பழிக்கப்படவில்லை'' என அறிக்கை கொடுத்திருப்பதோடு, போலீசார் அது பறறிய விவரங்களைத் தங்களிடம் கேட்க வில்லை என்றும் சொல்லியிருக்கிறார். எனினும், ""பாலியல் வன்புணர்ச்சி குற்றச்சாட்டு தொடர்பாக இரண்டாவது பிரேதப் பரிசோதனை அக்.4 அன்று நடந்தது. ஆனால், அதற்குள் அப்பெண்களின் உடல்கள் மிகவும் அழுகி விட்டதாலும்; முதல் பிரேதப் பரிசோதனையின் பொழுது அறுத்து எடுக்கப்பட்ட கர்ப்பப்பை மற்றும் பெண் குறி திரவங்கள் சட்டப்படி பாதுகாக்கப்படாமல் அழிக்கப்பட்டு விட்டதாலும், பாலியல் வன்புணர்ச்சி நடந்ததற்கான அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை'' என அதிகார வர்க்கம் கையை விரித்து விட்டது.


அப்பெண்கள் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டதற்கு அறிவியல் ஆதாரம் திட்டமிட்டே அழிக்கப்பட்டது என்றால், அத்தாக்குதலைக் கண்ணால் பார்த்த பைய்யாலாலின் சாட்சியமோ திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி, முக்கிய குற்றவாளிகளுள் ஒருவராக பைய்யாலாலால் அடையாளம் காட்டப்பட்டுள்ள, கயர்லாஞ்சி கிராமத் தலைவர் உபாஸ்ராவ் காந்தேடையும் போலீசார் கைது செய்ய மறுக்கின்றனர்.


வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, தலித் மக்கள் மீது எவரேனும் கும்பலாய் வன்முறைத் தாக்குதல் நடத்தினால், ஒட்டு மொத்த கிராமத்துக்கே பத்து இலட்சம் ரூபாயிலிருந்து இருபது லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வேண்டும். அரசு இச்சட்டப் பிரிவையும் அமல்படுத்த மறுக்கிறது.


ஒப்புக்காகக் குற்றவாளிகளுள் சிலரைக் கைது செய்வது; பைய்யாலால் போட்மாங்கேக்கு நட்டஈடும், அரசு வேலையும் கொடுத்து, அரசின் நடுநி லைத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வது; இதன் மூலம் இப்பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்து விடுவது என்பதுதான் அரசின் திட்டம். ஆனால், பைய்யாலாலோ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் நீதிதான் எனக்கு வேண்டுமே தவிர, அரசின் சன்மானங்கள் தனக்குத் தேவையில்லை எனக் கூறி, மகாராஷ்டிர அரசின் முகத்தில் கரியைப் பூசிவிட்டார்.


இச்சம்பவம் நடந்து முடிந்த ஒரு சில நாட்களிலேயே, அம்பேத்கர் புத்தமதத்துக்கு மாறியதை நினைவு கூறும் பொன்விழா நிகழ்ச்சி நாக்பூரில் நடைபெற்றது. இவ்விழாவுக்குத் திரண்டு வந்த தாழ்த்தப்பட்டோர், கயர்லாஞ்சி சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கிவிடக் கூடாது என்பதற்காகவே, பாதுகாப்பு என்ற பெயரில் பெரும் போலீசு பட்டாளம், விழா நடந்த தீக்ஷா பூமியைச் சுற்றி வளைத்துக் கொண்டது.


அன்று அந்த விழா தீண்டாமைக்கு எதிரான பெரும் போராட்டமாக மாற்றப்படாதது தாழ்த்தப்பட்ட அமைப்புகளிடம் அரசியல் முன்முயற்சி இல்லாததைக் காட்டினாலும், அதைத் தொடர்ந்த நாட்களில் நாக்பூர், பந்தாரா, யவட்மால் பகுதிகளில் கயர்லாஞ்சி தாக்குதலைக் கண்டித்து ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் சில, போலீசாருடனான மோதலாகவும் மாறின. இப்போராட்டங்களை நடத்துபவர்களை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்வது; இரண்டு மூன்று நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைப்பது; நாக்பூரில் இருந்து கயர்லாஞ்சிக்குச் செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந்த ஊர்வலத்திற்குக் கொடுத்த அனுமதியை மறுப்பது என இப்போராட்டங்களை ஒடுக்குவதில் அரசு மும்முரமாக உள்ளது.


குறிப்பாக, மகாராஷ்டிர மாநில அரசின் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டில், இப்போராட்டங்களை நக்சல்பாரிகள் தூண்டிவிடுவதாகக் கூறி, தீண்டாமைக்கு எதிராகச் சட்டபூர்வ வழியில் போராடுவதைக் கூட பயங்கரவாதமாகக் காட்ட முயன்றார். எனினும், உள்ளூர் அளவில் செயல்படும் 20க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றாக இணைந்து இப்படுகொலைக்கு நீதி கேட்டு குரல் கொடுத்து வருகின்றன.


கயர்லாஞ்சி தாக்குதல் ஒன்றும் அரிதாக, அபூர்வமாக நடந்துவிட்ட சம்பவம் அல்ல. தாழ்த்தப்பட்டோர் மீது இப்டிப்பட்ட தாக்குதல்கள் நடக்கும் ஒவ்வொரு முறையும், அதற்கான பழியை அத்தாக்குதலில் ஈடுபட்ட சாதிவெறியர்கள் மீது, அவர்களை ஆதரிக்கும் ஓட்டுக் கட்சிகள் மீது, அதிகார வர்க்கத்தின் மீது போட்டுவிட்டு, பெரும்பான்மையான மக்கள் மாற்று மதத்தினரையும் சேர்த்துதான் அமைதியாகி விடுகின்றனர். சாதிவெறியைப் போன்றே, இந்த அமைதியும், கண்டு கொள்ளாமையும் அபாயகரமானதுதான்.


""இப்பவெல்லாம் யார் சார் சாதி பார்க்குறாங்க?'' எனத் தோளைக் குலுக்கிக் கொள்ளும் நகர்புறத்து படித்த நடுத்தர வர்க்கத்தினரில், எத்தனை பேரின் மனச்சாட்சியை இச்சம்பவம் உலுக்கியிருக்கும்? பிரியங்கா மட்டூ, ஜெஸிகாலால் போன்ற மேல்தட்டு பெண்களின் படுகொலைக்கு நீதி கேட்டு ஊர்வலம் போன கனவான்களில், எத்தனை பேர் சுரேகாவுக்காக, பிரியங்காவுக்காக நீதி கேட்டுப் போராட வந்திருக்கிறார்கள்? இத்தாக்குதலை நடத்திய சாதிவெறியர்கள் ஏன் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படுவதில்லை? இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபடும் சாதிவெறியர்களை, அச்சாதியைச் சேர்ந்த ""அப்பாவி மக்கள்'' ஏன் ஒதுக்கி வைப்பதில்லை? இவை போன்ற கேள்விகளை உங்களிடமே கேட்டுப் பாருங்கள். அதற்கான பதிலில்தான் நீங்கள் சாதிய சமூகத்தை எதிர்ப்பவரா, இல்லை ஆதரிப்பவரா என்ற உண்மை உங்களுக்கே தெரியக்கூடும்!




·கவி