தமிழ் அரங்கம்

Saturday, November 17, 2007

அரசியல் நாகரீகமற்ற சந்தர்ப்பவாதிகளின் மொழி

பி.இரயாகரன்
17.11.2007


மனிதவிரோதிகளின் அரசியல் நாகரீகத்தைப் பற்றி பேசுவது தான், எமது மொழி. உங்கள் அரசியல் நடத்தை தான், எமது மொழிக்கு முன்னால் வந்தது. இதுபோல் தான் புலிகளின் பாசிசத்துக்கு முன்னால் வந்தது பேரினவாதம். புலிப்பாசிசம் பேரினவாதத்தை உருவாக்கவில்லை. அதுபோல் தான் இதுவும்.

அரசியல் நாகரீகமற்ற சர்தர்ப்பவாதிகள் எம்மைப் பார்த்து கூறுகின்றனர் 'பரந்துபட்ட தமிழ்மக்கள் நாகரீகம் எனக் கருதும் மொழிநடையில்" எழுதும்படி. ஏதோ மொழி நாகரீகம் என்கின்றது தேசம்நெற். சரி, இதை எமக்கு சொல்வதற்கு முன்னர், உங்கள் அரசியல் நாகரீகம் தான் என்ன? அதை முதலில் சொல்லுங்கள்.

அரசியல் பொது வாழ்வில் நாகரீகமாக வாழமுடியாத இழிவான சமூகவிரோதக் கும்பலுடன் (புலி மற்றும் புலியெதிர்ப்பு), உங்களுக்கு என்ன அரசியல் உறவு? அதை முதலில் சொல்லுங்கள். நீங்கள் அரசியல் நாகரீகம் உள்ளவர்கள் என்றால், நாகரீகமற்ற அந்த அரசியலைப் பற்றி முதலில் பேசுங்கள், அம்பலப்படுத்துங்கள். அதைவிட்டுவிட்டு, நாம் அந்த நாகரீகமற்ற பொறுக்கிகளைப் பற்றி கதைப்பதை தடுப்பது தான், தேசம்நெற்றின் அரசியல் நாகரிகமோ? இந்த அரசியல் நாகரீகமோ. 'பரந்துபட்ட தமிழ்மக்கள் நாகரீகம் எனக் கருதும் மொழி"யால் கதையுங்கள் என்று கூறுவதன் மூலம், அந்த போக்கிரிகளின் அரசியல் ஈனச்செயலை பாதுகாப்பது தான்.

மக்களை அரசியல் ரீதியாக ஏமாற்ற புறப்பட்ட நீங்கள், உங்கள் இந்த அரசியல் நாகரீகம் பற்றி எதுவும் சொல்லமாட்டீர்கள். நாங்கள் தான் அதைச் சொல்ல முடியும். இவர்களின் அரசியல் நாகரீகமோ, புலிக்கும் புலியெதிர்ப்புக்கும் இடையில் நடுநிலை வேஷம் இட்டு படுத்துக்கிடப்பது. இவர்களின் அரசியல் என்பது, கடற்கரையில் படுத்துக் கிடக்கும் மேட்டுக்குடிகளின் நாகரீக நினைப்பு. புலியையும் புலியெதிர்ப்பையும் அனுசரித்து அரசியல் விபச்சாரம் செய்வதே, இவர்களின் அரசியல் நாகரீகம். மக்களைக் கொன்று போடுவதற்கு உதவுவதுதான், இவர்களின் அரசியல் நாகரீகம். நாம் மட்டும் தான் இரண்டையும் எதிர்க்கின்றோம். வேறு யார் தான் இரண்டைப் பற்றியும் அன்றும் இன்றும் கதைக்கின்றனர். அதனால் இரண்டையும் அனுசரித்த படி, எம்மை எதிர்க்கின்றனர்.

தேசம்நெற்றுக்கு தெரிந்த அரசியல் நாகரீகம் இது. மக்களின் நாகரீகம் புலிக்கும் புலியெதிhப்புக்கும் எதிரானது. மக்களின் எதிரிகளுடன் கூடி கும்மாளம் அடிப்பது தான், தேசம் நெற்றின் இணைய அரசியல் நாகரீகம்.

யாரெல்லாம் இப்படி நாகரீகம் பேசிக்கொண்டு வருகின்றனரோ, அவர்கள் தாம் யார் என்று சொல்வதில்லை. கடந்த காலத்தில் என்ன அரசியல் செய்தனர். சமகாலத்தில் என்ன அரசியலை முன் வைக்கின்றனர் என்று எதையும் மூடி மறைக்கும் கடைந்தெடுத்த அரசியல் போக்கிரிகள் தான் இவர்கள். தம்மை அரசியல் ரீதியாக மூடிமறைத்துக் கொள்கின்றனர். இதனால் மக்களுடன் அதைப் பேசுவது கிடையாது. அவர்கள் தான் மொழி நாகரீகம் பற்றி பேசுகின்றனர். உங்களுக்கு அது பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதியுண்டு?

நீங்கள் சொல்வதா மொழி. மொழி என்பது ஆளும் வர்க்கத்தின் பண்பாடாகி, அதன் மொழியாகிக் கிடக்கின்றது. அந்த ஆளும் மொழிப் பண்பாட்டை நாகரீகம் என்பது, மக்களின் அடிமைத்தனத்தை போற்றுவது தான்.

மக்களை கொன்று போட்டவனை, மக்களை இழிவாடுபவனை எப்படி நாம் அழைப்பது? இவர்களை அழைக்க 'பரந்துபட்ட தமிழ்மக்கள் நாகரீகம் எனக் கருதும் மொழிநடை" என்று ஒன்று உண்டோ? மக்களின் முதுகில் குத்தி அரசியல் விபச்சாரம் செய்பவனை எப்படி அழைப்பது? அண்ணே அரசியல் விபச்சாரம் செய்யாதையுங்கோ, என்று காந்தியின் அகிம்சை வழியில் மொழியைக் கையாள வேண்டுமோ? உங்களைப் போல், மக்களின் எதிரிகளை நாம் கெஞ்சியும் கொஞ்சியும் உறவாடுவது கிடையாது. மக்கள் அவர்களை எந்த மொழியில் எப்படி அணுகுகின்றரோ, அதை அப்படி அந்த மொழியில் நாம் எழுதுகின்றோம். மக்களின் கண்ணீரை, மொழிகளில் வடிகட்டுவதற்கு நாங்கள் தயராகவில்லை. அது அரசியல் பொறுக்கிகளுக்கேயுரிய செயல் தான். கடந்தகாலத்தில் நாம் போராடிய வர்க்க மொழி மட்டும்தான், புரட்சிகரமான அரசியல் மொழியாக இருந்தது. வேறு யாரின் மொழி புரட்சிகரமாக இருந்தது? காட்ட முடியுமா? முடியாது, முடிந்த வரலாற்றில் அதற்கு இடமில்லை.

மக்களின் கண்ணீரை, மொழிகளில் வடிகட்டுவதற்கு நாங்கள் தயராகவில்லை. அதை உங்கள் விபச்சார விடுதியில் செய்யுங்கள். மக்களின் விடுதலையைப் பேசுகின்றவன், அரசியல் பொறுக்கியாக வாழும் போது, மொழி மூலம் அதனைப் பாதுகாக்கின்ற அரசியல் பொறுக்கிகள் அல்ல நாங்கள். அவன் உங்களுக்கு நாகரீகமான கனவானாக இருக்கலாம். எங்களுக்கு அப்படியல்ல. அவன் எங்கள் முன் பொறுக்கி தான். உங்களைப் போல் எத்தனை அரசியல் பொறுக்கிகளை, எமது போராட்டத்தில் நாங்கள் அடையாளம் கண்டவர்கள்.

இந்த திடீர் புதிய வேஷம், ஏன் எதற்காக ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையின் இன்றைய சூழலில், ஆளும் வர்க்கங்களே இவர்களை முன்னிறுத்துகின்றது. புலியும், புலியெதிர்ப்பு அரசியலும் முடிவுக்கு வருகின்றது. வெற்றிடத்தைக் கண்டு ஆளும் வர்க்கம் அலறும் எச்சரிக்கை தான், இப்படி தேசம் நெற் ஊடாக குசுவுகின்றது. ஏற்படும் அரசியல் வெற்றிடம், மீண்டும் பிற்போக்குக் கருத்தால் நிரப்பப்பட வேண்டும். இது தான் இந்தியா இலங்கை உளவு அமைப்புக்களின் அரசியல் பணி. அதை நோக்கிய அசைவுகள் தான், திடீர் தேசம்நெற்றின் புதிய வருகை. அதனுடன் சேர்ந்து இயங்கும் புதிய தேசம் என்ற, எனக்கு எதிரான அவதூறு இணையத்தின் தோற்றமும் கூட. இன்னமும் இன்னமும் இவர்கள் பல இணையத்தை தோற்றுவிப்பார்கள்.

இவர்கள் எல்லாம் தம்மை இடதுசாரியாக காட்ட முனைகின்றனர். பலரை கொண்டு வந்து வலிந்து ஒட்டி விளையாடுகின்றனர். இணைய ஆசிரியர்களே புனைபெயர்களில் வந்து வக்கரிக்கின்றனர். தேசம் சஞ்சிகையில் இடதுசாரிகளை தொட்டுக்கொள்ள பயன்படுத்தியபோல், இங்கும் அதே வேஷம், அதே சேட்டை.

அரசியல் வெற்றிடத்தில் சரியான அரசியல் சிந்தனை வந்துவிடக் கூடாது என்பதே, இதன் பின்னால் உள்ள அரசியல் அடிப்படை. இதனால் புரட்சிகரமான செயலை சேறடிப்பது அவசியமாகின்றது. அதை அரசியல் ரீதியாக ஒருநாளும் இவர்களால் செய்ய முடியாது.

என்ன செய்ய முனைகின்றனர். தாம் அரசியல் ரீதியாக கூடித்திரியும் அரசியல் பொறுக்கிகளைப் போல் எம்மைக் காட்டி விட்டால், புரட்சியாவது அரசியலாவது. அதையே செய்ய முனைகின்றது தேசம்நெற். புதியதேசம் என்ற பெயரில், அவதூறுக்கு தனியான இணையம். வாழ்க புரட்சி.

தம்மையொத்த அரசியல் பொறுக்கிகள் போல், எம்மையும் காட்ட முனைகின்றனர். இதன் மூலம் அரசியல் போக்கை முறியடிக்க முனைகின்றனர். இதற்கு நாம் எதிர்த்து போராடும், புலி மற்றும் புலியெதிப்புக் கும்பலுடன் சேர்ந்து அதைச் செய்ய முனைகின்றனர். இது அவர்களின் அரசியல் நாகரீமாக உள்ளது. (இந்த வகையில் தேசம்நெற் சுற்றிச்சுற்றி கற்றன் நஷனல் வங்கிக் கொள்ளை பற்றி பேசுகின்றது. அதற்கான எமது விளக்கத்துக்கு, மறுக்க கூட துப்பு கிடையாது. தேசம்நெற் என்ன செய்கின்றது. அந்த அவதூறை மீண்டும் மீண்டும் வெட்டியொட்டி அரசியல் செய்கின்றது. வேறு எப்படித் தான் தேசம்நெற் அரசியல் செய்யமுடியும். அவர்களுக்கு இதைப் பற்றி பேசுவதைத் தவிர, வேறு மாற்று அரசியல் வழி கிடையாது. பாவம் அவர்கள் வெட்டி ஒட்டும் சிரமத்தை போக்க, இதுவரை சமூகவிரோத போக்கிலிகள் எமக்கு எதிராக எழுதிய முழுவதையும் நாம் தொகுப்பாக விரைவில் வெளியிடுகின்றோம். இனி மேல் சிரமப்படாமல் அதை வெட்டி ஒட்டுங்கள். எத்தனை நாளுக்கு இதை ஒட்டி தேசம்நெற் இந்த அரசியலை செய்யப் போகின்றது, என்று பார்ப்போம்.)

ஆயிரம் ஆயிரம் மக்களை கொன்ற புலிகள், இதே போல் வேட்டையாடிய புலியெதிர்ப்புக் கும்பல், இந்திய இலங்கை மற்றும் மேற்கு கைக்கூலிக் குழுக்களுடன் சேர்ந்து 'பரந்துபட்ட தமிழ்மக்கள் நாகரீகம் எனக் கருதும் மொழிநடையில்" கருத்து விவாதம் நடத்துகின்றனராம். உங்களை பொறுக்கி என்று சொல்லாமல், எப்படி நாம் 'பரந்துபட்ட தமிழ்மக்கள் நாகரீகம் எனக் கருதும் மொழிநடையில்" அழைப்பது? கருத்து விவாதம் நடத்துகின்றனராம். சரி எதைப் பற்றி? அவர்கள் தம்மைப் பற்றி அல்ல. எம்மைப் பற்றி. 'அரசியல் அல்லாத கருத்து" விவாதம் செய்கின்றனராம்.

இவர்களின் விவாதமே வேடிக்கை. இவர்கள் எமக்கு மொழி நாகரீகம் பற்றி கற்றுத்தர முனைகின்றனர். விபச்சாரம் செய்யும் அரசியல் நாகரீகத்தை முதலில் அவிழ்த்துப் போடுங்கள். பிறகு மொழிக்கு வாருங்கள். உங்கள் அரசியல் நாகரீகத்தைப் பற்றி பேசுவது தான் மொழி. உங்கள் அரசியல் நடத்தை தான் மொழிக்கு முன்னால் வந்தது. அரசியல் நடத்தையை பாதுகாத்துக் கொண்டு, தேசம்நெற் விபச்சாரம் செய்வதை நியாயப்படுத்த எமது மொழியை மறுப்பது அவசியமாகின்றது.

பாசிச கொலைகார புலிக்கும், கூலிக் குழுவான புலியெதிர்ப்பு கும்பலுக்கும் எதிராக ஒரு அரசியல் நாகரீகம் பற்றிய வரையறை கூட இல்லாதவர்கள் இவர்கள். அவர்களுடன் கூடி நின்று, எம்மை அவதூறு செய்யும் நாகரீகம். இப்படி ஒரு இணைய நாகரீகத்தைக் கூட பேண வக்கில்லாதவர்கள். உங்கள் அரசியல் நாகரீகம் என்பது, இப்படி மக்களை இழிவாடுவது தான். இரண்டையும் எதிர்த்து, மக்களுக்காக விவாதமும், அரசியலும் நடத்த துப்புக் கிடையாது. நீங்கள் மொழி நாகரீகம் பற்றி உளறுகின்றீர்கள். நாம் அதைச் செய்யக் கூடாது என்பதற்காக, மொழி நாகரீகம் பற்றி பேசுகின்றனர்.

இந்த வகையில் நீங்கள் குறிப்பிடும் உங்கள் 'பரந்துபட்ட தமிழ்மக்கள் நாகரீகம் எனக் கருதும் மொழிநடை"யை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த மொழி நடை என்பது, பாசிசத்துக்கு படுத்து கிடப்பது தான். ஜனநாயகம் பேசும் விபச்சாரிகளுக்கு மெத்தை போடுவது தான். இதுதான் உங்கள் யோக்கியமான அரசியல் நாகரீகம். பூசிமெழுகும் மொழிநடை, எமது வர்க்கப் போராட்டத்துக்கு உதவாது. அது புலிப் பாசிசத்துக்கும், புலியெதிர்ப்பு ஜனநாயகத்துக்கும் ஜால்றாப்போடும் பன்றிகளுக்கே ஏற்ற மொழி தான்.

Friday, November 16, 2007

சமூக விரோத பொறுக்கிகள் பற்றிய எச்சரிக்கை.

முக்கிய அறிவித்தல்


சமூக விரோத பொறுக்கிகள் பற்றிய எச்சரிக்கை.

இதன் பின்னணியில் புலி மற்றும் புலியெதிர்ப்பு கோஸ்டிகள் இயங்குகின்றது.

தேசம் நெற், எனது பெயரில் பதிவுகளை இடுகின்றது. நாம் அதில் எழுதுவதில்லை என்று, முன்பே எமது கட்டுரையில் அறிவித்திருந்தோம். அதன் ஆசிரியர் சேனன் என்னுடன் தொலைபேசியில் தொடர்;பு கொண்ட போதும், திட்டவட்டமாக இதையே கூறியிருந்தேன். இன்று (16.11.2007) எனது பெயரில் நான் போட்டதாக, எனது கட்டுரையை போட்டிருந்ததை, எனது பெயரில் இருந்து அகற்ற, இணைய ஆசிரியர் இருவரிடமும் ஈமெயில் மூலம் கோரியிருந்தேன்.

ஆனால் அது அகற்றப்படவில்லை. அதைப் பார்த்த சமூகவிரோத புலிப்பொறுக்கி ஒன்று வந்த உறுமுகின்றது. அதை அதன் பின் அனுமதித்துள்ளனர்.

எனது பெயரில் அல்லது எமது இணையத்தின் பெயரில் தேசம் நெற்றில் போடும் எந்தக் கருத்துக்கும் நாம் பொறுப்பாளிகள் அல்ல. அது எனது கட்டுரையைப் போட்டாலும் கூட பொருந்தும்.

தேசம்நெற் இணைய விபச்சாரத்தை செய்ய புறப்பட்ட பின், அது சமூக விரோத இணையப் பொறுக்கிகள் வம்பளக்கும் அரசியல் தளமாகிவிட்டது. எம்மை வைத்து காறி துப்புவது தான், அவர்களின் அரசியல் வாடிக்கையாளர்களின் அரசியல் கொசிப்பாகின்றது. தொட்டுக் கொள்ள நாம். இல்லாது எப்படித்தான், எதைத்தான் அவர்கள் விவாதம் செய்வது.

தேசியம், தலித்தியம், மரபு மார்க்சியம், ஸ்ராலின் என்று அரட்ட, அலட்டமுடியும்.

சரி உங்கள் அரசியல் என்ன? புலி மற்றும் புலியெதிர்ப்பை எப்படி பார்க்கின்றீர்கள்? ஏகாதிபத்தியம் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன? புலி வைக்கும் தமிழீழத்தைப் பற்றிய தேசத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன? புலியெதிர்ப்பு வைக்கும் ஜனநாயகம் பற்றிய அரசியல் நிலைப்பாடு என்ன.? இலங்கை அரசுடன் கூலிப்பட்டாளமாக உள்ள குழுக்கள் பற்றிய தேசத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன? இந்திய இலங்கை உளவு அமைப்புகள், புலம்பெயர் நாட்டில் உங்கள் பின் இயங்கவில்லையா? ஏகாதிபத்தியம் பற்றிய நிலைப்பாடு என்ன?

எதுவும் இல்லை. படுபிற்போக்கான சமூக விரோதக்கும்பலுடன் சேர்ந்து கருத்தாடுகின்றனராம். அது மார்க்சியத்தை வேரறுக்க, புரட்சிகரமான எமது நிலையை காறித் துப்ப எடுக்கும் சதிக்கும்பலின்; முயற்சி தான் இவைகள். இதன் மூலம் புலி மற்றும் புலியெதிர்ப்புடன் கூடி விபச்சாரம் செய்வது தான் இக் கைங்கரியம்.

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை

குஜராத் மாநிலம் கோத்ரா தொடர் வண்டி நிலையத்தில் பிப்.27, 2002 அன்று சபர்மதி விரைவு வண்டியின் ""எஸ்6'' பெட்டி எரிந்து போனதையும்; அத் தீ விபத்தில் 58 பேர் இறந்து போனதையும், ""உள்ளூர் முசுலீம் மதவெறியர்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்''; ""ராம பக்தர்களைக் கொல்ல பாக். உதவியுடன் நடத்தப்பட்ட சதி'' என இந்து மதவெறிக் கும்பல் ஊதிப் பெருக்கியது. ஆனால், இச்சம்பவம் குறித்து நடந்து வரும் விசாரணையில், குஜராத் முசுலீம்கள் மீது இனவெறிப் படுகொலையை ஏவிவிடக் காத்திருந்த இந்து மதவெறிக் கும்பல், அதற்கொரு வாய்ப்பாகவே கோத்ரா சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டது என்ற உண்மை சட்டபூர்வமாகவே அம்பலமாகி வருகிறது.

""கோத்ராவைச் சேர்ந்த முசுலீம் தீவிரவாதிகள், 60 லிட்டர் பெட்ரோலை வெளியே இருந்து எஸ்6 பெட்டிக்குள் ஊற்றி, அதற்குத் தீ வைத்தனர்'' என்பதுதான் இச்சம்பவம் பற்றி இந்து மதவெறிக் கும்பல் குஜராத் போலீசு கூட்டணியின் முதல் புலனாய்வுக் கண்டுபிடிப்பு.

இக்கண்டுபிடிப்பை குஜராத் மாநிலத் தடய அறிவியல் துறை கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இச்சம்பவம் பற்றி அளித்த இரண்டு அறிக்கைகளுள் முதலாவது அறிக்கை, ""தீப்பற்றிய விதம், அது பரவிய முறை, எரிந்த தன்மை இவற்றை ஆராய்ந்து பார்க்கும்போது, உள்ளுக்குள் இருந்துதான் தீயைப் பற்ற வைத்திருக்க முடியும்'' எனக் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவது அறிக்கை, ""ரயில் வண்டியின் ஜன்னல் தரைமட்டத்தில் இருந்து சுமார் 7 அடி உயரம் உள்ளது. எனவே, வெளியில் இருந்து எரிபொருளை ரயிலுக்குள் ஊற்ற முடியாது. எரிபொருள் திரவம் வெளியில் இருந்து ஊற்றப்பட்டிருந்தால், பெட்டியின் வெளியில் இருக்கும் அடிப்பாகமும் எரிந்திருக்கும். ஆனால், அடிப்பாகம் எரியாததால், எரிபொருள் வெளியே இருந்து ஊற்றப்படவில்லை என்பது உறுதி'' எனக் குறிப்பிட்டது.

இதுவொருபுறமிருக்க, ""முசுலீம் தீவிரவாதிகள்'' பெட்ரோல் வாங்கியதாகச் சொல்லப்பட்ட பெட்ரோல் நிலையத்தைச் சேர்ந்த பிரபாத் சிங் மற்றும் ரஞ்சித் சிங் என்ற இரு ஊழியர்கள், ""தங்களிடமிருந்து பெட்ரோல் வாங்கப்படவில்லை'' என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்து மதவெறிக் கும்பலின் முதல் ""கண்டுபிடிப்பு'' புஸ்வானமாகிப் போனபிறகு, ""எஸ்6 மற்றும் எஸ்7 பெட்டிகளை இணைக்கும் இணைப்பை கிழித்துவிட்டு, எஸ்6 பெட்டிக்குள் நுழைந்த தீவிரவாதிகள், திரவ எரிபொருளை கீழே கொட்டிவிட்டு, அதன்பின் வெளியே இறங்கிப் போய் தீ வைத்ததாக'' இரண்டாவது கண்டுபிடிப்பை வெளியிட்டனர். இதற்கு ஏற்றாற்போல, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பற்றிய முதல் தகவல் அறிக்கையும் திருத்தப்பட்டது.

கோத்ரா சம்பவம் பற்றி விசாரணை நடத்திவரும் கே.ஜி.ஷா நானாவதி கமிசன் முன்பு சாட்சியம் அளித்துள்ள பூபத் பாய் என்ற பயணி, ""வெளியில் இருந்த கும்பலில் இருந்து எவரும் ரயில் பெட்டிக்குள் ஏறியதை நான் பார்க்க வில்லை'' எனக் கூறியுள்ளார்.

துவாரகா பாய் என்ற பயணி, ""நான் தப்பித்து வெளியேறும்வரை... எத்தகைய திரவப் பொருளும் உள்ளே வீசப்பட்டதை நான் பார்க்கவில்லை. யாரும் எந்த நபரும் எத்தகைய திரவத்தையும் தெளிப்பதையோ அல்லது பெட்டியைக் கொளுத்துவதையோ நான் பார்க்கவில்லை'' எனச் சாட்சியம் அளித்துள்ளார்.

டி.என். திவிவேதி என்ற பயணி, பெட்டியின் இடதுபுற மேல்பாகத்தில் இருந்துதான் கரும்புகை எழுந்து தீப்பிடித்ததாகக் கூறியிருக்கிறார்.

எஸ்6 பெட்டி தீக்கிரையானதைப் பற்றி விசாரிக்க ரயில்வே அமைச்சகத் தால் நியமிக்கப்பட்ட பானர்ஜி கமிசன், தனது இடைக்கால அறிக்கையில், ""அரி பிரசாத் ஜோஷி என்ற பயணி பெட்டியின் பின்பக்கம் வழியாக இருக்கை எண் 72 அருகில் இருந்து வெளியே இறங்கியிருக்கிறார். இருக்கை எண் 72 அருகே உள்ள ரயிலின் தரை தளத்தில் பெட்ரோல் வீசப்பட்டு அதன் காரணமாகத் தீ பற்றியிருந்தால், அந்தப் பகுதியில் இருந்து ஜோஷி உயிர் தப்பியிருக்க முடியாது'' எனக் குறிப்பிட்டுள்ளது.

பானர்ஜி கமிசன் விசாரணைக்கு உதவி புரிந்த துனுராய், பேரா. தினேஷ் மோகன் என்ற இரு தொழில்நுட்ப வல்லுனர்கள், ""எஸ்6 மற்றும் எஸ்7க்கு இடையே உள்ள இணைப்பு இரும்புச் சுவரால் ஆனது மட்டுமன்று; இது, ""நியோபிரீன் ரப்பர்'' என்ற பொருளால் நிரப்பப்பட்டது. எனவே, இதனை உடைப்பதோ வெட்டி வழி ஏற்படுத்துவதோ சற்றும் இயலாத காரியமாகும்'' எனச் சான்று அளித்துள்ளனர்.

இந்து மதவெறியர்கள் கூறுகிறபடி முசுலீம்கள் பெட்டிக்கு வெளியில் இருந்தோ, அல்லது பெட்டிக்குள் நுழைந்தோ பெட்ரோல் போன்ற திரவ எரிபொருளைக் கொட்டியிருந்தால் உடனடியாக தீப்பற்றியிருக்கும். ஆனால், நானாவதி ஷா கமிசனிலும், பானர்ஜி கமிசனிலும், சாட்சியம் அளித்துள்ள பயணிகள், ""முதலில் மூச்சு முட்டும் அளவிற்குக் கரும்புகை வந்தது; அதன்பின் சில நிமிடங்கள் கழித்துதான் நெருப்பு எரிந்ததாக''ச் சாட்சியம் அளித்துள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று எஸ்6 பெட்டியில் பயணம் செய்தவர்களுள் பெரும்பாலானோர் குஜராத் மாநில விசுவ இந்து பரிசத்தின் ஆதரவாளர்கள்தான். இது, பயணிகள் முதன்பதிவு பட்டியலின் மூலமும்; முன்பதிவு செய்து எஸ்6 பெட்டியில் பயணம் செய்த 52 பயணிகளில் 41 பேர் உயிர் பிழைத்திருப்பதை வைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எஸ்6 பெட்டியில் பயணம் செய்த விசுவ இந்து பரிசத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் கையில் திரிசூலத்தை வைத்துக் கொண்டு இருந்துள்ளனர். எனவே, இப்படிப்பட்ட நிலையில், ""எவ்வித எதிர்ப்பு இன்றி சிலர் பெட்டிக்குள் புகுந்து திரவ எரிபொருளைக் கொட்டியோ அல்லது திரவ எரிபொருளை ரயில் பெட்டிக்கு வெளியில் இருந்து விசிறி அடித்தோ தீ வைத்திருப்பார்கள் என்பது நம்ப முடியாததும், அபத்தமானதும் ஆகும்'' எனக் குறிப்பிட்டுள்ள பானர்ஜி கமிசன், எஸ்6 பெட்டி தீக்கிரையானதை, ""ஒரு தற்செயலான தீ விபத்துதான்'' என முடிவு செய்து, இடைக்கால அறிக்கையை அளித்திருக்கிறது.

இச்சம்பவம் நடந்த சமயத்தில் குஜராத் மாநில போலீசுத் துறையின் உளவுப் பிரிவில் கூடுதல் போலீசு இயக்குநராகப் பணி புரிந்து வந்த சிறீகுமார், நானாவதி ஷா கமிசனிடம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ""எந்தவிதமான ஆதாரங்கள் இல்லாதபொழுதும், கோத்ரா தீ விபத்திற்கு பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பின்புலம்தான் காரணமாக இருக்கும் என்பதை "நிரூபிக்கும்' வகையிலேயே புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என மத்தியமாநில அரசுகளிடமிருந்தும், மோடிக்கு நெருக்கமான அதிகாரிகளிடமிருந்தும் நெருக்குதல் வந்ததாக''க் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் மாநில விசுவ இந்து பரிசத், நானாவதி கமிசனில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், எஸ்6 பெட்டியை எரிக்க எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டது பற்றி ஒரு வார்த்தைக் கூட குறிப்பிடவில்லை.

குஜராத் மாநில செய்தித் தொடர்பாளர் நளின் பட், ""எளிதில் பற்றக்கூடிய பொருள் எதுவும் எஸ்6 பெட்டிக்குள் வெளியில் இருந்து வீசப்பட்டதற்கான தகவல் எதுவும் தங்களின் சாட்சிகளிடம் இல்லை'' எனக் கூறியுள்ளார்.

கோத்ரா சம்பவம் தொடர்பாக உள்ளூரில் இருந்து பாகிஸ்தானுக்குத் தொடர்பு கொண்டதாகச் சொல்லி, 6 தொலைபேசி எண்களைக் குறிப்பிட்டிருந்தது, விசுவ இந்து பரிசத். இது தொடர்பாக நானாவதி கமிசனில் நடந்த குறுக்கு விசாரணையில், ஒரு தொலைபேசி எண் சூரத்தைச் சேர்ந்த கணேஷ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு உரிமையானது; மற்ற ஐந்து தொலைபேசி எண்ணும் உபயோகத்தில் இல்லாதவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக, கோத்ரா சம்பவம் ""பாக். உதவியோடு உள்ளூர் முசுலீம்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்'' என்பதை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லாதபொழுதும், எஸ்6 ரயில் பெட்டி தீக்கிரையான வழக்கு, காலாவதியாகிப் போன ""பொடா'' சட்டத்தின் கீழ் நடந்து வருகிறது. நீதியை நிலை நாட்டுவது என்பதைவிட, சிறுபான்மையினரான முசுலீம் மக்களை நிரந்தரப் பீதியில் வைத்திருப்பதுதான் இந்த வழக்கின் நோக்கம் என்பதை விசாரணையின் போக்கே அம்பலமாக்கி வருகிறது.

கோத்ரா வழக்கில் 54ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள இஷாக் முகம்மது பார்வையற்றவர். ""இஷாக் முகம்மது 100 சதவீதம் பார்வையற்றவர்'' என 1997ஆம் ஆண்டே குஜராத் அரசு மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளனர். எனினும், இவ்வழக்கில் இவரைக் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, கோத்ரா சம்பவம் நடந்த பிறகு, ""இஷாக் முகம்மது பார்வையற்றவர் என்ற பொழுதும், ஒரு மீட்டர் தொலைவிற்கு இவரால் பார்க்க முடியும் எனச் சான்றிதழ் பெறப்பட்டு இஷாக் முகம்மது சிறையில் தள்ளப்பட்டார். ""எஸ்6 பெட்டிக்கு வெளியே கூடி நின்ற கும்பலில் இஷாக் முகம்மதுவும் இருந்தார்'' என்பதுதான் இவர் மீது சுமத்தப்பட் டுள்ள குற்றச்சாட்டு. அதாவது "வேடிக்கை பார்க்க' நின்ற குற்றத்திற்காக இவர் மீது ""பொடா'' பாய்ந்திருப்பதோடு, கடந்த ஐந்து ஆண்டுகளாக பிணையும் மறுக்கப்பட்டு வருகிறது.

சலீம் அப்துல் கலாம் பதாம் உள்ளிட்டு ஐந்து குற்றவாளிகள் கோத்ராவைச் சேர்ந்த திலீப் உஜ்ஜம்பாய் தசரியா என்ற பள்ளி ஆசிரியர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக அரசு கூறி வருகிறது. ஆனால், அந்தப் பள்ளி ஆசிரியரோ, தான் அப்படிப்பட்ட எந்த சாட்சியமும் அளிக்கவில்லை என்றும்; சம்பவம் நடந்த அன்று, கோத்ராவில் இருந்து 25 கி.மீ. தள்ளியுள்ள ஊரில் தனது பள்ளியில் இருந்ததாகப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பதோடு, அதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்திடம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அந்த ஐந்து "குற்றவாளிகள்' மீதான வழக்கைத் திரும்பப் பெற, மோடி அரசு மறுத்து வருகிறது.

முகம்மது அன்சார் குத்புதீன் அன்சாரி, பைதுல்லா காதர் தெலீ, ஃபெரோஸ்கான் குல்சார்கான் பத்தான், இஷாக் யூசூப் லுஹர் உள்ளிட்ட 20 பேர் மீது, கோத்ரா சம்பவம் தொடர்பாக எந்தப் புகாரும் இல்லாமலேயே, அவர்கள் அனைவரும் சம்பவம் நடந்த பிப். 27, 2002 அன்று காலை 9.30 மணிக்குக் கைது செய்யப்பட்டனர். இதற்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்துதான் அவர்கள் மீதான புகார் பதிவு செய்யப்பட்டது.

கோத்ரா சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுள் 36 பேர், எஸ்6 பெட்டி தீக்கிரையான அன்றுதான், மற்றொரு வழக்கில் இருந்த நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டனர். ""நீலம் தங்கும் விடுதி வழக்கு'' என்ற அந்த வழக்கில், இந்த 36 பேருக்கு எதிராக போலீசாரால் சாட்சிகளாக நிறுத்தப்பட்டவர்கள்தான், கோத்ரா வழக்கிலும் இவர்களுக்கு எதிராக புகாரும், சாட்சியமும் அளித்துள்ளனர். குஜராத் போலீசின் காவித்தனமான பழி தீர்த்துக் கொள்ளும் வெறிக்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

கோத்ராவைச் சேர்ந்த முசுலீம் மதகுருதான், சம்பவம் நடப்பதற்கு முன்பாக, மசூதியின் மேலேறி நின்று, மதவெறியைக் கக்கும் விதமாக உரை நிகழ்த்தி, ராம பக்தர்களைத் தாக்கும்படி உள்ளூர் முசுலீம்களைத் தூண்டிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த மதகுரு சம்பவம் நடந்த அன்று மகாராஷ்டிராவில் இருந்தார் என்பது நிரூபிக்கப்பட்ட பிறகும், அவர் மீதான சதி வழக்குத் திரும்பப் பெறப்படாததால், அவர் இன்றுவரை தலைமறைவாக இருந்து வருகிறார்.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். கும்பல் தலைமை தாங்கி நடத்திய இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு உதவி செய்வதில் முன்னணியில் நின்ற மௌலானா உமர்ஜி, ஹரூண் அபித், ஹருண் ரஷீத் ஆகிய முசுலீம் மதத் தன்னார்வ தொண்டர்களும், ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டு, ""பொடா''வின் கீழ் சிறையில் தள்ளப்பட்டனர். இதன் மூலம் அநாதரவான முசுலீம்கள் தங்களுக்குள்ளேயே உதவி செய்து கொள்வதைக் கூட வக்கிரமாகத் தடுக்க முனைந்தது, மோடி அரசு.

கோத்ரா சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 135 பேரில், 22 பேர் தலைமறைவாகி விட்டனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 100 பேரில் 16 பேருக்கு மட்டும் பிப்.14, 2003 அன்று குஜராத் மாநில உயர்நீதி மன்றம் பிணை வழங்கியது. மீதி பேருக்கு பிணை கிடைத்துவிடக் கூடாது எனக் கங்கணம் கட்டிக் கொண்ட மோடி அரசு, பிணை தீர்ப்பு வெளிவந்த ஐந்தாவது நாளே, இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடந்துவந்த கோத்ரா வழக்கை, சட்டவிரோதமான முறையில் ""பொடா'' வழக்காக மாற்றியது.

மைய அரசின் கீழ் அமைக்கப்பட்ட பொடா மறுஆய்வு கமிட்டி, கோத்ரா வழக்கை பொடா சட்டத்தின்கீழ் விசாரிக்கத் தேவையில்லை என மே16, 2005 அன்றே கூறிவிட்டாலும், குஜராத் அரசும், ""பொடா'' சிறப்பு நீதிமன்றமும் இவ்வழக்கை இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டு வர மறுத்து வருகின்றன. பொடா மறு ஆய்வு கமிட்டியின் முடிவை அம்பலப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு கூட, கடந்த இரண்டாண்டுகளாக விசாரணையின்றி தூசி படிந்து கிடக்கிறது.

குஜராத்தில், நடத்தப்பட்ட இனப்படுகொலைகளுக்குப் பிறகு, அகதி முகாம்களில் வசித்துவரும் முசுலீம்களுக்கு அடிப்படையான வசதிகளைச் செய்து தர வேண்டும் எனக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், குஜராத் உயர்நீதி மன்றம் அரசுக்கு எந்த உத்தரவும் இட மறுத்துவிட்டது. மாறாக, அகதி முகாம்களில் வசித்துவரும் ஒவ்வொரு முசுலீமுக்கும் கொடுக்கப்படும் தினப்படியை ஆறு ரூபாயில் இருந்து எட்டு ரூபாயாக உயர்த்திக் கொடுப்போம் என்ற வாக்குறுதியை அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்திடம் அளித்தால் போதும் எனக் கூறி, தனது "கடமையை' முடித்துக் கொண்டது.

இப்படிப்பட்ட நீதிமன்றத்திடமிருந்து ""பொடா'' வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முசுலீம்களுக்கு; இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டுள்ள முசுலீம்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்று நம்ப முடியுமா? நரேந்திர மோடி, அவரது அமைச்சர்கள், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட 63 மேல்தட்டு குற்றவாளிகளும்; பிற ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளும் தண்டிக்கப்பட்டு விடுவார்கள் என நாம் கையைக் கட்டிக் கொண்டு மௌனமாக இருந்துவிட முடியுமா?

· செல்வம்

Thursday, November 15, 2007

ஈழப்போர் : சிங்களப் பேரினவாதத்தின் பல முனைத் தோல்வி

நான்காவது ஈழப்போர் நாளும் கடுமையாகி வருகிறது. மோதிக் கொள்ளும் இரு தரப்பாகிய தமிழீழ விடுதலைப் புலிகளாகட்டும், சிங்களப் பாசிச பேரினவாத அரசாகட்டும் இரண்டு தரப்புமே உரிமை பாராட்டிக் கொள்வதைப் போல எத்தரப்புக்கும் முழு சாதகமாகப் போரின் போக்கு இல்லை என்பதுதான் உண்மை.

யாழ்குடா நாட்டை இலங்கைத் தீவின் பிற பகுதியுடன் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலையை மூடியதன் மூலம், ஈழத் தமிழர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பேரடி கொடுத்துவிட்டதாக சிங்கள பாசிச அரசு எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் என்றால், இலங்கை விமானப் படைத் தளத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதன் மூலம், அந்நாட்டின் ஒரே சர்வதேச விமான நிலையமான பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்தின் இரவுச் சேவைகளை மூடிவிடும்படி செய்ததில் தமிழீழ விடுதலைப் புலிகள் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளனர்.

சிங்கள பாசிச இராணுவம் தொடர்ந்து நடத்தி வந்த வான்வழித் தாக்குதல்கள் குண்டு வீச்சுக்கள்; தமிழீழ விடுதலைப் புலிகளின் கொரில்லாத் தாக்குதல்கள் மற்றும் அரசியல் அழித்தொழிப்புகள்; இரண்டாவது ஜெனிவா பேச்சுவார்த்தைகள் கடந்த அக்டோபரில் முறிந்து போனது; ""யுத்தம் மற்றும் சமாதானம் என்ற சிங்களவரின் இரட்டை நாடகம் காரணமாக அரசியல் விடுதலைக்காகப் போரிடுவதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லாமல் செய்துவிட்டது'' என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடந்த அக்டோபர் தியாகிகள் தினத்தில் பிரகடனம் செய்தது; ஏற்கெனவே போருக்கான முடிவிலும் தயாரிப்பிலும் இருந்த சிங்கள பாசிச இனவெறி அதிபர் ராஜபக்சே, பிரபாகரனின் பேச்சைச் சாக்குவைத்து, புலிகள் அமைப்பை இராணுவ ரீதியில் நிலைகுலையச் செய்யாமல் இலங்கையில் சமாதானமோ முன்னேற்றமோ ஏற்படாது என்று அறிவித்தது — இவையெல்லாம் தற்போதைய நான்காவது ஈழப்போருக்கு பின்னணியாக அமைந்தவை.

ஈழப்போர் தாழ்ந்த நிலையில் நடந்து வந்தபோதே, அது ஏற்படுத்தியிருந்த பாதிப்புகள் ஈழத்தமிழர்களின் துயரங்கள் எண்ணிலடங்காதவையாகிவிட்டன. இலங்கை அமைதிக் கண்காணிப்புக் குழுவின் மதிப்பீட்டின்படி கடந்த பிப்ரவரி 2007 வரையிலான 15 மாதங்களில் மட்டும் 4000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 2004 சுனாமி பாதிப்பும் சேர்ந்து ஒரு பத்து இலட்சம்பேர் அகதிகளாக்கப்பட்டிருக்கின்றனர் என்று ஐ.நா சபை மற்றும் பிற சர்வதேச முகமை அமைப்புகள் கூறுகின்றன. சிங்கள இனவெறி பாசிச அரசு விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகள் காரணமாக உணவு, மருந்து மற்றும் பிற இன்றியமையாத் தேவைகள் கிடைக்காமல் ஈழமக்கள் பட்டினியாலும் நோயாலும் மடிவது அதிகரித்துக் கொண்டே போகிறது.

கடந்த ஜூலை 19ந் தேதி ஈழத்தின் கிழக்கு மாகாணத்திலுள்ள தொப்பிக்கலை குன்றில் இலங்கையின் சிறப்பு அதிரடிப்படையினர், சிங்கள அரசின் கொடியை ஏற்றி வைத்தனர். அதன்மூலம் கிழக்கு மாகாணம் முழுமையையும் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றி விட்டதாகப் பிரகடனம் செய்தனர்.

இதைக் கொண்டாடும் விதமாக, இலங்கையின் சுதந்திர தின விழாவுக்கு இணையாக ஜூலை 19ந் தேதி குதூகலமான இராணுவ அணிவகுப்புடன் கூடிய அரசு விழாவொன்றை கொழும்பு நகரில் சிங்கள பாசிச பேரினவாத அரசு நடத்தியது. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றியதைக் குறிக்கும் பட்டயம் ஒன்றை இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் முப்படைத் தளபதிகள் அளித்தனர். இந்தியா உட்பட இலங்கையின் நட்பு நாடுகளுடைய சிறப்பு அரசுப் பிரதிநிதிகள் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

உண்மையில் இந்த விழாவானது சிங்கள பாசிச பேரினவாத அரசின் பலமுனைத் தோல்விகளையும் நெருக்கடிகளையும் மூடி மறைப்பதற்கும், சிங்கள மக்களுடைய கவனத்தையும் கூடத் திசை திருப்புவதற்கான ஒரு ஏற்பாடுதான். இலங்கை அரசின் நிதி ஆதாரங்கள் அனைத்தும் ஆயுதக் குவிப்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான போருக்கும் திருப்பி விடப்பட்டுள்ள நிலையில் பணவீக்கமும், விலைவாசியேற்றமும் இலங்கைப் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குள் வீழ்த்திவிட்டது.

30 சதவீதமான இலங்கையின் அன்னியச் செலாவணி வருவாயை சுற்றுலாத் தொழில் மூலமே பெற்று வந்தனர். ஆனால், போர் மூண்ட பிறகு, குறிப்பாக கொழும்பு மீதான புலிகளின் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தின் இரவுச் சேவைகள் நிறுத்தப்பட்ட பிறகு, இலங்கையின் சுற்றுலாத் தொழில் ஏறக்குறைய முற்றிலும் முடங்கிப் போய்விட்டது. பிரபலமான பிரமுகர்கள், தொழில் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துப் பணம் பறிப்பது சிங்கள பாசிசத் துணை இராணுவப் படைகள் மற்றும் இரகசிய உலகக் குற்றக் கும்பல்களின் முக்கியத் தொழிலானது. ஆரம்பத்தில் தென்னிலங்கையில் வாழும் தமிழர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும், பிறகு இசுலாமியக் குடும்பத்தினரையும் பணயக் கைதிகளாகக் கடத்துவதும், தொடர்ந்து சிங்களக் குடும்பங்கள் பலியாவதும் என்றும் விரிவடைந்தது. இதனால் முக்கியத் தொழில் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நாட்டைவிட்டு ஓடுவது அதிகரித்துள்ளது.

இப்படி பணயப் பணத்துக்காக ஆட்களைக் கடத்துவதும், இளைஞர்கள் காணாமல் (!) போவதும் கடத்திப் படுகொலை செய்யப்படுவதும் பல ஆயிரங்களாகிவிட்டது என்று அரசு சாரா சேவை அமைப்புகளே புகார்கள் கூறுகின்றன. செய்தி ஊடக சுதந்திர அளவுக் குறியீட்டில் 2002ஆம் ஆண்டு 55வது இடத்தில் இருந்த இலங்கை, கடந்த ஐந்தாண்டுகளில் அதாவது 2007ஆம் ஆண்டில் 145வது இடத்துக்குச் சரிந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ ரீதியிலான ""வெற்றி'' இலங்கையில் அமைதியையும், முன்னேற்றத்தையும் கொண்டு வந்து விடும் என்ற ராஜபக்சே அரசின் ""கனவு'' பொய்த்து வருவதையே மேற்கண்ட விவரங்கள் காட்டுகின்றன.

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள், உலகின் பல நாட்டு மனித உரிமை அமைப்புகளின் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. உலக அரங்கில் தன்னை நியாயப்படுத்திக் கொள்வதற்காக ராஜபக்சே அரசு, இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி தலைமையில் இலங்கையில் மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஒரு சர்வதேச ஆணையம் நியமித்தது. அதன் விசாரணை ராஜபக்சே அரசுக்கு எதிராகப் போனபோது, அரசு பொது வழக்கறிஞரை விட்டு அந்த ஆணையத்துக்கு கடும் எதிர்ப்பு காட்டி அதையும் செயலிழக்கச் செய்துவிட்டது.

ஈழத்தின் கிழக்கு மாகாணத்தைப் புலிகளிடமிருந்து கைப்பற்றி இருப்பதுகூட, சிங்கள பாசிச அரசு பீற்றிக் கொள்வதைப்போல இராணுவ ரீதியிலான பெரும் வெற்றி என்று கூறிவிட முடியாது. கிழக்கைப் பொருத்தவரை, மட்டக்களப்பை அடுத்துள்ள எழுவன்கரை பகுதி பெரும்பாலும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்திருக்கிறது. இந்தப் பகுதி பெரும்பாலும் தமிழ் மற்றும் இசுலாமிய மக்கள் வாழும் கிராமங்களைப் பரவலாகக் கொண்டிருக்கிறது. மட்டக்களப்பு நீர்ப்பரப்புக்கு மேற்கில் பெரும்பாலும் தமிழர்கள் வாழும் கிராமங்களைக் கொண்ட படுவன்கரைப் பகுதிகள் பெரும்பாலும புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்திருக்கிறது.

ஆகவே, கிழக்கு மாகாணம் யாருடைய கட்டுப்பாட்டில் இருப்பது என்பது புலிகளின் நோக்கத்தைவிட, சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் இராணுவப் போர்த் தந்திர மாற்றங்களுக்கு ஏற்பவே அமைந்திருக்கிறது. ஜெயவர்த்தனே மற்றும் பிரேமதாசா ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர்கள் அதிகாரத்திலிருந்தவரை, கலவையான மக்களைக் கொண்டுள்ள கிழக்கைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் தமிழீழத்துக்கான புலிகளின் உரிமையை மறுக்கும் முகமாக அவர்கள் இலங்கையின் 42 சதவீத இராணுவ வலிமையை கிழக்கு மாகாணத்தில் குவித்து வைத்திருந்தனர். இதனால் வடக்கு மாகாணத்தைப் பெரும்பாலும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் கிழக்கின் வனப் பகுதிகளையும் அவற்றை ஒட்டியுள்ள தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளையும் மட்டுமே புலிகள் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

சந்திரிகா குமாரதுங்கா அதிபரான பிறகு, முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் முறிந்ததைத் தொடர்ந்து, 1995இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் மூண்டபோது சிங்கள இராணுவப் போர் உத்தி மாறியது. கிழக்கிலிருந்து இராணுவம் பின்வாங்கப்பட்டு, வடக்கு மாகாணத்தில் புலிகள் மீது கடும் தாக்குதல் ஒருமுகப்படுத்தப்பட்டது. புலிகளை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தி ஈழத்தமிழர்களுக்குப் பாதகமான அதிகாரப் பகிர்வுத் தீர்வைத் திணிக்கும் நோக்கில் அந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. யாழ் தீபகற்பப் பகுதியையும் வடக்கு வன்னியின் சில பகுதிகளையும் கைப்பற்றுவதில் சந்திரிகா அரசாங்கம் ஓரளவு வெற்றி பெற்றது.

என்றாலும், கிழக்கில் ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்ட விடுதலைப் புலிகள், சிங்கள இராணுவத்தின் பாரிய எதிர்ப்பு எதுவுமின்றி கிழக்கின் பெரும்பகுதியை எளிதில் கைப்பற்றிக் கொண்டனர். பிறகு இந்த வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டு, ஆயுதங்களையும் படைகளையும் குவித்து யானையிறவு உட்பட பல போர்களில் போர்த்தந்திர முக்கியத்துவமுடைய வெற்றிகளைப் புலிகள் ஈட்டினர். போரில் சந்திரிகா தலைமையிலான அரசாங்கம் தோல்விகளை சந்திக்க நேர்ந்ததோடு தென்னிலங்கையில் அது பின்னடைவுகளைக் கண்டது; நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி பெரும்பான்மை பெற்று, ரணில் விக்கிரமசிங்கே பிரதமரானார். அவருடன் சமாதான முன்னெடுப்புகள் மீண்டும் துவங்கியபோது, அதிபர் சந்திரிகா தலையிட்டு அம்முயற்சிகளைச் சிதைத்து, மீண்டும் சிங்களபேரின வெறி தலைவிரித்தாடியபோது, ராஜபக்சே தலைமையிலான கூட்டணி அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றது.

கடந்த ஆண்டு ஜூலையில் ராஜபக்சே அரசாங்கம், கிழக்கைக் கைப்பற்றுவது என்ற பழைய இராணுவ போர்த்தந்திரத்தை முன்வைத்து அறிவிக்கப்படாத போரைத் தொடுத்தது. சிங்கள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான புலிகளின் தற்கொலை கொரில்லாத் தாக்குதலைச் சாக்கு வைத்து சம்பூர், முத்தூர் பகுதிகள் மீது விமானக் குண்டு வீச்சுகள் நடத்தி, அங்கு வாழ்ந்த மக்கள் அகதிகளாக விரட்டப்பட்டனர். பிறகு மாவிலாறு அணையை மீட்பது என்கிற முகாந்திரத்தை முன்வைத்து அமைதிக் குழு மீதே சிங்கள இராணுவம் குண்டுமாறிப் பொழிந்தது. ஆரம்பத்தில் கடும் எதிர்ப்புக் காட்டிய விடுதலைப் புலிகள் செயல் தந்திர ரீதியிலான பின்வாங்குதல் செய்தபிறகு சாம்பூர், வாகரை, படுவன்கரை மற்றும் இறுதியாக தொப்பிக்கலையை சிங்கள இராணுவம் கைப்பற்றிக் கொண்டது. இந்தப் போரில், புலிகளிடமிருந்து பிரிந்துபோன கருணா தலைமையிலான ""துரோக''ப் படை சிங்கள இராணுவத்துக்குப் பெருந்துணையாக இருந்தது முக்கியமானதாகும்.

கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றியாகிவிட்டது. இனி வடக்கில் இராணுவத்தைக் குவித்து தாக்குதலை ஒருமுகப்படுத்திப் புலிகளைப் பலவீனப்படுத்தி விடலாம் என்று சிங்கள பாசிச அரசு மனப்பால் குடிக்கிறது. அதோடு இந்தியாவிலுள்ள மாவட்ட கவுன்சில் அளவுக்கான பஞ்சாயத்து அமைப்புகளை உருவாக்கி பெயரளவுக்கான அதிகாரப் பகிர்வு என்ற தீர்வை ராஜபக்சே அரசு முன் தள்ளுகிறது. இந்த இரு திட்டங்களுமே ஒருபோதும் பலிக்கப் போவதில்லை. நூற்றுக்கணக்கான கொரில்லாப் படையினரை கிழக்கில் பிரித்து ஒதுக்கி இருக்கும் விடுதலைப் புலிகள், வடக்கில் சிங்களப் படைகளை முன்னேற விடாமல் தாக்கி வருகின்றனர். தரையிலும் கடலிலும் கடும்போர் நடத்தும் புலிகள், இப்போது வான்வழித் தாக்குதலுக்குமான பலத்தைப் பெற்றுள்ளனர் என்பது முக்கியமானது.

ஆனாலும், சிங்கள பாசிச பேரினவாத அரசு அமெரிக்கா, இந்தியா உட்பட ஏகாதிபத்திய, துணை வல்லரசு ஆதரவைப் பெற்றுள்ளது. அந்நாடுகள் நவீன ஆயுதங்களைக் öகாடுத்து சிங்கள பாசிச இராணுவத்துக்கு முட்டுக் கொடுத்து வருகின்றன. இந்திய அரசிடம் நயந்து பேசி, சமரசம் செய்து கொள்ளும் புலிகளின் உத்தி சிறிதும் வெற்றி பெறாத நிலையில், புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதுதான் இந்தியாவின் ஈழத்தமிழர் விரோதச் செயல்களை ஓரளவு வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

சிங்கள பாசிச பேரினவாத அரசு புலிகளை இராணுவ ரீதியில் வெல்வது சாத்தியமில்லாமலிருக்கும் அதேசமயம், புலிகளும் ஈழ விடுதலையை போர் மூலம் சாதிப்பது என்ற தங்கள் உத்திக்கு சர்வதேச ஆதரவைப் பெறமுடியாமலேயே இருக்கின்றனர். ஒன்றுபட்ட இலங்கையைத் தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதையே அமெரிக்கா, இந்தியா உட்பட பிற நாடுகள் விரும்புகின்றன. தமது தலைமையிலான தமிழீழம் இந்த நாடுகளுக்குக் கீழ்ப்படிந்தே இருக்கும் என்ற புலிகளின் வாக்குறுதியை அவை ஏற்க மறுக்கின்றன. இத்தகைய பாதகமான நிலையை எதிர்கொள்வதற்கான சரியான அரசியல், இராணுவ உத்திகள் புலிகளிடமில்லை என்பதுதான் உண்மையாகும். விடுதலைப் புலிகள் தமது பாசிச நடவடிக்கைகளால் ஈழத் தமிழர்களின் ஒருமித்த ஆதரவைப் பெற முடியாமல் போனதோடு, புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும் இழந்துள்ளனர். ஆயுதங்களையும், உலகின் பிற்போக்கு அரசுகளின் ஆதரவைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையையும் வைத்து எந்த விடுதலைப் போரும் வெல்ல முடியாது என்பதற்குப் புலிகள் இயக்கம் தக்க சான்றாக விளங்குகிறது.

· ஆர்.கே.

Wednesday, November 14, 2007

உலகமயமாதலில் : நவீன அடிமைத்தனங்களின்றி சுதந்திரமான சொர்க்கமில்லை

பி.இரயாகரன்

14.11.2007

நான் எமுதிய 'உலகமயமாதலில் : நவீன அடிமைத்தனங்களின்றி சுதந்திரமான சொர்க்கமில்லை" என்ற புதிய நூல் கீழைக்காற்றின் ஊடாக வெளிவர உள்ளது. அநேகமாக சென்னை புத்தக கண்காட்சியில் பெறமுடியும். இதை நான் நேற்றுத் தான் எழுதி முடித்திருந்தேன். அந்த நூலின் முன்னுரை.


முன்னுரை


நீ மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்றால், மற்றவன் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். இதுவே உலகமயமாதல் என்ற பொருளாதாரத்தின் அடிப்படையான இயங்கு விதி. வெளிப்பார்வைக்கு இது உருத்தெரியாத ஒன்றாக உருத்திரிந்து இயங்குகின்றது. தனிமனித சுதந்திரம், தனிமனித தெரிவு, இருப்பதைக் கொண்டு எப்படியும் வாழ்வென்கின்றது. இதுதான், இப்படித்தான் உலகம் என்கின்றது. இதை மாற்ற முடியாது என்கின்றது. இதை இயற்கையானது என்கின்றது. இதையே மனித ஜனநாயகம் என்கின்றது. மனித சுதந்திரம் என்கின்றது. இதன் உள்ளாhந்த சமூக விதியை கற்றுக்கொள்ளாதே என்பதே, இதன் பொருள்.

நவீன அடிமைத்தனம் என்பது, இப்படி நுட்பமானது. அது சிந்தனை முறையில் திணிக்கப்படுகின்றது. மனித அறிவியல் தற்குறித்தனத்தை புகுத்துகின்றது. சில பொருட்கள், பொருட்களைப் பற்றி கதைத்தல், நுகர்த்தல் என்ற எல்லைக்குள், மனித அறிவை மலடாக்கி நவீன அடிமைத்தனத்தை வாழ்வியலாக மாற்றிவிடுகின்றது. சமூகம் தன்னைச் சுற்றியுள்ள இந்த வட்டத்தை விட்டு, சுயமாக வெளியில் வரமுடியாது. அந்த வகையில், நவீன ஊடகவியல் மனிதனை தனது சொந்த சிறையில் பாதுகாப்பாக வைத்துள்ளது.

அது தன்னைத் தானே இழிவுபடுத்துகின்றது. கற்றல், கற்றுக் கொள்ளுதல் என்பது, அறிவற்றவனின் வேலை என்கின்றது. சமூகத்தின் சாரத்தை தெரிந்து கொள்ளுதல், வாழத் தெரியாதவர்களின் முட்டாள்தனம் என்கின்றது. சமூக அவலத்தில் இருந்து சமூகத்தை விடுவிக்க முனைவதும் போராடுவதும், வேலையற்றவர்களின் கண்டுபிடிப்பு என்கின்றது.

இப்படித்தான் நவீன அடிமைத்தனம் புகுத்தப்பட்டுள்ளது. பொருள் உலகில், மனிதன் தானும் ஒரு உயிருள்ள சடப்பொருளாக மாறிவிடுகின்றான். உணர்வுகளும், உணர்ச்சிகளும் வக்கிரமடைந்து விடுகின்றது. மனிதனோ மனித உணர்ச்சியற்ற, மிருக உணர்ச்சி கொண்ட நுகர்வு வெறியனாகி விடுகின்றான். நான் என்ற எல்லைக்குள், அனைத்தையும் தீர்மானிக்கின்றான். சுயநலமோ அவன் மேல் ஏறி உட்காருகின்றது. அனைத்தையும் இதற்குள்ளாக்கி, இதற்குள்ளாகவே பார்த்து சமூகத்தை இழிவாடுகின்றது.

மனித குலத்தின் சொந்த அவலத்தை கண்கொண்டு பார்க்க மறுக்கின்றது. மனிதனுக்கு எதிரான நடத்தையை, தனது வாழ்வுக்கான கூறாக பார்க்கின்றது. இப்படி உலகளவில் மக்களைச் சுரண்டி சூறையாடி வாழ்கின்ற ஒரு வர்க்கத்தின் சொர்க்கம் தான், உலகமயமாதலின் சுபீட்சம். இப்படி உருவாகும் சிலரின் சுபீட்சமோ, சமூக உயிரியான மனிதனுக்கு நரகத்தை உருவாக்குகின்றது.

நவீன மனித அடிமைத்தனங்களே இன்று உலகமயமாகின்றது. இந்த அடிமைத்தனத்தை நாம் எங்கும் எதிலும் காணமுடியும். மனித அடிமைத்தனம் மீது, மனித இழிவுகள் புகுத்தப்படும் வரைமுறையற்ற தன்மை தான் உலகமயமாதலின் வீக்கம்.

உலகளாவில் உழைப்பு உருவாக்கும் சொத்துடமையை, சிலரின் சொத்தாக மாற்றுகின்றனர். அதை பாதுகாக்கும் சிலர்pன் அதிகாரம் வரை நீண்டு விரிந்தது தான், உலகமயமாதலின் சட்ட ஒழுங்கு. இதற்கு உட்பட்டது தான் அனைத்தும். தனிமனித சுதந்திரம் உட்பட ஜனநாயகம் அனைத்தும் இதற்கு கீழ்பட்டது தான். இதை மீறிய (தனிமனித) சுதந்திரம், ஜனநாயகம் என்று எதுவும், இந்த உலகமயமாதலில் கிடையவே கிடையாது.

தனிமனித சுதந்திரம் என்பது ஒரு வர்க்கத்தைச் சார்ந்தது என்பது, சிலரின் வர்க்க நலன்களுடன் தொடர்புடையதாக மாற்றப்பட்டுவிட்டது. முன்பு தனிமனித சுதந்திரம் என்பது ஒரு வர்க்கத்தின் பொது நலன் என்ற மாயை கலைந்து, அதில் உள்ள சிலர்pன் நலன் என்ற எல்லைக்குள் குவிந்துவிட்டது. விரல்விட்டு எண்ணக் கூடிய சிலருக்காக, உலகம் வேகமாக சுருங்கிச் செல்லுகின்றது.

இதனால் கஞ்சிக்கே வழியில்லாத மக்கள் கூட்டத்தின் வயிறோ, மேலும் மேலும் சுருங்கி வருகின்றது. மனித உழைப்பிலான அனைத்து வகை செல்வத்தையும், ஜனநாயகத்தின் பெயரிலும் சுதந்திரத்தின் பெயரிலும் திருடுவதே உலகமயமாதலின் பிழைப்பாகிவிட்டது.

இந்த தனிமனித நலன் சார்ந்த ஒழுக்கக்கேட்டை பீற்றிக் கொள்கின்ற வக்கிரம் தான், பண்பாடாக கலாச்சாரமாக புணர்ந்து விடப்படுகின்றது. இந்த உலகமயமாதலில் கதாநாயகர்களின் நுகர்வு வக்கிரங்களை பார்த்தும், கேட்டும் ரசிக்கின்ற ரசிகர் கூட்டமாக, ஒரு கற்பனை உலகில் மக்களை சஞ்சரிக்க கோருகின்றனர். இப்படி மக்கள் கூட்டத்தை அற்ப உணர்வுக்குள் திணிப்பதையும், அதை உணர்வதையும் தான் தனிமனிதனின் சுதந்திர உணர்வு என்கின்றனர்.

இவை எல்லாம் எதற்காக? யாருடைய நலனுக்காக? நிச்சயமாக உழைத்து வாழ்கின்ற மக்களுக்காக அல்ல. இந்த வகையில் உலக பொருளாதாரம் என்பது, தேசிய பொருளாதாரம் முதல் ஒரு தனி மனிதனின் பொருளாதாரம் வரையிலான, அதன் சுயேட்சையை அனுமதிப்பதில்லை. தனிமனிதனின் சுயேட்சை முதல் ஒரு மக்கள் கூட்டத்தின் சுயேட்சையான எந்த செயற்பாட்டையும், அதன் இருப்பையும் தகர்ப்பது தான் உலகமயமாதலின் உட்சாரம்.

அதாவது யாரெல்லாம் செல்வத்தை வரைமுறையின்றி மக்களைத் திருடிக் குவிக்கின்றனரோ, அதற்கேற்ற பொருளாதாரக் கொள்கையே உலகமயமாதல். இதுவே உலகப் பொருளாதாரம்.

இந்த உலக பொருளாதாரம் என்பது உயர்வான இலாப நோக்கில், அனைத்தையும் சிலரின் தனிச்சொத்தாக்கும் வகையில் திட்டமிட்டப்படுகின்றது. இதற்கு வெளியில் மக்களின் தேவையையும், அவர்களின் அவசியத்தையும் அடிப்படையாக கொண்டு, எவையும் திட்டமிடப்படுவதில்லை. அப்படி எந்த அரசும் கிடையாது. இந்த சமூக அமைப்பில் அதிகாரத்தை பெற விரும்புகின்ற எந்த கட்சியும், எந்த அரசு சாராத அமைப்பிடம் கூட, மக்கள் நலத்திட்டம் எதுவும் கிடையாது.

இவர்களிடம் முதன்மையான (அரசியல்) நோக்கமாக இருப்பது, உலகமயமாதலின் கொழுக்கின்ற வர்க்கத்தின் நலன்களை பாதுகாத்தபடி, தாம் எப்படி பிழைப்பது என்பது தான். இந்த உலகமயமாதல் என்ற சமூக அமைப்பை ஏற்றுக்கொள்ளும் அனைவரினதும் அரசியல் நலன்களும் கூட, இதற்கு உட்பட்டதே. மக்கள் நலன் என்பது, இவர்களின் அரசியல் வேலைத்திட்டத்தில் ஒரு அரசியல் கூறாகக் கூட இருப்பதில்லை.

மக்கள் கூட்டத்தை ஏமாற்ற, மக்களை பிரித்தாள முனைகின்றன. அரசியல் ரீதியாக இவர்கள் வைக்கின்ற கோசங்கள் முழக்கங்கள், மனிதன் தன்னை உணராத வகையில் வைக்கப்படுகின்றது. கடைந்தெடுத்த அரசியல் பொறுக்கிகளாகத்தான், இந்த சமூக அமைப்பினுள் அரசியல் செய்வோரின் நடத்தைகள் உள்ளன.

இந்த உலகமயமாதலில் யாரெல்லாம் பொருட்களை வாங்கி நுகரும் வசதியும் வாய்ப்பும் உள்ளனரோ, அவர்களுக்கு மட்டும் உற்பத்தி என்பது உலகமயமாதல் சந்தை விதியாகும். பொருட்களை வாங்கி நுகர முடியாத வகையில் சுரண்டப்படும் மனித குலத்தையிட்டு, உலகமயமாதல் சமூக அமைப்பு கவலைப்படுவது கிடையாது. இந்த சமூக அமைப்பை ஏற்றுக்கொண்ட கட்சிகள், கோட்பாடுகள் மற்றும் பொதுநல அமைப்புகள் அனைத்தும், இந்த சந்தை விதியை அனுசரித்து இதற்குள் செயல்படுகின்றது. இதனிடம் எந்த மனித முகமும், சமூக நலனும் இருப்பதில்லை. இது உலகமயமாதல் நோக்கில் நிர்வாணமானது.

இந்த உலகமயமாதல் அறிவியல் நோக்கு என்பது, பொருட்களை வாங்க முடியாதவன், பொருள் உலகில் வாழ தகுதியற்றவனாக பார்க்கின்றது. உலகமயமாதல் பொருட்களினாலானது. இலாபமே குறிக்கோளாக கொண்டது. இதற்குள்ளேயே நுகர்வு என்று தீர்மானிக்கின்றது. சுதந்திரம், ஜனநாயகம் என அனைத்தும் இதற்குள் அடிமையானதே. இதை மீறி பீற்றிக்கொள்ள எதுவும் கிடையாது. அற்ப வக்கிரத்தை கொட்டி, பீற்றுவதையே சுதந்திரம் என்கின்றன.

மனித பண்பாடு, கலாச்சாரம், கல்வி, மருத்துவம் என எதுவாக இருந்தாலும், உலகமயமாதல் என்ற தனிமனித நலனைச் சார்ந்த சந்தை விதிக்கு உட்பட்டதே. யாரெல்லாம் பணம் கொடுத்து இவற்றை பெறமுடியுமோ, அவர்களுக்கு மட்டுமான ஒரு உலகம் தான் உலகமயமாதல். இதற்கு வாழ வழியற்றவராக்கப்பட்டவர்கள், இந்த உலகமயமாதலில் வாழ முடியாது.

இப்படி வாழ முடியாதவர்கள் யார்? உலகமயமாதலில் வாழக் கூடியவன் நுகரும் பொருட்களை, அதன் அடிகட்டுமானங்களை உற்பத்தி செய்பவன் தான். இப்படி வாழ முடியாதவனை உற்பத்திசெய்யும் உலகமயமாதல் என்பது, மனித உழைப்பு அதியுயர் இலாப எல்லைக்குள் வரைமுறையின்றி சுரண்டப்படுவதால் உருவாக்கப்படுகின்றது. உலகமயமாதல் உற்பத்தி செய்பவனுக்கும் கொடுக்கும் அற்ப கூலியில், அவன் உற்பத்தி செய்தவற்றை அவனே நுகர முடியாது போகின்றது. உண்மையில் ஒரு வர்க்கத்தின் நுகர்வுக்குரிய பொருளை உற்பத்தி செய்பவன், அதை நுகர முடியாது பிறிதொரு வர்க்கமாகின்றான். இதனால் மனித வாழ்க்கையே வர்க்கப் போராட்டமாகி விடுகின்றது.

Tuesday, November 13, 2007

இராமன் பாலம் : இந்துவெறியர்களின் பொய்கள் - சதிகள்!

பாரதிய ஜனதாவின் அலுவலகத்தை தி.மு.க. தொண்டர்கள் நொறுக்குவதையும், கொடிமரத்தைப் பிடுங்கி எறிவதையும், தமிழகமெங்கும் வேதாந்தியின் உருவப்பொம்மைகளும் அத்வானியின் உருவப்பொம்மைகளும் எரிக்கப்படுவதையும் தொலைக்காட்சியில் பார்த்த வட இந்திய மக்கள் என்ன நினைத்திருப்பார்கள்? கட்சியின் தலைமை அலுவலகத்தின் கதவை மூடிக்கொண்டு கம்பக்கதவின் பின்னே பேயறைந்தாற்போல நின்று கொண்டிருந்த பா.ஜ.க தலைவர்களைப் பார்த்த அவர்களது வட இந்தியத் தலைவர்கள் எப்படிப் புழுங்கியிருப்பார்கள்? முகத்தில் பார்ப்பனக் கொழுப்பையும் திமிரையும் தவிர, வேறு உணர்ச்சிகளைக் காட்டவே தெரியாத ராம.கோபாலன்ஜியும், எச்.ராஜாஜியும் பீதியில் உறைந்து நின்றதைப் பார்த்த சங்கப் பரிவாரத்தின் காக்கி அரை நிஜார்கள் என்ன உணர்ந்திருப்பார்கள்?

பா.ஜ.க அலுவலகத்தின் மீது தி.மு.க.வினர் தாக்குதல் தொடுத்த சம்பவத்தின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்துவது நம் நோக்கமில்லை. "தங்கள் தலைவரின் தலையை வெட்டி வந்தால் எடைக்கு எடை தங்கம் தருவதாக' ஒரு பரதேசி கூறும்போது, அந்தத் தலைவனின் மீது அன்பு கொண்ட தொண்டர்கள் ஆத்திரம் கொண்டு தாக்குவது எங்கும் நடக்கக் கூடியது தானே என்று கருதலாம்.

ஆனால், இந்தத் தலைவர் இராமனை எள்ளி நகையாடிய தலைவர். அதற்கு எதிர்ப்பு வந்தபோதும் அதை லட்சியம் செய்யாத தலைவர். பாரதிய ஜனதாவின் மொழியில் சொன்னால், இந்துக்களின் மதத்தையும் கடவுளையும் இழிவு படுத்திய நாத்திகர். அவருக்கு ஆதரவாகத் திரண்டு வந்தவர்களோ அனைவரும் "இந்துக்கள்'

தங்கள் தலைவர் இராமபிரானை "இழிவு'படுத்துகிறார் என்று தெரிந்தும் அதைப் பொருட்படுத்தாதது மட்டுமல்ல, அதனைத் தட்டிக் கேட்ட சாமியாரையும் கட்சியையும் ஒரு இந்து திருப்பித் தாக்க முடியுமா? இராமனுக்கு எதிராக இராவணனைக் கொண்டாடும் ஒரு தலைவருக்குப் பின்னால் இந்து என்று சொல்லிக் கொள்ளும் ஒருவன் அணிதிரளமுடியுமா?

இதுதான் தமிழகம் தவிர்த்த இந்தியாவுக்கு, குறிப்பாக வட இந்தியாவுக்குப் புரியாத புதிர். பார்ப்பன பாசிச ஆர்.எஸ்.எஸ். கும்பலின் ஆத்திரத்தைத் தூண்டும் புதிர். அந்தப் புதிரின் நாயகன் பெரியார். பார்ப்பன இந்துமதவெறி சித்தாந்தத்துக்குப் பலியாகியோ அல்லது அஞ்சி நடுங்கியோ எஞ்சியுள்ள இந்தியா குனிந்து நிற்கையில், கம்பீரமாக அதனை எதிர்த்து நிற்கிறது தமிழகம். இது பெரியார் பிறந்த மண் என்பதற்காக நாம் கர்வம் கொள்ளக்கூடிய தருணம் இது.

கருணாநிதியின் பேச்சையும், தி.மு.க.வினரின் எதிர்த்தாக்குதலையும் மிகைபடப் புகழ்வது நமது நோக்கமல்ல. அதேநேரத்தில் அதனைப் அலட்சியப்படுத்திப் புறக்கணிப்பது நேர்மையும் அல்ல. இராமனை அம்பலப்படுத்தி கருணாநிதி ஒருவேளை பேசாமல் இருந்திருந்தால், ""ஏன் பேசவில்லை?'' என்று அவரைக் கேட்கும் யோக்கியதை கொண்ட யாரும் இந்திய ஓட்டுக் கட்சி அரசியலில் இல்லை. இத்தகைய விமரிசனங்கள் அவருக்கு அரசியல் ஆதாயத்தைத் தரப்போவதும் இல்லை. தேர்தல் அரசியல் சந்தர்ப்பவாதத்தில் கரைகண்டு, பாரதிய ஜனதாவுடன் கூட்டு வைக்கும் அளவுக்குச் சீரழிந்த பின்னரும், முன்னர் பெருங்காயம் வைத்திருந்த அந்தப் பாண்டத்தில் இன்னும் காரம் மிச்சமிருக்கிறது. அந்தக் காரம் தி.மு.க. என்ற கட்சியின் இயல்பாக இல்லாவிடினும், கருணாநிதி என்ற கிழவரின் இயல் பாக இருக்கிறது. பிழைப்புவாதத்தில் ஊறிப்போன அந்தக் கட்சியிலும் கூட, பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு என்ற உணர்வு ஒருவேளை அவர்களுக்கே தெரியாமல்கூட இன்னும் கொஞ்சம் எஞ்சியிருக்கிறது. "தந்தை'யின் சாயல் பிள்ளைகள் மீது படிந்திருக்கிறது!

சமஸ்கிருதத்தை எதிர்த்து நின்ற தமிழ், பார்ப்பனியத்தை எதிர்த்து நின்ற பவுத்தம், சமணம், சித்தர்கள் ... என்று ஒரு நெடிய மரபைக் கொண்டிருக்கும் தமிழகத்தில், மக்கள் மத்தியில் விரவியிருக்கும் இந்த பார்ப்பன எதிர்ப்புணர்வை வேறு யாரும் புரிந்து வைத்திருக்கவில்லை என்றாலும், தமிழகத்தின் பார்ப்பனக் கும்பல் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறது. ""இராமனைக் கற்பனை என்று கூறியதன் மூலம் கருணாநிதி இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்திவிட்டார்'' என்று ஜெயலலிதா அலறுவதும், ""கருணாநிதி திருந்தாததனால்தான் இத்தகைய கடும் விமரிசனங்கள் எழுகின்றன'' என்று தலைவெட்டி வேதாந்திக்கு வக்காலத்து வாங்குவதும் வெறும் தி.மு.க. அ.தி.மு.க. போட்டி அரசியல் அல்ல. பார்ப்பன எதிர்ப்பு மரபை தமிழகத்திலிருந்து ஒழித்துக் கட்டி, பார்ப்பன சாம்ராச்சியத்தை நிறுவ வேண்டுமென்ற ஜெவின் வெறிக்கு இவை நிரூபணங்கள். பாரதிய ஜனதாவால் இந்த இராமன் விவகாரத்தைத் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கொண்டு செல்ல இயலாது என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும். அதனால்தான் அந்தப் பணியைச் சொரணையற்ற தன் அடிமைகளிடம் ஒப்படைத்திருக்கிறார்.

பார்ப்பன பாசிசத்தை நிலைநாட்டும் தங்களது பொது நோக்கத்துக்காகத்தான் சங்கராச்சாரி கைதை ஒட்டி ஏற்பட்ட பகையை மறந்து சோவும், சுப்பிரமணிய சாமியும், அத்வானியும் ஜெயலலிதாவுடன் கை கோர்க்கின்றனர். அன்று சு.சாமிக்கு எதிராகத் தனது மகளிரணியை வைத்து அம்மண ஆட்டம் நடத்திக் காட்டிய அம்மையார், "சேது சமுத்திரத் திட்டத்துக்கு இடைக்காலத் தடை வாங்கிய சாதனைக்காக' இன்று சுப்பிரமணிய சாமிக்கு மலர்க்கொத்து அனுப்பி வைக்கிறார். தினமணியோ, மதியின் அருவெறுக்கத்தக்க கேலிச்சித்திரங்களாலும், வன்மம் தெறிக்கும் தலையங்கங்களாலும் நிரம்பி வழிகிறது. இராமன் சேது பிரச்சினையில் இந்தத் தமிழ்நாட்டுப் பார்ப்பனக் கூட்டணியின் துணையை பாரதிய ஜனதா பெரிதும் நம்பியிருக்கிறது.

"வெளிக்கியிருக்கப் போனவனுக்கு விளாம்பழம் கிடைத்த கதையாக' பாரதிய ஜனதாவுக்கு அகப்பட்டிருக்கிறது இராமன் சேது பிரச்சினை. எந்திரத்தில் மடக்கி மடக்கித் நசுக்கப்பட்ட கரும்பு போல "அயோத்தி இராமன்' சக்கையாகி பொடியும் ஆகி உதிர்ந்துவிட்டான். இனி, அயோத்தி இராமனைக் காட்டி அந்தக் கோயில் பூசாரியிடமே கூட ஓட்டு வாங்க முடியாத நிலை! அரசு அதிகாரத்தை இழந்த நிலையில் பதவிப் போட்டியால் பா.ஜனதாக் கட்சி கந்தலாகிக் கிடந்தது.

காங்கிரசை விஞ்சும் அளவுக்கு பதவிப்போட்டி, கோஷ்டித் தகராறுகள், போலி விசா, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க இலஞ்சம், காமக் களியாட்டங்கள், அதிகாரத் தரகு பேரங்கள் என ஆளும் வர்க்கமே முகம் சுளிக்குமளவுக்கு மொத்தக் கட்சியுமே அழுகி நாறியது. அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் முதல் மன்மோகன் சிங்கின் மறுகாலனியாக்கக் கொள்கைகள் வரை அனைத்திலுமே காங்கிரசின் கொள்கைதான் பாரதிய ஜனதாவின் கொள்கையும் என்பதால் "எதை எதிர்ப்பதன் மூலம் எதிர்க்கட்சியாக இருப்பது' என்ற கேள்விக்கு பாரதிய ஜனதாவிடம் விடை இல்லை. எனவே, கையில் கிடைத்திருக்கும் இந்த "விளாம்பழத்தை' அது விடுவதாக இல்லை.

இராமன் பாலம் குறித்த பாரதிய ஜனதாவின் ஆவேசங்கள் எல்லாம் வெறும் வேசங்கள். மார்ச் 9, 2001 அன்று சேது சமுத்திரத்திட்டம் குறித்த ஆய்வுக்கு உத்தரவிட்டவர் அப்போதைய அமைச்சர் அருண் ஜேட்லி. அதன்பின் உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, திருநாவுக்கரசு உள்ளிட்ட 6 பா.ஜ.க அமைச்சர்கள் தற்போதைய கால்வாய்ப் பாதைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். கடலுக்கடியில் பாலம் இருக்கிறதா என்று "கண்டுபிடிப்பதற்காக' சுரங்கத்துறை அமைச்சர் உமாபாரதி நியமித்த ஆய்வுக்குழுவும் "அவ்வாறு ஏதுமில்லை' என்று அழுத்தம் திருத்தமாக அப்போதே அறிக்கை கொடுத்துவிட்டது. அன்றைய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சத்ருகன் சின்ஹா, ""ஆதாம் பாலத்துக்கு (அதாவது இராமர் பாலத்துக்கு) குறுக்கேதான் சேதுக்கால்வாய் தோண்ட இருக்கிறோம்'' என்று செப். 29, 2003 அன்று நாடாளுமன்ற மேலவையில் அறிவித்துமிருக்கிறார். இத்தனை உண்மைகளையும் இருட்டடிப்பு செய்து விட்டு இன்று சாமியாடிக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா.

பாரதிய ஜனதாவிலிருந்து வெளியேறிய உமாபாரதி, தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்காக பத்துப் பேருடன் ராமேசுவரம் கடலில் நின்று அவ்வப்போது போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். மற்றபடி ஜெயலலிதா, பா.ஜ.க உள்ளிட்ட யாரும் இதனை ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை.

மே2007இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனுவுக்கு உயிர் கொடுத்து பிரச்சினையைத் துவங்கி வைத்தவர் தலைமை நீதிபதி ஷா. ""ஆதாம் பாலம் (இராமன் பாலம்) ஒரு தொன்மை வாய்ந்த சின்னம்தான் என்பது குறித்து தொல்லியல் துறையைக் கொண்டு ஆய்வு செய்யாமலேயே கால்வாய் வெட்டப்படுவதாகவும் இதற்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும்'' என்றும் கோரினார் சு.சாமி. அவை இயற்கையாக அமைந்த மணற்திட்டுக்கள் என்பது பா.ஜ.க அரசின் காலத்தில் நடத்தப்பட்ட ஆய்விலேயே நிறுவப் பட்டுவிட்டதால் தொல்லியல் துறையின் ஆய்வு என்ற கேள்வியே எழவில்லை. எனினும், நீதிபதி ஷா வழக்கைத் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக, சுப்பிரமணியசாமியின் கருத்தை வழிமொழிந்து நீதிமன்றத்தில் ஒரு பிரச்சார உரை நிகழ்த்தினார். பிறகு வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தார். பார்ப்பன மதவெறியின் முதல் கொள்ளி இப்படித்தான் வைக்கப்பட்டது.

பிறகு உச்சநீதிமன்றத்தில் தொல்லியல் துறை தாக்கல் செய்த மனுவின் வாசகங்களைக் காரணம் காட்டி பிரச்சினையை ஊதிவிட்டது விசுவ இந்து பரிசத். ""ஆதாம் பாலம் என்பது இயற்கையான மணற்திட்டு. அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல'' என்று கூறிய தொல்லியல் துறை,
இராமாயணமும் அதன் பாத்திரங்களும் புனைகதைகளே என்றும் குறிப்பிட்டது. உடனே களமிறங்கினார் அத்வானி. ""இது தேவ தூஷணம்'' என்றும், இந்துக்களுக்கு அவமதிப்பு என்றும், இந்தியா என்ற கருத்தாக்கத்தையே இது நிராகரிப்பதாகவும் கூறி, மன்மோகன் சிங்கை தனியே சந்தித்து ஆட்சேபம் தெரிவித்தார். ""ஆட்சியே போனாலும் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஒரு வார்த்தையைக் கூடத் திருத்தமாட்டேன்'' என்று வெறி கொண்டு பேசிய மன்மோகன்சிங், அத்வானி சொன்ன மறுகணமே ஆட்சேபத்துக்குரிய அந்த வாக்கியங்களை நீக்குமாறு தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டார். மறுநாள் மொத்த மனுவையுமே வாபஸ் பெற்றது காங்கிரசு.

""ராமன் இந்தியக் கலாச்சாரத்தின் பிரிக்கவொண்ணாத அங்கம். இது வழக்குக்கோ விவாதத்துக்கோ உரிய பொருளே அல்ல... இராமன் இருந்தாரா என்பதை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. இந்த உலகமே இராமனால்தான் இருக்கிறது... நம்பிக்கையின் அடிப்படையிலான விசயங்களுக்கு நிரூபணம் தேவையில்லை.'' — இது அத்வானியின் அறிவிப்பு அல்ல; மனுவை வாபஸ் பெறுமாறு உத்தரவிட்ட காங்கிரசு அரசின் சட்ட அமைச்சர் பரத்வாஜின் பிரகடனம். 1980களில் பாபர் மசூதியின் கதவுகளைத் திறந்து இராமன் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்க ஏற்பாடு செய்ததும் இந்தப் பார்ப்பன நரிதான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

உடனே அமைச்சர் அம்பிகா சோனி ராஜினாமா செய்யவேண்டும் என்று அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும் ஆர்.கே.தவாணும் கோரினர். தொல்லியல் துறை அதிகாரிகள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். மனுவை திரும்பப் பெற்றதை தி.மு.க.வைத் தவிர ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. போலி கம்யூனிஸ்டுகளோ, ""இராமன் கற்பனைப் பாத்திரம் என்று தொல்லியல் துறை தனது மனுவில் கூறியிருக்கத் தேவையில்லை'' என்று கடிந்து கொண்டனர்.

இராமன் என்றொருவன் இருந்ததற்கும், அவன் பாலம் கட்டியதற்கும் ஆதாரமாக வால்மீகி இராமாயணம், துளசிதாசரின் ராமசரித மானஸ் ஆகிய "வரலாற்று நூல்களை' சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும்போது, ""இது வரலாறு அல்ல, புராணக் கட்டுக்கதை'' என்று மறுக்காமல் தொல்லியல் துறையால் எப்படி வாதாடமுடியும்? பெரும்பான்மை இந்துக்களின் மனம் புண்படும் என்பதற்காக இந்த வரலாற்று உண்மையைக் கூறக்கூடாது என்பது எந்த வகை மதச்சார்பின்மையில் சேரும்? தொல்லியல் என்பது ஒரு வரலாற்று விஞ்ஞானம். ஒரு அறிவியலாளன், அவன் சான்றுகளின் அடிப்படையில் தான் கண்ட உண்மைகளைக் கூறவேண்டுமா அல்லது புராணப் புரட்டுகளுக்கு விஞ்ஞானம் என்று சான்றிதழ் தரவேண்டுமா? "பூமி சூரியனைச் சுற்றுகிறது' என்று கூறியதற்காக கலீலியோவைக் கூண்டிலேற்றிய பாதிரிகளுக்கும் இந்தக் காங்கிரசு களவாணிகளுக்கும் என்ன வேறுபாடு? ஜெர்மானியர்கள்தான் தூய ஆரியர்கள் என்றும் வெள்ளையரல்லாதோர் அரைக்குரங்குகள் என்றும் அறிவியல் பாடம் எழுதச் சொன்ன இட்லரின் பாசிசத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? ஒரு வேறுபாடும் இல்லை.

இதோ பாசிசம் பேசுகிறது. ""இராமன் வாழ்ந்ததை மறுக்கும் ஒரு அரசுக்கு ஆட்சியில் நீடிக்க உரிமை இல்லை'' என்கிறார் அத்வானி. ""தேவதூஷணம் செய்பவனின் நாக்கை அறு, தலையை வெட்டு என்று பகவத்கீதை ஆணையிடுகிறது'' என்கிறான் வேதாந்தி. அதே நேரத்தில் "விவாதத்துக்குத் தயார்' என்று சவடாலும் அடிக்கிறார் அத்வானி. பார்ப்பனக் கும்பலின் இந்த இரட்டை நாக்கு புரளும் விதத்தைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.

விவாதிக்கத் தயாராக இருப்பவன் தொல்லியல் துறையின் அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் அல்லவா விவாதித்திருக்க வேண்டும்! எங்கே விவாதத்தின் முடிவில் ஒரு தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டியிருக்குமோ அங்கே விவாதிக்க மறுத்து, "இது எங்கள் நம்பிக்கை' என்று கூறுவது; நீதிமன்றத்துக்கு வெளியே வந்து "விவாதத்துக்குத் தயார்' என்று ஜம்பமடிப்பது இதுதான் பார்ப்பன பாசிஸ்டுகள் தொடர்ந்து கையாண்டுவரும் உத்தி.

அயோத்தியில் அகழ்வாராய்ச்சி நடத்திய ப.ப.லால் என்ற ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தொல்பொருள் ஆய்வாளர் அயோத்தியில் மனிதர்கள் வாழத்தொடங்கியதற்கான தடயம் கி.மு. 700ஆம் நூற்றாண்டிலிருந்து இருப்பதாகக் கூறினார். அன்று இவருடைய ஆய்வைத்தான் இராம ஜென்மபூமிக்கு ஆதாரமாகக் காட்டியது ஆர்.எஸ்.எஸ். தற்போது இராமர் பாலம் 17.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்று வாதிடுகிறார்கள். இராமன் பிறப்பதற்கு முன்பே இராமன் பாலம் கட்டப்பட்டுவிட்டது போலும்! இந்தக் கேலிக்கூத்துடன் எப்படி விவாதம் நடத்துவது?

இராமன் பாலத்தில் தோரியம் கொட்டிக்கிடப்பதாகவும், அதனால் தான் கால்வாய் தோண்ட வேண்டாம் என்று கூறுவதாகவும் ஒரு புதுக் கரடி விடுகிறார் இல.கணேசன். கால்வாய் தோண்டினால் தோரியம் கரைந்து விடுமா, அவ்வாறு தோரியம் இருந்தாலும் அதை வெட்டாமல் எடுக்கத்தான் முடியுமா? அல்லது அங்கே யுரேனியமே கொட்டிக் கிடந்தாலும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் வேண்டாம் என்றுதான் பாரதிய ஜனதா சொல்லிவிடுமா? எதுவும் இல்லை. பிறகு விவாதம் எதற்கு?

5 நாளில் 800 மைல் நீளத்துக்குப் பாலம் போட்டதாகக் கூறுகிறது வால்மீகி இராமாயணம். 30 மைல் கூட இல்லாத இலங்கைக்கு 800 மைல் நீளத்துக்குப் பாலம் போட்டதாகக் கூறும் கோமாளித்தனத்துக்கு எந்த "சோ' விளக்கம் கூறுவார்? இன்று அதிநவீன கருவிகளை வைத்துக் கொண்டு ஒரு மேம்பாலம் கட்டுவதற்கே மாதக்கணக்கில் ஆகும்போது அணிலும் குரங்கும் சேர்ந்து 5 நாளில் பாலம் கட்டிய கட்டுக்கதையுடன் எப்படி விவாதம் நடத்துவது?

"விவாதம் நடத்தத் தயார்' என்று கூறுபவர்கள் அறிவுபூர்வமாகக் கேள்வி கேட்டால் ஆத்திரம் அடைவார்கள். "உன் அறிவுக்கெல்லாம் எட்டாத பேரறிவு அது' என்று மிரட்டுவார்கள். கடைசியில், ""எங்கள் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் மத உணர்வைப் புண்படுத்துகிறாய்'' என்று குற்றம் சாட்டுவார்கள்.

விவாதம் என்றாலே அங்கே சான்றுகளின் அடிப்படையில்தான் முடிவுக்கு வரமுடியும். சான்றுகளால் நிரூபிக்கத் தேவையில்லாத "நம்பிக்கை' விவாதத்துக்கு வருவதில்லை. மேலே சொர்க்கமும் கீழே நரகமும் இருப்பதாக நம்பும் மக்கள் அதை நிரூபிக்க முயல்வதில்லை. இராமாயணத்தை நம்பும் பக்தர்கள் அது வரலாற்று ரீதியாக உண்மைதானா என்பது குறித்து எப்போதும் கவலைப்பட்டதில்லை.இராமனை அவதார புருசனாகக் கருதும் அவர்கள் அவனுடைய நடவடிக்கைகள் மனிதனுக்கு சாத்தியமானவைதானா என்று சோதித்துப் பார்க்கவும் முயலுவதில்லை.

அது அவர்களுடைய தனிப்பட்ட மத நம்பிக்கை. அவ்வளவுதான். ""இராமன் என்று ஒருவன் இருந்தான். அவன் கடலுக்குக் குறுக்கே பாலம் கட்டினான்'' என்று நம்புகிறவர்கள் நம்பிக்கொள்ளட்டும். ஆனால், அந்த நம்பிக்கை நாட்டின் பொது முடிவாக ஆக்கப்படுமானால் அதனைச் சான்றுகள் மூலம் நிரூபிக்கத்தான் வேண்டும். கேள்விகளுக்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். அவ்வாறு கேட்பது மத உணர்வைப் புண்படுத்துவதாகாது.

ஆனால், பார்ப்பன பாசிஸ்டுகளோ இராமாயணத்தை இதிகாசமாகவும் அதே நேரத்தில் வரலாறாகவும் காட்ட முயற்சிக்கிறார்கள். இராமனை ஒரே நேரத்தில் கடவுளாகவும் வரலாற்று மாந்தனாகவும் காட்ட முயல்கிறார்கள். வரலாற்று வகைப்பட்ட கேள்விகளை எழுப்பினாலோ, இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்திவிட்டதாக அல றுகிறார்கள். இந்து தேசிய அரசியலைக் கட்டமைப்பதற்கான சூழ்ச்சிதான் இது.

இராமாயணம் ஒரு கட்டுக்கதைதான். ஆனால் அது இந்தியாவின் பழங்குடி மக்களான திராவிடர்களுக்கு எதிராக ஆரியர்கள் நடத்திய ஆக்கிரமிப்பு யுத்தத்தையும், நால்வருண அமைப்பு எனும் பார்ப்பனக் கொடுங்கோன்மையையும் பிரதிபலிக்கும் கட்டுக்கதை. இதில் வரும் சமூக உண்மைகள் மட்டுமே வரலாற்றுத் தன்மை வாய்ந்தவை. இராமன் பாலம், புஷ்பக விமானம், பிரம்மாஸ்திரம் போன்றவை அனைத்தும் புனைகதைகள். பார்ப்பன பாசிஸ்டுகளோ இதில் வரும் புனைகதைகளை வரலாறு என்று நம்பச் சொல்கிறார்கள். பார்ப்பனக் கொடுங்கோன்மையை நிரூபிக்கும் சமூக உண்மைகளை மட்டும் புனைகதையென்று கருதி மறந்துவிடச் சொல்கிறார்கள்.

இராமன் பாலம் வரலாற்று உண்மை என்றால், இந்த நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் தொடர்புபடுத்தி பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருக்கும் எல்லா கட்டுக்கதைகளையும் வரலாற்று உண்மைகளாக அங்கீகரிக்க வேண்டியிருக்கும். "ராமன் தலைவைத்துப் படுத்த கல், சீதை குளித்த இடம், இலட்சுமணன் முதுகு சொறிந்த இடம்' என்று இலட்சக்கணக்கான "வரலாற்று' முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அங்கீகரிக்க வேண்டியிருக்கும்.

அரசு பதவியில் இருக்கும் இந்துக்கள் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கு விரோதமாக அரசு நிகழ்ச்சிகளையே மதச்சடங்குகளாக்குகிறார்கள். மத நம்பிக்கையை அரசு மேடையில் நின்று பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களுக்கு அந்த உரிமை உண்டாம். ஆனால், கருணாநிதி மட்டும் தன்னுடைய நாத்திகக் கருத்தை ஒரு மத நம்பிக்கை போல மனதுக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமாம். வெளியில் பேசினால் அது மக்களின் மத உணர்வைப் புண்படுத்துமாம்.

மதத்தை தனிப்பட்ட நம்பிக்கையாக வைத்துக் கொள்வதும், பொது நடவடிக்கைகளை அறிவியல் கண்ணோட்டத்துக்கு உட்படுத்துவதும்தான் மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் சாரம். ஆனால், அறிவியலின் பாற்பட்ட நாத்திகக் கருத்தை "தனிப்பட்ட மத நம்பிக்கையைப் போல' மனதிற்குள் வைத்துக் கொள்வதும், மதக்கருத்தை மட்டும் வெளியில் பேசுவதும்தான் உண்மையான மதச்சார்பின்மை என்கிறது பார்ப்பன பாசிசக் கும்பல். இராமனது இல்லாத மகிமைகளைப் பிரச்சாரம் செய்ய ஆத்திகத்துக்கு உரிமை உண்டென்றால், அதன் பொய்மையை அம்பலப்படுத்தும் உரிமையை நாத்திகத்துக்கு எப்படி மறுக்க முடியும்?

ஒரு மனிதன் தன்னை வருத்திக் கொள்வதை மட்டும்தான் மத உணர்வு என்று கருதி சகித்துக் கொள்ள முடியும். ஆனால், சக மனிதனை சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும், மக்களின் மொழியை "இழிமொழி' என்றும் கூறி நசுக்குகிறது பார்ப்பன மதம். இந்த ஆதிக்க உணர்வை மத உணர்வு என்று எப்படி அங்கீகரிக்க முடியும்?

இராமாயணத்தை அங்கீகரிப்பதென்பது என்பதன் பொருள், பார்ப்பன ஆதிக்கத்தையும் சூத்திர அடிமைத்தனத்தனத்தையும் அங்கீகரிப்பதுதான். பெரியாரும் அம்பேத்கரும் இதனை ஆணித்தரமாக நிறுவியிருந்த போதும், அவர்களைத் தங்களது அரசியல் பிழைப்புவாதத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் கட்சிகள் எவையும் அவர்களுடைய பார்ப்பன எதிர்ப்புக் கருத்துகளைப் பேசுவதில்லை. பிற்படுத்தப்பட்டோர்தாழ்த்தப்பட்டோர் என்று பேசும் தலைவர்கள் மத்தியில் ஒளிந்திருக்கும் சுக்ரீவன்களையும், வீடணன்களையும், ஆழ்வார்களையும் நாம் அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்.

நாடெல்லாம் சுற்றிக் கடைசியில் வரவேண்டிய இடத்திற்கு வந்துசேர்ந்திருக்கிறது பார்ப்பன பாசிசம். கால்வாய் வெட்டுவதற்குக் காலதாமதம் ஆனாலும் பார்ப்பனக் கும்பலின் கல்லறைக்குக் குழி வெட்டும் வேலையை உடனே துவக்குவோம். காசியிலிருந்து ராமேசுவரத்திற்குத் தீர்த்த யாத்திரை வரும் இந்து பக்தர்கள், பார்ப்பன பாசிசம் புதைக்கப்பட்டிருக்கும் கல்லறையையும் தரிசித்துச் செல்லட்டும்!

· இரணியன்

Monday, November 12, 2007

விடுதலைப் புலிகளால் போர் மூலம்..மக்களை முட்டாளாக்கி வருகிறது இந்தியச் சாணக்கியம்!

வணக்கம், வாசகர்களே! இது தமிழ்ச்செல்வன் படுகொலை குறித்துப் பேராசிரியர். டாக்டர் சி. சிவசேகரம் அவர்கள் எழுதிய சிறு குறிப்பு. இதுள் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய போராட்ட அணுகுமுறை குறித்த பார்வைகளை, இலங்கையிலிருந்தபடியே பேராசிரியர் பார்க்கின்றார். இதைத்தான் நாமும் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றோம். இருந்தும், புலிகளின் போராட்ட முறைகளிலோ அன்றி மக்களுக்கும் அவர்களுக்குமான உறவுகளிலோ, அணிச் சேர்க்கையிலோ-வெஜனப்படுத்தல்களிலோ, உட்கட்சி ஜனநாயகப் பண்பிலோ இதுவரை மாற்றமில்லை. எனினும், தொடர்ந்தும் நாம் எழுதியே வருகிறோம்!இங்கே, புலிகளின் போராட்டத்தைத் தீர்மானிக்கும் பிராதான சக்திகள் எவை?


மக்களா?


வெளிபுறச் சக்திகளா?


இந்தக் கேள்விக்கு நாம் ஏலவே பதிலைத் தந்திருக்கிறோம். மக்களின் எந்தப் பங்களிப்புமின்றித் தம்மால்(புலிகள்) செய்யப்படும் போராட்டத்தால் அதே மக்களைப் பாதிப்படைய வைத்தபடி, அவர்களைக் கேடயமாக்கும் இந்தப் போராட்ட முறையானது சாரம்சத்தில் மக்களின் உரிமைக்கு-விடுதலைக்கெதிரானதென்பதை நாம் மீளவும் அறுதியிட்டுச் சொல்லும் அரசியல் விஞ்ஞானம் உண்மையானதென்பதை பேராசிரியர் சிவசேகரத்தின் கருத்துத்தான் நிறுவவேண்டுமென்பதல்ல. என்றபோதும, பேராசிரியர் இலங்கை மண்ணில் இருந்தபடி இந்தப் போராட்டத்தை மிக நுணுக்கமாகப் பார்த்து வருபவர். மக்களின் அழிவுக்குப் பின்பான பாரிய மானுட அவலத்துள் தமிழ் பேசும் மக்களின் சமூக சீவியம் தள்ளப்பட்டபின், மக்களின் ஆன்ம வலுக் குன்றியிருக்கிறது. வாழ்வின் எதிர்பாராத அழிவில் மானுடம் கூட்டுப்பலத்தையிழந்து தவிக்கிறது. மக்கள், போராட்டத்தோடு மானசீகமாகப் பிணையுறாதபோது இத்தகைய தடங்கல்கள் அவர்களையின்னும் போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தும். அதை நாம் இப்போது நேரிடையாகக் காணினும் நமது போராட்ட முறையில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்தபாடிலில்லை!

இது, எத்தகைய அரசியலை மக்கள் முன் வைத்திருக்கிறது?

மக்களே வரலாற்றைப்படைபவர்களென ஆயிரம் தடவை பட்டியல் போட்டுக் கூறும் புலிகளின் பிரசுரங்கள் அந்த மக்களைப் போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தியபடி இதைச் செய்யும் அரசியல்தான் என்ன?

மக்களின் விடுதலையை, அவர்களின் அடிமைத்தனத்தை-தமிழ்பேசும் ஒரே காரணத்தால் அவர்களை ஒடுக்கிவரும் சிங்களப்பாசிச ஒடுக்குமுறையைத்தன்னும், அவர்கள்மீது திணிக்காதிருக்கும் ஒரு காத்திரமான வெகுஜனப் போரை முன்னெடுக்க முடியாது புலிகள் வெறும் இராணுவவாதத்துக்குள் மூழ்கிக்கிடக்கக்காரணம் என்ன?-தமது அதி முக்கியமான தலைவர்களை இழக்கக் காரணமென்ன?அவர்களது மரணத்தில் அரசியல் செய்ய முனையும் பிற்காரணங்கள் என்ன?, மக்களை வெறும் இனவாதத் தீயில் மூழ்கடிக்க முனையும் வியூகம் என்ன?, சிங்கள அரசு செய்யும் அதே காரியத்தைத் தமிழ் மக்கள் மத்தியில் புலிகள் செய்து முடிக்கும் அரசியலிலிருந்து நாம் என்ன அரசியலை எதிர் கொள்கிறோம்?

இங்கேதான் உண்மையொன்றுண்டு!

அதாவது, புலிகள் எந்தப் பொழுதிலும் மக்களின் பிரச்சனைகளிலிருந்து தமது போராட்டப் பாதையைத் தீர்மானிக்கவில்லை. மக்களின் விடுதலைக்காக, மக்களின் வெகுஜனப் போராட்டத்தால் மக்களே ஆயுதம் ஏந்திப் போராட்ட அணியாகமாறியவர்கள் அல்லப் புலிகள். புலிகள் அன்னிய நலன்களின் அற்ப சலுகைகளுக்காக அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு ஆயுதக் குழுவென்பதற்கு இன்றைய பற்பல நிகழ்வுகள் சாட்சியாகின்றன. இதுவரை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்ட முன்னெடுப்புகள் யாவும் மக்களின் அழிவை மேன்மேலும் வலுப்படுத்தியதேயொழிய, மாறாக விடுதலையை அல்ல!இது எந்தவொரு விடுதலை அமைப்புக்குள்ளும் நிகழாத எதிர்மறை நிலையாகும்.

புலிகள் மக்களின் நலனைத் தமது எஜமானர்களுக்காக ஏலம்விட்டுப் போரைச் செய்து வருகிறார்கள். இதிலிருந்து மக்கள் திசைமாறித் தமது விடுதலையைத் தாமே போராடித் தீர்மானித்துக்கொள்ள முடியாதவொரு சர்வதிகாரத்தனமான கருத்தியல் மற்றும் வன்முறைசார் ஜந்திரங்களால் மக்களின் அனைத்து வகை முன்னெடுப்பும் அடித்து நொருக்கப்பட்டுவருகிறது. இதனால் நாம் தொடர்ந்து அன்னிய சக்திகளாலும், இலங்கைப் பாசிச சிங்கள அரசாலும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு, திட்டமிட்டு அழிக்கப் படுகிறோம். இதற்குடந்தையாகப் புலிகளின் அத்துமீறிய யுத்த ஜந்திரம் மிகத் தோதாகச் செயற்பட்டு, மக்களின் உண்மையான எழிச்சியை முடக்கி வருகிறார்கள் என்பதைப் பேராசிரியர் சொல்லாமற் சொல்லுகிறார்.

இதிலிருந்து மக்கள் விடுபடக்கூடிய சூழலை எந்தவொரு சக்தியும் ஏற்படுத்திவிட முடியாதபடி புலிகளினதும் மற்றும் உதிரிக்குழுக்களினதும் ஆனந்தசங்கரிகளினதும், டக்ளசுகளினதும் எஜமானர்கள் கவனமாக இருக்கிறார்கள். இதற்காக இவர்கள் தமிழ் மக்களுக்குள் பற்பல குழுக்களைத் திட்டுமிட்டு வளர்த்துவருகிறார்கள். புலிகளைப் பிரித்துக் கூறுபோட்ட அன்னிய சக்திகள் தத்தமது பலப் பரீட்சையை இலங்கையில் பரிசீலித்துக் கொண்டபோது, இந்தியா தனது கைகளிலுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி இலங்கையில் பற்பல பொறிகளை-வலையை விரித்து வைத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்று புலம் பெயர்ந்த மண்ணில் ரீ. பீ. சீ. வானொலி, இராமராஜன், மற்றும் புளட் ஜெகநாதன் போன்ற கிரிமினல்களைப் பயன்படுத்தியும் வருகிறது. இவர்களால் கொட்டப்படும் நச்சுக் கருத்துக்களும், புலிகளால் கொட்டுப்படும் தோட்டாக்களும் சாரம்சத்தில் ஒன்றாகவே இருக்கிறது.

ஆனால், புலிகளை இந்த இந்தியக் கைக்கூலிகள் எதிர்பதுபோன்று நடிக்க வைத்து, மக்களை முட்டாளாக்கி வருகிறது இந்தியச் சாணாக்கியம். புலிகளுக்கெதிரான மக்களின் தார்மீகப் போராட்டமானது சுயவெழிச்சியோடு தமது போராட்டத்தைத் தாமே தீர்மானிக்கும் சூழலைத் தடுத்தபடி புலிகளுக்கெதிராகக் குரல் கொடுப்பதாக நடிக்கும் இந்தியாவின் கைக்கூலிகளிடம் மக்கள் மீளவும் வீழத் தகவமைக்கப்பட்ட பொறியில் மக்களைக் காவு கொள்ள இந்தியா முயல்கிறது. இந்தக் கைக் கூலிகளே, தமிழ்பேசும் மக்கள் இலங்கையின் ஓட்டுக் கட்சிகளோடு சமரசம் செய்து அதிகாரப் பகிர்வைப் பெறவேண்டுமென்று விவாதிக்க, அதையும் இராமராஜன் "ஆமா, ஆமா" என்றபடி ஆமோதிக்கும் "அரசியில்"கலந்துரையாடல்கள் வேறு மக்களிடம் கொட்டப்படுகிறது. இத்தகைய கபோதிகள் ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புலிகள்தான். இவர்கள் புலிகளை எதிர்பதுபோன்று நடித்தபடி மக்களைக் காவு கொள்ளும் இந்தியாவின் இன்னொரு வடிவம்.

இதையெல்லாம் புரிந்துகொண்டு மக்கள் தமது தலைவிதியைத் தாமே தீர்மானிக்கக் கூடியவொரு சூழலை எங்ஙனம் இனம் காட்ட முடியும்?

பேராசிரியரின் கட்டுரையில் இத்தகைய கேள்வி தொக்கி நிக்கிறது.

படித்துப்பாருங்கள்.

கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். கருத்துக்கள் மக்களை வலுப்படுத்தும். ஒருமைப்படுத்தும்-உண்மைகளை இனம் காட்டும்.

அப்போது, மக்கள் தமது எதிரிகள் தமக்குள் எந்தெந்த வடிவத்திலிருக்கிறார்கள் என்று புரியும்போது, தமது விடுதலையைச் சாத்தியப்படுத்தும் வழியைத் தாமே கண்டடைவார்கள். இதுவே, நம் முன் உள்ள இன்றைய மிக முக்கியமான பணி.

அன்புடன்,
பரமுவேலன் கருணாநந்தன்
11. 11. 2007


மறுபக்கம் ://அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளைப் போரால் அழிக்க
முடியாது என்ற கருத்தையிட்டு மகிழுகிறவர்கள் விடுதலைப் புலிகளால் போர் மூலம்
மட்டுமே அரசாங்கத்தைத் தோற்கடித்து தமிழ் மக்களின் உரிமைகளை வெல்ல இயலாது என்ற
உண்மையையும் உணரவேண்டும்.
//


-பேராசிரியர். டாக்டர். சி. சிவசேகரம்.


தமிழ்ச்செல்வனும் பிற விடுதலைப் புலி முக்கியஸ்தர்களும் குண்டு வீச்சில் கொல்லப்பட்டது பற்றிய கருத்துக்களில் எதிர்பார்க்கக்கூடிய விதமான தீவிர வேறுபாடுகள் காணப்பட்டன. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதில் வருத்தம் எதுவுமில்லையென்று யூ. என். பி. பிரமுகர் எஸ். பி. திஸாநாயக்கா சொல்லியிருந்தார். அவரது கோபம் யூ. என். பி. வேட்பாளர் சென்ற சனாதிபதித் தேர்தலில் வெல்லத் தடையாக இருந்தவர் தமிழ்ச் செல்வன் என்பது பற்றியது. சகட்டு மேனிக்கு அவர் அமைதிப் பேச்சுவார்த்தைகளின்போது தமிழ்ச்செல்வன் கடும் போக்கைக் கடைப்பிடித்தார் என்ற விதமாக சொல்லியிருக்கிறார். அரசாங்கத்தையும் வான்படையையும் பொறுத்தவரை இது அநுராதபுர நிகழ்வுக்குப் பிரதியான ஒரு பதிலடி என்று பெருமைப்படுகிறார்கள். ஜே. வி. பி. யும், ஹெல உறுமயவும் எதிர்பார்த்த விதமாகவே மெச்சி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.தம்மை எதிர்நோக்குங் கேள்விகளில் அடிப்படையானது இக் குண்டு வீச்சு அரசாங்கத்தின் தரப்பிற் கூறப்படுவதுபோல உளவுத் தகவல்களின் அடிப்படையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலா என்பது. அப்படியென்றால் ஆயுதம் தாங்காத எதிரிகள் மீதும் தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதலான இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என்பது என்னுடைய நிலைப்பாடு. மாறாக வேறு சிலர் சொல்வது போல, இது வழமைபோல் மக்கள் குடியிருக்கும் இடங்களிலும் பொதுக் கட்டிடங்களிலும் பொழியப்படும் குண்டுமழை என்றாலும், இது அதேயளவு தவறானது. அப்பாவிப் பொது மக்களும் போரில் நேரடியாகப் பங்கு பற்றாதவர்களும் இவ்வாறு கோழைத்தனமாகக் கொன்றொழிக்கப்படுவது ஏற்க இயலாது.

லெபனானில் இஸ்ரேலியக் குண்டுவீச்சாகட்டும் சில மாதங்கள் முன்னர் அமெரிக்கா சோமாலியாவில் நடத்திய குண்டுவீச்சாகட்டும், வியற்நாம் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின்போது வியற்நாமிலும் லாவோஸிலும் காம்போஜத்திலும் நடந்த குண்டுவீச்சுகளாகட்டும் இன்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடக்கிறவையாகட்டும் எல்லாமே நிபந்தனையற்ற கண்டனத்திற்குரியன. குறுகிய காலத்தில் அவை பெற்றுத்தருகிற நன்மைகளால் மகிழ்ச்சி பெற்றவர்கள் நீண்ட காலத்தில் பெரும் இழப்புக்களையும் தோல்விகளையே கண்டுள்ளனர்.

மாக்ஸியவாதிகள் இவ்விடயத்தில் எப்போதுமே தெளிவாக இருந்துள்ளனர். போர்களும் ஆயுதப்போராட்டங்களும் தவிர்க்க இயலாதவை என்று அவர்கள் கூறி வந்தபோது அதை ஏற்க இயலாது. இந்திய மதங்களும் பண்பாடும் வன்முறையை ஏற்க மாட்டா என்றும் பவுத்தம் அகிம்சையைப் போதிப்பதால் இலங்கையில் வன்முறைக்கு வாய்ப்பேயில்லை என்று சொல்லப்பட்டது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பது இரண்டு நாடுகளிலும் சோதிக்கப்பட நீண்ட காலமாகவில்லை. அரச வன்முறை, மேலாதிக்க வாதிகளின் சாதிய வன்முறை, மதவாத வன்முறை என்பன இன்று நாளாந்த நிகழ்வாகிவிட்டன. அவற்றுக்கு எதிராக மக்கள் எழுச்சிகளும் தவிர்க்க இயலாமலே ஆயுத எழுச்சிகளாகிவிட்டன.

ஆயுதப் போராட்டம் என்பது குருட்டுத் தனமான வன்முறையல்ல. தனிமனிதப் படுகொலைகளால் விடுதலையை வென்றெடுக்க இயலாது. உயிரிழப்புகள் தவிர்க்க இயலாதன என்றாலும் தவிர்க்கக்கூடிய ஒவ்வொரு உயிரிழப்பும் தவிர்க்கப்படவேண்டும். இவை பற்றிய தெளிவும் உடன்பாடும் உள்ளவர்கள் தமது நிலைப்பாட்டில் தெளிவாகவும் தடுமாற்றத்திற்கு இடமில்லாமலும் நடந்துகொள்ளுகின்றனர். அரசியற் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் இவ்வாறான விடயங்களில் அறஞ்சார்ந்து கருத்துரைக்கின்றனர். உதாரணமாக கதிர்காமரின் கொலையை எவ்வளவு வன்மையாகக் கண்டிக்க முடிந்ததோ. அதேயளவு வன்மையுடன் ரவிராஜின் கொலையையும் கண்டிக்க முடிந்தது. ஒவ்வொரு பத்திரிகையாளரதுங் கொலையையுங் கண்டிக்க முடிந்தது. எந்தவொரு கொலையினதும் கண்டனமும் கொலை முயற்சி பற்றிய கண்டனமும் கொல்லப்பட்டவரது அரசியலையோ கொலை முயற்சிக்குட்பட்டவரின் அரசியலையோ பற்றிய கருத்தில் எவ்விதமான தளம்பலுக்கும் இடமளிக்கவில்லை.

நாடு பிரகடனம் செய்யப்படாத ஒரு போரினுள்ளும் நாளாந்தம் உக்கிரமடைந்துவரும் பொருளியல் நெருக்கடிக்குள்ளும் சிக்கித் தவிக்கின்ற ஒரு சூழலில் கிளிநொச்சிக் குண்டு வீச்சின் பின் விளைவுகள் நிம்மதிக்கு இடமளிப்பனவாகவே இருக்க முடியாது. எனவேதான், அது பற்றிய கண்டனம் அரசியல் கண்ணோட்டத்தில் முன்வைக்கப்பட வேண்டியுள்ளது. அது எவ்வகையான அரசியல் என்பது முக்கியமானது.

இப்போது விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுவோரின் கொலைகளைக் கண்டித்தவர்களில் எத்தனை பேர் கிளிநொச்சிக் குண்டு வீச்சை கண்டிக்க ஆயத்தமாயுள்ளனர். ? கண்டிக்காததுபோகட்டும் ஏதோ ஒரு பெரிய சாதனை என்று பேசுகிறார்களே. இவர்களில் எவருக்கும் எந்தப் படுகொலையும் கண்டிக்க என்ன யோக்கியம் உண்டு என்று யோசித்துப் பார்ப்போம். இவர்களில் எவருமே `சரி, பிழை' என்பதை `நாங்கள்- அவர்கள்' என்ற அடிப்படையிலேயே பார்க்கிறார்கள். எனவேதான் இவர்களில் எவருக்கும் எளிய உண்மைகள் நினைவுக்கு வருவதில்லை. சிறைப்பிடிக்கப்பட்ட ஜே. வி. பி. தலைமைப்பீடம் முழுவதும் யூ. என். பி. ஆட்சியாளர்களால் கொன்று குவிக்கப்பட்டது. இதை ஜே. வி. பி. தலைமை தவறு என்று கருதுகின்றது என்பதைவிட ஒரு கொடிய கொலை, பாதகம் என்று கருதுவதாகச் சொல்வது அரசாங்கத்தினது பார்வையிலும் பிற கட்சிகள் சிலவற்றினதும் கண்களில் தெரிவதுபோலவும் பொருந்தும். பயங்கரவாதிகளாகவே நடந்துகொண்ட அந்தத் தலைப்பீடத்தின் படுகொலை நியாயமானதா? ஜே. வி. பி. யும் அரசாங்கமும் மோதிய அந்த இரண்டு ஆண்டுகளில் நடக்காத பயங்கரமா? செய்யப்படாத கொடுமைகளா? ஜே. வி. பி. தான் செய்த படுகொலைகளை நியாயப்படுத்தியதுபோல யூ. என். பி. ஆட்சியாளர்களும் தாங்கள் செய்த படுகொலைகளை நியாயப்படுத்தினார்கள். இன்றுங்கூடத் தாங்கள் செய்த குற்றங்களை ஏற்கத் துணிவில்லாத கட்சிகள் தாம் இவை.

தமிழ் மக்களிடையிலும் இவ்வாறான ஒரு போக்கை நாம் காணலாம். இன்றுவரை எந்தவொரு படுகொலையையும் எந்த அரசியற் கட்சியுங் கண்டிக்கிறது என்றால் அக்கொலை அவர்களுக்கு உடன்பாடற்றவர்கள் செய்ததாயிருக்கும் என்று நம்பக்கூடியவாறே அவர்கள் நடந்துவந்துள்ளனர்.
ஒரு அடக்கு முறை ஆட்சிக்கு அறம் பற்றித் தெரியாமல் இருக்கலாம். அது தவறுக்கு மேல் தவறுசெய்துகொண்டு போகிறதற்கு அதற்கு அறம் இல்லாமை ஒரு முக்கிய காரணம். ஆனால், விடுதலைப் போராட்டங்களிற்கு அறங்கள் உள்ளன. அவற்றைப் புறக்கணிக்கிறபோது அவற்றின் நியாயம் பலவீனமடைகிறது.

ஒரு விடுதலைப் போராட்டம் தனது மக்களைச் சார்ந்து நிற்கும் வரை அதை யாருமே முறியடிக்க இயலாது. தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டம் இவ் விடயத்தில் தொடக்கத்திலிருந்தே பல தவறுகளைச் செய்து வந்துள்ளது. தமிழ் மக்களிடையே இருந்த மேட்டுக் குடிகளின் நலன்களை மட்டுமே கருத்திற்கொண்டு செயற்பட்ட தலைமையை மக்கள் நிராகரித்தபோது ஒரு வெகுசனப் போராட்டத்திற்கும் ஒரு வெகுசன அரசியலுக்குமான வாய்ப்பு ஏற்பட்டது. அது நடக்காத விதமாகத் தடுத்தது என்ன? இயக்கங்களின் அரசியல் சிந்தனை பழைய தலைமையின் தவறான சிந்தனைகள் பலவற்றை களையத் தவறியமையா? இயக்கத் தலைவர்களின் முதிர்ச்சியின்மையால் அவற்றினிடையே இருந்துவந்த போட்டி பொறாமைகளா? இயக்கங்களின் தலைமைகளின் பலவீனங்களை நன்கு அறிந்து அவற்றினிடையே போட்டியையும் பகைமையையும் ஊக்குவித்து தனது எடுபிடிகளாக அவற்றை மாற்றுகிற நோக்கிற் செயற்பட்ட ஒரு பிராந்திய வல்லரசினது சதி வேலைகளா? இவை எல்லாமே பங்களித்திருந்தாலும் மக்களே பிரதானமான வரலாற்றுச் சக்தி என்பதை இயக்கங்கள் அன்றுமுதல் இன்றுவரை ஏற்க மறுத்தமையே விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான பலவீனமாகும். அண்மைய இழப்புக்களின் காரணங்களைத் துரோகங்கள் பற்றிப் பேசலாம். துரோகிகள் என்று கருதப்பட்டவர்களை அழிக்கலாம். துரோகங்கள் நிற்கப்போவதில்லை. அவை பெருகுமே ஒழியக் குறையா. போராளிகட்கும் துரோகிகட்கும் ஊட்டம் மக்கள் மத்தியிலிருந்தே கிடைக்கிறது. ஒரு விடுதலைப் போராட்டம் ஏகப் பெரும்பான்மையான மக்களைத் தன்பக்கம் திருப்புவதன் மூலம் துரோகிகளைத் தனிமைப்படுத்துகிறது. துரோகம் செய்த பலர் மனந்திருந்த வாய்ப்பேற்படுகிறது. புதிய துரோகிகள் உருவாகிறதற்கான வாய்ப்புக்களை இல்லாமற் செய்கிறது.

துரோகம் எது? துரோகிகள் யாரென்ற முடிவை மக்களே எடுக்க வேண்டும். யாரை எவ்வாறு தண்டிப்பதென்கிற முடிவு மக்களிடம்விடப்பட வேண்டும். இன்று தமிழ் மக்களுக்கு எதிரான மிலேச்சத்தனமான தாக்குதலில் அதிகளவிற் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி மக்களே. எத்தனையோ அப்பாவிகளைக் கொன்று குவித்து அதைவிடப் பெருந்தொகையானோரை வாழ வழியற்றோராக்கியுள்ள அரசாங்கம் ஒரு அரசியற் படுகொலையை வெற்றி என்று கொண்டாடுகிறது. இதன் மூலம் இதற்கு முன் விமானங்கள் இலக்கு வைத்துத் தாக்கியவை எல்லாம் போராளிகளின் வதிவிடங்களல்ல. மாறாக பொதுமக்களின் வாழ்விடங்களே என்ற உண்ைம வெளிவராமல் தடுக்கப்படுகிறது.

அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளைப் போரால் அழிக்க முடியாது என்ற கருத்தையிட்டு மகிழுகிறவர்கள் விடுதலைப் புலிகளால் போர் மூலம் மட்டுமே அரசாங்கத்தைத் தோற்கடித்து தமிழ் மக்களின் உரிமைகளை வெல்ல இயலாது என்ற உண்மையையும் உணரவேண்டும். அது விடுதலைப் புலிகளின் ஆயுத வலிமையோ போர்த்திறனோ பற்றிய அடிப்படையிலன்றிக் பிற உள்நாட்டு, வெளியுலக நிலவரங்களினதும் அடிப்படையும் நாம் வந்தடையக் கூடிய முடிவு.

போர் மட்டுமே போராட்டமல்ல என்பது பற்றியும் பொதுமக்களைப் போராட்டத்தின் பிரதான பகுதியாக்குவதன் தேவை பற்றியும் உலக வரலாறு நிறையவே கூறுகிறது. நாம் கற்பது எப்போது?


-பேராசிரியர். டாக்டர். சி. சிவசேகரம்

நன்றி:தினக்குரல்

Sunday, November 11, 2007

சிங்கள, புலி அரசியலை மதிப்பிடும் போக்கு:3


"மனித வாழ்வு எவ்வளவோ மகத்தானது.
ஒரு மனிதன் தன் அநுபவத்
திரட்சியை,
ஆற்றலை இந்தச் சமூகத்துக்குக் கையளிக்கிறானே
அதுதான் மனித
வாழ்விலேயே உயர்வானது.
நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது மூதாதையர் தந்த
அறிவையும், அநுபவத் திரட்சியையும்
ஒவ்வொருவரும் பயன்படுத்திக்
கொண்டிருக்கிறோம்.
ஆகையால் இந்தப் பங்களிப்புகளிலெல்லாம்
எமக்கு ஈடுபாடு
இல்லையென்று யாரும் சும்மா இருந்துவிட முடியாது.
நாம் நிச்சியம் எமது
சமூகத்திற்கு எம் ஆற்றலையும், அறிவையும்
வழங்கக் கடமைப்பட்டிருக்கிறோம்". -புதியதோர் உலகத்தில் கோவிந்தன். பக்கம்:61.


ப. வி. ஸ்ரீரங்கன்
10. 11. 2007

கடந்த காலங்களிலெல்லாம் இலங்கை இனப் பிரச்சனையுள் அந்நியத் தலையீடென்பதை "நமது அரசியல்" இந்தியாவின் முட்டுக்கட்டையாகவே புரிந்து வைத்திருக்கிறது. இந்தப் புரிதலில் மக்களைத் திடமாக இருத்தி வைத்தவர்கள் நமது தமிழ் அரசியல் வாதிகள்தாம். எனினும், இன்றைய புலிகளின் போராட்டச் செல் நெறி மீளவும் நம் மக்களை தமது அரசியல் முன்னெடுப்பிலிருந்து மெல்லத் தனிமைப்படுத்தி வந்துள்ள நிலையை இன்னும் உச்சப் படுத்தும் ஒரு பெரியவொரு நிகழ்வு இன்றைய போராட்ட வாழ்வில் நிகழ்கிறது. சர்வதேச நலன்களாலும், தென்கிழக்காசியாவின் கேந்திர அரசியல் போக்குகளாலும் இலங்கையின் மக்கள் வேட்டைக்குட்பட்டு வருகின்ற இன்றையபொழுதில் புலிகளின் முக்கிய தலைவர்களிலொருவர் படுகொலை செய்யப்படுகிறார். இதுவொரு திட்டமிட்ட சதியாகவே புலப்படுகிறது. இலங்கைவாழ் மக்களின் இனவேறுபாடுகளைக் களைந்து ஒரு இன ஐக்கியம் உருவாவதற்கும் அதனூடாக இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைப் புரட்சிகரமான வகைகளில் தீர்ப்பதற்கான போராட்டப் பாதைக்கு இத்தகைய கொலைகள் பெரும் பின்னடைவைத் தருகிறது. இதனால் இனங்களுக்கிடையில் பரஸ்பரம் அவநம்பிக்கைகளும், இனக்குரோதமும் வளர்க்கப்பட்டு, இனவாதிகளின் அரசியலுக்கு மீளவும் எண்ணையூற்றப்படுகிறது. மக்கள் ஆதரவையிழந்துவந்த புலிகளின் போராட்டத்துக்குப் புது இரத்தம் பாய்ச்சும் உந்துதலைத் தமிழ்ச் செல்வனின் மரணமிட்டுச் செல்கிறது. இதை எதிர்பார்த்து அரசியல் செய்யும் வலதுசாரிக்கட்சிகளின் இன்றைய எதிர்பார்ப்பு நிறைவு செய்யப்பட்ட இந்தக் கொலையில் எவரது பங்கு உண்டென்பதைவிட நாம் மேலே செல்வோம்.

இன்றைய இலங்கையின் பொருளாதார முன்னெடுப்புகள் யாவும் அந்நிய மூலதனத்தின் வரவுகளோடு தம் மக்களின் அதீத உழைப்பைச் சுரண்டி ஏப்பமிடும் பொருளாதார நகர்வாகவே இருக்கிறது. இலங்கையின் முழுமொத்தச் சமூக உற்பத்தியும் அந்நியர்களின் தயவில் (கடனுதவி மற்றும் அந்நியத் தனியார் நிதிமூலதனம்) உயிர்வாழும் தகமையுடைதாகவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் நடைபெறும் எந்தப் போராட்ட வியூகங்களும் வெளிநாட்டுச் சக்திகளாலேயே தீர்மானிக்கப்பட்டு யுத்தமாக விரிவடைவதை நாம் எல்லோரும் ஓரளவேனும் நம்பித்தாம் ஆகணும். இந்தவுண்மை மிகவும் நேர்மையான அரசியல் அறிவினூடாகவே புரிந்துகொள்ளத் தக்கதாகும். இங்கே எந்த முட்டுக்கட்டையுமின்றி (இயக்க வாத-தமிழ்த் தேசியவாத மாயைகள் மற்றும் முஸ்லீம் தேசிய வாத- தலித்துவ வாதங்கள்) வர்க்கச் சமுதாயத்தின் வர்க்க அரசியலைப் புரிந்துகொள்ளும் அறிவே இலங்கையின் இன்றைய இனப் பிரச்சனையுள் அந்நிய சக்திகளின் மிகவும் கீழ்த்தரமான யுத்த மேலாதிக்கத்தைப் புரிய முடியும். இத்தகைய பார்வையின்றி நாம் வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லும். இத்தகைய தரணத்தில் நாம் சந்த்திக்கும் இழப்புகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலாதென்பதே கம்யூனிச அறிக்கையின் ஆரம்ப வாசகம். இங்கு மனித சமூகங்கள் வர்க்கங்களாகப் பிரிந்துள்ளார்கள். நாம் ஒரே மொழியைப்பேசி, ஒரே இனமாக இருப்பினும்-நாமெல்லோரும் ஒன்றல்ல. நமக்குக்குள் வர்க வேறுபாடுண்டு! அடக்குபவர்களாகவும், அடக்கப்படுபவர்களுமாக இருக்கிறோம். இங்கே நேரெதிரான வர்க்கங்கள் என்றும் சேர்ந்து ஒரேயினமாக-வர்க்கபேதமற்ற இனமாக இருக்கமுடியாது. அப்படியுண்டென்பது ஒருவித மொன்னைப்பேச்சாகும்.

பகைமுரண்பாடுமிக்க இருவேறு வர்க்கங்கள் ஏதோவொரு அரசியலுக்கு தமது உடலை அடிமையாக்குவதற்கு முதலாளிய மேல்மட்ட அமைப்புகள் காரியமாற்றுகின்றன. இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க, பால்-நிறபேதங்களும், சாதிய-இன, மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல. இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது. ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும், அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமையையும் இதற்குள் திணிக்கிறது. இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இங்கேதாம் ஒடுக்குமுறையும், அவலமும் தோற்றம் பெறுகிறது. இத்தகைய ஒடுக்குமுறையின் தொடர்ச்சிகள் எத்தனை கரும்புலிகள்-தமிழ்ச் செல்வன்கள் உயிரைப் பறித்தாலும் தமது அரசியல் மற்றும் ஆளும் தளத்தை இழக்காதிருப்பதற்காக இன்னும் ஆயிரம் கொலைகளை இனம் மொழி தாண்டிச் செய்து முடிக்கும்.

இது இனவாதத்தைப் புதுமுறைமைகளில் பேசுவதற்குத் தயாராகிறது. இலங்கை அரசாகவிருந்தாலென்ன அல்லப் புலிகளாக இருந்தாலென்ன புதுப்புது அர்த்தத்தோடு "தேசிய மற்றும் விதேசிய"பண்புகளைக் கொட்டியபடி தத்தமது இருப்பைக் காத்து வரும்பொழுது, இன நலனுக்குக்காக எதுவும் செய்யலாம் எனும் ஒரு "மொன்னைப் பேச்சு" அறிவுத்தளத்தைக் காவுகொள்ளத் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது. அது, தமிழர் பக்கம் தமிழீழம் என்றும், சிங்களவர் பக்கம் பெளத்த இராச்சியச் ஸ்ரீலங்கா சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும் கோசமிடுகிறது. இந்தக் கோசங்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் அதிகார வர்க்கமானது தன்னைச் சமுதாயத்தின் அதீதமேய்ப்பானாக சமூகத்தின் உள்ளரங்குக்குள் எதுவிதத் தடையுமின்றி உட்பிரவேசிக்கின்றது. இத்தகைய வாசல் திறந்த பின் இது கட்டமைக்கும் அரசியலானது பாசிசத்தை நோக்கியதாகும்.சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் அது சுருட்டி வைத்துக் கொள்கிறது. சமூகத்தின் மிக முக்கியமான மனிதவளத்தையே அது தனது காலடியில் கிடத்தி வைக்கும்போது மற்றெல்லாம் இங்கே வெறும் துகள்களாகவே இருக்கிறது! இந்த ஸ்த்தானத்தை அது எந்நேரமும் வைத்திருக்க விரும்புகிறது, அதற்காகத் தன்னைத் தியாகத்திலும், வீரத்திலும் ஒரு அவதாரமாக்க முனைந்து கொண்டே தனக்கு நிகரான வேறொரு ஆற்றலில்லையென்று "ஒளிவட்டம்"கட்டிக் கொண்டிருக்கிறது. இதை வாழ்வுக்கான வியூகமாக அது புரிந்து வைத்திருப்பதால் இதைச் சுற்றிய எண்ணவோட்டத்தை மிகையான அளவுகளில் சமூகத்தில் திணிக்கிறது.

இங்கே மொழிக்காக, இனத்துக்காக, தேசத்துக்காக "உயிர்ப்பலிசெய்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு"எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டே மனித ஆளுமையைக் காவு கொள்கிறது. இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற "வர்க்க"அரசியலானது மண்ணையும், மொழியையும் முதன்மைப்படுத்தும் அளவுக்கு மனித விழுமியத்தை ஒருநாளும் முதன்மைப் படுத்துவதில்லை. இது இந்தச் சிந்தனையை உயர்வாகவெண்ணுவதுமில்லை. வடிவமைக்கப்பட்ட நெகிழ்வுத் தன்மையற்ற ஒரு மனிதவடிவைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கும் இந்தத் "தேசிய" அனுமானங்கள் மக்களின் உரிமைகளின் எல்லையில் தனது வலுக்கரத்தைப் பதிக்கிறபோது அங்கு அராஜகத்துக்கான முளை முகிழ்க்கிறது. இது எதனை முதன்மைப் படுத்த முனைகிறதென்ற புரிதலற்ற சாதாரணக் குடிமக்கள் தமது வாழ்வாதாரத்தைத் தொலைப்பதற்கானவொரு சூழலை, இங்ஙனம் இழப்பதைக்கூட ஒரு கட்டத்தில் "வடிவ மனிதர்களாகி" பற்பல கதைகளைப் பேசிக்கொள்ளும் தியாகியாக (ஆற்றலுற்ற மனிதவுறுதி) மாறிப் போகிறார்கள்.இந்த ஆற்றலைப் பிழிந்தெடுக்கக் காத்திருக்கும் அதிகாரத்துவத்தின் கனவானது அந்தத் திசையை மிக ஆழமாகப் புரிந்து கொண்டு மக்களின் -இனத்தின் புற வாழ்வைப் பற்றியவொரு "பொற்காலக் கற்பனைகளைத்"தயா¡ப்படுத்திக் கைவசம் வைத்துக் கொள்கிறது. இது மனித இயக்கத்தையே கட்டுப்படுத்தும் அல்லது அவர்களது சிந்தனையைப் பிம்பங்களின் ( தேசம், தேசியம், இனம், பண்பாடு, மொழி) பண்புக்கமையத் தயார்ப்படுத்தும் கருத்தியல் மனதை அவர்களிடம் தோற்றுகிறது. உண்மையான "இருப்பானது"நிசத்தில் அழிக்கப்பட்டபின் எஞ்சுவது சுமைகாவும் ஒரு ஜந்திரமே, இந்த ஜந்திரமானது பல வர்ணக் கனவுகளோடு, பெருமிதங்களோடு உயிர் வாழக் கற்றுக் கொண்ட சூழலுக்குள் வந்துவிடும்போது இதன் "வியாபித்த"மனிதமற்ற சமூகப்பங்களிப்பானது "வர்க்க"அரசியலுக்கும் அதன் மிதமான எதிர் பார்ப்புகளுக்கும் எந்தப் பங்கமும் விளைவிக்காத பாதகமற்ற சமூக நிர்ணயத்தைக் உள்வாங்கிக் கொள்கிறது.

இங்கே தாம் தமிழ்பேசும் மக்களினங்களில் நிலவுகின்ற "ஊனங்களும்"அந்த ஊனங்களைப் பொறுமையோடு எதிர்கொள்ளப் பக்குவமற்ற அரசியல் வாழ்வும் நமக்கு நேர்கின்றது. இது மக்களையே தமது முன்னெடுப்புகளுக்கு எதிரானதாக மாற்றியெடுத்து அவர்களைப் பலியெடுப்பதில் அதிகாரத்தை உருவாக்கிறது. இந்தத் திமிர்தனமான அதிகாரத்துவம் "துப்பாக்கிக் குழலிலிருந்து வருவது"ஒருபகுதியுண்மை மட்டுமே. மாறாக அந்த அதிகாரமானது மிகக் கடுமையான"உளவியற் கருத்தாங்களால் "கட்டியமைக்கப்படுகிறது. இது துப்பாக்கியைவிட மிகப் பல்மடங்கு காட்டமானது. இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட "மனிதவுடலானது"அந்த அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது. இந்த நிகழ்வுப் போக்கானது தலைமுறை, தலைமுறையாகத் தகவமைக்கப்பட்டுக் கடத்தப்படுகிறது. இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக "மக்கள் விரோதமாக" இருந்தும் அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் "நாம" மிக இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.

இங்கே பொய்மையையும், கயமையையும் கலந்து அரசியல் செய்யும் ஆயுதக் குழுக்களும் அவைகளின் அரசியல் எதிர்பார்ப்பும் மக்களை, மக்கள் நலனைப் புறந்தள்ளிய நோக்கு நிலையோடு "அரசியல்"செய்கின்றன. இந்த மக்கள் நலன் மறுத்த குழுக்கள் தமக்குள் முட்டிமோதும் "அரசியல் இலாபத்துக்குள்" மூழ்கிப் பதவி ஆசையால் வெறிகொண்ட கொலைகளைச் செய்து தமிழ் மக்கள் சமுதாயத்தைக் காட்டுமிராண்டிச் சமுதாயமாகக் காட்டி நிற்கிறது. எந்தக் காரணத்தையும் கொலைகளுக்குச் சொல்ல முடியாது.மனிதவுள்ளம்கொண்ட ஒரு தனிநபர் தனது விருப்பு வெறுப்புக்காக எந்தக் கொலைகளையும் ஏதோவொரு காரணத்தை முன் வைத்துத ்"திருத்திய" நேர்த்தியான-அவசியமான கொலையென்றாரானால், அவர் கடைந்தெடுத்த "கொலைக் கிரிமனல்" என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய "அரசியல்-பொருளியல்" வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல. திடீர் தயாரிப்பான இந்த "அலகுகள்" அந்ததந்த நாடுகளில் இன்னும் ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை- தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய "அலகுகளை" உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை. இத்தகையவொரு சூழலில் எழும் "பொருளாதாரச் சிக்கல்கள்" அந்தந்த மக்களின் -இனக்குழுக்களில் அதிகாரத்துக்காகத் துடிக்கும் சில உடமையாளர்களைத் தமது வசதிக்காக அரசியல் நடாத்தும் கூட்டமாக்கி விட்டுள்ளது. மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளும் தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பில்லை. இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிகத் தயாராகிறது. இது எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது. இங்கேதாம் நமது மரபு ரீதியான கட்சியரசியல் புரிவானதின் இயலாமை நம்மைப் போட்டுக் குழப்பிக் கொள்வதை நாம் அநுமதிக்கிறோம். இத்தகையவொரு விருப்புறுதியானது நம்மால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட "எதிர்பார்ப்புகளால்"ஆனதாகா! இது காலாகாலமாக நமது அரசியல் பண்பாட்டுத் தகவமைப்புகளால் வார்க்கப்பட்டவொரு வடிவமாக நம்முன் வேறொரு மனிதனை இனம் காணத்தக்கக் கலவையைத் தயார்ப்படுத்தி நமது நோக்கத்தையே திசை திருப்புகிறது.

இந்தச் சிக்கலான உறவுகளால் உண்மைபேசுவர்களுக்கு நேரும் கொடூரமான அவமானங்கள் அந்தச் சமுதாயத்தில் பொய்மையும் , புரட்டும் எவ்வளவுதூரம் ஆழமாக வேரோடி விழுதெறிந்துள்ளதென்பதை நம்மால் உணரமுடிகிறது. இங்கு"விரோதி, துரோகி" என்பது மக்களின் நலனைச் சிதைக்கிறார்களேயெனும் ஆதங்கத்தில் எழுகிறது.தான் நம்பவைக்கப்பட்ட கருத்தியலுக்கு எதிராக உண்மையிருப்பதை அந்த உடலால் ஜீரணிக்க முடிவதில்லை. இந்தச் சிக்கலைத் தெளிவுற வைக்கும் போராட்டமானது முளையிலேயே கிள்ளியெறியப்பட்ட வரலாறு நமது வரலாறாகும்."தியாகி துரோகி" என்பதை சமூகவுளவியலில் மிக ஆழமாக விதைத்துவரும் தமிழக் குறுந்தேசியமானது தனது இருப்பை இதனால் பாதுகாக்க இதுநாள்வரை முனைந்துகொண்டு வருகிறது.

இன்றைய உலக ஆதிக்க வர்க்கம் மிகக் கவனமாக இருக்கிறது. ஒவ்வொரு தனிநபர்களையும் அதீத சுதந்திரத்தைக் கோரும் நிலைக்குள் தள்ளி சமூகக் கூட்டைத் தகர்த்து ஒற்றை மனிதர்களாக்கியபடியே அவர்களைச் சுய நலமிகளாக்கி விட்டுள்ளது.இத்தகைய மனிதர்களால் சமூகக்கூட்டோடு இசைந்து வாழ்வது முடியாது போய் தனித்த "தீவுகளாக" வாழ்வு நாறுகிறது.இங்கே ஒருவரும் "பொதுவான" வேலைத்திட்டத்துக்கு வரமுடியாதுள்ளது.அவரவர் கொண்டதே கோலமாகிறது.அவ்வாறு நிகழும் தரணங்களில்தாம் தத்தமது தனிநபர் வாதத்துக்கும் அதீத காழ்ப்புணர்ச்சியை முன்தள்ளி, ஒழுக்கம்-நாணயம் குறித்தும் சமூகத்தை இன்னும் கீழ் நிலைக்குள் தள்ளி அதிகாரத்தோடு கைகுலுக்கிறது(இது மிக மோசமான சேறடிப்பைத் தனது தோழமைக்கு எதிராகவே செய்து முடிக்கிறது.இந்தப் போக்கை ஈழத்திலும், புலம் பெயர் நாடுகளிலும் தற்போது நாம் பார்த்து வரலாம்).இன்று நமது எதிர்காலம் வேறெந்தக்காலத்தையும்விட பாரிய அழுத்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.இதனால் நமது சமூகவாழ்வானது சிதைந்து சின்னாபின்ப்பட்டுப்போனதன் காரணத்தால் நாம் ஒற்றை மனிதர்களாக-அதீத தனிநபர்வாதக் கண்ணோட்டத்துகுள் வந்துவிடுகிறோம்.இதனால் எதையும் ஒருபொருட்டாக எடுப்பதற்கான காலவகாசமின்றி "ஏதோ எப்படியோ"சமூகமாக மாறியுள்ளோம். இந்த நிலையிலும் பற்பல முறைமைகளில் நமது வாழ்வுமீதும்-இருப்பின்மீதும் அடாத காடைத்தனஞ்செய்யும் இந்த வர்த்தகச் சமுதாயத்தின் கருத்தியல்-ஊடகவன்முறையைப் புரிந்துகொள்வதும், இவர்களின் அழகிய ஒளிவட்டங்களுக்குப்பின் பாரியபிசாசுக் கரங்கள் இருப்பதையும் நாம் அறிந்துகொண்டு எமது நம்பிக்கைகளை மானுடநேசிப்பின்பால் நோக்கித்தள்ளவேண்டியுள்ளது.

அதிகார வர்க்கமானது "புரட்சிகரக் கட்சியின் "தோற்றத்தைத் தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தே வருகிறது.இதை அறிவுத்தளத்திலும், அதிகாரத்தளத்திலுமிருந்து நகர்த்தி வருகிறது.நவீனத்துக்குப் பின்பான கருத்தியல் வளர்ச்சியானது இதை அறிவுத்தளத்தில் அதிகாரத்துவத்துக்கெதிரான அறவியில் பண்பாக வளர்க்க முற்பட்டு"பின் நவீனத்துவ"தத்துவ விசாரணையாக வளர்த்தெடுத்தது. இங்கே அதிகாரங்களுக்கெதிரான சிந்தனை சோஷலிசக் கட்டமைப்புகளுக்கெதிரானதாக-புரட்சிக் கட்சிக்கு எதிரானதாக மொழியப்பட்டதேயொழிய ஒழுங்கமைந்த பூர்ச்சுவாக் கட்சிக்குகெதிராக ஒரு மண்ணையும் செய்யவில்லை.

இன்றைய நிலையில் எவரெவர் "புரட்சிக் கட்சி"க்கெதிராகக் குரலிடுகிறாரோ அவர் பாசிசத்தின் அடிவருடியே. தனிநபர்களைப் புரட்சிகரமாகப் பேசவிடும் இந்த முதலாளிய அமைப்பு, அவர்களை இணைத்துக் கட்சி கட்டவிடுவதில்லை. அப்படியொரு புரட்சிக் கட்சி தோன்றும்போது அதை வேரோடு சாய்க்கப் பல் முனைத் தாக்குதலில் இறங்கி, அந்தக் கட்சியைச் சிதைத்து மக்கள் விரோதக் கட்சியாக்கி விடுகிறது. இந்நிலையில் தனிநபர் எவ்வளவு புரட்சி பேசினாலும் ஒரு மண்ணும் நிகழ வாய்ப்பில்லை. இங்கேதாம்"மனமுடக்கங்களும், சிதைவுகளும்" தனிநபர்வாதமாக மாறுகிறது. இன்றைய காலம் தமிழ்பேசும் மக்களது நலனில் அக்கறையற்ற காலம். எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள், போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை. நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள். சரியான திசைவழியின்றிப் போரிட்ட அமைப்புகள் தமது நலன்களுக்காக மீண்டும் நம்மை ஏமாற்றதக்கப் போராட்டச் செல் நெறியோடு போராடுகின்றன. இங்கே நண்பன் யார், எதிரி யார்? என்ற மதிப்பீடுகளின்றி தம்மை எதிர்ப்பவர்கள்-விமர்சிப்பவர்கள் அனைவருமே எதிரிகளென்னும் இந்தப் பார்வைக்குத் தமிழ் பேசும் மக்களின் உண்மையான எதிரிகளான ஏகாதிபத்தியம்-இந்தியத் தரகு முதலாளியம் போன்றவைகள் எப்போதுமே நட்பு சக்திகளாகின்றன. இதனால் தமிழ் பேசும் மக்களின் உண்மையான விடுதலை அந்நியப் பேரங்களுக்கான வியூகத்துக்குள் வீழ்ந்து தமிழ்வீரப் புதல்வர்களின் தியாத்தைத் தனதாக்கிக்கொள்கிறது.

இங்கு அனைவரும் முதலில் புரியவேண்டியது தமிழ்பேசும் இலங்கை மக்களின் நலனும் குறிப்பிட்ட இயக்கங்களின் நலனும் ஒன்றல்ல என்பதே.
இயக்க நலன் தவிர்க்க முடியாது தமிழ்பேசும் மக்கள் நலத்துடன் பிணைகிறது, அவ்வண்ணமே மக்கள் நலன் இயக்க நலனாய் தன்னுள் மயக்கமுறுகிறது. உதாரணமாகப் புலிகளை எடுத்தக்கொண்டால் புலிகள் நமது வரலாற்றில் தடார் புடாலெனத் தோன்றிய ஒரு சக்தியல்ல. அது நமது மக்களின் தேசிய அபிலாசையின் விளைபொருளென்று கொள்வது பலரிடம் உண்டு. எனினும் அது சிங்கள அடக்குமுறைக்கெதிரான தமிழ் தரகு முதலாளியத்தினதும், இந்திய ஆளும் வர்க்கத்தினது கனவினதும் விளைபொருளாகத் தன்னை வெளிப்படுத்துகிறது. தமிழ்பேசும் தரகு முதலாளியத்தின் தனியான நில வரையறையைக் கொண்ட தனித் தமிழ் நில ஆதிக்கத்துக்கும் சந்தை வாய்புக்குமான கனவும், இந்திய பிராந்தியவல்லரசின் புவியியற் அரசியல் ஆதிக்கத்தின் நலனை இலங்கையில் விஸ்த்தரிக்கும் நோக்கத்தின் கூட்டு வடிவாகத்தாம் புலிகள் அமைப்பின் நலனுள்ளது.

புலிகளிடம் இருக்கின்ற அரசியல் புரட்சிகரமற்றது. அது பிற்போக்கான முதலாளிய நலன்களுடன் உறவுடையது. அதனால் மக்கள் நலன் சார்ந்த புரட்சிகரமான அரசியலை எப்போதுமே தரமுடியாது. இது அவர்களது இயக்க நலனினால் தீர்மானக்கப்பட்டவொன்று. இந்த வகை அரசியல் எந்தத் தரப்பைப் பிரதிநித்துவஞ் செய்கிறது என்பதைப் புரியாத இயக்கவாத மாயைக்கு முகம்கொடுப்பது பாரிய உபத்திரமானது. அவர்களுக்குச் சமூகத்தை விஞ்ஞான பூர்வமாகப் பார்க்க முடியவில்லை. உணர்ச்சிவகை அரசியற்பார்வையால் சமூகத்தை விஞ்ஞான பூர்வமாக ஆய்வுசெய்யமுடியாது! இதனால் புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம், அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள், போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க முடியாமல் போய்விடுகிறது. வெறும் தமிழ்ப் பாசம் இங்கு யாரையும் காப்பாற்றாது. தமிழைப்பேசுவதால் தமிழர்கள் யாவரும் ஒன்றல்ல- ஒரு தரப்பாக முடியாது-ஒரே தளத்திலுமில்லை! தமிழ் மக்கள் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளார்கள்-சாதியின் பெயரால் ஒருவரொருவர் எந்தத்தொடர்வுமற்று இன்றும் பிளவுண்டு அடக்கப்பட்டவரும் ஆள்பவர்களுமாகக் கிடக்கிறார்கள். இதுகூடவொரு பாரிய உடலரசியற் உளவிற்றளத்தை ஏற்படுத்தி , சமூகத்துள் உள்ளகக் காலனித்துவத்தைத் தோற்றி வைத்திருக்கிறது.

எங்களுடைய போராட்ட ஆரம்பமானது எவ்வளவுதாம் புரட்சி பேசினாலும் அது உண்மையில் ஒரு புரட்சிகரக் கட்சியின் வழியில் நகர்த்தப்பட்ட முன்னெடுப்புகளில்லை!இன்றைய அவலங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது எமது சமுதாயத்தின்முன் விரிந்து கிடக்கும் குட்டிமுதலாளியப் பண்பாகும். வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படையாக இருப்பதால் எந்தெந்த வர்க்கம் தத்தமது நலனுக்கான முன்னெடுப்பில் கட்சியில் ஆதிக்கம் பெற்றுக் கொள்கிறதோ அந்த வர்க்கமே கட்சியின் முன் நகர்வை-போராட்டச் செல் நெறியை, யுத்த தந்திரோபத்தைச் செய்கிறது-அந்த வர்க்கத்தின் முரண்பாடுகளேயேதாம் அது கையாள முனைகிறது. எமது தேசிய விடுதலையமைப்புகள் முன்வைத்த கோசங்கள் பல இந்த வகையிலே எழுந்தவை. இனவொதுக்கல், தரப்படுத்தல், தமிழுக்கு அரசகரும மொழி அந்தஸ்த்துக்காக குரல் கொடுத்த கட்சிகள் தமது சமுதாயத்துக்குள் உழைப்பவர்களை நாயிலும் கேவலமாகப்"பறையன், நளவன், பள்ளன், அம்பட்டன், வண்ணான்"என்று சாதி சொல்லி அடக்கியபடி இவற்றைக் கேட்டுக் கொண்டது. சிங்கள அரசிடம் தமிழருக்கான தனி மண்ணைக் கேட்ட அதே அரசியல் தனக்குள் ஒடுக்கப்படும் தலித்துக்களை எந்தவுரிமையுமின்றி வாழ நிர்ப்பந்தித்து. இத்தகைய வரலாற்றுத் தவறுகளிலிருந்துதாம் போராட்ட இயக்கங்கள் தம்மைத் தகவமைத்தன. அவை தமது படையணிக்கு அடியாளகமட்டுமே தலித்துக்களை இணைத்தார்களேயொழிய புரட்சிகரக் கட்சியைக்கட்டிப் போராடுவதற்கல்ல. இத்தகைய குட்டி முதலாளியப் பண்பானது இயக்கங்களுக்குள் போட்டியை வெளியிலிருந்து திணிப்பதற்குமுன் உள்ளேயே முகிழ்க்கும் கருவூலங்களை இந்த நடுத்தரவர்க்க மேல் சாதிய ஆதிக்கக் கல்வி செய்து முடித்தது. இந்தத் தரணங்களின் யாழ்ப்பாண வேளாள ஆதிக்க மனதானது அனைத்துப் புரட்சிகரச் சக்திகளையும் இனம் கண்டு அழித்தொழித்தது. இதுவே உட்கட்சிக் கொலைகளுக்கு ஆரம்பமான கருத்தியலை போராட்ட இயக்கங்களுக்கு வழங்கியது. இதன் உச்சத்தை அந்நிய நலன்கள் செய்து முடித்தன!

இன்றைய இந்தப் பெரும் யுத்த அழிவானது மக்களின் நிரந்தரமான வாழ்சூழலாக மாற்றப்பட்டு வருகிறது. தமிழ்பேசும் மக்களின் நாளாந்த அழிவுகள் "புலிகளின் பயங்கரவாத்தை" அழிக்கிறோம் எனும் அரசியல் பரப்புரையூடாக நியாயப்படுத்தும் அதி இழிவான செயலில் ஆளும் மகிந்த அரசு செயற்பட்டுவருகிறது. தினமும் புதுப்புது இராஜ தந்திரத்தோடு புலிகளும் தத்தமது நியாயப்பாடுகளைச் சொன்னாலும், யுத்தம் நிறுத்தப்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது. இன்றைய இராணுவச் சமமின்மையான புலிகளின் இராணுவ வலுவானது சிங்கள அரசையும, ; இந்தியாவையும் பெரு மகிழ்வுக்குள்ளிட்டுச் சென்று, அவர்கள் தமது தந்திரங்களை, சாணாக்கியத்தை செயற்படுத்த வழிவிட்டுள்ளது.

மக்களின் எந்தவுரிமையையும் பொருட்படுத்தாது தமது தேவைகளின் பொருட்டுப் போர் மக்களை அழித்து வருகிறது. சாதாரணமாகப் போர் மனித நாகரீகத்தையே தமிழ்ச் சமுதாயத்திடம் இல்லாதாக்கி அவர்களைக் காட்டுமிராண்டிகளாக்கியபின்னும் நாம் நமது தேசத்தின்-மக்களின்பால் கவனஞ் செய்தும் "ஆயுதங்கள்"நம்மைக் கட்டிப் போடுகிறது! மக்கள் வாய் திறந்து எதிர்வார்த்தை பேசமுடியாது திணறிக்கொண்டிருக்கிறார்கள். எனினும் மரணப்பயம் மக்களின் மனதைக் கட்டிப் போடுகிறது. ஈழ இயக்கங்களிள் எந்தப் பக்தைப் பார்த்தாலும் அவை குரூரம் நிறைந்த பக்கமாகவே தெரிகிறது. இதை மூடிமறைத்தல் இன்னுமின்னும் நம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.

யுத்தத்தின் வாயிலாக வந்தடைந்த மரணவோலமும், பயங்கரவாதமும், காட்டுமிராண்டித்தனமும்-கொலையும், கொள்ளையுமே நமது மக்களின் வாழ்வியல்ப் பெறுமானமாகிப் போய், ஒரு தலைமுறையே யுத்தத்தில் மூழ்கி முடவர்களாகிப் போனது அங்கத்தில் மட்டுமல்ல அறிலும்தாம். இத்தகையவொரு சமூக இழிநிலையில் அந்தச் சமுதாயத்தின்பால் இன்னமும் நம்பிக்கையோடு அதைக் காலத்துக்கேற்ற முறைமைகளில் மக்களின் நலன்களை முன் நிறுத்துவதற்கான தகமைக்கிட்டுச் செல்லத் தூண்டுவது அவசியமாகும்.

எனவே வர்க்கச் சமுதாயத்துள் வர்க்க அரசியல் தவிர்க்க முடியாது அரங்கிற்கு வருகிறது. இங்கே ஒவ்வொருவரும் தத்தமது வர்க்கம் சார்ந்து சிந்தித்தல் சாத்தியமாகிவிடுகிறது. நாம் புலிகளை வெறும் விருப்பு வெறுப்புக்குட்பட்டு ஆராய்ய முடியாது. அது விஞ்ஞானபூர்வமற்று வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பான திராவிட அரசியல் மாதிரித்தாம் முடியும்!

தமிழ் பேசும் மக்களது நலன் அவர்தம் "சுயநிர்ணய உரிமை, வரலாறுதொட்டுவாழ்ந்த பூமி அவர்கள் வாழும் மண்ணாகவும், அவர்களுக்கென்ற அரசியல் பொருளாதாரப்-பண்பாட்டு வாழ்வுண்டுடெனும் உறதிப்படுத்தலுடன் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தலும்" அவர்தம் நலனாகிவிட முடியாது. வர்க்கபேதமற்ற மனித வாழ்வுக்கான எந்த முன்னெடுப்புமற்ற இந்தக் கோசமும் வெறும் வெற்றுவேட்டாகும். இது சிங்கள முதலாளிகள் அவர்களை அடக்கு வதற்குப் பதிலாகத் தமிழ் முதலாளிகள்; அடக்குவதில் போய் முடியும். எனவேதாம் அவர்கள் நலனை முன்னேடுக்காத ஈழப்போரை ஒருசில தமிழ்த் தரகு முதலாளியத்தின் அபிலாசையென்கிறோம். உழைப்பவர் நலன் முன் வைக்கப்படும் அரசியல் ஈழக்கோசத்தை முன்னெடுக்க முடியாது. அங்கே பெருந்தேசிய வெறிக்குப் பதிலாகக் குறுந்தேசியம் முன் தள்ளப் பட முடியாது. இரண்டும் சாரம்ஸத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிரானதுதாம். புலிகளுக்கூடாக விரியும் அல்லது கட்டமைக்கும்"தேசியம்"சாரம்சத்தில் விதேசியம் என்பதைப் புரியம் தரணங்களைப் புரிவதற்குத் தேசியத்தைப் புரட்சிகரமாக நிறுவம் போக்குகளை நாம் உள்வாங்க வேண்டும். அது, ஆளும் வர்க்கங்கள் அடியெடுத்துவரும் பிற்போக்குத் தேசிய வாதமில்லை. இதைத்தாம் லெனின் வார்த்தையில் சொன்னால்:"தேசிய வாதம் என்பது எப்பவும் முதலாளிகளின் கோட்டைக்குள்ளிருந்து வரும். "என்பதாகும். இதை மிக நேர்த்தியாகப் புரிவதற்குத் தேசியம் குறித்து மேலும் புரிவதற்கான சந்தர்ப்பங்களை நாம் தருவோம்.


தொடரும்.

ப. வி. ஸ்ரீரங்கன்
10. 11. 2007


The Rise of Disaster Capitalism: A Short Film by Alfonso

The Shock Doctrine: The Rise of Disaster Capitalism: A Short Film by Alfonso Cuaron