தமிழ் அரங்கம்

Thursday, September 28, 2006

தேசத்துரோகிகள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

ஐ.ஐ.டி ஐ.ஐ.எம்.:

தேசத்துரோகிகள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

சையும் மலைகள், நகராத ஆறுகள், பூச்சொரியும் நறுமணமுள்ள முள்காடுகள்'' பூமியில் இப்படியும் இடம் உண்டோ? உண்டு. சென்னை ஐ.ஐ.டி.க்கு வந்தால் பார்க்கலாம்.


சாதித் திமிர் நிரம்பி வழிய அசையும் மலைகளாக இயக்குனரும், பார்ப்பனப் பேராசிரியர் குழுவும், மேல்சாதிக் கூஜாக்களும், எதிர்காலத்தில் வெளிநாடு செல்லும் கனவுகளுடன் மாணவ "அவாள்'களும்; அசையாத ஆறுகளாக காங்க்ரீட் கட்டிடங்கள் அவற்றுக்கு கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவிரி என்றும் ஓடும் ஆறுகளின் நாமகரணங்கள் உண்டு;. மிச்சமீதி கண்ணுக்கெட்டிய தொலைவுவரை முள் கம்பி வேலிக்குள் முள்காடுகள் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் மைய அரசு விரிவான வளாக நிர்வாகத்துகுகாகவே 20 கோடி சிறப்பு நிதி தருகிறது. என்ன அபாரமான சாணக்கிய மூளை! முள்காட்டுப் பராமரிப்புக்கு 20 கோடி!


இதுதான் ஐ.ஐ.டி. சென்னை. ஒவ்வோராண்டும் 100 கோடி வரை மைய அரசு நிதி கொட்டுகிறது. அத்தனையும் மக்கள் வரிப்பணம். இந்த ஐ.ஐ.டி. உயர்கல்வி மையங்களை மைக்ரோ சாஃப்ட் முதலாளி பில்கேட்ஸ் ""மிகச் சிறந்த மனிதவள மூலதனத்தின் புதையல் மாளிகை'' என்று பாராட்டினார். பாராட்டிய இடம் அமெரிக்க சிலிக்கான் பள்ளத்தாக்கில் நடந்த ஐ.ஐ.டி. 50ஆம் ஆண்டு மாநாடு. பில்கேட்ஸ் வாயால் தங்களுக்கு "மூலதனம்' என்ற பட்டம் கிடைத்த பெருமையைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறது, ஐ.ஐ.டி. அக்கிரகாரம்.


ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். இரண்டின் பிறப்பும் வரலாறும் "பணக்கார சோஷலிஸ்டு' நேருவோடு சம்பந்தமுள்ளது. "இந்தியாவின் வருங்காலத்தை இங்கே பார்க்கிறேன்!' என்றார் நேரு, கரக்பூர் ஐ.ஐ.டி.யைத் திறந்து வைத்தபோது. 1946லேயே பிரிட்டிஷாரால் அமெரிக்க மாசாசூட்ஸ் தொழில் நுட்பக் கழகத்தின் மாதிரியில் அமைக்கப்பட்டதே ஐ.ஐ.டி. 1950களின் பின்பாதியில் அமெரிக்க நிர்வாகப் பள்ளியைப் பார்த்து வடிவமைத்ததுதான் ஐ.ஐ.எம்.


ஆரம்பத்தில் போலிச் "சுயசார்பு' சூரத்தனமாக விளம்பரம் செய்யப்பட்டுப் பிறகு பார்ப்பன உன்னதமும், கார்ப்பொரேட் கம்பெனி உன்னதமும் கலந்து இவை வளர்க்கப்பட்டன. ஐ.ஐ.டி. கரக்பூர், மும்பை, சென்னை போன்று மொத்தம் 7 இடங்களில்; ஐ.ஐ.எம். அகமதாபாத், பெங்களூர் போன்று மொத்தம் 7 இடங்களில்,


ஒவ்வொரு ஐ.ஐ.டி. கிளையும் பெறும் ஆண்டு நிதி : சுமார் 100 130 கோடிகள்.


ஐ.ஐ.டி. பட்டமுன்படிப்பு மாணவரின் கட்டணத்தில் அரசின் உதவித் தொகை : 80மூ


மேற்பட்டப்படிப்பு படிப்பவர்க்கு : உதவிச் சம்பளம்


மாணவர் கட்டணம் (விடுதி, உணவு, கல்விச் செலவில் ஒரு பகுதி) : ஆண்டுக்கு ரூ. 50,000ஃ மட்டுமே


ஐ.ஐ.டி. மாணவர்கள் அனுபவிக்கும் வசதிகளை ஒரு பார்வை பார்க்கிறீர்களா? சலவை இயந்திரம், டி.வி. உட்பட வசதி நிறைந்த விடுதி, மிகப் பெரிய உணவுக்கூடங்கள், மையநூலகம் நெட் வசதிகள், கல்லூரிக்காக 10, 15 மைதானங்கள், தவிர விடுதிக்காக தனி மைதானங்கள், கோயில் (மசூதி கிடையாது என்பது தனி விசயம்), சர்ச் வசதிகள், திறந்தவெளி நாடகஃசினிமா அரங்கு, இலக்கிச் சங்கங்கள், தொழில்நுட்ப விழா (ஷாஸ்த்ரா), கலாச்சார விழா (சாரங்), இசைக்காக அக்கிரகார மாடலில் "ஸங்கீத ஸபா', வானியல் சங்கம், விவேகானந்தர் விவாத மன்றம் "பிரகிருதி' எனப்படும் "வனவிலங்குகள் கழகம்' — இவ்வளவும் ஐ.ஐ.டி.யில் உற்பத்தி செய்யப்படும் தரத்துக்கு நாம் நமது வரிப்பணத்திலிருந்து கொடுக்கும் விலை.


ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு பெறுவதற்கே தடுமாறும் அரசுப் பொறியியல் கல்லூரிகளையோ, அல்லது ""இடிந்து காரை விழும் கட்டிடம், ஒரேயொரு குண்டு பல்பு, மொத்த விடுதிக்கும் ஒரே கழிப்பறை, ஓடாத மோட்டார், பக்கெட்டில் சாம்பார், வேகாத புழுத்தரிசி'' போன்ற வசதிகளுடன் இயங்கும் தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகளையோ இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். 50 லட்ச ரூபாய் செலவில் இந்து நாளிதழின் கோலாகலமான கவரேஜுடன் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐ.ஐ.டி.யின் "சாரங்' கலை விழாவையும், 500, 1000த்துக்கே அல்லாடும் அரசுக் கல்லூரிகளின் முத்தமிழ் விழாக்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஐ.ஐ.டி தரத்தின் வக்கிரம் புரியும்.


ஐ.ஐ.டி. நேரடியாகக் குடியரசுத் தலைவரின் கீழ் வருகிறது. கல்வி அமைச்சர், சில எம்.பி.க்கள், அரசின் சில துறைத்தலைவர்கள் இடம் பெறும் போர்டு சும்மானாச்சும்தான். உண்மை அதிகாரம் படைத்தவர்கள் ஐ.ஐ.டி. கவர்னர்களும், இயக்குனர்களும்தான். டைரக்டர் நினைத்தால் புதுப்பதவிகளில், பதவி உயர்வுகளில் ஆட்களைப் போடலாம். டாக்டர் சுவாமி என்ற இயக்குனர் 200 வகையான புதிய பதவிகளை அவ்வாறு உருவாக்கினார். சென்னை ஐ.ஐ.டி. ஆசிரியர்கள் விகிதம் ஓர் எ.கா. தாழ்த்தப்பட்டவர்கள் 2 சதம்; பிற்படுத்தப்பட்டவர்கள் 2025 சதம்; பார்ப்பனர் சுமார் 73 சதம். இச்சுயேச்சை நிர்வாகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களில் தகுதியானவர்களுக்குக் கூட பரிசு பெயர் புகழ் செல்வதில்லை; தலித் மாணவர்கள் என்றால் வருவதோ, வளர்வதோ, ஆசிரியராக உயர்வதோ முயற்கொம்பு. டைரக்டர் ராச்சியம் பார்ப்பன ராச்சியம்.


சென்னை ஐ.ஐ.டி.யில் இதுவரை இருந்த, இருக்கிற இயக்குநர்கள் வரை அனைவர் மீதும் ஏராளமாய் ஊழல் வழக்குகள். கவுன்சில் சேர்மன் விதைநெல் திருடன் எம்.எஸ். சாமிநாதன் போன்றவர்கள் இருந்த இடம் இது என்பதைக் கவனம் கொள்ளவும். தவிர, பன்னாட்டுத் தொழிற்கழகங்களோடு சரச சல்லாபங்கள் வெகு தாராளம் தற்போதைய ஐ.ஐ.டி. சென்னை இயக்குனர் ஆனந்தின் உபயத்தில் ஐ.ஐ.டி. தளம் ஒன்றையே கார்ப்பொரேட் அலுவலகத்திற்கு குத்தகைக்குக் கொடுத்திருக்கிறார்கள். தவிரவும், பிற்படுத்தப்பட்ட, தலித் ஆசிரியர்கள் அவரது பார்ப்பனக் கொடுமை சுரண்டலின் கீழ் அல்லப்படுவது சொல்லத்தரமல்ல.


முதல் வகுப்புப் பட்டப்படிப்பு, 158 ஆய்வு நூல்கள், 5 டாக்டர் பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டி என்று எல்லாத் தகுதிகளும் இருந்தும் சென்னை ஐ.ஐ.டி.யின், டாக்டர் வசந்தா கந்தசாமி உயர்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாறாக, எம்.எஸ்.ஸி இரண்டாம் வகுப்பில் தேறிய பார்ப்பனரே அந்த இடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு ஒரு உதாரணம்.


2005 2006இல் மட்டும் 136 அந்நியக் கம்பெனிகள் ஐ.ஐ.டி. வளாகத் தேர்வுக்கு வந்தன. சீமென்ஸ், அமெரிக்கன் மெகாடிரெண்ட்ஸ் (இந்தியக் கிளை), மன்ஹாட்டன், மெக்கின்ஸே, மோட்டோரோலா, மற்றும் அந்நியக் கூட்டு உள்ள இன்போசிஸ், இன்டெல், சி.டாட், ஐ.டி.சி. போன்றவை அவை.


இந்தியக் கல்வியின் எதிர்காலத் திட்டங்களையும் உலக வங்கியே வழிநடத்துகிறது. ""உயர் கல்வி என்பது சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியம். பொறுப்புள்ள பதவிகளுக்கு தேவைப்படும் அறிவும் திறமையும் கொண்டவர்களை வளர்க்கும் பொறுப்பு உயர் கல்வி நிறுவனங்களுக்கே உண்டு. இதில் முதலீடு செய்தால் உழைப்பவரின் உற்பத்தித் திறன் கூடும். வறுமையின் கடுமையைத் தணிக்கக் கூடிய நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சிக்கும் இது அவசியம்'' என்கிறது உலகவங்கி அறிக்கை. அறிவு திறமை குறித்த பார்ப்பனியத்தின் வாதமும் பன்னாட்டு மூலதனத்தின் வாதமும் ஒன்றுபடும் புள்ளி இதுதான். கடந்த 40 ஆண்டுகளில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.இல் உலக வங்கியின் ஆலோசனைப்படி தயாரிக்கப்பட்ட 1,10,000 "திறமைசாலிகள்' அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் ஓடியிருக்கிறார்கள் நம்முயை வறுமையின் கடுமையைத் தணிப்பதற்கு!


உள்நாட்டு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பதற்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் இந்த தேசபக்தர்கள், வெளிநாட்டு மாணவர்களை ஐ.ஐ.டி.யில் சேர்த்துக் காசு பண்ணலாம், வெளிநாடுகளிலேயே ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். போன்ற நிறுவனங்களைத் தொடங்கி வியாபாரம் செய்யலாம் என்று அரசுக்கு ஆலோசனை கூறுகிறார்கள். உலகத்தரம் வாய்ந்த ஐ.ஐ.டி. பிராண்டை காசாக்கும் இந்தத் திட்டம் பன்னாட்டு முதலாளிகளின் மூளையில் உதித்தது. அதைப் பார்ப்பன மூளைகள் வழிமொழிகின்றன.


காட்ஸ் ஒப்பந்தப்படி (வணிகம் சார்ந்த சேவைகள் தொடர்பான பொது ஒப்பந்தம்) கல்வியும் மருத்துவமும் தனியார்மயமாக்கப்பட வேண்டிய வணிகச் சரக்குகள். அந்த வகையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் நம் நாட்டில் கடைபோடவும் நாம் அனுமதித்தாக வேண்டும்.


பின்னே, ""நாசாவிலேயும் பென்டகன்லேயும் நம்மவாளுக்கு அவன் வேலை கொடுக்கும்போது, அவாளுக்கு நாம படிப்பு சொல்லித்தரப் படாதா? பிரிட்டிஷ் மெடிக்கல் அசோசியேஷன்ல நம்மவாதான் எண்ணிக்கையில நம்பர் ஒன். அந்த விசுவாசத்துக்கு அந்த நாட்டுக்காராளுக்கு நாம இங்கே வைத்தியம் பார்த்துப் பணம் பண்ணக் கூடாதா? போன வருஷம் மட்டும் ஒண்ணரை லட்சம் ஃபாரின் நோயாளிகள் இந்தியாவில வைத்தியம் பாத்து டாலரைக் கொட்டிருக்கான்னா அது தேசத்துக்குப் பெருமை இல்லையா? எய்ம்ஸ்லயும், ஜிப்மர்லயும் படிச்சுப்புட்டு பெரியாஸ்பத்திரில போய் குப்பை கொட்ட முடியுமா என்ன? இதுதான் தகுதி, திறமை, தரம் பேசுவோரின் வாதம்.


மருத்துவர்கள் ஏற்றுமதி, நோயாளி இறக்குமதி! அறிவாளிகள் ஏற்றுமதி, அறிவு இறக்குமதி இவர்களுக்கு நம் வரிப்பணத்தைக் கொட்டியழுவது இந்தியக் குடிமகனின் தலைவிதி!


(ஆதாரம்: ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.


வலைத்தளங்கள்; ஹார்வர்டு


பல்கலைக் கழக ஆய்வறிக்கை, 2004;


சனத்கவுல், ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர்.,


டெல்லியின் ஆய்வுக் கட்டுiர்


மற்றும் ஐ.ஐ.டி. சென்னை


பிற்படுத்தப்பட்டோருக்கான சங்கம்.)


Wednesday, September 27, 2006

தமிழீழக் கனவு வெற்றுக் கானல் நீர் தான் - மீள்பதிவு

தமிழீழக் கனவு வெற்றுக் கானல் நீர் தான்

பி.இரயாகரன்
07.09.06


காலப்பொருத்தம் கருதி ஏற்கனவே வெளியிடப்பட்ட கட்டுரை இங்கு மீளவும் வெளியிடப்படுகின்றது.
தமிழரங்கம்


எந்தளவுக்கு தமிழீழக் கனவின் சாத்தியப்பாடு கேள்விக்குள்ளாக்கி சிதைகின்றதோ, அந்தளவுக்கு அது வீங்கி வெம்புகின்றது. எங்கும் எதிலும் தொடர்ச்சியான நெருக்கடிகளும், சோகமான விளைவுகளும் தொடருகின்ற இன்றைய நிலையில், அதை வலிந்து புலி அரசியல் வரவழைத்துக் கொண்டேயுள்ளது. இதைப் பயன்படுத்தி பிழைப்புவாத அரசியல் பொறுக்கிகளும், கண்டகண்ட தெரு நாய்கள் எல்லாம் தமிழீழக் கனவைக் கவ்விக்கொண்டு ஊரைக் கூட்டி ஊளையிடுகின்றன. இந்தக் கும்பல் தமிழ் சமூகத்தையே நடுவாற்றில் இறக்கிவிட்டு, வெள்ளத்தின் போக்கில் அடித்துச் செல்ல வைத்துள்ளனர். எது நடக்கும் எது நடக்காது என்று தெரியாத ஒரு சூனியத்தில் மக்கள் வாழ்வுக்காக தத்தளிக்கின்றனர்.



சொந்த அரசியல் வேலைத் திட்டம் எதையும் அடிப்படையாக கொள்ளாத புலிகளின் தன்னியல்பான இராணுவவாத நடத்தைகள், தமிழீழம் எமது தாகம் என்பதைத் தாண்டி எதையும் கொண்டிருப்பதில்லை. தமிழீழத்தை எப்படி, எந்த வழியில் சாதிக்க முடியும், என்ற நடைமுறை ரீதியான சாத்தியமான வேலைத்திட்டத்தை அவர்களால் முன்வைக்க முடியாது போயுள்ளது. மாறாக தன்னிச்சையான தன்னியல்புக்கு ஏற்ப, நிகழ்ச்சிகள் மீது எதிர்வினையாற்றுகின்றனர். உண்மையில் இதை பற்றி அவர்களுக்கே எதுவும் தெரிந்து இருப்பதில்லை.



இதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒவ்வொருவரும் தத்தம் நோக்கில் கற்பனை உலகை தாமே படைத்து, அதை கைநீட்டி காட்டி அதுதான் விடிவுக்கான பாதை என்கின்றனர். ஒவ்வொருவரும் தாமாக கற்பனை பண்ணும் தமிழீழக் கனவுக்கு என்று, ஒரு கொள்கை கோட்பாடு என எதுவும் கிடையாது. அதிலும் போராடுவதாக காட்டிக் கொள்ளும் புலிக்கும் இதற்கும், எந்த சம்பந்தமும் கிடையாது. புலிகளுக்கு தாம், தமது சொந்த நலன், இதைத் தாண்டிய எதுவும் அவர்களின் நலனாக இருப்பதில்லை. தமிழீழம் என்பது தமது சொந்த நலனை பூர்த்தி செய்யும் ஒரு கருவி மட்டும்தான். அதனால் தான் தமிழீழத்துக்கான அனைத்து சாத்தியமான வழியையும் நாசமாக்கி, அதை அழித்து, அதன் சாத்தியப்பாட்டை இல்லாததாக்கி வருகின்றனர். அவர்களின் அனைத்து செயற்பாடும் இன்று அப்படித்தான் மாறிவிட்டது.



இந்த நிலையில் இது அம்பலமாவதைத் தவிர்க்க, கற்பனை புனைவுகளை கொண்ட நம்பிக்கையையே வாழ்வாக விதைக்கின்றனர். எதார்த்தமான வாழ்வு சார்ந்த நம்பிக்கையை, ஒடுக்கப்பட்ட மனித போராட்டத்தை வாழ்வாக நிறுவிக் காட்டமுடிவதில்லை. வாழ்வுடன் சம்மந்தப்படாத கற்பனையின் விளைவால், இவர்கள் மோசமான மனநோய்க்கு உள்ளாகின்றனர். கனவையே வாழ்க்கையாக கொண்டு சம்பந்தமில்லாத வகையில் புலம்புகின்றனர். கற்பனையான கனவை உண்மையான எதார்த்தமாக காட்டி ஆய்வுரைகளையும், கருத்துரைகளையும் அறிவாளி போல் முன்வைக்கின்றனர். இந்தக் கருத்தின் ஆயுள் மிகக் குறுகியதாக இருப்பதால், அவை உடனுக்குடன் அம்பலமாகின்றது. ஆனால் தமிழீழக் கற்பனை, பலரை அதற்குள் சுயமாக சிந்திக்கவிடாது பேயாக பிசாசாக ஆட்டுவிக்கின்றது.



புலித் தமிழீழம் ஒன்று, வரவே வரமுடியாது. அதற்குரிய அனைத்து சமூக அடிப்படையையும் அது தானாகவே இழந்து, இழிந்து சீரழிந்துவிட்டது. இதை நாம் துல்லியமாகவும், நுணுக்கமாகவும் ஆராய்வோம்.



கற்பனையில் கனவாகவுள்ள எல்லைகளை அடிப்படையாக கொண்ட தமிழீழம் கிடைக்க வேண்டும் என்றால், இரண்டு பிரதான வழிகளில் மட்டும் சாத்தியமானது. இவ் இரண்டு வழிகளையும், புலிகள் எப்போதோ தமது சொந்த பாசிச வழிகளால் இழந்துவிட்டனர். ஒரு தனி அரசை உருவாக்கவும், அதன் நீடித்த இருப்பும் சில நிபந்தனைக்கு உட்பட்டது. குறித்த நிபந்தனையின்றி நாடுகள் அல்லது தனித்த பிரதேசங்கள் உருவாவதில்லை. ஒரு தனி அரசை உருவாக்கவும் பாதுகாக்கவும், நாம் ஏதோ ஒரு வகையில் சர்வதேச அமைப்பில் ஒரு அங்கமாக இருக்கவேண்டும். இதில் இருந்து பிரிந்து யாரும் சுயாதீனமாக தனித்து வாழமுடியாது.



1. புலிகளின் பொருளாதார கொள்கை அடிப்படையிலும், அவர்களின் உடன்பாடான உலகமயமாதல் போக்கில், தனிநாட்டுக்கான அங்கீகாரத்தை இந்த அமைப்பில் புலிகள் பெறவேண்டும். இதுவே முதலாவது வழி. அதாவது ஏகாதிபத்தியம் அங்கீகரிக்க வேண்டும். அமெரிக்காவில் தம் மீதான தடையை நீக்க இலஞ்சம் கொடுக்கலாம், ஆனால் அங்கீகாரத்தை பெறவே முடியாது. அங்கீகாரம் என்பது சர்வதேச பொருளாதார உறவுகளுக்கு உட்பட்டது. புலிகள் போன்ற மாபியாத்தனத்தை அடிப்படையாக கொண்ட பாசிசக் குழுக்கள், அதை நினைத்தே பார்க்க முடியாது. எப்படி அல்கைதா அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக வளர்ந்து, இன்று அங்கீகாரம் பெறமுடியாத எதிரிகளாகி அழிப்புக்குள்ளாகின்றனர். இதேபோல் தான் புலிகளின் நிலையும். புலிகள் அமெரிக்காவின் நிதியையும் ஆயுதத்தையும் பல்வேறு அமெரிக்கா எஜண்டுகள் ஊடாக பெற்றது முதல், இஸ்ரவேலில் ஆயுதப் பயிற்சி அவர்கள் நாட்டிலேயே பெற்றநிலை இன்று மாறிவிட்டது. மாறாக அவர்களின் எதிரியாக புலிகள் இருப்பதை, அல்கைதவுடன் ஓப்பிட்டு நாம் புரிந்து கொள்ளவேண்டும்.



இந்த நிலையில் ஒரு அங்கீகாரத்தை உலகமயமாதல் பொருளாதார நிபந்தனைக்குள் கிடைக்குமா என்ற கேள்வியை விடுத்து, அங்கீகரிப்பார்கள் என்று எடுத்தால், புலியை யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள். உலகமயமாதலை வழிநாடத்தும் ஏகாதிபத்திய நாடுகள், புலியை தடைசெய்து பயங்கரவாத குழுவாகவே கருதுகின்றது. அதாவது இந்த உலகமயமாதல் அமைப்புக்கு பாதகமான குழுவாகவே கருதுகின்றது. இது புலிகளின் பொருளாதார நோக்கில் இருந்தல்ல. இந்தநிலையில் உலகமயமாதல் அமைப்பில், ஏகாதிபத்தியம் புலிகளை அங்கீகரிக்கவே மாட்டாது. இந்த வகையில் உலகமயமாதல் பொருளாதார அமைப்புக்குள் தமிழீழம் சாத்தியமில்லை.



2. இரண்டாவது சாத்தியமான வழி என்பது, ஒடுக்கப்பட்ட மக்களை முற்றாக சார்ந்திருத்தலாகும். சமூக பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி, அவர்களின் தலைமையில் ஒரு தேசிய பொருளாதார அமைப்பை கொண்டிருப்பதே அடிப்படையான நிபந்தனையாகும். இந்த வகையில் உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றிருத்தல் நிபந்தனையாகும். குறிப்பாக சிங்கள முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை, அனுதாபத்தை பெற்றிருப்பது முக்கியமான அடிப்படை நிபந்தனையாகும். இந்த வகையிலும் தமிழீழம் சாத்தியமில்லை.



இப்படி இரண்டு வழிகளிலுமான புலித் தமிழீழ சாத்தியப்பாட்டை, அவர்கள் எப்போதோ இழந்துவிட்டனர். தற்போது அவர்கள் தங்களை பாதுகாப்பதே மிக முக்கிய பிரச்சனையாக மாறிவிட்டது. இதை அவர்களும் சரியாக உணரவில்லை, அதன் பின்னால் நக்கித் தின்னும் நாய்க் கூட்டமும் உணரவில்லை. ஆனால் எல்லா இராணுவ கட்டுமானங்களும், பிரமைகளும் ஒவ்வொன்றாக மெதுவாக இடிந்து வீழ்கின்றது. அது ஓரேயடியாக சரிந்து தூள்தூளாகிவிடுமா என்ற நிலைமையே, எதார்த்தத்தில் மிகமுக்கியமான பிரச்சனையாகிவிட்டது. ஆனால் இது பெரும்பான்மையான சமூக அமைப்பில் இதுவரை உணரப்படவேயில்லை.



முன்னைய சோவியத்யூனியன் சரிந்து இடிந்து விழ முன், கே.ஜ.பி உலகளாவில் பலமான சதிகளையும் கட்டுமானங்களையும் உசுப்பியது போல், உலுப்பிக்காட்டவே புலிகள் முனைகின்றனர். அதனூடாக இடிந்து கொண்டிருக்கும் கனவை, நிமிர்த்திக்காட்ட முனைகின்றனர். பிழைப்புவாத இந்திய சுயநல அரசியல் செய்யும் பச்சோந்தி கோபாலசாமி முதல் நெடுமாறன் வரையிலான பிழைப்புவாதிகளுக்கு, பணத்தையும் சலுகைகளையும் கொடுத்து தமிழீழத்தையோ அல்லது புலியின் சீரழிவையோ தடுத்து நிறுத்தவே முடியாது. மேற்கில் அரசியல்வாதிகளுக்கு விருந்துகளையும், விமானத் ரிக்கற்றுகளையும், பணத்தையும் இலஞ்சமாக கொடுத்து தமிழீழத்தைப் பெறமுடியாது. விடையங்களை பண உறவாக, இராணுவ வழியிலும் சிந்திப்பது செயலாற்றுவது, சொந்த அழிவின் விளிம்பில் அது பல்லிளித்து காட்சியளிக்கின்றது. இதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது போய்விடுகின்றது. அது சோரம் போன போக்கிரிகளின் சொந்த நலனுக்குள் முடங்கி விடுவதைத் தவிர, எதையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெற்றுத்தராது. ஒரு காலத்தில் இவை வெற்றிகரமான பலன் அளிப்பது போல் காட்சி அளிப்பது எப்போதும் தற்காலிகமானது. அது அதற்கென்று சொந்த விதியையும், நோக்கத்தையும் கொண்டது. அது உண்மையில் தொடக்கத்திலேயே கருவறுக்கும் தெளிவான அரசியல் நோக்கை அடிப்படையாகக் கொண்டு, பெரும் ஏகாதிபத்தியங்களே இதை மறைமுகமாக ஊக்குவித்து உதவுகின்றன. இந்தியா புலிகளுக்கு விமானத்தை அழிக்கவல்ல விமான எதிர்ப்பு சாம் ஏவுகணையைக் கூட தனது ஏஜண்டுகள் மூலம் புலிக்கு விற்று, அதை செயற்படாமல் முடக்கிய வரலாறு 1987 இல் நடைபெற்றது. இதன் போது புலிகளின் பணம் முடக்கப்பட்டது மட்டுமல்ல, ஏவுகணையும் செயற்படவில்லை. இப்படி பல நிகழ்ச்சிகள் தெரிந்தும் தெரியாமலும் உள்ளது.



பணம், ஆயுதம் என்ற எல்லைக்குள் புலிகள், வெறும் மாபியாக் குழுவாக, பாசிசக் கும்பலாக சீரழிந்துவிட்டது. தனக்காக மட்டும், தன் நோக்கில் வன்முறையைக் கையாண்டு மேலும் ஆழமாக சீரழிகின்றது. இப்படி சீரழிந்து சிதைந்து கொள்கையும் கோட்பாடுமற்ற ஒரு கும்பல் தமிழீழம் அமைப்பார்கள் என்பதும், அதற்கு அலங்கரித்து நம்பிக்கை ஊட்டுவது குருட்டுத்தனமான அபத்தமாகும்.



மேலே குறிப்பிட்ட இரண்டு அடிப்படையையும் கடந்து, ஒரு தமிழீழத்துகான சாத்தியப்பாட்டை யாரும் முன்வைக்கவே முடியாது. இன்று இலங்கை பேரினவாத அரசாங்கம் முழுமையான பொருளாதார தடையைக் கொண்டு வந்தாலே, குறித்த புலிகளின் பிரதேசத்தைக் கூட பாதுகாக்க முடியாது. விசித்திரமான ஆனால் எதார்த்தமான உண்மை இது. இன்று புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள அரசு ஊழியருக்கான சம்பளம், அங்கு வாழும் மக்களுக்கான உணவு விநியோகத்தையும் நிறுத்தினால், புலியின் பிரதேசத்தில் அவர்களால் தொடர்ந்தும் நின்றுபிடிக்கவே முடியாது. இன்றும் யுத்த அகதிகளுக்கு, அரசு தான் இலவச உணவை அல்லது மலிவு உணவை வழங்குகின்றது. அதிலும் ஒரு பகுதியை மக்களுக்கு தெரியாது உறுஞ்சியும் அபகரித்தும் புலிகள் வாழ்கின்றனர். இப்படி பலவழிகளில் தான் புலியின் தேசிய பொருளாதாரம் நிறைவு செய்யப்படுகின்றது.



உலகில் கொரில்லா மண்டலங்களுக்கு, இலங்கையில் மட்டும் தான் உணவையும் சம்பளத்தையும் பேரினவாத அரசு கொடுக்கின்றது. வேறு நாடுகளின் கடந்தகால, நிகழ்கால போராட்டங்களின் போது, அரசு அதை முற்றாகமுடக்கி பட்டினிச்சாவில் தள்ளி போராட்டத்தை நசுக்கமுனைந்தன. இதை எதிர்கொள்ளும் வகையில் முன்கூட்டியே சொந்த பொருளாதார கட்டமைப்பை உருவாக்கி, பொருளாதார தடையை எதிர்கொண்டனர். உண்மையான வெற்றிகரமான போராட்டத்தின் வரலாறுகள் இப்படித்தான், இந்த நிபந்தனையூடாகத்தான் நடந்தன.



இதற்கு புறம்பாக இலங்கையில் ஏன் இப்படியான நிலையை பேரினவாத அரசு கையாளுகின்றது. சுயமானதும் சுயாதீனமானதுமான மக்களைச் சார்ந்த போராட்டம் உருவாகிவிடக் கூடாது என்பதால் தான், தன்னைச் சார்ந்த சமூகப் பொருளாதார இருப்பை தக்கவைக்க அரசு, அவற்றை இடைவிடாது மட்டுப்படுத்தி வழங்குகின்றது. புனர் நிர்மாண பணத்தை வழங்குகின்றது. அரசுசாராத நிறுவனங்களின் நிவாரணங்கள் பாரிய அளவில் செயற்பட அனுமதித்துள்ளது. சொந்த தேசியப் பொருளாதார கட்டமைப்பை உருவாக்கி, தனிநாட்டுக்கான சுயாதீனமான தேசிய பொருளாதாரத்தை கட்டிவிடக் கூடாது என்பதால், பேரினவாத சுரண்டல் அரசு மிகக் கவனமாக திட்டமிட்டு புலியை சீரழிக்கும் வகையில் செயற்பட்டது. ஆனால் தேசியத்துக்காக போராடுவதாக கூறியவர்கள், அனைத்து தேசிய பொருளாதாரத்தையும் அழித்தே தீர்வோம் என்று கங்கணம் கட்டி, பாசிச ஆட்டம் போட்டனர். தேசிய பொருளாதாரம் கோரியவர்களை எள்ளி நகையாடி, அவர்களை கொன்றே போட்டனர். தேசிய பண்பில் இருந்து சீரழிந்து, ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் பாசிச எடுபிடிகளாகி, அதை சமூக உறவாகக் கொண்டு சீரழிந்தனர். இதை பேரினவாதம் தனது கொள்கை மூலம், புலிகளைக் கொண்டு வெற்றிகரமாக சாதித்தனர்.



இந்த நிலையில் முற்று முழுமையான பொருளாதார தடையும், கூலி மறுப்பும் சாத்தியமானதா என்றால், ஆம் சாத்தியமானதே. இதை உலகம் கண்டு கொள்ளாது. ஈராக் ஆக்கிரமிக்க முன்னம் ஏகாதிபத்தியம் ஏற்படுத்திய பொருளாதாரத் தடையில் 10 லட்சம் முதல் 20 லட்சம் பேர் கொல்லபட்டனர். இவை அனைத்தும் இந்த சமூக அமைப்பில் சாத்தியமானதே. ஏன் அண்மையில் பாலஸ்தீன மீதான பொருளாதாரத் தடையும் அமல் செய்யப்ட்டது. இப்படியொரு பொருளாதாரத் தடை கொண்டுவரப்படின், புலிகள் தமது கெரிலா பிரதேசத்தில் கூட நின்று பிடிக்கமுடியாது. அதற்கென்று எந்த சுயபொரளாதார சார்ந்த, சுய தேசிய வாழ்க்கை முறை எதையும் புலித் தேசியம் கட்டமைக்கவில்லை. ஏகாதிபத்திய பொருளாதாரத்துக்கு இசைவான எலும்புப் பொருளாதாரத்தையே அடிப்படையாக கொண்ட புலிப் பொருளாதாரம், எந்த நிலைமையையும் எதிர்கொள்ளும் ஆற்றலற்றது.



இந்த நிலையில் தமிழீழம் வந்திட்டுது இந்தா பிடி, இந்தா வருது, பிடி பிடி, எட்டிப் பிடி என்று நம்பவைக்கின்ற புலம்பல்கள் மட்டும் ஓயவில்லை. இந்தப் பொய்யையும் கற்பனையும் வாழ்வாக கொண்ட கனவு காட்சிகள் அனைத்தும் தகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த எதார்த்தமான சொந்தக் காட்சியை, அவர்கள் கண்ணை மூடிக்கொள்வதால் காண்பதில்லை.



இந்த கற்பனை தமிழீழவாதிகள் வலிந்து செய்யும் யுத்த கோமாளித்தனத்தால், உருவாகும் அகதிகளுக்கு ஒரு நேர உணவைக் கூட போட வக்கில்லாதவராகவே அவர்கள் உள்ளனர். தனி அரசுக்குரிய எந்த அடிப்படையுமற்ற நிலையில், எதைத்தான் சொந்தமாக சுய ஆற்றலுடன் மக்கள் சார்ந்து நின்று நிர்மாணிக்கின்றனர். குண்டுகளை வெடிக்க வைப்பதன் மூலம் மட்டும் தமிழீழம் வந்துவிடாது. கொல்வதால் மட்டும் தமிழீழம் வந்துவிடாது.



சரி, நீங்கள் குண்டுகளை வெடிக்க வைத்து, பலரைக் கொன்று போட்டு தமிழீழ எல்லைவரை பிடித்துவிட்டீர்கள் என்ற வைப்போம். என்ன நடக்கும். முதலில் சர்வதேச நிலையைப் பார்ப்போம்.



1. இந்தியா இதை ஒருநாளும் அனுமதியாது. ஒரு நாளுமே இதை அங்கீகரிக்காது.



2 .சர்வதேச நாடுகள் ஒன்றும் இதை அங்கீகரிக்காது.



3. சர்வதேச நாடு ஒன்று அங்கீகரிக்கின்றது என்று வைத்தாலும், இந்தியா அதை அனுமதிக்காது.



சர்வதேச நிலைமையை சாதகமாக மாற்றக் கூடிய, நிர்ப்பந்தம் கொடுக்கக் கூடிய வகையில், புலியின் சர்வதேச அரசியல் பாதகமாகவே உள்ளது. குறிப்பாக சர்வதேச ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து இருப்பது என்பது மட்டும் தான் குறைந்த பட்சம் ஒரு நிர்ப்பந்தத்தையாவது கொடுக்கமுடியும்.



மறுபக்கத்தில் எல்லைவரை பிடித்த பின், தமிழீழப் பிரகடனத்தை புலிகள் ஒருதலைப்பட்சமாக பிரகடனம் செய்யவேண்டும். இதன் மூலம் பேரினவாதத்தின் அனைத்து தொடர்பையும் இது இயல்பாக தானாகவே மறுதலிக்கும். முழுக்கமுழுக்க சொந்த நிர்வாகத்தை நிறுவவேண்டும. பேரினவாதிகள் கொடுத்த உணவையும், அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தையும் புலிகளே கொடுக்க வேண்டும். இப்படி பிரச்சனைகளை எதிர்கொள்ள, சொந்த தேசிய ஆற்றல் புலிகளிடம் கிடையாது. புலிகளால் சொந்த தேசிய கட்டமைப்பைச் சார்ந்து நிறைவு செய்யமுடியாது. இது தமிழீழத்தை பிரகடனம் செய்யாவிட்டாலும் கூட இதுதான் நிலைமை.



இதைவிட இன்று வடக்குகிழக்குக்கு வெளியில் வாழும் தமிழர்கள், வடக்குகிழக்கு நோக்கி செல்ல வேண்டிய சந்தர்ப்பம் உருவாகும். அவர்களின் அடிப்படைத் தேவைகள், வேலைவாயப்புகள், அவர்களின் உணவுத் தேவைகளை பூர்த்திசெய்ய புலிப்பொருளாதாரத்தால் முடியாது. சர்வதேச ரீதியாக எந்த உதவி, எதுவும் வழங்கப்பட மாட்டாது. இது சர்வதேச விதிக்குட்பட்டது. சர்வதேச ரீதியான புலிகள் மீதான தடை, இதை மேலும் அனுமதியாது. புலம்பெயர் தமிழர்கள் உதவமுடியும் என்று சிலர் வாதத்துக்காக கூறலாம், இது சாத்தியமானதா என்ற கேள்விக்கு அப்பால், இதை அந்த நாடுகள் (ஏகாதிபத்தியங்கள்) அனுமதியாது. அது இன்று தொடர்ச்சியாக கடுமையாகவே தடைக்குள்ளாகி வருகின்றது. அதைவிட புலிகள் பணம் சேர்க்க முடியாத அளவுக்கு, மக்களுக்கும் அவர்களுக்குமான உறவு மேலும் சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றது. இப்படி நிலைமை உள்ளது. சரி பணத்தை ஏதோ ஒருவழியில் புலிகள் பெறுகின்றார்கள் என்றால், பணப் பேப்பரை வைத்து உண்ணமுடியாது. அது உணவையும், அடிப்படைத் தேவையையும் உற்பத்தி செய்வதில்லை. அது வெற்றுப் பேப்பர் தான். மக்களின் உழைப்புத்தான் அனைத்தும்.



சிலர் புலி மாமா கதை சொல்வது போல், புலிக் கப்பல் பற்றி பேசுகின்றனர். இன்றைய சர்வதேச நெருக்கடியை தாண்டி (குறிப்பாக புலிகளின் அமெரிக்க ஆயுதக் கொள்வனவு) இது தப்பிப்பிழைக்க வேண்டும். அப்படி எல்லாம் தப்பிப் பிழைத்து உயிர் வாழ்ந்தாலும், இந்தியாவின் தீவிர கண்காணிப்பை தாண்டி இலங்கையில் உட்புகுவது என்பது முயல் கொம்புதான். அப்படி ஒரு இரு கப்பலை கொண்டு போனாலும், அந்த கப்பலில் எத்தனை பேருக்கு எத்தனை நாட்களுக்கு உணவு கொண்டு போகமுடியும்? இப்படி இதற்குள் நிறைய கேள்வி உண்டு. மக்கள் எலியையெல்லாம் பிடித்து தின்று முடிய, புலியைத்தான் பிடித்து தின்னும் நிலைதான் உருவாகும்.



சரி தமிழீழத்தை அங்கீகரித்து ஒரு நாடாக உருவாகிவிட்டது என்று எடுப்போம். பிறகு என்ன நடக்கும். வெற்றுக் காற்றில் ஊதிச் சாப்பிடமுடியாது. சிலர் தேசியப் பொருளாதாரம் பற்றி பீற்றுகின்றனர். ஏற்றுமதி பற்றியெல்லாம் கதைக்கின்றனர். மீன் பிடி என்கின்றனர். உப்பு உற்பத்தி என்று இப்படி பலவற்றை குறிப்பிடுகின்றனர். மீனை விற்று உணவை பெற முடியுமா? எந்தனை தொன் மீனை விற்று, எத்தனை தொன் உணவை வாங்குவது? இது எத்தனை பேருக்கு போதும். ஏற்றுமதி பொருளாதாரத்தை நம்பி தேசத்தை தேசியத்தை நிர்மாணிக்க முடியாது. புலம்பெயர் தமிழன் முதலீடு பற்றி பீற்றப்படுகின்றது. முதலில் புலியை நம்பி அவர்கள் வரவேண்டும். மறுபக்கதில் புலம்பெயர் முதலீடு என்பது வெறும் டப்பாதான். புலம்பெயர் தமிழரின் இன்றைய வர்த்தக முயற்சிகளில் 90 சதவீதமானவை பாரிய கடன் நெருக்குவாரத்துக்குள் உள்ள வெற்று டப்பாதான். சொந்த தேசத்தை, தேசியத்தை சொந்தமாக நிர்மாணிக்க முடியாதவர்களின், வெற்று கருத்துகளும் புலம்பலும தான் இவை. தமது வெற்றுத்தனத்தை நியாயப்படுத்த இப்படிக் கூறுவதும், புலிகளின் சமூகக்கூறுகளில் இருந்து அன்னியமாகி நிற்கின்ற ஒரு நிலையில், தன்னியல்பாக சுயவிளக்கமளித்து இப்படி தானே தனக்குள் நம்புவதே இதன் சாரமாகும். உண்மையில் இவையெல்லாம் வெற்று வேட்டுத்தனம்.



புலித்தேசியத்தில் வாழும் மக்கள், பொருள் சார்ந்த கனவில் வாழ்பவர்கள் தான். ஆடம்பரமான கனவுகளும் வேட்கைகளையும், பொருள் சார்ந்த உலக பார்வையையும் புலித்தேசியத்தால் ஈடுசெய்ய முடியாது. புலிக் கப்பல் உணவுக்கு பதில் கொக்கோகோலாவைத் தான் கொண்டுவந்து இறக்கவேண்டிய பரிதாபநிலை. இதுதான் தமிழனின் வாழ்வு சார்ந்த கண்ணோட்டமாகும். புலித்தேசியம் பன்னாட்டு ஆடம்பர பொருள் சார்ந்ததே ஒழிய, மக்கள் சார்ந்ததல்ல.



ஒடுக்கப்பட்ட மக்கள், அவர்களின் சொந்தப் பொருளாதார நலன்களை, கீழ் இருந்து கட்டாத வரை தேசியம் என்பது சாத்தியமற்றது. இன்று காணப்படும் பிற்போக்கு பண்பாட்டை கலாச்சாரத்தை மறுதலித்து ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்ததாக முன்னெடுக்காத வரை, ஒரு கெரில்லா பிரதேசத்தைக் கூட பாதுகாக்க முடியாது. பேரினவாதம் தொடர்ந்தும் உணவையும் கூலியையும் வழங்குவதால் மட்டும் தான், புலிகள் இன்னமும் அங்கு புலிகளாக நீடிக்க முடிகின்றது. இந்த உண்மையை புரிந்து கொள்வதும், மக்கள் போராட்டம் என்றால் என்ன என்பதை எதிர்மறையில் புரிந்து கொள்வது, இன்றைய காலத்தின் தேவை மட்டுமின்றி அவசியமான நிபந்தனையுமாக உள்ளது.

Monday, September 25, 2006

இட ஒதுக்கீடு எதிர்ப்பு: ஆகாவென்றெழுந்தன பார், தவளைகள்!

இட ஒதுக்கீடு எதிர்ப்பு: ஆகாவென்றெழுந்தன பார், தவளைகள்!

நான் டெல்லியின் பிரபலமானதொரு பள்ளியில் படித்தேன். 12ஆம் வகுப்பு முடியும் வரை எனக்கு, நாம் நம்முடைய சாதியினால் அடையாளம் காணப்படுகிறோம் எனத் தெரியாது. மருத்துவக் கல்லூரியில்தான் சாதி எனும் நச்சுப் பாதையில் நான் நுழைக்கப்பட்டேன். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அதன்பிறகு திறமை அனைத்தையும் தீர்மானிக்கும். நலிந்த பிரிவினருக்குத் தேவைப்படுவது நல்ல பள்ளிகள்தானேயன்றி, இடஒதுக்கீடு போன்ற சலுகைகளல்ல.


சமீபத்திய பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் மூலம் மாணவர் சமூகத்தைப் பிரிக்க முயன்ற அரசின் முயற்சிகள் எங்களிடம் ஒரு ஆழமான காயத்தை உண்டாக்கி விட்டன. என் கல்லூரியில் படிக்கும் 120 மாணவர்களில் உள்ள 80 முற்பட்ட சாதி மாணவர்களும் எம்.பி.பி.எஸ். முடித்தவுடன் வெளிநாடு சென்றுவிட முடிவெடுத்திருக்கிறோம்.


இது எங்கள் நாடே அல்ல என்பது போல் நாங்கள் நடத்தப்படுகிறோம். இன்றைய இந்தியாவில், மேல்சாதிக் குடும்பத்தில் பிறப்பது ஒரு குற்றமாகி விட்டது.''


அபிஷேக் பன்சல், எம்.பி.பி.எஸ். மாணவர், "சமத்துவத்திற்கான இளைஞர்கள்' அமைப்பின் துவக்க உறுப்பினர். (வீக் ஆங்கில வார இதழில்)


12ஆம் வகுப்பு முடியும் வரை இந்த நாட்டில் சாதி என்ற ஒன்று இருப்பதே தெரியாமல் வளர்ந்த இந்த "பரிதாபத்திற்குரிய' கான்வென்டுத் தவளையைப் போன்ற தவளைகளின் ஒப்பாரி, கடந்த இரு மாதங்களாக தொலைக்காட்சிப் பெட்டிகளின் வாயிலாக நாட்டையே செவிடாக்குமளவிற்குப் பேரிரைச்சலாய் ஒளிபரப்பப்பட்டது.


இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி), இந்திய மேலாண்மைக் கழகம், இந்திய அறிவியல் கழகம், 20 மையப் பல்கலைக் கழகங்கள், ஆறு மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் அறிவித்த நாளிலிருந்து கூச்சலும், கூப்பாடும் ஆரம்பமானது. அர்ஜுன் சிங் அங்கிள் ரொம்ப மோசம், நாங்கள் மன்மோகன் சிங் அங்கிளிடம் பேச வேண்டும் என்று அடம் பிடித்தன "காம்ப்ளான்' குழந்தைகள். அப்படி இப்படி இழுத்து, பிறகு, மன்மோகன் அங்கிளும் மேலோட்டமாய்க் கைவிரித்து விட, "சமத்துவத்திற்கான இளைஞர்கள்' என்ற பெயரில் டெல்லி, மும்பை முதலிய மாநகரங்களின் மேல்சாதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள், இடஒதுக்கீடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் துவங்கினார்கள். மும்பையில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் போலீசு தடியடி நடத்தியது. சூடு பிடிக்கும் வகையில் விற்கக் கூடிய விசயம்தான் என்பதாலும், தங்கள் சொந்த வர்க்கசாதிப் பாசத்தாலும், என்.டி.டி.வி, சி.என்.என் ஐ.பி.என் முதலான ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள், வெறியோடு உருமி அடிக்கத் துவங்கியதில் ஆகாவென்றெழுந்தன ஆவேசமுற்ற தவளைகள்.


அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவர்களும், தரகு முதலாளிகளும், பத்திரிக்கைகளும், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களும் ஜோதியில் கலக்க, டெல்லியில், உண்ணாவிரதம் துவங்கியது. இடஒதுக்கீடு அமலுக்கு வந்தால், தாங்கள் செருப்பு தைக்கத்தான் போக வேண்டும் என்பதாக, ஷý பாலிஷ் போடுதல், தரையைக் கூட்டுதல் போன்ற "போராட்டங்களை' நிகழ்த்தினார்கள். தற்கொலைக்கு அனுமதி கேட்டு குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்தார்கள் "போராளிகள்'. இறுதியில் பதினெட்டுப் பட்டிக்கும் நாட்டாமை சுப்ரீம் கோர்ட்டு, மருத்துவர்களை வீட்டுக்கு அனுப்பலாம் என செல்லமாய் கடிந்து கொண்ட பின்னால்தான் ஆரவாரம் அடங்கியது.


இதுநாள் வரை யார் போராடுகிறார்கள், எதற்காகப் போராடுகிறார்கள் என்பது குறித்து சிறிதும் அக்கறையின்றி "போக்குவரத்துக்கு' இடையூறு பண்ணுவதாக தொழிலாளர்களின் ஊர்வலத்தை சகட்டுமேனிக்கு திட்டித் தள்ளியவர்கள், தாங்கள் ரகளை செய்தபொழுது, ஊரே ஸ்தம்பிக்க வேண்டுமென்று குட்டிக்கரணம் போட்டார்கள்.


இவற்றையெல்லாம் மீறி, இப்போராட்டம் பிசுபிசுத்துப் போனதற்குக் காரணம், 1990 மண்டல் எதிர்ப்பில் முன்நின்ற மேல்சாதிக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் தற்பொழுது அடக்கி வாசிப்பதுதான்.


தென்மாநிலங்களில் திராவிட அரசியல் காரணமாக, தமிழகத்தில் 69 சதவிகிதமும், ஆந்திரத்தில் 49.5, கர்நாடகம் மற்றும் கேரளாவில் 50 என மாநில கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட போதும், கடந்த ஐம்பது ஆண்டுகளாக மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை. இந்த இடஒதுக்கீடு எதிர்ப்பு ஆரவாரத்தின் விளைவாக, தற்போதைய இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமென்றும், எனவே மேல்சாதி மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்களென்றும், 2007 ஜூன் முதல் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


இடஒதுக்கீட்டின் அடிப்படையையே கேலிக் கூத்தாக்கும் இம்முயற்சியை எதிர்க்காமல், சமூகநீதிக் கட்சிகள் மவுனம் காக்கின்றன.


கடந்த ஐம்பதாண்டுகளில், இந்த நாட்டில் "இடஒதுக்கீடு' மக்கள் மன்றத் தில் விவாதிக்கப்பட்ட அளவிற்கு, வேறு எந்த தலைப்பும் விவாதிக்கப்பட்டதில்லை. மாற்றுக் கருத்துக்களை விவாதிக்கும் ஜனநாயகம், காஷ்மீர் பிரச்சினை, நக்சல்பாரி எழுச்சி, இசுலாமியர் மீதான வன்கொடுமைகள் உள்ளிட்ட வேறு எந்தத் தலைப்பிற்கும் "வழங்கப்பட்டதில்லை'. ஆயினும் கூட புளித்துப் போன "தகுதி, திறமை, சமத்துவ'வாதங்கள் மீண்டும் மீண்டும் மேல்சாதி உயர் நடுத்தர வர்க்கத்தால் முன்வைக்கப்படுகின்றன.


இந்தத் திடீர் சோசலிசத் தவளைகளின் வாதத்தின் சாரம் இதுதான்:


""அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் "தகுதி'யின் அடிப்படையிலான, சமமான போட்டியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். தகுதியின் அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்படாவிட்டால், கல்வியின் தரம் குறைந்து, திறமையற்றவர்கள் உருவாகி விடுவார்கள்.''


சமமானவர்களுக்கு இடையில்தானே சமமான போட்டி நிலவ முடியும் என நாம் சொன்னால், "உலகம் தெரியாதவன்' என அவர்கள் சிரிக்கக் கூடும். ஏனெனில், இந்தச் சமமான போட்டிக்கான சமத்துவக் கோட்பாட்டில்தான் உலகமயமே அடங்கியிருக்கிறது. அது எப்படிப்பட்ட சமமான போட்டி? கோகோ கோலாவோடு காளிமார்க் சோடா மோதும் சமமான போட்டி. சாரத்தில் அமெரிக்கா இராக்கிற்கு வழங்கிய "ஜனநாயகத்தை'ப் போன்றது அம்பிகள் முன்வைக்கும் "சமத்துவம்'.


2000 ஆண்டுகளாக பிறப்பின் அடிப்படையில் "தகுதி' தீர்மானிக்கப்பட்ட நாட்டில், இன்று "தகுதி', மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் இருக்க வேண்டுமாம். சமமான போட்டியின் அடிப்படையில் இருக்க வேண்டுமாம்.


இவர்கள் மூச்சு வாங்கப் புலம்புவதென்ன? இவர்களை விட ஐந்து மார்க் குறைத்து வாங்கியவர், சாதி அடிப்படையில் சீட் பெறுகிறார் என்றால் அங்கே தகுதி அடிபடுகிறதாம். ஆனால், இவர்களை விட ஐம்பது மார்க் குறைத்து வாங்கியவர், சில லட்சங்களைக் கொடுத்து சீட் வாங்கினால் அது மட்டும் தப்பில்லையாம். "தகுதி'யைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் நிர்வாக ஒதுக்கீட்டு முறையைப் பற்றி மட்டும் இவர்கள் மறந்தும் வாய் திறப்பதில்லை. 2 லட்சம் கொடுத்து, ஒரு எருமை மாட்டைச் சேர்த்து விட்டால் கூட, அதையும் வகுப்பில் உட்கார வைத்து, பாடம் நடத்தி பட்டம் வாங்கித் தரக்கூடிய தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் பகற்கொள்ளையைக் குறித்து இவர்கள் யாரும் இப்படி இரத்தம் கொதிக்கக் குமுறுவதில்லை. ஏனெனில் அதுவும் கூட இவர்களுடைய தகுதிகளில் ஒன்றுதான். வரி கட்டுவதால் இவர்களுக்கு தேசபக்தி வருவதைப் போல, காசுக்கு வாங்கினால்தான் கல்வி தரமாக இருக்கும் என்பதும் இவர்களது நம்பிக்கை. எனவே, கல்வியின் மேம்பாட்டிற்காக அல்ல, மனதில் கமழும் மேல் சாதிய வன்மம் தான் இவர்களை இவ்வாறு வெறி கொள்ளச் செய்கிறது. சூத்திரனும், பஞ்சமனும் பிறவியிலேயே அறிவற்றவர்கள் என்ற மனுதர்மத் திமிர்தான் இவர்களது "அறவியல்' ஆவேசத்தின் ஆதார சுருதி.


மேலும், மத்திய உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் போன்றவை நாட்டிலேயே தலைசிறந்த வல்லுனர்களை உருவாக்குபவை. அதாவது ஆகமக் கோவில்களைப் போல ஆகப் புனிதமானவை. எனவே, அங்கே "தரத்தில்' பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள். அது ஏன் அங்கே மட்டும் பேச்சுக்கே இடமில்லாத "தரம்' நிலவ வேண்டும்? மக்களின் வரிப்பணத்தை கோடியாக கோடியாகக் கொட்டி நடத்தப்படும் ஐ.ஐ.டி.யிலும், ஐ.ஐ.எம்.மிலும் இருந்து தான் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கில் "தரம் வாய்ந்த', "திறமையான' பொறியாளர்களும், மேலாண்மைப் பட்டதாரிகளும் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எய்ம்ஸ்ல் படித்த தகுதி வாய்ந்த மருத்துவர்கள்தான் முடித்த கையோடு அமெரிக்காவிற்குப் பறக்கிறார்கள்.


ஆய்வுகளின்படி 2001இல் மட்டும் ஐ.ஐ.டி.யில் படித்த 25,000 பேர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்தியர்களில் 34 சதவிகிதம் பேர் ஐ.ஐ.டி.யில் படித்தவர்கள். 1980 வரை உள்ள கணக்கின்படி, எய்ம்ஸ்ல் படிக்கும் மருத்துவர்களில் 85 சதவிகிதம் பேர் வெளிநாடுகளுக்குச் சென்று விடுகிறார்கள். ஆனால் மாநில நிறுவனங்களில், இடஒதுக்கீட்டில் படித்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மருத்துவர்களில் பலர், தங்கள் மண்ணோடும் மக்களோடும் தொடர்புடையவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.


ஆக, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்., எய்ம்ஸ்இல் இடஒதுக்கீடு வந்து, "தரம்' குறைந்து விட்டால் என்னவாகும்? அமெரிக்க, ஐரோப்பிய எசமானர்களுக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்பை இந்தியக் கூலிப் பட்டாளம் இழந்து விடும். மொத்தத்தில், தாங்கள் தேசத்துரோகம் செய்வதற்கான வாய்ப்பை இழந்து விடுவோம் என ஆதங்கப்படுகிறார்கள் மேல்சாதி இளைஞர்கள். நியாயமான கவலைதான் இல்லையா? சரி, "இடஒதுக்கீடு வேண்டாம், ஆனால் படித்து முடித்த பிறகு குறைந்தபட்சம் 10 வருடம் இந்தியாவில்தான் வேலை செய்ய வேண்டும்' என்று சட்டம் கொண்டு வந்தால் என்னவாகும்? இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராளிகளெல்லாம் மறுநாளே இந்த நிறுவனங்களை விட்டு வெளியே வந்து விடுவார்கள். எனவே, இவர்கள் "தரம், தராதரம்' என்பதெல்லாம் பகல்வேடம். அமெரிக்க, ஐரோப்பிய எடுபிடிகளாக வாழ்வதையே தங்கள் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு கட்டிய மனக்கோட்டைகளில் இடஒதுக்கீட்டினால் ஓட்டை விழுந்து விடுமோ என்ற பீதியில்தான் இவர்களது "சமத்துவத்திற்கான வேட்கை' ஊற்றெடுக்கிறது.


மேலும் இத்தகைய இடஒதுக்கீடு திட்டங்களெல்லாம் ஓட்டு வங்கியை மனதிற்கொண்டு செய்யப்படும் அரசியல் என்று கூக்குரலிடுகிறார்கள். இவர்கள் ஓட்டுவங்கி என்று குறிப்பிடுவது, இவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட அமெரிக்க வேலையும், ஹ_ண்டாய் கார்களும், பிட்சா கார்னர்களும், டிஸ்கொதேக்குகளும், ஷாப்பிங் மால்களும் நிரம்பிய உலகமய இந்தியாவில் நுழைய முடியாத இந்த நாட்டின் 83 சதவிகித மக்களைத்தான். தாங்கள் கனவு காணும், தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் "ஒளிரும் இந்தியாவில்', தங்களுடைய பார்ப்பன ஆன்மாவிற்கும், தங்கள் பன்னாட்டு முதலாளிகளுக்கும் ஒத்து வராத அரசியல் அனைத்தும் இவர்களுக்கு ஓட்டுச் சீட்டு அரசியலாகப்படுகிறது. தங்கள் எசமானவர்களின் முன்னேற்றத்திலேயே தங்கள் முன்னேற்றம் அடங்கியுள்ளதை உணர்ந்த மேற்குலக அடிமைகள் இவர்கள். எனவேதான், தரம் இவர்களுடைய தாரக மந்திரமாகிறது.


அரசியல் என்ற சொல்லே இவர்களுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. அதனால்தான், அனைத்தும் அரசியலுக்கு அப்பாற்பட்டிருக்க வேண்டும் என ஒவ்வோர் தருணத்திலும் இவர்கள் கதறுகிறார்கள். இந்த நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுவது அரசியல் இல்லை. இந்த நாட்டின் நிலம், நீர், ஆகாயம் என அனைத்தும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஏலம் விடப்படுவது அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஆனால், இடஒதுக்கீடு மட்டும் அரசியலாம்!


சில "அரசியலுக்கு அப்பாற்ப்பட்ட' அறிவாளிகள், இடஒதுக்கீட்டின் பலன்கள் எல்லோரையும் சென்றடைவதில்லை என மடக்குகிறார்கள். ஏற்கெனவே அச்சலுகையை பயன்படுத்தி முன்னுக்கு வந்தவர்களே மீண்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே, இடஒதுக்கீடு பொருளற்றதாகி விட்டதென்கிறார்கள். ஆனால், மேல்சாதிகளிலும் கூடத்தான் உயர்வர்க்க, செல்வாக்குடையவர்கள் ஆதிக்கம் நிலவுகிறது. இந்த நாட்டின் முக்கியப் பதவிகளில் வீற்றிருப்போர் பட்டியலை எடுத்துப் பாருங்கள், மேல்சாதிகளில் உள்ள உயர்வர்க்க கும்பல் அப்பதவிகளில் ஆக்கிரமித்திருப்பதை அறிய முடியும். வழங்கப்படும் நியாயத்தின் முழுமையை, பாதிக்கப்பட்டவர்கள் தான் ஆலோசிக்க வேண்டும். ஆனால், அதையும் கூட இவர்கள்தான் தீர்மானிக்க வேண்டுமாம். அது சரி, இவர்கள் பிறவியிலேயே அறிவாளிகளாயிற்றே!


இறுதியில் பார்ப்பன எழுத்தாளர் அசோகமித்திரனைப் போல, இந்த நாட்டில் பிறந்ததே குற்றம், மேல்சாதிக் குடும்பத்தில் பிறந்தது அதைவிடப் பெரிய குற்றம் என ஒப்பாரி வைக்கிறார்கள். ஐயன்மீர், உங்கள் சோபாக்களிலிருந்து எழுந்து சற்றே வெளியே வாருங்கள். நீங்கள் வியந்தோதும் உலகமயம் கடந்த பத்தாண்டுகளில் கோடிக்கணக்கான தொழிலாளர்களை வீதிக்கு வீசியெறிந்து விட்டது. ஆந்திராவில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மடிந்து விட்டார்கள். அவர்கள் குடும்பங்கள் நடுரோட்டில் நிற்கின்றன. இந்த நாட்டில் விவசாயியாகப் பிறந்த குற்றத்திற்காக குடும்பம் குடும்பமாக நாடோடியாக அலைகிறார்கள். அளவுக்கு மீறி வருத்தப்படாதீர்கள், திமிறிக் கொண்டிருக்கும் மக்கள் கண்ணில் பட்டால் உங்கள் கன்னங்கள் சிவந்து விடும்.


2006இன் இடஒதுக்கீடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை வழக்கமான மேல்சாதிக் கொழுப்பு என்று மட்டும் வரையறுக்க முடியாது. 1990 மண்டல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகான இப்பத்தாண்டுகளில் மேல்சாதிகளிலிருந்து உருவாகியுள்ள உலகமயத்தின் செல்லப் பிள்ளைகள், தங்களுடைய இருப்பை ஆணவத்தோடும், ஆவேசத்தோடும் உணர்த்த தலைப்பட்டுள்ளனர் என்பதையே தற்போதைய நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. உதாரணமாக, மும்பையில் நடந்த இடஒதுக்கீடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று, உயர் வர்க்க பார்ட்டிகளையும், நிறுவன கண்காட்சிகளையும் நிகழ்த்தும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் (ழூதிழூணவ ட்ச்ணச்ஞ்ழூட்ழூணவ ஞிணிட்ணீச்ணதூ) பொறுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. போராட்டம் கூட "புரொஃபசனலாக' (தொழில் திறமையோடு) நடத்தப்பட்டுள்ளது.


"தனியார்மயம், தாராளமயம், உலகமயம்' என்ற விவாதத்திற்கு அப்பாற்பட்ட மூன்று சொல் தாரக மந்திரம், இந்த நாட்டின் பெரும்பான்மை மக் களை அன்றாடம் அவர்களது வாழ்க்கையிலிருந்து பிய்த்தெறிந்து கொண்டிருக்கிறதென்றால், இன்னொருபுறம் இந்நாட்டின் தரகு முதலாளிகளுக்கும், உயர் நடுத்தர வர்க்கத்திற்கும், கடந்த 50 ஆண்டுகளில் அவர்கள் காணக் கிடைக்காத, காணத் தவித்த வாழ்க்கையையும், வளத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறது. மெக்காலே உருவாக்கிய கல்வி முறையிலிருந்து, உடலால் இந்தியர்களாகவும், உள்ளத்தால் அமெரிக்க, ஐரோப்பியர்களாகவும் வாழும், நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் இந்திய உயர் நடுத்தர வர்க்கம், உலகமயமாக்கத்தின், தகவல் தொழில்நுட்பப் புரட்சி யுகத்தின் "தரம் வாய்ந்த' தேவைகளை கனகச்சிதமாக நிறைவு செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் குவியும் லட்சக்கணக்கான கார்களையும், விதவிதமான நுகர்பொருட்களையும், வாங்கிக் குவிப்பவர்கள் இவர்கள்தான். அடுக்குமாடிக் குடியிருப்புகளும், நவநாகரிக சலூன்களும், மசாஜ் பார்லர்களும், ரிசார்ட்டுகளும் கொழித்துக் கொண்டிருப்பது இவர்களால்தான். எம்.டி.வி., எஸ்.எஸ். மியூசிக், ரேடியோ மிர்ச்சியின் டார்கெட் ஆடியன்ஸ் இவர்கள்தான். மொத்தத்தில், இந்த 2 சதவீத இந்தியர்களின் இந்தியா ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.


மேல்நோக்கி விரைந்து கொண்டே இருக்கும் இந்த உலகமய இந்தியர்களின் மகிழ்ச்சியான தவளை வாழ்க்கையில், சமூக "அக்கறையை' அவ்வப்பொழுது ஒரு காபியைப் போலப் பருகிக் கொள்கிறார்கள். இணையத் தளங்களிலும், எஸ்.எம்.எஸ்.ஸிலும், இவர்களுடைய முத்தான "முற்போக்கு'க் கருத்துக்கள் பரவி விரிகின்றன. இந்த தேசத்தின் மண்ணோடும், மக்களோடும் உணர்ச்சிபூர்வமான எந்தத் தொடர்பும் அற்ற இவர்கள் இலஞ்சத்தை ஒழிக்க வேண்டும், படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும், தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும், இலவசம், மானியம் என்ற பேச்சே கூடாது என தங்கள் எசமானர்களும், அவர்களது கைத்தடி ஊடகங்களும் உருவாக்கிய கருத்துப் பொந்துகளுக்குள் உலா வருகிறார்கள்.


இந்தக் கருத்துக்களை உதிர்க்கும் போதெல்லாம் "குடிமகன்' என்ற அடையாளத்தை அணிந்து கொள்கிறார்கள். இந்தக் குடிமகன் அடையாளம் இவர்களுக்குப் பாதுகாப்பாகவும், வாயளப்பதற்கும் ஏற்றதாக இருக்கிறது. எல்லா சண்டப் பிரசண்டமும் செய்து விட்டு, குடிமகன் என்ற முறையில் என் கருத்தைச் சொன்னேன், அவ்வளவுதான் என அறிவை நிரூபித்த திருப்தியோடு தனது தவளை வாழ்க்கையை கவலையின்றித் தொடர வசதி செய்து தருகிறது. இத்தனை அறிவோடும், ஆற்றலோடும் தாங்கள் இருக்கையில், தங்களை சில முட்டாள்கள் ஆட்சி செய்வது, இவர்களுக்குச் சகிக்கவொண்ணாததாக இருக்கிறது. எனவே, உலகமய இந்தியர்களின் கனவு நாயகனுக்கான தேடல் தொடர்கிறது.


அவன் யார்? மணிரத்தினத்தின் "ஆய்த எழுத்து' மைக்கேல் (சூர்யா நடித்த வேடம்)தான். படித்த, அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்த, ஸ்டைலான, சிவப்பான, அரசியலுக்கு வரும் ஹீரோ. "ரங் தே பசந்தி' முன்வைத்த "அரசியலுக்கு அப்பாற்பட்ட' ஜாலியான ஆனால் புத்திசாலி ஹீரோக்கள். கோடிகளைக் குவிப்பதற்காக அமெரிக்காவில் குடியேறி, பிறகு இந்திய ஜனநாயகத்தை உய்விப்பதற்காகத் தாயகம் திரும்பி "லோக் பரித்ரான்' என்ற அமைப்பை உருவாக்கிய ஐ.ஐ.டி. மாணவர்கள்.


மெல்ல வளர்ந்து இப்பொழுது, பார்ப்பனிய ஆன்மாவும், உலகமய முகமும் கொண்ட ஒளிரும் இந்தியா தலைவிரிகோலமாக ஆடிக் கொண்டிருக்கிறது. இக்கோர ஆட்டத்தை இரண்டாயிரம் வருடப் பொறுமையோடு சகித்துக் கொண்டிருக்கிறார்கள் உண்மை இந்தியாவின் மக்கள். அந்தப் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் உடைபட்டுக் கொண்டிருக்கிறது. மொத்தமாய் உடைபடும் நாளில், அது கற்பனை செய்ய இயலாத கொடுங்கோபம் கொள்ளும். அன்று அழுகுணி வாதங்கள் எடுபடாது. சமத்துவம் அதன் உண்மையான பொருளில் நடைமுறைக்கு வரும்.


பால்ராஜ்


எதிர்ப்பு அல்ல, வக்கிரம்!


"இடஒதுக்கீடு எதிர்ப்பு' என்ற பெயரில் பார்ப்பன மேல்சாதி வெறி மாணவர்கள் அடித்த வன்முறைக் கொட்டத்துக்கு சில மாதிரிகள் இதோ: இடம்: ஒரு மருத்துவக் கல்லூரி.


வகுப்புக்குள் நுழையும் ஒவ்வொரு மாணவனையும் அவர்கள் தடுத்து நிறுத்துகிறார்கள். ""நீ கோட்டா (கிதணிவச்) மாணவனா?'' என்று கேட்கிறார்கள். பலர் "இல்லை' என்கிறார்கள். ஒருவரிடம் விசாரிக்கிற மாணவன், ""டேய் நீ கோட்டா மாணவன்தான், பொய் சொல்றியே, எனக்குத் தெரியும்'' என்று சொல்ல, மற்றவர்கள் அவனைப் பார்த்துக் கேலிசெய்து ""ஹோ'' என்று கத்துகிறார்கள்.


வகுப்பறைக்குள் விரிவுரையாளர் நுழைகிறார். பல மாணவர்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்திருப்பதைப் பார்க்கிறார். உடனே அவர் அம்மாணவர்களைப் பார்த்துச் சொல்கிறார்: ""அப்படீன்னா நீங்கள் எல்லா இடஒதுக்கீட்டையும் (கோட்டா) எதிர்க்கிறீங்க. சரி, ஒன்று செய்ங்க, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.யில ஒரு பொண்ண கல்யாணம் கட்டிக்குங்க, கோட்டா கெடச்சிடும்'' என்று அந்த மாணவர்களைப் பார்த்து நமட்டுச் சிரிப்போடு சொல்கிறார். விரிவுரையாளரின் "போதனை'யைக் கேட்ட ஒரு பெண் அருகிலிருந்த ஒரு எஸ்.சி. மாணவியைப் பார்த்துக் கேட்கிறாள்: ""ஏய், உனக்கு ஒரு அண்ணன் இருந்தால் சொல்லுடீ, அவனைக் கட்டிக்கிறேன், எனக்கும் கோட்டா கிடைக்கும்.''


பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அவர்களது நண்பர்களிடமிருந்து நக்கலாக எஸ்.எம்.எஸ். செய்திகள் வந்து கொட்டுகின்றன் மாதிரிக்குச் சில: ""ஓர் அறிவிப்பு: இன்றிலிருந்து எஸ்.சிஃஎஸ்.டி மாணவன் 4 ரன் எடுத்தால் 8 ரன்னுக்குச் சமம். அவன் 50 ரன் எடுத்தாலே போதும், 100 ரன் அடிச்சதுக்குச் சமம்.''


விடுதியில் இருந்த மாணவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து 5 நிமிடங்கள் "கரண்ட் கட்' செய்ய முடிவு செய்தார்கள். சில மாணவர்கள் இந்தக் கேலியை, அவமரியாதையைச் சட்டை செய்யவில்லை. உடனே எதிரணி மாணவர்கள் "கோட்டா', "இடஒதுக்கீடு' என்று சொற்கள் வரும் பாட்டைக் கோரஸாகப் பாடி மற்றவரை எரிச்சல் ஊட்டுகின்றனர். இதனால் அவமானம் அடைந்த மாணவர்கள் அடுத்தநாள் "கோட்டா எதிர்ப்பு ஊர்வலத்தில்' கலந்து கொள்வதாகத் தெரிவிக்கின்றனர். (ஆர்ப்பாட்டத்துக்கு ஆள் சேர்க்க இப்படியும் ஒரு வழி).


நாட்டில் உள்ள வேறு கல்லூரிகளிலும், இதே நிலைமைதான். சில இடங்களில் இன்னமும் படுமோசம். ""படிப்பாளி''யான, ""அறிவு நிரம்பிய'' மேல்சாதி வெறிகொண்ட மாணவரின் ""சமஉரிமைக்கான'' போராட்டத்தின் அழகு இதுதான்.


ஆதாரம்: தி இந்து, "ஓபன்பேஜ்'


முன்னேற்றத்தின் வண்ணமா, வக்கிரத்தின் சின்னமா?

நுகர்பொருளே, பரமபொருளாக! இந்தப் பச்சை, முன்னேற்றத்தின் வண்ணமா, வக்கிரத்தின் சின்னமா?

"ஜெனிஃபரி"ன் இந்த புதிய பெர்ப்ஃயூம் உங்கள் ஆளுமையை கூட்டி, சுத்தமாகவும், செக்ஸியாகவும் வைத்திருக்கும் வேறு எதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள்?'' என்று குழுமியிருக்கும் கூட்டத்தினரை கேட்கிறார் சென்ட் விற்பனை பிரதிநிதி. இது இந்து நாளேடு சென்னையில் நடத்திய ""மெட்ரோ பிளஸ் லைப் ஸ்டைல் ஷோ''வில் ஒரு காட்சி.


இந்திய நடுத்தர வர்க்கம் காத்திருக்கவில்லை. வாழ்க்கையின் இலட்சியத்தை, மகிழ்ச்சியின் இரகசியத்தை ""கண்டுகொண்டேன்... கண்டுகொண்டேன்'' என முன்னெப்போதைக் காட்டிலும் விரைவாக "அமெரிக்கக் கனவை' நோக்கி ஓடுகிறது. அந்த ஓட்டத்தில் ஒரு நிறுத்தம் தான் ""தி இந்து மெட்ரோ பிளஸ் லைப் ஸ்டைல் ஷோ.''


மேல்தட்டு வர்க்கத்தினரின் கேளிக்கை, கும்மாளங்களை பிரசுரிப்பதற்காக "மெட்ரோ பிளஸ்' எனும் 4 பக்க இலவச இணைப்பை நாள்தோறும் பிரசுரித்து நடுத்தர வர்க்கத்தினருக்கு "ஆன்மீக சேவை' புரிந்து வரும் "மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவின் மடோனா அவதாரம்' இந்த மெட்ரோ பிளஸ் கண்காட்சி.


இது "ரங்கராட்டினம், பஞ்சு மிட்டாய்' ரகத்தைச் சேர்ந்த அரசுப் பொருட்காட்சியோ, வீட்டு உபயோகப் பொருட்காட்சியோ அல்ல. ராக் இசை நிகழ்ச்சியும், "பிளானட் யம்'மின் உலக உணவகமும், ""நிமிடத்தில் எத்தனை பிட்சாவை விழுங்க முடியும்'' போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நிறைந்த, அரை டஜன் ஹெவி டுட்டி ஜெனரேட்டர்களால் முற்றிலும் குளிரூட்டப்பட்ட புதிய கனவுலகம்.


வாடிக்கையாளர்கள் விலைக்கு வாங்க முடியாத, ஆனால் நுகர்ந்து மகிழக்கூடிய சினிமா நட்சத்திரங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும், மாடல்களும் கூட அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தனர்.


நுகர்வோரின் வாழ்க்கைத் தரத்தை "ஜாக்கி' வைத்து தூக்கும் ஆயிரக்கணக்கான பொருட்களை இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும், ஆப்பிரிக்கா, தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா, அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் தருவித்து சதுர மீட்டருக்கு ரூ. 6000ஃ வாடகை செலுத்தி, 1,40,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டிருந்த ஒரு உலக சந்தை அது.


எதிர்பார்த்ததை போலவே கடந்த ஆண்டை விட 70% அதிகமானோர், தனது ""இஷ்ட பிராண்டுகள்'' அனைத்தும் ஒரு சேர எழுந்தருளியுள்ள இந்த ஹைபர் மார்க்கெட் ஆலயத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்து, ரூ. 50 நுழைவுக் கட்டணம் செலுத்தி, வரிசையில் நின்று தரிசித்தனர்.


விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தவைகளில் பல இதற்கு முன்னர் கேள்வியே பட்டிராத பொருள்களென்றாலும் அவை ஒவ்வொன்றின் "அத்தியாவசிய'த் தன்மையை விளக்கும் விற்பனை பிரதிநிதிகளுக்கும், ""அதில் மேற்கொண்டு பலான பலான வசதிகள் இல்லையே'' என்று விற்பனையாளர்களைத் திணறடிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பஞ்சமே இல்லை.


விறகு அடுப்பை ஊதி கண் வீங்கும் பெண்கள் வாழும் நாட்டில் ரூ. 15,000 விலையில் "பெண்களின் குறைதீர்க்கும்' எலக்ட்ரானிக் புகைபோக்கியுடன் கூடிய 4 பர்னர் அடுப்பு.


இலவச டி.வி.க்கு ஓட்டுப் போட்ட தமிழ்நாட்டில் ரூ. 400,000 விலையில் 40'' பிளாஸ்மா டி.வி. உட்கார்ந்தபடியே டி.வி. பார்க்க, படிக்க, அப்படியே கால் நீட்டி ஓய்வெடுக்க, அதையே கட்டிலாக்கித் தூங்க... என பல அவதாரம் எடுக்கும் ரூ. 25,000 மதிப்புள்ள சோபா.


60% மக்களுக்கு குழாய் இணைப்பு, குடிநீர், கழிவறை இல்லாத நாட்டில், டி.வி., போன், இண்டர்நெட், வி.சி.டி., டி.வி.டி போன்ற 13 "அத்தியாவசியமான சாதனங்கள்' பொருத்தப்பட்ட ரூ. 2,50,000 மதிப்புள்ள குளியல் அறை.


நேர்த்திக் கடனை செலுத்துவதற்குக் கூட கடன் வாங்கி பஸ் பிடிக்கும் பக்தர்கள் நிறைந்த நாட்டில் ரூ. 4 லட்சத்திற்கு விற்பனையாகும் வெள்ளியிலான நடமாடும் பூஜையறை.


உயிர் காக்கும் 150 மருந்துகளில் தன்னிறைவு இல்லாத நாட்டில், கை, கால், இடுப்பு, முதுகு, தோள், தலை என எல்லா அங்கங்களுக்கும் மசாஜ் செய்யும் 1.5 லட்சம் மதிப்புள்ள மசாஜ் நாற்காலி.


தாய்லாந்தின் காடுகள் அழிந்து சோபாவாக, ஜார்கண்ட் பழங்குடியினரின் மரபுகள் அழிந்து கைவினைப் பொருட்களாக, தாய்வான் பெண்களின் கண்பார்வை அழிந்து எலக்ட்ரானிக் பொருட்களாக, மத்தியப் பிரதேச கைவினைஞர்களின் கலை அழிந்து வெறும் பூஜையறையாக, உத்திர பிரதேச குழந்தை தொழிலாளர்களின் மழலை அழிந்து அலங்கார விரிப்புகளாக, கொத்தடிமை நெசவாளர்களின் இரத்தம் ஆர்.எம்.கே.வி.யின் புடவைகளாக, சுரங்கத் தொழிலாளர்களின் உயிர் டி.டமாஸின் வைரங்களாக, ஆப்பிரிக்க நாகரிகம் அழிந்து சுற்றுலா மையமாக... மனிதன் அழிந்து நுகர்வோனாக! இதுதான் அந்தக் கண்காட்சி.


அங்கே சோபா செட்டைப் பார்த்தவர்கள் வரவேற்பறையின் போதாமையை உணர்ந்தனர். சிறிய காரைப் பார்த்தவர்கள் இரு சக்கர வண்டியின் போதாமையை உணர்ந்தனர். பிளாஸ்மா டி.வி.யைப் பார்த்த பெண்கள் கணவனின் போதாமையை உணர்ந்தனர். அழகு சாதன மாடல்களைப் பார்த்த கணவன்மார் மனைவயின் போதாமையை உணர்ந்தனர்.


மொத்தத்தில் ஞானிகளும் முனிவர்களும் தம் வாழ்நாள் முழுவதும் முயன்றும் மக்களுக்குப் புரிய வைக்க முடியாத வாழ்வின் போதாமை தத்துவத்தை மூன்றே மணி நேரத்தில் நுகர்வோருக்குப் புரிய வைத்தது அந்தக் "கண்காட்சி'.


புதிய பொருளாதாரக் கொள்கையினால் உருவாகியிருக்கும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புதிய வேலை வாய்ப்புகளும், ஐந்திலக்கச் சம்பளமும் இந்திய நகர்ப்புற மக்களிடையே ஒரு வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வீக்கத்தை வளர்ச்சியென ஊதிப் பெருக்கி அதை அறுவடை செய்ய பன்னாட்டுக் கம்பெனிகள் இந்திய நகரங்களை முற்றுகையிட்டு, நுகர்வோரின் வாழ்க்கையை நேரடியாகவும் மறைமுகமாகவும் இடையறாது தாக்கி மாற்றுகின்றனர்.


தீபாவளி, பொங்கல் என வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே சந்தை களை கட்டிய காலம் போய், ""காதலர்கள் தினம், நண்பர்கள் தினம், தாய்மார்கள் தினம், பெற்றோர்கள் தினம், அட்சயத் திருதியை, புத்தாண்டு விற்பனை என மாதந்தோறும் சந்தை தீபாவளி கொண்டாடுகிறது.


அழகு சாதனங்களை விற்க பெரு நகரம் முதல் சிறு டவுன்கள் வரை அழகிப் போட்டிகள், ஆயத்த ஆடைகளின் விற்பனைக்கு பேஷன் ஷோக்கள், மேட்டுக்குடி ஆபாச வாழக்கையை கடைச் சரக்காக்கும் "வாழ்க்கைத் தர' புத்தகங்கள், வியாபாரிகளை மிரட்டி தங்கள் பொருட்களை மட்டுமே விற்கச் செய்யும் பன்னாட்டு கம்பெனிகளின் வர்த்தக "மேலாண்மை'த் தந்திரங்கள், கடைக்கு வர முடியாதவர்களை வீட்டுக்கே சென்று வளைக்கும் "டெமோ'க்கள்!


ஞாயிற்றுக் கிழமையானால் பகுதிக்கு ஒரு ஷாப்பிங் திருவிழா, மாதத்திற்கு ஒரு பொருட்காட்சி, திரும்பிய பக்கமெல்லாம் முகத்தில் அரையும் பிரம்மாண்ட விளம்பர தட்டிகள், கண்ணைப் பறிக்கும் நியான் ஒளி வெள்ளங்கள், மழைக்கால தள்ளுபடி, கோடைக்கால தள்ளுபடி, ஆண்டுத் துவக்க தள்ளுபடி, ஆண்டு முடிவு தள்ளுபடி, ஆடித் தள்ளுபடி, ஆனித் தள்ளுபடி என எப்போது வாங்கப் போனாலும் விலை குறைவாக உள்ளதைப் போன்று உருவாக்கப்படும் மாயத் தோற்றங்கள், பற்பசையை கூட தன்னம்பிக்கை பசையாக மாற்றும் விளம்பர மோசடிகள், இலவச சலுகைகள், பரிசுப் போட்டிகள் என விரிக்கப்படுகிறது வலை. தான் சிக்குவதை உணராத நுகர்வோரோ இந்த சந்தை சாகரத்தில் மூழ்கி மூச்சுத் திணறுகிறார்கள்.


நகரங்கள் முழுவதும் சீரியல் செட்டு போல சாரை சாரையாக மிளிரும் மார்கெட்டுகளும், ஷாப்பிங் மால்களும் மக்களை சுண்டியிழுக்கின்றன. ஆரவாரத்தின் மீது ஆராக் காதல் கொண்ட நடுத்தர வர்க்கமோ, திட்டமிட்டு பொருட்களை வாங்க வேண்டும் என்ற "பத்தாம் பசலி'த் தனத்தையெல்லாம் கைவிட்டு ""கடைக்குப் போவோம், கண்டதை வாங்குவோம்'' என்று ஈசலைப் போல கடைவீதியை மொய்க்கிறது. பொருட்களின் அணி வரிசையில் மயங்கி தள்ளுக்கூடையின் ஐந்தாவது சக்கரமாக சுழன்று கண்ணில் பட்டதையெல்லாம் அள்ளிப் போட்டு நிரம்பிய கூடையை பார்த்து பெருமிதமும் கொள்கிறது.


""அதிகமாய் நுகர்கின்ற நாடே முன்னேறிய நாடு, அதிகமாய் நுகர்கின்ற மனிதனே வெற்றி பெற்ற மனிதன், பார்த்தவுடனே வாங்க வேண்டும், ஒருவேளை பொருட்களை நுகர முடியாவிட்டாலும் அவற்றை உடைமையாக வைத்திருப்பதே மகிழ்ச்சி. அவற்றை வாங்குகின்ற அனுபவமே மகிழ்ச்சி...'' என்ற இந்த அமெரிக்கக் கனவு இந்திய நடுத்தரவர்க்கத்தின் ஆசையை வீங்க வைக்கிறது. வாங்க முடியாத ஏழை மக்களை ஏங்க வைக்கிறது.


""உழைப்பு நேரம் போக மீதமுள்ள நேரத்தில் மக்கள் ஈடுபடவேண்டிய படைப்பூக்கமுள்ள ஒரே நடவடிக்கை கடைவீதிக்குப் போய் ஷாப்பிங் செய்வதுதான்'' என்று தனது சமூகத்தையே மாற்றி அமைத்திருக்கிறது அமெரிக்க ஆளும் வர்க்கம்.


""மனசு சரியில்லை கோயிலுக்குப் போய் வருகிறேன், மனசு சரியில்லை சினிமாவுக்குப் போய் வருகிறேன்'' என்று கூறக் கேட்டிருப்பீர்கள். ""மனசு சரியில்லை சரவணா ஸ்டோர் போய்ட்டு வரேன்'' என்ற வசனத்தை விரைவில் நாம் கேட்கவிருக்கிறோம். மன ஆறுதலுக்கு ""ஷாப்பிங்'' என்பதை ஒரு மருந்தாகவே சிபாரிசு செய்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள். இந்த நுகர்வு வெறி என்பது ஒரு மருந்தா அல்லது பிணியா? இந்தக் கேள்விக்கான விடையை அமெரிக்காவிலேயே தேடுவோம்.


பசிப்பிணி என்ற சொல்லைத்தான் நாம் அறிந்திருக்கிறோம். வசதிப்பிணி என்ற நோயை உலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறது அமெரிக்கா. ""மேலும் வாங்கு, மேலும் வாங்கு என்ற வெறி பிடித்த துரத்தலின் விளைவாகத் தோன்றும் மிகை உழைப்பு, கடன், பதற்றம், மனஅழுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய துன்பகரமான சமூகத் தொற்று நோய்'' என்று இதனை வரையறுத்திருக்கிறார்கள் அமெரிக்க உளவியல் மருத்துவர்கள்.


ஷாப்பிங்தான் அமெரிக்கர்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு. நோய் தீர்க்க ஷாப்பிங், உற்சாகத்திற்காக ஷாப்பிங், ஷாப்பிங்கிற்காக ஷாப்பிங் என வாங்கிக் கொண்டே இருப்பது என்பது அமெரிக்க கலாச்சார கூறுகளில் ஒன்றாகிவிட்டது.


தங்கள் குழந்தைகளுடன் வாரம் வெறும் 40 நிமிடமே விளையாடும் 70% அமெரிக்கர்கள் வாரம் 6 மணி நேரம் ஷாப்பிங் செய்கிறார்கள். நாளொன்றுக்கு 7 மணிநேரத்தை தொலைக்காட்சியின் முன் செலவிடும் குழந்தைகள் பெற்றோருடன் பேசும் நேரம் வெறும் 15 நிமிடங்கள். டி.வி. விளம்பரத்துக்குப் பலியான அமெரிக்க குழந்தைகளால் தூண்டப்படும் வியாபாரம் மட்டும் ஆண்டுக்கு 45 லட்சம் கோடி ரூபாய்.


1950இல் துவங்கிய அமெரிக்க மக்களின் நுகர்வு கலாச்சாரம், நுகர்வு வெறியாய் வளர்ந்து, கொள்ளை நோயான அஃப்லூயென்ஸாவாக இன்று ஒட்டு மொத்த சமூகத்தையே சிதைத்துவிட்டது. இந்த தணியாத நுகர்வுத் தாகத்தினால் அமெரிக்கர்கள் ஆண்டுதோறும் ஆளுக்கு 21,000 டாலர்கள் நுகர்வு பொருட்களின் மேல் செலவழிக்கிறார்கள். அமெரிக்காவில் உயர் பள்ளிகளைவிட ஷாப்பிங் மால்கள் இரு மடங்காக பெருகியுள்ளன.


இவ்வளவு செலவிற்கும் அமெரிக்கர்கள் வாங்கியவை பொருட்கள், பொருட்கள், பொருட்கள் மட்டுமே. பொருட்களை வாங்கி வைப்பதற்காக அமெரிக்கர்களின் வீடுகள் விரிந்தன. அதாவது, வீட்டில் மனிதர்கள் பயன்படுத்தும் இடத்தைக் காட்டிலும் பொருட்கள் "பயன்படுத்தும்' இடம் அதிகரித்தது. சோபா, கட்டில், பீரோ போன்ற பொருட்களை வாங்கிவிட்டு வைப்பதற்கு வீட்டில் இடமில்லாமல் வாடகைக்கு லாக்கர் பிடித்து அங்கே அடுக்கி வைத்துப் பாதுகாக்கிறார்கள். இதற்கு அமெரிக்கர்கள் கட்டும் ஆண்டு வாடகை மட்டும் 60,000 கோடி ரூபாய்.


இவ்வளவு வாங்கியும் செலவழித்தும் அமெரிக்கர்களால் இன்பமாக இருக்க முடியவில்லை. ஏனென்றால் ""அமெரிக்கர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அமெரிக்கர்கள் அதிகமாக உழைக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அதிகமாக வாங்க விரும்புகிறார்கள்.'' வாங்கிய கடனை அடைக்க மேலும் அதிகமாக வேலை செய்கிறார்கள்.


ஏனென்றால், இந்த ஷாப்பிங் அனைத்தும் கடனில் தான் செய்யப்படுகிறது. அமெரிக்காவில் ஐந்திற்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் இல்லாத நபரை காண்பது அரிது. ஒரு சராசரி அமெரிக்க குடும்பம் கிரெடிட் கார்டுகளில் மட்டும் 7500 டாலர்களுக்கு மேல் கடன் வைத்துள்ளது. இன்றைய நிலையில் 60 லட்சம் அமெரிக்கர்கள் போண்டியாகும் விளிம்பில் உள்ளனர். 60% அமெரிக்கர்களுக்கு வேலை போனால் தனது வாழ்க்கையை 1 மாதம் கூட தாக்கு பிடிக்க முடியாத நிலை.


ஒரு அமெரிக்கத் தொழிலாளி 1960களில் வேலை செய்ததை விட இன்று அதிக நேரம் வேலை செய்கிறான். இதனால் ஏற்பட்ட நேரமின்மை காரணமாக ஒரே வீட்டில் இருந்தாலும், அமெரிக்க குடும்பத்தினர் தனித்தனி தீவுகளாக தொடர்பற்று வாழ்கின்றனர். நாளொன்றுக்கு 12 நிமிடம் மட்டுமே பேசும் அமெரிக்க தம்பதிகள்தான் உலகிலேயே அதிகமாக விவாகரத்து செய்கிறார்கள். அதில் 90% விவகாரத்துகளுக்கு காரணம் பணம் தொடர்பான பிரச்சினைகள்.


பொருட்களின் பால் வளர்க்கப்படும் "உபயோகித்தபின் தூக்கியெறி' எனும் "யூஸ் அண்ட் த்ரோ' கலாச்சாரம் மனித உறவுகளுக்கும் பரவுகிறது. "பயன்படாத' நண்பர்களோ, கணவனோ, மனைவியோ, பெற்றோரோ காலம் காலமாய் ஒரு கம்பெனியில் உழைத்த தொழிலாளியோ யாராக இருந்தாலும் பொருட்களை போலவே தூக்கியெறியப்படுகிறார்கள்.


நுகர்வு வெறியின் நேரடி விளைவாக ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்குமான இடைவெளி அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏழைகள் வறுமை கோட்டுக்கு கீழ் போய் கொண்டிருக்கும் அதேநேரத்தில் பணக்காரர்கள் தனது வளத்தை பெருக்கிக் கொண்டே போகின்றனர். 20 சதவிகிதம் அமெரிக்க குடும்பங்கள் 92% அமெரிக்க வளத்தை பெற்றுள்ளன. அவர்களில் 10% பேர் 83% வளத்தை பெற்றுள்ளனர். இதற்கு மாறாக 40% அமெரிக்கர்களுக்கு எந்தவிதமான சொத்துக்களும் இல்லை. இந்த ஏற்றத்தாழ்வின் விளைவாக விதம் விதமான குற்றங்கள் அதிகரிக்கின்றன. உலகத்திலேயே அதிகமாக 20 லட்சம் குடிமக்களை சிறையில் வைத்துள்ளது அமெரிக்க அரசு.


வாங்கிக் குவிப்பதில் வற்றாத தாகம் கொண்ட அமெரிக்கர்களுக்கு தன் குடும்பமும் சமூகமும் சிதறுவதைப் பற்றி உரைப்பதேயில்லை. நுகர்வுவெறி தோற்றுவிக்கும் "நான் எனது என்னுடைய' என்ற தனிநபர்வாதம் அவர்களை ஒட்டு மொத்த சமூகத்திலிருந்து அந்நியமாக்கியிருக்கின்றது. உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கும் நுகர்வு வெறி சமூகமான அமெரிக்க வல்லரசில் 15% பேர் மன நோயுடன் வாழ்கிறார்கள். 10 ஆண்டுகளில் தற்கொலைகள் 300% அதிகரித்துள்ளன.


2004ஆம் ஆண்டு கணக்குப்படி நம் நாட்டில் பெங்களூரில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 70% பேர் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதிகளான சாப்ட்வேர் துறையினர். இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவும் வல்லரசுதானோ!


பசிப்பிணியால் துன்புறும் நமது நாட்டிற்கும் வசதிப் பிணியால் அவதிப்படும் அமெரிக்காவுக்கும் ஏணி வைத்தாலும் எட்டுமா என்று வாசகர்கள் சிலர் கருதக்கூடும். ஏணி வைக்காமலேயே எட்டிவிடும் தூரத்தில்தான் இருக்கிறோம்.


அடுத்த சில ஆண்டுகளில் ""25 கோடி செல்போன் என்ற இலக்கை அடைந்தே தீருவோம்'' என்கிறார் அமைச்சர். வீட்டுக்கு ஒரு குழாய் இல்லை; குழாய் வைக்க வீடே இல்லை. ஆனால் வீட்டுக்கு ஒரு செல்போன்! இரண்டு ரூபாய் அரிசியும் கலர் டிவியும் அமைத்துள்ள கூட்டணியின் பொருள் என்ன? அதுதான் வறுமையும் நுகர்பொருள் மோகமும் அமைத்துள்ள கூட்டணி.


அமெரிக்காவைப் போல பொருட்களை வைக்க வீட்டில் இடமில்லாமல் லாக்கர் தேடும் நிலை இங்கே தோன்றாமலிருக்கலாம். ஆனால் ""டிவி, சோபா, ஃபிரிட்ஜ், வாசிங்மிஷின், கிரைண்டர், கம்ப்யூட்டர், சாப்பாட்டு மேசை'' ஆகியவைதான் இன்றைய நடுத்தர வர்க்க வீடுகளின் அளவைத் தீர்மானிக்கின்றன என்பது உண்மையில்லையா?


அட்சய திருதியைக்கும் ஆடித் தள்ளுபடிக்கும் நேர்த்திக் கடன் செலுத்துவது போல கடைவீதிக்குப் போக நடுத்தர வர்க்கம் பழகிவிடவில்லையா? கிரெடிட் கார்டு இல்லாத நகர்ப்புற நடுத்தர வர்க்கம் இன்று உண்டா? 1980இல் இந்தியா முழுவதும் 8700 கிரெடிட் கார்டுகள். இன்று ஒரு சிற்×ரிலேயே அதைவிட அதிகமிருக்கும்.


உங்கள் பெற்றோரும் பிள்ளையும் டி.வி.யுடன் செலவிடும் நேரம் அதிகமா, உங்களுடன் செலவிடும் நேரம் அதிகமா? தொலைக்காட்சி விளம்பரங்கள் உங்கள் வாங்கும் விருப்பங்களைத் தீர்மானிக்கவில்லையா?


இந்த நுகர்வு மோகம் உங்கள் உறவினர் மத்தியில், நண்பர்கள் மத்தியில், ஏன் உங்கள் குடும்பத்திற்குள்ளேயே இனம் புரியாத சுயநலவாதிகளை உருவாக்கியிருப்பதை நீங்கள் இன்னும் அடையாளம் காணவில்லையா?


எதை உடைமையாகக் கொள்ள முடியுமோ அந்தப் பொருளை மட்டுமே நேசிப்பது என்ற பொருள் மோகம், ""காதல், பாசம், இரக்கம், நட்பு, தோழமை'' போன்ற மனித உணர்ச்சிகளின் இடத்தில் உடைமை உணர்ச்சியை சத்தம் போடாமல் திணித்துவிட்டது. சக மனிதனைப் பொருளைப் போல விலைக்கு வாங்க முடியாதென்பதால் மனித உறவுகள் "மதிப்பு' இழந்து வருகின்றன.


இந்தப் பொருள் மோகம் தானாக உருவானதல்ல. முதலாளி வர்க்கத்தால் திட்டமிட்டு உருவாக்கப்படுவது. முதலாளித்துவ நுகர்பொருள் உற்பத்தியுடைய கன்வேயர் பெல்ட்டின் மறுமுனையில் உங்கள் வாய். நாளொன்றுக்கு 10 லட்சம் பாட்டில் கொக்கோ கோலா உற்பத்தி என்றால் தினம் ஒரு பாட்டில் குடிப்பதற்கும் அதுவே 20 லட்சமானால் 2 பாட்டில் குடிக்கும்படியாகவும் நீங்கள் தயாரிக்கப்படுகிறீர்கள். விலங்குகளைக் கூடக் கூண்டிலடைத்துத்தான் அடிமையாக்க முடியும். சுதந்திரமாக உலவவிட்டு அடிமைத்தனமாக சிந்திக்கும் நிலைக்கு நம்மைப் பழக்கியிருக்கிறது முதலாளித்துவம்.


முதலாளித்துவ உற்பத்தியின் தேவைக்கு ஏற்ப உங்கள் பசியும் தாகமும் உருவாக்கப்படுகின்றன. உங்களுடைய நாவில் உமிழ்நீர் சுரப்பதைக் கூட விளம்பரங்கள் தீர்மானிக்கின்றன.


அமெரிக்கக் கனவைத் துரத்தும் இந்த ஓட்டத்தில் மனிதப் பண்புகள் காலடிப் புழுதியாகி காற்றில் கலக்கின்றன. கடன் கட்ட முடியாமல் 10,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நாட்டில், கையில் கிரெடிட் கார்டுகளுடன் எதை வாங்குவது என்று தெரிவு செய்ய முடியாமல் கடைகளில் அலைமோதுகிறது ஒரு கூட்டம்.


அவர்களுக்கு நாட்டைப் பற்றியோ சக மனிதர்களின் துயரத்தைப் பற்றியோ அக்கறையில்லை. அவர்களால் விலைக்கு வாங்க முடியாத எந்தப் பொருள் மீதும் அவர்களுக்குப் பற்றுதல் இல்லை.


கணவன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் நண்பர்களுக்கும் ஒதுக்குவதற்குக் கூட நேரமில்லாமல் அவர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். உழைப்பு நேரத்தையும் ஓய்வு நேரத்தையும் ஒரு சேர சந்தையிடம் அடகு வைத்ததனால் ஏற்பட்டுள்ள இடைவெளியை அவர்கள் அடைத்தாக வேண்டும் பொருட்களைக் கொண்டு!


மு கார்மேகம்


Sunday, September 24, 2006

நூல் அறிமுகம்: ஈழம் : சமர் புரியும் உண்மைகள்!

நூல் அறிமுகம்:
ஈழம் : சமர் புரியும் உண்மைகள்!

லக வரைபடத்தை உற்றுப் பார்த்தால் நாதியற்று நடுக்கடலில் வெட்டி வீசியெறியப்பட்ட இதயத்துண்டாய் நம் கண்ணில் படுகிறது இலங்கைத் தீவு.


""விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள இராணுவத்திற்கும் சண்டை, புலிகள் தமிழகத்தில் ஊடுருவல்'' என்ற பூச்சாண்டியைத்தவிர செய்தித்தாள்கள் வேறு எதையும் சொல்வதில்லை. புலிகளின் தமிழகத்து ஆதரவாளர்களோ புலிகளின் போர் முறையை வியந்து சிங்கள இராணுவம் திணறல், கடல் புலிகள் சாகசம், எட்டிவிடும் தூரத்தில்தான் ஈழம் என்று புலிப்பாணி சோதிடர்களாய் பொழிப்புரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


ஆனால் நடப்பது என்ன? சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த ஈழத்தமிழர்களின் தேசிய இனப் போராட்டம் திசை விலகி சிங்கள இனவெறி அரசு, விடுதலைப்புலிகள் இரு தரப்புமே அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் மேற்பார்வையின் கீழான ஒரு இழுபறிச் சண்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இரு தரப்பு இலக்குகளுமே ஏகாதிபத்தியங்கள் நிர்பந்திக்கும் திசையில் இழுத்துச் செல்லப்படுகின்றன. இந்தப் புரிதலின் வெளிப்பாடுதான் இருதரப்புமே நார்வே தூதுக்குழு முன்னிலையில் செய்து கொண்ட "புரிந்துணர்வு' ஒப்பந்தங்களும், புலிகளின் "இடைக்கால தன்னாட்சி அதிகாரங்களும்'.


புலிகளின் போக்கை விமர்சனம் இன்றி ஆதரிக்காதவர்கள் அனைவரும் இனத்துரோகிகளென்று கூறி ஈழத்தமிழர்களுக்கான அரசியல் உரிமையை மறுத்தும், மாற்று அரசியல் கருத்தாளர்களைப் புலிகள் படுகொலை செய்தும் வரும் சூழலில், ஈழத் தமிழர்களின் தேசிய நலனும் ஒட்டு மொத்த இலங்கையுமே அன்னிய ஆக்கிரமிப்பாளர்களான ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைக்கப்படுவதைக் கண்டித்து ஒரு குரல் கேட்கிறது.


புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரான பி.இரயாகரன் அவர்கள் எழுதியிருக்கும் மூன்று நூல்கள் சிங்கள அரசின் இன ஒடுக்குமுறை மற்றும் அதற்கு எதிரான ஈழத் தமிழர் போராட்டத்தின் முழுப் பரிமாணத்தையும், வர்க்க உள்ளடக்கத்தையும், தெளிவுபடுத்துவதில் சிறப்பான பங்காற்றுகின்றன.


1. இலங்கை: யுத்தத்தின் பரிணாமமும், உலகமயமாக்கலின் படையெடுப்பும்


ஈழத் தமிழர்களின் தேசிய இனப் போராட்டம் சிங்கள இனவெறிக்கு பதிலடியான யுத்தமாக பரிணமித்து, பிறகு ஏகாதிபத்தியங்களின் உலகமயமாக்கல் நலனுக்கு உட்பட்டவையாக மாறியதை இந்நூல் புள்ளிவிபரங் களோடும், இலங்கையின் நிகழ்வுகளோடு தொகுத்தும் கூறுகிறது. யாழ்ப்பாணத்தையே மையப்படுத்தி ஆய்வு செய்யும் நூல்களுக்கு மத்தியில், ஈழத்தின் உழைக்கும் மக்கள், மலையகத் தமிழர்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோரின் வாழ்க்கைப் போராட்ட இனப் பிரச்சினையைப் பொருத்தி விவாதிக்கிறது இந்நூல்.


""யாழ்ப்பாணத்தின் அற்ப பூர்சுவா கனவுகளையே இயக்கம் தலைமை தாங்குகிறது. மலையக மக்கள், முசுலீம் மக்கள், பின் தங்கிய பிரதேச மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்கள் என எதைப் பற்றியும் கவலைப்படாத போராட்டம். (பக்.16)'' இப்படி கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் அனைத்திலும் ஈழத்தமிழர்களிலேயே பெரும்பகுதியினரைப் புறக்கணித்த வரலாற்றை நூல் அடுக்கடுக்காக விவரிக்கிறது.


சிங்கள இனவெறியையும் ஏகாதிபத்தியங்களையும் எதிர்க்கும் புரட்சிகரக் குழுக்களைக்கூடச் செயல்பட அனுமதிக்காத புலிகள், தன்னார்வக் குழுக்களை மட்டும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திருப்பதை அம்பலப்படுத்துகிறார் நூலாசிரியர். ஐரோப்பிய யூனியன் 8.8 லட்சம் டாலரை வழங்கியுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி முதல் அமெரிக்கா ஈறாக அனைவரும் பணத்தை வாரி வழங்குகின்றனர். ஏகாதிபத்திய நிதி உதவியில் இலங்கையில் 3000 தன்னார்வக் குழுக்கள் செயல்படுகின்றன.'' (பக். 104)


உலகமயமாக்கலின் அதிகாரத்தின் கீழ் நடைபெறும் யுத்தத்தின் சகலவிதமான தேசவிரோத நடவடிக்கைகளையும் இனங்காட்டுவதோடு, ஒரு தேசத்தின் நலன்களைப் பாதுகாக்கும் அரசியல் யுத்தத்தின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது இந்நூல். (பக். 111)


2. ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை


சிங்கள இனவெறிஅரசு, விடுதலைப் புலிகள், தமிழின விரோதக் குழுக்கள், தனிநபர் அராஜகவாதிகள் ஆகிய அனைவருமே ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து போவதைச் சொல்கிறது இந்நூல். ""சமாதானமா? யுத்தமா? என்பதை மையமான பொருளாக்கிய ஏகாதிபத்தியம் விரிவாகவே களமிறங்கியுள்ளது. புலிகளுக்கும், அரசுக்கும் பின்பக்கமாகக் கைகள் இறுகக் கட்டப்பட்ட நிலையில் சமாதானம் பற்றி மூலதனம் உத்தரவுகளை இடுகிறது... (பக். 5)''


""உதாரணமாக 2002இல் பட்டியலிடப்பட்ட 208 கம்பெனிகள், முதல்கால் பகுதியில் பெற்ற நிகர லாபம் 390 கோடி ரூபாயாகும். சென்ற வருடத்துடன் ஒப்பிடும்போது 85 சதவீதம் அதிகமாகும். உண்மையில் சமாதானம் அமைதி என்பதை வெளிநாட்டு மூலதனமே தனக்கு இசைவாகப் பயன்படுத்தியுள்ளது. (பக்.5)''


""2003 (ஜனபிப்) தை மாதம் இலங்கைத் துறைமுகத்துக்குள் 22,258 கப்பல்கள் வந்தன. இது வழமையை விட 12 சதவீதம் அதிகமாகும். ஏற்றி இறக்கிய கொள்கலன்கள் 1,46,737 ஆகும்.


அமெரிக்க பினாமியான நார்வே மத்தியஸ்தம் மூலம் ""இடைக்கால தன்னாட்சி அதிகாரம்'' என்று ஏகாதிபத்தியங்கள் முன் புலிகள் செய்திருக்கும் சமாதானம் என்பதும் எப்படி மக்கள் நலனுக்கு எதிராக உள்ளது என்பதை பக்.170இல் தொடங்கும் அத்தியாயங்கள் விவரிக்கின்றன. புலிகளின் பொருளாதாரக் கொள்கை, மக்களிடம் வரி அளவிடும் முறை, தேசிய உற்பத்தியின் சூறையாடல் போன்ற விவரங்கள் ஈழத்தைச் சுற்றிப் பார்க்கப் போய் வரும் தமிழகத்து "புலிச்சுற்றுலா' நபர்களின் நூல்களில் மறைக்கப்படும் உண்மைகளாகும்.


"".... மூன்றாவது தமிழீழத் தேசிய விளையாட்டு விழாவை புலிகள் 20.2.2004 அன்று கிளிநொச்சியில் நடத்தினர். அந்தத் தேசிய விழாவில் கொக்கோ கோலா விளம்பரங்கள், புலிக் கொடியை விட பெரிய அளவில், புலிக்கொடியின் பின்னணியில் வடிவ மைக்கப்பட்டிருந்தது. (பக்.112)''


""இனச்சண்டையில் பாட்டாளியாவது வர்க்கமாவது, அதெல்லாம் நடக்காது. களத்தில் நின்று பார்த்தால்தான் புரியும்'' என்று வர்க்க ஒற்றுமைக்கு எதிராக வக்கணை பேசுகிறார்கள் வவுனியா கைடுகள். ஆனால், பன்னாட்டுக் கம்பெனிகளுடன் வர்க்க ஒற்றுமை கொள்வது மட்டும் சாத்தியம் என்பதைத் தமது ஏகாதிபத்திய சேவையின் மூலம் புரிய வைத்திருக்கிறார்கள் புலிகள்.


""அண்மையில் பிரபாகரனின் மகன் வெளிநாடு சென்று கல்வி கற்க இலங்கை அரசின் ஊடாக கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) எடுத்த செய்தி மெதுவாக கசிந்துள்ளது. இதுவரை புலிகள் இதை மறுக்கவில்லை. யுத்தத்தை மிகக் கேடாகப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு... மண்ணெண்ணையை விற்று மக்களையே கொள்ளையடித்து கோடீசுவரனான ஆளும் கட்சியின்... மகேஸ்வரன்... பிரபாகரனின் மகளின் கடவுச்சீட்டை நேரடியாக பெற்றுக் கொடுத்ததாக, தகவல் கசிகிறது. இவன் இந்துக் கோயில்களின் தர்மகர்த்தாவாகவும், சாராயக் கடைகளின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் ரவுடியாகவும் இருக்கிறான்... (பக்.36)


இப்படி இனவெறி அரசுடனும் மக்கள் விரோதிகளுடனும் கூடத் தரகுத் தமிழ்த் தேசியம் உடன்பட்டுப் போகும்போது, ஏகாதிபத்திய "உதவிகள்' கசக்கவா செய்யும்? இதனை விரிவாகப் பட்டியலிடுகிறது மூன்றாவது நூல்.


3. இலங்கை: இயற்கைப் பேரழிவு, தேசத்தின் சீரழிவு


சுனாமியால் கடும் பாதிப்புக்குள்ளான இன்னொரு நாடான இந்தோனேசியாவை விட அதிகமாக ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையில் வந்து குவிந்து, உதவி, கடன் வழங்குவது ஏன்? அது இலங்கையின் இயற்கை வளங்களைப் பங்கு போடத்தான் என்பதை ஆதாரங்களுடன் அம்பலம் செய்கிறது இந்நூல்.


சிங்கள இனவெறி அரசு மற்றும் புலிகள் சுனாமி நிதியைப் பெறுவதற்கு ஏகாதிபத்தியங்களிடம் தேசிய நலன்களை அடகு வைத்தது பற்றியும், கண்டு கொள்ளப்படாத முசுலீம் மக்கள் மற்றும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்களின் நிலைமைகள் பற்றியும், ஜே.வி.பி.யின் இனவாதத்தையும், சுனாமியைச் சாக்கிட்டு நுழைந்த ஏகாதிபத்திய தன்னார்வக் குழுக்கள் செய்யும் குடி கெடுக்கும் வேலைகளையும், இயற்கையின் பாதிப்பிலும் நாட்டை ஏகாதிபத்தியங்களிடம் மீள் அடகு வைக்கும் அரசியல் நிகழ்ச்சிகளையும் போதிய விவரங்களுடன் புரிந்து கொள்ள இந்நூல் வழிசெய்கிறது.


நூலாசிரியர் சமூக நடவடிக்கைகளை விட்டு ஒதுங்கி "கள ஆய்வு' செய்து கருத்துக்களை வண்ணம் குழைக்கும் நுண்மான் நுழைபுலம் கொண்ட வெறும் ஆய்வாளரல்ல. ஈழத்து அரசியல் களத்தில் மார்க்சியலெனினிய சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு மக்களிடம் அரசியல் வேலை செய்தவர். இயக்கமாய் இயங்கியவர். அந்தக் காரணத்துக்காகவே புலிகளின் சித்திரவதை முகாமில் தண்டனைக்கு உள்ளானவர். மாற்று அரசியல் பேசும் உரிமையும் உயிர் வாழும் உரிமையும் மறுக்கப்பட்ட நிலையில், புலம் பெயர்ந்தாலும் வர்க்க நலன் பெயராமல் ஈழத்தை நோக்கியும், சர்வதேசப் பாட்டாளி வர்க்க உணர்வுடனும் இயங்கிக் கொண்டிருப்பவர்.


இம்மூன்று நூல்களும் இலங்கை, ஐரோப்பா மற்றும் தமிழகத்தில் பரவலாக அறிமுகமாகியிருந்தாலும், கம்யூனிச அரசியலுக்கு எதிரான காய்ச்சலால், இனவாதிகளாலும், அராஜகவாதிகளாலும் இருட்டடிப்பு செய்யப்படுபவை. இனப் பிரச்சினையைப் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்க்க விரும்புவோர்க்குத் துணை புரிபவை.


இலங்கை: யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்


ரூ. 40.00


ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை


ரூ. 70.00


இலங்கை: இயற்கைப் பேரழிவு தேசத்தின் சீரழிவு


ரூ. 150.00


ஆசிரியர் : பி. இரயாகரன்.


வெளியீடு : சமர், பிரான்சு.


தமிழகத்தில் நூல் கிடைக்குமிடம்:


கீழைக்காற்று வெளியீட்டகம்,


10, அவுலியா சாகிபு தெரு,


எல்லீசு சாலை,


சென்னை 600 002.


தொலைபேசி: 04428412367


அஞ்சலில் நூல் வேண்டுவோர் நூலின் விலையுடன் ரூ. 17.00 சேர்த்து M.O. செய்யவும்.