தமிழ் அரங்கம்

Friday, April 7, 2006

நாடு அழிகிறது பங்குச் சந்தை வளர்கிறது

நாடு அழிகிறது பங்குச் சந்தை வளர்கிறது

ந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் மும்பை பங்குச் சந்தை புள்ளிகள் 10,000ஐத் தாண்டி புதிய உயரத்துக்கு முன்னேறியது. அது மேலும் உயர்ந்து மேலே போய்க் கொண்டிருக்கிறது. ""பாய்ச்சல்; இதுவரை கண்டிராத வகையில் முரட்டுக் காளையின் மாபெரும் பாய்ச்சல்; பிப்ரவரி 6ஆம் தேதி, மும்பை பங்குச் சந்தையின் அதிருஷ்டநாள்!'' என்று பெரு முதலாளிகளும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் தரகர்களும் செய்தி ஊடகங்களும் குதூகலத்துடன் கொண்டாடினர். கோலாகலம், விருந்துகள், வாழ்த்துச் செய்திகள், பொருளாதார நிபுணர்களின் பேட்டிகள், எதிர்காலம் பற்றிய ஆரூடங்கள் என பங்குச் சந்தை சூதாடிகளும் பத்திரிகைகளும் ஒரு திருவிழாவையே நடத்தினர்.

""48 நாட்களில் 10,000 புள்ளிகளைத் தாண்டி பங்குச் சந்தை வர்த்தகம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது; பொருளாதாரம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில் 8.1மூ பொருளாதார வளர்ச்சியை எட்டி விடுவோம்'' என்கிறார், நிதியமைச்சர் ப.சிதம்பரம். ""இல்லையில்லை; 10மூக்கும் மேலாக வளர்ச்சி இருக்கும் என்று கிளி ஜோசியம் சொல்கிறார், உலக வங்கி கைக்கூலியும் திட்டக் கமிசன் துணைத் தலைவருமான மான்டேக்சிங் அலுவாலியா.

பிப்ரவரியில் 10,000 புள்ளிகளைத் தாண்டி மும்பை பங்குச் சந்தை பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருந்தபோது, அதே மும்பை நகர் அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்தில், கடன் சுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்ட சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 300 பேரைத் தாண்டிக் கொண்டிருந்தது. மும்பை நகரில் மூடப்பட்ட சிறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியது. பட்டினியால் மகாராஷ்டிராவில் மாண்டுபோன பழங்குடியின குழந்தைகளின் எண்ணிக்கை 2850ஐத் தாண்டியது. வேலையிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை பல பத்தாயிரங்களாக அதிகரித்தது.

நாட்டின் உண்மை நிலவரம் இப்படியிருக்க, காங்கிரசு கயவாளிகளும் பங்குச் சந்தை சூதாடிகளும் முதலாளித்துவ மூதறிஞர்களும் நாட்டின் பொருளாதாரம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருவதாகக் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கின்றனர். தொழில் நிறுவனங்கள் ஈட்டும் லாபத்திற்கேற்ப பங்குகளின் விலை உயர்வு அமையும் என்பதற்கு மாறாக, தொழில் வளர்ச்சியே மந்த நிலையில் இருக்கும் போது பங்குகளின் விலை மட்டும் வீங்கிக் கொண்டே போகிறது. இதற்கான காரணத்தையும், இதனால் ஏற்படும் விபரீத விளைவுகளையும் மூடிமறைத்துவிட்டு, பங்குச் சந்தை பாய்ச்சலைக் காட்டி பொருளாதாரம் முன்னேறுவதாக இப்பாசிஸ்டுகள் நம்பச் சொல்கிறார்கள்.

பங்குச் சந்தையின் பிரமிக்கத்தக்க வளர்ச்சிக்கு முக்கிய காரணம், இந்திய பங்குச் சந்தை சூதாட்டத்தில் கோடிகோடியாய் அந்நிய நிதி முதலீடுகள் கட்டுப்பாடின்றி பாய்ந்திருப்பதேயாகும். கடந்த பத்தாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவந்த இந்த அந்நிய சூதாட்ட முதலீடுகள் இப்போது ரூ. 2 லட்சம் கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டில் மட்டும் இத்தகைய முதலீடுகள் ரூ. 45,000 கோடிக்கும் மேலாக இந்தியப் பங்குச் சந்தைகளில் பாய்ந்ததால், பங்குகளின் விலையும் உயரத் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையில் 2005 முடிவில் 9400 ஆக இருந்த விலை புள்ளி கடந்த பிப்ரவரியில் 10,000ஐத் தாண்டி இன்னும் மேலே போய்க் கொண்டிருக்கிறது. இந்தியத் தொழில் நிறுவனங்களின் வியாபாரப் பெருக்கத்தாலோ, லாப அதிகரிப்பாலோ இந்தப் பாய்ச்சல் நிகழவில்லை. அந்நிய முதலீடுகளின் அதிகமான புழக்கத்தால் செயற்கையான கிராக்கி ஏற்பட்டு பங்குகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

மீன்காரனுக்கு தூண்டில் மிதவை மீதுதான் கண் என்பதைப் போல, மற்ற நாடுகளைவிட அதிக லாபம் கிடைக்கும் என்பதால் குறுகில் காலத்தில் கொள்ளையடிப்பையே குறியாக வைத்து அந்நிய நிதி முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையை நோக்கிப் படையெடுக்கின்றன. காலையில் பங்குகளை வாங்கி மாலைக்குள் விற்று முடித்து கோடிகோடியாய் லாபத்தை அள்ளுகின்றன. ஒருநாள் அல்ல, ஒரு சில நிமிடங்களிலேயே இந்த வியாபாரத்தை முடித்துக் கொண்டு, கிடைத்த லாபத்தோடு இந்த அந்நிய முதலீடுகளும் வெளியேறி விடுகின்றன.

ஒரு அந்நிய நிறுவனம் நேரடியாகவோ அல்லது இங்குள்ள தரகுப் பெருமுதலாளிகளை பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டோ ஒரு தொழில் நிறுவனத்தைத் தொடங்கினால் அது அந்நிய நேரடி முதலீடு எனப்படுகிறது. இது ஒப்பீட்டளவில் நீண்டகாலம் இங்கு நிலைத்திருக்கும் முதலீடாகும்.
ஆனால், பங்குச் சந்தையில் குவியும் சூதாட்ட முதலீடு அப்படிப்பட்டதல்ல. அந்நிய நிதி நிறுவன முதலீடு எனப்படும் இத்தகைய முதலீடுகளை குறுகிய கால முதலீடு என்றும் சூடான நிதி என்றும் குறிப்பிடுவர். அதாவது இந்தச் சூட்டை கையில் வைத்திருக்க முடியாமல் கைக்கு கை வேகமாக பணம் கைமாறும். நிமிடத்திற்கு நிமிடம் கைமாறும் இந்த சூடான பணம் உலகெங்கும் பங்குச் சந்தைகளில் வேகமாகச் சுழன்று பங்குச் சந்தை சூதாட்டத்தை ஊக்குவித்து உச்சாணிக்குக் கொண்டு சென்று பறந்துவிடும். காசோலை எழுதி அஞ்சல் செய்து அனுப்பக் கால தாமதமாகும் என்பதால், இந்தச் சூடான நிதியை காசோலை மூலம் கொடுக்கல் வாங்கல் செய்வதில்லை. மின்னஞ்சல் (ஈ மெயில்) மூலம் இந்தப் பணம் புழங்குவதால் இதை ""ஈ பணம்'' என்றும் குறிப்பிடுவர்.

ஈ போல மொய்த்து உடனே பறந்துவிடும் இந்தச் சூதாட்ட முதலீடானது, பொருளாதாரத்தையே சூதாட்டமாக மாற்றிவிடுமளவுக்கு ஆபத்தானது. 1997இல் தென்கிழக்காசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் வெள்ளமென இத்தகைய அந்நிய சூதாட்ட முதலீடுகள் குவிந்ததும், அந்நாடுகளின் பங்குச் சந்தைகளின் விலைப்புள்ளிகள் கிடுகிடுவென உயர்ந்து விண்ணைத் தொட்டன. அதைக் காட்டி அந்நாடுகளை ""ஆசியப் புலிகள்'' என்று ஏகாதிபத்திய உலகம் பாராட்டிப் புகழ்ந்தது. பின்னர், இந்தச் சூடான சூதாட்ட முதலீடு வற்றத் தொடங்கியதும், அந்நாடுகளின் பொருளாதார அடித்தளமே ஆட்டங்கண்டு அதலபாதாளத்தில் வீழ்ந்தது. புலிப் பாய்ச்சலாக சித்தரிக்கப்பட்ட அந்நாடுகளின் பொருளாதாரம் எலிப் புழுக்கைகளாகி விட்டன.

தென்கிழக்காசிய நாடுகளின் வழியில் இப்போது இந்தியாவிலும் காட்டாற்று வெள்ளம்போல் அந்நிய சூதாட்ட முதலீடுகள் பல்லாயிரம் கோடிகளில் பாய்ந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாக செயற்கையான கிராக்கியால் பங்குகளின் விலைகள் நீர்குமிழிபோல வீங்குகின்றன. விலைப்புள்ளிகள் யானைக் காலாக உப்புகின்றன. நம்பகமான வர்த்தகத்தின், வலுவான பொருளாதார வளர்ச்சியின் வெளிப்பாடுகளே இவை என்று சொல்லி ஏய்க்கிறது ஆளுங்கும்பல்.

உயரங்கள் எப்போதுமே குதூகலத்தைக் கொடுக்கும்; அதே நேரத்தில் அடிவயிற்றில் பயத்தையும் உருவாக்கும். எனவேதான், இந்தச் சூதாட்ட முதலீடுகளின் விபரீத விளைவுகளைப் பற்றி வாய் திறக்காமல், ""புத்திசாலித்தனமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யுங்கள்'' என்று பட்டும்படாமல் இந்திய மேட்டுக்குடியினரிடம் எச்சரிக்கிறார், நிதியமைச்சர் ப.சிதம்பரம். ""பயப்படாதீர்கள்; டாலர் அடிப்படையிலான முழு நாணய மாற்றுமுறை காரணமாகவே தென்கிழக்காசிய நாடுகளில் பங்குச் சந்தை சரிந்தது; நம் நாட்டில் முழு நாணய மாற்றுமுறை இல்லாததால், நமக்கு அத்தகைய நிலைமை ஏற்படாது'' என்று நம்பிக்கையூட்டுகின்றன, பங்கு வர்த்தக ஊக வணிக நிறுவனங்கள். கனவுகளில் மிதக்கும் நடுத்தர மேட்டுக்குடி வர்க்கத்திடம்,

""திறமை இருந்தால் நாமும் முன்னேறிவிடலாம்'' என்று ஆசை காட்டி, பங்குச் சந்தையில் சூதாட அழைப்பு விடுக்கின்றன.

ஆனால், அந்நிய நிதிநிறுவனங்களின் பங்குச் சந்தை முதலீடுகளும் பரிமாற்றங்களும் வெறும் சூதாட்டம் மட்டுமல்ல் அது நாட்டை மீண்டும் காலனியாக்கும் ஏகாதிபத்திய சதிகளின் ஓர் அங்கம் ஆகும். கடந்த 2004ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த மறுவாரத்தில், தனியார்மயம் தாராளமயம் எனும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளுக்கு இடதுசாரிகளால் பாதிப்பு வரலாம் என்ற வதந்தி பரவியதும், அந்நிய நிதி நிறுவனங்கள் மும்பை பங்குச் சந்தையில் ரூ. 1,33,000 கோடிக்கு மேல் வீழ்ச்சியைத் தோற்றுவித்து காங்கிரசு கூட்டணி அரசை எச்சரித்தன. எங்களுக்குச் சாதகமாக மறுகாலனியாதிக்கக் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தாவிடில் இந்தக் கதிதான் ஏற்படும் என்று மிரட்டின. அவற்றுக்குப் பணிந்து விசுவாசமாக காங்கிரசு அரசு வாலாட்டியதாலேயே இப்போது அவை பல லட்சம் கோடிகளை பங்குச் சந்தை சூதாட்டத்தில் குவித்து சூறையாடுகின்றன. புலி வாலைப் பிடித்தவன் கதையாக, இத்தகைய ஆபத்தான அந்நிய முதலீடுகளைக் கட்டுப்பாடின்றி அனுமதித்துக் கொண்டு, அதன் இழுத்த இழுப்புகளுக்கேற்ப காங்கிரசு கூட்டணி அரசு சென்று கொண்டிருக்கிறது; பொருளாதாரமோ பாதாளத்தை நோக்கி பாய்ச்சலுடன் முன்னேறுகிறது.

நாட்டை மறுகாலனியாக்கி, தொழிலையும் விவசாயத்தையும் மரணக் குழியில் தள்ளிவிட்டு, பங்குச் சந்தை பாய்ச்சலை கோலாகமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது ஆளுங்கும்பல். இந்த வக்கிரத்தையும் திமிரையும் இனியும் உழைக்கும் மக்கள் சகித்துக் கொண்டிருந்தால், நாளைய வரலாறு நம்மைத்தான் இகழும்.

குமார்

நன்றி புதிய ஜனநாயகம்

Wednesday, April 5, 2006

உலகளாவிய நிதி மூலதனம் சமூகசாரத்தையே உறுஞ்சுகின்றது.

உலகளாவிய நிதி மூலதனம் சமூகசாரத்தையே உறுஞ்சுகின்றது.

பி.இரயாகரன்
03.04.2006 (பகுதி -1)

டன், எங்கும் கடன், மனித இனத்தின் மீதே கடன். மனித இனம் மீளமுடியாத வகையில் அளுங்குப்பிடியாகவே கடன் உலகெங்கும் மாறிவிட்டது. இந்த கடன் நாடுகளையே திவாலாக்கி வருகின்றது. இந்தக் கடனில் இருந்து மீள முடியாத நிபந்தனைகள். கடனை வாங்குவது கூட, அவசியமான நிபந்தனைகளில் ஒன்றாகிவிட்டது. உதவி என்ற பெயரில் வாரிவழங்கும் இந்த கடன், மனிதனின் சமூக சாரத்தையே உறுஞ்சி அழிக்கின்றது. கடன் மனித உழைப்பை ஒட்ட உறுஞ்சுகின்றது. மனித வாழ்வை அழிக்கும் இந்தக் கடனை யார் வாங்குகின்றான். எங்கிருந்து எப்படி கடனுக்கான நிதி கிடைக்கின்றது. யார் இதனால் எப்படி இலாபம் அடைகின்றனர்? இந்தக் கடனால் யார் எதை இழக்கின்றனர்? இந்த கடன் என்ற சூக்குமத்தையும், அதில் மனித அவலத்தையும் நாம் புரிந்து கொள்ள முனைவோம்.

இன்று நிதி மூலதனம் உலகின் முலைமுடுக்கெங்கும் ஊடுருவியுள்ளது. மனிதவினத்தையே மூலதனத்துக்கு அடிமைப்படுத்த விரும்பும் உலகமயமாதல் என்ற உலகம் தழுவிய போக்கில், நிதி மூலதனமே அதன் முதன்மையான இழிவான சமூக பாத்திரத்தை வகிக்கின்றது. இது எந்த சமூக உற்பத்தியிலும் ஈடுபடாமல், சமூக உற்பத்தியில் இருந்து அதன் சமூக சாரத்தையே உரிந்தெடுத்து விடுகின்றது. மனித குலத்தின் அவலமோ, கழிப்ப+ட்டும் ஒரு நவீனத்துவமாக பூத்துக் குலுங்குகின்றது. செல்வத்தை வைத்திருப்பவனின் சுதந்திரமே, செல்வம் இல்லாதவனின் மேல் பாய்ந்து கடித்துக் குதறும் ஒரு உலகவொழுங்கே ஜனநாயகமாகிவிடுகின்றது.

செல்;வத்தைத் தன்னகத்தே குவித்து வைத்திருப்பவன் சமூகத்தைப் பற்றி ஒரு விதமாகவும், செல்வம் இல்லாதவன் மற்றொரு விதமாகவும் சிந்திக்கின்றான். செல்வம் உள்ளவன் அதைப் பெருக்குவதைப் பற்றியே, சதாகாலமும் சிந்தித்த வண்ணம் நனவுபூர்வமாக ஒரு பேயாக வாழ்கின்றான். தனது வாழ்வை காட்டுமிராண்டித்தனமான உணர்வுடன் கூடிய மிருக வெறியுடன், சமூகத்தைக் கடித்துக் குதறுவதில் தனது காலத்தை ஒய்வின்றி ஓட்டுகின்றான்;. இந்த சமூக இழிபிறவிகளே, நவீன நாகரிக கனவான்களாக பகட்டு உடையணிந்து உலகெங்கும் பவனி வருகின்றனர். இவர்களின் பின் நக்தித் தின்னும் ஒரு கூட்டம் எப்போதும் அலைமோதுகின்றது. இவன் பணத்தை மேலும் மேலும் பல மடங்காக பெருக்கக் கூடிய வழிவகைகளுக்கு தடையாக உள்ள அனைத்து சமூகக் கூறுகளையும், ஈவிரக்கமின்றி அழித்தொழிப்பதில் தனது முழுமையான இழிவான வக்கிரத்தையே பயன்படுத்துகின்றான்;. இதைத் தான் இன்று மனித இனத்தின் சுதந்திரமாக காட்டி புணரப்படுகின்றது. இதைத் தான் ஜனநாயகமாக மூலமிடப்படுகின்றது.

இப்படி சமூகத்தின் அனைத்துச் செல்வத்தையும் கவர்ந்து சூறையாடுபவர்கள், தமது செல்வத்தைப் பாதுகாக்கவே அரசையும், அரசியல் சட்ட அமைப்புகளையும் தனக்கு இசைவாக உருவாக்கினர், உருவாக்கின்றனர். மனிதனை சூறையாடும் சட்டத்தையே மேலும் மேலும் தனக்கு இசைவாக மாற்றும் வகையில், உலகளாவிய சட்டங்களையே மாற்றுகின்றான். இந்த சமூக விரோத வக்கிரம் என்பது தனிமனித நலன் சார்ந்த லும்பன் குணாம்சங்களால் ஆனபோதும், இவையே எப்போதும் முழு மக்களுக்குமான சட்டவாக்கம் பெறுகின்றது.

இப்படி மனித விரோத சட்டங்களையே அன்றாடம் சமூகத்துக்கு எதிராகவே உருவாகி வருகின்றான். இதை கார்ல் மார்க்ஸ் அன்றே அவர் வாழ்ந்த சமூக அமைப்பில் இனம் கண்டு கூறியது என்பது, இந்த மனிதவிரோத்தை புரிந்துகொள்வதையே மேலும் துல்லியமாக்குகின்றது. பிரான்சின் வர்க்கப்போராட்டம் என்ற தனது நூலில் கார்ல்மாhக்ஸ் ~~நிதி ஆதிக்க மேற்குடியினர் சட்டங்களை இயற்றியதால், அரசு நிர்வாகத்திற்கு தலைமை வகிக்கிறது. அரசாங்க அதிகாரங்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது. பத்திரிகை மூலமும் மற்றும் உண்மையான அரச விவகாரங்கள் மூலமும் பொதுக் கருத்தை மாற்றுவதற்கு அதிகாரம் படைத்திருக்கின்றது. அதே விபச்சாரம், அதே வெட்கங்கெட்ட மோசடி, அதே பணக்காரன் ஆக வேண்டும் என்ற அரிப்பு, ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு அரங்கத்திலும் தொடர்ந்து எதிரொலித்து வருகின்றது... உற்பத்தி மூலம் செல்வந்தன் ஆக வேண்டும் என்று நினைக்கவில்லை, மாறாக ஏற்கனவே உற்பத்தி செய்து பிறர் வைத்திருக்கும் சொத்தைக் களவாடி தன் பையில் போட்டுக் கொள்வதன் அடிப்படையில் செல்வந்தனாக எண்ணுகின்றனர். அடிப்படையில் எப்போதுமே முதலாளித்துவ சட்டங்களோடு மோதிக் கொண்டும், ஆரோக்கியமற்ற மிக வெறி உணர்வோடு முதலாளித்துவ சமுதாயத்தின் மேல்தட்டு மக்கள் செயல்படுவர்... நிதி ஆதிக்க சக்திகள் பணம் திரட்டுவதிலும் வாழ்வை அனுபவிப்பதிலும் முதலாளித்துவ சமுதாயத்தின் உச்சத்தில் மீண்டும் லும்பன் சமுதாயம் தோன்றுவதைக் குறிக்கின்றது மிகச் சரியாக இதன் முதிர்ந்து வரும் வடிவத்தை, இந்த உலகமயமாதல் உலகம் தளுவிய வகையில் நிறைவு செய்வதை நாம் இன்று காண்கின்றோம்.

உலகளாவிய அரசு கட்டமைப்புகள் முழுமையாகவே, இன்று நிதிக் கும்பல்களால் ஆட்டிப்படைக்கப் படுகின்றது. சகல பொருளாதார செயல்பாடுகளும் முழுமையாகவே நிதிக்கும்பலின் சூறையாடலுக்கு ஏற்ற வகையில் புணரப்படுகின்றது. உற்பத்தி மீதான சுரண்டலை மிஞ்சி, நிதி மூலமான சூறையாடலே முதன்மையான ஒன்றாகியுள்ளது. கஞ்சிக்கே வழியற்ற ஏழை எளியதுகளின் கோவணத்தையும் உருவும் நிதிக் கொள்கை, உலகெங்கும் மக்களை காலில் போட்டே மிதிக்கின்றது. நிதி மூலதனம் மூலமான சூறையாடல் பல வழிப்பட்டதாக, பல்துறை சார்ந்தாக மாறிவருகின்றது. மக்கள் மூச்சு விட்டாலே, அதற்கும் கூட வரிகட்ட வேண்டிய மனித அவலம். இதுவே உலகமயமாதல் என்ற அமைப்பின், உன்னதமான இலட்சிய இலக்காகவுள்ளது.

எங்கும் எதிலும் சூறையாடல், இதுவே உன்னதமான இலட்சியமாக உலகமயமாதல் வரிந்துள்ளது. இதை தான் (பின்)நவீனத்துவம் என்கின்றனர். ஆனால் மக்களின் சமூக வாழ்வுக்கு என்னதான் நடக்கின்றது. 1987 இல் மிக வறுமையில் சிக்கி இருந்த 95 நாடுகளை எடுத்தால், மருத்துவத்துக்கு அவர்கள் தமது சொந்த தேசிய வருமானத்தில் 1.1 சதவிகிதத்தையே பயன்படுத்தினர். கல்விக்கு 2.5 சதவிகித்தையே பயன்படுத்தினர். ஆனால் கடனுக்கான வட்டி மற்றும் அது சார்ந்த கொடுப்பனவு (அதாவது சேவிஸ்) 4.5 சதவிகிதத்தை கொடுத்தனர். இது 1980 க்கு முன் இல்லாத புதிய ஒரு சூறையாடல். ஒரு நாடு தனது வருமானத்தில் ஒரு பகுதியை அன்னியனுக்கு இழக்கின்ற சமூக(மனித) அவலம். இதன் விளைவு வறுமையின் பெருக்கமே, இதன் உள்ளார்ந்த சமூக விதியாகின்றது. இந்தத் தொகையை விட வட்டி மற்றும் நிதியை மீள் அறவிடுதல் முதல் பற்பல நிதிச் சூறையாடலை நாம் விரிவாக ஆராய்ந்து தெரிந்து கொள்வதன் மூலம், இந்த உலகமயமாதல் எப்படிப்பட்ட இழிந்தது என்பதையும், மனிதனுக்கு எதிரானது என்பதையே நாம் காணவுள்ளோம்.

இந்த உலகமயமாதல் உலகளாவிய நிதி மூலதனமாக, தனித்து ஒரு வடிவம் பெற்று உலகை கட்டுப்படுத்தவில்லை. இப்படி நடப்பதாக ஒரு திரிபு உலகமயமாதலை ஆதரிப்போரால் புகுத்தப்படுகின்து. அதாவது இது ஏகாதிபத்திய முரண்பாட்டை மறுதலிக்கின்ற ஒரு அரசியல் உத்தியாகவே கையாளப்படுகின்றது. உலகளாவிய நிதி மூலதனம் தனித்தனி ஏகாதிபத்தியங்களைச் சார்ந்து இயங்கும் அதேநேரம், ஒன்று குவிந்தும் இயங்குகின்றது. லெனின் அன்று இதை தெளிவாக கூறியது போல் ~~சர்வதேசிய ரீதியில் ஐக்கியப்பட்ட நிதி மூலதனம் மற்றும் ஒட்டமொத்தமான ஏகாதிபத்தியம் ஆகியவை ஒருபுறம்; தேசிய ரீதியில் வடிவமைக்கப்பட்ட நிதி மூலதனம் மற்றும் ஒரு அரசு ரீதியில் வடிவமைக்கப்பட்ட ஏகாதிபத்தியங்கள் ஆகியவை மறுபுறம் - இந்த இரண்டுக்குமிடையே பாகுபடுத்திப் பார்க்கவேண்டும் என்கின்றார். இதுவே இன்றும் எங்கும் எதிலும் விரவிக் காணப்படுகின்றது. இந்தப் பொது உண்மையை இனம் காண்பதன் மூலமே, உலகமயமாதலை புரிந்து கொள்ளமுடியும். இந்த உண்மையை ஒரு தலைப்பட்சமாக மறுத்தால் அல்லது திரித்தால் உலகமயமாதலின் உண்மை முகத்தை நாம் இனம் காணமுடியாது மட்டுமின்றி, மக்களின் எதிரியைப் பற்றிய ஒரு சர்வதேசிய போர்தந்திரத்தைக் கூட வகுக்கமுடியாது போய்விடுகின்றது.

மக்களின் எதிரி எப்போதும் தனது சொந்த முகத்தை சூக்குமமாக்கி மூடிமறைக்கவே விரும்புகின்றான். பற்பல விதமான வேஷங்களைப் போட்டு மனித அறிவை மலடாக்கி, அதில் தன்னைத்தான் வளப்படுத்திக் கொள்கின்றான். இதனால் உலகின் சமூகப் பிளவுகள் பற்பலவாகவே பிளவுறுகின்றது. இப் பிளவுகள் சிலருக்கு லும்பன் தனமான அனைத்து வளத்தையும், பலரை எதுவுமற்ற சமூகப் பரதேசிகளாக மாற்றுகின்றது. இந்த விளைவின் ஒரு சிலவற்றை முதலில் பார்ப்போம்.

குறைந்த வருமானம் உடைய பொருளாதாரத்துக்கும் உயர் வருமானமுடைய பொருளாதாரத்துக்கும் இடையிலான தனிமனித வருமான விகிதம் 1970 இல் 1 க்கு 28யாக இருந்தது. இது 1990 இல் 1 க்கு 50யாக அதிகரித்தது. இது தொடாந்தும் அதிகரித்துச் செல்லுகின்றது. செல்வந்தன் மேலும் மேலும் செல்வந்தனாக மாற, எழை மேலும் மேலும் எழையாகின்றான். இது ஒருபுற நிகழ, மறுபுறத்தில் ஏகாதிபத்தியத்துக்கும் எழை நாடுகளுக்கும் இடையிலும்; இதே விதியே எதார்த்தமானதாக உள்ளது. செல்வம் தனி மனிதனிடம் குவிவது, தனிமனித சமூக அமைப்பின் உள்ளார்ந்த விதி. இந்த விதிக்கமைய இதை மக்கள் இழப்பதையே சுதந்திரமாக்கின்றது. இதை அடைவதைத் தான் ஜனநாயகம் என்கின்றது. சக மனித உழைப்பை சூறையாடம் தனிமனித சமூக அமைப்பு என்பது ஜனநாயகம், சுதந்திரம் என்ற கோட்பாட்டலானது.

இதை மறுக்க முடியாத வகையில் தரவுகள் நிறுவி வருகின்றன. உதாரணமாக உலக மக்களில் 20 சதவிகிதமான பணக்காரர்களைக் கொண்ட நாடுகள், உலக வருமானத்தில் தனது பங்கை 1960 இல் இருந்து 1989 க்கு இடையிலான காலத்தில் 70.2 சதவிகிதத்தில் இருந்து 82.7 சதவிகிதமாக மாற்றி, சூறையாடிக் கொள்ளையிட்டுக் கொண்டது. 20 சதவிகிதமான எழைகளைக் கொண்ட நாடுகள் உலக வருமானத்தை இதே காலப்பகுதியில் 2.3 சதவிகிதத்தில் இருந்து 1.4 சதவிகிதமாக கொள்ளையிடுபவனிடம் இழந்து போனது. சமூக வறுமையின் விதி இப்படித் தான் உருவானது. இதுவே இன்று மறுக்க முடியாத சமூக எதார்த்தம். இதற்கு பிந்திய காலத் தரவுகளை எனது நூலின் தொடர்ச்சியில், இந்த உண்மையை மறுதலிக்காது மேலும் ஆழமாகவே நிறுவியுள்ளது. எப்படி உலகம் தனிமனித சுதந்திரத்தின் பெயரில், ஜனநாயகத்தின் பெயரில் பிரித்தாளப்படுகின்றது என்பதையும், இதன் மூலம் சிலர் உலகத்தின் முழுச் செல்வத்தினதும் அதிபதிகளாக மாறி வருகின்றனர் என்ற உண்மையை இவை மறுதலித்துவிடவில்லை. உலகெங்கும் இதுவே நடந்தது, நடந்து வருகின்றது.

இன்று நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தில் ஒரு மனிதன், ஒரு சமுதாயம், ஓரு தேசம், உலக மக்கள் என அனைவரும் கடன் பெற்று வாழ்வதே உலகமயமாதல், என்ற (பின்)நவீனத்துவ அடிமைத்தனம் புகுத்தப்பட்டுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் மேலும் கடன் என்ற ஒரு சிலந்தி வலை போடப்பட்டுள்ளது. இதுவே இன்றைய சமூகத்தின் தலைவிதியாகி, அதுவே சிலுவையில் அறையப்படுகின்றது. இப்படித் தான் வாழவேண்டும் என நிர்பந்திக்கப்படுகின்றார்கள். அடிமைத்தனம் மக்களின் முதுகில் சட்டபூர்வமாக குறியிடப்படுகின்றது. உலகில் மக்கள் கூட்டமே, கடனுக்கு உட்பட்டு வாழ்கின்றனர் என்பதே இன்று சூக்குமாகவே உள்ளது. அதாவது மக்கள் இதை உணர முடியாத வகையில், மந்தைகளாக்கி சமூக அறிவின்மையை உருவாக்கியுள்ளனர். இந்த கடனுக்கு மக்களாகிய நாம் (உழைக்கும் மக்கள்) தான், வட்டி கட்டுகின்றோம் என்பதும் கூட தெரியாது உள்ளது. இதுவே முதலாளித்துவத்தின் சமூக அறிவியலாக உள்ளது. மற்றவர் அறியாவண்ணம் அவனை எப்படி சூறையாடுவது என்பது தான் முதலாளித்துவ சமூக அறிவியலாகும்;. இதுவே இன்றைய (பின்)நவீன தத்துவவியலுமாகும்;.

ஒவ்வொரு மனிதனும் உலகின் கடனுக்காக வட்டியையும், முதலையும் அன்றாடம் தனது உழைப்பில் இருந்து செலுத்திக் கொண்டிருக்கின்றான் என்ற உண்மையை தெரிந்து கொள்ளாத அடிமை அமைப்பில், நாம் எம்மை பற்றி பீற்றிக் கொண்டே வாழ்கின்றோம். நாம் சுதந்திரமானவராகவும், ஜனநாயகத்தின் உச்சத்தில் வாழ்வதாகவும் கூட பீற்றுகின்றோம். யார் இந்த மக்களுக்கு கடனைக் கொடுத்தார்கள்? யார் இந்த கடனையும், கடனுக்கான வட்டியையும் எப்படி எந்த நிபந்தனையுடன் அறவிடுகின்றனர்? எங்கே இவை எப்படி போகின்றது? இதை மக்களாகிய நீ அறிந்த கொள்ளாத வகையில், உன்னையே முட்டளாக்கும் இந்த சூக்குமம் தான் என்ன? எப்போதுதவது நீ இதைப் பற்றி சுயமாக சிந்தித்ததுண்டா? அறிவாளிகள் ஏன் இந்த சுதந்திர ஊடகங்கள் உனக்குச் சொன்னதுண்டா?

பணம் என்பது என்ன? பணம் என்பதும் அதற்கான பெறுமானம் என்பதும் மனித உழைப்பால் தான் எப்போதும் அளவிடப்படுகின்றது. இது உனக்குத் தெரியுமா! இந்த விதிக்கமைய எமது உழைப்பில் இருந்து நாள்தோறும் கடனுக்காக ஒரு பகுதியை, எமக்குத் தெரியாமலேயே நாம் செலுத்திக் கொண்டிருப்பதை உலகம் உறுதி செய்கின்றது. இது மறுதலிக்கப்படுகின்ற போது, உலகம் கொந்தளிப்பான கட்டத்துக்குள் நகாந்துவிடுகின்றது. கடனுக்கான வட்டி என்பது, சுரண்டலுக்குள்;ளேயே ஒரு புதிய சுரண்டலாகிவிட்டது. இது பணக்கார நாடுகள் முதல் ஏழை நாடுகள் வரை, இந்தக் கடன் என்ற சிலந்தி வலைக்குள் சமூகமே (மக்கள்) சிக்கியுள்ளது. இதற்கு வட்டியாகவும், முதலாகவும் உலகில் உழைக்கும் மக்கள் அனைவருமே தமது சொந்த உழைப்பின் ஒரு பெரும் பகுதியை செலுத்துகின்றனர். இது யாரால் எப்படி அறவிடப்படுகின்றது என்பது பொதுவான சமூகத்தின் முன் சூக்குமமாகவே உள்ளது.

இந்த சூறையாடல் சாதிப் படிநிலைக் கோபுரம் போல், கீழ் இருந்து மேலாக படிமுறை கட்டமைப்பைக் கொண்டது. ஏழை நாடுகள் பணக்கார நாடுகள் என்ற வரிசைக் கிரமத்தில் நகர்ந்து, இறுதியில் அவை ஒரு சில தனிப்பட்ட நபர்கள் வரை சென்று தனிமனிதனாக எஞ்சி விடுகின்றது. இங்கு சுரண்டலின் அளவு என்பது கூட, சாதி படிநிலையை அடிப்படையாக கொண்டே உள்ளது. ஏழைகள் கடனை கட்டும்போதும், பணக்காரன் கடனை கொடுக்கும் போது இதன் சமூக விளைவுகள் ஒன்றாக இருப்பதில்லை. ஏழைநாடுகளும் சரி, பணக்கார நாடுகளும் சரி, அந்த நாட்டு மக்கள் கடனுக்காக தமது சொந்த உழைப்பை தியாகம் செய்யும் போது, ஏற்படும் சமூக விளைவுகளின் அளவில் ஒரு பாரிய வேறுபாடு கொண்டவை.

உலகில் உணவின்றி, மருந்தின்றி, வாழவீடின்றி, கல்வி வசதியின்றி, குடிக்க தண்ணீரின்றி வாழும் மக்கள், அவர்களின் வாழ்வுடன் சம்பந்தப்படாத ஒரு கடனுக்காக வட்டியையும் முதலையும் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவர்களின் உழைப்பில் இருந்து இவை பலாத்காரமாக புடுங்கி எடுக்கும் சூக்குமான அமைப்பு தான் இன்றைய சுதந்திரமான ஜனநாயகமாகும். மக்கள் தமது சொந்த சமூகத் தேவைக்காகவே உழைக்கின்றார்கள். ஆனால் அதை அவர்கள் எப்போதும் சுதந்திரமான மூலதனத்தின் ஜனநாயகத்திடம் பறிகொடுக்கின்றனர். சிலர் அதை முழுமையாக கைப்பற்றி உலகில் உள்ள அனைத்து செல்வத்தினதும் அதிபதியாகின்றனர்.

கடன்கள் ஒரு நாட்டுக்கு வழங்கப்படும் போது, கடன் கொடுப்பவன் எப்போதும் கடுமையான நிபந்தனைக்குட்பட்டே கொடுக்கின்றான். இந்த நிபந்தனை சாராம்சத்தில் சொந்த மனைவியை (கணவனையும்) புணரும் சுதந்திரத்தையும் நிபந்தனையின்றி கோருகின்றது. இந்தக் கடன் மிகப் பெரிய பணக்காரக் கும்பலின் சொகுசுக்கு சேவை செய்யவும், பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளையிட்டு செல்லும் வசதியைப் பெருக்கவும், மேற்கு நோக்கிய ஏகாதிபத்திய நுகர்வின் ஆடம்பர சமூக வாழ்வை பூர்த்தி செய்யும் வகையில் முழு உற்பத்தியை மாற்றவும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்த அடைக்க முடியாத கடனை, அடைக்க முயன்று கொண்டிருப்பவர்கள், உற்பத்தியல் ஈடுபடும் எழை எளிய மக்களும், உழைக்கும் மக்களுமே ஆகும். இது ஒரு விசித்திரமான ஆனால் எதார்த்த உண்மை. ஏகாதிபத்திய கடனுக்கும் உழைக்கும் மக்கள் வட்டி கட்டாது, யாரும் இந்த உலகில் உயிருடன் வாழவில்லை. வட்டியைக் கட்ட மறுத்தால், அது மனித இனத்தின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தை மீறிய செயலாகவே உலக ஒழுங்கும் அதன் சட்டதிட்டங்களும் வரையறுகின்றது. கையேந்தி நிற்கும் பிச்சைக்கார நாடுகள் கூட கடனுக்கு, வட்டியை கட்டவைக்கப்படுகின்றது.

இந்த படிநிலை சமூகக் கட்டமைப்பில் உலகில் உள்ள மக்கள் கூட்டம் அனைவரும், சிலருக்காக உழைத்து கொடுப்பது தான் உலகமயமாதல். இதில் ஏழை மக்களையும், ஏழை நாடுகளையும் கொடுமையாக சூறையாடுவதே நாகரீக நாடுகளின் சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் உள்ளது. ஜனநாயகமும், சுதந்திரமும் உலகமயமாதலின் ஆன்மாவாக இருக்கும் இன்றைய உலகில், ஒவ்வொரு வருடமும் பசியால் மட்டும் 1.6 கோடி பேர் இறக்கின்றனர். இந்த உன்னதமான சுதந்திரமான சமூக அமைப்பில் தான், 1990 இல் ஏகாதிபத்தியம்; 134000 கோடி டொலரை வறிய நாடுகளில் பிணங்களின் மேலாக, தனது நாட்டுக்கு பலவழிகளில் கடத்திச் சென்றது. 1.6 கோடி மக்களின் உணவை ஜனநாயகத்தின் பெயரில் பறித்து பட்டினி போட்டு கொல்லும் ஏகாதிபத்தியம், பறித்த உணவை தனது சொந்த நாட்டுக்கே கடத்திவருகின்றது. இதைவிட 1990 இல் ஏற்றுமதி மூலம் 50000 கோடி டொலரை வறிய நாடுகளிடம் இருத்து கடத்தியது. இப்படி பல வழிகளில் எழைநாடுகளில் இருந்து கொள்ளையிட்டு, அன்றடாம் அவை எகாதிபத்தியத்தினால் கடத்தப்படுகின்றது. வறிய நாடுகளின் ஏழ்மையும், பணக்கார நாடுகளின் செல்வச் செழிப்பு இப்படித் தான் உருவாகியது.

ஏழைநாடுகள் பணக்கார நாடுகளின் செல்வச் செழிப்புக்கு சேவை செய்யும் அமைப்பாக மாற்றப்பட்ட உலக ஒழுங்கே, இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாதல் சகாப்த்தமாகும். இந்த நாகரிகமான ஜனநாயகமான உலகமயமாதல் சகாப்தத்தில் ஒவ்வொரு நாளும் 19000 குழந்தைகள், மேற்கு நாடுகளுக்கு கடனுக்கான வட்டியை வாங்குவதால் இறக்கின்றனர். ஏழைகள் இறந்துமடிவது தான், உலகமயமாதலுக்கு அத்திவாரமாகிவிட்டது. இதுவே சிலருக்கான சுதந்திரமாகி விடுகின்றது.

மூன்றாம் உலகநாடுகள் தமது சொந்த நாட்டின் தேவை கருதி 1980 இல் கல்வி மற்றும் சிறப்பு பயிற்சிக்காக 1200 கோடி டொலரை செலவு செய்தது. இப்படி செலவு செய்து உருவாக்கியவர்களை ஏகாதிபத்தியம் இலவசமாகவே பணத்தைக் காட்டி (நாய்க்கு எலும்பை வீசி திருடுவது போல்) கவர்ந்தெடுக்கின்றது. இப்படி மூன்றாம் உலக நாடுகள் வருடாந்தம் 1000 கோடி டொலர் இழப்பைச் சந்தித்தன. இதுவே இன்று மிகப்பெரும் பல்துறை சார்ந்து அறிவியல் கொள்ளையாகவும் மாறிவிட்டது. இப்படி கொள்ளைகள் பற்பலவாக மாறிவருகின்றது. கொள்ளை அடிப்பதை சூக்குமமாக்கி, அதை நவீனப்படுத்திய நடைமுறையே உலகமயமாதலாகியது. இன்று மூன்;றாம் உலக நாடுகளின் செல்வம், ஏகாதிபத்தியத்தை நோக்கி அலையலையாக ஒடவைக்கின்றது. இப்படி இயல்பாக எளிமையாக ஒடவைப்பதே மனித சுதந்திரமாகவும், இதுவே ஜனநாயகமாகவும் புரிந்து கொள்வதற்கான சமூக விளக்கமே உலகமயமாதலாகின்றது.

இப்படி ஓடிவரும் செல்வம் உருவாகும் அமைப்பில், மனித இனம் வலுக்கட்டாயமாகவே சூக்குமமாகவே நரபலியிடப்படுகின்றது. இந்த சுதந்திரமான சுபீட்சமான செல்வந்தர்களின் சமூக அமைப்பில், இந்த செல்வந்தர்களின் சமூக இருப்பு சார்ந்து, மக்களுக்கு இல்லாமை புகுத்தப்படுகின்றது. அடிப்படையான சமூகத் தேவையை மனிதன் இழக்கும் போகும், மனிதர்கள் உயிர்வாழ முடியாது அமைதியாக இறந்து போவதை இயற்கையின் இறப்பாக காட்டி நம்ப வைக்கப்படுகின்றது. இப்படி உலகில் வருடாந்தம் குறைந்தபட்சம் 10 கோடி பேர் குடிக்க சுத்தமான நீரின்றி, பசிக்கு உண்ண உணவின்றி, நோய்யைத் தடுக்க மருந்தின்றி, வாழ தங்குமிட வசதியின்றி மற்றும் பற்பல காரணங்களால் உயிருடன் மடிந்து போகின்றனர். எமது அறியாமை என்ற எமது மலட்டுத்தனத்தின் மேல், சுதந்திரம் மற்றும் ஜனநாயக அமைப்பு இயற்கை மரணம் என்கின்றது. இவை அனைத்தும் மூலதனத்தின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் வாழ்வுக்காகவே, மனித இனம் தன்னைத்தான் களப்பழியாக்கின்றது. எங்கும் அடிமைத்தனத்தின் சின்னம் உற்பத்தி முறையிலும், வாழ்வியல் முறையில் பலாக்காரமாகவும், அமைதியாகவும் புணரப்பட்டு புகுத்தப்படுகின்றது.

தொடரும்

உலகமயமாதல் (பகுதி 2)

கடனும் வட்டியும் இன்றி, உலகமயமாதல் ஒரு கணம் கூட உயிர் வாழ முடியாது

பி.இரயாகரன் (பகுதி 2)
05.04.2006

லெனின் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்றார். அவர் தனது மிகச் சிறந்த நடைமுறை சார்ந்த ஆய்வுரையில் "பழைய முதலாளித்துவத்திற்கு இருபதாம் நூற்றாண்டு திருப்பு முனையாக அமையும். பொதுவான மூலதனத்தின் ஆதிக்கத்திலிருந்து புதிய நிதி மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு அது மாறும்" என தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார். இன்றைய காலத்துக்கு மிகவும் நுட்பமாகவும் சிறப்பாகவும் பொருந்தும் இந்த உண்மை, இன்று இதுவே எதார்த்தத்தில் முதிர்வடைந்து வருகின்றது. நிதி மூலதனத்தின் ஆதிக்கம் உலகம் தழுவியதாக இன்று மாறிவிட்டது. எங்கும் எதிலும் நிதி மூலதனத்தின் தலையீடின்றி உலகமே இயங்க மறுக்கின்றது.

நிதி மூலதனம் பல்துறை சார்ந்த தலையீட்டை சமூகம் மீது நடத்துகின்றது. இதில் கடனும் வட்டியும் முக்கியமான ஒர் அம்சமாகிவிட்டது. தேசங்களின் அழிவை துரிதமாக்கவே, இந்தக் கடனை திட்டமிட்டு உருவாக்குகின்றனர். தேசங்களின் தனித்துவமான வாழ்வின், சமூக ஆதாரங்களையே இது அழித்தொழிக்கின்றது. இதன் அடிப்படையில் நிதி மூலதனத்தின் சுதந்திரமான செயல்பாட்டை ஒழுங்குபடுத்தவே, பலவேறு சர்வதேச அமைப்புகள் சட்டதிட்டங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது. இவை எவையும் சுதந்திரமானதாக இயல்பாக உருவானவையல்ல.

சுதந்திரமான சூறையாடலுக்கென திட்டமிட்டு உருவாக்கப்பட்ட உலக வங்கியின் உலகளாவிய அதிகாரம் ஏற்பட்ட பின்பாக, 2000 ஆண்டில் மட்டும் புதிதாக 20 கோடி பேர் வறுமைக்குள் வந்துள்ளனர். 2000 ம் ஆண்டில் மூன்றாம் உலக நாடுகளின் கடன் 252750 கோடி டொலராகியது. இதில் நீண்ட மற்றும் இடைக்காலக் கடன் 206100 கோடி டொலராகியது. இந்தக் கடனில் 152690 கோடி டொலர் தேசிய அரசுகளின் பொறுப்பாக இருக்க, 53420 கோடி டொலர் தனியாருக்கு வழங்கப்பட்டு இருந்தது. 46640 கோடி டொலர் குறுகிய காலக் கடனாக வழங்கப்பட்டது. கடனின் அளவு 1980 இல் இருந்தையும் விடவும் நான்கு மடங்கு அதிகமாகியது. இந்த கடனுக்கான வட்டி மற்றும் மீள் கொடுப்பனவாக, 2000 ஆண்டு மூன்றாம் உலக நாடுகள் மேற்கு நாடுகளுக்கு கொடுத்தது 37600 கோடி டொலராகியது. இது 1980 இல் கொடுத்தைவிட நான்கு மடங்கு அதிகமாகும். மிக வறிய மற்றும் ஏழை நாடுகள் குறிப்பாக ஆபிரிக்காவில் உள்ள சில நாடுகளில் இருந்து, 2000ம் ஆண்டு அந்த மக்களுக்கு தெரியாது அவர்களிடம் புடுங்கி எடுத்துக் கொண்டது 1500 கோடி டொலராகும். மூன்றாம் உலக நாடுகளின கடனுக்கான வட்டி உள்ளிட்ட மீள் கொடுப்பனவு 1980 இல் 8870 கோடி டொலராக இருந்தது. இது 1990 இல் 16410 கோடி டொலராகவும், 2000 இல் 37670 கோடியுமாகியது.

இதுவே உலகளாவிய மூன்றாம் உலக நாடுகளின் கடன் பற்றிய ஒரு சித்திரம். எப்படி நிதி மூலம் ஏழை நாடுகள் சூறையாடப்படுகின்றது என்பதற்கு, இது ஒரு எடுத்துக் காட்டு. உலக மக்கள் தொகையில் அண்ணளவாக 80 சதவீதமானவர்கள் ஏழைநாடுகளிலேயே வாழ்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் 2000ம் ஆண்டு பணக்கார நாட்டுக்கு கட்டிய வட்டி அண்ணளவாக 77 டொலர். அதாவது இந்தியா ரூபாவில் 3700யும், இலங்கை ரூபாவில் 8000 மாகும். அவர்கள் ஒவ்வொருவர் மீதுள்ள கடன் அண்ணளவாக 480 டொலர். இந்த வட்டியை பணக்கார நாட்டில் உள்ளவனுக்கு பகிர்ந்தளிப்பின் அண்ணளவாக அவன் பெறுவது 313 டொலர். அதாவது இந்தியா ரூபாவில் 14700யும், இலங்கை ரூபாவில் 32000 மாகும். மூன்றாம் உலகக் கடனை மேற்கில் உள்ளவனுக்கு பகிர்ந்தளிப்பின் அண்ணளவாக 2106 டொலரை பெறுவான். மேற்கில் உள்ளவனின் வாழ்வுக்கு ஏழைநாட்டவன் எப்படி அடிமையாக உள்ளான் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. பணக்கார நாடுகளுக்கு ஏழைநாட்டு மக்கள் எப்படி உழைக்கின்றனர் என்பதை இது தெளிவாக்குகின்றது. ஏழைநாடுகளின் சராசரியான கடன் அளவு, அவர்களின் வருடாந்த தேசிய வருமானத்துக்கு சமமானதாக பல நாடுகளில் உள்ளது. தேசங்களின் திவாலை நிதி மூலதனம் பிரகடனம் செய்து, அதை தனது கமக்கட்டுக்குள் இப்படித்தான் செருகி வைத்திருக்கின்றது.

இதுவே இன்று ஒரு சட்டபூர்வமான சுரண்டலாக மாறிவிட்டது. மனிதனின் சமூகத் தேவையை மறுத்து, சூக்குமமான மனிதப் படுகொலைகளை இயற்கையானதாக காட்டியே ஏகாதிபத்திங்கள் கொழுத்துவந்த வரலாற்றையே நாம் இங்கு காண்கின்றோம். 2000 ஆண்டில் மூன்றாம் உலக நாடுகளின் அன்னியக் கடனின் அளவு, அந்த நாடுகளின் தேசிய வருமானத்தில் 37.4 சதவிகிதமாகியது. இது 1980 இல் 18.2 சதவிகித மட்டுமே. இந்த நாடுகள் 2000 ஆண்டில் செய்த மொத்த ஏற்றுமதியில், கடனின் அளவு 114.3 சதவிகிதமாகியது. இது 1980 இல் 84.4 சதவிகித மட்டுமே. ஒரு புறம் கடன் தொகை அதிகரிப்பு, மறுபுறம் மூன்றாம் உலகநாடுகள் கடனுக்கான ஏற்றுமதிப் பொருட்களின் விலையை அடிமாட்டு விலைக்கு தாழ்த்தி, ஏகாதிபத்தியம் அதை வரைமுறையற்ற வகையில் பிடுங்கி நுகர்கின்றது. மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்தி பொருட்களின் விலையை தாழ்வான விலைக்கு இட்டுச் செல்வதன் மூலம், அதை உற்பத்தி செய்வோரின் கூலிவிகிதம் குறைக்கப்படுகின்றது. இதன் மூலம் பொருளை உற்பத்தி செய்யும் உழைப்பாளி வாங்கும்திறனை இயல்பாகவே இழக்கின்றான்;. இதனால் உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்பவன் நுகர முடியாத ஒரு நிலையில், பொருட்களை மலிவான விலையில் ஏகாதிபத்தியங்கள் அதிக நுகர்வு வெறியுடன் மூன்றாம் உலக நாடுகளையே அதிகளவில் சூறையாடுகின்றது. இதைவிட ஒவ்வொரு உழைப்பாளியும் தனது உழைப்பில் இருந்து கடனுக்கான வட்டி கட்ட வேண்டிய உலக ஒழுங்கு, சமூக நிதி ஆதாரங்கள் மீதான சமூக வெட்டுகள் இயல்பில் மக்களின் வாங்கும் திறனையே இல்லாதாக்குகின்றது. உழைக்கும் மக்கள் குறைந்து வரும் தமது குறைந்த கூலி ஒருபுறம், மறுபுறம் இந்த மலிவு உழைப்பில் இருந்து சமூக வெட்டை ஈடு செய்யவேண்டிய நெருக்கடி உருவாகின்றது. இதனால் அடிப்படை நுகர்வுக்கான பொருட்களை வாங்கமுடியாத நிலையில், நுகர்வின் அளவு குறைந்து வருகின்றது. இதை ஏகாதிபத்தியங்கள் மலிவான விலையில், மக்களின் பிணங்களின் மேலாகவே கொள்ளையிட்டு செல்லுகின்றது. வறுமை இதனால் எங்கும் எதிலும் பெருகுகின்றது. இதுவே உலகமயமாதல் ஒழுங்கில் இன்றைய (பின்)நவீன உலகமாகின்றது.

இப்படி அடாத்தான சுரண்டலுக்கும் நுகர்விற்காகவும், மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதி பொருட்களின் உலகளாவிய சந்தை விலையை ஏகாதிபத்தியங்கள் தாம் விரும்பியவாறு கூட்டாகவே திட்டமிட்டு குறைத்தே வந்துள்ளது. சர்வதேச பேச்சுவார்த்தைகள் என்ற பெயரில் திடட்மிட்டு உருவாக்கும் ஏகாதிபத்தியங்களின் கூட்டான செயல்பாடுகள் அனைத்தும் இதையே அடிப்படையாக கொண்டது. மூன்றாம் உலக நாடுகளை எப்படி மலிவாகவும், இலகுவாகவும் சுரண்டுவது என்பதே பேச்சு வார்த்தை என்ற பெயரில் திணிக்கும் நிபந்தனைகளின் முழுச் சாரமுமாகும். உதாரணமாக 1980 க்கும் 1986 க்கும் இடையில் உற்பத்திக்கான ஆதாரப் பொருட்களின் விலை 30 சதவிகிதத்தால் வீழ்ச்சி கண்டது. இப்படி அடிமாட்டு விலையில் அதிகரித்த ஏற்றுமதியை, கடனுக்காக பெற்றுக் கொள்ளும் ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிமிக்க சூறையாடலே இன்று எங்கும் எதிலும் உலகமயமாகியுள்ளது. இன்று ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதிக்கென பணம் கொடுத்து பொருட்களை வாங்குவதில்லை. மாறாக மூன்றாம் உலகநாடுகள் கடனுக்காக கட்ட வேண்டிய வட்டிக்காக, ஏற்றுமதிப் பொருட்களை இலவசமாக பெறத் தொடங்கியுள்ளது. கடன் உள்ளவரை இந்த நிலையில் மாற்றம் வராது. மாறாக மேலும் மேலும் மக்கள் உயிர்வாழ்வதற்கான சமூகத் தேவையை மறுத்து, அவற்றை புடுங்கி ஏற்றுமதி செய்வதே அதிகரிக்கும்;. இதைத்தான் சர்வதேச ஒழுங்கிற்குட்பட்ட சட்டங்கள் கோருகின்றது.

1980 இல் இருந்ததை விடவும் ஏற்றுமதியை மிஞ்சிய கடன், தேசிய வருவாயில் பெரும் பகுதியை உள்ளடக்கிய கடன் என்று, மூன்றாம் உலக நாடுகளின் அடிமை நிலையை, கடன் வழங்கியவன் தெளிவாக பிரகடனம் செய்கின்றான். கடன் அடிமைத்தனத்தின் மீது, எழுதப்படாத சட்ப+ர்வமான ஒப்பந்தமாகிவிட்டது. கடன் கொடுத்த நாட்டுக்கு, கடன் வாங்கிய நாடு அடிமையாக இருப்பது, இதன் மூலம் உறுதி செய்யப்படுகின்றது. இதுவே எங்கும் எதிலும், ஏன் தனிமனிதன் வரை இன்று விரிந்து செல்லுகின்றது.

2000ம் ஆண்டில் உலகில் 22 நாடுகளின் தேசிய வருமானத்தை விடவும், அவர்களின் கடன் அதிகமாக இருந்தது. உதாரணமாக கினிபிசு தேசிய வருமானத்தை விட அந்த நாட்டின் கடன் 417 சதவிகிதமாகவும்;, மாற்றினிக் கடன் 240 சதவிகிதமாகவும், லாவோஸ்சின் கடன் 205 சதவிகிதமாகவும் இருந்தது. 2001 இல் இலங்கையின் கடன் 1000 கோடி டொலராகியது. ஆனால் 1960 இல் 6.2 கோடி டொலர் கடனே இலங்கைக்கு இருந்தது. 1969 இல் இது 23.1 கோடி டொலராகியது. 1974 இல் இது 38 கோடி டொலராகியது. 1986 இல் 400 கோடி டொலராகியது. ஒரு நாட்டின் கடன் எப்படி அதிகரித்து வருகின்றது என்பதை நாம் இங்கு எதார்த்தமாகவே காண்கின்றோம். இதற்கென வட்டிப் பணத்தை வரிகள் மூலம் அறவிடப்படுகின்றது. இதை கொடுக்க மொத்த ஏற்றுமதியையும் பயன்படுத்தப்படுகின்றது. இதைத் தவிர அரசு சொத்துகளை அபகரிப்பது, பங்குச் சந்தையை கைப்பற்றுவது, ஒய்வூதிய நிதிகளை அபகரிப்பது என தொடர்ச்சியாகவே அன்றாடம் ஒரு கொள்ளை நிகழ்கின்றது. பரந்துபட்ட மக்கள் இவற்றை அன்றாடம் இழந்துவிடுவதன் மூலம், தமது கடந்தகால வாழ்வின் சமூக இருப்புக்கான சகல அடிப்படைகளையே இழந்து விடுகின்றனர். இந்தக் கடன் படிப்படியாக அதிகரித்து, கடனுக்கான வட்டியே அந்த நாட்டின் மொத்த வருடாந்த தேசிய வருமானங்களைக் கூட மிஞ்சிவிடும் நிலைக்குள் உலகம் தாவிச் செல்லுகின்றது. இதன் மூலம் நாடுகளின் திவாலும், அடிமைத்தனமும் நடந்து முடிந்துவிட்ட நிலையில், மூன்றாம் உலகநாடுகள் காணப்படுகின்றன. இதையே நம்மைப் போன்ற முட்டாள்கள் சுதந்திரமான நாடுகளாகவும் அவற்றை ஜனநாயக நாடுகளாகவும் பீற்றிக்கொண்டு எம்மையறியாது வாழ்கின்றோம்.

தொடரும்