பி.இரயாகரன்
13.01.2007
வரலாற்று ரீதியாக இந்த கேள்விக்கு பதிலளிப்பது என்பது மிகவும் சிக்கலுக்குரிய ஒன்று. வரலாற்று ஆய்வுகளில் உள்ள குளறுபடிகள், அதை மேலும் மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குகின்றது. ஆனால் தெளிவாக சில வரலாற்று முடிவுகளை, வரலாறு சார்ந்து எடுக்கமுடியும்.
1. ஆரியர்கள் என்போர் வந்தேறிகளே. அவர்கள் கி.மு 1000 க்கும் கி.மு 2000 ஆண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில், இந்தியாவின் ஒரு பகுதியை வந்தடைந்தவர்கள்.
2. ரிக்வேதம் ஆரியருடையதும், ஆரியரால் பின்பட்ட ஒரு வாழ்வுமுறையுடன் கூடிய ஒரு சடங்கு முறையை அடிப்படைiயாகக் கொண்டது. ரிக்வேத உள்ளடக்கமும் அதன் வாழ்வியல் முறையும், இந்திய சமுதாயத்துடன் தொடர்பற்ற ஒன்று.
3. ஆரியர் என்று கருதப்பட்டவர்கள் தான், இன்றைய பார்ப்பனர்கள் என்ற நேர்கோட்டு எடுகோள் தவறானது. மாறாக ஆரியரின் ஒரு பிரிவு, அதுவும் இந்திய சமுதாய கலப்பின் ஊடாகத்தான் பார்ப்பனர்களானார்கள். மற்றைய ஆரிய பகுதி இந்திய சமூகத்துடன் ஒன்று கலந்து இனம் காணமுடியாது போய்விட்டனர். அத்துடன் இன்றைய பார்ப்பனர்களின் ஒரு பகுதி, ஆரிய கலப்பற்றவர்கள். அதாவது இவர்கள் ஆரிய பார்ப்பனர்களால், பார்ப்பனர்களானவர்கள்.
4. ஆரியரின் எந்தப் பகுதி பெரும்பகுதி பார்ப்பனர்களானார்கள் என்றால், ஆரியரில் இருந்த பூசாரிகள் தான். அனைத்து ஆரியரும் பார்ப்பனராகவில்லை.
5. பார்ப்பனம், பார்ப்பனீயம் தோன்றுமளவுக்கு ஆரிய சமூகத்தின் சிதைவு நிகழ்ந்துள்ளது. இதன் விளைவு அதன் மூலமொழியை இழந்து போகுமளவுக்கு நிகழ்ந்துள்ளது.
6. ஆரிய சமூக அமைப்பை வழிநடத்திய பூசாரிகள், சமுதாய எண்ணிக்கையில் மிகச்சிறிய பிரிவினராவர். ஆனால் பொருளாதார ரீதியாக வலுவுள்ள ஆதிக்க பிரிவினராகும். தமது பலத்தினை நிலைநிறுத்தக் கூடிய வகையில், குதிரைகளை சொந்தமாக கொண்ட ஒரு பிரிவும் கூட. ஆரிய சமூக சிதைவின் போது, அவர்கள் தனிமைப்படுமளவுக்கு தனித்துவமான சடங்குகளை பேணும் ஒரு குழுவாக எஞ்சினர். அவர்கள் தமது தனித்தன்மையை பேணியபடி, தனிச் சலுகையையும் கொண்டபடி, இந்த பூசாரிகளும் சமுதாயத்தினுள் சிதைந்தனர். இந்த சிதைவின் மூலம் தமது மூல வேத ஆரிய மொழியை இழந்தனர். ஆனால் தனிச் சலுகை பெற்;ற ஒரு பூசாரிக் குழுவாக இருந்ததாலும், வழிபாட்டு முறைகள் ஏற்கப்பட்டதாலும், அந்த பழைய சடங்கை அவர்கள் பாதுகாக்க முடிந்தது. ஆனால் தனது சொந்த மூல மொழியை இதனூடாக பாதுகாக்க முடியவில்லை. அதாவது வேத ஆரிய கால சடங்குகளை மற்றொரு மொழி ஊடாக செய்ய முனைந்தன் மூலம் தான், அது தப்பிப்பிழைத்தது. சமுதாயத்தில் சிதைந்ததன் மூலம், ஆரிய வேத மூல மொழியையே இழந்தனர்.
இந்த நிகழ்வு நீண்ட நீடித்த ஒரு கால பகுதியில், அதாவது சில தலைமுறைக்குள்ளான ஒன்றாக இருந்துள்ளது. சடங்கு நிலையில் எஞ்சிய அவர்களின் வாழ்வுமுறை மிகவும் தனிமைப்பட்ட நிலையிலும், சமுதாய போக்கில் ஒன்றிணைந்ததன் விளைவு, அவர்கள் ஆரிய வேத மொழியின் நீட்சியை இழந்தனர். எஞ்சி இருந்த சடங்கு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தின் சடங்காக மாறிய போது, சிதைந்த மூல மொழியில் இருந்தும், வாழ்ந்த சமுதாயத்தின் மொழிகளுடனும் கலந்து சமஸ்கிருதம் என்ற இரகசிய பூசாரிகளின் மொழி உருவானது. இது சமுதாயத்தின் பேச்சு மொழியாக உருவாகவில்லை. சொல்லப்போனால் ஆரியர்கள் அனைவரும் பேசும் மொழியாக மீள் உருவாக்கம் செய்யப்படவேயில்லை.
7 .வேதகாலச் ஆரிய சடங்குகளை செய்யக் கூடிய இந்த ஆரிய வழிவந்த பிரிவு, சமுதாயத்தில் தனிச்சலுகை பெற்ற ஓன்றாக மாறியது. இது சலுகை பெற்ற ஒரு தனியான சுரண்டும் வர்க்கமாக, தனது வர்க்க தனித்துவத்தை பேணவும், அதை இரகசியமாக்கவும், தனது பழைய மொழியின் சிதைவில் இருந்து ஒரு மொழியை தக்கவைத்துள்ளது. அதுதான் சமஸ்கிருதம். இதை கடவுளுக்கு மட்டும் தெரிந்த ஒரு மொழியாக கூறிக்கொண்டதுடன், கடவுளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடியவர்களின் ஒரு இரகசிய மொழியாகவும் இதைப் புனைந்தனர். இந்த மொழியைத் தெரிந்தவர்கள், கடவுளுடன் பேசக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை கட்டமைக்கப்பட்டது.
8. இந்த சமஸ்கிருத மொழியின் தோற்றம், அதுவும் பார்ப்பனரால் மட்டும் பேசப்பட்ட மொழியாக வரலாறு இந்த மொழியை அடையாளம் கண்டுள்ளது. இதை கடவுள் மொழி என்று கூறிக்கொண்டனர். மறுபக்கத்தில் ஆரிய மூல மொழியை மீட்க முடியாத அளவுக்கு, ஆரிய சிதைவு சமுதாயத்தினுள் நிகழ்ந்துள்ளது.
9. இந்த ஆரிய வேத மொழி சிதைவும், பார்ப்பனர் மட்டும் பேசும் சமஸ்கிருத மொழியின் தோற்றமும், ஆரியரின் சிதைவை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இடைப்பட்ட இக் காலத்தில் ஆரியர் என்ற அடையாளமே இன்றி, அது ஓரு தனித்துவமான மக்கள் கூட்டம் என்ற அடையாளமே இன்றியே, அது அழிந்துபோனது.
ஆரிய சமூகம் ஆரிய வேத மொழியை பேசிய காலத்தில், பல்வேறு தொழில்களைச் செய்யும் ஒரு சமூகமாகவே அது இருந்துள்ளது. அது வெறும் பூசாரிகளை மட்டும் கொண்ட கற்பனைக் கூட்டமல்ல. ஒரு சமுதாய அலகாக, தனது சமுதாயத்தினுள்ளான தேவைகளை பூர்த்தி செய்யும் பலதுறை சார்ந்த ஒரு குழுதான் ஆரியர். இதை நாம் ஆரிய ரிக்வேத சடங்குகளிலும் காணமுடியும். இரண்டாவதாக ஆரிய நாடோடி வாழ்க்கை அதன் முழுச் சிதைவு வரை, பல தலைமுறை கொண்டது. நாடோடிகளாக இந்தியாவின் ஒருபகுதியை வந்தடைந்த காலம் வரை, தனது சமூகத்தின் தேவையை அது தனக்குள்ளேயே பூர்த்தி செய்தது. இப்படி பல்வேறு சமூகத் தேவையையொட்டி, சமுதாயத்தில் உழைப்புப் பிரிவினை அதற்குள் இருந்தது. இந்த ஆரிய நாடோடிகள், அப்படியே இரத்த உறவு கொண்ட பார்ப்பனராக இடம் பெயரவில்லை. அப்படி காட்சிப்படுத்துவது என்பது, அப்படி நம்புவது என்பது, மூடர்களினதும், முட்டாள்களினதும் பிழைப்புவாதிகளினதும் செயலாகும்.
இப்படி வந்த நாடோடி ஆரிய சமூகம் இந்தியாவினுள் தனித்துவமாகவும், ஆரிய சமூகமாகவும் நீடிக்க முடியவில்லை. இந்திய சமூகத்தை வென்று அடக்கவும் முடியவில்லை. அவர்கள் சிதைந்தனர். சிதைந்த போது தமது சடங்கு முறை மூலம், இந்திய சமூகத்துக்கு நஞ்சிட்டனர். அந்த நஞ்சு தான், பார்ப்பனீயமாகி சாதியாக நீடிக்கின்றது. இந்த ஆரிய சடங்கு முறையைத் தவிர, ஆரிய மூலம் எதுவும் இனம் காணமுடியாத வகையில் அது சிதைந்துள்ளது.
மீட்கப்பட்ட ஆரிய வேத சடங்குமுறை தனது மூலத்தை தக்கவைத்தபடி, இன்றைய எல்லைவரை அது பலவாக திரிந்து வந்துள்ளது. ஆரிய வேத நாடோடி மக்களின் சிதைவு, தனது மொழியையும், அதன் மூலத்தையும் இழந்தது. தனது நாடோடித் தனித்துவத்தை பேண முடியாத ஒரு காரணத்தினால் தான் அழிந்து, பொதுவான சமூக ஓட்டத்தில் சிதைந்து கலந்தனர். இப்படி அந்த வேத ஆரிய மொழி சிதைவுற்று, அதன் மூல மொழி அழிகின்றது. இதன் மூலம் அவர்களின் இரத்த வழியான சமூக நாடோடி உறவு முறையே அழிகின்றது.
ஆனால் வேத ஆரிய சடங்குகளை பின்பற்றும் ஒரு பிரிவினர், இருக்கத்தான் செய்தனர். ஆனால் அவர்கள் ஆரியராகவோ, ஆரிய வேத மொழியை பேசுபவராகவோ இருக்கமுடியவில்லை. அதன் பெயரால் அவர்கள் தம்மைத்தாம் அடையாளப்படுத்தவும் கூட முடியவில்லை. அவர்கள் வாழ்ந்த சமூதாயத்தில் சிதைந்தபடி, தமது சடங்கை பின்பற்றுபவராக இருந்துள்ளனர். இந்த மதச் சடங்கை பின்பற்றியோர், பெருமளவில் ஆரியரில் இருந்த பூசாரிப் பிரிவாகும். இவர்களால் மட்டும் தான், தனது சடங்குகளையும் அது சார்ந்த நினைவுகளையும் தொடர முடிந்தது. மதம் ஊடாகவும் அவர்களின் பராம்பரியமாக மனப்பாடம் செய்யும் கல்வி முறையூடாகவும் இதைப் பேண முடிந்தது. அதாவது வசதியும் வாய்ப்பும் கொண்ட, உழைப்பில் ஈடுபட்டு வாழவேண்டிய தேவை இல்லாத பிரிவு மூலம் தான், இது ஒரு மதச் சடங்காக பாதுகாக்கப்பட்டது.
மறுபக்கத்தில் தனிச்சொத்துரிமை குடும்ப அலகை அடிப்படையாக கொண்டது என்ற வகையில், ஆரம்ப உழைப்பு பிரிவினைகள் பரம்பரைத்தன்மை கொண்டவையாகவே இருந்தது. அதாவது அது இயற்கையானது கூட. உற்பத்தி சார்ந்த அறிவு, அது சார்ந்த நுட்பத் திறன், அது பற்றிய கல்விமுறை பெற்றோர் வழியாக குழந்தைக்கு சென்றது. குழந்தை பிறந்தது முதலே, இது ஒரு வாழ்வாக மாறிவிடுகின்றது.
இந்த வகையில் ஆரியவேதச் சடங்குகளை, பூசாரிகள் தம் குழந்தைகள் ஊடாக பரம்பரையாக கடத்தப்பட்டது. ஆனால் இந்த பாரம்பரிய சடங்கை வேத ஆரிய மொழியில் தொடர்ச்சியாக செய்ய முடியவில்லை. மாறாக சமுதாயத்தில் நிலவிய மொழியில், வெறும் சடங்குகளாகவே அவை சிதைந்து வெளிப்பட்டது. வேத ஆரிய மொழிச் சிதைவு கலந்த ஒரு மந்திரமாகவே, சமஸ்கிருத மொழியின் முந்தைய வடிவங்கள் நீடித்தன. சமஸ்கிருத மொழி மந்திரம் என்ற நிலையைக் கடந்து, ஒரு மொழியாக உருவாகியது என்பது, ஆரிய வேத சடங்குக்கு இருந்த சமுதாய மதிப்பு தான் அடிப்படைக் காரணமாகும். இப்படி சமஸ்கிருதம் ஒரு சுரண்டும் வர்க்கத்தின் இரகசிய மொழியாகியது. இந்த மொழி ஒரு மக்கள் கூட்டத்தால் பேசப்படவில்லை. மாறாக மற்றவர்களை ஏமாற்றி தொழில் செய்யும் ஒரு கூட்டத்தின், தொழிலுக்குரிய மொழியாகியது.
இப்படி இந்த சமஸ்கிருதம் ஒரு குறித்த பூசாரிகளின் கூட்டத்தின் மொழியாவது என்பது, வேதஆரிய சடங்குகள் சமுதாயமயமாகியதன் பின் நிகழ்கின்றது. வேத ஆரியரின் முன்னயை சடங்கு முறைகள் சமுதாயத்தில் மதவழிபாடாக ஆதிக்கம் பெற்ற போது, சமஸ்கிருதமே அந்தச் சடங்குக்குரிய மந்திர மொழியாகின்றது.
10. இந்த தனி மொழியின் தேவை ஏன் எதனால் எழுகின்றது? வேதகால ஆரிய மதச்சடங்கு நல்ல வருவாயுள்ள ஒன்றாகவும், சுரண்டல் வாழ்க்கைக்கு அத்திவாரமானதன் விளைவு, அந்த சடங்கு மந்திரங்கள் தனித்தன்மை பெற்று அவை இரகசியமாகின்றது. வருவாயுள்ள தொழிலை மற்றவர் தெரியக் கூடாது என்பதால், இந்தச் சடங்கை மற்றவர்க்கு புரியாத, புரிய முடியாத வகையில் கட்டுப்படுத்த தனிமொழியின் தேவை அந்த சுரண்டும் வர்க்கத்துக்கு நிபந்தனையாகின்றது. இதை சில இரகசிய மந்திரங்கள் மூலம் செய்வதையும் உறுதி செய்வது, தனிச்சொத்துரிமை அமைப்பின் சுரண்டல் விதியாகும். மற்றவர் புரியாத மொழியில் செய்வது மட்டும் தான், இந்த சுரண்டலை தனித்தன்மையுடன் பாதுகாக்கவும், அதன் தனித்தன்மையை சிலர் கொண்டிருக்கவும், அதை பரம்பரைத்தன்மை வாய்ந்ததாக மாற்றுவது, வர்க்க சுரண்டல் அமைப்பில் வாழ்வுக்கான அடிப்படை விதிகளில் ஒன்று. தனிச்சொத்துரிமை அமைப்பில் இது எல்லா தொழிலுக்கும், அன்றும் இன்றும் பொருந்துகின்றது.
வேத ஆரிய சடங்கை இரகசியமாக்க உருவான, இரகசிய சுரண்டல் மொழிதான் சமஸ்கிருதம். இதை அந்த பூசாரிகள் மட்டும் பேசுகின்ற வகையில் தனித்தன்மை பெற்று, அவர்கள் மொழியானது. இந்த மொழி ஒரு கூட்டத்தின் மொழியாக இருந்த போது, சமூகத்தில் மற்றொரு மொழியே மக்கள் மொழியாக இருந்தது. இந்த மொழியின் இருப்பு என்பது, பூசாரிகள் ஒரு சுரண்டும் வர்க்கமான போது அதாவது அவர்கள் சுரண்டும் பார்ப்பனர்களாகியதால், அவர்களின் பேசும் மொழியாகியது. இந்த சுரண்டும் சமஸ்கிருத மொழி, பொதுவான பூசாரிகளில் இருந்து அவர்களை பிரித்து பார்ப்பனராக்கியது.
இந்த மொழிக்கு என்று சமுதாய மூலம் எதுவும் கிடையாது, இந்த மொழிக்கு என்று தனி வரலாறு கிடையாது. இது பூசாரிக் கூட்டத்தின், அதாவது பார்ப்பனியரின் சுரண்டும் ஓரு இரகசிய மொழி. இந்த மொழியை சாதிய அமைப்பு மேலும் இறுக்கமாக்கி, அதை ஒரு சாதிய மொழியாக்கியது. இது என்றும் எங்கும் ஒரு மக்கள் மொழியாக இருந்ததில்லை. இதனால் இதற்கென்று வரலாறு கிடையாது. இதை ஆரிய வேதச் சடங்கின் மூலம் மட்டும் தான், இனம் காணவேண்டியுள்ளது.
ஆனாலும் சுரண்டும் பூசாரி வர்க்கப் பிரிவின், ஆதிக்கம் பெற்ற ஒரு இரகசிய மொழியாக இருந்தது. இப்படி வேத ஆரியரை சடங்குகள் மூலம் தம்மை மீள் உருவாக்கம் செய்தவர்கள் தான் பாரப்பனர்கள். அவர்களினது சுரண்டும் இரகசிய மொழி தான் சமஸ்கிருதம்.
இந்த அடிப்படையில் தான் வேத ஆரிய பார்ப்பன வரலாற்றின் தொடர்ச்சியை நாம் இனம் காணமுடியும். ஆரிய வேத மக்களின் மூலத்தை, அதன் வாழ்வியல் கூறையும், இந்திய சமுதாயத்தில் தொடர்ச்சியாக அதன் மூலத்துடன் இனம் காணமுடியாது. வேத ஆரிய சடங்குகள் மூலம் அவை மீள் உருவாக்கம் செய்யப்பட்டது. ஆரியரின் தொடர்ச்சியில் வந்த பூசாரி பிரிவுகளால் அவை மீள் அறிமுகமாகியது. இந்த பூசாரிகள் ஆரியராக அறிமுகமாகவில்லை, மாறாக சமுதாயத்தில் சுரண்டித் தின்னும் பார்ப்பனராக, புதியதொரு வர்க்கமாக, தமது சடங்குகள் மூலம் அறிமுகமாகின்றனர். இதுவே வருண அமைப்பில் வீற்று இருக்கும் பார்ப்பானாகின்றான். பார்ப்பான் வருண அமைப்பில் ஒரு சுரண்டும் ஒரு உறுப்பாகத்தான், வரலாற்றில் அவன் மீளவும் ஆரிய வேத சடங்கு மூலம் அறிமுகமாகின்றான். சாதி அமைப்பில் இது மற்றொன்றாக வேறுபடுகின்றது. இதை தனியாக நான் விளக்கியுள்ளேன்.
தனது சுரண்டல் தொழிலின் இரகசியம், அது சார்ந்த இழிந்த கேடுகெட்ட வாழ்க்கை முறை, உழைப்பின் மீதான வெறுப்பு, இயல்பாகவே அவர்களை பண்பு ரீதியாக பண்பு கெட்ட சூழ்ச்சிக்காரராக, சதிகாரராக வரலாறு முழுக்க வாழவைக்கின்றது. அது மட்டும் தான், அவர்கள் உருவாக்கிய வாழ்க்கை முறையாகியது. இதற்காக எதையும் செய்யவும், எப்படியும் வாழ்வும், சமுதாயத்தை எப்படியும் இழிவுபடுத்தவும், அவர்கள் ஒருகணம் கூட தயங்கியதில்லை. அவர்கள் வாழ்க்கையே சூழ்ச்சியாகி சதியாகியது. இந்த வாழ்க்கை முறை மூலம், முழு இந்தியாவையும் தனக்கு அடிமைப்படுத்தியது. அதில் ஒன்று தான் சாதிய வடிவம். இவற்றை தனியாக நான் ஆராய்ந்துள்ளேன்.
11. இங்கு ஒரு அடிப்படைக் கேள்வி எழலாம். இன்றைய பார்ப்பனர்கள் அனைவரும் ஒரு அடியைச் சேர்ந்த, 4000 வருட வழி வந்த இரத்த உறவு வாரிசுகளா? எனின் இல்லை. வர்க்க அமைப்பின் விதி, தனிச்சொத்துடமை அடிப்படையில் யாரையும் சாதிய அமைப்பு போல் கட்டுப்படுத்துவதில்லை. சாதிய அமைப்பில் சொத்துடைமையை, அதாவது வர்க்க நிலையை சில சாதிகளின் உரிமையாக்கியது. ஆனால் வருண வர்க்க அமைப்பு அப்படி இருக்கவில்லை. வருண அமைப்பில் சொத்துடைய யாரும் மேலே உயர முடியும். அதேநேரம் சொத்தை இழந்தவர்கள் கீழே விழமுடியும். இதை கட்டுப்படுத்தும் எந்த சாதிய விதியும், அங்கு கிடையாது. பாhப்பனர்கள் முதியவர்கள் போன்ற தகுதிக்குரிய அந்தஸ்தை சிறப்பாக பெற்று இருந்தபோது, தனிச்சொத்துடமை விதி பலமானது. அது ஒரு இயற்கை விதியாக, தனிச்சொத்துரிமை அமைப்பின் போக்கில் அதை நிர்ணயம் செய்தது.
இந்த வருண அமைப்புக்கு முன்னமே வேத ஆரிய மூலத்தையும், அந்த மொழியையும், வாழ்ந்த சமுதாயத்தினுள்ளாக சிதைந்ததன் மூலம், தமது இரத்த உறவு வழியான தூய்மை என்று சொல்லக் கூடியதையே இழந்தனர். ஆரியர் என்ற வரலாற்று மூலத்தைக் கூட இழந்து காணப்பட்ட ஒரு சமூகத்தில் தான் பார்ப்பனர்கள் உருவானார்கள். கலப்பு அடிவந்த ஆரிய பரம்பரை தான் இன்றைய பார்ப்பனர்கள். ஆனால் இதற்கு வெளியில் பலர் பார்ப்பனரானார்கள்.
பார்ப்பன பூசாரி சுரண்டும் வர்க்கம் வேத ஆரிய சடங்குமுறையையும், அதன் இரகசியத்தை தனிமொழி மூலம், தனிச்சொத்துரிமை வருண அமைப்பில் தற்பாதுகாக்க முடியாது போனது. தற்பாதுகாப்பு அடிப்படையில் உருவான இரகசிய மொழியான சமஸ்கிருதம் வெறும் மொழியே ஒழிய, சாதி போல் வலுவுள்ள தற்பாதுகாப்பு ஆயுதமல்ல. சாதியில் மட்டும், அதுவும் நிலபிரபுத்துவ காட்டுமிராண்டி அடக்குமுறைச் சமூக அமைப்பில் மட்டும், அது இரத்த உறவு பரம்பரை முறையை பாதுகாக்க முடிந்தது. ஆனால் வருண அமைப்பில், அதன் பரம்பரைத்தன்மையை, இரத்த வாரிசு உறவுக்கு வெளியில் இட்டுச் சென்றது.
வருண அமைப்பின் விதிக்கமைய அதாவது வர்க்க விதிக்கமைய, பார்ப்பனரின் வர்க்க வீழ்ச்சியும், பணம் சம்பாதிக்கும் விதியும், குருகுலக்கல்வி முறையும், ஒரு இரத்த உறவு கொண்ட பரம்பரைக்குரிய ஒன்றாக, ஆரிய வேதச் சடங்கை பாதுகாக்க முடியவில்லை. நல்ல வருவாய் கொண்ட இந்த சுரண்டலில், பலர் புதிய பார்ப்பனரானார்கள். ஆரிய வேதச் சடங்குகள் அதாவது பார்ப்பனீயம் மற்றைய மதங்களைப் போல் துறவை, மனித சேவையை முன்வைக்கவில்லை. தன்னை முன்னிலைப்படுத்தி, தன்னை கடவுளாக்கி, அது தனக்கேயுரிய சுரண்டலை முன்வைத்தது. இந்த வகையில் ஆரிய வேத சடங்கு வருவாயுள்ள பார்ப்பனீய தொழிலாகியது. மற்றைய மதங்கள் போல் துறவை மேற்கொண்டு, மக்களிடம் கையேந்தி உண்ணவில்லை. மக்களைச் சுரண்டித் தின்றது. உழைத்து வாழ விரும்பாத சமூக பொறுக்கிகளின் தூய தங்குமிடமாக, வேத ஆரிய சடங்கு மாறியதில் ஆச்சரியமில்லை. சூதும், சூழச்சியும் கொண்ட சதிகள் மூலம், சதியாளர்கள் புதிய பார்ப்பனரானார்கள்.
இந்த ஆரிய வேத சடங்கு ஒரு மதமாக இந்திய சமுதாயத்தில் வெற்றிபெற்றதற்கான மூலம், இது தனக்காக சுரண்டிய மதம் என்பதால், அது செயலூக்கமுள்ள ஒன்றாக எப்போதும் இருந்ததால் இருப்பதால் வெற்றிபெற்றது. அது தோற்ற போதெல்லாம், வென்றதை செரித்தபடி சமுதாயத்தின் கூறுகள் மீது பார்ப்பனீயத்தை நஞ்சாயிட்டது. சமுதாயத்தினுள் பார்ப்பனீயம் நஞ்சை இடுவதில், அதன் சுரண்டும் வர்க்க மூலம் மீட்சிக்கான கூறாக இருந்ததும், இன்றும் இருந்தும் வருகின்றது.
இரத்த உறவைத் தாண்டியே, இந்த பார்ப்பனீயம் பலரை பார்ப்பனீயமாக்கியது. சுரண்டும் ஆரிய வேதச் சடங்கின் செல்வாக்கு, குறித்த இடத்தைத் தாண்டிச் செல்ல ஊக்கியாக்கியது. பல பிரதேசத்தை சேர்ந்த தூர இடங்களில் இருந்து வந்து கற்கவும், அதை தெரிந்து கொள்ளவும் இது தூண்டியது. இந்த சுரண்டும் சூது வாதுகளை கற்பிப்பது நல்ல வருவாயுள்ள தொழிலாகியது. இது குருகுலக் கல்விக்கூடாக, புதிய பார்ப்பனர்களை உருவாக்கியது. இந்தக் கல்வி இரகசிய மொழியான அதே சமஸ்கிருத்தில் கற்றதாலும், கற்று வந்ததாலும், சமஸ்கிருதம் அவர்களுக்குரிய ஒரு தனிமொழியாகியது. எந்த சமூக பொருளாதார அடிப்படையிலான எந்த தொடர்ச்சியுமற்ற இந்த சமஸ்கிருத மொழி, வேத ஆரிய சடங்கு மூலம் சுரண்டலை செய்தவரிடையேயான ஒரு மொழியாக நீடிக்க முடிந்தது. இது ஒரு சுரண்டும் வர்க்கத்தின் இரகசிய மொழியாகவும், அதை மட்டும் இந்த மொழி ஆதாரமாக்கியதால் அதன் இருப்புக்கான அடிப்படையாகியது. மற்றொரு வகையில் இந்த மொழியில் மட்டுமே, வேத ஆரிய சடங்குமுறைகள் இருந்ததுடன், அதை கடவுளின் மொழியாகவும் கற்பிக்கப்பட்டு இருந்தது.
வரலாறு தெரிந்த காலம் முதலே, வேத ஆரிய பார்ப்பனீய சடங்கை முன்னிலைப்படுத்தி வெளிவந்த அனைத்தும், சமஸ்கிருத்தில் எழுதப்பட்டது மட்டுமின்றி, அவை பார்ப்பனரால் தன்னை தான் முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டது. சாதியக் கோட்பாட்டை மதக் கோட்பாடாக்கியதுடன், பார்ப்பனீயம் இப்படித்தான் சமூகமயமாகியது.
12 .ரிக் வேத ஆரிய வரலாறு தொடங்கி, இந்தியாவில் அவர்கள் நிலைபெறல் வரையிலான காலத்தை உள்ளடக்கிய வேதம், நாகரிகம் பெற்று சமூகத்தை அடிப்படையாக கொள்ளவில்லை. அவர்களின் போர்கள் நாகரிக சமூகத்துக் எதிராக இருந்துள்ளது. அவர்கள் போற்றும் ரிக்வேதம் தொடங்கிய இடத்தில் இருந்து நிலைபெற்ற வரையிலான வேத காலத்தில், அவர்களின் போராட்டம் நாகரிக கோட்டைகளை அழித்தலாகும். நிலையாக உழைத்து வாழ்ந்த மக்களின் வாழ்விடங்களை அழித்தலாகும். அந்த இடத்தை ஆக்கிரமித்து அதில் அவர்கள் வாழ முயலவில்லை. அழித்தல் என்பது சூறையாடலை அடிப்படையாக கொண்டது. நெருப்பு சார்ந்த சடங்குகள், விலங்கு பலியிடல் அனைத்தும் இதற்கு உட்பட்டதே. இதைத் தனியாக பின்னர் பார்ப்போம்.
இந்திரன் கோட்டையை அழிக்கும் ஒரு கடவுளாகவே, ஆரியர் முன் நிற்கின்றான். அப்படித்தான் ஆரிய வேத மக்கள் இந்திரனை நம்பினர். ரிக் வேதத்தில் கோட்டை கட்டி ஆரியர் வாழ்ந்ததாக எந்த குறிப்பும் கிடையாது. சாராம்சத்தில் கோட்டை தமது கடவுள் கோட்பாட்டுக்கு எதிரானதாகவும் கூட மாறிவிடுகின்றது. நாகரிக எதிர்ப்பாளரான ஆரியர் வாழ்வியல் முறை, அவர்களின் வழிபாடாக மாறிவிடுகின்றது. ரிக்வேத ஆரிய மந்திரம் ஒன்று, அக்கினியிடம் கோட்டையை காப்பாற்றுவது போன்று, எம்மையும் காப்பாற்ற வேண்டும் என்று கோரி வழிபடுகின்றனர்.
இப்படி அக்கால நாகரிக அமைப்புக்கு வெளியில் ஒரு நாடோடிகளாகவே ஆரியர் வாழ்ந்தவர்கள். அதனால் தான் அவர்களின் அழிவு வரை, அவர்களால் நிலைபெற்று வாழ முடியவில்லை. அவர்களின் பின் பல பண்பாட்டு கூறுகள் ஓட்டிக்கொண்டு வருகின்றது. குதிரை, இருப்பு முதல் இறந்தவரை புதைத்தல் எரித்தல் வரை பல கலப்பு பண்பாட்டின் கலவைகளாக வேத ஆரிய வழிபாடு அறிமுகமாகின்றது. அவர்கள் பற்றி எந்த வரலாற்றுக் குறிப்பையும், இந்த சடங்கு முறைக்கு வெளியில் பெற முடியவில்லை. வரும் வழியெங்கும் சிலவற்றை உள்வாங்கினர், சிலவற்றை இழந்தனர். தொடங்கி முடியும் வரலாற்றுக்கு இடையில் பிணத்தை எரிப்பு முதல் புதைப்பது வரை, அவர்களின் பண்பாட்டுத் தளமே அதிர்ந்தது. இந்த நாடோடிக் குணாம்சம், மூலமேயின்றி சடங்கு முறையுடன் எஞ்சி அழிந்தனர். அவர்களின் கோட்பாடு நாகரிகத்துக்கு எதிராக இருந்ததால், அவர்கள் நிலைபெற்று ஒரு சமூகமாக நாகரிகமாக உழைத்து இன்றுவரை வாழ முடியவில்லை.
நகரும் ஒரு நாடோடிச் சமூகமாக, அதையே பல தலைமுறை செய்ததால் நாகரீகத்தின் மூச்சை அவர்களின் வரலாற்றின் பின் இனம் காணமுடியாது. வரும் வழியெல்லாம் அவர்கள் கொள்ளையிடுகின்றனர். கால்நடைகளை திருடுகின்றனர். இதை ரிக் வேதம் இத் திருட்டையும் கொள்ளையையும், இந்திர கொடையாக கூறுகின்றது. இப்படி கொள்ளையிட்டு, அதை புசித்து உண்டு வாழும் சமூகம் காட்டுமிராண்டி சமூகமாக இருப்பது ஆச்சரியமன்று. இப்படி கொள்ளையடித்த கால்நடைகளை பலியிட்டு உண்டபடி தான், அதுவும் பல தலைமுறை ஊடாக குறிக்கோளின்றி இந்தியா வரை வந்தடைந்த ஆரியர் வாழ்வியல் முறை அரைக் காட்டுமிராண்டித்தனமானது தான்.
நீண்ட பல தலைமுறை கொண்ட ஒரு நாடோடி அரைக் காட்டுமிராண்டிகளை, குறைந்தபட்சம் நாகரிகப்படுத்தியது என்றால் அவர்களின் வாழ்வியல் நெருக்கடிதான். இந்த நாடோடிகள் உணவுக்காக கொள்ளையிட்ட போதும், அது அவர்களின் வாழ்வைப் பூர்த்தியாக்கும் வகையில், கொள்ளை வளம் போதுமானதாக இருக்கவில்லை. முதலில் எரியூட்டியவர்கள், ஒரேயடியாக பலியிட்டவர்கள், இதில் இருந்து தப்பிப்பிழைக்க கால்நடைகளை பராமரிப்பது பெருக்குவதை அவசியமாக்கியது. அன்றைய இருப்பில் கால்நடை இன்றிய நகர்வு, தற்கொலைக்கு ஒப்பானது. உணவை நகரும் பாதையில் பெறுவது என்பது சாத்திமற்ற ஒன்று. எனவே கால்நடைகளை தொடர்ந்து பராமரிப்பதும், அதை இனவிருத்தி செய்வதும் அவசியமாக இருந்தது. ஒருபுறம் ஆரிய வேதம் கூறுவது போல் வரும் வழியெங்கும் சடங்கின் பெயரில் கால்நடைகளை தின்பதும், மறுபுறம் கால்நடை வளர்ப்பும் அவசியமானதாக இருந்தது.
அத்துடன் இது சிறியளவிலான தேவையை ஓட்டி சிறிதுகாலம் தங்குவது, பயிர் செய்கையை செய்வதும் உருவானது. இது ஒரு நிலையான பிரதேசத்தில் அல்ல, நகரும் வழிகளில் இதை அவர்கள் செய்தனர் அல்லது கொள்ளையிட்டு அழித்த சமூகத்தின் பயிர் செய்கையை பராமரித்து, அதை அறுவடை செய்து பாதுகாத்தனர். இது தான் அவர்களின் காட்டுமிராண்டிகளற்றதாக காட்டுகின்ற ஒரு உயர்ந்தபட்ச நாகரிகம். அத்துடன் அங்கு இருந்த உழைப்புக் கருவிகளையும், தற்பாதுகாப்பு கருவிகளையும் திருடிக்கொண்டு தம்மை பலப்படுத்தினர். இதை வைத்து முகர்ந்து தேடும் ஆய்வாளர்கள், அவர்களை நாகரிக சமூகமாக காட்ட அலைகின்றனர்.
இந்த ஆரிய நாடோடிகளின் பெயர்வு நிலையற்ற ஒரு நீண்ட பல தலைமுறை கொண்டது. அப்படித்தான் சமூக இருப்பு கொண்ட ஆதி சமூகங்கள் பல இருந்துள்ளது. மனிதன் கால்படாத பல புதிய பகுதியூடான இடப்பெயர்ச்சி, பல இடத் தரிப்புகளை கொண்டதாக இருந்தது. வளமும் வாய்ப்பும் நிறைந்த பூமியில், கொள்ளையும் கொழுப்பும் நிறைந்த இடத்தில், அந்த வளம் வற்றும் வரை தங்கி வாழ்தல் மூலமே ஆரிய இடப்பெயர்ச்சி மெதுவாக நடந்தது. பெண்கள் குழந்தைகள் முதல் முதியவர் ஈறாக கொண்டு, கால்நடைகளை பராமரித்தபடியான இந்த இடப்பெயர்ச்சியை ஒரு புள்ளியாக, ஒரு நேர் கோடாக சுருக்க முடியாது. இது போன்ற வாழ்க்கை முறையுடன் கூடிய நாடோடி வாழ்க்கை முறை, செவ்விந்திய மக்கள் மத்தியில் அமெரிக்காவின் அழித்தொழிப்பு நிகழ்ந்த காலத்திலும் கூட காணப்பட்டுள்ளது. இங்கு அது இயற்கை மாற்றத்தை ஒட்டி இந்த இடப்பெயர்ச்சி பருவகாலத்தின் போக்கில் நடந்தது.
மெதுவான ஆரிய இடப்பெயர்ச்சி மூலம், அவர்கள் கொள்ளையடித்து வைத்திருந்த குதிரைகள் இனவிருத்தி ஊடாக பெருகியதுடன், சுற்றுச்சூழலுக்கு அவை இசைவாக்கம் அடைந்தது. உலக வரலாற்றில் எங்குமே இல்லாத வகையில் குதிரையைக் கூட பலியிட்டு உண்டனர். அதாவது முதிர்ந்த, செயலற்ற, நகர்வுக்கு தடையாக பெருகிவிட்ட, உணவு இல்லாத நிலையில் குத்pரை கூட பலியிடப்பட்டது. வேத ஆரிய பார்ப்பனீய சடங்கின் போது, பலியிடப்பட்ட குதிரையுடன் அரசி புணரும் சடங்கு பின்னால் ஒரு சூக்குமம் உள்ளது என்பது தெளிவு. அது முறையற்ற ஒரு செயலின் மீதான குற்ற உணர்வை நீக்குவதாக இருக்கலாம்;.
இதற்கு நல்ல உதாரணம் டார்வின் ஆய்வு நடத்திய காட்டுமிராண்டி சமூகத்தில், வேட்டை கிடைக்காத போது தமது வேட்டைக்கு உதவும் நாய்களுக்கு உணவிட, வேட்டையாட முடியாத முதியவர்களை கொன்று நாய்க்கு உணவிட்டதை அவர் பதிவாக்கியுள்ளார். இந்த வகையில் இந்த நாடோடி ஆரிய நகர்வு நடந்தது. ஆரிய இடப்பெயர்ச்சி என்பது ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்தை நோக்கி போதலை அடிப்படையாக கொண்டதல்ல. பல வரலாற்று ஆய்வாளார்கள் இதைக் காணத் தவறி, ஆரிய வரலாற்றை அங்குமிங்கும் முகர்ந்து ஆரிய மூத்திரம் தென்படுகின்றதா என்று முகர்ந்து தேடுகின்றனர்.
ஆரிய சமூகம் நிலையான சமூகமாக உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அல்ல. அதனால் வரலாற்றில் நிலையான வாழ்வற்றவர்கள். ஆதிய சமூகத்தில் நிலையான வாழ்வமைத்து, உற்பத்தி உறவுடன் பின்னிப்பிணையாது அலைந்துதிரியும் காட்டுமிராண்டி சமூக குழுக்களில் ஒன்று தான் ஆரியர். இதற்குள் நிலைபெற்ற நாகரிக பண்பாட்டை அகழ்வாராய்ச்சியில் தேட முடியாது.
பிரதானமான வேள்வி முறையையும், அக்கினி சடங்குகளையும் கொண்ட வேத ஆரியரின், அக்கினி பலிபீடங்களை தேடியவர்களுக்கு அதன் சுவடே காணமுடியவில்லை. அக்கினி வழிபாடு மற்றும் பலியிடல், ஆரிய சடங்கில் கொள்ளையிட்ட சமூகத்தின் மீதான எதிர்வினைதான். இவை ஒரு நிலையான சமூகமாக இல்லாத ஒரு நாடோடிகள் என்பதால், வேள்வி முதல் பலியிடல் வரை வந்த இடத்துக்கு ஏற்ப தற்காலிகமானது தான். அவை அழிந்து போகக் கூடிய எல்லைக்குள், அவை வரலாற்றில் காணாமல் போய்விடுகின்றது.
ஆரிய வேத சடங்கு முறைகள் சிலவற்றை கொண்ட, அதன் எச்சத்தை மீளமைப்பு செய்த பார்ப்பனீயம் இல்லையென்றால் ஆரிய வரலாற்றைப் பற்றிய எந்தக் குறிப்பும் எமக்குக் கிடையாது போய் இருக்கும். இது போன்ற எத்தனையோ சமூகத்தின் தனிக் குறிப்புகள் இல்லாமல் போனது போல் ஆகியிருக்கும். இது ஒன்றும் வரலாற்றுக்கு புதிதல்ல.
------------------------------------------------------------------------------------------
எனது கட்டுரையின் உள்ளடக்கம் புத்தகம் வெளிவரும் வரை, தொடர்ச்சியான திருத்தத்துக்கும், இணைப்புக்கும், நீக்கத்துக்கும் உள்ளாக்குகின்றது. அதேபோல் கட்டுரையின் தலைப்பு, கட்டுரைகள் வரவேண்டிய இடம், கட்டுரையின் உள் மேலும் கீழுமாக இடம்மாறும். அந்த வகையில் இவை தொடர்பான எனது கற்றலும், உங்கள் ஆக்கபூர்வமான விவாதமும் இதற்கு உதவும். இந்த வகையில் உங்கள் தர்க்கங்கள், வாதங்களையும், ஆலோசனைகளையும் கூட எதிர்பார்க்கின்றேன்.