தமிழ் அரங்கம்

Friday, September 7, 2007

புதிய நூல் வெளிவந்துள்ளது.

இரயாகரனின் புதிய நூல் வெளிவந்துள்ளது.


மனித அவலங்களில் மிதற்கும் அரசியலும் கோட்பாடுகளும்!310 பக்கங்ளைக் கொண்ட இந் நூல், இலங்கையின் நடைபெறும் மனித அவலத்துக்கு காரணமானவர்களைப் பற்றிப் பேசுகின்றது.

மக்களுக்கு எதிராக சமகாலத்தில் நடைபெறும் செயற்பாடுகளை அம்பலமாக்கின்றது.


இந்த நூலின் மேற்கத்தைய விலை 7 ஈரோ

இலங்கையில் 270 ரூபா

இந்தியாவில் 140 ரூபா


இது போன்ற எனது நூல்கள் உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் அவதூறுகளுக்கு மத்தியில் கடின உழைப்பின் மூலம் எழுதப்பட்டவை. இதை நாம் வெளியீடாக செய்ய முடிவதில்லை. எந்த அறிமுகமும், ஆதரவும் கிடைப்பதில்லை. சமரசமின்றிப் போராடுவதால், எமது இணையம் புறக்கணிக்கப்பட்டு அனாதையாக்கப்பட்டுள்ளதோ அதே நிலையே எமது நூலுக்கும்.


எமது இணையத்தை மற்றவர்களுக்கு நீங்கள் அறிமுகப்படுத்துவது போல், இந்த நூலையும் நீங்கள் தான் அறிமுகம் செய்யவேண்டும்.


எனது உழைப்பில் மட்டும் நம்பி இது முழுமையாக வெளிவருகின்றது. தோழர்களே நண்பர்களே அனுதாபிகளே, முகமறியா இணைய வாசகர்களே எனது நூலை விலைகொடுத்து வாங்கி உதவவும்;. எடுத்து விற்று உதவவும்;. மொத்தமாக வாங்கி உதவவும்;.


சமுதாய நலனில் அக்கறையுள்ள ஒவ்வொருவரிடமும் உரிமையுடன் கோருகின்றோம். இதுவரை 9 நூல்கள் அச்சில் வெளிவந்துள்ளது. விவரங்களுக்கு நூல் பகுதியை பார்க்க.


இவ்வருட இறுதிக்குள் மேலும் இரு நூல்கள் வெளிவரவுள்ளது. உங்கள் பங்களிப்பை, ஒத்துழைப்பையும் வழங்கும்படி உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

Thursday, September 6, 2007

அமெரிக்க அணு ஆயுத போர்க்கப்பல் ""நிமிட்ஸ்''ஐ விரட்டியடிப்போம்!


நாடு மீண்டும் காலனியாக்கப்படும் நிலையில், அமெரிக்க உலக மேலாதிக்கப் போர்த் தேரில் இந்தியாவைப் பிணைக்கும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக, அமெரிக்க அணு ஆயுதப் போர்க்கப்பலான நிமிட்ஸ், கடந்த ஜூலை முதல் வாரத்தில் சென்னைத் துறைமுகத்துக்கு வந்ததை எதிர்த்தும், இக்கப்பலை இந்திய கடற்பகுதியில் உலாவ அனுமதிக்கும் துரோக ஆட்சியாளர்களை எதிர்த்தும் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

ஏற்கெனவே அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்க அடிமைச் சாசனத்தில் கையெழுத்திட்டுள்ள இந்திய அரசு, இப்போது ""கூட்டுச் சேரா இயக்கத்திலிருந்து விலகி அமெரிக்காவுடன் நெருங்கி வரவேண்டும்'' என்று அமெரிக்க அரசுச் செயலர் கண்டலீசா ரைஸ் விடுத்த எச்சரிக்கைக்கு விசுவாசமாகப் பணிந்து இப்போர்க்கப்பலை அனுமதித்துள்ளது. அண்மை ஆண்டுகளில் இதேபோல் 5 அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்கு வந்து இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகள் நடத்தியுள்ளன.

இந்த உண்மைகளுடன், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடி வரும் ஈராக் மக்களைக் கொன்றொழித்த இப்போர்க் கப்பலை அனுமதிப்பதென்பது நாட்டுக்கே அவமானம் என்று விளக்கி, கடந்த ஜூலை 2ஆம் நாளன்று சென்னை மெமோரியல் ஹால் அருகே காலை 10 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமையேற்ற தோழர் சுப.தங்கராசு அறை கூவினார்.

ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை நெஞ்சிலேந்தி விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், திரளாக வந்த உழைக்கும் மக்களிடம் சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்றது.

பு.ஜ. செய்தியாளர்கள்

Wednesday, September 5, 2007

அரசு சாராத அமைப்புகள் யுத்தத்துக்கு துணைபோகும் கிரிமினல்களே!

பி.இரயாகரன்
05.09.2007


ரசுசாராத அமைப்புக்கள் எப்படிப்பட்ட யுத்த கிரிமினல்கள் என்பதற்கு, இலங்கை யுத்தம் சிறப்பான எடுத்துக்காட்டாகி வருகின்றது. மனித விரோத யுத்தத்தை நடத்துபவன் மட்டுமல்ல, அதற்கு துணையாக அதன் பின்னணி தளத்தில் செயற்படுபவனும் குற்றவாளி தான்.

புலியொழிப்பு என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமாக பேரினவாதம் தமிழ் மக்கள் மீதே யுத்தம் செய்கின்றது. இந்த யுத்தத்தின் பின்னணியில், தன்னார்வக் குழுக்கள் யுத்தத்துக்கு துணையாக செயலாற்றுகின்றன.

யுத்தம் செய்பவன் இழைக்கின்ற மனிதக் குற்றத்தை மூடிமறைக்கின்ற, அதை சாந்தப் படுத்துகின்ற நடவடிக்கைகள் தான், தன்னார்வக் குழுக்களின் செயல்பாடுகள். இது தான் அவர்களின் அரசியல் நோக்கம். இதன் மூலம் யுத்தத்தை மேலும் நடத்தவும், யுத்தம் நடத்துபவன் மக்களிடம் அம்பலமாகாது இருக்கவும், யுத்தப் பின்னணியை கழுவித் துடைக்கின்ற வேலையை இந்த அரசு சாராத தன்னார்வக் குழுக்கள் செய்கின்றன. யுத்தத்தின் விளைவை எதிர்கொள்ளும் மக்கள் கூட்டமும், அதைச் சுற்றியுள்ள மக்களும், இதை சுயமாக எதிர்கொள்ளும் ஆற்றலை நலமடிப்பதன் மூலம், ஒரு சமூகத்தின் சுய இருப்பை நலமடிப்பதே இதுவாகும்.

மனித துயரங்களையும், அவலங்களையும் போக்குதல் என்ற பெயரில், யுத்தத்துக்கு கைகொடுத்து உதவுகின்ற பணியைத்தான், இலங்கையில் அரசுசாராத நிறுவனங்கள் வெளிப்படையாகவே செய்கின்றன. பேரினவாத அரசு இயந்திரம் இராணுவ சர்வாதிகாரமாகி, அது நடத்துகின்ற இன அழித்தொழிப்பு, இன்று அனைத்து தரப்பாலும் என்றுமில்லாத வகையில் ஊக்கப்படுத்தப்படுகின்றது. இதற்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் இந்த தன்னார்வக் குழுக்கள் செய்கின்றன.

யுத்தத்தில் சம்மந்தப்பட்டவர்கள், யுத்தம் ஏற்படுத்தும் மனித அவலத்தை போக்க வேண்டிய உறுப்புகள் அல்ல என்பதே, தன்னார்வக் குழுக்களுக்கு பணம் வழங்கும் எகாதிபத்திய அரசியல் நோக்கமாகும். நிவாரணத்தை வழங்கும் தேவையில் இருந்து, அந்த பொறுப்பில் இருந்து, யுத்தம் செய்பவனை விடுவிப்பதன் மூலம், யுத்தத்தின் பின்னணி ஊக்குவிக்கப்படுகின்றது. உலகமயமாதல் அரசு இயந்திரம் என்பது, ஏகாதிபத்திய நலனை பாதுகாக்கும் ஒரு பொலிஸ் நிறுவனம் தான் என்பதை, இலங்கையின் யுத்த பின்னணி எடுப்பாக உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றது.

பேரினவாத சிங்கள இராணுவம் புலிகள் ஒழிப்பு என்ற பெயரில், தமிழ் மக்களை இராணுவ ரீதியாகவே ஒடுக்குகின்றது. இதற்கு துணையாக இதன் பின்தளத்தில், தன்னார்வக் குழுக்களின் கிரிமினல் செயல்பாடுகள் அமைந்துள்ளது.

தமிழ் மக்களை புலிகளின் உருவாக்கத்துக்கு முன்னமே, ஒரு இனம் என்ற ரீதியில் ஒடுக்கியவர்கள் இதே சிங்கள பேரினவாதிகள் தான். காலகாலமாக நடத்திய அதே ஒடுக்குமுறையைத் தான், இன்று புலிகளின் பெயரில் அவர்கள் மறுபடியும் தொடருகின்றனர்.

சமாதானத்தின் பெயரில் ஒப்பந்தங்கள், இனப்பிரச்சனைக்கு தீர்வை காணுதல் என்ற பெயரில் வகைவகையான குழுக்கள், கூட்டங்கள், உரைகளை நடத்துகின்ற பேரினவாத அரசு இயந்திரத்தின் நோக்கம், தமிழ் மக்களை அழிப்பதை இதன் மூலம் மூடிமறைப்பது தான். அப்படிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கம் தான், தன்னார்வக் குழுக்களின் மனிதாபிமான செயல்பாடுகள்.

இனவழிப்பு யுத்தத்தில் பேச்சுவார்த்தை முதல் தன்னார்வக் குழுக்களின் செயல்பாடுகள் அனைத்தும் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளது. அனைத்தும் இராணுவ நடவடிக்கையுடன் ஒருங்குகிணைக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி நிரல் இலங்கையில் அப்பட்டமாக காணப்படுகின்றது. இராணுவம் எங்கு யுத்தத்தை தொடங்குகின்றதோ, அங்கு இந்த தன்னார்வக் குழுக்கள் உடனடியாக பின்னணியில் செயலாற்றத் தொடங்குகின்றது.

இந்த அரசு சாராத தன்னார்வக் குழுக்களை உருவாக்கி அதன் செயல்பாட்டுக்குரிய நிதியையும் ஏகாதிபத்தியம் என்ற பிசாசே வழங்குகின்றது. ஏகாதிபத்திய நலன்களையும், ஏகாதிபத்திய நலன் சார்ந்த அரசின் நலன்களையும் பாதுகாக்கின்ற, மக்களிடையே அது அம்பலமாகாது இருக்கின்ற அரசியல் தான், அரசுசாராத நிறுவனங்களின் நோக்கமாகும்.

உலகமயமாதல் பொருளாதார கட்டமைப்பை உருவாக்கி அதில் மிதக்கின்ற ஏகாதிபத்தியம், மனித குலத்தின் அழிவில் தான் இதைச் சாதிக்க முடிகின்றது. மனித அழிவும் அவலமும், சமூக ரீதியான எழுச்சியாக மாறக் கூடாது என்பதற்காக, அவன் உருவாக்கி அவன் கொடுக்கும் பணத்தில் இயங்குவது தான் இந்த அரசுசாராத தன்னார்வக் குழுக்கள்.

ஏகாதிபத்திய பணத்தில் அவனின் நலனை பூர்த்திசெய்வது தான், இதன் அடிப்படை அரசியல் நோக்கமாகும். ஏகாதிபத்தயத்தின் தயவில் இயங்கும் இலங்கை பேரினவாத இராணுவ ஆட்சியை, ஏகாதிபத்தியம் தக்கவைக்க முனைகின்றது. அதற்கு தன்னார்வக் குழுக்கள் உறுதுணையாக செயல்படுகின்றது. பேரினவாத இன ஆக்கிரமிப்புக்கு உறுதுணையாக, அதன் பின்னணி தளத்தில் செயல்படுகின்றது.

இனவழிப்பை நடத்தும் இராணுவ நடவடிக்கையின் விளைவுகள் ஏற்படுத்தும் மனித துயரங்கள், வெளி உலக்கும் உலக மக்களுக்கும் தெரியாது மூடிமறைக்கின்ற சதியை செய்வது யார் என்றால், இந்த தன்னார்வ ஏகாதிபத்திய குழுக்கள் தான். இந்த தன்னார்வக் குழுக்களின் நோக்கமும் கருசனையும், அந்த மக்கள் இந்த அவலத்தின் விளைவை சுயமாக புரிந்து அவர்கள் செயல்படாது தடுப்பது தான். மக்கள் இதை சுயமாக எதிர் கொள்ளும் ஆற்றல் ஏற்படாத வண்ணம், அதை நலமடித்து வருகின்றனர். இதனால் தான் ஓடோடிச் சென்று உதவுதாக காட்டி, மக்களின் சமூக செயல்பாட்டை நலமடிப்பதே இதன் அரசியல் பணியாகும்.

மற்றவனை நம்பி இருக்க கூறும் ஒரு சமூக இருப்பை, சமூக இழிவை புகுத்துகின்ற ஏகாதிபத்திய கிரிமினல்கள் தான், அரசுசாராத தன்னார்வ நிறுவனங்கள். இப்படி இந்த நோக்கில் இக் குழுக்களின் செயல்பாடுகள் கிரிமினல் மயப்படுத்தப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய நோக்கத்தையும், பேரினவாத நோக்கத்தையும் ஒருங்கே பூர்த்தி செய்கின்ற பேரினவாத இனவழிப்பு யுத்தத்தின் பின்னணியை, அவன் கொடுக்கும் பணத்தில் சாந்தப்படுத்துகின்றவர்கள் கிரிமினல் மயப்படுத்தப்பட்ட போர் குற்றவாளிகன் தான்.

Monday, September 3, 2007

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: நீர்க்குமிழி பெருத்தால்..


""எந்தவிதத் தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாத, அரசின் வரிகள் எதுவும் பாதிக்காத, ஒரு தனி சாம்ராஜ்யமாக இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவது வருங்காலத்திற்கு நல்லதுதானா என்பதே விவாதத்துக்குரிய விஷயமாகத் தெரிகிறது.'' (தினமணி, 26.6.07)

""சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் ஈர்க்கப்படும் தொழில் நிறுவனங்களுள், பெரும்பாலானவை மிகப் பெரும் முதலீட்டில் தொடங்கப்படுகின்றன. எந்தவிதமான தொழில்நுட்பப் பயிற்சியும் பெறாத தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு, இது ஒன்றுதான் தக்க வழியா என்பது தெளிவாகத் தெரியவில்லை.'' (தி ஹிந்து, 24.5.07, பக்: 23)

மேலே காணப்படும் இரண்டு கருத்துக்களும், சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்ப்பவர்களால் கூறப்பட்டவையல்ல. முன்னது, ""தினமணி'' நாளிதழின் தலையங்கக் கருத்து. பின்னது, இந்தியாவின் வர்த்தகக் கொள்கை மீளாய்வு தொடர்பாக நடந்த கூட்டத்தில், உலக வர்த்தகக் கழகம் முன்வைத்த அறிக்கையில் கூறப்பட்ட விமர்சனம்.

""எந்தவிதமான அதிகார வர்க்கத் தடைகளுமின்றி, அந்நிய மூலதனத்தையும், அதி உயர் தொழில் நுட்பத்தையும் இறக்குமதி செய்வது; ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், அந்நியச் செலாவணி ஈட்டுவதை உயர்த்துவது; வேலை வாய்ப்பைப் பெருக்குவது'' ஆகிய நோக்கங்களுக்காகத்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதாக இந்திய அரசு கூறி வருகிறது. ஆனால், சிறப்புப் பொருளாதார மண்டலங்களால், இந்தப் பலன்கள் கிடைக்கும் என்பதை ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவே ஒத்துக் கொள்ளத் தயங்குகின்றன. ""தினமணி''யின் தலையங்கமும், உலக வர்த்தகக் கழகத்தின் அறிக்கையும் இந்தத் தயக்கத்தின் வெளிப்பாடுகள்தான்.

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க 2001ஆம் ஆண்டே 2,400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இம்மண்டலத்தில் அமையும் ஆலைகள் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்; இதனால் அப்பகுதியில் சாதிக் கலவரம் நடப்பது தடுக்கப்படும் என்றெல்லாம் அன்று கதையளந்தார்கள். ஆனால், ஆறாண்டுகளுக்குப் பிறகு பார்த்தால், கையகப்படுத்தப்பட்ட நிலத்தைச் சுற்றி வேலை அமைக்கும் பணிதான் நான்குநேரியில் நடந்து கொண்டிருக்கிறது. ""வேலி அமைத்தவுடன், அங்கு குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கும்; அது முடிந்தபிறகுதான் ஆலைகள் வரும்'' என்று இப்பொழுது புதுக்கதை சொல்கிறார்கள்.

நான்குநேரி திட்டம் இப்படி ஆமை வேகத்தில் நகர, ""இந்த ஆண்டிற்குள் தமிழகத்தில் 9 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 7,107 கோடி ரூபாய் மூலதனத்தில் அமையும்; இதன் மூலம் 1,76,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்'' என டாம்பீகமாக அறிவித்தது தி.மு.க. அரசு. ஆனால், இத்திட்டங்களுக்காக இதுவரை வெறும் 772.50 கோடி ரூபாய்தான் மூலதனம் போடப்பட்டிருப்பதாக அழுது புலம்பும் ""ஃபிக்கி'' என்ற தரகு முதலாளிகள் சங்கம், தமிழக அரசு இன்னும் முனைப்பாகச் செயல்பட வேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களால், இந்தியாவின் உற்பத்தி சார்ந்த தொழில் வளர்ச்சிக்கு ஏதாவது பயன் கிட்டுமா என்பதும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அனுமதி கேட்டு வந்துள்ள விண்ணப்பங்களுள் 63 சதவீத விண்ணப்பங்கள் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்கத்தான் அனுமதி கோரியுள்ளன.

இதுவொருபுறமிருக்க, ஏற்கெனவே நடந்து வரும் தொழில்கள், சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு இடம் பெயர்வதை ""வளர்ச்சி'' என்று சொல்ல முடியாது; சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்படும் பண்டங்கள், உள்நாட்டுச் சந்தைக்குள் நுழைந்தால், இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப் பெரும் இழப்பு ஏற்படும் என முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களே அச்சப்படுகின்றனர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தாராளமயத்தின் தீவிர பக்தரான நிதியமைச்சர் ப.சிதம்பரம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் அடுத்த ஐந்தாண்டுகளில் மைய அரசுக்கு 1,75,000 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் எனக் கூறி, வர்த்தக அமைச்சர் கமல்நாத்தோடு முட்டி மோதிக் கொண்டிருக்கிறார். உலக வர்த்தகக் கழகம் கூட இந்த வரி இழப்பு பற்றிக் கவலைப்படுகிறது.

தனியார்மயம் தாராளமயத்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைக்கப் போகும் பலன்கள் என ஆளும் கும்பல் ஊதிப் பெருக்குவதெல்லாம், அடுத்த நிமிடமே நீர்க்குமிழி போல உடைந்து வருகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலமும் இந்தத் தோல்வியில் இருந்து தப்பப் போவதில்லை.

Sunday, September 2, 2007

எதிரியின் கைக்கூலிகளால் ஒருநாளும் ஜனநாயகத்தை உருவாக்க முடியாது.

பி.இரயாகரன்
02.09.2007

க்களின் எதிரிகளாக யார் உள்ளனரோ, அவர்களின் கைக்கூலிகள் தான் புலியெதிர்ப்புக் கும்பல். இதற்கு வெளியில் சுயாதீனமான மக்கள் அரசியல் எதுவும் இந்தக் கும்பலிடம் கிடையாது. இந்த புலியெதிர்ப்பு 'ஜனநாயகவாதிகள்" மக்களின் எதிரிகளிடம் பணத்தில் அரசியல் செய்வதுடன், அவர்களின் பாதுகாப்பில் நின்று அதற்கு விசுவாசமாக குலைக்கின்ற ஓட்டுண்ணிக் கும்பல். இதை யாரும் இல்லை என்று நிறுவமுடியாது.

இந்தக் கும்பல் கைக்கூலிக்குரிய விசுவாசத்துடன், புலியொழிப்பு என்று வித்தை காட்ட முனைகின்றனர். புலியை எதிரியாக காட்டி, தனக்கு பணம் தருபவனை எதிரியற்றதாக காட்டி எதிரிக்கு வாலாட்டி நக்குகின்றனர்.

எதிரி பற்றிய வரையறை என்ன? மக்களின் வாழ்வாதாரங்களுடன் பின்னிப்பிணையாத அனைத்தும், மக்களுக்கு எதிரி தான். மக்களைச் சார்ந்தே நிற்காத புலிகள், புலியெதிர்ப்புக் கும்பல் கூட, மக்களின் எதிரிதான். மக்களை எதிரியாகி செயல்படும் அரசு முதல் ஏகாதிபத்தியம் வரை மக்களின் எதிரிதான். மக்களுக்காக இவர்கள் சிந்திப்பதுமில்லை, செயல்படுவதுமில்லை. மக்களை வேட்டையாடி தமக்கும், சுரண்டும் வர்க்கத்துக்கும் சேவை செய்கின்றவர்கள் மக்களின் எதிரிதான்.

இந்த எதிரி புலியாக இருந்தாலும் சரி, புலியெதிர்ப்பு புலியொழிப்புக் கும்பலாக இருந்தாலும் சரி, ஒன்று தான். அதன் அரசியல் என்பது மக்களைச் சார்ந்து இருப்பதில்லை. மக்கள் தான், தமது சொந்த விடுதலைக்கு போராட வேண்டும் என்பதை மறுப்பவர்கள் இவர்கள். அவர்கள் கூறும் காரணம், மக்களை அணிதிரட்டுவது சாத்தியமில்லை என்கின்றனர். அத்துடன் மக்கள் தமக்காக போராட மாட்டார்கள் என்று சொல்லி, தரங்கெட்ட அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். புலியும் சரி, புலியெதிர்ப்பும் சரி, இதைத்தான் அன்று முதல் இன்று வரை சொல்லுகின்றது. அதனடிப்படையில் செயல்பட்டவர்கள் எதையும் பெற்றது கிடையாது. பார்ப்பனியம் போல் சலசலக்கும் இந்த மக்கள் விரோதிகள், பேய்களினதும் பிசாசுகளினதும் வைப்பாட்டிகள் தான்.

இப்படிப்பட்ட இவர்களில், தம்மை முற்போக்கு ஜனநாயகவாதிகளாக காட்ட முனையும் புலியெதிர்ப்பு 'ஜனநாயகவாதிகளின்" யோக்கியதை என்ன?

ஈ.என்.டி.எல்.எப் என்ற கூலிக் கும்பல், இந்தியா அரசிடம் பணம் வாங்கி இயங்குகின்ற, இயங்க வைக்கப்படுகின்ற ஒரு கொலைகார கும்பல். இந்தியாவின் பாதுகாப்பிலும், அண்மையில் இலங்கை அரசின் பாதுகாப்பில் இயங்கிய கருணா என்ற கும்பலுடன் கூடி செயல்பட்ட, ஒரு கொலைகாரக் கூலிக் கும்பல். இதற்கு மாற்றாக வேறு எந்த வேலைத் திட்டமும் இதனிடம் கிடையாது.

ஈ.பி.டி.பி இலங்கை அரசிடம் பணம் வாங்கி செயற்படும் ஒரு கூலிப்படை. அரசு கொடுக்கும் பணத்தில் கொலை செய்ய கூலிக்கு ஆட்களைத் திரட்டுவதுடன், அரசு பதவியைக் கொண்டு பிழைப்புவாத பிரமுகர்களை அடிப்படையாக கொண்ட ஒரு கூலிக் கும்பல். இலங்கை அரசின் பணத்துக்கு வெளியில் எந்த வேலைத் திட்டமும் இதனிடம் கிடையாது. இலங்கை அரசின் பாதுகாப்பில் நின்று, புலிக்கு நிகராகவே கொலை செய்கின்ற ஒரு கூலிக் கும்பல்.

புளாட், ஈ.பி.ஆர்.எல்.எப் முதல் அனைத்தும் இலங்கை அரசின் பாதுகாப்பில் இருப்பதுடன், அவர்களிடம் பணத்தை பெற்று அரசியல் செய்கின்ற ஒட்டுண்ணிக் கும்பல்கள். அன்றாடம் கொலையும், வரியும் அறவிடுவதே இவர்களின் கைதேர்ந்த அரசியல்.

கருணா என்ற கொலைகார புலிக்கும்பல். இலங்கை அரசின் இன்றைய செல்லக்குழந்தை. புலியொழிப்பின் பெயரில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வரி, கப்பம், அடிதடி, ரவுடித்தனம் என்று, புலியின் அனைத்து வகை வக்கிரத்தையும் கிழக்கில் செய்யும் தனிக்காட்டு ராஜா. இந்த கருணா கும்பலின் அரசியல் என்பது, புலி செய்த கொலைகார அரசியல்தான். இன்று இலங்கை அரசுக்காக கொலை செய்கின்ற, இலங்கை அரசின் ஒரு கொலைகாரக் கூலிக் கும்பல். இந்த கொலைகார அரசியல், கிழக்கை குத்தகைக்கு எடுத்துவைத்துள்ளது. இந்த அரசியல் போக்கிரித்தனத்தை செய்ய, கிழக்கு வாழ் மக்களின் குழந்தைகளை திருடுகின்ற மக்களின் முதல்தரமான விரோதிகளின் ஒருவன் தான் கருணா. இந்தளவுக்கு இதை சாதிக்க, இலங்கை மற்றும் இந்திய அரசின் பாதுகாப்பும், பணமும் உதவுகின்றது.

கூட்டணியைச் சேர்ந்த ஆனந்தசங்கரி. இலங்கை அரசிடமும் பணம் பெற்று, அவர்களின் பாதுகாப்பில் திடீர் 'ஜனநாயகவாதி"யானவர். அரசு மற்றும் ஏகாதிபத்திய செயல்பாட்டு எல்லைக்கு வெளியில் எந்த மாற்று அரசியலும் கிடையாது. மக்களை நம்பி இவர்கள் குலைப்பதில்லை.

இவர்கள் எல்லாம் ஜனநாயக வாதிகள். தமது சொந்த அமைப்பில் கூட ஜனநாயகத்தின் மூச்சை காட்ட முடியாதவர்கள். கொலை, அடி உதை, மிரட்டல், பணத்தை கொடுத்து விலைக்கு வாங்குவது, ஆசைகாட்டுவது, அடிபணிய வைப்பது, தூக்கியெறிவது என்று, இந்த அமைப்புகளின் உட்கட்சி ஜனநாயகம் உள்ளது. இவர்கள் தான் புலிகளிடம் இருந்து, ஜனநாயகத்தை மீட்கப்போகின்றார்களாம். அதை புலியொழிப்பு என்று கூறிக்கொண்டு, புலியெதிர்ப்பை முன்வைத்து புலியை ஒழிக்க கொலை செய்கின்றனர்.

சொந்த அமைப்பில் ஜனநாயகத்தை, மக்கள் நலத் திட்டத்தை வைக்க முடியாதவர்கள், மக்கள் மேல் தமது சர்வாதிகாரத்தை திணிக்கின்றனர். இலங்கை மற்றும் இந்திய அரசிடமும், ஏகாதிபத்தியத்திடமும் பணமும் ஆயுதமும் வாங்கி திரிகின்ற கூலிக் குழுக்கள் தான் இவை. ஏகாதிபத்தியத்திடம் பணத்தையும், வசதி வாய்ப்புகளையும் பெறுகின்றனர். உலகத்தைச் சுற்றிவர இலவச விமான ரிக்கற்றுகள் முதல் பற்பல சலுகைகள். புலியெதிர்ப்பு புலியொழிப்பை ஊக்குவிக்க, ஏகாதிபத்திய நிறுவனங்கள் பட்டங்களையும் பரிசுகளையும் கூட வழங்குகின்றது.

மனிதத்தையே ஏகாதிபத்தியத்திடம் கூவி விற்கும் இந்த புல்லுருவிகள், ஏகாதிபத்திய ஊக்கத்தையும், ஆக்கத்தையும் பெற்றபடி தான் மானிட விடுதலை பற்றி கொக்கரிக்கின்றனர்.

இப்படிப்பட்ட இந்தக் கும்பலில் யோக்கியதை உலகமறிந்தது. இப்படி இலங்கை இந்திய உள்ளிட்ட ஏகாதிபத்திய ஆதரவு பெற்ற இந்த 'ஜனநாயக" கனவான்கள், மக்களிடம் அரசியல் செய்வது கிடையாது. மக்களிடம் செல்ல எந்த வேலைத்திட்டமும் கிடையாது. சொந்த மக்களை நம்புவது கிடையாது. அதாவது மக்களை நம்பி அரசியல் செய்வது கிடையாது.

அன்னிய பணம், அன்னிய பாதுகாப்புக்குள் நின்று குலைக்கின்ற கொலைகாரக் கும்பல்கள் இவை. இவர்கள் தான் புலிப் பாசிசம் பற்றியும், ஜனநாயக மீட்புப் பற்றியும் பிதற்றுகின்றனர்.

அன்னிய பணத்தில், அன்னிய பாதுகாப்பில் நின்று நடத்துகின்ற அரசியல், மக்களை அவர்களுக்கு அடிமைப்படுத்துவதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. இவர்கள் கடந்த 25 வருடத்தில் இந்தக் குழுக்களும், இந்த குழுக்களைச் சேர்ந்தவர்களின் அரசியல் பித்தாலாட்டங்கள், மனித விரோத செயல்பாட்டுகள் எம்முன்னால் விரிந்து கிடக்கின்றது.

புலியின் பாசிச அரசியலுக்கு மாற்றாக எந்த மாற்று அரசியல் வழியும் இவர்களிடம் கிடையாது. புலிகள் எப்படி மக்களை பார்க்கின்றரோ, அப்படித் தான் இந்தக் கும்பலும் மக்களை பார்க்கின்றது. புலிகள் எப்படி மக்களை நடத்துகின்றனரோ அப்படித்தான் இந்தக் கும்பலும் நடத்துகின்றது. புலிகள் எப்படி மக்களை அடக்கியொடுக்குகின்றனரோ, அப்படித்தான் இந்தக் கும்பலும் நடக்கின்றது. புலிகள் எப்படி மக்கள் நலன்களையும், அவர்களின் சொந்தப் போராட்டங்களையும் புலித் தமிழீழத்தின் பின் என்கின்றனரோ, அப்படித்தான் இவர்கள் அதை புலியொழிப்பின் பின் என்கின்றனர்.

எல்லா விதத்திலும் புலியாக இருப்பதில், புலியொழிப்பு புலியெதிர்ப்புக் கும்பல் ஒன்றுபட்டே நிற்கின்றது.

இந்தக் கும்பலுக்கும், இதற்கு அன்னக்காவடி எடுத்தாடும் புலம்பெயர் கொள்கை கோட்பாடற்ற எடுபிடிகள், தம்மைத் தாம் 'ஜனநாயகவாதிகள்" என்கின்றனர். இவர்கள் கூடிக் குலாவி செய்யும் விபச்சாரம் மூலம், ஜனநாயகத்தை மீட்பதாகச் சதிசெய்கின்றனர். நல்ல வேடிக்கையான அரசியல்.

இலங்கை அரசு என்ற பேய்க்கும், ஏகாதிபத்தியம் என்ற பிசாசுக்கும் துதிபாடுகின்ற, அதன் பின்னால் நின்று குலைக்கின்ற இந்த கும்பல், மக்களின் எதிரிகள் தான். இதற்கு வெளியில் எதையும் இவர்கள் செய்வதில்லை.

புலிகள் போல் எந்த விதத்திலும் இவர்கள் குறைந்தவர்கள் அல்ல. புலிகள் பெருமெடுப்பில் கொலைகளைத் தொடங்க முன்பு, புளாட் பாரிய உட்படுகொலைகளை நடத்தியவர்கள். இந்திய இராணுவம் எம்மண்ணை ஆக்கிரமித்து இருந்த காலத்தில் ஈ.என்.டி.எல்.எப், ஈ.பி.ஆர்.எல.எப் நடத்திய படுகொலைகள் புலியை மிஞ்சியது. இவர்கள் இன்றுவரை அதை சுயவிமர்சனம், விமர்சனம் செய்ய மறுப்பவர்கள். இன்று ஈ.பி.டி.பி நடத்தும் கொலைகள் புலிக்கு நிகரானது.

புலியெதிர்ப்பின் பின் புலியொழிப்பு அரசியல் நடைமுறையாக இருப்பது கொலைகள் தான். புலியொழிப்பு வேலைத்திட்டமே அதுதான். இன்று வடக்கு கிழக்கில் நடக்கும் கொலை, ஆள்கடத்தல், வரி, கப்பம் எல்லாம் யார் செய்கின்றனர். எல்லாம் இந்த ஜனநாயகவாதிகள் தான். கொலைகளை செய்துவந்த புலிகளை விரட்டிவிட்டு, இவர்கள் கொலைகளைச் செய்கின்றனர். இது தான் புலியொழிப்பு. வேறு வழி இவர்களிடம் இதற்கு வெளியில் கிடையாது.

புலியொழிப்பு 'ஜனநாயகவாதிகள்" புலி படுகொலைக்கு எதிராக குதித்தவர்கள், இன்று கள்ள மௌனத்துடன் அதை செய்வதும் ஆதரிப்பதும் வெளிப்படையானது.

அண்மையில் கிழக்கு சென்ற புலியொழிப்புக்கு தலைமை தாங்கும் தலைவர்கள், கிழக்கை கருணா என்ற புலியொழிப்பு கொலைகாரனுக்கு குத்தகைக்கு கொடுத்ததை பெருமையாக பீற்றினர். கொலைகார கருணாவுக்கும் தமக்கு இடையில் மோதலை உருவாக்கும் சதி என்று கூறி, ஜனநாயகத்துக்கே வெடி வைத்தனர். கருணா என்ற கொலைகார புலிக் குழுவுக்கு மாற்றாக, தேர்தலில் பங்குகொள்ள அனுமதி இல்லை என்பதையே, இந்த மோதல் பற்றிய கூற்று பளிச்சென்று விளக்கியது.

கிழக்கில் புலியின் முன்னைய கொலைகார வாரிசும், இன்றைய போட்டி கொலைகாரனுமான கருணா கும்பல் நடத்துகின்ற கொலைகள், மனித உரிமை மீறல்களை, அவர்களால் மக்கள் படும் துன்பத்தை பற்றி பேச முடியாத இவர்கள் ஊமை ஜனநாயகவாதிகளாக மாறி மட்டக்களப்பை சுற்றிப்பார்த்தனர். அதைப் பற்றி பேசினால் அது மோதல், புலிச் சதி என்று கூறும் ஜனநாயகத் துரோகிகள்.

கருணா என்ற புலிக் கொலைகாரன் நடத்துகின்ற வெறியாட்டங்கள், இந்த ஜனநாயகவாதிகளுக்கு இப்படி கண்ணில் தெரியாமல் போகின்றது. எப்படிப்பட்ட பொறுக்கிகள். கிழக்கு மக்களுக்கே அதே யாழ் மேலாதிக்க உள்ளடகத்தில் இங்கும் துரோகம் செய்கின்றனர். கிழக்கில் ஜனநாயகம் என்பது கருணாவுக்கு உட்பட்டது என்பது இவர்களின் அகராதி கூறுகின்றது. நாங்கள் அங்கு ஜனநாயக ரீதியாக செயல்பட மாட்டோம் என்கின்றது. இதையே ஆனந்தசங்கரி என்ற புலியொழிப்பு கனவான் பி.பி.சிக்கு பேட்டியாக கொடுக்கின்றார்.

எங்கள் ஜனநாயகம் புலியை ஒழிப்பது தான். அதை யார் செய்தாலும், அதை கண்டு கொள்ளமாட்டோம். அதில் ஜனநாயக விரோதம் நடந்தால் அதை ஆதரிப்போம் அல்லது கண்டுகொள்ளவே மாட்டோம் என்கின்றனர்.

இவர்களிள் நோக்கம் மக்களின் ஜனநாயகத்தை மீட்பதல்ல. அதற்கென்று எந்த வேலைத்திட்டமும் இவர்களிடம் கிடையாது. சொந்த அரசியல், மக்களைச் சார்ந்து நிற்றல் என்று, இந்தக் கும்பலிடம் எந்த அரசியல் அகராதியும் கிடையாது. புலியைப் போல் ஒரு பாசிச மாபியாக் கும்பல். புலியை மட்டுமல்ல, இந்த புலியெதிர்ப்பு புலியொழிப்பு பாசிச கும்பல்களையும் இனம் கண்டு மக்களாக ஒழிக்காத வரை, சமுதாயத்தில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.