தமிழ் அரங்கம்

Friday, May 12, 2006

புலியெதிர்ப்பின் அலம்பலும், சேரனின் புலம்பலும்

புலியெதிர்ப்பின் அலம்பலும், சேரனின் புலம்பலும்

பி.இரயாகரன்
12.05.2006

க்கள் பற்றி பேசமறுக்கும் கூட்டுச் சதி. தத்தம் நோக்கில் அரசியல் ரீதியாக இழிந்து போன தமது சமூக இருப்பில் இருந்து கொண்டு, புலம்புவதும் அலம்புவதும் நிகழ்கின்றது. மக்களின் நலன் பற்றி, அவர்களின் சமூக பொருளாதார அரசியல் உறவு பற்றி எந்த அக்கறையுமற்ற வாதங்களும், நியாயங்களும். தமிழ் மக்கள் முதல் சர்வதேச ரீதியாகவே மக்கள் பற்றி அக்கறையற்ற இவர்கள், ஏகாதிபத்திய கண்ணோட்டத்தை தமது சொந்த அடிப்படையாக கொண்ட இந்த புத்திஜீவிகள், தம்மைத்தாம் தக்கவைக்க வாதங்களையும் பிரதிவாதங்களையும் முன்வைக்கின்றனர்.


அண்மையில் சேரனின் புலிசார்பு பற்றி தேனீயில் ஒரு புலியெதிர்ப்பு அலம்பல் அண்மையில் வெளியாகியது. இதைத் தொடர்ந்து சேரனின் புலம்பல் வெளிவந்தது. வேடிக்கை என்னவென்றால், இருதரப்பும் தத்தம் நிலையில் நின்று தாம் சமூக அக்கறை உள்ளவராகவும், மக்களுக்காக நேர்மையாக செயல்படுவதாகவும் கூறியது தான். இந்தக் அரசியல் கூட்டுச் சதியை, நாம் இனம் காணவேண்டியவராகவே உள்ளோம்.


சேரன் பற்றி தேனீக் கட்டுரையாளர் சில சம்பவங்களையும், அதன் மீதான உண்மைத்தன்மை பற்றிய தரவுகள் மீது, தனது புலியெதிர்ப்புக் கட்டுரையை வரைந்தார். சேரன் கட்டுரையாளரின் தரவுகளின் உண்மைத்தன்மையை கேள்வி கேட்டு, பதிலை அதன் மீது தனக்கு சாதகமாக்கி கொண்டு பதிலளித்தார். இப்படி விடையத்தின் உள்ளடகத்தின் மீதான அரசியல் விமர்சனத்தை, இருவருமே அரசியல் ரீதியாக செய்யவில்லை. இதுவே அலம்பலும் புலம்பலுமாகியது.


ஒரு புத்திஜீவியாக தம்மை கருதி செயலாற்றி வருபவர்கள், மக்களுக்கு கருத்துக்களை தெரிவித்து வருபவர்களின் அரசியல் நேர்மை என்பது என்ன? இது ஒரு அடிப்படையான, எல்லோருக்கும் பொருந்தக் கூடிய ஒரு கேள்வியை உள்ளடக்கிய வகையில், அரசியல் சாரத்தைக் கொண்டது. புத்திஜீவியாக ஒருவன் இருக்கின்றான் என்றால், யாருக்கு எப்படி இருகின்றான் என்பதைக் கொண்டே, அவனின் சமூக பாத்திரம் துல்லியமாக தீர்மானிக்கப்படுகின்றது. இலங்கையைச் சேர்ந்த ஒரு புத்திஜீவியாக, அதிலும் தமிழ் புத்திஜீவியாக அவன் இருக்கின்றான் என்றால், அவன் சமூகத்தில் என்ன (அரசியல்) பாத்திரத்தை வகிக்க வேண்டும்.


1.மக்களின் துன்ப துயரங்கள் மீது தனது அறிவை, மக்களிடமிருந்து கற்று அதை அந்த மக்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ளவேண்டும்.


2.சமூக பொருளாதார அரசியல் கூறுகளின் மீது, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை பிரதிநிதித்துவம் செய்து மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.


3.மக்களின் உள்நாட்டு எதிரி, வெளிநாட்டு (அன்னிய) எதிரியை தெளிவாக உணர்த்தி, மக்களின் நலன்களுடன் ஒன்றிணைந்து தன்னை வெளிப்படுத்தி நிற்கவேண்டும்.


4.மக்களின் சமூக பொருளாதார வாழ்வியல் முரண்பாடுகளின் மீதும், மக்களின் அன்றாட போராட்டங்களிலும், ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைத்து தன்னை ஒரு அமைப்பாக்கிக் கொள்ள வேண்டும்.


5.மக்களை விட்டு விலகிய அனைத்து வகையான மக்கள் விரோத புத்திஜீவித்தனத்தையும், அந்தக் கோட்பாட்டையும் இடைவிடாது எதிர்த்துப் போராட வேண்டும்;


இப்படி புத்திஜீவிகளின் முன்னுள்ள கடமை என்பது, சமூக அளவில் விரிவானது. முரணற்ற வகையில், சமரசமற்ற வகையில், மக்களின் நலனுக்காக போராடுவது தான் ஒரு புத்திஜீவியின் முன்னுள்ள கடமை. இது மட்டும் தான் புத்திஜீவியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தகுதியை வழங்குகின்றது.


இதை சேரன் போன்றவர்களின் பொது வாழ்வில் காணவேமுடியாது. ஏன், தேனீயின் இணைய வாழ்வில் காணமுடியாது. இவர்களின் அலம்பலும் புலம்பலும், மக்களின் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டும் அரசியல் வக்கிரத்தை மட்டுமே செய்கின்றது. புலியெதிர்ப்பு முதல் புலி ஆதரவு புத்திஜீவித்தனத்தின் பகட்டான ஆர்ப்பாட்டமான செயல்கள் அனைத்தும், மிக இழிவான சமூகப் பாத்திரத்தையே சமூகளவில் வகிக்கின்றது.


சேரனின் அரசியல் என்ன? சேரனின் கடந்தகாலம் முதல் நிகழ்காலம் வரையிலான அவரின் அரசியல் பாத்திரம் என்ன? அவரின் புத்திஜீவித்தனம் என்ன? எதைத்தான் செய்ய முனைகின்றார். அங்குமிங்கும் வாலையும் மூஞ்சையையும் காட்டும் அரசியல் பன்றித்தனத்தையே செய்கின்றார்.


சேரன் எப்போதும் அரங்கில் தன்னை பகட்டாக காட்டுவதன் மூலம், தன்னை தக்கவைப்பவர். அலையில் மிதக்க முனைபவர். தேசியப் போராட்டம் தொடங்கிய போது தமிழ் குறுந்தேசிய கவிதை எழுதியவர். இயக்கத்தின் மக்கள் விரோத போக்கு வளர்ச்சியுற்ற போது, அதை எதிர்த்து குறுகியகாலம் (அலை தணியும் வரை) கவிதை எழுதியவர். இதுதான் அவரை புத்திஜீவியாகவே அறிமுகப்படுத்தியது. பின் அவர் இலக்கிய சீரழிவாளர் கும்பலகளில் ஒருவர். இதற்கு உட்பட்ட புலி பற்றி மென்மைகலந்த விமர்சனம். அதன் நீட்சியாக புலிகளிளுடன் கூடிக்கூலாவியபடி, அவர்களின் பாசிச நிறுவனங்களில் வேலை செய்கின்றார். இன்று பிரபாகரனினதும் பாலசிங்கத்தினதும் உரைக்கு இடையில் தன்னை புகுத்திக் கொண்டு, பிரபாகரனை பின்பற்றுகின்றார். அதற்கு அரசியல் கொள்கை விளக்கங்கள். இப்படி அவரின் அரசியலும் பிழைப்புத்தனமும் நடக்கின்றது.


இவரின் புத்திஜீவித்தனம் மார்க்சிய எதிர்ப்பில் முகிழ்ந்தது. ஏகாதிபத்திய வட்டாரங்களுடன் நட்பார்ந்த தொடர்புகள் மூலம், தன்னைப்பற்றிய பிரமையை தக்கவைப்பவர். இதற்கு உட்பட்டு தன்னையும், தனது எழுத்தையும் வாரி துப்புபவர். இந்த கனவான் சோவியத் மண்ணிலும், சீனாவிலும், தனது கம்யூனிச எதிர்ப்பின் அடிப்படையில் மனிதம் பற்றி தேடியலைந்து கருத்துக் கூறும் பிழைப்புவாத புத்திஜீவி, தனது சொந்த மண்ணில் அதைச் செய்வதில்லை. எம் மண்ணில் மனிதம் மறுக்கப்படுகின்றது. எம்மண்ணின் மனித துயரங்கள் எண்ணில் அடங்காதவை. அவை பற்றி எந்த சூடுசுறணையுமற்ற நக்குத்தனமே, இவர்களின் புத்திஜீவித்தனமாகும். விமர்சனமற்ற மிதவாதத்தன்மை இயல்பாக, புலிகளின் அமைப்புகளில் கூலிக்கு மாரடிக்கவைக்கின்றது. பிறகு தமது புத்திஜீவித்தனம் பற்றிய பிரமையில் அங்கலாய்த்து புலம்புகின்றனர்.


தமிழ் பேசும் மக்களின் வாழ்வியல் துன்பத்தை தீர்க்க, அதை சமூகத்தின் முன் கொண்டு செல்ல வக்கற்றவர்கள்; தான் இந்த புலம்பல் பேர்வழிகள். மக்களை வழிகாட்டிச் செல்ல, அவர்களுக்கு கற்றுக் கொடுக்க முடியாத சமூக விரோத ஒட்டூண்ணிகள் தான் இவர்கள். சமூகத்தில் வாழ்ந்தபடி, சமூகத்தில் மேலாண்மையை தக்க வைத்தபடி, அதில் படர்ந்து வாழும்; ஒட்டூண்ணிகளாகவே இருக்கின்றனர். இந்த ஒட்டூணிகளின் புத்திஜீவித்தனம், அங்குமிங்கும் ஒன்றைப் பொறுக்கி, மக்களை ஏமாற்றி அவர்கள் மீது காறித் துப்புவதுதான். இதன் மூலமே தமது சொந்த மேலாண்மையை தக்கவைக்கின்றனர். இழிவான, இழிந்து போன சமூகத்தின் இருப்பில், தமது மேலாண்மையை நிறுவி அதில் கவுரவ பிரமுகராக குளிர்காய்வது தான் சமூகம் பற்றிய இவர்களின் நிலைப்பாடு..


'மாமனிதன்" சிவராம் என்ற ஒரு சமூக விரோத ஒட்டுண்ணி எப்படி அங்குமிங்கும் ஒரு புழுவாக நெளிந்து வாழ்ந்தானோ, அதே போக்கு சேரனிடமும் உண்டு. அரசியல் ஒட்டுண்ணித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட பிழைப்புத்தனத்தில் தம்மைத்தாம் மிதப்பாக்கி புலம்புகின்றனர்.


இந்தப் புலம்பலிலே சேரன் கூறுகின்றார்


'நான் திருப்பித் திருப்பி வலியுறுத்துவது போல் எந்தக் கால கட்டத்திலும் எந்தக் கட்சியிலும் நான் உறுப்பினராகவோ ஆதாரவாளனாகவோ இருந்ததில்லை.


ஈபிடிபியின் டக்களஸ்தேவானந்தா, முன்னாள் ஈரோஸ் பின்னாள் ஈபிடிபியின் சின்னபாலா, ஈபிஆர்எல்எப் இன் வராராஜப்பொருமாள், பத்மநாபா, விடுதலைப்புலிகள் வே.பாலகுமாரன், கிட்டு, சந்தோஷம் போன்ற ஏராளமான இயக்கத் தலைவர்களுடன், இயக்க உறுப்பினர்களுடன் போன்றவர்களுடன் நட்பு இருந்தது. இன்னும் இருக்கின்றது. அரசியல் முரண்பாடுகளுக்கு அப்பால் நட்பைப் பேணமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது"


என்று மக்களுக்கு கூற முனையும் சேரன், என்ன தான் சொல்லுகின்றார். என்னைப் போல் இருந்தல் தான், இன்றைய அரசியல் சமூக பணி என்கின்றார். இதுதான் இன்று புத்திஜீவிகள் செய்யும் அரசியல் சமூக பணி என்கின்றார். ஒட்டுண்ணிக்கேயுரிய அரசியல் நக்குத்தனம்; இது. இதை சொல்லும் போது, அதை வாசிப்பவனை கேனப்பயல் என்று நினைப்பது தான் இவரின் புத்திஜீவித்தனம்;.


மக்களுடன் அரசியல் ரீதியாக நட்பை பேணமுடியாத இந்த ஒட்டுண்ணி, மக்களின் எதிரியுடன் நட்பை கொள்ளமுடிகின்றது. சேரன் பெயர் குறிப்பிட்டுக் கூறியுள்ள எல்லாத் தலைவர்களும் கடந்த காலத்தில் கொலைகளை செய்தவர்கள், அல்லது கொலைகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள். கொலைக்கு ஏதோ ஒரு வகையில் தலைமை தாங்கியவர்கள். மனித விரோதத்தையே வாழ்வாகக் கொண்டு, ஆயிரம் ஆயிரம் மனிதர்களின் வாழ்வையே அழித்தவர்கள். ஆனால் இவர்கள் சேரனின் நண்பர்களாக இருப்பதாக, சேரனே பெருமை பாராட்ட முடிகின்றது. மக்களாகிய உங்களால் முடியுமா? தனது சொந்த துரோகத்துக்கு முற்போக்கு அரசியல் மூலாம் பூச பயன்படுவது நட்பு. நட்பின் இலக்கணத்தையே இழிவு செய்வதில் வெட்கப்படுதில்லை இந்த பொறுக்கிகள்.


சேரனின் நிலையே விசித்திரமானது. அந்த தலைவர்கள் சரியானவர்களா? அல்லது சேரன் சரியானவரா? அல்லது இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா! நண்பன் பற்றிய சமூக மதிப்பீட்டுக்கு சேரன் போன்ற அரசியல் பொறுக்கிகள் புது விளக்கம் கொடுக்க முனைகின்றனர். நட்போ பகையோயற்ற சேரனின் அரசியல் நிலை பற்றிய விளக்கங்கள்; என்பவை, எதார்த்தத்தில் மனித விரோதத்தை அடிப்படையாகக் கொண்டவை. எவ்வளவுக்கு மனித உணர்வுகள் இழிவான சமூக பாத்திரத்தை வகிக்கின்றதோ, அந்தளவுக்கு மனிதர்களின் பகைவர்களுடன் பொறுக்கி வாழ்வோர், கூடிவாழ்வர். மிகவும் கரடு முரடாகவே எமது சமூகம் சந்திக்கும் அவல வாழ்வை, சேரன் இழிவுபடுத்தி கேவலப்படுத்துகின்றார்.


வாயைத் திறந்தாலே மரண தண்டனை என்ற நிலையில், அண்ணன் தம்பியைக் கூட தாயின் முன்னால் கொன்று போடுவதே எமது சமூக அமைப்பின் வக்கிரமாகிவிட்டது. ஆனால் சேரனுக்கு இது விதிவிலக்காம். முட்டாள்களே நம்புங்கள். முரண்பாட்டுடன் நட்பை பேணும் அரசியல் பொறுக்கித்தனம் தன்னிடம் இருப்பதால், இது தனக்கு விதிவிலக்கு என்கின்றார். உண்மையில் மக்களின் முதுகில் குத்தி சவாரி செய்யும் புத்திஜீவித்தனம் தான், இந்த ஒட்டுண்ணித்தனமாகும். மக்களின் எதிரிகளுடன் கூடிவாழ முடிகின்றது. இது மக்கள் விரோத இயக்க தலைவர்களுடன் மட்டுமல்ல, பேரினவாத அரசின் தலைவர்களுடனும், ஏன் ஏகாதிபத்திய தலைவர்களுடன் கூட இந்த நட்பு பாராட்டும் அரசியல் விபச்சாரம் கொடிகட்டிப் பறக்கின்றது. இது தான் சேரன். இந்த சேரனின் வாழ்வின் எதார்த்தத்தை, தமிழ் மக்களாகிய நாங்களும் கையாண்டு வாழ்வது தான் உயர்ந்த ஜனநாயகம் என்கின்றார். இதில் முரண்பாடும் வாழும், நட்பும் வாழும் என்கின்றார். தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த எதார்த்தை புரிந்து கொள்ளாமல், காரணமின்றி சும்மா எல்லாம் புலம்பி வீணாகவே சாகின்றனர் என்கின்றார் சேரன். தன்னைப் போல் ஒட்டுண்ணியாக வாழ்ந்து பீற்றிக் கொள்வதே புத்திஜீவித்தனம் என்கின்றார்.


மனித விரோதிகளுடன், சமூக விரோதிகளுடன், அன்னியநாட்டு எடுபிடிகளுடன், கொலைகாரனுடன், கொள்ளைக்காரனுடன், மாபியாக் கும்பலுடன், பாசிட்டுகளுடன், குறந்தேசிய வாதிகளுடன், பேரினவாதிகளுடன் நட்பைப் பாராட்டுபவன், ஏன் பெருமையாக அதை பிரகடனம் செய்பவன், நிச்சயமாக மக்கள் விரோதியாக மட்டும்தான் இருக்கமுடியும். மனிதர்களை இழிவுக்குட்படுத்தி, அவர்களின் அழிவில் வாழ்பவர்களை நண்பன் என்று சொல்பவன் யாராக இருக்க முடியும்? நிச்சயமாக மக்களை இழிவுபடுத்தி வாழ்பவனுக்கு துணை போபவன் தான். எந்த மனச்சாட்சியுமற்ற, மனிதத்துவத்தைக் கூட ஏற்றுக் கொள்ளாத இவர்கள், வக்கிரம் பிடித்த லும்பன்களாக வாழ்கின்றனர். சமூகத்தை சமூக செயல்பாட்டை மறுப்பவராகின்றனர். இதனால் தான் தாம் 'எந்தக் கால கட்டத்திலும் எந்தக் கட்சியிலும் நான் உறுப்பினராகவோ ஆதரவாளனாகவோ இருந்ததில்லை" என்று கூறிக் கொள்கின்றனர். தனிமனித சமூக அமைப்பில் ஒரு லும்பனாக வாழ்ந்தபடி, மக்களின் எதிரிகளுடன் நண்பனாக கூட விபச்சாரம் செய்ய முடிகின்றது.


இப்படியும் மனிதன் வாழமுடியும், அவர்களை நட்புடன் இணங்கி வாழமுடியும் என்று சொல்லும் சேரனின், புத்திஜீவித்தனம் தான் அவரின் இருப்பின் அடையாளமாகும். 'நான் திருப்பித் திருப்பி வலியுறுத்துவது போல எந்தக் கால கட்டத்திலும் எந்தக் கட்சியிலும் நான் உறுப்பினராகவோ ஆதாரவாளனாகவோ இருந்ததில்லை." என்று கூறும் சேரன், இதற்கு வெளியில் மக்கள் பக்கத்திலும் என்றும் எந்தக் கட்டத்திலும் இணைந்தது கிடையாது. அங்குமிங்கும் நழுவி ஒட்டுண்ணியாகவே படர்ந்து, மக்களை ஏமாற்றி பிழைத்துக் கொள்ளும் புத்திஜீவித்தனமே இவர்களின் சொந்த முகமாகும். எப்போதும் எங்கும் எல்லாக்கட்டத்திலும் மக்களின் எதிரிகளுடன் நட்பாகவே இருந்தனர்.


இந்த அரசியல் விபச்சாரத்தை பூசிமெழுக, கடந்தகாலத்தில்; தமது சில செயல்களை காட்டித் தப்பிக்க முனைகின்றனர். குறிப்பாக சரிநிகர் பற்றி குறிப்பிடுகின்றார். சரிநிகர் ஆசிரியர் என்ற இடத்தில் இவரின் பெயர் போடப்பட்டதே ஒழிய, அதன் உள்ளடகத்துக்கும் இவருக்கும் சம்பந்தமே கிடையாது. சரி சம்மந்தம் உண்டு என்று வைத்தாலும், அதைக் கொண்டு அரசியல் விபச்சாரத்தை நியாயப்படுத்த முடியாது. சரிநிகரில் தொடாச்சியாக எழுதிய புதுசு அ.ரவி, ஆய்வாளர் என்ற பெயரில் புலம்பும் புலிப்பினாமியாகிய யோதிலிங்கம் எல்லாம் சரிநிகரில் ஏழுதியவர்கள் தான். உன்னை விடவும் அவர்கள் அதிகமாகவே புலியைப்பற்றி எழுதியவர்கள்.


அதைவிட அவர்கள் 1986 இல் நடந்த விஜிதரன் போராட்டத்தில் தலைமை தாங்கவும், முன்னணி வரிசையில் நின்று போராடியவர்கள் தான். இன்று அவர்கள் மக்களுக்கு எதிராக அரசியல் விபச்சாரம் செய்கின்றார்கள். கடந்தகாலம் பற்றி கூறி, இவர்கள் எல்லாம் வருங்காலத்தில் தப்பித்துவிடவே முடியாது. இவர்களின் கடந்தகாலம் மக்களுக்கானதாக இருந்தது என்றால், நிகழ்காலம் மக்களுக்கு எதிரானதாகவே உள்ளது. இவை எவையும் எதிர்காலத்தில் தம்மைத்தாம் நியாயப்படுத்தி, தமது சொந்த மனிதவிரோதத்தை மூடிமுறைக்க ஒருக்காலும் உதவப் போவதில்லை.


இவை கேடுகெட்டவை. சமூக விரோதத் தன்மை கொண்டவை. அது சேரனாகிய உனக்கும் விதிவிலக்கின்றி பொருந்துகின்றது. கனடாவில் புலிகளின் பினாமி அமைப்புகளில், நீ நக்கி அரசியல் ரீதியாக பிழைக்கத் தொடங்கிய போது அது தெளிவாகவே மேலும் அம்மணமாகியது. உனது புத்திஜீவித்தனத்தை பயன்படுத்தி, உலகத்தினை ஏமாற்ற நினைக்கும் உனது சமகால எதிர்வினைகளே மிகவும் இழிவானவை. அவை மக்களுக்கு எதிரானவை.


பிரபாகரனின் உரைக்கு பொழிப்புரை வழங்கிய பாலசிங்கத்தின் உரை பற்றி உனது விமர்சனம், உனது இழிவான புத்திஜீவித்தனத்தின் சூழ்ச்சிமிக்க குதர்க்கமாகும். அதை விமர்சனம் செய்த வடிவமே, அப்பட்டமான மோசடித்தனமான ஏமாற்று வித்தையாகும். முடிச்சு மாறிகளுக்கே உரிய ஒரு குணாம்சத்தில், இந்த விமர்சன உள்ளடக்கம் அமைந்துள்ளது. உனது புலி நண்பர்களா! இப்படி ஒரு விமர்சனம் செய்ய ஆலோசனை உனக்கு தந்தார்கள்? இப்படி விமர்சனம் செய்யும் நட்பு அல்லவோ நட்பு. முரண்பாடுகளுடன் தொடரும் நட்புக்கு, புதிய இலக்கணம் வகுத்துள்ளது இந்த விமர்சனம்.


விமர்சனம் புலிகளை அரசியல் ரீதியாக செய்யவில்லை. மக்களுக்கு எதிரான அரசியல் உள்ளடகத்தின் மீது செய்யப்படவில்லை. மாறாக புலிகளே ஏற்றுக் கொள்ளாத, அவர்களே தமது வெளியீடுகளில் சுய தணிக்கை செய்துகொண்ட, பாலசிங்கத்தின் சில உள்ளடகத்தின் மீது, சேரன் புலியாக குளிர் காய்கின்ற முயற்சி இது. புலிகளின் எதிர்வினையையே, இவர் மீண்டும் பிரதிபலித்துள்ளார் அவ்வளவே. பாலசிங்கம் பகிரங்க மேடையில் இப்படிப் பேசலாமா? என்பதே சேரனின் விமர்சனத்தின் அரசியல் எல்லை. இது ராஜதந்திரமற்றது என்பதே சேரனின் புலம்பல். சேரனுக்கு பின்னால் ஒரு புலி வால் தெரிவதை யாராலும் தடுக்க முடியவில்லை. இந்த உரையினால் மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியை, சேரன் தனது அதிதிறன் வாய்ந்த புத்திஜீவித்தனத்தால் சரிக்கட்டிவிட முனைகின்றார். இதை வெறும் நகைச்சுவையாக, சபையை கிளுகிளுப்பில் வைத்திருக்க பாலசிங்கம் வழமையாக கையாளும் ஒரு முயற்சியின் விளைவே ஒழிய, இது அவர்களின் அரசியல் அல்ல என்பதே சேரன் சொல்ல முனையும் மற்றொரு அரசியல் செய்தி.


நீ அரசியல் இலக்கியம் பெயரில் தனிமனித வக்கிரத்துடன் புரண்டு எழுகின்ற போதும் சரி, பாலசிங்கம் உருளுகின்ற போதும் சரி, உங்கள் மொழியே இது தான். சமூகம் மீதான மொழி இழிவாடல் இன்றி, முரண்பாடுகள் மீதான அவதூறு இன்றி, நீங்கள் அரசியல் இலக்கியம் புலம்புவது கிடையாது. ஆனால் நீ அதை நாகரிகமாக மேடையில் செய்யமாட்டாய். ஆனால் பாலசிங்கம் அதை செய்து விட்டார் என்ற அங்கலாய்ப்பே உனது விமர்சனமாகின்றது.


தலைவரின் உரை மீது எந்த அரசியல் விமர்சனமற்ற சேரனின் விபச்சார அரசியல், பாலசிங்கத்தின் கோமாளித்தனத்தின் மீது மட்டும் தனது அதிருப்தியை வெளியிட்டு மிக நுட்பமாக மக்களை ஏமாற்றும் புத்திஜீவித்தனத்தை காட்டிவிடுகின்றார். பிரபாகரனின் உரையே மக்களுக்கு எதிரானது. புலிகளின் அரசியலே மக்களுக்கு எதிரானது. மக்களுக்கு எதிரானது என்பதில் சேரனுக்கு உடன்பாடில்லை. இதனால் அதைப்பற்றி அவர் வாய்திறப்பதில்லை. உண்மையில் மக்களை பற்றி எந்த அக்கறையுமற்ற பன்றித்தனத்தையே, தனது புத்திஜீவித்தனமாக மக்களின் முன் சொல்லுகின்றனர். இதனால் அவர்கள் நண்பர்களாகி தோளில் கைபோட்டு மக்களின் முதுகில் குத்துகின்றனர். மக்களின் வாழ்வு மீது, இவர்கள் எந்த உரையையும் கூட்டாக செய்வதில்லை. மக்களை இழிவுபடுத்தி, அவர்களை மந்தைகளாக நடத்தி, தமது அடிமைகள் மீது செய்யும் உரைகள் தான் இவைகள். அந்த மந்தைகளுக்கு சேரன் வழிகாட்ட முனைகின்றார். ஒட்டுமொத்த தமிழ்மக்களின் எதிர்காலத்தையே நாசமாக்குகின்ற, அவர்களை அழித்துவிடுகின்ற, ராஐதந்திரமற்ற உரையே பிரபாகரனின் உரை. இந்த உரையின் அரசியல் மீது விமர்சனமற்ற சேரனின் நிலை என்பதே, புலித்தனம் தான்.


அந்த புலித்தனத்தை சேரன் வெளிப்படுத்தவும் தவறவில்லை. பாலசிங்கம் பற்றி சேரன் கூறும் போது 'கட்டுக்கோப்பாகவும் ஒழுங்குடனும் திட்டமிடப்பட்ட முறையிலும் நல்ல வாக்கு வன்மையுடனும் ஆற்றப்பட்ட விளக்கவுரை அது. அவருடைய தமிழறிவிலும் புலமையிலும் மெய்யியல் ஞானத்திலும் மதிநுட்பத்திலும் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை" என்கின்றார். பாலசிங்கம் மீதே படருகின்ற ஓடடுண்ணித்தனம். சேரனின் அரசியல் ஒட்டுண்ணி விபச்சாரத்;தை அறியாதவர்களோ, சேரனா இப்படிக் கூறுகின்றார் என்று ஆச்சரியப்படலாம். புத்திஜீவிகள் என்று கூறிக் கொண்டு, காலத்தை பிழைப்புக்காக கடத்தி நக்கும் பலர் இப்படித்தான் ஒட்டுண்ணிகளாக அங்குமிங்கும் ஊர்ந்து வாழ்கின்றனர்.


ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்களின் உயிரை வேட்டையாடி, ஒரு இட்டுக்கட்டான முட்டுச் சந்தியில் அர்த்தமே இழந்துபோன போராட்டத்தை கொண்டு வந்து நிறுத்தியது யார்? அன்றாடம் எதிரிகளையே உற்பத்தி செய்தபடி, அன்றாடம் அவர்களை கொன்று குவித்து வருவது யார்? பிரபாகரனும் பாலசிங்கமும் மட்டுமல்ல, சேரன் போன்ற ஒட்டுண்ணிகளும் தான். இந்த ஒட்டுண்ணிகளின் தயவும் துணையுமின்றி புலிகள் இல்லை. 'தமிழறிவிலும் புலமையிலும் மெய்யியல் ஞானத்திலும் மதிநுட்பத்திலும்" வழிநடத்தப்படும் போராட்டத்தில் வழி நெடுக சேரனின் நன்மதிப்புடன் கூடிய ஆதரவுள்ளது என்பதை, சேரன் அழகாகவே சொல்லிவிடுகின்றார். இயக்க அழிப்புக்கள், மக்கள் மீதான தாக்குதல்கள், தொடர் கொலைகள், தொடர் கொள்ளை மற்றும் சூறையாடல், முஸ்லீம் மக்கள் வெளியேற்றம், முஸ்லீம் மக்கள் படுகொலைகள், எல்லைகிராமங்கள் மீதான படுகொலை தாக்குதல்கள், மக்கள் மீதான குண்டு வைப்புகள், இந்தியாவில நடத்திய படுகொலைகள், பாரிஸ் படுகொலைகள் என்று எண்ணிலடங்காத புலி பாசிசத்தின் கூறுகளையே, சேரன் தன் வாயால் ஒட்டுண்ணியாகி போற்றுகின்றார். அதை சேரன் பாலசிங்கத்தின் 'புலமையிலும் மெய்யியல் ஞானத்திலும் மதிநுட்பத்திலும்" வழிகாட்டப்பட்டு செய்யப்பட்டது என்கின்றார். இதையே அவர் அடுத்த வரியில், முதல்தரமான ராஐதந்திரியின் ராஐதந்திரம் என்கின்றார்.


போராட்ட மெய்யியல், புலனறிவு, ஞானம், மதி நுட்பம் என எதுவுமற்ற, வன்முறை கொண்ட ஒரு லும்பன் தான் பாலசிங்கம். மக்கள் பற்றி எந்த சமூக அறிவும் கிடையாது. செந்தில் முதல் கதாநாயகன் வகைப்பட்ட சினிமாவையே, தேசிய போராட்டமாக தயாரித்து அதற்கு கதைசொல்லும் ஒரு அரசியல் கோமாளி. விமர்சனமற்ற உலகத்தை துப்பாக்கி முனையில் உருவாக்கி வைத்துக் கொண்டு தாலாட்டு பெற நினைக்கும் வக்கிரத்தையே, சேரன் தாலாட்டுப் பாடி ஆட்டுகின்றார். இவை எவையும் கொலைகளும், அடக்குமுறையுமின்றி, தம்மைப் பற்றி தாம் கூறிக் கொள்வதில்லை. கோமாளிகளின் இராஜதந்திரம் போராட்டத்தின் உள்ளடகத்தில், தமிழ் சமூகத்தின் வாழ்வில் எதையும் பிரதிபலிப்பதில்லை. இதற்கு அப்பால் மொழியியல் ரீதியாக எடுத்தால், சமூக மொழியியல் பாலசிங்கத்துக்கு கிடையாது. இவர்களின் மொழியே மிக இழிவான கீழான சமூகப் பாத்திரத்தை வகிக்கின்றது. தமிழ் தேசியத்தில் பயன்படும் மொழி, அவர்கள் பேசிக் கொள்ளும் மொழி சார்ந்த நடத்தை நெறிகள், ஆண் பெண் வேறுபாடு இன்றி மிகவும் பண்புகெட்ட இழிவான வன்மமான பாத்திரத்தை வகிக்கின்றது. தூசணமே அதிலும் ஆணாதிக்கம் வக்கரிக்க வெளிப்படும் அரசியல் மொழியே இவர்களின் ஆன்மாவாக உள்ளது. கட்டளைகள், அதிகார திமிர்த்தனங்கள் என அனைத்தும் இதில் இருந்து புணர்ந்து வருகின்றது. பண்பாடற்ற காட்டுமிராண்டித்தனமான வக்கிரமான மொழியில் தான், தேசிய மொழியாக உள்ளது. சாதாரணமாக அதன் கீழ் வாழும் மக்கள், தமது முரண்பாடுகளை பேச முடியாதவாகளாக மாறி, அவர்கள் வன்மம் கொண்ட வன்முறையாளராகவே மாறிவிட்டது. இது மொழியில் தொடங்கி கொலையில் முடிகின்றது.


பாலசிங்கத்தின் மொழியின் வன்மம், வக்கிரமான வன்முறையான ஆணாதிக்க தன்மை வாய்ந்தவை. மொழி பாலசிங்கத்தின் குகையில் இருந்து உறுமுகின்றது. இதற்குள் 'புலமையிலும் மெய்யியல் ஞானத்திலும் மதிநுட்பத்திலும்" தேடும் சேரனின் பொறுக்கித்தனத்தையே, இங்கு நாம் காண்கின்றோம். ஒட்டுண்ணிகள் தாம் ஒட்டுண்ணும் பிரதேசத்தின் மகிமையை சொல்லித்தானே வாழமுடியும்.


இப்படி புலிவாலை நிமிர்த்தி ஒட்டுண்ணும் சேரன் 'வன்னியில் வாழும் புகழ்பெற்ற அரசியல் வரலாற்று ஆய்வாளரும் புலமையாளருமான மு.திருநாவுக்கரசு அவர்கள் பாலசிங்கத்தின் நூல் அரங்கேற்ற விழாவில் குறிப்பிட்டதைப் போல் 'குறைபாடுகள் இருந்தாலும் தமிழீழத்தின் முதலாவது இராஐதந்திரி பாலசிங்கம் அவர்கள் தான்" என்ற கருத்தில் மிகுந்த நியாயம் உள்ளது" என்கின்றார். தமிழ் மக்களாகிய நாங்கள் மிகச்சிறந்த இராஐதந்திரியின் கீழ் வாழ்வதாக சேரன் கூறுகின்றார். இதைச் சொன்ன விதம் தான் சூக்குமமானது. தான் எப்படி ஒரு புத்திஜீவியாக இருக்கின்றேனோ, அப்படி பாலசிங்கம் இராஐதந்திரி என்கின்றார். என்ன ஒற்றுமை. ஐயா சேரன் அவர்களே, அவர் எப்படி இராஐதந்திரியாகின்றார்?


1.எந்த வடிவத்தில் இராஐதந்திரியானர்?


2.அவரின் அரசியல் இராஐதந்திரம் தான் என்ன?


புத்திஜீவி சேரன் அவர்களே அதைக் கொஞ்சம் சொல்லுங்கள்;. வாயை மூடிக்கொண்டு ஒட்டுண்ணிகள் போல் அங்குமிங்கும் ஊர்ந்து தாவுவதைவிட்டு சொல்லுங்கள். நாயிலும் கீழான வாழ்வை வாழ்ந்தபடி நாய் வாலை நிமிர்த்த நக்குவது, உங்களைப் போன்றவர்களுக்கு இராஐதந்திரமாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு அல்ல. பொய்யும், புரட்டும், புனைவும், சுத்துமாத்தும், வன்முறையும் கொண்டு, பேந்து பீச்சி விடுவதையே சேரன் இராஐதந்திரம் என்கின்றார். எதார்த்தத்துக்குப் பொருந்தா வகையில், விமர்சனம் செய்ய முடியாத மனித அடிமை நிலையை உருவாக்கி வைத்துக் கொண்டு, அனைத்தையும் தாமே தமக்கு இராஐதந்திரம் என்று கூறிக் கொள்கின்றனர். இதையே சேரன் ஆகா இராஐதந்திரம் என்று எமக்கு கூறி, வானத்தை நோக்கி சுட்டிக் காட்டுகின்றார். இடிந்து வீழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் கோபுரத்தின் கீழ் உட்கார்ந்து இருப்பதால், யாரும் தன்னை முட்ட முடியாது என்ற துணிச்சல் வேறு. அதையும் இந்த ஒட்டுண்ணி சொல்லிக் காட்டுகின்றது


தனது ஓட்டுண்ணித் துணிச்சலையே பினாற்ற தொடங்குகின்றது. 'வன்னியில் வாழும் புகழ்பெற்ற அரசியல் வரலாற்று ஆய்வாளரும் புலமையாளருமான மு.திருநாவுக்கரசு" என்று அவரைப் பற்றிக் கூறுகின்றார். இந்த திருநாவுக்கரசை கோயில் திருப்பணியை சமணருக்கு எதிராக தொடங்கிய காலத்தில் இருந்தே நாம் அறிவோம். யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு புலியாக இருந்த போதே அறிவோம். அவரின் ஆய்வில் ஒடுவது எல்லாம் வலதுசாரிய புலி பினாற்றலே. புகழ்பெற்ற ஆய்வாளார் என்ற குறிப்பிடும் சேரன், அவரின் சுயாதீனம் பற்றிக் குறிப்பிடுவதில்லை.


புலியாக புலியின் நிழலாகவே வாழ்ந்த அவர், தனது சொந்த தந்தையின் வாழ்நிலையில் இருந்து கூட மக்களை திரும்பி ஒருநாளும் பார்த்ததில்லை. அவரின் தந்தை மிகவறிய நிலையில், மிகவும் கடினமான உழைப்பில் வாழ்ந்த சமூக இருத்தலைப் பற்றியோ, அந்த உழைப்பு பற்றியோ அவர் ஆய்வு எதையும் செய்யவில்லை. மக்களைப் பற்றி எந்த அக்கறையுமற்ற, மக்களின் வாழ்வுக்கே வேட்டுவைக்கின்ற அரசியலுக்கு கொள்கை விளக்கத்தையே அனறு முதல் இன்றுவரை செய்து வருகின்றார். போராட்டம் என்ற பெயரில் மக்கள் விரோதக் கூறுகள் அனைத்தையும் ஆதரிக்கும் ஒரு பாசிட். அவர் இந்த மக்கள் விரோதக் கூறுகளுக்கு அரசியல் கொள்கை விளக்கம் வழங்குவதற்கு அப்பால், மக்கள் பற்றி அக்கறையற்ற எழுத்துக்கள் தான் அவரின் ஆய்வுகள்.


அன்று முதல் இன்று வரை அனைத்துவிதமான ஜனநாயக போராட்டத்தையும் குழிதோண்டிப் புதைப்பதில் தனித்துவம் வாய்ந்தவர். மக்களின் வாழ்வையே புதைப்பதற்கு உதவியவர். கொலை கொள்ளை அனைத்துக்கும் பக்கபலமாக, ஏதோ ஒரு வகையில் கைகொடுத்து உதவியவர். மக்கள் விரோத போக்குக்கு எதிராக சில குறுகிய காலம் நீங்கள் கவிதை பாடிய போதே, அவர் உங்களுக்கு எதிராகவே 'புகழ் பூத்த" ஆய்வுகளை செய்தவர். இன்று உங்களுக்கே, உங்களின் தோலின் தன்மைக்கு ஏற்ப அவர் அரசியல் ஆசானாகிவிடுகின்றார். உங்கள் பார்வையில் புகழ்பூத்தவராகி, மதிப்புக்குரியவராகிவிடுகின்றார். புத்திஜீவித்தனத்தின் நக்குத்தனமே இதை அனுசரிக்கின்றது.


சேரன் தனது விபச்சார நிலையில் நின்று அங்குமிங்குமாக நக்குவதை நியாயப்படுத்த வைக்கும் வாதம் சிரிப்புக்குரியது. 'கடந்த சில ஆண்டுகளாக ஈழத்து அரசியல் தீவிரமான இரண்டு முனைகளைக் கொண்டதாக மாறிவிட்டது. ஒன்று புலி ஆதரவு, இன்னொன்று புலிஎதிர்ப்பு. இந்த இரண்டுக்கும் இடையில் சுதந்திரமான கருத்துகளையும் சுதந்திரமான நிலைப்பாட்டையும் எடுப்பவர்கள் மீது மிகுந்த தாக்குதல்களும் விமர்சனமும் வைக்கப்படுகின்றன" என்கின்றார். எப்படி இருக்கின்றது இந்த தர்க்க வாதம். இரண்டுக்கும் இடையில், தான் நண்பர்களாக அணுகி வாழும் விபச்சார நிலையைத்தான் அவர், இப்படிக் கூறுகின்றார். தனக்கு அனைவரும் நண்பர்கள் என்கின்றார். இதைத் தான் அவர் தான் புலியுமில்லை, புலியெதிர்ப்புமில்லை என்கின்றார்.


இரண்டுடனும் தொடர்பு கொண்ட மூன்றாவது அணி என்கின்றார். சேரன் போல் மக்கள் வாழ முடியுமா? எதார்த்தம் மக்களுக்கு மரணத்தை பரிசளிக்கின்றது. சேரன் போன்ற விபச்சாரர்கள் மட்டும்தான் இப்படி வாழமுடியும். இங்கு அரசியல் தொழிலே விபச்சாரமல்லலா. இதைத் தான் புலி அல்லாத, புலியாதரவு அல்லாத மூன்றாவது அரசியலின் சரியான நிலை என்கின்றார். இந்த புத்திஜீவியை நம்பி, அதைப் பின்பற்ற முடிந்தால் ஒரு அடிiயை எடுத்து வைத்துப் பாருங்கள். நாங்கள் என்ன சொல்லுகின்றோம் என்றால் இரண்டுக்கும் எதிராக மக்கள் நலனை உயர்த்தி, அதை முன்னெடுப்பது தான் சரியான அரசியல் பாதை என்கின்றோம். இதற்குள் தன்னை செருகிக் கொள்ள முனையும் நரித்தனத்துடன் தான், சேரன் தன்னை வெளிப்படுத்துகின்றார். நாங்கள் புலியுடனும் புலியெதிர்ப்பு அணியுடனும் கூடிக் கொண்டு முரண்பாட்டுடன் நட்பாக வாழ்வோம் என்கின்றார்.. இதே போல் யாருடனும் இதையே செய்வோம் என்கின்றார். நாங்கள் நிலைமைக்கு ஏற்ப நிறம் மாறும் ஒணான்கள் தான். ஒட்டுண்ணியாகவே பிழைத்தபடி உயிர் வாழ்பவர்கள் தான் என்கின்றார். அதனால் தான் எங்கள் ஒட்டுண்ணிக் கோபுரங்கள் மாடுமுட்டி இடிந்து வீழ்வதில்லை என்கின்றார்.

Thursday, May 11, 2006

மறுகாலனியாதிக்க எதிர்ப்பு தீ பரவட்டும்

கோக் மற்றும் பன்னாட்டு நிறுவனப் பொருட்கள் எரிப்புப் போராட்டம்: மறுகாலனியாதிக்க எதிர்ப்பு தீ பரவட்டும்

ழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி தூக்கு மேடையேறிய தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் எந்தக் காலனியாதிக்கத்தை முறியடிக்கவும் அடிமைத்தனத்தை ஒழித்துக் கட்டவும் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்தார்களோ, அந்தக் காலனியாதிக்கம் இன்றும் புதிய வடிவில் தொடர்கிறது. அன்றைய காலனியாதிக்கத்தைவிட தற்போதைய மறுகாலனியாதிக்கம் மிகவும் சதித்தனமானது; கொடூரமானது. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற பெயரில் வந்துள்ள ஏகாதிபத்தியக் கொள்ளையையும் மறுகாலனியாதிக்கத்தையும் வீழ்த்தவும் விடுதலைப் போருக்கு அணிதிரளவும் அறைகூவி மாவீரன் பகத்சிங்கின் 75வது நினைவுநாளில் (மார்ச் 23) கோக் மற்றும் பன்னாட்டு நிறுவனப் பொருட்களை எரிக்கும் போராட்டத்தை ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் அறிவித்தன.


""காட்'' ஒப்பந்தம் கையெழுத்தானபோதே நாட்டை அடிமைப்படுத்தும் இத்துரோகத்தை எதிர்த்து முதல்குரல் கொடுத்து ரயில் மறியல் போராட்டம் நடத்திய இவ்வமைப்புகள், தொடர்ச்சியாக ஏகாதிபத்தியமறுகாலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக, தாமிரவருணியை உறிஞ்சும் அமெரிக்க கோக்கிற்கு எதிராகவும் தண்ணீர் தனியார்மயத்துக்கு எதிராகவும் தமிழகமெங்கும் மிக விரிவான அளவில் பிரச்சார இயக்கத்தையும் போராட்டத்தையும் நடத்திய இவ்வமைப்புகள், அதன் தொடர்ச்சியாக இப்போராட்டத்தை அறிவித்து கடந்த மூன்று மாதங்களாக காலனியாதிக்க எதிர்ப்பு அரசியல் பிரச்சாரத்தையும் நாட்டுப்பற்றுணர்வையும் உழைக்கும் மக்களிடம் வீச்சாகக் கொண்டு சென்றன.


இப்போராட்டத்தை அறிவித்து தமிழகத்தின் பல பகுதிகளில் சுவரெழுத்துக்கள், பல்லாயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்கள், தட்டிகள், சுவரொட்டிகள், செஞ்சட்டையில் ""தாமிரவருணி எங்கள் ஆறு! அமெரிக்க கோக்கே வெளியேறு!'' என்ற முழக்கத்துடன் அந்நியப் பொருட்கள் எரிப்புப் போராட்டத்தை விளக்கி கிராமங்கள், நகரங்கள், சந்தைகள், ஆலைகள், கல்லூரிகள், பேருந்துகள், ரயில்கள் என வாய்ப்புள்ள எல்லா இடங்களிலும் இவ்வமைப்பினர் தொடர்ச்சியாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். நாட்டுப்பற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலும் போராட்ட விதையாக தமிழக மக்களின் நெஞ்சங்களில் ஆழமாகப் பதிந்தது.


கடந்த பிப்ரவரி 26ஆம் தேதியன்று நெல்லை தாழையூத்தில் கோக் எதிர்ப்பு மற்றும் தண்ணீர் தனியார்மய எதிர்ப்பு கருத்தரங்கமும் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது. நெல்லையில் கடந்த ஆண்டு செப்.12 அன்று இப்புரட்சிகர அமைப்புகள் அமெரிக்க கோக்கிற்கு எதிராக நடத்திய பேரணி, ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து, கோக் எதிர்ப்பு பிரச்சாரம் அனைத்திற்கும் தடைவிதித்து கோக்கின் அடியாளாகவே செயல்பட்டது நெல்லை போலீசு. போலீசின் அச்சுறுத்தல்களையும் கெடுபிடிகளையும் மீறி நெல்லை கங்கை கொண்டான் பகுதிவாழ் மக்கள் பங்கேற்ற இக்கருத்தரங்கில், கோக்கினால் நாசமாக்கப்பட்ட கேரளத்தின் பிளாச்சிமடாவைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் பாதுகாப்புக் குழு தோழர் தங்கமணி, பிளாச்சிமடா கோக் எதிர்ப்புப் போராட்டக்குழு நிறுவனர் விளயோடி வேணுகோபாலன் ஆகியோர் அமெரிக்க மேலாதிக்கத்தின் அங்கமான கோக்கை இந்தியாவிலிருந்தும் உலகிலிருந்தும் விரட்ட வேண்டிய அவசியத்தையும் கேரள மக்களின் போராட்ட அனுபவங்களையும் தமது சிறப்புரையில் குறிப்பிட்டனர். நெல்லை மாவட்ட வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் முருகேசன், கோக் ஆலை அமைந்துள்ள மானூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் செல்வி விஜயா ஆகியோர் பங்கேற்று உரையாற்றிய இக்கருத்தரங்கமும் ஓவியக் கண்காட்சியும் கோக் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டியடிக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கு அறைகூவுவதாக அமைந்தன.


நெல்லையைத் தொடர்ந்து சென்னை, வேலூர், ஆம்பூர், உளுந்தூர்பேட்டை, கோவை, திருச்சி, ஓசூர் முதலான இடங்களில் கோக் மற்றும் பன்னாட்டு நிறுனப் பொருட்கள் எரிப்புப் போராட்ட விளக்க கருத்தரங்குகள் நடைபெற்றன. மருத்துவர்கள், தொழிற் சங்க முன்னணியாளர்கள், வழக்குரைஞர்கள், வணிகர் சங்கப் பேரவையின் பிரமுகர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றிய கருத்தரங்குகளும் அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஓவியக் கண்காட்சியும் பார்வையாளர்களை போராட அறைகூவி அழைப்பதாக அமைந்தன.


ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தியாகத் தோழர் பகத்சிங் 75வது நினைவு நாளான மார்ச்ச 23ஆம் நாளன்று இப்புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் பேரணி ஆர்ப்பாட்டத்தோடு கோக் மற்றும் பன்னாட்டு நிறுவனப் பொருட்கள் எரிப்புப் போராட்டத்துக்கு முறையாக அனுமதி பெற்றிருந்த போதிலும் திடீரென 23ஆம் தேதியன்று இப்போராட்டத்துக்கு தமிழகமெங்கும் தடைவிதித்து, தன்னை ஏகாதிபத்திய அடியாள் என்பதை நிரூபித்துக் காட்டியது, தமிழக போலீசு. பல பகுதிகளில் முன்னணித் தோழர்கள் முதல் நாளே கைது செய்யப்பட்டனர். அனுமதி மறுப்பினால் பல பகுதிகளில் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்த இயலாத நிலையில், தடையை மீறி இப்போராட்டம் பல்வேறு பகுதிகளில் எழுச்சியோடு நடந்தது. வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த தோழர் பகத்சிங்கின் படங்களை ஏந்தி, செங்கொடிகள் விண்ணில் உயர, அத்தியாகத் தோழருக்கு வீரவணக்கம் செலுத்தி, அவர் காட்டிய வழியில் ஒரு தீரமிக்க சுதந்திரப் போருக்கு நாட்டு மக்கள் மீண்டும் கிளர்ந்தெழ அறைகூவி அழைப்பதாக இப்போராட்டம் நடந்தது.


நாமக்கல் நகரில் போலீசு தடையை மீறி, பேருந்து நிலைய வாயிலில் விண்ணதிர முழக்கங்களுடன், மாலை 6 மணியளவில் பன்னாட்டு நிறுவனப் பொருட்கள் எரிக்கப்பட்டன. முன்னணித் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். ஓசூரில் தடையை மீறி லேலண்டு ஆலை முன்பாக மாலை 5 மணியளவில் அன்னியப் பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் திரளான தொழிலாளர்களின் ஆதரவோடு நடந்தது.


கோவில்பட்டியில், போலீசு விதித்த திடீர் தடையை மீறி பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டம், நூற்றுக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்து, உலக வர்த்தகக் கழக ஆட்சியை வீழத்த அறைகூவுவதாக அமைந்தது. சிவகங்கையில், அரண்மனை வாயிலருகே தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த தோழர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில், பெண்கள்குழந்தைகளுடன் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 130 தோழர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மதுரை, உசிலம்பட்டி, திருச்சி, தஞ்சை நகரங்களில் ஆர்ப்பாட்டத்திற்காக தோழர்கள் அணிதிரளும்போதே கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூரில், 5 அடி உயரத்துக்கு கோக் பாட்டில் உருவப் பொம்மையுடன் முழக்கமிட்டபடியே ஊர்வலமாக வந்த தோழர்களும் போராட்டத்தில் பங்கேற்க, கிருஷ்ணகிரி வேலூர் மாவட்டங்களிலிருந்து அணிஅணியாகத் திரண்டு வந்த தோழர்களும் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.


ஏகாதிபத்திய கைக்கூலி மன்மோகன்சிங் ஆட்சியில் நாடு வேகவேகமாக அடிமைப்படுத்தப்பட்டு வரும் சூழலில், இப்போராட்டம் மேலும் முக்கியத்துவம் பெற்றதோடு உழைக்கும் மக்களிடம் புதிய நம்பிக்கையை ஊட்டுவதாகவும் அமைந்தது. இடதுவலது கம்யூனிஸ்டு கட்சிகளிலுள்ள மூத்த தோழர்கள் பலர், ""இதுதான் உண்மையான, புரட்சிகர போராட்டம்; நீங்கள்தான் உண்மையான புரட்சியாளர்கள்'' என்று போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களைக் கட்டித் தழுவி வாழ்த்தினர். இப்போராட்டத்தை விளக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்ட தோழர்களைப் பாராட்டி, சென்ற இடமெல்லாம் உழைக்கும் மக்கள் உணவும் தேநீரும் நன்கொடையும் அளித்து ஆதரித்தனர்.


தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகள் கோக் மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் பொருட்களை எரிக்கும் இப்போராட்டத்தை நடத்துவது முதன்முறையல்ல. ஏற்கெனவே 2001ஆம் ஆண்டில் இதே போராட்டத்தை விரிவான பிரச்சாரத்துடன் இவ்வமைப்புகள் நடத்தியபோது, பல பகுதிகளில் தடை விதிக்கப்பட்டு முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். இப்போது மீண்டும் அதே போராட்டத்தை நடத்தும்போதும் தடை விதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பது உலக வர்த்தகக் கழகத்தின் நாட்டாமை; நாடாள்வதோ பன்னாட்டுக் கம்பெனிகள் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?


ஆனால், நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளால் மூட்டப்பட்டுள்ள இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புத் தீயை கைதுகள்தடைகளால் ஒருக்காலும் அணைத்துவிட முடியாது. இது சுதந்திரப் போராட்டத்தீ! அது காட்டுத் தீயாக நாடெங்கும் பற்றிப் படர்ந்து மறுகாலனியாதிக்கத்தைச் சுட்டுப் பொசுக்கி சாம்பலாக்காமல் ஓயாது.


பு.ஜ. செய்தியாளர்கள்.

Tuesday, May 9, 2006

தனியார்மயத்திற்கு மனித முகம் பொருந்துமா?

தனியார்மயத்திற்கு மனித முகம் பொருந்துமா?


கொஞ்சம் நினைத்துப் பார்த்தால், அரசியல் பொருளாதார அறிவு பெரிதாக இல்லாத சாதாரண சாமானியர்களே வியக்கத்தக்க விசயம் இது. எந்தக் கட்சி ஆட்சியானாலும் (இந்தக் காலத்தில் ஆட்சி அதிகாரத்தை ருசி பார்க்காத ஓட்டுக் கட்சிகளோ மிகவும் குறைவு!) தாலி வாங்கிய இந்து மனைவி கணவனுக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று விதிக்கப்பட்டதைப் போல தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கைக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார்கள். இது ஏன்? எப்படி? எதற்காக?



இந்தக் கொள்கை அமலாக்கப்பட்டு, சாதனைகள் நிகழ்ந்ததற்கான சான்றுகள் எதுவும் கிடையாது. மாறாக, இதனால் உலக நாடுகளில் பலவும் பொருளாதார நெருக்கடிகளுக்குள் ஆழமாக வீழ்ந்து, திவாலாகிப் போனதாகத்தான் தெரிகிறது. இந்தக் கொள்கையை அமலாக்கும் ஆட்சியாளர்கள் அடுத்தடுத்துத் தேர்தல்களில் தோற்கடிக்கப்படுகிறார்கள்.



வாக்காளர்களைக் கவர்வதற்குத் தோதான செயல்பாடுகளில் ஈடுபடுவது தானே ஓட்டுக் கட்சிகளின் இயல்பு! ஆனால், பாருங்கள், நாட்டின் தேர்தல் அரசியல் கட்சிகள் அனைத்துமே வாக்காளர்கள் வெறுக்கும் கொள்கைகளைச் செயல்படுத்துகிறார்கள்! ஏனென்றால் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆளுங்கட்சியானாலும், தோல்வியடைந்து எதிர்க்கட்சியானாலும் தனியார் தரகு முதலாளிகள், ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து வருவாய் கிடைத்து விடுகிறது; அளவில்தான் வேறுபாடு இருக்கிறது. ஆகவே, வாக்காளர்களைக் கவர்வதற்கு அவர்கள் விரும்பும் கொள்கைகளை முன்வைப்பது அவசியமில்லை.



மேலும், ஓட்டுக் கட்சி தமது கொள்கைகளை முன்வைத்து வாக்குகளைப் பெறுவது கிடையாது; வெற்றி பெறுவதற்கு வேறுபல வழிமுறைகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் தேசியமயமாக்கம்தான் தனது பொருளாதாரக் கொள்கை என்று கூறி வாக்காளர்களை ஈர்த்தது போல, இப்போது தனியார்மயமாக்கம்தான் (இதுதான் அவர்கள் பின்பற்றும் கொள்கை) என்று எந்த அரசியல் கட்சியும் துணிவாகவும் வெளிப்படையாகவும் கூறிக் கொள்வதில்லை. அதைத் தமது இரகசியத் திட்டமாகவும் கொள்கையாகவும் வைத்துக் கொண்டு சதித்தனமாக திருட்டுத்தனமாக நிறைவேற்றி வருகிறார்கள்.



தேசியமயமாக்கம்,

அரசுடைமையாக்கம் என்பதே தனியார்துறையின்

தோல்வியிலிருந்தும் அதன்

தேவைக்காகவுமே உருவாக்கப்பட்டது என்பது இன்றைய

இளையதலைமுறைக்குத்

தெரியாது.


இதிலிருந்து தெரியவில்லையா தனியார்மயமாக்கம் என்பது பலரும் கருதுவதுபோல வெறுமனே ஒரு பொருளாதாரக் கொள்கை அல்ல. அரசின் ஆதிக்கத்திலுள்ள பொதுச் சொத்துக்களை மக்கள் செல்வங்களையும் நாட்டுச் செல்வாதாரங்களையும் தனியார் தரகு முதலாளிகளும், ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளும் அந்நிய ஏகாதிபத்திய ஏகபோக முதலாளிகளும் கொள்ளையடிப்பதற்கு மறுபெயர்தான் தனியார்மயமாக்கம். அதனால்தான் இரகசியமாக சதித்தனமாக அக்கொள்கையைச் செயல்படுத்துகிறார்கள்.



தனியார்மயம் முதலிய புதிய பொருளாதாரக் கொள்கைகளை ஏகாதிபத்திய நிறுவனங்கள் திணிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பிருந்தே, பின்னாளில் ஜனதா கூட்டணியாக உருவெடுத்த பார்ப்பன பனியா கும்பலின் அப்பட்டமான முகவர்கள் இங்கே வாதாடி போராடி வந்திருக்கிறார்கள். பார்ப்பன அரசியல் குருவான இராஜாஜி அவர்களுக்குத் தலைமையேற்றார். நேரு காந்தி பரம்பரையின் பழைய பொருளாதாரக் கொள்கையை ""லைசென்சு பர்மிட் கோட்டா'' ஆட்சி என்று அவர்கள் கேலி செய்தனர். பதிலுக்கு இவர்களை ""ஏகபோக முதலாளிகள் ஏகாதிபத்தியங்களின் ஏஜெண்டுகள், பிற்போக்காளர்கள், சிண்டிக்கேடர்கள்'' என்று காங்கிரசு கம்யூனிஸ்டு அணியினர் சாடினர்.



இவ்வாறு இங்கு தனியார்மயமாக்கம் முதலியவை புகுத்தப்படுவதற்கு முன்பாக அதற்கு ஆதரவான தளம் அப்பட்டமான பிற்போக்கு பார்ப்பன பனியா கும்பலால் உருவாக்கப்பட்டிருந்தது. முதலில், ருசிய சீன எதிர்ப்பு தேசியவெறி, கம்யூனிச சோசலிச எதிர்ப்பு என்பதில் தொடங்கி (தேர்தல்கள் மூலம் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு குறைந்த போது அரசியல்வாதிகள் மீது பொதுவான வெறுப்பைத் தூண்டி அரசியலற்றவாதத்தைப் பரப்பி) அரசுத்துறை சார்ந்த பொருளாதாரத்தைச் சாடுவது, தேசியமயத்தை எதிர்ப்பது என்பதாக தனியார்மயமாக்கம், ஏகபோக ஏகாதிபத்திய ஆதரவுப் பிரச்சாரம் செய்தனர். இப்போதும் இடஒதுக்கீடு எதிர்ப்பு, சிறுபான்மை மற்றும் தேசிய இன மக்கள் உரிமை எதிர்ப்பு பிற்போக்கு பாசிச சக்திகளால்தான் புதிய பொருளாதாரக் கொள்கை தாங்கிப் பிடிக்கப்படுகிறது.



ஆனால் தனியார்மயமாக்கத்தின் விளைவாக நேரடி பாதிப்புக்குள்ளாகும் மக்கள் பிரிவினர் அதைக் கடுமையாக எதிர்த்துப் போராடுகிறார்கள். பால்கோ அலுமினிய ஆலையை தனியாருக்கு விற்கும் முடிவை எதிர்த்துப் போர்க்குணத்தோடு போராடிய தொழிலாளர்கள் ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டனர். உத்திரப் பிரதேசத்தைத் தொடர்ந்து ஆந்திராவில் மின்சாரத்துறை தனியார்மயமாக்கத்தை எதிர்த்த தொழிலாளர் மக்கள் போராட்டங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுப் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.



தனியார்மயமாக்கம், நிர்வாகத் திறமைமிக்கதாக மாற்றி, தொழில் தரம் உயரும் என்ற வாதமும் தற்போது தகர்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத் தலைநகரமாம் மும்பை மற்றும் அரசியல் தலைநகரமாம் டெல்லியின் மின் விநியோகம் ரிலையன்சு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. சமீபத்திய பேய்மழை வெள்ளப் பெருக்குக்குப் பிறகு மின் இணைப்பு பல நாட்கள் துண்டிக்கப்பட்ட மும்பை பல நாட்கள் இருளில் மூழ்கி தொழிலும் பாதிக்கப்பட்டுக் கிடந்தது. மும்பைப் புறநகரில் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பழைய மின்வாரியம் விரைந்து செயல்பட்டு சரி செய்தும், தனியார் நிறுவனமான ரிலையன்சு பல நாட்கள் உறங்கிக் கிடந்தது.



இதே ரிலையன்சு நிறுவனம் அடிக்கடி மின் அளவை மின்னணு இயந்திரத்தை மாற்றி பயனீட்டு அளவை பன்மடங்கு கூட்டிக் காட்டி தில்லுமுல்லுகள் செய்து கொள்ளையடிப்பதாக டெல்லி வாழ் நுகர்வார் குழுக்கள் புகார் கூறி வருகின்றன. தொலைத்தொடர்புச் சேவை நடத்தும் இந்த நிறுவனம் வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை எல்லாம் உள்ளூர் அழைப்புகளாகக் காட்டி, அரசு நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கட்டணத்தொகை மோசடி செய்துள்ளது.



இவ்வாறு தனியார் நிறுவனங்களின் மோசடிகள், தில்லுமுல்லுகள் பலவும் அவ்வப்போது அம்பலமாகி வருகின்றன. தனியார்மயமானால், ஊழியர்கள் கடமைப் பொறுப்போடு வேலை செய்வார்கள், அரசு நிறுவனங்களில் நடப்பது போல பணிகளைத் தட்டிக் கழிக்க முடியாது என்பது போன்ற கருத்துக்கள் நடுத்தர மக்களிடம் நிலவுகிறது. ஆனால் இதெல்லாம் கீழ்நிலைத் தொழிலாளர்களுக்குத்தான் எப்போதும் பொருந்தும். இவர்களுக்குத்தான் தொழிற்சங்க உரிமைகள், பணிஊதிய சலுகைகள் மறுக்கப்பட்டுக் கடுமையாக அடக்கி ஒடுக்கியும் சுரண்டப்படுகிறார்கள்.



உயர் அதிகாரிகளுக்குப் பாலியல் சுற்றுலா உட்பட பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் வரியேய்ப்பு முதலிய மோசடிகள் செய்து சிக்கிக் கொள்ளும்போது இலஞ்ச ஊழலில் ஈடுபடுகின்றன. அந்தச் சமயத்திலும் பிற நிறுவனங்களோடு தொழில் உறவுகள் (விற்பனை வாங்குவதில் சேவை முதலிய) ஒப்பந்தங்கள் போடும்போதும், கட்டுமானப் பணிகள் போன்ற வேலைகளின் போதும், பணியாளர்கள் நியமனத்தின் போதும் தனியார் நிறுவனங்களிலும் இலஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகின்றது.



எரிந்து போனவர் ஒரு தற்கொலைப்

படையைச் சேர்ந்தவர்தான்! ஆனால்,

எந்தவொரு தீவிரவாத இயக்கத்தின்

தற்கொலைப் படையுமில்லை.



""வேலையில்லாத் தற்கொலைப் படை''யைச் சேர்ந்தவர்!



சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள தனியார்

நிறுவனங்களில் அடுத்தடுத்து தற்காலிக

வேலைகளிலிருந்து விரட்டப்பட்டவர்.



நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வதற்காக என்று சொல்லி அமெரிக்காவின் மோசடி நிறுவனமான என்ரானுடன் ஒப்பந்தம் போட்டு அந்நிய தனியார்துறையில் தபோல் மின்திட்டம் மராட்டியத்தில் அமைக்கப்பட்டது. நாட்டுக்குப் பெருஞ்சுமையாகி விடும் என்று இத்திட்டத்தை முற்போக்கு இயக்கங்கள் கடுமையாக எதிர்த்தன. இத்திட்டத்தில் இலஞ்ச ஊழல் தலைவிரித்தாடியதாக ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டே, எதிர்ப்பை மீறி, காங்கிரசும், பா.ஜ.க.வும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோது தபோல் மின்திட்டம் அமைக்கப்பட்டது. என்ரான் நிறுவனத்தின் மிகையான மின்கட்டண வசூலுக்கு ஈடுகொடுக்க முடியாத மராட்டிய மாநில அரசுக்குப் பதிலாக இந்திய அரசு பல நூறு கோடி தண்டம் கட்டியும், ஒப்பந்தத்தை மீறியதாக உலக நீதிமன்றத்தில் வழக்குப் போடுவதாக மிரட்டுகிறது, என்ரான்.



புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு ஏராளமான தொழில் நிதி மற்றும் பங்குச் சந்தை நிறுவனங்கள் முளைத்தன. அத்தனையும் போலியானவை என்று விரைவிலேயே தெரிய வந்துவிட்டது. கொள்ளை இலாபவட்டி ஆசைகாட்டி நடுத்தர மக்களிடமிருந்து கொஞ்ச நஞ்சச் சேமிப்புகளையும் சூறையாடி விட்டு இந்த நிறுவனங்கள் மழைக்காலக் காளான்களாய் மறைந்து போயின. அடுத்து பொதுத்துறை நிதி நிறுவனங்களின் சேமிப்புகள் பங்கு பத்திர ஊழல்கள் முறைகேடுகள் மூலம் கொள்ளையடிக்கப்பட்டன.



மோட்டார் வாகன உற்பத்தி முதல் குளிர்பானங்கள் குடிதண்ணீர் விற்பனை வரை அந்நிய ஏகாதிபத்தியத் தொழில் நிறுவனங்களின் ஏகபோகம் நிறுவப்பட்டது. அந்த நிறுவனங்களோடு இந்தியத் தரகு முதலாளிகளும் சேர்ந்து தொழில்களை நவீனமயமாக்கி விரிவுபடுத்தியபோது இலட்சக்கணக்கான சிறிய பெரிய உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டும், ஆட்குறைப்பு செய்யப்பட்டும் கோடிக்கணக்கானோர் வேலை பறிக்கப்பட்டுத் தெருவில் வீசப்பட்டனர். சுற்றுச்சூழலை நாசமாக்கி மக்களைக் கொள்ளை நோய் மரண வாசலில் தள்ளும் தொழில்கள் பெருகின.



கொள்ளை இலாபந்தரக் கூடிய நுகர்பொருள் உற்பத்தி (அழகு சாதனப் பொருட்கள், பொழுது போக்குச் சாதனங்கள் போன்றவை), வங்கி காப்பீடு சுற்றுலா சினிமா வானொலி வானொளி விளம்பரம் தொலைத்தொடர்பு போன்ற சேவைத்துறைத் தொழில்களில் மட்டுமே தனியார் தரகு முதலாளிகள் முதலீடு செய்வதில் அக்கறை காட்டுகின்றனர். அதேசமயம் தனியார் தரகு முதலாளிகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டுமான வசதிகளைப் பெருக்கித் தருவதற்கான முதலீடும் பணிகளும் இன்னமும் அரசுத் துறை பொறுப்பிலேயே நடக்கின்றன.



இதைவிட மோசமானது என்னவென்றால், மக்களிடமிருந்து பலவழிகளிலும் திரட்டப்பட்ட சேமிப்பு, அந்நிய உள்நாட்டுக் கடன்கள் மூலம் பெறப்பட்ட கடன் தொகையையும் கொண்டு இலாபகரமாக நடத்தப்பட்ட பொதுத்துறைத் தொழில்கள் எல்லாம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு தனியார் தரகு முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகின்றன. இந்தத் துரோக வேலையைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு ஒரு தனி அமைச்சகமே ஏற்படுத்தப்பட்டது.



நாட்டுக்கும் மக்களுக்கும் மிகவும் அவசியமானவை என்று கூறப்பட்ட மின்உற்பத்தி விநியோகம், கப்பற்துறைமுகம், இரயில்வே சாலைப் போக்குவரத்து, செய்தித் தொடர்பு வசதிகள் அனைத்தும் தனியார் தரகு முதலாளிகளுக்கு விற்கப்படுகின்றன. இன்றியமையாத் தேவையென்று கூறி மக்கள் நிலங்களைக் கையகப்படுத்தி, மேற்படி வசதிகள் செய்து தரப்படுகின்றன. பொதுநலச் சேவைக்கானவை என்று கூறப்பட்ட மருத்துவம், கல்வி, குடிநீர், சுகாதாரம் போன்றவையெல்லாம் இலாபம் தரக்கூடிய தொழில்களாக மாற்றப்பட்டுத் தனியார் கொள்ளைக்கு வழிவகை செய்யப்படுகின்றன. ஆற்றுமணல், புறம்போக்கில் உள்ள கற்பாறைகள், காடுகள் எல்லாம் தனியார் தரகு முதலாளிகளின் கொள்ளைக்கு ஏலம் விடப்படுகின்றன.

முன்பெல்லாம் தேசியமயம், தனியார் ஏகபோக ஆதிக்க ஒழிப்பு, இந்திய மயம் என்று கூச்சல் போட்டார்கள். அப்போது பல மாநிலங்களில் காந்தி நேரு காங்கிரசு கட்சியின் ஏகபோக ஆட்சிகள் கவிழ்ந்து, மத்தியில் அதன் ஆட்சி ஆட்டங் கண்டிருந்தது. இந்த முழக்கத்தை வைத்து அன்றைய ஆட்சியாளர்கள் தேர்தல்களில் செழிப்பான அறுவடை செய்து கொண்டார்கள்.



நாட்டின் பெரிய வங்கிகள், பெட்ரோலிய வியாபாரம், கனரகத் தொழில்கள், சுரங்கத் தொழில்கள், போக்குவரத்துத் தொழில்கள் என்று ஆரம்பித்து, பால் மீன் முட்டை கோழி கறிக்கடைகள் நடத்துவது வரை அரசுத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டன. தொழில்துறையில் ஏகபோக ஆதிக்கத்தைத் தடுக்கவும் அந்நிய மூலதன ஊடுருவலைத் தடுக்கவும் சட்டங்கள் வந்தன. அந்நிய நுகர்வுப் பொருட்கள் இறக்குமதி மற்றும் குவிப்பைத் தடுப்பதற்கு காப்புவரித் தடைகள் போடப்பட்டன.



அன்றைய ""அந்தப் பொருளாதாரக் கொள்கை நாட்டை பின்தங்கிய நிலைக்குத் தள்ளிவிட்டது; நாட்டின் பொருளாதாரம் தேக்க நிலையிலும் நெருக்கடியிலும் சிக்கி விட்டது'' என்று கூறி அதற்கு எதிராக வந்திருப்பதுதான் புதிய பொருளாதாரக் கொள்கை.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகியன அடங்கிய இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையின் மகிமைகள் என்று பலவும் சொல்லப்படுகின்றன.

""தேசியமயம் முதலிய பழைய பொருளாதாரக் கொள்கை நாட்டின் தொழில் பொருளாதார வளர்ச்சிக்குக் கேடு விளைவித்து விட்டது; அரசுத்துறை பொதுத்துறைத் தொழில்கள் வெள்ளை யானையைக் கட்டித் தீனி போடுவது போன்று பெரும் நட்டம் ஏற்படுத்திவிட்டது. புதிய பொருளாதாரக் கொள்கையால் தொழிலும், தொழில்நுட்பமும் நவீனப்படுத்தப்படும். தனியார்துறை என்றாலே நிர்வாகத்திறமை ஊக்கம், முன்முயற்சி, பொறுப்பு போன்றவை தானே பொதிந்திருக்கும். வீண்விரயம், காலதாமதம் இருக்காது. போட்டி மனப்பான்மையால் தரம் பராமரிக்கப்படும். தனியார்துறை அதிகாரிகள் அலுவலர்கள் ஊழியர்கள் மேல்மட்ட நிர்வாகத்துக்கும் நுகர்வோருக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பை உணர்ந்து வேலை செய்வார்கள். குற்றம் குறை நேர்ந்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் இருக்கும். அனாவசியமான அரசியல் தலையீடு, அதிகார முறைகேடு, சிகப்பு நாடாமுறை, தேவையற்ற தொழில் தகராறுகள் இருக்காது.''



""மேலும் மறைமுக நேரடி அந்நிய மூலதனம் முதலீடு குவியும்; தொழில் வளம் பெருகும். உலகச் சந்தையில் போட்டி போட்டு இந்தியத் தொழில்கள் நவீன உற்பத்தி, நிர்வாகத்திறமை, தரமான சரக்கு என்று வளரும். மொத்தத்தில் நாட்டின் பொருளாதாரம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறும்'' என்று இப்போது கூறுகிறார்கள்.



ஆனால், தேசியமயமாக்கம், அரசுடைமையாக்கம் என்பதே தனியார்துறையின் தோல்வியிலும் தேவைக்காகவுமே உருவாக்கப்பட்டது என்பது இன்றைய இளையதலைமுறைக்குத் தெரியாது. அதாவது இரும்பு எஃகு, சாலை ரயில் போக்குவரத்து, மின்உற்பத்தி, செய்தித் தொடர்பு, அணைக்கட்டு நீர்ப்பாசன வசதி போன்ற துறைகளில் பெருமளவுக்கு முதலீடு போடுமளவுக்குத் தனியார் முதலாளிகளிடம் அப்போது மூலதனமும் இல்லை; இவற்றின் மூலமான இலாப விகிதமும் குறைவாகவே இருந்தன. இத்தேவைகளை அரசுத்துறை மூலமாக நிறைவேற்றிக் கொண்ட அவர்கள், கொள்ளை இலாபம் கிடைத்த நுகர்பொருள் உற்பத்தியில் கவனம் செலுத்தினர்.



அப்படியிருந்தும் புதிய முதலீட்டுக்கும் நவீனமயமாக்கத்துக்கும் போதிய மூலதனக் குவிப்பை தனியார்துறை முதலாளிகள் எட்ட முடியாமல் நூற்றுக்கணக்கான பெரிய, ஆயிரக்கணக்கான சிறிய ஆலைகள் நலிவுற்று நெருக்கடியில் சிக்கிக் கொண்டன. நெருக்கடியிலிருந்து அவற்றை மீட்கும் முகமாக நலிவுற்ற ஆலைகளை அரசுடைமையாக்குவதும், வங்கிகளை அரசுடைமையாக்கி மூலதனக் குவிப்பை அடையவும் தேசியமயமாக்கம் முதலிய பொருளாதாரக் கொள்கைகள் புகுத்தப்பட்டன.



தேசியமயமாக்கம் என்ற பெயரில் நடந்த அரசுடைமையாக்கம் என்பது எந்த வகையிலும் சோசலிசத்தன்மை வாய்ந்ததோ, நாட்டின் பொதுமக்களுக்கு, குறிப்பாக உழைக்கும் மக்களுக்கு நன்மை செய்யும் சீர்திருத்தமோ கிடையாது. உண்மையில் அது தொழிலையும் பொருளாதாரத்தையும் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தில் வைப்பதாகும். இதற்கேயுரிய அதிகார முறைகேடுகள் இலஞ்ச ஊழல் காரணமாகவும், தனியார் தரகு முதலாளிகளுக்கும் பண்ணை நிலப்பிரபுக்களுக்கும் வழங்கப்பட்ட சலுகைகள் காரணமாகவும் தொடர்ந்து பின்பற்றப்பட்ட இராணுவமயமாக்கம் காரணமாகவும் அரசுக்கு மேலும் பெரும் பொருளாதார நெருக்கடியும் அந்நிய உள்நாட்டுக் கடன் சுமையும் பல்கிப் பெருகின.



இவற்றின் விளைவாக, உலக வங்கி, சர்வதேச நிறுவனம் மற்றும் பிற ஏகாதிபத்திய அமைப்புகளின் பெரும் கடன் கேட்டுக் கையேந்திய இந்திய அரசுக்கு பல்வேறு கடும் நிபந்தனைகள் கட்டளைகள் விதிக்கப்பட்டன. பொருளாதாரச் சீர்திருத்தம், கட்டுமான மறுசீரமைப்புக்காக தனியார்மயம், தாராளமயம், உலகமயம் திணிக்கப்பட்டது. கடும் பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்து கிடக்கும் நாடுகளின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தும் மாய மருந்தாக மந்திரமாகச் சொல்லப்படுவதுதான் இந்தச் சூத்திரம்.



ஆனால் இச்சூத்திரம் அமலாக்கப்பட்டதன் விளைவாக உலகின் பலநாடுகளிலும் ஆலைகள் தொழில்கள் மூடப்பட்டன. பொருளாதார நெருக்கடிகள் முற்றி, திவாலாகிப் போயின. வறுமை வேலையில்லாத் திண்டாட்டம், பட்டினிச் சாவுகள் பெருகின. அதனால்தான் இப்போது ""மனிதமுகம்'' கொண்ட சீர்திருத்தம் செய்யும்படி பரிந்துரைக்கப்படுகிறது.





சில வாரங்களுக்கு முன்புதான் அது நடந்தது. கோவையை நெருங்கிக் கொண்டிருந்த சேரன் துரித ரயில்வண்டி அதிகாலையில் திடீரென்று தீப்பிடித்து, இரண்டு பெட்டிகள் எரிந்து சாம்பலாயின. இரயில் பெட்டியின் கழிவறையில் எரிந்து கரிக்கட்டையாகிப் போன ஒரு இளைஞனின் பிணம் கிடந்தது.

காற்றில் இலையசைந்தால் கூட தீவிரவாதிகள் என்று பீதியுற்று கண்மண் தெரியாமல் சரமாரியாகச் சுடும் போலீசுச் சூரப்புலிகள் துப்புத்துலக்குவதற்கு முன்பே வழக்கமான புரளி கிளப்பிவிட்டார்கள்: ""யாராவது தற்கொலைப் படைத் தீவிரவாதியாக இருக்கலாம்!''



கடைசியில் ஒருவழியாக உண்மை தெரிய வந்தது. எரிந்து போனவர் ஒரு தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்தான்! ஆனால், எந்தவொரு தீவிரவாத இயக்கத்தின் தற்கொலைப் படையுமில்லை. ""வேலையில்லாத் தற்கொலைப் படை''யைச் சேர்ந்தவர்! கோவைப் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டயப் படிப்புப் படித்த வேலையில்லா இளைஞர். சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள தனியார் நிறுவனங்களில் அடுத்தடுத்து தற்காலிக வேலை செய்து விரட்டப்பட்டவர். வாழ்க்கையில் வெறுப்படைந்து வீடு திரும்பும் வழியில் தற்கொலை செய்து கொண்டார்.



""2012இல் இந்த நாட்டில் நாற்பது கோடிப்பேர் வேலை தேடி அலைவார்கள். தனியார்துறையும் அரசுத்துறையும் சேர்ந்து ஒரு ஆறுகோடிப் பேருக்குத்தான் வேலை தர முடியும்'' என்று எச்சரிக்கிறார் டாடா நிறுவனத்தின் இயக்குநர். இந்த எச்சரிக்கையின் எதார்த்த விளைவை நேரிலே அனுபவித்தவன்தான் தன்னைத்தானே கொளுத்திக் கொண்ட அந்த இளைஞன்.



ஆனால், நாட்டின் முதன்மைக் கோமாளி அப்துல் கலாம், மாணவர்கள் இளைஞர்களைப் பார்த்துச் சொல்கிறார், ""கனவு காணுங்கள்! 2020இல் இந்த நாடு ஒரு மேல்நிலை வல்லரசாகிவிடும்!''



அந்த இளைஞன் கண்ணை மூடினாலும் சரி, திறந்தாலும் சரி இருண்ட எதிர்காலமே தெரிந்திருக்கிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் தோல்விகளும் தொடர்ந்த வெறுப்புமே அவர் சாவைத் தழுவிக் கொண்டதற்கான காரணங்கள். தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்கிற சூத்திரம் அதிகாரபூர்வமாகச் செயல்படுத்தத் தொடங்கி 15 ஆண்டுகளாகி விட்டன. இருந்தும் இதுதான் நிலைமை.



மனித முகங்கொண்ட சீர்திருத்தம், அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவு எரிந்து கரிக்கட்டைகளாகிப் போகும் முகங்களைக் கொண்டவர்களாக மனிதர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது!

மு சிவராஜ்

Monday, May 8, 2006

நெய்தல் குறிப்புகள்

நெய்தல் குறிப்புகள்

நாளங்காடி, பொழுதங்காடி

யவனர் வந்து கால்தடம் பதித்து...

நீட்டி முழக்கும் நெய்தற்குறிப்பில்

சேர்த்துக் கொள்ளுங்கள் இதையும்

கோட்டுச்சேரி சுனாமி குடியிருப்பில்

வெறிநாய் வந்து கால்தடம் பதித்து

கைக்குழந்தையைக் கடித்துக் குதறிய காட்சியையும்!

உறங்கிக் கிடக்கும் குழந்தை அழகில்

ஈ மொய்த்தாலே தாய்மனம் பதைக்கும்

தௌ;ளுப்பூச்சி கடித்தாலே தேகம் சிவக்கும்

பிள்ளைமுகம் நாய் கடித்தால்

யார் மனம் பொறுக்கும்?

ஊருக்கு வெளியே குடியிருப்பு

சாவுக்கு வெளியே காத்திருப்பு.

கருவறை நீந்தி நீர்மடி குதித்து

தலைமுறை கலந்த பரதவர் உறவை

கொலை செய்தோம் என்ற குற்ற உணர்வில்

பார்ப்பவர் முகத்தில் பழகத் தயங்கி

கூசிப் பின்வாங்குது கடல்.

""உலகவங்கியில் முதலீடு செய்த

தமிழகத்துப் பிணங்களுக்குத் நானே முதல்வர்

இவை என்னுடைய பிணங்கள்''

தமிழகம் தரிசாக்கிப் படையல் கொள்ளும்

பாலைத் தெய்வத்தின் ஊளை கண்டு

பல இடங்களில் உள்வாங்கிக் கொண்டது கடல்.

""தேசியப் பேரழிவாகத் தெரிவு செய்த பிணங்களை

மாநிலத்து நிதியாக மாற்றீடு செய்து

நீ பேர் வாங்கிப் போகவா இலவு காத்தோம்?

இது அந்நிய மூலதனத்தின் ஆயுள் காப்பீடு

இந்தியப் பிணங்களைத் துண்டாடாதே

எங்கள் பிணங்களில் கை போடாதே!'' என

பிணங்களைச் சுரண்டும் கூட்டணி பார்த்து

ஓடி ஒளியுது சமுத்திர நண்டு.

அந்நிய நிர்வாணம் நம் தண்ணீரைப் பழிக்க

மணல்வெளி போர்த்திய மீன் வலைகளை

கழட்டி எறியச் சொல்லும் பறங்கியர் குரல்கள்

சூரியக் குளியலைக் கடை பரப்ப

கொளுத்தப்படும் குப்பங்கள்.

வலைவீசக் கடல் இல்லை, உலை வைக்க நிலமில்லை.

உழைப்பவர் கண்களில் புதிய உப்பளங்கள்.

தேர்தல் முத்துக்களைத் தெருவில் நிரல் பரப்பி

வாகைப் பூவோடு வருகிறார்கள்

யவனர்கள், பறங்கியர்

கூடவே புரட்சித் தலைவி, புரட்சிப் புயல்,

தமிழினத் தலைவர், காவலர், ஏவலர்......

செத்த ஓட்டுப் போக மத்த ஓட்டை வேட்டையாட

பிணங்களின் மீது வீசிய காசு

உன்னது என்னதென்று பேரிரைச்சலோடு

மனிதக் கூச்சம் சிறிதுமின்றி

ஊரைச் சுற்றி வளைக்குது வெறிநாய்கள்.

மு துரை. சண்முகம்

Sunday, May 7, 2006

ஓனிக்ஸ்:தனியார்மயத்தின் கோரமுகம்

ஓனிக்ஸ்:தனியார்மயத்தின் கோரமுகம்

டுக்கப்படாமல் நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகள், துருப்பிடித்துப்போன தகர வண்டிகள், தூரத்தில் வரும்போதே பீதிக்குள்ளாக்கும் தகரடப்பா லாரிகள், சரக் சரக் என்று விட்டு விட்டுக் குப்பையை வாரும் பிரம்பாலான மிலாறு, வாரும்போதே பாதியைக் கீழே கொட்டும் ஓட்டை இருப்புச் சட்டிகள், தேய்ந்து போன மண்வெட்டிகள். வெளிறிக் கசங்கிய காக்கி உடையில் இந்தக் கருவிகளுடன் போராடிக் கொண்டிருக்கும் துப்புரவுப் பணியாளர்கள் இதுதான் மாநகராட்சித் துப்புரவுப் பணிக்களத்தின் தோற்றம்.


எதிரொளிக்கும் ஃபுளோரசென்ட் பட்டைகள் கொண்ட சீருடை, தொப்பி, ஆரஞ்சு நிறக் கையுறை, ஆள் உயர இரும்பு பிரஷ், மண் அள்ளும் ஷவல், சாம்பல் நிறத்தில் நடமாடும் பிளாஸ்டிக் குப்பைத் தொட்டி, உதிரிக் குப்பைகளை ஒய்யாரமாக ஏற்றிச் செல்லும் சிறிய ரக வாகனங்கள், வீதிகளின் மூலையில் கரும்பச்சை நிறத்துடன் இருப்புக் கொண்டிருக்கும் பெரிய குப்பைத்தொட்டி, அதை அப்படியே அலக்காகத் தூக்கித் தனது முதுகில் சாய்த்துக் கொள்ளும் தானியங்கி லாரிகள், சிப்பாய்களைப் போல அவற்றின் ஓரங்களில் தொங்கிக் கொண்டு செல்லும் துடிப்பான தொழிலாளிகள், சாலையில் படிந்திருக்கும் மண்ணை நக்கித் துடைக்கும் நவீன எந்திரங்கள் எழுப்பும் விநோத ஓசை, வாக்கி டாக்கியுடன் சுற்றித் திரிந்து இவற்றை மேற்பார்வையிடும் சூபர்வைசர்களின் மிடுக்கு... இது ஓனிக்ஸ்.


""அடடா... இது சென்னை நகரமா, அல்லது ஹாலிவுட் படங்களில் மட்டுமே நாம் பார்த்திருக்கும் ஐரோப்பிய நகரமா'' என்று பார்ப்பவர்களையெல்லாம் வியக்க வைக்கிறது; ""எவ்வளவு நீட்டா இருக்கு பாருங்க, என்ன இருந்தாலும் பிரைவேட்னா பிரைவேட்தான் சார்.'' என்று தனியார்மயக் கொள்கைக்கு "ஜே' போடவும் வைக்கிறது சென்னையில் இயங்கும் ஓனிக்ஸ் எனும் பன்னாட்டுத் துப்புரவுத் தொழில் நிறுவனம்.


சிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை 2000 என்றெல்லாம் கனவு கண்ட முன்னாள் மேயர் மு.க.ஸ்டாலின், சென்னையை சிங்கப்பூராக்க வேண்டுமானால் அங்கே குப்பை அள்ளும் கம்பெனியை வைத்து சென்னையிலும் குப்பை அள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். லண்டன் மாநகரத்திலும் சிங்கப்பூரிலும் குப்பை அள்ளும் ஓனிக்ஸ் நிறுவனம் சென்னையில் வந்து இறங்கியது. துப்புரவுப் பணியிலும் தனியார்மயம் தொடங்கியது. சென்னை மாநகராட்சியில் மந்தைவெளி, ஐஸ் ஹவுஸ், கோடம்பாக்கம் ஆகிய 3 மண்டலங்களில் குப்பை அகற்றும் பணியை ஏழேகால் ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளது ஓனிக்ஸ் நிறுவனம்.


""காசுக்கு வழியில்லாதவன்தான் குப்பை பொறுக்குவான், இவ்வளவு பெரிய வெளிநாட்டுக் கம்பெனி நம்ம நாட்டுல வந்து குப்பை பொறுக்குறான்னா அவனுக்கு என்ன காலக்கொடுமையோ'' என்று நினைத்து விடவேண்டாம். கொடுமை பன்னாட்டுக் கம்பெனிக்கல்ல, அதன் பணியாளர்களுக்குத்தான்.


""ஓனிக்ஸ் தொழிலாளர் வேலைநிறுத்தம்! மலையாய்க் குவிந்தன குப்பைகள்! நோய் பரவும் அபாயம்!'' என்று அலறின சென்னை நாளிதழ்கள். ஆனால் மலையாய்க் குவிந்திருக்கும் தொழிலாளர்களின் துயரம்தான் அவர்களை வேலைநிறுத்தத்திற்குத் தள்ளியிருக்கிறது என்ற உண்மையை மட்டும் அவை அணுவளவும் வெளியிடவில்லை. "வழக்கமான சம்பள உயர்வு, போனஸ் பிரச்சினைதான்' என்று பொய்யாகச் சித்தரித்து ஓனிக்ஸின் மேனாமினுக்கித் தோற்றத்திற்கு உள்ளே புழுத்து நெளிந்து கொண்டிருந்த அடக்குமுறைகள் அம்பலமாகாமல் இருட்டடிப்பு செய்தன.


ஓனிக்ஸ் தொழிலாளர்களை நேரில் சந்தித்த போதுதான் அழகு, சுத்தம் என்ற சொற்களுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது ஒரு அப்பட்டமான பயங்கரவாதம் என்பது தெரியவந்தது.


""எங்களை மனிதர்களாக நடத்து, சுயமரியாதையுள்ள மனிதர்களாக நடத்து'' என்ற ஒரு வரியில் ஓனிக்ஸ் தொழிலாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் அடங்கிவிடுகின்றன. ""தொழிலாளர்களை ரீ டிரெய்னிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்தாதே; விசாரணை என்ற பெயரில் வேலை நீக்கம் செய்யாதே; தொழிலாளர்களைக் கேவலமாகப் பேசும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு; ஆட்குறைப்புசெய்வதை நிறுத்து; சம்பளப் பாக்கிகளைக் கொடு'' என்பவைதான் தொழிலாளர்களின் கோரிக்கைகள். இந்தக் கோரிக்கைகளின் உள்ளே குமுறிக் கொண்டிருக்கும் ஓனிக்ஸ் தொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவர்களுடைய பணிநிலைமைகளை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.


போகிற போக்கில் அலட்சியமாக நாம் வீசும் குப்பை, மூக்கைப் பிடித்துக் கொண்டு தெருவில் விட்டெறியும் செத்த எலி, கடைக்காரர்கள் கொட்டும் அழுகிய காய்கறிகள், ஓட்டல்கள் வெளியேற்றும் கெட்டுப்போன சோறு, கருச்சிதைவில் வெளியேறிய குழந்தை உள்ளிட்ட மருத்துவமனையின் ஆபத்தான கழிவுகள், லாரியில் அடிபட்டுச் செத்த நாய்கள்... இவையனைத்தும் நாட்கணக்கில் அகற்றப்படாமல் கிடக்கும் காட்சியைக் கண்ணை மூடிக் கொண்டு கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். துப்புரவுப் பணியாளர்கள் இயங்கினால்தான் சென்னை என்பது மாநகரம், இல்லையேல் மறுநாளே இது நரகம். ஆனால் அவர்கள் இயக்கப்படுவது எப்படி?


ஓனிக்ஸ் குத்தகைக்கு எடுத்துள்ள சென்னை நகரின் 3 மண்டலங்களுடைய துப்புரவுப் பணிக்காக ஏற்கெனவே மாநகராட்சி ஒதுக்கியிருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 6000. அதே பணியை மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை வைத்து முடித்து வருகிறது ஓனிக்ஸ் நிறுவனம். தனியாரின் திறமை இங்கிருந்து தொடங்குகிறது.


130 பெண்கள் உட்பட ஓனிக்ஸ் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 2300. ஒவ்வொரு மண்டலத்திலும் 10 டிவிசன்கள், ஒரு டிவிசனுக்கு 60 தொழிலாளர்கள், ஒரு சூபர்வைசர், லாரி டிரைவர். 8 மணி நேரத்தில் ஒரு தொழிலாளி சுத்தம் செய்ய வேண்டிய சாலையின் நீளம் 1400 மீட்டர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர். ஒரு துளி தூசும் இல்லாதபடி மறுபடி மறுபடி பெருக்க வேண்டும். வெறும் 300 சதுர அடி வீட்டைக் கூட்டி முடிப்பதற்குள் முதுகு பிடித்துக் கொண்ட கதையை இலக்கியமாகப் பேசும் நபர்கள் 1400 மீட்டர் கடைவீதியைக் கற்பனையிலாவது ஒருமுறை கூட்டிப் பார்க்க வேண்டும்.


இரும்புத் துடைப்பானால் குப்பையைத் தள்ளிக் கொண்டும், பொடி மண்ணை பிரஷ்ஷால் தேய்த்துத் தேய்த்துத் துடைத்துக் கொண்டும் குனிந்த தலையுடன் ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கும் ஓனிக்ஸ் தொழிலாளியின் கைகள் ஓய்ந்து ஒரு கணம் நிற்பதையோ, அவர்கள் உட்கார்ந்திருப்பதையோ சென்னைவாசிகள் யாராவது எங்கேயாவது பார்த்திருக்க முடியுமா? மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் 5,6 பேராக டீக்கடைகளில் அமர்ந்து தேநீர் குடிப்பதையும், புகையிலை போடுவதையும் பார்த்திருப்பீர்கள். 4 ஓனிக்ஸ் தொழிலாளிகள் சேர்ந்து டீ குடித்தபடி நிற்பதை யாராவது பார்த்ததுண்டா?


இதுவரை கவனித்திராதவர்கள் இனி கவனித்துப் பாருங்கள். வியர்வையைத் துடைப்பதற்காகக் கூட அவர்கள் ஒரு கணம் ஓய முடியாது. வயர்லெஸ்ஸ{டன் வண்டியில் சுற்றிக் கொண்டே இருக்கும் சூபர்வைசரின் கண்ணில் பட்டால் எந்த விளக்கத்தையும் அவன் காதில் வாங்க மாட்டான். உடனே மெமோ. சூபர்வைசரின் அனுமதியில்லாமல் சிறுநீர் கழிக்கக் கூட ஒதுங்கக் கூடாது. எக்காரணம் கொண்டும் மக்களிடம் பேசக்கூடாது. முகவரியை வைத்துக் கொண்டு வழிகேட்கும் மக்களிடம் கூடப் பேசக் கூடாது. நட்புணர்ச்சியுடன் கடைக்காரர்கள் ரெண்டு வாழைப்பழமோ டீயோ கொடுத்தால்கூட வாங்கிச் சாப்பிடக் கூடாது. குடித்தால், சாப்பிட்டால் மறுகணமே வேலைநீக்கம்.


இரண்டு பத்து நிமிடங்கள் தேநீர் இடைவேளை, சாப்பாட்டுக்கு அரைமணி நேரம் போக, 8 மணி நேர வேலை. கல்லாய்ச் சமைந்திருக்கும் சந்து முனீஸ்வரன்களுக்குக் கூட கழிவை வெளியேற்ற வழியுண்டு; ஒன்றரை கி.மீ. துப்புரவுப் பணி செய்யும் பெண் தொழிலாளிக்கு 10 நிமிட இடைவேளைக்குள் சிறுநீர் கழிக்க இடம் தேடுவதே பெரும் போராட்டம்.


எந்தச் சோற்றுக்காக இத்தனைப் பாடுபடுகிறார்களோ அதை நிம்மதியாகத் தின்ன முடியாது. அன்றைக்கு ஒதுக்கப்பட்ட சாலையில் ஏதாவது ஒரு கடையில் சோற்று டப்பாவைக் கொடுத்து வைத்து, இடைவேளை நேரத்தில் அந்தக் கடைக்கு ஓடிவந்து அள்ளி விழுங்கி விட்டு 30 நிமிடத்தில் விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடர வேண்டும். துர்நாற்றம் போகக் கை கால் முகத்தைக் கழுவிவிட்டு சாப்பிடவோ, சாப்பிட்ட பின் சற்று அமரவோ கூட அவர்களுக்கு நேரம் கிடையாது.


அன்றாடம் 8 மணி நேரம் சாலையோரக் குப்பையையும் மண்ணையும் அழுந்தத் தேய்த்துச் சுத்தம் செய்யும் உள்ளங்கை புண்ணாகும். ஒரு தானியங்கி எந்திரத்தைப் போல நிமிடத்திற்கு 25,30 முறை முன்னும் பின்னும் இயங்கும் தோள்பட்டை மூட்டுக்கள் என்னாகும்? ஒரே ஆண்டில் சவ்வுகள் கிழிந்து தேய்ந்து போன எந்திரம்போல "கடக் கடக்' என்று ஓசை எழுப்புகின்றன தொழிலாளர்களின் தோள்பட்டைகள். ஆண்டுக்கு இரண்டு மாதம் வேகப்பந்து வீசும் கிரிக்கெட் வீரர்களுக்கும் இதே பிரச்சினை வருகிறது. அவர்களுக்கு லண்டனில் அறுவை சிகிச்சை, 20 லட்சம் செலவு!


இப்படித் "தேய்ந்து' போகும் தொழிலாளர்களைக் கழித்துக் கட்ட கொடூரமான தந்திரத்தைக் கடைப்பிடிக்கிறது ஓனிக்ஸ் நிர்வாகம். வேகம் குறைந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு "நின்னால் குத்தம் உட்கார்ந்தால் குத்தம்' என்று அவர்களுக்கு அடுக்கடுக்காக மெமோ கொடுத்து அலுவலகத்துக்கு அலைய வைப்பது; அப்போதும் வேலையை விட்டு ஓடவில்லையென்றால் "ரீ டிரெய்னிங்' என்ற பெயரில் இறுகிப் போன மண் மேடுகளைத் தன்னந்தனியாக சவல் போட்டு பெயர்த்தெடுக்கும் கொடிய தண்டனையை வழங்குவது இந்தக் கொடுமைகள் தாளாமல் பரிதாபத்துக்குரிய அந்தத் தொழிலாளர்கள் தானே வேலையை விட்டு ஓடுகிறார்கள்.


ஆனால் தேய்ந்து போன லாரிகளை ஓனிக்ஸ் இவ்வாறு கழித்துக்கட்டுவதில்லை. ""ஆரம்பத்துலதான லாரியெல்லாம் பந்தாவா இருந்திச்சு. இப்ப எந்த வண்டியிலுமே ஷாக் அப்சர்வர் வேலை செய்யறதில்லை. குப்பைய ஓவர் லோடு ஏத்தி வண்டி ஓட்ட முடியாம இடுப்பு வலி தாங்கல சார். குப்பை கொட்றப்ப எரிஞ்சு புகைமூட்டமாக இருக்கும். எதிர்ல வர்ற ஆளும் தெரியாது. வண்டியும் தெரியாது. குப்ப பொறுக்குறவங்க மேல வண்டி ஏறிடும். நைட்ல எங்காளுகளே வண்டி ஏறி செத்ததுண்டு டிரைவர்னு வேலைக்கு சேர்ந்தேன். தினம் 3 டிரிப் அடிக்கணும். முடிச்சிட்டா நீயும் போய் குப்பை வாருன்னு கட்டாயப்படுத்துறாங்க. முடியலீங்க. வேலைய விட்டுரலாம்னு இருக்கேன்.'' இது ஒரு டிரைவரின் குமுறல்.


ஓனிக்ஸிலிருந்து ராஜினாமா செய்து விட்டு ஓடிய தொழிலாளர்கள் சுமார் 4000 பேர். சில ஆண்டுகளிலேயே இத்தனைப் பெரிய வெளியேற்றம். வேறெந்தத் தொழிலிலும் காண முடியாதது. இளம் குருத்துக்களை வேலைக்கு எடுத்து, அவர்களுடைய எலும்பையும் தசையையும் கரும்புச் சாறு பிழியும் எந்திரம் போல முறுக்கிப் பிழிந்து 4000 பேரைத் துப்பியிருக்கிறது ஓனிக்ஸ்.


ஒரு தொழிலாளியின் சம்பளம் 2300 ரூபாய். ஆண்டுக்கு 24 நாட்கள் விடுப்பு. மூட்டு வலி, சுவாசக் கோளாறு, வயிற்று வலி, குடலிலும் சீறுநீரகத்திலும் மண் தங்குதல் இவை எல்லாத் தொழிலாளர்களுக்கும் வரும் நோய்கள். எனவே கூடுதல் விடுப்பு எடுப்பது தவிர்க்க முடியாதது. கூடுதலாக விடுப்பு எடுத்தாலோ, முன் அனுமதியின்றி எடுத்தாலோ, ஒருநாள் விடுப்புக்கு 4 நாள் சம்பளம் (ரூ. 340) வெட்டு.


சூபர்வைசர்களின் சம்பளம் 15,000 ரூபாய். ஒவ்வொருவரும் 60 தொழிலாளிகள் மற்றும் சுமார் 40 கி.மீ நீளச் சாலைக்குப் பொறுப்பு. இந்தப் பணிச்சுமையால் வேட்டை நாய்களாகவே அவர்களை மாற்றியிருக்கிறது நிர்வாகம். குப்பையின் எடையும் தண்டிக்கப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கூடக் கூட அவர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து, பரிசுகள்.


டன் ஒன்றுக்கு 650 ரூபாய் என்ற கட்டணத்தில் நாளொன்றுக்கு 1200 டன் குப்பை அள்ள வேண்டுமென்பது மாநகராட்சிக்கும் ஓனிக்ஸ{க்கும் இடையிலான ஒப்பந்தம். இந்தக் கணக்கின்படி ஓனிக்ஸின் மாத வருவாய்


ரூ. 2 கோடி 35 லட்சம். 2300 தொழிலாளர்களுக்கு (மொத்த ஊதியம் சராசரி ரூ. 3000 என்ற கணக்கில்) வழங்கப்படும் ஊதியம் 69 லட்சம் மட்டுமே. பிற செலவினங்கள் போனாலும் தோராயமாக மாத லாபம் ஒரு கோடி ரூபாய். குப்பையின் எடையைக் கூட்டுவதற்காக கட்டிடம் இடித்த கற்களை அள்ளி, குப்பைக் கணக்கில் சேர்த்துக் காசு பார்க்கிறது ஓனிக்ஸ். அவ்வப்போது பிடிபடும் இந்த மோசடியை லஞ்சத்தால் சரிக்கட்டியும் விடுகிறது.


இந்த ஒரு கோடி ரூபாய் லாபத்தைப் பெறுவதற்காக ஓனிக்ஸ் இறக்கியிருக்கும் தொழில் நுட்பமென்ன? போட்ட முதலீடு என்ன? நம்மூர்க் குப்பைதான் முதலீடு. கசக்கிப் பிழியப்படும் நம் தொழிலாளர்களின் உழைப்புதான் தொழில்நுட்பம். கம்ப்யூட்டர் திரையையும் லாபக் கணக்கையும் தவிர வேறெதுவும் தெரியாத ஒரேயொரு வெள்ளைக்கார நிர்வாகியை மட்டும்தான் சென்னையில் இறக்கியிருக்கிறது ஓனிக்ஸ். வந்திறங்கிய ஒருசில ஆண்டுகளிலேயே 4000 இளைஞர்களை உயிருள்ள குப்பைகளாக்கி வீசியிருப்பதுதான் ஓனிக்ஸின் "திறமை'. ஈவிரக்கமற்ற சுரண்டல்தான் ஓனிக்ஸ் வழங்கும் சுத்தத்தின் இரகசியம்.


தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் ஜோஹனஸ்பர்க்கில் குடிநீரைத் தனியார்மயமாக்கி, ""ப்ரீ பெய்டு அட்டை வாங்க முடிந்தவர்களுக்கு மட்டும்தான் குடிநீர்'' என்ற கொடிய திட்டத்தை அமல்படுத்திய வயோலியா என்ற பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனத்தின் கிளைதான் ஓனிக்ஸ். காசில்லாதவனுக்குக் குடிநீரில்லை என்ற இந்தக் கொடிய திட்டத்தின் விளைவாக லட்சக்கணக்கான கறுப்பின ஏழைமக்கள் கழிவுநீரையும் குட்டை நீரையும் குடித்து காலராவுக்கு இரையாகினர்.


அதே வயோலியா நிறுவனம்தான் சென்னை மாநகரக் குடிநீர் வழங்கல் வாரியத்தின் ஆலோசகராகவும் அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, குப்பையில் லாபம் பார்க்கும் ஓனிக்ஸ், குடிநீரில் லாபம் பார்ப்பதெப்படி என்பதை நமது மாநகராட்சிக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறது. அந்த நிறுவனத்தின் கிளைதான் கழிவுகளிலிருந்து நம்மைப் "பாதுகாக்க' வந்திறங்கியிருக்கிறது. ஓனிக்ஸின் ஒப்பந்தம் நீடிக்கப்படும்; மெல்ல மெல்ல சென்னை முழுவதுற்கும் அது விரிவுபடுத்தப்படும்.


ஏனென்றால், தனியார்மயம்தான் அரசின் கொள்கை. பணி உத்திரவாதம், குறைந்த பட்ச ஊதியம், தொழிற்சங்க உரிமைகள் போன்ற "தொந்திரவுகள்' நீக்கப்படாமல் இருப்பதால்தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நுழையத் தயங்குகின்றன என்றும் தொழிலாளர் நலச் சட்டங்களை உடனே ஒழித்தால்தான் ஓனிக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நமது மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியுமென்றும் கூறுகிறார் மன்மோகன் சிங்.


அரசு இனி வழங்கவிருப்பதெல்லாம் இத்தகைய வேலை வாய்ப்புகள்தான். ஓனிக்ஸ் தொழிலாளர்களில் பலர் எம்.ஏ., பி.ஏ. பட்டதாரிகள். பல சாதிகளையும் சேர்ந்தவர்கள். நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் அவர்களுடைய மாதச் சம்பளம் 2300 ரூபாய். குடியிருக்கும் இடத்திலிருந்து குப்பை அள்ளும் இடத்திற்கு வந்து போக பேருந்துக் கட்டணம் தினமும் 10 ரூபாய். தேநீர்ச் செலவு குறைந்தது 10 ரூபாய். ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் ஒருநாள் சம்பளம் வெட்டு அந்த வகையில் மாதம் 340 ரூபாய். மிஞ்சுவது மாதம் 1340 ரூபாய். மருத்துவச் செலவு அதில்தான், சீருடையைத் துவைக்கும் செலவு அதில்தான். சோறும் வீட்டு வாடகையும் அதில்தான். இதுதான் தனியார்மயம் வழங்கும் "வேலை வாய்ப்பு'.


இனி இது ஓனிக்ஸ் தொழிலாளர் பிரச்சினை மட்டுமல்ல, உங்கள் பிரச்சினை. இத்தகைய வேலைவாய்ப்புக்கு நீங்கள் தயாரா?


மு க.மு.