தமிழ் அரங்கம்
Saturday, September 1, 2007
இந்தியா - புலிகள் அரசியல் நகர்வுகள்
01.09.2007
இரண்டு தசாப்தங்களிற்கு முன்னர் இந்தியா தனது மூக்கை இலங்கைத் தீவினுள் நுழைத்தது. இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சனையையும் சிங்கள மக்களிடம, தெற்கின் அரசியல்வாதிகள் ஏற்படுத்தியிருந்த இந்தியவிஸ்தரிப்பு எதிர்ப்புவாதத்தையும் மிக மிக போடிபோக்காக கணிப்பிட்டபடி ஒரு வகை சண்டித்தனத்துடன் நடந்து கொண்டது இந்தியா இது நாமறிந்த உண்மை.
இதனை கூடிய சீக்கிரமே, பிரபாகரன் - பிரேமதாச தேனிலவுத் தந்திரோபாயத்தின் மூலம் படிப்பினையாக கற்றுக்கொண்டது இந்தியா. உலகின் 'நான்காவது" பெரிய இராணுவத்தை கொண்ட இந்தியா தனது தலைக்குனிவை தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொண்டது.
இதன் விளைவாக தற்போதைய தனது அரசியல் நகர்வில, இலங்கையில் குறிப்பாக பிராந்திய அதிகாரத்தினை நிலைநிறுத்த, அதிலும் முக்கியமாக புலிகளின் விடயத்தில் தொலைநோக்குடனும் பழிவாங்கும் நயவஞ்சகத்துடனும் தனது காய்களை நகர்த்துகிறது.
உள்நாட்டிலும். . . .
ஓவ்வொரு நகர்வும் இந்தியா, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மிக அவதானமாக புலிகளின் பக்கம் பச்சாதாபம் ஏற்படாத வகையில் தமிழ்நாட்டின் மாநில அரசின் அனுசரணையுடன் நடாத்திவருகிறது. அதற்கு சாதகமாக கருணாநிதியின் கட்சி காங்கிரசினுடனான கூட்டமைப்பு என்கின்ற நிலமை 'புலிக்கு புதர் காவல் - புதருக்கு புலி காவல்" என்று சாதகமாக அமைந்துள்ளது.
மிகவும் சிறுபான்மையான ஒரு கூட்டம் அதாவது புலிகளிடம் சம்பளம் வாங்கும் திருமாவளவன், நெடுமாறன், கோபால்சாமி போன்றவர்களின் கூக்குரலை மிகவும் இலகுவாக அடிபட்டுப்போகக்கூடிய முறையில் நகர்த்தி வருவதும் வெளிப்படை.
உதாரணம், இந்திய மீனவர்கள் கடத்தப்பட்டது சம்பந்தமான பிரச்சனைகளை புலிகள்தான் செய்தார்கள் என்பதை தாங்கள் நாகரீகமான முறையில் வெளிப்படுத்தி தமிழக மீனவர்களின் பாதுகாவலனாக தெரிவிக்கின்றது. இதன் மூலம் புலிகளுக்கான ஆதரவு வட்டத்தையும் ஆட்டம் காண வைத்தது. இதிலிருந்து நன்றாக புரிவது ஒன்று, முன்னர் போன்று பாய்ந்து விழுந்து தன்னியல்பில் சண்டித்தனத்தை காட்டுவதை தவிர்த்து மிகப் பாரிய அளவில் உலக அங்கீகாரத்தை பெறுவதற்காக காத்திருக்கின்றது.
இதற்கு சாதகமாக அமைவது புலிகளின் ஆழமான அரசியலற்ற, தொலை நோக்கற்ற, வெறும் பழிவாங்கும், வீரப்பிரதாபம் காட்டும் முட்டாள்த்தனம்.
தமது அரசில் முட்டாள்தனத்தை வெளிப்படுத்த இடைக்கிடை 'மன்னிப்பு" 'துன்பியல் சம்பவம்" போன்ற வெளிப்பாடுகள்.
புலிகளின் போராட்ட அரசியலானது தான் விரும்பும் 'யாழ்ப்பாணிய மையவாத" அரசியலுக்குக்கூட சாதகமாக அமையப்போவதில்லை என்பது தான் பெரிய உண்மை.
உலகளாவிய அளவிலும். . .
கடந்த சில வருடங்களில் உலகமேலாதிக்க நாடுகளில, ஜரோப்பிய வல்லரசுகளில, கனடாவில, அமெரிக்காவில், புலிகளின் மீதான தடை ஏற்பட்டது ஒருபுறமிருக்க சர்வதேசிய அளவில் புலிகளை பற்றிய எதிர்ப்பரப்புரை ஆங்கிலத்திலும், ஜரோப்பிய மொழிகளிலும், புலம்பெயர்ந்த தமிழரின் புலியெதிர்ப்புப்பரப்புரை தமிழர் ஊடகங்களிலும் வளர்ச்சி கண்டது எவ்வாறு. . ?
இது சிங்கள் இனவாத அரசாங்கத்தினால் மட்டும் ஏற்படுத்தமுடியுமா. . ?
இல்லை . . உலகின் வல்லரசுகளுக்கு சவாலாக முதலாளித்துவத்தை வளர்க்க முடியும் என்று வளர்ந்து வரும் பிராந்திய வல்லரசுகளில் இந்தியா முக்கியமானது.
இந்தியாவின் வளர்ச்சியில் மேலைத்தேய நாடுகளின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ. . ? மேற்கத்தைய நாடுகளிற்கு இந்தியா போன்ற பாரிய நாடுகளின் அனுசரணை அந்தந்தப் பிராந்தியத்தில் அவசியமாகின்றது.
இதனை. . அதாவது இந்த உபாயத்தினை தனது பிராந்திய நலன்களிற்கு சாதகமாக்குவது இந்தியாவின் தந்திரோபாயம்.
வெளிப்படையாக சொல்வதானால் இந்தியாவின் செல்வாக்கானது சர்வதேச ரீதியாக தற்போது புலிகள் மேல் ஏற்படுத்திய கடும் அழுத்தங்கள் என்று சொல்வதுதான் எதிர்மறையான உண்மையாகும்.
இந்தியா தனக்கிருக்கும் சர்வதேசிய செல்வாக்கினை பயன்படுத்தி சிறிய அண்டை நாடான இலங்கையில் இனப்பிரச்சனையில், குறிப்பாக புலிகளின் செயற்பாட்டினை நசுக்குவதற்கு மிகவும் திட்டமிட்டபடி காய்களை நகர்த்துகிறது. அந்த அளவிற்கு ஈழத்தின் 'பிரிவினை" என்பது இந்திய உபகண்டத்திற்கு முக்கியமானதாகும்.
கடந்த காலங்களில் புலி தவிர்ந்த சில இயக்கங்கள் எழுந்தமானமாக இந்தியாவின் ஆயுத உதவி, இராணுவப்பயிற்சி என்பவற்றைப் பெற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் இந்த உதவிகளின் உள்நோக்கங்களை புரிந்துகொள்ளாமல் இந்தியாவின் தூண்டிலில் மாட்டிக்கொண்ட வரலாறுகள் வெளிப்படை.
புலிகள் மிகப்பெரிய அளவில் இந்தியாவின் அரசியல் சதுரங்கத்திற்குள் இதுவரை விழவில்லை என்பது ஓரளவு உண்மை. இதற்குக்காரணம் புலிகளின் ஆழமான அரசியல் காரணமல்ல. எதுவும் தனது ஆழுமைக்குள் நகரவேண்டும் என்ற பிரபாகரனின் எதேச்சாதிகாரப் போக்குதான்.
இவ்வளவு கால வரலாற்றில் புலிகளின் போராட்டமானது மிக மூர்க்கமானதாக இருந்த போதிலும் தனது 'புலித்தேசிய" அரசியலில்கூட பின்னடைவுகளையே பெற்றுள்ளது. காரணம் வரலாறு கற்றுகொடுத்ததை திரும்பிப் பார்க்க மறுத்ததுதான். தேசியமோ, வர்க்கமோ, சாதியோ, பெண்ணியமோ மக்கள் சார்ந்த சமூக அரசியலை புரிந்தவர்கள் முன்கை எடுக்கும்போது மட்டும்தான் . . . வெற்றியடையாமல் போனாலும்கூட இருக்கின்ற அமைப்பினை கேள்விக்குள்ளாக்கி செல்கின்றது.
காலனித்துவம் . .நவகாலனித்துவமாகி. . நவகாலனித்துவம் . ஏகாதிபத்தியமாகி. . ஏகாதிபத்தியம் . . நவீனத்துவமாகி. . நவீனத்துவம் . 'பின்நவீனத்துவமாகி" (தத்துவத்தை சொல்லவில்லை பொருளாதார தொழில் நுட்பத்தை, அமைப்பியலை சொல்கிறோம்) அதாவது இல்லாதவற்றை இருப்பதாக கூறி மக்களின் போராட்டங்களை, மானிட ஒருங்கிணைப்பை இல்லாதொழிக்கும் இன்றைய அரசியல் போக்கில் இதுவும் செல்கின்றது.
தேவாரம் திருவாசகம் போல தேசியவாதமும் முட்டாள்தனமாக சமூக அக்கறையற்றவர்களால் ஓதப்படுகின்றது.
உலக வல்லரசுகளுக்கு எது தேவையோ அதனையே புலிகளின் தேசியமும் செய்கின்றது. எப்படி இந்த வல்லரசுகள் எந்த வலையை விரிக்கிறார்களோ இதில் அப்பாவிகளாக விழாவிட்டாலும் கூட இந்த குறிப்பிட்ட 'தவிர்க்கமுடியாமையால்" செய்கிறார்கள். இதே தவிர்க்கமுடியாமைக்குள் ராஜபக்ஸ அரசும் விழத்தான் செய்கின்றது.
இவற்றுக்கு நல்ல உதாரணம் தாக்குதல் வலிமை கொண்ட டோறா படகுகளை எப்படி புலிகளுக்கு விற்று பயிற்சிகளும் கொடுத்த இஸ்ரேல் அதன் தடுப்பாற்றல் கொண்ட கப்பல்களை இலங்கை அரசிற்கும் விற்று பயிற்சியும் கொடுத்தது என்பதாகும்.
வான்படை பற்றியும் அதே கேள்விகள் நாளை எழலாம். யார் கண்டது.
அடி பிடி போட்டி என்று வந்து விட்டால் விட்டுக்கொடுக்கவா முடியும். . ? எத்தனை சிறுவர்கள் செத்தால் என்ன. . ? எத்தனை மக்கள் பட்டினி கிடந்தால் என்ன. . ? பேயிடம் இல்லாவிட்டால் பிசாசிடம் வாங்கியும் அடிபடுவம்.
பழைய கூட்டணிக்காரர் சொல்வதுபோல 'இந்தியா இல்லாமல் எங்கடை பிரச்சனை தீர்க்கமுடியாது" என்பதை தமிழர்கூட்டணியின் வம்சாவழிகளான புலிகளின் வரலாறும் நிருபித்திருக்கிறது. புலிகளையும் இந்தியா தனது ஆளுமைக்குள் கொண்டுவருவதற்கான காய் நகர்த்தல்களை மிகவும் அவதானமாக செய்கின்றது.
இந்தியா தலைமையில் ஒரு சர்வதேசிய படையை இலங்கையில் நிலைநிறுத்துவது இந்தியாவின் இறுதி நோக்கமாக, வெற்றியாக அமையலாம். இதைவிட மோசமான பாதிப்பு தமிழ்த் தேசியத்திற்கும் இலங்கையின் இறைமைக்கும் ஏற்படுவது கற்பனாவாதமே!
Friday, August 31, 2007
யார் இந்த டயானா?
(பத்து வருடங்களுக்கு முன்னான டயானாவின் மரணத்தையிட்டு அன்றைய சமர் இதழ் 23 இல் வெளியாகிய கட்டுரை மீள் பிரசுரமாகின்றது)
உலகப்பத்திரிகைகள், மக்கள் முன் டயானாவின் மரணம் தொடர்பான செய்திகளை வெளியிட்டன. இந்த வகையில் வீரகேசரி, ஈழநாடு, ஈழமுரசு, சரிநிகர், வெளி என அனைத்துப் பத்திரிகைகளும் ஒரே விதமான ஆறுதல் ஒப்பாரிகளை முன்வைத்தபோது தான், இந்தப் பத்திரிகைகளின் ஒரே அரசியல் நிலைப்பாடு அப்பட்டமாக நிர்வாணமாகத் தெரிந்தன. சரிநிகர் 130 இல் ரத்னா என்பவர் " பரந்துபட்ட உலகமக்கள் டயானாவின் மூலமாக ஒரு பழம் பெருமிதம் உடைபடுவதைக் கண்டார்கள். ---- அவர் இன்னொரு திரேசாவாக இயங்குவதை வரவேற்றார்கள். --- அன்று தொடக்கம் இன்றுவரை பெண் என்ற ஒரே காரணத்துக்காக சமூக, கலாசார ரீதியான துன்பங்களை அவள் எந்த உயர்குடும்பத்தைச் சேர்ந்த வகையிலும் சரி அநுபவித்தேயாக வேண்டும். ... ஒரு பெண் என்ற விதத்தில் தான் விரும்பியபடி வாழ்வதற்கு அவருக்கு இருந்த நெருக்கடிகள் வேறெந்தப் பெண்ணுக்குமிருந்த பொதுவான நெருக்கடி தான். .... இந்த வகையில் இரக்க சுபாவமும் பிறருக்கு உதவும் மனப்பான்மையும் கொண்ட டயானா என்ற பெண்ணின் மரணத்தில் இரத்தக்கறை ஆணாதிக்க சமூகத்தின் கைகளில் படிந்திருப்பது மறுக்க முடியாததே ".
அதே சரிநிகரில் நாசமறுப்பான் " டயானாவின் இறப்பு எமக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியும் இளவரசர் ஹரி தேவாலயத்தில் விம்மி விம்மி அழுததும் எமது நெஞ்சை உருக்கி விட்டன. இக் கவலைக்கு மத்தியில் ....." .
அதே சரிநிகரில் மேலும் ஆழ்வார்க்குட்டி " அவர் நேர்மையாக இருந்தார். தனது வேரிலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்ள முயலவில்லை. அவரால் அது முடியவுமில்லை. அரச குடும்பத்தின் போலி கவுரவத்திற்கும், விறைப்புக்கும் அவர் அடிபணியவில்லை. ..... மிகவும் சாதாரணமான ஒரு பணக்காரச்சீமாட்டியாக அவர் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டலாம். அவரது துன்பியல் முடிபுக்காக அநுதாபப்படலாம். --------- அரச குடும்ப அங்கத்தவராகிவிட்ட பின்னரும் டயானா சாதாரண மக்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை. அவர்களுடன் சுமுகமாகப் பேசினார். அரச மிடுக்கு அவரிடம் இருக்கவில்லை. சாதாரண மக்களைத் தொட்டுப் பேசினார். " என சரிநிகர் ஆறுதல் ஒப்பாரி முன்வைத்துப் புலம்பியிருந்தது. யமுனா ராஜேந்திரன் ஈழமுரசு 30-09 , 06-10 இதழ்களில் இரட்டை வேடம் போட்டு புலம்பும் பகுதியைப் பார்ப்போம்.
"அன்னை தெரேசா பற்றி நிறைய அதிதீவிர இடதுசாரி விமர்சனங்கள் உண்டு. எந்தவிதமான விமர்சனமற்ற வலதுசாரி துதிபாடல்களும் உண்டு "எனக் கூறி நடுநிலையாகக் கூறுவது போல் பாசாங்குபண்ணி " அன்னையைப் பரிவான கண்ணோட்டத்துடன் அணுகியவர்களே பெரும்பான்மையான இந்திய இடதுசாரிகள் அன்னையின் செயல்களின் விளைவுகளை அரசியல் ரீதியில் பார்க்கத்தான் வேண்டும். ஆயினும் அன்னை தெரேசா அரசியல்வாதி இல்லை. அரசியலால் போரினால் பிளவுண்ட உலகத்தில் வாழநேர்ந்த தியாக சிந்தையுள்ள தெரேசா அன்னையின் அந்தரங்க சுத்தியை சேவா மனத்தை நிச்சயமாகச் சந்தேகிக்க முடியாது." எனக் கூறி அவரைப் புனிதர் எனப் பிரகடனம் செய்த யமுனா டயானாவைப் பற்றிய தனது கருத்தில் " ------ அவர் வெறுக்கத்தக்க மனுஷியாக வாழவில்லை. பரிதாபத்துக்குரிய ஜீவனாகவும் முடியாட்சி குறித்த பிரம்மை உடைத்தவராகவும் புனித வழிபாட்டுக்குரிய உருவமாகவுமே (CON) அவர் காணப்பட்டார்.
"அவரோடு ஒப்புநோக்கத்தக்கவர்கள் வரலாற்றில் முன்பும் இருந்தார்கள் பின்பும் இருப்பார்கள். மர்லின் மன்றோ, ஜாக்குலின், ஒளாஸில், எலிட்பா, ஸின்டி, கிராட்போர்டு, மடோனா போன்றவர்கள் இவ்வாறு புனித வழிபாட்டு உருவங்களாக ஆனார்கள். தமிழகத்தில் நாம் ஜெயலலிதாவையும் இவ்வகையில் நோக்கமுடியும். ---- ஐரோப்பிய மதிப்பீடுகளின்படி குடிமக்கள் மனோநிலையுடன் (Republican) விடுதலைக் கண்ணோட்டத்துடன் செயல்பட்டார். ----- தொழிற்கட்சியை ஆதரித்தார். வெகுஜனங்களின் பார்வையில் வெறுக்கப்படக்கூடிய எந்தத் தன்மைகளையும் கொண்டிருக்கவில்லை. செயல்களையும் அவர் மேற்கொள்ளவில்லை." என யமுனா டயானாவையும் தெரேசாவையும் மக்கள் முன் பிரமைகளை தமிழில் விதைத்ததன் நோக்கம் இந்த உலகக்கட்டமைப்புக்கு சேதம் ஏற்படக்கூடாது என்ற ஒரே ஒரு பிரேமைதானே ஒழிய வேறல்ல.
இலண்டன் "வெளி" இரண்டில் டயானா சமூகசேவகியாக வலம் வரத்தொடங்கினார். ----- மிதிவெடிகளுக்கு எதிரான இவரது பிரச்சாரம் உலகளாவிய ரீதியில் அவருக்குப் பாராட்டைத் தேடித்தந்தது.
அதே இதழில் ஒரு கவிதை "காலனித்துவக் கொள்ளையரைக் கரம்காட்டி எதிர்த்தாய் பெண்ணின் உரிமைக்காய் முடி துறந்த மன்னர்கள் விழிபிதுங்கி நிற்க மானுடம் காக்க மனிதரை நேசிக்க எதையும் செய்வேன் என்றாய் ..... "
எனப் பலவாறாக பல பல பத்திரிகைகள், பிற்போக்கு முற்போக்குகள் எல்லாம் ஒன்று ஒன்றாய் சலிப்புக்களை எழுதிய போதுதான், இவர்கள் தத்தம் சொந்த அரசியல் முகம் ஒன்றே தான் என்பதை இனம் காட்டினர். இவர்கள் டயானா குறித்து பொதுவாக
1. அரச குடும்பத்தை எதிர்த்தார் என்கின்றனர்.
2. பெண் விடுதலையைக் கோரினார் என்கின்றனர்.
3. மனிதநேயத்தை நேசித்தார் என்கின்றனர்.
4. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்தார் என்கின்றனர்.
5. ஒரு சமூக சேவகி என்கின்றனர்.
6. பழைய காலனியாதிக்கத்தை எதிர்த்தார் என்கின்றனர்.
7. தரைக்கண்ணிவெடி, யூகோசிலவாக்கியா யுத்தம், வறுமைப்பட்ட மக்களுக்கு என எல்லாம் மக்களுக்காகவும் நின்றார் எனப் பலப்பலவாக இனம் காட்டுகின்றனர்.
டயானா கொல்லப்பட்டவுடன் ஏகாதிபத்திய செய்தி நிறுவனங்கள், தொடர்புசாதனங்கள் எதை எல்லாம் ஒப்பாரி வைத்தனவோ, அதை எல்லாம் கூட்டி அள்ளி வாந்தி எடுத்து வைத்துள்ளனர் இன்றைய முற்போக்குகள் எனக் கூறிக் கொள்வோர். ஏகாதிபத்திய தலைவர்களும் இந்த முற்போக்குகளும் ஒரே அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தனர். டயானா யார்? டயானாவுக்கும் மக்களுக்கும் இடையில் என்ன உறவு இருந்தது? என்ற கேள்விகளை சொந்த மூளையுடன் ஆராயும் சொந்தப்புத்தி உள்ள மனிதன் புரிந்து கொள்வான் யார் இந்த டயானா என்று ?
ஒரு கவர்ச்சிக்கன்னி, ஒரு மொடலிஸ்ட் ஒரு பணக்காரச் சீமாட்டி, ஏகாதிபத்திய பண்பாட்டைக் கோரிய ஒரு பெண் இதை மூடி மறைக்க வேடமிட்ட ஒரு பம்மாத்துப் பொம்மை. இது தான் டயானாவின் உண்மை முகம்.
டயானா நேர்மையானவர். எதில் நேர்மையானவர் சொல்ல முடியுமா? டயானாவின் ஆடம்பரக் களியாட்ட கொட்டடிப்புக்கும் மக்கள் பற்றி வித்தை காட்டவும் எல்லாம் எப்படிப் பணம் வந்தது? நேர்மையாக உழைத்தாரா? எங்கே உழைத்துக் கை கால் தேய்ந்தது? மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து, அதில் தான் டயானாவின் எல்லா ஆர்ப்பாட்டமும். மறுக்க முடியுமா? அப்படியாயின் எதற்கு உங்களின இந்த உடன்சலிப்பும், பழஞ்சலிப்புக்களும். டயானாவுக்குத்தான் நேர்மை கிடையாது அதை எழுதிய நீங்கள் நேர்மையாகக் கூறுவீர்களா? முடியாது. ஒருக்காலும் உங்களால் முடியாது.
ஏழைகளைத் தொட்டுப் பழகினார். அவர்கள் உடன் ஏதோதோ செய்தார் என்கின்றீர்கள். நீங்கள் கனவு காண்கிறீர்களா? எம்.ஜி.ஆர், பிரேமதாச முதல் இப்படி எத்தனை பேர். ஏன் உலக அழகுராணிகள் எத்தனை பேர் இதே வேசம் இதே நாடகம். ஏன் அண்மையில் CNN தொலைக்காட்சி உரிமையாளர் நலிவுற்ற மக்களுக்கு 100 கோடி டொலரை ஜக்கிய நாட்டு சபைக்கு வழங்கியபோது உலகம் மூக்கில் கைவைத்தது. அண்மையில் உலக பன்னாட்டு நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறும்போது "எனது மூளை முதலாளித்துவ சிந்தனையுடையது. எனது நடைமுறை சமூக ஜனநாயக வடிவமுடையது என்றார்.
உலகில் 40 பெரிய பணக்காரர்களில் ஒருவரும் CNN சொந்தக்காரனுமான (TED TURNER) ரெட் ரீயுணர். 100 கோடி டொலர் பணத்தை ஜ.நா .சபையின் மனித சமூக நலச் சேவைக்கு வழங்கி உள்ளார். CNN மாத இலாபம் ஜ.நா.வின் ஒருவருட நிர்வாகத்துக்குப் போதுமானது. உலகை ஆட்டிப்படைக்கும் இந்த கூத்தாண்டியை உலகப் பொலிஸ்காரத் தலைவன் கிளிங்ரன் பாராட்டியதுடன் இதைப் போல் செய்ய வேண்டும் என வேறு பலரையும் கோரியுள்ளார். அதாவது உலகை மேலும் மேலும் சூறையாட அற்ப எலும்பு துண்டுகளை வீசுவது அவசியம். இதை செய்வதன் மூலம் டயானா போல் வேஷம் போடவும், சூறையாடி குதித்து அடக்கி ஆள முடியும் என்ற கனவுதான் மனித உதவிகளின் பின்னுள்ள கபட நோக்கமாகும்.
எல்லோரும் மக்கள் பற்றிப் பேசுகின்றனர். அடிமட்ட சாதிப்பிரிவுகள் எழுச்சியுற்று எழுந்து போராடும்போது மேல்மட்ட தலைவர்கள் சமபந்தி முதல் எல்லா வேஷமும் போடுகின்றனர்.
நாம் வாழ்க்கை முழுக்க இந்த வேஷங்களை அடிக்கடி காண்கின்றோம். டயானாவின் வேஷம் இதைத்தாண்டியது அல்ல. அந்தச் சீமாட்டி போடும் உடுப்பின் விலை கூட அவர் தொட்ட ஆபிரிக்க மனிதனின் பல ஆயுள் உழைப்புக்குச் சமனாகும். ஏன் டயானாவால் ஒரு சாதாரண மனிதனாக மாறமுடியவில்லை. அந்த மனிதனுடன் சேர்ந்து போராடமுடியவில்லை. நிலத்தில் கை ஏந்தி நிற்கும் மனிதன் எப்போதும் வான் வரை உயர்ந்து நின்று மக்களின் உழைப்பை சுரண்டும் அதில் வாழும் டயானாவை எட்டிப் பார்க்க முடியாது. இந்த அற்ப மனிதர்கள் டயானாவின் விளையாட்டுப் பொம்மைகளாக கைகளில் சிக்கியவை தான். இந்த விளையாட்டுக்குள் சிக்கும் ஏழைகள் மூலம் அவர்களுக்கு புகழ் அந்தஸ்து கிடைத்தன. அதனால் தான் இந்த வேஷம் தேவைப்படுகிறது.
உலகில் கொள்ளைக்கார ஏகாதிபத்தியங்கள், காலனிகளை வைத்திருந்த போது புகையிரத தண்டவாளங்களை அமைத்தது முதல் இன்று தன்னார்வக் குழுக்களை விதைப்பது வரை எல்லாம் சேவையாகிவிடுமா? இல்லை இங்கு சேவைக்குப் பின்னால் கொடுரமான கைகள், நோக்கங்கள் தான் உள்ளன. இதுமட்டும் தான் உண்மையானவை.
டயானா அரச குடும்ப முரண்பாடு முற்போக்கான திசைவழிப்பட்டதா? அவரின் நடவடிக்கை பெண்விடுதலை வழிப்பட்டதா? வழிப்பட்டது தான் என ஏகாதிபத்திய சக்திகள் இருந்து ஒப்பாரி வைக்கின்றனர்.
டயானாவுக்கும் அரச குடும்பத்துக்கும் இடையிலான முரண்பாடு எந்த வகைப்பட்டது என ஆராயின் - ஏகாதிபத்தியத்துக்கும் (முதலாளித்துவத்தை உள்ளடக்கிய) நிலப்பிரபுத்துவ மதவாதத்துக்கும் இடையிலானதே. டயானா நிலப்பிரபுத்துவ மதவாதத்துக்குப் பதிலாக ஏகாதிபத்திய கலாசாரத்தைக் கோரினார். இதுதான் டயானா அரச குடும்ப மோதலாகும். இங்கு பெண்ணியம் கூட ஏகாதிபத்திய பெண்ணியத்தைக் கோரியதே ஒழிய வேறு ஒன்றும் சமூகத்தைப் புரட்ட அல்ல. டயானா ஏகாதிபத்திய இன்றைய உலகமயமாதலில் எது எதுவெல்லாம் தேவைப்பட்டதோ, அவை எல்லாவற்றையும் கோரினார் அவ்வளவே. வெளியில் உங்களால் காட்ட முடியாது.
உலக அழகுராணிகள் எதை எதையெல்லாம் செய்ய வேண்டுமென ஏகாதிபத்தியம் வழிகாட்டுகின்றதோ அதை எல்லாம் டயானா செய்தார். ஓர் அழகியாக, ஒரு மொடலாக, ஒரு விபச்சாரியாக, வேஷம் போடுபவராக, ஆட்டம் போடும் ஒரு பணக்காரச் சீமாட்டியாக எல்லாமாக எதுவெதுவாக இருக்கமுடியுமோ அப்படியே இருந்தார். அடுத்து கண்ணிவெடிக்கு எதிராக, யூக்கோசிலாவியா யுத்தக் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்தார் என்கின்றனர். அதாவது அமெரிக்கா அணுகுண்டு தடைக்கு கையெழுத்து கோரியது போன்றும், உலக ஆளும் அரசு தலைவர்கள் கண்ணிவெடிக்கு எதிராக குரல் கொடுத்தது போன்றதுதான் டயானாவின் புலம்பல் நாடகம் .
ஆயுதத்தைச் செய்தவன், யுத்தத்தை நடத்துபவன், வன்முறையைக் கையாள்பவன், அடக்குமுறையைக் கையாள்பவன் பயங்கரவாதத்தை செய்பவன்தான் அடிக்கடி அதற்கு எதிராக குரல் கொடுக்கின்றான். இதில் டயானா என்ற அழகி மொடலிஸ்ட் குரல் கொடுத்ததனால் தான் உங்களுக்கு நா ஊறப் புல்லரிக்கின்றதோ?
ஆயுதத்தின் நோக்கம், யுத்தத்தின் நோக்கம் அனைத்தினதும் அடிப்படை நோக்கத்தை கேள்விக்கு உள்ளாக்காது அதன் காரணகர்த்தாக்களைப்பற்றி மௌனம் சாதித்து அங்கீகரித்தபடி புலம்பி நடிப்பதில் உலகம் மாறிவிடுமா? இதைவிட இன்று மனிதர்களுக்காக நாள்தோறும் போராடிப்போராடி இந்தச் சீமாட்டிகள் பாதுகாக்கும் அரசுநிறுவனத்தால் கொல்லப்படும் மனிதர்கள் இவர்களைவிட ஆயிரம் ஆயிரம் மடங்கு வான் உயர எழுந்து நிற்கின்றனர். கால் தூசுக்கு கூட அருகதையற்ற சீமாட்டி டயானாவைப் பற்றி இன்று புலம்ப ஏகாதிபத்திய உலகம் உள்ளது. ஆனால் மக்களுக்காக அவர்களுக்காகவே இறக்கும் ஆயிரம் ஆயிரம் மனிதர்களை நினைவு கொள்ள ஓர் உலகம் இல்லைத்தான். அதனால் தான் டயானாவைப் பற்றி ஒப்பாரிகள் புலம்பல்கள் நிரம்பிப் போயுள்ளது.
புரட்சி பேசுகின்ற ரொக்சிய கம்யூனிச கட்சியின் பத்திரிகையான தொழிலாளர் பாதை டயானாவுக்கு அஞ்சலி செலுத்திய வண்ணத்தைப் பார்ப்போம். தொழிலாளர் பாதை இலங்கை வெளியீடு 484 இல் (1997 அக்டோபர் ) "டயானாவின் மரணமும் பிரித்தானியாவின் அரசியல் நெருக்கடியும் " எனத் தலைப்பிட்ட கட்டுரை தலையங்கம் எப்படி டயானாவின் மரணம் அரசுக்கு நெருக்கடி கொடுத்தது என்பதை விளக்கவில்லை. ஆனால் டயானாவுக்கு மறைமுகமாக கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் 'எதிர்காலம் எதுவிதத்திலும் உறுதியானது அல்ல. டயானாவின் மரணத்துடன் வெடித்த பலம் வாய்ந்த பொதுஜன உணர்வுகளும் அவை அரச குடும்பத்துக்கு எதிராக நெறிப்படுத்தப்பட்டமையும் அது முதலாளி வர்க்கம் மீது திரும்பிப் பாயும் சக்தியுடைய பூதம் அடைக்கப்பட்டிருந்த போத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது." எனப் புரட்சியின் பெயரால் தொழிலாளர் பாதை பிரகடனம் செய்து இருந்தது. டயானாவின் அரசியல் என்ன? என்ன செய்து கொண்டிருந்தார்? என்ற கேள்வியை கேட்கவோ, விமர்சிக்கவோ முன்வராத தொழிலாளர் பாதையின் ஒருபக்க கட்டுரையில் மனிதாபிமான டயானாவின் பின் திரண்டோர் முற்போக்குகள் என மறைமுகமாக பிரகடனம் செய்ததுள்ளதுடன், இனி அடுத்த புரட்சிக்கோ, பாசிசத்துக்கோ அணிதிரட்டக் கூடிய நிலையில் கனிந்து உள்ளது என பிரகடனம் செய்கின்றனர். அதாவது குடுவையில் இருந்து டயானாவின் முற்போக்கில் வெளிவந்துள்ளார்கள். எதிர்காலப் புரட்சிக்கு தயாராக உள்ளார்கள் என அத்தாட்சி செய்கின்றனர். இது தான் தொழிலாளர் பாதையின் புரட்சி வேஷம்.
இப்படி நாம் விமர்சிக்கும்போது யமுனா ராஜேந்திரன் போன்றோர் தீவிர இடதுசாரிகளின் பார்வை எனக் கூறி சேறு அடிக்கும் வழியில் தான் ரொக்சிகளும் தீவிர இடதுசாரித்தனம் என சேறடித்து இந்த உலகை பாதுகாக்க அதீத பிரயத்தனம் செய்து உச்சநடை போடுகின்றனர்.
காலனியாதிக்க அரசு குடும்பவடுக்களையோ, அங்கு கொள்ளையடித்த சொத்துக்களைப் பெறுவதிலோ இன்று மக்கள் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ வெட்கப்படாத, ஆடம்பர களியாட்ட ஏகாதிபத்திய கலாச்சார சீரழிவுகளை தனது வாழ்க்கையாகக் கொண்டு, அதற்குள்ளான சகதிக்குள் நடந்த இழுபறியில் தான் டயானா இறந்தார். இதற்காக ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாம் ஏன் தான் ஒப்பாரி வைத்து அழுது புலம்ப வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் இதை அம்பலப்படுத்தி எதிர்த்து இதைப் போற்றுவோரையும், அதன் எடுபிடிகளையும் வேரறுக்க வேண்டும்.
குறிப்பு- இன்னுமொரு சாக்கடை நாயகியும் ஏகாதிபத்தியங்களின் புகழ்களைப் பெற்றுக் கொண்டவருமான அன்னை திரேசா, டயானா போன்று வேறு ஒரு வழியில் அதே சாக்கடைக்காக இயங்கியவர்.
வறுமை கடவுளின் கொடை எனப் பிரகடனம் செய்து, உலக ஏகாதிபத்தியத்திடமும், உலக சர்வாதிகாரிகளின் கை குலுக்கி அவர்களை மனித நேயவாதிகளாப் பிரகடனம் செய்து, அவர்கள் கொடுத்த பணத்தில் ஏழைக்கு சிரமதானம் செய்தார். அதுவும் ஏழைகளை நாயாக நடத்தி மருத்துவ உலகில் எவை தடை செய்யப்பட்டதோ அதை எல்லாம் அவ் ஏழைகளுக்கு கொடுத்தும் செய்து, பலரைப் பரலோகம் அடைய வைத்தார்.
ஏழைகள் உள்ளவரை தான் தமது பிழைப்பும் நிலைக்கும் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டுதான், ஏழைகளை உருவாக்கும் சமூக அமைப்பைப் பாதுகாக்க அயராது உழைத்தார்.
ஏகாதிபத்தியம் ஏற்படுத்தி வைத்துள்ள வறுமையையும், அதற்கு எதிரான போராட்டத்தையும் தடுக்கத்தான் ஏகாதிபத்தியம் மனித உதவி திட்டங்களை முன்வைக்க, அதில் புரண்டு எழுந்தவர் தான் அன்னை திரேசா என்ற நச்சுக்காளான்.
Wednesday, August 29, 2007
தமிழ் மக்களுக்கு எதிரான இரண்டு துரோகக் கும்பல்கள்
பி.இரயாகரன்
30.08.2007
தமிழ் மக்களின் முதன்மை எதிரியான சிங்களப் பேரினவாதம், தமிழ் இனத்தின் இருப்புக்கே வேட்டுவைக்கின்றது. அதை வெறுமனே புலிப் பயங்கரவாதமாக காட்டுகின்றது. தமிழ் இனத்துக்கு எந்த அரசியல் உரிமையும் கிடையாது என்று சொல்வதே, அதன் அரசியல் சூக்குமமாகும். காலனித்துவ காலம் தொடக்கம் பேரினவாத சக்திகள் படிப்படியாக தமது பேரினவாத தமிழ் விரோத செயல்களை செய்து வருகின்றது. இதை இன்று வெறும் புலிப் பயங்கரவாதமாக திரித்து உலகறியச் செய்கின்றது. ஒரு இனம் திட்டமிட்ட வகையில் பேரினவாதிகளால் தொடர்ச்சியாக அழிக்கப்படுகின்றது.
இந்த பேரினவாதத்துக்கு துணையாக, அக்கம்பக்கமாக இரண்டு தமிழ் துரோகக் கும்பல்கள் செயல்படுகின்றன. இவர்கள் தமிழ் மக்கள் தமக்காக தாம் போராட முடியாதவர்கள் என்று கூறியபடி, அவர்களை அடக்கி அடிமைப்படுத்தி வைத்தபடி தமது துரோகத்தை அரசியலாக்க முனைகின்றனர். தமிழ் மக்களுக்கு எதிரான இந்த இரண்டு துரோகிகள் யார்?
1.புலிக் கும்பல்
2.புலியெதிர்ப்புக் கும்பல்
தமிழ் மக்களின் அனைத்து சமூக வாழ்வாதாரங்களையும் அன்றாடம் அழித்தபடி, இந்த துரோகிகள் தமிழ் மக்களுக்காக தாம் போராடுவதாக கூறுகின்றனர். மக்கள் தாம் தமது சொந்த விடுதலைக்காக போராட வேண்டும் என்பதில் நம்பிக்கையற்ற இந்த துரோகக் கும்பல்கள், குறுங்குழுவாத அரசியலைச் செய்கின்றனர். தமிழ் மக்கள் தமக்காக போராட எந்த லாயக்குமற்றவர்கள் என்பதே, இவர்களின் அடிப்படையான அரசியல் கோட்பாடாகும். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இதனடிப்படையில் செயல்படும் இவர்கள், தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்ததும், கொடுப்பதும் அவர்களின் சொந்த வாழ்வியல் இழப்பையும் அவலத்தையும் தான்.
தமிழ் மக்கள் இந்த மக்கள் விரோத இரண்டு துரோக வழிகளிலும் சிக்கி படாதபாடுபடுகின்றனர். அவர்கள் அனைத்தையும் இழந்துவிட்டனர். இவர்களிடம் தமது சுய கவுரத்தை இழந்துவிட்டனர். நடைப்பிணமாக, தலையாட்டி பொம்மையாக மாற்றப்பட்டுவிட்டனர். தமிழ் மக்கள் எதையும் சுயமாக சிந்திக்கவோ, சுயமாக செயல்படவோ எந்த உரிமைற்றவராகிவிட்டனர். இதை வெறுமனே புலிகள் மட்டும் செய்யவில்லை. புலியெதிர்ப்புக் கும்பலும் சேர்ந்தே செய்தனர், செய்கின்றனர்.
20 வருடங்களுக்கு முன்னம் புலிகள் மாற்று இயக்கத்தை அழித்த பின், புலியெதிர்ப்பாக இந்த பிற்போக்கு கூறுகள் திரிபடைந்தன. அதற்கு முன் அனைத்து பழதான குழுக்களும் மக்களை எதிர்த்து நின்றன. இதனடிப்படையில் நூற்றுக்கணக்கான உள்ளியக்க படுகொலைகளை நடத்தினர். இதன் மூலம் மக்கள் நலன்களுக்கான போராட்ட கூறுகள் ஒழித்துக்கட்டப்பட்டன. மக்களுக்கான போராட்டம் என்பது, தேசவிடுதலைக்கு எதிரானதாக காட்டி, தமிழ் மக்களுக்கு எதிரான துரோகத்தை அரசியலாக அரங்கேற்றினர்.
இப்படிபட்ட ஒரு அரசியல் தொடர்ச்சியில் தான், மக்கள் விரோத துரோகமே இந்தக் குழுக்களின் அரசியலாகியது. இதுவே புலியின் இயக்க அழிப்பின் பின், புலியாகவும் புலியெதிர்ப்பாகவும் சமூகத்தை பிளந்துகாட்ட முனைந்தனர். புலிகள் அனைத்தையும் தியாகம் துரோகம் என்று இரு வரையறையில் முத்திரை குத்தினர். புலியெதிர்ப்பு கும்பல் தாம் அல்லாத அனைத்தையும், புலியாக முத்திரை குத்தினர். மக்கள் நலன் சார்ந்த எந்த கூறையும், அதற்கான போராட்டத்தையும் தொடர்ச்சியாக புலிகளும், புலியெதிர்ப்பு துரோகிகளும் தமிழ் மக்களிடையே அனுமதிக்கவில்லை.
இயக்க ஒழிப்பின் பின்பும் அதற்கு முன்னமும் மக்களில் நம்பிக்கையற்று இந்தக் குழுக்கள், தமிழ் மக்கள் தமக்காக தாம் போராட வேண்டும் என்பதை மறுத்து முதன்மையான துரோகிகளானார்கள்.
தமிழ் மக்கள் தமக்காக தாம் போராட முடியாதவர்கள் என்று இவர்கள் அன்று முதல் இன்று வரை கூறிக்கொள்வதன் மூலம், தமது மக்கள் விரோத பாசிச நிலையை அரசியலாக கையிலெடுத்தனர். தாம் போராடி தமிழ் மக்களின் விடுதலை பெற்றுத் தரப்போவதாக பறைசாற்றிக் கொண்ட இந்த துரோகிகள், மக்களை நாயிலும் கீழாக அடிமைப்படுத்தினர். மக்களை தமது தேவைக்கு பயன்படுத்தும் எல்லைக்குள் அடிமைப்படுத்தி, அவர்களின் அடிப்படை உரிமைகளை இன்றுவரை மறுத்து நிற்கின்றனர். அதை மீறுவதை துரோகமாக்கினர்.
புலித் தமிழீழம், புலியொழிப்பு ஜனநாயகம் என்று கூறியபடி, அனைத்தையும் இதற்குள் கட்டுப்படுத்தி சமூகத்தை அடக்கியொடுக்கினர், அடக்கியொடுக்குகின்றனர். மக்கள் இதற்கு வெளியில் சிந்திக்கவும், செயல்படவும் முடியாத வகையில், படுகொலை அரசியலை நடத்தினர், நடத்துகின்றனர்.
இதை சாதிக்க அன்னிய சக்திகளின் கைக்கூலிகளாகி விட்டனர். பேய்களுடனும், பிசாசுகளுடனும் கூடிக் குலாவுகின்றனர். அவர்களின் உதவியையும், வழிகாட்டலை பெறுவதுடன், ஆயுதங்களில் மட்டும் தங்கி நிற்கும் துரோகிகளாக உள்ளனர். இப்படி தமிழ் மக்களின் உள்ளேயான முதன்மையான எதிரிகளாவர். எதிரிக்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடத்தவிடாது தடுக்கின்ற, பாசிட்டுகளாக துரோகிகளாக உள்ளனர்.
கடந்த 20, 25 வருடமாக இவர்கள் கூறிக்கொள்வது, தமிழ் மக்கள் தமக்காக தாம் போராட மாட்டார்கள் என்ற மக்கள் விரோத பாசிசக் கோட்பாட்டைத் தான். இதைக் கூறிக் கொண்ட இந்த இரு துரோகக் கும்பலும், தமிழீழத்தையோ ஜனநாயகத்தையோ மீட்கவில்லை, மீட்கப்போவதுமில்லை. மாறாக அதை பரஸ்பரம் தத்தம் சொந்த துரோக வழிகளின் குழி தோண்டி புதைத்தனர், புதைக்கின்றனர்.
புலித் தமிழீழம் பெற தாம் அல்லாதவர் படுகொலைகளையும், ஜனநாயகத்தை பெற புலியொழிப்பு படுகொலைகளை அரசியலாக கொண்ட இந்த துரோகக் கும்பல்கள் செயல்படுகின்றன. இதற்கு பல்வேறு மட்டத்தில் பேய்களும் பிசாசுகளும் உதவுகின்றனர். தமிழ் மக்கள் இதற்கு வெளியில் மூச்சுவிட முனைந்த போது எல்லாம், படுகொலைகள் மூலம் பதிலளித்தனர், பதிலளிக்கின்றனர்.
இவர்கள் தமது முரண்பாட்டின் இடையே, இரண்டு வழிதான் உண்டு என்கின்றனர். அதாவது புலித் தமிழீழம் அல்லது புலியொழிப்பு, இதை முன்வைக்கின்ற புலிகள், புலியெதிர்ப்பு வாதிகள் மட்டுமே உள்ளனர் என்கின்றனர். இதற்கு வெளியில் சிந்திக்கவும் செயல்படவும் யாருக்கும் அனுமதியுமில்லை, உரிமையுமில்லை. இது தான் உண்மை.
உண்மையில் மக்கள் தமக்காக தாம் போராடும் உரிமை கிடையாது என்று கூறும் இந்தக் கும்பல், அரசியல் படுகொலைகளையும் பாசிச வெளியாட்டத்தையும் அதன் மீது நடத்துகின்றனர்.
மக்கள் தமது சொந்த விடுதலைக்காக போராடுவதை தடுப்பதில், புலிகள் முதல் புலியெதிர்ப்பு புலியொழிப்புவாதிகள் வரை ஊக்கமாக பங்காற்றுகின்றனர். மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றி யாரும் பேச முடியாது என்கின்றனர். அதற்குரிய காலம் இதுவல்ல என்கின்றனர். அனைத்தையும் தமிழீழத்தின் பின் அல்லது புலியொழிப்பு ஜனநாயக மீட்பின் பின் என்கின்றனர்.
இப்படி கூறியபடி அனைத்தையும் இதற்குள் பரஸ்பரம் கட்டுப்படுத்தியபடி வெறியாட்டமாடுகின்றனர். தமிழ் மக்கள் தமக்காக தாம் சொந்தமாக போராட முடியாது என்பதும், அதை அவர்கள் செய்ய முடியாதவர்கள் என்று கூறும் இவர்கள், அதை தடுப்பதன் மூலம் சொந்த வலதுசாரி பாசிச சூறையாடலை தமிழ் மக்கள் நிலைநிறுத்த முனைகின்றனர்.
தமிழ் மக்கள் மீதான அனைத்து சமூக ஒடுக்குமுறையிலும் இருந்து விடுபடுவதற்காக போராடுவதை தடுக்கின்றவர்கள் இந்த இரு துரோகிகளுமாவர். தமிழ் மக்கள் தாம் அணிதிரளவோ, அதை முன்வைத்து போராடவோ அனுமதிக்காது ஆயுத வன்முறையையும் ஊடக வன்முறையையும் கையாளுகின்றனர். தமது பாசிச அதிகார வெறிகொண்டு, தமிழ் மக்களை உள்ளிருந்து ஓடுக்குபவர்கள் வேறுயாருமல்ல, இந்த இரு துரோகிகளும் தான். இதை வேரறுக்காது, தமிழ் மக்களின் சொந்த விடுதலை கிடையாது.
நக்சல்பாரி 'அபாயம்": அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா
கடந்த ஜூன் 25ம் தேதியன்று பெரியகுளம் முருகன்மலைப் பகுதியில் மாவோயிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த 3 தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பழனிவேல், வேல்முருகன், முத்தமிழ்ச்செல்வன் என்ற இந்த 3 பேரிடமிருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக போலீசு கூறுகிறது. மற்ற சிலர் தப்பிவிட்டதாகக் கூறி, சிலருடைய புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறது, போலீசு. ஜூலை 8ம் தேதியன்று இரவு சுந்தரமூர்த்தி, கார்த்திக், ஈஸ்வரன் ஆகியோர் திருப்பூரில் கைது செய்யப்பட்டு, போலீசு விசாரணைக்குப்பின் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.
தப்பியவர்களைப் பிடிப்பதற்கு மதுரை மற்றும் பிற நகரங்களிலும் ""கியூ'' பிரிவு உளவுத்துறைப் போலீசு வீடுவீடாகச் சோதனை நடத்தியிருக்கிறது.
வீரப்பனின் பிணத்தைச் சுட்டுக் கைப்பற்றிய விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் எங்கும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
""தமிழகமெங்கும் 70 பேர் கொண்ட 70 ஆயுதக் குழுக்கள்!'', ""பெரியகுளத்தில் ஏ.கே47 துப்பாக்கிகள், ஆயுதப் புதையல்கள், லேப் டாப் கம்ப்யூட்டர்கள்'', ""ஆயுதப்படையில் சேருவதற்குத் தயாராக 600 மாணவர்கள்'' என்று விஜயகாந்த் சினிமாவை விஞ்சும் வகையில் திரைக்கதை எழுதுகின்றன, பத்திரிகைகள். "நக்சல் வேட்டை' என்று போலீசு அராஜகத்தைக் கொண்டாடுவது, விஜயகுமாரையும் உளவுத் துறை போலீசு அதிகாரிகளையும் ஏதோ உயிருக்குத் துணிந்த வீர சாகச நாயகர்களாகச் சித்தரிப்பது, கைது செய்யப்பட்ட தோழர்களை "அவன், இவன்' என்று ஏகவசனத்தில் எழுதுவது என நாலாந்தரமான போலீசு எடுபிடிகளாகவும் பரபரப்புக்காகப் பச்சைப் பொய்களைப் புனைந்து எழுதும் பேனாத்தரகர்களாகவுமே பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
மாவோயிஸ்டுகள் தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் மாபெரும் அபாயம் போல ஒரு சித்திரம் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது. எனினும் இந்தத் "தேடுதல் வேட்டை'க்குத் தலைமை தாங்கும் விஜயகுமார், நாஞ்சில் குமரன் போன்ற போலீசு அதிகாரிகள் ""அச்சப்படும் அளவுக்கு தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் வளர்ந்துவிடவில்லை'' என்று கூறுகின்றனர். கியூ பிரிவு எஸ்.பி. அசோக்குமார் ""தமிழகத்தில் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 25 முதல் 35 வரை இருக்கலாம் என்பது எங்கள் கணக்கு'' என்று பேட்டி கொடுக்கிறார். ""கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்கள் மிகச் சாதாரணமானவை'' என்றும் போலீசே கூறுகிறது.
பிறகு ஏன் இந்த ஆரவாரம்? பெரியகுளத்தில் வேட்டை, குற்றாலத்தில் வேட்டை, கொடைக்கானலில் வேட்டை, தருமபுரியில் வேட்டை என்று விஜயகுமாரின் காட்டு சீன் ஸ்டில்கள், சினிமா ஸ்டில்களைப் போல அன்றாடம் பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்படுவது ஏன்? பெரியகுளத்தில் நிரந்தரமான அதிரடிப்படை முகாம் எதற்கு?
இது போலீசின் வழக்கமான விளம்பர மோகம் அல்ல; மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் அரச பயங்கரவாதம். "நக்சல்பாரி' என்ற சொல்லைக் கேட்டாலே மக்களுக்கு அதிரடிப் படையின் கொடூரமுகம் நினைவுக்கு வரவேண்டும் என்பதும், அவர்கள் அஞ்சி நடுங்கி ஒதுங்க வேண்டும் என்பதும்தான் இந்த நடவடிக்கையின் முதல் நோக்கம்.
இரண்டாவதாக, இது தீவிரவாத ஒழிப்பில் மன்னனை விஞ்சிய ராஜவிசுவாசியாகத் தன்னைச் சித்தரித்துக் கொள்ள கருணாநிதி மேற்கொள்ளும் முயற்சி. ""தமிழகத்தைத் தீவிரவாத அபாயத்திலிருந்து காப்பாற்றி அமைதியான வாழ்க்கையை அளிக்கும் வல்லமை எனக்கு மட்டும்தான் உண்டு. கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதம் தலைவிரித்தாடுவதுடன், சட்டம்ஒழுங்கு சீர்குலைந்துவிடும்'' என்பது ஜெயலலிதா நிரந்தரமாக முன்வைத்துவரும் பாசிச அரசியல். துக்ளக் முதல் இந்து வரையிலான பார்ப்பனப் பத்திரிகைகளால் வழிமொழியப்படும் பிரச்சாரமும் இதுதான்.
தற்போது ஜெயலலிதாவின் ஆசி பெற்ற விஜயகுமாரை "நக்சல் ஒழிப்பு நடவடிக்கையின்' தலைவராக நியமித்திருப்பதன் மூலம் "வசிட்டன் வாயால் பிரம்மரிஷிப் பட்டம்' வாங்கத் துடிக்கிறார், கருணாநிதி. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக தமிழகத்தைப் பேணுவதற்கும், ஆளும் வர்க்கங்களின் மனம் கவர்ந்த அமைதிப் பூங்காவாக மாநிலத்தை "மார்க்கெட்டிங்' செய்வதற்கும் நக்சல் வேட்டை என்னும் இந்த ஊதிப்பெருக்கப்பட்ட நடவடிக்கை திமுக அரசுக்குத் தேவைப்படுகிறது.
போலீசைப் பொறுத்தவரை தனது கேள்விக்கிடமற்ற அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கும், தனது கிரிமினல் நடவடிக்கைகளை மறைத்துக் கொள்வதற்கும் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் அது பயன்படுத்திக் கொள்கிறது. மிகவும் அபாயகரமான பணியில் இராப்பகலாக ஈடுபட்டிருப்பதைப் போன்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவே, காடுகளிலும் மலைகளிலும் ""அவுட்டோர் ஷூட்டிங்'' நடத்துகிறது. தான் நடத்திய, நடத்தப் போகிற எல்லா "போலி மோதல்' கொலைகளையும் மறைப்பதற்கான திரைச்சீலைகளாக இவற்றைப் பயன்படுத்துகிறது.
இத்தனை பயங்கரமாகச் சித்தரிக்கப்படும் பெரியகுளம் சம்பவத்தில் நடந்திருப்பது என்ன? 3 பேர் சில ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குண்டு வெடிப்பு, போலீசுடன் மோதல், உயிரிழப்பு என்று எதுவும் நிகழவில்லை. கைது செய்த போலீசாருக்கோ ஒரு சிராய்ப்புக் காயம் கூட ஏற்படவில்லை. போலீசின் சட்டம் ஒழுங்கு பார்வையின் படியேகூட இது மிகவும் சாதாரணமான குற்றம்தான்.
தினகரன் பத்திரிகை மீது பட்டப்பகலில் போலீசின் முன்னிலையில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். 3 ஊழியர்கள் கொல்லப்பட்டிருந்தும், அந்த வன்முறை வெறியாட்டம் மறுக்க முடியாதவண்ணம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தும், ""தாக்குதலுக்குக் கருத்துக் கணிப்புதான் காரணம்'' என்று கூறி, சட்டமன்றத்திலேயே அதனை நியாயப்படுத்தினார், கருணாநிதி. அண்ணன் அழகிரிக்கு 2% தான் ஆதரவு என்று எழுதியதற்காக ஒரு பத்திரிகை அலுவலகத்தை ஊழியர்களுடன் சேர்த்துக் கொளுத்தலாமாம். அழகிரி ஆதரவாளர்களின் கோபத்துக்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம். ஆனால், ஒரு இலட்சம் விவசாயிகளைத் தற்கொலைக்கும், பல ஆயிரம் முஸ்லிம்களையும் தலித் மக்களையும் படுகொலைக்கும், கோடிக்கணக்கான மக்களைப் பட்டினிக்கும் தள்ளும் இந்த அரசமைப்புக்கு எதிராக ஆயுதமேந்துவது தீவிரவாதமாம்!
மூன்று இளைஞர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்தார்கள் என்ற குற்றத்துக்காகத் தமிழகமெங்கும் மாவோயிஸ்டு அமைப்பினர் மீது தேடுதல் வேட்டை நடத்துகிறது போலீசு. சிவகங்கையில் நட்ட நடுவீதியில் ரிமோட் குண்டு வைத்து தி.மு.க. நகராட்சித் தலைவரை தி.மு.க.காரனே கொலை செய்கிறானே, அந்தப் படுகொலைக்கு என்ன காரணம்? அன்று உள்ளாட்சித் தேர்தலையும், இன்று கூட்டுறவுத் தேர்தலையும் ரத்து செய்ய வைத்த வன்முறைக்கான காரணம் என்ன? தமிழ் நாட்டையே கொள்ளைக் காடாக்கி வரும் கழக வீரப்பன்கள் மீது எந்த அதிரடிப்படை ஏவப்பட்டிருக்கிறது?
"நக்சல் ஒழிப்பு' நடவடிக்கையில் காட்டப்படும் இந்தத் தீவிரத்தில் ஒரு சதவீதமாவது "தீண்டாமை ஒழிப்பு', "லஞ்ச ஒழிப்பு', "மதவெறி ஒழிப்பு' நடவடிக்கைகளில் காட்டப்பட்டதுண்டா? காடு மலையெல்லாம் தேடி அலைய வேண்டிய தேவையே இல்லாமல் கண்முன்னால் காட்சி தரும் இந்தக் கிரிமினல் குற்றங்களை ஒழிக்க ஒரு அமைதிப்படையாவது ஏவப்பட்டதுண்டா?
"வன்முறையா மென்முறையா' என்பதல்ல பிரச்சினை. இந்த அரசமைப்பில் ஐக்கியமாகி, அரசு சன்மானங்களைப் பொறுக்கித் தின்னவும், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தரகு வேலை செய்யவும், மக்கள் சொத்தைக் கொள்ளையடித்துப் பங்கு போட்டுக் கொள்ளவும் ஆயுதம் ஏந்தி மோதிக்கொள்வதில் ஆளும் வர்க்கத்துக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. மக்கள் யுத்தக் குழுவினர் சந்திரபாபு நாயுடுவுக்கு வைத்த குண்டைக் காட்டிலும், சிவகங்கையில் வைக்கப்பட்ட ரிமோட் குண்டுதான் நவீன தொழில்நுட்பம். அவ்வாறிருந்தும் சிவகங்கையில் தேடுதல் வேட்டை கிடையாது, காரணம், இது திமுக ஆட்சி என்பது மட்டுமல்ல; இத்தகைய வன்முறைகள் எதுவும் ஆளும் வர்க்கத்துக்கு எதிரானவையல்ல என்பதுதான் அடிப்படைக் காரணம்.
மாறாக, ""இந்த கொள்ளைக்கார அரசமைப்பைத் தூக்கியெறிவதற்காக ஆயுதம் ஏந்தவேண்டும்'' என்று கூறுவதனால்தான், ஜனநாயகத்தின் எல்லாத் தூண்களும் "தீவிரவாதிகள்' என்று முத்திரை குத்தி நக்சல்பாரிகள் மீது பாய்ந்து படுங்குகின்றன.
குறிப்பாக, தனியார்மயதாராளமயக் கொள்கைகளை எதிர்த்துக் கிளர்ந்தெழும் உழைக்கும் மக்கள், நாளை கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரண்டு விடுவார்களோ என்ற அச்சம்தான் ஆளும் வர்க்கங்களை நடுங்கச் செய்கிறது. துப்பாக்கிகாடுபயிற்சி என்பதல்ல எதிரிகளின் அச்சத்துக்குக் காரணம். மார்க்சியம்லெனினியம்மாசேதுங் சிந்தனை என்ற கம்யூனிசச் சித்தாந்தம்தான் அவர்களை அச்சுறுத்துகிறது. கம்யூனிசப் புரட்சியாளர்களின் உறுதியும் விடாப்பிடியான முயற்சியும் அவர்களுக்குப் பீதியூட்டுகிறது.
இதனை மறைத்துக் கொண்டு, "வேலையில்லாத பட்டதாரிகளும் விரக்தியுற்ற இளைஞர்களும்தான் நக்சல்பாரிகளாக மாறிவிடுவதாக'க் கதையளக்கிறார்கள். "இந்த சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் நக்சலியம் ஒழிந்துவிடும்' என்று கனாக் காண்கிறார்கள். வேலையின்மை, வறுமை காரணமாக நக்சலியம் பரவுகிறது (திருட்டு, விபச்சாரம் போன்ற கிரிமினல் குற்றங்கள் பரவுவதைப் போல) என்று கூறுவதன் மூலம் நக்சல்பாரி அரசியலையே கிரிமினல் குற்றமாகச் சித்தரிக்கிறார்கள்.
விரக்தியுற்றவர்கள்தான் நக்சல்பாரிகளாகிறார்கள் என்ற கூற்று உண்மையாயிருப்பின், தற்கொலை செய்து கொண்ட ஒரு லட்சம் விவசாயிகளும் நக்சல்பாரிகளாகியிருக்க வேண்டும். நக்சல்பாரிகளை உந்தித் தள்ளும் உணர்ச்சி, விரக்தி அல்ல; அது சமூக அநீதிகளுக்கு எதிரான ஆவேசம். அவர்களை வழிநடத்துவது மார்க்சியம்லெனினியம் என்ற அறிவியல் பார்வை. நக்சல்பாரிகள் சமூகத்தைத் தம் தோளில் சுமப்பவர்கள், மக்கள் நலனுக்காகத் தம் சொந்த வாழ்வின் இன்பங்களைத் தாமே முன்வந்து துறப்பவர்கள். நக்சல்பாரிகள் விரக்தியுற்ற இளைஞர்களுமல்ல, கம்யூனிசம் சோற்றால் அடித்தால் செத்துவிழும் கொள்கையுமல்ல.
நக்சல்பாரிகளின் அரசியலைத் தவறு என்று யாராலும் வாதாட முடியாது. நக்சல்பாரி இயக்கத்தின் ஒரு சாதாரணத் தொண்டன் எழுப்பும் அரசியல் கேள்விக்கு எந்த ஓட்டுப் பொறுக்கித் தலைவனாலும் பதில் சொல்ல முடியாது. நக்சல்பாரிகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது. எனவேதான் அச்சுறுத்துகிறது, அவதூறு செய்கிறது, மக்களிடமிருந்து தனிமைப்படுத்த முயற்சி செய்கிறது.
பெரியகுளம் சம்பவத்தையொட்டி நக்சல்பாரிகளுக்கு எதிராக அரசும் ஊடகங்களும் மேற்கொண்டு வரும் பொய்ப்பிரச்சாரத்தை நாம் முறியடிக்க முடியும். ஆனால், மேற்கூறிய பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லையென்றோ, மாவோயிஸ்டுகளின் "ஆயுதப் போராட்டத்துக்கான' நியாயத்தை தமிழக மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் என்றோ அதற்குப் பொருள் அல்ல. பெரியகுளம் சம்பவத்தையொட்டி மாவோயிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையே இதற்குச் சான்று கூறுகிறது.
""மாவோயிஸ்டுகளின் கொள்கைகளையும் இலட்சியங்களையும் மறைத்து விட்டு அவர்களை வெறும் ஆயுத மோகம் கொண்ட தீவிரவாதிகளாகக் காட்ட ஊடகங்கள் முயற்சிக்கின்றன''... ""ஆயுதப் போராட்டத்திற்கான சிறிய தயாரிப்புகளையே பெரும் பயங்கரவாதமெனச் சித்தரித்துப் பயங்கரவாத பீதியை உருவாக்கி வருகிறது கருணாநிதி அரசு'' என்று கூறும் அந்த அறிக்கை, ""மாவோயிஸ்டுகள் யார், அவர்கள் ஏன் ஆயுதம் ஏந்துகிறார்கள்?'' என்று சுருக்கமாக விளக்குகிறது.
"மாவோயிஸ்டுகள் யார், அவர்களுடைய கொள்கை என்ன, அவர்கள் ஏன் ஆயுதம் ஏந்துகிறார்கள்' என்பதையே மக்களுக்கு விளக்கிப் புரியவைக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் ஒரு அமைப்பு, ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கிவிட்டதாகக் கூறுவது சிறுபிள்ளைத்தனம் என்பதை விளக்கத் தேவையில்லை. தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் இவர்கள் சுற்றி வளைத்துக் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறை.
பேருந்து எரிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக சனவரி, 2000இல் தோழர் ரவீந்திரனை போலீசு காவலில் வைத்து சித்திரவதை செய்து சுட்டுக் கொன்று விட்டு, அதனை மோதல் கொலை என்று புளுகியது போலீசு. அது தி.மு.க. ஆட்சிக்காலம். பின்னர், நவம்பர், 2003இல் தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாரத்தில் 26 தோழர்கள் கைது செய்யப்பட்டு பொடாவில் சிறை வைக்கப்பட்டனர். தோழர் சிவா சுட்டுக் கொல்லப்பட்டார் அது ஜெயலலிதா ஆட்சிக் காலம். இப்போது பெரியகுளம் சம்பவம்.
பெரியகுளத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி மாவோயிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை எதுவும் கூறவில்லை. ஆனால், முன்னர் ரவீந்திரன் கொலை செய்யப்பட்டபோதும், ஊத்தங்கரையில் 26 பேர் சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்ட போதும், மக்கள் ஆதரவு அடித்தளம் கூட இல்லாமல் ஆயுதக் குழுக்களைக் கட்டும் இவர்களுடைய சாகசவாதம் பற்றி நாம் விமரிசித்தோம். மாவோயிஸ்டுகள் கோபப்பட்டார்கள். தருமபுரி மாவட்டத்தில் ஏராளமான மக்களைத் திரட்டியிருப்பதாகவும், அம்மாவட்டம் ஒரு ஆயுதப்போராட்ட முனையாக உருவாகியிருப்பதாகவும் வலிந்து வாதாடினார்கள்.
தற்போது பெரியகுளம் பகுதி! இங்கே மாவோயிஸ்டு அமைப்பிற்கு மக்கள் மத்தியில் அரசியல் ரீதியான செல்வாக்கு ஏதும் இல்லை. அன்றைய சம்பவத்தில் இவர்களுக்கு ஆதரவு கொடுத்ததற்காக அந்த வட்டாரத்து மக்கள் யாரும் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி இல்லை.
""மலைத்தொடர்கள், காட்டுப் பகுதிகள், பாதுகாப்பான மறைவிடங்கள் கொண்ட காட்டுப்பகுதிகளாக இருந்தால் போதும்; அங்கே ஆயுதக்குழுக்களைக் கட்டிவிடலாம், ஆயுதப்போராட்டத்தைத் தொடங்கிவிடலாம்'' என்று சிந்திக்கும் அளவுக்கு புவியியல்தான் இவர்களை வழிநடத்துகிறது; அரசியல் வழிநடத்துவதாகத் தெரியவில்லை. அரசியல் கண்ணோட்டம் ஏதுமற்ற இந்த அசட்டுத்தனமான நடவடிக்கையை இவர்கள் தம்முடைய சொந்த விவகாரமாகக் கருதிக் கொள்கிறார்கள். ""நாங்கள் போராடுகிறோம், நாங்கள் தியாகம் செய்கிறோம், உனக்கென்ன நட்டம்?'' என்ற சாகசவாதிகளுக்கே உரித்தான மனோபாவம்தான் இவர்களுடைய சிந்தனையை வழிநடத்துகிறது.
""கம்யூனிஸ்டுகள் தம்முடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் மக்களுக்கு விளக்கமளிக்கக் கடமைப்பட்டவர்கள்'' என்ற மிக எளிய உண்மை கூட, எதிரிகளின் அவதூறுப் பிரச்சாரம் தொடங்கிய பின்னர்தான் இலேசாக இவர்களுக்குப் புரியத் தொடங்குகிறது.
எனவேதான் ""மாவோயிஸ்டுகள் ஏன் ஆயுதம் ஏந்துகிறார்கள்?'' என்று தங்களுடைய அறிக்கையில் மக்களுக்கு விளக்கம் தருகிறார்கள். ""சிறப்புப் பொருளாதார மண்டலம், கோக், பெப்சி, ரிலையன்சு, குஜராத் படுகொலைகள்..'' என்று ஒரு நீண்ட பட்டியலைக் கூறி ""இத்தகைய பயங்கரவாதங்களை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயுதம் ஏந்துவது பயங்கரவாதமல்ல. அத்தகைய மக்கள் புரட்சிக்குத் தலைமை ஏற்கவே மாவோயிஸ்டுகள் ஆயுதம் ஏந்துகிறார்கள்'' என்கிறது அவர்களது அறிக்கை.
மேற்கூறிய பிரச்சினைகளுக்காக ஏற்கெனவே மக்கள் புரட்சி நடந்து கொண்டிருக்கிறதாம்! அதற்கு இவர்கள் தலைமை தாங்குகிறார்களாம்! புரட்சிக்குத் தலைமை தாங்கும் கம்யூனிஸ்டுகள், புரட்சியில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்குத் "தன்னிலை விளக்கம்' தந்து புரிய வைப்பதை நாம் இப்போதுதான் கேள்விப்படுகிறோம்.
சிறப்புப் பொருளாதார மண்டலமாக இருக்கட்டும், பிற தனியார்மய நடவடிக்கைகளாக இருக்கட்டும், அவற்றுக்கு எதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த அரசமைப்பின் வரம்புக்குள்ளேயே தத்தம் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பல்வேறு மக்கட்பிரிவினர் நடத்தும் இத்தகைய போராட்டங்கள் அவை போர்க்குணமிக்கவையாக இருப்பினும் பொருளாதாரப் போராட்டங்களே. மறுகாலனியாக்க எதிர்ப்பு என்ற அரசியல் கண்ணோட்டமோ, இந்த அரசமைப்பைத் தூக்கியெறிய வேண்டுமென்ற இலட்சியமோ அத்தகைய போராட்டங்களுக்கு இல்லை. அத்தகைய அரசியல் முழக்கங்களை முன்வைத்து மக்களைத் திரட்டுவதுதான் கம்யூனிஸ்டுகளின் கடமை. புரட்சிக்கு மக்களை அணிதிரட்டுவது என்பதன் பொருள் இதுதான். இப்படிப்பட்ட புரிதலோ, இவ்வாறு மக்களைத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கையோ மாவோயிஸ்டுகளுக்கு இல்லை.
மாறாக, மக்களை அரசியல் படுத்த ஒரு விபரீதமான முறையைக் கடைப்பிடிக்கிறார்கள், மாவோயிஸ்டுகள். தத்தம் கோரிக்கைகளுக்காக மக்கள் போராடும்போது அவற்றில் கலந்து கொண்டு, அப்போராட்டங்களையே போலீசுடனான மோதலாக மாற்றினால், நிராயுதபாணிகளான மக்களோ போலீசின் அடக்குமுறையை எதிர்கொண்டு செய்வதறியாமல் திகைத்து நிற்பார்கள்; இப்படியாக "அரசு என்பது அடக்குமுறைக் கருவி' என்ற உண்மையை மக்களுக்கு அனுபவபூர்வமாக புரிய வைத்து விடலாம் என்று நம்புகிறார்கள். இப்படியான செயல்கள் மூலம் அவர்கள் மத்தியிலிருந்து முன்னணியாளர்கள் சிலரைத் தமது "ஆயுதக் குழுக்களுக்கு' வென்றெடுக்கிறார்கள். இதுதான் மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்ட மாவோயிஸ்டுகள் வகுத்திருக்கும் வழிமுறை.
சில சிறப்பான நிலைமைகளில் ஆந்திரம் மற்றும் தண்டகாரண்யாவின் பழங்குடி மக்கள் மத்தியில் தாங்கள் பெற்றிருக்கும் ஆதரவைக் காட்டி, அதனை மக்களின் ஆயுதப் போராட்டம் என்று சித்தரிக்கிறார்கள் மாவோயிஸ்டுகள். இதையே நாடு முழுவதற்கும் விரிவாக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
அந்த மக்கள் ஆதரவின் தன்மை என்ன? அது அரசியல் ரீதியான ஆதரவல்ல. ""நம்முடைய கோரிக்கைகளுக்காக நக்சல்பாரிகள் உயிரைக் கொடுக்கிறார்கள்'' என்ற அறவுணர்வின் அடிப்படையில் பழங்குடி மக்கள் வழங்கும் ஆதரவு. இத்தகைய ஆதரவு மக்களிடம் அரசியல் உணர்வை வளர்ப்பதில்லை. மாறாக, அதனை இல்லாமல் செய்து, மக்களை வெறும் பார்வையாளர்களாக்கி விடுகிறது.
சமீபத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் அறிவித்த "பந்த்'இல் ஆந்திரத்தில் எவ்வித சம்பவமும் இல்லை என்கின்றன பத்திரிகைச் செய்திகள். சட்டிஸ்காரிலோ தொலைபேசி கோபுரம் தகர்ப்பு, மின் கோபுரம் தகர்ப்பு என்பன போன்ற சில இராணுவ நடவடிக்கைகள்தான் நடந்துள்ளன. மக்களின் அரசியல் உணர்வை அமைப்பாக்கிக் காட்டுகின்ற போராட்ட வடிவமான "பந்த்' என்ற நடவடிக்கை, செயலூக்கமிக்க பங்கேற்பின் மூலம் அவர்களுடைய வர்க்க உணர்வை இன்னும் மேம்பட்ட தளத்துக்கு உயர்த்தவேண்டிய ஒரு அரசியல் நடவடிக்கை, அதன் பொருளை இழந்து ஆளும் வர்க்கத்துக்கு "தொந்திரவு தரும் நடவடிக்கையாக'ச் சுருங்கிவிட்டதை நாம் காண்கிறோம்.
ஆந்திரத்தில் தங்கள் அமைப்பிற்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக ஒப்புக் கொள்கிறார் மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், தோழர் சோனு. (பீப்பிள்ஸ் மார்ச், ஜூலை, 2007) ஆனால், இந்தப் பின்னடைவு குறித்தும்கூட அவர்கள் இராணுவ ரீதியாகப் பரிசீலிக்கிறார்களேயன்றி, அரசியல்ரீதியாகப் பரிசீலிப்பதில்லை.
""அங்கே மாவோயிஸ்டுகள் ஏற்கெனவே நிலைநாட்டியிருப்பதாகக் கூறிக் கொள்ளும் "மக்கள் அதிகாரத்தைப்' பாதுகாத்துக் கொள்ள மக்கள் போராடுகிறார்களா? ராஜசேகர் ரெட்டி அரசுடன் பேச்சுவார்த்தை நடந்தபோது இலட்சக்கணக்கில் திரண்ட மக்கள், பேச்சு வார்த்தையின்போதே போலி மோதல் கொலைகளை அரசு தொடங்கியபோது, அதனை எதிர்த்து அவ்வாறு மக்கள் அணிதிரளாதது ஏன்? மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மிகுந்த ஆந்திரத்துக்கு, கடுமையான மக்கள் எதிர்ப்புகள் இன்றி புஷ் விஜயம் செய்ய முடிவது எப்படி? சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஆந்திரம் முன்னிலை வகிப்பதும், நாயுடுவைக் காட்டிலும் தீவிரமாகப் புதிய தாராளவாதக் கொள்கைகளை ரெட்டி அமல்படுத்த முடிவதும், இவற்றுக்கெல்லாம் எதிராக நந்திக்கிராமுடன் ஒப்பிடத்தக்க வகையிலான மக்கள் போராட்டங்கள் எதுவும் ஆந்திரத்தில் நடைபெறாமல் இருப்பதும் ஏன்?'' என்பன போன்ற கேள்விகளை அவர்கள் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்வதில்லை.
""அடக்குமுறை இருப்பதால் மக்கள் திரளவில்லை, இல்லையென்றால் மக்கள் திரளுவார்கள்'' என்ற எளிய சூத்திரத்தைச் சொல்லி ஆறுதல் அடைந்து கொள்கின்றனர். வரலாறு நெடுகிலும் நடந்திருக்கின்ற மக்களின் அரசியல் ரீதியான எழுச்சிகளோ, நம் கண் முன்னே காஷ்மீரிலும், மணிப்பூரிலும் ஏன், நந்திக்கிராமிலும் அடக்குமுறைகளை மீறிக் கிளர்ந்தெழும் மக்கள் எழுச்சிகளோ கூட (அவை வேறு யார் தலைமையிலானவையாக இருந்தாலும்) மாவோயிஸ்டுகளுடைய கண்களைத் திறக்கவில்லை. ஏனெனில், அவர்களுடைய சுத்த இராணுவக் கண்ணோட்டம், மக்களின் அரசியல் முன்முயற்சி பற்றிக் கவலைப்படுவதில்லை. "தமது ஆயுத நடவடிக்கைகளுக்கு உதவுவது' என்ற கோணத்தில் மட்டுமே மக்களின் ஆதரவு குறித்துக் கவலைப்படுகிறார்கள்.
""மாவோயிஸ்டுகளின் கொள்கைகளை மறைத்து விட்டு அவர்களை வெறும் ஆயுத மோகம் கொண்ட தீவிரவாதிகளாகக் காட்ட ஊடகங்கள் முயல்கின்றன'' என்று மாவோயிஸ்டு தமிழ் மாநிலக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. ஊடகங்கள் அவதூறு செய்வது இருக்கட்டும், உண்மை நிலவரமென்ன? "" ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பதுதான் ஒரு அமைப்பை புரட்சிகர அமைப்பு என்று மதிப்பிடுவதற்கான முன் நிபந்தனை'' என்று மாவோயிஸ்டு அமைப்பினர் கொண்டிருக்கும் கருத்துக்கும், சிறுபிள்ளைத்தனமான பெரியகுளம் ஆயுதப்போராட்டத் தயாரிப்புக்கும் வேறென்ன பொருள்? "புரட்சிகர அரசியலின் பௌதிக வடிவமே துப்பாக்கிதான்' என்று கருதும் சிந்தனைதானே இதில் வெளிப்படுகிறது!
""அரசியல் போராட்டத்தின் முதிர்ந்த வடிவம்தான் ஆயுதப்போராட்டம் என்பதையும், அரசியல் போராட்ட அனுபவத்தினூடாக ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை மக்கள் உணரச் செய்ய வேண்டும்'' என்று நாம் கூறுவதையும் மாவோயிஸ்டு அமைப்பினர் ஏளனத்துடன் மறுக்கிறார்கள். ""மக்கள் ஆயுதப்போராட்டத்துக்குத் தயாராகத்தான் இருக்கிறார்கள். சும்மா எத்தனை நாள் பேசிக்கொண்டே இருக்க முடியும்? நாம்தான் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்'' என்று அரசியலையே வீர வசனமாகச் சுருக்குகிறார்கள்.
மக்களைப் புரட்சிக்கு அணியமாக்குவதும், தலைமை தாங்குவதும்தான் கம்யூனிஸ்டுகளுக்குரிய பணியே அன்றி, மக்களின் சார்பாகப் புரட்சி செய்வதல்ல. புரட்சி என்பது ஆளும் வர்க்கங்களுடன் புரட்சியாளர்கள் "ஒண்டிக்கு ஒண்டி' நடத்தும் சண்டையும் அல்ல. ஆனால், மக்களுக்கு விடுதலையை "வழங்கப் பொறுப்பேற்றிருக்கும்' இடது சாகசவாதம் இப்படித்தான் கருதிக் கொள்கிறது.
வலது சந்தர்ப்பவாதிகளான போலி கம்யூனிஸ்டுகள் புரட்சிக்கு இழைக்கும் துரோகம் எளிதில் அம்பலமாகிவிடுகிறது. ஆனால், இடது சாகசவாதமும் புரட்சிக்கு இழப்பைத்தான் ஏற்படுத்துகிறது என்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை. சிறையையும் சித்திரவதையையும் சந்திக்கும் அந்தத் தோழர்களின் தனிப்பட்ட இழப்பாக மட்டுமே இது புரிந்து கொள்ளப்படுகிறது.
""பயங்கரவாதப் படையான அதிரடிப்படையை அனுப்புவதன் மூலம் மாவோயிஸ்டு புரட்சியாளர்களை மட்டுமல்ல, இச்சமூக அமைப்பை எதிர்த்துப் போராடும் அனைவரையும் மிரட்ட முயற்சிக்கிறார் கருணாநிதி'' என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது, மாவோயிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக் குழு.
உண்மைதான். ஆளும் வர்க்கத்தின் அடியாட்படையான அரசு எந்திரமும் அதிரடிப்படையும் மக்கள் அனைவரின் பொது எதிரி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், அந்த எதிரிப்படை தன்னை நாயகனாகச் சித்தரித்துக்கொள்ளவும், தன்னுடைய பயங்கரவாத நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொள்ளவும், புரட்சியாளர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவும் மாவோயிஸ்டுகளின் இந்த நடவடிக்கை எதிரிக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இது புரட்சிக்கு ஏற்படும் இழப்பு என்பதை இனிமேலாவது அவர்கள் புரிந்து கொள்ளப் போகிறார்களா என்பதுதான் கேள்வி.
— ஆசிரியர் குழு
Tuesday, August 28, 2007
அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்
சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...
அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்
தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடி இனத்தைச் சேராத ஒருவராலோ அல்லது ஒரு சிலராலோ இம்மக்கள் வசிக்கும் ஓர் இடத்திலோ அவர்கள் வந்துபோகும் இடங்களிலோ, வன்கொடுமைகள் இழைக்கப்படும் என்ற தகவலோ, அச்சுறுத்தலோ ஒரு அரசு நிர்வாக அமலாளர் மற்றும் போலீசு துணைக் கண்காணிப்பாளருக்குக் கிடைக்கும்போது, அச்செய்தியை அந்த அதிகாரிகள் உறுதி செய்து கொண்டு வன்கொடுமைகள் நடக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடி மக்களிடையே தமக்கு வன்கொடுமை ஆபத்து விளையாது என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை மாநில அரசு அதிகாரபூர்வ அரசிதழில் அறிவிப்பு செய்யவேண்டும் என்று வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் அறிவுறுத்துகிறது.
இச்சட்டத்தை பயனுள்ள முறையில் அமல் செய்வது மத்திய, மாநில அரசின் கடமைகள் என்று அறிவுறுத்தும் அதேசமயம், அதற்கான வழிவகைகளையும் நல்லெண்ணத்தோடு அந்த அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பும் அளிக்கிறது. அவ்வாறான நடவடிக்கை ஒன்றுக்காகவும் மத்திய, மாநில அரசுகளுக்கும் அவற்றின் அதிகாரிகளுக்கு எதிராகவும் உரிமையியல் வழக்கோ, உரிமைகள் வழக்கோ அல்லது வேறு சட்ட நடவடிக்கையோ ஏதும் தொடர முடியாது.
பின்வரும் நடவடிக்கைகளை இச்சட்டம் மாநில அரசுகளுக்குப் பரிந்துரைக்கிறது.
கொடுமைகளுக்கு ஆளானவர்களுக்கு சட்ட உதவி உட்பட போதிய வசதிகளுக்கு வகை செய்தல்; பாதிப்புற்றவர்களுக்கும் சாட்சிகளுக்கும் பயணச் செலவும் பராமரிப்புச் செலவும் கிடைக்க வகை செய்தல்; பொருளாதாரச் சமுதாயப் புனர்வாழ்விற்கு வகை செய்தல்; இச்சட்டத்தின் வழிவகைகளை மீறியதற்காக வழக்குத் தொடுப்பதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் அதிகாரிகளை நியமித்தல்; இச்சட்டத்தின்படியான நடவடிக்கைகளை வகுத்து அமல் செய்ய மாநில அரசுக்கு உதவும் பொருட்டு பொருத்தமான மட்டங்களில் குழுக்களை அமைத்தல்; இச்சட்டத்தின் வழிவகைகளை மேலும் சிறந்த முறையில் செயலாக்குவதற்கும் இவ்வழிவகைகள் இயங்கும் விதம் குறித்து ஆய்வு செய்வதற்கும் வகை செய்தல்; கொடுமைகளுக்கு ஆளாக்கப்படக் கூடிய பகுதிகளை இனங்கண்டு தகுந்த பாதுகாப்பை உறுதி செய்தல்.
மேலும், இச்சட்டத்தை அமலாக்குவதில் மத்திய அரசு செய்ய வேண்டிய பணிகளைப் பின்வருமாறு இச்சட்டமே பரிந்துரைக்கிறது. மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு அவசியமாகக் கூடியவற்றை மத்திய அரசு செய்யும்.
மத்திய அரசும் மாநில அரசுகளும் இச்சட்டத்தின்படி எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட சாதியினர் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்புச்) சட்டம், 1989ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்டிருந்தாலும், ஆறாண்டுகளுக்குப் பிறகுதான் அதாவது 1995ஆம் ஆண்டுதான் அச்சட்டத்தை அமலாக்குவதற்கான வழிவகைகளை வரையறுக்கும் விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) விதிகள், 1995 என்பது அதன்பெயர்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மீதான வன்செ யல்களைத் தடுக்கும் வகையில் அரசு மேற்கொள்ள வேண்டிய பதினோரு முன்னெச்சரிக்கை மற்றும் முன்தடுப்பு நடவடிக்கைகள் வகுத்துரைக்கப்பட்டுள்ளன.
வன்கொடுமை நிகழும் என நம்பும் அல்லது சந்தேகப்படும் இடங்களை அடையாளங்கண்டு, மாவட்ட குற்றவியல் நடுர் அல்லது போலீசுக் கண்காணிப்பாளர் அல்லது வேறு அலுவலர்களை அப்பகுதியைப் பார்வையிடும்படி ஆணையிட வேண்டும். தேவையெனில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களது வேலையாட்கள், குடும்ப நண்பர்கள் வைத்திருக்கும் உரிமத்தை முடக்கி வைக்க வேண்டும்; அத்தகைய ஆயுதங்களைக் கைப்பற்றி அரசு ஆயுதக் கிடங்கில் ஒப்படைக்க வேண்டும். அப்பகுதியில் எல்லா வெடிகளையும் பறிமுதல் செய்வதோடு வெடிபொருள் உற்பத்தியைத் தடை செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பளிப்பதற்காக அவசியம் எனில் அவர்களுக்கும் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமங்கள் வழங்க வேண்டும்.
இச்சட்டத்தின் விதிகளை அமலாக்குவதில் அரசுக்கு உதவிட அவசியம் எனில் மாநில, மாவட்ட அல்லது கோட்ட அளவிலான உயர்மட்டக் குழுக்களை அமைக்க வேண்டும். இச்சட்ட விதிமுறைகளைத் திறம்பட அமலாக்குவதற்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்கக் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழுக்களை அமைக்கவேண்டும். அப்பகுதிகளில் விழிப்புணர்வு மையங்களை அமைத்து, பணியரங்குகளை நடத்தி மத்திய, மாநில அரசுகளின் சட்டம், விதிகள், நடைமுறைகள் மற்றும் திட்டங்கள் மூலம் அம்மக்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள், பாதுகாப்புக் குறித்து விளக்க வேண்டும். இவ்வாறு செய்யும் அரசு சாரா அமைப்புகளுக்குத் தேவையான நிதி மற்றும் இதர உதவிகளை அளித்து ஊக்குவிக்க வேண்டும். அடையாளம் காணப்படும் பகுதிகளில் சிறப்புக் காவல் படையை நிறுத்த வேண்டும்.
காலாண்டுக்கு ஒருமுறை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், இச்சட்டத்தின் விதிகளை அமலாக்குவதற்குப் பொறுப்பான அதிகாரிகள் அமைப்புகளின் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை நடத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்மட்ட வழக்கறிஞர்களின் குழு ஒன்றை மாவட்டக் குற்றவியல் நடுவர் அளிக்கும் பரிந்துரையின்படி மாநில அரசு நியமிக்கவேண்டும். அதோடு வழக்குகளுக்குப் பொறுப்புள்ள விசாரணை இயக்குநரின் ஆலோசனையின் பேரில் அரசு குற்றவியல் வழக்குரைஞர் குழு ஒன்றும் அமைக்க வேண்டும். இவ்விரு குழுக்களும் மூன்றாண்டுகளுக்குப் பொறுப்பு வகிக்கும். மாவட்ட குற்றவியல் நடுவர் மற்றும் விசாரணை இயக்குநர் வருடத்திற்கு இரண்டு முறை வழக்குகளின் நிலவரம், அரசு குற்றவியல் வழக்கறிஞர்களின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து மாநில அரசுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும். பதிவு செய்யப்படும் வழக்கு விவரங்களை ஒவ்வொரு மாதமும் மாநில அரசுக்கு அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமைகள் நடந்தால் மேற்படி அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதியை உடனடியாக நேரடியாகப் பார்வையிட்டு ஏற்பட்ட பாதிப்பு, உயிரிழந்தவர்களின் விவரம், சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அரசுக்கு அறிக்கை தரவேண்டும். வன்கொடுமை பரவியுள்ள பகுதிகளில் தீவிர போலீசு ரோந்துக்கு ஆணையிட வேண்டும். உயிரிழந்தவர்களின் அனுதாபிகள் மற்றும் சாட்சிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும்.
வன்கொடுமைக் குற்றத்தை போலீசு கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத ஒருவர்தான் புலனாய்வு செய்ய வேண்டும். கடந்தகால அனுபவம், நேர்மை, கடமை உணர்வு அடிப்படையில் இந்தப் புலனாய்வு அதிகாரியை மாநில அரசு, போலீசுத் தலைமை இயக்குநர் மூலம் நியமித்து, 30 நாட்களுக்குள் புலனாய்வை முடித்து அறிக்கை பெற வேண்டும். ஒவ்வொரு காலாண்டும் மாநில உள்துறைச் செயலர், சமூகநலச் செயலர், விசாரணை இயக்குநர், விசாரணைப் பொறுப்பு அதிகாரி, போலீசுத் தலைமை இயக்குநர் ஆகியோர் பரிசீலனை செய்ய வேண்டும்.
வன்கொடுமைக் குற்றங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புக் குழு ஒன்றை மாநிலத் தலைநகரங்களில், போலீசு தலைமை ஆய்வாளர் பொறுப்பில் மாநில அரசு நியமிக்க வேண்டும். அக்குழுவானது குற்றங்கள் நடக்கும் என்று அடையாளம் காணப்படும் பகுதியில் ஆய்வு செய்து, பொது அமைதியை நிர்வகிக்க வேண்டும். அப்பகுதியில் சிறப்புக் காவல் படையை நிறுத்தவும் சிறப்புக் காவல் சாவடியை அமைக்கவும் ஏற்பாடு செய்யவேண்டும்.
குற்றங்களுக்குச் சரியான அடிப்படைக் காரணம் குறித்துப் புலனாய்வு செய்வதோடு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மத்தியில் பாதுகாப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்பகுதியின் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்துத் தலைமை மற்றும் சிறப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தந்து, அவர்களிடம் விசாரணையும் செய்ய வேண்டும். குற்றங்களைப் பதிவு செய்வதோடு, வழக்குகள் குறித்து அதிகாரிகள் அலட்சியம் காட்டினால் விசாரிப்பதோடு வழக்குகளின் நிலவரம் குறித்து மறுபரிசீலனை செய்வேண்டும். மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் மாநில அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
இச்சட்டத்தின் விதிமுறைகளை அமலாக்கும் பொறுப்பு வகிக்கும் குற்றவியல் நடுவர் மற்றும் போலீசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக மாநில அரசின் செயலர் பதவிக்கு இணையான உயர் அதிகாரியை மாநில அரசு நியமிக்க வேண்டும். அதேபோல மாவட்டக் குற்றவியல் நடுவர் பதவிக்குக் குறையாத ஒருவரை மாவட்டச் சிறப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். இந்த அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினராக இருக்க வேண்டும்.
மாநில உயரதிகாரியானவர், இச்சட்ட விதிகளின்படி மாநில அரசு பெறும் அறிக்கைகளைப் பரிசீலிப்பது, வழக்குகளின் நிலவரங்களைப் பரிசீலிப்பது, குற்றங்கள் நடக்கும் பகுதிகளில் சட்டம்ஒழுங்கு நிலவரங்களைப் பரிசீலிப்பது ஆகியவற்றைச் செய்ய வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் உடனடி நிவாரணம் மற்றும் இதர உதவிகளைப் பரிசீலிக்க வேண்டும். அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் தேவையான ரேசன், உடை, தங்கும் வசதி, சட்ட உதவி, பயணப்படி, தினசரிப்படி, போக்குவரத்து போன்ற வசதிகளைப் பரிசீலித்து போதிய அளவு அளிக்க வேண்டும். அரசு சாரா அமைப்புகள், பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் இச்சட்ட அமலாக்க அதிகாரிகள் ஆகியோரின் செயல்பாடுகளைப் பரிசீலிக்க வேண்டும்.
மாவட்ட சிறப்பு அதிகாரியானவர்கள் குற்றங்கள் நிகழும் பகுதி அல்லது மாவட்டத் தலைமையகங்களில் விழிப்புணர்வு மையங்களை அமைத்து மத்திய, மாநில அரசுகளின் சட்டதிட்டங்களால் கிடைக்கும் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் பிற உதவிகள் குறித்து பணியரங்குகள் மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு விளக்க வேண்டும். இம்மையங்களை நிர்வகிப்பது அல்லது பணியரங்குகளை நடத்துவதற்காக அரசு சாரா அமைப்புகளுக்குத் தேவையான நிதி மற்றும் பிற உதவிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் மற்றும் சார்ந்திருப்பவர்களுக்குப் பயணப்படி, தினசரிப்படி, நிர்வாகச் செலவு, பராமரிப்புச் செலவு மற்றும் போக்குவரத்து வசதிகளை மாநில அரசு செய்து தரவேண்டும். பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவச் செலவு, அவசியமான உடைகள், உணவு மற்றும் பழங்கள், போக்குவரத்து ஆகியனவற்றுக்கு அவர்களே செய்த செலவுகளைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
இச்சட்டத்தை அமலாக்குவதில் மாவட்ட நிர்வாகத்திற்குள்ள ஏழு பணிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் உதவி செய்வது; உடனடியாகப் புலனாய்வு அதிகாரியை நியமிப்பது; அப்பகுதியில் காவல்படையை நிறுத்துவதோடு மீண்டும் குற்றங்கள் நடக்காதவாறு நடவடிக்கை எடுப்பது; பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர், உடை, தங்குமிடம், மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அவர்களின் இழப்புகளுக்குத் தகுந்த நட்டஈடு அடங்கிய நிவாரணம் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இச்சட்டத்தை அமலாக்க நியமிக்கப்படும் அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் பிரச்சினைகளையும் புரிந்து கொள்ளும் திறமுள்ளவராக இருக்க வேண்டும்; நிர்வாகம், காவல்நிலையம், காவல் சாவடி ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்பதை மாநில அரசு உறுதி செய்யவேண்டும்.
பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வசதிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு தனது ஆண்டு வரவு செலவு திட்டத்தில் செய்யவேண்டும். இச்சட்டத்தை அமலாக்குவது குறித்த பல்வேறு அறிக்கைகளைத் தவறாது பரிசீலிப்பதோடு மாநில அரசு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மறுபரிசீலனையும் செய்யவேண்டும்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய நிவாரணத் திட்டங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. உடனடி நிவாரணமாக பணம் மற்றும் பிற உதவிகள் வழங்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசுப் பணியில் வேலை அளிக்க வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட விதவைகள், உயரிழந்தவர்களின் குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் அல்லது வயதானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டாய நட்டஈடும், சமூகப் பொருளாதார, நிரந்தர வீட்டு வசதி ஆகியவை ஏற்படுத்த வேண்டும். அம்மக்கள் வாழும் பகுதிகளில் சுகாதாரம், இன்றியமையாப் பொருட்கள் வழங்கல், மின்சாரம், குடிநீர், மயானப் பாதை மற்றும் சாலை வசதிகளைச் செய்துர வேண்டும். இவற்றுக்கும் மேலும் எதிர்பாரா செலவினங்களுக்கும் திட்டம் வகுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு மாநில அளவிலும் 25 பேர் கொண்ட உயர்மட்டக் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு அமைக்க வேண்டும். மாநில முதல்வர் அதன் நிர்வாகியாகவும் தலைவராகவும் இருப்பார். உள்துறை மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள் அதன் உறுப்பினர்களாக இருப்பர். இவர்களோடு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அக்குழு உறுப்பினர்களாக இருப்பர். மேலும் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், போலீசுத் தலைமை இயக்குநர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணைய இயக்குநர் துணை இயக்குநர்களும் இக்குழுவில் இருப்பர். அம்மக்களின் மேம்பாடு மற்றும் நலவாழ்வுக்கான பொறுப்புச் செயலர் அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். மாநில அரசு பெறும் பல்வேறு அறிக்கைகளையம் சட்ட விதி அமலாக்கம், வழக்குகள், நிவாரணங்கள் ஆகியவற்றை ஆண்டுக்கு இருமுறை இக்குழு பரிசீலிக்கும்.
இதேபோல மாவட்ட அளவில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக்கான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு செயல்படும். நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்கள், போலீசுத் துறை கண்காணிப்பாளர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாநில அரசின் "ஏ' பிரிவு அதிகாரிகள் மூவர், அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள், அதே வகுப்பைச் சேர்ந்த அரசுசாரா அமைப்புகளின் 5 பிரதிநிதிகள், அந்த அமைப்புகளைச் சேர்ந்த ஆனால் அந்த வகுப்புகளைச் சாரா 3 உறுப்பினர்கள் ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பர். மாவட்டக் குற்றவியல் நடுவர் தலைவராகவும், சமூகநல அதிகாரி செயலராகவும் செயல்படுவர்.
நாட்டின் எந்தவொரு சமூகப் பிரிவினருக்காகவும் இவ்வளவு விரிவாகவும், நுட்பமாகவும், ஆழமாகவும் அக்கறை காட்டும் வகையிலான "கடுமை'யான சட்டம் கிடையாது. இப்படிப்பட்ட சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகளாகிறது. இந்த 18 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு நேரும் வன்கொடுமைகளை இந்தியாவிலுள்ள மத்திய, மாநில அரசுகளும் அதிகாரிகளும் எவ்வாறு அமலாக்கியுள்ளனர் என்பதைப் பார்ப்போம்.
தொடரும்
Monday, August 27, 2007
தொடர்ச்சியாக நடக்கும் வாள் வெட்டுகள் கோடாலி கொத்துகள்
பி.இரயாகரன்
27.08.2007
தமிழ் சமூகத்தினை நாடி பிடித்து பார்க்கும் அளவுக்கு, இதன் விளைவு வக்கிரமாகவே வெளிப்படுகின்றது. ஒரு மனிதனை கோடாலி கொண்டு கொத்தவும், வாள் கொண்டு கண்ட துண்டமாக வெட்டவும் முடியும் என்பதை, தமிழ் சமூகம் மீண்டும் மீண்டும் தனது சொந்த வாழ்வியலில் நிறுவி வருகின்றது. எம் மண்ணில் தலையை வெட்டுவது, உடலைக் கொத்துவது, அடித்துக் கொல்வது முதல் பற்பல வகையான சித்திரவதைகளை செய்வது, அன்றாட அரசியல் நிகழ்வாகி நிற்கின்றது. இதைத் தமிழ் தேசிய அரசியலாக, ஜனநாயக மீட்பாக நியாயப்படுத்துகின்ற ஒரு சமூகத்தில் இருந்து வந்த புலம்பெயர் தமிழ் சமூகத்திலும், இந்த வன்முறை இயல்பானது இயற்கையானது.
அண்மையில் நோர்வேயில் நடைபெற்ற வாள்வெட்டும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் இதில் ஒன்று. இந்தச் சம்பவம் நோர்வேஜிய சமூகத்தையே உலுக்கிவிட்டது. சமாதானம் அமைதி என்ற பெயரில் ஏகாதிபத்திய நோர்வே, இலங்கையில் தலையிட்டு. புலிகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் நோர்வே நிகழ்வும், அதற்கான எதிர்வினையும் சற்று வேறுபட்டதாகியது.
புலிகளுக்கு பல வழிகளில் பணத்தை மறைமுகமாக கொடுக்கின்ற நோர்வே அதிகார மட்டங்களும், அதனுடன் தொடர்புடைய புலிப் பினாமிகளும் அதிர்ந்து போனார்கள். புலிகளுக்கு தொடர்பு உண்டா இல்லையா என்றான கேள்வி, சந்தேகம் சகல மட்டத்திலும் இன்று மேல் எழுந்துள்ளது.
இந்த நிலையில் புலிகள் செய்ததாக புலியெதிர்ப்பு சதிக் கும்பல், இணையத்தில் பேண்டனர். மறுபக்கத்தில் புலிகள் தாம் வன்முறையற்றவராக, நல்ல பிள்ளையாக காட்டிக்கொள்ள படாத பாடுபட்டனர். புலிப்பினாமிகளாக நோர்வே அரசியலில் ஈடுபட்டு, பணத்தை திருடும் புலி அரசியல்வாதிகள், ஜயோ தமிழனுக்கே அவமானம் என்று ஒப்பாரி வைத்தனர். நோர்வேஜிய அரசியல் மூலம் பணம் திருடும் இந்த தொழில்முறை வேஷதாரிகள், தமது சொந்த கறைபடிந்த கையைப்பிசைந்து கொண்டனர்.
இப்படியாக இந்த வன்முறைக்கான சூழலை கவனமாக பாதுகாத்துக் கொண்டனர். அந்த அரசியலில் நின்று, சூதுவாதற்ற தமிழ் சமூகம் பற்றி சுய புராணம் பாடத்தொடங்கினர்.
புலிகள் இதை புலிக்கெதிரான சதி என்றனர்.மறுபக்கத்தில் புலியெதிர்ப்புக் கும்பல் இதை புலிக்குள்ளான சண்டை என்றனர்.
இப்படி இந்த வன்முறையை ஆதரிக்கின்ற, நியாயப்படுத்துகின்ற, தாம் அல்லாத ஒன்றாக காட்டுகின்ற எல்லைக்குள் அரசியல் விபச்சாரம் செய்தனர். பாவம் தமிழ் மக்கள். இந்த அரசியல் போக்கால் மக்கள் சந்திக்கின்ற துயரமும், அவலமும் எல்லையற்றது. இதிவொன்று தான் இந்த வன்முறை.
புலம்பெயர் சமூகத்தின் இயக்கமல்லாத கோஸ்டிகளுக்கு இடையிலான வன்முறை என்பது சர்வ சாதாரணமாக உள்ளது. கனடா, பிரான்ஸ், இலண்டன், சுவிஸ் என்பன, முக்கியமான வன்முறை மையங்களாக உள்ளது. வருடாந்தம் இவர்களின் வன்முறை வரவுசெலவு போல் நீண்டது.
இந்த புலம்பெயர் வன்முறை என்பது வெட்டுக் கொத்து, கடத்தல், அடிதடி, துப்பாக்கிச் சூடு முதல் பற்பல விதமானது. அது வக்கிரமானது கூட.
இந்த கோஸ்டிகளின் இருப்பும், அதன் வாழ்வும் பொதுவான புலிகளின் பாசிச அரசியல் நீரோட்டத்துடன் ஒன்று கலந்தது. புலிகளுக்கு இந்த மாதிரி கோஸ்ட்டிகளின் தேவை அவர்களின் அரசியல் தேவையுடன் பின்னிப்பிணைந்தது. இதனால் அதைச் சார்ந்தும், ஆதரித்தும், உசுப்பியும் விடுகின்றனர். தாம் நேரடியாக சாதிக்க முடியாதவைகளை சாதிக்கின்ற எல்லையில், அரசியல் ரீதியாக புலிகள் இதைப் பயன்படுத்துகின்றனர், வளர்க்கின்றனர். அத்துடன் அரசியல் ரீதியாக இந்த வன்முறையை, தமது சொந்த அரசியல் நீரோட்டத்தின் போக்கில் பாதுகாக்கின்றனர்.
இந்த கோஸ்டிகளின் இருப்பு, அடிப்படையில் ரவுடிகளானது. ரவுடிசம் என்பது, தமிழ் சமூகத்தில் எதுவென்று பகுத்து பார்க்க முடியாத சூனியமான அரசியல் சூழலில் நிலவுகின்றது. இப்படி இன்று ரவுடிசமே எங்கும் எதிலும் வாழ்க்கையாகவே கலந்து கிடக்கின்ற சூழல், வரைமுறையற்ற ரவுடிசத்தின் விளைநிலமாக உள்ளது. தமிழ் கலாச்சாரம், பண்பாடு என்பது எதுவென்று தெரியாது, மேல் இருந்து பெண்ணுக்கு மட்டும் திணிக்கும் பாலியல் ஒழுக்கமாக மட்டும் சிதைந்துவிட்டது. ஒரு குறுகிய மனப்பாங்காக, கலாச்சாரமும் பண்பாடும் மேல் இருந்து அறிவியலுக்கு புறம்பாக வன்முறை மூலம் திணிக்கப்படுகின்றது. குழந்தை தமிழ் சமூகத்திடம் பெறுவது இது தான். குழந்தை இயல்பாக தமிழ் சமூகத்திடம் பெறுவதற்க்கு வேறு எதுவும் இருப்பதில்லை. இயல்பாக குழந்தை தமிழ் சமூகத்தில் இருந்து அன்னியமாகின்றது. வக்கிரமான உள்ளடகத்தில் இது பிரதிபலிக்கத் தொடங்குகின்றது. இந்த நிலையில் புலம்பெயர் நாட்டுக்கான கலாச்சாரத்தை அக்குழந்தைப் பெறத்தவறின், உதிரியான வன்முறைகொண்ட அராஜகக் கும்பல்கள் உருவாகின்றது. உண்மையில் தமிழ் மற்றும் புலம்பெயர் நாடுகளின் பண்பாட்டை கலாச்சாரத்தை இழக்கின்ற போது, அராஜகத்தனமே வாழ்வாகின்றது.
இதற்குரிய சூழல், எமது இன்றைய அரசியல் சூழலுடன் தொடர்புடையது. தமிழ் இனம் கடந்த முன்று பத்தாண்டுகள் வெளி மற்றும் உள் வன்முறைக்குள்ளானதன் விளைவால், இயல்பாகவே சமூகம் வக்கிரமடைந்து விட்டது.
தமிழ் மக்களின் வாழ்வு என்பது வன்முறையை சந்திப்பதும், வன்முறையை ஆதரிப்பதுமாகிவிட்டது. வாழ்வுக்காக போராடுவதை மறுத்து, வாழ்வை அழிக்கின்ற வன்முறைக்கு உட்படுவதும் அதற்கு துணைபோவதுமாகிவிட்டது. இதற்கு வெளியில் தமிழ் சமூகம் எதையும் சிந்திக்க, செயல்படுத்த முடியாத உள் மற்றும் புறச் சூழல். இது வன்முறை மூலம் உருவாக்கப்படுகின்றது. தமிழ் சமூகம் தனது சொந்த சுயத்தை குறுகிய குழுக்களிடம் இழந்துவிட்டது.
இதன் அரசியல் என்பது நியாயமான மனித வாழ்வுக்கான போராட்டத்தை நிராகரிக்கின்றது. மாறாக வாழ்வை மறுக்கின்ற உள் வன்முறையை ஆதரிக்கின்றது. இதன் எதிர் அரசியலோ, வெளி வன்முறையை ஆதரிக்கின்றது. இதுவே தமிழ் சமூகத்தின் மொழி முதல் அனைத்து அசைவுகளுமாகிவிட்டது.
தமிழ் சமூகத்தின் மீதான உள் வன்முறை மீதான நேசிப்பு, நியாயப்படுத்தல் மட்டும் தான், தியாகமாக போராட்டமாக திணிக்கப்பட்டு மெச்சப்படுகின்றது. சமூகம் தமது சொந்த அபிப்பிராயத்தை தெரிவிக்கவும், விமர்சிக்கவும் முடியாது. தமிழ் சமூகம் எந்த கருத்துமின்றி, மலடாக்கப்பட்டுவிட்டது.
ஒற்றைப் பரிணாமத்தில் திணிக்கப்படும் மொழி, சொற்கோவைகளுக்கு வெளியில் எந்த மொழியாடலும் செய்ய முடியாது. அறிவற்ற குருட்டுக் கூட்டமாக வாழ்வது தான், தமிழ் தேசியமாக கற்பிக்கப்பட்டு அது வன்முறையாக தமிழ் சமூகத்தின் மீது ஏறி உட்கார்ந்துள்ளது.
இந்த சமூக அமைப்பில் மொழி என்பது வன்முறை கொண்டது. அதன் பார்வை வன்முறை கொண்டது. அதன் இயக்கமே வன்முறை கொண்டது.
சமூகமாக வாழ்வதற்கான சொந்த சமூக அடிப்படையை இழந்துவிட்டது. உதிரியான வன்முறை கொண்ட, தனிமனிதர்களாக வெறும் சடலங்களாக வாழ்வதே உயிர் வாழ்வாகிவிட்டது. மற்றவன் மரணத்தில் மகிழ்ச்சியடைகின்ற வக்கிரம் புகுந்துவிட்டது. அதில் வாழ நினைக்கின்ற, வாழ்கின்ற அரசியலோ வன்முறையை அடிப்படையாக கொண்டது.
எம் மண்ணில் இதுவே அரசியல் இயக்கத்தில் புரையோடிவிட்டது. அது சித்திரவதையாக, கடத்தலாக, கொலைகளாக, தூசண மொழியாடலாக வக்கிரப்பட்டு அன்றாடம் வெளிப்படுகின்றது. அதன் வாரிசுகள் புலம்பெயர் மண்ணில் ரவுடிகளாகிவிடுகின்றனர். புலம்பெயர் நாட்டில் சட்ட திட்டத்துக்கு கட்டுப்படுத்தப்படுவதால், உதிரியான லும்பன் கோட்ஸ்டிகளாக ரவுடிகளாக உருவாகின்றனர். இவர்களோ மண்ணில் இயக்கங்களின் உள்ளே இருக்கின்றனர்.
எம் மண்ணில் ரவுடிசம் முதல் மாபியாத்தனம் வரை அரசியலாக, அதன் செயல்பாடாகிவிட்ட நிலையில், புலம்பெயர் நாட்டிலோ அது கோரமாக வெளிப்படுகின்றது.
இதில் உள்ள சோகம் என்னவென்றால், தந்தைமார் மற்றவனைக் கொல்வதை ஆதரித்து நிற்கின்றனர். குழந்தைகள் தமக்கு இடையில் அடிதடியில் ஈடுபடுகின்றனர். இந்த அடிதடி வன்முறையில் ஈடுபடுபவர்களின் அநேக குடும்பங்கள், சமூகத்தின் உள்ளான வன்முறையின் தீவிரமான ஆதரவாளராக இருக்கின்றனர். சமூகத்தினுள்ளான உள் வன்முறையை நியாயப்படுத்துகின்ற, அதை ஆதரிக்கின்ற, வக்கரித்து உறுமுகின்ற, (தூசண) மொழி வன்முறையை கையாளுகின்றவர்களாக இருக்கின்றனர். வன்முறையை வாழ்வாக ரசிக்கின்ற குடும்பச் சூழல், குழந்தைகளை லும்பன் தனமான வன்முறை வாழ்வுக்குள் இட்டுச்செல்லுகின்றது.
புலம்பெயர் நாட்டில் வன்முறைக்கான சூழல், புலியின் (புலியெதிர்ப்பு) அரசியல் நீரோட்டத்தில் வடிகாலாகவே பொதுவாக உள்ளது. மக்கள் வாழ்வதற்காக தாம் போராடுவதை மறுத்து இது அரங்கேறுகின்றது.
1. போராட்டம் என்ற பெயரில் மக்கள் வாழ்வதற்கான அடிப்படையான போராட்டத்தை நிராகரித்து, வாழ்வை மறுக்கின்ற வன்முறையைச் சார்ந்தே புலம்பெயர் வன்முறை உருவாகின்றது
2. இந்த உதிரிகளை குழுக்களாக ஒருங்கிணைக்கும் இடம் தமிழ் பாடசாலைகளே. தமிழ் பாடசாலைகளின் நோக்கம் என்பது, தமிழ் மக்களிடம் பணம் அறவிடவும், தமிழ் மக்களை புலியின் கட்டுப்பாட்டில் வைத்து கண்காணிக்கும் அமைப்பு என்ற எல்லைக்கு உட்பட்டதே. இதனால் அது தமிழ் மொழி என்ற பெயரில், வன்முறையை நியாயப்படுத்தி, அதை கண்ணை மூடிக்கொண்டு குருட்டுத்தனமாக ஆதரிக்க கோருகின்றது. கல்வி என்ற பெயரில் வன்முறையை அரசியலாக கொண்டு ஒரு கும்பலின் சுயநலத்தை, நியாயப்படுத்த பாடசாலைகள் உதவுகின்றது. இங்கு கற்க வரும் ஒருவன் இந்த வன்முறையை கற்பதுடன், வன்முறை செய்யும் குழுவுக்குரிய நபர்களையும் அங்கு இனம் காண்கின்றான். குறிப்பாக இளம் பெண்களை கவர, இளைஞர் கும்பல் கல்வியின் பெயரில் இங்கு கொக்கரிக்கின்றனர்.
3. வன்முறைக்குரிய குழுச் சேர்தலை இணைக்கும் மற்றொரு இடம் தமிழ் கடைகள். எப்படி குடிகாரர்களையும் சூதாடிகளையும் சில கடைகள் வாடிக்கையாளராக உருவாக்கி கடையை அண்டி வாழ வைக்கின்றனரோ, அப்படித் தான் வன்முறைக் கும்பல் கடைகளின் முன்னால் நிலையாக கூடிவிடுகின்றனர்.
4. அடுத்து வன்முறையை கதாநாயகத் தன்மையுடன் வாழ்வாக தூண்டும் தமிழ் சினிமா. காதல் முதல் பொருட்களை அடையும் வழிகள் குறுக்குவழியைக் கொண்டது. அதாவது வன்முறை கொண்டதும், லும்பன் தனமான வக்கிரத்தினால் சினிமாவே வாழ்வாகின்றது. இந்த சினிமா தான் புலம்பெயர் சமூகத்தின் பொழுது போக்கு. இது வன்முறையை ஊட்டி வளர்க்கின்றது. இதை பொதுவான தமிழ் அரசியல் விமர்சிப்பது கிடையாது. அதற்கு எதிரான போக்கு என்பது, தமக்கு எதிரான போக்காக கற்பிக்கின்ற அரசியல் வன்முறை.
5. குடும்ப வன்முறையை தூண்டுகின்ற நாடகங்கள். கும்பத்தில் தாய், தந்தை, மனைவி, கணவன், குழந்தை, சகோதரர், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஒருவருக்கு ஒருவர் எதிரியாக்கி வன்முறையை தூண்டுகின்றது. சதா மற்றவர் மீது பிழையை தேடிப் கண்டுபிடிக்கும் நாடகங்கள், சதியாக முதுகுக்கு பின்பாக வன்முறையை தூண்டுகின்றது. சதா தூற்றுதலும், புறுபுறுப்பையும் கொண்டு, மற்றவன் மீது சந்தேகத்தை ஊட்டுகின்ற கண்காணிக்கின்ற வாழ்வை நாடகம் திணிக்கின்றது. இது சதியை தூண்டுகின்ற வகையில், குடும்பத்தை வன்முறையின் களமாக்குகின்றது. இந்த நிலமையை தமிழ் தேசிய அரசியல் பாதுகாக்கின்றதன் மூலம், தனது சொந்த பாசிச வன்முறையை பாதுகாக்க முடியும் என்ற அரசியல் நிலை. இது உதிரியான வன்முறை கோஸ்டிகளுக்குரிய, அடித்தளங்களில் ஒன்றாகும்.
பொதுவாக இந்த கோஸ்ட்டிகளின் சண்டைக்குரிய காரணங்கள் அற்பத்தனமாக இருந்த போதும், வக்கிரம் கொண்டது.
1. தன்னை கதாநாயகனாக காட்டுகின்ற அற்ப வழியில் இந்த வன்முறையை கையில் எடுக்கின்றனர். எந்த சமூகநீதியுமற்ற கதாநாயகத் தனம், தனது சமூக விரோதச் செயலாக வக்கரிக்கின்றது.
2. ஒரு தலைப்பட்சமாக ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் ஒரு பெண்ணை அடைகின்ற குறுக்கு வழியில், இந்த வன்முறை உருவாகின்றது
3. பெண்ணை கட்டாயப்படுத்தி அடைய முனைகின்ற பொறுக்கித்தனமான தரம்கெட்ட செயல்கள், வன்முறையாக உருவாகின்றது
4. எந்த உழைப்புமின்றி வீதியில் நிற்கின்ற இந்த கோமாளித்தனத்தை, அதன் குரங்குச் சேட்டையை மற்றவன் திரும்பிப் பார்த்தால், என்ன பார்வை என்று முறுகும் ரவுடித்தனம் இது இரண்டு ரவடிகளுக்கு இடையிலானதாக இருந்தால் வன்முறையாக வெடிக்கும்.
5. உழைப்பில் ஈடுபடாத இந்த புறம்போக்கு ரவுடிகள், பெற்றோரிடம் இருந்து பெறும் சொகுசைக் கொண்டு வெளிப்படுத்துகின்ற வக்கிரமான கேவலமான கோமாளித்தனமான நடத்தையும் வன்முறை வடிவம் பெறுகின்றது.
6. இந்த ரவுடிகளை சார்ந்து இயங்கும் கோயில்கள், சினிமா தியேட்டர்களில் ஏற்படும் முறுகல்கள், வன்முறைக்குள்ளாகின்றது.
7. பொதுவான அரசியல் ஆதரவுடன் இயங்கும் கும்பலின் வன்முறை சார்ந்த அதிகாரத் திமிர் வன்முறையாகின்றது.
மனிதம், மனிதத்தன்மையற்ற நடத்தைகள் இதன் பொது வெளிப்பாடாகின்றது. மொழியில் சாதாரணமாக உரையாடத் தெரியாத, மற்றவனுடன் பழகத் தெரியாத, மற்றவன் கருத்தை கேட்ட முடியாத, மனிதத்தன்மையை கொண்டிராத, ஜனநாயக பன்மைத் தன்மை கொண்டிராத உதிரிகள், கும்பலாக சேர்ந்து நடத்துகின்ற நடத்தைகள், தமிழ் சமூகத்தில் ஒரு கரும்புள்ளியல்ல.
ஒரு சிறிய பிரிவுதான் இதில் ஈடுபடுகின்றது என்று கூறிக்கொண்டு, பலரும் தப்பித்துக்கொள்ள முனைகின்றனர். இந்த அற்பத்தனமான மனிதர்கள் அனைவரும், இந்த வன்முறைக்குரிய சூழலை பாதுகாப்பவர்கள் தான். வாழ்வுக்காக போராடுவதை நிராகரிக்கும் சமூக அற்பத்தனம். குறுகிய குறுங்குழுவாத குழுக்களின் பாசிச மனிதவிரோத நடத்தைகளை (புலிகள் மற்றும் புலியெதிர்ப்பு குழுக்கள்) முன்னிலைப்படுத்திய ஒரு வன்முறையில், இதை அனுசரித்து போகின்ற வகையில், தன்னையும், தனது நிலையை பெருமையாக பீற்றித் தன்னை அற்பத்தனமாக நிலைநிறுத்தியுள்ளது. புலிகள், புலியெதிர்ப்பு என்று இரு பாசிச கும்பலும், இதற்குள் தான் அரசியல் செய்கின்றனர். மக்கள் மீது எந்த நம்பிக்கையுமற்ற இந்தக் கும்பல்களின் அரசியல், வன்முறையை அடிப்படையாக கொண்டது. சமூகத்தின் நியாயமான போராட்டங்களை எதிர்ப்பதிலும் ஒடுக்குவதிலும் தான், இவர்களின் அரசியல் வன்முறையாக நீடிக்கின்றது.
இந்த சமூகம் ஒரு சில சம்பவமாக இதைக் காட்டுகின்ற அரசியல் தளம், கேடுகெட்ட வன்முறை கோட்பாட்டாலானது. தொப்பியை அளவாக வெட்டி மற்றவன் மீது போடுகின்ற, அற்பத்தனத்திலானது. இந்தப் போக்கு நீடிக்கும் வரை, இந்த உதிரியான லும்பன்தனமான வன்முறையும் அரசியல் ரீதியாகவே நீடிக்கும்.
ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டிய கேள்விகள் அடிப்படையானது.
1. இந்த வன்முறைக்கான சூழல் என்ன?
2. இந்த வன்முறைக்குரிய குழுக்களை, அதன் இணைப்பை உருவாக்குகின்ற இடம், சூழல் எது?
3. இதற்கு எதிராக எப்படி, எதை நாம் செய்யப்போகின்றோம்?
4. எனது குழந்தை, எனது சகோதரன், எனது உறவினன், இதில் ஈடுபடமாட்டான் என்று, எந்த வகையில் நாம் இதை தடுத்து நிறுத்தியுள்ளோம்.
மனம் திறந்த விவாதங்கள், விமர்சனங்கள் இன்றி, சமூக உறுப்பினர்கள் தமக்கிடையில் இதை போட்டு சுக்குநூறாக உடைக்காத வரை, வன்முறைக்குரிய சூழல் தொடர்ச்சியாக அரசியல் ரீதியாகவே பாதுகாக்கப்படும்.