தமிழ் அரங்கம்

Saturday, November 3, 2007

சீன சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்:சீழ் பிடித்து நாறும் இரணங்கள்

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் மறுகாலனியக் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்தி வரும் ஆட்சியாளர்கள், இதற்கு சீனாவை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்கள். சாதாரண மீன்பிடி கிராமமாக இருந்த சீனாவின் ஷென்சென் இன்று ஆலைகள், அலுவலகங்கள், அடுக்குமாடிக் கட்டிடங்கள் வர்த்தக நிறுவனங்கள் என பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றதற்கு அங்கு நிறுவப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம்தான் காரணம் என்று விளக்கமளிக்கிறார்கள். முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளோ, சீனாவைப் போல வளர்ச்சியைச் சாதிக்க வேண்டுமானால் இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை விரிவாகக் கட்டியமைக்க வேண்டியது அவசியம் என்று வாதிடுகின்றனர்.

""சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் மாபெரும் வளர்ச்சியைச் சாதிப்பதில் சீனா ஒளிரும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது. பல்வேறு சலுகைகளை அளிப்பதன் மூலம் அன்னிய மூலதனத்தைக் கவர்ந்திழுத்து, தனது பொருளாதாரத்தை மிகப் பெருமளவுக்கு சீனா வளர்த்தெடுத்துள்ளது'' என்று 2005ஆம் ஆண்டில் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்தின் போது, புதுச்சேரி பா.ம.க எம்.பி.யான இராமதாசு புகழ் பாடினார். சீனாவில் நிறுவப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், பொருளாதாரத்தில் புதிய பாய்ச்சலைத் தோற்றுவித்துள்ளதோடு, அந்நாடு ஆசியாவின் புதிய வல்லரசாகப் பரிணமித்து வருகிறது என்று ஏகாதிபத்தியவாதிகள் சீனாவின் புகழ் பாடுகின்றனர். போதாக்குறைக்கு, போலி கம்யூனிஸ்டுகளான சி.பி.எம். கட்சியினரும், ""சீன அரசின் தெளிவான சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கை, பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது'' என்று தமது "மார்க்சிஸ்ட்' மாத இதழில் (பிப்.07) பூஜிக்கின்றனர்.

இப்படி ஏகாதிபத்தியவாதிகளாலும், அவர்களின் கைக்கூலி ஆட்சியாளர்களாலும், சர்வகட்சி ஓட்டுப் பொறுக்கிகளாலும் துதிக்கப்படும் சீன சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் யோக்கியதை என்ன?

ஏழை நாடுகளில் ஏகாதிபத்தியவாதிகளால் உருவாக்கப்பட்ட ஏற்றுமதி பொருளுற்பத்தி மண்டலங்களின் (உகஙூ) புதிய பரிமாணம்தான் 1980களில் சீனாவில் உருவாக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். அன்னிய முதலீட்டாளர்களுக்கு இதர நாடுகள் கணக்கற்ற சலுகைகளை அளித்து வந்தபோது, அவர்களுக்குத் தனியே ஒரு சமஸ்தானத்தை அமைத்துக் கொடுத்த சீனாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள், இதையே சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று குறிப்பிட்டனர். ஏகாதிபத்தியச் சூறையாடலுக்குக் கதவை அகலத் திறந்துவிடும் இக்கேடுகெட்ட கொள்கையை ""சந்தை சோசலிசம்'' என்றும் ""முதலாளித்துவமற்ற வளர்ச்சிப் பாதை'' என்றும் கயிறு திரித்தனர்.

சீனாவில் 6 பெரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்படுவதாகக் கூறப்பட்டாலும், பல்லாயிரக்கணக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றில் அன்னிய முதலீடுகள் வெள்ளமெனப் பாயும் என்ற சீன ஆட்சியாளர்களின் கனவு புஸ்வாணமாகிப் போனது. குவாங்டாங் மாநிலத்திலுள்ள ஷென்சென் மண்டலம் தவிர, இதர சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் எதிர்பார்த்த அளவிற்கு அன்னிய முதலீடுகள் வரவில்லை. குறிப்பாக, ஷாண்டூவ் மண்டலத்துக்கு அன்னிய முதலீடாக சல்லிக் காசு கூட வரவில்லை.

அமெரிக்க, ஐரோப்பிய முதலீடுகளை எதிர்பார்த்து பல சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்ட போதிலும், அந்நாடுகளிலிருந்து மிக அற்பமான அளவுக்கே முதலீடுகள் வந்தன. ஹாங்காங், தைவான் ஆகியவற்றிலிருந்தே பெருமளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டன. ஒட்டு மொத்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஹாங்காங், தைவான் முதலாளிகளின் முதலீட்டு பங்கு 88%க்கு மேலாக இருந்தது. பீற்றிக் கொள்ளப்படும் ஷென்சென் மண்டலத்தின் ஜவுளி உற்பத்தி மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்பு முதலானவற்றில் ஹாங்காங் முதலாளிகளின் பங்கு 95%க்கு மேலானதாக இருந்தது. ஏகாதிபத்திய நாடுகளின் முதலீடு மிகமிகக் குறைவானதாகவே இருந்தது. சிறப்புப் பொருளாதார மண்டலத்தால் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து மூலதனமும் தொழில்நுட்பமும் குவியும் என்ற மாயை ஷென்சென் மண்டலத்திலேயே தகர்ந்து போய் விட்டது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும் வீட்டுமனை கட்டுமானத் தொழில் வளர்ச்சிக்காகவும் 199293இல் சீன அரசு 1,27,000 ஹெக்டேர் விளைநிலங்களை முதலாளிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது. இருப்பினும் இன்றுவரை இவற்றில் 46.5% நிலங்கள் மட்டுமே உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏராளமான சலுகைகளோடு நிலங்களை ஒப்படைத்தால், இடையூறின்றி முதலாளிகள் தொழில் தொடங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு கேழ்வரகில் நெய் வடிந்த கதையாகி விட்டது. இம்மண்டலங்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதிக்கும் மேலான நிலங்கள் இன்று தரிசாகக் கிடக்கின்றன.

சீன மைய அரசு உருவாக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஒருபுறமிருக்க, இன்னும் ஏராளமான சலுகைகளுடன் மாநில அரசுகள் 6000 முதல் 8500 வரையிலான சிறிய அளவிலான சிறப்புப் பொருளாதார மண்டலங்களை "90களில் உருவாக்கின. இவற்றின் மொத்தப் பரப்பளவு 15,000 சதுர கி.மீ.க்கும் மேலாகும். இது சீனாவில் தற்போதுள்ள நகரங்களின் பரப்பளவை விட அதிகமாகும். இப்படி வெறிபிடித்த வேகத்தில் தொடங்கப்பட்ட மண்டலங்களில் பாதியளவுக்குக் கூட செயல்படவில்லை. பின்னர், மைய அரசு இவற்றில் 2000க்கும் மேற்பட்ட மண்டலங்களை ரத்து செய்து பழைய நிலைக்குத் திரும்ப முயற்சித்து வருகிறது.

1986லிருந்து 1996 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக சீன அரசு ஏறத்தாழ 50 லட்சம் ஹெக்டர் விளைநிலங்களைப் பறித்தெடுத்தது. குறிப்பாக, ஃபூஜியன் மாநிலத்தில் உள்ள சியாமென் மண்டலத்திற்காக ஏறத்தாழ 4 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பறிக்கப்பட்டன. இந்நிலங்களில் ஓட்டல்கள், உல்லாச விடுதிகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி வீட்டுமனைத் தொழில் முதலாளிகள் ஆதாயமடைந்தனரே தவிர, புதிதாக தொழிற்சாலைகள் எதுவும் உருவாகவில்லை. வேலை வாய்ப்பும் பெருகவில்லை. வேறிடத்திலுள்ள சில வர்த்தக நிறுவனங்கள் இம்மண்டலங்களுக்கு இடம் பெயர்ந்ததைத் தவிர, புதிய நிறுவனங்கள் எவையும் உருவாகி வளரவில்லை. ஏற்றுமதிக்கான தொழில் நிறுவனங்களை உருவாக்காமல் வெறுமனே உல்லாச விடுதிகள், குடியிருப்புகள் உருவாக்குவதற்கு இப்போது சீன அரசு கட்டுப்பாடு விதிக்குமளவுக்கு நிலைமை விபரீதமாகிவிட்டது.

""உலகின் மிகப் பெரிய ஊகவணிக நீர்க்குமிழி'' என்று "எக்னாமிஸ்ட்' எனும் ஆங்கில வார ஏடு சித்தரித்த øஹானான் சிறப்புப் பொருளாதார மண்டலம், சீனாவின் அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் யோக்கியதைக்கு எடுப்பான சான்றாகத் திகழ்கிறது. அங்கு 30 மாடிக்கும் உயரமான பெரும் வர்த்தக கட்டடங்கள் காலியாகிக் கிடக்கின்றன. பெருமுதலாளிகள் குடியேறுவதற்காகக் கட்டப்பட்ட ஆடம்பர பங்களாக்களில் எதிர்பார்த்தபடி அன்னிய முதலாளிகள் முதலீடு செய்ய வராததால், அவற்றில் கோட்டான்களே குடியிருக்கின்றன. தொழில்நுட்ப ஊழியர்கள் குடியிருப்பதற்காகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஊக வணிகம், வரி ஏய்ப்பின் மூலம் வீட்டுமனைத் தொழில் முதலாளிகள் கொழுப்பதற்காகவே உருவாக்கப்பட்டு ஊதிப் பெருத்த அந்த மண்டலம், முதலாளித்துவச் சூறையாடலின் நினைவுச் சின்னமாக நிற்கிறது. இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கென உருவாக்கப்பட்ட ஹைனான் வளர்ச்சி வங்கி திவாலாகி மூடிக் கிடக்கிறது.

திவாலானது இந்த ஒரு வங்கி மட்டுமல்ல; இதற்கு முன்பாகவே குவாங்டாங் அனைத்துலக டிரஸ்ட் மற்றும் குவாங்டாங் முதலீட்டு கார்ப்பரேசன் ஆகிய வங்கிகள் திவாலாகி விட்டன. வேடிக்கை என்னவென்றால் இந்த குவாங்டாங் மாநிலத்தில்தான் "மாபெரும் வளர்ச்சியை' எட்டியதாகக் கூறப்படும் ஷென்சென் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைந்துள்ளது.

இந்த ஷென்சென் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில்தான் ஆலைத் தொழிலாளர்கள் விபத்துகளில் சிக்கி பெருமளவில் மரணமடைந்துள்ளனர். இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததாலேயே விபத்துகளும் மரணங்களும் தொடர்கின்றன. இத்தொழிலாளர்களுக்குச் சட்ட ரீதியாகவோ சமூக ரீதியாகவோ எவ்வித பாதுகாப்பும் கிடையாது. இத்தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ளவும் உரிமை கிடையாது. இம்மண்டலத்தில் மட்டும், ஏறத்தாழ 5 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக உழல்கின்றனர். இம்மண்டலத்தில் பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் தராமல் கோடிக்கணக்கில் பாக்கி வைத்துள்ளன. இம்மண்டலத்திலும் இதர பகுதிகளிலும் சேர்த்து நாடெங்கும் கடந்த 2006ஆம் ஆண்டில் மட்டும் 10,000க்கும் மேற்பட்ட தன்னெழுச்சியான தொழிலாளர் போராட்டங்கள் நடந்துள்ளன.

இவை எல்லாவற்றையும் விட, எல்லா வகையான சமூக சீரழிவுகளின் மையமாக இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் திகழ்கின்றன. விபச்சாரத்துக்கும் பெண் கடத்தலுக்கும் பெயர் பெற்றுள்ள ஷாங்காய் நகரத்தைவிட, சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைந்துள்ள ஷென்சென்னில் 9 மடங்கு அதிகமாகக் குற்றங்கள் கேள்விமுறையின்றித் தொடர்கின்றன. ஷான்டோவ், ஷியாமென் ஆகிய சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வரிஏய்ப்பு மோசடிகளும் கடத்தலும் பெருமளவில் நடந்துள்ளதாக சீன அரசே ஒப்புக் கொண்டுள்ளது. இத்தகைய மண்டலங்களால் அன்னியச் செலாவணி இழப்பு ஏற்பட்டு, பண வீக்கம் பெருகியது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்கள் பறிக்கப்பட்டு, விவசாயம் புறக்கணிக்கப்பட்டதால் விவசாயிகள் பிழைக்க வழியின்றி நகரங்களை ஓடி வருகின்றனர். இதனால் நகர்ப்புற மேட்டுக்குடியினரின் வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுவதாகக் குற்றம் சாட்டி அம்மக்களை சீன அரசு நகர்ப்புறங்களிலிருந்து விரட்டியடிப்பதோடு, நகரங்களின் எல்லைகளில் தடுப்பரண்களை எழுப்பி அவர்கள் நகரினுள் நுழையாமல் தடுத்து வருகிறது. வாழவழியின்றி நாடோடிகளாக அலையும் விவசாயிகள் பிச்சை எடுக்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் விளைந்த பேரழிவுகளை அனுபவ ரீதியாக உணர்ந்த சீன அரசு திட்டக் குழுவின் முன்னாள் ஆலோசகராக இருந்த சாவோசியோ, ""சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பாதை முடிவுக்கு வந்து முட்டுச் சந்தில் சிக்கிக் கொண்டு விட்டது. சீழ்பிடித்து நாறும் இரணங்களை அன்னிய முதலீடு எனும் பட்டுத் துணியால் இனிமேலும் மூடிமறைக்க முடியாது'' என்று 2006ஆம் ஆண்டில் சாடினார்.

சீன சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வளர்ச்சிக்கான முன்னுதாரணம் அல்ல; பேரழிவுக்கான முன்னெச்சரிக்கை என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

இக்கட்டுரைக்கான ஆதாரங்கள் ""எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி'' எனும் ஆங்கில வார இதழிலிருந்து (ஏப்ரல் 28 மே 4, 2007) எடுக்கப்பட்டுள்ளன.

· குமார்

கரும் புலித்தாக்குதலுக்குப் பின்பான சிங்கள, புலி அரசியலை மதிப்பிடும் போக்கு(2)

"...ஒவ்வொருத்தனும் தனக்குரிய சவப்பெட்டியைச் சுமந்தபடியே

தனது ஒவ்வொரு வேளை

உணவையும் உண்கிறான்


தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும்

தீர்க்கதரிசிகளுக்கும் உரிய

இடமும் காலமும் போதனையுங்கூட

இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது..." -சிவரமணி.
(2)

ப.வி.ஸ்ரீரங்கன்

01.11.2007

ந்த வகைகளில் நாம் இன்றெமது நாட்டின் அரசியல் போக்குக் குறித்துப் பேசமுடியும்? நாட்டில் நிகழ்கின்ற இருவேறு அரச ஜந்திரக்களுக்குள் நிலவும் மனித விரோதப் போக்குகளின் வாயிலாகத் தினமும் மனிதப் படுகொலைகளும், மனித வருத்தல்களும் நடைபெறும்போது, இலங்கை இராணுவ ஆட்சிக்குள் மெல்ல நகர்ந்தபடி கட்சியாதிக்கத்திலுள்ள முக்கிய குடும்பங்களின் காட்டாட்சிக்குள் வந்துவிடுகிறது. அங்கே, எல்லாளன்களும், துட்டக் கைமுனுக்களும் மக்களின்-இளைஞர்களின் உயிரோடு தமது முரண்பாடுகளைப் பொருத்தி இலங்கையில் அறுவடை செய்யும் கொலை அரசியலில் இன்னும் எத்தனை அநுராதபுரங்கள், குடும்பிமுனைகள் நடந்தேறுமோ தெரியாது. என்றபோதும, இத்தகைய அரசியலின் முகிழ்ப்புக்கு வித்திட்ட புறச் சூழலை மிகத் தெளிவாக நாம் இனம் காணவேண்டும். ஈழப்போராட்டத்திலுள்ள தெளிவின்மையான உலக அரசியல் அறிவானது நமக்குள் கற்பனைகளை மனம்போன போக்கில் விதைத்தது. இதன் வாயிலாகப் போராட்டத்தில் புரட்சிக்கட்சியின் பங்கு, அதன் வெளிப்புற மற்றும் உள் தோழமைகள் மற்றும் போராட்டச் செல்நெறி பற்றிய சரியான விஞ்ஞான பூர்வமான விளக்கங்கள் நமக்குள் வசமாகவில்லை. ஒரு கட்சியின் பண்புகளில் முக்கியமான சுய விமர்சனம், உட்கட்சி ஜனநாயகம் போன்ற முக்கியமான அறிவு-பண்பு நமக்குள் இல்லாமற் போனதுமின்றி இயக்கங்களுக்குள் தனிநபர் வழிபாடும், கண்மூடித்தனமான விசுவாசம், நம்பிக்கையென்று உணர்ச்சி வழி அரசியலாக நமது போராட்டத்தைக் கீழ்மைப்படுத்தியதில் இந்தியாவுக்கு அதீத பங்குண்டு!

எமது மக்களின் விலங்கையொடிப்பதற்காகப் புறப்பட்ட இளைஞர்களை தகுந்த வழிகளில் அரசியல் மயப்படுத்தி, அவர்களைப் புரட்சிகரப் படையணியாகத் திரட்ட வக்கற்ற மேட்டுக்குடி வேளாளத் தமிழ்ச் சிந்தனா முறையானது வெறும் பித்தலாட்டமாக இந்தியா குறித்துக் கருத்துக்களை 80 களில் வெளிப்படுத்தியது. "இந்தியா என்பது உலகத்துக்கு முற்போக்கு நாடாகக் காட்டுவதால் அது தமிழீழக் கோரிக்கையை-தமிழீழத்தை தவிர்க்க முடியாது அங்கீகரித்துத் தன்னை முற்போக்காக உலகினில் காட்டும், இது இந்தியாவுக்கு மிக அவசியம், இல்லையேல் உலகில் மாபெரும் ஜனநாயக நாடுவென்ற பெயர் அடிபட்டுப் போகும்" என்று நமது அரசியல் வல்லுநர்கள் அன்று புலம்பிச் சொதப்பினார்கள். பாலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடு இந்தியா, எனவே ஈழத்தையும் அங்கீகரித்துத் தமிழர்களுக்குச் சாதகமான நாடாக இருக்குமென்றும் மனப்பால் குடித்த ஈழத் தமிழ் அரசியல்"வல்லுநகர்களை" அன்றே எள்ளி நகையாடிய சிங்கள அரசியல் தந்திரம் இன்று மிக அற்புதமாகத் தமிழர்களின் உரிமைகளை மறுத்தொதுக்கிவிட்டுப் "புலிப் பயங்கரவாதம்" குறித்து அரசியல் நடாத்த முடிகிறது. இது எவ்வளவு தூரம் நமது முட்டாள்தனத்தைப் பறைசாற்றி வருகிறது!

யுத்தம் செய்யும் சமுதாயம் தனது வலுவுக்குள் எந்தவொரு கட்டமைப்பையும் கொண்டிருப்பதில்லை. இது அரசியல் விஞ்ஞானத்தில் மிகத் தெளிவாக நாம் உணரத்தக்கது. இந்தச் சூழலில் இலங்கைபோன்ற மிகவும் பின் தங்கிய-எந்தச் சமூகவுற்பத்தியையும் தனது சொந்த முயற்சியால் முன்னெடுக்காதவொரு நாட்டில் "எந்தச் சுயாண்மையும்" நிலவ முடியாது. இதுதாம் இன்றைய இலங்கையில் யுத்தத்தை குத்தகைக்கு எடுத்த அந்நிய சக்திகள் தமது வலுவுக்கேற்ற வடிவில் இலங்கைச் சிங்கள-தமிழ் அடியாட்படைகளைத் தகவமைத்து யுத்தத்தைச் செய்து வருகிறார்கள். தமது சந்தையில் தேங்கிக்கிடக்கும் சிறு இரக ஆயுதங்களை விற்றுத் தொலைப்பதும் அதன் வருமானத்தில் புதிய கனரக ஆயுதங்களின் ஆய்வுகளுக்கு நிதி முதலிடவும் அவசியமாக இருக்கிறது. இது ஒரு பகுதியுண்மை என்பதும் மற்றைய பகுதியுண்மை தொழிற்சாலைகளின் எதிர்காலப் பொருள் உற்பத்திக்கான மூலவளத் தேவையை மையப்படுத்தியதாகவும் விரிகிறது. இந்த நிலையில் இலங்கையென்பது இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட நிலப் பிரதேசம் என்பதும், இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சமூகவுறுகளின் இறமைக்கு அதி முக்கிய பாத்திரம்பெறும் வலையமென்பதும் உண்மையாக இருப்பதால், பண்டு தொட்டு இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் முடிவுகள், விருப்பங்கள், ஆர்வங்கள், ஆதிக்கங்கள் சங்கிலித் தொடராகப் பின்னப்பட்டு வருகிறது. இந்த இந்தியாவென்ற ஒரு தேச அரசியல் கட்டுமானமானது பிராந்திய ஆதிகத்தின் வெளிப்பாட்டோடு முன் நிறுத்தப்படும் பாரிய யுத்த ஜந்திரத்தோட ு"உலகின் பாரிய ஜனநாயக நாடு" என்று பிரகடனம் பெறுகிறது. இந்த நாட்டைப்பற்றிய அரை குறைப் புரிதலின் வெளிப்பாடே நமது போராட்டச் செல் நெறியில்-தந்திரோபாயத்தில் மாபெரும் தவறையேற்படுத்தியது.

உதாரணமாக இந்தப் போராட்டம், அதாவது ஈழத்துக்கான போராட்டம் என்பது சாரம்சத்தில் காலவதியாகிவிட்டது. இதைக் காலவதியாக்கிய ஜனநாயகத்துக்கான-இயல்பு வாழ்வுக்கான கோரிக்கைகள் புலிகளின் உள்ளார்ந்த அராஜகத்தின்-பாசிச அடக்கு முறைகளிலிருந்து மக்களின் குரல்களாகவும், உரிமையாகவும் இனம்காணத்தக்கவொரு அரசியற் கோரிக்கையின் அதிமுக்கிய வெளிப்பாடாக முகிழ்த்தபோது, மக்களின் உரிமைகளை அழித்தொதுக்கும் சிங்களப் பாசிச இனவொடுக்குமுறையரசே தன்னை மக்களின்-தமிழ் பேசும் மக்களின் நண்பனாகக் காட்டிக்கொள்ளும் கபடம் நிறைந்த அரசியல் நகர்வுக்கு இ·து பாத்திரமாகிறது.

இலங்கையின் அரசமைப்பில் இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்கள் தம்மை மிக மிகத் தந்திரமாகத் தக்க வைத்துக்கொண்ட வரலாறு மிகவும் கொடியது. இது கடந்த காலத்தில் சிங்களப் தரப்பில் 40.000. அப்பாவி இளைஞர்களையும், தமிழ்-முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் தரப்பில் சுமார் 90.000. அப்பாவி மக்களையும் கொன்று தள்ளியுள்ளது. இன்றுவரையும் இழுபட்டுப்போகும் இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்களின் அத்துமீறிய போரினால் மனிதவுரிமைகள் துளியளவும் இல்லாது போய்விட்டது. இந்த இலட்சணத்தில் தமிழ் பேசும் மக்களினதும்-முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் எதிர்காலமானது வெறும் இருண்ட வெளிக்குள் நகர்கிறது. இங்கே, எல்லாளன்களும், துட்டக்கைமுனுக்களும் தத்தமது கெளரவத்துக்கான போராட்டமாக இலங்கை இனப்பிரச்சனைக்கான முரண்பாடுகளைக் குறுக்குவதுகூட இந்தியாவின் சாணாக்கியத்தின் வெளிப்பாடே! இலங்கை அரசென்பது சாரம்சத்தில் இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஒடுக்கி இனச் சுத்திகரிப்பைச் செய்யுமொரு பாசிச அரசாக இருக்கும்போது, இத்தகைய "துட்டக் கைமுனு-எல்லாளன்" வடிவங்களுடாகக் கருத்தைக்கட்டி, இதை வெறும் தனிநபர்களுக்கிடையிலான கெளரவப் பிரச்சனையாக வலாற்றில் குறுக்கிவிட முனையும் இந்தியச் சதி புலிகளின் ஆலோசகர்கள் ஊடாகப் பிரபாகரனை அடைகிறது. இத்தகைய வார்த்தைகளின் பின்னே என்ன சதியுண்டென்பதை அறிந்துணர முடியாத தலைமைதாம் புலிகளின் தலைமை என்பதை நாம் சொல்லித்தாம் வாசகர்கள் அறியும் நிலையில்லை. எனினும், புலி அநுதாபிகளுக்கு இதைத் திரும்பத் திரும்பச் சொல்லியாகவே வேண்டும்.
நண்பர்கள் யார்?






எதிரிகள் யார்? என்ற குறைந்தபட்ச மதிப்பீடுகூடக் கிடையாத புலியரசியலால் தமிழ் ஆளும் வர்க்கம் தன் இருப்பைத் தக்க வைக்க முனைகிறது. இது மக்களின் சகல உரிமைகளையும் தமது இருப்புக்கும், பேரத்துக்கும் தக்கபடி தகவமைத்துப் போராடிக்கொண்டபோது தமிழ் மக்கள் அதைத் தமது வாழ்வு மேம்பாட்டுக்கானதென எண்ணிக் கொண்டதும் உண்மை.இலங்கைச் சிங்களப் பேரினவாதம் ஒருபுறம் தமிழ் மக்களைக் கருவறுக்கும்போது புலிகள் மக்களின் மீட்பர்களாகக் கணிக்கப்பட்டார்கள். ஆனால், புலிகளின் வர்க்க நலனானது மக்களின் நலனோடு நேரடியாக மோதியபோது அது தமிழ் மக்களின் கணிசமான பகுதியைத் துரோகிகளாக்கிப் போட்டுத் தள்ளியதும், எதிர் நிலைக்குள் தள்ளியதும் தற்செயல் நிகழ்வல்ல. இத்தகைய தரணத்தில் தாம் நமது எதிரியான பெளத்த பேரினவாதச் சிங்கள ஆளும் வர்க்கம் தம்மை எமது மக்களின் மீட்பர்களாக்கிக் கொண்டுள்ளார்கள். இத்தகைய அரசியல் சூழ்ச்சிக்கு உடந்தையான ஒருபிரிவு (ஆனந்தசங்கரி, டக்ளஸ், கருணா, புளட், மற்றும் இன்னபிறக் குறுங் குழுக்கள்) புலிகளின் காட்டாட்சியால் உருவாக்கப்பட்டவர்கள், இத்தகைய உருவாக்கத்தை மிக விரைவாக்கியவர்கள் இந்தியச் சாணாக்கியர்கள்தாம் என்ப¨தையும் இதுள் குறித்துக் கொள்ளுங்கள். இந்த நிலையில் நமது இளைஞர்கள் நமது மக்களின் விடிவுக்காகவே இன்னும் உயிர் நீத்துவருகிறார்கள். அநுராதபுரத் தாக்குதலிருந்து இந்த அரசியல் போக்கை மதிப்பிடுவது மிகவும் அவசியமானது. ஏனெனில், புலிகள் இவ்வளவு பெருந்தொகையான கரும் புலிகளை எங்கும் பயன் படுத்தியது கிடையாது. இத்தகைய தாக்குதலால் நிகழ்த்தப்படவுள்ள அரசியல் பேரமானது இந்தியாவின் தயவில் புலிகள் குறித்தவொரு இலக்கை அடைவதற்குள் அதன் அரசியல் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டே இருக்கும். சிங்கள-இந்தியக் கொடிய அரசுகள் தமிழ்மக்களின் ஜீவாதாரப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கான முகாந்திரத்தைப் புலிகளே ஏற்படுத்தியவர்கள். எனினும், புலித்தலைமையின் கீழ் அணிதிரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான தேசபக்த இளைஞர்கள் தமது தாயகத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிரைத் தியாகஞ் செய்வது உண்மை! அவர்கள் தமது தாயகத்தைக் காப்பதற்கும், விடுதலையடைவதற்குமென்றே மரணித்துப் போகிறார்கள். அவர்களது உயிர்த்தியாகத்தைத் தமிழ் ஆளும் வர்க்கம் தனக்கிசைவாகக் கையாளும்போது தவிர்க்கமுடியாது முட்டுச்சந்தியில் தனது அரசியலோடு கையாலாகாத பிராணியாக நிற்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் விரோதிகளான சிங்கள ஆளும் வர்க்கமும், இந்திய ஆளும் வாக்கமும் மிகத் தெளிவாக நம்மை ஒடுக்குவதற்கு நமக்குள்ளேயே தமது அடிவருடிகளைத் தயார் செய்கிறது.

ஓடுகாலிகளான மார்க்சிய விரோதிகள் தம்மைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக முன் நிறுத்தும் இன்றைய காலக்கட்டத்தில் நாம் அவர்களை அம்பலப்படுத்தியாக வேண்டும். ரீ.பீ.சீ. வானொலியின் பிரதான அரசியல் ஆய்வாளரான சிவலிங்கம் குறித்துரைக்கும் "ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுத்த அரசு" என்ற மொழியூடாக எதைக் கூற முனைகிறார்? இலங்கையரசு மட்டுமல்ல உலகத்திலுள்ள அனைத்து ஒடுக்குமுறை அரசுகளும் போலித்தனமான பித்தலாட்ட பாராளுமன்ற ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்தாம். கிட்லரையும், முசோலினியையும் ஏன் இன்றைய புஷ்-பிளேயர் கொடுங்கோன்மையாளரையும் இதே மக்கள்தாம் தேர்ந்தெடுத்தார்கள். அதற்காக இவர்களெல்லோருமே மக்களின் நலத்தில் அக்கறையுடையவர்களும், மனிதவுரிமைவாதிகளுமாக மாறிடமுடியுமா?;! இவர்கள் தூக்கி நிறுத்தும் இலங்கையரசானது ஸ்த்தூலமான ஒடுக்குமுறையரசாகும். இது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனநாயகபூர்வமான அரசுகிடையாது. இதுகாறும் தமிழர்களின் பிரதான எதிரியான சிங்களப் பேரினவாதமானது இனியும் பிரதான எதிரியாக இனம் காணப்படவேண்டிய சூழலில் தமிழ்ச் சமுதாயம் தள்ளப்பட்டுள்ள நிலையில் இத்தகைய சதிகாரக் கும்பல் தமது அற்ப பதவி-பண ஆசைக்காக முழுமொத்த தமிழ் மக்களுக்கும் ஈனஞ் செய்வது மிகவும் வருந்தத் தக்கது. புலிகள் வேறு, தமிழ்பேசும் மக்கள் வேறென்பவர்கள்-ஏன் தமிழ்பேசும் மக்களை இலங்கை-இந்திய அரசிடம் காட்டிக்கொடுக்கிறார்கள்? எப்படித் தமிழ் பேசும் மக்களினது வாழ்வில் காலாகாலமாகத் தீங்கிழைக்கும் சிங்கள இனவாத ஆளும் வர்க்கத்தை நண்பர்களாக்கித் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்? இங்கேதாம் இந்தியாவின் அதீத சாணாக்கியம் புலப்படுகிறது.

அன்று, அதிகாரப் பகிர்வில் இதே அரசியலைக் கையாண்ட இந்தியா இப்போது அதையே செய்து வருகிறது.அன்று அதிகாரப்பகிர்வில் ஏற்பட்ட தகராறில் புலிகள் இந்திய இராணுவத்தோடு திட்டமிட்டுத் தகராறை ஏற்படுத்தி யுத்தஞ் செய்தபோது இந்தியா எதிர்பார்த்த அரசியல் இலாபம் உறுதிப்பட்டது. அதாவது, தான் அதிகாரத்தைப் பகிர்ந்த மாற்றியக்கங்களைத் தானே அழிப்பதைவிட-மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதைவிடப் புலிகளினால் மிக இலகுவாக அழிப்பதற்கும், மக்களிடம் அதிவலதுசாரியப் பாசிச இயக்கமான புலிகளை வளர்ப்பதால் மிக நேர்த்தியாகத் தமிழ் பேசும் மக்களின் தேசியவிடுதலைப் போராட்டத்தைச் சிதைக்க முடியுமென்று அன்றே இந்தியப் புலனாய்வுப்பிரிவு கருதியது. இதற்கு உடந்தையாக இருந்தவர் தமிழ்நாட்டரசியலில் பாரிய தாக்கஞ் செய்த எம்.ஜீ.ஆரும் அவருது அமைச்சருமான பண்டூருட்டி இராமச்சந்திரனும் என்பது உலகம் அறிந்ததே.

இந்தியத் தயவில் மாகாண ஆட்சியில் அதிகார வெறியோடு பதவியேற்ற ஈ.பீ.ஆர்.எல்.எப் போன்ற இயக்கம் மக்களிடம் புலிகளைவிடப் பன்மடங்கு செல்வாக்குச் செலுத்தியது. அதுவும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களிடம் அந்த அமைப்புக்கு மிகவும் செல்வாக்கிருந்தபோது, அத்தகைய அமைப்பைவிட்டுவைப்பது காலவோட்டத்தில் உழைக்கும் மக்களிடம் பாரிய விழிப்புணர்வை அது ஏற்படுத்தலாமென்ற இந்தியாவின் அச்சம், புலிகளால் செய்யப்பட்ட படுகொலை அரசியலினுடே பிரதிப்பலப்பதாகும். எனவேதாம் புலிகளைத் திட்டமிட்டே இந்தியா இந்த வியூகத்துள் தள்ளி மாற்றியக்கங்களை வேட்டையாடியது. இதன் உச்சக்கட்டம் இந்தியக் கட்சியரசியலில் ஏற்பட்ட ஆதிக்க முரண்பாடுகளில் இராஜீவ் காந்தியை அழிப்பதற்கும் புலிகளின் பெயரைப்பயன்படுத்தும் சாணாக்கியத்தோடு இந்திய உளவுப்படை காரியமாற்றியது. இங்கே தமிழ்பேசும் மக்களின் அனைத்து உரிமைகளையும் இவ்வளவுதூரம் அழித்தொழிப்பதற்குக் காரணமானவர்கள் புலிகள் என்பதைத் தவிர வேறெதைக் கூறமுடியும்?

இந்தியாவின் மிகச் சாதுரியமான சாணாக்கியத்துக்குப் பலியான புலிகளின் தலைமைக்கு மிக நேர்த்தியான புரட்சிகர அரசியலைப் புகட்டும் திறன்மிக்க ஆலோசகர்கள் வாய்க்கப் பெறவில்லை. ஆன்டன் பாலசிங்கம்போன்ற அரைவேக்காட்டு அரசியல் ஆலோசகர்கள் இந்தியாவின் அதி முக்கியமான அடிவருடிகளில் முக்கியமானவொரு நபராக இருப்பதற்குச் சம்மதம் தெரிவித்த ஒப்புதலுக்குப் பின் பிரபாகரன் வெறும் பொம்மையாகவே இந்திய வியூகத்துள் செயற்பட்டார். அவரிடம் இருந்த மிகத் தீவிரமான தனிநபர் வாதம் இதற்குத் தோதாக இருந்தது. அவர் புரட்சிகரமான அரசியலை கற்க வேண்டிய பணி இந்த வகைக் காரணத்தால் தடைப்பட்டு வெறும் பூஜைக்குரிய நபராக மாற்றப்பட்டார். இங்கேதாம் புலிகளின் அடிமைச் சேவகம் அடிமட்டப் புலிப் போராளிகளின் தியாகத்தை அந்நிய நலனுக்காகத் திசை திருப்பி இந்தியா வெற்றி பெற்றது. இந்தியாவின் இரண்டாவது வெற்றியாக நம் எல்லோராலும் அறியக்கூடியது தமிழ்ச் சமுதாயத்தின் கருத்தியற்றளத்தில் புலிகளையும், அவர்களது தத்துவார்த்தப் போக்குகளையும் நிலைப்படுத்திச் சிந்தனா முறையில் புலிகளுக்கான இருப்பிடத்தைக் கைப்பற்றிக் கொடுத்ததாகும்.

இந்திய இராணுவத்தோடான மோதலில் மிகச் செயற்கைத் தனமாகப் பிரபாகரன் உயிருடன் விடப்பட்டார். அவரது உயிர்த்திருப்பில் இன்னொரு அதியசம் நடக்குமென இந்திய முதலாளிகள் அறிந்தே இருந்தார்கள். அந்த அதிசயம் இன்று நம்முன் எந்த ரூபத்திலிருக்கிறதென்பதை நாம் சொல்லத்தேவையில்லை. பிரபாகரனின் காலடி மண்ணெடுத்து நெற்றியிலிட்டுக் கொள்வதற்குத் தமிழர்களில் பலர் இருக்கிறார்கள் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். உலகத்தின் நான்காவது பெரிய இராணுவத்தோடு போரிட்டு மீண்டான் தமிழன்-வீராதிவீரன் எங்கள் விடுதலைப் புலித் தலைவன் என்ற கோசங்களோடு கட்டி வளர்க்கப்பட்ட கருத்தியல் மனதுதாம் இன்று புலிகளை விட்டால் நமக்கு யாருமே இல்லையென்றவொரு வெற்றிடத்தைக் குறிவைத்துரைக்கிறதா?அங்கேதாம் இந்தியாவின் இரண்டாவது வெற்றி பட்டவர்த்தனமாக இருக்கிறது. புலிகளால் நலமடைய விரும்பும் இந்தியப் பிராந்திய நலனானது எப்பவும் இலங்கை அரசியலில் இடதுசாரிய மரபை உடைப்பதற்குத் தனது மூக்கை நுழைத்தபடியே இருந்திருக்கிறது. இலங்கையிலோ-தென்னாசியப் பிராந்திய நாடுகளுக்குள் இந்த இலங்கைதாம் அண்ணளவாகவொரு இடதுசாரியசார்பு அரசியலையும் குறைந்தளவான ஜனநாயக விழுமியத்தையும் கொண்டிருந்திருக்கிறதென்றும் நாம் கருத்துரைக்கும் அளவுக்கு இந்திய உளவு நடவடிக்கை நமக்குச் சில வெளிகளைத் திறந்து விட்டிருக்கிறது. இங்கே,இலங்கையென்பது வெறும் கைப்பொம்மையான அரசைக் கொண்டிருப்பதும் அதன் உண்மையான எஜமானாக இந்திய ஆளும் வர்க்கம் இருந்துவருகிறது. இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கமானது இந்தியத் தரகு முதலாளிய ஆளும் வர்க்கத்தோடு இணையும் தரணங்கள் வெறும் புவிகோள அரசியல் மதிப்பீடுகளால் நடந்தேறுவதில்லை. இந்தியச் சந்தையாக இலங்கை இருக்கும் ஒப்புதலில் இலங்கையென்பது இந்தியாவின் பாதுகாப்போடு மிகவும் சம்பந்தப்பட்டதென்ற கோமாளித்தனமான புரிதலைத்தாண்டித் தென்னாசியத் தொழிலாள வர்க்கத்தின் இணைவில் இலங்கைத் தமிழர்களின் தேசிய இன முரண்பாடு பாரிய விளைவுகளைச் செய்யுமென்ற பாரிய அச்சமே இந்தியாவைப் புலிகளோடும், இலங்கை ஆளும் வர்க்கத்தோடுமான அரசியல் சதுரங்கத்தில் பாரிய சாணாக்கியத்தைச் செய்து காட்ட வைத்தது.
இந்திய நலன்களோடு, பொருளாதார உறவுகளோடு கிஞ்சித்தும் இசைந்து போகாத புலிகள், தமிழ் பேசும் மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காகவே போராடுவதாகக் காட்டப்படும் அரசியலானது தற் செயலானதல்ல. இதுதாம் இந்தியாவின் அரசியல் தந்திரமாகும்.இங்கே புலிகள்போன்றவொரு அமைப்பைத் தவிர வேறெந்தவொரு அமைப்பாவது போராட்டத்தில் இராணுவப் பலமடைய இந்தியா அநுமதிக்கவேயில்லை .அதற்கான காரணமாக இந்தியவுக்குள் நிலவிய அச்சமானது மற்றைய குழுக்களிடமிருந்து ஓரளவு சுயவறிவுபடைத்த தலைமையும், அவர்களின் இடதுசாரியச்சாயலுமே(இங்கே அவர்கள் இடதுசாரியத்தை பகிடிக்குக் கையாண்டதைக்கூட இந்தியா அநுமதிக்கவில்லை என்பதை நோக்குக)காரணமாக இருக்க வெளிப்படலாயிற்று. பிரபாகரனைத் தவிர வேறெந்தவொரு மனிதரும் தமிழர்களுக்கு எதிரியாக இருப்பதற்குத் தகுதியற்றவர்கள். கல்வி, கேள்வி, அநுபவம் என்பதெல்லாம் தனிநபர்வாதம், கொலை,கொடும் அடக்கு முறை என்றான புரிதலுக்குப் பிரபாகரனே சரியானவொரு நபராக இருந்திருக்கிறார். இவருக்கு ஆலோசகர்களாக இருந்தவரும் இத்தகைய பண்பை ஒரளவு கொண்டரென்பதும் புரியத் தக்கது.


இந்தியாவானது இன்று செய்துவரும் மிகப் பெரிய இராஜதந்திரமானது அன்றைக்கே அடிகோலிய சாணாக்கியத்திலிருந்து வளாத்தெடுக்கப்பட்ட தந்திரமே. அதாவது புலிகளை இராணுவ ரீதியாகப் பலவீனப்படுத்துவது. பின்பு தமிழ்பேசும் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாகப் பலப்படுத்தி அவர்களுடாகச் சில அரசியல் தீர்வைத் திணிப்பது. இந்தத் தந்திரத்துக்காக ஆனந்த சங்கரி, டக்ளஸ், கருணா போன்றவர்கள் எங்கே நிற்கிறார்ளென்றால் யுத்தத்தின்மீது வெறுப்புடைய மக்களின் மனங்களை அரைகுறைத் தீர்வுக்குள் திணிப்பதற்கானவொரு மனதைத் தயார்ப்படுத்தும் மனோநிலையைப் படைப்பதற்கான"ஜனநாய"அரசியலைப் பேசி மக்களை ஏமாற்றும்போது, அங்கே வரப்போகும் தீர்வை "இதோ கருணாவிடம்,ஆனந்த சங்கரியிடம் கையளிக்கிறது இலங்கை-இந்தியா" என்று மக்களைக் குழப்பிப்பின் புலிகளிடம் இதைத் தாரவார்க்கும்போது, "புலிகள் சொன்னால் அது சரி" என்ற மக்களின் மனோநிலையை ஏற்படுத்தவே! ஏனெனில், இன்றைய இலங்கையின் இனப்பிரச்சனைக்குப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கிடையவே கிடையாது! இதுவரை பலியிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்த் தியாகத்துக்குப் பின் பேச்சு வார்த்தை மூலம் தமிழீழம் பிரிப்பதென்றால் மட்டுமே, பேச்சுவார்த்தைக்கு வலு உண்டாகும். ஆக, எல்லைகளைப் பற்றிய பேச்சாக மட்டுமே இவை இருக்க முடியும். எனவே, பேச்சு வார்த்தையென்பது புலிகளிடம் வழங்கப்பட இருக்கும் இந்த அரைகுறைத் தீர்வுக்காக மக்களை ஏமாற்றிப் போட்டுப் புலிகள் சொன்னால் சரி என்று அமைதிப்படுத்தவே.


இதை இங்ஙனம் புரிவோம்.


அதாவது, இந்திய ஆளும் வர்க்கமானது புலிகளை இராணுவ ரீதியாகப் பலவீனப்படுத்தியுள்ளது. அதன் போராட்டவலுச் சிதைந்துள்ளது.அநுராதபுரத்தாக்குதலே அதை நிருபித்திருக்கிறது. புலிகளால் மரபு ரீதியானவொரு யுத்தம் நடாத்த முடியாது. புலிகளை மெல்ல இராணுவரிதியாகப் பலவீனமாக்கிய இந்தியா இலங்கை இராணுவத்தின் மூலமாக அதை மெல்லப் பரீட்சித்துப் பார்க்கிறார்கள். இதற்கான மூல காரணம் புலிகளுக்கும் மேற்குலகுக்குமான தொடர்புகளால் புலிகளிடம் இன்னும் என்ன வலுவுண்டு. என்ன ஆயுதம் உண்டு? என்று இந்திய மிக நேர்த்தியாக அறிய விரும்புகிறது. எனவே, தொடர் யுத்தங்களை ஒவ்வொரு பாகமாகச் செய்து புலிகளின் போரிடும் வலுவைக் கண்காணிக்கிறது. இந்தியாவின் இந்த அறிதல் சாத்தியமானால்-அது நம்பும் நிலையில் புலிகள் இராணுவ ரீதியாகப் பின்னடைவில் இருக்கிறார்களென்றால் பேச்சு வார்த்தை தயார், "தீர்வுப் பொதியை" புலிகளிடம் வழங்கித் தமிழர்களின் நெற்றியில் பென்னாம்பெரிய நாம் இழுத்து அதைத் திருப்பதிவரைக் கொண்டு செல்லலாம். எனவே, புலிகள் பற்றிய புரிதலுக்கான இலங்கை இராணுவப் படையெடுப்புகள் ஒரு பரிட்சார்த்தமே. இங்ஙனம் புலிகள் இராணுவரீதியாகப் பலவீனம் அடைந்து விட்டால், அரசியல் ரீதியாகப் பலப்படுத்தித் தமிழர்களை-உழைப்பவர்களை ஒடுக்குவதற்கான புலிகளின் ஒடுக்கு முறைக்குச் சட்ட அங்கீகாரம் வழங்க இந்தியாவும், இலங்கையும் உடன்பட முனைகின்றன. இங்கே, இந்தியாவின் இந்த இரண்டாவது வெற்றி பெரும்பாலும் நிதர்சனமாகி வருகிறது.


இன்றைய நிலையில் தமிழ் பேசும் மக்களின் உண்மையான பிரச்சனைகளைக் கண்டறிய முடியாதவரையில் "வம்ச அரசியில்" நடந்தேறுகிறது. இங்கே, துட்டக் கைமுனு மற்றும் எல்லாளன்களின் மீள் வருகை மக்களை அடிமுட்டாளாக்கும் அரசியலை அவர்களுக்குள் திணிக்கிறது. இது எப்படிப் "புலிகள்தாம் நின்று போராடுகிறார்கள்,புலிகளை விட்டால் வேறெவருண்டு?"; என்ற கருத்தியல் மனதுக்கு மாற்றாக மேலெழுப்பப்டும் கருத்தியலை உருவாக்க முனைகிறது. இந்தத் தளத்திலிருந்தபடி தமிழ் பேசும் மக்களையும்,அவர்களின் உரிமையையும் தனிமைப்படுத்தி ஒடுக்கு முறைக்கான சட்ட அங்கீககாரத்தைப் புலிகளிடம் கச்சிதமாகக் கையளிக்க முனையும் அரசியலைப் புரிந்தாகவேண்டும்.


தொடரும்.

Thursday, November 1, 2007

அன்னிய முதலீடுகள்: பகற்கொள்ளையின் மறுபெயர்

நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறி வல்லரசாக வேண்டுமா? அதற்கு அன்னிய நேரடி முதலீடுதான் ஒரே தீர்வு! வேலை வாய்ப்பு பெருக வேண்டுமா? அதற்கும் அன்னிய நேரடி முதலீடுதான் ஒரே தீர்வு! தொழில் நுட்பம், தரமான உற்பத்திப் பொருட்கள், உயரிய சேவை, நிர்வாகத் திறன், ஏற்றுமதிக்கான வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் என அனைத்திற்கும் ஒரே சர்வரோக நிவாரணியாகச் சித்தரிக்கப்படுகிறது அன்னிய நேரடி முதலீடு.

ஒரு அன்னிய நிறுவனம், நேரடியாகவோ அல்லது இங்குள்ள தரகுப் பெருமுதலாளிகளைப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டோ ஒரு தொழில் நிறுவனத்தைத் தொடங்கினால், அது அன்னிய நேரடி முதலீடு (ஊஈஐ) எனப்படுகிறது. இதற்கு அந்த அன்னிய நிறுவனம் தனது சொந்தப் பணத்தை மொத்தமாக முதலீடு செய்வதில்லை. இந்திய வங்கிகள் மூலம் அன்னிய நிறுவனங்கள் இதற்கான நிதியைப் பெற்றுக் கொள்கின்றன.

""பிரிட்ஜ் ஸ்டோன்'' என்ற ஜப்பானிய டயர் கம்பெனி, அமெரிக்காவின் ""ஃபயர் ஸ்டோன்'' டயர் கம்பெனியை 1988இல் கைப்பற்ற அமெரிக்க நிதி நிறுவனங்கள் உதவின. இதேபோலத்தான், அமெரிக்க என்ரான் நிறுவனம் மகாராஷ்டிராவில் தபோல் மின் நிலையம் தொடங்க இந்திய வங்கிகள் 40%க்கு மேல் நிதியுதவி செய்தன. சிறிது காலத்திற்குள் என்ரான் நிறுவனம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் நடத்திய மோசடியின் காரணமாக திவாலாகி விடவே, அதன் துணை நிறுவனமான தபோல் மின் உற்பத்தி நிலையமும் இழுத்து மூடப்பட்டது. என்ரானுக்கு நிதியளித்த இந்திய வங்கிகளுக்கு ஏற்பட்ட கடன் சுமை, இந்திய மக்களின் தலையில் சுமத்தப்பட்டது.

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, இந்திய வங்கிகளிடமிருந்து நிதியைப் பெற்று இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரால் சூறையாடியது என்ரான். இப்படித்தான் பல அன்னிய நிறுவனங்கள் இந்திய வங்கிகளிடமிருந்து நிதியைப் பெற்று இந்தியாவில் முதலீடு செய்கின்றனவே தவிர, அன்னிய நாட்டிலிருந்து கோடி கோடியாய் பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வந்து இங்கு முதலீடு செய்து தொழில் தொடங்குவதில்லை. ஆனாலும் இந்தப் பித்தலாட்டத்தை மூடி மறைத்துவிட்டு இதுவும் அன்னிய நேரடி முதலீடுதான் என்று தாராளமய தாசர்கள் துதிபாடி வரவேற்கின்றனர்.

""உலக வங்கியிடம் கடன் வாங்கினால் நாம் வட்டியோடு அசலைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது; ஆனால், அன்னிய நேரடி முதலீட்டைப் பொறுத்தவரை நாம் அசலையோ, வட்டியையோ திருப்பிச் செலுத்தப் போவதில்லை. அப்படியிருக்க, நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக உள்ள அன்னிய நேரடி முதலீட்டை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?'' என்று ஏகாதிபத்திய எடுபிடிகள் நியாயவாதம் பேசுகின்றனர்.


ஆனால், ஒரு தொழிலில் நுழையும் அன்னிய நேரடி முதலீடானது காப்புரிமைத் தொகை, இலாப ஈட்டுத் தொகை, தொழில்நுட்பக் கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் எனப் பல்வேறு வடிவங்களில் உள்நாட்டுச் செல்வத்தை உறிஞ்சிக் கொழுக்கிறது. மகாராஷ்டிராவில் என்ரான் நிறுவனம் தபோல் மின் நிலையத்தில் உற்பத்தியைத் தொடங்குவதற்கு முன்பே திறன் கட்டணம் என்ற பெயரில் மாதமாதம் ரூ. 95 கோடி வீதம் விழுங்கியது. இப்படி பல்வேறு அன்னிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் பல வடிவங்களில் உறிஞ்சுவதால் உள்நாட்டின் கையிருப்பான அன்னியச் செலாவணி வெகு விரைவில் கரைந்து விடுகிறது. இவ்வாறு காலியாக்கப்படும் அன்னியச் செலாவணியின் மதிப்பு, அன்னிய நேரடி முதலீட்டை விட அதிகமாக இருந்தால், அது நாட்டின் வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா?


ஆப்பிரிக்க நாடுகளில் நுழைந்த அன்னிய நேரடி முதலீடு இதைத்தான் செய்துள்ளது. போஸ்ட்வானா நாட்டில் 19952003 காலகட்டத்தில் போடப்பட்ட அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 4243 கோடி ரூபாய். ஆனால் இலாப ஈட்டுத் தொகை, தொழில் நுட்பக் கட்டணம், ஆதாயப் பங்கு முதலான வடிவங்களில் வெளியேறிய உள்நாட்டு மூலதனமோ ஏறத்தாழ 25,294 கோடி ரூபாய்! காங்கோ நாட்டில் அதே காலகட்டத்தில் போடப்பட்ட அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 7,303 கோடி ரூபாய். வெளியேறிய மூலதனமோ 12,478 கோடி ரூபாய். ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமல்ல; தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள பிரேசில் நாட்டிலும் இதுதான் நடந்தது. அந்நாட்டில் அன்னிய நேரடி முதலீடு பெருகப் பெருக, அந்நாட்டின் அன்னியச் செலாவணி இருப்பும் கரைந்து கொண்டே போனது. 1993இல் பிரேசிலை விட்டு வெளியேறிய உள்நாட்டு மூலதனம் ஏறத்தாழ ரூ. 148 கோடியாக இருந்தது. 1998இலோ இது ரூ. 28,000 கோடியாக உயர்ந்தது. (ஆதாரம்: க்Nஇகூஅஈ அறிக்கை, 2005)


இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் நடத்திய ஓர் ஆய்வின்படி, ஏறத்தாழ 300 அன்னிய நேரடி முதலீட்டு நிறுவனங்களால் இந்திய அரசுக்குக் கிடைத்த வருவாயை விட, அந்நிறுவனங்களின் தொழில்நுட்பக் கட்டணம், மூலப்பொருள் இறக்குமதி முதலானவற்றுக்காகச் செலவிடப்பட்ட அந்நியச் செலாவணியே அதிகமாக உள்ளது. இவ்வாறு நாட்டின் செலாவணி இருப்பைக் கரைக்கும் நிதிச்சேவை, தொலைத் தொடர்பு, அடிக்கட்டுமான துறை, மின்சக்தி, சில்லறை வணிகம் முதலான துறைகளிலேயே பெருமளவு அன்னிய மூலதனம் நுழைகிறது.


அன்னியச் செலாவணி இருப்பைப் பலவழிகளில் அபகரிப்பதோடு அன்னிய நேரடி முதலீடுகள் நின்று விடுவதில்லை. மோசடிக் கணக்கு வழக்குகள் மூலம் ஒரு நாட்டில் முதலீடு செய்த மூலதனத்தையே அவை படிப்படியாகக் கடத்திச் சென்று விடுகின்றன. மேலும், இத்தகைய மோசடி கணக்கு வழக்குகளால் உலகெங்கும் பல நாடுகளில் கோடிகோடியாய் வரி இழப்பையும் ஏற்படுத்துகின்றன. பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளின் மோசடி தில்லுமுல்லு கணக்கு வழக்குகளால் அமெரிக்காவுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 1,20,000 கோடிக்கு மேல் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு புலம்புகிறது.


பன்னாட்டு நிறுவனங்கள் எந்த நாட்டில் முதலீடு செய்தாலும், அந்நாட்டு அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைக் குறைக்கவும் ஏய்க்கவும் தாங்கள் அடைந்த இலாபத்தைக் குறைத்துக் காட்டுவதென்பது இன்னுமொரு மோசடி உத்தி. உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏகபோக நிறுவனமான எக்சான், தென்னமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வரியே செலுத்தியதில்லை. ஏனென்றால், அந்நிறுவனத்துக்கு அங்கே சல்லிக் காசு கூட இலாபம் கிடைக்கவில்லையாம்! அப்புறம் எதற்காக எக்சான் நிறுவனம் பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி தொழில் நடத்திக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் அதிகப்பிரசங்கித்தனமாக கேள்வி கேட்கக் கூடாது. அது, சிலி நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறி வல்லரசாவதைத் தடுத்து விடும்!


இவை ஒருபுறமிருக்கட்டும். நேரடி அன்னிய முதலீடுகள் புதிதாக எந்தத் தொழிலையும் உருவாக்காமல், ஏற்கெனவே ஒருநாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களைக் கைப்பற்றி பெயரை மட்டும் மாற்றிக் கொள்கின்றன. அல்லது ஒரு நாட்டில் ஏற்கெனவே உள்ள தொழில் நிறுவனங்களை முற்றாக அழித்து விட்டு தனது தொழில் ஆதிக்கத்தை நிறுவுகின்றன. தமிழகத்தில் காளிமார்க், மாப்பிள்ளை விநாயகர் முதலான உள்ளூர் குளிர்பான நிறுவனங்களை ஒழித்துக் கட்டிவிட்டு ஆதிக்கம் செய்யும் கோக்கும் பெப்சியுமே இதற்குச் சான்று கூறப் போதுமானது.


அன்னிய முதலீடுகளால் வேலை வாய்ப்புப் பெருகும் என்பது அப்பட்டமான புளுகைத் தவிர வேறில்லை. ஏனெனில், இவ்வகை முதலீடுகள் பெரும்பாலும் நிதி நிறுவன முதலீடுகளாக பங்குச் சந்தை சூதாட்ட முதலீடுகளாகவே இருப்பதால், பெருமளவில் வேலைவாய்ப்பை உருவாக்க அடிப்படையே இல்லை. அடுத்து, சேவைத் துறையிலும் உற்பத்தித் துறையிலும் கணிசமாக நுழைந்துள்ள அன்னிய முதலீடுகள் நேரடி வேலைவாய்ப்பை உருவாக்காமல், ஒப்பந்தக்காரர்கள் மூலமே வேலைகளை முடித்துக் கொள்கின்றன. வேலை வாய்ப்பை உருவாக்குவதைவிட, தொழில் நிறுவனங்களைக் கைப்பற்றியும் கைமாற்றியும், ஆட்குறைப்பு செய்தும் இலாபத்தைச் சுருட்டுவதிலேயே அன்னிய நிறுவனங்கள் குறியாக உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கையால், பல்லாயிரம் கோடிக்கும் மேல் அன்னிய முதலீடுகள் வெள்ளமெனப் பாய்ந்தும் கூட, அவை உருவாக்கியுள்ள வேலை வாய்ப்பு மிக அற்பமானதுதான் என்ற நடைமுறை உண்மையே இதை நிரூபித்துக் காட்டுகிறது.


""அதெல்லாம் இருக்கட்டும்; மும்பை பங்குச் சந்தை 15,000 புள்ளிகளைத் தாண்டி புதிய உயரத்துக்குத் தாவுகிறது பாருங்கள். அன்னிய முதலீடுகளால் இந்தியப் பொருளாதாரம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுகிறது பாருங்கள்'' என்று ஏகாதிபத்திய எடுபிடிகள் உபதேசிக்கின்றனர்.


ஆனால், அதே மும்பை நகர் அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்திலும் ஆந்திராவிலும் கடன்சுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்ட சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 500ஐத் தாண்டிக் கொண்டிருக்கிறது. மும்பை நகரில் மூடப்பட்ட சிறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 3000க்கும் மேல் சென்றுவிட்டது.


இந்த உண்மை நிலவரங்களையெல்லாம் மூடிமறைத்துவிட்டு, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு எல்லா ஓட்டுப் பொறுக்கி அரசாங்கங்களும் அன்னிய முதலீடுகளை போட்டி போட்டுக் கொண்டு வரவேற்கின்றன. அன்னிய முதலீடுகளால் வளர்ச்சி பெருகிறது; கேழ்வரகில் நெய் வடிகிறது என்று கோயபல்சு பாணியில் புளுகி வருகின்றன. நாட்டைப் பேரழிவுக்குள் தள்ளி விட்டுள்ள அன்னிய முதலீடுகளையும் அதன் எடுபிடி ஆட்சியாளர்களையும் இன்னமும் சகித்துக் கொண்டிருந்தால், நாளைய வரலாறு நம்மைத்தான் இகழும்.


· தனபால்

Wednesday, October 31, 2007

தலித் மாநாடும், ஏற்றுக்கொள்ள முடியாதவையும்

பி.இரயாகரன்
31.10.2007

டுக்கப்பட்ட மக்கள் பற்றிய ஒரு மாநாட்டை ஒட்டிய எதிர்பார்ப்பு என்பது இயல்பானது. அந்த மக்களின் விடுதலைக்கான பாதையை கொள்கையளவிலாவது அது தெளிவுபடுத்தும் என்ற எதிர்பார்ப்பு, இயல்பானது. அந்த உணர்வை, ஏன் அந்த வழியையும், இந்த மாநாடு வழங்கவில்லை. எல்லாம் வழமையான பாணியில், அவர் அவர் அரிப்புகளைக் கொட்டும் இடமாகிப் போனது. வழமையான இலக்கிய சந்திப்புக்குரிய கொசிப்பாகி, தலித் மாநாட்டை சிதைத்துவிட்டனர். இதைக் கண்டு யாருக்குத் தான் கோபம் வராது.

தலித்திய மக்களின் பிரச்சனை என்பது, இலக்கிய கும்பலிலினதும் புலியெதிர்ப்பு கும்பலினதும் கொசிப்புக்கான தளங்களல்ல. ஆனால் அவர்கள் அந்த மக்களின் பிரச்சனையையே, கேலிசெய்து விடுகின்றனர். அந்த மக்களின் சமூகப் பிரச்சனையை பொறுப்புணர்வுடன் அணுகவும், அதை முன்னெடுத்துச் செல்லவும் உறுதியும் நேர்மையும் அவசியமானது. இந்த வகையில் அவை திட்டமிடப்படவில்லை.

இந்திய இலங்கை அரசினது கூலிக்குழுவாக இயங்குபவனுக்கு, தலித்தியம் பற்றி என்ன தான் அக்கறை இருக்கமுடியும். இந்திய இலங்கை அரசின் நலன்களைப் பேணும் கூலிக்குழுவாக, அவர்களின் பணத்தில் அவர்களின் ஆயதங்களைக் கொண்டு இயங்கும் இயக்கங்களும், இலக்கியம் என்றால் தண்ணியடிப்பிலும் கொசிப்பிலும் மூழ்கிவிடுகின்றவர்களால், தலித் பிரச்சனையை ஒருநாளும் நேர்மையாக அணுகமுடியாது.

தலித் பிரச்சனையைப் பற்றி கதைக்க கலந்த கொண்டவர்களில் கணிசமானவர்கள் இவர்கள். இவர்கள் ஒப்புப்பாடவும், ஒப்பாரி வைப்பதுமாகி தலித்மாநாட்டைக் கேலிசெய்தனர். கூலிக் குழுக்களாக மாறிவிட்ட இயக்கத்தில் இன்றும் இயக்க உறுப்பினராக இருப்பவர்கள், அதை மூடிமறைத்துக் கொண்டு தம்மை தலித் மாநாட்டின் ஆதரவாளராக அடையாளப்படுத்துவர்கள், எப்படி தலித் மக்களின் பிரச்சனைக்காக உண்மையாக இருப்பார்கள்? இப்படித்தான் இலக்கியவாதியாக கூறிக்கொண்டவர்கள், ஒரு இலக்கியத்தைக் கூட மக்களுக்காக படைத்தது கிடையாது. இவர்கள் எப்படி தலித் விடுதலைக்கு வழிகாட்ட முடியும். அதற்காக உண்மையாக போராடுபவர்கள் என்று, யாரால் எப்படி கூறமுடியும்?

இப்படிப்பட்ட போலிகளையே திருப்தி செய்த மாநாடு, அதனடிப்படையிலேயே தன்னை சோரம் போக வைத்தது. இதை தோலுரித்துச் சொல்லும் தலித்திய உரிமை, எங்களுக்கு உண்டல்லவா?

தலித்தியம் பற்றி உண்மையான அக்கறை உள்ளவர்கள், தலித் மக்களின் உண்மையான விடுதலையை விரும்புபவர்கள், எதைச்செய்ய வேண்டுமோ அதை செய்வது கிடையாது. இலக்கிய மலடுகளையும், புலியெதிர்ப்பு அரசியலை அடிப்படையாக கொண்ட கும்பலையும், இயக்கவாதிகளையும் அல்லவா நிராகரிக்க வேண்டும். இவர்கள் தான், தலித்தியம் கோட்பாட்டு ரீதியாக கூட, தன்னை அடையாளம் காண்பதற்கு எதிரான முதலாவது எதிரிகள். இதை தலித் மாநாடு தெளிவுபடுத்தாது, அவர்களுடன் கூடி சோரம் போனது. உண்மையில் இது தலித் மக்களுக்கு எதிரானது. மக்கள் இலக்கியம், பாசிச ஒழிப்பில் மக்களை சார்ந்து நிற்றல் மூலம் தான், உண்மையான தலித் விடுதலையை பற்றி குறைந்தபட்சம் பேசும் நிலைக்கு முன்னேற முடியும்.

தலித்துக்கு ஒரேயொரு வேலைத்திட்டம் தான் இருக்கமுடியும். பாசிச ஒழிப்புக்கு என்று வேறு வேலைத் திட்டம் இருக்க முடியாது. தலித் மக்களை சார்ந்து நிற்றல் மூலம், தனது எதிரியாக உள்ள பாசிசத்தையும், பேரினவாதத்தையும் எதிர்த்துப் போராட முடியும். இப்படித்தான் சாதி ஒழிப்பை நடத்த முடியும். ஒரேயொரு வேலைத் திட்டம் தான் தலித் விடுதலைக்கும் சரி, எந்த விடுதலைக்கும் சரி அடிப்படையாக அமையமுடியும்.

தலித்தியம் பெயரில் குறித்த தலைப்புகளின் பேசியவர்கள்

ஒரு இருவரைத் தவிர, மற்றவர்கள் எந்தவிதமான சமூகப் பொறுப்புணர்வுடனும் அதைச் செய்யவில்லை. அவர்கள் தமது தலைப்புக்குள் கூட பேச முடியவில்லை. அரைக்கின்ற வழமையான மாவை, வழமை போல் மீள அரைத்தனர். அதை மற்றவன் நெற்றில் வழமையாக பூசுகின்றதையே, இங்கும் மீளச் செய்தனர்.

ஆய்வுத்திறன், அறிவு, தொடர்ச்சியாக கற்றல், சமூகத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் எல்லாம் மலடாகிப் போனவர்களின் சொந்த ஒப்பாரிதான், தலித் மாநாட்டின் பெயரில் மீண்டும் அரங்கேறியது. இப்படி அவர்களுக்கு, முன்னால் இருப்பவர்களை கேலிசெய்துவிடுகின்றனர். எந்த சமூக பொறுப்புணர்வுமற்ற, மற்றவனைக் கேலிசெய்கின்ற, சொந்த சமூக அறியாமையை, அறிவாகவும் அறிவாளியாகவும் காட்டி வண்டில் விடுகின்ற நக்கல் தனம் தான், கருத்துரைகளாக அவர்களிடம் இருந்து வெளிப்பட்டது.

உண்மையில் தமக்கு தெரிந்ததை வழமை போல் கொட்டிவிட்டு செல்லுகின்ற வழமையான பாணியை, புலம்பெயர் மாற்றுத் தளமாக சித்தரிப்பது அலுக்கோசுத்தனமாகும். ஆய்வுக்குரிய சமூகத் தகுதி இங்கு கேள்விக்கு உள்ளாகின்றது.

ஒரு சமூகம் சந்திக்கின்ற முழுமையான பிரச்சனையை. அதை சம்பவ ரீதியாக சொல்வதா அறிவு? எல்லோருக்கும் தெரிந்ததைப் போல், தனக்கு தெரிந்ததை சொல்வதும் அறிவுமல்ல, ஆய்வுமல்ல. ஒரு இலக்கியம் போல், ஆய்வும் அறிவும் என்பது, விடையங்களில் பொதிந்துள்ள சூக்குமத்தை உடைத்தெறிவது தான். ஒரு ஒடுக்குமுறை வெளிப்படையாக இயங்குவது ஒருவிதம். ஆனால் அது சூக்குமமாக, ஒடுக்குமுறை சமூக இணக்கத்துடன், சமூகம் ஏற்றுக்கொள்ளும் வடிவில் இயங்குகின்றது. அறிவு என்பதும், ஆய்வு என்பதும் இதை உடைத்துப் போட்டுத் தெளிவுபடுத்துவது தான். இதை விடுத்து ஒப்பாரி வைப்பது ஆய்வுமல்ல அறிவுமல்ல. சம்பவங்கள் இந்த சாதிய சமூகத்தின் உள் வாழ்கின்ற அனைவருக்கும் தெரிந்தவை தான். அவை சமூகத்தில் உள்ளவை தான். இதைச் சொல்வதா அறிவு, ஆய்வு. இது சமூகத்தின் உட்பதிந்துள்ள, அறிவை கேலிசெய்வதாகும்.

இதன் விளைவு வெளிப்படையானது. ஆய்வு, அறிவு என்ற பெயரில் அங்கு பேசியவர்கள், தமது குறுகிய எல்லைக்குள் அதற்குட்பட்ட நோக்கத்துக்குள் சாதியத்தை இட்டுச் சென்றனர். இப்படி சாதியத்துக்கு எதிரான உணர்வுபூர்வமான போராட்டத்தை சிதைத்தனர். உண்மையில் அறியாமை, மலட்டுத் தனம், உள்நோக்கம் கொண்ட சதியை அடிப்படையாக கொண்ட ஆய்வு முறை, பொறுப்பற்ற சமூக விரோதத்தன்மை என்பனவற்றின் வெளிப்பாடாகவே தலித் மாநாடு அமைந்தது.

உதாரணமாக இடைக்காலத் தீர்வுத் திட்டத்தில் சாதிய தீர்வை புகுத்தல் என்ற பெயரில், இரண்டு சட்ட நிபுணர்கள் உரையாற்றினர். வேடிக்கை என்னவென்றால், சாதியைப் பற்றி இலங்கை சட்ட அமைப்பில் இருப்பதைக் கூட, அவர்களால் அடையாளப்படுத்த முடியாதவர்களாகவே இருந்ததுடன், ஏதோ கதைத்தனர். 1950 களினான சட்டமும், 1970 களிலும் திருத்தப்பட்ட சட்டமும், சாதியொடுக்கு முறைக்கு எதிராக உண்டு. இப்படி இதைக் கூட ஆராயாது, அதைக் கூட முன்வைக்க முடியாதவர்கள், சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக எந்த சட்டதிட்டத்தைத்தான் கோரமுடியும். இலங்கையின் சட்ட அமைப்பே அதை தெளிவாக கொண்டுள்ளது. தீர்வுத்திட்டத்தில் எதைக் கோருவது என்பதற்கு, இது அவசியமானது. இப்படி ஆய்வுகள் அறிக்கைகள் எதையும் முன்வைக்க முடியாதபோது, தலித்மாநாட்டின் தோல்வி என்பது, கலந்து கொண்டவர்களின் உள்நோக்கம் சார்ந்து வெளிப்படையானது.

சாதிய அமைப்பில் சட்டங்கள் மூலம், எதையும் முடிவுக்கு கொண்டு வர முடியாது. சட்ட ஏற்பாடுகள், சாதிச் சமூக அமைப்பில் அமுலுக்கு வராது. தனிப்பட்ட சில நபருக்கு உதவலாம். அது போல் தனிபட்ட நபர்களின் நலனுக்கு இவை உதவலாம். சமூகத்துக்கல்ல.

இந்தியாவில் சாதிய கொடுமைகளுக்கு எதிராக இருக்கின்ற சட்டங்கள் இயங்கினாலே, சாதியம் கிடுகிடுக்கும். ஆனால் அது இயங்குவதில்லை. அச்சட்டங்கள் என்ன? அது ஏன் இயங்குவதில்லை.? பார்க்க

1.சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள் அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச்சுரைக்காய்கள்

2.சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள் அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச்சுரைக்காய்கள்


3.சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள் அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச்சுரைக்காய்கள்


4.சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள் அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச்சுரைக்காய்கள்

கருத்துச் சுதந்திரம் என்பது நபருக்கானதா? கருத்துக்கானதா?

கருத்து இருந்தால் தானே, கருத்துச் சுதந்திரம் இயங்க முடியும். கருத்து என்பது முரண்பட்ட மக்களின் நலன்களை பிரதிபலிப்பது. சமூக முரண்பாடுகளில் இருந்து பிரதிபலிப்பது. சமூகத்தினையிட்டு அக்கறையற்றவர்கள், குறுகிய நலன்களுடன் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்ற ஒரு கூட்டத்திடம், கருத்துகள் இருப்பதில்லை. தனிமனித பொறுக்கித்தனமே கருத்தாக வெளிப்படுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்த ஒரு கருத்தாக அல்லாது, அதற்கு எதிரான ஒன்றாகவே அது மாறுகின்றது.

இதன் விளைவு கருத்துச் சுதந்திரம் என்பது கருத்துக்கு அல்ல, நபருக்கானதாக மாறுகின்றது. இப்படியான ஒரு புரிதல், சமூகத்தின் ஆற்றலற்ற மலட்டுத்தனத்தில் இருந்து வித்திடப்படுகின்றது. இப்படி கருத்துச் சுதந்திரம் என்பது நபருக்கானதா? கருத்துக்கானதா? என்ற எல்லைக்குள், சமூகத்தின் அறிவு மட்டும் நபருக்கானதாகி தரம் தாழ்ந்து போகின்றது. கருத்துக்களே இல்லாத போது, நபருக்கே கருத்துச்சுதந்திரம் என்ற நிலைக்கு சமூகத்தின் பொதுப்புத்திமட்டம் தாழ்ந்து விட்டது. நபர்களின் எண்ணிக்கை, அவர்கள் பேசுவதே கருத்துச் சுதந்திரமாகிவிட்டது.

இதன் மூலம் கருத்துச் சுதந்திரம் என்பது நபருக்கே ஒழிய, கருத்துக்கு அல்ல என்ற வகையில், இன்று கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. இன்று மக்கள் போராhட்டம் என்றாலே அதை புலி மற்றும் புலியல்லாத தரப்பு கேலி செய்வது போல், அது என்னவென்று கேட்கின்ற நிலைக்கு சமூகத்தின் நிலை தாழ்ந்துவிட்டதைப் போன்ற, ஒன்று கருத்துச் சுதந்திரம் பற்றி நிலைப்பாடும் உள்ளது.

500 பேர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் கருத்துச் சுதந்திரம் நபருக்கு என்றால், அதுவும் ஒரு நிமிடம் தான் என்றால் 500 நிமிடங்கள் தேவை. இப்படி கருத்துகள் மறுக்கப்படுகின்ற அவலம். ஆனால் இப்படித்தான் கருத்துச் சுதந்திரம் பற்றி புரியப்பட்டு இருக்கின்றது. இப்படித் தான் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு, அமுல்படுத்தப்படுகின்றது.

இப்படி கருத்து மறுப்பு பொதுத்தன்மையாகிவிட்டது. மாறுபட்ட கருத்துக்கு கருத்துச் சுதந்திரம் என்பது, நினைத்துக் கூட பார்க்க முடியாத விடையமாகிவிடுகின்றது. ஒத்த கருத்துக்கு கருத்துச் சுதந்திரம் என்பது, நபர் சார்ந்து ஒப்பாரியாகிவிடுகின்றது. ஒரே கருத்தை ஒரேவிதமாக ஒப்புவிக்கின்ற நபர்களின் புலம்பல், கருத்துச் சுதந்திரமல்ல. கருத்து மறுப்பாகும். மாற்றுக் கருத்து வருவதை நேரத்தைக்கொண்டு தடை செய்கின்றது. கேட்பவரை சிந்திக்க விடாது தடுக்கின்றது. இப்படி மாறுபட்ட கருத்துக்கு கருத்துச் சுதந்திரத்தை கோரிப் போராட வேண்டிய நிலை.

நபருக்கான கருத்துச் சுதந்திரம் பிற்போக்கான கூறாகி விடுகின்றது. தலித் மாநாட்டில் தலித்திய பிரச்சனை இல்லை என்று சொல்பவருக்கும் கருத்துச்சுதந்திரம். பகுத்தறிவை அடிப்படையாக கொண்ட தலித்மாநாட்டில், மதவாதிக்கும் கருத்துச் சுதந்திரம் என்ற நிலைக்கு கருத்துச் சுதந்திரம் கொச்சைப்படுத்தப்படுகின்றது.

கருத்துச் சுதந்திரத்தின் பெயரில், மதவாதியாகவே புலம்பிய பசிர்

இவர் புலியெதிர்ப்புக் கும்பலின் தந்தைகளில் ஒருவர். ரீ.பீ.சி புலியெதிர்ப்பு மூலம் பெத்துப் போட்ட, மதவாதி. மதவாதிக்கும் பகுத்தறிவுக்கும் என்ன சம்பந்தம்? புலியெதிர்ப்பு ஊடாக பாய்விரித்து, பகுத்தறிவை விபச்சாரம் செய்கின்றனர். பாவம் தலித் மக்கள். இவர் சட்டத் துறையில் உண்மையை பொய்யாக நிறுவுகின்ற வழக்குசார் நுட்பம், அது சார்ந்த பேச்சாற்றல், ரீ.பீ.சீயில் புலியெதிர்ப்பு மேதையானார்.

இந்த மதவாதி தனது மதம் சார்ந்து, முஸ்லிம் மக்களை தேசியம் இனம் என்பவர். இதே நபர் தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இது தான் இதில் முரணே. இப்படி புலியெதிர்ப்பு கூச்சல் பேர்வழி. இவர் தமிழ் தேசியத்தை எதிர்கின்ற அரசியலும், முஸ்லீம் தேசியத்தை ஆதரிக்கின்ற வக்கிரமும், முஸ்லீம் என்ற மத அடிப்படைவாதத்தில் இருந்து தான் வருகின்றது.

தலித் மாநாட்டின் சட்டமேதையாக, புலியெதிர்ப்பு சார்ந்து கலந்துகொள்ள முடிந்தது. தலித் மக்களை பாதுகாக்க சட்டம் பற்றி கதைக்க வந்தவர், இலங்கை சட்டமைப்பில் இது எப்படி உள்ளது என்று கூறத் தெரியாத அளவுக்கு அக்கறையற்றவர். புலியெதிர்ப்பு தலித்தியத்தை நிறுவ வந்த கோஸ்டிகளில் ஒருவர் என்பது தான் உண்மை. முஸ்லீம் மதவாதத்தை பாதுகாப்பதில் உள்ள கருசனை, தலித்திய பகுத்தறிவை எட்டி உதைக்கின்றது.

தலித்மாநாட்டில் இந்த மதவாதியின் வேஷம் கலைந்தது. அவர் ஒரு பகுத்தறிவாளன் அல்ல என்பது உண்மையாகியது. ஒரு முஸ்லிம் மதவாதியாகி, மதவெறி பிடித்த கும்பலுடன் தன்னை அடையாளம் காட்டினார். இந்தியாவில் முஸ்லீம் மக்கள் மத்தியில் உள்ள சாதியத்தை பாதுகாக்க, அதை இல்லை என்று ஒரு மதவாதியாக குலைத்தார். எப்படிப்பட்ட ஒரு தலித் விரோதி. தலித்தியம் என்பதை இந்துத்துவமாக மட்டும் காட்டுகின்ற மத வக்கிரம்.

இந்த மதவாதம் ஊடாகவே புலியையும் அணுகுகின்றது. புலியை இந்து புலியாக காட்ட முனைகின்றார். வடக்கு முஸ்லீம் மக்களை வெளியேற்றியதை பற்றி குறிப்பிடும் போது, புலிகள் மதவாதத்தை அடிப்படையாக கொண்டு வெளியேற்றியதாக தனது சொந்த மதவெறியைக் கக்கினார். பார்க்க இதை மறுக்கும் எனது கருத்துகளை.

முஸ்லீம் மக்கள் மீதான வன்முறையும்இ அதற்கு எதிரான போராட்டமும்

இப்படி மதவாதியின் நோக்கம் சார்ந்த அப்பட்டமான திரிபு. வடக்கில் இருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றம் என்பது, அவர்கள் முஸ்லீம் மதத்தை பின்பற்றியதால் அல்ல. அவர்களை இந்து மதத்துக்கு மாறக் கோரியதால் அல்ல. மூஸ்லீம் மதத்தை பின்பற்றுகின்றீர்கள் என்பதால் அல்ல. அவர்கள் தேசிய சிறுபான்மை இனமாக இருந்ததால் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். அந்த வகையில் தான் அவர்களை தேசிய இனங்களில் ஒன்றாக வரையறுக்கின்றோம். முஸ்லீம் மதத்தை பின்பற்றுவதால், அவர்கள் தேசிய இனமாகிவிடமாட்டர்கள்.

பகுத்தறிவுக்கு மாறாக, மதத்தின் ஊடாக தனது அறிவை, மூளையை உடைத்து அங்கு வீற்று இருந்த பெரியாரின் மூஞ்சையில் காறித் துப்பினார். இவர் இந்திய முஸ்லீம் மக்கள் மத்தியில் சாதியம் உண்டு என்ற புதியமாதவி ஆதாரபூர்வமாக கூறிய போது, இந்த மதவாதியால் அங்கு இருப்புக்கொள்ள முடியவில்லை. மதவாதியாக இந்திய முஸ்லீம் மதத்தை பாதுகாக்க, அதை பொய் என்றார். அப்படிக் கிடையாது என்றார். அது இதுவாக இருக்கும், இது அதுவாக இருக்கும் என்று, தனது தொழில் சார்ந்து செய்கின்ற புரட்டுத்தனத்தை இங்கும் செய்தார்.

நான் மதவாதியாகவா கதைக்கின்றீர்கள் என்று குறுக்கிட்ட போது, அது தனது கருத்துச் சுதந்திரம் என்றார். கருத்துச் சுதந்திரம் என்பது, தலித் மாநாடு முன்னிறுத்திய பெரியாரின் பகுத்தறிவுக்கு எதிராகவே அங்கும் அரங்கேறியது.

தன்னை ஒழுக்கவாதியாக காட்டமுனைந்த ஜெகநாதன்

ரீ.பீ.சியின் மற்றொரு புலியெதிர்ப்பு பிதாமகன். நான் ஆனந்தசங்கரி பற்றி எழுதிய கட்டுரையில், ஜெகநாதனுடன் அவர் கொண்டிருந்த தொழில் கூட்டு பற்றி எழுதியிருந்தேன். பார்க்க தமிழ் மக்களையே குதறித் தின்னும் குள்ளநரி

அதை மறுத்த அவர், தான் ஒருவருக்கு மட்டும் தான் ஆனந்தசங்கரியின் கடிதத் தலைப்பை பயன்படுத்தியதாக குறிப்பிட்டார். இப்படி தனது அரசியல் ஒழுக்கம் பற்றி பேசி, என்னை தூற்றினார்.

ஜெகநாதனும் வேறு சிலரும் கூட்டாக ஆனந்தசங்கரியுடன் சேர்ந்து, ஆனந்தசங்கரிக்கு வெளியில் இலங்கை தூதுவராலயம் வரை எப்படி தொழில் செய்து சம்பாதித்தீர்கள் என்பது ஊர் உலகம் அறிந்தது. சரி, நீங்கள் சொல்வது போல் நீங்கள் அதைச் செய்யாத ஒழுக்கவாதிகள், நேர்மையானவர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

உங்கள் ஒழுக்கவியலையும், நேர்மையையும் வேறு ஒரு தளத்தில் உடைத்துப் பார்ப்போம். இன்று வரை புளாட் என்ற கொலைகார சதிக் குழுவின் உறுப்பினர். அதை மூடிமறைத்து, ஊர் உலகத்தின் முன்னால் ஜனநாயகவாதியாக அறிமுகம் செய்து, வேஷம் போடுவது அழகோ. தலித் மாநாட்டில் கூட சொந்த இயக்க அடையாளத்தை மறைத்தபடி நாய் வேஷம். இப்படி எல்லா நாய்களைப் போல வாலாட்டி மக்கள் முன் வேஷம் போடுவது அரசியல் சூழ்ச்சி.

புளாட் இயக்கம் செய்த ஒவ்வாரு கொலையையும், இன்றும் செய்கின்ற ஒவ்வொரு கொலையையும் ஆதரித்த படி, அந்த இயக்கத்தில் இருப்பது அரசியல் யோக்கியதையோ! ஆனந்தசங்கரி என்ற பொறுக்கியுடன் கூடி அரசியல் செய்வது யோக்கியமோ. இந்த ஆனந்தசங்கரி தமிழ் மக்களின் பிரச்சனையை பேசி பெற்ற பணத்தை, அவன் தனதாக்கி வைத்திருப்பதற்கு துணைபோவது யோக்கியதையோ? தமிழ் மக்களைச் சொல்லி அதில் வாழும் அந்த போக்கிரியுடன் கூடி வம்பளப்பதா, உங்கள் அரசியல் யோக்கியதை! இதை கண்டிக்க, விமர்சிக்க கூட அரசியல் யோக்கியதை உங்களிடம் கிடையாது. அப்படிப்பட்டவர்கள் போக்கிரிகள் தான்.

தம்மை மூடிமறைத்துக் கொண்டு இயங்கும், இயக்கவாதிகளின் நோக்கம் என்ன?

ஏன் எதற்காக தம்மைத்தாம் மூடிமறைக்கின்றனர். எதனால் வெளிப்படையாக மக்கள் முன் வரமுடிவதில்லை. தாம் ஜனநாயகவாதிகளாக, வன்முறைக்கு எதிரானவர்களாக, கொலைகளை கண்டிப்பவர்களாக காட்டிக்கொண்ட, காட்டிக்கொள்கின்றவர்கள், எத்தனை எத்தனையோ கவர்ச்சிகரமான வேஷங்கள். இயக்கத்தின் உறுப்பினராக, அவர்களுடன் தொடர்புடையவராக வலம் வரும் இந்த வேஷதாரிகளின் வேஷம் படுபிற்போக்கானது. ஒருவன் தன்னை புலி என்று கூறி வேலை செய்வதில் ஒரு நேர்மையும், அதில் ஒரு ஒழுக்கமும் உண்டு. அதைக் கூட செய்யமுடியாதவர்கள் தான் ஜனநாயகவாதிகள். இப்படிப்பட்டவர்கள் படுபிற்போக்குவாதிகள். உண்மையில் தம்மையும், தமது மனித விரோத நடைமுறைகளையும் மக்கள் முன் மூடிமறைப்பது தான், தம்மை முடிமறைப்பதன் நோக்கம்.

இப்படிப்பட்டவர்கள் மக்களின் முன்னும், தமது கருத்துக்களை வைக்கும் இடங்களிலும், தமது இயக்க அடையாளத்தை வெளிப்படுத்துவதில்லை. இதேபோல் தம்மை ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ளும், அராஜகவாத லும்பன் உதிரிகள் இந்த இயக்கவாத கும்பலுடன் அடிக்கும் கூத்துகள் சொல்லிமாளாது. இவர்களின் இழிவு கெட்ட அரசியலோ, அரசியல் சதியாகின்றது. தலித் மாநாட்டிலும் கலந்து கொண்ட இந்த இயக்கப் பேர்வழிகள், தம்மை முழுமையாக மூடிமறைத்துக் கொண்டு, தலித் மக்களுக்கு எதிராகவே சதி செய்தனர்.

இப்படி பல புனைபெயர் பேர்வழிகள் எழுத்தில் உலவுகின்றனர். சொந்தப் பெயரில் அதை சொல்லும் அரசியல் நேர்மையற்று, சதிகளை மூலமாகிக்கொண்டு இயங்குகின்றனர். அண்மையில் ஞானம் தொடர்பாக தீப்பொறி இணையமும், அதை மீள வெளியிட்ட நிதர்சனச் செய்தியின் உண்மைத் தன்மையும் கூட, இங்கு இப்படிப்பட்டதுதான். ஞானம் பற்றிய குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை பற்றி ஆராய்வதல்ல, இந்த சதி வழிமுறை பற்றியதே எம்முன்னுள்ள விடையம்.

ஞானம் தனது அரசியல் செயல்பாட்டையும், கருணா என்ற பாசிச புலிக் கும்பல் பற்றிய, அரசியல் நிலைப்பாட்டை பகிரங்கமாக இதுவரை முன்வைக்கவில்லை. யாழ்மேலாதிக்கத்தின் பெயரால், கிழக்கு வாதங்கள் மூலம், அதை அரசியல் ரீதியாக பாதுகாத்து விடமுடியாது. இதையொட்டி தேனீயில் அவர் எழுதிய கட்டுரை, எதையும் அரசியல் ரீதியாக தெளிவாக்காத வகையில், சூக்குமமாக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் சதிகாரர்களின் தொடர் குற்றச்சாட்டுக்கு, அதுவே மேலும் பக்கபலமாக உள்ளது.

இந்த விடையத்தை அரசியல் சதியாகவே முன்னெடுத்த பின்னணியோ, அதைவிட சூக்குமானது. ஈ.என்.டி.எல்.எப் என்ற இந்தியக் கூலிக் குழுவின் இணையத்தில் தான், இந்த சதி திட்டமிட்டு வெளிவருகின்றது. இதில் அரசியல் நேர்மை பற்றிய விடையமும், சதி பற்றிய சூக்குமமும் அம்பலமாகின்றது. ஈ.என்.டி.எல்.எப் என்ற கொலைகார கும்பலினதும், இந்திய சதிக் கும்பலினதும் இணையம் தான் தீப்பொறி. இதில் ஒரு புனைபெயர் வழியாக, வருகின்ற சதிக்குரிய நபரை, அனைவரும் அறிவர்.

வேடிக்கை என்னவென்றால், அண்மைக் காலமாக புலியின் இணையமான நிதர்சனம் டொட் கொம்மும் அதனுடன் இணங்கி செயல்படுகின்றது. சுவிஸ் ஜெயிலில் ராம்ராஜ்சை புலிகள் சந்தித்ததும், ஈ.என்.டி.எல்.எப் ஏகபோக தலைவர் ராஜனின் சகோதரர் கொழும்பில் காணாமல் போன பின்னணியுடன், இந்த தேன் நிலவு இவர்களுக்கு இடையில் நடப்பது வெளிப்படையானது. இப்படி இந்த இரண்டு இணையமும், ஒன்றுடன் ஓன்று சார்ந்து செயல்படுகின்றது.

இப்படி இயக்க சதிகள், ஜனநாயகத்தின் பெயரில் அரங்கேறுகின்றது. இதில் ஈ.என்.டி.எல்.எப் யை, கருணா கும்பல் ஜனநாயக விரோதமாக கிழக்கில் விழுங்கி ஏப்பமிட்டதை பழி தீர்க்கும் அரசியல், ஞானம் விவகாரம் ஊடாக பூதமாகி வீங்குகின்றது.

ஞானத்துடன் தீரா பகை கொண்டு திரியும் 'அனைத்து வன்முறைக்கும் எதிரானவர்" நடத்தும் நாடகம் தான், ஞானம் பற்றிய தொடர்ச்சியான செய்திகள். 'யன்னiலைத் திற" என்ற அசோக்கின் வெளியீடு இதைத்தான் அப்படியே முன்பு செய்ய முனைந்தது. இப்ப எழுத்தில் புனைபெயர்கள். இப்படி புனைபெயர் கட்டுரைகள் பல. கருணைதாசன் என்ற புனைபெயரில் தீப்பொறியில் வந்ததும் சரி, ஈழமுரசில் கருணைதாசன் என்ற பெயரில் மகாஜனா பழைய மாணவர் சங்கம் பற்றி எழுதியவரும் ஓருவரே. அண்மையில் தேனீயில் மலைதாசன் (பெயர்?) என்ற பெயரில் சோபாசக்தியை தாக்கிய, புனைபெயர் அனைத்திலும் ஒருவரே. இப்படி அரசியல் சதியை சூதாட்டமாக நடத்துகின்றனர். ஞானத்தின் அன்றைய துரோகத்தை பட்டியல் இடுபவர்கள், அந்த வீட்டில் பல வருடக்கணக்காக இதையெல்லாம் தெரிந்து கொண்டு சாப்பிட்ட அந்த துரோகத்தை மட்டும், எதிலும் யாரும் குறிப்பிடுவதில்லை. அப்போது ஞானம் துரோகியல்ல, இப்ப துரோகி.

இது போன்ற குற்றச்சாட்டுகளின் சரிபிழைக்கு அப்பால், சொந்தப் பெயரில் செய்ய முடியாது கேடுகெட்ட கேவலமே போதுமானது, இந்த சதியை ஆராய. இவர்களின் அரசியல் நேர்மை பற்றி பேசுவதற்கு. அதுவும் ஈ.என்.டி.எல்.எப் என்ற அனைத்து வன்முறையும் செய்த செய்யும் ஒரு இணையத்தில் இது அரங்கேறுகின்றது. இந்தக் கேவலமும், அனைத்து வன்முறையையும் எதிர்ப்பதாக கூறுவதன் அர்த்தமும் வெட்கக்கேடானது.

கிழக்கு பிரதேசவாதத்தை வைப்பது என்பது அவரின் அரசியல். அதை அரசியல் ரீதியாக எதிர்கொன்ள முடியாமல் போவது ஏன். இதை மறுக்கும் நீங்கள் வைக்கும் மாற்று அரசியல் தான் என்ன? அதைவிட உயர்வாக என்னத்தை வைக்கின்றீர்கள். ஈ.என்.டி.எல்.எப் என்ற இந்தியக் கூலிக் குழுவின் இணையத்தில் படுத்துக்கிடப்பது, ஞானத்தின் மீதான குற்றச்சாட்டை விட எந்தவகையில் உயர்ந்தது. புலியெதிர்ப்பின் பின் நடத்துகின்ற அரசியல் வக்கிரம், ஞானத்தின் அரசியலை விட எந்தவிதத்திலும் உயர்ந்ததல்ல.

இயக்கங்களுடன் நடத்துகின்ற இரகசிய உறவுகள், தொலைபேசி உரையாடல்கள், கூட்டுச் சதிகள், இயக்கத் தலைவர்களுடன் கொண்டுள்ள உறவு, என்று மொத்தத்திலேயே கேவலமானது. யார் வன்முறை செய்கின்றனரோ, அவர்களுடன் அரசியல் விபச்சாரம். வன்முறை மறுப்பதாக கூறிக்கொண்டு, கேடுகெட்ட அரசியல் விபச்சாரமல்லவா இவை. புலிகள் மட்டுமே வன்முறை செய்வதாக கூறிக்கொண்டும், கருணாவும் அப்படி செய்வதாக காட்டிக் கொண்டும், ஈ.என்.டி.எல்.எப் வுடன் குலாவுவது எப்படிப்பட்ட பொறுக்கித்தனம். நீங்கள் டக்கிளஸ்சுடன் ஆனந்தசங்கரியுடனும் கூடி (அவர்கள் கோடிக்கணக்கில் துரோகத்துக்கு பணம் வாங்குகின்றனர்.) அரசியல் கோஸ்டி கானம் பாடும் போது, ஞானம் தனியாக பாடினால் தான் என்ன? நீங்கள் செய்வது புரட்சியோ?

இப்படி டக்கிளஸ்சுடன் ஆனந்தசங்கரியுடனும் ஆலவட்டம் பிடித்து திரிகின்றவர்கள், தங்களை மூடி மறைத்துக் கொண்டு, புனைபெயரில் பம்முகின்ற அரசியல் யோக்கியதை தான் என்ன? ஞானம் தனது அரசியல் நிலையை வைக்க மறுப்பது என்பது, எமக்கு முன்னுள்ள தெளிவான விமர்சனம். கருணா பற்றிய அவரின் நிலைப்பாட்டை கோருகின்றோம். ஆனால் அதை நீங்கள் வைப்பதற்கு, உங்களுக்கு எந்த அரசியல் அடிப்படையுமே கிடையாது. அதுவும் ஈ.என்.டி.எல்.எப் இணையத்தில்! சொந்த அரசியல் நிலையைக் கூட வைக்க முடியாதவர்கள், ஞானத்தைப் பற்றி பேசுவது மிகமிக மலிவானது. உங்கள் அரசியல் என்பது, இழிவான மலிவான பிரச்சாரங்கள் தான். அதே புளட்டின் சதித் தனங்கள் தவிர, வேறு எதுவும் அங்கு அரங்கேறுவதில்லை.

Tuesday, October 30, 2007

அமெரிக்காவின் உருவாக்கம் தான் எய்ட்ஸ் கிருமி HIV

அமெரிக்காவின் உருவாக்கம் தான் எய்ட்ஸ் கிருமி HIV

நன்றி : தமிழர் இணையம்
AIDS : Made in America - பேரழிவு ஆயுதம் - Dr. புகழேந்தி (இந்தியா)

(மருத்துவத் துறையில் தங்கப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் கல்பாக்கம் அணு மின் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதியில் கதிர்வீச்சு அபாயம், குழந்தைகளுக்கு ஆறு விரல்கள் இருப்பது, புற்றுநோய் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். அவரது AIDS: A Biological Warfare? நூலைத் தழுவி இக்கட்டுரையை ச.வேலு தொகுத்துள்ளார். )

இன்று வரை நம்மிடையே "பாதுகாப்பான உறவு" எனப் பரப்பப்பட்ட செய்திகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விசுவாசமான பிரச்சாரங்களும் ஒழுக்கம் பற்றிய விளிம்புக்குள்ளேயே சுற்றிவந்தன. மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா தளங்களில் இறக்கிவிடப்பட்ட, இந்த எய்ட்ஸ் பற்றிய மறுபக்க ஆய்வுகள், இன்றுவரை புரிய வைக்கப்பட்ட செய்திகளைத் தலைகீழாக மாற்றியுள்ளது.

எய்ட்ஸ் பீதியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட ஊசி தயாரிக்கும் குழுமங்களும், இரத்தம் செலுத்தும் மையங்களும், ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்களும் கொள்ளையடிக்கத் தொடங்கிவிட்டன.

எய்ட்ஸ் என்பது இயற்கை வியாதியா?

எய்ட்ஸால் இறந்த பலரையும் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவ ஆய்வாளர்களின் அறிக்கை நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றது. எயிட்ஸ் என்பது இயற்கையான வியாதியுமல்ல, ஓரினச் சேர்க்கையாளர்களை (Homo Sexuals) ஒழிக்க மட்டும் வந்த வியாதியுமல்ல. கருப்பின மக்களை மட்டும் அழிக்கவந்த வியாதியுமல்ல. எய்ட்ஸ் என்பது மனிதர்களால் சோதனைச் சாலையில், மனிதர்களுக்கு எதிராக கிருமியை உருவாக்க முடியும் என்பதற்கான ஆதாரத்திலிருந்து(1) எய்ட்ஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பது இன்று உறுதியாகின்றது.(2)

இத்தகைய ஆட்கொல்லிக் கிருமி உருவாக்கங்களின் தேவை என்ன? இது எத்தகைய அழிவுகளை உருவாக்க வல்லது என்பதனையும், இதன் பின்புலம் என்ன என்பதனையும் அறிந்தோமானால், அதிர்ச்சியளிக்கக்கூடிய பல உண்மைகள் புரியவரும்.

எய்ட்ஸின் பின்னணி

அமெரிக்கா தனது மேலாண்மையை நிறுவவும், மூன்றாம் உலக மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும் எய்ட்ஸ் போன்ற கிருமியை உருவாக்கத் திட்டமிட்டது. இதற்கான நிதியை அமெரிக்க காங்கிரஸ் இடமிருந்து (60 மில்லியன்டாலர்கள்) பெற்று அமெரிக்க இராணுவத் தலைமைக்கு (பென்டகன்) வழங்கியுள்ளது. இதற்கு பின்புலமாக செயற்பட்டவர் ஹென்றி கிஸ்சிங்கர் (அமெரிக்காவின் முன்னாள் Secretary of State) என்பதும், இந்த இரகசிய உயிரியல் கிருமியை உருவாக்கும் திட்டத்திற்கு MK-NAOMI (Negroes Are Only Momentary Individuals) எனப் பெயரிடப்பட்டது என்பதும், சீ.ஐ.ஏ.யின் துணையுடன் இத்திட்டத்தின் முழுக் கட்டுப்பாடும் கிஸ்சிங்கர் மற்றும் அவருடன் இருந்த மிகச் சில MK NAOMI விஞ்ஞானிகள் கைகளிலேயே இருந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த இராணுவ உயிரியல் கொல்லி ஆராய்ச்சித் திட்டத்தின் விளைவாக மனிதனில் நோய் எதிர்க்கும் திறனை சீர்குலைக்க உருவாக்கப்பட்ட ஆற்றல் மிக்க கிருமியால் ஏற்படும் (இறப்பும்) முடிவுகளையும், அதற்கான விரிவுபடுத் தப்பட்ட திட்டங்களையும் அம்பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியவர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். வழக்கம்போல இச்செய்திகள் வெளிவராமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டுமுள்ளன.

செயல்திட்ட வடிவங்கள்

1964 இல் உலக நாடுகளிலிருந்து பலதரப்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை சேகரிப்பதும், புற்றுநோய் உருவாக்கக்கூடிய வைரஸ் கிருமிகளை பெருமளவில் சோதனைச் சாலைகளில் வளர்ப்பதற்குமான சிறப்பு வைரஸ் புற்றுநோய்த் திட்டமும் (SVCP - Special Virus Cancer Program 1962-77) தேசிய புற்றுநோய் நிறுவனமும் (NCI - National Cancer Institute) அரசின் நிதி உதவியோடு ஒன்றாக இணைக்கப்பட்டு அனைத்து புற்று நோய்களையும் உள்ளடக்கக்கூடிய ஆய்வுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.

இவ்வாய்வுத் திட்டத்தின் கீழ், சிம்பன்சி குரங்கின் உறுப்புகளை மனித உடம்பில் பொருத்தி, சோதனை செய்துள்ளனர். 1964 இல் சிம்பன்சி குரங்கின் சிறுநீரகங்களை ஆறு மனிதர்களுக்குப் பொருத்தியதில் ஆறு பேரும் இறந்துள்ளனர். பின்னர் மனிதர்களுக்கிடையே உறுப்பு மாற்றம் செய்ததில் விஞ்ஞானிகள் வெற்றிகண்டுள்ளனர்.

SVCP திட்டத்தின் மூலமே விலங்குகளைப் பாதிக்கும் பல வைரஸ் கிருமிகளை மனிதர்களிடையே பரப்பும் சோதனைகள் நடந்தேறியுள்ளன. இத்திட்டத்தின் வாயிலாக புற்றுநோயை உண்டாக்கவும், மனித நோய் எதிர்ப்புத் திறனை சீர்குலைக்கக்கூடிய பல விலங்கு வைரஸ் கிருமிகள் மனித செல்களுக்கும்(Cells), திசுக்களுக்கும் மாற்றம் செய்யும் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. இக்குழுவில் Robert GalloTk (எய்ட்ஸ் கிருமியின் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர்) இடம்பெற்றிருந்தது முக்கிய அம்சமாகும். இத்திட்டத்தில் ஜப்பான், ஸ்வீடன், இத்தாலி, நெதர்லாந்து, இஸ்ரேல், உகண்டா, ஆபிரிக்கா நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

பின்னர் இத்திட்டத்தில் அமெரிக்க இராணுவ உயிரியல் போர்முறை (Biological Warfare) ஆய்வாளர்களும் இணைக்கப்பட்டனர். அக்டோபர் 18, 1971 இல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் உத்தரவின்பேரில் இராணுவ உயிரியல் போர்முறைச் சோதனைச் சாலைகளை SVCP இன் கீழ் கொண்டுவரும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வகம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் ஆய்வகத் தேவைகளுக்கான புற்றுநோயை உருவாக்கும் வைரஸ் கிருமிகளை தொடர்ந்து கிடைக்கும் வகையில் செய்தலே அதன் முக்கிய பணி என்றும் மனிதர்களுக்கு நெருக்கமான விலங்குகளைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, (எய்ட்ஸை உண்டாக்கும் HIV அத்தகைய இனத்தைச் சேர்ந்தது) மனிதர்களை பாதிக்கும் வைரஸ் கிருமிகளை பெருமளவு வளர்த்தெடுப்பது போன்றவை பிற பணிகளாகவும் இருக்கும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த ஆய்வகங்களில் தான் சுண்டெலி, பூனை போன்றவற்றைப் பாதிக்கும் புற்றுநோய் வைரஸ் கிருமிகளை குரங்குகளுக்குச் செலுத்தி அதன்மூலம் குரங்குகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் சோதனையில் வெற்றி அடைந்தனர். இத்தகைய சோதனைகளில், இனம் விட்டு இனம் தாவும் (Species jumping) கிருமிகள் உருவாக்கப் படுவது பொதுவான விசயமாக இருந்து வந்தது.

1970 இல் எய்ட்ஸ் ஏற்படுத்தும் HIV கூடவே ஒரு புதுவகை Herpes வைரஸ் ஓரினச் சேர்க்கையாளர்களிடத்து மட்டும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த Herpes வைரஸ் தற்போது எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படும் Kaposis Sacroma (Gay Cancer of AIDS) என்ற நோய்க்குக் காரணம் என நம்பப்படுகின்றது. உலகில் எய்ட்ஸ் தாக்கம் வருமுன் ஆரோக்கியமான இளைஞர்களுக்கு Kaposis Sacroma பாதிப்பு இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட பத்து ஆண்டுகள் கழித்து தெரியவந்த (1994இல்) Kaposis Sacroma வைரஸ்களுக் கும் மனிதர்களை ஒத்த தன்மையுள்ள விலங்கினங்களுக்கு (குரங்குகளுக்கு) வியாதியை ஏற்படுத்தும் Herpes வைரஸ்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதும், அத்தகைய வைரஸினைத் தான் பத்தாண்டுகளுக்கு முன்னர் விலங்குகளிடமிருந்து மனித உடலில் வெற்றிகரமாக செலுத்தும் ஆய்வுகள் மும்முரமாக நடைபெற்றன என்பதும் தெளிவாக உள்ளது.

மேலும், கலப்படம் செய்யப்பட்ட தடுப்பூசிகளால் எய்ட்ஸ் வரும் என்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ள துடன், HIV வைரஸ் புற்றுநோயை உண்டாக்கவல்ல கிருமியே எனவும், எய்ட்ஸ் என்பது கொள்ளை நோயாகவரும் ஒருவித புற்றுநோயே என்பதை 1984 இல் Robert Gallo (எயிட்ஸ் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர்) தெளிவுபடுத்தி உள்ளார்.

போலியோ தடுப்பூசியை கண்டுபிடித்த ஜோன்ஸ் சால்க்ஸ் செய்த பல ஆய்வுகளில் அவருக்குத் தெரியாமலேயே Hela செல்கள் கலந்திருந்தது அவருக்குப் பின்னர் தெரியவந்துள்ளது. அதே போல் புற்றுநோய் தடுப்பூசி ஆய்வுகளில் Hela செல்கள் அதிகம் கலந்திருப்பது பிறகு தெரியவந்துள்ளது. (4)
1951 இல் முதன் முதலில் சோதனைச்சாலைகளில் மனித செல்களை வளர்த்தெடுத்தனர். இதற்கு பால்டிமோர் நகரைச் சேர்ந்த Hennrieta Lacks என்னும் இளம் கறுப்பின பெண்ணின் கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட திசுவே Hela செல் என அழைக்கப்படுகின்றது.

இதே போல் இரண்டாம் உலகப் போரின் போது மனித இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட Yellow Fever Vaccine இல் மஞ்சள் காமாலை வைரஸ் (Hepatitis Virus) கலந்திருப்பது பின்னர் தெரியவந்துள்ளது.

1970- 80 களில் குடர காய்ச்சலுக்கு எதிரான தடுப் பூசிகளில் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தில் தயாரான Mycoplasma, வைரஸ் கிருமிகள் கலக்கப்பட்டிருந்ததுடன் இதை டெக்சாஸ் மாநில ஹன்ட்ஸ்விலி சிறைக் கைதிகளுக்குக் கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதை இராணுவமும், மருத்துவ மையங்களும் இணைந்து நடத்தியது. இந்த மனித விரோத பரிசோதனைக் குழுவில் DNA வடிவத்தைக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான ஜேம்ஸ் வாட்சனும் ஒருவர் என்பது வெட்கக்கெடான செய்தி. (இவர் தற்போது Human Genome Project இன் முக்கிய அலுவலர்)

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இரகசியமாக செலுத்தப் பட்ட Mycoplasma Penetrans எனும் கிருமியைப் பற்றிய தகவல்களும் மறைத்தே வைக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் டேவிட் என்னுமிடத்தில் ஒரு வகை குரங்குகளிடம் ஏற்பட்ட எயிட்ஸ் கொள்ளை நோய் (Simian AIDS) காரணமாக பெரும்பாலான குரங்குகள் இறந்துள்ளன. இதுவே முதலில் பதிவுசெய்யப்பட்டது. இதுபோன்று நான்கு இடங்களில் இது நிகழ்ந்துள்ளது. இந்த வகை குரங்குகள் இறந்துபோக HIVNa காரணம் எனப் பின்னர் தெரியவந்தது. இச்சம்பவத்தை மறைக்க பல குரங்குகள் அட்லாண்டாவி லுள்ள எர்கிஸ் பகுதிக்கு கடத்திவரப்பட்டன. இவ்வாறு கடத்தப்பட்ட குரங்குகள் அனைத்தும் 1980 வாக்கில் Simian AIDS நோயால் தாக்கப்பட்டு இறந்துள்ளன.

1974ல் கால்நடை மருத்துவர்களால் சிம்பன்சி குரங்குக் குட்டிகளிடம் எயிட்ஸ் போன்ற நோய் உருவாக்கப்பட்டது. இளம் சிம்பன்சி குரங்குக் குட்டிகளை தாயிடமிருந்து பிரித்து, Bovine C Type Virus என்னும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளான மாடுகளிடமிருந்து கிடைக்கும் வைரஸ் கலந்த பாலை மட்டும் கொடுத்தால் அக்குரங்குக் குட்டிகள் ஒரு வருடத்துக்குள் நியுமோனியா காய்ச்சல் (The Gay Pneumonia of AIDS) கண்டு இறந்துள்ளன.

1979இல் பெண்டகன் மையத்தின் உயிரியல் விஞ்ஞானி Dr. Mac Arthur இன் உத்தரவுக்கிணங்க சோதனைச் சாலைகளில் உருவாக்கப்பட்ட HIV அமெரிக்காவில் முற்றிலும் வெறுக்கப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களிடத்து அவர்களுக்குத் தெரிந்தும், தெரியாமலும் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் விளைவாகவே AIDS கிருமி அவர்களுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தின் மூலம் பரப்பப்பட்டது. அதன் காரணமாக அமெரிக்காவில் AIDS ஆல் பாதிக்கப்பட்டவர்கள் நியுயோர்க் மன்ஹட்டன் நகரைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்களே. மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்திற்கு ஒத்துக்கொண்ட 20 சதவீதமான ஓரினச் சேர்க்கையாளர்கள் இரத்தத்தில் 1980 - 81 வாக்கில் செய்யப்பட்ட ஆய்வில் HIV Positive இருப்பது தெரியவந்தது. இது 1983 இல் 30 சதவீதமாக உயர்ந்து உள்ளது. 1981இல் தான் HIV எயிட்ஸ் க்கு காரணம் என வெளியிடப்பட்டது.

நியுயார்க் நகர மன்ஹட்டன் (Manhatton) தான் எய்ட்சின் பிறப்பிடம். ஆபிரி;க்காவில் 1982ஆம் ஆண்டின் பின்னரே உறுதிசெய்யப்பட்ட AIDS நோயாளிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எய்ட்ஸ் வல்லுநர்கள் சிம்பன்சி குரங்குக ளிடம் இருந்துதான் மனிதனுக்கு எயிட்ஸ் கிருமி தொற்றி உள்ளது எனும் கருத்தை மட்டும் ஏற்றுக்கொள்கின்றனர்.

1970களில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் காமாலை தடுப்பூசி சிம்பன்சி குரங்குகளின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்டது என்பதும், குரங்குகளிடமிருந்து எய்ட்ஸ் தோன்றி வளர்ந்திருக்கிறது என்பதும் தற்செயல் நிகழ்வு அல்ல.

ஆபிரிக்காவில், உலக சுகாதார நிறுவனத்தின் திட்டமான பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் மூலம், பல மில்லியன் மக்களுக்கு, எய்ட்ஸ் கிருமி கலந்த பெரியம்மை தடுப்பூசி கொடுத்ததன் காரணமாக எயிட்ஸ் பரவியது என்பதை மே 11 1987 டைம்ஸ் பத்திரிகை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது(6).

சோதனை விலங்குகளாக சொந்த நாட்டு மக்கள்

1965இல் உருவாக்கப்பட்ட LEMSIP (The Laboratory for Experimental Medicine and Surgery) என்ற ஆய்வுக்கூடம் 1997 வரை, விலங்குகளிடமிருந்து மனித செல்களில் பரவக்கூடிய வைரஸ் கிருமிகளை ஆய்வுசெய்யும் நியுயார்க் பல்கலைக் கழக விஞ்ஞானிகளுக்கு விலங்கின் உறுப்புகளை தொடர்ந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.

நியுயார்க் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள் தான் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டார்கள் என்பது கவனிக்கத்ததக்கது.

1994இல் மக்களின் ஒப்புதல் இல்லாமலேயே பல கதிர்வீச்சு தொடர்பான சோதனைகளை அமெரிக்க மக்கள் மீது அரசு நடத்தியுள்ளதற்கு எதிராக பல்வேறு ஜனநாயக அமைப்புகள் நடத்திய போராட்டத்திற்கு இணங்கிய அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், இவற்றை விசாரிக்க அறிவுரைக் குழுவினை ஏற்படுத்தினார். தனது அறிக்கையில் (3 ஒக்டோபர் 1995) 1960 வரை மருத்துவர்கள் நோயாளிகளின் ஒப்புதல் பெறாமலே அவர்கள்மீது சேதனை செய்துள்ளதை அக்குழு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் 20 வருடங்களுக்கு மேலாக The U.S.Code annotated title 50, Chapter 32, Section 1520, dated July 30, 1977 என்கின்ற இச்சட்டத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பு அமைச்சகம் தனது சொந்த மக்களையே சோதனை விலங்குகளாக நடத்த ஒப்புதல் அளித்து வந்துள்ளது.

எய்ட்ஸ் யாரையும் தாக்கலாம் என இருந்தாலும், ஆபிரிக்காவில் ஆண் - பெண் புணர்ச்சிக்குப் பின்பே எய்ட்ஸ் ஏற்பட்டது என்பதும், அமெரிக்காவில் அது ஓரினச் சேர்க்கையாளர்களிடம் (ஆண்களிடம்) அதிகமாகக் காணப்பட்டது என்பதும் தெளிவான விசயங்கள்.

HIV கிருமி இனம், மொழி, பாலினத்தை மதிக்காது எனக் கொண்டால் ஏன் அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மட்டும் எய்ட்ஸ் அதிகம் வரவேண்டும்?

எய்ட்ஸ் வல்லுநர்கள் அமெரிக்காவில் எய்ட்ஸின் பாதிப்பு ஆபிரிக்காவில் இருந்து வந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களைப் பாதிக்குதம் எய்ட்ஸ் கிருமி வகை ஆபிரிக்காவில் இல்லவே இல்லை. பின் இது எப்படிச் சாத்தியம்?

1990களில் அணுவியல் உயிரியல் வல்லுநர்கள் எய்ட்ஸ் கிருமியில் எட்டு வகைகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் D வகை தான் பெருங்குடலைக் (Rectum) தாக்கும் திறனைக் கொண்டது. இந்தவகை எய்ட்ஸ் கிருமி அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களைத் தாக்குகின்றது. மாறாக ஆபிரிக்க எயிட்ஸ் கிருமி பிறப்புறுப்பு செல்களை (Vaginal Cervical Cells) தாக்கும் திறன் இருப்பது தெரியவந்தது. டீ வகைக் கிருமிகளால் அச்செல்களில் பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை.

1997 ஆய்வுகளில் பத்தில் ஒரு அமெரிக்கருக்கு (வெள்ளை இன) எய்ட்ஸ் எதிர்க்கும் மரபணுக்கள் இருப்பதா கவும், ஆபிரிக்காவில் உள்ள கறுப்பின மக்களில் ஒருவர் கூட எய்ட்ஸ் பாதுகாப்பு மரபணுக்கள் பெற்றிருக்கவில்லை என்பதையும் தெளிவாகக் கூறுகையில் எயிட்ஸ் கிருமி என்பது சில இனக் குழுக்களையும் (கறுப்பர்களையும்) ஓரினச்சேர்க்கையாளர்களையும் திட்டமிட்டு ஒழிக்க உருவாக்கப்பட்ட Designer Virus என்பது தெளிவாகின்றது.

எய்ட்ஸ் கிருமி கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான Robert Gallo 1987இல் Play Boy சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் "எனக்குத் தெரிந்து அமெரிக்காவில் ஆண் -பெண் புணர்ச்சிக்குப் பின் ஏற்பட்ட எய்ட்ஸ் பாதிப்பு இல்லவே இல்லை என்று கூறலாம்" என்றும், "அமெரிக்க பொது மக்களுக்கு எய்ட்ஸ் வியாதி என்றும் பெரும் பிரச்சினையாக இராது" என்றும் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

"அமெரிக்க அதிகார மையங்களை விரிவுபடுத்த ஆற்றல் கொண்ட கிருமியை (Super Germ)உருவாக்குவதன் தேவை அரசுக்கு உள்ளது" A.H.Passerella - Director, Department of Defence, USA.

ஆக எயிட்ஸ் கிருமி அமெரிக்க ஆய்வகங்களில் உருவாகி பல ஆயிரம் மக்களை அழிக்கும் எண்ணத்துடன் (Weapon of mass destruction WMD) உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் இவ்வளவு ஆதாரங்களுடன் தெளிவான பின்பும், அமெரிக்கா மற்றவர்களிடம் உயிரியல் ஆயுதம் இருப்பதாகக் கூறி அவர்களைத் தாக்கும் இவர்களின் யோக்கியதையை நாம் என்னவென்பது?

Reference:

1. Dr. Alan Cantwell Jr. Queer Blood: The secret AIDS Genocide plot.

2. John Seale, M.D. "Origins of AIDS viruses HIV-1 & HIV-2: Fact or Fiction?" The British Journal of the Royal Society of Medicine

- 1988 (81: 617-619)

3. Dr Leonard G. Horowitz. "Emerging virusus: AIDS. Ebola", Accident or International (1996)

4. M.Gold, A conspiracy of cells: one woman's immortal legacy and the medical scandal it caused.
5. William Blum, Rough State.

6. "Small pox Vaccine Triggered AIDS Virus" The London Times Front page story 11.05.1987

--

தியாகு

Monday, October 29, 2007

கரும் புலித்தாக்குதலுக்குப் பின்பான சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு(1)


"...இரவு மட்டுமல்ல

இந்த மண்ணின் இருப்பும்

அச்சத்தைத் தருகிறது

கிழட்டுப் பலாமரத்தில்

பச்சோந்தியொன்று.

வண்ணத்துப் பூச்சிகள்

சிறகடிக்கின்றன..." -செழியன்.(அதிகாலையைத் தேடி,பக்கம்:12.)
(1)

ருபத்தியொரு கரும்புலிகளின் மரணத்துக்குப் பின்பான அநுராதாபுர வான்படைத்தளத்தைத் தாக்கிய வெற்றி இன்றைய பொழுதுகளில் வலைப்பதிவுகளில் புலி அரசியல் ஆதரவு-எதிர்பார்ளகளிடம் ஏற்படுத்தியிருக்கும் உளவியல் ரீதியான தாக்கம்-மரணமுற்று மண்ணையணைத்தபடி மண்டை பிளந்து கிடந்த தமிழ்க் குழந்தைகளின் உடல்களைக் கடந்து, சிந்தித்த உளவியலைப் பார்த்தறிவது மிக அவசியமாகும். இத்தகைய மதிப்பீடானது எதிர்வரும் புலி-சிங்கள அரச வியூகத்துக்குள் மக்கள்படப்போகும் போர்காலச் சமூகசீவியத்துக்கு மாற்றீடான அரசியல் நகர்வுக்கு அவசியமான முன் நிபந்தனையில் ஒன்றாகும்.

புலம் பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடிய வெற்றியும், தமது இன்னுயிர்களைத் தமது தேச விடிவுக்கென எண்ணி மரித்த வீரத் தமிழ்ப்பாலகர்களின் கொத்துக்கொத்தான உடல்களைக் கண்டும், அது குறித்து எந்தவொரு பாதிப்புமேயற்ற விறைத்த பதிவர்கள் மீண்டும், மீண்டும் தலித் மநாட்டைக் கேலி பண்ணுவதும், அதன் பின்பு கரும் புலிப் பாடலென்று இணைப்புக் கொடுப்பதுமாக இருக்கிறதும்,பின்பு, போராளிகளின் மரணத்தைக் கண்டு அதிர்பவர்களின் உணர்வுகளைக் கேலி பண்ணுவதுமாகச் சில நறுக்குப் பதிவிடுவதுமாக மனம் பிரண்ட சைக்கோவாகக் கிடந்துழலும் இந்தப் பொழுதுகளில் நாம் இத்தகைய வக்கிரத் தலைமுறையின் உளவியலையும், புலிகள் மற்றும் சிங்கள அரசியல் நகர்வுகளையும் பார்ப்பது ஆரோக்கியமே.

புலி அரசியல்சார் அநுதாபிகளால் கூட போராளிகளின் மரணத்தைக் கண்டு ஒரு காத்திரமான படைப்பைத் தரமுடியாதபோது புலிகளின் அரசியலை மிகக் காட்டமாக விவாதிக்கும் நாங்கள் அதிர்கிறோம். எங்கள் குழந்தைகளின் மரணம் எம்மைப் பாதிக்கிறது. அவர்களின் மரணத்துக்கூடாக வந்து சேரும் இத்தகைய (அநுராதபுரத்தாக்குதல் போன்றவை) வெற்றிகளால் நமது தேசியவிடுதலை-சுயநிர்ணயம் வந்துவிடக்கூடுமென நாம் நம்புவதற்கு நாம் தயாரில்லை. இந்த மரணங்களை உணர்வு மரத்த இன்றைய புலி அநுதாப இளைஞர்கள் வெற்றியின் படிக்கட்டுகளாகவெண்ணியும் இனிப்புண்டு மகிழ்ந்தும் போகலாம். நாம் இதை வெறுக்கிறோம். இத்தகைய மரணங்களால் தேச விடுதலைச் சாத்தியமாவென்று பார்ப்பதற்கு முதலில் புலிகளின் போராட்டத்தையும், அவர்களின் அந்நிய உறவுகளையும், அரசியல் வியூகத்தையும், சிங்கள அரசியல் நகர்வுகளையும், அந்த அரசைக் காத்துவரும் உலக நலன்களையும் சற்றுப் பார்ப்பது அவசியம்.

புலிகளின் கடந்த அநுராதபுரத் தாக்குதலுக்குப் பின்பான "தேசிய விடுதலை"ப் போராடச் சூழலையும், கரும் புலிகளின் வகைதொகையான மரணத்துக்கூடாகக் கட்டப்பட்ட "வெற்றி"யென்ற இந்த அரசியலிலிருந்து புலிகளின் போராட்ட நிலை என்னவென்பதும், இந்தப் போராட்டத்தால் சாத்தியமாக இருக்கும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் இலக்கு என்னவென்று ஆராய்வதும் மிக முக்கியமாகும். மரணங்கள், உடல்கள், மனிதக் கணங்களை வருத்துபவை. அவை உணர்வின் உந்துதல்களால் மனிதர்களின் எல்லா வகைக் கருத்துக்களையும் மெல்லக் கடைந்தேற்றி "ஓலம்,ஒப்பாரி"என்ற இயலாமையின் வெளிப்பாடாக வெளிவந்துவிடுகிறது. சக மனிதனின் அழிவைப் பார்த்தும், அவனால் நிர்மூலமாக்கப்பட்ட பொருட் சேதாரத்துக்காக மகிழ்வுறும் சமுதாயமாக இருக்கும் இந்தத் தமிழ் பேசும் சமுதாயத்திடம் முதலில் சில கேள்விகளைக் கேட்டாகவே வேண்டும்?


இவ்வளவு மரணங்களை விலையாகக் கொடுத்து இத்தகைய வெற்றி தேவையாகிறதா?

இந்த வெற்றியால் புலிகள் சொல்லும் தமிழீழம் சாத்தியமாகிறதா?

இழந்த யுத்த தளபாடங்களை மீளப் பெற்றுத் தன்னை வலுவாகத் தகவமைப்பதற்கு இலங்கைக்கு என்ன தடை வந்துவிடுகிறது இதனால்?

இத்தகைய தாக்குதலால் இலாபமடைய முனையும் போர்த்தளபாட உற்பத்தியாளர்கள் எந்த முறையிலும் இலங்கைக்கு உதவும் தரணங்கள் அடைப்பட்டுப் போய்விடுமா? (இந்தியாவே இப்போது உதவுவதாக உருவேற்றி வருவதைக் காண்க).

போர்த்தளபாடத்தின் விருத்தியில் இலங்கை அரசியலின் எதிர்காலம் இராணுவத்தன்மையிலான அரசாக விருத்திக்கிட்டுச் செல்லும் சூழலுக்கு இத்தகைய போராட்டச் செல்நெறி ஒத்திசைவாக உண்டா,இல்லையா?

இலங்கை அரசின் வீழ்ச்சியைத் தடுக்கும் சக்திகள் எவர்?,அவர்களுக்கும் புலிகளுக்கும்-இலங்கைத் தமிழ் மக்களுக்குமான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் என்ன?

இலங்கை இராணுவத்தின் இன்றைய நிலை என்ன?அதற்கு இத் தாக்குதலால் ஏற்படும் விளைவுகள் என்ன?

மேற்காணும் கேள்விகளுக்கான விடைகளை எமக்குள் விதைக்கப்பட்ட தேசியவாதக் கருத்து எல்லைக்குள் இருந்து தேடுவதற்குமப்பால் நாம் நமது இன்றைய அரசியல் சூழலின் வெளியிலிருந்து பார்க்காது, நமது மக்களின் இன்றைய வாழ் சூழலுக்குள் இருந்தும்,இலங்கை மற்றும் புலிகள் அரசியலுக்கு அடித்தளமாக இருக்கும் பொருளாதார உறவுகள்,வெளிப்புறச் சக்திகளின் நலன்களையும் பொருத்திக் கண்டடைய முனையவேண்டும்.

இருபத்தியொரு கரும் புலிகளைத் தயார்படுத்தி இவ்வளவு பெருந்தொகைப் போராளிகளின் மரணத்தில் சில விமானங்களை அழிப்பதும்,அதுவே,இலங்கைப் பாசிச அரசின் இராணுவ ஜந்திரத்தை முடக்குமென யாராவது கனவு கண்டால் அவர் நிச்சியம் உலக அரசியலைத் துளிகூட அநுபவப்பட்டுப் புரியவில்லையென்றே எண்ண வேண்டும்.

இனி விடையத்துக்குள் நுழைவோம்.

சிங்கள அரசும், புலிகளும்:

இப்போது நம்முள் எழும் கேள்வி, புலிகளையும் சிங்கள அரசையும் சமமாக்க முடியுமா? இன்றைக்கு இந்தியக்கைக்கூலி ஆனந்த சங்கரி மற்றும் புலிகளால் சொல்லப்படும் ஒட்டுக் குழுக்கள் எனும் குழுக்கள், கருணா அணி முதல் புலம் பெயர்ந்து வாழும் இயக்கவாத உறுப்பினர்கள்-ஊழியர்கள், இந்தியத் துரோகத்துக்குத் துணையாகும் வானொலி ரீ.பீ.சி. மற்றும் சிவலிங்கம்-புளட் ஜெகநாதன் கம்பனி, கூடவே ரொக்சிய வாதிகளான அழகலிங்கம், தமிழரசன் போன்றோர்கள் கூறும் அரசியலில் புலிகளை மதிப்பிடும் தவறான போக்கிலிருந்து நாம் மீள்வதற்கான ஒரு ஆரம்ப நிலையாக இக்கட்டுரைத் தொடரைப் பார்க்கலாம்.

இன்றைய நிலையில், சிங்கள அரசு, புலிகளின் அதிகார வடிவம் இதுள் எந்த அரச-அதிகார அமைப்புத் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரிகள்? என்ற கேள்வியைக் கேட்போம்.

"புலிகளின் அதிகார வடிவம்" என்றே பதிலைத்தர குறைந்த பட்சமாவது 60 வீதமான தமிழர்கள் இப்போது இருக்கிறார்கள். வடமாகணம் இழந்து, கிழக்கு மாகணம் இழந்து, மன்னாரும் பறிபோய் கிளிநொச்சிக்குள் அதிகார அமைப்பாண்மை பெற்ற புலிகள், கணிசமான தமிழ்பேசும் மக்களின் இலங்கை அரசசார் வாழ்வுக்கு வழிவிட்டுள்ளார்கள். இங்கே, இலங்கை அரச ஆதிக்கம் மீளவும் விருத்தியாகி அது மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கஞ் செய்யும்போது கூடவே கிளிநொச்சிக்குள்ளும் இலங்கை அரச ஆதிக்கத்துக்கான பொருளாதாரவுறவுகள் நிகழும்போது, இலங்கை அரசு என்பது தமிழ்பேசும் மக்களின் தவிர்க்க முடியாத இரண்டாம்பட்ச எதிரியாவது சாத்தியமே. இதைக் கணிப்பெலெடுத்த சிவலிங்கம் மற்றும் அழகலிங்கம், தமிழரசன் போன்றோர் புலிகளையே முதற்தர எதிரிகளாக வரையறுக்கிறார்கள். இதுள் தமிழ்பேசும் மக்களின் இன்றைய புலியெதிர்ப்பு எண்ணங்களும் முட்டிமோதுவதைக் காணாதிருக்க முடியாது. எனினும், நாம் முன்வைப்பது தமிழ் பேசும் மக்களுக்குள் புலிகள் போன்ற அமைப்பைத் தோற்றுவித்தது இலங்கைப் பாசிசச் சிங்களப் பேரினவாத அரசே என்பதால், அதுவே தமிழ் பேசும் மக்களின் முதல்தர எதிரியென்பதாகும். இது குறித்துக் கீழே பார்ப்போம்.

புலிகளால் நிகழ்ந்த மக்கள்சாராக் கருத்தியல்-அரசியல், அதிகாரத்திமிர், அத்துமீறிய சமூக (பிள்ளைபிடி-வீட்டுக்கொருவர் போரிட அழைத்தல்) மற்றும் வாழ்வாதாரங்களின் பறிப்பும், இவைகளைச் செய்து முடிப்பதற்குமான கொலை அரசியலும் காரணமாகிறது. எனவே, மக்களில் கணிசமானோர் புலிகளிடமிருந்து மெல்ல விடுபட முனையும்போது அங்கே புலிகளுக்கெதிரான அரசியல் இலங்கை அரசுக்குச் சாத்தியமாகிறதென்பதையும் கவனத்தில் எடுப்போம்.இந்தக் (புலிகளா இலங்கை அரசா தமிழ்பேசும் மக்களின முதற்தர எதிரி?); கேள்வியை 15 ஆண்டுகள் முன் கேட்டிருந்தால் குறைந்தது 30 வீதமாவது புலிகளே என்றிருப்பார்கள். இதிலிருந்து புலிகள் கற்றிருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதில்.

தமிழ் பேசும் மக்களின்மீதான சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரானவொரு போராட்டம், தமிழ் பேசும் மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்குவதற்காகவும், அதன் உந்துதலோடு சோசலிசச் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதுமாகச் சொன்ன இந்தப் போராட்டம் எங்ஙனம் தமிழ்பேசும் மக்களுக்கே எதிரானது? இக்கேள்வியைக் கேட்காமல் எவரும் தப்பித்து ஓட முடியாது! அப்படி ஓடும்போது அவர் முழு மொத்தத் தமிழ் பேசும் மக்களின் அழிவுக்கு உடந்தையாக இருக்கிறார் என்பதே இன்றைய அரசியல் சூழலிலிருந்து (பெருந் தொகையான கரும் புலித்தாக்குதல்...மரணம், போராளிகளின் மிகப் பெரும் அழிவு இத்தியாதிகள்) நாம் முன் வைக்கும் பதிலாகும்.

புலிகள் என்பவர்களையும், சிங்கள அரசையும் உண்மையில் சமப்படுத்திவிட முடியாது! சிங்கள அரசோ பெளத்த சிங்களப் பேரினவாத பாசிசத் தரகு முதலாளிய அரசு. தனக்குள் ஏற்பட்ட முதலாளிய நலன்களாலும், அதைப் பகிர்ந்தளிக்க வேண்டிய இனங்களுக்குள் முளைவிட்டத் தரகு முதலாளிக்களை ஓரங்கட்டுவதற்காகவும் இலங்கையின் சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லீம், மலையக மக்களை திட்டமிட்டு அடையாளமற்றதாக்கும் அரசவியூகத்துள் முழுமொத்தச் சிங்கள இன வலுவையும் பயன்படுத்தி பேரனவாதத்தை இறுக்கிப் போராடும் அரசு. இதற்காக அனைத்து உபாயங்களையும் உட்படுத்தி, இலங்கையின் பெயரளவிலான ஜனநாயகத்தையே படுகுழிக்குள் தள்ளி, இராணுவ அரச வடிவமாகிய சிங்கள அரசு உலக நலன்களால் நிலைப்படுத்திப் பாதுகாக்கப்படும் அரசாக இலங்கையில் ஆதிகத்தை நிலைப்படுத்துகிறது.

இங்கே, புலிகளோ ஒருவகைமாதிரியான (வெளியில் மக்களின் நண்பனாகவும் உட்கட்டமைவில் அதே மக்களின் விரோதியாகவும்)அமைப்பாகவும், ஜனநாயக விரோதப் பாசிச இயல்புளை (மக்களின் சுயவெழிச்சுக்குத்தடை, மாற்றுச் சக்திகள்-இயக்கங்களுக்குத்தடை, கருத்துச் சுதந்திரத்தின் மீதான அதீத கண்காணிப்பு, தம்மை விமர்சிப்பதன் தளத்தைத் தகர்ப்பதற்காகக் கட்டப்பட்ட துரோகி எனும் கருத்தியல் மற்றும் அதுசார்ந்த அரசியற் கொலைகள்) கொண்ட ஒரு இராணுவ ஜந்திரத்தைக்கட்டிய அதிகார வடிவம். எனவே, புலிகள் தமிழ்பேசும் மக்களின் நலனைப் பேணுவதாகச் சொன்னபடி அவர்களின் நலனின்மீது தமது அதிகாரத்தைக்கட்டிக்கொண்டவொரு வர்க்கமாக இருப்பதன் தொடர்ச்சியில் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள புதிய தரகு முதலாளிகளாகி வருகிறார்கள். இதற்கும் சிங்களத் தரகு முதலாளியத்துக்குமான முரண்பாடுகள் தீர்க்குமொரு அரசியல் நகர்வில்(இது பெரும்பாலும் நிகழ்வதற்காக இந்தியாவோடு மனோ கணோசன் போன்றார் பாடுபடுவதாகச் சொல்லியுள்ளார்கள்) புலியின் இராணுவ மற்றும் அதிகார வடிவம் சிதைந்து சிங்கள அரச அமைப்புக்குள் சங்கமமாகும்.

இவர்களையும் (புலிகள்) சிங்கள அரசையும் எப்போதும் சமப்படுத்திவிட முடியாது. இந்தச் சங்கதியைப் புரிந்துகொள்வதற்குத் தடையாக இருப்பதே புலிகளின் அரசியல்தாம். புலிகளின் பாத்திரத்தைப் புரிந்துகொள்ள முடியாத அரசியலின் விருத்திக்குக்காரணமாக நாம் இனம் காணுவது எமது போராட்டத்தைத் தக்கபடி நகர்த்தமுடியாது தடுத்த இந்தியாவினது தலையீடும், புலிகளின் ஏகாதிபத்தியத் தொடர்புகளுமே. இக் காரணங்கள் எமது மக்களின் நோக்கு நிலையிலிருந்து போராட்டச் செல் நெறியை வகுக்க முடியாதவொரு பாரிய சதியைத் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்துக்குள் திணித்த உலக நலன்களின் இன்றுவரையான அழுத்தம் எமக்கான திசைவழியில் போராட்டச் செல்நெறி அமையவில்லை. எனவே, இதைப் புரியும் நிலையில் நமக்குத் தொடர்ந்து பொய் முக அரசியல் சிந்தனைக்குள் திணிக்கப்பட்டு மக்களை உளவியல் ரீதியாக முடக்கிய வரலாறு தொடர்ந்தபடி இருப்பதுதாம். எண்பதுகளின் மத்தியில் இயக்கங்களின் ஐக்கியம் மிகவும் அவசியமாக இருந்தது. அந்த ஐக்கியத்தூடாகக் கட்டப்படிவேண்டிய தேசியப் போராட்டச் செல்நெறி கட்டப்படவில்லை. இலங்கை இராணுவமானது இக்காலக்கட்டத்தில் மிகவும் முடங்கி, முகாங்களுக்குள்ளிலிருந்து வெளியில் வருவதே முற்றிலும் தடைப்பட்ட வேளையில், இயக்கங்களின் ஐக்கியத்தினூடாகக் கட்டபடவேண்டிய போராட்டச் செல்நெறியும் அதனூடாக வளர்த்தெடுக்க வேண்டிய மக்கள் எழிச்சி மற்றும் மக்கள் மன்றங்கள் யாவும் அந்நியத் தலையீட்டால் முற்றுமுழுதாகச் சிதறடிக்கப்பட்டு, இறுதியில் இந்தியாவின் கைக்கூலிகளாக மாறிய இயக்கங்களாகச் சில தோற்றமுற்றன. அதில் புலிகளின் பாத்திரம் முக்கியமானது. ஏனெனில், இந்தியா எப்படிப் புலிகளை வளர்த்தெடுத்ததென்பதை நாம் அறிவது அவசியமாகிறது.

இப்போதைய நிலைமைகளில் இலங்கை இராணுவம் பரவலாகத் தமிழ்ப் பிரதேசமெங்கும் தனது முகாங்களை நிறுவிப் பலாத்தகாரமான இராணுவ அதிகாரத்தை நிறுவித் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்து வாழ்வு முன்னெடுப்பையும் தீர்மானிக்கும் போதும் நமது போராட்டத்துள் சரியானவொரு போராட்டச் செல்நெறி கட்டப்பட முடியாதிருக்கிற சூழலே எம்முன் வந்துள்ளது. தமிழ் பேசும் மக்களினதும், அவர்களினது சுயவெழிச்சி மற்றும் முழுமொத்தப் பங்களிப்புமின்றித் தேசியவிடுதலைப் போராட்டத்துக்கானவொரு புரட்சிகரமான போராட்டச் செல் நெறி சாத்தியமில்லை.

புலிகளின் நிலை மிக மோசமான நிலையாகும். அவர்கள் தமிழ்பேசும் மக்களில் கணிசமானவர்களைப் போராட்டத்திலிருந்து பிரித்துத் தமக்கெதிரான நிலைக்குள் தள்ளுவதற்கான முறைமைகளில் அந்நியச் சக்திகளால் திட்டமிடப்பட்டு மிகக் கறாராகக் கண்காணிப்பட்டுள்ளார்கள். இதற்கான தகுந்த ஆதாரமாக நாம் முன்வைப்பது இந்திய இராணுவத்துக்கும் புலிகளுக்குமிடையிலான யுத்தம். இந்த யுத்தம் மிகத் திட்டமிடப்பட்ட வகையில் நடந்தவை. ஆனால், இந்த யுத்தத்துக்குள்ளும் புலித்தலைமை இராஜீவ் காந்தியோடு சமரசம் செய்ய முயன்றது. இதைப் புலித்தலைமையே ஒத்துக்கொண்டது. அவ்வண்ணமே வன்னியில் நடந்த சர்வதேசப் பத்திரிதையாளர் மாநாட்டிலும் புலிகளின் தலைவர் இதையே மீளவும் சாடைமாடையகச் சொல்லியிருக்கிறார் (கவனிக்க: பாலசிங்கத்துக்கும் பிரபாகரனுக்குமிடையிலான உரையாடல், "நாங்கள் அவர்களோடு பேசிக்கொண்டுதானே இருக்கிறம்" என்று பிரபாகரனே அதுள் முணுமுணுக்கிறார்). இந்திய இராணுவத்தின் கொடூரமான அழிப்புக்குப் பின்பும் கூடப் புலிகள் இந்திய அரசுடன் நட்புப்பாராட்டவே முயன்றார்கள்.

இப்போது நாம் சொல்வது தமிழ் பேசும் மக்களின் முதற்தரமான எதிரிகள் இலங்கை அரசும், அந்த அரசைத் தூக்கி நிறுத்துவதற்காவும், தமிழ்பேசும் மக்களின் போராட்டத்தையே சிதைப்பதற்காகவும் புலிகளை நிரந்தரத் தலைமையாக்கிய இந்நிய அரசுமே தமிழ்பேசும் மக்களின் அதிமுதல் எதிரிகள். இந்திய அரசு இல்லாமல் புலிகள் இல்லை. இன்றைய புலியின் இருப்புக்கு இந்திய அரசு எவ்வகையில் செயற்பட்டதென்பதை ஆராய்பவர், இலங்கை இந்திய ஒப்பந்தம், அவ் ஒப்பந்தத்தில் புலிகளைத் தவிர்த்தபடி அதிகாரத்தை ஏனைய இயக்கங்களிடம் கையளித்து, அத்தகைய இயக்கங்களின் வாயிலாக மக்களை நரவேட்டையாட வைத்து, எக்காலத்திலும் ஒரு ஐயக்கியம் ஏற்படாதபடி இந்தியா பார்த்துக்கொண்டது. இத்தகையவொரு நிலையில் மக்களோடு ஐக்கியமுறக்கூடியவொரு நிலையை இவ்வியக்கங்கங்கள் இழந்தபோது புலிகளே தமிழ்பேசும் மக்களின் ஏகப்பிரதிநிதியாகும் நிலைமை தோற்றம் பெற்றது. இது இந்திய முதலாளிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி.

தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

28.10.2007


Sunday, October 28, 2007

'தேசியம் எதிர் தலித்தியம்' ? 'தேசியம் எதிர் மார்க்சியம்' ?

பி.இரயாகரன்
28.10.2007


டைந்தெடுத்த அரசியல் உள்நோக்கம் கொண்ட திட்டமிட்ட திரிப்பு. இது தலித்துக்கு எதிரானவர்களின் சதி. ஆதிக்க சாதியினர் தலித்துக்களுக்கு கொடுக்க விரும்பிய நஞ்சு.

புலியெதிர்ப்பை அரசியல் அடிப்படையாக கொண்டவர்களும், சகல இயக்க புல்லுருவிகளும் இதைத்தான் நிறுவ முனைந்தனர், முனைகின்றனர். இதை ஒப்புப்பாடவும், தலித்தியத்தை சவப்பெட்டியில் வைத்து தூக்கி எடுத்துச் செல்லவும், தலித்மாநாட்டில் கும்மாளமாக குழுமி நின்றனர். இதற்கு ராகவன் என்ற முன்னாள் புலியும், இன்றும் புலியாகவே சிந்தித்து எழுதிய கட்டுரை (http://www.satiyakadatasi.com/?p=115)உதவும் என்று நம்பினர்.

இப்படி தலித் மாநாட்டை தேசிய எதிர்ப்பு, மார்க்சிய எதிர்ப்பு அரசியல் மாநாடாக்க விரும்பினர். இப்படி புலியெதிர்ப்பு மற்றும் இயக்க புல்லுருவிகள் அங்கு சலசலத்தனர். தலித்திய மாநாட்டையும், தலித்திய பிரச்சனையையும் ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் தேசிய எதிர்ப்பு, மார்க்சிய எதிர்ப்புகளை முன்வைத்தனர். இவர்கள் அங்கம் வகிக்கும் இயக்கங்கள், தலித் மக்களுக்கு எதிரானதாகவே இருந்தது, இருக்கின்றது. ஆனால் தலித் மாநாட்டுக்கு ஆதாரவாம். இப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேடிக்கை காட்டுகின்றனர்.

இந்த மாநாடு நடப்பது உறுதியான போது, எப்படி விழுங்குவது என்றே அவர்கள் திட்டமிட்டனர். தாம் இதை எதிர்க்கவில்லை என்று காட்டவும், ஆதரவு தெரிவிப்பதாக கூறி விழுங்கவும் விரும்பினர். இந்த வகையில் பலர் இதற்கென்றே, பாடைகளைக் கட்டிக்கொண்டு வந்திருந்தனர். ரீ.பீ.சீ இந்த அடிப்படையில், திட்டமிட்டு வானொலி நிகழ்ச்சிகளை நடத்தியது.

இந்த அரசியல் சதியையும், அதன் நுட்பத்தையும், இதன் சூக்குமத்தையும், நாம் புரிந்து கொண்டு, இதன் கபடத்தை தோலுரித்தோம். எமது எச்சரிக்கை கலந்த உணர்வுகள் மூலம், அதை துல்லியமாக கிள்ளி எறிந்தோம். தலித் மக்களின் வெற்றி என்பது, புலியெதிர்ப்பு அணிக்குள் அது கொள்கையளவில் சரணடைய மறுத்தது தான்.

எமது அனுபவம், சந்தர்ப்பங்கள், தொடர்ச்சியான புலியெதிர்ப்பு அணிகளின் நடத்தைகள், எமது தெளிவான துல்லியமான அணுகுமுறை மூலம், சதிகளையும் சூழ்ச்சிகளையும் கபடத்தையும் சுக்குநூறாக்கினோம்.

'தமிழ்த் தேசியமும் தலித்தியமும்" என்ற ராகவனின் கட்டுரையும், அவரின் உரையும் தலித்தியம் எதிர் தேசியம், தலித்தியம் எதிர் மார்க்சியம் என்று நிறுவுவதே நோக்கமாக இருந்தது. இதன் மூலம் அவர் சாதிக்க நினைத்தது, தலித் மக்களை புலியெதிர்ப்பின் பின் ஒன்று இணைப்பது தான். வேறு எந்த தலித்திய நோக்கமுமல்ல. அவர் கூற முனைந்தது, நாங்களும் நீங்களும் புலியெதிர்ப்பில் ஒன்று என்பதே. இங்கு நாங்கள் என்பது உயர்சாதியினர், நீங்கள் என்பது தாழ்ந்த சாதியினர். இப்படி ஆதிக்க சாதியினரின் குரலாக, அவரின் அறிவொழுகும் கட்டுரையில் பாசிசமாக கொட்டியது.

இதற்கு அவர் எடுத்துக் கொண்ட மையமான வாதம், தேசியம் சமன் புலி என்ற எடுகோள். இப்படி புலியெதிர்ப்பின் அரசியல் அச்சே, இதில் தான் உள்ளது. உண்மையில் ராகவன் 1980 களின் முன்னும் பின்னும் எதை அவர் தேசியமாக கருதி புலியில் செயல்பட்டாரோ, அதை இன்று மீண்டும் ஒப்புவிப்பது தான, இதில் உள்ள அரசியல் சூக்குமம். 1978 இல் நடந்த புலிகளின் உடைவில் ராகவன் போன்றவர்கள் எதை தேசியம் என்று கருதி புலியின் பின் நின்றனரோ, அதையே இன்றும் தேசியமாக கற்பிப்பது தான் அபத்தம்.

பிரபாகரனும் புலிகளும் கூறிய தேசியமும், அன்று புலியில் இருந்து பிரிந்தவர்கள் வைத்த தேசியமும் வேறு. பிரிந்து சென்றவர்களுடன் இருந்த சுந்தரம், இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட உமாமகேஸ்வரனை மறுபடியும் சேர்த்து, பழையபடி புலியின் தேசியத்தை உயர்த்தினர். பிரிந்த பலர் ஒதுங்கினர். ஒரு சிலர் புதிய இயக்கங்களை உருவாக்கினர். இப்படி தேசியம் பற்றி பல வரலாறுகள் தொடர்ச்சியாக இருக்க, ராகவனும் அவரையொத்த புலியெதிர்ப்புக் கும்பல்கள், புலித் தேசித்தையே இன்றும் தேசியமாக காட்டுவது மூலம் தான் இவர்களின் அரசியல் இருப்பே நீடிக்கின்றது.

இப்படி உண்மையில் பிரபாகரன் புலிக்கு மட்டும் தலைவர் அல்ல, புலியெதிர்ப்பு அணிக்கும் தலைவராக உள்ளார். பிரபாகரன் வைக்கும் தேசியத்தை ஆதரிப்பது, அவரின் தேசியத்தை தேசியமாக காட்டி எதிர்ப்பது என்ற வகையில், பிரபாகரன் புலி மற்றும் புலியெதிர்ப்பின் உண்மையான கோட்பாட்டுத் தலைவராகிவிடுகின்றார். பிரபாகரனின் தேசியத்தை தேசியமாக காட்டித் தான், தலித் எதிர் தேசியம் என்று நிறுவ முனைகின்றனர். இப்படித்தான் இந்த கும்பலின் மொத்த அரசியலும் உள்ளது.

கடந்த 30 வருடத்தில் புலிக்கு வெளியில் மாற்று தேசியம் இருக்கவில்லையா? இப்படி ஒன்று இல்லை என்பது புலியெதிர்ப்பு மற்றும் துரோக இயக்கங்களின் அரசியல் நிலையாகும். எதிரியுடன் அன்னிய சக்திகளுடன் கூடி நிற்கின்ற, இந்த இழிந்து போன பிரிவுகளின் அரசியல் என்பது, அதை இல்லை என்பதுதான். புலிகளைப் பொறுத்த வரையில் அதை அழித்தல், அவர்களின் இருப்பு சார்ந்ததாகின்றது.

நாம் அந்த கூட்டத்தில் தெளிவாக மாற்று தேசியத்தை சுட்டிக்காட்டிய வரலாறு, உள்ளடக்கத்தில் தலித்திய வரலாறும் கூட. ஆம் அன்றைய இயக்கங்கள் அனைத்தும் அதாவது புலி உட்பட, அனைவரும் சமூக விடுதலையையும் சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான வேலைத்திட்டத்தையும் முன்வைத்தே இயக்கங்களைக் கட்டினர். இதனடிப்படையில் அணிகள் இயக்கத்தினுள் உட் சென்றனர். இதை யாராலும் மறுக்க முடியாது.

இன்று பாசிச புலிகளாகி இதை மறுக்கும் அவர்களின், அன்றைய வேலைத்திட்டம் தெளிவானது. சில உதாரணங்கள் இதை தெளிவுபடுத்தும். 'தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை மாக்சிய-லெனினிச சிந்தனையின் அடிப்படையில் நியாயப்படுத்தினார்." என்று பாலசிங்கம் கூறுகின்றார். 'தேசிய விடுதலை எனும் பொழுது ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மாணத்தையுமே" தமது இலட்சியம் என்றனர் தமது முதல் வேலைத்திட்டத்தில். இப்படி மக்களின் அரசியல் விடுதலையைப் பற்றி அவர்களின் முதல் அறிக்கை தெளிவாகவே பேசுகின்றது.

அந்த விடுதலை என்பது 'சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடனும், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும்" ஆட்சியாக அமையும் என்றனர்.

அத்துடன் அவர்களின் முதல் அறிக்கை விட்டுவிடவில்லை. "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்" என்றனர்.

சமூக அமைப்பை விளக்கும் அவ் அறிக்கை 'தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்சசொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" என்றனர்.

இதை முன்வைக்கும் எம்மை புலிகள் துரோகி என்கின்றனர். புலியெதிர்ப்போ எம்மை புலி என்கின்றனர். அதை விடுவோம்.

சகல இயக்கமும் இதையொத்த ஒரு வேலைத்திட்டத்தை அல்லது இதைவிட உயர்ந்த வேலைத்திட்டத்தை முன்வைத்து தான் அமைப்பைக் கட்டினர். எந்த உறுப்பினரும், இதற்கு எதிரான உணர்வுடன் அமைப்புகளில் இணையவில்லை. இன்றைய தலித் மாநாடு கூட, இந்தளவுக்கு கொள்கையளவில் கூட முன்னேறவில்லை. அந்தளவுக்கு அது பிற்போக்காகவே இன்றும் உள்ளது.

அன்று இப்படி வைக்கப்பட்ட முற்போக்கான நடைமுறைச் சாத்தியமான சரியான தேசியத்தை, இன்று போல் அன்றும் மறுத்தவர்கள் யார்? இயக்கங்களுக்கு தலைமை தாங்கியவர்களின் தலைமை தாங்கும் தகுதியற்ற அறிவற்ற குருட்டுத் தன்மை, இராணுவ சாகசத்துடன் தலைமையை நிர்ணயம் செய்ததும், அன்னிய சக்திகளின் கூலிக் குழுவாக (இந்தியாவும் இந்தியாவூடாக ரூசியாவும் மற்றும் அமெரிக்கா) மாறத் தொடங்கி போது, இந்த இலட்சியங்களை, தலைமையே எதிராக பார்க்கத் தொடங்கியது. இது தான் எமது இயக்க வரலாறு. இப்படித் தான், மனித குலத்துக்கு எதிராக அவாகள் இயங்கத் தொடங்கினர்.

இயக்கம் முன்வைத்த மனித இலட்சியங்களை இயக்க நடைமுறையில் கோரியவர்களை, அதை அடிப்படையாக கொண்டு இயங்கியவர்களை, உள்ளியக்க படுகொலைகளின் மூலம் அந்த முற்போக்கான தேசியக் கூறை அழித்தனர். பலரை திட்டமிட்டு ஒதுக்கினர். பிற்போக்கு சக்திகளைக் கொண்டு தலைமையை நிரப்பினர். அதாவது உள்ளியக்க படுகொலைகளின் மூலம் மனித இலட்சியத்தை முன்வைத்தவர்கள் கொல்லப்பட்டனர். சித்திரவதைகளை சந்தித்தனர். பலரை சிதைத்தனர். அரசியலை விட்டு ஓடவைத்தனர். இப்படி உள்ளியக்கத்தை தூய பிற்போக்கான கூறாக மாற்ற, முற்போக்கை சுத்திகரித்தனர். அடுத்து சமூகத்தில் இதைச் செய்யத் தொடங்கினர்.

புலிகள் மற்றைய இயக்கங்களை அழித்து வரலாற்றை தனதாக்கும் முன்பாக, அனைத்து பெரிய இயக்கமும் இதைத்தான் செய்தனர். இயக்க அழிப்பை புலிகள் முன்னெடுத்த பின், அனைத்தையும் புலிகள் முழுமையாக செய்து முடித்தனர்.

இப்படி தான் முற்போக்குத் தேசியம், பிற்போக்கு தேசியமாக மாறியது. இதைத்தான் ராகவனும் தலித் மாநாட்டில் இருந்த பலரும் செய்தனர் அல்லது கோட்பாட்டளவில் அதை ஆதரித்தனர். இன்றுவரை ஆதரிக்கின்றனர்.

இந்த தலித் மாநாடு, முற்போக்கு தேசியத்தில் சாதி ஒழிப்பை வலியுறுத்தி கொல்லப்பட்டவர்களை அடையாளம் காண மறுத்து நின்றது கண்கூடு. அதை அவர்கள் உணரவில்லை என்ற அடிப்படையில், தமது சுயவிமர்சனத்தை வைக்க வேண்டியது அவசியமானது என்ற வகையில், அவர்கள் மீதான விமர்சனத்தை செய்ய முற்படவில்லை. இப்படி உண்மையில் தலித்திய பிரதிநிதிகளாகவும் கூட, நாங்கள் மட்டுமே வரலாற்று தொடர்ச்சியில் நிற்பது இன்று வெளிப்படையானது.

இப்படி தேசியம் தொடர்பான வரலாறு இருக்க, ராகவன் தேசியம் எதிர் தலித்தியம் என்கின்றார். யாரெல்லாம் தேசியத்தின் மூலம் சாதியை ஒழிப்பதாக கூறி அணிதிரட்டினரோ, அவர்களே அதை நடைமுறையில் கோரியவர்களை கொன்றதை 'தேசியம் எதிர் தலித்தியம்" மூலம் மூடிமறைக்கின்றனர். இப்படிக் தாங்கள் கொன்றதைக் கூட, அவர்கள் தமது பதிவில் எடுக்க மறுத்துள்ளார். எப்படிப்பட்ட தலித் விரோதிகள். இந்த கொலைகளை நியாயப்படுத்த, கொன்றவர்களின் வலதுசாரி பாசிசத்தை தேசியமாக காட்டுகின்றனர். இப்படித்தான் அவரின் தலித் பற்றி வலதுசாரிய மலட்டு ஆய்வுரை தொடங்கியது.

ராகவன் புலியின் தலைமையில் இருந்த போது, பாசிசத்தை தேசியமாக கருதிசெயல்பட்டதை கொள்கையளவில் கூட சுயவிமர்சனம் செய்யாமையை தான் 'தேசியம் எதிர் தலித்தியம்" என்கின்றது. தாம் ஏன் கொன்றோம் என்ற உள்ளடகத்தை மூடிமறைத்து, அதை தேசியம் என்று கூறி நியாயப்படுத்துவது என்பது கடைந்தெடுத்த பொறுக்கித்தனம். அவர் இயக்கத்தில் இருந்து விலகியது என்பது, தேசியம் பற்றிய மாற்று அரசியலில் இருந்தல்ல. அதையே அவரின் 'தேசியம் எதிர் தலித்தியம்" கோட்பாடு அழகாக நிறுவுகின்றது. அவர் புலியில் இருந்து விலகியது, தனது அதிகாரம் பற்றியதேயொழிய தேசியம் பற்றியதல்ல. தேசியம் பற்றி அவரின் கருதுகோள், இதை நிறுவுகின்றது.

சாதியொழிப்பை உள்ளடக்கிய முற்போக்கு தேசியத்தை முன்வைத்தவர்களை அழித்து உருவானதே, எமது தேசிய வரலாறு. இப்படி பிற்போக்கு வலதுசாரிய பாசிசத்தை, தேசியமாக காட்டுவது புலிகள் மட்டுமல்ல, புலியெதிர்ப்பும் தான். தேசியம் பற்றி திரித்து வைக்கின்றவர்கள், அதை தேசியமாக காட்டுகின்ற புலி மற்றும் புலியெதிர்ப்பு கோடபாடுகள் தான் சமூகத்தின் போக்கை நிர்ணயம் செய்ய முனைகின்றனர். இதை மறுத்து நாங்கள் மட்டும் முரண்நிலையாக இருப்பதும், தலித் மக்களின் உண்மையான விடுதலைக்காக உறுதியோடு நிற்பவர்களாக இந்த வரலாற்றில் நாம் நிற்கின்றோம்.

உட்படுகொலைகளில் கொல்லப்பட்டவர்கள் யார்? ஏன் கொல்லப்பட்டனர். அவர்கள் முன்வைத்த தேசியம் எது? இப்படி மாறுபட்ட தேசியக் கூறுகள், எமது இந்த தேசியப் போராட்டத்தில் இருந்துள்ளது. இதை மறுத்து ஒற்றைப் பரிமாணத்தில் தேசியத்தை காட்டுகின்ற ராகவன், மற்றும் புலியெதிர்ப்பு அரசியல் திட்டவட்டமாக மக்களுக்கு எதிரானதும், படுபிற்போக்கானதுமாகும். தேசியத்தை புலியிசமாக காட்டுவது, புலிக்கு சோரம் போவது தான். இவர்களின் அரசியலே, புலியின் பாசிசத்தை தேசியமாக காட்டுவதில் தான் மிதக்கின்றது. புலியின் பாசிசத்தை மூடிமறைப்பதன் மூலம், தமது பாசிசத்தை பாதுகாப்பது புலியெதிர்ப்பு அரசியலாகின்றது.

புலி பாசிசத்தை தேசியமாக காட்டும் ராகவன், அம்பேத்கரை துணைக்கு அழைக்கின்றார். "நீங்கள் உங்களை ஒரு தேசம் எனக் கருதுவது வெறும் பிரமை. பல்வேறு சாதிப் பிரிவினைகள் கொண்டவர்கள் தங்களை ஒரு தேசம் என்று அழைக்க என்ன அருகதை இருக்கிறது? நிலவி வரும் சமூக ஒழுங்கை மாற்றாதவரை நீங்கள் எவ்வித முன்னேற்றமும் அடையப்போவதில்லை. சாதியக் கட்டமைப்பிலிருந்து நீங்கள் எதனை உருவாக்கினாலும் அது இறுதியில் உடைந்துதான் போகும்" அம்பேத்கரின் இக் கூற்று ராகவனின் கோட்பாட்டுக்கு எதிரானது. அம்பேத்கர் வேறு ஒரு தேசியம் உண்டு என்பதையும், அதை செய்யக் கோருகின்றார். 'நிலவி வரும் சமூக ஒழுங்கை மாற்றாதவரை நீங்கள்" என்ற அழைத்து கூறுவதையா, நீங்களும் நீங்கள் அங்கம் வகிக்கும் புலியெதிர்ப்பு அரசியலும் செய்கின்றது. இல்லை. அம்பேகத்கர் கூறுகின்றார், இதை செய்யாத வரை 'நீங்கள் எவ்வித முன்னேற்றமும் அடையப்போவதில்லை" எவ்வளவு தெளிவான வாதம். இதையா நீங்களும் உங்கள் கும்பலும் தமிழ் மக்கள் முன் வைக்கின்றீர்கள். அம்பேத்கர் சரியாகவே அதை செய்கின்றார். சமூகத்தை மாற்றப் போராடுகின்றார்.

இப்படி ராகவன் கட்டுரையின் தொடக்கத்தில் போட்ட அம்பேகத்கர் வரியே , அவரின் ஆய்வுக்கு எதிரானது. எங்களுடைய நிலைக்கு மட்டும் தான் அது மிகப் பொருந்தும். அம்பேத்கரின் இந்த விமர்சனம், தேசியத்தை சாதிக்கு எதிராக நிறுத்தவேயில்லை. தேசியத்தின் தேவையை, சாதிய ஒழிப்பின் ஊடாகவே கோருகின்றார். இது தான் அவரின் முரண்பட்ட அம்சம்.

இதைக் கூட புரிந்துகொள்ளாதவர்கள், தேசியம் என்பதை புலியிசமாக காட்டுகின்றவர்கள் எதைத்தான் தலித் மக்களுக்கு கூற முடியும். தலித் மக்களின் தலையில் அரைக்க முனைகின்றனர். பிரபாகரனையும், அவரின் புலி இயக்கத்தையும் மறுப்பதாக கூறும் இவர்கள், அதைப் பாதுகாப்பது தான் இதில் உள்ள சூக்குமமாகும். தேசியத்தை புலியில் இருந்து வேறுபடுத்தி பார்க்க மறுக்கின்ற அரசியலை, தலித்துகளுக்கு அம்பேத்கருக்கு மாறாக அம்பேத்கரின் பெயரில் அவிக்கின்றனர். பிரபாகரன் தேசியம் என்றால் என்னவென்று எதை வரையறுத்துள்ளாரோ, அதையே மீண்டும் தேசியமாக காட்டுவது அதை ஏற்றுக்கொள்வது புலியெதிர்ப்பின் அரசியல் மலட்டுத்தனமாகும். இதுவே இதில் உள்ள பிரதானமான மையமான விடையம். இதை நாம் அங்கு துல்லியமாக அம்பலப்படுத்தினோம்.

பிரபாகரனும் புலிகளும் கூறுவதா தேசியம்? இதை யாரால் விவாதிக்க முடியும்? இந்த கேள்வியை, புலியெதிர்ப்பு கேள்வியாய் கேட்பதில்லை. அதை விவாதத்துக்கு எடுப்பதில்லை. மாறாக அதை தேசியமாக கூறிக்கொண்டு தான், தமது பிற்போக்கான அனைத்து வகை செயல்பாட்டை நியாயப்படுத்துகின்றனர்.

வலதுசாரிய பிற்போக்கு கூறு இடதுசாரிய முற்போக்கு கூறுகளை அழித்ததால், தேசியம் பிற்போக்கான கூறாகிவிடுமா? இல்லையே. எப்படிப்பட்ட சாதிய மலட்டு ஆய்வு. அனைத்தையும் கட்டுடைப்பதாக கூறுகின்ற எவரும், இதை கட்டுடைப்பதில்லை. வலதுசாரி பாசிச கூறு முற்போக்கை அழித்து வெல்வதற்கு, இந்தியா முதல் அமெரிக்கா வரை பயிற்சியும் ஆயுதமும் கோட்பாடு வழிகாட்டலையும் வழங்கியதே எமது வரலாறு. இப்படித்தான் முற்போக்கு கூறுகள் அழிக்கப்பட்டது. ஏன் இன்றுவரை அந்த பிற்போக்கு கூறு தான் புலி அல்லாத தளத்திலும் ஆதிக்கம் வகிக்கின்றது. இது இன்றைய எமது சமகால வரலாறு.

வலதுசாரியம் அன்று அழித்தது, தேசியத்தின் தோல்வியா? இல்லை. எல்லா பிற்போக்குவாதிகளும், இதை தேசியத்தின் தோல்வியாக கூறுவதும், இதை தேசியம் என்பதும், எம் கண்முன்னால் நடக்கும் கோரமான சமூக இழிவாடல்கள். இப்படி இவர்களின் அரசியல் நேர்மை, தெளிவாகவே அம்மணமாகின்றது.

'தேசியம் எதிர் தலித்தியம்" என்று கூறும் ராகவன் 'இன தேசியவாதச் சிந்தனை முறைமையைக் கேள்விக்குள்ளாக்குவதும் தலித் பிரக்ஞைக்கும் தேசியவாதக் கருத்தியலுக்குமுள்ள தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகளை அடையாளம் காண்பதுமாகும்." என்கின்றார். தேசியத்தை புலியிசமாக காண்பவர், எப்படி தீர்க்கப்படாத அந்த முரண்பாட்டை காணமுடியும். வார்த்தைகளால் வேடிக்கை காட்டுகின்றார். புலிப்பாசிசம் சமூக முரண்பாடு எதையும் தீhக்காது. உண்மையில் அதை பாதுகாப்பதால் தான், அது பாசிசமாக இருக்கின்றது. இது தேசியமாக காட்டுவது சித்தரிப்பது, 'தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகளை அடையாளம் காண்பதுமாகும்" என்று புலுடா விடுவது அரசியலாகின்றது.

தேசியத்தை பற்றி இந்த புலி 'அது தன்னைத் தான் கற்பனை பண்ணும் பிரதேசத்திற்குள் குறுக்கிக் கொள்கிறது. பிறப்பையும் பாரம்பரியத்தையும் மொழியையும் கலாச்சாரத்தையும் தனது அடையாளத்திற்கான கருப்பொருட்களாகக் காண்கின்றது." இதுவா தேசியம். தேசியம் என்பது, குறைந்தபட்சம் முதலாளித்துவ புரட்சியை அடிப்படையாக கொண்டது. சகல நிலப்பிரபுத்துவ சமூகக் கூறையும் ஒழித்துக்கட்டுவதே தேசமாக கொண்டு அமைவதே தேசியம். இதற்கு இரண்டு பக்கம் உண்டு. ஒன்று முதலாளித்துவ தேசியம். இரண்டு பாட்டாளி வர்க்கத் தேசியம். பாட்டாளி வர்க்கத் தேசியம் சர்வதேசியத் தன்மை கொண்டது. இரண்டும் ஏகாதிபத்திய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டது. தேசிய பொருளாதாரத்தை மறுக்கும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதே தேசியம். இப்படி தேசியம் பற்றிய வரையறை மக்கள் நலன் சார்ந்துண்டு. இதை புலிகள் மறுக்கலாம், புலியிசத்தை தேசியமாக கொண்ட புலியெதிர்ப்பு (நீங்கள்) மறுக்கலாம். தேசிய உண்மைகளை மறுக்க, யாராலும் முடியாது.

தேசியத்தின் உண்மைத் தன்மையை மறுக்க முனையும் இந்தப் புலி 'சாதியவாதத்தின் இதே அடிப்படையைத் தமிழ்த் தேசியவாதமும் கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டவனுக்கு நிலம் சொந்தமில்லை. எனவே பாரம்பரிய நிலம் என்பது ஆதிக்கசாதியினரின் நிலங்களேயாகும்." என்கின்றார். இதனால் தேசியம் எதிர் தலித். என்ன வேடிக்கை. தேசியம் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையை அடிப்டையாக கொண்டது. நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து, நிலத்தை உழுபவனுக்கு பங்கிடுவதை அடிப்படையாக கொண்டது. புலிகளின் திட்டம் கூட இதையே வலியுறுத்தியது. தேசியம் சரியாகத்தான் அன்றும் இன்றும் உள்ளது.

மறுபக்கத்தில் நிலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இல்லை என்பதால், எப்படி தேசியம் தவறாகிவிடும். நீங்கள் பாதுகாக்கும் உன்னதமான இந்த சுரண்டல் அமைப்பில், உழைக்கும் மக்கள் கூட்டம் அப்படித்தான் உள்ளது. நிலமற்ற மக்கள் போராடவில்லையா? போராடக் கூடாதா? நிலமற்ற அந்த தலித் பாட்டாளி வர்க்கத்தின், புரட்சிக்காகவா நீங்கள் கூச்சல் போடுகின்றீர்கள். இல்லை, நிச்சயமாக எதிர்புரட்சிக்காக அல்லவா! அதாவது தாழ்த்தப்பட்டவனுக்கு எந்த வகையிலும் நிலம் கிடைக்கக் கூடாது, என்பதற்காகத்தான், தேசியத்தை திரித்துக் காட்டுகின்றீர்கள். ஆதிக்க சாதிகளின், ஆதிக்க வர்க்கத்தின் குரல்கள் இவை.

'நிலம் மறுக்கப்பட்ட மனிதனின் பாரம்பரியப் பிரதேசம் எங்கே இருக்கின்றதெனக் கேள்வியெழுப்பித் தாய் நிலக் கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்குகிறது." என்பதன் மூலம் நிலம் கிடைக்கும் வழியை தடுப்பது, இந்த தலித் விரோதிகளின் நோக்கமாகும். சரி நிலம் இல்லை, அது கிடைக்கும் வழி என்ன? அதை மட்டும் சொல்ல மாட்டார்கள். புலிகளின் பாசிசம் தேசியத்தின் பெயரில் அதை மறுப்பதால், தேசியம் அதை மறுத்துவிடுமா? ஏகாதிபத்திய எடுபிடிகளாகி சலசலக்கும் நீங்கள், யாருக்கு வேடிக்கை காட்டுகின்றீர்கள்.

'நிலப்பிரபுத்துவத்தின் அழிவோடு சாதி ஏற்றத்தாழ்வுகள் மறைந்துவிடும் என்ற படிமுறை வளர்ச்சி அடிப்படையிலான மரபு மார்க்ஸியவாதத்தையும் தலித்தியம் நிராகரிக்கின்றது." சரி எப்படித்தான் சாதி ஒழியும். அல்லது எப்படி ஓழிப்பீர்கள். அதை மட்டும் சொல்லவரமாட்டார்கள். உழைக்கும் மக்களின் எதிரி, முன்னாள் இன்னாள் புலியாக இருந்தால், இருப்பதால் இப்படி புலியாகி ஒப்பாரிவைக்கின்றது. எதிர்ப்புரட்சி கோட்பாட்டைக் கட்டிக்கொண்டு அழுகின்றது. பாட்டாளி வர்க்கப் புரட்சி முன்வைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரம் மூலம் மட்டும் தான், சாதியை ஒழிக்கும். இதற்கு மாற்று வழி எதுவும் கிடையாது. தலித்தியம் எதிர் தேசியம், தலித்தியம் எதிர் மார்க்சியம் என்கின்ற இந்த புலியெதிர்ப்புக் கோட்பாடு, தலித்தியத்துக்கு எதிர் அல்லாதது எதுவென்றாவது சொல்ல முனைகின்றதா? அது ஏகாதிபத்தியமே என்று சொல்லுவதற்கு, இந்த நாய்கள் படுகின்ற பாடு சொல்லிமாளாது.

எப்படித்தான் குத்தி முனகினாலும், உங்கள் எதிர்ப்புரட்சி புலியின் பெயரால் புரட்சியாகிவிடாது. 'சாதிய ஒடுக்குமுறை குறித்துப் பேசினால் தமிழ்த் தேசியத்தின் அரசியல் வீச்சு அற்றுப்போய்விடுமென்பதே எதார்த்தம். தமிழ் தேசியவாதக் கருத்தியல் சாதிய கூறுகளிலேயே கட்டப்பட்டிருக்கிறது." ஆகாகா அம்பேத்கரையே மறுக்கின்ற இழிவாடல்கள். தேசியம் பேசினால் தான், சாதியம் ஒழியும். தேசியத்தை தலித்தியம் தனது சொந்த அதிகாரத்துக்காக கையில் எடுத்தால் தான், சாதி ஒழியும். வேறு எந்த வகையிலும் சாதியை ஒழிக்கமுடியாது. தலித்திய விடுதலையை மறுத்த தேசிய மறுப்பில் தான், சாதி கூறு கட்டமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.

புலி பாசிசம் ஏன் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து நிற்கின்றது? ஏன் ஜனநாயகத்தை மக்களுக்கு மறுக்கின்றது. அந்த இயக்கத்தில் இருந்தவருக்கு நன்கு தெரியும். சமூக முரண்பாடுகளை தீர்க்கக் கோரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, இது அவசியமாகின்றது. சமூக ஓடுக்கு முறையைக் களையக் கோரும் தேசியத்தை மறுத்து, தேசியத்தின் பெயரில் பாசிசப் புலியிசம் பரிணாமித்து நிற்கின்றது.

'சாதிய ஒடுக்குமுறை குறித்துப் பேசினால் தமிழ்த் தேசியத்தின் அரசியல் வீச்சு அற்றுப்போய்விடுமென்பதே எதார்த்தம்" என்பது தவறானது. மாறாக வீறு கொண்ட தேசியமாக பரிணாமிக்கும். அது புலிப் பாசிசத்தை ஒழித்துக்கட்டும். உண்மையாக தேசியம் சரியாக முன்னுக்குவரும். அது வரக் கூடாது என்பது புலியெதிர்ப்பின், எதிர்ப்புரட்சிகர அரசியல் சாரமாகும்.

ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் தமது அதிகாரத்தை அடைவதற்காக, சமூகத்தில் உள்ள முரண்பாடுகளைக் களையும் போராட்டத்தின் ஊடாக போராட்டத்தை தனதாக்கவேண்டும். இந்த வகையில் தேசியம், வர்க்கப் போராட்டம் என, எந்த சமூக ஒடுக்குமுறையும் தனதாக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மாறவேண்டும். இந்தப் போராட்டத்தை அதுவே தலைமை தாங்க வேண்டும். இதைப் புலியும் சரி, புலியெதிர்ப்பும் சரி, ஒருநாளும் அனுமதிக்காது என்பது வெளிப்படையானது.

தொடரும்