தோழர் மருதையன் உரை
தமிழ் அரங்கம்
Saturday, December 22, 2007
இந்துவெறியர்களின் பொய்கள் சதிகள்!
இந்துவெறியர்களின்
பொய்கள் சதிகள்!
பாரதிய ஜனதாவின் அலுவலகத்தை தி.மு.க. தொண்டர்கள் நொறுக்குவதையும், கொடிமரத்தைப் பிடுங்கி எறிவதையும்,
தமிழகமெங்கும் வேதாந்தியின் உருவப்பொம்மைகளும் அத்வானியின் உருவப்பொம்மைகளும் எரிக்கப்படுவதையும் தொலைக்காட்சியில் பார்த்த வட இந்திய மக்கள் என்ன நினைத்திருப்பார்கள்? கட்சியின் தலைமை அலுவலகத்தின் கதவை மூடிக்கொண்டு கம்பக்கதவின் பின்னே பேயறைந்தாற்போல நின்று கொண்டிருந்த பா.ஜ.க தலைவர்களைப் பார்த்த அவர்களது வட இந்தியத் தலைவர்கள் எப்படிப் புழுங்கியிருப்பார்கள்? முகத்தில் பார்ப்பனக் கொழுப்பையும் திமிரையும் தவிர, வேறு உணர்ச்சிகளைக் காட்டவே தெரியாத ராம.கோபாலன்ஜியும், எச்.ராஜாஜியும் பீதியில் உறைந்து நின்றதைப் பார்த்த சங்கப் பரிவாரத்தின் காக்கி அரை நிஜார்கள் என்ன உணர்ந்திருப்பார்கள்?
பா.ஜ.க அலுவலகத்தின் மீது தி.மு.க.வினர் தாக்குதல் தொடுத்த சம்பவத்தின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்துவது நம் நோக்கமில்லை. "தங்கள் தலைவரின் தலையை வெட்டி வந்தால் எடைக்கு எடை தங்கம் தருவதாக' ஒரு பரதேசி கூறும்போது, அந்தத் தலைவனின் மீது அன்பு கொண்ட தொண்டர்கள் ஆத்திரம் கொண்டு தாக்குவது எங்கும் நடக்கக் கூடியது தானே என்று கருதலாம்.
ஆனால், இந்தத் தலைவர் இராமனை எள்ளி நகையாடிய தலைவர். அதற்கு எதிர்ப்பு வந்தபோதும் அதை லட்சியம் செய்யாத தலைவர். பாரதிய ஜனதாவின் மொழியில் சொன்னால், இந்துக்களின் மதத்தையும் கடவுளையும் இழிவு படுத்திய நாத்திகர். அவருக்கு ஆதரவாகத் திரண்டு வந்தவர்களோ அனைவரும் "இந்துக்கள்'.
தந்தைப் பெரியாரால்
தலை நிமிர்ந்த தமிழகம்
தங்கள் தலைவர் இராமபிரானை "இழிவு'படுத்துகிறார் என்று தெரிந்தும் அதைப் பொருட்படுத்தாதது மட்டுமல்ல, அதனைத் தட்டிக் கேட்ட சாமியாரையும் கட்சியையும் ஒரு இந்து திருப்பித் தாக்க முடியுமா? இராமனுக்கு எதிராக இராவணனைக் கொண்டாடும் ஒரு தலைவருக்குப் பின்னால் இந்து என்று சொல்லிக் கொள்ளும் ஒருவன் அணிதிரள முடியுமா?
இதுதான் தமிழகம் தவிர்த்த இந்தியாவுக்கு, குறிப்பாக வட இந்தியாவுக்குப் புரியாத புதிர். பார்ப்பன பாசிச ஆர்.எஸ்.எஸ். கும்பலின் ஆத்திரத்தைத் தூண்டும் புதிர். அந்தப் புதிரின் நாயகன் பெரியார். பார்ப்பன இந்துமதவெறி சித்தாந்தத்துக்குப் பலியாகியோ அல்லது அஞ்சி நடுங்கியோ எஞ்சியுள்ள இந்தியா குனிந்து நிற்கையில், கம்பீரமாக அதனை எதிர்த்து நிற்கிறது தமிழகம். இது பெரியார் பிறந்த மண் என்பதற்காக நாம் கர்வம் கொள்ளக்கூடிய தருணம் இது.
கருணாநிதியின் பேச்சையும், தி.மு.க.வினரின் எதிர்த்தாக்குதலையும் மிகைபடப் புகழ்வது நமது நோக்கமல்ல. அதேநேரத்தில் அதனைப் அலட்சியப்படுத்திப் புறக்கணிப்பது நேர்மையும் அல்ல. இராமனை அம்பலப்படுத்தி கருணாநிதி ஒருவேளை பேசாமல் இருந்திருந்தால், ""ஏன் பேசவில்லை?'' என்று அவரைக் கேட்கும் யோக்கியதை கொண்ட யாரும் இந்திய ஓட்டுக் கட்சி அரசியலில் இல்லை. இத்தகைய விமரிசனங்கள் அவருக்கு அரசியல் ஆதாயத்தைத் தரப்போவதும் இல்லை.
தேர்தல் அரசியல் சந்தர்ப்பவாதத்தில் கரைகண்டு, பாரதிய ஜனதாவுடன் கூட்டு வைக்கும் அளவுக்குச் சீரழிந்த பின்னரும், முன்னர் பெருங்காயம் வைத்திருந்த அந்தப் பாண்டத்தில் இன்னும் காரம் மிச்சமிருக்கிறது. அந்தக் காரம் தி.மு.க. என்ற கட்சியின் இயல்பாக இல்லாவிடினும், கருணாநிதி என்ற கிழவரின் இயல்பாக இருக்கிறது. பிழைப்புவாதத்தில் ஊறிப்போன அந்தக் கட்சியிலும் கூட, பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு என்ற உணர்வு ஒருவேளை அவர்களுக்கே தெரியாமல்கூடஇன்னும் கொஞ்சம் எஞ்சியிருக்கிறது. "தந்தை'யின் சாயல் பிள்ளைகள் மீது படிந்திருக்கிறது!
அணிதிரளுகிறார்கள்பார்ப்பன பாசிஸ்டுகள்
சமஸ்கிருதத்தை எதிர்த்து நின்ற தமிழ், பார்ப்பனியத்தை எதிர்த்து நின்ற பவுத்தம், சமணம், சித்தர்கள்... என்று ஒரு நெடிய மரபைக் கொண்டிருக்கும் தமிழகத்தில், மக்கள் மத்தியில் விரவியிருக்கும் இந்த பார்ப்பன எதிர்ப்புணர்வை வேறு யாரும் புரிந்து வைத்திருக்கவில்லை என்றாலும், தமிழகத்தின் பார்ப்பனக் கும்பல் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறது. ""இராமனைக் கற்பனை என்று கூறியதன் மூலம் கருணாநிதி இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்திவிட்டார்'' என்று ஜெயலலிதா அலறுவதும், ""கருணாநிதி திருந்தாததனால்தான் இத்தகைய கடும் விமரிசனங்கள் எழுகின்றன'' என்று தலைவெட்டி வேதாந்திக்கு வக்காலத்து வாங்குவதும் வெறும் தி.மு.க. அ.தி.மு.க. போட்டி அரசியல் அல்ல. பார்ப்பன எதிர்ப்பு மரபை தமிழகத்திலிருந்து ஒழித்துக் கட்டி, பார்ப்பன சாம்ராச்சியத்தை நிறுவ வேண்டுமென்ற ஜெயாவின் வெறிக்கு இவை நிரூபணங்கள். பாரதிய ஜனதாவால் இந்த இராமன் விவகாரத்தைத் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கொண்டு செல்ல இயலாது என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும். அதனால்தான் அந்தப் பணியைச் சொரணையற்ற தன் அடிமைகளிடம் ஒப்படைத்திருக்கிறார்.
பார்ப்பன பாசிசத்தை நிலைநாட்டும் தங்களது பொது நோக்கத்துக்காகத்தான் சங்கராச்சாரி கைதை ஒட்டி ஏற்பட்ட பகையை மறந்து சோவும், சுப்பிரமணிய சாமியும், அத்வானியும் ஜெயலலிதாவுடன் கை கோர்க்கின்றனர். அன்று சு.சாமிக்கு எதிராகத் தனது மகளிரணியை வைத்து அம்மண ஆட்டம் நடத்திக் காட்டிய அம்மையார், "சேது சமுத்திரத் திட்டத்துக்கு இடைக்காலத் தடை வாங்கிய சாதனைக்காக' இன்று சுப்பிரமணிய சாமிக்கு மலர்க்கொத்து அனுப்பி வைக்கிறார். தினமணியோ, மதியின் அருவெறுக்கத்தக்க கேலிச்சித்திரங்களாலும், வன்மம் தெறிக்கும் தலையங்கங்களாலும் நிரம்பி வழிகிறது. இராமன் சேது பிரச்சினையில் இந்தத் தமிழ்நாட்டுப் பார்ப்பனக் கூட்டணியின் துணையை பாரதிய ஜனதா பெரிதும் நம்பியிருக்கிறது.
"வெளிக்கியிருக்கப் போனவனுக்கு விளாம்பழம் கிடைத்த கதையாக' பாரதிய ஜனதாவுக்கு அகப்பட்டிருக்கிறது இராமன் சேது பிரச்சினை. எந்திரத்தில் மடக்கி மடக்கித் நசுக்கப்பட்ட கரும்பு போல "அயோத்தி இராமன்' சக்கையாகி பொடியும் ஆகி உதிர்ந்துவிட்டான். இனி, அயோத்தி இராமனைக் காட்டி அந்தக் கோயில் பூசாரியிடமே கூட ஓட்டு வாங்க முடியாத நிலை! அரசு அதிகாரத்தை இழந்த நிலையில் பதவிப் போட்டியால் பாரதிய ஜனதாக் கட்சி கந்தலாகிக் கிடந்தது.
காங்கிரசை விஞ்சும் அளவுக்கு பதவிப்போட்டி, கோஷ்டித் தகராறுகள், போலி விசா, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க இலஞ்சம், காமக் களியாட்டங்கள், அதிகாரத் தரகு பேரங்கள் என ஆளும் வர்க்கமே முகம் சுளிக்குமளவுக்கு மொத்தக் கட்சியுமே அழுகி நாறியது. அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் முதல் மன்மோகன் சிங்கின் மறுகாலனியாக்கக் கொள்கைகள் வரை அனைத்திலுமே காங்கிரசின் கொள்கைதான் பாரதிய ஜனதாவின் கொள்கையும் என்பதால் "எதை எதிர்ப்பதன் மூலம் எதிர்க்கட்சியாக இருப்பது' என்ற கேள்விக்கு பாரதிய ஜனதாவிடம் விடை இல்லை. எனவே, கையில் கிடைத்திருக்கும் இந்த "விளாம்பழத்தை' அது விடுவதாக இல்லை.
ஆவேசங்களா?
வெறும் வேசங்களா?
இராமன் பாலம் குறித்த பாரதிய ஜனதாவின் ஆவேசங்கள் எல்லாம் வெறும் வேசங்கள். மார்ச் 9, 2001 அன்று சேது சமுத்திரத்திட்டம் குறித்த ஆய்வுக்கு உத்தரவிட்டவர் அப்போதைய அமைச்சர் அருண் ஜேட்லி. அதன்பின் உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, திருநாவுக்கரசு உள்ளிட்ட 6 பா.ஜ.க அமைச்சர்கள் தற்போதைய கால்வாய்ப் பாதைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். கடலுக்கடியில் பாலம் இருக்கிறதா என்று "கண்டுபிடிப்பதற்காக' சுரங்கத்துறை அமைச்சர் உமாபாரதி நியமித்த ஆய்வுக்குழுவும் "அவ்வாறு ஏதுமில்லை' என்று அழுத்தம் திருத்தமாக அப்போதே அறிக்கை கொடுத்துவிட்டது. அன்றைய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சத்ருகன் சின்ஹா,""ஆதாம் பாலத்துக்கு (அதாவது இராமன் பாலத்துக்கு) குறுக்கேதான் சேதுக்கால்வாய் தோண்ட இருக்கிறோம்'' என்று செப். 29, 2003 அன்று நாடாளுமன்ற மேலவையில் அறிவித்துமிருக்கிறார். இத்தனை உண்மைகளையும் இருட்டடிப்பு செய்து விட்டு இன்று சாமியாடிக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா.
பாரதிய ஜனதாவிலிருந்து வெளியேறிய உமாபாரதி, தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்காக பத்துப் பேருடன் ராமேசுவரம் கடலில் நின்று அவ்வப்போது போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். மற்றபடி ஜெயலலிதா, பா.ஜ.க உள்ளிட்ட யாரும் இதனை ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை.
பார்ப்பன வெறியைப்
பற்ற வைத்த நீதிபதி
மே2007இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனுவுக்கு உயிர் கொடுத்து பிரச்சினையைத் துவங்கி வைத்தவர் தலைமை நீதிபதி ஷா. ""ஆதாம் பாலம் (இராமன் பாலம்) ஒரு தொன்மை வாய்ந்த சின்னம்தான் என்பது குறித்து தொல்லியல் துறையைக் கொண்டு ஆய்வு செய்யாமலேயே கால்வாய் வெட்டப்படுவதாகவும் இதற்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும்'' என்றும் கோரினார் சு.சாமி. அவை இயற்கையாக அமைந்த மணற்திட்டுக்கள் என்பது பா.ஜ.க அரசின் காலத்தில் நடத்தப்பட்ட ஆய்விலேயே நிறுவப் பட்டுவிட்டதால் தொல்லியல் துறையின் ஆய்வு என்ற கேள்வியே எழவில்லை. எனினும், நீதிபதி ஷா வழக்கைத் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக, சுப்பிரமணியசாமியின் கருத்தை வழிமொழிந்து நீதிமன்றத்தில் ஒரு பிரச்சார உரை நிகழ்த்தினார். பிறகு வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தார். பார்ப்பன மதவெறியின் முதல் கொள்ளி இப்படித்தான் வைக்கப்பட்டது.
பிறகு உச்சநீதிமன்றத்தில் தொல்லியல் துறை தாக்கல் செய்த மனுவின் வாசகங்களைக் காரணம் காட்டி பிரச்சினையை ஊதிவிட்டது விசுவ இந்து பரிசத். ""ஆதாம் பாலம் என்பது இயற்கையான மணற்திட்டு. அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல'' என்று கூறிய தொல்லியல் துறை, ""இராமாயணமும் அதன் பாத்திரங்களும் புனைகதைகளே'' என்றும் குறிப்பிட்டது.
உடனே களமிறங்கினார் அத்வானி. ""இது தேவ தூஷணம்'' என்றும், ""இந்துக்களுக்கு அவமதிப்பு'' என்றும்,இந்தியா என்ற கருத்தாக்கத்தையே இது நிராகரிப்பதாகவும் கூறி, மன்மோகன் சிங்கை தனியே சந்தித்து ஆட்சேபம் தெரிவித்தார். ""ஆட்சியே போனாலும் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஒரு வார்த்தையைக் கூடத் திருத்தமாட்டேன்'' என்று வெறி கொண்டு பேசிய மன்மோகன்சிங், அத்வானி சொன்ன மறுகணமே ஆட்சேபத்துக்குரிய அந்த வாக்கியங்களை நீக்குமாறு தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டார். மறுநாள் மொத்த மனுவையுமே வாபஸ் பெற்றது, காங்கிரசு.
பா.ஜ.க. காங்கிரசு
கள்ளக் கூட்டு
""ராமன் இந்தியக் கலாச்சாரத்தின் பிரிக்கவொண்ணாத அங்கம்.. இது வழக்குக்கோ, விவாதத்துக்கோ உரிய பொருளே அல்ல... இராமன் இருந்தாரா என்பதை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. இந்த உலகமே இராமனால்தான் இருக்கிறது... நம்பிக்கையின் அடிப்படையிலான விசயங்களுக்கு நிரூபணம் தேவையில்லை.'' — இது அத்வானியின் அறிவிப்பு அல்ல; மனுவை வாபஸ் பெறுமாறு உத்தரவிட்ட காங்கிரசு அரசின் சட்ட அமைச்சர் பரத்வாஜின் பிரகடனம். 1980களில் பாபர் மசூதியின் கதவுகளைத் திறந்து இராமன் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்க ஏற்பாடு செய்ததும் இந்தப் பார்ப்பன நரிதான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
உடனே அமைச்சர் அம்பிகா சோனி ராஜினாமா செய்யவேண்டும் என்று அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும் ஆர்.கே.தவாணும் கோரினர். தொல்லியல் துறை அதிகாரிகள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். மனுவைத் திரும்பப் பெற்றதை தி.மு.க.வைத் தவிர ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. போலி கம்யூனிஸ்டுகளோ, ""இராமன் கற்பனைப் பாத்திரம் என்று தொல்லியல் துறை தனது மனுவில் கூறியிருக்கத் தேவையில்லை'' என்று கடிந்து கொண்டனர்.
இராமன் என்றொருவன் இருந்ததற்கும், அவன் பாலம் கட்டியதற்கும் ஆதாரமாக வால்மீகி இராமாயணம், துளசிதாசரின் ராமசரித மானஸ் ஆகிய "வரலாற்று நூல்களை' சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும்போது, ""இது வரலாறு அல்ல, புராணக் கட்டுக்கதை'' என்று மறுக்காமல் தொல்லியல் துறையால் எப்படி வாதாடமுடியும்? பெரும்பான்மை இந்துக்களின் மனம் புண்படும் என்பதற்காக, இந்த வரலாற்று உண்மையைக் கூறக்கூடாது என்பது எந்த வகை மதச்சார்பின்மையில் சேரும்? தொல்லியல் என்பது ஒரு வரலாற்று விஞ்ஞானம். ஒரு அறிவியலாளன், சான்றுகளின் அடிப்படையில் தான் கண்ட உண்மைகளைக் கூறவேண்டுமா அல்லது புராணப் புரட்டுகளுக்கு விஞ்ஞானம் என்று சான்றிதழ் தரவேண்டுமா? "பூமி சூரியனைச் சுற்றுகிறது' என்று கூறியதற்காக கலீலியோவைக் கூண்டிலேற்றிய பாதிரிகளுக்கும் இந்தக் காங்கிரசு களவாணிகளுக்கும் என்ன வேறுபாடு? ஜெர்மானியர்கள்தான் தூய ஆரியர்கள் என்றும் வெள்ளையரல்லாதோர் அரைக்குரங்குகள் என்றும் அறிவியல் பாடம் எழுதச் சொன்ன இட்லரின் பாசிசத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? ஒரு வேறுபாடும் இல்லை.
பார்ப்பனக் கும்பலின்
இரட்டை நாக்கு
இதோ பாசிசம் பேசுகிறது. ""இராமன் வாழ்ந்ததை மறுக்கும் ஒரு அரசுக்கு ஆட்சியில் நீடிக்க உரிமை இல்லை'' என்கிறார் அத்வானி.""தேவதூஷணம் செய்பவனின் நாக்கை அறு, தலையை வெட்டு என்று பகவத்கீதை ஆணையிடுகிறது'' என்கிறான் வேதாந்தி. அதே நேரத்தில் "விவாதத்துக்குத் தயார்' என்று சவடாலும் அடிக்கிறார் அத்வானி. பார்ப்பனக் கும்பலின் இந்த இரட்டை நாக்கு புரளும் விதத்தைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.
விவாதிக்கத் தயாராக இருப்பவன் தொல்லியல் துறையின் அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் அல்லவா விவாதித்திருக்க வேண்டும்! எங்கே விவாதத்தின் முடிவில் ஒரு தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டியிருக்குமோ அங்கே விவாதிக்க மறுத்து, "இது எங்கள் நம்பிக்கை' என்று கூறுவது; நீதிமன்றத்துக்கு வெளியே வந்து "விவாதத்துக்குத் தயார்' என்று ஜம்பமடிப்பது இதுதான் பார்ப்பன பாசிஸ்டுகள் தொடர்ந்து கையாண்டுவரும் உத்தி.
விவாதமா? விதண்டாவாதமா?
அயோத்தியில் அகழ்வாராய்ச்சி நடத்திய ப.ப.லால் என்ற ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தொல்பொருள் ஆய்வாளர், அயோத்தியில் மனிதர்கள் வாழத்தொடங்கியதற்கான தடயம் கி.மு. 700ஆம் நூற்றாண்டிலிருந்து இருப்பதாகக் கூறினார். அன்று இவருடைய ஆய்வைத்தான் இராம ஜென்மபூமிக்கு ஆதாரமாகக் காட்டியது ஆர்.எஸ்.எஸ். தற்போது இராமர் பாலம் 17.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்று வாதிடுகிறார்கள். இராமன் பிறப்பதற்கு முன்பே இராமன் பாலம் கட்டப்பட்டுவிட்டது போலும்! இந்தக் கேலிக்கூத்துடன் எப்படி விவாதம் நடத்துவது?
இராமன் பாலத்தில் தோரியம் கொட்டிக்கிடப்பதாகவும், அதனால் தான் கால்வாய் தோண்ட வேண்டாம் என்று கூறுவதாகவும் ஒரு புதுக் கரடி விடுகிறார் இல.கணேசன். கால்வாய் தோண்டினால் தோரியம் கரைந்து விடுமா, அவ்வாறு தோரியம் இருந்தாலும் அதை வெட்டாமல் எடுக்கத்தான் முடியுமா? அல்லது அங்கே யுரேனியமே கொட்டிக் கிடந்தாலும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் வேண்டாம் என்றுதான் பாரதிய ஜனதா சொல்லிவிடுமா? எதுவும் இல்லை. பிறகு விவாதம் எதற்கு?
5 நாளில் 800 மைல் நீளத்துக்குப் பாலம் போட்டதாகக் கூறுகிறது வால்மீகி இராமாயணம். 30 மைல் கூட இல்லாத இலங்கைக்கு 800 மைல் நீளத்துக்குப் பாலம் போட்டதாகக் கூறும் கோமாளித்தனத்துக்கு எந்த "சோ' விளக்கம் கூறுவார்? இன்று அதிநவீன கருவிகளை வைத்துக் கொண்டு ஒரு மேம்பாலம் கட்டுவதற்கே மாதக்கணக்கில் ஆகும்போது அணிலும் குரங்கும் சேர்ந்து 5 நாளில் பாலம் கட்டிய கட்டுக்கதையுடன் எப்படி விவாதம் நடத்துவது?
"விவாதம் நடத்தத் தயார்' என்று கூறுபவர்கள் அறிவுபூர்வமாகக் கேள்வி கேட்டால் ஆத்திரம் அடைவார்கள். "உன் அறிவுக்கெல்லாம் எட்டாத பேரறிவு அது' என்று மிரட்டுவார்கள். கடைசியில், ""எங்கள் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் மத உணர்வைப் புண்படுத்துகிறாய்'' என்று குற்றம் சாட்டுவார்கள்.
விவாதம் என்றாலே அங்கே சான்றுகளின் அடிப்படையில்தான் முடிவுக்கு வரமுடியும். சான்றுகளால் நிரூபிக்கத் தேவையில்லாத "நம்பிக்கை' விவாதத்துக்கு வருவதில்லை. மேலே சொர்க்கமும் கீழே நரகமும் இருப்பதாக நம்பும் மக்கள் அதை நிரூபிக்க முயல்வதில்லை. இராமாயணத்தை நம்பும் பக்தர்கள் அது வரலாற்று ரீதியாக உண்மைதானா என்பது குறித்து எப்போதும் கவலைப்பட்டதில்லை. இராமனை அவதார புருசனாகக் கருதும் அவர்கள், அவனுடைய நடவடிக்கைகள் மனிதனுக்கு சாத்தியமானவைதானா என்று சோதித்துப் பார்க்கவும் முயலுவதில்லை.
அது அவர்களுடைய தனிப்பட்ட மத நம்பிக்கை. அவ்வளவுதான். ""இராமன் என்று ஒருவன் இருந்தான். அவன் கடலுக்குக் குறுக்கே பாலம் கட்டினான்'' என்று நம்புகிறவர்கள் நம்பிக்கொள்ளட்டும். ஆனால், அந்த நம்பிக்கை நாட்டின் பொது முடிவாக ஆக்கப்படுமானால் அதனைச் சான்றுகள் மூலம் நிரூபிக்கத்தான் வேண்டும். கேள்விகளுக்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். அவ்வாறு கேட்பது மத உணர்வைப் புண்படுத்துவதாகாது.
ஆனால், பார்ப்பன பாசிஸ்டுகளோ இராமாயணத்தை இதிகாசமாகவும் அதே நேரத்தில் வரலாறாகவும் காட்ட முயற்சிக்கிறார்கள். இராமனை ஒரே நேரத்தில் கடவுளாகவும் வரலாற்று மாந்தனாகவும் காட்ட முயல்கிறார்கள். வரலாற்று வகைப்பட்ட கேள்விகளை எழுப்பினாலோ, இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்திவிட்டதாக அலறுகிறார்கள். இந்து தேசிய அரசியலைக் கட்டமைப்பதற்கான சூழ்ச்சிதான் இது.
இராமாயணம் ஒரு கட்டுக்கதைதான். ஆனால், அது இந்தியாவின் பழங்குடி மக்களான திராவிடர்களுக்கு எதிராக ஆரியர்கள் நடத்திய ஆக்கிரமிப்பு யுத்தத்தையும், நால்வருண அமைப்பு எனும் பார்ப்பனக் கொடுங்கோன்மையையும் பிரதிபலிக்கும் கட்டுக்கதை. இதில் வரும் சமூக உண்மைகள் மட்டுமே வரலாற்றுத் தன்மை வாய்ந்தவை. இராமன் பாலம், புஷ்பக விமானம், பிரம்மாஸ்திரம் போன்றவை அனைத்தும் புனைகதைகள். பார்ப்பன பாசிஸ்டுகளோ இதில் வரும் புனைகதைகளை வரலாறு என்று நம்பச் சொல்கிறார்கள். பார்ப்பனக் கொடுங்கோன்மையை நிரூபிக்கும் சமூக உண்மைகளை மட்டும் புனைகதையென்று கருதி மறந்துவிடச் சொல்கிறார்கள்.
இராமன் பாலம் வரலாற்று உண்மை என்றால், இந்த நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் தொடர்புபடுத்தி பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருக்கும் எல்லா கட்டுக்கதைகளையும் வரலாற்று உண்மைகளாக அங்கீகரிக்க வேண்டியிருக்கும். "ராமன் தலைவைத்துப் படுத்த கல், சீதை குளித்த இடம், இலட்சுமணன் முதுகு சொறிந்த இடம்' என்று இலட்சக்கணக்கான "வரலாற்று' முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அங்கீகரிக்க வேண்டியிருக்கும்.
எது மதச்சார்பின்மை?
அரசு பதவியில் இருக்கும் இந்துக்கள் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கு விரோதமாக அரசு நிகழ்ச்சிகளையே மதச்சடங்குகளாக்குகிறார்கள். மத நம்பிக்கையை அரசு மேடையில் நின்று பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களுக்கு அந்த உரிமை உண்டாம். ஆனால், கருணாநிதி மட்டும் தன்னுடைய நாத்திகக் கருத்தை ஒரு மத நம்பிக்கை போல மனதுக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமாம். வெளியில் பேசினால் அது மக்களின் மத உணர்வைப் புண்படுத்துமாம்.
மதத்தை தனிப்பட்ட நம்பிக்கையாக வைத்துக் கொள்வதும், பொது நடவடிக்கைகளை அறிவியல் கண்ணோட்டத்துக்கு உட்படுத்துவதும்தான் மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் சாரம். ஆனால், அறிவியலின் பாற்பட்ட நாத்திகக் கருத்தை "தனிப்பட்ட மத நம்பிக்கையைப் போல' மனதிற்குள் வைத்துக் கொள்வதும், மதக்கருத்தை மட்டும் வெளியில் பேசுவதும்தான் உண்மையான மதச்சார்பின்மை என்கிறது பார்ப்பன பாசிசக் கும்பல். இராமனது இல்லாத மகிமைகளைப் பிரச்சாரம் செய்ய ஆத்திகத்துக்கு உரிமை உண்டென்றால், அதன் பொய்மையை அம்பலப்படுத்தும் உரிமையை நாத்திகத்துக்கு எப்படி மறுக்க முடியும்?
ஒரு மனிதன் தன்னை வருத்திக் கொள்வதை மட்டும்தான் மத உணர்வு என்று கருதி சகித்துக் கொள்ள முடியும். ஆனால், சக மனிதனை சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும், மக்களின் மொழியை "இழிமொழி' என்றும் கூறி நசுக்குகிறது பார்ப்பன மதம். இந்த ஆதிக்க உணர்வை மத உணர்வு என்று எப்படி அங்கீகரிக்க முடியும்?
இராமாயணத்தை அங்கீகரிப்பதென்பது என்பதன் பொருள், பார்ப்பன ஆதிக்கத்தையும் சூத்திர அடிமைத்தனத்தனத்தையும் அங்கீகரிப்பதுதான். பெரியாரும் அம்பேத்கரும் இதனை ஆணித்தரமாக நிறுவியிருந்த போதும், அவர்களைத் தங்களது அரசியல் பிழைப்புவாதத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் கட்சிகள் எவையும் அவர்களுடைய பார்ப்பன எதிர்ப்புக் கருத்துகளைப் பேசுவதில்லை. பிற்படுத்தப்பட்டோர்தாழ்த்தப்பட்டோர் என்று பேசும் தலைவர்கள் மத்தியில் ஒளிந்திருக்கும் சுக்ரீவன்களையும், வீடணன்களையும், ஆழ்வார்களையும் நாம் அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்.
நாடெல்லாம் சுற்றிக் கடைசியில் வரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது பார்ப்பன பாசிசம். கால்வாய் வெட்டுவதற்குக் காலதாமதம் ஆனாலும் பார்ப்பனக் கும்பலின் கல்லறைக்குக் குழி வெட்டும் வேலையை உடனே துவக்குவோம். காசியிலிருந்து ராமேசுவரத்திற்குத் தீர்த்த யாத்திரை வரும் இந்து பக்தர்கள், பார்ப்பன பாசிசம் புதைக்கப்பட்டிருக்கும் கல்லறையையும் தரிசித்துச் செல்லட்டும்!
· புதிய ஜனநாயகம், அக்டோபர் 2007
Friday, December 21, 2007
கருப்பு அங்கிக்குள் மறைந்திருக்கும் காவிவெறி!
ஓட்டுக் கட்சிகள், அதிகார வர்க்கம், போலீசு ஆகியவற்றின் மக்கள் விரோதத் தன்மை அம்பலப்பட்டு நாறிப் போய்விட்ட நிலையில், ""நீதிமன்றங்கள்தான் மக்களின் கடைசிப் புகலிடம்; நீதிபதிகள் அனைவரும் நடுநிலையாளர்கள், கறைபடாத புனிதர்கள்'' என்றொரு மாயை சாதாரண மக்கள் மத்தியில் ஆழமாக விதைக்கப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பான்மையான மக்களைப் பாதிக்கக் கூடிய பிரச்சினைகளில் நீதிமன்றங்கள் அளித்துள்ள தீர்ப்பகளை ""பிரேதப் பரிசோதனை'' செய்து பார்க்கும்பொழுதுதான், அவற்றின் பசுந்தோல் போர்த்திய புலி வேடம் அம்பலத்துக்கு வரும்.
தனது உத்தரவை மீறிவிட்டதாகக் குற்றஞ்சுமத்தி, ""தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும்'' என இன்று கருணாநிதியை மிரட்டும் உச்சநீதி மன்றம், டிச.6, 1992 அன்று, தனது உத்தரவை மீறி, பா.ஜ.க.வின் உ.பி. முதல்வர் கல்யாண் சிங் பாபர் மசூதி இடிப்புக்குத் துணை போனதைக் கண்டு ஆவேசப்படவில்லை. மாறாக, கல்யாண் சிங்குக்கு ஒருநாள் சிறை தண்டனை என்ற அடையாள தண்டனையை இரண்டு வருடம் கழித்துக் (1994ஆம் ஆண்டு) கொடுத்தது. இறுதியில் இந்தத் ""தண்டனை''யும் கூட நீதிமன்றம் முடிவடையும் நேரத்தில் கொடுக்கப்பட்டதால், கல்யாண் சிங் தண்டனையை அனுபவிக்காமலேயே, வெளியே வந்தார்.
ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, இந்து மதவெறியர்கள், பாபர் மசூதி வளாகத்தினுள் திருட்டுத்தனமாக வைத்த ராமன் சிலை தொடர்பான வழக்கு, இன்று வரை தீர்ப்புக் கூறப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. அதேசமயம், பாபர் மசூதியை இடித்துவிட்டுச் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள ராமன் கோவிலில் வழிபாட்டு உரிமை கோரி ""விசுவ இந்து பரிசத்'' தொடுத்த வழக்கில், ""ராமர் கோவில் சிலைகளுக்குப் பாதுகாப்பான முறையிலும், பக்தர்கள், யாத்திரிகர்களின் பார்வைக்கு வசதியாகவும் போதிய தூரத்தில் நின்று வழிபட அனுமதிக்க வேண்டும்; கோவிலுக்கப் போடப்பட்டுள்ள துணிக் கூடாரத்தைப் பாதுகாக்கவும், பனி, வெயில், மழைக் காலங்களில் பூசாரிகள் அங்கு தங்கி பூசைகள் நடத்தப் போதுமானவைதானா என்பதைப் பார்த்துத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்'' என அடுக்கடுக்காகக் கட்டளைகள் போட்டு, சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கூடாரத்திற்கு, சட்டபூர்வ அந்தஸ்து வழங்கியது, லக்னோ உயர்நீதி மன்றக் கிளை.
மேலும், ""பகவான் ராமன் ஒரு கற்பனைக் கட்டுக்கதை அல்ல; இந்த நாட்டின் தேசிய கலாச்சாரத்திலும் கட்டுமானத்திலும் இடம் பெற்றுள்ள ஒரு எதார்த்தம்; அரசியல் நிர்ணய சட்டத்தின் ஒரு அங்கம் என்று 1949, நவ.26ஆம் தேதி அரசியல் நிர்ணய சபை நிறைவேற்றிய மூலப் பிரதியின் பக்கங்களில் உள்ள சித்திரங்கள் காட்டுகின்றன'' என ராமர் பற்றிய ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கருத்துக்கு முட்டுக் கொடுத்தது, லக்னோ உயர்நீதி மன்றக் கிளை.
இந்தத் தீர்ப்பை வழங்கிய இரண்டு பார்ப்பன நீதிபதிகளுள் ஒருவரான ""தில்ஹரி'' என்பவர், ஏற்கெனவே ""பாபர் மசூதி ராம ஜென்ம பூமி'' வழக்கில் இந்து மதவெறியர்களின் சார்பில் வழக்காடிய வக்கீல் என்பதும்; அவர் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்ற இசுலாமியர்களின் மனு நிராகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்.எஸ்.எஸ். கும்பல் பாபர் மசூதியை இடித்துத் தள்ள சதித் திட்டம் தீட்டியதற்கும், அதற்காகப் பயிற்சி எடுத்ததற்கும், ஏராளமான ஆதாரங்கள் இருக்கும்பொழுது, ""அயோத்தி மசூதி இடிப்புச் சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தியது அல்ல; ராம பக்தர்களான கரசேவகர்களால் தன்னெழுச்சியாக எதிர்பாராத வகையில், நடந்துவிட்டது'' என்ற ஆர்.எஸ்.எஸ்.இன் வாதத்தை பஹ்ரி நடுவர் மன்றம் அப்படியே ஏற்றுக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகள் மைய அரசால் தடை செய்யப்பட்டிருந்ததை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
மசூதி இடிப்பு நாயகனான அத்வானி மீது ஆரம்பத்தில் ""கலவரத்தைத் தூண்டிவிடும்படி பேசினார்'' என்ற குற்றச்சாட்டின் கீழ் மட்டும்தான் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான், அத்வானி மீது மசூதி இடிப்பு தொடர்பான சதிக் குற்றம் சுமத்தப்பட்டு, லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
பின்னர், அலகாபாத் உயர்நீதி மன்ற உத்தரவின்படி, லக்னோ சிறப்பு நீதிமன்றம் அத்வானி மீதான சதிக் குற்றச்சாட்டை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இந்திய நீதிமன்றங்களின் ""மதச்சார்பின்மை'' மோசடித்தனமானது என்பதை நிரூபிப்பதற்கு, இன்னுமா தீர்ப்புகள் வேண்டும்? ராமன் தொடங்கி பொது சிவில் சட்டம் வரையிலான பிரச்சினைகளில், ஆர்.எஸ்.எஸ்.இன் கருத்து எதுவோ அதுவே "மாட்சிமை தங்கிய' நீதிபதிகளின் கருத்தாகவும் இருக்கிறது.
""நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள முசுலீம் தீவிரவாதிகளைத் தூக்கில் போட வேண்டும்'' எனப் பிரச்சாரம் செய்கிறது, ஆர்.எஸ்.எஸ். குற்றம் சாட்டப்பட்ட அப்சலுக்கு எதிராகப் போதிய சாட்சி இல்லாதபோதிலும், சமூகத்தின் பொது மனசாட்சியைத் திருப்திப்படுத்தும் பொருட்டு அந்த காசுமீரி முசுலீமுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது, உச்சநீதி மன்றம்.
""கருணாநிதி, உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மீறிவிட்டதாக''க் கூப்பாடு போடும்'' உச்சநீதி மன்ற நீதிபதிகள், ""பாபர் மசூதி வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்குக் கட்டுப்பட மாட்டோம்'' என இந்து மதவெறிக் கும்பல் திமிரோடு பேசி வருவதைக் கண்டு கொள்வதே இல்லை.
கோவை குண்டு வெடிப்பிலும், மும்பய்க் குண்டு வெடிப்பிலும் முசுலீம்களைத் தண்டித்து ""நீதி''யை நிலைநாட்டும் நீதிமன்றங்கள், அக்குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான கோவை கலவரத்தையும் மும்பய்க் கலவரத்தையும் நடத்திய இந்து மதவெறியர்கள் மீது விசாரணை நடத்தக் கூட மறுக்கின்றன.
மும்பய் கலவரத்தின் பொழுது, சிவசேனாவின் ""சாம்னா'' பத்திரிகையில் கலவரத்தைத் தூண்டும் வண்ணம் எழுதப்பட்ட தலையங்கங்களை ஆதாரமாகக் காட்டி, பால் தாக்கரேயைத் தண்டிக்கக் கோரி, மகாராஷ்டிரா அரசின் முன்னாள் தலைமைச் செயலர் மும்பய் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்நீதி மன்றமோ, ""இந்துமுசுலீம் உறவு சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டதால், இப்போது பழையனவற்றைக் கிளற வேண்டாம்'' எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது. பால் தாக்கரேயோ, ""என்னைக் கைது செய்தால் மும்பய் நகரமே மீண்டும் தீப்பற்றி எரியும்'' என நீதிமன்றத்திற்கு எதிராக மட்டுமல்ல, சட்டத்தின் ஆட்சிக்கு எதிராகவும் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்.
Thursday, December 20, 2007
கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...11_12
சட்டம் செய்த சதி
முயல்களோடு ஓடிக்கொண்டே, அதை வேட்டை நாயைக் கொண்டு வேட்டையாடுவதுப் போலப், பாதிக்கபட்டவர்களுக்காக வாதிடுகிற அரசு தரப்பு வழக்கறிஞர்கள், அவர்களுடைய அனுதாபங்கள் எல்லாம் குற்றவாளிகளின் மீதே திட்டமாக இருக்கிறது. அரசாங்கச் சட்ட ஆலோசகரான அரவிந்த் பாண்ட்யா, உண்மையைக் கண்டுபிடிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நானாவதி-ஷா ஆணையத்தையே சரிகட்டி நீதியை அழிக்க எத்தகைய நம்பிக்கையோடு இருந்தார்!.
மேலோட்டம்
சபர்மதி விரைவு இரயில் 'தீ'க்கு இரையாக்கப்பட்ட அந்த இரவிலேயே கலவரக்காரர்களைப் பாதுகாப்பதற்காக, வழக்கறிஞர்களைக் கொண்ட கமிட்டி ஒன்று சங்பரிவார முக்கியஸ்தர்களால் நியமிக்கப்பட்டது.
விஹெச்பி உறுப்பினரும், அஹ்மதாபாத்தில் முக்கியமான வழக்கறிஞருமாகிய சேத்தன் ஷா என்பவனே நரோடா பாட்டியா படுகொலைகள் வழக்கில் குற்றவாளிகளுக்காக வாதாட வந்த முதல் வழக்கறிஞர் ஆவான். மிக முக்கியமான, சிக்கலான வழக்குகளில் அரசு தரப்பு சார்பாக சங்பரிவார அபிமானிகள் ஆஜராவது வழக்கப்படுத்தப்பட்டதால், பின்னர் இவன் (சேத்தன் ஷா)குல்பர்க் சமூக படுகொலைகள் வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டான்.
கலவரங்களின் போது மிக மோசமாகப் பாதிக்கபட்டப் பகுதிகளுள் ஒன்றான மேஃஸானா மாவட்டத்தின் மூத்த வழக்கறிஞராக, குஜராத் மாநில விஹெச்பி பொதுச் செயலாளரான திலீப் திரிவேதி நியமிக்கபட்டிருக்கிறான். குஜராத் முழுவதும் கலவரம் சம்பந்தப்பட்ட வழக்குகளை ஒழுங்குபடுத்தி நடத்துகிறவனும் இவனே.
சபர்கந்தாவில் அரசு தரப்பு வழக்கறிஞராக விஹெச்பி மாவட்டத் தலைவனான பாரத் பட் என்பவன் நியமிக்கபட்டிருக்கிறான். இவனால் முடிந்த அளவு குற்றவாளிகளுக்கு சிறந்த உதவிகளை செய்வதாக இவன் கூறுகிறான்
நானாவதி-ஷா ஆணையத்தில் மாநில அரசு சட்ட ஆலோசகரான அரவிந்த் பாண்ட்யா நீதிபதிகள் மேல் அவதூறான மதிப்பீடு செய்கிறான். அவனது அபிப்பிராயத்தின் படி, நானாவதி பணத்தாசையுடைவர் என்றும், ஷா அவர்கள்(சங்பரிவாரம்) மீது அநுதாபமுடையவர் என்பதாகும்.
நீதி - வஞ்சிக்கபட்டவர்களுக்கு மறைக்க(மறுக்க)ப்பட்டது
கலவரங்கள் நடப்பதற்கு முன்பே, வழக்கறிஞர்கள் மிக அதிகமான கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டு வழக்குகளைச் சந்திப்பதற்கான முன்னேற்பாடுகளை சங்பரிவாரம் செய்ய ஆரம்பித்துவிட்டது.
நன்கு சோதித்து அறியப்பட்ட ஒரு திட்டத்தை வைத்து நடத்தபட்ட மனித வர்க்கத்தின் படுகொலை மட்டுமல்ல, இது ஒரு துயரமான முடிவுமாகும். ஹிந்துக்களில் எவர்கள் கலவரத்தினாலும், கொலைகளினாலும் குற்றம்சாட்டப் படுவார்களோ அவர்களுக்குச் சட்ட உதவிகள் அளிப்பதற்கான திட்டங்களையும் சூழ்ச்சிகளையும், கலவரங்கள் நடப்பதற்கு முன்பே விஹெச்பி வகுக்க ஆரம்பித்துவிட்டது.
தீமந்த் பட் மற்றும் தீபக் ஷா, இவ்விருவரும் வதோதரா பகுதி பாஜக உறுப்பினர்கள். பட் என்பவன் மஹாராஜா சயோஜிராவ் பல்கலைகழகத்தில் தலைமை கணக்காளனாக பணி செய்கிறான். ஷா என்பவன் பல்கலைகழகத்தின் நிர்வாக குழு உறுப்பினராக இருக்கிறான். இவ்விருவரும் தெஹல்காவிடம் சொல்லும் போது, சபர்மதி விரைவு இரயில் சம்பவம் நடந்த இரவில் சங்பரிவார் முக்கிய நபர்கள் ஒன்று கூடி கலவரக்காரர்களுக்கு எதிராக பதியப்படும் வழக்குகளைச் சந்திக்க வழக்கறிஞர்களின் கமிட்டி ஒன்றை நியமித்தார்கள்.
உண்மை நிலை என்னவென்றால், விஹெச்பியில் பதவியில் இருக்கக் கூடியவர்களே தனியாக பணியாற்றக் கூடிய வழக்கறிஞர்களாகவும் இன்னும் அரசு
வழக்கறிஞர்களாவும் என அதிக எண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள் இருந்தது அவர்களுடைய வேலையைச் சுலபமாக்கித் தந்தது. வதோதராவில் வழக்கறிஞர்களாக இருக்கும் ராஜேந்திர திரிவேதி, நீரஜ் ஜெயின் மற்றும் துஸார் வியாஸ் போன்ற அதிகமான வழக்கறிஞர்கள் பெயர்களை தீபக் ஷா கூறி, இவர்கள் எல்லோரும் முன்னேற்பாடுகளைக் குறித்து நடத்தபட்டச் சந்திப்பில் கலந்துக் கொண்டதாக கூறினான்.
RSS உறுப்பினாகளான நரேந்திர பட்டேல் மற்றும் மோகன் பட்டேல் ஆகியோர் தெஹல்காவிடம் சொல்லும் போது, கலவரத்திற்குப் பின் ஹிந்து கலவரக்காரர்களுக்கு சட்ட உதவிகள் செய்வதற்காக சபர்கந்தா மாவட்டத்தில் சங்கலன் என்ற பெயரில் ஒரு அமைப்பை RSS உருவாக்கியதாகச் சொன்னார்கள். தனியாகப் பணியாற்றிய விஹெச்பியை சார்ந்த அநேகமான வழக்கறிஞர்களே குற்றவாளிகளுக்காக வாதாடுகிறவர்கள் ஆனார்கள். இன்னும் அரசு தரப்பு வழக்கறிஞர்களோ விஹெச்பி உறுப்பினர்களாகவோ அல்லது சங்பரிவார அபிமானிகளாகவோ இருப்பதனால் கலவரக்கார வன்முறை குற்றவாளிகளுக்கு மறைமுகமான உதவிகளைச் செய்தனர்.
அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு எதிரான குற்றங்களை முன்னெடுத்து வைத்து வழக்கைக் கொண்டுச் செல்வதற்குப் பதிலாக அவர்களுக்கு உள்ளபடியே உதவிகளைச் செய்தார்கள். எனவே, அநேகமான இடங்களில், வழக்கைத் தொடர்ந்தவருக்காக (பாதிக்கப்படவருக்காக) வாதிடும் வழக்கறிஞரும், எதிர் தரப்புக்கு (குற்றவாளிக்காக)வாதிடும் வழக்கறிஞரும் ஒரே பக்கத்திற்குச் சார்புடையவர்களாக, அதாவது கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் செய்தக் குற்றவாளிகளின் தரப்புக்கு ஆதரவாக இருந்தார்கள். அப்படியானால் முஸ்லிம் சமுதாயம் என்ன நம்பிக்கையோடு தங்களை வதைத்தக் கொடுமைபடுத்தியக் குற்றவாளிகள் தண்டனை அளிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியும்? முதலில் காவல்துறை தங்களது போலியான கண்துடைப்பு விசாரணைகள் மூலம் கலவரக்காரர்களின் பக்கம் சாய்ந்திருந்தார்கள். இப்பொழுது பாதிக்கபட்டவர்களுக்காக வாதாட வேண்டிய அரசு தரப்பு வழக்கறிஞர்களும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக அணி திரண்டு விட்டனர்.
விஹெச்பியின் செயல்பாடுகளில் தீவிர ஈடுபாடுடைய உறுப்பினரும், அஹ்மதாபாத்தில் முன்னனி வழக்கறிஞருமான சேட்டன் ஷா, முதலில் நரோடா பட்டியா படுகொலைகளில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்காகத் தான் ஆஜரானார். அரசாங்கம் பின்னர் அவரை, குல்பர்க் சமூக குடியிருப்பு படுகொலைகளுக்கான வழக்கில் அரசு தரப்பு (பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடும்) வழக்கறிஞராக நியமித்தது. குல்பர்க் வழக்கில் குற்றம் சாட்டபட்டுள்ளவர்களில் ஒருவனான பிரஹ்லட் ராஜு என்பவனை தெஹல்கா சந்தித்த போது கூறினான், அவன் கைது செய்வதிலிருந்து தப்பிக்க ஓடிக் கொண்டிருந்தப் போது, எப்பொழுது காவலதுறையிடம் சரணடைய வேண்டும் என்பது பற்றிய ஆலோசனையை சேட்டன் ஷா அளித்ததாகக் கூறினான்கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...12.
மேஃஸானா மாவட்டத்தில் குஜராத் மாநில விஹெச்பி பொது செயலாளரான திலீப் திரிவேதி, கிட்டத்தட்ட 1 டஜன் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கொண்ட அவனுக்குக் கீழே வேலை செய்யும் ஒரு வழக்கறிஞர் அணியை வழிநடத்தக் கூடிய மூத்த வழக்கறிஞனாக நியமிக்கப்பட்டான். மேஃஸானா, கலவரங்களின் போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டப் பகுதிகளுள் ஒன்றாகும்.
மேஃஸானாவில் குறிப்பாக இரண்டு வழக்குகள், விஸ்நகரில் நடந்த தீப்தா தர்வாஜா சம்பவமும் இன்னும் சர்தார்புரா சம்பவமும் - இங்கு மக்கள் படுகொலை செய்யப்பட்ட எண்ணிக்கையாலும் மேலும் காட்டுமிராண்டித்தனமாக ஈவு இரக்கமில்லாமல் கொடூரமாகக் கொலைகள் செய்யப்பட்ட முறையால் - மனித சமுதாயத்தின் நெஞ்சத்தை உலுக்கியது. இந்த இரண்டு வழக்குகளிலும் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவர மனு தாக்கல் செய்யும் போது அதை எதிர்க்க வேண்டியது தான் இவரது(அரசு தரப்பு வழக்கறிஞர்) கடமையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக குற்றவாளி ஜாமீனில் வெளிவர உதவியதற்காக சமுதாயத்தால் குற்றம் சாட்டப்பட்டு, கண்டிக்கப்பட்டான். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை குஜராத் உயர்நீதி மன்றத்திலும் இன்னும் உச்சநீதி மன்றத்திலும் முறையிட்டப் பின், கலவர வழக்குகளுக்காக ஆஜர் ஆவதிலிருந்தும் திரிவேதி நீக்கப்பட்டான். ஜுன் 15ம் தேதி 2007ல் திரிவேதியை மேஃஸானா நீதிமன்ற வளாகத்திலிருக்கும் அவனது அலுவலகத்தில் வைத்து பார்க்க தெஹல்கா சென்றது.
விஹெச்பியின் பொது செயலாளர் என்ற அந்தஸ்தின் காரணத்தால், குஜராத் வன்முறை கலவரங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் அனைத்தையும் இவன் தான் ஒருங்கிணைத்துள்ளான். தெஹல்கா பத்திரிக்கையாளர், திரிவேதியின் அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போதே கலவரம் தொடர்பான வழக்குக் குறித்துக் கலந்து ஆலோசிப்பதற்காக, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹிந்துக்களில் இரண்டு பேர் உள்ளே வந்தனர். குற்றவாளிக்காக வாதாடுவதற்கு வழக்கறிஞர் ஒருவரை அமர்துவது தொடர்பாக திரிவேதியின் உதவியை இவ்விருவரும் நாடினார்கள்.
தன்னைக் காண வந்தவர்களுக்குச் சரியான வழக்கறிஞரை பிடிக்க முயற்சி செய்யும் பொருட்டு சில வழக்கறிஞர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டான். அவர்களுடைய வழக்கிற்காக ஏற்கனவே வாதாடி வந்த ஒரு வழக்கறிஞர் நோயுற்று விட்டதால், வேறொரு புது வழக்கறிஞரை மீண்டும் கண்டுபிடித்து கொடுப்பது இவனது பொறுப்பாகி விட்டதாக அவ்விருவரும் அவனது அலுவலகத்தை விட்டுச் சென்றப் பிறகு திரிவேதி கூறினான்.
அரசு வழக்கறிஞர்களையும் எதிர்தரப்பு வழக்கறிஞர்களையும் ஒருங்கிணைப்பதிலிருந்து கலவரம் தொடர்பான வழக்குகளை மறுவிசாரணை செய்யும் காவல்துறையினருடன் பேசுவது வரை அனைத்தையும் இவன் ஒருவனே நிர்வகிக்க வேண்டியதிருப்பது குறித்து முணுமுணுத்துக் கொண்டான். அவன் மேலும் கூறும் போது, கலவரம் தொடர்புடைய மொத்தம் 74 வழக்குகளில் இரண்டில் மட்டுமே குற்றாவாளி எனத் தீர்ப்பு வந்துள்ளதாகவும் தெரிவித்தான்.
"ஒரு வழக்கில், செஷன்ஸ் நீதிமன்றத்தில் நான் மேல்மூறையீடு செய்து நிரபராதி எனத் தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்தேன்.....இரண்டாவது வழக்கில் மேல்மூறையீடு உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எல்லோரும் பிணையில் வெளியே வந்துவிட்டனர். .. குற்றவாளி என்று கொடுக்கப்பட்ட தீர்ப்பு தவறானது."
கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மேஃஸானாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுபயங்கரமான கொள்ளைகள் மற்றும் கொலைகளைப் பற்றியத் தகவல்களை விவரிக்க ஆரம்பித்து விட்டான். சர்தார்புரா வழக்கு பற்றி இவன் (திலீப் திரிவேதி) கூறும் போது, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகள் பிணையில் ஏற்கனவே வெளியே வந்து விட்டதால் இந்தத் தடையைப் பற்றித் தான் கவலை படவில்லை என்பதாகக் கூறினான். இதன்பிறகு மேஃஸானா நீதிமன்றத்தில் சர்தார்புரா கலவரம் தொடர்பான வழக்கில் இவன் குற்றவாளிகளைப் பிணையில் விடுதலை செய்ய வைத்த போது, பாதிக்கப்பட்டவர்கள் எத்தகையக் கூக்குரல்கள் எழுப்பினார்கள் என்பது பற்றியும், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை முதல் பக்கத்தில் இவ்வாறு பிணையில் விடுதலை செய்ததைப் பற்றி எழுதி தான் கலவரம் தொடர்பான வழக்குகளில் குற்றாவாளிக்கு ஆதரவாக நடக்கிறவன் என்று குற்றம் சாட்டியதை எல்லாம் விவரித்துக் கூறினான்.
தனக்கு எதிரான குற்றசாட்டுகள் உண்மையாக இருந்தும் கூட இதனை நிரூபிக்க எந்த ஒரு ஆதாரமும் கிடையாது என்று சந்தோசத்துடன் திரிவேதி கூறி பெருமைபட்டுக் கொண்டான். கலவரத்திற்குப் பின்பு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அங்கு முகாமிட்டு தங்கி அரசு வழக்கறிஞர்கள், (சங்பரிவார) தொண்டர்கள் மற்றும் காவல் துறை அதிகரிகளுடன் சந்தித்து, கூட்டங்கள் நடத்தியதை அனைவரும் அறிவார்கள் என்றும் கூறினான்.
சபர்கந்தாவில் அரசு வழக்கறிஞரான பாரத் பட் என்பவனை தெஹல்கா சந்தித்தது. அவனும் விஹெச்பியின் மாவட்டத் தலைவராக உள்ளான். அவனால் முடிந்த அளவுக்குச் சிறந்த உதவிகளைக் குற்றவாளிகளுக்குச் செய்வதாகவும் பட் கூறினான். இந்த அரசு வழக்கறிஞர் சரியாக சொல்லப் போனால் தரகராக மாறிவிட்டான் என்று கூறவேண்டும். ஏனென்றால் நீதிக்குப் போராடுவதை விட்டு விட்டு நீதிமன்றத்திறக்கு வெளியே பாதிக்கபட்டவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே சமரசம் செய்து தீர்த்து வைக்க முயற்சி செய்கிறான்.
நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html
Wednesday, December 19, 2007
'இரக்கமற்ற கோழைகளின் அரசியல் உருவாக்கும் மனித அவலங்கள்' என்ற நூலின் முன்னுரை
பி.இரயாகரன்
19.12.2007
அவலமும் துயரம் நிறைந்த ஒரு சமூகம் தான் தமிழ் இனம். இன்று எமது தமிழ் சமூகத்தின் இருப்பே கேள்விக்குள்ளாகியுள்ளது. இப்படி எந்த நம்பிக்கையுமற்ற நிலையில், எந்தத் துரும்புமின்றி சிதைக்கப்பட்டுள்ளது. மக்களை தலைமை தாங்கி செல்லும் வகையில், எந்த மாற்றும் கிடையாது.
இந்தப் போக்கினை அம்பலப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல் இது. பல்வேறு மனித அவலங்களை ஒருங்கே பேச முனைகின்ற இந்த நூல், உங்களுடன் இதைப்பற்றி உரையாட முனைகின்றது.
சிங்களப் பேரினவாதிகளும், புலிகளும், புலியல்லாத அரசு சார்பு குழுக்களும், தமிழ் மக்களை இரக்கமற்ற வகையில் தமது அடிமைகளாகவே நடத்துகின்றனர். மக்கள் அந்தக் கொடூரத்தை எதிர்கொள்ள முடியாது, அடங்கி ஒடுங்கி கைகட்டி நிற்கின்றனர். இப்படி இருத்தல் தான், தமிழ் மக்களுக்கு அழகு என பரஸ்பரம் கூறிக்கொள்கின்றனர்.
இதை மீறி எதையும் ஆக்கப+ர்வமாக செய்யமுடியாது. அவை செய்யக் கூடாத ஒன்று. இப்படி எதையும் இவர்கள் அனுமதிப்பதில்லை. இது மீறப்படும் போது, காணாமல் போதல், கடத்தல், படுகொலை மூலம் பதிலளிக்கப்படுகின்றது. காலத்துக்கு காலம், இப்படி மாறி மாறி, தமிழ் இனத்தையே அரித்து சிதைத்து வந்தனர், வருகின்றனர்.
இந்த மனித துயரத்தை மனதால் நினைத்துப் பார்க்க முடியாது. இதை எழுத்தில் கொண்டு வரமுடியாது. அந்தளவுக்கு இந்த துயரம் கொடுமையானது, கொடூரமானது. அன்றாடம் இதை வாழ்வாக அனுபவிப்பவன் படுகின்ற வேதனைகள், படு பயங்கரமானவை.
உரிமையைக் கோரிய சமூகம், இன்று வாழ்வையே பறிகொடுத்து நிற்கின்ற பரிதாபம். சின்னச் சின்ன அற்ப உணர்வுகளைக் கூட, துயரம் நிறைந்த வாழ்வாக அனுபவிக்கின்ற ஒரு இனமாக தமிழினம் சிதைந்துவிட்டது. சாதாரணமான வாழ்வைக் கூட இயல்பாக வாழமுடியாத வகையில், மக்கள் விரோத சக்திகளின் கொடூரமான நடத்தைகள் செயல்கள் பதிலளிக்கின்றன.
இதனால் குடும்ப உறுப்பினர்களை இழந்து புலம்பும் குழந்தை, மனைவி, தாய். இப்படி பல உறவு சார்ந்த சமூகச் சிதைவுகள். அவர்களின் சொந்த அன்றாட வாழ்க்கையில் தொடரும் பற்பல சோகங்கள். இதை அற்பத்தனமாகவே எடுத்து, கண்டும் காணாமல் விட்டுவிடுகின்ற புறக்கணிப்புக்கள். மனித உணர்வுகள் மீது, உணர்ச்சியற்று கல்லாகிப் போன சமூகத் தன்மை.
இதில் கணவனை இழக்கும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும், மனித உணர்ச்சியும் உணர்வும் சார்ந்த பாலியல் நெருக்கடிகள். சமூகத்தில் இதைக் கண்டு கொள்ளாத அசமந்தமான வக்கிரமான போக்குகள். ஒழுக்கமென்ற பெயரில், சமூக அதிகாரம் கொண்ட அதிகார மையங்கள். இப்படி எண்ணற்ற உளவியல் சார்ந்த, மனம் சார்ந்த மனித துயரங்கள். கண்ணுக்கு புலனாகாத வகையில், சமூகத்தினுள் சீழ் பிடித்து நாறுகின்றது.
இதன் மேல் தான் ஜனநாயகம் தேசியம் என்று, ஒன்றையொன்று எதிராக நிறுத்தியபடி அரசியல் நடனம் ஆடுகின்றனர். இவர்கள் மூச்சுக்கு மூச்சு மக்களின் விடுதலையைப் பற்றி பேசுகின்றனர். இந்த நூல் இதை அம்பலப்படுத்துவதுடன், சாதாரண மனிதனின் உள்ளத்துடன் உணர்வுடன் நின்று பேச முற்படுகின்றது.
இப்படி மனித அவலங்களை பற்றி, மக்களுடன் பேச முற்படுகின்றது இந்த நூல். நாம் தீர்வாக ஒன்றை மட்டுமே கூற முற்படுகின்றோம். நாங்கள் வாழ்வில் உணருகின்ற எங்கள் பிரச்சனைக்கு, ஒரு தீர்வைத் தேடி நாங்கள் போராடாத வரை, மாற்று தீர்வு என எதுவும் எமக்கு கிடைக்கப்போவதில்லை. எப்படிப் போராடுவது என்பது கூட, நாம் எமது சொந்த சூழல் சார்ந்து கற்றுக்கொள்வதில் தான் அடங்கியுள்ளது. இதைவிட மாற்று எதையும், யாரும் தங்கத்தட்டில் ஏந்தி வந்து தரப்போவதில்லை.
Tuesday, December 18, 2007
""போலி சுதந்திரத்தைத் திரைகிழிப்போம்!
நாட்டை அடிமையாக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை முறியடிப்போம்!''
— புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்
ஆகஸ்ட்15; போலி சுதந்திரத்தின் 60ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஆட்சியாளர்களும் ஓட்டுப் பொறுக்கிகளும் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், 1947இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அதிகார மாற்றம்தான் என்பதை விளக்கியும், அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் நாட்டை அமெரிக்காவுக்கு அடிமையாக்கும் துரோகத்தனத்தைத் திரைகிழித்தும், மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராட உழைக்கும் மக்களை அறைகூவியும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் துண்டுப் பிரசுரம் சுவரொட்டிகள் மூலம் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன.
திருச்சியில், இப்புரட்சிகர அமைப்புகள் இணைந்து 14.8.07 அன்று மாலை திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, இந்தியாவை அடிமையாக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தின. பு.மா.இ.மு. மாவட்டச் செயலர் தோழர் தண்டபாணி தலைமையில் விண்ணதிரும் முழக்கங்களோடு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் நாட்டை அடிமைப்படுத்தியுள்ள ஆட்சியாளர்களின் துரோகத்தனத்தை அம்பலப்படுத்தியும், மீண்டும் ஒரு சுதந்திரப் போருக்கு அணிதிரள உழைக்கும் மக்களை அறைகூவியும் முன்னணியாளர்கள் உரையாற்றினர்.
உசிலம்பட்டியில், ஆகஸ்ட் 15 அன்று மாலை முருகன் கோவில் அருகே ""காலனியாதிக்கத்துக்கு எதிரான விடுதலைப் போரின் வீரமரபைப் பின் தொடர்வோம்! மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான போரை முன்னெடுப்போம்!'' என்ற முழக்கத்துடன் இப்பகுதியில் இயங்கும் வி.வி.மு. பொதுக்கட்டம் கலைநிகழ்ச்சியை நடத்தியது. தோழர் சந்திரபோஸ் தலைமையில் நடந்த இப்பொதுக்கூட்டத்தில் தோழர் நடராஜ், தோழர் நாகராசன், தோழர் மோகன், தோழர் காளியப்பன் ஆகியோர் போலி சுதந்திரத்தைத் திரைகிழித்தும் நாட்டைப் பேரழிவுக்குள் தள்ளிவிட்டுள்ள சர்வகட்சி ஆட்சியாளர்களின் துரோகத்தை அம்பலப்படுத்தியும் சிறப்புரையாற்றினர்.
இறுதியில் ம.க.இ.க. மையக் கலைக்குழு நடத்திய புரட்சிகர கலைநிகழ்ச்சியும் குறிப்பாக, ""செட்டிநாட்டு சிதம்பரம், பட்டினிதாண்டா நிரந்தரம்'' என்ற பாடலும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.
நாட்டை அடிமையாக்கும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக தமிழகமெங்கும் இப்புரட்சிகர அமைப்புகள் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றன.
— பு.ஜ. செய்தியாளர்கள்.
சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு எதிராக
ஓசூர் விவசாயிகளின் போராட்டம்!
ஓசூரை அடுத்துள்ள கெலமங்கலம், பைரமங்கலம், குண்டுமாரனப்பள்ளி, ஒன்னல்வாடி, அஞ்செட்டிப் பள்ளி, சனமாவு, அக்கொண்டப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களின் விளைநிலங்களைப் பறித்து 3640 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும் ஜி.எம்.ஆர். குழுமம் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து இம்மண்டலத்தை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று தமிழக முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.
""லிட்டில் இங்கிலாந்து'' என்று வெள்ளைக்காரர்களால் காலனியாட்சிக் காலத்தில் அழைக்கப்பட்ட இப்பகுதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓரளவுக்கு செழிப்பான பகுதியாகும். இங்கு பெருமளவில் விளையும் வாழை, முட்டைக்கோஸ், உருளை, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் சென்னை, பெங்களூர் முதலான பெருநகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இத்தகைய வளமான விளைநிலங்களையும் விவசாயிகள் வாழ்வுரிமையையும் பறித்துவிட்டு, இங்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கத் துடிக்கிறது தி.மு.க. அரசு.
இப்பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவப்படுவதற்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, ஏறத்தாழ ஓராண்டு காலமாக, இப்பகுதியில் இயங்கிவரும் வி.வி.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு விவசாயிகளிடம் விழிப்புணர்வூட்டி வந்தன. தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதும் இக்கிராமங்களில் வீச்சாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு விவசாயிகளை அணிதிரட்டின. இப்பிரச்சாரத்தால் உந்தப்பட்ட விவசாயிகள் தன்னெழுச்சியாகத் திரண்டு கடந்த 17.8.07 அன்று அக்கொண்டப்பள்ளியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். விவசாயிகள் ஒப்புதலின்றி நிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என்று வட்டாட்சியரும் காவல்துறை கண்காணிப்பாளரும் போராடும் மக்களை சமரசமப்படுத்த முயற்சித்தனர்.
இந்தப் பசப்பல்களை ஏற்க மறுத்த இப்பகுதிவாழ் விவசாயிகள் 23.8.07 அன்று விவசாய நிலங்களை தர மறுப்பதாகவும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்ப்பதாகவும் அறிவித்து ஆர்ப்பாட்டப் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். விவசாயிகளின் விழிப்புணர்வையும் போராட்டத்தையும் கண்டு அரண்டு போன அதிகார வர்க்கமும் போலீசும்,"தொழில் வளர்ச்சி பெருகும்; 70 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்' என்றெல்லாம் புளுகி எதிர்ப்பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இவற்றை அம்பலப்படுத்தி முறியடிக்கவும், சிறப்புப் பொருளாதார மண்டலத்தை விரட்டியடிக்கவும் வி.வி.மு.வினர் விவசாயிகளை அணிதிரட்டி வருகின்றனர்.
— விவசாயிகள்
விடுதலை
முன்னணி,
கிருஷ்ணகிரி
மாவட்டம்.
ஒரு கிலோ அரிசியும் இரண்டு ரூபாய்; சிறுநீர் கழிக்கவும் இரண்டு ரூபாய்!
— கட்டணக் கொள்ளைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
வேலூர் நகரின் மத்திய பேருந்து நிலையம் ""எக்ஸ்னோரா'' என்ற தனியார் நிறுவனத்தின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனியாரிடம் ஒப்படைத்தால் நிர்வாகம், பராமரிப்பு, சேவை என அனைத்துமே மேம்பட்டு சிறப்படையும் என்று கருதும் மேதாவிகள் இப்பேருந்து நிலையத்துக்கு வந்தால், மூக்கைப் பிடித்துக் கொண்டு ஓடிவிடுவார்கள்.
இப்பேருந்து நிலையத்தினுள்ளே வந்து செல்ல சாலை வசதியில்லை. பயணிகளுக்கு நிழற்குடை இல்லை. ஆட்டோ நிறுத்தம்கூட இல்லாததால் மூட்டை முடிச்சுகளோடு பயணிகள் அவதிப்படுகின்றனர். கிட்ட நெருங்கவே முடியாதபடி முடைநாற்றமடிக்கின்றன கழிப்பறைகள்; அவற்றில் சிறுநீர் கழிக்க கட்டணமாக இரண்டு ரூபாயை வழிப்பறி செய்கிறது எக்ஸ்னோரா.
பேருந்து நிலையத்தின் யோக்கியதை இப்படியிருக்க, வேலூர் நகரமோ சேறும் சகதியுமான சாலைகள், கழிவுநீர் தேங்கி பன்றிகள் உருளும் சாக்கடைகள், அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள் என குடலைப் புரட்டும் நாற்றத்தால் திணறுகிறது. பெரும் ஒப்பந்தக்காரர்களும் எக்ஸ்னோரா போன்ற "தொண்டு' நிறுவனங்களும் பகற்கொள்ளையடிக்க, நகராட்சியோ இக்கொள்ளையர்களுக்குத் தொண்டூழியம் செய்து கொண்டிருக்கிறது.
மக்களின் அடிப்படை வசதிகளை அறவே புறக்கணித்துவிட்டு, அவற்றைத் தனியார் கொள்ளைக்குத் திறந்துவிட்டுள்ள நகராட்சியை அம்பலப்படுத்தியும், பேருந்து நிலையத்தை எக்ஸ்னோராவிடமிருந்து பிடுங்குவது உள்ளிட்ட இதர கோரிக்கைகளை வலியுறுத்தியும் நகராட்சி அலுவலகம் முன்பாக 20.8.07 அன்று எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை ம.க.இ.க. நடத்தியது. தனியார்மயத்தின் யோக்கியதையை நாறடித்த இந்த ஆர்ப்பாட்டம், வேலூர் நகர மக்களிடம் சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்றது.
தனது மரணம் வரை தளராது போராடிய மனிதன்
பி.இரயாகரன்
18.12.2007
பரா தனக்கு சரியென்றுபட்ட கருத்தை தனது வாழ்வின் இறுதிவரை முன் வைத்தவர். போராடுவதில் தனது முதுமையை எட்டி உதைத்தவர். பொது அரசியல் சூழல் அவரை அங்குமிங்குமாக அரசியலில் ஆட வைத்தது. ஆனால் பொதுவான அரசியல் சீரழிவுக்குள் மூழ்காது, தன்னையும் தனது கருத்தையும் காப்பாற்றியவர். நடைமுறை ரீதியாக சூழலுக்குள் இழுபட்டு இயங்கிய போதும், தனது கருத்தை அதற்குளளாக ஒருநாளும் விட்டுக் கொடுத்தவர் அல்ல.
பராவை அரசியல் மதிப்பீடு செய்வது என்பது, விமர்சனங்களுடன் உள்ளடங்கியது தான். அவரின் திரோஸ்க்கிய அரசியல் நிலைப்பாடும், தொழிற்சங்க வாதமும், அவரின் இலக்கிய சந்திப்பு தொடர்பான நிலைப்பாடுகளும், இதில் அவரின் சந்தர்ப்பவாதமும் விமர்சனத்துக்குரியதாகவே எப்போதும் இருந்துள்ளது.
இவற்றைக் கடந்தும் அவரின் சில சரியான நிலைப்பாடுகளை மதிப்பிட வேண்டியுள்ளது.
1. சமகாலத்தில் மார்க்சியம் மீதான பொதுவான தாக்குதல், இழிவாடல்களை எல்லாவற்றையும் மீறி, மார்க்சியம் தான் மக்களின் விடுதலைக்கான ஓரே தத்துவம் என்று மீண்டும் மீண்டும் உரக்கச் சொன்னவர். தனது கருத்துகளை அதற்குள் நின்று முன்வைத்தவர்.
2. ஜனநாயகம் என்பது புலியெதிர்ப்பு என்று வரைவிலக்கணம் பெற்ற நிலையில், அதை அவர் எதிர்த்து நின்றவர். இலக்கியச் சந்திப்பை வெறும் புலியெதிர்ப்பு சந்திப்பாக்க எடுத்த முயற்சிகளை எதிர்த்துப் போராடியவர்.
3. திரோஸ்க்கிய வாதியாக அவர் இருந்தபோதும், ஸ்ராலினிய காழ்ப்புடன் சமூக இயக்கத்தை ஆராயாது, அதன் இயங்கியல் தன்மையுடன் இணங்கிப் பார்த்தவர். இப்படி முற்றாக ஸ்hரலினை எதிர்த்து தூற்றியவரல்ல.
4. சமகால அரசியல் செயற்பாட்டை தனது சுயநலத்துக்காக பயன்படுத்தியவரல்ல. பலர் அப்படிச் செய்த போதும், அவர் தன்னளவில் நேர்மையாக இருக்க முனைந்தவர்.
அரசியல் சூழல் சார்ந்த தனிமனித எல்லையும், பொது அரசியல் போக்கும், அவர் கொண்டிருந்த திரோஸ்கியப் பாரம்பரிய அரசியலும் தான், அவரின் தவறுகளுக்கு காரணமாக இருந்தது. சாதகமான போராட்ட சூழல் ஒன்று நிலவியிருப்பின், மக்களுக்காக அர்ப்பணித்து போராடக் கூடிய உள ஆற்றலையும், தனிமனித நேர்மையையும் அவர் தன்னளவில் கொண்டிருந்தவர்.
தன் வாழ்வின் இறுதிவரை, வர்க்க போராட்டம் பற்றியே கனவு கண்டவர். இலங்கையின் முழு மக்களும் ஜனநாயகத்தைப் பெறுவதை உணர்வு பூர்வமாக உள்வாங்கி, அதற்காக ஏங்கியவர். வளவளவென்றில்லாமல் கருத்தைச் சொல்வதில் உள்ள திடம் அசாதாரணமானது. இந்த வகையில் தனது முழுக் குடும்பத்தையும், தனது அரசியல் அரங்கில் இட்டுச்சென்றவர். அவர் விடாமுயற்சி உடன் கூடிய உற்சாகம் கொண்ட உழைப்பு, கருத்துப் பிரச்சாரம் செய்வதில் உள்ள திடமான உறுதியான நம்பிக்கை, முதுமையைக் கடந்தும் அவரை இளமையுடன் போராட வைத்தது.
Monday, December 17, 2007
'காற்றுப் புகமுடியாத இடத்திலும் கம்யூனிஸ்டுகள் நுழைவார்கள்'
""கல்லூரி நிர்வாகம் "பறக்கும் படை' என்ற பெயரில் ஒரு குண்டர் படையை வைத்திருக்கிறது. போராடும் மாணவர்களை "டார்க் ரூம்' எனப்படும் கொட்டடியில் அடைத்து வைத்து ஆபாச வசவுகளுடன் காட்டுமிராண்டித்தனமாக அக்குண்டர்கள் அடிப்பார்கள்'' என்று கடந்த 2006ஆம் ஆண்டில் ஜேப்பியாரின் சத்யபாமா நிகர்நிலைப்பல்கலைகழக மாணவர்கள் முகத்தைக் கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்ததையும், ஜேப்பியாரின் உருட்டல்மிரட்டல்களால் மனமுடைந்த மாணவர் ராபின்வாஸ் தற்கொலை செய்து கொண்ட அவலத்தையும் தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது.
பல்லாயிரக் கணக்கில் பணத்தைக் கொட்டியழுது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கே இந்த கதி என்றால், இம்மாணவர்களைப் பேருந்துகளில் அழைத்துவரும் ஜேப்பியார் கல்லூரிகளின் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பிற தொழிலாளர்களின் நிலை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
""கல்வித் தந்தை'' ,""வள்ளல்'' என்றெல்லாம் தனது எடுபிடிகளை வைத்து தனக்குத்தானே பட்டமளித்துக் கொண்டு சுய இன்பம் காணும் ஜேப்பியாரின் கல்வி நிறுவனங்களில் பேருந்து ஓட்டுநர்கள், மெக்கானிக்குகள், கிளீனர்கள், துப்புரவுப் பணியாளர்கள், உணவு விடுதிப் பணியாளர்கள் என ஏறத்தாழ 400க்கும் மேற்பட்டோர் நீண்ட காலமாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் எந்த உரிமையுமற்ற அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். ஜேப்பியார் வைத்ததுதான் சட்டம்; இட்டதுதான் நீதி. காரணமே இன்றி தொழிலாளிகளை வேலையிலிருந்து நீக்குவது, கல்லூரி நுழைவாயிலில் மணிக்கணக்கில் கால்கடுக்க நிற்க வைத்து தண்டிப்பது, ரௌடியைப்போல பாய்ந்து வந்து பளாரென அறைந்து எட்டி உதைப்பது – என ஜேப்பியாரின் அட்டூழியங்களுக்கு எல்லையே கிடையாது. இரவு பகலாக உழைக்கும் இத்தொழிலாளர்களுக்கு, மாணவர்களும் ஆசிரியர்களும் சாப்பிட்டு முடித்தபின் எஞ்சியிருக்கும் உணவுதான் அரைகுறையாகத் தரப்படும். அதுவும் கூட பலருக்குக் கிடைக்காமல் பட்டினி கிடக்க நேரிடும்.
குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்களை சங்கமாக அணிதிரட்டிப் போராட எந்த ஓட்டுக்கட்சியும் முன்வரவில்லை. ஏனெனில், எல்லா ஓட்டுக்கட்சிகளுக்கும் புரவலராக இருப்பவர் ஜேப்பியார். "கேப்டன்' விஜயகாந்த் ஜேப்பியாரின் காலில் விழுகிறார். வலது கம்யூனிஸ்டுகள் ""ஜனசக்தி'' நாளேடுக்கு ஜேப்பியாரிடமிருந்து கணிப்பொறிகளை அன்பளிப்பாகப் பெறுகின்றனர். தலித்தியம் பேசும் சிவகாமி ஐ.ஏ.எஸ். கருத்தரங்கம் நடத்த, தனது கல்வி நிறுவன அரங்கத்தில் ஜேப்பியார் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். பா.ம.க.வினர் மாநாடு நடத்த ஜேப்பியாரிடமிருந்து இலவச வாகன வசதி அளிக்கப்படுகிறது. இதர கட்சிகளின் மேல்மட்டங்களுக்கு உரிய முறையில் உபசரிப்புகளும் சிறப்பு செய்தலும் நடக்கின்றன.
எனவேதான்,வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள் ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்துவிட்டு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வழிகாட்டுதலில் சங்கமாக அணிதிரளத் தொடங்கினர். பீதியடைந்த நிர்வாகம், வெற்றிவேல் செழியன் என்ற முன்னணி ஊழியரை திடீரென வேலை நீக்கம் செய்து பழிவாங்கியது. இந்த அச்சுறுத்தலைக் கண்டு சோர்வடையாமல், நம்பிக்கையோடு செயல்பட்ட தொழிலாளர்கள், அனைவரையும் சங்கத்தில் உறுப்பினர்களாக்கி ""புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சங்கம்'' என்ற பெயரில் சங்கத்தைப் பதிவு செய்து அதை பு.ஜ.தொ.மு.வுடன் இணைத்துக் கொண்டனர். பழிவாங்கப்பட்ட வெற்றிவேல் செழியனின் வேலை நீக்கம் சட்டப்படி செல்லாது என தொழிலாளர்துறை ஆணையரிடம் வழக்கு தொடுத்தனர். இதைத் தொடர்ந்து, ஒப்பந்ததாரர்கள் மூலம் கல்லூரிப் பேருந்துகளை இயக்க ஜேப்பியார் முயற்சிக்க, அதற்கெதிராக சங்கத்தின் மூலம் போராடி நீதிமன்றத் தடையாணையும் பெற்றுள்ளனர்.
அரண்டுபோன ஜேப்பியார், அனைத்து ஓட்டுநர்களையும் அழைத்து, ""சங்கத்திலிருந்து விலகி விடுங்கள்; உங்களுடைய எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றுகிறேன்'' என்று நைச்சியமாகப் பேசிப்பார்த்தார். சங்கத்திலிருந்து விலகிவிட்டதாக எழுதிக் கொடுத்தால் ரூ.25,000 கடன் தருவதாக அறிவித்துப் பார்த்தார். சங்கமாக அணிதிரண்டதால்தான் இந்தக் கல்விக் கொள்ளையர் இப்படி இறங்கி வருகிறார் என்பதை உணர்ந்த தொழிலாளர்கள், ஜேப்பியாரின் பசப்பல்களை உதாசீனப்படுத்தி உறுதியாக நின்றனர். பின்வாங்கிய நிர்வாகம், இப்போது சில ஆரம்ப கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளது. இதைக் கண்டு உற்சாகமடைந்த ஜேப்பியாரின் செயிண்ட் ஜோசப் கல்லூரி, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களும் ஓம்சக்தி டிராவல்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்களுமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் இச்சங்கத்தில் இணைந்துள்ளனர். இதுதவிர, ஜேப்பியாரின் சத்யபாமா பல்கலைக் கழகத்தில் கொத்தடிமைகளைவிடக் கேவலமாக நடத்தப்பட்டு வந்த 200க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை மீட்டெடுக்க இச்சங்கத்தில் அணிதிரண்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 12.08.07 அன்று மாலை சத்யபாமா பல்கலைக் கழகம் முன்பாக, செம்மஞ்சேரியில், சங்கக் கொடியேற்றி அலுவலகத் திறப்பு விழாவும் பொதுக் கூட்டம் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன. பெயருக்கேற்ப செம்மஞ்சேரி அன்று செங்கொடிகளாலும் செஞ்சட்டை அணிந்த தொழிலாளர்களாலும் பெருமிதத்தோடு குலுங்கியது. பு.ஜ.தொ.மு. தலைவர் தோழர் முகுந்தன் மற்றும் பொதுச்செயலர் தோழர் சுப. தங்கராசு ஆகியோர் சங்கக் கிளைகளின் கொடியேற்ற, சங்க நிர்வாகிகள் அலுவலகம் மற்றும் பெயர்ப்பலகைகளைத் திறந்து வைக்க, அதைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னணியாளர்களும் தோழமை அமைப்பினரும் வாழ்த்துரை வழங்கினர். ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி போராட்ட உணர்வுக்குப் புதுரத்தம் பாய்ச்சியது. நாவலூர், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி ஆகிய ஊர்களின் முக்கிய பிரமுகர்களும் குறிப்பாக பஞ்சாயத்துத் தலைவர் திரு. தனசேகர், ஒப்பந்ததாரர் திரு. கருணாகரன் ஆகியோரின் பேராதாரவோடும் நடந்த இந்த இந்நிகழ்ச்சியில் திரளாக உள்ளூர் உழைக்கும் மக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். பணபலம், குண்டர்பலம், சர்வகட்சி ஆதரவு என கொட்டமடிக்கும் ஜேப்பியார் கல்லூரிகளில் துணிந்து உறுதியாக நின்று தொழிற்சங்கம் நிறுவப்பட்டுள்ளதை வியந்து பாராட்டி , இன்னும் பல கல்லூரிகளின் தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரளத் தொடங்கியுள்ளனர்.
ஓங்கட்டும் தொழிலாளி வர்க்க ஒற்றுமை!
தகவல்: புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள்
மற்றும் டெக்னீசியன்கள் சங்கம்.
உ.பி.:தலித்திய ஆட்சி பார்ப்பனிய நீதி
உத்தரப் பிரதேசத்தில் பார்ப்பனர்களுடன் கூட்டணி கட்டிக் கொண்டு மாயாவதி ஆட்சியைப் பிடித்து சிறிது காலம்தான் ஆகியுள்ளது. அதற்குள்ளாகவே இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியின் சாயம் வெளுக்கத் தொடங்கி விட்டது. தலித் ஒருவர் ஆளுவதனாலேயே தலித் மக்கள் வாழ்வில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு விடும் என்ற பிரச்சாரம் பொய்த்துப் போயுள்ளதோடு, தலித் இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்ற பார்ப்பன சாதி வெறியர்களைச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியே துணைபோகும் கொடுமையும் அங்கு நடந்தேறியுள்ளது.
கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கார் மாவட்டத்தில் இருக்கும் பாதேவெரா எனும் சிற்×ரின் தலித் குடியிருப்பை சேர்ந்தவர், 21 வயது நிரம்பிய சக்ராசென் கவுதம். சாமர் எனும் தலித் சாதியை சேர்ந்த சக்ராசென் பி.ஏ. பட்டம் முடித்து, எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் எனும் முயற்சியில் ரயில்வே உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டும், ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டும் இருந்தார். சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்துவிட்ட சக்ராசென்னையும் அவரது இரு சகோதரர்களையும் அவர்களின் தாத்தா, சிவ்மூர்த்திதான் படிக்க வைத்து வந்தார்.
2004இல் அவ்வூரின் பஞ்சாயத்து தலைவராக தலித் ஒருவர் இருந்தபோது, ரேசன் கடை நடத்தும் உரிமையை இவர்களின் குடும்பத்திற்கு வழங்கி இருந்தனர். தலித் சேரியின் அண்மையில் இருக்கும் பார்ப்பன குடியிருப்பை சேர்ந்த சந்தோஷ் மிஸ்ரா, தான் நடத்தி வரும் கடையில் சந்தை விலைக்கு விற்று லாபமீட்டுவதற்காக, சிவ்மூர்த்தி, தனது ரேஷன் கடையில் இருந்து அதிக அளவில் ரேசன் பொருட்களைத் தந்தாக வேண்டுமென நிபந்தனை விதித்தார். இதற்கு உடன்பட சிவ்மூர்த்தி மறுத்து விடவே சந்தோஷ் மிஷ்ரா, இந்த தலித் குடும்பத்தினர் மீது வன்மம் கொண்டிருந்தார்.மேலும், தலித் இளைஞரான சக்ராசென் உயர்கல்வி கற்றுள்ளதைக் கண்டு பொறாமையும் ஆத்திரமும் கொண்டிருந்தார்.
பத்து மாதங்களுக்கு முன்பு கூட மிஸ்ரா, ""உங்கள் பேரனை அதிகம் படிக்க வைத்து விட்டீர்கள். ஆனாலும் அவனால் உங்களுக்கு எந்த பிரயோசனமும் இருக்கப் போவதில்லை, பாருங்கள்!'' என்று சக்ராசென்னை ஒழித்துக் கட்ட இருப்பதாக சிவ்மூர்த்தியிடம் மிரட்டி இருக்கிறார். உடனடியாக இது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் உள்ளூர் போலீசிடம் புகார் கொடுக்கப்பட்டதால் மிஸ்ரா விசாரணைக்காக கைது செய்யப்பட்டார். உடனே உள்ளூர் தாக்குர்கள் (ஆதிக்க சாதியினர்) சிவ்மூர்த்தியிடம் "இது உள்ளூர் விசயம். நமக்குள் பேசித் தீர்க்கலாம்' என்று கூறி புகாரை திரும்பப் பெற வைத்தனர். ஆயினும், அவரின் பேரன் உயிருக்கிருந்த ஆபத்து நீங்கிவிடவில்லை. ""உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்'' என்றும் ""ஒழித்துக்கட்டுவேன்'' என்றும் பார்ப்பன மிஸ்ரா பகிரங்கமாக மிரட்டிக் கொண்டிருந்தார்.
கடந்த ஜூலை 30ஆம் நாள் இரவு அலகாபாத்தில் இருந்து ஊர் திரும்பிய சக்ராசென் கவுதம், வழக்கம்போல மறுநாள் அதிகாலையில் ஓட்டப்பயிற்சி செய்ய வீட்டை விட்டுக் கிளம்பிச் சென்றார். அவரை இன்னொரு தலித்தான இந்திரஜித் பாஸ்வான் என்பவரின் வீட்டில் வைத்து கட்டிப் போட்டு ஒரு கும்பல் அடித்து உதைத்துக் கொண்டிருக்கும் தகவலை அறிந்த சக்ராசென்னின் தாத்தாவும் தம்பியும் விரைந்து சென்று பார்த்தபோது, இரத்த வெள்ளத்தில் கிடந்த சக்ராசென்னுக்கு உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.
""பாஸ்வானின் குடிசைக்கு நீ எப்படி வந்தாய்?'' என அவர்கள் கேட்டதற்கு, சந்தோஷ் மிஸ்ரா மற்றும் ஆகாஷ் துபே ஆகிய இரு பார்ப்பனர்களின் பெயர்களை உச்சரித்து விட்டு குற்றுயிராய்க் கிடந்த சக்ராசென் மரணமடைந்தார். கொலையாளிகள் இருவரும் தலைமறைவானார்கள். போலீசோ பாஸ்வானையும் அவரின் இரு சகோதரர்களையும் கைது செய்துவிட்டு, 4 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்து விட்ட இன்னொரு தலித்தைக் குற்றவாளிப் பட்டியலில் சேர்த்துள்ளது.
கொலைகார பார்ப்பனர்களைக் கைது செய்யவிடாமல் உள்ளூர் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வான ராம் ஷிரோன்மணி சுக்லா தடுத்து வருகிறார். பார்ப்பன சாதியை சேர்ந்த ஆளும்கட்சி எல்.எல்.ஏ.வான இவருக்கு, கொலையாளிகள் இருவரும் நெருங்கிய கூட்டாளிகள் மட்டுமல்ல; ஒரே சாதியையும் சேர்ந்தவர்கள்.
5 லட்ச ரூபாய் தருவதாயும், இரண்டு பார்ப்பனர்கள் மீதான புகார்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இந்த எல்.எல்.ஏ. பேரம் பேசியுள்ளார். சக்ராசென் கவுதமின் குடும்பமோ கொல்லப்பட்ட சக்ராசென்னின் உடலை காரில் கொண்டு சென்று மாயாவதி வீட்டு முன் வைக்க முயன்றது. ஆனால் சுக்லாவும் போலீசாரும் கார் ஓட்டுநரை மிரட்டி இதனைத் தடுத்து விட்டனர். கொலையாளிக்கு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வே உதவுகிறார் என்பதை அம்மாவட்ட பகுஜன் சமாஜின் தலைவராக இருக்கும் தலித் ஒருவரிடம் சென்று சக்ராசென் குடும்பத்தார் முறையிட்டனர். தலித்தாக இருந்தாலும் அவரோ அந்த ""சட்டமன்ற உறுப்பினர், அவரின் சாதிக் கடமையைச் செய்யத்தானே செய்வார்'' என்று சாதி வெறியர்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.
இக்கொலைக்குப் பின்னர் அந்த வட்டாரத்தில் இருக்கும் பார்ப்பன சங்கமான "பிராமண சகோதரத்துவக் குழு'வுக்கு புதுத்தெம்பு பிறந்து விட்டது. பாதேவெரா கிராமத்தின் தலித் சேரியைச் சுற்றி வந்து நக்கலான முழக்கம் ஒன்றை அக்கும்பல் முழக்கிச் செல்கின்றது. ""பிராமணர்கள் சங்கு ஊதட்டும்... பகுஜன் சமாஜிகள் தில்லிக்கு செல்லட்டும்'' என்பதே அந்த முழக்கம்.
சக்ராசென் கொலை செய்யப்பட காரணம், அவர் தலித் என்பதால் மட்டுமல்ல; சுயமரியாதையோடு படித்து முன்னேறத் துடித்த தலித் இளைஞர் என்பதால்தான் அவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த உண்மை ஒருபுறமிருக்க, தலித் ஒருவர் முதல்வராக இருந்து ஆட்சி செய்தாலும், இன்றைய அரசியலமைப்பு முறையின் மூலம் சாதிவெறிக் கொடுமைகளை ஒழிக்க முடியாது என்பதையும் தனது உயிர்த்தியாகத்தின் மூலம் உறுதி செய்திருக்கிறார், சக்ராசென்.
ஆனால், பகுஜன் சமாஜின் பார்ப்பனக் கூட்டை சாதி ஒழிப்புக் குரிய போர்த்தந்திரமாகக் கருதி பல அறிவாளிகளும் அரசியல் விற்பன்னர்களும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கின்றனர். தலித்களும் பிற சாதி உழைக்கும் மக்களும் ஒன்றுபடாமல் வெறுமனே ஓட்டுப் பொறுக்கித் தலைவர்களிடையேயான கூட்டணியால் தலித்கள் விடுதலையை வென்றெடுக்கலாம் என்பதும், பார்ப்பனர்களுடனான கூட்டணி தலித்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி விடும் என்பதும் எவ்வளவு மோசடியானது என்பதை மாயாவதியின் தலித்திய ஆட்சியே நிரூபித்துக்காட்டிவிட்டது.
· கவி
Sunday, December 16, 2007
கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...9_10
கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...9_10
உள்ளூர் பஜ்ரங்தள் தலைவனும், சதித் திட்டங்களைத் தீட்டியச் சூழ்ச்சியாளர்களில் ஒருவனும், இப்பொழுது சிவசேனா உறுப்பினருமான பாபு பஜ்ரங்கி, மோடியைப் பற்றிக் கூறும் போது, “என்னை பெயிலில் வெளியே கொண்டு வருவதற்காக, நரேந்திரபாய் மும்முறை நீதிபதிகளை மாற்றினார்” என்றான்.
மோடிக்கு இம்மனிதன்(?) மேல் ஒரு அனுகிரகம் உண்டு. இவன் தான் பின்னர் பர்ஜானியா என்றத் திரைபடத்தைத் திரையிட விடாமல் தடுத்தவன். ஒருவருக்கொருவர் மரியாதை உண்டு.
பாபு பஜ்ரங்கி தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....
தெஹல்கா: பாட்யா சம்பவத்தின் போது மோடி உங்களை ஆதரிக்கவில்லையா?
பஜ்ரங்கி : அவர் தான் எல்லாவற்றையும் சாதகமாக்கித் தந்தார், இல்லையென்றால் யாருக்கு பலம் இவ்வளவு பலம் உண்டு.....? அவருடைய கைகள் தான் எல்லா இடத்திலும் இருந்தது... அவர் மட்டும் காவல்துறையை வேறு வகையில் செயல்படுமாறு கூறியிருந்தால், அவர்கள் எங்களை ஓ..... ....அவர்களால் அது முடிந்திருக்கும்.... முழுகட்டுபாடும் அவர்கள் கையிலிருந்தது.....
தெஹல்கா: அவர்கள் கட்டுக்குள்ளா?
பஜ்ரங்கி : குஜராத் முழுவதிலும் எல்லா நகரங்களும் அவர்களின் (காவல்துறை) கட்டுபாடுகளும் மிக உறுதியாகவே இருந்தது.. (ஆனால்) இரண்டு நாட்களுக்கு மட்டும் நரேந்திரபாய் தான் தன் கட்டுபாடுக்குள் வைத்திருந்தார்.... மூன்றாவது நாளிலிருந்து அதிகமான அழுத்தங்கள் மேலிடத்திலிருந்து வர ஆரம்பித்தது... சோனியா-வோனியா இன்னும் எல்லோரும் இங்கே வந்தார்கள்....
தெஹல்கா: நீங்கள் சிறைச்சாலையில் இருந்த போது நரேந்திரபாய் உங்களைச் சந்திக்க வந்தாரா?
பஜ்ரங்கி : நரேந்திரபாய் என்னைச் சந்திக்க வந்திருப்பாரானால், அவருக்கு மிகப் பெரிய நெருக்கடி வந்திருக்கும்....நான் அவரைப் பார்ப்பதைப் பற்றி எதிர்பார்க்கவில்லை.... இன்று கூட நான் எதிர்பார்க்கவில்லை.
தெஹல்கா: அவர் (மோடி) எப்போதாவது உங்களுடன் தொலைபேசியில் பேசினாரா?
பஜ்ரங்கி : அந்த வழியில் அவருடன் பேசினேன்.... ஆனால் எளிதாக அல்ல.... முழு உலகமே இதைப் பற்றிப் (குஜராத்தில் மோடியின் செயல்பாடுகள்) பேச ஆரம்பித்திருந்தது.
தெஹல்கா: ஆனால் நீங்கள் தலைமறைவாக இருந்த போது, அந்த சமயத்தில் அவர்.......
பஜ்ரங்கி : ம்ம்ம்....நான் இரண்டு அல்லது மூன்று தடவை பேசினேன்.
தெஹல்கா: அவர் (மோடி) எங்களை உற்சாகப்படுத்தினாரா?....
பஜ்ரங்கி : நரேந்திரபாய் நெசமான ஆம்பளை....அவர் (மோடி) எனது உடலில் ஒரு வெடிகுண்டு கட்டிக் கொண்டு என்னைக் குதிக்கச் சொல்லியிருந்தால்....அவ்வாறு நான் செய்வதற்கு நொடிப் பொழுது கூட எனக்கு ஆகாது.....நான் உடனே ஒரு வெடிகுண்டு எனது உடலில் சுற்றிக் கொண்டு எங்கு குதிப்பதற்கு நான் கூறப்பட்டேனோ அங்கே குதித்து விடுவேன்..... ஹிந்துகளுக்காக..
தெஹல்கா: அவர்(மோடி) மட்டும் இல்லாதிருந்தால், பிறகு நரோடா பாட்டியா, குலடபர்க் இன்னும்......
பஜ்ரங்கி : நடந்திருக்காது, நடந்திருப்பது மிகக் கடினமே....
தெஹல்கா: நரேந்திரபாய் படுகொலைகள் நடந்த மறுநாள் பாட்டியா வந்தாரா?
பஜ்ரங்கி : நரேந்திரபாய் பாட்டியா வந்தார்... அவர் சம்பவங்கள் நடந்த இடத்துக்கு வரமுடியவில்லை. ஏனென்றால் அவருடன் கமெண்டோ (அதிரடி படையினர்)-பமெண்டோ எல்லோரும் இருந்தார்கள்... ஆனால் பாட்டியா வந்து எங்களுடைய உற்சாகத்தைக் கண்டார். பின்னர் சென்று விட்டார்.... அவர் உண்மையிலேயே நல்ல ஒரு சூழலை விட்டுச் சென்றார்.....
தெஹல்கா: மிக உங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதங்களைச் சொன்னாரா....
பஜ்ரங்கி : நரேந்திரபாய் அங்கு பார்க்க வந்தவைகள் எதுவும் மறுநாளும் நிறுத்தப்படவில்லை....அவர் அஹ்மதாபாத் முழுவதும், மீயாக்களுடைய (முஸ்லிம்கள்) இடங்கள், ஹிந்துக்களுடையப் பகுதிகளும் என எல்லா இடங்களுக்கும் சென்றார்.... அவர்கள் (காவி பாவிகள்) நல்லபடியாக செய்துள்ளதாக மக்களிடம் (?) சொன்னார். அதோடு இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.....
பஜ்ரங்கி : (படுகொலைகளுக்குப் பின்) காவல்துறை ஆணையாளர் ஆணைகள் பிறப்பித்து இருந்தார் (எனக்கெதிராக)..... நான் எனது வீட்டிலிருந்து வெளியேறுமாறுச் சொல்லப்பட்டேன்...நான் அங்கிருந்து ஓடினேன்... நரேந்திரபாய் என்னை....மவுண்ட் அபுவிலுள்ள குஜராத் பவனில் நாலரை மாதங்கள் தங்க வைத்திருந்தார்.... அதன் பிறகு நரேந்திரபாய் என்னென்ன செய்ய என்னிடம் சொன்னாரோ (நான் செய்தேன்)..... குஜராத்தில் நரேந்திரபாய் செய்ததை போன்று ஒருவராலும் செய்ய முடியாது... நரேந்திரபாயுடைய உதவிகள் மட்டும் எனக்கு இல்லாது இருந்திருந்தால், எங்களால் பழிதீர்த்து (கோத்ரா சம்பவத்திற்காக) இருக்க முடியாது..... (எல்லாம் முடிவடைந்த பிறகு) நரேந்திரபாய் சந்தோசப்பட்டார், மக்கள் (?) சந்தோசமடைந்தனர், நாங்கள் சந்தோசமடைந்தோம்.... நான் சிறைக்குச் சென்று விட்டுத் திரும்ப வந்துள்ளேன்....முன்பு வாழ்ந்த வாழ்க்கையின் பால் திரும்பி விட்டேன்.
பஜ்ரங்கி : நரேந்திரபாய் என்னைச் சிறையிலிருந்து வெளியே எடுத்தார்.... அவர் நீதிபதிகளை மாற்றிக் கொண்டே இருந்தார்... என்னுடைய விடுதலையை உறுதி செய்வதற்காகவே இதைச் செய்தார். இல்லையெனில் இது வரை என்னால் வெளியே வந்திருக்க முடியாது.... முதல் நீதிபதி ஒரு தோலாகியாஜி... அவர் பாபு பஜ்ரங்கி உறுதியாக தூக்கிலிடப்பட வேண்டும் என்று சொன்னார். ஒரு தடவையல்ல நாலைந்து முறை சொன்னார். இன்னும் அவர் வழக்கு சம்பந்தப்பட்டக் கோப்பை ஒரு ஓரத்தில் வீசினார்.... அதன் பிறகு இன்னொருவர் வந்தார். நான் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சொல்ல வருவதற்கு சற்று முன்பாக அவர் நிறுத்தப்பட்டார்.... இதன் பிறகு மூன்றாவது ஒருவர்... இப்படியாக நாலரை மாதங்கள் சிறையில் கழிந்தது. பிறகு நரேந்திரபாய் ஒரு செய்தியை அனுப்பினார்...அவர் (மோடி) ஒரு வழியைக் கண்டுபிடிப்பதாக அந்தச் செய்தியில் கூறியிருந்தார்... அதன் பிறகு அக்ஸை மேத்தா என்ற பெயருடைய ஒருவரை நீதிபதியாக நியமித்தார்... அவர் வழக்கு சம்பந்தப்பட்ட கோப்புகளை கூடப் பார்க்கவில்லை... (பெயில்) வழங்கப்படுகிறது என்று மிகச் சதாரணமாக அவர் சொல்லி விட்டார்... அதன் பிறகு நாங்கள் அனைவரும் வெளியே வந்தோம்... நாங்கள் அனைவரும் விடுதலையானோம்.... இதனால் நான் கடவுள் (?) மீது நம்பிக்கை வைத்துள்ளேன்... நாங்கள் ஹிந்துத்வாவுக்காகச் சாவதற்கும் தாயாராக இருக்கிறோம்.......
விஹெச்பியின் குறிப்பிடத் தகுந்த முக்கிய நபரும், கலுப்பூர் மற்றும் தரியாபூர் ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்த திட்டமிட்ட சதிகாரனான ரமேஷ் தேவ் என்பவன் மோடியைப் பற்றிக்
கூறும் போது, “அவருடைய கடுங் கோபம் மிக அதிகமாக இருந்தது” என்றான்.
உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்த மோடி கோத்ரா சம்பவத்தின் போது தனது உணர்வை உண்மைபடுத்தி காட்டியது, சங்பரிவாரத்திற்காக இறுதி வரை உழைக்கும் ஒரு சகத் தொண்டனால் புரிந்து கொள்ள முடிந்தது.
ரமேஷ் தேவ் தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....
ரமேஷ் தேவ்: அன்றிரவு நாங்கள் (விஹெச்பி) அலுவலகத்திற்குப் போயிருந்தோம்... அங்குச் சூழ்நிலை மனதை மிகவும் பாதிக்கக் கூடியதாக இருந்தது... பல ஆண்டுகளாக (நாம் வாங்கிக் கொண்டிருந்தோம்) என ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள். நரேந்திரபாய் எங்களுக்கு மிகச் சிறப்பாக உதவி செய்தார்....
தெஹல்கா: கோத்ரா வந்ததும் அவருடைய உணர்வு என்னவாக இருந்தது.
தேவ்: கோத்ராவில் அவர் மிகக் கடுமையான தகவலைச் சொன்னார்... அவர் கடுங் கோபத்திலிருந்தார்.... அவர் சங்பரிவாரத்தில் தனது குழந்தை பருவத்திலிருந்தே இருக்கிறார்.... அவரது கோபம் அப்படி இருந்தது..... அப்போது அவர்(மோடி) வெளிப்படையாக வரவில்லையே தவிர, தனது காவல்துறையின் செயல்பாட்டை முற்றிலுமாக முடக்கிச் செயலிழக்கச் செய்தார்.......
கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...10.
சுரேஷ் ரிச்சர்ட் என்பவன் மோடியை பற்றி கூறும் போது, “நீங்கள் எல்லோரும் சிறப்பானவர்கள் என்று அவர் எங்களுக்குக் கூறினார்”என்றான்.
தனிப்பட்ட முறையில் ரிச்சர்டைப் பாராட்டி வாழ்த்துக்களை மோடி தெரிவித்த போது, மிகச் சிறப்பாக வேலைகளை (இன படுகொலை, கற்பழிப்பு, கொள்ளை....) செய்து முடித்ததாக ச்சாரா இனத்தையும் புகழாரங்கள் பொழிந்துப் பாராட்டினார்
சுரேஷ் ரிச்சர்ட் தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....
சுரேஷ் ரிச்சர்ட்: (படுகொலை நடந்த நாளில்) என்னென்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவைகள் அனைத்தையும் மாலையின் கடைசி பொழுது வரை முழுமையாகச் செய்தோம்...7:30 மணியளவில்....கிட்டதட்ட 7:15 எங்களுடைய மோடி பாய் வந்தார்.....வீட்டின் வெளியே, இதே இடத்திற்கு.... எனது சகோதரிகள் ரோஜாக்களால் செய்த மாலை அணிவித்தனர்.
தெஹல்கா: நரேந்திர மோடி....
ரிச்சர்ட்: நரேந்திர மோடி....அவர் கருப்பு பூனை அதிரடி படையினருடன் வந்தார்.....தனது அம்பாஸிடர் காரிலிருந்து வெளியேறி இங்கு வரை நடந்து வந்தார்....எனது சகோதரிகள் எல்லோரும் அவருக்கு மாலை அணிவித்தார்கள்...... என்ன இருந்தாலும் பெரிய மனிதன் (?) பெரிய மனிதன் தான்.
தெஹல்கா: அவர் தெருவிலா வந்தார்?
ரிச்சர்ட்: இங்கே, இந்த வீட்டின் அருகே.... பிறகு இந்த வழியாகச் சென்றார்....நரோடாவில் எப்படி உள்ளது என்பதைப் பார்த்தார்.....
தெஹல்கா: பாட்டியாவில் வன்முறை சம்பவங்கள் நடந்த நாளன்றா
ரிச்சர்ட்: அதே மாலை
தெஹல்கா: பிப்ரவரி 28
ரிச்சர்ட்: 28
தெஹல்கா: 2002
ரிச்சர்ட்: இங்கே அவர் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தார்... எங்கள் இனம்(ச்சாரா) சிறப்பானது எனக் கூறினார்.....எங்கள் தாயார்களும் சிறப்பானவாகள் (எங்களைச் சுமந்ததால்) ..
தெஹல்கா: அவர் வந்தது 5 மணியளவிலா அல்லது 7 மணியளவிலா
ரிச்சர்ட்: கிட்டதட்ட 7 அல்லது 7:30.... அந்த நேரத்தில் மின்சாரம் கிடையாது..... வன்முறை கலவரத்தால் எல்லாம் எரிந்து சாம்பலாகிப் போனது......
தெஹல்கா: நரேந்திர மோடி அன்றைய தினம், நரோடா பாட்டியா படுகொலைகள் நடந்த தினத்தில் உங்கள் வீட்டுக்கு வருகை தந்து விட்டுப் போன பின்பு, அதன் பிறகு எப்போவாவது உங்கள் வீட்டுக்கு மீண்டும் வருகை தந்தாரா?
ரிச்சர்ட்: ஒரு போதும் இல்லை
ராஜேந்திர வியாஸ் என்பவன் மோடியைப் பற்றிக் கூறும் போது, “பழிவாங்குவது என்பதே அவருடைய உறுதிமொழியாக இருந்தது” என்றான்.
கோத்ரா சம்பவத்திற்குப் பிறகுத் தாங்க முடியாத துயரில் இருந்த அஹ்மதாபாத் விஹெச்பி தலைவர் மோடியிடம் இருந்து எல்லாம் பார்த்து கொள்ளபடும் என்ற வார்த்தைகளைப் பெற்றுக் கொண்டார்.
ராஜேந்திர வியாஸ் தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....
தெஹல்கா: நரேந்திர மோடி பற்றி.... நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்...அவருடைய முதல் வார்த்தைகள் என்னவாக இருந்தது (கோத்ரா ரயில் சம்பவத்திற்குப் பிறகு)? உங்கள் அனைவர்களிடமும் அவர் என்ன சொன்னார்?.
ராஜேந்திர வியாஸ்: முதலில் அவர்(மோடி) சொன்னது என்னவென்றால் நாம் பழிவாங்க வேண்டும்...... நான் எதை பொதுவிடத்தில் வைத்து சொன்னேனோ அதையே.... அதன் பிறகு எதையும் நான் சாப்பிட கூடவில்லை.... ஒரு துளி தண்ணீர் கூடப் பருகவில்லை.... எத்தனையோ பேர் இறந்து விட்டார்களே என்று நான் கடுமையான கோபத்தில் இருந்தேன், கண்ணீர் எனது கண்களிலிருந்துப் பெருகி ஓடியது..... ஆனால் எனது பலத்தைக் காட்ட ஆரம்பித்ததும்.... திட்ட ஆரம்பித்ததும்... அமைதியாக இருங்கள் எல்லாம் கவனித்து கொள்ளப்படும் என்று அவர் (மோடி) சொன்னார்.... எல்லாம் கவனித்து கொள்ளப்படும் என்று அவர் (மோடி) சொல்வதன் அர்த்தம் என்ன?.....அவைகள் எல்லாமே புரிந்தது, புரிந்து விட்டது.....!
நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/10.html
ஒரு பச்சோந்தியும் சில 'கூஜா'க்களும்
உண்மையை மறைக்க முடியுமா?
""அடுத்த தேர்தலில் ஆட்சி: பச்சோந்தி இராமதாசின் பகல் கனவு'' என்ற தலைப்பில் ""புதிய ஜனநாயகம்'' ஆகஸ்டு இதழில் அட்டைப்படச் சிறப்புக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதற்கு, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நல்ல வரவேற்பு இருந்தது. ""பாரபட்சமின்றி'' அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் அம்பலப்படுத்தி வரும் ""புதிய ஜனநாயகம்'', பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் இராமதாசின் சந்தர்ப்பவாத, மோசடி அரசியலை உரிய நேரத்தில் உரிய வகையில் அம்பலப்படுத்தியிருப்பதாகப் பலரும் வரவேற்றுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் என்ற ஊரில் இருந்து முரளி என்ற வாசகர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழக ஆட்சியாளரின் பச்சோந்தித்தனத்தை அம்பலப்படுத்தி வருவதற்கு மனமார்ந்த பாராட்டுதலைத் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், இக்கருத்துக்கு நேர்மாறாக சென்னை வடபழனியில் இருந்து கி.ராம் (செட்டியார்) என்பவர், தன்னை ஒரு புதிய ஜனநாயகம் வாசகர், ம.க.இ.க.வைச் சேர்ந்தவர் என்று கூறிக் கொண்டு மிகவும் கீழ்த்தரமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பு.ஜ. வாசகர் என்றும், ம.க.இ.க. காரன் என்று புளுகிக் கொண்டு வடபழனி கி.ராம் எழுதிய இந்தக் கடிதத்தைப் படித்ததும் ஒரு பழைய நினைவுதான் வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன், பண்ருட்டி இராமச்சந்திரன் பா.ம.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவராக இருந்தார். அப்போது அவரை விமர்சித்து எழுதியதற்காக, அப்போது இராமதாசு கட்சி நடத்தி வந்த ""தினப்புரட்சி'' நாளேட்டிலும், கடிதம் மூலமாகவும் ""புதிய ஜனநாயகம்'' பத்திரிக்கையாளரைக் கேவலமாக திட்டி எழுதியிருந்தனர். பு.ஜ. அதற்குப் பதிலடியும் எழுதியிருந்தது. பா.ம.க.வினரால் அன்று தாங்கிப் பிடிக்கப்பட்ட ""பண்ருட்டியார்'' பின்னர் என்ன ஆனார், பா.ம.க.வினராலேயே எவ்வளவு தூரம் வசைபாடப்பட்டார் என்பதும், அக்கட்சியினர் இப்போது மறந்து போன சங்கதி.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற ஊரில் பு.ஜ. விற்றுக் கொண்டிருந்த இரண்டு தோழர்களை சூழ்ந்து கொண்ட பா.ம.க.காரர்கள் சிலர் இதழ்களைப் பிடுங்கி கிழித்து வீசினர். வேறு சிலரோ தோழர்களின் விளக்கத்துக்குப் பிறகு இதழ்களை வாங்கிச் சென்றனர்.
இப்போது, பா.ம.க. "பசுமைத் தாயக'த்தின் நிர்வாகிகள் என்று கூறிக் கொண்டு ""புதிய ஜனநாயகம்'' தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டு உருட்டுவதும், புலம்புவதும், மிரட்டுவதும் வசவுபாடுவதுமாக உள்ளனர்.
""எங்க அய்யாவைப் பத்தி என்னய்யா இப்படி அநாகரிகமாக எழுதியிருக்கீங்க? பத்திரிகைன்னா என்ன வேணாலும் எழுதறதா? மத்த கட்சிக்காரனெல்லாம் பண்ணாததையா எங்கய்யா பண்ணிட்டாரு? எங்க அய்யாவை மட்டும் ஏன் எழுதற? எல்லா விசயத்திலும் மக்களுக்காக எங்கய்யாதான் போராடிக்கிட்டு இருக்காரு, முன்மாதிரியா தொலைக்காட்சி கூட எப்படி நடத்தலாம்னு நடத்திக் காண்பிக்கிறாரு, அவரப்பத்தி இப்படி இழிவுபடுத்தி எழுதலாமா?''
இவர்களில் யாருமே அரசியலுக்காக பா.ம.க.வில் உள்ளவர்கள் அல்ல; பிழைப்புக்காக அக்கட்சியில் இருப்பவர்கள் என்பது அவர்கள் எழுப்பும் கேள்விகளில் இருந்தே தெரிகிறது. ""எங்கய்யாவைப் பச்சோந்தின்னு எப்படி எழுதலாம்? மத்த கட்சிக்காரனெல்லாம் யோக்கியமா? ஏன் எங்கய்யாவை மட்டும் எழுதற? பொன்முடிகிட்ட தி.மு.க. கிட்ட "சூட்கேசு' வாங்கிக் கிட்டுதானே இப்படி எழுதறே? நேத்து வந்த விஜயகாந்த் எல்லாம் கனவு காண்றப்ப மக்களுக்காக உயிரைக் கொடுத்துப் போராடுற எங்கய்யா கனவு காணக்கூடாதா?'' என்றவாறான இந்தக் கேள்விகளில் எங்காவது அரசியல் இருக்கிறதா? எல்லா ஓட்டுக் கட்சிகளைப் போலத்தான் பா.ம.க.வும் என்று இவர்களின் வாக்குமூலமே அக்கட்சி மற்றும் தலைமையின் யோக்கியதையை வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறது.
இவர்களில் ""புதிய ஜனநாயகம்'' எழுதியுள்ள அரசியல் மீது எந்தக் கேள்வியும் எழுப்புவதற்கு யோக்கியதை உண்டா? நாடாளுமன்றத்துக்கு பா.ம.க. அனுப்பியுள்ள புதுவை எம்.பி.யான இராமதாசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஆதரித்து, வரவேற்று அங்கே பேசுகிறார். இங்கே இந்த "ஐயா' இராமதாசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்த்துப் பேசுகிறார். எது பா.ம.க.வின் நிலை? இதைப் புரிந்து கொள்ளும், கேள்வி கேட்கும் பா.ம.க.காரர்களைத்தாம் அரசியலுக்காக அக்கட்சியில் இருப்பவர்களாகக் கருதமுடியும். அப்படி இல்லாமல் வெறுமனே இராமதாசுக்குத் துதிபாடும் பிழைப்புவாதிகள்தாம் ""புதிய ஜனநாயகம்'' பத்திரிகையை உருட்டி, மிரட்டிப் பார்க்கிறார்கள்.
யார் இந்த இராமதாசு? பா.ம.க.வில் அவருக்கு என்ன பொறுப்பு? தனக்குக் கட்சியில் பதவி வேண்டாம் என்று தியாகியைப் போல நாடகமாடிக் கொண்டே, ஜெயலலிதாவைப் போல யாரோ எழுதித்தரும் அறிக்கைகளுக்கு கையெழுத்துப் போட்டு வெளியிடுவதைத் தவிர கட்சியில் எந்தப் பொறுப்பும் ஏற்காது, அடிமுதல் முடி வரை கட்சிப் பொறுப்பாளர்களை நியமிக்கவும், அவர்களின் விசுவாசத்தை சந்தேகித்தால் தூக்கியடிக்கவும் வாய்ப்புக் கிடைத்தால் அன்பு மகன், மனைவி, மருமகள், பேத்தி எல்லோருக்கும் ""பதவி'' வழங்குவதை யும் இவர்கள் கேள்வி கேட்கிறார்களா? ""பத்து நாட்களில் ரிலையன்சு கடைகளை மூடாவிட்டால் இழுத்துப் பூட்டுவோம்'' என்று இராமதாசால் எச்சரிக்கை விடப்பட்ட ரிலையன்சு ஃபிரெஷ் கடைகள் இன்னமும் திறந்தே கிடக்கிறது பா.ம.க வீரர்கள் அங்கே போவார்களா?
— ஆசிரியர் குழு