"புலியை அழிக்க பிசாசுடன் கூடியுள்ளோம்" புலியெதிர்ப்பு தத்துவஞானியின் பிரகடனம்.
பி.இரயாகரன்
25.07.2007
மக்களின் முதுகில் குத்தி உருவாகும் வரலாற்று துரோகிகள், பிசாசுடன் (ஏகாதிபத்தியத்துடன்) சேர்ந்து மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுத்தரப் போகின்றார்களாம். இந்த கேடுகெட்ட போக்கிரித்தனமான அரசியல் பிரகடனத்தை, நம்புங்கள். புலிகளின் பாசிசத்தில் இருந்து மக்களை மீட்க, புலியெதிர்ப்பு கும்பல் வைக்கும் ஒரேயொரு தீர்வு இதுதான். பிசாசுகளுக்கு உதவும் கூலிப்பட்டாளத்தை உருவாக்கும் வேலைத்திட்டம் தான், புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் நடவடிக்கைகள். இப்படி இந்தப் பிசாசுகள் பெற்றுத் தரும் ஜனநாயகம்? மக்களுக்கானதா? பிசாசுக்கானதா? அறிவு நாணயம் நேர்மை எதுவும் எஞ்சி உங்களிடம் இருந்தால், சொந்தமாக ஒரு மக்கள் அரசியல் உங்களிடம் இருந்தால், இந்த அரசியல் துரோகத்தனத்தை குறைந்தபட்சம் தட்டிக் கேட்பீர்கள். இல்லாது கூடி புலியெதிர்ப்பு கும்பலாக கும்மாளம் அடிக்கும் அனைவரும், இந்த நாற்றம் பிடித்த அரசியல் சாக்கடையில் புரளும் எருமை மாடுகள்தான்.
புலியெதிர்ப்புக் கும்பலின் மதியுரைஞர் சிவலிங்கம், பாரிஸில் நடைபெற்ற கலைச்செல்வனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினக்கூட்டத்தில் தான், பிசாசுடன் சேர்ந்து புலியை அழிக்கும் தமது 'ஜனநாயகப்" பிரகடனத்தைச் செய்தார். இப்படி மக்களின் எதிரிகள் புலிகளுக்குள் மட்டுமல்ல, புலியெதிர்ப்புக்குள்ளும் தான் உள்ளனர் என்பதையே, இது மறுபடியும் தௌளத்தெளிவாக அம்பலமாக்குகின்றது.
புலிகளுக்கு ஒரு மதியுரைஞர் பாலசிங்கம் எப்படியோ அப்படி புலியெதிர்ப்பு கும்பலுக்கு ஒரு மதியுரைஞர் சிவலிங்கம். இவர்கள் எல்லாம் மக்களின் தாலியை அறுத்து, அதில் அரசியல் செய்பவர்கள். இந்த கடைந்தெடுத்த ஈனத்தனத்தைச் செய்யவே, பிசாசுடன் கூடி நிற்கும் அரசியல் அசிங்கத்தை, ஒரு கொள்கைப் பிரகடனமாக பாரிஸில் எமக்கு எதிராக முன்வைத்ததன் மூலம், தமது சந்தர்ப்பவாத மூகமூடியை கழற்றி எறிந்தனர்.
அரசியல் ரீதியாக புலி எதிர்ப்புக்கு (ஒழிப்புக்கு) வெளியில், இவர்களிடம் வேறு எந்த அரசியலும் கிடையாது. மக்களுக்கு என்று சொல்ல எந்த மக்கள் பிரச்சனையும் இவர்களிடம் கிடையாது.
புலிகள் தமது பாசிசம் மூலம் மக்களுக்கு ஏன் ஜனநாயகத்தை மறுக்கின்றனர்? இதைக் கூட அரசியல் ரீதியாக விளக்க முடியாத கோவேறுக் கழுதைகள். புலிகளுடனான இவர்களின் அரசியல் முரண்பாடு என்பதே, புலிகளின் குறிப்பான கொலைகள் பற்றியது மட்டுமே. புலிகள் மக்களுக்கு முன்வைக்கும் அரசியல் தொடர்பானதல்ல. புலிகளின் மக்கள் விரோத அரசியலின், மிகத் தீவிர ஆதாரவாளர்கள் இவர்கள். கொள்கை ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக முரண்பாடு என்பது கிடையாது.
இவர்களின் முரண்பாடு என்பது, இவர்களுக்கு இடையிலான அதிகாரம் தொடர்பானதே. யார் தமிழ் மக்களை அடக்கியாள்வது என்பது தொடர்பானது. மக்களின் விடுதலை தொடர்பானதல்ல. இந்த வகையில் முன்னைய இன்றைய கொலைகார குழுக்கள் அனைத்தும் கூடிக்குலைக்கின்றனர். மாற்றுக் கருத்து என்ற பெயரில், தமது அதிகாரத்துக்காக புலிகளுடன் முரண்படுகின்றனர். மக்களை எட்டி உதைத்து, பிசாசுகளுடன் கூடி விபச்சாரம் செய்கின்றனர்.
புலிகள் மக்களுக்கு எந்த உரிமையை மறுக்கின்றனரோ, அதை புலியெதிர்ப்புக் கும்பலும் மக்களுக்கு மறுக்கின்றது. மக்கள் தமது சொந்த விடுதலைக்காக, தமது சொந்த அதிகாரத்துக்காக போராடுவதை புலிகள் போல் இவர்களும் அனுமதிப்பதில்லை. அதை கருவறுப்பதுதான் புலியெதிப்பு சிந்தாந்தக் குருவின் பிசாசுத் தத்துவம்.
கடந்தகால வரலாற்றில் யாரெல்லாம் மக்களின் உரிமையை மறுத்து, அதைக் கோரியவர்களைக் கொன்று ஒரு படுகொலை அரசியலை நடத்தினரோ, அவர்கள் எல்லாம் கூடி 'ஜனநாயகத்தை" மீட்கும் பிசாசுத் தத்துவத்தை ஒப்புப் பாடுகின்றனர். இலங்கையினதும் இந்தியாவினதும் கூலிக் குழுக்களாகவே செயல்படும் கொலைகாரக் கும்பல்கள், புலியை ஒழித்து "ஜனநாயகத்தை" மீட்க பிசாசுடன் சேருவதே முற்போக்கான அரசியல் என்கின்றனர்.
இவர்கள் முன்வைக்கும் அந்த பிசாசு யார்? அந்த பிசாசு வேறு யாருமல்ல, ஏகாதிபத்தியம் தான். புலியை ஒழிக்க, புலியிடமிருந்து தமது ஜனநாயகத்தை மீட்க, பிசாசுகளை விட்டால் வேறு என்னதான் அரசியல் வழி உண்டு என்று எம்மை பார்த்து ஆச்சரியமாக கேட்கின்றனர். இதையே தான் தன்னையும் மார்க்சியவாதியாக கூறிக்கொண்ட, சோலையூரனும் கேட்டார். அவர் தன்னை உள்ளடக்கி பொதுவில் ஏகாதிபத்தியவாதிகள் என்கின்றீர்களா என்றார்? மார்க்சியவாதியாக கூறிக்கொள்ளும் சோலையூரானின் பரிதாபகரமான 'மார்க்சிய" நிலை இது.
நாம் புலியை பாசிட்டுகள் என்று கூறும் போது, இந்த அளவீடு அதன் கீழ்மட்ட உறுப்பினர் வரை பொருந்தும். அந்த அரசியலை சித்தாந்த ரீதியாக ஏற்றுக் கொண்டு இருக்கும் வரை, அதை பிரதிநிதித்துவம் செய்யும் அனைவருக்கும் பொருந்தும். நீங்கள் ஏகாதிபத்திய துணையுடன் அதன் கோட்பாட்டை உள்வாங்கியபடி புலியை அழிக்க புறப்பட்ட பின், இதை ஏற்றுக்கொண்டு செயல்படும் அனைவருக்கும் பொருந்தும். தலைவர் அதன் தொண்டன் என்பதில், ஏகாதிபத்திய தன்மையில் வேறுபாடு கிடையாது. வேறுபாடு அறியாமையில், அப்பாவித்தனத்தில் கூலிக்கு மாரடிக்கும் செயல்தளத்தில் வேறுபாடு உண்டு. தமிழ் மக்களைச் சார்ந்து நிற்கத் தவறுகின்ற அனைத்தும், ஏகாதிபத்திய, மக்களின் சொந்த எதிரியுடன் கூடி நிற்கின்ற அனைத்தும், ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தவை.
அன்று இயக்கங்கள் தொடங்கியது முதல், மக்களுக்கு எதிரான அரசியலையே இயக்க அரசியலாக வரிந்து கொண்ட காலம் முதலாக, மக்களை எதிரியாக கருதும் கும்பலா, மக்கள் ஜனநாயகத்தை மீட்கப் போகின்றார்கள்? இன்றும் அவையெல்லாம் மக்கள் விரோத இயக்கங்களாக, சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நடித்துக் கொள்ளும் இவர்கள், அந்த மக்களின் பிரச்சனையில் இருந்து சமூகத்தை பார்க்கத் தவறுவது தான் வேடிக்கை.
அன்று பேரினவாதத்துக்கு எதிராக தொடங்கிய இயக்கங்கள் எப்படி மக்களுக்கு எதிராக சென்றனரோ, அதேநிலையில் தான் புலி பாசிச ஒழிப்பிலும் அரசியல் நிலையெடுக்கின்றனர். அன்று பேரினவாதத்தை எதிர்கொள்ள மக்களை எட்டி உதைத்த படி, இந்தியாவின் கூலிக் குழுவானவர்கள் தான், இன்று மக்களை அதேபோல் எட்டி உதைத்தபடி பிசாசுகளுடன் கூடி நிற்கின்றனர். மனித விரோத வரலாறு இப்படி நிர்வாணமாகவே காட்சி அளிக்கின்றது.
நாம்(ன்) அன்றைய கூட்டத்தில் இதை அம்பலப்படுத்திய போது, இந்த மனித விரோத பிசாசு செயல்பாடுகள் உணர்ச்சிகரமான குமுறலுடன் அம்பலமாகியது. அவர்களின் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப, சந்தர்ப்பவாதிகளின் அரசியல் முடிச்சுமாற்றித்தனத்தின் உள்ளார்ந்த அரசியல் கூறை உடைத்தெறியும் வகையில், தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றிய விடையத்தை கருப்பொருளாக கொண்டு இதை அம்பலமாக்கினோம். தமிழ் மக்கள் தமது பிரச்சனைக்காக தாமே மட்டும் போராடுவதைத் தவிர, வேறு எந்த மாற்று வழியும் கிடையாது என்றோம். இதற்கு வெளியில் மாற்றுவழி உண்டென்றால், அதை முன்வைக்குமாறு சவால் விடுத்தோம். இதற்கு பதிலடியாகவே பிசாசுடன் கூடி புலியெதிர்ப்பை (புலிஒழிப்பை) மாற்றாக முன்வைத்தனர். மக்களுக்கு எதிராக பிசாசுகளுடன் கூடி, மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுத்தரப் போகின்றனராம்.
இப்படி கடந்தகாலத்தில் இந்தியாவுடன் கூடி தமிழீழத்தை பெற்றவர்கள், இந்த தமிழீழம் என்று இன்றும் கூறுபவர்கள் போல், பிசாசுடன் கூடி ஜனநாயகத்தை மக்களுக்கு பெற்றுத் தரப்போகின்றனராம். அரசியலில் பொறுக்கிகளின் சூழ்ச்சிகள் இவை. சொந்த மக்களில் நம்பிக்கை இல்லாதவர்கள். அந்த அரசியல் வழிமுறையை எப்படி என்றும், அது சாத்தியமற்றது என்றும் சதா கிண்டல் அடிப்பவர்கள். அந்த மக்களுக்கு இவர்கள் எப்படி உண்மையான இருப்பார்கள். ஒரு உண்மையான மக்கள் ஜனநாயகத்துக்காக எப்படி போராடுவார்கள். சொல்லுங்கள். அன்னியருக்கு ஒரு கூலிக் குழுவாக இருந்து, செயல்படுவதில் மட்டும் நம்பிக்கை கொண்டவர்கள். இது மட்டுமே சாத்தியம் என்பவர்கள். மக்கள் வழி சாத்தியமற்றது என்று கூறுவதன் மூலம், இதை மறைமுகமாக திணிப்பவர்கள்.
மாற்றுவழி என்பது, அவர்களே பிசாசுகள் என்று வருணிப்பவர்களுடன் சேர்ந்து புலியை ஒழிப்பது. இப்படி பிரகடனம் செய்வது மட்டுமல்ல, அதை எமக்கு எதிராக சவால் விடுகின்றனர். எப்படிப்பட்ட சமூக விரோத கும்பல் இவர்கள் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.
மக்களை சார்ந்து நின்று, அந்த அரசியல் மூலம் மக்களின் தீர்வாக புலியொழிப்பை நாம் கோரிய போது, பிசாசுகளாக மாறியது மட்டுமின்றி பிசாசுகளாகவே பிரகடனம் செய்தனர். இதுதான் அன்றைய நிகழ்வும் நிகழ்ச்சியுமாகியது. இந்த பிசாசுக் கூட்டத்தில் ஆணாதிக்கத்தை ஒழிக்கப் போராடுவதாக கூறிக்கொள்பவர்களும், சாதி ஒழிப்புக்காக போராடுவதாக கூறிக்கொள்பவர்களும், யாழ் மேலாதிக்கத்துக்கு எதிராக போராடுபவராக கூறிக்கொள்பவர்களும், சுரண்டலை எதிர்ப்பதாக கூறிக்கொள்பவர்களும் பலரும் சேர்ந்து, மக்களின் இந்தப் பிரச்சனை புலி ஒழிப்புக்குள் அடங்காது என்கின்றனர். வேடிக்கையிலும் வேடிக்கை. இந்த மனித ஒடுக்குமுறை செய்பவர்களுடன் சேர்ந்து தான், புலியை ஒழிக்க முடியும் என்கின்றனர். இப்படித்தான் இது தமிழீழப் போராட்டத்திலும் அடங்கவில்லை என்றவர்களும் இவர்கள் தான். ஏன் புலிகளும் அதைத்தான், இன்று வரை கூறுகின்றனர். வரலாற்றைப் புரட்டினால், இது தெரியும். இப்படி கோரியவர்கள் கொன்றவர்கள் எல்லாம், மக்கள் போராட்டம் என்பது தமது அதிகாரத்துக்கு பிந்தைய விடையமாக கருதும் கருத்துடையவர்கள். இதைக் கோரியவர்கள், கோருபவர்களை கொன்றது மட்டுமின்றி, தமது எதிரியாகவும் பார்க்கின்றனர். இப்படி மக்களுக்கு எதிரான ஒரு அரசியல் நீட்சியாகவே, இன்றும் அவர்கள் உள்ளனர்.
மக்கள் ஜனநாயகம் என்பது மக்கள் தமது பிரச்சனையைப் பற்றி பேசுவது, அதற்காக போராடித் தீர்வைக் காண்பதும் தான். ஆனால் இதை மறுத்துத்தான் புலிகள் முதல் புலியல்லாத புலியெதிர்ப்பு வரை கொக்கரிக்கின்றது. மக்கள் தமது உரிமைக்காக போராடும் காலம் இதுவல்ல என்று கூறுபவர்கள், அந்த உரிமைகளுக்காக தாம் உண்மையாக இருப்பதாக காட்டிக்கொண்டு மக்களின் முதுகில் குத்துவதே இவர்களின் பிசாசுத் தத்துவம்.
புலி ஒழிப்பின் பின் தனித்தனியாக போராடப் போவதாக கூறுவது வேடிக்கை. புலி என்ன சொல்லுகின்றது. தமிழீழத்தை பெற்ற பின்னர் தான், தாம் இதற்காக போராடுவினமாம். அதாவது புலிகள் தமிழீழத்தை பெற்றபின் போராடுவினமாம். புலியெதிர்ப்பு கும்பலோ புலியை பிசாசுடன் சேர்ந்து ஒழித்த பின் இதற்காக போராடுவினமாம். கூட்டாகவே கொள்கை ரீதியாக, மக்களின் உரிமைக்காக போராட மறுக்கும் பிரகடனமும், அரசியல் உடன்பாடும் புலிக்கும் புலியெதிர்ப்புக்கும் ஒன்று தான்.
இப்படி மக்களின் பிரச்சனையை கைவிட்டுவிட்டு, மக்களை எப்படி எந்த வழியில் அணி திரட்டமுடியும். மக்கள் போராட்டம் என்பது இதற்கு வெளியில் கிடையாது. மக்களின் பிரச்சனைக்காக, அந்த மக்கள் தாம் தமக்காக போராடுவது தான் மக்கள் போராட்டம். அது சிலரின் வெறும் வரட்டு தமிழீழமோ அல்லது வெறும் வரட்டு புலியொழிப்போ அல்ல.
இவர்கள் பரஸ்பரம் தமக்குள் குற்றம் சாட்டியபடி, இதற்குள் வரட்டுத்தனமாக அனைவரையும் கட்டிப்போடுகின்ற மக்கள் விரோத வேலையைத் தான் இந்தக் கும்பல் செய்கின்றது. மக்களின் அடிப்படையான அனைத்து பிரச்சனைகளையும் அடையாளம் கண்டு, அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சனையைத் தீர்க்க நாம் கோரியும், இதற்கு வெளியில் மக்களுக்கு சார்பான மாற்று அரசியல் வழி எதுவும் கிடையாது என்று நாம் சவால் விட்டோம். இதன் போது புலியெதிர்ப்புக் கும்பல் தாம் அம்பலமாவது கண்டு அதிர்ந்து போனது. எம் மீது புலியெதிர்ப்பு தத்துவமேதை சிவலிங்கம் உட்பட, சோலையூரன் முதல் கீரன் வரை காழ்ப்புடன் சீறிப் பாய்ந்தனர்.
கீரனோ நாலு சுவருக்குள் இருந்து, 20 பவுனில் இணையத்தில் மக்கள் புரட்சி நடத்துவதாக வெம்பிக் கொட்டினார். இந்த சம்பந்தமில்லாத எம்மீதான அரசியல் காழ்ப்பு, எப்படி தமிழ் மக்களின் அப்படை பிரச்சனைக்கு பதிலளிக்கின்றது என்பது அந்தக் கும்பலுக்குத் தான் வெளிச்சம். புலிகள் என்ன சொல்லினம் என்றால், கதைப்பதை வன்னியில் சென்று கதையுங்கள் என்கின்றனர். அங்கு சென்று போராடுங்கள் என்கின்றனர். இப்படி புலிகள் பேச புலியெதிர்ப்போ நாலு சுவர்களுக்குள் மக்கள் புரட்சியா என்கின்றனர். வன்னி மக்களின் சுதந்திரம் என்றழுகின்றனர்.
வன்னி மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கு போராட முடியாதவர்கள் என்கின்றனர். அந்த மக்கள் இணையத்தை பார்க்க முடியாது என்கின்றனர். இதனால் பிசாசுக் கூட்டத்துடன் தம்மைப் போல் சேரக் கோருகின்றனர்.
பிசாசுடன் சேர்ந்து புலியெதிர்ப்பு (ஒழிப்பு) பிரச்சாரம் செய்யும் இவர்கள், அந்த மக்களிடம் செல்வதில்லை. ஏன் இணையம் பார்க்கும் மக்களிடம் கூட, மக்களின் பிரச்சனையை கொண்டு செல்வது கிடையாது. பிசாசுகளின் அரிதட்டில் இட்டு வடிகட்டி கிடைப்பதைப் பொறுக்கி, தாமே தமக்குள் வம்பளப்பதே இவர்களின் அரசியல். புலி ஊடகவியல் போல், புலியெதிர்ப்பு ஊடகவியல் மக்களின் பிரச்சனைகள் மீது விபச்சாரம் செய்கின்றனர்.
வன்னி மக்களின் சுதந்திரமான வாழ்வு மற்றும் இடப்பெயர்ச்சி பற்றி மட்டும் பேசும் இவர்கள், இலங்கை அரசு அதை மறுப்பதை இட்டோ, ஏன் ஏகாதிபத்திய நாட்டில் இது மறுக்கப்படுவதை இட்டோ அலட்டிக்கொள்ளாத, புலியெதிர்ப்பு ஜனநாயகத்தை பற்றி மட்டும் பேசும் பந்சோந்திகள்.
பிசாசுகளுடன் சேர்ந்து தாம் புலியை அழிப்போம் என்றவர்கள். இதை யாரும் தடுக்க முடியாது என்றவர்கள், இப்படி தனது நெற்றிக் கண்ணையே திறந்த சிவலிங்கம், தனது ஏகாதிபத்திய விசுபரூபத்தையே உலகுக்கு முழுமையாக காட்டினார். அற்புதத்திலும் அற்புதம். மானம் கெட்ட நாய்கள், ஏகாதிபத்திய கால்களை நக்குவதைத் தவிர வேறு எந்த மக்கள் அரசியலும் கிடையாது.
இந்த பிசாசு யார் என்ற சர்ச்சை பின்னால் வந்த போது, சொந்த சுயவிளக்கம் அளிக்க வெளிக்கிட்ட பரமபிதா சிவலிங்கம், அந்த சிவலிங்கத்துக்கேயுரிய ஆபாச வக்கிரத்துடன் பினாற்றுவதைத் தவிர வேறு எதையும், அற்புதமாக சோடிக்க முடியவில்லை.
தான் பிசாசு என்று குறிப்பிட்டது மனித உரிமை அமைப்புக்களையே என்றார். இப்படி தனது புலியெதிர்ப்பு அரசியல் செயல்பாட்டுக்கு மனித முகம் கொடுக்க முற்பட்டார். இப்படி சூழ்ச்சியான அரசியல் ஆய்வாளராக பாலசிங்கத்தையே மிஞ்சும் இந்த முட்டாள், முன்னால் இருப்பவனெல்லாம் மாங்காய் மடையன் என்ற நினைப்பு. சிவலிங்கம் தன் வீட்டு மாங்காய் என்ற அவரின் சொந்த நினைப்பு.
சரி சொன்னபடி எடுப்போம். மனித உரிமை அமைப்புக்கள் பிசாசுகள் என்றால், அப்படி பிசாசு என்று தெரிந்துகொண்டு செயல்படுபவன் எப்படிப்பட்ட பொறுக்கியாக இருப்பான். நாங்கள் மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளின் அடிப்படையில், மக்களை அணிதிரட்ட முயலமாட்டோம் என்று கூறி, பிசாசுகளுடன் சேர்வோம் என்று கூறிய இந்த பொறுக்கி தான், புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் குரு. இந்த மக்கள் விரோத செயல்பாடு தான் புலியெதிர்ப்பு அரசியல்.
சரி இந்த பிசாசாக மனித உரிமை அமைப்புகளைக் காட்ட முற்பட்டது, உள்ளடகத்தில் ஏகாதிபத்தியத்தில் இருந்து இவ்வமைப்புக்கள் வேறானவை என இட்டுக்கட்டத்தான். தாம் செய்யும் ஏகாதிபத்திய செயல்பாட்டை, இல்லையென மழுப்ப அவ்வமைப்புக்கள் ஏகாதிபத்தியத்துக்கு அப்பாற்பட்டவையென காட்டி, மக்களுக்கு புலுடா விடுகின்ற முடிச்சுமாற்றித் தனம் தான் இந்த சுயவிளக்கம். இந்த மனிதவுரிமை அமைப்புகளை ஏகாதிபத்தியத்திலும் இருந்து சுயாதீனமானதாக காட்டுகின்ற, ஏகாதிபத்திய நரித்தனம், இதற்குள் வெளிப்படுவது மற்றொரு உண்மை. மனித உரிமைக்காக செயல்படுவதாக கூறுகின்ற இந்த ஏகாதிபத்திய அமைப்புகள், ஏகாதிபத்திய அமைப்புகளல்ல என்கின்றீர்களா? அரசியல் மோசடியில் உங்கள் செயல்பாட்டை நியாயப்படுத்துகின்ற வெளிப்படையான பொறுக்கித்தனம் இது.
மனிதவுரிமை அமைப்புக்கு யார் பணம் கொடுக்கின்றனர். ஏகாதிபத்திய பணத்தில், ஏகாதிபத்திய உலக ஒழுங்குக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட அமைப்புகள் தான் இவை. அதற்காகவே அவை செயல்படுகின்றது. இவை ஏகாதிபத்திய நலன் சார்ந்த
1. மனித உரிமை மீறலுக்கான சமூகக் காரணங்களை ஆராய்வதில்லை.
2. மனித உரிமையை சொல்லி நடைபெறுகின்றதும், மனித உரிமை அறிக்கையின் அடிப்படையில் நடக்கும் தலையீட்டுக்கும், ஏன் அது உருவாக்கும் மனிதவுரிமை மீறலுக்கும் தாம் பொறுப்பாளியாக இருப்பதில்லை.
3. சக மனிதனின் உழைப்பைச் சுரண்டுவதை மனிதவுரிமை மீறலாகக் கூட அங்கீகரிப்பதில்லை.
இந்த மனித விரோதத்துக்கு, இப்படி வக்கிரமான பலவடிவங்கள் உண்டு. ஏகாதிபத்திய நலன்களுக்கு இசைவாக மட்டும் மனித உரிமை மீறலைப் பற்றி பேசுகின்ற, அரசு சாராத அரச பணத்தில் இயங்குகின்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள் இவை.
தமிழ் மக்களுக்கு காலாகாலமாக காதில் பூ வைத்து அரசியல் செய்த கூட்டம், இந்த மனித உரிமை அமைப்பு பற்றியும் பொய்மையை விதைக்க முனைகின்றனர். புலிகள் முதல் புலியெதிர்ப்பு வரை இப்படி இதில் ஒத்த நிலைப்பாடு கொண்டுள்ளனர். மனிதவுரிமை அமைப்புகள் ஏகாதிபத்திய நலன்களுடன் தொடர்புடைய அமைப்புகள். இப்படியாக இயங்குகின்ற அரசு சாராத ஏகாதிபத்திய நன்கொடையில் இயங்குகின்ற இந்த அமைப்புகள், மனித உரிமை முதல் பொருளாதார செயல்பாடுகள் வரை ஒன்றுடன் ஒன்று திட்டமிட்ட வகையில் பின்னிப் பிணைந்தவை. ஏகாதிபத்திய நலன்களுக்கு இசைவாக செயல்படுகின்ற அதேநேரம், அதை மூடிமறைக்க மனிதத்தின் ஒரு பகுதியை கையில் எடுத்துக்கொண்டு, மொத்த மனிதனுக்கு விரோதமாக செயல்படும் அமைப்புகள் தான் இவை.
இல்லை இவை ஏகாதிபத்திய அமைப்புகள் அல்ல என்ற கூறும் தைரியம், நேர்மை இருந்தால், அதையும் விவாதிக்கவும் நாம் சவால் விடுகின்றோம். மக்களின் முதுகில் குத்தி அரசியல் ரீதியாக சோரம் போவதும், ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதும், பிறகு அதற்கு மனிதவுரிமை அமைப்பு என்று பச்சையாக சுயவிளக்கம் வழங்குவதும் விபச்சார தரகனுக்குரிய அதே குணம் தான். இப்படி தமது புனிதத் தன்மை பற்றி ஒப்பாரி வைப்பது, தம்மையும் தமது செயல்பாட்டுக்கும் புனித தன்மை பற்றி கூறி மக்களை ஏமாற்ற முயலுகின்ற வக்கிரம் தான், புலியெதிர்ப்பின் பின் அரங்கேறுகின்றது.
இன்றைய மனிதவுரிமை அமைப்புகள், மனித உரிமை மீறலுக்கான காரணத்தை ஏன் விமர்சிப்பதில்லை. மனிதவுரிமை மீறலுக்கு காரணம், ஏகாதிபத்திய உலக ஒழுங்கு தான். இந்த அடிப்படைக் காரணமே இப்படி வெளிப்படையாக இருக்க, அதை பற்றி பேசாது மனித உரிமை பேசுகிற ஏகாதிபத்திய நிறுவனங்கள் தான் இவை. ஏகாதிபத்திய சர்வதேச தலையீட்டுக்கான நிலைமைகளை தயாரிப்பது, இந்த அமைப்புகளின் தலையாய செயல்பாடுகளாகும். இப்படி மனித முகம் வழங்கி, தனது தூய்மை பற்றிய பிரமையை உருவாக்கி, சதி செய்து மக்களை ஒடுக்குவதற்கு துணை செய்கின்ற அமைப்புகள் தான் இவை.
இந்த கேடுகெட்ட வகையில் ஏகாதிபத்திய பணத்தில் இயங்கும் பிசாசுகளுடன், தான் சேர்ந்து செயல்படுவதாக, நெற்றிக் கண்ணைத் திறந்து சிவலிங்கம் தனது சுயவிளக்கத்தில் புலியெதிர்ப்புக் கும்பல் சார்பாக சூளுரைத்தார். இப்படி ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து செய்கின்ற மனித விரோதத்தை, மூடிமறைக்கலாம் என்று இந்த புலியெதிர்ப்புக் கும்பல் நம்பியதால், அதை வீரமாகவே பிரகடனம் செய்தனர். நாய் வேஷம் போட்டு விசுவாசமாக நக்கிக் குலைக்க வெளிக்கிட்டாலும் கூட எதையும் யாராலும் மூடிமறைக்கவே முடியாது.
ஏகாதிபத்தியம் என்றால் என்ன? நீங்கள் ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து செயல்படவில்லை என்று கருதினால், ஏது ஏகாதிபத்தியத்துடனான செயல்பாடு என்று அதைச் சொல்லுங்கள்? நடத்துவதோ மானம்கெட்ட அரசியல் விபச்சாரம். ஏகாதிபத்திய அரசியல்வாதிகள் முதல் எல்லாவிதமான ஏகாதிபத்திய நிறுவனங்களுடனும் சேர்ந்து கும்மியடிப்பதைத் தவிர, வேறு எதுவும் செய்வதில்லை. அதை புலியெதிர்ப்பு ஊடகவியல் மூலம் வாரியள்ளி கொட்டுவதன் மூலம், அதற்கு அவர்கள் இட்ட பெயர் தான் ஜனநாயகம். மக்கள் தமக்காக, தமது சமூக பொருளாதார உரிமைக்காக போராடுவது ஜனநாயகமல்ல என்பது இவர்கள் தத்துவம். சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவது ஜனநாயகமல்ல, அதுவே ஜனநாயக விரோதம் என்கின்றனர். இதனால் புலி முதல் புலியெதிர்ப்பு வரை போராட மறுத்து, இதை வேட்டையாடுவதையே போராட்டமாக்கியவர்கள்.
இந்த புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய செயல்பாடுகளை நாம் அம்பலப்படுத்துவதால், நாலு சுவருக்குள் இருந்து 20 பவுன் காசில் மக்கள் புரட்சி செய்வதாக பம்புகின்றனர். சரி இந்த வாதம் எப்படி, நீங்கள் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதில்லை என்பதனையோ அல்லது சேவை செய்வதையோ நியாயப்படுத்திவிடும்?
ஏகாதிபத்திய பிசாசுடன் சேர்ந்து செய்வது சரி என்பதையும், அதை எப்படிச் செய்கின்றோம் என்பதையும் வெளிப்படையாக மூடிமறைக்காது கூற வேண்டியதுதானே. ஏன் சுயவிளக்கம் கொண்ட பிசாசுத் தத்துவம். நாலு சுவருக்குள் 20 பவுன் காசில் இணையம் என்று, ஏன் பேயைக்கண்டது போல் அலறுகின்றீர்கள். மக்களின் முதுகில் குத்தி துரோகம் செய்யும் உங்கள் வண்டவாளங்கள், அந்த 'நாலு சுவருக்குள்" இருந்து அம்பலமாவதைக் கண்டு குமுறுவதன் பின்னனி எமக்கு புரிகின்றது. நாலு சுவர் இணையத்தை நிறுத்தக் கோரும் உங்கள் பிசாசு ஜனநாயகம், தலைகீழாக நின்று அழுவது புரிகின்றது.
ஜனநாயக விரோதிகள் புலிகள் மட்டுமல்ல, இந்த புலியெதிர்ப்புக் கும்பலும் தான். மக்களின் விடுதலையை கோரியோரைக் கொன்று குவித்த முன்னைய கொலைகார கும்பலும், இன்றைய கொலைகாரர்களுமான புளாட், ஈ.பிஆர்.எல்.எவ், ஈரோஸ், ஈ.என்.டி.எல்.எப், ஈ.பி.டி.பி, ரெலோ முதல், கொலைகாரனுக்கு ஆள்காட்டியும் உதவிய கூட்டணி என்று அனைவரும், சேர்ந்து புலியிடமிருந்து ஜனநாயகத்தை மீட்கப் போகின்றார்களாம். புலிகளிடம் அதிகாரத்தில் பங்கு கோரி நடத்தும் அரசியல் சண்டையை மூடிமறைக்க, புலிப் பாசிசம் பற்றி புலியெதிர்ப்பு ஆர்பாட்டங்கள்.
இந்த அதிகாரம் கிடைக்கும் முன்பே, சதியை அடிப்படையாகக் கொண்ட அதிகாரச் சண்டைகள் இவர்களுக்குள். பாரிஸ் கூட்டத்துக்கு முதல் நாள் கூடிய ஜெர்மனிய கூட்டத்தில் இவை அரங்கேறியது. தலித்தியவாதிகள், கிழக்குவாதிகளையும் அழைக்க கூடாது என்ற புலியெதிர்ப்பு ஜனநாயக சதி கூட விவாதிக்கப்பட்டது. யாரை அழைக்கக்கூடாது என்று முன் கூட்டியே திட்டமிட்டு அவர்கள் தடுக்கப்பட்டனர். விமான நிலையத்தில் அழைத்து வருவதில் கூட திட்டமிட்ட புறக்கணிப்புகள், சதிகள். இப்படி இந்த ஜனநாயகம் கொடிகட்டிப் பறக்கின்றது. புலியெதிர்ப்பு சித்தாந்த குரு யாரின் பக்கம் என்று காட்டுவதில் உள்ளேயே ஒரு போட்டி, ஒரு சதி. இதைப் பிரதிநிதித்துவம் செய்யும் குழுக்கள், அனைத்து இலங்கை இந்திய அரசுகளின் கூலிக் குழுக்கள். சிலதுகள் பிசாசுகளின் கூலிகள். இவர்கள் எல்லாம் கூடி நின்று, புலியின் ஜனநாயக மீறலைப் பற்றி தமக்குள் ஊளையிடுகின்றனர்.
இப்படி ஊளையிடுவதில் உள்ள கைக்கூலித்தனம் வெளிப்படையானது. இந்த ஏகாதிபத்திய நிலை என்பது அரசியல் ரீதியானது, கொள்கை ரீதியானது. புலியெதிர்ப்பின் உள்ளார்ந்த சித்தாந்தம், கொள்கை ரீதியாகவே ஏகாதிபத்திய தன்மை கொண்டது. இதை யாரும் மறுத்து நிறுவ முடியாது. ஏகாதிபத்தியத்துடன் அரசியல் ரீதியாகவே சோரம் போய், அதன் பின் வாலாட்டுபவர்கள். இந்த ஏகாதிபத்தியம் என்பதும், அதன் வடிவம் என்பதும் கொள்கை ரீதியானது மட்டுமின்றி வன்முறை வடிவமும் கொண்டது.
புலியெதிர்ப்புக் கும்பலின் செயல்பாடுகள் ஏகாதிபத்திய அதிகார மையங்களுடனும், அதன் மனித முகம் கொண்ட நிறுவனங்களுடன் தொடர்புக்கு உட்பட்டது. இன்று புலிகள் தாம் வேறு, தமது மனித செயல்பாடுகள் வேறு என்று எப்படி காட்ட முனைகின்றனரோ, அப்படிப்பட்ட ஒரு வேறுபாட்டைக் காட்டித் தான் (பலவற்றை மறைத்தபடி), புலியெதிர்ப்புக் கும்பல் தனது துரோகத்தை மனித செயல்பாடாக காட்டமுனைகின்றது.
நாலு சுவருக்குள் 20 பவுன் காசில் இணையம் நடத்துபவர்கள் என்று எம்மைக் கூறி, தாம் மக்கள் மத்தியில் செயல்படுவதாகவும் ஊர்வலங்களை நடத்துவதாகவும், எமக்கு அரசியல் பாடம் நடத்த முனைந்தனர். சரி இவர்களின் ஊர்வலங்கள் மக்களுடன் சம்பந்தப்பட்டதா? பிசாசுகளுடன் கூடித்தான் புலியை அழிப்போம் என்றவர்கள், அதற்கு முற்றாக முரணான வழியான மக்களுடன் கூடி புலியை எப்படி அழிக்கமுடியும். கேட்பவன் கேனயன் என்ற நினைப்பு. இவர்களின் மக்கள் போராட்டம் எப்படிப்பட்டது. சிங்கள உறுமய முதல் கொலைகார கூலிக் குழுக்களின் பிரதிநிதிகள் எல்லாம் கூடி நடத்துவது, மக்கள் போராட்டம் என்கின்றனர். புலியெதிர்ப்புக் கும்பல் தாமே கூடி ஊளையிடுவது மக்கள் போராட்டமல்ல. அதுவும் பிசாசுகளுக்கு மகஜர் கொடுத்துவிட்டு வந்து, பிசாசுக்கு பின்னால் வாலாட்டி திரிவது மக்கள் போராட்டமல்ல. மறுபக்கத்தில் இதை மக்கள் போராட்டம் என்றால், புலியும் தான் உங்களைவிட அதிகளவு உங்கள் போல் 'மக்கள் போராட்டம்" நடத்துகின்றது. உங்கள் போராட்டம் மக்கள் போராட்டம் என்றால், புலிப் போராட்டமும் மக்கள் போராட்டம் தான்.
புலிகள் பேரினவாதிகளின் மனிதவிரோத செயலை சொல்லி ஊர்வலம் நடத்தி மக்களின் முதுகில் எப்படி குத்துகின்றனரோ, அப்படி புலியைச் சொல்லி நீங்கள் மக்களின் முதுகில் குத்துவது மக்கள் போராட்டமோ? உங்களிடையே அரசியல் ரீதியாக என்ன வேறுபாடு உண்டு?
இந்த புல்லுருவிகளின் திடீர் தோற்றமும், அதன் திடீர் வரலாறும், வரவின் சூக்குமத்தை தெளிவுபடுத்த போதுமானது. இது வைத்த, திடீர் ஜனநாயகமும் அப்படிப்பட்டது தான்.
இலங்கையில் சமாதானம் அமைதி என்று கூறிக்கொண்டு ஏகாதிபத்திய தலையீடுகள் அதிகரித்த போதுதான், இந்த புலியெதிர்ப்பு புல்லுருவிகளும் அக்கம்பக்கமாக சமகாலத்தில் முளைத்தவர்கள்.
அதற்கு முன்னம் அரசியல் ரீதியாக இனம் காணப்படாதவர்கள். எந்த செயல்பாடுமற்ற உறங்கு நிலையில் இருந்தவர்கள். எதிர்ப்புரட்சிகர சூழல் இன்றி, அரசியல் போக்கற்று, அரசியல் அனாதைகளாகக் கிடந்தவர்கள். அதிகரித்த ஏகாதிபத்திய தலையீட்டுடன், எதிர்ப்புரட்சிகர திட்டத்துடன், பாசிச புலிகளின் நடத்தையை சாதகமாக கொண்டு திடீர் ஜனநாயகவாதியானவர்கள். இவர்களின் திடீர் ஜனநாயகமோ, கிலோ விலைக்கு விற்கப்படுகின்றது. ஏகாதிபத்தியத்தின் அதிகரித்த தலையீட்டுடன் உருவாகி புல்லுருவிக் கூட்டம் இது. அதற்கு ஏற்ப இதனிடம் மாற்று வேலைத்திட்டம் கிடையாது. மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகள் பற்றி, எந்த சமூக அக்கறையும் அற்றவர்கள். இதனிடம் பிசாசுடன் கூடிய, புலி அழிப்புத்திட்டம் தான் உள்ளது.
மக்கள் விரோத பாசிச புலியை அழிக்க வேண்டும் என்றால்
1. அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த வழியில் குறுக்கிடும் புலிக்கு எதிராகப் போராடி அழிக்க வேண்டும். அதாவது தமது அதிகாரத்துக்காக, தமது சமூக பொருளாதார விடுதலைக்காக மக்கள் போராட வேண்டும்.
2. இல்லையென்றால் அரசு அல்லது இந்தியா முதலான ஏகாதிபத்தியங்களின் தலையீடு மூலம், அவர்களின் நலன்களுக்காக புலியை அழிக்க வேண்டும்
இதில் இரண்டாவது வழியைத் தான் புலியெதிர்ப்புக் கும்பல் வைக்கின்றது. இதுதான் பிசாசுத் தத்துவம். மக்களின் இன்றைய பிரச்சனைக்கு தீர்வை இரண்டாவது வழியில் தான், புலியெதிர்ப்பு வழி காட்டுகின்றது. இதனால் தான் அடிக்கடி தம்மிடம் மாற்று வழி இல்லை என்று நாசுக்காக கூறிக்கொண்டு, ஏகாதிபத்திய தலையீட்டுக்கு சாதகமான வழிக்குள் அழைத்துச் செல்லுகின்றனர். திட்டமிட்ட சதிகாரர்கள். நேரத்துக்கும் நிலைமைக்கும் ஏற்ற சந்தர்ப்பவாதிகள். தம்மை மூடிமறைத்தபடி சந்தர்ப்பத்துக்கு ஏற்ப குலைக்கின்ற, குதர்க்கப் பேர்வழிகள்.
ஏகாதிபத்திய தலையீட்டுடன் புல்லுருவிகளாக, திடீர் விட்டில் பூச்சிகளாக உலவுகின்றவர்கள். மக்களின் மனிதவுரிமை பற்றிய பிரச்சனை மீது தம்மை மூடிமறைத்துக் கொண்டு, அசல் ஏகாதிபத்தியம் போல் ஊர் உலகத்தையே ஏமாற்றுபவர்கள். உலகளவில் ஏகாதிபத்திய தலையீடுகளும், அதற்கான நியாயங்கள் எப்படி எந்த அரசியல் வழியில் உருவாக்கப்படுகின்றதோ, அதையே இலங்கை பிரதிநிதிகளாக நின்று செய்து முடிக்க முனைபவர்கள் தான், இந்த புலியெதிர்ப்புக் கும்பல். வரலாற்றில் வேறுவிதமாக இந்த கும்பலை வரலாறு பதிவு செய்வதற்குரிய எந்த தர்க்கமும், இதன் பிசாசு கோட்பாட்டில் கிடையாது. வரலாற்றுத் துரோகிகளாக, காலத்தின் போக்கில் உருவாகி நிற்பவர்கள் தான் இவர்கள். மக்களின் விடுதலைக்கே எதிரான புல்லுருவிகள். இதை இனம் காண்பது, வரலாற்றுத் தேவையாக உள்ளது.