தமிழ் அரங்கம்
Saturday, January 27, 2007
சாயி பாபாவின் வித்தைகள் பகுதி ஒன்றும் பகுதி இரண்டும்
நோர்வேஜிய மொழி + ஆங்கிலம்) பகுதி ஒன்றும் பகுதி இரண்டும்
துரோகமா மாற்று அரசியல்?
பி.இரயாகரன்
26.01.2007
மக்களுக்கு எதிரான துரோகத்தை நியாயப்படுத்துவதே மாற்று அரசியல் என்று, புலியெதிர்ப்புக் கும்பல் நிறுவ முனைகின்றது. புலிகளிள் ஒவ்வொரு பல்லும் விழும்போது, துரோகமே மாற்று என்று நிறுவப்படுகின்ற அரசியல் வக்கிரம் ஒருங்கே அரங்கேறுகின்றது. வரலாற்றின் முரண்நிலை, இதுவாக இருப்பதாக காட்டப்படுகின்றது..
தமிழ் மக்களின் அரசியல் என்பது, இதுதான் என்று அறைந்து ஒட்டப்படுகின்றது. இது மீறப்பட முடியாத வகையில் ஊடகவியல் மாற்றுகள் அனைத்தையும் முடக்கி மலடாக்குகின்றது. இந்த வகையில் தமிழ் மக்களை கன்னை பிரித்து, சிந்திக்க நிர்ப்பந்திக்கின்றது.
1. புலியை ஆதரிப்பது மட்டும் தான் தமிழ் மக்களின் அரசியலாக இருக்க முடியும் என்றும்
2 .புலியை எதிர்ப்பதும், புலிக்கு எதிரான துரோகக் குழுக்களையும் பேரினவாத அரசையும் ஆதரிப்பதும் தான் மாற்று என்றும் உளறப்படுகின்றது.
இதுவல்லாத கருத்துக்கு, சிந்தனைக்கு சமூகத்தில் எந்த இடமுமில்லை என்பது இவர்களின் நிலைப்பாடு. இதில் இவர்களுக்கிடையில் வேறுபாடு கிடையாது. மக்கள் தம்மைப்பற்றி தாமே சிந்திப்பது, இவர்களைப் பொறுத்த வரையில் ஒரு ஜனநாயகக் குற்றம்.
இப்படி இரண்டு தளத்தில் மக்களின் (எமது) அறிவு, சிந்தனை, செயல், மனிதநேயம் என்று எல்லாவற்றையும் காயடித்து, நலமடிக்கின்றனர். இதில் இருந்து எந்த விதத்திலும் மனிதர்களின் பன்முகப் பார்வை விரியக் கூடாது என்பதில், புலிகள் முதல் புலியெதிர்ப்பு கும்பல் வரை மிகக் கவனமாகவுள்ளது.
புலிகள், புலிகளுக்கு வெளியில் அரசுடன் சேர்ந்து இயங்கும் குழுக்களைச் சுற்றி ஓளிவட்டம் கட்டுவதே அரசியலாகி நிற்கின்றது. இதை நியாயப்படுத்த புலிக்கு பேரினவாத பாசிசம் எப்படி உதவுகின்றதோ, அப்படி புலியெதிர்ப்புக்கு புலிப் பாசிசம் உதவுகின்றது.
ஓன்றையொன்று எதிர்த்தபடி, இதற்குள் தமிழ் மக்கள் இயங்கவேண்டும் என்பது மாற்றுக் கருத்தின் உள்ளடக்கமாக காட்டுவது அரங்கேறுகின்றது. முன்னாள் இயக்கங்களான புளாட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி என அனைத்தும் மாற்றுக் கருத்துக்களை கொண்ட நபர்களை கொலை செய்து, அதன் மூலம் தலைமைக்கு வந்தவர்களால் தான் இன்னமும் அவ்வியக்கங்கள் துரோக வழியில் வழிநடத்தப்படுகின்றது. இந்த அமைப்புக்கள் இந்தியா இலங்கை முதல் ஏகாதிபத்தியம் வரையிலான ஐந்தாம் படையாகவே இன்றுவரை செயல்படுகின்றது.
இவர்களின் காலத்தில், இவர்களே தம்மை அம்பலமாக்கியவர்கள். மக்களுக்கு எதிரான வக்கிரங்களை கொட்டித் தீர்த்து, கொலைகள் மூலம் தமது தலைமையை தக்கவைத்து வாழ்பவர்கள் இவர்கள். வெறும் பிரபாகரன் மட்டுமல்ல, இந்தக் கூலிக் குழுக்களின் தலைவர்களும் அப்படி வந்தவர்கள். அடியாட்கள் பலம், ஆட் பலம், கைக்கூலிப் பணம், கப்பப் பணம் மூலம் இன்று நாலாம் தரமான அரசியல் செய்கின்றனர். மக்களின் அவலங்களை ஏற்படுத்தி, அதில் நக்கிப் பிழைப்பது இவர்களின் அரசியலாகின்றது. இதற்குள் நாலாம்தரமான பாராளுமன்ற வழியில் இழிந்து சீரழிந்து கிடப்பவர்களா மக்களின் மீட்பாளர்கள்!
இந்த கயவாளிக் கும்பல்களின் வழியில், காலடி எடுத்து வைத்து முன்னேறுகின்றது, கருணா என்ற புலியில் இருந்து பிரிந்த புலிக் கும்பல். கருணா கும்பல் புலிகளில் இருந்து பிரிந்தது முதல் இந்திய இலங்கை அரசின் ஒரு கூலிப்படையாக சீரழிந்து இழிந்து வருகின்றது. நாலாம்தர பாராளுமன்ற பாதைக்கு வந்து, மக்களை எப்படியும் ஏமாற்றி பிழைக்கலாம் என்று கங்கணம் கட்டி நிற்கின்றனர்.
பாவம் மக்கள். மக்கள் என்ன செய்வது. யாராவது ஒரு பொறுக்கிக்கு வாக்கு போடுவது தான் அவர்களின் ஜனநாயகம். இதை இந்த அரசியல் பொறுக்கிகள் கற்றுக்கொடுக்க முனைகின்றனர். மக்கள் இதுவரை ஆயுதம் ஏந்திய குண்டர்களுக்கு பின்னால் தலையாட்டியவர்கள், இனி நாலாம்தர பொறுக்கி பாராளுமன்ற உறுப்பினர்க்கு வாக்குபோடுவதே உங்கள் அரசியல் கடமை என்று ஒப்பாரிவைக்கின்றனர். மக்களின் சொந்த அரசியல் உணர்வை மழுங்கடிப்பதில், இவர்கள் போட்டி போடுகின்றனர்.
இப்படி புதிதாக முளைக்கும் கருணா குழு பற்றிய மாயை விதைக்கப்படுகின்றது. புலியெதிர்ப்பு புல்லுருவிகளால் கருணா பற்றிய மாயையை தொடர்ந்து தக்கவைக்கும், விபச்சாரம் புகுத்தப்படுகின்றது. இப்பத்தானே வந்தவர் என்று கூறுவதன் மூலம், அவரின் மக்கள் விரோத செயல்களைக் கண்டுகொள்ளக் கூடாது என்பதே அவர்களின் பிரச்சார உத்தி. அவர்கள் திருந்துவார்கள், அதை மீறினால் நாம் கண்டிக்கத் தான் வேண்டும். இப்படி ஒரு புளுடா. இவர்கள் எதைத்தான் எப்படி எங்கே கண்டித்துள்ளனர். ஒரு விமர்சனம் கிடையாது. இப்படி பல சூழ்ச்சிகளை அடிப்படையாக கொண்ட வக்கிரமான உத்திகள்.
ஐரோப்பாவில் இருந்து கதைப்பது, விமர்சிப்பது இலகுவானது. அங்கே உள்ள எதார்த்தம் இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவது தான். 20 வருடம் புலியுடன் இருந்த கருணாவுக்கு, இராணுவத்தையும் பேரினவாதத்தையும் தெரியாத அப்பாவியா? எனவே கவலைப்படாதீர்கள், அவர்கள் மக்களின் மீட்பாளராகவே இருக்கின்றனர். இப்படி எத்தனையோ பல்லவிகள். எல்லாம் அந்தத் துரோகத்தை மூடிமறைக்க வைக்கும் நரி வாதங்கள். இது புலியையெதிர்த்து அல்ல. மக்களுக்கு எதிராக இந்த துரோகக் குழுக்கள் நடத்தும் அசிங்கத்தை அம்பலப்படுத்தும் எம் போன்றவர்களுக்கு எதிராக, கனைக்கும் வாதங்கள் தான் இவை.
மக்களைப்பற்றி கதைக்க, அவர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவைப்பற்றி பேசவும், அதைப்பற்றி கதைக்கவும், எந்த அரசியல் அருகதையும் இவர்களிடம் இருப்பதில்லை. இவர்கள் முன்னாள் இன்னாள் துரோகக் குழுக்களின் எடுபிடிகளாக இருந்து குலைப்பவர்கள் தான் இவை.
கருணா கும்பலுக்காகவே இவர்கள் தலைகீழாகவே நிற்கின்றனர். கருணா கும்பல் தனது வேஷம் களையும் போது எல்லாம், பேச்சுவார்த்தை, சந்திப்புகள் என்று வேஷம் போட்டு கூத்துகளை அரங்கேற்றுகின்றனர். ஆனால் இதற்கு தலைமை தாங்கும் கருணாவோ, அப்பட்டமான ஒரு புளுத்துப் போன புலிப் பரதேசி.
இதை ஊர் அறிய பலமுறை அரங்கேற்றியவர். 24.01.2007 பி.பி.சி தமிழ் சேவையில் கருணா வழங்கிய பேட்டி, தமிழ்ச்செல்வன், தயா மாஸ்டர் பாணியில், அதே புளுத்துப் போன பொய்யை வறுகிக் கொட்டினார். அதைக் கேட்கும் தமிழ் மக்கள் எல்லோரும் கேனப்பயல்கள் என்ற நினைப்பில், அவர்களின் முகத்திலேயே பொய்யையே காறித் துப்பினான். நீங்கள் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குகின்றீர்களா என்ற கேள்விக்கு இல்லையென்றார்!. சரி சிறுவர்களை வைத்துள்ளீர்களா என்ற போது இல்லையென்றார்! ஆள் கடத்தலில் ஈடுபடுகின்றீர்களா என்ற போது இல்லையென்றார்! கொலைகள் அதுவும் இல்லையென்றார்! இப்படி அவர்களின் அன்றாட நடவடிக்கைளை மறுத்தலித்தார். அவர்கள் என்ன தான் செய்கின்றனர்!
அனைத்து மக்களுக்கும் நன்கு தெரிந்த உண்மையை மறுப்பதையும், அதை செய்கின்ற இந்த பேர்வழிகள் எப்படிப்பட்ட நேர்மையாளராக இவர்கள் இருக்கமுடியும் என்பதை, அவர்களின் வாய்வழியாகவும் நடைமுறை ரீதியாகவும் பார்க்கின்றோம்.
இதைச் சுற்றித்தான் ஒளிவட்டம் கட்டப்படுகின்றது. கருணா கும்பலை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகள் தான், கருணா கும்பலின் அன்றாட அரசியல் செயல்பாடுகள். அதை மறுத்து பொய்யையே உமிழும் இவர்களை நம்பும்படி கூறுவது, தமிழ் மக்களின் காதில் துணிந்து பூ வைப்பது தான். இதைத் தான் இவர்கள் மாற்று அரசியல் என்கின்றனர். இதையே ஜனநாயகம் என்கின்றனர்.
அந்த பொய்கார கொலைகாரனின், பிள்ளைபிடிகாரனின், கப்பக்காரனின் பொய்யை தேனீ, நெருப்பு, அதிரடி முதல் ரீ.பீ.சீ வரை செய்தியாக போட்டு அதையே பிரச்சாரம் செய்கின்றனர் என்றால், எப்படிப்பட்ட அரசியல் பொறுக்கிகள் இவர்கள். இதைச் சுற்றி ஒரு புலியெதிர்ப்புக் கும்பல், காவலுக்கு நின்று வள்ளென்று ஊளையிடுகின்றது. இவர்களுக்கே தெரியும் இது பொய் என்று. இல்லையென்று மறுக்கின்ற துணிவு இவர்களிடம் கிடையாது.
உண்மையில் புலிகளின் நிதர்சனம், புதினம் முதல் அனைத்து புலி ஊடகங்களும், பொய்களை எப்படி ஊதிப்பெருக்கி அதைச் சுற்றி நாய்களாய் நின்று குலைத்தனரோ, அதையே தான் இந்த புலியெதிர்ப்புக் கும்பலும் செய்கின்றது.
இவர்கள் புலிகளிடம், தம்மை போல் இலங்கை அரசின் துரோகத்தக்கு ஒத்துழைக்க கோருகினார். இதற்கு மாறாக வேறு எந்த அரசியலும் இவர்களிடம் கிடையாது. புலிகளின் பாசிசம் சிங்களப் பேரினவாதத்தினை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி, அதை முன்னிறுத்தி ஒரு மக்களுக்கான போராட்டமாக மாற்ற முடியாத வகையில் பாசிட்டுகளாக இருப்பதால், இந்த நாய்கள் துரோகத்துக்காக இலகுவாக குலைக்க முடிகின்றது.
புலிப் பாசிசம் தனது சொந்த விதிக்கமைய தங்களையும் தனது வாழ்வையும் முதன்மைப்படுத்தி, மக்களின் அடிப்படையான தேசிய நலன்களை புதைக்குழிக்கு அனுப்பினர். புலிகளின் இந்த அரசியல் வக்கிரத்தை சாதகமாக கொண்டு, இந்த புலியெதிhப்புக் கும்பல் துரோகத்தை மாற்றாக காட்டி குலைக்க முனைகின்றது.
பேரினவாதமும் அதன் ஒட்டுண்ணிகளாகி நிற்கும் துரோக குழுக்கள் ஒருபக்கத்திலும் மறுபக்கத்தில், புலிப் பாசிசமும் மக்களின் வாழ்வை அழித்து வருகின்றது. இந்த வாழ்வின் அவலத்தில் இருந்து தப்ப, மக்கள் படும்பாட்டை வைத்துக் கொண்டு, அதற்குள் இவர்கள் நீந்தி விளையாடுகின்றனர். மக்களின் போதுமான அவலங்கள், அவர்களின் உரிமைப் போராட்டத்தை விலை பேசப் போதுமானதாக கருதுகின்ற கும்பல்கள், எப்படித்தான தமிழ் மக்களின் மாற்றாக இருக்கமுடியும்.
ஆயுதப் போராட்டத்தில் கடைந்தெடுத்த கொலைகார பாசிட்டுகள், அமைதி வழியில் நாலாம்தர பொறுக்கிகள், இந்த அரசியலைத் தான் இவர்கள் தமிழ் மக்களின் பெயரில் கோருகின்றனர். இதற்குள் தமிழ் மக்களின் நலனை பூர்த்தி செய்வதாகவும், பூர்த்தி செய்யப்போவதாகவும் காட்டுகின்ற அரசியல் பொறுக்கிகளை, இன்று இனம் காணவேண்டியது, சமகால வரலாற்றில் அவசர தேவையாகியுள்ளது.
Thursday, January 25, 2007
முதலாம் எதிரி யார்? 2ம் 3ம். எதிரிகள் யார் ?.
சபேசன் (கனடா)
24.01.2007
மாற்றுக்கருத்தாளர்களிடம் சில கேள்விகள்
இரண்டு வினோதமான அரசியல், கருத்தியல் போராட்டம் இன்றைக்கு புலம் பெயர் தமிழர்களிடமும், "மாற்றுக் கருத்தாளர்" களிடமும் தோன்றியுள்ளது.
ஓன்று - இலங்கை அரசாங்கமா விடுதலைப்புலிகளா இவர்களில் யார் முதலாவது எதிரி யார் இரண்டாவது எதிரி என்ற ஒரு அற்புதமான ஜட்ஜ்மென்ற்.
இரண்டாவது - இலங்கை முஸ்லிம் மக்களின் அரசியல் தீர்வுக்காக பிரதேச அலகுகளா அல்லது யூனியன் பிரதேசங்களா என்கின்ற கேள்விகட்கு திரொக்சிய சார்பில் முடிவெடுப்பதா இல்லை ஸ்ராலினிஸ கருத்தியல் அடிப்படையில் முடிவு எடுப்பதா என்பது.
நாங்கள் வருத்தப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் யதார்த்த நிலைகளை புரிந்து கொண்டு மக்கள் நலனை நேசிக்கும் சக்திகள் முன்னெடுக்கவேண்டிய வேலைகளை இந்த யதார்த்த நிலமைகளை மக்கள் விரோத சக்திகளிடம் விட்டுவிட்டு மேலே குறிப்பிட்ட காத்திரமற்ற விடயங்களில் கவனம் செலுத்துகின்றோம்.
முதல் விடயத்தை முதலில் பார்ப்போம். இருபது இருபத்தைந்து வருடங்களிற்கு முன்னரே இலங்கை அரசு இனவாத அரசுதான் என்பதை முடிவெடுத்து விட்டோம். பதினைந்து வருடங்களிற்கு முன்னரே விடுதலைப்புலிகள் பாசிட்டுக்கள் என்று முடிவெடுத்து விட்டோம். இன்று வரையில் இந்த இரண்டு பகுதிகளிடமும் முன்னேற்றமோ அல்லது முற்போக்கான அரசியல் மாற்றங்களோ அல்லது மனித உரிமை மீறல்களைப் பற்றிய எந்தவித மாறுதல்களோ ஏற்படவில்லை. ஆனால் முன்னர் இந்த இரண்டு பகுதிகளையும் நிராகரித்த "மாற்றுக்கருத்தாளர்கள்" பலர் இப்போது இந்த இரண்டு கோதாக்களில் ஏதோ ஒன்றுக்குள் பாய்ந்துவிட்டார்கள்.
தங்களின் தோல்விகள், தங்களின் சுயநலங்கள், தங்களின் வெற்றிடங்கள், போன்றவற்றின் தாழ்வு சிக்கல்களின் வெளிப்பாடாக தங்களையே நியாயப்படுத்த, தங்களுக்குள்ளேயே குறுகிய வட்டப்போட்டியை நிர்ணயம் செய்கின்றனர்.
"பிரித்தாளும் தந்திரம்" உருவாக்கிய பிரித்தானியாவை முதலாம் எதிரி என்;று சிந்தனை செய்ய எல்லோரும் மறந்துவிட்டார்கள். அத்தோடு உலக வங்கி, சர்வதேச நாணயநிதியம் என்பவற்றையும் மேற்கத்தைய வல்லரசுகளையும மறந்து விட்டார்கள். உலகமயமாதலை மறந்து விட்டார்கள்.
வறுமையில் வாழும் கரையோர சிங்களவர்களும், சாலையோர வியாபார முஸ்லிம்களும், லயன்களில் பரிதவிக்கும் மலையகத்தவர்களும், வெளிநாடு செல்லப் பணமற்ற தமிழர்களும் இன்று ஒருவருக்கொருவர் எதிரியாகி தேசியப் போராட்டம் செய்வதில் யார் முதலாம் யார் இரண்டாம் எதிரி என்று கணிப்பீட்டுப் போராட்டம் செய்தழிகிறார்கள்.
இதன் பின்னர் சதாமுடன் சேர்ந்து புஸ்சுக்கு அடிப்பமோ? அல்லது புஸ்சுடன் சேர்ந்து சதாமுக்கு அடிப்பமோ? என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். (பிரபாகரனுடன் சேர்ந்து ராஜபக்ஸவிற்கு அடிப்பமோ அல்லது ராஜபக்ஸவுடன் சேர்ந்து பிரபாகரனுக்கு இடிப்பமோ? என்பது போன்று.)
இன்றைக்கு இந்த "மாற்றுக்கருத்தாளர்களின்" பிரதான கடமை என்ன?
இலங்கையிலோ அல்லது தமிழ் பேசும் மக்களிடமோ உருவாக, அல்லது உருவாக்க வேண்டிய "மாற்று அரசியல் களம்" என்பது நிச்சயமாக இலங்கையிலிருந்துதான் தோற்றம் பெற வேண்டும்.
இதைவிடுத்து இனிமேல் அப்படியான ஒன்று தோன்றவே தோன்றாது, இது ஒரு கற்பனாவாதம், அதற்குரிய காலகட்டம் கடந்து விட்டது, இரண்டில் ஒன்றை தீர்மானிக்க வேண்டும் போன்ற வாதங்கள் "மாற்றம் என்பது மாறாதது" என்ற நம்பிக்கையை இழந்தவர்களாலேயே எடுக்கப்படும். இது பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடிப்பது போன்ற நிலைப்பாடு. தொடர் கொலைகளும், உடைவுகளும், உருவாக்கங்களும் அடக்குமுறைகளும் தொடர்கின்ற எமது சமூகத்திலிருந்து முற்போக்கான சக்திகளே உருவாகாது என்ற அவநம்பிக்கைகளை நாங்களே தான் உடைக்கவேண்டும். இலகுவானதல்ல, மிகவும் கடினமான காலகட்டத்தில் உள்ளோம் என்பது நிதர்சனமானதே.
இவற்றுக்கெல்லாம் அடிப்படை எம்மை நாமே சுயவிமர்சனம் செய்வதிலிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும்.
"மாற்றுக்கருத்து" என்பதன் வரைவிலக்கணம் எதுவாக இருக்க முடியும்?
புலிகளை எதிர்த்;தால் மட்டும் மாற்றுக்கருத்தா? அப்படி என்றால் அரசாங்கத்தை மட்டும் எதிர்த்தால் மாற்றுக்கருத்து என்று ஏன் கூறமுடியாது? இது முற்றிலும் குழுவாதமே ஆகும்.
"மாற்றுக்கருத்து" என்பது பொது நீரோட்டத்தில் சமூகத்தில் பெரும்பான்மையினரால் நியாயம் என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அனைத்து அநீதிகளையும் மறுத்து கூறும், அல்லது மறுக்கமுயற்சிக்கும் கருத்தாக்கமே மாற்றுக்கருத்தாகும்.
உதாரணத்திற்கு ஒரு நண்பண் கூறிய ஒரு வார்த்தை "காலமை கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுப் போட்டு, மத்தியானம் வாய்காட்டின மனிச்pக்கு பளாரென்று அறைஞ்சு கதைய நிப்பாட்டிப்போட்டு, பின்னேரம் பிள்ளையளுக்கு பக்கத்து வீட்டில கறுவல் முன்வீட்டில சப்பட்டை என்று விளக்கம் குடுத்துப்போட்டு இரவு பியர் குடிக்கேக்க மாத்திரம் பு. . . புலிகள் எண்டு பேசிப்போட்டு தன்னை தானே மாற்றுக்கருத்தாளன் எண்டு சொல்லுறான்" என்று சொன்னான்.
பொதுப் போக்கில் உள்ள பெண்ணடிமைத்துவத்தை நிராகரிக்க வேண்டும், பொது நீரோட்டத்தில் உள்ள புலிகளாலும் அரசாலும் சொல்லப்படுகின்ற "தேசியம்" என்ற இனவாதத்தை நிராகரிக்கவேண்டும். மூட மதவாதத்தை நிராகரிக்க வேண்டும். நிறவாதத்தையும் ஒருபாலின எதிர்ப்பு வாதத்தை நிராகரிக்க வேண்டும். சாதி, மொழி, பிரதேச. . .இன்ன இன்ன பிற வாதங்களையும் நிராகரிக்க வேண்டும்.
இதை விடுத்து "மாற்றுக்கருத்தை" ஒரு fashion ஆக எங்கள் மேல் நாங்களே முத்திரை குத்திக் கொள்ளக்கூடாது.
புலிகளின் அராஜகம் பலமுனைகளிலும் பலரையும் பாதித்ததும் உண்மை. அது தமிழ் சமூக வரலாற்றின் இயங்கியலை பின்தள்ளியது. இதன் காரணமாக பல தனிநபர்களையும், பல இயக்கங்களையும் அரசாங்கத்தின் பக்கம் தள்ளியதும் உண்மையே.
புலிகளின் அராஜகம் காரணமாக தவிர்க்கமுடியாமல் அரசாங்கத்தின் பால் போவது வேறு. சிங்கள இனவாத அரசின் அரசியலை அப்படியே உள்வாங்குவது என்பது வேறு.
புலிகளின் செயல்களால் கொழுத்தியும் கொல்லப்பட்டும் விரட்டியடிக்கப்பட்ட மற்றைய இயக்கங்களின் மேல் ஒரு பச்சாத்தாப உணர்வு உண்டாவது உண்மைதான். இது மனித நேயம் கொண்ட எவருக்கும் தவிர்க்கமுடியாதது.
இப்போது கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆனந்தவிகடனுக்கு கூறிய கதை ஒன்று நினைவுக்கு வருகின்றது.
சிங்கள இராணுவத்தின் மேல் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் என்பது "பலாத்காரம் செய்யப்படுகின்ற ஒரு பெண் உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் பலவீனமான நிலையில் கையில் கிடைப்பதை கொண்டு தன்னை பலாத்காரம் செய்யும் ஆணை தாக்குவது போன்றது. எனவே இதனை வன்முறை என்ற பதத்தில் சேர்க்கமுடியாது." காரணம் இவைகள் அடக்குமுறைக்கு எதிராக அடக்கப்படுகின்றவர்கள் தற்பாதுகாப்பிற்கு செய்கின்ற தாக்குதல்களே! ஆகவே இவற்றை வன்முறை என்ற பதத்தினுள் கருதக்கூடாது! என்றார்.
ஆகா என்ன புதிய கண்டுபிடிப்பு!
சரி அப்படியே ஏற்றுக்கொள்ளுவோம்
இந்த வாதம் கூறுவதாவது "பாதிக்கப்படுகின்ற, சிறுபான்மையான, பலம் குறைந்த, அதிகாரமற்ற சமூகப்பகுதி தான் எதிர்க்கும் அதிகாரத்துவத்தின் மீது செலுத்துகின்ற பதில்தாக்குதலை "வன்முறை" என்ற வகைக்குள் சேர்க்கமுடியாது." என்பதேயாகும்.
பாலியல் வல்லுறவில் பாதிக்கப்படும் பெண் திருப்பித் தாக்கினால் ?
வன்முறையில் சேர்க்கமுடியாது!
தலித்துக்கள் பிராமணன் மேல் திருப்பித் தாக்கினால்?
வன்முறையில் சேர்க்கமுடியாது!
கறுப்பர்கள் வெள்ளையர் மேல் திருப்பித்தாக்கினால்?
வன்முறையில் சேர்க்கமுடியாது!
சிங்கள பெரும்பான்மையினர் மீது தமிழ் சிறுபான்மையினர் திருப்பித்தாக்கினால்?
வன்முறையில் சேர்க்கமுடியாது!
பெரும்பான்மை கிறிஸ்த்தவர்கள் மேல் சிறுபான்மை முஸ்லிகள் திருப்பித்தாக்கினால் ?
வன்முறையில் சேர்க்கமுடியாது
ஆனால். . . ஆனால். . . ஆனால் . . .
பலத்தில் குறைந்த மட்டக்களப்பான்,
பலத்தில் குறைந்த முஸ்லிம்கள் திருப்பித்தாக்கினால்
மட்டும் "துரோகி" "தொப்பி பிரட்டி"
இதையும் தாண்டி அது புனிதமானது!
ஆயுத பலம் கொண்ட புலிகள் ஆயுத பலத்தில் நாட்டமில்லாத சிறு இயக்கங்களை அழிக்கும் போது திருப்பித்தாக்கினால் . . . ?
வாசகர்களின் முடிவுக்கே இதனை விட்டு விடுகின்றேன்.
இப்போது அவசரப்பட்டு எவரும் முடிவெடுக்கவேண்டாம.
இது புலிகள் தவிர்ந்த மற்றைய இயக்கங்கள் செய்யும் கொலைகளை நியாயப்படுத்த வேண்டும் என்பதாக அர்த்தப்படாது.
கொலைகள், கொலைகள் தான். ஆயுதம் தாங்கியவர்கள் ஆயுதம் தாங்கியவர்களை தாக்கியழிப்பது வேறு, ஆயுதமற்ற அப்பாவிகளை, செய்தியாளர்களை, எதிர்த்து கருத்து கூறுபவர்களை, ஜனநாயகவாதிகளை ஆயுதம் ஏந்தியவர்கள் கொலை செய்து பணியவைப்பது என்பது வேறு. இந்த இரண்டாவது வகை தான் அராஜகம் என்பது.
இன்றைய மாற்றுக்கருத்தாளர்களுக்கு மட்டுமல்ல அனைத்து ஜனநாயக சக்திகளின் முதல் கடமை அரசியல் படுகொலைகள் எந்தத்தரப்பினரால் நடத்தப்பட்டாலும் ஒன்றுபட்டு உரத்தகுரலில் தவறை தவறு என்று முகத்துக்கு முன்னால் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதே. . ! இந்த உறுதியான ஜனநாயகப் போராட்டம் என்பது "ஆயுதம் தாங்கி எவரையும் அழித்துவிடுவோம்" என்கின்ற அராஜகத்தை விடவும் பலமடங்கு வலிமை கூடியது.
சபேசன்
Tuesday, January 23, 2007
சுதேசிப் போர்க்கப்பல் தளபதி: வ.உ.சி
பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஜம்ஷெட்ஜி டாடா 1877இல் தனது நூற்பாலையை நிறுவி அதற்குப் "பேரரசி ஆலை' என்று பெயரிட்டார். கிழக்கிந்தியக் கம்பெனிக்காகச் சீனாவுக்கு கப்பல் மூலம் அபினி கடத்தியதில் கிடைத்த தரகுப் பணத்தையும், 1857இல் ஈரான் மீதும், 1868இல் எத்தியோப்பியா மீதும் பிரிட்டிஷ் இராணுவம் போர் தொடுத்தபோது அவர்களுக்கு உணவு சப்ளை செய்து அந்த "காண்டீன் கான்டிராக்ட்' மூலம் கிடைத்த பணத்தையும் வைத்து இந்த நூற்பாலை துவங்கப்பட்டதால், அந்த நன்றி "பேரரசி ஆலை' என்று வாலை ஆட்டியது. இப்படிப் போதைப் பொருள் கடத்திய டாடாவைத்தான் தொழில் தந்தை என்று பெருமையுடன் குறிப்பிடுகிறது "சுதந்திர' இந்தியா. அதேபோல, தமிழ்நாட்டின் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், ஆங்கில அரசின் ஆசியோடு பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தங்கள் வட்டித் தொழிலை விரிவுபடுத்தியிருந்தனர்.
இந்தியாவின் சுதேசி வணிகர்கள் இப்படியாகத் திரைகடல் ஓடித் திரவியம் தேடிக் கொண்டிருந்தபோது வெள்ளையனை விரட்ட வேண்டும் என்றால் அவனை எதிர்த்துப் போட்டி வர்த்தகம் நடத்த வேண்டும் என்று ஒரு குரல் தூத்துக்குடியிலிருந்து உரத்துக் கூவியது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் வணிகரல்ல. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான வ.உ.சிதம்பரம்.
""ஒரு பரிதாபத்துக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகி. ஏதோ ஒரு உந்துதலில் வெள்ளையனுக்கு எதிராகப் போராடிச் சிறை சென்றவர்'' என்பது போன்ற தோற்றம் வ.உ.சி.யைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் அவர் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்ட ஒரு விடுதலை வீரர். பிரிட்டிஷாருக்கு எதிரான நெருப்பாகவே வாழ்ந்தவர்.
""வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்க்குக் கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே தமிழர்கள் மீண்டும் கடல் மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்'' என்று சுதேசிக் கப்பலுக்கான "விதை' பற்றிக் குறிப்பிடுகிறார் வ.உ.சி. சுதேசிக் கப்பல் என்பது வியாபாரம் அல்ல, அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் வீரியமிக்க வடிவம் என்ற புரிதல் வ.உ.சி.க்கு இருந்தது. எனவே தன்னுடைய கம்பெனிக்கு மிகச் சாதாரண மக்களிடமெல்லாம் பங்கு வசூல் செய்தார் வ.உ.சி. 1906 அக்டோபர் 16ஆம் நாள் "சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி' என்ற பெயரில் சுதேசிக் கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 1907 மே மாதம் "காலியோ, லாவோ' என்ற இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.
கிலி பிடித்த வெள்ளையர்களின் பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியும் (பி.ஐ.எஸ்.என்) பிரிட்டிஷ் அரசும் இணைந்த கைகளோடு சுதேசிக் கப்பலுக்கு எதிராகச் சதிகள் செய்ய ஆரம்பத்தன. தூத்துக்குடிக்கும் கொழும் புக்கும் இடையில் 5 ரூபாயாக இருந்த மூன்றாம் வகுப்புக் கட்டணத்தை 75 பைசாவாகக் குறைத்தது பி.ஐ.எஸ்.என் நிறுவனம். அடுத்த சதியாக, இந்திய இலங்கை ரயில்வே நிர்வாகம், பி.ஐ.எஸ்.என் நிறுவனக் கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கும் பயணிகளுக்கும் ரயிலில் கட்டணச் சலுகை என்று அறிவித்தது.
ஆனாலும் தேசப்பற்று மிக்க மக்கள் இந்த சதி நிறைந்த சலுகைகளைப் புறம் தள்ளி, வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல்களையே ஆதரித்தனர். அதனால் வெள்ளையன் கப்பல் நிறுவனத்திற்கு மாதம் 40,000 வரை நட்டம் ஏற்பட்டது. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல் படுத்தியது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்ட உணர்வை மக்கள் மனதில் விதைத்தது.
சுதேசிக் கப்பல் பதிவு செய்து சரியாக மூன்று மாதம் கழித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ""வெள்ளையர் எதிர்ப்புணர்வு இங்கு நிலவுகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் அதிகம் நிலவுகிறது'' என்று அரசுக்கு அறிக்கை அனுப்பினான். ஆம். நெஞ்சில் நெருப்போடு வெள்ளையர் களுக்கு எதிரான கலவரத்தை நடத்தக் காத்திருந்தது திருநெல்வேலிச் சீமை.
கப்பலோட்டியது மட்டும்தான் வ.உ.சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்ற சித்திரம் தவறானது. பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டலையும் கொடுங்கோன்மையையும் எதிர்த்த மக்கள் போராட்டங்களின் மூலம்தான் விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற பார்வை வ.உ.சி.க்கு இருந்திருக்கிறது.
வெள்ளை முதலாளிகளால் நடத்தப் பட்ட தூத்துக்குடி கோரல் ஆலைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் இதற்குச் சான்றாக இருக்கிறது.
கோரல் ஆலையில் 10 வயதுச் சிறுவர்களும் தொழிலாளர்களாக வேலை வாங்கப்பட்டனர். வார விடுமுறை என்பதே கிடையாது. கூலி மிகக் குறைவு. வேலையில் தவறு நேர்ந்தால் பிரம்படி. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதற்காக வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் கைகோர்த்தனர். ""முதலாளிகளை முடமாக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று இயந்திரங்களுக்கு ஊறு விளைவிப்பது, இன்னொன்று வேலை நிறுத்தம். இரண்டாவது வழியே சிறந்தது'' என்று தொழிலாளர்களிடம் உரையாற்றினார் சிவா. பின்னர் பேசிய வ.உ.சி, இரண்டு வழிகளையும் கையாளுமாறு தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
தொழிலாளர்கள் வ.உ.சியின் "கோரிக்கையை' உடனே நிறைவேற்றினர். மறுநாளே ஆலையின் மீது கற்களை வீசினார்கள். ஆலையின் தண்ணீர்க் குழாயை உடைத்தெறிந்தார்கள். தொழிலாளர் பிரச்சினையை மக்களிடம் பேசி அதனை வெள்ளையருக்கு எதிரான போராட்டமாக மாற்றினார் வ.உ.சி. மக்கள் வீதியில் சென்ற வெள்ளையர்களைக் கல்லால் அடித்த னர். வியாபாரிகள் வெள்ளையருக்கு உணவுப் பொருட்களை விற்க மறுத்தனர். தூத்துக்குடியில் வாழ்ந்த வெள்ளையர்கள் உயிருக்குப் பயந்து தங்கள் இரவுகளைக் கப்பல் கம்பெனி அலுவலகத்தில் கழித்தனர். ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதனால் வெள்ளையனின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாவிதர்களோ வெள்ளையரை ஆதரித்தவர்களுக்குச் சவரம் செய்யவும் மறுத்தனர்.
நிலைமை எல்லை மீறியது. நிர்வாகம் பணிந்தது. வார விடுமுறை, ஊதிய உயர்வு, வேலை நேரக்குறைப்பு ஆகியவற்றுக்கு உடன்பட்டது. தொழிலாளர் பிரச்சினையை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக மாற்றியமைத்த வ.உ.சி.யின் இந்த வியூகம் பிரமிக்க வைக்கிறது. இந்தப் போராட்ட முறை இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்டிருந்தால் பிரிட்டிஷ் அரசு அப்போதே கப்பல் ஏறியிருக்கும்.
வெறுமனே கூலி உயர்வுக்குக் குரல் கொடுக்கிற அமைப்பாகத் தொழிற் சங்கத்தை வ.உ.சி பார்க்கவில்லை. ஏகாதிபத்தியத்தை நாட்டை விட்டே விரட்டுகிற மாபெரும் சக்தியாகவே அவர் தொழிலாளி வர்க்கத்தைப் பார்த்தார். கோரல் ஆலைப் போராட்டம் முடிந்தவுடனேயே அடுத்த அரசியல் போராட்டத்தைத் துவக்குகிறார் வ.உ.சி.
அன்றைய காங்கிரஸ் கட்சியின் திலகர் அணியைச் சேர்ந்த விபின் சந்திரபால் சிறையிலிருந்து விடுதலை அடைந்த நாளை சுயராச்சிய நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்படுகிறது. தடை விதிக்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 மார்ச் 10ம் நாள் வ.உ.சி, சிவா, பத்மநாபன் ஆகியோர் தலைமையில் தடை உத்தரவை மீறுகிறார்கள் மக்கள். வெறி கொண்ட விஞ்ச் மூவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கிறான்.
உடனே திருநெல்வேலியின் கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. வ.உ.சி யின் தீவிர விசுவாசியான ஏட்டு குருநாத அய்யர், திறந்திருக்கும் கடைகளையெல்லாம் மூடுமாறு மிரட்டு கிறார். இதனால் தன் வேலையையும் இழந்து சிறைக்கும் செல்கிறார். சுமார் 4000 பேர் கொண்ட மக்கள் கூட்டம் இந்துக் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு கல்லூரியை இழுத்து மூடுகிறது. கல்லூரி முதல்வர் எர்ஃபர்டு தப்பி ஓடி அருகில் இருந்த பாரி கம்பெனிக்குள் ஒளிந்து கொள்கிறார். பிறகு அந்த மக்கள் கூட்டம் நகரமன்ற அலுவலகம், அஞ்சலகம், காவல் நிலையம், மண்ணெண்ணெய்க் கிடங்கு ஆகிய அனைத்துக்கும் தீ வைத்துக் கொளுத்துகிறது. திருநெல்வேலியே திகு திகுவெனத் தீப்பற்றி எரிகிறது.
எழுச்சி கொண்ட கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த போலீசு ஆயத்தமானபோது ""எங்களோடு சேர்ந்து கொண்டு வெள்ளையரைச் சுடுங்கள்'' என்று போலீசைக் கோருகிறார்கள் மக்கள். தூத்துக்குடி யிலும் கடையடைப்பு. வீடுகளின் மாடிகளிலிருந்து போலீசார் மீது சரமாரியாகக் கற்கள் வீசப்படுகின்றன. தமது முக்கிய வாடிக்கையாளர்களான வெள்ளையர்களை எதிர்த்தும் கசாப்புக் கடைக்காரர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
வேலைநிறுத்தம் முடிந்து 3 நாட்கள் முன்புதான் பணிக்குத் திரும்பியிருந்த கோரல் ஆலைத் தொழிலாளர்கள் கைதுக்கு எதிராக மீண்டும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
வ.உ.சி, சிவா இருவர் மீதும் அரசு நிந்தனை வழக்கு தொடர்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 சூன் 7ஆம் நாளன்று ""வ.உ.சிக்கு ஆயுள் மற்றும் நாடு கடத்தல் தண்டனை'' விதிக்கிறான் நீதிபதி பின்ஹே. அந்தமான் சிறையில் இடப்பற்றாக்குறை காரணமாக நாடு கடத்தல் தவிர்க்கப்படுகிறது. ஆனாலும் கடும் குற்றவாளிகளுக்கு அணிவிக் கின்ற இரும்பு வளையத்தை வ.உ.சி யின் காலில் அணிவிக்கிறது பாளை சிறை நிர்வாகம். கோவை, கண்ணனூர் என அவருடைய சிறைவாசம் தொடர்கிறது. அங்கே கைதிகளின் மீதான சிறைக் கொடுமைகளுக்கு எதிராக வ.உ.சி.யின் போராட்டமும் தொடர்கிறது.
மேல் முறையீட்டில் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு, 1912 டிசம்பர் 24 அன்று கண்ணனூர் சிறையில் இருந்து விடுதலையான வ.உ.சி.க்குக் கிடைத்த வரவேற்பு, காங்கிரஸ் இயக்கத்தின் கையாலாகாத்தனத்தைக் காட்டியது. சுப்பிரமணிய சிவா, கணபதிப் பிள்ளை என்ற இருவரைத் தவிர வ.உ.சியை வரவேற்கக்கூட யாரும் வரவில்லை.
சிறைத்தண்டனை அனுபவித்ததால் வழக்கறிஞர் பணியைத் தொடரும் உரிமை வ.உ.சி.யிடமிருந்து பறிக்கப் பட்டு விட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற அவர் மளிகைக் கடை நடத்தினார், மண்ணெண்ணெய் விற்றார், அரிசி நெய் வியாபாரங்கள் செய்து பார்த்தார். வெள்ளையனை எதிர்த்துக் கப்பல் கம்பெனியே நடத்திய வ.உ.சி.க்கு கடை நடத்தத் தெரியவில்லை. அரசியல் தெரிந்த அளவுக்கு அவருக்கு வியாபாரம் தெரியவில்லை. எனினும் வறுமை அவருடைய அரசியல் ஈடுபாட்டைக் குறைத்துவிடவுமில்லை.
சென்னை, பெரம்பூரில் மளிகைக் கடை வைத்திருந்தபோதுதான் தபால் ஊழியர் சங்கத்தை உருவாக்கினார். அந்தக் காலத்தில் தொழிற்சங்கங் களிலும் காங்கிரஸ் தலைவர்களிடமும் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த அன்னிபெசன்டை எதிர்த்தார். ""மக்கள் எழுச்சி வெள்ளையருக்கு எதிராக வெகுண்டு எழுவதைத் தடுக்கவே அன்னிபெசன்ட் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்'' என்று தொழிலாளர்களிடம் பேசினார். அன்னிபெசன்டோடு சேர்ந்து செயல்படுவதற்காக, தான் தலைவராகக் கருதிய திலகரையும் கண்டித்தார் வ.உ.சி.
காந்தியின் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதபோதிலும் வேறு வழியின்றி அவர் காந்தியின் தலைமையை ஆதரித்தே பேசியிருக் கிறார். காந்தியுடன் கசப்பான தனிப்பட்ட அனுபவமும் அவருக்கு இருந்தது. சிறையிலிருந்து திரும்பிய வ.உ.சியின் குடும்ப வறுமை போக்க, 5000 ரூபாய் நிதி திரட்டி வ.உ.சியிடம் ஒப்படைக்கு மாறு காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்த தமிழர்கள். கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் காந்தி அந்தப் பணத்தை வ.உ.சியிடம் தரவேயில்லை. எனினும் வ.உ.சி. அதைப் பொருட்படுத்தவில்லை. காந்தியின் அகிம்சைக் கொள்கைதான் அவரைப் பெரிதும் இம்சை செய்திருக்கிறது.
சிறுவயல் என்ற கிராமத்தில் ப.ஜீவா நடத்திவந்த ஆசிரமத்துக்குச் சென்றிருக் கிறார் வ.உ.சி. அங்கிருந்த ராட்டை களைப் பார்த்துவிட்டு, ""இங்குள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா?'' என்று ஜீவாவைக் கேட்கிறார். ""ஆம்'' என்று அவர் சொன்னவுடன், ""முட்டாள் தனமான நிறுவனம். வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டை சுற்றச் சொல்கிறாயே'' என்று கோபப்பட்டிருக் கிறார். இந்த உணர்வோடுதான் காங்கிரசில் இருந்திருக்கிறார் வ.உ.சி.
அன்றைய சென்னை மாகாண காங்கிரசில் வ.உ.சிக்கு இணையான தியாகியோ, போர்க்குணமுள்ள தலைவரோ கிடையாது. எனினும் வ.உ.சி க்கு உரிய மரியாதையை காங்கிரஸ் தரவில்லை. அது மட்டுமல்ல, காங்கிரசிலிருந்து வெளியேறிய பின், கேரளத்தின் மாப்ளா
எழுச்சியை ஆதரித்து கோவையில் பேசியதற்காக வ.உ.சி மீது அரசதுரோக வழக்கு தொடுத்தது பிரிட்டிஷ் அரசு. இந்த வழக்கை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை. வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த இந்த வெறுப்பிற்கு வேறொரு வலுவான காரணம் உண்டு.
1925ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரி யாதை இயக்கம், தமிழக அரசியலை இரண்டாகப் பிளக்கிறது. 19.6.27 அன்று கோவில்பட்டியில் நடந்த ஒரு கூட்டத் தில் பெரியாருடன் வ.உ.சியும் கலந்து கொள்கிறார். "எனது தலைவர்' என்று பெரியாரை பெருமையுடன் குறிப் பிட்டுப் பேசுகிறார். பின்னர் பேசிய பெரியார், தனக்கேயுரிய பண்போடு அதை மறுக்கிறார். (குடி அரசு, 26.6.27)
பின்னர் காங்கிரசில் மீண்டும் இணைந்த வ.உ.சி, 1927 சேலம் காங்கிரஸ் மாநாட்டில், ""இம்மகாநாட் டில் குழுமியுள்ளோரில் பெரும்பாலோர் பிராமணரல்லாதோர். நானும் பிராமண ரல்லாதார்தான்'' என்று பேசுகிறார். 1928இல் காரைக்குடியில் சைவ சமயத்தோர் மத்தியில் பேசும்போது அவருடைய பேச்சில் பெரியாரின் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது. பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்ப தையும் மனுஸ்மிருதியையும் கண்டிக் கிறார், சிரார்த்தம் செய்வதைக் கேலி செய்கிறார். பார்ப்பான் என்ற சொல்லை எதிர்ப்பாகவே பயன்படுத்துகிறார். பெண்களின் உரிமை பற்றிப் பேசுகிறார். ""தவறு என்று தெரிந்தால் வள்ளுவரென்ன, சிவபெருமானே ஆனாலும் தள்ளி வைக்க வேண்டியதுதான்'' என்று பேசுகிறார்.
சிறையில் இருந்த போது அவரிடம் நிலவிய சாதி மனோபாவத்தை அவரது குறிப்புகளே கூறுகின்றன. ""பார்ப்பான் அல்லது பாண்டிய வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால்தான் உண்பேன்'' என்று ஜெயிலரிடம் போராடிய வ.உ.சி, பெரியாரின் தாக்கத்தால் பெருமளவு உருமாறியிருக்கிறார் என்பதை மேற்சொன்ன நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.
வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த வெறுப்புக்கான காரணத்தை இனிமேலும் விளக்கத் தேவையில்லை. 1936இல் வ.உ.சி இறந்த பிறகும் அவர் மீதான வெறுப்பை காங்கிரஸ் கைவிடவில்லை. திராவிட இயக்கத்தின் மீதும் பெரியார் மீதும் கட்டுக்கடங்காத காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தவரான ம.பொ.சி தன் அனுபவத்தை எழுதுகிறார். 1939இல் வ.உ.சிக்கு ஒரு சிலை வைக்க ம.பொ.சி முயன்றபோது காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுக்கிறார் சத்தியமூர்த்தி. ""வகுப்புவாத உணர்ச்சி காரணமாகத்தான் நான் ஜஸ்டிஸ் கட்சிக்காரரான வ.உ.சிக்கு காங்கிரஸ் மாளிகை முன்பு சிலை வைக்க முயல்கிறேன் என்று (என் மீது) பழி சுமத்தினார் சத்தியமூர்த்தி'' என்று எழுதுகிறார் ம.பொ.சி.
பிறகு, வேறு வழியில்லாமல் வ.உ.சியை காங்கிரஸ் "கவுரவிக்க' முயன்றபோது அது அவரை மிகக் கேவலமாக இழிவுபடுத்துவதாக அமைந்தது. 1949இல் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே வ.உ.சி யின் பெயரில் கப்பல் விடப்படுகிறது. துவக்க விழாவில் பேசினார் அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி:
""கோரல் மில்ஸ், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி இவற்றின் ஒத்துழைப்புடனும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும்... இந்தக் கப்பல் போக்குவரத்தை இன்று நான் ஆரம்பித்து வைக்கிறேன்.... நம் நாடு முழு விடுதலை பெற்று விட்டது. ஹார்வி கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் இன்று நான் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறேன்... சிதம்பரம் பிள்ளை ஆனந்தக் கண்ணீர் ததும்பத் தம் பெரிய கண்களை அகல விரித்து இந்த விழாவையும் என்னையும் பார்த்துக் கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது'' என்று கொஞ்சமும் வெட்கமில்லாமல் இந்த பச்சைத் துரோகத்தை பெருமை பொங்க விவரித்தார்.
இறந்தவர் மீண்டும் வரக் கூடுமென்றால், வ.உ.சி தனது பெரிய கண்கள் சிவக்க இந்தப் பச்சைத் துரோகத்துக்காக ராஜாஜியின் குரல் வளையைக் கடித்துக் குதறியிருப்பார். அவர் உயிருடன் இருந்த போதே அவர் துவங்கிய கப்பல் கம்பெனி நலிவுற்றது. ""நான் தோற்றுவித்த கப்பல் கம்பெனி நசித்தபின் எங்கள் கம்பெனியைச் சேர்ந்த ஒரு கப்பலை எங்கள் எதிரியான பி.ஐ.எஸ்.என் கம்பெனியாரிடமே அப்போதிருந்த சுதேசிக் கப்பல் அதிகாரிகள் விற்று விட்டது எனது உடைந்த மனதில் உதிரம் பெருகச் செய்தது'' என்று குமுறினார் வ.உ.சி.
எந்த எதிகளை எதிர்த்து வ.உ.சி கப்பல் விட்டாரோ, அந்த எதிரியின் தயவிலேயே கப்பல் விட்டு அதற்கு அவரது பெயரையும் சூட்டிக் களங்கப் படுத்தியது "சுதந்திர' இந்தியா. தன்னுடைய சித்திரவதைகள் மூலம் வ.உ.சியின் உடலிலிருந்துதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ரத்தம் குடிக்க முடிந்தது. காங்கிரஸ் துரோகிகளோ, தேச விடுதலைக்காகத் துடித்து அடங்கிய அந்த உள்ளத்தையும் உடைத்து ரத்தம் குடித்துவிட்டார்கள்.
· வே. மதிமாறன்
கட்டபொம்மனைப்
பாடாத பாரதி!
பாரதியின் பார்ப்பனக் கண்ணோட்டம் பற்றி நாம் விமரிசிக்கும் போதெல்லாம், ""பாரதியை அவரது வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்வது வறட்டுவாதம், பார்ப்பன துவேஷம்'' என்றும் கூறி விமரிசிப்போர் மீதே முத்திரை குத்துவார்கள் பாரதி ஆய்வாளர்கள்.
சரி. வரலாற்றுப் பின்புலத்தில் வைத்தே பரிசீலிப்போம். பாரதி, சத்ரபதி சிவாஜியைப் பாடியிருக்கிறார். கோகலே, தாதாபாய் நவ்ரோஜி, திலகர், லாலா லஜபதி ராய் போன்ற வட இந்தியத் தலைவர்களைப் பற்றிப் பாடியிருக்கிறார். இத்தாலி, பெல்ஜியம், ரசியாவைப் பற்றியெல்லாம் பாடியிருக்கிறார். காக்கை, குயில், கிளி, மரம் மட்டை அனைத்தையும் பாடியிருக்கிறார்.
ஆனால் அவருடைய பக்கத்து ஊரான பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்த கட்டபொம்மனைப் பற்றி ஒரு வரி கூடப் பாடியதில்லை. சிவகங்கைச் சீமையின் சின்ன மருதுவைப் பற்றியும் பாடியதில்லை. பாரதியைப் போன்ற இலக்கிய அறிவோ, உலக ஞானமோ இல்லாத அந்தப் பகுதி மக்கள் கட்டபொம்மனைப் பற்றியும் மருதுவைப் பற்றியும் ஏராளமான கதைப்பாடல்களையும் நாடகங் களையும் உருவாக்கி நிகழ்த்தியும் வந்திருக்கிறார்கள். ஆனால் பாரதி மட்டும் எழுதாதது ஏன்?
ஒரு வேளை இதையும் நாம் பாரதியின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும் போலும்! ""எட்டப்பனின் ஊரான எட்டயபுரத்தில் பிறந்து, எட்டப்பனின் வாரிசான "மன்னனுக்கு'த் தோழனாக இருந்து அவனை அண்டிப் பிழைத்த ஒரு கவிஞன் கட்டபொம் மனைப் பற்றி எப்படி எழுத முடியும்?'' என்று கூட மேற்படி ஆய்வாளர்கள் நம்மிடம் கேள்வி எழுப்பக்கூடும்.
""நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி'', ""அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்'' ... அடேயப்பா! ஈட்டி போல் பாயும் சொற்கள்! பக்கத்து ஊரில் தூக்கில் தொங்கிய விடுதலை வீரனைப் பற்றி எழுத முடியாத தன்னுடைய "நேர்மைத் திறத்தைப் பற்றி' பாரதி ஏதாவது சொல்லியிருக் கிறாரா? அல்லது நெல்லை மாவட்டத் தைச் சேர்ந்த பாரதி பஜனை மண்டலி யினர் தம்முடைய ஆய்வுகளில் இதைப்பற்றி ஏதாவது எழுதியிருக் கிறார்களா?
வே.மாணிக்கம் எழுதிய "தானாபதிப் பிள்ளை வரலாறு' என்ற நூலுக்கான முன்னுரையில் கீழ்க்கண்ட வாறு குறிப்படுகிறார் ஆய்வாளர், ஆ.இரா.வேங்கடாசலபதி:
""கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டயபுரத்தைச் சேர்ந்த பாரதி, கட்டபொம்மனைப் பற்றியோ, பாஞ்சாலங்குறிச்சி பற்றியோ தம் எழுத்துக்களில் எங்கும் சுட்டாதது குறிப்பிடத்தகுந்தது. புதுச்சேரியி லிருந்து மீண்டு, மிகுந்த நலிவுற்று, பொருள் ஆதரவு வேண்டி எட்டயபுரம் மன்னருக்கு 1919இல் ஓலைத்தூக்கும் சீட்டுக் கவியும் எழுதி ஏமாற்றமுற்ற நிலையில், ஸ்வாமி தீட்சிதர் என்பவர் எட்டயபுரம் ஜமீன் பற்றி எழுதிய "வம்சமணி தீபிகை' (1878) நூலைச் செம்மைப்படுத்தித் தர பாரதி முன் வந்தார். எட்டயபுரம் மன்னர் இந்த வேண்டுகோளையும் ஏற்றுக் கொள் ளாத நிலையில், கட்டபொம்மனைப் பற்றி எதிர்மறையாக எழுதும் தீயூழைப் பாரதி தவிர்க்க முடிந்ததே என்று நாம் ஆறுதல் அடையலாம்.''
அதாவது, எட்டயபுரம் மன்னர் மட்டும் காசு கொடுத்திருந்தால் கட்டபொம்மனை அவதூறு செய்து எழுதவும் பாரதி தயங்கியிருக்க மாட்டார் என்கிறார் வேங்கடாசலபதி. அத்தகைய தீயூழிலிருந்து பாரதியைக் காப்பாற்றிய அந்த எட்டப்பன் பரம்பரைக்கே பெரிதும் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள் பாரதி பக்தர்கள்!
Monday, January 22, 2007
ஆங்கிலேயரை அச்சுறுத்திய சூறாவளி
""மனித குல வரலாற்றில் பழி வாங்குதல் என ஒன்று இருக்கிறது. இங்கே பழிவாங்குவதற்கான கருவிகளை உருவாக்குபவன் வன்முறைக்கு இலக்கானவன் அல்ல, அந்த வன்முறையை ஏவியவன்தான் (தனக்கெதிரான) அந்தக் கருவியையே தயார் செய்கிறான். இதுதான் வரலாற்றுப் பழிவாங்குதலின் விதி..... பிரிட்டிஷாரால் சித்திரவதை செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட விவசாயிகளிடமிருந்து தொடங்கவில்லை இந்தியாவின் கலகம். அவர்களால் சோறும் துணியும் தந்து சீராட்டி வளர்க்கப்பட்ட சிப்பாய்களிடமிருந்துதான் தொடங்கியிருக்கிறது.
கார்ல் மார்க்ஸ், செப்,4,1857.
தென்னிந்தியாவில் தொடங்கிய விடுதலைப் போராட்டத்தின் துயரம் தோய்ந்த முடிவுரையாக, எண்ணெய் தீர்ந்த விளக்கின் சுடராக, எரிந்து அடங்கியது 1806 வேலூர் சிப்பாய்ப் புரட்சி. திப்பு என்ற கவிதை கரைந்த பிறகு, தீபகற்பக் கூட்டிணைவு மறைந்த பிறகு, காலனியாதிக்கத்துக்கு எதிரான சக்திகளை ஒன்றாய்க் கட்டும் தலைமை ஏதும் இல்லாததால் அடுத்த 50 ஆண்டுகளில் அநேகமாக இந்தியா முழுமையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது கும்பினியாட்சி.
மராத்தியர்களின் பதவிச் சண்டைகளும், இரண்டு போர்களும் மராத்தா அரசை வீழ்த்தின. பிறகு ராஜபுதனம் வீழ்ந்தது. இந்து முசுலிம் சீக்கியப் படைகளின் வீரமிக்க போருக்குப் பின் லாகூர் உடன்படிக்கை யின் வளையத்தில் பஞ்சாப் வீழ்ந்தது. எஞ்சியிருந்தவை ஏற்கெனவே கும்பினியின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டிருந்த டெல்லி, அவத் (இன்றைய உ.பி, பீகாரின் பெரும்பகுதி) சமஸ்தானங்கள் மட்டுமே.
நவாப் வாஜித் அலி ஷாவின் நிர்வாகம் சரியில்லை என்று சொல்லி, ஒரே ஒரு பேனாக்கோடு கிழித்து 1856 இல் அவத் அரசை கும்பினியாட்சியின் கீழ்க் கொண்டு வந்தான் டல்ஹவுஸி. அவத் மன்னன் கல்கத்தாவில் சிறை வைக்கப்பட்டான். ""பகதூர் ஷாவின் மறைவுக்குப் பின் அவரது வாரிசுகள் தங்களை மன்னர்கள் என்று அழைத்துக் கொள்ளக் கூடாது; செங்கோட்டையைக் காலி செய்து விட்டு டெல்லிக்கு வெளியேதான் தங்கவேண்டும்'' என்று ஆணையிட்டான். ஜான்சி ராணி லட்சுமி பாயின் தத்துப் பிள்ளைக்கு அரசுரிமை மறுக்கப்பட்டது.
எல்லா எழுத்துபூர்வமான ஒப்பந்தங்களையும் மிக அலட்சியமாக மீறியது கும்பினியாட்சி. தாழ்ந்து தாழ்ந்து நாயினும் தாழ்ந்து, இனிமேலும் தாழ்வதற்கோ வாழ்வதற்கோ வழியற்ற கையாலாகாத நிலையில் கொதித்துக் கொண்டிருந்தது பிரபுக்குலம். எனினும் காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்திற்கு அறைகூவல் விட்டுத் தலைமையேற்று நடத்தும் அருகதை அவர்கள் யாருக்கும் இல்லை. எனவே, மக்களின் கோபம் வெடித்தெழும் தருணத்திற்காக நாடு காத்திருந்தது.
···
காலனியாதிக்கத்தால் ஆகக் கொடூரமாகச் சுரண்டப்பட்டவர்கள் விவசாயிகள். கும்பினியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட பகுதிகளில் வரிவிதிப்பு விளைச்சலில் 55% என்ற எல்லை வரை சென்றது. வெள்ளம் வறட்சி எதற்காகவும் வரித்தள்ளுபடி கிடையாது. வரி கட்டாத விவசாயிகளுக்குக் கசையடியும், சிறையும், சித்திரவதையுமே நீதிமன்றத் தீர்ப்புகளாக இருந்தன. ""சித்திரவதை ஆங்கில அரசின் நிதிக்கொள்கையாக இருந்தது'' என்று இதை அம்பலப்படுத்தினார் மார்க்ஸ்.
ஜமீன்தாரி முறை அமலாக்கப்பட்ட பகுதிகளில் முந்தைய ஆட்சியின் நிலப்பிரபுக்களான தாலுக்தார்கள் நீக்கப்பட்டனர். ஜமீன்தார் பதவிகள் ஏலம் விடப்பட்டன. பம்பாய், கல்கத்தா போன்ற நகரங்களைச் சேர்ந்த கந்து வட்டிக்காரர்கள் ஜமீன்தாரி உரிமையை அதிக விலைக்கு ஏலம் எடுத்தார்கள். முந்தைய தாலுக்தார்களிடம் கசிந்த இரக்க உணர்ச்சி கூட இல்லாமல் விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சினார்கள். வட்டி விகிதம் குறித்த பாரம்பரியக் கட்டுப்பாடுகளும், கந்து வட்டிக்காரர்கள் மீது கிராம சமுதாயம் முன்பு கொண்டிருந்த அதிகாரமும் நீக்கப்பட்டு விட்டதால், நகர்ப்புறங்களிலிருந்து வந்திறங்கிய கந்துவட்டிக் கும்பல் விருப்பம் போல விவசாயிகளை ஏமாற்றியது. இது வரை விவசாயிகள் அறிந்திராத நீதிமன்றங்களுக்கு அவர்களை இழுத்தது.
வட்டியும் வரியும் கட்ட முடியாத விவசாயிகளின் நிலம் ஏலம் விடப்பட்டது. தனது உடலின் நீட்சியென இதுகாறும் விவசாயி கருதிவந்த நிலத்தை வேறொருவன் பறிக்கவும் முடியும் என்ற அதிர்ச்சியைப் பல இடங்களில் விவசாய வர்க்கம் முதன் முறையாக எதிர்கொண்டது. நிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கை பன் மடங்கு அதிகரித்தது.
""நம்முடைய நிர்வாகம் ஒரு கடற்பஞ்சைப் போலச் செயல்படுகிறது. கங்கைக் கரையிலுள்ள அனைத்து வளங்களையும் உறிஞ்சி அவற்றை தேம்ஸ் நதிக்கரையில் பிழிந்து விடுகிறது'' என்று மெச்சிக்கொண்டான் வருவாய் ஆணையத்தின் தலைவர் ஜான் சலிவன். ""மெட்ராஸ் மாகாணம் முதல் வங்காளம் வரை நடந்த பச்சையான வெட்கங்கெட்ட கொள்ளை'' என்று இதனைச் சாடினர் மார்க்ஸும் எங்கெல்சும்.
தொழிற்புரட்சி தோற்றுவித்த நவீன எந்திரங்களால் உற்பத்தி செய்யப்பட்ட துணிகளைக் காட்டிலும் இந்தியக் கைத்தறி தரமானதாகவும் மலிவானதாகவும் இருக்கவே, இந்தியாவின் துணி ஏற்றுமதியை 1820இல் முற்றிலுமாகத் தடை செய்தது கும்பினியாட்சி. பிரிட்டனின் துணிகள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்கத் தொடங்கின. உலகப் புகழ் பெற்ற இந்தியாவின் கைவினைஞர்களும் நெசவாளர்களும் பிழைக்க வழியற்று விவசாயத்தை நோக்கித் தள்ளப்பட்டனர்.
இதன் விளைவாக 1770 முதல் 1857 வரை தோன்றிய 12 பெரும் பஞ்சங்கள் லட்சக்கணக்கான மக்களைக் காவு கொண்டன. ""ஒரு வேளைச் சோற்றை வயிறார உண்பது என்றால் என்ன வென்றே 50% விவசாயிகளுக்குத் தெரியாது என்று அன்றைய நிலைமையை வருணித்தான் ஒரு ஆங்கில அதிகாரி. அபினியும் அவுரியும் பயிரிடச் சொல்லி விவசாயிகளையும் பழங்குடி மக்களையும் கட்டாயப்படுத்தியதன் மூலம் உணவு உற்பத்தியை மேலும் அழித்தது ஆங்கில ஆட்சி.
ஜமீன்தார்களுக்கும், கந்துவட்டிக்காரர்களுக்கும், அவர்களை ஏவிவிட்ட கும்பினியாட்சிக்கும் எதிராக எண்ணிறந்த விவசாயிகளின் கலகங்கள் வெடித்தெழுந்தன. அவையனைத்தும் கொடூரமாக நசுக்கப்பட்டன. வரவிருக்கும் எழுச்சிக்குக் கட்டியம் கூறுவது போல 1855இல் எழுந்தது சந்தால் பழங்குடி மக்களின் ஆயுதப்போராட்டம். வங்காளத்திலும் பீகாரிலும் பல பகுதிகளை ஆங்கிலேயரின் நிர்வாகத்திலிருந்தே இரண்டு ஆண்டுகள் விடுவிக்குமளவு போர்க்குணத்துடன் நடைபெற்ற அந்தப் போராட்டம் ஒரு ஆயுதமேந்திய மக்கள் எழுச்சியின் வலிமையை நிரூபித்துக் காட்டியது. எனினும் சமூகமனைத்தையும் தட்டியெழுப்பும் வல்லமை அந்த எழுச்சிக்கு இல்லை. எனவே அத்தகையதொரு கிளர்ச்சிக் காக நாடு காத்திருந்தது.
""பிரிட்டிஷ் சார்ஜெண்டுகளால் பயிற்றுவிக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட இந்தியச் சிப்பாய்களைக் கொண்ட ஒரு இராணுவம், இந்தியா தன் விடுதலையைத் தேடிக்கொள்வதற்கு ஒரு முன்நிபந்தனையாக இருக்கிறது'' என்று ""இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்'' என்ற தன் கட்டுரையில் 1853இல் குறிப்பிட்டார் கார்ல் மார்க்ஸ். ஆங்கிலேய அதிகாரிகளால் பயிற்றுவிக்கப்பட்டு இந்துஸ்தானின் சமஸ்தானங்களை வென்றடக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட அந்த இந்தியச் சிப்பாய்களும் குமுறிக் கொண்டிருந்தார்கள்.
இந்தச் சிப்பாய்கள் என்பவர்கள் யார்? விவசாயத்திலிருந்து துரத்தப்பட்ட விவசாயிகள், வாழும் வழி இழந்த கைவினைஞர்கள், நிலப்பிரபுத்துவச் சமூகத்தின் இடைநிலை, கீழ்நிலை வர்க்கங்களிலிருந்து பிய்த்தெறியப்பட்டு சோற்றுக்கு வேறு தொழில் இல்லாமல் பட்டாளத்தில் சேர்ந்த பரிதாபத்துக்குரிய மக்கள்.
என்னதான் பாசறைகளில் அடைக்கப்பட்டிருந்தாலும், சோறும் துணியும் சம்பளமும் வழங்கப்பட்டாலும் சமூகத்தின் மற்றெல்லாப் பிரிவினரிடமும் வெளிப்பட்டுக் கொண்டிருந்த ஆங்கிலேய எதிர்ப்புக் கோபம் சிப்பாய்களுக்குள்ளும் கனன்று கொண்டிருந்தது. சீருடை அணிந்த விவசாயிகள் என்று அழைக்கப்படும் சிப்பாய்கள் விவசாயிகளின் உணர்வைப் பகிர்ந்து கொண்டார்கள்.
அவத் சமஸ்தானத்திலிருந்து வந்த 75,000 சிப்பாய்களால், தங்கள் நாடு பறிக்கப்பட்டு மன்னன் சிறை வைக்கப்பட்ட அவமானத்தைச் சகிக்க இயலவில்லை. ஆங்கிலேய ஆட்சி வந்தவுடனே விவசாயிகள் மீது அதிகரிக்கப்பட்ட வரிவிதிப்பு அவர்களுடைய குடும்பங்களை நேரடியாகத் தாக்கியது. ஆப்கான் போன்ற தொலைதூரப் பகுதிகளுக்குப் போரிடச் சென்றால் கொடுக்கப்பட்டு வந்த படித்தொகையை திடீரென்று நிறுத்தியது அவர்களுடைய ஆத்திரத்தை மேலும் கிளறிவிட்டது.
பிரபுக்குலத்தையே இழிவாக நடத்திய ஆங்கிலேய ஆட்சி, சிப்பாய்களை அற்பப் புழுக்களைப் போல நடத்தியது. ""நீக்ரோ என்றும் பன்றி என்றும்தான் சிப்பாய்களை அழைக்கிறார்கள் அதிகாரிகள். ஹைதரைப் போன்ற இராணுவ மேதையாக இருந்தாலும் அவன் எந்தக் காலத்திலும் ஒரு கீழ்நிலை ஆங்கிலேயச் சிப்பாயின் ஊதியத்தை எட்டவே முடியாது. 30 ஆண்டுகள் விசுவாசமாகச் சேவை புரிந்திருந்தாலும் நேற்று வந்திறங்கிய ஒரு ஆங்கிலேய விடலைப் பையனின் கிறுக்குத்தனமான உத்தரவுகளிலிருந்து அவன் தப்ப முடியாது'' என்று சிப்பாய்களின் அன்றைய நிலைமையைப் பதிவு செய்திருக்கிறார்கள் ஆங்கில வரலாற்றாசியர்கள்.
1824இல் பரக்பூரின் இந்துச் சிப்பாய்கள் கடல் மார்க்கமாக பர்மா செல்ல மறுத்தபோது அந்தப் படைப்பிரிவே கலைக்கப்பட்டு அனைவரும் பீரங்கி வாயில் வைத்துப் பிளந்தெறியப்பட்டார்கள். ஆப்கன் போரின் போது தாங்கள் கேவலமாக நடத்தப்பட்டதை எதிர்த்த ஒரு இந்துச் சிப்பாயும் முசுலிம் சிப்பாயும் ஒன்றாக நிற்கவைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பாரக்பூரின் இளம் சிப்பாய் மங்கள் பாண்டே மேலதிகாரியைத் தாக்கிய குற்றத்துக்காக மார்ச் 1857இல் தூக்கிலிடப்பட்டான்.
ஒரு பெரும் கிளர்ச்சி வெடிப்பதற்குத் தயாராக இருந்தது. துப்பாக்கியின் குதிரையை அழுத்தியவுடனே சீறிப்பாய்வதற்குத் தோதான கொழுப்பு தடவிய தோட்டாவை வழங்கியதன் மூலம் கலகத் துப்பாக்கியின் குதிரையைத் தானே தட்டிவிட்டது பிரிட்டிஷ் அரசு. ஆம், அது கலகத்தின் தோற்றுவாய் அல்ல, ஒரு தூண்டுதல்.
உடைமை இழந்து, பாரம்பரியத் தொழிலை இழந்து, அடிமைப்படுத்தப்பட்டு, எதிர்க்க முடியாமல் அடங்கிக் கிடந்த ஒரு சமூகம், தனது சுயகவுரவத்தின் மீது திட்டமிட்டே நடத்தப்பட்ட சகிக்கவொண்ணாத தாக்குதலாக இதனைக் கருதியிருக்கிறது. இந்து, முசுலிம் மத நம்பக்கைகளுக்கு எதிராக அரசாங்கத்தின் துணையுடன் ஐரோப்பியப் பாதிரிகள் நடத்தி வந்த பகிரங்கமான பிரச்சாரமும், இராணுவத்திலேயே மேற்கொள்ளப்பட்ட மதமாற்ற நடவடிக்கைகளும் நியாயமானதொரு அச்சத்தை அவர்களிடம் தோற்றுவித்திருக்கிறது. சாதிகளாகவும், மதங்களாகவும், பாளையங்களாகவும் பிரிந்து நின்று கொண்டு, ஒரு கூலிப்படையின் உணர்ச்சியோடு, கும்பினியாட்சியின் வெற்றிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிக் கொண்டிருந்த சிப்பாய்களை ஒன்றிணைக்கும் ஒரே உணர்வாக அன்று மத உணர்வு செயல்பட்டதில் வியப்பேதும் இல்லை. எவ்வாறாயினும் தோட்டாவின் உறையில் தடவப்பட்ட அந்தக் கொழுப்பு, காலனியாதிக்கக் கொழுப்பின் ஒரு உருவகமேயன்றி வேறல்ல.
மாட்டுக் கொழுப்பும் பன்றிக் கொழுப்பும் தடவப்பட்ட தோட்டா உறைகளைப் பயன்படுத்த மறுத்தனர் மீரட்டின் சிப்பாய்கள். 85 பேர் உடனே வேலைநீக்கம் செய்யப்பட்டனர். 10 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு, மே9ம் தேதியன்று கைகால்களில் விலங்கு பிணைக்கப்பட்டு அவர்கள் சிறைக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.
··
வெடித்தது கலகம். மே 10ஆம் தேதியன்றே சிறையை உடைத்து தம் தோழர்களை விடுவித்த சிப்பாய்கள் ஆங்கிலேய அதிகாரிகளைச் சரமாரியாக வெட்டினார்கள், சுட்டார்கள். கலகக் கொடி உயர்ந்தது. மீரட் வீழ்ந்தது. மொத்த "இந்துஸ்தானத்'தின் தலைமைப் பீடமாக இருந்த முகலாயப் பேரரசின் தலைநகரான டெல்லியை நோக்கி, மீரட்டின் படை இரவோடிரவாக விரைந்தது.
டெல்லியில் வந்திறங்கிய மீரட் படையைக் கண்டவுடனே, டில்லியில் இருந்த பிரிட்டிஷ் இராணுவத்தின் சிப்பாய்கள் தங்களது வெள்ளை அதிகாரிகளைக் கொன்று வீசிவிட்டு நகரத்தைக் கைப்பற்றினார்கள். முதுமையில் தளர்ந்து, அதிகாரமின்றித் துவண்டு கிடந்த பகதூர் ஷாவை "இந்தியாவின் சக்ரவர்த்தி' என்று பிரகடனம் செய்தார்கள். படைவீரர்களின் கலகமாகத் தொடங்கிய போராட்டம், இந்தப் பிரகடனத்தின் மூலம் அந்தக் கணமே ஒரு காலனியாதிக்க எதிர்ப்புப் புரட்சிப் போராக மாறிவிட்டது.
டெல்லி போர்க்கோலம் பூண்டது. பார்த்த இடத்திலெல்லாம் மக்கள் ஆங்கிலேயரை வெட்டிச் சாய்த்தனர். டெல்லி ஆயுதச்சாலை கைப்பற்றப் பட்டது. ""எல்லா தேசங்களும் மாகாணங்களும் இணைந்த ஒரு கூட்டமைப்பை உருவாக்குவோம், பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கி எறிவோம்!'' என்று அறிவித்தார் பகதூர் ஷா.
மொத்த வங்காளப் படையும் ஒரே சிப்பாய் போல எழுச்சியில் இணைந்தது. அவத், ரோஹில்கண்டு, தோப், புந்தேல் கண்டு, மத்திய இந்தியா, பீகாரின் பெரும்பகுதி, கிழக்குப் பஞ்சாப் என கிளர்ச்சித் தீ பற்றிப் பரவியது. ராஜஸ்தான், மராட்டியம், ஐதராபாத், வங்காளம் என்று ஆங்காங்கே குறுநில மன்னர்களும் முன்னாள் நிலப்பிரபுக்களும் விவசாயிகளும் கைவினைஞர்களும், சிறு வணிகர்களும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
வேல், ஈட்டி, வில் அம்புகள், அரிவாள் எனக் கையில் கிடைத்த ஆயுதங்கள் எல்லாம் வெள்ளையருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன. சிப்பாய்களே இல்லாத இடங்களிலும் கலகம் பரவியிருந்தது. பீகார், உத்திரப் பிரதேச விவசாயிகளின் பீறிட்டெழுந்த கோபம் கந்துவட்டிக்காரர்கள் மீது பாய்ந்தது. அவர்களுடைய கணக்குப் புத்தகங்கள் தீக்கிரையாகின. காவல்
நிலையங்கள், வருவாய்த்துறை அலுவலகங்கள், கோர்ட்டுகள் அழிக்கப்பட்டன.
பிரிட்டிஷ் ஆட்சி தூக்கியெறியப் பட்டு விடுமோ என்ற பீதி பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்திடம் பரவத் தொடங்கி விட்டது. பிரிட்டனிலிருந்தும், இலங் கையிலிருந்தும், நேபாளத்திலிருந்தும், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் துருப்புகள் தருவிக்கப்பட்டனர். ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியச் சிப்பாய்கள் இழைத்த "கொடிய சித்திரவதைகள்' பற்றிய கதைகள் இலண்டன் நாளேடுகளில் நிரம்பி வழிந்தன.
இதுவரை காணாத மூர்க்கத்துடன் தாக்கிய இந்த எழுச்சியில் வெளிப்பட்ட வன்முறையைக் காட்டிலும், இதில் வெளிப்பட்ட இந்துமுசுலிம் ஒற்றுமை தான் ஆங்கிலேயரைப் பெரிதும் கலக்கத்துக்குள்ளாக்கியது. முகலாயப் பேரரசை "இந்துஸ்தானத்'தின் அரசாக இந்துக்கள் அங்கீகரித்தார்கள் என்றால், கிளர்ச்சி வெற்றி பெற்ற இடங்களிலெல்லாம் நல்லெண்ண நடவடிக்கையாகப் பசுவதைத் தடையை முசுலிம்கள் அறிவித்தார்கள். சிப்பாய்களிடமிருந்தும் விவசாயிகளிடமிருந்தும் தோன்றிய இந்தக் கிளர்ச்சித் தீ, மேல்நோக்கிப் பரவி முன்னாள் ஜமீன்தார்களையும் பின்னர் குறுநில மன்னர்களையும் தழுவிக் கொண்டது. அவர்களில் பலரை மக்கள் நாயகர்களாக மாற்றியது.
கான்பூரில் நானாசாகேப் தலைமை தாங்கினார். பிரிட்டிஷாரை விரட்டி விட்டுத் தன்னை அரசனென்றும் பகதூர் ஷாவைப் பேரரசன் என்றும் பிரகடனம் செய்தார். கொரில்லாப் போரில் சிறந்த தாந்தியா தோப், அரசியல் பிரச்சாரத்தில் சிறந்த அசிமுல்லா ஆகியோர் இந்தக் கிளர்ச்சியில் அவரது தளபதிகள்.
லக்னோவின் புரட்சி அரசாங்கத்தை 10 மாதங்கள் நடத்திக் காட்டினார் பேகம் ஹஸ்ரத் மகல். ஹஸ்ரத் மகல் செய்த எல்லாப் பிழைகளையும் பொறுத்து மன்னிப்பு அளிப்பதாகவும், பென்சன் வழங்குவதாகவும் பிரகடனம் வெளியிட்டார் விக்டோரியா மகாராணி. ஹஸ்ரத் அதை வீசி எறிந்தார். ""சில கோழைகள் பரப்பி விட்ட அந்த முட்டாள்தனமான பிரகடனத்தின் பின்னால் உள்ள அவர்களின் நோக்கம் என்ன என்று பாருங்கள், அதை அம்பலப்படுத்துங்கள். எச்சரிக்கையாக இருங்கள்!'' என்று தன் மக்களுக்கும் சிப்பாய்களுக்கும் அறிவித்தார் ஹஸ்ரத். போராடித் தோற்ற பிறகும் எதிரியின் கரங்களில் சிக்கிவிடக் கூடாதென்று இமயத்தின் அடிவாரக் காடுகளில் தன் மகனோடு அலைந்து திரிந்து, 15 ஆண்டுகள் எளிய வாழ்க்கை வாழ்ந்து இறந்தார்.
சென்னை மாகாணத்திலிருந்து பைசாபாத் சென்று மக்கள் மத்தியில் ஆயுதப்புரட்சியைப் பிரச்சாரம் செய்து அணிதிரட்டி, 1857இலேயே பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர்கொண்டு தோற்கடித்தவர் மவுல்வி அகமதுல்லா. சிப்பாய்ப் புரட்சி அவரை மாபெரும் தலைவராக்கியது.
பிரிட்டிஷ் ஆட்சியால் சொத்து பறிக்கப்பட்ட ஜமீன்தாரான குன்வர்சிங்கின் வயது 80. எழுச்சிக்குத் தலைமை வகித்து களத்திலேயே வீர மரணமடைந்த அவரைப் பற்றிப் பல தாலாட்டுகள், கதைப்பாடல்கள். குன்வர் சிங் இன்னமும் மக்களின் நாவில் பாட்டாய் நடக்கிறான்.
இளம் அரசியான ஜான்சி ராணி லட்சுமி பாய், ஒரு ஆண் பிள்ளையைத் தத்து எடுத்து தன் வாரிசாக நியமிக்க விரும்பியதைத் தடுத்து, ஜான்சியைக் கவர்ந்து கொண்டது பிரிட்டிஷ் அரசு. சிப்பாய்கள் மத்தியில் கலகத்தைத் தூண்டுவதாகவும் லட்சுமி பாய் மீது குற்றமும் சாட்டியது. போரில் இணைந்து கொள்ள முதலில் சற்றுத் தயக்கம் காட்டிய லட்சுமிபாய், களத்தில் இறங்கியபின் இறுதிவரை படையை வழிநடத்தினார். ""நம் கைகளால் நம் சுயராச்சியத்தை என்றும் புதைக்க மாட்டோம்'' என்று அவருடைய தலைமையில் உறுதிமொழி எடுத்தனர் சிப்பாய்கள்.
அவரது படையில் பெண்கள் பீரங்கிகளை இயக்கினார்கள், குண்டுகளையும் போர்க்கலன்களையும் சுமந்து சென்று வீரர்களுக்கு விநியோகித்தார்கள். தாந்தியா தோப்பின் உதவியுடன் குவாலியரைக் கைப்பற்றினார் லட்சுமிபாய். மன்னன் சிந்தியாவின் 20,000 வீரர்கள் லட்சுமிபாயுடன் சேர்ந்து கொள்ளவே, ஆக்ராவிற்குத் தப்பியோடி வெள்ளையரிடம் தஞ்சம் புகுந்தான் சிந்தியா. சிப்பாயின் உடையணிந்து குதிரை மீது அமர்ந்தபடி ஜூன் 1858இல் போர்க்களத்தில் உயிர் நீத்தார் ஜான்சி ராணி. அவருடைய உயிர்த்தோழியான முசுலிம் பெண்ணும் அவருடன் போர்க்களத்திலேயே மடிந்தார். சிப்பாய்களுக்குச் சிறந்த உணவையும், தனக்கு எளிய உணவையும் கொடுக்க கட்டளையிட்டார் ஜான்சி ராணி. களத்தில் உயிர்நீத்த சமயத்தில், தன் செல்வங்களை எல்லாம் தன் வீரர்களிடம் கொடுத்துவிடச் சொன்னார். எங்கள் கண் இமைகளில் உன்னைக் காப்பாற்றுவோம் ஜான்சி ராணி என்று தொடங்கும் நாட்டுப்புறப் பாடல் இன்னமும் உயிர் வாழ்கிறது.
1857 சிப்பாய்ப் புரட்சி தோற்றுவித்த வீரப்புதல்வர்கள் ஏராளம். தனித்தனிப் போர்க்களங்களில் அவர்கள் காட்டிய வீரமும், போர்த்திறனும் வியக்கத்தக்கவையாக இருந்தன. டெல்லியில் வீட்டுக்கு வீடு போர் நடந்தது. ""ஆயிரம் அடி தொலைவில் இருந்த டெல்லி கோட்டையைப் பிடிக்க, பிரிட்டிஷாரின் பீரங்கிப் படைக்கு 10 நாட்கள் பிடித்தது என்றால் அது இராணுவ அதிசயம்.. கோட்டையின் மதிள் மேலிருந்து சிப்பாய்கள் முறையான பீரங்கித் தாக்குதல் நடத்தியிருந்தால் ஆங்கிலேயர்கள் தலையால் தண்ணீர் குடித்திருப்பர்'' என்று டெல்லிப் போரை வருணித்தார் எங்கெல்ஸ்.
எனினும் செப்டம்பர் 1857இல் டெல்லியைக் கைப்பற்றியது பிரிட்டிஷ் படை. பகதூர் ஷாவின் இரண்டு மகன்களை ஹோட்ஸன் என்ற இராணுவ அதிகாரி நேருக்கு நேர் சுட்டுக் கொன்றான். பகதூர் ஷா பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். குன்வர்சிங், அகமதுல்லா போன்ற பல தலைவர்கள் 1859இல் கொல்லப்பட்டனர். சரணடைய மறுத்த நானா சாகிப் நேபாளத்துக்குத் தப்பிச் சென்றார். இறுதிவரை கொரில்லாப் போர் தொடுத்த தாந்தியா தோப், தூங்கும்போது துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
தலைமையை இழந்த பின்னரும் 1859 வரை போர் தொடர்ந்தது. அவத் சமஸ்தானத்தில் கொல்லப்பட்ட 1.5 லட்சம் பேரில், 50,000 பேர் மட்டுமே சிப்பாய்கள், ஏனையோர் மக்கள் என்ற விவரம் இந்த எழுச்சியின் மக்கள் திரள் தன்மைக்குச் சான்று கூறுகிறது.
எரிமலையாய் வெடித்து எரிந்த புரட்சி, மெல்ல அவிந்து அடங்கியது. கோடிக்கணக்கான மக்களைத் தன் பக்கம் ஈர்த்தபோதிலும் இது நாடு தழுவிய எழுச்சியாக விரியவில்லை. பெரும்பாலான மன்னர்கள் இதனை ஆதரிக்கவில்லை என்பதுடன், படை அனுப்பி எழுச்சியை ஒடுக்க பிரிட்டிஷாருக்கு உதவினார்கள். குவாலியரின் சிந்தியா, இந்தூரின் ஹோல்கர், ஐதராபாத் நிஜாம், சீக்கிய, ராஜபுதன மன்னர்கள், ஜோத்பூர், பாட்டியாலா, காஷ்மீர் மற்றும் நேபாள மன்னர்கள் .. என்று துரோகிகளின் பட்டியல் மிகவும் பெரிது. ""மன்னர்கள் மட்டும் தடுப்பரண்களாகச் செயல்பட்டிருக்கவில்லை என்றால், இந்தச் சூறாவளியின் பேரலை நம்மைத் தூக்கி வீசியிருக்கும்'' என்றான் கவர்னர் ஜெனரல் கானிங்.
கந்து வட்டிக்காரர்களும், புதிய ஜமீன்தார்களும், சென்னை, பம்பாய், கல்கத்தாவைச் சேர்ந்த பெருவணிகர்களும் புரட்சியை எதிர்ப்பதில் பிரிட்டிஷ் ஆட்சிக்குத் துணை நின்றார்கள். உலகெங்கும் காலனிகளைக் கொள்ளையடித்த செல்வமும், முதலாளித்துவப் பொருளாதாரம் வழங்கிய வலிமையும், தொழில்முறையில் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவமும் பிரிட்டனின் வெற்றியை எளிதாக்கின. இருப்பினும், இன்னொரு எழுச்சி தோன்றிவிடக் கூடாது என்ற கவலையின் காரணமாகக் கும்பினி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து இந்தியாவின் நிர்வாகத்தை நேரடியாகத் தன் கையில் எடுத்துக்கொண்டது பிரிட்டிஷ் அரசு.
1857இன் சிப்பாய்களிடம் வீரம் இருந்தது, தியாக உணர்ச்சி இருந்தது. ஆனால் நவீன ஆயுதங்களோ, ஒருங்கிணைந்த இராணுவத் திட்டமோ இல்லை. கிளர்ச்சி செய்த விவசாயிகள் புதிய ஜமீன்தார்களை விரட்டினார்கள், கந்து வட்டிக் கணக்குகளைக் கொளுத்தினார்கள், ஆனால் அதன்பின் செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள். ஆம். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் முழு வலிமை பற்றிய புரிதல் அவர்களுக்கு இல்லை. அதனை அகற்றியபின் நிறுவப்போகும் அரசமைப்பு குறித்த தெளிவும் இல்லை. எனவே காலனியாதிக்க எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கூறுகளைக் கொண்டிருந்த போதிலும் அந்த எழுச்சி தேங்கி நின்றது.
ஆயினும், மன்னர்களும் பிரபுக்குலமும் தமது போராட்டத்திற்குத் தலைமை தாங்கி வழிநடத்தும் தகுதியிழந்து விட்டார்கள் என்பதை சிப்பாய்களும் மக்களும் தமது அனுபவத்தில் புரிந்து கொண்டார்கள். புதியதொரு அதிகார அமைப்பை உருவாக்கத் தொடங்கினார்கள். 6 சிப்பாய்களும் 4 சிவிலியன்களும் இணைந்த ஒரு நிர்வாகக் கமிட்டியொன்று டெல்லியில் உருவாக்கப் பட்டது. நிர்வாகம் மற்றும் இராணுவம் தொடர்பான எல்லா முடிவுகளையும் ஓட்டெடுப்பு நடத்தி அது முடிவு செய்தது.
""கலகத்தை உடனே அடக்கவில்லை என்றால், நாம் புதிய பாத்திரங்களை மேடையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்'' என்று பிரிட்டிஷ் அரசை எச்சரித்தான் டிஸ்ரேலி. அத்தகைய புதிய பாத்திரங்கள் உடனே தோன்றி விடவில்லை. டிஸ்ரேலியின் அச்சம் மெய்ப்பிக்கப்படுவதற்கு இந்தியா மேலும் சில காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.
விடுதலைப் போராட்ட மரபின் வீரியமனைத்தையும் உட்செரித்துக் கொண்ட வீரனுக்காக, "காலனியாதிக்கத்தை அதன் உயிர் நிலையில் தாக்க வல்லது கம்யூனிசமே' என்று முழங்கத் தெரிந்த மாவீரன் பகத்சிங்கிற்காக, இந்தியா மேலும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
· குப்பண்ணன்
Sunday, January 21, 2007
கருணா கும்பலுக்கு, ஒளிவட்டம் கட்டும் எடுபிடி ஜனநாயகம்
பி.இரயாகரன்
21.01.2007
ஜனநாயகத்துக்கும் பேச்சாளர்கள். கேடுகெட்ட ஒரு அரசியல் விபச்சாரம். புலிக்கு மட்டுமா பேச்சாளர்கள், இல்லை, கருணா தரப்புக்கும் தான் பேச்சாளர்கள். ஒரே பாணி அதே குட்டை. இதைச் சுற்றி இரண்டுக்கும் ஒரேவிதமான கோமாளித் தொண்டர்கள். எதையும் எப்படியும் நியாயப்படுத்தும் அரசியல் எடுபிடித்தனம். இவர்களின் திடீர் ஜனநாயகமோ எதையும் எப்படியும் கொத்திக் கிளறும், அமெரிக்க வகைப்பட்ட ஜனநாயகம்.
ரீ.பீ.சீ நடத்தும் அரசியல் ஆய்வரங்கில் தான், மீண்டும் இந்த காட்சி படிமானங்களுடன் அரங்கேறியது. தமது ஜனநாயக முகம் எவ்வளவு வக்கிரம் கொண்டது என்பதை, அவர்களே தம் முகத்தைக் கீறிக் காட்டினார்கள். கருணா குழுவின் மக்கள் விரோத செயல்களை (அது மட்டடும் தான் அவர்களின் அரசியல்) நியாயயப்படுத்தும் வகையில், பலவிதமான திடீர் ஜனநாயக கூக்குரல்களை ரீ.பீ.சீ யில் அரற்கேற்றினர்.
இந்தளவுக்கும் இவர்கள் வாலையாட்டி வள்ளென்று எகிறிக் குலைக்கும் கருணா குழு, மக்களைச் சார்ந்து நிற்காத ஒரு கூலிக் கும்பல். பேரினவாத சிங்கள இராணுவ நோக்கத்துக்கும், அரசியல் நோக்கத்துக்கும் துணைநிற்கும் கைக்கூலிகள். புலிகளைப் போல் அல்லாது, ஆயிரமாயிரம் மக்களை கொன்ற, கொன்று கொண்டிருக்கின்ற இராணுவத்தின் மலத்தை துடைத்தபடி, அதை நக்கும் ஒரு கூலிக் கும்பல் தான் கருணா குழு. இந்த சிங்கள பேரினவாத இராணுவம் 1971 இல் 30 ஆயிரம் சிங்கள இளைஞர்களை கொன்று குவித்தது. 1979-1980 இல் 60 ஆயிரம் சிங்கள இளைஞர்களை கொன்றொழித்த, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களைக் கொன்ற ஒரு இராணுவத்தின் எடுபிடிகளாக, கைக் கூலி குண்டர் படையாக செயல்படுவவர்கள் தான் இந்த கருணா கும்பல்.
இப்படி கொலையும், கொள்ளையுமாக திரியும் ஒரு குழுவுக்கு, ரீ.பீ.சீ என்ற புலியெதிர்ப்புக் கும்பல் ஒளிவட்டம் காட்டுகின்றது. இதற்குள் ஜனநாயக வழி பற்றிய விவாதம். மக்களுக்கு எதிராக செயல்படுவதில் மானம் கெட்டு, அரசியல் ரீதியாக மன்னிக்க முடியாதபடி இழிந்து குலைக்கின்றனர். இதையே புலிக்கு மாற்றாக, இந்த ரீ.பீ.சீ யைச் சுற்றியுள்ள புலியெதிர்ப்புக் கும்பல் முன்வைப்பது, மன்னிக்க முடியாத வரலாற்றுக் குற்றம். இந்த கும்பல்கள் தமிழ் பகுதிகளை இராணுவம் ஆக்கிரமிக்கும் போது, ஏதோ தமது வெற்றியாக இணையங்களில் கொண்டாடுவதும் வெட்கக்கேடு. இந்தக் கொண்டாட்டத்தினுடாகவே, மோதலில் அகதியாக வரும் அகதிகளுக்கு நீலிக்கண்ணீர் வடித்து நிதி சேகரிக்கின்றனர். மக்களுக்கு சேவை செய்வதாக காட்டி விளம்பரம் செய்ய, அங்குள்ள இராணுவ எடுபிடிகள் அதை படம் எடுத்து இணையங்களில் போடுகின்றனர்.
இப்படி மக்களை ஏமாற்ற ஒரு எடுபிடி அரசியல் அரங்கேறுகின்றது. 18.01.2007 அன்று ரீ.பீ.சீ யில் கருத்துரைத்த நியூட்டன் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். ரீ.பீ.சீ புலி ஜனநாயக மீறலை மட்டும் அம்பலப்படுத்துவதாகவும், கருணா தரப்பு மீறல்களைப் பற்றி பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு நடந்த சில சம்பவங்களை உதாரணத்துக்கு குறிப்பிட்டார். இங்கு நியூட்டன் இக் குற்றச்சாட்டை முன்வைத்த போது, ரீ.பீ.சீயின் ஜனநாயகத்துக்கான அரசியல் என்ன என்ற கேள்வியை எழுப்பி, அந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. அந்தளவில் அவரின் சமூக அக்கறை கேள்விக்குரியதாகி நின்றது. ஆனால் அவரின் குற்றச்சாட்டின் சாரம் நியாயமானது, உண்மையானது.
இந்த நியாயமான உண்மையை கண்டு வெகுண்டு போன புலியெதிர்ப்பு கருணா கும்பலின் எடுபிடிகள், அவருக்கு எதிராக காறித் துப்பினர். விடையத்தை பலவிதமாக, பல கோணத்தில் திரித்தனர். குறித்த புளொட் நபரின் கொலை தொடர்பாக நியூட்டன் கருணா மீது குற்றம் சாட்டியதைக் குத்திக்காட்டி, அதை புளொட்டே தனது வரலாற்று ரீதியியான ஒரு தொடர்சியான கொலை என்றனர். புளொட்டின் எடுபிடியாக இயங்கும் ரீ.பீ.சீ யின் மற்றொரு ஆய்வாளர் ஜெகநாதன், இதை புலிகள் இராணுவ உளவு பிரிவுக்கு பணம் கொடுத்து செய்ததாக நம்பப்படுகின்றது என்றார். இப்படி அந்தக்கொலையை ஓட்டி ஆளுக்காள், தம் நிறத்துக்கும் தோலுக்கும் ஏற்ப விளக்கம் அளித்தபடி, நியூட்டன் மீது காறித்துப்பினர்.
நன்கு அறியப்பட்ட இந்த புனைபெயர் பேர்வழிகள் முதல் அனைவரும், இதை அரசியல் ரீதியாக விவாதிக்க தயாரற்று, இதை புரட்டிப் போட்டபடி அவரவர் பணிக்கு இதை விபச்சாரம் செய்தனர். நியூடனின் விமர்சனத்தை தொடர்ந்து கருணாவை சந்தித்ததாக பீற்றிக்கொண்ட அந்த ஆய்வு அலுக்கோசு, தனது கோயில் தர்மகர்த்தா வழியில் பதிலளித்தது. இப்படி ஜனநாயகத்தை இழிவுபடுத்துவதில் பற்பல வக்கிரங்கள், அதிலும் பல ரகங்கள். ஆனால் லண்டனில் இருந்து முதன்முதலாக ரீ.பீ.சீக்கு வந்த ஒருவர், நியாயமாக இதையொட்டி சில கேள்விகளை எழுப்பினார்.
1.புலிகளுடன் கருணா இருந்த கடந்தகாலத்தில் நடந்த கொலைகளுக்கும், கருணாவுக்கும் எந்த வகையில் தொடர்பு உண்டு?
2.புலிகளில் நடந்த சம்பவங்கள் பற்றி கருணாவின் நிலைப்பாடுகள் என்ன?
இதை அவர் ஏன் ஒரு சுயவிமர்சனமாக செய்யவில்லை என்றார். மிகவும் தெளிவான துல்லியமான கேள்வி. ரீ.பீ.சீயில் சொறி நாயாக குலைக்கும் எந்த தெருநாய்களுக்கும் மண்டையில் உறைக்கும்படியான கேள்வி.
கருணா பிரிந்து வந்தவுடன் செய்ய வேண்டிய முதல் அரசியல் பணி, கடந்த காலத்தை சுய விமர்சனமாக பார்த்தல் தான். இது தான் அவரின் அணியை, சரியான மக்கள் வழிக்கு இட்டுச் செல்லும். புலிகளில் இருந்தபோது எது எமது தவறு என்பதை தெளிவுபடுத்தி, எது சரியானது என்பதை சுட்டிக்காட்டி, எதை மக்களுக்காக செய்ய வேண்டும் என்பதை முன்வைப்பதன் மூலம், தனது அணியை அரசியல் ரீதியாக வழிநடத்தியிருக்க வேண்டும்.
இதைச் செய்தல் தான், பாசிச அமைப்பில இருந்து வந்தவர்களின் குறைந்தபட்சம் முதலாவது அரசியல் முன்முயற்சியாகும். இதை செய்ய முடியாதவர்கள், செய்ய மறுப்பவர்கள், எதைக் கொண்டு தான் கடந்தகாலத்தை விமர்சிக்க முடியும். எதைத் தான் தனது அணிக்கு மாற்றாக வைக்கமுடியும். நிச்சயமாக எதுவுமில்லை. பழைய புலிப்பாணி அரசியல் தான், அவர்களின் மாற்று வழி. இவர்களால் ஒருநாளும், ஒருகணமும் ஒரு மக்கள் அரசியலைச் செய்யமுடியாது. தனிப்படட அதிகார முரண்பாட்டில் பிரிந்த கருணாவுக்கு, மாற்று அரசியல் பார்வை இருந்தது கிடையாது. மாறாக எதையும் முன்வைக்க முடியாது. அந்தநிலை தான் இன்று வரை உள்ளது. இதற்கு சிலர் ஒளிவட்டம் கட்ட பார்க்கின்றனர்.
உண்மையில் மறுபடியும் புலி அரசியலையே கருணா குழு செய்கின்றது. புலிகளோ தமிழ் தேசியத்தை ஆயுத மூலம் அடைதல் என்கின்றனர். கருணா குழுவோ கிழக்கு மையவாதத்துடன், அரசின் கால்களை நக்கித் தீர்வு காண்பது என்கின்றனர். புலியை அழிக்கவே தமது தற்பாதுகாப்பு ஆயுதமும் என்று பசப்புகின்றனர். ஆனால் மக்கள் பற்றி, எந்தவித முன்முயற்சியும் கிடையாது. ஏன் கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும் கூட எந்த சுயவிமர்சனமும் கிடையாது. நுணுகிப் பார்த்தால், அதே புலிப்பாணி உத்திகள்.
இலங்கை இராணுவத்தின கூலிக் குண்டர் குழுவாகிவிட்ட கருணா கும்பலால் விமர்சனம், சுயவிமர்சனம் செய்யமுடியாது. மக்களை நேசிக்கவும், மக்களில் தங்கி நிற்கவும் முன்முயற்சி எடுக்காத யாரிடமும் இதற்கான பதிலைப் பெறமுடியாது. புலிகளில் இருந்து கருணா கும்பல், எதைத் தான் செய்யவில்லை. உங்களால் பட்டியலிட முடியுமா?
குழந்தைகளை படையில் சேர்த்தல் என்ற கருணா குழுவின் வாய்வழி நிலைப்பாடு ஏகாதிபத்திய உள்ளடகத்தை அடிப்படையாக கொண்டது. நடைமுறை செயல்பாடு சொந்தப் புலிக் குணத்தை அடிப்படையாக கொண்டது. இதைத் தான் புலிகளும் செய்கின்றனர்.
புலிகளுக்கு இளந்திரையன் போல், கருணா குழுவிற்கு பல இளந்திரையன்கள். ரீ.பீ.சீ க்கு கருணா குழு இளந்திரையன்கள் வந்து உறுமிய போது, இவர்களின் ஜனநாயகத்தின் மூகமுடி கிழிந்து அம்பலமானது. நியூட்டனின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முடியாது, அவரை புலிகள் பாணியிலேயே தூற்றினர்.
1. கருணாவை விமர்சித்ததால் அவரை யாழ் மேலாதிக்கவாதி என்றனர்.
2. கருணாவை விமர்சிதத்தால் கிழக்கின் எதிரி என்றனர்.
3. கருணாவை விமர்சித்ததால் இதை திட்டமிட்ட சதி என்றனர்.
4. கருணாவை விமர்சிதத்தால் 2003 பின் ஜனநாயகத்தை பேச வந்தவர் என்றனர்
5. கருணாவை விமர்சித்ததால் அதற்கு ஆதாரங்கள் எங்கே என்றனர்.
6. கருணாவை விமர்சிதத்தால் நியூட்டன் கிழக்கு மக்களுக்காக எங்கே குரல் கொடுத்தவர் என்றனர்.
இந்தளவு காலமும் புலியெதிர்ப்பு அணிக்கு பக்கபலமாக நின்ற நியூட்டனின் அரசியலை ஆதரித்தவர்கள், கருணாவை விமர்சித்தவுடன் எல்லாம் தலைகீழாக மாறியது வேடிக்கைதான். வாயில் வந்தபடி அள்ளித்தூற்றினர். ஆளுக்காள் ஜனநாயகத்துக்கு புது விளக்கம் வழங்கினர். பாசிச அமைப்பில இருந்து வந்தவர்கள், ஜனநாயக வழிக்கு திரும்ப கால அவகாசம் வேண்டும் என்றனர். சரி அவர்கள் எப்படி மாறுவார்கள் என்று நீங்கள் அவதானித்த, அந்த அரசியல் அடிப்படை தான் என்ன? யாரை ஏமாற்றி, ஜனநாயகத்தை விபச்சாரம் செய்ய முனைகின்றீர்கள். ஒரு பாசிச வழியில் இருந்து பிரிந்தவர்கள், அந்த வழியை விமர்சனம், சுயவிமர்சனம் செய்ய முடியாதவர்கள் ஜனநாயகத்தை பற்றி சிந்திக்க முடியாது. அதனால் தான் அவர்கள் பேரினவாதத்தின் கூலிக் குண்டர் படையானார்கள்.
இந்த பேரினவாத எடுபிடி கருணா மீதான விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத கருணா எடுபிடிகள், தனிநபர் மீதான எதிர் தாக்குதலை புலிகள் பாணியில் நடத்தினர். ஜனநாயகம் பேசும் புலியெதிர்ப்புக் கும்பல், நியூட்டனை எதிர்கொண்ட விதமே ஜனநாயக விரோதமானது. இது எந்த விதத்திலும் ரீ.பீ.சீ க்கு வந்து புலம்பும் புலிக்கு குறைந்ததல்ல. அதே புலிப்பாணி. ரீ.பீ.சீ யை கருணா பிரச்சார வானொலியாக மாற்றுவது தான், அவர்களின் எதிர்பார்ப்பாகும். இந்த கருணாவின் எடுபிடிகள் இந்தத் துள்ளு துள்ளும் போது, கருணா எந்த துள்ளுத் துள்ளுவார்! முதலில் நியூட்டன் பற்றிய குற்றச்சாட்டை அள்ளி தெளித்தவர்கள், கிழக்கு மக்கள் பற்றி புலம்புமுன்பே நியூட்டன் அது பற்றி தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருந்தவர். இன்று கிழக்கு பற்றிப் புலம்புபவர்கள், அரசியல் அற்ற இலக்கியம், தலித்தியம், பின்நவீனத்துவம், ஐக்கிய இலங்கை என்று அலம்பியவர்கள், காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப சந்தர்ப்பவாதமாக புலம்பியவர்கள், இன்று கிழக்கு மையவாதமாகி (உள்ளடகத்தில் இது யாழ் மேலாதிக்கம் தான்) இறுதியாக கருணாவின் எடுபிடியாகி நிற்கின்றனர். நியூட்டன் உங்களைப் போல் ஜனநாயகத்தின் விரோதியாக இருக்கவில்லை.
அவரின் செயல்பாட்டை நன்கு அறிந்தவன் என்ற வகையிலும், முன்பு நான் அவருடன் நெருங்கிய செயற்பாடுகளைக் கொண்டு இருந்தவன் என்ற வகையிலும், அவர் உங்களை விட மக்களை நேசிப்பதில் மலைதான். யாழ் மேலாதிக்கம் பற்றிய அவரின் நிலைப்பாடும், கிழக்கு மக்கள் பற்றிய அவரின் நிலைப்பாடும், முஸ்லீம் மக்கள் பற்றிய அவரின் நிலைப்பாடும், முரணற்ற ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டது. 10 வருடங்களுக்கு முன் அவர் உடன்பட்டு செயல்பட்ட ஒரு அமைப்பு ஆவணங்கள் இதை தெளிவாக நிறுவுகின்றது. சுமைகள் பத்திரிகை ஆசிரியர்களில் ஒருவர். அவரின் அரசியலை வெளிப்படுத்தக் கூடிய விவாதங்களை உள்ளடக்கிய ஆவணங்கள் என்னிடம் உள்ளது. அவருக்கும், அவர் சார்ந்த குழுவுக்கும் எனக்கும் இடையில் நடைபெற்ற, 50க்கு மேற்பட்ட விவாதங்களை உள்ளடக்கிய கடிதத் தொகுப்பே என்னிடம் உண்டு. எளிதில் உணாச்சிவசப்படக் கூடிய அவர், உங்கள் எல்லோரையும் விட, மக்களை நேசிப்பதில் மேலே இருந்தவர். சமகாலத்தில் எம்முடன் எந்தத் தொடர்பும் இல்லாத போதும், ரீ.பீ.சீ ஊடாக ஜனநாயகத்தை பரப்பமுடியும் என்ற அவரின் செயல்பாட்டுடன் நாம் என்றும் உடன்பட முடியாது.
ஆனால் அவரின் நியாயமான விமர்சனத்தை எதிர்கொண்டு எதிர்த்தவிதம், அவர் நம்பிய ஜனநாயகவாதிகள் முகத்தை அவருக்கு தோலுரித்துக் காட்டி இருக்கும். அவர் நம்பிய ஜனநாயகவாதிகளே அவரைத் தூற்றிய விதம், அதை திரித்துப் புரட்டிய விதம், அவருக்கு உறைக்கவே விளக்கியிருக்கும் என்று நம்புகின்றோம்.
இதைக் கடந்தும் ஜனநாயகம் பற்றி நியூட்டனுக்கு ஒரு துல்லியமான பார்வை இருந்தது. இது தான் அன்று ரீ.பீ.சீ யில் பிரதிபலித்தது. கடந்தகால நடைமுறை பற்றிய செயல்பாட்டில் நம்பிக்கை இழந்ததால், உணர்ச்சிவசப்பட்டு சோர்ந்த நிலையிலும் அவர் செயல்பட்டார். நோர்வே இடதுசாரி அரசியலில் ஈடுபட்டதுடன், அதன் மூலம் நோர்வே மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரானதும் நாம் அறிவோம். இப்படிப்பட்டவரை தனிப்பட்ட ரீதியில் ஆதாரமற்ற வகையில் இழிவுபடுத்தலாமே ஒழிய, ரீ.பீ.சீ போன்ற புலியெதிர்ப்புக் கும்பல் அவரின் குற்றச்சாட்டுக்கு என்றும் பதிலளிக்க முடியாது.
இந்த நிலையில் இந்த புலியெதிர்ப்பு கும்பலை ஒரு குடையில் பாதுகாக்க, சிவலிங்கம் என்னதான் நியூட்டனின் கேள்விகளில் நியாயமுண்டு என்று கூறினாலும், பலரும் பலவிதமாக கருத்துரைத்தாலும், மக்களைச் சார்ந்து நிற்காத எந்த ஒரு அரசியலும், அரசியலற்ற புலியெதிர்ப்பு செக்குமாட்டு புலம்பல் வண்டியை இழுக்கமுடியாது. அது இழிந்து சிதைந்து நாலாபக்கமும் பிய்ந்தேயாகும். அது தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
புலிகளில் இருந்து தனது தனிப்பட்ட பிரச்சனை காரணமாக (உள்ளடகத்தில் இது ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டது. கருணா இதை ஜனநாயகமாக கருதி வெளியேறியது கிடையாது. அவருக்கு அது அதிகார மோதல்) பிரிந்த கருணா பற்றிய பிரமையை விதைக்க முனையும் திடீர் ஜனநாயகவாதிகளுக்கு, ஜனநாயகத்தின் அரிச்சுவடியே தெரிந்திருப்பதில்லை. மாறாக நிலைமைக்கு ஏற்ப ஜனநாயகம் பேசுவதன் மூலம், இவர்களே ஜனநாயகத்தின் பிரதான எதிரியாக உள்ளனர். உங்கள் ஜனநாயகத்தின் அரசியல் தான் என்ன?
நியூட்டனிடம் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்பதும், புலிகள் உங்களிடம் கேட்பதற்கும் என்ன வேறுபாடு? புலிகள் இது போன்றவற்றுக்கு பதிலளிக்கும் வடிவத்துக்கும், உங்கள் பதிலுக்கும் என்ன வேறுபாடு? உங்கள் ஜனநாயக தராசில், புலிக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமோ? புலியின் எதிரி எமது நண்பன் என்ற புலியெதிர்ப்பு அரசியல் போக்கில் ஏற்படும் சலசலப்பைக் கூட, சகித்துக்கொள்ள முடியாது தூற்றுவதுதான் உங்கள் உயர்ந்தபட்ட அரசியலாகும்.
நியூட்டனின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்பதும், எதிர்க்குற்றச்சாட்டை முன்வைப்பதற்கும் அப்பால், நீங்கள் கருணா தரப்பு பேச்சாளராக இருக்கவிரும்பினால், அல்லது கருணா தரப்பை ஜனநாயக அமைப்பாக நியாயப்படுத்த விரும்பினால், என்ன செய்யதிருக்கவேண்டும். உங்கள் அரசியல் நேர்மையை நீங்களே விமர்சனத்துக்குள்ளாக்கி இருக்கவேண்டும்.
1. இது போன்ற மனித விரோத செயல்களை கருணா தரப்பு செய்வதில்லை என்று, அரசியல் ரீதியாக உறுதிப்படுத்தி கூறியிருக்க வேண்டும். அது உங்களாலும், ஏன் கருணா கும்பலாலும் கூட முடியாது. இனம் காணப்பட்ட சில சம்பவங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கப்பட்ட போதெல்லாம், அதை அவர்கள் சுயவிமர்சனம் செய்தது கிடையாது. மாறாக புலிகள் பாணியில் அதை மூடிமறைக்கவும், உடனடியாக அதைச் சமாளிக்கவும் தான் முனைந்தவர்கள்.
கருணா தரப்பு அரசியல் கொலைகளை செய்வதில்லை என்று சொல்ல, உங்களுக்கு எந்தத் துப்பும் கிடையாது. ஒரு புறத்தில் புலிகள், மறுதளத்தில் கருணா தரப்பு பாரியளவில் கொலைகள் செய்கின்றனர். வவுனியாவில் கூட கருணா தரப்பு கொலைகளைச் செய்கின்றது. இந்த கொலைகள் ஆயுதம் ஏந்திய புலிகள் மீது நடத்தப்படவில்லை. ஆயுதம் எந்தாத நபர்கள் மீது, கிழக்கு முதல் வடக்கு வரை இந்த கொலைகள் நாள் தோறும் நடக்கின்றது.
இன்று வரைமுறையின்றி நடக்கும் கொலைகள், ஆட்கடத்தல்கள் 90 சதவீதமானவை கருணா கும்பலாலும், பேரினவாத இராணுவ கும்பலாலும் செய்யப்படுகின்றது. இதை புலியெதிர்ப்புக் கும்பல் ஆதரிப்பதும், அதை கண்டும் காணமல் உதவுவதும் நன்கு தெரிந்ததே. புலிகள் கொலை செய்த போது அதற்கு கொடுக்கும் முக்கியத்துவமும், எதிர் பிரச்சாரமும் மறுதளத்தில் செய்யப்படுவதில்லை. இப்படி கருணா என்ற கூலிக் குழுவின் கொலைக்கு, ஆட் கடத்தலுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற இவர்கள், தம்மைத் தாம் ஜனநாயகவாதி என்கின்றனர்.
2.கருணா தரப்பு படைக்கு ஆட்கடத்தல், பணத்துக்காக ஆள் கடத்தல், வரி அறிவிடல், சிறுவர்களை பலாத்காரமாக கடத்தல் என்று, அனைத்து புலி நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர். புலிப் பாசிசத்துக்கு அடங்கியொடுங்கி இருந்த மக்கள், கருணாவின் கூலி இராணுவத்துக்கு அடங்கி ஒடுங்குகின்றனர்.
3.சாதாரண மக்கள் மீது அடாவடித்தனமான அட்டகாசம் செய்யும் புலி போன்ற, ஒரு மக்கள் விரோத குண்டர் படைதான் கருணா கும்பல். அது மேலும் இழிந்து அரசில் கூலிக் கும்பலாகியுள்ளது. மக்கள் பற்றி அதற்கென்று எந்த சொந்த அரசியல் கோட்பாடும் கிடையாது. அதற்கென்றொரு நடைமுறையை நினைத்து பார்க்கமுடியாது. அது எடுபிடிகளை மட்டும் கொண்டது. பொறுக்கி அரசியல் செய்யும் எடுபிடிகளைக் கொண்டு, தமக்குத் தாமே ஜனநாயக மூகமுடியை போட முனையும் கூலிக் குண்டர் படைதான்.
4.கருணா தரப்பு இலங்கை அரசின் கீழ் இயங்கும் ஒரு கூலிக் கும்பல் தான். பேரினவாதம் எதைச் செய்ய விரும்புகின்றதோ, அதை நிறைவு செய்யும் ஒரு இழிந்த சீரழிந்த குண்டர் படையாக, அவர்களின் பாதுகாப்பில் உள்ளனர். இதற்கென்று சொந்தமான அரசியல் முன்முயற்சி எதுவும் கிடையாது. மக்கள் பற்றி நினைத்தே பார்க்கமுடியாது.
5.கருணா தரப்பின் செயல்பாட்டை நடைமுறை சார்ந்த அரசியலை நாங்கள் எடுத்தால், அதாவது மக்களுடனான உறவை எடுத்தால் இரண்டும் ஒன்றுதான். புலிகளில் இருந்து எந்த வகையில், எப்படி வேறுபடுகின்றனர் என்று தேடினால், நீங்கள் எதையும் காணமுடியாது. புலிகளில் இருந்து வேறுபட்ட, இவர்களின் மக்கள் பற்றிய பார்வை என்ன? மக்களுடன் எப்படி அணுகுகின்றனர். உங்களால் புலிக்கு மாறாக உள்ளனர் என்று பதிலளிக்க முடியுமா? முடியாது. எடுபிடிகளே!, உங்களைத் தான் கேட்கின்றேன். முடியுமா?
6.கருணா தரப்பு புலிகளில் இருந்து பிரிந்ததற்கு முன்வைக்கும் இன்றைய காரணங்கள், அன்றைய காரணங்களும் வேறுபட்டவை. ஒவ்வொருவரும் ஆளுக்காள் புதிய காரணத்தைக் கண்டுபிடிக்கின்றனர். இந்த கருணா அன்று வைத்த காரணத்தை திரித்து, இன்று அரசியல் செய்ய நினைப்பது தான் உங்கள் ஜனநாயகம். இது கடைந்தெடுத்த ஒரு அரசியல் மோசடி.
அன்று அவர் அதிகாரம் சார்ந்து முன்வைத்த சில காரணங்கள் உண்மையானது. பின்னால் பிரதேசவாசமாகி, இன்று ஐ.நா குலைக்கும் சிறுவர் படை பற்றிய அவர்களின் பார்வை எல்லாம், கருணாவின் பிரிவிற்கான அரசியல் காரணமாகிவிடுகின்றது. இதற்கு ஜெயதேவன் போன்ற சந்தர்ப்பவாதிகளை சாட்சியமாக்கி, அதை குலைக்க வைக்கின்றனர். இப்படி ஒன்றுக்கு பின் ஒன்றாக, பிழைப்புக்காக அரசியல் நாடகம் ஆடுபவர்கள் எல்லாம் மக்களை ஏமாற்றும் அரசியல் பொறுக்கிகள் தான்.
இப்படி கருணா என்ற கைக்கூலிக் கும்பலின் மக்கள் விரோத செயல்களை பட்டியலிட முடியும். சில புலியெதிர்ப்பு பொறுக்கிகள் (தேனீ இணையம் முதல் ) 20 வருட பாசிசத்தில் இருந்து வந்தவர்கள், திருந்த கால அவகாசம் தேவை என்றனர். இப்படி தங்கள் ஜனநாயகத்தை, விபச்சாரத்துகாக முந்தானையாக விரித்து விபச்சாரம் செய்கின்றனர். புலிகள் போன்ற இயக்கத்தில் இருந்து பிரிந்தவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியில், இது போன்றவை நிகழ்வது தவிர்க்க முடியாது என்றனர். இதனுடன் விட்டார்களா இல்லை, கருணா பிரிந்ததால் தான் இன்று தமக்கு ஜனநாயகம் கிடைத்துள்ளது என்றனர். எனவே அவர்களினதும், தமதும் விபச்சாரத்தை கண்டுகொள்ளவே கூடாது என்பதே அவர்கள் மக்களுக்குச் சொல்லும் செய்தி.
இப்படி அரசியல் விபச்சாரம் செய்வது, ஜனநாயகத்துக்கு நல்லதொரு நகைச்சுவை தான். இந்த கருணா குழுவின் ஜனநாயக விரோத செயலை நியாயப்படுத்தும் அதேநேரம், அதற்கு காரணத்தையும் கற்பிக்கின்றனர். ஆயுதம் வைத்திருப்பது தவிர்க்க முடியாதது, இதனால் தான் ஜனநாயகத்துக்கு பாதகமாய் இருக்கின்றதாம். எல்லோருடைய ஆயுதத்தையும் ஒன்றாக களைவது தான் தீர்வாம். கெடுகெட்ட அரசியல் பிழைப்புதான், இப்படிக் கூற வைக்கின்றது. ஆயுதம் வைத்திருப்பதோ, அல்லது வன்முறையில் ஈடுபடுவதோ, கட்டாயமாக ஜனநாயக விரோதமாக இருக்கவேண்டும் என்பதல்ல. ஆயுதமும், வன்முறையும் தான், ஜனநாயக விரோதத்துக்கான காரணங்களல்ல. மாறாக அவர்கள் கொண்டுள்ள அரசியல் தான் காரணம். இதை சொல்லும் அரசியல் நேர்மை இவர்களிடம் கிடையாது. ஆயுதமும், வன்முறையும், யாருக்கு எதிராக, எப்படி, எங்கே பயன்படுத்தப்படுகின்றது என்பது தான் பிரச்சனை. அதிலும் பேரினவாதத்தின் கூலிக் கும்பல் மக்களுக்கு எதிராகத்தானே எப்போதும் பயன்படுத்தும். இது சந்தேகத்துக்கு இடமற்றது. மக்களைச் சார்ந்த ஒரு இயக்கமா கருணா என்ற கூலிக் கும்பல்! இல்லையே. இது உங்கள் ஜனநாயகத்தக்கு தெரிவதில்லையே ஏன்?
இந்தக் கும்பல் வைத்துள்ள ஆயுதங்கள், அவர்களின் வன்முறை, வெறும் புலிக்கு எதிராக மட்டும் செயல்படுத்தப்படுவதில்லை. மாறாக மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது. இந்தியா இலங்கை அரசுகளில் கூலிக் குழுவாக இருந்தபடி அதன் அரசியல் நலனுக்காக பிரயோகிக்கப்படுகின்றது.
அன்றைய வாதத்தில் இந்தக் கைக்கூலித்தனத்தையும் இந்த புலியெதிர்ப்புக் கும்பல் நியாயப்படுத்தியது. புலிகளிடம் இருந்து தப்பி வாழ, வேறு மார்க்கம் இல்லைத்தானே என்றனர். நல்லதொரு தர்க்கம். இந்த தர்க்கத்தை சரியென்று நியாயப்படுத்த முடியமென்றால், அங்கு மக்களைப் பற்றி பேசுவதற்கு என்று எதுவுமில்லை. ஜனநாயகத்தை பற்றிப் பேச என்னதான் அவர்களிடம் மிஞ்சியிருக்கும்.
தனிமனிதன் தற்பாதுகாப்புக்காக அவனின் அறியாமையில், இயலாமையில் பேரினவாதத்தின் பாதுகாப்பை நாடுவது வேறு. ஆனால் அவனின் நோக்கத்துக்கு துணை போகமுடியாது. வரலாற்றில் இதை அறியாமல் துணை போனவர்களை மன்னிக்கமுடியும். ஆனால் ஒரு அரசியலை பேரினவாத தயவில், ஒரு கூலிக்குழுவாக செய்ய முனைவதை அங்கீகரிக்க முடியாது. இது மக்களுக்கு எதிரானது. மக்களின் எதிரியுடன் கூட்டுச் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யமுடியாது. மக்களுக்கு விரோதமாகத்தான் செயல்படமுடியும்.
டக்ளஸ் போன்றவர்கள் மந்திரிப் பதவியுடன் திரிவதும், அதைக் கொண்டு செய்வதும் மக்கள் சேவையல்ல. அரசு மக்களுக்கு செய்ய வேண்டியதை மறுத்து, பின் அதை செய்யும் எல்லைக்குள், எலும்பை வீசி மக்களை அடிமைப்படுத்துவதாகும். மக்கள் சேவை என்ற பெயரில் செய்யப்படுவது அனைத்தும், மக்களின் அடிப்படை உரிமையை மறுத்து, பின் அதைப் பிச்சையாக போடுவதாகும். அதை இயல்பாக கிடைக்கவிடாமல் மறுப்பது, அதை எலும்புத் துண்டாக்கி வீசி ஏமாற்றுவது, கடைந்தெடுத்த ஒரு மனித விரோதக் குற்றமாகும். மக்களுக்கு எதிரான ஒரு அரசை எதிர்க்காது, அரசு வீசும் எலும்பை கொண்டு அரசியல் செய்யும் வக்கிரமே இங்கு அரங்கேறுகின்றது.
புலிகளின் அச்சுறுத்தலுக்குள் அரசியல் செய்வது என்பது, மக்களைச் சார்ந்து நிற்பதன் மூலம் போராடுவது தான். இதில் நீ அழிக்கப்படுவாயானால், போராடி மடி. அதுதான் மக்களுக்கான போராட்டம். வெற்றி என்பது தோல்வியை உள்ளடக்கியது தான். வாழ்வு என்பது மரணத்தை அடிப்படையாக கொண்டதே. போராட்டத்தில் நாம் தோற்றுப் போகலாம், ஆனால் எப்படித்தான் எம் மக்களுக்கு துரோகம் செய்ய முடியும். இதில் என்ன நியாயம் தான் உள்ளது. மக்களுக்காக மடி. கூலி இராணுவத்துக்காக மடிவதை வெறு.
மக்களுக்காக அவர்களில் தங்கி நின்று போராடி வாழ முனைவது தான், மக்களை நேசிப்பதற்கான ஒரேயொரு வழியாகும். இந்த போராட்டத்தில் மரணித்தல் நிகழும் என்றால் அதை ஏற்றுக்கொள். இதைவிடுத்து அதற்காக மக்களுக்கு எதிராக துரோகம் செய்ய முடியுமா! மக்களுக்கான போராட்டத்தில் மரணத்தை கண்டு பயந்து, போராடி வாழமுடியாது என்று கருதினால், அதில் இருந்து ஒதுங்கிப் போய்விடுவது துரோகத்தை விட மேலானது, நேர்மையானது. மக்களின் முதுகில் குத்தித் தான் அரசியல் செய்வது என்பது, இழிவான சொறி நாய் பிழைப்புத் தான்.
கூலி இராணுவத்துக்காக மடியும் துரோகத்தை மூடிமறைக்க, மக்களை வெறும் மந்தைகளாக, மடையர்களாக வைத்துக் கொண்டு குலைப்பதையே, இன்று இவர்கள் ஜனநாயக அரசியல் என்கின்றனர். இதையே எல்லா புலியெதிர்ப்புக் கும்பலும் அரோகரா போட்டு, சிங்கள பேரினவாத இராணுவத்தின் எடுபிடிகளாகி கூலிக் கும்பலாக குலைக்கின்றனர்.