தமிழ் அரங்கம்

Saturday, April 14, 2007

உலகமயமாதல் நலன்களும், இந்திய நலன்களும் முரணானவையா?

உலகமயமாதல் நலன்களும், இந்திய நலன்களும் முரணானவையா? புலிகளின் நலன்கள் இந்த முரண்பாட்டிலா நீடிக்கின்றது?

பி.இரயாகரன்
14.04.2007


லகமயமாதல் நலன்களும், இந்திய நலன்களும் ஒன்றோடொன்று முரணானவையா? சரி முரணானவை என்றால் எப்படி? எந்த வகையில்? எந்த வர்க்க நலன்களின் அடிப்படையில்? இந்தியாவில் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களினதும், தேசிய முதலாளினதும் நலன்கள், இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களாக இருப்பதில்லை. எனவே அதை பற்றிய ஒரு விவாதமல்ல இது.


அண்மைக் காலமாக மேற்குக்கு எதிராக இந்தியா அல்லது தென்னாசிய நாடுகளின் பகை முரண்பாடுகள் பற்றி கற்பனையில் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. புலி, புலியல்லாத ஆய்வுகள் கூட இதற்குள் கட்டமைக்கப்படுகின்றது. இந்த வகையில் ஒரு அரசியல் தளம், உலகமயமாதல் எதார்த்தத்தை திரித்தே கட்டமைக்கப்படுகின்றது. இந்த வகையில் புலிகள் மட்டுமல்ல, புலிகளின் எதிர்தரப்பின் ஒரு பகுதியும் கூட இந்த வாதத்தை முன்வைக்கின்றனர். வாதங்கள் சகட்டு மேனியில் கண்மூடித்தனமாகவே நடத்தப்படுகின்றது. அரசியலற்ற வெற்றுத்தனங்கள், இப்படி வம்பளக்க வைக்கப்படுகின்றது.


இது போன்றே ஜே.வி.பி அரசியல் செயல்பாடுகள் இருப்பதாக நம்பப்படுகின்றது. தென்னாசிய சமூகத்தை சார்ந்து, குறிப்பாக இந்தியாவைச் சார்ந்து நின்று மேற்கை எதிர்ப்பது போன்ற ஒரு அரசியல் பிரமையை, நாடகத்தை, ஒரு மயக்கத்தை உருவாக்குகின்றனர். சிலர் புலி மேற்கைச் சார்ந்ததாக காட்டி, தென்னாசிய அரசியலை ஆதரிக்கும் வகையில் புலிகளை அழிக்க வேண்டும் என்கின்றனர். இப்படி முரண்நிலைத் தன்மையான வாதங்கள். புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிக்கவும், தாங்கள் என்ன அரசியலைக் கொண்டுள்ளோம் என்ற அடிப்படையில் செயல்படத் தவறுகின்ற போதும் இது வீங்கி வெம்புகின்றது. கற்பனைப் புனைவுகளும், குதர்க்கமும், குழப்பமும் இதன் அரசியல் சாரமாகும்.


புலிகளின் அரசியல் நெருக்கடிகள் முதல் சமகால நிலமைகளை புரிந்து விளக்குதல் எப்படி என்ற கேள்வி விடையாகவே, இந்த மலிவான அரசியல் திரிபு புகுத்தப்படுகின்றது. இதன் பின்னணியில் புலியை மேற்கின் எடுபிடிகளாக செயல்படுவதாக சித்தரிப்பது முதல், இந்தியாவுக்கும் மேற்குக்கும் முரண்பாடுகள் உள்ளதாக காட்டி புலிகள் நீச்சல் அடிப்பது வரை, இந்த கற்பனை அரசியல் அரங்கம் கட்டமைக்கப்படுகின்றது.


உண்மையில் அரசியல் பொருளாதார அடிப்படையில் வாதிடத் தவறுகின்றனர். மேலோட்டமான நிகழ்ச்சிகள் மீது மேய்கின்ற ஒரு திசைவிலகலாகவே, இவை பொத்தாம் பொதுவில் அணுகப்படுகின்றது.


புலிகளின் விமானத் தாக்குதல் நடந்ததன் பின்பாக இந்த நடவடிக்கை தென்னாசியாவுக்கு ஆபத்து என்றும், இது மேற்கத்தைய சதி என்றும், இதுபோன்ற பல புலியல்லாத கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. சர்வதேச ரீதியாக புலிகள் பற்றிய நிலைப்பாட்டுக்கு மாறானது. உலகமயமாதல் புலிகளை ஒரே வகையில் தான், ஒரு நேர்கோட்டில் தான் புரிந்து கொள்கின்றது. புலிகளைப் பற்றி அபத்தமான வகையில் மதிப்பிடுவது மட்டுமின்றி, தென்னாசிய சூழலையே தலைகீழாக்கி விடுகின்றனர். புலிகளை அனைத்துக்குமான மையப்புள்ளியாக வைத்து, தென்னாசிய மற்றும் மேற்கத்தைய நலன்களைப் பற்றிய ஆய்வுகள், முடிவுகளை அறிவிப்பது அபத்தமாகும்.


மேற்கில் புலிகளை ஒடுக்கும் நடிவடிக்கைகள் நடக்காத நிலையில், அதையிட்டும் புலம்பும் புலியெதிர்ப்பு, மேற்கு புலிக்கு ஆதரவாக இருப்பதாக காட்டுவது நிகழ்கின்றது. மேற்கு நடவடிக்கைகள் சட்டதிட்ட எல்லைக்குள் இருப்பதைக் காண்பதில்லை. புலிகளிடம் மட்டும் ஜனநாயகத்தைக் கோரும் ஜனநாயக விரோதிகளுக்கு, இது சூக்குமமாகி புரிய மறுக்கின்றது. மேற்கின் நிலைப்பாடுகள் இனப்பிரச்சனையை தீர்க்கின்ற எல்லைக்குள் தான், நடவடிக்கைளை மட்டுப்படுத்துகின்றது. இந்த வகையில் இலங்கை அரசின் தீர்வு நடவடிக்கையுடன் ஒருங்கிணைந்ததாகவே அமையும்.


முரண்பாடு பற்றிய கற்பனை ஆய்வுக்கு மையமாக இந்தியாவின் கொள்கை பற்றியும், அதன் மேற்கு விரோத நிலை பற்றியும் பற்பல எடுகோள்கள். உண்மையில் அரசியலை ஒரு இடை நீக்கல் வழியாக கற்பித்து, அதன் ஊடாக தேடுவது இதன் சாரமாகும்.


மேற்குடனான தென்னாசிய முரண்பாடு அதாவது இந்திய முரண்பாட்டின் சாரம் என்ன? அது எங்கிருந்து, எப்படி எந்த வழியில் உருவாகின்றது. இதற்கான அரசியல் அடிப்படை தான் என்ன? பொருளாதார அடிப்படைகள் தான் என்ன?


1. இந்தக் கேள்விகள் பற்றியும், இந்தியாவின் உள்ளார்ந்த புரட்சிகர பிரிவுகளின் மைய விவாதத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது.


2. முரண்பாடு, முரண்பாட்டின் தன்மை என்பது அனைத்தும் தழுவியது. முரண்பாடுகள் இல்லாத உலகம் என்பது கற்பனையானது. ஒரு மனிதனுக்குள்ளும், அவனின் சிந்தனைக்குள்ளும் கூட முரண்பாடுகள் உண்டு. ஒரு முரண்பாடு அனைத்தும் தழுவியதாக, காணப்படும் போது, முரண்பாடுகளின் எதிர் நேர் முரண் தன்மையில் ஒன்று மேலோங்கி காணப்படும். சடப்பொருள் முதல் உயிர் உள்ளவற்றின் இயக்கமே அது சார்ந்தது தான்.


இந்த வகையில் மனிதனைச் சூறையாடும் இன்றைய உலகமயமாதல் என்ற சமூக அமைப்பில், இந்தியாவுக்கும் மேற்குக்கும் இடையில் முரண்பாடு உண்டா? இங்கு இவர்களுக்கு இடையில் அரசியல் பொருளாதார முரண்பாடுகள், எதிர்நிலைத் தன்மையிலா காணப்படுகின்றது? இல்லை, மாறாக முரண்பாடுகள் நட்பு முரண்பாடாக காணப்படுவதுடன், மேற்கின் நலன்கள் தான் இந்தியாவின் நலன்களாக உள்ளது. அதாவது மேற்கின் நலன்கள் என்பது, சுரண்டும் வர்க்கத்தின் சுரண்டும் நலன்கள். ஏகாதிபத்திய நலன்கள் என்பதும் இது சார்ந்ததே. இந்த வகையில் தான் இந்திய ஆளும் சுரண்டும் வர்க்கம், உலகமயமாதலை ஒருங்கமைத்துள்ளது. அனைத்து சுரண்டல் வடிவங்களும், அதை பாதுகாக்கும் சட்ட அமைப்புகளும், மேற்கின் (ஏகாதிபத்திய) சுரண்டல் நலன்களுடன் பின்னிப்பிணைந்தாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள முரண்பாடுகள் படிப்படியாக களையப்படுகின்றது. அதாவது இந்தியாவின் உழைக்கும் மக்களுடன் உள்ள ஆளும் வர்க்கத்தின் முரண்பாடுகள், முத்தி ஒரு மோதலாக மாறாத வண்ணம் மிக அவதானமாக இருக்கும் போதுதான், மேற்குடனான முரண்பாடுகள் இருப்பது போல் காட்சியளிக்கின்றது. கானல் நீராக உள்ள இந்த முரண்பாடு, படிப்படியாகவே அகற்றப்படுகின்றது. உழைக்கும் மக்களுடான முரண்பாட்டை அவர்களுக்கு இடையிலானதாக்கி, மேற்கு முரண்பாடுகள் களையப்படுகின்றது.


இப்படி இந்தியாவின் ஆளும் வர்க்க நலன்கள் என்பது, மேற்கத்தைய சுரண்டல் நலனுக்கு முரணாக இருப்பதில்லை. இந்தியாவின் சர்வதேசக் கொள்கை என்பது, மேற்குக்கு எதிரானதல்ல. அதாவது ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு எதிரானதல்ல.


இந்திய தரகுமுதலாளிகளின் நலன்கள் என்பது, இந்தியாவின் பரந்துபட்ட மக்களின் நலன்கள் அல்ல. இது ஆளும் வர்க்கத்தின் நலன்களாகும். இந்தியாவின் நலன்கள் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்கு முன்பாகவே, ஏகாதிபத்திய சுரண்டலை அடிப்படையாக கொண்டே இருந்தது. இந்தியாவின் அன்றாடம் உருவாகும் தேசிய முதலாளிகளின் நலன்களை, இந்தியாவின் ஆளும் வர்க்கம் பிரதிபலிப்பதல்ல. இந்தியாவின் தேசிய முதலாளிகளின் நலன்கள், இந்தியாவின் போலிச் சுதந்திரத்தின் பின்பாக கூட பாதுகாக்கப்படவில்லை. அவையும் படிப்படியாக அன்றாடம் அழிக்கப்பட்டே வந்தன. இன்றைய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரல் படி, அவை மேலும் வேகமாக திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. இப்படி இந்திய மக்கள் நலன் சார்ந்த எந்த வர்க்கக் கூறினதும் நலன்களை, இந்தியாவின் ஆளும் வர்க்கம் கொண்டிருப்பதில்லை. மாறாக அதற்கு எதிராக செயல்படுகின்றது. இதுவே தென்னாசிய நாடுகளின் நிலை கூட.


இந்த நிலையில் இலங்கை விவகாரத்தில் இந்திய நலன்கள் தனித்துவமாக செயல்படுதில்லை. அதாவது மேற்குக்கு எதிரான ஒரு வர்க்கத்தின் நலனுக்காக, இலங்கை விடையத்தில் இந்தியா முரண்படுவது கிடையாது. அப்படி ஒரு வர்க்கத்தை இந்தியா பிரதிபலிப்பதில்லை. இந்நிலையில் முரண்படுவதாக கூறுவது, எந்த வர்க்கத்தின் நலனை அடிப்படையாக கொண்டது?


வர்க்கங்களைக் கடந்தது இந்தியாவின் முரண்பாடு என்பது கற்பனையானது. ஒரு சார்பு நிலை என்பது, எங்கும் எதிலும் வர்க்கம் சார்ந்தது. இந்தியாவின் ஆளும் வர்க்க நலன்கள், ஏகாதிபத்திய வர்க்க நலனுக்கு முரணானதல்ல. முரணானது என்பது எப்படி?


புலிகளின் வர்க்க நலன் இந்திய நலனுடன், அதாவது மேற்கத்தைய நலனுடன் முரண்பட்டதல்ல. அதனால் அந்த எல்லையில், புலிகளுடன் அவர்கள் முரண்படுவதில்லை. புலிகளுடனான முரண்பாடு என்பது, புலிகளின் நலன்சார் நடவடிக்கை அந்த நாடுகளின் சுரண்டல் வர்க்கத்தின் நலனுக்கு இசைவானதாக அதே திசையில் இருப்பதில்லை. குறிப்பாக புலிகளின் தனிமனித நலன்சார் நடவடிக்கைகள், உலகமயமாதல் பொது நடைமுறைக்கு எதிரான வகையில் குத்தும் முள்ளாகி முரண்படுகின்றது. சுரண்டும் வாக்கங்களுக்கு இடையிலான முரண்பாடு, புலிகள் விடையத்தில் அதீதமான குழுவாதத்தால் பகைமுரண்பாடாக மாறிச் செல்லுகின்றது. இது உலகமயமாதல் பொருளாதார அமைப்புக்கு எதிராக அல்ல, மாறாக ஒரு மாபியாக் கும்பலுக்குரிய ஒரு பின்னணியில் இது ஏற்படுகின்றது.


மேற்கத்தைய மற்றும் இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்கு, புலிகள் பற்றிய அதன் வர்க்க உள்ளடக்கத்தில் முரண்பாடு கிடையாது. மாறாக அந்த நாடுகளின் சுரண்டும் வர்க்கம், சுதந்திரமாக சுரண்ட புலிகளின் மாபியா நடவடிக்கைகள் தடையாக இருக்கின்றது. இதனால் அதை அமைதியாக தீர்த்துக்கொள்ள, அந்த வர்க்கங்கள் தமக்குள் முனைப்புக் கொள்கின்றது.


சிலர் புலிகள் அதீதமாக மேற்கை சார்ந்ததாக நம்பவைக்க முனைகின்றனர். இந்தியாவுக்கு எதிரானதாக காட்ட முனைகின்றனர். சுரண்டும் வர்க்கத்தின் தரகுத்தன்மையின் குறிப்பான நிலையை, பொதுவானதுக்கு பொருத்த முனைவதாகும். எந்த சுரண்டும் வர்க்கத்தின் நலனுக்காக செயல்படுவது என்ற முரண்பாடாகும். ஏகாதிபத்திய முரண்பாடுகள், பிராந்திய முரண்பாடுகளின் அடிப்படையில் இது உள்ளது. இது பொதுவான இன்றைய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில் நட்பு முரண்பாடாகவே உள்ளது. இதில் ஒன்றை சார்ந்து நிற்க முனைதல், சுரண்டும் தரகு முதலாளிகளின் இருத்தலாகும். இது இந்தியாவின் தரகு முதலாளிகளுக்குள்ளும் காணப்படுகின்றது. இது எங்கும் தழுவிய ஒரு முரண்பாடு. புலிகள் பொதுவான மேற்கத்தைய சார்பும், உள்ளார்ந்த அதனுடன் இந்திய சார்பு நிலையும் கூட காணப்படுகின்றது.


சுரண்டும் வர்க்கத்தின் குறிப்பான நலன்கள் சார்ந்த போக்காகும். இதுவே பகை முரண்பாடாக, ஆளும் வர்க்க மோதலாக மாறுவது உண்டு. இன்று இலங்கை விவகாரத்தில் இது பகை முரண்பாடாக செயல்படவில்லை. இந்தியாவின் ஆளும் வர்க்கம், ஏகாதிபத்திய நலன்களுடன் ஒன்று கலத்தலிலுள்ள சொந்த வர்க்க முரண்பாட்டை களைவதற்கான அதனுள்ள முரண்பாடு, புலிகள் விடையமாக இருப்பதில்லை. இது மிகையான கற்பனை. ஆனால் அப்படி இருப்பதாக புலிகள், புலிகள் அல்லாத பலரும் நம்ப முனைகின்றனர். புலியை மையமாக வைத்து, சர்வதேச நிகழ்ச்சியை குருட்டுக் கண்ணால் புஞ்சிப் பார்ப்பதன் விளைவு இது.


குட்டிபூர்சுவா இயக்கமாக தொடங்கி தரகு முதலாளிய இயக்கமாக மாறிய புலிகள், மேற்கு சார்பு நிலையை மேற்கொள்கின்றது. இது எந்த விதத்திலும் இந்திய ஆளும் வர்க்க சுரண்டல் நலனுக்கு முரணானதல்ல. தரகு முதலாளியப் புலிகள் இந்த வர்க்க சார்புத் தன்மையை அரசியல் நடைமுறையாக்க முடியாது போன நிலையில், ஒரு மாபியாக் குழுவாக மாறிவிட்டது. அது தரகு முதலாளிய வர்க்க நலனையும் இன்று பிரதிபலிப்பதில்லை. தரகு முதலாளிய வர்க்க எல்லையைக் கடந்த அதன் மாபியாத்தனம், உலகமயமாதலுக்குள் எப்படி புகுந்து கொள்ளை அடிப்பது என்ற எல்லைக்குள் அது தானாக சீரழிந்துவிட்டது. அது மாபியாத்தனத்தை பாதுகாக்க, மக்களுக்கு எதிரான ஒரு தேசியத்தை அரசியல் கோரிக்கையாக வைத்து, பாசிசமாக தன்னை அலங்கரிக்கின்றது.


உலகமயமாதலின் சுரண்டும் வர்க்கங்கள் இந்த மாபியா குழுவைப் பயன்படுத்தி நீச்சலடிப்பதில்லை. அதேபோல் உலகமயமாதல் என்ற சுரண்டும் வர்க்கத்தை, புலிகள் தமக்கு தமது மாபியாத் தனத்துக்கும் பயன்படுத்த முடியாது. சுரண்டும் வர்க்கத்தின் உள்ளான முரண்பாடுகள் எங்கும் தழுவியது. இது சிறப்பாக இந்தியா மேற்கு என்று மட்டும் பிரிந்து காணப்படுவதில்லை.


இந்தியா பிராந்திய ஆதிக்க சக்தியாக இருத்தல் என்பது, உலகமயமாதல் நலனுக்கு முரணானதல்ல. உலகமயமாதலில் உள்ளார்ந்த வர்க்கத்தின் நலனை அடிப்படையாக கொண்டே, பிராந்திய ஆதிக்கத்தை செலுத்த முனைகின்றது. மற்றைய ஆதிக்க சக்திகளுடனான முரண்பாடு என்பது, இன்றைய உலகமயமாதலில் போக்கில் பகை முரண்பாடானதல்ல. மாறாக சுரண்டும் வர்க்கங்களிடையேயான நட்பு முரண்பாடுதான். இதில் புலிகள் விடையத்தில், புலிகளை கையாள்வதில் முரண்பாடுகள் உள்ளதாக காண்பதும் காட்டுவதும் சுத்த அபத்தம்.


இலங்கையில் எந்தளவில்? எப்படி? மேற்கத்தைய மற்றும் இந்திய ஆதிக்கம் நீடிப்பது என்பது, உலகமயமாதல் பொருளாதார நலனுக்கு முரணாக செயல்படுவதில்லை. அப்படி ஒரு முரண்பாடு ஏற்படும் போது, அதுவே இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒரு யுத்தமாக மாறுகின்றது.


சிலர் இலங்கையை பொருளாதார ரீதியாக சுரண்டுவதற்குரிய நாடல்ல என்கின்றனர். மாறாக இராணுவ தளம் சார்ந்தது என்கின்றனர். இதன் மூலம் ஏகாதிபத்திய இந்திய முரண்பாட்டை காட்ட முனைகின்றனர். இலங்கை இராணுவ ரீதியானதாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் சுரண்டலுக்குரிய ஒரு நாடாகவே உள்ளது. இராணுவ ரீதியானதும், சர்வதேச கடல் போக்குவரத்து சார்ந்தும் இலங்கைக்கு உள்ள முக்கியத்துவம், என அனைத்தும் உலகமயமாதலின் பிரதான சுரண்டும் வர்க்கத்தின் பொது நலனுடன் பின்னிப்பிணைந்தது. இதை பகை முரண்பாடாக, உலகமயமாதலில் செயல்படும் சுரண்டும் வர்க்கங்கள் கையாள்வது கிடையாது.


அனைத்தும் தழுவிய முரண்பாடு எங்கும் எதிலும் உண்டு என்பதும், அதை பகை முரண்பாடாக மட்டும் பூதக்கண்ணாடி கொண்டு தேடிக் காட்டுவது அரசியல் அபத்தமாகும். பிராந்திய ரீதியான முரண்பாடுகளை முன்னிலைப்படுத்தி, பகையாக மட்டும் திரித்துக்காட்டுவது அதை விட அபத்தமாகும். முரண்பாடுகள் என்பது, தனித்து ஒன்றாக மட்டும், அது மட்டும், அதுவே முழித்துக் கொண்டிருப்பதில்லை அது பலவாக இருப்பதுடன், ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததாகவும் முன்னிலைக்குரிய இடத்துக்கு மாறிச் செல்லுகின்றது.


புலிகளின் பாத்திரம் என்பது, அதன் எஞ்சிய அரசியல் அடிப்படையை தகர்த்து வருகின்றது. வெறும் லும்பன் மாபியா அராஜக குழுவாக, அரசியல் ரீதியாக பாசிட்டுகளாக மாறிவிட்டனர். இதன் வர்க்க அடிப்படை என்பது குறுகி குட்டி இராணுவத் தளபதிகளின் நலன்களாகி சீரழிந்துவிட்டது. இது தன்னை தற்பாதுகாத்துக் கொள்ளும் இராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. சினிமா பாணியிலான கதாநாயக நடவடிக்கையின் மூலம், தனது இருப்பை தக்கவைக்க முனைகின்றது. ஒரு வர்க்கத்தின் சுரண்டல் நலன் என்ற, அரசியல் அடிப்படையில் செயல்படுவது கிடையாது. அராஜகவாத லும்பன்தன சாகசத்தில், தனது இருப்பு சார்ந்த போராட்டத்தை நடத்துகின்றது. இந்தக் குழுவின் அராஜகவாத லும்பன் செயலை, மேற்குடன் அல்லது இந்தியாவுடன் இணைத்துக் காட்டுவது, புலிகளைப் போல் அரசியலற்ற வெற்றுத் தனமாகும்.


Friday, April 13, 2007

உங்களை அழைக்கிறது கலந்துரையாடல்

காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பு: பத்தில் ஒன்பது பழுதில்லை

காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பு: பத்தில் ஒன்பது பழுதில்லை


16 ஆண்டு காலச் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம், காவிரி நதி நீரைப் பகிர்ந்து கொள்வதில் ஒருமனதான இறுதித் தீர்ப்பை அளித்திருக்கிறது. காவிரியில் ஆண்டுக்கு 74,000 கோடி கன அடி நீர் கிடைக்கும் என்ற மதிப்பீட்டை (நூற்றுக்கு) 50 சதவீதம் நம்பலாம் என்ற அடிப்படையில், கர்நாடகத்திற்கு 27,000 கோடி கன அடி நீரும்; தமிழகத்திற்கு 41,900 கோடி கன அடி நீரும்; கேரளாவிற்கு 3,000 கோடி கன அடி நீரும்; புதுச்சேரிக்கு 700 கோடி கன அடி நீரும் இறுதித் தீர்ப்பில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இப்பகிர்வு போக, எஞ்சியிருக்கும் நீரில் 1,000 கோடி கன அடி நீர் சுற்றுப்புறச் சூழலுக்கும்; தவிர்க்க இயலாமல் கடலில் கலப்பது 400 கோடி கன அடி நீர் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், கர்நாடகம், தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 20,500 கோடி கன அடி நீர் தர வேண்டும்; அதிலிருந்து தமிழகம் புதுச்சேரிக்கு 600 கோடி கன அடி நீர் தரவேண்டும். கர்நாடகம் தர வேண்டிய நீரின் அளவு மேட்டூரில் அளவிப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. தற்பொழுது வழங்கப்பட்டுள்ள இறுதித் தீர்ப்பில், கர்நாடகம் தமிழகத்திற்கு, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்குத் தேவைப்படும் 1,000 கோடி கன அடி நீரையும் சேர்த்து, 19,200 கோடி கன அடி நீர் தர வேண்டும்; கர்நாடகம் தர வேண்டிய நீரின் அளவு, மேட்டூருக்கு மேலே, கர்நாடகம் தமிழகம் எல்லையில் உள்ள பில்லிகுண்டலு என்ற இடத்தில் அளவிடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பங்கில், கர்நாடக மாநிலம் தரும் 18,200 கோடி கன அடி நீர் போக, மீதமுள்ள 23,700 கோடி கன அடி நீர் தமிழகப் பகுதிகளில் காவிரி நதியில் கிடைப்பதாகும்.


கன்னட இனவெறியர்களோ, தமிழகத்தின் பங்கு முழுவதையும் கர்நாடகமே தரவேண்டும் என்பது போல தீர்ப்பு வந்திருப்பதாகவும்; கீழ்மடைக்காரனைவிட, மேல்மடைக்காரனுக்குக் குறைவான நீரே ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவதூறு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். தீர்ப்பின் உண்மை விவரத்தை விவசாயிகளுக்கு விளக்க வேண்டிய மாநில அரசும் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாகப் பொய் சொல்வதன் மூலம் தமிழர்களுக்கு எதிரான இனவெறி நடவடிக்கைகளுக்குத் தூபம் போட்டு வருகிறது.


கர்நாடகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நாடகதிரைப்படக் கலைஞரும், ஞானபீட விருது பெற்ற நாடக ஆசிரியருமான கிரீஷ் கர்னாட், தீர்ப்பை கர்நாடகம் மதிக்க வேண்டும் என வெளிப்படையாகக் கூறியதற்காகவே, அவரின் உருவ பொம்மை கொளுத்தப்பட்டது. கர்நாடக இனவெறியர்களின் இப்பாசிசப் போக்கின் காரணமாகவே, அம்மாநிலத்தில் தீர்ப்பை ஆதரிப்போரின் குரல்கள், பத்திரிகைகளுக்கு எழுதப்படும் வாசகர் கடிதம் பகுதியைத் தாண்டி வெளியே கேட்கவில்லை.


1934 தொடங்கி 1980 வரையிலான காலகட்டத்தில், கர்நாடகம் உபயோகித்திருக்கும் காவிரி நீரின் குறைந்தபட்ச சராசரி அளவு 11,840 கோடி கன அடி; அதிகபட்ச சராசரி அளவு 19,070 கோடி கன அடி. கர்நாடகம், தனது காவிரி பாசனப் பரப்பைத் தன்னிச்சையாக விரிவாக்கிக் கொண்ட பிறகு, 198090 காலகட்டத்தில், அம்மாநிலம் பயன்படுத்தியிருக்கும் காவிரி நீரின் சராசரி அளவு 28,030 கோடி கன அடியாகும். (ஆதாரம்: தமிழகம்: நதிநீர்ப் பிரச்சினைகள் பழ.நெடுமாறன், பக்:107) இப்புள்ளி விவரத்தோடு ஒப்பிட்டால், இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 27,000 கோடி கன அடி நீர் என்பது முற்றிலும் நியாயமான பங்கீடாகும்.


இது ஒருபுறமிருக்க, இடைக்காலத் தீர்ப்பில், கர்நாடக மாநில அரசு தனது பாசனப்பரப்பை 11.2 இலட்சம் ஏக்கருக்கு மேல் விரிவாக்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், கர்நாடக மாநில அரசோ, இத்தடையைக் கண்டு கொள்ளாமல், தனது பாசனப் பரப்பை விரிவாக்கிக் கொண்டே சென்றது. இறுதித் தீர்ப்பில், கர்நாடகா தடையை மீறி விரிவாக்கம் செய்த பாசனப் பரப்பையும் உள்ளடக்கி 18.85 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பிற்குப் பாசனம் அளிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.


இந்தச் சாதகமான அம்சங்களைக் கருத்தில் கொண்டுதான் காவிரி நடுவர் மன்றத்தில் கர்நாடகா சார்பாக வாதாடிய வழக்குரைஞர் ஃபாலி.எஸ். நாரிமன், கர்நாடக மாநில தலைமை வழக்குரைஞர் இருவரும், ""இத்தீர்ப்பு நியாயமானது'' எனக் கூறியுள்ளனர். எதிர்க்கட்சிகள் அவர்களின் கருத்துக்கு எதிராகச் சட்டசபையில் சாமியாடிய பிறகுதான், கர்நாடக மாநில அரசு அவர்களின் கருத்தை மறுத்துப் பேசியதோடு, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, தீர்ப்பை முற்றிலும் நிராகரிப்பதாக அறிவித்திருக்கிறது.


···


கர்நாடகாவைப் போலன்றி, தமிழகத்தில் இத்தீர்ப்பிற்கு அரசியல் கட்சிகள் இயக்கங்கள் விவசாய சங்கங்கள் மத்தியில் விமர்சனத்துடன் கூடிய ஆதரவும், எதிர்ப்பும் கிடைத்திருக்கிறது.


நடுவர் மன்றத்தில் நடந்த வழக்கில், கர்நாடகம் தமிழகத்திற்குத் தரவேண்டிய நீரை மேட்டூரில்தான் அளவிட வேண்டும் எனத் தமிழகம் கோரியிருந்தது. கர்நாடகம்தான், பில்லிகுண்டலுவை நீர் அளக்கும் இடமாகக் கோரியது. இறுதித் தீர்ப்பு கர்நாடகாவிற்குச் சாதகமாக வந்திருக்கிறது என்பது தீர்ப்பை எதிர்ப்பவர்களின் வாதங்களுள் ஒன்று.


இறுதித் தீர்ப்பில் பில்லிகுண்டலு தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், திறந்துவிடப்படும் நீரை அங்கு அளவிட்டு அறிவிக்கப் போவது கர்நாடக அரசு கிடையாது; மைய அரசின் நீர் வள கமிசன்தான் நீரை அளவிட்டு அறிவிக்கப் போகிறது. சர்வதேச அளவுகோலின்படி பில்லிகுண்டலுவில் நீர் அளக்கப்படும் எனக் கூறப்படுவதால், மேட்டூரில் நீரை அளந்தபோது தமிழகம் கர்நாடகாவிற்கு இடையே ஏற்பட்ட முரண்பாடுகளும், குழப்பங்களும் நீக்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், முரண்பட்ட இரண்டு கட்சிக்காரர்களிடையே ஏற்படும் மோதலைத் தீர்த்து வைக்க மத்தியஸ்தரை நாடவேண்டும் என்ற நடைமுறைபடி பார்த்தால், பில்லிகுண்டலுவையோ அல்லது இரு மாநிலங்களுக்குமான எல்லைப் பகுதியில் வேறொரு இடத்தையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதை நியாயமானதாகத்தான் பார்க்க முடியும்.


பில்லிகுண்டலுவுக்கும், மேட்டூருக்கும் இடையே உள்ள தமிழகப் பகுதிகளில் ஆண்டொன்றுக்கு 2,500 கோடி கன அடி நீர் காவிரியில் கிடைப்பதாக தமிழக அரசே நடுவர் மன்றத்திடம் கூறியிருக்கிறது. இந்தப் புள்ளி விவரப்படி பார்த்தால், கர்நாடகம் இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு, தனது மாநில எல்லையான பில்லிகுண்டலுவில் 18,000 கோடி கன அடி நீரைத் திறந்துவிட்டாலே, மேட்டூரில் (18,000 + 2,500 = 20,500 கோடி கன அடி) கணக்கு நேராகி விடும். தற்பொழுது இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடகம், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1,000 கோடி கன அடி நீர் போக, 18,200 கோடி கன அடி நீரை தமிழகத்தின் பங்காக பில்லிகுண்டலுவில் திறந்துவிட வேண்டும்.


இடைக்காலத் தீர்ப்பின்படி புதுச்சேரிக்குத் தரவேண்டிய பங்கு போக, தமிழகத்திற்கு மேட்டூரில் 19,900 கோடி கன அடி நீர் ""கிடைத்தது'' என்றால், தற்பொழுது, புதுச்சேரியின் பங்கு போக, 20,000 கோடி கன அடி நீர் கிடைக்கும்.


இது, இடைக்காலத் தீர்ப்பில் ஒதுக்கப்பட்டதை விடக் கொஞ்சம் அதிகமானது என்ற போதிலும், தமிழகப் பகுதியில் 2,500 கோடி கன அடிக்குக் குறைவாகவே நீர் கிடைத்தால் (தீர்ப்பு வெளிவந்த பிறகு தமிழக அரசு மேட்டூருக்கும் பில்லிகுண்டலுவுக்கும் இடையே 1,700 கோடி கன அடி நீர்தான் கிடைக்கும் எனக் கூறத் தொடங்கியிருக்கிறது) இடைக்காலத் தீர்ப்பைவிடக் குறைவான நீரே கிடைக்கும். எனினும், இடைக்காலத் தீர்ப்பை மட்டுமே அளவுகோலாக வைத்துக் கொண்டு, இறுதித் தீர்ப்பைப் பரிசீலிப்பது குருட்டுத்தனமானது.


காவிரியில் கிடைக்கும் மொத்த நீரில் (74,000 கோடி கன அடி) 20 சதவீதப் பங்கு (கிட்டத்தட்ட 14,300 கோடி கன அடி) கேரளாவின் கபினி, பவானி, பம்பாறு நீர் பிடிப்புப் பகுதியில் இருந்துதான் கிடைக்கிறது. இந்த உண்மையைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் கேரளாவிற்கு 3,000 கோடி கன அடி நீர் இறுதித் தீர்ப்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, கேரளாவிற்கு அநியாயமாக நீர் ஒதுக்கப்பட்டு விட்டதாக இனவாதிகள் புலம்புவதற்கு அடிப்படையே கிடையாது.


1901இல் தமிழகத்தில் காவிரி பாசனப் பரப்பு 13.45 இலட்சம் ஏக்கராக இருந்தது. இது, 1928இல் 14.44 இலட்சம் ஏக்கராக அதிகரித்தது. இந்தக் காலக் கட்டத்தில் கையெழுத்தான 1924 ஒப்பந்தத்தின்படி, தமிழகம் மேட்டூர் திட்டத்தின் கீழ் மேலும் 3.2 இலட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை விரிவாக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், தமிழகமோ, 19511961 கால கட்டங்களில் நிறைவேற்றப்பட்ட கீழ் பவானி திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம், அமராவதி, புள்ளம்பாடி, கட்டளைக் கால்வாய் திட்டம் ஆகியவற்றையும் பயன்படுத்தி, 6.4 இலட்சம் ஏக்கர் அளவிற்கு பாசனப் பரப்பை விரிவாக்கிக் கொண்டது.


""1924 ஒப்பந்தம் இத்திட்டங்களை அனுமதிக்கவில்லை'' என அப்போதைய மைசூர் அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ""மேட்டூர் கால்வாய் திட்டம் மேட்டூர் ஒப்பந்தத்தின் கீழ்தான் வருகிறது. புதிய கட்டளைக் கால்வாய், புள்ளம்பாடி கால்வாய் திட்டங்கள் மூலம் விரிவாக்கப்படும் பாசனப்பரப்பிற்கு உபரி நீரைத்தான் தமிழகம் பயன்படுத்தும்; கூடுதல் நீர் கேட்க மாட்டோம்'' என மைய அரசின் திட்டக் கமிசனிடம் உறுதியளித்துத்தான், தமிழக அரசு இத்திட்டங்களை நிறைவேற்றியது. இதன் விளைவாக, 1971இல் தமிழகத்தில் காவிரிப் பாசனப் பரப்பு 25.30 இலட்சம் ஏக்கராகவும்; 1990இல் 25.80 இலட்சம் ஏக்கராகவும் அதிகரித்தது;


""மொழி வழி மாநிலங்கள் 1956இல் ஏற்படுத்தப்பட்ட பிறகு, தமிழகத் திட்டங்களுக்கு கர்நாடகமும், கர்நாடகத் திட்டங்களுக்குத் தமிழகமும் எதிர்ப்புகளைத் தெரிவிக்க ஆரம்பித்தன'' எனக் குறிப்பிடுகிறார், காவிரி காப்புக் குழுவின் அமைப்பாளரான, பூ.அர. குப்புசாமி (ஆதாரம்: காவிரி: திராவிட இயக்க அரசியல் தலைமையின் தோல்வி, பக்.15)


காவிரிப் பிரச்சினையின் இந்த அம்சத்தை கணக்கில் எடுத்துக் கொண்டுதான், நடுவர் மன்றம், 1924க்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட பாசனப் பரப்பு 15.20 இலட்சம் ஏக்கர்; 1924 ஒப்பந்தத்தின்படி அனுமதிக்கப்பட்ட பாசனப் பரப்பு 6.20 இலட்சம் ஏக்கர்; ஒப்பந்தத்திற்கு அப்பால் விரிவாக்கம் செய்யப்பட்டாலும், தகுதியின் அடிப்படையில் அனுமதிக்கப்படும் பரப்பு 2.06 இலட்சம் ஏக்கர்; சிறு பாசனத்தின் கீழ் வரும் பரப்பு 1.25 ஏக்கர் பரப்பு என்ற அடிப்படையில் தமிழகத்தின் பாசனப் பரப்பை 24.71 இலட்சம் ஏக்கர் எனத் தீர்மானித்திருக்கிறது.


எதிர்கால விரிவாக்கத்தையும் கணக்கில் கொண்டு, கர்நாடகாவின் காவிரி பாசனப் பரப்பை 27.28 இலட்சம் ஏக்கராக அனுமதிக்கக் கோரிய கர்நாடகத்தின் பாசனப் பரப்பு, இறுதித் தீர்ப்பில் 18.85 இலட்சம் ஏக்கராகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு, நடுவர் மன்றத்தில் தனக்கு 56,200 கோடி கன அடி நீர் வேண்டும் எனக் கோரியது; கர்நாடகம் தனக்கு 46,500 கோடி கன அடி நீர் வேண்டும் எனக் கோரியது. கேரளாவும், புதுச்சேரியும் தத்தமது மாநிலங்களுக்கு முறையே 9,900 / 900 கோடி கன அடி நீரைக் கோரியிருந்தன. இதன்படி தண்ணீரை ஒதுக்க வேண்டும் என்றால் காவிரியில் 1,13,500 கோடி கன அடி நீர் கிடைக்க வேண்டும். ஆனால், காவிரியிலோ, 50 சதவீத நம்பகத்தன்மை அடிப்படையில் (இரண்டு ஆண்டுகளில் ஒரு ஆண்டு எதிர்பார்க்கப்படும் தண்ணீர் கிடைக்கும் என்ற அளவுகோலின்படி) 74,000காடி கன அடி நீர்தான் கிடைக்கிறது. 75 சதவீத நம்பகத்தன்மை அடிப்படையில் (நான்கு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் எதிர்பார்க்கப்படும் தண்ணீர் கிடைக்கும் என்ற அளவுகோலின்படி) 67,100 கோடி கன அடி நீர்தான் கிடைக்கும்.


""ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கின்ற அனுபவத்தைக் கொண்டு, உபரி நீரை (ஒப்பந்தம் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக வரும் நீரை) எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்று மறு ஆய்வு செய்ய வேண்டும்'' என 1924 ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 1970களிலேயே காவிரி நதி நீரில் 92 சதவீத நீர் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால், உபரி நீர் என்ற பேச்சுக்கே வழி இல்லாமல் போய்விட்டது. இதனால் 1924 ஒப்பந்தத்தில் கூறியபடி மறுஆய்வு செய்யும் வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.


காவிரி நதி நீரைப் பயன்படுத்தும் மாநிலங்களின் உரிமையை நிலைநாட்டும் அதேசமயம், மாறியுள்ள புதிய சூழ்நிலையில், பற்றாக்குறையுள்ள நதிநீரை, அதைப் பயன்படுத்தும் மாநிலங்களுக்கு இடையே எப்படி நியாயமாகப் பகிர்ந்து கொள்வது என்பதுதான் காவிரி சிக்கலின் சாரம். இந்த அடிப்படையில் இருந்துதான் நடுவர் மன்றத்தின் இறதித் தீர்ப்பைப் பரிசீலிக்க வேண்டும்.


· ""காவிரி தங்களுக்கு மட்டுமே சொந்தம்'' என்று கூப்பாடு போடுவதன் மூலம், கர்நாடகா காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையை அங்கீகரிக்க மறுத்து வந்தது. இறுதித் தீர்ப்பு, ""காவிரியை, அதனைப் பயன்படுத்தும் எந்தவொரு மாநிலமும் தனியுரிமை கொண்டாட முடியாது'' எனக் கூறியிருப்பதன் மூலம், கன்னட இனவெறிக்கு ஆப்பறைந்திருக்கிறது.


· ""1892 மற்றும் 1924 ஒப்பந்தங்கள் இரண்டுமே செல்லுபடியாகாது; அவை எங்களைக் கட்டுப்படுத்தாது'' என்று கர்நாடகமும், கேரளமும் கூறி வந்ததை, இறுதித் தீர்ப்பு நிராகரித்து விட்டது. அதேசமயம், புதிய நிலைமைகளுக்கு ஏற்ப அந்த ஒப்பந்தங்களை மீளாய்வு செய்து, இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அந்த ஒப்பந்தங்களின் இடத்தை இந்தத் தீர்ப்பு எடுத்துக் கொண்டு விட்டதாகக் கூறப்பட்டுள்ளதை நியாயமான சட்டபூர்வ நடவடிக்கையாகத்தான் பார்க்க வேண்டும்.


· ""தனக்குப் போக எஞ்சியதுதான் தமிழகத்திற்கு'' என்பதுதான் காவிரிநீரைப் பகிர்ந்து கொள்வதில் கர்நாடகாவின் நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. கர்நாடகம், தமிழகத்திற்குத் தர வேண்டிய பங்கை, மாதாந்திர தவணை அடிப்படையில் திறந்துவிட வேண்டும் என இறுதித் தீர்ப்பில் கூறியிருப்பதன் மூலம், கர்நாடகத்தின் அடாவடித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


· கர்நாடகம், காவிரியில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும், அதனால் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்கு நீர் குறைந்துவிடக் கூடாது என்பது தீர்ப்பில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


· குறுவைப் பயிர் சாகுபடிக்கு 10,100 கோடி கன அடி நீர் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது. இறுதித் தீர்ப்பில், குறுவை சாகுபடி நடக்கும் ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் 13,400 கோடி கன அடி நீர் திறந்துவிட வேண்டும்; இந்த நீரை அந்தந்த மாதங்களில் ஒதுக்கப்பட்ட அளவின்படி, ஒவ்வொரு மாதமும் 10 தவணைகளில் திறந்துவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருப்பதால், குறுவைப் பயிர் சாகுபடி சூதாட்டமாக மாறிவிடாமல், உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.


· தமிழக அரசு காவிரிப் பாசன வாய்க்கால்களில் தூர் வாரியதற்கு மேல், எந்தவிதமான நவீன மேம்பட்ட வசதிகளையும் செய்து கொடுத்ததில்லை. காவிரி வழக்கு நடப்பதைக் காட்டியே, காவிரிப் பாசன வாய்க்கால்களையும், ஏரிகளையும் நவீனப்படுத்த மறுத்து வந்தது. வடகிழக்குப் பருவமழை பெய்யும் காலங்களில் வெள்ளத்தால் ஏரிகள் கண்மாய்கள் உடைத்துக் கொண்டு, பயிர்களும், நிலமும் சேதாரமாவதைத் தடுப்பது மட்டுமல்ல; அந்த உபரி நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தவும் நவீனமயம் அவசியம்.


காவிரியில் தண்ணீர் விடாமல் முரண்டு பிடிப்பதற்கு வேண்டுமானால், கர்நாடகாவைக் குற்றம் சொல்லலாம்; ஆனால், வெள்ளக் காலங்களில் டெல்டா விவசாயிகள் நட்டமடைவதற்கு தமிழக அரசைத் தவிர, வேறு யாரைக் குற்றம் சொல்ல முடியும்? காவிரியில் தண்ணீர் இல்லாமல் தரிசாகப் போடப்படும் நிலங்களின் பரப்பைவிட, வெள்ளத்தால் நாசமாகும் வயல் பரப்பு அதிகம்.


இறுதித் தீர்ப்பின் மூலம் காவிரிப் பாசன வாய்க்கால்களை நவீனப்படுத்துவதற்கு இருந்துவந்த ""தடை'' நீங்கிவிட்டது. இந்த நவீனமயம் காவிரிப் பாசன விவசாயிகளின் நலனுக்காக மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர, உலக வங்கியின் உத்தரவுப்படி தண்ணீர் வியாபாரிகளின் இலாபத்திற்காக மேற்கொள்ளப்படக் கூடாது என்பதை தமிழக அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.


· தீர்ப்பில், காவிரி டெல்டா பகுதியில் கிடைக்கும் நிலத்தடி நீரையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும் என்ற கர்நாடகத்தின் வாதம் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.


· கேரளத்தில் போதிய அடிக்கட்டுமான வசதிகள் இல்லாததால் அம்மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 3,000 கோடி கனஅடி நீரையும் அம்மாநிலம் பயன்படுத்த தற்பொழுது வாய்ப்பு இல்லை. எனவே, கேரளா பயன்படுத்த முடியாத நீரைத் தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கர்நாடகம் கோரியது. இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அந்த நீர் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்திற்குத் தற்காலிகமாக 2,000 முதல் 2,500 கோடி கன அடி நீர் கூடுதலாகக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


· மேல்மடை மாநிலமான கேரளா, கீழ்மடை மாநிலங்களான கர்நாடகமும், தமிழகமும் பாதிக்கப்படும் வகையில் எந்தத் திட்டத்தையும் நடைமுறைபடுத்தக் கூடாது என்பது சுட்டிக் காட்டப்பட்டு, கேரளா அனுமதிக்குமாறு கோரியிருந்த மூன்று திட்டங்களை நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் நிராகரித்து விட்டது.


இவை போன்ற சாதகமான அம்சங்கள் ஒருபுறமிருந்தாலும், இறுதித் தீர்ப்பில் குறைபாடுகளும், குழப்பங்களும் காணப்படுகின்றன.


காவிரியில் கிடைக்கும் நீர் 50 சதவீத நம்பகத் தன்மை அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டிருப்பதால், இரண்டு வருடங்களில் ஒரு ஆண்டு எதிர்பார்க்கப்படும் தண்ணீர் கிடைக்கும் எனக் கூற முடியாது. எனவே, பற்றாக்குறையையும் எப்படி பகிர்ந்து கொள்வது என்பதை உடனடியாகவே தீர்மானிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழகத்தில் பெய்யும் வடகிழக்குப் பருவமழை மட்டும் பொய்த்தால் எப்படி பகிர்ந்து கொள்வது? கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்யும் தென்மேற்குப் பருவ மழை பொய்த்தால் எப்படி பகிர்ந்து கொள்வது? இரண்டு பருவ மழைகளும் பொய்த்தால் எப்படி பகிர்ந்து கொள்வது என்பது பற்றி தீர்மானிக்காமல், பற்றாக்குறை வரும்பொழுது ஒதுக்கப்பட்ட பங்கின்படி பிரித்துக் கொள்ள வேண்டும் என பொத்தாம் பொதுவான சூத்திரத்தைச் சொல்லிவிட்டு, இறுதித் தீர்ப்பு நழுவிக் கொள்கிறது.


காவிரியில் கிடைக்கும் மொத்த நீரில் இருந்து, சுற்றுப்புறச் சூழலுக்காக ஒதுக்கப்பட்ட 1,000 கோடி கன அடி நீரை கழித்த பிறகுதான், மாநிலங்களுக்கிடையே தண்ணீர் பங்கு பிரிக்கப்பட்டிருப்பதாக இறுதித் தீர்ப்பு கூறுகிறது. எனினும், மொத்த நீரில் இருந்து ஏற்கெனவே கழிக்கப்பட்ட 1,000 கோடி கன அடி நீரை, கர்நாடகம் தமிழகத்திற்குத் தரவேண்டிய நீரில் இருந்து மீண்டும் கழித்திருப்பதன் மூலம், அந்த 1,000 கோடி கன அடி நீரை கர்நாடகாவே சேமித்துக் கொள்ளும் வாய்ப்பை இறுதித் தீர்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.


மேலும், கேரளாவிற்குத் தமிழக அணைகளில் இருந்து கொடுக்க வேண்டிய 9,000 கோடி கன அடி நீரும்; கடலில் கலக்கும் 4,000 கோடி கன அடி நீரும் தமிழகத்தின் பங்கில் இருந்து தான் கழிக்கப்படும் என்றால், 41,900 கோடி கன அடி நீரை விடக் குறைவான பங்கே தமிழகத்திற்குக் கிடைக்கும்.


நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை முற்றிலுமாக நிராகரித்திருக்கும் கர்நாடகம், ""பேச்சு வார்த்தை'' என்ற மோசடித்தனத்தை மீண்டும் அரங்கேற்றத் திட்டம் போடுகிறது. இந்த நச்சுச் சூழலுக்குள் இப்போது மட்டுமல்ல; எதிர்காலத்திலும் தமிழகம் சிக்கிக் கொள்ளக் கூடாது.


இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் அம்சங்களை நீக்கக் கோரி, நடுவர் மன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாகத் தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. இந்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை காலந்தாழ்த்தாமல் வழங்கக் கோர வேண்டும். அதுவரை, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றவாறு, அதனை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும்; இறுதித் தீர்ப்பில் கூறியபடி, இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு சுய அதிகாரம் படைத்த கமிட்டிகள் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரித் தமிழக மக்கள் போராடுவதன் மூலம் மட்டுமே, இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்குக் கிடைத்திருக்கும் சாதகமான அம்சங்களைத் தக்க வைக்க முடியும்; பாதகமான அம்சங்களை நீக்கவும் முடியும்.


· ரஹீம்

Thursday, April 12, 2007

அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...
அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

ட்டியலின பழங்குடி மக்கள் என்றாலே அவர்களைப் பற்றி நாட்டின் பெரும்பாலானவர்கள், படித்த நகர்ப்புற அறிவாளிகள் கூட ஒரு தவறான கண்ணோட்டம் வைத்திருக்கிறார்கள். அறிவியல் தொழில்நுட்பம், கல்வி பண்பாடு, சமூகப் பொருளாதாரம், நாகரிகம் ஆகியவற்றால் தாங்கள் முன்னேறியவர்கள் என்றும், ஆனால் பழங்குடியினர் என்பவர்கள், மனித நாகரிகமே அறியாத பூர்வகுடியினர்; ஆதி முதற்கொண்டு காடுகளிலேயே பிறந்து, வளர்ந்தவர்கள்; வெளியுலக வளர்ச்சியையே காணாது பின்தங்கிப் போயுள்ளவர்கள் என்றும் இவர்கள் கருதுகின்றனர்.ஆனால், பட்டியலின பழங்குடி மக்களின் உண்மையான வரலாறோ வேறுவிதமானது. இன்று அவர்கள் பழங்குடி விவசாயிகளாகவும், காடுகளில் கிடைக்கும் பொருட்களைச் சேகரித்து விற்பவர்களாகவும், வேட்டையாடிகளாகவும் வாழ்ந்தாலும், அநாகரிகமானவர்களாகத் தோன்றினாலும், இந்தப் பழங்குடி மக்களின் மூதாதையர்களும் மற்றபிற மக்களைப் போலவே ஒரு காலத்தில் ஒப்பீட்டு ரீதியில் முன்னேறிய விவசாயமும் பொருளாதாரமும், நாகரிகமும் கொண்டிருந்தவர்கள்தாம். சமவெளிகளில் அவர்களிடமிருந்த பண்படுத்தப்பட்ட விவசாய நிலங்களைப் பறித்துக் கொண்டு காடுகளுக்கும் மலைகளுக்கும் விரட்டப்பட்டவர்கள் தாம்.காடுகள் மீது அரசு ஏகபோக உரிமையை நிறுவிய பிரித்தானிய காலனியவாதிகளுக்கு முன்பிருந்தே, மத்தியகால மன்னர்கள் காலத்திலேயே செழுமையான விவசாயச் சமவெளிகளை நிலப்பிரபுக்கள் கைப்பற்றிக் கொள்வதை அடுத்தடுத்த ஆட்சியாளர்கள் ஊக்குவித்தார்கள்; துணை நின்றார்கள். இதனால் நிரந்தரமான வாழ்விடங்களையும், விவசாய நிலங்களையும் இழந்த மக்கள் மலைச் சரிவுகளிலும், காடுகளிலும் பருவமழைக்கேற்ப பயிர் செய்தும், காடுகளில் கிடைக்கும் தேன், விறகு, சில விதைகள்பழங்களைச் சேகரித்தும், சிறிய விலங்குகளை வேட்டையாடியும் விற்றுப் பிழைத்தனர். கல்வி வசதியின்றியும், நாகரிக வளர்ச்சி குன்றியும் பின்தங்கியவர்கள் ஆனார்கள்.வளமான மண்வளமும், மழை வளமுமிக்க மலைச் சரிவுகள் அந்நிய மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளால் கைப்பற்றப்பட்டு காபி, தேயிலை, ஏலம், இலவங்கம் போன்ற விலை உயர்ந்த பணப்பயிர்களின் பண்ணைகளாக மாற்றப்பட்டன. கட்டுமானப் பொருட்களுக்காகவும், காகித ஆலைகளுக்காகவும் காடுகள் சூறையாடப்பட்டன. நவீன ஆலை உற்பத்திக்கான தாதுப் பொருட்களையும், நிலக்கரிகளையும் வெட்டி எடுப்பதற்காகக் காடுகள் அழிக்கப்பட்டன. இந்தத் தொழில்களுக்கான கூலி அடிமைகளாகப் பழங்குடி மக்கள் மாற்றப்பட்டனர்.காலனிய காலத்திற்கு முன்பிருந்தே நடந்து வரும் இத்தகைய அநீதிகளுக்கு ""ஈடாக''ப் பழங்குடி மக்கள் பட்டியலினமாக அறிவிக்கப்பட்டு இடஒதுக்கீடு என்ற சலுகை மட்டும் தரப்பட்டது. ஆனால், அதன் பிறகு ""தேசியப் பொருளாதார வளர்ச்சி'' என்ற பெயரில் காடுகளையும் மலைகளையும் பழங்குடியின மக்களிடமிருந்து பறிப்பது பன்மடங்கு அதிகரித்து விட்டது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8.7 சதவீதமானவர்களாகப் பழங்குடி மக்கள் உள்ளனர். இந்த மக்கள் பலநூறு ஆண்டுகளாக வாழும் மலைகளும் காடுகளும் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கானஇராட்சத அணைகள் கட்டுவதற்கான ஆறுகள், மிகப் பெரும் அளவிலான தாதுப் பொருட்கள் மற்றும் பிற மூலாதாரங்கள் நிரம்பியிருப்பவை. இம்மக்களை அங்கிருந்து வெளியேற்றினால்தான் உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்ட முடியும் என்ற விதமாக ஆட்சியாளர்கள் திட்டமிடுகின்றனர்.ஆந்திரப் பிரதேசத்தின் கோதாவரி மாவட்டங்களில் கட்டப்பட்டு வரும் போலாவரம் இந்திரா சாகர் பல்நோக்கு நீர்ப்பாசன மின் திட்டம்; விசாகபட்டினம் மாவட்டத்தின் பாக்சைட் சுரங்கத் திட்டம்; நாகார்ஜுனா அணை அருகே அமையவுள்ள உரேனியம் தாதுப்பொருள் ஆலை; ஒரிசாவின் நியாம்கிரி மலைப் பகுதியில் அமையும் வேதாந்தா அலுமினியம் ஆலைக்காக வெட்டப்படும் உலகிலேயே மிகப் பெரிய பாக்சைட் சுரங்கம் மற்றும் பாஸ்கோ இரும்புத் தாது சுரங்கம் ஆகியவற்றால் ஆந்திரா, சட்டிஸ்கார், மற்றும் ஒரிசா மாநிலங்களில் வாழும் பல இலட்சக்கணக்கான பட்டியலின பழங்குடி மக்கள் தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்படுவர்.ஏற்கெனவே மத்தியப்பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பாயும் நர்மதா மற்றும் அதன் துணை ஆறுகள் மீது சர்தார் சரோவர் அணைத் திட்டத்தின் கீழ் பல சிறியபெரிய அணைகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளன. இதனால் பல இலட்சம் பழங்குடியின மக்கள் வெளியேற்றப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கின்றனர். இந்த வெளியேற்றத்துக்கும், அணைத்திட்டங்களுக்கும் எதிராகவும், மறுவாழ்வு கோரியும் பல ஆண்டுகளாக அவர்கள் போராடுகின்றனர். பழங்குடியின மக்களின் வெளியேற்றம் மற்றும் அணைத் திட்டங்களை நியாயப்படுத்தித் தீர்ப்புகள் வழங்கியுள்ள உச்சநீதி மன்றம் பிறப்பித்துள்ள மறுவாழ்வு ஏற்பாடுகள் எதையுமே செய்யாது மத்தியமாநில அரசுகள் ஏய்த்து வருகின்றன.ஆந்திராவில் ""சமா'' என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம், பழங்குடியின மக்கள் அனுபவித்து வரும் பட்டியலிடப்பட்ட பகுதிகளை, தாதுப் பொருட்கள் வெட்டியெடுப்பதற்காக தனியார்களுக்குக் குத்தகைக்கு விடுவதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் 12 ஆண்டுகளாக வழக்கு நடத்தித் தடுத்திருக்கிறது. அதன் அமைப்பாளர் ரெட்டுபிரகடா என்பவர் சொல்கிறார், ""ஒரு பத்து சதவீத வளர்ச்சியைச் சாதிப்பது என்ற பொருளாதாரத் திட்டத்தின் அங்கமாக அணைக்கட்டுகளும் அலுமினிய ஆலைகளும் நிறுவப்பட உள்ளன. பழங்குடியின மக்களின் மொத்த வெளியேற்று விளைவின் வளர்ச்சியை (எணூணிண்ண் ஞீடிண்ணீடூச்ஞிஞுட்ஞுணt ணீணூணிஞீதஞிt ணிஞூ tடஞு tணூடிஞச்டூ ணீஞுணிணீடூஞு எஈக) உயர்த்துவதன் மூலம் இதைச் சாதிக்கப் போகிறார்கள்.''நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பத்து சதவீதமாக உயர்த்துவது என்ற மன்மோகன் சிங் மாண்டேக் சிங் அலுவாலியா சிதம்பரம் ஆகிய உலகவங்கி, ஐ.எம்.எஃப், மற்றும் உலக வர்த்தகக் கழக எடுபிடிகளின் இலக்கை அடைய முயல்வது இப்படிப்பட்டதாகத்தான் இருக்கிறது.இந்த உண்மையை மூடிமறைக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் மத்தியில் இந்திய அரசு ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. அதற்குத் தோதாக ""பழங்குடியின மக்கள் மற்றும் பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டம் 2006'' என்று அதற்கு நயவஞ்சகமான பெயரும் சூட்டியிருக்கிறது. அதற்கு முன்பாக, இந்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனங்களுக்கான அமைச்சகம் சுற்றுச் சூழல் தாக்கம் பற்றிய ஒரு புதிய மதிப்பீட்டு அறிவிக்கையையும் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிட்டிருக்கிறது.அந்தச் சட்டத்தின் பெயரும், அறிவிக்கையின் தோரணையும் தோற்றத்தில் பழங்குடியின மக்களுக்குச் சாதகமானதாகவும் சுற்றுச்சூழலையும் வளங்களையும் பாதுகாப்பதற்கானதாகவும் தெரிகின்றன. ஆனால், உண்மையில் இவை உள்ளடக்கத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும், பன்னாட்டு மற்றும் இந்தியத் தரகுத் தொழில்களின் நலன்களுக்காக சுற்றுச் சூழலை நாசப்படுத்துவதாகவும் வனங்களை அழித்துச் சூறையாடுவதாகவும் உள்ளன. மிகப் பிற்போக்கான, நாட்டை மறுகாலனியாக்கும் ஆளும் அரசியல் கூட்டணிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்றும், அதோடு மதவெறி பாசிச அரசியல் கூட்டணிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றும் பெயர் வைத்திருப்பதைப் போல பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை அகதிகளாக விரட்டியடிக்கும் சட்டத்திற்குப் ""பழங்குடி மற்றும் பாரம்பரிய வனவாசிகள் வனஉரிமைகள் அங்கீகாரச் சட்டம்'' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.நாடு முழுவதும் மொத்தம் 500க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவுவதற்கு மத்தியமாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன; அவற்றில் 19 மாநிலங்களில் 237 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஒப்புதல் பெற்றுவிட்டன. 23 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்கெனவே இயங்கத் தொடங்கி விட்டன. 166 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான கொள்கை அறிவிக்கை செய்வதற்காக கொள்கை ரீதியிலான முடிவெடுக்கப்பட்டு விட்டது; 63க்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு விட்டன. 237 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக 34,861 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. இவற்றில் மிகமிகப் பெரும்பாலானவை நடுத்தர, சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து கைப்பற்றப்படும் விவசாய நிலங்கள். இதனால் கோடிக்கணக்கான விவசாயிகள் நிலவெளியேற்றத்துக்குப் பலியாகிறார்கள்.தற்போது மத்தியிலோ, மாநிலங்களிலோ ஏதாவது ஒரு வகையில் (தனித்தோ, கூட்டணிகளின் மூலமாகவோ) அரசில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை முன்னிட்டு விவசாயிகளின் நில வெளியேற்றத்துக்குத் துணை போகும் சக்திகளாகவே உள்ளனர். அதேசமயம் தாங்கள் ஆட்சியில் பங்கேற்காத மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. போன்ற எதிர்க்கட்சிகள்; மகேந்திரா சிட்டி போன்றவற்றுக்கு துணைநின்ற ஜெயலலிதா; மத்திய அரசில் பங்கேற்று அன்புமணி மூலம் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவப்படுவதற்குத் துணை நிற்கும் பா.ம.க இராமதாசு; இப்போதைக்கு எதிர்த்தரப்பில் இருக்கும் மமதா பானர்ஜி போன்றவர்கள் விவசாயிகளின் நில வெளியேற்றத்தை எதிர்ப்பதாக நாடகமாடுகிறார்கள்.ஆனால், இத்தகைய மோசடி, பித்தலாட்டங்கள் எல்லாவற்றிலும் முன்னோடிகளாகத் திகழ்பவர்கள் போலி இடதுசாரிக் கட்சிகள்தாம், அதிலும் குறிப்பாக, போலி மார்க்சிஸ்டு கட்சிதான்! ஏகாதிபத்திய உலகமயமாக்கம் என்பதே "தேச' விரோத, மக்கள் விரோத, ஏகாதிபத்திய மறுகாலனியாக்க நோக்கம் கொண்டதுதான். ஆனால், ஏகாதிபத்திய உலகமயமாக்கம் மனித முகம் கொண்டதாகவும், ""தேசிய'' சுயசார்பு அடிப்படையிலானதாகவும், தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கானதாகவும் இருக்க வேண்டும் என்றும் எவ்வித அடிப்படையும் இல்லாத வெற்று நிபந்தனையோடு உலகமயமாக்கத்தை போலி கம்யூனிஸ்டுகள் ஏற்கின்றனர். அதேபோல விவசாயிகளைப் பாதிக்காத வகையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சவடாலடிக்கின்றனர்.ஆனால், தாங்கள் ஆளும் மாநிலங்களில், குறிப்பாக மேற்கு வங்கத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கு செங்கொடியை நடைபாவாடையாக விரித்து வரவேற்கின்றனர். மத்திய அரசின் தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கல் நடவடிக்கைகளை வெறும் அறிக்கை தீர்மானம் போட்டு எதிர்ப்பதாக நடித்துக் கொண்டே ""தொழில்வளர்ச்சி வேலை வாய்ப்புப் பெருக்கம் பொருளாதார முன்மேற்கு வங்கம் சிங்கூர்நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக போலீசை ஏவி பாசிச வெறியாட்டம் போட்டு விவசாயிகளிடமிருந்து விவசாய விளைநிலங்களைப் பறித்துக் கொண்டு வெளியேற்றுகிறார்கள், இந்தப் போலி கம்யூனிஸ்டுகள். குறிப்பாக போலி மார்க்சிஸ்டுகள்தாம் மத்திய அரசு இப்போது கொண்டு வந்திருக்கும் பழங்குடியின மக்கள் மற்றும் பாரம்பரிய வனவாசிகள் சட்டமானது (வன உரிமைகள் அங்கீகாரச் சட்டம்), பழங்குடியின மக்கள் காடுகளில் இருந்து வெளியேற்றப்படுவதைத் தடுக்கும்; அவர்களுடைய உரிமைகளை நிலைநாட்டும் என்று பம்மாத்துச் செய்கிறார்கள்.""காட்டிலாகா அதிகாரிகளின் ஆணைகள் மூலம் கோலேச்சும் ஆட்சிக்கு இந்தச் சட்டம் சாவுமணியாக இருக்கும்'' என்றும் ""சமூக நீதி உணர்வின் மிகப் பெரிய முன்னெடுப்பாகும்'' என்றும் பிரகாசுகாரத் சீதாராம் யெச்சூரி கும்பலின் முக்கிய உறுப்பினரான பிருந்தா காரத் கூறுகிறார். 1980க்குப் பிந்தைய எல்லா வன ஆக்கிரமிப்பாளர்களையும் வெளியேற்ற வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதை ஏற்று எல்லா ""ஆக்கிரமிப்பாளர்களையும்'' வெளியேற்றுவதாக முடிவு செய்து ஓராண்டுக்குள் 1,68,000 குடும்பங்களை வாஜ்பாய் அரசாங்கம் வெளியேற்றி விட்ட நிலையில், 2004ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு அரசாங்கம், இடதுசாரி கூட்டணியின் நிர்பந்தம் காரணமாக எல்லா பழங்குடியின மக்கள் வெளியேற்றத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவதாக குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டது; அதன் விளைவாக வந்ததுதான் இந்த வன உரிமைகள் அங்கீகாரச் சட்டம் என்று பீற்றிக் கொள்கிறார் பிருந்தா காரத்.""பழங்குடியின மக்களை வெளியேற்றுவதை முடிவுக்குக் கொண்டு வருவது'' என்பதைத் தமது குறைந்தபட்ச பொதுதிட்டத்தில் ஒப்புக் கொண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு நகல் மசோதாவைத் தயாரித்தது. ""உண்மையில் அந்த நகல் மசோதா பழங்குடியின மக்களைச் சட்டப்பூர்வமாக வெளியேற்றுவதற்கானதாக இருந்தது. அப்படி ஒரு சட்ட மசோதாவை கொண்டு வராமல் இருந்திருக்கலாம் என்று இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்த பின்னர், நாடாளுமன்ற கூட் டுக்கமிட்டி அமைக்கப்பட்டது. அது பழங்குடி மக்களின் நலன்களுக்கான எல்லாக் கூறுகளையும் கொண்டிருந்ததாக''க் கூறும் பிருந்தா காரத், நாடாளுமன்றக் கூட்டுக் கமிட்டி அறிக்கையைப் பரிசீலிப்பதற்கான அமைச்சர்கள் குழுவை அரசாங்கம் அமைத்ததாகக் கூறுகிறார். அந்தப் பரிசீலனையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிந்துரைகளை ஏற்பதற்கில்லை என்று நிராகரித்து விட்டதாகச் சொன்ன அரசாங்கம், வேறொரு மசோதா தயாரித்தளிப்பதாகக் கூறியது; அப்படிச் செய்வது இன்னும் மோசமாகிவிடும் என்று இடதுசாரிகள் கருதியதால் அமைச்சர்கள் குழுவின் முடிவுகள் அடிப்படையிலேயே ""வன உரிமைகள் அங்கீகாரம்'' என்ற பழங்குடி மக்கள் மற்றும் பாரம்பரிய வனவாசிகளுக்குச் சாதகமான சட்டம் நிறைவேறியது, என்கிறார்.இருந்தபோதும், ""நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிந்துரைகள் முற்றாக நிராகரிக்கப்படவில்லை; இறுதியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும், ஐ.மு. கூட்டணி அரசு முதலில் முன்வைத்த வரைவு மசோதாவையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே, மாற்றங்கள் புரியும்; இந்த வகையில் இது ஒரு முக்கிய முன்னெடுப்புத்தான்'' என்று பூரித்துப் போகிறார் பிருந்தா காரத். ஆனால், ""பாரம்பரிய வனவாசிகள்'' யார் என்று வரையறுப்பதற்கான இவர்களின் பரிந்துரையை நிராகரித்ததோடு, நாடாளுமன்றத்தில் அவசர கோலத்தில் மசோதா சட்டமாக்கப்பட்டதையும் அவரே ஒப்புக் கொள்கிறார்.""நாடாளுமன்றக் கூட்டத் தொடர் டிசம்பர் 19ந் தேதி, செவ்வாய்கிழமை நிறைவுற இருந்தது. ஆனால், டிசம்பர் 15ந் தேதி மதியம்தான் நாடாளுமன்றம் முன்பு மசோதா கொண்டு வரப்பட்டது. விவாதம் துவங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்புதான் மசோதாவில் புகுத்தப்படும் முக்கிய மாற்றங்களை உள்ளடக்கிய அதிகாரபூர்வத் திருத்தங்கள் மக்களவை உறுப்பினர்களுக்குத் தரப்பட்டன. இது ஜனநாயக விரோதமானதென்று தெளிவாகத் தெரிந்தது; மாற்றங்களைப் படித்தறிவதற்கான போதிய கால அவகாசம் மக்களவை உறுப்பினர்களுக்குத் தரப்படவில்லை'' என்கிறார் போலி மார்க்சியக் கட்சியின் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் பங்கேற்ற பிருந்தா காரத்.எல்லா ஓட்டுக் கட்சி ஆட்சியாளர்களும் இதே தந்திரத்தைத்தான் பின்பற்றுகிறார்கள் என்பது இந்த போலி மார்க்சிஸ்ட் தலைவி பிருந்தா காரத்துக்குத் தெரியாதா? உலக வர்த்தகக் கழக ஒப்பந்தம், அமெரிக்காவுடனான இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்ப்தங்கள் போன்ற நாட்டை அடகு வைக்கும் பலவும் நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே கையொப்பமிட்டு முடிக்கப்பட்டன. இவற்றை எதிர்ப்பதாக போலி கம்யூனிஸ்டுகள் சவடாலடித்துவிட்டு, எல்லாம் முடிந்தபிறகு நாடாளுமன்றத்தில் பிரதமரின் விளக்கத்தை மட்டுமே கேட்டு விட்டு வாய்மூடிக் கொண்டதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.இப்போது, நாடாளுமன்றக் கூட்டுக் குழு என்ற பெயரில் கூடி விருந்து தரப்பட்டதும் தங்கள் முயற்சியால் முற்போக்கான வனஉரிமைகள் அங்கீகாரச் சட்டம் வந்துவிட்டதாக பசப்புகிறார்கள். இதே பிருந்தா காரத் கூறுகிறார், ""சுற்றுச் சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்தால் உச்சநீதி மன்றத்துக்கு அளிக்கப்பட்ட புள்ளிவிவரப்படி, கடந்த மூன்றாண்டுகளில் அடர்ந்த காடுகள் நிரம்பிய 5.75 இலட்சம் ஹெக்டேர் காட்டு நிலங்கள் ஆலைத்திட்டங்கள் மற்றும் தாதுப் பொருள் சுரங்கங்கள் போன்ற காடுகள் அல்லாத தேவைகளுக்காக தாரை வார்க்கப்பட்டிருக்கின்றன. மேலும் கம்பெனிகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.''இவ்வாறு பழங்குடியின மக்களின் வாழ்விடங்களையும் வளங்களையும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் அரசாங்கம், பழங்குடியின மக்கள் மற்றும் பாரம்பரிய வனவாசிகள் நலன்களுக்காக வன உரிமைகள் அங்கீகாரச் சட்டம் போட்டிருப்பதாகக் கூறுவது எவ்வளவு பெரிய மோசடி!

தொடரும்

Tuesday, April 10, 2007

அலுக்கோசுகளின் தலைமையில் நடத்த முனைந்த கும்மமேளம்

அலுக்கோசுகளின் தலைமையில் நடத்த முனைந்த கும்மமேளம்

பி.இரயாகரன்
10.04.2007


புலிகளின் கைதுக்கான காரணமும், இதை எதிர்த்து போராடுவதற்கான முரண்பாடு, ஜனநாயக விரோதத் தன்மை கொண்டவை. இதை புலிப் பசை கொண்டு யாராலும் ஒட்ட வைக்கமுடியாது.


மந்தைகளாக வாழும் மக்களையே தமது புல்லுருவித்தனத்துக்கு ஏற்ப எமாற்றி, அலுக்கோசுகள் நடத்த முனைந்தது ஒரு விலாசப் போராட்டம், அதன் கருவிலேயே கருகி மடிந்தது. புலிகள் பாரிசில் நடத்துகின்ற தொடர்ச்சியான குற்றங்களுக்காக கைதானதைத் தொடர்ந்து, அந்த செயல்களை நியாயப்படுத்த புலிகள் முனைந்தனர். இதை மூடிமறைத்தபடி பொலிஸ் அனுமதி பெற்ற ஒரு சட்டப்படியான போராட்டம், பின்னால் தடை செய்யப்பட்டது. போராடுவதற்காக வழங்கப்பட்ட இந்த ஜனநாயக உரிமையை கூட, சட்டவிரோதமாக்கப்பட்டதன் விளைவே தடையாக மாறியது. எல்லாவற்றையும் சிறுபிள்ளைத்தனமாகவே புலிமயமாக்கி கேவலப்படுத்தப்பட்டது. இப்படி தமது தூக்கு தண்டனைக்காக தமது கயிற்றை தூக்கிக் கொண்டு திரிந்தவர்கள், தமது சொந்த பிணத்தையும் காவிக்கொண்டு ஊர்வலம் செல்லவைத்தது.


தமிழ் மக்களை மந்தைகளாக மாற்றி, அவர்களை ஏமாற்றி புலுடாவிட்டு அரங்கேற்றும் அலுகோசுத்தனங்களை, பிரஞ்சு அரசின் சட்டப்படியான போராட்ட அரங்கிலும் புலிகள் நகைச்சுவையாகவே அரங்கேற்ற முனைந்தனர். இதன் விளைவு இது போன்ற எதிர்கால முயற்சிகள் அனைத்துக்கும் வேட்டு வைத்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த போராட்டம் தடை செய்யப்பட்ட நிலையில், அதை கைவிடுவதாக முதலில் அறிவித்தவர்கள், பின் சட்டவிரோதமாக நடத்தபோவதாக தட்டுத்தடுமாறி கூறியவர்கள், அதையும் கூட செய்யமுடியாது அதை சொந்த தூக்கில் மாட்டினர்.


சுய சிந்தனையற்ற மந்தைகள் தாம், ஏன் எதற்காக போராடுகின்றோம் என்று தெரியாத ஒரு நிலையில் சட்டவிரோத ஊர்வலத்தை நோக்கிச் சென்றவர்களை, பொலிசார் திருப்பி அனுப்பிய போது அமைதியான மந்தையாகவே மீண்டனர். சிலர் வேறு ஒரு இடத்தில் கூடிய போதும், போராட்டத்தை அத்துமீற முடியாது, தடைசெய்யப்பட்ட அதே சட்ட நிலைக்குள் நின்று கொண்டனர். இப்படி சட்டவிரோத போராட்டத்துக்கு அழைத்துச் சென்றவர்கள் அதை அத்துமீறாது, மீண்டும் அலுக்கோசுகளால் காட்டிக்கொடுக்கப்பட்டது.


தனிப்பட்ட மனிதர்கள் மீதான சட்டவிரோத செயலுக்காக கைது செய்யப்பட்டவர்களின் குற்றத்தை சரி என்று நியாயப்படுத்த கூடிய மந்தைகளுக்கு, தாம் எதற்காக கூடியுள்ளோம் என்பது கூட உள்ளடக்க ரீதியாக தெரியாது என்பது தான் இதில் வேடிக்கை.


இதில் பத்திரிகையாளர் சந்திப்பு அதை விடக் கேவலம். தமிழிலேயே தமது பிரச்சனை என்ன என்று சொல்லத் தெரியாது கையெழுத்து வாங்கும் கிளிப்பிள்ளை அலுக்கோசுகள், பிரஞ்சு மக்களுக்கு எதைத் தான் விளங்கப்படுத்த முடியும்? குற்றச்சாட்டுகள் புலிகளின் அரசியலுடன் பின்னிப்பிணைந்தவை. பாதிக்கப்பட்டவர்கள் சட்டப்படியாக நீதியை கோரும் உரிமையை, எப்படி எந்த வழியால் அலுக்கோசுகளால் தர்க்கிக்க முடியும். பேரினவாதம் தமிழ் மக்களுக்கு இழைக்கும் கொடுமைகளை காட்டி, புலிகள் இங்கு அடாவடித்தனத்தில் செயல்படுவதை எப்படி தான் நியாயப்படுத்த முடியும். இப்படி தப்புத்தப்பாகவே ஒரு போராட்டத்தை இழிவுபடுத்தி வழி நடத்துவது, ஐரோப்பிய சமூகம் புலிப் பாசிசத்தின் மறுபக்கத்தில் உள்ள தார்மீக உண்மையை தேடும் ஒரு புதிய நிலையை உருவாக்கியுள்ளது.


பாரிசில் புலிகளின் கைது ஏற்படுத்திய தாக்கத்தைவிடவும், இந்த வீங்கி வெம்பிய அலுகோசுகளின் தலைமையில் நடத்த முனைந்த போராட்டம், புலிகளுக்கு மிகப் பெரிய பாரிய பின்னடைவாகும். அனுமதி பெற்ற சட்ட வரம்பைக் கூட புரியாதவர்கள், அனைத்தையும் சட்டவிரோhதமாகவே தட்டி சுருட்டி வாழ்பவர்களால், ஒரு நாளும் மக்களுக்காக ஒரு போராட்டத்தை வழிநடத்தவே முடியாது.


புலிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் கைதுக்கான அதிகாரத்தை கொண்டிருந்தவர்கள், சட்ட நுணுக்கத்துடன் அதன் சட்ட எல்லையின் அடிப்படையில் இதை அணுகியிருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் இயங்கியதாக கூறிய சட்டபூர்வமான அமைப்பை, அவர்கள் தடைசெய்யாதது மட்டுமின்றி அதை இயங்கவும் கூட அனுமதித்து இருந்தனர். இந்த சட்ட எல்லையின் விரிந்த ஜனநாயகத்தைக் கூட புரிந்துகொண்டு அதை வழிநடத்த தெரியாத அலுக்கோசுகள், அனைத்தையும் சட்டவிரோதமாகவே அணுகினர். திகதி குறிக்கப்பட்ட சட்டப்படியான போராட்டம், சட்டவிரோத செயலால் தடை (இது தவறு என்றால் நட்ட ஈடுகோரி நீதிமன்றம் செல்ல முடியும்) செய்யப்பட்டது. பின் அதை மீறிய போராட்டம் என்ற கோமளித்தனம், ஐரோப்பிய ஜனநாயக உரிமையை பயன்படுத்த தெரியாத முட்டாள்களிள் அலுக்கோசுத்தனமாகவே அரங்கேறியது. இதன் மூலம் பாரிய ஒரு பின்னடைவை நிகழ்காலத்திலும், எதிர்காலத்தில் உருவாக்கும் வண்ணம் இச்செயல்பாடுகள் நடந்தேறியுள்ளது.


உண்மையில் இந்த ஊர்வலத்துக்கு வழங்கிய சட்ட அனுமதியைக் கூட, சட்டவிரோத செயலுக்கூடாக சட்ட விரோதமாக்கினர். இதன் மூலம் ஊர்வலத்தை ஆதரித்தவர்கள் வெளியிட்ட சட்டவிரோத தன்மையைக் கூட, தண்டனைக்குள்ளாகும் எல்லைக்குள் தான் இது தடை செயப்பட்டது.


ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை எப்படி நடத்துவது என்று தெரியாதவர்கள் ஒருபுறம், அதை வைத்து வர்த்தகம் செய்யும் புல்லுருவிகள் மறுபுறம். மக்களின் விடுதலைப் போராட்டம் என்பது, சிலர் தின்று தீர்க்கும் விவகாரமாகிவிட்டது. தமது சொந்த வக்கிரங்களை வெளிப்படுத்தும் விவகாரமாக்கியதன் விளைவு, மீண்டும் மீண்டும் மக்களின் முகத்தில் ஒங்கி அறைகின்றது.


எல்லாம் அந்த ஏகப்பிரதிநிதி என்ற புலிமயமாக்கலுக்குள் சிந்தித்து, அதற்குள் உயிர்பிக்க முனையும் போது, நியாயமான அடிப்படையான போராட்டங்கள் கூட நடத்த முடியாத எல்லைக்குள் தலைகுப்புற வீழ்த்தி விடுகின்றனர். தமிழ் மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் அது பாசிசம் என்னும் தொழுநோய்க்குள்ளாகி, எந்த மருத்துவமும் இன்றி அழுகி நாற்றமெடுகின்றது. அன்றாடம் தமிழ் இனம் தனது மரணத்துள் சிதைகின்றது. ஒரு இனத்தின் தலைவிதி இப்படி குறுகிய வக்கிரம் கொண்ட அலுக்கோசுகளின் துணையுடன், தூக்கு மேடைக்கு இட்டுச் செல்லுகின்றது.


பாரிஸ் அலுக்கோசும், அதன் எடுபிடிகளும் பாய் விரித்து நடத்திய நாடகம், பிரஞ்சு தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கி உள்ளது. பல தமிழ் கடைகள் தாம் விரும்பி பணம் கொடுத்ததாக அவர்கள் நிர்ப்பந்தம் ஊடாக பெற்றுக்கொண்ட கடிதங்கள் முதல், அதன் பின்னால் பல பொது அமைப்புகளின் பெயரை பயன்படுத்தியது வரை எண்ணில் அடங்காதவை. இதன் மூலம் தமிழ் சமூகத்தின் எதிர்கால நடவடிக்கையையே அலுக்கோசுகள் கட்டாயப்படுத்தி நலமடித்துள்ளனர்.


இந்த செயல்பாடுகள் பின்னணியில்


1. புலிக்கு பணம் கொடுத்தல் சட்டப்படி குற்றம். இது கூட தெரியாதவர்கள் நாங்கள் விரும்பித்தான் பணம் கொடுத்தோம் என்று கையெழுத்து வாங்கியது, அவர்களின் வர்த்தக முயற்சிகளை எதிர் காலத்தில் முடக்குவதாகும்.


2. .பணம் கொடுத்தோம் என்று எழுதிக்கொடுத்த ஒருவர், சட்டப்படி அதை வரிக்குள் உள்ளடக்கியிருக்கவில்லை என்றால் கடுமையான வரிப்பிரச்சனைகள் எதிர் கொள்ளவேண்டும்.


3. இந்த கைதைத் தொடர்ந்து தமிழ் கடைகள் மேலான திடீர் சோதனைகள் முதல், விசா இல்லாது வேலை செய்த பலர் கைது செய்யப்பட்டனர். இவையெல்லாம் பலவிதமான குற்றசாட்டை புலிகளுடன் வர்த்தக அமைப்பை சம்பந்தப்படுத்த போதுமானது. விரும்பியே பணம் கொடுத்தோம் என்று எழுதிக்கொடுத்தவர்கள், தமது கடையில் விசா அற்றவர்களை வைத்து வேலை செய்வித்தனர் என்றால், அந்தப் பணம் புலிக்கு செல்லுகின்றது என்ற சோடிக்க போதுமான காரணமாகிவிடும். புலிகள் தான் இப்படியான நபர்களை கொண்டு செய்விப்பதாகவும், இலங்கையில் இருந்து ஆட்களை கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் ஆச்சரியப்படுதற்கல்ல. அண்மைக்காலமாக உண்டியல் முறை தான் ஆட்களை கடத்த உதவுகின்றது என்ற காரணங்களை முன்வைத்து, அவை தொடர்ச்சியாக முடக்கப்படுவது போன்றதே இவையும்.


4. விசாவற்ற, வாழ வழியற்றவர்களின் வயிற்றில், இந்த அலுக்கோசுகள் வீரம் பேசி (எதற்கும் உருப்படாத, செல்லுபடியாகாத கையெழுத்துகளை வாங்கி) மண்ணை அள்ளி போட்டுள்ளனர்.


4. பொது அமைப்புகளை வலிந்தும், மறைமுக நிர்ப்பந்தம் கொடுத்தும், அதன் அமைப்பு விதிக்கு மாறாக, இதற்குள் இழுத்துவிட்டதன் மூலம் அவற்றுக்கு இந்த அலுக்கோசுகள் நலமடித்துள்ளனர். அவற்றின் மீதான தடைகள் முதல் சட்ட சிக்கல்கள் வரை இதை சாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழ் மக்களுக்காக செயல்படும் ஒரு சில சுயாதீனமான எஞ்சிய அமைப்புகளையும், அவை செய்த அற்பசொற்ப உதவிகளையும் கூட தடுக்கின்ற வகையில், இங்கும் அங்குமாக ஒரு நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது.


5. தடை செய்யப்பட்ட புலிகள் மீதான விடையத்தை எளிய புலிச் சமன்பாடாக்கி அடிவாங்கியதன் மூலம், தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் கூட காட்டிக் கொடுக்கப்பட்டது. நியாயமான போராட்டத்தைக் கூட மக்கள் ஆதரிக்க முடியாத ஒரு நெருக்கடியை, தமிழ் சமூகத்தின் முன் உருவாக்கியுள்ளனர்.


6. இந்த அலுக்கோசுகளின் கோமாளித்தனம் பிரான்சை மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகள் எங்கும் அவலமாகவே எதிராக பிரதிபலிக்கும்.


7. இதன் விளைவுகளை தனிப்பட்ட நபர்கள் அன்றாட வாழ்வின் கூறுகளில் சந்திப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.


தவறான ஒரு தமிழ் தலைமையால் விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டு அது சந்திக்கின்ற சுய நெருக்கடியை, அலுக்கோசுகளின் அலுகோசுத்தனம் மேலும் பலமடங்காக்கியுள்ளது. இந்த கோமாளிக் கூத்தின் பின்னான விளைவு தமிழ் மக்களுக்கு எதிரானது. தொடர்ச்சியான பின்விளைவையும், புலம்பெயர் நாடுகளில் ஒரு புதிய நெருக்கடியையும் இது தோற்றுவித்துள்ளது.


Sunday, April 8, 2007

புலிகள் பின்வாங்குகின்றார்களா? அல்லது தோற்கின்றார்களா?

புலிகள் பின்வாங்குகின்றார்களா? அல்லது தோற்கின்றார்களா?

பி.இரயாகரன்
08.04.2007


வர்கள் கூறுவது போல் பின்வாங்குகின்றார்கள் என்றால், ஏன் எதற்காக? இதன் பின் எந்த காரணத்தையும் அவர்கள் முன்வைக்க முடியாது. எப்போதும் காரணத்தை முன்வைக்க முடியாத ஒரு பாசிச வழிப் போராட்டத்தை நடத்துபவர்கள். எந்த விளக்கத்தையும் முன்வைக்கவோ, செயலாற்றவோ வக்கற்றவர்கள், தோற்றுக் கொண்டிருப்பதை இப்படித்தான் பரிதாபகரமாக கூறமுடியும்.


சரி நீங்கள் கூறுவது போல் பின்வாங்குகின்றீர்கள் என்றால், ஏன் பெரும் தொகையான ஆயுதங்களை கைவிட்டு விட்டு ஒடுகின்றீர்கள். அதற்கும் இது போன்ற ஒரு குருட்டு விளக்கம் வைத்து இருப்பீர்களே. உலகெங்கும் மக்களை ஏமாற்றியும், மிரட்டியும் பெற்ற பணத்தில் வாங்கிய ஆயுதங்கள். எத்தனையோ உயிர்களைப் பலியிட்டு பெற்ற ஆயுதங்கள், கேட்பாரின்றி கிழக்கில் விட்டுவிட்டு ஒடுகின்றனர். மக்கள் மேலான பாசிசம், மக்களின் எதிரியுடனான யுத்தத்தில் புலிகளை தோற்கடிக்கின்றது. புலிகள் என்ற பிசாசை மக்கள் தோற்கடிக்கின்றனர். அந்த வெற்றிடத்தில் மற்றொரு பாசிசப் பேய் குடிகொள்கின்றது. இது அந்த சிங்கள பேரினவாத பேய்களின் வெற்றியல்ல. இங்கு யாரும் அந்த மக்களை வெல்லவில்லை. மக்களின் எதிரிகள் யாரும், அவர்களை வெல்ல முடியாது.


இங்கு புலிகளின் எந்த பின்வாங்கலும் நிகழவில்லை. மாறாக புலிகள் மக்களிடம் தோற்றதன் விளைவாய் எதிரியுடன் தோற்றுக்கொண்டு இருக்கிறார்கள். மக்களையே சொந்த எதிரியாக கருதி அவர்களை அடக்கியொடுக்கி வைத்திருந்த ஒரு இயக்கத்தின் முடிவு என்பது, காலத்தால் செல்லரித்து நிர்ணயமாகின்றது. மக்கள் மேல் நீடிக்கும் பாசிச கட்டமைப்பு ஒருநாள், பொலபொலவென திடீரென உதிரும். அந்தக்கணம் வரை பாசிசமே அதன் சமூக இருப்பாகும் அந்த பாசிச சமூக தகர்வை நோக்கி தலைமை வேகமாக உருண்டோடுகின்றது. துரதிஸ்டவசமாக தமிழ் மக்களின் எதிரி அதைப் பயன்படுத்தி, தனது சொந்த வெற்றியாக காண்பிக்கின்றான். அதன் பின்னால் புலியெதிர்ப்பு அன்னக்காவடிகள் அரோகரா போடுகின்றனர்.


சர்வதேச வலைப்பின்னலைக் கொண்ட உளவுப்பிரிவையும், ஆயுத ஏந்திய குண்டர்களையும் கொண்ட புலிகள், தமிழ் மக்களுடனான அரசியல் உறவு என்பது மாபியாத்தனமாகும். இவ் மாபியா இயக்கம் அனைத்தையும் தழுவிய ஒரு பாசிச இயக்கம், மக்களின் வாழ்வுசார் போராட்டத்தில் தங்கியிருக்க முடியாத, முரண்நிலையை அடிப்படையாகக் கொண்ட இயக்கம். தமிழ் தேசியம் என்பது அதன் உள்ளடகத்தில் இந்த பாசிச கும்பலிடம் அறவே இல்லாமல் போன நிலையில், மக்கள் எதைத்தான் கொண்டு புலிகளை ஆதரிக்க முடியும்.


புலிகளிடம் தேசியத்தின் எந்தக் கூறும், அரசியல் ரீதியாக கிடையாது. வெறும் கோசம், மற்றும்படி அவர்களின் இயங்குதளம் பாசிசத்தையும் மாபியாத்தனத்தையும் அடிப்படையாக கொண்ட இராணுவ வாதமாக மட்டும் உயிர்வாழ்கின்றது.


இதுவும் அம்பலமாகி, திவாலாகி, திக்குத் தெரியாத நடுகாட்டில், அனாதையாக தனது சொந்த மரணத்தை நோக்கி அலைகின்றது. இதில் இருந்து மீள, புலிகள் அதிரடியான தாக்குதல் மூலம், ஒரு மாயையை உருவாக்க முனைகின்றனர். உருவேற்றப்பட்ட மாயையில் காரியத்தை சாதிக்கும் பிரபாயிசம், இந்த எல்லைக்குள் மலினப்பட்ட நிலையில் அதற்காக குலைக்கின்றது. மாயையை உருவாக்கும் முயற்சிகள் கூட வெற்றிகரமாக்க முடியாத ஒரு நிலையில், அவை கூட முறியடிக்கப்படுகின்றது. எங்கும் நம்பிக்கையீனங்கள். அவமானங்கள், அனாதைகளின் நடமாட்டம். எதையும் சொல்ல முடியாதபடி, சொல்வதற்கு எதுவுமின்றி வெறித்துப் பார்க்கின்றது. புலிப்பினாமி ஊடகவியலோ அடிவாங்கிய சாரைப் பாம்பு போல், உயிருக்காக துடிக்கின்றது.


இந்த நிலையில் தான் கட்டுநாயக்க விமானத்தளம் மீதான விமானத்தாக்குதலை புலிகள் நடத்தினர். உயிர் மீண்ட யேசுவின் கற்பனைக் கதை போல், புலிகளும் உயிர்தெழுந்துள்ளதாக காட்டவே உருவாடினர். ஆகாகா அற்புதம், புலிகள் பலம் பெற்று வரலாறு மீண்டுவிட்டது என்றனர். இது தென்னாசிய சமநிலையையே தகர்த்துவிட்டது என்றனர். வயிற்றுக் குத்து வந்தவன் போல் அங்குமிங்கும் புரளும், பற்பல உப்புச் சப்பில்லாத ஆய்வுகள், இதை புலி புத்துணர்ச்சிக்கான ரொனிக்காக (குளிசையாக) கடை விரித்தனர். சிலருக்கு கண நேர அரிப்பு சார்ந்த அற்ப மகிழ்ச்சி, தமிழ் சமூகமோ எதற்கும் நாதியற்று குலுங்கிக் குலுங்கி அழுகின்றது. அரசோ இதை சர்வதேச தலையீட்டுக்குரிய ஒன்றாக்க, பெரிதாக்கி சாவதேச தலையீட்டை இதற்குள்ளும் ஆழமாக்குகின்றது.


மக்களிடம் தோற்ற புலிகள், எதிரியுடன் யுத்தமுனையில் அடிவாங்கிக் கொண்டிருகின்றார்கள். ஒரு அதிரடியான எந்தத் தாக்குதலும் (இதை செய்யும் இராணுவ ஆற்றல் புலிகளிடம் அழிந்துவிடவில்லை), அவர்களை மீட்காது என்ற உண்மை முதன்மையானது. மக்களிடம் இருந்து முற்றாக தோற்ற புலிகளின் மீட்சி என்பது சாத்தியமற்ற ஒன்று. மண்ணில் யுத்தத்தையே வெறுக்கும் மக்களின் முன், பாசிசம் யுத்தத்தை திணிக்க முனைகின்றது. மறுபக்கம் யுத்தம் வேண்டும் என்று சில புலம்பெயர் மலடுகளின் கூச்சலால், புலியின் மீட்சியை உருவாக்க முடியாது. புலம்பெயர் நாடுகளில் யுத்த விரும்பிகளாக உள்ள மலட்டுக் கூட்டம், யுத்தத்தை வெறுக்கும் மக்களின் உணர்வுகளை நலமடிக்க முடியாது. அதாவது யுத்தத்தின் தேவையை மக்கள் முன் உருவாக்க முடியாது. பாசிசத்தைக் கொண்டு மக்களை அடக்கி அடிமைப்படுத்தலாம், ஆனால் மக்களை ஒருநாளும் வெல்லமுடியாது. புலிகள் ஒவ்வொரு கணமும் மக்களிடம் மேலும் மேலும் அன்னியமாகி ஆழமாக தோற்கின்றனர். இதனால் எதிரியுடனான யுத்தத்தில் தோற்கடிக்கப்படுகின்றனர்.