skip to main |
skip to sidebar
ஆரம்ப புலம்பெயர் இலக்கியம் மக்களின் நலனை உயர்த்தியது என்பது எவ்வளவு உண்மையோ, அந்தளவுக்கு அது படிப்படியாக மக்களுக்கு எதிராகவே மாறத் தொடங்கியது. புதிய சொத்துடைய மத்தியதர வர்க்கமாகவும், முதலில் சொந்தமாக பணத்தை கொண்டு வாழத் தொடங்கிய சூழல்களும், இந்த சூழலுக்கு ஏற்ப வலதுசாரிய பூர்சுவா குடும்பங்கள் உருவானது. இவர்கள் முன் மக்கள் நலன்சார் அரசியல் என்பது, தமது புதிய பூர்சுவா வாழ்வியல் இருப்புக்கு எதிரானதாக கருதியது. இதனால் மக்கள் நலன் அரசியலை எதிர்ப்பது, இவர்களுக்கு அவசியமாகியது.
இப்படி மக்கள் விரோத கோட்பாடுகள், கருத்துக்களே எங்கும் குடிபுகுந்தது. நான், நாங்கள் மட்டும் தனித்து நின்றோம். மறுபக்கத்தில் இடது கலந்த வலதுசாரியம் புலி எதிர்ப்பை அளவுகோலாகக் கொண்டு, மக்கள் அரசியலைத் திரித்து அதில் மிதக்க முனைந்தது.
இதை நான், நாங்கள் மட்டுமே கடுமையாக எதிர்த்து நின்றோம். மக்கள் அரசியலை இதற்கு எதிராக உயர்த்தினோம். இயல்பாகவே நாம் இவர்களின் முதல் எதிரிகளானோம். இவர்கள் தமது செயல்பாட்டுக்கு எதிர்ப்பைச் சந்தித்தது, எம்மிடம் இருந்துதான். எமது எதிர்ப்பு என்பது அரசியல் தளத்தில் இருந்ததால், இது தனிப்பட்ட முரண்பாடாகா வண்ணம் எமது கடுமையான ஈவிரக்கமற்ற விமர்சனத்தை முன்வைத்தோம். இதை தனிப்பட்ட முரண்பாடாக்க முனைந்த போதெல்லாம், அதை நாம் தோற்கடித்தோம்.