தமிழ் அரங்கம்

Friday, May 9, 2008

புலிப் பிணத்தை உண்ணும், புதியரக அரசியல் உண்ணிகள்


புலித்தேசியமோ தனது சொந்த புதைகுழியை தானே வெட்டிவைத்துக் கொண்டு, தானே வலிந்து தேர்ந்தெடுத்த ஒரு பாதையில் மடிகின்றது. இந்த புலியை உறிஞ்சிக் கொண்டு வாழ்ந்த பிழைப்புவாத உண்ணிக் கூட்டமோ, புலி பிணமாக முன்னமே மெதுவாக களன்று தப்பித்தோடுகின்றது. மறுபக்கத்திலோ புதியரக உண்ணிகள், பழைய உண்ணிகள் விட்டுச்செல்லும் வெற்றிடத்தில் மொய்க்கத் தொடங்கியுள்ளது.

இந்த புதியரக உண்ணிகள் யார்? இவர்கள் எப்படிப்பட்டவர்கள்? என்பதை நாம் தெரிந்து கொள்ள முன்னம், புலிகளோ எப்படிப்பட்ட ஒரு அமைப்பாக இழிந்து கிடந்து என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

தமிழ் தேசம், தமிழ் தேசியம் என்று பேசிய புலிகள், புலித் தேசியத்தையே தமிழ் தேசியமாக காட்டியது. அது தனிமனிதனை முதன்மைப்படுத்தி, தேசியத்தையே குழுவாதமாகியது. இதன் மூலம் மொத்த தமிழ்மக்களின் தேசியத்தை முழுமையாக நிராகரித்தது. மாறாக புலித்தேசியத்தை தேசியமாக காட்டியது. இந்த புலித் தேசியத்தின் பெயரில், போராட்டம் தியாகம் என்பன கட்டமைக்கப்பட்டது. சுயசிந்தனையும், மனித அறிவும் மழுங்கடிக்கப்பட்ட புலித் தேசியத்தில், இளைஞர் இளைஞிகள் புலித்தேசியத்துக்காக பலியிடப்பட்டனர்.

இருந்த போதும், இதனால் புலிகள் தம்மைத் தாம் நியாயப்படுத்திக் கொள்ள முடியவில்லை. தமிழ் தேசியத்துக்கும், புலித் தேசியத்துக்கும் இடையிலான இடைவெளியையும் பிளவையும் மூடிமறைக்க, தமிழ் மக்கள் மேலான ஒடுக்குமுறையையே அவர்கள் தேர்ந்தெடுத்தனர். அது புலிப் பாசிசமாக, மாபியாத்தனமாக வளர்ச்சியுற்றது.

இப்படித் புலித்தேசியம் வீங்கி வெம்பியதுடன், தானாக புளுத்துப் போகின்றது. இந்த புலித்தேசியத்தில் நேர்மை, அறிவு, உண்மை, தியாகம், மனித நேயம், மனிதப் பண்பு, அறிவு ஒழுக்கம் என்று எதையும், யாரும் காண முடியாது. மாறாக பொய்மையும் புரட்டும், கொடுமையும் கொடூரமும், துரோகமும் காட்டிக்கொடுப்பும், மனித விரோதமும் பண்பற்ற நடத்தைகளும், அறிவு இழந்த ஒழுக்கமும் காட்டுமிராண்டித் தனமும், பிற்போக்கான அடிமைத்தனம் கொண்ட பழமைவாதமுமே, புலித்தேசியத்தின் விழுமியமாகியது.
இதற்கு ஏற்ற பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் தானாக வந்து வலிந்து ஓட்டிக்கொண்டு, தமிழ் இனத்தின் இரத்தத்தையே உறிஞ்சி வாழத் தொடங்கியது. தமிழினமோ மொத்தத்தில் அழிந்து கொண்டிருந்தது. அது தனது சமூக விழுமியங்களை எல்லாம் இழந்து, பட்டுப்போனது.

பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் மூலம் தனது சொந்தப் பிழைப்பை நடத்தவே, தனக்கு ஏற்ப புலி அரசியலை குதர்க்கமாக நியாயப்படுத்தியது. சிங்களப் பேரினவாதத்தின் இராணுவத்தை கொல்லும் எண்ணிக்கைக்கு ஏற்ப, புலி அரசியலை அவர்கள் விளங்கி விளக்கினர். கொன்ற இராணுவத்தின் எண்ணிக்கை புலித்தேசியமாக, அதை குளிர்மைப்படுத்தி கொழுவேற்றியபடி தம் பங்குக்கு குழிபறித்தனர்.

இப்படி வட்டிக்கு பணம் கொடுப்பவன், புலிப் பணத்தைக் கொண்டு தனது பணச் சுற்றை (றோல்) செய்பவன், வர்த்தகர்கள், அதிகாரத்துக்கு ஆசைப்பட்டவர்கள், அடக்கியாள விரும்பியவர்கள், புகழுக்கு ஆசைப்பட்டவர்கள், சட்டவிரோத தொழில் செய்தவர்கள், உழைத்து வாழ விரும்பாதவர்கள், புலிக்கு பணம் கொடுத்தவர்கள், பணம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் என்று ஒரு கூட்டம், புலியை வாழ வைத்து தானும் வாழ்ந்தது. இதற்கான தகுதி என்பது புலிக்கு பணத்தை வாரிவழங்கியே, அந்த இடத்தைப் பெறுகின்றனர். இப்படி பணத்தைக் கொடுத்து வாழும் சமூகத் தகுதி தான், புலியின் அரசியல் அறமாக இருந்தது. இதுவே தமிழ் தேசியமாகிப் போனது. யாரெல்லாம் பணத்தைக் கொடுக்க முடியுமோ, அவர்கள் புலியின் முக்கிய பிரமுகரானார்கள்.

யுத்த முனையில் போராடுகின்ற புலிக்கு வெளியில், புலியை அலங்கரித்து ஆதரித்து நின்ற கூட்டம் இது தான். இது தான் புலியின் கால்களாகி, கைகளாகி, புலியின் ஆண்மையையே செயலிழக்கப் பண்ணியது.
புலிகள் தான் எல்லாம் என்ற நிலையில், எல்லா சமூக விரோதிகளும் புலிக்குள் இருந்தபடி பிழைத்துக்கொள்ளத் தொடங்கினர். இந்த சமூக விரோதிகள், தம்மை கொழுக்கவைத்துக் கொண்டனர். புலியின் பெயரில் நடந்த தியாகத்தை, தனக்கு அமைவாக பயன்படுத்திக்கொண்டு அது தானாக வாழத் தொடங்கியது.

இப்படி வாழ்ந்த கும்பல் தான் இன்று புலியில் இருந்து கழரத் தொடங்குகின்றது. புலிகளின் அழிவுக்குரிய இன்றைய காலகட்டத்தில், இந்த சமூகவிரோதக் கும்பல் புலியை அம்போ என்று, கையை விடுகின்றது.
இலங்கை முதல் புலம்பெயர் நாடுகள் வரை, புலிகளுக்கு எதிரான கடுமையான ஒடுக்குமுறை கையாளப்படுகின்றது. ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு, தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிழைப்புவாத சந்தர்ப்பவாத கூட்டம், உண்ணி கழருவது போல் கழன்று வருகின்றது. பலர் புலியின் பின் திடீரென்று காணாமல் போகின்றனர். பலர் புலிக்கு எதிராக வேஷம் போட்டுக் கொண்டு, திடீரென்று தூற்றுகின்றனர்.
இப்படி ஒருபுறம் நடக்க, புதிய உண்ணிக் கூட்டம் ஒன்று திடீரென்று பினாமிகளாக வலம் வரத் தொடங்குகின்றது. முன்பு எந்த வாய்ப்பும் கிடைக்காத அறிவுசார் பிழைப்புவாதிகள் தான் இவர்கள். முன்பு பொருள் சார் சமூக விரோதிகளால் புறந்தள்ளப்பட்ட அரசியல் பேசும் புலுடாவாதிகள், இன்று புலிக்கு அரசியல் சாயமடிக்கின்றனர்.

இவர்கள் யார்? முன்னாள் மாற்று இயக்கங்களில் அரசியல் பேசியவர்கள். பெருமளவுக்கு புளட்டில் அரசியல் பேசியவர்கள். அன்று கொலைகார புளட்டுக்கு அரசியல் பேசியது போல, இன்று புலிக்காக அரசியல் பேசுகின்றனர். பொருள் சார்ந்த உண்ணிகள் களறுகின்ற வெற்றிடத்தில், இந்த உண்ணிகள் ஓட்டிக்கொள்கின்றது.

கொலைகார கும்பலுக்கு அன்று அரசியல் சாயமடித்து நியாயப்படுத்திய கும்பல்கள், அவர்களின் அழிவில் அரசியல் வாழ்விழந்தவர்கள். மக்கள், மக்கள் விடுதலை என கூறிக் கொணடவர்கள், மக்களுக்காக என்றும் போராடியது கிடையாது.

மக்களுக்காக என்றும் மக்கள் அரசியலை முன்வைத்தது கிடையாது. மக்களின் அடிப்படை உரிமைக்காக போராடியது கிடையாது. அதிகாரத்தில் உள்ளவர்களுடன் ஓட்டிக்கொண்டு, அதற்கு அரசியல் சாயமடிக்கின்றனர். இதையே அவர்கள் மக்கள் அரசியல் என்று, அரசியல் பேச முனைகின்றனர். பச்சைப் பாசிசத்தையே, மக்கள் விடுதலை எனக் காட்டத் தலைகீழாக முனைகின்றனர். இதே கதைதான், இலங்கை இந்திய அரசின் பின்னுள்ள கும்பலுக்கு ஜனநாயக முகமூடி போட்டு அழகு பார்க்கின்றனர்.
ஆனால் புலிகளில் இவர்கள் பேசும் சாய அரசியலுக்கு இடமில்லை. புலிகளின் நடத்தையால் சாயம் வெளுத்துப் போகின்றது.

புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் அண்மையில் கூறியது போல், 'தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக எமது மாணவர்கள் அறிவியல்துறையில் வளர வேண்டும்" என்பதற்கு, அமைவாக, இங்கு மக்கள் அரசியலுக்கு இடமில்லை. மக்கள் எல்லாம் தலைவரின் இந்த வரட்டு சிந்தனையைப் பெற்றால், தமிழ் மண்ணே பிணக்காடாகிப் போகும்.

இப்படி இருக்க பிண உண்ணிகள், புலிப் பாசித்தை உச்சிமுகர்ந்து தனக்கு ஏற்ப வாரியிழுக்கின்றது. தாம் உண்ணும் பிணத்தை, உயிருள்ளதாக காட்ட முனைகின்றது. கூலிக்கு மாரடிக்கும் இந்த அரசியல் ஒப்பாரி மூலம், பிணத்தைக் கட்டி வைத்துக்கொண்டு அழுகின்றது. அதுவும் தனித்து நின்று, தனது சொந்த வெறுமையில் அழுகின்றது. இப்படியும் புலித்தேசியம், அரசியல் விபச்சாரிகளால் விபச்சாரம் செய்யப்படுகின்றது.

பி.இரயாகரன்
09.05.2008

Thursday, May 8, 2008

மக்கள் போராட்டம் என்றால் என்ன?

மக்கள் எதிரிக்கு எதிராக தனக்குள்ளேயுள்ள முரண்பாடுகளைக் களைந்து ஐக்கியப்படுதலாகும். மக்கள் தமக்குள் ஒன்றுபட்டு, தமது சொந்த விடுதலைக்காக தாம் போராடுவது தான் மக்கள் போராட்டம்.
இது தனக்குள்ளான ஒடுக்குமுறைகளை அனுமதிக்காது. அதாவது தனக்குள்ளான முரண்பாடுகளை களையும் போராட்டத்தை நடாத்திக் கொண்டு, எதிரியை தனிமைப்படுத்தி தனது சொந்த விடுதலையை அடையப் போராடுவது தான் மக்கள் போராட்டம்.

இப்படி போராடாத, போராட முனையாத அனைத்துமே மக்கள் விரோதப் போராட்டம் தான். இப்படி குறைந்தபட்சம் மக்கள் போராட்டம் இருக்க, மக்களை பிளவுபடுத்தி அதை அரசியலாக பாதுகாக்கும் மக்களின் எதிரிகள் எல்லாம், தாம் மக்கள் போராட்டம் நடத்துவதாக கூறிக்கொள்கின்றனர்.

தாம் மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு தான், ஜோஷ் புஸ் முதல் பின்லாடன் வரை மக்களின் தொண்டைக்குழியையே அறுக்கின்றனர். புலிகளாக இருக்கலாம், புலியெதிர்ப்பாளனாக இருக்கலாம், போலிக் கம்ய+னிஸ்ட்டாக இருக்கலாம், அரசியல் கருத்தற்றவராக கூறிக்கொள்பவராக இருக்கலாம், ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனமாக இருக்கலாம், இப்படி பற்பலவிதமானவர்கள் எல்லாம் மக்களின் விரோதிகளாகவே உள்ளனர். ஆனால் இவர்கள் தாம் நடத்துவது, மக்கள் போராட்டம் என்கின்றனர்.

பணத்தை, ஆயுதத்தை, அதிகாரத்தை வைத்துக் கொண்டும், சமூக பிளவுகளை விதைத்துக் கொண்டும் தான், இவர்கள் மக்களின் வாழ்வை அழித்தொழிக்கின்றனர். மக்கள் வாழ்வின் உண்மையை அறிந்து விடாது இருக்கும் வண்ணம், தம்மைச் சுற்றி போலியானதும் கவர்ச்சியானதுமான மலிவான முலாம் மூலம் கவசமிட்டு வைத்துக்கொள்கின்றனர். இதன் மூலம் சிறிதொரு பிரிவின் நலன்களுக்காக, அனைத்தையும் வளைத்துப் போடுகின்றனர்.

இவர்களால் தான் உலகெங்குமுள்ள மக்கள் தம் வாழ்வை இழக்கின்றனர். வெறும் நுகர்வு மந்தையர்களாக, அடிமைகளாக மாற்றப்படுகின்றனர். இவர்களின் கோட்பாடோ, மக்கள் தமக்காக தாமே போராட முடியாது. மாறாக தம்மை மீட்பாளராக, மக்கள் தமது மந்தைக் குணத்துடன் ஏற்க வேண்டும். இதை மீறினால், சாமபேதம் பாராது எதையும் எப்படியும் கையாள்கின்றனர்.

விடுதலைப்புலிகளின் பாசிசமாகட்டும், பிள்ளையானின் கிழக்கு ரவுடித் தனமாகட்டும், தாலிபானின் இஸ்லாமிய கொடூரமான ஆட்சியாகட்டும், இந்தியாவின் போலி கம்யூனிஸ்டுக்களின் (உதாரணம் நந்திக்கிராம்) வக்கிரமாகட்டும், ஜே.வி.பியின் பச்சையான இனவாதமாகட்டும், இப்படி மக்களின் பெயரில் இவர்கள் செய்யும் மக்கள் விரோத செயல்களையே மக்களின் விடுதலை என்கின்றனர்.

மக்கள் போராட்டம் என்பது, மக்கள் தமது சொந்த விடுதலையை அடைதல் தான். இதை மறுப்பதோ, மிகமோசமான அயோகியத்தனமாகும். மக்களின் விடுதலை என்பது, தம் மீதான அடக்குமுறைகளை களைதல் தான். அது சமூகத்தில் எந்த விதத்தில் எப்படி வந்தாலும், அது எந்த முரண்பாடாக இருந்தாலும், அதைக் களைந்து மக்கள் தமது விடுதலையை அடைதல் தான் மக்கள் போராட்டம். இதுதான் மக்களின் விடுதலையை அடிப்படையாக கொண்ட, விடுதலைப் போராட்டம். இது சக மனிதனை ஒடுக்காது. சக மனிதன் மீதான ஒடுக்குமுறைகளைக் களைய தானே முன்னின்று போராடும்.

இப்படி மக்கள் போராட்டம் என்பது, மக்கள் தம் மீதான ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலையை அடைவதற்காக போராடுவதை அடிப்படையாக கொண்டது. இந்த மக்கள் போராட்டத்தை யாரும் குத்தகைக்கு எடுக்க முடியாது. தாம் விடுதலை பெற்றுத் தருவதாக, ஒரு குழு கூற முடியாது. மாறாக அந்த மக்கள், தமது சொந்த விடுதலைக்காக போராடுவது தான் மக்கள் போராட்டம். இப்படி மக்கள் போராட்டம் என்பது, மக்கள் தாம் தெரிவு செய்கின்ற எந்த வழியிலாவது தமது சொந்த விடுதலையை அடைதல் தான்.

தலைமைகள் என்பது, மக்கள் தமது போராட்டத்தின் தேவைக்கு ஏற்ப, உருவாக்கும் அமைப்பு வடிவங்கள் தான். மக்களின் சொந்த நலனுக்கு வெளியில், மக்கள் தலைமைகள் இருக்க முடியாது. இது மக்கள் போராட்டத்தில் அடிப்படையான அரசியல் உள்ளடக்கமாகும். இப்படித்தான் மக்கள் தலைமைகள் உருவாகின்றது. சமூகம் எதிர் கொள்ளும் முரண்பாடுளை தீர்க்கின்ற போராட்டத்தில் தான், உண்மையான மக்கள் தலைமைகள் உருவாகின்றது.

சமூகத்துக்கு எதிரான முரண்பாடுகள் எவை?

மனித இனம், தனது சொந்த விடுதலையை நாடி நிற்கின்றது. இதை கோட்பாட்டு ரீதியாகவே, இந்த உலக ஒழுங்கு மறுக்கின்றது. மக்கள் தனது சொந்த விடுதலையை நாடுகின்றது என்றால், தனக்கு எதிரான அனைத்து முரண்பாட்டையும் களையக் கோருகின்றது. இதுவல்லாத விடுதலைப் போராட்டம் அல்லது தீர்வுகள் அல்லது மனித வாழ்வு என்பது, அந்த மக்களை ஓடுக்குவது தான்.

வர்க்கப் போராட்டமாக இருக்கலாம், தேசிய போராட்டமாக இருக்கலாம், சாதிப் போராட்டமாக இருக்கலாம், பெண்ணிய போராட்டமாக இருக்கலாம், இவை எதுவாக இருந்தாலும், இதில் ஒன்று சமூகத்துக்கும் சரி தனிமனிதனுக்கும் சரி முதன்மை முரண்பாடாக அமைவது எதார்த்தம். இந்த எதார்த்தம் என்பது இதில் இருந்து விடுவிக்கும் போராட்டமாக மாறும் போது, அது தன்னைச் சுற்றியுள்ள மக்களின் மொத்த விடுதலையை பற்றி கவனத்தில் கொள்ளுகின்றது. தனித்து விடுதலை அடைதல் சாத்தியமில்லை. இதைக் கவனத்தில் கொள்ளாது போராடினால், அது இயல்பாக மக்களையே ஒடுக்குகின்ற போராட்டமாக சீரழிந்து விடுகின்றது. எதை பிரதான முரண்பாடாக கருதியதோ, அது மக்களிள் விடுதலைக்குரிய ஒன்றாக இருப்பதை மறுக்கத் தொடங்குகின்றது. இதை உலகம் முழுக்க நாம் காணமுடியும்.

தமிழ் தேசியம் எப்படி பாசிசமானது?

தமிழ் தேசியம் தன் மீதான இனவொடுக்குமுறைக்கு எதிராக தேசிய முரண்பாட்டை களைய முற்பட்ட போது, தமிழ் மக்களின் உள்ளான சமூக முரண்பாட்டை களைய மறுத்ததன் மூலம் தான், அது தன்னைப் பாசிசமாக்கிக் கொண்டது. இதை நாம் புலிகள் மீது மட்டும் குறிப்பாக குற்றம்சாட்ட முற்படவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி முதல் சகல குழுக்களும் (ஒரு சில சிறு குழுக்களைத் தவிர) சமூக முரண்பாடுளை களைந்து, தமிழ் மக்களை ஐக்கியப்படுத்த மறுத்தன. மாறாக சமூக முரண்பாடுகளைப் பாதுகாத்து, சமூக பிளவுகளை விதைத்து, தமிழ் தேசியத்தையே சுடுகாடாக்கினர். மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிரியாக்கினர். புலிகளோ இதை பல பத்தாயிரம் சகோதாரப் படுகொலைகள் மூலம் அரங்கேற்றினர்.

தமிழ் தேசியத்தில் மக்களை ஜக்கியப்படுத்துவதற்கு பதில், மக்களைப் பிளந்து, மக்களையே ஈவிரக்கமின்றி கொன்றனர். மக்கள் போராட்டம் என்பதற்கான சகல அடிப்படைகளையும் தகர்த்தனர்.

தமிழ் மக்கள் ஒன்றுபட்டு பேரினவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டிய மக்கள் போராட்டம், ஒரு குழுவின் நலன்சார்ந்த போராட்டமாக குறுகிப்போனது. மக்கள் மத்தியில் உள்ள சமூக முரண்பாட்டைப் பயன்படுத்தி, குழுவின் குழுப் போராட்டமாக்கியது.

மறுபக்கத்தில் பேரினவாதம் தமிழ் மக்களை முழுவீச்சில் ஒடுக்கியது. ஆனால் தமிழ் மக்களின் மக்கள் போராட்டம், சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து நிற்கும் ஒரு மக்கள் போராட்டமாக உருவாகவில்லை. ஒரு குழு நலன் சார்ந்த போராட்டமாய் சீரழிந்தும், படிப்படியாக மாபியாத்தன்மை பெற்றும் அது பாசிசமாகியது.

தமிழ் சமூகம் ஒன்றுபட்டு எழுந்து நிற்க வேண்டும் என்றால், தமிழ் சமூகத்தின் உள்ளான தனது சொந்த முரண்பாடுகளை களைந்து இருக்க வேண்டும். இதுதான், ஒன்றுபட்ட மக்கள் தேசியத்தையும், மக்கள் போராட்டத்தையும் உருவாக்கியிருக்கும்.

தமிழ் தேசியத்தின் சொந்தக் குரல் கூட இதுதான். மக்கள் அதைத் தான் விரும்பினர். இதனால் தான் அனைத்து இயக்கமும் இதை தமது தேசிய வேலைத்திட்டத்தில் பெயரளவிலாவது குறித்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். இப்படி மக்களை தாம் முரண்பாடுகளைக் களைந்து ஒன்றுபடுத்துவதாக காட்டிக் கொண்ட இயக்கங்களின் தேசியம், மக்களின் முதுகிலேயே குத்தி ஏமாற்றினர்.

எத்தனை நாளைக்குத் தான் மக்களை ஏமாற்ற முடியும். விளைவு படிப்படியாக மக்களை எதிரியாக கருதி, அவர்களை ஒடுக்கத் தொடங்கினர். பின் அதுவே கொலைக் களமாகியது. இப்படி மக்களை ஒன்றுபடுத்த தடையாக இருந்த முரண்பாடுகளை களைய மறுத்து, அதே முரண்பாடுகளை மேலும் ஆழமான பிளவுகளாக விதைத்தனர். இப்படி மக்களின் ஐக்கியம், தேசியம் என்றவை கருவிலேயே சிதைக்கப்பட்டது. தனிமனித நலன் சாhந்து, குழு நலனாக அவை முதன்மை பெற்றறு. இது மக்களையே எதிரியாக்கியது. அனைத்தும் தனிமனிதர் சார்ந்த குழு நலனுக்கு உட்பட்டதாக பார்த்து, தேசியத்தையே அதற்கு ஏற்ப நலமடித்தனர்.

இப்படி ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்துக்கான, அரசியல் அடிப்படையே மறுதலிக்கப்பட்டு வந்தது. தமிழ் தேசியம் தமிழர்களை ஒன்றுபடுத்துவதற்கு பதில், அவர்களை பல கூறாக பிளந்தனர். இங்கு மக்கள் போராட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லாது போனது.

குழுவின் நலன் முதன்மை அம்சமாகி, அதுவே போராட்டமாகியது. குழுநலன் முதன்மையாக, தமிழ் மக்கள் என்ற பொது அடையாளம் மறுப்புக்குள்ளானது. தனக்குள் இருந்த ஒடுக்குமுறைகளைக் களைய மறுத்தது. மாறாக பிளவை பாதுகாத்து, தனது சொந்த குழுநலனை முதன்மைப்படுத்தியது. தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு பதில், அவர்களைப் பிளந்தது. பல ஆயிரம் பேரைக் கொன்று குவித்தது. இப்படி மக்கள் போராட்டம் என்பது குழுப் போராட்டமாகி விட, மக்களை பலாத்காரமாக யுத்த முனையில் ஈடுபடுத்தி அழிக்கின்றது.

புலித் தேசியமோ, மக்கள் விரோதப் போராட்டமாகிவிட்டது

1. தமிழ் என்ற மொழி ஊடான தமிழ் தேசிய அடையாளத்தின் கீழ் வாழ்ந்த முஸ்லீம் மக்களை, தமிழ் தேசியத்தின் பெயரில் இயங்கிய குழுக்கள் என்ன செய்தனர்? முஸ்லீம் மற்றும் தமிழ் மக்கள் இடையேயான முரண்பாடுகளை எப்படிக் களைய முனைந்தனர். தமிழ் மொழி என்ற அடையாளம் மூலம் ஐக்கியத்தை வளர்த்தார்களா? அல்லது பிரித்தார்களா? இங்கு முஸ்லீம் மக்களையே தமிழ் தேசியத்துக்கு எதிரான எதிரியாக நிறுத்தியது. இதையே மக்கள் போராட்டம் என்று சொல்லுகின்றவர்களை, விவாத அரங்கிலும் நாம் காண்கின்றோம்.

2. எமது போராட்டம் பிரதேசவாத பிளவுகளை ஒழித்துக்கட்டியதா ? இல்லை. மாறாக அதை வளர்த்து. பிரதேசவாத பிளவுகளை ஆழமாக்கியது. மக்களை பிளந்து ஐக்கியத்தையே சிதறடித்துள்ளது. இந்த நிலையில் எப்படித் தான் மக்கள் போராட்டம் நடக்கும்.

3. தமிழ் தேசமே எழுந்து நிற்கும் வண்ணம், அது மக்கள் போராட்டமாக மாற வேண்டும் என்றால், ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் குரல்களையும் தேசியம் உள்வாங்க வேண்டும். மக்கள் தமது கருத்துச் சுதந்திரத்தை, செயல் சுதந்திரத்தை, வாழ்வியல் சுதந்திரத்தை பேணும் ஐக்கியத்தை, எமது தேசியம் கொண்டிருந்ததா? இல்லை, எமது போராட்டம் அதை மறுத்தது. மாறாக சர்வாதிகார வடிவங்களில், பாசிச உள்ளடகத்தில் இதற்கு பதில் கொடுத்தது. தமிழ் தேசியத்தின் ஆன்மாவோ, குடலுடன் உருவப்பட்டது.

4. மக்கள் போராட்டம் எப்படி சகோதரப் படுகொலைகள் நடத்தும். ஒரு குழுவின் சர்வாதிகாரமே போராட்டமாகியதால், அது பல பத்தாயிரம் தமிழ் மக்களையே கொன்று குவித்தது. இதுவா மக்கள் போராட்டம்!

5. மக்கள் போராட்டம் என்பது, மக்கள் தாமே தீர்மானங்களை எடுக்கவும், வழிகாட்டவும் கூடிய வகையில், தமது சொந்த போராட்டமாக போராட்டத்தை வழிநடத்துவர். மாறாக ஒரு குழு தான் விரும்பியதை, மக்கள் மேல் திணிப்பதா மக்கள் போராட்டம்.

6. தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட சாதியத்தைப் பாருங்கள். நாங்கள் தமிழ் மக்கள் என்று கூறிக்கொண்டு, தமிழ் மக்கள் மத்தியில் சாதிய பிளவை வைத்துக்கொண்டு, எப்படி ஒரு மக்கள் போராட்டத்தை நடத்த முடியும். நாம் இந்துகள் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனியம், தனக்குள் தீண்டத்தகாதவனை உள்ளடக்குவது போல் தான் இதுவும். இப்படி எமது போராட்டம் இதைக் களைய மறுத்து, சாதிய பிளவுகளை வளர்க்கின்ற வகையில் தான், அந்த மக்களுக்கும் எதிராகவும் சீரழிந்தது.

7. தமிழ் மக்களின் போராட்டம் என்பது தேசியத்தை அடிப்படையாக கொண்டது. இந்த தேசியம் என்பது, தேசத்தை நிர்மாணம் செய்யும் தேசிய பொருளாதார கட்டுமானத்தை அடிப்படையாக கொண்டது. இப்படி தேசிய பொருளாதாரம் என்பது, தேசிய முதலாளிகளை ஆதாரமாக கொண்டது. இப்படி தேசிய முதலாளித்துவத்தையா, எமது போராட்டம் உருவாக்கியது? தேசியத்துக்கு எதிரான நிலபிரபுத்துவ, தரகு முதலாளித்துவ கட்டமைப்பை பாதுகாத்துக்கொண்டு, தேசிய முதலாளித்துவ கூறுகளை அழித்தொழித்தது. இப்படி இருக்க, இங்கு உழைக்கும் வர்க்கத்தின் மேலான ஒடுக்குமுறை சொல்லிமாளாது. இப்படி போராட்டம் என்பது மக்களின் வாழ்வை வளப்படுத்துவதற்கு பதில், இதற்கு எதிராகிப் போனது.

8. சக மனிதனின் உழைப்பை சதா சுரண்டித் தின்னும் ஒருவனுக்கும், அதை பறிகொடுத்தவனுக்கும் இடையில் எப்படி ஒன்றுபட்ட போராட்டம் எழும். இதை களைகின்ற போராட்டம் தான், மக்கள் போராட்டம்.

இப்படி பல.

இப்படி மக்களுக்கு எதிரான அரசியலை ஆணையில் வைத்துக் கொண்டு, மக்களைப் பிளந்தன் மூலம் மக்கள் போராட்டத்தை தடுத்தி நிறுத்தினர். ஒரு குழுவின் பாசிச மாபியாத்தன்மையை மக்கள் போராட்டம் என்று சொல்லுகின்றனர். இப்படி எதிர்புரட்சியையே புரட்சி என்கின்ற மாயை நீண்டகாலம் மக்கள் முன் நீடிப்பதில்லை. அதனால் தான் மக்கள், தொடர்ச்சியாக படுகொலை செய்யப்படுகின்றனர்.

பி.இரயாகரன்
07.05.2008

Wednesday, May 7, 2008

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் : நஞ்சாக்கப்படும் உணவு

இந்திய நாடு மரபணுமாற்ற தொழில்நுட்பத்தைச் செயல்படுத்திப் பார்க்கும் சோதனைச்சாலை எலியாக மாற்றப்பட்டு விட்டது. கத்தரிக்காய்; தமிழக மக்களின் உணவில் முக்கிய இடம்பெறும் காய். குண்டு கத்தரி. நீள கத்தரி, நாம கத்தரி, வெள்ளை கத்தரி என்று அதில் பல ரகமுண்டு. இப்போது புதிய ரகமாக பி.டி.கத்தரிக்காய் வரப்போகிறது. அதென்ன பி.டி.கத்தரிக்காய்?

இது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய். காய்ப்புழுத் தாக்குதலை எதிர்க்கும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிச் செடியிலிருந்து காய்க்கும் புதிய வகை கத்தரிக்காய். பூச்சிக்கொல்லி மருந்துகளே இல்லாமல், செடியின் உள்ளே பொதிந்துள்ள மரபணுவை மாற்றி விடுவதன் மூலம் பூச்சிகள் செடிகளைத் தாக்குவதைத் தடுக்கும் மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய கத்தரிச் செடியில் விளைவதுதான் பி.டி.கத்தரிக்காய்.

கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இப்புதியவகை கத்தரி விதைக்கப்பட்டு, செடிகள் வளர்ந்து காயும் பிஞ்சுமாக செழித்து நின்றன. அமெரிக்க விதைக் கம்பெனியான மான்சாண்டோவின் இந்தியப் பங்குதாரரான மஹிகோ நிறுவனமும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகமும் கூட்டுச் சேர்ந்து இரகசியமாக இப்புதிய ரக கத்தரியைப் பயிரிட்டு கள ஆய்வு செய்து வந்தன. இதையறிந்த தமிழக வேளாண் காப்புக் குழு, ஈரோடு இயற்கை விவசாயிகள் குழு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த முன்னணியாளர்கள் சிலர் பல்கலைக் கழக வளாகத்தில் கத்தரி தோட்டத்தின் அருகே திரண்டு விவசாயத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் இந்த ஆராய்ச்சியை நிறுத்தக் கோரி கடந்த பிப்ரவரி 22ஆம் நாளன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், பல்கலைக் கழக நுழைவு வாயிலில் உள்ள பெயர்ப் பலகையில்,"" தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் தற்போதைய உரிமையாளர் மான்சாண்டோ'' என்று எழுதி ஒட்டிவிட்டுக் கலைந்து சென்றனர்.

உடனே இப்பல்கலைக் கழக துணைவேந்தரும் பதிவாளரும், ""பட்டினிச் சாவுகளைத் தடுத்து பல லட்சக்கணக்கான மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்யும் நோக்கத்தோடு விவசாயமும் சமுதாயமும் பயனடைய வேண்டும் என்பதற்காக இப்பல்கலைக் கழகம் செயல்படுகிறது; அதனடிப்படையிலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் கள ஆய்வு செய்யப்படுகின்றன'' என்று நியாயவாதங்களை அடுக்கியதோடு, போராடியவர்கள் அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் எதிரானவர்கள் என்று சாடி, போராடிய அமைப்புகள் மீது கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களும் உயிரி தொழில் நுட்பப் புரட்சியும் விவசாய உற்பத்தியைப் பெருக்குமா? மரபணு மாற்றம் செய்யப்பட்ட விவசாய விளைபொருட்களால் மனித இனத்துக்குப் பாதிப்பு ஏதேனும் ஏற்படுமா? இவை குறித்து ஆராய்ச்சி முடிவுகள் என்ன?
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களாலும் அவற்றின் பூக்கள், காய்கள், கிழங்குகள், விதைகளாலும் மனித இனத்துக்கு ஒவ்வாமையும் இனம் புரியாத பல்வேறு நோய்களும் ஏற்படும் என்று பல்வேறு ஆய்வாளர்களும் எச்சரிக்கின்றனர். நோபல் பரிசு பெற்ற மரபியல் விஞ்ஞானியான ப்ரென்னர் என்பவர், ""மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் முழுமையாகப் பாதுகாப்பானவை என்று கூற பெரும்பாலான விஞ்ஞானிகள் தயங்குகிறார்கள். ஏனென்றால், அவர்களின் ஆயுட்காலத்திலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஆபத்தானவை'' என்று நிரூபிக்கப்பட்டுவிடும் என்கிறார்.

மனித இனம் மட்டுமின்றி, இப்பயிர்கள் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குகின்றன. தாவரங்களுடன் ஒட்டுறவு கொண்டுள்ள பல்வேறு பூச்சிகள், நுண்ணுயிர்கள் மட்டுமின்றி நன்மை செய்யும் மண்புழுக்களும் இப்புதிய வகைப் பயிர்களால் அழிக்கப்படுகின்றன. மறுபுறம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் மகரந்தங்கள் களைகளின் மகரந்தங்களுடன் சேர்ந்து, களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் கொண்ட புதியவகை "சூப்பர்' களைகளை உருவாக்கி விடுகின்றன. இவற்றை எந்த களைக் கொல்லி மருந்தாலும் கட்டுப்படுத்தவே முடியாது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரம், அது பயிரிடப்படும் பகுதிகளில் காலனியாதிக்கம் செய்யக்கூடியது. அதாவது, பிற தாவரங்களின் வளர்ச்சியை அழித்து, தான் மட்டும் செழித்து வளரும் தன்மை கொண்டது. மகரந்த சேர்க்கை மூலம் பாரம்பரிய விவசாயப் பயிர்களை அழித்து விடும் ஆற்றல் கொண்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களின் பூக்களில் தேன் சுரக்குமா, அவற்றைத் தேனீக்கள் உறிஞ்சினால் என்ன பாதிப்பு ஏற்படும், அத்தேனை மனிதர்கள் மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதெல்லாம் இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.

இவை ஒருபுறமிருக்க , மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்திப் பயிர்களில் காய்ப்புழுக்கள் முற்றாக அழிந்து விடுவதில்லை; மாறாக, அப்புழுக்கள் எதிர்ப்புத்திறன் பெற்று புதிய வீரியத்துடன் தாக்குகின்றன. 2003 முதல் 2006 வரை அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழகம், மிசிசிபி மற்றும் அர்கன்சாஸ் மாநிலங்களில் நடத்திய ஆய்வுகள் இதை நிரூபித்துள்ளன. எனவேதான் அனைத்துலக பல்லுயிர் பாதுகாப்புக்குழு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைக் களச்சோதனை முறையில் பயிரிடுவதற்குக் கூட தடை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில், இத்தொழில் நுட்பத்திற்கும், இதனைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களின் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஏழை நாடான இந்தியாவில் 2002இல் மரபணு மாற்றப்பட்ட கடுகும், 2003இல் 8 விதமான பருத்தியும் அனுமதிக்கப்பட்டு நாடெங்கும் 30 இலட்சம் ஏக்கரில் களப்பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு, கர்நாடகம், குஜராத், ம.பி;மராட்டியம் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட பருத்தியானது பாரம்பரிய பருத்தியைவிட 5 மடங்கு குறைவான விளைச்சலையே தந்து, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நட்டமேற்படுத்தியுள்ளது. விரக்தியடைந்த விவசாயிகள் பூச்சிமருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர். இந்த உண்மைகளை நாடாளுமன்ற மேலவையில் கேள்வி நேரத்தின் போதே அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இருப்பினும், எவ்விதக் கட்டுப்பாடோ வரைமுறையோ இன்றி எல்வா வகையான உணவு தானியப் பயிர்களுக்கும் மரபணு மாற்ற ஆராய்ச்சிகளையும் களப்பரிசோதனைகளையும் இந்திய அரசு தாராளமாக அனுமதித்து வருகிறது. ஏழை நாடான இந்தியா இத்தொழில் நுட்பத்தைச் செயல்படுத்திப் பார்க்கும் சோதனைச் சாலை எலியாக மாற்றப்பட்டு விட்டது. பி.டி. பருத்தியிலிருந்து தொடங்கி கடுகு, கத்தரிக்காய், சோளம் என அனைத்து உணவுதானியங்களும் மட்டுமின்றி, இந்திய விவசாயத்தின் உயிர்நாடியான நெல் சாகுபடிக்கும் பேராபத்தாக பி.டி. நெல்லும் வந்துவிட்டது.

அமெரிக்காவின் ராக்பெல்லர் நிறுவனமும் ஐதராபாத் பல்கலைக் கழகமும் கூட்டுச்சேர்ந்து வறட்சியைத் தாங்கும் நெல் ரகத்தை மரபணு மாற்றம் மூலம் உருவாக்க ஆராய்ச்சி செய்கின்றன. வைட்டமின்""ஏ'' சத்து நிறைந்த நெல் ரகத்தை உருவாக்க புதுதில்லி, ஐதராபாத், கோவை ஆகிய இடங்களிலுள்ள அரசின் வேளாண் ஆய்வு மையங்கள் சுவிட்சர்லாந்து ஏகபோகக் கம்பெனியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. ""தங்க அரிசி'' எனும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த அரிசியை உருவாக்க பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையமும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையமும் கூட்டுச் சேர்ந்து ஆய்வுகள் நடத்துகின்றன.

கட்டுப்பாடற்ற இத்தகைய களப்பரிசோதனைகள் பயிர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. இந்திய மக்களையும் சோதனைக்கூட எலிகளாக்கி பரிசோதிக்கும் கொடுமையும் இந்திய அரசின் துணையோடு நடந்து வருகிறது. ஏறத்தாழ 72 லட்சம் பேர் பயனடைவதாகக் கூறப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தை இந்திய அரசு உலக வங்கி கடனைக் கொண்டு நடத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைக்குப் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு சத்துமாவு உருண்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ""கேர்'' எனும் மிகப்பெரிய தன்னார்வ நிறுவனம் மூலம் மரபணு மாற்றப்பட்ட சோயாமாவையும் சோயா எண்ணெய்யையும் வழங்கி அத்தாய்மார்கள்குழந்தைகளிடம் அதன் விளைவுகளை 2002ஆம் ஆண்டில் சோதித்துப் பார்த்துள்ளனர். இந்த உணவின் தன்மை, விளைவுகள் பற்றிக் கண்டறிய எவ்வித பகுப்பாய்வு முறையும் இதுவரை இல்லை என்பதுதான் மிகப்பெரிய கொடுமை.

பி.டி.பருத்தி விதைகள் ஆந்திர, மகாராஷ்டிர பருத்தி விவசாயிகளைத் திவாலாக்கி, தற்கொலைக்குத் தள்ளிவிட்ட பின்னரும் இந்தக் கொலைகார தொழில்நுட்பத்தையும் சோதனைகளையும் முற்றாகத் தடைசெய்ய மறுத்து வருகிறது இந்திய அரசு. ஏனென்றால், இது உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவு!

இந்த அடிமைத் தனத்தையே இரண்டாவது பசுமைப் புரட்சி என்று ஆளும் காங்கிரசு கும்பல் கொண்டாடுகிறது. ஏற்கெனவே உரம், பூச்சி மருந்துகளுக்காக ஏகாதிபத்தியக் கம்பெனிகளிடம் அண்டி நிற்கும் இந்திய விவசாயிகளை, விதைக்காகவும் கையேந்த வைத்து, இந்திய விவசாயத்தின் சுய சார்புத் தன்மையை முற்றாக அழித்துவிட வேண்டும் என்பதுதான் இரண்டாவது பசுமைப் புரட்சியின் பின்னுள்ள சதித்திட்டம்.

தலைப்பாகைக்கு மட்டுமல்ல; தலைக்கே பேராபத்து வந்துவிட்ட நிலையில், இம்மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராக விவசாயிகளும் உழைக்கும் மக்களும் புரட்சிகர அமைப்புகளில் அணிதிரண்டு விடுதலைப் போரைத் தொடுக்காமல் பேரழிவிலிருந்து மீளவும் முடியாது.

· சுடர்

Tuesday, May 6, 2008

பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறும் உலகம்


பட்டினிக் கொடுமையால் தன்னையும் கடவுளையும் நொந்து கொண்டு, இறைவன் தமக்குக் ""கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?'' என்று பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பாடல் ஒன்றில் தமிழ்ப் புலவர் ஒருவர் கேட்டிருந்தார். அப்புலவரின் வேதனைமிக்க இந்த வரிகள் இன்று ஹெய்தி நாட்டில் யதார்த்த உண்மையாகியுள்ளது.

அந்நாட்டு ஏழை மக்கள் இப்போது மண்ணைத் தின்றால்தான் உயிர் வாழ முடியும் என்று கற்பிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவ்வாறு கற்றுத் தந்திருப்பது எல்லாம்வல்ல இறைவனல்ல, ஏகாதிபத்தியம்!
வெளிறிய மஞ்சள் நிறக் களிமண்; அதைக் குழைத்து அச்சில் வார்த்து காயவைத்து, சிறிது உப்பு சேர்த்து உண்கின்றனர் ஹெய்தி நாட்டின் ஏழை மக்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் குமட்டலைத் தணிக்க இக்களிமண்ணைச் சிறிதளவு மருந்து போல உட்கொள்வதென்பது அந்நாட்டு வழக்கம். இப்போது இக்களிமண்ணே ஏழைகளின் முழுமையான உணவாகி விட்டது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தெற்கு வாசலில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் கியூபாவுக்கு அருகிலுள்ள சின்னஞ்சிறு நாடுதான் ஹெய்தி. ஏறத்தாழ ஒரு கோடி கருப்பின மக்களைக் கொண்டுள்ள இந்நாடு, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தாலும் பின்னர் அமெரிக்க மேலாதிக்க வல்லரசாலும் சூறையாடப்பட்டு, இன்று உலகின் ஏழ்மை சூழ்ந்த நாடுகளில் ஒன்றாகிப் பரிதவித்து நிற்கிறது. ஏகாதிபத்தியவாதிகளால் திணிக்கப்பட்டு ஹெய்தியின் கைக்கூலி ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மறுகாலனியாதிக்கக் கொள்ளையால், அந்நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் வேலையிழந்து வாழ்விழந்து பட்டினியில் பரிதவிக்கிறார்கள். அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏழைகளால் வாங்க முடியாத அளவுக்கு விலையேற்றம் பலமடங்கு அதிகரித்து விட்டது.

இந்நிலையில் ""ரஸ்க்'' ரொட்டியைப் போல, அச்சில் வார்த்து காய வைக்கப்பட்ட களிமண்ணைத் தின்று பசியைப் போக்கிக் கொள்கின்றனர், அந்நாட்டு ஏழைகள். இக்களிமண் ரொட்டி வாயில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடுவதால், வாய்ப்புண், வயிற்றுப்புண் ஏற்பட்டு தீராத நோய்களுக்கு இம்மக்கள் பலியாகி வருகிறார்கள். ஹெய்தியின் அவலம் மெதுவாகக் கசிந்து உலகையே அதிர்ச்சியுறச் செய்ததும், ஐ.நா. மன்றத்தின் உணவு மற்றும் விவசாயக் கழகம் அவசர நிலைப் பிரகடனம் செய்து, அந்நாட்டுக்கு உடனடியாக உணவுப் பொருட்களை அனுப்புமாறு உலக நாடுகளைக் கோரியுள்ளது.

இது ஏதோ ஹெய்தி நாட்டில் மட்டும் ஏற்பட்ட பிரச்சினை அல்ல. ஏகாதிபத்தியவாதிகளால் உலகின் சிவப்பு விளக்குப் பகுதியாகச் சீரழிக்கப்பட்டு விட்ட தாய்லாந்து நாட்டில், ஏழை விவசாயிகள் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் பட்டினியில் பரிதவிக்கின்றனர். பசிக் கொடுமையிலிருந்து மீள, அவர்கள் மூங்கில் புழுக்கள், ஈசல்விட்டில் பூச்சிகள், காட்டெறும்புகள் முதலானவற்றைப் பிடித்து வறுத்துத் தின்னும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வல்லரசு கனவு காணும் இந்தியாவின் உ.பி.மாநிலத்தில் முஷாகர் எனப்படும் தாழ்த்தப்பட்ட சாதியினர், பட்டினியிலிருந்து மீள எலிகளையும் நத்தைகளையுமே உணவாக உட்கொள்கின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் உணவுப் பஞ்சத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் உலகின் பல ஏழை நாடுகளில் இத்தகைய அவலங்கள் தொடரும் அதேநேரத்தில், மாரிடானியா, செனகல், கினியா, பர்கினா பாசோ, மொராக்கோ முதலான ஆப்பிரிக்க நாடுகளிலும், உஸ்பெகிஸ்தான், யேமன் முதலான ஆசிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலுள்ள மெக்சிகோ நாட்டிலும் உணவுக் கலகங்கள் வெடித்துப் பரவுகின்றன.

இந்தியா உள்ளிட்டு இந்த ஏழை நாடுகளை மட்டுமின்றி, உலகையே அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் என்னும் கொள்ளைநோய் கவ்வியுள்ளது. கடந்த ஓராண்டுக்குள் மக்காசோளத்தின் விலை 50 சதவீதமும், அரிசியின் விலை 25 சதவீதமும், கோதுமையின் விலை இருமடங்காகவும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடும் ஐ.நா. மன்றம், உலக அளவில் தானியக் கையிருப்பு 57 நாட்களுக்கு மட்டுமே உள்ளதாகவும், கடந்த 25 ஆண்டுகளில் இதுபோன்றதொரு படுமோசமான நிலைமை ஏற்பட்டதில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

கடந்த ஈராண்டுகளாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கிடுகிடு விலையேற்றத்துக்கு ""உயிரி எரிபொருள்'' எனும் ஏகாதிபத்திய திட்டமே முதன்மையான காரணமாகும். உயிரி எரிபொருள் தயாரிப்புக்காக மக்காச்சோளம், சோயா, கரும்பு, சிலவகையான கிழங்குகள், எண்ணெய் வித்துக்கள் முதலான விவசாய விளைபொருட்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாலேயே இந்த விலையேற்றமும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன.

உலகின் எரிபொருள் தேவையை ஈடுகட்டவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும், புவி வெப்பம் உயர்ந்து வருவதைத் தடுக்கவும்தான் உயிரி எரிபொருள் திட்டம் என்று ஏகாதிபத்தியங்கள் வாதிட்டாலும், இது ஏழை மக்களைப் பட்டினி போட்டுக் கொல்லும் வக்கிரத் திட்டமாகவே உள்ளது. மேலும், பெட்ரோல், நிலக்கரி போன்ற மரபு சார்ந்த எரிபொருளுக்கு மாற்றீடாக உயிரி எரிபொருள் அமைந்து விடாது என்றும் இதனால் விபரீத விளைவுகளே ஏற்படும் என்றும் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துக் காட்டியுள்ளன.

இதுதவிர, ஏகாதிபத்திய உலகின் மேட்டுக்குடி கும்பல்களது உணவில் இறைச்சியானது முக்கிய இடம் பெறுகிறது. வகைவகையான இறைச்சி உணவின் தேவையை நிறைவு செய்யக் கூடுதலாக இறைச்சி உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக கணிசமான அளவுக்கு உணவு தானியங்கள் கால்நடைகளுக்குத் தீனியாகத் திருப்பிவிடப்பட்டுக் கொழுக்க வைக்கப்படுகின்றன. சராசரியாக ஒரு கிலோ இறைச்சிக்காக 8 கிலோ உணவு தானியம் கால்நடைகளுக்குக் கொட்டப்படுகிறது. இதனாலும் உணவு தானியப் பற்றாக்குறையும் விலையேற்றமும் ஏற்படுகிறது.

மேலும், ஏகாதிபத்திய அராஜக உற்பத்தியால் புவி வெப்பம் அதிகரித்து, இயற்கைச் சீற்றங்களால் உணவு உற்பத்தி பாதிக்கப்படுவதாலும், மக்கட்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப விவசாய உற்பத்தி நவீனப்படுத்தப்படாமல் ஏகாதிபத்தியங்களால் நாசமாக்கப்பட்டு வருவதாலும், ஏகாதிபத்திய உலகின் நிதியாதிக்கக் கும்பல்கள் ஊக வணிகத்தின் மூலம் உணவுப் பொருட்களைக் கட்டுப்படுத்தி மேலாதிக்கம் செய்து வருவதாலும் உலகெங்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடும் விலையேற்றமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஏகாதிபத்தியம் உலகம் மிகக் கொடியது. மனித இனம் பட்டினியால் மாண்டு போனாலும் பரவாயில்லை, எமக்கு இலாபம்தான் வேண்டும் என வெறியோடு அலையும் ஏகாதிபத்தியவாதிகள் உலகில் நீடிக்கும்வரை, உலகைக் கவ்வியுள்ள பட்டினிப் பேராயத்திலிருந்து மனித இனம் மீள முடியாது. ஏகாதிபத்தியத்தைத் தூக்கியெறியும் அரசியல் புரட்சிகள் நடக்காமல், சுயசார்பான தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்காமல் மனித இனம் இனிச் சுதந்திரமாக உயிர் வாழவும் முடியாது.

இம்மாபெரும் புரட்சிப் போருக்கு நாம் அணிதிரளப் போகிறோமா? அல்லது விதியை நொந்து கொண்டு ஹெய்தி மக்களைப் போல களிமண்ணைத் தின்றுச் சாகப் போகிறோமா?
· குமார்

அவலத்திலும் இலாபவெறி! ஏகாதிபத்தியவாதிகளின் வக்கிரம்!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் பட்டினியால் சிக்கித் தவிக்கும் தாய்லாந்து நாட்டின் ஏழைகள் மூங்கில் புழுக்களைப் பிடித்து வறுத்து உண்கிறார்கள். இப்போது அதையும் பறித்துக் கொண்டு அம்மக்களைப் பட்டினிச் சாவுக்குத் தள்ளிவிட ஏகாதிபத்திய நிறுவனங்கள் கிளம்பியுள்ளன.

தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில், ஏழைகள் உண்ணும் புழு, பூச்சிகளைத் தரம் உயர்த்தி அவற்றை டப்பாக்களில் அடைத்து விற்கும் வழிமுறைகளை ஆராய்வதற்காக, தாய்லாந்தில் உள்ள சியாங்மை நகரில் கடந்த பிப்ரவரி 18ஆம் நாளன்று, ஐ.நா. மன்றத்தின் உணவு மற்றும் வேளாண் கழகம் ஒரு ஆய்வரங்கத்தை நடத்தியுள்ளது. உலகெங்கும் 1400 வகை புழுபூச்சிகளை மனிதர்கள் மருந்தாக உண்பதாகவும், அவற்றில் புரதச் சத்து மிகுந்துள்ளதாகவும், இவற்றை சுகாதாரமான முறையில் தயாரிப்பதன் மூலம் புதிய வியாபாரச் சந்தையை உருவாக்க முடியும் என்றும் அந்த ஆய்வரங்கில் விவாதிக்கப்பட்டுள்ளது.

உடனே பல்வேறு ஏகாதிபத்திய நிறுவனங்கள், புழுபூச்சிகளைப் பிடித்து வறுத்து டப்பாக்களில் அடைத்து வியாபாரம் செய்ய களத்தில் இறங்கிவிட்டன. முதலாளித்துவ செய்தி ஊடகங்களோ ""இயற்கையான புரதச் சத்து நிறைந்த புழுபூச்சிகளின்'' அருமை பெருமைகளை அடுக்கத் தொடங்கி விட்டன. ஈசல் வறுவலும், எலிக்கறியும் இனி டப்பாக்களில் விற்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கிரிக்கெட் போட்டி ஏலம்: சூதாட்டமே விளையாட்டாக…

கிரிக்கெட் போட்டி ஏலம்: சூதாட்டமே விளையாட்டாக…
புதிய ஜனநாயகம் - 2008

ஏகாதிபத்தியத்தின் கீழ் எதுவுமே புனிதமானதல்ல : எல்லாமே பணம் பண்ணும் சரக்குதான் என்பதையே ஏலம் விடப்பட்ட கிரிக்கெட் போட்டி எடுத்துக்காட்டுகிறது.

ஒருமுறை மறைந்த கவர்ச்சி நடிகை ""சில்க்'' சுமிதா கடித்த எச்சில் ஆப்பிளை ரசிகர் ஒருவர் 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். கிரிக்கெட் விளையாட்டிலும் அண்மையில் இதுபோன்றதொரு ஏலம் நடந்திருக்கிறது. ஏலம் எடுக்கப்பட்டது இந்திய கிரிக்கெட் வீரர்கள் தின்று போட்ட எச்சில் இலைகளையல்ல.

மாறாக, கிரிக்கெட் வீரர்களையே ஏலம் எடுத்திருக்கிறார்கள், இந்தியப் பெருமுதலாளிகள்.

""சில்க்'' சுமிதாவின் எச்சில் ஆப்பிளை ஏலத்துக்கு எடுத்தவரின் செயலை, பைத்தியக்காரத்தனம் என்று எவரும் எளிதில் கூறிவிட முடியும். ஆனால், கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுத்திருக்கும் முதலாளிகள் நிச்சயம் பைத்தியக்காரர்கள் அல்ல. ""இது ஒரு இலாபம் தரும் வியாபாரம்'' என்று பேட்டியளிக்கிறார், கொல்கத்தா அணியை ஏலம் எடுத்திருக்கும் இந்தி நடிகர் ஷாருக்கான்.

ஏப்ரல் ஜூன் மாதங்களில் இருபதுக்கு இருபது (20/20) என்ற பெயரில் இந்தியன் பிரீமியர் லீக் என்ற அமைப்பு கிரிக்கெட் போட்டிகளை நடத்தவிருக்கிறது. இந்தப் போட்டிகளில் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி, மொஹாலி, ஜெய்ப்பூர், மும்பை, பெங்களூரு என இந்தியாவின் எட்டு மாநில நகரங்களின் பெயரில் அணிகள் மோதவிருக்கின்றன. இந்த அணிகளை யார் வேண்டுமானாலும் ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம் என 200 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப் புள்ளி அறிக்கை (டெண்டர்) வெளியிட்டது, இந்திய கிரிக்கெட் வாரியம். இதன்படி, சாராய அதிபர் விஜய் மல்லையா, திரு(ட்டு) பாய் அம்பானி, ஜி.எம்.ஆர். எனும் வீட்டுமனை கொள்ளைக்கார நிறுவனம், டெக்கான் கிரானிக்கல் எனும் ஆங்கில நாளேடு, பெருமுதலாளி நெஸ் வாடியா, இந்தி சினிமா நடிகர் ஷாருக்கான், கவர்ச்சி நடிகை பிரீத்தி ஜிந்தா ஆகியோர் பல நூறு கோடிகளுக்கு ஒவ்வொரு அணியையும் ஏலம் எடுத்துள்ளனர்.

இந்த அணிகள் இந்தியாவின் மாநிலங்களைச் சேர்ந்த நகரங்களின் பெயர்களில் அமைந்திருந்தாலும், அதில் விளையாடுபவர்களெல்லாம் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இன்னும் சொல்லப் போனால், இதில் பலர் இந்தியாவைச் சேர்ந்தவர்களே அல்ல. ஒவ்வொரு அணியிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த 4 கிரிக்கெட் வீரர்கள் இடம் பெறுவார்கள். எஞ்சியிருப்பவர்களில், எந்த மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் இடம் பெறுவார்கள். இப்படி உள்நாட்டுவெளிநாட்டு வீரர்களைக் கலந்து வீரிய ஒட்டுரகமாக அணிகள் அமைந்திருக்கும்.

அணிகளை ஏலத்துக்கு எடுத்ததைப் போலவே, அதற்கான ஆட்டக்காரர்களையும் ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள் இந்திய முதலாளிகள். இதன்படி, சென்னை அணியில் விளையாடவுள்ள மகேந்திரசிங் டோனியை 6 கோடி ரூபாய்க்கு ஏலமெடுத்திருக்கிறார், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முதலாளி. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆட்டக்காரர் சைமண்ட்சை 5.4 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணிக்காக ஏலம் எடுத்திருக்கிறது, டெக்கான் கிரானிக்கல் நாளேடு. இதேபோல பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை இந்த ஏலமுறைக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது, இந்திய கிரிக்கெட் வாரியம். இவர்களில் தங்களுக்கு விருப்பமானவர்களைத் தெரிவு செய்து, தாங்கள் ஏலம் எடுத்துள்ள அணிகளில் அவர்களை ஆட வைக்க முதலாளிகளால் முடியும்.

கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை ஏலம் போட்டு முதலாளிகளிடம் விற்றதன் மூலம் 7,000 கோடி ரூபாய்க்கு கல்லா கட்டியிருக்கிறது, இந்திய கிரிக்கெட் வாரியம். செய்தி ஊடகங்களால் இந்த தேசத்தின் நாயகர்களாகச் சித்தரிக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர்கள், தாங்கள் அடிமைகளைப் போல ஏலம் போட்டு விற்கப்பட்டதற்கு அவமானப்படவில்லை. இப்படி தங்களுக்கு ""ரேட்'' பேசப்பட்டிருப்பதைக் கண்டு பூரித்துப் போயுள்ளார்கள். ""இந்த ஏலத்தின் மூலம் கிரிக்கெட் வீரர்கள் குறுகிய காலத்தில் அதிக இலாபமீட்ட முடியும்'' என்று மகிழ்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார், நட்சத்திர ஆட்டக்காரரான யுவராஜ்சிங். விலை போகாத சில "வீரர்கள்' மட்டும், ""எனக்கு இது தகுந்த ரேட் இல்லை'' என்று விலைமகளிர் போல பேட்டியளித்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்பட்ட கேவலத்தைக் கண்டு வெறுப்பை உமிழாமல், இந்த ஆட்டக்காரருக்கு இவ்வளவு தொகை கொடுத்திருக்கலாம்; இது குறைவானது, கூடுதலானது என்றெல்லாம் செய்தி ஊடகங்கள் பரபரப்பாக பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றன. டோனிக்கு ஆறு கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டதைக் கண்டு தேசியப் பெருமிதம் கொள்கின்றன. இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கைக் காட்டிலும் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பதை சந்தைப் பொருளாதாரத்தின் விளைவு என்று அங்கலாய்த்து, இந்தப் பட்டிமன்றத்தில் "தேச பக்தி'யோடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது, "மார்க்சிஸ்டு'களின் புரட்சிகர ""தீக்கதிர்'' நாளேடு.

ஆங்கிலேய பிரபுக்குலத்தின் மேட்டுக்குடி சீமான்களின் பொழுதுபோக்கு விளையாட்டாகத் தொடங்கிய கிரிக்கெட், இன்று பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் விளம்பர வியாபார ஊடகமாகவும், தரகுப் பெருமுதலாளிகள் கருப்புப் பணச் சூதாடிகளின் விளையாட்டாகவும் வளர்ந்து விட்டது. சினிமாவுக்கு அடுத்த கவர்ச்சிகரமானதாக கிரிக்கெட் மாற்றப்பட்டிருக்கும் அதேசமயம், சினிமாவைவிட அதிகமாகப் பணம் புரளும், பணம் கொழிக்கும் மையமாக கிரிக்கெட் விளையாட்டு மாறியிருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் வெவ்வேறு நாடுகளின் ஊழல்மிக்க வாரியங்கள் ஆண்டுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய்களைச் சம்பாதிக்கின்றன. கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் பல லட்ச ரூபாய் சம்பளமாகப் பெறுவதோடு, கூடுதலாக விளம்பரங்களில் தோன்றி கோடிக்கணக்கில் ஊதியம் பெறுகிறார்கள். இவை மட்டுமின்றி, கிரிக்கெட் சூதாடிகளுடனும் தரகர்களுடனும் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை நடத்துகிறார்கள்.

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பால் உல்மரின் கொலைச் சம்பவம், சர்வதேச கிரிக்கெட்டின் இருண்டஅசிங்கமான பகுதியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து காட்டியது. இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் அணிகளின் வீரர்கள், வர்த்தகச் சூதாடிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஊழலில் ஈடுபட்ட விவகாரம் ஏற்கெனவே அம்பலமாகியுள்ளது. இருப்பினும் உள்நாட்டுவெளிநாட்டு முதலாளிகளால் பல்லாயிரம் கோடிகள் வாரியிறைக்கப்பட்டு இந்த கிரிக்கெட் சூதாட்டம் வெறியோடு நடத்தப்படுகிறது. ஆங்கிலேய காலனிய நாடுகளாக இருந்த நாடுகளில் மட்டுமே, அவமான அடிமைச் சின்னமாக கிரிக்கெட் விளையாட்டு தொடர்கிறது. விடுதலைப் போராட்ட உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு அமெரிக்கஆங்கில மோகம் ஊட்டி வளர்க்கப்படுவதைப் போலவே கிரிக்கெட் மோகம் "தேசபக்தி'யாக வளர்க்கப்படுகிறது.

கிரிக்கெட்டையே தனித்தொழிலாகக் கொண்ட ஆட்டக்காரர்களும், கிரிக்கெட்டை பந்தயம்சூதாட்டமாகவும் வியாபாரம்விளம்பரமாகவும் நடத்தும் கருப்புப் பண கும்பலும் சமுதாயத்தின் மிகப் பெரிய ஒட்டுண்ணிகளாக வளர்ந்து விட்டதை, தற்போதைய ஏல விவகாரம் மீண்டும் நிரூபித்துக் காட்டிவிட்டது. குதிரைப் பந்தயம், லாட்டரி, ஆபாச களிவெறியாட்ட விடுதிகள் போன்றவை எவ்வாறு ஒழிக்கப்பட வேண்டியவையோ, அதைப் போலவே மிகப்பெரிய சமூகக் கேடான கிரிக்கெட் விளையாட்டும் ஒழிக்கப்பட வேண்டும். உழைக்கும் மக்களின் புரட்சிகரப் போராட்டங்களே, இச்சூதாட்ட வெறியாட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும்.

· பாலன்

Sunday, May 4, 2008

சாயம் வெளுத்துப் போகும் ஓநாய் கூட்டங்கள்

தமிழ் பேசும் மக்களின் மீட்பாளர்கள் எல்லாம் தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். 'விடுதலை" பேசிய புலிகள் முதல் 'ஜனநாயகம்" பேசிய புலியெதிர்ப்பு ஒநாய்கள் வரை, தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். தமிழ் மக்களின் தேசிய விடுதலை என்றும், தமிழ் மக்களின் ஜனநாயகம் என்று கூறிக்கொண்டவர்கள் எல்லாம், கேடுகெட்ட மனித விரோதிகள் என்பதை, அவர்களின் அரசியலையும் நடத்தையையும் அடிப்படையாக கொண்டு கடந்த காலத்தில் கூறிவந்தோம்.

இன்று அவர்களில் பலர் தமது செய்கைகள் மூலம் அம்பலமாகிவருகின்றனர். புலிகள் அரசு பேசுசுவார்த்தையின் போது, புலிகள் தாம் படுமோசமான மக்கள் விரோதிகள் என்பதை ஊர் உலகம் அறிய தம்மை அம்பலமாக்கினர். இதே காலத்தில் ஜனநாயகம் பேசும் கூட்டம் புளுத்து, திடீர் மிதப்பாகினர். ஆனால் அரசு புலியின் யுத்த தொடங்கியவுடன், தாங்கள் புலிகளை மிஞ்சிய மக்கள் விரோதிகள் என்பதை, தமது சொந்த அரசியல் நாற்றத்துடனேயே எடுப்பாக அவர்கள் அம்பலமாக்கி வருகின்றனர்.

'ஜனநாயகத்தின்" பெயரில் ரீ.பீ.சீயையும், தேனீயையும் மையமாக வைத்து ஜனநாயகம் பேசியவர்கள, இலங்கையின் இந்தியாவின் அரசியல் எடுபிடிகளாக இன்று பலர் தாமாக வெளிவருகின்றனர். அன்று 'ஜனநாயக" மாநாடுகள், சமூக விழுமியங்கள், தீர்வுப் பொதிகள் என்ற வேஷத்தில் கொட்டமடித்தவர்கள் எல்லாம், இலங்கை அரசின் கோமணங்களாக இருப்பது அம்பலமாகி வருகின்றது.

ரீ.பீ.சீக் கும்பலோ ஈ.என்.டீ.எல்.எவ் என்ற இந்தியக் கூலிக் கும்பலில் எடுபிடிகளே தாங்கள், என்பதை வெளிப்படை அம்மணமாக்கி நிற்கின்றனர். கருணாவின் பிளவுடன் ஈ.என்.டீ.எல்.எவ் கும்பலும் நடத்திய (இந்தியா) அரசியல் தேன் நிலவு வரை நீடித்த, அவர்களின் ஜனநாயக கூத்து இன்று நொருங்கிப்போய்விட்டது. அக்காலத்தில் கருணா ஊர் உலகத்தை கொள்ளையடித்த கொள்ளைப் பணத்தின் ஒருபகுதியைப் பெற்றே, ரீ.பீ.சீ 'ஜனநாயகம்" பேசியதை இன்று கருணா-பிள்ளையான் கும்பல் அம்பலமாக்கியுள்ளது. இன்று ஒருவரை ஒருவர் பரம எதிரியாகவும், பரஸ்பரம் அவதூறை கட்டமைக்கும் 'ஜனநாயகத்தை"யே அவர்கள் தமது அரசியலாக செய்கின்றனர்.

தேனீக் கும்பல, ஆனந்தசங்கரி முதல் புளட் கும்பல் வரையிலான எடுபிடி 'ஜனநாயகம்' பேசி நாறுகின்றது. எல்லாம் இலங்கையில் இயங்கும் கூலிக் கும்பல்களின் பினாமிகள் என்பது, இந்திய இலங்கை ஏகாதிபத்திய அரசியல் ஏஜண்டுகள் என்பது வெளிப்படையானது. மக்களுக்கென்ற ஒரு சுயாதீனமான மக்கள் அரசியலை என்றும் இவர்கள் வைத்தது கிடையாது. இவர்கள் பேசிய 'ஜனநாயகம்" என்பது, இலங்கை இந்திய கூலிக் குழுக்களைச் சார்ந்து, தாம் பிழைத்துக்கொள்ளும் சுயநலத்தை தாண்டியதல்ல என்பது இன்று வெளிப்படையாகி நிற்கின்றது.

இந்த வேஷதாரிகள் வெளிப்படையாக வெளுத்துப் போக, தேசம் நெற் இந்த கும்பலின் பின்னணியில் தனிமனித வக்கிரங்களை அள்ளிக் கொட்டுகின்ற அற்ப கொசிப்புத் தளமாகியது. இலங்கை மக்களின் சொந்த விடுதலை பற்றி யாரும் பேசிவிடக் கூடாது என்ற அடிப்படையில், அன்னிய உளவுத்துறைகளின் திட்டமிட்ட அரசியல் தேவையுடன் தேசம் நெற் களமிறங்கியது.

தமக்கு கருத்து கிடையாது, அரசியல் கிடையாது என்று அறிவித்துக்கொண்டு, மக்களுக்கு எதிரான அரசியலுடன் விபச்சாரம் செய்தனர். இதையே கடந்தகால கருத்தற்ற இலக்கிய சந்திப்பும், கருத்தற்ற புலம்பெயர் சஞ்சிகைகளும் செய்துவந்தன. இதன் மூலம் அவர்கள் கருத்தின்றியே செத்து மடிந்தன.

இன்று தேசம்நெற் மக்களின் உரிமைகள் மீதும் கூட தமக்கு கருத்துக் கிடையாது என்று கூறிக்கொண்டு, அது தனிமனித காழ்ப்புக்களை கொட்டி ஆட்டம் போட்டது, போடுகின்றது. புலி, புலியெதிர்ப்பு அரசியல் வக்கரித்துப் போன சமூக விரோதிகளின், சொந்த ஆடுகளமாக கொண்ட வாசகர் தளத்தை அடிப்படையாகக் கொண்ட தேசம் நெற் அரசியல் செய்தது, செய்கின்றது. இப்படி இரண்டு சமூக விரோதிகளின் அரசியலைக் கொண்டு, மக்களுக்கு எதிராகவே தன்னை மிதப்பாக்க முனைந்தது.

மக்களை நேர்மையாக அணுகவும் நேசிக்கவும் வக்கற்ற கும்பலினை வளைத்துப்பிடித்துக் கொண்டு, தமிழ் மக்களை வழிகாட்டப் போவதாக பீற்றிக்கொண்டது. கொசிப்பு, அரிப்பு, வம்பளப்பு மூலம், தன்னை பிரபல்யமாக்க முனைந்தது. இதைச் செய்த பலர், முடிவற்ற இந்த சூதில் சிக்கி களைத்துப் போய்விட்டனர்.

இப்படி எங்கும் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் என்று விதம் விதமாக பேசியவர்கள் எல்லாம், இன்று அம்பலமாகிவிட்டனர். அண்மையில் ஞானம் கிழக்கில் பிள்ளையான் அருகில் அமர்ந்து மதியுரைஞனாக கருத்துரைத்ததன் மூலம், அதன் அரசியல் குருவானார். இது எமக்கு நன்கு தெரிந்த ஞானத்தின் சொந்தக் கதையல்ல. ஞானம் போன்றவர்கள் இன்று ஒரு உதாரணம், ஆனால் புலி எதிர்ப்பு பேசும் பலரின் சொந்த நிலை இது. கிழக்கு தேர்தலில் வேறு (புலம்பெயர்ந்தவர்கள்) சிலர், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் பின்னணியில் பணம் முதல் அவர்களின் அரசியல் வரை, தாராளமாக அரசியல் விபச்சாரம் செய்கின்றது. சந்தர்ப்பம், சூழல், துணிவும் இருந்தால் 'ஜனநாயகம்" பேசும் பலர், தமிழ் மக்களுக்கு எதிராக, புலிகளின் பெயரில் இலங்கை - இந்திய அரசின் ஏஜண்டுகளாக செயல்பட தயாராகவே உள்ளனர் என்பதே எதார்த்த உண்மை.

ஞானத்தை அம்பலப்படுத்துவது எமது இலக்கல்ல

ஞானம் போன்றவர்கள் தான், புலியெதிர்ப்பு அரசியல் பிதாமக்கள். ஞானத்தின் அரசியல் என்ன? இன்று அல்ல, நேற்று அல்ல, அவரின் அரசியல் கதை நீண்டது, நெடியது. அவர்கள் புலம்பெயர் இலக்கியம் பேசிய முதல், இலக்கிய சந்திப்பின் பிதாமகனாகவும், 'ஜனநாயகத்தின்" கொம்பாக ரீ.பீ.சீ உளறியது வரை, இந்த துரோக அரசியல் தான் காணப்பட்டது. தலித் முன்னணி ஏற்பாட்டாளராக இருந்த போதும் கூட, இந்த அரசியல் தான் அவரின் முதுகெலும்பாக இருந்தது. தலித்தியம், உயிர்நிழல், எக்சில் பின் முகிழ்ந்த அரசியல் எல்லாம், மக்கள் விரோத அரசியல் தான். இப்படிப்பட்டவர்களின் அரசியல் கூட்டுத்தான், இந்த புலம்பெயர் புலியல்லாத தளத்தில் பொதுவான அரசியல். இவர்களுக்கு இடையிலான முரண்பாட்டிலும் கூட.

இன்று ரவுடி பிள்ளையானின் அரசியல் ஆலோசகர். அன்று எதை புலம்பெயர் இலக்கியத்திலும் அரசியலிலும் அவர் உளறினாரோ, அதை பிள்ளையானுக்காக இன்று உளறுகின்றார். ஒரே குட்டை தான் எங்கும். அதை ஞானத்தின் அன்றைய இன்றைய செய்கைகள் மெய்ப்பிக்கின்றது. இங்கும் பல பிள்ளையான்கள் பல வேஷத்தில் உள்ளனர் என்பது, வெளிப்படையானது. அது ஞானம் வடிவில் வெளிவந்தது தற்செயலானது.

அவருடன் கடந்த காலத்தில் இருந்த பலரும், சமகாலத்தில் நீPடிப்பவர்களும், அவருடன் முரண்பட்டவர்களும் கொண்டிருக்கும் அரசியல், ஞானத்தின் இன்றைய அதே அரசியல் தான். வேறுபாடும் முரண்பாடும், எந்த கொம்பை பிடித்து மேலே ஏறுவது என்பது தான். இவர்கள் அனைவரும் புலம்பெயர் இலக்கியம், அரசியல் ஊடாக செய்ததும், செய்வதும் படுகேவலமான மக்கள் விரோத அரசியல் தான்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை மறுப்பதும், அனைத்தையும் புலியாக காட்டுவதும் இவர்களின் அரசியல் முகமூடி. தமிழ் மக்களுக்கு புலிகள் மறுக்கும் ஜனநாயக உரிமையைப் பற்றி தமக்கு ஏற்ப தாளம் போட்டு பேசுவதும், அதேநேரம் அந்த மக்களின் அரசியல் உரிமைகளை மறுப்பதும், இவர்களின் மொத்த இழிவான அரசியலாகும். இந்த அரசியல் அடிப்படையில் இலங்கை இந்திய அரசின் ஏஜண்டுகளாக செயலாற்றுகின்றனர். கூலிக் குழுக்களை ஜனநாயகவாதிகளாக காட்டிக்கொண்டு, நேரடி மற்றும் மறைமுக அரசியல் தொடர்புகளை கொண்டவராக, புலியெதிர்ப்பு அரசியல் பொதுவாக மூடிமறைத்துக் காணப்படுகின்றது.

பேரினவாத அரசு தமிழ் மக்களின் அரசியல் உரிமையை மறுப்பதை கண்டும் காணாது நியாயப்படுத்திக்கொண்டு, அவர்களின் பின்னால் குலைப்பதே இவர்களின் அரசியல். மக்களின் அடிப்படை அரசியல் உரிமையை நிராகரிப்பதில் இருந்து தான், இவர்களின் அரசியல் தொடங்கி முடிகின்றது. புலியை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அரசியல் வித்தை காட்டுவதே, இவர்களின் எதிர்ப்புரட்சி அரசியலாகும். இதற்காக மார்க்சியம் முதல் தலித்தியம் வரை, ஏன் இவர்கள் பேசாத பொருள் கிடையாது.

இவர்கள் மக்களுக்கு வழிகாட்டியதும் வழிகாட்டுவதும் எதை? அவர்கள் சொந்த அடிமைத் தனத்தையும் அற்பத்தனத்தையும் தான். பிள்ளையானின் வாலைப் பிடித்தோ அல்லது டக்கிளஸ்சின் வாலைப் பிடித்தோ, இது போன்றவர்களில் தொங்கிக்கொண்டு தான் தமிழ் மக்கள் தமது விடுதலையைப் பெறமுடியும் என்கின்றனர். தமது சொந்த அடிமைப் புத்தியை நியாயப்படுத்த, தமிழ்மக்கள் ஒடுக்கும் புலிகளின் பாசிசம் இவர்களுக்கு உதவுகின்றது. இதைக் காட்டிக் கொண்டு, இலங்கை அரசின் அடிமைகளாக தமிழ் மக்கள் வாழ்வது தான், தமிழ் மக்களின் விடுதலை என்கின்றனர். புலியின் அடிமைத் தனத்தில் இருந்து, பேரினவாத அரசின் அடிமைகளாக தமிழ் மக்கள் வாழ்வது தான், தமிழ் மக்களின் விடுதலை என்பதே புலியெதிர்ப்பு அரசியலாகும். இதற்கு வெளியில் யார் எதை தான் முன்வைக்கின்றனர்?

பிள்ளையானோ ஒரு அரசியல் ரவுடி

கருணாவின் அதிகாரத்தை கைப்பற்றிய வழிமுறையே, அந்த அரசியல் ரவுடிசத்தைக் காட்டுகின்றது. இலங்கை அரசின் படுகேவலமான ஒரு எடுபிடியாக, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு லும்பன் தான் பின்ளையான். இப்படித் தான் கிழக்கில் திடீரென உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் தலைவன் தான் பிள்ளையான். கூலிக்கு மாரடிப்பதும், கொலை கொள்ளை கற்பழிப்பு என்று எல்லாவற்றையும் அரசியல் பெயரில் செய்த ஒரு ரவுடி தான், கிழக்கின் விடிவெள்ளி. அவனுக்கு ஏற்ற அரசியல் ஆலோசகர் உயிர்நிழல்-எக்சில் ஞானம். பெண்ணியம் தலித்தியம், மார்க்சியம், பின்நவீனத்துவம், யாழ் மேலாதிக்கம் எதிர்ப்பு என்று, எத்தனை எத்தனை முகம்.

இந்த அரசியல் வழிகாட்டியின் தலைவனோ, விதவிதமாக ரையைக் கட்டி படம் போடுவதன் மூலம், தன்னை நம்பிக்கையான கவுரவ அரசியல்வாதியாக காட்டிக்கொள்ள விரும்புகின்ற பக்காத் திருடன். இவரின் அரசியல் ஆலோசகர் ஞானமும், ஸ்ராலின் என்ற பெயரில், சின்னமாஸ்ட்டர் என்ற பல பெயரிலும் இயங்கியவர்.

புலம் பெயர் 'முற்போக்கு" இலக்கியம், அரசியல் எல்லாம் இப்படி ஒரு ரவுடியின் அரசியல் பின்னால் முகிழ்வது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இவர்களுடன் எமது நீண்ட போராட்டம், மிகச்சரியானது என்பதை இவை நிறுவியுள்ளது. உண்மையில் ஞானம் போல் பலர் உள்ளனர்.

இலங்கை - இந்திய அரசுடன் இயங்குகின்ற கூலிக் கும்பல்களின் தலைவர்களுடன் தொடர்பு கொள்ளாத, அவர்களுடன் தொலைபேசி உரையாடலைக் கொள்ளாத, அவர்களின் சந்திப்புகளில் கலந்த கொள்ளாத எத்தனையோ பேர், புலியெதிர்ப்பு அரசியலில் உள்ளனர். எபப்டித்தான் இவர்கள் மக்களின் அரசியலுக்காக போராடுகின்றனர். மக்கள் விரோதிகளுடன் உறவை வைத்துக்கொண்ட பலரையே நாம், எம்மைச் சுற்றிய புலியெதிர்ப்பு 'முற்போக்கில்" காண்கின்றோம். படுகேவலமான அரசியல் சூழலை தக்கவைத்தபடி, அதை 'முற்போக்கு" என்று சொல்லுகின்ற அரசியல் வக்கிரமே அரங்கேறுகின்றது.

ஞானம் வெளிப்படையாக பிள்ளையானின் மடியில் அமர்ந்து பிழைப்பதே, தமிழ் மக்களின் அரசியல் என்றவுடன், அந்த ரவுடியின் அரசியல் ஆலோசகராகி விடுகின்றார். இப்படி பலர் வெளிப்படையற்ற வகையில் உலாவுகின்றனர். இந்த விமர்சனத்தையே, பலர் தனிநபர் அவதூறு எனகின்றனர். எங்களுக்கு இதுபற்றிக் கவலை கிடையாது. கேடுகெட்ட வகையில், மக்களுக்கு எதிராக யார் எந்த வேஷத்தில் இருந்தாலும், அதை நாம் அம்பலப்படுத்தினோம், அம்பலப்படுத்துவோம்.

ஞானம் போன்றவர்கள் சாதிக்கப் போவது எதை?

இலங்கை அரசின் கூலிக் குழுவாக இருப்பது எப்படி, என்பதை வழிகாட்டுவது தான். அதற்கு ஒரு தத்துவ முலாம் பூசுவது. அதை மக்கள் அரசியலாக சோடிப்பது, அதை 'ஜனநாயகம்" என்று காட்டுவதும் தான். வெறும் புலியெதிர்ப்பை லாடமாக கொண்டு, தாமும் பிழைத்துக் கொள்வது. தம்மைத் தாம் 'முற்போக்கு" என்று கூறிக்கொண்டு, மேலும் மக்களை அடிமைப்படுத்தி தாம் மட்டும் பொறுக்கி வாழ்வது.

மக்களின் சொந்த விடுதலை என்பதை அடையாளம் காணவிடாது தடுப்பதே இவர்களின் அரசியல். இதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பது. பேரினவாதிகளின் திட்டமிட்ட சதித்தன்மையான தேர்தலை, 'ஜனநாயகம்" என்று கூறி, ஊர் உலகத்தை ஏமாற்றி பிழைப்பது, அதற்கு ஏற்ற அரசியல் ஆலோசனைகளை வழங்குவது, இதற்கு ஏற்ப பிழைத்துக் கொண்டு, சொந்த வாழ்வை வளப்படுத்துவது. சட்டவிரோத கடத்தல், கப்பம், கொலைகளை நடத்த உதவுவது. வடக்கு மக்களுக்கு எதிராக, கிழக்கு மக்களை உருவேற்றுவது, முஸ்லீம் மக்களை எதிரியாக்கி, கிழக்கு அரசியல் பேசி அரசியல் பிழைப்பு நடத்துவது, சிறுவர்களை ஆயுதபாணியாக்கி, தம்மைப் பாதுகாப்பது. அவர்களின் பாதுகாப்பில் அரசியல் ஆலோசனை வழங்குவது.

(வடக்கு – கிழக்கு) மக்கள், இவர்களின் அடிமைகளாக வாய் பொத்திக் கிடப்பதுதான் இந்த 'ஜனநாயக"த்தின் உச்சம். இனவாதம், பிரதேசவாதம், சாதிவாதம் என்று பல வகையில் தம்மை நியாயப்படுத்திக் கொள்ள, மக்களை பிளப்பதே இவர்களின் அரசியல் உத்தி.

ஞானம் வழிநடத்திய புலம்பெயர் தலித்தியம்

புலம்பெயர் தலித்தியம் இன்று சந்திக்கு வந்துள்ளது. தலித் ஏற்பாட்டாளர்களில் இந்த ஞானம் முக்கியமானவர். பாவம் தலித் மக்கள். தலித் மக்களின் பெயரில் அரசியல் பிழைப்பு நடத்தப்பட்டதை, ஞானத்தின் இன்றைய நிலை எடுத்துக்காட்டுகின்றது. தலித்திய மற்றைய ஏற்பாட்டாளர்களின் கள்ள மௌனம், இதற்கு எதிராக கருத்துரைக்காத அவர்களின் தலித்தியமும், இதை மேலும் அம்பலமாக்குகின்றது.

தலித் மக்களைக் கொண்டு பிளக்கும், இலங்கை அரசின் ஏற்பாடா தலித்தியம் என்ற கேள்வியை எம்முன் இது எழுப்புகின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத அரசின் ஒரு அரசியல் ஏஜண்டாக ஞானம் வெளிவந்த பின்பு, தலித் ஏற்பாட்டாளர்கள் எந்த எதிர்வினையுமின்றி இருப்பது ஏன்? தலித் மக்களின் விடுதலை இவர்களின் நோக்கமல்ல என்பதையே, இது தெளிவாக காட்டுகின்றது. இலங்கை அரசும் இது போன்ற சமூக பிளவுகளை தனது அரசியல் நோக்கில், நேரடியாகவும் மறைமுகமாகவும், சுற்று வழிகளிலும் தொடர்ச்சியாக செய்து வருகின்றது. தலித்தியம் பற்றிய தெளிவற்ற வளவளப்பு கோட்பாட்டை, தலித் ஏற்பாட்டாளர்கள் முன்வைத்த போது, அதை நாம் அம்பலப்படுத்தினோம்.

தலித் பேசுவோர்கள், இலங்கை அரசாங்கத்தை இதன் பெயரில் கண்டிப்பது கிடையாது. ஏன் இவர்கள் கூட, இலங்கை அரசின் ஊடாக தலித் விடுதலை பற்றியே கனவு காண்கின்றனர். புலியொழிப்பு போல் இதுவும், இலங்கை அரசின் ஊடாக தீர்வு என்று, அதே சக்கரத்தைத் தான் உருட்டுகின்றனர்.

இப்படி தமிழ் மக்கள், தலித் மக்கள், கிழக்கு மக்களின் விடுதலை எல்லாம், இலங்கை அரசின் கையைக் காலைப் பிடித்து சாதிக்கும் அரசியல் விடையமாகிவிட்டது. அதை 'ஜனநாயக" மாக காட்டி செய்யும் அரசியலோ, மொத்தத்தில் மக்கள் விரோத அரசியல் தான்.

பி.இரயாகரன்
04.05.2008

அழுகி நாறும் கூழ் முட்டையை அடைகாக்கும் அரசியல்

அழுகி நாறும் கூழ் முட்டையை அடைகாக்கும் அரசியல்


புரியாத புதிருடன் புலம்பும் பிழைப்புவாத வழிபாடு. இது பகுத்தறிவற்றது. நேபாள மாவோயிஸ்ட்டுக்களின் இன்றைய சர்வதேச நிலையை வைத்து, பாசிசப் புலிகள் தம்மை நியாயப்படுத்த முனையும் வாதங்கள் ஒருபுறம். மறுபக்கத்தில் இதையே இந்திய போலி கம்யூனிஸ்ட்டுக்கள், தம்மை தாம் நியாயப்படுத்த வைக்கும் வாதங்கள். அனைத்தும் யாருக்கு எதிராக என்றால், உண்மையான புரட்சியாளர்களுக்கு எதிராகத்தான். மக்களின் அடிப்படைப் பிரச்சனையை பேசாதே என்கின்ற உள்ளடக்கத்துடன், இவ்வாறு அவதூறு பொழிகின்றனர்.


அந்த வகையில் அற்புதன் என்பவர் 'நேபாள மாவோக்கள், ஏகாதிபத்திய நலன் சார் அரசியல் முதல் முகட்டைப் பார்த்து எழுதும் வலையுலகப் புரட்சீ'யாளர் வரை.." என்று புலிப் பாசிசத்தை நியாயப்படுத்த எழுதுகின்றார். http://aatputhan.blogspot.com/2008/05/blog-post.html

இந்திய போலி கம்யூனிஸ்டான சந்திப்பு "இந்திய மாவோயிஸ்ட்டுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாதை!" என்று இதை எழுதுகின்றது. http://santhipu.blogspot.com/2008/04/blog-post_29.html

ஒன்று புலிப் பாசிசத்தை ஆதரி என்கின்றது. மற்றது போலிக் கம்யூனிசத்தை புரட்சிகர வழி என்கின்றது.

இந்தக் கூழ்முட்டைகள் ஒன்றை மட்டும் கண்டு கொள்வதில்லை. மாவோயிஸ்ட்டுகள் நேபாள மக்களுடன் கொண்டுள்ள அரசியல் உறவை. அந்த வழியை தமது சொந்த வழியாக தேர்ந்தெடுப்பதை திட்டமிட்டு நிராகரித்தபடி, நேபாள கம்யூனிஸ்ட்டுக்களை மறைமுகமாக அவதூறு பொழிந்தபடி திரித்துக் காட்டமுனைகின்றனர். இவை மக்களின் புரட்சிகர அக்கறையின் பால் அல்ல. தமது சொந்த எதிர்ப் புரட்சிகர நிலைக்கு செங்கம்பளம் விரிக்கத் தான் இந்த ஏற்பாடுகள்.

நேபாள மாவோயிஸ்டுக்கள் மக்களை மக்களாகவே நேசித்து, அவர்களுக்காக போராடிய, போராடுகின்ற மறுபக்க உண்மையை கண்டு கொள்ளாமல், அரசியல் அவதூறு பொழிகின்றனர். அவர்கள் வெறுமனே மன்னரைத் துக்கியெறியவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ ஆட்சியேறவில்லை. அதற்காக மக்கள் அவர்களை தெரிவு செய்யவுமில்லை.

மக்களின் விருப்பை, அவர்களின் புரட்சியை தலைமையெற்று செய்தேயாக வேண்டும். சந்தர்ப்ப சூழலில் அவர்கள் அமைத்துள்ள அரசு, முரண்பட்ட வர்க்கங்களையும் சர்வதேச சூழலையும் எதிர்கொண்டு, தமது வர்க்கப் புரட்சியைச் செய்ய வேண்டியுள்ளது. இதை எதிர்கொள்கின்ற போக்கில், அவர்கள் பலதரப்புடன் கொண்டுள்ள உறவை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு, தங்களது சொந்த மக்கள் விரோத அரசியலை நியாயப்படுத்த முனைகின்றவர்கள் அரசியலில் நேர்மையற்றவர்கள். கடைந்தெடுத்த போக்கிரிகள்.

நேபாள மாவோயிஸ்ட்டுக்கள் இருக்கட்டும், உங்களால் ஏன் மக்களுக்காக போராட முடியவில்லை. இந்த அடிப்படையான அரசியல் விடையத்தை விடுத்து, அதோ பார் அவர்கள் தேர்தலில் நிற்கின்றனர், அமெரிக்காவுடன் கைகுலுக்குகின்றனர். நாங்களும் அதையே செய்கின்றோம் என்ற நியாயவாதமோ கபடத்தனமானது. தேர்தலில் நிற்கின்றனர், அமெரிக்காவுடன் கைகுலுக்குகின்றனர் எல்லாம் சரி, ஆனால் அவர்கள் மக்களின் புரட்சிகர கடமைகளுடன் சேர்ந்து நிற்கின்றனர். மக்களைச் சார்ந்து நிற்கின்றனரே ஒழிய, பாராளுமன்றத்தையோ ஏகாதிபத்தியத்தையோ சார்ந்தல்ல.

மக்களுக்கு துரோகம் இழைப்பவர்களும், அவர்களை அடக்கியொடுக்குபவர்களும், நேபாள மாவோயிஸ்ட்டுக்கள் மக்களுடன் கொண்டுள்ள அடிப்படையான அரசியல் உறவு தான் என்ன என்பதையிட்டு அவர்களுக்கு புரியாத புதிராக உள்ளது.

தாம் அடைகாக்கும் சொந்தக் கூழ் முட்டைகளை பொரிப்போம் என்று கொக்கரிக்கும் அடைக்கோழிகள், வேறு எதைத்தான் சொந்த அரசியலில் எதிர்வாதமாக முன்வைக்க முடியும்.

நேபாள கம்யூனிட்ஸ்டுக்களை நாம் எந்த வகையில் ஏன் ஆதரிக்கின்றோம்
நேபாள மக்களின் புரட்சிக்கு அவர்கள் தலைமை தாங்குவதால், நாம் அதை ஆதரிக்கின்றோம். நேபாள மக்கள் விரும்பும் புரட்சியை, அவர்கள் செய்யும் எல்லை வரை தான், எமது ஆதரவு. அதை அவர்கள் செய்யத் தவறினால், அவர்களும் வரலாற்றில் துரோகிகள் தான். மக்கள் தமது வாழ்வுக்காக புரட்சியை விரும்புகின்றனர். நேபாள மக்கள் தமது ஆயுதப் போராட்டம் மூலமும், வாக்குப் பலம் மூலமும் கூட, தமது புரட்சிகர செய்தியை தெளிவாக கூறியுள்ளனர். புரட்சியை நடத்தும் அரசியல் அதிகாரத்தை, அவர்கள் தமது சொந்த தலைமைக்கு வழங்கியுள்ளனர்.

இதை எந்த விதத்திலும் மாவோயிஸ்ட்டுகள் நிராகரித்தால், துரோகம் இழைத்தால், வரலாற்றில் அவர்களையும் மக்கள் குப்பைத் தொட்டியில் தான் போடுவார்கள்.

நேபாள மக்களின் புரட்சியைச் செய்ய அவர்கள் கையாளும் நடைமுறைகள் மக்களுக்கு எதிராக அமைந்தால், கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் மட்டும் தான் அதை விமர்சிப்போம், அம்பலப்படுத்துவோம்.

சர்வதேச வர்க்கங்களின் அணிச் சேர்க்கையிலும், உள்நாட்டு வர்க்க நிலையிலும், வர்க்கப் போராட்டத்தைக் கையாளுவதில் எதிரியுடன் புரட்சியாளர் கொண்ட உறவுகள், வரலாற்றில் பல முறை நிகழ்ந்துள்ளது.

இதை மாவோயிஸ்ட்டுகளும் நேபாளத்தில் கையாண்டனர். இன்றைய நிலைக்கு சற்று முந்தைய காலத்தில், அதிகாரத்தில் பங்கு கொண்டிருந்த ஒட்டுக்கட்சிகளுடன் நேபாள மாவோயிஸ்ட்டுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்கள் கையாண்ட அணுகுமுறைகள் நடைமுறைகள், புரட்சியை மேலும் நடத்தவே உதவியது. பேச்சுவார்த்தை, தேர்தல் உட்பட அனைத்தும், மிக நுட்பமாக கையை குலுக்கியபடி புரட்சிகரமாக அவர்களை அம்பலப்படுத்தி தூக்கியெறிந்துள்ளனர். இன்று இந்தியா முதல் அமெரிக்கா வரை அவர்கள் கையாளும் சர்வதேச அணுகுமுறை, அவர்கள் மக்கள் விரும்பும் புரட்சிக்காக வெற்றிகரமாக கையாள்வார்கள் என்பதை அவர்களின் சொந்த அனுபவமும் நடைமுறையும் காட்டுகின்றது.

மாவோயிஸ்ட்டுகள் வெளிப்படையாக கையாளும் நடைமுறைகளும், ஏகாதிபத்தியம் வெளிப்படையாக கையாளும் அணுகுமுறைகளும், தத்தம் சொந்த வர்க்க நலனை அடிப்படையாக கொண்டது. மாவோயிஸ்ட்டுகள் பொதுவான ஜனநாயகத்தை முரணற்ற வகையில் வெளிப்படையாக கையாள, ஏகாதிபத்தியம் சதியை சொந்த அணுகுமுறையாக கொள்கின்றது. இது நேபாள வர்க்கப்போராட்டத்தில் தெளிவாக மறுபடியும் உறுதியாகும்.

நேபாள மக்கள், ஜனநாயகப் புரட்சியை நடத்தும்படி மாவோயிஸ்ட்டுகளைக் கோரி நிற்கின்றனர். மக்களுக்கு வழங்கிய இந்த வாக்குறுதியை, அவர்கள் நடைமுறையில் செய்வார்கள். அது மட்டும் தான், அவர்களின நீடித்த புரட்சிக்கான அவர்களின் சொந்த வர்க்கத்தின் செயல் தந்திரமாக அமையும்.

இதைப் புரிந்துகொள்ள முடியாத கூழ்முட்டைகள், தத்தம் அரசியல் இழிநிலைக்கும் இருப்பு நிலைக்கும் ஏற்ப, நேபாள மாவோயிஸ்ட்டுகளை மக்களுக்கு வெளியில் பிரித்து வைத்து கதைசொல்ல முடிகின்றது. தமது கூழ் முட்டைக்கு ஏற்ப விளக்கம் சொல்லி, அடைகாக்க முடிகின்றது.

சந்திப்பு நடத்துகின்ற பிழைப்புவாத போலி மார்க்சிய புரட்டலை, நாம் தனிக்கட்டுரை ஊடாக விரைவில் சந்திப்போம். அற்புதன் என்பவர், புலிப் பாசிச கூழ்முட்டையைப் பாதுகாக்க, தமது சொந்த ஏகாதிபத்திய நியாயப்படுத்தலை எப்படி செய்கின்றார் என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

'நேபாள மாவோயிஸ்டுகளிடம் அமெரிக்க அரசு பேசுகிறது, மாவோக்களும் பேசுகிறார்கள், கைகுலுக்குகிறார்கள். நேபாள மாவோக்களும் தாம் கலப்புப் பொருளாதாரத்தையும், பல் கட்சி ஜனநாயகத் தேர்தல் முறைமையையும் அடிப்படையாகக் கொண்டு இந்த உலக ஒழுங்கிற்கு ஏற்ப ஆட்சி அமைப்பதாகவும் கூறி உள்ளார்கள்." என்கின்றார். இதனால் அவர்கள் கம்யூனிசத்தை கைவிட்டுவிட்டனர் என்று கூறுகின்ற அற்பத்தனம் அறியாமையும் வெளிப்படுகின்றது. இங்கு மாவோயிஸ்டுகளிடம் தெளிவான வேறுபட்ட பொருளாதார கொள்கை உண்டு என்பது உண்மையல்லவா. அவர்கள் அதற்காக போராடுவார்கள் என்பது வெளிப்படையானது.

மறுபக்கத்தில் இதைச் சொன்ன அவர்கள், ஜனநாயகப் புரட்சியை நடத்த மாட்டோம் என்று சொன்னார்களா? மக்களுக்கு தாங்கள் வழங்கிய வாக்குறுதியை கைவிட்டுவிட்டனர் என்று சொன்னார்களா? இல்லை. அவர்கள் சரியாக செல்லுகின்றனர் என்றே கருதுகின்றோம்.

'இந்த முரண்பாடு பற்றி இவர்கள் எவருமே இதுவரை எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை," என்கின்றீர்கள் எங்களுக்கு இதில் முரண்பாடே கிடையாது. அவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை, அவர்கள் தெரிவு செய்த மக்களின் விருப்பை இது வரை நிராகரிக்கவில்லை, கைவிடவில்லை. அதை அவர்கள் அமுல் செய்வார்கள் என்பதால், எமக்கு இதில் எந்த முரண்பாடும் கிடையாது.

வரலாற்றில் லெனின் சர்வதேச சந்தைக்கு ஏற்ப பொருளாதாரத்தை திறந்துவிட்டது உட்பட சிறு உற்பத்தியை ஊக்குவித்த வரலாறும் உண்டு. ஏன் சோசலிச நாடுகள் முதலாளித்துவ நாடுகளுடன் உறவைக்கொண்டு இயங்கியது. ஸ்ராலின் இரண்டாம் உலக யுத்தத்தின் போது கையாண்ட வடிவமும் இதை ஒத்தது தான். சீனக் கம்யூனிஸ்ட்டுக்கள், தமது படைத் தலைமையைக் கூட கலைத்து, சியாங்கே சேக்கின் அதிகாரத்தில் விட்ட வரலாறும் உண்டு. புரட்சியை நெளிவு சுழிவாக மக்களுடன் சேர்ந்து எப்படி நடத்துவது என்பதில், கம்யூனிஸ்டுக்கள் தேர்வுகள் நிலைமைக்கு ஏற்ப அமைகின்றன. நெளிவு சுழிவான வழிகள், மக்களின் புரட்சிகர நலன்களை அடிப்படையாக கொண்டது. இதுவல்ல என்று நிறுவப்படாத வரை, அதை நாம் நிராகரிப்பது கிடையாது. இந்திய அமெரிக்க அரசுடன் கொண்டுள்ள உறவுகளையிட்டு, புரட்சிக்கு எதிரானது என்று எந்த முரண்பாடும் எம்முன் இருப்பதில்லை.

இதைவிடுத்து மக்களுக்கு எதிரான பாசிச அரசியலில் மிதப்பவர்களுக்கு, தம்மை நியாயப்படுத்த, இது எப்படி தெரிகின்றது. 'இவர்கள் ஏகாதிபத்தியங்களுடன் சமரசம் செய்து கைகுலுக்க வில்லையா?" என்று கேட்க வைக்கின்றது. புலிகள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடும் சொந்த அக்கறையின் பாலானா கேள்வியா இது. இல்லை. மாறாக தமது ஏகாதிபத்திய தன்மையை, எதார்த்தமானதாக காட்ட வைக்கும் குதர்க்க வாதம் இது.

அடுத்து அவரின் ஏகாதிபத்திய சார்பு வாதத்தைப் பாருங்கள். 'அப்படியாயின் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றி, அது ஏகாதிபத்திய சார்பு நிலைப்பட்டது என்றெல்லாம் எழுதிக் குவிக்கும் இவர்களின் எழுத்துக்கள் எவ்வகையில் நேர்மையானவை?" இதன் மூலம் என்ன சொல்ல முனைகின்றார். அதை ஆதரிக்கும் நீங்கள், எங்கள் ஏகாதிபத்திய சார்பு பாசிசப் போராட்டத்தை ஆதரியுங்கள் என்கின்றார். இப்படியும் மானம் கெட்ட அரசியல் பிழைப்பு.

ஐயோ பாவம். நேபாள மாவோயிஸ்ட்டுகள் மக்களை சார்ந்து புரட்சி செய்கின்றனர். மக்களின் சமூக பொருளாதார உறவை அரசியலாக கொண்டு, அவர்களின் சொந்த விடுதலைக்காக போராடுகின்றனர். இந்த வகையில் அவர்கள் சர்வதேச சமூகத்துடன் உறவுகொள்கின்றனர். மக்களின் சமூக பொருளாதார அரசியல் நலனை முதன்மையாக வைக்கின்றனர்.

புலிப் போராட்டம் மக்களின் தேசிய சமூக பொருளாதார உறவுக்காக போராடவில்லை. மாறாக ஏகாதிபத்திய சமூக பொருளாதார உறவை முன்வைத்து, மக்களை எதிரியாக்கி நிற்கின்றது. அடிப்படையில் மக்கள் சார்ந்து நிற்பதில் மாவோயிஸ்டுகளின் அரசியல் நிலை ஒருபுறம், மக்களை எதிரியாக்கி நிற்கும் புலிகள் தலைகீழாய் மறுபுறம். இப்படி இரண்டும் ஏகாதிபத்தியத்தை அணுகுகின்ற விதமே, முற்றிலும் நேர்மாறானது.

இப்படி இருக்க, அற்புதன் தனது பெயருக்கு ஏற்ப அற்புதம் செய்ய விரும்புகின்றார். 'நேபாள மார்க்ஸிஸ்ட்டுக்கள், மாக்ஸிஸ்டுக்கள் என்றால் இந்த வலையுலகப் புரட்சியாளர்கள் சொல்லும் மார்க்சிசம் என்ன? சிவப்புக் கொடியும், சுத்தியலும் அரிவாளும் போட்டுக் கோசம் போட்டா அவை தான் மார்சியர்களா? அப்படி போடாதவை மக்கள் நலன் சார்ந்து போராடினால் அவர்கள் ஏகாதிபத்திய அடிவருடிகளா?" என்கின்றார். திருகுதாளம் போட்டு, உண்மையை திரித்து புரட்டி கதை சொல்வது பாசிட்டுகளுக்கு ஏற்ற தர்க்கம் தான்.

மாவோயிஸ்ட்டுக்கள் மக்களைச் சார்ந்து நிற்க, அதை இல்லை என்கின்றனர். அதை அவர் 'சிவப்புக் கொடியும், சுத்தியலும் அரிவாளும் போட்டுக் கோசம் போட்டா" என்கின்றார். மறுபக்கத்தில் பாசிட்டுகளான தம்மை மக்கள் இயக்கம் என்கின்றார். அதை அவர் 'அப்படி போடாதவை மக்கள் நலன் சார்ந்து போராடினால் அவர்கள் ஏகாதிபத்திய அடிவருடிகளா?" என்கின்றார். மக்கள் நலன் எதையும் வைக்காத மக்களுக்கு எதிரான புலிகள் எங்கே! மக்கள் நலனை வைத்து அவர்களுக்காக போராடும் மாவோயிஸ்ட்டுகள் எங்கே

மக்களை எதிரியாக்கி, அவர்களைத் துன்புறுத்தி பாசிசத்தை அரசியலாக கொண்டது புலிகள் ஏகாதிபத்திய அரசியல். இந்த நிலைக்காக வக்காளத்து வாங்க, மாவோயிஸ்டுக்களின் மக்கள் அரசியல் நடைமுறைகள் உதவப்போவதில்லை.

அடை காப்பது கூழ்முட்டை என்பது தெரியாது, கொக்கரிக்கும் கோழியால் மனித வாழ்வு என்றும் விடியாது. தமது இழிவான மக்கள் விரோத ஏகாதிபத்திய நிலையைப் பாதுகாக்க 'ஏகாதிபத்திய எதிர்ப்பை விட இன்று மக்கள் முன்னால் இருக்கும் பிரதான முரண்பாட்டிற்கான தீர்வே முதன்மையானது" என்கின்றனர். இதைத் தான் ஏகாதிபத்தியமும் சொல்லுகின்றது. இதைத்தான் புலிகளும் ஏற்றுக்கொள்கின்றனர். இப்படி வாதிடும் புலிகளை, நாங்கள் ஏகாதிபத்திய அடிவருடிகள் என்று சொல்வதில் என்ன தவறு?

'இன்று மக்கள் முன்னால் இருக்கும் பிரதான முரண்பாட்டிற்கான தீர்வே முதன்மையானது" நல்லது. மக்கள் அமைதி மூலம் இதை தீர்க்க விரும்பினர். புலிகள் சண்டை மூலம் தீர்க்க விரும்பி சண்டையைத் தொடங்கினர். 'இன்று மக்கள் முன்னால் இருக்கும் பிரதான முரண்பாட்டிற்கான தீர்வே முதன்மையானது" என்று எமக்கு சொல்லாது, புலிக்கு சொல்லுங்கள்.

'பிரதான முரண்பாட்டிற்கான தீர்"வில் கூட ஏகாதிபத்தியம் தான், அதை தடுக்கின்றது. சமூகங்களுக்கு இடையிலான அனைத்து முரண்பாட்டின் நெம்புகோலும், ஏகாதிபத்திய சமூக பொருளாதார அடிப்படையைக் கொண்டது. அதன் நலனுக்கு உட்பட்டது. இதற்கு வெளியில் அல்ல. மக்கள் நலன் இதற்கு வெளியிலானது. புலியின் நலன் என்பது, மக்கள் நலன் அல்ல என்பதால் 'ஏகாதிபத்திய எதிர்ப்பை விட" முதன்மையானது புலிகளின் சொந்த நலன் என்பது தெளிவானது.

அரசியலை புலியின் நலனுக்கு ஏற்ப வடிகட்டுவது நிகழ்கின்றது. 'நேபாளத்தில் அது இந்துத்துவா அடிப்படையிலான முடியாட்சியாகவும் தமிழீழத்தில் அது சிங்களப் பேரினவாதமுமாக இருக்கிறது" என்ன அரசியல் திரிபு.

'நேபாளத்தில் அது இந்துத்துவா அடிப்படையிலான முடியாட்சி" என்பது திரிபு. அது நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்திய தரகுமுதலாளித்துவ முடியாட்சி. ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடாமல் இதை ஒழிக்க முடியாது. அது ஒருபுறம். 'தமிழீழத்தில் அது சிங்களப் பேரினவாதமுமாக இருக்கிறது" இது ஒரு திரிபு. சிங்கள பேரினவாத தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்திய ஆட்சியாக உள்ளது. இதை விடுதலைப்புலிகள் அரசியல் அறிக்கை கூட தெளிவாகக் கூறுகின்றது. விடுதலைப்புலிகளின் ஆரம்பப் பத்திரிகைகள் கூட இதைக் கூறுகின்றது. இன்று அதை மறுக்கும் நீங்கள், ஊர் உலகத்தையே ஏமாற்றுகின்றீர்கள்.

தமிழ் தேசியமாக இருப்பது ஏகாதிபத்திய எதிர்ப்பை அடிப்படையாக கொண்டது தான். தேசியம் என்பது சமூக பொருளாதார உறவை அடிப்படையாக கொண்டது. அது சிங்கள பேரினவாதத்தை மட்டுமல்ல, அதை ஆதரிக்கின்ற ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து போராடுவதை அடிப்படையாக கொண்டது.

'மக்களை உண்மையாக நேசிப்பவர்கள் மக்களின் விடுதலையை விரும்புபவர்கள் முன் இன்றிருக்க கூடிய ஒரே தெரிவு தமிழ்த் தேசிய விடுதலை ஒன்றே." இது உண்மையான மக்களின் சொந்த தேசியமாக, மக்களை நேசிக்கின்ற, அவர்களே தமது விடுதலைக்காகப் போராடுகின்ற, அவர்களின் சொந்த சமூக பொருளாதார விடுதலையை முன்னிறுத்துவதாக அமைவது மட்டும் தான் தேசியம். இந்த வகையில் புலிப் பாசிசம் தேசியமாகாது. அது தேசியத்தின் பெயரிலான பாசிசம்.

பி.இரயாகரன்
03.05.2008