1980ஆம் ஆண்டு காடுகள் (பாதுகாப்பு) சட்டம் என்ற பெயரில் மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி 1980ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதிக்கு முன்பிருந்து காடுகளில் வாழ்ந்து வருவதாக நிரூபிக்க முடியாதவர்கள் எல்லாம் ""ஆக்கிரமிப்பாளர்கள்'' என்று அறிவிக்கப்பட்டார்கள்.
அதைத் தொடர்ந்து, ""ஆக்கிரமிப்பாளர்களை'' எல்லாம் வெளியேற்றும்படிக் கோரி ""சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்'' எனப்படுவோர் உச்சநீதி மன்றத்தை அணுகினர். அதை ஏற்ற உச்சநீதி மன்றம் 1980க்குப் பிந்தைய எல்லா ஆக்கிரமிப்பாளர்களையும் வெளியேற்றும்படி உத்திரவிட்டது. அத்தீர்ப்பின் அடிப்படையில் 20022003 ஆகிய ஓராண்டில் 1.68 இலட்சம் குடும்பங்களை வாஜ்பாயி தலைமையிலான அரசாங்கம் வெளியேற்றியது.
பட்டியலினப் பழங்குடி மக்களின் வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்தப் போவதாக வாக்களித்து ஆட்சிக்கு வந்த காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இடதுசாரிக் கூட்டணி ஆகியவை தமது குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் அவ்வாறான ஒரு அம்சத்தைக் குறிப்பிட்டிருந்தன. அதைத் தொடர்ந்து, காடுகளில் இருந்து பழங்குடி மக்கள் மற்றும் காடுகளைச் சார்ந்து வாழும் வனவாசிகளை வெளியேற்றுவதைத் தடுப்பது, அதற்காக அவர்களுக்கு காட்டு நிலங்கள் மற்றும் விளைபொருட்கள் மீதுள்ள 14 உரிமைகளை நிலைநாட்டுவது என்ற பெயரில் ஒரு மசோதாவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்தது. ""உண்மையில் அந்த மசோதா பழங்குடி மற்றும் காடுகளைச் சார்ந்து வாழும் மக்களை வெளியேற்றும் நோக்கத்தைக் கொண்டிருந்தது'' என்கிறார்கள் காங்கிரசு தலைமையிலான அரசின் முக்கிய ஆதரவாளர்களான "இடதுசாரி'க் கூட்டணியினர். முக்கியமாக நான்கு குறைபாடுகள் முதலில் கொண்டு வந்த மசோதாவில் இருந்தன. காடுகளில் வாழும் பழங்குடி அல்லாத மக்களின் உரிமைகள் சேர்க்கப்படவில்லை; காடுகளில் வாழும் பழங்குடி அல்லாத மக்கள் உரிமை பெறுவதற்குத் தகுதியானவர்களாகக் கருதப்படும் காலவரையறை; கிராமமக்கள் சபையின் பாத்திரம் குறிப்பிடப்படவில்லை; காடுகளில் வாழும் மக்கள் விவசாயம் செய்வதற்காக 2.5 ஹெக்டேர் என்ற உச்ச வரம்பு.
இந்தக் குறைபாடுகளைக் சுட்டிக் காட்டி ஐ.மு.கூட்டணி அரசு கொண்டு வந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்பக் கோரி, இடதுசாரிக் கூட்டணி அதில் வெற்றியும் கண்டது. அதன்படி அமைக்கப்பட்ட கமிட்டி, பழைய மசோதாவின் மீது ஏழு பரிந்துரைகளை முன் வைத்தது. நாடாளுமன்றக் கூட்டுக் கமிட்டியின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, அவற்றை அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியது, ஐ.மு.கூட்டணி அரசு.
நாடாளுமன்றக் கூட்டுக் கமிட்டியின் பரிந்துரைகளை அடிப்படையிலேயே நிராகரித்து விட்டு, காட்டிலாகா அதிகார வர்க்கம், அந்நிய பன்னாட்டுத் தொழில் கழகங்கள் மற்றும் உள்நாட்டுத் தரகு முதலாளிகள் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பல திருத்தங்களை அமைச்சர்கள் குழு புகுத்தியது. ""பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் மக்களின் (காடுகளின் மீதான உரிமைகளை அங்கீகரிக்கும்) சட்டம் 2006'' என்று பெயரிடப்பட்டிருக்கும் இச்சட்டத்தில் உள்ள பெயரளவிற்கான உரிமைகளையும் நீர்த்துப் போகச் செய்யும் வகையில் அமைச்சர்கள் குழுவின் திருத்தங்கள் அமைந்துள்ளன.
இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் முயற்சியால் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டம் பழங்குடி மக்களின் வாழ்வில் "ஒரு திருப்பு முனை' என்று பீற்றிக் கொள்ளும் போலி மார்க்சிஸ்டுகள், விதிகள் உருவாக்கப்படும்போது இதிலுள்ள குறைபாடுகள் சரி செய்யப்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று வாக்குறுதியளிக்கின்றனர். மக்களுக்குச் சாதகமான இச்சட்டத்தை விரைவில் அமல்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு, மலைவாழ் மக்களிடையே இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பழங்குடி மக்களின் நில உடைமையைப் பாதுகாப்பதற்காகப் பாடுபட வேண்டும்; இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பழங்குடி மக்களின் மத்தியில் இடதுசாரி சக்திகளின் வலுவைக் கூட்டி அமைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும் சவடால் அடிக்கின்றனர்.
ஆனால், ஆளும் வர்க்கங்களும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் போலி மார்க்சிஸ்டுகளைவிட மிகவும் புத்திசாலிகள் மட்டுமல்ல, தந்திரசாலிகளாகவும் உள்ளனர். ஏகாதிபத்திய சேவை செய்வதையே தேசிய நலன்களுக்கான செயல்கள் என்றும், தமது சொந்த நலன்களையே பொதுமக்கள் நலன்களுக்கானவை என்றும் பசப்பி ஏய்ப்பதில் வல்லவர்கள். அவ்வாறுதான் பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாகக் காடுகளைச் சார்ந்து வாழும் மக்களின் காடுகள் மீதான உரிமைகளை அங்கீகரிப்பதாகப் பெயர் கொண்ட இப்புதிய சட்டத்திலும் பல சட்டநுட்பத் தில்லுமுல்லுகளைச் செய்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக 1980ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட காடுகள் (பராமரிப்புச்) சட்டப்படி அந்த ஆண்டு அக்டோபர் 25ந் தேதிக்கு முன்பிருந்து காடுகளில் வாழ்ந்து வருவதாக நிரூபிக்க முடியாத வனவாசி மக்கள் ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதப்பட்டு வெளியேற்றப்படுவர். தற்போதைய சட்டம் இந்தக் கால வரையறையை 2005, டிசம்பர் 13 ஆக மாற்றியிருக்கிறது. காடுகளில் வாழும் பட்டியலினப் பழங்குடிகள் அல்லாத மக்களுக்கும் இது பொருந்தும் என்றும், ஆகவே இச்சட்டம் முற்போக்கானதென்றும் நம்பச் சொல்கிறார்கள். ஆனால், ஒரு தலைமுறை என்பது 25 ஆண்டுகள் வீதம் மூன்று தலைமுறைகளாகப் பாரம்பரியமாகக் காடுகளில் தாங்கள் வாழ்ந்து வருவதாக அம்மக்கள் நிரூபித்தாக வேண்டும். அதாவது 1930 முதல் 75 ஆண்டுகள் காடுகளில் வாழ்ந்து வந்திருப்பதாக நிரூபிப்பவர்கள் மட்டுமே இச்சட்டத்தின்படி உரிமைகள் பெற முடியும். வாய்வழிச் சாட்சியங்களோ, நேரடி சோதனை ஆதாரங்களோ போதாதவை; காலனிய கால ஆவணங்களை வைத்து நிரூபித்தாக வேண்டும். இவ்வாறான கறாரான வரையறை மூலம் பெரும்பாலான மக்களின் வன உரிமைகள் நிராகரிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
அடுத்து, ஐ.மு.கூட்டணி அரசு முதலில் முன் வைத்த நகல் சட்ட மசோதா, பட்டியலினப் பழங்குடி மக்களின் உரிமைகள் பற்றி மட்டுமே பேசியது. பின்னர்தான் அப்பழங்குடி மக்கள் அல்லாத பாரம்பரியமாகக் காடுகளில் வாழும் மக்கள் உரிமைகள் என்று சேர்க்கப்பட்டது. இது இடதுசாரிக் கட்சிகளின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட முற்போக்கான அம்சம் என்று போலி மார்க்சிஸ்டுகள் கொண்டாடுகின்றனர். ஆனால், காடுகளில் தங்கள் கால்நடைகளை மேய்த்து வாழும் குஜ்ஜார் போன்ற பழங்குடிகள் அல்லாத மக்கள், காடுகளின் விளிம்புகளில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பல தலைமுறைகளாக காடுகளில் விவசாயம் செய்தும், பீடி, இலை, விறகு பொறுக்கி வாழும் ஏழை எளிய மக்கள் என ஏராளமான மக்கள் காடுகளைச் சார்ந்து வாழுகிறார்கள். ""பாரம்பரியமாகக் காடுகளில் வாழும் பட்டியலினப் பழங்குடிகள் அல்லாத மக்கள்'' உரிமைகள் பற்றி இச்சட்டம் பேசுவதால் இது முற்போக்கானதென்று யாரும் நம்பிவிட வேண்டாம். ஏனெனில் ""காடுகளில் வாழும் மக்கள்'' என்ற சொல்லுக்குக் ""காடுகளில் உள்ளே வாழும் மக்கள்'' என்று இறுதியாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் ஐ.மு.கூட்டணி அரசு திருத்தம் செய்திருக்கிறது. இதன் மூலம் காடுகளையொட்டி அவற்றின் விளிம்பில் வாழும் மக்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதனால் அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்ட 3000 கிராமங்கள் தவிர பதிவு செய்யப்படாத காட்டுப்பகுதி கிராமங்களில் வாழும் மக்களுக்கு வன உரிமைகள் மறுக்கப்படுவதாகிறது.
""அரசினால் காடுகளில் குடியமர்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்'' என்று பழங்குடி மக்கள் விவகார அமைச்சர் வெறுமனே வாக்களித்துள்ளார். ஆனால், சட்டத்தில் அப்படி இல்லை. மேலும், ""காடுகளுக்கு வெளியே வாழ்ந்தாலும், காடுகளுக்குள்ளே நில உடைமை வைத்துள்ளவர்கள் அதன் மீது உரிமை கொண்டாட முடியும்'' என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார். இதன்மூலம் வெளியூரில் வாழும் நிலப்பிரபுக்கள் கூட "தமது' நிலத்தின் மீது உரிமை பாராட்டமுடியும். அதேசமயம், காடுகளின் விளிம்பில் வாழும் கூலிஏழைநிலமற்ற விவசாயிகளோ, தாழ்த்தப்பட்ட மக்களோ அவ்வாறு செய்ய முடியாது என்றாகிறது.
மேலும், பட்டியலினப் பழங்குடி மக்கள் மற்றும் அவர்கள் அல்லாத, பாரம்பரியமாக காடுகளில் வாழும் மக்களுடைய கிராம சபை பற்றிய வரையறுப்பையும், அவற்றின் அதிகாரங்களையும் இறுதிச் சட்டம் மாற்றித் திருத்தி அமைத்து விட்டது. ""மலைவாழ் மக்களின் குடியிருப்புப் பஞ்சாயத்து'' அடிப்படையிலான கிராம சபை என்பதற்கு பதிலாக, அதிகாரவர்க்கம் மற்றும் மேல்சாதி மக்களின் கட்டுப்பாட்டில் வரும் வருவாய்த் துறை பஞ்சாயத்துக்களே கிராம சபைகள் என்று வரையறுத்து, இந்த வகை கிராமப் பஞ்சாயத்துக்களின் முடிவே கணக்கில் கொள்ளப்படும் என்று மாற்றி அமைத்து விட்டது, நிறைவேற்றப்பட்ட சட்டம். இடம் மாறி விவசாயம் செய்வதற்கான உரிமை, காடுகளின் சிறு விளைபொருட்களைப் பயன்படுத்தும் உரிமை, அவற்றின் விலை நிர்ணயம், காடுகள் அல்லாத தேவைகளுக்குக் காடுகளைப் பயன்படுத்துவது போன்ற முடிவுகளை பாரம்பரிய கிராமப் பஞ்சாயத்துக்கள் தீர்மானிக்க முடியாது. அரசு அதிகாரிகளும், மூன்று வருவாய்த்துறை பஞ்சாயத்துத் தலைவர்களும் கொண்ட துணைக் கோட்டக் கமிட்டிதான் மேற்படி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்டவை.
காடுகளில் கிடைக்கும் சிறு விளைபொருட்களைப் பட்டியலினப் பழங்குடி மக்களும் பாரம்பரியமாக காடுகளில் வாழும் பழங்குடிகள் அல்லாத மக்களும் பயன்படுத்தும் உரிமை இருப்பதாகக் கூறினாலும், விறகு, மூங்கில், கற்கள் மற்றும் பல்வேறு வகை இலைகள் இவ்வாறு பயன்படுத்தப்படுவதில் இருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளன. அதேபோல, இடம் பெயர்ந்து விவசாயம் செய்வதற்கான உரிமை வழங்குவதாகக் கூறினாலும் அந்நிலங்களின் பல்வேறு பயன்பாடுகளுக்குக் கடுமையாகத் தடை விதித்துள்ளது. காடுகளில் உள்ள தேசியப் பூங்கா மற்றும் பலவகை விலங்கு பறவை சரணாலயங்களில் இருந்து சிறு விளைபொருட்களை எடுத்துச் செல்வதற்கும் பல தடைகள் விதித்துள்ளது.
காடுகள் மற்றும் அவற்றின் விளிம்புகளில் நிறைவேற்றப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மீதும் பாரம்பரிய கிராம சபைக்கு அதிகாரம் கிடையாது. அரசு அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்திலுள்ள வருவாய்த்துறை பஞ்சாயத்துகளுக்கே அதிகாரம் உள்ளது; அதேபோன்று அங்குள்ள தேசிய பூங்கா, பறவைகள் வனவிலங்குகள் சரணாலயம் பற்றிய முடிவுகள் எடுப்பது; அவற்றைச் சாக்கு வைத்து பழங்குடி மக்கள் மற்றும் பழங்குடியினர் அல்லாத பாரம்பரிய கிராம மக்களை இடமாற்றம் செய்வது, மறுகுடியேற்றங்கள் நிறுவுவது போன்றவற்றுக்கான அதிகாரமும் அரசு அதிகார வர்க்கத்திடமே ஒப்படைக்கப்படுகிறது.
காடுகள் அல்லாத தேவைகளுக்கு காடுகளில் உள்ள நிலங்களைப் பயன்படுத்துவது குறித்த முடிவையும் அரசு அதிகார வர்க்கமே செய்யும். இதுதவிர, காடுகளைப் பராமரித்து நிர்வகிக்கும் அதிகாரம் தொடர்ந்து வழமையான காட்டிலாகா அதிகார வர்க்கத்திடமே நீடிக்கும். இந்த நிர்வாகக் கட்டமைப்பைக் கலைக்காமல், பட்டியலின பழங்குடி மக்கள் மற்றும் பழங்குடியினர் அல்லாத பாரம்பரிய காட்டுவாசிகள் உரிமை பற்றிப் பேசுவதெல்லாம் வெறும் கண்துடைப்பு வேலைதான்.
காடுகளையும் மலைகளையும் அவற்றின் வளங்களையும் அந்நியப் பன்னாட்டு முதலாளிகளுக்கும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் தாரை வார்ப்பதைக் கண்டு பழங்குடி மக்களும் காடுகளைச் சார்ந்து வாழும் மக்களும் கொதித்தெழுந்து போராடுவதைத் தடுப்பதற்கே, மக்களின் காடுகள் உரிமைச் சட்டம் என்ற பெயரில் மோசடியானதொரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.