தமிழ் அரங்கம்

Saturday, April 5, 2008

தி.க. கம்பெனியின் 'நாட்டாமை"க்குப் பவள விழா பெரியார் கொள்கைக்கு மூடு விழா

தி.க. கம்பெனியின்
'நாட்டாமை"க்குப் பவள விழா
பெரியார் கொள்கைக்கு மூடு விழா

ன உணர்வுத் திருவிழா ஒன்றை சென்னையில் நடத்தப் போவதாக கி.வீரமணியின் திராவிடர் கழகம் அறிவித்தவுடனே, பரவாயில்லையே; தொய்வாகிக் கிடந்த பெரியாரின் தொண்டர்கள் பார்ப்பன மதவெறிக்கு எதிராகக் கிளம்பி எழப்போகிறார்கள் போலும்! அதைப் பார்க்காமல் விட்டுவிட்டால் நாளைய வரலாறு நம்மைப் பழித்துவிடுமே எனும் அச்சத்தில்"இன உணர்வைத் தட்டி எழுப்பும்' டிசம்பர் 2ஆம் தேதியன்று பெரியார் திடலுக்குள் எட்டிப் பார்த்தோம்.

சென்னை மாநகரம் முழுக்க பளபளக்கும் டிஜிட்டல் பேனர்களில் "ஓய்வறியாதவராகவும்', "அசுரர் குலத்தலைவராகவும்',"தமிழர் தலைவராகவும்' எழுந்தருளியிருந்த வீரமணியாரின் 75 ஆவது பிறந்த நாளைத்தான் கருஞ்சட்டைப் படையினர் "இன உணர்வுத் திருவிழா'வாக இரண்டு நாட்களாகக் கொண்டாடும் விசயம் நமக்குப் புரி பட்டது. இருக்கட்டும். பிறந்த நாளை முன்வைத்து பெரியாரின் சுயமரியாதைக்கு புதுப்பாணியில் தெம்பூட்டப்போகிறார்கள் போலும் என்று எண்ணிக்கொண்டோம்.

பிறந்தநாள் விழாவுக்கு அச்சிட்ட அழைப்பிதழைப் பார்த்தவுடன் நமக்கு ஒன்றும் புரியவில்லை. சினிமா பட "பூஜை' ஏதும் நடத்தப் போகிறார்களோ எனும் ஐயம் ஏற்பட்டது. அழைப்பிதழ் செலவு மட்டுமே 100 ரூபாய்க்கு மேல் இருக்கும். வழக்கமாக கோடம்பாக்கத்தில்தான் இப்படி வக்கிரக் கூத்துகள் நடக்கும். "தமிழர் தலைவராகி' பெரியாரை பன்னாட்டு நிறுவனமாக்கி ஜோராக வியாபாரம் செய்பவர், இதைக் கூட செய்யாவிட்டால் எப்படி?

உள்ளே கல்வியாளர் அரங்கம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. பவள விழா நாயகரை ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் ""சாக்ரடீசுக்கு கிடைத்த மாணவர் பிளாட்டோ போல பெரியாருக்கு ஒரு தமிழர் தலைவர்'' என்று முழங்கிக் கொண்டிருந்தார். இரண்டு மணிநேரம் வரை இந்தக் கூட்டம் நடக்கும் என்பதனாலும் அக்கூட்டத்தில் வீரமணி அடுத்தடுத்து மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, சேகுவேரா என பல அவதாரங்களை எடுக்கும் பேராபத்து இருந்ததாலும் அங்கிருந்து தப்பித்து எங்காவது சுயமரியாதையை ஒளித்து வைத்திருப்பார்களோ எனத் தேடிக்கொண்டிருக்கும்போது, ஆம்பூர் ஆட்டுக்கறிப் பிரியாணியை 5000 பேருக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள். தலைவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்பவர்கள் 75 ரூபாய் கொடுத்து படத்தை வாங்கிக் கொண்டு வீரமணியின் பிரியாணிப் பொட்டலத்தில் பகுத்தறிவைக் கிளறிக் கொண்டிருந்தார்கள். சுயமரியாதைப் பிரியாணி தொண்டைக்குள் விக்காமல் இருக்க அனைவருக்கும் 15 ரூபாய் தண்ணீர் பாட்டிலை இலவசமாக வழங்கினார்கள்.

கல்வியாளர்கள் பாராட்டு மழையை ஒருபக்கம் பொழிந்தால், அரசியல் கட்சிப் பிரமுகர்களும் தி.க. பொறுப்பாளர்களும் ""பெரியார் 95 வயது வரை வாழ்ந்தார். தலைவர் இன்னும் கூடுதலாக வாழவேண்டும்'' என்று வாழ்த்தினார்கள். பெரியாரின் தொண்டர்களை எண்ணிப் பார்த்து பரிதாபப்பட்டுக் கொண்டோம். தி.க.வின் ஒவ்வொரு விழாவிற்கும் 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை ஆயிரம், இரண்டாயிரம் எனக் கட்டாய நன்கொடையாக தங்கள் சம்பளத்தில் பறிகொடுக்கும் வல்லம், திருச்சி பெரியார் கல்வி நிறுவன ஊழியர்களோ ""இன்னும் 20 ஆண்டுகளா'' எனப் பதறியதைக் காண முடிந்தது.

பெரியார் உயிருடன் இருந்த காலத்தில் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு சுயமரியாதைப் பிரச்சாரக் கூட்டங்களும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அதேபோன்று பிரச்சாரம் ஏதாவது ஒன்றை இவர்கள் செய்யக்கூடும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஒரு ஆடியோ சி.டி. வெளியிட்டார்கள். தொழில்முறைக் கலைஞர்களை வைத்து தயாரிக்கப்பட்ட அந்த சிடியோ "தமிழர் தலைவரின்' புகழை மட்டும் பாடிக் கொண்டிருந்தது. தி.க.தொண்டர் ஒருவர் வீரமணியின் முழு வாழ்க்கை வரலாற்றைப் பல தொகுதிகளாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறாராம். அதில் அவர் பிறந்ததில் இருந்து முதல் 20 வருடங்களின் "வரலாற்றினை'க் கூறும் முதல் தொகுதியினை விலைக்கு வைத்திருந்தார். விலை ரூ.1500 என்றார்கள்.

தலைவரின் பிறந்தநாளுக்காக பத்து லட்சம் ரூபாயை அமெரிக்க நண்பர்கள் கொடுத்தார்கள். வீரமணியின் இடுப்பு உயரத்திற்கு ஒரு உண்டியல் வைக்கப்பட்டு மொய் வசூல் ஜோராகப் போய்க் கொண்டிருந்தது. ""விடுதலை'' பத்திரிகைக்கு சந்தாவாக 50 இலட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டிருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 75 தங்கக் காசுகளை மாலையாக்கி அணிவித்தார்கள். ரூபாய் நோட்டு மாலையுடன் "வசூல்ராஜா வீரமணி எம்.ஏ., பி.எல்.,' தி.க. பக்தர்களுக்கு காட்சி அளித்து மகிழ்ந்தார்.

வீரமணியின் கொத்தடிமைகளாலும் பல காக்கைகளாலும் தயாரிக்கப்பட்ட வீரமணியாரின் பிறந்தநாள் மலரை ரூ.100க்கு விற்பனைக்கு வைத்திருந்தார்கள். ஒரு கோடிக்கும் அதிகமாய் செலவு செய்து கொண்டாடப்பட்டுள்ள "இன உணர்வுத் திருவிழா'வை ""விடுதலை'' நாளிதழ் ஒரு வாரமாகக் கொண்டாடியது. இக்கொண்டாட்டத்திற்கு மட்டும் 3 தலையங்கங்களை எழுதித் தள்ளியது. ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு மட்டும் தலையங்கம் எழுதியது பத்திரிக்கை உலகில் நிச்சயமாக ""சாதனை கல்'' தான்.

கொண்டாட்டத்தின் இறுதிக்காட்சியாக கருணாநிதி தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் ஒரு விழா. அங்கே வீரமணி நடத்திவரும் கல்வி நிறுவனத்தில் பயிலும் பெண்கள் வீரமணியின் அருமை பெருமைகளைப் பாடி ஆடி விளக்கினர். சினிமாக் கலை இயக்குநர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையில் "வேந்தர்' வீரமணி டாக்டர் பட்ட கவுனுடன் கட் அவுட்டாகி இருந்தார். வள்ளுவர் கோட்ட மேடையில் பேசுபவர்கள் கருணாநிதியையும் வீரமணியையும் பாகுபாடின்றிப் புகழ வேண்டிய சிரமத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கையில் ""தாங்கள் சுட்டு விரலை நீட்டினால் எதிரிகளை நிர்மூலமாக்கக் காத்துக் கிடக்கிறது கருஞ்சட்டைப் பட்டாளம்'' என்று துரை.சந்திரசேகரன் எனும் கருஞ்சட்டை சீரியசாகப் பேசியது. வீரமணி என்றைக்கும் சுட்டு விரலை நீட்டப்போவதில்லை என்பதை அறியாமலா பேசி இருப்பார்? பாம்பறியும் பாம்பின் கால் அல்லவா?

அனைவரும் ஒரே மாதிரி ""பெரியார், ஓரிரண்டு நிறுவனங்களைத்தான் தொடங்கினார். அவற்றின் எண்ணிக்கையை 50 வரை உயர்த்திய உயர்ந்த உள்ளம்'' என்று வீரமணியின் வியாபார விரிவாக்கத்தை மட்டுமே புகழ்ந்து கொண்டிருந்தபோது, கருணாநிதி ஒரு குட்டிக்கதை சொல்லி வைத்தார். பெரியாரிடம் வீரமணி பேச்சாளராக வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் ஒருநாள் வீரமணியை, தான் வளர்க்கும் நாய்க்குட்டிக்குப் பால் வாங்கிவரச் சொன்னாராம் பெரியார். கடைக்குப் போன வீரமணி வெறும் செம்புடன் திரும்பி விட்டாராம். ""பிராமணாள் கபே'' மட்டும் திறந்திருந்ததால், அக்கடையில் பாலை வாங்காமல் வந்துவிட்டதாக வீரமணி சொன்னாராம். நமக்கெல்லாம் சுயமரியாதை ஊட்ட பெரியார் ""பிராமணாள் கபே''யைப் புறக்கணிக்கச் சொல்லி இருந்தபோதிலும், அக்கொள்கையை நாய்க்குட்டி விசயத்திலும் கடைப்பிடித்த கொள்கைக் குன்று நமது இளவல் என்று கருணாநிதி சொன்னதும் பலத்த கைதட்டல். ஆனால் இக்கதை எதற்காக சொல்லப்பட்டது என்பதை வீரமணி நிச்சயம் உணர்ந்திருப்பார். அப்பேற்பட்ட "கொள்கைக் குன்று' போயஸ் தோட்டத்துப் பாப்பாத்தியின் நாய்க்குட்டியாகக் குரைக்கப் போனதை உள்ளுறையாக உணர்த்துவதுதான் அக்கதை என்பது தெரியாதவரா வீரமணி?

பெரியார் திடலில் இருந்து வள்ளுவர் கோட்டம் வரை தேடித்தேடிப் பார்த்தும் இவ்விழாவில் பெரியார் கொள்கைகள் பேசப்படவே இல்லை. முழுக்க முழுக்க துதிப்பாடல்கள். தன்னைப் பெரியாரின் நம்பிக்கைக்குரிய தொண்டன் என்று சொல்லிக்கொள்ளும் வீரமணி, தனது பிறந்தநாளைக் கொண்டாடி தன்னை அனைவரையும் புகழ வைத்துக் கொண்ட அழகைப் பார்க்கையில் நம்மையும் அறியாமல் திருவாரூர் நீதிக்கட்சி மாநாடு நினைவுக்கு வருகிறது.

1940இல் நடந்த அம்மாநாட்டில் பெரியாரைத் தலைமை தாங்கச் சொல்லி டாக்டர் தர்மாம்பாள், சவுந்திரபாண்டியன், சோமசுந்தரபாரதியார் உட்பட 15 பேர் உரையாற்றி முடித்த பிறகு பெரியார் பேசினார். ""என்னை நீங்கள் மக்களுக்காக அதிகம் கஷ்டப்பட்டதாக எடுத்துக் கூறி 15 பேரும் பேசினீர்கள். எனக்கு கஷ்டம் என்று படக்கூடிய காரியம் எதையும் நான் செய்தது கிடையாது. ஆனால், ஏதாவது கஷ்டப்பட்டேன் என்று சொல்ல வேண்டுமானால், என்னை பிரேரேபித்த (முன்மொழிந்த) 15 பேருடைய பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்தேனே; அதுதான் உண்மையில் பெரிய கஷ்டமாக இருந்தது'' என்றார். ஆனால் இரண்டுநாள் பஜனையை பெரியாரின் "உண்மைச் சீடர்' வீரமணியோ மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அமர்ந்திருந்தார்.

விழா முடிவில் கருணாநிதியிடம் அரசு சார்பாக சென்னையில் 95 அடி உயர பெரியார் சிலை அமைக்க வீரமணி கேட்டுக் கொண்டார். முதல்வரும் ஏற்றுக் கொண்டார். பெரியார் பொறியியற் கல்லூரி, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் போன்று 46 நிறுவனங்களைப் பெரியார் பேரில் வளர்த்த வீரமணி, பெரியார் சிலையை அரசின் பொறுப்பில் விட்டுவிட்டார். வருவாய் ஏதும் தந்து விடாத பெரியார் சிலையை விட, நன்கொடை தரும் நிறுவனங்களில் அல்லவா முதலீடு செய்யவேண்டும் என்பதுதான் இந்த "மானமிகு'வின் தந்திரம் போலும்.

எதற்காக வீரமணியின் பவளவிழாவை இவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாடினார்கள்? அதற்கு ""நடைபெற்றது தனிநபருக்கான விழா அல்ல; ஓர் இயக்கத்தின் உயிரோட்டத்துக்கான உரைகல்'' என்று வீரமணியின் விடுதலை ஏடு விளக்கம் தருகிறது.

ஓர் இயக்கம் செத்துப் போகாமல் மூச்சு இருக்கிறதா எனப் பார்க்க ஒரு கோடி ரூபாயைக் கரியாக்கி மகிழ்ந்த இயக்கம், அநேகமாக உலகிலேயே வேறு எங்கும் இருக்க முடியாது. உரசிப் பார்க்கத்தான் எதிரி சென்ற ஆண்டு சிறீங்கம் பெரியார் சிலையை உடைத்து பைசா செலவில்லாமலே ஒரு நல்ல வாய்ப்பை வழங்கி இருந்தானே! அப்போது தி.க. என்ன செய்தது? கருணாநிதியின் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்று சாக்குப் போக்கு சொல்லி பெரியார் சிலை உடைப்பை அறிக்கை அக்கப்போரிலேயே முடக்கி வைத்தது. ம.க.இ.க. தோழர்கள் சிலை உடைப்பை மையப்படுத்தி தமிழ்நாடெங்கும் பார்ப்பன பயங்கரவாதத்தைத் திரைகிழித்தபோதும் கூட தி.க. மவுனமாகிக் ""கோமா''வில் கிடந்ததே! அதற்கு உயிரூட்டி எழுப்பிட ஒரு கோடி செலவு. எழுந்து உட்கார்ந்த இயக்கமோ தனது முதலாளிக்கு முதுகு சொறிந்து விட்டு மறுபடியும் நீளõதுயிலுக்குச் சென்றிருக்கிறது.

ஊதாரித்தனமான பிறந்தநாள் கொண்டாட்டத்தின் மத்தியில் வீரமணி பகிரங்கமாக ஒன்றை சொல்லி இருக்கிறார். ""நாம் களத்திலே நின்று கொண்டிருக்கிறோம். அப்படிப் போராடிக் கொண்டிருக்கின்றபோது அதனுடைய கருவிகளை மாற்றவேண்டும். காலத்துக்கேற்ப கருவிகளை மாற்றிக் கொள்ளும்போது கருத்துக்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.'' இந்த ஒப்புதல் வாக்குமூலத்திற்காக வீரமணியை நாம் பாராட்டியே தீரவேண்டும்.

ஆம். வீரமணியின் கருத்து இன்றைக்கு மாறி இருக்கிறது. அவரிடம் முன்னர் இருந்த பார்ப்பன எதிர்ப்பும், நாத்திகமும் மறைந்து விட்டன. நிறுவனங்களை விரிவுபடுத்தி, பெரியாரின் சொத்துக்களைப் பன்மடங்காக்கி ஆதாயம் அடைந்து கொண்டிருக்கும் "தமிழர் தலைவர்' இன்று பார்ப்பனியத்தையும், கருத்துமுதல்வாதத்தையும் (ஆன்மீகம்) ஆதரித்து "வாழ்வியல் சிந்தனை'களாக எழுதிப் பிரச்சாரம் செய்து வருவதைத்தான் அவரே ""கருத்துக்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்று முடிவாகச் சொல்லி பெரியாரின் சிந்தனைகளைச் சவப்பெட்டியில் ஏற்றி இறுதி ஆணியை அறைந்திருக்கிறார்.

இன்னமும் பல பெரியார் தொண்டர்கள், வீரமணியின் அனைத்துப் பித்தலாட்டங்களையும் சகித்துக்கொண்டு, பெரியார் ஆரம்பித்த இயக்கம் என்கிற ஒரே காரணத்துக்காக தி.க.வில் இருக்கிறார்கள். பாட்டன் வெட்டிய கேணியே என்றாலும், அதில் ஊறுவது உப்புத்தண்ணீர் என்றால், அதனைக் குடித்துக் கொண்டா இருப்பது? பெரியாரியலுக்கு மூடுவிழா நடத்திவிட்ட வீரமணியின் தலைமையைத் துறந்து, பெரியாரின் கொள்கைகளை வீச்சோடு எடுத்துச் சென்று பார்ப்பனிய பயங்கரவாதத்தை எதிர்த்து களத்தில் நிற்கும் புரட்சிகர அமைப்புகளில் பகுத்தறிவாளர்கள் இணைவதைத் தவிர இனி வேறென்ன வழி இருக்கிறது?

· இளம்பிறை

பழங்குடி இனப் பெண்கள் மீது பாலியல் வன்முறை

பழங்குடி இனப் பெண்கள் மீது பாலியல் வன்முறை
தமிழகத்துக்குச் சிறப்பு அதிரடிப்படை
ஆந்திராவுக்கு வேட்டை நாய்ப்படை

ந்திரப் பிரதேச மாநிலத்தில், விசாகப்பட்டினம் நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில், கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வாகப்பள்ளி, கோண்ட் பழங்குடியினர் வசித்து வரும் மலைக் கிராமம். நேற்றுவரை வெளியுலகம் அறிந்திராத சாதாரண கிராமமாக இருந்த வாகப்பள்ளி, இன்று ஆந்திரப் போலீசாரின் ரவுடித்தனத்தையும், பொறுக்கித்தனத்தையும் எதிர்த்து நிற்கும் போராட்ட மையமாக மாறியிருக்கிறது.

ஆந்திர மாநில அரசால், நக்சல்பாரிப் போராளிகளை வேட்டையாடுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள சிறப்புப் போலீசுப் படைப்பிரிவான ""வேட்டை நாய்'' (எணூஞுதூடணிதணஞீண்) போலீசார் கடந்த ஆகஸ்டு 20 அன்று, வாகப்பள்ளிக் கிராமத்திற்குள் நுழைந்தனர். கணேஷ் என்ற பெயர் கொண்ட மாவோயிஸ்டு "தீவிரவாதியை'த் தேடுவது என்ற பெயரில், அக்கிராமத்திற்குள் நுழைந்த இந்த ""வேட்டை நாய்கள்'', அப்பழங்குடியினரின் வீடுகளுக்குள் அத்து மீறிப் புகுந்து துவம்சம் செய்ததோடு, 11 பெண்களைக் கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தி னர். சமீபத்தில் குழந்தையை ஈன்றெடுத்த ஒரு இளம்தாய்கூட, இம்மிருகங்களின் பாலியல் வேட்டைக்குப் பலியாகியுள்ளார்.

அப்பெண்களும் பழங்குடியினரும் அவமானத்திற்குப் பயந்து, இப்பாலியல் பலாத்காரத் தாக்குதலை வெளியே சொல்ல முடியாமல், வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போய் விடுவார்கள் என ஆந்திர போலீசு இறுமாந்து கிடந்தது. ஆனால், அவர்களோ இவ்வேட்டை நாய்களால் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், அவமானத்திற்கும் நீதி பெறாமல் விடப்போவதில்லை என்ற முடிவோடு போராட்டத்தில் குதித்து விட்டனர்.

பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்கள் சம்பவம் நடந்த அன்றே, வாகப்பள்ளிக்கு அருகேயுள்ள நுர்மதி கிராமத் தலைவரிடம் சென்று உதவி கோரினர்; பிறகு, வாகப்பள்ளி, நுர்மதி கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் அணிதிரண்டு சென்று, குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு பதேரு போலீசு நிலையத்தில் முறையிட்டனர். அங்கிருந்த போலீசு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்யாமல், இப்பாலியல் வன்கொடுமையை மூடிமறைத்து விடும் சதித்தனத்தில் இறங்கிய பொழுது, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் லேக் ராஜாராவ் இப்பிரச்சினையில் தலையிட்டு, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வைத்தார்.

ஆந்திரப் போலீசின் இந்த அத்துமீறல் வெளியே தெரிய ஆரம்பித்தவுடனேயே, மாவட்ட போலீசு கண்காணிப்பாளர், அகுன் சபர்லால், ""வேட்டை நாய் போலீசுப் படைப் பிரிவு அக்கிராமத்தின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்கவில்லை'' எனத் தடாலடியாக மறுத்தார். வேட்டை நாய் படையைச் சேர்ந்த போலீசார் எங்கே போகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்ற விவரங்கள் ஒரு சில உயர் போலீசு அதிகாரிகளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அப்படையைச் சேர்ந்த போலீசார் சீருடை அணியத் தேவையில்லை; பெயர் மற்றும் பதவியைக் குறிக்கும் பட்டைகளை (badge) அணிந்திருக்கத் தேவையில்லை. அவர்கள் தேடுதல் வேட்டைக்குச் செல்லும் வாகனங்களில் பதிவு எண் இருக்க வேண்டிய அவசியமில்லை; அப்படையின் நடமாட்டம் குறித்து எந்த ஆவணத்திலும் பதிவு செய்ய வேண்டியதில்லை என அப்படையின் நடவடிக்கைகள் அனைத்தும் இரகசியமாகப் பாதுகாக்கப்படுவதால், வாகப்பள்ளி கிராமத்தில் அவர்கள் நடத்திய பாலியல் வேட்டையை எளிதாக மறைத்துவிட முடியும் என ஆந்திர உயர் போலீசு அதிகாரிகள் மட்டுமின்றி, ஆந்திர முதலமைச்சர், உள்துறை அமைச்சரும் கூட நம்பினார்கள்.

எனினும், ""ஒரு குற்றச்சாட்டு பற்றி ஆரம்ப கட்ட விசாரணை கூட நடத்தாமல், அதனை எப்படி மறுக்க முடியும்?'' எனப் பல்வேறு ஜனநாயக அமைப்புகளும், அறிவுலகத் துறையினரும் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்க முடியாமல், போலீசு அதிகாரிகள் திணறிப் போனார்கள். பிறகு, நிலைமையைச் சமாளிக்கும் விதமாக, ""அப்படையினர் வாகப்பள்ளிக் கிராமத்திற்குப் போனார்களே தவிர, எவ்வித அத்துமீறலிலும் ஈடுபடவில்லை'' என அரை உண்மையைக் கக்கினார், அகுன் சபர்லால்.

அம்மாவட்டக் கூடுதல் போலீசு கண்காணிப்பாளர் ஐந்து இலட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்து, அப்பெண்களின் வாயை அடைக்க முயற்சி செய்தார். அப்பெண்களோ, ""குற்றவாளிகளைத் தண்டியுங்கள்; இதைவிட அதிகமான பணத்தை உங்களுக்குத் தருகிறோம்'' எனப் பதிலடி கொடுத்து, போலீசின் முகத்தில் கரியைப் பூசினார்கள்.

தங்களை அவமானப்படுத்திய பெண்களைப் பழிவாங்கும் விதமாக, ஆந்திர மாநில போலீசு இயக்குநர் பஸ்தி, ""ஆந்திர போலீசாரின் தேடுதல் வேட்டையைத் தடுக்கும் நோக்கத் தோடுதான், அப்பெண்கள் இப்படிப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டைக் கூறுகிறார்கள்; இதன் மூலம், அவர்கள் மாவோயிஸ்டுகளுக்கு உதவுகிறார்கள்'' எனக்கூறி அப்பெண்களை இரண்டாம் முறையாக அவமானப்படுத்தினார். அதேசமயம் ஆந்திர அரசோ, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பத்து கிலோ அரிசியும், ஒரு பாட்டில் மண்ணெண்ணெயும் கொடுப்பதாகக் கூறி, பழங்குடி இனப் பெண்களின் ""கற்புக்கு'' விலை நிர்ணயித்தது.

காங்கிரசு அரசின், போலீசு அதிகாரியின் இந்த பாசிசக் கொழுப்பிற்குப் பொதுமக்கள் பதிலடி கொடுத்தார்கள். புரட்சிகரஜனநாயக இயக்கங்களும், மகளிர் அமைப்புகளும் மட்டுமின்றி, காங்கிரசைத் தவிர பிற ஓட்டுக்கட்சிகளும் குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரிப் போராட்டத்தில் குதித்தன. பழங்குடி இன மாணவர் அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் எதிர்க்கட்சிகளோடு இணைந்து, ""குற்றவாளிகளைப் பணி இடை நீக்கம் செய்யக்கோரி'' ஆக.22 அன்று விசாகப்பட்டினம் மாவட்டத்தில் கதவடைப்புப் போராட்டம் நடத்தின; மாவோயிஸ்டு அமைப்பினர் ஆகஸ்டு 27 அன்று விசாகப்பட்டினத்தின் கிழக்கு மண்டலத்திலும், மல்காகிரி மாவட்டத்திலும் கதவடைப்புப் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அரண்டு போன காங்கிரசு அரசு, ""குற்றம் நிரூபிக்கப்பட்டால், தண்டிப்போம்'' என நடுநிலையாளனைப் போலப் பேசத் தொடங்கியது.

குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பில் உள்ள போலீசோ , தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, விசாரணையின் தொடக்க நிலையிலேயே குற்றத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் சதி வேலைகளில் இறங்கியது. பதேரு போலீசு நிலையத்திற்கு அருகில் உள்ள அங்கப்பள்ளி அரசு மருத்துவமனையில், பாதிக்கப்பட்ட பெண்களை மருத்துவப் பரிசோதனை செய்யும் ஆய்வக வசதி கிடையாது எனத் தெரிந்திருந்தும், அப்பெண்களை அம்மருத்துவமனைக்கே போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். போலீசாரின் சதித்தனத்தைக் கண்டித்துப் பல்வேறு அமைப்புகளும் போராடிய பிறகுதான், அப்பெண்கள் விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு ஆக.21 அன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவம் நடந்த ஆகஸ்டு 20 அன்றே மருத்துவப் பரிசோதனையை நடத்தாமல், வேண்டுமென்றே ஒருநாள் தாமதித்ததன் மூலம் முக்கியமான சாட்சியத்தை போலீசார் திட்டமிட்டே அழித்தனர். போலீசார் எதிர்பார்த்தபடியே, ஆந்திர அரசின் தடய அறிவியல் துறையும் அப்பெண்கள் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை என மருத்துவ அறிக்கை கொடுத்துவிட்டது. இதனைக்காட்டி, அப்பெண்கள் புளுகி வருவதாக போலீசார் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஒரு பெண், தான் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதாக போலீசு நிலையத்தில் புகார் செய்தால், போலீசார் அப்புகாரை உடனே பதிவு செய்ய வேண்டும் என இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 376ஆம் பிரிவு கூறுகிறது; அப்பெண் தரும் புகாரின் அடிப்படையிலேயே நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தலாம் என இந்தியச் சாட்சியச் சட்டப் பிரிவுகள் கூறுகின்றன. பாதிக்கப்பட்ட பெண் தாழ்த்தப்பட்டவராகவோ/ பழங்குடியினராகவோ இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாகக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வன்கொடுமை தடுப்புச் சட்டம் கூறுகிறது. போலீசாரோ, இவ்வழக்கில் சட்டப்படி நடக்கவே மறுத்து வருகின்றனர்.

ஆந்திர அரசும், போலீசாரும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, இச்சம்பவத்தைக் குழி தோண்டி புதைத்துவிட எடுத்துவரும் ஒவ்வொரு நடவடிக்கைக்கு எதிராகவும் போராட்டங்கள் கூர்மையடையவே, இப்பிரச்சினையில் தலையிட்ட ஆந்திர உயர்நீதி மன்றம், ""இக்குற்றச்சாட்டு பற்றி ஆந்திர மாநில இரகசியப் போலீசார் விசாரிக்க வேண்டும்'' என உத்தரவிட்டது. உயர்நீதி மன்றத்தின் உத்தரவு வெளியாகி ஏழு வாரங்கள் கழிந்த பிறகும் விசாரணை தொடங்காததால், பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பெண்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். பங்கி சிறீதேவி, ஜனகாம்மா என்ற இரு பெண்கள் தீக்குளிக்கப் போவதாக அறிவித்தனர். இதன்பின், இப் பிரச்சினையில் மீண்டும் தலையிட்ட உயர்நீதி மன்றம், ""ஏதாவது நிவாரண உதவி வழங்குமாறு'' கூறியதே தவிர, தனது உத்தரவு போலீசாரால் குப்பைக் கூடைக்கு அனுப்பப்பட்டதைக் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டது.

வேட்டை நாய் போலீசுப் படையின் கடந்த கால வரலாறை புரட்டிப் பார்த்தாலே, இச்சட்டப்பூர்வ சமூக விரோதக் கும்பலை விசாரணையின்றித் தண்டிக்கக் கோர முடியும். நக்சலைட்டு ஒழிப்பு என்ற போர்வையில், 1987ஆம் ஆண்டு 45 பழங்குடியினக் கிராமங்களைத் தீயிட்டுக் கொளுத்தியது, இப்படை. 1993ஆம் ஆண்டு இன்னிகருவு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இனப் பெண்கள், வேட்டை நாய்களால் கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டனர். சின்ன புல்லக்கா, ருப்பி, துப்ரி உள்ளிட்டு, நூற்றுக்கணக்கான பழங்குடி இனப் பெண்கள், மாவோயிஸ்டு அமைப்பில் இணைந்து பணியாற்றிய ஒரே காரணத்திற்காகப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆந்திரப் புரட்சிக் கலைஞர் கத்தாரைக் கொல்ல முயற்சித்தது மட்டுமின்றி, இப்படையினரால் இரகசியமாகக் கொன்றொழிக்கப்பட்ட புரட்சியாளர்கள்மனித உரிமைப் போராளிகளின் எண்ணிக்கையைப் பட்டியல் போட்டு மாள முடியாது.

இச்சம்பவத்தைப் பொறுத்தவரை, பழங்குடி இன நலத்துறையின் செயலர் நாகிரெட்டி, இந்த அத்துமீறல் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தியிருப்பதோடு, பதேரு போலீசு நிலைய துணை ஆய்வாளர் உள்ளிட்ட 21போலீசாரைக் குற்றவாளிகள் எனக் குறிப்பிட்டுத் தக்க ஆதாரங்களோடு அரசுக்கு அறிக்கை அளித்திருக்கிறார். உயர்நீதி மன்றம் கேட்டுக் கொண்ட பிறகும், இந்த அறிக்கையை வெளியிட மறுத்து வருகிறது, ஆந்திர அரசு.

வேட்டை நாய்கள் படைப் பிரிவு இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதை நிரூபிப்பதற்கு வேறு சில சாட்சியங்களும் உள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதற்கு வசதியாக, அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டும் எனக் கோரி வருகிறார்கள். குட்டு அம்பலப்பட்டுப் போய் விடும் என்ற பயம் காரணமாக, அடையாள அணிவகுப்பு நடத்த மறுத்து வருகிறது, ஆந்திர அரசு.

பாதிக்கப்பட்ட பெண்களுள் ஒருவரான பங்கி சிறீதேவியை, ""உண்மையைச் சொன்னால், உன் கணவரைக் கொன்று விடுவோம்'' என மிரட்டியிருக்கிறது, ஆந்திர போலீசு. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவரும் சட்டமன்ற உறுப்பினர் லேக் ராஜாராவின் மீது, ""போலீசுக்கு எதிராகப் பழங்குடி இனப் பெண்களைத் தூண்டிவிடுவதாக''ப் பொய்வழக்குப் போட்டு, அவரின் செயல்பாடுகளை முடக்க எத்தணிக்கிறது.

பழங்குடி இன மக்கள் நக்சல்பாரி போராளிகளுக்கு உதவக் கூடாது; அவர்களோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே, இப்படிப்பட்ட அரசு பயங்கரவாதத் தாக்குதல்கள் கடந்த இருபது ஆண்டுகளாக அவர்கள் மீது ஏவிவிடப்படுகின்றன. எனினும், வாகப்பள்ளி பழங்குடி இனப் பெண்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இன்னொரு நோக்கமும் உண்டு எனக் கூறப்படுகிறது.

வடக்கு ஆந்திராவின் வனப் பகுதிகளில் இரும்பு, நிலக்கரி, பாக்சைட் போன்ற கனிமவளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இச்செல்வங்களை ஜிண்டால், எஸ்ஸார் போன்ற தரகு முதலாளிகளுக்குப் பட்டா போட்டுக் கொடுக்கத் திட்டமிட்டு வருகிறது, அரசு. இதனைச் செயல்படுத்த வேண்டும் என்றால், அப்பகுதிகளில் வாழும் பழங்குடி இன மக்களை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான அரங்கேற்றம்தான் வாகப்பள்ளியில் நடந்திருக்கிறது. 200க்கும் குறைவான பழங்குடி இன மக்கள் வாழும் வாகப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கிராமத்து ஆண்கள் வேலைக்குச் சென்ற நேரமாகப் பார்த்து இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, அரசின் இந்த நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது.

பழங்குடி இனப் பெண்களைப் பாலியல் பலாத்காரப்படுத்தியதன் மூலம், போலீசு வேட்டை நாய்கள் அம்பலமாகி நிற்கின்றன; ஆனால், நாட்டின் செல்வங்களைக் கூறு போட்டு விற்கும் மன்மோகன்சிங், ப.சிதம்பரம் போன்ற வேட்டை நாய்களோ, "வளர்ச்சி' என்ற பெயரில் தங்களின் அத்துமீறல்களை மூடி மறைத்துக் கொள்கின்றன.

· செல்வம்

பார்ப்பனக்கூலி 'சுக்ரீவன்'எஸ்.வி.ராஜதுரையும் 'புதுவிசை'யும்........

பார்ப்பனக்கூலி 'சுக்ரீவன்'எஸ்.வி.ராஜதுரையும் 'புதுவிசை'யும்........

வாழ்ந்த காலம் முழுவதிலும் தான் சார்ந்த பார்ப்பனீயத்துக்கு காவடி தூக்கியாடிய பாரதி. இடையிடையே 'இடம், பொருள், ஏவல்' ஆகிய மூன்று சந்தர்ப்பவாத முறைகளையும் தவறாது பயன்படுத்தி அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்ப‌ சாதிய, பெண்ணீய கருத்துக்களையும் தேசவிடுதலைப் புராணங்களையும் பாடினான். அவ்வளவேதான், இதனைக்கொண்டே அவனை தேசிய‌க்கவியாகவும், மகாகவியாகவும் வானுயர உருவகப்படுத்தியதோடு, அவனை இலாவகமாக நம் அனைவரின் தலையிலும் ஏற்றிவைத்தது பார்ப்பனக்கூட்டம்.

பாரதி செத்தபிறகு, அவனை தம் அக்கிரகாரத்திற்கே உரிய நேர்த்தியுடன் மிகப்பிரமான்டமாக ஜோடித்து நம்ம 'காம்ரேடு'களின் தோள்களில் ஏற்றித் தெருத்தெருவாக ஊர்வலம் விட்டது குடுமி கம்பெனி. அந்த காலகட்டங்களில் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளோடு ஊடல் கொண்டிருந்த, அப்போதைய, 'சர்வகட்சி உறுப்பினர்' என்ற உயர்ந்த! அந்தஸ்த்தில் இருந்த 'மூத்த காம்ரேடு' ஜீவாவின் வாயாலேயே பாரதி புகழ் பாடவைப்பதன் மூலம், தந்தை. பெரியாரை அவதூறு செய்யமுடியும் என்று தீர்க்கமாக நம்பியது பார்ப்பனக் கூடாரம். ஜீவாவும் அந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொண்டார்.

'எதிரிக்கு எதிரி, நண்பன்' என்ற மாபெரும் கொள்கையினை மனதில் தாங்கியபடியே ஜீவா பார்ப்பனர்களின் கைப்பாவையாக மாறிப்போனார். வர்ணாசிரம குற்றவாளி் இராமனைப் பெரியார் எதிர்த்து இயக்கம் நடத்திய‌போது ஜீவா இராமனுக்கு துதிபாடுகின்ற இயக்கங்களை நடத்திக்கொண்டிருந்தார். அதன் நீட்சியாகத்தான் ஜீவா பாடிய பாரதிபுராணமும்.

அதன் விளைவாகத்தான் இன்று வரை போலிகம்யூனிஸ்டுகள் பாரதியைப் போற்றி பாடித்திரிகின்றனர். ஜீவாவைப்பற்றியே சரியான மதிப்பீடு செய்துகொள்ள விரும்பாத இந்த பிழைப்புவாதிகள், ஜீவாவால் கொண்டாடப்பட்ட பாரதியைப் பற்றியா பரிசீலிக்கப்போகிறார்கள்?!.

தொடர்ந்து பெரியாரிய கருத்துக்களை புறந்தள்ளிவந்த இந்த போலிக்கூட்டம், இப்போது தங்கள் இயக்கத்துக்குள்ளிருக்கும் சிலரது வாயாலேயே பெரியாரியக் கருத்துக்களை ஆதரித்துப்பேச அரிதாரம் பூசி இறக்கிவிட்டிருக்கிறது. அத்தகையவர்களில் ஒருவர்தான் 'தத்துவப்புலி' எஸ்.வி.ராஜதுரையும், 'தலித்படைப்பாளி' ஆதவன் தீட்சன்யாவும்.

நான் என்னுடைய முந்தைய ஒரு பதிவிலேயே குறிப்பிட்டிருந்த, ஆதவன் தீட்சன்யாவின் அதே (நான் ஒரு மநு விரோதன்) புத்தக வெளியீட்டுவிழாவில், அவருக்கு ஒரு கேள்வி வைக்கப்பட்டிருந்தது. கீற்று டாட் காம்(http://www.keetru.com/) என்ற இணைய தளத்தைச் சார்ந்த மிணர்வா, "எங்களுடைய இணையதளத்தின் சார்பில் நாங்கள் ஆதவனை நேர்கானல் செய்த போது பலவிதமான கேள்விகளுக்கும் நேர்மையாக பதிலலித்த அவர் (ஆதவன் தீட்சன்யா) பாரதி குறித்த அவரது மதிப்பீடு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலலிக்க மறுத்துவிட்டார், அதுதான் ஏனென்று தெரியவில்லை" என்று குறிப்பிட்டுப் பேசினார்.

அதற்கு பதிலலிக்க வந்த ஆதவன் தீட்சன்யா, " பாரதி எந்தகாலத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கிடையாது. எனவே அவருக்கு வக்காலத்து வாங்கிப் பேசவேண்டிய அவசியம் இடது சாரிகளுக்கோ, த.மு.எ.ச.விற்கோ கிடையாது. இன்னும் சொல்லப்போனால் பாரதிதாசனைப்பற்றி எஸ்.வி.ராஜதுரை எழுதிய மிகக் கடுமையான விமர்சனக்கட்டுரையை எங்கள் 'புது விசை'யில் பதிவு செய்திருக்கிறோம். பாரதியைப் பற்றி மிகப் பிரமாண்டமான பிம்பம் ஒன்று இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு எதிராக மதிமாறன் போன்றவர்கள் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த விமர்சனம் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு என்னால் பாரதியைப்பற்றிய விமர்சனத்தை வைத்துவிடமுடியாது. அதை நான் முழுமையாக வாசித்த பிறகுதான் இதுபற்றிய கருத்தினை தெரிவிக்க முடியும்" என்று மழுப்பலாக பதிலலித்து அனைவருக்கும் நல்லபிள்ளையாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.

தோழர். வே.மதிமாறன், ஆதவன் சொன்ன 'பாரதி என்ற மிகப்பிரமான்டமான பிம்பத்தை' தனது ஆய்வுகளின் மூலம் தகர்த்து எழுதிய "பாரதி'ய ஜனதா பார்ட்டி' என்ற தலைப்பிட்ட கட்டுரைகள் கடந்த ஏப்ரல்'2000 முதல் ஜனவரி'2001 வரை 'தலித்முரசு' இதழில் வெளிவந்திருக்கிறது. வேறெந்த பத்திரிக்கையும் இத்தகைய செய்திகளை வெளியிடத் தயங்கியபோது 'தலித்முரசு' செய்த இத்தகைய பணி மிகவும் பாராட்டுக்குரியது. அது நூல் வடிவிலும் இரண்டு பதிப்புகளாக வெளியிடப்பட்டு, பலவிதமான (நேர்மறையான/எதிர்மறையான) விமர்சனங்களையும் கடந்திருக்கிறது. பொங்கியெழுந்து ஆர்ப்பரித்துவந்த முற்போக்கு வேடமனிந்த பலவிதமான பாரதி அபிமானிகளின் கேள்விகளும் மதிமாறனின் ஆதாரப்பூர்வமான வாதத்தை எதிர்கொள்ளமுடியாமல் ஓடி ஒளிந்து கொண்டன.

மாபெரும் கம்யூனிஸ தலைவர்கள் முதற்கொண்டு அம்பேத்கர், பெரியார் வரை அனைவரும் பலமுறை இழிவுபடுத்தப்பட்ட போதும் உணர்ச்சியற்றுக்கிடந்த, த.மு.எ.ச.வின் முற்போக்கு வேடதாரிகள், பாரதியைப் பற்றிய விமர்சனத்தை பொறுக்கமாட்டாமல், உடனடியாக‌ மதிமாறனுடைய இந்த நூலுக்கு கண்டனக்கூட்டம் ஒன்றை திருவல்லிக்கேனி பாரதி இல்லத்தில் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதோ இத்தனையாண்டுகள் கழிந்த பின்னரும் ஆதவன் போன்ற முற்போக்கு(!)வாதிகள் 'முழுமையாக வாசித்துவிட்டு சொல்கிறேன்.....' என்று பசப்பிவருவது இவர்களது இயலாமையையே காட்டுகிறது. ஆனால் பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகளையும், பார்ப்பன இந்துமத எதிர்ப்பையும், வீரிய வித்துக்களாய் இம்மண்ணில் தனது கவிதைகளின் மூலம் விதைத்திட்ட புரட்சிக்கவி.பாரதிதாசனைப் பற்றி மட்டும் கடுமையாக‌ விமர்சிப்பதற்கு இவர்களால் முடிவது நமக்கு ஏளனத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

பொதுவுடைமை வாதிகளாக தங்களைக்காட்டிக் கொள்ளும் இவர்கள், பாரதி ரஷ்யாவைப்பாடியதாலேயே அவனை நேசிப்பதாகக் கூறும் இவர்கள், பொதுவுடைமையைப் பாடியபடி களத்தில் நின்ற‌ பாரதிதாசனை பாலியல் வக்கிரம் பிடித்தவனாக உருவகப்படுத்துகிறார்கள். இதிலிருந்தே இவர்களின் வேசைத்தனத்தை நாம் புரிந்துகொள்ளமுடியும்.

//////‘மங்கை ஒருத்தி தரும் சுகமும்,

எங்கள் மாத்தமிழ்க் கீடில்லை என்றுரைப்போம்’

தமிழை ஒப்பிடுவதற்குக் கவிஞரால் அதிகபட்சம் பார்க்க முடிந்தது ‘மங்கை ஒருத்தி தரும் சுகம்’ தான்!//////

என்று புதுவிசையில் எழுதுகிறார் ஒரு மாமாமாமாமாமா.....பெரும் எழுத்தாளப்புலி எஸ்.வி.ராஜதுரை. பாரதியின் பார்ப்பனச் சார்புநிலை அம்பலப்பட்டுக்கிடப்பதை, பாரதிதாசனை இழிவுபடுத்ததுவதன் மூலமாகஇவர் மறைத்துவிடத் துடிக்கிறார். அதற்கு பாரதிதாசனை பாலியல் வக்கிரம் பிடித்த எழுத்தாளர் என்ற அளவிற்கு கீழ்மைப்படுத்த முயற்சிக்கிறார்.

பார்ப்பனீய இந்து மதக் கருத்துக்களுக்கு எதிராக‌ இருந்திட்ட சித்தர்களைக்கூட பார்ப்பனர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்;

'இந்த‌ சித்தர்கள் பெண்களைப்பற்றி எப்படி தவறாகப் பாடியிருக்கின்றனர் பாருங்கள்' என்றுதான் அங்கலாய்த்தார்கள். மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் வருகின்ற ஒரு பாடல் வரியில்கூட‌,

"பெண்கள் கூட்டம் பேய்களென்று பாடற்சொன்ன சித்தர்களும்,

ஈன்றதாயும் பெண்மையென்று எண்ணிடாத பித்தர்களே!"

என்று எழுதியவர் யார் தெரியுமா?

போகிற வருகிற இடங்களிலெல்லாம் பெண்களால் 'காலி' என்று அவமானப்படுத்தப்பட்ட 'வாலி'தான் வேறு யாருமல்ல‌. வாலியுடைய பெண்கள் மீதான அக்கரையைப் பற்றி நாம் புதிதாக எதுவும் கண்டுபிடித்துச் சொல்லத்தேவையில்லை. அது ஏற்கெனவே சந்திசிரிச்ச விஷயம் தான்.

பாரதியைக் காப்பாற்ற பார்ப்பனக்கூலி எஸ்.வி.ராஜதுரையும், சித்தர்களை இகழ்ந்த அதே பார்ப்பன வசனங்களை இப்போது பாரதிதாசன் மீது வாரியிறைக்கிறார். இவரும் அந்த வாலிக்கு சற்றும் சளைக்காத 'சுக்ரீவனின்' வேலையை மிகச்சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது தான் இதிலிருந்து நமக்குக் கிடைக்கின்ற செய்தியாக இருக்கும்.

பார்ப்பன எதிர்ப்பு என்ற ஒரு விஷயத்தைத் தவிர மற்ற எல்லா இந்துமத‌ விஷயங்களையும் ஏற்று செயல்பட்டுவந்த நீதிக்கட்சித் தலைவர்களைப்பற்றி மட்டும் சரியக பார்க்கத்தெரிந்த இந்த 'அறிவாளி' ராஜதுரை பாரதிதாசனை விமர்சிப்பதற்கு மட்டும் பார்ப்பனக்கண்களை இரவல் வாங்கிக்கொள்கிறார்.

'சரி பாரதிதாசன் மட்டும் என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா?' என்று கூட இவர்கள் திருப்பிக்கேட்கலாம். பாரதிதாசனைக் குறித்து இவர்களைவிட ஆழமான அழுத்தமான விமர்சனங்கள் எமக்கும் உண்டு. அவரைப் பற்றிய மிகச் சரியான விமர்சனம் என்று சொன்னால், பெரியாரின் சுயமரியாதைப் பாசறையில் இருந்துகொண்டே பார்ப்பனவெறி பிடித்த பாரதியை ஏற்றுச் செயல்பட்டதைச் சொல்லமுடியும். பாரதிதாசனின் இத்தகைய துரோகம் பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தின் செயல்களுக்கு பெருந்தடையாகவும் இருந்தது என்பதுகூட, அப்போதைய இயக்கத் தோழர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இருப்பினும் பாரதிதாசனுடைய பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்களும் இந்துமத எதிர்ப்புச் செயல்களும்தான் அவரை ஏற்றுக்கொள்ளத் தூண்டுபவையாக இருக்கின்றன. பாரதியின் மொழிநடையினை மட்டும் வியந்து போற்றிட்ட பாரதிதாசன், தனது கவிதைகளில் பாரதியின் பார்ப்பனீயக் கருத்துக்களுக்குத் துளியும் இடம் கொடாமல், அதற்கு எதிரான‌ பெரியாரின் சிந்தனைகளைத்தான் வெளிப்படுத்தினார் என்பதுவும் பாரதிதாசனுடைய சிறப்பல்லவா?


"சீரங்க நாதனையும் தில்லைநடராசனையும்

பீரங்கி வைத்துப் பிளக்கும் நன்நாள் எந்நாளோ!"


என்ற இந்துமத எதிர்ப்புப் பாடல் வரிகளும்,


பார்ப்பான் பால் படியாதீர்; - சொற்குக் கீழ்ப் படியாதீர்;

பார்பபான்; தீதுறப் பார்ப்பான் கெடுத்துவிடப் பார்ப்பான் -

எப்போதும் பார்ப்பான் ஆர்ப்பான் நம் நன்மையிலே


ஆர்வம் மிக உள்ளவன்போல்! நம்ப வேண்டாம்

பார்ப்பானின் கையை எதிர் பார்ப்பானையே பார்ப்பான்


தின்னப் பார்ப்பான் தமிழன் பேர் சொல்லி மிகு

தமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட்டாலும்


தமிழழித்துத் தமிழர் தம்மைத் தலை தூக்கா தழித்துவிட

நினைப்பான் பார்ப்பான் அமுதாகப் பேசிடுவான்


அத்தனையும் நஞ்சென்க நம்ப வேண்டாம்

தமிழர்கடன் பார்ப்பானைத் தரை மட்டம்


ஆக்குவதேஎன்றுணர்வீர்!

போன்ற பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்களை வலியுறுத்தும் கவிஞரின் வீரிய வரிகளைப் போல் தமிழில் இதுவரை வேறெந்தக் கவிஞனும் பாடியதில்லை, என்பதை மறுக்கமுடியுமா?


"சித்திரச் சோலைகளே!

உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே .... முன்னர்

எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ

உங்கள் வேரினிலே!"


என்ற வரிகளில் பொதிந்திருக்கும்

உழைப்பாளிவர்க்கச் சிந்தனையைப் போல பாரதி எங்காவது பாடியிருக்கிறானா?

இந்து வெறியை தனது கவிதைகளின் மூலம் ஊட்டிவளர்த்திட்ட பாரதி விமர்சிக்கப்பட வேண்டியவரா?, அல்லது அதற்கும் அப்பாற்பட்டு கொண்டாடப்படவேண்டியவரா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியாக‌ பதிலலிக்காமல் ''நாங்கள் பாரதிதாசனை விமர்சித்திருக்கிறோம்'' என்று சொல்லும் பித்தலாட்டத்தைத்தான் அறிவுஜீவித்தனம் என்று சொல்லிக்கொள்கிறார்கள் இவர்கள்.

தலித் எழுத்தாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற ஆதவன் தீட்சன்யாவோ, 'ஈன பறையர்கள்' என்று தலித் மக்களைத் தூற்றிட்ட பார்ப்பனவெறியன் பாரதியைப் பற்றி விமர்சிக்கப் பம்முகிறார். இதுதான் இவரின் தலித்பார்வையோ?

இன்றைக்கு பார்ப்பன பயங்கரவாதம் கொலைவெறியோடு அலைகின்ற சூழலில்கூட நமது மதிப்பிற்குரிய‌ முற்போக்கு(!)வாதிகளின் இத்தகைய பிற்போக்கு வாதங்கள், பார்ப்பனியத்துக்கு மேலும் வலுசேர்ப்பதற்காகவே அமைகின்றன. சிறிதும் வெட்கமின்றி, பாரதியைப்பற்றிய விமர்சனங்களுக்கு பதிலலிக்க வக்கற்ற இவர்கள், பாரதிதாசனை இகழ்வதன் மூலமாக சரிசெய்துவிடமுடியும் என்று பிறருக்குப் போதித்தும் வருகின்றனர். பாரதிதாசனை கடுமையாக விமர்சிப்பதைக் காட்டிலும், தங்களுடைய பாரதி ஆதரவு நிலைதான் பெரியாருக்கு இவர்கள் செய்யும் முழுத் துரோகமாகும். அறிவுலக நண்பர்கள் இதனைச் சரியாக அடையாளம் கண்டு உடனடியாக இந்த விமர்சனத்தைத் துவக்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

.......................................................................

தோழமையுடன்,

ஏகலைவன்.

குறிப்பு: இது குறித்த தனது கருத்துக்களை, சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சியில் நேர்கானல் அளித்த தோழர்.வே.மதிமாறன் அவர்களுடைய, அந்த வீடியோ பதிவு இப்போது அவருடைய வலைதளத்தில்(http://mathimaran.wordpress.com/) வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர்வமிருப்பவர்கள், இதற்காக ஒரு பதினைந்து நிமிடம் மட்டுமாவது செலவிட முடிந்தவர்கள், இதனை எந்த இன்டெர்நெட் சென்டரிலும் சென்று பார்க்க முடியும்.

Thursday, April 3, 2008

சுயநலத்துடன் நாம் எப்படி வாழ்தல்?

சுயநலத்துடன் நாம் எப்படி வாழ்தல்?


பி.இரயாகரன்
02.04.2008

தை சொல்ல முனையும் ஒரு நூலுக்கூடாக, அவர்களின் சொந்தக் கலந்துரையாடல். பெற்றோர் முதல் நூல் ஆசிரியர் வரை, வாழ்வின் வெற்றி தோல்விகளாக எதைத்தான் கருதுகின்றனர்? இதை நுணுகி உடைத்துப் பார்த்தால், பெற்றோரின் குறுகிய சுயநலத்தைத் தான் பெற்றோரியம் என்கின்றனர். இதை எப்படிச் சாதிப்பது என்பதை கனகசபாபதி எழுத முடிந்தது என்றால், இதற்கு மேல் அவரால் எதையும் சமூக நோக்கில் சிந்திக்க முடியவில்லை. சுயநலத்தை புத்தகம் மூலம் சமூக நலமாக்குகின்றார். சுயநலமே மனித வாழ்க்கையாக எண்ணுகின்ற எம்மவர் இதை புகழ்வதும், தமது வெற்றி தோல்வியை பெற்றோரியமாக கருதுவதுமே சுற்றிச்சுற்றி அரங்கேறுகின்றது. மகாஜனா பழைய மாணவர் சங்க நூல் வெளியீடு, இதைத்தான் பெற்றோரியம் என்றது. இப்படித் தான் அவர்களின் கூட்டமாக அரங்கேற்றியது.

1.கனகசபாபதியின் நூல் மேலான விமர்சனம், திட்டமிட்டு தடுக்கப்பட்டது. அவரையும் நூலையும் புகழ்வதும், அதை ஏற்பதுமாகவே கூட்டமே அரங்கேற்றப்பட்டது.

2.பெற்றோரிய நெருக்கடிகளை, தத்தம் சுயநலத்தின் குறுகிய எல்லைக்குள் வைத்து மீளவும் அரைக்கப்பட்டது.

இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக பெற்றோர்கள் புரிந்தது என்ன? புரிய வைத்தது என்ன? ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் சமூக சிதைவுகளையும் சீரழிவுகளையும், பெற்றோராகிய நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வது என்பது. இந்த சூழலில் வாழும் குழந்தைக்கு, எப்படி அந்த நஞ்சை பெற்றோராகிய நாம் எம்பங்குக்கு ஊட்டுவது என்பது தான். பெற்றோர் சமூகப் பொறுப்புள்ளவராக சமூக ஐPவியாக இருக்க, அவரால் எதையும் சொல்ல முடியவில்லை.

சுயநலம் தான் பெற்றோரியம் என்று நூல் ஆசிரியர் புரிந்துள்ளார். அதை மற்றவர்களுக்கு புரிய வைக்க முனைந்தார், முனைகின்றார். ஏகாதிபத்திய உலகமயமாதலின் விளைவுகளை, பெற்றோராகிய நாம் ஏற்க மறுப்பது தவறு என்கின்றார். இதை உலகமயமாதல் ஏற்கும் சமூக பொறுப்பற்ற அறிவியல் துறையில் இருந்து பெற்று, அதை எமக்கு அறிவியல் பூர்வமாக சொல்ல முனைந்தார்.

இந்த அறிவு என்பது, சமூகத்தின் பொதுப் போக்கு சரியானதா என்ற விவாதத்தை மறுத்து எழுகின்றது. ஏகாதிபத்தியமே மறுக்கின்ற எமது நிலப்பிரபுத்துவ பண்பாட்டினை மறுத்து, அதனிடத்தில் ஏகாதிபத்திய பண்பாட்டு கூறை வைப்பதையே அறிவியல் என்கின்றது. இது முற்போக்கு மயக்கத்தை தருகின்றது. எமது நிலபிரபுத்துவ அறிவின் முன், பண்பாட்டின் முன், முற்போக்காக வேஷம் கட்டி வருகின்றது. உலகமயமாதல் ஏகாதிபத்திய வன்முறையால் மட்டும் வெல்வதல்ல, மாறாக மனித அறிவியலை மறுத்து அதை மலடாக்கி அறிவியலை தனதாக்கி வெல்லுகின்றது.

நூல் ஆசிரியர் இதைச் சொல்லும் உத்தி என்பது, தனிமனித சுயநலத்தை சீர்திருத்தம் ஊடாக சொல்வது. ஏகாதிபத்திய உலகமயமாதல் நலன்களால், அதில் சிக்கி திணறும் மக்கள் சந்திக்கின்ற தனிமனித சமூக நெருக்கடிகளை, சமாளிக்கும் விதத்தையே தீர்வென்கின்றனர். அதே தமிழில் கையாளக்கோரி, அதைக் கூற முனைகின்றனர்.

ஏகாதிபத்திய உலகமயமாதல் பற்றி அபிப்பிராயமின்றி, அதற்கு ஆதாரவாளராக இருந்தபடி அதற்குள் சிந்தித்தலே அறிவு என்பது, நூல் ஆசிரியரின் முடிந்த முடிவு. இதுவோ சுத்த சுயநலமானது. எமது யாழ்ப்பாணிய எஞ்சினியர் – டாக்டர் கனவுக்கு உட்பட்டது. அதில் வென்றால் வெற்றி அல்லது தோல்வி என்ற பொது அறிவு மட்டத்தில், எமது குறுகிய அற்பத்தனத்தை அடிப்படையாக கொண்டது.

ஏகாதிபத்திய உலகமயமாதலில் வாழ்ந்தபடி, அது பற்றிய சுயசிந்தனையின்றி யாரால் எதை மாற்றாக சிந்திக்கமுடியும். முரண்பட்ட சிந்தனை, மாற்று அபிப்பிராயமற்றதாக காட்ட, வாழைப்பழத்தில் ஊசியேற்றுகின்ற நவீனபாணியில் கருத்துச் சுதந்திர மறுப்பு. அனைத்தையும் ஒற்றைப் பரிணாமத்தில், தமிழருக்கே உரிய பாணியல், சிலர் இதை செய்யவும், சொல்லவும், தமக்குள் விவாதிக்கவும் கூடவும் முனைகின்றனர்.

இப்படி இவர்கள் பெற்றோரியம் என்ற பெயரில், வெற்றி தோல்வியாக கருதியது எதை? எமது சிந்தனை முறையிலான வாழ்வைத் தான். குறிப்பாக அதன் விருப்பங்களைத் தான். நாம் வெற்றி தோல்வியாக கருதியவை சரியானவையா? சரியானவை என்பது, சமூக நோக்கில் இருந்து பார்த்தால் மட்டும் தான், சரியானது. சுயநல நோக்கில் இருந்து பார்த்தால், அது தவறானது. சமுதாய நோக்கமற்ற எமது சிந்தனை முறையிலான எமது கருதுகோள்கள், சரியானவையல்ல. இதன் அடிப்படையிலான வெற்றி - தோல்வி என்ற எமது முடிவுகளும், ஏன் விவாதங்களும் கூட சரியானவையல்ல.

எமது சமூகப் பார்வை குறுகியதாக இருக்கும் போது, குழந்தையை நாம் வழிகாட்டுவது அதே குறுகிய உணர்வை தாண்டாமலே தான். பெற்றோரின் சமூக பார்வையை நூல் விவாதிக்கின்றது? குழந்தையின் சமூகப் பார்வை என்ன? நாம் அதையும், எம்மைப்போல் எமது குறுகிய எல்லையால் ஆராய மறுக்கின்றோம்.

மாறாக பெற்றோர்கள் தமது குறுகிய விருப்பங்களை, எண்ணங்களை, குழந்தை எந்த வகையில் ஏற்றுக்கொண்டு வாழ்கின்றது என்ற சுயநல எல்லைக்குள் தான், சமூகத்தையே புரிந்து கொள்ளுகின்றோம். அதையே நாம் வெற்றி தோல்வியாக பீற்றுகின்றோம்.

சமூக நலன் என்ற பொது சமூக கண்ணோட்டத்தில், குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வை எண்ணிப் பார்க்க முடிவதில்லை. இலங்கைத் தமிழர்கள், அந்தக் கருத்துத் தளத்தையே அனுமதிப்பதில்லை. நாம் எம்மைச் சுற்றி மட்டும் சிந்திக்கின்றோம். சமூகத்தின் விளைவுகளைத் தான் குழந்தையும் - பெற்றோரும், தமக்குத் தெரிந்த சொந்த சுயநல நோக்கிலேயே அதை எதிh கொண்டு எதிர்வினை ஆற்றுகின்றனர்.

இங்கு அந்த சுயநலத்தை எப்படி பரஸ்பரம் இணங்கி அங்கீகரித்து அதை அடைதல் என்பதை அறிவு என்கின்றனர், வாழ்வின் வெற்றி என்கின்றனர். இதற்கு வெளியில் சமூக பார்வையை வைத்தல், பெற்றோரியமல்ல என்கின்றனர்.

என்ன செய்கின்றனர். பெற்றோர் குழந்தை முரண்பாட்டை, வீட்டுக்குள்ளான முரண்பாடாக முடக்குகின்றனர். ஒவ்வொரு வீட்டுக்குள்ளான, பெற்றோரின் அணுகுமுறை தொடர்பான பிரச்சனையாக திரிக்கின்றனர். அதை சுயநலத்துடன் எப்படி பார்த்தல், அணுகுதல் என்பதை, உலகமயமாக்கல் போக்கில் இணங்கி வாழக் கோருகின்றனர்.

உலகம் சரியாக செல்கின்றது என்பதை நாம் ஏற்று (அதை நூல் ஆசிரியர் ஏற்றுகொள்கின்றார்), எம்மை அதற்கு ஏற்ப வெட்டிச் சுருக்க கோருகின்றனர். இந்த வகையில் வீட்டுக்குள் நடக்கும் ஒவ்வொரு விடையமும், சமுதாயத்தின் விளைவு என்பதை அது தெளிவாக நிராகரிக்கின்து. உலகமயமாதல் என்ற பொது நிகழ்ச்சிப் போக்கை அங்கீகரித்து, அதை சுயநலத்துடன் வாழக் கற்றுக் கொள்ளும் அறிவு (சுயநலம்) தான் பெற்றோரியம் என்ற அளவுக்கு சிந்தனை மட்டம் தாழ்ந்து காணப்படுகின்றது.

உலகமயமாக்கலில் வாழ்கின்ற மக்கள், இதற்கு எதிராக முரண்படவில்லை என்ற ஒற்றைப் பரிமாண சிந்தனை, இதன் மேல் திணிக்கப்படுகின்றது. உலகமயமாதல் அறிவை சுயசிந்தனையின்றி வழிபடக் கோருகின்றது. இது இயற்கைக்கும், மனித குல நலனுக்கும் சாதகமானதா என்ற சுயசிந்தனை இன்றி, ஆதரிக்க கோருகின்றது. இதையே நூல் ஆசிரியர், தனது பாணியில் செய்துள்ளார்.

நுகர்வுப் பண்பாட்டையே சமூகக் குறிக்கோளாக திணிக்கும் உலகமயமாதல் நிகழ்ச்சியை, சுய அறிவின்றி ஏற்று வாழப் பழகிவிட்ட மந்தைத் தன்மையை அங்கீகாரமாகக் கொண்டு, வளவளப்பது அறிவாகிவிடுகின்றது. இதன் மீதான சமூகம்சார் விமர்சனங்களை, தடுத்து நிறுத்துகின்றனர். பெற்றோரியத்தின் பெயரில் சுயநலத்தையே முன்னிறுத்தி, அதை வெற்றிகரமாக கலந்துரையாடுவது விவாதப் பண்பாகின்றது.

சுயநலத்தையே கனகசபாபதியின் நூல்கள் விதிந்துரைக்கின்றது. ஏகாதிபத்திய சூழலில் வாழும் குழந்தைக்கு ஏற்ப, பெற்றோர் தம்மை எகாதிபத்தியமயமாக்குவது தான் அவரின் ஒரேயொரு தீர்வு. சமூக அடிப்படையிலான சமூகப் பார்வையை, பெற்றோர் – குழந்தைகள் பெறுவதன் மூலம் தீர்வு காண்பதல்ல. ஏகாதிபத்திய அமைப்பு வழங்குகின்ற, அதற்கேற்ற தீர்வுகளைத் தான் அவர் வலியுறுத்துகின்றார். பெற்றோர் - குழந்தை முரண்பாட்டில், பெற்றோர் தமது ஏகாதிபத்தியமயமாக்கலை பூர்த்தி செய்வது தான் தீர்வு என்கின்றார். இப்படி தீர்வுகள், வழிகாட்டல்கள், அனைத்தும் இதை எப்படி ஏற்றுக்கொள்வது என்பது தான். தம்மை ஏகாதிபத்திய தன்மைக்கு மாற்றி, தோல்வியை வெற்றியாக கருதியும், வெற்றியை தோல்வியாகக் கருதியும், சுயநலத்துடன் வாழும் சுய வழிபாட்டுதனத்தைப் ப+சிப்பது தான்.

குறித்த அவரின் நூல் இதைத் தான் வலியுறுத்துகின்றது. அந்த வகையில்

1. குழந்தை – பெற்றோருக்கு இடையிலான புறச் சமூகச் சூழலையும், அதன் விளைவுகளையும் விமர்சிக்கவும், ஏன் அதைப் பார்க்கவும் கூட மறுக்கின்றது. அது உட்படுத்தும் பாதிப்பை, பெற்றோர் – குழந்தை உறவில் விவாதிக்க முடியாத ஒரு அன்னிய விடையமாக்கி, விடையத்தை சயநலமாக்கி விடுகின்றது. பரஸ்பரம் சுயநலத்தை அங்கீகரித்து இணங்கிப் போக மறுத்தலே, பெற்றோர் – குழந்தை முரண்பாடு என்று நூல் மூலம் திரிக்கப்படுகின்றது. உலகமயமாதலின் பண்பாட்டுத் தளமோ, சுயநலமாக இருத்தலும் அதற்ளுள் தீர்வு காணுதலும். இதுவோ கல்விசார் முறையில் புகுத்தப்படும், சிறுகச் சிறுக ஏகாதிபத்தியம் கொடுக்கும் நஞ்சு. சுயநலமென்ற உலகமயமாதல் தன்மையை எமது சுயநலப்போக்கில் ஆதரித்து வாழ்தல் எப்படி என்பதை, தனது பக்தகோடிகளுக்கு நூல் மூலம் கூற முனைகின்றார். உலகமயமாதல் சமூகத்தை புரிந்து கொள்வதன் ஊடாக, சமூகமாக சமூக நலனுடன் எதிர்வினையாற்றுவது பெற்றோரின் கடமையல்ல என்கின்றார்.

2.புறச் சூழலை அங்கீகரித்து, அதாவது உலகமயமாக்கலை ஏற்று நாம் எப்படி இணங்கி இசைந்து அதற்கு எதிர்ப்பின்றி வாழப் பழகுவது என்பது தான் பெற்றோரியம் என்கின்ற இக்கருத்தை முன்வைக்கின்றார். அவர் படிக்கும் நூல்கள், அவர் தொடர்பு கொண்டுள்ள ஏகாதிபத்திய கல்வி நிறுவனங்கள், இதை அவருக்கு ஊட்ட அதை அவர் எமக்கு சுயசிந்தனையின்றி ஊட்டுகின்றார்.

3. பெற்றோரியம் என்பது உலகமயமாக்கலை ஏற்றும், இணங்கியும் வாழ்வது தான். இதில் பிள்ளை பெற்றோருடனோ, பெற்றோர் பிள்ளையுடனோ முரண்படக் கூடாது. உலகமயமாதலில் தீர்வை ஏற்றுக்கொள்வதே, பெற்றோரியம். ஏன்! அதையே அறிவு என்கின்றது.

4. பெற்றோரியம் என்பது புறச் சூழல் (உலகமயமாதல்) சார்ந்ததல்ல என்கின்றது. அகச் சூழல் சார்ந்தது என்கின்றது. இது எமது சுயநலனுக்கு உட்பட்டது என்கின்றார்.

உலகமயமாதல் சமூகத்தில் முரண்பாடுகளே இல்லை என்ற எல்லைக்குள், பெற்றோரியம் காயடிக்கப்படுகின்றது. இந்த காயடிப்பை ஏற்றுக்கொள்ளும், தமிழ் அதிகார வர்க்க சூழல். தமிழ் இனத்தையே அழிவுக்கு வழிகாட்டியவர்கள், அழித்துக் கொண்டு இருப்பவர்கள், இதை ஆதரிப்பதும், ஏற்றுக்கொள்வதும், இதைப் போற்றுவதும் ஏன்? அவர்கள் சமூக சிந்தனையிலான, தமிழ் இனத்தின் சுயத்தை மறுப்பவர்கள். உலகமயமாதல் பெற்றோரியம் கூட, சுயசிந்தனையிலான சமூக கண்ணோட்டத்தை மறுக்கின்றது. இதனால் உலகமயமாதல் பெற்றோரியத்தை, அவர்களும் ஏற்றுக்கொள்கின்றனர். இப்படி இயங்கும் ஒருபுள்ளியில் அவர்கள் ஒருங்கிணைய, சுயநலத்தை அடிப்படையாக கொண்ட சிந்தனைமுறை பழைய மாணவர் சங்கத்திலும் மெருகூட்டப்படுகின்றது.

மக்களின் போராட்டமே அரசு பயங்கரவாதிகளைத் தண்டிக்கும்

மக்களின் போராட்டமே அரசு பயங்கரவாதிகளைத் தண்டிக்கும்

விசாரணைக்காக கோவையிலிருந்து தஞ்சைக்கு அழைத்து வரப்பட்ட அகிலாண்டேஸ்வரி என்ற பெண், போலீசு இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவனின் பாலியல் பலாத்காரம் சித்திரவதையால் கொல்லப்பட்டு, ஓட்டல் அறையில் பிணமாகத் தூக்கில் தொங்கிய சம்பவம், கடந்த நவம்பர் மாதத்தில் தஞ்சை நகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக கார்த்திக் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தஞ்சையைச் சேர்ந்த ஜானகிராமன், இளையராஜா, கோவையைச் சேர்ந்த கணினிப் பொறியாளர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தார், தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசு நிலைய ஆய்வாளரான சேதுமணி மாதவன். ஏற்கெனவே அதிகார போதைத் தலைக்கேறி ஆட்டம் போட்டு வந்த சேதுமணி மாதவன், வழக்கில் உள்ளவர்களைக் கைது(!) செய்து திருச்சியிலுள்ள குரு லாட்ஜ், கஜப்பிரியா ஓட்டல் ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து, அடித்து உதைத்து மிரட்டி அவர்களிடம் இலட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். அகிலாவிடமும் அவரது பெற்றோரிடமும் பல லட்சங்களைக் கறந்த சேதுமணி மாதவன், அவர்களைத் தஞ்சையில் மேட்டுக்குடி கும்பல்களின் களிவெறியாட்ட விடுதியான ""டெம்பிள் டவர்'' ஓட்டலில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்துள்ளார்.

மேலும் பணம் கொண்டுவரச் சொல்லி அவர்களை அனுப்பி விட்டு, அகிலாவை மட்டும் உடனே திரும்பி வரச்சொல்லி மிரட்டி, அச்சுறுத்தியுள்ளார். 16.11.07 அன்று தஞ்சை வந்த அகிலாவை பேருந்து நிலையத்திலிருந்து போலீசு வாகனத்திலேயே ஏற்றிச் சென்று ""டெம்பிள் டவர்'' ஓட்டலில் அடைத்துத் தொடர்ந்து பாலியல் வன்முறையை ஏவியுள்ளார். சேதுமணி மாதவனோடு விபச்சார புரோக்கரும் முன்னாள் அரசு ஊழியருமான பாலு, ஏட்டு கணேசன் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து இந்த அயோக்கியத்தனத்தைச் செய்துள்ளனர். இதற்கு ஜெயலட்சுமி என்ற பெண் போலீசு இன்ஸ்பெக்டர் உதவி செய்திருக்கிறார்.

தனக்கு நேர்ந்த கொடுமையை மரண வாக்குமூலம் போல தனது அம்மாவுக்கு 19.11.07 அன்று கடிதமாக எழுதி அனுப்பியுள்ளார், அகிலா. அதேநாளில் சேதுமணி மாதவனின் தொடர் பாலியல் வன்முறையால் கொல்லப்பட்டுள்ளார். அகிலாவின் பெற்றோரை அவசரமாகத் தொலைபேசியில் அழைத்த சேதுமணி மாதவன், அகிலா அளவுக்கதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டதாகக் கூறி, உடனே புறப்பட்டு வரச் சொல்லிவிட்டு, அகிலா தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டதாக ஜோடித்தார்.

அகிலாவின் பெற்றோரிடம் பிணத்தை ஒப்படைக்காமல், ஒப்படைத்து விட்டதாக மிரட்டிக் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு, தஞ்சை ரெட்டிப்பாளையம் சுடுகாட்டில் வைத்து போலீசே முன்னின்று பிணத்தை எரித்துள்ளது. பாலியல் வன்முறையை ஏவிக் கொலை செய்துள்ள தடயங்களை அதிகார பலத்தைக் கொண்டு அழித்துவிட்ட போலீசு கும்பல், அகிலாவின் பெற்றோரை மிரட்டி, ""என் மகள் தற்கொலைதான் செய்து கொண்டாள்; என் மகள் சாவுக்குப் போலீசு காரணம் இல்லை'' என்று வாக்குமூலம் பெற்றுள்ளது.

சேதுமணி மாதவன், சீருடை அணிந்த ஒரு ரௌடி. மனித உரிமை மீறல் குற்றவாளி என மதுரை உயர்நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டு, தமிழக அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் போலீசு எஸ்.பி.யான பிரேம்குமார் தஞ்சையில் பணியாற்றியபோது, அவருடன் சேர்ந்து சேதுமணி மாதவன் நடத்திய "மோதல்' படுகொலைகள் ஏராளம். சிவில் வழக்குகளில் தலையிட்டுக் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிப்பது, பெண் கைதிகளை மிரட்டிப் பாலியல் வன்முறையை ஏவுவது, விசாரணைக் கைதிகளை அடித்துக் கொட்டடியிலேயே கொல்வது, கைத்துப்பாக்கியை இடுப்பில் சொருகிக் கொண்டு சுட்டு விடுவேன் என்று அதிகாரத் திமிரோடு மக்களை மிரட்டுவது என்பதாக இந்தக் காக்கிச் சட்டை கிரிமினலின் கொட்டம் தலைவிரித்தாடியது. அதிலும், திருவாரூர், தி.மு.க. செயலாளர் பூண்டி கலைச்செல்வன் கொலை வழக்கு விசாரணைக் குழு, திருச்சி தீவிரவாத எதிர்ப்புப் படைக்குழு ஆகியவற்றில் சேதுமணி மாதவன் அங்கம் வகிப்பதால், உயரதிகாரிகளுடன் நெருக்கம் காரணமாக அதிகார போதையில் ஆட்டம் போட்டு வந்தார்.

இருப்பினும், மனோகரன் என்பவர் மீது பொய் வழக்குப் போட்டு பணம் பறித்த சேதுமணி மாதவனுக்கு மனித உரிமை ஆணையம் ரூ. 25,000 அபராதம் விதித்துள்ள விவகாரம் உள்ளிட்டு, அவரது கொலைகளும் அத்துமீறல்களும் ஏற்கெனவே அம்பலமாகியுள்ளதாலும், அகிலா கொலையில் அவர் சிக்கியிருப்பது மெதுவாகக் கசியத் தொடங்கியதாலும், வேறு வழியின்றி அவர் மீது, அகிலாவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சேதுமணி மாதவனோ, கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் படுத்துக் கொண்டார். போலீசு கும்பலோ புலன் விசாரணை முடிந்துவிட்டதாகக் கூறி அவருக்குப் பிணை வாங்க முயற்சித்தது.

தண்டனையின்றித் தப்பிக்க கொலைகார சேதுமணி மாதவனும் போலீசு கும்பலும் தகிடுதத்தங்களில் இறங்கத் தொடங்கியதும், தஞ்சையில் இயங்கும் ம.க.இ.க., பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், இக்கொலைகார போலீசின் ஆள் கடத்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்துச் சித்திரவதை, பணம் பறிப்பு, பாலியல் வன்முறை ஆகிய கொடிய குற்றங்களுக்காகக் கைது செய்து தண்டிக்கக் கோரி நகரெங்கும் விரிவான பிரச்சாரத்தை மேற்கொண்டன. அகிலாவின் கடைசி கடிதத்தைச் சுவரொட்டியாக அச்சிட்டு ஒட்டி, கொலைக் குற்றவாளி சேதுமணி மாதவன்தான் என்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திக் காட்டியது.

இதைத் தொடர்ந்து, ம.க.இ.க., பு.மா.இ.மு., மனித உரிமை பாதுகாப்பு மையம், ஆதித் தமிழர் பேரவை, தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி, தமிழக இளைஞர் முன்னணி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் அமைப்புகளும் இணைந்து ""கோவை அகிலா காவல் கொலைக்கு நீதிகோரும் கூட்டமைப்பு'' நிறுவப்பட்டு, அக்கூட்டமைப்பின் சார்பில் பிரசுரம், சுவரொட்டி, தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாக நகரெங்கும் வீச்சாகப் பிரச்சாரமும் அதன் தொடர்ச்சியாக கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டன.

மனித உரிமை பாதுகாப்பு மையம், கீழமை நீதிமன்றத்தில் இக்கொலைகாரனுக்குப் பிணை வழங்கக் கூடாது என்று மனு செய்ததோடு, உயர்நீதி மன்றத்தில் இக்குற்றவாளியைத் தப்புவிக்கும் வகையில் நடக்கும் போலீசு விசாரணைக்குத் தடை கோரியும், மையப்புலனாய்வுத் துறை மூலம் விசாரணை நடத்தக் கோரியும் மனு செய்தது. அதன்படி, கொலைகார சேதுமணி மாதவனுக்குப் பிணை மறுக்கப்பட்டு, மருத்துவமனையிலிருந்து சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். போலீசு விசாரணைக்குத் தடை விதித்துள்ள மதுரை உயர்நீதி மன்றம், நீதித்துறை மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

உழைக்கும் மக்களை அணிதிரட்டி இக்கூட்டமைப்பும் இதர ஜனநாயக சக்திகளும் தொடர்ச்சியாக மேற்கொண்ட பிரச்சாரம் மற்றும் போராட்டங்களால்தான் சீருடை அணிந்த கிரிமினல் சேதுமணி மாதவன் இப்போது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாரே தவிர, அரசின் நடுநிலையான சட்டம் நீதியினால் அல்ல. இது தஞ்சை மக்களின் போராட்டத்திற்குக் கிடைத்த முதற்கட்ட வெற்றி. முன்னுதாரணமிக்க இப்போராட்ட வெற்றியைச் சாதகமாக்கிக் கொண்டு, கொலைகார சேதுமணி மாதவனின் கூட்டாளிகளான சாதிவெறியர்கள், சமூக விரோதிகள், ஓட்டுக்கட்சி கிரிமினல்கள், ஓட்டல் அதிபர்கள், போலீசு அதிகாரிகள் உள்ளிட்டு அனைவரையும் தண்டிக்கக் கோரி, மனித உரிமை ஜனநாயக உரிமைகளுக்காக உழைக்கும் மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவதன் மூலமே, போலீசு பயங்கரவாதிகளின் கொட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

பு.ஜ. செய்தாளர்கள், தஞ்சை.

அதிகார வர்க்கத்தைப் பணிய வைத்த மக்கள் போராட்டம்

அதிகார வர்க்கத்தைப் பணிய வைத்த மக்கள் போராட்டம்

ஞ்சாவூரில், மருத்துவக் கல்லூரி சாலையிலிருந்து மானோஜிப்பட்டி, ஈஸ்வரி நகருக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காகத் தோண்டப்பட்டு கடந்த மூன்றரை ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகிக் கிடக்கின்றன. அடித்தள உழைக்கும் மக்கள் வாழும் இப்பகுதியிலிருந்து வேலைக்குச் செல்வோர், வியாபாரத்துக்குச் செல்வோர், பள்ளிகல்லூரிகளுக்குச் செல்வோர், ""மினி'' பேருந்துகள், ஆட்டோக்கள் என எப்போதும் பரபரப்பாகக் காணப்பட்ட இச்சாலைகள் இப்போது வெறிச்சோடிக் கிடக்கின்றன. மழைக்காலங்களில் வெளியுலகத் தொடர்பின்றி இப்பகுதி தனித்தீவாகத் தத்தளிக்கிறது.

உலக வங்கியிடம் கடன் பெற்று செயல்படுத்தப்படும் இப்பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவடைந்துவிட்டதாக அறிவித்து அமைச்சர் ஸ்டாலினை வைத்து திறப்பு விழாவும் நடத்தி விட்டது, தஞ்சை நகராட்சி. ஆனால், மேட்டுக்குடியினர் வாழும் பகுதிகளில் மட்டும் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளனவே தவிர, அடித்தள மக்கள் வாழும் பகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.

சாலை சீரமைக்கப்படாததால் இரண்டு கி.மீ. தூரம் சுற்றிச் சென்று அல்லற்பட்ட மானோஜிப்பட்டி மக்கள், கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர், அமைச்சர்கள் என அனைவருக்கும் மனு கொடுத்து ஓய்ந்து போயினர். பின்னர் அதிரடியாக நாற்று நடும் போராட்டத்தை நடத்தி, கவனத்தை ஈர்த்துப் பார்த்தனர். அதிகாரிகளோ போதிய நிதியில்லை என்று சொல்லியே தொடர்ந்து இழுத்தடித்து வந்தனர். இப்பகுதியில் இயங்கும் ம.க.இ.க; பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், இளைஞர்களை அணிதிரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்த ஏற்பாடுகளைச் செய்து வந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகளும் இதர அமைப்புகளும் இதில் இணைந்து கூட்டியக்கமாக முன்னேறியது.

இக்கூட்டியக்கத்தின் மூலம் தெருமுனைக் கூட்டங்கள், துண்டுப் பிரசுரம்சுவரொட்டிகள் , ஆட்டோ பிரச்சாரம் என முழுவீச்சில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு சாலை மறியல் போராட்டத்துக்கு மக்கள் அணிதிரட்டப்பட்டனர். இப்பிரச்சார இயக்கத்தின் வீச்சையும் மக்களின் பேராதரவையும் கண்டு அரண்டு போன மாவட்ட போலீசு கண்காணிப்பாளர், சாலைமறியல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் எச்சரித்தார். உளவுத்துறை போலீசார் போராட்டத்தை நிறுத்தச் சொல்லி முன்னணியாளர்களை மிரட்டிப் பார்த்தனர்.

இவற்றையெல்லாம் துச்சமாக மதித்து, திட்டமிட்டபடி 19.1107 அன்று சாலை மறியலுக்காக உழைக்கும் மக்கள் பேரணியாகப் புறப்பட்டு முன்னேறியதும், கைது செய்ய வந்த போலீசு, பெரும் மக்கள் திரளைக் கண்டு பீதியடைந்து, அதிகாரிகளை அழைத்து வந்து பேச்சு வார்த்தை நடத்தியது. விண்ணதிரும் முழக்கங்களுடன் போர்க்குணத்தோடு அணிதிரண்ட மக்கள்திரளிடம் மண்டியிட்ட அதிகார வர்க்கம், உடனடியாக கிராவல் மண்கொட்டி சாலைகளைச் சீரமைப்பதாகவும், ஜனவரி 30ஆம் தேதிக்குள் தார்ச்சாலைகளை அமைப்பதாகவும் போராட்டக் குழுவினரிடம் எழுத்துபூர்வமாக உறுதியளித்தது. அதன்படி நகராட்சி, மறுநாளே சாலை சீரமைப்புப் பணிகளை தொடங்கியது.

மக்கள் திரளின் போர்க்குணமிக்க போராட்டங்களின் மூலமே எருமைத் தோல் அதிகார வர்க்கத்தை அடிபணிய வைக்க முடியும் என்பதை மானோஜிப்பட்டி மக்களின் போராட்ட வெற்றி மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது.

பு.ஜ. செய்தியாளர்கள், தஞ்சை.

Wednesday, April 2, 2008

மின்வெட்டு – டாலர் மதிப்பு சரிவு தமிழகத்தை அழுத்தும் நுகத்தடிகள்


மின்வெட்டு – டாலர் மதிப்பு சரிவு
தமிழகத்தை அழுத்தும் நுகத்தடிகள்

"பகலில் ஆலைகளை இயக்காமல் இரவில் இயக்குங்கள்; வாரத்துக்கு ஒருமுறை எந்திர இயக்கத்தை நிறுத்தி வையுங்கள்.'' இவையெல்லாம், கடுமையான மின்வெட்டால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நெசவாலை முதலாளிகளிடம் தமிழக மின்துறை அமைச்சர் வைத்துள்ள வேண்டுகோள்கள். உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடிய 1960களில் அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ""வாரத்துக்கு ஒருநாள் பட்டினி கிடப்பீர்'' என்று நாட்டு மக்களுக்குச் செய்த உபதேசத்துக்குச் சற்றும் குறையாத பொறுப்பற்ற யோசனைகளே இவை.

பொன்விழா கொண்டாடிய தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழகத்தின் தேவையைவிட அதிகமாக மின்னுற்பத்தி செய்வதை, அது வெளியிட்டிருக்கும் நாட்காட்டிகளில் கூடச் சாதனையாக அறிவித்துள்ளது. அமைச்சர் வீராசாமியே பலமுறை இதனைப் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நடைமுறையில், உண்மை நிலவரமோ வேறுவிதமாக உள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக தமிழகமெங்கும் அறிவிப்பின்றியே அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. ஏற்கெனவே நேரம் தவறி விவசாயத்துக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரமும் அடிக்கடி மின்தடையால் நின்று போய், நீர்ப்பாய்ச்சலின்றி விவசாயம் தத்தளிக்கத் தொடங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்துக்குக் குடிநீர் வழங்கிவரும் தாமிரபரணி மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், இம்மின்வெட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அம்மாவட்டத்தின் பல பகுதிகள் குடிநீர்த் தட்டுப்பாட்டினால் தவிக்கின்றன. பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வுக்கு ஆதாரமான நெசவாலைகளுக்கும் விசைத்தறிகளுக்கும் தொடர்ச்சியாக மின்சாரம் கிடைக்காததால், கோவைதிருப்பூர் பகுதிகளில் நெசவுத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பின்னலாடைத் தொழிலில் கூட மின்சாரத் தட்டுப்பாட்டை ஜெனரேட்டர்களை வைத்து இயக்கி சமாளித்துவிட முடியும். ஆனால், விசைத்தறியோ கடும் மனித உழைப்பைக் கொண்டு குறைந்த லாபத்தில் இயங்கும் தொழிலாகும். இத்தொழிலுக்கு தினமும் 5 மணி நேர மின்வெட்டு என்றால், அத்தொழில் எவ்வளவு பாதிக்கப்படும் என்று சொல்லத் தேவையில்லை. இப்பாதிப்புகள் அனைத்தும் தொழிலாளர் தலையில் சுமத்தப்பட்டு, அவர்களது ஊதியமும் கணிசமாகக் குறைந்துள்ளது.

கோவை ஈரோடு மாவட்டங்கள், தமிழகத்தின் மின்சாரத்தில் 13.5%ஐ நுகரும் அளவுக்கு நெசவாலைகள், நூற்பாலைகளைக் கொண்டுள்ளன. இப்பகுதிகளில் பல சமயங்களில் 8 மணி நேரம் வரை மின்வெட்டு நீடிக்கிறது. இதனால் நெசவாலைகளும் நூற்பாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. ஏற்கெனவே அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியால் 15%க்கு மேல் இலாபத்தில் சரிவைக் கண்டுள்ள நெசவுத் தொழிலை மின் பற்றாக்குறையானது மேலும் நலிவடையச் செய்துவிடும் என்று தென்னிந்திய ஆலை அதிபர்கள் சங்கம் (சிமா) கூறுகிறது. இதுதவிர, தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் தொடரும் மின்வெட்டால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

அரசு புள்ளி விவரங்களின்படி தமிழகத்தின் மொத்த மின்உற்பத்தி 10,000 மெகாவாட் ஆகும். இதில் 55% தமிழக அரசின் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 28% மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 11% தனியார் மின்உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 3.5% வெளிமாநிலங்களிலிருந்தும் பெறப்படுகிறது.

இது தவிர, காற்றாலைகள் மூலம் ஏறத்தாழ 3000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இருப்பினும், மின்வெட்டு தொடரக் காரணம் என்ன? ""காற்றாலைகள் மற்றும் நீர்மின் திட்டங்களிலிருந்து அண்மைக் காலமாக மின் உற்பத்தி எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை. இதுதான் மின்சாரத் தட்டுப்பாட்டுக்குக் காரணம்'' என்கிறார் அமைச்சர் வீராச்சாமி.

அணைகள் அனைத்தும் நிரம்பி வழியும் இந்நேரத்தில் மின்உற்பத்தி எப்படி முடங்கிப் போகும்? மேலும், காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் மிகக் குறைவானதுதான். ஆனால், தற்போதைய மின்தட்டுப்பாடோ 30%க்கு மேலாக இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

கடந்த இருபது ஆண்டுகளாக மின்னுற்பத்தியிலும் மின் விநியோகத்திலும் புழங்கிவரும் எந்திரங்களோ, கருவிகளோ புதுப்பிக்கப்படவில்லை; சீரமைக்கப்படவில்லை. மின்தடையைப் பழுதுநீக்கி சரிசெய்யும் துறையிலும் பராமரிப்பிலும் பல்லாயிரக்கணக்கான காலி இடங்கள் நிரப்பப்படாமல், தற்காலிகத் தொழிலாளர்களை வைத்து சமாளித்து வருகின்றனர். சென்ற ஆட்சியில் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் இறுதியாக்கப்பட்டு முடிக்கப்படாததால் பல வேலைகள் கிடப்பில் உள்ளன. இத்தகைய நிர்வாகச் சீர்கேடுகளும் குளறுபடிகளுமே மின்தடைக்கு முக்கிய காரணங்களாகின்றன.

இதுதவிர, தினசரி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற ரீதியில் கணக்கற்ற பன்னாட்டு நிறுவனங்களுடனும் தரகுப் பெருமுதலாளிகளுடனும் தமிழக அரசு போட்டுக் கொண்டிருக்கும் ஒப்பந்தங்கள் 24 மணி நேரத் தங்குத் தடையற்ற மின் வழங்கலை முன்னிபந்தனையாகக் கொண்டுள்ளன. புதிதாக உருவாகி வரும் 120 தொழில் பூங்காங்களால் மட்டும் 700 மெகாவாட்டுகள் வரை மின்தேவை கூடுதலாகியுள்ளது.

ஆனால், கூடுதல் மின்தேவையை ஈடு செய்யும் வகையில் மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை. அதிக உற்பத்தியை ஈட்டி, அடுத்தடுத்து தங்கப்பதக்கம் வெல்லும் மேட்டூர் மின்நிலையத்திலும் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதிலிருந்தே அரசின் நிர்வாகச் சீர்கேட்டைப் புரிந்து கொள்ள முடியும்.

பத்தாண்டுகளுக்கு முன் தனியார் மின் உற்பத்தி 0.4 சதவீதமாக இருந்தது. தனியார்மயம் தேசியக் கொள்கையாகிவிட்ட பிறகு, இன்று தனியார் மின் உற்பத்தி 28.18 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இத்தனியார் நிறுவனங்களிடமிருந்து பல மடங்கு அதிகமாக கட்டணம் செலுத்தி தமிழக அரசு மின்சாரத்தை வாங்குவதால் ஆண்டுக்கு
ரூ. 1216 கோடி வரை நட்டமடைந்து வருகிறது. இதனால் மின்னுற்பத்தியை அதிகரிக்கவோ, பராமரிப்புப் பணிகளைச் செய்யவோ முடியாமல் மின்வாரியம் தடுமாறுகிறது.

உள்ளூர் தொழிலுக்கும் விவசாயத்துக்குமான மின்சாரத்தை வெட்டி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள தமிழக அரசு, அதேநேரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொழில் பூங்காக்கள், பன்னாட்டு நிறுவனங்கள், கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலானவற்றுக்குத் தடையின்றி மின்சாரத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம், அரசின் மின் விநியோகத்தின் மீது அவநம்பிக்கை உருவாகவும், தனியார் மின்சார விநியோகத்தை மக்கள் இயல்பாக ஏற்றுக் கொள்ளச் செய்யவுமான எதிர்விளைவையே உருவாக்கி வருகிறது.

மின்வெட்டால் கடும் பாதிப்புக்குள்ளான தமிழகம், நிர்வாகக் குளறுபடிகளைச் சீரமைத்தால் நெருக்கடியிலிருந்து மீண்டு விட முடியும். ஆனால் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கமோ, தமிழகம் உள்ளிட்டு நாட்டு மக்கள் அனைவரையும் மீள முடியாதபடி மரணக் குழியில் தள்ளும் பேரபாயமாகும்.

தாராளமயம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை தற்கொலைச் சாவுக்குத் தள்ளியுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் முதலாகத் தொடரும் டாலர் மதிப்புச் சரிவினால், ஏற்றுமதியைச் சார்ந்துள்ள ஜவுளித் தொழிலும் ஆயத்த ஆடைத் தொழிலும் மீள முடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளன. இத்தொழில்களை நம்பியுள்ள 3.5 கோடி தொழிலாளர்களின் எதிர்காலமோ இருண்டு கிடக்கிறது. இந்திய ரூபாய்க்கு நிகராக, டாலரின் மதிப்பு 12%க்கு மேல் குறைந்து விட்டதால், மும்பையில் பல நிறுவனங்கள் ""லேஆப்'' அறிவித்துள்ளன. ஏறத்தாழ 70,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். திருப்பூரில் ஏற்கெனவே 10,000 பேர் வேலையிழந்து, மேலும் 50,000 பேர் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளனர். ஜவுளித் தொழிலில் மட்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டாலர் மதிப்புச் சரிவானது, நாடெங்கும் 80 லட்சம் பேரின் வேலையைப் பறித்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.

தமிழகத்தையும் நாட்டையும் மறுகாலனியாக்கம் எனும் கொள்ளைநோய் சூறையாடிக் கொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளோ மின்வெட்டினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை வைத்து போராட்டங்களை நடத்தி மக்கள் பிரச்சினைகளுக்குப் போராடுவதைப் போல நாடகமாடுகின்றன. மறுகாலனியாக்கம் எனும் மையமான விவகாரத்தை விட்டுப் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொண்டு சூரத்தனம் காட்டும் இந்த ஓட்டுக் கட்சிகள், தலைக்கே பேராபத்து வந்துள்ளபோது தலைவலிக்கு மருந்து கேட்கின்றன.

· தனபால்

நெல்லுக்கு ஆதாரவிலை பிச்சையல்ல, உரிமை!


நெல்லுக்கு ஆதாரவிலை
பிச்சையல்ல, உரிமை!

கோதுமைக்குத் தரப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை, ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,000/ என உயர்த்தி நிர்ணயித்திருக்கும் மைய அரசு, நெல் விலையை நிர்ணயிப்பதில் மாற்றந்தாய் மனப்போக்குடன் நடந்து கொண்டுள்ளது. 199495 ஆண்டு வரை, நெல்லுக்கும் கோதுமைக்குமான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதில் எவ்வித வேறுபாடும் இருந்தது கிடையாது. அதன்பிறகு, அவற்றின் ஆதரவு விலைகளை நிர்ணயிப்பதில் வேறுபாடு காட்டப்படுவது தொடங்கி, இன்று இந்த விலை வேறுபாடு ரூ. 255/ ஆக அதிகரித்து விட்டது.

இந்த ஆண்டு ஒரு குவிண்டால் சன்னரக நெல்லுக்கான ஆதரவு விலை ரூ. 675/; மோட்டாரக நெல்லுக்கான ஆதரவு விலை ரூ. 645/ என்றுதான் மைய அரசால் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு மேல் ஊக்கத் தொகை வழங்கவும் மறுத்துவிட்டது, மைய அரசு. தமிழக விவசாயிகள் ஒரு குவிண்டால் நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 1,000/ தர வேண்டும் எனக் கோரி வருவது தி.மு.க.வுக்குத் தெரிந்திருந்தும் கூட, மைய அமைச்சரவை நெல்லுக்கு மிகவும் குறைவாக ஆதரவு விலையை நிர்ணயித்ததை அக்கட்சி எதிர்த்துப் பேசவில்லை.

தமிழக விவசாயிகள் மைய அரசின் இந்த முடிவை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கிய பிறகு, தமிழக முதல்வர் மு.க., மைய அரசுக்குக் கடிதம் எழுத, அதனைத் தொடர்ந்து, மைய அரசு ஏதோ பிச்சை போடுவது போல, இரண்டு தவணைகளில் ஆதரவு விலையை ரூ. 100/ உயர்த்தி, சன்னரக நெல்லுக்கு ரூ.775/ மோட்டா ரக நெல்லுக்கு ரூ.745/ என விலை நிர்ணயம் செய்தது.

இதற்கு மேல் மைய அரசிடமிருந்து ஒரு பைசாகூடப் பெயராது எனத் தெரிந்து கொண்ட மு.க., தமிழக நெல் விவசாயிகளின் அதிருப்தியைப் போக்குவதற்காக, கூடுதல் ஊக்கத் தொகையாக ஐம்பது ரூபாய் தமிழக அரசின் சார்பில் அளிக்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

ஒரு குவிண்டால் நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 1,000/ தர வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை, அநியாயமானதோ, தான்தோன்றித்தனமானதோ அல்ல. விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் பற்றி ஆராய்வதற்காக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் மைய அரசினால் அமைக்கப்பட்ட தேசிய கமிசன் ஒரு குவிண்டால் நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 1,400/ தரப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்திருக்கிறது. கோதுமை உற்பத்திக்கு ஆகும் செலவைவிட, நெல் உற்பத்திக்கு ஆகும் செலவு அதிகமானது என்பதை மைய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்குப் பிறகும், மைய அரசு நெல் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கத் துணிகிறது என்றால், மன்மோகன் சிங் கும்பலை எதைக் கொண்டு அடிப்பது?

இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த வே.துரைமாணிக்கம் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையின் படியும்; தமிழக வேளாண்மைத் துறையின் கணக்கீட்டின்படியும் ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் உற்பத்தி செய்வதற்கு ஆகும் சராசரி செலவு ரூ. 14,689/ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் நன்றாக இருந்தால் ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகபட்சமாக 1,800 கிலோ மகசூல் கிடைக்கும். இம்மகசூல் அனைத்தையும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்றால் கூட ரூ.14,300/ லிருந்து ரூ.15,000/ வரைதான் கிடைக்கும். நெல்லை விற்றுக் கிடைக்கும் வரவு, உற்பத்திச் செலவை ஈடுகட்டக்கூடப் போதாது என்றால், விவசாயிகள் நெல் விவசாயம் பார்ப்பதைவிட, நிலத்தைத் தரிசாகவே போட்டு விடலாம்.

இந்தியாவில் 4.4 கோடி ஹெக்டேர் பரப்பளவில் விளையும் நெல் மகசூல் அனைத்தையும் மைய அரசே கொள்முதல் செய்வது கிடையாது. தமிழகத்தில் விளையும் நெல்லில் காணப்படும் ஈரப்பதத்தைக் காட்டியே, தமிழக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது, மைய அரசு. எனவே, நெல் விவசாயிகளுக்குத் தங்களின் விளைச்சலைத் தனியாரிடம் விற்பதைத் தவிர வேறுவழியில்லாமல் போய் விடுகிறது. விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் தனியார் கமிசன் ஏஜெண்டுகள், குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து வாங்குவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எனவே, நடைமுறையில் நெல் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய நட்டம், புத்தக மதிப்பீட்டைவிட அதிகமாகவே இருக்கும்.

கந்துவட்டிக் கடனில் மூழ்கிப் போன விவசாயிகளின் எண்ணிக்கையில், தமிழகம், இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. வேளாண் விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்காமல் இருப்பதனால்தான், விவசாயிகள் கடன் சுமையில் இருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போகிறார்கள். தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த நெல் விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 1,000/ தர வேண்டும் எனக் கோருவதையும், அதற்காகத் தமிழக விவசாயிகள் போராடுவதையும் இந்தச் சூழ்நிலையில் இருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், மைய அரசின் வேளாண்துறை அமைச்சர் சரத்பவாருக்கோ, தமிழக நெல் விவசாயத்தின் அரிச்சுவடி கூடத் தெரியவில்லை.

""நெல்லுக்கு மைய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை பஞ்சாப் விவசாயிகள் வரவேற்றுள்ளனர்'' எனத் தமிழக விவசாயிகளிடம் கூறி தமிழகத்தையும், பஞ்சாபையும் எதிரெதிராக நிறுத்தியிருக்கிறார், சரத்பவார். அதற்குத் தமிழக விவசாயிகள், ""பஞ்சாபில் கோதுமை, நெல் என இரண்டு பயிர்கள். ஒன்று இல்லாவிட்டாலும், ஒன்றில் கிடைப்பதால் மகிழ்ச்சியாக உள்ளார்கள்'' எனப் பதிலடி கொடுத்துள்ளனர்.

""தமிழ்நாட்டில் மூன்று போகம் நெல் சாகுபடி நடப்பதாக''க் கூறித் தனது முட்டாள்தனத்தை வெளிக்காட்டிக் கொண்ட சரத்பவார், ""விவசாயத் துணைத் தொழில்களான கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டால், நல்ல வருமானம் கிடைக்கும்'' என்ற "அரிய' ஆலோசனையை எடுத்துக் கூறி பிரச்சினையை திசை திருப்பியிருக்கிறார்.

""மீன் வளர்க்க மின்சாரத்துக்கு எங்கு போவது? யூனிட் 6 ரூபாய் வசூலிக்கிறார்கள். இலவசமாக மின்சாரம் கிடைக்குமா?'' என விவசாயிகள் கேட்டதில் மூக்குடைந்து போன அமைச்சர், ""நீங்கள் இப்படிக் கூடுதல் விலை கேட்டால், குறைந்த விலைக்கு எப்படி அரிசி கொடுக்க முடியும்?'' எனக் கேட்டு, விவசாயிகளைப் பொதுமக்களின் வில்லனாகக் காட்ட முயலுகிறார்.

ஒரு குவிண்டால் நெல்லுக்கு 250 ரூபாய் கூடுதலாகக் கொடுப்பதை மறுப்பதற்கு ஆயிரத்தெட்டு காரணங்களை அடுக்கும் சரத்பவார், புளுத்துப் போன கோதுமையை, அந்நிய நாடுகளில் இருந்து அநியாய விலைக்கு இறக்குமதி செய்வதற்கு எவ்விதத் தயக்கமும் காட்டியதில்லை. இந்த இறக்குமதியை எதிர்த்து வந்த கோதுமை விவசாயிகளின் கோபத்தைத் தணிப்பதற்காகத்தான், கோதுமையின் ஆதரவு விலையை ரூ. 1000/ என மைய அரசு அறிவித்திருக்கிறது.

""நெல்லுக்கு ஆதரவு விலை ரூ.1000/ கொடுத்தால், மக்களுக்குக் குறைந்த விலையில் எப்படி அரிசி கொடுக்க முடியும்?'' எனக் கேட்கிறார் சரத்பவார். ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கோ, ""மக்களுக்குக் குறைந்த விலையில் அரிசியையும், கோதுமையையும் ஏன் வழங்க வேண்டும்?'' எனக் கேட்கிறார். ""மைய அரசு மக்கள் நலத் திட்டங்களுக்காக ரூ. 1 இலட்சம் கோடி ரூபாய் மானியமாக வழங்குவதாகவும்; இம்மானியம் முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை என்பதால், இம்மானியங்களை விரைவில் ஒழித்துவிட வேண்டும்'' என்ற அரிய ஆலோசனையை சமீபத்தில் கூறியிருக்கிறார், மன்மோகன் சிங்.

மூட்டை பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தச் சொல்லும் முட்டாள்தனம்தான் இது. பொது மக்களுக்கு ரேசன் கடைகளின் மூலம் மானிய விலையில் அரிசியும், கோதுமையும் வழங்கத் தேவையில்லை என்றால், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து, நெல்லையும், கோதுமையையும் மைய அரசு வாங்க வேண்டியதில்லை என்பதுதான் பொருள்.

""மானியங்களை அடியோடு ஒழிக்க வேண்டும்'' என்ற பொருளாதாரக் கொள்கை ஆட்சியில் இருக்கும்வரை, கோதுமைக்கு ரூ.1,000/ கிடைத்துவிட்டது எனக் கோதுமை விவசாயிகள் நிம்மதியடைந்து விடவும் முடியாது; இன்றில்லாவிட்டால் நாளை, நெல்லுக்கும் 1,000 கிடைத்துவிடும் என நெல் விவசாயிகள் காத்துக் கிடக்கவும் முடியாது.

தாராளமயம் விவசாயிகளின் கழுத்துக்குக் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு நடத்தி வந்த நெல் கொள்முதலை முந்தைய அ.தி.மு.க. ஆட்சி கைவிட்டதற்கும்; தற்போதைய தி.மு.க. ஆட்சி அதனை மீண்டும் கொண்டுவர மறுப்பதற்கும் தாராளமயம்தான் காரணம்.

தமிழகத்தில் முன்பு 70 இலட்சம் ஏக்கரில் நடந்துவந்த நெல் சாகுபடி தற்பொழுது 55 இலட்சம் ஏக்கராகச் சுருங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. நெல்லுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்கவில்லை என்றால், நெல் சாகுபடி பரப்பு மேலும் சரிந்து வீழ்வதைத் தடுக்க முடியாது. தமிழக மக்களின் ஆதார உணவுப் பயிரான நெல் சாகுபடியைப் பாதுகாக்க வேண்டும் என்றால், அந்நிய மூலதனத்திற்காக பாரம்பரிய உணவுப் பயிர் விவசாயத்தைக் புறக்கணிக்கும் தாராளமயத்தை எதிர்த்துப் போராடுவது தவிர்க்க முடியாதது!

·ரஹீம்

Monday, March 31, 2008

சுயநலத்தின் இரண்டு முனைகள்

சுயநலத்தின் இரண்டு முனைகள்

த்திய அரசு கொண்டு வர இருக்கும் கிராமப்புறக் கட்டாய மருத்துவ சேவைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு சுற்றுப் போராட்டம் நடத்திய மருத்துவ மாணவர்கள், தமிழக முதல்வரும் மருத்துவத்துறை அமைச்சரும் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்காலிகமாகத் தமது வகுப்பறைகளுக்குத் திரும்பியிருக்கின்றனர்.

ஏற்கெனவே உள்ள மருத்துவக் கல்வித் திட்டத்தின்படி, பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, நான்கரை ஆண்டுகாலம் மருத்துவக் கல்லூரிப் படிப்புடன், 4,500 ரூபாய் உதவித் தொகையுடன் ஓராண்டு உள்பயிற்சி மருத்துவராகப் பணியாற்றித் தேறிய மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவர் பட்டம் (எம்.பி.பி.எஸ்.) வழங்கப்பட்டு வந்தது. புதிதாகக் கொண்டு வரப்படும் திட்டத்தின்படி, உள்பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிய பிறகு, நான்கு மாதம் கிராமப்புற மருத்துவமனையிலும், அடுத்த நான்கு மாதம் வட்டத் தலைநகர் மருத்துவமனையிலும், கடைசி நான்கு மாதம் மாவட்ட மருத்துவமனையிலும் — ஆக ஓராண்டு காலம் 8,000 ரூபாய் உதவித் தொகை பெற்றுக் கொண்டு வெளிப் பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற வேண்டும்; அதன்பிறகுதான் அவர்களுக்கு இளங்கலை மருத்துவர் (எம்.பி.பி.எஸ்) பட்டம் வழங்கப்படும்.

""இது கிராமப்புற ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவை செய்யும் நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்படும் திட்டம். இதை எதிர்ப்பவர்கள் கிராமப்புற விவசாய மக்களுக்கு எதிரானவர்கள்'' என்று மத்திய ""சமூக நலத்துறை'' அமைச்சர் அன்புமணியும் அவரது குடும்பக் கட்சியின் நிறுவனர் இராமதாசும் பேசி வருகின்றனர்.

கிராமப்புற ஏழை மக்களுக்குச் சேவை செய்வதையே இத்திட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்பது உண்மை அல்லவென்று அத்திட்டத்தைச் சற்றுக் கவனத்தோடு பார்த்த மாத்திரத்தில் அறிந்து கொள்ள முடியும். ஒரு நான்கு மாதங்களில் கிராமப்புற மருத்துவமனைகளில், போதிய பயிற்சியும் அனுபவமும் இல்லாத இளம் மருத்துவர்கள் கிராமப்புற மக்களுக்கு என்ன சேவை செய்து விட முடியும்! ஆகவே, இப்போது அரசு கொண்டு வந்திருக்கும் திட்டத்தை கல்லூரியில் மருத்துவப் படிப்பு முடித்த பிறகு ஓராண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் உள் மருத்துவராகவும், மேலும் ஓராண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லாத வெளி மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவராகவும் பணியாற்றுவதைக் கட்டாயமாக்குகிறது என்று வேண்டுமானால் கருதலாம்.

இவ்வாறு, இளம் மருத்துவர்களின் பயிற்சிக் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிப்பதை கிராமப்புறக் கட்டாய சேவைத் திட்டம் என்று அரசும், மருத்துவக் கல்விக் காலத்தை ஆறரை ஆண்டுகளாக அதிகரிப்பதாக மருத்துவ மாணவர்களும் தவறான கருத்தை மக்களிடம் கூறி வருகின்றனர். இரண்டு தரப்பாரிடமும் உண்மையைச் சொல்லும் நேர்மையான அணுகுமுறை இல்லை.

இத்திட்டத்தை எதிர்ப்பதற்கு மாணவர்கள் தரப்பில் சில காரணங்கள்கூறப்படுகின்றன. கல்விக் கடன் பெற்று மருத்துவப்படிப்பு முடிக்கும் தாங்கள் உடனடியாக வேலைக்குப் போய் கடனடைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அரசு தரும் 8000 ரூபாய் உதவித் தொகையைக் கொண்டு கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமல் போகிறது. உடனடியாக வேலைக்குப் போகாவிட்டால் படிக்க வைத்த பெற்றோர்களின் சுமை ஏறி விடுகிறது. பட்டமேற்படிப்புக்குச் செல்வதில் பிரச்சினை ஏற்படும்; உரிய வயதில், குறிப்பாகப் பெண் மருத்துவர்களுக்கு திருமணம் செய்து கொள்ள இயலாமல் போகிறது இவ்வாறான தமது சொந்த நலன்களுக்கான காரணங்களோடு, சில பொதுநல மக்கள் நலப் பிரச்சினைகளையும் போராடும் மருத்துவ மாணவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள்.

கிராமப்புற மருத்துவமனைகளில் மருந்து, கருவிகள், செவிலியர் போன்றவை போதிய அளவில் இல்லாதபோது எப்படி கிராம மருத்துவ சேவை செய்ய முடியும்? கிராம மருத்துவ மனைகளில் மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளன. உரிய மருத்துவர்களை நியமிக்காமல் பயிற்சி மருத்துவ மாணவர்களை அனுப்புவதால், ஏற்கெனவே பட்டம் பெற்ற மருத்துவர்களின் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படும். மேலும் மருத்துவச் சேவைக்கான அரசுச் செலவைக் குறைக்கும்படி உலக வங்கி உத்தரவிட்டுள்ளது; அதற்காக பயிற்சி மாணவர்களை சுழற்சி முறையில் அனுப்புவதன் மூலம் புதிய மருத்துவர்களை நியமித்து, மருத்துவ வசதிகளைப் பெருக்க வேண்டிய கடமையிலிருந்து தவறும் அரசு மக்களை ஏய்க்கவே இத்திட்டத்தைக் கொண்டு வருகிறது.

கிராமப்புற மருத்துவ சேவையில் அரசின் பொறுப்பின்மை தவறுகள் குறித்துக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைதான்; என்றபோதும் அவற்றுக்காக மருத்துவ மாணவர்கள் ஒருபோதும் கவனஞ் செலுத்தியதோ, குரல் கொடுத்ததோ கிடையாது; அதேசமயம் அரசின் புதிய திட்டத்தால் தாங்கள் பாதிக்கப்படுவதாக மருத்துவ மாணவர்கள் கூறும் எந்தக் காரணத்தையும் ஏற்க முடியாது.

உதாரணமாக, கல்விக் கடன் அடைப்பதில் பிரச்சினை வரும் என்றால், அதற்குரிய காலத்தை நீட்டிக்கும்படியும், எளிய தவணையாக்கும்படியும், உதவித் தொகையை அதிகரிக்கும்படியும் கோரலாமே! மருத்துவ உயர்கல்விக்கான தகுதிகளில் ஒன்றாக இந்தப் பயிற்சிக் காலத்தையும் கணக்கிடும்படி கோரலாமே! இந்தப் பயிற்சிக் காலத்திலேயே தேவையானால் திருமணம் செய்து கொள்வதை எது தடுக்கிறது?

எவ்வளவு விரைவில் பட்டம் பெற்று தொழில் தொடங்கி காசு பணத்தைப் பார்ப்போம், வரதட்சிணை பெற்று வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம் என்ற சிந்தனை கணிசமான அளவு மருத்துவ மாணவர்களைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை அவர்கள் மறுக்க முடியாது. கிராமப்புற மருத்துவமனைகளில் பணிநியமனம் செய்யப்பட்ட மருத்துவர்கள் அங்கு பொறுப்பேற்க மறுப்பதும், பொறுப்பேற்ற பிறகும் அருகிலுள்ள நகரங்களில் குடியேறி தனியே தொழில் செய்வதையும் காண்கிறோம். பலர் பணி நேரங்களில் மருத்துவமனைகளில் இருப்பதுமில்லை; நோயாளிகளை மரியாதையுடன் நடத்தி உரிய சிகிச்சையும் அளிப்பதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவப் படிப்பை முடித்து, இளங்கலை மருத்துவப் பட்டம் பெற்றிருந்தாலும், சுயமாக மருத்துவச் சேவை செய்வதற்கு ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்தாண்டுகளுக்காவது முதுநிலை மருத்துவர்களின் கீழ் பணியாற்றி அனுபவம் பெற வேண்டியது அவசியமென்பதை அவர்கள் உணர வேண்டும். இந்தக் காலத்தை உயர் கல்விக்கான தகுதியாகக் கருத வேண்டும் என்றும், ஏற்புடைய ஊதியத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் இளநிலை மருத்துவர்கள் கோருவதுதான் அவர்களின் தொழிலுக்கே அவசியமாக உள்ளது.

அரசு கொண்டு வரவிருக்கும் கிராமப்புறக் கட்டாய மருத்துவ சேவைத் திட்டம் உண்மையில் கிராமப்புறங்கள் நலனுக்கானதே கிடையாது. ஒரு நான்கு மாதமே கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்றுவதைப் புதிய திட்டம் கோருகிறது. மத்திய அரசு தனது மொத்த ஆண்டு வருவாயில் 18 சதவீதத்தை இராணுவத்திற்குக் கொட்டும் அதேசமயம், 1.3 சதவீதமே மருத்துவத்துறைக்கு ஒதுக்குகிறது; மாநில அரசு 5.5 சதவீதமே ஒதுக்குகிறது; மருத்துவப் பணியிடங்கள் பலவும் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன. அரசு மருத்துவமனைகளில், குறிப்பாகக் கிராமப்புற மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளோ, மருந்துகளோ கருவிகளோ கிடையாது. இவற்றையெல்லாம் கவனிக்காமல், ஒரு நான்கு மாதம் இளம்நிலை பயிற்சி மருத்துவர்களை அனுப்புவதைக் கிராமப்புற மக்களின் மருத்துவச் சேவையாக வாய் கிழியப் பேசுகிறார்கள், இராமதாசர்கள்.

உண்மையில் கிராமப்புற மருத்துவ சேவையில் அக்கறையுடையதாக செயல்படும் அரசாக இருந்தால், ஐந்தாண்டுகளுக்காவது வேலை உத்திரவாதமளித்து இளம்நிலை மருத்துவர்களைக் கிராமப்புற மருத்துவமனைகளில் நியமிக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து அங்கு பணியாற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். வசிப்பிடம், வாகன வசதிகள் போன்றவை வழங்க வேண்டும். போதிய மருத்துவக் கருவிகள், படுக்கை, பிற கட்டுமான வசதிகள், மருந்துகள், உதவியாளர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு பணிபுரியும் தகுதி அடிப்படையிலேயே மருத்துவ உயர்கல்விக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வகையிலான மருத்துவ சேவையை மேற்பார்வையிடும் மக்கள் பிரதிநிதிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு மக்கள் நலனில் அக்கறையுடைய கோரிக்கைகளுக்காக அல்லாமல், தங்கள் சொந்த நலனுக்காக மட்டும் போராடும் """வெள்ளுடை வேந்தர்களை'' மக்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?

· ஆர்.கே.

ஆலை மூடலுக்கு எதிராக ஆர்த்தெழுந்த தொழிலாளி வர்க்கம்


ஆலை மூடலுக்கு எதிராக
ஆர்த்தெழுந்த தொழிலாளி வர்க்கம்

யர் உற்பத்தியில் கடந்த 43 ஆண்டுகளாக முன்னணி நிறுவனமாக இயங்கி வந்த, சென்னையிலுள்ள எம்.ஆர்.எஃப் கம்பெனி கடந்த டிசம்பர் 3ஆம் தேதி முதலாக சட்டவிரோதமாக கதவடைப்பு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கும் மேலும் 5 கிளைகளின் உருவாக்கத்திற்கும் அயராது பாடுபட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களோ இன்று வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்களின் உரிமைகளை இழக்க மறுத்து, நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்த குற்றத்திற்காக, இரு தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்து 26 பேரை சஸ்பெண்ட் செய்தது நிர்வாகம். இதை எதிர்த்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததும், திமிரெடுத்த நிர்வாகம் அடாவடித்தனமாக ஆலையை மூடிவிட்டது. ஆலையை மீண்டும் திறக்கக் கோரி தொழிலாளர் நல ஆணையர் அளித்த அறிவுரையையும் ஏற்க மறுத்து விட்டது. கதவடைப்புக்குத் தடை விதித்துள்ள தமிழக அரசின் உத்தரவைச் செயல்படுத்துமாறு உயர்நீதி மன்றம் விதித்துள்ள ஆணையையும் எதிர்த்து எம்.ஆர்.எஃப் நிர்வாகம் மேல் முறையீடு செய்து கொக்கரிக்கிறது.

ஆலையை மூடுவதற்கு எம்.ஆர்.எஃப் டயர்களுக்குச் சந்தையில்லாமல், உற்பத்தி தேங்கி விட்டதோ, நட்டமோ காரணமல்ல. இந்தியாவின் சந்தையில் முதலிடத்தைப் பிடித்து கொழுத்த இலாபமடையும் முன்னணி நிறுவனம்தான் எம்.ஆர்.எஃப். மறுகாலனியாக்கத்திற்கு ஏற்ப தொழிலாளர் உரிமைகளைப் பறித்து கொத்தடிமைகளாக்கிச் சுரண்டும் நோக்கத்தோடுதான் இப்படி ஆலையை மூடி அடாவடித்தனம் செய்கிறது நிர்வாகம். சட்டவிரோத கதவடைப்பு செய்து அரசு உத்தரவையும் மதிக்காத இந்நிறுவன முதலாளியைக் கைது செய்து, ஆலையை அரசே ஏற்று நடத்துவதற்குப் பதில், கைகட்டி நிற்கிறது தமிழக அரசு.

ஆலை மூடலால் குமுறிக் கொண்டிருந்த எம்.ஆர்.எஃப் தொழிலாளர்களை அணிதிரட்டி, ""மூடிய எம்.ஆர்.எஃப் ஆலையை உடனே திற! ஆலையைத் திறக்காமல் அடாவடி செய்யும் முதலாளியைக் கைது செய்! எம்.ஆர்.எஃப் ஆலையை அரசுடமையாக்கு!'' என்ற முழக்கத்துடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி 26.12.07 அன்று மாலை மெமோரியல் ஹால் அருகே எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், எம்.ஆர்.எஃப் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் பிரபாகரன், பு.ஜ.தொ.மு. மாநிலச் செயலர் தோழர் சுப.தங்கராசு மற்றும் முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர்.

தொழிலாளர்கள் குடும்பத்தோடு திரண்டு வந்து வர்க்க உணர்வோடு நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் இதர கிளைகளைச் சேர்ந்த தொழிலாளர்களையும் இணைத்துப் போராடவும், இதர தொழிற்சங்கங்களையும் உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி அடுத்தகட்டப் போராட்டத்தைத் தொடரவும், பு.ஜ.தொ.மு.வும் எம்.ஆர்.எஃப் தொழிலாளர்களும் உறுதியேற்றுள்ளனர்.

தொழிலாளி வர்க்கம் தோற்றதாக வரலாறில்லை.

பு.ஜ. செய்தியாளர், சென்னை.

குஜராத் மோடியின் வெற்றி: இந்துவெறி பயங்கரவாதப் பிடி இறுகுகிறது

குஜராத் மோடியின் வெற்றி:
இந்துவெறி பயங்கரவாதப் பிடி இறுகுகிறது


குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. மற்றும் பிற இந்துத்துவ பாசிச சக்திகள், இந்து மதவெறியனும் காட்டுமிராண்டியுமான நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட்டன. குஜராத்தைக் கவ்விய பாசிச இருள் தன் பிடியை மேலும் இறுக்கியிருக்கிறது. 2002 கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதன் பிறகு நடத்தப்பட்ட மாநிலம் தழுவிய முசுலீம்கள் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் ஆகியவற்றை பாசிச வக்கிரங்களோடும் கோரமாகவும் மோடி தலைமையில் கட்டவிழ்த்து விட்ட உண்மை இரத்தத்தை உறைய வைக்குமாறு அம்பலப்பட்ட பிறகும்; மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும், மனித உரிமை ஆர்வலர்களும், செய்தி ஊடகங்களும் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக நீதியை நிலைநாட்டவும், மோடி உட்பட இந்துத்துவக் கிரிமினல் கொலைவெறியர்கள் தண்டிக்கப்படவும் போராடிய பிறகும்; இந்து பாசிச பரிவாரங்களுக்குள்ளேயே பிளவுகளும் முரண்பாடுகளும் முற்றி வெடித்த பிறகும், பாசிச பரிவாரங்களின் அங்கமாகவே செயல்பட்ட போலீசும் உளவுத்துறையும் நடத்திய போலி மோதல் படுகொலை உச்சநீதி மன்றத்திலேயே அம்பலப்பட்டு நாடு முழுவதும் நாறிய பிறகும், இந்தப் பஞ்சமா பாதகங்களை செய்த குற்றவாளிகளில் பெரும்பான்மையினர் ஒப்புதல் வாக்குமூலங்கள் அளித்த பிறகும், இறுதியாக இவ்வளவு கொலைபாதகச் செயல்களுக்கும் உரிமை பாராட்டி, மோடியே நியாயப்படுத்திய பிறகும், ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பல் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, குஜராத் சமூகத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்தி, தனக்கென ஒரு கட்டுக்கோப்பான வாக்கு வங்கியை ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. மற்றும் பிற இந்துத்துவ பாசிசக் கும்பல்கள் உருவாக்கித் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. சிறுபான்மையினரான இசுலாமியர்களோ, 2002 படுகொலைகளுக்குப் பிறகு பய பீதியில் சிக்கி, ஜனநாயக உரிமைகள் ஏதுமற்ற அகதிகளாகவே வாழ்கிறார்கள். இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள மக்களோ, அரசியலற்ற பிழைப்புவாதகாரியவாத சகதியில் உழல்கின்றனர். இவர்கள் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வுக்கும் எதிரணியான காங்கிரசுக்கும் இடையில் பெரிய வேறுபாடு எதையும் காண்பதற்கில்லை.

அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அணி தோல்விகளையும் பின்னடைவுகளையும் சந்தித்ததற்கு அத்வானிமோடிராஜ்நாத் போன்ற தலைமை பின்பற்றிய இந்துத்துவ கடுங்கோட்பாட்டுவாதமும், சிறுபான்மையினருக்கு எதிரான கொலைவெறித் தாக்குதல்களும் காரணங்களென்று கருதி அவற்றை மறைத்து வைத்துக் கொண்டு, ஒரு மென்மையான இந்துத்துவ கோட்பாட்டை முன்தள்ள வேண்டுமென்ற கருத்து இந்து பாசிச பரிவாரங்களிலேயே எழுந்திருந்தது. அதனால்தான் மோடி கும்பல் தனது வழக்கமான இசுலாமிய எதிர்ப்பு பாசிச வெறிப் பிரச்சாரத்திற்கு பதிலாக, ""குஜராத் வளர்ச்சி'' என்ற பிரச்சினையை முன்னிறுத்தி பிரச்சாரத்தை தொடங்கியது. ஆனால் மதச் சார்பற்ற சக்திகளோடு சேர்ந்து ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. பாசிச பரிவாரங்களுக்கு எதிராக கடுந்தாக்குதல் தொடுப்பதற்குப் பதிலாக, குஜராத்தின் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரசு தானும் ஒரு மிதவாத இந்துத்துவ நிலை எடுத்தது. குறிப்பாக மோடி தலைமையிலான பாசிச பரிவாரங்களின் கிரிமினல் குற்றங்களுக்கெதிராக மத்திய ஆட்சியாளர்கள் என்ற முறையில் நடவடிக்கை எடுக்கத் தவறியதோடு, ஜனநாயக சக்திகளும் மனித உரிமை ஆர்வலர்களும் அதற்கான முயற்சியை மேற்கொண்டபோதும் பாராமுகமாகவே இருந்தது. ""டெகல்கா'' ஏட்டின் அம்பலப்படுத்துதல்கள் வெளியான பிறகும், அது ""பா.ஜ.க.டெகல்கா கூட்டுச் சதி'' என்ற நிலை எடுத்தது. கிரிமினல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வேலையை செய்தது. அதற்கு முக்கியக் காரணம் அந்தக் கிரிமினல் குற்றவாளிகளில் பலர் இப்போது காங்கிரசு அணியில் இருக்கின்றனர்.

இவ்வாறு இந்துத்துவ பாசிச பரிவாரங்களின் வெற்றிக்குக் காரணங்கள் என்னவாக இருந்தாலும், அதன் விளைவுகள் குஜராத்தை மட்டும் பாதிப்பதாக இருக்காது. நாடு முழுவதும் அதன் பாசிச வெறியாட்டத்தை புதிய வேகத்துடன் நடத்தும். கிழக்கே ஒரிசாவில் கிறித்துவ சபைகளைத் தாக்குவதிலிருந்து இது ஆரம்பத்திருக்கிறது. அதன் வெற்றி சோஜெயா முதலிய வழமையான கூட்டாளிகளை மட்டுமல்ல; இராமதாசு, வைகோ போன்ற பிழைப்புவாத சந்தர்ப்பவாத சக்திகளையும் நெருக்கமாகி விடும். ஆகவே காங்கிரசு இடது முன்னணி ஆகிய மிதவாத இந்துத்துவ மற்றும் போலி மதச்சார்பற்ற கூட்டணியை நம்பிக் கொண்டிராமல், உண்மையான மதச்சார்பற்ற சக்திகள் முன்பை விட மூர்க்கமான கூடுதல் வேகத்துடன் இந்துத்துவ பாசிச பரிவாரங்களை எதிர்த்துப் போரிடாமல் அவற்றை வீழ்த்த முடியாது.

Sunday, March 30, 2008

நன்றி கெட்ட சமூகமே! ! நீ மூகஞ்சுழிக்கும் மலக்குழிக்குள் மூழ்கிச் சாகும் இவர்களும் மனிதர்களே!

நன்றி கெட்ட சமூகமே!
நீ மூகஞ்சுழிக்கும் மலக்குழிக்குள் மூழ்கிச் சாகும்
இவர்களும் மனிதர்களே!


கொலைகள், நாளும் தொடரும் படுகொலைகள். ஒருவரல்ல, இருவரல்ல; ஆண்டுக்கு ஏறத்தாழ 22,327 தாழ்த்தப்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இது, ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை அல்ல. நாடெங்கும் பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றும்போது நச்சுவாயு தாக்கி, மூச்சுத் திணறி மாண்டு போகும் துப்புரவுத் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கைதான் இது.


காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் குவிக்கப்பட்டுள்ள அரசு பயங்கரவாத போலீசு, இராணுவ, துணை இராணுவப் படையினரில், 1990 முதல் 2007 மார்ச் மாதம் வரை மாண்டு போனவர்களின் எண்ணிக்கை 5100 பேர். பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மாண்டு போன அச்சிப்பாய்களின் குடும்பத்தாருக்கு நிவாரணமும் கருணைத் தொகையும் ஓய்வூதியமும் பதக்கங்களும் அரசால் வழங்கப்படுகிறது. ஆனால், ஆண்டுக்கு ஏறத்தாழ 22,000 பேர் துப்புரவுப் பணியாற்றும்போது மாண்டு போகிறார்கள். அவர்களது குடும்பத்தாருக்கு நிவாரணமோ, உதவிகளோ செய்யப்படுவதில்லை.

கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், அரியானா மாநிலத்தின் ஹல்தேரி கிராமத்தில் 50 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 6 வயதான குமார் காஷ்யப் என்ற சிறுவனை மீட்க இராணுவப் படை விரைந்தது. மீட்புப் பணியைப் பார்வையிட மாநில முதல்வர் ஹூடா, அமைச்சர்கள், எம்.பி.க்கள் அங்கே குவிந்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அச்சிறுவன் மீட்கப்பட்டதை தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்புச் செய்தன. நாளேடுகள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. மீட்கப்பட்ட அச்சிறுவனுக்கு ரூ. 7 இலட்சம் பெறுமான பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால், பாதாள சாக்கடையில் இறங்கி அடைப்புகளை நீக்கும்போது நச்சுவாயு தாக்கி தத்தளிக்கும் துப்புரவுத் தொழிலாளியை மீட்க எந்த இராணுவமும் வருவதில்லை. இராணுவம் கிடக்கட்டும்; தீயணைப்புப் படையின் மீட்புக் குழுகூட வருவதில்லை. எந்த அமைச்சரும் எட்டிப் பார்ப்பதில்லை. மாண்டுபோன துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணமும் இல்லை.

மனிதக் கழிவுகள், அடுப்பங்கரைக் கழிவுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள், ஆடுமாடுகளின் கழிவுகள், இறைச்சிக்கூட கழிவுகள் என அனைத்தும் பாதாளச் சாக்கடையில் பாய்கின்றன. பெருநகரங்களில் இப்பாதாள சாக்கடைகளில் ஆங்காங்குள்ள மனிதக் குழி மூடிக ளைத் திறந்து வெற்றுடம்புடன் இறங்கி துப்புரவுத் தொழிலாளர் அடைப்புகளை அகற்றுகின்றனர். டெல்லி மாநகரில் ஏறத்தாழ 5600 கி.மீ. நீளத்துக்கு குறுக்கும் நெடுக்குமாக அமைந்துள்ள பாதாள சாக்கடையில் ஒன்றரை லட்சத்துக்கும் மேலான திறப்புக் குழிகள் உள்ளன. சென்னையில் 2800 கி.மீ. நீளத்துக்கு ஏறத்தாழ 80,000க்கும் மேற்பட்ட திறப்புக் குழிகள் உள்ளன. அடைப்புகளை நீக்க துப்புரவுத் தொழிலாளர்கள் அன்றாடம் இக்குழிகளில் இறங்கி மூழ்கி எழுகின்றனர்.

மூழ்கி எழுந்தால் உடலெங்கும் கழிவுகள் படிந்து துர்நாற்றம் குடலைப் புரட்டும். பாதாள சாக்கடையில் மூச்சை அடக்கி மூழ்கும்போது கழிவுகள் உதட்டில் படியும். மீண்டு வெளியே வந்து உடலைக் கழுவிய பிறகும் நாற்றம் அருவருப்பூட்டும். பச்சைத் தண்ணீரைக் குடித்தால் கூட குமட்டும்.

பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு கழிவுகள் அழுகியும் நொதித்தும் பலவகை நச்சு வாயுக்கள் உருவாகின்றன. ஹைட்ரஜன் சல்பைடு எனும் கொடிய நச்சு வாயு மூளைக்குச் செல்லும் பிராண வாயுவைத் தடுத்து மயக்கத்தையும் மரணத்தையும் விளைவிக்கும். மீதேன் என்பது இன்னுமொரு கொடிய நச்சு வாயு. இதுவும் மரணத்தை விளைவிக்கும். இவை தவிர கரியமலவாயு, கார்பன் மோனாக்சைடு முதலான நச்சு வாயுக்களும் துப்புரவுத் தொழிலாளிகளைத் தாக்குகின்றன. வாடையோ நிறமோ இல்லாத சில கொடிய நச்சுவாயுக்களைக் கண்டறியவும் முடியாது. பாதாள சாக்கடையின் மனிதக் குழி எனும் மரணக் குழியில் இறங்கி திடீர் மரணமடைவது மட்டுமின்றி, பெரும்பாலான துப்புரவுத் தொழிலாளர்கள் சுவாசக் கோளாறுகளுக்கும், தோல் நோய்களுக்கும் பலியாகின்றனர்.

""நச்சு வாயு உள்ளதா என்று சோதித்தறிய எங்களுக்கு எவ்வித சாதனமும் வழங்கப்படுவதில்லை. பாதாள சாக்கடையின் மனிதக்குழி மூடிகளைத் திறந்து பார்ப்போம். கரப்பான்பூச்சிகள் ஓடினால் பிரச்சினை இல்லை. அவை செத்துக் கிடந்தால் அபாயம். இதுதான் நச்சுவாயு உள்ளதா என்பதைக் கண்டறிய நாங்கள் வைக்கும் சோதனை. கரப்பான் பூச்சிகள் செத்துக் கிடந்தால் நச்சுவாயு உள்ளதாகத் தீர்மானித்து, சிறிது நேரம் மூடியைத் திறந்து வைத்துவிட்டு, பின்னர் குழியில் இறங்குவோம்'' என்கிறார் கிருஷ்ணையா என்ற துப்புரவுத் தொழிலாளி.

""நாங்கள் குழியில் இறங்கி, தீக்குச்சியைப் பற்ற வைத்து கீழே பிடித்துப் பார்ப்போம். தீக்குச்சி சுடர்விட்டு எரிந்தால் நச்சுவாயு உள்ளதாக முடிவு செய்து, சிறிது நேரம் மூடியைத் திறந்து வைத்துவிட்டு குழியில் இறங்குவோம்'' என்று இன்னுமொரு சோதனை முறையைக் கூறுகிறார் முனியசாமி என்ற தொழிலாளி.

மூங்கில் குச்சிகள்தான் அடைப்புகளை நீக்க துப்புரவுத் தொழிலாளிகளுக்குத் தரப்படும் சாதனம். சில நேரங்களில் இரும்புக் கம்பிகள் தரப்படும். ""குழியினுள் மூழ்கி மூச்சை அடக்கி மூங்கில் குச்சியால் குத்தி அடைப்புகளை உடைக்கும்போது, திடீரென உடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் வெள்ளமெனப் பாய்ந்து எங்களை இழுத்துச் சென்றுவிடும். எதிர்நீச்சல் போட்டு எழமுடியாமல் மாண்டவர்கள் ஏராளம்'' என்கிறார் டெல்லியைச் சேர்ந்த சதீஷ் என்ற துப்புரவுத் தொழிலாளி.

பாதாள சாக்கடைக்குள் இறங்கும் துப்புரவுத் தொழிலாளிக்கு கயிறு மட்டும்தான் பாதுகாப்புச் சாதனமாகத் தரப்படுகிறது. கயிறை இடுப்பில் கட்டிக் கொண்டு பாதாள சாக்கடைக்குள் மூழ்கும் தொழிலாளி அபாயம் ஏற்படும்போது கயிறை அசைத்தால், மேலே கயிறைப் பிடித்துக் கொண்டிருக்கும் மற்றொரு தொழிலாளி அவரை இழுத்து மேலே தூக்குவார். ""பல நேரங்களில் மாண்டு போன சக தொழிலாளியின் பிணத்தைத் தூக்குவதற்குத்தான் இந்தக் கயிறு பயன்பட்டிருக்கிறது'' என்று விம்முகிறார் இராமையா என்ற தொழிலாளி.

ஆனால், மேலைநாடுகளிலும் தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் துப்புரவுத் தொழிலாளிக்கு சாக்கடைக் கழிவுகள் உடலில் படாதிருக்க கவச உடைகள் தரப்படுகின்றன. மூச்சுக் கவசங்கள், கைகால்களுக்கான தனிச்சிறப்பான உறைகள் தரப்படுகின்றன. பாதாள சாக்கடையில் துப்புரவுத் தொழிலாளி இறங்குமுன் நச்சுவாயு உள்ளதா என்று நவீன கருவிகளைக் கொண்டு சோதிக்கப்படுகிறது. குழியில் இறங்கியதும் எந்திர விசிறி மூலம் காற்றோட்டம் உருவாக்கப்படுகிறது. துப்புரவு தொழிலாளிக்கென தனிப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்த பின் ஒவ்வொரு தொழிலாளியும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

ஆனால், இந்தியாவில், கயிறுதான் துப்புரவுத் தொழிலாளிக்குத் தரப்படும் பாதுகாப்புக் கவசம். இத்தொழிலுக்கென எவ்வித சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டோர் என்பதாலேயே துப்புரவுத் தொழிலாளிகள் நம் நாட்டில் நரபலி கொடுக்கப்படுகிறார்கள். டெல்லி குடிநீர்வடிகால் வாரியத்தில் மட்டும் கடந்த 2005ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் 200 துப்புரவுத் தொழிலாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்த தொழிலாளிகளில் 95% பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கும் மேற்பட்டோர் கண்நோய்கள், தோல் நோய்கள், சுவாசக் கோளாறு, மஞ்சள் காமாலை நோய்களுக்கும் ஆளாகியுள்ளனர். ஓய்வு பெறுமுன்னரே பெரும்பா லான தொழிலாளிகள் நோய் தாக்கி மரணமடைகின்றனர். சராசரியாக 45 ஆண்டுகள்தான் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் வாழ்க்கைக் காலமாக உள்ளது. அபாயகரமான இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளிக்கு சம்பளத்தோடு பேரிடர் உதவித் தொகையாக ரூ. 50 முதல் ரூ. 200 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்தியாவில் துப்புரவுத் தொழிலாளிகள் அற்பக் கூலிக்கு உயிரைப் பணயம் வைத்து பாதாளச் சாக்கடையில் இறங்கும் அதேநேரத்தில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் துப்புரவுத் தொழிலாளர்கள் பாதுகாப்புக் கவசங்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டு மாதத்துக்கு ஏறத்தாழ ரூ. 1 லட்சம் ஊதியம் பெறுகிறார்கள். ஆறு மாதங்களில் இச்சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் நிரந்தரம் செய்யப்பட்ட துப்புரவுத் தொழிலாளிக்கு மாதம் ரூ. 12,000 கூட ஊதியமாகக் கிடைப்பதில்லை. ""எல்லா பாதுகாப்புக் கவசங்களுடன் ரூ. 50,000 வரை சம்பளம் கொடுத்தாலும் பார்ப்பனர்களும் ஆதிக்கச் சாதியினரும் இத்தொழிலைச் செய்ய முன்வர மாட்டார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினர் மட்டுமே இத்தொழிலை நிர்ப்பந்தமாகச் செய்யுமளவுக்கு இங்கே தீண்டாமை புரையோடிப் போயுள்ளது'' என்று வேதனையுடன் குறிப்பிடுகிறார், தாழ்த்தப்பட்ட வால்மீகி சங்கப் பிரமுகரான புருசோத்தமன் வகேலா.

""ஏதோவொரு கம்பெனியின் ஆதாயத்துக்காக டெல்லி மாநகராட்சி 50 பாதுகாப்புக் கவசங்களை வாங்கியது. இங்கு நாங்கள் 800 பேருக்கு மேல் இருக்கும்போது, யார் இதை அணிய முடியும்? மேலும் அதன் எடையோ 18 கிலோ. இது தவிர வாயுக்கலன் எடையோ 13 கிலோ. இவற்றைச் சுமந்துக் கொண்டு சாக்கடை குழியில் இறங்கினால், மீண்டு வர முடியாமல் அங்கேயே சமாதி ஆக வேண்டியதுதான்'' என்று பாதுகாப்புக் கவசங்களின் யோக்கியதையும் அரசின் அலட்சியத்தையும் சாடுகிறார் டெல்லியைச் சேர்ந்த துக்காராம் என்ற தொழிலாளி.

ஆனால் அரசோ, நாங்கள் பாதுகாப்புக் கவசம் வழங்கியும் கூட, அவற்றைத் துப்புரவுத் தொழிலாளிகள் பயன்படுத்துவதில்லை என்று பழிபோட்டு தப்பித்துக் கொள்கிறது. இதேபோல அடிக்குழாய் மூலம் சேற்றை உறிஞ்சும் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு, நம் நாட்டு பாதாள சாக்கடைகளுக்குப் பொருத்தமில்லாததால் துருப்பிடித்து கிடக்கின்றன.

தனியார்மயக் கொள்கை தீவிரமாக்கப்பட்ட பிறகு, பல மாநகராட்சிகளில் துப்புரவுப் பணிகள் தனியாருக்குக் கையளிக்கப்பட்டுள்ளன. இத்தனியார் நிறுவனங்கள் அற்பக் கூலிக்கு ஒப்பந்தத் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தி கொழுத்த ஆதாயமடைகின்றனவே தவிர துப்புரவுத் தொழிலாளிக்கு எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்வதில்லை. ஆபத்தான பாதாள சாக்கடைப் பணிகளில் இறங்கி துப்புரவுத் தொழிலாளி மாண்டு போனால், அற்பத் தொகையை நிவாரணமாகக் கொடுப்பதற்கு மேல் அவை வேறொன்றும் செய்வதில்லை. ஒப்பந்தத் தொழிலாளி என்பதால் வழக்கு விசாரணையும் நடப்பதில்லை. அரசோ இது ஒப்பந்த நிறுவனத்துக்கும் தொழிலாளிக்குமான தாவா என்று கூறி, கை கழுவிக் கொள்கிறது. கடந்த மார்ச் 2006லிருந்து ஆகஸ்ட் 2007 வரை டெல்லியில் 14 துப்புரவுத் தொழிலாளிகள் பாதாள சாக்கடையில் இறங்கி வேலை செய்யும்போது மாண்டு போயுள்ளனர். இவர்களில் 12 பேர் ஒப்பந்தக் கூலிகள். இவர்களது குடும்பத்தாருக்கு எவ்வித நிவாரணமும் இன்றுவரை கிடைக்கவில்லை.

ஒப்பந்ததாரர்கள் மூலம் துப்புரவுத் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்று ஏற்கெனவே குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், நாடெங்கும் ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவுப் பணியே விரிவடைந்து வருகிறது. இத்தகைய ஒப்பந்த முறையானது, துப்புரவுத் தொழிலாளிகளின் உயிரைப் பறிப்பதோடு, நிரந்தரத் தொழிலாளிகளின் வேலையையும் பறிக்கிறது. சென்னை மாநகராட்சி, 2003ஆம் ஆண்டில் பாதாள சாக்கடைத் துப்புரவுப் பணியை ஒரு கோடி ரூபாய் ஏலத்துக்கு கே.கே.குமார் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் கையளித்தது. அத்தனியார் நிறுவனமோ பாதாள சாக்கடையில் மூழ்கி மூச்சை அடக்கி நீந்திச் சென்று அடைப்புகளை நீக்கும் தனிச்சிறப்பான நீச்சல் பணியாளர்கள் 250 பேரை வேலையிலிருந்து நீக்கிவிட்டு, அற்ப கூலிக்கு அவர்களை ஒப்பந்தக் கூலிகளாக்கியுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பைத் துச்சமாக மதிப்பது ஒருபுறமிருக்க, தான் இயற்றிய சட்டத்தையே இந்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டு, துப்புரவுத் தொழிலாளிகளான தாழ்த்தப்பட்டோரை நாயினும் கீழானவர்களாகவே நடத்தி வருகிறது. மனித மலத்தைத் தலையில் சுமப்பது, உலர் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது ஆகியன 1993ஆம் ஆண்டில் இந்திய அரசால் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. இச்சட்டத்தை மீறினால், ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ. 2,000 அபராதமும் விதிக்கப்படும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்கும் தொடரப்படும். இருப்பினும் மலம் அள்ளும் துப்புரவுப் பணி இந்திய அரசாலேயே சட்டவிரோதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

நாட்டின் மிகப் பெரிய அரசுத்துறை நிறுவனமான இரயில்வே துறையில் மலம் அள்ளும் தொழில் இன்னமும் வெளிப்படையாகவே நடந்து வருகிறது. இரயில்வே துறையில் ஏறத்தாழ 14,500 ரயில் பெட்டிகளில் பழங்கால முறையிலான கழிவறைகளே நீடிக்கின்றன. ரயில் நின்ற பிறகுதான் பயணிகள் கழிப்பறைக்குச் செல்வதால் ரயில் நிலையங்கள் மலக்காடாகின்றன. மனிதர்கள் மலம் அள்ள சட்டபூர்வமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ள போதிலும், 6856 ரயில் நிலையங்களில் தாழ்த்தப்பட்டோரான துப்புரவுத் தொழிலாளிகளே மலம் அள்ளும் வேலையைச் செய்கின்றனர். இக்கொடுமைக்கு எதிராக பல்வேறு அமைப்புக ளும் பலமுறை போராடிய போதிலும், வழக்கு தொடுத்த போதிலும் அரசு அசைந்து கொடுக்கவில்லை. ரயில் பெட்டிகளில் நவீன கழிப்பறைகளை அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றும், அதிக செலவு பிடிப்பதால் திட்டம் தாமதமாகிறது என்றும் பசப்பி வருகிறது இரயில்வே துறை.

இரயில்வே துறையிலேயே சட்டவிரோதமாக இக்கொடுமை தொடரும்போது, நகராட்சிகள் பஞ்சாயத்துக்களின் நிலைமை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. துடப்பம், இரும்புவாளி, தகர முறத்தோடு இன்னமும் துப்புரவுத் தொழிலாளிகள் மனித மலத்தை அள்ளும் கொடுமை பல மாநிலங்களில் கேள்விமுறையின்றித் தொடர்கிறது. நாடெங்கும் ஏறத்தாழ 13 லட்சம் தாழ்த்தப்பட்டோர் மனித மலம் அள்ளுவதைச் செய்து வருவதாக துப்புரவுத் தொழிலாளர் சங்கம் (சஃபய் கரம்சாரி அந்தோலன் குஓஅ) கூறுகிறது. இச்சட்டவிரோத சமூகக் கொடுமைக்கு எதிராக இச்சங்கம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, எல்லா மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், மனித மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளி என்று யாருமே இல்லை என்றும் கூசாமல் புளுகின. மேலும், மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்டு வந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வும் மாற்று வேலைவாய்ப்பும் செய்யப்பட்டதாகவும் அவை கணக்குக் காட்டி ஏய்த்தன.

இரயில்வே முதற்கொண்டு நகராட்சிகள் பஞ்சாயத்துகள் வரை மலம் அள்ளுவது உள்ளிட்ட துப்புரவுப் பணிகள் தனியார்மயமாக்கப்பட்டு வருவதால், மைய அரசும் மாநில அரசுகளும் தாங்கள் மலம் அள்ளும் தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்தவில்லை என்று கூறி மோசடி செய்கின்றன. மேலும், துப்புரவுப் பணி என்பது மாநில அரசின் பொறுப்பு என்கிறது மைய அரசு. இதன்படி மலம் அள்ளுவதும் துப்புரவுப் பணிதான் என்பதாகச் சுருக்கி, இச்சமூகக் கொடுமையை சாதாரண துப்புரவு சுகாதாரப் பிரச்சினையாகச் சுருக்கி விட்டது மைய அரசு.

மனித மலத்தை அள்ளும் தொழிலுக்குத் தடைவிதித்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்று வரை இச்சமூகக் கொடுமை தொடர்ந்த போதிலும், இதுவரை ஒரு வழக்கைக் கூட அதிகார வர்க்கமோ, போலீசோ பதிவு செய்யவில்லை. இச்சட்டம் வெறும் காகிதச் சட்டமாகவே உள்ளது. துப்புரவு அதிகாரி, சுகாதார அதிகாரி, மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடமே இச்சட்டத்தின்படி கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ளது. இந்நிலையில், மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளியால் புகார் மட்டும்தான் கொடுக்க முடியும். அரசு எந்திரத்தில் உள்ள சாதிவெறி கொண்ட அதிகார வர்க்கம் இத்தகைய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவது இன்னுமொரு மூட நம்பிக்கைதான்.

மலம் அள்ளும் இழிதொழிலிலிருந்து மீண்டு வேறு தொழில் செய்து பிழைக்க தாழ்த்தப்பட்டோர் முயுற்சித்தாலும், பார்ப்பன இந்துமத சாதியக் கட்டுமானம் அவர்களை மீண்டும் பழிவாங்குகிறது. அரியானா மாநிலத்தின் ரோடக் மாவட்டத்தைச் சேர்ந்த சுமித்ரா தேவி எனும் இளம் பெண், சில சமூக ஆர்வலர்களின் உதவியுடன் மலம் அள்ளும் இழிதொழிலிலிருந்து மீண்டு, வங்கியில் கடன் பெற்று கிராமத்தில் துணி வியாபாரம் செய்தார். பிணங்களின் மீது இறுதியாகப் போர்த்தப்படும் துணிகளைக் களவாடி அவர் துணி வியாபாரம் செய்வதாக ஆதிக்க சாதியினர் வதந்தியைப் பரப்பி, அவரது வியாபாரத்தையே முடமாக்கினர். நட்டமடைந்த அவர் வியாபாரத்தை விட்டு, வேறு வழியின்றி இப்போது மீண்டும் மலம் அள்ளும் தொழிலையே செய்கிறார்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மொகஞ்சதாரோ ஹாரப்பா நாகரிக காலத்தில் கூட, ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு, செங்கற்களிலான கால்வாய் மூலம் கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளன என்பதை அகழ்வாராய்ச்சிகள் நிரூபித்துக் காட்டுகின்றன. ஆனால் தொழில்நுட்பப் புரட்சி நடக்கும் இன்றைய நவீன காலத்தில் இன்னமும் நம்நாட்டில் மனித மலத்தை அள்ளும் கொடுமை தொடர்கிறது. நாடெங்கும் நவீன கழிப்பறைகளைக் கட்டியமைத்து இக்கொடுமையைத் தடுத்து நிறுத்த, போதிய நிதி இல்லை என்று அரசு வாதிடுவது மிகப் பெரிய மோசடி. சந்திரனுக்கு விண்கலம் அனுப்ப ""சந்திராயன் ஐஐ'' திட்டத்துக்கு ரூ. 386 கோடியை அரசு வாரியிறைக்கிறது. ஆனால், மலம் அள்ளும் கொடுமையை நிறுத்தவும், பாதாள சாக்கடைகளை நவீனப்படுத்தி துப்புரவுத் தொழிலாளர்கள் நரபலி கொடுக்கப்படுவதைத் தடுக்கவும் மட்டும் நிதியில்லையாம்!

ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்தின் கீழ் கடந்த ஏழாண்டுகளில் ரூ. 1,20,536 கோடிகளை நகராட்சிகளுக்கும் உள்ளூராட்சிகளுக்கும் மைய அரசு வாரியிறைத்துள்ளது. இதில் ஏறத்தாழ 40% தொகை வடிகால்கள், பாதாள சாக்கடைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீண்டும் பழைய வழியிலான பாதாளச் சாக்கடைக் குழாய்களும் மனிதக் குழிகளும் அமைக்கப்படுகின்றனவே தவிர, துப்புரவுத் தொழிலாளிகளின் பாதுகாப்புக்காக சல்லிக்காசு கூட செலவிடப்படுவதில்லை. ஏனெனில், அருவருப்பான ஆபத்தான தொழில் என்றாலும், பாதாள சாக்கடையைத் துப்புரவு செய்ய மலிவான உழைப்புக்கு தாழ்த்தப்பட்டோர் இருக்கிறார்கள் என்கிற அரசின் சாதியத் திமிர் தான் இதற்குக் காரணம்.

அதிகார வர்க்கம், போலீசுஇராணுவம், நீதித்துறை அடங்கிய இன்றைய அரசு எந்திரம்தான், சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் எதிராக மலம் அள்ளும் தொழிலில் தாழ்த்தப்பட்டோரை நிர்பந்தமாகத் தள்ளுகிறது. எவ்விதப் பாதுகாப்போ நிவாரணமோ இன்றி, பாதாள சாக்கடைதுப்புரவுத் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்டோரை தொடர்ந்து நரபலி கொடுத்து வருகிறது. அவர்களை அறிந்தே தீராத கொடிய நோய்களில் தள்ளி வதைக்கிறது. தாழ்த்தப்பட்டோருக்கென்றே இத்தொழிலை ஒதுக்கி பார்ப்பன சாதியக் கட்டுமானத்தைக் கட்டிக் காக்கிறது. தீண்டாமைக்கும், தொடரும் இக்கொடுமைக்குமான முதல் குற்றவாளியே இன்றைய அரசமைப்புதான்.

கிஞ்சித்தும் மனிதாபிமானமின்றி சாதியத் திமிர் கொண்ட இக்கேடுகெட்ட அரசமைப்பை வீழ்த்தாமல் துப்புரவுத் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்டோர் நரபலியாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திட முடியாது. உழைக்கும் மக்களின் புரட்சிகர அரசை நிறுவாமல் மனித மலம் அள்ளும் சமூகக் கொடுமைக்கு முடிவு கட்டவும் முடியாது.

· பாலன்

பள்ளி மாணவர் வன்முறை: நுகர்வு வெறியில் பிறக்கும் கொலைவெறி


பள்ளி மாணவர் வன்முறை:

நுகர்வு வெறியில் பிறக்கும் கொலைவெறி


சம்பவம் 1. தெற்கு தில்லி, அரியானா எல்லையில் இருக்கும் குர்கான் நகரம். அங்கு யூரோ சர்வதேசப் பள்ளியில் அவினாஷ், வினய் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அதே வகுப்பில் படிக்கும் அபிஷேக் தியாகியுடன் தகராறு வருகிறது. அவினாஷின் அப்பா ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டி அருகில் தயார் நிலையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, அவினாஷ், வினய் இருவரும் அபிஷேக்கைச் சுட்டுக் கொல்கிறார்கள்.

சம்பவம் 2. பெங்களூர் நகரம். ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் அந்த மாணவனது வீடு, பள்ளிக்கு அருகில்தான் இருக்கிறது. வீட்டு மொட்டை மாடியில் ஏர் கன்னால் சுட்டுப் பழகுவது, இம்மாணவனது பொழுதுபோக்கு. அப்பா பொறியியலாளர். அம்மா மருத்துவர். இம்மாணவனை கன்னட வழி வகுப்பில் படிக்கும் இரு மாணவர்கள் கேலி செய்தார்களாம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மாணவன், வீட்டின் மொட்டை மாடியிலிருந்து பள்ளி முடிந்து வரும் அந்த இரு மாணவர்களையும் துப்பாக்கியால் சுடுகிறான். இருவரும் சாகவில்லை என்றாலும், காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள்.
சம்பவம் 3. உத்திரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டம் மெத்னாரா கிராமத்தைச் சேர்ந்த அதர் சிங் +2 படிக்கும் மாணவன். உடன் படிக்கும் விபன் எனும் மாணவனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான். ""தங்கையை கேலி செய்யாதே எனப் பலமுறை எச்சரித்தும் கேட்காததால் விபனைச் சுட்டுக் கொன்றேன் '' என அதர் சிங் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் 4. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் திருச்செங்கோடு நகரம். அங்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ரஞ்சித் +2 படிக்கிறான். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட ரஞ்சித், புது மட்டை வாங்குவதற்கு பெற்றோர்களை நச்சரித்துப் பணம் வாங்குகிறான். லோகநாயகி என்ற வயதான பெண்மணி நடத்தும் விளையாட்டு பொருட்கள் விற்பனையகத்துக்கு செல்லும் ரஞ்சித், அங்கு பல மட்டைகளைப் பார்த்தும் திருப்தியடையவில்லை. தனது நேரத்தை வீணடிப்பதாக அவனிடம் லோகநாயகி நொந்து கொள்கிறார். இதை ஒரு பெரிய அவமானமாக எடுத்துக்கொண்ட ரஞ்சித், அந்தப் பெண்மணியைப் பழிவாங்க நினைக்கிறான். அவனது தாத்தா கந்தசாமி, தி.மு.க.வில் இரு முறை சட்டமன்றப் பதவிக்குப் போட்டியிட்டவர். வீட்டில் ஒரு வெளிநாட்டு கைத்துப்பாக்கியை வைத்திருக்கிறார். அதை எடுத்துக் கொண்ட ரஞ்சித், இருநாட்கள் கழித்து லோகநாயகி அம்மாளைச் சுட்டுப் படுகாயப்படுத்துகிறான். அந்தப் பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.


···

இந்நான்கு சம்பவங்களும், கடந்த சில மாதங்களில் நடந்து பத்திரிக்கைகளில் பதிவானவை. மாணவர் மத்தியில் நடக்கும் இது போன்ற துப்பாக்கிச்சூடு நிகழ்வுகளுக்கு புகழ்பெற்ற நாடு அமெரிக்காதான். கடந்த பிப்ரவரி மாதத்தில் இலியானாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவன் ஒருவன் சுட்டு, 5 மாணவர்கள் இறந்திருக்கின்றனர். இந்த அமெரிக்கப் பாணி வன்முறை இந்தியாவிலும் வந்து விட்டதா என்று சிலர் அதிர்ச்சியடையலாம். வாழ்க்கை, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் அத்தனையும் அமெரிக்கமயமாகி வரும் போது, வன்முறை மட்டும் விதிவிலக்கா என்ன? அமெரிக்கா அளவுக்கு இங்கே துப்பாக்கிகள் மலிவாகப் பரவவில்லையே தவிர, வன்முறை அதன் தன்மையளவில் மாணவர்களிடையே சமீப காலமாகப் பரவித் தான் வருகிறது.

இது சமூக அநீதிக்கு எதிராகக் கலகம் செய்யும் மாணவப் பருவத்திற்கேயுரிய போராட்ட வன்முறையல்ல; ஆடம்பரத்திற்காகவும், அற்பப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் துப்பாக்கி எடுக்கும் தனிநபர் வன்முறை. மேற்கண்ட சம்பவங்களில் வன்முறையின் கருவி துப்பாக்கியாக இருப்பதினாலேயே போலீசும், பத்திரிக்கைகளும் விசேடமாகப் பார்க்கின்றன. உண்மையில் துப்பாக்கியல்ல பிரச்சினை. விடலைப் பருவத்தின் வன்முறை மனோபாவம்தான் பிரச்சினை.

2006 டிசம்பர் மாதத்தில், சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் 13 வயதே நிரம்பிய அரவிந்த் என்ற சிறுவன் அவனது தெரு நண்பர்களாலேயே கொல்லப்படுகிறான். புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பணமில்லாததால், அரவிந்தை பணையக் கைதியாகக் கடத்தி, அவனுடைய அப்பாவிடமிருந்து தேவைப்பட்ட பணத்தைக் கறந்து விடலாம் என்று திட்டமிடுகிறார்கள். திட்டம் குளறுபடியாகி, அம்மாணவன் கோரமாகக் கொல்லப்படுகிறான். இதே காலத்தில் ஆடம்பர, கேளிக்கை வாழ்விற்காகப் பணம் திரட்ட நினைத்த மூன்று ஏழை மாணவர்கள், ஒரு நகைக் கடையைக் கொள்ளையடிக்க முயன்றபோது பிடிபட்டார்கள்.

இப்படிப் பரபரப்பிற்காகப் பத்திரிகைகளில் வெளிச்சமிடப்படும் சம்பவங்கள் பல இருந்தாலும், இவை எங்கோ ஒரு வீட்டில் நடப்பதாகவும், நம் வீட்டில் பிரச்சினையில்லை என்று பல பெற்றோர்கள் சுயதிருப்தி கொள்ளலாம். வன்முறையின் கடும் தருணங்கள் இங்குதான் வெடிக்கவேண்டுமென்று திட்டமிட்டுக் கொள்வதில்லை. அவை எங்கும் எப்போதும் நடக்கலாம். அதற்குத் தோதாக விடலைப் பருவ மாணவ வாழ்க்கை தயாராகி வருகிறது. அதில் நம் வீட்டுப் பையனும் இருக்கிறான் என்பதைப் பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை.


···

ஓரிரு தலைமுறைகளுக்கு முன்பு இருந்ததை விட, மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை வெகுவாக மாறிவிட்டது. முன்பு ஆடம்பரமாகக் கருதப்பட்டவை, இன்று அத்தியாவசியமானவையாக மாறிவிட்டன. எல்லா வேலைகளுக்கும் நவீனக் கருவிகள்; அது போக வேலையாட்கள், குளிர்பதனக் கருவி, கார், இருசக்கர வாகனங்கள், செல்பேசிகள், பீட்ஸா, பர்கர் என்று மாறிவிட்ட உணவுப் பழக்கம், குடும்ப உறுப்பினராக மாறிவிட்ட தொலைக்காட்சி, வார இறுதியில் எல்லையில்லா கேளிக்கைகள் ...

இலட்சக்கணக்கான விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிவரும் புதிய பொருளாதாரக் கொள்கைதான், நடுத்தர வர்க்கத்தை இப்படியொரு "மகிழ்ச்சியான வாழ்க்கைக்குள்' பிடித்துத் தள்ளியிருக்கிறது. மற்றவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட வாழ்க்கையை, நவீன வசதிகளாக மாற்றித் தந்திருக்கும் உலகமயமாக்கம் உருவாக்கியிருக்கும் இந்த வாழ்க்கையின் தன்மைதான் என்ன? எல்லா வகை உடலுழைப்பையும், சமூக உறவுகளையும் ரத்து செய்துவிட்டு, கேளிக்கை, நுகர்வு ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓடும் இந்த வாழ்க்கை, சிறார்களின் உலகை என்னவாக மாற்றியிருக்கிறது?


வன்முறை கற்றுத்தரும்
கார்ட்டூன் தொடர்கள்!

குழந்தைகளுக்கு விருப்பமான கார்ட்டூன் சேனல்கள் இன்று தமிழிலேயே வந்து விட்டன. பள்ளிக் கல்விக்கு ஆங்கிலமும், பொழுது போக்குவதற்கு மட்டும் தமிழ் என்பது ஒரு முரண்பாடாகத் தோன்றலாம். குழந்தைகள் மனதை தாய்மொழியில்தான் கொள்ளை கொள்ள முடியும் என்பது அந்தச் சேனல்களைச் சந்தைப்படுத்தும் முதலாளிகளுக்குத் தெரியும்; சுட்டி டி.வி.யையும், தமிழ் ஜெட்டிக்ஸையும் சிறார்கள் நீண்ட நேரம் வெறித்துப் பார்க்கிறார்கள். அப்படிப் பார்ப்பதற்காகவே விரும்பிக் காத்திருக்கிறார்கள். அதற்காகவே வீட்டுப் பாடத்தை விரைந்து முடிக்கிறார்கள். அவர்களது கற்பனை உலகை கார்ட்டூன்களும், யதார்த்த உலகை கார்ட்டூன்களுக்கு இடையில் வரும் விளம்பரங்களும் கட்டியமைக்கின்றன. ஆசை தோற்றுவிக்கும் ஏக்கத்திற்கும், அது நிறைவேற தடையாக இருக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இந்த மாய உலகின் முரண்பாட்டில்தான் இளம்பருவத்து மாணவர்கள் உலவுகிறார்கள்.

பவர் ரேன்ஜர்ஸ் அவர்கள் விரும்பிப் பார்க்கும் ஒரு தொடர். கிராபிக்ஸ் உதவியோடு வண்ணச் சிதறலாகத் தெறிக்கும் இத்தொடரில் அடிப்பது, வெட்டுவது, சுடுவது, வெடிப்பது எல்லாம் நொடிக்கொரு தடவை நடக்கிறது. நமக்கு ஓரிரு நிமிடங்களில் சலித்துப் போகும் இத்தொடர், அவர்களுக்குச் சலிப்பதில்லை. கிராஃபிக்ஸ் இல்லாமல், நிஜத்தில் மாமிச மலைகள் மோதும் டபிள்யூ.டபிள்யூ. எஃப் மல்யுத்தச் சண்டைகளும் ஜெட்டிக்சில் காண்பிக்கப்படுகின்றன. வகை தொகையில்லாமல் மனிதர்கள் அடித்துக் கொள்ளும் இந்த வன்முறைக் காட்சிகளைத் தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

சக மனிதன் அடிபட்டாலோ, இரத்தம் சிந்தினாலோ, இறந்து போனாலோ அதிர்ச்சியடைவது மனித இயல்பு. சிறார்களின் உலகில், இந்த உள்ளார்ந்த மனித மதிப்பீடுகள் நமத்துப் போகின்றன. வன்முறை குறித்த இரக்கமோ, பயமோ இல்லாதது மட்டுமல்ல, அவர்களே அதைச் செயல்படுத்துபவர்களாகவும் மெல்ல மெல்ல மாறுகிறார்கள். அற்பப் பிரச்சினைகளாக இருந்தால் கூட, அதை வன்முறை மூலம் தீர்த்துக்கொண்டு இறுதி வெற்றி அடையவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். விளைவறியாத இளங்கன்றுகளாக இருப்பதால், இத்தகைய வன்முறை அவர்களது ஆளுமையின் அங்கமாகிறது.

விலங்குகளையும் இயற்கையையும் நேரில் கண்டு கற்கவேண்டிய வயதில், மிக்கி மவுசின் பொருளற்ற வேடிக்கைகளில் காலந்தள்ளுகிறார்கள் சிறார்கள். அதிலும் விலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்படும் கார்ட்டூன் தொடர்கள், இப்போது அருகி வருகின்றன. சண்டைக் காட்சிகளை மையமாக வைத்து எடுக்கப்படும் அதிதீவிர வீரர்களின் தொடர்களே இன்று பெருகி வருகின்றன. இவற்றின் வன்முறைக்கு ஒத்திசைவான விதத்தில் இடையில் வரும் விளம்பரங்களும் குழந்தைகளைப் போட்டுத் தாக்குகின்றன. பெரியவர்களுக்கு வேண்டுமானால் விளம்பரங்கள் மீது சலிப்பு வரலாம். சிறியவர்களுக்கு அவைதான் பாலபாடம்.


விளம்பர உலகில்
வெதும்பும் சிறார்கள்!

சில விநாடிகள் மட்டுமே வரும் விளம்பரங்களின் செய்தி, நாள் முழுக்க சிறுவர்களை இயக்குகின்றது. அவர்களது அறிவுத்திறனின் அடிப்படையே விளம்பரங்கள்தான். வேகமான படத்தொகுப்புக்களில் விரைந்து செல்லும் விளம்பரத்தின் சிறு செய்தி கூட, சிறுவர்களின் மனதில் தைப்பதற்குத் தவறுவதில்லை. விளம்பரங்கள் செதுக்கித்தரும் "மகிழ்ச்சியான குடும்பம்' உண்மையில் ஒரு கற்பனைதான் என்றாலும், அந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகச் சிறுவர்கள் ஏங்குகிறார்கள். இயற்கையின் இயக்கத்தையும், சமூகத்தின் போராட்டத்தையும் அறிய வேண்டிய இளம் பருவம், இத்தகைய செயற்கையான, சுயநலம் மிகுந்த, ஆடம்பரமான கற்பனை உலகத்தில் வெம்பி வாடுகிறது. பிஞ்சில் பழுத்த மனம், தான் காணும் தொலைக்காட்சி வாழ்க்கை கிடைக்காத போது வன்முறையின் பக்கம் எளிதாக நகருகிறது.

சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருள் எது, எது வாங்கினால் எது இலவசம், எதற்குத் தள்ளுபடி, எந்தக் கடையில் என்ன கிடைக்கும் முதலான நுகர்வுக் கலாச்சார பொது அறிவில், குழந்தைகள் பெரியவர்களை விஞ்சி நிற்கிறார்கள். அவ்வகையில் முதலாளிகளின் விளம்பரங்களுக்கு பிரச்சார பீரங்கிகளாக சிறுவர்களே விளங்குகிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒரு புதிய பொருளை வாங்க வேண்டுமென்ற போராட்டம், அநேகமாக சிறியவர்களிடமிருந்துதான் துவங்குகிறது.

வானவேடிக்கை போல விளம்பரங்களை வாரி இறைக்கும் இன்றைய முதலாளித்துவத்தின் அடிப்படைகளில் ஒன்றான நுகர்வுக் கலாச்சாரம், தன்னளவிலேயே ஒரு வன்முறையைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு புதிய செல்பேசி, கார், தொலைக்காட்சி முதலானவை அறிமுகமாகும் போதும் அவற்றின் பழைய மாடல்களை வைத்திருப்பவர்களிடம், ஒரு பதட்டம் பற்றிக் கொண்டு விடுகிறது. புதியதை வாங்கும் வரை, மனம் அமைதியடைவதில்லை. பங்குச் சந்தை குறியீட்டெண் போல, ஒவ்வொரு புதிய விளம்பரமும் இந்த மெல்லிய வன்முறையின் அளவைக் கூட்டுகிறது. இதில் சிக்கியிருக்கும் பெரியவர்களின் கதியே இதுவென்றால், சிறியவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

விளம்பரங்களின் வழியாக மனதில் பதியும் புதிய பொருளை வாங்க வேண்டுமென்று சிறார்கள் அடம் பிடிக்கிறார்கள்; சண்டை போடுகிறார்கள். வகுப்புத் தோழர்களிடம் அற்பவிசயங்களுக்காக எழும் பொறுமையின்மைக்கான அரிச்சுவடி, இதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவ்வகையில் சகிப்புத் தன்மையற்ற மனநிலையை நுகர்வுக் கலாச்சாரம் கற்றுத் தருகிறது. நச்சரிப்பு தாங்காத பெற்றோர்களும், கேட்டதை வாங்கித் தருகிறார்கள். பிடிவாதம் பிடித்தால் நினைத்ததை வாங்கிக் கொள்ளலாம் என்பதைக் குழந்தைகள் தமது சொந்த அனுபவத்தில் அறிந்து கொள்கிறார்கள். இந்தப் பிடிவாதம்தான் வன்முறையின் துவக்கப்புள்ளி என்பதைப் பெற்றோர்கள் உணர்வதில்லை.

""இந்த உலகத்தில் பெரும்பான்மை மக்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதுதான் நமக்கும்'' என்று போதித்து வளர்ப்பதுதான், குழந்தைகளை ஒரு சமூக மனிதனாக வளர்ப்பதற்குரிய ""சரியான அணுகுமுறை. மாறாக ""இந்த உலகில் நீ மட்டும்தான் முக்கியம், உன் மகிழ்ச்சிதான் எங்கள் மகிழ்ச்சி'', என்று குழந்தைகளைச் சீராட்டிப் பாராட்டி வளர்க்கிறார்கள் பெற்றோர்கள். இப்படிச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் சிறுவர்களிடம்தான் பொறுமையின்மையும், கோபமும், பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்கின்றது. இந்த எதிர்மறைப் பண்புகளின் விளைவு குறித்து இவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதால் இவர்கள் யாருக்கும் அடங்குவதில்லை.

ஆனால் இவர்களின் பல தவறுகள் பெற்றோரால் மன்னிக்கப்படுகின்றன. நிகழ்காலத்தில் கண்டிக்கப்படாத தவறுகள், எதிர்காலத் தவறுகளுக்கான ஊக்கசக்தியாக மாறிவிடுகின்றன. துப்பாக்கியால் சக மாணவனைச் சுடுவதென்பது, நிச்சயம் அவர்களது முதல் தவறாக இருந்திருக்க முடியாது. துப்பாக்கி வெடிப்பதற்கு முன்பே வன்முறையின் வெவ்வேறு வடிவங்கள் அவர்களிடம் வெடித்திருக்க வேண்டும். அந்தப் பட்டியலில் இன்னொன்று என்று, அந்த மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டைப் பற்றி அலட்சியமாகக் கருதியிருக்க வேண்டும். அல்லது, அப்பொதெல்லாம் தங்களைக் காப்பாற்றியிருக்கும் பெற்றோர்கள் இப்போதும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களை இந்த எல்லைக்கு கொண்டு வந்திருக்கக்கூடும்.


செல்பேசி இணையத்தில்
சீரழியும் மாணவர்கள்!

சென்ற தலைமுறைப் பெற்றோர்கள் அளவிற்குக் கூட, இந்தத் தலைமுறைப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்டிப்போடும், ஒழுக்கத்தோடும் வளர்ப்பதில்லை. அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்தால் பிரச்சினை முடிந்து விடும் என்று கருதுகிறார்கள். உண்மையில் அப்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்லூரி சென்றால்தான் அதிகபட்சமாக சைக்கிளோ, கைக்கடிகாரமோ கிடைத்தது. இன்றோ பள்ளியிறுதியாண்டுகளிலேயே இருசக்கர வாகனம் மாணவர்களின் கனவாகி விட்டது. முக்கியமாக செல்பேசி வைத்திருப்பது, மாணவ நாகரீகத்தின் அளவு கோலாகப் பரவி வருகிறது.

ஆளும்வர்க்கத்தின் கலாச்சாரத் தாக்குதலுக்கு முக்கியமான படைக்கலனாக இருக்கும் செல்பேசி, மாணவ சமுதாயத்தை சீர்குலைப்பதற்கு கச்சிதமான கையடக்கக் கருவியாகும். ஒரு புதிய செல்பேசியிலிருக்கும் தொழில்நுட்ப சாத்தியங்கள், பெரியவர்களுக்குக் கூடத் தெரிவதில்லை. சிறியவர்களே அதில் விற்பன்னர்களாக இருக்கிறார்கள். செல்பேசி நிறுவனங்களும், மாணவர்களுக்கென்றே சிறப்புத் திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கின்றன. அதில் தவறாமல் இலவசக் குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதி நூற்றுக்கணக்கில் இருக்கும். நாட்டு நடப்பு குறித்து செய்தித்தாள்களின் பக்கம் தலையெடுத்தும் பார்க்காத மாணவர்கள், குறுஞ்செய்தி அரட்டைகளில் மூழ்குகின்றனர். கடி ஜோக்ஸ், காதலர் தினம் என்று ஆரம்பித்து, இறுதியில் பாலுறவு விரசங்களில் மூழ்குகின்றனர்.

சென்ற ஆண்டு, டெல்லியில் தன் வகுப்பு மாணவியுடன் உறவு கொண்டு, அதை காமரா செல்பேசியில் படம்பிடித்து தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டான், ஒரு மாணவன். இத்தகைய வக்கிரக் கலாச்சாரம் மாணவர்களிடையே வெகுவேகமாகப் பரவி வருகிறது. பார்க்கும் பெண்களை ஆபாசக் கோணத்தில் படம்பிடிப்பதும், பரப்புவதும் ஒரு பொழுது போக்காக நிலை பெற்று விட்டது. இத்தகைய படங்களை கட்டணம் வாங்கிக் கொண்டு பதிவுசெய்து தருவதற்கென்றே பல இணையத்தள தரகர்கள் இருக்கின்றனர். மேலும் இன்று இணையத்தள மையங்கள் அனைத்தும் மாணவர்களை நம்பியே நடத்தப் படுகின்றன. இணையத்தில் உலாவுவதற்கு வீட்டில் கணினி இருக்க வேண்டிய அவசியமில்லை. பத்து ரூபாயில், பலான விசயங்களை டன் கணக்கில் மேய்ந்து விடலாம். ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடற்று, இந்த நச்சுப் பண்பாடு கைக்கெட்டிய தூரத்தில் மாணவர்களுக்குக் கிடைக்கிறது, என்பதுதான் முக்கியமானது.

விடலைப் பருவத்தில், பாலியல் உறுப்புகள் முதிர்ச்சி அடையும் வயதில், செக்ஸ் என்பது ஒரு புகைமூட்டம் போல மர்மமாய்க் கவிந்திருக்கும் சூழல் இன்று இல்லை. பாலியல் உணர்வில் கட்டுப்பெட்டித்தனம் கொண்டிருந்த இந்திய மனநிலையின் மடையை, இணையத்தின் வெள்ளம் உடைத்திருக்கிறது. திருமணத்துக்கு முந்தைய உறவு மாணவர்களிடம் வேகமாக வளர்ந்து வருவதாக, பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டிகின்றன. இதற்குத் தீர்வாக, மாணவர்களுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று பல கல்வியலாளர்கள் முன்வைக்கின்றனர்.

எய்ட்ஸைக் கட்டுப்படுத்துவதற்கு ஆணுறை போடுங்கள் என்பது போலத்தான் இதுவும். இதனால் பாலியல் கல்வி வேண்டாம் என்பதல்ல. ஆனால் பிரச்சினைக்கு அது தீர்வல்ல. சொல்லப் போனால் மாணவப்பருவத்தில்தான் கட்டுப்பாடுகள் மிக அவசியம். அறியாக் குழந்தை கண்டதையும் வாயில் போடும்போது, சிறிது அடித்துத் திருத்துவதில் என்ன தவறு இருக்கிறது?


வளரும் பருவத்தை
வலிமையாக்கும் கட்டுப்பாடு!

அப்படி ஒரு கட்டுப்பாட்டை, அதாவது கல்லூரி வளாகத்தில் செல்பேசியைப் பயன்படுத்தக்கூடாது என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்திய போது, பத்திரிக்கைகளும், முற்போக்கு முகாமும் ஆவேசத்துடன் அதனைக் கண்டித்தன. இது சுதந்திரத்துக்கும், தனிநபர் உரிமைக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது என்று வாதிட்டார்கள். அமெரிக்க மாணவர்களிடையே வன்முறையை நிறுத்துவதற்கு துப்பாக்கி வியாபாரத்தைத் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, ஜனநாயக உரிமையின் பெயரால்தான் அது அங்கே நிராகரிக்கப்பட்டது.

இந்த வாதங்களில் ஒரு வெங்காய "உரிமை'யும் உண்மையில் இல்லையென்பது ஒருபுறமிருக்க, இந்த உலகமே கட்டுப்பாட்டில்தானே இயங்கி வருகிறது? ஒரு தொழிலாளிக்கு சீருடை அணிய வேண்டும், குறித்த நேரத்திற்கு வேலைக்கு வரவேண்டும், குறிப்பிட்ட இடைவெளி நேரத்தில்தான் மதிய உணவு அருந்த வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இல்லையா? பல அலுவலகங்களிலும் செல்பேசியில் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு வைத்திருக்கிறார்களே, இதனால் என்ன குடி முழுகிப் போய்விட்டது? விதியின் பெயராலும், நடைமுறை ரீதியிலும் உழைக்கும் வர்க்கத்தின் மீது ஆயிரம் கட்டுப்பாடுகள் வைத்திருக்கும் முதலாளித்துவம், சமூகத்தில் சீரழிவுக் கலாச்சாரத்தைப் பரப்புவதற்கு மட்டும் தனக்கு சுதந்திரத்தைக் கோருகிறது.

வீட்டிலும், பள்ளியிலும் கட்டுப்பாடு இல்லாத மாணவர்கள்தான், வன்முறை எண்ணம் கொண்டவர்களாகத் தலையெடுக்கின்றனர். விடலைப்பருவ உளவியலின் காரணமாகப் பெற்றோருடனும், சூழலோடும் முரண்படுகிறார்கள். மாணவர்களின் உடல் மாற்றத்திற்கேற்ப நடக்கும் இந்த உளவியல் வெளிப்பாடுகளை, மேற்கண்ட நச்சுக்கலாச்சாரம் ஊதிப் பெருக்குகிறது. இதனால் தனிமைப்படும் மாணவர்களைத்தான் வன்முறை எண்ணம் தின்று சீரணிக்கிறது. மாணவர்களை உடலுழைப்பிலும், விளையாட்டிலும் ஈடுபடுத்துவதுதான் இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்குரிய வழி. ஆனால் அந்தச் சூழல் நமது கல்வி முறையிலோ, பண்பாட்டிலோ இல்லை.

வளரும் சிறுவருக்கு
உடலுழைப்பு அவசியம்!

இளம் மாணவர்களின் வயதினையொத்த சிறார்கள், நாடெங்கிலும் இலட்சக்கணக்கில் உதிரித் தொழில்களில் ஈடுபடுகின்றனர். குழந்தைத் தொழிலாளர் உழைப்பைத் தடை செய்ய வேண்டும் என இவர்களது வாழ்க்கை குறித்து கவலைப்படுவது தொண்டு நிறுவனங்களின் நாகரீகப் பணியாக இருக்கிறது. படிக்கவேண்டிய வயதில் இவர்களை இவ்வேலைகளுக்கு அனுப்பியது பெற்றோர்களின் குற்றமெனத் தொண்டு நிறுவனங்கள் சாதிக்கின்றன. உண்மையில் பணமில்லாதவனுக்கு எதுவுமில்லை என இந்தச் சமூக அமைப்பை மாற்றியஅரசும், ஆளும் வர்க்கங்களும்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, இக்குழந்தைகள் விடலைப் பருவச் சேட்டைகளையோ, வன்முறைகளையோ செய்வதில்லை. தேநீர்க்கடைகளில் குவளை கழுவும் சிறுவனோ, ஓட்டலில் மேசை துடைக்கும் சிறுவனோ இத்தகைய வன்முறை வெறிக்குப் பலியாவதில்லை. சமூகத்துடன் யதார்த்தமான உறவில் இருக்கும் இச்சிறுவர்கள், பண்பையும் முதிர்ச்சியையும்தான் பழகிக் கொள்கின்றனர். வயதுக்கு மீறிய அதீத உழைப்புதான், இவர்களைப் பின்னாளில் உதிரிக் குணம் கொண்டவர்களாக மாற்றி விடுகிறது. அப்போதும்கூட இவர்கள், சமூகத்தின் மீது வன்முறை செலுத்தும் மேட்டுக்குடிப் பொறுக்கிகளைப் போல மாறுவதில்லை.

ஆம். மாணவர்களை குறிப்பிட்ட அளவில் உடலுழைப்பில் ஈடுபடுத்துவதன் மூலமே, அவர்களது பருவப் பிரச்சினைகளைக் கடந்து ஒரு சமூக மனிதனாக வளர்க்க முடியும். கோடை விடுமுறையில் சிறுவர்களை சிறு பட்டறைகளுக்கோ, இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்கோ, கட்டிட வேலைக்கோ, விவசாய வேலைக்கோ அனுப்பினால், பட்டை தீட்டப்பட்ட வைரக்கற்களாகப் புடம் போடப்பட்டு வருவார்கள். உடலுழைப்புடன் கூடிய சுயமதிப்புடன் சமூகத்தைப் பற்றி அறிந்து கொள்வார்கள். கட்டுப்பாட்டுடன் பணியாற்றுவதன் மூலமே இச்சமூகத்தின் அங்கத்தினன் என்ற தகுதியைப் பெறமுடியும் என்பதைத் தங்களது சொந்த அனுபவத்திலிருந்து புரிந்து கொள்வார்கள்.

ஆனால் நடுத்தர வர்க்கமோ தங்களது செல்வங்களை டென்னிசுக்கும், கணினிப் பயிற்சிக்கும், பாட்டு வகுப்பிற்கும் அனுப்பி நம்பர் 1 ஆக்குவதற்கு மட்டுமே மனப்பால் குடிக்கிறது. இது மாணவர்களுக்கு தனிநபர் வாதத்தையும், சுயநலத்தையும், காரியவாதத்தையும் கற்றுத் தருகின்றதே ஒழிய, நல்ல குடிமகனாக்குவதில்லை. மேலும் கடுமையான போட்டிகள் நிறைந்த இக்காலட்டத்தில், தோல்வி குழந்தைகள் மனதை ரணமாக்குகிறது. விஜய் டி.வி.யின் பாட்டுப் போட்டியில் தோல்வியுற்றதால் வெளியேற்றப்பட்ட குழந்தைகள் அழுவதைப் படம்பிடித்துக் காண்பிப்பதை இங்கு நினைவு படுத்திக் கொள்வோம்.

வளரும் குழந்தைகளுக்கு கலைத்திறமைகளை கற்றுத்தருவதை விட, அவர்களை மக்களின் பால் பற்று கொண்ட நன்மக்களாக மாற்றுவதே அத்தியாவசியமானது. உண்மையில் அவர்களது வன்முறை எண்ணத்தை மடைமாற்றும் சூட்சுமம், இதில்தான் அடங்கியிருக்கிறது. ஆனால் நடுத்தர வர்க்கக் குழந்தைகளுக்கு, உடலுழைப்பு அறவே கிடையாது. எல்லா வேலைகளுக்கும் இயந்திரங்கள் இருக்கின்றன. இது போக வேலையாட்கள்! பெற்றோர்கள் பணியாட்களை மிரட்டுவது போல பிள்ளைகளும் செய்கிறார்கள். குறைந்த பட்சம் தன்னைப் பராமரித்துக் கொள்வதைக் கூட இக்குழந்தைகள் செய்வதில்லை. பெற்றோரும் விரும்புவதில்லை. தான் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதற்கோ, உடுத்தும் உடையைத் துவைப்பதற்கோ பழகிக் கொள்ளாத ஒரு சிறுவன்தான், இந்த உலகம் தனக்காகப் பணிசெய்ய படைக்கப்பட்டிருப்பதாக எண்ணுகிறான். இந்த அணுகுமுறையில் நெருடல் வரும்போது, தவிர்க்கவியலாமல் வன்முறையின் பக்கம் நகர்கின்றான்.

அருகும் விளையாட்டு
அரிக்கும் வீடியோ விளையாட்டு!

உடலுழைப்புக்கு அடுத்த படியாக குழந்தைகளுக்குத் தேவைப்படுவது, வியர்க்க விறுவிறுக்க விளையாடப்படும் விளையாட்டு. மனம் விரும்பிச் செய்யப்படும் இவ்வுழைப்பில்தான் அவர்கள் வளருவதற்கேற்ற வலிமை உடலுக்கும், உள்ளத்திற்கும் கிடைக்கிறது. குழுரீதியான உணர்வு பெறுவதற்கும், சண்டையுடன் கூடிய நட்பு அரும்புவதற்கும், வெற்றி தோல்விகளையெல்லாம் சகஜமாக எடுத்துக் கொள்வதற்கும், பாடங்கள் கற்பதற்கேற்ற உற்சாகத்தைப் பெறுவதற்கும், விளையாட்டு அவசியமாகிறது. அடுக்குமாடிக் கட்டிடங்கள் துருத்தி நிற்கும் நகரங்களில், மைதானங்கள் காணக் கிடைப்பதில்லை. பல்லாயிரம் ரூபாய்களைக் கட்டணங்களாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளிலும், விளையாட்டுத் திடல்கள் போதுமானதாக இல்லை. மாணவர்களும் இந்திய அணி ஆடும் சமயங்களில் மட்டும் கிரிக்கெட் ஆடுவதைத் தவிர, விளையாட்டில் விருப்பத்துடன் ஈடுபடுவதில்லை.

இந்த இடத்தை மாணவர்களால் பரவலாக விளையாடப்படும் வீடியோ விளையாட்டு எடுத்துக் கொள்கிறது. இணையத் தள மையங்களில் பாலுறவு விசயங்களுக்கு அடுத்தபடியாக மாணவர்கள் விரும்புவது இந்த எந்திர விளையாட்டைத்தான். வியர்வைத் துளிகளுக்கு வேலை கொடுக்காமல், மூளையை அரிக்கும் இந்த விளையாட்டைத் தொடர்ந்து விளையாடும்போது மாணவர்கள் அதற்கு அடிமையாகிறார்கள்.

இந்தப் போதையிலிருந்து மீள்வது சிரமம் என்பதோடு, இது ஏற்படுத்தும் உளவியல் கோளாறுகள் அதிகம். கற்பனையான உலகில் கற்பனையான வெற்றிக்காக மணிக்கணக்கில் ஆடும் மாணவர்கள், அதீத உணர்ச்சிக்கு ஆட்படுகிறார்கள். இந்த உணர்ச்சிச் சமநிலைச் சீர்குலைவு வன்முறைக்குப் பொருத்தமான சமன்பாட்டைக் கொண்டிருக்கிறது.

விளையாடி முடித்ததும் ஏற்படும் சோர்வு நிஜ உலகோடு கொண்டுள்ள உறவைச் சோர்வுக்குள்ளாக்குகிறது. இந்தச் சோர்விலிருந்து வாழ்வின் பிற அம்சங்கள் மீது அளவு கடந்த சோம்பல் உருப்பெறும். கணிப்பொறி விளையாட்டின் மீது ஒன்றி பரவசம் அதிகரிப்பதற்கேற்ப மனித உறவுகளின் மீது நெருடல் அதிகரிக்கிறது. பிரச்சினை வரும்போது அமைதியுடன் எதிர்கொள்ள வேண்டிய மூளையின் தன்மை, நேரெதிராக மாற்றப்படுகிறது. வீடியோ விளையாட்டின் வேகம் விரிவடைதற்கேற்ப, நிஜவாழ்வின் பிரச்சினைகளை பரிசீலிக்கும் பொறுமை சுருங்குகிறது.

விதவிதமான உணவு வகை
எல்லைமீறும் உணர்ச்சிகள்!

இப்படி உடலுழைப்பிலும், விளையாட்டிலும் அன்னியப்பட்டுள்ள மாணவர்கள் விரும்பும் மற்றுமொரு விசயம் நவீன உணவு வகைகள். பீட்ஸா, பர்கர், விதவிதமான சாக்லேட், பிஸ்கட், ஐஸ்கிரீம் வகைகள், பெட்டிக் கடைதொட்டு சரம்சரமாகப் பல வண்ணங்களில் தொங்கும் நொறுக்குத்தீனி பாக்கட்டுகள், உணவகங்களில் கிடைக்கும் பலநாட்டுத் துரித உணவு வகைகள்.... இவையெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்கள் போல, குழந்தைகள் மனதில் ஆழப்பதிந்து விட்டன.

குடும்பத்துடன் வெளியில் செல்லும்போது சிறார்கள் அடம்பிடித்துச் சண்டையிடுவது இவ்வுணவு வகைகளுக்காகத்தான். வீட்டுச்சமையல் என்பதே இப்படி டப்பா வகை உணவுப் பிரிவுக்கு வேகமாக மாறி வருகிறது. இது பற்றி பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், மருத்துவர்களும் கவலைப்படாமல் இல்லை. ஆனால் அந்தக் கவலை, குழந்தைகள் குண்டாவது குறித்த பிரச்சினையாக மட்டுமே நின்று விடுகிறது.

உண்மையில் இந்த "குண்டு' பிரச்சினை இரண்டாம் பட்சமானதுதான். நவீன உணவு வகைகளில் சர்க்கரையும், உப்பும், கொழுப்பும் மிக அதிகம். ஒரு சிறுவனது உடலில் இம்மூன்றும் திடீரென்று அதிகரிக்கும் போது அது மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இப்படி தொடர்ந்து தின்று தீர்க்கும் சிறுவர்கள், அவற்றைச் செலவழிக்கும் உடலுழைப்பு ஏதும் இல்லாததால் எளிதில் உணர்ச்சி வசப்படுவர்களாக மாறுகிறார்கள். எல்லா வகை உணர்ச்சிகளும் எல்லை மீறும்போது, அதன் இறுதி நிலை வன்முறையில் தான் முடியும். இதுபோக உடல் பருமனாவதால் சோம்பேறிகளாகவும், மந்தகதிக் குழந்தைகளாகவும் நாட்களைத் தள்ளுகிறார்கள். ஏற்öகனவே அவர்களது வாழ்க்கைச் சூழல் இப்படித்தான் உள்ளது எனும்போது, டப்பா வகை உணவுகள் அந்தச் சூழலை வீரியமாக்குகின்றன. பெற்றோர்களே இந்த நவீன உணவு வகைகளுக்கு அடிமையாகும் போது, குழந்தைகளைக் கடைத்தேற்றுவதற்கு வழியேதுமில்லை.

அரசு பள்ளி நன்மைகள்
தனியார் பள்ளி தீமைகள்!

இந்த நொறுக்குத் தீனிகளின் பெயர்கள் கூடத் தெரியாமல், சத்துணவிற்காகவே குழந்தைகள் கோடிக்கணக்கில் அரசுப் பள்ளிகளுக்கு வருவதும் இந்நாட்டில்தான். இன்று அரசுப் பள்ளிகள் முற்றிலும் ஏழைகளுக்கு மட்டுமானவையாக மாறி விட்டன. நகரங்களைப் பொறுத்தவரை, சென்ற தலைமுறைப் பெற்றோர்களில் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளிஅரசுக் கல்லூரிகளில் படித்து வந்தவர்கள்தான். அப்போது தனியார் பள்ளிகள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே இருந்தன.

ஏழையும், பணக்காரனும், குறிப்பிட்ட அளவில் சாதிய வேறுபாடுகள் இல்லாமலும், சமூகத்தின் எல்லாப் பிரிவினரும் அரசுப் பள்ளிகளில் சங்கமித்தனர். கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களின் வழியாக கிராம வாழ்க்கையைப் பற்றியும், விவசாயத்தின் நிலை குறித்தும் தெரிந்து வைத்திருந்தனர். தனது வர்க்கம் தவிர, ஏனைய வர்க்கங்கள் எப்படி வாழ்கின்றன என்பதை அறியக்கூடிய வாய்ப்பை அன்றைய அரசுப் பள்ளிகள் வழங்கின. அதனால்தான் இன்றைய மாணவர்களை விட, சென்றதலைமுறை மாணவர்கள் பொது அறிவிலும், வாழ்க்கை குறித்த யதார்த்தமான கண்ணோட்டத்திலும் மேம்பட்டு விளங்குகின்றனர். திராவிட இயக்கமும், இடதுசாரி இயக்கமும் இந்தப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்தான் தமது அடிப்படையைக் கட்டியமைத்தன.

இன்று வர்க்க முரண்பாடு துல்லியமாகப் பிரிந்து விட்டது. காசு உள்ளவனுக்கு தனியார் பள்ளி மற்றும் சுயநிதிக் கல்லூரி; இல்லாதவனுக்கு அரசுப்பள்ளி. தனியார் மயம் நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேட்டைக்காடாக மாற்றிவருகிறது என்ற அநீதிக்கு, குறைவில்லாத பங்கை தனியார் பள்ளிகளும் செய்து வருகின்றன. மேற்கண்ட துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பலரும், இத்தகைய தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள்தான். அரசுப் பள்ளிகள் என்னென்ன நன்மைகளைச் செய்கிறதோ, அவற்றின் நேரெதிர் தீமைகளைத் தனியார் பள்ளிகளும் சுயநிதிக் கல்லூரிகளும் செய்து வருகின்றன. இங்கு மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்தோரே படிக்க வருகின்றனர். உழைக்கும் வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும் கடன் வாங்கியாவது இப்பள்ளிகளுக்கு வந்தாலும், இவர்கள் இங்கே சிறுபான்மையினர்தான். ஆகவே இப்பள்ளிகள் சமூகத்தைப் பிரதிபலிப்பதில்லை. வண்ணமயமான வாழ்க்கையின் வகைகள் இங்கே பரிமாறப்படுவதில்லை. நடுத்தர வர்க்கத்தின் காரியவாத வாழ்க்கை மட்டுமே இங்கு பேசுபொருளாக இருக்கிறது.

சமீபத்தில் சந்தைக்கு வந்த செல்பேசிகள், வாகனங்கள், டி.வி.க்கள், கணினிகள் எவை என்பதுதான் இங்கே மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் கல்வி! எதிர்காலத்தில் டாக்டர், இன்ஜினியர், எம்.பி.ஏ, அமெரிக்கா முதலான இலட்சியங்களை அடையவேண்டும் என்பதை இப்பள்ளிகள் ஊட்டி வளர்க்கின்றன. அவ்வகையில் சுயநலமும், பிழைப்பு வாதமும் மாணவர்களின் நற்பண்புகளாக ஏற்றப் படுகின்றன.

இதனால் போட்டி, பொறாமை, இரக்கமின்மை, முதலிய சொத்துக்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் அவனது இலட்சியத்தை அடைவதற்குத் தேவைப்படுகின்றன. எல்லா மாணவர்களும் இக்காரியவாதப் போட்டியில் வெல்லமுடியாது என்பதால் சோர்வும், விரக்தியும், தனிமைப்படுவதும் நடக்கிறது. சில சமயங்களில் அது சமூகத்தின் மீதான கோபமாகவும் வெடிக்கிறது. தன்னிலும் ஆடம்பர வாழ்வைப் பார்த்து ஏங்குவதும், அதை அடைய குறுக்கு வழிகளை நாடுவதும் இயல்பான விசயங்களாக ஏற்கப்படுகின்றன.

முன்னர் கண்ட செல்பேசிஇணையக் கலாச்சாரம், திருமணத்திற்கு முந்தைய உறவு, புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், பீர் கலாச்சாரம், வீடியோ விளையாட்டு முதலியவற்றிலும், தனியார் பள்ளி மாணவர்களே முன்னிலை வகிக்கின்றனர். பள்ளி திறக்கும் பருவத்தில் எல்லாத் தனியார் பள்ளிகளும் தங்களது தேர்ச்சி விகிதத்தை விளம்பரமாக வெளியிட்டு பெற்றோர்களை ஈர்க்கின்றன.

அந்த விளம்பரங்களில் கூறப்படாத செய்தி என்னவென்றால், வன்முறை விகிதத்திலும் இப்பள்ளிகள்தான் முதலிடம் வகிக்கின்றன என்பதுதான். சுருங்கக்கூறின் அரசுப் பள்ளிகள் ஒரு மாணவனை நல்ல குடிமகனாக மாற்றும் போது, தனியார் பள்ளிகளோ ஒரு மாணவனை சமூகத்திற்கு விரோதமான தனிநபராய் வளர்க்கின்றன. கல்வியில் தனியார்மயம் நுழைந்ததற்கு, நாம் பெற்றுள்ள சாபக்கேடு இதுதான்.

நடுத்தர வர்க்கத்தின் தனியார் பள்ளி மோகத்திற்கு இணையான மற்றொரு மோகம், ஆங்கில வழிக் கல்வி. ஆங்கில வழிக் கல்விக்கும் மாணவர் வன்முறைக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் நினைக்கலாம். முதலில் கண்ட துப்பாக்கி வன்முறை மாணவர்களெல்லாம், ஆங்கில வழிக் கல்வியில் படிப்பவர்கள்தான். இதை வைத்து மட்டுமே, ஆங்கில மோகம் வன்முறையை வளர்க்கிறது என்று சொல்லவில்லை. சிறார்களின் கல்வியறிவுக்காக பயன்படுத்தப்படும் ஆங்கிலம், அவர்களுடைய வாழ்க்கையை ரத்து செய்கிறது. ஐ.டி துறையின் எழுச்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பிற்காக ஆங்கிலம் மட்டுமே உதவும் என்ற சூழ்நிலையில், தமிழ் வழிக் கல்வியின் மீது பலருக்கு நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். ஒரு மொழி என்ற அளவில் ஆங்கிலத்தை தேர்ச்சியுடன் கற்றுக்கொள்வதும், அதை ஒரு பயிற்று மொழியாகவே பயன்படுத்துவதும் ஒன்றல்ல.

அன்னியப்படுத்தும்
ஆங்கில மோகம்

1947க்குப் பின்னர் உயர் கல்விக்காகப் படித்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், தமிழ் வழிக் கல்வி கற்றவர்கள் என்பதோடு ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவர்களாக இருப்பதையும் காண்கிறோம். இவர்களது பெற்றோர்கள் எவரும் பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்த்தவர்கள் அல்லர். இருப்பினும் வறியவாழ்க்கையோடு, பலமைல் தூரம் நடந்துச் சென்று, கல்விக்காகக் கடும் உழைப்பு செலுத்தி, போராடிக் கற்றார்கள். அந்தக் கால ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கல்விப் பணி செய்தார்கள்.

அதற்குப் பிந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், வசதியான வாழ்க்கையுடன் பள்ளிக்குச் சென்றாலும், அவர்களுக்கு ஆங்கிலம் மட்டுமல்ல தமிழும் தெரியாமல் இருப்பதைக் காண்கிறோம். இது போக, இன்றைய மாணவர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் பொழுது போக்குகளும் ஏராளம். மேலும் அன்று உயர்கல்வி முடித்தால் ஏதோ ஒரு அரசுப் பணி கிடைக்கும் என்ற நிலைமையும் இன்று இல்லை. இந்தப் பிரச்சினையை ஆங்கிலவழிக் கல்வி தீர்த்து விடாது என்பதையே இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

மேலும் ஆங்கிலவழிக் கல்வி ஒரு மாணவனை யதார்த்தமான சமூக வாழ்க்கையிலிருந்து அன்னியப்படுத்துவதோடு, அவனது அறிவுத்திறன் வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து வளரும் சிறார்கள் தாயுடனும், தமிழுடனும் சேர்ந்தே உலகை அறியத் துவங்குகிறார்கள். பெற்றோர், சுற்றம், உற்றம், நட்பு, தெரு, பெட்டிக்கடைக்காரர், மளிகைக் கடைக்காரர், வணிகர்கள், ஆட்டோக்காரர், பேருந்து ஓட்டுநர் என தமிழால் சூழப்பட்ட உலகில்தான், சிறார்களின் வாழ்க்கைக் கல்வி துளிர் விடத் துவங்குகிறது. இந்தச் சூழலை ஆங்கில வழிக் கல்வி செயற்கையாக துண்டிப்பதோடு, அந்த உறவு மேற்கொண்டு வளர விடாமலும் செய்கிறது.

இதனால் ஆங்கில வழிக் கல்வியின் உலகம் பள்ளி வகுப்பறையுடன் சுருங்கி விடுகிறது. அதனால்தான் ஆங்கில வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பொதுவில் தனிமை விரும்பிகளாகவும், சிறுசிறு பிரச்சினைகளைக்கூட தீர்ப்பதற்கு இலாயக்கில்லாதவர்களாகவும், சமகாலப் பொதுஅறிவில் பின்தங்கியவர்களாகவும் இருக்கிறார்கள். பொது வாழ்க்கைக்கு ஆங்கிலம் விதித்திருக்கும் இத்தடைகள்தான், அவர்களை பொறுமையிழந்தவர்களாகவும், வன்முறை சுபாவம் கொண்டவர்களாகவும் மெல்ல மெல்ல மாற்றுகிறது. தமிழை விட ஆங்கிலம்தான் நுகர்வுக் கலாச்சாரத்தின் எல்லா வகைகளுக்கும் பொருத்தமாக இருப்பதால், எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றி தீப்பிடிக்க வைக்கிறது.

தேம்ஸ் நதிக்கரையையும், வாஷிங்டன் அதிபர்களையும், அமெரிக்க மல்யுத்த வீரர்களையும், வால்ட் டிஸ்னியின் முயலையும் அறிந்து வைத்திருக்கும் ஆங்கில மாணவன், தாமிரபரணி நதி பற்றியோ, காவிரியின் கீழத்தஞ்சை விவசாயப் பிரச்சினை பற்றியோ, காஞ்சிபுரத்தின் பட்டுத்தறி பற்றியோ, ஏன் கபடி விளையாட்டைக்கூட தெரியாதவனாக இருக்கிறான். இப்படி தமிழக வாழ்க்கையிலிருந்து தூக்கியெறியப்பட்டு, தனக்குத் தொடர்பற்ற மேற்கத்திய விசயங்களுக்கு அறிமுகமாகும் மாணவன்தான் இந்த மண், மக்கள், வாழ்க்கை குறித்து வெறுப்போடும், நம்பிக்கையில்லாமலும் வாழப் பணிக்கப்படுகிறான்.

விவசாயப் பிண்ணனியிலிருந்து வரும் ஒரு மாணவனுக்கு, நூற்றுக்கணக்கான தாவர வகைகளும், கிராம வாழ்க்கை மூலம் விவசாய அனுபவமும் தமிழ் வழியாகத்தான் தெரிந்திருக்கும். இம்மாணவன் ஆங்கிலத்தின் மூலம் தாவரவியலைக் கற்பதால் என்ன நடக்கும்? அவன் சேகரித்து வைத்திருந்த அறிவுக்குப் பயனில்லாமல் போவதோடு, ஆயிரக்கணக்கான ஆண்டு விவசாய அறிவைத் தாங்கி வரும் தமிழக விவசாயிகளுடன் பேசுவதற்குக் கூட வழியில்லாமலும் போகிறது. இந்த அவலம் எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.

இதனால்தான் ஆங்கில வழிக் கல்வி அறிவுத் திறனை மட்டுப்படுத்துவதோடு, சமூகத் தொடர்பையும் இல்லாமல் செய்து விடுகிறது என்கிறோம். ஆங்கிலவழிக் கல்வியினால் வேலை கிடைத்துவிடும் என்ற மூடநம்பிக்கையின் விளைவாக, சிறார்களை தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் படிக்க வைக்கும் பெற்றோர்கள் அனைவரும், உண்மையில் தமது வாரிசுகளை வாழ்க்கையை எதிர்கொள்ளத் திராணியற்றவர்களாக மாற்றுகிறார்கள். இது போக இன்றைய பாடத்திட்டமும் மேலும் மேலும் தொழில்முறைத் தேர்ச்சியை நோக்கி மாற்றப்படுவதால் அதில் பொது அறிவும், சமூகக் கண்ணோட்டமும் அருகி வருகிறது.

இந்த நோய்களோடு வட இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு சாதிவர்க்கத் திமிரும் சேர்ந்து கொள்கிறது. தமிழகத்தில் இவை இல்லாமலில்லை என்றாலும், இந்தி பேசும் மாநிலங்களில் இவை அதிகம். இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மேல் சாதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை, இங்கு நினைவு படுத்திக் கொள்வோம்.

வட இந்தியாவில் அநேக பிரபலங்கள் துப்பாக்கியோடும் பாதுகாவலர்களோடும்தான் உலா வருகிறார்கள். அப்பனே கிரிமினலாக இருக்கும் போது, மகன் அப்படி இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். ஜெசிகா லாலைக் கொன்ற மனுசர்மாதான் வடக்கின் மேட்டுக்குடி மாணவர்களுக்கு வகை மாதிரி. ஏழைகள் மற்றும் தலித்துகள் மீது வன்மம் கொண்டவர்களாகத்தான், வட இந்திய மாணவர்கள் வளர்க்கப் படுகிறார்கள். கூடவே இந்துமதவெறிப் பாசிசத்தின் செல்வாக்கும் இவர்களிடத்தில் அதிகம்.

···

இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். பொதுவில் இன்றைய மாணவத் தலைமுறையினர் இளமைக்குரிய துடிப்புடனோ, உற்சாகத்துடனோ, கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடனோ இல்லை. முக்கியமாக, அவர்களது மனவலிமை மேலும் மேலும் குறைந்து வருகிறது. பள்ளி இறுதி ஆண்டு மதிப்பெண்கள் வந்தவுடனேயே, தேர்ச்சி பெறாத மாணவர்களிடத்தில் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருவதையும் பார்க்கிறோம். வீட்டு நிலைமைக்குப் பொறுப்பேற்கும் சென்ற தலைமுறையின் பண்பு கூட, இத்தலைமுறை மாணவர்களிடத்தில் இல்லை. காலச்சூழலில் அடித்துச் செல்லப்படும் இன்றைய நிலையில், நாம் என்ன செய்ய முடியும் என்று சிலர் விரக்தி அடையலாம். அப்படி இல்லை.

இக்கட்டுரை மாணவரைச் சீர்குலைக்கும் விசயங்களைப் பரிசீலிப்பதோடு நின்று விடவில்லை. நேர்மறையில் ஒரு மாணவனை எப்படி வளர்க்க வேண்டும் என்ற தீர்வுகளையும் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறது. அதைப் புரிந்து கொள்வதோடு, நடைமுறைப்படுத்துவதற்கும் முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அற்பப் பிரச்சினைகளுக்காக ஆத்திரங்கொண்டு வெடிப்பதற்குத் துப்பாக்கிதான் வேண்டுமென்பதில்லை, கிடைக்கும் எதுவும் பயன்படும். அதுவும் கண்காணாத ஒரு வீட்டில்தான் நடக்கவேண்டும் என்பதில்லை, அந்த வீடு உங்களுடையதாகவும் இருக்கலாம்.

· வேல்ராசன்