அவர்கள் அனைவரும் சாலைப் பணியாளர்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து சொந்த மண்ணையும், வீடுவாசலையும் விட்டு பிழைப்புத் தேடி மராட்டியத்தின் மும்பைப் பெருநகருக்கு விரட்டப்பட்டவர்கள். மும்பை நகரின் செல்வச் சீமான்களின் சொகுசுக் கார்கள் வழுக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகள் அமைப்பதுதான் அவர்களின் வேலை. ஆனால், அந்தச் சாலையிலேயே, அத்தகை சொகுசுக் கார்களில் ஒன்றாலேயே தாம் நசுக்கிக் கொல்லப்படுவோம் என்று கொஞ்சமும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள்!
முன்னிரவில் கொதிக்கும் தாரோடு கலந்த கருங்கல் ""ஜல்லி''களோடு கைகால் வெந்து நெக்குறுகிப் போயிருந்தார்கள். அதன்பிறகு வாட்டி எடுக்கும் கடுங்குளிரில், வெட்டவெளியில் அதே சாலையோரத்தில் அடித்துப் போட்ட மனிதர்களாய் துவண்டு கிடந்தார்கள். அது மும்பை பெருநகரின் பாந்த்ரா பகுதி; கார்ட்டர் சாலை. அதிகாலை 3.45 மணி. பேய்கள்தாம் களிவெறியாட்டம் முடித்து உறங்கப் போகும் நேரம். திடீரென்று பாய்ந்து வந்த ""டொயோட்டோ கோரல்லா'' என்ற சொகுசுக்கார் அவர்கள் மீது ஏறி ஓடியது. ஐந்து வயதுச் சிறுவன், ஏழு வயதுச் சிறுமி, மூன்று பெண்கள், இரண்டு ஆண்களை நசுக்கிக் கொன்றது. மேலும் பதினான்கு பேரை சாவின் விளம்பிற்குத் தள்ளியது.
காரை ஓட்டியவர் உட்பட காரிலிருந்த ஆறு பேரும் 18 முதல் 21 வயதேயாகியவர்கள், எல்லோரும் குடிபோதையில் மிதந்தார்கள். போதை இறங்கிவிட்டால் மேலும் ஏற்றிக் கொள்ள சீமைச் சாராயப் புட்டிகளும் காரில் கிடந்தன. அவர்கள் அனைவரும் மும்பையில் செல்வச் சீமான் வீட்டுக் குலக்கொழுந்துகள். பெற்றோர்களின் தொழில் நிர்வாகிகள் அல்லது மேட்டுக்குடிக் கல்லூரி மாணவர்கள்.
இந்தக் கொலைகாரர்கள் எல்லாம், மும்பையின் முதன்மையான நட்சத்திர விடுதியான தாஜ் ஓட்டலில், வயிறு முட்டக் குடித்தும், தின்றும், ஆட்டம் பாட்டம் என்று கும்மாளமிட்டு விட்டுத் திரும்பியிருக்கிறார்கள். இவர்கள் குடித்துக் கூத்தடித்துக் கொண்டிருந்த அந்த நள்ளிரவிலும், இந்தத் தொழிலாளர்கள் சாலை போட்டுக் கொண்டிருந்தார்கள். அதிகாலை இரண்டு மணிக்குத்தான் பணி முடித்துக் களைப்பாற்றத் தூங்கப் போனார்கள். இந்தக் கோரமான முடிவைச் சந்தித்தார்கள். இந்தக் களிவெறித் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்த அவர்களின் உறவினர்கள் மொழி அறியாத அந்த இடத்தில் கதறி அழும் காட்சி நெஞ்சை அறுக்கும் துயரம்மிக்கதாகவே இருந்தது.
அந்த ஏழைஎளிய உழைப்பாளிகளின் உயிர்கள் அற்பமாக மதித்துப் பறிக்கப்பட்டதைப் போலவே, கொலைகாரர்களுக்கான தண்டனையும் அற்பமாகவே இருக்கப் போகிறது. மும்பைபாந்த்ரா சாலைத் தொழிலாளர்களுக்கெதிரான இந்தக் கோரமான கொலைக்குற்றம், குடித்துவிட்டு மோட்டார் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்குரிய அலட்சியத்தால் இழைக்கப்படும் குற்றமாகக் கருதித் தண்டிக்கும் குற்றப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்தியத் தண்டனைச் சட்டம் 304(அ) அலட்சியம் காரணமாக மரணம் விளைவிக்கும் குற்றம் இதன்படி குற்றவாளி பிணையில் வந்துவிடமுடியும்; அதிகபட்சம் தண்டனை இரண்டு ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
ஆனால், நடந்திருப்பது ஒரு கொலைக்குற்றம். தாழ்த்தப்பட்ட மக்களை சாதிவெறியர்கள் படுகொலை செய்வதற்கு சாதி ஆதிக்கவெறி அடிப்படையாக இருப்பதைப் போல, ஏழை எளிய மக்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணி மிகவும் அலட்சியமாகப் பலியிடுவதற்கு அடிப்படையாக, செல்வமிகு மேட்டுக்குடித் திமிர்த்தனம் இருக்கிறது. ஆண்டைகள் தமது செல்லப்பிராணிகளுக்கு அடிமைகளை இரையாக்கி, அதைக் கண்டு மகிழ்வதைப் போன்ற வக்கிரம் இந்த மேட்டுக்குடித் திமிர்த்தனத்தில் வெளிப்படுகிறது.
இதுவொன்றும் வழக்கம் போல குடித்துவிட்டு மோட்டார் வாகனங்களை ஓட்டும் அலட்சியம் அல்ல; தனி ஒரு சம்பவமும் அல்ல. மும்பை மட்டுமல்ல, பிற பெருநகரங்களிலும் இத்தகைய கிரிமினல் குற்றங்களில் மேட்டுக்குடிசெல்வச்சீமான்களின் குலக் கொழுந்துகள் ஈடுபடுவது ஒரு பொதுப்போக்காகவே இப்போது வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் ஸ்டாண்டார்டு வங்கியின் உயர் அதிகாரி நீல் சட்டர்ஜி மும்பையின் பிரபாதேவி பகுதியில் ரமாகாந்த் தூரி என்ற காவலாளியை கார் ஏற்றிக் கொன்றார். இதே பாந்த்ரா பகுதியில் இந்தி நடிகர் ராஜ்குமாரின் மகன் புரு ராஜ் குமார் நடைபாதை மக்கள் மீது கார் ஏற்றிப் பலரைப் படுகாயமுறச் செய்துவிட்டு, வெறும் அபராதத்தோடு தப்பித்துக் கொண்டார்.
இந்தியக் கடற்படை தலைமைத் தளபதி எஸ்.எம். நந்தாவின் பேரனும், கடற்படை தளபதி சுரேஷ் நந்தாவின் மகனும் கிரௌன் கார்ப்பரேசன் கம்பெனியின் ஆயுதங்கள் விற்பனைத் தலைமை அதிகாரியுமான சஞ்சீவ் நந்தா, தனது பி.எம்.டபிள்யூ என்ற சொகுசுக்காரை ஏற்றி ஆறு பேரைக் கொன்றுவிட்டு, தண்டனையின்றித் தப்பித்துக் கொண்டார். கடந்த ஆண்டு, பிரபல கட்டாவ் துணி ஆலை முதலாளி மகேந்திரா கட்டாவின் மகன் மணிஷ் கட்டாவ் மும்பையின் பிரதான சாலையான மரைன் டிரைவில் நின்றிருந்த ஜிதேந்திரா ரோகடே என்ற போலீசுக்காரரை காரேற்றிக் கொன்றுவிட்டு, தண்டனையின்றி விடுதலை செய்யப்பட்டார்.
மும்பை சிவசேனாத் தலைவர் பால்தாக்கரேயின் உதவியாளர் ரவீந்திர மகத்ரே காரேற்றி இரண்டு பேரைக் கொன்று இரண்டு பேரைப் படுகாயமுறச் செய்தார். பிரபல இந்தி நடிகர் சல்மான்கான், தனது டயோட்டா சொகுசுக் காரை தலைத்தெறிக்க ஓட்டி சென்று ரொட்டிக் கடையின் முன்பு உறங்கிக் கொண்டிருந்த ஒருவரைக் கொன்றும் நான்கு பேரைப் படுகாயமுறவும் செய்தார்.
இத்தகைய குற்றங்கள் தொடர்வதற்குக் காரணமென்ன? எப்படிப்பட்டவர்கள் இத்தகைய குற்றங்களைச் செய்கின்றனர். தங்குதடையற்ற கொண்டாட்டமும் பரபரப்பான வாழ்க்கையும் இலக்காகக் கொண்டவர்கள்; கத்தை கத்தையாக பணக் கட்டுகளும், கடன் அட்டைகளும், மின்னணுக் கைச் சாதனங்களும், பேய்த்தனமாகப் பாய்ந்து செல்லும் விலையுயர்ந்த மோட்டார் வாகனங்களுமாகப் பெருநகர சாலைகளிலும், நட்சத்திர நடன விடுதிகளிலும் திரிபவர்கள்; தான்தோன்றித்தனமான கேளிக்கைகளிலும் கனவுகளிலும் மிதப்பவர்கள்; சுருக்கமாகச் சொன்னால், தாராளமயம்உலகமயம் பெற்றெடுத்த செல்வச்சீமான்களின் கொழுப்பேறிய செல்லப் பிள்ளைகள்; அதாவது, நவநாகரீகப் பொறுக்கிகள்.
இந்த ""இளைஞர்கள் போதிய பணம் வைத்திருக்கிறார்கள்; அந்தப் பணபலமே தமது அதிகார உரிமை என்று அவர்கள் கருதுகிறார்கள். வெறித்தனம், அதிகாரம், போதை மற்றும் கிறுக்குத்தனமான ஆணவம் திமிர்த்தனம் ஆகியவை ஒரு கொடிய உயிர்க் கொல்லி ஆயுதமாக அமையும் உலகமயமாக்கம் கூட இம்மாதிரியான நடத்தைகளுக்கு ஒரு காரணமாக அமைகிறது'' என்கிறார் மும்பையின் பிரபல மான மனநல மருத்துவர் ஹரீஷ் ஷெட்டி.
இத்தகைய நச்சுப் பண்பாடு, மும்பை மட்டுமல்ல, தில்லி, சென்னை, பெங்களூர், ஐதராபாத் என்று நாட்டின் பெருநகரங்களிலெல்லாம் தொற்று நோயாகப் பரவி வருகிறது. சென்னை மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையின் இருபுறமும் புற்றீசல்களாய் புறப்பட்டுள்ள சொகுசு மாளிகைகளில் சனிக்கிழமை பின்னிரவு வரை குடித்துக் கும்மாளமிட்டு, கூத்தடித்துவிட்டு பாய்ந்து செல்லும் கார்களை ஓட்டிவரும் மேட்டுக்குடி புதுநாகரிகப் பொறுக்கிகளால் ஏற்படும் ""விபத்துகள்'' அங்கே வாழும் மக்களைப் பீதியடைச் செய்து வருகின்றன. இந்தச் சாலையில் நடக்கும் சாவுகள் மட்டும், சென்னையின் பிற பகுதிகளில் நடப்பவைகளைவிட அதிகமென்று விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்குக் காரணமானவர்கள் வழக்கமாக நாம் காணும் பரம்பரை பணக்கார வீட்டுச் செல்லப் பிள்ளைகள் அல்ல. கடந்த 15 ஆண்டுகளாக அடுத்தடுத்துவந்த ஆட்சியாளர்கள் பின்பற்றிய தாராளமயம் தனியார்மயம் உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாகப் பெய்த டாலர் மழையில் நனைந்த புதுப்பணக்காரர்கள். குறிப்பாக கணினி தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் அதன் உண்மை மதிப்புக்குமேல் பன்மடங்கு வரும் வருவாயினால் ஊதிப் பெருத்துப்போன செல்வத்தில் மிதிப்பவர்கள்தான் கண்மண் தெரியாமல் தறிகெட்டு ஆட்டம் போடுகிறார்கள்.
சில நாட்களுக்கு முன் குடிவெறியில் காரை ஓட்டிச் சென்ற ஒருவர் சாலைத்தடுப்புக் கம்பிகள் மீது மோதி மாண்டார். அதனால், குடிபோதையில் கார் ஓட்டுபவர்களைப் பிடிப்பதற்காக போலீசார் சோதனைகளில் ஈடுபட்டபோது, நள்ளிரவுக்குப் பின்னரும் குடித்துக் கும்மாளமிட்டுவிட்டு இளம் ஜோடிகள் கார்களில் பறப்பதைக் கண்டனர். இதைத் தொடர்ந்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விதிகளை மீறி நடத்தப்படும் சில ""பார்கள்'' மற்றும் நடன அரங்குகள் மீது திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன. நட்சத்திர விடுதிகளில் நள்ளிரவுக்குப் பிறகும் சீமைச் சாராயம் பரிமாறப்படுவதும், இளம்ஜோடிகள் குடிவெறியில் விளக்குகள் அணைக்கப்பட்டும், மங்கிய ஒளியிலும், வரைமுறைகள் இல்லாமல் ஆபாசமாக நடனமாடுவதும் நடப்பதைக் கண்டார்கள்.
சோதனையிட வந்த போலீசாரைக் கண்டதும், பலர், ஏற்கெனவே "புக்' செய்திருந்த தமது அறைகளில் பதுங்கிவிட்டனர். மேலும் பலர் பின்புறவழியாகத் தப்பி ஓடினர். போலீசார் வந்ததும் போதையில் ஆடிக் கொண்டிருந்தவர்களைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் ""நல்ல வேலையில் உள்ளவர்கள்; நல்ல குடும்பப் பின்னணி உள்ளவர்கள்'' என்று தெரிந்ததால் அவர்களின் ""எதிர்கால நலன்களை கருதி எச்சரித்து அனுப்பப்பட்டனர்'' என்கிறார்கள், போலீசார். ஆனால், விதிகளை மீறியும் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேலும் பார்களையும் நடன அரங்குகளையும் நடத்தியதற்காக விடுதி ஊழியர்கள் 17 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.
""சென்னையில் தெருவுக்குத் தெரு கம்ப்யூட்டர் நிறுவனங்கள் பெருகி வருகின்றன. இவற்றில் நான்கைந்து ஷிப்டுகளில் வேலை நடக்கிறது. நள்ளிரவில் "ஷிப்டு' முடிந்து செல்பவர்களைக் கவர்வதற்காகவே ஒட்டல்களில் பார்கள் நள்ளிரவைத் தாண்டியும் திறந்து வைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு தங்கள் மகன், மகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர், வேலை முடித்து அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுக்கு வருகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். நள்ளிரவில் வெகுநேரம் குடித்துவிட்டு அதிகாலையில் வீடு திரும்புபவர்கள் வேகமாக கார் ஓட்டிச் செல்கின்றனர். இதனால், நிறைய விபத்துக்கள் நடக்கின்றன என்பதையும் பெற்றோர் உணரவேண்டும்'' என்கிறார், ஒரு போலீசு அதிகாரி.
என்னவொரு அக்கறை! என்னவொரு பொறுப்பு! எல்லோரும் ""நல்ல வேலையில் இருப்பவர்கள், நல்ல குடும்பப் பின்னணி உள்ளவர்கள்'' அல்லவா, அதுதான்! ஆனால், பிடிபட்ட பெண்களோ, ""நாங்கள் எவன்கூடப் போனால் இவர்களுக்கென்ன?'' என்று கொழுப்புக் கொப்பளிக்கக் கேட்கிறார்கள். தாங்கள் அவ்வளவாகக் குடித்திருக்கவில்லை என்றும் குடிபோதையில் இருந்த 15,16 வயதுப் பெண்களை மட்டும் தப்பிப் போகவிட்டார்கள்; (மைனர் பெண்கள் ஆதலால் வழக்கும் குற்றமும் கடுமையாகக் கருதப்படும் என்பதால் போலீசின் கரிசனம் நிரம்பி வழிந்திருக்கிறது போலும்!) அடையாள அட்டைகளைக் காட்டியபோதும் காக்க வைத்து பெற்றோரை அழைத்து எச்சரித்துவிட்டுத்தான் வெளியே விட்டார்கள்'' என்று குறைபட்டுக் கொண்டார்கள்.
இரவு நேரங்களில் இப்படிக் குடித்துக் கூத்தடிப்பது ஒன்றும் தவறில்லை; ஒளிவுமறைவானதுமில்லை, கூச்சத்துக்குரியதுமில்லை, தகுந்த அடையாளத்தைக் காட்டி பகிரங்கமாகவே இப்படிச் செய்வதில் தயக்கமில்லை என்று அவற்றில் ஈடுபட்டவர்கள் காட்டிக் கொள்கிறார்கள். இப்படிச் செய்வது தங்கள் உரிமை என்றும் வாதிடுகிறார்கள். அதை மறுக்காத போலீசுக்காரர்களும் நடன அரங்கின் புகையும் சூழலும்தான் நல்லதில்லை என்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை முஷ்டியை மடக்கி மிரட்டுவதாகும் என்று ஐதீகமான ""இந்து'' நாளேடு சித்தரிக்கிறது. பெண்களை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்குக் கொண்டு போய் ஒருமணிநேரம் காத்திருக்கச் செய்தது பயபீதியூட்டுவதாகும் என்று பொருமுகிறது அந்த நாளேடு. கூடவே, இம்மாதிரியான ஆட்டங்களில் பாடுவதைத் தொழிலாகக் கொண்ட ஒருவரைப் பேட்டி கண்டு, ""இப்படிக் கட்டுப்பெட்டித்தனமாக இருக்கக் கூடாது, மின்னணு இசையை இரசிக்கும் புதிய போக்கை வளர்ப்பதற்காக இன்னும் தாராளமாக நடந்து கொள்ள வேண்டும்'' என்று எழுதியது அந்த நாளேடு.
அடுத்தநாளே கூடிய தென்னிந்திய ஓட்டல்கள் உணவகங்களின் உரிமையாளர் சங்கம், ""அந்நிய விமான சேவைகள், அந்நிய நேரடி முதலீட்டாளர்கள், அந்நிய சுற்றுலாப் பயணிகள் ஆகியவர்களுக்காக அரசு தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். குடிக்கவும், ஆடவுமான நேரத்தை அதிகரிக்க வேண்டும். தகவல் தொழில் நுட்பம், அது சார்ந்த சேவை நிறுவனங்கள், கணினிவெளி வேலைகளுக்கான நிறுவனங்கள், கால்சென்டர்கள் போன்றவை பெருகிவரும் சென்னையில் இரவு வாழ்க்கை பற்றித் தெளிவான கொள்கையை அரசு வகுக்க வேண்டும்'' என்று கோரியுள்ளனர்.
""இரவு வாழ்க்கை'' என்பது மேலே குறிப்பிடப்பட்ட தொழில்களின் நீட்டிப்பாகவும், புதிய பண்பாடாகவும் அந்நிய, உள்நாட்டுக் கூட்டுப்பங்குத் தொழில் கழகங்களால் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. தமது பணியாளர்களின் இரவு வாழ்க்கைக்காக இந்தக் கூட்டுப்பங்குத் தொழில் கழகங்கள், தாமே கூடுதல் சம்பளம், சுற்றுப் பயணங்கள் வசதிகள் மற்றும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்கின்றன. ""என்.ஐ.ஐ.டி.'' மற்றும் ""விப்ரோ'' ஆகிய இரண்டு கணினி மென்பொருள் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் சேர்ந்து ""தேதி வைத்து'' உல்லாசமாகக் கழிப்பதற்கு சிறப்புப் படி (டேட்டிங் அலவன்ஸ்) வழங்குகின்றன. இதனால் தனது மணவாழ்க்கை சிதைவதாக ""விப்ரோ'' நிறுவனப் பணியாளர் ஒருவரின் மனைவி வழக்குத் தொடுத்துள்ளார்.
தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற இந்த மறுகாலனியாக்கம் நமது நாட்டுப் பொருளாதாரத்தை மட்டுமல்ல, நமது நாட்டின் பண்பாட்டையும், குடும்பங்களை மட்டுமல்ல, ஏழை எளிய மக்களின் வாழ்வையும், உயிரையும் பறிக்கும் விபரீதங்களாக உருவெடுத்து வருகிறது என்பதையே இவை காட்டுகின்றன.
· ஆர்.கே.