தமிழ் அரங்கம்

Saturday, February 24, 2007

பெரும்பான்மை திட்டம் பேரினவாதமே

பெரும்பான்மை திட்டம் பேரினவாதமே என்பதை இனம் காண்பதும், மாற்றாக குறைந்தபட்ச ஜனநாயகத் தீர்வும்

பி.இரயாகரன்
24.2.2007


(இந்த விமர்சனத்தை தீர்வை முன்வைக்கும் அனைத்து தரப்புக்கும், இதன் மீது அக்கறை உள்ள அனைத்து சமூகப் பிரிவுக்கும் முடிந்தளவுக்கு அனுப்பிவைக்கவும்)


கொடூரமான புலிப்பாசிசம் ஒருபுறம், பேரினவாத அரசு நடத்தும் சதிகள் சூழ்ச்சிகள் கூடிய பாசிசம் மறுபுறம். இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து நிற்பதால், அனைத்தையும் மோசடி செய்தல், ஏய்த்து ஏமாற்றுதல், சமூகங்ளை இங்குமங்குமாக நம்பிக்கையூட்டி அலைக்கழித்தல், சமூகத்தையே சின்னாபின்னப்படுத்தி சிதைக்க காலத்தை இழுத்தடித்தல், அரசியல் பித்தலாட்ட மோசடிகளின் ஒட்டு மொத்த வடிவம் தான், இனப்பிரச்சனைக்கு தீர்வு என்ற பெயரில் இன்று அரங்கேறுகின்றது.


குறிக்கோளற்ற வகையில் காலத்தை இழுத்தடித்து பேச்சு வார்த்தைகள், சமாதானம் என்ற பெயரில் அர்த்தமற்ற வார்த்தைகள், அமைதி சமாதானம் என்ற பெயரில் கொலை வெறியாட்டங்கள், மக்களையே திண்டு செரிக்கும் சர்வ கட்சி கூட்டங்கள் என்ற பெயரில் வம்பளப்புகள், நிபுணர் குழுக்களின் ஆலோசனையின் பெயரில் பேரினவாத அரசியல் மோசடிகள், இப்படி பற்பல அன்றாடம் அரங்கேறுகின்றது.


தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகள் என்ற பெயரில் சிறிய கும்பல்கள், மக்களுக்கு விளங்காத மொழியில், மக்களை எட்டி மிதித்தபடி கட்சிகளையும், சந்திப்புகளையும் நடத்திக்காட்டுகின்றனர். இந்த வகையில் அமைக்கப்படட நிபுணர் குழுக்களின் அறிக்கைகள் எல்லாம், கடைந்தெடுத்த அரசியல் மோசடிகளை அடிப்படையாக கொண்டது. இந்த வகையில் தான் அரசால் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் பெரும்பான்மை அறிக்கை உள்ளது. இதன் தமிழ் ஆக்கத்தை "நண்பர்கள் வட்டம் - பிரான்ஸ்" வெளியிட்டுள்ளதுடன், இதையொட்டிய ஒரு சந்திப்பை நடத்தவுள்ளனர்.


இது போன்ற அறிக்கைகள் மற்றும் தீர்மானங்களை முன்வைப்பவர்கள், தீர்வு வைக்கப்போவதாக விடும் சவடால்கள் எல்லாம் வழமை போல் வெற்று கூச்சலாகவும், காலத்தை இழுத்தடிக்கும் ஒரு சதியாகவும், ஊரையும் உலகத்தையும் ஏமாற்றும் சூழ்ச்சியாகவும் அம்மணமாகி வருகின்றது. இந்த நிலையில் இந்த அறிக்கை மீதான கவனத்தை குறிப்பாக்கி, இந்த விடையங்கள் மீதான ஒரு தெளிவான சிந்தனைப் போக்கை கட்டமைப்பது அவசியமாகின்றது.


மறுபக்கத்தில் யுத்தத்தை விரும்பி வலிந்து தாக்கிய புலிகள் அதில் இருந்து மெதுவாக ஒதுங்கி விலக, யுத்தத்ததை நோக்கி பேரினவாதம் வலிந்து கால் வைத்து முன்னேறுகின்றது. இருந்த போதும் தீர்வை நோக்கிய இந்த சூழ்ச்சிகள் பற்றி தெளிவு கொள்வது அவசியமானது.


1. 1.1 இல் "உரிய அரச அதிகாரத்திற்கான பங்கு வழங்காமையினாலேயே இன்றைய சிக்கலான சூழல் ஏற்பட்டுள்ளது." இவ்வாக்கியம் மூலம் இனப்பிரச்சனையை அடையாளம் கண்ட விதமே முற்றாக முழுமையாக தவறானது. அரசு மற்றும் அதிகாரம் என்ற எல்லைக்குள் தமிழ் மக்களின் பிரச்சனைiயை குறுக்கி விடுவதன் மூலம், பேரினவாதத்தை மூடிமறைக்கின்றது.


தமிழ் மக்கள் இன ரீதியாக அடையாளம் காணப்பட்டு ஒடுக்கப்பட்டதன் விளைவு தான் இனப்பிரச்சனை. குறிப்பாக தமிழ் மொழி பேசும் மக்கள் எப்படி ஒடுக்கப்பட்டனர், ஒடுக்கப்பட்டுள்ளனர் என்ற விபரத்தை ஆதாரமாக தயாரிக்கமால், இதை ஒரு நாளும் சரியாக இனம் காணவோ, தீர்க்கவோ முடியாது.


2. 1.2 இல் "இந் நிலமை காரணமாக சிறுபான்மையினர் ஓரம் கட்டப்பட்டதோடு, இலங்கை அரசிலிருந்தும் ஒதுக்கப்பட்டதால் ஏற்கெனவே அதிகாரப் பகிர்வு குறித்து மேற்கொள்ளப்பட்ட பொறிமுறைகள் தோல்வி அடைந்தன." இது அபத்தமானது. அதிகாரப் பகிர்வுகள் தோல்வி அடைந்தமைக்கு இவை காரணமல்ல. மாறாக பேரினவாத நிலையே காரணம். அந்த வகையில் பேரினவாத நிலைமையை அடையாளம் காணவும், அதை சுட்டிக்காட்டவும் தவறுகின்ற அறிக்கை, தோல்விக்கான காரணத்தை மூடிமறைக்கின்றது. இதன் மூலம் அதிகாரப் பகிர்வின் உண்மைத் தன்மையையே மீளவும் கேள்விக்குரியதாக்குகின்றது.


3. 1.3 இல் "வித்தியாசமான இனக் குழும, மத அடையாளங்களை இணைத்துச் செல்வதற்கான இலக்கு அரசியல் அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்டு", என்றும் 1.4 இல் "வேறுபட்ட இனங்கள், மதப் பிரிவினரிடையே மிக அதிக அளவிலான உண்மையான அதிகார பகிர்வினை வழங்கும்" என்றும் அரசியல் அமைப்பு திருத்தத்தை முன்வைக்கின்றது. மத அடையாளத்தை திணிப்பது, உருவாக்குவது இனப்பிரச்சனையில் புதியதொரு அரசியல் சூழ்ச்சி. மதத்துக்கு அதிக அதிகாரம் என்றால் என்ன? இன அடையாளத்தை குறிப்பிட்ட இந்த அறிக்கை, அதன் அடிப்படையில் தீர்க்க தவறுகின்றது. தவறாக இந்த பிரச்சனையை மத அடையாளமாக காட்டி, அதை வலிந்து முன்னிலைப்படுத்தி இதற்குள் திணிக்கின்றது. அரசு மதத்துக்கு வெளியில் இருக்க வேண்டிய ஒன்று என்பது கட்டாயமான ஒன்று.


4. 1.5 இல் "இக் குழுவினரின் அணுகுமுறை இரு முனைகளைக் கொண்டது. அதாவது மாகாண சபைகளும், உள்ளுராட்சி சபைகளும் அரசின் நிறுவனங்களாகவும்," என்பதன் மூலம் இனங்கள் என்ற அடிப்படையில், மொழிகள் என்ற அடிப்படையில் பிரச்சனையை இனங் காணத்தவறி, அதை பேரினவாத நிலைக்குள் இதை சிறுமைப்படுத்தி ஒடுக்க முனைகின்றது.


5. 2.2 இல் "ஓற்றையான, சமஷ்டியிலான, பிரதேசங்களின் அல்லது மாகாணங்களின் ஒன்றியம் என அழைக்கப்படும்" என்பது உள்ளடகத்தில் தேசிய இனப்பிரச்சனையை முழு இலங்கைக்குமான ஒன்றாக கருத மறுக்கின்றது. மாகாணங்கள், மாகாண சபைகள் அனைத்தையும் இலங்கைக்கான ஒன்றாக கொண்டு வந்தவர்கள், இனப்பிரச்சனை தீர்வில் அதை தமிழருக்கு மட்டுமானதாக காட்டுவது, அதனடிப்படையில் பேரினவாதம் தான். தமிழ் மக்களை அது தனிமைப்படுத்தி இனவொடுக்குமுறையை ஆணையில் வைக்கின்றது.


6. 2.4:இல் "மக்களுக்கு தமக்கான மொழியை உருவாக்கவும், வளர்க்கவும் அத்துடன் தமது கலாச்சாரத்தின் வரலாற்றினைப் பேணவும், வளர்க்கவும், அபிவிருத்தி செய்யவும் உரிமை உண்டு. அத்துடன் இலங்கையர் என்ற பொதுவான அடையாளத்தினைப் பலவீனப்படுத்தாத வகையில் அரச அதிகாரத்தில் பகிர்வு கொள்ளவும், ஏனைய அரச கட்டுமானங்களில் பிரதிநிதித்துவம் பெறவும் உரிமை உண்டு. இவ் விளக்கமானது நாட்டின் எல்லைகளின் தன்மையை முழுமையாக அல்லது பகுதியாக பிரித்தல் அல்லது குடியரசின் அரசியல் ஐக்கியத்திற்கு பங்கமேற்படும் வகையிலான நடவடிக்கைகளுக்கு ஊக்கத்தினை வழங்குவதாக கருதுதல் ஆகாது." என்பது அபத்தமான விளக்கம். யாருக்கு யார்? ஏன்? இதை விளக்க முனைகின்றனர். நிச்சயமாக தமிழ் மக்களுக்கு அல்ல சிங்கள பேரினவாதிகளுக்கே. இந்த வகையில் இத் திட்டம் பேரினவாதிகளை திருப்தி செய்கின்ற வகையில், இதை விளக்கி தீர்வை இனம் காண முனைகின்றது. பொதுவான விளக்கம், அடையாளம் காணல், இவைகள் மட்டும்தான் உண்மையான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும்.


7. 4.2இல் "குடியரசின் மாகாணத்தினை அல்லது அதன் பாகத்தை பிரிப்பதற்காக நேரடியாக அல்லது மறைமுகமாக ஊக்கமளித்தல் அல்லது நியாயப்படுத்தல் அல்லது முயற்சிகளை மேற்கொள்ளல் என்பன மாகாண அரசினால் அல்லது மாகாண சட்ட சபையினால் மேற்கொள்ள முடியாது." என்ற விளக்கம் அபத்தமானது. ஒரு தீர்வுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்படும் போதும், முன்வைக்கப்படும் போதும் இப்படி இனம் காண்பது, விளக்குவது, யாரைத் திருப்தி செய்ய? நிச்சயமாக தமிழ் மக்களை அல்ல. சிங்கள பேரினவாதிகளைத் தான். இனப்பிரச்சனையை இவர்களால் வேறு எப்படிதான் இனம் காணமுடியும்.


8. 4.3இல் "நாட்டின் இறைமைக்கு அல்லது எல்லைப் பாதுகாப்பிற்கு அல்லது ஐக்கியத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் நிகழ்வு ஏற்படும்போது மாகாண நிர்வாகத்தின் அழைப்பின்பேரில் மத்திய ஆட்சி தலையிடமுடியும். அவை அரசியல் அமைப்பில் தெளிவாக வரையறுக்கப்படும்." பேரினவாதத்தை திருப்தி செய்கின்ற வாதங்கள். யாரால் "நாட்டின் இறைமைக்கு அல்லது எல்லைப் பாதுகாப்பிற்கு அல்லது ஐக்கியத்திற்கு பங்கம் ஏற்படும்" என்றால் அது தமிழரால் என்று மறைபொருளாகின்றது. அசட்டுத்தனமான ஒன்று. ஏன் மத்திய அரசால், சிங்கள பிரிவால் நடக்காது.? இப்படி இனம்காணுதல், விளக்குவது என்று இந்த அத்தியாயம் முழுக்க பேரினவாதமாகவே கொட்டிக்கிடக்கின்றது.


9. 6:3இல் "அதன் அடிப்படையில் அதிகார பரவலாக்கத்திற்கான பொருத்தமான அலகு மாகாணம் என குழு கருதுகிறது." இது உண்மையில் இனங்களின் உரிமையினை மறுக்கின்றது. அதை வெறும் அதிகாரமாக விதந்துரைக்கின்றது. இலங்கையை இன மற்றும் மொழி பிரதேசங்களாக பிரிக்க மறுக்கின்ற பேரினவாத அரசியல் சூழச்சி, பிரச்சனையை தீர்க்க உண்மையில் விரும்பவில்லை.


6:4இல் ".. தீர்மானங்களை மேற்கொள்ளும்போது இனக்குழுமம் மட்டும் தீர்மானிக்கும் காரணியாக அமையக்கூடாது என்பதும் கருத்தாக உள்ளது." ஏன் என இதற்கு பதிலளிக்கவில்லை. உண்மையில் சிங்கள பேரினவாதத்தையே தீர்வாக முன்மொழியும் போது, தனது அந்த எல்லைக்குள் தான் அது விதந்துரைக்கின்றது. பேரினவாதத்தை திருப்தி செய்கின்ற பல விளக்க உரைகளை வழங்க முனைகின்ற இந்த குழு, பிரச்சனையை இனங்காண்பதையே மறுக்கின்றது. சொல்லப்போனால் இந்த பிரச்சனையை அலசி ஆராயும் சுயாதீனமான குழுவாகக் கூட இதனால் இருக்க முடியவில்லை.


10. 6:5 இல் "1978ம் ஆண்டின் அரசியல் அமைப்பும், 1987ம் ஆண்டின் மாகாண சபை சட்டத்தின் பிரிவு 42ம் வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய இரண்டு அல்லது மூன்று மாகாணங்களின் இணைவு அதுவும் சட்டம் வழங்கிய அதிகாரத்தின் பிரகாரம் வாக்கெடுப்பு நடத்தி இணையுமாயின் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது என குழு கருதுகிறது." இவை எல்லாம் ஏமாற்றுகின்ற, பிரச்சனைகளை சிக்கலாக்குகின்ற ஒரு அரசியல் ஏற்பாடு. உண்மையில் வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கின்ற, அதேநேரம் ஏற்பது போல் நடித்து அதை வாக்கெடுப்புக்கு விட்டு இணைப்பது பற்றி சிங்கள பேரினவாதத்துக்கு காட்டுகின்ற ஒரு ஏற்பாடு. நேர்மையற்ற சதியை இப்படி முன்வைக்கின்றனர். இது மக்கள் கூட்டத்துக்கு இடையில் பிளவுகளையும், விரிசல்களையும் உருவாக்குகின்ற ஒரு தொடர்ச்சியான ஏற்பாடு. கூறப் போனால் இது பேரினவாதத்தின் சதி தான்.


11. 6:7 இல் "இந்த அடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் பிரதான கவலைகள் பின்வருமாறு" 6:7 (அ) "தமிழ் மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிலும், அரசியல் அதிகாரத்திலும் ஒதுக்கப்பட்டுள்ளதாக காணப்படும் உணர்வு" 6:7 (ஆ) "முடிக்குரிய நிலங்களைப் பயன்படுத்தல்" தமிழ் மக்களின் பிரச்சனையை மிகவும் குறுகிய எல்லையில் சுருக்கி, அதில் முடிக்குரிய காணியை முன்னிலைப்படுத்தி பேரினவாதத்தை அதன் திட்டமிட்ட குடியேற்றத்தை பாதுகாக்க முனைகின்றனர். முடிக்குரிய காணி அல்லாதவை மீதான அழுத்தமான உரிமையை இனங்களுக்கு மறுக்கின்றது.


அதை 17.1 "மத்திய அரசாங்கமும் அதன் ஸ்தாபனங்களும், யாப்பின் ஆரம்பத்தில் தேசிய அட்டவணையிலுள்ள விடயங்களின்படி கடடுடப்பாட்டில் அல்லது பாவனையில் வைத்திருக்கும் அரச காணிகளை எல்லாம் மத்தி பொறுப்பேற்கும்." என்கின்றது. இப்படி மையமான புள்ளியில் விட்டுக் கொடுக்க மறுக்கின்றது. மகாணங்கள் காணி மீதான எந்த உரிமையையும் கொண்டிருக்காது.


.இதைத்தான் முஸ்லீம் மக்கள் மீது 6:8 (இ) " முடிக்குரிய நிலங்களைப் பயன்படுத்தல்." பற்றி பேச முனைகின்றது. 6:8 (அ) "வடக்கு, கிழக்கில் காணப்படும் இனச் சுத்திகரிப்பு, அதனைத் தொடர்ந்து ஏற்படும் சொந்த சொத்துகளை இழத்தல் தொடர்பான பயம்." என்ற விடையத்திலும் தீர்வை குளறுபடியாக்கி மிரட்டுகின்றது. முஸ்லீம் மக்களின் தனித்துவத்தை அடையாளம் காண மறுக்கின்றது. இந்த அறிக்கை அவர்களுக்கான சரியான ஏற்பாட்டை முன்வைக்கவில்லை. எப்படி தமிழ் மக்களுக்கு வைக்கவில்லையோ, அப்படி முஸ்லீம் மக்களுக்கும் முன்வைக்கவில்லை. பின் 6:8 (ஆ) "பாதுகாப்பு" பற்றி பேசுகின்றது. இதுவே மற்றொரு கேள்வியை எழுப்புகின்றது. தமிழ் மக்களுக்கு பயம் ஏற்படாதோ? பாதுகாப்பு எப்படி உறுதிசெய்யப்படும்!


6:9 இல் "வடக்கு, கிழக்கில் உள்ள சிங்கள மக்களின் கவலைகள் என பின்வருவனவற்றை குழு அடையாளப்படுத்துகிறது. 6:9 (அ) "பாதுகாப்பு" 6:9 (ஆ) "அதிகார பரவலாக்கத்தால் வாழ்வுக்கான வசதிகளை இழக்கக்கூடிய ஆபத்துக்கள் பற்றிய ஏக்கங்கள்." என்று இந்த தீர்மானம் சிங்கள மக்களின் பயம், ஏக்கம், ஆபத்து, இழப்பு என்று அலட்டுகின்றது. இது தமிழ் மக்களுக்கும் சிங்கள பகுதியில் பொருந்தும் தானே. அங்கு அது பற்றி அக்கறை கொள்ளவில்லை. தீர்வுகள், அதன் வரையறைகள் தவறாக உள்ள போதுதான், இவை பற்றி பிரச்சனைகளே உருவாகின்றது.


12. 6:10(அ) "தனியான வடக்கு, கிழக்கில் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களின் கவலைகளைக் கருத்தில்கொண்டு இரண்டு சுயாட்சி அலகுகள் அதனுள்ளே அமைக்கப்படுகின்றன." என்று கூறப்படுகின்றது. இதில் சிங்கள மக்கள் சுயாட்சி என்கின்றனர். எவ்வளவு இழிவாக தமிழ் முஸ்லீம் மக்களை காயடிக்க முடியுமோ, அப்படி இது காயடிக்கின்றது. நடத்தப்பட்டது திட்டமிட்ட சிங்கள குடியேற்றம். இந்த பேரினவாத செயலை கண்டிக்காது, அதற்கு அரசியல் அந்தஸ்து வழங்கும் ஒரு ஏற்பாடு. அப்படியாயின் இதே காரணங்களுக்காக, தமிழர்கள் செறிந்து வாழும் சிங்கள பகுதிகளில் சுயாட்சியை வழங்குவார்களா?


13. 6:10(ஆ)(2) "சிங்கள பெரும்பான்மை பகுதிகளை அருகிலுள்ள மாகாணத்துடன் இணைத்தல்." என்ற வாதம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் மீதான நியாயப்படுத்தல். சட்ட ரீதியான அந்தஸ்து வழங்கி, அதை தமிழ் பிரதேசங்கள் அல்லாதனவென்று பிரிக்கின்ற சூழ்ச்சி. இதனால் தமிழ், முஸ்லீம் என்று பிரிக்கின்றனர்.


14. 6:10 (இ) "வடக்கு, கிழக்கிற்கென பொதுவான மாகாண சட்ட சபையும், அரசும் அமைதல் வேண்டுமெனவும், அதன் ஆயுள் 10 வருடகாலம் எனவும், அதன் பின்னர் கிழக்கில் வாக்கெடுப்பு நடத்தலாம்" இது தமிழ் மக்களை பிளக்கின்ற சூழ்ச்சி. இணைப்பு, பிரிப்பு என்று, தமிழ் மக்கள் பிரச்சனையை அங்கீகரிக்க மறுக்கின்ற பேரினவாத அரசியல் நாடகத்தின் நீட்சி. இந்த பெரும்பான்மை பேரினவாதத்தை எப்படி அமுல்படுத்துவது என்ற கூடி ஆராய்ந்து, முன்வைத்த அறிக்கை தான் இது.


இப்படி அறிக்கை முழுக்க பற்பல கூறுகள். சிலவற்றைத் தான் எடுத்துக் காட்டியுள்ளேன். மாறாக குறைந்த பட்ச அடிப்படையில் சில முன் மொழிவுகள்.


குறைந்தபட்ச ஜனநாயகத்தினை அடிப்படையாக கொண்ட ஒரு ஜனநாயகத் தீர்வு


இனப்பிரச்சனையில் குறைந்தபட்ச ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட, எமது கருத்து சார்ந்த முன்மொழிவு ஒன்றை எடுத்துக்காட்ட முனைகின்றோம். இதை அடிப்படையாக கொண்டு ஒரு தீர்வை, அனைத்து தரப்பையும் வலியுறுத்தி முன்வைக்க கோருகின்றோம். இதை நாம் தெளிவுபடுத்த முன், எமது நிலைப்பாடுகள் மீதான சில தெளிவுபடுத்தல் அவசியமானது.


1. எம்மைப் பொறுத்தவரையில் இலங்கையில் இனமுரண்பாட்டுக்கான தீர்வு சுயநிர்ணய அடிப்படையிலானது தான். இது அல்லாத அரசியல் அமைப்பில், இனப்பிரச்சனையை, அதன் சமூக பொருளாதார கூறுகளையும் முழுமையாக தீர்க்க முடியாது என்பது எமது தெளிவான நிலைப்பாடு. இதற்கு குறைந்த எந்தத் தீர்வும் இனங்களுக்கு இடையேயான பிரச்சனையையும், இனங்களுக்குள்ளான எந்த சமூக முரண்பாடுகளையும், மொத்த சமூக பிரச்னைகளையும் தீர்க்காது. இது எமது அரசியல் ரீதியான தெளிவான துல்லியமான நிலைப்பாடு. உண்மையில் அசாத்தியமான இந்த உண்மையை எடுத்துச் சொல்வதற்கு அப்பால், இதை நிர்ணயம் செய்யக் கூடிய வகையில் சமூகம் மீதான செயல்தளத்தில் எந்த சமூக பலத்தையும் இக்கருத்து கொண்டிருக்கவில்லை. இதை அடைவதற்கு இடைக்கட்டத் தீர்வைக் கூட முன்வைக்கவும், அதில் இருந்து முன்னேறும் நிலையிலும் கூட இக்கருத்து சமூக சார்ந்த அமைப்பு வடிவத்தைக் கொண்டிருக்கவில்லை.


2. சுயநிர்ணயத்தை அடையும் வழியில், ஒரு இடைக்கால தீர்வுத் திட்டத்தை மக்கள் நலன் சார்ந்து முன்வைக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது. இதுவும் கூட இன்றளவில் கருத்தாகத்தான் உள்ளது. மக்களின் குறைந்தபட்ச நலன்களை முன்னிறுத்தி, அதை அமுல்படுத்தக் கோரும் வகையில் இலங்கையில் யாருமில்லை. எந்த சக்தியும் இதற்கு தயாரற்று இதற்கு எதிராகவே உள்ளனர். இந்த கருத்து தளம் சார்ந்து, அரசியல் ரீதியாக மக்கள் திரள் அமைப்பைக் கொண்ட இயங்கு தளம் எதுவும் கிடையாது. சமூக இயக்கம் முழுவதும் பாசிசமயமாகி, குறுகிய அதிகார வெறிக்குள் சமூகத்தை அங்குமிங்குமாக பிய்தெறிந்து பொறுக்கித் தின்னும் கூட்டத்தின் எல்லைக்குள் முழு சமூகமும் மலடாக்கப்பட்டுள்ளது. இடைக்கால ஒரு சமூகநலத் தீர்வைக் முன்வைக்க முடியாத நிலை. (இதை பேச்சுவார்த்தை தொடங்கிய காலத்தில் நான் முன்பே வைத்துள்ளேன். பார்க்க இலங்கையில் மக்கள் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழ

குறைந்த பட்சம் எவை தீர்க்கப்பட வேண்டும் )


இவ் இரண்டும் கருத்தளவில், மக்கள் சார்பு நிலையில் முன்வைப்பதாக மட்டும் உள்ளது. இந்த அவலமான ஒரு நிலையில், மூன்றாவது நிலையை ஒட்டிய குறைந்தபட்ச ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட ஒரு நிலைக்கு நாங்களும் கீழ் இறங்கி, அதையே குறிப்பாக்கி தெளிவான ஒரு வழிகாட்டலை வழங்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.


3. இலங்கை முழுவதுமான இன்றைய பாசிச சூழலில் இருந்து, தப்பித்துக் கொள்ள மக்கள் விரும்புகின்றனர். இதை கவனத்தில் கொண்டு, இந்த உணர்வுகள், நிகழ்வுப் போக்குகள் மீது செயலாற்றவும் கோருகின்றது. எமது கருத்துக்களை மீறியும், மக்களின் வாழ்வியல் நிலை, அவர்களின் உடனடித் தேவை மீதான ஒரு தீர்வை, அவர்களின் அவலங்கள் கோருகின்றது.


இது உள்ளடகத்தில் பாசிச யுத்த பிரிவுகளிடமிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் ஒரு முயற்சி. இந்த நிலையில், நாம் இந்த மக்களின் துயரங்களை துடைத்துக்கொள்ளவும், அதையொட்டி இணங்கிச்செல்வதும் காலத்தின் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் கூட நாம் ஆளுமை செலுத்தவோ அல்லது அதன் திசைவழியை ஒழுங்குபடுத்தும் சக்தியோ எம் முன் கிடையாது. ஆனால் குறைந்தபட்சம் அதை நோக்கி ஒரு சிந்தனை முறையை உருவாக்குவது, அவசியமானது. இந்த வகையில், மூன்றாவது நிலை மீதான ஒரு தீர்வுக்கான ஒரு சிந்தனைமுறையை தூண்டும் முயற்சி தான் இது.


எமது மூன்றாவது நிலை பெரும்பாலானவர்களின் அருபமான முதலாவது அரசியல் நிலையாகும். ஆனால் அதில் தெளிவற்ற ஒரு கதம்பம். இந்த வகையில் இந்த மூன்றாவது வகையான தீர்வு என்பது, சமூகத்தில் நிலவும் பல்வேறு சமூக முரண்பாடுகளை தீர்க்கமாட்டாது என்பதை முதலில் தெளிவாக புரிந்திருக்க வேண்டும். இந்த அரசியல் நிலையைத்தான் பெரும்பான்மையானவர்கள் கொண்டுள்ளனர். இதற்கு வெளியில் யாரும் பாசாங்கு செய்யத் தேவையில்லை.


இது நிலவுகின்ற இந்த பிற்போக்கான அரசியல் அமைப்புச் சட்டத்தில், சில சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது. இன்று பேசப்படும் அரசியல் தீர்வு இதற்கு உட்பட்டதே. இந்த நிலையில் சமூகத்தின் ஏனைய சமூக முரண்பாடுகள் பற்றிய விவாதப் பொருளையே இது இயல்பாக தவிர்த்துக்கொள்கின்றது. இன்று அரசு கூற முனையும் கற்பனையாகவேயுள்ள அந்த தீர்வும் சரி, அதையொத்த ஓத்த தீர்வுகளும் சரி, இதற்குள் தான் இயங்குகின்றது.


இந்த வகையில் தான் அண்மையில் வெளியாகிய பெரும்பான்மை அறிக்கை. இதை எடுத்துக் கொண்டால், இது பெருமளவில் உப்புச்சப்பற்ற வெற்று அலட்டல். சாதாரண மக்கள் புரிந்து கொள்ளமுடியாத வகையில், வெளிப்படையாக பேச மறுக்கின்ற, இனப்பிரச்சனையை தீர்க்கின்ற வகையில் புலமையெதுவுமற்ற ஒரு அறிக்கை. உண்மையில் பேரினவாதத்தை இறுக்குகின்ற, நியாயப்படுத்துகின்ற ஒரு தீர்வு. அதைத்தான் சுருக்கமாக மேலே பார்த்தோம். படுமோசமானதும், இலங்கையில் இன ஒடுக்குமுறையை கட்டமைத்த பேரினவாத நிலையை பேணுகின்ற வகையில், ஒரு தொடர்ச்சியான முன் முயற்சிதான் இது. இதையும் இந்த பேரினவாத அரசியல் மலம் துடைக்க பயன்படுத்துகின்றது என்பது வேறு விடையம்.


இந்த அறிக்கையும் சரி, இது போன்ற அறிக்கைளும் சரி, இனப்பிரச்சனையை குறிப்பாக்கி அதற்கான தீர்வை முன்வைக்க தவறுகின்றன. எந்த மக்களுக்கு அதை விளங்க வேண்டுமோ, அந்த மக்கள் புரியாத வகையில் இதை திணிக்க முனைகின்றது. உண்மையில் பார்த்தால் இதன் உள்ளடக்கம், அரசியல் அமைப்பில் ஓட்டைகளை உருவாக்கி அதற்குள் அங்குமிங்குமாக இனவாதத்தை மிதக்கவிட முனைகின்றது.


சமூக முரண்பாடுகளை தீர்க்க மறுக்கின்ற இந்த அரசியல் சட்ட அமைப்புக்குள், இதை ஆதரிக்கின்ற சக்திகள் இனப்பிரச்சனையை குறைந்தபட்ச வரையறையில் தீர்க்கமுடியும். இனமுரண்பாடு அபத்தங்களையும் கடந்து, இதை செய்யமுடியும். பெரும்பான்மையின் விருப்பத்தை பெறும் வகையில், அனைத்து அரசியல் கட்சிகளையும், அதன் குறுகிய குதர்க்கமான அரசியல் எல்லைகளை முடக்கும் வகையில், இதை முன்மொழிய முடியும்.


இதை நாம் வைப்பது எமது தொடர்ச்சியான அரசியல் நிலைக்கு முரணாகப்படலாம். மக்கள் விரும்புகின்ற உடனடியான அமைதியை, குறைந்தபட்ச ஜனநாயக கோரிக்கைக்குள் உள்ளடக்கி இதை நாம் முன்வைப்பது அவசியமாகின்றது.


இந்த வகையில் ஒவ்வொருவரின் சிந்தனை முறையையும், குறைந்தபட்ச ஜனநாயக கோரிக்கைக்குள் சிந்திக்க தூண்டுவது அவசிமானதாக உள்ளது.


இந்த வகையில் இனங்களுக்கு இடையில் மக்கள் கூட்டத்துக்குள் அதியுயர் ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில், மிக நுட்பமாக தீர்வுகளை இனம் காணவேண்டும்.


1. இலங்கையில் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பதை வெறுமனே வடக்கு கிழக்கு மக்களுக்கானதாக காட்டி மட்டுப்படுத்துவது நிராகரிக்கப்பட வேண்டும். இது பிரச்சனையை தீர்க்காது. மாறாக அலங்கோலமாக்கி சின்னா பின்னமாக்கும். உண்மையில் அரசியல் கட்சிகள், அரசியல் செய்யவே இது உதவுகின்றது.


2. இனப்பிரச்சனைக்கான தீர்வை இலங்கையின் இனங்கள் என்ற அடிப்படையிலான வரையறையிலும் செய்யப்பட வேண்டும். தீர்வு அனைத்து இனங்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். தீர்வு ஒரு பிரிவு மக்களுக்கு என்று சிறப்பானதாக, தனித்துவமானதாக இருக்கக் கூடாது. இவை பிரச்சனையை மேலும் கூர்மையாக்கும். வடக்குகிழக்கு மக்களின் பிரச்சனைக்கு தீர்வல்ல, இலங்கையில் உள்ள இனங்களுக்கான ஒரு தீர்வை இனம் காணவேண்டும்.


இந்த வகையில் முதன்மையானதும் முக்கியமானதுமாக, சிங்கள மக்களுக்கு தனி அலகாகக் கொண்ட இன அடிப்படையிலான தீர்வை வழங்குவது அவசியமானது, நிபந்தனையானது. இலங்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களின் தனித்துவமான அடையாளங்களை ஒருங்கிணைக்கும் அரசியல் தான், இதை குறைந்தபட்சம் ஜனநாயக ப+ர்வமாக தீர்க்கும். இந்த வகையில் அடையாளம் காணப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் என்ற அடிப்படையில், தீர்வுகளை இனம் காண முற்படவேண்டும்.


3. இன அடிப்படையிலான தனி அலகை இனம் காண்பது, இனரீதியான ஒடுக்குமுறையை தொடங்கி வைத்த 1948 ஆண்டு காலகட்டத்தை அடிப்படையாக கொண்டு, இதை நெகிழ்ச்சி கொண்ட வடிவில் அணுகுவது அவசியமானது. இயல்பான இடப்பெயர்வுகள், திட்டமிட்டு நடத்திய குடியேற்றங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய வகையில், இந்த வரையறை முன்வைக்கப்பட வேண்டும்.


4. இந்த வரையரைக்குள் உள்ளடங்கும் சகல மக்களினதும் தனித்துவத்தையும், அதற்கு எதிரான முரண்பாடுகளையும் களையும் வகையில், முரண்பாடாக இயங்க முடியாத வகையில் அவை பாதுகாக்கப்பட வேண்டும்.


5. மத்திய (இன மொழியல்லாத) அரசு, மாநில (இன மொழி) அரசு இந்த இணக்கப்பாடான உடன்பாட்டை மீறமுடியாத வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் அமைய வேண்டும். அந்த (இன மொழி வாரிப்) பகுதியில் வாழும் சிறுபான்மை இனப் பிரிவுகளின் ஆட்சேபனைகள், பெரும்பான்மை இனப் பிரிவுக்கு எதிராக இருக்குமானால், அந்த பெரும்பான்மை எடுக்கும் இனச் சட்டங்கள் செல்லுபடியாகாத வகையில் சட்ட விதிகள் அவசியமானது. இனம் மற்றும் மொழிச் சட்டங்கள் சிறுபான்மையின் இணக்கமான அங்கீகாரத்துடன் மட்டும் தான் சட்ட அங்கீகாரத்தை பெறும். இது அந்தப் பகுதி சிறுபான்மை மக்களின் விருப்பை தெரிந்து கொள்ளும் நேரடி வாக்கெடுப்புக்கு (அரசியல் வாதிகள் விலை பேசப்படலாம்) உட்பட்ட வகையில் இது அமைதல் அவசியம். (இங்கு வாக்களிப்பை கோருவதற்கு, குறிப்பிட்ட அந்தப் பகுதி மக்கள் அதை கோருகின்றனர் என்பதை உறுதி செய்யும் ஜனநாயகமுறை சட்ட ரீதியாக அவசியமானது.)


6. இன ரீதியான ஒரு மாநிலம் ஒன்றில் காணப்படும் பிரதேச ரீதியான முரண்பாடுகள், பிரச்சனைகள், அதிகாரங்கள் அனைத்தும் ஒரு இணக்கப்பாடான வடிவத்தில் இணைந்து காணப்பட வேண்டும். குறிப்பாக பிரதேச ரீதியான ஒரு ஆட்சேபனைக்கு எதிராக, பொதுவான பெரும்பான்மை மூலமான சட்டத்தை நடைமுறையில் அமுல்படுத்த முடியாத வகையில் இருக்க வேண்டும். ஆட்சேபனையை சட்டமாக்க வேண்டும் என்றால், அந்த பிரதேச மக்களின் வாக்களிப்பு மூலம் மட்டும் தான் செய்ய கூடியவகையில் அரசியல் அமைப்பு கொண்டிருக்க வேண்டும். (இங்கு வாக்களிப்பை கோருவதற்கு, குறிப்பிட்ட அந்தப் பகுதி மக்கள் அதை கோருகின்றனரா என்பதை உறுதி செய்யும் ஜனநாயகமுறை சட்ட ரீதியாக அவசியமானது.)


7. தமிழ் மொழி பேசுகின்ற முஸ்லீம் மலையக மக்களை எடுத்துக்கொண்டால், அவை தனி அலகுகளாக இருக்கின்ற வகையிலும், அது சிங்கள தமிழ் மக்கள் உட்பட்ட இரு பிரதேசங்களினுள்ளும் அமையலாம், தனித்தும் இருக்கலாம். அவர்களின் செறிவை அடிப்படையாக கொண்டு, இது வரையறுக்கப்பட வேண்டும். மக்கள் சிதறி வாழ்கின்ற குறித்த பிரதேசங்களில் அடர்த்தியாக வாழ்கின்ற போது, அவர்களின் ஆட்சேபனைகளை உள்வாங்கவும், அதை அந்த சிறுபான்மை நிராகரிக்கும் பட்சத்தில் அதை அமுல்படுத்த முடியாதாகவும் இருக்க வேண்டும்.


8. இன மொழி ரீதியான அமைப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்களை உள்ளடக்கிய வகையில், அவர்களை பெரும்பான்மை உறுப்பினராக கொண்ட ஒரு மத்திய அரசு உருவாக்க்கப்பட வேண்டும். ஒன்றையொன்று ஐக்கியப்பட்டு செயல்படவும், அதிகளவு பணம் நிர்வாக அலகுகளுக்கூடாக சிதைக்கப்படுவதையும் இது தடுக்கும்.


9. இந்த வகையில் இன ரீதியான அலகுகளின் அதிகாரங்கள் அனைத்தும் சர்வதேச மற்றும் உள்நாட்டு தொடர்புடைய வகையில் பிரிக்கப்பட வேண்டும். சர்வதேச தொடர்புடையவை மத்தியரசுடனும், உள்நாட்டுடன் தொடர்புடையவை மாநில அரசுகளுடனும் இருக்கும் வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். ஒரு பிரதேச பகுதிக்கான வரையறை, இயல்பாக அப்பிரதேச ரீதியான சட்டம், வாழ்வியல், பொருளாதாரம், கல்வி, காணி போன்ற பல துறைக்கு உட்பட்டதாக அதிகார கொண்டதாக இருக்க வேண்டும்.


10. மத்திய, மாநில அரசு இரண்டும் மதத்தில் தலையிடாக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும். மதத்தை பாதுகாப்பது, அதற்கு நிதி ஒதுக்குவது முற்றாக தடை செய்ய வேண்டும். மதம் மக்களின் வழிபாட்டுமுறை என்றால், அதை பராமரிப்பது, அனுசரிப்பது மக்களின் உரிமையாக அவர்களிடமே விட்டுவிட வேண்டும். அரசு தலையிடவும், நீதி வழங்குவதும் தடைசெய்யப்பட வேண்டும்.


கல்வியில் அனைத்து மதக் கல்வியும் தடை செய்யப்பட வேண்டும். மொழிக் கல்வி முன்னிலைப்படுத்த வேண்டும்.


11. இனக்குரோதங்களை விதைத்தல் தடை செய்யப்பட வேண்டும். அவை என்ன என்பதை சட்ட வரையறை செய்வது அவசியம். குற்றம் இழைக்கும் பட்சத்தில் உறுப்புரிமையை இழக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அரசு உத்தியோகத்தர்கள் தமது பதவியை இழப்பர். அத்துடன் அனைவரும் தண்டனைக்கு உட்பட வேண்டும்.


12. கல்வி, வேலை வாய்ப்பு போன்ற விடையங்களில் இன அலகுகள் சுயாதீனமாக செயலாற்றும் வண்ணம் இருக்க வேண்டும். ஆனால் இலங்கை முழுவதுக்குமான கல்வி முறை, கூலி முறை, தொழிலாளார் சட்டங்கள் பொதுவானதாக இருக்கவேண்டும்.


13. நிதி வளங்களை பகிர்தல் என்பது, மாநில ரீதியான அலகு திரட்டக் கூடிய வகையிலும் இருக்க வேண்டும். மத்திய நிதியைப் பகிர்தல் என்பது, இன மொழி ரீதியான பிரதிநிதித்துவம் செய்யும் பிரதேசத்தைச் சோந்த ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குழுவினால் தீhமானிக்கப்பட வேண்டும். இனங்களின் எந்த ஆட்சேபனையும், இதை தடுக்கும் வகையில் இது உறுதி செய்யப்பட வேண்டும்.


14. மொழி மற்றும் பண்பாட்டு கலச்சார கூறுகள், பரஸ்பர இணைப்புக்குள்ளாக்க வேண்டும். தாய் மொழி பிரதானமாக இருக்கும் அதேநேரம், இரண்டாவது தேசிய மொழி (இது தமிழ் அல்லது சிங்களம்) உயர்தர வகுப்பு வரை கட்டாய பாடமாக இருக்க வேண்டும். உயர் பரீpட்சையில் இரண்டாவது மொழித் தேர்வு கட்டாயமாக இருக்க வேண்டும். இது ஒரு 10, 15 வருட கால இடைவெளியில் முழுமையாக அமுலுக்கு வரவேண்டும். அரசு சேவையில் உள்ளோர் குறிப்பிட்ட காலத்தின் பின்பும், மற்றும் புதிய நியமனங்களில் கட்டாயமாக இரண்டு மொழித் தேர்வும் சித்தி அடைந்து இருக்க வேண்டும். இரண்டு மொழி அறிவற்ற ஒருவரின் நியமனம் உரிமை அல்லது நியமனத்தில் இருந்து விலக்கும் உரிமை சட்ட ரீதியானது. இதை கால இடைவெளியில் அமுல்படுத்த வேண்டும். ஏற்கனவேயுள்ள முதியவர்களுக்கு சலுகையும், இரண்டாவது மொழியை பாவிக்கும் திறன் பெற்றவர்களுக்கு ஊக்கத் தொகையாக விசேட படியும் வழங்க வேண்டும். இரண்டாவது மொழியின் ஆற்றலை மூன்று வகையில், இதை நெகிழ்சி போக்காக கையாளவேண்டும் 1.இலக்கண ரீதியான முழுமையான மொழி அறிவு. 2. இரண்டாவது மொழி மூலம் பேசும் அறிவு. 3. எழுதவும் பேசவும் திறன் கொண்ட அறிவு. இந்த அடிப்படையில், சலுகை அடிப்படையில் இதை இனம் காண்பது அவசியம்


இது மத்திய மாநில அரசின் அனைத்து அரசு துறையிலும் இது கட்டாயம் கையாள வேண்டும்.


15. இன ரீதியான, மத ரீதியான இழிவாடல்கள், நடத்தைகள் அனைத்தும் சட்டத்தின் முன் குற்றமாக பிரகடனம் செய்து, தண்டனைச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். சாதிய ரீதியான குற்றங்களைப் போன்று இவை அடையாளம் காணவேண்டும்


இவைகள் குறிப்பிடத்தக்க சில. இவைகளில் உள்ள தப்பபிராயங்களை களைய, கால அவகாசத்தை அடிப்படையாக கொண்டு நடைமுறைக்குரிய ஒன்றாக மாற்றுவதன் மூலம், குறைந்தபட்சம் இனங்களுக்கு இடையில் உயர்ந்த ஜனநாயக பன்முகத் தன்மையை உருவாக்க முடியும்.


இவைகளை அடிப்படையாக கொண்டு, இலங்கைக்கான அரசியல் அமைப்புச் சட்டத்தை புதிதாக வரைய வேண்டும். இது மட்டும் தான், பிரச்சனையை குறைந்தபட்சம் தீர்க்கும. இல்லாத அனைத்தும் மறுபடியும் மறுபடியும், இதை முன்னுக்கு கொண்டுவரும்.


Friday, February 23, 2007

நாடகம் சோகமான முடிவை நோக்கி நகர்கின்றது

சமாதானமா? யுத்தமா? இது யாருக்காக? மக்களுக்கா? மூலதனத்துக்கா? நாடகம் சோகமான முடிவை நோக்கி நகர்கின்றது

"சமாதானமா? யுத்தமா?" என்பதை மையமான பொருளாக்கிய ஏகாதிபத்தியங்கள், விரிவாகவே களமிறங்கியுள்ளது. புலிகளுக்கும் அரசுக்கும் பின்பக்கமாக கைகளை இறுகக் கட்டபட்ட நிலையில், சமாதானம் பற்றி மூலதனம் உத்தரவுகளை இடுகின்றது. இங்கு அமைதிப் படைக்கு பதில், மூலதனமே சமாதானத்தை கடைப்பிடிக்க உத்தரவுகளை இடுகின்றது. என்றுமில்லாத வகையில், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏகாதிபத்தியத் தலையீடுகள் பெருக்கெடுத்துள்ளது. உண்மையில் யுத்தமற்ற அமைதியை மக்கள் பெற்றார்களோ இல்லையோ, மூலதனம் இதைச் சரியாகவும் சாதகமாகவும் பயன்படுத்தியுள்ளது.


உதாரணமாக 2002 இல் பட்டடியலிடப்பட்ட 208 கம்பெனிகள் முதல் காற் பகுதியில் பெற்ற நிகர லாபம், 3.9 பில்லியன் ரூபாவாகும் (390 கோடி ரூபாவாகும்). இது சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 85 சதவீதம் அதிகமாகும். இதில் ஓரிரு விதிவிலக்குத் தவிர, அனைத்தும் வெளிநாட்டுக் கம்பனிகளாகும். உண்மையில் சமாதானம் அமைதி என்பதை வெளிநாட்டு மூலதனமே தனக்கு இசைவாகப் பயன்படுத்தியுள்ளது. மக்களின் உடல் உழைப்பையும், தேசிய வளங்களையும் வெறும் 208 கம்பெனிகள் மட்டும், முந்திய வருடத்தை விட 85 சதவீதம் அதிகமாக, சுரண்டிக் கடத்தியுள்ளதைச் சமாதானம் ஏற்படுத்திய எதார்த்தமான புள்ளிவிபரம் நிறுவுகின்றது. மொத்தமாக ஆராய்ந்தால் சமாதானத்தின் ஒட்டு மொத்த சுரண்டல் லாபங்களை யார் அனுபவிக்கின்றார்கள் எனின், வெளிநாட்டு மூலதனம் தான் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லாது போகின்றது. 2002 அக்டோபர் மாதம் ஏற்றுமதி 16 சதவீதம் அதிகரித்து அந்த மாதம் 40.8 கோடி டொலர் (4080 கோடி இலங்கை ரூபா) பெறுமதியான தேசிய செல்வங்கள் மக்களிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. 2001 ஆண்டு மொத்த ஏற்றுமதி 408 கோடி டொலராக (40,800 கோடி ரூபா) இருந்தது. 2002 ம் ஆண்டு முதல் 10 மாதத்தில் மொத்த ஏற்றுமதி 383 கோடி டொலரை (38300 கோடி ரூபா) எட்டியிருந்தது. 2002 அக்டோபர் மாதம் இறக்குமதி 19 சதவீதம் அதிகரித்ததுடன் 57.8 கோடி டொலர் (5780 கோடி ரூபா) பெறுமதியான பொருட்கள் இறக்குமதியானது. இதன் மூலம் தேசிய உற்பத்திகளை முடக்கி அழிக்க அமைதி, சமாதானம் என்ற வாய்வீச்சுகள் துணைபோனது, போகின்றது. முதல் 10 மாதத்தில் இறக்குமதி 494 கோடி டொலராக (49400 கோடி ரூபா) அதிகரித்து இருந்தது. 2002ம் ஆண்டு வெளிநாட்டு வர்த்தக நெருக்கடி 12.6 கோடி டொலரில் இருந்து 126 கோடி டொலர் வரை ஏற்படும் என்று, அமைதிப் பூங்காவில் வெட்டித்தனத்தின் மீது மத்திய வங்கி பகட்டாக அறிவித்துள்ளது. தேச மக்களின் அடிப்படை தேவை சார்ந்த நுகர்வுகளை ஏகாதிபத்திய வெள்ளையர்களின் வாயின் ருசிக்கு ஏற்ப ஏற்றமதி செய்யவும், மக்களின் அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையற்ற கழிவுகள் சார்ந்த ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்யும் தேசிய கொள்கை, அமைதிப் பூங்காவை நிறுவி மக்கள் மேல் திணிக்கப்படுகின்றது. தேசப் பண்பாடுகள், கலாச்சாரங்கள், வாழ்வியல் தன்மை என அனைத்தும் என்றுமில்லாத வகையில் கற்பழிக்கப்படுகின்றது.


இது தொடர்ச்சியாகத் தேசத்தையே அழிக்கும் சூறாவளியாக, நாட்டின் தடையற்ற, மந்தை குணம் கொண்ட அடிமை மக்கள் மேல் தன்னை ஜனநாயகப்படுத்துகின்றது. 2003 (ஜன-பிப்) தை மாதம் இலங்கை துறைமுகத்துக்குள் 22,258 கப்பல்கள் வந்தன. இது வழமையை விட 12 சதவீதம் அதிகமாகும். ஏற்றி இறக்கிய கொள்கலன்கள் 1,46,737 ஆகும். இது சென்ற வருடத்தை விட 17.2 சதவீதம் அதிகமாகும். 2003 மாசி (பிப்-மார்ச்) மாதம் தென் ஆசியாவில் மிகப் பெரிய சரக்குகளை ஏற்றி இறக்கும் இடமாக இலங்கை மாறியது. 1,03,321 கொள்கலன்களை ஏற்றி இறக்கியது. இது சென்ற வருடத்தை விட 22.1 சதவீதம் அதிகமாகும். கொழும்பு துறைமுகம் உலகின் மிகப் பெரிய கப்பல் கம்பெனியுடன் ஒரு ஒப்பந்தத்தை அண்மையில் செய்துள்ளது. சரக்குள் ஏற்றி இறக்கும் ஒரு மையமாக கொழும்பு அடுத்த இரண்டு வருடத்தில் மாறவுள்ளது. அக்கம்பெனியின் 312 கப்பலை உள் எடுக்கவும் 8 லட்சம் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றி இறக்கவும் ஒப்பந்தம் கோருகின்றது. இலங்கை ஏகாதிபத்தியங்களின் சந்தைக்கு ஏற்ற மையமாகவும், சூறையாடுவதற்கு ஏற்ற அடிமை பண்பாடு விரிவாக தேசியமயமாகின்றது. நாட்டின் உள் வரும் ஒவ்வொரு கப்பல்களில் இருந்து கழிவுகளை இறக்கும் பணியும் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் களவாடி ஏற்றிச் செல்லும் பணியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தடங்களுக்குள்ளாகவில்லை. இன்றைய அமைதியும் அதன் வெற்றியும் இங்கு தான் ஜனநாயகமாகியது.


மூலதனத்தின் ஆக்கிரமிப்புக்கு இசைவாக "அமைதியா? யுத்தமா?" என்று பிரகடனம் செய்தபடி, 2002ம் ஆண்டு இலங்கையில் அதி கூடிய எண்ணிக்கையில் புதிய கம்பெனிகள் பதிவு செய்யபட்டுள்ளது. 3284 புதிய கம்பெனிகள் பதிவான அதே நேரம், முந்திய வருடத்தை விட இது 46 சதவீதம் அதிகமாகும். 3050 தனியார் கம்பெனியாகவும், 90 அரசுதுறை சார்ந்தும் பதிவானது. மொத்தத்தில் 43000 கம்பெனிகள் பதிவாகியுள்ள அதே நேரம் 32000 கம்பெனிகள் ஒன்றுக்கு மேற்பட்ட கம்பெனிக்குள் தன்னை பதிவாகியுள்ளது. புதிய முதலீடுகளும், முதலீட்டுக்குள் முதலீடுகளும் இன்று இலங்கையின் தேசிய வளங்கள் மேலான ஆக்கிரமிப்பு நடத்துகின்றது. புதிய கம்பெனிகள் மக்களுக்கு வேலை வாய்ப்பை அள்ளித் தருகின்றது என்ற ஒரு தலைப்பட்சமான பிரச்சாரம் மூலம், அன்னிய முதலீடுகள் தேசிய அடிப்படைகளைச் சூறையாடிச் செல்வதை உறுதி செய்கின்றது. தேசத்தில் வாழும் தேச மக்களையும், தேச வளங்களையும் விற்கும் விபச்சாரத் தரகரர்களாகவே, தமிழ் சிங்கள தேசியத் தலைவர்கள் தத்தம் சமாதானம் மற்றும் யுத்தக் கோஷங்களை பிரகடனம் செய்கின்றனர்.


இலங்கையில் வாழும் ஒவ்வொரு இனத்தின் தலைவர்களும் தேசத்தை இனம் சார்ந்து, ஏகாதிபத்தியத்துக்கு விபச்சாரம் செய்யவும் கூட்டிக் கொடுக்கவும் கம்பளம் விரிக்க ஒரு கணம் கூட தயங்கவில்லை. இதுவே இன்றைய தேசத்தின் "தேசியத் தலைவர்களின்" இறுதி மூச்சுடன் கூடிய நக்கிப் பிழைப்பாக உள்ளது. 2002-ம் ஆண்டு சமர்ப்பித்த வரவுசெலவு, தேசத்தை சூறையாடும் மூலதனத்துக்கு அடிமையாகக் கூனிக்குறுகிய படி சலுகை வழங்கத் தவறவில்லை. நாட்டைச் சூறையாடிக் கொழுக்கும் தேசத் துரோகிகளான தேசத்தின் எதிரிகள் கட்ட வேண்டிய வரிக்கு, மன்னிப்பு திட்டம் மூலம் விலக்களித்த போது ஜனநாயகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பன்றிகளைப் போல் தமது சாக்கடை நாற்றத்தால் தேசத்தையே மூழ்கடித்தனர். இங்கு தமிழ் சிங்கள மொழி வேறுபாடு சார்ந்து எந்தத் தேசிய உணர்வும் பிரதிபலிக்கவில்லை. மூலதனத்துக்குப் பாதுகாப்பும் சலுகையும் ஜனநாயகத்தின் எடுப்பான தேசியமாகியது. மூலதனத்துக்குச் சலுகை இது மட்டுமா? இல்லை. மக்களைச் சுரண்டி வருடம் 50 இலட்சம் வரி செலுத்தும் மூலதனத்துக்கு, 30 சதவீதமான வரி குறைக்கப்பட்டதன் மூலம், வெளி நாட்டு மூலதனம் தாராளமாக சுதந்திரமாக சுரண்டும் சலுகை ஊக்குவிக்கப்பட்டது. அதே நேரம் 50 லட்சத்துக்குக் குறைவான வரி கட்டுபவர்கள் 20 சதவீத வரி கட்டவேண்டும். இதன் மூலம் தேசிய உற்பத்திக்கு அதிக வரிமுறை சுற்று வழி மூலம் நடைமுறைக்கு வந்துள்ளது. 50 லட்சத்துக்கும் கூடுதலாக 20 சதவீத வரிகட்டியவர்கள் 30 சதவீத வரிச் சலுகை பெறுவதால், 50 லட்சத்துக்கு குறைய வரி கட்டுபவர்கள் கூடுதலான வரியை அதி கூடிய வருவாய் உடையவர்களை விட அதிகம் கட்டக் கோருகின்றது. இதை விட மேலதிக சலுகையாக 50 லட்சத்துக்கு அதிகம் வரிகட்டுபவர்கள் மக்கள் நலன் செயல் திட்டத்துக்கு உதவினால், 15 சதவீத வரி கட்டினால் போதுமானது. இதற்குப் பின்னால் 30 சதவீத வரிச் சலுகையும் உண்டு. மறைமுகமாக வெளிநாட்டு மூலதனத்துக்கு அதிக வரியற்ற சலுகைகளும், தேசிய உற்பத்திக்கு அதிக வரி மூலம் நெருக்கடியையும் தேசிய ஜனநாயக பாராளுமன்றங்கள் திணித்து, தேசிய அடிப்படைகளைத் தகர்ப்பதே இன்றைய தேசியமாக, அமைதியாக, யுத்த பிரகடனங்களாக உள்ளது.


இதன் அடிப்படையில் புதிய முதலீட்டுக்கு 5 வருட வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. முதலீடுகளைப் பெரியளவில் குவிக்கும் வெளிநாட்டு கம்பெனிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் தேசிய அரசாங்கங்கள் ஒரு விபச்சாரத் தரகனாகச் செயல்படுகின்றது. இந்த விபச்சாரத் தரகர்கள் தனிப்பட்ட உயர் வர்க்கப் பிரிவினர் கட்டிய 35 சதவீத வரியை, 30 சதவீதமாகக் குறைத்து ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசமாக "நாய் போல் வாலாட்டி குலைக்க கோரும்" சலுகை வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் செல்வத்தை தாராளமாகக் கடத்திச் செல்ல ஏற்றுமதி வரியை 0.5 முதல் 0.75 சதவீதம் குறைத்து ஏகாதிபத்திய மூலதனம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் அடிப்படை தேவையைப் பறித்து, அதை ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்கப்படுகின்றது. மக்களின் அடிப்படை வாழ்வைக் கூலிகள் மூலம் சிதைக்கவும், வெளிநாட்டவன் அதிகம் சம்பாதிக்கவும் பணத்தின் பெறுமதி குறைக்கப்பட்டது. 2002-இல் பணவீக்கம் 14.2 சதவீதமாக இருக்கும் வண்ணம் உலகமயமாதல் திணித்தது. வட்டி வீதம் ஒரு சதவீதத்தால் குறைத்ததன் மூலம், மக்களின் தேசிய சேமிப்புக்குக் கிடைத்த வட்டியின் அளவு குறைந்தது. தேசியச் சேமிப்பை எடுத்து முதலீடாக பயன்படுத்தும் பெரும் மூலதனத்துக்கு ஒரு சதவீத வட்டி குறைக்கப்பட்டதால், மறைமுகமான விசேட மானியமாகியது. உதாரணமாக அமெரிக்காவில் இந்த நடைமுறை மூலம் மூலதனத்துக்குக் கிடைத்த மேலதிகப் பணத்தின் பெறுமானம் 13,500 கோடி டொலராகும். பெரும் மூலதனத்துக்குச் சேவை செய்வதே தேசிய கொள்கையாக மாறிவிட்டது. இதற்குத் தமிழ், சிங்கள, முஸ்லிம் தலைவர்கள் என யாரும் விதிவிலக்கல்ல. இதற்கு ஆயுதம் ஏந்திய, ஏந்தா, எந்தத் தேசிய நாயகர்களும் விதிவிலக்கற்ற கைக்கூலிச் சேவையைச் செய்கின்றனர்.


நாட்டைப் பெரும் மூலதனத்துக்கு ஏலம் விட்டபடி, நிதி மூலதனத்துக்கு நாட்டை அடகு வைப்பதையே அடிப்படைக் கொள்கையாகக் கொண்டே, நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் போராட்ட இயக்கங்களும் நாலுகால் பாய்ச்சலில் முண்டியடிக்கின்றனர். அடகு வைத்து பெற்ற பணத்துக்கு வட்டி கட்டவும் மீள கொடுப்பனவுக்கும், தேசிய வருமானத்தில் 50 சதவீதத்தக்கு அதிகமானதை தாரை வார்க்கின்றனர். இலங்கையின் கடன் 2002 இல் 1,45,060 கோடி (1450.6 பில்லியன்) ரூபாவாக அதிகரித்துச் செல்லுகின்றது. இலங்கையில் ஒவ்வொருவரும் 77,500 ரூபா கடனுக்கு தேசிய சொந்தக்காரராக உள்ளனர். வெளி நாட்டுக் கடன் மொத்தத் தேசிய வருவாயில் 112 சதவீதமாக உள்ளது. உண்மையில் இந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றால், ஒரு வருடம் முழுக்க பட்டினி இருந்து அனைத்தையும் வெளிநாட்டுக்குக் கொடுத்தாலும் கடனைக் கொடுக்க முடியாது என்பதை புள்ளிவிபரங்கள் உணர்த்தி நிற்கின்றன. நாடு திவாலாகி வரும் நிலையில் மத்திய வங்கி 2003 தைமாதம் (ஜனவரி) 200 கோடி ரூபாவுக்கு பிணைப்பத்திரங்களை வழங்கியது. வழமையாக இந்த பிணைப் பத்திர முதிர்வு 6 வருடமாக இருந்தது. தற்போது 10, 15 வருடமாக மாறியுள்ளது. இதற்கு 15 சதவீத வட்டி வழங்க உறுதி அளித்தது. உண்மையில் மக்களின் சேமிப்புகள் திவாலாகி விட்டதையும், இதை மூடிமறைக்க பிணைப்பத்திரங்கள் பயன்படுத்தப்படுவதையும் இன்று எதார்த்த நிலையில் காணலாம். இதன் மூலம் மேலும் மக்களின் தேசியப் பணத்தில் இருந்து 24,000 கோடி ரூபாவை உறிஞ்சியெடுக்க முனைகின்றது. இதன் முதற்படியாக 2003 தை மாதம் 5500 கோடி ரூபாவை மத்திய வங்கி மக்களின் பணத்தைத் தனதாக்கியது. 2003 (பிப்ரவரி) மாசி மாதம் மீண்டும் 100 கோடி ரூபா பெறுமதியான பிணைப்பத்திரத்தை வெளியிட்டது. இதற்கு 8.5 சதவீத வட்டி உறுதி அளிக்கப்பட்டு, அதை வருடம் இரண்டு தடவைகளில் வழங்க உறுதி அளிக்கப்பட்டது. பெரும் மூலதனங்கள் மக்களின் பணத்தைக் கைப்பற்றி அவர்களையே சூறையாட, மக்களின் சேமிப்புகளைக் கவரும் சலுகையாக இந்த முயற்சிகளின் ஒரு அங்கமாகவே வேகம் பெற்றுள்ளது. உண்மையில் பணத்தின் பெறுமானம் இதன் மூலம் வீழ்ச்சி காணவும், பணத்தை தேசங் கடந்த நிதி நிறுவனங்கள் சுருட்டிச் செல்வதும், அதையே மீள் கடனாக வழங்கி, நாட்டை மறுகாலனியாக்குவதுமே இதன் அடிப்படைக் கொள்கையாகும். மக்களின் சேமிப்பு பணத்தின் பெறுமானமானது, பணவீக்கம் மூலமும், வட்டிக் குறைப்பின் மூலமும் மற்றும் பல மறைமுக வழிகளில் குறைந்து செல்ல, மறுதளத்தில் மக்களின் பணத்தை தரமுடியாது என்ற அறிவிப்பை வழங்கும் ஒரு நிலைக்கு நாடு செல்லுகின்றது. கடன் பத்திரங்கள் அதன் முதற்படியாக, வங்கிகள் திவாலாகும் ஒரு நிலைக்கு இலங்கையின் உலகமயமாக்கல் நாலுகால் பாய்ச்சலில் எகிறி குதித்துச் செல்லுகின்றது.


மற்றொரு வேடிக்கையாக 1996-க்கு பின் வெளிநாட்டுக் கடனாக வந்த 25000 கோடி ரூபா பணம் பயன்படுத்தப்படவேயில்லை. ஆனால் அதற்கு வட்டி கட்டுவதும், மீள கொடுப்பதும் தொடர்ச்சியாக செய்யப்பட்டுள்ளது. உண்மையில் வெளிநாட்டுக் கடன்கள் நேரடியாக இலங்கை வங்கியில் இடப்படுவதில்லை. மாறாகக் கடன் கொடுத்தவர்களிடம் பாதுகாப்பாக அப்பணம் இருப்பதுடன், அவை பொருட்களாக ஏற்றுமதியாகின்றன. பணத்தைக் கடன் வாங்கியவன் என்ற அடிப்படையில் கடன் கொடுத்தவனிடம் பொருட்களை அவன் நிர்ணயித்த அதிக விலைக்கு உரிமையுடன் வாங்கும் சிறப்புத் தகுதியை கடன் பெற்றவனுக்கு கொடுக்கின்றது. பின் வாங்கிய பொருளுக்கு வட்டி கட்டும் ஒரு சுழற்சி முறையான கொள்ளையே, கடனின் சிறப்பான உலகமயமாக்கமாகும். காகிதப் பணம் என்பது மனித உழைப்புச் சார்ந்த ஒரு பொருளின் அடக்க விலையைச் சுரண்டலுடன் உள்ளடக்கிக் குறிக்கின்றது. பணத்தின் பெறுமதியைக் குறித்து அச்சு அடிக்கும் பேப்பரின், எந்தப் பெறுமானமும் அது குறிக்கும் பெறுமானத்தை உள்ளடக்கியிருப்பதில்லை. கடனின் செயல்பாடு உழைப்பின் செயற்பாடாக இருப்பதால், வெளிநாட்டு உழைப்பு நேரடியாக நாட்டுக்குள் வருவதில்லை. மாறாக உழைப்பின் உற்பத்தி ஏற்றுமதியாகி, மறைமுகமாக வெளிநாட்டவனின் நேரடி உழைப்பு ஆக்கிரமிப்பாக மாறுகின்றது. முன்பு நேரடியாக ஆக்கிரமித்த வடிவத்தில் இருந்து, இன்று மறைமுகமாக நாட்டை ஆக்கிரமிக்கும் ஒரு அரக்கனாக வருகின்றது. எந்தளவுக்கு வெளி நாட்டுப் பணம் உள் நாட்டில் வருகின்றதோ, அந்தளவுக்கு வெளி நாட்டு உழைப்பின் சுரண்டல் சார்ந்த உழைப்பு, மற்றைய நாட்டுக்குள் ஊடுருவிப் பாய்கின்றது. இதனால் தேசிய உற்பத்தி முடக்கும் அதே நேரம், உள்நாட்டு உற்பத்தி "உழைப்பு வழியாக" மிக மலிவாக மீள உறிஞ்சப்படுகின்றது. உழைப்பு சார்ந்த சுரண்டல் பணத்தையும், உழைப்பின் சேமிப்பையும் மறைமுகமாக மக்களிடம் கவரும் ஏகாதிபத்தியங்கள் மறு முதலீடாக, இலங்கை முதல் பல நாடுகளுக்கு வட்டிக்கும், வட்டிக்கும் வட்டி கோரி நிபந்தனைகளை உள்ளடக்கி வழங்குகின்றது. இதை அவர்கள் மெதுவாகவே சுட்டிக்காட்ட முற்படுகின்றனர். "வடக்கு - கிழக்கு மாகாண உடனடி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கும் நாடுகள் தமது உதவிகள் குறித்து சில நிபந்தனைகளை விதித்துள்ளன. அவை தொடர்பான விவரங்களை இப்போது வெளியிடமுடியாது." என்று அரசின் சமாதானச் செயலணிப் பணிப்பாளர் பேர்னாட் குணதிலக வன்னியில் வைத்து அறிவித்தார். அத்துடன் அதை "உதவி வழங்கும் நாடுகள் நிதியைச் சும்மா வழங்கப் போவதில்லை. அந்த நாடுகள் சில நிபந்தனைகளை விதிக்கும் என்பது தெரிந்ததே. அந்த நிபந்தனைகள் குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது" - என்று கூறினார். இதன் அடிப்படையில் புலிகள் உள்ளடங்கிய சிரானின் கூட்டத்தில் திட்ட வரைவாகத் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு மேலாக அரசும் 300 முதல் 400 திட்டங்களையும் சமர்ப்பிக்கவிருக்கின்றது என்று அறிவித்தார். யாழ்ப்பாணத்தில் 10 கோடி ரூபா கடனை மின்சார வழங்கலுக்காக ஆசிய வளர்ச்சி வங்கி கொடுத்துள்ளது. உண்மையில் இவை எல்லாம் மக்களை வெறும் கொத்தடிமைகளாக மற்றும் மறுகாலனியாக்கம் இதன் மூலம் வேகம் பெறுகின்றது.


நாடு சமாதானத்தின் இறக்கைகள் மூலம் ஏலம் விடப்படுகின்றது. நிரந்தரத் தீர்வு ஏற்பட்டால் வடக்கு - கிழக்கு புனரமைப்புக்கு கூடுதல் கடன்களை உதவி என்ற பெயரில் வழங்குவோம் என்று ஆசிய அபிவிருத்தி வங்கித் தலைவர் ரடோசினோ தெரிவிக்கின்றார். விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் நடத்திய பேச்சுக்களின் பின் அவர் வெளியிட்ட கருத்தில் "வடக்கு - கிழக்குப் புனரமைப்புக்கும் மக்களின் மீள் குடியமர்வுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி தனது கூடுதல் பங்களிப்பை வழங்கவேண்டும் என்று தமிழ்ச்செல்வன் கோரிக்கை விடுத்தாகவும்,. ஏ-9 வீதியை புனரமைக்க நிதி உதவி வழங்கியது போன்று, வடக்கு - கிழக்கில் சேதமடைந்துள்ள ஏனைய வீதிகளைப் புனரமைக்க நிதி வழங்க வேண்டும் என்றும் தமிழ்ச்செல்வன் கோரியதாகவும் தெரிவித்தார். வடக்கு - கிழக்கில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த 40 கோடி (அண்ணளவாக 4000 கோடி ரூபா) அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளோம். நிரந்தர சமாதானம் ஏற்பட்ட பின்னர் கூடுதல் நிதியை வழங்குவோம் என்று சினோ பதிலளித்தாக" செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் அன்றே கிளிநொச்சியில் 60 கோடி ரூபா செலவில் உருவாக உள்ள புதிய நவீன வைத்தியசாலைக்கான காலனித்துவ அடிக் கல்லை நாட்டத் தவறவில்லை. இப்படி நாட்டின் வடக்கு கிழக்கு மட்டுமல்ல. நாட்டின் எல்லா பாகத்திலும் வெளிநாட்டு மூலதனமும் ஊடுருவிப் பாய்கின்றது.

நாட்டின் சட்டத்திட்டத்தில் விதிவிலக்குடன் கூடிய சுரண்டல் சுதந்திரம் சில நாடுகளுக்கு, அவர்களின் இறைமையாக தாரை வார்க்கப்படுகின்றது. 01.3.2003 தொடக்கம் இலங்கை இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. தேசிய உற்பத்திகள் இதன் மூலம் மிகப் பெரிய அழிவைத் துரிதப்படுத்தக் கோருகின்றது. மலிவான இந்தியக் கூலியில் உற்பத்தியாகும் பொருட்கள், இலங்கையின் உயர்வான கூலியில் உருவாகும் உற்பத்தியை அழித்து ஒழிப்பதை நிபந்தனையாக இது கொள்கின்றது. தேசிய உற்பத்திகள் தப்பிப் பிழைக்க கூலி குறைப்பை தேசிய முதலாளித்துவ சக்திகள் முன் திணித்து கட்டாயப்படுத்துகின்றது. இதன் மூலம் வர்க்கப் போராட்டத்தின் நட்பு சக்திகளை எதார்த்த நடைமுறையில் எதிரணிக்கு இட்டுச் செல்வதன் மூலம், பெரு மூலதனம் வர்க்கப் போராட்டத்தில் இருந்து தற்காப்பு பெறமுயல்கின்றது. மறுதளத்தில் பிராந்திய ஆதிக்கச் சக்தியான இந்தியாவின் ஒரு மாநிலமாக, இலங்கை மாற்றப்படுகின்றது. கொள்ளையை இலகுவாக நடத்த இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்குமிடையே தரைப்பாதை அமைப்பது குறித்து ரணில் விக்கிரமசிங்காவும் வாஜ்பாயும் புதுடில்லியில் கூடி ஆராய்ந்தனர். சுதந்திர வர்த்தகம் போன்று சுதந்திர வர்த்தக வலையங்கள் பல இலங்கை சட்டத்திட்டத்துக்கு வெளியில் தாராளமாக மக்களைச் சுரண்டிக் கொழுக்க உருவாக்கப்படுகின்றது. மாசி (பிப்ரவரி) 2003-இல் இலங்கை மற்றும் பிரான்சுக்கு இடையில் கையெழுத்தான ஒப்பந்தம் ஒன்று, பிரஞ்சு மூலதனத்துக்குத் தனியான கைத்தொழில் பேட்டை ஒன்று அமைத்து கொள்ளையிட அனுமதித்துள்ளது. இதில் தற்போதைக்கு 76 முதலீடுகளை உள்ளடக்கிய இந்த சுதந்திரமான கைத்தொழில் பேட்டை, மக்கள் மேலும் அதிகமாகச் சூறையாட அனுமதிக்கும் அதே நேரம் மக்களை மேலும் தியாகம் செய்ய கோருகின்றது.


நாடு தொடர்ச்சியாகத் திவாலாகி வருகின்றது. மக்களின் உழைப்பும், உழைப்பு சார்ந்த வாழ்வும் பெறுமதி இழந்து வருகின்றது. உலகமயமாதல் நாட்டின் எல்லை எந்தளவுக்கு ஊடுருவிப் பாய்கின்றதோ, அந்தளவுக்கு நாட்டின் தேசிய பற்றக்குறை இயல்பானதாக மாறுகின்றது. வரிச்சலுகை, வரிவிலக்குகள் அளிப்பது, வட்டி கட்டுவது, மூலதனம் விரிந்த களத்தில் வசதியாகச் சுரண்டும் சாதனங்களை அமைத்துக் கொடுப்பது (உதாரணமாக கட்டுநாயவுக்கு விமானம் எற இலகுவாகச் செல்ல அமைக்கும் பாதை. இது வெளிநாட்டு நபர்கள் மற்றும் சரக்கு உள்ளிட) என விரிந்தளவில் வழங்கும் சலுகைகள், மானியங்கள் மூலம் பற்றாக்குறை நியாயப்படுத்தப்படுகின்றது. இதைத் துல்லியமாகக் கூறினால், தேசிய பற்றாக்குறைத் திட்டமிட்டே உலகமயமாதல் அமைப்பு உருவாக்குகின்றது. கடன் மூலம் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உலக வங்கி நிர்ப்பந்திக்கின்றது. இலங்கையின் மொத்த தேசிய வருமானம் 2002 இல் 33900 கோடி ரூபாவாகும். ஆனால் செலவோ 64900 கோடியாகும். துண்டு விழும் தொகையை கடன் வாங்குவதன் மூலம் நாட்டை ஏலம் விட்டே திரட்ட உள்ளனர். அதாவது வட்டியையும், மீள கடன் கொடுப்பனவை மறு கடனாக வாங்கவும், புதிதாக கடன் வாங்குவதன் மூலம் பற்றக் குறையை நிவர்த்தி செய்து மூலதனத்துக்கு மறுமுதலீடு செய்யா கோருகின்றது. அத்துடன் கொள்ளையடிப்போரும் கடன் கொடுத்து வட்டி வாங்குவோரும் மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, இருப்பிடம், மருத்துவம், கல்வி என அனைத்தையும் படிப்படியாகக் குறைத்து அதற்குச் செலவிடுவதை நிறுத்தக் கோருவதுடன், அதைத் தமக்குத் தரும்படி கோருகின்றனர். அதை ஒவ்வொரு வரவு செலவிலும் சரி, ஒவ்வொரு தேசிய நடவடிக்கையிலும் சரி தலைகீழாக நின்று செய்வதில், மொழி கடந்த தேசிய தலைவர்கள் நேர்மையானவர்களாக இருக்கின்றனர்.


தேச வளத்தைக் கொள்ளையடிப்பதையே தேசியக் கொள்கையாகக் கொள்கின்றனர். ஏகாதிபத்தியமான ஆஸ்திரேலியாவின் கொள்ளை நிறுவனம் ஒன்று மன்னார் பிரதேசத்தில் பெட்ரோலிய வளம் சம்பந்தமாக விரிவான ஆய்வொன்றினை நடத்தியுள்ளது. பெட்ரோலின் இருப்பை ஒட்டிய நம்பிக்கையினை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகிழக்கிலும் எண்ணெய் வள ஆய்வினை மேற்கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 3லட்சத்து 25ஆயிரம் அமெரிக்க டொலரை மேலும் வழங்க முன்வந்துள்ளது. இதை கொள்ளை அடிக்க பன்னாட்டு நிறுவனங்களிடம் மன்னார் கடலைத் தாரை வார்க்க அரசு பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரவுள்ளது. இது போன்று பல தேசிய உற்பத்திகளை அழிக்க புதிதாக 175 வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்குள் வர உள்ளதாக, அரசு பெருமையாக அறிவித்துள்ளது. சீனா சுதந்திர வர்த்தக வலையத்தில் புடவைத் தொழிலில் முதலிடும் ஒரு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. ஜெர்மனி அரசு யாழ்குடாவில் 1997 முதல் தொழில்நுட்ப புனரமைப்பு என்ற பெயரில் 47 கோடி ரூபாவை 2003 வரை செலவு செய்துள்ளது. 74 பாடசாலைகளில் 300 மலசல கூடங்களை அமைத்ததுடன், 17 கிராமிய நீர் திட்டங்களைப் புனரமைத்ததுடன், 2000 வீடுகளை அமைக்கவும் இந்த நிதியைப் பயன்படுத்தியது. இலங்கை அரசு திருகோணமலையில் உணவு பாதுகாப்பு மையம் ஒன்றை உருவாக்க ஜெர்மனிய மூலதனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக 18 கோடி ரூபாவையும, இரண்டாம் கட்டமாக 22 கோடி ரூபாவையும் முதலீடு செய்ய உள்ளது. திருகோணமலையில் எண்ணைக் குதங்களை சிலவற்றை 35 வருட குத்தகைக்கு எடுத்த இந்தியா, சென்னையில் இருந்து கொழும்புக்குக் குழாய் வழி மூலம் எண்ணை அனுப்பும் திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்த உள்ளது. உள்ள10ர் பெட்ரோல் விநியோகத்தையும், அதை கடை வைத்து விற்கும் உரிமையை இந்திய மூலதனத்துக்கு கொடுக்கும் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் பொருட்களின் விலையைத் தீர்மானிக்கும் "உலக வர்த்தக நிறுவன விலைமதிப்பீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இறக்குமதி பொருளுக்கு விலைமதிப்பீட்டை ஆறு வழிமுறைகள் ஊடாக சர்வதேச சந்தை விலைக்கு இசைவாக மதிப்பீடு செய்ய ஒப்பந்தம் வழிவகுக்கின்றது. முதல் முறை சாத்தியமாக விட்டால் ஒழுங்கு முறைப்படி கையாள இந்த ஆறு வழிமுறைகள் கோருகின்றது. அத்துடன் உலகமயமாக்கல் விதியின் அடிப்படையில், சர்வதேச விலைக்கு இசைவாக விலையைத் தீர்மானிக்க, இறக்குமதியாக்கும் தனியாருக்கு இந்த ஒப்பந்தம் அதிகாரத்தை அளித்துள்ளது. அதாவது அரசுக்கு வெளியில் இது சுயமாக விலை நிர்ணயத்தைச் செய்யும் அதிகாரத்தைக் கொண்டது.


சமாதானம் அமைதி என்ற பெயரில் எந்தச் சத்துமில்லாத நஞ்சுப் பானமான கொக்கோகோலாவைத் தமிழ் தேசியத்துக்கும், யாழ் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் சத்துள்ள பழங்கள் பதனிடப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய புதிய தொழிற்சாலைகள் போடப்படுகின்றன. தமிழ்த் தேசிய வீரர்களின் தேசியத் தியாகத்தின் கல்லறைகள் மேல் செய்த துரோகம் மூலம், நடைமுறைக்கு வருகின்றது. ஏன், யாழ் கொக்கோகோலா தரகர்களாகத் தாம் மட்டும் இருக்கும் முயற்சியில், தேசிய வீரர்கள்(!) தமது அதிகாரத்தை பாவிக்க முயல்கின்றனர். தேசியக் கல்லறைகள் மேல் உலகக் கொள்ளைக்காரர்கள் அமர்ந்து உல்லாசம் செய்ய, யாழ்குடாவில் 50 அறைகள் உள்ளடங்கிய நட்சத்திர விடுதி ஒன்றை அமைக்க 35 கோடி ரூபா முதலீடு செய்ய உள்ளனர் என்ற அறிவுப்புகள் வெளியாகியுள்ளது. ஏகாதிபத்தியங்கள் தத்தம் முதலீடுகளுடன் இலங்கையைச் சூறையாட இந்த "அமைதி சமாதானம்" என்ற முகமூடியைப் பயன்படுத்தி வருகின்றது. யுத்தமா? அமைதியா? என ஏகாதிபத்தியத் "தேசியம்" பேசும் தேசிய வாதிகள் வம்பளந்து கொண்டு எலும்புக்காகப் போடும் சண்டையில் குளிர் காய்ந்தபடி, தேசத்தின் உயிர் உள்ள சதைகளையும் அதன் ஆற்றல்களையும் உயிருடன் கொன்றே கொள்ளையிட்டுச் செல்வது அதிகரித்து வருகின்றது. இது விரிவான வகையில் வடக்கு கிழக்கு உட்பட எங்கும் புற்றீசல் போல் பரவிப் படருகின்றது. மக்களின் தேச வளங்கள், அவர்களின் உயிருள்ள உழைப்பு ஆகியவை மூலதனத்தின் நெம்புக்குள் சிக்கி நொருங்கிச் சிதைவதை நியாயப்படுத்துவதே தேசிய வாதமாகிப் போனது. இதுவே நாட்டை முன்னேற்றுகின்றோம் என்ற பொதுக் கோஷத்தின் கீழ் நடக்கும் கூத்து ஆகும். இதுவே இன்று அமைதி - சமாதானம் என்ற பெயரில், உலகமயமாதலாக உள்ளது.


இந்த "அமைதி சமாதான"த்தைக் கொண்டாடவும், சொகுசாக மக்களின் உழைப்பை மலிவாக அனுபவிக்கவும், பிஞ்சுக் குழந்தைகளைப் பாலியல் பண்டமாகக் குதறிச் சூறையாடவும் 2002ம் ஆண்டு, இலங்கைக்கு 4 லட்சம் வெளிநாட்டவர் - உல்லாச பயணிகள் வந்தனர். செப்டம்பர் மாதம் மட்டும் 33000 பேர் இலங்கை வந்தனர். இது முந்தைய வருடத்துடன் ஒப்பிடும் போது 180 சதவீதம் அதிகமாகும். இந்த "அமைதி சமாதான"த்தைக் கொண்டாடவும் அனுபவிக்கவும் 2003 இல் 5 லட்சம் உல்லாச பயணிகள் இலங்கை வருவார்கள் என அரசு மதிப்பிட்டு அதற்கான தயாரிப்புகளை ஊக்குவிக்கின்றது. உல்லாசம் கொடி கட்டி பறக்கும் நிலையில், மக்கள் அவர்களுக்குக் கைகட்டி சேவை செய்து வாழக் கோருவதே இன்றைய "அமைதியும் சமாதானமுமாகும்." மக்கள் சுயமாகச் சுய ஆற்றலுடன் உழைத்து வாழ வழியற்று, மற்றவர்களின் தயவில் அவர்களுக்குச் சேவை செய்து, கை கட்டி வாழ உல்லாசத்துறை மட்டும் கோரவில்லை.


இந்த அடிப்படையில் நாட்டை மட்டும் விற்கவில்லை, மக்களும் ஏலம் போட்டு விற்கப்படுகின்றனர். உலகப் பணக்காரர்களுக்குச் சேவை செய்ய, இலங்கையில் இருந்து வேலைக்காரர்களாக எமது மக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றனர். நவீன அடிமை முறையுடன் கூடிய நவீன கொத்தடிமைகள் உருவாக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றனர். சொந்த இன்ப துன்பங்களை விடுத்து, ஒரு இயந்திரப் பொம்மை பணிப் பெண்களாக, நவீன பாலியல் சேவை சார்ந்தும் இந்த ஏற்றுமதி இலங்கையின் புதிய தேசியக் கொள்கையாகியுள்ளது.. 2003 இல் 2.25 லட்சம் இலங்கையரை அரபு நாடுகளில் அந்தப்புரங்களில் சேவை செய்ய அனுப்பப்படுவார்கள் என, அரசு பெருமையாக அறிவித்துள்ளது. இதில் 80 சதவீதம் பெண்களுக்கு உரிய சேவை என அறிவித்துள்ளனர். மொத்தமாக அரபு அந்தப்புரங்கள் முதல் மூலதனத்தின் தூசுகளைத் துடைக்கும் அடிமையாக 12 லட்சம் பேரை நாடு கடத்தியதை பெருமையுடன் அரசு அறிவிக்கின்றது. இப்படி நாடு கடத்தியவர்களில் 30 சதவீதம் பேர் சிங்கப்பூர், கொங்கொங், மாலத்தீவு, கிரேக், மற்றும் இத்தாலியிலும் சேவைத் தொழிலில் உள்ளதாக பீற்றுகின்றனர். இந்த நவீன அடிமை சேவைத் துறையில் 80 சதவீதம் பேர் பெண்களாவர். அத்துடன் 60 சதவீதமான அடிமைத் தொழில் - வீட்டுப் பணி பெண்களுக்குரியதாக உள்ளது. சவுதியில் 2.9 லட்சம் பேரும், குவைத்தில் 1.4 லட்சம் பேரும், ஐக்கிய அரபியாவில் 1.15 லட்சம் பேரும் இந்த அடிமைத் தொழில் சார்ந்த இலங்கையர், எந்த அடிப்படை உரிமைகளுமற்ற நடைப்பிணங்களாக உழைக்கின்றனர். உண்மையில் இவை அனைத்தும் இலங்கையில் கூர்மையாக உள்ள வர்க்கப் போராட்டத்தைப் பின் தள்ளும் ஒரு உத்தியாக அரசு ஊக்குவிக்கின்றது.


ஒரு புறம் மக்களை நாட்டை விட்டு வெளியேற்றி நக்கிப் பிழைக்க வைக்கும் அரசு, இதை மேலும் துரிதமாக்க வெளிநாட்டு மூலதனத்துக்குக் கம்பளம் விரித்து வரவேற்கின்றது. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 2001 இல் 8 கோடி டொலராக (800 கோடி ரூபா) இருந்தது. இது 2002 இல் 30 கோடி டொலராக (அண்ணளவாக 3000 கோடி ரூபா) இருக்கும் என மதிப்பிடப்பட்டது. நேரடியாக கொள்ளையிடும் முறை ஒருபுறம் நிகழ, கூட்டுச் செயல் திட்டங்கள், கடன் திட்டங்கள் என பல உருவாக்கப்படுகின்றன. கொள்ளையடிப்போர் வசதியாக, இலகுவாக வந்து இறங்கவும், உல்லாசப் பயணங்களை இலகுவாக நடத்தி நாட்டைக் கற்பழிக்க வருவோருக்காகவும், புதிதாக முத்துகம பிரதேசத்தில் 25,000 ஏக்கர் நிலத்தில் புதிய சர்வதேச விமானத் தளம் ஒன்றை அமைக்க இந்த சமாதானம் கோருகின்றது. நவீன வசதிகளுடன் விமானம் மூலம் கொள்ளை அடிக்க வருவோரையும், கொள்ளை அடித்ததை வேகமாக நாட்டை விட்டு கடத்தவும் அதிவேகப் பாதை அமைக்கவும், உள்ளுர் வீதி போக்குவரத்துகளை நவீனப்படுத்தவும் உலக வங்கி கோருகின்றது. இதன் அடிப்படையில் கட்டுநாயக்க கொழும்பு அதி வேகப் பாதை அமைக்கப்படுகின்றது. இதற்காக வீதிக்கு அருகில் வாழ்ந்த 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்த மண்ணில் இருந்து புடுங்கியதுடன், அவர்களின் வாழ்வின் அடிப்படை ஆதாரங்களைப் பறித்துத் துரத்தப்படுகின்றனர். கொள்ளையடிப்பைத் துரிதப்படுத்த வீதிகளை நவீனப்படுத்த ஆசியாவங்கி 5.65 கோடி டொலரை (அண்ணளவாக 565 கோடி ரூபாவை) ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 980 கி.மீற்றர் வீதியை நவீனப்படுத்தவும், 12 சதவீதமான உள்ள10ர் வீதிகளை நவீனப்படுத்தவும் உலகமயமாதல் கோருகின்றது. இந்தப் பணத்தை அரசு மீளக் கொடுக்கவும், வட்டி கட்டவும் மக்களைச் சுரண்டக் கோருகின்றது. மேலும் வீதி அபிவிருத்தி என்ற பெயரில் ஜப்பான், விசேட நிதியை வேறு வழங்கியுள்ளது.


நாட்டின் அபிவிருத்தி என்ற பெயரில், குறித்த துறை சார்ந்த கடன்கள் மூலம் அத் துறைகளை ஆக்கிரமிக்க ஏகாதிபத்தியங்கள் தராளமாகத் தன்னை ஒன்று இணைக்கின்றது. பிரஞ்சு ஏகாதிபத்தியம் அநுராதரபுரம் நீர் தேக்கம் ஒன்றை அமைக்கும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. 330 கோடி ரூபா செலவில் 21,000 கன மீற்றர் அளவுடைய நீர் தேக்கமாக இது அமையவுள்ளது. இலங்கையில் உள்ள 20,000 சிறு உற்பத்திகளுக்கு 6 கோடி அமெரிக்க டொலர் (அண்ணளவாக 600 கோடி ரூபா) கடன் வழங்க உள்ளதாக ஆசியா அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் சிறிய உற்பத்திகளைக் கைப்பற்றவும், அழிக்கவும் இந்தக் கடன் அவசியமானதாக உள்ளது. ஜப்பான் அம்பந்தோட்டை நீர் விநியோகத் திட்டம் ஒன்றுக்கு 111.25 கோடி ரூபாவை வழங்கும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. ஜப்பானிடம் இருந்து 6 வேலைத் திட்டத்துக்கு 260 கோடி ரூபா கடன் வாங்கும் ஒப்பந்தம் ஒன்றை அண்மையில் செய்துள்ளனர். 1.26 கோடி டொலரை (126 கோடி ரூபாவை) ஜப்பான் கண்ணிவெடி அகற்றல் உட்பட அவசரத் தேவைக்கு வழங்கும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. நோர்வே 2003 ஆண்டில் சென்ற வருடத்தை (2002) விட மூன்று மடங்கு நிதியைச் சமாதானத்தின் பெயரில் லஞ்சமாக வழங்கவுள்ளது. அதாவது 3 கோடி டொலர் (300 கோடி ரூபா) பணத்தை வழங்கவுள்ளது. இது 2002 இல் 1.1 கோடி டொலரை (110 கோடி ரூபா) மட்டுமே வழங்கியது. இப்படி எண்ணிலடங்காத லஞ்சங்கள், கடன்கள் இலங்கைக்குத் தாராளமாக கொடுக்கப்படுகின்றது. இவை அனைத்தும் எமது மக்களைக் கொள்ளையடிக்கவும், சூறையாடும் நிபந்தனைக்கும் உட்பட்டே செயல்படுத்தப்படுகின்றது.


இதனால் மக்கள் தமது அடிப்படை வாழ்வை இழந்து வருகின்றனர். தமது இயற்கை வளத்தைச் சூறையாடலுக்குப் பறி கொடுக்கின்றனர். 1970ம் ஆண்டு இலங்கையில் இருந்த 40 சதவீதமான காட்டுப்பகுதி இன்று 22 சதவீதமாகக் குறைந்து காணாமல் போய்விட்டது. இனச் சூறையாடல் சார்ந்தும், நிலப்பிரபுத்துவத்தையும் அது சார்ந்த அரசையும் நிலத்துக்கான வர்க்கப் போராட்டத்தில் இருந்து பாதுகாக்க நடத்தப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்கள் காட்டை அழித்தது. உலகமயமாதல் உலகச் சந்தை மீதான ஆதிக்கத்தைக் கைப்பற்றியவுடன், ஏகாதிபத்தியங்கள் நாட்டை விபச்சார நிலைக்குக் கொண்டு வந்தது. இதனால் இயற்கையான காட்டின் வளங்கள் முதல் இயற்கையைப் பேணல் என்பதுவரை தொடர்ந்து அழிந்து சிதைந்து போகின்றது. இது போன்று 2002 இல் புதிதாக ஒரு லட்சத்து 13ஆயிரத்து 351 வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் 18 லட்சத்து 92 ஆயிரத்து 367 வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவற்றில் மோட்டார் சைக்கிள்கள் மாத்திரம் 9,23,467 ஆகும். இயற்கையை வேகமாக நஞ்சாக்கும் லும்பன் வாழ்க்கையின் உதிரிச் சின்னமாக, நவீன நகர்ப்புற வாழ்வின் சின்னமாக மோட்டார் சைக்கிள் மாறி உள்ளது. அமைதி சமாதானம் என்ற பெயரில் 2002-இல் 50,000 மோட்டார் சைக்கிள்கள் புதிதாகப் பதிவாகியுள்ளது. மூலதனம் சந்தையில் நல்ல வர்த்தகமாக மாறியுள்ளதை இது காட்டுகிறது. இதை நாம் மூன்றாம் உலகின் அனைத்து நாடுகளிலும் இந்த வக்கிரத்தை காணமுடியும். இது மிக அபாயகரமானதாகவும் சுற்றுச்சூழலை வேகமாக அழக்கும் தன்மைக் கொண்டது. உண்மையில் அதிரவைக்கும் இந்த சந்தை வேகம், இலங்கையின் சுற்றுபுறத்தையே புகை மண்டலமாக்கி நஞ்சாக்குகின்றது.


எங்கும் எல்லாத்துறையிலும் மக்களின் வாழ்வு என்றுமில்லாத அழிவைச் சந்திக்கின்றது. நவீன உல்லாச கனவு தேசத்தின் அடிப்படை வாழ்வுக்குப் புறம்பாகத் தோன்றி வளர, வெம்பிய ஒரு சமூகப் பிரிவை உருவாக்கின்றது. இந்த உல்லாச வாழ்வை எண்ணி அதில் வெம்பிச் சிதைந்தோர் நாட்டின் தேசிய சின்னமாக மாறுகின்றனர். இலங்கையில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் போதைவஸ்தைப் பயன்படுத்தும் அடிமையாகியுள்ளனர். உலகில் மிகக் கூடிய தற்கொலை செய்யும் பிரதேசமாக இலங்கை மாறிவிட்டது. யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களை விட, தம்மைத் தாம் கொன்றோர் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. 1995-இல் 8,519 தற்கொலைகள் நடந்துள்ளன. இதில் ஆண்கள் 6,256 பேரும் பெண்கள் 2,263 பேருமாவர். 1996-இல் 7,344 தற்கொலைகளும், 1997, 1998, 1999-ஆம் ஆண்டுகளில் முறையே 6,418, 4,492, 8,897 தற்கொலைகளும், 2000, 2001-இல் முறையே 5,414-யும், 5,555 தற்கொலைகளும் நடந்தன. ஹாவாட் மருத்துவ அறிக்கை ஒன்று இலங்கையின் தற்கொலை வீகிதத்தின் உயர் தன்மையை இட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் ஒரு வருடத்தில் 1 லட்சம் தற்கொலை முயற்சி நடைபெறுகின்றது என்று அந்த அறிக்கை எச்சரிக்கின்றது. இலங்கையில் சராசரி தற்கொலை விகிதம் ஒரு லட்சத்துக்கு 55 ஆக அதிகரித்துள்ளது. மேற்கத்திய ஆய்வுப்படி 10 தற்கொலை முயற்சிக்கு ஒரு தற்கொலை நடப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 1950-க்கும் 1990-க்கும் இடையில் தேசிய தற்கொலை வீதம் 11 மடங்காக அதிகாரித்துள்ளது. இலங்கை சுமித்ரயோ சங்கம் செய்த ஆய்வில் நாள் ஒன்றுக்கு 23 பேர் தற்கொலை செய்ய முயல்கின்றனர். இதில் 20-30 வயதுக்கிடையில் இருப்போர் அதிகமாகும். 1995-இல் இந்த வயதுடையோர் 2,030 பேர் தம் உயிரை தற்கொலை செய்து இறந்தனர். வருடாந்தரம் 10,000 பேர் தற்கொலை செய்து விடுகின்றனர். பிரதேச ரீதியாக குருநாகல், பொலநறுவை, முல்லைத்தீவு, அநுராதபுரம், அம்பந்தோட்டை, மன்னார், மட்டக்களப்பு பகுதிகளில் அதிக தற்கொலை விகிதம் காணப்படுகின்றது.

2002 ம் ஆண்டு மட்டும் இலங்கையில் 2146 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் ஆண்கள் 1155 பேரும், பெண்கள் 991 பேருமாவர். அத்துடன் 456 சடலங்கள் அடையாளம் காணப்படாமல் அனாதையாக அழிக்கப்பட்டது. இதில் ஆண்கள் 370 பேரும் பெண்கள் 84 பேருமாகும். தேசத்தின் தேசிய சின்னங்களாக போகும் இந்த மனித அவலங்கள் இனயுத்தத்தின் வக்கிரத்தில் கருத்தரித்து உலகமயமாதலின் பிறப்பில் அலங்கரிக்கின்றது. இதை இன்றைய தேசியப் போரும் அதன் மேல் தன்னை நிலை நாட்டியுள்ள உலகமயமாதலும் தீர்க்கப் போவதில்லை. மக்கள் தம்மைத் தாம் மீட்க போராடாத வரை, இது போன்ற நூற்றுக்கணக்கான மனித அவலங்கள் தேசத்தின் விதைகளாகி, அதுவே சமுதாயத்தின் போக்காவது தவிர்க்க முடியாது.


மனித அவலங்கள் பெருக்கெடுத்து ஓட அந்த இரத்தத்தில் கால்களை நனைத்தபடி இனயுத்தம் ஒன்று நடக்கின்றது. இதற்கு இருவராலும் இடப்பட்ட கௌரவப் பெயர் "தேசிய" யுத்தம். தேச நலன்களை அடகு வைக்கும், அதையே திட்மிட்டு அழிக்கும் யுத்தம் கடந்த 12 வருட "தேசியத்தின்" தேச யுத்தத்தில் மொத்தமாக 17,423 பேர் இராணுவம் சார்ந்து இறந்துள்ளனர். 3736 பேர் காணாமல் போயுள்ளனர். புலிகள் தரப்பில் 17,648 பேர் இறந்துள்ளனர். மொத்தமாக கடந்த 12 வருடத்தில் 11,000 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. மக்களின் எந்த அவலத்தையும் தீர்க்க வக்கற்ற இந்த இனவாத யுத்தம், காணாமல் போனோர் பற்றிய ஒரு தலைபட்சமான புள்ளிவிபரத்தையே முன்வைக்கின்றது. காணாமல் போனோர் பட்டியலை யுத்தத்தின் ஒட்டு மொத்த வரலாற்றில் இரு தரப்புக்கும் எதிராகச் செஞ்சிலுவைச் சங்கம் தயாரிக்கவில்லை. இனம் தெரியாத படுகொலைகளைச் சார்ந்த விசாரணைகள் செய்யப்படவில்லை. புதைகுழிகள் இரண்டு தரப்பாலும் உருவானது என்ற அடிப்படையில், புதைகுழிகள் மேல் விசாரணை தொடர்வதில்லை. உண்மையில் இவை எல்லாம் மோசடி நிறைந்த மக்களை ஏமாற்றுகின்ற சமாதானத்தின் பெயரில் நடக்கும் கண்துடைப்பு நாடகங்களே ஆகும்.


சமாதானம் அமைதி தீர்வு என்ற நாடகத்தின் பின், இனவாதத்தின் உண்மை முகம் என்ன? 1989-ஆம் ஆண்டு முதன் முறையாக பொலீஸ் சேவையில் 350 மலையக இளைஞர்களைச் சேர்த்துக் கொண்ட இனவாதிகள், இன்றுவரை அவர்களைத் தமிழர் என்பதால் நிரந்தரமாக்கவில்லை. சமாதான சிம்மாசனமான உலகமயமாக்கத்தினை தொடர்ந்து இனவாதம் யுத்த வழிகளில் மட்டுமல்ல, எல்லா பண்பியல் நடைமுறை வழிகளிலும் திட்டமிட்டே கையாளப்படுகின்றது. ஏகாதிபத்தியப் பணத்தின் துணை கொண்டு இயங்கும் சர்வதேச அரசுசாரா நிறுவனங்கள் முதல், அரசின் திட்டங்கள் கூட இனவாதத்தை ஒழுங்கமைக்கின்றது. இந்த வகையில் இலங்கையில் நிரந்தர கருத்தடை செய்தோரில் 45 சதவீதம் பேர் மலையகத்தை சேர்ந்த பெண்களாவர். மற்றைய சமூகத்துடன் ஒப்பிடும் போது, இது இரண்டு மடங்கை விட அதிகமாகும். அத்துடன் ஆண்களும் திருமணமாகாத ஆண் பெண் என விரிந்த தளத்தில் இனக் கருத்தடை திணிக்கப்பட்டுள்ளது. இனவாதத்தை ஒழிக்கப் போவதாக கூறி சமாதனப் பந்தலின் பூசாரியாக அமர்ந்து மந்திரம் சொல்லும் அரசு, அண்மையில் பிரஜாவுரிமை தொடர்பாகக் கொண்டு வந்த இனவாதச் சட்டம் மலையக மக்களால் எதிர்க்கப்பட்டதால் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. ஆண்வழி ஆணாதிக்க அமைப்பு ஆண் வழி பிரஜாவுரிமையே இலங்கையில் அண்மைக்காலம் வரை அமுலில் கொண்டு இருந்தது. இது மலையக மக்களை நாடற்றவராக நிலை நிறுத்தும் மறைமுகமான ஒரு இனவாதச் சட்டமாகவும் இருந்தது. பிழைப்புத் தேடி நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க, வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளின் பிரஜாவுரிமை பிரச்சனைக்குரியதாகியது. இதனால் தாய்வழி பிரஜாவுரிமைச் சட்டம் ஒன்றை அண்மையில் கொண்டு வந்த போது, அதில் இலங்கையில் பிறந்த நாடற்ற மலையக மக்களின் பிரஜாவுரிமையை வழங்க அரசு மறுத்து இருந்தது. இனவாதத்தை ஒழிக்க போட்ட பூசாரி வேடம் மீண்டும் ஒருமுறை நிர்வாணமாகியது. ஆட்சி அமைப்பில் பெரும்பான்மை அற்ற இனவாத சிங்கள அரசு, மலையக பிழைப்புவாதப் பொறுக்கிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியில் நீடிக்க, இறுதியாக பிரஜாவுரிமை வழங்கும் சட்டத்தை திருத்திக் கொண்டது.


சமாதானம் என்பது இனவாதப் பூசாரியின் கபடமான வாசனை திரவியமாகவும், சமாதனத்தின் குறிக்கோளை அரசு பூர்த்தி செய்வதில் பம்பரமாகவும் உள்ளது. உலக வங்கி நிபந்தனைக்கு இணங்க அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவது ஒரு நிகழ்ச்சியாக அமுலுக்கு வந்துள்ளது. இதில் லஞ்சம் முதல் நிகழ்ச்சி நிரலாகியுள்ளது. இதன் முதல் படியாக அரசு ஊழியர் ஒருவர் எட்டு லட்சம் ரூபாவை நஷ்டஈடாகப் பெற்றுக் கொண்டு ஓய்வுபெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்காது. இல்லாவிட்டால் 3 லட்சம் ரூபா நஷ்டஈட்டுடன் ஒரு ஊழியர் ஓய்வு பெறலாம். அவர் ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த லஞ்ச முறை மூலம் திட்டமிட்ட வகையில் அரசுதுறைகள் அழிக்கப்படுகின்றது. அரசுச் சேவையில் இருந்து ஆள்களைக் குறைக்கும் பணியைத் தற்காலிகமாக வடக்கு - கிழக்கில் நடைமுறைப் படுத்துவதில்லை என்று, அரசு கொள்கை அளவில் முடிவு செய்திருக்கிறது. வடக்கு கிழக்கில் அரசுத்துறை செயல்பட முடியாத அளவுக்கு பற்றாக்குறை நிலவுவதாலும், புலிகளின் மாற்று அதிகாரத்தைத் தகர்க்க இது அவசியமாக இருப்பதாலும் மட்டுமே இது விதிவிலக்காகியுள்ளது. அத்துடன் பேச்சு வார்த்தை மூலம் கிடைக்கும் ஆதாயத்தை, புலிகளுக்குச் சில சலுகை வழங்க இட வெற்றிடத்தை பேணுவது அவசியமாகின்றது. ஒன்று சேர்ந்த நிர்வாகம் மூலம், மக்களின் தோலை உரிக்க வடக்கு கிழக்கில் விதிவிலக்கு தற்காலிகமாகப் பேணப்படுகின்றது. நாட்டை விற்கும் ஜனநாயக பாராளுமன்ற நாய்கள், எஜமான் வீட்டில் சொகுசாக வாழ்வதற்கு உலகமயமாதல் தடைவிதிப்பதில்லை. ஏழை வீட்டின் கோவணத்தையே உருவக் கோரும் உலகவங்கி, உருவித் தரும் நாய்கள் ஆடம்பரமாக வாழ்வதை ஊக்குவிக்கின்றது. நவீன 225 ஆடம்பரக் கார்களை வாங்க 55 கோடி ரூபா பணத்தை ஒதுக்கிய போது, உலக வங்கி ஆட்சேபிக்கவில்லை. கொள்ளையடித்துத் தரும் பணத்தில் எச்சில் பணத்தை, கொள்ளையடித்துத் தரும் பொறுக்கிகள், நக்கி பிழைக்க விட்டு வைக்கின்றது. மக்களின் வாக்கைப் பெற்று அன்னியனுக்குச் சேவை செய்ய மக்களை கொள்ளையடித்து கொடுக்கும் எச்சில் பொறுக்கிகள், அதில் ஆடம்பரமாக வாழ்வதுமே ஜனநாயகமாகி விட்ட நிலையில், இந்த ஜனநாயகமும் அதன் அடிப்படையில் உருவான பாராளுமன்றமும் எமக்கு அவசியமற்றவைதான். உழைக்கும் மக்கள் சர்வாதிகார மன்றங்களை உருவாக்கவும், மக்களின் எதிரிகளை ஒழித்துக் கட்டவும் போராடுவதே இன்றையத் தேவையாக எம்முன்னுள்ளது.


இந்த நிலையில் சமாதானமா? யுத்தமா? என்பது ஒருவருட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்பு, பரவலாகப் பேசப்படும் விடயமாகியுள்ளது. தேன்நிலவாக நாட்டுக்கு வெளியில் நடந்த, நடக்கின்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஆரம்பத்தில் சமாதானம் என ஓங்கி ஒலித்த குரல்கள் மெதுவாக யுத்தத்தை நோக்கிய குரலாகப் பரிணமித்தது. ஆனால் தர்க்க ரீதியாக யுத்தத்தை நியாயப்படுத்தக் கூடிய அடிப்படையான வாதங்களை வைக்க முடியாத நிலையில், சிறிய சம்பவங்களைக் கூட யுத்தமாக மாற்றிவிட துடிக்கின்ற நிலைமை பரவலாக ஊதிப் பெருக்கப்பட்டது. இதைச் சமாதானத்தின் உறுதியான ஆதரவாளர்கள் என மார்பு தட்டும் நக்கிப் பிழைக்கும் கூட்டம், யுத்தத்தை நோக்கி வெம்பி வீங்க வைப்பதில் வக்கரித்து நிற்கின்றது. மக்களின் அடிப்படை வாழ்வியல் நலனுடன் தொடர்பற்ற சமாதானமும் சரி, யுத்தமும் சரி மக்களுக்கு எதையும் பெற்றுத் தரப் போவதில்லை. வாழ்வின் அவலத்தைத் தேசியமாக்கி, அதைப் பரிசாகத் தர நாலுகால் பாய்ச்சலில் எகிறித் திரிகின்றனர்.


இதை யுத்தத்தின் கடந்தகால வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கின்றது. 1983 முதல் யுத்தத்தினால் 40,300 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் வடக்கு-கிழக்கில் அழிந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் 23,000 பேர் இறந்ததுடன், 1,05,000 குடும்பங்கள் தமது இடத்தை விட்டு வெளியேறியுள்ளதாக அறிவித்துள்ளது. மொத்தமாக 60 முதல் 80 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. இன்றைய இனயுத்தம் மக்களின் சொத்து இழப்பைக் கூட எந்த விதத்திலும் மீட்கும் தகுதியைக் கூட இழந்துள்ளது. இதை எப்படி எந்த வழியில் மீட்பார்கள்? தேசத்தை, தேசிய பொருளாதாரத்தை அன்னியனுக்கு எதிரான போராட்டத்தில் கட்டி எழுப்ப தயாரற்ற தியாகங்களே தொடர்கின்றது. உலக வங்கியிடமும், ஏகாதிபத்திய நாடுகளிடமும் தேசியவாதிகள் கையேந்தி பிச்சையெடுத்து இதை மீட்க முடியுமா? 40,300 கோடி இழப்பு என்பது சொத்து இழப்பில் மட்டுமானதே. மனித உழைப்பு சார்ந்த இழப்பு முதல் உயிரை இழந்த இழப்பு வரை பல நூறு வடிவங்களில் பல ஆயிரம் கோடி இழப்புகளை இந்தப் புள்ளிவிபரம் உள்ளடக்கவில்லை. தமிழ் மக்களின் இழப்பு எல்லையற்றது. ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் இழப்பின் தொடரில், வெற்றியில் பாரிய வளர்ச்சியை அடைவதைக் குறித்தே நடத்தப்பட வேண்டும். ஆனால் ஏகாதிபத்தியத்துக்குச் சேவை செய்யவும், அவன் கொள்ளையடிக்கவும் தமிழ் ஆட்சியைக் கோரும் தேசிய வீரர்கள், ஏகாதிபத்தியத்துக்கு வட்டி கட்டியே நாட்டை அழிக்க சபதம் ஏற்றுள்ளனர். அதன் பெயரில் தியாகங்கள், துரோகங்கள் தொடர்கின்றன. இழப்புகள் நிரந்தரமானவை மட்டுமின்றி, தொடர்ந்து அன்னியனுக்குச் சேவை செய்யும் பொருளாதாரக் கட்டுமான அடிமை வாழ்வை மேலும் துல்லியமாக நவீனப்படுத்துவதை அடிப்படையாக கொண்டே, சமாதானம் பற்றியும் யுத்தம் பற்றியும் பீற்றிக் கொள்கின்றனர்.


உண்மையில் ஆராய்கின்ற போது இலங்கையின் யுத்தமும் சரி, சமாதானமும் சரி பிரச்சனையைத் தீர்க்க தகுதியற்றவையாக இருப்பது எதார்த்தம். புரிந்துணர்வு ஒப்பந்தமும், அதன் உள்ளடக்கமும் மக்களின் நலனை முதன்மைப்படுத்த தவறி, புலிகளின் குறித்த நலன்கள் சார்ந்து உருவானவையே. இந்தச் சமாதான முயற்சி மக்களின் நலனைப் பின் தள்ளி, மக்கள் மேல் சுமையை பல மடங்காக்கியது என்பதே உண்மை. இருந்த போதும் இந்த ஒப்பந்தம் மக்களின் அடிப்படை நலனில் இருந்தே உருவாக்கப்பட்டதாக அரசு மற்றும் புலிகள் கூறினர். ஒரு ஒப்பந்தம் தத்தம் நலன் சார்ந்து உருவாக்கிய போதும், சில அனுகூலங்களை ஒரு பகுதி மக்கள் பெறுவது தவிர்க்க முடியாத விடயமாகின்றது. இதனால் மக்கள் நலன் சார்ந்த விடயத்தை உயர்த்தவும், மக்கள் விரோதப் போக்கை விமர்சிப்பதும் என்ற உள்ளடகத்தை அடிப்படையாகக் கொண்டே இதை அணுக வேண்டியிருந்தது, இருக்கின்றது.


மறுதளத்தில் இந்த ஒப்பந்தத்தை செய்தவர்கள் இந்த ஒப்பந்தத்தை மதித்து நடப்பது அடிப்படையான ஒரு விடயமாகும். இந்த வகையில் யுத்த நிறுத்த மீறல்களை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டியதானது, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சமாதானத்துக்கு அடிப்படையானதாக யார் கருதினார்களோ, அவர்களின் அடிப்படைக் கடமையாகும். யுத்த நிறுத்த மீறல்கள் தான், இருக்கின்ற அமைதியைக் கடந்து யுத்தத்தைத் தொடங்க அடிப்படையாக உள்ளது. இந்த யுத்த நிறுத்த மீறலை யார் செய்தாலும் இரண்டையும் விமர்சிக்கத் தவறுகின்ற போது, சமாதானத்துக்கு எதிரான நிலைப்பாட்டைச் சாராம்சமாக கொள்வது வெள்ளிடைமலை. ஒரு தலைப்பட்சமாகக் கண்டிக்கும் போது, ஒரு பக்கம் சார்ந்து யுத்தத்தினைத் தொடங்க முனையும் போக்கு உண்மையான சமாதானத்துக்கு எதிரானதாக எதார்த்தத்தில் நிலவுகின்றது.


ஒரு யுத்த நிறுத்தம், சமாதானம் என்பவற்றில் அடிப்படையான நேர்மை அவசியமானது. அடிப்படையான நேர்மை இல்லாத வரை, அவை மக்களுக்கு எதிரான குறுகிய வக்கிரம் கொண்டவையாக இருப்பது எதார்த்தம். புரிந்துணர்வு ஒப்பந்தம் அது சார்ந்து யுத்த நிறுத்தம் ஊடாகச் சமாதானத்தை அடைய முடியும் எனக் கருதி மக்கள் தொடர்பு ஊடகங்களில் கருத்து உரைப்பவர்கள், நேர்மையாகச் செயல்படுவது எல்லாவற்றையும் விட மிக அவசியமாகும். அது இல்லாத வரை இதுவே யுத்தத்தின் ஊற்று மூலமாகிவிடும். நேர்மையற்ற யுத்தப் பிரச்சாரம் இன்றைய தேசிய அரசியலாகி, அதுவே சமாதான கோஷமாக உள்ளது. சமாதானத்தின் கோஷம் மக்களுக்கு எதிரான யுத்தமாக இருப்பது எதார்த்தமாக உள்ளது. ஒரு நாய் ஊளையிடத் தொடங்க, ஊரில் உள்ள நாய்கள் எல்லாம் ஊளையிடுவது போன்றே தமிழ்த் தேசிய அரசியல் மலடாகிக் கிடக்கின்றது. கட்சிகள், பத்திரிக்கைகள், எழுத்தாளர்கள் என எல்லா மட்டத்திலும் இந்த ஊளையிடல் ஒரு பகட்டுத்தனத்துடன் கூடிய, மக்கள் விரோதப் போக்காகப் பரவி வருகின்றது. ஊளையிடலுடன் தமது அரசியல் தனித்துவ நிலைப்பாடுகளைக் கூட மாற்றி மாற்றி, குட்டிக் காரணம் அடிப்பதில் சாதனை புரிகின்றனர்.


தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உள்ள நியாயமான சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்ட கோரிக்கைகள் எதையும், புலிகளும் சரி அரசும் சரி, இந்த ஊளையிடும் பேர்வழிகளும் சரி தீர்க்கப் போவதில்லை என்பதே எதார்த்தம். இந்த நிலையில் அமைதி அல்லது யுத்தம் எதுவாக இருந்தாலும், மக்களின் நலனை இது பூர்த்தி செய்யாத வரை, பாட்டாளி வர்க்கம் இரண்டிலும் எதையும் ஆதரிக்கப் போவதில்லை. யுத்தம் தொடங்கின் தமிழ் மக்களின் நலன்கள் ஒரு விதத்தில் சூறையாடப்படுமாயின், அமைதி வேறு ஒரு வடிவத்தில் தமிழ் மக்களின் நலன்களைச் சூறையாடுகின்றது. ஆனால் இந்த இரண்டு போக்கிலும் அரசும் சரி, புலிகளும் சரி மக்களுக்கு எதிராக இருப்பதாலும், யுத்தம் இதில் மிகக் கொடூரமாக இருப்பதாலும் சமாதானம் அதாவது அமைதி என்பது மக்களின் சொந்த போராட்டத்துக்குச் சாதகமானதாக இருக்கும். யுத்தம் தொடங்கின் மிகக் குறுகிய காலத்தில் 1000 பேருக்கும் மேற்பட்டோர் யுத்தம் அல்லாத வழிகளில், இரண்டு தரப்பினராலும் கொல்லப்படுவர். அரசு புலிகள் என்றும், புலிகள் துரோகிகள் என்றும் தம்முடன் முரண்பட்டவர்கள் என்ற ஒரு நீண்ட பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மக்கள் கொல்லப்படுவர். இதற்கான பட்டியலைச் சமாதானம் தயாரித்துள்ளது என்பதே எதார்த்தம். உண்மையில் அப்பாவி மக்கள் தனிப்பட்ட துப்பாக்கிகளின் வக்கிரத்துக்குக் காரணம் அறியாது பலியிடப்படுவர். சமாதானத்தில் இருந்து யுத்தம் தொடங்கும் போது வீதிகள் தோறும் பிணங்களை காண்பது தவிர்க்க முடியாது. இதை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் ஒரு அரங்கேற்றமாக அரங்கேற்ற தயாராகவே உள்ளனர். மக்களின் துன்பங்களையும், துயரத்தையும் உற்பத்தி செய்யும் தேசமாக, தேசியமாக பரிணமிப்பதை விட அமைதி மேலானது.


சிங்கள பௌத்த இனவாதப் பாசிச அரசு ஏகாதிபத்தியப் பொம்மையாக இருந்த படி, தேச மக்களின் அடிப்படையான தேசிய உரிமைகளை அழிப்பதில் இனம் பார்ப்பதில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் என்று அனைத்து மக்களின் தேசிய உரிமைகளைச் சூறையாடுவதில் தன்னை முரண்பட்டுக் கொள்ளவில்லை. ஏகாதிபத்தியக் கொள்ளைக்குத் தேசத்தைத் திறந்து விபச்சாரம் செய்ய வைப்பதே அரசின் மையமான ஒரு குறிக்கோளாகும். இதைச் செய்யும் போது, உள்நாட்டில் மோதலை உருவாக்குவதன் மூலம் பொம்மைப் பாத்திரத்தைத் தொடர்ச்சியாகத் தக்கவைக்க முடியும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் காலனிகளை பிரித்தாளும் தந்திரமான கோட்பாட்டுக்கு இணங்க, இனங்களுக்கு இடையில் வேறுபட்ட சலுகைகளை வழங்குவதன் மூலம் மோதலைத் திட்டமிட்டு நடத்தியது. இந்தக் குறிப்பான சலுகையை யார் பெறுவது, யார் இழப்பது என்பதை இனவாத பௌத்த சிங்கள அரசு தீர்மானித்த போது, தமிழ் மக்கள் இதை இழந்தனர் அல்லது பறி கொடுத்தனர். இது ஒரு யுத்த நிலைக்கு நகர்ந்த போது, தேசத்தின் நலன்களை ஏகாதிபத்தியங்கள் கொள்ளை அடிப்பதை யாரும் கண்டு கொள்ளவோ அல்லது அதற்கு எதிராக போராடவோ இல்லை. சலுகைகளை யார் பெறுவது என்பதில் தொடங்கிய போராட்டம், அதன் எல்லையைத் தாண்டவில்லை. இரண்டு பகுதியும் ஏகாதிபத்தியச் சூறையாடலை அடிப்படையாகக் கொண்ட ஒரே கொள்கையை கொண்டிருப்பதுடன், இந்தக் கொள்ளை தொடர்வதை அரசும் சரி புலிகளும் சரி எதிர்க்கவில்லை. அதை வாழ்த்தி வரவேற்கின்றனர். இந்த ஒரே ஒரு அடிப்படையில் தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒருவருட பூர்த்தியைத் தாண்டியும் ஊசலாடிக் கொண்டு போகின்றது.


கடந்த எமது போராட்டத்தின் மக்கள் விரோதப் பண்பையும், பாசிசக் கூறுகளையும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எப்படி இணங்கி அனுசரித்து போகின்றது என்பதைப் புரிந்து கொள்ளும் போதுதான், அமைதியையும் அதன் நீடிப்பையும் புரிந்து கொள்ள முடியும். நிதி மூலதனம் ஆதிக்கத்துக்கு வரும் போது, அதன் பிரதிநிதியாகப் பாசிசம் உருவாகின்றது. இந்த வரலாற்று போக்கில் தான் நாம் புலிகளையும் புலித் தேசியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவப் புரட்சி நடைபெறாத நாடுகளில், நிதி மூலதனத்தைத் திரட்டும் தேசிய வளத்தைப் பெற முடியாது. இதனால் இந்த நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளின் பொம்மை அரசுகளாக, நிலப்பிரபுத்துவத் தரகு நலன் சார்ந்த பாசிசத்தைக் கட்டமைக்கின்றது. இதற்கு ஏகாதிபத்திய நிதி மூலதனம் அடிப்படையாக இருப்பதுடன், வழிகாட்டுகின்றது. மக்களின் தேசிய வளங்கள் அழிக்கப்படும் வரலாற்றில், இதற்கு எதிரான வர்க்கம் போராட்டம் கூர்மையாகின்ற போது பாசிசம் அதன் ஆணையாகின்றது.


புலிகள் தரகு முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கம் சார்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து அதன் நீட்சியில் உருவான ஒரு இயக்கமே. தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற அரசியல் சதிராட்டத்தில் சரணடைவையும் துரோகத்தையும் தமிழ் மக்களுக்குத் தீர்வாக்கிய போது, புலிகள் (மற்றைய இயக்கங்களும் தான்) கூட்டணியின் பாராளுமன்ற வழிகளில் இருந்து மட்டும் வேறுபட்டு ஆயுதப் போராட்டத்தை முன்வைத்தன. தமிழர் விடுதலைக் கூட்டணியை இந்த எல்லைக்கு அப்பால் விமர்சிக்கவுமில்லை, முரண்படவுமில்லை. மக்கள் வாழ்வியல் பற்றிய கூட்டணியின் அதே கொள்கையை அப்படியே புலிகள் கொண்டிருந்தனர். கூட்டணியின் தொடர்ச்சியாக புலிகள் ஆயுதத்தைக் கூடுதலாக வைத்திருந்தனர். இதைப் புலிகளின் தத்துவ ஆசிரியர் பாலசிங்கமே கூறத் தயங்கவில்லை. "... சில பேர் என்னிடம் கேட்டார்கள், செல்வநாயகம் ஐயாவும் இதைத்தான் கேட்டார். சமஷ்டியை அவங்கள் கொடுக்கவில்லை. பிறகு நீங்கள் ஏன் இதைக் கேட்கிறியள் என்று. அவர்கள் ஏமாற்றி விட்டால், என்ன செய்வீர்கள் என்று. நான் சொன்னன் ஏமாற்றட்டும், அதைத் தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். செல்வநாயகத்தார் என்ன வைத்திருந்தார். அவர் அகிம்சையை ஆயுதமாக வைத்திருந்தார். நாங்கள் பீரங்கிகளை அல்லவா வைத்திருக்கின்றோம்"


உண்மையைப் பளிச்சென வெகுளித்தனமாகப் பாலசிங்கம் போட்டு உடைக்கின்றார். அகிம்சை அல்லது ஆயுதம் இது தான் கூட்டணியையும் புலிகளையும் வேறுபடுத்துகின்றது. அரசியல் ரீதியாக அல்ல. மக்களின் நலன்களில் இருந்து அல்ல. ஆயுதமும் அது சார்ந்த அதிகாரமும் வரும் போது, தரகு மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கக் கண்ணோட்டம், குணாம்சம் ரீதியான மக்கள் விரோத போக்கை பண்பியல் ரீதியாக வளர்ச்சி பெறவைக்கின்றது. புலிகளின் ஆரம்ப காலச் செயற்பாடுகளில் ஆயுதம் முதன்மை அம்சமாக மாறியது. ஆயுதமே அனைத்தும் என்ற கொள்கைக்கு இணங்க ஆயுதத்தை முதன்மைப்படுத்தி, அதன் மொழியில் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தை அதன் சமூக பொருளாதார எல்லைக்குள் சரணடைய வைக்கப்பட்டது. இந்த ஆயுதமும் அதன் அதிகாரத்திலும் அடிப்படையாக உருவான அரசியல் அதிகாரம், தரகு நிலப்பிரபுத்துவ வர்க்கம் சார்ந்து தேசிய பொருளாதார வாழ்வியலைச் சிதைப்பதில் தொடங்கியது.


ஆரம்பத்தில் நிதி சேகரிப்புகள், ஆயுதம் திரட்டுவது முதன்மைக் கூறாகச் செயல்பட்ட போக்கு, படிப்படியாக நிதி மூலதனம் சார்ந்த மூலதனங்களைத் திரட்டுவதில் கூர்மைப்பட்டுள்ளது. போராட்டமும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் தமது தேவைக்கு எப்போதும் சொந்த உழைப்பு சார்ந்து இருக்கவில்லை. போராட்டத்தில் உழைப்பு நிராகரிக்கப்பட்ட நிலையில், தமது தேவைக்கு மக்கள் தமது சொந்த உழைப்பை அர்ப்பணிக்கக் கோரப்பட்டது. தமது தேவை எதுவாக இருந்தாலும், அதை அபகரிக்கும் உரிமையைத் தேசவிடுதலை இயக்கங்கள் தாமாகவே துப்பாக்கி முனையில் பெற்றுக் கொண்டன. சொந்த உழைப்பைத் தர முடியாது என சொன்னவர்கள், அதை எதிர்த்து போராடியவர்கள் எல்லோரையும் அன்று முதல் இன்று வரை பல ஆயிரம் பேரை பலிகொண்டது. போராட்டத்தின் ஊடாக வளர்ச்சி பெற வேண்டிய பல்வேறு தேவைகள் கூட, காலப்போக்கில் அபகரிப்பதை அடிப்படை சித்தாந்தமாகக் கொண்டே பறிக்கபட்டது. வெகுசன அமைப்புகள், வெகுசனப் பண்பாட்டு கலாச்சார உற்பத்தி கூறுகளைக் கூட பலாத்காரமாகத் தமதாக்கினர். தமக்குச் சார்பான அறிக்கைகளைக் கூட இன்று அபகரிப்பு மிரட்டல் என்ற வழிகள் ஊடாக பெறப்படுகின்றது. ஆரம்பம் முதலே நிதி திரட்டல் முறை சார்ந்து தனித்துவமான அதிகாரத்தை நிறுவுவதற்கு உந்தித் தள்ளியது. மக்களின் தேசிய உற்பத்திகளை யார் சூறையாடுவது என்ற அடிப்படையான காரணத்தைக் கொண்டு, மற்றய இயக்கங்கள் அழிக்கப்பட்டன.


நிதி பெறுவது, பங்கீடு என்பது புலிகளின் மையமான ஒரே குறிக்கோளாக அதுவே அரசியலாக மாறிவிட்ட நிலையில், மக்களுடனான தொடர்பு இந்த ஒரு வழிக்குள் மட்டுமே என்ற நிலைக்கு இன்று சீரழிந்து விட்டது. நிதி திரட்டிடவே "யுத்தத்தை தொடரவும் இராணுவத்தை வெற்றி பெறவும்" என்ற வாக்குறுதி சார்ந்து, மக்களிடமிருந்தும் பணம் பெறப்படுகின்றன. நிதி முதன்மைக் கூறாக இருப்பதாலும், உழைப்பைச் சூறையாடவும் பாசிசக் கட்டமைப்பு அவசியமானதாக மாறிவிடுகின்றது. மக்களின் சுயமான சிந்தனை, செயல்பாடுகள், நிதியை அடிப்படையாகக் கொண்ட இயக்கத்துக்கு எதிரானதாக இருப்பதால், அதை மறுப்பதே தேசியமாகச் சித்தரிக்கப்படுகின்றது. இந்த நிதி மூலதனம் மீதான புலிகளின் காதல், ஏகாதிபத்தியத்துக்கு உவப்பான விடையமாக இருக்கின்றது. ஏகாதிபத்தியம் இதன் அடிப்படையிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கியது. அடிப்படை தீர்வை பின் தள்ளிய படி, நிதி மூலதனம் சார்ந்து சமாதானம் என்ற கோசம் முன்னிலைப்படுத்தப்பட்டது. நிதி மூலதனத்தை தாராளமாக விரிவாக்கவும் ஏகாதிபத்தியங்கள் தாரை வார்க்க தயாரான நிலையில், புலிகள் அதை நோக்கி கையேந்திய நிலையில் பேச்சு வார்த்தைகள் தொடருகின்றது. இதற்கிடையே அடிமட்டங்களில் இருந்து எழும் முறுகள் சார்ந்து தலைமை வாலை முறுக்கினாலும், நிதி மூலதனத்தின் முன் வாலைச் சுருட்டிக் கொண்டு பணிய வைக்கப்படுகின்றது. பிரபாகரன் அண்மையில் உலக வங்கி உலக மக்களுக்கு கடன் கொடுத்து, அவர்களின் வளர்ச்சிக்குச் சேவை செய்வதாக பாராட்டிய போது, புலிகளின் துரோகம் துல்லியமாக நிர்வாணமாகியது. உலக வங்கி உலக மக்களுக்கு எதிராக இருப்பதுடன், மக்களைக் கொள்ளையடித்து பணத்தை குவிப்பதுடன், அதைக் கொண்டு மக்கள் அடிமைப்படுத்தப்படுகின்றனர். இதையே உலகளவில் மக்கள் இயக்கங்களும் அவர்களின் போராட்டங்களும் பிரகடனம் செய்கின்றன. ஆனால் புலிகள் வாலைச் சுருட்டிக் கொண்டு உலக வங்கியின் கால்களை நக்கத் தயாராக இருப்பதை பிரகடனம் செய்கின்றனர். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஆயுள் நீடிப்பதன் மர்மம், நிதி மூலதனத்தில் தங்கி கிடக்கின்றது.


தமிழீழப் பகுதிகளை நோக்கி குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி நிதி மூலதனம் பாரிய அளவில் முதலிடவும், வழங்கவும் ஏகாதிபத்தியங்கள் தயாராக இருக்கின்றன. இதை அடிக்கடி புலித் தலைமைக்கு நேரடியாகச் சந்தித்து உலக நாடுகளின் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டி வருகின்றனர். இந்த நிதி மூலதனத்தை இடுவதற்கு ஆயுதத்தைக் கைவிடுவதுடன் கூடிய அமைதியான சூழலையும் நிபந்தனையாக வைக்கின்றது. நிதி மூலதனத்தை ஏகாதிபத்தியங்கள் இப்பகுதிகளில் முதலீடும் போது அதை மீளப் பெறுவதை புலிகள் உத்தரவாதம் செய்ய வேண்டியுள்ளது. லாபத்தைப் பெறவும், சுரண்டவும், வட்டியை அறவிடவும், முதலீட்டை மீள பெறுவதையும் புலிகள் எந்த வழியில் அதைப் பெற முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு யுத்தம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. இது மட்டும் தான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஆயுளை தீர்மானிக்கின்றது. அத்துடன் ஏகாதிபத்தியத்திடம் கையேந்தி எடுக்கும் தேசியப் பிச்சை சார்ந்த அரசியல், யுத்தத்தை நோக்கி நகர்வதைத் தடுக்கின்றது. உள்நாட்டுப் பொருளாதார அமைப்பை ஏகாதிபத்திய பணத்தில் கட்டமைப்பது என்று தீர்மானமாகிய பின்பு, ஏகாதிபத்தியங்கள் நடத்தும் சமாதானம் என்ற நாடகத்தை மீறி புலிகளால் ஒரு அடி தன்னும் நகர முடியாது. ஏனெனின் மீண்டும் யுத்தம் எனச் சென்றால் ஏகாதிபத்தியத்திடம் மீளக் கையேந்தும் அரசியலைச் செய்வது என்பது சாத்தியமில்லை. ஏகாதிபத்தியத் தயவுடன் மீற முடியுமே ஒழிய, எதிர்த்து அல்ல. இதை புலியின் அரசியல் தெளிவாகவே வரைந்து காட்டுகின்றது.


ஏகாதிபத்திய நிதி மூலதனத்தைப் பெறவும் அதை மீள வட்டியுடன் கட்டவும் அதற்குப் புலிகள் "தமிழீழத் தாயகத்தைத்" தியாகம் செய்யத் தயாராக உள்ளதை உணர்த்தி வருகின்றனர். இதற்கு எந்தத் தடை வரினும் அதைப் பூர்த்தி செய்யத் துடிக்கும் புலிகளின் நிலைப்பாடு தான், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீண்ட ஆயுளாக்கியுள்ளது. இந்த விடையில் இருந்து அரசு தனது பொறுப்பை மெதுவாக கைவிட்டுவிடுகின்றது. நிதியைப் புலிகள் பெறவும், அதை மீளக் கட்டவும் உள்ள நிபந்தனைகள் உள்ளடங்கிய சர்வதேச நிபந்தனைகளைப் பற்றி அரசு பேசுவதை விட, சர்வதேச கொள்ளைக்காரர்களும் புலிகளும் பேசி முடிவு காணும் போது, இன்றைய அமைதி நிலையானதாக மாறிவிடும். இந்த முடிவு என்பது பேச்சு வார்த்தைக்காக கூடும் இடங்களில் நடப்பதில்லை. ஏகாதிபத்தியங்கள் நேரடியாகவே புலிகளுடன் இவை தொடர்பாகப் பேசி வருகின்றன.


இங்கு ஒரு பிரமையைத் திட்டமிட்டே புலிகளும் சேர்ந்து விதைக்கின்றனர். சர்வதேச நிதி இனாமாக அதாவது அன்பளிப்பாகக் கிடைப்பதாகவும், அதைத் திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை என்ற மயக்கமான ஒரு பிரச்சாரத்தை திட்டமிட்டே பரப்புகின்றனர். தேசத்தை தேசியத்தை விற்று கையேந்தும் பிழைப்பவாத துரோகத்தை இதன் மூலம் திட்டமிட்டே மூடிமறைக்கின்றனர். கையேந்தி நிற்பதன் மூலம் ஏகாதிபத்தியமயமாதல் நியாயப்படுத்தப்படுகின்றது. ஏகாதிபத்தியங்களைக் கொடை வள்ளலாகக் காட்டும் இந்தப் பிரமைகள் எல்லாம், ஏகாதிபத்தியத்திடம் சோரம் போவதைப் பண்பாட்டு கலாச்சார ரீதியாகவே துரிதப்படுத்துகின்றது. உலகமயமாதல் உலகத்தைத் தனது கைப்பொம்மையாக்கி தனது நலன்களை திட்டமிட்டே செயல்படுத்தும் ஆதாரம், இந்த நிதி மூலதனத்தில் இருந்தே என்பதை மூடிமறைக்கின்றனர். வழங்கப்படும் கடன், கடனுக்கான வட்டி, வட்டியே மூலதனமாகவும் மறு வட்டியுமாகப் பெருகிச் செல்லும் இன்றைய நிலையில், நாடுகள் அடிமைப்படுத்தப்படுகின்றன. தேசங்கள் சொந்த தேசிய வளம் சார்ந்து நிலைத்த காலம் போய், கடன் வாங்கியே நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கும் காலகட்டம் 1980 களின் பின்னால் தீவிரமானது. தேசிய உற்பத்தி சார்ந்து மக்களின் நலன் என்ற கொள்கை கைவிடப்பட்ட நிலையில், கடன் வாங்கி நாட்டை விற்கும் உலகமயமாதலைப் புலிகள் அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். புலிகள் வாங்கும் நிதி, மீள மறுபடியும் தமிழ் மக்கள் தமது சொந்த உழைப்பில் இருந்தே கட்ட வேண்டும். கடன் வாங்குவதை ஊக்குவிக்க ஒரு தொகைப் பணம் இனாமாக வழங்கப்படும் என்பது உண்மையே. போதைவஸ்த்தை விற்பவன் அதை விற்க முன் இனாமாக கொடுப்பது போன்றே இதுவும். ஆனால் வாங்கும் கடனுக்கு வட்டி கட்டவும் மீளத் திருப்பி அளிக்கவும் வேண்டும். இந்த வட்டியையும், மீள திருப்பி கொடுக்கும் பணத்தையும் மக்களிடம் கறந்து தர புலிகள் உத்தரவாதத்தை வழங்கின், நிதி மூலதனம் எல்லையற்ற வகையில் ஊடுருவிப் பாயும். இதுவே சமாதானத்தின் அச்சாக உள்ளது. தமிழ் மக்களின் அபிவிருத்தி என்ற பெயரில் கடனை வாங்கவும், அதைத் திருப்பிக் கட்டவும், அதற்கான வட்டியைக் கொடுக்கவும் தயாராக புலிகள் இருக்கும் பட்சத்தில், தொடர்ச்சியாக கடனை வழங்க ஏகாதிபத்தியம் தயாராக உள்ளது. இதனடிப்படையில் உருவாகும் "சமாதானம்" பூத்துக்குலுங்கும்(!)


இந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் விடுத்த அறிக்கை ஒன்றில் உலக வங்கி மனித வளர்ச்சிக்கு உதவும் வகையில், உலகளவில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுவதாகப் பாராட்டி அறிக்கை விடுகின்றார். மேலும் உலக வங்கியின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவும் மக்களிடம் கறந்து ஏகாதிபத்தியத்துக்குத் தாரை வார்க்கவும் தயாராக இருப்பதைப் பிரகடனம் செய்தார். உலக வங்கிக்கு எப்படி எங்கிருந்து பணம் வருகின்றது என்பது புலிகளின் தேசியத் தலைவருக்குத் தெரியாது இருந்தால், இராணுவ பாணியிலான புலனாய்வு நடத்துவதை விடுத்து மக்களை ஏலம் போட்டு விற்க அழைப்பது துரோகத்தனமானது. உலக வங்கி வைக்கும் உலகமயமாதல் என்பது, தேசியம் முன் வைக்கும் தேசத்துக்கு எதிரான ஒரு உருவாக்கம் என்பதைப் பிரபாகரன் இனியாவது புரிந்து கொள்ள மறுத்தால், இதுவரை செய்யப்பட்ட தியாகங்கள் எல்லாம் உலகமயமாதலின் சிம்மாசனத்தை நோக்கி ஏறும் செங்கம்பள படிக்கற்கள் தான். உலக நாடுகளுக்குக் கடன் கொடுத்து வசூலிக்கும் வட்டி முதல் வட்டிக்கு வட்டி வரை மக்களைச் சுரண்டி பெறப்படும் பணத்தையே மறு வட்டிக்குத் தருகின்றது. உலகளவில் மக்களின் அற்ப சேமிப்புகளை எடுத்தும், மக்களின் ஓய்வூதியங்களைக் களவாடியும், மக்களை ஏமாற்றி பெறும் காப்புறுதி பணத்தைச் சேகரித்து அறவட்டிக்கு விடுவதே உலக வங்கியின் பாத்திரம். மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மீளப் பெரு மூலதனத்துக்குச் செல்லும் வண்ணம் வழங்குகின்றனர். வழங்கும் கடனை என்ன வகையில் எப்படி செலவளிப்பது, எந்த நாட்டில் இருந்து என்ன பொருளை என்ன விலைக்கு வாங்க வேண்டும் என்று நிபந்தனைகளை எல்லாம் உள்ளடக்கியது. உள்நாட்டு உற்பத்தியாக எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், யாருக்கு யார் செய்ய வேண்டும் என்ற எண்ணற்ற நிபந்தனைகளை உள்ளடக்கியதே உலக வங்கியினதும் சரி மற்றைய கடன்களினதும் வரலாறு. இருக்கின்ற தேசிய உள்ளடக்கங்களை அழித்து உலகமயமாதலை நிறுவுவதே உலகவங்கியின் சர்வதேச நிலைப்பாடாகும். வாங்கும் பணத்தை மீளக் கட்டுவதுடன், அதற்கு வட்டி கட்ட வேண்டும் என்பதையும் மூடிமறைத்தபடி தான், நிதி உதவிபற்றி அறிக்கைகள் மேல் அறிக்கை விடுகின்றனர். பணத்தை மீளக் கட்டுவதும், வட்டி கட்டுவதும் மக்களின் உழைப்பில் இருந்தே என்பதை தெரிந்து கொள்ளாத வரை, இந்தத் தேசியம் என்பது விபச்சாரமே. சொந்த வீட்டுப் பெண்களையே, பணத்துக்காக அற்ப சலுகைக்காக கூட்டிக் கொடுக்கும் அயோக்கியத்தனமே.


இந்த விபச்சாரம் சார்ந்த தேசியம் என்ன என்பதைப் பாலசிங்கம் தெளிவாகக் குறிப்பிடத் தவறவில்லை. "சுயநிர்ணய உரிமை என்றால் என்ன என்று ஐ.நா.சாசனத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது காலத்துக்குக் காலம் மாற்றமடைந்து புதிய அர்த்த பரிமாணத்துடன் காலத்துக்குக் காலம் வளர்ச்சியடைந்து வரும் கோட்பாடு. முன்பு ஒரு சர்வதேச சட்டரீதியாக இருந்தது. இப்போது அனைத்துலக மக்களுக்கும் பொருத்தமான ஒரு மனித உரிமையாக இந்தக் கோட்பாடு விளங்குகின்றது" என்பதே அவர் குறிப்பிட்டது. ஐ.நா வரையறை என்பதும் காலத்துக்குக் காலம் மாறி இன்று அனைத்துலக மக்களுக்குப் பொருத்தமான மனிதவுரிமையாக மாறிவிட்டது என்பதும் மிகவும் தேர்ந்தெடுத்த மக்கள் விரோத தேசிய விரோதக் கூற்றாகும். சொந்தத் தேசிய விடுதலைப் போராட்டத்தையே, சொந்தத் தியாகத்தையே இப்படி யாரும் இவ்வளவு நேர்த்தியாகக் கேவலப்படுத்தி விற்கமுடியாது. இது அனைத்துலக மனிதவுரிமை என்பதன் மூலம், அனைத்துலகமும் சுரண்டப்படும் உரிமையை புலிகள் அங்கீகரிக்கின்றனர். மனிதவுரிமை என்பது ஐ.நாவின் உலக அகராதியிலும், புலிகளின் தேசிய அகராதியிலும் ஒன்றுபட்டுள்ளது. உண்மையில் இது மக்களை சூறையாடுவதுதான். இதை மூடிமறைத்து விட்டு இது தான் சுயநிர்ணயம் என்று புலிகள் வக்காளத்து வாங்குகின்றனர். இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து சோவியத்யூனியனை ஒடுக்கவும், உலகளாவிய மக்களின் தேசிய எழுச்சிகளைச் சீரழித்து அரைக் காலனி, நவ காலனி மற்றும் மறுகாலனியாக்கலை மறுநிர்மாணம் செய்யவே ஐ.நா. உருவானது. ஐ.நா. உலக மக்களுக்கு எதிராக மூலதனத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் சேவை செய்வதையே தனது அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்தது. ஐ.நா. பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் எல்லாம் யார்? ஏகாதிபத்தியங்களும், அவர்கள் உருவாக்கிய பொம்மை அரசுகளின் பிரதிநிதிகளுமே. ஐ.நா. மக்கள் விரோதப் பாத்திரத்தை அரங்கேற்றும் ஒரு சர்வதேச சபையாகியது. "வீட்டோ"வானது மூலதனத்தின் நெம்பாக தொழில்பட்டது. இந்த ஐ.நா. ஊழியர்களுக்கு ஏகாதிபத்தியமே சம்பளம் கொடுத்ததுடன், தமது தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான பணத்தைக் கொடுத்து உருவான ஒரு விபச்சாரத் தரகு மையம் தான் இது. இதைத் தாண்டி ஐ.நா. எதையும் மக்களுக்குச் செய்யவில்லை. இந்த மையத்தின் சட்டத்திட்டங்களை உருவாக்கியதில், சர்வதேசக் கோட்பாடுகளை விளக்கியதில் சிங்கள இனவெறி பௌத்த அரசின் பங்கு உள்ளடக்காமல் எதுவும் விளக்கப்படவேயில்லை. இந்த விபச்சாரத் தரகர்களின் சொந்த நலன் சார்ந்த சுயநிர்ணயம் பற்றிய கோட்பாட்டை, பாலசிங்கம் தமிழ் மக்களுக்கு விளக்க முற்படுகின்றார்.


முன்பு அனைத்துலக மக்களுக்குப் பொருத்தமில்லாததாக இருந்தாகவும், இன்று பொருத்தமாக மாறி உள்ளதாகவும் கூறுவது, உள்ளடக்கத்தில் சுயநிர்ணயம் உலகமயமாகி விட்டது என்பதைக் கூறி துரோகத்துக்கு விளக்கம் கொடுக்கின்றார். முன்பு நாடுகளுக்குள் ஒரு சட்ட ரீதியான தேசிய வரையறையாக இருந்தது மாறி, உலகமயமாதல் என்ற அனைத்து மக்களையும் உள்ளடக்கியதே தேசியம் என்ற விளக்கத்தை வைக்கின்றார். நாட்டை ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிக்கும் உரிமைக்குத் தத்துவ விளக்கம் தருகின்றார்.


தமிழ்த் தேசியம் என்பது உலகமயமாதலுக்கு உட்பட்ட, ஒரு அடிமைத் தேசமே என்பதைச் சொல்லாமல் சொல்ல முனைகின்றனர். தேசிய பொருளாதாரம், பண்பாடு, கலாச்சாரம், மொழி என அனைத்தையும் இதற்கு உட்பட்டு அழிக்க தயாராக இருப்பதை உறுதிபடுத்தியதுடன், அதையே இன்று செய்கின்றனர். அதையே பிரபாகரன் வார்த்தையில் கூறுவதானால் "உலகப் போக்குடன் முரண்படாது உலக வரலாற்றின் ஓட்டத்திற்கு இசைவாக நாமும் எமது போராட்ட வரலாற்றை முன்நகர்த்திச் செல்வதே விவேகமானது" என்றதன் மூலம், தேசத்தின் அடிப்படை நலன்களை குழி தோண்டிப் புதைக்கவும், உலகமயமாதலின் கைக் கூலிகளாகச் செயல்படத் தயாராக இருப்பதைத் தமிழ் தேசியமாக பிரகடனம் செய்கின்றனர். உலகப் போக்குடன் முரண்படாது அதற்கு இசைவாகச் செல்ல வேண்டும் என்று கூறுவதாயின், ஏன் இவ்வளவு அர்த்தமற்ற தியாகங்கள்? எதற்காக இவ்வளவு இரத்த கறைபடிந்த வரலாறுகள் எல்லாம் எமக்கு தேவைப்பட்டன? இன்று இதைச் சொல்வதற்குப் பதில் அன்றே இதைச் சொல்லி இருக்க முடியும். ஏன் உலக வரலாற்று ஓட்டத்தை மாற்றியமைக்க நாம் போராடக் கூடாது? அது அல்லவா மக்கள் போராட்டம். அது அல்லவா மக்கள் புரட்சி. ஈராக்கை ஆக்கிரமிக்க அமெரிக்கா எடுக்கும் உலக ஓட்டத்தைச் சார்ந்த முயற்சியை அடுத்து, உலகளவில் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நாளில் வீதியில் இறங்கி இதை எதிர்த்து போராடிய வரலாற்றுப் போக்கில் புலிகள் எந்தப் பக்கம் நிற்கின்றனர்? அந்த மக்கள் உலக வரலாற்று ஓட்டத்தை மறுத்து, உலகை தமக்கு இசைவாக மாற்றி அமைக்க விரும்புகின்றனர். ஆனால் ஆயுதம் ஏந்தியப் படைகள் மூலம் அதிகாரத்தை ஏந்தியுள்ள புலிகள், அமெரிக்கா பின்னால் வாலாட்டி அதை ஒழுகுவதே தமிழ்த் தேசியம் என்கின்றனர். அதற்கு ஐ.நா. என்ற விபச்சாரத் தரகனைச் சாட்சிக்கு அழைக்கின்றனர்.


இப்படி பாய் விரித்து அழைத்தபடி "இன்று உலகம் மாறிவருகின்றது. உலக ஒழுங்கும் மாறிவருகின்றது. உலக நாடுகளின் உறவுகளும் மாறி வருகின்றன. மனித சமுதாயம் முன்னென்றும் காணாத புதிய சவால்களுக்கு முகம் கொடுத்து நிற்கிறது" என்று பிரபாகரன் கனவில் இருந்து எழும்பி கதை சொல்கின்றார். பிரபாகரனின் கனவுக்கு ஏற்ப உலக ஒழுங்கு இன்று மாறவில்லை. உலக ஒழுங்கு எப்போதோ மாறி விட்டது. அதன் பண்புகள் தான் காலத்துக்குக் காலம் எகிறிக் குதிக்கின்றது. மனித சமுதாயத்தின் விடுதலை என்ற லட்சியம், இதனால் பொய்த்து விடவில்லை. சோரம் போனவர்கள் இது பொய்த்து விட்டது என்று கூறி, "இன்று உலகம் மாறிவருகின்றது. உலக ஒழுங்கும் மாறிவருகின்றது. உலக நாடுகளின் உறவுகளும் மாறி வருகின்றன. மனித சமுதாயம் முன்னென்றும் காணாத புதிய சவால்களுக்கு முகம் கொடுத்து நிற்கிறது" என்று கூறி மக்களின் விடுதலை உணர்வை உயிருடன் புதைக்க நினைக்கலாம். ஆனால் மக்களின் விடுதலை போராட்டம் முன்பைவிட கூர்மையாகியுள்ளது. மக்கள் புரட்சி செய்யவும், தமது விடுதலைக்காகவும் போராடத் துடிக்கின்றனர். புலிகளில் தம் உயிரை மனித விடுதலை என்ற ஒரேயொரு லட்சியத்துக்காகக் கொடுத்து மரணமடைந்த ஒவ்வொரு அடிமட்ட புலி உறுப்பினரும், உலகம் மாறிவிட்டது என்று கூறி மரணிக்கவில்லை. இன்று தலைமை கூறுவதற்கு எதிரான உணர்வுகளுடன் தான், விடுதலை என்ற உன்னதமான மனித நோக்குடன் தான் தன்னை அர்ப்பணித்தனர். இங்கு அவர்களின் அரசியல் நோக்கத்தில் அரசியல் ரீதியாகத் தவறு இருந்தது என்பது உண்மைதான். ஆனால் இங்கு விடுதலை என்ற தியாக மனப்பாங்குடன் கூடிய மனித உணர்வை, தியாகத்தை புலிகள் முதல் யாரும் கொச்சைப்படுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது. இந்த உலகத்தின் போக்குக்கு எதிராக, முன்னென்றும் மனித இனம் காணாத சவால்களை எதிர் கொண்டு மக்கள் போராடுவது மட்டும் ஒரேயொரு எதிர்தரப்பாகி விட்ட நிலையில், புலிகள் இதற்கு நேர் எதிர் திசையில் செல்லுகின்றனர். இதைக் காட்டி பின்வாங்கவும், துரோகத்தை நியாயப்படுத்தவும் விளக்கம் கொடுக்கின்றனர். மக்களின் விடுதலை என்பது உலகமயமாதல் நோக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தான் என்பதைப் புலிகள் திட்டவட்டமாக மறுத்து நிற்கின்றனர். உலகமயமாதலைக் கட்டமைத்து பாதுகாக்கும் உலக வங்கியின் செயல்களைப் புலிகள் பாராட்டும் போது தமிழ் மக்கள் இரத்தம் சிந்திய தியாகம் அனைத்தும் உலக மூலதனத்தின் விடுதலைக்காக என்பதையே புலிகள் தேசியமாகப் பிரகடனம் செய்கின்றனர்.


பிரபாகரன் ஏகாதிபத்திய மூலதனத்தின் நலன்கள் சார்ந்த "உலகப் போக்குடன் முரண்படாது உலக வரலாற்றின் ஓட்டத்திற்கு இசைவாக...", "தமிழ் மக்கள் தமது தியாகத்தில் சுயாட்சி அதிகாரமுடைய ஆட்சியை நிறுவி, தம்மைத் தாமே ஆளுவதற்கு சிங்கள மக்கள் தடையாக இருக்கக்கூடாது." என்பதே தமிழீழத் தாகம் என்கின்றார். தம்மைத் தாம் ஆள்வது என்பது, உள்ளடக்கத்தில் ஏகாதிபத்தியம் தமிழ் மக்களை சுரண்டும் உரிமையைப் பாதுக்காக்கும் உரிமையைத் தமக்குத் தரக் கோருவதே. ஏகாதிபத்திய உலகமயமாதல் "உலகப் போக்குடன் முரண்படாது உலக வரலாற்றின் ஓட்டத்திற்கு இசைவாக" தாம் தமிழ் மக்களை ஆளும் உரிமையைக் கோருகின்றார். உலக வங்கியிடம் கடன் வாங்கவும், அதற்கு வட்டி கட்டவும், மக்களை பிழிந்து கறந்து தரும் உரிமையைக் கோருகின்றனர். புலிகள் தமிழ் மக்களின் நலன்கள் எதையும் வழங்க மறுக்கும் அதே நேரம், மக்களின் நலன்களுக்காகப் போராட மறுத்து, அவர்களை சூறையாடிய படி ஏகாதிபத்திய நலன்களுக்காக அதற்கு இசைவாக செங்கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.


சர்வதேச நிதி மூலதனம் சார்ந்து தேசத்தை மீட்கப் போவதாகப் பிரகடனம் செய்கின்றனர். சர்வதேச சுரண்டல் விதிக்கமைய கடன் வாங்கி, வட்டி கட்டும் தேசத்தில், அன்னிய மூலதனம் புகுந்து மக்களைச் சுரண்டும் உரிமையுடன் கூடிய உலக ஒழுங்கைப் புலிகள் காப்பாற்ற முனைகின்றனர். அதையே அவர்கள் அழகாக "எங்கள் போராட்டத்தின் நியாயத்தை தர்மத்தை உலக நாடுகள் உணர்ந்து ஏற்கப் போவதில்லை. ஆகவே நாமும் எமது போராட்டப் பாதையை உலக வரலாற்று ஓட்டத்தை அனுசரித்து போக வேண்டுமென்பதே தலைவர் கூறுவதாகும்." என்று பாலசிங்கம் கூறுகின்றார். போராட்டத்தின் நியாயத்தை, தர்மத்தை உணராத ஏகாதிபத்தியத்தின் பின்னால் மக்களை எல்லாம் தம்மைப் போல் துரோகமிழைத்து வால் பிடிக்க கோருகின்றனர். ஆனால் எல்லா நாட்டிலும் உலக போக்கை எதிர்த்து, மக்கள் நியாயத்தையும் தர்மத்தையும் அங்கீகரிக்கக் கோரியும் நாள் தோறும் போராடுகின்றனர். உலகம் அங்கீகரிக்கும் என்று கருதியா, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தம் உயிரைத் தியாகம் செய்தனர். உலகம் அங்கீகரிக்கா விட்டால் துரோகத்துக்கு இணங்கும் சம்மதத்தையே, தியாகங்கள் இடித்துரைப்பதாக புலிகள் விளக்கம் கொடுக்கின்றனர். அனைத்துத் துரோகங்களையும் மூடி மறைத்த படி, மக்களுக்கு எதிராக அணிவகுக்க அறை கூவுகின்றனர். மக்களே வரலாற்றை படைபவர்கள் என்பதை மறுக்கும் புலிகள், மூலதனமே மக்களின் வரலாற்றை படைப்பதாகக் கூறி துரோகத்தை பச்சையாகப் பிரகடனம் செய்கின்றனர். இந்தத் துரோகத்தை முழுமையாக அப்பட்டமாக பூர்த்தி செய்வது சார்ந்தே, ஏகாதிபத்திய நிதிகள் தாராளமாக ஊடுருவி மக்களைச் சூறையாடக் காத்துக் கிடக்கின்றது. சர்வதேச ஏகாதிபத்திய ஆளும் வர்க்க பிரதிநிதிகள், புலிகளை அடிக்கடி சந்தித்து கதைப்பதன் உள்ளார்ந்த அர்த்தம் இது தான். சுரண்டலை விரைவாக விரிவுபடுத்த, புலிகள் அதற்கு இசைவான செயல்பாடுகளை துரிதப்படுத்த சந்திப்புகள் தொடர்ச்சியாக நாள் தோறும் தொடருகின்றது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்களை அல்ல, போராட்டத்தின் நியாயத்தை தர்மத்தை மறுக்கும் ஏகாதிபத்தியப் பிரதிநிதிகள் நடத்தும் நிதிப் பேரங்கள் எண்ணில் அடங்காதவை.


இந்த இடத்தில் தான் பிரபாகரன் "நாம் நேர்மையுடனும், உறுதியுடனும் சமாதான வழிமுறையை தழுவி நிற்கின்றோம்" என்று பிரகடனம் செய்கின்றார். பணத்தை அள்ளித் தரும்படி வேண்டு கோளுக்கு மேல் வேண்டு கோள்களை ஏகாதிபத்தியம் நோக்கி விடுகின்றனர். பணம் தருவதாக வழங்கிய வாக்குறுதிகள் நடைமுறை ரீதியாக எல்லை தாண்டி வரமறுக்கின்றது. தமிழ் பகுதிக்கு வழங்கும் பணத்தை ஏகாதிபத்தியத்திடமே பாதுகாக்க புலிகள் கோரிய போது, அரசு மிக இலகுவாகத் தனது சொந்த பொறுப்பில் இருந்து நழுவிக் கொண்டது. அரசை நோக்கி குற்றச்சாட்டுகளை முன் வைக்க முடியாத அவலம் எதார்த்தமாகியது. இந்த நிலையில் புலிகள் "பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படுவதாக கூறினாலும் வடக்கு - கிழக்கில் களநிலை மாற்றமேதுமில்லை"1 என்ற அதிருப்தியை பாலசிங்கம் தெரிவிக்கின்றார். மாற்றம் நிகழவில்லை என்று கூறுவதன் மூலம், நிதி தாராளமாக தரப்படவில்லை என்ற அதிருப்தியை வெளியிடுகின்றனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை யாரை நோக்கியும் வைக்காது, பொத்தாம் பொதுவில் வைக்கப்படுகின்றது. அரசு மௌனமாக இதை விட்டுவிடுவதன் மூலம், புலிகளின் கையாலாத்தனம் வெற்று வேட்டாகி விடுகின்றது. நிதி மூலதனத்தை ஏகாதிபத்தியம் கொடுப்பதாயின் யுத்தத்தை நிரந்தரமாக நிறுத்தி, கொடுத்த பணத்தை மீளப் பெறுவதற்கான உத்தரவாதத்தைப் புலிகள் உறுதி செய்வது அவசியமாகும். இதை உறுதி செய்வது என்பது ஆயுதத்தைக் கைவிடவும், சுரண்டும் முரண்பட்ட ஜனநாயகத்தை அழுல்படுத்தவும் கோருகின்றது. இன்று இலங்கையில் சர்வாதிகார பாசிச வழிமுறை சார்ந்த சுரண்டலின் அவசியமற்ற நிலை காணப்படுகின்றது. வர்க்கப் போராட்டங்கள் தமிழ் சிங்களப் பகுதியில் பாசிச வடிவங்கள் மூலம் இரத்த ஆற்றில் முழ்கடிக்கப்பட்ட நிலையில், அதை அறுவடை செய்யும் அமைதியை உலகமயமாதல் கோருகின்றது. பாசிச வடிவிலான சர்வாதிகார அமைப்பு முறையைத் தொடர்ச்சியாக வைத்திருப்பதும் கூட சுரண்டலுக்குப் பாதகமானதே என்பது, உலகளாவிய அடிப்படை உள்ளடக்கமாகும். சுரண்டலைத் துரிதப்படுத்தவும், யுத்தம் சார்ந்து காணப்படும் பாசிச சர்வாதிகார அமைப்பு வடிவத்தைக் களைந்து, சுரண்டுவதை இலகுவாக்க உலகமயமாதல் கோருகின்றது. இது பூர்த்தியாகும் போது உறுதி அளித்த நிதி மூலதனங்கள், தாராளமாக மக்களைச் சூறையாட உட்புகும் என்பது வெள்ளிடைமலை.


தமிழ் மக்களின் தேசியத்தைக் கைவிட்டு துரோகம் செய்வதில் உள்ள இழுபறியை நிவர்த்தி செய்ய, ஏகாதிபத்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புலிகளை நாள் தோறும் சந்தித்து சரணடைய வைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதன் தொடர்ச்சியில் தான் "நாம் நேர்மையுடனும், உறுதியுடனும் சமாதான வழிமுறையைத் தழுவி நிற்கின்றோம்" என்று கூறி அறிக்கை விடுகின்றனர். இதன் மூலம் ஏகாதிபத்திய நிலைகளுக்கு விசுவாசமாகவும், மக்களுக்கு எதிராகவும் கூர்மையான ஒடுக்குமுறையைக் கையாளுகின்றனர். அதாவது இதைப் புலிகள் ஒற்றைப் பரிமாணத்தில் விளக்க முனைகின்றனர். சொந்த நடைமுறை செயல்பாடுகள் முரண்நிலை காண்கின்றது. ஏகாதிபத்தியத்துடன் ஒரு நெருக்கமான கைக்கூலியாகச் செயல்படவும், அதன் அங்கமாக மக்களை அடக்கியாள அனுமதிக்கும் அமைதியை சமாதானத்தையே வேண்டி நிற்கின்றனர். இதனால் அவர்கள் தாம் செய்த, சொந்த நலன் சார்ந்த ஒப்பந்தத்தையே மீறி நிற்கின்றனர். சொந்த ஒப்பந்த மீறல்கள் தற்செயலாக நிகழும் போது அது தவறு அல்ல. ஆனால் அதுவே திட்டமிட்ட வகையில் கையாளப்படும் போது அதன் விளைவு மிகவும் எதிரிடையாக மக்களுக்கு எதிராக மாறுகின்றது.


அதாவது புலிகள் தமது சொந்த நலன் சார்ந்து செய்த ஒப்பந்தத்தை மீறுவது, உண்மையில் மக்களின் அடிப்படையான வாழ்வை மேலும் நாசமாக்குவதை துரிதமாக்குகின்றது. ஏகாதிபத்தியத் தலையீடுகள் இவற்றை மேலும் துரிதமாக்குகின்றன. யுத்த நிறுத்த மீறல்கள் அனைத்தும் சொந்த மக்களுக்கு எதிராக புலிகள் கையாள்வது என்பதை எக்காரணம் கொண்டும் நாம் நியாயப்படுத்த அனுமதிக்க முடியாது. இதை சற்று விரிவாகப் பாhப்போம். மார்கழி மாதம் கண்காணிப்பு குழுவுக்குக் கிடைத்த மொத்த புகார் 142 ஆகும். இதில் 118 விடுதலைப் புலிக்கு எதிராகவும், 24 சிங்கள இராணுவத்துக்கு எதிராகவும் கிடைத்துள்ளது. ஒப்பந்தத்தின் பின்னான 31.12.2002 வரையான மொத்த யுத்த நிறுத்த மீறல்கள் 556 ஆகும். இதில் புலிகளுக்கு எதிராக 502யும், இராணுவத்துக்கு எதிராக 54 புகார்களும் யுத்த நிறுத்த மீறலாக அடையாளம் காணப்பட்டது. புலிகளின் யுத்த நிறுத்த மீறலில் கட்டாயத்தின் பெயரில் 313 சிறுவர்களைப் படைக்குத் திரட்டியது முதல் 89 ஆள் கடத்தல மற்றும் 49 தொல்லை கொடுத்த சம்பவங்கள் ஆகும். இராணுவத்துக்கு எதிரான புகாரில் 20 தொல்லை கொடுத்தது முதல் 13 பணம் பறித்த சம்பவம் அல்லது சுதந்திர நடமாட்டத்துக்கு தடை விதித்த சம்பவமாகும். இந்த யுத்த நிறுத்த மீறல்கள் அவர்கள் தத்தம் நலன்கள் சார்ந்து, அவர்கள் உடன்பட்டுச் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதில் இருந்து கண்டறியப்பட்டது. 2003 இல் மட்டும் 670 ஆள் கடத்தல் முறைப்பாட்டைக் கண்காணிப்பு குழு பெற்றுள்ளது. இதில் 417யை கண்கணிப்பு குழு உறுதி செய்துள்ளது. இரண்டு வருட யுத்த நிறுத்தம் பூர்த்தியான நிலையில், யுத்த நிறுத்த மீறல் பற்றிய அறிக்கை வெளியாகியுள்ளது. புலிகள் 1046 தடவைகள் மீறியுள்ள நிலையில், படையினர் 88 தடவைகள் மீறியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் 99 சதவீதமானவை நேரடியாக மக்களுக்கு எதிரானது. அரசின் யுத்த நிறுத்த மீறலை விடவும் புலிகளின் யுத்த நிறுத்த மீறல்கள் பாரியதாக உள்ளது. மிகவும் கட்டுப்பாடு கொண்ட இயக்கம் என புகழ் உரைக்கும் புலிகள், தலைவரின் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தையே விசுவாசமின்றி உதாசீனம் செய்யும் போது, இந்த மீறல் தலைமையின் ஆதரவுடனா அல்லது தலைமைக்கு எதிராகவா என்பதை எதார்த்தத்தின் சராசரி தீர்ப்புக்கு விட்டுவிடுவோம்.


உண்மையில் இந்த யுத்த நிறுத்த மீறல்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் மட்டும் பதிவானவைதான். அதுவும் புலிகளின் கொலை அச்சுறுத்தலை மீறி இது பதிவானதாகும். அச்சுறுத்தலின்றி சுதந்திரமாக பதிவாகியிருப்பின் உண்மையில் இதன் அளவு பல மடங்காக இருப்பது எதார்த்தம். இதை யாரும் மறுக்க முடியாது. இது யுத்த நிறுத்த மீறலாக அடையாளம் காணப்பட்டவை மட்டுமே. மக்கள் தமக்கு எதிராக ஜனநாயக விரோதமாக இருப்பதாக கருதி, யுத்த நிறுத்த மீறலாக கூறிய புகார்கள் இதை விட சில மடங்கு அதிகமாகும். கண்காணிப்புக் குழுவிடம் ஒரு புகாரை செய்வது கூட கடினமானது. கண்காணிப்புடன் கூடிய உளவாளிகளை உள்ளடக்கிய ஒரு கண்காணிப்பு குழு, சுதந்திரமானது அல்ல. அத்துடன் அது மக்களுடன் தொடர்பற்றவை. உயிரை பணயம் வைத்தே புகார்கள் செய்யப்படுகின்றன. செய்யப்பட்ட புகார்கள் பல உறுதி செய்யமுடியாதது. காரணம் பாசிச நிலைமை, சுதந்திரமற்ற ஜனநாயகமற்ற சூழலால் வெறுமனே பதிவாகும் பல சம்பவங்கள், யுத்த நிறுத்த மீறலாக யாரையும் குற்றம் சாட்டுவதை திட்டமிட்டே கைவிடுகின்றது. சுதந்திரமான ஜனநாயகமான மக்களுடன் தொடர்புடைய ஒரு யுத்த நிறுத்த மீறல் அமைப்பு மட்டும் தான், மேலும் துல்லியமான தகவல்களை திரட்டித் தரும். உதாரணமாக யுத்த நிறுத்தத்தின் பின்பு வடக்கு கிழக்கில் நடந்த அரசியல் கொலைகள், இனம் தெரியாத அரசியல் வன்முறைகள் யுத்த நிறுத்த மீறலாக அடையாளம் காணப்படவில்லை. மட்டக்களப்பு பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டுப் பத்திரிகை நிறுத்தப்பட்ட நிலையில், இதை யுத்த நிறுத்த மீறலாக அடையாளம் காணப்படவில்லை. தமிழ் பத்திரிகை உலகம் இதை மட்டும் கண்டிக்காது, பத்திரிகை சுதந்திரம் பற்றி பினாமிகள் மூலம் பக்கம் பக்கமாக எழுதுகின்றனர். இப்படி பற் பல. யுத்த நிறுத்த மீறல் பற்றிய அறிக்கை 10 சதவீதத்தைக் கூட வெளிக் கொண்டு வரும் தகுதியை இழந்து போனது.


யுத்த நிறுத்த மீறல் என்று அவர்கள் தாம் தமக்கு இடையில் செய்த கொண்ட ஒப்பந்தத்துக்கு இணைய கட்டுப்படுத்தும் விதிகள், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை மீறலை யுத்த நிறுத்த மீறலாக கருத மறுக்கின்றது. கட்டாய ஆள் சேர்ப்புடன் கூடிய மனித கடத்தல்கள், பயிற்சியில் இருந்து தப்பித்து வந்த 200 மேற்பட்டவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமை மீறலை யுத்த நிறுத்த மீறலாகக் கருதப்படவில்லை. அடிப்படை ஜனநாயக உரிமை மீறலை யுத்த நிறுத்த மீறலாக கருதாத ஒப்பந்தம், குறிப்பிட்டதை மட்டும் யுத்த நிறுத்த மீறலாக கருதுகின்றது. இதை இருவரும் தத்தம் நலன் சார்ந்து செய்த போது, அதை அவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிப்பது அவசியமானதாகும். குறிப்பாக இது மக்களுக்கு எதிரான யுத்த நிறுத்த மீறலாக இருக்குமாயின் இதை எதிர்த்துப் போராடுவது அவசியமாகும். இந்த ஒப்பந்தம் சமாதானத்தை எற்படுத்தும் எனக் கருதும் அனைவரும், இதை ஆதரிக்கும் அனைவரும் இந்த மீறலை கண்டிக்க தவறும் போது, சமாதானத்தை மறுக்கும் அப்பட்டமான அயோக்கியர்களாக இருக்கின்றனர். இன்றைய அன்றாட தமிழ் செய்திப் பத்திரிகைகளும், அதை ஆக்கிரமித்து எழுதும் புலிகளின் பினாமி எழுத்தாளர்களும், புலிகள் ஊளையிட அதன் உடன் சோந்து ஊளையிடும் அறிவுத்துறையினரும், மக்களுக்கு எதிரான யுத்த நிறுத்த மீறலை, ஒரு தலைப்பட்சமாக ஆதரித்துக் கருத்துரைப்பதன் மூலம், மக்களின் எதிரிகள் ஏகாதிபத்தியக் குடையின் கீழ் ஒன்று கூடுகின்றனர். இதுவே இன்றைய பிழைப்புவாதமாக உள்ளது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை தமக்காக தாமே முன்வந்து செய்த புலிகள், குறைந்த பட்சம் அதில் நேர்மையாக இருப்பது மிக முக்கியமானது. இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கும் யாவரும், மக்களுக்கு எதிரான யுத்த நிறுத்த மீறலை கண்டிப்பதில் அடிப்படை நேர்மை அவசியம். நேர்மையற்ற பிழைப்புவாதமும், குறுகிய வக்கிரமும் கொப்பளிக்க, மக்கள் மேலான யுத்த நிறுத்த மீறலை ஆதரிப்பது அல்லது கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கும் பூனையாட்டம் கருத்துரைப்பது, எல்லாம் தமிழ் மக்களின் மேலான சுமையை உயர்த்தவும் வாழ்வை மேலும் அழிக்கவும் நெம்பாக நின்று உதவி செய்வதாகும்.


யுத்த நிறுத்த மீறல் மோதலாக மாறும் சந்தர்ப்பங்களில் இதுவே புலிகள் மேலான நெருக்கடியாகப் பரிணமிக்கின்றது. யுத்த நிறுத்த மீறலைப் புலிகளுக்கு எதிரான ஒரு தெளிவான குற்றச் சாட்டாக ஏகாதிபத்தியங்கள் முன்வைக்க தவறவில்லை. இந்த நிலையில் தமிழ்ச்செல்வன், கண்காணிப்பு குழுவுக்கு எழுதிய கடிதத்தில், யுத்த நிறுத்த மீறலைச் செய்வோரை கண்கணிப்பு குழு கைது செய்யும் அதிகாரத்தை, புலிகள் சார்பாக அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. தாமாக முன் வந்து இதைக் கூறியதன் மூலம், சொந்த அமைப்பில் ஏற்படும் எதிர்ப்புகளையும் ஒடுக்க ஏகாதிபத்தியத்துக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார். கண்காணிப்புக் குழு யுத்த நிறுத்த மீறல் செய்வோரை கைது செய்யக் கோரும் தமிழ்ச்செல்வன், ஏகாதிபத்திய படைகளின் வருகையையும், நீதி விசாரணைக்கும் உரிய சர்வதேச ஆக்கிரமிப்புக்கும் தனது ஆதரவை உறுதி செய்துள்ளார். இதன் படி இன்றைய யுத்த நிறுத்த மீறலுக்காக புலிகள் தரப்பில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட உறுப்பினரை கைது செய்யும் கண்காணிப்புக் குழுவின் உரிமை சார்ந்த அதிகாரம் பற்றிப் பேசத் தவறவில்லை. ஏகாதிபத்தியத்துக்கு எப்படி கைக்கூலியாக இருப்பது என புலிகள் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை எதிர்ப்பதை யுத்த நிறுத்த மீறலாக கூறுவதன் மூலம், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களை ஒடுக்கும் உரிமையை சர்வதேச ஆயுதம் ஏந்திய கண்காணிப்பு குழுவுக்கு வழங்க புலிகள் முனைகின்றனர். இந்த எதிர்ப்பு புலிகளில் இருக்கும் நேர்மையான தேசிய வாதிகளிடம் இருந்தும் எழும் என்பதை முன்கூட்டியே, கண்காணிப்பு குழுவுக்கு எச்சரிப்பதன் மூலம், ஆயுதம் ஏந்திய அதிகாரம் பெற்ற ஒரு சர்வதேச ஆக்கிரமிப்பை துரிதப்படுத்தவேக் கோருகின்றனர் புலிகள்.


புலிகள் ஏதாவது ஒரு வகையில் முரண்டு பிடிக்கும் போது, யுத்த நிறுத்த மீறல்கள் அனைத்தும் ஏகாதிபத்தியத்துக்கு சார்பானதாகிவிடும். இதை காட்டி இலங்கையில் நேரடி ஆக்கிரமிப்பைச் செய்ய போதுமான வலுவை பெற்றுவிட்டவர்கள், அதை நோக்கிய முன்னெடுப்புகள் தயாரிப்புகள் ஒருபுறம் செய்யப்படுகின்றது. ஒஸாமா பின்லேடன் தலைமையிலான அல்-ஹைடா என்ற இஸ்லாமிய அடிப்படைவாத மதவாத குழுவுக்கு, கடலில் தற்கொலை தாக்குதலை எப்படி நடத்துவது எனப் புலிகள் பயிற்சி அளித்ததாக அமெரிக்காவின் "கடல் புலனாய்வுப் பிரிவு" தெரிவித்துள்ளது. "கடல் புலனாய்வுப் பிரிவைச்" சேர்ந்த கிவ்வென் கிம்மில்மன் புலிகளிடம் இருந்து "ஜமா இஸ்லாமியா" பெரும் பலன்களை பெறுவதாகக் கூறினார். உலகமயமாக்கல் சார்ந்த அமெரிக்க உலக ஆக்கிரமிப்புகளை விடாப்பிடியாக தொடர்ச்சியாக நடத்த, காரணங்களையும் நியாயங்களையும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பொய்யாக புனைந்தும் அடுக்கிவைக்கின்றன. அமெரிக்க கடல் உளவுத்துறையின் இந்தக் கூற்றைப் புலிகள் இதுவரை மறுத்தாகத் தெரியவில்லை. இது உண்மையில் நடந்ததோ அல்லது ஆக்கிரமிப்புக்கான ஒரு முன் கூட்டியோ சோடிக்கப்பட்ட காரணமாக இருந்தாலும், புலிகளின் அடிப்படை அரசியலால் இந்த எடுகோளை பொய்யாக்கிவிட முடியாது. புலிகளின் தேசிய அரசியல் என்பது ஏகாதிபத்திய அரசியலாக உள்ளவரை, அதாவது "உலகப் போக்குடன் முரண்படாது உலக வரலாற்றின் ஓட்டத்திற்கு இசைவாக" உள்ளதால், இந்த அடிப்படைக் கோட்பாடு, அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுக்கும் சர்வதேச மக்களின் தார்மிகத்தை அழித்து விடுகின்றது. இது உண்மையா என்ற ஊகத்தை இது சர்வதேச அளவில் உருவாக்கிவிடுகின்றது. பணத்துக்கும், ஆயுதத்துக்கும் பிசாசுடன் கூட கூட்டுச் சேர தயாரான புலிகளின் அரசியல், இதை மறுத்து நிற்கும் தார்மீகத்தை இழந்து நிற்கின்றது.


ஒருபுறம் ஆக்கிரமிப்பை நடத்தத் தயாராகும் ஏகாதிபத்தியங்கள், மறுபுறம் நிதி மூலதனம் மூலம் நாட்டை மறு காலனியாக்க முனைகின்றது. நிதி தாராளமாக வழங்கும் உறுதி மொழிகளை வாரி விடுகின்றது. உதாரணமாக ஐரோப்பா யூனியன் தனியார் துறையை, முதலீட்டை ஊக்குவிக்க முதன் முறையாக 4 கோடி ஈரோ நாணயத்தை (அண்ணளவாக 400 கோடி ரூபா) ஐரோப்பிய முதலீட்டு வங்கி, கடனாக வழங்கியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி வருடாந்தம் 20 கோடி டொலர் கடன் (2000 கோடி ரூபாவை) வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. வடக்கு - கிழக்கில் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தவும், அரசாங்க நிறுவனங்களைப் புனரமைக்கவும் உலக வங்கி 310 கோடி ரூபாவை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக பிரதமரின் செயலாளரான பிரட்மன் வீரக்கோன் தெரிவிக்கின்றார். இக் கடனுதவி 15 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்படவேண்டும். ஆனால் விதிவிலக்காக இக் கடனுக்கு வட்டி செலுத்தத் தேவையில்லை. பரஸ்பரம் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் இலங்கையும் ஆஸ்திரேலியாவும் கைச்சாத்திட்டுள்ளன. சமாதான முன்னெடுப்புகளுக்காக இதுவரை 90 லட்சம் டொலர்களை (90 கோடி ரூபாவை) ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது. எதிர்காலத்தில் மேலும் உதவிகளை வழங்கவும் முதலீடுகளைச் செய்யவும் அந்நாடு தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. உலக வங்கி இலங்கைக்கு 4.3 கோடி டொலர் (430 கோடி ரூபா) 40 வருட கடனாக வழங்கியுள்ளது. இது இடம் பெயர்ந்தவர்களை மறு குடியேற்றுவதற்காக வழங்கப்பட்டது. நெதர்லாந்து வழமையாக இலங்கைக்கு கடனாக வழங்கும் 1.06 கோடி யூரோவுக்கு (115 கோடி ரூபா) பதிலாக, இம்முறை 2.06 கோடி (225 கோடி ரூபாவை) யூரோவை வழங்க உள்ளது. இதில் 1 கோடி யூரோ நிவாரணக் கடனாக வழங்கியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி 50 கோடி ரூபா செலவில் வன்னியில் நவீன வைத்தியசாலை அமைக்கும் முயற்சியாக அடிக்கல்லை நாட்டியுள்ளது.


இப்படி பல பத்து உதவி என்ற பெயரில் கடன்கள் சர்வதேச நிதிக் கொள்கைக்கு ஏற்ப பணம் தாராளமாக வழங்கவும், வழங்குவதற்கான உறுதியையும் அளிக்கின்றன ஏகாதிபத்தியங்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான போது அதை நேரில் காணச் சென்ற பி.பி.சி தமிழ்ச் சேவையின் செய்தி தயாரிப்பாளர்கள் அது பற்றி கூறும் போது, ஒளிவு மறைவு இன்றி தமது ஏகாதிபத்திய நோக்கத்துடன் புலிகளும் இணங்கி நிற்பதை வெளிப்படுத்தினர். அந்த செய்தியில் செய்தியாளர்கள் கொண்டு சென்ற நவீன கைத்தொலை பேசிகளை கண் கொட்டாது புலிகள் பாhத்துக் கொண்டு இருந்தாகவும், சமாதானம் நிலைநாட்டப்பட்டால் வடக்கு கிழக்கில் கைத் தொலைப்பேசியால் நிரப்பிவிடும் ஆளுமை புலிகளுக்கு நிச்சயம் உண்டு என்று பெருமைபடக் கூறினர். இந்தக் கூற்று தற்செயலானவையல்ல. இதுவே உண்மையும் கூட. வெளிநாட்டுப் பொருள் மேலான மோகம், புலிகளின் அரசியல் மோகமாகி, அதுவே தமிழ்த் தேசியப் பண்பாடு சார்ந்ததாக இருப்பதால், இதுவே தமிழீழத் தாகமாகிவிடுகின்றது. சிங்கப்பூர் கனவு பற்றியும், இஸ்ரேலின் கைக்கூலி வாழ்வு பற்றியும், நினைக்காத புலிகள் உண்டோ! சொந்த நாட்டை சொந்த மக்கள் வளப்படுத்தவும் மீட்கவும் தயாரற்ற நிலையில், ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் கொள்ளையர்கள் தான் எமது நாட்டின் திட்டங்களைப் போடுகின்றனர். அதை எப்படி செய்வது, எங்கே செய்வது, யாரைக் கொண்டு செய்வது என்பது முதல் அதை நேரடியாக கண்காணிக்கவும் செய்கின்றனர். இதன் பலனை யார் நுகர்வது என்பதையும் தீர்மானிக்கின்றனர். எப்படி உற்பத்தியை செய்வது, யாரைக் கொண்டு செய்வது, என்ன கூலி என்பது முதல் நாட்டின் பண்பாடுகள் என அனைத்தையும் ஏகாதிபத்தியங்கள் தீர்மானிக்கும் படிக்கல்லில், புலிகள் செங்கம்பளம் விரித்து (இந்த செங்கம்பளங்கள் புலிகளின் தியாகங்களின் இரத்தத்தினால் ஊறியவை) வரவேற்ப்பு அளித்து ஆரத்தழுவியபடி படியேற்றுகின்றனர். நாட்டில் வாழும் மக்களின் அறிவு, அனுபவம் புறக்கணிக்கப்பட்டு, வெளிநாட்டவனின் தேவைக்கும் நோக்கத்துக்கும் இசைவாக திட்டங்கள் போடப்படுகின்றன. வெளிநாட்டுப் பொருட்கள் மீதான மோகம் வெம்பி வெதும்புகின்றது. மக்களின் அடிப்படை தேவை புறக்கணிக்கப்பட்டு, ஆடம்பரமான அடிப்படையற்ற கவர்ச்சிகரமான நவீனங்களால் தேசம் கற்பழிக்கப்படுகின்றது. புலிகளின் வெளிநாட்டு மோகம் அதிகரிக்க, வெளிநாட்டவனின் கால்களை நக்குவதும் துரோகம் செய்வதும் தேசியமாக நவீன விளக்கம் பெறுகின்றது.


அண்மையில் பிரபாகரனின் மகன் வெளிநாடு சென்று கல்வி கற்க இலங்கை அரசின் ஊடாக கடவுச்சீட்டு (பாஸ்போட்) எடுத்த செய்தி மெதுவாகக் கசிந்துள்ளது. இதுவரை புலிகள் இதை மறுக்கவில்லை. யுத்தத்தை மிகக் கேடாகப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு அறவிலையில் மண்ணெண்ணையை விற்று, மக்களையே கொள்ளையடித்து கோடீஸ்வரனான ஆளும் கட்சியின் மக்கள் பிரதிநிதியான மகேஸ்வரன், இந்திய பார்ப்பனியக் கைக்கூலியாக அனுமான் வேடம் போட்டு இந்து அமைச்சரான இந்த பன்றி தான், பிரபாகரனின் மகனின் கடவுச்சீட்டை நேரடியாக பெற்றுக் கொடுத்ததாக தகவல் கசிகின்றது. இந்தக் கொள்ளையன் இந்துக் கோயில்களின் தர்மகர்த்தாவாகவும் சாராயக் கடைகளின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் ரவுடியாக இருக்கின்றான். இதனால் எல்லா தரப்பு அரசியலிலும் தொடர்பு கொண்டு, நக்கிப் பிழைக்கும் ஒரு சாக்கடைப் பன்றி தான் இவன். இதன் போதே இந்தக் கடவுச்சீட்டு விடையமும் அரங்கேறியது. செல்வநாயகம், ஐp.ஐP.பொன்னம்பலம் முதல் அமர்தலிங்கம் வரை சொந்த குடும்பத்தில் தமது குழந்தைகளின் படிப்பு சார்ந்த எதை எல்லாம் தேசியத்தின் நலனின் பெயரில் செய்தார்களோ, அதையே புலிகளின் தலைவர் இன்று செய்து உள்ளதாகத் தகவல் கசிகின்றன. பிரபாகரனின் மகனின் வயதை ஒத்த போராளிகள் நாட்டுக்காக, தமிழ் மக்களுக்காக கல்வியைத் துறந்து, தாய் தந்தை முதல் சகோதரப் பாசத்தை இழந்து ஆயுதங்களைச் சுமந்து போராடுகின்றனர். ஆனால் தலைவரின் மகன் வெளி நாட்டில் படிக்க செல்லப் போவதாகத் தகவல் கசிகின்றன. தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தமிழ்த் தேசிய உணர்வு சார்ந்து, புலிகளின் மறுப்பு வெளிவந்ததாக அறியமுடியவில்லை. பிரபாகரனின் சொந்த மகனை ஒத்த தமிழ் மக்களின் எல்லாக் குழந்தைகளையும் சொந்த மகனாக கருதுவது தான், தமிழ் மக்களின் தலைவனுக்கு இருக்கும் தகுதி என்பதையே மக்கள் அங்கீகரிக்கின்றனர். வெளிநாட்டில் பிரபாகரனின் சொந்த மகன் படிக்கச் செல்வது உண்மையானால், இதற்கான விசா எப்படி பெறப்பட்டது. தமிழ் மக்களின் தேசியப் போராட்டத்தை ஏகாதிபத்தியத்திடம் தாரை வார்ப்பதற்காக, கைக் கூலியாக செயல்படும் போது எறியப்படும் எச்சில் கைமாற்றில் இதுவும் ஒன்றோ? ஏகாதிபத்தியங்கள் நாள் தோறும் தமிழ் மக்களைக் கைது செய்து நாடு கடத்தி வரும் இன்றைய நிலையில், அதைப் பற்றி பேசாத புலிகள் தமது சொந்த குழந்தைகளுக்கு விசா பெற்று ஏகாதிபத்திய நாட்டுக்குச் செல்ல முனைவது என்பது நகைப்புக்குரியதோ, சின்னவிடையமோ அல்ல. இதை நியாயப்படுத்துவது சொந்தத் தாயையே, படுக்கைக்கு அழைப்பதற்கு நிகரானது. கல்வி கற்கச் செல்வது உண்மையானால், கல்விக்கான செலவையும் வாழ்வுக்கான செலவையும் யார் வழங்கவுள்ளனர். ஏகாதிபத்தியமா? இலங்கை அரசா? தமிழ் மக்களா? அல்லது பிரபாகரன் குடும்பத்தின் சொந்த உழைப்பா? இவை எல்லாம் கேள்வி கேட்க முடியாத, மரண தண்டனைக்குரிய துரோகமாக, தேசிய விரோதமாக முத்திரை குத்தி படுகொலையை நியாயப்படுத்த முனையலாம். இதற்காகவே நாம் கொல்லப்படலாம். இதைக் கேட்காமல் இருப்பது தமிழ் மக்களின் நலன்களைக் கால் தூசாக எத்துவதற்கும், தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தியாகம் செய்த அனைத்து போராளிகளையும் குழி தோண்டி மறுபடியும் ஆழப் புதைப்பதற்கும் நிகரானது.


சொந்த நலன்கள் ஒருபுறம் கிடைக்கும் போது, நாட்டை ஒட்டு மொத்தமாகவே கூவி விற்கின்றனர். கடன் வாங்குவதன் மூலம் நாட்டை அடகு வைத்து, அறவட்டியையே மூலதனமாக்கி நாட்டை விற்கும் உலகமயமாதல் அனுபவத்தை புலிகள் மூடிமறைத்தபடி நியாயப்படுத்துகின்றனர். வாங்கும் கடனை புலிகள் தாம் பெற துடிக்கும் நிலையில், இந்தக் கடன் பற்றிய போலியான பிரமையை மாயையை தமிழ் மக்கள் மத்தியில் விதைக்கின்றனர். புலிகள் எப்போதும் பணத்தை அறவிட்டவர்களே ஒழிய, அதை திருப்பிக் கொடுப்பதோ கணக்கு காட்டுவதோ இல்லை. அதே போல் தான் இந்தப் பணமும் என்ற உணர்வை தன்னியல்பாகவும், புலிகளின் பினாமிகள் மூலமும் உருவாக்குகின்றனர். அனைத்தையும் வெறும் உதவியாகக் கட்டமைக்கின்றனர். இலங்கையின் ஒவ்வொரு நபருக்கும் 77.5 ஆயிரம் ரூபா கடன் எப்படி ஏற்பட்டது என்பதை மக்கள் தெரிந்து கொள்ளாமல் செம்மறி மந்தையாக இருக்கும் வரை, கடன் வாங்குவதும் நாட்டை ஏகாதிபத்தியத்துக்கு விற்பதும் தேசியத்தின் கொள்கையாக மாறிவிடும். இந்தக் கடன் பணத்தையும், அதற்கான வட்டியையும் மக்களாகிய எமது உழைப்பில் இருந்து கட்டப்படுவதை இந்த சமூகம் தெரிந்து கொள்ளாத அறிவிலியாக உள்ளவரை, தேசம் தேசியம் சார்ந்து விபச்சாரம் செய்யப்படுவதை அறிய முடியாது. இந்தக் கடனையும் வட்டியையும், உள்நாட்டுப் பொருளாதார உற்பத்தியை நுகர்வை உலகமயமாதலுக்கு இசைவாக இலங்கை அரசில் இணைந்து புலிகள் செய்வதா (வட்டியை கட்டுவதா), அல்லது பிரிந்து தமது பங்கைத் தாமாக ஏகாதிபத்தியத்துக்கு செய்வதா (கட்டுவதா) என்ற கேள்விகளுக்கு புலிகள் வேண்டும். இதை நிறைவேற்றாத வரை "உலகப் போக்குடன் முரண்படாது உலக வரலாற்றின் ஓட்டத்திற்கு இசைவாக" சமாதானத்தை முன்னெடுக்க முடியாது. மறு தளத்தில் இதற்கு இசையாத வரை, ஏகாதிபத்தியம் புலிக்கு எதிரான அழித்தொழிப்பை ஆக்கிரமிப்பை ஊக்கப்படுத்தவே செய்யும். உண்மையில் இதை எதிர் கொள்ளும் தகுதியை "உலகப் போக்குடன் முரண்படாது உலக வரலாற்றின் ஓட்டத்திற்கு இசைவாக" உள்ள அரசியலால், இதற்கு மாறாக எதிர் கொள்ள முடியாது.


மறுதளத்தில் மக்களின் வாழ்வு புதிய சுமைகளால் மேலும் ஆழமாக சிறைபிடிக்கப்படுகின்றது. ஒருபுறம் சொந்தத் தேசியப் பொருளாதார அடிப்படைகள் அழிக்கப்பட, மறுபுறம் அன்னியப் பொருட்கள் நாட்டில் குவிகின்றன. அடிப்படைத் தேவையைப் புறக்கணித்து வரும் சந்தைப் பொருளாதாரமே தேசிய, பண்பாட்டு, கலாச்சார சூழல்களாகவும் ஒட்டு மொத்த சமுதாயமும் ஏகாதிபத்தியக் கலாச்சார எல்லைக்குள் நடுங்கவைக்கும் வக்கிரத்தால் வெம்புகின்றது. இதன் ஒரு பகுதியாக வீங்கி வெம்பும் இந்தப் பண்பாடு, கற்பிக்கும் கல்வியிலேயே ஒரு கொள்ளையாக மாறிவிடுகின்றது. இலவசமான அரசு பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் அறவிட்டு கல்வி கற்பிக்கும், புதிய புல்லுருவி வர்க்கம் ஒன்று புதிதாக முளைத்தெழுந்துள்ளது. தமிழ்த் தேசியத்தின் செங்கோல் நிலைநாட்டப்பட்ட நிலையில் தான், இந்தக் கொள்ளை அடிப்பு அரங்கேறுகின்றது. இலவசமான அரசு பாடசாலையில் தமிழனிடம் தமிழனே நடத்தும் இந்தக் கொள்ளை, யாழ்மாவட்டப் பாடசாலை மாணவர்களையும் பெற்றோரையும் உறைய வைக்கின்றது. மாணவர்களை அனுமதிப்பதற்காக பெற்றோர்களிடம் இருந்து பெருங் கொள்ளையை அடிக்க பல்வேறு யுக்திகளை பாடசாலை நிர்வாகங்களும், அபிவிருத்திச் சங்கங்களும் கையாள்கின்றன. ஒரு புல்லுருவி வர்க்கம் பாடசாலையின் அபிவிருத்தி என்ற பெயரில், பாடசாலையைச் சுற்றி ஆட்டம் போடுகின்றது. சில அரசாங்கப் பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு ஆகக் கூடுதலாக 15 ஆயிரம் ரூபாவரை கோரப்படுகின்றது. சில பாடசாலைகளில் குறைந்தது 3 ஆயிரம் ரூபா கட்ட நிர்பந்திக்கப்படுகின்றது. பாடசாலையின் தரமே கொள்ளையின் அளவை நிர்ணயம் செய்கின்றது. தமிழ் மாணவர்கள் கல்வி கற்க பணம் இல்லை என்றால், கல்வி கற்க முடியாது. இதைச் சிங்கள இனவாதிகள் செய்யவில்லை. இதைத் தமிழ்ப் புல்லுருவி வர்க்கம் தேசியவாதிகளின் ஆதரவுடன், தமிழ் ஆசிரியர் சங்கத்தின் துணையுடன் செய்கின்றது. ஏழை மாணவர்களின் கல்வி என்பது எட்டக் கனியாகின்றது. இதில் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கு இது மேலும் ஆழமான வேட்டு வைப்பதுடன், புதிய சாதிய வேலியாகின்றது. இதனால் பெண்களின் கல்வி வீழ்ச்சியுறுவதை ஆணாதிக்கப் புல்லுருவி வர்க்கம் மறைமுகமாக ஏற்படுத்துகின்றது. யாழ் சமூகத்தைப் பற்றி பெருமையாகக் கூறும் போது பிள்ளைகளின் கல்விக்காக குடும்பங்கள் உழைத்து வாழ்ந்த காலத்தில், கல்விக்குப் பணம் என்பது ஒரு கேவலமான சமூக விடையமாக கருதப்பட்டது. பாடசாலைக்கு வெளியில் தனியார் கல்வி கொழுப்புள்ள பணம் திரட்டும் ஊடகமாக மாறிய போது, கல்வியை வர்த்தகமாகக் கொண்ட புல்லுருவி வர்க்கம் உருவானது. இதுவே பின்னால் பாடசாலைக்குள் புகுந்ததுடன், கல்வி கற்பதற்கே பணம் என்ற நிலைக்கு மாறிவிட்டது. தாய் மொழி கல்விக்குப் பதில் ஆங்கிலம் மூலம் நடத்தும் புதிய முறைகளும், தமிழ்த் தேசிய விபச்சாரத் தரகர்களின் துணையுடன் புகுத்தப்படுகின்றது. தமிழ் தேசிய சமூகம் எந்தளவுக்கு மேற்கத்தைய நுகர்வு பண்பாடு சார்ந்து சீரழிந்து செல்கின்றதோ, அந்தளவுக்குப் புல்லுருவி கூட்டமும் மக்களிடையேயான பிளவை அகலமாக்குகின்றது. தமிழ் மக்களின் கல்வி என்றும் சந்திக்காத அளவுக்குக் கடும் வீழ்ச்சி கண்டு வருகின்றது. இந்த வீழ்ச்சி தமிழ் மக்களுக்கு எதிரான புலிகளின் சொந்த வக்கிரத்துக்கு ஏற்ப, மேலும் துல்லியமாகத் துரிதப்படுகின்றது.


சிலர் மட்டும் கற்கும் கல்வி தேசியமாகி வரும் நிலையில், 2001-2002ம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதி புள்ளிவிபர ரீதியாக கல்வியின் வீழ்ச்சியை உறுதி செய்கின்றது. பல்கலைக்கழக அனுமதிக்கு திறமை அடிப்படையில் 625 தமிழர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், 5210 சிங்களவர் தெரிவு செய்யப்பட்டனர். அதாவது மொத்தமாகத் திறமையடிப்படையில் தெரிவானோரில் தமிழர் 10.71 சதவீதத்தினர் மட்டுமே. 2000-2001 இல் திறமை அடிப்படையில் தெரிவான 1011 தமிழர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடின், வீழ்ச்சியின் அகலத்தை நாம் நிர்வாணமாக - பூச்சியமாகவே காணமுடியும். சென்ற வருட புள்ளி விபரங்களுடன் ஒப்பிடும் போது 38 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. 2001-2002 ஆண்டில் திறமையடிப்படையில் மருத்துவத்துறையில் 14 தமிழ் மாணவர்களும், 23 முஸ்லிம் மாணவர்களும் தெரிவானார்கள். அதே நேரம் சிங்கள மாணவர்கள் எண்ணிக்கை 306 ஆக தெளிவாக இருந்தது. உயிரியல் துறையில் 2 தமிழர்கள் தெரிவாக சிங்களவர் 175 பேர் தெரிவானார்கள். சட்டத்துறையில் 67 சிங்கள மாணவர்கள் தெரிவான போது, தமிழர் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் தலா ஒருவர் மட்டுமே தெரிவானார்கள். கல்வியின் வீழ்ச்சி போன்றே, இது அனைத்து துறையிலும் பிரதி பலிக்கின்றது. மக்களின் வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சியுடன் கூடிய கொள்ளையடிப்புகள் நிகழ்காலச் சமுதாயத்தை விழுங்கும் போது, எதிர்கால சமுகம் நிர்வாணமாகின்றது. மிகவும் வசதியான செழிப்பான சமூகம் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்த நிலையில், மிகவும் பின் தங்கிய வசதியற்ற சமூகம் நாட்டில் எஞ்சி வாழ்கின்றது. இந்தப் போக்குக்கு தமிழ்த் தேசிய வீரர்களின் தேசிய விரோதக் கொள்கை தான் அடிப்படையான காரணம். தேசிய விரோதப் போக்கு ஒரு புல்லுருவி கூட்டமாகி அராஜகத்தை விதைத்த போது, பின் தங்கிய சமூகம் மேலும் ஆழமாக ஊசலாடியது. இந்த நிலையைப் பயன்படுத்தி ஒரு புதிய புல்லுருவி வர்க்கம் ஒன்று சமுதாயத்தை இயக்கும் சக்தியாகியது. மக்கள் நிலை தடுமாற மக்களின் சொத்துகள் சிங்கள இராணுவ இன அழிப்புக்குள்ளும் தரைமட்டமாகியது. மறு தளத்தில் புல்லுருவி வர்க்கத்தின் சூறையாடலுக்கும், தேசிய வீரர்களின் அபகரிப்புக்குள்ளும் சிக்கிய போது, சமுதாயம் அனைத்து படைப்பாற்றலையும் அதன் அடிப்படையையும் இழந்து நிற்கின்றது. இந்த நிலையில் தமிழ்ச் சமுகம் ஒரு பின்தங்கிய சமுதாயமாக மாறிவிட்டது. புல்லுருவிச் வர்க்கம் ஏகாதிபத்திய நுகர்வு மற்றும் பண்பாட்டை அடித்தளமாக்க, ஏகாதிபத்தியம் தேசியவாதிகளின் துணையுடன் சமுதாயத்தை காலுக்குக் கீழே கொண்டு வந்துள்ளது. சமுதாயத்தின் வீழ்ச்சி என்பது, ஆளும் அனைத்து பிரிவின் நெம்புக்குள் சிக்கி ஒட்ட மொத்தமாக அழிக்கின்றதாகும்.


எந்தச் சட்டமும் கட்டுப்படுத்த முடியாத புதிய வரி அறவிடும் முறை, மேலும் தமிழ்ச் சமூகத்தை மோசமாக்கி வருகின்றது. தமிழ் மக்கள் தமது சொந்த உழைப்பை வாழ்வை, வரிகள் மூலம் நாள் தோறும் வாங்கும் பொருளில் இருந்து விற்கும் பொருளின் எல்லா எல்லைகள் வரை இழக்கின்றனர். அண்மையில் வெளியான புள்ளி விபரம் ஒன்று 2002 இல் புலிகள் ஏ-9 பாதையில் பயணிகள் போக்குவரத்து வரி மற்றும் உணவு பொருட்கள் மீதான வரிகள் மூலம் 234 கோடி ரூபாயை திரட்டியதாக கூறுகின்றது. இதை விட பல்வேறு வரிமுறை மூலமும் மற்றைய பொருட்கள் சார்ந்தும் 300 கோடி ரூபா திரட்டியுள்ளதாக சர்வதேச ஆய்வு மதிப்பிட்டு மையம் ஒன்று தகவல் வெளிப்படுத்தியுள்ளது. இதுவும் ஒரு பகுதி மட்டும் தான். கட்டுப்பாடற்ற கட்டாய பண அறவீடுகள், மறைமுகவரி, சொத்துகளை வாங்கி விற்பது, சொத்துகளை அபகரிப்பது, உற்பத்திகளை மிகக் குறைவானதை தாம் தம் நலன் சார்ந்து நிர்ணயித்த விலைக்கு பலாத்காரமாக கட்டாயப்படுத்தி வாங்கி அதை சில மடங்காக விற்பது (இதை அடிப்படையாக கொண்ட பல போராட்டங்கள் புலிக்கு எதிராக நடந்துள்ளது) என்று எண்ணற்ற வரிகள் மூலம் திரட்டப்படும் பணத்தின் அளவு யாருக்கும் தெரியாது. ஆனால் பணம் திரட்டப்படுகின்றது. யாருடைய பணம். மக்களின் பணம். தேச மக்களின் பணம். தேச மக்கள் தமது வியர்வை சிந்தி சொந்த உழைப்பில் இருந்து உருவாக்கிய பணம். பண இழப்புகள், மக்களின் வாழ்வை தேசத்தின் வாழ்வை அழிக்கின்றது. மக்கள் பணத்தை இழக்க, தேசியம் கந்தலாகிவிடுகின்றது. தமிழ் மக்களின் தலைவிதியை இந்தளவுக்கு கந்தலாக்கி கொள்ளையடிப்போர் யார்? யுத்தம் மக்களின் வாழ்வை அழிக்க, தவறான யுத்த நிலைமை வாழ்வை நரகமாக்கின்றது. போராட்டங்கள் பல கடந்த நிலையில் அரசின் வரி, புலிகளின் வரி என்ற இரட்டைச் சுமைகளை தமிழ் மக்கள் சுமந்து சிக்கித் திணறுகின்றனர். பணம் பணம் என சூறையாடப்படும் நிலையில், அது மக்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ மீளப் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக இது ஏகாதிபத்திய ஆயுதச் சந்தையிலும், நவீன பொருட்களிலும் (உதாரணமாகப் பைரோ ஜீப் ஒன்று ஒரு கோடி ரூபா) செலவிடுவதன் மூலம், பணம் எகாதிபத்தியத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்லுகின்றது. பணத்துக்கு என்ன நடக்கின்றது என்பது யாருக்கும் தெரியாது. நடக்கும் பேச்சு வார்த்தை சார்ந்து உருவாகும் ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு இணங்க, இந்த நிதி சில பெரும் மூலதனத்தைக் கொண்ட சில புலித் தரகு முதலாளிகளை உருவாக்கலாம். நாம் இதை எதிர் காலத்தில் நிர்வாணமாகவே தெரிந்து கொள்வது தவிர்க்க முடியாது.


ஆடம்பரமாகவும் அட்டகாசமாகவும் நுகர்வு வெறியுடன் செயலாற்றும் புலிகள், தன்னார்வக் குழுக்களின் பணத்தைத் தமதாக்க முடியாத வெற்றுப்பேரத்தை அடைகின்ற போது, அதைத் திட்டவும் செய்கின்றனர். பாலசிங்கம் "இங்கு இயங்கும் சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் தமது நிர்வாகச் செலவுக்கும், வாகன வசதிக்கும் பெரும் நிதியை விரயமாக்குகின்றன. ஐ.நா. ஒதுக்கும் நிதியில் முக்கால் பங்கை தமது செலவுக்கு எடுத்துவிட்டு, மீதியில் பாயும், பீங்கானும் வழங்கி வருகின்றன. அத்துடன் புலிகளுக்கு எதிராக அறிக்கை விடுகின்றன. அவர்களை இங்கிருந்து அடித்துக் கலைக்க எங்களுக்குத் தெரியாதா? ஆனால் நாம் பொறுமையோடு இருக்கின்றோம்" என்று கூறுகின்றார். தன்னார்வக் குழுக்களை அரசியல் ரீதியாக எதிர்க்கவில்லை புலிகள். மாறாக விமர்சனங்களை தாங்கி கொள்ள முடியாத நிலையிலும், பணத்தை சொந்தமாக்க முடியாத நிலையிலும் இருந்தே இந்தக் கூற்று எழுகின்றது. வாகனத்தைப் பற்றி பேசும் போது, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஓடும் பைரோ ஐPப்புகளின் விலை என்ன. கோடிக்கணக்கான பெறுமதி உடைய எத்தனை வாகனங்கள் ஓடுகின்றது. எல்லையைக் கடக்கும் போது இராணுவத்திடம் எத்தனை பைரோ ஐPப்புகளை புலிகள் இழந்துள்ளனர். இங்கு இந்த பணமானது போராட்ட அவசியம் கருதிய நிதியா? என்பதைப் புலிகளில் இருந்து பிரிந்த கருணா, வடக்கு புலித் தலைவர்களின் ஆடம்பரம் என்று தனது கடிதத்தில் குறிப்பிடுகின்றார். மக்களின் ஏழ்மையைப் பற்றி கருணாவும் சரி, வடக்கு புலித் தலைமையும் சரி அக்கறைப்பட்டது கிடையாது. மக்களை ஏமாற்றவும், அவர்களைச் சூறையாடவும் வைக்கும் வாதங்கள் என்ற எல்லையைத் தாண்டி இதற்கு விளக்கம் இருப்பதில்லை. (இது பின்னால் கட்டுரையில் இணைக்கப்பட்டது.)


இப்படி வறண்டு போன மண்ணில் திரட்டப்படும் பணம் உழைக்கும் மக்களையே கையேந்தும் பரதேசியாக்குகின்றது. நிலத்தில் பாடுபட்டு வியர்வை சிந்தி உழைத்த மக்கள், தாம் உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடிவதில்லை. நாட்டில் உணவு இன்றி கையேந்தும் முரண்பாடும் இங்கு சம காலத்தில் நிகழ்கின்றது. இந்த வருட (2003) ஆரம்பத்தில் வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் மேற்கு ஆகிய பகுதிகளில் நெல்லின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. காலபோக நெற்செய்கையின் அறுவடை ஆரம்பமாகியதை அடுத்து, விலை வீழ்ச்சி ஏற்பட்டது. 69 கிலோகிராம் நிறையுள்ள ஒரு மூடை நெல் 800 ரூபாவிலிருந்து 850 ரூபாவரை விற்கப்படுகின்றது. இதன் விலையைத் தனிப்பட்ட வியாபாரியே தீர்மானிக்கின்றான். காலபோக நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் எரு, உரம், கிருமிநாசினி, களைக்கொல்லி, கூலி என்று பலவற்றிற்கும் செலவு செய்த நிலையில், விலை வீழ்ச்சி விவசாயிகளைப் பிச்சைக்காரர் ஆக்கின்றது. ஒரு மூடை நெல்லை (69கிலோ) ஆயிரத்து இருநூறு ரூபாவுக்கு விற்பனை செய்தால் தான் உழைப்புக்குக் கூலியின்றி நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். பல வருடங்களுக்கு முன்னர் நெற் சந்தைப்படுத்தும் சபை விவசாயிகளிடமிருந்து நியாயமான விலைக்கு என்ற பெயரில் நெல்லை கொள்வனவு செய்தது. தற்போது இச்சபை உலகமயமாதல் நிபந்தனைக்கு ஏற்ப அதை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் புலிகள் 800 முதல் 850 ரூபாவுக்கு நெல்லை கட்டாயப்படுத்தி வாங்கி, விவசாயிகளை ஓட்டாண்டியாக்குகின்றனர்.


வியர்வை ஆறாக சிந்தி தன்மானத்துடன் உழைத்து வாழும் விவசாயிகளின் துன்பம் இது. விதைக்கு வரி, உரத்துக்கு வரி, கிருமிநாசினிக்கு வரி, கூலிக்கு வரி, தண்ணீருக்கு வரி, உற்பத்திக்கு வரி, நெல்லை கொள்வனவு செய்யும் தனியார் முதலாளிக்கு மேலதிக வரி என புலிகளின் வரிமுறையே தேசியமாக உள்ளது. அரசின் வரிமுறையுடன் இது மேலதிக வரிமுறை. இரண்டு ஆளும் வர்க்கத்தால் தமிழன் இரட்டை வரிமுறைக்கு உள்ளாகின்றான். ஆழமாகப் பார்த்தால் மூன்று வரிமுறை உண்டு. ஏகாதிபத்தியத்தின் மறைமுக வரியும் உண்டு. சிங்கள மக்களில் இருந்து அதிகமாக மேலதிகமாக மிக கொடுமையான ஒரு வரிமுறைக்கு தமிழ் விவசாயிகள் உள்ளாக்கப்பட்டு வாழ்க்கையை இழக்கின்றான். தமிழ் விவசாயிகளுக்கும் சிங்கள விவசாயிகளுக்கும் ஒரே பொருளில் கிடைக்கும் லாபம் நட்டம் வேறுபடுகின்றது. இதில் தமிழ் விவசாயிகளின் கதை சொல்ல வேண்டியதில்லை. இது எல்லா உற்பத்திக்கும் பொருந்துகின்றது. இதற்கு வெளிச்சம் பிடித்து தமிழ்க் குறுந் தேசியவாதிகள் தமது குருட்டுக் கண்ணால் பார்க்க வேண்டியதில்லை. உண்மையில் தமிழ்த் தேசியம் மட்டுமல்ல தேசியப் பொருளாதாரமும் அழிகின்றது. உற்பத்தியை செய்வதை விட நிலத்தை சும்மாவிடுவதே மேல் என்பதை விவசாயிகளின் நட்டம் உணர்த்துகின்றது. தமிழ்த் தேசமும் தேசியப் பொருளாதாரமும் ஆழமாகச் சிதைகின்றது. இதனால் யார் லாபம் அடைகின்றனர்? மக்களா!? அல்லது ஏகாதிபத்தியமும், அதன் எலும்பை நக்கும் புல்லுருவிக் கூட்டமுமா!?