இந்திய இராணுவத்தின் கொலைக்களம்!
""ஜம்முகாசுமீர் போலீசு சிறப்பு நடவடிக்கை அதிரடிப் படையும், மத்திய ரிசர்வ் போலீசு படையும் இணைந்து பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவனைச் சுட்டுக் கொன்றதோடு, அத்தீவிரவாதியிடமிருந்து ஆயுதமொன்றையும் கைப்பற்றினர்'' இப்படியொரு முதல் தகவல் அறிக்கை டிச.9, 2006 அன்று, ஜம்முகாசுமீர் மாநிலத்தில் உள்ள கந்தேர்பால் போலீசு நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த முதல் தகவல் அறிக்கையே, மறுநாள் பத்திரிகைகளில் செய்தியாகவும் வெளிவந்தது.
இந்தச் சம்பவம் நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து, இந்த "மோதல் கொலை'யின் பின்னே உள்ள உண்மை, அந்தத் "தீவிரவாதி'யின் கல்லறையில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு நடவடிக்கை அதிரடிப் படையாலும், துணை இராணுவப் படையாலும் சுட்டுக் கொல்லப்பட்டவர் பாக். தீவிரவாதி இல்லை என்பதும்; அவர், ஜம்முகாசுமீர் மாநிலத்தில் உள்ள லர்னூ கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் பத்தர் என்ற தச்சுத் தொழிலாளி என்பதும் தற்பொழுது அம்பலமாகியிருப்பதோடு, இப்போலி மோதல் கொலை காசுமீர் பள்ளத் தாக்கில் பெரும் போராட்டப் புயலையே உருவாக்கி விட்டது.
அப்துல் ரஹ்மான் பத்தர், தனது நண்பனும், சிறப்பு நடவடிக்கை அதிரடிப் படையில் தலைமைக் காவலராக வேலை பார்த்துவரும் ஃபரூக் அகமது பத்தரிடம், காசுமீர் மாநில போலீசு துறையில் தனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கித் தருவதற்காக, 75,000/ ரூபாய் இலஞ்சம் கொடுத்திருந்தார். நாட்கள் நகர்ந்ததேயொழிய, அப்துல் ரஹ்மான் பத்தருக்கு போலீசு துறையில் வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அப்துல் ரஹ்மான் பத்தர், தான் இலஞ்சமாகக் கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி போலீசுக்காரன் ஃபரூக் அகமதுவிடம் கேட்கத் தொடங்கினார். இதனையடுத்து, ஃபரூக் அகமது, தன்னை டிச.8, 2006 அன்று சிறீநகரில் வந்து சந்திக்கும்படி அகமது ரஹ்மானுக்குத் தகவல் கொடுக்க, அவரும் ஃபரூக் அகமதுவைச் சந்திக்கக் கிளம்பிச் சென்றார். அந்தப் பயணமே, அப்துல் ரஹ்மான் பத்தரின் இறுதிப் பயணமாகி விட்டது.
சிறீநகருக்குக் கிளம்பிச் சென்ற அப்துல் ரஹ்மான் பத்தர் ஆறு நாட்கள் கழிந்த பிறகும் வீடு திரும்பாததையடுத்து, அவரது உறவினர்கள் சிறீநகர் தெற்கு மண்டல போலீசு கண்காணிப்பாளரிடம் புகார் செய்தனர். அப்துல் ரஹ்மான் பத்தர் காணாமல் போனது பற்றிய விசாரணை ஒரு பெரும் பூதத்தைக் கிளப்பிவிடப் போவதை அறியாமலேயே, போலீசாரும் விசாரணையை நடத்தினர்.
அப்துல் ரஹ்மானின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டபொழுது, அது செயல்படாமல் முடங்கிப் போயிருப்பது தெரிய வந்தது. எனினும், பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர், அப்துல் ரஹ்மானின் செல்போன் எண் முடங்கிப் போய்விட்ட பிறகும், அவரது செல்போன், வேறொரு எண்ணில் இயங்கி வருவதைக் கண்டுபிடித்து, போலீசுக்குத் தகவல் கொடுத்தார். அப்துல் ரஹ்மானின் செல்போனை வைத்திருந்த அப்துல் ரஷீத் வாகே என்பவரை போலீசார் விசாரித்தபொழுது, அவர், தான் அந்த செல்போனை, கந்தேர்பால் நகரில் தீவிரவாத எதிர்ப்பு போலீசு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் ஃபரூக் அகமது குட்டுவிடமிருந்து வாங்கியதாக கூறினார். தீவிரவாத எதிர்ப்பு போலீசு உதவி ஆய்வாளர் குட்டு விசாரிக்கப்பட்ட பொழுது, பூதம் வெளியே வந்தது.
""அப்துல் ரஹ்மான் பத்தர், ஃபரூக் அகமது பத்தர் கூறியபடி, டிச.8, 2006 அன்று ஃபரூக்கைப் பார்க்க சிறீநகருக்கு வந்து, ஃபரூக்கின் வீட்டில் தங்கியிருந்ததாகவும்; அன்று மதியம் தனது தலைமையில் ஒரு போலீசு படை
ஃபரூக்கின் வீட்டிற்குச் சென்று, அப்துல் ரஹ்மான் பத்தரை அங்கிருந்து கந்தேர்பாலுக்குக் கடத்திச் சென்று மறுநாள் சுட்டுக் கொன்றுவிட்டு, கையோடு சடலத்தைப் புதைத்து விட்டதாகவும்; அதன்பிறகு பாக். தீவிரவாதியைச் சுட்டுக் கொன்றதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாகவும்'' தீவிரவாத எதிர்ப்பு உதவி ஆய்வாளர் ஃபரூக் அகமது குட்டு, போலீசிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இலஞ்சப் பணத்தைத் திருப்பிக் கேட்டதற்காக, அப்துல் ரஹ்மான் பத்தர் சுட்டுக் கொல்லப்படவில்லை. காசுமீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக இறக்கி விடப்பட்டிருக்கும் இராணுவம் துணை இராணுவப் படைகள் சிறப்பு அதிரடிப் படைகள் தங்களுக்குள் கூட்டணி வைத்துக் கொண்டு, அப்பாவிகளை இரகசியமாகக் கடத்திக் கொண்டு போய் போலி மோதலில் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை பாக். தீவிரவாதிகள் என்றோ, அடையாளம் தெரியாத தீவிரவாதி என்றோ முத்திரை குத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட்டு, இந்தக் கொலைக்கு கிடைக்கும் பரிசுப் பணத்தையும், பதவி உயர்வையும் பங்கு போட்டுக் கொள்ளும் கொலை திட்டத்தை வெகு காலமாகவே நடத்தி வருகின்றன. அப்துல் ரஹ்மான் பத்தரைப் போலி மோதலில் சுட்டுக் கொன்றதன் மூலம், சிறப்பு அதிரடிப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீசு படையைச் சேர்ந்த அரசு பயங்கரவாதிகள் பங்கு போட்டுக் கொண்ட பரிசுத் தொகை ரூ. 1,30,000/
ஒவ்வொரு மாதமும் இத்தனை தீவிரவாதிகளை "மோதலில்' சுட்டுக் கொன்றிருக்கிறோம் எனக் கணக்குக் காட்டுவதற்காகவே, இராணுவமும் போலீசும் அப்பாவி முசுலீம்களை போலி மோதலில் சுட்டுக் கொல்வதை சர்வ சாதாரணமாக நடத்தி வருகின்றன. போலீசாரால் புதைக்கப்பட்டு, இப்பொழுது மறு பிரேதப் பரிசோதனைக்காகத் தோண்டி எடுக்கப்படும் "தீவிரவாதிகளின்' பிணங்கள் இந்த உண்மையை மீண்டும் நாறடித்து விட்டன.
· 13ஆவது தேசிய துப்பாக்கிப் படை பிரிவைச் சேர்ந்த சிப்பாய்களும், போலீசாரும் இணைந்து நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்இமுகம்மது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த, ஜாஹித் அலி என்ற பாக். பயங்கரவாதி இறந்து போனதாக அக்.5, 2006 அன்று சும்பல் போலீசு நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. "மோதலில்' கொல்லப்பட்ட அந்த பாகிஸ்தான் பயங்கரவாதி, தோடா மாவட்டத்தில் உள்ள பனிஹல் கிராமத்தைச் சேர்ந்த ஷெளகத் கான் என்பது தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது.
· 5ஆவது தேசிய துப்பாக்கி படைப்பிரிவு சிப்பாய்களும், போலீசும் இணைந்து அடையாளம் தெரியாத தீவிரவாதியைச் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும்; அந்தத் தீவிரவாதியிடமிருந்து ஒரு ""ஏ.கே.'' இரக துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் வெடி மருந்து பொருட்களைக் கைப்பற்றியதாகவும் பிப்.17, 2006 அன்று கந்தேர்பால் போலீசு நிலையத்தில் முதல் தகவல் பதிவாகி இருக்கிறது.
அடையாளம் தெரியாத அந்தத் தீவிரவாதி சிறீநகர் தெருக்களில் நறுமணத் திரவியங்களை விற்கும் நஸிர் அகமது தேகா என்ற நடைபாதை வியாபாரி என்றும்; அவர் கோகேர்நாக் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தற்பொழுது அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவர் நறுமணத் திரவியங்களைத் தெருத்தெருவாக எடுத்துச் சென்று விற்பதற்காகப் பயன்படுத்தி வந்த பெட்டி, துணை ஆய்வாளர் ஃபரூக் அகமது குட்டுவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
· மார்ச் 14, 2006 அன்று 24ஆவது தேசிய துப்பாக்கிப் படை சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்ட அடையாளம் தீவிரவாதி, துணி வியாபாரியான குலாம் நபி வானி என்பதும்; மார்ச் 8, 2006 அன்று 24ஆவது தேசிய துப்பாக்கிப் படை சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்ட அடையாளம் தெரியாத தீவிரவாதி, ஜம்முகாசுமீர் மாநில அரசில் கடைநிலை ஊழியர் அலி முகம்மது பத்தர் என்பதும் தற்பொழுது நிரூபணமாகியிருக்கிறது.
···
""போலி மோதல் கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்; ஜம்முகாசுமீர் மாநில போலீசு துறையைச் சேர்ந்த சிறப்பு நடவடிக்கைகள் அதிரடிப் படையை முழுமையாகக் கலைக்க வேண்டும்; ஜம்மு காசுமீரில் இருந்து இராணுவமும் துணை இராணுவமும் வெளியேற வேண்டும்'' எனப் போராடிக் கொண்டிருக்கும் அம்மாநில மக்களின் ஆத்திரத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, இந்த ஐந்து போலி மோதல் கொலைகள் பற்றி நீதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது, காங். கூட்டணி ஆட்சி. சிறப்பு நடவடிக்கைகள் அதிரடிப் படையைச் சேர்ந்த முதுநிலை போலீசு கண்காணிப்பாளர், துணை போலீசு கண்காணிப்பாளர் உள்ளிட்டு ஐந்து காக்கிச் சட்டை கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலைகள் பற்றி இராணுவத்திற்குள் விசாரணை நடத்தப்படும் என்று இராணுவ அமைச்சரும், இராணுவ அதிகாரிகளும் அறிவித்துள்ளனர். அரசாங்கம் இப்படி முண்டா தட்டுவதை வைத்துக் கொண்டு அரச பயங்கரவாதக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு விடுவார்கள் என நம்பிவிட முடியுமா?
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள தெலினா என்ற ஊரைச் சேர்ந்த மன்சூர் அகமது மிர், செப்.7, 2003 அன்று, தேசிய துப்பாக்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த கேப்டன் ஷர்மாவால், அவரது வீட்டில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு மன்சூர் அகமது மிர் ""காணாமல்'' போய்விட்டார். மூன்று ஆண்டுகள் கழித்து, தெலினாவில் ஒரு மருத்துவமனை கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்ட பொழுது, அந்த இடத்தில் மிர் புதைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. மிர்ரின் படுகொலைக்கு நீதி கேட்டு காசுமீர் மக்கள் 15 நாட்கள் போராடிய பிறகு, காங். கூட்டணி ஆட்சி நீதிமன்ற விசாரணைக் கமிசனை அமைத்தது. இந்த கமிசன் அமைக்கப்பட்டு எட்டு மாதங்கள் கழிந்து விட்டாலும், விசாரணை ஒரு அங்குலம் கூட முன்னேறவில்லை.
""இராணுவம் விசாரணை நடத்த ஒத்துழைக்க மறுக்கிறது; குறைந்த பட்சம், கேப்டன் ஷர்மா இப்பொழுது எங்கு இருக்கிறார் என்ற தகவலைக் கூடச் சொல்ல மறுக்கிறது'' என ஜம்மு காசுமீர் மாநில தலைமை போலீசு அதிகாரியே குற்றஞ் சுமத்தியிருக்கிறார்.
2002ஆம் ஆண்டு சிட்டிசிங்புரா என்ற கிராமத்தில், ஐந்து அப்பாவி முசுலீம்களை, பாக். பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி இந்திய இராணுவம் கொன்றொழித்தது. இந்தப் படுகொலை அம்பலமாகி மக்கள் போராடிய பிறகு, மையப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இராணுவத்தின் இழுத்தடிப்பால், சி.பி.ஐ. விசாரணையை முடிக்கவே நான்கு ஆண்டுகளாகி விட்டது. கடந்த ஆண்டு மே மாதம், இப்படுகொலை தொடர்பாக, சி.பி.ஐ. ஐந்து இராணுவ அதிகாரிகள் மீது குற்றப் பத்திரிகைத் தாக்கல் செய்துவிட்டாலும், கடந்த ஒரு ஆண்டில், அந்த ஐந்து அதிகாரிகள் ஒருமுறை கூட நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்கவில்லை.
ஜம்முகாசுமீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒழிப்பது என்ற பெயரில் போலி மோதல்களை நடத்தியிருக்கும் அரசு பயங்கரவாதிகளை விசாரித்துத் தண்டிப்பதில், இந்திய ஆளுங் கும்பல் காட்டி வரும் "அக்கறைக்கு' இவை போல ஆயிரத்தெட்டு வழக்குகளை உதாரணமாக எடுத்துக் காட்டலாம். அம்மாநில மனித உரிமை கமிசனின் தலைவராக நியமிக்கப்பட்ட நீதிபதி அலி முகம்மது மிர், ""இந்த கமிசன் சர்வதேச சமூகத்தை முட்டாளாக்குவதற்கான கண்துடைப்பு நடவடிக்கை தவிர, வேறொன்றுமில்லை'' எனக் குறிப்பிட்டுப் பதவி விலகியதை, மனித உரிமை மீறல் பற்றிய ஆளும் கும்பல்களின் பசப்பல்களுக்கு முத்தாய்ப்பாகக் குறிப்பிடலாம்.
தற்பொழுது அம்பலமாகியுள்ள இந்த ஐந்து படுகொலை நடவடிக்கைகளிலும், தேசிய துப்பாக்கிப் படையைச் சேர்ந்த மூன்று படைப் பிரிவுகள் பங்கெடுத்துக் கொண்டிருப்பது நிரூபணமாகியிருக்கிறது. இப்படிப்பட்ட போலி மோதல் கொலைகளை, ""தாளிப்பு நடவடிக்கை'' எனப் பெயரிட்டு அழைக்கிறது, இராணுவம். ""1989ஆம் தொடங்கி இன்று வரை, ஏறத்தாழ 10,000 அப்பாவிகள் பாதுகாப்பு படைகளால் இழுத்துச் செல்லப்பட்ட பின் காணாமல் போய்விட்டதாக''க் குறிப்பிடுகிறது. ""காணாமல் போனவர்களின் பெற்றோர் அமைப்பு.'' காசுமீரில் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு 60 பேர் மட்டுமே காணாமல் போயிருப்பதாகக் கூறி வந்த காங்.கூட்டணி ஆட்சி, இப்பொழுது 1,017 அப்பாவிகள் காணாமல் போய் விட்டதாகக் கணக்குக் காட்டுகிறது.
ஜம்முகாசுமீர் போலீசு துறையைச் சேர்ந்த ""சிறப்பு நடவடிக்கைகள் குழு'' என்ற அதிரடி படைப் பிரிவு, இரகசிய கொலைக் குழுவாகவே செயல்பட்டு வருகிறது. இராணுவமும், துணை இராணுவமும் ஆள் காட்டி வேலை செய்வதற்காகவே சரணடைந்த போராளிகளைப் பயன்படுத்தி வருகின்றன. தீவிரவாதி என முத்திரை குத்திவிடுவோம் என மிரட்டியே அப்பாவி மக்களிடம் பணம் பறிப்பதை, ஒரு தொழிலாகவே இராணுவமும், துணை இராணுவமும் நடத்தி வருகின்றன. ஜம்முகாசுமீர் மாநிலத்தில் மட்டுமின்றி, பனி படர்ந்த சியாச்சின் மலைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினர் கூட, பரிசு பணத்திற்காகவும், பதவி உயர்வுக்காகவும் போலி மோதல் நடவடிக்கைகளை நடத்தி வருவதும் ஏற்கெனவே அம்பலமாகி நாறியிருக்கிறது.
···
""அடையாளம் தெரியாத தீவிரவாதி'' என பாதுகாப்பு படைகள் முத்திரை குத்துகின்றனவே, அதைவிட அயோக்கியத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. ஒருவரின் அடையாளமே தெரியாத பொழுது, அவரை எப்படி தீவிரவாதியாக முத்திரை குத்த முடியும்? இந்தக் கேள்வியை எழுப்பும் பொழுது, இராணுவம் போலீசின் கட்டுக்கதையும், மோதல் நாடகமும் உடனடியாக அம்பலத்துக்கு வந்து விடும். ஆனால், பத்திரிகைகள் தொடங்கி நீதிமான்கள் வரை ஒருவரும் இந்தச் சாதாரண கேள்வியை எழுப்ப மறுக்கிறார்கள்.
மாறாக, ""பாதுகாப்புப் படைகள் கடுமையான சூழ்நிலையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன; இந்தக் கொலைகளுக்காக பாதுகாப்புப் படையினரை விசாரித்தால் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடும் அவர்களின் முனைப்பு மழுங்கிவிடும்'' என ""சோ'' முதலான பாசிஸ்டுகள் இராணுவத்தின் இந்தக் கொலைவெறியைப் பொது மக்களிடம் நியாயப்படுத்துகிறார்கள். அரசாங்கமோ, பரிசுப் பணம், பதவி உயர்வு என்ற தீனியைப் போட்டு, இந்தக் கொலைவெறியை வளர்த்து விடுகிறது. மேலும், இப்படிப்பட்ட கொலைகளில் ஈடுபடும் இராணுவத்தினரை விசாரணை தண்டனையில் இருந்து பாதுகாக்க ""ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை'' நடைமுறைப்படுத்தி வருகிறது.
சட்டபூர்வமாகவே கிடைக்கும் இந்தப் பாதுகாப்புதான், ஜம்முகாசுமீர் மாநிலத்தில் யாரையும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் குருவி சுடுவது போல சுட்டுக் கொல்லலாம் என்ற பாசிசத் திமிரை இராணுவத்திற்கும் போலீசிற்கும் வழங்கியிருக்கிறது.
""ஜம்முகாசுமீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படைகள் நடத்திவரும் அட்டூழியங்களை, பிற மாநில மக்கள் ஏன் கண்டிப்பதில்லை?'' என்ற கேள்வியை முன்வைக்கிறார், பெர்வேஸ் இம்ரோஸ் என்ற வழக்கறிஞர். நேர்மையான மனசாட்சி கொண்ட ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டிய கேள்வி இது. ஆனால், இதற்குப் பதில் சொல்ல வேண்டிய நடுத்தர வர்க்கமோ குருட்டு தேசபக்தியில் மூழ்கிப் போய் கிடக்கிறது. கூலிக்குக் கொலை செய்யும் கிரிமினல் மாஃபியா கும்பலைப் போலச் சீரழிந்துவிட்ட இந்திய இராணுவத்தை, இந்த குருட்டு தேசபக்திதான் புனிதப்படுத்தித் தண்டனையில் இருந்து பாதுகாக்கிறது. ஜம்முகாசுமீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை, பயங்கரவாதம் என நாக்கூசாமல் அவதூறு செய்கிறது.
· செல்வம்