தமிழ் அரங்கம்

Saturday, April 29, 2006

மூஞ்சப் பாரு! கொள்கையப் பார்க்காதே!

மூஞ்சப் பாரு!
கொள்கையப் பார்க்காதே!


கொள்கை கூட்டணிகளின் கொள்கை விளக்கங்கள்

""து கொள்கைக் கூட்டணியல்ல, அரசியல் கூட்டணி'' என்றார் போயஸ் தோட்டத்தை விட்டுவெளியில் வந்த வை.கோபால்சாமி. கொள்கை என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன?

இதற்கு 1999இலேயே திருமாவளவன் பதில் சொல்லியிருக்கிறார். ""தேர்தல் புறக்கணிப்பு எங்கள் கோட்பாடு பங்கேற்பு என்பது நிலைப்பாடு'' என்றார்.

திருமாவை வை.கோவுக்கு மொழிபெயர்த்தால், கொள்கை என்பது கோட்பாடு, அரசியல் என்பது நிலைப்பாடு என்று பொருள் வருகிறது.

இன்று போயஸ் தோட்டத்தை விட்டு வெளியே வந்தவுடன், ""நிலைப்பாடு என்பது வேறு, தேர்தல் உடன்பாடு என்பது வேறு'' என்று புது விளக்கம் அளித்திருக்கிறார். திருமா. அதாவது அரசியல் வேறு கூட்டணி வேறு என்று இவர் விளக்கமளிக்கிறார்.

திருமா போயசு தோட்டத்திற்குப் போனது பற்றி ராமதாசு "வருத்தம்' மட்டுமே வெளியிட்டார். மற்றபடி தங்களிருவரையும் கொள்கை ரீதியாகப் பிணைத்திருக்கும் தமிழ்க் கூட்டணிக்கும் இந்தப் பதவிக் கூட்டணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தி விட்டார்.

""தனது கட்சிக்கு நல்லது என்று அவர் கருதியிருக்கலாம்'' என்று வை.கோ.வின் கூட்டணித் தாவலை வருணித்தார் வ.கம்யூ தலைவர் தா.பாண்டியன். தானும் போயசு தோட்டத்தின் பக்கம் நாளை தாவ நேரிடும் என்ற எதிர்காலம் குறித்த கவலை அவரது சொற்களில் பளிச்சிட்டது.

""முதலை வாயில் சிக்கிவிட்டார்'' என வருத்தப்பட்டார் மார்க்சிஸ்டு தலைவர். நாளை மதச்சார்பற்ற கூட்டணி அமைக்க நேர்ந்து அதில் 4 சீட்டு குறைந்தால் வை.கோ.வை ஜோக்கர் கார்டாகப் பயன்படுத்திக் கொள்ளக் கிடைக்கும் வாய்ப்பை நழுவவிட மார்க்சிஸ்டுகள் விரும்பவில்லை.

""போன தேர்தல்ல பாரதிய ஜனதாவை எதிர்த்துப் பேசினேன். இந்தத் தேர்தல்ல ஆதரிச்சுப் பேசறேன். எனக்கே அலுத்துப் போச்சுய்யா. ஆனா தலைவா, அடுத்த வாட்டி இவளோட (ஜெயலலிதாவோடு) கூட்டணி வெச்சுடாதீங்க. நான் தீக்குளிச்சிடுவேன்.'' என்று 1999 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசினார் தீப்பொறி ஆறுமுகம். இன்றோ அவரே புரட்சித் தலைவியின் பொற்பாதங்களில் கிடக்கிறார்.

இன்றைய தி.மு.க.வின் கூட்டாளிகள்தான் 2001இல் அன்புச் சகோதரியின் அராஜக ஆட்சியை அரும்பாடு பட்டுக் கொண்டு வந்தனர். அதேபோல, 5 ஆண்டுப் பதவிக்காலம் முடிந்து "வணக்கம்' போட்டு லைட்டும் போட்ட பிறகுதான் பாரதிய ஜனதாவின் மதவெறி முகம் தி.மு.க.வுக்குத் தெரியவந்தது.

"நெருநல் உளனொருவன் இன்றில்லையென்னும் பெருமையுடைத்திவ் வுலகு' என்பதை "பெருமையுடைத்து இத்தேர்தல்' என்று திருத்தி வாசிக்கலாம். நேற்றெங்கிருந்தாய், நாளை எங்கிருப்பாய் என்ற கேள்விகளுக்குப் பொருளேயில்லாத அத்வைதப் பெருவெளியில் கலந்து கொண்டிருக்கிறது தேர்தல் அரசியல்.

அதனால்தான் இத்தகைய அஞ்ஞானங்களுக்கெல்லாம் ஜெயலலிதா எப்போதுமே ஆட்படுவதில்லை. ""நடந்ததை மறப்போம் கதவு திறந்திருக்கிறது'' என்ற பிரகடனத்தின் மூலம் ஒரு பரந்த கூட்டணிக்கு அடிப்படையாக அமையும் கொள்கையை அவர் வெளியிட்டிருக்கிறார். கூட்டுத் தொகையில் பெரும்பான்மையைத் தருகின்ற எந்தக் கொள்கையும் அவரைப் பொறுத்தவரை நல்ல கொள்கையே.

மேலும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியைத் தீர்மானிக்கும் கொள்கையும், பிந்தைய கூட்டணியைத் தீர்மானிக்கும் கொள்கையும் வேறு வேறானவை என்பதும், அந்தக் கொள்கைகளை வைப்பதற்குத் தனித்தனி சூட்கேசுகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற உண்மையும் அவருக்குத் தெரியும். ஆகவேதான் கொள்கை விவகாரங்கள் குறித்த சில்லறைச் சச்சரவுகளில் அவர் எப்போதுமே பங்கேற்பதில்லை.

""கொள்கை கொள்கை என்று பேசிக் கொண்டிருந்தால் கட்சியை வளர்க்க முடியாது. முதலில் கட்சியை உறுதிப் படுத்த வேண்டும்'' என்பதனால்தான் இப்படியொரு முடிவை எடுத்ததாக வை.கோ. விளக்கம் சொல்லியிருக்கிறார். கட்சியை உறுதிப்படுத்துவது என்றால் என்ன?'' மாவட்டச் செயலாளர்களுக்கு தலா ஒரு எம்.எல்.ஏ. சீட்டாவது கிடைக்க ஏற்பாடு செய்து, அடுத்த 5 ஆண்டுகளில் அவர்களும் அவர்களுடைய கைத்தடிகளும் வீடு, கார், நிலம், பஸ், சினிமா தியேட்டர் என்று செட்டில் ஆவதை உறுதிப்படுத்துவது; இந்த உறுதியான அடித்தளத்தின் மீது கட்சியை நிறுத்தி அதன் மீது கொள்கையை வளர்த்துக் கொள்வது'' என்பதுதான் வை.கோ. கூறும் விளக்கத்தின் உண்மையான பொருள்.

இந்த விளக்கம் எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும் என்பது மட்டுமல்ல, எப்படி அரசியல் பண்ணுவது' என்பது குறித்து சர்வ கட்சித் தொண்டர்களும் கொண்டிருக்கும் கருத்தும் இதுதான். ""இத்தனை நாள் அரசியலில் இருந்து என்ன பயன்? நாங்களும் நாலு காசு பார்க்க வேண்டாமா?'' என்ற கேள்வியை தத்தம் கட்சிப் பொதுக்குழுக்களில் அவர்கள் வெளிப்படையாகவே எழுப்பத்தான் செய்கிறார்கள். அடிக்கும் கொள்ளை முறையாகப் பகிர்ந்தளிக்கப்படாத போது "உட்கட்சி ஜனநாயகத்துக்காக'க் குரல் கொடுக்கிறார்கள். கட்சியில் தன்னை "வளர' விடுவதில்லை என்று பதவியிலிருப்போரைக் குற்றம் சாட்டுகிறார்கள்.

என்றாலும், தேர்தலின் நோக்கம் குறித்த இந்த உண்மைகளை அவர்கள் மக்களிடம் வெளிப்படையாகக் கூறுவதில்லை. மக்களுக்கு அரைகுறையாகவோ, முழுமையாகவோ இந்த உண்மைகள் தெரியும் என்பதை அவர்கள் அறிவார்கள். ஆளை ரெண்டு துண்டாக அறுத்துப் பிறகு ஒட்ட வைக்கிறான் வித்தைக்காரன். அது தந்திரம் என்று பார்வையாளர்கள் அறிந்து தானிருக்கிறார்கள். அதற்காக அந்த ரகசியத்தை வித்தைக்காரன் வெளியிட்டு விடுவதில்லையே! அந்த மயிர்க் கூச்செறியும் காட்சியில் ரசிகன் கண்களை மூடிக்கொண்டு நாற்காலியை இறுகப் பற்றிக் கொள்ளும்வரைதானே வித்தைக்குக் கூட்டம் சேரும்!

தேர்தல் என்ற இந்த வித்தைக்குக் கூட்டம் சேருவதெப்படி? இந்தக் கேள்விக்குத்தான் நமக்கு விடை வேண்டும்

இந்தத் தேர்தல் அரசியல் குறித்து தேநீர்க் கடைகளில் நடைபெறும் விவாதங்களைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். ""வைகோ வேறென்ன சார் பண்ண முடியும், அவரும் கட்சி வளர்க்க வேண்டாமா?'' ""கலைஞர் இல்லன்னா நீ பொடாவிலேர்ந்து வெளியே வந்திருப்பியா, கொஞ்சமாவது நன்றி வாணாம்?'' ""கலைஞர் பெரிய ராஜதந்திரிங்கிறாங்க, அந்தம்மா பாரு சைலண்டா காய் நவுத்தி வேலய முடிச்சிடுச்சி'' ""சும்மா சொல்லக்கூடாது, விஜயகாந்த் போல்டான ஆளுய்யா, ரஜினிதான் இதோ வாரேன், அதோ வாரேன்னு கெடுத்துகிட்டாரு'' ""அவன் பேசாம அம்மாவோட கூட்டணி வச்சா 20,30 சீட்டு ஜெயிச்சிட்டு அப்புறமா அடுத்த தேர்தலுக்குள்ள கட்சிய வளர்த்துக்கலாம். தனியா நின்னா டெபாசிட் போய் ஒரேயடியா மங்களம் பாடிட வேண்டியதுதான்.''

அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் பத்திரிகை படிப்பவர்கள் என்று சொல்லப்படும் பிரிவினர் அரசியலை விவாதிக்கும் முறை இதுதான். இவர்கள் தேர்தல் முடிவு பற்றி ஆரூடம் சொல்கிறார்கள். "பொதுமக்களின்' மனநிலை பற்றி உளவியல் பகுப்பாய்வு செய்கிறார்கள். எப்படிக் கட்சி நடத்தவேண்டும் என்று ஐடியா கொடுக்கிறார்கள். கூட்டணி பேரங்களில் யார் கதாநாயகன், யார் வில்லன் என்பது பற்றி காரசாரமாக வாதாடுகிறார்கள்.

எப்படி எடுத்திருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும் என்று சினிமாக் கொட்டகை வாசலில் நின்றபடியே இயக்குநராக மாறும் ரசிகனைப் போலவே, எப்படி அரசியல் பண்ண வேண்டும் என்று இவர்கள் அரசியல்வாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

ஒரு சின்ன மெகா சீரியலைப் போல ஓடுகிறது தேர்தல். தொலைக்காட்சி சீரியலில் யார் கதாநாயகன், யார் வில்லன், மற்ற கதாபாத்திரங்கள் யார் யார் என்பதை கதாசிரியர் தீர்மானித்து விடுவதால் ரசிகனின் "கருத்துரிமை' அங்கே கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் நாளைக்கு என்ன செய்யப் போகிறது என்பதை ஊகிக்கும் வரம்பிற்குள் ரசிகனின் "படைப்புத்திறன்' முடக்கப்பட்டு விடுகிறது.

தேர்தல் எனும் சீரியலோ நாற்புறமும் சுற்றி வளைத்து மக்களைத் தனக்குள் கவர்ந்திழுக்கிறது. காலை மாலைப் பத்திரிகைகள், வார இதழ்கள், வாரமிருமுறை இதழ்கள், தொலைக்காட்சிகள், பொதுக்கூட்டங்கள் போன்றவையனைத்தும் ஒரே கதையை தத்தம் நோக்கில் விதம் விதமாகச் சொல்கின்றன. ஒரு இதழில் வைகோ கதாநாயகன், இன்னொரு இத ழில் வில்லன், வேறொரு இதழிலோ கோமாளி. திடீர் திருப்பங்கள், திரைமறைவுப் பேரங்கள், பேட்டிகள் பேட்டிகளுக்கான பொழிப்புரைகள் என்று விரிந்து சூழும் இந்த சீரியலில் ரசிகன் அவனுக்கே தெரியாமல் கதாபாத்திரமாக மாற்றப்பட்டு விடுகிறான்.

கட்சி கட்டிக் கொண்டு வாதாடுகிறான், தனது ஆதர்ச பாத்திரங்களின் சார்பில் சிந்திக்கிறான், கோபம் கொள்கிறான், மகிழ்ச்சியடைகிறான், தன்னுடைய ஊகங்கள் பலிக்க வேண்டுமேயென்று தவிப்பும் கொள்கிறான். கலைஞர், ஜெ., வை.கோ., திருமா., ராமதாசு ஆகியோரது பிரச்சினைகளைத் தனது சொந்தப் பிரச்சினையாகவும், அவர்களது நியாயங்களைத் தனது சொந்த நியாயமாகவும் உணர்ந்து வாதாடுகிறார்கள் அரசியல் ரசிகர்கள்.

ஆனால், எதார்த்த வாழ்க்கையின் கொடுங்கரங்கள் அவர்களை அவ்வப்போது உசுப்பி விடுகின்றன. ""ரேசன் கடைக்குப் போக வேண்டும், வேலைக்கு நேரமாகி விட்டது. பைனான்சுக்காரனுக்குப் பதில் சொல்ல வேண்டும், கரண்டு பில் கட்ட கடன் வாங்க வேண்டும்'' என்ற உண்மைகள் அவர்களைத் தீண்டியவுடனே விழித்துக் கொள்கிறார்கள். ""எவன் கதையப் பேசி நமக்கு என்னா ஆவப்போகுதுங்க, நாம உழைச்சாதான் நமக்குச் சோறு, என்னா சொல்றீங்க'' என்ற வசனத்துடன் அன்றைய சீரியலை முடித்துக் கொள்கிறார்கள். விட்ட இடத்திலிருந்து மீண்டும் மறுநாள் தொடர்கிறது சீரியல்.

இவ்வாறு விவாதம் நடத்துபவர்கள் கட்சிக்காரர்களோ அல்லது கட்சி ஆதரவாளர்களோ மட்டுமல்ல; எந்தக் கட்சியயையும் சாராதவர்களென்றும் சரி தவறுகளைச் சீர்தூக்கிப் பார்த்து நல்ல கட்சிக்கும் நல்ல வேட்பாளருக்கும் வாக்களிப்பவர்களென்றும் கூறப்படும் பொதுமக்கள். தொழிலாளர்கள், விவசாயிகள், சிறுவணிகர்கள், கைவினைஞர்கள், அரசு ஊழியர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் இதில் உண்டு.


எந்தத் தேநீர்க் கடையிலாவது எப்போதாவது இவர்கள் தங்களது வாழ்க்கையைச் சூறையாடும் அரசின் கொள்கைகளைப் பற்றியோ, அவற்றில் பல்வேறு கட்சிகளின் நிலைபாடு பற்றியோ இத்தனை ஈடுபாட்டுடனும் உணர்ச்சி பூர்வமாகவும் விவாதிப்பதைக் கண்டிருக்கிறீர்களா?

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனுக்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்கிறார் ராமதாசு. இதைக் காட்டிலும் சுயநிதிக் கல்லூரிகளையே ரத்து செய்து அரசுக் கல்லூரிகளாக்குவது அம்மாணவர்களுக்கு நல்லதில்லையா, இந்த எளிய உண்மை அய்யாவுக்கு விளங்காமல் போனதெப்படி?

கேபிள் டி.வி.யை அரசுடைமையாக்கும் சட்டம் வந்தவுடனே கவர்னரைப் பார்க்கச் சென்ற கலைஞர் விமான நிலையங்களைத் தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்தபோது யாரைச் சென்று சந்தித்தார்?

13 தொகுதிகளைப் பெறுவதற்காக கருணாநிதியிடம் மாபெரும் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்டுகள், ""2 தொகுதிகளை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் தாமிரவருணியை கோகோ கோலாவுக்கு கொடுத்து விடாதீர்கள்'' என்று மன்றாடவாவது செய்தார்களா?

பத்தைப் பதின்மூன்றாக்கும் கவுரவப் பிரச்சினைக்காக அறிவாலயத்திற்குப் பாதயாத்திரை போனார் தா.பாண்டியன். பணிநிரந்தரமும், தொழிற்சங்க உரிமையும் இல்லாமல் பன்னாட்டு கம்பெனிகளில் கொத்தடிமைகளாகப் பணிபுரியும் பாட்டாளி வர்க்கம் தன்னுடைய கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள எந்தக் கோயிலுக்குத் தீர்த்த யாத்திரை போவது?

9 தொகுதிகளை திருமாவுக்கு ஒதுக்கியது இருக்கட்டும். பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி சாதிவெறியர்களை உள்ளே தள்ளுவதாகவும், தலித்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு நிரப்பப்படாத அரசுப் பணியிடங்களை நிரப்புவதாகவும் சில கொசுறு வாக்குறுதிகளையாவது தலித் மக்களுக்கு அம்மா போட்டுக் கொடுத்திருக்கிறாரா?

இவையெல்லாம் மக்களின் அறிவுக்கெட்டாத பிரச்சினைகளோ, அவர்களால் எழுப்பமுடியாத கேள்விகளோ அல்ல. எனினும் இந்தக் கேள்விகளுக்கும் தேர்தலுக்கும் தொடர்பிருப்பதாக அவர்கள் சிந்திப்பதில்லை. அத்தகைய அபாயகரமான "தீவிரவாத' சிந்தனைக்குச் செவிமடுத்து விடாமல் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை முதலாளித்துவ ஊடகங்களும், கட்சிகளும் ஏற்றிருக்கின்றன.

ஜனநாயக சோசலிசம், லோகியா சோசலிசம், திராவிட நாடு என்ற கொள்கை வேடங்களுடன் தொடங்கி, அவையனைத்தும் கலைந்து "அரசு சன்மானங்களைப் பொறுக்கித் தின்பதற்கான கூச்சநாச்சமற்ற போட்டிதான் தேர்தல்' என்ற நிலையை எய்தியிருக்கும் தருணத்தில், இந்தியத் தேர்தல் ஜனநாயகம் மறுகாலனியாக்கத்தைச் சந்தித்திருக்கிறது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்றழைக்கப்படும் மறுகாலனியாக்கத்தை அமல்படுத்துவதில் போட்டியிடும் இரண்டு கூட்டணிகளிடையே எவ்விதக் கொள்கை வேறுபாடும் இல்லை. விவசாயத்தையும் உள்நாட்டுத் தொழில்களையும், தொழிலாளர் உரிமைகளையும் "மென்னியை நெறித்துக் கொன்று விடலாம்' என்கிறார் புரட்சித்தலைவி. "மருந்து வைத்துக் கொல்லலாம்' என்கிறார் கலைஞர். "பட்டினி போட்டுக் கொல்வதுதான் மனிதாபிமான முறை' என்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள். இந்தக் "கொள்கை வேறுபாட்டை' மக்களுக்குப் புரிய வைக்க அவர்கள் முயற்சித்தால் அவர்களுக்கு நேரக்கூடிய கதி என்ன?

""சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது, வாட் வரி விதிப்பு கூடாது, தண்ணீர் வியாபாரம் கூடாது, கோக்பெப்சியைத் தடை செய்ய வேண்டும்'' என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்குத்தான் வணிகர்கள் வாக்களிப்பார்கள் என்று தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவித்தது. எந்தக் கட்சியும் இக்கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காததால் ""எல்லா கட்சிகளிலிருந்தும் வணிகர்கள் வெளியேறவேண்டும்'' என இப்போது அறைகூவல் விடுத்துள்ளது.

விளைபொருளுக்கு விலை நிர்ணயம் கோரி விவசாயிகளும், சுயநிதிக் கல்லூரிகளை அரசே ஏற்கச் சொல்லி மாணவர்களும், பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்க உரிமை கோரி தொழிலாளர்களும், தனியார்மயத்தை நிறுத்தவேண்டுமென்று கோரி பொதுத்துறை ஊழியர்களும், ஆளெடுப்புத் தடைச் சட்டத்தை அகற்றவேண்டுமென வேலையில்லா இளைஞர்களும் கோரிக்கை வைத்து, இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என்றும் அறிவித்திருந்தால், வணிகர் சங்கத்திற்கு நேர்ந்த கதிதான் எல்லோருக்கும் நேர்ந்திருக்கும்.

பெரும்பான்மை மக்களுக்கு உணவு, வேலை, கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகிய அனைத்து உரிமைகளையும் மறுத்து, அவர்களை வறுமைக்கும் பட்டினிச் சாவுக்கும் தற்கொலைக்கும் தள்ளுகின்ற இந்தத் தனியார்மயத் தாராளமயக் கொள்கைகளைப் பெரும்பான்மை மக்களின் ஒப்புதலைப் பெற்று (ஜனநாயக பூர்வமான முறையில்) அமல்படுத்துவது சாத்தியமற்றது என்பது ஆளும் வர்க்கத்துக்குத் தெரியும். எனவேதான் கள்ளத்தனமான வழிமுறைகளின் மூலம் மட்டுமே இவை திணிக்கப்படுகின்றன.

1994இல் நாட்டிற்கும் நாடாளுமன்றத்திற்கும் கூடத் தெரியாமல் நரசிம்மராவ் அரசு காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது முதல், இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தில் யாருக்கும் தெரியாமல் மன்மோகன் சிங் கையெழுத்திட்டது வரை இந்தக் கள்ளத்தனம் பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது.

எனினும் கருத்துரிமையும், அதனடிப்படையில் நடத்தப்படும் சுதந்திரமான விவாதமும் இருந்தால்தானே மக்கள் இதனை ஜனநாயகம் என்று நம்புவார்கள்! ஆகவே, தான் அனுமதிக்கும் சட்டகத்திற்குள் விவாதம் நடத்த வாக்காளர்களுக்குப் "பூரண' சுதந்திரத்தையும் வழங்கியிருக்கின்றன ஆளும் வர்க்கங்கள்.

நுகர்வோனின் "தெரிவு செய்யும் உரிமை'யை சாத்தியப்படுத்துவதற்காகப் பலவிதமான சோப்புகளும் பவுடர்களும் சந்தையில் அடுக்கப்பட்டிருப்பதைப் போலவே, வாக்காளனின் தெரிவு செய்யும் உரிமையை அங்கீகரிக்குமுகமாக தேர்தல் சந்தையில் பல வண்ணக் கட்சிகளைப் பார்வைக்கும் வைத்திருக்கின்றன.

""கொள்கை ரீதியில் தங்களிடையே எவ்வித வேறுபாடும் இல்லாதபோது, தம்மை வித்தியாசமானவர்களாக மக்களிடம் சித்தரித்துக் கொள்வது எப்படி? மக்கள் தம் சொந்தக் கோரிக்கைகள் பற்றி சிந்திப்பதை மறந்து, தம் தலைவர்களின் கோரிக்கைகளையே தமது சொந்தக் கோரிக்கைகளாகக் கருதி விவாதிக்குமாறு செய்வது எப்படி?'' இவை ஓட்டுக் கட்சிகளின் முன் உள்ள கேள்விகள்.

கொள்கை வேறுபாடுகள் பற்றி மக்கள் கஷ்டப்பட்டுச் சிந்திக்கத் தேவையில்லாத சூழ்நிலையை அவர்கள் ஏற்கெனவே உருவாக்கி விட்டார்கள். நெடுஞ்சாலைச் சுவர்களிலும் சுவரொட்டிகளிலும், பானர்களிலும் தரிசனம் தரும் ""அய்யா, அம்மா, திருமா, கலைஞர், வை.கோ. தளபதி'' போன்ற "கொள்கை'களில் ஒன்றை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

சுவரொட்டியில் உள்ள செய்தி கலியாணமா, கருமாதியா என்பதைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. அது அம்மா கட்சியின் வட்டச் செயலர் பெண்ணுக்கு நடக்கும் பூப்பு நீராட்டு விழாவாகக் கூட இருக்கலாம். அய்யா மரம் நடுவதாக இருக்கலாம். வைகோ ரத்ததானம் கொடுப்பதாகவும் இருக்கலாம். அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி யாருக்கென்ன கவலை? "அம்மா', "அய்யா' என்பதே முக்கியம்.

குளோசப் காட்சியில் கொள்கைப் பின்புலத்தைக் காண முடியுமா? பெஞ்சு டிக்கெட்டில் உட்கார்ந்து அண்ணாந்து படம் பார்ப்பவனுக்கு எல்லா காட்சிகளும் குளோசப் காட்சிகளே. ரோட்டில் நடந்தால் இந்தத் தலைவர்களின் பெயர்களைக் கடந்து செல்வதற்குள் நமக்குக் கால் வலிக்கிறது. அவர்களது விசுவரூபத்தை அண்ணாந்து பார்க்க முயன்றாலோ கழுத்து வலிக்கிறது.

அர்ச்சுனனின் கேள்விக்குத் தனது விசுவரூபத்தால் விடை சொன்ன கண்ண பரமாத்மாவைப் போல, "நானே கொள்கை, நானே மக்கள்' என்கிறார்கள் தலைவர்கள். ஆகவே தலைவர்களின் சோகமே மக்களின் சோகம்.

""தள்ளாத வயதிலும் வேலூர் சிறை வாசலில் கால் வலிக்கக் காத்திருந்து உன்னைக் காண வந்த தலைவனின் முதுகில் குத்தி விட்டாயே துரோகி!'' என்று சென்டிமென்டு குண்டை வைகோவின் மீது வீசுகிறது தி.மு.க.


சீட்டுக் கணக்கைச் சொல்லி இந்த சென்டிமென்டு குண்டைத் தகர்க்க முடியாது என்பதால் ""வேண்டாத விருந்தாளியாக அறிவாலயத்தின் முன் காத்துக் கிடந்தேன்'' என்று கண்ணீர் விடுகிறார் வை.கோ.

குண்டர் சட்டம், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, திண்ணியம் என்ற அனைத்துத் தடைகளையும் தாண்டி அம்மாவைச் சரண் புகுந்த திருமாவுக்கும் சென்டிமென்ட் கை கொடுக்கிறது. ""தனியாகத் தொகுதி கேட்டால் கலைஞர் பா.ம.க.வின் எச்சில் இலையில் சோறு தின்னச் சொல்கிறார்'' என்ற திருமாவின் சோக உருவகம், தலித் மக்களின் தீண்டாமைச் சோகத்தை பதிலி செய்கிறது. திண்ணியம் சோகத்தைக் கூட ஒன்றுமில்லாததாக்கி விடுகிறது.

இவற்றில் எது கிளிசரின் கண்ணீர் எது உண்மைக் கண்ணீர் என்று பகுத்து அறியும் பொறுப்பும், இவர்களுடைய கண்ணீருக்குப் பதில் சொல்ல வேண்டிய தார்மீகக் கடமையும் இதோ, வாக்காளர்கள் மீது சுமத்தப்பட்டு விட்டது. காண்டிராக்டையும் கட்டைப் பஞ்சாயத்தையும் கைப்பற்றுவதற்காக நடக்கும் ஒரு மோதலில் கண்ணீரையும் சென்டிமென்டையும் புகுத்தி இப்படி ஒரு திரைக்கதை தயாரிக்க முடியுமென்பதை "சென்டிமென்ட்' சக்ரவர்த்தியான இயக்குநர் ஃபாசில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.

அகிலமனைத்தையும் தன்னுள் அடக்கும் "சிவாய நம' என்பதும் கூட ஐந்தெழுத்து மந்திரம். ஆனால் பாமர மக்கள் கொள்கை விளக்கம் பெற 5 எழுத்துக்கள் அதிகம் என்பதால் அதையும்கூடச் சுருக்கி விட்டார்கள் தலைவர்கள்.

வன்னியர் சமூகத்தின் மேன்மை, தமிழ்ப் பெண்களின் கற்புடைமை, காடுகள் மரம் செடி கொடிகளின் பசுமை அனைத்தும் "அய்யா' என்ற மூன்றெழுத்தில் அடக்கம்; தலித் சமூகத்தின் விடுதலை, கவுரவம், அதிகாரம் அனைத்தும் "திருமா' என்ற மூன்றெழுத்துள் அடக்கம்; புலிகளின் துப்பாக்கிச் சத்தத்தை விஞ்சுகின்ற "வைகோ' எனும் இரண்டெழுத்துப் பேரிரைச்சலில் ஈழத்தமிழர்களின் எதிர்காலமே அடக்கம்; தமிழ் என்ற மூன்றெழுத்து "கலைஞர்' என்ற நான்கெழுத்தில் அடக்கம்; "தளபதி'க்குள் தி.மு.க. அடக்கம்; தமிழகமே "அம்மா'வில் அடக்கம்

நேர்மைக்கு ஹமாம், அழகுன்னா லக்ஸ், கூலுன்னா கொக்கோ கோலா அவ்வளவுதான். நேர்மை என்றால் என்ன, அது ஹமாமில் எத்தனை சதவீதம் கலந்திருக்கிறது, அது அழுக்கை அகற்றுமா என்றெல்லாம் ஆராயாமல் குறிப்பிட்ட பிராண்டுக்கு விசுவாசம் காட்டும் நுகர்வோரைப் போலவே வாக்காளர்களும் "சிந்திக்க' வேண்டும். கொள்கை என்றால் என்ன, அது தலைவரின் சொல்லிலும் செயலிலும் எத்தனைச் சதவீதம் கலந்திருக்கிறது என்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடக் கூடாது. ஏனென்றால், தலைவர்தான் கொள்கை, தலைவரே மக்கள்!

மாறனுக்கும் அன்புமணிக்கும் மந்திரிப் பதவி கிடைத்தால் "தமிழகத்துக்கு 7 மந்திரிகள்' என்றே நாம் புரிந்து கொள்ளவேண்டும். திருமாவுக்கு 9 இடம் கிடைத்தால் தலித் சமூகத்துக்கே இடம் கிடைத்ததாகக் கொண்டாட வேண்டும். கிடைக்காவிட்டால் தலித் சமூகத்திற்கு நேர்ந்துவிட்ட இந்த அவமானத்தை எண்ணிக் குமுற வேண்டும். இந்த நிலையில் மக்களை இருத்தி வைப்பது குறித்து ஓட்டுக்கட்சித் தலைவர்கள் இடையறாது சிந்திக்கிறார்கள்.

தி.மு.க. கூட்டணியிலிருந்து டக்கென்று தாவ முடியாமல் வைகோவின் துண்டைப் பிடித்திழுத்த கேள்வி எது? "இது நீதியான முடிவா?' என்ற கொள்கைக் கேள்வியல்ல, "இந்த முடிவை தனது வாக்கு வங்கி ஒத்துக் கொள்ளுமா?' என்ற நடைமுறைக் கேள்வி. "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா' என்று விடுதித் தலைவர் காளிமுத்து தோட்டத்துக் கதவைத் திறந்து உள்ளே தள்ளிவிட்ட மறுகணமே அவருக்கு தெளிவு பிறந்துவிட்டது. முதன்முதலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும்போதும் "கொள்கையைக் கைவிடுகிறோமே என்று தி.மு.க.வினர் யாரும் சஞ்சலப்படவில்லை, "இதை மக்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமே' என்றுதான் கவலைப்பட்டனர்.

""இந்த சீனை மக்கள் ஒத்துக்குவானா?'' என்று சினிமாக்காரர்கள் நடத்தும் ஸ்டோரி டிஸ்கசனுக்கும், ""இந்தக் கூட்டணி கிளிக் ஆகுமா?'' என்று ஓட்டுக்கட்சிகள் படுகின்ற கவலைக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை. வாக்காளர்களை இரசிகர்களின் நிலைக்குத் தாழ்த்திவிட்ட இந்த இரசவாதம், ஓட்டுச் சீட்டு அரசியலில் ஒரே நாளில் நிகழ்ந்து விடவில்லை. வாக்குறுதிகள், தேர்தல் அறிக்கைகள் போன்ற எவையும் நம்பத் தக்கவையல்ல என்று மக்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து விட்டநிலையில், எதை வைத்து அவர்களை வாக்குச்சாவடிக்கு இழுப்பது என்ற கேள்விக்கு ஆளும் வர்க்கங்கள் கண்டிருக்கும் விடை இது.

அன்றாட வாழ்க்கையில் தாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கும், இந்தத் தேர்தலுக்கும் நேரடியாகத் தொடர்பிருப்பதையும், தாங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய பிரதிநிதிகள்தான் தம் குடியைக் கெடுத்த துரோகிகள் என்பதையும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு தேர்தல் என்பதை ஒரு சினிமாவாகவும் சீரியலாகவும் திருவிழாவாகவும் மாற்றிவிட்டன ஆளும் வர்க்கங்களும் அவர்களின் பிடியில் உள்ள ஊடகங்களும்.

அரசியல், பொருளாதாரம் என்பன பற்றியெல்லாம் தெரிந்து கொள்வதற்கு இதுநாள்வரை அக்கறை காட்டாத மக்கட் பிரிவினரையெல்லாம் அரசில் களத்தில் இறங்குமாறு கட்டாயப்படுத்துகின்றது மறுகாலனியத் தாக்குதல். ஒரு குவளைத் தண்ணீர், ஒரு கவளம் ரேசன் அரிசிச் சோறு, அடுப்பெரிக்க மண்ணெண்ணெய், குடிசையில் எரியும் ஒரு குண்டு பல்பு என எதைத் தொட்டாலும் "நான் நான்' என்று முன்னால் வந்து நிற்கிறது உலக வங்கி.

இந்தத் தாக்குதல் எவ்வளவு பருண்மையாகவும் பட்டவர்த்தனமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு அதிலிருந்து சூட்சுமமாக விலகிச் செல்கிறது தேர்தல் அரசியல். "நல்லாட்சி' "அராஜக ஆட்சி' "முன்னேற்றம்' "தீயசக்தி' என்ற பொருள் விளங்காச் சொற்களும், "நன்றி' "தியாகம்' "துரோகம்' "கருணை' போன்ற உணர்ச்சிப் பசப்பல்களும், இவற்றுக்குப் பொருத்தமான முகபாவங்களுடன் எல்லா முச்சந்திகளிலும் இளித்துக் கொண்டிருக்கும் தலைவர்களின் மூஞ்சிகளுமே வாக்காளர்களின் மூளைகளில் நிரப்பப்பட்டிருக்கின்றன.

இத்தகைய உணர்ச்சிப் பசப்பல்களுக்கும் அரசியல் அரட்டைகளுக்கும் வாய்ப்பில்லாமல் வாழ்க்கையால் தண்டிக்கப்பட்டு, நிதர்சன உலகில் மட்டுமே வாழுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் பெரும்பான்மையான ஏழை மக்கள். பூடகமான சொற்களால் ஏமாற்றப்படுமளவுக்கு அவர்கள் கல்வியறிவு பெறவில்லையாதலால் அவர்களுக்கு சைக்கிள், குடம், தவலை, வெள்ள நிவாரணம் எனப் பருண்மையான பொருட்கள்!

இந்தத் தேர்தலால் மக்களுக்கு என்ன பயன் என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்பாமல் அரட்டையையே அரசியலாய்க் கருதும் படித்த வாக்காளர்களின் "அறிவு', உடனடிப் பயன்களைத் தாண்டி வேறெதையும் பார்க்கத் தெரியாத பாமர மக்களின் அறியாமை என்ற இரு தண்டவாளங்களின் மீது ஓடிக் கொண்டிருக்கிறது, இந்தப் போலி ஜனநாயகத் தேர்தல்.

இம்முழு மோசடியைத்தான் "ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை' என்று வருணிக்கிறது ஆளும் வர்க்கம். ஒரு வாதத்திற்கு அதை ஒப்புக் கொள்வதாக இருந்தாலும், ஜனநாயகத்தின் மீதான அதே நம்பிக்கை ஆளும் வர்க்கத்துக்கும் இருந்தால் மட்டுமே இந்தத் தேர்தல் ஜனநாயகம் நீடிக்க முடியும். மக்களுடைய இந்த நம்பிக்கையைப் பராமரிக்கும் நோக்கத்திற்காகவாவது தனது மறுகாலனியக் கொள்கைகள் சிலவற்றை விட்டுக் கொடுக்கவோ கொஞ்சம் தள்ளி வைக்கவோ கூட ஆளும் வர்க்கம் தயாராக இல்லை.

தேர்தல் அரசியலின் நிர்ப்பந்தம் காரணமாக ரேசன் கடை மூடல், பொதுத்துறை ஏலம், தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்தல் போன்ற தனியார்மய, தாராளமய நடவடிக்கைகளை நினைத்த மாத்திரத்தில் ஆளும் வர்க்கத்தால் நடத்த முடிவதில்லை. ""பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் வேகத்தை எண்ணி வெட்கப்படுகிறேன்'' என்று சமீபத்தில் டாவோஸில் நடந்த உலக முதலாளிகள் கூட்டத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார் ப.சிதம்பரம்.

தாங்கள் ஆட்பட்டிருந்த தேர்தல் ஜனநாயக மாயை குறித்தும் மக்கள் வெட்கத்துடன் திரும்பிப் பார்க்கத்தான் போகிறார்கள். இருக்கின்ற வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், மிகச் சாதாரணமான அன்றாடக் கோரிக்கைகளுக்காகவும் மக்கள் நடத்தும் போராட்டங்களைக் கூட, மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களாக மாற்ற வேண்டிய கட்டாயத்தை ஆளும் வர்க்கம் தோற்றுவித்து வருகிறது.

ஆகவே, எந்தக் கூட்டணியைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் மக்களுக்கு இனி இருக்காது. நெல்லை கங்கை கொண்டானில் நூறு சதவீத மக்களும் கோகோ கோலா ஆலையை வெளியேற்றவேண்டும் என்று போராடுகின்றனர். அங்கே சர்வகட்சிக் கவுன்சிலர்களும் கோக்கின் பின்னால் ஒரே கூட்டணியாக இணைந்து நிற்பதை மக்கள் காண்கிறார்கள்.

அய்யா அம்மா தளபதி வகையறாக்களும் ஒரே அணியில்தான் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெவ்வேறு அணியென்று மக்கள் கொண்டிருக்கும் மாயையை வரவிருக்கும் மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்கள் துடைத்தெறிந்து விடும்; போலி ஜனநாயகத் தேர்தல் எனும் இந்த சீரியலை முன் அறிவிப்புகள் ஏதுமின்றி முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்.

மு சூரியன்

புதிய கலாச்சாரம்

Thursday, April 27, 2006

முடிவாக என்னதான் நடக்கப் போகின்றது

முடிவாக என்னதான் நடக்கப் போகின்றது

பி.இரயாகரன்
27.04.2006


தேசியத்தை எப்போதோ அழித்துவிட்ட புலிகள் இன்று செய்வது என்ன? தமது சொந்த இனத்தை அழிக்கின்றனர். ஒரு விடுதலை இயக்கமே அதை செய்து முடிக்கின்றது. இது ஒன்றும் கற்பனையான எனது தனிப்பட்ட முடிவல்ல. நடந்து கொண்டிருப்பதை அடிப்படையாக கொண்ட, ஒரு எதாhத்தமான சமூக உண்மை இது. புலிகள் எவ்வளவுக்கு எவ்வளவு காட்டுமிராண்டிகளாக, பண்பாடற்றவர்களாக உறுமுகின்றார்களோ, அந்தளவுக்கு தமிழ் இனத்தில் எலும்பு சிதிலங்கள் மட்டும் எஞ்சுவதை யாரும் தடுக்கமுடியாது. பேரினவாதம் மிகவும் பலமான நிலையில், தமிழ் இனத்தை புலிகளைக் கொண்டே அழிக்கின்ற எதார்த்தத்தை, ஒரு காலமும் தமிழ் இனம் தானாக எண்ணியிருக்கமாட்டது. பேரினவாதத்தின் சூழச்சிமிக்க அரசியல் நரித்தனத்துக்கு எதிராக, நியாயமான ஒரு போராட்டம் (அரசியல் மற்றும் இராணுவம்) அவசியமாக இருந்த போது கூட, அதை நியாயமான மக்களின் கோரிக்கைளால் தனிமைப்படுத்தி வெற்றிகரமான போராட்டத்தை நடத்தும் ஆளுமை காட்டுமிராண்டிகளுக்கு எப்போதும் கிடையாது என்பதை தமிழினத்தின் சார்பாக மீண்டும் புலிகள் நிறுவிவருகின்றனர்.

புலிகள் இயக்கமே பதவி வெறியர்களாலும், கொள்ளையடிப்போராலும், சுத்துமாத்துகாரர்களும், ஒட்டுண்ணிகளாலும், பிழைப்புவாதிகளாலும் சூழப்பட்டுவிட்டது. அது இன்று ஒரு போராட்ட இயக்கமே அல்ல என்ற நிலைக்கு, படிப்படியாக தனக்குத் தானே நஞ்சிட்டு சீரழிந்து சிதைந்து வருகின்றது. இந்த சிதைவுகள் சமூகத்துக்கே நஞ்சாகின்றது. தியாகங்கள் எல்லாம் சிலரின் நலனுக்கானதாக மாற்றப்பட்டுவிட்டது. புலிகளை பயன்படுத்தி தாம் நன்றாக வாழமுடியும் என்று நம்புகின்ற பொறுக்கிகளின் கூட்டமே, புலியைச் சுற்றி இன்று கும்மாளமடிக்கின்றது. புலிகளின் பின் இருந்த சில அரசியல் இலட்சியங்கள் எல்லாம் கண்காணாது தொலைந்து போகின்றது. புலித் தலைவர்களின் நெருங்கிய உறவினர்கள், ஏன் புலித் தலைவர்களின் குழந்தைகள் நூற்றுக் கணக்கானோர், மேற்கு பல்கலைக்கழகங்களில் வசதிவாய்ப்புடன் கல்விகற்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் அதையொத்த குழந்தைகள் இளைஞர்கள் தமது கல்வியை இழந்து, துப்பாக்கியை ஏந்தி தலைவர்களை பாதுகாக்க மணிக்கணக்காக தூங்கிவழிகின்றனர்.

நம்பிக்கை, விசுவாசம், இலட்சியம், தியாகம் என்ற நம்புகின்றவர்களின் நிலை இதுவென்றால், அவர்களை தலைமை தாங்குவோர் குழந்தைகள் மேற்கில் பல கோடி ரூபா செலவினான ஆடம்பரக் கல்வி. எமது இனத்தின் சமூக பொருளாதாரத்துக்கே உதவாத, அதை அழிக்கின்ற சமூக விரோதக் கல்வியை கற்கின்றனர். யாருடைய பணத்தில்! இது எப்படித்தான் சாத்தியமானது. ஒரு போராட்ட அமைப்பில் இது எப்படித் தான் புகுந்துகொண்டது. மக்களுடைய விடுதலைப் போராட்டம் என்று சொல்லி, அவர்களுக்கே இது வேட்டு வைக்கின்றது. போராட்டம் மக்களின் உயிரை மட்டும் கொல்லவில்லை, அவர்களின் உழைப்பை, அவர்களின் பொருளாதார கட்டுமானத்தையே, சமூக அமைப்பையே கொன்று ஒழிக்கின்றது.

இதற்கு தலைமை தாங்கும் தலைவர்களோ தம்மைச் சுற்றி சொகுசான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொண்டு, அதி நவீன தொழில்நுட்ப மோகத்தில் அவற்றை எல்லாம் பொறிக்கிப் பெற்றுக் கொள்கின்றனர். அவர்கள் வாழும் வாழ்வின் சகல அடிப்படையையும், சாதாரணமாக உழைக்கும் தமிழ் மக்களின் அன்றாட உழைப்பே வழங்குகின்றது. இதற்குத் தான் போராட்டம் என்கின்றனர். இது எமது சொந்த மண்ணில் இருந்து புலம்பெயர் மண் வரையிலான புலிகளின் வாழ்க்கை முறைமை, நவீனமான ஆடம்பரத்தாலானது. அரசியல் பொறுக்கித் தனத்தின் உச்சம் இது. இந்த வாழ்க்கைக்கு பணம் பெறுவதே போராட்டமாக காட்டுகின்ற நிலைமையில், சமூகமே இதற்கு இசைவாக மாற்றப்படுகினறது. ஏமாற்றியும், மோசடி செய்தும், மிரட்டியும், ஏன் கப்பமாக கூட, பற்பல வழிகளில் பணம் திரட்டும் முறை, தொழில்முறை மாபியாத்தனத்தையே தேசியவிடுதலைப் போராட்டமாக மாற்றிவிட்டனர். மக்கள் பற்றி துளியளவு கூட ஈவிரக்கமற்ற உணர்வுகள். இதன் பின் மக்களின் சமூக பொருளாதார வாழ்வில் உணர்வுபூர்வமாக பங்காற்றுவார்கள் என்று நாம் எண்ணியே பார்க்கமுடியாது.

மக்கள் என்று அவர்கள் கூறுவது எல்லாம் தமிழ் மக்கள் பற்றி அக்கறையற்றதும், அவர்களின் குழந்தைகளை திருடி தமது கொலைகாரப் படைப்பிரிவுக்கு ஆள் திரட்டவும், தமது சொகுசுக்கு மக்களிடம் பணம் திரட்டுகின்ற இந்த எல்லைக்குள் தான் மோசடி செய்கின்றனர். தமிழ் மக்கள் என்ற வரையறை இதற்குள் சுருங்கிவிட்டது. இதற்கு வெளியில் தமிழ் மக்கள் பற்றி புலிக்கும் சரி, அதை சொல்லி வாழும் பொறுக்கிகளும் சரி, எந்தவிதமான சமூக அக்கறையும் கிடையாது. தட்டிப்பறித்து கொள்ளையிட்டு வாழும் லும்பன்களின் வாழ்வுக்கான வாய்ப்பையும் வசதியையும் அரசியலாக்குகின்ற எல்லைக்குள், தமிழ் மக்கள் என்ற வார்த்தை உச்சரிக்கப்படுகின்றது. இதன் மொத்த விளைவு தமிழ் மக்கள் உழைப்பு புடுங்கப்பட்டு, அவர்களின் குழந்தைகள் சூறையாடப்படுகின்றன. தமது சொந்தக் குழந்தைகளை மீட்கும் பாதுகாக்கும் போராட்டமாக மாறி, ஒவ்வொரு தமிழ் தாயும் தமது வயிற்றில் அடித்து குமுறி வாழும், அவலம் கொண்ட சமூகமாகவே மாறிவிட்டது. இதை சொல்லியே அழமுடியாத நிலையில் தாய்மை மண்டியிட வைக்கப்பட்டுள்ளது. ஒரு இனத்தின் சொந்த அழிவு நோக்கி செல்லும் பாதையில், பேரினவாதத்தின் சூழ்ச்சிகளுடன் புலிகள் கைகோர்த்து நிற்கின்றனர். இதன் முடிவு என்ன? பேரினவாதி தமிழ் இனத்தை அழிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பதே, இவர்களுக்கு இடையில் எழுதப்படாத ஒரு இனவாத ஒப்பந்தமாகும்.

கொலை கொலை எங்கும் எதிலும் கொலை

மூச்சு விட்டாலும் கொலை. ஜயோ கொலை. கொலைகள் எங்கும் எதிலும் தொடருகின்றது. தொடர் கொலைகள் அன்றாடச் செய்தியாகின்றது. யார் ஏன், எதற்கு கொல்லப்படுகின்றனர் என்பது கூட தெரியாத அளவுக்கு கொலை. வெட்டிக் கொலை, குத்திக் கொலை, சுட்டுக் கொலை, என்று கொலைகள் நவீன பாணியில் விதவிதமாக வக்கிரமடைகின்றன. ஒட்டுப்படை, மக்கள் படை என்று குஞ்சரம் கட்டி, கொலைகார கும்பலுக்கு பல வண்ண வேஷங்கள் கட்டியே, ஈவிரக்கமற்ற மனித வெளியாட்டங்கள் நடத்தப்படுகின்றது. இவை எல்லாம் இனம் தெரியாத மர்மக் கொலைகள். அரசும் புலியும் கூட்டடாகவே பரஸ்பரம் குற்றம்சாட்டியபடி, எங்களுக்கும் இந்த கொலைக்கும் எந்த ஒரு தொடர்பு கிடையாது என்று கூறுகின்றனர். எங்களிடம் மட்டும் தான் துப்பாக்கிகள் உண்டு, ஆனால் நாங்கள் கொலைகள் செய்வதில்லை என்கின்றனர். இந்த பொய்யர்களை நம்பி, மக்கள் வாய்பொத்தி மூச்சுக்காட்டாது வாழவேண்டும் என்று கூட கூறுகின்றனர். இதைத்தான் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்கின்றனர். இதை மீறினால் தண்டனை உண்டு, ஆனாலும் அதையும் நாங்கள் செய்யவில்லை என்போம். அதையும் நீங்கள் நம்ப வேண்டும். நம்ப மறுத்தால் விளைவு உண்டு என்பர்.

ஒருபுறம் புலிகள் என்றால் மறுபுறம் அரசு. இரண்டு மக்கள் விரோத பாசிட்டுகளும் தாம் அல்ல என்று கூறியபடி, கொலைகளை தமது சொந்த அரசியலாக மாபியாத் தொழிலாகவே நடத்துகின்றனர். அமைதி சமாதானம் என்று பெயரளவுக்கு பெயர் பலகையை தமக்கு மேலே தொங்கவிட்டபடி, இரகசியமான ஒரு யுத்தத்தையே அதைக் கொலைகளாகவே தமிழ் மக்கள் மேல் நடத்துகின்றனர். இருவரும் தமிழ் இனத்தை அழிப்பதில் இடைவிடாது போட்டிபோடுகின்றனர். தாமே தேர்ந்து கையெழுத்திட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தங்களையெல்லாம் தாமே மறுதலித்தபடி, மக்கள் வாழ்வின் எல்லா சமூகக் கூறுகளையும் நஞ்சிடுகின்றர். தமிழ் மக்களுக்கு தேசிய பிரச்சனைகள் உண்டு என்று ஏற்றுக் கொண்ட இரண்டு பகுதியும், இதைப்பற்றி துளியளவுகூட அக்கறைப்படுவதில்லை. அவர்கள் பேச இருந்தாலும் சரி, கொலைகளை செய்தாலும் சரி, சண்டையைப் பிடித்தாலும் சரி தேசிய பிரச்சனைக்குள் அவர்கள் எந்த அக்கறையையும் காட்டுவதில்லை.

புலிகளை எடுத்தால் தனது சொந்த குறுகிய குழுநலன் என்ற எல்லைக்குள், அவர்களின் சொந்த வாழ்வின் நலன்கள் என்ற குறுகிய வட்டத்திலேயே அனைத்தையும் குறுக்கிவிடுகின்றனர். தமிழ் மக்களின் வாழ்வை அழித்து, தமது சொகுசுக்கு ஏற்ப எதிரியை வரையறுக்கின்றனர். தம்முடன் முரண்பட்டவர்கள், மாற்றுக் கருத்து கொண்டவர்கள், பணம் தர மறுப்பவர்கள், தம்மை விமர்சிப்பவர்கள், அதிருப்தியை வெளிப்படுத்துபவர்கள் என அனைவரையும் அவர்கள், அவர்கள் மொழியிலேயே போட்டுத் தள்ளுகின்றனர். போட்டுத் தள்ளுதல் மூலம் கொலைகள் பெருக்கெடுக்கின்றது. நாளாந்தம் எதிரிகளை பெருக்கி, போட்டுத்தள்ளும் பட்டியலையே பெரிதாக்கி வருகின்றனர். மக்களுக்கும் புலிக்கும் இடையில் முரண்பாடுகள் அன்றாடம் விரிவாகி அகன்று வருகின்றது. இனம்புரியாத அமைதி மட்டும்தான் புலிகளின் இருப்பை தக்கவைக்கின்றது.

மறுபுறம் அமைதி சமாதானம் என்ற பெயரில் இலங்கை அரசு மிக நிதானமாகவே, புலிகளின் தமிழின அழிப்பை அங்கீகரித்தது. புலிகளின் கப்;பங்களை ஆதரித்து அதைக் கடைப்பிடித்ததன் மூலம், புலிகளையே தமிழ் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தினர். புலிகளின் மக்கள் விரோத நடத்தையை கொண்டு, அவர்களை தனிமைப்படுத்தும் உத்தியை பேரினவாதம் கையாண்டது. புலிகளை எங்கும் எதிலும் அம்பலப்படுத்துவதில் அரசு வெற்றி பெற்றது. புலிகள் நடந்து செல்லும் அனைத்துப் பாதையிலும், அவர்களின் சொந்த காட்டுமிராண்டித்தனத்தைப் பயன்படுத்தி அவர்களையே மூக்கறவைத்தனர்.

புலிகளின் சுயநல அரசியலுக்கு ஏற்ப பேச்சுவார்த்தை உள்ளடகத்தை அரசு பாதுகாப்பதில் கவனமாகவும் நுட்பமாகவும் செயற்பட்டது. இழுபறியான பேரங்கள், புலிகளின் சுயநல எல்லைக்குள் கூனிக்குறுகி நகர்ந்தது. புலியை தனிமைப்படுத்தி அம்பலப்படுத்தி ஒரு நிலையில், தொடர்ந்து இந்த சலுகையை அரசு மறுத்துள்ளது. இந்த நிலையில், இராணுவம் மீதான இரகசிய தாக்குதலை புலிகள் தொடர்ந்து நடத்துகின்ற ஒரு நிலையில், இராணுவமும் பதிலடியாக புலிகளின் பாணியில் கொலைகளை திடட்மிட்டு நடத்துகின்றது. நன்றாக இனம் காணப்பட்டவர்களை தேடி அழித்தல் என்ற யுத்தி மூலம், புலிகளின் ஆதரவு தளங்கள் படுகொலைகள் மூலம் சுத்தப்படுத்தப்படுகின்றது. புலிகள் கொலைகளை தொடர்ந்து செய்து வந்த நிலையில், கொலைகளை இனம் காணமுடியாத வகையில் அதே பாணியில் இராணுவமும் செய்துவிடுகின்றது. யார் எதை செய்தனர் என்பது தெரியாத வகையில், இனம் தெரியாத கொலைகளாகின்றது. ஒரு கொலைக்களம் உருவாக்கப்பட்டு, மனித பிணங்கள் வீதிகள் தோறும் வீசப்படுகின்றது.

புலிகள் தொடங்கி வைக்கும் ஒவ்வொரு வகையான யுத்த நிறுத்த மீறலைத் தொடர்ந்தும், அரசும் அதே பாணியில் செய்துவிட்டுப் புலிகளைப் போல் பதிலளிக்கின்றனர். புலிகளின் எல்லாவகையான சாமபேதமற்ற உத்தியையும், இராணுவமும் கற்று அதையே எதிர்மறையில் கையாளுகின்றது.

இலங்கையில் ஒரு இனப்பிரச்சனை உண்டா?

இந்த நிலையில் இலங்கையில் ஒரு இனப்பிரச்சனை உண்டு என்பதை புலிகள் மறந்து விட்டார்கள், அரசு அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி புலிப்பிரச்சனையாக உலகுக்கு இதைக் காட்டத் தொடங்கிவிட்டது. இதை ஒரு பயங்கரவாத குழுவின் தனிப்பட்ட பிரச்சனையாக, புலிகளைக் கொண்டே அரசு வெற்றிகரமாக நிறுவிவருகின்றனர். அரசின் அறிக்கைகள் முடிவுகள் வரமுன்னமே, ஏகாதிபத்தியங்களின் அறிக்கைகள் புலிக்கு எதிராக வெளிவருகின்றன.

இந்த நிலமையை உருவாக்கிய அரசியல் அடிப்படை என்பது, கடந்த 4 வருடங்களாக நிலவும் அமைதி ஒப்பந்தம் இனப்பிரச்சனையைப் பற்றி பேசமுனையாமையால் ஏற்பட்டது. மாறாக புலிகள் என்ற குறுங்குழுவின் சொந்த நலன்கள் என்ற குறுகிய அரசியல் வட்டத்தில், இழுபறியான பேரங்களையே வலிந்து புலிகள் நடத்தினர். புலிகளுக்கு பண வரவை நல்கக் கூடியதும், புலிகள் தாம் எதிரிகளாக கருதக் கூடியவர்களை கொல்லக் கூடிய, ஒரு இயல்பான அமைதியான சூழலை உருவாக்கவே புலிகள் பேச்சுவார்த்தையில் போராடினர். இந்த எல்லைக்குள் தான் புலிகள் சுற்றிச் சுற்றி பேச்சு வார்த்தையை நடத்தினர். இதற்கு வெளியில் தமிழ் மக்கள் நலன்கள், அவர்களின் பிரச்சனைகள் என எதையும் அவர்கள் அரசியல் ரீதியாக பேசியதில்லை, கோரியதில்லை.

உண்மையில் இதை பயன்படுத்தி அரசு என்ன செய்ய முனைந்தது. தனக்கு மேல் தாக்குதலை நடத்தாதவகையில், தமிழர்களை தமிழர்களே கொன்று குவிக்கும் வகையில் புலிகளுக்கு இணங்கிச் சென்றனர். புலிகளின் குறுகிய நலன்களுக்கு இணங்கிப் போவதன் மூலம், சலுகைகளை வழங்கி தேசிய இனப்பிரச்சனையை கிடப்பில் போடவைத்தனர். தமிழ் மக்களுக்கு ஒரு அடிப்படையான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பது அவசியம் என்ற எந்த நெருக்கடியுமின்றி, புலிகளின் குறுந்தேசியத்துக்கு முன்னால் இலகுவாக இனவாத அரசியலை வெற்றிகரமாக்கி சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். புலிகள் என்ற குழு அழிக்கப்பட வேண்டிய பயங்கரவாதக் சதிக்குழு தான் என்பதை, அவர்கள் வெற்றிகரமாக சர்வதேசமாக்கியுள்ளனர். உலகமே இந்த முடிவுக்குள் தாமாகவே முடிவு எடுக்க வைத்துள்ளனர்.

புலிகளின் மேல் மிகக் கடுமையான அரசியல் நெருக்கடிக்குள் இது இயல்பாகவே இட்டுச் சென்று விடுகின்றது. இராணுவ வாதங்களிலும், கொலைக்கலாச்சாரத்தாலும், வன்முறையாலும் புலிகள் சாதிக்க நினைத்ததெல்லாம் சொந்த நலன்கள் தான். இது தான் புலியின் அரசியல் என்பதை, பேரினவாதம் தமிழ் மக்கள் மத்தியிலும் உலகளாவிலும் வெற்றிகரமாக அம்பலப்படுத்தி புலியை தனிமைப்படுத்தியுள்ளனர்.

புலிகள் யுத்த நிறுத்தத்தில் இருந்து வலிந்து விலக, வலிந்து திணிக்கும் தொடர் வன்முறைகள் சர்வதேச ரீதியாக புலிகள் மீதான பாரிய தடைகளையும், நெருக்கடிகளையும் உருவாக்கி வருகின்றது. அமெரிக்காவில் இருந்து ஜரோப்பா வரை புலிகள் தடை செய்யப்படுகின்ற ஒரு சர்வதேச நிலைமை உருவாகிவிட்டது. புலிகளை ஒரு மரணப் பொறியில் சிக்க வைக்கின்ற அரசியல் நகர்வை, புலிகளின் சொந்த நடத்தையைக் கொண்டே புலிகள் தாமே முடுக்கிவிட்டுள்ளனர். அதேநேரம் தனது கோட்பாட்டையே கொண்ட பலமான வலதுசாரி எதிரியைக் கூட, புலிகள் சர்வதேச ரீதியாக வலிந்து உற்பத்தி செய்துள்ளனர். சர்வதேச நாடுகளின் ஆதரவையும் அனுதாபத்தையும் பெற்றுள்ள இந்த வலதுசாரிய புலியெதிர்ப்புக்கும்பல், எதிர்காலத்தில் மிகப் பெரிய சவாலாக விளங்குவர். மக்களின் எதிரிகளே எங்கும் எதிலும் பலம் பெற்றுவருகின்றனர்.

அரசியல் மீட்சியற்ற புதைகுழியில் இது போய் முடிந்துள்ளது. தமிழ்பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சனையை பேசுவதற்கு பதில், சொந்த நலன்களை பற்றி மட்டும் பேசியதன் மொத்த விளைவு இது. இது முட்டுச் சந்தியில் இன்று தலைகீழாகவே தொங்குகின்றது. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை பற்றி, பத்தாண்டுக்கு யாரும் இனிப் பேசப் போவதில்லை. அழிவின் விளிம்பில் தமிழ் இனம் தனது சொந்த இன அடையாளத்தை அன்றாடம் இழக்கின்றது. தமிழ் இனத்தின் அரைப்பகுதி நாட்டை விட்டே நிரந்தரமாக வெளியேறிவிட்டது. மிகுதியில் அரைப்பகுதி சிங்கள பகுதியில் நிரந்தரமாக குடியேறி, தனது சொந்த இன அடையாளத்தையே இழந்து இழிந்து வருகின்றது. மிகுதி மக்கள் பிரதேசவாதத்தாலும், சமூக பிளவுகளாலும் கூனிக்கூறுகி முரண்பட்டபடி முரண்பாட்டுடன் ஏனோ தானோ என்று வாழ்கின்றனர். இவர்களின் பொது வாழ்வு அச்சுறுத்தப்பட்டுள்ள ஒரு நிலையில், கொலைக்கலாச்சாரத்தாலும் சின்னாபின்னமாகி அழிவதுடன், அந்த மண்ணைவிட்டே ஒடமுனைகின்றனர். சிறுபான்மை தேசிய இனமான முஸ்லீம் மக்களை, எதிரி முகாமில் வலிந்து தள்ளிவிட்ட பெருமை தமிழராகிய எமக்கே பெருமை சேர்க்கும். மீண்டும் ஒரு இனவாத யுத்தம், எஞ்சிய எச்சசொச்சத்தையும் துடைத்தெறியும். ஒரு இனம் வாழ்ந்த அடையாளமே இல்லாமல் போய்விடுகின்றது. கொலைகாரர்களை மட்டும் தாங்கி பாதுகாப்பாக வாழும் ஒரு மயான பூமியாகவும், அடிமைகளைக் கொண்ட ஒரு துர்ப்பாக்கியமான ஒரு வலுவிழந்த சமூகம் மட்டுமே தமிழ் இனமாக எஞ்சி வாழ்கின்ற ஒரு துயரமே நடந்த வண்ணம் உள்ளது.

மீட்சியற்ற வழியில் புலிகள் உறுமுகின்றனர்.

புத்திசாலித்தனத்தால், நேர்மையால், உண்மையால், மக்களை சார்ந்து நிற்பதால் மக்களின் எதிரியை இலகுவாக வெல்லமுடியும். அதாவது மக்கள் தாம் தமது சொந்தப் போராட்டத்தில் வெல்வார்கள். ஆனால் நடப்பது என்ன? மக்களை நாயிலும் கீழாக அடிமையாக நடத்தி, நேர்மையற்ற சூழ்ச்சியால், பொய்களால், புத்திசாலித்தனமற்ற முட்டாள் தனத்தால், கொலைகள் மூலம் அரசியல் விபச்சாரம் செய்யும் போது, அதுவே தோல்வியில் முடிகின்றது. தாமே வலிந்து உருவாக்கிய தமது சொந்தப் புதைகுழியில் நின்ற படி, புலிகள் உறுமுகின்றனர். அழகாக தம்மைத்தாம் அழகுபடுத்தியுள்ளதாக நம்பி அசிங்கப்படுத்திக் கொண்டு, தம்மைத் தாமே பொய்களாலும் புரட்டுகளாலும் புகழ்ந்து கொண்டு, அரசியல் கனவுகள் காண்கின்றது. உலகத்தின் பொதுத்தளத்தில் இருந்து தன்னை தாமே வலிந்து தனிமைப்படுத்திக் கொண்டு, மக்களை அவர்களின் முகத்திலேயே எட்டி உதைத்தபடி, தன்னைச் சுற்றி ஆழமான புதைகுழியை வெட்டியபடியே உறுமிக் காட்டுகின்றனர். அரசியல் மீட்சியற்ற பாதையில் தொடரவும், கொலை கொள்ளை என்ற அரசியல் பதாகையை தூக்கிக் கொண்டு ஊர்வலம் போகமுனைகின்றனர்.

இலங்கை அரசுடன் பேச வேண்டியது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு என்பதை மறந்தும், மறுத்தும் நிற்கின்ற வரை, தமிழ் மக்களின் வாழ்வுக்கான நரகம் தெளிவாக வழிகாட்டுகின்றது. காலம் கடக்க முன் தமது சொந்த புதைகுழிக்கு மாற்றான மக்கள் பாதையை செப்பனிடாத வரை, புலிகளின் அழிவு நெருங்கி வருகின்றது. இராணுவ நோக்கில் வென்றுவிட முடியும் என்ற குழந்தைத்தனமான அரசியல், தமிழ் மக்களுக்கு ஒரு தேசத்தின் அடிப்படைக் கூறுகளையே இல்லாது ஒழிப்பதையே துரிதமாக்குகின்றது. இராணுவம் என்பது கூட அரசியலானது என்பதை புரிந்து, அதை எதிர்கொள்ளும் ஆற்றல் வக்கற்றுப் போனால், முட்டாள்களின் முடிவுகளில் தமிழினமே அழிந்துபோவது வரலாற்றின் முடிவாகிவிடும். இன்று நடக்கும் தொடர் நிகழ்ச்சிகள், உண்மையில் தமிழ் இனம் சிதைந்து சின்னாபின்னமாகி வருவதையே உறுதிசெய்கின்றது. மறுபக்கத்தில் புலிகள் இராணுவ நோக்கில் எதைத்தான் வென்று விடப்போகின்றார்கள். மக்களுக்கு எதைத்தான் வென்று கொடுத்துவிடுவார்கள்.

தமிழ் மக்கள் நாட்டைவிட்டு ஒடுவதும் அல்லது நாட்டைவிட்டு வெளியேறுவதும், புலிக்கு எதிராக மக்கள் அன்றாடம் மாறுவது அல்லது எதிரியின் பக்கத்தில் சென்று விடுவது அன்றாட நிகழ்வாகவே உள்ளது. புலியின் அன்றாட நடத்தைகள், இதை அன்றாட நிகழ்ச்சி நிரலாகவே உற்பத்தி செய்கின்றது. புலிகளின் அன்றாட அரசியல், மக்களை எதிரியின் முகாமுக்கு வலிந்து தள்ளுவதுதான். இதில் இருந்து மீட்சியற்ற புதைகுழியில், மக்களை பலாத்காரமாக புதைப்பதுதான் நிகழ்கின்றது. தொடர்ந்து ஒரு குறுகிய குழுவாக தப்பிப் பிழைக்க வேறு வழியின்றி, கட்டாய ஆள் சேர்ப்புக்களை புலிகள் முடுக்கிவிட்டுள்ளனர். நிர்ப்பந்திக்கப்பட்ட குறுகிய ஒரு வட்டத்தில் மக்களை நிறுத்தி வைத்து, மக்களை கழுத்தை நெரித்தபடி தமக்கு விசுவாசமாகவே ஆடாமால் அசையாமல் இருக்க கோருகின்றனர்.

தொடரும் அமைதி சமாதானம் என்ற பதாகை மீதான அரசியல் நெருக்கடி

அறிவிக்கப்படாத ஒரு இரகசிய யுத்தம் தொடங்கியுள்ள ஒரு நிலையில், கொல்லுதல் என்பது அதன் கோசமாகின்றது. நீ ஊடுருவி தாக்கினால் நானும் தாக்க முடியும் என்பதை பேரினவாதிகளும் நிறுவி வருகின்றனர். நீ எம்மைக் கொன்றால், நான் உன்னைக் கொல்ல முடியும் என்பதை இலங்கையில் இரண்டு மக்கள் விரோத இராணுவம் தமது லலதுசாரிய எதிரெதிர் முகாமில் நின்றபடி நிறுவி வருகின்றனர்.

தடுத்து நிறுத்த முடியாத வகையில் கொலைகளின் எண்ணிக்கை பெருகி வருகின்றது. இதற்கு இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை நோக்கி நகரும் முயற்சிகள், விக்கிரமாதித்தனின் வேதாளம் கதைகள் நடக்கின்றன. ஆனால் யாரும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையைப் பற்றி பேசப் போவதில்லை. கொல்லுதல் மீண்டும் கொல்லுதல், வரி மீண்டும் வரி இதை பற்றி மட்டுமே இவர்கள் பேசப்போகின்றார்கள்.

இவர்கள் பேசினால் கொலைகள் பற்றி மட்டும் தான் பேசப் போகின்றார்கள்;. கொலை செய்வதற்கான இயல்பான சூழலைப்பற்றி மட்டும் தான் பேசப்போகின்றார்கள். ஆனால் இனிப் பேசினால், என்றுமில்லாத வகையில் முதன்முதலாக புலிகள் பேரினவாதிகளிடம் இருந்து கடுமையான பதிலளிக்க முடியாத ஒரு பேச்சுவார்த்தையை சந்திப்பார்கள். பேரினவாதம் புலிகளின் அரசியல் நரித்தனத்தை, அவர்களின் சொந்த மொழியில் கற்கின்றது. அதே பாணியில் செயற்பட்டு அடிபணிய வைக்கின்றது. நீ ஒரு இரகசிய யுத்தம் என்றால், நானும் தான் என்கின்றது. நீ கொலை என்றால் நானும் கொலை தான் என்கின்றது. இதேபோல் பேச்சுவார்த்தை மேசையில் முதன்முதலாக கொலைகள் பற்றி விவாதம் நடக்கும். பேரினவாதம் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட அடிப்படையான தரவுகளுடன், முன்வைக்கின்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

இது புலிக்கு எதிராக மாறுவது தவிர்க்கமுடியாது. ஏனெனின் அன்றாடம் கொலைகள் மூலம், மனித உரிமை மீறல்கள் மூலம் உயிர்வாழ்பவர்கள் புலிகள். தமக்கு எதிரான ஆதாரங்களை புலிகளே அன்றாடம் உற்பத்தி செய்பவர்கள். இதன் மூலம் சர்வதேச ரீதியாக புலிகளை மேலும் தனிமைப்படுத்தி அம்பலப்படுத்தவும், புலிகள் மீதான சர்வதேச விசாரணைக்கு இட்டுச் செல்வதை துரிதப்படுத்தும். பேரினவாதிகள் புலிகளுடன் எழுந்தமானமாக பேசிவந்த நிலைமை முடிவுக்கு வந்துள்ளது. மாறாக கடுமையான முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பேச்சுவார்த்தையை எதிர்கொள்வர். இதை புலிகளே அரசின் மீது வலிந்து திணித்துவிட்டனர். இங்கும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் தான் அரசு பேசும், ஆனால் புலிகள் மீளமுடியாத அரசியல் சகதிக்குள் புதைவார்கள். புலிகள் பேச முனைகின்ற விடையத்தில், புலிகளே பாரிய மக்கள் விரோத குற்றங்களை இழைத்துள்ளனர். இது அவர்களின் சொந்தப் புதைகுழியை அவர்களே தோண்டுவதற்கு இட்டுச் செல்லும்.

பேரினவாதிகளை எதிர் கொள்வது எப்படி?

பேச்சுவார்த்தை மேசையில் பேரினவாதிகளை தனிமைப்படுத்துவ எப்படி? தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை முன்வைத்து பேசுவதால் மட்டும்தான் அது முடியும். அரசியல் தீர்வை நோக்கி பேச முனைவதன் மூலம், பேரினவாதிகளை தனிமைப்படுத்தி, உலகுக்கே அதை அம்பலப்படுத்த முடியும். பேரினவாதமே இதற்குள் தான் அடங்கியிருக்கின்றதே ஒழிய, இதற்கு வெளியில் அல்ல. புலிகள் வலிந்து பேசுகின்ற எந்த விடையத்திலும், பேரினவாதத்தின் அடிக்கட்டுமானம் இருப்பதில்லை. பேரினவாதிகளை எதிர்கொண்டு அவர்களை அம்பலப்படுத்த வேண்டுமெனின், அரசியல் தீர்வு மீதே பேசவேண்டும்.

அரசிடம் கோர வேண்டியது என்ன? தமிழ் மக்களுக்கு அரசு வைக்கும் தீர்வுத்திட்டம் என்ன என்பதை முன்கூட்டியே முன்வைக்க கோருவது தான். இதை பேச்சுவார்த்தை மேசையில் அல்ல, மக்களுக்கு பகிரங்கமாக முன்வைக்கும்படி கோரவேண்டும். அதைத் தான், பின்னால் பேச்சுவார்த்தை மேசையில் வைத்து பேசவேண்டும். பேசியதை மக்கள் முன் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும். இதைச் செய்யாத வரை பேரினவாதம், தனது சொந்த பேரினவாத மூகமுடியை கழற்றி எறியாது. மாறாக புலிகளை தனிமைப்படுத்தி, தமிழ் மக்களின் உரிமைக் கோரிகையையே இல்லாதாக்கிவிடும்.

புலிகள் கண்ணை மூடிக் கொண்டே பால் குடிக்கமுனைகின்றனர்.

எதுவும் அறியாது போல் நடித்தபடி, சுற்றிச்சுற்றி புலிகள் செய்வது முட்டாள்தனமாக தமக்குத் தாமே புதைகுழியை வெட்டுவது தான். அன்றாடம் கொலைகள் செய்ய 'துரோகி" ஒழிப்பு செய்வதாக கூறிக் கொண்டு, புதிதாக அன்றாடம் பலமடங்கு 'துரோகிகளை" உற்பத்தி செய்கின்றனர். கொலை செய்வது, செய்வதை காட்டுவது, அதை நியாயப்படுத்துவதே புலியின் அன்றாட அரசியலாகிவிட்டது. இதற்காகவே கொலை செய்ய வேண்டியதாகின்றது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையைப் பற்றி அவர்கள் பேரினவாதிகளுடனும் பேசுவதில்லை, ஏன், அவர்கள் அதைப்பற்றி தமக்குள் கூட பேசுவதில்லை. இதன் விளைவு தமிழ்மக்களுக்கு என்ன பிரச்சனை என்பது புலிக்கும் தெரியாது போய்விட்டது, ஏன் சமூகத்திடமே அதற்கான அடிப்படை இல்லாது போய்விட்டது. மாறாக புலிக் கும்பலின் பிரச்சனையே தமிழ் மக்கள் பிரச்சனையாக காண்பது, கூறுவது, நம்புவது என்று ஒரு குறுகிய வட்டத்தில் அனைத்தும் மூழ்கடிக்கப்படுகின்றது. சுற்றிச்சுற்றி இதற்குள் தான் சேடமிழுக்கின்றது.

பேரினவாதிகளை பார்த்து உறுமுவதன் மூலம், அவர்களை கொன்று காட்டுவதன் மூலம், எதையும் சாதிக்கமுடியும் என்ற இராணுவ அரசியல் முடிவை நோக்கி நகருகின்றது. இதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் தலைவிதி சூனியமாகி, ஒரு இனத்தின் அழிவு நிரந்தரமானதாகவே மாறிவிட்டது. தமிழினத்தின் அடிப்படையை பேரினவாதம் அழித்து சின்னாபின்னப்படுத்தியதை விட, தமிழ் மக்களாகிய நாமே அதை செய்து முடிப்பதற்கு ஏற்ற ஒரு அரசியல் தலைமையே கொண்டுள்ளோம் என்ற வரலாற்று உண்மையை மெய்ப்பிப்பதே நடந்தவண்ணம் உள்ளது.

Tuesday, April 25, 2006

ஓட்டுப் போடாதே புரட்சி செய்!

ஓட்டுப் போடாதே புரட்சி செய்!

து 13 வது சட்டமன்றத் தேர்தல். மீண்டும் வாக்களிக்கப் போகிறீர்களா? ஒரு முறை ஏமாறுவது மனிதனுக்கு இயல்பு; இரண்டு முறை ஏமாறுபவன் ஏமாளி; மூன்று முறை ஏமாந்தால் அவனை முட்டாள் என்றும் சொல்லலாம்.12 முறை ஏமாற்றப் பட்டபிறகும் சொரணையில்லாமல் பல்லிளித்துக் கொண்டு ஓட்டுப் போடச் செல்பவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது?


அப்பன், பாட்டன், கொள்ளுப்பாட்டன் என்று மூன்று தலைமுறைகள் ஏமாந்த பிறகும் புத்தி வராமல்,''அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே" என்ற சத்தம் கேட்டவுடனே நான்காவது தலைமுறையும் ஓடுகிறது; மசால் வடைக்கு மயங்கும் எலியைப்போல வாக்குச்சாவடியின் முன்னால் வரிசையில் நிற்கிறது. இந்த மானக்கேட்டை யாரிடம் சொல்லி அழுவது?


தேர்தல் என்ற அறிவிப்பு வந்தவுடன் கரண்டு கம்பத்தைக் கண்டால் காலைத்தூக்கும் தெருநாயைப் போல, தானாக வந்து ஓட்டுப் போடுவான் என்று நம்மைக் கேவலமாக நினைக் கிறார்களே ஓட்டுப் பொறுக்கிகள், இந்த அவமானத்திற்கு எப்போதுதான் முடிவு கட்டுவது?


பழனிக்கும் திருப்பதிக்கும் மொட்டை போடும் பக்தன் கூட தன்னுடைய நம்பிக்கைக்கு ஒரு விளக்கம் சொல்கிறான். 'இந்தச் சாமிக்கு நேர்ந்து கொண்டால் இது நடக்கும்" என்று நம்பவும் செய்கிறான். ஆனால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் 'சாவடியில்'தவறாமல் மொட்டை போட்டுக் கொள்ளும் வாக்காளனுக்கோ இந்தத் தேர்தலின் மீது அப்படியொரு நம்பிக்கை கூடக் கிடையாது.


'எவன் வந்தாலும் விலைவாசி குறையப் போவதில்லை, விவசாயம் விளங்கப் போவதில்லை, வேலை கிடைக்கப் போவதில்லை, லஞ்சம் ஒழியப் போவதில்லை, ஊழல் குறையப் போவதில்லை" என்று ஆணித்தரமாகப் பேசுகிறான். 'அப்புறம் எதற்காக ஓட்டுப் போடுகிறாய்?" என்று கேட்டால், 'வேறென்ன செய்ய முடியும்?" என்று எதிர்க் கேள்வி கேட்கிறான். வாக்குரி மையை 'வேஸ்ட்' க்காமல் யாராவது ஒரு திருடனுக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட வேண்டுமென்று துடிக்கிறான்.


'ஓட்டுப் போடவில்லையென்றால் செத்ததுக்குச் சமமாமே" என்று பாமரத்தனமாகச் சிலர்அஞ்சுகிறார்கள். இது உண்மை யென்றால் மன்மோகன்சிங் செத்த இடத்தில் புல் முளைத்திருக்க வேண்டும். 3 தேர்தலாக ஓட்டுப்போடாத மன்மோகன்சிங் தான் இந்த நாட்டின் பிரதமர். தேர்தல் ஒரு நாடகம் என்றும் எவன் ஜெயித்தாலும் அந்த ஆட்சி நம்ம ஆட்சிதான் என்றும் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கும் டாடா பிர்லா போன்ற பெரு முதலாளிகள் முதல் உள்ளூர்ப் பணக்காரர்கள் வரை யாரும் எப்போதும் ஓட்டுப் போடுவதில்லை. கொளுத்தும் வெயிலில் வரிசையில் நின்று இந்த 'ஜனநாயகத்தை'க் காப்பாற்றுவது பாமரமக்கள்தான்.ஏனென்றால், 'தேர்தலைப் புறக்கணித்து விட்டால் இருக்கின்ற ஒரே ஒரு பிடியையும் நாம் இழந்துவிடுவோம். ஜெயலலிதா சரியில்லை என்றால் கருணாநிதியைக் கொண்டு வரலாம், சோனியா சரியில்லை என்றால் வாஜ்பாயியைக் கொண்டு வரலாம். புறக்கணிப்பதன் மூலம் என்ன சாதித்து விடமுடியும்? வேறென்ன வழி இருக்கிறது?"என்று எண்ணுகிறான் வாக்காளன்.தேர்தல் தோல்வி என்பது ஓட்டுப் பொறுக்கிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை அல்ல, இன்று தோற்றாலும் நாளை நாம்தான் என்று ஐந்தாண்டுகள் அவர்கள் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். ட்சிக்காலத்தில் அடித்த கொள்ளையை அனுபவிக்கிறார்கள். தத்தம் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் அரியணை ஏறுகிறார்கள்.


'மக்களுக்குத்தான் இதை விட்டால் வேறு வழியில்லை" என்ற சலிப்பு! ஓட்டுக் கட்சிகளுக்கோ 'நம்மை விட்டால் மக்களுக்கு வேறு நாதி இல்லை" என்ற இறுமாப்பு!

தேர்தலைப் புறக்கணிக்க மக்கள் தயங்கலாம். ஆனால் மக்களின் இந்தக் கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டுதான் கடந்த 50 ஆண்டுகளாக இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை மிகவும் அலட்சியமாகப் புறக்கணித்து வருகிறது தேர்தல் அரசியல்.


தொடர்ந்து நம்மைப் புறக்கணித்து வரும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலை நாம் ஏன் புறக்கணிக்க மறுக்கிறோம் என்பதுதான் எங்களது கேள்வி.வாக்காளர்களா, பிச்சைக்காரர்களா?


'கலர் டிவி, கிலோ 2 ரூபாய்க்கு அரிசி, 2 ஏக்கர் நிலம்" என்று வாக்குறுதி தருகிறார் கருணாநிதி. 'இலவச சைக்கிள் கொடுத்தேன், பாடநூல் கொடுத்தேன், வெள்ள நிவாரணம் கொடுத்தேன், கோயிலில் அன்னதானம் போட்டேன், இலவசத் திருமணம் நடத்திவைத்தேன்" என்று சாதனைப் பட்டியல் படிக்கிறார் ஜெயலலிதா. 'மாதம் 15 கிலோ அரிசி இலவசமாகத் தருகிறேன், அதையும் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறேன், கல்யாணம் பண்ணி வைத்து பிள்ளை பெத்தால் அதற்கும் பணம் கொடுக்கிறேன்" என்கிறார் நடிகர் விஜயகாந்த்.


இந்த வாக்குறுதிகளைப் படிப்பவர்கள், தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் பிச்சைக்காரர்கள் என்ற முடிவுக்குத்தான் வரமுடியும். இப்படி எல்லாவற்றையும் இலவசமாக அள்ளி அள்ளிக் கொடுத்தால் அரசாங்க கஜானாவே காலியாகி விடுமென்று ஆத்திரம் பொங்க பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள் திமிர் பிடித்த மேட்டுக்குடி அறிவாளிகள்.


யாருடைய பணத்திலிருந்து நமக்கு இந்த 'இலவசங்களை' வழங்குகிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள்? அரசாங்க கஜானாவில் சேரும் வரிப்பணத்தில் கப்பெரும்பகுதி ஏழை- நடுத்தர மக்கள் கொடுக்கும் மறைமுக, நேர்முக வரிப்பணம்தான். ஏழை களின் வரிப்பணத்திலிருந்து ஏழைகளுக்குச் செலவிடுவதை 'இலவசம்' என்று எப்படி அழைக்க முடியும்?


இலவச சைக்கிளுக்கு 83 கோடி, பாடநூலுக்கு 113 கோடி, சத்துணவுக்கு 850 கோடி, உழவர் பாதுகாப்புத் திட்டத்துக்கு 300 கோடி - என்று பட்டியல் படிக்கிறார் ஜெயலலிதா.


போர்டு, ஹண்டாய், கோகோ கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலமும், தண்ணீரும், மின்சாரமும், சாலை வசதிகளும் செய்து கொடுத்து அவர்களுக்கு வரிச் சலுகை களையும் வாரி வழங்கியிருக்கிறது ஜெ அரசு. மக்களுடைய வரிப்பணத்திலிருந்து பன்னாட்டு முதலாளிகள் ஒவ்வொரு வருக்கும் எத்தனை ஆயிரம் கோடி சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்ற இரகசியத்தை ஜெயலலிதா வெளியிடுவாரா? 'முதலாளிகளுக்கான இலவசத் திட்டங்கள்' என்று இவை அழைக்கப் படுவதில்லையே, ஏன்?


2004-05 ஆம் ஆண்டில் மட்டும் பன்னாட்டு முதலாளிகள் மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு ப.சிதம்பரம் வழங்கி யுள்ள வரித்தள்ளுபடி 1,58,661 கோடி ரூபாய் என்கிறது முதலாளி வர்க்கத்தின் பத்திரிகையான பிசினஸ் ஸ்டாண்டர்ட். னால் இதே ஆண்டில் நாடு முழுவதும் உள்ள மக்களின் ரேசன் அரிசிக்காக சிதம்பரம் வழங்கிய மானியம் ரூ.25,000 கோடி மட்டும்தான். யார் வழங்கும் மானியத்தில் யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறதா?


ஆண்டொன்றுக்கு டாஸ்மாக்கின் மொத்த விற்பனை 24,000 கோடி என்கிறார் ஜெயலலிதா. இதில் அரசுக்குக் கிடைக்கும் ண்டு வருவாய் சுமார் 5000 கோடியாம். என்றால், சசிகலாவின் சாராயக் கம்பெனி அடித்த லாபம் எத்தனை யிரம் கோடி? சாராயத்தில் வரவு 5000 கோடி, சத்துணவுக்குச் செலவு 850 கோடி. இந்த அயோக்கியத் தனத்துக்குப் பெயர் இலவசத் திட்டமாம்!


தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகிக் கொண்டிருக்கிறது என்றும் இதைச் சாதித்தது நான்தான் என்றும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் இந்தப் பெருமைக்குப் போட்டி போடுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு தேர்தலுக்கும் இத்தகைய 'இலவச'த் திட்டங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இதுதான் தமிழகத்தின் முன்னேற்றமா?


கிலோ 2 ரூபாய்க்குக் கிடைக்கும் புழுத்த அரிசியில்தான் கஞ்சி குடிக்க முடியும் என்ற அளவிற்கு மோசமான வறுமை நிலையில் தமிழ்நாட்டின் பல கோடி மக்கள் வைக்கப்பட்டிருப் பது ஏன்? நிலமில்லாத கூலி விவசாயி மட்டுமல்ல, தன்னுடைய நிலத்தில் நெல் பயிரிடும் விவசாயி கூட சொந்த நிலத்தில் விளைந்ததை வந்த விலைக்கு விற்று விட்டு, இந்த 2 ரூபாய் புழுத்த அரிசியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? எதை நட்டாலும் விவசாயம் விளங்காத போது கருணாநிதி கொடுக்கவிருக்கும் புறம்போக்கு நிலத்தில் யாரை நடுவது?


பெற்ற பிள்ளைக்குத் திருமணம் செய்யவும், கட்டிய மனைவிக்கு சேலை எடுத்துக் கொடுக்கவும், அவளுக்குப் பிரசவம் பார்க்கவும் விஜயகாந்த் பணம் கொடுக்க வேண்டிய நிலைமைதான் 12 தேர்தல்களில் நாம் கண்ட முன்னேற்றமா?


2000 ரூபாய் காசுக்காக சென்னை நகரில் 50 பேர் மிதிபட்டுச் செத்திருக்கிறார்களே, மக்களை இந்த அவலமான வாழ்க்கை நிலைக்கு விரட்டியது யார்?


ஜெயலலிதா கூட்டத்துக்குப் போனால் சோறு போட்டு 100 ரூபாய், ஸ்டாலின் கூட்டத்துக்குப் போனால் சேலை, இன்னொரு மந்திரி கூட்டத்துக்குப் போனால் 2 கிலோ அரிசி, புரட்சித் தலைவி பிறந்த நாளுக்கு அன்னதானம்... என்று எட்டுத்திக்கும் பிச்சை யெடுத்துத் திரிய வேண்டிய மானங்கெட்ட நிலைமை மக்களுக்கு ஏன் ஏற்பட்டது?


இப்படிப்பட்ட கேள்விகளை ஓட்டுப்பொறுக்கிகள் யாரும் எழுப்புவதில்லை. இலவச டிவி கொடுக்க முடியுமா முடியாதா, 2 ரூபாய் அரிசி போட முடியுமா முடியாதா என்று அனல் பறக்கும் விவாதம் நடத்துகிறார்கள். பண்ணையார்களிடம் பொங்கல் இனாம் வாங்கப்போன பண்ணையாட்களைப் போல மக்களைத் தங்கள் முன்னால் கையேந்தி நிற்க வைக்கிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கிகள்.


தாம் சொந்தமாகச் சம்பாதித்த காசிலிருந்து பழனி படிக்கட்டில் காத்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு தருமம் செய்கிறார்கள் பக்தர்கள். ஆனால் ஓட்டுப்பொறுக்கிகளோ, நம்மைக் கொள்ளையடித்த பணத்திற்குச் சில்லறை மாற்றி 50, 100, 500 என்று நமக்கே விட்டெறிகிறார்கள். இவர்களுக்கு எப்படி வந்தது இந்தப் பணம்?


அரசாங்க காண்டிராக்டில் அடித்த கொள்ளை, காடுகளையும் மலைகளையும் வெட்டி விற்ற காசு, புறம்போக்குகளை விற்று ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றிக் குவித்த பணம், ரேசன் அரிசி,வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம்,வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் சுருட்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்க அதிகாரிகள் வாங்கும் லஞ்சப்பணத்தில் வசூலிக்கும் கப்பம், சட்டவிரோத சமூக விரோதத் தொழில்கள், போலீசுடன் கூட்டு சேர்ந்து நடத்தும் கட்டைப் பஞ்சாயத்து கலெக்சன், இவையனைத்துக்கும் மேலாக பன்னாட்டு முதலாளிகளிடம் நாட்டைக் கூட்டிக் கொடுத்து வாங்கிய கமிசன்........ என்று இவர்கள் சூறையாடிய பொதுச் சொத்துதான் தொகுதிக்கு 4 கோடி 5 கோடி என றாய்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது.


முன்னர் முதலாளிகளிடம் லஞ்சம் வாங்கித் தின்று கொண்டிருந்த ஓட்டுப்பொறுக்கிகள், தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய பின்னர் தாங்களே முதலாளிகளாக மாறத் தொடங்கிவிட்டார்கள். கந்து வட்டிக்காரர்கள், காண்டிராக்டர்கள், ரியல் எஸ்டேட் முதலாளிகள், சினிமா தயாரிப்பாளர்கள், தண்ணீர் வியாபாரிகள், கிரானைட் அதிபர்கள், பஸ் கம்பெனி அதிபர்கள், சுயநிதிக் கல்லூரி முதலாளிகள், பன்னாட்டுக் கம்பெனிகளின் ஏஜெண்டுகள் .. என இந்த ஓட்டுப் பொறுக்கித் தொழிலதிபர் களின் கொள்ளை லாபம் பன்மடங்கு அதிகரித்து விட்டது.


இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகத் தன்னுடைய சாராயக் கம்பெனி லாபத்திலிருந்து, ஜெயா-சசி கும்பல் ஓட்டுக்கு 1000 ரூபாய் கூடக் கொடுக்கும்; ஒரே ஆண்டில் போட்ட காசையும் எடுக்கும். தன்னால் போண்டியாக்கப்பட்ட ஏழை மக்களையே தனக்கு விசுவாசமான ஓட்டு வங்கியாக உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு, அவர்களைத் தன்னுடைய கையேந்திகளாகத் திட்டமிட்டே மாற்றி வருகிறது ஜெயா - சசி கும்பல். கருணாநிதியோ ஏழைகளை அரசாங்கக் கையேந்திகளாகக்கும் திட்டங்களை அடுக்கடுக்காக அறிவிக்கிறார்.


தள்ளாத வயதிலும் கடுமையாக உழைத்துக் கஞ்சி குடிக்கும் மானமுள்ள உழைக்கும் மக்கள் பிச்சைக்காரர்களாக நடத்தப் படுகிறார்கள். சூடு, சொரணை, மான ரோசமில்லாமல் பதவிக்காக எவன் காலையும் பிடிக்கத் தயங்காத இழிபிறவிகளும், அடுத்தவனை ஏமாற்றியே உடம்பை வளர்த்த சோம்பேறிகளும், பொதுச் சொத்தை வளைக்கவும் சொந்த மனைவியை விலை பேசவும் தயங்காத கயவர்களும் 'எம்.எல்.ஏ காட்டன், மினிஸ்டர் காட்டன்' சட்டைகளுக்குள் புகுந்துகொண்டு மினுக்கித் திரிகிறார்கள்.கேவலம் ஒரு டீயைக் கூட அடுத்தவன் காசில் மட்டுமே குடித்துப் பழகிய இந்த அயோக்கியர்கள் மக்களுக்கு இலவசத் திட்டம் அறிவிக்கிறார்கள்; ஓட்டுக்கு 200, 300 பணமும் கொடுக்கிறார்கள். இவர்களிடம் கையேந்தி நிற்பதும், இப்படிப்பட்ட தேர்தலில் வாக்களிப்பதும் நம்மை நாமே பிச்சைக்காரர்கள் என்று ஒப்புக்கொள்வதற்குச் சமமல்லவா என்பதுதான் நாங்கள் எழுப்பும் கேள்வி.ஜனநாயகத்தை அடியறுக்கம் ஆயுதமாக வாக்குரிமை!

ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம், விஜயகாந்த் சுனாமி சுற்றுப்பயணம்... என்று தமிழ்நாடு முழுவதும் புழுதி பறந்து கொண்டிருக்கிறது. 'எனக்கு ஓட்டுப் போடுங்கள்' என்ற கோரிக்கையை முன்வைத்து மக்களைச் சந்திக்க வரும் தலைவர்களின் அணிவகுப்பால் எல்லாச் சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இந்தச் 'சாலை மறியலுக்கு' போலீசு காவல் நிற்கிறது. இக்காட்சிகளைப் புகைப்படம் எடுத்து பக்கம் பக்கமாகப் பிரசுரிக்கின்றன பத்திரிக்கைகள்.


'எங்களுக்கு குடிக்கத் தண்ணீர் வேண்டும், பாசனத்திற்குத் தண்ணீர் வேண்டும், பள்ளிக்கூடம் வேண்டும், சாலை வேண்டும், பேருந்து விடவேண்டும், வெள்ள நிவாரணம் வேண்டும், வறட்சி நிவாரணம் வேண்டும்" - என்று மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய சாலை மறியல் போராட்டங்கள் கொஞ்சமா?


சாலை மறியல் என்றவுடனே போலீசு வரும், பிறகு அதிரடிப்படை வரும், அதன்பின் யுதப்படை வரும். இவை எதற்கும் பயப்படாமல் மக்கள் துணிந்து நின்றால் கடைசியாக தாசில்தார் வருவார். கலைந்து போகச்சொல்வார். கொளுத்தும் வெயிலில் பிள்ளை குட்டிகளோடு தெருவில் உட்கார்ந்திருக்கும் மக்களைச் சந்திக்க மந்திரி, எம்.எல்.ஏ, வட்டம், குட்டம் எவனும் எப்போதும் வந்ததில்லை. அவர்களுடைய கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்டதுமில்லை. ஆளும் கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் எனப்படுவோரின் யோக்கியதையும் இதுதான்.ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களைக் கொஞ்சம் நினைவு படுத்திப் பாருங்கள்.


ஆட்சிக்கு வந்தவுடன் டிசம்பர் 2001- இலேயே பேருந்துக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப் பட்டது. மாணவர் பஸ் பாஸ் ரத்து, அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்குக் கட்டணம், நோயாளியைப் பார்க்கப் போகும் பார்வையாளர்களுக்குக் கட்டணம், ரேசன் அரிசி விலை ஏற்றம், அரிசி வாங்க கூப்பன் ... எல்லாம் ஒரே நாளில் அறிவிக்கப்பட்டன. தமிழகமெங்கும் மக்கள் எதிர்த்துப் போராடினார்கள்.


அரசுக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப் பட்டன. கல்லூரிகளை லாபமீட்டும் கம்பெனிகளாக்கி ஏழை மாணவர்களின் கல்வியைப் பறிப்பதற்கெதிராக மாணவர்கள் போராடினார்கள்.


நீதிமன்றக் கட்டணம் 100 மடங்கு உயர்த்தப்பட்டதை எதிர்த்து வழக்குரைஞர்கள் போராடினார்கள். மாவட்ட ட்சியரிடம் மனுக்கொடுக்க 25 ரூபாய் கட்டணம், நகர்ப்புற நடுத்தர மக்களைக் கொள்ளையடிக்க கட்டிட வரன்முறைச் சட்டம்... என ஆட்சிக்கு வந்த எட்டே மாதத்தில் எல்லா மக்கட்பிரிவினர் மீதும் தாக்குதல் தொடுத்தது ஜெயா ட்சி.


காவிரியில் தண்ணீரில்லாததால் விவசாயிகள் எலிக்கறி தின்றார்கள். நெற்களஞ்சியமாம் தஞ்சையில் பட்டினிச்சாவு தொடங்கியது. 22 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார் கள். ஜெ அரசோ விவசாயிகளுக்கான கூட்டுறவுக் கடனையும் கடன் தள்ளுபடியையும் நிறுத்தியது. அரசாங்க நெல் கொள்முதலையும் குறைத்தது.


கிணறு தோண்டித் தோண்டி தண்ணீரைக் காணாமல் திவாலான ஒரு விவசாயியின் குடும்பம் கரண்டு கம்பியை உடலில் சுற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது. ஜெயலலிதா பம்பு செட்டுக்கு மீட்டர் போடப்போவதாக அறிவித்தார். அதே நேரத்தில் தனியார் தண்ணீர் வியாபாரம் ஊக்குவிக்கப்பட்டது. தாமிரவருணி கோகோ கோலாவிற்கு விலை பேசப்பட்டது.


கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகங்கள் குறைக்கப்பட்டதால் நசிந்து போன நெசவாளர்கள் மீதும் தாக்குதல் தொடுத்தது ஜெ அரசு. இலவச வேட்டி சேலை கொள்முதலை நிறுத்தியதால் தேங்கிய துணிகளை விற்க முடியாமல் பல லட்சம் நெசவாளர்கள் பட்டினிச் சாவுக்கும் தற்கொலைக்கும் தள்ளப்பட்டனர். கஞ்சித் தொட்டியின் முன்னால் கையேந்தி நின்ற அந்த நெசவாளர்கள் மீதும் தடியடி நடத்தியது ஜெ அரசு.


18,000 கிராமப்புறத் தொடக்கப் பள்ளிகளில் 5 ஆசிரியர்களை 2 ஆகக் குறைத்தது ஜெ அரசு. 1500 பள்ளிகளுக்கு ஒரே ஆசிரியர். நூற்றுக்கணக்கான பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன. ஆசிரியர்களும் பேராசிரியர்களும் இனி காண்டிராக்டு முறையில்தான் நியமிக்கப் படுவார்களென்று பகிரங்கமாக அறிவித்தது அரசு.


இழந்த உரிமைகளை மீட்பதற்காகப் போராடிய போக்குவரத்துத் தொழிலாளர்கள் 27,000 பேர் சிறையிலடைக்கப் பட்டார்கள். அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டமோ இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. 2 லட்சம் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். 50-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் இறந்தார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் நலப் பணியாளர்களும் சாலைப் பணியாளர்களும் ஒரே நொடியில் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். 64 சாலைப் பணியாளர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.


மதமாற்றத் தடைச்சட்டம், கிடா வெட்டுத் தடைச்சட்டம் என பார்ப்பன பாசிச சட்டங்கள் திணிக்கப்பட்டன. கிடா வெட்டி சாமி கும்பிடப் போன பக்தர்களும் பூசாரிகளும் கைது செய்யப் பட்டார்கள். கிராமப்புறக் கோயில்கள் போலீசின் புறக்காவல் நிலையங்களாகவே மாற்றப்பட்டன.


தலித் மக்களின் வாயில் மலத்தைத் திணிப்பது, சிறுநீர்கழிப்பது, பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தல்களை சாதி வெறியர்கள் முடக்குவது... என தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன.


அதிரடிப்படையின் அக்கிரமங்கள், லாக் அப் கொலைகள், போலி மோதல் கொலைகள், ஏட்டு முதல் எஸ்பி வரை நீண்டு சென்ற ஜெயலட்சுமி புராணம், கான்ஸ்டபிள் முதல் டி.ஐ.ஜி வரையிலான அனைத்து போலீசு அதிகாரிகளின் களவாணித் தனங்கள்.. என ஜெயலலிதாவால் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட போலீசின் அட்டூழியங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்தன.


இவற்றின் விளைவாகக் கொண்ட த்திரத்தில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தார்கள். ஆனால் மக்களுடைய வாக்குகளை அறுவடை செய்து கொள்வதற்கு இந்த எதிர்க்கட்சிகளுக்கு என்ன அருகதை இருக்கிறது?


இன்று ஓட்டுக்கேட்டு உங்கள் மத்தியில் ஊர்ஊராகச் சூறாவளி சுற்றுப் பயணம் வரும் ஓட்டுப் பொறுக்கிகள் அன்று மக்களுடைய போராட்டங்களுக்கு தரவாகக் களத்தில் இறங்கினார்களா? இணைந்து போராடினார்களா? இல்லை. வீட்டிலிருந்தபடியே அறிக்கை விட்டார்கள். ஜெயலலிதாவிடம் அடிபடும் மக்கள் அடுத்த தேர்தலில் எப்படியும் தங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள் என்று எண்ணி, மக்கள் அடிவாங்கு வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தார்கள். இது மிகையல்ல, உண்மை.


தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்று கூறும் நாங்கள்தான் மக்கள் கோரிக்கைகளுக்கு தரவாகத் தமிழக மெங்கும் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தோம். போராடினோம். சிறையும் சென்றோம்.


ஒருவேளை மக்கள் கோரிக்கைகளுக்கு தரவாக மற்றெல்லாக் கட்சியினரும் 'கூட்டணி சேர்ந்து' போராடியிருந்தால் மக்கள் தனித்தனியே போராடி அடிவாங்கித் தோற்றுத் துவண்டு விழும் நிலை ஏற்பட்டிருக்காது. இத்தனை அரசு ஊழியர்களும் சாலைப்பணியாளர்களும் நெசவாளர்களும் விவசாயிகளும் அநியாயமாகச் செத்து மடியவேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்காது.


ஆனால் மக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமைகளை தங்களுடைய சொந்தக் கரங்களாலேயே போராடி வென்றெடுப் பதை ஓட்டுப்பொறுக்கிகள் யாரும் விரும்புவதில்லை. அது அவர்களுடைய முதலுக்கே மோசமாகிவிடும் என்று அஞ்சுகிறார்கள்.


'ஐந்தாண்டுகள் அடக்குமுறைகளைப் பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக்கொள்ளுங்கள், அதற்குப் பிறகு எங்களுக்கு ஓட்டுப் போட்டு நாற்காலியில் உட்காரவையுங்கள். நாங்கள் வந்து கிழிக்கிறோம்" என்று கூறி மக்களுடைய போராட்டங்களை முடமாக்குகிறார்கள். ஜனநாயக உணர்வை மழுங்கடிக் கிறார்கள்.


வாக்குரிமையை மிகவும் புனிதமான உரிமையாகச் சித்தரிக்கும் ஓட்டுப்பொறுக்கிகள், மக்களுடைய பிறவாழ்வுரி மைகளையும் ஜனநாயக உரிமைகளையும் எப்போதுமே கால்தூசுக்குச் சமமாகத்தான் மதிக்கிறார்கள். எந்த ஆட்சியாக இருந்தாலும் போலீசின் அனுமதி இல்லாமல் நீங்கள் பொதுக்கூட்டம் நடத்தவோ, பேரணி நடத்தவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ முடியாது. ஓட்டுப்போடுவதற்கு மட்டும் போலீசு அனுமதி தேவையில்லை எனும்போது, பேசுவதற்கும் போராடுவதற்கும் மட்டும் ஏன் போலிசைக் கேட்க வேண்டும்? வாக்குரிமையைப் போல கருத்துரிமையும் ஒரு அடிப்படை ஜனநாயக உரிமை என்பதை எந்த ஆட்சியும் ஏற்பதில்லை.


அதனால்தான், மக்கள் தண்ணீர் கேட்டுப் போராடினால் குடிநீர் வாரிய அதிகாரி வருவதில்லை; போலீசு வருகிறது. சாலை கேட்டால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வருவதில்லை, போலீசு வருகிறது. பள்ளிக்கூடம் கேட்டால் கல்வித்துறை அதிகாரி வருவதில்லை, போலீசுதான் வருகிறது. அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் போராடும் மக்களைச் சந்திப்பதற்கு எப்போதுமே வருவதில்லை. ஏனென்றால் மக்களின் அடிப்படை உரிமைகள் எதையும் ஓட்டுப் பொறுக்கிகள் அங்கீகரிப்பதேயில்லை.


வாக்குரிமையைத் தவிர வேறெந்த உரிமையைப் பற்றி மக்கள் பேசினாலும் அது ஓட்டுப்பொறுக்கிகளுக்கு வேப்பங்காயாய்க் கசக்கிறது. விவசாயிகள் வாழவேண்டுமானால் விளை பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். கருணாநிதியோ


'2 ரூபாய்க்கு அரிசி போடுகிறேன் கஞ்சி குடித்துக்கொள்" என்று 'கருணை' காட்டுகிறார். இலவச மருத்துவம் மக்களின் உரிமை. 'எனக்கு ஓட்டுப் போட்டால் பிரசவத்துக்கு பணம் கொடுக்கிறேன்" என்கிறார் விஜயகாந்த். இலவசக் கல்வி என்பது மக்களின் உரிமை. அம்மாவோ சைக்கிள் கொடுக்கிறார், ஏழை மாணவர்கள் 4 பேருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தாயுள்ளத்துடன் தருமம் கொடுத்துவிட்டு பத்திரிகைகளில் பிலிம் காட்டுகிறார்.


'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற பேச்சே ஒரு பித்தலாட்டம். இப்போது நாம் காண்பது ஒரு புதிய வகை மன்னராட்சி. ராஜாவுக்குப் பிறந்தவன் ராஜா என்பதற்குப் பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மன்னரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த மன்னர் போடும் பிச்சைதான் உங்கள் வாழ்க்கை.


வாக்குரிமை என்பது மற்றெல்லா உரிமைகளையும் அடியறுக்கும் ஆயுதமாகவே மாற்றப்பட்டு விட்டது. இந்த யுதத்தை நமக்கெதிராக நாமே பயன்படுத்துவது மடமையில்லையா, என்பதுதான் எங்கள் கேள்வி.யாரால் கொள்ளையடிக்கப்பட விரும்புகிறீர்கள்?

ஒரு வாக்காளர் என்ற முறையில் சொல்லுங்கள். ஓட்டுக் கட்சிகளுக்கு உங்கள் ஓட்டு ஏன் தேவைப்படுகிறது? ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் என்ற இந்தக் கூத்தினால் என்ன பயன்?


'தேர்தல் என்ற ஒன்று நடக்காமல் அரசாங்கம் எப்படி அமையும்? நல்லதோ கெட்டதோ, அரசாங்கம் என்ற ஒன்று அமையாமல், சட்டசபை என்ற ஒன்று இல்லாமல், சட்டதிட்டங்கள் வகுப்பது எப்படி? நிர்வாகம் நடப்பது எப்படி? மக்களுக்கு நல்லது கெட்டது செய்வது எப்படி?" என்று நீங்கள் திருப்பிக் கேட்கக் கூடும்.


இது ஓட்டுப்போடும் வாக்காளராகிய உங்களுடைய கருத்து. ஓட்டு வாங்கும் வேட்பாளர்களிடம் இதே கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். வை.கோ என்ற அசிங்கத்தைப் பார்த்த பிறகும் இந்தத் தேர்தல் என்பது பொறுக்கித் தின்பதற்கான போட்டி என்பதை இவர்களிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?


தயாநிதியும் அன்புமணியும் திடீர் மந்திரிகளாக்கப் பட்டதும், முதல்வர் நாற்காலியைப் பிடிப்பதற்காகக் கருணாநிதியின் முதுகுக்குப் பின்னால் ஸ்டாலின் தயாராகக் காத்து நிற்பதும் வேறெதற்கு?


வீரபாண்டி ஆறுமுகம் தனக்கொரு சீட், தன் மகனுக்கு ஒரு சீட், மச்சானுக்கு ஒரு சீட் வாங்கியிருப்பதும், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் அன்பரசுவும் தமது பிள்ளைகளுக்கு சீட் வாங்கியிருப்பதும் எதற்கு, குடும்பத்தோடு மக்கள் தொண்டாற்றவா?


'எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்" என்று விஜயகாந்த் கெஞ்சுவதும், 'கருணாநிதி குடும்பம் மட்டும்தான் கொள்ளையடிக்க வேண்டுமா, காத்திருக்கும் நாங்களெல்லாம் இளித்த வாயர்களா" என்று வை.கோ குமுறி வெடிப்பதும், எல்லாக் கட்சிகளின் 'செயல் வீரர்' கூட்டங்களிலும் நாற்காலிகள் பறப்பதும், சத்தியமூர்த்தி பவனில் அன்றாடம் பத்து இருபது கதர்ச்சட்டைகள் கிழிவதும் எதற்காக?


இதில் மூடுமந்திரம் எதுவும் இல்லை. அ.தி.மு.க வில் வேட்பாளர் விண்ணப்பத்துக்கான கட்டணம் 10,000 ரூபாய். வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டு ஜெயித்தால் பல கோடி பம்பர் பரிசு. தோற்றால், தேர்தல் செலவுக்கு அம்மா கொடுக்கும் 2 கோடியில் அமுக்கியவரை லாபம் - இது றுதல் பரிசு. ஜெயித்தாலும் தோற்றாலும் பரிசு தரும் லாட்டரிச் சீட்டு உலகத்தில் வேறெங்காவது உண்டா?


'சீட்டு கிடைக்காதவர்கள் கோபப்படாதீர்கள்; ராஜ்யசபா சீட்டு தருகிறேன், மேல்சபைக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறேன்" என்று உடன் பிறப்புகளுக்கு உற்சாகபானம் ஊற்றி உசுப்பி விடுகிறார் கலைஞர்.


தேர்தலின் நோக்கம் என்ன என்பது பற்றி வாக்காளராகிய நீங்கள் ஏதாவது முட்டாள்தனமாகக் கற்பனை செய்து கொண்டிருக்கலாம். ஆனால், தாங்கள் போட்டியிடுவதன் நோக்கம் என்ன என்பதில் வேட்பாளர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். ஒளிவு மறைவோ கூச்சநாச்சமோ இல்லாமல் அதை வெளிப்படையாகப் பேசவும் செய்கிறார்கள்.


ஆயுத பேரத்தில் லஞ்சம், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம், தொகுதி மேம்பாட்டு நிதியை மக்களுக்குச் செலவிடுவதற்கு லஞ்சம்.. என அனைத்தும் தெளிவாக வீடியோ படமெடுத்து நாடெங்கும் ஒளிபரப்பப்பட்டுவிட்டன. நடைபெறவிருப்பது இரண்டு கொள்ளைக் கூட்டணிகளுக் கிடையிலான 'ஜனநாயக பூர்வமான' மோதல்.


மக்களிடம் மாமூல் வசூலிப்பதில் ஒரே ஊரிலுள்ள இரண்டு ரவுடிக்கும்பல்களுக்கிடையே போட்டி வந்தால் என்ன நடக்கும்? அடிதடி வெட்டு குத்தின் மூலம் ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டியை ஒழித்துக் கட்டி, தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளும்.


அவ்வாறில்லாமல், கொள்ளையடிக்கும் உரிமையை 'ஜனநாயகபூர்வமான' முறையில் முடிவு செய்வதுதான் இந்தத் தேர்தல். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் யாரால் கொள்ளை யடிக்கப்பட விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் 'ரகசியமாக'த் தெரிவித்து விட்டால், அதன்பின் அவர்கள் உங்களைப் பகிரங்கமாகவும் சட்டபூர்வமாகவும் கொள்ளையடிப்பார்கள். இதுதான் தேர்தல் விசயத்தில் வேட்பாளர்கள் கொண்டிருக்கும் நோக்கம்.


யாருடைய நோக்கம் நிறைவேறப் போகிறது? வாக்காளர்களாகிய உங்களுடைய நோக்கமா, கொள்ளையர்களாகிய அவர்களுடைய நோக்கமா?


உங்கள் ஒடுக்க நீங்களே நியாயவுரிமை வழங்காதீர்கள்


புழுத்து நாறிவிட்டது இந்த ஜனநாயகம். இதற்குப் புனுகு பூசி, நம்பிக்கையிழந்து வெறுத்துப் போன வாக்காளர்களுக்கு நம்பிக்கையூட்டி, தேர்தலில் ஒரு விறுவிறுப்பை உருவாக்கி வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கிறார்கள் ஆளும்வர்க்கங்கள்.


'நல்லவர்கள், வல்லவர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. நல்ல பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தால் நல்ல சட்டம் போடுவார்கள். வல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் நாட்டை வல்லரசாக்குவார்கள். வெல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் மக்களாகிய நீங்கள்தான். உங்கள் பிரதிநிதிகள்தான் சட்டமியற்றுகிறார்கள். எனவே அவற்றுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது உங்கள் கடமை" என்று நம்மை ஏற்கச் செய்கிறார்கள்.


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாம்! இந்த நியாய உரிமையை வைத்துக் கொண்டுதான் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும், ஜெயலலிதாவும் எல்லா வகையான மக்கள் விரோதத் திட்டங்களையும் அமலாக்குகிறார்கள். நாட்டின் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறை கொண்டவர்கள் போல நடிக்கிறார்கள். 'தமிழ்நாடு முதல் மாநிலமாகிறது, இந்தியா வல்லரசாகிறது" என்ற பிரமைகளைப் பரப்பிவிட்டு மக்களை மயக்கத்திலாழ்த்துகிறார்கள்.சட்டமன்றத்தில் நடக்கும் விவாதங்களின் யோக்கிய தையைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? 'ஜெயலலிதா எங்களைப் பேசவே விடுவதில்லை" என்று கூறி எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நாளும் வெளிநடப்பு செய்தன. மீறிப் பேசினால் அவைக் குறிப்பிலிருந்து நீக்குவார் காளிமுத்து. இவர்களுடைய பேச்செல்லாம் அவைக் குறிப்பில் ஏறினால் என்ன, இறங்கினால் என்ன?


இந்த அவையிலேயே இல்லாத உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமும் தான் அவையில் நிறைவேற்றப்படும் சட்ட திட்டங்கள் அனைத்தையும் தீர்மானிக்கின்றன. 2001 இல் நாற்காலியில் அமர்ந்த மறுகணமே பேருந்துக் கட்டண உயர்வு, ரேசன் விலை உயர்வு, பம்பு செட்டுக்கு மீட்டர் என்று ஒரே நாளில் அறிவித்தாரே ஜெயலலிதா, அவை உலக வங்கியின் உத்தரவுகளன்றி வேறென்ன? அரசு ஊழியர் சலுகைகளை வெட்டும் சதித்திட்டம் முதல், மகளிர் சுய உதவிக்குழு போன்ற 'நலத்திட்டங்கள்' வரை அனைத்தும் உலக வங்கியின் ஆணைகள். தண்ணீர் தனியார்மயம், கடற்கரை தனியார்மயம், பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கவிருக்கும் பண்ணை விவசாயம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் சட்டங்கள் ரத்து என்பன போன்ற அனைத்தும் உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுகள்.


இத்தகைய மசோதாக்களெல்லாம் தமிழக சட்டமன்றத்தில் ஒரே நாளில் 10, 15 என்று கொத்துக்கொத்தாக விவாதமின்றி நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. 'ஏக்கருக்கு ஆண்டொன்றுக்கு 8000 ரூபாய் தண்ணீர் வரி' என்ற மசோதா உட்பட 16 மசோதாக்களை ஒரே மணிநேரத்தில் நிறைவேற்றியது மகாராட்டிரச் சட்டமன்றம்.


நாடாளுமன்றத்தில் நடப்பதென்ன?


பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கை களையெல்லாம் அமல்படுத்திவிட்டு, அப்புறம் போனால் போகிறதென்றுதான் பாராளுமன்றத்துக்குச் சேதி சொல்கிறார் ப.சிதம்பரம். உலக வங்கியின் வழிகாட்டுதலின் கீழ்தான் மத்திய மாநிலபட்ஜெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.


பிறகு, டாடா, பிர்லா, பஜாஜ், அம்பானி, நாராயணமூர்த்தி, மல்லையா போன்ற தரகு முதலாளிகள் நிதியமைச்சருக்கு 'லோசனை' வழங்குகிறார்கள். அதன்பின் இந்த மாபெரும் 'ரகசிய வணத்திற்கு' அரக்கு சீல் வைத்து, யுதக் காவல் போட்டு மக்கள் பிரதிநிதிகளுக்கு விநியோகிக்கிறார் நிதியமைச்சர்.சமீபத்தில் அமெரிக்காவுடன் போடப்பட்ட ராணுவ ஒப்பந்தம், அணுசக்தி ஒப்பந்தம், விவசாய ஒப்பந்தம் கியவற்றில் என்ன இருக்கிறது என்றுகூட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நிமிடம் வரை முழுமையாகத் தெரியாது. நம்முடைய நாட்டையே வல்லரசுகளுக்கு அடிமையாக்கும் 'காட்' ஒப்பந்தமோ அதிகாரிகளால் கையெழுத்திடப்பட்டு அதன் பின்னர் அரைகுறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.


நாட்டின் தலைவிதியையும் மக்களின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்ற கொள்கைகள் - திட்டங்கள் பற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே எதுவும் தெரிவிக்கப் படுவதில்லை எனும்போது, மக்களாகிய நம்முடைய நிலைமையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?


'என்னைத் தேர்ந்தெடுத்தால் ரேசன் விலையை ஏற்றுவேன், பம்புசெட்டுக்கு மீட்டர் போடுவேன், பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவேன், தொழிலாளர்களுக்கு போனஸை வெட்டுவேன்" என்று மக்களுக்கு 'வாக்குறுதி' அளித்திருந்தால், 2001 இல் ஜெயலலிதா ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியுமா?


'எங்களைத் தேர்ந்தெடுத்தால் ஆண்டுக்கு 1000 விவசாயிகளையாவது மருந்து வைத்துக் கொல்லுவோம், லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு முதலாளிகளிடம் அடிமாட்டு விலைக்குத் தள்ளுவோம், சில்லறை வணிகத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடுவோம் - இதுதான் எங்களுடைய குறைந்த பட்ச செயல் திட்டம்" - என்று கூறி காங்கிரஸ் வென்றிருக்க முடியுமா?


இன்ன கொள்கையைத்தான் அமல்படுத்தப் போகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொன்னால் ஓட்டுப் பொறுக்கிகள் மக்களிடம் ஓட்டு வாங்குவது கடினம். எனவேதான் கள்ளத் தனமான வாக்குறுதிகளைத் தந்து ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள். பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்றுள்வதற்கான நியாய உரிமையைப் பெறுகிறார்கள்.


நம்மைச் சுரண்டிச் சூறையாடி ஒடுக்குவதற்கான நியாய உரிமையை ஆளும் வர்க்கங்களுக்கும் அவர்களது எடுபிடிகளான ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் நாமே வழங்குவது அறிவுடைமையா என்பதுதான் நாங்கள் எழுப்பும் கேள்வி.உழைப்பாளிகளின் பிரதிநிதிகள் களவாணிகளா?


'வாக்காளப் பெருமக்களே!' என்று அலறும் ஒலிபெருக்கிச் சத்தம் இந்தத் தேர்தல் முடிவதற்குள் குறைந்தது சில யிரம் தடவைகளாவது உங்கள் காதுகளைக் குடைந்துவிடும். இந்தச் சொல்லின் பொருள் என்ன என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா?


பண்ணையார்கள்- விவசாயிகள், முதலாளிகள்- தொழிலாளர்கள், அதிகாரிகள் - ஊழியர்கள் என்று பல்வேறு வர்க்கங்களாகப் பிரிந்திருக்கும் இந்தச் சமுதாயத்தில் கோடீசுவரன் முதல் குப்பன் சுப்பன் வரை எல்லோரையும் ஒரே பட்டியிலடைத்து 'வாக்காளப் பெருமக்கள்' ஆக்கி, இவர்கள் எல்லோருக்கும் பொதுவாக நடுநிலையாக ஒரு அரசாங்கத்தை நடத்த முடியுமா? முதலாளியும் தொழிலாளியும் ஒரே நபரைத் தங்களுடைய வேட்பாளராகத் தேர்ந்தெடுக்க முடியுமா? முடியாது. னால் நடந்து கொண்டிருப்பதென்னவோ அதுதான்.நாங்கள் முதலாளிகளின் பிரதிநிதிகள் என்றோ, பண்ணையார்களின் பிரதிநிதிகள் என்றோ எந்தக் கட்சியும் சொல்லிக் கொள்வதில்லை. தாங்கள் பெரும்பான்மை ஏழை மக்களின் பிரதிநிதிகள் என்றுதான் எல்லா ஓட்டுக் கட்சிகளும் கூறிக்கொள்கின்றன. ஆனால், ஏழ்மையின் சாயலைக்கூட எந்த வேட்பாளரிடமும் நாம் பார்க்க முடிவதில்லை.


நாட்டிலேயே எண்ணிக்கையில் பெரிய வர்க்கம் விவசாயி வர்க்கம். நிலமற்ற கூலி விவசாயிகள் தஞ்சை மாவட்டத்தில் எலிக்கறி தின்றார்கள், பட்டினியால் செத்தார்கள். நெல், கரும்பு, பருத்தி, தென்னை விவசாயிகளும், தக்காளி முதலான காய்களைப் பயிரிட்ட விவசாயிகளும் கடன்கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அல்லது திருப்பூருக்கு கூலி வேலைக்கு ஓடுகிறார்கள். உலகமயமாக்கம் தோற்றுவித்த விலை வீழ்ச்சியால் போண்டியான நீலகிரி தேயிலை விவசாயிகளோ கோவை நகரில் மூட்டை தூக்கி வயிற்றைக் கழுவுகிறார்கள். இந்தப் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகள் எத்தனைப் பேர்?


கைத்தறிக்கான நூல் ரகங்கள் ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டதால் கைத்தறி நெசவுத் தொழிலே ஒழிந்து வருகிறது. ஜெ ஆட்சியில் கஞ்சித்தொட்டியின் முன் கையேந்தி நின்ற அந்தக் கைத்தறி நெசவாளர்களை எந்தக் கட்சி வேட்பாளராகத் தெரிவு செய்திருக்கிறது?


பன்னாட்டுக் கம்பெனிகளின் வரவால் அழிந்து வரும் சிவகாசியின் தீப்பெட்டித் தொழில், கோலா பானங்களால் கொல்லப்பட்ட சோடா கலர் கம்பெனிகள், சோப்பு, சீப்பு, ஊறுகாய், வத்தல், வறுவல், மிட்டாய் என பன்னாட்டு நிறுவனங்களால் க்கிரமிக்கப்படும் யிரக்கணக்கான குடிசைத் தொழில் மற்றும் சிறு தொழில் முனைவோருக்கும், சில்லறை வணிகர்களுக்கும் எந்தக் கட்சி சீட் கொடுத்திருக்கிறது?


தொழிற்சங்க உரிமைகள் இழந்து, வேலை உத்திரவாதம் இழந்து, குறைந்தபட்ச ஊதியம் எனும் சட்டப் பாதுகாப்பும் இன்றி நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்கிறார்களே தொழிலாளர்கள் அவர்களுக்கும், நாடெங்கும் இரைந்துகிடக்கும் உதிரித் தொழிலாளர்களுக்கும் எந்தக் கட்சியில் பிரதிநிதித்துவம் இருக்கிறது?


பெயருக்குக் கூட நம்முடைய வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் இல்லாத மன்றம், நம்முடைய நலனைப் பற்றி எப்படிச் சிந்திக்க முடியும்?


'என்ன சாதி, எவ்வளவு ரூபாய் செலவு செய்வாய்" என்ற இரண்டு கேள்விகளின் அடிப்படையில்தான் ஓட்டுக் கட்சிகளின் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். 'பெரிய' சாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் வசதி சிறியதாக இருக்கும் கட்சித் தொண்டன் வேட்பாளராகவே முடியாது. இது தெரிந்த விசயம்தானே என்று நீங்கள் கருதலாம்.


விசயம் தெரிந்த பிறகும் நீங்கள் வாக்களிக்கிறீர்கள் என்றால் இவர்களை உங்கள் பிரதிநிதிகளாக ஒப்புக் கொள்கிறீர்கள் என்றே பொருள்.


சினிமாவில் நடித்து கோடி கோடியாய்ச் சம்பாதித்து, பிறகு தி.மு.க வில் சேர்ந்து எம்.பி பதவியும் வாங்கிவிட்ட சரத்குமார் என்ற நடிகனுக்கு மந்திரிப்பதவி வேண்டுமாம். இல்லை யென்றால் நாடார் சமுதாயம் பொங்கி எழுமாம். இதை ஆதரிக்க ஒரு கூட்டம். பத்திரிகைகளில் பக்கம் பக்கமாகக் கட்டுரைகள். அதே நாடார் சமூகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதை எதிர்த்தும், கோகோ கோலாவை எதிர்த்தும் போராடிக் கொண்டிருக்கிறார்களே இந்த நடிகனா அவர்களுடைய பிரதிநிதி?


விவசாயம் பொய்த்துப் போய், ஆந்திராவில் முறுக்கு சுட்டு விற்கவும், கேரளத்து எஸ்டேட்டுகளில் கூலி வேலை பார்க்கவும், திருப்பூர் பனியன் கம்பெனியில் கொத்தடிமையாக உழைத்து கந்துவட்டிக் கடனை அடைக்கவும் ஓடுகிறார்கள் மதுரை மாவட்டத்தின் தேவர் சாதியைச் சேர்ந்த விவசாயிகள். 'சின்ன ஜமீன்' கார்த்திக்கா இவர்களுடைய பிரதிநிதி?


குடித்து வளர்ந்த தாமிரவருணித் தண்ணீரையே கோகோ கோலாகாரனுக்குக் கூட்டிக் கொடுத்துவிட்டு, அதற்கு உத்தரவிட்ட ஜெயலலிதாவுடன் கூட்டணியும் அமைத்திருக்கும் கோபாலசாமியா ஈழத்தமிழர் விடுதலைக்குப் பிரதிநிதி?


திண்ணியத்தில் மலம், திண்டுக்கல்லில் சிறுநீர், தென் மாவட்டமெங்கும் தனிக்குவளை, பாப்பாப்பட்டி கீரிப்பட்டியில் அரசாங்க முத்திரை பெற்ற தீண்டாமை..... தலித் மக்களுக்கு ஜெயலலிதா அருளிச் செய்துள்ள இந்த 'சலுகை'களெல்லாம் போதாதென்று 9 தொகுதிகளையும் சேர்த்து வாங்கியிருக்கிறார் திருமா. புரட்சித் தலைவியிடம் சொல்லி பொதுச் சுடுகாடு களில் தலித் பிணங்களுக்கும் 9 இடங்களை பெற்றுத் தருவாரா இந்த தலித் பிரதிநிதி?


கல் சுமக்கவும் கட்டிட வேலை பார்க்கவும் பெங்களூருக்கு ஓடும் சேலம், தருமபுரி வன்னிய விவசாயிகளின் பிள்ளைகளை டாக்டராக்கி அழகு பார்க்கத்தான் மருத்துவக் கல்லூரி கட்டுகிறாரா மருத்துவர் அய்யா?


பாகிஸ்தானைப் பந்தாடி, ஊழல் போலீசை ஒழித்து, ஸ்பத்திரி லஞ்சத்தை ஓழித்து, இருட்டரங்கில் இந்தியாவை வல்லரசாக்கிக் காட்டிய விஜயகாந்த், வெளிச்சத்துக்கு வந்தவுடன் சுயநிதிக் கல்லூரி முதலாளியாகி விட்டார். இலவச அரிசிக்குப் பதில் இலவசக் கல்வி தருகிறேன் என்று அவர் ஒரு பேச்சுக்குக் கூட சொல்லாத மர்மம் என்ன? அவர் கல்விக் கொள்ளையர்களிடம் லட்சக்கணக்கில் ஜேப்படி கொடுத்த மாணவர்களின் பிரதிநிதியா, ஜேப்படி அடித்த ஜேப்பியாரின் பிரதிநிதியா?


உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிகிறது உண்மை. இதை மறைப்பதற்குத்தான் ஓட்டுப்பொறுக்கிகள் அரும்பாடு படுகிறார்கள். தங்களுக்கு சீட் கிடைக்காத சோகத்திற்காக உங்களை அழச்சொல்கிறார்கள். தங்களுக்குப் பொறுக்கித் தின்னும் வாய்ப்பு மறுக்கப்பட்டதை விளக்கி அதற்காக உங்களைக் கோபப்படச் சொல்கிறார்கள். தங்களுடைய அரசியல் எதிரிகளின் சந்தர்ப்பவாதங்களைச் சொல்லி உங்களைச் சிரிக்கச் சொல்கிறார்கள். சிம்ரன், விந்தியா போன்ற நடிகைகளை மேடையேற்றி அவர்களை ரசிக்கச் சொல்கிறார்கள். உங்களுடைய வர்க்கத்தின் கோரிக்கை என்ன என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்காமல், 'வாக்காளப் பெருமக்களாகவே' நீடிக்கும் வரை இவர்கள் நம்முடைய பிரதிநிதிகளாவதைத் தடுக்க முடியாது; பிதாமகன் சினிமாவில் வரும் ஒரு காட்சியைப் போல, நடிகை சிம்ரன் ஊர் ஊராகப் போய் இலவசமாக டான்ஸ் ஆடிக்காண்பித்து விட்டு, தன்னுடைய ரசிகப் பெருமக்களை அப்படியே வாக்காளப் பெருமக்களாக மாற்றி, முதல்வர் நாற்காலியிலும் அமர்ந்துவிட முடியும்.


வாக்காளப் பெருமக்களாகவே நீடிக்கப் போகிறீர்களா, வர்க்க உணர்வு கொண்ட உழைக்கும் மக்களாக மாறப் போகிறீர்களா என்பதுதான் எங்களுடைய கேள்வி.மறுகாலனியாக்கத்தை முறியடிக்க தேர்தல் தீர்வல்ல!

தி.மு.க கூட்டணிக்கும் அ.தி.மு.க கூட்டணிக்குமிடையில் என்ன கொள்கை வேறுபாடு? ஹமாம் சோப்புக்கும் லைப்பாய் சோப்புக்குமிடையில் உள்ள வேறுபாடுதான் இவர்களுக்கிடையிலான கொள்கை வேறுபாடு. இவர்கள் பேசுவதைக் கவனிப்பதற்குப் பதிலாக, பேசாதவற்றைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்.


தமிழகத்திலிருந்து போன மத்திய அமைச்சர்கள் மீது அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டுகிறார் ஜெயலலிதா. னால், சென்னைத் துறைமுகத்தை ஸ்திரேலிய நிறுவனத்துக்கு விற்றுவிட்டார் டி.ர்.பாலு என்றோ, அரசுத் தொலைபேசித் துறையை முடமாக்கி தனியார் தொலைபேசி முதலாளிகளைக் கொழுக்க வைக்கிறார் தயாநிதி மாறன் என்றோ, டிரிப்ஸ் (TRIPS) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மருந்துகளின் விலையை ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக்கிவிட்டார் அன்புமணி என்றோ ஜெயலலிதா குற்றம் சாட்டுவதில்லை. வை.கோ இவை பற்றியெல்லாம் மூச்சே விடுவதில்லை.


ஜெயலலிதாவின் சுனாமி ஊழல், வெள்ள நிவாரண ஊழல் பற்றியெல்லாம் விலாவாரியாகப் பேசும் தி.மு.க, தாமிரவருணி ற்றையே கோகோ கோலாவிற்குத் தாரை வார்த்த மாபெரும் ஊழலைப் பற்றி வாய் திறப்பதில்லை. தமிழகத்தில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களிலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் எவ்விதத் தொழிற்சங்க உரிமையும் இல்லாமல் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வைக்கப் பட்டிருப்பதை 'ஜெயலலிதாவின் சர்வாதிகாரப் போக்கிற்கு' ஒரு சான்றாகக் கூடக் காட்டுவதில்லை.


'நோக்கியாவை நான் கொண்டு வந்தேன்" என்கிறார் தயாநிதி மாறன். '•போர்டு, ஹ¥ண்டாய் கம்பெனிகளை நான் கொண்டுவந்தேன்" என்று வாங்கிப் பாடுகிறார் ஜெயா. 'தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட டைடல் பார்க் முதலான கணினித்துறை தொழில் வளர்ச்சிகளை அ.தி.மு.க அரசு தொடர்வதால், மேலும் முதலீடு போடுமாறு பில் கேட்ஸைக் கேட்டுக்கொண்டேன்" என்கிறார் கருணாநிதி.


சிவகங்கை கூட்டுறவு வங்கி மூடப்பட்ட விவகாரத்தைப் பேசி வரும் ஜெயலலிதா, விமான நிலையத் தனியார்மயம், காப்பீடு தனியார்மயம், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி போன்ற பிரச்சினைகளை ப.சிதம்பரத்துக்கு எதிராக தவறியும் பேசுவதில்லை.


உலக வங்கி - உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சி, அதனடிப் படையில் வகுக்கப்படும் இந்திய மக்களுக்கு எதிரான பொருளாதாரக் கொள்கைகள் கியவற்றில் இருவருமே முழுமையாக உடன்படுகிறார்கள். இவற்றைத் தீவிரமாக அமல்படுத்துவதன் மூலம்தான் தமிழகத்தை முதல் மாநிலமாக்க முடியுமென்றும் கூறுகிறார்கள். இந்தக் கொள்கைகளின் விளைவாகப் பாதிக்கப்படும் மக்களின் போராட்டத்தை ஒடுக்க போலீசைப் பலப்படுத்துவதையும் போலீசுக்குச் சலுகை வழங்குவதையும் போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள்.


இப்படி மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்துவதில் ஒரே கூட்டணியாகச் செயல்படும் இவர்கள், இந்தக் கொள்கைகளுக்கும் அரசியலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதாக மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள். தங்களுக்கிடையிலான இந்த முக்கியமான ஒற்றுமையைப் பார்க்காமல், முக்கியத்துவமற்ற வேற்றுமைகளைப் பெரிதுபடுத்திக் காட்டி அதிலேயே மக்களை மயங்கவும் வைத்திருக்கிறார்கள்.


இவ்விரண்டு கூட்டணிகளுமே பிழைப்புவாதக் கூட்டணிகள்தான் என்பது மக்களுக்குத் தெரிந்திருந்தாலும் வேறுமாற்று தெரியாததால், 'ஏதோவொரு அயோக்கியனைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?" என்று சிந்திக்கிறார்கள். 'அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா" என்று அவர்கள் சார்பில் வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். சில மூடர்கள் 'விஜயகாந்துக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்தாலென்ன?" என்று விபரீதமாகச் சிந்திக்கிறார்கள்.


லஞ்சத்தை வெறுத்த மக்களை 'லஞ்சம் தவிர்க்க முடியாதது' என்று காலப்போக்கில் ஏற்கச் செய்ததைப் போல, குடிநீருக்கும் சிறுநீருக்கும் கூடக் காசு கொடுத்தாக வேண்டும் என்று மக்களைப் பழக்கியதைப்போல, கல்வியும் மருத்துவமும் காசுக்கு மட்டும்தான் என்பதை சகஜமாக்கியதைப் போல அரசியல் சீரழிவுக்கும் மக்களைப் பழக்கியிருக்கிருக்கிறார்கள்.


இந்தத் தேர்தல் ஜனநாயகம் சீரழிந்ததற்குக் காரணமானவர்கள் ஓட்டுப் பொறுக்கிகள் மட்டுமல்ல. மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக நாட்டின் இறையாண்மையும், மக்களின் வாழ்வுரிமைகளும் பன்னாட்டு நிறுவனங்களால் சூறையாடப்பட்டு, உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைகளுக் கேற்ப இந்திய அரசு ஆடிவரும் சூழலில், 'ஜனநாயகம்' என்பதும், 'வாக்குரிமை' என்பதும் கவைக்குதவாத கேலிப்பொருட்களாகி வருகின்றன.


நாடே அந்நிய வல்லரசுகளுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும்போது, இந்த பொம்மைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதால் என்ன பயன்? இராக்கை நேரடியாக க்கிரமித்துக் காலனியாதிக்கம் செய்கிறது அமெரிக்கா. அந்த திக்கத்தின் கீழ் ஏதோவொரு அமெரிக்கக் கைக்கூலியைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் போலித் தேர்தலைப் புறக்கணித்து அமெரிக்க இராணுவத்திற்கெதிராக யுதப் போராட்டம் நடத்துகிறார்கள் இராக் மக்கள்.


நாம் சந்தித்துக் கொண்டிருப்பதோ மறுகாலனியாதிக்கம். அன்று நம் நாட்டை வணிகம் என்ற பெயரில் அடிமைப்படுத்திய கிழக்கிந்தியக் கம்பெனியின் இடத்தில், இன்று பல பன்னாட்டு நிறுவனங்கள்; அந்த நிறுவனங்களின் எடுபிடிகளாக பல்வேறு ஓட்டுப்பொறுக்கிகள். இந்த ஓட்டுப் பொறுக்கிகளில் யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவா நாட்டை விடுவிக்க முடியும்? தேச விடுதலையை யாரேனும் ஓட்டுப் பாதையின் மூலம் வென்றெடுத்ததாக வரலாறு உண்டா?


இந்தத் தேர்தல் முறை என்பதொன்றும் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தோன்றியதுமல்ல் வேறு மாற்றே இல்லாத ஒரே ஆட்சி முறையுமல்ல. தனக்குச் சேவகம் செய்யும் கைக்கூலிகளை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு, நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியவைதான் இன்று நாம் காணும் சட்டமன்றமும், தேர்தல் முறையும். அன்று திவான் பகதூர்களும் ராவ்பகதூர்களும் சட்டமன்றப் பதவிச்சொகுசை அனுபவித்துக் கொண்டிருக்க, உண்மையான விடுதலை வீரர்கள் தெருவிலிறங்கிப் போராடினார்கள்.


அந்த ராவ்பகதூர்களின் வாரிசுகளான ஓட்டுப்பொறுக்கிகள் இன்று நாட்டை அந்நிய வல்லரசுகளுக்கு விலை பேசுகிறார்கள். பன்னாட்டு முதலாளிகள் வீசும் எலும்புத் துண்டுகளுக்கும், அரசுச் சன்மானங்களுக்கும் அடித்துக் கொள்வதையே ஜனநாயகம் என்று சித்தரிக்கிறார்கள்.


மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடும் நாங்கள், இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்கிறோம். மறுகாலனியாக்கத்திற்கு எதிரான போராட்டத்தினூடாக ஒரு புதியஜனநாயக அரசமைப்பை உருவாக்க வேண்டுமென்கிறோம்.


இலவசங்களுக்கு மயங்கியது போதும். வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டது போதும். நம் காலடியிலிருந்து நழுவித் தேசமே அந்நியன் கைகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. போராடி வென்றெடுத்த உரிமைகள் எல்லாம் நம் கைகளிலிருந்து ஒவ்வொன்றாய் உருவப்படுகின்றன. சூறைக்காற்றில் சிக்கிய காகிதமாய் பிடிமானமின்றி அலைக்கழிக்கப் படுகிறது நம் வாழ்க்கை.


நின்று ஒரு கணம் சிந்தியுங்கள். ஏன் என்று ஒரு முறை கேட்டுப் பாருங்கள். இந்தத் தேர்தலை விட்டால் வேறு வழியில்லை என்ற உங்கள் கருத்து மாறும்.


'ஓட்டுப் போடாதே, புரட்சி செய்" என்ற எங்கள் முழக்கம் உங்களது முழக்கமாக உடனே மாறும்! நேபாளத்தின் மாவோயிஸ்டுகள், பிலிப்பைன்ஸின் 'தேசிய மக்கள் படை', பெருவின் 'ஒளிரும் பாதை', என்ற அணிவரிசையில் இந்தியாவின் நக்சல்பாரிப் பாதை விடுதலைக்கான புதிய வழியைப் படைத்துக் காட்டும்!


வெளியீடு

மக்கள் கலை இலக்கியக் கழகம்

விவசாயிகள் விடுதலை முன்னணி

புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

Monday, April 24, 2006

மக்கள் விரோத அரசியலுக்கு லாடம் கட்டும் முயற்சி

மக்கள் விரோத வலதுசாரிய அரசியலுக்கு லாடம் கட்டும் முயற்சி தேவைதானா!

பி.இரயாகரன்
23.04.2006

ண்மையில் மரணமடைந்த புஸ்பராஜா பற்றி, பலரும் எதிர்பார்த்தது போல் நான் எதையும் எழுதாமல் இருந்தேன். அவரின் 35 வருட அரசியல் சார்ந்த பொதுவாழ்வும், சில காலம் கடுமையான சித்திரவதையுடன் கூடிய சிறைவாழ்வும் என எதையும், அரசியல் ரீதியாக நியாயப்படுத்த முற்படாத ஒரு நிலையில் மரண நிகழ்வு நடந்தது. தனிப்பட்ட நட்பே முன்னிலைப்படுத்தப்பட்ட அஞ்சலிகளே எனது விமர்சனத்தை அவசியமற்றதாக்கியிருந்தது. ஆனால் ஒரு மாதத்தின் பின்பாக அவரை அரசியல் ரீதியாக முன்னிலைப்படுத்தி, இதுதான் புரட்சிகரமான அரசியல் பாதை என்று அடையாளப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட ஒரு நிலையில், இவ் விமர்சனம் அமைகின்றது. அவரைப்பற்றி ஒரு ஒளித்தொகுப்பு ஒன்றைக் கூட வெளியிட்டவர்கள் "விதையாய் விழுந்தாய் விருட்சமாய் எழுவோம்" என்று அதற்கு தலைப்பிட்டுள்ளனர்.

இது ஒருபுறம் என்றால், புஸ்பராஜா மரணத்தின் முன்பே தனது மரணம் தெரிந்த ஒரு நிலையில், தன்னைப்பற்றிய ஒரு அரசியல் விளம்பரத்தை அடிப்படையாக கொண்டு ஒரு அரசியல் முன்முயற்சியையும் முன்னெடுத்து இருந்தார். இந்திய மக்களின் வாழ்வையே நஞ்சாக்கும் ஆனந்தவிகடனில் வழங்கிய இறுதிப் பேட்டி ஒன்றில், இறுதி தொலைகாட்சி பேட்டி (இது டான் தொலைக் காட்சி பேட்டி. இது மரணத்தின் பின் ஒரு மாதம் கழித்து வெளிவந்தது.), இறுதி கையெழுத்து உயில் என்று அவரே தன்னைப்பற்றி அமர்க்களப்படுத்திவிட்டு சென்றுள்ளார். இவற்றை எல்லாம் அடிப்படையாக கொண்ட ஒரு அரசியல் பிரமை கட்டமைக்கப்பட்டு, இது தான் புரட்சிகரமான நடவடிக்கையாக காட்டுகின்ற அரசியல் முயற்சி மீதான விமர்சனமே இது.
பொதுவாக விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவம் புலிக்கு மட்டுமல்ல, புலியின் எதிர்தரப்புக்கும் கிடையாது. வன்மம் கொண்ட காழப்புகள் இதன் பின் சுழன்றடிக்கின்றது. இதன் எதிர்வினை தனிப்பட்ட தூற்றுதலாகவே மாறுகின்றது. பொதுவாழ்வில் மரணமடைந்தவர்கள் மீதான விமர்சனத்தை செய்யும் போது, விமர்சனம் இருப்பவர்கள் கூட அதை மூடிமறைத்தபடி மிகச் சிறந்த அரசியல் நடிகராகி விடுகின்றனர்.

பொதுவாக புலியல்லாத தரப்புகள் தமக்குள் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும் என்ற பொதுவான கண்ணோட்டம் காணப்படுகின்றது. புலிகள் தாம் அல்லாதவர்களை எதிரியாக கருதி, அவர்கள் மேல் திணிக்கின்ற வன்முறையையும், அது வழங்கும் அடையாளத்தினையும், புலியல்லாத தரப்பு தமது சொந்த அரசியல் அடையாளமாக கொள்கின்ற ஒரு பொது நிலையில், எமது விமர்சனங்களை இவர்கள் கூட புலிப்பாணியில் தான் எதிர்கொள்ளுகின்றனர்.

எமது விமர்சனங்கள் அரசியல் ரீதியாக அமைகின்ற போது, புலி மற்றும் புலியல்லாத பொதுத்தளத்திலும் கூட உள்நுழைந்து விடுகின்றது. ஒரு சரியான மக்கள் நலன் சாரந்த அரசியல், இந்த இரு பொது போக்குக்கும் வெளியில் தான் உள்ளது. இதுவே அரசியல் விமர்சனமாகின்றது.
வாழும் போது ஒன்றையொன்று குழிபறித்து முதுகுக்குப் பின்னால் அரசியல் செய்யும் கூத்துகள் சொல்லிமாளாது. ஆனால் மரணத்தின் பின் திடீரென தூக்கி நிறுத்தி கட்டமைக்கின்ற அரசியல் பிரமைகள் வேஷங்கள் அனைத்தும், தமிழ் பேசும் மக்களின் விடுதலையின் பெயரில் அரசியலாய் செய்யப்படுவதை நாம் அனுமதிக்க முடியாது. விமர்சனம் என்பது இது போன்ற இழிந்து போன முன்முயற்சிகளை தடுத்து நிறுத்தி, மக்களுக்காக அவர்களின் சொந்த பிரச்சனைகள் மீது போராடி உண்மையாக மக்களுக்காக வாழக்கோருவது தான்.

இதைப் புரிந்துகொள்ளாத பொதுவாழ்வும், தியாகங்களும் அர்த்தமற்றதாக, மக்களுக்கு எதிரானதாக மாறுகின்றது. மக்களின் எதிரியாக உள்ள அரசியலுக்கு துணை போவது தான் நிகழ்கின்றது. நாங்கள் அதை புரிந்து கொள்ளமுடியாத அரசியல் அப்பாவிகளாக இருப்பது ஒருபுறம், இதைப் புரிந்தும் அதையே அரசியலாக நம்புவது மறுபுறம். புஸ்பராஜாவைப் போல், தியாகங்கள் புலிகளாலும் நிகழ்த்தப்படுகின்றது, புலியெதிர்ப்பு அணியிலும் நிகழ்தப்படுகின்றது. எப்படி இதைப் புரிந்து கொள்வது? இந்த தியாகங்கள் உண்மையில் மக்களுக்கானதாக இருப்பதில்லை. இது புஸ்பராஜாவுக்கும் விதிவிலக்கல்ல. இதை முதலில் நாம் புரிந்துகொள்வது வரலாற்றக் கடமையாகின்றது.

புஸ்பராஜாவின் கடந்தகால செயற்பாட்டை பற்றி நான்கு தளத்தில் பிரித்து ஆராய்வதன் மூலமே, சூக்குமங்களை கடந்து அவரை சரியாக நாம் இனம் காணமுடியும்.

1. 30, 35 வருடத்துக்கு முந்திய அவரின் கடந்தகால அரசியல் இறுதிகாலம் வரை மாற்றம் இன்றி இருந்ததையும், அது சார்ந்த அவரின் அரசியல் நடத்தைகள் பற்றியதும்.

2. புலியெதிர்ப்பு அணியில் தன்னை இனம் காட்டி நின்றது.

3. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற அவரின் நூல் தொடர்பானது.

4. தனது மரணம் தெரிந்த நிலையில், இதை அடிப்படையாக கொண்டு அவர் வழங்கிய பேட்டிகள், மற்றும் அவசர சந்திப்புகள், மற்றும் இறுதியாக அவர் எழுதி வைத்தவை.

நான்கு தளத்தில் பல உட்பிரிவுகளுடன் புஸ்பராஜா பற்றிய பிரமைகள் கட்டமைக்கப்படுகின்றன. எது எப்படி இருந்தாலும் கடைசி இரண்டு தான், இறுதி நேரத்தில் அவரைப்பற்றி சொல்வதற்கு பலருக்கும் ஒரு அடிப்படையை உருவாக்கி கொடுத்தது. புஸ்பராஜா கடைசி நிமிடத்தில் தன்னைப்ப்றி ஒரு விம்பத்தை கட்டுவதில், தீவிரமாக தானாகவே முனைந்தார். அவர் இதற்காக இந்தியா வரை கூட சென்றவர். தனது மரணம் இந்தியாவில் ஒரிரு நாட்களில் என்று தெரிந்தவுடன், அவசரமாக பிரான்ஸ் திரும்பி மரணித்தன் மூலம் கூட, தனது அனாதை மரணத்தைக திட்டமிட்டு தவிர்த்துக் கொண்டவர். இப்படி மிகவும் திட்டமிட்ட வகையில் தன்னை கட்டமைக்க முனைந்த புஸ்பராஜா பற்றி, நாம் அரசியல் ரீதியாக எப்படி புரிந்து கொள்வது.

அவரின் கடந்தகால நிகழ்கால அரசியல்

30, 35 வருடத்துக்கு முந்திய அவரின் கடந்தகால அரசியல் எந்த மாற்றமும் இன்றி இறுதிகாலம் வரை அப்படியே நீடித்தது. அவர் தன்னையும், கடந்தகால அரசியலையும் சுயவிமர்சனம் விமர்சனம் செய்தது கிடையாது. இது சார்ந்தே அவரின் அனைத்து அரசியல் நடத்தைகளும் இருந்தன. இந்த உண்மையை அரசியல் ரீதியாக ஆராயும் பட்சத்தில், அவை எந்த விதத்திலும் மக்களுக்கானவையாக இருக்கவில்லை.

1970களில் அவர் வரிந்து கொண்ட அரசியல் என்பது, அடிப்படையில் வலதுசாரிய அரசியல் தான். இந்த அரசியல் வழியில் இருந்து, அவர் என்றும் தன்னை சுயவிமர்சனம் செய்தது கிடையாது. அதை அவர் போற்றினார். அதை தனது பெருமைக்குரிய ஒன்றாக காட்டி, அந்தப் பிரமைகளுடன் மடிந்து போனவர். அவரை அறிமுகப்படுத்தியது அந்த அரசியல் தான் என்ற போதும் கூட, அது மக்களுக்கு எதிரான வலதுசாரிய அரசியல் என்பதை அவர் சுயவிமர்சனம் செய்தது கிடையாது. தன்னை தலித் என்றும், புலியெதிர்ப்பு அணியாகவும், புலம்பெயர் இலக்கியவாதியாகவும், ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினராக காட்டி, வாழ்ந்து மடிந்த காலத்திலும் கூட, ஒரு வலதுசாரியாகவே வாழ்ந்தவர். இந்த அரசியல் இடதுக்கு எதிரான மிகவும் வன்மமிக்க ஒரு அரசியலாகவும், இடதுக்கு எதிரான வன்முறையைக் கையாள்வதில் துணை போவதில் பின்நிற்காத ஒருவராகவே இருந்தார். இடதுக்கு எதிராக ஜனநாயக மறுப்பாளராகவே எதார்த்ததில் வாழ்ந்தார்.
1970 களில் தமிழரசுக்கட்சி மற்றும் கூட்டணியில் இளைஞர் பிரிவுகளில் தீவிரமான செயற்பாட்டாளராக இருந்தவர். 1970 களில் கூட்டணியின் அரசியல் எதிரிகளைக் கொல்லத் தொடங்கிய தனிமனித பயங்கரவாதத்துடன் நெருக்கமான தொடர்புகள், பங்குபற்றல்களை கொண்டிருந்தவர். இந்த தனிமனித பயங்கரவாத அரசியலுடன், அவர் என்றும் முரண்பட்டது கிடையாது. 'கொலைகளை நிறுத்துங்கடா" என்ற அவரின் இறுதி மரணச் செய்திலும் கூட, தனிமனித பயங்கரவாத அரசியலை நியாயப்படுத்தி விட்டே சென்றவர். அவர் தனது கடந்தகால செயற்பாட்டை பெருமையாக முன்னிலைப்படுத்தியவர். மரணம் வரை அதைப் பீற்றியவர்.

அவரின் கடந்தகால தனிமனித பயங்கரவாத செயல்களும், பேரினவாதத்துக்கு எதிரான போராட்டங்களும் அவரை சிறிலங்காவின் சிறைக்கு இட்டுச் சென்றது. இதனால் பலத்த சித்திரவதைகளை பலமுறை சந்தித்தவர். அவரின் குடும்பமே பேரினவாதிகளின் சித்திரவதைகளை தொடர்ச்சியாக சந்தித்தது. அக்காலத்தில் புஸ்பராஜாவும் அவர் குடும்பமும் சிறிலங்காவின் கொடூரங்களுக்கு ஒரு எடுத்துகாட்டான அடையாளமாக, பலரும் அறியக் கூடிய ஒன்றாகவும் இருந்தது. இதைச் சொல்லியே புலிகள் இயக்கம் முதல் பல இயக்கங்களும் அரசியல் செய்தனர்.

அன்று புஸ்பராஜா மரணித்து இருந்தால், சிவகுமாருக்கு கிடைத்த அதே அந்தஸ்து கிடைத்து இருக்கும். ஆனால் அந்த அதிஸ்ட்டம் அவருக்கு கிடைக்கவில்லை. 1982 களில் பிரான்ஸ் வந்தபின், இவரின் இரண்டாவது அரசியல் காலம் ஈ.பி.ஆர்.எல்.எவ்யுடன் இணைந்த பின் தொடங்கியது.
இங்கும் இந்திய ஆக்கிரமிப்புக்கு முன் பின் என்று இரண்டு காலகட்டத்திலும் அவரின் அரசியல் பாத்திரம் உண்டு. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சென்ற கப்பலில் சென்ற போதும் சரி, பின்பு ஆக்கிரமிப்பாளனின் கெலியில் மக்களின் மேலாக பறந்து திரிந்த போதும் சரி, இந்திய இராணுவ பாதுகாப்பில் கூலி இராணுவ முகாமில் தங்கி இருந்த போதும் சரி, இவர் கொல்லப்பட்டு இருந்தால் அதன் விளைவு எப்படிப்பட்டதாக இருந்து இருக்கும்.
இவரின் பொதுவாழ்வில் மரணத்தின் தளம், மரணத்தின் இடம் எல்லாம் மாறிக் கொண்டே இருந்தது. நேர்மையான மக்கள் அரசியலை முன்னெடுக்காத வரை, மரணம் கூட அவர்களின் அரசியலை நியாயப்படுத்திவிடாது. இப்படி பல்வேறு வழிகளில் புஸ்பராஜா பயணித்த நிலையில், இந்த வரலாற்றை சரியானதாக காட்டுவது அந்தப் பாதையில் செல்ல முனைவது முனைப்புக் கொள்வது கடும் விமர்சனத்துக்குரியது.
தமிழ் மக்கள் என்ற பெயரில் நடத்திய அனைத்து அரசியல் கூத்தும், மக்களின் வாழ்வுடன் தொடர்பற்றவையாக இருந்தது. அதிலும் வலதுசாரியத்தை அடிப்படையாக கொண்டது. இது இயல்பாக மக்கள் விரோத அடிப்படையில் பாசிசத்தை தனது அரசியல் சித்தாந்தமாக வரிந்து கொண்டது. இதில் புஸ்பராஜா பங்கு கொண்டதுடன், அதை என்றும் சுயவிமர்சனம் செய்தவரல்ல. மாறாக கடைசி வரையும் அதை பெருமையாக காட்டி நியாப்படுத்தியவர். அவரின் நூல் அதையே செய்ய முனைகின்றது.
தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலுடன் சங்கமித்து இருந்த புஸ்பராஜாவின் அரசியல், படுபிற்போக்கான யாழ் மேலாதிக்க குறுந்தேசியவாதம் தான். அனைத்து சமூக ஒழுக்குமுறையையும் களைவதற்கு எதிரான ஒரு குறந்தேசிய அரசியல் தான். இதை அவர் கடைசிக்காலம் வரை கூட மாற்றியது கிடையாது. தனது கடைசிக்காலத்தில் அமிர்தலிங்கத்துக்கு நடத்திய அஞ்சலிக் கூட்டம் முதல் தொண்டமானுக்கு நடத்திய அஞ்சலிக் கூட்டம் வரை, இதற்கு சிறந்த சான்று பகிர்கின்றது.
கூட்டணியின் தமிழ் தேசிய அரசியல் என்பது, 1940 முதலே இனவாதத்தை அடிப்படையாக கொண்டது. தமிழ் மக்களை தமிழ் தேசியத்தின் பெயரில் ஏமாற்றி, அவர்களின் வாழ்வை சூறையாடுவதை அடிப்படையாக கொண்டது. சிங்களப் பேரினவாதத்தைக் காட்டி அதில் தமது சொந்த குறுந்தேசிய வாதத்தைக் கட்டமைத்தனர். உண்மையில் சிங்கள பேரினவாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் எதைச் செய்தனரோ, அதைத்தான் தமிழ் தேசியத்தின் பெயரில் குறுந்தேசியவாதிகள் செய்தனர். கூட்டணியின் மிகச் சிறந்த ஆயதமேந்திய பிரதிநிதிகள் தான் புலிகள். கூட்டணியின் அரசியலுக்கு வெளியில் புலிகளுக்கு என்ற தனித்துவமான அரசியல் கிடையாது. கொலைகள் பற்றிய கண்ணோட்டத்திலும் கூட.

கூட்டணியின் அரசியல் என்பது யாழ் மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்டது. உயர்சாதியத்தை அடிப்படையாக கொண்டது. ஆணாதிக்கத்தை அடிப்படையாக கொண்டது. தமிழ் தரகு முதலாளிகளின் ஏக பிரதிநிதிகளாகவும், தமிழ் நிலப்பிரபுத்துவத்தின் ஏக பிரதிநிதிகளாக தம்மை வெளிப்படுத்தி, அதற்காக தமிழ்மக்களை அடிமைப்படுத்தியவாகள். இப்படி சமூகத்தின் சகல அவலத்தினையும் பாதுகாக்கும், வலதுசாரி கூட்டணி அரசியலில் தான், புஸ்பராஜா தன்னை நிலைநிறுத்தியவர். அவரின் மரணம் வரை அதையே புலிகள் விதிவிலக்கின்றி தமது கோட்பாட்டு நீட்சியாக பேணியவர்.

அன்று முதல் இன்று வரை கூட்டணி அரசியல் இடது எதிர்ப்பை அடிப்படையாக கொண்டதாக உள்ளது. அன்று தமது அரசியலுக்கு போட்டியாளராக இருந்தவர்களை துரோகிகளாக காட்டி படுகொலை செய்வித்தவர்கள். பிரபாகரன் கூட அப்படி அமிர்தலிங்கத்தால் வளர்க்கப்பட்டவர். தனிமனித பயங்கரவாத அரசியல் எடுபிடியாகத் தான் இவர்கள் வாலட்டியவர்கள். இந்த கூட்டணியின் தொடர்ச்சியான அரசியலில் புஸ்பராஜா விசுவாசமாக அதற்காகவே கடைசி வரையும் குலைத்தவர். "கொலைகளை நிறுத்துங்கடா" என்று சொன்னவர், கடந்தகாலத்தில் அதாவது கூட்டணி காலத்தில் நடந்த இதே போன்ற அரசியல் கொலைகளை அவர் விமர்சிக்கவில்லை. மாறாக அதை அவர் தனது சொந்த நூலில் நியாயப்படுத்தியுள்ளார்.

புஸ்பராஜா தமிழரசுக் கட்சியுடன் தொடர்பு கொண்ட காலத்தில் தான், சாதியத்துக்கு எதிரான போராட்டம் யாழ் மண்ணில் வீறு கொண்டிருந்தது. உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான போராட்டமும் கூட நடைபெற்றது. பேரினவாதத்துக்கு எதிரான போரட்டங்களும் கூட, இடதுசாரி கண்ணோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதைக் கூட்டணி தெளிவாகவும் துல்லியமாகவும் எதிர்த்தது. பேரினவாதத்துடன் இந்த விடையத்தில் கூட்டுச் சேர்ந்து இடதுகளை ஒழித்துக்கட்ட போராடியது. தீவிர குறுந்தேசியத்தை மாற்றாக முன்வைத்தது.

ஒடுக்கப்பட்ட ஒரு சாதியில் இருந்து வந்த புஸ்பராஜா, தீவிர இடது எதிர்ப்பு கொண்ட வலதுசாரிய உயர்சாதிய கட்சியில் இணைந்து கொண்டது மட்டுமல்ல, அதை தனது மரணம் வரை நியாயப்படுத்தியதை நாம் எப்படி இன்று நியாயப்படுத்த முடியும். புஸ்பராஜா இந்தக் குறுந்தேசிய, யாழ் மேலாதிக்க, உயர்சாதிய, ஆணாதிக்க இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தனது கடந்தகால வரலாற்றை, அவர் என்றுமே சுயவிமர்சனம் செய்தது கிடையாது. இறுதி வரை அதை பாதுகாக்கும் அரசியலையும், அரசியல் நடத்தைகளிலும் ஈடுபட்டவர். அதை காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப வலதுசாரிய அரசியல் வழியில் நியாயப்படுத்தியவர். உதாரணமாக பெண்ணிய நோக்கிலும் கூட நியாயப்படுத்த முனைந்தவர். பெண்களை தாம் இயக்கத்தில் இணைத்ததாக கூறுவதை பெண்ணியம் என்கின்றார். புலிகளும் தான் பெண்களை இயக்கத்தில் இணைக்கின்றனர். இது பெண்ணியமா?
தமிழரசுக் கட்சியின் உள்முரண்பாட்டின் பின்பு ஏற்பட்ட பிளவும், மீண்டும் கூட்டணிக்கு வரும் மீள் பிளவிலும் கூட, பிற்போக்கான அரசியல் தேர்வையே செய்தவர். இதன் பின்பாக கூட்டணி அரசியலில் சிதைந்து சிதறிய ஒரு நிலையில் உதிரியாகின்றார். இதன் பின்பாக தனிப்பட்ட நலன், குழு நலன் அடிப்படையில் தான் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடன் இணைந்தவர். ஈ.பி.ஆர்.எல்.எவ் உலகத்தை ஒற்றை ஏகாதிபத்தியமாக வகைப்படுத்தி, சோவியத் என்ற சமூக ஏகாதிபத்தியத்தை சோசலிச நாடாக காட்டி, இந்திய கைக்கூலிகளாகவே அவ்வியக்கம் கட்டமைக்கப்பட்டது. வர்க்கம் என்பது அவர்களுக்கு வெறும் சொல்லலங்காரம் மட்டும் தான். சாதியம் என்பது ஆளெடுக்கும் ஒரு சாதிய விளைநிலம் தான். சாதியப் போராட்டம் நடந்த மண்ணில், இந்த இயக்கம் தொடர்ச்சியான எந்த சாதிப் போராட்டத்தையும் திட்டமிட்டு முன்னெடுக்கவில்லை.

உண்மையில் யாழ் மேலாதிக்க இயக்கமாகவே அது உருவானது. சிந்தனையும் செயலும் அப்படித் தான் இருந்தது. இதற்கு எதிராக செழியன்-தாஸ் தலைமையிலான உள்முரண்பாடு கூர்மை அடைந்து இருந்தது. இன்று புலியின் பின்னால் வாலாட்டி நிற்கும் பிரேமச்சந்திரன் தான், அந்த இயக்கத்தின் உண்மையான தலைவன். பத்மநாபா அந்த இயக்கத்தின், வெறுமனே மனிதாபிமானம் கொண்ட ஒரு பொம்மை. மாறாக பிரேமச்சந்திரன் இந்தியாவின் நேரடியான கைக்கூலி. இந்த இயக்கத்தை புலிகள் தடைசெய்து படுகொலைகளை நடத்தியதன் பின்பாக, இந்தியக் கைக்கூலித்தனமே ஆளுமை பெற்று அங்கீகாரம் பெற்ற ஒன்றாக மாறியது. மற்றைய போக்குகளை அவ்வியக்கம் அனுமதிக்கவில்லை.

இந்திய ஆக்கிரமிப்பின் போது ஒரு கூலிப்பட்டாளமாகவே அது செயற்பட்டது. இதன் போது புஸ்பராஜா எப்படி செயற்பட்டார். இந்தியக் கைக் கூலியாக, தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு கூலி இராணுவத்துடன் சேர்ந்து இயங்கினார். ஆக்கிரமிப்பாளனின் துணையுடன் வடக்கு கிழக்கு மண்ணில் பவனி வந்தவர். இந்திய கெலிகளிலும், இந்திய இராணுவ வாகனங்களிலும், இந்திய போர்க் கப்பலிலும் தமிழ் மக்களை சுற்றியும் மேலாகவும் ஊடறுத்தும் திரிந்தவர். இப்படி தான் இவரின் வலதுசாரிய அரசியல் இயல்பாகவே இழிவான சமூக பாத்திரத்தை வகித்தது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் சமூகத்தில் இழிந்து சிதைந்து போகும் வரை, அதில் ஒட்டிக் கொண்டிருந்தவர். இதன் பின்னால் புலியெதிர்ப்பு அணி, புலம்பெயர் இலக்கியத்துடன் ஒட்டிக் கொள்ளத் தொடங்கியவர்.
அதிகாரமற்ற ஒரு நிலையில், வக்கற்றுப் போனவர்களின் நிலையையே தனது வாழ்வாக கொண்டிருந்தார். இது உருவாக்கும் வக்கற்ற புலம்பல்களே, இலக்கியமாகவும் அரசியலாகவும் வெளிப்பட்டது. சமூகத்துக்கு என வழிகாட்ட வக்கற்றுப் போனார்கள். இதை அவர் தனது இறுதிப் பேட்டியில் தெளிவாகவே, மக்களுக்கு எனச் சொல்ல தன்னிடம் எதுவும் இல்லை என்கின்றார். மாறாக தம்மை மிதப்பாக காட்டுவதன் மூலம், சமூகத்தில் ஒரு இடம் கிடைக்குமா என்ற அங்கலாய்ப்பில் அங்கும் இங்குமாகவே ஒடித் திரிந்தவர். எல்லாருடனும் சிரித்துக் கதைத்து தன்னைத்தான் நடுநிலையாளனாக காட்டிக் கொள்ள முனைந்தவர்.

புலியெதிர்ப்பு அணியில் தன்னை இனம் காட்டியது

போக்கிடமற்றவர்களின் தங்குமிடமாக புலியெதிர்ப்பு மூகமுடி எப்போதும் உதவி வந்தது. இது புஸ்பராஜாவுக்கும் விதிவிலக்கல்ல. புலியெதிர்ப்பு அணியில் தன்னை இனம் காட்டிக் கொண்டதன் மூலமே, தனது இறுதி காலத்தை அரசியலுக்குள் ஒட்டியவர். அங்கும் அவர் புலியுடன் இணங்கிக் கொள்ளும் வகையில், ஒரு வலதுசாரிய நடுநிலை போக்கை அங்குமிங்குமாக கையாண்டவர். புலிகளின் சில நடத்தைகளை மட்டும் எதிர்த்தவர், அவர்களின் சமூக பொருளாதார குறுந்தேசிய அரசியலை சரியென்று கூறியவர். இதுதான் அவரின் கடந்தகால தேசிய அரசியலாக இருந்தது. இது இயல்பில் புலிகளுடன் முரண்படாத வகையில், தன்னைத்தான் நியாயப்படுத்திக் கொள்ளவே உதவியது. அனைத்து தரப்பிடமும் இருந்து, தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பெற தீவிரமாக முனைந்தவர். இது தான் அவரின் இறுதிகால அரசியல் முயற்சியாக இருந்தது.

மக்கள் அரசியலைக் கைவிட்ட புலியெதிர்ப்பு என்பது 1990 களில் ஒரு அரசியல் போக்காகவே தொடங்கியது. புலிகள் அல்லாத அனைவரையும் படுகொலைகள் மூலம் அழித்த புலிகள், தாம் அல்லாத அனைத்தையும் எதிரியாக முத்திரை குத்தினர். இந்த நிலையில் மற்றவர்கள் அனைவரையும் ஒரு அணியாக புலிகளே அடையாளம் காட்டத் தொடங்கினர். துரோகி என்று பொதுவாக புலிகள் இட்ட அடையாளமே, புலியெதிர்ப்பு அணியாக அவர்களையே ஒரு கும்பலாக ஒருங்கிணைத்தது.

இந்த புலியெதிர்ப்பு கும்பல் அரசியல், தனித்துவமான தமது சொந்தக் கருத்துகளை படிப்படியாக இழந்து இழிந்து போனது. புலிக்கு எதிரான அனைத்தும், இந்தக் கும்பலின் கருத்து என்ற உள்ளடகத்திலேயே இந்தப் போக்கு அரசியலாக வளர்ச்சியுற்றது. இதற்குள் முரண்பாடு என்றால், தனிநபர் ஈகோ முரண்பாடுகள் மட்டும்தான் இதற்குள் எஞ்சியது. புலிகள் தாம் அல்லாதவர்களை ஒன்றாக்கி அவர்களையே இழிவுபடுத்தியது போது, அவர்கள் அந்த இழிவை விசுவாசமாக ஏற்றுக் கொண்;டு முதலில் செய்தது தமது சொந்தக் கருத்துக்களை இழந்தது தான். இழிந்து அரசியல் ரீதியான சீரழிந்து, மக்களை எதிரியாக பார்க்கின்ற ஒரு அரசியல் உணர்வாக அது வளர்ச்சியுற்றது. இதுவே புலிகளை மேலும் மக்களுக்கு எதிராகப் பலப்படுத்தியது. மக்களுக்கு எதிராக இரண்டு வலதுசாரிய அணிகள், எதிர்நிலையில் ஒன்றையொன்று எதிர்த்தபடி உருவானது.

இரண்டும் புலிகள் சமன் மக்கள் என்ற கோட்பாட்டை உயர்த்தினர். மக்களின் நியாயமான கோரிக்கைகளை புலியின் கோரிக்கையாக காண்பது இதன் அரசியலாகியது. இதை புலிகள் தாம் செய்தனர் என்றால், புலியெதிர்ப்பணியும் இதையே செய்து, அனைத்தையும் புலியாகக் கண்டது. இது இயல்பில் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையையே மறுக்கத் தொடங்கியது. அனைத்து சமூக ஒடுக்குமுறையையும் முரணற்றவகையில் ஒழிப்பது தான் ஜனநாயகக் கோரிக்கை. இதைப் புரிந்து கொள்ளாது, புரிந்துகொள்ள முனையாது, மக்களின் கோரிக்கையை புலிகள் கொண்டுள்ளதாக கருதிய புலிகளும், புலியெதிர்ப்பு கண்ணோட்டமும் இயல்பாக, தமது சொந்த தவறான முடிவுகளால் இயல்பில் மக்களுக்கு எதிராகவே மாறின. சிலர் அங்கும் இங்குமாக தமது சொந்த வலதுசாரிக் கருத்துகளை இவ் இரண்டுக்குள்ளும் தேடினர். இந்த வகையில் புஸ்பராஜாவும் ஒருவர்.

கும்பலாக ஒருங்கிணைந்த புலியெதிர்ப்பு அணி, தன்னை வலது இடது கலந்த ஒன்றாக காட்டியபடியே இடது அரசியலையே களைந்து கைவிட்டது. மாறாக வலது அரசியலையே முதன்மைப்படுத்தியது. இதன் வளர்ச்சி ஏகாதிபத்திய புலியெதிர்ப்பையும், சிறிலங்காவின் புலியெதிர்ப்பையும், இந்தியாவின் பிராந்திய புலியெதிர்ப்பையும் கூட தனக்குள் சுவீகரித்துக் கொண்டது. இது இயல்பாக புலிக்கு எதிரான அனைத்துப் பிரிவுகளும் ஒன்றாகக் கூடி கும்மாளம் அடிக்கும் ஒரு அரசியல் களமாக மாறியது. இவர்களிடத்தில் மக்களுக்கு வழிகாட்ட சொந்த அரசியல் என எதுவும் எஞ்சியிருக்கவில்லை. புலிக்கு எதிரான அரசுகளின் அரசியல் பொருளாதார நிலைப்பாட்டையும், கூலித்தனத்தையுமே புலியெதிர்ப்பு அரசியலாக கொண்டு வளர்ச்சியுற்றது. இது கடந்து வந்த காலம் முழுக்க படிப்படியாக முன்னேறி, இன்று தீவிர புலியெதிர்ப்பு வாந்தியாக பேந்துவிடுகின்றனர். இதில் இருந்த சில பிரிவுகள் அல்லது தனிப்பட்டவர்கள் முரண்பட்டு வெளியேறுகின்றனர். தம்மை தனித்துவமாக அடையாளம் காட்ட விரும்பிய போதும், அவர்களும் இந்த வட்டத்துடன் மிக நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயற்படுகின்றனர் என்பதே துரதிஸ்ட்டமானது.

மக்கள் நலன்களை உயர்த்தி, அதைக் கோட்பாட்டு ரீதியாகவே மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல் அற்பத்தனத்தின் மொத்த விளைவு இது. மக்களுக்கு என்று சொல்வதற்கு எதுவுமற்றவர்களின் கதம்பமாக, இது சீரழிந்த வண்ணம் உள்ளது. புஸ்பராஜா தனது வலதுசாரிய அரசியலுடன் இதற்குள் வலுவாக குந்தியிருக்கவே முனைந்தவர். மக்கள் நலன் எதையும் முன்வைக்கவோ, அதைக் கோரவோ முனையவில்லை. மக்களுக்கு எதிரான பொது அரசியல் போக்கை அம்பலப்படுத்த முனையவில்லை. மாறாக மக்கள் விரோத கும்பலாகவே குந்தியிருந்தபடி, புலியுடன் தனது வலதுசாரிய அரசியலூடாக பாசக்கயிற்றை அங்கு எறிந்தவர். தனது மரணத்துக்கு முந்திய இறுதிப் பேட்டியில் புலியிடம் வேண்டுகோள் விடுக்க முனைந்தவரே ஒழிய, மக்களுக்கு சொல்ல எதுவும் தம்மிடம் இல்லையென்றவர். உண்மையில் வலதுசாரிய அரசியலிடம் மக்களுக்கு சொல்லவென எதுவும் இருப்பதில்லை.
இந்த புலியெதிர்ப்பு அணியின் முன்முயற்சியின் ஒருபகுதி தான் இலக்கிய சந்திப்பு. இலக்கிய சந்திப்பின் தொடக்கம், இடதுசாரிய நிலைப்பாட்டுடன், மக்களுக்கு வழிகாட்டும் முனைப்புடன் உருவாக்கப்பட்டது. ஆனால் அரசியல் ரீதியாக தெளிவற்ற, மக்களுக்கு வழிகாட்ட வக்கற்ற சஞ்சிகைளும், இலக்கியவாதிகளும் படிப்படியாக தமது சொந்த இடது நிலைப்பாட்டை கைவிட்டு வலதுசாரியாக மாறிவந்த நிலையில், வலதுசாரிகளின் ஆதிக்கத்தில் இந்த சந்திப்பும் அரசியல் ரீதியாக சிதைந்து போனது. மாறாக தமது அரசியல் அரிப்புகளை பேசுமிடமாக, தனிபட்ட நபர்களின் அற்பத்தனங்களை தீர்க்கும் இடமாக மாறி, சந்திப்பு ஒரு சுற்றுலாவாக பொழுதுபோக்காக மாறியது. இங்கு மக்களுக்காக எதையும் கூறுவதுமில்லை, பேசுவதுமில்லை.

தன்னார்வக் குழுக்களிடம் பணம் வாங்கி நக்குபவர்களும், இடதுசாரி சித்தாந்தத்தை கைவிட்டு அதை வீம்புக்கு அலட்டிக் கொண்டு அரசியலில் வாழ்பவர்கள் என பலரும், படிப்படியாக வலதுசாரியக் கோட்பாட்டின் உள்ளடகத்தில் இணங்கி இசைந்த சந்திப்பாக சிதைந்து, உருக்குலைந்து சமூகத்துக்கே நஞ்சிடுகின்றனர். புலியெதிர்ப்புக் கவசத்துடன் புலம்பெயர் இலக்கியம் என்ற கவர்ச்சியுடன் படுபிற்போகான வலதுசாரிய நிலைக்குள் இலக்கியச் சந்திப்பு செயல்வடிவம் பெற்று அது செய்தது எல்லாம், இடது போக்கை இழிவுபடுத்தி புறக்கணித்தது தான். புலியின், ஏன் கடந்தகால குறுந் தேசியவிடுதலைப் போராட்டத்தின் வலதுசாரிய அரசியலை, அது என்றுமே கேள்விக்குள்ளாக்கியது கிடையாது. மாறாக வலதுசாரிய அரசியலில், தமது கால்களை ஆழப்புதைத்துக் கொண்டனர். புஸ்பராஜா போன்றவர்கள் இயல்பாகவே இதனுடன் ஓட்டிக் கொண்டனர்.

மறுபக்கத்தில் புலம்பெயர் இலக்கிய சந்திப்பு எதையும் சொந்தமாக செய்ய வக்கற்றுப் போனது. இந்த இலக்கியத்தின் சிதைவையும், அதன் இயலாத் தன்மையையும் நாம் காண்கின்றோம். இதற்கு வெளியில் தான் ஒருசில இலக்கியங்கள் வெளிவந்தன, வெளி வருகின்றன. இலக்கிய சந்திப்பின் கொள்கை கோட்பாட்டுக்கு வெளியில் தான் இவை கூட உருவாகின்றது.
இந்த இலக்கிய சந்திப்பு தனது வலதுசாரிய அரசியலால் சிதைந்து சின்னாபின்னமாகி வந்த நிலையில், அதைச் சரிக்கட்டவே, பின்நவீனத்துவம் தலித்தியம் என்று பல பெயர் கொண்ட கோட்பாடுகளை பெயருக்கு அதில் புகுத்தினர். இப்புதிய வடிவங்கள் செயற்கையாகவே உள்ளடகத்தில் அல்லாது அதில் பிரதிபலித்தது. இந்தியாவின் பிரதிபலிப்பாகவே இப்போக்கு இங்கும் பிரதிபலித்தது. இந்தியாவில் சிதைந்து சீரழிந்த போது, இங்கும் அது மூச்சுத்திணறி செத்துப் போனது.

இதன் போதும் புஸ்பராஜா தனத வலதுசாரிய அரசியலைக் கைவிடாது அதன் பிரதிநிதியாக தன்னை காட்டிக் கொள்ள வலிந்து முனைந்தார். ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்து வந்தவர் என்ற அடையாளத்துடன், செயற்கையாகவே தனது வலதுசாரிய நிலையில் நின்று அதைப்பற்றி எழுதவெளிக்கிட்டவர். ஆனால் அதில் அவர் ஒட்டிக்கொள்ள முடியவில்லை. தனது வலதுசாரிய நிலைக்கு ஏற்ப சாதியத்தை மேய்ந்தார். இதுவே தனக்கு ஒரு அரசியல் அந்தஸ்த்தை பெற்றுத் தரும் என்று நம்பினார். ஆனால் சாதியத்தின் சமூகக் கூறுகளைக் கொண்டு, கடந்த காலத்தில் தான் பின்பற்றிய வலதுசாரிய அரசியல் முன்னிறுத்திய சாதிய ஒடுக்குமுறை மீதான விமர்சனத்தை அவர் முன்னெடுக்கவில்லை. தனது சொந்த நூலில் பின்நவீனத்துவ தலித்திய நோக்கில் நின்று, கடந்த காலத்தையும் தனது செயற்பாட்டையும் கூட அவர் விமர்சிக்கவில்லை. மாறாக அதை நியாயப்படுத்தியபடி, தன்னைத்தான் தலித் என்றார். ஒரு வலதுசாரியின் அரசியல் இப்படித்தான் என்பதையே, அவர் நிறுவிக்காட்டினார். சாதியம் பற்றிய தரவுகளை தொகுப்பதன் மூலம், தலித் என்ற பெயரில் தங்கிநின்று மற்றவனை திட்டுவதன் மூலம், சாதிய போராட்டத்தில் தானும் பங்காளி என்று காட்டவே முனைந்தவர். ஆனால் 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" என்ற அவரின் நூலில், அவர் தன்னை ஒரு வலதுசாரிய உயர்சாதிய பிரதிநிதியாகவே வெளிப்படுத்தி நிற்கின்றார். அவரின் கடந்தகாலச் செயற்பாடுகள், யாழ் மேலாதிக்க உயர்சாதிய ஆணாதிக்க சுரண்டும் வர்க்கத்தின் குறுந்தேசியமாகவே இருந்தது. இதை அவர் தனது மரணம் வரை நியாயப்படுத்தியவர். இது தான் அவரின் அரசியல்.
'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" என்ற நூல் மூலம் சேடம் கட்ட முடியுமா?

நூல் பற்றிய முழுமையான விமர்சனத்துக்கு என எடுத்த எனது குறிப்புகள், என் முன் இருந்த போதும், நேரம் இன்மையால் அதை எழுதமுடியவில்லை. இருந்த போதும் அவரின் மரணத்தை இந்த நூலின் மூலம் அரசியலாக்க முனையும் நிலையில், இந்த நூல் பற்றி எனது குறிப்பான விமர்சனம் தான் இது.

நான் முன்பே எழுதியது போல், இந்த நூல் சொல்ல முனைவது பிரபாகரன் இடத்தில் நான் இருக்கவேண்டியவன் என்ற வலதுசாரிய அங்கலாய்ப்புடன் தனது சொந்த நலனை முன்னிறுத்தி தொகுக்கப்பட்டுள்ளது. (நூல் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கமும் அடங்கும்.) அதற்கேயுரிய தகவல்கள், எல்லாம் தானாக இருந்ததாக காட்ட முனையும் போக்கு, இடது வெறுப்புடன் கூடிய வன்மம் மிக்க கண்ணோட்டம், மக்களின் அரசியல் போராட்டத்தை வெறுக்கும் அரசியல் போக்கு புலிகளிடம் மண்டியிட்ட வேண்டுகோளாக மாறுகின்றது. மக்கள் மீதான நம்பிக்கையை, மக்களே வரலாற்றை தீர்மானிப்பவர்கள் என்ற உண்மையை எங்கும் எதிலும் அவரிடம் காணமுடியாது.

இந்த நூல் பல தவறான தகவல்களையும், திரித்த தகவல்களையும் கூட வழங்குகின்றது. தன்னை முன்னிலைப்படுத்தி, தனது வலதுசாரிய அரசியலை முதன்மைப்படுத்தி, குறுந்தேசிய வரலாற்றை நியாயப்படுத்தி வெளிவந்தது. திட்டமிட்ட வகையில் இடதுசாரிப் போராட்டத்தையே முற்றாக இருட்டடிப்பு செய்து இந்த நூல் செய்தது. வலதுசாரியத்துடன் ஏற்பட்ட இடது முரண்பாடுகளைக் கூட, புலிப்பாணியல் எதிராக காட்டுவது, இந்த நூலின் அரசியல் சாரமாகும். பிரபாகரன் தனது வலதுசாரிய அரசியல் பார்வையில் தாம் தூய்மையானவர்கள் என்று எப்படி ஒரு போலியான கட்டமைப்பை உருவாக்கினரோ, அதையே புஸ்பராஜாவும் செய்து தன்னைத்தான் முன்னிலைப்படுத்த முனைகின்றார்.

அக்காலத்தில் மக்கள் பற்றி தனது சொந்த நிலைப்பாட்டை அவர், புலிப் பாணியில், எல்லாம் தாமாக தமது அரசியலாக காட்டுகின்றார். புலிகளின் வலதுசாரிய பாசிச அரசியலையே, புஸ்பராஜா அப்படியே பிரதிபலிக்கின்றார். தனது ஒடுக்கப்பட்ட சாதிய முரண்பாடுகளைக் கூட அவரால் கண்திறந்து பார்க்க முடியாத அன்றைய நிலையில், அப்படியே இன்று விமர்சனமின்றி ஒப்புவிக்கின்றார். சுயவிமர்சனம், விமர்சனம் என்பது அறவே கிடையாத ஒரு வலதுசாரிய கண்ணோட்டம் கொப்பளிக்கின்றது.

மிக அப்பட்டமான துரோகம் என்னவென்றால் அக்காலத்தில் நடந்த மக்கள் போராட்டங்களை மறுதலிப்பதன் மூலம், அதை இருட்டடிப்பு செய்கின்றார். மேல்சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள், குறுந்தேசிய இயக்கத்துக்கு எதிரான அடிநிலை சாதிகளின் போராட்டம், இயக்கத்துக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்கள், குறுந்தேசிய ஆணாதிக்கத்துக்கு எதிரான பொதுப் போராட்டங்கள் என எதையும் அவர் கண்டு கொள்ளவில்லை. கூட்டணிக்கு எதிரான போராட்டங்கள், வலதுசாரிய அரசியலுக்கு எதிரான போராட்டங்கள் என பல, அவரால் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது. வலதுசாரிய தனிமனித பயங்கரவாதங்கள் நியாயப்படுத்தப்பட்டு, கதாநாயகர்கள் பற்றி பிரமையூட்டி அவ் வலதுசாரிய அரசியல் போற்றப்படுகினற்து. இவர் பதிய மறுத்த பல போராட்டங்கள் பலரும் அறியும் போராட்டமாக இருந்தது. சில புலம்பெயர் இலக்கிய சஞ்சிகைளில் பதிவாகியும் உள்ளது.

இது ஒருபுறம். மறுபக்கத்தில் அவர் சார்ந்து இருந்த அரசியல் போக்குக்கு எதிரான மக்கள் போராட்டங்களை, மிகவும் திட்டமிட்டு மறைக்கின்றார். சொன்னவைகளை தனது வலதுசாரிய நிலைக்கு ஏற்ப, இன்றும் கூட திட்டமிட்டு திரித்து காட்டுகின்றார். எல்லாவற்றையும் வலதுசாரிய அரசியலுக்குள், கறைபடியாத ஒன்றாக நிறுவிக்காட்ட முனைகின்றார். இந்த குறுந்தேசிய வலதுசாரிய அரசியல் சரியானதாக சித்தரிக்க முனைகின்றார்.
நான் சோபாசக்தியின் 'ம்" நாவல் விமர்சனக் கூட்டத்தில் வைத்து சுட்டிக் காட்டியபடி, 'ம்" நாவலின் பல உண்மை சம்பவங்களுடன் முரண்பட்டவற்றை புஸ்பராஜா நூல் கொண்டிருந்தது. அங்கு பிரசன்னமாகியிருந்த புஸ்பராஜா, பின் இது பற்றி என்னுடன் கதைத்த போது, தனது வலதுசாரி கண்ணோட்டத்தில் நியாயப்படுத்தியபடி தவறுகள் உண்டு என்றார். தனிப்பட்ட ரீதியில் விமர்சனத்தை தவிர்க்கும் நோக்கில், தனிப்பட எனக்கு கூறப்பட்டது தான்.

உதாரணமாக ஊர்காவற்துறை இன்ஸ்பெக்டர் பற்றிய அபிப்பிராயத்தில், அது அப்படித்தான் இருந்தது என்கின்றார். அந்த இன்ஸ்பெக்டர் பற்றிய மதிப்பீட்டில் சோபாசக்தியின் உண்மை பாத்திரம் சரியாகவே இனம் காண்கின்றது. புஸ்பராஜாவின் பாத்திரம் பிழையாக வலதுசாரிய நோக்கில் இனம் காண்கின்றது. எதிரியை பிழையாக அடையாளம் காட்டி நண்பனாக்குகின்றது. நண்பனை எதிரியாக்குகின்றது. இது குறுந்தேசிய புலி அரசியல் இப்படித் தான் சமூகத்தை வகைப்படுத்தி அழித்தொழிக்கின்றது. ஒருவன் பற்றிய உண்மை மதிப்பீட்டை அரசியலுக்கு அப்பால் இட்டுச் சென்று, தனிமனித நோக்கில் அணுகிவிடும் வலதுசாரிய மதிப்பீடுகளே இவை, மனிதவிரோத இன்ஸ்பெக்டரை குறுந் தேசியத்துக்கு ஆதரவானவராக காட்டுகின்றது. இது எமது குறுந்தேசிய போராட்டம் முழுக்க காணப்படுகின்றது. எதிரி நண்பன் பற்றிய மதீப்பீட்டையே இது முற்றாக எதிர்நிலைத்தன்மை கொண்டதாக அணுகிவிடுகின்றது. இதன் விளைவையே நாம் இன்று ஒரு சமூகமாகவே அனுபவிக்கின்றோம்.

இதுபோல் பல நூறு விடையங்களை இப்படி பார்க்க முடியும். சந்ததியார் பற்றிய புஸ்பராஜவின் மதிப்பீடும் இப்படித்தான். பாலசிங்கத்தின் 'போரும் சமாதானமும்" நூல் போல், புலிகள் அல்லாத மற்றொரு வலதுசாரிய அரசியலை வெளிக்கொண்டு வருகின்றது. உதாரணமாக பிரபாகரன் மாத்தையா என்ற இரண்டு வலதுசாரிகள் வரலாற்றை எழுதினால், அல்லது கருணா பிரபாகரன் என்ற இரண்டுபேரின் வரலாற்றை எழுதினால் நிச்சயமாக முரண்பட்ட இரண்டு வரலாறு இருக்கும். அதைபோல் தான் புஸ்பராஜா தனது வலதுசாரிய அரசியல் பாத்திரத்தை நியாயப்படுத்தி எழுதுகின்றார். இங்கு மக்கள் பற்றியோ, அவர்களின் அரசியல் கோரிக்கையைப்பற்றியோ, ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவுகளின் பிரத்தியேகமான சிறப்பான கோரிக்கை பற்றியோ, இயக்க கண்ணோட்டங்களைப்பற்றியோ அல்ல. மாறாக தன்னை முதன்மைப்படுத்தி, அந்த வலதுசாரிய மக்கள் விரோத நடத்தையை தமிழ் மக்களின் தலைக்கு மேல் வைக்க முனைகின்றார். கடந்தகால வலதுசாரிய மொத்த மக்கள் விரோத அரசியலையும் நியாயப்படுத்துகின்றார்.

இங்கு புலியல்லாத பிரிவினால் புத்தகம் நிராகரிக்க முடியாத ஒன்றாகவும், பலரும் வியந்து பார்க்கும் வண்ணம் எது மாற்றுகின்றது. மக்களுக்கு எதையும் வழிகாட்ட முடியாத ஆளுமையற்ற சமூக இருப்பில், தம்மைத்தாம் தக்கவைக்க முனைகின்ற போது ஏற்படும் அதிர்வே இப்படி பிரதிபலிக்கின்றது. இந்த அரசியலுக்கு வெளியில் நூல் பலரும் இலகுவாக தெரிந்து கொள்ள முடியாத, பல சம்பவங்களை தொகுத்தளிக்கின்றது. இவற்றில் பல தவறுகள் இருந்த போதும் கூட, பல திட்டமிட்டு விடப்பட்டு இருந்த போதும் கூட, தனிப்பட்ட நபர்கள் பற்றி மிகைப்படுத்தியும் கொச்சைப்படுத்திய போதும் கூட, அது கொண்டுள்ள தரவுகள் சார்ந்து நிராகரிக்கப்பட முடியாத ஒன்றாகவே உள்ளது. இதேபோல் தான் அன்ரன் பாலசிங்கத்தின் 'போரும் சமாதானமும்" என்ற நூல் பழைய பேச்சுவார்த்தையில் என்ன நடத்தது என்ற சில ஆவணக்கடிதங்களை முதன் முதலில் வெளிக் கொண்டுவந்துள்ளது. சமூகத்தையும் அக்காலத்தையும் திரும்பி பார்க்க இது உதவுவது போல், புஸ்பராஜாவின் நூலும் உதவுகின்றது அவ்வளவுதான். இதற்கு வெளியில் மக்கள் நலன் சார்ந்து பார்த்தால், இந்த நூல் அரசியல் ரீதியாகவே பயனற்றது. மக்களை வெறும் பொம்மையாக்கி இழிவாக்குகின்றது.

இதை கவனத்தில் கொள்ளாது அரசியல் ரீதியாக முன்னோக்கி காட்டுவது, அரசியலில் பொறுக்கித்தனமாகும். புஸ்பராஜா விரும்பியது என்ன? இந்த நூலை விமர்சிக்காது இருக்கும் ஏற்பாட்டைத் தான். நூல் வெளியீட்டை ஒரு பணச்சடங்காகவே செய்தவர், அதை அங்கு விமர்சனம் செய்யாது இருக்க திட்டமிட்ட பலத்த வலதுசாரிய அரசியல் ஏற்பாட்டையே செய்தவர்.
இந்த நூலுக்கு எதிரான ஒருசில விமர்சனங்கள் பின்னால் வெளிவந்தன. பாரிசில் சிலர் இணைந்து வெளியிட்ட சிறிய நூல் அதில் ஒன்று. இது தனிப்பட்டவர்கள் சிலரின் அதிருப்தியை அடிப்படையாக கொண்டு விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. இரண்டாவது சோபாசக்தியின் விமர்சனம் மரணத்தின் பின் (இது முன் கூட்டியே எழுதப்பட்டதாக கூறப்படுகின்றது) 'அநிச்ச" இதழ் இரண்டில் வெளிவந்துள்ளது. இது அரசியல் ரீதியாக வலதுசாரிய பக்கத்தின் சிலகூறுகளை அம்பலப்படுத்த முனைகின்றது. குறிப்பாக வலது சாரியத்தை சாதிய நோக்கில் காண முனைகின்றது. மறுபக்கத்தில் இதை சமநிலைப்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. இந்த சமநிலைப்படுத்தலை புலிகளின் சில ஈனச்செயல்களை விமர்சிப்பதை எடுத்துக்காட்டி செய்யப்படுகின்றது. இதையே அவரும் தனது மரணத்துக்கு முந்திய செய்திகளிலும் கூட, இந்த உத்தியையே கையாளுகின்றார்.
இப்படியான முயற்சி எல்லாம், வலதுசாரிய புலியெதிர்ப்பு அரசியல் உள்ளடகத்தில் நியாயப்படுத்தப்படுகின்றது. சாதிய அடிப்படையில் நிராகரிக்கின்ற சமநிலைக் கோட்பாடு, மக்கள் பற்றிய முழுமையாக புரிந்த தெளிவாக வழிகாட்ட திறனற்ற வெளிப்பாட்டின் விளைவாகும். 'மௌனம் என்பது சாவுக்கு சமம்" என்று கூறுவதால் மட்டும் நிலைமை மாறிவிடுவதில்லை, மாறாக மக்களுக்கு வழிகாட்டும் வகையில் முன்நகர்வது அவசியமாகும்.

சோபாசக்தி சமூகம் சார்ந்த சமகால விடையங்கள் மீதான எழுத்தாளன் என்ற வகையில், அவரில் அண்மையில் ஏற்பட்டு வரும் மாற்றம் வரவேற்க்கத்தக்கது தான். இன்னமும் மக்களைவிட்டு விலகி நிற்கும் போக்கு, சமூகத்துடன் தொடர்பற்ற சூழல் உருவாக்கும் தனிமனித அற்பத்தனங்களில் எஞ்சிக்கிடக்கின்றது. இது புஸ்பராஜா போன்ற வலதுசாரிகளுக்கு தொங்கு பாலத்தை கட்டிவிடலாம் என்று முனைப்புக் கொள்கின்றது. மக்களையும் அவர்களின் வாழ்வு சார்ந்த உள்ளடகத்தில் இருந்து சமூகத்தைக் கற்றுக் கொள்வது அவசியமானதாகும். தனிமனிதர்கள் மக்களின் வாழ்வுடன், எப்படி எந்த சமூகப் பொருளாதார அரசியலுடன் இணைந்து வாழ்ந்தார்கள் என்பதையே நுணுகிப் பார்த்து, அணுகுவதையே கோருகின்றது சாதி மட்டுமல்ல, சமூகத்தின் பல ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் சமூக உணர்வோட்டங்களை புரிந்து, உணர்ந்து, வாழ்ந்து பிரதிபலிப்பதன் மூலம், மக்கள் கலைஞனாக அவர்களுக்காகவே வாழ முற்படுதலே எழுத்தாளனின் சமூகக் கடமையாகும். இதைவிடுத்து தனிநபர்களின் வலதுசாரி பாத்திரத்தின் இழிந்துபோன அரசியலை மொத்தமாக பார்க்காமல் பகுதியாக அதை பிரித்து போற்றி நிற்கும் முயற்சி அரசியல் ரீதியாக மக்களுக்கு எதிரானதே. இதை புரிந்துகொள்வது காலத்தின் தேவையுடன் அவசியமானது.
மரணத்தை தெரிந்து கொண்டு திட்டமிட்டு செய்த தீடீர் அரசியல்
தனது மரணம் தெரிந்தவுடன் ஒரு திட்டமிட்ட ஒரு அரசியலையே புஸ்பராஜா செய்தார். வழங்கிய பேட்டிகள், மற்றும் இந்தியா வரை சென்று நடத்திய அவசரச் சந்திப்புகள், மற்றும் இறுதியாக எழுதி வைத்தவை என சில.

பலரும் இதற்குள் நின்று புஸ்பராஜாவை காட்ட முனைகின்றனர். ஆனால் எதார்த்தம் என்னவென்றால் இந்த இறுதி செய்திகளில் கூட, மக்களைப்பற்றி அவர் பேசவில்லை. புலியிடம் வேண்டுகோள்களை விடுத்து, வலதுசாரிய சீர்திருத்தத்தையே மீண்டும் முன்வைக்கின்றார்.

'புஸ்பராஜா பேசுகின்றேன்" என்ற தனது இறுதிக் குறிப்பில் '..என்னால் இயன்றதைச் செய்தேன். அது வெற்றியளித்தது" என்கின்றார். அந்த வெற்றி தான் என்ன? தமிழினமோ தோற்றுப் போய் நிற்கின்றது. தனது சொந்த வாழ் நிலையை சொல்லியழ கூட முடியாத அவல வாழ்வில் தவிக்கின்றது. ஆனால் புஸ்பராஜா சொல்லுகின்றார் தான் இயன்றதைச் செய்து, அதுவும் வெற்றியளித்துள்ளது என்கின்றார். தனிப்பட்ட வாழ்க்கையை அப்படி சொல்லுகிறாரா?

பொதுவாழ்வு என்றால், அது வெற்றியளித்தது என்றால் அது என்ன? அது வலதுசாரிய புலி அரசியல் தான். இதற்கு வெளியில் வேறு எதுதான் வெற்றியளித்தது. அவர் வலிந்து வரிந்து கொண்டு வலதுசாரிய அரசியலின் இன்றைய நிலையைத் தான், அவர் வெற்றியென்கின்றார்;. அது எவ்வளவு பெரிய தோல்வி என்பதை, புலி அழிவுடன் காலம் தெளிவாகவே எடுத்துக் காட்டும்.

அந்தக் குறிப்பில் புஸ்பராஜா விட்டுச் செல்லும் வேண்டுகோளில் 'தயவு செய்து கொலைகளை நிறுத்துங்கடா. போதும் கொலைவெறி, மனித சுதந்திரத்தை மதியுங்கள். உயிரின் விலையை மதியுங்கள்" என்கின்றார். இந்த வரிகள் பொதுவாக பார்க்குமிடத்தில், என்ன ஜனநாயக கோசம்! இது எல்லோரையும் மெய்சிலிர்க்க செய்கின்றது. ஆகா ஆகா ஒரு கை பிடியுங்கள், புஸ்பராஜாவை நாம் தூக்குவோம் என்று முனைகின்றனர். இந்த விடையத்தை நாம் எப்படி புரிந்து கொள்வது. இதுவும் வலதுசாரிக் கோரிக்கை தான்.

இவர் தனது அதிகாரம் நிலவிய காலத்தில், இவர் உதவியுடன் நடந்த தனிமனித படுகொலைகள் முதல் நியாயப்படுத்திய தனிமனித படுகொலைகள் வரை இவர் விமர்சித்தாரா எனின், இல்லை. தனிமனிதப் படுகொலையை நியாயப்படுத்தும் வலதுசாரி அரசியலை அவர் விமர்சிக்கவில்லை. அந்த அரசியலே வலதுசாரிய பாசிசமாகி புலிகளாகவுள்ளது. தனிமனித பயங்கரவாத வலதுசாரிய அரசியல் தான் இன்றைய படுகொலைகள். அன்று தமிழரசுக் கட்சியும், பின் கூட்டணியும் தனிமனித படுகொலைகளை செய்வித்து, அதை ஊக்குவித்து உதவிய வரலாற்றின் தொடர்ச்சிதான் இன்றைய புலிகள். பிரபாகரன் அன்றைய தமிழரசு கட்சி உருவாக்கிய கொலைகார கும்பலின், கொலைகாரனாக இருந்தவர் தான். இன்று மொட்டையாக கடந்தகாலத்தை நியாயப்படுத்தி புனிதப்படுத்தியபடி, கொலைகளை நிறுத்து என்று சொல்வது எவ்வகையானது.
கொலைகளை நிறுத்துங்கள் என்பது அரசியல் மோசடிதான். இன்று ஏகாதிபத்தியம் முதல் புலிகள் அல்லாத அனைத்து தரப்பும் இதை முன்வைக்கின்றது. இதில் அரசியல் ரீதியாக கூர்ந்து பார்த்தால், மக்களை ஏமாற்றும் அரசியல் மோசடியே எஞ்சுகின்றது. அன்று தேசியத்தின் பெயரில் அனைவரும் ஒன்றாக மக்களுக்கு எதிராக இருந்தது போல், இதுவும் சூக்குமாக மக்களுக்கு எதிராக உள்ளது. கொலைகளை நிறுத்து என்ற கோரிக்கையில் சரி, கண்டனத்திலும் சரி, எப்படி புஸ்பராஜா தனது கோரிக்கையை ஏகாதிபத்திய கோரிக்கையில் இருந்து வேறுபடுத்துகின்றார். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். தான் இருந்த வலதுசாரிய அரசியல் வழியில் இருந்து, இதை எப்படி வேறுபடுத்துகின்றார்? உண்மையில் ஏகாதிபத்திய வலதுசாரிய கோரிக்கையும், புஸ்பராஜாவின் வலதுசாரியக் கோரிக்கையும் ஒன்றுதான். இந்தியாவின் கோரிக்கையும் புஸ்பராஜாவின் கோரிக்கையும் ஒன்றுதான். ஆனந்தசங்கரியின் கோரிக்கையும், புஸ்பராஜாவின் கோரிக்கையும் ஒன்று தான். தனது கடந்தகால வலதுசாரிய அரசியலை விமர்சிக்காது, அதை போற்றியபடி மொட்டையாக கூறிவிட முடிகின்றது.

டான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய அவரின் இறுதிப் பேட்டி ஒன்றில், மக்களுக்கு சொல்ல எதுவுமில்லை என்று கூறும் புஸ்பராஜா, புலிகளிடம் வேண்டுகோளை விடமுடிகின்றது. இது தான் புஸ்பராஜா. மக்கள் பற்றிய அக்கறையற்ற வலதுசாரிய அரசியல் இப்படி கொக்கரிக்கின்றது. தனது ஒடுக்கபட்ட சாதிகளின் விடுதலையைத்தன்னும் கூட, ஒரு அரசியல் வேண்டுகோளாக விட முடியாது போகின்றது. அதை பற்றி அலசமுடிகின்றது அவ்வளவுதான். தேசிய விடுதலைப் போராட்டத்தில் புலிகளை விட்டால் வேறு யாரும் இல்லையென்கின்றார். உண்மையில் வலதுசாரிய புலியாகவே அவா பேசுகின்றார். மக்கள் இருக்கின்றனர் என்பதையே நிராகரிக்கின்றார். இது ஒரு மக்கள் விரோத வலதுசாரிக் கருத்து. கவுரவமான தீர்வுக்கு புலிகளை இணங்ககோரும் வேண்டுகோளே நகைப்புக்குரியது. சரி அந்த கவுரவம் தான் என்ன? யாருக்கு கவுரவம்? அந்த தீர்வு தான் என்ன? அது தமிழ் தேசிய அபிலாசைகளை தீர்க்குமா? சாதியை ஒழிக்குமா? ஆணாதிக்கத்தை ஒழிக்குமா? பிரதேசவாதத்தை ஒழிக்குமா? சிறுபான்மை இனங்களின் தனித்துவத்தை அங்கீகரிக்குமா? தேசிய பொருளாதாரத்தை கட்டுமா? இதை எந்த வலதுசாரி அரசியலும் செய்யாது. புலிகள் இதை ஒருக்காலும் செய்ய மாட்டார்கள். பின் யாருக்கு கவுரவம்! உண்மையில் யாரிடம் வேண்டுகோள் விடவேண்டும் என்றால், மக்களிடம் தான். உண்மையில் தேசியம் என்பது, சமூகத்தின் அனைத்து அடக்குமுறையையும் ஒழிப்பதுதான்.

இதற்கு மாறாக உருவான புலிகள் என்ற வலதுசாரிகளின் சூறையாடல்கள், கொலைகள் என்பது தனிமனித பயங்கரவாதத்தின் தோற்றுவாயாகும். வலதுசாரிய தனிமனித பயங்கரவாத அரசியல், பாசிசமாகி மக்களை கண்டு அஞ்சும் நிலையில் தான், தமது இருப்புக்கான ஒரு அரசியலாக கொலைகள் அடிப்படையாகின்றது. அன்று கூட்டணி கொலைகளை செய்ய கோரியதும், உதவியதும், அதை அரசியல் ரீதியாக பாதுகாத்த வரலாற்றில், பிரபாகரனும் அதற்குள் உள்ளடங்கியிருந்தவர். அதை ஒட்டிய பல ஆவணங்களை, புஸ்பராஜாவே எடுத்துக் காட்டி பெருமைப்படுகின்றார். இப்படி கொலையை ஆதரித்து, உதவி, அரசியல் ரீதியாக முண்டு கொடுத்த இவர்கள், இன்று கொலையை நிறுத்து என்கின்றனர். ஆனந்தசங்கரியும் இதைத் தான் சொல்லுகின்றார். இவர்கள் கடந்தகாலத்தை சுயவிமர்சனம் செய்தது கிடையாது.

'விதையாய் விழுந்தாய் விருட்சமாய் எழுவோம்" என்று கோரி ஆவணம் வெளியிடுகின்றீர்களே, எதை விதையாக்குகின்றீர்கள். எதை விருட்சமாக கோருகின்றீர்கள். வலதுசாரிய அரசியலை விதையாக விதைத்து, விருட்சமாக எழுந்த புலிகளையா மீண்டும் கோருகின்றீர்கள்! போதும் நிறுத்துங்கள்!
மக்களின் பெயரால், மக்களின் முதுகில் சவாரி செய்யாதீர்கள். முடிந்தால் மக்களுக்காக, அவர்களின் வாழ்வுக்காக, உண்மையாகவும் நேர்மையாகவும் போராடக் கற்றுக் கொள்ளுங்கள்.