தமிழ் அரங்கம்

Saturday, April 19, 2008

சி.பி.எம். - இன் மதச்சார்பின்மை : நரியின் சாயம் வெளுத்தது

சி.பி.எம். - இன் மதச்சார்பின்மை :
நரியின் சாயம் வெளுத்தது

போலி மார்க்சிஸ்ட் கட்சி தனது கடைசி ஒட்டுத் துணியையும் அவிழ்த்து வீசிவிட்டு நிர்வாணமாய் நிற்கிறது. இதுவரை அக்கட்சி நடத்திவந்த மிக மோசமான சந்தர்ப்பவாத அரசியல் ஆட்டத்தில், ""மதச்சார்பின்மை என்ற ஒரே ஒட்டுத் துணி''யால் மானத்தைக் காத்துக் கொண்டிருந்தது.

வங்கதேச மருத்துவரும் எழுத்தாளருமான தஸ்லிமா நஸ்ரினை கொல்கத்தாவிலிருந்து சதித்தனமாக ""நாடு கடத்தியதில்'' இருந்து போலி மார்க்சிஸ்ட் கட்சியும் அதன் தலைமையிலான மேற்கு வங்க இடதுசாரி அரசாங்கமும் தமது சுயரூபத்தைத் தாமே வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டன.

போலி மார்க்சிஸ்ட் கட்சி தனது எல்லா சந்தர்ப்பவாதங்களையும் நியாயப்படுத்துவதற்கு வைத்துள்ள ஒரே அரசியல் ஆயுதம் மதச்சார்பின்மை. ஆனால், இந்த மதச்சார்பின்மையையேகூட அக்கட்சி ஒரு சந்தர்ப்பவாத ஆயுதமாகவே கொண்டிருக்கிறது. காங்கிரசு கட்சியைப் போலவே, மிதவாத இந்துத்துவா அரசியலைக் கொண்டிருக்கிறது.

அதாவது இக்கட்சிகள் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அரசியலைத்தான் எதிர்க்கின்றனதே தவிர, அக்கும்பலின் இந்துத்துவமயமாக்கலை எதிர்ப்பதில்லை. அதேசமயம் மதச்சார்பின்மை நாடகமாடி, முஸ்லீம்களின் ஆதரவாளர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டு ஓட்டுப் பொறுக்குவதற்காக இசுலாமிய மதவெறியர்களின் நிலையை ஆதரிக்கின்றனர்.

தஸ்லிமா வங்கதேசத்தவர் என்றாலும், ""லஜ்ஜா'' நாவலை வெளியிட்டதிலிருந்து அந்நாட்டு முஸ்லீம் மதவெறியர்கள் அவரது தலைக்கு விலை வைத்து வேட்டையாடத் தொடங்கிய பிறகு, சுவீடன் நாட்டில் தஞ்சமடைந்தார்; அவர் விரும்பியிருந்தால் எத்தனையோ மேலைநாடுகளில் மருத்துவத் தொழில் செய்து கொண்டோ, எழுத்தாளராகவோ சுதந்திரமாகவும் சொகுசாகவும் வாழ்ந்திருக்க முடியும். ஆனால், தஸ்லிமா ஒரு படித்த அறிவுஜீவி என்றாலும், அரசியல் அறிவற்ற பேதை.

திபேத்தின் தலாய்லாமா மற்றும் ஆயிரக்கணக்கான அவரது சீடர்கள்; "ஜனநாயக'த்துக்குப் போராடும் நேபாளி காங்கிரசுத் தலைவர்கள்; ஃபைஸ் அகமது ஃபைஸ், ஃபாமிதா ரியாஸ் ஆகிய பாகிஸ்தானிய எழுத்தாளர்கள்; வங்கதேசத்தின் சேக் முஜிபூர் ரஹ்மான் மகளும் முன்னாள் பிரதமருமான சேக் ஹசினா வாஜீத், ஈழத் துரோகி வரதராஜப் பெருமாள் இப்படி ஏராளமான அந்நிய தேசத்தினர் இந்தியாவில் அரசு விருந்தினர்களாக வாழ்கின்றனர்.

அவர்களைப் போல, இந்தியாவில் அமைதியான, சுதந்திரமான வாழ்வு தனக்குக் கிடைக்கும் என்று தஸ்லிமா நம்பினார். அதாவது இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு; இங்கு சுதந்திரமாக எழுதவும், பேசவும், வெளிப்படையாக வாழவும் முடியும் என்றும் மேலோட்டமாகக் கருதினார். தஸ்லிமாவின் பார்வையின்படி ஜனநாயகத்துக்காகவும் சுதந்திர உரிமைகளுக்காகவும் போராடிய பலருக்கு இந்தியா புகலிடம் கொடுத்து வாழ்வித்து வருகிறது. ஆனால், மேற்படி நபர்களுக்கு இந்தியா தஞ்சமளித்து அரசு விருந்தினர்களாகவும் பாதுகாப்பாகவும் வாழ்விப்பதற்கு உண்மையான காரணங்கள் வேறுவேறாக உள்ளன. சீனா, பாக். எதிர்ப்பு அரசியல் நோக்கத்துக்காக சிலரையும், இந்தியா கடைப்பிடித்த வெளியுறவு ஆக்கிரமிப்பு, விரிவாக்க, ஆதிக்க கொள்கைகள் தோல்வியுற்றதால் வந்த பாவத்தைச் சுமக்கும் வகையில் சிலரையும் பேண வேண்டியதாகியது.

இந்தியாவிலேயே இந்துத்துவ மதவெறியர்களின் தாக்குதல்களுக்கு எதிராக எழுத்தாளர்களும் கலைஞர்களும் பாதுகாப்போடும் சுதந்திரமாகவும், ஜனநாயக உரிமைகளோடும் வாழவும், பணியாற்றவும் முடியவில்லை. அவர்களின் தாக்குதல்களுக்கு அஞ்சி ஓவியர் எம்.எஃப். உசேன் வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இந்து மதவெறியர்கள் மட்டுமல்ல; முஸ்லீம் மற்றும் கிறித்துவ மதவாதிகளின் கூச்சல்களுக்குப் பயந்து, இந்திய அரசு சல்மான் ருஷ்டி நூலுக்கும், "டாவின்சி கோடு' திரைப்படத்துக்கும் தடை விதித்தது. இதையெல்லாம் அறிந்தும் இந்தியாவில் மதச்சார்பின்மையும், ஜனநாயகமும், சுதந்திரமும் இருப்பதாக தஸ்லிமா நஸ்ரின் நம்புவது பேதமைதானே!

அதுமட்டுமல்ல; தஸ்லிமா தனது தாய்மொழியான வங்காள மொழியில் எழுதுவதையும், தனது தாய்மொழியினரிடையே, அவர்களின் பண்பாடுகளுடன் சேர்ந்து வாழ்வதையும் நேசித்தார். அதற்காக, மதச்சார்பின்மை, ஜனநாயகம், முற்போக்கு பேசும் "இடதுசாரிகள்' 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் மேற்கு வங்காளமும் ஜனநாயகம், சுதந்திர எண்ணங்கொண்ட அறிவுஜீவிகள் அதிகமாக வாழும் கொல்கத்தாவும் தனக்குப் பாதுகாப்பும் ஆதரவும் நல்கும் என்று நம்பி அங்கு குடியேறினார்.

இதுவும் ஏமாளித்தனமாகவே முடிந்தது. மேற்கு வங்க போலி மார்க்சிஸ்ட் தலைமையிலான "இடதுசாரி' கூட்டணி அரசு ஆரம்பம் முதலே சதி செய்து தஸ்லிமாவை கொல்கத்தாவில் இருந்து விரட்டுவதிலேயே குறியாக இருந்தது. முஸ்லீம் மதவாதிகள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காதபோதே தானே முன்வந்து 2003ஆம் ஆண்டே தஸ்லிமாவின் சுயசரிதை நூலைத் தடை செய்தது. கொல்கத்தா அறிவுஜீவிகள் எதிர்ப்புத் தெரிவித்த பிறகு அத்தடையை நீக்கியது. அதன்பிறகு, போலீசை ஏவி நிர்பந்தித்தும் மிரட்டியும் வெளியேறி விடும்படி எச்சரித்தது.

கடைசியாக, கடந்த நவம்பரில் தஸ்லிமாவை நாட்டைவிட்டுத் துரத்தும்படி கோரி முஸ்லீம் மதவெறிக் கும்பல் கொல்கத்தா நகரில் கலவரங்களில் இறங்கியது. அப்போதைக்கு இராணுவத்தை இறக்கி கொல்கத்தாவில் ""அமைதி''யை ஏற்படுத்தினாலும், போலி மார்க்சிஸ்டு தலைமையிலான "இடதுசாரி' முன்னணி அரசு நேரடியான வெட்கக் கேடான செயலில் இறங்கியது. இரவோடு இரவாக போலீசு அதிகாரிகளை ஏவிவிட்டு, கட்டிய துணியோடு தஸ்லிமா நஸ்ரினை ஒரு விமானத்தில் தூக்கிப் போட்டு பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்குக் கொண்டு சென்றது. அங்கே ஒரு விடுதியில் தள்ளிவிட்டுவிட்டு ஓடிவந்து விட்டது. அங்கிருந்து ஓரிரு நாட்களில் ராஜஸ்தான் போலீசு தஸ்லிமாவை டெல்லிக்குக் கடத்திக் கொண்டு போய், ஜெய்ப்பூர் மாளிகையில் அடைத்து வைத்தது. பின்னர் மத்திய அரசின் தேசிய பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டு, இடம் விட்டு இடம் மாற்றி, இறுதியில் தலைநகரின் தென்மேற்கில் உள்ள அப்படையின் விருந்தினர் மாளிகையில் அடைக்கப்பட்டார்.

முஸ்லீம் மதவாதிகளால் தஸ்லிமாவின் தலைக்கு விலையும் உயிருக்குக் குறியும் வைக்கப்பட்டிருக்கிறது. இதையே சாக்கு வைத்து, இந்தியாவில் இருந்த கடந்த நான்காண்டுகளாக அவர் ஏறக்குறைய சிறையிலடைக்கப்பட்டதைப் போல, கொல்கத்தா போலீசால் வீட்டுக் காவலில்தான் வைக்கப்பட்டிருந்தார். தைவான் தலைநகர் தாய்பெய் நகரில் நடந்த கவிஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டுமே இருமுறை வெளியில் விடப்பட்டார். அவரது உயிருக்கு ஆபத்திருப்பதாகக் கூறி வீட்டுக் காவலில் அடைத்து வைத்திருந்த போலீசு, எவ்விதப் பாதுகாப்புமின்றி கொல்கத்தாவிலிருந்து ஜெய்ப்பூருக்கும் அங்கிருந்து டெல்லிக்கும் விரட்டியது.

இவ்வாறு தஸ்லிமா நஸ்ரின் பந்தாடப்பட்ட விவகாரம் மூலம் நாட்டின் மூன்று முக்கிய ஓட்டுக் கட்சி அணிகளின் அரசியல் ஓட்டாண்டித்தனம் வெட்டவெளிச்சமாகியது. இந்த வகையில் முதலிடத்தில் நிற்பது போலி மார்க்சிஸ்ட் கட்சியாகும். எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அணி பாயும் போதெல்லாம் தவறாது சவடால் அடிக்கும் போலி மார்க்சிஸ்டு கட்சிக்கு தஸ்லிமாவைப் பாதுகாப்பதைவிட, மதச்சார்பின்மை நாடகமாடி இசுலாமிய மதவாதிகளின் ஆதரவைப் பெற்று ஓட்டுப் பொறுக்குவது முக்கியமானதாக உள்ளது.

ஏற்கெனவே நந்திகிராமத்தில் போலி மார்க்சிஸ்டுகளின் பாசிச ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் விவசாயிகள். அதோடு தற்போது ரிஸ்வான் ரஹ்மான் "தற்கொலை' விவகாரமும் அக்கட்சிக்கு எதிரான முஸ்லீம் மக்களின் வெறுப்பை அதிகரித்துள்ளது. அதாவது தன் பெண்ணைக் காதலித்து மணம் செய்யவிருந்த முஸ்லீம் பொறியாளர் ரிஸ்வானை கொல்கத்தா போலீசை ஏவி, மிரட்டி, "தற்கொலை' (!) செய்ய வைத்தான் ஒரு இந்து முதலாளி. அந்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்று அம்பலமாகிப் போனது, போலி மார்க்சிஸ்டு அரசு.

இவற்றால், மேற்கு வங்க வாக்காளர்களில் 26 சதவீதத்தினராக உள்ள இசுலாமியர்களின் ஆதரவை இழந்து விடும் பீதியிலுள்ள போலி மார்க்சிஸ்டுகள், தஸ்லிமா நஸ்ரினை பலி கொடுப்பது என்று தீர்மானித்து, அவரை நாடு கடத்தும் சதித்தனமான வேலையைச் செய்து முடித்தனர். முதலாளித்துவ ஊடகத்தின் கள்ளக் காதலனும் அக்கட்சியின் கோயாபல்சுமான சீத்தாராம் யெச்சூரி, தஸ்லிமா மீதான நடவடிக்கைக்கும் தனது கட்சிக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என்று அப்பட்டமாகப் புளுகித் தள்ளினார்.

ஆனால், இசுலாமிய மதவெறியர்கள் கொல்கத்தா நகரின் தெருக்களில் இறங்கிக் கலவரம் செய்த உடனே, அக்கட்சியின் மாநிலச் செயலாளரான குண்டர்படைத் தலைவன் பீமன் பாசு, ""மேற்கு வங்காளத்தில் தஸ்லிமா தங்கியிருப்பதில் மைய அரசின் பங்கு பற்றி விரிவாக நான் பேச விரும்பவில்லை. ஆனால், அவரது இருப்பு அமைதிக்கு ஒரு பிரச்சினையை உருவாக்குமானால், மாநிலத்தை விட்டு அவர் வெளியேறி விடவேண்டும்'' என்று தஸ்லிமா நஸ்ரினுக்கு எச்சரிக்கையும் மிரட்டலும் விடுத்தார்.

இதற்கு இன்னொரு போலி கம்யூனிஸ்டு கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கண்டனம் தெரிவித்தவுடன், பீமன் பாசு ""தஸ்லிமாவுக்குக் கடவுச் சீட்டு வழங்குவதிலோ அல்லது அதை ரத்து செய்வதிலோ மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. மைய அரசுதான் இதில் முடிவு செய்ய முடியும்; இந்தப் பிரச்சினையில் மைய அரசே பொருத்தமான முடிவெடுக்கட்டும். இதை நான் தெளிவான மொழியில் சொல்லியிருக்க வேண்டும். மாநிலக் கட்சி (சி.பி.எம்) சார்பாக, நேற்று இரவு விடுத்த அறிக்கையை திருத்திக் கொள்கிறேன் என்பதை மக்களுக்கு விளக்க விரும்புகிறேன்'' என்றார் பீமன் பாசு. போலீசை விட்டு, மிரட்டி, நிர்பந்தமாக ""நாடு கடத்தி விட்டு'', பிறகு இப்படித் திரித்துப் புரட்டி, பூசி மழுப்பினார் பீமன் பாசு. இப்படிப் புரட்டுவதுதான் போலி மார்க்சிஸ்டுகளின் வாடிக்கையாக உள்ளது.

ஆனால், சீத்தாராம் யெச்சூரி தனக்கே உரிய நயவஞ்சகத்தோடும் நம்பூதிரித்தனமாகவும், ""தஸ்லிமா விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது மைய அரசின் சட்ட உரிமையாகும். அதுதான் அவருக்கு கடவுச் சீட்டு வழங்கியுள்ளது'' என்று பேசி கைகழுவி விட்டார். மைய அரசு தனக்குள்ள அதிகாரம், உரிமைகளை வைத்து எடுக்கும் எல்லா விவகாரங்களிலும் இந்தப் போலி மார்க்சிஸ்டுகள் இப்படித்தான் ஒதுங்கிக் கொள்கின்றனரா? முற்போக்கு முகமூடியும் வேண்டும்; முஸ்லீம்களின் வாக்குகளும் வேண்டும் என்பதற்காகத்தானே இப்படி சந்தர்ப்பவாதம் பேசுகிறார் சீத்தாராம் யெச்சூரி. முதலாளித்துவ செய்தி ஊடகத்தின் இன்னொரு கள்ளக் காதலியும், பெண்ணுரிமை, ஜனநாயக உரிமை பற்றியெல்லாம் நுனி நாக்கு ஆங்கிலத்தில் வாய் கிழியப் பேசுபவருமான பிருந்தா காரத் உட்பட போலி மார்க்சிஸ்டுகள் மேற்கொண்டு எதுவும் பேசாது ஓடி ஒளிகின்றனர்.

அதேசமயம், ""தஸ்லிமா கொல்கத்தா திரும்புவதை வரவேற்கிறோம்'' என்று அதிகாரிகளை விட்டு ஒருபுறம் பேட்டியளிப்பதும்; மறுபுறம், ""அரசின் போலீசுத் துறையிடமிருந்து உடனடியாக தஸ்லிமாவை மூட்டை கட்டி அனுப்பிவிடும்படி உத்தரவு வந்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக (யாருடைய பாதுகாப்பு?) அவரை அனுப்பி விட்டோம். மற்றபடி எந்தக் கருத்தும் கூற முடியாது'' என்கிறார் கொல்கத்தா போலீசு துணை ஆணையாளர் வினீத் கோயல்.

போலி மார்க்சிஸ்டுகளின் ஆதரவோடு ஆட்சி புரியும் மைய அரசின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியோ, ""பாதுகாப்பைக் கோரி வரும் யாருக்கும் தஞ்சமளிக்க இந்தியா எப்போதுமே மறுத்ததில்லை. நஸ்ரினுக்கும் புகலிடம் அளிப்போம்'' என்று யோக்கியன் போல தொடங்கி, ""ஆனால், எங்கள் நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நடவடிக்கைகளிலோ, கருத்துக்களைச் சொல்வதிலோ எங்கள் விருந்தினர்கள் ஈடுபடமாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறோம்'' என்று நிபந்தனைகள் போட்டார். அதாவது, இந்தியாவில் வாழலாம், ஆனால், சுதந்திரமாக எழுதும் உரிமை கிடையாது என்கிறார்.

இந்துக் கடவுளர்களை அவமானப்படுத்தி விட்டதாகக் கூறி பிரபல ஓவியர் எம்.எஃப். உசைனின் கண்காட்சியைத் தாக்கி, மிரட்டி, அவரை வெளிநாட்டிற்கு விரட்டியவர்கள்; எம்.எஸ். பல்கலைக்கழக மாணவரைத் தாக்கி பொய் வழக்குப் போட்டவர்கள்; இந்து சமுதாயத்தில் நிலவும் பெண் ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தும் திரைப்படம் எடுத்த பெண் இயக்குநரின் படப்பிடிப்புக் குழுவினரைத் தாக்கியவர்கள்; வீதி நாடகம் நடத்திய சப்தார் ஹாஸ்மியை அந்த இடத்திலேயே படுகொலை செய்தவர்கள்; குஜராத்தில் அமீர்கானின் திரைப்படத்தைத் திரையிட முடியாமல் தடை விதித்தவர்கள்; மோடியின் முஸ்லீம் படுகொலைகளை அம்பலப்படுத்திய தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடைவிதித்தவர்கள் — பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பல். ஆனால், முஸ்லீம் மதவாதிகள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக தஸ்லிமா நஸ்ரினின் எழுத்துரிமை சுதந்திரத்தை காக்கும் அவதாரம் எடுத்தார்கள். தஸ்லிமா இஸ்லாமியப் பிற்போக்குத்தனத்தை எதிர்ப்பதைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் கோணல் புத்திதான் இந்த ஆதரவுக்குக் காரணம்.

கொல்கத்தாவிலிருந்து விரட்டப்பட்ட தஸ்லிமாவுக்கு ராஜஸ்தானை ஆளும் முதல்வர் விஜயராஜே வரவேற்றுத் தஞ்சமளித்தார். தேர்தல் பிரச்சாரத்திலிருந்த மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன், பா.ஜ.க.வின் மக்களவை பேச்சாளர் மல்கோத்ரா எனப் பலரும் கருத்துச் சுதந்திரத்துக்கு வக்காலத்து வாங்குகின்றனர். பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறையை ஏவிப் படுகொலைகள் நடத்தி, அதைப் பகிரங்கமாகவே நியாயப்படுத்தும் மோடி, ""சாத்தான் வேதம் ஓதுவது போல'' ""அடிப்படைவாதிகளுக்கு எதிராகத் தஸ்லிமா துணிச்சலோடு பேசுகிறார். மைய அரசு அவரைப் பேண முடியவில்லை என்றால் குஜராத்துக்கு அனுப்பட்டும். குஜராத் மக்களும் அரசும் அவரைப் பேணிக் கொள்வார்கள். அவரைப் பாதுகாக்கும் துணிவு எனக்கிருக்கிறது'' என்கிறார். பில்கிஸ் பானு போன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் தமது உயிருக்கும் மானத்துக்கும் அஞ்சி அகதிகள் முகாம்களிலும் வெளிமாநிலங்களிலும் தஞ்சமடையக் காரணமான காட்டுமிராண்டி மோடி, மான்களுக்குப் பாதுகாப்பளிப்பதாக ஓநாயைப் போல இளிக்கிறார்.

இவ்வாறு தஸ்லிமா நஸ்ரின் இந்த நாட்டில் வேட்டையாடப்படுவதற்குத் தலைமை தாங்குபவர், ஜமாத் உலேமா இந்த் என்ற முஸ்லீம் மதவெறி அமைப்பின் பொதுச் செயலாளர் மகமது மதானி. அனைத்திந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தின் மூலமாக தஸ்லிமா வேட்டையை நடத்தும் இவர், நாடு முழுவதும் உள்ள தியேõபந்த் மதராசா பள்ளிகளைக் கட்டுப்படுத்துபவர். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வுக்கு எதிராக, நாட்டிலேயே அதிகமாக மதச்சார்பின்மை கூச்சல் போடும் ""சமூக நீதி'' ராமபக்தன் லாலுபிரசாத் யாதவ் கட்சியின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர். தஸ்லிமா முஸ்லீம் சமுதாயத்தில் பெண்களின் நிலையைப் பற்றி மட்டுமல்ல, குரானையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி தனது மூன்றாம் பகுதி சுயசரிதையில் எழுதிக் கோடிக்கணக்கான முஸ்லீம் மக்களின் மனதைப் புண்படுத்தி விட்டார் என்பதுதான் அவர்களின் புகார். அது உண்மைதான் என்றால், சட்டப்படியான நடவடிக்கைதான் எடுக்க வேண்டுமே தவிர, அவரது தலைக்கு விலை வைத்து ""மதக் கட்டளை'' விதிப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமைஅதிகாரம் இருக்கிறது? மதத்தின் பெயரால் இப்படி நடவடிக்கைகளில் இறங்குவதற்கு மதவாதிகளுக்கு உரிமை இருக்கிறது என்றால், அப்புறம் எல்லா மதவெறி பாசிச பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்துக்கும் இந்த நாடும் சமுதாயமும் பலியாகி விடும்.

· மாணிக்கவாசகம்

ஒரிசா: பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக்காடு


ஒரிசா :
பன்னாட்டு முதலாளிகளின்
வேட்டைக்காடு
ரிசா மாநிலத்திலுள்ள காசிபுர் வட்டத்தைச் சேர்ந்தவர் சரோஜ் மோகந்தி. இவர், கடந்த ஜூலை 14, 2007 அன்று காசிபுருக்குச் சென்று கொண்டிருந்தபொழுது, போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்டு பல்வேறு கிரிமினல் குற்றங்கள், ஒரிசா போலீசாரால் சுமத்தப்பட்டுள்ளன.

சரோஜ் மோகந்தியின் கைது, பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் என்பது போன்ற கதையல்ல. சரோஜ் மோகந்தி, ""அன்வேசா'' என்ற ஒரிய மொழி பத்திரிகையின் ஆசிரியர்; கவிஞர்; பழங்குடி இன மக்களின் நலனுக்காகப் போராடி வரும் ""பி.எஸ்.எஸ்.பி.'' என்ற அமைப்பின் செயல் வீரர். இப்படிபட்ட பின்னணி கொண்ட சரோஜ் மோகந்தி மீது ஒரிசா போலீசும், அம்மாநில அரசும் வன்மத்தோடு பல்வேறு கிரிமினல் வழக்குகளைப் போட்டு, கடந்த ஏழெட்டு மாதங்களாகப் பிணைகூட வழங்காமல், சிறையில் அடைத்து வைத்திருப்பதற்குக் காரணம், அவர், பிர்லா குழுமம் காசிபுர் பகுதியில் அமைத்துவரும் ""உத்கல் அலுமினா இண்டர்நேஷனல் லிட்.'' என்ற அலுமினிய உருக்காலையைத் தீவிரமாக எதிர்த்துப் போராடி வருகிறார் என்பதுதான்.

தரகு முதலாளி டாடாவுக்காக சிங்கூரிலும்; பன்னாட்டு முதலாளி சலீமுக்காக நந்திகிராமத்திலும் நடந்த அரசு பயங்கரவாதத் தாக்குதல்கள் அம்பலமான அளவிற்கு, ஒரிசாவில் தரகு மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் நலன்களைக் காப்பதற்காக நடந்துவரும் அரசின் அடக்குமுறைகள் வெளியே தெரிவதில்லை. ஒரிசாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்த்துப் போராடுவதில் முன்னணியில் இருக்கும் பழங்குடி இன மக்கள் மீதான தாக்குதல்கள், அவர்களின் மலை கிராமங்களுக்குள்ளேயே அமுக்கப்பட்டு விடுகின்றன. அதையும் மீறி வெளியே கசிந்துள்ள அடக்குமுறைகளுள் ஒன்றுதான் சரோஜ் மோகந்தியின் கைதும், அவர் மீதான பொய் வழக்குகளும்.

சரோஜ் மோகந்தி மட்டுமல்ல, காசிபுர் வட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், பிர்லாவின் அலுமினிய ஆலையை எதிர்த்துப் போராடிய ஒரே காரணத்திற்காக, பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

· ஜஜ்புர் மாவட்டத்திலுள்ள கலிங்கா நகர் தொழிற்பேட்டையில் அமையவுள்ள டாடாவின் இரும்பு உருக்காலைக்குப் பழங்குடி இன மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து மே 9, 2005 அன்று பழங்குடி மக்கள் மிகப் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவது என்ற போர்வையில் ஒரிசா போலீசார் கிராமம் கிராமமாகப் புகுந்து தடியடி நடத்தினர். இத்தடியடியில் வயதான முதியவர் ஒருவரும், இரண்டு பழங்குடி இனக் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

இதன்பிறகு, டாடா ஆலைக்காகப் பழங்குடி இன மக்களின் நிலத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்படுவதை எதிர்த்து நடந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக, சனவரி 2, 2006 அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

· காளஹந்தி மாவட்டத்தில், கோண்டு பழங்குடி இன மக்கள் வசித்து வரும் நியம்கிரி மலைப் பகுதியில், இங்கிலாந்தைச் சேர்ந்த வேதாந்தா நிறுவனம் இரும்பு உருக்காலை அமைத்து வருகிறது. பல்வேறு காட்டு விலங்குகள் / உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் உறைவிடமாக இருக்கும் இம்மலைப் பகுதியில் இரும்பு உருக்காலை அமைவதை எதிர்த்துப் போராடி வரும் பழங்குடி இன மக்களை ஒடுக்குவதற்கு, வேதாந்தா நிறுவனமே ஒரு குண்டர் படையைப் பராமரித்து வருகிறது.

இக்குண்டர்படையின் அட்டூழியங்கள் பற்றி போலீசிடம் புகார் கொடுக்க கோண்டு பழங்குடிஇன மக்கள் ஊர்வலமாகச் சென்ற பொழுது, அந்தக் குண்டர்கள் லஞ்சிகடா போலீசு நிலையம் முன்பே பழங்குடி இன மக்களைத் தடுத்து நிறுத்தியதோடு, போலீசாரின் கண் முன்னாலேயே அவர்களை அடித்தும் துரத்தினர்.

வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக ஏப்ரல் 2004இல் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒரே காரணத்திற்காக, நியம்கிரி மலை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த 14 பேர் மீது பொதுச் சொத்தைத் தீ வைத்துக் கொளுத்தியதாகப் பொய் வழக்குப் போடப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நியம்கிரி மலை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரான சுக்ரு மஜ்ஹி உள்ளிட்டு மூன்று பழங்குடியினர் வேதாந்தா நிறுவனத்தின் குண்டர்படையால் 2005ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர். எனினும், இன்றுவரை வேதாந்தா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மீதோ, அக்குண்டர்கள் மீதோ ஒரிசா போலீசார் ஒரு ""பெட்டி கேஸ்'' கூடப் போடவில்லை.

· ஒரிசா மாநில அரசு, தென்கொரிய நிறுவனமான ""போஸ்கோ''வின் வளர்ப்புப் பிராணியாகச் செயல்பட்டு வருவது நாடே அறிந்த உண்மை. சுற்றுப்புறச் சூழல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், போஸ்கோ தொழில் தொடங்க அனுமதிப்பதற்காகத் தடையில்லாச் சான்றிதழ் வழங்கும் பொருட்டு, ஏப்.15, 2007 அன்று ""மக்கள் விசாரணை''யொன்றை நடத்தினார்கள். இவ்விசாரணை நடப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே, ஒரிசா ஆயுதப்படையைச் சேர்ந்த 19 ""பட்டாலியன்கள்'' கிராமங்களில் குவிக்கப்பட்டு, இடைஞ்சல் ஏற்படுத்தும் நபர்களைத் தேடும் வேட்டை நடத்தப்பட்டு, பழங்குடி இன மக்கள் பீதியூட்டப்பட்டனர். இது போதாதென்று, மக்கள் விசாரணையும், போஸ்கோ ஆலை அமையவுள்ள இடத்தில் இருந்து 20 கி.மீ. தள்ளி குஜங்க் என்ற இடத்தில் போலீசின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட்டு முடிக்கப்பட்டது. இந்த ஆலையின் ""ஆதரவாளர்கள்'' தரும் புகாரின் அடிப்படையில், ஆலையை எதிர்க்கும் பழங்குடி இன மக்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப்படுவதற்கு நீதிமன்றங்களும் ஒத்தூதுகின்றன.

· நேபாஸ் இரும்பு உருக்காலை அதிகார வர்க்கத்தின் துணையோடு, சுந்தர்கர் மாவட்டத்தில் குவார்முண்டா பகுதியில் பாசன வசதிமிக்க விளைநிலங்களை வளைத்துப் போட முயன்றதை எதிர்த்து, மார்ச் 24, 2006 அன்று, 4,000 பேர் கலந்து கொண்ட பேரணி நடந்தது அப்பொழுது போலீசுக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த ஆலைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட போலீசு, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மிகக் கொடூரமான தடியடி நடத்தியதோடு, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு 118 பேரை மறுநாள் கைது செய்தது. திருட்டு, சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல், கொலை முயற்சி உள்ளிட்டு, பிணையில் வெளியே வர முடியாத பொய் வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டன.

· காந்தாமர்தன் எனுமிடத்தில் அமையவுள்ள தனியார் அலுமினிய உருக்காலைக்குத் தேவைப்படும் தண்ணீரை வழங்குவதற்காக ஒரிசா மாநில அரசு போலாங்கிர் மாவட்டத்தில் கீழ் சுக்தேல் அணையைக் கட்டி வருகிறது. இந்த அணையால் மூழ்கப் போகும் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், அணைக்கு அடிக்கல் நாட்டப்படுவதை எதிர்த்து மே 11, 2005 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மறுநாள், கிராமங்களுக்குள் புகுந்த போலீசார், பொதுமக்களின் மீது தடியடி நடத்தி, அவர்களின் அற்ப உடைமைகளையும் சேதப்படுத்தியதோடு, 70 விவசாயிகளைக் கைது செய்து சிறையில் தள்ளினர்.

· காசிபுர் பகுதியைச் சேர்ந்த லத்ரா மஜ்ஹி, பிப். 2005இல், ஒரிசா போலீசாரால் திடீரெனக் கைது செய்யப்பட்டார். காசிபுர் பகுதியில் நடந்து வரும் போராட்டங்களில் ஆர்வமாகக் கலந்து கொண்டு வருகிறார் என்ற ஒரே காரணத்துக்காக, அவரை இழிவுபடுத்தும் தீய நோக்கத்தோடு, அவர் மீது இரண்டு திருட்டு வழக்குகள் போடப்பட்டன. நீதிமன்றம் இவ்வழக்கில் இவருக்குப் பிணை வழங்கவே ஆறு மாத காலம் எடுத்துக் கொண்டது. வழக்கு விசாரணையின்பொழுது, இது போலீசார் புனைந்த பொய் வழக்கு என்பதும், போலீசு தரப்பு சாட்சிகள் பொய் சாட்சிகள் என்பதும் அம்பலமான பிறகும், நீதிமன்றம் இந்த இரண்டு திருட்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்ய மறுத்து விட்டது. லத்ரா மஜ்ஹியை மட்டும் விடுதலை செய்த நீதிமன்றம், அவரோடு சேர்த்து கைது செய்யப்பட்ட மீதி ஆறு பேரின் மீதும் போடப்பட்ட திருட்டு வழக்குகளை ""ஆய்ந்து'' கொண்டிருக்கிறது.

கடந்த ஏழாண்டுகளுக்கும் மேலாக ஒரிசா மக்களின் மீது ஏவிவிடப்படும் இந்த அரசு பயங்கரவாதத் தாக்குதலைப் பட்டியல் போட்டு மாளாது. ""மக்களாட்சி'' என்ற முகமூடியை, இப்பொழுது ஒரிசா மாநில அரசு சீண்டுவதேயில்லை. பழங்குடி இன மக்களின் பூமியில் சுரங்கங்களும், உருக்காலைகளும் அமைவதை எதிர்ப்பவர்களைச் சுட்டுக் கொன்றால்தான், பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளினால்தான் ""தொழில் வளர்ச்சி''யைச் சாதிக்க முடியும் என்று கூறி, இந்த அடக்குமுறையை நியாயப்படுத்துகிறது.

உங்களுக்கு நக்சலைட்டுகள் யாரென்று கூடத் தெரிந்திருக்க வேண்டியதில்லை; உங்களைத் தீவிரவாதி என்று முத்திரை குத்த, உங்கள் இடுப்பில் துப்பாக்கி இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தத் ""தொழில் வளர்ச்சி''யை எதிர்த்தாலே போதும், உங்களை, நக்சலைட்டுகள், சமூக விரோதிகள், தேச விரோதிகள், தீவிரவாதிகள் என முத்திரைக் குத்தித் தண்டிக்க மாநில அமைச்சர்களும், அதிகாரிகளும் கையில் குண்டாந்தடிகளோடு அலைகிறார்கள்.

""ஒரிசாவில் அமையவுள்ள சுரங்கங்களிலும் உருக்காலைகளிலும் 50,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றாலும், இதனால் ஏறத்தாழ 2.5 இலட்சம் குடும்பங்கள் (10 இலட்சம் மக்கள்) தங்கள் கிராமங்களை, நிலங்களை இழந்து இடம் பெயர வேண்டியிருக்கும்'' என மாநில அரசே ஒப்புக் கொள்கிறது. எனவே, இத்தகைய ""தொழிற் கொள்கையால்'' ஒரிசாவில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை பெருகுகிறதோ இல்லையோ, சிறைச்சாலைகளின் எண்ணிக்கை உயர வாய்ப்பிருக்கிறது.

ஈராக் நாட்டில் அமெரிக்கப் படைகள் நுழைந்திருப்பதால், அந்த ஆக்கிரமிப்பு வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரிசாவிலோ, டாடா, பிர்லா, ஜிந்தால், வேதாந்தா, போஸ்கோ எனத் தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் இரும்பு, பாக்ஸைட் போன்ற தாது வளங்களைச் சூறையாடுவதற்காக, பழங்குடி இன மக்களின் நிலங்களையும்; காடுகள், மலைகள் போன்ற பொதுச் சொத்துக்களையும் ஆக்கிரமித்து வருகின்றனர். இத்தகைய ஆக்கிரமிப்பு ஒரிசாவில் மட்டுமின்றி, இந்தியாவெங்கிலும் ""வளர்ச்சி'' என்ற பெயரில் மூடி மறைக்கப்படுகிறது.


· குப்பன்


டாடாயிஸ்ட் சந்திப்பும் நந்திக்கிராமமும்

சந்திப்புக்கு தன்னைத்தவிர ஊரில் உள்ளவன் எல்லாம் கேனயன் என்ற நினைப்பு. நந்திக்கிராம மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்தி சொச்சைப்படுத்த, சி.பி.ஐ.(எம்) இது போன்ற நிகழ்சிகளை செய்வதில்லை என்று கதை சொல்ல முனைகின்றார். மூலதனத்தின் அரசியல் குண்டர்களான சி.பி.ஐ.(எம்) இன் வக்கிரத்தை, அறிவும் நேர்மையும் தர்க்கம் எதுவுமின்றி போராடும் மக்கள் மீது காறித் துப்புகின்றனர்.


சி.பி.ஐ.(எம்) டாடாயிஸ்டடுகள் சிறப்பு பொருளாதார சட்ட விதிக்கு மாறாக விளை நிலங்களை கையகப்படுத்தவில்லையா? சிங்கூரில் டாடா கார் தொழிற சலைக்கு 997,1 ஏக்கர் நிலத்தை மக்களிடம் இருந்து திருடவில்லையா? இதை எதிர்த்து போராடிய விவசாயிகள் ஒடுக்கப்படவில்லையா? அந்த நிலத்தில் உழைத்த 1320 குத்தகை விவசாயிகள், 3000 நிலமற்ற கூலிகள், இதை அண்டி தொழில் செய்த 10000 பேரின் கதி என்ன? சி.பி.ஐ.(எம்) காரன் மக்கள் வரிப்பணத்தில் மூலதனத்துக்காக திருடிய 120 கோடியில் வாங்கிய நிலத்தை, வெறும் 20 கோடிக்கு டாடாவிடம் கொடுத்த மாமாக்களின் மர்மம் என்ன? இப்படி நிலத்தை சலுகை விலையில் கொடுக்கவில்லையா? இந்த நிலத்துக்கு இதை விட சலுகைகள் பல. ஆட்சியில் உள்ள சி.பி.ஐ.(எம்) காரன், தனது புரட்சியில் அந்த மண்ணில் வாழும் மக்களுக்கு என்ன தான் செய்துள்ளான். மற்றைய மாநிலங்களை விட எதைத்தான் சிறப்பாக செய்துள்ளான்? தான் கொழுத்ததைத் தவிர வேறு எதையுமல்ல. 250 ஏக்கர் மட்டும் தேவைப்பட, ஏன் 1000 ஏக்கரை சி.பி.ஐ.(எம்) இடமிருந்து பறித்து கொடுத்தது? சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் மக்களிடம் திருடி கொழுப்பதே புரட்சியாகிவிட்டது.

அடுத்து அதேவழியில் நந்திக்கிராமமும். இச்சிறப்புப் பொருளாதார மண்டலம் 14,500 ஏக்கர் பரப்பளவில் சி.பி.ஐ.(எம்) உருவாக்கியது. இதில் 10,000 ஏக்கர் நிலம் இந்தோனேஷிய சலீம் குழுமத்துக்கும், 4,500 ஏக்கர் நிலம் ருயா குழுமத்துக்குமாக தாரை வார்க்கப்பட இருந்தது. இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விளைநிலங்களைப் பறிகொடுக்கப் போகும் கிராமங்களில் ஒன்றுதான் நந்திகிராமம். மக்களின் போராட்டமே இதை தடுத்து நிறுத்தியுள்ளது.

ி.பி.ஐ.(எம்) குண்டர்களும், சந்திப்பும் கூறுவது போல் 'இது தவிர, நந்திகிராமத்தில், இதுவரை ஒரு துண்டு நிலத்தை கூட அரசு கைப்பற்றவில்லை." என்பது உண்மையல்ல. மக்கள் போராடி தமது சொந்த உயிரை இழந்து அதைத் தடுத்துள்ளனர். இது தான் புரட்சி. இதற்கு எதிரான வகையில் சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் புலம்புவது எதிர் புரட்சி.

மக்கள் நடத்திய இந்த நில கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிரான போராட்டத்தை சி.பி.ஐ.(எம்) குண்டர்களும், சந்திப்பும் தமது எதிர்புரட்சிகர வழியில் எப்படி வருணிக்கின றனர். 'நந்திகிராமத்தையே கடந்த மூன்று வாரங்களாக தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, அங்குள்ள சி.பி.ஐ.(எம்) ஆதரவாளர்களை வெளியேற்றிவிட்டு, அபாயகரமான ஆயுதங்களை வைத்துக் கொண்டு, மம்தாவும் - நக்சலிசவாதிகளும் ஆடிய ரவுடித்தனத்திற்குதான் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்கின்றனர். நல்ல வேடிக்கை. 'இது தவிர, நந்திகிராமத்தில், இதுவரை ஒரு துண்டு நிலத்தை கூட அரசு கைப்பற்றவில்லை." என்று கூறும் இந்த முட்டாள்கள் தான் இதையும் சொல்லுகின்றனர். சி.பி.ஐ.(எம்) குண்டர்களும், சந்திப்பும் கூறுவது போல், மக்கள் எல்லாம் கேனயன் என்ற நினைப்பு.

'..மம்தாவும் - நக்சலிசவாதிகளும் ஆடிய ரவுடித்தனத்திற்குதான் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்றால் அது படுகொலை மூலம் தான . இது சரி என்றால், 'நந்திகிராமத்தில் நடைபெற்றுள்ள சம்பவத்திற்காக சி.பி.ஐ.(எம்) வருந்துகிறது." இது என்ன புளுடாவா! இதில் எது சரி? எதிர்புரட்சிகர சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் மக்களின் புரட்சிகர போராட்டத தின் முன்னால் தோற்ற போது, இப்படி அங்குமிங்குமாக சாக்கடை புழுககள் போல் நெளிகின்றனர். இதை அப்படியும் இப்படியும் நெளியவைப்பத்து சந்திப்பின் திருகுதாளமாகும்.

'சி.பி.ஐ.(எம்) ஆதரவாளர்களை வெளியேற்றிவிட்டு" என்றால் சி.பி.ஐ.(எம்) காரனின் தேவைக்காக நடந்த துப்பாக்கி சூடு அல்லவா! அதைத்தானே இது வெளிப்படுத்துகின்றது. சரி மக்கள் விரோத சி.பி.ஐ.(எம்) காரன் ஏன் அங்கிருந்து ஓடினான்? அதற்கு ஏன் துப்பாக்கி சூட்டை நடத்த வேண்டும்?

இதற்கு சற்று முன்னால் அங்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்

சோனாசுரா கிராமத்தில் 'நந்திகிராம நிலப பாதுகாப்பு கமிட்டி" கூட்டம் நடத்துவதை அறிந்து, சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் ஜனவரி 6ஆம் தேதியன்று அதிகாலையில் அக்கிராமத்தை தாக்கினர். சோனாசுரா கிராமத்துக்கு 250 பேருக்கும் மேலாகத் வெளியில் இருந்து திரண்டு வந்த சி.பி.எம். குண்டர்களே இத்தாக்குதலை நடத்தினர். அக்கிராம விவசாயிகளது வீடுகளின் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதோடு, அலறியடித்துக் கொண்டு தப்பியோடிய மக்கள் மீது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர். இப்பயங்கரவாதத் தாக்குதலில் 6 பேர் கோரமாகக் கொல்லப்பட்டனர். சி.பி.எம். குண்டர்களின் கொலைவெறியாட்டத்துக்கு எதிராக ஜனவரி 8ஆம் நாளன்று எதிர்க்கட்சிகள் நடத்திய மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டத்தின்போதும் போலீசு தடியடி நடத்தியதோடு, துப்பாக்கிச் சூடு நடத்தி அடக்குமுறை வெறியாட்டம் போட்டது. இப்படி சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் ரவுடிகளாக அந்த மக்களை தாக்கி கொன்றனர். இந்த மக்கள் விரோத ரவுடிகள் மக்கள் எதிர்ப்பதும , அதில் இருந்த தப்பி ஒடுவதும் இயல்பு.

ஒருவரல்ல, இருவரல்ல, ஆறு பேர் கொலை. அந்த மண்ணில் 15 முறை போலீசு துப்பாக்கிச் சூடு தடியடி, கண்ணீர் புகை வீச்சு, 144 தடையுத்தரவு. எல்லாம் எதற்கு? சி.பி.ஐ.(எம்) குண்டர்களால் கையகப்படுத்த முடியாத அந்த நிலத்துக்காக. அதாவது '.. நந்திகிராமத்தில், இதுவரை ஒரு துண்டு நிலத்தை கூட அரசு கைப்பற்றவில்லை." என்ற உண்மையை பொய்யாக்குவதற்காகத்தான் 'மார்க்சிஸ்ட்" எம்.பி.யான லக்ஷ்மண் சேத், ஏக்கருக்கு ரூ. 4.3 லட்சம் வரை கொடுக்க அரசு தீர்மானித்துள்ளதாகவும், நந்தி கிராமத்தில் பகுதியளவு நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். ஒருபுறம் வன்முறை, மறுபுறம் பணத்தைக் காட்டி விலை பேசுவது என்று மூலதனத்தக்காக புரட்சி செய்கினறனர். சி.பி.ஐ.(எம்) குண்டர்களும் அவர்களின் எடுபிடிகளும். இவவனைததையும செய்துவிட்டு ஊரையும் உலகத்தையும ஏமாற்ற நக்சலைட் அவதூறுகள்.

மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் தான் எதிர் வன்முறையாகின்றது. பின் அந்த குண்டர்படைகளினதும் பொலிசாரினதும் மனிதாபிமானப் பிரச்சனை பற்றி ஒப்பாரி வைப்பது தொழிலாகிவிட்டது.

அந்த மக்களின் நிலத்தை அபகரிக்க சி.பி.ஐ.(எம்) குண்டர்களுக்கு துணையாக பொலிசாரும் கூட்டாகவே களமிறங்கினர். இங்கு ஒரு கேள்வி. 'மம்தாவும் - நக்சலிசவாதிகளும் ஆடிய ரவுடித்தனத்திற்கு" பதில் தான் இந்த படுகொலை என்கின்றார் சந்திப்பு. நல்ல அரசியல் வேடிக்கை. சரி எதிர்க கட்சி போராடக் கூடாதோ! போராடாமல் இருத்தல் தான் ஜனநாயகமோ! சரி எதிர் கட்சிகள் எங்கு இருந்து உருவாகின்றது. அதே மக்களில் இருந்து தானே. அந்த மக்கள் ஆளும் மூலதனத்தின் எடுபிடிகளுக்கு எதிராக போராடக் கூடாது. மேற்கு வங்கத்தில் கம்யூனிச ஆட்சியா நிலவுகின்றது. அப்பட்டமான மூலதனத்தின் கெடுபிடியான பாசிச ஆட்சியே அங்கு நிலவுகின்றது.

யார் பயங்கரவாதி? யார் எதிர்வினையையும் அது சார்ந்த வன்முறையையும் உற்பத்தி செய்கின்றனர். சி.பி.ஐ.(எம்) காரன் மூலதனத்துக்காக சேவை செய்யும் போது, மக்களின் போராட்டத்தைக் கண்டு மூலதனத்தின் எடுபிடிகள் ஒடுகின்றனர். மக்கள் புரட்சி இப்படித்தான் நடக்கும். மக்களை படுகொலை செய்வதே மூலதனத்தின் ஜனநாயகமாக இருக்கின்றது.

மக்கள் போராடுவதே தவறு என்பதே சந்திப்பின் மைய விளக்கம். மக்களை கொள்ளை அடிப்பதை அனுமதிப்பது தான் சி.பி.ஐ.(எம்) காரனின் புரட்சி. ஜனவரி 6ஆம் திகதி சி.பி.ஐ.(எம்) காரனினால் கொல்லப பட்டவர்கள் யார்? அந்த ஊரில் வாழும் உழைக்கும் மக்கள். சி.பி.ஐ.(எம்)காரன் பொலிசார் மூலம் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்கள் யார்? அவர்களும் மக்கள் தான். ஆயிர ஆயிரமாக திரண்ட மக்கள், எதிர்கட்சியோ, நக்சலைட்டுகளோ அல்ல. சி.பி.ஐ.(எம்) குண்டர்களால் வாழ்வு இழக்கப்பட்ட சாதாரணமான உழைக்கும் மக்கள். இப்படி கொல்லப படுவது தான், சி.பி.ஐ.(எம்) காரனின் புரட்சி என்பதே சந்திப்பின் தர்க்கம்.

அதை அவரின் கட்சியைச் சோந்த மூலதனத்தின் எடுபிடி குண்டர்கள் 'சில அரசியல் கட்சிகளும் அங்கே ஆத்திரமூட்டும் செயல்களில் இறங்கியுள்ளன. இவர்கள் யாரும் அந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் அல்ல. இவர்களது நடவடிக்கைகளை அக்கிராம மக்கள் எதிர்த்தார்கள்." என்கின்றனர்.

காயமடைந்த, கொல்லபட்டவர்கள் யார் என்பது உலகம் அறிந்ததே. ஆனால் சி.பி.ஐ.(எம்) குண்டர்களுக்கும் அதன் எடுபிடிகளுக்கும் அது தெரிவதில்லை. வெளியார் என்கின்றனர்.பார்ப்பனிய எடுபிடிகள் வழமையாக கூறுவது போல், பாகிஸ்தானிய முஸ்லீம் கைக் கூலிகளோ!

இதே அளவைக கொண்டே ம.க.இ.க நடத்திய கோக்கோலா எதிர்ப்பு போராட்டம் முதல் அனைத்தையும் துப்பாக்கிச் சூட்டை நடத்தி ஒடுக்கமுடியும் என்பதே, சந்திப்பின் அரசியல் தர்க்கம். சி.பி.ஐ.(எம்) துப்பாக்கி சூட்டை நடத்தலாம் என்றால், ஏன் மற்றவர்கள் அதே காரணத்தை கூறி நடத்த முடியாது?

குஜராத்தில் பார்ப்பனிய மோடி நடத்திய வெறியாட்டமும் இதே காரணத்தைச் சொல்லி நடந்தது, அதை பார்ப்பனிய பாதம் நக்கிகள் நியாயப்படுத்தினர். போராடிய மக்களை, புரட்சிகர மக்களை கொன்று போட்டுவிட்டு, பாசிச கோயபலஸ் பாணியில் விளக்கம் சொல்வதிலும் இந்த குண்டர்கள் மூலதனத் திமிர் வெளிப்படுகின்றது.

'நந்திகிராமத்தில் நடைபெற்றுள்ள சம்பவத்திற்காக சி.பி.ஐ.(எம்) வருந்துகிறது." என்ன வேடிக்கை. நியாயப்படுத்தப்படும் போது, அன்னியர், அது நக்சலைட்டுகளின் சதி என்று புலம்பல். 'தற்போது, தொழில் வளர்ச்சியை திட்டமிட்டு முடக்க பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்று அக்கட்சி மூலதனத்துகாக விளக்கம் தருகின்றனர். அக்கட்சியின் எம்.பி.யாகிய லக்ஷ்மண் சேத், நந்திகிராமத்தில் நிலம் கையகப்படுத்த எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை என்று கோயபல்சையே விஞ்சும் வகையில் அண்டப்புளுகை அவிழ்த்துவிடுகின்றார். சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான எச்சூரியும், கட்சியின் அதிகாரபூர்வ நாளேடுகளும் இதுதான் உண்மை என்று திரும்பத் திரும்ப வாந்தி எடுத்தன. இப்படி ஒன்றுக்கொன று முரணாக புலம்பும் இந்த மூலதனத்துக்கு வாலாட்டும் நாய்களுக்கு சூடுசுரணை இருப்பதில்லை.

ஆனால், இது அண்டப்புளுகை விஞ்சும் ஆகாசப்புளுகு என்பதை மே.வங்க நாளேடுகள், லக்ஷ்மண் சேத் கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையையும், ஹால்டியா வளர்ச்சிக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பையும் படத்தோடு செய்தியாக வெளியிட்டு நாறடித்தன. அதன் பிறகே மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ஹால்டியா வளர்ச்சிக் குழுமம் தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், அதை உடனே ரத்து செய்யுமாறு ஆணையிட்டுள்ளதாகவும் துப்பாக்கி சூடு நடக்க முன்னம் புலம்பினார். 'நந்தி கிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலப் பணிகள் அதிகாரபூர்வமாக நிறுத்தப்பட்டு விட்டன." என்கின்றனர். என்ன முரண்பாடு. இவர்கள் செய்வது என்ன?

1. மக்களை ஒடுக்கி அவர்களின் மேல் நடத்துகின்ற வெறியாட்டம்

2. மறுபக்கம் அதை தாம் செய்யவில்லை என்று ஊரையும் உலகத்தையும ஏமாற்றும் வக்கிரம்.

3. செய்ததை நியாயப்படுத்த, அதை மற்றவர்களின் குற்றமாக காட்டும் சூழ்ச்சிகளும், சதிகளும்

4. மூலதனத்துக்காக நாயாக நக்கி உழைப்பதே புரட்சி என்பது இவர்களின் வாழ்க்கை நெறி

மக்களின் எதிரிகளை, எதிர்புரட்சிகர சக்திகளை எந்தவகையில் மக்கள் தண்டிக்க விரும்புகின்றனரோ, அந்த வகையில் சி.பி.ஐ.(எம்) கட்சியை தண்டிப்பார்கள். சந்திப்பின் (5) கேள்விகள் எல்லாம் பிரச்சனையை திசை திருப்புகினற பார்ப்பனிய அரசியல் வித்தைகள்.

குறிப்பு.:
1.அரவிந்தன் நீலகண்டன் என்ற நபர் இந்திய மக்களின் கடைந்தெடுத்த எதிரி. உள்ளடக்க ரீதியாக இந்திய அரசியல் அமைப்பு சட்டம கடடமைத்துள்ள அனைத்து மக்கள் விரோத செயற்பாட்டுக்கும் துணை நிற்கும் ஒரு பூணூல். பார்ப்பனிய வழியாக கட்டிப பாதுகாக்கும் மூலதனத்தின் அசலான அடிவருடி. இந்த பூணூல் மார்க்சியமும் அறிவியலும் என்ற தலைப்பில், தனது பூணூல் வழியாக ஒரு பதிவைப் போட்டுள்ளது.

பார்ப்பனிய மூலதன அரசியல் அமைப்புக்கு பூணூல் அணிந்த குலைக்கும் ஒருவன் அறிவாளியாக, அறிவியலாக இருக்கவே முடியாது. அதுவும் பார்ப்பனியத்தை ஆதரிப்பவனாக இருந்தால், அதன் அறிவு என்பது சதியும் சூழ்ச்சியும் தான் அதன் மூலதனமாகும். விரைவில் தனிப்பதிவு மூலம் அதைப் பார்ப்போம்.

2 .புரட்சிகர வன்முறை குறித்தும், புரட்சிகர மனிதாபிமானம் குறித்தும தனிப்பதிவாக பார்க்கவுள்ளோம். வன்முறையை வாழ்க்கையாக, மனிதாபிமானத்துக்கு எதிராக வாழ்வதையே நாகரிகமாக கொண்ட சமூகவிரோத ஓட்டூண்ணிகளை தோலுரிப்பது அவசியமல்லலா!
பி.இரயாகரன்21.03.2006

Friday, April 18, 2008

நானோ கார் : மலிவு விலையின் பின்னே மறைந்து கிடக்கும் உண்மைகள்

நானோ கார் :
மலிவு விலையின் பின்னே
மறைந்து கிடக்கும் உண்மைகள்

ரு லட்ச ரூபாய்க்கு ""நானோ'' கார் எனும் குட்டிக்காரை சந்தைக்கு கொண்டுவந்து, தரகு பெருமுதலாளி டாடா, கார் புரட்சி செய்யப்போகிறாராம். இவர் செய்யப்போகும் புரட்சிகூட இரண்டாவது புரட்சிதானாம். முதல் புரட்சியை ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ""மாருதி'' நடத்தி விட்டதாம். இம்மாபெரும் உண்மைகளை ""இந்தியா டுடே'' நமக்கு உணர்த்தியிருக்கிறது.

சொந்தமாக ஒரு கார் என்பதுதான், நடுத்தர வர்க்கத்தின் அந்தஸ்தையும் கவுரவத்தையும் தூக்கி நிறுத்தும் அம்சமென்று கடந்த சில பத்தாண்டுகளாகவே விளம்பர உலகம் பிரச்சாரம் செய்து வரும் சூழலில், ஒரு லட்ச ரூபாய்க்குள் ஒரு கார் என்பதும், அதற்காக ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகள் கடன் தர இருப்பதும் நல்ல விசயம்தானே என்று மக்களில் பலரும் மயங்கிக் கிடக்கின்றனர். வணிகப் பத்திரிக்கைகள் எல்லாம் ஏதோ ஏழை, நடுத்தர மக்களின் வயிற்றில் பால்வார்த்து டாட்டா மாபெரும் தியாகமே புரிந்துள்ளதாகப் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளுகின்றன.

டாட்டா அறிவித்துள்ள மலிவுவிலைக் காரின் மகத்துவத்தை நாம் அலசுமுன், சிங்கூர் மக்களின் துயரக்கதையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

டாட்டாவின் மலிவுக் காருக்காக 997 ஏக்கர் விளைநிலத்தை சிங்கூர் மக்கள் பறிகொடுத்துவிட்டு, மாற்று வேலை கிடைக்காமல் தற்கொலையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 9ஆம் தேதியன்று சிங்கூரில் நிலத்தை இழந்து, வேலையையும் இழந்த குத்தகை விவசாயியான காளிபடா மஜ்ஹி, பட்டினியால் மாண்டு போயுள்ளார். கார் தொழிற்சாலையில் கிடைத்த காவலாளி, தோட்டக்காரர் போன்ற அற்ப வேலைகளும், விரைவில் கட்டுமானப்பணிகள் முடிவடைந்ததும் சிங்கூர் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும்.

இந்தக் காருக்காக மேற்கு வங்க ""டாட்டா கம்யூனிஸ்டு'' அரசு, 287.5 ஏக்கர் நிலத்துக்கு மட்டும் இழப்பீடாக 150 கோடி கொடுத்துவிட்டு, மற்றவர்களை நிலத்தை விட்டுக் கட்டாயமாக விரட்டியடித்து பாசிச அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அதுமட்டுமல்ல; கட்டுமானப் பணிக்கென்று ரூபாய் 200 கோடியை 1 சதவீத வட்டியில் கடன், கார் விற்பனைக்கு வங்கத்தில் முதல் பத்தாண்டுகளுக்கு மதிப்புக் கூட்டு வரிவிலக்கு, 997 ஏக்கரையும் அற்பத் தொகைக்கு 99 வருடக் குத்தகை என சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.

குத்தகைத் தொகையைக்கூட டாட்டா நிறுவனம் முதல் ஐந்தாண்டுகளுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி வீதமும், அடுத்த பத்தாண்டுகளுக்கு ஆண்டுக்கு பத்துக் கோடி வீதமும், பின்னர் முப்பது ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.20 கோடி வீதமும் நிதானமாகச் செலுத்தினால் போதும். வரி விலக்கினால் மட்டும் அரசுக்கு ஏற்படப்போகும் இழப்பு சுமார் ரூ.500 கோடி. மேலும் கொல்கத்தா நகருக்கு வெளியே 50 ஏக்கர் நிலமும், அதற்கு சற்று தள்ளி 200 ஏக்கர் நிலமும் டாட்டா நிறுவன ஊழியர்கள் தங்குமிடத்திற்கென அரசு ஒதுக்கியுள்ளது. தொழிற்சாலைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வெறும் 100 ஏக்கரை மட்டும் பயன்படுத்திக் கொண்டு, மீதமுள்ள இடங்களை கார் உதிரிபாகத் தொழிலகங்களுக்கு உள்வாடகைக்கு விட்டு டாட்டா பல கோடிகளைச் சம்பாதிக்க உள்ளது. இந்தப் "புரட்சி'க்குத் துணை நின்றவர்கள்தான் டாடா கம்யூனிஸ்டுகளாகிய, மே.வங்கத்தை ஆளும் போலி கம்யூனிஸ்டுகள்.

பொதுமக்களின் சொத்தை இவ்வளவு விழுங்கியும் ""நானோ'' டாட்டாவின் பணப்பசி இன்னும் தீரவில்லை. மத்திய அரசு இதற்கு வரிச்சலுகை தரவேண்டும் என்கிறது. விவசாய இடுபொருளான உரத்திற்கு மானியத்தை வெட்டும் அரசு, இந்தக் காருக்கு வரிச்சலுகை தந்தாலும் அது வியப்பில்லை.

இந்தக் காரை ஆரம்பத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்குத் தரப்போவதாகச் சொன்ன டாட்டா அதற்குரிய வரியையோ, பதிவுக் கட்டணத்தையோ சேர்க்கவில்லை. இதனைச் சேர்த்தாலே அது கூடுதலாக 35 ஆயிரத்தை விழுங்கும். ""எஃகு, டயர் விலைகள் எல்லாம் உயர்ந்து வருகின்றன'' என இன்னும் விலை உயரப்போவதை டாட்டாவே சூசகமாக அறிவித்துள்ளார்.

கடைசியில், சஞ்சய்காந்தியின் "கனவு'த் திட்டமான மாருதியின் கதைதான். முதலில் 40 ஆயிரத்தில் கார் என அறிவித்துவிட்டு சந்தைக்குக் காரைக் கொண்டுவந்தபோது, விலையைக் கூட்டி நடுத்தர வர்க்கத்தின் பாக்கெட்டுகளைப் பறித்தெடுத்த அதே திட்டம் "நானோ'விலும் நிகழப் போகிறது. ஆனால், இந்த முறை இதனை விரைவுபடுத்த பல தனியார் வங்கிகள் நீண்டகாலக் கடன் தரத் தயாராகிக் கொண்டுள்ளன. நடுத்தர வர்க்கத்தைக் கடன் வலைக்குள் சிக்க வைத்து ஆயுள் முழுக்க வட்டி கட்ட வைக்கும் திட்டங்கள் எல்லாம் தயாராக உள்ளன.

இது மிகவும் பாதுகாப்பானது, நச்சுப்புகை வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் பாரத்2, பாரத்3 ஆகிய தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது; ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18 கி.மீ. ஓடும்; நீண்ட காலம் தாக்குப்பிடிக்கும் என்ற 4 அம்சங்களும் நானோ காரின் சிறப்புகளாக பத்திரிக்கைகளால் கூறப்படுகின்றன. ஆனால் வாகன நிபுணர்களோ, இவை அனைத்தும் அப்பட்டமான பொய் என்று தோலுரிக்கின்றனர்.

மலிவுவிலைக் கார் வாங்கப் போகும் நடுத்தர வர்க்கத்தின் உயிர் பற்றியெல்லாம் முதலாளி டாட்டாவுக்கு அக்கறை இருக்க முடியுமா? அதனால் தான் நானோவில் எஃகு, இரும்பு ஆணிகள், மரைகளுக்குப் பதிலாக உதிரிப்பாகங்கள் பலவும் பிளாஸ்டிக், ஒட்டும் கோந்து போன்றவற்றால் உருவாக்கப்பட்டுள்ளன. வண்டி ""ஸ்டியரிங்''கை சக்கரத்துடன் இணைக்க வேண்டிய இரும்புத் தண்டுக்குப் பதிலாக, உள்ளீடான குழாய் பொருத்தப்பட்டுள்ளது. வண்டி 60 கி.மீ. வேகத்தில் சென்றால் ""ஸ்டியரிங்'' ஆட்டம் கண்டு விடும். இதுதான் நானோ வழங்கும் "பாதுகாப்பு'!

இக்காரின் எஞ்சின் உட்பட முக்கியமான பாகங்கள் மிகவும் பழைய தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதால், புகை மாசு வெளியேற்றத்தில் இது 5 முதல் 6 மடங்குவரை சுற்றுச்சூழலை நாசமாக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதனைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.

விவசாயத்தினை அரசு திட்டமிட்டு அழித்து வருவதால், நகரங்களுக்குச் சென்று எதையாவது செய்து பிழைக்கலாம் என மக்கள் வந்து குவிகிறார்கள். அவர்களுக்குத் தேவையான அளவிற்கு பேருந்துகளை அரசு இயக்குவதில்லை. இருக்கும் பொதுப்போக்குவரத்தையும் நட்டக்கணக்கு காட்டி இழுத்து மூடத்திட்டம் போடுகிறது. ஆனால், பேருந்தைக் காட்டிலும் 6 மடங்கு அதிகம் பெட்ரோலைக் கரியாக்கி நமது அந்நியச் செலாவணியைக் கரைக்கும் கார்களை அரசு ஊக்குவிக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் மக்கள் தொகை, நகரங்களில் 4 மடங்குதான் பெருகியிருக்கிறது. ஆனால், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களோ 158 மடங்கு பெருகியிருக்கின்றன என்றால், அதனால் ஏற்படும் வரைமுறையற்ற மாசை ஊகித்துக் கொள்ளலாம்.

கோடிக்கணக்கான செலவில் போடப்படும் பளபளா சாலைகளையும் பாலங்களையும் உபயோகித்துக் கொண்டு போக்குவரத்து நெரிசல்களை உருவாக்கும் கார்களுக்கு அரசு விதிக்கும் சாலை வரியோ வெறும் 300 ரூபாய். ஆனால் 2 அல்லது 3 கார்களின் இடத்தை மட்டும் அடைத்துக் கொள்ளும் பொதுப்பேருந்துக்கு விதிக்கும் வரியோ 1300 ரூபாய். பல கோடி நில மதிப்பு மிக்க நகர மையங்களில், அரசே கார்களுக்கு இலவச நிறுத்துமிட வசதிகளை செய்து கொடுக்கிறது. அவ்விடங்களை விடக் குறைந்த நிலப்பரப்பில் வாழும் ஏழைகளின் குடிசைகளையோ ஆக்கிரமிப்பு என்று பிய்த்து எறிகிறது.

நியாயமாகக் கணக்கிட்டால்கூட, கார் வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தும் சாலைக்கும் பாலங்களுக்கும் ஆகும் கட்டுமான செலவு, பராமரிப்பு செலவுக்கென்று ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கோ சலுகைக்கு மேல் சலுகை. அதே நேரத்தில், சைக்கிள்களை சில சாலைகளில் செல்ல அனுமதிப்பது கூட இல்லை. மேம்பாலங்கள் கட்டுகிறோம் என்ற பெயரில் இருந்த நடைபாதைகளையும் தகர்த்துவிட்டது அரசு.

கணக்கு வழக்கின்றி தனிநபர் வாகனங்கள் பெருகி வருவதால் பெருநகரங்களில் வாகனப் போக்குவரத்தின் சராசரி வேகமே ஆமைக்கு கொஞ்சம் பக்கத்தில் எனும் அளவில் வந்து நிற்கிறது. காலை மாலை வேளைகளில் கொல்கத்தாவில் மணிக்கு 7 கி.மீ. வேகத்திலும், சென்னையில் 13 கி.மீ. வேகத்திலும்தான் போக்குவரத்தே ஊர்கிறது. மந்தமான இந்த நகர்வினால் உற்பத்தி பாதிப்பு, சாலைச் சந்திப்புகளில் நின்றுகொண்டே இயங்கும் எஞ்சின்கள் ஆகியவற்றால் இந்தியப் பொருளாதாரமே ஆண்டுக்கு ரூ.3000 கோடியில் இருந்து ரூ.4000 கோடிவரை அழிகிறது என்கிறது ஓர் ஆய்வு.

இந்தியச் சாலைகளின் முக்கால்வாசிப் பகுதியை அடைத்து நிற்கும் கார்களால் 5 சதவீதப் போக்குவரத்துத் தேவை மட்டுமே நிறைவு செய்யப்படுகிறது. ஆனால் 5 சதவீதப் பரப்பை மட்டும் பயன்படுத்தும் பொதுப் பேருந்துகள்தான் மக்களின் 60 சதவீதத் தேவையை நிறைவு செய்கின்றன.

கரியமிலவாயுவால் புவிப்பரப்பே சூடாகி வருகிறது எனும் பேரபாயம் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்கள் அனைவரையும் பாதிக்கும் தனிநபர் வாகனங்களைக் குறைத்துக் கொண்டு பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதுதான் உலகம் அழிந்துவிடுவதைத் தள்ளிப் போடச் சிறந்த வழி.

சிங்கப்பூர், லண்டன், நியூயார்க் போன்ற முதலாளித்துவம் அதிகாரம் செலுத்தும் நகரங்களில் கூட, ரயில் பேருந்துப் போக்குவரத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால் இங்கோ கார் நிறுவனங்களின் சந்தைக்கேற்ப பொதுப் போக்குவரத்தை நாசமாக்கும் செயல் நடந்து வருகிறது.

அதற்குத் தகுந்தாற்போல நடுத்தர வர்க்கத்தின் கனவை ஊடகங்களே தயாரித்து வழங்குகின்றன. பாட்டாளி வர்க்கக் கட்சி என்று தம்மைக் கூறிக்கொள்ளும் மே.வங்க அரசோ மக்களைத் துரத்தியடித்து "மக்கள் கார்' தயாரிக்கப் போகும் "புரட்சித் தலைவர்' ரத்தன் டாட்டாவுடன் ஐக்கிய முன்னணி கட்டிக் கொண்டிருக்கிறது.· அன்பு

Thursday, April 17, 2008

சிறுநீரகக் கொள்ளை: வெட்கங்கெட்ட இந்திய அரசு


சிறுநீரகக் கொள்ளை :
வெட்கங்கெட்ட இந்திய அரசு


ந்நியச் செலாவணி எனும் எச்சில் காசுக்காக இந்தியப் பெண்களின் மானத்தை விற்கலாம்; வாடகைத் தாயாக மாறித் தாய்மையை விலை பேசலாம்; நாட்டின் இறையாண்மையை அமெரிக்க அணுசக்திக்காக விற்கலாம்; நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உயர்கல்வி கற்று, உலக மேலாதிக்க அமெரிக்காவின் ""நாசா''வுக்கு ஏவுகணைகள் தயாரிக்கக் கட்டளை நிரல்கள் (கம்ப்யூட்டர் புரோகிராம்) எழுதலாம் இப்படியெல்லாம் புதிய நீதிநெறிகள் உருவாக்கப்பட்டுள்ள மறுகாலனியக் கட்டமைவுக்குள், துரத்திக் கொல்லும் வறுமையிலிருந்து விடுபட உடல் உறுப்புகளை ஏழை மக்கள் விற்கலாம் என்பதுதானே நெறிமுறையாக இருக்க முடியும்?

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கு தடையற்ற சிறுநீரக வர்த்தகம். ஒவ்வொருமுறை பிடிபடும் போதும், விரைவிலேயே விடுதலை. பெயரை மாற்றிக் கொண்டு பல ஊர்களில் 500க்கும் மேற்பட்டவர்களிடம் சிறுநீரகத் திருட்டு. இதன் மூலம் 1000 கோடி ரூபாய்க்கும் மேலாக சொத்து, சுகபோகம் எனத் "தொழில்' நடத்தி, இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் டாக்டர் அமீத்திடம் கேளுங்கள். இவற்றையெல்லாம் குற்றமாகவே ஒப்புக் கொள்ள அவர் மறுக்கிறார்.

மும்பையிலிருந்து அரியானாவின் குர்கான் வரை, 1993இலிருந்து நேற்றுவரை, வறுமையில் வாடும் கூலித் தொழிலாளர்கள் நடைபாதைவாசிகளிடம் நைச்சியமாகப் பேசியோ, பண ஆசை காட்டியோ, இழுத்து வந்து மிரட்டியோ அவர்களின் சிறுநீரகங்களை எடுத்து, அமெரிக்கஅராபிய பெரும் பணக்கார நோயாளிகளுக்குப் பொருத்தும் தொழிலை டாக்டர் அமீத் செய்து வந்துள்ளார். இந்த ஏழைகளிடம் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை வீசியெறிந்து விட்டு, அவர்களின் சிறுநீரகத்தை எடுத்துக் கொண்டு அதனை மேலைநாட்டு கோடீசுவர நோயாளிகளுக்கு ரூ. 20 லட்சம் வரை விற்றிருக்கிறார்.

இவ்வாறு செய்வது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம். ஆனாலும் டாக்டர் அமீத் விவகாரத்தில் இச்சட்டம், 500க்கும் மேற்பட்ட தடவைகளில் மீறப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கைக் காப்பதாகக் கூறிக்கொள்ளும் போலீசு நீதித்துறை அதிகார வர்க்கம் அடங்கிய அரசு எந்திரமே டாக்டர் அமீதுடன் சேர்ந்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளது.

பல நாடுகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், 1980களில் இந்தியாவில் கணக்கு வழக்கின்றி பல சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டன. பின்னர், இதில் நடக்கும் மோசடிகளைத் தடுத்து முறைப்படுத்த 1994இல் புதியதொரு சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி, வணிகத்துக்காக உடல் உறுப்பு மாற்றுவது தண்டனைக்குரிய குற்றம். இருப்பினும், சட்டத்தை உருவாக்கும்போதே அதனை மீறுவதற்காக ஒரு உட்பிரிவை அதில் புகுத்தியுள்ளனர்.

இதன்படி, ஒரு நோயாளிக்கு அவரது இரத்தவழி உறவுடைய உடன்பிறந்தவர்களோ, மகனோ, மகளோ அல்லது பெற்றோரோ உடல் உறுப்பைத் தானமாகக் கொடுக்கலாம். இதுதவிர, மனிதாபிமானத்துடன் உணர்வுபூர்வமான கொடையாளியும் தானமாக தனது உடல் உறுப்புகளை வழங்கலாம். இரத்த வழி உறவற்ற இந்த "உணர்வுபூர்வமான கொடையாளி' எனும் பிரிவைப் பயன்படுத்தித்தான் மருத்துவ வியாபாரிகள் தமது "தொழிலில்' கொடிகட்டிப் பறக்கின்றனர். ஏழைகளின் சிறுநீரகங்களை விலைபேசி, அந்த ஏழைகள் கண்ணால் கூடப் பார்த்திராத அமெரிக்க அராபிய கோடீசுவர நோயாளிகளுக்கு "உணர்வுபூர்வமாக'த் தமது உடல் உறுப்புகளைத் தானமாகத் தந்ததாகக் காட்டிச் சட்டப்படியே சட்டத்தை ஏய்த்து வருகின்றனர்.

இங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக நேபாளத்தில் பதுங்கியிருந்த டாக்டர் அமீதை இந்தியப் போலீசார் கைது செய்துள்ளதை ஏதோ வீரசாகசச் செயல்போல ஊடகங்கள் சித்தரிக்கின்றன. ஆனால், அமீதின் மருத்துவமனையைச் சோதனையிடப் போகிறார்கள் என்ற தகவலை, உயர்போலீசு அதிகாரிகளே அவருக்குத் தெரிவித்து தப்பியோட உதவியுள்ளனர். இதிலிருந்தே "சட்டத்தின் ஆட்சி' எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்று டாக்டர் அமீது கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், நாடெங்கும் இரகசிய உலகத் தொழிலாக உடலுறுப்பு வணிகம் தொடர்ந்து நடந்து வருகிறது. அவ்வப்போது பெயரளவிலான சோதனை நாடகங்கள் நடத்தப்பட்டு, மருத்துவ வியாபாரிகள் தப்புவிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் மதுரை, பள்ளிப்பாளையம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் சிறுநீரக வியாபாரத்தில் பல மாஃபியா கும்பல்கள் ஈடுபட்டு வந்தபோதிலும், நெசவாளர்கள் தமது சிறுநீரகங்களை விற்ற அவலங்கள் கதைகதையாக வெளிவந்த போதிலும் இக்கும்பலை சேர்ந்தவர்களோ, அறுவை சிகிச்சை நடத்திய மருத்துவர்களோ இன்று வரை கைது செய்யப்படவில்லை. தேவர் சாதிப் பிரமுகரான டாக்டர் சேதுராமனின் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் வாரத்துக்கு மூன்று வீதம் சென்னை சுனாமி முகாம்வாசிகளின் சிறுநீரகங்கள் அறுத்தெடுக்கப்பட்டு, அவை மேட்டுக்குடி நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டு, இந்த வியாபாரம் கொடிகட்டிப் பறந்தபோதிலும், இந்த உண்மைகள் பத்திரிகைகளில் வெளிவந்து நாறிய போதிலும், சட்டம் பல்லிளித்துக் கொண்டுதான் நின்றது.

ஒருவேளை இந்தச் சட்டத்தைக் கறாராகச் செயல்படுத்தினாலும்கூட, மருத்துவத்தை வியாபாரமாக்கும் அறநெறியற்ற மருத்துவர்கள் தூக்குமேடைக்குப் போகப் போவதில்லை. உடலுறுப்புகள் உறவினர்களிடையே மாற்றப்படவில்லை என்பதையும் வணிகரீதியாகத்தான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்பதையும் சட்டப்படி நிரூபித்தாலும் கூட, 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கும். அவர்களது சொத்துக்களும் மருத்துவர் தகுதியும் பறிக்கப்பட மாட்டாது. இந்தப் "பயங்கர' சட்டத்தைத்தான் கறாராகச் செயல்படுத்த வேண்டுமென்கின்றன, செய்தி ஊடகங்கள். அமைச்சர் அன்புமணியோ அவசியமான திருத்தங்களைச் செய்து இச்சட்டத்தை இன்னும் கடுமையாக்கப் போவதாகப் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்.

விவசாயத்தையும் நெசவையும் சிறுதொழில்களையும் தாக்கி அழித்து மரணப் படுக்கையில் வீழ்த்தியுள்ள மறுகாலனியாதிக்கம், இந்நாட்டு மக்கள் உயிர் வாழ்வதற்குத் தமது உடல் உறுப்புகளை விற்கும் அவலத்திற்குத் தள்ளியுள்ளது. மரணக் குழியில் மக்களைத் தள்ளும் மறுகாலனியாக்கமே, ஏழைகளின் உடல் உறுப்புகளைக் கூறுபோட்டு விற்கும் தரகர்களையும் உருவாக்குகிறது. இத்தரகர்களும், மருத்துவ வியாபாரிகளும் அதிகார வர்க்கமும் போலீசும் கூட்டுச் சேர்ந்து "தொழில்' நடத்துவதற்கேற்ப காகிதச் சட்டங்களையும் இயற்றி வைத்துள்ளது.

இதனால்தான், இந்தியாவில் கிடைக்கும் மலிவான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட மலிவு விலை மருத்துவ சிகிச்சைகளைக் காட்டி, ""மருத்துவச் சுற்றுலா''க்களை வளர்க்க ஏராளமான சலுகைகளை வாரியிறைக்கிறது, புதிய பொருளாதாரக் கொள்கை. செட்டிநாடு மருத்துவமனை, பெரியார்புரா போன்று பல மருத்துவச் சுற்றுலா மையங்கள் அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்காகவே உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சட்டத்தை மேலும் கடுமையாக்குவதல்ல; உடல் உறுப்புகளை விற்று உயிர்வாழும் நிலைக்குத் தள்ளியுள்ள மறுகாலனியாக்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் மேலும் கடுமையாகப் போராடுவதொன்றே, இந்த அவலத்தையும் அமீதுகளின் கொட்டத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும்.

· அன்பு

அதியமான்கோட்டை ஆயுதக் கொள்ளை

அதியமான்கோட்டை ஆயுதக் கொள்ளை:

பார்ப்பன ஜெயாவின் 'பஜாரி" அரசியல்
பதவி-அதிகாரத்தை அடைவதற்காகப் பச்சைப்பொய்யைக் கூடத் துணிந்து சொல்லும ஜாலக்காரிதான் ஜெயா.

ட்சி அதிகாரம் இல்லாத ஒரு விநாடியைக் கூட பார்ப்பன பாசிச பயங்கரவாதியான ஜெயலலிதாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஆவேசம் அகங்காரத்தோடு பொங்கி விடுகிறார். சென்னை மக்கள் மொழியில் சொல்வதானால் ""பஜாரி'' அரசியல்வாதியாக அவதாரமெடுத்து விடுகிறார்.

அதென்ன பஜாரி அரசியல்? பொதுமக்கள் நடமாடும் இடம் என்பதையும் கவனத்தில் கொள்ளாது, தெருச்சந்தியில் நின்று கொண்டு, இழந்துவிட்ட வருமானத்தை மீண்டும் அடைவதற்கான வெறியோடும் ஆத்திரத்தோடும் அருவெறுப்பாகவும் நாராசமாகவும் அரசியல் எதிரிகள் மீது வசவுகளும் அவதூறுகளும் அள்ளி வீசி, ஓங்காரக் கூச்சல் போடுவது.

ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்தை இழந்ததில் இருந்து, அடுத்த தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் ஆவேசமும், கோயாபல்சுத் தனமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. வலிப்பு நோயும் மனநோயும் ஒருசேரப் பிடித்தவரைப்போல நடந்து கொள்கிறார்.

ஜெயலலிதா மீதான வெறுப்பினால் இதை நாம் சொல்லவில்லை. முற்றிலும் ஆதார அடிப்படையிலான உண்மைதான் இது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது, தர்மபுரி அதியமான்கோட்டை போலீசு நிலையத்தில் கடந்த மாதம் நடந்த ஆயுதக் கொள்ளை குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை.

மக்கள் இயக்கச் செய்திகளை இருட்டடிப்பு செய்து விட்டு, சினிமா நடிகைகளின் செய்திகளை தலைப்பில் போடும் குஜராத்தி பனியாவுக்குச் சொந்தமான பார்ப்பனச் செய்தி ஏடு "தினமணி'. ஆதாரப்பூர்வமான உண்மைச் செய்திகளை மட்டுமே வெளியிடும் யோக்கிய சிகாமணிபோலக் காட்டிக் கொள்ளும் தினமணி, ஜெயலலிதாவின் கோயாபல்சு அறிக்கையை ""தீவிரவாத அமைப்புகளுக்கு முதல்வர் கருணாநிதி ஆதரவு தருவதாகக் கூறிய ஜெயலலிதா, தமிழகம் ஆயுதக்காடாக மாறிவிடும் என்று எச்சரித்துள்ளார்'' என்று முன்னுரையோடு முதற்பக்கத்தில் முழுமையாக வெளியிட்டுள்ளது. ""தமிழகம் ஆயுதக் காடாக மாறிவிடும் ஜெயலலிதா எச்சரிக்கை'' என்று தலைப்பில் நாலு பத்தியும், ஜெயலலிதா மூஞ்சியை ஒரு பத்தியுமாகப் போட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம்ஒழுங்கு உட்பட எதுவுமே கருணாநிதியின் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்று தான் கூறியதை நிரூபிக்கும் விதமாக, 9.2.2008 அன்று அதிகாலை தர்மபுரி அதியமான்கோட்டை போலீசு நிலையச் சம்பவம் அமைந்துள்ளது என்கிறார் ஜெயலலிதா.

""அந்த காவல் நிலையத்துக்குள் புகுந்த நக்சலைட் கும்பல் பூட்டப்பட்டிருந்த ஆயுத அறைப்பூட்டை உடைத்து 6 துப்பாக்கிகள், அவற்றின் குத்துவாள்கள், ஒரு ""வாக்கி டாக்கி''யைக் கொள்ளையடித்துள்ளது. இதை அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர், இரு தலைமைக் காவலர்கள் மற்றும் ஒரு காவலர் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தது தனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது'' என்கிறார், ஜெயலலிதா.

இப்படிப்பட்ட சம்பவங்கள் கருணாநிதி ஆட்சிக்கு ஒன்றும் புதிதல்ல என்று கூறும் ஜெயலலிதா, 1998இல் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் ஈரோடு வெள்ளித் திருப்பூரில் ஆயுதங்களைக் கொள்ளையடித்ததையும், அதே ஆண்டு தர்மபுரி பென்னாகரத்தில் போலீசின் ஓட்டுநரைக் கொன்றுவிட்டு நக்சலைட்டுகள் வங்கியைக் கொள்ளையடிக்க முயன்றதையும் எடுத்துக்காட்டுகிறார்.

""கருணாநிதி ஆட்சியில் காவல்துறையினர் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் என பல்வேறு தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் ஊடுருவல் காரணமாக தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. காவல்நிலையத்தையே பாதுகாக்க முடியாத கருணாநிதி, தமிழ்நாட்டு மக்களை எப்படிக் காப்பாற்றப் போகிறார்?

""கருணாநிதிக்கு இந்த நாட்டின் மீதோ, அரசமைப்புச் சட்டத்தின் மீதோ, இந்திய இறையாண்மையின் மீதோ அக்கறை இல்லை. காவல்துறையை கைவசம் வைத்திருக்கும் முதல்வர் கருணாநிதியே தீவிரவாதிகளை ஆதரித்துப் பேசும்போது, நாம் ஏன் நக்சலைட் கும்பலை எதிர்த்துப் போராடி காயம் அடைவதோடு முதல்வரிடம் கெட்ட பெயர் வாங்க வேண்டும் என்று அதியமான் கோட்டை காவல்நிலைய அதிகாரிகள் நினைத்து விட்டனர் போலும்.

""வெள்ளித்திருப்பூர் சம்பவத்தில் காவல்துறையினர் எதிர்தாக்குதல் நடத்தினர். ஆனால் தற்போது நடைபெற்ற சம்பவத்தில் காவல்துறையால் எதிர்தாக்குதல் நடத்தப்படவில்லை. கருணாநிதியின் சென்ற ஆட்சியை விட தற்போதுள்ள ஆட்சியில் "முன்னேற்றம்' ஏற்பட்டுள்ளது.

""தீவிரவாத அமைப்புகளுக்கு கருணாநிதி தொடர்ந்து ஆதரவு கொடுப்பதால் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வேண்டுமானால் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருக்காது. ஆனால், தமிழகம் ஆயுதக்காடாக மாறிவிடும் என்பதை கருணாநிதிக்கு நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

""இந்தியாவிலேயே பயங்கரவாத அமைப்புகளின் ஊடுருவலில் முதன்மை மாநிலம் என்ற பெருமையை தமிழகத்திற்கு கருணாநிதி தேடித்தரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

""தமிழகத்தை ஆயுதக் காடாக மாற்றிவரும் கருணாநிதியின் செயல்பாடுகளை கண்டிப்பதோடு, தமிழக மக்களை தீவிரவாத அமைப்புகளிடமிருந்து காப்பாற்றவும், தமிழகத்தில் தொடர்ந்து பெருகி வரும் வன்முறை கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்த உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.'' (தினமணி, 12 பிப்.08)

அதியமான் கோட்டை ஆயுதக் கொள்ளைக் குறித்து ஜெயலலிதா வெளியிட்ட இந்த அறிக்கையை ""புதுதில்லி ஆகாஷ் வாணியின் முன்னாள் ஷெய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண் ஸ்வாமி'' என்ற தமிழ்க் கொலையாளி, ஜெயா தொலைக்காட்சியில் பலமுறை மேலும் பஜாரித்தனச் சுருதிக் கூட்டி வாசித்தார்.

· ஜெயலலிதாவின் இந்த ""பஜாரி'' அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் போல தர்மபுரி அதியமான் கோட்டை ஆயுதக் கொள்ளைக்கும் நக்சல்பாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்தத் துப்பும்ஆதாரமும் கிடைப்பதற்கு முன்பே அவசர அவசரமாக அவர் வழக்கம்போல கோயபல்சுத்தனமாகப் புளுகித் தள்ளிவிட்டார். இதன் மூலம் ""நக்சல்பாரி, தீவிரவாத, பிளவுவாத, பயங்கரவாதப் பீதி கிளப்பி அரசியல் ஆதாயம் அடைவது என்பது பார்ப்பன சதியாக உள்ளது என்ற குற்றச்சாட்டை மீண்டும் ஒருமுறை ஜெயலலிதா நிரூபித்துள்ளார்.

· மத்திய அரசியலிலும் அதிகார வர்க்கத்திலும் உள்ள தனது பார்ப்பன சாதி ஆதரவைப் பயன்படுத்தி, கருணாநிதி தி.மு.க. மீது விடுதலைப் புலிகள் ஆதரவு, தீவிரவாதிகள் ஆதரவு சக்தி என்ற அவதூறு செய்து, தமிழ்நாட்டில் வெடிகுண்டுக் கலாச்சாரம், துப்பாக்கிக் கலாச்சாரம், வன்முறை வெறியாட்டம் பெருகிவிட்டது என்று புளுகி, ஆட்சியைக் கவிழ்த்து, எப்படியாவது தனது பாசிச ஆட்சியை நிறுவி விடுவது என்ற பார்ப்பன சதிகார அரசியலை மீண்டும் ஒருமுறை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

· தர்மபுரி அதியமான் கோட்டை ஆயுதக் கொள்ளைக்கும் நக்சல்பாரி மாவோயிஸ்ட் அல்லது வேறு எந்த ""தீவிரவாத'' குழுவுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. ஒன்று உள்ளூர் பா.ம.க. கட்சிப் பிரமுகருக்கும் வேறு ஒருவருக்கும் இடையிலான நிலப்பிரச்சினை அல்லது அதியமான் கோட்டை போலீசு நிலைய போலீசுக்காரர்களிடையே ""மாமூல்'' வசூலைப் பங்குபோட்டுக் கொள்வதில் நீண்டகாலமாக நீடித்த பங்காளிச் சண்டையில் ஒரு கும்பலைப் பழிவாங்குவதற்காக மற்றொரு கும்பல் நடத்திய நாடகம்தான். இந்த உண்மை ஆயுதக் கொள்ளை சம்பவம் நடந்த அன்றே தெரிந்து விட்டது. பின்னர் வந்த நாளேடுகள் மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசப் பார்ப்பன ""ஜூனியர் விகடன்'' உட்பட வார இதழ்களில் இச்செய்தி வெளிவந்து விட்டது.

· தர்மபுரி அதியமான்கோட்டை ஆயுதக் கொள்ளை வழக்கை நேரடியாக விசாரித்த ஜெயலலிதாவின் நீண்டகால விசுவாசியும், வீரப்பன் என்கவுண்டரை அரங்கேற்றிய அதிரடிப் படைத் தலைவருமான கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார்தான், போலீசுக்காரர்களே நடத்திய நாடகம்தான் இதுவென்று உறுதிசெய்து, கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை பெரும்பாலும் மீட்டு, ஏழு போலீசுக்காரர்களை இடைக்கால நீக்கம் செய்து, விசாரணை மற்றும் உண்மை அறியும் சோதனை நடத்த சென்னைக்கும் பெங்களூருக்கும் கொண்டு போயுள்ளார். இதன்மூலம் ஜெயலலிதா வெளியிட்ட ""பஜாரி'' அறிக்கை முழுக்க முழுக்கத் தவறானது என்பது உறுதியான பிறகும், அதற்காகக் கொஞ்சமும் வருந்தவோ, விளக்க அறிக்கை வெளியிடவோ இல்லை. கல்லுளி மங்கையைப் போல இறுக்க மூடிக் கொண்டிருக்கவுமில்லை. தொடர்ந்து புளுகு, அவதூறு மூட்டைகளை அவிழ்த்து விட்டு நாற்றமடிக்கிறார்.

· ஜெயலலிதா தனது ""பஜாரி அறிக்கை''யில் ஆயுதக் கொள்ளையில் ஈடுபட்ட போலீசுக்காரர்களை அப்பாவிகளாகக் காட்டி நீலிக்கண்ணீர் வடித்து எழுதியிருக்கிறார். ஆனால் அவர்களோ வாச்சாத்தி, சின்னாம்பதி, வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் மாதேஸ்வரன் மலைப்பகுதி என காமுகக் கும்பலாக மாறி பாலியல் வன்முறையில் தறிகெட்டு ஆடுவது உட்பட என்கவுண்டர் படுகொலைகள், கொட்டடிக் கொலைகள், சித்திரவதைகள், கொலை கொள்ளை வழிப்பறி ஆள்மாறாட்டம் மோசடி; வைப்பாடிகள் கள்ளக்காதலிகள் மனைவிகளைக் கொலை செய்வது உட்பட ஏராளமான கிரிமினல் குற்றவழக்குகளில் சிக்கி அம்பலமாகி வருகின்றனர். அப்படிப்பட்ட போலீசுக்காரர்களைப் பார்த்து, ""பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டவர்கள்'' என்கிறார், ஜெயலலிதா. அவர் மட்டுமல்ல; கருணாநிதிக்கும், பார்ப்பனபிழைப்புவாத அதிகார வர்க்கத்தினருக்கும் போலீசுக்காரர்கள் செல்லப் பிராணிகளாவே உள்ளனர். அவர்களுக்கு இருவரும் மாறி மாறி ஏராளமான சலுகைகளை வாரிவழங்குவது வாடிக்கையாகி விட்டது.

· சேர்த்து வைத்திருக்கும் கள்ளப்பணம் கருப்புப் பணத்தை வீசி ""நீதிபதிகள்'' உட்பட யாரையும் விலைக்கு வாங்குவதும், அதேசயமம் தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக நாராசமான அவதூறுகளை நாக்கூசாது அள்ளி வீசுவதும் ஜெயலலிதாவின் அரசியல் உத்தியாகவே உள்ளது. எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கலைத்துவிட்டு தன்னை முதல்வராக்கும்படி ஆளுநருக்குத் தூதுவிட்டது; பாலில் விஷம் கொடுத்து ஜானகி எம்.ஜி.ஆரைக் கொன்றுவிட்டதாகக் குற்றஞ்சாட்டியது; எம்.ஜி.ஆர். சவ ஊர்வலத்தில் புகுந்து அனுதாபம் தேடியது; சட்டசபைக்குள் கருணாநிதியை கிரிமினல் என்று ஏசி, கட்சிக் குண்டர்களை ஏவி கலவரம் செய்து ஒப்பாரி வைத்தது; லாரி மோதியும், கோவில் பிரசாதத்தில் விஷம் வைத்தும், கொலைகாரர்களை போயஸ் தோட்டத்துக்குள் பலமுறை ஏவியும் தன்னை கொல்ல முயன்றதாகவும் அடிக்கடி கூப்பாடு போடுவது; ஆளுநர் சென்னாரெட்டி தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக புளுகியது; கருணாநிதிதான் ராஜீவ்காந்தியைக் கொலை செய்தார் என்று பிரச்சாரம் செய்தது; அரசுச் சொத்துக்களை கொள்ளையடித்துவிட்டு நீதிமன்றத்திலேயே பொய் வாக்குமூலங்கள் கொடுத்தது இப்படி ஏராளமான கோயாபல்சுத் தனங்கள் செய்தவர்தான் ஜெயலலிதா.

இந்த வரிசையில என்ன வேண்டுமானாலும் புளுகித் தள்ளலாம், யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புவதால்தான் அதியமான்கோட்டை ஆயுதக் கொள்ளை குறித்து ""பஜாரி அறிக்கை''யை எடுத்து விட்டிருக்கிறார்.

அப்பட்டமான பார்ப்பனபாசிச ஆட்சி நடத்திவிட்டு, தொடர்ந்து ""துணிச்சலான'' பஜாரி அரசியல் நடத்தும் ஜெயலலிதாவால் எப்படி மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர முடிகிறது? அரசியலிலும், அதிகார வர்க்கத்திலும், நீதித்துறையிலும் எங்கும் நிறைந்திருக்கும் பார்ப்பன கும்பல்களும் பிழைப்புவாதிகளும் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருக்கின்றனர் அல்லது விலைபோகின்றனர். போலி கம்யூனிஸ்டுகள், காங்கிரசு மற்றும் வைகோ, திருமா, ராமதாசு உட்பட பிழைப்புவாத ஓட்டுக் கட்சியினர் அனைவரும் குறுகிய சுயநலனுக்காக ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர எப்போதும் தயாராக உள்ளனர்.

இதைவிட முக்கியமாக ஜெயாசோசு.சாமி, ராம.கோபாலன் ஆகிய பார்ப்பன கும்பல் கருணாநிதி மீது தீவிரவாத பயங்கரவாதபுலிகள் ஆதரவாளர் என்று அவதூறு பிரச்சாரம் செய்யும்போது, கருணாநிதியின் தி.மு.க. திருப்பித் தாக்குவதற்குப் பதிலாக, கோழைத்தனமான அரசியல் நடத்துகிறது. பார்ப்பன கும்பல் இவ்வாறான குற்றஞ்சாட்டும் போதெல்லாம், அது கைகாட்டுபவர்கள் மீது தானே உறுதியான நடவடிக்கை எடுப்பதாகக் காட்டிக் கொள்கிறது. குற்றமற்றவர்கள் மீது பாய்ந்து குதறுகிறது. இது கண்டு பார்ப்பன கும்பல் தனது அவதூறுப் பிரச்சாரத்தைக் குறைத்துக் கொள்ளவோ, நிறுத்திக் கொள்வதோ இல்லை. சேதுக் கால்வாய் திட்டத்திற்கு எதிராக கடற்படைத் துணைத் தளபதி கூறிய கருத்தை மறுத்து டி.ஆர்.பாலு பிரதமருக்கு கடிதம் எழுதியதைக் கூட சட்டவிரோதம், ஆட்சியைக் கலை என்கிறார்.

இராமேசுவரத்தில் பசுமாடு செத்துப் போனது, யாரோ இலங்கைக்கு பீடிக்கட்டு கடத்தியது கூட கருணாநிதியின் இந்து விரோத செயல், புலிகளுக்கு உடந்தையானது என்று முத்திரைக் குத்தி, உடனே கருணாநிதி அரசைக் கலைக்க வேண்டும் என்று கோருகிறார், ஜெயா. இதைவிட வேறென்ன பஜாரித்தனம் இருக்க முடியும்!

· ஆர்.கே.

ராஜ்தாக்கரேயின் இனவெறிமும்பையைக் கவ்விய பயங்கரம்!


ராஜ்தாக்கரேயின் இனவெறி
மும்பையைக் கவ்விய பயங்கரம்!

ந்தியாவில் வர்த்தகத் தலைநகரமான மும்பையில் பிழைப்புக்காகக் குடியேறிய உ.பி; பீகார் மாநில உழைக்கும் மக்கள், நேற்றுவரை இந்தியக் குடிமக்களாகக் கருதப்பட்டார்கள். ஆனால் இன்று...? டாக்சி ஓட்டுநர்களாகவும் நடைபாதை வியாபாரிகளாகவும் தள்ளுவண்டிக்காரர்களாகவும் கட்டுமானத் தொழிலாளர்களாகவும் உள்ள வடஇந்திய சாமானிய மக்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்படுகிறார்கள். அவர்களது பிழைப்புக்கான சாதனங்களும் அற்ப உடமைகளும் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்படுகின்றன. போஜ்புரி மொழியில் வெளியான திரைப்படத்தைத் திரையிட்ட அரங்கம் தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது. பல்லாயிரக்கணக்கில் வட இந்திய உழைக்கும் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மும்பையை விட்டுத் தப்பியோடுகிறார்கள்.

மும்பை, புனே மற்றும் நாசிக் நகரங்களில் இக்காட்டுமிராண்டித்தனமான இனவெறித் தாக்குதலை ""மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா'' என்ற கட்சியின் குண்டர்கள் கடந்த பிப்ரவரி முதல் இரு வாரங்களில் கட்டவிழ்த்து விட்டனர். இந்துவெறி இனவெறி பிடித்த பாசிச சிவசேனா கட்சியின் தலைவரான பால்தாக்கரேயின் சகோதரர் மகனாகிய ராஜ்தாக்கரே என்பவர்தான் இக்கட்சியின் தலைவர். சிவசேனாவிலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய அவர், ""இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் வசித்துக் கொண்டு கோடிகோடியாய் சம்பாதித்த பணத்தை மகாராஷ்டிராவில் அல்லாமல் உ.பி.யில் முதலீடு செய்கிறார்; ரயில்வே துறையில் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பீகாரிகளுக்கே வேலை வாய்ப்பளிக்கிறார்; மாநிலமானது வந்தேறிகளின் வேட்டைக் காடாகி விட்டது'' என்றெல்லாம் அவர் குறுகிய இனவெறியைத் தூண்டிவிட, அவரது கட்சிக்குண்டர்கள் வடமாநில உழைக்கும் மக்கள் மீது வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

மும்பை போன்ற வர்த்தகப் பெருநகரங்களில் ஏற்கெனவே பிறமாநிலத்தவர் கணிசமான அளவில் குடியேறி பல்வேறு மொழிஇன மக்களும் கலந்து வாழ்வது இயல்பானதாகி விட்டது. குறிப்பாக, தாராளமயம்உலகமயத்தால் விவசாயம் நாசமாக்கப்பட்டதன் விளைவாக, வேலையிழந்து வாழ்விழந்த விவசாயிகள் கூலித் தொழிலாளர்களாக மும்பை போன்ற நகரங்களில் குடியேறுகிறார்களேயன்றி, இவர்கள் யாருடைய வாழ்வையும் பறிப்பதற்காக வந்தவர்கள் அல்ல. இருப்பினும், இச்சாமானிய மக்களைக் குறிவைத்துத் தாக்கி, வடஇந்தியர்களுக்கெதிராக குறுகிய இனவெறியூட்டி, மண்ணின் மைந்தர்களான மராத்தியர்களை தம்பக்கம் இழுக்க ராஜ்தாக்கரே கும்பல் முயற்சிக்கிறது.

இருவாரங்களாக ராஜ்தாக்கரே கும்பலின் வெறியாட்டங்கள் தொடர்ந்த போதிலும் மகாராஷ்டிராவை ஆளும் காங்கிரசுதேசியவாத காங்கிரசு கூட்டணி அரசு கைகட்டி நின்றுவிட்டு, பின்னர் கண்துடைப்புக்காக ராஜ்தாக்கரேவைக் கைது செய்து அடுத்த நிமிடமே பிணையில் விடுவித்து விட்டது. தமது மராத்திய ஓட்டு வங்கிக்கு இழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம்.

பொதுவாகவே பல மாநிலக் கட்சிகள் மட்டுமின்றி, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு அனைத்து தேசியக் கட்சிகளும் தமது ஓட்டு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ள ராஜ்தாக்கரே அளவுக்கு இல்லையென்றாலும், இதே பாணியில்தான் செயல்படுகின்றன. காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தமது மாநிலத்தின் நலன் என்ற பெயரால் குறுகிய இனவெறியூட்டி அரசியல் ஆதாயமடைவதில் கர்நாடகாகேரளத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் இதே வழியில் ஓரணியில் நிற்கின்றன.

மண்ணின் மைந்தர்களான உழைக்கும் மக்களை அவர்களது சொந்த பூமியிலிருந்து அடித்து விரட்டி வாழ்வைப் பறிப்பதும், மகாராஷ்டிரா மட்டுமின்றி நாடு முழுவதும் உழைக்கும் மக்களின் தேசிய இனமொழிபண்பாட்டு அடையாளங்களைத் தகர்த்துக் கொண்டிருப்பதும் தாராளமயமும் உலகமயமும் தான். அதற்கெதிராக உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராடுவதைத் தடுத்து திசைதிருப்பவும் குறுகிய இனவெறியூட்டி ஆதாயமடையவும் ராஜ்தாக்கரே போன்ற பாசிச இனவெறி சக்திகள் கிளம்பியுள்ளனர். சட்டத்தின் மூலமாகவோ, தாராளமயம் உலகமயத்தின் அடியாட்களான ஓட்டுக்கட்சிகளின் மூலமாகவோ இத்தகைய பாசிச இனவெறி சக்திகளை முறியடிக்க முடியாது. இனமொழி வேறுபாடுகளைக் கடந்து உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு தாராளமயம்உலகமயம் எனும் மறுகாலனியத் தாக்குதலுக்கெதிராகப் போராடாமல், மண்ணின் மைந்தர்கள் தமது நிலத்தையும், வாழ்வையும் இனமொழி உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ளவும் முடியாது.

Wednesday, April 16, 2008

தென்காசி குண்டு வெடிப்பு: இந்து முன்னணியின் கிரிமினல் முகம்


தென்காசி குண்டு வெடிப்பு:
இந்து முன்னணியின் கிரிமினல் முகம்


ஜெர்மனியின் நாடாளுமன்றக் கட்டிடத்துக்குத் தாமே தீ வைத்துக் கொளுத்திவிட்டு, அப்பழியை கம்யூனிஸ்டுகள் மீது சுமத்தியது, ஆரிய இனவெறிப் பிடித்த பாசிச இட்லர் கும்பல். அது பழைய வரலாறு அல்ல; அந்த வரலாறு இன்னமும் தொடர்கிறது. பாசிச இட்லரின் வாரிசுகள் இந்து முன்னணி என்ற பெயரில் அதே உத்தியுடன் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திவிட்டு, பழியை மற்றவர்கள் மீது போடுகிறார்கள். இட்லர் நடத்திய பயங்கரவாதச் சதி உலகெங்கும் அம்பலமானதைப் போல, இப்போது இந்து முன்னணி நடத்திய பயங்கரவாதச் சதியும் தென்காசி வெடிகுண்டு விவகாரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நில உரிமை தொடர்பான தகராறில், தென்காசியைச் சேர்ந்த இந்து முன்னணி தலைவரான குமார் பாண்டியன், கடந்த 2006 டிசம்பரில் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் முஸ்லிம்களாக இருந்ததால், மதக் கலவரத்தைத் தூண்டிவிட இந்து முன்னணியும், இந்து மதவெறிக் கும்பலும் தீவிரமாக முயற்சித்தன. ஆனால் அவற்றின் எத்தணிப்புகள் அங்கே வெற்றி பெறவில்லை. இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் பிணையில் இருந்து கொண்டு கையெழுத்துப் போட வந்தபோது, 2007 ஆகஸ்டில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டு குமார் பாண்டியனின் சகோதரர்கள் உட்பட மூவரும், முஸ்லீம்கள் மூவரும் ஒரே நேரத்தில் கொலையுண்டனர். அதைத் தொடர்ந்து இந்துமத வெறிக் கும்பல் தென்காசியை முற்றுகையிட்டு, என்னென்னவோ செய்து பார்த்தது. ஆனாலும், அதன் முயற்சிகள் பலிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த ஜனவரியில் அதாவது "குடியரசு' தினத்துக்கு இரு நாட்களுக்கு முன், தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இரண்டு ""பைப்'' வெடிகுண்டுகள் வெடித்தன. தென்காசி பேருந்து நிலையத்திலும் இதேபோன்ற குண்டுகள் வெடித்தன. முன்னிரவு நேரத்தில் நடந்த இக்குண்டு வெடிப்புகளில் ஓரிருவருக்குக் காயங்கள் ஏற்பட்ட போதிலும், உயிர்சேதங்கள் நிகழவில்லை.

குண்டு வெடிப்புகள் நடந்தவுடனேயே, ஆர்.எஸ்.எஸ். இன் மாநிலத் தலைவரான மாரிமுத்து, தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளும் சுதந்திரமாகச் செயல்படுவதாகவும், இவர்கள்தாம் இக்குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் என்றும், இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தவறினால், மாநிலம் தழுவிய தீவிர போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்தார். குண்டு வெடிப்புகளுக்கு எதிராக பா.ஜ.க. அப்பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியதோடு, முஸ்லீம்களுக்கு எதிரான கீழ்த்தரமான மதவெறிப் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விட்டது.

குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தி வந்த போலீசார், கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று மூவரைக் கைது செய்தனர். இவர்கள், இந்துமத வெறியர்கள் குற்றம் சாட்டியதுபோல பாகிஸ்தானிலிருந்து கூலிக்கு அனுப்பப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளோ, மாவோயிஸ்டுகளோ அல்ல. பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டே, இக்குண்டு வைப்புகளில் ஈடுபட்டவர்கள் இந்து முன்னணி பயங்கரவாதிகள்தாம்!

நிலத்தகராறில் கொலையுண்ட குமார் பாண்டியனின் அண்ணன் ரவி பாண்டியன், கே.டி.சி.குமார், நாராயண சர்மா ஆகிய மூன்று பயங்கரவாதிகளைக் கைது செய்துள்ள போலீசார் விசாரணைக்குப் பின் பாலமுருகன், முருகன் எனுமிருவரையும் கைது செய்துள்ளனர்.

ரவி பாண்டியனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ""தனது வீட்டில் அடுத்தடுத்து 3 பேர் பலியான போதிலும் இந்துக்களிடம் பெரிய அளவில் எழுச்சி ஏற்படவில்லை; போதிய ஆதரவும் கிடைக்கவில்லை. இப்படியொரு குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தால், இந்துக்கள் ஒன்றாகச் சேர்வார்கள் என்ற நோக்கத்தில் இக்குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டதாக'' அவன் தெரிவித்துள்ளான்.

கைது செய்யப்பட்டுள்ள ரவிபாண்டியனுக்குச் சொந்தமான கேபிள் டி.வி. அறையில் வைத்து இந்த ""பைப்'' குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தென்காசியில் 6 பேர் கொல்லப்பட்ட நிகழ்ச்சிக்கு முன்னரே, அதாவது கடந்த ஆண்டு ஜூலையிலிருந்தே இக்குண்டு தயாரிப்பு வேலையில் இப்பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். மின்தடையை ஏற்படுத்தி குண்டுகளைப் பொருத்திவிட்டு, மீண்டும் மின் இணைப்பு கொடுத்தால் 20 நொடிகளில் குண்டுகள் வெடிக்கும் வகையில் தொழில்நுட்பத் தேர்ச்சியுடன் இக்குண்டுகளைத் தயாரித்துள்ளனர். இதே தொழில்நுட்பத்தைக் கொண்ட ""பைப்'' வெடிகுண்டுகள் தாம், ஐதராபாத் தொடர்குண்டு வெடிப்புகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் நாடு தழுவிய வலைப்பின்னலைக் கொண்டு நவீன தொழில்நுட்பத்துடன் இந்துவெறி பயங்கரவாதிகள் குண்டு வைப்புகளில் ஈடுபட்டு வருவதை நிரூபித்துக் காட்டுகின்றன.

ஏற்கெனவே மகாராஷ்டிர மாநிலம் நாண்டெட் நகரில் குண்டு தயாரிக்கும்போது விபத்தில் சிக்கிய இந்துவெறி பயங்கரவாதிகள் அளித்த வாக்குமூலங்களும், தற்போது தென்காசி குண்டு வெடிப்புச் சம்பவத்தையொட்டி கைதாகியுள்ள இந்து முன்னணி பயங்கரவாதிகள் அளித்துள்ள வாக்குமூலங்களும், அவை எத்தகையதொரு பாசிச பயங்கரவாத வலைப்பின்னலைக் கொண்ட அமைப்புகள் என்பதை மீண்டும் மெய்ப்பித்துக் காட்டியுள்ளன. இனி, இப்பாசிச பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்து, அவ்வமைப்பினரைச் சிறையிலடைத்துத் தண்டிப்பதற்கான மக்கள் திரள் போராட்டங்களே அவசியமாகியுள்ளது.

· கவி

இந்திய பங்குச் சந்தையைக் கவிழ்த்தது அமெரிக்கா


இந்திய பங்குச் சந்தையைக்
கவிழ்த்தது அமெரிக்கா

டந்த சனவரி மாத இறுதியில் இந்தியாவில் நடந்த பங்குச் சந்தை வீழ்ச்சியை, ""பொருளாதார சுனாமி'' என்றே கூறலாம். இப்பங்குச் சந்தை வீழ்ச்சி ஒரே சமயத்தில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு ஆகிய ஏகாதிபத்திய நாடுகளிலும்; இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு ஏழை நாடுகளிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்று விட்டது.

இவ்வீழ்ச்சி குறித்துப் பல்வேறு முதலாளித்துவப் பத்திரிகைகள் வெளியிட்டு வரும் புள்ளி விவரங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, இந்தியாவில் மட்டும் இவ்வீழ்ச்சியினால் நடுத்தர வர்க்கம் முதலீட்டாளர்களுக்கு 6 முதல் 18 இலட்சம் கோடி ரூபாய் வரை நட்ட மேற்பட்டிருக்கக் கூடும்.

பங்குச் சந்தை வியாபார வளர்ச்சியைக் குறிக்கும் குறியீட்டு எண், 2007 சனவரியில் 16,000 புள்ளியாக இருந்தது; கடந்த ஒரு ஆண்டிற்குள், இவ்வளர்ச்சி 21,000 புள்ளிகளைத் தொட்டது; குறிப்பாக, கடந்த நான்கு மாதங்களில் மட்டும், மும்பய் பங்குச் சந்தையில் வியாபாரம் 40 சதவீதம் வளர்ச்சியடைந்ததாம்.

இந்த "வளர்ச்சி', ஒரு வீழ்ச்சியைச் சந்திக்கும் என பங்குச் சந்தை வர்த்தகச் சூதாடிகள் எதிர்பார்த்தே இருந்தனர். அதனால்தான், சனவரி மாத மூன்றாவது வாரத்தில் பங்குச் சந்தை குறியீட்டு எண் 5,000 புள்ளிகள் சரிவடைந்த பொழுது, பொருளாதார நிபுணர்கள் அவ்வீழ்ச்சியைக் கண்டு ஒப்பாரி வைக்காமல், ""பங்குச் சந்தை தன்னைத் திருத்திக் கொள்ளும்'' வாய்ப்பாக, இவ்வீழ்ச்சியை வர்ணித்தார்கள். திருடப் போனவனைத் தேள் கொட்டிவிட்டால், அவன் அலறித் துடிக்கவா முடியும்?

அமெரிக்க அரசின் கடன் கொள்கையும்; அதனால் அமெரிக்க வங்கிகளுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியும்தான் இந்தியப் பங்குச் சந்தை வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அமெரிக்க அரசின் அதே கடன் கொள்கைதான், இந்தியப் பங்குச் சந்தையின் அபரிதமான வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்தது என்பதையும் மறுக்க முடியாது. இந்தியப் பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கு எது வரமாக அமைந்ததோ அதுவே சாபக்கேடாகவும் அமைந்து விட்டது என்பதே உண்மை.

செப்.2001இல், அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டபொழுது, அமெரிக்கா பொருளாதாரத் தேக்கத்திலும் சிக்கிக் கொண்டிருந்தது. இத்தேக்கத்தை உடைக்க, இத்தாக்குதலைப் புத்தசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டது, புஷ் கும்பல். ""இசுலாமிய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றால், அமெரிக்கப் பொருளாதாரம் வளர வேண்டும்; எனவே, அமெரிக்காவின் நலனுக்காக நுகருங்கள்'' (குடணிணீ ஞூணிணூ அட்ஞுணூடிஞிச்) என்ற முழக்கத்தை முன்வைத்து, அமெரிக்காவில் ஒரு பிரச்சார இயக்கமே நடத்தப்பட்டது. அதாவது, நுகர்வு வெறி, தேசபக்தியாக உருமாற்றம் செய்யப்பட்டது.

அமெரிக்க மக்களைக் கடைகளை நோக்கி இழுக்க வேண்டும் என்பதற்காகவே, புஷ் கும்பலால், ஒரு புதிய கடன் கொள்கையும் அறிவிக்கப்பட்டது. தான் வாங்கும் கடனைத் திருப்பி அடைக்கும் தகுதி ஒருவருக்கு இருக்கிறதா என்பது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் கடன் கொடுக்கும் வண்ணம், கடன் கொள்கையில் தாராளமயம் புகுத்தப்பட்டது. இந்த அடிப்படையிலேயே, இக்கடன் கொள்கைக்கு, ""தரமில்லாதவர்களுக்கு வழங்கப்படும் கடன்'' எனப் பொருள்படியான ""சப்பிரைம் லோன்'' என்ற பெயர் சூட்டப்பட்டது. இக்கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டியும் ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டது.

ஒருவர் 50 இலட்சத்திற்குக் கடன் வாங்கி வீடு வாங்கியிருந்தால், அவரது வீட்டின் மதிப்பு ஒரு கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டு, அவருக்கு மீண்டும் கடன் வழங்கப்பட்டது. இந்தத் தான்தோன்றித்தனமான கடன் கொள்கையின் கீழ், 2002லிருந்து 2006க்குள், அமெரிக்கச் சந்தையில் 60 இலட்சம் கோடி ரூபாய் கொட்டப்பட்டது.

நெல்லுக்குப் பாயும் நீர், புல்லுக்கும் புசிவதைப் போல, அமெரிக்காவின் ""சப்பிரைம்'' கடன் கொள்கையால், இந்தியா உள்ளிட்ட சில ஏழை நாடுகளும் பயனடைந்தன. ஒருபுறம், அந்நாடுகளின் அமெரிக்காவுடனான ஏற்றுமதி வர்த்தகம் கணிசமாக அதிகரித்தது. இன்னொருபுறம், ""சப்பிரைம்'' கடனுக்காக அமெரிக்க வங்கிகளின் வட்டி வீதம் குறைக்கப்பட்டதால், முதலீடுகள் அதிக இலாபம் தரும் சந்தைகளை நோக்கித் திரும்பின.

இந்தச் சூழ்நிலையில், இந்தியா அந்நிய முதலீட்டு நிறுவனங்களைக் கவரும் வண்ணம், நீண்டகால முதலீடுகள் மூலம் கிடைக்கும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டு வந்த வரியை நீக்கியது; சமூகப் பயன்பாட்டுக்காக, ஒவ்வொரு பங்கு பரிமாற்றத்தின் மீதும் ஒரு சதவீத வரி விதிக்கும் ""ரோபின் வரி'' முறையைப் புகுத்தவும் மறுத்து விட்டது.

இச்சீர்திருத்தங்களையடுத்துதான், அந்நிய நிதி நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தையை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தன. 2003ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்தியப் பங்குச் சந்தையில் வெறும் 74 கோடி அமெரிக்க டாலராக இருந்த அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு, 2003இல் 660 கோடி அமெரிக்க டாலராகவும்; 2004இல் 850 கோடி அமெரிக்க டாலராகவும்; 2005இல் 1070 கோடி அமெரிக்க டாலராகவும்; 2006இல் 800 கோடி அமெரிக்கா டாலராகவும்; 2007இல் 1720 கோடி அமெரிக்க டாலராகவும் அதிகரித்தது. இதற்கேற்ப, இந்தியப் பங்குச் சந்தையின் வளர்ச்சி குறியீட்டு எண், கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,000 புள்ளியில் இருந்து 20,000 புள்ளியாக அதிகரித்தது.

இந்த ""வளர்ச்சி''யை முகவரியே இல்லாத உப்புமா கம்பெனிகள் கூட மூலதனத்தைத் திரட்டப் பயன்படுத்திக் கொண்டன. ""ரூ. 40 கோடியே மதிப்புள்ள நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு 8,000 கோடி ரூபாயாக உயர்ந்தது; வெறும் 4 கோடி ரூபாய் மட்டுமே இலாபம் பார்க்கும் சொத்து நிர்வாகக் கம்பெனிகள் (அண்ண்ஞுt ட்ச்ணச்ஞ்ஞுட்ஞுணt) கூட 5,000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிந்தது; ஒட்டு மொத்த லாபமாக ரூ. 1,000 கோடியைக் கூடப் பார்க்க முடியாத மீடியா கம்பெனிகளின் மதிப்பு 75,000 கோடி ரூபாயாக அதிகரித்தது'' என இந்தியாடுடே வார இதழே அங்கலாய்த்துக் கொள்கிறதென்றால், இதை வளர்ச்சி என்று சொல்ல முடியுமா? இல்லை, சூதாட்டம் என்று சொல்ல முடியுமா?

இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியின் (எஈக) மதிப்பே 40 இலட்சம் கோடி ரூபாய்தான்; ஆனால், பங்குச் சந்தைச் சூதாட்டமோ மும்பய்ப் பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள 4,687 நிறுவனங்களின் மதிப்பை 68 இலட்சம் கோடி ரூபாயாக வீங்க வைத்திருக்கிறது மும்பய்ப் பங்குச் சந்தை. வளர்ச்சியைக் குறிக்கும் ""சென்செக்ஸ்'' புள்ளி, ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், ஏர்டெல் உள்ளிட்ட ஒரு 30 நிறுவனங்களின் பங்குகளுக்கு இருக்கும் கிராக்கியை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்களின் வருடாந்திர உற்பத்தி மதிப்பு 40,000 கோடி ரூபாய்தான். ஆனால், பங்குச் சந்தைச் சூதாட்டமோ இந்நிறுவனங்களின் பங்கு மதிப்பை 30 இலட்சம் கோடி ரூபாயாக ஊதிப் பெருக்கியிருக்கிறது.

ஒன்றுக்குப் பத்தாக வீங்க வைக்கும் இச்சூதாட்டத்தால்தான், அம்பானி சகோதரர்களும், விப்ரோ நிறுவன அதிபர் அசிம் பிரேம்ஜியும் உலகப் பணக்காரர்களுள் முதல் பத்து பேரில் ஒருவராக "உயர' முடிந்திருக்கிறது.

···


அந்நிய நிதி நிறுவனங்கள், மும்பய்ப் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள 1,597 நிறுவனங்களின் பங்குகளில் செய்துள்ள முதலீடு 8,70,122 கோடி ரூபாய்; அப்பங்குகளின் சந்தை மதிப்பு 12 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேலிருக்கும் என ""பிசினஸ் வேர்ல்டு'' (11 பிப்., 2008) என்ற வார இதழ் குறிப்பிடுகிறது. மும்பய்ப் பங்குச் சந்தையில் தினந்தோறும் நடைபெறும் வர்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவனங்களின் பங்கு ஏறத்தாழ 15.5 சதவீதமாகும். மும்பய்ப் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள முக்கியமான 500 நிறுவனங்களின் 23 சதவீதப் பங்குகள் அந்நிய நிதி நிறுவனங்களின் பிடிக்குள் இருக்கின்றன. அந்நிய நிதி நிறுவனங்கள் நிøனத்தால் இந்தியப் பங்குச் சந்தையை ""வளர்ச்சி''யை நோக்கித் தள்ளவும் முடியும்; வீழ்த்தவும் முடியும் என்பதைத்தான் இப்புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அமெரிக்காவில் வழங்கப்பட்டு வரும் ""சப்பிரைம்'' கடனால், அமெரிக்க வங்கிகள் / நிதி நிறுவனங்களின் வாராக் கடன் அதிகமாகி, அவை கடந்த ஆறு மாதங்களாகவே கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. அந்நிறுவனங்கள், சப்பிரைம் கடனால் தங்களுக்கு ஏற்பட்டு வரும் நட்டத்தை ஈடுகட்ட பங்குச் சந்தை ""வளர்ச்சி''யைப் பயன்படுத்திக் கொண்டன. இந்தியப் பங்குச் சந்தையின் ""வளர்ச்சி'' 21,000 புள்ளிகளைத் தொட்டபொழுது, அந்நிய நிதி நிறுவனங்கள் 10,500 கோடிரூபாய் பெறுமான பங்குகளை முன்றே நாட்களில் விற்று, இலாபத்தைச் சுருட்டியதையடுத்துதான் இந்தியப் பங்குச் சந்தை 5,000 புள்ளிகள் சரிந்தது. ""எச்.என்.ஐ.எஸ்.'' என்ற பொருளாதார நிபுணர்கள் குழு, இந்தியப் பங்குச் சந்தையில் கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்டுள்ள ""வளர்ச்சி''யையும், சனவரி 2008இல் ஏற்பட்டுள்ள சரிவையும், வியாபார நடவடிக்கையாகப் பார்க்க மறுக்கிறது; மாறாக, இதனை, 1992இல் நடந்த அர்சத் மேத்தா ஊழலோடு ஒப்பிடுகிறது.

இந்தியப் பங்குச் சந்தையைத் தங்களின் விருப்பப்படி ஆட்டிப் படைக்கும் அந்நிய நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த முடியாமல், மைய அரசு திணறுகிறது என்பதே உண்மை. வெளிநாடுகளைச் சேர்ந்த சிறு முதலீட்டாளர்கள், தங்களின் அடையாளத்தை வெளிகாட்டிக் கொள்ளாமல், அந்நிய நிதி நிறுவனங்களின் மூலம் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு ""பங்கேற்பு பத்திரம்'' (கச்ணூtடிஞிடிணீச்tணிணூதூ ணணிtஞுண்) என்ற வழிமுறை இருக்கிறது. இந்த வழிமுறை பல்வேறு விதமான மோசடிகளுக்கு வாய்ப்பாக இருப்பதால், இதனைப் படிப்படியாகத் தடை செய்ய வேண்டும் என இந்தியப் பங்குச் சந்தை வாரியம் அரசுக்கு ஆலோசனை வழங்கியது. இந்த ஆலோசனையை முளையிலேயே கிள்ளியெறிய விரும்பிய அந்நிய நிதி நிறுவனங்கள், கடந்த அக்.2007இல், பங்குச் சந்தையில் 1,000 புள்ளிகள் சரிவை ஏற்படுத்தி, அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தன. இம்மிரட்டலால் அரண்டு போன ப.சிதம்பரம், அந்த ஆலோசனையைக் கைவிடுவதாக அறிவித்தார்.

கேதான் பாரேக் என்பவன் தலைமையில் 2001இல் நடந்த பங்குச் சந்தை ஊழலால், கொல்கத்தா பங்குச் சந்தையை மூட வேண்டிய நிர்பந்தம் எழுந்தது. நிதி நிறுவனங்கள், தங்களிடம் இல்லாத பங்குகளை, வாடிக்கையாளர்களுக்குப் பிற்பாடு வாங்கித் தருவதாக ஒப்புக் கொண்டு போட்டுக் கொள்ளும் வர்த்தக ஒப்பந்தமும்; நிதி நிறுவனங்கள் தாங்கள் கொடுக்க வேண்டிய கடனுக்கு ஈடாகப் பங்குகளை அடமானமாகக் கொடுப்பதும்தான் இந்த ஊழலுக்கு அடிப்படையாக அமைந்ததால், நிதி நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டது.

இத்தடையை டிச.2007இல் நீக்கிவிட்ட மைய அரசு, இந்திய நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, அந்நிய நிதி நிறுவனங்களும் இவ்வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி அளித்திருக்கிறது. பங்குச் சந்தை வீங்கிக் கொண்டே செல்லும்போது, இத்தடை நீக்கம் வம்பை விலை கொடுத்து வாங்குவது போலாகிவிடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்ததை, மன்மோகன் சிங் கும்பல் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

அந்நிய நிதி நிறுவனங்கள் நினைத்தால், இந்தியப் பங்குச் சந்தையை மட்டுமல்ல, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பையும் ஆட்டம் காண வைத்து விட முடியும். இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, அக்.2007இல் 26,100 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. அந்நிய நிதி நிறுவனங்கள், தங்களின் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டால், இக்கையிருப்பு வெறும் 4,000 கோடி அமெரிக்க டாலராகக் கரைந்துவிடும். அதனால்தான், அந்நிய நிதி நிறுவனங்கள் எள் என்பதற்குள், மன்மோகன் சிங் கும்பல் எண்ணெயாக நிற்கிறது.

···


தாராளமயத்தின் பிறகு இந்தியப் பங்குச் சந்தை பலமுறை வீழ்ச்சியடைந்திருக்கிறது. தாராளமயத்தின் ஆரம்ப கட்டத்தில் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தால், அதில் ஊழல் நடந்திருக்கிறதா என்பதைப் புலனாய்வு செய்ய ஒரு கமிட்டியாவது நியமிக்கப்படும். இப்பொழுதோ, அப்படிப்பட்ட ""கண்காணிப்புகள்'' எல்லாம் பழங்கதையாகி விட்டன. விசாரணைக்குப் பதிலாக பங்குச் சந்தையைத் தூக்கி நிறுத்த அரசின் கஜானா திறந்து வைக்கப்படுகிறது.

அந்நிய நிதி நிறுவனங்கள் அக்.2007இல் 6,000 கோடி ரூபாயை வெளியே எடுத்து, பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்படுத்திய பொழுது, மைய அரசு 3,300 கோடி ரூபாயைச் சந்தையில் கொட்டியது. தற்பொழுது, பொதுத்துறை வங்கிகளும், இந்தியக் காப்பீடு நிறுவனமும் 4,600 கோடி ரூபாயைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து சரிவைச் சரிகட்ட முயன்றன.

பங்குச் சந்தையை வளர்க்கவும், அது சரிவடைந்தால் முட்டுக் கொடுக்கவும், பொது மக்களின் சேமிப்பு எவ்விதத் தடையும் இன்றி பங்குச் சந்தையில் பாய வேண்டும் என்பதற்காகவே, மைய அரசு சேமநல நிதியைத் தனியார்மயப்படுத்த முயன்று வருகிறது. பொதுத்துறை வங்கிகள், சேமிப்புக் கணக்குகளுக்குத் தரும் வட்டி வீதம் குறைக்கப்பட்டு பங்குச் சந்தை முதலீடு கவர்ச்சிகரமானதாக நடுத்தர வர்க்கத்தின் முன் நிறுத்தப்படுகிறது. பேராசை கொள்ளாமல், நிதானமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நட்டமே ஏற்படாது என நடுத்தர வர்க்கம் மூளைச் சலவை செய்யப்படுகிறது. 199192இல் அர்சத் மேத்தா, வங்கிப் பணத்தைப் பங்குச் சந்தையில் போட்டுச் சூதாடியது ஊழலாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இப்பொழுதோ, பொதுத்துறை வங்கிகள் பங்குச் சந்தையில் சூதாடுவதற்காகப் பரஸ்பர நிதி நிறுவனங்களைத் தொடங்கி நடத்துவதன் மூலம், ஊழலைச் சட்டபூர்வமாக்கி விட்டன.

அமெரிக்க அரசு, தனது நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க, 15,000 கோடி அமெரிக்க டாலர்களைச் சந்தையில் கொட்டியிருப்பதோடு, கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டி வீதத்தையும் 25 சதவீதம் குறைத்துவிட்டது. இதனால் ஏற்படும் பணப்புழக்கம், இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் சரிவில் இருந்து வளர்வதற்கான வாய்ப்புகளை அள்ளி வழங்கத்தான் செய்யும். எனினும், அந்த ""வளர்ச்சி'', ஒரு வீழ்ச்சியை தன் வயிற்றில் சுமந்து கொண்டேதான் வரும். உலகமயமான இந்தியா, இந்த நச்சுச் சூழலில் இருந்து தப்பிக்கவே முடியாது.

· செல்வம்

Tuesday, April 15, 2008

ம.க.இ.க. வின் பிறப்பு குறித்து புரளி பேசுபவன் யார்?

மக்களுக்கு துரோகம் செய்து, கொள்கை ரீதியாக சோரம் போனவர்கள் தான். மக்களுக்காக, அவர்களின் நலன்களை முன்வைக்க அரசியல் ரீதியாக வக்கற்று போனவர்கள். மக்களை பிறப்பில் வைத்தே பிளக்கும் நயவஞ்சகத்தைத் தவிர வேறு அரசியல் அற்றவர்கள், இவர்கள் தான்.


1. ஆண் பெண் பால் பிரிவினையை பிறப்பில் வைத்தே, ஆணாதிக்கமாக்கும் வக்கிரத்தின் சொந்தக்காரர்கள்.

2. மதப் பிளவை பிறப்பில் வைத்தே பிளக்கும் இழிதனத்தைக் கொண்டவர்கள்.

3. சாதியை பிறப்பில் வைத்தே சூதாடும் பார்ப்பனியத்துக்கு பாய் விரிப்பவர்கள்.

4. நிறம் குறித்த ஓடுக்குமுறையை செய்யும் ஓட்டுண்ணிகள்.

5. விபச்சாரியின் குழந்தையை பிறப்பு சார்ந்து விபச்சாரம் செய்ய தூண்டும் பொறுக்கிகளின் அற்பத்தனத்தை செய்பவர்கள்.

இப்படி அநேக ஒடுக்குமுறையை பிறப்பால் அடையாளப்படுத்தி, செழிப்பவர்கள் இவர்கள். மக்களின் அப்பட்டமான விரோதிகள் இவர்கள்.

இப்படி மக்களைப் பிளந்து, அவர்களை குழிதோண்டி புதைக்க வெளிக்கிடும் கும்பலைச் சேர்ந்தவர்கள். ஒரு விவாதத்தில் அப்படியும் இப்படியுமாக புணர்ந்து, அவர்களே அறியாது பாசிசத்தை புலம்புபவர்கள். இப்படி பிறப்பு குறித்து ம.க.இ.க. வை தமது சொந்த முகாந்திரத்துடன் புணர முனைகின்றனர். இப்படிக் காட்டுகின்ற பாசிச வன்மம் எனன்வென்றால், அவர்களின் போராட்டத்தைக் கண்டு அஞ்சும், மக்களை ஓடுக்குகின்ற வர்க்க பிரதிநிதிகளின் நடத்தையாக வெளிப்படுகின்றது.

இவர்கள் ம.க.இ.க வின் கொள்கையை விவாதிக்க முடியாதவர்கள். அதில் உள்ள தனிநபர்களின் பிறப்பு குறித்து புலம்புகின்றனர். இதுவும் ஒரு அரசியலோ.

பாட்டாளி வர்க்கப் பிரதிநிதிகள், மனித இனத்தில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை.

1. ஆண் பெண் பாகுபாடு பார்ப்பதில்லை.

2. சாதிப் பாகுபாடு பார்ப்பதில்லை.

3. நிறப் பாகுபாடு பார்ப்பதில்லை.

4. இனப் பாகுபாடு பார்ப்பதில்லை.

5. மதப் பாகுபாடு பார்ப்பதில்லை.

இப்படி எந்தப் பாகுபாடும் மனிதர்களுக்கு இடையில் பார்ப்பதில்லை. இதனால் தான் இது சர்வதேசியமாக இருக்கின்றது. உலகெங்கும் அதனிடம் ஒருமித்த நிலைப்பாடு உள்ளது. மக்கள் நலன் சார்ந்த கொள்கையுடன், மனிதர்களை அணுகுகின்றது. அது பிறப்பில் பார்ப்பானையும், பிறப்பில் முதலாளியையும், பிறப்பில் சக்கிலியனையும், பிறப்பில் பெண்ணையும், பிறப்பில் எதுவாக இருந்தாலும், மனிதர்களுக்கு இடையில் வேறுபாடு காட்டுவதில்லை. அது கொள்கை ரீதியாக மட்டும் தன்னை ஒழுங்கமைக்கின்றது. அதாவது மனிதத் தன்மையை மட்டும் அளவுகோலாக கொள்கின்றது. வேறுபாடு காட்டாத மனிதத்தன்மையை மட்டும் அது கோருகின்றது. வேறுபாடு காட்டும் அனைத்து ஒடுக்குமுறையையும் அது எதிர்க்கின்றது. நீ யார்? நான் யார் என்று பிறப்பில் அது பிரிவனை காட்டுவது கிடையாது.

இதற்கு மாறாக உண்மையில் பிறப்பு குறித்து அணுகுகின்ற கோட்பாடு பார்ப்பனியமாக இருக்கின்றது. அதாவது சாதியக் கோட்பாடாக உள்ளது. ம.க.இ.க வில் உள்ள நபரின் பிறப்பு குறித்து ஆராய்வதே கடைந்தெடுத்த பார்ப்பனியம் தான். அதை காவடியாக தூக்கும் மனித விரோதிகளையே இது அம்பலமாக்குகின்றது.

இப்படி பிறப்பில் இருந்து ஆராய்கின்ற மனிதம் எப்படிப்பட்டது என்றால், உள்ளடக்க ரீதியாக பாசிசமே. ஜெர்மனிய நாசிகளின் பிறப்பு குறித்த ஆரியக் கோட்பாடு, யூதர்களின் பிறப்பு குறித்த அடையாளம் ஊடாகவே கொன்றது. இந்தியாவில் அதுவே பார்ப்பனியமாகி சாதியமாக உள்ளது. இதை தூக்கும் தமிழினவாதிகள் பிறப்பில் இருந்து காண்பது மனிதவிரோதமேயன்றி அது வேறு எதுவுமல்ல. இதுவே இலங்கையில் புலிப் பாசிசப் படுகொலையாக நடக்கின்றது. மனிதத் தன்மையற்ற கண்ணோட்டம் இதன் மூலவேராக உள்ளது.
பி.இரயாகரன்13.07.2007

Friday, 13 July 2007 22:08

சந்திப்பு புரட்டும் புரட்டு அரசியல் எப்படிப்பட்டது!Monday, April 14, 2008

விடுதலைப் போரில் புதிய உத்தி


விடுதலைப் போரில் புதிய உத்தி

ந்தவொரு அடக்குமுறையும் மக்கள் சக்தியின் முன் நிற்க முடியாது என்ற வரலாற்று உண்மை, மீண்டும் பாலஸ்தீனத்தில் நிரூபணமாகி இருக்கிறது. குண்டு வீச்சாலும், ராக்கெட் தாக்குதல்களாலும் வெல்ல முடியாத பாலஸ்தீன மக்களைப் பட்டினி போட்டுப் பணிய வைக்க இசுரேல் அமெரிக்கா கூட்டணி திட்டம் போட்டது. பாலஸ்தீன மக்கள், இப்படுகொலைத் திட்டத்தை எளிதாக, ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் முறியடித்து, ஏகாதிபத்தியக் கும்பலை அதிர வைத்துவிட்டனர்.

2005ஆம் ஆண்டு இறுதியில் பாலஸ்தீன ஆணையத்திற்கு நடந்த தேர்தலில், ஏகாதிபத்திய கும்பலின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, இசுலாமிய மத அடிப்படைவாத அமைப்பான ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றது. பாலஸ்தீன ஆணையத்தை ஹமாஸ் இயக்கம் கைப்பற்றிக் கொண்டாலும், அதிபர் மற்றும் அதிகார வர்க்கப் பதவிகள் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஓர் அங்கமான ஃபதா அமைப்பின் கைகளில் இருந்தன.

ஃபதா இயக்கத்தின் தலைவரும், பாலஸ்தீன அதிபருமான முகம்மது அப்பாஸூம், மேற்குலக ஏகாதிபத்தியங்களும், இசுரேலும் ஹமாஸின் தேர்தல் வெற்றியை அங்கீகரிக்க மறுத்ததோடு, ஹமாஸின் ஆட்சியைக் கவிழ்க்கவும் சதி செய்தன. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஹமாஸை அழிக்க, ஃபதா இயக்கத்திற்கு ஆயுதங்களும், பயிற்சியும் அளித்து சகோதரச் சண்டையைத் தூண்டிவிட்டு வந்தது. அதிபர் முகம்மது அப்பாஸ், கடந்த ஆண்டு மத்தியில் தன்னிச்சையாக பாலஸ்தீன ஆணையத்தைக் கலைத்ததையடுத்து, மேற்குக் கரையை ஃபதா இயக்கமும்; காசாமுனையை ஹமாஸ் இயக்கமும் தங்களுக்குள் பாகப் பிரிவினை செய்து கொண்டன.

பாலஸ்தீனம் இப்படி இரண்டாகப் பிளவுபட்டதை வரவேற்ற அமெரிக்க ஏகாதிபத்தியம், ""காசாவைக் கசக்கிப் பிழிவதன் மூலம் ஹமாஸைத் தோற்கடிப்போம்'' என வெளிப்படையாக அறிவித்தது. இசுரேல் காசாமுனைப் பகுதியை, ""எதிரிப் பகுதி'' என அறிவித்துத் தனது ஆக்கிரமிப்புப் போரைத் தொடர்ந்தது.

காசாமுனை, மூன்று புறங்களில் இசுரேலையும்; நான்காவது பக்கத்தில் எகிப்தையும் எல்லையாகக் கொண்ட நிலப்பகுதி ஆகும். இசுரேல் இந்தப் பூகோள அம்சத்தைப் பயன்படுத்திக் கொண்டு, காசாமுனையைத் திறந்தவெளி சிறைச்சாலையாகவே மாற்றியமைத்து விட்டது. 2005ஆம் ஆண்டே காசா முனைகளில் இருந்து இசுரேல் இராணுவம் வெளியேறி விட்டாலும், அதன்மீது குண்டு வீச்சு மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்துவதை இசுரேல் நிறுத்திக் கொள்ளவேயில்லை. இவ்வான்வழித் தாக்குதல்கள் மூலம் பாலஸ்தீன மக்களின் குடியிருப்புகளை மட்டுமின்றி, காசாமுனையில் நடந்து வந்த விவசாயத்தையும், சிறு தொழில்களையும் அழித்தொழித்தது, இசுரேல். இதனால், காசா முனையில் வாழும் 15 இலட்சம் பாலஸ்தீனர்களும் அடுத்த வேளை உணவுக்கும், அடிப்படைத் தேவைகளுக்கும் ஐ.நா.வின் உதவியை அண்டியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இப்படிப்பட்ட அவலமான நிலையிலும் கூட, பாலஸ்தீன மக்களின் போராட்ட உணர்வு பிசுபிசுத்துப் போய்விடவில்லை. இதனால் ஒருபுறம் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்திக் கொண்டே, இன்னொரு புறம், தனது எல்லை வழியாக காசா முனைக்குச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களைத் தடுக்கத் தொடங்கியது, இசுரேல்.

இசுரேலின் வழியாக காசா முனைக்குத் தினந்தோறும் 900 லாரிகள் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்று வந்தன. இந்தச் சரக்குப் போக்குவரத்தின் எண்ணிக்கை, கடந்த 18 மாதங்களில் படிப்படியாக 15 ஆகக் குறைக்கப்பட்டதோடு, காசாவுக்குச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் எண்ணிக்கையும் 15 ஆகக் குறைக்கப்பட்டது. இப்பொருளாதார முற்றுகையை கடந்த சனவரி 2008 முதல் முழுமையாக அமல்படுத்தத் தொடங்கியது, இசுரேல். உயிர் வாழ்வதற்கே அடிப்படையான உணவுப் பொருட்களும், மருந்துப் பொருட்களும், எரிபொருளும், மின்சாரமும் காசாவுக்குக் கிடைப்பது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டது.

எரிபொருளும், மின்சாரமும் தடை செய்யப்பட்டதால், காசாமுனையில் வாழும் பாலஸ்தீன மக்கள் குளிரில் விறைத்துச் சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்; மின்சாரம் இல்லாததால், தண்ணீரைச் சுத்திகரித்துக் குடிதண்ணீர் வழங்குவது நின்று போனது; மேலும், கழிவு நீரைச் சுத்திகரிக்க முடியாமல் போனதால் கிருமிகள் பெருகி, தொற்று நோய் பரவும் அபாயம் நேரிட்டது. இதன் மூலம் காசாமுனை மீது ஓர் உயிரியல் போரையும் கட்டவிழ்த்து விட்டது, இசுரேல்.

பாலஸ்தீன விடுதலைப் போராளிகள், காசாமுனை எல்லையில் அமைந்துள்ள சிடரோட் என்ற கிராமப்புற பகுதி மீது ராக்கெட் குண்டுகளை வீசி இசுரேலியர்களைக் கொன்று வருவதாகவும்; அதனைத் தடுக்கும் முகமாகத்தான் இப்பொருளாதாரத் தடையை காசாவின் மீது விதித்திருப்பதாகவும் கூறி, இசுரேல் தனது இனவெறிப் பிடித்த போர் நடவடிக்கையை நியாயப்படுத்தி வருகிறது.

ஆனால், ""இது பச்சைப் பொய்'' என்கிறார், இசுரேலின் அமைதிக் குழுவைச் சேர்ந்த யுரி அவ்நேரி. ""இசுரேல் வகைதொகையின்றி காசா முனை மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி வருவதற்குப் பதிலடியாகத்தான் பாலஸ்தீனப் போராளிகள் சிடரோட் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இசுரேலின் குண்டு வீச்சுத் தாக்குதல்களினால், 2007இல் மட்டும் 53 சிறுவர்கள் உள்ளிட்டு 290 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேசமயம், சிடரோட் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல்களினால் 2007இல் வெறும் இரண்டு யூதர்கள்தான் கொல்லப்பட்டுள்ளனர்.

""ராக்கெட் தாக்குதல்களை நிறுத்துவதற்காக மட்டும் இப்பொருளாதார முற்றுகை காசாமுனை மீது திணிக்கப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் போகும் பொழுது, பாலஸ்தீன மக்கள் ஆத்திரமடைந்து ஹமாஸ் இயக்கத்திற்கு எதிராகப் போராடத் தொடங்குவார்கள். அப்போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஹமாஸ் இயக்கத்தை காசா முனையில் இருந்து வெளியேற்றுவதில் வெற்றி பெறலாம் என்பதுதான் இசுரேலின் நோக்கமேயன்றி, சிடரோட் கிராம மக்களைக் காப்பாற்றுவது அதன் பிரதான நோக்கமல்ல. சிடரோட் கிராம மக்களை ராக்கெட் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றுவதுதான் இசுரேலின் பிரதான நோக்கமாக இருந்திருந்தால், ஹமாஸ் இயக்கம் முன்வைத்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை இசுரேல் ஏன் ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது?'' எனக் கேள்வி எழுப்பி, யுரி அவ்நேரி இசுரேலின் ஆக்கிரமிப்புப் போர்வெறியை அம்பலப்படுத்தியுள்ளார்.

இப்பொருளாதார முற்றுகையால் ராக்கெட் தாக்குதல் நிற்கும்; பாலஸ்தீன மக்கள் ஹமாஸுக்கு எதிராகப் போராடத் தொடங்குவார்கள் என்ற இசுரேலின் இரண்டு கணிப்புகளும் பொய்த்துப் போய்விட்டன. ""எரிபொருளும், மின்சாரமும் கிடைக்காமல் காசாமுனை இருளில் மூழ்கிப் போன பிறகு, சிடரோட் மீது 17 ராக்கெட் தாக்குதல்கள் நடந்துள்ளன. தமது குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் திண்டாடிப் போன பாலஸ்தீன தாய்மார்கள் ஹமாஸ் இயக்கத்தை வெறுத்தொதுக்கவில்லை. மாறாக, இசுரேலின் பிரதமர் ஓல்மெர்ட்டையும்; இசுரேலோடு கூட்டணி சேர்ந்துள்ள பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸையும்தான் திட்டித் தீர்த்தார்கள்'' என யுரி அவ்நேரி குறிப்பிடுகிறார்.

இசுரேல் காசாமுனை மீது பொருளாதார முற்றுகையைத் திணித்தவுடனேயே பாலஸ்தீன மக்கள் எல்லையைக் கடந்து எகிப்துக்குள் நுழைய முயன்றனர். எகிப்தின் எல்லைக் காவல் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டினால், அவர்களின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதற்கு அடுத்த நாளே, ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் எகிப்துகாசாமுனை எல்லைப்புறத்தில் அமைந்துள்ள ரஃபா எனுமிடத்தில் குவிந்ததோடு, எல்லைப்புற வேலியை குண்டு வைத்துத் தகர்த்துவிட்டு, எகிப்துக்குள் நுழைந்தனர். அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்வதற்காக பாலஸ்தீன மக்கள் எகிப்துக்குள் நுழைந்த இந்த நடவடிக்கையை, பாலஸ்தீன விடுதலையை நேசிக்கும் அனைவரும் ""மூன்றாவது இண்டிஃபதா'' என்று வருணித்தனர்.

இந்த ""எல்லை தாண்டிய விடுதலை நடவடிக்கை'' இசுரேல் அமெரிக்கக் கூட்டணியை மட்டுமல்ல, அவர்களின் அரேபியக் கூட்டாளிகளையும் திகைக்க வைத்துவிட்டது. ""எல்லைப் புறத்தை உடனடியாக மூடாவிட்டால், அமெரிக்கா எகிப்துக்கு வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்திவிடும்'' என அமெரிக்கா எகிப்தை எச்சரித்தது. எனினும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக எகிப்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் காரணமாக, எகிப்து அரசால் அமெரிக்காவின் கட்டளையை நிறைவேற்ற முடியவில்லை. எல்லைப்புற வேலி உடைக்கப்பட்டு 11 நாட்கள் கழித்து, ஹமாஸுக்கும், எகிப்து அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையை அடுத்துதான் காசாமுனை எகிப்து எல்லைப் பகுதி மூடப்பட்டது.

பாலஸ்தீன மக்களின் அதிரடி நடவடிக்கையால், இப்பொருளாதார முற்றுகை பிசுபிசுத்துப் போய்விட்டதாலும்; சர்வதேச மக்களின் முன் இசுரேலின் ஆக்கிரமிப்புப் போர்வெறி மீண்டும் அம்பலப்பட்டுப் போய்விட்டதாலும், காசாமுனைக்கு எரிபொருளும், மின்சாரமும் வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையைத் தற்பொழுது ஓரளவு தளர்த்திவிட்டது, இசுரேல். அதேசம யம், இப்பொருளாதார முற்றுகையை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளாவிடில், எகிப்துக்குள் நுழைந்ததைப் போல இசுரேலுக்குள் நுழைவோம் என பாலஸ்தீன மக்கள் எச்சரித்துள்ளனர்.

""சர்வதேசச் சட்டங்கள் ஒப்பந்தங்களின் படி பார்த்தால், பாலஸ்தீன மக்களின் மீது இசுரேல் திணித்த இப்பொருளாதார முற்றுகைப் போரை இனப்படுகொலை என்றுதான் கூற முடியும்'', எனச் சர்வதேசச் சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், அமெரிக்காவோ, இப்பொருளாதார முற்றுகையைக் கண்டித்து ஐ.நா. மன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரும் முயற்சியை, தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்தியது. இந்தியாவோ, ஒருபுறம் இசுரேலை பெயரளவுக்குக் கண்டித்துவிட்டு, மறுபுறம் ஈரானை வேவு பார்ப்பதற்காகவே இசுரேல் தயாரித்திருந்த உளவு செயற்கைக் கோளை, சிறீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணிற்குச் செலுத்தி, இசுரேலுக்கு உதவியது. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் என்ற போர்வையில் திரியும் இனத் துரோகி முகம்மது அப்பாஸோ, எவ்வித நிபந்தனையும் இன்றி இசுரேல் அமெரிக்கப் போர்க் குற்றவாளிகளோடு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.

பாலஸ்தீனக் குழந்தைகள் பாலுக்காகக் கதறிக் கொண்டிருக்கும் பொழுது, அம்மக்கள் குளிரில் விறைத்துச் செத்துக் கொண்டிருக்கும்பொழுது, அவர்களால் எப்படி அமைதியாய் இருக்க முடியும்? இப்பொருளாதார முற்றுகை, ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தியிருப்பதோடு, விடுதலை இயக்கங்கள், தங்களின் போராட்டத்தின் ஊடாகவே சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தியிருக்கிறது.

·ரஹீம்

போதையில் நடந்த மாநாடு : மார்க்சிஸ்டுகளின் கலாச்சாரப் புரட்சி


போதையில் நடந்த மாநாடு :
மார்க்சிஸ்டுகளின் கலாச்சாரப் புரட்சிபுரட்சி பேசும் சி.பி.எம். கட்சியானது, முதலாளித்துவக் கட்சியாகச் சீரழிந்துவிட்ட பிறகு, அதனிடம் காலிப் பெருங்காய டப்பாவாக இருந்த பாட்டாளி வர்க்கப் பண்பாடும் இப்போது இல்லாதொழிந்து விட்டது.

கோவையில் நடைபெறவுள்ள சி.பி.எம். கட்சியின் அனைத்திந்திய மாநாட்டுக்கு முன்னதாக, அக்கட்சி செயல்பட்டு வரும் மாநிலங்களில் மாநில மாநாடுகள் நடந்து வருகின்றன. கேரளத்தில் நடந்த மாநில மாநாட்டின் முடிவில், கோட்டயத்தில் மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி பிப்ரவரி 14ஆம் தேதியன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. சி.பி.எம். கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் உள்ளிட்டு அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் மேடையில் வீற்றிருக்க, கட்சி ஊழியர்களோ சாராய போதையில் "புரட்சிகர' ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். கேரள சி.பி.எம். முதல்வர் அச்சதானந்தன் உரையாற்றியபோது, அவரது ஒவ்வொரு வார்த்தைக்கும் கைதட்டி ஆர்ப்பரித்த இந்த ஊழியர்கள், ஒரு கட்டத்தில் காலிச் சாராய புட்டியை மேடையை நோக்கி வீசியெறிந்து, தமது "புரட்சிகர' உற்சாகத்தை நாட்டு மக்களுக்கு நிரூபித்துக் காட்டினர்.

அடுத்து பேசிய சி.பி.எம். கட்சியின் கேரள மாநிலச் செயலாளரான பினாரயி விஜயன், ""இது கம்யூனிஸ்ட் கட்சி கூட்டமா, அல்லது உஷாஉதுப் நடத்தும் நிகழ்ச்சியா'' என்று போதையேறிய கட்சி ஊழியர்களின் காலித்தனத்தைக் கண்டனம் செய்ததோடு, மாநாட்டுத் தொண்டர்களிடம் அவர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். தொண்டர்கள் அவர்களை வெளியேற்ற முயற்சிக்கும்போது, அது அடிதடியாக முற்றி, நாற்காலிகளும் காலிச் சாராய புட்டிகளும் பறந்துள்ளன. இந்நேரத்தில், எதிர்பாராத விதமாக மழை வலுக்கத் தொடங்கியதால், கூட்டம் அதோடு முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஊழியர்களிடம் போதையில் பொங்கிவழிந்த புரட்சிகர ஆரவாரமும் சுருதி குறைந்து ஒரு வழியாகத் தணிந்தது.

முதலாளித்துவத்துடன் கூட்டணி சுகம் தேடும் தலைவர்கள்; புரட்சிகர உணர்வை சாராய புட்டியில் தேடும் ஊழியர்கள். அடடா! எப்பேர்ப்பட்ட கட்சி! எப்பேர்ப்பட்ட புரட்சி!

·

நேபாளம் : தெற்காசியாவின் கலங்கரை விளக்கம்

நேபாளம் :
தெற்காசியாவின் கலங்கரை விளக்கம்


ரலாற்று சிறப்புமிக்க இந்த பொதுக்கூட்டத்தின் தோழமைக்குரிய தலைவர் அவர்களே, தமிழகத்தின் பல்வேறு அரசியல் இயக்கங்கள் அமைப்புகளின் தலைவர்களே, இங்கே வீரஞ்செறிந்த முறையிலே திரண்டிருக்கிற தமிழக மக்களே, தமிழகத்தின் வரலாற்று புகழ்மிக்க போராடுகிற மக்களுக்கு முதற்கண் என்னுடைய சிவப்பு வணக்கத்தை, வாழ்த்துக்களை உரித்தாக்க விரும்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சென்னை சிறையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக நான் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, தமிழகத்திலே இருக்கிற அரசியல் இயக்கங்களின் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், அனைவருக்கும் மேலாக மக்களாகிய நீங்கள், என்னை நேபாளத்திற்கு அனுப்பக் கூடாது; நேபாள அரசிடம் ஒப்படைக்கக் கூடாது என்பதற்காகப் போராடினீர்கள். நான் நேபாளத்திடம் ஒப்படைக்கப்படுவதை நீங்கள் அப்படி தடுத்திராவிட்டால், அங்கு நேபாள இராணுவத்திடம் பிடிபட்ட ஐயாயிரம் பேர் என்ன கதிக்கு ஆளானார்களோ, அதே நிலைமைக்கு நானும் ஆளாகியிருப்பேன். நான் நேபாள அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், இப்போது உங்களிடம் பேசுவதற்கு இருந்திருக்க மாட்டேன்.

நேபாளத்தில் அரசியல் போராட்டத்திலே நாங்கள் வெற்றி கண்டு, அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு, நேபாளச் சிறைகளில் அடைபட்டிருந்த எங்களுடைய தோழர்களெல்லாம் சிறையிலிருந்து விடுதலை செய்யபட்டபோதுகூட, இந்தியாவில் தமிழ்நாடு அரசு என்னை சிறையிலே இருந்து விடுவிக்கவில்லை.

நீங்கள் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவிக்கிற வகையில், சிறையிலே இருந்து விடுதலை செய்யப்பட்டதும் முதலில் உங்களைப் பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். ஆனால், சென்னையிலே என்னை விடுதலை செய்தவுடனே, மீண்டும் வேறு ஒரு வழக்கிலே என்னை தளைப்படுத்தி ஜல்பைகுரிக்கு கொண்டு சென்றார்கள்.

மேற்கு வங்கத்திலிருக்கிற ஜல்பைகுரி சிறையிலிருந்துதான் இறுதியாக நான் விடுதலை செய்யப்பட்டேன். அதனால்தான் சிறையிலேயிருந்து வெளியே வந்தவுடனே உங்களுக்கு நன்றி தெரிவிக்கிற கடமையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.

என் விடுதலைக்காக நீங்கள் போராடிய அந்த காலம் நெருக்கடிகள் நிறைந்த ஒரு காலம். ஏனென்றால், என்னை ஒரு பயங்கரவாத இயக்கத்தினுடைய தலைவராக சிறைப்படுத்தி வைத்திருந்தார்கள். அரசாங்கத்தால் பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக, வெளியிலே போராடுவது கடினமானது என்பதை நான் அறிவேன். அப்படியிருந்தும் இடர்ப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் என்னை நேபாளத்திடம் ஒப்படைக்கவிடாமலும், என்னை விடுவிப்பதற்காகவும், எனக்கு ஆதரவாகவும் நீங்கள் அரும்பாடுபட்டுப் போராடினீர்கள்.

என்னைப் பிடித்து நேபாளத்திலே ஒப்படைக்கவிடாமல் தடுப்பதற்காக நீங்கள் பாடுபட்டீர்கள். எனது விடுதலைக்காக நீங்கள் உறுதியாகப் போராடினீர்கள். உங்களுடைய இந்த போராட்டமும் உழைப்பும் உண்மையான பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் அடையாளம் என்று நாம் எடுத்துக் கொள்கிறோம்.

எங்கள் கட்சி மக்கள் திரளின் புரட்சிகரப் போராட்டங்களில் ஒருமைப்பாடு கொண்டிருக்கிறது. நீங்கள் எடுத்துக்கொண்ட அந்த முயற்சிக்காக எங்களது கட்சி உங்களுக்கு செவ்வணக்கம் கூறவும், நன்றி கூறவும் பணித்திருக்கிறது. எனவே, மீண்டும் ஒருமுறை நான் சார்ந்திருக்கிற கட்சியின் சார்பில் உங்களுக்கு செவ்வணக்கமும் உளமார்ந்த நன்றியும் கூறிக் கொள்கிறேன்.

நேபாளத்திலே இருக்கிற அரசியல் சூழலைப் பொறுத்தவரை, பல்வேறு அரசியல் சக்திகள் புரட்சிகர சக்திகள்கூட நேபாளத்தின் நிலைமை எத்தகையது, அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து குழம்பி போய் இருக்கிறார்கள். அமைதி வழி மாற்றத்தை நோக்கி நாங்கள் அடி எடுத்துள்ளோம். எங்களுடைய மக்கள் விடுதலை இராணுவம் 20,000 வீரர்களைக் கொண்டிருக்கிற வலிமையான இராணுவம் — ஐ.நா. படைகளைவிட இருமடங்கு பெரிய இராணுவம். இதைக் கண்டு அமெரிக்க ஏகாதிபத்தியமே அஞ்சக்கூடிய நிலை இங்கிருக்கிறது. அந்த இராணுவம் முகாம்களிலே அடைக்கப்பட்டிருக்கிறது. எங்களுடைய ஆயுதங்கள் பெட்டகங்களிலே வைத்து பூட்டப்பட்டிருக்கின்றன. சில புரட்சியாளர்கள் நாங்கள் எங்களுடைய ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டோம், ஆயுதங்களைக் கையளித்து விட்டோம் என்று கருதிக் கொண்டு குழப்பமடைந் திருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.

பத்தாண்டு காலம் நடந்து வந்திருக்கிற மக்கள் போர், அங்கே இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலைத் தோற்றுவித்திருக்கிறது. அந்த ஆயுதப் போராட்டம் தோற்றுவித்த அரசியல் சூழல் எத்தகையது என்றால், ஆயுதமேந்தி நாங்கள் அடையக்கூடிய நோக்கத்தை அமைதியான முறையிலே அடைகிற வாய்ப்பை அது ஏற்படுத்தியிருக்கிறது. எனவே தான், நாங்கள் ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம். தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோமே தவிர, ஆயுதப் போராட்டத்தை ஒரேயடியாக கைவிட்டுவிடவில்லை என்பதைத் தெளிவாக்க விரும்புகிறேன்.

எங்களுடைய நண்பர்களும் தோழர்களும் கவலைப்படுகிறார்கள். எங்களுடைய மக்கள் விடுதலைப் படை பாசறைகளுக்குள்ளே அடைபட்டிருக்கின்றனவே, ஆயுதங்கள் பெட்டகங்களிலே பூட்டி வைக்கப்பட்டிருக்கின்றனவே என்று அவர்கள் கவலைப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்கிறேன், கவலைப் பட வேண்டாம். பெட்டகங்களைப் பூட்டி அதனுடைய சாவி எங்களுடைய படைத் தளபதியின் கையிலேதான் இருக்கிறது. எப்போது தேவை என்றாலும் திறந்து எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரியப்படுத்த விரும்புகிறேன்.

மறுதரப்பிலே வேறு சிலர் இருக்கிறார்கள். உதாரணமாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் சொல்கிறது, மாவோயிஸ்டுகள் மாறிவிடவில்லை என்று; மாவோயிஸ்டுகள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று; பிற்போக்காளர்கள் சொல்கிறார்கள், மாவோயிஸ்டுகள் மாறவில்லை, அவர்களை மாற்ற வேண்டும் என்று. இந்திய அரசும் அப்படித்தான் சொல்கிறது. நேபாளத்திலே இருக்கிற பிற்போக்கு அமைப்புகள் சொல்கின்றன; நேபாள காங்கிரசு, ஐக்கிய நேபாள மார்க்சிஸ்டுலெனினிஸ்டு போன்ற அமைப்புகளெல்லாம் சொல்கிறார்கள், மாவோயிஸ்டுகள் மாறவில்லை என்று. நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் வந்திருப்பது எங்களை மாற்றிக் கொள்வதற்காக அல்ல; உங்கள் மாற்றுவதற்காகவே நாங்கள் வந்திருக்கிறோம்.

நான் முன்பே கூறியது போல, நாங்கள் நடத்தி வந்திருக்கிற போராட்டம் ஒரு புதிய அரசியல் சூழலைத் தோற்றுவித்திருக்கிறது. பத்தாண்டு காலம் நடந்திருக்கிற மக்கள் போரினால் ஏற்பட்டிருக்கிற அந்த அரசியல் சூழல், ஆயுதங்களை கொண்டு நாங்கள் அடையக்கூடிய நோக்கத்தை அரசியல் வழிமுறைகளைக் கொண்டு அடைகிற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. நாங்கள் எங்கள் நோக்கத்தை அந்த அரசியல் வழிமுறையில் அடையத்தான் போகிறோம்.

வேறு சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்ய முற்படுகிறார்கள்; அறிவுரை செய்கிறார்கள். கீதோபதேசம் செய்கிறார்கள். ""நீங்கள் மக்கள் போரை நடத்தியவர்கள், ஆனால், இப்போது நீங்கள் போராட்டம் போதும் என்ற நிலைக்கு வந்திருக்கிறீர்கள். ஆயுதப்போராட்டம் தேவையில்லை, வன்முறை தேவையில்லை; அதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது. இறுதியாக இப்போது நீங்கள் மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி வருகிறீர்கள். எனவே ஆயுதப்போராட்டத்தை நீங்கள் நடத்தியிருக்கத் தேவையில்லை'' என்று அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள், எங்களைப் படிப்பினை பெற்றுக் கொள்ளச் சொல்கிறார்கள். அப்படி இல்லை; நாங்கள் ஆயுதப்போராட்டம் தேவையில்லை என்று ஒரு போதும் கருதவில்லை என்று தெரியப்படுத்த விரும்புகிறேன்.

உண்மை என்னவென்றால், பத்தாண்டுகால மக்கள் போர் நடைபெற்றிருக்கவில்லையென்றால், 19 நாள் பெருந்திரள் எழுச்சி ஏற்பட்டிருக்காது. அந்த 19 நாள் மக்கள் எழுச்சி ஏற்பட்டிருக்காவிட்டால், அரசியல் சூழ்நிலையில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது. எனவே, இந்த மக்கள் எழுச்சியை உருவாக்கியதில், அரசியல் சூழலை மாற்றியதில் 10 ஆண்டுகாலம் நடத்தியிருக்கிற மக்கள் போருக்கு மிக முக்கியமான பங்கிருக்கிறது என்பதைத் தெரியப்படுத்த விரும்புகிறோம்.

நேபாள வரலாற்றில் மக்கள் எழுச்சி என்பது புதிய செய்தியல்ல; கடந்த காலத்தில் மக்கள் பலமுறை பெருந்திரளாக எழுந்து போராடியிருக்கிறார்கள். ஆனால், அந்த எழுச்சிகளெல்லாம் கொடிய முறையிலே அடக்கி ஒடுக்கி நசுக்கப்பட்டன.

ஆனால், இந்த முறை, 19 நாள் மக்கள் எழுச்சியை அவர்களால் ஒடுக்க முடியவில்லை; அதற்குக் காரணம், மக்கள் விடுதலை இராணுவம் அருகிலே இருந்தது என்பதுதான். காத்மாண்டு பள்ளத்தாக்கை மக்கள் விடுதலை இராணுவம் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தது. எனவே, மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. நம்மை நேபாள இராணுவம் சுடுமானால், பக்கத்திலே இருக்கிற மக்கள் விடுதலை இராணுவம் தலையிட்டுச் செயல்படும் என்ற நம்பிக்கை இருந்தது. அதேபோல் இராணுவத்தினருக்கும் தெரியும், எனவே தாங்கள் எதுவும் செய்ய முடியாது என்பதால், அந்த மக்கள் எழுச்சியை அவர்களால் அடக்கவோ ஒடுக்கவோ முடியவில்லை. எனவேதான், 19 நாட்கள் நடந்த மக்கள் எழுச்சியானது, தனது உடனடி நோக்கத்தில் வெற்றி பெற முடிந்தது.

இப்போது நேபாளம், அரசமைப்புப் பேரவை தேர்தலுக்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. நேபாள மாவோயிஸ்டு கட்சி இதற்கு முன்பே விரிவாக கூறியது, அரசமைப்பு பேரவைக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்; அரசமைப்புப் பேரவை கூட்டப்பட்டு புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்படவேண்டும்; அந்த புதிய அரசமைப்புச் சட்டத்தின் வழியாக புரட்சிகர மாற்றம் ஏற்பட வேண்டும் என்று. நாங்கள் ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறோம். இது குறித்தும் பலருக்கு சந்தேகம் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. புரட்சிகர அணிகள் இது குறித்து ஐயம் தெரிவித்து வருகிறார்கள்.

ஏன் தேர்தல் நடக்கிறது, அத்தேர்தல் என்ன பங்கு வகிக்கிறது. தேர்தலில் நாங்கள் ஏன் பங்கேற்கப் போகிறோம் என்பன பற்றி அந்த நண்பர்கள் குழப்பமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசமைப்புப் பேரவைக்கான தேர்தல் என்பதன் உண்மையான பொருள் விளங்கவில்லை. ஆகவேதான் அவர்கள், மற்றக் கட்சிகளோடு தேர்தல் பங்கேற்பு கட்சிகளோடு எங்களை ஒப்பிட்டு குழப்பிக் கொள்கிறார்கள்.

இந்த நண்பர்கள் ஏப்ரல் 10 அன்று நடைபெற இருக்கிற தேர்தலைச் சரிவர விளங்கிக் கொள்ளவில்லை. ஏப்ரல் 10ஆம் நாள் நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிற அரசமைப்புப் பேரவை தேர்தல் என்பது, ஒரு புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான தேர்தலாகும். இப்பேரவையின் பிரதிநிதிகள் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவார்கள். அதற்கான தேர்தலாகும். இந்தத் தேர்தலை, சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் நடைபெறும் தேர்தலோடு இந்த நண்பர்கள் குழப்பிக் கொள்கிறார்கள். அங்கே நடைபெறுகிற தேர்தல், நேபாள சமுதாயத்தில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேர்தல். இங்கே ஐந்தாண்டுக்கு ஒருமுறையோ, நான்காண்டுக்கு ஒருமுறையோ நடத்தப்படுகிற தேர்தலால் எந்த மாற்றமும் வருவதில்லை. அந்த தேர்தலும் இந்த தேர்தலும் ஒன்றல்ல என்று நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நாங்கள் இந்த அரசமைப்புப் பேரவைக்கான தேர்தலில் உயிர்மரணப் போராட்டத்திலே ஈடுபட்டிருக்கிறோம். ஏனென்றால், இந்த தேர்தலிலே புரட்சிகர சக்திகள் வெற்றி பெறுமானால், நாங்கள் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதாக, ஒரு புதிய ஜனநாயக நேபாளத்தை உருவாக்குவதாக அது இருக்கும். நாங்கள் தோற்று பிற்போக்கு சக்திகள் வெற்றி பெறுவதாக இருந்தால், அவர்கள் ஒரு புதிய வடிவிலான முடியாட்சிக்குத் திரும்பி செல்கிற பிற்போக்கு நிலைக்கு திரும்பிச் செல்கிற ஆபத்து இருக்கிறது. எனவேதான், மிகுந்த அக்கறையோடும் கடுமையான உழைப்போடும் இந்தத் தேர்தலில் வெற்றிபெற நாங்கள் உயிர்மரணப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.

இப்போது ஏப்ரல் 10 அன்று நடைபெறுவதாக இருக்கிற அரசமைப்பு பேரவைத் தேர்தல், சென்ற ஆண்டு ஜூன் மாதத்திலேயே நடந்திருக்க வேண்டும். ஆனால் அந்த தேர்தலை அவர்கள் மீண்டும் மீண்டும், திரும்பத் திரும்ப தள்ளிப் போட்டு வந்திருக்கிறார்கள். பிற்போக்குச் சக்திகள் இந்தத் தேர்தலை நடைபெற விடாமல் தள்ளிப் போட்டிருக்கிறார்கள்.

சென்ற ஜூன் மாதத்திலேயே, இந்த தேர்தல் நடைபெற்றிருக்குமேயானால், உறுதியாக தேர்தலிலே எங்கள் கட்சி வெற்றி பெற்றிருக்கும். அதன் விளைவாக, புதிய ஜனநாயக நேபாளம் உருவாகியிருக்கும். இந்த அரசியல் எதார்த்த நிலையை பிற்போக்கு சக்திகள் மிக நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டு இருந்ததால்தான், அந்த தேர்தலை நடத்த விடாமல் செய்தார்கள்.

வெளியிலிருந்து பார்க்கும்போது, நேபாளம் அமைதியான முறையில் அரசியல் மாற்றத்தை நோக்கிச் செல்வதாகத் தோன்றக்கூடும். ஆனால் அது உண்மையல்ல. அங்கே, மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் இரு வர்க்கங்கள் மோதிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கத்தில், புரட்சிகர வர்க்கம் புரட்சிகர கட்சிகள். மறுபக்கத்தில், பிற்போக்கு வர்க்கம் பிற்போக்கு கட்சிகளும் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பெரும்போர் என்று வர்ணிக்கலாம். இந்தப் போராட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றால், ஒரு பிற்போக்கான ஆட்சியை நிறுவுவார்கள். புரட்சிகர சக்திகள் வெற்றி பெற்றால், புதிய அரசமைப்பை நிறுவுவார்கள். எனவே அங்கு பெரிய போர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது நேபாளத்தில் இருவேறு எதிர் எதிரான சக்திகள் எதிரெதிரான கட்சிகள் மோதிக் கொண்டிருக்கின்றன. தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி, இந்த தேர்தலில், அந்த எதிரெதிரான சக்திகளுக்கு இடையான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு பிற்போக்கு சக்திகளுக்கு மன்னராட்சிக்கு, அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது. இந்திய ஆளும் வர்க்கத்தின் இந்து அடிப்படைவாத சக்திகள் அவர்களுக்கு ஆதரவாக இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முடி மன்னருக்கும் பிற்போக்கு அமைப்புக்கும் ஆதரவாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மறுபக்கம், முடியாட்சிக்கு புத்துயிர் அளிக்கக் கூடிய பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக, அங்கே புரட்சிகர கட்சிகள், இடதுசாரி சக்திகள் பொதுவுடமை சக்திகள் மற்றும் நேபாள உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணியாகத் திரண்டு போராடிக் கொண்டிருக்கின்றனர். நேபாளத்தின் அந்த முற்போக்கு சக்திகளுக்கு உலகெங்குமிருக்கிற புரட்சிகர மக்களின் ஆதரவு இருந்து வருகிறது. அவர்கள் முடியாட்சியை முடிவு கட்டுவதற்கான போராட்டத்தில் ஒன்றுபட்டு ஈடுபட்டிருக்கிறார்கள். மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்கான போராட்டத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

அமெரிக்க மேல்நிலை வல்லரசு நேபாளத்தின் முடியாட்சியை ஆதரித்து கொண்டிருக்கிறது. அதனுடைய மேலாதிக்க நலன்களுக்கு அதுதான் பொருத்தமென்பதால் முடியாட்சியை ஆதரிக்கிறது. இந்தியாவிலே இருக்கிற இந்துத்துவ சக்திகள், ""நேபாளத்தை பார்! அங்கே இந்து அரசு நடப்பதை பார்! அதேபோன்ற ஒரு இந்து அரசை இந்தியாவில் நிறுவ வேண்டும்'' என்பதற்கு நேபாளத்தை எடுத்துக்காட்டாக காட்டுவதற்காகவே, நேபாளத்திலே முடியாட்சியை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, நாங்கள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûக்கு சவால் விடுகிறோம். உங்களுக்கு முடியாட்சி மீது காதல் இருக்குமானால், அந்த முடியாட்சியை உங்கள் நாட்டுக்கே கொண்டு போய் வைத்துக் கொள்ளுங்கள். தம்பிடி காசும் விலை கொடுக்காமல் முடியாட்சியை உங்கள் கையிலே ஒப்படைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நாங்கள் பா.ஜ.க. தலைவர்களுக்குச் சொல்ல விரும்புகிறோம். உங்களுக்கு முடியாட்சி மீது அவ்வளவு ஆசையும் காதலும் இருக்குமானால், அந்த முடியாட்சியை தில்லிக்குக் கொண்டு வந்து தில்லியிலே அரியணையில் அமர்த்திக் கொள்ளுங்கள். தில்லி அரியணையிலே முடிமன்னனை அமர்த்த மக்கள் உங்களை அனுமதிக்க மாட்டார்கள் என்றால், உங்கள் கட்சி அலுவலகத்திற்கு உள்ளே கொண்டு போய் வைத்து தினந்தோறும் வழிபாடு செய்யுங்கள்.

நேபாளத்தில் முடியாட்சிக்கு செயலளவிலே நாங்கள் முடிவு கட்டிவிட்டோம். முடியாட்சியின் கதை ஏற்கெனவே அங்கே முடிந்து போய்விட்டது. இப்போது நேபாள மன்னர் நேபாள படையினுடைய தலைவருமில்லை; அங்கே நடைபெறுகிற ஆட்சியின் தலைவரும் இல்லை.

எனவே, ஏறத்தாழ ஒழிந்து போன நிலையிலே அந்த முடியாட்சி இருந்து கொண்டிருக்கிறது. நாங்கள் அங்கே எதை எதிர்த்துப் போராடுகிறோமென்றால், செத்துக் கொண்டிருக்கிற முடியாட்சியை எதிர்த்து அல்ல; எங்களுடைய போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கெதிரானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது. அந்தப் போராட்டத்தைத்தான் நாங்கள் நேபாளத்திலே நடத்திக் கொண்டிருக்கிறோம்.

உலக மக்களுக்குப் பகைவனாக இருக்கிற அமெரிக்க வல்லாதிக்கம், வலிமை பொருந்திய ஒரு ஆற்றலாக இருக்கிற காரணத்தினால், அதனை ஒழித்துகட்ட நேபாள மக்கள் மட்டும் போதாது. உலகெங்கும் இருக்கிற மக்கள் ஒன்றுபட்டு தங்கள் பொதுப் பகைவனாகிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்த வேண்டும். ஆகவே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீழ்த்துவதற்கு, நேபாளஇந்திய மக்களின் ஒற்றுமை அவசியம் என்று கருதுகிறோம். நேபாள மக்களும் இந்திய மக்களும் ஒன்றுபட்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவோம் என்று அறைகூவி அழைக்கிறேன்.

நாங்கள் தேர்தலிலே வெற்றி பெறக் கூடிய நிலையிலே இருக்கிறோம். தேர்தலிலே வெற்றி பெற்று புரட்சிகரமான மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்தப் போகிறோம் என்று கருதித்தான் பிற்போக்கு சக்திகள் ஏகாதிபத்திய சக்திகள், விரிவாக்கப் பேராசை கொண்ட சக்திகள், மாற்றத்தை விரும்பாத சக்திகள் நேபாள பிற்போக்காளர்களை வலியுறுத்தி ""தேர்தலை நடத்தாதே! தேர்தலை நடத்த விடாமல் செய்!'' என்று தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் நேபாளத்திலே நடைபெற இருக்கிற தேர்தலில், அந்த தேர்தல் போராட்டத்தில் மாபெரும் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறோம். நேபாளத்தினுடைய 75 மாவட்டங்களிலும் சென்ற ஜனவரி 13ஆம் தேதி நாங்கள் பெருந்திரள் கூட்டங்களை நடத்தினோம். அங்கே திரண்ட இலட்சக்கணக்கான மக்களைப் பார்த்து, பிற்போக்கு சக்திகள் எங்கள் வெற்றி உறுதி என்று தெரிந்து அஞ்சி நடுங்கி, தேர்தலைச் சீர்குலைக்கவும், தேர்தலிலே நாங்கள் வெற்றி பெற விடாமல் தடுக்கவும் மீண்டும் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் இரண்டு வழிகளுக்கும் தயாராக இருக்கிறோம். முதலாவதாக, தேர்தலை நடத்தும்படி அரசை நெருக்கி நிர்பந்திப்போம். அப்படி தேர்தல் நடத்தப்படுமானால், நாங்கள்இடதுசாரி சக்திகள் வெற்றி பெற்று ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்தை இயற்றி, கூட்டாட்சி குடியரசை, புதிய ஜனநாயகக் குடியரசை நேபாளத்திலே நிறுவுவோம். ஒரு மக்கள் குடியரசை நாங்கள் நிறுவுவோம். அப்படி அவர்கள் தேர்தலை நடத்த மறுப்பார்களேயானால், சீர்குலைப்பார்களேயானால் இரண்டாவது வழி இருக்கிறது. நாங்கள் மக்களைத் திரட்டி இந்த அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்த அணியமாக இருக்கிறோம்.

அவர்கள் தேர்தல் நடைபெறாவிடாமல் சீர்குலைப்பார்களானால், எந்த தேதியிலே தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டுமோ அதே நாளில், நாங்கள் மீண்டுமொரு மக்கள் எழுச்சிக்கு அறைகூவல் விடுப்போம். மீண்டுமொரு மக்கள் இயக்கத்தை நடத்தி இந்தத் தேர்தலை நடத்த விடாமல் தடுத்த சக்திகளை தூக்கியெறிவோம். அப்போது அந்த மக்கள் எழுச்சி மூலமாக வீழ்த்தப்படுவதும் வெளியேற்றப்படுவதும் முடியாட்சியாக மட்டும் இருக்காது. நேபாளத்தினுடைய பிற்போக்குச் சக்திகள் அனைவரையும் தூக்கியெறிந்து விட்டு, நேபாளத்தை விடுதலை செய்து, எவரெஸ்டின் உச்சியிலே புரட்சி செங்கொடியினைப் பறக்க விடுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத்தின் பிற்போக்காளர்கள் ஏகாதிபத்தியவாதிகள் ஒரு வதந்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். 21ஆம் நூற்றாண்டில் இனிமேல் உலகத்தில் எந்த நாட்டிலும் புரட்சி நடைபெற முடியாது என்று அவர்கள் மக்களை ஏய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சோசலிசம் அழிந்து போய் விட்டது; மார்க்சியம் பொருத்தப்பாட்டை இழந்து விட்டது; கம்யூனிச புரட்சிக்கு இனி வாய்ப்பில்லை என்று அவர்கள் கதைகட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கூறுவதை பொய்யாக்குகிற விதத்திலே, 21ஆம் நூற்றாண்டின் முதலாவது புரட்சி என்ற வகையிலே, நேபாளத்திலே நாங்கள் புரட்சியிலே வெற்றி பெறுவோம். உலகெங்குமுள்ள புரட்சிகர மக்களின் பேரதரவுடன் புரட்சியின் வெற்றியின் வாயிலிலே நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். அந்த புரட்சியினுடைய வெற்றி என்பது, உலகத்திற்கு புரட்சி இன்றும் பொருத்தப்பாடுடையது என்பதை இமயத்தின் உச்சியில் ஏறி அறிவிப்பதாக இருக்கும்.

ஆகவே நேபாளத்தில் புரட்சி என்பது, நேபாளத்திற்கு மட்டுமேயான புரட்சியாக இருக்காது. அது இந்திய மக்களுக்கும் உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நம்பிக்கையூட்டுகிற புதிய புரட்சியாக இருக்கும். இந்திய மக்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்வார்களேயானால், இந்திய மக்களும் நேபாள மக்களும் இந்த புரட்சிக்காக ஒன்றுபட்டு நிற்பார்களேயானால், நேபாள புரட்சியைத் தடுத்து நிறுத்துகிற சக்தி உலகத்தில் எவருக்குமில்லை என்று நான் உறுதியாகச் சொல்வேன். இந்தியநேபாள மக்களின் ஒற்றுமையின் வாயிலாக, அந்தப் புரட்சியை நாம் வெற்றி பெறச் செய்வோம்.

நான் கர்நாடகம் சென்றிருந்த போது, அங்கே செய்தி ஏடுகளிலேய ஒரு செய்தியைப் படித்தேன். எங்கள் தலைவர் பிரசந்தா அவர்கள், இலங்கையிலே தமிழீழ விடுதலை இயக்கத்தைப் பற்றியும், அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைப் பற்றியும் என்ன கூறினார் என்பது பற்றியது அது. அதனால் ஒரு குழப்பம் நிலவுவதாகத் தெரிந்து கொண்டேன்.

உண்மை என்னவென்றால், இலங்கையிலிருந்து ஒரு அமைச்சர் நேபாளத்திற்கு வந்திருந்தார். அவர் எங்களுடைய தலைமையைச் சந்தித்துப் பேசுவதற்காக வந்தார். நான் எங்கள் கட்சியின் பன்னாட்டு பிரிவின் தலைவர் என்ற போதிலும், அந்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருக்க வேண்டுமென்றாலும் கூட, அந்த நேரத்தில் வேறு பணி காரணமாக நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எங்கள் தலைவரை அந்த அமைச்சர் சந்தித்துப் பேசிவிட்டு வந்து, வெளியே செய்தியை திரித்து தவறாக வெளியிட்டு விட்டார். இலங்கையில் ஆயுதப் போராட்டம் நடத்த தேவையில்லை என்றும் இலங்கைத் தமிழர்கள் அமைதி வழியிலே தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் எங்கள் தலைவர் கூறியதாக அவர் சொல்லிச் சென்று விட்டார். இது முழுப்பொய். முழுக்க முழுக்க தவறான செய்தி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

எங்கள் கட்சியின் கொள்கை என்னவென்றால், எந்தவொரு விடுதலை இயக்கத்தையும் நாங்கள் ஆதரிக்கிறோம். எங்கெல்லாம் தேசிய ஒடுக்குமுறை நிலவினாலும் அதை எதிர்த்து விடுதலைக்காகப் போராடுகிற உரிமை மக்களுக்கு உண்டு. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இலங்கைத் தமிழ் தேசிய இனம் சிங்கள பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகிறது. ஆகவே, இலங்கைத் தமிழர்களுக்கு தங்கள் தேசிய விடுதலைக்காகப் போராட முழு உரிமை உண்டு. அவர்களது போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நேபாளத்திலேயே சின்னஞ்சிறு தேசிய இனங்கள் சில இருக்கின்றன. அந்த தேசிய இனங்கள் தங்கள் விடுதலைக்காக போராடுகின்றன. ஏனென்றால், அவை தேசிய ஒடுக்குமுறைக்குள்ளாகியிருக்கின்றன. அந்த தேசிய இனங்களின் போராட்டத்தை எங்கள் கட்சிதான் தலைமையேற்று நடத்துகிறது. தேசிய விடுதலைக்காக நாங்கள் போராடுகிறோம். உலகெங்கும் தேசிய விடுதலை இயக்கங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆகவே, எங்களுடைய தலைவர் பிரசந்தா, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைக் கண்டித்தார் என்று கூறுவதற்கு வாய்ப்பே இல்லை. அது முழுப்பொய்.

இறுதியாக, வீரஞ்செறிந்த தமிழ் மக்களாகிய உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். நேபாளத்தினுடைய புரட்சிகர போராட்டத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும். முடியாட்சியையும் ஏகாதிபத்தியத்தையும் வீழ்த்தி விட்டு, ஒரு புதிய அரசை, புதிய அரசமைப்பை, புதிய சமூகத்தை உருவாக்குவதற்கான நேபாளத்தினுடைய இந்தப் போராட்டம் வெற்றி பெறுவதற்குத் துணை நிற்குமாறு நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் போராட்டம் வெற்றி பெறுகிறபொழுது, உலகத்தின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலே செங்கொடி பறக்கும். அந்தச் செங்கொடி உலகத்தின் உச்சியிலே பறக்கிறபொழுது, உலகம் முழுவதும் அதை பார்க்கும். இந்தியாவெங்கும், உலகம் முழுவதும் அது புரட்சியை பரவச் செய்யும். உலகப் புரட்சிக்கு அது அடையாளமாக வழிகாட்டுதலாகத் திகழும். ஆகவே, எங்கள் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவு தாருங்கள், தாருங்கள் என்று வேண்டி முடிக்கிறேன்.

நன்றி, செவ்வணக்கம்!