தமிழ் அரங்கம்

Saturday, April 21, 2007

கிரிக்கெட்: வெறும் விளையாட்டல்ல, ஒழிக்கப்பட வேண்டிய சூதாட்டம்-சமூகக்கேடு

கிரிக்கெட்: வெறும் விளையாட்டல்ல,
ஒழிக்கப்பட வேண்டிய சூதாட்டம்-சமூகக்கேடு
!

2007 உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் சுற்றிலேயே கற்றுக்குட்டி நாடுகளாக மதிப்பிடப்பட்ட வங்கதேசம் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளிடம் படுதோல்வி அடைந்து வெளியேற்றப்பட்டதும், கூடவே பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மரின் கொலையும் கிரிக்கெட் விளையாட்டைச் சுற்றிலும் எழுப்பப்பட்டிருந்த பல மாயத் தோற்றங்களைக் கலைத்திருக்கின்றன. கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் தெருக்களில் பட்டாசுகள் கொளுத்தி இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதையும், தோல்வியடைந்தால் போதையேற்றிக் கொண்டு கவிழ்ந்து படுத்துவிடுவதையும் வழக்கமாகக் கொண்ட இந்திய ரசிகர்கள், வங்கதேசத்திடமும், இலங்கையிடமும் தோல்வி அடைந்தவுடன் தன்னெழுச்சியாக ஆத்திரங்கொண்டு கிரிக்கெட் வீரர்களின் உருவபொம்மைகளைக் கொளுத்தினார்கள்; உருவப்படங்களைச் செருப்பால் அடித்து, கிழித்துப் போட்டு அவமானப்படுத்தினார்கள்; கழுதைகளுக்கு கிரிக்கெட் வீரர்களின் பெயர்களைச் சூட்டி மாலை போட்டுத் தெருத்தெருவாக இழுத்து வந்தார்கள்; பாடைகள் கட்டியும், மொட்டையடித்தும் கருமாதிச் சடங்குகள் செய்தார்கள்; அவர்களின் வீடுகளைத் தாக்கினார்கள்.


இதே கிரிக்கெட் ரசிகர்கள்தாம் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குமுன்பு இந்திய அணியின் வெற்றிக்காக யாகங்கள், சிறப்புப் பூசைகள், பிரார்த்தனைக் கூட்டங்கள், கூட்டு வழிபாடுகள் நடத்தினார்கள். ""கிரிக்கெட் விநாயகர்'' கோவில் கட்டி பஜனைப் பாடல்களும், சுலோகங்களும் இயற்றிக் குறுந்தகடுகளும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கேலிக் கூத்துக்களில் பார்ப்பன அர்ச்சகர்களும் இந்து மதவெறி அமைப்புகளின் பிரமுகர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். ""பாப் உல்மரின் கொலைச் சம்பவம் சர்வதேச கிரிக்கெட்டின் இருண்ட, அசிங்கமான பகுதியையும், நவீன கிரிக்கெட்டில் புழங்கும் மிகையான பணத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் வர்த்தகச் சூதாடிகளுடன் கூட்டுச் சேர்ந்து கிரிக்கெட் ஊழலில் ஈடுபட்டிருப்பது ஏற்கெனவே அம்பலமாகியுள்ளன. இந்த நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களிடையே நிலவும் மனநோய் வெறித்தனம் காரணமாக மற்ற பிற விளையாட்டுகள் போன்ற ஒரு விளையாட்டாக கிரிக்கெட் மதிக்கப்படுவதற்குப் பதில் மிகையான கவர்ச்சியூட்டப்பட்டு விட்டது'' என்று செய்தி ஊடகங்கள் இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கின்றன.


கிரிக்கெட் மீது பெரும்பாலான ரசிகர்களிடையே மனநோய் வெறித்தனம் கொள்ளுமளவு மிகையான கவர்ச்சி ஏற்படுவதற்கு என்ன காரணம், யார் பொறுப்பு என்பதைப் பற்றி இந்தச் செய்தி ஊடகங்கள் மவுனம் சாதிக்கின்றன. ""விøயாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்; விளையாட்டுப் போட்டிகளில் ஏற்படும் வெற்றிதோல்விகளைத் தனிப்பட்ட பகையாக மாற்றி விடக்கூடாது; விளையாட்டுக்களில் வெற்றி முக்கியமில்லை, பங்கேற்பதுதான் முதன்மையானதாக இருக்கவேண்டும்'' என்று ஒருபுறம் உபதேசிக்கப்பட்டாலும் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கிரிக்கெட் தேசியச் சின்னமாக மாற்றப்பட்டு, தேசிய வெறியூட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் இந்து தேசியவெறியின் அடையாளமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதினால் மட்டுமல்ல, வேறெந்த நாட்டோடு பாகிஸ்தான் மோதினாலும் பாகிஸ்தானின் தோல்வியைக் கொண்டாடும் அளவுக்கு இந்தியாவில் ""தேசிய'' வெறியேற்றப்பட்டு இருக்கிறது; இதே நிலைதான் பாகிஸ்தானிலும் உள்ளது. அதாவது, இந்தியாவின் தோல்வியை அவர்கள் கொண்டாடுவதாக உள்ளது.


சினிமாவுக்கு அடுத்து கவர்ச்சிகரமானதாக கிரிக்கெட் மாற்றப்பட்டிருக்கும் அதேசமயம், சினிமாவைவிட அதிகமாகப் பணம் புரளும், பணம் கொழிக்கும் மையமாக கிரிக்கெட் விளையாட்டு மாறியிருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் ஊழல்கள் நிறைந்த வெவ்வேறு நாடுகளின் வாரியங்கள் ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கின்றன. கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் பல இலட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள், கூடுதலாக விளம்பரங்களில் தோன்றி கோடிக்கணக்கில் ஊதியம் பெறுகிறார்கள். இவை போதாதென்று கிரிக்கெட் சூதாடிகளுடனும், தரகர்களுடனும் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிப்பதோடு, உல்லாச சொகுசு வாழ்க்கை, வசதிகளையும் பெறுகிறார்கள். கிரிக்கெட் போட்டி முடிவுகள் மீது பந்தயம் கட்டும் சூதாட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரளுகிறது. கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை ஒலிஒளி பரப்புவதும், அவற்றுக்கிடையே விளம்பரங்கள் செய்வதுமாக பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரளுகிறது. இவைதவிர, போட்டிகளை நடத்தப் பொறுப்பேற்கும் பெப்சி, கோக், எல்.ஜி., சாம்சங், ஹோண்டா போன்ற பல பன்னாட்டு உள்நாட்டு தொழில் கழகங்கள், அவற்றின் உற்பத்திப் பொருள் விளம்பரங்களுக்காக வாரி இறைக்கும் தொகை பலப்பலகோடி ரூபாய்கள். அதனால்தான் உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் தோல்வியடைந்ததால் பல ஆயிரம் கோடி ரூபாய் நட்டமடைந்த பன்னாட்டு தொழிற்கழகங்களும், செய்தி ஊடகங்களும் கிரிக்கெட் ரசிகர்களைவிடப் பன்மடங்கு ஆத்திரமடைந்துள்ளன.


ஆங்கிலேயப் பிரபுக் குலத்தின், மேட்டுக்குடி சீமான்களின் சோம்பேறித்தனமான பொழுது போக்கு விளையாட்டாகத் தொடங்கிய கிரிக்கெட், பன்னாட்டுத் தொழில்கழகங்களின் விளம்பர வியாபார ஊடகமாகவும், கருப்புப்பண சூதாடிகளின் விளையாட்டாகவும் வளர்ச்சியுற்றிருக்கிறது. மேலும், ஆங்கிலேயக் காலனி நாடுகளாக இருந்த நாடுகளில் மட்டுமே, அந்த அவமான அடிமைச் சின்னமாக இது விளையாடப்பட்டு வருகிறது. விடுதலைப் போராட்ட உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு மேலைநாகரிக, ஆங்கில மோகம் ஊட்டி வளர்க்கப்படுவதைப் போல கிரிக்கெட் மோகம் வளர்க்கப்படுகிறது.


விளையாட்டு என்பது வெறுமனே உடற்பயிற்சிக்கானதாகவும், கேளிக்கை பொழுதுபோக்கிற்கானதாகவும், வியாபார சூதாட்டக்களமாகவும் இருக்கக் கூடாது. சமூக நலனை முன்னிறுத்தி சமூக மறுஉற்பத்திக்கான மறு ஆக்கம் தருவதாக இருக்கவேண்டும். விளையாட்டையே தனித் தொழிலாகக் கொண்ட வீரர்களும், அதையே பந்தயம், சூதாட்டமாகவும், வியாபாரம் விளம்பரமாகவும் நடத்தும் தொழில்முறை சோம்பேறிக் கும்பலும் சமூகத்திற்கு ஒட்டுண்ணிகளாகவே இருக்க முடியும். அத்தகைய கேடு விளைவிப்பதாக இருக்கும் கிரிக்கெட் விளையாட்டை, குதிரைப் பந்தயம், சூதாட்ட விடுதிகள், இலாட்டரி, ஆபாசக் களிவெறியாட்ட விடுதிகள் போன்றவை எவ்வாறு ஒழிக்கப்பட வேண்டியவையோ, அதைப்போல கருதி ஒழிப்பதற்கு உழைக்கும் மக்கள் போராட வேண்டும்.


Thursday, April 19, 2007

ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு!''

சிறு வணிகத்தை விழுங்க வரும்

ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு!''

— புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் ஆர்ப்பாட்டம்

ல இலட்சக்கணக்கான சிறு வியாபாரிகள் விவசாயிகள் தொழிலாளர்களின் வாழ்வை நாசமாக்கும் வகையில், சென்னையில் பல்லாயிரம் கோடி முதலீட்டில் 14 இடங்களில் காய்கனி அங்காடிகளைத் தொடங்கியுள்ளதோடு, நகரின் மூலை முடுக்கெல்லாம் விரிவுபடுத்தி வருகிறது, ரிலையன்ஸ் குழுமம். இதன் விளைவாக கோயம்பேடு வணிக வளாகத்தின் விற்பனை இப்போதே 40% அளவுக்கு வீழ்ச்சியடைந்து விட்டது. கோயம்பேட்டை நம்பி வாழும் சுமார் ஒரு லட்சம் குடும்பங்களின் வாழ்க்கைக் கேள்விக்குறியாகி விட்டது.


எதிர்க்கட்சிகள் சித்தரிப்பதைப் போல, இது ஏதோ அரசின் தவறான கொள்கையால் ஏற்பட்டுள்ள பேரழிவு அல்ல. விவசாயம், சிறு தொழில்கள், சிறு வணிகம் முதலான எல்லாத் துறைகளையும் நாட்டின் இயற்கை வளங்களையும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் பிடியில் சிக்க வைத்து, நாட்டையே அடிமைப்படுத்தும் மறுகாலனியாக்கக் கொள்கைகள்.


கடந்த பத்தாண்டுகளாக தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாதிக்கக் கொள்கைகளுக்கெதிராகத் தொடர்ந்து போராடி வரும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், ரிலையன்ஸ் எதிர்ப்புப் போராட்டத்தை ஒட்டி மார்ச் 18 முதல் 23 வரை தொடர் பிரச்சார, ஆர்ப்பாட்டங்களில் இறங்கின. பல ஆயிரம் துண்டறிக்கைகள், நூற்றுக்கணக்கான முழக்க அட்டைகள், ""சிறு வணிகத்தை விழுங்கவரும் ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு!'' என்ற சிறுவெளியீடு ஆகியன களத்தில் குவிந்தன.


செங்கொடிகளோடு தோழர்கள் கோயம்பேடு வணிக வளாகத்தைச் சுற்றி 10 கி.மீ. சுற்றளவில் பரவியிருக்கும் ஏழைக் குடியிருப்புகளில் துடிப்போடு பிரச்சாரம் செய்தபோது, மக்கள் ஆதரித்தும் நன்கொடைகள் தந்தும் வரவேற்றனர். அருகே இருந்த மத்தியதர வர்க்க அடுக்ககங்களில் மட்டும் "ரிலையன்ஸ் ஃபிரெஷ்' விரித்துவரும் பொய்யான விளம்பரங்கள் ஊடுருவி இருப்பதை அறிந்த தோழர்கள், அவர்களிடம் உண்மைகளை எடுத்துச் சொல்லிப் போராடக் கற்றுக் கொடுத்தனர்.


20,21 (மார்ச்) ஆகிய இரு நாட்களிலும் கோயம்பேடு வளாகத்திற்குள் 18 இடங்களில் பிரச்சாரம் செய்தது ம.க.இ.க. மையக் கலைக்குழு "ஓரம் ஓரம் ஓரம்' பாடல் பிறந்த களம் அதுதான். சிறு நாடகங்கள், பாடல் ஆடல் மூலம் பல்லாயிரம் உழைப்பாளர்கள் மற்றும் வியாபாரிகளின் நெஞ்சங்களில் கனன்ற போராட்டத் தீயை வேகமாகப் பரப்பியது அக்கலைக்குழு.


கோயம்பேடு வட்டாரம் தவிர, சென்னை தாம்பரம் முதல் வள்ளலார் நகர் உள்ளிட்ட நகரப் பேருந்து நிலையங்களிலும்; பல பேருந்து நிலையங்களிலும்,மின்சார ரயில்களிலும் ரிலையன்ஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்தை எடுத்துச் சென்ற இப்புரட்சிகர அமைப்புகள், போராடும் மக்களின் நம்பிக்கைக்கு உரமாய், ரிலையன்ஸின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஆப்பறையும் வகையில் புரட்சிகர கலைநிகழ்ச்சியுடன் பொதுக்கூட்டத்தை மார்ச் 21 அன்று மாலை கோயம்பேடு சந்தை அருகே பிருந்தாவன் நகர்த் திடலில் நடத்தின.


பொதுக்கூட்டத்திற்கு பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் அ.முகுந்தன் தலைமை வகித்தார். ம.க.இ.க. மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் சிறப்புரை ஆற்றினார். காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜி.டி.இராசசேகரன், சிறுகடை வியாபாரிகள் சங்கத் தலைவர் அண்ணாமலை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணித் தலைவர் செங்கோவலர் அரசன், சுமை தூக்கும் கூலித் தொழிலாளி சிவக்குமார் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.


அரசின் வஞ்சகமான திட்டத்தின்படி, "இடைத்தரகு வியாபாரிகள்' நீக்கப்பட்டு, பகாசுர முதலாளியான ரிலையன்சிடமும், பன்னாட்டு முதலாளியான வால்மார்ட்டிடமும் வியாபாரச் சூத்திரக் கயிறு கொடுக்கப்படுமானால், விவசாயிகள், வியாபாரிகள், கூலிகள் எல்லோருமே ஒட்டு மொத்தமாய்க் குப்பையாக வீசியெறியப்பட்டு விடுவார்கள் என்று விளக்கி எச்சரித்த தோழர் காளியப்பன், நேற்றுவரை நம்மோடு பழகிய சிறு வியாபாரிகளை வீதியில் விட்டுவிட்டு, புதிதாக குஜராத்திலிருந்து வந்த தரகு முதலாளி ரிலையன்ஸ் அம்பானியோடு உறவு வைக்கத் தொடங்குவது என்ன ஒழுக்கம், அது ஆபத்தல்லவா என்று மத்தியதர வர்க்கத்தை நோக்கி நச்சென்று கேள்விகளை வீசினார்.


அடுத்துப் பேசிய கூலித் தொழிலாளி சிவக்குமார் தன் வர்க்கத்துக்கேயுரிய கோபத்தோடு தங்கள் வாழ்க்கையைப் படுகுழியில் தள்ளியிருக்கும் ரிலையன்சை அடித்து விரட்ட வேண்டும் என்று பேசினார்; தொழிலாளர் விடுதலை முன்னணித் தலைவர் செங்கோவலர் அரசன், கோயம்பேடு நிலைமையை மாற்றப் போராட்டம் அவசியம் என்று விளக்கிவிட்டு, ரிலையன்ஸை நுழையவிட்ட கட்சிகளின் பின்னால் தன் கட்சித் தலைவர்களே எப்படிச் சென்றார்கள் என்று கேள்வி எழுப்பினார். சிறு கடை வியாபாரிகள் சங்கத் தலைவரான அண்ணாமலை எளிய வாதங்களை முன்வைத்து ஆளுங்கட்சித் தலைவர்களை நோக்கிக் கேள்விகளை வீசியபோது கைத்தட்டலால் கூட்டம் ஆர்ப்பரித்தது.

கூட்ட இறுதியில் நடந்த ஒரு மணிநேரக் கலைநிகழ்ச்சியில் ஒரு புதிய போராட்டக்கலை அங்கே பிறந்ததைக் கண்ணெதிரே கண்டனர் சுமார் 1500க்கும் மேல் திரண்டிருந்த உழைப்பாளிகள். ""ஓரம் ஓரம் ஓரம் அவன / விரட்ட வேணும் தூரம்/ சொல்லி அடங்கலேன்னா, தயங்காதே, / அழுத்தி ஊக்கில் போடு'' என்ற பாடலை மையக் கலைக்குழு பாடியபோது, அதைப் போராட்ட அச்சாரமாக எடுத்துச் சென்றார்கள் உழைக்கும் கூலிகள்.


மார்ச் 23 பகத்சிங் நினைவு நாளன்று ஜெ.ஜெ. நகர் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடை அருகே இப்புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டு செங்கொடிகள், போராட்ட முழக்கத் தட்டிகளோடு வீதியில் நின்று சுமார் 3 மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர். வீதியோடு சென்ற தள்ளுவண்டி வியாபாரிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வந்து கலந்து கொண்டனர்.


சென்னைக்கும் படை எடுத்து வந்து கடை திறந்திருக்கும் ரிலையன்ஸை எதிர்த்து கோயம்பேடு வணிக வளாகத்தின் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கூலித் தொழிலாளர்கள் அதே நாளில் போர்க்கோலம் பூண்டனர். தமிழகத்தில் பல லட்சம் சிறு வியாபாரிகள், கூலித் தொழிலாளரின் வாழ்வைச் சூறையாட வந்துள்ள ரிலையன்ஸைத் தமிழகத்தைவிட்டே விரட்டியடிக்க வேண்டும் என்று போராட்டம் கூர்மைப்பட்டிருந்தது. அதேநாளின் பிற்பகலில் கோயம்பேடு வணிகவளாகத்தில் சிறு வியாபாரிகளும், கூலித் தொழிலாளர்களும் நடத்திய உண்ணாவிரதக் கூட்டத்தில் தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர். தோழர் அ.முகுந்தன் அங்கு எழுச்சி உரை ஆற்றினார்.


""ரிலையன்ஸை ஓட ஓட விரட்டியடிப்போம்!'' என்று தொடங்கியுள்ள இவ்வமைப்புகளின் வீச்சான ஒருவாரப் பிரச்சாரமும் சில்லறை வியாபாரிகள் தொழிலாளர்களின் போராட்டமும் முடியவில்லை; இது ஒரு தொடக்கம்; மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போரின் ஒரு சிறு பொறி; இது காட்டுத்தீயாக நிச்சயம் பரவும்!

தகவல்: ம.க.இ.க., சென்னை.Wednesday, April 18, 2007

இஸ்லாத்தில் மனுவாதிகள்

Monday, April 16, 2007

"அற்புத"மான பாசிச அலட்டல்

"அற்புத"மான பாசிச அலட்டல்


பி.இரயாகரன்
16.04.2007


"ணையப் போலிப் புரட்சியாளரும் ஈழ விடுதலைப் போரும்" என்ற தலைப்பில், தமிழ் மணத்தில் அற்புதன் என்ற, 'அற்புத"மான புலிப் பாசிட் எம்மீது தனது புலிப் பாய்ச்சலை நடத்தியுள்ளது. அந்த புலிப் பாசிச பாய்ச்சலின் உள்ளடகத்தைப் பார்ப்போம்.


'மாக்சியப் பண்டிதர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் தங்களைத் தாங்களே மகிடம் இட்டுக் கொண்டு இணையத்தில் மாக்சியம், புலிப்பாசிசம், நலமடித்தல், மக்கள் விடுதலை, புதியஜனநாயகப் புரட்சி என்று வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் மனநோயாளரைப் போல் புலம்பிக் கொண்டிருக்கும் பல போலிகளுக்கும், கீழ் இணைத்துள்ள, இதயச் சந்திரன் வீரகேசரியில் எழுதி உள்ள எதிர்வினை பொருந்தும். கொழும்பில் இருந்து வெளிவரும் சிறிலங்கா அரச ஊதுகுழல் ஆன தினகரனில் வந்த ஒரு பந்தி எழுத்துக்கு, எதிர்வினையாக என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, இவ்வாறான ஒரு கட்டுரை சி.சிவசேகரத்தால் எழுதப்பட்டு இணையத்தில் பல பெயர்களில் பதிவிடும் ஒரு இணையப் போலிப் புரட்சியாளர் ஒருவரால் படி எடுத்துப் போடப் பட்டிருந்தது."


இவர் குறிப்பிடும் சிவசேகரம், இதயச்சந்திரன் பற்றி விவாதத்துக்குள் செல்வது அவசியமற்றது. இதயச்சந்திரன் விவாதம் உப்புச்சப்பற்றது. புலிப் பாசிசத்துக்கு குடைபிடிக்கும் நாயுண்ணிகளின் வெற்று அலட்டல். பத்திரிகைளை மிரட்டி அடிபணிய வைத்து, மாற்று விவாதங்களை அடக்கியொடுக்கியபடி, புலிகளின் எடுபிடிகள் மட்டுமே குலைக்க முடியும் என்ற நிலையில், பாசிசக் அலட்டல் அது. இந்த பாசிச அலட்டலுக்கு பின்னால் இருப்பது, வெற்று வேட்டுத்தனம். இந்த அலட்டலை விடுத்து 'அற்புத"மான இந்த பாசிச அலட்டலைப் பாhப்போம்.


'மாக்சியம், புலிப் பாசிசம், நலமடித்தல், மக்கள் விடுதலை, புதிய ஜனநாயகப் புரட்சி என்று வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் மன நோயாளரைப் போல் புலம்பிக் கொண்டிருக்கும் பல போலிகளுக்கும்" பதிலளிக்கின்றாராம்.


சரி எப்படி? அதை மட்டும் அவர் சொல்ல மாட்டார். தலைவரின் மாவீரர் தின செய்திக்காக, வாயைப் பிளந்து திருவிழாவுக்காக காத்து நிற்கும் கூட்டம் போல், இவர் சொல்லும் வரை நாம் தவம் இருக்கவேண்டியது தான். இதற்கெல்லாம் அர்த்தம் தெரிந்த அற்புதமே, முடிந்தால் உங்கள் புலியின் நுண் மார்க்சிய வழியில் இதை விளக்குங்களேன். இதற்கு பதில் வழமையான புலி நுண் மார்க்சிய அரசியல் வழியில், துப்பாக்கிக் குண்டை பரிசாக தருகின்ற வழியில் பதிலளித்துவிடுவார்களோ என்று அச்சப்படுகின்றோம்.


உங்களுக்கு நன்கு தெரிந்த ஆனால் எமக்கு தெரியாத இவற்றை விளக்கி, சரியான வழியில் எம்மை வழிகாட்டிச் செல்லுங்களேன். ஏன் அதை செய்ய முடிவதில்லை. இப்படி செய்திருந்தால், இலங்கையில் பல பத்தாயிரம் உயிர்களை புலிகள் பலி கொண்டிருக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. ஏன் அதை மட்டும் செய்ய முடிவதில்லை. 'மார்க்சியம், புலிப் பாசிசம், நலமடித்தல், மக்கள் விடுதலை, புதிய ஜனநாயகப் புரட்சி என்று வார்த்தைகளுக்கு அர்த்தம்" தெரிந்து போராடியவர்களை வேட்டையாடிய புலிகளின் பாசிச வண்டவாளத்தை தண்டவாளத்தில் நிறுத்தி, இணையத்தில் ஓட்டமுடியாது.


நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் எமக்கு மனநோய் என்று. நல்லது அப்படியே வைத்துக் கொள்வோம், மனநோயற்ற நீங்களாவது சுயபுத்தியுடன் இதை விளக்குங்களேன். பொத்தாம் பொதுவிலான அலட்டல், வெற்றுத்தனமான காழ்ப்பை அடிப்படையாக கொண்ட அவதூறுதான் இது.


'தமிழ் ஈழமக்கள் இந்தப் போலிப் புரட்ச்சியாளர்களின் போலித் தனங்களை நன்கு அறிவார்கள். மக்களால் நிராகரிக்கப்பட்டு இணையத்தில் இவ்வாறு புரட்சிகரப் படங்காட்டிக் கொண்டிருக்கும் இவர்கள் பற்றிய புரிதலை இடதுசாரிச் சிந்தனை உடைய தமிழ் நாட்டுத் தோழர்களிடம் அம்பலப்படுத்துவதற்காக இந்தப்பதிவு இங்கு இடப்படுகிறது."


நல்லது தமிழ் நாட்டு இடதுசாரிகளுக்கு தெரியப்படுத்த முனையும் நீங்கள், மேலுள்ளவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். முடிச்சுமாற்றி தொழிலைச் செய்வதை விடுத்து, அது பற்றிய விளங்கங்கள் தான் தேவை. அவர்கள் அதை வெற்றிடத்தில் புரிந்தகொள்ள முடியாது. சரி 'தமிழ் ஈழமக்கள் இந்தப் போலிப் புரட்ச்சியாளர்களின் போலித் தனக்களை நன்கு அறிவார்கள்" ஆகாகா அற்புதம். பெயருக்கு ஏற்ப அற்புதம். புரட்சி பேசும் நீங்கள், உங்களுடைய புரட்சி என்ன என்றாவது சொல்லுங்கள். பிரபாகரன் மாவீரர் தினத்தில் அலட்டும் போது சொன்னால் தான் அதுவும் தெரியும். அதுவும் அவர் கழித்த மலத்துக்குள் புழுக் கிண்டித் தேட வேண்டிய பரிதாபம் தமிழ் இனத்துக்கு. அந்தளவுக்கு வெற்று வேட்டுத்தனமும், மக்கள் விரோதமும் பொங்கிவழியும். சரி எல்லாம் தெரிந்த புண்ணியவானே, உங்கள் புரட்சி என்ன? பாசிச மரமண்டைகளே அதையாவது சொல்லுங்கள். நாங்கள் போலிகள் என்று நீங்கள் கூறுவது போலவே இருக்கட்டும், போலியற்ற நீங்கள் மக்களுக்காக எதை எப்படி செய்கின்றீர்கள். அதையாவது சொல்லுங்களேள். உங்கள் புரட்சிகர தத்துவம் என்ன நடைமுறை என்ன விளம்புங்கள். மக்களை மாபியா பாணியில் சுரண்டும் திருட்டுக் கூட்டத்தை பற்றி நாம் பேசுகின்றோம் என்பதை மறக்க வேண்டாம். மண்டையில் போட்டும், மிரட்டியும், மக்களை அடக்கி ஆள்வதுதான் புரட்சியோ! தெரியாமல் தான் கேட்கின்றோம், தெரிந்தால் சொல்லுங்களேன்.


'புலிகள் மேல் உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்வே இவர்களின் இந்த மன வியாதிக்கான அடிப்படை. மக்களின் அரசியல் அபிலாசைகளைப் புரிந்து கொள்ளாமல், சித்தாந்தத்தை நடைமுறையுடன் இணைக்காமல், கிளிப்பிள்ளைகளைப் போல் புரட்சிகரமான சொற்களை உமிழ்வதே இவர்களின் நடைமுறையாக இருந்து வந்துள்ளது. சுத்தியலையும், சிவப்பு அட்டைப் புத்தகங்களையும் காட்சிப்படுத்துவது தான் மாக்சிசம் என்றும், சீனாவில், ரசியாவில் நடந்தது தான் புரட்சி என்றும், மாக்சிசத்தை அறிவியல் அடிப்படையில் அணுகாமல் அதனை ஒரு மதத்தைப் போல் அணுகும் இந்தப் போலிச் சித்தாந்திகள் வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கப் போவதில்லை."


நல்லது, தனிப்பட்ட காழ்ப்புணர்வை என்ன என்ன என்று இனங்காட்டுங்களேன். வெற்று சொற்களுக்கு வெளியில் அதை செய்யும் அரசியல் அருகதை கூட பாசிட்டுகளுக்கு கிடையாது. நாங்கள் எழுதிய கட்டுரைகளில், அதை எடுத்துக்காட்டுகளேன். நாங்கள் புலியை மட்டும் எதிர்க்கவில்லை. இலங்கை அரசு முதல் உலகம் வரை எதிர்த்து எழுதுகின்றோம். அங்கும் மனநோய் முற்றி, தனிப்பட்ட காழ்ப்பு தான் என்றால் அதையும் விளக்கமாய் சொல்லிவிடுங்கள். அர்த்தம் தெரிந்த நீங்கள் தான் சொல்ல வேண்டும். அதைவிடுத்து பல்லிளித்து விளம்பர பாணியில் அரசியல் செய்யும் தமிழ்செல்வன் போல், மூடிமறைத்து சித்த விளையாட்டில் ஈடுபடுகின்றீர்கள். இந்த வக்கிரத்தை பார்ப்பனியம் குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கின்றது என்றால், புலிப் பாசிட்டுக்களான நீங்களுமா!


'மக்களின் அரசியல் அபிலாசைகளைப் புரிந்து கொள்ளாமல், சித்தாந்தத்தை நடைமுறையுடன் இணைக்காமல், கிளிப்பிள்ளைகளைப் போல் புரட்சிகரமான சொற்களை உமிழ்வதே இவர்களின் நடைமுறையாக இருந்து வந்துள்ளது." நல்லது மக்களின் அபிலாசைகள் என்ன? அதையாவது சொல்லுங்கள். சொல்லுக்கு வெளியில், இதையும் தலைவரிடம் கேட்கவேண்டுமோ! மக்களின் அபிலாசைக்காக போராடும் புலிகள் என்கின்றீர்கள், அதை எப்படி எங்கே நடைமுறைப்படுத்துகின்றார்கள்? தெரிந்தால் அதையாவது சொல்லுங்கள்.


'சித்தாந்தத்தை நடைமுறையுடன் இணைக்காமல், கிளிப்பிள்ளைகளைப் போல் புரட்சிகரமான சொற்களை உமிழ்வதே இவர்களின் நடைமுறையாக இருந்து வந்துள்ளது." இது தவறு தான். சித்தாந்தமும் நடைமுறையும் ஒன்றிணையவேண்டும் என்பதை நாம் நிராகரிக்கவில்லை. ஆனால் அதை புலிகள் எப்படி செய்கின்றார்கள்? அதை முதல் உலகறிய சொல்லுங்கள். மக்களின் அபிலாசைகளை அடிப்படையாக கொண்ட சித்தாந்தம், அச்சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட நடைமுறையை புலிகளின் பாசிச வழியில் ஒளிவீசிக் காட்டுங்களேன். ஏனிந்த வார்த்தைப் புலம்பல். புரட்சிகரமான சொற்களை நாம் முன்வைக்கின்றோம் என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டு, வெளிப்படும் அவதூறோடான உங்கள் காழ்ப்பு, எமக்கு மனநோயில்லை என்பதையும், தனிப்பட்ட காழ்ப்புமல்ல என்பதையும் நிறுவுகின்றது. நடைமுறையுடன் இணைத்தல் என்பது, வரலாற்றுக்குரிய ஒன்று தான். படுகொலையும், காட்டுமிராண்டித்தனமும் புலி புரட்சியாக நிலவுகின்ற ஒரு நிலையில், நீங்கள் உங்கள் பாசிச வழியில் எம்மை நோக்கி கேள்வி எழுப்பி விடுவது இலகுவானது. படுகொலையும், காட்டுமிராண்டித்தனமுமற்ற அரசியல் வழியில் நின்று, இதைச் சொன்னால் அது நியாயம். அதை முதலில் செய்யுங்கள். கொலைகார கும்பலின் பக்கப்பாட்டுக்கு ஏற்ப, கும்மியடிக்கும் நீங்கள் எல்லாம் நடைமுறை பற்றி பேச வருகின்றீர்கள். இந்த மனித விரோத மாபியா பாசிசச் செயல்களை அம்பலப்படுத்தி போராடுவது, மரணத்துக்கு ஒப்பானது. அதுவே எமது இன்றைய நடைமுறை.


'அண்மையில் மயூரன் தனது வலைப் பதிவில், சரிநிகரில் இருந்து படி எடுத்து நேபாள மாவோக்களின் தலைவர் பிரச்சண்டாவின் பேட்டியை இணைத்திருந்தார். (Prachanda: Our Revolution Won ஆங்கில மூலம்)
பிரச்சண்டா இந்த வரட்டுச் சித்தாந்த குழுவாதத்தை வெகுவாக விமர்சித்து இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது."


பிரச்சண்டா பேட்டி, அதன் உள்ளடக்கம், அதில் உள்ள அரசியல் நேர்மை, புலியின் பாசிசத்தில் ஒரு சதவீதத்துக்கு கூட பொருந்தது. அவர் வரட்டுச் சித்தாந்தம் என்று கூறுவது சரியானது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானது. அவர் கோட்பாட்டை விட்டுச் செல்லவில்லை. அவரின் கருத்து வெளிப்படுத்தும் உள்ளடக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிக்கான எதார்த்தம் சார்ந்து வெளிப்படுகின்றது. அவர் மக்களை ஏமாற்ற முனையவில்லை. புரட்சியின் முதல் கட்டத்தில் உள்ள, பல்வேறு வர்க்கத்தின் நலன்களை சரியாகவே உயர்த்துகின்றார். பிரதான எதிரி, அதாவது நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை தனிமைப்படுத்தி ஒடுக்குவதில் உள்ள, அவரின் பொது அணுகுமுறை மிகச்சரியானது. புலிகளைப் போல் எதிரியல்லாத யாரையும் எதிரியாக்கவில்லை. மக்களை நண்பர்களை, புரட்சிகர சக்தியாக முன்னிலைப்படுத்துகின்றார். இந்த வகையில் ஒரு நேர்மையான ஐக்கிய முன்னணிக்காக உழைக்கின்றார்.


அவர் எம்மை விமர்சிக்கின்றார் என்ற உங்கள் கண்டுபிடிப்பு நகைப்புக்குரியது. அதை எப்படி எந்த வகையில் என்று நிறுவவேண்டும். அவர்கள் உங்களைப் போன்றவர்களின் வங்குரோத்துச் செயலை, பொது உலகில் அம்பலப்படுத்தகின்றனர். உலகுக்கு வழிகாட்ட போவதாக சூளுரைத்துள்ளார். அவர் உலக மக்களை நம்புகின்றார். புலிப் பாசிச மாபியாக்கள் போலல்ல. உங்கள் இந்த குருட்டுத்தனமான வாதத்தின் நோக்கம், புலிகளை ஆதரிக்காவிட்டால் வரட்டுவாதி என்பது, ஆதரித்தால் வரட்டுவாதியல்ல என்பதே உங்கள் புலிக் கண்டுபிடிப்பு. அதை அவர் வரட்டுவாதமாக குறிப்பிடவில்லை.


'21 ஆம் நூற்றாண்டுக்கான நடைமுறை மாக்சிசம் பற்றியும் கலப்புப் பொருளாதாரம் பற்றியும் அவர் பேசி இருந்தார். போன நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட ரசியப் புரட்சியோ அன்றி சீனப் புரட்சியோ இந்த நூற்றாண்டுக்கும், எங்கும், எப்போதும் பொருந்தும் என்று எதிர்பார்ப்பது அறிவிலித்தனம். ஒவ்வொரு போராட்டத்தின் அக மற்றும் புற நிலைகளும் சர்வதேச சூழலும், பூகோள அரசியலும் வேறுபடுகிறது. மாற்றாக மாக்சிசத்தின் அடிப்படைகளைப் புரிந்து, சிங்கள பேரினவாதத்திற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் ஏகாத்திபதிய சக்திகளுக்கு எதிராக நுண்ணிய அரசியற் தளத்தில் நடைமுறை ரீதியாக இயங்கும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைமைச் சக்திகளான புலிகளின் அரசியலை இவர்கள் இன்னும் உள்ளார்ந்தமாக புரிந்து கொள்ளவில்லை, அவ்வாறான புரிதல் ஏற்படாததற்கான அடிப்படைக் காரணம் இவர்களின் சிந்தனையின் வரட்டுத் தனமும், இயற்கையாக புலிகள் மேலெழும் தனிப்பட்ட காழ்ப்புணர்வுமே."


பிரச்சண்டாவுக்கு ஒரு பாசிச பொழிப்புரை. மாவீரர் தின உரைக்கு பொழிப்புரை சொல்லிப் பிழைக்கும் கூட்டம், பிரசண்டாவுக்கு பொழிப்புரை. பிரசண்டா பெயரிலும் மானம் கெட்ட நாய்ப் பிழைப்பு.


'21 ஆம் நூற்றாண்டுக்கான நடைமுறை மாக்சிசம் பற்றியும் கலப்புப் பொருளாதாரம் பற்றியும் அவர் பேசி இருந்தார்."


மார்க்சிசம் நடைமுறை நாட்டுக்கு நாடு மட்டுமன்றி, காலத்துக்கும் ஏற்பவும் அதை கையாளுகின்ற வடிவங்களும் மாறும். புரட்சிகர சூழல், வர்க்கங்களின் நிலை, மாறுபட்டதாக உள்ள நிலைமையில், கம்யூனிசத்தை நோக்கிய பயணம் நேர்கோட்டு வழியில் ஒரு சீராக செல்வது கிடையாது. ஒரே மாதிரியான, ஒரே வடிவிலான புரட்சிகள் சாத்தியமில்லை. புரட்சிகள் இயந்திரமாக, இயந்திரகதியில் உற்பத்தி செய்வதில்லை. வர்க்க போராட்டத்தின் உள்ளடக்க விதிகளும், சுரண்டல் பற்றிய சித்தாந்தமும், சுரண்டல் உள்ளவரை மாறிவிடுவதில்லை. மாக்சியம் புதிய உலக நிலைமைகளையும், மாற்றத்தை உள்வாங்கி வளர்த்தெடுக்கப்படுகின்றது. 'கலப்புப் பொருளாதாரம்" பற்றிய அவரின் கருத்து மிகச் சரியானது. இது இப்போது தான் முதல் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டதல்ல. சீனா, சோவியத் எங்கும் இந்த முறை புரட்சியில் கையாளப்பட்டு இருக்கின்றது. நேபாளக் கம்யூனிஸ்ட்டுகள் நிலப்பிரத்துவ வர்க்கங்களை தூக்கியெறியும் போராட்டத்தில், அதற்கு எதிரான அனைத்து வர்க்கங்களையும் உள்ளடக்கிய ஒரு ஐக்கிய முன்னணியை மேலிருந்து கட்டியுள்ளது. இது புதிய ஜனநாயக புரட்சிக்கு முந்தைய, ஜனநாயக புரட்சிக்குரிய கட்டத்தை அடிப்படையாக கொண்டது.


இந்தவகையில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை அவர் தெளிவாக முன்வைக்கின்றார். பாட்டாளி வர்க்க புரட்சி வேறு. இதில் இருந்தும் சோசலிச புரட்சி வேறு. இதில் இருந்தும் புதிய ஜனநாயக புரட்சி வேறானது. புரட்சியின் வௌவேறு காலகட்டமும், வௌவேறு வர்க்கங்களின் அணி சேர்க்கையை இனம் காண்பதில் தான், இந்த வெற்றி அடங்கிக் கிடக்கின்றது. இதில் ஜனநாயக புரட்சிக்குரிய குறிப்பான வர்க்க சூழல் சார்ந்து, அதை தெளிவாக முன்வைக்கின்றார். இதில் எந்தத் தவறுமில்லை. இதை மார்க்சியத்துக்கு எதிரானதாக திரிக்க முடியாது. அவர் இதை முன்னெடுப்பது ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிக்காகத் தான். அதை அவர் கைவிட்டால், அதாவது நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை ஒழித்து நிலத்தை மறுபங்கிடுவதைக் கைவிடுவாரேயானால், அவர் வரலாற்றில் மார்க்சியத்துக்கு துரோகத்தை இழைத்து மக்களின் முதுகில் குத்துவார்.


'மாக்சிசத்தின் அடிப்படைகளைப் புரிந்து, சிங்கள பேரினவாதத்திற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் ஏகாத்திபதிய சக்திகளுக்கு எதிராக நுண்ணிய அரசியற் தளத்தில் நடைமுறை ரீதியாக இயங்கும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைமைச் சக்திகளான புலிகளின் அரசியலை இவர்கள் இன்னும் உள்ளார்ந்தமாக புரிந்து கொள்ளவில்லை, அவ்வாறான புரிதல் ஏற்படாததற்கான அடிப்படைக் காரணம் இவர்களின் சிந்தனையின் வரட்டுத் தனமும், இயற்கையாக புலிகள் மேலெழும் தனிப்பட்ட காழ்ப் புணர்வுமே."


என்கின்றார்.


அதாவது புலிகளை மார்க்சிய சக்திகள் என்கின்றார். 'ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக நுண்ணிய அரசியற் தளத்தில் நடைமுறை ரீதியாக" செயற்படுகின்றனராம். உலகத்தை முட்டாளாக கருதுகின்ற குதர்க்கம். இப்படிக் கூறுவதற்கு உள்ள துணிச்சல் தான், பாசிசத்தின் திமிர். ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, மக்களுக்கு தெரியாமல், நுண் என்ற மாய மந்திரத்தின் துணையுடன் போராடுகின்றனராம். அதுவும் இந்த அற்புதத்துக்கு தெரிந்துவிடுகின்றது.


நுண் தளத்தில் மக்களுக்கு தெரியாது, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்துகின்றனராம். முக்கியமாக மக்களுக்கு அவை தெரியக்கூடாது. யார் போராடுவது என்றால், எல்லாம் வல்ல தலைவர் மட்டும். அவர் நுண் தளத்தில் சொன்னால், மக்கள் வேத வாக்காக கருதி, ஏகாதிபத்தியத்தை தூக்கியெறிவார்களாம். புலுடா விடுவதில் மகாகெட்டித்தனம் என்ற நினைப்பு இவர்களுக்கு.


'சிந்தனையின் வரட்டுத் தனமும், இயற்கையாக புலிகள் மேலெழும் தனிப்பட்ட காழ்ப்புணர்வுமே." இந்த நுண் அரசியலை புரிந்து கொள்ளத் தடை என்கின்றார். ஐயா அதை ஊர் அறிய, நீங்கள் புரிந்து கொண்ட, அந்த நுண் தளத்தைச் சொல்லுங்கள். உங்களுக்கு அவை தடையல்லவே. ஏன் சொல்ல முடிவதில்லை. 'பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்"


சுய அறிவற்ற கூட்டம், தலைவரின் மாவீரர் தின செய்தியில் ஏதும் வருமா என்று நம்பி நிற்கும் பிழைப்புவாத கூட்டத்துக்கு, எதைத்தான் சுயமாக மக்கள் சார்பாக காட்டமுடியும். பொறுக்கி நக்குகின்ற கூட்டம், எங்கேயாவது குண்டு வெடித்தால், பத்து இராணுவம் செத்தால் அதை கொண்டு உருவாடுகின்ற கூட்டம், மக்களைப்பற்றி எதைத்தான் கூறமுடியும். அதை அரசியலாக கொண்டு, பேசித் திரியும் கூட்டம், எதைத்தான் இந்த நுண் தளத்தில் கூறமுடியும். தமிழ் மக்களை நலமடித்து விட்டு, இப்படி வள்ளென்று குலைக்க முடிகின்றது.


'இந்த வரட்டுச் சித்தாந்திகளின் அரசியல் மலட்டுத் தனமே, இவர்களால் ஒரு மக்கள் மயப்பட்ட பரந்துபட்ட வெகுசன அமைப்பை கட்டி எழுப்ப முடியாதற்கான அடிப்படைக் காரணம். வெறுமையாக புரட்சிகரச் சொற்களை உமிழும் இவர்கள் உண்மையில் மாக்சிசத்தை ஒரு நடைமுறைச் சித்தாந்தமாக அன்றி, உச்சாடனம் செய்யும் மந்திரமாகவும், மாக்சையும், லெனினையும், மாவோவையும் கடவுளர்களாகவும், அவர்களின் கூற்றுக்களை எதுவித விமர்சனமும் அற்ற வேத வாக்குகளாகவும் கருதிக் கொண்டதன் வெளிப்பாடே அன்றி வேறொன்றும் இல்லை. இவர்களின் அரசியல் என்பது சொன்னதை மீள ஒப்புவித்தல் என்பதுடன் மட்டுமே நின்று விடுகிறது. ஒரு சித்தாந்ததை அதன் நடை முறையுடனும் அது கூறப்பட்ட காலப்பகுதியின் அக, புற நிலைகளுடனும் இவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. ஒரு சித்தாந்தத்தின் அடிப்படை அதன் தர்க்கமும், சிந்தனையுமே அன்றி வெறும் சொல்லாடல்கள் அல்ல. பிரச்சண்டா குறிப்பிடுவது போல் மக்கள் அமைப்பொன்றை நிறுவததற்கு ஒரு அடிப்படை வேண்டும். அந்த அடிப்படை மக்கள் மத்தியில் இருக்கும் பிரதானமான ஒடுக்குமுறையின் எதிர் நிலையாகவே அமைய முடியும். அரசியல் யதார்த்தம் என்பதுவும் நுண் அரசியல் என்பதுவும் அதுவே. நேபாளத்தில் நிலவுடமை அடிப்படையிலான மன்னர் புரட்சியே பிரதானமான ஒடுக்குமுறைக் கருத்தியலாக இருக்கிறது. சிறிலங்காவில் அது சிங்களப்பவுத்த பேரினவாதமாக இருக்கிறது. ஒரு மக்கள் மயப்பட்ட அரசியல் இயக்கம் இந்தப் பிரதான முரண்பாட்டை அடிப்படையாக வைத்தே கட்டி எழுப்பப்படமுடியும்."


பாவம் பிரசண்டா. ஒரு வலதுசாரி கொலைகார பாசிட்டுகள், ஒரு இடதுசாரி ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தை கூறி நக்கலாமென்று தெரிந்திருக்க நியாயமில்லை தான.


'இவர்களின் அரசியல் என்பது சொன்னதை மீள ஒப்புவித்தல் என்பதுடன் மட்டுமே நின்று விடுகிறது." சொன்னதை மீள ஒப்புவிப்பவர்கள் யார்?. சுயசிந்தனை அற்று, மக்களை சிந்திக்கவே கூடாது என்று நலமடித்தவர்கள் யார்? தலைவர் சொன்னதை தவிர, யாரும் வேறுவிதமாக சிந்திக்க கூடாது. புலிகளை சொன்னதைத் தவிர வேறு எதுவும் பேசக் கூடாது. இது தான் புலிகளின் நுண் புரட்சியாக்கும்.


'இந்த வரட்டுச் சித்தாந்திகளின் அரசியல் மலட்டுத் தனமே, இவர்களால் ஒரு மக்கள் மயப்பட்ட பரந்துபட்ட வெகுசன அமைப்பை கட்டி எழுப்ப முடியாதற்கான அடிப்படைக் காரணம். வெறுமையாக புரட்சிகரச் சொற்களை உமிழும் இவர்கள் உண்மையில் மார்க்சிசத்தை ஒரு நடைமுறைச் சித்தாந்தமாக அன்றி, உச்சாடனம் செய்யும் மந்திரமாகவும்,"


இதுதான் கட்டி எழுப்ப முடியாததற்கு காரணம் என்கின்றார். எதைக் கட்டியெழுப்ப என்பது சூக்குமம். புலிகள் மாற்றுக் கருத்தை அங்கீகரித்து, குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயகத்தை அங்கீகரித்தா உள்ளனர்! இவர் என்ன தான் கூறுகின்றார்? இப்படியான நிலையில் செயற்படாமல் இருக்கின்றனர் என்று கூற வருகின்றாரா? வெகுஜன அடிப்படையை கட்டியெழுப்பும் தடைக்கு, எமது வரட்டுவாதமே காரணம் என்கின்றார். இதை புலிகள் தடுக்கவில்லை என்கின்றாரா?. ஒரு பாசிட்டின், வடிகட்டிய முட்டாளின் உளறல் இது. இவை எல்லாவற்றையும் செய்யமுயன்றவர்கள் 5000 பேரை கொன்ற திமிர் தான் இப்படி இணையத்தில் குலைக்க வைக்கின்றது.


எத்தனை எத்தனையோ முரண்பட்ட மனிதர்களைக் கொன்று குவித்த கொலைகாரக் கும்பல், எம்மைப் பார்த்து 'இணையப் போலிப் புரட்சியாளரும் ஈழ விடுதலைப் போரும்" எனக் கிண்டல் அடிக்கின்றது. இன்னும் கொல்லும் வெறி அடங்காத இரத்தம் வழியும் பாசிச திமிருடன், வம்பளக்க வருகின்றது. நாம் நாளை இதே காரணத்துக்காக கொல்லப்படலாம். அந்த உணர்வுடன் தான், நாம் உங்களை எதிர்கொள்கின்றோம். உங்கள் வம்புகளை, உங்கள் பாசிச வக்கிரங்களை எதிர்த்து நாம் போராடுகின்றோம் என்றால், அதுவே தான் இன்றைய நடைமுறை. இதில் மரணம் தான் எமக்கு முன்னால் உள்ளது. இது ஒரேயொரு வழிப்பாதையூடாக உள்ளதென்பதை, நாம் புரிந்தே தாம் எழுதுகின்றோம்.


'புலிகள் மேலான காழ்ப்புணர்வே இவர்களை அண்மையில் பிரன்சு அரசின் ஜனநாயக விரோதமான நடவடிக்கைகளை நியாயப்படுத்தி எழுத வைத்துள்ளது. ஒருபுறத்தில் புலிகளை ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகளாச் சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கத்தில் அந்த ஏகாதிபத்தியக் கூட்டின் புலிகள் மீதான, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீதான நடவடிக்கைகளை ஆதரித்தும் இவர்களால் எழுதமுடிவது இவர்களின் அரசியல் வங்குரோத்துத் தனத்தின் உச்சக்கட்டம். ஏகாதிபத்தியங்களின் உண்மையான அடிவருடிகள் யார் என்பதை தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாக்சிய முத்திரை குத்தல்களுக்கு அப்பால் சென்று தோழர்கள் இவர்களின் போலித் தனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்."


நல்லது நுண் அரசியல் புலிவாதியே. 'இவர்களை அண்மையில் பிரன்சு அரசின் ஜனநாயக விரோதமான நடவடிக்கைகளை நியாயப்படுத்தி எழுத வைத்துள்ளது" என்கின்றீர்கள். பிரஞ்சு அரசின் ஜனநாயக விரோத செயல் என்று எதை குறிப்பிடுகின்றீர்கள்! அவர்கள் கைதைச் செய்தவர்கள், அந்த அமைப்பை தடை செய்யவில்லையே, ஏன்? அதன் செயற்பாட்டை முடக்கவில்லையே ஏன்? எங்கு எப்படி ஜனநாயக விரோதம் உள்ளது? அதை ஒருக்கால் ஊரறிய சொல்லுங்களேன்! அவர்கள், அவர்களது நாட்டின் சட்ட எல்லைக்குள், இதை நுட்பமாக கையாளுகின்றனர்.


புலிகள் பாரிசில் நடத்தியது என்ன? ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், அதை சதா மூச்சுக்கு மூச்சு ஒடுக்குபவர்கள் எதை செய்திருப்பார்கள்? அனைத்தும் வெளிப்படையானது. ஒரு சட்ட எல்லைக்குள் இயங்கத் தெரியாதவர்கள். பாசிச வழிகளில், ஜனநாயகத்தை முழுங்குபவர்கள். அவர்களின் மொழிகள், ஆணைகள், அடி உதை மிரட்டல் ஏன் மரணம் வரை அனைவருக்கும் தெளிவானது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, நாம் நிற்பதை இது தடுத்துவிடாது. நாளை எம் மீது தாக்குதலை அவர்கள் நடத்தினாலும், நாம் இந்த நாட்டின் சட்டப் பாதுகாப்பை கோருவதை, இந்த நாடு ஏகாதிபத்தியம் என்பதால் தடுத்து விடமாட்டது. நாங்கள் ஒரு சட்ட அமைப்புக்குள் நீதியைக் கோருவோம்.


அது ஒரு ஏகாதிபத்தியமாக இருந்தாலும், அந்த நாட்டில் வாழும் மனித உரிமையை மறுப்பதை நாம் ஆதரிக்கமுடியாது. ஒரு நாட்டின் சட்டம் அங்கீகரிக்கும் எல்லைக்குள், அதை மீறுபவனுக்கு எதிராக அந்த சட்ட வடிவங்களில் போராடுவது தவிர்க்க முடியாதது. புலிகளை நாம் ஆதரிக்க வேண்டும் என்றால், மனித உரிமைகளை புலிகள் அங்கீகரிக்கவேண்டும்.


சட்டப்படியாக இயங்க வேண்டும். மாறாக மாபியாத் தளத்தில் இயங்கும் ஒரு குழுவை, விடுதலை இயக்கமாக நாம் அங்கீகரிக்க முடியாது. பாதிக்கப்பட்ட மக்களின் நீதி எவ்வளவு முக்கியம் என்பதே, மிக முக்கியமானது. ஒருவன் பாதிக்கப்பட்டடிருந்தாலும் கூட, அதற்காக குரல் கொடுப்பது மார்க்சியம். இதே பாரிசில் சபாலிங்கம் கொலை, நாதன் கஜன் கொலை, லட்சுமி வீடு புகுந்து சூறையாடல், குகநாதன் மீதான் கொலை மிரட்டல், சோபாசக்தி மீதான மிரட்டல், எத்தனை எத்தனையோ உண்டு.


இதையெல்லாம் கொலைவெறியுடன் ஆதரிக்கும் நீங்கள், நுண் அரசியல் வழியில் இதை புலிகள் செய்வதாக மார்பு தட்டுவது எமக்கு கேட்கின்றது. எமது மரணம் தான் இதற்கு பரிசென்றால், நாம் அந்த மரணத்தை உங்களின் நுண் அரசியலுக்காக முத்தமிடத் தயாராகவே உள்ளோம.

Sunday, April 15, 2007

எங்கள் புரட்சி வெற்றி பெற்றது - மாவோயிஸ்ட் இயக்கத்தலைவர் பிரசண்ட

எங்கள் புரட்சி வெற்றி பெற்றது - மாவோயிஸ்ட் இயக்கத்தலைவர் பிரசண்ட

"நாங்களே பிரதான அரசியல் சக்தி என்ற வகையில் சமூக பொருளாதார கட்டமைப்பை மாற்றியமைத்தல் மக்களுக்கு அதிகாரத்தை அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளை பாரியளவில் முன்னெடுத்து வருகிறோம். "

Prachanda: Our Revolution Won ஆங்கில மூலம்


பக்கம் 1 பக்கம் 2

பக்கம் 3 பக்கம் 4

பக்கம் 5 பக்கம் 6


நன்றி சரிநிகர்