பி. இரயாகரன்
10.03.2007
கிழக்குவாழ் மக்களின் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்ட விமர்சனம், காலத்தின் முக்கியத்துவம் கருதி முன்வைக்கப்படுகின்றது. புலிக்கு பதிலாக கருணா என்ற ஒரு பாசிட், பேரினவாதத்தின் கூலிப்படையாக வெளிப்பட்டது முதல் அந்த அரசியல் இழிநிலையை அம்பலப்படுத்துவதை காலம் கோருகின்றது. புலியெதிர்ப்பு மற்றும் புலிக்கு மாற்றாக கருணா என்ற மற்றொரு பாசிட்டை முற்போக்காக காட்டுகின்ற வரலாற்று ஒட்டத்தின் ஆரம்பத்திலேயே, இதை அரசியல் ரீதியாக முறியடிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. யாழ் மேலாதிக்கத்துக்கு நிகராக கிழக்கு பிரதேசவாதத்தை முன்வைத்து, அந்த மக்களின் முதுகில் சவாரி செய்வதை அனுமதிக்க முடியாது. போலியாகவும் புரட்டாகவும் அரசியலை திரித்துப் புரட்டி, மக்கள் அரசியல் செய்வதாக பீற்றுகின்ற இந்த பாசிட்டுக்களை இனம் காண்பது அவசியமானது. இந்த வகையில் கிழக்கு மக்களின் வாழ்வு சார்ந்த பிரச்சனைகள் என்ன என்ற ஆய்வுடன் கூடிய விமர்சனம், உள்ளடக்கத்தில் முழு இலங்கை வாழ் மக்களுக்கும் பொருந்தி வரும் அம்சம் அதிகமானது.
புலிகள் என்ற வலதுசாரிய குறுந்தேசிய அமைப்பு அதன் அரசியல் நீட்சியில் இயல்பாகவே பாசிச வடிவத்தை எடுத்துக் கொண்டது. இதன் நீட்சியில் ஒரு கொலைகார, ஒரு கொள்ளைக்கார மாபியா கும்பலாக சீரழிந்தது. ஓட்டு மொத்த மக்களையும் தனக்கு அடிமைப்படுத்தி, அவர்களின் வாழ்வை சீரழித்து சிதைத்து சின்னாபின்னமாக்கியுள்ளது. இந்த வரலாற்று ஓட்டத்தில், அதன் அனைத்து பாசிச மாபியா நடத்தைகளில் தீவிர பங்கு கொண்ட அதன் முக்கிய புள்ளியாக செயல்பட்ட கருணா, அதிகார முரண்பாடுகளால் முரண்பட்ட போது பிளவு நிகழ்கின்றது. உண்மையில் புலிகளின் ஜனநாயகமின்மை, கருணாவின் தனிப்பட்ட அதிகார முரண்பாட்டால் ஏற்பட்ட பிளவு தவிர்க்க முடியாத ஒன்றாகியது. புலிகள் அமைப்பில் இது போன்ற பல உதிர்வுகளும், விலகல்களும் தொடர்ச்சியாக நடந்து வந்துள்ளது. இதற்கு அப்பால் துரோகியாகவும், இராணுவ மோதலில் வீர மரணங்களாகவும், திடீரென காணாமல் போன நிகழ்வுகள், பாசிச மாபியா கும்பலின் வளர்ச்சியுடன் ஓட்டிப் பிறந்ததாகவே காணப்படுகின்றது.
இந்த வகையில் உள் நிகழ்ந்த அதிகார மோதலில் தோற்ற கருணாவின் பிளவு, தவிர்க்க முடியாதது தான். உள்ளடகத்தில் அவரின் தனிப்பட்ட உரிமையும் கூட. பிளவு நிகழ்ந்த பின்பாக 14.3.2004, 20.03.2004 நாம் எழுதிய கட்டுரைகளில், சரியாகவும் தெளிவாகவும் இதை மதிப்பிட்டோம். (பார்க்க வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாத பிளவு, ஏன் புலிக்குள் நடந்தது?
பாசிச அமைப்புக்குள்ளான கருணாவின் அதிகார நலன்கள், அதுவே தனிமனித பிளவாகிய போதும், அதற்குள் ஒரு ஜனநாயகக் கோரிக்கை இருந்தது. புலிகள் போன்ற பாசிச மாபியா இயக்க நடைமுறையில், உள்ளியக்க ஜனநாயக மறுப்புக்கு எதிரான உயிர்வாழ்வு சார்ந்த பிரச்சனை கூட ஜனநாயகக் கோரிக்கை தான். கருணா தனிநபர் அதிகார நலனை முன்வைத்து பிரிந்த அந்த அதிகார நலன் சார்ந்த அரசியல் உள்ளடகத்தை மறைத்து, அதை இயல்பாக காலகாலமாக நீடித்த யாழ் மேலாதிக்கத்துக்கு எதிரான பிளவாக தனது பிளவை சித்தரித்தார்.
இந்த வகையில் யாழ் மேலாதிக்கத்தை எதிர்த்து போராட வேண்டிய அரசியல் பணிக்கு இது உற்ற துணையாகவும், அதேநேரம் இதன்பால் ஆழமான அரசியல் தெளிவு ஏற்படும் போது கருணா போன்றவர்கள் கூட சரியான மக்கள் நிலையை எடுக்க முடியும் என்ற அரசியல் உண்மையை நாம் நிராகரித்து இருக்கவில்லை. இந்த வகையில் யாழ் மேலாதிக்கம் பற்றியும், மக்களின் நலனை முன்னிலைப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும், நாம் விமர்சன ரீதியாக தொடர்ந்து இடித்துரைத்தே வந்தோம். ஆனால் கருணா மக்களுக்கு எதிராக அதே பாசிச வழியில், யாழ் மேலாதிக்கத்தை இனம் காணத் தவறி, வடக்கு மக்களை எதிரியாக சித்தரித்து, சொந்த மக்களையே ஒடுக்கத் தொடங்கினார். உள்ளடகத்தில் தனது அதிகாரத்தையும், அந்த அதிகார மேலாதிக்கத்தை பெறுவதற்காக யாழ் மேலாதிக்கத்தை முன்னிறுத்தி, பிரதேச பிளவை முன்தள்ளி, மக்களை எதிராக நிறுத்தி, ஒரு அதிகார வெறியன் என்பதை நிறுவியுள்ளார். புலிகளின் உள்ளான முரண்பாட்டில் எது அவரின் முரண்பாடோ, அதை இப்படி சாதித்துக் கொண்டார். அதே புலிப்பாசிச மாபியா வழியில், அந்த அரசியல் சாக்கடை மூலம் தன்னை நிறுவிக் கொண்டார். யாழ் மேலாதிக்கத்தை அரசியல் ரீதியாக இனம் காணத் தவறி, குறும் பிரதேச பிளவை முன்தள்ளிய கருணா, மக்களிடையே பிளவை விதைத்ததன் மூலம் மற்றொரு பாசிச மாபியா புலியை உருவாக்கினார். இப்படி கிழக்கு மக்கள் புதிய பாசிச புலிக்கு அடிமையாகி, தம் வாழ்வை இழக்கின்றனர். இந்த புலி பேரினவாதத்தின் எடுபிடி குண்டர் படையாக, கிழக்கு மக்கள் மத்தியில் தனது சூறையாடலை நடத்துகின்றது. கிழக்கு மக்களின் வாழ்க்கைக்கு எதிராக இந்த பாசிச மாபியா கும்பல் செயல்படுகின்றது.
இதை அம்பலப்படுத்துவது அனைவரினதும் உடனடிக் கடமையாக உள்ளது. அதன் ஆரம்பத்திலேயே இது இனம் காணப்பட்டு, அரசியல் ரீதியாக அழிக்கப்பட வேண்டும். இந்த வகையில் யாழ் மேலாதிக்கத்தை அரசியல் ரீதியாக அடையாளம் காண்பதும், கிழக்கு மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி போராடுவதும் அவசியமானது. இது மட்டும் தான் முற்போக்காக இருக்கும். அதுவே மக்களின் நலனை முன்னிலைப்படுத்தும். ஆனால் கருணா கும்பல் இதற்கு எதிராகவே செயல்பட்டது. படிப்படியாக மற்றொரு புலி பாசிட்டுக்களாக மாபியாவாகவே தன்னை வெளிப்படுத்த தொடங்கியது. இந்த நிலையில் பேரினவாதத்துடன் அங்குமிங்குமாக ஓட்டி உறவாடியது வெளிப்படத் தொடங்கியது. இந்தியாவின் கைக் கூலியாக அடையாளப்படுத்திக் கொண்ட நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. அதேநேரம் இலங்கை இந்திய அரசுகளின் கூலி அமைப்புக்களாக, அவர்களின் வளர்ப்பில் வாழ்ந்த மக்கள் விரோத கும்பல்களுடன் தம்மை இணைத்துக் கொண்டு செயல்படுவதை அறிவித்தனர். இருந்த போதும் கூட, அதை விமர்சிப்பதில் தெளிவாகவும், ஆனால் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி சரியான வழிக்கு வரும் வகையில், மென்மையான அணுகுமுறையை கையாண்டோம். குறைந்த பட்சம், மக்களின் அடிப்படையான வாழ்வியல் நலனை அவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்ற எமது ஆவல் காரணமாக, அதற்கு இசைவான வகையில் விமர்சன முறையைக் கையாண்டோம்.
ஆனால் கருணா கும்பல் மற்றொரு புலியாக, பேரினவாதத்தின் கூலிக் கும்பலாகவே, இந்தியாவின் அரசியல் எடுபிடிகளாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. எந்த விதத்திலும் புலிக்கும், இந்த கிழக்கு புலிக்கும் இடையில் மக்கள் பற்றிய நிலைப்பாட்டில் வேறுபாடில்லை என்பதை மெய்ப்பித்து வந்தது. குறிப்பாக புலியை விட மோசமான அரசியல் நிலையை எடுத்து, எதிரியுடன் கூட்டு சேர்ந்து தனது பாசிசத்தை மக்கள் மேல் கையாண்டது. இந்த பாசிச மாபியா கும்பலை ஆதரிப்பதில் புலியெதிர்ப்பு கும்பல் முற்றுமுழுதாக முழுமூச்சாக செயல்படத் தொடங்கியது. இந்த அரசு சார்பு கும்பலின் பாசிச நடவடிக்கையை முற்று முழுதாக இருட்டடிப்பு செய்தலில், புலியெதிர்ப்பு கும்பலின் பங்கு முதன்மையானது. பல புலியெதிர்ப்பு நபர்கள் கருணா கும்பலின் பேச்சாளராக, பிரச்சாரகராகவும் மாறினர். கருணா அரசுடன் சேர்ந்து ஈடுபட்ட பாசிச நடிவடிக்கைகளை, மூடிமறைத்தபடி அதை முற்போக்காக காட்டத் தொடங்கினர். இந்த நிலையில் அதனை முழுமையாக அம்பலப்படுத்தும் வரலாற்று கால கட்டத்தில், நாம் தொடாச்சியாக அதனை அம்பலப்படுத்துகின்றோம்.
இந்த கருணா என்ற பாசிச மாபியா கும்பல் பேரினவாதத்தின் இராணுவத் தேவையை பூர்த்தி செய்யும் கூலிக்கும்பலின் செயல்களை நாம் புரிந்துகொள்ள, மக்களின் நலன்கள் என்ன என்பதை தெளிவுபடுத்துவதும் அவசியமாகின்றது.
மக்களின் நலன்கள் என்பது, அரசியல் ரீதியாக அதற்காக போராடுவதைக் குறிக்கின்றது. மக்களுக்காக போராடுவதாக கூறிக் கொள்ளும் யாரும், மக்களை நலனை இனம் கண்டு போராட மறுப்பது, உள்ளடகத்தில் மக்களுக்கு விரோதமான செயலை அடிப்படையாக கொண்டது. மக்களின் நலன்களை எப்படி இனம் காண்பது.
1. மக்கள் எப்படியான பொருளாதாரத்தில்,
2. எப்படியான சூழலில்
3. எந்த வகையான உழைப்பில்
4. எந்த வகையான உற்பத்தி உறவில்
5. எந்த வகையான சமூக முரண்பாடுகளில்
6. எந்த வகையான வர்க்க முரண்பாடுகளில்
7. எந்த வகையான அடக்குமுறைகளின் கீழ்
எப்படி வாழ்கின்றனர் என்ற தெளிவும், அதை களையும் போராட்டத்தையும் அடிப்படையாக கொண்டது. மக்களின் வாழ்வுசார் முரண்பாடுகளை தீர்க்கும் உள்ளடகத்தில் நின்று போராடுவது தான் மக்கள் போராட்டம். வர்க்க மற்றும் சமூக முரண்பாட்டின் அனைத்தும் தழுவிய உள்ளடகத்தில் போராட மறுப்பது மக்கள் விரோதத் தன்மை கொண்டது. இதில் ஒன்றை மட்டும் மையப்படுத்தி போராடுவது என்பது, உள்ளடகத்தில் பிற்போக்குக் கூறைக் கொண்ட ஒரு போராட்டமாகவே இருக்கும். இது படிப்படியாகவே சீரழியும்.
இந்த வகையில் கிழக்கு மக்களின் பிரச்சனைகள் இனம் காணப்பட்டு, அந்த மக்களின் வாழ்வுக்காக அவர்களுடன் இணைந்து நின்று யாரும் போராடவில்லை. கிழக்கு வாழும் மக்களின் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் மிகமிக வறிய மக்கள். அன்றாடம் ஒரு நேரக் கஞ்சிக்கே வாழவழியற்ற உழைக்கும் மக்களாவர். அன்றாடம் தனது தேவையை பூர்த்தி செய்யாத, உழைப்பு என்ற சகதிக்குள் உருத்தெரியாது மாண்டு போகின்றவர்கள். ஒரு உயிரின் தேவைகளைக் கூட வெளிப்படுத்த முடியாத வகையில், அவர்களின் அடிமைத்தனம் காணப்படுகின்றது. இந்த விளைவால் குழந்தைகளின் எதிர்காலம் முதல் நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் என எதையும் நுகரமுடியாத, உலகமயமாதல் சமூக அமைப்பில் உயிர்வாழ்வதற்கு அவசியமற்ற ஒரு உறுப்பாக வாழ்பவர்கள்.
இந்தளவுக்கும் அந்த மக்கள் வாழும் பூமி அதீதமான இயற்கை வளம்கொண்டது. ஆனால் அந்த மக்கள் வாழ முடியாத அவலம். ஒரு நேர கஞ்சிக்காக அவர்கள் விடும் கண்ணீர், வற்றாத நதிகளாகவிட்டன. ஒருபுறம் சொந்த நிலத்தைக் கொண்டு வாழமுடியாத அவலம், மறுபக்கம் கூலிக்குச் சென்று வாழமுடியாத அவலம். பெரும்பாலான கிழக்கு மக்களின் நிலை இது. மக்களின் வாழ்க்கை அனைத்தும் இந்த சகதிக்குள் தான் உழலுகின்றது.
ஆனால் அரசியல் செய்தவர்கள், செய்பவர்கள் இந்த உண்மையை மறுத்தபடி, தமது வெட்கக் கேடான இழிந்து போன அரசியலை செய்கின்றனர். இந்த மக்கள் மத்தியில் அரசியல் செய்பவர்களின் வாழ்க்கை முறையோ, இதற்கு நேர்மாறானது. பகட்டுத்தனங்கள், ஆடம்பரங்கள் முதல் அனைத்தும் இந்த மக்களின் இரத்தத்தை உறிஞ்சி வாழ்கின்றவர்களின் சொகுசு வாழ்க்கை தான், அவர்களின் அரசியலாகி நிற்கின்றது.
பேரினவாதம் தமிழ் மக்களை ஒடுக்குகின்றது என்பதை மேலெழுந்தவாரியாக இனம் கண்ட ஒரு போராட்டம், அந்த குறித்த சமூக முரண்பாட்டினுள் மக்களின் வாழ்வு சார்ந்த நிலையை மறுதலித்து அதை முன்னெடுக்கவில்லை. மாறாக இதை பயன்படுத்திக் கொண்டு, அந்த மக்களை ஒடுக்குகின்ற ஒன்றாகவே மாறியது. இது உள்ளடகத்தில் யாழ் மேலாதிக்கமாகவும் அடையாளம் காணப்பட்டது. இதை மறுப்பதாக கூறிக் கொண்டு யாழ் மேலாதிக்கத்தை எதிர்ப்பதாக பாசாங்கு செய்தவர்கள், அதை வெறும் பிரதேச ரீதியாக வரையறுத்தனர். யாழ்மேலாதிக்கத்தை எதிர்ப்பதின் பின் உள்ள மக்கள் வாழ்வு சார்ந்த வாழ்வியலை நிராகரித்தது. மக்களின் மற்றொரு எதிரியுடன், மற்றைய சமூக முரண்பாடுகளை களையமறுத்து, அந்த முரண்பாட்டின் ஒடுக்குமுறைக்கு சார்பாக நின்று, மக்களை ஒடுக்குவதில் தான் இவர்களின் அரசியலே அடங்கிக் கிடக்கின்றது. மக்களின் உழைப்பிலான செல்வத்தை உறிஞ்சுவதில் தான், இவர்களின் அரசியல் அடங்கிக்கிடக்கின்றது. அந்த மக்களை அடக்கியொடுக்கி, அவர்களின் உழைப்பைப் புடுங்கி வாழும் வாழ்க்கையைத்தான், அவர்களின் வாழ்க்கையின் பின்னணியில் காண்கின்றோம். தமக்காக, தமது வாழ்வை மேம்படுத்துவதற்காக மக்களின் பெயரில் போராடுகின்றனர்.
மக்களின் வாழ்வு சார்ந்த வறுமையும், அதனுடன் கூடிய இழிநிலைமை என்பது, இலங்கை தழுவிய சமூக பொருளாதார சுரண்டல் ஆட்சி அமைப்பினால் உருவானது. ஏகாதிபத்திய நலனை பூர்த்தி செய்யும் தரகு முதலாளிகளையும், நிலப்பிரபுக்களையும் கொண்ட இலங்கை அரசு, இலங்கை பூராகவும் மக்களின் வாழ்வை அழித்து வாழ்பவர்களின் நலனைத் தான் ஜனநாயகம் என்கின்றது. பொதுவான இந்த நிலைமையால் ஏற்படும் விளைவு, பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுகின்றது. ஒப்பீட்டளவில் கிழக்கு மக்களின் நிலைமையும், அவர்களின் வாழ்க்கைத் தரமும், மற்றைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் கீழ்நிலைப் பாத்திரத்தை வகிக்கின்றது. கிழக்கு மக்களின் வாழ்வில் ஒரு விடுதலை வேண்டும் என்றால், அது இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை அடிப்படையாக கொண்டது. இது உள்ளடகத்தில் அனைத்தும் தழுவிய வகையில் நடத்தப்பட வேண்டும். இதை மறுக்க முனைவதே அபத்தம்.
இந்த நிலையில் தமிழ் மக்கள் மேல் இனவொடுக்கு முறையை பேரினவாதம் கையாண்ட போது, அந்த மக்கள் இரண்டு பிரதானமான ஒடுக்குமுறையைச் சந்தித்தனர், சந்திக்கின்றனர்.
1. பொதுவாக இலங்கை முழுவதுமாக காணப்படும் சுரண்டலும், சூறையாடலும்
2 .இனவொடுக்குமுறை ஊடாக காணப்படும் அடக்குமுறையும் சூறையாடலும்
இரண்டாவதை மட்டும் எதிர்த்து போராடி தலைமைகள் இயல்பாகவே சுரண்டும் முதலாவது போக்குடன் இணங்கிச் சென்றன. தமிழ் ஆதிக்க சுரண்டும் பிரிவுகளின் போராட்டமாக மாற்றியதால், கிழக்கு மக்கள் மூன்றாவது மற்றும் நான்காவது ஒடுக்குமுறையைச் சந்தித்தனர்.
3. அது யாழ் மேலாதிக்கமாக, குறுந் தேசியமாக, சொந்த மக்களை அடக்கியொடுக்கி சூறையாடும் ஒரு போராட்டமாக மாறியது.
4. கிழக்கு மக்கள் பிரதேச ரீதியான இழிவாடலையும், சமூக ரீதியான புறக்கணிப்பையும், வெறுமனே பயன்படுத்துப்படுவதையும், பிரதேசரீதியான புறக்கணிப்பையும், மற்றைய இன மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டிய நிலையில் இணக்கமற்ற தொடர் மோதலையும், இது போன்று பலவற்றை சந்தித்தனர்.
இப்படி தமிழ் மக்கள் மூன்று சிறப்பான ஒடுக்குமுறையையும், கிழக்கு மக்கள் மேலதிகமான நாலாவது சிறப்பு ஒடுக்குமுறைiயும் ஒரே நேரத்தில் அனுபவித்தனர். இந்த மக்களின் மேலான ஒடுக்குமுறைகளை இனம் கண்டு போராடத் தவறுகின்ற எந்த தலைமையும், எந்த அரசியலும் அந்த மக்களுக்கே எதிரானது. இதில் ஒன்றை அல்லது பலவற்றை ஒருங்கே கொண்டு மக்களை அடக்கியொடுக்கும் செயல் தான் கிழக்கில் நடக்கின்றது. உண்மையில் எந்த மக்களுக்காக போராடுவதாக பீற்றிக்கொள்கின்றனரோ, அந்த மக்களின் மேலான ஒடுக்குமுறையை, இவர்கள் மக்களுக்கு அடையாளம் காட்டுவது கிடையாது. ஒன்றை முதன்மைப் படுத்தி, இதன் ஒரு பக்கத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி, மக்களை ஒடுக்குவது தான் இவர்களின் அரசியலாகும்.
இந்த மக்களின் விடுதலைக்காக குறித்த பிரதேசத்தை உள்ளடக்கிய யாழ் மேலாதிக்கமோ, கிழக்கு மேலாதிக்கமோ போராடவில்லை. தேசியம் என்ற பெயரில் சிங்கள மக்களை எதிரியாக காட்டி வந்த யாழ் மேலாதிக்கம் போல், யாழ் மேலாதிக்கம் என்ற பெயரில் வடக்கு மக்களை கிழக்கு மேலாதிக்கம் எதிரியாக காட்டுகின்றது. உள்ளடகத்தில் மக்களை எதிரியாக காட்டி, மக்களிடையே பிளவை விதைத்து அதில் சிலர் தத்தம் நலனையே அடைகின்றனர்.
ஒரு தேசம், தேசிய மக்கள், பிரதேச மக்கள் என்று எந்தக் கோட்பாடும், மக்களின் இந்த அவல நிலைக்கு காரணமான அரசை எதிர்த்துப் போராடவில்லை. மாறாக அந்த அரசின் பெயரில் மக்களை இழிவாக்கி, சுரண்டுகின்ற அதே கொள்கையை அடிப்படையாக கொண்டு, மக்களுக்காக போராடுவதாக கூறுவது நகைப்புக்குரியது. உண்மையில் இவர்கள் எல்லோரும் மக்களின் அடிமைத்தனத்தில், வாழவிரும்புகின்ற ஒரு வர்க்கத்தின் நலனை மட்டும் தான், இந்த மக்கள் விரோதக் கும்பல் கையிலெடுக்கின்றது.
ஒரு பிரதேச மக்களின் வாழ்க்கை என்பது வர்க்க முரண்பாடுகளால், சமூக முரண்பாடுகளால் சின்னாபின்னப்படுத்தப்படுகின்றது. இப்படித் தான் இலங்கையில் மக்கள் கூட்டம் வாழ்கின்றது. இந்த மக்களை பிரதிநித்துவம் செய்வதாக கூறிக் கொள்வோர் முதல் அரசியல் செய்வோர் ஒவ்வொருவரும், நிச்சயமாக இந்த வர்க்க மற்றும் சமூக முரண்பாட்டின் ஒரு பிரிவை சார்ந்து நிற்கின்றனர். இந்த வகையில் தான் யாழ் மேலாதிக்கம் முதல் கருணாவின் பிரதேசவாதம் வரை, ஒரு வர்க்கத்தின் நலனை பிரதிநிதித்துவம் செய்கின்றது. இந்த இரண்டும் சுரண்டும் வர்க்கத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டு, பெரும்பான்மை மக்களின் உழைப்பைச் சுரண்டும் ஒரு பிரிவுக்கு தலைமை தாங்குகின்றது. பரந்துபட்ட மக்களின் வர்க்க நலனையும் கணக்கிலெடுத்து, அந்த மக்களை பிளக்கும் சமூக ஒடுக்குமுறைகளை இது களைவதில்லை. இந்த வகையில் தான் இது உண்மையில் காணப்படுகின்றது. இதனிடம் மக்கள் நலன் என எதையும் எதிர்பார்க்க முடியாது. மக்களைச் சுரண்டி வாழ்கின்ற, யுத்தம் மூலம் உருவாகும் அராஜகவாத புதுப் பணக்காரக் கும்பலாகத்தான் இருக்கின்றது. அத்துடன், அந்த யுத்த பொருளாதார மூலம் உருவாகும் புதுப்பணக்கார ரவுடிகளின் பாசிச நலனை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது. இந்த புதுப் பணக்கார வர்க்கம் மக்களின் அவலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, அவர்களை மிகக் கோரமாகவே சுரண்டி உருவான ஒரு இழிந்த அராஜகவாத வர்க்கம். இந்த வகையில் உருவான வர்க்கத்தின் உருவாக்கத்துக்கும் இருப்புக்கும், பாசிசமே அதன் சமூக விதியாக இருந்தது.
இந்த நிலையில் இந்த வர்க்கத்தின் சார்பாக போராடிய இந்தக் கும்பல்கள், சமூகத்தில் இழையோடிப் போயுள்ள வர்க்க முரண்பாட்டை சமூக முரண்பாட்டைக் கண்டு கொள்வதில்லை. அப்படி ஒன்று சமூகத்தில் இருப்பதாக கருதுவதைக் கூட அங்கீகரிப்பதில்லை. மாறாக இவர்கள் எதை ஆயுதமாக எடுக்கின்றனர் என்றால், சமூக முரண்பாட்டின் ஒன்றை ஒற்றைப்பரிணாமத்தில் முன்னெடுக்கின்றனர். அதன் முழுமையையும், மற்றைய முரண்பாடுகளையும் கண்டு கொள்வதில்லை. யாழ் மேலாதிக்கம் தமிழ் தேசியத்தில் பேரினவாதமாகவும், கிழக்கு மேலாதிக்கம் பிரதேசவாதத்தில் யாழ் மேலாதிக்கமாகவும் உள்ளது.
இந்த இரண்டும் அந்த மேலாதிக்க உள்ளடகத்தில் உள்ள, வர்க்க முரண்பாட்டையும், மற்றைய சமூக முரண்பாடுகளையும் கூட நிராகரிக்கின்றது. தன்னளவிலும், அதாவது தனக்குள்ளும் எதரிக்குள்ளும் உள்ள வர்க்க முரண்பாட்டை மறுதலிக்கின்றது. இது தனக்குள் உள்ள வர்க்க முரண்பாட்டை மட்டும் மறுக்கவில்லை, எதிரிக்குள் உள்ள வர்க்க முரண்பாட்டையும் மறுதலிக்கின்றது. போராடுபவன் மட்டுமின்றி, எதிரியும் கூட, இதைத்தான் தனது அரசியலாக கொள்கின்றான். மாறாக ஒரு மக்கள் கூட்டத்தை, இன்னொரு மக்கள் கூட்டத்துக்கு எதிராக நிறுத்தி, வழிநடத்த முனைகின்றனர். இது தான் சிங்கள மேலாதிக்கம், யாழ் மேலாதிக்கம் மற்றும் கிழக்கு மேலாதிக்கத்தின், நடைமுறை சார்ந்த அரசியல் நிலையாகும். சொந்த மக்களை வர்க்க மற்றும் சமூக முரண்பாட்டில் ஒடுக்கியபடி, மற்றைய மக்கள் கூட்டத்தை எதிரியாக காண்பித்து கற்பிக்கின்றது.
இந்த வகையில் தான் குறிப்பாக புலியெதிர்ப்பும் செயல்படுகின்றது. இந்தப் பிரிவு மேற்கூறிய பிரிவுகளினால் கழித்துவிடப்பட்ட அல்லது அந்த போக்கில் அதிகாரத்தை பெறமுடியாது தோற்றவர்கள் முதலாக கொண்ட, சுயமாக மக்கள் நலனை முன்னெடுக்க, ஆதரிக்க முடியாதவர்களின் தங்குமிடமாகும். இது அறவே மக்களின் வர்க்க முரண்பாட்டையும், சமூக முரண்பாட்டையும் நிராகரிக்கின்றது. ஏதாவது ஒரு சமூக முரண்பாட்டில் பகுதியாக தொங்கிக் கொண்டு, அனைத்தையும் புலியாக காண்கின்றது. இலங்கையில் வாழும் அனைத்து மக்களின் எதிரியாக இனம் காணப்பட்ட ஏகாதிபத்தியம், பிராந்திய ஆதிக்க சக்தியான இந்தியா, இலங்கை ஆளும் பேரினவாத அரசு முதல் அரசியல் ரீதியாக இலங்கை இந்திய அரசின் கூலிக் குழுக்களாக உள்ளவர்களை சார்ந்து நிற்கின்றனர் அல்லது அவர்களின் கருத்தை முன்னிலைப்படுத்துகின்றனர். மக்களின் வாழ்வை அழிக்கும் வர்க்க முரண்பாடு, சமூக முரண்பாட்டை நிராகரிக்கின்றனர். இதை அரசியலாக கொண்ட மேற்கொண்ட பிரிவுகளின் அரசியல் தேவையை முன்னெடுப்பவர்களின் அரசியல் தான் புலியெதிர்ப்பாகும். இவர்கள் புலியை நிராகரிக்கும் போது கூட, புலியை வர்க்க ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ அம்பலப்படுத்துவது கிடையாது.
இந்த வகையில் முரணற்ற வகையில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை, ஒடுக்கப்பட்ட சமூக முரண்பாடு பிரிவுகளை இவர்கள் சார்ந்து நிற்பதில்லை. மாறாக ஒடுக்கும் வர்க்கத்தையும், ஒடுக்கும் சமூக பிரிவுகளையும் சார்ந்து நிற்கின்றனர். புலியின் நடத்தைகள் மீதும், ஏகாதிபத்திய வரையறைகளை அடிப்படையாக கொண்டு, தமது அரசியல் தளத்தை தக்கவைக்கின்றனர்.
மறுபக்கத்தில் இவர்கள் சார்ந்து நிற்கின்ற பிரிவுகளின் நடத்தைகளை விமர்சிப்பதில்லை. ஜனநாயக வேஷதாரிகளாக காட்டிக்கொள்ளும் நிர்ப்பந்தம் காரணமாக, புலியல்லாத தரப்புகளின் செயல்பாட்டை மென்மையாக அணுகுகின்றனர். இந்தவகையில் இவர்களின் இணைய இணைப்புகள், கருத்துகளை வெளியிடுவது முதல் ஒன்றாக விவாதிப்பது வரை, ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படுகின்றது. மக்களின் எதிர்காலம் பற்றி இவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே இடத்தில், ஒரு நோக்கத்தில் கூடி மக்களுக்கு எதிராக விவாதிக்க முடிகின்றது. இந்த விவாதங்களில், சமூகத்தின் உள்ளான வர்க்க முரண்பாட்டை பற்றியோ, சமூக முரண்பாடுகளைப் பற்றியோ அதாவது ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக எதுவும் விவாதிப்பதில்லை. புலிகளை வர்க்கத்துக்கு அப்பாலான ஒரு சக்தியாக நிலைநிறுத்துவதும், கூடுவோர் வர்க்கங்கள் மற்றும் சமூக முரண்பாடுகள் கடந்த ஒரு நிலையில் புலி எதிர்ப்பில் மிதப்பதுமாக கும்மாளமிடுகின்றனர்.
மக்களின் பிரச்சனைகள் என்ன என்பதை இனம்காண மறுக்கின்றனர். அதை ஒவ்வொன்றாக இனம் கண்டு, அதை முன்னிலைப்படுத்தி போராட மறுக்கின்றனர். இந்த வகையில் இந்த புலியெதிர்ப்பை தெளிவாக, அரசியல் ரீதியாக அடையாளப்படுத்த முடியும், முடிகின்றது. இந்த வகையில் கிழக்கு மேலாதிக்கத்தையும், புலிகளை எதிர்க்கும் சகல பிற்போக்கு கூறுகளையும் ஆதரித்து நிற்கின்றது. மக்களின் ஐக்கியத்தை முன்னிலைப்படுத்துவதை எதிர்க்கும் இவர்கள், பிளவை அகலமாக்குகின்றனர். இலங்கையில் வாழும் அனைத்து மக்களிடையேயான ஜக்கியம், ஜக்கியத்துக்கு எதிரான அனைத்துக்குமான முன்நிபந்தனையாகும். மக்களிடையே ஐக்கியத்தை உருவாக்குவது, இதனடிப்படையில் சமூகங்கள் இணங்கி வாழும் வழிவகைகளை உருவாக்குவது அவசியமானது. இதை சிங்கள மேலாதிக்கம், யாழ் மேலாதிக்கம், கிழக்கு மேலாதிக்கம் முதல் புலி எதிர்ப்பு வரை மறுதலிக்கின்றது.
உண்மையில் சமூகத்தின் வர்க்க முரண்பாடுகளை, சமூக முரண்பாடுகளை ஒட்டு மொத்தமாக மறுத்தபடி, மக்களின் ஐக்கியத்துக்கான முன்னிபந்தனைகளை மறுத்தபடி தான், இந்தப் பிரிவுகள் செயல்படுகின்றது. இந்த அடிப்படையில் மக்கள் நலன் என்று எதையும், இதனிடம் தோண்டியும் எடுக்கமுடியாது. இந்த கும்பலுக்கு இடையிலான அதிகார மோதல்கள் எதுவும், மக்களுக்கான எந்த நலனையும் பிரதிபலிப்பதில்லை.
மக்கள் இடையேயான வர்க்க முரண்பாடு, உள்ளடகத்தில் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பகுதி மனிதர்களின் உழைப்பை, சிறிய பகுதி திருடி வாழ்வது தான் சுரண்டல். இதன் போதான உற்பத்தி உறவுகள், ஒருவருக்கு எதிராக மற்றவரை நிறுத்துகின்றது. இதன் மூலம் ஒருவனின் உழைப்பை சுரண்டி மற்றொரு பிரிவு வாழ்கின்றது. மனித இனத்தின் அடிமைத்தனம் இதனூடாக கட்டமைக்கப்படுகின்றது. சமூகத்தில் வறுமையும், இல்லாமையும் பெருகுகின்றது. சமூகத்தின் கடைக்கூறில் எஞ்சிக் கிடக்கும் ஜனநாயகத் தன்மை படிப்படியாக சீரழிக்கப்படுகின்றது. உலகம் தழுவிய இந்த நிகழ்வால், சமூக உறுப்புகள் எதையும் சுயமாக நுகர முடியாது. உதாரணமாக சுரண்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையும், சுரணடும் குடும்பத்தின் குழந்தையும் ஒரேவிதமான ஒரே கல்வியை, ஒரே கல்விச் சூழலில் பெறமுடியாது. ஓரேவிதமான பொழுதுபோக்கை அனுபவிக்கவோ, நுகரவோ முடியாது. பண்பாடு கலாச்சாரம் என அனைத்தும் இரண்டு துருவமாக வேறுபடுகின்றது. எப்படி பிரதேசங்களுக்கு இடையில் பண்பாடுகள், கலாச்சாரங்கள் வேறுபடுகின்றதோ, அப்படித்தான் ஒரு சமூகத்தினுள்ளும் உள்ளார்ந்த வர்க்க வேறுபாடுகள் காணப்படுகின்றது. இது ஒருபுறம்.
மறுபுறம் இதன் காரணமாக சமூக முரண்பாடுகள் காணப்படுகின்றது. மனிதர்களை பிளந்து புதிது புதிதாக கற்பிக்கப்படுகின்றது. அது இனவாதமாக, நிறவாதமாக, பிரதேசவாதமாக, ஆணாதிக்கமாக, சாதியமாக, மதவாதமாக, பற்பல வகையில் காணப்படுகின்றது. இவற்றுக்கான உள்ளார்ந்த தோற்றுவாய்க்கான மூலங்களுக்கு அப்பால், சக மனிதனை ஒடுக்கி, அடக்கி வாழ்கின்ற உள்ளடகத்தில், அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகின்றது என்பதே உண்மை. இந்த ஒடுக்குமுறைகள் மீதான சமூக இழிவுகள் மீதான போராட்டத்தை முன்னெடுக்க தவறுகின்ற, இதற்குள்ளான முரண்பாட்டை முன்னெடுக்க தவறுகின்ற அனைத்தும் மக்கள் விரோதமானவை. அதாவது இன்று இவைகள் எதையும் முன்னெடுக்க தவறுகின்ற யாழ் மேலாதிக்கம் முதல் கிழக்கு மேலாதிக்கம் வரை, உள்ளடகத்தில் படு பிற்போக்கானவை. இந்த எல்லைக்குள் தான் புலியெதிர்ப்பும் அரங்கேறுகின்றது.
மக்கள் பிரச்சனைகள் இதற்குள் தான், முழுமையாக காணப்படுகின்றது. இந்த மக்களின் பிரச்சனைகளை நிராகரித்துவிட்டு வௌவெறு அதிகாரப் பிரிவுகள், தத்தம் பாசிச முகத்துடன் ஒன்றையொன்று எதிராக காட்டி முட்டி மோதிக் கொள்வதன் மூலம், தத்தம் குறுகிய நலனை மட்டும் அடைவதை நோக்கமாக கொணடது. இதன் பின்னால் எந்த மக்கள் நலனும் இருப்பதில்லை. இந்த வகையில் சிங்கள மேலாதிக்க தேசியமோ, யாழ் மேலாதிக்க தேசியமோ, கிழக்கு மேலாதிக்க பிரதேசவாதமோ, உள்ளடகத்தில் மக்கள் நலனை அடிப்படையாக கொண்டதல்ல. அனைத்தும் ஒரே அரசியலைக் கொண்டதும், ஒன்றுபடவே மக்கள் விரோதத்தையே அடிப்படையாக கொண்டது. இந்த வகையில் இவை அனைத்தும் புழுத்துக் கிடக்கின்றது.
சின்னசின்ன மக்களின் அன்றாட துயரங்கள் மீதும் கூட அக்கறை காட்டுவதில்லை. இந்த நிலையில் இலங்கை பேரினவாதத்துக்கு எதிரான யாழ் மேலாதிக்கம், யாழ் மேலாதிக்கத்துக்கு எதிரான கிழக்கு மேலாதிக்க போக்குகள் முதன்மை பெற்ற ஒரு முரண்பாடாக முன்னிலைப்படுத்தப்பட்டு, ஒடுக்குமுறைகள் உச்சத்தில் காணப்படுகின்றது. இதிலிருந்து மக்களை மீட்பதாக கூறிக் கொள்வது என்பதுவும், அனைத்தையும் பூசி மெழுகி நடத்திய மோசடிகளும் அம்பலமாகி சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றது. உண்மையில் தாம் போராடுவதாக கூறிக் கொள்ளும் சிங்களப் பேரினவாதமாகட்டும், யாழ் மேலாதிக்கமாகட்டும், அதை ஒழித்துக் கட்டும் எந்த போராட்டத்தையும், இவர்கள் கோட்பாட்டு ரீதியாகவோ, நடைமுறை ரீதியாகவோ கொண்டிருக்கில்லை. சிங்கள பேரினவாதம் என்பதை சிங்களவனின் ஆதிக்கமாக விளக்குவதும், யாழ் மேலாதிக்கம் என்பதை யாழ்ப்பாணத்தானின் ஆதிக்கமாக விளக்குவதும், கிழக்கு மேலாதிக்கத்தை கிழக்கு மக்களின் ஆதிக்கமாக காட்டுவதும் நிகழ்கின்றது. உண்மையில் இதன் மூலம், இதை ஒழித்துக்கட்ட முடியாது. எந்த சமூக சார் மேலாதிக்கத்தையும், முழுமையாக சமூக பொருளாதார அரசியல் ரீதியாக மக்களை அணிதிரட்டி, அந்த மக்களின் தலைமையில் போராடாத வரை இதை ஒழிக்கமுடியாது. மாறாக சில சமூகம் சார்ந்த பொறுக்கிகளின் சுயநலனுக்கான போராட்டமாக எஞ்சுகின்றது.
இது ஆயுதம் ஏந்தும் போது இயல்பாகவே, பாசிச மாபியா குழுக்களின் நலனுக்கானதாக மாற்றம் காண்கின்றது. தத்தம் சொந்த தனிமனித அதிகாரத்துக்கான, தமது பொருளாதார நலனுக்காக, மக்கள் கூட்டங்களை எதிராக காட்டியபடி மனித உறவுகளை சிதைக்கின்றனர். இதுதான் இலங்கையில் ஆதிக்கம் பெற்ற அரசியலாக உள்ளது. இதற்குள் மக்கள் நலன், மனித நேயம் என எதையும் பூதக்கண்ணாடி வைத்துக் கூட, நாம் தேடமுடியாது.
ஒரு மக்கள் கூட்டத்தில் இருக்கின்ற படுபிற்போக்கான பாசிச ஆதிக்கப் பிரிவுகளை, மற்றைய ஆதிக்க பிரிவு அகற்றுவது, அந்த மக்களின் விடுதலையை குறிப்பதாக கூறுவதே, அனைத்து மேலாதிக்க சக்திகளின் அரசியலாக உள்ளது. இந்த கோட்பாட்டாளர்கள் அரசியல் ரீதியாக செய்வது, உண்மையில் அந்த மக்களின் அடிமைத்தனத்தை மற்றைய ஆதிக்க குழுவின் கையில் தாரைவார்ப்பதைத்தான். இதன் மூலம் சில எலும்புகள் கிடைக்கும் என்ற ஒரே காரணத்தினால், மக்களுக்கு எதிராக குலைக்கின்றனர்.
கிழக்கு மக்களின் விடுதலையை மறுக்கும் உள்ளார்ந்த முதன்மை எதிரி, கருணா என்ற பாசிட்டே
கருணா புலியில் இருந்த போதும் சரி, இன்று இலங்கை அரசின் கைக் கூலியாக புது அவதாரம் எடுத்து தனித்துவம் பெற்ற போதும் சரி, கிழக்கு மக்களின் உள்ளார்ந்த பிரதான எதிரி கருணாவாக இருந்தது, இருப்பது வெளிப்படையானது. கிழக்கு மக்களுக்கு எதிராக அன்று யாழ் மேலாதிக்கத்தின் கோவணமாக இருந்தவர், இன்று சிங்கள மேலாதிக்கத்துக்கு கோவணமாக இருக்கின்றார். இப்படித்தான் கிழக்கு மக்கள் அங்குமிங்குமாக, கருணா என்ற பொறுக்கியின் தலைமையில் மிகக் கேவலமாக இழிவாடப்பட்டனர், இழிவாடப்படுகின்றனர்.
கிழக்கை எடுத்தால் தேசியத்தின் பெயரில் இயங்கிய யாழ் மேலாதிக்க பாசிச மாபியா கும்பலிடமிருந்து, கிழக்கு மேலாதிக்க கருணா என்ற மாபியாக் கும்பலிடம் அதிகாரத்தை இடம்மாற்றுவதன் மூலம், அந்த மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. சொந்த உள்ளுர்வாசி என்ற அடையாளத்தைத் தவிர, வேறு எதையும் புதிதாக மக்கள் அனுபவிப்பதில்லை. கிழக்கு மக்களுக்கு மாற்றம் வரும் என்று நம்ப வைப்பவர்கள், அவரின் பிறப்பை வைத்து (கிழக்கைச் சேர்ந்தவர் என்பதால்) அரசியல் மாற்றத்தை எதிர்வு கூறுகின்றனர். என்ன அரசியல் மக்களுக்கு சேவை செய்யும் என்பது பற்றி, எந்த சமூக அக்கறையும் இவர்களிடம் கிடையாது.
கிழக்கு மக்கள் என்று நாம் கதைத்தால், அன்றாடம் உழைத்து வாழும் கிழக்கு மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைக்கு தீர்வுகளை முன்வைக்க வேண்டும். அந்த மக்களின் சொந்த அதிகாரத்தை ஏற்படுத்துகின்ற எந்த அரசியல் வேலைத்திட்டத்தையும் முன்வைக்காத யாரும், மக்களின் எதிரிகள் தான். கடந்த எமது 30 வருட போராட்ட காலத்தில், உள்ளியக்க முரண்பாடுகளிலும், இயங்கங்கள் முன்வைத்த அரசியல் கருத்துக்களில் திட்டங்களில் மக்கள் நலன் சார்ந்த சிறிய முளைகள் இணங்காணக் கூடியவை. குறைந்தபட்சம் அதைக் கூட முன்னிறுத்த முடியாத, புதிய செயல்பாடுகள் பழையபடி பாசிசத்தின் வழியில் தொடர்வதை அங்கீகரிக்க முடியாது. கடந்தகாலத்திய மக்கள் நலன் சார்ந்த கூறுகளை இனம் காண்பதே, முதல்படியாக இருக்க வேண்டும்.
கருணா புலிகளில் இருந்து பிரிந்த பின்னால், தான் இருந்த இயக்கமே பாசிச மாபியா இயக்கம் என்பதையோ, அது ஒரு மக்கள் விரோத இயக்கம் என்பதையோ, இன்று வரை ஏற்றது கிடையாது. மாறாக அதில் சில தனிநபர்கள் தான், பிரச்சனைக்குரியவராக காட்டப்பட்டனரே ஒழிய அதன் அரசியல் அல்ல. இன்று வரை அது தான் கருணா குழுவின் நிலையாகும். எந்த அரசியல் மாற்றமும் கிடையாது.
தமக்கு இடையிலான அதிகார மோதலில் சம்பந்தப்பட்டவர்களை எதிரியாக காண்பதும், அவர்களை மக்களின் எதிரியாக காட்டுவதே அரசியலாக உள்ளது. புலிகளை அரசியல் ரீதியாக காணமறுப்பதும், அந்த அரசியலை மறுபடியும் முன்னெடுப்பதும் வெளிப்படையானது. கூறப் போனால் புலிகளில் இருந்து பிரிந்த போது காணப்பட்ட ஜனநாயக உரிமை சார்ந்த ஜனநாயகக் கூறு கூட, அர்த்தமிழந்து சிதைந்து விடுகின்றது.
முதலில் பிரிந்து வந்த இயக்கத்தை அரசியல் ரீதியாக விமர்சிக்க தவறுகின்ற யாராலும், புதிதாக ஒன்றை உருவாக்க முடியாது. புலிகள் பாசிச மாபியா இயக்கமாக இருந்ததை அரசியல் ரீதியாக விமர்சிப்பது தான், சுயவிமர்சனமாக இருந்திருக்கும். இதற்கு வெளியில் சுயவிமர்சனம் என்று எதுவும் கிடையாது. இதைச் செய்ய மறுத்தவர்கள், சுயவிமர்சனத்தை எப்படி செய்ய முன்வரவில்லையோ, அப்படி கடந்தகால மக்கள் விரோத அரசியலையே இன்றும் கொண்டிருப்பது தெளிவானது.
மாறாக தான் இருந்த காலத்தை மக்கள் இயக்கமாக பீற்றிக் கொள்கின்றனர். அண்மையில் வெளியாகிய அவரின் தொலைக்காட்சி பேட்டியில், தான் பிரிந்த பின்பாகத்தான் அது மக்கள் இயக்கமாக இல்லாமல் போனது என்கின்றார். தாங்கள் இப்போது ஒரு மக்கள் இயக்கம் என்கின்றார். கடைந்தெடுத்த பாசிட்டுகளுக்கே உரிய அரசியல் வக்கிரம்.
கடந்தகாலம் முழுக்க அதாவது தொடக்கம் முதலே மக்களுக்கு எதிராகவே செயல்பட்ட ஒரு இயக்கம், எப்படி மக்கள் இயக்கமாகும். இவை மக்கள் இயக்கமல்ல என்பது 1970 அடிப்படையாக கொண்ட பத்தாண்டுகளின் இறுதியிலேயே கடுமையான விமர்சனம் இருந்து வந்தது. இதனடிப்படையில் நடந்த முதலாவது புலிக்குள்ளான பிளவு, மக்கள் இயக்கம் தொடர்பான விவாதத்தில் நிகழ்ந்தது. தனிமனித சர்வாதிகாரம் ஆரம்பம் முதலாகவே அதன் பின்னால் கட்டமைக்கப்பட்டது. கருணா இதற்கெல்லாம் ஒத்தேதான் அந்த இயக்கத்தில் ஒட்டிக் கொண்டு, இதைத் தீவிரமாக கடைப்பிடித்ததன் மூலம் தளபதியானவர். முதன்மையான மக்கள் விரோதிகள் தான், தலைமைக்கு வரமுடியும். இது புலி இயக்கத்தின் பாசிச விதி. இப்படித்தான் கருணா என்ற பாசிட் புலிகளின் அம்மானாகி தளபதியானவர்.
புலிகள் இயக்கம் தொடக்கம் முதலாகவே அதன் அரசியல் பொருளாதார கூறுகள் அனைத்தும், மக்கள் விரோதமாகவே இருந்து வந்துள்ளது. அதை அரசியல் ரீதியாக விமர்சிக்க முடியாதவர்கள், கட்டுகின்ற இயக்கமும் அதே வழிப்பட்டதே. புலிகளின் மக்கள் விரோத தலைவர்களின் இழிசெயல்களை கவுரவப்படுத்த வழங்கப்படும் 'அம்மான்" என்ற அடையாளத்தை தக்கவைத்தபடி, அண்மையில் சிங்கள தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியின் பின்னணியில் உள்ள கார்த்திகைப் பூ செடியும் எதைக்காட்டுகின்றது. கடந்தகால மக்கள் விரோத இயக்கத்தின் அடையாளங்களைக் கூட துறக்க மறுக்கின்ற, சுய தற்பெருமை பேர்வழிகளின் வக்கிரம் தான் பிரதிபலிக்கின்றது.
மக்கள் இயக்கம் வேறு, பாசிச இயக்கம் வேறு என்பதை பிரித்தறிய முடியாதவர்கள், ஒருபுறம் மக்கள் மேல் கும்மாளம் அடிக்கலாம். கருணா குறித்த பேட்டியில் குறிப்பிடும் போது, பாசிசத்துக்கு ஒரு ஒப்பீட்டைச் செய்தார். கம்பூச்சியாவின் பொல்பொட்டை பிரபாகரனுக்கு ஒப்பிட்டார். கடைந்தெடுத்த வலதுசாரிய பொறுக்கிகளின், பாசிச நாற்றங்கள் தான் இவை.
பாசிச படுகொலையையே ஜனநாயமாக கொண்ட வலதுசாரிகள், வரலாற்றில் இடதுசாரிகள் மீது சேறு அடிப்பதே அதன் அரசியலாகும். இன்றைய ஜனநாயக உலகில் வருடம் 10 கோடி பேர் மருந்தும், நீரும், உணவுமின்றி இது போன்ற காரணங்களால் கொல்லப்படுகின்றனர். எந்த பாசிட்டுகளால் இவை நடக்கின்றது. இப்படி வரலாறு இருக்க, இந்த அரசியல் பொறுக்கிகளுக்கு பொல்பொட் தேவைப்படுகின்றது.
கண்ணுக்கு முன்னால் நன்கு தெரிந்த சம்பவங்கள் உண்டு. சொந்த நாட்டில் அதாவது இலங்கையில் 1970க்கு பின் குறைந்தது 2 லட்சம் மக்களை இந்த சிங்கள அரசு இலங்கையிலேயே கொன்றுள்ளது. 1990க்கு பிந்தைய ஈராக்கில் அமெரிக்க தலைமையிலான நாடுகள் விதித்த பொருளாதாரத் தடையின் மூலம் 20 லட்சம் ஈராக்கிய குழந்தைகளை கொன்றுள்ளது. ஈராக்கில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட பின் குறைந்தபட்சம் 5 லட்சம் ஈராக்கியரின் மரணத்துக்கு காரணமாக இருந்துள்ளது. சமகாலத்தில் உங்கள் எஜமானர்களின் சொந்த இரத்தக் கறை படிந்த உதாரணங்கள் நிறைய இருக்க, அதை மூடிமறைத்த அவர்களின் வாரிசுகள் பொல்பொட்டை வாந்தி எடுக்கின்றனர்.
கடைந்தெடுத்த பொறுக்கிகள். மக்களுக்காக உண்மையில் போராடியவர்கள் மீது சேறு அடிப்பதே, இந்த கயவாளிப் பயல்களின் அரசியல் நடத்தையாகும். நீ கொன்று குவித்த கிழக்கு மக்கள், முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை எத்தனை? யாருக்கு கதை சொல்லுகின்றீர்கள். கம்பூச்சியாவில் பொல் பொட் தலைமையிலான ஆட்சியில் மனிதப்படுகொலைகள் நடந்தாக கூறுவது, அடிப்படையற்ற ஆதாரமற்ற ஒன்று. அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக நடந்த போரில் கொல்லப்பட்டவர்கள், அதன் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட சோவியத் ஏகாதிபத்திய பொருளாதார தடையால் கொல்லப்பட்டவர்கள் (பார்க்க ஈராக்கை), பட்டியலை கூட்டியள்ளி பொல் பொட்டின் தலையில் அரைக்கின்றனர்.
உண்மையில் அந்த மக்களின் நலனுக்காக போராடியவர் பொல் பொட். தவறு இழைத்தாரா எனின், ஆம் பல தவறுகள் இழைத்தார். குறிப்பாகவும் முக்கியமாகவும் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு நடந்த காலத்தில், கிராமங்கள் மீதான அமெரிக்காவின் கொடூரமான தாக்குதலுக்கு பயந்து, நகரங்களை நோக்கி குவிந்த இளைஞர்கள் விடையத்தில் தவறு இழைத்தார். கடுமையான பொருளாதாரத் தடை, யுத்தத்தில் இருந்து நாட்டை மீட்டு கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் பொல் பொட் பதவி ஏற்றார். இந்த நிலையில் உழைப்பே அறியாது அமெரிக்க இராணுவ பொருளாதாரத்தில் பொறுக்கி வாழ்ந்தபடி உதிரியாக சிதறிக் கிடந்த இளைஞர்களை, மறுஉழைப்புக்கு கொண்டு செல்வதில் கடுமையான தவறு நிகழ்ந்தது. உழைப்பவனுக்குத் தான் உணவு. அந்த வகையில் பொல்பொட் தலைமையிலான அரசு இந்த இளைஞர்களை கிராமங்களுக்கு திரும்பிச் செல்லவும், உழைப்பில் ஈடுபடவும் கோரியது. நகர்ப்புற உதிரிகள் தமது அராஜகத்தை அடிப்படையாக கொண்டு மறுத்தலித்து. உடல் உழைப்பையே அறியாது பொறுக்கி வாழ்வதையே வாழ்க்கையாக கொண்ட இந்த இளைஞர்களை, மீண்டும் உழைப்பில் ஈடுபடுத்த முனைந்த போது, அதை எதிர்த்து அவர்கள் கிராமங்களுக்குச் திரும்பிச் செல்ல மறுத்த போது, ஒடுக்குமுறை ஊடாக உழைப்பை பெற முனைந்தனர். இதன் போது பலர் கொல்லப்பட்டனர். இதை வைத்துத் தான், அமெரிக்க ஆக்கிரமிப்பாளன் நடத்திய கொலை எல்லாம் மூட்டை கட்டி, அதை பொல்பொட் தலையில் காறி துப்புவது கடைந்தெடுத்த வலதுசாரிய நாற்றமாகும். அக்காலத்தைய கம்பூச்சிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் கூட, இந்தப் பொய் புனைவை மறுதலிக்கின்றது.
கருணா அனைத்து குற்றத்தையும் பிரபாகரனின் தலைமையில் சுமத்தி தான் நடத்திய கொலையை மறுப்பது போல், ஏகாதிபத்திய சதிக் கதைகள் தான் இவை. இந்த நிலையில் அதை கருணா என்ற பாசிட், பொல்பொட்டை பிரபாகரனுக்கு ஒப்பிட்டு வக்கரிக்கின்றான். கிழக்கு தமிழ் மக்களையும், முஸ்லீம் மக்களையும் கொன்று அம்மான் என்ற கவுரவ அந்தஸ்துடன் பிரதேச தளபதியாகியவர், தன்னையும் தனது கடந்தகால கொலைகார வரலாற்றையும் சுயவிமர்சனம் செய்யவில்லை. மாறாக ஏகாதிபத்தியம் அரைத்து வைத்த பொல்பொட் கதையை, பிரபாகரனுக்கு ஒப்பிட்டு, தனது கொலைகார முகத்தை மினுக்க முனைகின்றார். அன்று நீங்கள் செய்த கொலைகள், இன்றும் நாள் தோறும் தொடருகின்றது.
அண்மையில் அம்பாறையில் புலிகளின் முகாமில் இருந்து இராணுவம் கைப்பற்றிய கம்பியிலான சிறைகள் அனைத்தும் கருணா காலத்தவை கூட. இன்றும் சித்திரவதையையும், சிறைக் கூடத்தையும் கொண்டு வாழ்கின்றவர்களே நீங்கள், உங்களுக்கு எதிரான மக்களின் கண்ணீரையும் அவர்களின் அவலங்களையும் சதா கேட்கின்றோம்.
நீங்கள் எல்லாம் கிழக்கு மக்களின் வாழ்வுக்காக போராடுவதாக நடிப்பது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இந்த வகையில் கிழக்கு மக்களின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட கல்வி மற்றும் அவர்களின் அபிவிருத்திக்காக செயல்படப் போவதாக அதே பேட்டியில் கூறுகின்றார். எப்படி என்கின்றீர்களா? அவரே கூறுகின்றார், பேரினவாத சிங்கள அரசு இதற்காக நிதி ஒதுக்க வேண்டும் என்கின்றார். ஒரு கேள்வி. இடையில், நீ ஏன் இருக்கவேண்டும். அதில் ஒரு பகுதியை விழுங்கவா! சிங்கள அரசிடம் இவற்றைக் கோருவதே நகைப்புக்குரிய ஒரு வாதம். இங்கு இதுதான் கிழக்கு மக்களின் பிரச்சனையாக காட்ட முனைகின்றார். அவர் இதன் மூலம் கிழக்கு மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்கின்றார்.
இலங்கையில் கிழக்கின் நிலையில் தான் பெரும்பாலான மாவட்டங்கள் உள்ளன. இதில் வடக்கின் சிலபகுதிகள் முதல் தென்னிலங்கையின் பல பகுதிகள் இப்படித்தான் உள்ளது. இலங்கையின் மக்கள் விரோத அரசாங்கம் இரங்கி ஒதுக்கும் பணத்தில், கிழக்கை முன்னேற்ற முடியும் என்ற கருணாவின் அலட்டல், நகைப்புக்குரிய ஒன்று. சிங்கள பேரினவாத அரசு இனவாதத்துடன் சிங்களவனுக்கு அதிக சலுகையுடன் ஒதுக்கிய பணத்தில் கூட, சிங்கள மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பதே, ஒப்பீட்டளவில் கிழக்கின் நிலையில் தான் காணப்படுகின்றது. அந்த மக்களின் பிரச்சனையை தீர்க்க முடியாது இருக்க, கிழக்குக்கு பணத்தை ஒதுக்கி இந்த பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று கூறுவது, கேடுகெட்ட அரசியல் பிழைப்பாகும்.
பிரச்சனைக்கான தீர்வும் வழியும் வேறு எங்கோ இருக்க, அரசு ஒதுக்கும் நிதி உதவி தான் தீர்வு என்று கூறுவது மக்களின் அடிமைத்தனத்தில் சவாரி விடுவதாகும். ஏன் சிங்கள மாணவர்களின் கல்வியை, இந்த அரசு எந்தவிதத்தில் கிழக்குக்கு மாறாக பூர்த்தி செய்துள்ளது. நீங்கள் எப்படி மாற்றாக பூர்த்தி செய்வீர்கள். சிங்கள மண்ணில் பொருளாதாரம் அந்த மக்களை வளப்படுத்தி உள்ளதா? இனங்களையும், பிரதேசங்களையும் பிளந்து அரசியல் செய்யும் வக்கிரம் பிடித்த கூட்டத்துக்கு, இவையெல்லாம் தமது பணப் பையை நிரப்பும் பொற்காசுகள் தான். மக்களுக்கு இவர்கள் கொடுப்பதோ அடக்குமுறையுடன் கூடிய மனித அவலத்தைத் தான்.
கிழக்கு மக்களின் கல்வி வளர்ச்சிக்காக உழைக்கப் போவதாக பீற்றி அலம்பும் கருணா, முழு இலங்கையிலும் அது முரணற்ற வகையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்ற அடிப்படைக் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். அதை விடுத்து சினிமா பாணியில் கதாநாயகர் வேசம் போட்டு ஆடுவது அபத்தமாகும்.
இலங்கை வாழ் மாணவர்கள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியையும், கல்விக்கான பொது சூழலையும் பூர்த்தி செய்கின்ற வகையிலான சமூக பொருளாதார அமைப்பை கோருவதன் மூலம் தான், குறைந்தபட்சம் கிழக்கு மக்களின் கல்வியை பூர்த்தி செய்யமுடியும். பல்கலைக்கழக அனுமதி பெற தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை வழங்கும் உரிமையை மறுக்கும் இந்த அரசு, அதை நியாயப்படுத்தும் தமிழ் குறுந்தேசிய மற்றும் பிரதேசவாத வக்கிரங்களே மாணவர்களுக்கு எதிராக அரங்கேறுகின்றது. இலங்கையில் அனைத்து பல்கலைக்கழக தகுதியுடைய மாணவர்களுக்கும் கல்வியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் இவர்கள் உயர்த்த முடிவதில்லை. இதற்கு மாறாக தரப்படுத்தல், அதி திறமைக்கு மட்டும் கல்வி என்ற நிலைப்பாடும், அதை நியாயப்படுத்துதலும் உண்மையில் மக்கள் சார்ந்தவையா? எந்த வகையில்!
கிழக்கில் இது எப்படி கல்வியை, வேலை வாய்ப்பை மேம்படுத்தும். கிழக்கில் கல்வி வாய்ப்பை மேம்படுத்த வேண்டும் என்றால், அந்த மக்களின் பொருளாதார வாழ்வு மேம்பட வேண்டும். இதற்கான அவரின் வேலைத்திட்டம் என்ன? குறைந்தபட்சம் இந்த பிற்போக்கான மக்கள் விரோத உள்ளடகத்தில் கூட, எந்த வேலைத் திட்டமும் இந்த பாசிச கும்பலிடம் கிடையாது. இவர்கள் மக்கள் நலன் பற்றி நகைப்புக்குரிய வகையில் புலுடா விடுகின்றனர். கிழக்கு மக்களின் கல்வி பொருளாதார முன்னேற்றத்துக்கு உழைக்க அரசை நம்பி இருப்பதாக கூறுவதன் மூலம், இவர்களின் அரசியல் வேலைத் திட்டமும் இது தான்.
தாங்கள் ஜனநாயகத்துக்கு வந்துள்ள சட்டப்படியான கட்சி என்கின்றனர். சரி அந்த கட்சியின் அரசியல் வேலைத்திட்டம் என்ன? எங்கே இவர்களால் வைக்க முடியுமா? வைக்க முடியாது. மக்கள் நலன் எதுவுமற்ற எந்த பாசிச கும்பலிடமும் எதுவும் இருப்பதில்லை. மாறாக இருப்பது பாசிசமும் மாபியாத்தனமும் தான். நெருக்கடிகளில் இருந்து தப்ப, வார்த்தை ஜாலங்களை அள்ளி எறிகின்றனர். புலிகளின் அதே பாசிசம் அதே உத்தி.
கருணா என்ற குழுவின் அரசியல் பேச்சாளர், தம் மீதான குற்றச்சாட்டுக்கு அடிக்கடி மறுப்பு விடுகின்றார். இதையே தான் தமிழ்ச்செல்வனும் செய்கின்றார். இருவருக்கும் இடையில் என்ன வேறுபாடு?
ஒரு மக்கள் இயக்கம் தனது அரசியல் வேலைத்திட்டத்தில் புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிக்க வேண்டும். அதை விடுத்து மேலெழுந்தவாரியாக பூசிமெழுகித் திரிவது, தமது பாசிச வழியை முன்வைப்பதாகும். கிழக்கு பிரிவினை பற்றி அப்பேட்டியில் கேட்டபோது, மகிந்த சொன்ன அதே வழிதான் தமது என்கின்றார்.
மகிந்த கிழக்கு மக்களின் விரும்பம் தான், தனது விரும்பம் என்கின்றார். இதுவே தனதுமென்கின்றார் கருணா. நீங்கள் ஒன்றாகி ஒரு கூலிக்குழுவாகிய பின் இப்படிச் சொல்வது ஆச்சரியமல்ல. கிழக்கு மக்களை பிரிப்பதில் யாழ் மேலாதிக்கத்துக்கு எந்தளவு முக்கிய பங்கு இருந்ததோ, அந்தளவுக்கு சிங்கள மேலாதிக்கத்துக்கும் முக்கிய பங்கு இருந்தது.
இந்த வகையில் இதை பிரதேச பிளவாக்கியதில் கருணாவின் பங்கு மிக முக்கியமானது. புலியில் இருந்தது முதல், அரசின் ஒரு கூலிக் குழுவாக வெளிவந்தது வரையிலான அவரின் பங்கு தனித்துவமானது. கிழக்கு மக்களுக்கு எதிராக கடந்த 15 வருட காலத்திய அனைத்து செயல்பாட்டிலும், கருணாவின் பங்கு தனித்துவமானது. இவை தான் இன்றைய பிளவுக்கு வழிகாட்டியது.
அதை அறுவடை செய்பவனும் அதே கயவாளிப்பயல்தான். இன்று அதை கிழக்கு மேலாதிக்கமாக்கி, பிளவை விதைப்பதில் கருணா கும்பலின் பங்கும் பணியும் முக்கியமானது. இவை அனைத்துக்கும் பின்னாலும், கிழக்கு மக்களின் நலனின் அடிப்படையில், இந்த கிழக்கு மக்களின் விருப்பம் எதையும் இந்த அரசியல் சூழ்ச்சிகள் கொண்டிருப்பதில்லை. மாறாக குறுகிய நலன்கள் முதன்மை பெற்று, தமிழ் இனத்தில் அழிப்பு என்ற பேரினவாத சதி இங்கு யாழ் மேலாதிக்கம் ஊடாக அரங்கேறுகின்றது. அதை கருணா சொன்னாலும் ஒன்று தான், மகிந்த சொன்னாலும் ஒன்றுதான்.
இலங்கையில் இனப்பிரச்சனை முதன்மையான முரண்பாடு என்ற அடிப்படையில், இனங்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு பதில், புதிய முரண்பாடுகளால் மக்கள் கூட்டத்தை பிளந்து வாழ நினைக்கும் கும்பல்களின் சதிகளே அரங்கேறுகின்றது. அவை தான் இன்றைய மொழியாக, கூக்குரலாக ஆதிக்கம் பெற்று நிற்கின்றது. எல்லா மக்கள் விரோத பிற்போக்கு வாதிகளும் இதைத் தான் செய்கின்றனர். கருணா குறித்த பேட்டியில் தாம் பேரினவாதத்தின் கூலிக் குழுவாக சேர்ந்து இயங்கவில்லை என்கின்றார். இந்தக் கூற்றே எவ்வளவு பெரிய பொய் என்பதை அனைவரும் அறிவர். இவர்களின் நேர்மையை இவைகள் மூலம் சாதாரணமாக உரசிப்பார்க்க முடியும்..
இதில் உள்ள முரண்பாடே, இந்த போலிகளின் கபட வேடத்தை தெளிவாக்குகின்றது. ஆயுதங்களுடன், பெரும் குண்டர் படையாக உள்ள இவர்களின் இருப்பை எப்படி இராணுவம் அனுமதிக்கின்றது. பேரினவாதத்துடன் கூட்டு, கூலித்தனமும் தெளிவானது. மக்களுக்காக போராடும் ஓரு இயக்கம், மக்களுக்கு எதிரான இராணுவத்துடன் இணங்கி செயல்படுவது என்பதும், பரஸ்பர இருப்பை அங்கீகரிப்பது என்பதுவும் எந்தவகையில் சாத்தியமானது!
எதிர்காலத்தில் இராணுவத்துடன் எலும்புக்கான சண்டையை கருணாதரப்பு நடத்தினால் கூட, அங்கு மோசடியும் சுயநலமும் தான் அடிப்படையாக இருக்கும். புலிகளின் அதே உத்தி தான். அமைதி சமாதானம் என்று பெயரில் நடத்துகின்ற நரித்தனங்கள், சூழ்ச்சிகள் பரஸ்பரம் இணையானவை. மக்களை நேசிப்பதில் நேர்மையற்ற பொறுக்கித்தனம், மக்கள் அரசியலாகிவிடாது. மக்கள் எப்படி புலிகளை இன்று கிழக்கில் தோற்கடிக்கின்றனரோ, அப்படி கருணா கும்பலை தோற்கடிப்பர்.