தமிழ் அரங்கம்

Saturday, October 1, 2005

சுதந்திரம், ஜனநாயகம்

சுதந்திரம், ஜனநாயகம் போன்றவை அனைவருக்கும் முரணற்ற வகையில் நிலவும் பட்சத்தில், இந்த சொல்லுக்குரிய அhத்தம் இயல்பாக இழந்துவிடும். நான் சுதந்திரமானவன் என்ற சொல்லுவதே கேலிக்குரியதாகிவிடும். எனக்கு சுதந்திரம் இல்லை என்பதும் கேலிக்குரியதே. இந்த சொல்லுக்குரிய உள்ளடக்கம் என்பது சமூக உள்ளடகத்தில் அர்த்தமற்ற ஒன்றாகிவிடும்.

அனைவருக்கும் சுதந்திரம், ஜனநாயகம் இல்லாத போது மட்டும் தான், அது சிலருக்கு இருக்கின்றது. பலருக்கு இல்லாமல் போகின்றது. ஒரு சொல்லுக்குரிய சமூகக் கருத்தோட்டம் சார்ந்த வாழ்வுமுறை என்பதும், அர்த்தம் கொண்டதாக இருப்பது என்பதும், சமூக முரண்பாட்டின் ஒரு கூறாகவே உள்ளது.

சுதந்திரம், ஜனநாயகம் இயற்கையான ஒரு பொருள் அல்ல. வாழ்வுமுறை சார்ந்த முரண்பாடுகளின் விளைவாக உள்ளது. இந்த முரண்பாடு தீர்க்கப்படும் போது இது எப்படி தோன்றியதோ, அப்படியே இல்லமல் போய்விடும். இது மனிதனின் தோற்றத்தில் இருந்த உருவான ஒன்றல்ல. மாறாக சமூகங்களின் பிளவினால் இடையில் உருவானது.

--------------------------------------------------------

Friday, September 30, 2005

பெண்ணும் கிறிஸ்தவமும்

கிறிஸ்துவத்தின் பழைய, மற்றும் புதிய பைபிளில்

எபே 5.22 இல் "மனைவிகளே, கர்த்தருக்கு கீழ்ப் படிகிறது போல, உங்கள் சொந்தப் புருஷருக்கும் கீழ்ப்படியுங்கள்."

எபே 5.23 இல், "கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்."

எபே 5.24 இல், "ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்த புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்."

எபே 5.33 இல,; ஷஷ...மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவன்."

என்று கிறிஸ்தவம் பெண்ணை பக்தியின் பின்னால் கிறிஸ்துவின் வசனங்கள் ஊடாக கோருவதன் மூலம், தனது சுதந்திரம் தனது உரிமையை ஆணுக்காக இழக்க கோருகின்றது. ஏன் பெண் ஆணுக்கு கீழ்படிந்து, மதித்து, பயபக்தியாக பெண் நடந்து கொள்ள வேண்டும்?. இதை பெண்ணுக்கு ஆண் ஏன் செய்யக் கூடாது. இருக்கும் ஆணாதிக்க தனிச் சொத்துரிமைக்குள், கிறிஸ்தவ மதம் ஆணாதிக்கத்தை பிரதிபலித்தே உருவாகியதைக் காட்டுகின்றது.

ஆணாதிக்க யதார்த்தம் மீது, கற்பனையான கடவுள் என்ற கருத்துமுதல்வாத கோட்பாட்டால் இறுக்கியதன் மூலம், பொருள்முதல்வாதமான யதார்த்த பெண்ணின் போராட்டத்தை மட்டுப்படுத்தமுடிந்தது, சிதைக்கமுடிந்தது.

கடவுளின் பெயரில் பெண்ணை அடங்கி நடக்க கோரியதன் மூலம், பெண்ணின் போராட்டத்தை பக்தியாக்கி ஆணாதிக்க வன்முறையை சீர்திருத்தமுடிந்தது. கடவுளின் பெயரில் நம்பிக்கையை உருவாக்கி, பெண்ணை அடிமையாக இயல்பில் வளர்த்தெடுத்ததன் மூலம், ஆணாதிக்க வன்முறை மட்டுப்படுத்தப்பட்டது. இந்த பக்தியை, நம்பிக்கையை, அடிமைத்தனத்தை மீறும் போது கொடூரமான ஒழுக்க மீறலாக சித்தரித்து வன்முறையை ஏவியது.

ஆண் பெண் பரஸ்பரம் மதிப்பும் மரியாதையையும் கொண்டு வாழ்வதை மறுத்த மதம், பெண்ணை ஆணுக்கு அடங்கி சேவகம் செய்ய நிர்ப்பந்தித்தது. தலைவனின் ஆணாதிக்கத்தை மதித்து, கீழ்ப்படிந்து, பயபக்தியாக அடங்கி நடக்க கோருவதே கிறிஸ்தவ செய்தியாகும்.

கடவுளுக்கு ஒருவன் எப்படி அடிமையாக பயத்தால் தனது நலன் கோரி வழிபடுகின்றானோ, அதேபோல் பெண் கணவனிடம் பயத்தால் அதிகாரப் படிநிலையை சொத்துரிமையால் மதிக்கின்றானோ, அதை கடவுளின் சித்தமாக்குவதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றாள். பெண்ணின் உடல், அவளின் செயல்கள் எல்லாம் ஆணுக்கு உட்பட்டவையே, அதை மீறுவது குற்றமாக உள்ளது. ஆணை மேவிய செயல், வார்த்தை, கோரிக்கை கிறிஸ்த்தவத்துக்கு எதிரானது. அதாவது, இன்று மனிதர்களின் ஜனநாயகம் பற்றிய பார்வையில் பெண் தனது ஜனநாயகத்தை கோரும் வரலாற்றில், பைபிள் படிப்பு ஊடாக முரண்பட்ட அனைத்து பழைய, புதிய மதப்பிரிவுகள் கோருவது, பைபிள் ஆணாதிக்க விளக்கத்தையும் கட்டிக்காப்பதற்கே.
-----------------------------------------------------------

Thursday, September 29, 2005

விபச்சாரத்துக்கு பிரபானிசியம்

வழங்கும் மரணதண்டனை

37வயதுடைய சாந்தி என்றழைக்கப்படும் லீலாவதி ஜெயராசா என்னும் நான்கு குழந்தைகளின் தாயொருவர் யாழ்குடா நாட்டில் சமூகச் சீராழிவில் ஈடுபட்டதாக கூறி சுட்டுக்கொல்லப்பட்டார். குறிப்பாக இந்த பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி இக் கொலை நியாயப்படுத்தப்பட்டது.

இங்கு அடிப்படையான கேள்வியே, விபச்சாரத்தில் ஈடுபடுவர்களுக்கு மரணதண்டனைத் தான் தீர்வா! இதைத் தான் புலித் தேசிய பிரபானிசியம் வழிகாட்டுகின்றாதா? ஓரு பெண் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கான அடிப்படையான சமூக காரணங்களை கேள்விக்கு உட்படுத்த மறுக்கும் மரணதண்டனைகளே வக்கிரமானவை.

விபச்சாரம் என்பது பிரபானிசியம் கருதுவது போல் பெண்ணின் தெரிவல்ல. மாறாக பிரபானிசியம் பாதுகாக்கும் ஆணாதிக்க சமூக அமைப்பினால் திணிக்கப்பட்டவை தான். இந்த சமூக அமைப்பில் ஒரு பெண் சுயதீனமாக வாழமுடியாத வறுமையும், சமூக நெருகடியும் ஒரு பெண்ணை விபச்சாரம் செய்ய நிர்பந்திக்கும் சமூக காரணங்களில் முக்கியமானவை. இதைத் தீர்க்க வக்கற்ற மாமனிதர்கள், மரணதண்டனையை வழங்குவதன் மூலம் இதை ஒழித்துக்கட்டலாம் என்று பிரபானிசியம் பீற்றுகின்றனர். தாய்யை கொன்றவர்கள், அந்த தாயின் நாலு குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் வாழ்வதற்கு என்ன வழியை பிரபானிசியம் வைத்துள்ளது. அவர்கள் குழந்தை பாலியல் தொழிலுக்கு போவதைத் தவிர வேறு மார்க்கம் எதையும் தேசியம் வழிகாட்டவில்லை.

மரணதண்டனை தான் ஒரு சரியான சமூகத் தீர்வென்றால், விபச்சாரத்தை விட்டால் வேறு வாழ்வு இல்லையென்ற நிலையில் உலகில் வாழும் கோடிக்காணக்கான பெண்களுக்கு பிரபானிசியம் மரணதண்டனையைத் தான் வழங்கவிரும்புகிறது.

மௌனமாக பலரும் பேசமறுத்த இக்கொலைக்கு பின்னால் உள்ள அரசியலும், மௌனமும் மிகவும் கேவலமானது.

---------------------------------------------------------------------

பூமியின்

உடைமையாளர்களாகிவிட முடியாது

''ஒரு மனிதன் பிறிதொரு மனிதனைத் தனது தனிச்சொத்தாக வைத்திருந்ததென்பது எங்ஙனம் (இன்று) அபத்தமானதாக ஆகிவிட்டதோ, அதேபோல, ஒரு உயர்ந்த சமூக பொருளாதார அமைப்பின் பார்வையில், தனிப்பட்ட சிலர் (இன்று) இந்தப் புவியில் கொண்டிருக்கும் தனிச் சொத்துடைமை என்பதும் (நாளை) அபத்தமானதாகவே கருதப்படும். ஒரு முழுச் சமூகமோ, ஒரு தேசமோ, அல்லது சமகாலத்தில் நிலவும் எல்லாச் சமூகங்களும் இணைந்தால்கூட யாரும் இந்தப் பூமியின் உடைமையாளர்களாகிவிட முடியாது. அவர்கள் இந்தப் பூமியில் (வாழப்)பெற்றிருக்கிறார்கள், பயனடைகிறார்கள் அவ்வளவுதான். 'ஒரு நல்ல குடும்பத் தலைவன் செய்வதைப் போல', தனக்குப் பின்னர் வரும் தலைமுறைகளுக்கு இந்தப் பூமியை மேலும் சிறப்பான நிலையில் அவர்கள் விட்டுச் செல்ல வேண்டும்.''

நன்றி கார்ல் மார்க்ஸ்.

Wednesday, September 28, 2005

கோக்கும் - குடிநீரும்


நீ என்ன செய்போகிறாய்?

வறட்சியென்றால் என்னவென்றே அறியாத கேரளாவின் நீர்வளமிக்க பிளாச்சிமடா கிராமத்தில் 2000ம் ஆண்டு இந்தியாவிலேயே தனது மிகப்பெரிய ஆலையை அமைத்தது கோக். நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சியெடுத்து இரண்டே ஆண்டுகளில் பிளாச்சிமடாவை நீர் ஆதாரமற்ற பாலை நிலமாக மாற்றியது.

உத்திரப்பிரதேசம் (வாரணாசி): வாரணாசியில் இயங்கிவந்த பார்லேயின் ஆலையை வாங்கிய கோக், நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சியெடுத்தது. மேலும் தனது நச்சுக் கழிவுகளை வயல்வெளிகளிலும், கால்வாய்களிலும், கங்கை நதியிலும் கொட்டி ஊரையே சாக்கடையாக்கியது கோக். விவசாயிகள் தங்கள் வயல்களில் கொட்டப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்த முனைந்த பொழுது பல வினோதமான சரும நோய்களால் பீடிக்கப்பட்டனர். கொசுக்கள் பெருகி மலேரியா காய்ச்சல் பரவியது. மண் அழிந்தது, நீர் அழிந்தது, வாழ்வழிந்தது.

ராஜஸ்தான் (காலாதரா): பாலைனப் பகுதியான ராஜஸ்தானையும் கோக் விட்டு வைக்கவில்லை. அம்மாநிலத்தின் நீர்வளமிக்க பகுதியான காலாதராவில் 1999இல் ஆலை அமைத்த கோக், 24 மணி நேரமும் போர் பம்புகளை இயக்கி ஒன்பதே மாதங்களில் 1,74,301 கன அடி தண்ணீரை உறிஞ்சி எடுத்து காலாதராவையும் பாலைவனமாக்கியது.

மகாராட்டிரம் (தானே): 1997இல் தானேவின் வாடா தாலூக்காவில் ஆலை அமைத்த கோக் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சியது. ஆற்றில் நீர் வரத்து இல்லாத பொழுதும் அணையிலிருந்து குழாய் மூலம் நீரை வரவழைத்து மக்களுக்கு நீரில்லாமல் செய்ததன் விளைவாகக் குடிக்கக் கூட நீரில்லாமல் ஊரை காலி செய்யும் நிலைக்கு மக்களைத் தள்ளியது கோக்.

இவை தவிர ஆந்திரம், வங்காளம், பஞ்சாப் என பெப்சி கோக் ஆலைஅமைத்த இடங்களிலெல்லாம் நன்னீர் வளங்களை அழித்தே தனது மென்பானத்தையும், பாட்டில் நீரையும் விற்பனை செய்கிறது. தனது பணபலம், அதிகார பலத்தின் மூலமாக கோக்பெப்சி தனது குற்றங்களையும் அதற்கெதிரான மக்கள் போராட்டங்களையும் எந்த ஊடகங்கள் வாயிலாகவும் உலகத்திற்குப் போய்ச் சேராமல் இருட்டடிப்பு செய்கிறது.

நன்றி: புதியகலச்சாரம்
-----------------------------------------------------------------

பாட்டில் தண்ணீர் மகாத்மியம்!

பாட்டில் நீரும், கேன் தண்ணீரும் வாங்கிக் குடிக்கும் படித்த வர்க்கத்தினர், காசு கொடுத்து வாங்குவதன் காரணமாகவே அது தரமான நீர் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஐரோப்பாவில் குடிநீரின் தரநிர்ணயத்துக்கு 56 காரணிகளை வைத்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம் கூறுவது 40 காரணிகள். நம் நாட்டுக்கு பன்னாட்டு பாட்டில் கம்பெனிகள் நிர்ணயித்துள்ளவை வெறும் 16 காரணிகள். ''குடிக்கத்தக்க நீரெல்லாம் குடிநீரே'' என்கிறது நம் அரசு. அதாவது இதற்கு சட்டரீதியான தரநிர்ணயம், கட்டுப்பாடு எதுவும் இதுவரை கிடையாது.

அதாவது, பாட்டில் தண்ணீரைக் கொண்டு போய் அரசின் ஆய்வு நிலையத்தில் கொடுத்தால், ''இதில் பூச்சி மருந்தும், இரசாயனப் பொருட்களும் எவ்வளவு உள்ளது'' என்பதைக் கூறுவார்கள். ஆனால் ''இன்ன அளவுக்கு மேல் இரசாயனப் பொருள் கலந்த நீரை விற்கக் கூடாது'' என்றும் கூறும் சட்டம் எதுவும் கிடையாது என்பதே நிலை.

தங்களுடைய தண்ணீர் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறையில் சுத்திகரிக்கப்படுவதாக பல நிறுவனங்கள் கூறுகின்றன. இம்முறையில் குளோரினை அகற்ற முடியாது. மைக்ரோ மற்றும் அல்ட்ரா சுத்திகரிப்பு முறைகளில் தண்ணீரில் உள்ள கிருமிகளுடன் சேர்ந்து நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் செத்து விடுவதால் அந்தத் தண்ணீர் சவத்துக்குச் சமம். செலவு அதிகம் பிடிக்கும் 'நேனோ' சுத்திகரிப்பு முறையை யாரும் செய்வதில்லை.

வேதியல் முறைகளில் சுத்திகரிப்பு செய்யாமல், திறந்த தூய்மையான நீர்நிலைகளிலிருந்து தண்ணீரை எடுத்து, அதை லாரியில் ஏற்றாமல், அங்கேயே அப்படியே பாட்டிலில் அடைத்து கொண்டு வருவதாகச் சொல்கிறது ஏவியான் எனும் நிறுவனம். ஒரு லிட்டர் தண்ணீரின் விலை 750 ரூபாய். நம்மூர் நட்சத்திர விடுதிகளில் மட்டுமே இது புழங்குகிறது.

மற்ற கின்லே, அக்வாஃபினா முதலான தண்ணீர் அனைத்தும் 500 அடி 1000 அடி போர் போட்டு எடுக்கப்படுபவைதான். ''உங்கள் ஊர் தண்ணீரில் பூச்சி மருந்தும் இரசாயனமும் இருந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?'' என்று உச்சநீதி மன்றத்தில் கோக்கும் பெப்சியும் வாதாடி வருகின்றன. எனவே, 'ஐளு 14543:1998' என்று எண்களை அச்சிட்டு அவர்கள் காட்டுவது வெறும் ஜிகினா வேலை. அவ்வளவுதான்.

அக்வாஃபினாவில் மரபணுக்களை பாதிக்கும் டைமெத்தோ பேட் உலகளவில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 13 மடங்கு அதிகமாக உள்ளது; ஞாபகமறதி நோயைத் தோற்றுவிக்கும் 'குளோரோபைரோபஸ்' வோல்கா மற்றும் மெக்டோவல் தண்ணீரில் (தண்ணியிலல்ல) உள்ளது.

புற்று நோய் மனச்சிதைவு மற்றும் கண் பார்வையைப் பாதிக்கும் 'மாலதியான்' பிஸ்லரியில் 400 மடங்கு உள்ளது. கல்லீரல் பாதிப்பு, மார்பக, இரத்த புற்றுநோயை உருவாக்கும் 'லிண்டேன்', 45 மடங்கு அதிகமாக 'ஹலோ' தண்ணீரில் உள்ளது. லிண்டேனுக்குரிய அத்தனை பாதிப்புகளையும் உருவாக்கும் டி.டி.டி. மற்றும் மேனோகுரோட்டோபாஸ் போன்றவை 70% பாட்டில் தண்ணீர்களில் நிறைந்துள்ளது.

இவையனைத்தும் சூழலியல் அமைப்புகள் நடத்திய சோதனைச் சாலை ஆய்வுகளின் முடிவுகள். இலவசமாகக் கிடைக்கும் நீரை காசுக்கு விற்கும் இந்தக் கயவர்கள், குறைந்தபட்சம் அதைச் சுத்திகரித்துத் தருவதற்குக் கூடப் பொறுப்பேற்பதில்லை. மாறாக, கார்ப்பரேசன் தண்ணீரையே பாட்டிலில் அடைத்து 'தசானி' என்று பெயரிட்டு விற்ற கோக் பிரிட்டனில் பிடிபட்டு விற்பனையையே நிறுத்தியது. அமெரிக்காவிலும் இதே கதைதான்.

இங்கேயோ கேட்கவே வேண்டாம். ''300ம% அதிகமான ஆக்ஸிஜன் கலந்த நீர்'' என்று தனது தண்ணீருக்கு விளம்பரம் செய்கிறது மாணிக்சந்த் குட்கா கம்பெனி. ஆனால், ''தண்ணீரின் இயல்பான அளவைவிட அதிக ஆக்ஸிஜனை கரைக்கும் முயற்சி தோல்வியடைந்து விட்டதாக'' ஒப்புக் கொள்கிறது, தண்ணீர் வியாபாரிகளின் இணையத்தளம்.

பழுத்துப் போன வெள்ளைச் சட்டைக்கு சொட்டு நீலம் போடுவது போல, பாட்டிலுக்கு நீல நிறம் ஏற்றி தண்ணீரைப் 'பளிச்சிட' வைத்து படித்த வர்க்கத்தின் பாக்கெட்டை சூறையாடுகிறார்கள் இந்த எத்தர்கள்.

''அப்புறம் பானைத் தண்ணீருக்கும் பாட்டில் தண்ணீருக்கும் என்னதான் வித்தியாசம்?'' என்று கேட்கிறீர்களா? வித்தியாசம் 13 ரூபாய்!

நள்றி: புதியகலச்சாரம்

Tuesday, September 27, 2005

ஈராக்கில்:

அமெரிக்க ஜனநாயகம்

மேலும் படங்களைப் பார்க்க : http://tamilcircle.net/iraq/iraq_photos.htm

-------------------------------------------------------------------------
தமிழ் மணத்தில் பதிவளராக இல்லாதவர்கள் தமது கருத்துகளை தெரிவிக்க விரும்பின், tamil_circle@yahoo.no என்ற இந்த ஈ-மெயில் மூலம் உங்கள் கருத்துகளை எமக்கு அனுப்பின் நாம் அதை பதிவிலீட முடியும்.

விரிவான கட்டுரைக்கு : www.tamilcircle.net

காரல் மார்க்ஸ்:

இன்றைய காலத்திற்கேயுரிய வழிகாட்டி

கையில் நயாபைசா இல்லாமல் புலம் பெயர்ந்து வந்து இலண்டன் மாநகரில் தஞ்சம் புகுந்த ஒரு அகதியை வசைபாடுவதற்கும், அவர் மீது பழிதூற்றுவதற்கும் இரண்டு முழுப் பக்கங்களைச் செலவிட்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் வலதுசாரிப் பத்திரிகையின் சென்ற வார இதழ். 'அகதி' என்ற சொல்லைக் கேட்டாலே வலதுசாரிகளுக்கு உடம்பெல்லாம் எரியும் என்பதால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைதான். எனினும் தாக்குதலுக்கு ஆளான இந்த அகதி இருக்கிறாரே, அவர் தற்போது உயிருடன் இல்லாதவர். அதாவது, 1883இலேயே இறந்து விட்டவர்.

ஆம்! 'மார்க்ஸ் எனும் அரக்கன்' என்பதே மேற்படி கட்டுரையின் தலைப்பு. பி.பி.சி. 'ரேடியோ 4' அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்ததுதான் இந்த வெறிகொண்ட எதிர்வினைக்குக் காரணம்.''ஸ்டாலின், மாவோ, போல்பாட், முகாபே போன்ற கொலைகாரச் சீடர்களை உருவாக்கிய ஒரு மனிதனை உலகின் தலைசிறந்த தத்துவஞானியாக எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்?'' இது அந்தப் பத்திரிகை எழுப்பியிருக்கும் கேள்வி.
இந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் புரிந்து கொள்ளத் தக்கதே. 15 ஆண்டுகளுக்குமுன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்த பின், ''மார்க்ஸின் கதை இதோடு முடிந்தது'' என்றொரு கருத்து பொதுவாகப் பரவியிருந்தது. ''அவர் செத்துவிட்டார், லண்டன் கல்லறையில் எஞ்சியிருக்கும் அவரது உடலின் எச்சங்கள் பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்குக் கீழ் நிரந்தரமாகப் புதைக்கப்பட்டு விட்டன. யாரும் அவரைப் பற்றிச் சிந்திக்கத் தேவையில்லை; அவரது சிந்தனைகளை இனி படிக்கவே தேவையில்லை'' என்பதே அந்தப் பொதுக் கருத்து.

பனிப்போர் முடிவுக்கு வந்த அந்த காலகட்டத்தில் ஃபிரான்சிஸ் ஃபுகுயாமா கூறினார், ''நாம் கடந்து சென்று கொண்டிருப்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கட்டமல்ல நாம் காண்பது வரலாற்றின் முடிவு. மனித குலத்தின் சித்தாந்த வளர்ச்சிக்கே எல்லை இதுதான். இத்துடன் முடிந்தது'' இது அவரது பிரகடனம்.
வரலாறோ திரும்பியது ஒரு வன்மத்துடன் விரைவிலேயே திரும்பியது. 1998 ஆகஸ்டில் ரசியாவின் பொருளாதாரம் கற்பூரமாய்க் கரையத் தொடங்கியது. ஆசிய நாடுகளின் நாணய மதிப்புகள் தலைகுப்புறக் கவிழ்ந்தன. உலகச் சந்தை முழுதும் பீதி பரவத் தொடங்கியது.

''உலக முதலாளித்துவம் வெற்றிக் கொடி நாட்டி பத்தாண்டுகள் கூட ஆகவில்லையே! அதற்குள்ளாகவா நாம் நெருக்கடியில் சிக்கிவிட்டோம்?'' என்று தனது அதிர்ச்சியை வெளியிட்டது லண்டனின் ''ஃபைனான்சியல் டைம்ஸ்'' பத்திரிகை. அந்தக் கட்டுரையின் தலைப்பென்ன தெரியுமா? ''டாஸ் காபிடலை (மார்க்சின் ''மூலதனம்'' நூலை) இன்னொரு முறை புரட்டிப் பார்ப்போம்!''முதலாளித்துவ அமைப்பினால் பெரிதும் ஆதாயம் அடைந்தவர்கள் கூட ''நம்முடைய வண்டி தொடர்ந்து ஓடுமா?'' என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கினார்கள்.

''தானும் தன்னையொத்த முதலாளிகளும் தங்களது மந்தை மனப்பான்மையை கட்டுப்படுத்திக் கொள்ளாவிட்டால், இந்த மந்தையின் காலடியில் எல்லோரும் மிதிபட்டுச் சாகவேண்டியதுதான்'' என்று எச்சரிக்கை செய்கிறார், மிகப் பெரும் கோடீசுவரனும் ஊகச்சந்தை வணிகனுமான ஜார்ஜ் சோரோஸ்.''முதலாளித்துவ அமைப்பைப் பற்றி நம்முடைய செவ்வியல் பொருளாதார வல்லுனர்கள் கூறும் சமநிலைக் கோட்பாட்டைக் காட்டிலும் சிறந்த முறையிலான ஆய்வை 150 ஆண்டுகளுக்கு முன்னரே மார்க்சும் எங்கெல்சும் வழங்கியுள்ளனர் என்று நிச்சயமாக என்னால் கூற முடியும்.''
''அச்சுறுத்தும் வகையில் கூர்மையான அவர்களது ஊகங்கள் உண்மையாகாமல் போனதற்குக் காரணம் இருக்கிறது. ஜனநாயக நாடுகளில் (கம்யூனிச அபாயத்தைத் தடுக்க) எதிர்நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீடுகள்தான் அதற்குக் காரணம். வரலாறு நமக்குப் பாடம் கற்பித்திருக்கிறது. அந்தப் பாடங்களிலிருந்து கூடத் தவறான முடிவுகளுக்கு மட்டுமே நாம் வருகிறோம். இன்னொரு முறை இதே தவறை நாம் செய்யும் அபாயம் இருக்கிறது. இந்த முறை அபாயம் கம்யூனிசத்திடமிருந்து வரவில்லை சந்தை கடுங்கோட்பாட்டுவாதம்தான் இன்று நமக்கெதிரான அபாயமாகும்.''

இவையெல்லாம் உலகின் மிகப் பெரும் ஊகச்சந்தை வணிகனான ஜார்ஜ் சோரோஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கள்

'நியூயார்க்கர்' பத்திரிகையின் வணிகத்துறைச் செய்தியாளர் ஜான் காசிடி, ஒரு முதலீட்டு வங்கியின் முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அந்த உரையாடலைப் பற்றி அக்டோபர் 1997இல் எழுதினார். ''வால் தெருவில் (நியூயார்க்கின் பங்குச் சந்தைத் தெரு) நான் எந்த அளவிற்கு நேரத்தைச் செலவிடுகிறேனோ, அந்த அளவிற்கு மார்க்ஸ் கூறியது சரிதான் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். முதலாளித்துவத்தை ஆய்வு செய்வதற்கு மார்க்ஸ் மேற்கொண்ட முறைதான் சரியானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை'' என்று சொன்னாராம் அந்த வங்கி முதலாளி.

மார்க்சின் நூல்களை இதுவரை படித்திராத செய்தியாளர் காசிடி, ஆவலை அடக்கமாட்டாமல் முதன்முறையாக மார்க்சைப் படித்தாராம். ''உலகமயமாக்கம், ஏற்றத்தாழ்வுகள், அரசியல் ஊழல், ஏகபோகமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சி, உயர் கலாச்சாரத்தின் வீழ்ச்சி, தொடர்ந்து உயிர்த்துடிப்பை இழந்து வரும் நவீன வாழ்க்கையின் தன்மை இவை பற்றியெல்லாம் ஆணி அடித்தாற்போலப் பேசும் மார்க்சின் எழுத்துக்களைக் கண்டேன். இதே விசயங்களைத்தான் இன்றைய பொருளாதார வல்லுனர்கள் ஏதோ புதிய பிரச்சினைகளாகக் கருதி எதிர்கொண்டு வருகிறார்கள். சில நேரங்களில், மார்க்சின் கால்தடம் பதிந்த பாதையில்தான் செல்கிறோம் என்பதை அறியாமலேயே அந்தப் பாதையிலும் நடக்கிறார்கள்'' இவை மார்க்சைப் படித்தபின் நியூயார்க்கர் இதழில் காசிடி எழுதிய கருத்துக்கள்.முதலாளி வர்க்கம் இன்னும் சாகவில்லை. மார்க்சும்தான் சாகவில்லை. முதலாளித்துவத்தைப் பற்றிய அவரது கணிப்புகளில் சில நிறைவேறாமல் போயிருக்கலாம்; அவர் தவறிழைத்திருக்கலாம். ஆனால், முதலாளித்துவம் என்ற மிருகத்தின் இயல்பை வெளிக் கொணர்ந்து காட்டிய அவரது ஆய்வின் கூர்மை இருக்கிறதே அந்த ஊடுருவிச் செல்லும் கூர்மை அது அவரது கணிப்பில் நேர்ந்த சில பிழைகளையெல்லாம் புறந்தள்ளிக் கடந்து சென்றுவிட்டது.

கம்யூனிஸ்டு அறிக்கையில் அவர் எழுதினார்: ''ஓயாது ஒழியாது உற்பத்தியில் ஏற்படும் புரட்சிகர மாற்றங்களும், சமூக உறவுகள் யாவும் இடையறாது அமைதி குலைதலும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்பும் முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய எலலா சகாப்தங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றது.''

சமீப காலம் வரையிலும் இங்கிலாந்தில் பலர் தம் வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையில் தொடர்ந்தார்கள்; அல்லது ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றினார்கள். ஆனால் இன்று? அப்படி யாரையாவது நாம் காட்ட முடியுமா? மார்க்ஸ் கூறியதைப் போல, ''திடப்பொருட்கள் எல்லாம் காற்றில் கரைகின்றன'' அல்லவா?

உண்மையில் மனிதனுக்கு மட்டுமே உரியவையாக இருக்கும் அனைத்தும் சரக்காக, உயிரற்ற சடப்பொருளாக உறைந்து போவதையும், அந்தச் சரக்கானது, பேராற்றலையும் உயிர்த்துடிப்பையும் பெற்று, தன்னை உற்பத்தி செய்த மனிதர்களையே கொடுங்கோன்மைக்கு ஆளாக்குவதையும் தனது தலைசிறந்த படைப்பான மூலதனத்தில் மார்க்ஸ் நிரூபித்துக் காட்டுகிறார்.
நம்முடைய வாழ்க்கையை ஆளும் சக்திகளைப் பற்றியும், அவை நம் வாழ்வில் தோற்றுவிக்கும் நிச்சயமின்மை, அந்நியமாதல், சுரண்டல் போன்றவை பற்றியும் மார்க்ஸ் வழங்கியுள்ள சித்தரிப்பு இன்னும் எதிரொலித்த வண்ணம்தான் இருக்கிறது; அது உலகின் கவனத்தை மீண்டும் ஈர்த்தே தீரும். பி.பி.சி. வானொலியின் கருத்துக் கணிப்பு காட்டும் உண்மை இதுதான்.

பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்கு அடியில் மார்க்ஸ் புதைக்கப்பட்டு விட்டதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இல்லை. இப்பொழுதுதான் தனக்குரிய உண்மையான முக்கியத்துவத்துடன் அவர் எழுந்துவரப் போகிறார். இதனைப் புரிந்து கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடியாமல் வலதுசாரிப் பத்திரிகைகள் என்னதான் ஊளையிட்டாலும், 21ஆம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க சிந்தனையாளராக உருவெடுக்கப் போகிறார் கார்ல் மார்க்ஸ்.

- ஃபிரான்சிஸ் வீன் ('கார்ல் மார்க்ஸ்' என்ற வாழ்க்கைவரலாற்று நூலின் ஆசிரியர்.)லண்டனிலிருந்து வெளிவரும்கார்டியன் பத்திரிகையில் வெளியான கட்டுரை. 'இந்து' நாளேட்டிலிருந்து (22.7.05) மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது

நன்றி புதியஜனநாயகம்

----------------------------------------------------------------------------
தமிழ் மணத்தில் பதிவளராக இல்லாதவர்கள் தமது கருத்துகளை தெரிவிக்க விரும்பின், tamil_circle@yahoo.no என்ற இந்த ஈ-மெயில் மூலம் உங்கள் கருத்துகளை எமக்கு அனுப்பின் நாம் அதை பதிவிலீட முடியும்.

விரிவான கட்டுரைக்கு www.tamilcircle.net

Monday, September 26, 2005

சிவபெருமானின் ஆணாதிக்கம்

சிவபெருமான் உமாதேவியாருக்கிடையில் நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து அதில் முடிவின்றி நீடித்ததால், நாட்டியத்தை ஆடுகின்றனர். நாட்டியத்தை சிவபெருமான் தொடர முடியாததால் திடீரென ஒருகாலை பூமியிலும் மறுகாலை விண்ணிலும் வைத்து ஆடுகின்றார். இதில்தான் உமாதேவியார் காலைதூக்கி வைத்து ஆடுவது, பெண்ணின் ஒழுக்கமல்ல என்பதால் தோற்கின்றார்.

இங்கு ஏன் உமாதேவியார் காலை துக்கிவைத்து ஆடமுடியாது என்ற கேள்விக்கு, ஆணாதிக்க அமைப்பு பெண்ணின் மீதான ஒழுக்க கோவையால் கட்டுபடுத்துகின்றது. ஏன் சிவபெருமான் போட்டியைக் குழப்பி அத்துமீறி காலை கீழ் நோக்கி வைத்து, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கின்றார். இது அதர்மமான நடத்தையல்லவா?.

ஓரே நிலையில் உமாதேவியரோடு போட்டியிட்டு வெல்ல முடியாத நிலையில்தானே, அடுத்த கட்டத்தை சிவபெருமான் தொடங்குகின்றார். வென்றது உமாதேவியார் அல்லவா!. ஆணாதிக்க ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டு அல்லவா, சிவபெருமனின் வெற்றி ஏற்க்கப்படுகின்றது. ஆனால் ஆணாதிக்க அமைப்பு உமாதேவியார் வெற்றியை மறுக்கின்றது.

ஆணாதிக்க அமைப்பில் தோற்ற உமாதேவியாரின் ஆணவத்தை அடக்க, சிவன் பூலோகம் சென்று வாழ சாபம் ஈடுகின்றார். அப்போதும் உமாதேவியாரின் துணையாக முருகன் (மகன்) அனுப்பப்படுகின்றான்.

பெண் ஆணுக்கு அடங்கி பாதுகாப்பு பெற்று வாழமுடியுமே ஒழிய, சுதந்திரமாக வாழும் உயிரல்ல என்பதைதான், ஆணாதிக்ககதை தனது சமூக இருப்பை நோக்கி புனைந்து காட்டுகின்றது.

------------------------------------------------------------------------
தமிழ் மணத்தில் பதிவளராக இல்லாதவர்கள் தமது கருத்துகளை தெரிவிக்க விரும்பின், tamil_circle@yahoo.no என்ற இந்த ஈ-மெயில் மூலம் உங்கள் கருத்துகளை எமக்கு அனுப்பின் நாம் அதை பதிவிலீட முடியும்.

விரிவான கட்டுரைக்கு www.tamilcircle.net

இந்து மதம் - பெண்

பெண்னை அடிமையாகவே இந்து மதம் கருதுகின்றது. "உயர் சாதி பெண் கணவனிடம் நன்றியுள்ளவளாக இல்லாதிருந்தால் அவள் நாய்களால் விழுங்கப்பட வேண்டியவள். (நாய்க்கு உணவாக்கப்படுவாள்). அவளைச் சோரம் இழைத்தவன் காய்ச்சிய இரும்புக் கட்டிலில் கிடத்தி கொல்லப்படவேண்டும்." என்று மனுநீதி 374, 375) குறிப்பிடுகின்றது.

அதே நேரம் கீழ்ச்சாதி பெண்ணைக் குறித்து மனுநீதி (11-178 இல்) "ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம். ஆனால் அதன் விளைவாக குழந்தை பிறந்துவிட்டால் அத்தகைய குழந்தை உயிரோடு இருந்தாலும் பிணம் போன்றதே" அத்துடன் அக்குழந்தை தந்தையின் சாதிக்கு ஏழு தலைமுறைக்கு பின் உயர்த்தப்பட முடியும் என்ற மோசடியுடன் கூடிய சதி நிர்வாணமாகின்றது.

இங்கு சூத்திர பெண்களின் அடிமைத்தனம், வைப்பாட்டித்தனம், இணங்கிப் போகும் அடிமைத்தனத்தை இந்துமதம் ஆணாதிக்கம் சார்ந்து சமூக பண்பாக்கியது. இந்து மதம் பெண்கள் மேல் குறிப்பிட்ட சில வன்முறைகளை கையாண்டது.
-------------------------------------------------------------------------
தமிழ் மணத்தில் பதிவளராக இல்லாதவர்கள் தமது கருத்துகளை தெரிவிக்க விரும்பின், tamil_circle@yahoo.no என்ற இந்த ஈ-மெயில் மூலம் உங்கள் கருத்துகளை எமக்கு அனுப்பின் நாம் அதை பதிவிலீட முடியும்.

விரிவான கட்டுரைக்கு www.tamilcircle.net

Sunday, September 25, 2005

இறுதித் தீர்ப்பு:

குஜராத் படுகொலை:
ஆவணப்படம்

நிறையப் படித்துவிட்டோம். குஜராத்தில் இந்து மதவெறி சங்கப் பரிவாரக் குரங்குகள் நடத்திய கொடூரத்தை. எழுத்துக்களாய் நீங்கள் படிக்கும் போது உங்களுக்குள் உருவகப்படுத்திக் கொண்ட காட்சிகளால் அல்லது வார்த்தைகள் தந்த உணர்ச்சிகளால் தாக்குண்டு, வெகுண்டெழுந்த உங்களது கோபம், இப்போது ஒருவேளை மட்டுப்பட்டிருக்கலாம். இந்துமத வெறியர்களின் கொலைவெறித் தாண்டவத்திற்கு உதாரணமாகக் குஜராத்தைச் சொல்லிச் சொல்லி உங்களையறியாமலேயே சலிப்படைந்து சடங்குத்தனமாய் வார்த்தைகள் உங்களிடமிருந்து வந்து கொண்டிருக்கலாம்.

உணர்ச்சி வசப்பட வைக்கும் எழுத்துக்களின் தீவிரம் நம்மை ஆட்கொள்ளும் காலத்தின் அளவு குறித்த வரையறை எதுவுமில்லைதான். ஆனால், அது நிச்சயமாகக் காட்சி ஊடகத்தின் தீவிரம் நம்மை ஆட்கொள்ளும் காலத்தின் அளவை விடக் குறைவுதான்.

சங்கப் பரிவாரக் குரங்கு ஒன்று இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு வெறியோடு அலறும் புகைப்படத்தையும், இசுலாமியர் ஒருவர் இரு கைகளையும் கூப்பி வணங்கி கண்ணில் நீர் மல்க, மரண பீதியுடன் நிற்கும் புகைப்படத்தையும், ஏற்கெனவே பத்திரிக்கைகளில் பார்த்திருந்ததால், குஜராத் படுகொலை குறித்த ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தபோது, ஆரம்பத்தில் ""ஒரே அழுகுரல், எங்கும் புகை, ஆங்காங்கே ஏதேதோ எரிந்து கொண்டிருக்கின்றன, வெட்டிச் சாய்க்கப்பட்ட பிணங்களாக மனிதர்கள், அலறி ஓடுகின்ற மக்கள், துரத்தி வரும் இந்து மதவெறியர்கள்....'' — இப்படித்தான் கற்பனை செய்து கொண்டிருந்தேன். ஆனால் படத்தில் அப்படி ஏதுமில்லை. பிஜேபியின் சித்தாந்தம் பாசிசம்தான் என்பதையும், பிஜேபி, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பலெல்லாம் பாசிசக் கூட்டம்தான் என்பதையும், மிகத் தெளிவாக, ரத்த சாட்சியங்களாக நம்முன் வைக்கிறது இந்த ஆவணப்படம், நாம் இனிமேல் குஜராத்தை என்றென்றைக்கும் மறந்து விட முடியாதபடி. இப்படத்தின் பெயர்: ஃபைனல் சொல்யூஷன் இறுதித் தீர்வு. படத்தை எடுத்தவர் ராகேஷ் சர்மா.

இந்து நஞ்சு

படத்தின் துவக்கத்திலேயே, படுகொலையினால் பாதிக்கப்பட்ட, படுகொலைகளை நேரில் பார்த்த முசுலீம் குடும்பத்துச் சிறுவன் இஜாஜ் உடன் நேர் காணல் வருகிறது. ஒரு நொடியில் நாம் அதை உணர்ந்து விடுவதால் ஓடிச் சென்று, கள்ளங்கபடமில்லாமல் மலங்க மலங்க விழித்தபடி பேசும் அவனைக் கட்டியணைத்து ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் எனச் சொல்ல வேண்டும் என மனம் துடிக்கிறது. படம் இரண்டரை மணி நேரம் ஓடுகிறது.

பக்தியை, கடவுளை, மதத்தை, மதவெறியை, கலவரம் மூலமாக, படுகொலைகள் மூலமாக, பாலியல் வன்முறை மூலமாக, தேர்தல் வெற்றியாக மாற்ற முடியும் என்பதைப் பாசிஸ்டுகள் நிரூபித்துக் காட்டுகிற விதத்தை தெளிவாக நாம் புரிந்து கொள்ளும்போது, படம் முடியப் போகும் நேரத்தில், மீண்டும் அதே சிறுவன் இஜாஜ் உடன் நேர் காணல் வருகிறது. கேள்விகளுக்கு அவன் பதில் சொல்வதைக் கேளுங்கள்.

இஜாஜ் படித்துக் கொண்டிருப்பது யூ.கே.ஜி.

இஜாஜ்: 1... 2... 3... எனக்கு எல்லா எண்களும் தெரியும். வீடு... பூக்கள் எல்லாம் செய்யத் தெரியும்.

கேள்வி: பெரியவனான பிறகு என்ன ஆவாய்?

இ: சோல்ஜராவேன்! பிறகு அவர்களைச் சுடுவேன்!

கே: யாரை?

இ: இந்துக்களை!

கே: ஏன்?

இ: ஏன்னா, அவர்களும் இதைத்தான் செய்தார்கள்!

கே: நீ ஏன் அவர்களை மோசமானவர்களாக நினைக்கிறாய்?

இ: .....கட்டாயம் அவர்களைக் கொல்வேன்!

கே: ஏன்?

இ: நான் அவர்களைச் சேதப்படுத்துவேன்!

கே: எல்லா இந்துக்களும் மோசமானவர்களா?

இ: அவர்கள் கெட்ட வார்த்தைகளைப் பேசினார்கள்!

கே: எந்த மாதிரி?

இ: நான் அந்தக் கெட்ட வார்த்தைகளைப் பேசமாட்டேன்.

கே: நான் ஒரு இந்து. நான் மோசமானவன்னு நெனக்கிறியா?

இ: (யோசித்து) இல்லை.

கே: நீ ஒரு சோல்ஜர். என்னைக் கொல்லணுமல்லவா?

இ: (தலையசைத்து) ஆமா, நா வேற யாரையும் தாக்க மாட்டேன். இந்துக்களை மட்டும்தான் கொல்வேன்.

கே: சரி! நா ஒரு இந்து.

இ: இல்லை. நீங்கள் அவர்களில்லை.

கே: நான் அவர்களைப் போல இல்லையா?

இ: (இல்லையெனும்படித் தலையசைக்கிறான்)

கேள்வி: அப்புறம்?

இஜாஜ்: நீங்கள் ஒரு முசுலீம்.

— குஜராத்தில் நடத்தப்பட்ட படுகொலைகள், இசுலாமிய இளைஞர்கள், பெண்கள், குழந்தைகளிடம் என்ன எதிர்விளைவுகளை உண்டாக்கும்? அவைகள் எதிர்வன்முறைகளாக அமைந்தால், அது இந்துவெறியர்களுக்குத்தான் சாதகமானதாக இருக்கும் என்பதை எப்படி அவர்களிடம் விளக்கலாம் என்பதும்; கொழுந்துவிட்டு எரியும் இவர்களின் கோபத் தீக்கு என்ன சமாதானம் சொல்வது? எம்மாதிரியான தண்டனைகளை இந்து மதவெறிக் கும்பலுக்கு வழங்கினால், இவர்களின் ஈடு செய்ய முடியாத இழப்புகளைச் சமன் செய்ய முடியும் என்கிற கேள்வியும் — படத்தின் இடையிடையே அலைபோல எழும்பியெழும்பித் தணிந்து கொண்டிருந்தபோது இறுதியில் வரும் இஜாஜின் சொற்கள் நம்மை அதிர வைக்கின்றன.

இந்துக்கள் என்றாலே கொடூரமானவர்கள் என்கிற ஆழமான வடுவை இஜாஜ் போன்ற குழந்தைகளின் மனதில் பதித்து விட்டார்கள், ராமபக்தர்களான இந்துப் பாசிஸ்டுகள். தம்மை இந்துக்கள் என்று நம்பிக் கொண்டும், சொல்லிக் கொண்டும் திரிபவர்கள் இஜாஜின் கேள்விக்கு என்ன பதில் சொல்வார்கள்?
அது யாரோ வெறியர்கள் செய்தது என்றால், உங்களின் பெயரைப் பயன்படுத்தித்தான் அவர்கள் இதைச் செய்தார்கள் என்பதால் அவர்களுக்கு நீங்கள் என்ன தண்டனை வழங்கப் போகிறீர்கள்? பிஞ்சு மனதில் நஞ்சைக் கலந்து என்பார்களே, அதை அப்படியே பார்க்க முடிகிறது. அதுவும் இது இந்து நஞ்சு.

நன்றி புதியகலச்சாரம்

-----------------------------------------------------------------------------
தமிழ் மணத்தில் பதிவளராக இல்லாதவர்கள் தமது கருத்துகளை தெரிவிக்க விரும்பின், tamil_circle@yahoo.no என்ற இந்த ஈ-மெயில் மூலம் உங்கள் கருத்துகளை எமக்கு அனுப்பின் நாம் அதை பதிவிலீட முடியும். விரிவான கட்டுரைக்கு http://www.tamilcircle.net/

புலிகளின் அரசியல் அறிக்கை

புலிகளின் அரசியல் வேலைத்திட்டத்தை உள்ளடங்கிய கொள்கை விளக்க நூலுக்கு (இது ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளிவந்தது.) "சோசலிச தமிழீழம்" எனறே தலைப்பிடுகின்றனர். அதில் அவர்கள் அரசியல் இலட்சியம் என்ற பகுதியில்

"தேசிய விடுதலை, சோசலிச சமூகப் புரட்சி ஆகிய இரு ... அடிப்படையான அரசியல் இலட்சியம்" என்கின்றனர். அதில் அவர்கள் தொடர்ந்தும் கூறகின்றனர்

"தேசிய விடுதலை எனும் பொழுது ....ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மானத்தையுமே" தமது இலட்சியம் என்கின்றனர்.

அதை அவர்கள் மேலும் விளக்கம் போது "சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வாகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடன், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும்... " ஆட்சியாக அமையும் என்கின்றனர்.

மேலும் அவர்கள் விளக்கம் போது "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்" என்றனர்.

அத்துடன் "தமழீழ சமூக வடிவமானது ஒரு முதிhச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. ... வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு... பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் உடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்கமுறைகளையும் ஒழித்தக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" இப்படி அந்த அறிக்கை நீண்டு செல்லுகின்றது.

இதை நாங்கள் சொல்லவில்லை. விடுதலைப்புலிகளின் அடிப்படையான ஆரம்ப அரசியல் ஆவணம் சொல்லுகின்றது. இப்படித் தான் போராட்டம் அறிவிக்கப்பட்டு, அணிதிரட்டப்பட்டனர். இன்று இந்த இலட்சியத்தையே கைவிட்டுவிட்டனர்.

ஆனால் என்ன நடந்தது. இப்படி சொன்னவர்கள், இதை நடைமுறைப்படுத்தக் கோரியவர்களை தேடித்தேடிக் கொன்றனர். ஆயுதம் எந்தியிராத இவர்களை படுகொலை செய்து, தமது சொந்த இலட்சியங்களையே முதலில் புதைகுழிக்கு அனுப்பினர்.

இப்படித் தான் இந்த இலட்சியங்கள் சமூகத்தில் இருந்தே ஒழித்துக் கட்டப்பட்டது. இதை புலிகள் பெருமளவில் செய்தனர் என்றால், மற்றைய இயக்கங்களும் இதைத் தான் போட்டிபோட்ட செய்தன.

இவர்களை இலங்கை இராணுவம் கொல்லவில்லை. இது ஒரு விசித்திரமான அரசியல் உண்மை. இந்த அடிப்படையில் தான் இன்று புலி மற்றும் புலியெதிர்ப்பு அணியினரும் இயங்குகின்றனர்.

புதைகுழிக்கு மக்கள் சார்பு கோட்பாடுகளை அனுப்பிய பின் இன்று வக்கரிக்கின்றனர். மக்கள் தமக்கான விடுதலையை தாமே பெறமுடியுமே ஒழிய, மற்றவர்களால் ஒரு நாளும் அதைப் பெற்றுத் தரமுடியாது. இதை அவர்கள் மறுதலிக்கின்றனர்.
------------------------------------------------------------------------------
தமிழ் மணத்தில் பதிவளராக இல்லாதவர்கள் தமது கருத்துகளை தெரிவிக்க விரும்பின், tamil_circle@yahoo.no என்ற இந்த ஈ-மெயில் மூலம் உங்கள் கருத்துகளை எமக்கு அனுப்பின் நாம் அதை பதிவிலீட முடியும்.

விரிவான கட்டுரைக்கு http://www.tamilcircle.net/

மக்களுக்கு மறுப்பது எதை

1986 இல் யாழ் பல்கலைகழக மாணவர்கள் சகல இயக்கத்திடமும் சில கோரிக்கையை முன்வைத்து ஒரு போராட்டத்தை நடத்தினர். இதுவே மட்டக்களப்பைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவனான விஜிதரன் கடத்தப்பட்டு காணமல் போன நிலையில், விடுதலை செய்யக் கோரி நடந்தப்பட்ட போராட்டமாகும். அந்தப் போராட்டத்தில்

1. "மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்"
2. "மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்."

என பல்கலைக்கழக மாணவர்கள் கோரினர். இதை அன்று வடக்கில் இயங்கிய சுதந்திரமான மக்கள் அமைப்புகள் ஆதாரவளித்து, அவர்களும் போராட்டங்களில் பங்குபற்றினர்.

இந்தக் கோரிக்கைக்கு பகிரங்க துண்டுப் பிரசுரம் மூலம் 28.11.1986 இல் புலிகள் பதிலளித்தனர்.

அதில் இது "..விடுதலைப் புலிகளை அரசியல் அனாதைகளாக்கக் கூடிய மேலும் இரு கோரிக்கைகள்" என்று கூறி அதை வழங்க முடியாது என்றனர்.

மக்களின் போராட்டமல்லாத புலிப் போராட்டத்தை பாதுகாக்கும் இப்பதில், மக்களுக்கு எதைத் தான் வழங்கியது. மக்களுக்கு மேல் சர்வாதிகாரமும் அடக்கு முறையையும் தான் பதிலாக அளித்தனர். இதுவே இன்று வரையான அவர்களின் தீர்ப்பு. புலிகள் மக்கள் என்று வாய்கிழய பினாற்றுவது, அவர்களின் அடிமைத்தனத்தின் விலங்குகள் உடையாது பாதுகாக்கும் கவசம் மட்டும் தான்.

--------------------------------------------------------------------------------
தமழ் மணத்தில் பதிவளராக இல்லாதவர்கள் தமது கருத்துகளை தெரிவிக்க விரும்பின், tamil_circle@yahoo.no என்ற இந்த ஈ-மெயில் மூலம் உங்கள் கருத்துகளை எமக்கு அனுப்பின் நாம் அதை பதிவிலீட முடியும்.

விரிவான கட்டுரைக்கு http://www.tamilcircle.net/