தமிழ் அரங்கம்
Friday, July 21, 2006
சந்திப்பு
தமிழ்சேக்கிள் ஆசிரியர் இரயாகரனாகிய நான் கனடா வந்துள்ளேன். என்னுடன் 23.07.2006 அன்று கனடாவில் சந்திப்பு ஒன்று நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மற்றும் எனது நூல்கள் தேவைப்படுபவர்கள் அங்குபெறமுடியும்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம்
SCARBOROUGH CIVIC CENTRE
150 BOROUGH DRIVE
(MACOWAN AND ELLESMAIRE)
Thursday, July 20, 2006
கவர்ச்சி அரசியலில் மயங்கிக் கிடக்கும் தமிழகம்
கலாச்சார சீரழிவு குறித்த ஒழுக்கவாத அங்கலாய்ப்பல்ல இது
அரசியல் சீரழிவின் நோய்க்குறிகளை அடையாளம் காணும் முயற்சி.
அழுகி நாற்றமெடுக்கும் முதலாளித்துவ ஜனநாயகம் என்ற சொற்றொடரின் முழுமையான பொருளை ஒரு இலக்கியம் போல உய்த்துணர்வதற்கு யாரேனும் விரும்பினால், அவர்கள் உடனே தமிழகத்திற்கு வரவேண்டும்.
""தோற்பது நானாக இருந்தாலும் வெல்வது பொறுக்கி அரசியலாக இருக்க வேண்டும். வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது சீரழிவாக இருக்க வேண்டும்'' என்ற கொள்கையுடன் ஓட்டுப் பொறுக்கி அரசியலை அடியாழம் காணமுடியாத அதல பாதாளத்தை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார், புரட்சித்தலைவி.
முதல்வர் நாற்காலியிலமர்ந்து மக்கள் தொண்டாற்றிய நிலையிலேதான் தனது உயிர் பிரிய வேண்டும் என்ற "கொள்கை வெறி'யுடன் களத்திலிறங்கியிருக்கும் கருணாநிதி, எந்தப் பாதாளத்திலும் பாய்ந்து பதவி நாற்காலியில் அமர்ந்துவிடத் துடிக்கிறார்.
இந்த வந்தனோபசார கடைசி ஆட்டத்தில், உணர்ச்சிபூர்வமான ரசிகர்களாகவும் தன்னுணர்விழந்த பாத்திரங்களாகவும் அவ்வப்போது வாக்காளர்களாகவும் இருக்கக் கொடுத்து வைத்த தமிழக மக்கள், எந்தக் கணத்தில் என்னவாக இருக்கிறோம் என்பதைத் தாங்களே அறிந்திராத காரணத்தினால், ஆட்டத்தின் ""கிளைமாக்ஸ்'' காட்சிக்குத் தேவைப்படுகின்ற திகில் தன்மையைத் தவிர்க்கவியலாமல் தோற்றுவிக்கிறார்கள்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களின் தலைகளை மேய்கின்ற தொலைக்காட்சிக் ""காமெரா''க்கள் தரும் சித்திரத்தைக் காணும்போது ஒரு மிகப்பெரிய உள்நாட்டுப் போரைத் தமிழகம் சந்திக்கவி ருப்பதைப் போன்ற பிரமை ஏற்படுகிறது. கொஞ்சம் நெருங்கி கூட்டத்தினரின் முகங்களைக் கூர்ந்து கவனிக்கும்போது பொய்மை உடனே புலப்பட்டு விடுகிறது.
""உங்கள் அன்புச் சகோதரியின் ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டுக் காட்ட உங்கள் "அன்புச் சகோதரி'க்கு நேரம் போதாது என்பது உங்களுக்கே தெரியும்'' என்று தனது முதல் கட்டத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் பேசிக் கொண்டிருந்தார் அன்புச் சகோதரி. ஆனால், ""2 ரூபாய் அரிசி, கலர் டி.வி.'' என்ற அஸ்திரங்கள் ஏவப்பட்டவுடன் அவருக்கு நேரம் கிடைத்து விட்டது. உளவுத்துறை மற்றும் களவுத்துறை அதிகாரிகள் இணைந்து எழுதிக் கொடுத்த வசனங்களை ஜெ உரக்கப் படிக்கிறார். ""2,34,561 விவசாயிகளுக்கு
ரூ. 18,43,323.47 பைசா வழங்கியிருக்கிறேன்'' என்பன போன்ற எண் கணித எழுச்சியுரைகளை அவர் எவ்வளவுதான் குரலை உயர்த்திக் கத்தியபோதிலும் கூட்டம் எதையும் கண்டு கொள்வதில்லை.
கூட்டத்தை வாடகைக்குப் பேசிய மா.செ; ஒ.செ. மற்றும் மந்திரிகள், ""இரண்டு விரலைக் காட்டியபடி தொடர்ந்து கூத்தாடவேண்டும்'' என்று மட்டுமே "மக்களுக்கு' உத்தரவிட்டிருக்கின்றனர். எனவே, ""இலவசம் இலவசம்'' என்று புரட்சித்தலைவி எத்தனை முறை கூவினாலும், அதைக் கடுகளவும் சட்டை செய்யாமல் இரண்டு விரலைக் காட்டியபடி தன் கடமையைச் செய்து கொண்டிருக்கிறது, மக்கள் கூட்டம்.
கருணாநிதியின் கூட்டமோ, "இலவசம்' என்ற சொல்லைத் தலைவர் உச்சரித்தவுடனே "திராவிட நாடு' என்ற சொல்லைக் கேட்ட போன்ற மனக்கிளர்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறது. சர்வாதிகார ஆட்சியை விரட்டுவதற்கான உத்வேகத்தை மக்களுக்கு வழங்கும் ஆற்றல், 2 ரூபாய் அரிசிக்கும், கலர் டிவிக்கும் தான் உண்டு என்ற இந்த அரசியல் கண்டுபிடிப்பின் விளைவாக, இனி ஆடித் தள்ளுபடி, கோடைத்தள்ளுபடி ஆகியவற்றின் வரிசையில் ""சர்வாதிகார எதிர்ப்பு தள்ளுபடி விற்பனை'' என்ற புதிய விற்பனை உத்தியை வணிகர்களுக்கு கற்றுத் தந்திருக்கிறார், கருணாநிதி.
இந்தக் கேலிக்கூத்துகளுக்குத் தேவைப்படுகின்ற கூட்டத்தைக் கூட்டி, கூட்டத்திற்குத் தேவையான உணர்ச்சியையும் முன்கூட்டியே தட்டியெழுப்பித் தயார் நிலையில் வைப்பதற்காக தேர்தல் மேடைகளில் கூத்தாடுகிறார்கள் "குத்தாட்டக் கலைஞர்கள்'. இதுதான் தமிழகத்தின் தேர்தல் களம்.
சர்வாதிகார ஆட்சி எதிர்ப்பு, குடும்ப ஆட்சி தடுப்பு, இலவச சைக்கிள், இலவச அரிசி, இலவச டிவி போன்ற எவையும் தோற்றுவிக்காத உணர்ச்சியையும் உள்ளக் கிளர்ச்சியையும் மக்களிடம் தோற்றுவிக்கக் களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்கள் சினிமாக் கழிசடைகள்.
ஜெசசி கும்பலிடம் சினிமா எடுக்க கந்துவட்டிக்குக் கடன் வாங்கிக் கட்டமுடியாததால் 1996இல் "ஜெயாவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து "தி.மு.க.வில் சேர்ந்து, ராஜ்யசபா உறுப்பினர் ஆகி, மனைவியின் டிவி கம்பெனிக்கு ""சன்'' டிவியில் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வியாபாரமும் தேடிக் கொண்ட சரத்குமார் என்ற நடிகன் அவமானத்தால் துடிக்கிறார். ""சோனியா காந்திக்கு பூச்செண்டு கொடுக்க விடாமல் விரட்டினார் தயாநிதி மாறன்; மாநாட்டில் முன்வரிசையிலிருந்து என்னை கிளப்பிவிட்டார் பேராசிரியர்; நானிருக்க நடிகன் விஜய் வைத்து தபால்தலை வெளியிடுகிறார்கள்'' என்று கூறி மக்களிடம் நீதி கேட்கிறார்.
""என்னை ஜெ என்ன சொல்லி அவமானப்படுத்தினார் என்பதை வெளியில் சொன்னால் சமூக அமைதிக்கே ஆபத்து வந்துவிடும் என்பதால் பொறுமையாக இருக்கிறேன்'' என்று உறுமுகிறார் "தேவரினச் சிங்கம்' கார்த்திக்.
மகளை வைத்துப் படமெடுத்து கடனில் சிக்கி, கரையேர வழியின்றி ""சன்'' டிவியைச் சரணடைந்த பாக்கியராஜ், ""அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். விசுவாசிகளுக்கு போதிய "மதிப்பு' இல்லையே'' என்று மருகுகிறார்.
போயசு தோட்டத்துக்குப் போய் 3 சீட்டுக் கேட்டு மூக்கறுபட்டு வந்த தி.மு.க.வின் முன்னாள் கொள்கை பரப்புச் செயலர் டி.ராஜேந்தர், ""நான் எடுத்த படம் ஒருதலை ராகம், வைகோ என்பது ஒருதலை நாகம், அது கலைஞர் காலடியில் அமர்ந்திருந்த காகம்'' என்று முழங்குகிறார்.
மேடையேறிய சிம்ரன், ""எனக்கு பேசத் தெரியாது'' என்று வெட்கப்பட்டதும் அ.தி.மு.க. வேட்பாளரான ரவுடி சேகர் பாபு அவருக்கு வசனம் சொல்லித் தருகிறார். ""அம்மா ஆட்சியில் தண்ணிப் பிரச்சினையில்லை, ரவுடிப் பிரச்சினையில்லை'' என்று அவர் சொல்ல, ""நோ வாட்டர் ப்ராளம், நோ ரவுடியிசம்'' என்று அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறார் சிம்ரன். இந்தப் பேச்சைக் "கேட்பதற்காக' மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை காத்து நிற்கிறது ஒரு கூட்டம்.
இதுதான் தமிழகத்தின் தேர்தல் களம். இந்தக் கழிசடைகள் யாரை நம்பி இத்தனை தைரியமாக மேடையேறுகிறார்கள்? இலவசத் திட்டங்கள் தோற்றுவிக்கும் அடிமைப் புத்தியைக் காட்டிலும் ஆபத்தான இந்த விபச்சார ரசனைக்கு மக்கள் ஆட்படுவது ஏன்?
""கொட்டுச் சத்தத்துக்கும் கூத்தாடிகளுக்கும் கூடும் கூட்டம் அவர்களை வேடிக்கை பார்க்குமேயொழிய அவர்கள் பேச்சைக் கேட்டு ஓட்டுப் போட்டுவிடாது. இதை வைத்து மக்களின் அரசியல், பண்பாட்டுத் தரத்தை அளவிட்டு விடக்கூடாது'' என்று நாம் ஆறுதல் பட்டுக் கொள்ள முடியுமா?
நடிகர்களும் நடிகைகளும் தோன்றும் நுகர்பொருள் விளம்பரங்களை முதலில் வேடிக்கை என்று எண்ணிப் பார்க்கும் மக்கள்தான் பிறகு அவற்றின் வாடிக்கையாளர்கள் ஆகிறார்கள். இந்தத் தேர்தல் வேடிக்கையும் கூடத் திடீரென்று தோன்றிவிடவில்லை.
சுதந்திர தினத்தன்று விடுதலைப் போராட்ட வீரர்களும், குடியரசு தினத்தன்று ஜனநாயக உரிமைக்குப் போராடும் செயல் வீரர்களும், மே தினத்தன்று தொழிற்சங்க முன்னணியாளர்களும், பெண்கள் தினத்தன்று பெண் உரிமை அமைப்பினரும், உழவர் திருநாளன்று விவசாயிகளும் தொலைக்காட்சியில் வாழ்த்து சொல்வதையோ, தத்தம் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதையோ பார்த்திருக்கிறீர்களா? மே தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் தொலைக்காட்சியில் தோன்றி ஆசியும் அறிவுரையும் வழங்கிய நட்சத்திரக் கழிசடைகள்தான் இப்போது தேர்தல் மேடைகளில் நேரில் தோன்றுகிறார்கள்.
"இவர்களுக்கென்ன சம்பந்தம்' என்ற கேள்வியை அப்போதெல்லாம் எழுப்பாத மக்கள் கூட்டம், இப்போது மட்டும் எப்படிக் கேட்கும்? திரைப்படத்தைப் பார்க்கும்போது ரசிகன், ஓட்டுப் போடும்போது வாக்காளன் என்ற பிரிவினை வார்த்தைகளில் இருக்கிறதேயன்றி வாழ்க்கையில் ஒரே மனிதன் இரண்டாக இருப்பதில்லை.
வீடு, பள்ளிக்கூடம், கோயில், சினிமா, அரசியல் போன்றவை வெவ்வேறு தளங்கள் என்றும் அந்த இடங்களுக்குரிய விதிகளும் விழுமியங்களும் வேறுவேறானவை என்றும் கருதப்பட்டது உண்டு. ஆனாலும், இவற்றுக்கிடையில் சீனப் பெருஞ்சுவர் எதுவும் இல்லை.
பருவம் வராத பிள்ளைகள் பார்க்கத்தகாதவை என்று கருதப்பட்ட ""மிட்நைட்'' மசாலாக்களையும், தந்தையும் பிள்ளைகளும், சகோதரனும், சகோதரியும் சேர்ந்தமர்ந்து பார்க்க முடியாதவை என்று கருதப்பட்ட விரசக் காட்சிகளையும் குடும்பமே ஒன்றுகூடி ரசிக்கிறது; ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதற்கான இடங்கள் என்று கருதப்பட்ட பள்ளிகளின் விழாக்களில் தமது பிள்ளைகள் குத்தாட்டம் ஆடுவதைக் கண்டு பரவசப்படுகிறார்கள் பெற்றோர்கள். கோயில் திருவிழாக்களுக்குக் கூட்டம் சேர்த்து ஆன்மீகத்தை வளர்க்கவும் ""ரிகார்டு டான்ஸ்'' தேவைப்படுகிறது; அதே ""டான்ஸ் பார்ட்டி''தான் அரசியல் கூட்ட மேடைகளிலும் ஏறுகிறது.
நடிகைகளை விலைபேசி மேடையேற்றும் போட்டியில் ஜெயலலிதாவிடம் தோற்றுப் போனதால், தி.மு.க.வினர் "அரசியல் ஒழுக்கம்' பற்றி அங்கலாய்த்துக் கொள்கிறார்கள். இந்த ஒழுக்கசீலர்களின் ""சன்'' டி.வி.தான் மேற்சொன்ன முடைநாற்றத்தின் மூலாதாரம் என்பதையும், கலைஞர் பொதுவாழ்வுக்குப் பொன்விழா கொண்டாடியபோது அந்த மேடையில் அரங்கேற்றப்பட்டதும் கோடம்பாக்கத்தின் ""ரிகார்டு டான்ஸ்''தான் என்பதையும் அவர்கள் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
இது, கலாச்சாரச் சீரழிவு குறித்த ஒழுக்கவாத அங்கலாய்ப்பல்ல; அரசியல் சீரழிவின் நோய்க்குறிகளை அடையாளம் காணும் முயற்சி. லஞ்சத்தை வெறுத்த மக்களை, "லஞ்சம் தவிர்க்க முடியாதது' என்று காலப்போக்கில் அங்கீகரிக்கச் செய்ததைப் போல, போலீசு அராஜகங்களைக் கண்டு கோபமுற்ற மக்களை, "போலீசு என்றாலே அராஜகம்தான்' என்று ஏற்கச் செய்ததைப்போல, குடிநீருக்கும் சிறுநீருக்கும்கூடக் காசு கொடுத்தாகவேண்டும் என்று பழக்கியதைப் போல இந்த அரசியல் சீரழிவுகளுக்கும் மக்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
தான் போகின்ற இடத்திற்குத் தனது ரசிகர்களையும் சாதிக்காரர்களையும் இழுத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருப்பதனால்தான் கார்த்திக், சரத்குமார், விஜயகாந்த் போன்ற கழிச டைகள் களத்தில் குதித்திருக்கிறார்கள். தன்னை பிழைப்புவாதியாகவும் தன் தாயை ஒழுக்கசீலியாகவும் தி.மு.க.வினர் சித்தரித்ததனால் கடுங்கோபமுற்ற வைகோ, ஜெயாவை வீட்டுக்கு அழைத்து, தன்னுடைய "குடும்பமே பிழைப்புவாதக் குடும்பம்தான்' என்பதைத் தொலைக்காட்சிக் காமெராக்களின் முன்னால் நிரூபித்துக் காட்டுவதன் மூலம் தன் நல்லொழுக்கத்தை நிலைநாட்டுகிறார்.
""புலிக்கு 35, சிறுத்தைக்கு 9, சிங்கத்துக்கு சைபரா?'' என்ற கார்த்திக்கின் தன்மான முழக்கமும், சரத்குமாரின் அவமானக் குமுறலும் அவர்களை அம்பலப்படுத்துவதைக் காட்டிலும், அவர்களால் உணர்ச்சியூட்டப்படும் சாதிக்காரர்களின் பிழைப்புவாதத்தையே பெரிதும் அம்பலமாக்குகின்றன. ஊழல் குற்றத்துக்காகத் தன்னாலேயே கைது செய்யப்பட்ட இந்திரகுமாரியையும், சேடப்பட்டியையும் கருணாநிதி வரவேற்கும் காட்சி, ஆபாசத்தில் நடிகர் செந்திலின் அரசியல் பிரச்சாரத்தையும் விஞ்சுகிறது.
"பொறுக்கித் தின்பதற்காக ஓட்டுக் கட்சிகளிடையே நடைபெறும் இந்தப் போட்டியினூடாக இடையிடையே மக்களுக்குப் பொசிவதுதான் ஜனநாயகம்' என்ற புதிய இலக்கணம் அரசியல் அகராதியின் அதிகாரபூர்வ அங்கீகாரத்தைப் பெறுவது மட்டுமே இப்போது பாக்கியாக இருக்கிறது.
இந்தச் சீரழிவு, ஓட்டுப்பொறுக்கிகள் மட்டும் தனித்து நின்று நிகழ்த்திய சாதனை அல்ல. மறுகாலனியாக்க அரசியல் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக நாட்டின் இறையாண்மையும் மக்களின் வாழ்வுரிமைகளும் சூறையாடப்பட்டு வரும் சூழலில் "ஜனநாயகம்' என்பதே இந்த அரசமைப்பிற்கு ஒரு கோமாளித் தொப்பியாக மாறி வருவதையே இந்த நிகழ்ச்சிப் போக்குகள் பிரதிபலிக்கின்றன.
கொள்கையின் இடத்தை கவர்ச்சித் திட்டங்களும் கவர்ச்சி நடிகர்நடிகைகளும் பிடித்துக் கொண்டதைப் போலவே, கட்சிகளைப் பணமுதலைகள் நேரடியாகவே கைப்பற்றிக் கொண்டு விட்டனர். கோடீசுவரன் மட்டும்தான் வேட்பாளராக முடியும் என்ற இந்த நிலைமை, கட்சி என்ற அமைப்பையே இல்லாமல் செய்து விட்டது என்பதை ஓட்டுக் கட்சித் தலைவர்களும் அறிவார்கள். ஆனால், அது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
தற்போதைய ஓட்டுச் சீட்டு அரசியலுக்குக் கட்சியும் தொண்டர்களும் எந்த விதத்திலும் தேவைப்படவில்லை என்பதே உண்மை. பொதுக்கூட்டம் முதல் மாநாடு வரை அனைத்துப் பணிகளுமே காண்டிராக்டர்களிடம்தான் ஒப்படைக்கப்படுகின்றன. தொண்டர்கள் கொடிகட்டி, போஸ்டர் ஒட்டிய காலம் மலையேறி விட்டது. பிரச்சாரத்துக்கு நடிகர்களை மட்டுமின்றி, தொழில்முறை பட்டிமன்றப் பேச்சாளர்களையும் அமர்த்திக் கொள்ளும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தலைவர்களின் பாதுகாப்புக்கோ போலீசு அல்லது தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி. மக்கள் கருத்தை அறிவதற்குக்கூட கீழ்மட்ட கட்சி அமைப்புகள் தேவையில்லை. கருத்துக் கணிப்புகளையும் தனியார் ஏஜென்சிகளே செய்து கொடுத்து விடுகின்றன. தொண்டர்களுக்கான பணிகள் அனைத்தையும் "காசு' செய்து முடித்து விடுகிறது.
காசுக்கு விலைபோகாத விசுவாசத்தையும், உழைப்பையும் தொண்டர்களிடம் கோருகின்ற கொள்கை எதுவும் ஓட்டுக் கட்சிகளிடம் இல்லை. இலவச டி.வி., சைக்கிள், வெள்ள நிவாரணம் முதலான "கொள்கைகளை' மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கும் தொண்டர்களே தேவையில்லை. இந்தக் "கொள்கைகளுக்காக' உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ள ஏழைகள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்.
ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கவும் ஓட்டை உத்திரவாதம் செய்யவும் மட்டுமே நம்பகமான தொண்டர்கள் தேவைப்படுகிறார்கள். இதையும் தனியார் ஏஜென்சிகளிடம் விற்பனையாளர்கள் மூலம் செய்து முடிப்பது சாத்தியம் என்பதால், கட்சி என்ற அமைப்பிற்கான அவசியமே ஏறத்தாழ இல்லாமல் போய்விட்டது.
தொண்டர்களும் கட்சியும் தேவையில்லாமல் போய்விட்ட போதிலும் ஜனநாயகத்துக்கு வாக்காளர்கள் தேவைப்படுகிறார்கள். தங்களுடைய வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் இந்தத் தேர்தலுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாக வாக்காளர்களை மாற்றுவதில் ஓட்டுப் பொறுக்கிகள் பெருமளவு வெற்றி பெற்றிருப்பதனால்தான், அவர்களுக்கு "ஜனநாயகம்' தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
அதனால்தான் விவசாயத்தின் அழிவு, நகரமயமாக்கம், தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை வாங்கப்படுவது, தொழிற்சங்க உரிமைகள் ரத்து செய்யப்படுவது, கல்வி, மருத்துவம், தண்ணீர் என அனைத்தும் வணிகமயமாக்கப்படுவது.. என மக்களுக்கு ஓராயிரம் பிரச்சினைகள் இருந்தும், அவையெதுவும் இந்தத் தேர்தலில் எழுப்பப்படாமல் இருப்பதைப் பார்க்கிறோம்.
மறுகாலனியாக்கத்தால் சூறையாடப்படும் தங்கள் வாழ்க்கை பற்றியோ, இழந்து வரும் உரிமைகள் பற்றியோ, உதிர்ந்து வரும் விழுமியங்கள் பற்றியோ எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல், இலவம்பஞ்சாய்ப் பறந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் இலவசமே உறுதியான, புரியக்கூடிய கொள்கையாக மக்களுக்குத் தெரிகிறது. உரிமையின் இடத்தை இலவசம் கைப்பற்றிக் கொண்டதைப் போல, மக்களுடைய தன்மானத்தின் இடத்தை சினிமாக் கழிசடைகளின் "அவமானக் குமுறல்' ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது.
"ஓட்டுக் கட்சிகள் அனைவரும் அயோக்கியர்கள்' என்ற பொதுவானதொரு கருத்து மக்களிடம் நிலவிய போதிலும், அவர்களுடைய அயோக்கியத்தனங்களின் தன்மையை இனம் காண்பதற்கான அரசியல் அறிவை மக்கள் பெற்றுவிடவில்லை. வறுமையும் வேலையின்மையும் உழைப்புச் சுரண்டலும் மக்களுக்கு வர்க்க உணர்வைத் தானாகவே ஏற்படுத்திவிடுவதில்லை. எதிரிகளைப் பற்றி மட்டுமல்ல, அவர்களால் இழிந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அவர்களுடைய அபாயகரமான நிலை குறித்த புரிதலையும் நாம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. புரட்சியாளர்கள் முன் உள்ள சவால் இதுதான்.
மு சூரியன்
Wednesday, July 19, 2006
ஒரு நதியின் கண்ணீர்
நர்மதைச் சமவெளியைப் பாதுகாக்க பழங்குடியின மக்கள் நடத்திவரும் போராட்டம் சட்டபூர்வ அமைதிவழிப் போராட்டங்களின் சாத்தியப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி விட்டது.
மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களின் வழியே ஓடும் நர்மதை மற்றும் அதன் கிளை ஆறுகளில் 30 பெரிய, 135 நடுத்தர மற்றும் 3000 சிறு அணைக்கட்டுகள் கட்டி, ம.பி., குஜராத், மகாராஷ்டிரா, இராசஸ்தான் ஆகிய மாநிலங்களுக்குப் பாசன குடிநீர் வசதிகள் உருவாக்கித் தரும் திட்டம் 1980களில் தீட்டப்பட்டது. இத்திட்டத்தில் சர்தார் சரோவர் மற்றும் நர்மதா சாகர் என்ற இரு அணைகள்தான் முக்கியமானவை.
குஜராத்தில் சர்தார் சரோவர் அணையைக் கட்டுவதற்காக மட்டும் இதுவரை ஏறத்தாழ 181 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அக்கிராமங்கள் அனைத்தும் அந்த அணையில் தேக்கப்படும் நீரில் மூழ்கிவிட்டன. இந்த அணை தற்பொழுதுள்ள 110 மீட்டர் உயரத்தில் இருந்து 121.92 மீட்டர் உயரத்திற்கு எழுந்து நிற்கும்பொழுது, மேலும் 117 கிராமங்கள் நீரில் மூழ்கிவி டும் என்றும்; ஏறத்தாழ 35,000க்கும் அதிகமான குடும்பங்கள் அக்கிராமங்களில் இருந்து அப்புறப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
சர்தார் சரோவர் அணையால் தங்களின் கிராமங்களை, நிலங்களை இழந்துவிட்ட நர்மதை சமவெளியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், தங்க ளின் மறுவாழ்க்கைக்காக நர்மதை பாதுகாப்பு இயக்கம் எனும் அமைப்பின் கீழ் அணி திரண்டு, கடந்த இருபது ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
இந்த அணை 90 மீட்டர் உயரத்தை அடைந்த பொழுது, இனியும் அணையின் உயரத்தை அதிகரிக்கக் கூடாது எனக் கோரி நர்மதை பாதுகாப்பு இயக்கத்தினர் 1995ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். விசாரணை என்ற போர்வையில் வழக்கை ஐந்து ஆண்டுகள் இழுத்தடித்த உச்சநீதி மன்றம், 2000ஆம் ஆண்டில் அணையின் உயரத்தை அதிகரிக்க அனுமதி வழங்கித் தீர்ப்பளித்தது.
இப்பிரச்சினை தொடர்பாக 2002ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றம் வழங்கிய மற்றொரு தீர்ப்பில், ""அணையின் உயரத்தை ஐந்து ஐந்து மீட்டராக உயர்த்தலாம்; அணையின் உயரத்தை அதிகரிப்பதற்கு முன், அதிகரிக்கப்படப் போகும் உயரத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு மறுவாழ்வு அளித்திருக்க வேண்டியது கட்டாயமாகும்'' எனக் குறிப்பிட்டது.
மேலும் இத்தீர்ப்பின்படி, அணையின் உயரத்தை அதிகரிப்பது மறுவாழ்வு அளிப்பது ஆகியவற்றில் ஏதாவது பிரச்சினை உருவாகி, அப்பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் போகும் இக்கட்டான, இழுபறி நிலை உருவாகுமானால், அதில் தலையிட்டுத் தீர்க்கும் முழு அதிகாரமும் இந்தியப் பிரதமருக்கு வழங்கப்பட்டது.
குஜராத் அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் அணையின் உயரத்தை 90 மீட்டரில் இருந்து 110 மீட்டராகக் கிடுகிடுவென உயர்த்தி விட்டது. ஆனால், அணை உயர்த்தப்பட்டதால் வாழ்விழந்த பழங்குடி இன மக்களோ, எவ்வித மறுவாழ்வு உதவியும் கிடைக்காமல் நடுத்தெருவில் நிற்கின்றனர். நர்மதை பாதுகாப்பு இயக்கம், இப்பழங்குடி மக்களின் அவலத்தை பலமுறை மைய அரசிடம் முறையிட்டும் கூட, அவையனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது.
இந்த நிலையில், நர்மதை கட்டுப்பாடு ஆணையம் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் அணையின் 110 மீட்டர் உயரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் மறுவாழ்வும், நிவாரணமும் வழங்கப்பட்டு விட்டதாகக் கூறிவிட்டு, அணையின் உயரத்தை 121 மீட்டர் அளவிற்கு உயர்த்திக் கொள்ள குஜராத் அரசிற்கு அனுமதி அளித்தது. இந்தத் திமிர் பிடித்த ஆணையை எதிர்த்து, நர்மதை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் மேதா பட்கரும், அவ்வியக்கத்தைச் சேர்ந்த இரு பழங்குடியினரும் உண்ணாவிரதப் போராட்டத்தை மார்ச் இறுதியில் தில்லியில் தொடங்கினர்.
பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதைவிட, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிடும் முயற்சியில் படுதீவிரமாக இறங்கியது மன்மோகன் சிங் அரசு. மேதா பட்கர், தங்களின் கோரிக்கை நிறைவேறாமல் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கவே, ஏப்ரல் 5 அன்று நள்ளிரவில் 1,000க்கும் அதிகமான போலீசாரை ஏவி, அவரைக் குண்டுகட்டாகத் தூக்கி வந்து, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் ""சிறை'' வைத்தது. மேதா பட்கர் மீது தற்கொலை முயற்சி வழக்கு போடப்பட்டதோடு, நர்மதை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் மீது ஆறு பிரிவுகளில் கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன.
மைய அரசின் இந்த மிரட்டலுக்குப் பணியாமல், மேதா பட்கர் மருத்துவமனையிலேயே உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். நர்மதை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்ட பல்வேறு அறிவுஜீவிகள், ஜனநாயக இயக்கங்களின் ஆதரவோடு நர்மதை கட்டுப்பாடு ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, ""தர்ணா'' போராட்டத்தை நடத்தி வந்தனர்.
மன்மோகன் சிங் அரசு தனது ""மனித முகமூடி''யைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சைபுதீன் சாஸ் தலைமையில் ஒரு அமைச்சர் குழுவை, மறுவாழ்வுப் பணிகளை ஆய்வு செய்ய அனுப்பி வைத்தது. ம.பி. மாநிலத்தில் ஆறு இடங்களை மட்டும் பார்வையிட்ட இக்குழு, அந்த இடங்களில் மறுவாழ்வுப் பணிகள் மயிரளவிற்குக் கூட நடக்கவில்லை என்ற உண்மையை ஒப்புக் கொண்டது.
இந்த நிலையில், நர்மதை பாதுகாப்பு இயக்கத்தினர் கோரியபடி நர்மதை கட்டுப்பாடு ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்வதுதான் நியாயமான நடவடிக்கையாக இருக்க முடியும். ஆனால், இராசஸ்தான், குஜராத், ம.பி. மாநில பா.ஜ.க. முதல்வர்கள், அணையின் உயரத்தை அதிகரிக்கும் கட்டுமானப் பணிகளை நிறுத்த மறுத்துவிட்டனர். இந்தச் சிக்கலை தீர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்கோ, பிரச்சினையை மீண்டும் உச்சநீதி மன்ற விசாரணைக்குத் தள்ளி விட்டுவிட்டுத் தப்பித்துக் கொண்டார்.
உச்சநீதி மன்றமோ, தான் அளித்த தீர்ப்புக்குத் தானே நியாயமாக நடந்து கொள்ள மறுத்துவிட்டது. ஒருபுறம், பிரச்சினையை மீண்டும் மன்மோகன் சிங்கிடம் தள்ளிவிட்டு, தனது பொறுப்பைத் தட்டிக் கழித்தது. இன்னொருபுறமோ, அணையின் கட்டுமானப் பணிகளை நிறுத்த மறுத்துவிட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகளைக் கொடுத்துவிட வேண்டும் என அறிவுரை வழங்கியது.
ஏழை மக்களைப் பந்தாடும் ஆளும் கும்பலின் இந்த விளையாட்டால் ஏமாற்றமடைந்த நர்மதை பாதுகாப்பு இயக்கத்தினர் 21 நாட்கள் கழித்துத் தங்களின் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். தங்களின் போராட்டத்தால், தங்களின் பிரச்சினையை இந்தியா முழுவதும் தெரிவித்து விட்டோம் என்ற திருப்தியைத் தவிர, வேறு எதனையும் பெற முடியாமல் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தை குஜராத் மக்களுக்கு எதிரானதாகச் சித்தரித்திருந்தார் மோடி. ஆனால், உண்மையென்ன? சர்தார் சரோவர் அணையில் தற்பொழுது தேக்கப்படும் தண்ணீரின் ஒரு பகுதியை எடுத்து, 3178 கிராமங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப் போவதாகப் பீற்றிக் கொண்டு, அதற்கு குஜராத் மாநில பா.ஜ.க. அரசு 464.77 கோடி ரூபாய் செலவழித்தது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் பாதியளவு கிராமங்களுக்குக் கூட இன்னும் குடிநீர் கிடைக்கவில்லை. அப்படியென்றால், அந்தத் தண்ணீரெல்லாம் எங்கே மாயமாய் போகிறது?
ஒருபுறம் குடிநீர் வழங்குவதை மட்டுமின்றி, ஆறுகளையே தனியார்மயப்படுத்தும் பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்திக் கொண்டு, இன்னொருபுறம் சர்தார் சரோவர் அணையை மக்களின் குடிநீர் தேவைக்காகக் கட்டுகிறோம் என்பது நம்பக்கூடியதாக உள்ளதா?
நாடெங்குமே விவசாயம் நசிவடைந்து, விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் பொழுது, சர்தார் சரோவர் அணையால், எந்த விவசாயி பலன் அடையப் போகிறார்? ஏழை விவசாயியா? இல்லை, விவசாயத்தில் புகுந்துள்ள நவீன பணக்கார விவசாயிகளும், தரகு முதலாளித்துவ நிறுவனங்களுமா?
இந்தப் போராட்டம், மக்களின் பெயரால் போடப்படும் வளர்ச்சித் திட்டங்களின் பின் மறைந்துள்ள கோர முகத்தை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. மக்கள், தங்கள் உரிமைகளுக்காகச் சட்டபூர்வமான, அமைதியான வழிகளில்கூட இனி போராட முடியுமா? அதை ஆளுங்கும்பல் சகித்துக் கொள்ளுமா? என்ற கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.
காந்திய வழியில் உண்ணாவிரதம் இருந்த மேதா பட்கரை திகார் சிறையில் அடைத்தால் தனது ஜனநாயக விரோதத் தன்மை அம்பலமாகி விடும் என்பதால்தான், அவரை மருத்துவமனையில் ""சிறை'' வைத்தது, மைய அரசு. அருந்ததி ராய் போன்ற பிரபலமான புள்ளிகளைத் தவிர, தனது இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்களைச் சந்திப்பதற்குக் கூட மேதா பட்கர் அனுமதிக்கப்படவில்லை. மேதா பட்கரோடு கைது செய்யப்பட்ட 300 பேர் அவரைப் போல ""மருத்துவமனைக்கு'' அழைத்துச் செல்லப்படவில்லை.
இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்த பொழுதே, குஜராத் முதல்வர் மோடி, ""சர்தார் சரோவர் அணையால் பாதிக்கப்படுபவர்களைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுவதில்லை'' எனத் திமிரோடு சொன்னார்.
இது பா.ஜ.க.வின் பாசிச முகம் மட்டுமல்ல; காங்கிரசு அரசின் "மனித முகமும்' இதுதான். உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், ""பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கக் கூடிய அளவிற்கு அரசிடம் சக்தி இல்லை'' என்றார். இப்படிப்பட்ட பாசிசப் பேர்வழிகளிடம் மறுவாழ்வு கொடுங்கள் என எத்தனை முறை கெஞ்ச முடியும்?
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக மேதாபட்கர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எதிராக மோடியின் 51 மணி நேர உண்ணாவிரத எதிர்போ ராட்ட வக்கிரக் கூத்தைக் கண்டிக்க முன்வராத உச்சநீதி மன்றம், நர்மதை இயக்கத்தினரின் சட்டபூர்வ போராட்டத்தை ""ஆத்திரமூட்டக் கூடிய நடவடிக்கை'' என்றது. இது போன்ற போராட்டங்கள் ""நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக முடியும்'' எனப் பீதியூட்டியது.
""மக்கள் கூடும் இடங்களில் பொதுக் கூட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்தக் கூடாது; முக்கிய சாலைகளின் வழியே ஊர்வலம் போகக் கூடாது; அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபடக் கூடாது. ""பந்த்'' போன்ற போராட்டங்கள் சட்டவிரோதமானவை'' என ஏற்கெனவே பல சட்டபூர்வ ஜனநாயக உரிமைகளை நீதிமன்றங்கள் தட்டிப் பறித்ததை நினைத்துப் பார்த்தால், உச்சநீதி மன்றத்தின் பீதியூட்டல் நமக்கு வியப்பைத் தராது.
தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் நாடு மறுகாலனியாக்கப்படுவதற்கு ஏற்றவிதத்தில் சட்டபூர்வ உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்ட பின், ""சட்ட விரோதமான'' வழிகளில் போராடுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது?
பணி பாதுகாப்புக்காகப் போராடிய ஹோண்டா தொழிலாளர்கள், அரியானா போலீசாரால் இரத்தம் சொட்ட சொட்ட அடிக்கப்பட்டனர்.
போஸ்கோ என்ற பன்னாட்டு நிறுவனத்திற்காக தங்களின் நிலங்களை இழக்க முடியாது எனப் போராடிய ஒரிசாவின் பழங்குடி இன மக்கள் ஒரிசா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மக்களின் போராட்டங்களை எதிர்க்கும் எதிரிகள் ஆயுதபாணியாக நிற்கும் பொழுது, மக்களும் தங்களின் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்தித் தானே தீரவேண்டும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது என்பது வெற்று பழமொழி அல்லவே!
மு சுடர்
சந்திப்பு
தமிழ்சோக்கிள் ஆசிரியர் இரயாகரனாகிய நான் கனடா வந்துள்ளேன்.என்னுடன் 23.07.2006 அன்று கனடாவில் சந்திப்பு ஒன்று நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மற்றும் எனது நூல்கள் தேவைப்படுபவர்கள் அங்குபெறமுடியும்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம்
SCARBOROUGH CIVIC CENTRE
150 BOROUGH DRIVE
(MACOWAN AND ELLESMAIRE)
சந்திப்பு
தமிழ்சோக்கிள் ஆசிரியர் இரயாகரனாகிய நான் கனடா வந்துள்ளேன்.என்னுடன் 23.07.2006 அன்று கனடாவில் சந்திப்பு ஒன்று நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மற்றும் எனது நூல்கள் தேவைப்படுபவர்கள் அங்குபெறமுடியும்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம்
SCARBOROUGH CIVIC CENTRE
150 BOROUGH DRIVE
(MACOWAN AND ELLESMAIRE)