"என்னடா பசங்கல்லாம் தெருப்பக்கம் விடுவிடுன்னு ஓடுறானுவ. சாமி கௌம்பிடுச்சா?''
""இல்லியே. மாரியம்மன் கோயிலுட்ட வேட்டு சத்தத்தையும் காணோம், பூசாரியும் கத்தக் காணோம்.''
""பசங்க கூட்டமாகப் போறத பாத்தா சந்தேகமா இருக்கு, ஒருவேள கொறவன் கொறத்தி செட்டு போயிருக்குமோ!''. தங்கையன் குழப்பத்துக்கு மருந்து போல வாயில் இன்னும் கொஞ்சம் புகையிலையை அமுக்கினான்.
""ஏன் சுப்பய்யா, சாமி கௌம்பிடுச்சா?''
""இன்னும் பூசாரியே கௌம்புல, நீ வேற. உச்சவ நாளு சும்மாவா! மணி ஆறு, ஏழு வரைக்கும் அர்ச்சனைய காமிச்சு காமிச்சு தச்சனைய முடிச்சு போட்டு இன்னக்கி எம்புளிச்சம்பழத்த பூசாரி அறுத்து போடுறதுக்குள்ள அவன் அவன் என்ன கதெ கட்டி நிக்கப் போறானுவளோ? இந்த வருசமாவது சண்ட வம்பு இல்லாம சாமி தெரு சுத்தி வரணும்னு நாலு ஊரு சனமும் வேண்டிக்கிட்டு கெடக்கு. தங்கையா கொஞ்சம் வெத்தல கொடேன்.''
""ஒர்ரூவா வெத்தலக்கி ஒம்போது பேரு கௌம்பி வாங்கய்யா. சாமியும் கௌம்புலங்கிற, பின்ன ஏன்ய்யா தெருப்பக்கம் கூட்டமாக ஓடுறானுவ.''
""ஓ, அதக்கேக்குறியா, மார்மான் கோயிலுக்கு எவுத்தாப்ல மெத்தவூடு இருக்கு பாரு, அவுரு மவன், அமெரிக்காவுலருந்து வந்துருக்கார்யா. அவுரு, இந்தக் கையில வச்சுட்டு படம்புடிப்பாங்க பாரு, அத கண்ணுக்கிட்ட வச்சிட்டு ஊரையே படம் புடிக்கிறார்யா. நம்ம டீக்கட கலியனகூட டீ ஆத்துறப்ப புடிச்சார்யா. அப்புடியே சினிமாப் படம்போல தெரிதுங்கறேன். அர ட்ராயர போட்டுக்கிட்டு வயப்பக்கம் படம் புடிக்க போறாரு போல. இந்தப் பயலுவளும் சாமி தூக்குறத வுட்டுட்டு அந்தாளு பின்னால சாமி வந்தமாரி ஓடுறானுவங்கிறேன்!''
""ஊதாங்கொழ மாதிரி இத்துணூண்டு இருக்குது. அது என்னமாப் புடிக்குது. போயி ஆட்டக் கட்டிப் போட்டு வர்றேன்.'' சுப்பய்யனின் வெறும் ஒடம்பில் கொசு வெத்தலப்பாக்கு போடுவது போல குதப்ப ஆரம்பிக்க மாரடித்துக் கொண்டதுபோல "நச்'சென்று கொசுவை அடிக்க நெஞ்சில் அடித்துக் கொண்ட சுப்பய்யன் ""ஆத்தாளகட்ட! நடவுக்கு ஆள் சொன்ன மாரி சாயங்காலம் ஆனா கரெக்டா வருதுங்கறேன். எல்லாம் எரும மாட்டு கொசுவா இருக்குது.'' முனகிக் கொண்டே நகர்ந்து போனான்.
""யோவ் இந்தப் பசங்கல்லாம் எங்கய்யா போனானுவ, இரண்டு கழி வெட்டணும், தீக்குழிபக்கம் கயிறு கட்டணும், ஒரு வேலயும் ஆவுல, சாமி தூக்குற நேரத்துல இவனுவ பாட்டும் படம்புடிக்கிறவரு பின்னாடி ஓடிட்டானுவ. டேய் மாரியப்பா போய் சாடாப் பயலுவளயும் சாமி பெறப்பாடு ஆவனும்னு சொல்லி இழுத்துட்டு வாடா. யோவ் பூசாரி! எல்லா பூவயும் சாத்தி அலங்காரம் பண்ணு. இந்த வருசம் மாரியம்மா அலங்காரத்துல ஊரே தகதகங்கணும்.'' நாட்டாமைக்காரர் தேங்காப்பூத்துண்டை உதறி தோளில் போட்டபடி சொல்லிவிட்டு டீக்கடைப் பக்கம் போனார்.
அமெரிக்க கேமராவுக்குப் பின்னே இளவட்டமெல்லாம் ஓடிப் போய்விட்டதால், அருள்மிகு கீழ்மாத்தூர் மாரியம்மன், பவர் கம்மியானது போல் எரியும் குண்டு பல்புக்குக் கீழே, தூக்குபவர்களை எதிர்பார்த்து மங்கலாகக் குந்தியிருந்தது.
சுந்தரமூர்த்தி வீட்டின் முன்பு சுப்பய்யாவும், தங்கையனும் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தனர். ""தே புள்ளய கொஞ்சிக்கிட்டு... அவுங்க வர்ராங்க, கிசுகிசுன்னு பேசாம இரு.'' வேகமாக மனைவியைக் கடிந்து கொண்ட சுப்பய்யன் சுந்தரமூர்த்தி வாசல் பக்கம் வந்தவுடன் ""ஒண்ணுமில்லய்யா... தம்பி அமெரிக்காவுலேந்து வந்துருக்குன்னு சொன்னாங்க. பாத்துட்டுப் போவலாம்னு...'' வார்த்தையை முடிக்காமல் ஓசையின்றிப் புன்னகைத்தான்.
பதிலுக்கு சுந்தரமூர்த்தியின் வாயிலிருந்து முதலில் எச்சில் வந்தது. பிறகுதான் வார்த்தை. வெற்றிலை பாக்கை அலட்சியமாகத் துப்பிவிட்டு ""தம்பி அசந்து தூங்குறான், இப்ப முடியாது அப்புறம் வாங்களேன். இதுக்கா படைதெரண்டு வந்தீங்க, என்ன தங்கையா உன் ஆடு பூரா நம்ம வயப்பக்கம் வருதுன்னு கேள்விப்பட்டேன்.''
""அட, அப்புடியெல்லாம் இல்லீங்க. மத்தியான சோறுகூட இல்லாம இவ ஆட்டோட கெடந்து காயிறா.''
""ஆமாங்க. அதெல்லாம் உட்ருவமா? வேண்டாத சனங்க சும்மா கௌப்பிவுடும். வரப்புல போறப்ப வர்றப்பவெல்லாம் அய்யா வூட்டு வயல கண்ணுபோல பாத்துக்கறோம். நல்லா சொல்லுது சனங்க!''
""சரி, சரி,. பொண்டுவ புள்ளைங்க ஏன் நின்னுகிட்டு கெடக்குறீங்க, போய் சோலிய பாருங்க.'' சுந்தரமூர்த்தியின் முகபாவம் அறிந்து கண்ணை இடுக்கிக் காட்டி பெண்களைப் போகச் செய்தனர்.
""அப்புறம் என்ன சுப்பய்யா ஊர்ல சேதி? நம்ம குழந்தசாமி கருப்பூரு பக்கம் ஏக்கரா கணக்குல நெலம் ஒப்புக் கொள்ளப் போறதா கேள்விப்பட்டேன். ஏதுய்யா அவனுக்கு இவ்ளோ வசதி, அவன் புள்ளகூட எங்கயோ திருப்பூர்லயோ, கோயமுத்தூர்லயோ வேல செய்றதால கேள்விப்பட்டேன்.''
""அத ஏன் கேக்குறீங்க. சும்மா அங்க இங்க சுத்தி வேலை பாத்துகிட்டு கெடந்தான் அவன் புள்ள குமாரு. ஒரு வருசமாச்சு, திடீர்னு ஏம்புள்ள அமரிக்காவுல வேலைல இருக்குன்னு சொல்றான். மாசமாசம் பந்தனூரு பேங்குக்கு அது என்னவோ செக்கோ சக்கோ வருதுங்குறாங்க. அமெரிக்காவுல வேலைன்னா சும்மாவா?''
""என்னது அமெரிக்காவுல வேலைல இருக்கானா?'' கேட்ட மாத்திரத்தில் மூட்டை நெல்லை தலையில் கொட்டியது போல திணறிப் போனார் சுந்தரமூர்த்தி. பதட்டத்தைத் தணித்துக் கொள்ள கையிலிருந்த சீவல் பொட்டலத்தை வெடுக்கெனக் கிழித்து பிடி சீவலை வாயில் போட்டுக் குதப்பிக் கொண்டு உள்ளங்கையை தொடையில் தட்டி கால்களை வேகமாக ஆட்டினார்.
""ஆமாங்க! அமெரிக்காவுல பெரிய வேலைல இருப்பான் போலிருக்கு. தெருவுலயே பெரிய மெத்தவூடா கட்ணும்னு கூட புள்ள சொன்னதா கொழந்தசாமி சொல்லிட்ருந்தான். ஆயிக்காரிக்கு பணமனுப்பி நகை செஞ்சு போட்ருக்கான். தரணி பக்கம் புதுசா தென்னந்தோப்பு வாங்கிப் போட்ருக்கான். நல்ல வேலைல இருப்பான் போலருக்குங்க. நம்ம தம்பியப் போல.''
உஷ்ணம் தலைக்கேறியது போல சுந்தரமூர்த்தி வெடுக்கென எழுந்து வேகமாகப் போய் எச்சிலைத் துப்ப, சுப்பயனுக்கும் தங்கையனுக்கும் ஆட்டம் கண்டு போனது.
""என்னடா தம்பியப் போல? தம்பி படிப்பென்ன, வேலை என்னான்னு தெரியுமா ஒனக்கு?'' தங்கையனுக்கு வெடவெடத்து குதிகால் வேர்க்க ஆரம்பித்து விட்டது.
""என்னமோ கம்ப்யூட்டரோ, ஏதோன்னு தம்பி சொல்ல கேட்ருக்கேன். நம்ப மண்டக்கி ஏறுமா அது! தம்பி என்னா படிப்பு, டவுன்ல போயி படிச்சது, பெங்களூர்ல படிச்சது, அவன் குமாரு சும்மா சுத்திக்கிட்டு கெடந்தானுங்க. யாரையாவது காக்கா புடிச்சு அமெரிக்கா போயிருப்பான்போல'' சுந்தரமூர்த்தியின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும்படி தங்கையன் தயங்கித் தயங்கி சமாளித்தான்.
""பெரிய அமெரிக்காவாம், சம்பாரிக்கிறானாம், ஒனக்கு ஊரத் தெரியுமா, உலகத்தத் தெரியுமா? அமெரிக்காவுல கக்கூசு கழுவுறவன் கூடத்தான் இருபத்தஞ்சாயிரம் ரூபா சம்பாதிப்பான். எங்கயாவது வீட்டு வேல, அது இதுன்னு புடிச்சு புகுந்துருப்பான்.''
மேற்கொண்டு வாயைத் திறக்காமல் தலையை அழுத்தமாக ஆட்டிக் கொண்டான் சுப்பய்யன்.
ஒரு மாதிரி நிதானத்துக்கு வந்த சுந்தரமூர்த்தி கழனி குடித்த மாடுபோல நாக்கை நீட்டி மடித்து உதடுமுழுக்க தடவிக் கொண்டே ""இருக்கட்டும், இருக்கட்டும், மனுசன்னா அப்படித்தான், கெடந்தமாதிரியே இருக்கக் கூடாது. படிப்படியா மேல வரணும், உங்களமாதிரியா பத்து ரூவா அதிகங் கெடச்சா ரூட்ட மாத்துறதும், ஆசைப்பட்டு ஆட்ட மாட்ட வாங்குறதும் அப்புறம் வழி இல்லேன்னா, அய்யா அஞ்சு குடு, பத்த குடுன்னு வந்து நிக்கறதும்.''
சுந்தரமூர்த்தி வேறு விதமாகப் பேச சுப்பய்யன் குழம்பிப் போய் தங்கய்யனைப் பார்த்தான். சற்று தளர்ந்து இருந்த தங்கய்யன் மீண்டும் குழம்பிப் போனவனாய் கைகட்டுவதுபோல விலாவைச் சொறிந்து கொண்டு தலையைச் சுற்றியதுபோல பாவணை செய்து பேசுவதை நிறுத்திக் கொண்டான். சுப்பய்யனும் வார்த்தை கொடுக்காமல் எச்சரிக்கையாய் தலையாட்டுவதில் சேர்ந்து கொண்டான்.
""சரி, குழந்தசாமியப் பாத்தா என்ன வந்து பாக்க சொல்லுங்க, என்ன? மறந்துராத. இந்தாப் பத்துரூவா, ஆளுக்கு அஞ்சி எடுத்துக்குங்க.'' இடுப்பில் கட்டியிருந்த வாரிலிருந்து சலவை நோட்டாய் பத்து ரூபாய்த் தாளை நீட்ட, இரண்டு கையையும் குவித்துப் பணிவாய் வாங்கி இரண்டு கண்ணிலும் ஒற்றிக் கொண்டான் சுப்பய்யா!
""ஒண்ணும் அவசரமில்ல, வேலையெல்லாம் முடிச்சுட்டு குழந்தசாமிய வரச்சொல்லு. நிலம் நீச்சுங்கறான், வீடுங்கறான், பாவம் பையன் அனுப்புற காச கண்ட மண்லயும் போட்டு பாழாக்கிடப் போறான். வரச்சொல்லு, பாத்து செஞ்சுடுறேன்'' சரிங்க என்று நடையை கட்டினர்.
""பெரிய மனுஷரு, பெரிய மனுஷருதான். இந்த கொழந்தசாமி நல்லது கெட்டதுக்கு அய்யாவ கலந்துகிட்டா என்ன? பணத்தப் பாத்தோன்னே ஏழூரு திமிருங்கறேன்!'' முனகிக் கொண்டே போனார்கள்.
திண்ணையிலிருந்து மாரியம்மன் கோயிலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரமூர்த்தி. கோயில் அடிபம்பில் வாளியை வைத்து தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த பூசாரி எதேச்சையாய் சுந்தரமூர்த்தியைப் பார்த்துவிட ""வர்றேன், வர்றேன், சேதி இருக்கு'' ஜாடை காண்பித்துவிட்டு நெருங்கி வந்தார்.
""திருவிழாவுக்கு முன்னால தெனம் தெனம் வந்த, இப்ப மடி கனத்துப் போச்சுல்ல. என்ன ஏய்யா தேடப்போற?''
""அய்யய்ய, அட என்னங்க நீங்க, மாரியம்மனுக்கு காப்ப பிரிக்கறதுக்குள்ள கணக்கு வழக்கு, மண்டகப்படின்னு ஆளுக்காளு என்னப் பிரிச்சி எடுத்துக்குடுவாங்க போலிருக்கு. அந்தாண்ட இந்தாண்ட நகர முடியல.''
""பாத்துய்யா. பூசாரி பழக்க வழக்கம் சரியல்ல, சேரித்தெரு ஆளுங்க எல்லாத்தையும் கொண்டாந்து கோயில் திண்ணையில ஏத்துறாருன்னு ஒரே கம்ப்ளயின்டா இருக்கு. நான்தான் பாத்துக்கலாம்யான்னு சொல்லி நாட்டாமையையும் ஊர்க்காரங்களையும் அனுப்பி வச்சேன். உனக்கு ஏன்யா இந்த வேல? பழக்க வழக்கத்த கோயிலுக்கு வெளியில வச்சுக்க. நாங்க ஒன்னும் தடுக்கல.''
""அப்புடியெல்லாம் ஒன்னுமில்லீங்க. சொன்னா கேக்குற மாரி ஊரு இல்ல. ஏற்கெனவே நீங்க ஐடியா பண்ணி, அடிபம்ப கோயிலுக்கு வெளியில் வச்சமாதிரி திண்ணைக்கும் ஒரு கேட்டை போட்டு வுட்ருங்க. பேருக்கு பேராவும் இருக்கும், ஊருக்கு ஊராவும் இருக்கும்.''
""சரி, அது கெடக்கட்டும், அந்த கொழந்தசாமி மவன்....''
சுந்தரமூர்த்தி முடிப்பதற்குள்ளேயே பூசாரி முந்திக் கொண்டு ""ஆமாங்க, ஆமாங்க, அத ஒங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். அவன் புள்ள அமெரிக்காவுல ஒரு ஆளாயி அவன் வூட்ல கலர் டிவி என்ன? வயல்ல போரு கொட்டா என்ன? என்ன மந்திரம் பண்ணானோ, மாயம் பண்ணானோ, அந்த மாரியாத்தாளுக்குத்தான் வெளிச்சம். ஏதோ புதுசா வீடு கட்ட தளவரிச போடணும். அதுக்கு மாரியம்மன் உத்தரவு கேக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தான். ஆள காணோம். யாரு மதிக்கிறா அவன் மதிக்க.''
""ஏன், நீந்தான் உத்தரவு கொடேன். அவன் மெத்தவீடு கட்டுவான், அப்புறம் அங்க ஒரு கோயில் கட்டுவான். காசு கெடய்க்கும்னு நீயும் தான் போயேன்'' எரிச்சலைக் கொட்டித் தீர்த்தார் சுந்தரமூர்த்தி.
""அதுக்காக அவன் பின்னாடி போக முடியுங்களா, இப்ப நீங்க இருக்கீங்கன்னா உங்க அப்பா காலத்துலேர்ந்து நிலம், கோயில்னு பரிபாலனம் பண்றீங்க. தம்பீங்கல்லாம் அமெரிக்கா போய் சம்பாரிச்சாலும் ஊரு வரமுறைய காவந்து பண்ணிகிட்டு இங்கே இருக்கிறீங்க. திடீர்னு அவன் புள்ள அமெரிக்கா போய் சம்பாரிச்சா எல்லாம் ஒண்ணாயிடுமா? தெருவுக்குள்ளேயே இவன் யாருக்கும் அஞ்சு காசு இழக்கிறதில்லயாம். அக்கம்பக்கம்லாம் ஒரே கிரீசலா இருக்குன்னு கேள்விப்பட்டேன்.''
""கேள்விப்பட்டது இருக்கட்டும்யா, புள்ள பேச்சக்கேட்டு ஊர்லேயே ஒரு பங்களா கட்டிக்கிட்டு தனியா பரிபாலனம் பண்ண ஆரம்பிச்சான்னு வச்சுக்க. ஊரே எங்களுதும்பானுக. அப்பறம் மாரியம்மன தூக்கி அவனுக கையில கொடுத்துட்டுப் நீயும் நானும் கொறவன் கொறத்திக்குப் பின்னாடி நிக்கவேண்டியதுதான். எனக்கு ஒண்ணுமில்ல. இப்பயே எம்புள்ளைங்க "எதுக்கு கிராமத்துல கெடந்துகிட்டு, ஒன்னு அமெரிக்கா வாங்க, இல்ல, மெட்ராஸ்ல மகாபலிபுரம் ரோட்ல பங்களா கட்டிக்கிட்டு இருங்க'ங்குது. நான்தான் பொறந்த ஊரவுட்டு போவக் கூடாதுன்னு இங்கேயே கெடக்குறேன்.''
""ஆ....மா நாளைக்கே நடக்கப் போவுது. நீங்க ஏன் கெடந்து மனசப் போட்டு கசக்கிக்கிட்டு. இவ்வளவு காலம் மணியாட்றேன். எனக்கு ராகம் புரியாது? எத எங்க வைக்கணும்னு எல்லாம் மாரியாத்தாளுக்குத் தெரியும். நாளைக்கு கோயிலுக்கு வருவான். பாத்துக்கலாம்.''
""நான் கூட கொழந்தசாமிய பாக்க வரச்சொல்லயிருந்தேன். அங்க வந்தான்னா கோயில்லியே ஆள நிப்பாட்டிக்கிட்டு எனக்கு ஆள் வுடு. நேர்ல பாத்துக்குவோம்.''
""வா கொழந்தசாமி, என்ன தட்டு தாம்பலம்னு பலமா இருக்கு.'' பூசாரி பூச்சரத்தை நிலைப்படியில் தேய்த்து அறுத்துக் கொண்டே விசாரித்தார். குழந்தைசாமி மனைவி சின்னப்பொண்ணுடனும், கொழுந்தியாளுடனும் கோயில் வாசலில் நின்றிருந்தார். ""அதான் சொன்னேனுங்களே பூசாரி அய்யா, பையன் வர்ற சித்திரையிலேயே வீட்டக் கட்டுங்க'ன்னு மாயாவரத்துல உள்ள பெரண்டு மூலமா பிளான வரைஞ்சி அனுப்பிட்டான். மார்மாங்கோயில்ல உத்தரவு வாங்கிட்டு மளமளன்னு வேலைய ஆரம்பிக்கலாம்னு பாக்குறேன். ஊர்லயும் விவரமான ஆளுங்ககிட்ட யோசனை கேட்டு செய்யினுட்டான். அதான் பொட்லம் போட்டுப் பார்த்து உத்தரவு வாங்கலாம்னு வந்தேன்.''
""எல்லாம் நம்பக் கையியலா இருக்கு. அந்தப் பாவாடைக்காரி கையில இருக்கு. நேத்திக்கிக் கூட பாரு, எம்புள்ளைக்கி சரியான காய்ச்சல். மாரியம்மா கையில பத்துப் பைசா இல்லயே, ஏற்கனவே கடன வாங்கி வீட்டுக்கு ஒலை வுட்டாச்சி. யாருக்கிட்டப் போயி நிக்கறதுன்னு யோசனை பண்ணிகிட்டு நிக்கிறேன். திடீர்னு நம்ம செருகுடி ராமமூர்த்தி வந்து பண்ணை ஊட்டுக்கு ஒரு அர்ச்சன பண்ணிட்டு வச்சுக்க இருபது ரூவான்னு குடுத்துட்டுப் போறாரு. யாரு நெனச்சா, பணம் கெடைக்கும்னு. தோ கெவுலி கூட சொல்லுது. வுட்டேன், வுட்டேன். சரி... சரி... அர்ச்சனையா, தட்டக் குடு, மவம் பேருக்குத்தானே'' கேட்டுக் கொண்டே பூசாரி உள்ளே போனார்.
விட்டத்திலிருந்த பல்லி தன் மேல் ஏதோ பழி விழுந்ததுபோல நெளிந்து வளைந்து பயந்து ஓடியது. மாரியம்மனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு இரண்டு பொட்டலத்தை குலுக்கிப் போட்ட பூசாரி திண்ணையில் நின்று கொண்டிருந்த சிறுமியைப் பார்த்து, ""தே மருதாயி வா, சாமிய வேண்டிக்கிட்டு ஒரு பொட்டலத்த எடுத்துக் குடு'' என்றார்.
திடீரென அழைத்ததால் லேசான பயத்துடன் போன மருதாயி மாறி மாறி பொட்டலத்தைப் பார்த்து நிற்க ""கஞ்சி வாங்கறதுன்னா குறுக்கப் பூந்து பத்து வாளிய நீட்டு, பொட்லத்த எடுன்னா முழிச்சுக்கிட்டு நிக்குற.'' பூசாரி போட்ட சத்தத்தில் வெடுக்கென்று ஒரு பொட்டலத்தை எடுத்தாள் மருதாயி. குழந்தைசாமியும் அவன் மனைவியும் கொக்கு போல கழுத்தைத் தூக்கி ஆவலுடன் எட்டிப் பார்த்தனர். பொட்டலத்தைப் பிரித்துக் கொண்டே, பூசாரி, ""டேய் சுப்ரமணி, போய் சொன்னதை செய்'' என்று தெருவில் நின்ற மகனுக்கு குரல் கொடுத்தார். பொட்டலத்தைப் பார்த்தவர் ஒரு நிமிடம் கண்களை மூடி புருவத்தைப் பிசைந்தபடி ""கொழந்தசாமி, அம்மா இன்னும் நாள் பாக்குறா போல இருக்கு. பாரு துன்னுத்துப் பொட்டலம். அது அதுக்கு நேரம் வரணும்ல.''
கூட இருந்த குழந்தசாமியின் மனைவி ""ஆமாம் ஆமாம் இதெல்லாம் அவசரப்படுற காரியமில்ல. நம்ம நினைக்கிறோம். அவ மனசில என்ன நெனச்சிருக்காளோ. நாங்க கிழிக்கிற கோட்ட பையன் தாண்டமாட்டான். பொறுத்து செய்வோம்'' பயபக்தியோடு கன்னத்தில் போட்டுக் கொண்டு பேசினாள்.
""தே, சுந்தரமூர்த்தி அய்யா வர்றாரு பாரு'' என்று மனைவியிடம் கிசுகிசுத்தார் குழந்தைசாமி. ""அய்யா நல்லாயிருக்கீங்களா. நான் பாத்தே நாளாகுது, பையன் விசயமா பொட்டலம் போட்டு பாக்க வந்தோம். கடகடவென விசாரணைக் கைதிபோல கொட்டினார்.
""ஆங், மாரியம்மனுக்கு மிஞ்சிதான் மத்ததெல்லாம். பையனுக்கு என்ன விசயம்?''
""அதான் குமாரு அமெரிக்காவுல இருக்கானுங்களே. அவன் வர்ற சித்திரையிலேயே மெத்த வூடு ஒன்னு கட்டுங்குறான். தெருவுலேயே ஒரு மனைக்கட்டு கெடக்கு. அது விசயமாத்தான் சாமிகிட்ட உத்தரவு வாங்கலாம்னு வந்தேன். பாத்தா இப்ப நமக்கு நேரம் பொருந்தி வல்லேன்னு தெரியுது. சுப்பய்யன் கூட அய்யா வரச்சொன்னீங்கன்னு சொன்னான். மரத்துரையில மவ வூட்டுக்கு போயிட்டேன். வரமுடியல. அய்யாகிட்டயும் இது விசயமா யோசனை கேக்கலாம்னுதான் இருந்தேன்.''
""கொழந்தசாமி உங்க ஆளுங்களுக்கு தெரியாத யோசனையில்ல. உம் புள்ள அமெரிக்காவுல இருக்கற விசயமே எனக்குத் தெரியாது. தெரிஞ்சா அமெரிக்காவுல இருக்குற நம்ம தம்பிய வுட்டே ஏதாவது ஹெல்ப் பண்ணியிருப்பேன், அது கெடக்கட்டும். எங்கயாவது நல்லாயிருந்தா சரி.'' வெடுக்கென முகத்தை திரும்பி மாரியம்மனிடம் பலமாக வேண்ட ஆரம்பித்தார்.
""அய்யா அப்படி நெனக்காதீங்க, தம்பி கூட கடுதாசி எழுதுனா ஒங்கள எல்லாம் விசாரிக்கும். ஒரு வருசமா மவ கல்யாணம், இவருக்கு ஆபரேசன்னு ஊருலேயே இருக்குறதுல்ல, அதாங்க.'' குழந்தைசாமியின் மனைவி பணிவுடன் ஒதுங்கி நின்று பேசினாள். ஆமோதிப்பது போல குழந்தைசாமியும் தலையாட்டியபடி ""ஐயா, எங்காளுக கெடக்கட்டும், நாங்க நல்லாருக்கறதப் பாத்து பக்கத்துல பொருமல் ஜாஸ்தி. பையனா, தெருவுலேயே மெத்தவூடு கட்லாம்ங்குறான். சாமியா பொறுத்திருங்குது. நீங்களே சொல்லுங்க. ஒங்களுக்குத் தெரியாத ஓசனையில்ல, என் நேரம், நல்லவேள அய்யா கோவில் பக்கம் வந்தீங்க.''
இதுதான் நேரமென்று காத்திருந்த சுந்தரமூர்த்தி, ""குழந்தசாமி நீ சொல்றதும் சரிதான். உன் தெருக்கார ஆளுங்க நீ ஓல மாத்துனதுக்கே மேலகீழ பாத்தாங்க. மெத்த வீடு கட்டுனேன்னு வச்சுக்க, அவனுங்க மூஞ்சி செத்தவீடு மாதிரி ஆயிடும். அவுங்கன்னு இல்லய்யா. ஒண்ணு தெரிஞ்சுக்க. நான் நல்லாருக்கறத பாத்து என் சொந்தக்காரனுவங்க வயிறு எரியறாங்க. ஒனக்கு இருக்காதா? இன்னொன்னு சொல்றேன். ஏதோ நீ இங்க பொறந்த, வாழ்ந்த, இருந்த, ஒன் தலைமுறை போயிடுச்சு. உன் புள்ள படிச்சு பெரியாளாயி அமெரிக்காவும் போயிட்டான். அவன் தலைமுறைக்கு இது இன்னமே ஒத்து வருமா? ஏன் இங்கேயே பூந்துகிட்டு. காலனிக்குள்ளே கெடந்துகிட்டு. பேசாமா குத்தாலம் ரோட்டுப் பக்கமா எடத்தை வாங்கிட்டு பங்களா மாறி வீட்ட கட்டிட்டு ஒரு மதிப்பா மரியாதையா முன்னேறுவியா, படிச்ச புள்ளைக்கி இது தெரியாதா? நீயாவது எடுத்துச் சொல்லி டவுனு பக்கம் போய் ஜாலியா இருப்பீங்களா, ஏன்ய்யா, இந்த பொச்சரிப்புல பூந்துக்கிட்டு?''
பூசாரியும் சேர்ந்துகொண்டான். ""ஆமாம் கொழந்தசாமி குத்தாலம் ரோட்டு மேல மளமளன்னு பிளாட்டு போயிட்டுருக்கு. அய்யாவுக்கு தெரிஞ்சவுருதான் அவரு. சொன்னேன்னு வச்சுக்க அய்யாவே ஒடனே முடிச்சுக் குடுப்பாரு.''
வேகமாக சுந்தரமூர்த்தி ""யோவ், யோவ் நீ பாட்டுக்கும் சொல்லிட்டுப் போற. கொழந்தசாமிக்கு மாயரத்துலேயே ஆளுருக்கு. நம்ப என்ன?'' என்று வெளுத்தாற்போல பேச, ""தே, நீ பாட்டுக்கும் சும்மா நிக்குற? அது மாயரத்துல தம்பி பெரண்டுங்க. நீங்க பாத்து நல்ல எடமா முடிச்சுக் குடுங்க. நல்ல ஓசனையா படுது. தம்பிக்கும் வந்து போனா வசதியா இருக்கும்'' குழந்தைசாமி மனைவி வேண்டினாள்.
கோயிலுக்குள் பூசாரியின் மகன் மணியடிக்க, ""பாரு மணி கூட அடிக்குது. நல்ல சகுனம், தேடிப்போன தெய்வம் கூடி வந்தமாரி! ஒந்நேரம் அய்யாவும் வந்தாரு. மாரியம்மா, எல்லாம் நல்லா நடக்கணும்'' கண்ணை மூடி வேகமாகப் பேசிய பூசாரி குழந்தசாமி கையில் துன்னூறைப் போட்டான். சுந்தரமூர்த்தியை வேண்டிக் கொள்வது போல பார்த்த குழந்தசாமி ""அய்யா, நாளைக்கி உங்கள வந்து பாக்கட்டுங்களா? செக்கு புக்கு வீட்லதான் இருக்கு. நைட்டு பையனுக்கு ஒரு போன போட்டுட்டு காலைல வேலைய முடிச்சுடுலாம்.''
கேட்டுக் கொண்டிருந்த பூசாரி திடீரென சாமி வந்ததுபோல ""நைட்டு என்னா நைட்டு, போயி ஒடனே போன போட்டு கேப்பியா, காலைல அவுங்களுக்கு பல ஜோலி இருக்கும். அவுங்களே வர்ரேங்கறப்ப நீ வேற லேட் பண்ணிகிட்டு'' என்று வேகப்படுத்தினான்.
""சரிதாங்க பேரன் இந்நேரம் காலேஜ் விட்டு வந்திருப்பான். தம்பிக்கி போன போட்டு விசயத்த சொல்லிட்டு ஒடனே வர்றேங்க. தே அய்யாகிட்ட சொல்லிட்டு சீக்கிரம் கௌம்பு.'' மூவரும் வேகமாக விடைபெற்றுக் கொண்டனர். ""நேரம் முட்டுனா சாமி சந்துலயும் வரும்பாங்க. அய்யா வந்தாரு பாரு'' குழந்தசாமி பழக்கப்பட்ட வழியில் பேசிக் கொண்டே விரைந்தார்.
""கொழந்தசாமி, பையனுக்கு புரியும்படி வெளரமா எடுத்து சொல்லு. பூசாரி மந்திரச் சொல் மாதிரி திரும்பத் திரும்பக் கத்தினான்.
இரண்டு மணி நேரம் கடந்தது. திண்ணையில் அமர்ந்திருந்த சுந்தரமூர்த்திக்குத் தவிப்புக் கூடிக் கொண்டே போனது. ""அவன் மவன் இருக்கானே, அப்பா பேச்சை மீறமாட்டான். அதவுட கொழந்தசாமி மாரியம்மன் உத்தரவ மீற மாட்டான். நல்லதுக்குத்தானே சொல்றோம். வீணாப்போவவா சொல்றோம்'' பூசாரி மாறி மாறிப் புலம்பிக் கொண்டிருந்தான்.
""தோ கொழந்தசாமி, பூசாரி வெடுக்கென எழுந்திருக்க சுந்தரமூர்த்தி பதட்டத்தை மறைத்துக் கொண்டு ஒரு வரட்டுப் புன்னகையுடன் வா குழந்தசாமி, என்ன முடிவு பண்ணுன?''
""முடிவு என்னங்க முடிவு, நீங்க சொல்றப்ப. பணத்த என்ன கீழ கொட்டவா சொல்றீங்க. எடம் மதிப்பும் கூடுது. புள்ளையும் நாளைக்கி டவுனு பக்கம் இருந்த மாரி இருக்கும். என்னடா யோசிக்கிறேன்னு ஒரு போடு போட்டேன் பாருங்க. சரி ஒங்க யோசனைப்படி செய்ங்கப்பான்ட்டான். அப்ப நாளைக்கி போயி முடிச்சுடலாம்ங்க. சரிங்களா.''
""என்னா? அண்டையா, அசலா உனக்காக வர்றேன், காலைல சீக்கிரமா வந்துரு. ஊரக் கூட்டாத. நீ மட்டும் வா'' என்று மெனக்கெட்டு வருவதுபோல பாவனை செய்தார் சுந்தரமூர்த்தி.
""மாடமேய வுட்ருந்தேன். அவுத்து கொட்டாயில கட்டணும். நீங்க சொன்ன மாதிரி காதும் காதும் வச்சமாதிரி முடிச்சுரலாம். பூசாரி அய்யா, அப்ப வரட்டுங்களா, ரொம்ப மெனக்கெட்டீங்க. சந்தோசங்க'' கையெடுத்து நன்றியுடன் கும்பிட்டுவிட்டு குழந்தசாமி நகர்ந்தார்.
சுந்தரமூர்த்தியை ஒருவிதப் புன்னகையுடன் பார்த்த பூசாரி, ""அப்பவே சொன்னன்ல. அவன் யோசிக்கலன்னாலும் அவன் மண்டைல பூந்து நம்ம சொல்படி யோசிக்கணும்னு வேண்டிக்கிட்டு ஆத்தாவுக்கு மண்ட வாங்கி வச்சேன்ல. நடக்காம போவுமா.''
""மாரியம்மனுக்கே நீ காப்பு போடற ஆளாச்சே!''
""மண்டையா, எப்படி இதெல்லாம் சத்தம் போடாம பண்ற?'' சுந்தரமூர்த்தி கேட்க வெடுக்கென பூசாரி ""நானா?'' என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க வெடித்துக் கிளம்பிய சுந்தரமூர்த்தியின் சிரிப்பில் பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த கோழி தனது குஞ்சுகளைக் காப்பாற்றியபடி ஓடியது.
மு துரை. சண்முகம்