தமிழ் அரங்கம்

Saturday, March 29, 2008

வேசி... அறம்… அனுபவம்.

வேசி...

அறம்…

அனுபவம்.


ப்போது நான் கோவையில் சர்வீஸ் என்ஜினியராகக் குப்பை கொட்டிக் கொண்டிருந்த காலம். சாயங்காலம் எல்லா கால்சும் முடித்து விட்டு, இரவு பத்து மணிக்குத்தான் வீட்டுக்கு கிளம்புவேன். அப்படியே பைக்க ஓட்டீட்டு காந்திபுரம் போய், ஒரு பாதாம் பால் அடிக்கிறது வழக்கமாகி விட்டது.

அது ஒரு தகரப் பெட்டிக்கடை. வெளியில் நின்றுதான் பாதாம் பால் குடிக்க வேண்டும். முதல் நாளே அவளைக் கவனித்தேன். கடையை விடத் தள்ளி கொஞ்சம் உள்ளடங்கி இருக்கும் வெளிச்சம் குறைந்த பகுதியில் நின்றிருந்தாள். அந்த சூழ்நிலைக்கு கொஞ்சம்கூட பொருந்தாமல் தெரிந்தாள். நடுத்தர வயதிலும் பலமான மேக்கப். வழக்கு மொழியில் சொன்னால் செமகட்டை. நான் பார்ப்பது தெரிந்ததும் என்னைப் பார்த்து சிரித்தாள். எனது ஆறாவது அறிவுக்கு உடனடியாகப் புரிந்தது.

""டே ராசப்பா!..... எஸ்கேஏஏஏப்..'' அவசரமாக பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு பைக்கை உதைத்தேன். அன்று இரவு என் கனவில் மேக்கப் சுந்தரி சிரித்து விட்டுச் சென்றாள்.

மறுநாள் மாலை ஆக ஆக ஒரு வேலையும் சரியாக ஓடவே இல்லை. ஒரே பரபரப்பாக இருந்தது. பாதாம் பால் வேறு நல்ல சுவையாக இருந்து தொலைத்தது. ""என்னடா! பத்து நாள் கக்கூஸூ போகாதவன் மாறி மூஞ்சிய வச்சுட்டு திரியுற?'' நண்பன் வேறு நக்கலடித்தான். எனது குறுகுறுப்பு அதிகரித்தது. எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் ""டே ராசப்பா! இது உனக்கு ஒரு சவால்டா. உன்னோட ஒழுக்கத்தோட பலம் இவ்வளவுதானா? இன்னிக்கு பால் சாப்பிட போற, ஆனா திரும்ப அதை பாக்க மாட்ட...ஓகே?''

சரியாக 9.59க்கே பாதாம் பால் கடைக்கு ஆஜர். முதலில் எதிர்ப்புறமாகத் திரும்பி நின்று கொண்டே குடித்தேன். "சனி'தான் நம்ம மச்சானாச்சே! சாதாரணமாகத் திரும்புவது போல திரும்பினேன்.

அவள் எதிர்பார்த்திருந்தாள் ... ! அதே கூப்பிடும் சிரிப்பு. என் உள்காயத்தை மறைத்துக்கொண்டே ""சே! இதுக்கு பிச்சை எடுக்கலாம்..'' என்று சத்தமாகச் சொன்னேன். சட்டென்று அவள் முகம் சுருங்கியது, எனக்கு திருப்தியாக இருந்தது. கடைக்காரனுக்கு பணத்தைக் கடாசி விட்டு, பைக்கை கதறவிட்டு கிளம்பினேன். அவளை முறைத்துக் கொண்டே கடந்து சென்றேன்.

ஆயிற்று, இப்படியாக ஒரு வாரம் கடந்தது. ஒரு நாள் இரவு அதே பால்கடை. கொஞ்ச தூரத்தில் அதே அவள். இப்போதெல்லாம் அவள் என்னை பார்ப்பதில்லை. அதான் யோக்கியன் வேஷம் போட்டாச்சே! அந்த நேரத்தில் ஒரு சாராய பார்ட்டி என்னைக் கடந்து சென்றது. பாடிக்கொண்டே அவளைப் பார்த்ததும் நின்றது. ஒரு மாதிரியாக இளித்தபடியே ""யேய் வாடி'' என்றது. ""முன்னூறு'' உணர்ச்சியே இல்லாமல் காய்கறி விலை சொல்வது போல் சொன்னாள். எனக்கு சுவாரசியமானது. இவள்தான் நான் கண்ணால் பார்த்த முதல் விபச்சாரி. இதுவே நான் காதில் கேட்ட முதல் பேரம். இருக்காதா பின்னே?

""ஹா... தாரன்! வாடி மொதல்ல''

""இங்கியே குடு''

""ஓ! தர்லன்னா வரமாட்டியா? வாடின்னா..'' சொன்னபடியே கையைப் பிடித்து இழுத்தது சாராயக்கடை.

""கட்டித்தீனி! உட்றா கையை'' சீறினாள் அந்தப் பெண்.

சாராயம் சூடேறி விட்டான். ஒன்றும் பேசாமல் ஓங்கி ஒரு அறை விட்டான். சாலையில் யாரும் இல்லை. நானும், பாதாம்பால் கடைக்காரனும்தான் இருந்தோம். கடைக்காரன் முகத்தில் ஒரு மாற்றமும் காட்டாமல், "தம்ளர் கழுவுவதே வாழ்க்கை இலட்சியம்' போல கழுவிக்கொண்டிருந்தான். இதற்குள் நாலைந்து அடி விழுந்து விட்டது. உதடு கிழிந்து ரத்தம் வேறு கொட்ட ஆரம்பித்தது. சேலை முந்தானையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்து விட்டான்.

எனக்கு பொறுக்க முடியவில்லை. சாராயம் வேறு சோதாவாகத் தெரிந்தானா, இவன்கிட்ட காட்டாம வேற எவன்கிட்ட காட்டுவதாம், என் வீரத்தை! விடுவிடுவென்று சென்றேன்.

""டேய் மயிரு... கைய எடுறா. நான் முன்னாடியே காசு குடுத்துருக்கேன். நீ மூடிட்டு போயிரு. இல்ல மூஞ்சிய பேத்துருவேன்'' எனக்கே எனது குரல் சத்தமாகக் கேட்டது. சாராயம் இதை எதிர்பார்க்கவில்லை. என்னை அண்ணாந்து பார்த்தான். நான் அவனை விட அரை அடி உயரம். சப்த நாடியையும் ஒடுக்கிக் கொண்டு தள்ளாடியபடியே நகர்ந்து விட்டான்.

நான் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்தேன். மேக்கப் முழுவதும் கலைந்து உதட்டில் ரத்தம் வழிய கோரமாய் இருந்தாள். ""ரொம்ப தேங்க்ஸூ தம்பி'' என்றாள். கண்ணில் நீர். அவள் "தம்பி' என்று விளித்தவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சமாளித்துக்கொண்டே< ""பரவாயில்லைங்க. பாருங்க இந்த மாறி வேலை செய்யறதுனாலதான இப்படியெல்லாம் நடக்குது?'' அட்வைசுத் தண்ணியை அள்ளிவிட இதை விடவா நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். பின்னே நாமெல்லாம் எப்ப காந்தி தாத்தா ஆகறது?

ஆனால் என் அட்வைசை அவள் லட்சியம் செய்யவில்லை. ""தேங்ஸூ தம்பி'' என்று என்னிடம் சொன்னபடியே ரோட்டில் ஓடிய ஒரு ஆட்டோவை அழைத்தாள். என்னைத் திரும்பிப் பார்த்தபடியே சென்று ஏறிக்கொண்டாள். ஆட்டோ ஒரு நிமிடம் போகாமல் நின்றான். நானும் வருவேன் என்று எதிர்பார்த்தான் போல. அவள் போகச்சொன்ன பின்னரே ஆட்டோவைக் கிளப்பினான்.

அன்றிரவு என் காதுகளில் "தம்பி' என்ற வார்த்தை ஓலித்துக் கொண்டே இருந்தது. தூக்கம் கோவிந்தா. அதிகாலை மூன்று மணிக்கு முடிவு செய்தேன் ""இன்றிலிருந்து பாதாம் பால் விஷப்பரிச்சை ஓவர்''.

ஒரு மாதம் இப்படியே ஓடிவிட்டது. ஒருநாள் மாலை தற்செயலாக பழைய மேம்பாலம் அருகே வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது அவளைக் கவனித்தேன். மேம்பாலத்தின் கீழ் இருந்து வேக வேகமாக ஓடி வந்தாள். அதே அவள். கடைசியாகப் பார்த்த அதே கோலம். மேக்கப் கலைந்து கன்னம் வீங்கி அலங்கோலமாய் இருந்தவள், கையை வீசி வண்டியை நிறுத்தினாள். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினாள். கொஞ்சம் தொலைவில் பேண்ட்டை இடுப்புக்கு இழுத்தபடியே ஒரு காண்டாமிருகம் ஓடி வந்து கொண்டிருந்தது. அந்த உருவமே எனக்கு பயத்தை உண்டாக்கியது. ஆனாலும் மறைத்துக்கொண்டே வண்டியில் இருந்து இறங்கப் பார்த்தேன். அதான் ஒரு முறை ஒரு சோதாவிடம் ஹீரோ ஆகித் தொலைத்து விட்டிருந்தேன். இப்போது பின்வாங்கவா முடியும்?

""தம்பி வேண்டாம்பா! அது போலீஸூ, நீ வண்டிய எடு.''

நல்லவேளை முதலிலேயே சொல்லி காப்பாற்றினாள். கியரை மாற்றி வண்டியைக் கிளப்பினேன். பின்னால் தொத்திக் கொண்டாள். நன்றாக இடைவெளி விட்டு உட்கார்ந்து கொண்டாள். அது எனக்கு ஏமாற்றமாக இருந்தது!

"எங்கீங்க?'

"புதூரு'

வேறு பேச்சே இல்லை. புதூர் வந்ததும் நாலைந்து சந்து பொந்துகளில் திருப்பச் சொன்னாள். ஒரு குடிசையின் முன் இறங்கிக்கொண்டாள். வண்டிச் சத்தம் கேட்டு ஒரு ஓமக்குச்சி வெளியே வந்தான். ""சார் உள்ளாற வாங்க'' குழைந்து கொண்டே கூப்பிட்டான். ""யோவ் நா அதுக்கு வரல. அந்தம்மாவப் பாரு மூஞ்சி கிழிஞ்சி வந்துருக்காங்க'' அவன் அவளுடைய காயத்தை லட்சியம் செய்யவில்லை. ""என்னடி இன்னிக்கு கஸ்ட்டமரு இல்லியா?''

""போலீஸூ தொல்ல, வா அப்புறம் பேசிக்கலாம்'' அவள் உள்ளே போக எத்தனித்தாள். அவன் இளித்தபடியே என்னிடம் வந்தான். சுர்ரென்று வந்தது எனக்கு. ""டேய்...'' அதற்குள் அவள் குறுக்கிட்டாள். ""தம்பி என்னிய இங்க உடத்தான் வந்திச்சு. நீங்க போங்க தம்பி. நீ உள்ளார வாய்யா''

புதூரிலிருந்து வீடு வரும் வரை ரத்தம் வழிந்த அவள் முகத்தை நினைத்துக் கொண்டே வந்தேன். ""என்ன வாழ்க்கை! கண்டவன்கிட்ட அடி வாங்கி, உதை வாங்கி, நூறோ எரநூறோ சம்பாதிக்க கண்டவனோட படுத்து, நோயோட வாழ்ந்து நோயோட செத்து, நோய பரப்பி, குடும்பமில்லாம சாக்காலத்துல கூட நிம்மதி இல்லாம செத்து, அப்படியும் சாகும்போது பக்கத்துல யாரும் இல்லாம தனியா செத்து..''

இரவு இரண்டு மணிக்கு அம்மா கேட்டாள், ""இன்னிக்கு எவன்கிட்டடா அடி வாங்கிட்டு வந்த, தூங்காம பொரண்டுட்டு இருக்க?'' என்னிடம் பதில் இல்லை.

இரண்டு நாள் போயிருக்கும். காலையில் வழக்கம் போல கால்ஸ் போகாமல் கட் அடித்து விட்டு ரயில்வேசுக்கு எதிரே உள்ள பேக்கரியில் உட்கார்ந்து டீ அடித்துக் கொண்டிருந்தேன். ""தம்பி..'' நிமிர்ந்தேன். தையல் போட்ட உதட்டுடன் அவள். சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரும் தெரிந்தவர்கள் இல்லை.

""நல்லாருக்கீங்களா?'' என்ன ஒரு கேள்வி!

""..ம்ம் இருக்கேன் தம்பி. நீங்க இங்க பக்கத்துல தான் வேலை செய்யறீங்களா?''

""ஆமாங்க. அந்தாளு உங்க ஊட்டுக்காரருங்களா?''

""ம்''

""வேலைக்கெல்லாம் போறதில்லீங்களா?''

""கல்யாணத்துக்கு மின்னாடி போய்ட்டிருந்தாரு. இப்ப இல்ல.''

""உங்களுக்கு பசங்க புள்ளைங்க இருக்குதுங்களா?''

""ஒரு புள்ளயிருக்குது தம்பி.''

சப்ளையரிடம் அவளுக்கும் சேர்த்து டீ சொன்னேன்.

அவளிடம் கேட்டேன், ""ஏங்க! அவுசாரி வேல செய்யறீங்களே! கூச்சமாவே இல்லீங்களா? இதுக்கு ஏதாச்சும் கூலி வேலைக்கு போலாமே?''

""எந்தூர்ல தம்பி கூலி வேலைக்கு அம்பது ரூவாக்கு மேல தர்றாங்க? அதுல சோறு காச்சறதா? இல்ல எம் பொண்ண படிக்க வக்கிறதா? அவளுக்கு அந்த அம்பது ரூவாக் காசுல கல்யாணங்காச்சி நடத்தறதா?''

""அதுக்கு, ஊரக்கெடுத்து சம்பாரிச்ச காசுல திங்கறது தெரிஞ்சா அவளுக்கு குளுகுளுன்னு இருக்குங்களா?''

""யாரு தம்பி ஊரக்கெடுக்கறது. அது ஏற்கனவே கெட்டுதாங் கெடக்குது. எங்கிட்ட வர்றவனெல்லாம் நாங் கெடுத்துதான் எங்கிட்ட வர்றானா? மின்னாடியே கெட்டதனாலதான் எங்கிட்ட வர்றான். யோக்கியனுக்கு அவுசாரிகிட்ட என்ன வேல? மொதல்ல ஒன்னு தெரிஞ்சுக்க, காலையில பட்டையோட ஊட்டவுட்டு கௌம்பி, நாளெல்லாம் காந்தி வேசம் போட்டுட்டு சாயந்திரமா எம்மேல கைய வைக்கறவனயா, நீ யோக்கியனுங்குற? ஊட்டுல பொண்டாட்டிய வச்சுட்டு எங்கிட்ட வர்றவன், நானில்லீன்னா பக்கத்தூட்டுப் பொம்பளைய கைய புடுச்சு இளுப்பான். பக்கத்தூட்டுக்காரிக பாதுகாப்பா இருக்காளுகன்னா அதுக்கு நாந்தான் காரணமாக்கும்.''

""அவனுகள உடுங்க. நீங்க பண்றது பாவத்தொழில் இல்லீங்களா?''

""எது தம்பி பாவம்?''

""பல பேரோட படுக்குறது பாவமில்லீங்களா?''

""நீங்க மனசுக்குள்ளாற பண்றதெல்லாம் நா வெளியில பண்றேன். வேறென்ன தம்பி வித்தியாசம்?'' பலநாள்களுக்குப் பிறகு மீண்டும் செருப்படி. டீ வந்தது. டீயைக் குடித்துக்கொண்டே கேட்டேன்.

""அப்படீன்னா அவுசாரித்தனம் புண்ணியம்னு எந்த சாமி, எந்த புக்குல சொல்லுச்சுங்க?''

சிரித்துக் கொண்டே சொன்னாள், ""சாமி எந்தப் புக்கும் எளுதல தம்பி. எளுதுனதெல்லாம் எல்லா சவுரியமும் இருந்த உங்கள மாறி ஆளுங்கதான் தம்பி. பாவ புண்ணியத்த புக்குல எளுதுனவன எங்க சேரில பத்து நாளு இருந்து பாக்கச் சொல்லு. திரும்பி வந்து கொல பண்றது கூட தப்பில்லைன்னு இன்னொரு புக்கு எளுதுவான். அப்ப நீங்கெல்லாம் கொல பண்ணக் கௌம்பீருவீங்களா? உடுங்க தம்பி! அவிங்கவிங்க நாயம் அவிங்கவிங்களுக்கு. ஆனா ஒன்னு புரிஞ்சுக்கங்க. நீங்க பாக்காத கேக்காத வாழ்க்கைன்னு ஒன்னு இருக்கு. அதுல வாழற மனுசனுங்களும் உங்க ஒலகத்துலதான் இருக்காங்க. உங்களுக்கு தெரியாது புரியாதுங்கறதுக்காக அதெல்லாம் பொய்யின்னு ஆயிராது. ஒங்க நாயம், பாவம், புண்ணியம் இதெல்லாம்வுட வாழ்க்க பெரிசு தம்பி''

""நா.. வாரந் தம்பி'' என்றபடியே டீக்காசை அவளே கொடுத்து விட்டு எதிர்ப்புறம் நின்ற பேருந்தை நோக்கி வேகமாக சென்றே விட்டாள். மதியம் வரை அசையாமல் பேக்கரியிலேயே உட்கார்ந்திருந்தேன். ஆங்கில ஹிந்து மிஷனரி பள்ளியில் படித்து, வாரந்தோறும் பஜனை சொல்லி, கோக்பெப்சி கலாச்சாரத்தில் வாழ்ந்து வந்த எனக்கு, வாழ்க்கை குறித்தும், பாவ புண்ணியம் பற்றியும் வேசி ஒருத்தி பாடம் நடத்திச் சென்றாள். உண்மைச்சூடு தந்த அதிர்ச்சியில் வெகுநேரம் உறைந்திருந்தேன்.

இப்போதெல்லாம் பாதாம் பால் சாப்பிடுவதில்லை. நீண்டநாள் கழித்து சாப்பிட வேண்டும் போல இருந்தது. பைக்கை காந்திபுரம் விட்டேன். அதே கடை. ஆர்வமாய் இருட்டுப் பகுதியைப் பார்த்தேன். அவள் இருந்தாள். பாசாங்கில்லாமல் சிரித்தேன். அவளும் சிரித்தாள். அது அழைப்பின் சிரிப்பல்ல. நட்பின் சிரிப்பு. இன்றைக்கு பால் கூடுதல் சுவையாக இருந்தது.

காசைக் கொடுத்துவிட்டு வண்டியைக் கிளப்பினேன். கோவையின் மார்கழிக் குளிரில் உடல் நடுங்கியது. பனியடர்ந்த சாலையில் மெர்க்குரி வெளிச்சம் தெளிவைக் கொடுத்துக் கொண்டிருந்தது. தவறில்லாத ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டது போல மனம் நிறைவாக இருந்தது. அன்று கனவுகள் இல்லாமல் தூங்கினேன்.

· கார்க்கி


தெகல்கா வாக்குமூலங்கள் :இந்து பாசிசத்தின் உளவியல்!

தெகல்கா வாக்குமூலங்கள் :இந்து பாசிசத்தின் உளவியல்!



""உள்ளே ஒரு மிருகம் காத்திருக்கிறது; தூண்டி விட்டால் அது வெறியோடு கிளம்பும்'', என்பது ஒரு சௌகரியமான பொய். மிருகத்தன்மை மாறி பரிணாம வளர்ச்சியடைவதுதான் மனிதத்தன்மை. பரிணாமம் பின்னோக்கிப் போகாது. குஜராத்தில் நடந்த வெறியாட்டம், தற்செயலாக தட்டி எழுப்பப்பட்ட மிருககுணம் அல்ல. அது இயல்பாக மனிதனிடம் உள்ள குணநலன்களை மழுங்கடித்து, பல காலமாக அவனது மூளையில் பதிய வைக்கப்பட்ட பேதவெறி; தன்னை விடத் தாழ்ந்தவனின் தலை சற்றே கூட நிமிரக்கூடாது எனும் ஆதிக்க வெறி; யதேச்சையாய் வெடித்த கலவரமல்ல, அது ஒரு திட்டமிட்ட வேட்டை.

"எதைச் செய்வது சரி, எப்படிச் செய்வது சரி' என்பதெல்லாம், மனித மனம் நாளும் கற்றுத் தேர்பவை. மனவியல் கருத்தின்படி, ஊக்குவிக்கப்படுவன (மிட்டாயோ? கைதட்டலோ?) சரியானவை என்றும், தண்டிக்கப்படுவன (அடிக்கப்படுவதோ? ஒதுக்கப்படுவதோ?) தவறானவை என்றும், மனம் கற்றுக் கொள்கிறது. "தண்டிக்கப்பட மாட்டோம், தப்பிப்போம்' என்று மனதுக்குத் தெரிந்தால் — தவறானதாகத் தெரிந்து வைத்தவற்றைக் கூட முயன்று பார்க்கத் துணியும். தண்டனை கிடைக்காது எனும் தைரியமும், ஓர் ஊக்குவிப்புதான். இப்படி மிருகத்தனமான செயல்கள், நேரடியாகவோ? மறைமுகமாகவோ? ஊக்குவிக்கப்பட்டால், மனம் "இதுவே நியாயம்' என்றும் நம்பியிருக்கும்.

சரியான காரியங்களைச் செய்தபின் இயல்பாகவே மனதுக்குள் மகிழ்ச்சியும், பெருமையும் நிலவும். "வெட்டினேன், கொளுத்தினேன், கொன்றேன், கொள்ளையடித்தேன், கற்பழித்தேன்' என்று பெருமையோடு பேசும் குஜராத் இந்து மதவெறியர்களின் மனங்கள், "அந்தக் காரியங்கள் நியாயமானவை, அவசியமானவை, சரியானவை' என்று தீர்மானித்து விட்டதால்தான், இத்தனை ஆண்டுகள் கழித்தும் தங்களது வெறிச் செயல்களை "வீர சாகசங்களாகவும், வெற்றிச் சரித்திரங்களாகவும்' அவர்கள் கொக்கரிக்கிறார்கள். அவர்களின் மனங்களுக்கென்றே ஒரு "கோணலான கல்வி' தொடர்ந்து பாடமாகப் பதியவைக்கப்பட்டுள்ளது.

"திருடுவது, கொல்வது, கற்பழிப்பது போன்றவை சரி'யென்று, பொதுவாக எந்த மதத்திலும் கூறப்படுவதில்லை. ஆனாலும், அந்தக் கலவரமும், வெறியாட்டமும் மதத்தின் சார்பாகவே நடந்தது. "மிதமானவை, மூர்க்கக் கட்டமைப்பு இல்லாதவை' என்று சொல்லிக் கொள்ளும் எல்லா மத மார்க்கங்களிலும் தாம் உயர்ந்தவர், கடவுளுக்கு அருகிலுள்ளவர் — தமது வழி வராதவரெல்லாம் தீயவர், தாழ்ந்தவர் என்ற மறைமுக போதனைகளும் உண்டு.

மேலோட்டமாகவேனும் நெறி புகட்டுவதாய் கருதப்படும் மதவரம்புகளை மீறி, அதைச் சார்ந்த ஒரு கூட்டம் வெறியாடுகிறது என்றால் — அந்தக் கும்பல் கயவர்களாலானது அல்லது அந்த மதநெறியே கோணலானது என்றே அர்த்தம். மேல் கீழ் எனும் பேதவெறியை தொடர்போதையாக ஊட்டி விட்டால், "தர்மம்' என்பதற்கே ஒரு புதிய அர்த்தம் தோன்ற ஆரம்பிக்கும்.

சமூக சட்ட அங்கீகாரமற்ற கோரச் செயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம், உள்ளே வேரூன்றிக் கிடக்கும் "தான் உயர்ந்தவன்' எனும் ஆணவம். இந்தப் போலி சமூகச் செல்வாக்கு "தன்னைவிடத் தாழ்ந்தவனை மிதிக்கலாம்' என்பதற்கு ஒரு அனுமதி போன்றே அவர்களது மனத்திற்குள் தோன்றும். இப்படியொரு கோணலான கண்ணோட்டத்தில் செய்த வன்முறை, வெறி, வரம்பு மீறல், கேவலம், கொடூரம் — எல்லாமே தக்க நேரத்தில் செய்த, சரியான காரியமாகவே அவர்களுக்குப் படும்.

அதனால்தான் அவர்களிடம் இது குறித்து வருத்தமும் இல்லை, வெட்கமும் இல்லை; குற்றமும் புரிந்து விட்டு, குறுகுறுப்பும் இல்லாதது மட்டுமல்ல, இவர்களிடம் சாதித்து விட்ட மமதையும் வெளிப்படுகிறது. இது வெறி மட்டுமல்ல, தண்டிக்கப் படாததால் வந்த தைரியம். கொலையும், கற்பழிப்பும், மனிதத்தன்மையே அல்ல என்பதை உணரக்கூட முடியாத அளவுக்கு உள்ளே மதவெறியும், ஆதிக்கத் திமிரும் வளர்ந்திருக்கிறது. இது ஆபத்தானது.

பொதுவாக, ஒரு போரின் முடிவில், வென்றவர்கள் தோற்றவர்களின் உடைமைகளை (பொருள்களை, பெண்களை) கொள்ளையடிப்பது, காலங்காலமாய் இருக்கும் ஒரு கோணலான நியதி. வெற்றிபலம், தோல்விபலவீனம் என்று ஏற்றுக் கொள்ளப்படுவதால், "பலவீனமானவர்களைக் கொள்ளையடிப்பதும், கொல்வதும், கற்பழிப்பதும், தவறு' என்பதற்குப் பதிலாக, "யுத்த தர்மம்' என்றே இது போற்றப்பட்டு வந்துள்ளது. குஜராத்தில் நடந்தது யுத்தமா?

"எதிரிகள் மனிதர்களேயல்ல' என்ற மூர்க்க சித்தாந்தம்தான் ஒரு படையைத் தூண்டிவிட முடியும். குஜராத்தில் சேர்ந்தது ஒரு பரிதாபகரமான படை. இதுநாள்வரை, ஒதுக்கித் தாழ்த்தி வைக்கப்பட்ட ஒரு கூட்டம், சண்டைபோட மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. "தாங்கள் தாழ்வாகக் கருதப்பட்டவர்கள்', என்பதை மறந்து, "தம்மிலும் தாழ்ந்தவனாக ஒரு எதிரியை அவர்கள் பார்த்தார்கள். இந்தப் போலி தர்மத்திற்கான யுத்த நேரத்தில் "ஆதிக்கம் செலுத்தியவன் தன் தோளோடு தோள் நிற்கிறானே' என்ற பொய்யான மகிழ்ச்சி, கூட்ட மனப்பான்மையில் "கொலைவெறி'யாகவும் மாறிவிட்டது. போர்ப்படை என்பதும் ஒரு கூட்டம்தான்.

எல்லாக் கூட்டங்களிலும், எப்போதுமே ஒரு தலைவன் உண்டு. அவனது ஆணைப்படியே அந்தந்த கூட்டம் இயங்கும். யதேச்சையாகத் திரளும் கூட்டங்களைத் தவிர, ஒரு இயக்கமாக, கட்சியாக, மதமாக அமையும் கூட்டங்கள், தலைவனை நேரில் பார்க்காத போதும் ஆணைகளைப் பின்பற்றும். இவ்வகைக் கூட்டங்களுக்கு "தலைவன் சொல்வதே சரி, அவன் ஆணைப்படி நடப்பதே சரி' எனும் ஒரு மூர்க்கப் பின்பற்றுதல் சிந்தனை அமையும். இவ்வகைத் தலைவன், எதிரியை அடையாளம் காட்டித் தன் கூட்டத்தையே போரிட வைக்க முடியும்.

தான் அடையப் போகும் பெரிய லாபத்திற்காக, இந்தக் கூட்டத்திலுள்ள வேலைக்காரர்கள் அடையும் அற்ப சந்தோஷங்களை அவன் கண்டு கொள்ள மாட்டான். சில எலும்புத் துண்டுகளை, அவனது வெறிநாய்கள் தாங்களாகவே பொறுக்கிக் கொள்வதும், அவனுக்கு வசதியாகவே அமையும். போர் முடிந்து, வெற்றி கிடைத்த பிறகுதான் "கூட்டத்துக்குத் தலைவன்' கொஞ்சம் தெரிவான். ஒன்றாக வெறியாடி, அவனுக்கு வெற்றி தேடித் தந்தவர்களில் சிலரே உயர்வார்கள். தற்காலிகக் கூலியாக மட்டுமே மற்றவர்கள் ஒதுக்கப்படுவார்கள். சாணக்கிய ரீதியில், இது "ராஜநீதி' என்றும் கூட ஏற்கப்படும்.

இவ்வளவு யுத்த தந்திரங்களோடு செயல்பட்டு ஒடுக்குமளவு, குஜராத்தில் யார் எதிரி? அடிபட்டவன், என்ன தவறுகள் செய்தான்? இது பழிவாங்குதல் என்றால், பழிதான் என்ன? தொடர் தவறுகளின் ஆரம்பம் எது? மதவெறியே அடிப்படைக் காரணமென்றால், வெறியூட்டும் மதத்திலுள்ள தவறுகள் எவை? நேற்றுவரை தெருவில் சந்திக்கும்போது சிரித்துப் பழகிய பெண்ணை, இன்று துரத்திக் கற்பழிப்பதும், கொல்வதும் சாத்தியம் என்றால் அவ்வெறியை ஊட்டியது யார்? ஊக்குவிப்பது யார்?

தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும், இது குறித்து மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு, கொஞ்சமாக முகம் சுளித்து, மிகக் குறைந்த அளவில் வருத்தப்படும் நடுத்தர வர்க்கத்திற்கும், இதிலுள்ள வக்கிரமும் உக்கிரமும் புரியவே செய்கிறது. வழக்கமான கோழைத்தனம் வாயை மூடிவைத்தாலும், தேர்தலில் வரக்கூடிய தைரியம் என்ன ஆனது?

வெறிச் செயல்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதும், அச்செயல்களை ஊக்குவிப்பதேயாகும். நடுத்தர வர்க்கத்தின் இந்த மௌனமான மறைமுகமான ஊக்குவிப்பிற்குக் காரணம், சுயநலம் மிகுந்த அச்சம்; "ஜெயிக்கும் குதிரை மேலேயே பணம் கட்டலாமே' எனும் சூதாட்ட மனப்பான்மை; வெல்பவன் பலசாலி – அவனை எதிர்ப்பதை விட கூட்டு சேர்ந்து கொள்ளலாமே, என்ற கோழைத்தனமான "குயுக்தி'. இந்த நடுத்தர வர்க்கமும் ஒரு கூட்டம்தான்.

மூர்க்க வெறியோடும் மூட பக்தியோடும், ஒரு தவறான தலைவனைப் பின்பற்றும் கூட்டம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறியாட்டம் போடும். வேடிக்கை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மௌனமே, இந்தக் கூட்டத்தை இன்னும் உரக்கச் சப்தமிட வைக்கும். "தன்னலக் குறிக்கோள்' மட்டுமே கொண்ட தலைவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தக் கூட்டம், "வெறியாடும் வாய்ப்பி'லேயே விடுதலையின் திருப்தியை அடையும். ஒரு முறை ருசித்த பிறகு, அடுத்த வெறியாட்ட வாய்ப்புக்குக் காத்திருக்கும். இந்தக் கூட்டத்தை, ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம், வெறியலையில் ஒருநாள் சுலபமாக உள்ளிழுக்கப்பட்டுவிடும்.

தனி மனிதனுக்கு "தன் வீடு, தன் இடம்' எனும் பாதுகாப்பான எல்லைகள் தேவைப்படுகின்றன. வெளியே ஒரு கூட்டத்துக்குள் நுழையும்போது, அவனுக்குத் "தன் இடம்' என்பதில்லாததால், ஒரு பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு பயமாகவும் மாறுகிறது. இந்தப் பாதுகாப்பின்மையின் பயத்தை, அவன் கூட்டத்தின் எண்ணிக்கையில் சரி செய்ய முயலுகிறான். தன்னைப் போலவே, பல தனிமனிதர்கள் இருக்கும் கூட்டத்தாலேயே தைரியம் பெறுகிறான். கூட்டத்தின் அளவு அதிகரிக்கும்போது தனது தனித்தன்மையை மீறி, கூட்டத்தின் ஒட்டுமொத்தத் தன்மையில் கலக்கிறான். பெரும்பான்மை மக்கள் கூட்டத்தில் செம்மறியாடுகள் போலிருந்தாலும், அதில் ஒரு கும்பல் தலைவனின் கூலிப்பட்டாளமாகச் செயல்படும்.

இந்தக் கும்பல்தான் கொள்ளையடித்து, "யுத்தம்' எனக் கூறி மற்றவர்களை இழுத்தும் செல்லும். எதிரியைத் தலைவனும், அவனுடைய கும்பலும் அடையாளம் காட்டும்போதே, கூட்டத்தில் "கொல்லப்படுமுன் கொல்' எனும் ஆதி மனிதத் தற்காப்பு எண்ணம் ஊட்டப்படும். குஜராத்தில் எதிரிகளாகக் கூறப்பட்டவர்கள் கொல்ல வரவில்லை, பயந்தே ஓடினார்கள். கும்பலோடு கூட்டம் அவர்களை வேட்டையாடியது. சாதாரணக் கோழைகளுக்கு, "கூட்டம்' ஊக்க மருந்தாக மட்டுமல்ல, பாதுகாப்புக் கவசமாகவும் மாறுகிறது.

கோழைகள் பயந்தவர்கள். "தண்டனையைத் தவிர்ப்பதே!' அவர்களது அடிப்படை நோக்கம். ஆனால், கோழைகளுக்கு ஆசைகள் அதிகம். தண்டிக்கப்படாத வரை, எப்படியாவது ஆசைகளை அடையத் துடிப்பதே, அவர்களது சிந்தனைக்கோணம். நெறிகளின் பால், சமூகத்தின் மேல் அக்கறை என்பதை விடவும், சமூகத்தின் அனுமதியே அவர்களுக்கு முக்கியம்.

குஜராத்தில் அவர்களுக்கு சமூக அனுமதி, அரசியல் சலுகை, ஆசைகளுக்குத் தீனி, வெறிக்கு வடிகால், குற்றங்களுக்கு நியாயம் எல்லாமே கிடைக்கும் என்று தெரிந்த உடன், கோழைகளின் கூட்டம் "வீரர்களின் சேனை'யாகத் தன்னை நினைத்துக் கொண்டது. வெறியாட்டத்தைப் "போர்' என்றும், அரசு பலத்தை "வீரமெ'ன்றும் கருதியவர்கள், பெருமையோடு இன்றும் திரிவது, அந்தச் சமூகம் தந்த அனுமதியோடுதான்.

அறிவும், பண்பும் இல்லாதது வீரமே அல்ல. மௌன கோழைத்தனம், இந்தப் போலி வீரத்தை மீண்டும் தூண்டும். முட்டாள்களும், கோழைகளும் இருக்கும் வரை, ஆதிக்க வெறியும், ஆணவமும் மிகுந்த அயோக்கியன் தலைவனாகவே தொடர்வான். வெறியூட்டினால், தனக்கே இறுதி வெற்றி, என்ற இறுமாப்பில், அவன் மேலும் பல திசைகளில், தன் பார்வையைத் திருப்புவான்.

போதையால் ஊட்டப்படும் வெறி, வெட்கப்படக்கூடிய அறிவை மழுங்கடிக்கும். சுயநலக் கோழைகள் மிகுந்த சமுதாயமும், அதைச் சுலபமாய் ஆட்டி வைக்கும் மோசடித் தலைமையும் "தொற்று நோய்' போல நாடு முழுவதும் பரவும். அந்த ஆதாரக் கிருமியை அழித்தால்தான் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு –இது அவசியமானது மட்டுமல்ல, அவசரமாகவும் செய்ய வேண்டிய காரியம்.

· ருத்ரன்,

மனநல மருத்துவர்.

Friday, March 28, 2008

கலைஞர், ஸ்ரீராமன் மற்றும் சில இலக்கிய வானரங்கள்

கலைஞர், ஸ்ரீராமன் மற்றும் சில இலக்கிய வானரங்கள்

"ஒரு சமயம் "காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார்' திருவாரூர் "விஜயம்' செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரை எதிர்ப்பது என்று எங்கள் கட்சியின் (திராவிடர் கழகம்) பெரியவர்கள் திரு. சிங்கராயர், "தண்டவாளம்' ரங்கராஜு ஆகியோர் முடிவு செய்து விட்டார்கள்... ஒட்டகம், யானை, பதாகை ஏந்திய சில வீரர்கள், இந்த வரிசைகளுக்குப் பிறகு ஒரு பல்லக்கில் சங்கராச்சாரியார் பவனி வருவது வாடிக்கை! அதே போல பவனி வந்து கொண்டிருக்கிறார். திடீரென ஒரு குரல், ""மானங்கெட்ட பசங்களா! இந்த ஆசாமியைத் தூக்க நீங்கதான் கிடைச்சிங்களா? ஏன்! பாப்பான்க தூக்கினாலென்ன?'' என்று கேட்டது.... ""இறக்கி வைச்சிட்டு எல்லாப் பசங்களும் ஓடுறீங்களா? இல்லே இந்தச் சாட்டையால் வெளுக்கட்டுமா?'' என்று ஏதோ ஒரு அடியாட்கள் கும்பலோடு நிற்பது போல "தண்டவாளம்' நின்று கொண்டு "பாவ்லா' காட்டலானார்! அவ்வளவுதான் பல்லக்கை வைத்து விட்டுப் பல்லக்குத் தூக்கிகள் இங்கொருவர் அங்கொருவராகப் பாய்ந்து ஓடிவிட்டனர்.''

""எங்கள் கூட்டங்களுக்குத் தலைமை வகிப்பது, நன்கொடையெல்லாம் வழங்குவது முதலிய காரியங்களைச் செய்த "ஜஸ்டிஸ்' கட்சிப் பிரமுகர் இராமானுஜ முதலியார் வீட்டில்தான் சங்கராச்சாரியார் ""காம்ப்'' போட்டிருந்தார். அவரைப் போய்ப் பார்ப்பதென்றால் சட்டை போட்டிருக்கக் கூடாது! "தண்டவாளம்' ஒரு நோட்டீஸ் அடித்தார்.


சங்கராச்சாரியார் சுவாமிகளைப் பார்க்கச் சட்டை போட்டிருக்கக் கூடாது, ஆண்கள்! ரொம்பச் சரி! பெண்கள் மட்டும் இரவிக்கை போட்டுக் கொண்டு போகலாமா? அதென்ன நியாயம்?'' என்கிற வாசகங்களோடு.

யார் எழுதிக் கொடுத்திருப்பார்கள் என்று சொல்லவா வேண்டும்? (கலைஞர்)


திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள், ""தமிழ்நாட்டில் பெரியார் என்கிற நச்சாறு ஓடுகிறது'' என்று சொல்லி விட்டார். இந்தச் சமயம் பார்த்து திருவாரூர் தியாகராஜப் பெருமாள் கோயிலில் (1.4.44 என்று நினைவு) அவருடைய ""உபன்யாசங்கள்'' நடைபெறும் என்று அறிவித்திருந்தார்கள். கருணாநிதி சும்மா இருப்பாரா? அவருடைய கைவண்ணத்தில் ""கிருபானந்த வாரியாருக்குச் சில கேள்விகள்'' என்கிற தலைப்பில் துண்டு நோட்டீஸ் தயாராகியிருந்தது.

"அன்பே சிவம் என்கிறீர்களே! 6000 சமணர்களைக் கழுவிலேற்றிச் சித்திரவதை செய்தது உங்கள் சிவ மதமல்லவா?'


"முற்றுந் துறந்தவராகக் காட்டிக் கொள்ளும் உமக்கு, கழுத்திலே தங்கம் போட்ட கொட்டை ஏன்? மார்பெல்லாம் ஆபரணாதிகள் ஏன்? காய்ச்சிய பாலும் கற்கண்டும் ஏன்? கார் ஏன்? இரயில் ஏன்?' இப்படிக் கேள்விகள்.

வாரியார் சுவாமிகள் சுவாரஸ்யமாகப் பேச ஆரம்பித்தார்.


""அன்புதான் சிவம். சிவம்தான் அன்பு. "எங்கும் அன்பு தழைக்க வேண்டும்', என்பதுதான் எம்பெருமானின் கருணை உள்ளம். பாருங்கள்! என்னென்னவோ உண்டாக்கியிருக்கலாம் அல்லவா எம்பெருமான்? மனிதன் சாப்பிடுவதற்கு எதை உண்டாக்கினார் பாருங்கள்! காய்கறிகளை!!.. கத்தரிக்காய்... வெண்டைக்காய்...''

""அது சரி சுவாமிகளே! அதே எம்பெருமான் சிங்கத்திற்காக எந்த உணவை உண்டு பண்ணினார்?'' கணீரென்று கேள்வி எழும்பியது! யாருடைய குரல் என்று கூற வேண்டுமா? (கலைஞர்) வாரியார் கொஞ்சநேரம் திகைத்து பேச்சை நிறுத்தினார். முன் கூட்டியே ஏற்பாடு செய்தபடி, நாங்கள், ""பதில் சொல்! பதில் சொல்!'' என்று கத்தலானோம். எங்களை எல்லாம் போலீஸ் துரத்தியது. எங்கள் வேலை முடிந்தது என்று எடுத்தோம் ஓட்டம்! அது முதல் பந்தோபஸ்து இல்லாமல் கோயிலில், "உபன்யாசங்கள்' நடப்பது இல்லை.

— (இராம. அரங்கண்ணலின் "நினைவுகள்' என்ற புத்தகத்திலிருந்து...)


இந்தப் பரம்பரையில் அல்லது வழியில் வந்த கலைஞர், "பேடி ராமனை' ("பேடி' பட்டம் உபயம் திருமதி சீதா ராமன்) பற்றிச் சொன்ன கருத்துக்கு ""கருணாநிதியின் தலையை கொண்டு வருவோர்க்கு தக்க சன்மானம்'' என்றான் வேதாந்தி. அதைக் கேட்ட தி.மு.க. தொண்டர்கள் கோபமுற்றதைப் பார்த்து, "தங்கள் தலை போய்விடுமோ?' என்று தேவையற்ற பயம் கொண்டு, பா.ஜ.க.வின் எச்.ராஜாவும், குமாரவேலும் அலறினார்கள்.

ஆளானப்பட்ட வஸ்தாதுகளே இப்படி அரண்டு போய்க் கிடக்க, சில இலக்கியத் "தறுதலைகள்', ""ஏய், எங்க ராமனை பத்தியே தப்பா வாடா பேசுறீங்க'' என்கிற ரீதியில் களம் இறங்கியிருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள், இலக்கிய உலகின் "இல.கணேச'னான மாலனும், இலக்கிய உலகின் "புரட்சித்தலைவி' வாஸந்தியும்.

"புதிய பார்வை' என்ற பத்திரிக்கையில் (ரொம்ப புதிய்ய்ய பார்வைய்ய்யா), "ராமர் பாலம்; கலைஞர் பேசியது சரிதானா?' என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறாரு மாலன். வேதாந்தியோட கருத்தையே வேறு வார்த்தைகளில்.... இது மாமாவோட வெர்ஷன்.


"தீராநதி' என்ற பத்திரிக்கையில் "இராமனுக்கான போர்' என்ற தலைப்பில் ஒரு "பொம்பள வேதாந்தி'யைப் போல, கலைஞரின் முன் கத்தியோடு குதித்திருக்கிறார், வாஸந்தி. இது மாமியோட வெர்ஷன்.

நமக்கோ, வேதாந்தி என்கிறவன் இப்படித் திமிர்த்தனமாக, ""ஒரு மாநில முதல்வரின் தலையை வெட்டிக்கிட்டு வா''ன்னு சொன்னானேன்னு கோபமா வருது. ஆனால் இவுங்களுக்கு, "ராமரை கருணாநிதி திட்டிட்டாரே'ன்னு ஆத்திரமா வருது.


இருவரும் தங்களது கட்டுரைகளில், "பெருவாரியான இந்துக்களின் உணர்வை...' என்று திரும்ப திரும்ப "செட்டு' சேர்க்கிறார்கள். நம்மதான் நாத்திகர்கள். ஆனால் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் நாத்திகர்கள் இல்லை. அதில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள். அவர்களுக்கு ராமனைப் பற்றிச் சொன்னால் கோபம் வருவதில்லை. கலைஞரைப் பற்றி சொன்னால்தான் கோபம் வருகிறது. ஏனென்றால், "ராமன் வழிபாடு' என்பது தமிழ்நாட்டில் கிடையாது. அதனால்தான் தமிழ்நாட்டில் ராமனுக்கு குறிப்பிடும்படியாக கோயில் கூட இல்லை. (தமிழ்நாட்டில் ராமனுக்கு ஆதரவாக ஒரு பத்து பேர் இருப்பாங்க. அதுல இரண்டு பேர் இவுங்க)

மாலன் எழுதுறாரு, ""பாம்பன் நீரிணையில் நடந்து வரும் அகழ்வு, நம் அரசியல் தலைவர்களின் அடிமனதில் உள்ள அச்சங்களையும் ஆசைகளையும் காழ்ப்புகளையும் கூட வெளிக் கொணர்ந்து விட்டது'' அதையே நாம் இப்படி எழுதுவோம், ""கலைஞரின் ராமன் பற்றிய பேச்சுக்கு பிறகு, நடு நிலையாளர்களாக, மத நல்லிணக்கவாதியாக, சிறுபான்மையினரின் ஆதரவாளராக வேஷம் போட்டுக் கொண்டிருந்த, பார்ப்பன பயங்கரவாதிகள் தங்களது உண்மை முகத்தைக் காட்டியிருக்கிறார்கள்.''


அதற்கு ஒரு எடுத்துக்காட்டை "மாமியின் வெர்ஷனில்' இருந்து பார்ப்போம். ""அரசியலில் பதவியும் புகழும் கீர்த்தியும் செல்வாக்கும் இருக்கும் வரை எந்தக் கொம்பனும், கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் சாட்சாத் ராமன் உள்பட, நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற எண்ணம் ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு வந்துவிட்டால், அது உச்ச நீதிமன்றம் வரை போய்விடும்.

""ராமர் பாலத்தை இடிக்காமல் திட்டத்தை நிறைவேற்ற மாற்று வழிகளை மூன்று மாத தவணைக்குள் ஆராய்வதாக உச்ச நீதிமன்றத்தில் சொன்னது காங்கிரஸ் அரசு. கருணாநிதி இதை சற்றும் எதிர்பார்த்து இருக்க மாட்டார். எந்த காவியத் தலைவனை திராவிட இயக்கம் சளைக்காமல் இடித்து வந்ததோ, அதே ராமனின் பெயரில் அவரது கனவுத் திட்டம் அடிவாங்கி விடும் என்ற சாத்தியம் அவமானகரமானது. அவரது நாடு தழுவிய கீர்த்திக்கும், அரசியல் சக்திக்கும் வயதுக்கும் தோல்வியையும் அவமானத்தையும் தாங்க வேண்டிய அவசியம் இல்லை. தாம் போட்ட கணக்கு தப்பிவிட்டது என்ற ஆத்திரத்தை அடக்க வேண்டும் என்ற பக்குவம் அரசியலில் பழம் தின்று கொட்டையை உமிழ்ந்துவிட்ட கருணாநிதிக்கு அவசியம் என்று படவில்லை.''... ""எத்தனை வயதானாலும், எத்தனை செல்வாக்கிருந்தாலும் நா காப்பது நல்லது. இல்லையென்றால், வயதானதற்கும் பெற்ற அனுபவங்களுக்கும் அர்த்தமில்லை.''


இந்த வரிகளில், முதல்வர் மீது "வேதாந்தி'க்கு இருந்த அதே ஆத்திரம், "வாஸந்தி'யிடமும் வெளிப்படுகிறது.

""நா காப்பது நல்லது. இல்லையென்றால்....'' இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கிற உளவியல், "கலைஞர் மீது வன்முறையை பிரயோகிக்க வேண்டும்' என்கிற எண்ணத்தையும், "ஜென்ம விரோத'த்தையும் வெளிப்படுத்துகிறது.


"நடுநிலை' மாலனோ, இல. கணேசன் பாணியில், ""ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்? வரலாற்று ஆதாரம் உண்டா? மது அருந்துபவர், மாமிசம் உண்பவர் என்பது போன்ற கேலிகளும், விவாதத்திற்கு தயாரா? என்ற சவால்களும் அவரது ஆரம்ப திராவிட கழக நாட்களை நினைவூட்டுகின்றன. ஆனால், இதை அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு பேசுவதுதான் பொருத்தமானதாக இல்லை'' என்கிறார்.

நரேந்திர மோடி என்கிற ஒருவன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டல்ல, படுத்துக் கொண்டு, திட்டமிட்டு இஸ்லாமிய மக்களைக் கொலை செய்கிறான். அதைக் கேட்பதற்கு வக்கற்றவர்கள், அல்லது அந்தக் கொலைகளை விரும்புகிறவர்கள், ஜனநாயக ரீதியாக ஒருவர் கருத்துச் சொல்வதைக் கண்டிக்கிறார்கள். ("சுப்ரீம் கோர்ட்டு'க்கு "ஜட்ஜா' போறதுக்கான முழுத் தகுதியும் உள்ளவர்கள்)


கம்யூனிசத்திற்கு நேரெதிர் கருத்து கொண்ட பிற்போக்காளர்களும், கம்யூனிச விரோதிகளும் தங்களது மோசடிக் கருத்தை நியாயப்படுத்த முயற்சிக்கும்போது மட்டும் மார்க்சை "வெறும் மேற்கோளாக'ப் பயன்படுத்துகிற மோசடி வேலையைச் செய்வார்கள். அப்படித்தான் இந்த "மோசடி மாலனும்' மார்க்சை மேற்கோள் காட்டுகிறார்.

""மதம் ஒரு அபின் என்ற கருத்துக்கு நம்மை இட்டுச் செல்லும் முன், அதை விளக்கும் முகமாக, மதம் என்பது ஒடுக்கப்பட்ட ஜந்துக்களின் பெருமூச்சு, இதயம் இல்லாத உலகின் இதயம் என்று சொல்கிறார் மார்க்ஸ்'' என்றுதன் நோக்கத்துக்கு ஏற்ப மார்க்சைப் பிரித்து, திரிக்கிறார்.


சரியாக 150 ஆண்டுகளுக்கு முன், 1848இல் "மார்க்ஸ் எங்கெல்ஸால்' எழுதப்பட்ட "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' இப்படித் துவங்குகிறது. ""ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம் — கம்யூனிசம் என்னும் பூதம். போப்பாண்டவரும் ஜாரரசனும், மெட்டர்னிக்கும் கிசோவும், பிரெஞ்சுத் தீவிரவாதிகளும் ஜெர்மன் உளவாளிகளுமாய், பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக் கூட்டு சேர்ந்திருக்கின்றன.''

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வதை "கடவுள்' என்று சொல்வதுதான் உலக வழக்கம். ஆனால், இவர்களோ கம்யூனிசத்தை "பூதம்' என்கிறார்கள். "கடவுள்' என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தவில்லை. கம்யூனிசத்துக்கு எதிராக அணி சேர்ந்து இருப்பவர்கள்தான் கடவுள் ஆதரவாளர்கள், போப்பாண்டவர்கள் போன்ற மதவாதிகள். அதனால்தான் அதைப் "புனிதக் கூட்டு' என்ற வார்த்தையால் அடையாளப் படுத்துகிறார்கள். "பூதம்' என்ற வார்த்தையை கடவுளுக்கு எதிரான, ஆதிக்கத்திற்கு எதிரான சொல்லாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.


ஒருவேளை, மாலன் இன்னொருநாள் கம்யூனிசத்துக்கு எதிராகக் கருத்துச் சொல்லும்போது, "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே, கம்யூனிசத்தை மார்க்சும், எங்கெல்சும் "பூதம்' என்று சொல்லியிருக்கிறார்கள், என்பது கவனிக்கத் தக்கது' என்று சொல்லுவார் போலும்.

""எதையும் வரலாற்றின் வெளிச்சத்தில் உறுதிப்படுத்திக் கொள்வது என்பது ஒரு வகையில் மேற்குலகிலிருந்து நாம் கற்றுக் கொண்ட வழக்கம். கீழ்த்திசை நாடுகளில் வாழ்வை வரலாற்றை விட இலக்கியத்தில் பதிவு செய்வது, என்பதே வழக்கமாக இருந்திருக்கிறது என்பதையும், இலக்கியம் என்பது மக்களைப் பற்றியதாகவும், வாழ்க்கையைப் பற்றியதாகவும் இருந்திருக்கிறது என்பதையும், இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்'' என்கிறார் மாலன்.


வரலாற்றை இருட்டடிப்புச் செய்து அல்லது இலக்கியத்தையே வரலாறாகச் சித்தரித்ததில் எவ்வளவு மோசடிகள் நியாயப் படுத்தப்பட்டிருக்கின்றன! சம்பூகனைக் கொன்ற "கொலைகார' ராமனை "கதாநாயக'னாக நியாயப்படுத்துகிறதே, அது எது? இலக்கியமா? வரலாறா? ஆயிரக்கணக்கான சமணர்களைக் கொன்ற பிறகும், "அன்பே சிவ'மாகக் காட்சி தருகிறார்களே, "சைவக் களவாணிகள்' அது எதனால்? வரலாற்றினாலா? இலக்கியத்தினாலா?

தாழ்த்தப்பட்டவர் என்பதினாலேயே "நந்தனை' தீயிட்டுக் கொளுத்தி, அந்தக் கொலையை "புனித'ப் படுத்தினார்களே, பார்ப்பனர்கள், அது வரலாறா, இலக்கியமா?

இலக்கியம் முழுவதும் பார்ப்பன நலன், பார்ப்பன உயர்வு, உழைக்கும் மக்களுக்கு எதிரான கருத்துக்களாகவே நிரம்பியிருக்கிற ஒரு நாட்டில், "வரலாற்றை விடவும், இலக்கியம் முதன்மையானது' என்று ஒருவன் சொன்னால், அவன் எப்பேற்பட்ட "ஃபிராடாக' இருப்பான்.


""இராமாயணத்தில் தண்டிக்கப்பட்டவர்கள் மூவர். வாலி, சூர்ப்பனகை, இராவணன் மூவரும் அடுத்தவர் மனைவிக்கு அல்லது கணவனுக்கு ஆசைப்பட்டவர்கள்'' என்கிறார் இந்த "உத்தம புருஷன்' மாலன். உன் ராமன் சம்பூகனைக் கொன்றானே, சம்பூகன் என்ன உன் பொண்டாட்டி கையைப் பிடிச்சா இழுத்தான்?



···

""ஒரே சொல், ஒரே கணை, ஒரே மனைவி என்று ராமனை வர்ணிக்கும் தியாகராஜரின் கீர்த்தனை ஒன்று உண்டு'' என்று மாலன் தன் கட்டுரையைத் துவக்குகிறார். அதேபோல மாமியும், ""திருவையாறு போயிருக்கிறீர்களா? தியாகராஜரின் கீர்த்தனைகளைக் கேட்டிருக்கிறீர்களா? அவரது தெலுங்குப் பாடல்களையும் கேட்டு நெக்குருகி நிற்கும் சாமான்ய தமிழர்களைப் பார்த்திருக்கிறீர்களா?'' என்று கலைஞரை கேட்கிறார். ("சாமான்ய தமிழர்கள்' வார்த்தைக் கவனிக்கவும்)


நாமும் அதே தியாகராஜரின் கீர்த்தனை ஒன்றைச் சொல்லி, ராமனின் பெருமையை உலகுக்கு அறிவிப்போம். வனவாசம் புறப்பட்ட ராமன், தன்னுடன் சீதையைக் காட்டிற்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லாமல் சீதையை அயோத்தியிலேயே இருக்கும்படி சொன்னதற்கு, சீதை மொழிந்த மறுமொழி:

""ராமா உன்னிடத்தில் அழகு மாத்திரமே இருக்கிறது. அதைக் கண்டு அனைவரும் மயங்கி விடுகிறார்கள். உனக்கு ஆண்மை என்பது சிறிதும் இல்லை. என் ஒருத்தியைக் காக்க முடியாமல் நிறுத்தி நீ காட்டுக்குப் போனாய் என்று எனது தந்தையார் கேள்விப்படின், ""ஹா புருஷ வேஷத்துடன் வந்த ஒரு பெண்பிள்ளை (பேடி)க்கா என் புதல்வியைக் கொடுத்தேன்'' என்று தம்மை நொந்து கொள்வார்.


இம்மடவுலகர், ராமனிடம் சூர்யனைப் போன்ற தேஜஸ் ஜொலிக்கின்றது என்று கூறுகின்றனர். இது முழுப் பொய்யான வார்த்தை. மனைவியைப் பிறர்க்கு ஒப்படைத்துப் பிழைக்கும் தன்மையான கூத்தாடியைப் போல நீயாகவே என்னைப் பிறர்க்குக் கொடுக்க விரும்புகின்றனை'' (அயோத்தியா காண்டம், 30வது சர்க்கம்; 229வது பக்கம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காரச்சாரியார் மொழிபெயர்ப்பு)

திருமதி. சீதை தன் கணவன் ராமனை இப்படிக் கேவலமாகப் பேசிய "இந்த சிச்சுவேஷனுக்குப் பொருத்தமாக' ஒரு பாடல் போட வேண்டும் என்றால், தியாகய்யர் ராமனை நினைத்துப் பாடிய ""எந்துகோ ராமா... ஈ ஜென்மமு...'' என்கிற கீர்த்தனையைப் போட்டு, அதனை இப்படிப் புரிந்து கொள்ளலாம்.


""உனக்கு எதுக்கு ராமா இந்த ஜென்மம்?''

மாலனும், வாஸந்தியும் ஏதோ கலைஞர் ராமனைப் பற்றி தன் சொந்தக் கருத்தைத் தெரிவித்ததைப் போல கோபப்படுகிறார்கள். ஆனால், அவர் வால்மீகி ராமாயணத்தில் இருந்துதான் மேற்கோள் காட்டினார். இவர்களுக்கு குறைந்தபட்ச அறிவு நாணயம் இருந்தால், வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிற "மேற்படி' செய்திகளுக்கு முறையான விளக்கம் சொல்லிவிட்டு, பிறகு பகுத்தறிவாளர்கள் மீது பாயட்டும்.


""கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லை என்பதும் நாத்திகவாதி என்பதும் அவரது சொந்த விஷயம்.'' ""கண்ணாடி அறைக்குள் அமர்ந்து கல்லெறியக் கூடாது. அதுவும் எப்படிப்பட்ட கல்? ஒரே வீச்சில் இந்தியா மொத்தத்திலும் உள்ள பெரும்பான்மையான இந்துக்களைப் புண்படுத்தும் ஆயுதமாக'' என்று சீறுகிறார் வாஸந்தி.

ஒரு காலத்தில், கணவன் இறந்தபோது மனைவியை உடன் வைத்துக் கொளுத்திய அநீதியைக் கண்டித்து, சமூக அக்கறை உள்ளவர்கள் எழுந்தபோது, இதேபோலத்தான் மதவாதிகள் கோபப்பட்டார்கள். வாஸந்தி கோபப்படறத பார்த்தா, "உடன் கட்டையை' தடைசெய்தது கூட இந்துக்களைப் புண்படுத்தும் செயலாகத்தான் தெரிகிறது. "உடன் கட்டை' வழக்கம் தொடர்ந்து இருந்திருந்தால், வாஸந்தியிடம் இருந்து இப்படி ஒரு கட்டுரையும் வந்திருக்காது; அதுக்கு பதில் எழுதுற வேலையும் நமக்கு மிச்சமாகி இருக்கும்.


···

""இந்து மதம் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களின் உணர்வுகளில் கலந்தது. அதை எந்த எதிர்ப்புகளினாலும் அழிக்க முடியாது. அதற்கு ஒரு பாரம்பரியம் உண்டு'' என்பதே பார்ப்பன அறிவுஜீவிகளின் ஆவேசம்.


10.1.1947இல் விடுதலை தலையங்கத்தில் தந்தை பெரியார் இப்படி எழுதினார்:

""யார் என்ன சொன்னாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் உள்ள இந்து மதத்தை அசைக்க எவராலும் முடியாது. எத்தனையோ எதிர்ப்புகளையும், கஷ்டங்களையும் சமாளித்துக் கொண்டு உயிரோடிருக்கிறது இந்து மதம்'' என்று சர். இராதாகிருஷ்ணன் போன்ற மேதைகள் கூறலாம். உயிரோடு இருப்பதினால் மட்டுமே ஒரு விஷயம் உயர்வானதாகி விடுமா?


எவ்வளவோ எதிர்ப்புக்களுக்கிடையே எலி, கொசு, தேள், பாம்பு, மூட்டைப்பூச்சிகள் கூடத்தான் உயிரோடு இருக்கின்றன. இவைகளெல்லாம் இந்துமதத்தை விட புனிதமானவைகளா? அதிகப் பலன் தரக்கூடியவையா?''

· வே. மதிமாறன்

காந்தி :வழிகாட்டியல்ல, சோளக்காட்டு பொம்மை

காந்தி :வழிகாட்டியல்ல, சோளக்காட்டு பொம்மை

மீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சேலம் வேலு காந்தி எனும் 82 வயது முதியவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், சாதி நம்பிக்கையற்றோர், "கலப்பு'த் திருமணம் செய்து கொண்டவர்கள், அனாதைக் குழந்தைகள், மதம் மாறியோர் ஆகிய நான்கு வகையினரைக் கொண்டு, "காந்தி சாதி' என்ற ஒரு புதிய சாதியை உருவாக்க உத்தரவு தருமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் சாதிகள் ஒழிய வழிபிறக்கும் என வாதிட்டார். அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஒரு புதிய சாதியை உருவாக்க தமக்கு அதிகாரம் இல்லையெனக் கூறி, நீதிபதிகள் அம்மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

நாமகரணங்கள் நமக்கு புதியனவல்ல. ஹரியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்டினார் காந்தி. காந்தியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்ட வேண்டுமென ஆதங்கப்படுகிறார் காந்தியின் சீடர். பெயர் சூட்டுவதிருக்கட்டும். "பீ'யள்ளப் போவது யார் என்பதல்லவா கேள்வி. அன்றே காந்தியின் சாதி ஒழிப்பு சண்ட பிரசண்டங்களுக்கும், அவரது நடைமுறைக்குமான முரண்பாட்டை அம்பேத்கர் திரை கிழித்திருக்கிறார். ஆனால், காந்தி தனது வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.

குறைந்தபட்சம் காங்கிரசில் உறுப்பினராக சேர தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கூடாது என ஒரு விதியைக் கொண்டு வருவதற்குக் கூட காந்தி தயாராக இருந்ததில்லை. காந்தியால் சோசலிசத்திற்கு மாற்றாக வைக்கப்பட்ட தருமகர்த்தா முறையை நடைமுறைப்படுத்தக் கிளம்பிய வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தின் தோல்வி காந்தியத்தின் தோல்வியல்ல என்பது போல மூடி மறைக்கப்பட்டு விட்டது. எனினும் காந்தி மீண்டும் மீண்டும் மக்கள் அரங்கில் முன்நிறுத்தப்படுவது மட்டும் இன்றளவும் நின்றபாடில்லை.

ஆனால், காந்தி சொன்ன கிராமப் பொருளாதார முறையை 1947லேயே காங்கிரசு கைக்கொள்ளவில்லை. காங்கிரசைக் கலைக்கச் சொன்ன காந்தியின் யோசனையை ஒரு பொருட்டாகக் கூட எவரும் கருதவில்லை. குடும்பக் கட்டுப்பாடு கூடாது, ஆலைத் தொழில்கள் கூடாது போன்ற "அற்புதமான' கருத்துக்களை மட்டுமல்ல; ஜனாதிபதி மாளிகையை இலவச மருத்துவமனையாக்க வேண்டுமென்ற தேசப்பிதாவின் "சின்ன சின்ன ஆசைகளை'க் கூட யாரும் கண்டு கொள்ளவில்லை.

எனினும், ஐநூறு ரூபாய் நோட்டிலும், காந்தி ஆசிரமங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள சிலைகளிலும், அரசாங்க உரைகளிலும் காந்தி ஒரு மந்திரம் போல தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறார். காந்தி பிறந்த குஜராத்தில் திரையிட மறுக்கப்பட்ட "பர்சானியா' திரைப்படம், குஜராத் முசுலீம் இனப்படுகொலையால் மனம் உடைந்து போகிற ஒரு வெளிநாட்டு காந்திய மாணவனை கதாபாத்திரமாகக் கொண்டிருந்தது. சோனியா காந்தியோ சத்தியாக்கிரகத்தின் "மகிமையை', "உலகப் பொருளாதார மன்ற'த்தில் வியந்தோதுகிறார்.

காந்தியால் மீண்டும் மீண்டும் குழப்பப்பட்ட சத்தியாக்கிரகம், இன்றும் கூட மக்கள் எதிர்ப்பை மழுங்கடிப்பதில், வன்முறை குறித்த நியாயத்திற்கு அப்பாற்பட்ட தார்மீக அச்சத்தை உருவாக்குவதில் முன் நிற்கிறது. மணிப்பூரில், இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக, இந்திய அரசின் கொடூரச் சட்டமான "ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை' திரும்பப்பெறக் கோரி, கடந்த ஏழு ஆண்டுகளாக உண்ணாவிரதமிருந்து வரும் ஐரோம் சர்மிளா இதற்கு ஒரு உதாரணம். சர்மிளா செத்துப் பிணமானால் கூட இந்திய அரசு அச்சட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை.

காந்தியின் தெளிவற்ற, மூடு மந்திரமான மதச்சார்பின்மை 1947 பிரிவினையின்போதே படுதோல்வியடைந்த போதிலும், இன்றும் காங்கிரசாலும், போலி கம்யூனிஸ்டுகளாலும் உதாரணமாக முன்வைக்கப் படுகிறது. ஷாபானு வழக்கிலும், ராம ஜென்ம பூமி விவகாரத்திலும், குஜராத் படுகொலையிலும் காந்திய மதச்சார்பின்மை வெங்காயம் மொத்தமாய் உரிந்து போனது. காவிப் படையின் கொலை வெறியாட்டத்திற்கு சொல்லில் மௌன சாட்சியாகவும், செயலில் நம்பகமான கூட்டாளியாகவும் காங்கிரசு துணை போனது. ஆனால், இன்னமும் மதச்சார்பின்மைக்கு போலித்தனமான நடுநிலைமையே விளக்கமாக அளிக்கப்படுகிறது.

உண்மையில், காந்தி வாழ்ந்த காலத்திலேயே காந்தியம் தோற்றுப் போய் விட்டது. ஆனால் அந்த உண்மைகள் மூடி மறைக்கப்படுகிறது. அரை உண்மைகள் ஊதிப்பெருக்கப்படுகின்றன. பொய்கள் அதிகாரப்பூர்வ வரலாறாகிறது. அப்படித்தான் நாம் காந்தியை ஏற்றுக் கொள்ளச் செய்யப்பட்டிருக்கிறோம். அவ்வாறு மூடி மறைக்கப்பட்ட சில வரலாற்று உண்மைகளின் ஒளியில், இப்பொய்களை அடையாளம் காண்போம்.


···

காந்தி அவரது காலத்திலேயே தமது முரண்பாடுகளுக்காக மிகப் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஒரு விவாதத்தில், ""எனது முரண்பட்ட நிலைகளைக் குறித்த நிறைய குற்றச்சாட்டுக்களை நான் படித்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். ஆனால், அவற்றிற்கு நான் பதில் கூறுவதில்லை. ஏனெனில், அவை வேறு யாரையும் பாதிப்பதில்லை. என்னை மட்டுமே பாதிக்கின்றன'' என காந்தி எழுதினார். ஆனால், இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தரும் "பொறுப்பை' ஏற்றிருந்த காந்தியின் முரண்பட்ட நிலைகள் எவ்வாறு இந்த நாட்டின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே பாதித்தது என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது.

அகிம்சைதான் காந்தியத்தின் அடிப்படைக் கொள்கையாகச் சொல்லப்படுகிறது. உலகிலேயே முதன்முறையாக காந்தி கண்ட அறவழிப் போராட்ட முறையாக சத்தியாக்கிரகம் முன் வைக்கப்படுகிறது. ஆனால், உலக வரலாற்றில், நியாயமான கோரிக்கைகளுக்காக, எதிர்த்துத் தாக்காமல், துன்பங்களை தாமே முன்வந்து ஏற்றுக் கொள்ளும் சாத்வீகப் போராட்ட முறை இயேசு, துவக் கால கிறிஸ்தவர்களிலிருந்து ரசியாவின் டியூகோபார்கள் எனப்படும் பிரிவினர் வரை பலரால் ஏற்கெனவே கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், காந்தி தனது சத்தியாக்கிரக முறை சாத்வீக போராட்ட முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதென விடாப்பிடியாக சாதித்தார்.

"காந்தியும் அவரது காலங்களும்' என்ற நூலில் காந்தியம் எனும் கருத்தாக்கம் உருவான முறையை சாரமாக எழுத்தாளர் மன்மத்நாத் குப்தா இவ்வாறு குறிப்பிடுகிறார். ""புத்திசாலித்தனமாக கணக்கற்ற தார்மீக, தத்துவார்த்த, ஆன்மீகச் சரடுகளை சுற்றிக் காட்டியதன் மூலம், முந்தைய சாத்வீக இயக்கங்களிலிருந்து சத்தியாக்கிரகம் மாறுபட்டதென காட்ட முயன்றார். நூற்றாண்டுகளைக் கடந்த இந்துக் கலாச்சாரத்தின் மீதேறி சுலபமாகப் பயணிக்க முயன்றார். அவரே ஒத்துக் கொண்டதைப் போல, இதற்கு தேவையான தயாரிப்புகள் இல்லாத போதும், வறட்டுப் பிடிவாதத்தின் மூலமாக மட்டுமே அவரால் தனக்கென ஒரு கருத்தாக்கத்தை உருவாக்க முடிந்தது.''

தமது ஆன்மீகச் சொல்லாடல்களின் மூலம் எக்கருத்தையும் தனக்கேற்ற முறையில் காந்தியால் வளைக்க முடிந்தது. சிறையிலிருக்கும் புரட்சியாளனின் உண்ணாவிரதத்தைக் கூட காந்தி "வன்முறை' என்றார். ஏனெனில் அவனது உள்ளத்தில் வன்முறை இருக்கிறதாம். நிலப்பிரபுக்களுக்கு விவசாயிகள் வரி கொடுக்க மறுத்து, சாத்வீக முறையிலேயே போராடிய போதும் கூட, அது வன்முறை என்றார்.

இவ்வாறு வன்முறைக்கும், அகிம்சைக்கும் கணக்கற்ற விளக்கங்கள் அளித்த காந்திதான், தென்னாப்பிரிக்காவில், முற்றிலும் அநீதியான வகையில் ஜூலூ கலகப் போரிலும், போயர் யுத்தத்திலும், முதல் உலகப் போரிலும், பிரிட்டிஷ் சிப்பாய்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை செய்தார். இதனைக் கேள்வி கேட்டவர்களுக்கெல்லாம், ""இதன் மூலம் பிரிட்டிஷ் பிரஜை என்ற முறையில் தமது கடமையை ஆற்றினால்தான், உரிமைகளைப் பெற முடியும்'' என விளக்கமளித்தார்.

முதல் உலகப் போரில் ஆங்கிலப் படைகளுக்கு சேவை செய்த பொழுது, அவரது நெருங்கிய நண்பர்களே அவரை விமர்சித்ததற்கு, ""போரில் பங்கேற்பது என்பது அகிம்சையோடு ஒருக்காலும் பொருந்தாது என்பதை நானறிவேன். ஆனால் ஒருவருக்கு அவரது கடமைகள் குறித்து, எல்லாச் சமயங்களிலும் தெளிவான பார்வை பெற வாய்ப்புகள் இருப்பதில்லை. சத்தியத்தின் பாதையில் பயணிப்பவன் பல சமயங்களில் இருட்டில்தான் செல்ல வேண்டியிருக்கிறது'' என நியாயம் கற்பித்தார்.

பின்னர், 1921இல் தமது கண்கள் திறந்து விட்டதாகவும், அவ்வாறு கருதியது தவறு என்றும், பிரிட்டிஷ் அரசு தம்மை பிரஜையாகவே கருதவில்லையென்றும், எந்த உரிமைகளும் அற்ற ஒரு தாழ்த்தப்பட்ட பராரியாகவே இந்த அரசின்கீழ் தான் உணர்வதாகவும் "யங் இந்தியா'வில் குறிப்பிட்டார். ஆனால், அக்கண்கள் நீண்டநாள் திறந்திருக்கவில்லை. மீண்டும் 1928இல் முதல் உலகப் போரின் பங்கேற்பு குறித்த நிருபர்களின் கேள்விக்கு, ""போருக்கு எதிராக என்னுள் இப்பொழுது இருக்கும் அதே அளவிலான எதிர்ப்புணர்வு அப்பொழுதும் இருந்தது. ஆனால், இந்த உலகத்தில் நாம் விரும்பாத பல விசயங்களை நாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.'' பச்சை அயோக்கியத்தனத்தை இயலாமையாகக் காட்டித் தப்பிக்க முயலும், அறிவு நாணயமற்ற மனிதனால் மட்டுமே இவ்வாறு விளக்கம் அளிக்க முடியும்.

""சுதந்திரம் என ஒன்று வருமானால், அது மாபெரும் பிரிட்டிஷ் அரசுடன் ஒரு கண்ணியமான ஒப்பந்தத்தின் மூலமே வரவேண்டும்'' என 1929இல் காந்தி எழுதினார். காந்திய சுதந்திரப் போராட்டத்தின் சாராம்சத்தை, அதன் திசைவழியை, இந்த ஒற்றை வரியை விட வேறெதுவும் விளக்கிவிட முடியாது. காந்தி முரண்பாடற்று, கடைபிடித்த ஒரே கொள்கை இதுதான். ஏனெனில், சுதந்திரம் மக்களால் சமரசமற்று வென்றெடுக்கப்படுமாயின், அது பிரிட்டிஷ் ஆட்சியை மட்டுமல்ல, முதலாளிகளையும், நிலப்பிரபுக்களையும் மட்டுமல்ல, தன்னையும் சேர்த்தே தூக்கி எறிந்து விடும் என்பதை காந்தி தெளிவாக அறிந்திருந்தார். அதனால்தான், நடைமுறையில் மக்கள் சக்தியின் இயல்பான கோபாவேசத்தின் சிறுபொறி எழும்பினால் கூட, உடனடியாக அப்போராட்டத்தையே கைவிட்டு மக்களை திகைத்துப் பின்வாங்கச் செய்தார்.

இதனை 1921 ஒத்துழையாமை இயக்கம் முதல் 1942 தனிநபர் சத்தியாக்கிரகம் அல்லது வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை, நாம் காண முடிகிறது. காந்தி நடத்திய மூன்று இயக்கங்களிலும், போராட்டத்தின் போக்கில் மக்கள் போலீசு மீது எதிர்த்தாக்குதல் தொடுப்பதும், அவர்களைச் சிறை பிடிப்பதும், அரசுச் சொத்துக்களை நாசப்படுத்துவதும் தன்னியல்பாக நிகழ்ந்தது.

1921இல் சௌரி சௌரான் விவசாயிகள் காவல் நிலையத்திற்கு தீ வைத்ததையொட்டி, ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதாக இருக்கட்டும்; 1930இல் மக்களின் போராட்டத் தீ பற்றி எரிந்த வேளையில் வைஸ்ராய் இர்வினோடு ஒருதலைப்பட்சமான ஒப்பந்தத்திற்கு முன்வந்து, போராட்டத்தை கைவிட்டதாக இருக்கட்டும்; 1942இல் "தான் எந்தப் போராட்டத்தையும் அறிவிக்கவில்லை. மக்களது வன்முறைக்கு தாம் பொறுப்பல்ல' என ஆகஸ்டு போராட்டத்தை கைகழுவியதாக இருக்கட்டும், காந்தியின் வன்முறைக்கெதிரான பரிசுத்த வேடத்திற்குள், போராட்டம் தனது கைகளிலிருந்து நழுவ விடக்கூடாதென்ற இடையறாத அச்சம் ஒளித்து கொண்டிருந்தது.

காந்தியப் போராட்டத்தினுடைய வர்க்கச் சார்பு முதலாளிகளையும், வணிகர்களையும் சார்ந்திருந்தது தற்செயலானதல்ல. அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தின் அனுபவத்திலிருந்தும், பர்தோலி விவசாயிகளின் வரிகொடா இயக்க போராட்டத்திலிருந்தும், தொழிலாளர், விவசாயிகளின் வர்க்க கோரிக்கைகளுக்காக போராடுவதும், அவர்களை விடுதலைப் போராட்டத்தில் களமிறங்கச் செய்வதும் அபாயகரமானது எனத் தான் உணர்வதாக காந்தி வெளியிட்ட அறிக்கைகளை, அன்றே தமது "இளம் அரசியல் தொண்டர்களுக்கு' எனும் கட்டுரையில் மாபெரும் புரட்சியாளர் தோழர் பகத்சிங் சுட்டிக் காட்டினார். சுருக்கமாகச் சொன்னால், காந்தியப் போராட்டத்தின் வர்க்க உள்ளடக்கம்தான் அப்போராட்டத்தின் வடிவத்தையும் வரம்புகளையும் தீர்மானித்தது. அகிம்சை, சத்தியாக்கிரகம் என்பதெல்லாம் வெறுமனே வார்த்தைப் பூச்சுக்கள் மட்டுமே.

1929இல் சுதந்திரம் கிடைக்காமலேயே சுதந்திரக் கொடியேற்றும் கோமாளித்தனத்தை அரங்கேற்றினார், காந்தி. வீரதீரமாக "முழுச் சுதந்திரமே இலட்சியம்' என்று அறிவித்த கையோடு வைஸ்ராய்க்கு எழுதிய நீண்ட கடிதத்தில், ""என்னால் இயன்ற வரை, தங்களுக்கு எத்தகைய அனாவசியமான தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தும் எண்ணம் எனக்கில்லை'' எனக் குழைந்தார். வைஸ்ராய், ஒரு அலட்சியமான பதிலை வீசியெறிந்தார். ""நான் மண்டியிட்டு உணவு கேட்டேன். ஆனால், எனக்கு கல்தான் கிடைத்திருக்கிறது'' எனப் புலம்பினார் காந்தி. வைஸ்ராய்க்கு "தர்மசங்கடத்தை' ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை காந்திக்கு ஏற்பட்டுவிட்டது. அந்த தர்மசங்கடத்திற்கு பெயர்தான் "தண்டி யாத்திரை'.

ஆனால், ஆங்கில அரசு குயுக்தியாக காந்தியின் சகாக்களை கைது செய்தது; காந்தியை மட்டும் கைது செய்யாமல் விட்டு, அவரைச் சிறுமைப்படுத்தியது. உடனே அகிம்சாமூர்த்தி ஒரு அழகான தந்திரம் செய்தார். உப்புக் கிடங்குகளைச் சோதனையிட்டு, உப்பைப் பறிமுதல் செய்ய முடிவு செய்தார். வேறு வழியின்றி, அவரை அரசு கைது செய்ய நேர்ந்தது. பறிமுதல் செய்வது சத்தியாக்கிரகம் என்றால், வங்கியை கொள்ளையடிப்பது கூட சத்தியாக்கிரகம் தானே? "தனது தலைமையை காப்பாற்றிக் கொள்வது' என்ற ஒரே நோக்கத்துக்காகத்தான், சத்தியாக்கிரக வடிவத்தைக் கைவிட்டு, "பறிமுதல்' என்ற போராட்ட வடிவத்துக்கு மாறினார் காந்தி. அதே நேரத்தில், ""உப்பை மட்டுமல்ல, மொத்த சுதந்திரத்தையுமே பறித்தெடுக்க வேண்டும்'' என்று கூறிய பகத்சிங் முதலான புரட்சியாளர்களை, "தீவிரவாதிகள், வன்முறையாளர்கள்' என்றார் காந்தி.

சட்ட மறுப்பு இயக்கத்தை "இரகசியம்' சூழ்ந்து விட்டதாகக் கூறி, காந்தி அதனைக் கைவிட்டு, இர்வினிடம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் சரணாகதி அடைந்த பொழுது, ""ஒரு அரசியல் தலைவர் என்ற முறையில் காந்தி தோல்வி அடைந்து விட்டதாக நாங்கள் ஐயமின்றிக் கருதுகிறோம். தனது வாழ்நாள் கொள்கைகளுக்கே முரணின்றி நடக்க இயலாத காந்தி மேலும் தலைவராக நீடிப்பது நியாயமற்றது'' என சுபாஷ் சந்திர போஸும், வித்தல்பாய் படேலும் வியன்னாவிலிருந்து பகிரங்கமாக அறிக்கை விடுத்தனர். இருப்பினும் பார்ப்பனபனியாக் கட்சியான காங்கிரசுக்கு, மக்களை ஏய்க்க காந்தியின் "முகமூடி' தேவைப்பட்டது. ஆங்கில அரசுக்கோ, இத்தகைய விசுவாசமான "எதிரி' கிடைத்ததை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?

இவ்வாறு முப்பதாண்டுகளுக்கும் மேலாக, ஆளும் வர்க்கத்தின் மனம் நோகாமல், காந்தி நடத்திய "அரசியல் பரிசோதனை'களுக்கு "சோதனைப் பிராணி'களாக இந்திய மக்கள் அடிபட்டார்கள். உதைபட்டார்கள். இரத்தம் சிந்தினார்கள். சொத்துக்களை இழந்தார்கள். சிறையில் வாடினார்கள். ஒவ்வொரு போராட்டத்தின் கழுத்தறுப்பிற்கு பிறகும் விரக்திக்கும், வேதனைக்கும் தள்ளப்பட்டார்கள். இதைவிடக் கொடூரம், ""போராட்டத்தின் தோல்விக்கான காரணம், மக்களின் ஆத்ம சுத்தி போதவில்லை'' என காந்தி சொன்ன குற்றச்சாட்டையும் மௌனமாக ஏற்றுக் கொண்டார்கள்.

1942இல் யுத்தத்தில் ஜெர்மனிஜப்பான் முகாம் வெற்றி பெறலாம் என்ற கணிப்பில், அரை மனதோடு, காந்தி "வெள்ளையனே வெளியேறு' முழக்கத்தை முன்வைத்த மறுகணமே, காங்கிரசின் அனைத்து முக்கியத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இம்முறை மக்களின் போர்க்குணம் முழுமையாக வெளிப்பட்டது. தந்திக்கம்பிகள் அறுக்கப்பட்டன. ரயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. போலீசும், இராணுவமும் தாக்கப்பட்டனர். ஷோலாப்பூர் போன்ற பல இடங்களில் இராணுவமோ, போலீசோ பல நாள்களாக உள்ளே நுழையக் கூட முடியவில்லை. கொடூர அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

"காங்கிரசு சோசலிஸ்டுகள்'தான் வன்முறைக்கு காரணமென்று, காங்கிரசுத் தலைவர்கள் ஆள்காட்டி வேலையில் ஈடுபட்டார்கள். எதற்கும் உதவாத அகிம்சையை, மக்கள் நடைமுறையில் வீசியெறிந்தனர். சிறையிலிருந்து விடுதலையான காந்தி, போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். 1921இல் ஒத்துழையாமை இயக்கத்தின் பொழுது, சாதி, மத வேறுபாடுகளற்று நாடே கிளர்ந்தெழுந்த பொழுது, சுதந்திரம் வாயிற்படி வரை வந்ததென்றால், 1942இல் சுதந்திரம் வீட்டிற்குள்ளேயே கால் வைத்தது. ஆனால் இந்த முறையும் காந்தி அதன் காலை வாரிவிட்டார்.

தலைமையை விஞ்சி எழும்பும் மக்களின் போர்க்குணத்தை அதன் திரண்ட வடிவத்தில் 1942இல் காந்தி கண்டார். அதனால்தான் பின்னர் பிரிவினைக் கோரிக்கை எழுந்த பொழுது, பிரிவினைக் கோரிக்கையை ஆதரிப்பதைத் தவிர காந்திக்கு வேறு வழி இருக்கவில்லை. ஏனெனில் இன்னொரு "மக்கள்திரள் அரசியல் போராட்டம்' என்பது ஒட்டுமொத்த நிறுவனத்தையும் பெயர்த்தெடுக்காமல் அடங்காது என்பதைக் காந்தி புரிந்து கொண்டார். பிரிவினைக் கோரிக்கையை ஏற்பதற்கான காங்கிரசுத் தீர்மானத்தின் முன்மொழிவில், இதனைக் குறிப்பிடவும் செய்தார்.

பிரிவினைக் காலத்தில், கலவரம் நடந்த ஒவ்வொரு இடத்திற்கும் காந்தி சென்றார். ஆனால், அவரது சமரச முயற்சிகளும், போதனைகளும் இந்துமகா சபா வெறியர்களிடமும், முசுலீம் லீக் வெறியர்களிடமும் எடுபடவில்லை. காந்தியின் ஆத்மார்த்த சீடர் ஆச்சார்ய கிருபாளனியே, காந்தியினுடைய முயற்சிகளின் பலனைக் கீழ்க்காணும் முறையில் விவரிக்கிறார். ""அவர் நவகாளிக்கு சென்றார். அவரது முயற்சிகளால் நிலைமை சற்றே முன்னேறியது. இப்பொழுது பீகாரில் இருக்கிறார். நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாபில் கொழுந்து விட்டெரியும் வன்முறையில் எந்த மாற்றமும் இல்லை. மொத்த இந்தியாவிற்கான இந்துமுசுலீம் ஒற்றுமைப் பிரச்சினையை பீகாரில் தீர்க்கப் போவதாகக் கூறுகிறார். ஒருவேளை அவ்வாறு நடக்கலாம். ஆனால் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவார் என்பது சிக்கலாகவே தோன்றுகிறது. சாத்வீகமாக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தைப் போல, இலக்கை அடைவதற்கான எத்தகைய தீர்க்கமான வழிமுறைகளும் இதில் இல்லை.'' பின்னர், ""பீகாரில் தங்களது அகிம்சை எவ்வாறு வேலை செய்தது?'' எனக் கேட்டபொழுது ""அது வேலையே செய்யவில்லை. மோசமாகத் தோல்வியடைந்தது'' என்றார் காந்தி.

காந்தியின் ஆசிரமம் தாக்கப்பட்டது. தில்லியில் நடத்திய கடைசி உண்ணாவிரதத்தின் இறுதியில் காந்தி ""நான் எனது ஓட்டாண்டித்தனத்தை ஒத்துக் கொள்கிறேன்'' என தனது இயலாமையை வெளியிட்டார். அகிம்சையின் தந்தை காஷ்மீருக்கு படைகள் அனுப்ப ஆதரவளித்தார். தான் சர்வாதிகாரியாக இருந்தால், மதத்தையும் அரசியலையும் பிரிப்பேன் என்றார். அடுத்த கணமே, ""மதம்தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். வார இறுதி விசயமாக அல்லாமல், ஒவ்வொரு நொடியும் மதத்திற்காகச் செலவிடப்பட வேண்டும்'' என்றார். காந்தியால் தனது அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்ட நேரு, "காந்தியின் பொருளாதாரக் கொள்கைகள் காலங்கடந்தவை' என அவருக்கே கடிதம் எழுதினார். ""காந்தி தனது இறுதி நாள்களில் இருளில் தடுமாறிக் கொண்டிருந்தார்'' எனத் தெரிவிக்கிறார் கிருபாளனி.

இதே காலகட்டத்தில் இந்திய தேசிய இராணுவம் தொடுத்த தாக்குதல்களும், 1945 கப்பற்படை எழுச்சியும், தொழிலாளர் போராட்டங்களும் காந்தியின் அரசியல் முடிவை முன்னறிவித்தன. இரண்டாம் உலகப் போரில் பலவீனமடைந்த ஆங்கில அரசு, நேரடியாகத் தனது காலனிகளை இனிமேலும் அடக்கியாள முடியாது என்ற நிலையில், இந்தியா, இலங்கை மற்றும் பிற காலனிகளின் தரகு முதலாளிகளுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கைமாற்றிக் கொடுக்க முன்வந்தது.

அரசியல் அரங்கத்தால் புறந்தள்ளப்பட்ட காந்தியின் பிம்பம், இன்றளவும் பாதுகாக்கப்படுகிறதென்றால், அதற்கு கோட்சேயின் நடவடிக்கைதான் உதவி செய்தது என்று சொல்ல வேண்டும். காந்தியம் வெளுத்து, அதன் பூச்சுக்கள் உதிர்ந்த நிலையில், காந்தி ஒருவேளை தொடர்ந்து வாழ்ந்திருப்பாரேயானால், காந்தியம் தவிர்க்கவியலாமல் செத்துப் போயிருக்கும். கத்தியின்றி, இரத்தமின்றி, சுதந்திரத்தின் கழுத்தறத்ததுதான், "காந்தி' எனும் ஊதிப் பெருக்கப்படும் "சோளக்காட்டுப் பொம்மை'யின் சுருக்கமான அரசியல் வரலாறு.

""என்னதான் இருந்தாலும், காந்தியிடமிருந்து பின்பற்றுவதற்கு எதுவுமே இல்லையா?'' என அரசியல் பொழுதுபோக்காளர்கள் கேட்கக் கூடும். காந்தியிடமிருந்து நாம் பின்பற்ற எதுவுமில்லை. ஆனால், "வாடிக்கையாளரே நமது எசமானர்' என்ற அவரது பொன்மொழியை மட்டும், கட்சிப் பாகுபாடின்றி சகல இந்திய ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளும் இம்மி பிசகாமல் பின்பற்றுகிறார்கள். அவர்கள் மக்களைத் தமது எசமானர்களாகக் கருதுவதில்லை. பன்னாட்டு முதலாளிகள் என்ற தமது வாடிக்கையாளர்களைத்தான் எசமானர்களாகக் கருதுகிறார்கள். இந்த விசயத்தில் குருவை மிஞ்சிய சீடர்களாகவும் நடந்து கொள்கிறார்கள். அந்த வகையில் காந்தியம் இன்னமும் உயிரோடிருக்கிறது என்பது உண்மைதான்.

Thursday, March 27, 2008

சொல்வதும், சொல்லத் தவறுவதும்

சொல்வதும், சொல்லத் தவறுவதும்

பி.இரயாகரன்
26.03.2008

(30.03.2008 பிரான்சில் வெளியிட உள்ள இரு புத்தகங்கள் மீதான விமர்சனம். கூட்ட விபரம். http://www.mahajanan.com/New/Programme-30mar08-pdf.pdf ) )

சொல்வதும், சொல்லத் தவறுவதும் என்ற இரு அடிப்படையான சமூகப் பரிணாமங்களில், ஒன்றை முன்னிறுத்தியே கனகசபாபதியின் இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளது. அது நோய்க்கு மருந்தைக் கொடுக்கின்றது. நோயின் மூலத்தை கண்டறிந்து, அதற்கு மருந்து கொடுப்பதைத் தவிர்க்கின்றது.

1. மனம் எங்கே போகிறது. (இந்த நூல் தனி மனிதனுக்குள்ளும், குடும்ப உறவுகளுக்குள்ளும்; நடக்கும் உளவியல் முரண்பாடுகளை, நெருக்கடிகளைப் பற்றி ஆராய்கின்றது. அத்துடன் மனிதன் வெளிப்படுத்தும் உணர்வுகள், உணாச்சிகளைப் பற்றி உடல் சார்ந்து பேசுகின்றது.)

2. திறவு கோல்; (இந்த நூல் விலங்கியல் துறை சார்ந்தது. ஆனால் உலகளாவிய மருத்துவ ரீதியான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பானது. இதன் ஊடாக மனித கலாச்சாரங்கள் முரண்பாடுகள் பற்றி சிலேடையாகவே பேசுகின்றது.)

இனி இந்த நூலுக்குள் வருவோம். இந்த இரண்டு நூல்களும், அவரின் முன்னைய நூல்கள் போல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதைவிட இவை மிக நுட்பமானவை. அதன் ஊடாக சொல்பவையோ சமூகம் தொடர்பானவை.

இலங்கைத் தமிழர்களின் இருண்ட சூனியமான வரலாற்றுப் போக்கில், இம் முயற்சிகள் சிறு அரும்புகள் தான். மனித சிந்தனையை சுயமாக சிந்திக்க வைக்கவும், சுய அறிவை மீளத் தேட வைக்கும் வகையில், உளவியல் ரீதியாக ஒவ்வொரு மனிதனையும் இது தூண்டுகின்றது.

இந்த நூல் உள்ளான விமர்சனங்களுக்கு அப்பால், அவர் தனது 74 வயதிலும் சமூகத்தை நுணுகி அணுக முடிந்த விடையங்கள் மிக முக்கியமானவை. இதை வாசித்தால் பாதிப்பின்றி, மாற்றமின்றி வெளிவர முடியாது. அந்தளவுக்கு மனிதம் சார்ந்து, அதன் ஒரு பக்கத்தைப் பேசுகின்றது.

இதை அவரின் எத்தனை பழைய மாணவர்கள் படிக்கின்றார்கள் என்பதே கேள்வி தான். முன்னாள் அதிபர், பழைய மாணவர் சங்கம் என்ற எல்லைக்குள், இதை வாங்குவதும் வெளியிடுவதும் என்ற சம்பிரதாயம் நடைமுறைகளே, பொதுவாக அதிகளவில் நிகழ்தகவாக நிகழ்கின்றது. இது மாற்றப்பாடாத வரை, இந்த மாதிரி நூல்கள் சொல்ல வரும் சமுதாய நலன் சார்ந்த விடையங்கள், வெறுமனே புத்தகத்தில் அச்சேறுவதுடன் முடிந்து போகின்றது.

நூல் பற்றி எனது விமர்சனம் என்பது, எதிர்காலத்தில் அவர் எழுத உள்ள தொடர்ச்சியான எழுத்தை, மேலும் ஒரு நுட்பமான சமூகவியலாளனாக அணுகிப் பார்க்கத் தூண்டுவது தான்.

இந்த இரு நூல்களும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு சமூக விஞ்ஞானமாகவே பேசுகின்றது. ஆனால் இது ஒருபுறம் விஞ்ஞானமாக இருக்கின்ற அதே தளத்தில், விஞ்ஞானத்துக்கு நேர் முரணாகவும் அணுகுகின்றது. இதில் மதம் கற்பனையில் புலம்பியவைகளை அறிவாகவும், சினிமா குப்பையில் இருந்து பொறுக்கியதை அழுத்தமாகவும்;, பழைய தமிழ் இலக்கிய ஒப்பீட்டு எடுகோள்களையும் இதற்குள் ஆங்காங்கே புகுத்தியது என்பது, விஞ்ஞான அறிவியல் முறைக்கே நேர்மாறானது. இதன் விளைவு என்பது, பாக்கு நீரிணையை பற்றிய அறிவியலை, இராமன் பாலம் என்று கூறும் மூடத்தனத்துக்கு ஒப்பானதாக்கி விடுகின்து. இது இந்த நூலின் மீதான பொதுவான விமர்சனங்களில் ஒன்று.

இரண்டாவது முக்கிய விமர்சனம், பொதுவான இந்த உலக ஏற்பாட்டை எதிர்ப்பின்றி போராட்டமின்றி ஏற்றுக்கொள்வது. அனைத்துக் கட்டுரைகளும் இதையே சாரமாக கொண்டது. எந்த மாற்றமும் இயல்பாக்கம் பெற்று அதை ஏற்றுக் கொள்ளப் பழகிவிட முடியும், எனவே சரணடை என்கின்றது.

குறிப்பான விமர்சனமூடாக, சில உதாரணங்கள் ஊடாக நுணுகிப் பார்ப்போம். 'கலை என்ற பெயரில் வக்கிர உணர்வுகளைத் தூண்டுகின்ற இலக்கியங்களை அமைத்து அவைகளைப் பார்க்கவோ வாசிக்கவோ நாம் வழிசெய்து கொடுத்தபின் அவர்கள் அதன் வழிநடக்கும் போது அவர்களைக் குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்?" மிகச் சரியானதும், துல்லியமானதுமான கருதுகோள் தான்.

அப்படியாயின் யாரை ஏன் எப்படி எதற்காக குற்றம் சாட்டுவது? பாதிக்கப்பட்ட வரை குற்றம் சாட்டமுடியாது என்பது மிகச் சரியானது, இந்த பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் குற்றவாளிகள் அல்லவா? இந்த நூல் இதை விவாதிக்க மறுப்பதும், குற்றம்சாட்ட மறுப்பதும் ஏன்? இந்த பாதிப்பில் இருந்து தப்புவது எப்படி? இந்த நூல் இதைச் சொல்லத் தவறுகின்றதே ஏன்? அனைத்துக் கட்டுரையும் இதை அடிப்படையாக கொண்டது.

இதை உருவாக்குபவனுக்கு எதிராக எதிர்வினையின்றி, இதன் பாதிப்பை அனுசரிக்கின்ற நழுவல் தீர்வுகளையும்;, ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பற்றியே படைப்புகள் பேசுகின்றது.

இதில் உள்ள முரண்பாட்டு வாதம், இதை நியாயப்படுத்திவிடுகின்றது. எதார்த்தமான நிலைமை இதுவென்று சொல்லி, இதை எப்படி இணக்கமாக்கி வாழ்க்கையாக்குவது என்ற உள்ளடக்கத்தில் தான் கட்டுரைகள் பெரும்பாலும் அமைகின்றது. நூல் ஆசிரியர் தொடர்ச்சியாக கற்றுக்கொள்ளும் நூல்கள் இதற்குள் அமைவதால், அது ஏற்படுத்தும் செல்வாக்கா? அல்லது ஆசிரியரின் நிலைப்பாடே இதுவா?

விமர்சனத்தின் மையமான விடையமே இது தான். 'கலை என்ற பெயரில் வக்கிர உணர்வுகளைத் தூண்டுகின்ற இலக்கியங்களை அமைத்து அவைகளைப் பாhக்கவோ வாசிக்கவோ நாம் வழிசெய்து கொடுத்தபின்.." என்ற விடையத்தில், 'வக்கிர உணர்வுகளைத் தூண்டுகின்ற இலக்கியங்க"ள் ஏன் படைக்கப்படுகின்றது. யாரால் எதற்காக இவ்வளவும்? ஆசிரியர் அதற்கு எதிரான அபிப்பிராயங்களை முன்வைக்க மறுப்பது தான், மையமான விமர்சனம்.

மனித நலனுக்கு எதிரான இவற்றுடன், எப்படித் தான் எம்மால் அனுசரித்துப் போக முடியும்? சமூக விஞ்ஞானி இதை ஏற்றுக்கொள்வானா? ஆசிரியரே இது போன்ற 'வக்கிர உணர்வுகளைத் தூண்டுகின்ற" சினிமாவில் இருந்து, மதத்தில் இருந்தும் தனது கருத்தை வலுப்படுத்த உதாரணம் காட்டுகின்றார். நூலின் நோக்கத்துக்கே முரணான ஆச்சரியம் தான்.

1. சமுதாயம் இப்படி இருக்கின்றது அல்லது மாறுகின்றது என்பதால், இருப்பதை நியாயப்படுத்தி, அதற்குள் விலங்கு மீன் போல் நழுவி வாழும் வகையில் தீர்வை வைக்கின்றார்.

2. இந்த போக்கு சரியானதல்ல என்ற விடையம் உணரப்பட்டாலும், அதன் மீது விமர்சனத்தை முன்வைக்கவில்லை. அந்த பக்கத்தைப் புறக்கணிக்கின்றார். அதாவது கண்டும் காணாமல் வாழப் பழகுதல் அறிவு என்கின்றார்.

இதை இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில் பார்த்தால், நோய் ஏற்பட்ட உடன் தடுப்பு மருந்து கொடுப்பது ஒருபுறம், மறுபக்கத்தில் நோய் தோன்றும் காரணமான சூழலை இனம் கண்டு அதை அகற்றுதல் என்ற இரண்டு பணிகள் உண்டு. இந்த இரண்டையும் ஒரு மருத்துவராக, அணுகவும் தீர்க்கவும் முற்படவில்லை.

ஒரு சமூகவியலாளன் இரண்டையும் செய்ய வேண்டும். இந்த நூல் தடுப்பு மருந்தைப் பற்றி மேலெழுந்தவாரியாகப் பேசுகின்றது, இந்த நோய் தோன்றுவதற்கான சூழலை மாற்றுவதைப் பற்றியும் அதற்கு மருந்து கொடுப்பதைப் பற்றியம் பேசவில்லை.

(கரப்பான் பூச்சிக்கான) கிருமி கொல்லி போன்றது இது. உடனடியாக அதை கொல்வதும், அதே நேரம் அது முற்றாக அழியாது மறுஉற்பத்தியை தூண்டுவதை அடிப்படையாக கொண்டே கிருமி கொல்லி தயாரிக்கப்படுகின்றது. கிருமி முற்றாக அழிந்தால், கிருமி கொல்லி விற்காது என்பதால், மீள் கிருமி உற்பத்தி தூண்டப்படுகின்றது. இதை அடிப்படையாக கொண்ட தத்துவம் தான் கட்டுரையின் சாரம்.

தொலைபேசி பற்றி 'காதலிப்பதற்கும் அது தேவை அல்லவா?" இதை அவர்கள் தெரிவு செய்கின்றனரா அல்லது தெரிவு செய்யத் தூண்டப்படுகின்றனரா? தேவைக்கு மாறாக தூண்டப்படுகின்றனர். இந்த தூண்டல் தான், விமர்சனமின்றி எங்கும் எதிலும் ஏற்கப்படுகின்றது. இதை ஆசிரியர் பிரதிபலிப்பது அபத்தம்.

மேலும் பார்ப்போம். '.. வியாபாரமாகும் பொழுதுதான் வாழ்வின் விழுமியங்கள் நொருங்கிப் போவதைக் காணமுடிகிறது" முழு உலகையும், இதற்கு ஊடாக புரிந்து கொள்ள இது போதும். ஆனால் இதுவே வாழ்வாகி, இது இயல்பில் உணரப்படுவதில்லை.

இதை எழுதிய ஆசிரியர், தனது கட்டுரைகளில் இதை போதுமானளவுக்கு விழிப்புணர்வுடன் இதைக் கையாளவில்லை. உண்மையில் ஒரு விளம்பர உதாரணத்தின் ஊடாக இதை அவரால் சொல்ல முடிந்தது. ஆனால் (விஞ்ஞான) அறிவியல் முதல் அனைத்தும் இதுவாகிவிட்டதை, தனது கட்டுரைகளில் வெளிப்படுத்த முடியவில்லை. (விஞ்ஞான) கண்டுபிடிப்புகள் இதற்காகத் தான் என்பதை அவர் காணவும், காட்டவும் தவறிவிடுகின்றார். சமூக நலனற்ற பொருள் உலகத்தில் அதை உள்வாங்கவும், நுகரவும், அதற்குள் இணங்கி வாழவும், செயற்கையாகவே மனிதன் மந்தையாக்கப்பட்டு தூண்டப்படுகின்றான். இதற்குள் தான் மனித உறவுகள் முதல் சிந்தனை வரை வக்கிரமாகி விட்டதை, நுணுகிப் பார்க்க முடிவதில்லை.

மனித உறவில் அனைத்தும் இதுவாகிவிட்டதை காணமறுப்பது, சமூகவியலாளனுக்கு உள்ள சிந்தனை முறையில் உள்ள அடிப்படைத் தவறாகும்.

இன்றைய விஞ்ஞானியின், இன்றைய மருத்துவரின் கண்டுபிடிப்புகள் முதல் அது எதுவாக இருந்தாலும், அவனின் அடிப்படையான நோக்கம் தான் என்ன? அவனின் சிந்தனை தான் என்ன? மனித குலம் மீதான, அக்கறையா அது? அதற்காகத் தான் அவன் அதில் ஈடுபடுகின்றானா? பதில் சொல்லவேண்டிய கடமை உண்டு.

74 வயதிலும் தொடர்ந்து கற்றும், கற்பிக்கும் உங்கள் முயற்சி, நூல் மூலம் புகழ் பணம் சம்பாதிக்கவல்ல என்பது உங்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். உங்களுக்கு என்று ஒரு சமூக அக்கறையும், சமூக நோக்கமும் உண்டு, இதில் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நோக்கம் நேர்மையானது, வெளிப்படையானது.

இந்த அடிப்படையில் தானா இன்றைய விஞ்ஞானமும், அறிவியலும்; முன்னேறுகின்றது. இல்லை என்பது உங்களுக்கு நன்கு தெரியும். ஆனால் அதை சொல்ல தவறுவது என்பது, அல்லது அதை முதன்மையானதாக உணராது இருப்பது என்பதே எமது விமர்சனம்.

நீங்கள் சொல்லும் விடையத்தைப் பாருங்கள். '..பெரிய உடலமைப்பைக் கொண்ட பண்ணை விலங்குகளை உருவாக்குவதால் பெரிய இலாபம் விலங்கு பண்ணை நடத்துவோருக்குக் கிடைக்க முடியும்" உங்கள் மற்றொரு கட்டுரையில் 'வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் முகமாக ஆடு, கோழிகளுக்கு புர் என அழைக்கப்படும் வளர்ச்சி ஓமோன் ஊட்டப்படுகின்றது. .. குழந்தைகள் அந்த இறைச்சியை உட்கொள்ளும் போது அதீத வளர்ச்சியைத் தூண்டுகின்றது" இதன் விளைவு, சமூக நெருக்கடிகள், தனிமனித அவலங்களும் கூட தோன்றுகின்றது. இதக்கு முரணானதாக உங்கள் முதல் கூற்று உள்ளது. அதை ஆதரிக்கின்றீர்கள். இரண்டாவது ஏற்படுத்தும் விளைவுகளை சரிக்கட்ட முனைகின்றீர்கள். ஏன் இந்த முரண்பாடு?

இங்கு கவனத்தில் எடுக்க வேண்டியது, அதீத வளர்ச்சி மருந்து ஜரோப்பாவில் மிருகங்களுக்கு கொடுப்;பது தடைசெய்யப்பட்டுள்ளது. இதை சட்டவிரோதமாக, மாபியா கடத்தி வருவதும், விவசாயிகள் இதை பயன்படுத்தியதை கண்டுபிடித்த விவசாய அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

பயன்பாட்டின் விளைவுக்கான தீர்வு, மறுபக்கம் பயன்பாட்டின் நோக்கத்தை தடுக்கும் வகையில் எதிர்வினை என்ற இரண்டு கூறுகள் உண்டு. ஒரு அறிவினை கண்ணை மூடி ஆதரிப்பது என்பது கட்டுரையாளரின் நோக்கமானால், அதுவும் அறிவாகாது.

இங்கு இயற்கையின் தேர்வை ஆசிரியர் தனது கவனத்தில் எடுக்கத் தவறுவது வெளிப்படுகின்றது. இயற்கையில் தேர்வை அழித்து மனிதன் வாழமுடியாது. இயற்கையின் தேர்வினைப் பயன்படுத்தி இணங்கி வாழ முடியும்;. அதை மறுத்ததல்ல. இன்றைய அறிவியலும் அறிவியல் முறைகளும், வாழ்வியலும் வாழ்வியல் முறைகளும், விஞ்ஞானமும் இயற்கையை மறுக்கின்றது. இயற்கையை அழிக்கின்றது. இவையெல்லாம் எதற்காக? மனித நல்வாழ்வுக்காகவா? அல்லது பணம் சம்பாதிப்பதற்காகவா?

நோக்கம் தவறானதாக உள்ள போது, அறிவியல் மனிதனுக்கு எதிராகவே கையாளப்படுகின்றது. அதாவது குறுகிய பயன்பாட்டின் மீது, குறுகிய நோக்கில் அதை முழு சமூகம் மீதும் திணித்து அது இயக்கப்படுகின்றது. ஏன், இது முழு இயற்கைக்கும் எதிராகவே இயக்கப்படுகின்து.

இதன் விளைவுகளை எப்படி சமாளிப்பது என்பதைத் தான், அறிவியல் தகவலுக்கு அப்பால் இந்த நூல் கூற முனைகின்றது. ஆனால் இதை முன்கூட்டியே தடுப்பது எப்படி என்பதை, இந்த நூல் பேச மறுக்கின்றது. இதனால் அதை ஆதரித்து விடுகின்ற தவறு, அதன் உள்ளடக்கமாகி விடுகின்றது.

சுமங்கலித் திட்டம் :பிள்ளைக்கறி தின்னும் ஜவுளி முதலாளிகள்!

சுமங்கலித் திட்டம் :பிள்ளைக்கறி தின்னும் ஜவுளி முதலாளிகள்!

"வேலை காலி இல்லை என்ற பலகை தொங்கியது அந்தக் காலம். இன்று எங்கு திரும்பினாலும் வேலை இருக்கிறது. இது "தனியார்மயம் தாராளமயம் உலகமயம்' என்ற கொள்கைக்குக் கிடைத்த வெற்றி'' என்கிறார்கள் ஆட்சியாளர்கள். இந்தியத் தரகு முதலாளிகளோ, "மனித வளம் அதுதான் நம்முடைய பலம்' என்று மக்களை நாக்கில் நீர் சொட்டப் பார்க்கிறார்கள். ""மக்கள்தொகைப் பெருக்கம்தான் நாடு முன்னேறாததற்குக் காரணம்'' என்று அரசாங்கமும் முன்புபோல மக்களை இப்போது கரித்துக் கொட்டுவதில்லை. மொத்தத்தில், மக்களுக்கு இப்போது மதிப்பு கூடிவிட்டது.

15-30 வயதுக்கு இடைப்பட்ட இளைய தலைமுறை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக இருக்கிறதாம். நாட்டை முன்னேற்றும் பொருட்டு கனிமவளம், நீர்வளம், எண்ணெய் வளம், காட்டுவளம் ஆகியவற்றைத் தனியார்மயமாக்கி, பன்னாட்டு நிறுவனங்களும் தரகுமுதலாளிகளும் அவற்றைத் தம் விருப்பம் போலச் சூறையாடுவதற்கேற்பச் சட்டங்களைத் திருத்தி விட்டன பா.ஜ.க, காங். அரசுகள். ஆனால், இந்த மனிதவளத்தைச் சூறையாடுவதற்குத்தான் பல சட்டங்கள் தடையாக இருக்கின்றனவாம். அவற்றையும் திருத்தி விட்டால் முதலாளிகள் மகிழ்ச்சியுடன் தொழில் தொடங்குவார்கள், என்கிறார் மன்மோகன் சிங்.

பணிப்பாதுகாப்பு, குறைந்த பட்ச ஊதியம், 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமைகள் போன்ற தடைகளை அகற்றினால்தான், முதலாளிகள் தொழிலாளிகளை சுதந்திரமாகக் கசக்கிப் பிழிய முடியும், என்பதுதான் பிரதமர் கூறுவதன் உட்பொருள். இருந்தாலும் ""உங்களைக் கசக்கிப் பிழிவதற்கான வாய்ப்பை வழங்குகிறோம்'' என்று முதலாளிகளோ பிரதமரோ, தொழிலாளிகளிடம் கூற முடியாதல்லவா? அதனால்தான், தங்களுடைய இலாபத்துக்கான வாய்ப்பை, "தொழிலாளிகளுக்கான வேலைவாய்ப்பு' என்று சித்தரிக்கிறார்கள் முதலாளிகள்.

தமிழகத்தின் வேலைவாய்ப்பு மையம் திருப்பூர். நாட்டுக்குச் சோறு போட்டு நொடித்துப் போன 17 மாவட்டங்களின் விவசாயிகள், உலகத்துக்கு உடை கொடுக்கும் இந்த ஜவுளித் தொழிலுக்கு வந்துதான் சரணடைகிறார்கள். 199697இல் ரூ.2255 கோடியாக இருந்த திருப்பூரின் ஏற்றுமதி, 2006/07இல் 11,000 கோடியாக உயர்ந்திருக்கிறதாம். "நீருயர நெல்லுயரும்' என்பது போல, உற்பத்தி உயர உயர உழைப்பாளிகளின் வாழ்க்கையும் உயரும் என்கிறது அரசாங்கம். இந்த 5 மடங்கு வளர்ச்சி, தொழிலாளர்களின் வாழ்க்கையில் எத்தனை மடங்கு வளர்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறது?

அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, இந்த வளர்ச்சியின் பின்னால் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் வீழ்ச்சியை அம்பலமாக்குகிறது. அந்நியச் செலாவணியை அள்ளித்தரும் கற்பக விருட்சமாகச் சித்தரிக்கப்படும் ஜவுளித் தொழிலில், நிலவும் கொத்தடிமைத்தனத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

""இந்தத் துறையில் பணியாற்றும் தொழிலாளிகளில், 70% பேர் "தொழிற்பழகுனர்கள்' (apprentice) என்ற பெயரில் சுரண்டப்படுகிறார்கள். நிரந்தரத் தொழிலாளிகளை வெளியேற்றி, மேலும் மேலும் இத்தகைய தொழிற்பழகுனர்களால் எல்லா ஆலைகளும் நிரப்பப்படுகின்றன. கோவை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 406 பஞ்சாலைகளில் மட்டும் 38,461 பெண்கள் "சுமங்கலித் திட்டம்' என்ற பெயரில் கொத்தடிமைகளாக, கொடூரமான முறைகளில் சுரண்டப்படுகிறார்கள்'' என்று அம்பலப்படுத்துகிறது இந்த மனு. தமிழகத்தில் உள்ள ஜவுளி மில்களின் எண்ணிக்கை 1600. இத்தகைய பெண் கொத்தடிமைகளின் எண்ணிக்கை மொத்தம் எவ்வளவு என்பதற்குக் கணக்கில்லை. பஞ்சாலைகளில் முறுக்கிப் பிழியப்படும் பல்லாயிரக்கணக்கான இளம் பெண்களின் கண்ணீர்க் கதை இது. இந்தக் கண்ணீர்க் கதைக்கு, முதலாளிகள் சூட்டியிருக்கும் பெயர் சுமங்கலித் திட்டம்.

ஏழை, கூலி விவசாயிகள், கிராமப்புற ஏழைகள் ஆகியோரது வீட்டுப் பெண் பிள்ளைகளைக் குறிவைத்து, ஜவுளி ஆலை முதலாளிகளால் உருவாக்கப்பட்டிருக்கும் திட்டம்தான், சுமங்கலித் திட்டம். இதற்காகவே கிராமப்புறங்களில் அலையும் தரகர்கள், பள்ளியிறுதித் தேர்வு முடிந்து, விடுமுறையில் இருக்கும் பெண்களுடைய பெற்றோர்களைக் குறிவைக்கிறார்கள். ""தினக்கூலி 25 ரூபாய்; உணவு, தங்குமிடம், மருத்துவம் இலவசம்; இலவசமாக தையல் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி; 3 ஆண்டுகள் வேலை செய்தால், முடிவில் 50,000 ரூபாயுடன் வீடு திரும்பலாம்'' என்று பெற்றோர்களுக்கு ஆசை காட்டுகிறார்கள். ""வீட்டில் இருந்தால் வீண் செலவுதானே, படித்து ஆகப்போறதென்ன, சும்மாயிருப்பதற்கு தொழில் படிச்சமாதிரியும் ஆச்சு, கல்யாணத்துக்கு சம்பாரிச்ச மாதிரியும் ஆச்சு'' என்று கூறி, பெண்பிள்ளையைக் கட்டிக் கொடுக்க வழியில்லாத அவர்களது நிலைமையை நினைவுபடுத்துகின்றனர். ""ஒழுக்கம், கற்பு விசயத்தில், உங்களைவிட முதலாளி ரொம்பவும் கண்டிப்பாக்கும்'' என்று கதை சொல்லி, பெற்றோரின் தயக்கத்தைப் போக்குகின்றனர்.

தயங்கி என்ன செய்ய முடியும்? பெண்ணைப் படிக்க வைக்க ஆசையிருந்தாலும், விவசாயிக்கு வசதி கிடையாது. அவருக்கே வேலை கிடைக்காத கிராமப்புறத்தில், பிள்ளைக்கு வேலையும் கிடைக்காது. கல்யாணம் கட்டிக் கொடுக்கவோ, காசும் கிடையாது. தரகனின் பேச்சைக் காட்டிலும், வாழ்க்கை தரும் இந்த நிர்ப்பந்தம் அவர்களைத் தலையாட்ட வைக்கிறது.

இப்படி கிராமப்புறங்களிலிருந்து ஓட்டிச் செல்லப்படும் பெண்கள், மில்லுக்கு அருகிலேயே தங்க வைக்கப் படுகிறார்கள். கால் நீட்டிக்கூடப் படுக்க முடியாமல், ஒரு அறைக்கு 70 பேர் மந்தைகளைப் போல அடைக்கப்படுகிறார்கள். தினசரி 12 மணி நேரம் வேலை. கூடுதலாக 3 மணி நேரமாவது வேலை செய்ய வேண்டியிருக்கும். மறுத்தால் நாள் முழுதும் வெயிலில் நிற்கும் தண்டனை. ஒருநாள் கூலி 15 முதல் 25 ரூபாய் வரை. பேசிய கூலியைக் கொடு என்று வாய்திறந்து கேட்கமுடியாது. ஆண்டுக்கு 5 நாள்தான் விடுமுறை. உடம்பு முடியாமல் லீவு போட்டால் சம்பள வெட்டு. மாதவிடாய்க் காலத்திலும் கடினமான வேலைகளிலிருந்து விலக்கு கிடையாது. வேலை நேரத்தில் கழிவறைக்கு ஒதுங்க நினைத்தால், ஆண் கங்காணிகளின் சீண்டல் பேச்சுக்களையும் கழுகுப்பார்வைகளையும் தாண்டித்தான் போக முடியும். வீட்டிலிருந்து வரும் கடிதங்கள் பிரித்துப் படிக்கப்படும். தங்கியிருக்கும் விடுதியிலிருந்து வெளியில் செல்லவோ, வெளியாள்களிடம் பேசவோ அனுமதி கிடையாது. ஒருவேளை, மூன்றாண்டுகளுக்கு சில மாதங்கள் முன்னதாகத் திருமணம் நிச்சயமாகி விட்டால்கூட, மொத்தத் தொகையும் மறுக்கப்படும். காதலித்தாலும் வேலைநீக்கம்.

தினக்கூலியில் சாதிபேதமும் உண்டு. நாகமலை என்ற கிராமத்திலிருந்து வந்த தலித் பெண்களுக்கு 15 ரூபாய்தான் தினக்கூலி. திண்டுக்கல் மாவட்டம், தோட்டணாம்பட்டி மரகதத்துக்கு இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு திருமணமான குற்றத்துக்காக, மொத்தத் தொகையும் மறுப்பு. பழனி விஜயகுமார் மில்லின் முதலாளியோ, திடீரென்று மில்லை மூடி, சுமங்கலித் திட்டத்தில் வேலை செய்த 789 பெண்களுக்குச் சேர வேண்டிய மொத்தத் தொகையையும் விழுங்கி விட்டான். நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுபோய், நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கிய பின்னரும் பணம் வராததால், தற்கொலைக்கு முயன்ற பெண்களும் உண்டு.

முழுசாக 50,000 ரூபாயைப் பார்த்தறியாத விவசாயிகள், அந்தத் தூண்டிலில் சிக்கித்தான் பெண்களை அனுப்புகிறார்கள். ஆனால், "குற்றம் குறை இல்லாமல் மூன்றாண்டுகளை முடித்தால்தான் முழுத்தொகை' என்ற அந்த நிபந்தனைதான், ஆகக் கொடூரமான கொத்தடிமைத்தனத்தையும் சகித்துக் கொள்ளும் கட்டாயத்தை அந்தப் பெண்களுக்கு ஏற்படுத்துகிறது. ""அடிக்கடி பார்க்க வந்தால் அதுவே பிரச்சினையாகி விடும்'' என்று பெற்றோர்களையே துரத்தும் பெண்களின் பயம், காதலிக்க பயம், உடல்நலம் குறைந்தால் தகுதிக் குறைவாகி விடுமோ, என்று அதை வெளியில் சொல்ல பயம், ஒதுங்க நினைத்தால் கூட சூப்பர்வைசரைக் கண்டு பயம், ஓட நினைத்தால் கஞ்சிக்கு வழியில்லாத வீட்டை எண்ணிப் பயம், மிசினில் சிக்கி விரல் துண்டானாலும் மருத்துவ விடுப்பு எடுக்க பயம், பாலியல் வன்முறைக்கு ஆளானாலும் அதைச் சகித்துக் கொள்ளவேண்டிய பயம் இப்படித் திட்டமிட்டே அச்சத்தில் உறைய வைத்துதான் அந்தப் பெண்களை உறிஞ்சுகிறார்கள், முதலாளிகள்.

தாங்கள் அனுபவித்து வரும் கொடுமையைத் தம் பெற்றோரிடம் சொன்னால் கூடப் பிரச்சினையாகிவிடுமோ, என்று அஞ்சும் இந்தப் பெண்கள், இவற்றையெல்லாம் தாமாகவே வெளியுலகிற்குக் கொண்டுவந்து விடவில்லை. பத்திரிகையாளர்களிடம் கூட பேசப் பயந்தார்கள். நிரந்தரத் தொழிலாளிகளின் மூலம்தான், இப்பிரச்சினையின் வீச்சும், பரிமாணமும் வெளியில் வந்திருக்கின்றன. நிரந்தரத் தொழிலாளர்களையெல்லாம் கட்டாயப்படுத்தி, "விருப்ப ஓய்வி'ல் அனுப்பிவிட்டு, மொத்த உற்பத்தியையும் தொழிற்பழகுனர்களை வைத்தே நடத்த, முதலாளிகள் சதி செய்வதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்கள் நிரந்தரத் தொழிலாளர்கள். ""100% தொழிற்பழகுனர்களை வைத்தே ஆலையை நடத்தும்போதுதான் ஜவுளித் தொழிலின் திறனைக் கூட்டமுடியும்'' என்று வெளிப்படையாக பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கிறார் தென்னிந்திய ஜவுளி ஆலை அதிபர்கள் சங்கத்தின் செயலர் செல்வராஜ்.

இவ்வாறு கூறுவதே சட்டவிரோதமல்லவா, என்று பலர் கருதலாம். ஆனால் 1947இல் இயற்றப்பட்ட தொழிற்பழகுனர் சட்டம், மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் எத்தனை சதவீதம் பேரை தொழிற்பழகுனர்களாக வைத்துக் கொள்ளலாம் என்ற வரம்பு எதையும் குறிப்பிடவில்லை. முதலாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தொலைநோக்குடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்டத்தின் கீழ்தான் சுமங்கலித்திட்டம் இன்று அமலாகிக் கொண்டிருக்கிறது. அண்ணா தொழிற்சங்கம் போட்ட வழக்கை ஒட்டி, 17 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் தலைமையில் தொழிலாளர் துறை இணை ஆணையர்கள், வருவாய்த்துறை ஆய்வாளர்கள் அடங்கிய குழு சுமங்கலித் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்டது. மில்கள் அதிகம் உள்ள கோவை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் இத்திட்டம் மிகச் சிறப்பாகச் செயல்படுவதாக அறிக்கை கொடுத்து விட்டனர்.

""அந்தப் பெண்கள் செய்யும் வேலைக்கு, அதிகபட்சம் 6 மாதத்துக்கு மேல் பயிற்சி தேவையில்லை. 3 ஆண்டுகள் தொழிற்பழகுனர்களாக அவர்களை வைத்திருப்பது மோசடி. நிரந்தரத் தொழிலாளிகளின் வேலைகள் அனைத்தையும் அவர்கள் செய்கிறார்கள். ஆனால், உரிமை மாத்திரம் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது'' என்று தொழிற்சங்கம் கூறும் குற்றச்சாட்டை தொழிலாளர் துறை ஆணையர்கள், காதில் கூடப் போட்டுக் கொள்ளவில்லை. அதிகார வர்க்கத்தை முதலாளிகள் விலை பேசிவிட்டார்கள் என்பது மட்டுமல்ல பிரச்சினை. "தொழில் வளர்ச்சிக்கு உகந்த தொழிலாளர் கொள்கை இதுதான்' என்பதே இன்று அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதனால்தான் தொழிலாளர் சட்டங்களில் ஏற்கெனவே இருக்கும் ஓட்டைகளை இன்னும் பெரிதாக்க வேண்டும் என்கிறார் மன்மோகன் சிங்.

மூன்றாண்டு காலம் ஒரே வேலையைச் செய்து, அவ்வேலையில் தேர்ச்சி பெற்ற பெண்களை பணி நிரந்தரம் செய்ய முதலாளிகள் தயாரில்லை, என்பது மட்டுமல்ல, நாளொன்றுக்கு 100 ரூபாய் கூலி கொடுத்துத் தற்காலிகப் பணியாளராக வைத்துக் கொள்ளவும் அவர்கள் தயாரில்லை. பட்டமரத்தைப் பார்த்தொதுக்கும் பறவையைப் போல, தண்ணீர் மட்டம் குறைந்தவுடன் தடமொன்றை மாற்றிவிடும் தண்ணீர் வியாபாரி போல, பதின் வயதில், இயற்கை மனித உடலுக்கு வழங்கும் ஆற்றலை, மூன்றே ஆண்டுகளில் கசக்கி உறிஞ்சி விட்டுத் துப்பி விடுகிறார்கள், முதலாளிகள். கிராமப்புறமெங்கும் கொட்டிக் கிடக்கும் பிள்ளைக் கறியை அள்ளிக்கொண்டு வரத் தரகர்களை ஏவி விடுகிறார்கள். புறம்போக்கைக் கண்டவுடன் விழுங்கத் துடிக்கும் அரசியல்வாதியைப் போல, பெண்களைப் பார்த்தவுடன் எச்சில் ஊறும் காமுகனைப் போல, உழைப்பை உறிஞ்சத் துடிக்கிறார்கள் முதலாளிகள்.

"வால்மார்ட்'டின் அமெரிக்க வியர்வைக் கடைகளில் சிக்கிக் கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள், ஒரு டாலர் கூலிக்கு நாள் முழுவதும் "நைக்' காலணிகளைத் தயாரிக்கும் தாய்லாந்தின் சிறுவர்கள், அமெரிக்கக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொம்மைகளை வழங்குவதற்காக, சீனத்தில் கொத்தடிமைகளாக உழைக்கும் பெண்கள், தம் கழுத்தில் தாலி ஏறுவதற்கு முன் நிபந்தனையாக, இந்தியாவின் "ஜவுளி ஏற்றுமதி'யை ஏற்றிக் கொண்டிருக்கும் சுமங்கலித் திட்டத்தின் பெண்கள்.. இந்திய முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும், விரும்பி நேசிக்கும் "மனிதவளம்' இதுதான்.

உறிஞ்ச உறிஞ்ச வற்றாத இந்த மனித வளத்தின் விலை (அதாவது கூலி) இந்தியாவில் மிகக் குறைவு. மிகவும் குறைவு! ஜவுளித் தொழிலில் இந்தியா கொடி கட்டிப் பறப்பதன் இரகசியம் இதுதான். ஐ.டி தொழிலின் அசுர வளர்ச்சிக்குக் காரணமும் இதுதான்.

""அவர்கள் தொழிற்சங்கத்தை விரும்புவதில்லை. 8 மணி நேர வேலை என்ற வரம்பையும் விரும்புவதில்லை. சோம்பேறித்தனமாக உட்கார்ந்திருக்க விரும்பவில்லை. அவர்கள் அதிக நேரம் வேலை செய்ய விரும்புகிறார்கள். ஏனென்றால், அவர்கள் அதிகம் சம்பாதிக்க விரும்புகிறார்கள்'' என்கிறார் ஜவுளி முதலாளிகள் சங்கச் செயலர் செல்வராஜ்.

தனியார்மய தாராளமயக் கொள்கைகளை ஆதரிக்கும் ஒரு முதலாளித்துவப் பத்திரிகையாளர் இதையே வேறு விதமாகக் கூறுகிறார். ""நாம் வேலைவாய்ப்பு என்கிறோம்; கம்யூனிஸ்டுகள் சுரண்டல் என்கிறார்கள். பெரும்பான்மை மக்களோ தாம் சுரண்டப்படாமல் இருப்பதை விட சுரண்டப்படுவதையே விரும்புகிறார்கள்'' என்றார். விவசாயிகளின் கையறு நிலையையும் செல்வராஜின் குரூரத்தையும் ஒரே வரியில் கூறும் "வக்கிரக் கவிதை' என்று இதைச் சொல்லலாமோ!

· வசந்தன்

Tuesday, March 25, 2008

தமிழ்மணம் தமிழச்சிமீதான தடாவை தளர்த்தி அவரை வழமைபோலவே ஏற்கும்

தமிழ்மணம் தமிழச்சிமீதான தடாவை தளர்த்தி அவரை வழமைபோலவே ஏற்கும்


லைப் பதிவுகளில் மிகவும் பொருத்தமற்ற சில வசவுகளைத் தனிநபர் சார்ந்து முன்வைத்த தமிழச்சியின் அதீத தனிநபர்வாத முனைப்பின் செயலூக்கம் அவர் குறித்த எல்லைகளை "பிறர்" நிறுவுவதற்கேற்றவாறு விளைவினையேற்படுத்தியபின் தமிழ் மணத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்?.இ·து,தற்செயல் நிகழ்வல்லவென்று நாம் உணரத்தக்கபடி தமிழச்சிதம் தனிநபர்சார் காழ்ப்புணர்வு இயங்கி வருகிறது.இது,அவரது செயற்பாட்டிற்கு ஒருபோதும் அழகல்ல.சமூகச் சீர்திருத்தம் என்பதை அவர் புரிந்துகொண்டதன் அடிப்படையிலேயே இந்த"அழகு"இங்கே முன் வைக்கப்படுகிறது! தொடர்ந்து பெயரிலியைத் தாக்கி விசனிப்பதன் வெளி "சகவோடிகளால்"நிறுவப்படும்போது-அங்கே,தமிழச்சிமீதான சுய செயற்பாடு அடிபட்டு,முன்னைய எதிர்பார்ப்பு எவரெவருக்காகவோ நிறைவேற்றப்படுகிறது.இதை இனம் காண மறுக்கும் தமிழச்சி தொடர்ந்து தனிநபர் தாக்குதலக்கு "இலக்கு"வைத்த பதிவுகளையே-பின்னூட்டங்களையே எழுதுகிறார்.

நாம், புரிதலில் நீண்ட பயணத்தைத் தொடரவேண்டும்.எமக்குப் புரியாதவைகளைச் சிறுவர்கள் மனத்திலிருந்துகொண்டு புரியவும் முனைகிறோம்.இதுவே அவசியமானதும்.ஆனால்,மற்றவர்கள் முன் வைக்கும் கருத்துக்கள் தமது கருத்துக்கு உடன்பாடற்றுப்போனால் அவைகளை எதிரி(ர்)க்கருத்துக்கள் நிலையில் தள்ளப்பட்டு,தாக்குதலாக விரிவுறும்போது இன்றைய நிலை உருவாகிறது!இது தவிர்த்திருக்கூடியது.எனினும்,சமூக நிலைகளைப் புரிந்துகொண்ட முறைமைகளை யதார்த்தப்படுத்தத் தவறும் ஒவ்வொரு தருணத்திலும் இத்தகைய "தாக்குதல்-வசவு"மேலெழுந்து தாம்கொண்ட செயற்பாட்டையே கேலிக் கூத்தாக்கும் நிலைமைகளை உணர்வெழிச்சியின் உந்துதல் தந்துவிடுகிறது.இதன் தொடர்ச்சியாக இப்போது ஓசை செல்லா களத்தில் இறங்குகிறார்!இது கூட்டு மனப்பாண்மையைக் குதறிவிட்டுத் தனிநபர்களின் விருப்பு-வெறுப்புக்கு உட்பட்ட சில நபர்களின் மனவூக்கமாக முன்னெடுக்கப்படுகிறது.இங்கே,எந்த சமூக நலனும் முன்னிற்பதாகத் தெரியவில்லை.பொதுவான சமூக இயகத்தைப் புரியமறுக்கும் மேட்டிமைப் பண்பு புரிதலற்ற-ஆழ்ந்த அநுபவமற்ற சூழலில் தோற்றமுறும்.தமிழச்சி இதை உணர்வதிலிருந்து பின் வாங்கும் ஒவ்வொரு பொழுதும் காழ்ப்புணர்வே மேலெழும்.சரியான தெரிவைவிட்டுத் தடுமாறும் சூழலை மனிதவுணர்வு முன்னிலைப்படுத்தும்.இங்கு, மிக அவதானமாகச் செயற்படும் நிலை தோன்றியுள்ளது.

சமூகமாற்றமென்பது தனிநபர்களால் செய்து முடிக்கப்படுவதல்ல என்பதை முதலில் எவர் புரிகிறார்களோ இல்லையோ தமிழ்மணம் மிக விரிவாக அதைத் தொட்டுள்ளது!தமிழச்சியின் பதிவைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு ஏற்படும் உணர்வு"தமிழச்சி புரிய மறுக்கிறார்"எனும் உணர்வே.இன்றைய சமூக ஒழுங்குகள் யாவும் நிலவும் அமைப்புகளுக்கு இசைவாகவும் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிரானதாகவும் இருக்கிறது.இதைப் புரிந்துகொண்ட தமிழச்சி புரிய மறுத்தது சமூகத்தளத்தில் இதற்கெதிரான கருத்தாடலை எங்ஙனம் கொண்டு செல்வதென்பதே!

தனிநபர்சார்ந்த உணர்வுகளால் சுயமுனைப்பை முன் நிறுத்துவது நடுத்தரவர்க்கத்துக்கான பாரம்பரியமாகவே இருக்கிறது.நாம் சமூகமாற்றை விரும்புகிறோமெனில் முதலில் நம்மைக் கொன்றாக வேண்டும்.அங்ஙனம் கொன்றபின் நாம் முன்நிறுத்தும் செயற்பாட்டுக்குமுன் நம்மை முன் நிறுத்தும் செயல் அடிப்பட்டுப் போகும்.இதைத் தவிர்த்துவிட்டு நாம் மக்கள் மத்தியில் இறங்கிச் செயற்பட முடியாது.இது, பொது மனிதக் கூட்டுக்குள் வேலைத் திட்டத்தை முன் தள்ள முனையும் ஒரு அமைப்பின் செயற்பாட்டிலுள்ள முன் ஆலோசனைகளில் ஒன்று!மக்களிடமிருந்து கற்பதும் அதை(கற்றதை)அவர்களுக்கே மீள அளிப்பதும் செயற்பாட்டின் ஆரம்பப் புரிதல்களாக இருக்கிறது.இங்கு மாணவ நிலையிலேயே நாம் இருந்தாக வேண்டும்.நமது சிந்தையில் உட்புகுந்துள்ள படிமங்களைக் கொன்று குவித்துவிடுவதற்கு நீண்ட போராட்டம் தேவை.இதுவே தமிழச்சியிடம் நாம் காணும் பலவீனமாகும்.

தமிழச்சிதம் கடந்த-சமீபத்து எழுத்துக்கள் சுட்டும் உடற்கூறுகளைக் குறித்த பதிவுகளைப் பெரிதுபடுத்தும் நிலையற்ற எமக்கு-அவரது தாக்குதல் தனமான பொதுபுத்தி எழுத்துக்களையே பெரிதும் சலிப்புடன் பார்த்தது. பொதுவில் வலைபதியும் எவருக்கும் இருக்கும் பொறுப்புணர்வு,மனித கெளரவம்,சுயமதிப்பின் தொடர் பங்கீட்டுச் சக மனித மேன்மை மதிக்கப்படாத அவரது போக்கு மிகவும் வருந்தத் தக்கது!எதிரிகள் நம்மை நாயிலும் கேவலமாக அவமதித்தாலும் நாம் பொது மனித கெளரவத்தை அவர்கள் பாணியில் நொருக்க முடியாது!இது புரட்சியல்ல.சிறுபிள்ளைத் தனம்.பெரும் பொறுபுணர்வுமிக்க அரிய செயல் வடிவத்தை(பெரியாரியம்)மிகவும் மலினப்படுத்திய நிலைமைக்குத் தமிழச்சிமட்டும் பொறுப்பேற்க முடியாது!-நாமும்தாம்!செயற்பாட்டை எங்ஙனம் முன்னெடுப்பதென்ற முயற்சிகளை ஓரளவு செயற் திட்டமாகக்கூட வரையறை செய்யாதவொரு சூழலைத்தாம் தமிழ்ச் சூழல்கொண்டிருக்கிறது.பெரியாரைச் சொல்லிப் பிழைப்புறும் கூட்டமாகப் போன முன்னாள் பெரியாரியத் தொண்டர்கோடிகள் இன்னாள் பெரும் முதலீட்டாளர்களானபின் இத்தகையபோக்கு நிலவத்தாம் செய்யும்!எனவே,தமிழ் மணம் இதைப் புரிந்துகொள்ளும் தருணத்தில் தமிழச்சியின் பதிவுகளைத் திரட்டுவதற்கான ஒழுங்கைச் செய்வதே சாலச் சிறந்தது.தமிழச்சி முதலில் இத்தகைய சூழலின் சுய விமர்சனப் புரிதலை முன் வைத்தாகவேண்டும்.

என்றபோதும்,கடந்த செயற்பாடுகளை,அதன் விளைவுகளைப் பார்த்து,நாம் தமிழச்சியை எத்தனைவிதமாக(நட்பாக-தோழமையாக) அணுகினாலும்,தமிழச்சி அதைக் கூர்ந்துணர முடியாது"தனக்கெதிரான தாக்குதலாகப் பார்த்திருக்கிறார்"தத்தளித்திருக்கிற தருணங்களில் அவர் எழுத்து தனிநபர் தாக்குதலாக சக பதிவர்களைத் தாக்கி இருக்கிறது.எனினும்,தமிழச்சி இது குறித்து மிகையான சுய மதிப்பீடுகளை உருவாக்கித் தாக்குதல்களை வார்த்தைகளினூடாகக் கட்டமைத்தபோது,அவரைத் தொடர்ந்து சிந்திக்கும்படி நாம் கட்டுரை எழுதினோம்.அதீத சுய மதிப்புத் தன்மீதான அழுத்தங்களைத் தனக்கெதிரான திசையில் விவாதமாக்கியது.இதைத் தமிழச்சி உணர்ந்துகொள்ளும் சந்தர்ப்பத்தை "சகவோடிகள்"விட்டுவைக்காது தமிழச்சியை உருவேற்றும் எழுத்துக்களைப் பதியமிட்டபோது,இதன் வரிசையில் முன் நிற்பவர்கள் திருவாளர்கள் இலக்கி மற்றும் ஓசை செல்லா.இவர்களைத் தாண்டி நாம் இக்கட்டுரையூடாகச் சிலவற்றைச் சொல்ல முனைந்தோம்.அவ்வளவுதாம்.

தொடர்ந்து தமிழச்சி குறித்த கட்டுரை எதுவும் எழுதுவதில்லை.

"தமிழ் மணம் தமிழச்சிமீதான"தடாவை" தளர்த்தி அவரை வழமைபோலவே ஏற்கும்" என்ற எமது நம்பிக்கை வீண்போகாது.


தோழமையுடன்,

ப.வி.ஸ்ரீரங்கன்

25.03.2008

குஜராத் பாசிசத்தை தேர்வு செய்தது ஏன்?

குஜராத் பாசிசத்தை தேர்வு செய்தது ஏன்?

"இந்த முகமூடி எனக்கும் மக்களுக்கும் இடையே வலிமையான பிணைப்பை ஏற்படுத்தியது. நான் தாக்கப்பட்ட போதெல்லாம், என் வலியை மக்கள் உணர்ந்தார்கள்.''

(மோடியின் பேட்டி, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், டிசம்பர்25)

"அண்ணனே, தளபதியே, அம்மா, அய்யா' என்று, தலைவனாகிய ஆண்டவனைத் தொண்டர்கள் தொழுது வழிபடும் "துவைத' நிலையிலிருந்து, "அகம் பிரம்மாஸ்மி' என்ற "அத்வைத' நிலைக்கு, "நானே மக்களாக இருக்கிறேன்' என்ற தூய பாசிச நிலைக்கு, இந்திய ஜனநாயகத்தை உயர்த்தியிருக்கிறார் மோடி.

தனது முகமூடிகளை இலட்சக்கணக்கில் சீனத்திலிருந்து இறக்குமதி செய்து, அவற்றை குஜராத் முழுவதும் விநியோகித்திருந்தார் மோடி. தலைவனை "முக'மாகவும், மக்களை வெறும் "பிரதிபிம்ப'மாகவும் மாற்றிவிட்ட இந்த "அத்வைத' நாடகத்தில், அரசியல் எதிரிகள் மோடியை விமரிசித்த போது, முகமூடிகள் வலியால் துடித்ததில் வியப்பில்லை.

முன்பு, வாஜ்பாயி எனும் "மிதவாத மூகமூடி'யை அணிந்து கொண்டு பாசிசம் ஆட்சி நடத்தியபோது, அந்த முகமூடியின் மிதவாத ஒப்பனையைப் பாதுகாக்கும் பொறுப்பை, மதச்சார்பற்ற கட்சிகள் ஏற்றிருந்தன. அது பாசிசத்தின் முன்னுரை. இன்று ஒரு கொலைகாரனின் முகத்தைத் தனது முகமூடியாக அணிந்து கொண்டு, ஆனந்தக் கூத்தாடும் குஜராத் நமக்கு வழங்குவது பாசிசத்துக்கான பொழிப்புரை.

முஸ்லிம் இளைஞனை மணந்த இந்துப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, சிசுவை எடுத்து எரித்துக் கொன்றதையும், அண்டை வீட்டு முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லுறவால் சிதைத்து, பின்னர் அவர்களைக் கசக்கிக் கொன்று போட்டதையும், குழந்தைகளைத் தீயில் வறுத்ததையும் பெருமை பொங்க அசைபோடும் கொலைகாரர்களை தெகல்கா படம் பிடித்துக் காட்டியபோது, ""இவர்கள் என்ன வகை மிருகங்கள்?'' என்று அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் பல வாசகர்கள். எந்த மண்ணில் அந்தப் பாசிசப் பிராணிகள் முளைத்து, தழைத்து வளர்ந்தனவோ அந்த குஜராத் மண், இந்த முகமூடிக் கூத்தின் மூலம் தன்னுடைய முகத்தை அடையாளம் காட்டியிருக்கிறது.

நீதி, கருணை அல்லது மனிதத் தன்மையின் சாயலையேனும் தமக்குள் காப்பாற்றி வைத்திருக்கும் ஒவ்வொருவரும், தெகல்கா இதழின் செய்தியைப் படித்த பின்னர் "எப்படியாவது மோடி தோற்றுவிட மாட்டானா!' என்று தவித்தனர். தேர்தலுக்கு முந்தைய பல கருத்துக் கணிப்புகள், மோடியின் வெற்றியைத்தான் ஊகித்தன என்ற போதிலும், மோடி தோற்க வேண்டுமென்று ஏங்கினர். ஒருவேளை வெற்றியே பெற்றுவிட்டாலும், மோடியின் ஒரு முடியைக் கூடக் காங்கிரசு பிடுங்கப் போவதில்லை, என்பது தீர்க்கமாகத் தெரிந்திருந்தும், தெகல்கா கிளறிவிட்ட மனப்புண்ணின் ஆறுதலுக்காகவாவது, "மோடி தோற்கவேண்டும்' என்று பலர் விரும்பினர்.

இனப்படுகொலையின் பிணவாடையை முகர்ந்தபடியேதான், குஜராத்தின் பெரும்பான்மை இந்துக்கள் 2002இல் மோடிக்கு வாக்களித்தனர் என்ற போதிலும், ""அது கோத்ரா சம்பவம் தோற்றுவித்த தற்காலிகக் கிறுக்குத்தனமாக இருக்கக் கூடும்'' என்று தமக்குத் தாமே சமாதானம் கூறிக்கொண்ட பலர், 5 ஆண்டுகள் கடந்து விட்டதால் குஜராத்தின் இந்து மனோபாவத்திற்கு புத்தி தெளிந்துவிடும் என்றும், அதன் அடிமனதிலிருந்து "அறவுணர்ச்சி' மேலெழும்பி 2002இன் அநீதிக்குப் பரிகாரம் வழங்கும் என்றும் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர்.

தெகல்காவின் பேட்டிகள், இந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின. இமை தாழாமல், சொல் தடுமாறாமல் தாங்கள் இழைத்த பஞ்சமா பாதகங்களை "திரைக்கதை' போல வருணித்தார்கள் "குஜராத்தின் எழுச்சியுற்ற இந்துக்கள்'. "மாமிசம் தின்னும் "தமோ' குணம் நிரம்பிய கீழ்சாதி அடியாட்படையின்' வாயிலிருந்து மட்டுமல்ல, "சாக பட்சிணிகளும், இயல்பிலேயே "சத்வ' குணம் நிரம்பியவர்களுமான' பார்ப்பனபனியா உயர்சாதி இந்துக்களின் வாயிலிருந்தும் "ரத்தக் கவிச்சு' வீசியது. இருப்பினும், குஜராத்தின் உயர்சாதி இந்துக்கள் மூக்கைப் பொத்திக் கொள்ளவில்லை. பெரும்பான்மை இந்து மனம், அதனைக் கண்டு அவமானத்தால் குறுகி, வெட்கித் தலைகுனியவில்லை. "வருந்துகிறோம்' என்று மனதிற்குள் கூட முணுமுணுக்கவில்லை. முகம் என்ன செய்ததோ, அதையே முகமூடிகளும் பிரதிபலித்தன.

""2002 சம்பவங்களுக்காக வருந்துகிறேன் என்று நீங்கள் ஒரு வார்த்தை கூறினால் அது காயம்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்குமல்லவா?'' என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் நரேந்திர மோடியிடம் கேட்டார் கரண் தாப்பர் என்ற பத்திரிகையாளர். மறு கணமே, அந்தத் தொலைக்காட்சிப் பேட்டியிலிருந்து வெளியேறினார் மோடி. தெகல்கா பேட்டிகளோ, குஜராத் தொலைக்காட்சிகளிலிருந்தே வெளியேற்றப் பட்டன. பிரதிபலிப்பு தோற்றுவிக்கும் "இடவல மாற்றம்' என்பது, இதுதான் போலும்!

குஜராத் தேர்தல் முடிவு, காந்திய மத நல்லிணக்கவாதிகளையே கூட அதிர்ச்சியுறச் செய்துள்ளது. ""குஜராத்தை "இந்துத்துவத்தின் சோதனைச்சாலை' என்று இனிமேலும் அழைக்க முடியாது; அது தொழிற்சாலையாகி விட்டது'' என்கிறார் ஒரு பத்திரிகையாளர். ""குஜராத் ஒரு மாநிலமல்ல, அது ஒரு சித்தாந்தம்'' என்று எச்சரிக்கிறார் குல்தீப் நய்யார். ""இனி இந்தியாவே குஜராத் தான்'' என்று இரண்டு விரலைக் காட்டிக் கொக்கரிக்கின்றன மோடியின் முகமூடிகள்.

அத்வானியின் கூற்றுப்படி, இது பாரதிய ஜனதாவுக்கு ஒரு திருப்புமுனை. இது "ஆம்பளை ஜெயா'வின் வெற்றி என்பதால், ஜெயலலிதாவைப் பொருத்தவரை இது அவரது சொந்த வெற்றி. ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் (anti-incumbency) மக்களின் மனோபாவத்தை மீறி மோடி வென்றிருப்பதால், இந்த வெற்றிக்கு இந்துத்துவத்தைத் தவிர வேறு என்ன காரணம்? என்பதே மற்ற ஓட்டுக்கட்சிகளின் அக்கறைக்கு உரிய விசயமாக இருக்கிறது.

சங்க பரிவார அமைப்புகளும், லூவா படேல் சாதியைச் சேர்ந்த கேசுபாய் படேல், கோர்தன் ஜடாபயா போன்ற பா.ஜ.க தலைவர்களும், தொகாடியா போன்ற வி.எச்.பி தலைவர்களும், மோடியை எதிர்த்த போதிலும், போட்டி வேட்பாளர்களை நிறுத்தியும், காங்கிரசை மறைமுகமாக ஆதரித்த போதிலும், மோடி வென்றது எப்படி? மாயாவதியின் கட்சி வாக்குகளைப் பிரிக்காமல் இருந்திருந்தால், காங்கிரசு கூடுதல் தொகுதிகளில் வென்றிருக்கக் கூடுமா? மோடிக்கு மாற்றாக முதல்வர் பதவிக்கு காங்கிரசு சார்பில் யாரையும் முன் நிறுத்தவில்லை என்பதுதான், தோல்விக்கு அடிப்படையா? ஆதிக்க சாதியான படேல் சாதியினர் பா.ஜ.க வை எதிர்த்ததால், மற்றெல்லா சாதியினரும் பா.ஜ.க.வின் பக்கம் சாய்ந்து விட்டனரா? அல்லது உள்கட்சிப் பூசலால் பிளவு பட்டிருந்த இந்து ஓட்டு வங்கியை, தெகல்கா விவகாரம் தோற்றுவித்த இந்து உணர்வு, ஒன்றுபடுத்திவிட்டதா?... என தும்பிக்கை, காது, வால் என்று பிரித்து "யானை'யைத் தடவுகின்றன, தேர்தல் முடிவு குறித்த ஊடகங்களின் ஆய்வுகள்.

குஜராத் இனப்படுகொலை குறித்த பெரும்பான்மை இந்துக்களின் மனப்போக்கு என்ன? மோடியின் மறுகாலனியாக்க வளர்ச்சித் திட்டங்கள் குறித்த குஜராத் மக்களின் கண்ணோட்டம் என்ன<? அவை இந்தத் தேர்தல் முடிவுகளின் மீது செலுத்திய தாக்கம் என்ன? – என்ற கேள்விகளையே இந்த ஆய்வுகள் எதுவும் எழுப்பவில்லை. மாறாக, கேந்திரமான இவ்விரு பிரச்சினைகளையும், நமது பார்வையிலிருந்தே தந்திரமாக அகற்றி விடுகின்றன.

இந்தத் தேர்தல் முடிவல்ல, நமது பிரச்சினை. ஒருவேளை இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால், அந்த வெற்றி, காந்திய மத நல்லிணக்க வாதிகளின் மனப்புண்ணுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்குமேயன்றி, நிச்சயமாக அது இந்துத்துவத்தின் தோல்வியாக இருந்திருக்காது. "குஜராத் – இந்துத்துவத்தின் சோதனைச்சாலை' என்ற நிலைமையை மாற்றுவதற்கான ஒரு துவக்கப் புள்ளியாகக் கூட இருந்திருக்காது.

குஜராத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மோடி விடுத்த ஒரு சவால் மிகவும் முக்கியமானது. ""என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் எல்லாக் குறுந்தகடுகளையும், ஒரு நடுநிலையாளர் குழுவிடம் சமர்ப்பிக்க நான் தயாராக இருக்கிறேன். அதில் மதவெறியைத் தூண்டக்கூடிய ஏதாவது ஒரு பேச்சைக் காட்டுங்கள். நான் தோல்வியை ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்'' (டைம்ஸ் ஆஃப் இந்தியா, டிசம். 25)

பாசிஸ்டுகளின் வழக்கமான "வாய்ச்சவடால்' என்று இதனை ஒதுக்கிவிட முடியாது. இந்து, இந்துத்துவம், முஸ்லிம் என்ற சொற்களைத் தனது பிரச்சாரத்தில், மோடி அநேகமாக உச்சரிக்கவே இல்லை. அவற்றை உச்சரிக்காமலேயே, அவை தோற்றுவிக்கும் விளைவுகளை மோடியால் அறுவடை செய்ய முடிந்திருக்கிறது. காங்கிரசும், இந்தச் சொற்களைப் பயன்படுத்தவில்லை என்பதுதான், குரூரமான நகைச்சுவை. (இந்து பயங்கரவாதிகள் என்று ஒரே ஒருமுறை "திக்விஜய் சிங்' பேசியதைத் தவிர).

"இந்துத்துவத்தின் சோதனைச் சாலை' என்று அறியப்படும் ஒரு மாநிலத்தில், கிராமம் முதல் நகரம் வரை, இந்து பாசிச அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மாநிலத்தில், இந்துத்துவத்துக்கு எதிராகப் பேசும் அமைப்புகள், திரைப்படங்கள், பத்திரிகைகள், கலைஞர்கள் யாராக இருந்தாலும், தாக்கித் துரத்தப்படுவார்கள் என்பது நிலைநாட்டப்பட்டிருக்கும் மாநிலத்தில், 2500 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு, பல்லாயிரம் பேர் வீடு வாசலை இழந்து, கடந்த 5 ஆண்டுகளாக அகதி முகாம்களில் வாழ வேண்டியிருக்கும் ஒரு மாநிலத்தில், "இந்து பாசிசம்' என்ற சொல்லையே பயன்படுத்தாமல், அதன் கொடூரத் தன்மையை அம்பலப்படுத்தாமல், மோடிக்குப் பெரும்பான்மையாக வாக்களித்திருக்கும் மக்களைத் தன் பக்கம் ஈர்ப்பதில், காங்கிரஸ் எவ்வாறு வெற்றி பெற்றிருக்க முடியும்?

இந்துத்துவத்தை எதிர்ப்பது இருக்கட்டும், காந்திய மத நல்லிணக்கத்தைப் பேசினால்கூட குஜராத் இந்துக்களின் வாக்குகளை இழந்து விடுவோமென்று, காங்கிரசு அஞ்சியது. மோடி முகாமிலிருந்து வெளியேறிய அதிருப்தியாளர்களும், 2002 இனப்படுகொலையின் குற்றவாளிகளுமான கோர்தன் ஜடாபயா, கேசுபாய் படேல், பிரவின் தொகாடியா போன்றோரை அரவணைத்துக் கொள்வதன் மூலம், படேல் சாதி வாக்குகளையும், மோடி எதிர்ப்பு இந்து வாக்குகளையும் அள்ளி விடலாம் என்று கணக்கிட்டது. இது முஸ்லிம் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்த போதிலும், காங்கிரசை விட்டால் இப்போதைக்கு வேறு நாதி இல்லை என்ற முஸ்லிம் மக்களின் பரிதாபமான நிலைமையை, காங்கிரசு மிகவும் வக்கிரமாகப் பயன்படுத்திக் கொண்டது.

இது குஜராத் சூழ்நிலையைக் கணக்கில் கொண்டு காங்கிரசு வகுத்த தேர்தல் தந்திரம் மட்டுமல்ல. காங்கிரசே ஒரு மிதவாத இந்துத்துவக் கட்சிதான். அயோத்தி பிரச்சினைக்கு அடிக்கொள்ளியாக இருந்த ராஜீவ் காந்தி முதல், இன்று சேதுக் கால்வாய் விவகாரத்தில் பாரதிய ஜனதாவிடம் சரணடைந்த சோனியா காந்தி வரை இதற்குச் சான்றுகள் பல உண்டு. 2002 இனப்படுகொலையின் குற்றவாளிகளைச் சட்டபூர்வமாகத் தண்டிப்பதற்கு, ஒரு துரும்பைக் கூட காங்கிரசு எடுத்துப் போட்டதில்லை என்பது மட்டுமல்ல, கடந்த 5 ஆண்டுகளில் இந்த வழக்குகளை முடக்குவதிலும், மைய அரசு மோடிக்கு துணை நின்றிருக்கிறது என்பதே உண்மை.

எனவே பெயரைக் கூடக் குறிப்பிடாமல், "மரண வியாபாரி' என்று தனது தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா குறிப்பிட்டாரே, அது மட்டும்தான் மோடியின் மீது காங்கிரசு தொடுத்த "அதிபயங்கரத் தாக்குதல்'! இதற்கு மோடி கொடுத்த பதிலடிதான், மோடிக்கும் முகமூடிகளுக்குமிடையிலான உறவை நமக்கு விளக்குகிறது.

""5 கோடி குஜராத் மக்களை "மரணவியாபாரிகள்' என்கிறார் சோனியா. அது உண்மையா?'' – ""இல்லை.. இல்லை..''

""சோரபுதீன் ஷேக்கை என்ன செய்ய வேண்டும்?'' – ""கொல்ல வேண்டும்.. கொல்ல வேண்டும்''

""குஜராத்தில் நடக்கக் கூடாத சம்பவங்களெல்லாம் நடந்ததாகச் சொல்கிறார்களே, அது உண்மையா?'' – ""இல்லை.. இல்லை''

மேற்கூறியவையெல்லாம், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மோடி எழுப்பிய கேள்விகள். அவற்றுக்கு, கூட்டம் ஆரவாரமாக அளித்த பதில்கள். இது போன்றவையெல்லாம் எல்லாக் கூட்டங்களிலும் கட்சித் தொண்டர்கள் போடும் கூச்சல்தானே! என்று கருதிக் குறைத்து மதிப்பிட முடியாது. கூட்டம் அளித்த பதில் என்பது, குஜராத் இந்து உயர்சாதியினரிடம் உறுதியாக நிலவும் பொதுக்கருத்து. குஜராத் இந்து சமூகத்தின் பொது மனோபாவம்.

தன்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை, 5 கோடி குஜராத் மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக திசைதிருப்புவதில், மோடி எப்படி வெற்றி பெற முடிந்தது? பார்ப்பன எதிர்ப்பு, சுயமரியாதை, சாதிமறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு "தமிழன்' என்ற சொல்லைப் பெரியார் பயன்படுத்தினாரென்றால், அதன் நேர் எதிரான பொருளில் "குஜராத்தி' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறான் மோடி.

2002 தேர்தலின் போதே "இந்து' என்ற சொல்லை, "குஜராத்தி' என்ற சொல்லைக் கொண்டு தந்திரமாக மாற்றீடு செய்துவிட்டான் மோடி. 2002 இனப்படுகொலையைத் தொடர்ந்து, உலகமே இந்து பாசிஸ்டுகளைக் காறி உமிழ்ந்தபோது, தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடி வைத்த பெயர் "குஜராத் கவுரவ யாத்திரை'. ""கர்வ் சே கஹோ ஹம் ஹிந்து ஹை'' என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் முழக்கம், "குஜராத்தி கர்வமாக மாற்றப்பட்டு விட்டது. முஸ்லிம்கள் அந்நியர்கள்' என்ற உட்கிடையான பொருளைக் கொண்ட இந்த குஜராத்தி இனவாதம், இந்து பாசிச மனோபாவத்தைத் தன் இதயமாகக் கொண்டிருக்கிறது.

""சோரபுதீன் ஷேக் என்ற கிரிமினலை என்ன செய்யவேண்டும்?'' என்று கூட்டத்தைப் பார்த்து மோடி எழுப்பிய கேள்வி

""முஸ்லிம் = கிரிமினல், முஸ்லிம் = பயங்கரவாதி'' என்ற கருத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது.

""கொல்ல வேண்டும்'' என்ற கூட்டத்தின் கூச்சல், 2002 இனப்படுகொலைக்கு "சங்கேத மொழி'யில் கூட்டம் வழங்கிய அங்கீகாரம்.

அரசாங்கம், போலீசு, நீதிபதிகள் மட்டுமல்ல, ""மொத்த இந்து சமுதாயமே எங்கள் பின்னால் இருந்தது,'' என்று தெகல்கா நிருபரிடம், இந்து பாசிஸ்டு கிரிமினல்கள் அளித்த வாக்குமூலத்தின் பொருள், இதுதான்.

2002 இனப்படுகொலைக்காக குஜராத்தின் இந்துப் பொதுக்கருத்து, கடுகளவும் வருந்தவில்லை, என்றே குஜராத்தின் எல்லா சமூகவியலாளர்களும், குறிப்பிடுகிறார்கள். "கோத்ரா சம்பவம்' முஸ்லிம்கள் நடத்திய திட்டமிட்ட தாக்குதல், என்று நம்பியதால் உருவான பொதுக்கருத்து அல்ல. ""நாங்கள் ஒன்றும், நடந்ததை நியாயப்படுத்தவில்லை. இருந்தாலும் ஏன் அதையே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? முஸ்லிம்கள் மட்டும்தான் இந்த சமூகத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? டெல்லி சீக்கியர் படுகொலையின் குற்றவாளிகளைத் தண்டித்து விட்டார்களா?'' என்று அடுக்கடுக்காக எதிர்க் கேள்வி கேட்டு, இறுதியில் படுகொலையை நியாயப்படுத்துவதில் வந்து முடிக்கிறார்கள், இந்து நடுத்தர வர்க்கத்தினர். இவர்களில் "மிகவும் நல்லவர்கள்' என்று கூறப்படுபவர்கள் கூட ""2002ஐ மறந்து விடுங்கள்'' என்று அறிவுரை கூறுகிறார்கள். "மறப்பதா? வேண்டாமா? என்பதை பாதிக்கப்பட்ட மக்கள்தான் முடிவு செய்ய முடியும்' என்ற எளிய நியாயம் கூட உரைக்காத அளவிற்கு, இந்துப் பெரும்பான்மையினர் மத்தியில் அங்கே "சகஜநிலை' திரும்பியிருக்கிறது.

மறக்க மறுத்தால்? மீண்டும் சகஜ நிலை குலையும். தெகல்காவின் அம்பலப்படுத்தல்கள் வெளியானவுடனே, மீண்டும் ஒரு தாக்குதல் தொடங்கிவிடுமோ? என்று அகதி முகாம்களில் இருந்த முஸ்லிம்கள் அடைந்த அச்சம் இதற்குச் சான்று கூறுகிறது.

இத்தகைய சகஜ நிலையையும் அமைதியையும் நிலைநாட்டியிருப்பதே, இப்போது மோடியின் சாதனையாகி விட்டது.

""பாதுகாப்பு இல்லாமல், வளர்ச்சி எப்படி இருக்க முடியும்?'' என்று கேட்கிறார் மோடி. யாரிடமிருந்து பாதுகாப்பு? என்ற கேள்வியை குஜராத் எழுப்பவில்லை. 2500 பேரைக் கொன்று போட்ட பிறகும், சிறு சலசலப்போ மும்பையில் நடந்ததைப் போன்ற பயங்கரவாத எதிர்த்தாக்குதலோ இல்லாமல், குஜராத் இந்து சமூகத்தை, குறிப்பாக அதன் முதலாளிகளையும், வணிகர்களையும் பாதுகாத்திருக்கிறார் அல்லவா, அந்தப் பாதுகாப்பைத்தான் கூறுகிறார் மோடி!

மறுகாலனியாக்க வளர்ச்சித் திட்டங்களால், நாடே நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும், பயங்கரவாதமும் தீவிரவாதமும்தான் இந்த வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும், மன்மோகன் சிங் வழங்குகின்ற சித்திரம், பன்னாட்டு முதலாளிகள் நலனையும், இந்தியத் தரகுமுதலாளிகளின் நலனையுமே பிரதிபலிக்கிறது. மோடியும் அதையேதான் கூறுகிறாரெனினும், குஜராத்தின் குறிப்பான பின்புலத்தில், "ஆளும் வர்க்கத்துக்கு வழங்கப்படும் பாதுகாப்பிலிருந்து, இந்துக்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பிரிக்கவொண்ணாததாகி விடுகிறது.' அதாவது, "எது ஆளும் வர்க்கத்தின் நலனோ? அதுதான் இந்துக்களின் நலன் என்ற கருத்து அதன் வர்க்கரீதியான அர்த்தத்திலும், குஜராத் மக்களின் மனதில் பதியவைக்கப் பட்டிருக்கிறது.

""விமான நிலையத்துக்கே கார்களை அனுப்பி வைத்து, தொழிலதிபர்களை மகாராஜாக்களைப் போல வரவேற்கும் ஒரே முதல்வர், மோடி மட்டும்தான்'' என்று கூறி, மோடியின் வெற்றியைக் கொண்டாடினார் ஒரு இந்தியப் பெருமுதலாளி. ""குஜராத் சாதித்திருப்பதையும், சாதிக்கவிருப்பதையும் எஞ்சியுள்ள இந்தியா ஒருக்காலத்திலும் இனி சாதிக்க முடியாது'' என்று கூறி மோடியின் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள், வெளிநாட்டில் குடியேறிய குஜராத்திகள்.

இவர்களின் இந்தக் கொண்டாட்டத்துக்கு அர்த்தமில்லாமல் இல்லை. போராட்டங்களோ எதிர்ப்புகளோ இல்லாமல், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவியிருக்கும் மாநிலம் குஜராத். சி.பொ.ம. சட்டத்தை 2006இல் மைய அரசு கொண்டுவருவதற்கு முன்னர், 2004லேயே குஜராத்தில் அச்சட்டத்தைக் கொண்டு, வந்தவர் மோடி. "அடானி குழுமம்' என்ற தரகு முதலாளிக்கு, சதுர கெஜம் 50 பைசா விலையில் (சதுர அடி 5 காசு) 33,000 ஏக்கர் நிலத்தை சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக விற்றிருக்கிறார் மோடி. அதை சதுர கெஜம் 1200 ரூபாய்க்கு விற்று, இந்த நில விற்பனை மூலம் மட்டுமே 20,000 கோடி ரூபாயை இலாபம் ஈட்டியிருக்கிறது அடானி குழுமம். சி.பொ.மண்டலத்தால், வாழ்க்கை இழந்த கூலி விவசாயிகளுக்கோ அங்கே எவ்வித நிவாரணமும் வழங்கப்படுவதில்லை. இந்திய மக்கள்தொகையில் 5% உள்ள குஜராத், இந்திய பங்குச்சந்தையின் 30 சதவீதத்தைக் கையில் வைத்திருக்கிறது. அதே குஜராத் கல்வியிலும், ஆரம்ப மருத்துவத்திலும் பின்தங்கியிருக்கிறது.

சராசரி தனிநபர் வருமானத்தில், குஜராத்திற்கு இந்தியாவிலேயே 4வது இடம். மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலோ 15வது மாநிலமாக இருக்கிறது குஜராத். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 47% பேர் ஊட்டச்சத்துக் குறைவினால் எடை குறைந்து, சூம்பிக் கிடக்கின்றனர். தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களில், முதல் 3 இடங்களிலேயே குஜராத் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தத் தொழில் மயமாக்கத்தினால் வெளியேற்றப்படும் பழங்குடிகளும் தலித் மக்களும், எவ்வித நிவாரணமும் இல்லாமல் கிராமப்புறங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். "சூப்பர் ஹைவே'க்கள் எனப்படும் சாலைகள் குஜராத்தில் இருக்கின்றன; ஆனால், அந்தச் சாலைகளுக்குச் சுங்கவரி செலுத்தப் பணமில்லாமல், சாலையோரமாக ஒட்டகத்தில் பயணம் போகிறார்கள், மக்கள்.

மறுகாலனியாக்க வளர்ச்சித் திட்டங்களால் தீவிரமடைந்திருக்கும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள், சுரண்டப்படும் மக்களிடம் கலக உணர்வைத் "தானே' தோற்றுவித்து விடுவதில்லை. தேர்தல் ஆதாயத்துக்காகக் கூட, காங்கிரஸ் கட்சி இந்த வர்க்க முரண்பாடுகளை அம்பலப்படுத்துவதில்லை. ஆளும் வர்க்கநலனைப் பேணுவதில் அந்த அளவுக்கு ஒன்றியிருக்கும் பாரதிய ஜனதாகாங்கிரஸ் ஆகிய கட்சிகள் மட்டுமே, அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்துவதால், மக்களின் அரசியல் கண்ணோட்டமும் ஆளும் வர்க்கம் விதிக்கும் வரம்புகளைத் தாண்டுவதில்லை. வர்க்க ஒடுக்குமுறைக்கும் இந்துத்துவ ஒடுக்குமுறைக்கும் இடையிலான உறவுக்கு குஜராத்தில் தெளிவாக அடையாளம் காணத்தக்க பல வேர்கள் உள்ளன.

தொழிற்சங்க இயக்கத்தை முளையிலேயே கருக்கி, முதலாளிகளைத் தம் அறங்காவலர்களாகப் பார்ப்பதற்கு உழைக்கும் மக்களைப் பழக்கிய காந்தியம், வர்க்க ஆதிக்கத்துடன் சாதி ஆதிக்கத்தையும் மறைமுகமாக உறுதிப்படுத்தியது. 1980களில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக இந்தியாவிலேயே முதன்முதலாகப் போராட்டம் நடத்திய மாநிலம் குஜராத் என்பதும், அந்தப் போராட்டத்தின் முன்னணித் தலைவர்களில் மோடியும் ஒருவர் என்பதும் அந்த மாநிலத்தில் நிலவும் "சாதி ஆதிக்க' மனோபாவத்தைப் புரிந்து கொள்ள உதவும் வரலாற்றுச் சான்றுகள். மலம் அள்ள மறுத்த குற்றத்துக்காக, 80களில் தலித்மக்கள் மீது, கட்டுப்பாடாக சமூகப் புறக்கணிப்பு நடத்திய மாநிலமும் குஜராத் தான். "மலம் அள்ளுவதைக் கூட, ஒரு தியானமாகச் செய்யமுடியும்' என்று மோடி பேச முடிவதற்கான காரணம் இங்கே இருக்கிறது.

அன்று இட ஒதுக்கீட்டு எதிர்ப்பின் தாக்குதல் இலக்காக தலித்துகள். இன்று குஜராத் கவுரவத்தின் தாக்குதல் இலக்காக முஸ்லிம்கள். இதில் தலித்துகளும் பழங்குடி மக்களும் இந்துத்துவத்தின் காலாட்படையாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் புதிய முன்னேற்றம்.

மறுகாலனியாக்க வளர்ச்சியை "உடலாக'வும், இந்துத்துவத்தை அதன் "ஆன்மா'வாகவும் ஒருங்கிணைக்க முடிந்தததில்தான், மோடியின் வெற்றி அடங்கியிருக்கிறது. சந்தைக் கடுங்கோட்பாட்டு வாதமும், மதக் கடுங்கோட்பாட்டு வாதமும் இணையும் புள்ளி இது. தனியார்மய ஆதரவு, தொழில் வளர்ச்சி, பங்குச் சந்தை, சிறு வணிகம் என்று தமது வர்க்க நலனைப் பார்க்கவோ ஏங்கவோ பழகியிருக்கும் குஜராத் சமூகத்தைப் பொருத்தவரை, "மதச்சார்பின்மை' என்பது அதிக பட்சம் ஒரு அறக் கோட்படாக மட்டுமே இருக்க இயலும்.

ஆனால், மதச்சார்பின்மை என்பது வெறும் அறம் சார்ந்த விழுமியம் அல்ல. அது ஒரு அரசியல் கோட்பாடு. ஜனநாயகத்துக்கான போராட்டங்களின் மூலம் மட்டும்தான், மதச்சார்பின்மையைத் தனது பண்பாடாக ஒரு சமூகம் கிரகித்துக் கொள்ள இயலும். ஆளும் வர்க்க அரசியலிலும், அரசியலற்ற வணிக மனோபாவத்திலும் ஊறப்போடப்பட்ட ஒரு சமூகம், பாசிசத்தைத் தலை வணங்கி ஏற்றுக் கொள்வது தவிர்க்க இயலாதது.

தாராளவாதக் கொள்கை அளிக்கும் நவீன தொழில் வளர்ச்சியும், கல்வியும், பண்பாடும், தாராளவாத (liberal) விழுமியங்களை உருவாக்கி விடுவதில்லை. மாறாக, பழைமைவாதத்தையும், சுயநலத்தையும், ஆணவத்தையும், பாசிசத்தையும் மட்டுமே அவை வளர்க்கின்றன என்பதற்கு குஜராத்தும், குஜராத்தின் பாசிசத்தை டாலர் ஊற்றி வளர்க்கும் வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்களும், சான்றாக இருக்கிறார்கள்.

மோடியின் முகமூடிப் பிரச்சாரத்தைப் பார்த்து விட்டு, இது, "இந்துத்துவா' அல்ல "மோடித்துவா' என்கிறார்கள், சில பத்திரிகையாளர்கள். பாசிசம் தனியொரு கொள்கையாக இருப்பதில்லை. இட்லர், முசோலினி, அத்வானி, மோடி போன்ற பாசிஸ்டுகளின் வழியாகத்தான் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. மோடி முகமூடி வருவதற்கு முன்னால், மோடி ஆணுறை வந்துவிட்டது. அரசு விநியோகிக்கும் ஆணுறைகளில் கூடத் தன்னுடைய படத்தை அச்சிட்டிருக்கிறார் மோடி. கேட்பதற்கே அருவருப்பாகத்தான் இருக்கிறது, எனினும் ஆணுறைகளில் அச்சிடத்தக்க ஆண்மகனாக, குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை, மோடியைக் கருதியிருக்கிறது என்பது, அதைக் காட்டிலும் அருவருக்கத்தக்கதாக இருக்கிறது.

தெகல்கா நிருபரிடம், "பாபு பஜரங்கி' என்ற இந்துத்துவக் கொலைகாரன் வியந்து கூறிய சொற்களை இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள். ""மார்த் ஆத்மி ஹை!'' ஆம்பிளைச் சிங்கம்யா! இந்தச் சொல்லின் வழியே தெறிக்கும் பன்முகம் கொண்ட பொருள், "குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை மோடியைத் தெரிவு செய்தது ஏன்?' என்பதை விளக்குகிறது.

அந்த முகமூடி, மோடிக்கும், குஜராத்தின் இந்துப் பெரும்பான்மைக்கும் இடையே ஏற்படுத்தியிருந்த "வலிமையான பிணைப்பின்' பொருளும் விளங்குகிறது.

· மருதையன்

Monday, March 24, 2008

அண்ணன் வாறாரு வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க!

அண்ணன் வாறாரு வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க!



ட்அவுட் ஆடம்பர விளம்பரங்களை

கைவிட வேண்டும்!

கையில் தீச்சட்டி ஏந்தி

தீ மிதிக்கும் மூடத்தனம் ஒழிய வேண்டும்!

— இது கருணாநிதியின் ஊருக்கு உபதேசங்கள்.


""பெருசு அப்படித்தான் வயசான காலத்துல

பேசிவிட்டு திரியும்.

நீ பெருசு பெருசா வைடா என் கட் அவுட்டை,

எடுடா கரகத்தை,

குத்துடா அலகு காவடியை,

வெட்டுடா பிறந்தநாள் கேக்கை

— இது மு.க. அழகிரியின் மதுரைக் கொண்டாட்டங்கள்.


மனைவி காந்தி கிரிக்கெட் போட்டியைத் துவக்கி வைக்க,

மகன் துரை தயாநிதி பிளக்ஸ் பேனர்களில்

பாட்டன் சொத்துக்கு உரிமை கோர,

மகள் கயல்விழி அப்பாவுக்கு வந்த வாழ்த்துச் செய்திகளை

மலராகத் தொகுத்து வெளியிட்டு வீரவாளைப் பெற,

அழகிரியின் 57ஆவது பிறந்தநாள் படையெடுப்பில்

தங்கை கனிமொழியும் தன் பங்குக்கு

அண்ணா வழியில் போய்

அட்டாக் பாண்டியனைக் கண்டெடுத்த

அண்ணனின் போர்க்குணத்தைப் பாராட்ட

குடும்ப அரசியல் சந்தி சிரித்தது.


ஐம்பத்தியேழாவது பிறந்தநாளையொட்டி

ஐந்து கல்யாண மண்டபங்களில் சாப்பாடு

ஐநூற்று எழுபது பேருக்கு வேட்டி, சேலை

ஐம்பத்தியேழு பேருக்கு தையல் மிஷின்

ஐம்பத்தியேழு பேருக்கு அயர்ன் பாக்ஸ்

ஐம்பத்தியேழு ஜோடிகளுக்கு இலவசத் திருமணம்

ஐம்பத்தியேழு கோயில்களில் அன்னதானம்

இதுகளோடு ஒரு மூன்றை மட்டும் சேர்த்தால்

"அம்மா' பிறந்தநாளுக்கும்

அழகிரி ஆர்ப்பாட்டத்திற்கும் வேறுபாடில்லை.


""மதுரையின் ஐந்தாவது அதிசயம் அழகிரி'' என்று

வித்தகக்கவி முதுகைச் சொறிய,

""அழகிரி என் தந்தைக்கு இணையானவர்'' என்று

தங்கம் தென்னரசு மடியில் கையை வைக்க,

""கழகத்தின் ஆபத்தாண்டவரே'' என்று

கம்பம் செல்வேந்திரன் காலைச் சுற்ற,

பழைய பெருச்சாளி ராஜ கண்ணப்பனோ

""தி.மு.க.வின் இதயத்துடிப்பே '' என்று

பதவித் துடிப்பில் பல்லைக் காட்ட,

ஆற்றலரசர் தனது அதிகாரச் செல்வாக்கை

அனுபவித்து மகிழ்ந்தார்.


பிறந்தநாளையொட்டி வேட்டி மட்டுமா,

விளங்காத ஜென்மங்களுக்கு பேட்டியும் கொடுத்தார்:

""நேரு குடும்ப அரசியல் செய்யவில்லையா?

அன்புமணியை ராமதாஸ் அழைத்து வரவில்லையா?

விஜயகாந்த் மச்சானுக்கு பொறுப்பு தரவில்லையா?

அது மாதிரிதான்டா தி.மு.க.வும் எங்கப்பன் சொத்து

இதுக்கும் மேல புரியலைன்னா

என் மவனைக் கேளுடா வெண்ணை!'' என்று

பிய்த்து உதறி விட்டார்.


அ.தி.மு.க.வின் அடாவடிகளை எதிர்கொள்ள

இனி அழகிரி தி.மு.க.வாலேயே முடியும்!

அடிக்குற போஸ்டர் அளவை வைத்தே நாளை

அண்ணன் நிழலில் பொறுக்கித் திங்க முடியும் என்று

ஐம்பத்தி எட்டாவது பிறந்தநாளுக்கு இதை விட

பெரிதாகக் கலக்குவது பற்றி இப்போதே

சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் உடன்பிறப்புகள்.


தம்பி பரதனுக்காக முடிதுறந்த ராமர் அழகிரி

அம்பினை ஹாத்வே கேபிளுக்குள் நுழைக்க

இந்தியில் புகழ்பாடும் சுவரொட்டிகள்

எந்தப் பதவியிலும் இல்லாத ஏழைப் பங்காளனுக்கு

போலீஸ் துரத்தி, துரத்தி ராயல் சல்யூட்டுகள்.


பிழைப்புவாதிகள், துதிபாடிகள், சாதியக் கழிசடைகள்

அண்ணனின் பார்வையால்

தெருக்கோடியிலிருந்து பல கோடிக்குப் போனவர்கள்

அடித்த கூத்தில் கூச்சமில்லாமல் திளைக்கும்

அழகிரியைப் பார்த்து..

அடக்கி வாசித்த ஜெயலலிதாவே

இனி நமக்கென்ன தயக்கம் என்று

கழட்டிப் போட்ட பட்டுப்புடவையையும்

வைரக் கம்மலையும் மாட்டிக்கொண்டு

களத்தில் குதித்தாயிற்று..


முதலாளித்துவ அரசியல் போக்கை விமர்சித்த

காரல் மார்க்ஸ் இப்படிச் சொன்னார்:

""இனி பொய்ச்சத்தியம்தான் மதத்தைக் காப்பாற்றும்

ஒழுக்கக்கேடுதான் குடும்பத்தைக் காப்பாற்றும்

திருட்டுதான் சொத்தைக் காப்பாற்றும்''.

கழகக் கண்மணிகள் சொல்கிறார்கள்:

""இனி அழகிரிதான் கட்சியைக் காப்பாற்றுவார்.''


· சுடர்விழி