தமிழ் அரங்கம்

Saturday, September 23, 2006

அரசியல் இராணுவ தோல்விகளுக்கு காரணம் என்ன?

அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?

பி.இரயாகரன்
23.09.2006

யுத்தத்தில் புலிகளுக்கு ஏற்படும் தோல்விகளுக்கு காரணம் என்ன? இது அரசியல் ரீதியானதே ஒழிய இராணுவ ரீதியானதல்ல. ஆனால் இதைக் காண மறுப்பதும், இதை இராணுவ ரீதியாக காண்பதும் புலி மற்றும் புலியல்லாத புலியெதிர்ப்பு தரப்பின் இன்றைய கண்ணோட்டமாகவே உள்ளது. ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை பலிகொண்ட யுத்தம், இன்னமும் ஆயிரமாயிரம் இளைஞர்களை பலியிடத் தயாரான யுத்தம், பல பத்தாயிரம் மக்களை அழித்தொழித்துள்ளது. மக்கள் தமது வாழ்வை இழந்து, சொத்து சுகத்தை இழந்து அனாதையாகின்றனர். இதுவரை மக்களுக்கு புலிகள் எதையும் புதிதாக பெற்றுக்கொடுத்தது கிடையாது. இருந்ததை அழித்ததுக்கு அப்பால், எதையும் புலிகள் சாதிக்கவில்லை, சாதிக்கப்போவதில்லை. ஒவ்வொரு தமிழனும் புலிகள் எதை எமக்கு பெற்றுத் தந்தனர் என்று சுயவிசாரணை செய்தால், அவர்கள் இருந்ததை அழித்ததை தவிர, தம்மிடம் புடுங்கியதை தவிர வேறு எதுவும் இல்லை என்ற உண்மையைக் காண்பான். மக்களின் உழைப்பைச் சூறையாடி, ஒரு சில பத்தாயிரம் பேர் உழைப்பின்றி மக்களின் உழைப்பில் சொகுசாக வாழ்கின்றதை மக்கள் காண்பர்.


இந்த அவலமான துயரமான நிலையில், இந்த யுத்தம் சாதிக்கப் போவது எதுவுமில்லை. இன்று இந்த யுத்தம் தோல்வி கண்டுவரும் நிலையில், ஒரு இனத்தின் மொத்த அழிவும் நிதர்சனமாகியுள்ளது. புலிகள் ஒருபுறமும், மறுபக்கமாக புலியெதிர்ப்பு ஒநாய்க் கூட்டமும், மக்களை தமது எடுபிடிகளாக்கி, தாம் நினைத்த தமது மக்கள் விரோத வக்கிரங்களை தமிழ் மக்களின் தீர்வாக காட்டுகின்றனர்.


இந்த நிலையில் புலிகள் என்றுமேயில்லாத அளவுக்கு இராணுவ ரீதியாக தோற்றுக் கொண்டிருக்கின்றனர். பேச்சவார்த்தை என்ற அரசியல் மேசையில் தோற்றவர்கள், அதைத் தொடர்ந்து இன்று இராணுவ அரங்கில் தோற்பது தொடங்கியுள்ளது. அரசியல் மேசையில் தோற்று வந்த ஒரு நிலையில், வெல்வதற்காக அவசரமாகவே ஒரு தலைப்பட்சமாக வலிந்த ஒரு இராணுவ அரங்கைத் தொடங்கினர்.


இப்படி உத்தியோகப+ர்வமாக அறிவிக்கப்படாத ஒரு யுத்தத்ததை நோக்கி அவசரமாக ஒடிய புலிகள், தொடர்ச்சியாக அதில் தோற்றுப் போகின்றனர். இந்த நிலைமைக்கான காரணம் என்ன? இந்தக் கேள்வி பலருக்கு புதிரானதாக உள்ளது. புலிகளுக்கு இதுவே அதிர்ச்சிகரமானதாக மாறிவிட்டது. எங்கும் விடை தெரியாத, விடை காண முடியாத புதிராகி நிற்கின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரன் சென்ற மாவீரர் தினச்செய்தியில், மீண்டும் யுத்தம் என்ற பிரகடனத்தை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக மக்களின் பெயரில் தொடங்கிய தாக்குதல்கள், இன்று முட்டுச் சந்திக்கு வந்துள்ளது. இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களின் உள்ளான தாக்குதலை நடத்தமுடியாத நிலை உருவாகியுள்ளது. புலிகளின் மக்கள், மக்கள்படை அழித்தொழிக்கப்பட்டுவிட்டனர் அல்லது அவர்கள் அழித்தொழிக்கப்படுகின்றனர். அண்மைக்காலமாக நடக்கும் பெரும் எண்ணிக்கையிலான வகைதொகை தெரியாத கொலைகளில் பெரும்பாலானவை, புலிகளுக்கு எதிராக நடத்தப்படுகின்றது. அமைதி சமாதானம் காலத்தில், புலிகள் இதே போன்று வகைதொகை தெரியாது கொலைகளைச் செய்தனர் என்றால், இன்று அதே உத்தியை யுத்த சூழலுக்குள் பேரினவாதம் செய்து முடிக்கின்றது. நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இனம் தெரியாதவர் என்ற போர்வையில், மனித உரிமையை மதிக்க மறுக்கின்ற புலிகளின் கடந்தகால கொலைகாரப் போக்கினால், இன்றைய கொலைகள் யாரும் கண்டு கொள்ளாத ஒரு அசமந்தமான போக்கில் இக் கொலைகள் ஊக்குவிக்கப்படுகின்றது. இப்படி புலிகள் அல்லாத இராணுவ பிரதேசங்களில், புலியின் இராணுவ செயல்பாட்டை புலியின் பாணியிலேயே இராணுவம் செயலற்றதாக்கியுள்ளது.


இந்த நிலையில் அமைதி சமாதானம் பேசியபடி புலிகள் கையாண்ட இராணுவ தாக்குதல்கள் செயலற்று முடங்கிப் போன நிலையில், எல்லைகளில் மோதலை வலிந்து தொடுப்பதைத் தவிர, வேறு இராணுவ மார்க்கம் புலிகளுக்கு இருக்கவில்லை. அதையும் அவர்கள் வலிந்து தொடங்கினர். ஆனால் எல்லாம் பாரிய இழப்புடன் கூடிய தோல்விகளுக்கு அது இட்டுச் சென்றுள்ளது. மிகப்பெரிய படையை வைத்திருந்த புலிகள், நினைத்த இடத்தில் நினைத்தவரைக் கொல்லக் கூடிய ஒரு கொலைகார அடியாள் கும்பலைக் கொண்டிருந்தது. அத்துடன் விரும்பிய இடத்தில் விரும்பியவாறு ஏன் எதற்கென்ற கேள்வியின்றி தற்கொலை மூலம் தாக்குதலை நடத்தக் கூடிய விசுவாசிகளைக் கொண்டிருந்த புலிகள், நினைத்த இடத்தில் நினைத்த தாக்குதலை நடத்தும் வல்லமையைக் கொண்டிருந்த புலிகள் தொடர்ச்சியாக மண்ணைக் கவ்வுகின்றனர். மக்களை உருட்டி மிரட்டி ஏமாற்றி பலவழிகளில் மக்களிடம் திருடும் கோடிக்கான பணத்தில், தமது சொந்த சுகபோகத்தின் தேவை தவிர, மீதி முழுவதையும் இந்த இராணுவதுறைக்கே கொட்டுகின்றனர். அள்ளி வழங்கும் இலஞ்சம், தமது நோக்கை அடைய இலட்சக்கணக்கில் செலவு செய்யும் புலிகளின் இராணுவ உத்திகள் எல்லாம் தவிடுபொடியாகின்றன.


கடந்தகாலத்தில் இது போன்ற புலிப்பாணி இராணுவ வெற்றிகள் அனைத்தும் இன்று புஸ்வாணமாகின்றது. இது பலருக்கு அதிர்ச்சியாக உள்ளது. வழமை போல் தாக்குதல் தொடங்கியவுடன், செய்திகளை தகவல்களை புணர்ந்து புனைந்து போட்டவாகள், அதிர்ந்து போய் நிற்கின்றனர். பலதரம் அவை புஸ்வாணமாகி அம்பலமாகியுள்ளது. பலரை மௌனமாகி உறையச்செய்துள்ளது. புலிச் செய்தித்தளங்கள் நம்பிக்கை இழந்து சோர்வடைந்து வருகின்றது. புலிகளின் இராணுவ தோல்விக்கான காரணம் என்ன என்பது, பேரினவாதத்துக்கு புரியாத புதிராகவே உள்ளது. இதன் சூக்குமம் பிடிபடவே மறுக்கின்றது. புலிகளை வெல்லும் நிலைக்கு, இராணுவத்தின் பலம் மற்றும் கட்டமைப்பு மாற்றிவிட்டதாக சிலர் கருத்துரைக்கின்றனர். இதன் விளைவாக யுத்தவெறி கோசத்துடன், பேரினவாதம் கொக்கரிக்கின்றது. புலிகள் பின்வாங்கி பதுங்கி தப்ப முனைகின்றனர். இப்படி நிலைமைகள் தலைகீழாகிப் போனது.


உண்மையில் என்ன நடந்தது, என்ன நடக்கின்றது. இதை புலிகளாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. இலங்கை அரசியல் மீது கருத்துரைக்கும் யாராலும் இதை புரிந்துகொள்ள முடியாதுள்ளது. அந்தளவுக்கு அரசியலில் போக்கை தலைமை தாங்குவோருக்கும் மக்களுக்கும் இடையிலான உறவை புரிந்துகொள்ளும் அளவுக்கு, யாரும் மக்கள் நலனை அடிப்படையாக கொண்டு யாரும் இதை ஆராய்வதில்லை. இந்த நிலையில் இதை மீள மாற்றி அமைக்கும் வகையில், புலிகளின் இருப்பு அதை அனுமதிக்கவில்லை. புலிகளின் புலித் தேசிய சிதைவு இயல்பாக பல தளத்தில் தொடங்கிவிட்டது. புலிகளின் இராணுவ இருப்பும் அதை தடுக்கமுடியாது. இதற்கான அடிப்படைக் காரணம் என்ன? 1. புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு


2. தலைமைக்கும் அதன் கீழ்மட்ட உறுப்பினருக்குமான உறவு


3. முன்னனி தளபதிமாருக்கும் தலைமைக்குமான உறவு


4. தலைமைக்கும் மொத்த சமூகத்துக்குமான உறவு


இந்த உறவு சமாதானம் அமைதிக் காலத்தில் மெதுவாக, ஆனால் சிறுக்கச் சிறுக்க பலத்த மாறுதலுக்குள்ளாகியுள்ளது. இந்த இடைவெளி பலமானதாகவும, ஆழமானதாகியும் விட்டது. புலிக்குள் போராடும் உளவியல் பலம் முற்றாக சிதைந்து போய்விட்டது. இவைதான் தோல்விக்கான முக்கியமான அடிப்படையான காரணமாகும். இதை புலிகள் மாற்றவோ திருத்தவோ இனி முடியாது.


ஆயிரம் ஆயிரம் படைகளையும், நவீன இராணுவ உபகரணங்களையும் கொண்ட புலிகளின் இராணுவ பலம் மட்டும், யுத்தத்தையோ ஏன் ஒரு வெற்றிகரமான நகர்வையோ தீர்மானிப்பதில்லை. இதை புலிகளும், வலதுசாரிய கும்பல்களும் அங்கீகரிப்பதில்லை. இராணுவ வாதத்திற்குள் மல்லாக்க குப்புறவே வீழ்கின்றனர். புலிகளின் நவீன இராணுவ படைக்கு பின்னால் உள்ள பல ஆயிரம் இளைஞர்களின் போராடும் உணர்வுகளின் மட்டம் முற்றாகவே சிதைந்துவிட்டது. அவர்கள் போராட முடியாத அளவுக்கு உள்ள பாரிய உளவியல் நெருக்கடியே, அவர்களை இயல்பாக யுத்தத்தில் தோற்கடிக்கின்றது. இதை அணைபோட்டு தடுக்கமுடியாது. இதுதான் தோல்விக்கான குறிப்பான பிரதானமான அடிப்படைக் காரணமாகவுள்ளது.


1. புலிகளில் போராடும் இளைஞர்களின் அரசியல் மட்டம் முற்றாக சிதைந்துவிட்டது. அரசியலில் ஞானசூனியமாகி ஒரு கூலி கும்பலுக்குரிய மனோபாவத்தை பெற்றுவிட்டது.


2. புலி அமைப்பு, புலித் தலைமை பற்றி கொண்டிருந்த கண்ணோட்டங்கள் முற்றாக சிதைந்து, அதை வெளியில் சொல்லமுடியாத பாரிய உளவியல் நெருக்கடிகுள்ளாக்கிவிட்டது. எல்லாவிதமான நம்பிக்கைகளும் விசுவாசங்களும் அணிகளிடையே படிப்படியாக இல்லாது போகின்றது. அரசியல் நோக்கற்று இழிந்து செல்லும் சுயநல போக்கு கொண்ட புலிகளின் பொருளாதாரக் கட்டமைப்பு, எல்லாவிதத்திலும் இயல்பான போர்க்குணாம்சத்தை இல்லாதொழிக்கின்றது. புலிகளின் ஒவ்வொரு உறுப்பினரும் அமைதிக் காலத்தில், பலவற்றை சொந்த இயக்க வாழ்வியல் ஊடாக தாமாகவே தெரிந்து கொண்டார்கள். இதன் மூலம் சொந்த சுயநலத் தலைமையை, அதன் கொள்கையற்ற போக்கை, தமது வாழ்வியல் ஊடாகவே எதிர்மறையில் கற்றுக் கொண்டார்கள். தம்மைத் தலைமை தாங்கி நிற்கும் மாற்றவே முடியாத சொந்த தலைமையை, தனது மேலதிகாரியையும் நன்கு ஆழமாக உணாந்துபட்டு தெரிந்து கொண்டார்கள். இதைவிட வெளியில் இருந்து அவர்களின் விருப்பத்துக்கு மாறாக கடத்திவரப்பட்ட, ஆயிரக்கணக்கானவர்களுடனான உறவு, அவர்கள் வெளிப்படையான புலி மீதான அதிருப்திகள் இதை மேலும் ஆழமாக்கியது. இவர்களுடனான தொடர்புகள், அச்சமூட்டும் வகையில் அவர்களையே மேலும் மௌனமாக்கியது. ஒரு பாரிய இடைவெளியை உருவாக்கி வந்துள்ளது. பரஸ்பரம் சந்தேகத்தை மேலும் ஆழமாக்கி அதிகரிக்க வைத்தது. வெளிவேஷத்துடன் கூடிய போலியான ஒரு வாழ்வியல் முறையே, தலைமைக்கும் உறுப்புக்கும் இடையிலான உயிரான உறவாகியது. இது அமைப்பின் எல்லா மட்டத்திலும், எல்லா உறவிலும், இந்த போலித்தனமான நடிப்பே அவசியமான நிபந்தனையாகிவிட்டது. இந்த அதிருப்தி வெளிப்படுத்தும் உணர்வுகள், அவர்களின் சொந்த போர்க்குணாம்சத்தை சிறுகச்சிறுக அரித்து சிதைத்து தின்று வருகின்றது.


இதைவிட ஆடம்பரமாக சென்ற புலம்பெயர் வாழ்வியல் முறை, அதையொத்ததும் அதை விட வக்கிரத்தை அடிப்படையாக கொண்டதுமான யாழ் மேட்டுக்குடிகளின் ஆடம்பர வாழ்க்கை, அனைத்தும் சுயநலத்தை அடிப்படையாக கொண்டது. இது அங்கு போராடும் இளைஞன் முன் தான் ஏன் போராட வேண்டும் என்ற எதிர்மறையான கேள்வியை எழுப்பிவிடுகின்றது. இதை சொர்க்கமாக கருதுகின்ற இயல்பான உணர்வு, புலியினுள் ஆழமாகி ஒரு அரசியல் சிதைவை உருவாக்கிவிடுகின்றது.


இதற்கு ஏற்ற உறுதுணையாக சுயநலத்தை அடிப்படைiயாக கொண்ட புலிகளின் சமூக பொருளாதார கொள்கை, எதிர்மறையில் அவர்களுக்குள்ளும் அது செயல்படுகின்றது. சுயநலமற்ற சிந்தனைப் போக்கை, தியாக மனப்பான்மையை அது இயல்பாக மறுத்தலித்து விடுகின்றது. அமைதி சமாதான காலத்தில் இதுவே சமூக மேனிலைக்கு வந்தது. புலிக்குள் ஆழமான அதிருப்தியாக மாறிவிடுகின்றது. ஒவ்வொருவரும் சுயநலம் கொண்ட பொருளாதார அமைப்பில் உறுப்பினர் என்ற வகையில், தியாக மனப்பான்மை என்பது அவர்கள் முன்பே கேள்விக்குள்ளாகின்றது. அத்துடன் யுத்தமற்ற இக்காலகட்டத்தில், இதற்குள் வாழும் புலித் தலைமையில் சகல பூர்சுவா அற்பத்தனங்களும் அம்பலமாக்கிவிடுகின்றது.


1. தலைமையின் சொந்த ஆடம்பரமான வாழ்க்கைகள்


2. தலைமைகளின் இணக்கமற்ற அதிகாரபோக்கும், அதிகார வெறியும்


3. தான்தோன்றித்தனமான வாழ்க்கையும், செயல்களும்


4. சக மனிதனை மனிதனாகவே மதிக்கத் தவறுகின்ற வக்கிரங்கள்


5. சமூக ஒழுங்குகளை மீறியதும், அற்பத்தனமாக வாழும் இரகசிய பகிரங்க வாழ்க்கை முறைகள்.


இப்படி உள்ள ஒரு இயக்கத்தை, அந்த சூழலை கேள்வி கேட்க முடியாது. இதற்கு கீழ் உள்ளவன் தொடங்கி அனைவரும் அடங்கிப் போகும் வண்ணம், பீதியை அடிப்படையாக கொண்ட நிலமை. சக மனிதனை மனிதனாக மதிக்க தவறுகின்ற நிலையில், அவர்களிடையே உரையாடல்கள் எதுவுமற்ற போக்கில், அரசியல் உரையாடல்கள் கூட எதுவும் இல்லாத நிலையே புலிகளின் எதார்த்தமான பாசிச இருப்பாக நீடிக்கின்றது. தனிமையும், பீதியும் கலந்த உணர்வே, ஒவ்வொரு உறுப்பினரதும் ஆன்மாவுகுள்ளான உணர்வாகியது. அச்சம் கலந்த பீதி சார்ந்த மனவுணர்வு, கண்முன்னால் காணும் கொடூரமான சித்திரவதைகள், இதை செய்யும் லும்பன் வாழ்வை ஆதாரமாக கொண்ட கொலைகார நாசகாரக் கும்பல்கள், எப்போதும் எங்கும் கண்காணிப்படும் அவலம், நாம் எதற்காக ஏன் போராடுகின்றோம் என்று தெரியாத திரிசங்கடமான நிலைமை, அவர்களின் அனைத்துவிதமான தியாக மனப்பான்மையை போர்க்குணாம்சத்தை இல்லாதாக்கிவிட்டது.


இப்படி எந்தப் பிரச்சனையை பற்றியும் யாரும் வாய் திறந்து பேசமுடியாத நிலைமை. பேசினால் சித்திரவதைக் கூடங்கள், மரண தண்டனைகள் சாதாரணமான விடையமாக புலிக்குள்ளும் உள்ளது. இது புலி இயக்கவிதியாகும். அதிருப்திகளும், கேள்விகளும், சந்தேகங்களும் மனதுக்குள் குடைந்து அதை அரித்து, உளவியல் சிக்கலுக்குள் சிக்கிவிட்டது. இது புலிகள் அமைப்பு முழுக்க உருவாகிவிட்ட பொது நிலையாகும். இந்த உளவியல் சிக்கல், போராட்ட உணர்வை மழுங்கடித்து அதை இல்லாதாக்கிவிடுகின்றது.


கடந்தகாலத்தில் போராடும் ஆற்றல் கொண்டு காணப்பட்ட உளவியல் மட்டம், யுத்தத்தின் தேவை சார்ந்த அரசியல் என்பன அவர்களை போராடவைத்தது. அமைதிக்காலம் அதை முற்றாக சிதைத்து, அதை அறவே இல்லாததாக்கிவிட்டது. புலிகளின் அரசியல் நோக்கம் என்ன? தமிழ் மக்களுக்கு அவர்கள் எதை எப்படி பெற்றுத்தரப் போகின்றார்கள் என்ற கேள்வி சார்ந்த அரசியல் எதுவும் புலி உறுப்பினரிடையே விவாதத்துக்குரிய ஒரு அரசியலாக இருப்பதில்லை. சுத்த சூனியம், எல்லாம் தலைவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட அரசியல் உணர்வு, கடந்தகாலம் போல் நிகழ்காலத்தில் நம்பிக்கை எதையும் ஊட்டவில்லை. பிரபாகரனுக்கு அடுத்த மட்டத்தில் இருக்கக் கூடிய தலைவர்களின் தலைவிதி கூட இதுதான். எதையும் சுயமாக சித்திக்கவோ, சொல்லவோ, செயலாற்றவோ முடியாத நிலை, மொத்த அமைப்பையும் நம்பிக்கையீனத்தின் விளிம்புக்கு இட்டுச் சென்றுள்ளது.


வலிந்தே திணித்த கருணாவின் பிளவு, இதை மேலும் இரண்டு தளத்தில் ஆழமாக்கியது.


1. தவிர்த்து இருக்கக் கூடிய கருணாவின் பிளவு, ஆழமானதாக மீள முடியாத ஒரு பிரிவாகியது. இது புலிகளை இரண்டாக்கியது. கருணா வெளிச் சென்றாலும், புலியினுள் இன்னமும் பிளவு உயிருடன் காணப்படுகின்றது. 2. கருணா பிளவைக் கையாண்ட முறையும், கையாண்டு வரும் நடத்தை நெறிகளும், புலியின் கட்டமைப்பையே சிறுக்கச்சிறுக சிதறடித்துக் கொண்டிருக்கின்றது. அதாவது இது சூக்குமமாக, புலியின் சொந்த பாசிசத்தின் வீதியூடாக நடக்கின்றது. இயக்கத்தின் உள்ளார்ந்த இயல்புத் தன்மையையும், அதன் உள்ளார்ந்த விதியையும் நெருக்கடிக்குள்ளாக்கியதன் மூலம், அசாதாரணமான நிலை புலிக்குள் உருவாகியுள்ளது. பாசிசத்தினுள்ளும் காணப்பட்ட சுயாதீனமான சிந்தனைகள், அது சார்ந்த செயல்கள் அனைத்தையும் சந்தேகிக்கின்ற ஒரு போக்கு, புலியில் காணப்பட்ட உயிரோட்டத்தையும் இல்லாதாக்கியுள்ளது. அனைத்தும் தன்னியல்பாக முடமாக்கப்பட்டது. எல்லாவற்றையும் எதிராகவும், எதிரியாக கருதியதன் மூலம், கீழ் இருந்து மேல் வரை போலியான சம்பிரதாயமான விசுவாசமான பிரகடனங்களே உயர்ந்த புலி அரசியலாகியது. கேள்வியின்றிய வழிபாடே விசுவாசமாகியது.


இப்படி எங்கும் எதிலும் புலி தனக்குத்தானே குழிதோண்டியபடி தான், தனது சொந்த புதைக்குழிக்குள் அடிக்கடி புதைந்து மிதக்கின்றனர். கருணா விவகாரம் ஏற்படுத்திய விளைவு, இயக்கம் முழுக்க உள்ளார்ந்த அரசியல் விதியாகிவிட்டது. ஒவ்வொரு தளபதியும் தன்னைச் சுற்றி ஒரு வேலியிட்ட படி, பிரபாகரன் பெயரைச் கூறியபடி போலியாக பொம்மையாக அசைய முனைகின்றனர்.


எங்கும் ஒரு அசமந்தமான, அசாத்தியமான இனம் காணமுடியாத சூழல். மீட்சிக்கான பாதையோ, அதை கண்டறியும் பொதுச் சூழலே கிடையாது. தலைமை தனது தற்காப்பு என்ற எல்லைக்குள் முடங்கி நிற்கின்றது. பேரினவாதம் மட்டுமல்ல, சொந்த இயக்கத்தினுள்ளும் தற்காப்பை கோருகின்ற நிலைமையில் தலைமை உள்ளது. சொந்த அணிகளுக்கும் தலைமைக்கும் இடையில் உள்ள இடைவெளி அகன்று வருகின்றது. இது பல மட்டத்தில் ஒன்றுக்கு ஒன்று எதிரான போக்கில் வளர்ச்சியுறுகின்றது. பரஸ்பரம் நம்பிக்கையின்மை, பரஸ்பரம் விசுவாசமின்மை, மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம், இது புலிகளின் மொத்த இயக்கத்தின் சொந்த விதியாகிவிட்டது. இது உயிரோட்டமுள்ள தியாக மனப்பான்மை கொண்ட அனைத்துச் செயல்பாட்டை மறுதலித்துவிடுகின்றது. இயல்பாக இது தொடர்ச்சியான தோல்விக்கான முழுமையான சமூக அடிப்படையை உருவாக்கிவிட்டது. புலிகளின் சொந்த அரசியல் இராணுவ ரீதியான கட்டமைப்பு தோற்கடிக்கப்படுவது தவிர்க்க முடியாதாக்கியுள்ளது. முன்பை விடவும் இது வேகமாக அரங்கேறுவதை துரிதமாக்கியுள்ளது.


Friday, September 22, 2006

அமெரிக்காவில் தொடரும் போர்குற்றங்கள்

வியட்நாம் மைலாய்! ஈராக்கில் ஹதிதா!
அமெரிக்காவில் தொடரும் போர்குற்றங்கள்

ராக்கின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹதிதா என்ற சிறு நகரம், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடும் சன்னி பிரிவு முசுலீம் போராளிகளின் செல்வாக்கு நிறைந்த பிராந்தியம். இதன் காரணமாகவே ஹதிதா, அமெரிக்க இராணுவத்தின் தீவிர கண்காணிப்பின் கீழ் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 19 அன்று அதிகாலை நேரத்தில் இந்நகரைச் சேர்ந்த 23 ஈராக்கியர்கள் துப்பாக்கி தோட்டாக்களால் துளைக்கப்பட்டு இறந்து போனார்கள். அகால மரணமடைந்த இந்த 23 பேரில், மூன்று குழந்தைகள், ஏழு பெண்கள், மற்றும் நடக்கவே முடியாத முதியவர் ஒருவரும் அடங்குவார்கள்.


இந்தச் சம்பவம் குறித்து மறுநாள் நவம்பர் 20 அன்று அறிக்கை வெளியிட்ட அமெரிக்க இராணுவம் ""இறந்து போனவர்களுள் 8 பேர் தீவிரவாதிகள்; 15 பேர் பொதுமக்கள். தீவிரவாதிகளுக்கும், அமெரிக்க இராணுவத்துக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தபொழுது, அதனிடையே மாட்டிக் கொண்டு இந்த 15 பேர் இறந்து போனதாக''க் குறிப்பிட்டுள்ளது. ஈராக்கில் அன்றாடம் நடக்கும் உயிர்ப் பலிகளில் இதுவும் ஒன்று எனக் கருதி இதனை உலகம் மறந்துவிட்ட நிலையில், இப்பொழுது இச்சம்பவம் நடந்து ஏழு மாதங்கள் கழித்து உண்மைகள் மெதுவாகக் கசியத் தொடங்கியுள்ளன.


நவம்பர் 19 அன்று அதிகாலையில் ஹதிதா நகரையொட்டிச் செல்லும் நெடுஞ்சாலையில் ரோந்து சென்று கொண்டிருந்த அமெரிக்க இராணுவக் கவச வாகனங்களுள் ஒன்று, கண்ணிவெடித் தாக்குதலுக்கு உள்ளாகி உருக்குலைந்து போனது. இத்தாக்குதலில் 20 வயதான டெர்ரஸஸ் என்ற அமெரிக்க இராணுவச் சிப்பாய் இறந்து போனதோடு, இரண்டு சிப்பாய்கள் காயமடைந்தனர். இதற்குப் பழிக்குப் பழிவாங்கும் வெறியோடு, அந்நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள வீடுகளுக்குள் புகுந்து அமெரிக்க இராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டதன் விளைவாகத்தான் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு 23 பேர் இறந்து போனார்கள்.


இச்சம்பவம் குறித்து அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நெடுஞ்சாலையில் கண்ணிவெடி வெடித்ததும், அதில் சிக்கி ஒரு சிப்பாய் இறந்து போனது மட்டும்தான் உண்மை. தீவிரவாதிகளோடு நடந்த துப்பாக்கி சண்டை, அவர்களிடமிருந்து இரண்டு ஏ.கே.47 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது போன்றவை அனைத்தும், தனது போர் குற்றங்களை மறைக்க அமெரிக்கா சோடித்துள்ள கட்டுக்கதை என்பதை நிரூபிப்பதற்கு ஏராளமான சாட்சியங்களும், ஆதாரங்களும் உள்ளன.


ஒன்பது வயதான இமான் வாலீத் என்ற சிறுமியின் வீடு, கண்ணி வெடி தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 150 மீட்டர் தூரத்தில் உள்ளது. அமெரிக்க இராணுவம் இச்சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து சுட்டபொழுது, காலில் குண்டு காயத்தோடு மயிரிழையில் உயிர் பிழைத்து விட்டாள் இமான் வாலீத்.


""தெருவில் பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டவுடனேயே, என் அப்பா குர்ஆனை எடுத்துக் கொண்டு பக்கத்து அறைக்குச் சென்றுவிட்டார். துப்பாக்கிச் சத்தம் கேட்கும் பொழுதெல்லாம், தனியாகப் போய், குடும்பத்தினருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என அல்லாவிடம் வேண்டுவது அவர் வழக்கம். நான், என் தம்பி, அம்மா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை அனைவரும் படுக்கை அறையில் பதுங்கிக் கொண்டோம்.


நாங்கள் அனைவரும் இரவு உடைகளை அணிந்திருந்ததால், வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்பவில்லை. எங்கள் வீட்டிற்குள் துப்பாக்கிகளோடு புகுந்த சிலர், அப்பா பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தனர். மறுநிமிடம், சடசடவெனத் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் அந்த அறையில் இருந்து கேட்டது.


நாங்கள் பதுங்கியிருந்த அறைக்குள் புகுந்தவர்களின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. நீட்டிக் கொண்டிருந்த துப்பாக்கி முனையை மட்டும்தான் என்னால் பார்க்க முடிந்தது. அவர்கள் முதலில் எனது தாத்தாவின் நெஞ்சில் சுட்டார்கள். பிறகு அவரது தலையை துப்பாக்கி குண்டுகள் சல்லடையாகத் துளைத்தன. அடுத்து, என் பாட்டி சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பிறகு, அறையின் மூலையில் பதுங்கியிருந்த என்னையும், என் தம்பியையும் நோக்கி அவர்கள் திரும்பினர். எனது இரண்டு அத்தைகளும், மாமாக்களும் எங்களைச் சுற்றி கவசம் போல நின்று கொண்டு, எங்கள் இருவரின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் குண்டடிபட்டுச் செத்துப் போய்விட்டனர்.


எனது வலது காலிலும், என் தம்பியின் தோள்பட்டையிலும் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருந்தன. இரத்தப் பெருக்காலும், வலியாலும் துடித்துக் கொண்டிருந்த எங்களைச் சிலர் மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். "எங்கள் குடும்பத்தை ஏன் இப்படி கொன்று போட்டீர்கள்?' என்று நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அந்த ஈராக்கிய சிப்பாய்கள், நாங்கள் செய்யவில்லை. அமெரிக்கர்கள்தான் எனச் சொன்னார்கள்.


நானும் எனது தம்பியும் அநாதைகளாகி விட்டோம். அல்லா, இந்த முறை எனது குடும்பத்தைக் காக்காமல் கைவிட்டு விட்டார்'' எனத் தனது குடும்பம் இரக்கமற்ற முறையில் சுட்டுக் கொல்லப்பட்டதை மனித உரிமை அமைப்புகளிடம் கூறியிருக்கிறார், இமான் வாலீத்.


ஆனால், வாலீதின் வீட்டுப் பக்கத்தில் இருந்துதான் தீவிரவாதிகள் தங்களை நோக்கிச் சுட்டதாகவும், அந்த வீட்டிற்குள் நாங்கள் நுழைந்த போது, ஏ.கே.47 துப்பாக்கிகளை இயக்கப் போகும் ஓசை கேட்டதையடுத்துதான், தங்களைத் தற்காத்துக் கொள்ள அந்த வீட்டில் இருந்தவர்களைச் சுட்டுத் தள்ளியதாகவும் கூறி, இப்படுகொலைகளை நியாயப்படுத்துகிறது, அமெரிக்க இராணுவம்.


எனினும், வாலீதின் வீட்டில் இருந்து ஒரு விளையாட்டு துப்பாக்கியைக் கூட அமெரிக்க இராணுவம் கைப்பற்றவில்லை. வாலீதின் அப்பா கையில் இருந்த குர்ஆனை ஏ.கே. 47 ஆகப் பார்க்கும் அளவிற்கு அமெரிக்க இராணுவத்தின் கண்களும், மூளையும் முசுலீம் எதிர்ப்பு வெறியில் மூழ்கிக் கிடக்கின்றன.


வாலீதின் குடும்பத்தைத் தீர்த்துக் கட்டிய பிறகு, அச்சிறுமியின் பக்கத்து வீட்டிற்குள் புகுந்த அமெரிக்க சிப்பாய்கள், அங்கிருந்த நான்கு பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். ""அந்த நால்வரில், ஒருவர் கையில் ஏகே 47 துப்பாக்கி இருந்ததாகவும்; மற்றொருவர் துப்பாக்கியை எடுத்துவர முயன்ற பொழுது அவர்கள் இருவரை மட்டும்தான் தாங்கள் சுட்டுக் கொன்றதாகவும், மற்ற இருவர் எப்படி இறந்தார்கள் என்பது தங்களுக்குத் தெரியாது'' என அமெரிக்க சிப்பாய்கள் சாதிக்கின்றனர்.


ஆனால், சுட்டுக் கொல்லப்பட்ட நால்வரின் சகோதரரான ஆயேத், ""தனது நான்கு சகோதரர்களையும் துப்பாக்கி முனையில் மிரட்டி, ஒரே அறையில் அடைத்து வைத்து மிகவும் அருகாமையில் இருந்து அமெரிக்க சிப்பாய்கள் சுட்டுக் கொன்றதாகக் கூறுகிறார். அவர்களைக் காப்பாற்ற நான் வீட்டிற்குள் நுழைய முயன்றபொழுது, சில ஈராக்கிய சிப்பாய்கள், அமெரிக்கர்கள் உன்னையும் கொன்று விடுவார்கள் எனக் கூறித் தன்னைத் தடுத்துவிட்டதையும் சாட்சியமாகக் கூறியிருக்கிறார்'', ஆயேத்.


வாலீத், ஆயேத் குடும்பங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, மற்றொரு வீட்டின் கதவை குண்டுவீசி தகர்த்துவிட்டு, அவ்வீட்டிற்குள் புகுந்த அமெரிக்க சிப்பாய்கள், அந்த வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி, அவரது சகோதரி, அவரது இரண்டு வயது ஆண் குழந்தை மற்றும் மூன்று பெண் குழந்தைகளைச் சுட்டுக் கொன்றனர். இதற்கும் அமெரிக்க சிப்பாய்கள் சொல்லியிருக்கும் காரணம் அந்த வீட்டில் இருந்து எங்களை நோக்கிச் சுட்டார்கள் என்பதுதான்.


சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அமெரிக்க சிப்பாய்களே மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, ""அவர்கள் அனைவரும் தெருவோரம் வெடித்துச் சிதறிய வெடிகுண்டால் இறந்து போனதாக'' மருத்துவர்களிடம் கூறியுள்ளனர். அதேசமயம், பிரதேப் பரிசோதனை நடத்திய மருத்துவர்கள், ""இந்த 23 பேரில், பலரும் மிக அருகாமையில் இருந்து மார்பிலும், தலையிலும் சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பதை'' பத்திரிகையாளர்களிடம் அம்பலப்படுத்தியுள்ளனர்.


ஹதிதாவைச் சேர்ந்த இதழியல் மாணவர் ஒருவர், தாக்குதல் நடந்த மறுநாளே, தாக்குதல் நடந்த வீடுகளின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் ஒளிப் பேழையில் படமாகப் பதிவு செய்திருக்கிறார். ""இந்தப் படத்தைப் பார்த்தால், அமெரிக்க சிப்பாய்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்ததற்கான சிறு ஆதாரத்தையும் காண முடியவில்லை'' என ஹம்முராபி மனித உரிமைக் குழு கூறியிருக்கிறது.


இந்த ஹதிதா படுகொலைகள் உலகெங்கிலும் அம்பலமாகி, அமெரிக்க மேலாதிக்கவாதிகள் ஈராக் மீது திணித்திருக்கும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் சந்தி சிரிக்க வைத்து விட்டன. இதனால் அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் இந்தச் சம்பவம் பற்றி விசாரிக்க அமெரிக்க இராணுவத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார். விசாரணை நடத்தும் அதிகாரிகளோ, இந்தச் சம்பவத்தை, ""தீவிரவாதத்துக்கு எதிராக நடக்கும் போரில் ஏற்படும் துணை விளைவு'' என முத்திரை குத்திவிட முயன்று கொண்டிருக்கிறார்கள். எனவே, அமெரிக்க இராணுவம் நடத்திய கொலைகளை விசாரிக்கும் அமெரிக்க இராணுவத்தின் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதை இதன் மூலம் அனுமானித்துக் கொள்ளலாம்.


ஹதிதா தாக்குதல் சம்பவத்தில் இறந்து போன ஒவ்வொருக்கும் 2,500 அமெரிக்க டாலர்களை (ஏறத்தாழ 1,13,000 ரூபாய்) நட்ட ஈடாக வழங்கியிருக்கிறது அமெரிக்க இராணுவம். இந்த 2,500 அமெரிக்க டாலர் ஒரு ஈராக்கிய குடிமகனின் மதிப்பு மட்டுமல்ல் அமெரிக்காவை எதிர்த்தால், உங்கள் உயிரின் விலையும் இந்த 2,500 அமெரிக்க டாலர்களைத் தாண்டாது!


மு செல்வம்


Thursday, September 21, 2006

சாதி இந்துக்களுக்கு வக்காலத்து தான் சமூகநீதியா?

இட ஒதுக்கீடு:

சாதி இந்துக்களுக்கு வக்காலத்து தான் சமூகநீதியா?
-இனவாதிகளின் அவதூறும் எமது நிலையும்

மாற்று இயக்கத்தினர் மீது இட்டுக்கட்டி அவதூறும் பொய்யும் புனைச் சுருட்டும் பரப்புவதாலேயே மட்டும் எந்தவொரு இயக்கமும் வளர்ந்துவிட முடியுமா? அப்படித்தான் நம்புகிறார்கள் தமிழினவாதிகள். தேசிய இனப் பிரச்சினையாகட்டும், இடஒதுக்கீடாகட்டும், ஈழப் பிரச்சினையாகட்டும், இந்தத் தமிழினவாதிகளின் நிலைப்பாடுகளை ""அப்படியே'' ஏற்காதவர்களை எதிரிகளோடு இணைவைத்து முத்திரை குத்தி அவதூறு செய்கிறார்கள். குறிப்பாக, புதிய ஜனநாயகப் புரட்சிகர இயக்கத்தினரிடம் மட்டும் இந்தச் சிறப்பு அணுகுமுறையை வைத்திருக்கிறார்கள்.


அதேசமயம், தமிழ்தேசிய இனத்தின், சமூக நீதியின், ஈழவிடுதலையின் எதிரிகளான பா.ஜ.க.ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஜெயலலிதா கும்பல்களின் நெருங்கிய பங்காளிகளான ஜார்ஜ் பெர்ணாண்டஸ், வைகோ, திருமா போன்றவர்களோ தமிழினவாதிகளின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தலைவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகளைப் பார்த்து ""தமிழ் தேசியத்துக்கு எதிரான அகில இந்திய பூணூலிஸ்டுகள்'', ""ஈழப் பிரச்சினையில் புதிய ஜனநாயகத்தின் நிலைப்பாடுகளும் பார்ப்பன "துக்ளக் சோ'வினுடையவையும் ஒன்றுதாம்'', ""இடஒதுக்கீடு பிரச்சினையில் ம.க.இ.க.வின் அணுகுமுறை மறைமுகப் பார்ப்பனியமாக உள்ளது'' இப்படியெல்லாம் தொடர்ந்து இட்டுகட்டி, முத்திரை குத்தி அவதூறு செய்கிறார்கள், தமிழினவாதிகள்.


இந்தப் பிரச்சினைகளிலெல்லாம் நமது நிலைப்பாடுகளை, அடிப்படை ஆதாரங்களை விளக்குவதோடு நாம் நிற்கவில்லை. இவற்றில் தமிழினவாதிகளின் நிலைப்பாடுகள் மீது பல முக்கியமான கேள்விகளை எழுப்பி, நிராகரித்திருக்கிறோம். அவை எதற்குமே பதிலளிக்கத் திராணியற்ற தமிழினவாதிகள், நமது எதிரிகளின் நிலைப்பாடுகளோடு ஒப்பிட்டு இணை வைப்பதோடு, அவதூறும் பொய்பிரச்சாரமும் செய்கிறார்கள். அவர்கள் இணை வைத்துக் காட்டும் எதிரிகளுடையவற்றில் இருந்து நம்முடைய நிலைப்பாடுகள் எவ்வாறு அடிப்படையிலேயே மாறுபடுகின்றன என்றும் பலமுறை விளக்கியிருக்கிறோம். எளிதில் யாரும் புரிந்து கொள்ளக்கூடிய இந்த விளக்கங்களுக்கே கூட மறுப்புரை ஏதும் முன்வைக்காமல், கோயாபல்சுகளாகி திரும்பத் திரும்ப அதே பொய்களைப் பேசி வருகிறார்கள்.


தற்போது, உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு திட்டத்தை அமல்படுத்தப் போவதாக மத்தியில் ஆளும் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்திருக்கிறது. இதை ஏற்கெனவே உயர்கல்வி பெற்று வேலையிலிருக்கும் மற்றும் உயர்கல்வி கற்றுவரும் முற்பட்ட சாதியினர் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இதையொட்டி, ""உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பார்ப்பன மற்றும் பிற ஆதிக்க சாதிகளின் போராட்டத்தை முறியடிப்போம்'' என்று ம.க.இ.க. மற்றும் பிற புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகள் முழக்கம் முன்வைத்துப் போராடி வருகின்றன.


""உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு'' என்பதை பார்ப்பனர்கள் தவிர வேறு பிற ஆதிக்கசாதிகளும் எதிர்ப்பதையும் முறியடிக்க வேண்டியுள்ளது. அதோடு ஒருபுறம் இடஒதுக்கீட்டை ஆதரித்துக் கொண்டும் அதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் ராமதாசு, முலயம் சிங், லல்லுபிரசாத், கருணாநிதி போன்ற பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொள்ளும் சக்திகள் அதிகாரத்தில் பங்கு பெற்று, தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலகமயம் என்ற மறுகாலனியாதிக்கத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் முற்படுத்தப்பட்ட சாதிகளுடன் சமரசம் செய்து கொண்டுள்ளனர். அதுமட்டுமல்ல, பொதுவில் எல்லா இட ஒதுக்கீட்டிலும் உள்ளதைப் போலவே, உயர் கல்விக்கான இட ஒதுக்கீட்டிலும் இடம் பெற எத்தணிக்கும் சாதிகள் எல்லாம் உண்மையில் அதற்குத் தகுதியானவை என்று கருத முடியாது.


அதாவது, பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்ற பட்டியலில் தற்போது இடம் பெற்றுள்ள சாதிகளில் பலவும் முற்பட்ட சாதிகளாக உள்ளன. கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற சாதிகளை ஒடுக்கும் பல ஆதிக்க சாதிகள் பொய்யான அடிப்படையில் தாமும் பிற்படுத்தப்பட்டவை என்று உரிமை பாராட்டி இட ஒதுக்கீடு வாய்ப்பைக் கேடாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.


இந்த உண்மை விவரங்களைப் பரிசீலிக்காமலேயே, மறுத்துரைக்காமலேயே, தங்கள் நிலையை ஆதரிக்க வேண்டும்; இல்லையென்றால் நாம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள், பார்ப்பனர்களுக்கு மறைமுக ஆதரவு தெரிவிப்பவர்கள் என்றும் முத்திரை குத்துகிறார்கள், தமிழினவாதிகள். அவர்களுடைய நிலையோ எந்த ஆய்வுபரிசீலனையும் இல்லாது, நீதிக் கட்சியின் சிற்றரசர்கள், மிட்டாமிராசுகள், ஜமீன்தாரர்கள், (அக்கட்சி அப்படிப்பட்டதுதான் என்பதற்கு ஆதாரம் 1945 சேலம் திராவிடர் கழக மாநாட்டில் அண்ணாதுரை ஆற்றிய உரையேயாகும்) ஆகிய சாதி இந்துக்களின் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதோர் என்ற பொதுவரையறையின் அடிப்படையிலான நிலையைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதாகும்.


""கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா'' என்று புத்திசாலித்தனமாக சிலர் கேட்பதுண்டு. இரண்டில் ஒன்று சொல்லமுடியாது, பரிணாம வளர்ச்சிப்படி தான் வந்தது என்று சொல்லப் புகுந்தால், பதிலைப் புரிந்து கொள்ள மறுத்து, ""அதெல்லாம் வேண்டாம் இரண்டில் ஒன்று சொல்லுங்கள்'' என்று முட்டாள்தனமாக அவர்கள் அடம்பிடிப்பதும் உண்டு. அப்படித்தான் அடம் பிடிக்கிறார்கள், தமிழினவாதிகள். தமது மூதாதையர்களின் சாதி இந்துக்களின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அப்படியே ஆதரிக்க வேண்டும். அதை எவ்விதப் பரிசீலனைக்கும் மாற்றத்துக்கும் உட்படுத்தக் கூடாது. இல்லையென்றால் எதிர்க்கிறீர்கள் என்றுதான் பொருள் என்கிறார்கள். மொத்தத்தில் ""இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா? இரண்டில் ஒன்று சொல்லுங்கள். இரண்டில் ஒன்றுதான் இருக்க முடியும். மூன்றாவது ஒன்று இருக்க முடியாது. இரண்டும் இல்லாத வேறொன்று இருக்க முடியாது, நடுநிலையும் இருக்க முடியாது'' என்றெல்லாம் குதர்க்கம் பேசுகிறார்கள். பகுத்தறிவுக்கும் தர்க்கவியலுக்கும் விரோதமான இந்த அணுகுமுறையை அறிவியல்பூர்வமானது என்றும் கற்பித்துக் கொள்கிறார்கள்.


கேள்வியை அமைக்கும் முறை, மாற்றுக் கருத்துக்களைக் காமாலைக் கண் கொண்டு பார்க்கும் பார்வை, மாற்றாரும் எண்ணிப் பார்க்காத வகையில் அவர்களுடைய நிலைக்கு இவர்களே தரும் வியாக்கியானம் எல்லாவற்றிலும் பாசிசத்தனமான கருத்துத் திணிப்புத்தான் இருக்கிறது. காசுமீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலையை ஆதரிக்கிறீர்களா, இல்லையா என்ற கேள்விக்கு இல்லை எதிர்க்கிறோம் என்று பதில் சொன்னால், அப்படியென்றால் பாகிஸ்தான் நிலையை ஆதரிக்கிறார்கள் என்று முடிவு செய்தால் அது என்ன தர்க்கமாகும் தெரிகிறதா? அதேபோல இந்தியாவின் நிலையையும் ஏற்கவில்லை, பாகிஸ்தானின் நிலையையும் ஏற்கவில்லை; இரண்டையும் எதிர்க்கிறோம் என்று சொன்னால் அது நடுநிலையும் ஆகிவிடாது. காசுமீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்பதுதான் சரியானது என்ற மூன்றாவது, மாற்று, வேறொரு நிலையை எடுக்கவும் முடியும். இப்படி நிலை எடுப்பதாலேயே இந்திய வெறியர்கள் நம்மைப் பார்த்து, தேசத்துரோகிகள், பாக் ஆதரவாளர்கள் என்று அவதூறும் செய்யக் கூடும்.


அதைப்போலத்தான், இந்தத் தமிழினவாதிகள் உட்பட சமூக (அ) நீதிக்காரர்கள்; நன்றாகக் கவனியுங்கள், இடஒதுக்கீடு பிரச்சினையில் நமது நிலை என்னவென்று கேட்கவில்லை. தமது நிலையை ஆதரிக்கிறீர்களா? இல் லையா? என்று கேட்கிறார்கள். நாம் நமது நிலையைச் சொன்னால் அவர்களாகவே ஒரு வியாக்கியானம் செய்து கொள்கிறார்கள்.


இட ஒதுக்கீடு பிரச்சினையில் நமது நிலை குறித்து ஏற்கெனவே பின்வருமாறு எழுதியுள்ளோம்.


இட ஒதுக்கீடு குறித்துப் பார்ப்பன மற்றும் பிற உயர்சாதி இந்துக்கள் மூன்று விதமான நிலைப்பாடு எடுக்கின்றனர். ஒன்று; இட ஒதுக்கீடு என்பதே கூடாது; தகுதி, திறமை அடிப்படையிலேயே கல்வி, வேலை வாய்ப்புகள் தரவேண்டும் என்பது. இரண்டு; பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்து தரவேண்டும்; ஏனெனில் கல்வி மற்றும் சமூக உரிமை இப்போது கிடையாது என்பது. மூன்று: கல்வி மற்றும் சமூக ரீதியிலானவற்றோடு பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளதையும் அடிப்படையாக வைத்து இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது. இடஒதுக்கீடு மண்டல் அறிக்கையின் தீவிர ஆதரவாளர்களாகக் காட்டிக் கொள்ளும் சில ""மார்க்சிய லெனினியக் குழுக்கள்'' கூட இந்த மூன்றாவது நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளன. ஆனால் ""புதிய ஜனநாயகம்'' மேற்படி மூன்று நிலைப்பாடுகளையும் ஏற்கவில்லை; எதிர்த்து அம்பலப்படுத்தி வருகிறது.


""சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்பதுதான் அரசியல் சட்டத்தில் உள்ளது; இது தான் சரியானது; இவ்விரு அடிப்படைகளில் எது ஒன்றையும் புறக்கணிக்கக் கூடாது'' என்பதுதான் திராவிடக் கட்சிகள், அவற்றின் சார்புடையவர்களது நிலைப்பாடு இதை ""புதிய ஜனநாயகம்'' எதிர்க்கவில்லை. கல்வி மற்றும் சமூக ரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் உரிமை மறுக்கப்பட்டவர்கள்தான் இட ஒதுக்கீடு கோரும் உரிமை உடையவர்கள் என்றே கூறிவந்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் திராவிடக் கட்சிகள் அவற்றின் சார்புடையவர்களுக்கும் ""புதிய ஜனநாயக''த்திற்கும் இடையிலான வேறுபாடு எந்தெந்த சாதிகள் சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் ஒடுக்கப்பட்டவைகள் உரிமை மறுக்கப்பட்டவைகள், இதை எப்படித் தீர்மானிப்பது என்பதுதான்! அப்படி இருக்கும்போது பார்ப்பனர்களைப் போலவே குழப்புவதாகவும், "புதிய ஜனநாயகம் என்பது புதிய பார்ப்பனீயமே' என்று எழுதுவதும் வெறும் அவதூறும் பொய்யும்தான்! (புதிய ஜனநாயகம், 115, மார்ச்'92, கேள்விபதில்)


ஆகவே, இட ஒதுக்கீடு பிரச்சினையில் நமது முழுமையான, சுருக்கமான நிலை இதுதான்:


நிலவும் சமுதாயப் பொருளாதார, அரசியல் அமைப்பின் மீது வெறுப்புறும் பல்வேறு பிரிவு மக்களும் தங்களுக்கு எதிரான கலகத்தில் இறங்கிவிடக் கூடாது என்பதற்காகவே, ""இந்த ஆட்சியில் தாங்களும் பங்கு பெறுகிறோம்'' என்கிற மாயையை உருவாக்குவதற்காகவே, கொண்டு வரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு என்ற ""நிறுவனமயமாக்கும் கொள்கை.'' இந்த அடிப்படையில்தான் உலகின் பல நாடுகளிலும் ஆளும் வர்க்கங்களே இடஒதுக்கீடு ஏற்பாட்டைச் செய்கின்றனர். ஆங்கிலேயக் காலனியவாதிகள் முதல் ஆளும் காங்கிரசு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுவரை இப்படித்தான், இதற்காகத்தான் செய்கின்றனர். தமிழினவாதிகள் உட்பட சமூக அநீதிக்காரர்கள் கருதுவதைப் போல நீதிக்கட்சியினரோ, திராவிடர் கழகத்தினரோ முன்வைத்துப் போராடிப் பெற்ற உரிமையல்ல. ஆட்சியாளர்களால் புகுத்தப்பட்ட நிறுவனமயமாக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை சாதி இந்துக்களுக்குச் சாதகமாகத் திருப்பிக் கொண்டதுதான் நீதிக் கட்சிக்காரர்களின் ""வகுப்புரிமைப் போர்.'' தங்களது ஏகபோகஆதிக்கம் ""பறிபோகிறதே'' என்று ஆத்திரமுற்று இடஒதுக்கீட்டுக் கொள்கையை பார்ப்பனர்கள் எதிர்த்தபோது, அதை முறியடிக்கத் திராவிடர் கழகத்தினர் நடத்தியதுதான் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டம். இடஒதுக்கீடு தவிர வேறு பிறவற்றில், பெரியார் நடத்திய பார்ப்பனிய எதிர்ப்புக்களை அவரது ""வாரிசுகள்'' கைவிட்டுவிட்டார்கள்; ""இடஒதுக்கீடுதான் பெரியாரியத்தின் உயிராதாரமானது'' என்கிறார்கள். ஆனால், ஆட்சியாளர்களின் நிறுவனமயமாக்கும் கொள்கை என்கிற முறையில் இடஒதுக்கீட்டில் உள்ள புரட்சிக்கு பாதகமான அம்சங்களை மார்க்சிய லெனினியவாதிகள் பார்க்கிறார்கள். தங்களையும் பொதுவுடைமைவாதிகள் என்று கூறிக் கொள்ளும் தமிழினவாதிகள் இந்த உண்மையைக் காண மறுக்கிறார்கள். இந்த உண்மையை வலியுறுத்தும் நமது நிலையை எடுத்துக் காட்டி, ""இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள்'', ""மறைமுகப் பார்ப்பனியம்'' என்று அவதூறு செய்கிறார்கள்.


அதேசமயம், இடஒதுக்கீடு என்பது ஆட்சியாளர்களே புகுத்துவது என்றபோதும், நிலவும் சமூக அமைப்பில் ஒரு சலனத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தமாகவும் இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் சீர்திருத்தங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்கிற முறையில் நாம் இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் அல்ல் அது ஒரு தற்காலிக ஏற்பாடு என்கிற முறையில் எதிர்மறையில் ஏற்கிறோம். ஆனால், இடஒதுக்கீடு ஒரு முழுமையான தீர்வல்ல, ஒரு இடைக்காலத் தீர்வுதான், அதுவே சமூகப் புரட்சியாகாது என்பதைத் தாங்களும் ஏற்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழினவாதிகள் உட்பட சமூக(அ)நீதிக்காரர்கள் முரண்பாடாகவும் வாதிடுகிறார்கள். இட ஒதுக்கீடு என்பது பார்ப்பனியத்துக்கு எதிரான வகுப்புரிமைப் போர் என்றும் உலகிலேயே தனிச்சிறப்பான இந்திய சாதிய சமுதாயப் பிரச்சினைகளுக்கு வேறு யாராலும் எந்தத் தீர்வும் முன்வைக்கப்படாதபோது பெரியாரும் அம்பேத்கரும் கண்டுபிடித்த சரியான ஒரே தீர்வு இதுதான் என்றும் உயர்த்திப் பிடிக்கப்படுவது இட ஒதுக்கீடுதான்! ஆட்சியாளர்களாலேயே புகுத்தப்பட்டது, சமூகப்புரட்சியாகி விடாது, சமூக சீர்திருத்தம்தான் என்கிறபோது இந்த இடஒதுக்கீடுதான் பெரியாரியத்தின் உயிராதாரமானது என்று வாதிடுவது பெரியாரையே இழிவுபடுத்துவதாகாதா?


கருணாநிதி 5வது முறையாக முதல்வராகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே அவரை உலகவங்கி அதிகாரி மைக்கேல் கார்டர் சந்தித்து தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழைகள் மற்றும் அபாயகரமான பிரிவு மக்களின் ஏழ்மைக் குறைப்புக்காக 750 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார். தேர்தலின்போது கருணாநிதி அறிவித்த பல்வேறு இலவசத் திட்டங்களுக்கும் இந்த நிதி பயன்படப் போகிறது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே ஒப்புதலளிக்கப்பட்டது, உலக வங்கியின் இந்த ஏழ்மைக் குறைப்புத் திட்டம். தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் ஆகிய மறுகாலனியாதிக்கம்தான் மக்களை ஏழ்மையில் தள்ளுகிறது என்றபோதும் பல்வேறு ""இலவசங்கள்'' அடங்கிய இந்த ஏழ்மைக் குறைப்புத் திட்டத்தை நாம் எதிர்ப்பதில்லை. அதேசமயம், இதை ஆதரித்து, இந்த ஏழ்மைக் குறைப்புத் திட்டத்தின் கீழ் மேலும் மேலும் பல ""இலவசங்கள்'' கோரிப் போராடவும் போவதில்லை. வறுமையிலும் பட்டினியிலும் செத்துமடியும் நம் மக்கள் உயிர் பிழைத்திருப்பதற்கு ஒரு இடைக்கால ஏற்பாடு என்கிற எதிர்மறைநோக்கில் ஏற்கிறோம்.


ஏழ்மைக் குறைப்புத் திட்டங்களால் வறுமை ஒழிப்போ, மக்களின் பொருளாதா வாழ்வில் புரட்சிகர மாற்றங்களோ வந்துவிடப் போவதில்லை. மறுகாலனியாக்கத்தை முறியடிப்பதே வறுமை ஒழிப்புக்கான வழி என்பதை வலியுறுத்தி மக்களைத் திரட்டுகிறோம். மறுகாலனியாக்கத்தை எதிர்க்கிறீர்கள், ஆகவே அதன் ஒரு பகுதியாகிய ஏழ்மைக் குறைப்புக்கும் எதிரானவர்கள் என்று அதிமேதாவித்தனமாக வாதிட முடியாது. அதைப்போலத்தான், ஆட்சியாளர்களின் நிறுவனமயமாக்கும் கொள்கை என்கிற முறையில் தெரிவிக்கும் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவாதங்களை, ஒரு சீர்திருத்தம் என்கிற முறையில் தெரிவிக்கும் எதிர்மறையான ஆதரவை மறுப்பதற்குப் பயன்படுத்துவது அயோக்கியத்தனமானது.


இடஒதுக்கீடு கொள்கையை ஒரு சீர்திருத்தம் என்கிற முறையில் ஏற்கும் அதேசமயம், தொழிற்சங்கக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களைப் போலவே இதற்கும் ஒரு வரம்பிருக்கிறது. தொழிற்சங்கக் கோரிக்கைகளுக்கான போராட்டமாகட்டும், இட ஒதுக்கீட்டுச் சீர்திருத்தமாகட்டும், இரண்டையும் தொடர்ந்து வரம்பின்றி செயல்படுத்திக் கொண்டே இருந்தால் எதிர்விளைவுகள் அதாவது முந்தையதில் முதலாளித்துவக் கண்ணோட்டமும், பிந்தையதில் சாதியக் கண்ணோட்டமும்தான் வலுப்படுத்தப்படும் என்கிறோம். இட ஒதுக்கீட்டால் ஆதாயம் அடைந்த சிலர் கருப்புப் பார்ப்பனர் களாக நடந்து கொள்வதையும் பார்க்கி றோம். இட ஒதுக்கீடு கொள்கை ஒரு சீர்திருத்தம்தான் என்றபோதும், அதைக்கூட சகித்துக் கொள்ளாது பார்ப்பன மற்றும் பிற ஆதிக்க சாதிகள் காட்டும் எதிர்ப்பு கடுமையாகப் போராடி முறியடிக்க வேண்டியது என்கிறோம். அதேசமயம், முன்பு விளக்கியதைப் போன்று இடஒதுக்கீட்டின் பலன்களை அதற்குத் தகுதியற்ற ஆதிக்க சாதிகள் (சமூக ரீதியில் தொடர்ந்து ஒடுக்குமுறை செலுத்தி வரும் சாதிகள்) பெறுவதையும் எதிர்க்கவேண்டும். ஆனால், இத்தகைய ""சாதி இந்துக்களின்'' நலன்களுக்காகத்தான் தமிழினவாதிகள் உட்பட சமூக அநீதிக்காரர்கள் புதிய ஜனநாயகப் புரட்சியாளர்கள் மீது பாய்கின்றனர், அவதூறு செய்கின்றனர்.


—புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு


Wednesday, September 20, 2006

பெற்ற மகனை கொன்று எரித்த கொடூரம்

பெற்ற மகனை கொன்று எரித்த கொடூரம்!
சி.பி.எம்.காரனின் சாதிவெறியாட்டம்!


ஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள பூதலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மாரனேரி என்கிற கிராமத்தில் சுப்ரமணியன் என்ற சாதிவெறி பிடித்த மிருகம், தனது மகனையே கொன்று எரித்துள்ளது. இந்த மிருகம் ஆதிக்க சாதிகாரன் என்றோ, பெரும்பணக்காரன் அல்லது பண்ணையார் என்றோ கருதிவிட வேண்டாம். 20 ஆண்டுகளாக சி.பி.எம். கட்சியில் "தீவிரமாக' செயல்பட்டு வருபவர். தாழ்த்தப்பட்ட சாதியான பள்ளர் பிரிவை சார்ந்த, நிலம் ஏதும் இல்லாத கூலித் தொழிலாளி. இன்று வரை ஆதிக்கசாதியான உடையார் சாதிக்காரரான மகிமைராசு என்பவரிடம் பண்ணை வேலை செய்து வருபவர்தான் சுப்ரமணியன்.


சுப்ரமணியன் தனது மகனை கொலை செய்து எரிப்பதற்கான காரணம், தனது மகன் முருகராஜ், தாழ்த்தப்பட்ட சாதியின் மற்றொரு பிரிவான பறையர் வீட்டு பெண்ணான சித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததுதான். முருகராஜும், சித்ராவும் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். அதனடிப்படையில் சித்ரா 8 மாத கர்ப்பிணியாகி விட்டார். ஊருக்குத் தெரியும் முன்பே எங்கேயாவது சென்று திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவெடுத்தனர். இதையறிந்து, அப்போது சி.பி.எம். கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் பூதலூர் ஒன்றிய தலைவராக இருந்த கொலைகார சுப்ரமணியன் ""மாட்டு கறி திங்கிற பறச்சி எனக்கு மருமவளா வரமுடியாது'' என வெளிப்படையாக கூச்சல் போட்டுள்ளார். தனது மகன் முருகராஜை மிரட்டி கடத்தி சென்று உறவினர் வீட்டில் பதுக்கி வைத்துவிட்டார். இதனால் வெளியூர் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வது என்கிற இருவரது ஆசையும் நிராசையானது.


இந்நிலையில் கர்ப்பிணியான சித்ரா, வீட்டில் உள்ளவர்களின் கடும் பேச்சுக்கு ஆட்பட்டு அவமானத்தால் என்ன செய்வது என்று அறியாமல் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டார். மகனை கடத்தி பதுக்கி விட்டாலும் சித்ரா கர்ப்பமாக இருப்பது சுப்ரமணியனுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. உடனே ஆல்பர்ட் என்கிற இன்னொரு சி.பி.எம்.காரனிடம் ரூ. 500 கொடுத்து சித்ராவின் வயிற்றில் வளரும் கருவை கலைக்கக் கூறினான். ஆல்பர்ட்டும் சித்ராவிடம் நைச்சியமாக பேசி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளான். சித்ரா வயிற்றில் இருப்பது 8 மாத குழந்தை என்பதால் கலைக்க முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆகவே, சுப்ரமணியனின் முயற்சி தோல்வியானது.


இதற்கிடையில் அவ்வூர்காரர்களான தலித் அரசியல் ஆர்வலரான திரு. ராஜேந்திரன், வி.வி.மு. தோழர் ஆண்ட்ரோஸ் ஆகிய இருவரும் இப்பிரச்சினை தொடர்பாக சுப்ரமணியனிடம் பேசி திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தனர். அதற்கு மறுத்துவிட சுப்ரமணியன், இப்பிரச்சினையில் தலையிட்டால் ""கொலை செய்து விடுவேன்'' என மிரட்டவும் செய்தார். இந்நிலையில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் பூதலூர் ஒன்றிய பேரவை கூட்டம் சுப்ரமணியன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தஞ்சை சி.பி.எம். மாவட்ட செயலாளராக அப்போது இருந்த சீனிவாசன் என்பவர் வந்திருந்தார்.


அக்கூட்டத்திற்குள் சித்ராவை அழைத்துக் கொண்டு சென்ற ம.க.இ.க. பு.மா.இ.மு. தோழர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் சிலர், இப்பெண்ணிற்கு ஏற்பட்ட பிரச்சினையை எடுத்துக் கூறி, இக்கூட்டத்திலேயே விசாரித்து நியாயம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். திருடனுக்கு தேள்கொட்டிய கதையாக முழித்தார் சுப்ரமணியன். சி.பி.எம். மாவட்டச் செயலாளர், ""ஒருவாரம் கால அவகாசம் கொடுங்கள்; நான் தீர விசாரித்து நல்ல முடிவினை கூறுகிறேன். என்னை நம்புங்கள்'' என்றார். சி.பி.எம். மாவட்ட செயலாளரின் பேச்சும், உறுதியும் அனைத்தும் நயவஞ்சகம், ஏமாற்று, சுப்ரமணியனைக் காப்பாற்ற எடுத்த முயற்சி என்பது பிறகுதான் தெரிய வந்தது. ஒருவாரம், பின் 10 நாட்கள் என அவகாசம் கேட்ட சீனிவாசன், ""சுப்ரமணியனை கட்சியிலிருந்து நீக்கி விட்டோம், எங்களுக்கும் அவருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இப்பிரச்சினையில் நாங்கள் தலையிட முடியாது'' எனக் கூறி நழுவிக் கொண்டார்.


அட்டூழியங்களில் ஈடுபட்டு அம்பலமாகும் போலீசை இட மாறுதல் அளித்தோ, தற்காலிக பணி நீக்கம் செய்தோ காப்பாற்றும் போலீசுதுறையை போலவே, தேர்ந்த திறமையுடன் சுப்ரமணியனை காப்பாற்றியது சி.பி.எம். கட்சி. அக்கட்சிகாரர்கள் பலவகையில் சுப்ரமணியனுக்கு உதவியாக செயல்பட்டனர். கட்சிக்கு இது தெரிந்தே நடந்தது.


சித்ராவை சுப்ரமணியனின் வீட்டிற்கே அழைத்துச் சென்று 17.01.2001 அன்று நியாயம் கேட்ட ம.க.இ.க. வி.வி.மு. தோழர்களை சுப்ரமணியனுடன் சேர்ந்து கொண்டு தாக்க வந்தான் மெய்யழகன் என்ற சி.பி.எம்.காரன். பின்னர், சித்ரா கொடுத்த புகாரின்படி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சுப்ரமணியன், அவரது மனைவி இருவரையும் பிணையில் எடுக்க முயற்சி செய்தார் சி.பி.எம். கட்சியின் வழக்கறிஞர் ஒருவர். பிணையில் வந்த சுப்ரமணியன் கட்சி வேலைகள் செய்ய அனுமதிக்கப்பட்டார். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு கட்சியில் அதே தகுதியில் சேர்த்துக் கொள்ளவும் பட்டார். பூதலூர் வட்டாரத்தில் சி.பி.எம். கட்சி நடத்திய பல்வேறு பொதுக்கூட்ட பொது நிகழ்ச்சிகளின் துண்டு பிரசுரங்களே இதற்குச் சாட்சியமாக உள்ளது.


சாதாரண கூலி ஏழையான, இன்னமும் பண்ணை வேலை செய்யும் சுப்ரமணியனுக்கு தனது மகனையே கொலை செய்யும் துணிச்சல் ஏற்பட்டதற்கு சாதிவெறியே அடிப்படை என்றாலும், சி.பி.எம். கட்சிக்காரர்களின் சாதிவெறி ஆதரவு செயல்பாடும், சி.பி.எம். கட்சியின் சந்தர்ப்பவாதமும் முக்கிய காரணமாகும். சி.பி.எம். உண்மையாக, நேர்மையாக இவ்விசயத்தில் நடந்து கொண்டிருந்தால், சித்ராமுருகராஜ் இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து இருப்பர். அது நடைபெறாமல் போய்விட்டது.


கர்ப்பமடைந்த சித்ராவிற்கு 2000மாவது ஆண்டின் இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது. முருகராஜை திருமணம் செய்து கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் இதற்கு தடையாக இருக்கும் சுப்ரமணியன், அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசிடம் புகார் கொடுக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருந்தது. வழக்கு விசாரணையின்போதே வேறொரு பெண்ணை முருகராஜ்க்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்தார் சுப்ரமணியன். அப்பெண் மேற்கண்ட பிரச்சினை தெரிந்து வாழாமல் சென்று விட்டார். பூதலூரில், 2002ஆம் ஆண்டில் சி.பி.எம். கட்சியின் வி.தொ. சங்க மாவட்ட மாநாடு நடந்தபோது, சி.பி.எம். கட்சியின் சாதிவெறியையும், சுப்பிரமணியனின் அடாவடித்தனங் களை அம்பலப்படுத்தியும் வி.வி.மு. தோழர்கள் சுவரொட்டி பிரச்சாரம் செய்தனர். அதன்பிறகும்கூட வி.தொ. சங்க மாநிலத் தலைவரான வீரையன், சப்பிரமணியனை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்துப் பேசியுள்ளார். இதற்கிடையில், சித்ராவைக் காதலித்ததை ஒப்புக் கொண்டும் அவரையே திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தும் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்தார் முருகராஜ். பின்னர் முருகராஜ் ஊருக்குத் திரும்பிவந்து, பெற்றோருடன் உறவை முறித்துக் கொண்டு, சித்ராவுடன் தனியே குடும்பத்தை நடத்தி வந்தார். முருகராஜ் ஒப்புதல்படி 16.6.06இல் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க நீதிமன்றம் முடிவு செய்திருந்தது.


இந்நிலையில், 12.6.06 அன்று இரவே, ஆல்பர்ட், சேட்டு என்கிற மாரிமுத்து ஆகிய இரண்டு சி.பி.எம். காரன்களை துணையாகக் கொண்டு, தனியாக சென்றுக் கொண்டிருந்த முருகராஜை கொலை செய்து வைக்கோல் போரில் வைத்து எரித்து விட்டான் சுப்ரமணியன். எதிர்பாராத விதமாக மழை பலமாக பெய்ததால் பாதி எரிந்த நிலையில் உடல் கிடந்தது. வேறு வழி தெரியாமல் புதரில் உடலை தூக்கியெறிந்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டனர், போலி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூன்று அயோக்கியர்களும்.


கொலைக் குற்றத்திலிருந்து தப்பிக்கும் வகையில், சித்ராவிற்கு உறுதுணையாக நின்ற திரு.ராஜேந்திரன் உட்பட மூவர் மீது பொய்யாக புகார் கொடுத்து நாடகமாடினான் சுப்ரமணியன். முதற்கட்ட விசாரணையிலேயே சுப்ரமணியன்தான் கொலையாளி என்பது அம்பலமானது. திருகாட்டுப்பள்ளியில் கட்சிக்காரர் ஒருவரின் திருமணத்திற்கு வந்திருந்த விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் கோ.வீரையன் தகவல் தெரிந்து மாரனேரி வந்துள்ளார். அவரிடம் சுப்ரமணியன் கொலை செய்ததற்கான ஆதாரங்களை அடுக்கி, ""சி.பி.எம். கட்சிக்காரர் என்று குறிப்பிடாமல் கொலை வழக்கைப் பதிவு செய்துள்ளோம். உங்கள் கட்சியைக் காப்பாற்ற இதற்குமேல் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது'' என்று கூறியுள்ளது போலீசு. வேறெதுவும் பேசாமல் வந்த வழியிலேயே திரும்பிவிட்டார் கோ.வீரையன்.


சுப்ரமணியன்தான் கொலை செய்தார் என அம்பலபட்டுள்ள போதிலும், சி.பி.எம். கட்சிக்காரர்கள் சுப்ரமணியனைப் பாதுகாக்க முயற்சிப்பதை நிறுத்தவில்லை. சுப்ரமணியனுடன் கூட்டுச் சேர்ந்துள்ள தமது கட்சியின் சாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூட சி.பி.எம். முன்வரவில்லை. சுப்பிரமணியன் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட மூன்றாவது நபர் என்று கூறிக் கொண்டு, கணவனைப் பறிகொடுத்துவிட்டு நிற்கும் சித்ராவுக்கு நியாயம் கிடைக்க சட்டரீதியாகப் போராடக்கூட முன்வராமல் அக்கட்சித் தலைவர்கள் நழுவிக் கொள்கின்றனர்.


பூதலூர் வட்டாரத்தில் சி.பி.எம். கட்சியில் செயல்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் மட்டுமின்றி உழைக்கும் மக்களிடம் நீங்காத இடம் பெற்றவர் தோழர் வெங்கடாச்சலம். இவர் ஆதிக்க சாதியில் பிறந்திருந்தாலும், அச்சாதிவெறிக்கு எதிராக போர்க்குணத்துடன் செயல்பட்டவர். அதனால் சாதிவெறியர்களாலேயே கொலை செய்யப்பட்டு தியாகியானார். இன்னமும் இத்தியாகியின் பெயரை கூறியே அப்பகுதியில் கட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ள சி.பி.எம்., சாதிவெறியர்களின் கூடாரமாக மாறிவிட்டது என்பதையும், தலித் மக்களிடம் கூட பார்ப்பனியம் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது முருகராஜின் கொலை!


ம.க.இ.க.பு.மா.இ.மு.வி.வி.மு.,


தஞ்சை.


Tuesday, September 19, 2006

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கோவை கிளை தொடக்கவிழா

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கோவை கிளை தொடக்கவிழா
நம்பிக்கையின் ஒளிக்கீற்று!


டலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் செயற்பட்டு வரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (ஏகீகஇ), ""மனித உரிமை காப்போம்! மக்கள் விடுதலைக்கு அணிவகுப்போம்!'' என்ற முழக்கத்துடன் தனது கோவை மாவட்டக் கிளை தொடக்க விழாவை கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று நடத்தியது. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். ராஜு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநிலத் தலைவர் மதி.சோழர், செயலர் போஜகுமார், மூத்த வழக்குரைஞர் ப.பா. மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்துரை வழங்க, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலச் செயலர் தோழர் சுப.தங்கராசு சிறப்புரையாற்றினார். கோவை ம.உ.பா. மையத்தின் தலைவர் கார்க்கி, செயலாளர் மதி. ரமேஷ், பொருளாளர் சம்பத் ஆகியோரை ம.உ.பா. மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ அறிமுகப்படுத்தினார்.


கோவையைச் சுற்றியுள்ள ஆலைகளில் இளம் பெண்கள் ""கேம்ப் கூலி'' கொத்தடிமைகளாகச் சுரண்டப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்; கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகிச் சிறையில் வதைபடும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களுக்குப் பிணை வழங்க வேண்டும்; தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தேநீர் கடைகளில் தனிக்குவளை முறை, ஆலயங்களில் வழிபாட்டு உரிமை மறுப்பு முதலான தீண்டாமைக் கொடுமைகளை முடிவு கட்ட வேண்டும்; வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட அப்பாவி மலைவாழ் மக்களுக்கு சதாசிவம் கமிஷன் பரிந்துரைப்படி உடனடியாக இழப்பீடு தொகை வழங்க வேண்டும்; ""பொடா'' சட்டம் ரத்து செய்யப்பட்டும், தருமபுரி மாவட்டம் ஊற்றங்கரையைச் சேர்ந்த 26 பேரை இன்னமும் ""பொடா'' கைதிகளாக நடத்துவதை ரத்து செய்ய வேண்டும்; பவானி, சிறுவாணி ஆற்றுநீரை வரைமுறையின்றி உறிஞ்சியும், கழிவுகளைக் கொட்டி ஆற்றை நாசப்படுத்தியும் வரும் காகித ஆலைதுணி ஆலைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதைத் தடுக்கும் போலீசாரின் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


பாசிச இருள் சூழ்ந்துவரும் இன்றைய நிலையில், குறிப்பாக, பயங்கரவாத பீதியூட்டி ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் கோவை மாவட்டத்தில் இத்தகைய மனிதஉரிமை ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்புகள் மிக அவசியமானவை என்பதையும், மக்களைச் சார்ந்து நின்று மக்கள் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகளே இன்றைய தேவை என்பதையும் உணர்த்துவதாக இவ்விழா அமைந்தது.


பு.ஜ. செய்தியாளர்கள், கோவை.


Monday, September 18, 2006

மக்கள் விரோத அரசை ஒழித்தால்தான் கொசுவும் ஓழியும்!

சிக்குன்குன்யா நோய் தாக்குதல்:
மக்கள் விரோத அரசை ஒழித்தால்தான் கொசுவும் ஓழியும்!

சிக்குன்குன்யா மனிதனை முடமாக்கிவிடும் கொடிய நோய். ""ஏடீஸ் அஜெப்டி'' எனப்படும் கொசுக்களால் பரவும் இந்த வைரஸ் நோய், கடந்த நான்கு மாதங்களாகத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோரைத் தாக்கி படுக்கையில் வீழ்த்தியுள்ளது. கடந்த இரு மாதங்களாக விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்நோய் பரவி, சத்திரப்பட்டி வட்டாரத்தில் மட்டும் 19 பேரின் உயிரைக் காவு கொண்டுள்ளது. உயிரிழந்த அனைவரும் முதியவர்கள் என்றாலும், சிக்குன்குன்யா நோயின் கடுமை தாங்காமல், உரிய சிகிச்சையின்றி மாண்டு போயுள்ளனர்.


குப்பைகள், கழிவுநீர் குட்டைகள், பயன்பாடற்ற தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் இந்த வகை கொசுக்கள் வேகமாகப் பல்கிப் பெருகி மனிதர்களைத் தாக்குகின்றன. நோய் வாய்ப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கொசுக்கடி மூலம் இந்நோய் பரவி ஊரையே முடமாக்கி விடுகிறது.


நோய் தடுப்பு மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லாமல், சாதாரண தலைவலிகாய்ச்சலுக்கான மாத்திரைகளே தரப்படுவதால், வீங்கிய கால்களோடும், வலியோடும், காய்ச்சலோடும் வேதனைப்படும் ஏராளமான நோயாளிகள், நம்பிக்கையிழந்து வேப்பிலை அடிப்பது, தாயத்து கட்டுவது என்று போகிறார்கள். கோழிகளால் பரவும் காய்ச்சல், தண்ணீரால் பரவும் காய்ச்சல், நோயாளிகளுடன் இருந்தாலே தொற்றிக் கொள்ளும் என்றெல்லாம் அறியாமையால் வதந்திகளை நம்பி பீதியடைகிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு அருகே தோணிரேவு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சிக்குன்குன்யாவுக்கு அஞ்சி ஊரையே காலி செய்து வேறிடங்களுக்குச் சென்று விட்டனர். அதன் பின்னரே தாசில்தார், மருத்துவர்கள் குழு, அரசியல்வாதிகள் படையெடுத்து வந்து மருத்துவ முகாம் அமைத்துச் சிகிச்சையளித்துள்ளனர்.


சத்திரப்பட்டி வட்டாரத்தில் சிக்குன்குன்யா நோயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ள தகவலறிந்து, நாம் அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்குச் சென்று பார்த்தோம். அங்கு படுக்கை வசதியோ உரிய மருந்துகளோ சிகிச்சையோ இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர். பஞ்சாயத்து நிர்வாகமோ இரண்டு முறை கொசு மருந்து அடித்ததோடு முடங்கி விட்டது.


சிக்குன்குனியா நோயினால் உடலில் நீர்வற்றி நாவறட்சியும் கண் எரிச்சலும் அதீத உடற் சோர்வும் ஏற்படுவதால், நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றுவது அவசியம். ஆனால் சத்திரப்பட்டி மருத்துவமனையில் அதற்கான வாய்ப்போ அறிகுறியோ அறவே இல்லை. நோயினால் பாதிக்கப்பட்ட நெசவுத் தொழிலாளியான முத்துசாமி, ""கவருமெண்டு ஆசுபத்திரிக்குப் போயிருந்தால் நான் செத்துப் போயிருப்பேன். எனது உறவினர்கள் என்னை தனியார் ஆசுபத்திரியில் சேர்த்தார்கள். அங்கு 5 நாட்களுக்கு குளுக்கோஸ் ஏற்றியதால் உயிர் பிழைத்தேன். ஆயிரக்கணக்கில் பணம் செலவாகி விட்டது. கவருமெண்டு ஆசுபத்திரி ஒழுங்காக இல்லாததால், தனியார் டாக்டர் முதலாளிகளுக்குத்தான் கொள்ளை லாபம்'' என்று வேதனையோடு கூறுகிறார்.


சத்திரப்பட்டி வட்டாரத்தில் 2000க்கும் மேற்பட்டோரை இந்நோய் தாக்கிய பின்னரும் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அலட்சியப்படுத்தியதால், உழைக்கும் மக்கள் சாலை மறியல் போராட்டத்துக்கு ஆயத்தமாகினர். இத்தகவல் அறிந்ததும் கலெக்டர், தாசில்தார், ஆர்.டி.ஓ. என அதிகார வர்க்கம் ஓடோடி வந்து மக்களைச் சாந்தப்படுத்திவிட்டு, மருத்துவமனை வளாகத்தில் இருந்த, ஊரின் நோய் பரப்பும் மையமாக விளங்கிய மிகப்பெரிய கழிவுநீர் குட்டையை அவசரமாக மண்ணைப் போட்டு மூடினர். உள்ளூர் பிரமுகர்களுடன் பேசி, ஒரு திருமண மண்டபத்தை தற்காலிக மருத்துவ முகாமாக மாற்றி, 10 மருத்துவர்களை அனுப்பினர். ஆனால், உரிய மருந்துகளை அனுப்பவில்லை பின்னர் பஞ்சாயத்து நிர்வாகம் நன்கொடை திரட்டி மருந்துகளை வாங்கிக் கொடுத்தது. அவையும் ஒரு வாரத்தில் தீர்ந்துவிட மருத்துவர்களும் கிளம்பி விட்டனர். சத்திரப்பட்டியில் சிக்குன்குன்யாவைக் கட்டுப்படுத்தி விட்டதாக அதிகாரிகள் அறிக்கை தயாரித்து அனுப்பிவிட்டனர். ஆனால், இந்நோய் இப்போது சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம், ரெட்டியப்பட்டி, தேவராயன்பட்டி என அடுத்துள்ள ஊர்களில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.


""சாதாரண வைரஸ் நோய்தான்; இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது'' என்று ஆரூடம் சொல்கிறது அரசு. ஆனால், அச்சாதாரண நோய்க்குக் கூட அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை கிடைப்பதில்லை. சாதாரண நோய் புதிய வீரியத்துடன் தாக்குவதற்குக் காரணம் என்ன என்பதைப் பற்றியும் அரசு அக்கறை காட்டுவதில்லை. சிக்குன்குன்யா மட்டுமல்ல் ஏற்கெனவே ஒழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படும் காலரா, மலேரியா, பிளேக், அம்மை நோய், மூளைக் காய்ச்சல் முதலான பலவும் ஆண்டுதோறும் படையெடுக்கின்றன. டெங்கு காய்ச்சலும் ""மெட்ராஸ் ஐ'' எனப்படும் கண்நோயும் குறிப்பிட்ட பருவங்களில் தாக்குவது வாடிக்கையாகி விட்டது.


சுற்றுப்புற சுகாதாரமும் உரிய சிகிச்சையும் ஆரோக்கியமான உணவும் இருந்தால் இத்தகைய நோய்கள் மீண்டும் தலைதூக்க அடிப்படையில்லாமல் போயிருக்கும்! ஆனால், முதலாளிகளுக்கு வரிச் சலுகை, கண்ணகிக்கு சிலை, சிவாஜிக்கு சிலை என்று மக்கள் வரிப்பணத்தை கோடிகோடியாய் வாரியிறைக்கும் அரசு, அடிப்படை மருத்துவசுகாதாரத்துக்கு அற்ப நிதியையே ஒதுக்குகிறது. அடிப்படை மருத்துவ சுகாதார வசதிகளை அறவே புறக்கணித்துவிட்டு, நிலைமை முற்றியதும் கொசு மருந்து அடிப்பது, மருத்துவ முகாம் நடத்துவது, விழிப்புணர்வு பிரச்சாரம், நோய் தடுப்புக்காக ரூ. 2.856 கோடி ஒதுக்கீடு என்று திடீர் நாடகமாடுகிறது தி.மு.க. அரசு. உலக வங்கி உத்தரவுப்படி மருத்துவசுகாதார வசதிகளுக்கான மானியங்களை வெட்டியும், பஞ்சாயத்துகளுக்கு உரிய நிதி ஒதுக்காமலும் மக்கள் நல்வாழ்வைத் தொடர்ந்து புறக்கணித்ததன் கோரவிளைவுதான் இத்தகைய நோய்கள் பெருகக் காரணம்.


துப்புரவு சுகாதார மருத்துவ வசதிகள் அறவே புறக்கணிக்கப்பட்டு, சிக்குன்குன்யா போன்ற நோய்கள் பெருகுவதற்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கும் இந்த அரசுதான் பொறுப்பு என மக்களை உணரச் செய்ய வேண்டும். மக்களின் குமுறலை எதிரொலிக்கும் வகையில் போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும். அடிப்படை வசதிகளை அறவே புறக்கணிக்கும் தனியார்மய தாராளமயக் கொள்கைக்கு எதிரான, இக்கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்தி வரும் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்களாக இவை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இது தான் உண்மையான நிவாரணப் பணி; அரசியல் பணி.


பு.ஜ. செய்தியாளர்கள், மதுரை.


Sunday, September 17, 2006

ஓநாய் கூட்டத்துக்கு ஏற்ற கைக்கூலி பரிசுதான்

ஓநாய் கூட்டத்துக்கு ஏற்ற கைக்கூலி பரிசுதான் ஒரு கோடி பெறுமதியிலான 'அகிம்சையும் - சகிப்பும்"


பி.இரயாகரன்
17.09.2006

புலிகளின் தலைவர் பிரபாகரன் அடிக்கடி, தமது இழிசெயலுக்கு துணைநின்ற மக்கள் விரோதிகளுக்கு 'மாமனிதன்" என்ற பரிசு வழங்குகின்றார். அதேபோன்று தான் ஆனந்தசங்கரிக்கும் ஏகாதிபத்தியம் வழங்கியுள்ளது. 'அகிம்சைக்கும் சகிப்புக்கும்" எடுத்துக்காட்டி, அதை ஊக்குவிக்க, இலங்கைப் பணத்தில் அண்ணளவாக ஒரு கோடிக்கு ஒரு பொன் முடிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனந்தசங்கரிக்கோ, அவரின் கூட்டணிக்கோ இன்று தனித்துவமான சொந்த அரசியல் கிடையாது. அதனால் தான் இந்தப் பரிசுக்கு சிறப்பாக அவரை தேர்வு செய்துள்ளது. ஏகாதிபத்தியத்தின் அரசியலை ஆனந்தசங்கரி தன்வசப்படுத்தி, அதை தன்னுடைய அரசியல் திட்டமாக உலகுமெங்கும் முன்வைத்து வாலாட்டித் திரிவதால் தான், பரிசுக்குரிய நபராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.



இப்படி ஆனந்தசங்கரி வைக்கும் அரசியல் என்ன? ஒரு அரசியல் தீர்வு. யுத்தமற்ற அமைதியான நிலைமை. தேர்தலில் போட்டியிடக் கூடிய ஜனநாயகம். இதையே ஆனந்தசங்கரி தனது அரசியலாக, கோரிக்கையாக முன்வைக்கின்றார். இதற்கு வெளியில், இந்த உள்ளடகத்துக்கு வெளியில் வேறு அரசியல் கிடையாது. இதையே ஏகாதிபத்தியம் முன்வைக்கின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ளும் போது, ஆனந்தசங்கரியின் அரசியல் ஏகாதிபத்திய கைக்கூலித்தனம் வேறில்லைத்தான். இதையே அனைத்து புலியெதிர்ப்புக் கும்பலும் விசுவாசமாக செய்கின்றது. அப்படியிருக்க ஆனந்தசங்கரியை சிறப்பாக ஏன் தெரிவு செய்கின்றனர்.



ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தை தனது சொந்த அரசியல் வேலைத்திட்டமாக மாற்றி, அதை விசுவாசமாக அங்குமிங்குமாக பறந்தோடித் திரிந்து முன்வைப்பது தான் அடிப்படைக் காரணமாகும். சிங்கள் பேரினவாத தலைவர்களுடனும், உலக ஏகாதிபத்திய தலைவர்களுடனும் இதற்காக விசுவாசமாக பிரச்சாரம் செய்வதுடன், அதை வலியுறுத்தி புலிகளிடமும் கூட முரண்படுகின்றார். தமிழ்மக்களும் நாட்டின் அனைத்து இன மக்களும் விரும்பும் அமைதியையும், ஒரு அரசியல் தீர்வையும், பொதுவான ஜனநாயகச் சூழலையும், இதற்கு சார்பாக பயன்படுத்துவதில், ஆனந்தசங்கரி கையாளும் சூழ்ச்சி இனம்காணமுடியாத வகையில் மிகவும் நுட்பமாக மக்களுக்கு எதிராக இருக்கின்றது. ஏகாதிபத்திய இந்த அரசியல் நோக்கத்தை ஊக்குவிக்கவே, இந்தப் பொன்முடிப்பாகும்.



ஏகாதிபத்தியம் இன்று இலங்கையில் அரசு மற்றும் புலியிடம் கோருவதற்கு வெளியில், ஆனந்தசங்கரியிடமோ, புலியெதிர்ப்புக் கும்பலிடமோ மாற்று அரசியல் திட்டம் எதுவும் கிடையாது. மக்களுக்கு என்று தனித்துவமான, மக்கள் நலனை முன்வைக்கக் கூடிய ஒரு வேலைத் திட்டம் கிடையாது. இதை புரிந்துகொள்ளும் ஒவ்வொருவரும், இதன் பின்னுள்ள அரசியலை புரிந்துகொள்ளமுடியும். ஏகாதிபத்திய வேலைத்திட்டத்துக்கு விசுவாசமாக வாலாட்டி குலைப்பதும், அவர்கள் போடும் பிச்சையில் வாலாட்டி வாழ்வதும் தான் இவர்களின் அரசியல் பிழைப்பாகும். இதை இவர்கள் தமக்கு கிடைத்த உலக அங்கீகாரம் என்று பெருமையாக பீற்றவும், பண முடிப்பை இதை தொடர்வதற்கு சன்மானமாக மானவெட்கமின்றி கூறிக்கொள்கின்றனர். கைக்கூலிப்பணத்தை இப்படிப் பெற்று, அதைத் தொடர சபதம் ஏற்று நிற்கின்றனர்.



தமிழ்மக்களின் அன்றாட வாழ்வியல் துன்பங்களின் மேல், இப்படி பலர் கோமாளிக் கூத்தாடுகின்றனர். ஒருபுறம் அரசு, மறுபுறம் புலிகள், இதற்கு இடையில் சிலர். இப்படி கனவான் வேடங்கள், பொறுக்கி வேடங்கள் பற்பல. மக்களைப்பற்றி சிறிதளவு கூட அக்கறைப்படாத, அவர்கள் நலனை முன்வைக்காத மக்கள் விரோத அரசியல். இந்த வகையில் தான் ஆனந்தசங்கரியின் கைக்கூலி விசுவாசத்தை, ஏகாதிபத்தியம் மிதப்பாக்கிவிடுகின்றது.



ஆனந்தசங்கரியின் கடந்தகாலம் முதல் நிகழ்காலம் வரை மக்களை வைத்து பிழைப்பு நடத்தும் பச்சோந்தியாகவே அங்குமிங்கும் ஒடித்திரிந்தவர் தான். இறுதிக்கால கூட்டணி கால அப்புக்காத்து அரசியல் பணியில், அங்குமிங்குமாக ஊரையும் உலகத்தையும் கொள்ளையிட்டு கூத்தடிப்பவர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்வைக்கின்றார். அதையொட்டி அவர்களுடன் பேசமுனைகின்றார். அவர்களின் தலையீட்டை கோருகின்றார். அதற்கு துணைநிற்கும் அரசியல் விசுவாசத்தை பறை சாற்றுகின்றார். கடந்தகால கூட்டணியின் அதேபாணி அரசியல் சுத்துமாத்து, அதே கைக்கூலித்தனம் தனமே, ஆனந்தசங்கரியின் மையமான செயல்தளமாக உள்ளது. இது தான் ஆனந்தசங்கரியின் நிஜமான சொந்த அரசியல் முகம். இன்று இதை மூடிமறைக்கவே புலிப் பாசிசம் துணைநிற்கின்றது.



பாசிச புலிகள் மாபியா கொள்ளைக்காரராகி ஊர் உலகம் போற்ற, கொலை கொள்ளையில் ஈடுபடுவதையே தேசியமாக்கி நிற்கின்றனர். புலி அச்சுறுத்தல் சமூகம் முழுமையானதாகி, அதுவே சர்வமயமாகிவிட்டது. அந்த மாபியா பாசிச கும்பல் ஆனந்தசங்கரிக்கு தகுந்த மரியாதையும் தகுந்த இடமும் கொடுக்காததால், அமைதிக்காலத்தில் திடீர் அகிம்சைவாதியாகி திடீர் ஜனநாயகவாதியானவர். இதனால் புலிகளின் கொலைக்கு பலியாகக் கூடிய, முக்கிய அரசியல் பிரமுகராகினார். கதிர்காமருக்கு பின் சிங்கள பேரினவாதிகளே அவரை வெளிவிவகார அமைச்சராக நியமிக்க முனைந்தனர். அதேபோல் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுக்க முன்வந்தனர். அந்தளவுக்கு மிக விசுவாசமாக பேரினவாதத்துக்கு ஏற்ற வகையில் பரிணமித்தவர். மந்திரிப் பதவியையும், பாராளுமன்ற உறுப்பினராகும் கோரிக்கையையும் நிராகரித்த ஆனந்தசங்கரி, அதற்கு பதிலாக ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தை ஏற்றுக்கொண்டு அதற்காக பொன் முடிப்பையும் விசுவாசமாக பணிவாகப் பெற்றுக்கொண்டார். அரசியலில் அம்பலப்படாத, ஆனால் மக்களுக்கு எதிராக செயல்படுவதில், தனது கைக்கூலித்தனத்தை சாதுரியத்தை இதன் மூலம் நிறுவி நிற்கின்றார்.



இவரின் அரசியல் சூழ்ச்சியே பேரினவாத கோரிக்கையை நிராகரித்து, தன்னை தூய்மைவாதியாக காட்டியபடி சிங்கள அரசிடம் தீர்வைக் வைக்கக் கோருகின்றார். நடைமுறை சாத்தியமான ஒரு தீர்வை முன்வைப்பதன் மூலம், புலி மற்றும் அரசுக்கு எதிரானவராக காட்டிக் கொள்ளமுனைகின்றார். இதை அடிப்படையாக கொண்டு, உலகம் முழுக்க கடிதங்கள் மூலமும், நேரடியான பேச்சுவார்த்தையையும் நடத்துகின்றார். இது தான் அவரின் அரசியல் சூழ்ச்சி. இந்த அரசியல் எப்படிப்பட்டது என்பதை யாரும் உரசிப்பார்ப்பதில்லை. அந்தளவுக்கு தமிழ் சமூகத்தை புலிகள் மலடாக்கி வைத்துள்ளனர். இது புலிகளுக்கு மட்டுமல்ல, புலி அல்லாத ஆனந்தசங்கரி போன்ற அரசியல் பொறுக்கிகளுக்கும் உதவுகின்றது.



ஆனந்தசங்கரியின் அரசியல் என்ன? இந்தக் கேள்விக்கு யாரும் நேர்மையாக பதிலளிப்பதில்லை. ஆனந்தசங்கரியும் இதைச் சொல்லப்போவதில்லை. மாறாக யுத்தம், யுத்தக் கெடுபிடி, மனித அவலங்கள், புலியின் பாசிசம், பேரினவாதத்தின் கொடூரமான செயல்கள் பற்றி மட்டும் பேசுவர். இதில் இருந்து மீள, ஏகாதிபத்திய ஆதரவுடன் நடைமுறைச் சாத்தியமான ஒரு கோசத்தை அடிப்படையாக கொண்டு, அரசியல் ப+ச்சாண்டிகாட்டி, மக்களின் அடிமைத்தனத்தை பாதுகாப்பதே இவர்களின் மையஅரசியல்.



அதாவது ஏகாதிபத்தியம் கோருகின்ற ஒரு தீர்வு, அவர்கள் முன்மொழியும் ஒரு அமைதி, அவர்களின் நோக்கிலான ஒரு தேர்தலில் போட்டியிடக் கூடிய ஜனநாயகம், இதைத்தான் ஆனந்தசங்கரி தனது அரசியல் கோரிக்கையாக முன்வைக்கின்றார். இதைத்தான் புலியெதிர்ப்பு கும்பலும் முன்வைக்கின்றது. இந்த ஏகாதிபத்திய கைக்கூலித்தன அரசியலை அங்கீகரித்து, அதை உலகுக்கு வரையறுத்துக் காட்ட 'அகிம்சை மற்றும் சகிப்புக்கான" பரிசாக இது காட்டப்படுகின்றது. இதன் உள்ளடக்கம் கேலிக்குரிய ஒன்றாக உள்ளது. அகிம்சை மற்றும் சகிப்புக்கு பரிசு என்றால், அதன் அரசியல் அர்த்தம் என்ன? புலிகளுக்கு அடங்கியொடுங்கி கிடப்பதும், இதற்குள் தானே அடங்குகின்றது. புலிகளின் பாசிசத்தை சகித்து, எதிர்ப்பின்றி அகிம்சையாக சகித்து வாழும் மக்கள் நிலையை உருவாக்கிய புலிக்கும், இது அரசியல் ரீதியாக இது பொருந்துமல்லவா! இதைத்தான் புலிகள் கோருகின்றனர். புலிகளுக்கே இந்த பரிசை கொடுத்து இருக்கலாமே.



ஆனால் இங்கு இது எதிர்நிலையில் பயன்படுத்தப்படுகின்றது. புலியின் வலது பாசிசம் அம்பலமாகி வெடித்துச் சிதறி சின்னாபின்னமாகி விடும் என்ற ஒரு நிலைக்கு, அது வீங்கி வெம்பிக் கொண்டிருக்கின்றது. வெடித்து சிதறும் போது, அதற்கு ஒரு அரசியல் வடிகால் தேவை என்பதை தெளிவாக ஏகாதிபத்தியம் உணருகின்றது. அந்த அரசியல் வடிகால், வலதுசாரிய வாய்க்காலாக இருக்கவேண்டும் என்பதால், பணமுடிச்சை வழங்கி ஒரு அரசியல் களம் மாற்றாக உருவாக்கப்படுகின்றது.



உண்மையில் நிகழ்சிகளின் போக்கில் வலதுசாரி அரசியல் முடிவுக்குவரும் போது, இடதுசாரி போக்கு வளர்ச்சியுறும் என்ற அச்சம் இயல்பாக மற்றொரு வலதைக் கொண்டு நிவர்த்தி செய்வது தான் ஏகாதிபத்திய அரசியல் உத்தியாகும். 1940 களிலும் 1950 களிலும் தேசியங்களைக் கோரி சுதந்திர போராட்டம் வீறுகொண்ட போது, ஏகாதிபத்தியம் தமது கைகூலிகளிடம் சுதந்திரத்தின் பெயரில் ஆட்சியைக் கைமாற்றிய அதே வலதுசாரிய நிகழ்ச்சிதான் இங்கும் அரங்கேறுகின்றது. புலிகளை புலிகளாக அதாவது பாசிச மாபியாவாக இருக்கும் எல்லைக்குள் அவர்களை ஏகாதிபத்திய கைக்கூலிகளாக வைத்திருப்பது என்பது, உலகமயமாதலின் இன்றைய நிகழ்ச்சிப் போக்கில் அவசியமற்றதாக உள்ளது. இந்த நிலையில் புலியின் உள் மற்றும் வெளி கூறுகளினால் ஏற்பட்டுவரும் சிதைவை ஈடுசெய்ய, மற்றொரு பிற்போக்கு வலதுசாரியின் கையில் தமிழ் மக்களின் தலைவிதியை தாரைவார்க்க ஏகாதிபத்தியம் முனைகின்றது. இந்த வகையில் நடைமுறைச்சாத்தியமான ஒரு அரசியல் தீர்வுடன் ஆனந்தசங்கரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏகாதிபத்திய தயாரிப்பு களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளது. தனது சொந்த சரக்காக, அதை கூவிவிற்கும் தரகு வேலையை ஆனந்தசங்கரி விசுவாசமாக செய்கின்றார்.



டக்கிளஸ், கருணா வரிசையில் ஆனந்தசங்கரி. நாளை வேறு பலரும் வருவார்கள். இவர்கள் யாரும் மக்களின் நலனை, அவர்களின் வாழ்வியல் சார்ந்து எதையும் தீர்க்கப் போவதில்லை. மாறாக புலிகள் இடத்தில் ஒரு மாற்று, பேரினவாதத்திடம் இதற்குள் ஒரு தீர்வு. இப்படி அரசியல் சூதாட்டத்தில் துணிந்து மக்களை வழிநடத்த முனைகின்றனர்.



அகிம்சை, சகிப்பு தத்துவம் என்பதே மனித பரிணாமத்துக்கு முரணானது. மனிதனை மனிதன் சுரண்டவும், சாதியால் சாதியின் பெயரில் ஒடுக்கவும், பெண் என்ற அடையாளத்தால் பெண்ணை இழவுபடுத்தி அடக்கவும்... உள்ள உரிமையை தக்கவைப்பது தான் அகிம்சையும் சகிப்பும். ஒடுக்கப்பட்ட மக்கள் அடங்கியொடுக்கி சகிப்புடன் கூடிய அகிம்சைவாதிகளாக வாழ்வதைத்தான் அமைதியென்கின்றனர். அதைப்பற்றி பேசாத புலியெதிர்ப்புத் தான் ஜனநாயகம் என்கின்றனர். அகிம்சையை கூடிய சகிப்பை தமக்கு எதிராக கடைப்பிடிக் கோருவது தான், ஏகாதிபத்திய அரசியலாகும். அகிம்சையை கடைப்பிடிக்கவும், சகித்துக் கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கின்றதென்றால், இதன் எதிர்மறையில் வன்முறையும் சகிப்புத்தன்மையற்ற போக்கும் சமூகத்தில் இருப்பதை அங்கீகரிப்தாகும். இதை எதிர்க்காது சகித்து வாழவும், அகிம்சையாக அடங்கிப் போகவும் கோருவது என்பதே, மனித இனத்துக்கு எதிரானது. இதைத் தான் புலிகளும் கோரினர். ஏகாதிபத்தியமும் ஆனந்தசங்கரியூடாக கோருகின்றனர்.



புலிப்பாசித்தை இதனுடன் பொருத்தி இதற்குள் மகுடம் சூட்டி, ஒரு சமூகத்தை இழிவாடி அதற்குள் வாழக்கோருவதே இவர்களின் அரசியலாகும். அதைப் பெருமையாக போற்றுவதும், அதைப் பெருமையாக கொண்டாடுவது மக்களுக்கு எதிரான அதே புலி ஏகாதிபத்திய அரசியல் தான். இந்தப் பரிசை பெருமையாக கருதி கருத்துரைத்த ஆனந்தசங்கரி, ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்கின்றார். யாருடைய ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி இது? இதைத் தiயில் ஏற்றித் திரியும் புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் என்பது, அதே ஏகாதிபத்திய மக்கள் விரோத விசுவாச அரசியல் தான்.



இந்த ஏகாதிபத்திய பரிசுக்குரியவர் கடந்தகாலத்தில் கிளிநொச்சியில் தீவிர தமிழ் இனவாதம் பேசி அரசியல் ரவுடியாக, சமூக விரோதக்கும்பலின் துணையுடன் தான் அரசியல் பவனிவந்தவர். அன்று யாழ்ப்பாணத்தில் துரையப்பா கட்டிய கட்டிடங்களை தமிழ் இனவாதிகள் இடிக்கவில்லை, ஆனால் துரையப்பாவைக் கொன்றனர். ஆனால் ஆனந்தசங்கரி குமாரசூரியர் கட்டிய கட்டிடங்களை, நவீன சந்தையை, கிளிநொச்சி நகருக்கு நீர் வழங்கிய இணைப்புகள் பலவற்றையே செயற்படாது தடுத்து நிறுத்தியவர் அல்லது அதை குழிதோண்டி புதைத்தவர். குமாரசூரியரைக் கொல்வதற்கு இவர்களால் வளர்க்கபட்டவர்கள் பலமுறை முனைந்தனர்.



இப்படிபட்டவரின் அரசியல் யோக்கியதை தான் என்ன? தனது இரணைமடு காணிக்கு அருகில் இருந்த மயானத்தை (சுடலை) அகற்ற அரசியலையே பயன்படுத்தியவர். மாற்று மயானத்தை மக்களுக்கு காட்டியபோது, மக்களின் எதிர்ப்பால் அதைக் கைவிட்டவர். கிளிநொச்சி நகருக்கு வெளியில் மின்சாரம் சென்ற போது, முதலில் இவருடைய வீட்டுக்கு அருகாமையால் சென்றதன் மூலம் தான் முதலில் மின்சாரத்தை பெற்றவர். தனது வீட்டுக்கு செல்லும் வீதியில் மூன்று நவீன பாலங்களையே, தனது அரசியல் மூலம் நிறுவியவர். அவரின் கணிக்கே இந்த கவுரவம் என்றால், எத்தனை அரசியல் வண்டவாளங்கள். இது தான் இப்படித்தான், இவரின் அன்றைய மக்கள் சேவை நடந்தது. இப்படி பலதும் பத்துமாக பலவுண்டு.



இன்று புலிகளுக்கு பின்னால் அவற்றையெல்லாம் மூட்டைகட்டி வைத்தபடிதான், எட்டிப் பார்க்கின்றனர். இந்த ஆனந்தசங்கரியின் அரசியலுடன் கொண்டிருந்த, மக்கள் விரோத பாசிச வலது அரசியல், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கொடிகட்டி பறந்தது. புலிகளின் கொலைகாரக் கும்பல் முதல் பலரையும் தமது அரசியல் எடுபிடியாக்கி, தமது எதிரியாக கண்டவர்களை கொல்ல உதவியவர்கள். அதற்கு இனவாத அரசியல் வடிவம் கொடுத்தவர்கள் தான் இவர்கள். தமது சொந்த பாசிச அரவணைப்பில் வளர்த்தவர்கள். புலிக்கே வழிகாட்டியவர்கள். இன்று அகிம்சை, சகிப்புக்கு வேடமிட்டுள்ளனர். இவர்களின் அரசியல் சகிப்பு எப்படிப்பட்டது. எமது இணைய இணைப்பை போட்டவர்கள், சகிப்புத் தன்மை இழந்து அதை அகற்றியவர்கள். இப்படி நடிக்கும் இவர்கள் மீண்டும் வரலாறு திரும்பும் என்ற நம்பிக்கையுடன், ஏகாதிபத்திய ஆசியுடன் உலகம் சுற்றுகின்றனர். மக்களின் முதுகில் குத்தி நிற்கும் இந்தக் கும்பல், எப்படியாயினும் புலியை யார் ஒழித்தாலும் சரி என்ற வாயில் வீணி வடிய, புலிக்கு பதிலாக ஒரு ஓநாய்க் கூட்டமாகக் காத்துக்கிடக்கினறர். புலிகள் தின்ற மீதியைத் தின்ன, அங்குமிங்கும் வெறிபிடித்து துணைக்கு ஆட்களைப் பிடித்தபடி அலைகின்றனர்.