தமிழ் அரங்கம்
Saturday, February 14, 2009
Friday, February 13, 2009
Thursday, February 12, 2009
Wednesday, February 11, 2009
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, நாம் விடுக்கும் பகிரங்க வேண்டுகோள்
மூன்று சகாப்த காலமாக நிலவிய உங்கள் அரசியல் முடிவுக்கு வரும் இந்த தருணத்தில், மக்களுக்காக ஒரு கணம் சிந்தியுங்கள். உங்கள் தவறுகளை நிவர்த்தி செய்யுங்கள். இதன் மூலம் எதிர்கால தலைமுறை தனக்காக போராடவும், இந்த தலைமுறை தான் இழைத்த வரலாற்றுத் தவறுகளை உணர்ந்து கொள்ளவும் உதவுங்கள்.
இன்று பலரும் மேக்கப் செய்து உங்களை பாதுகாத்து விடலாம் என்று நினைக்கின்றனர். ஏன் அப்படி முனைகின்றனரும் கூட. அது இனி சாத்திமில்லை என்பது, உங்களுக்கு நன்கு தெரியும். ஏன் இந்த நிலைமை? எதனால் இது நடந்தது? தற்போதாவது உங்கள் மீதான அழித்தொழிப்பு நிகழும் கணத்தில் கூட, உங்களால் வரலாற்றுக்கு சொல்ல கூடிய, தவறுகளை திருத்தக் கூடிய இறுதிச் சந்தர்ப்பங்கள் இன்னமும் உண்டு.
நாம் கடந்த மூன்று சகாப்தமும் உங்களுடன் ஒரு எதிர் போராட்டத்தை நடத்தியவர்கள். நாம் கோரியது எல்லாம், போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றும்படிதான். இன்றும் அதைத்தான், இந்த கணத்திலும் நாம் கோருகின்றோம்.
வரலாறு உங்களை தூற்றக் கூடாது. இன்று உங்களைப் போற்றுபவர்கள் தான், நாளை உங்களை முதன்மையாக தூற்றுவார்கள். அப்போது உங்களின் சரியான பக்கத்தை, நாம் மட்டும் தான் காப்பாற்றுவோம்.
உங்கள் நாட்கள் எண்ணப்படும் இன்றைய நிலையில், இன்றும் நீங்கள் மக்களுக்கு செய்யக் கூடியதுண்டு.
1. நீங்கள் கடந்தகாலத்தில் மக்களுக்கு இழைத்த அனைத்து தவறுகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் அதை உணரும் வண்ணம், அதை பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்யுங்கள். நாளை அவர்கள் உங்களை மதிக்கும் வண்ணம், தவறை உணர்ந்ததற்காக நன்றி கூறும் வண்ணம், உங்கள் வரலாற்றை அவர்களுக்கு விட்டுச்செல்லுங்கள்.
2. நீங்கள் மக்களை விடுவிக்காவிட்டால், அவர்களின் அழிவுக்கு அவர்களே பொறுப்பு என்று பேரினவாதம் கொக்கரித்துள்ளது. பேரினவாதம் உங்கள் இரத்த உறவுகளையும் உங்களுடன் சேர்த்து கொல்வதை, நீங்கள் அனுமதிக்க போகின்றீர்களா!? தயவு செய்து அவர்களை விடுவித்து, மக்கள் நலன் சார்ந்த உணர்வுடன் வரலாற்றை முடியுங்கள். தவறுகள் தவறாக இதனுடனாவது நிறுத்திவிடுங்கள்.
3. உங்களுடன் சண்டையில் நிற்கின்றவர்களில், சண்டை செய்ய விரும்பாதவர்களை விடுவியுங்கள். அவர்களால் சண்டை செய்ய முடியாது. இந்த தவறையும் திருத்திக் கொண்டு, மொத்த தவறுகளையும் ஓத்துக் கொண்டு, அதற்காக போராடுங்கள். அதன் பின் ஒருநாளும் சரண் அடைந்து விடாதீர்கள். மக்களுக்காக போராடி மரணியுங்கள். வரலாறு அதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கின்றது.
4. நாம் ஏன் தோற்றுப்போனோம்? அதை வழமையான உங்கள் பதிலுக்கு பதில், மனித வரலாற்றில் தேடுங்கள். அதிகாரம் முதல் நவீன ஆயுதங்கள் எல்லாம் இருந்தும், பெரும் படையிருந்தும் ஏன் தோற்றோம்? வரலாற்றை தீர்மானிப்பவர்கள் மக்கள். இதை கடந்தகால மனித வரலாறு காட்டுகின்றது. ஏன் உங்கள் வரலாறு இன்று காட்டுகின்றது. இதை இன்றாவது உணர்ந்து, அதை ஓத்துக்கொண்டு, உங்கள் காலத்தில் அதை திருத்திக் கொள்வதன் ஊடாக, மனித வரலாறு உங்களை போற்றவையுங்கள். தியாகங்களை வரலாறு கொச்சைப்படுத்த விட்டுவிடாதீர்கள்.
கடந்த வரலாற்றில் அதன் தவறுகளையும் உணர்வதன் மூலம், இன்றே வரலாற்றை மாற்றமுடியும். நாளைய தலைமுறை அதை உணரும்; வண்ணம், மக்களை இன்றே நேசிக்க முனையுங்கள். இந்தக் கணமே, அதை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.
மூன்று சகாப்தமாக மனிதத்தை சிதைந்து சின்னாபின்னமாக்கிய உங்களின் அரசியல் வரலாற்றில் இருந்து, உங்கள் இறுதி மூச்சை மனிதத் தன்மையாக்குங்கள். அதை வரலாற்றில் புதைத்து விடாதீர்கள். மொத்த தவறையும் உணர்ந்து, வரலாற்றை சரி செய்யுங்கள்.
பி.இரயாகரன்
03.02.2009
Tuesday, February 10, 2009
Monday, February 9, 2009
Sunday, February 8, 2009
Subscribe to:
Posts (Atom)