தமிழ் அரங்கம்

Friday, August 4, 2006

கொத்தடிமைக் கூடாராமாகும் தமிழகம்

தீவிரமாகி வரும் மறுகாலனியாதிக்கம் கொத்தடிமைக் கூடாராமாகும் தமிழகம்


மாங்கல்ய திட்டம்; இது ஆட்சியாளர்கள் அறிவித்துள்ள புதியதொரு திருமண உதவித் திட்டம் அல்ல; நகைக்கடைக்காரர்கள் விளம்பரப்படுத்தியுள்ள புதியதொரு நகை சேமிப்புத் திட்டமும் அல்ல. மோசடி சீட்டுக் கம்பெனிக்காரர்கள் ""வாழ்க வளமுடன்'' என்ற பெயரில் தொழில் நடத்துவதைப் போல, இளஞ் சிறுமிகளைக் கொத்தடிமைகளாக்கிச் சுரண்ட பஞ்சாலைநூற்பாலை முதலாளிகள் உருவாக்கியுள்ள திட்டத்தின் பெயர்தான் மாங்கல்ய திட்டம்.


இத்திட்டத்தின் கீழ் கொத்தடிமைகளாகச் சேர்க்கப்படும் இளஞ்சிறுமிகள் நாளொன்றுக்கு 12 முதல் 15 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். மில் அருகிலுள்ள கொட்டகையில் தங்க வேண்டும். நாளொன்றுக்கு 25 முதல் 35 ரூபாய் கூலி; இதில் ஏறத்தாழ 10 முதல் 15 ரூபாய் உணவு தங்குமிடச் செலவுகளுக்காகப் பிடித்தம் செய்யப்படும். மீதித்தொகை முதலாளியிடம் சேமிப்பாக இருக்கும். 34 ஆண்டுகளுக்கப் பிறகு அதாவது அச்சிறுமிக்கு 1718 வயதாகும் போது அவரது திருமணச் செலவுகளுக்காக மொத்தமாக ஏறத்தாழ ரூ. 30,000 தரப்படும்.


இப்படி கணக்கற்ற சிறுமிகள் பழனி, தாராபுரம், புளியம்பட்டி பகுதிகளிலுள்ள மில்களில் கொத்தடிமைகளாக உழல்கின்றனர். மதுரை மாவட்டம் நாகமலை அருகிலுள்ள கீழகுயில்குடி கிராமத்திலிருந்து மட்டும் 10க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சிறுமிகள் புரோக்கருக்கு ரூ. 1000 கமிசனாகக் கொடுத்து இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதேபோல வடிவேல்கரை, கரடிப்பட்டி கிராமங்களிலிருந்தும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியிலிருந்தும் கணிசமான சிறுமிகள் இத்திட்டத்தில் சேர்ந்து கொத்தடிமைகளாக உழல்கின்றனர்.


கீழகுயில்குடி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதாகும் சீதா, இப்படி கொத்தடிமையாக 3 ஆண்டுகள் வேலை செய்துவிட்டு தற்போது ரூ. 30,000 பணத்துடன் வீடு திரும்பியுள்ளார். எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு வறுமை காரணமாக மேற்கொண்டு படிக்க வழியில்லாமல் இத்திட்டத்தில் சேர்ந்ததாக அவர் வேதனையுடன் கூறுகிறார். இருப்பினும், பெற்றோருக்கு சிரமம் தராமல் திருமணச் செலவுகளுக்காக ரூ.30,000 சம்பாதித்துக் கொடுத்துள்ள மனநிறைவு அவரிடம் காணப்படகிறது. சீதா மட்டுமின்றி, அவரது பெற்றோரும் இக்கிராமத்திலுள்ள தாழ்த்தப்பட்ட குடும்பங்களும் இந்தக் கொத்தடிமைத் திட்டத்தை விரும்பி ஏற்கின்றனர். ""எங்க புள்ளைங்க அங்கே இங்கேன்னு கூலி வேலை செஞ்சு சீரழியறதவிட இது எவ்வளவோ மேல்; புள்ளைங்க கல்யாண செலவுக்கும் பிரச்சினை இல்லாம இருக்கு'' என்று இக் கொத்தடிமைத்தனத்தை நியாயப்படுத்துகின்றனர்.


ஆனால், மில்களில் கொத்தடிமைகளாகச் சேர்க்கப்படும் இச்சிறுமிகள் ஓய்வில்லாத வேலை, சத்தில்லாத உணவு, சிறிய அறையில் கும்பலாகத் தங்க வைப்பது, உடல்நிலை சரியில்லை என்றாலும் சிகிச்சை செய்ய மறுப்பது, ஆண்டுக்கு ஒருமுறை 5 நாட்கள் மட்டுமே விடுமுறை என கொத்தடிமைகளாக வதைபடுகின்றனர். இதுதவிர பல சிறுமிகள் பாலியல் கொடுமைகளையும் சந்திக்கின்றனர். கசக்கிப் பிழியப்படும் இச்சிறுமிகள் மூன்றாண்டுக ளுக்குப் பிறகு வீடு திரும்பும்போது காசநோய், ஆஸ்துமா, இரத்தசோகை, கருப்பை பாதிப்பு மாதவிடாய் கோளாறுகள் என எல்லா நோய்களுக்கும் சொந்தக்காரர்களாகி விடுகிறார்கள். பழனியில் கொத்தடிமையாக வேலைக்குச் சேர்க்கப்பட்ட தங்கம் என்ற சிறுமி, ""4 நாள் தான் வேலை செய்தேன். சின்ன ரூமில 15 பேர் தங்கியிருந்தோம். நல்ல சாப்பாடு இல்லை. நாள் பூரா ஓயாம வேலைதான். கைவலி தாங்க முடியல. என்னால வேல செய்ய முடியல. அதனால என்னை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. சம்பளமும் தரல'' என்கிறார் வேதனையுடன்.


ஜூன் 12ஆம் நாள். சென்னை மெரீனா கடற்கரையில் சில இளஞ்சிறுவர்கள் மாலை வேளையில் கையில் தூக்குவாளியுடன் சுண்டல் விற்றுக் கொண்டிருந்தனர். அன்று அனைத்துலக குழந்தைத் தொழிலாளர் உழைப்புமுறை ஒழிப்பு நாள். அந்நாளில் தொழிலாளர் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் அங்கு சென்று சுண்டல் விற்கும் சிறுவர்களை அழைத்து விசாரித்தனர். அச்சிறுவர்களோ, தாங்கள் பகலில் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வேளையில் சுண்டல் விற்பதாகக் கூறினர். இதை நீங்கள் எழுதிக் காட்டுங்கள் என்று அந்த அதிகாரிகள் பேப்பரையும் பேனாவையும் நீட்டியபோது, எந்தச் சிறுவனுக்கும் எழுதத் தெரியவில்லை; எந்தப் பள்ளியில் எந்த வகுப்பில் படிக்கிறீர்கள் என்ற கேள்விக்கும் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பின்னர் அந்த அதிகாரிகள் இணக்கமாகப் பேசி அவர்களிடம் விசாரித்தபோது, அச்சிறுவர்கள் வறுமை காரணமாக கொத்தடிமைகளாக இந்த வேலையைச் செய்து வருகிறார்கள் என்ற உண்மை வெளிவந்துள்ளது.


இருப்பினும், ""எஜமானரிடமிருந்து மீட்டு எங்களை ஊருக்கு அனுப்பி விடாதீர்கள்; அங்கே ஒருவேளை கஞ்சி குடிக்கக்கூட எங்களுக்கு வழியில்லை; நாங்கள் இங்கே இருந்தால் பட்டினி கிடக்காமல் இருப்போம். எஙகள் பெற்றோருக்கும் காசு அனுப்ப முடியும்'' என்று அவர்கள் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்கள். அதிகாரிகள் அதன்பிறகு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை.


தமிழகத்தின் பல பகுதிகளில் இளஞ்சிறுவர்களும் சிறுமிகளும் கொத்தடிமைகளாக உழலும் கொடூரத்திற்கு இருவேறு சாட்சியங்கள்தான் இவை. முன்பெல்லாம் வறுமையில் உழலும் ஒருசில விவசாயக் குடும்பங்கள் பிழைக்க வழியின்றி இப்படி கொத்தடிமைத்தனத்தில் சிக்கிக் கொண்டு அவதிப்படுவதாக நிலைமை இருந்தது. இப்போது அது வேர்விட்டுப் பரவியுள்ளதோடு வறுமையில் உழலும் பெற்றோர்களும் சிறுவர்களும் வேறு வழியின்றி தாமே இக்கொத்தடிமை நுகத்தடியை பூட்டிக் கொள்வதாக நிலைமை மாறிவிட்டது.


அசோக் அகர்வால் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கின் அடிப்படையில், கடந்த 12.12.05 அன்று உச்சநீதி மன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட குழு மைய அரசுக்கு ஒரு எச்சரிக்கை நோட்டீசு அனுப்பியது. அதில், அரசியல் சட்டத்தின் 21 பிரிவின்படி 6 முதல் 14 வயது வரையிலான ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும். குழந்தைத் தொழிலாளர் உழைப்பை முற்றாக ஒழிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் 1947க்குப் பிறகு கடந்த 58 ஆண்டுகளில் குழந்தைத் தொழிலாளர் உழைப்பு முறை ஒழிக்கப்படவில்லை; மாறாக, குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லமுடியாமல் கொத்தடிமைகளாக்கப்படும் கொடூரம் தீவிரமடைந்து விட்டது. நாட்டின் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 20 கோடி. இவர்களில் பாதிப்பேர் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல், கூலிகளாகவும், கொத்தடிமைகளாகவும் உழல்வதாக உச்சநீதி மன்றமே ஒப்புக் கொள்கிறது. தற்போதைய சட்டங்கள் தோல்வியடைந்து விட்டதாகவும், குழந்தைகளை உடல் உழைப்பில் ஈடுபடுத்தும் மனித உரிமை மீறல் கேள்வி முறையின்றித் தொடர்வதாகவும் அது குறைபட்டுக் கொள்கிறது.


நகரங்களை விட கிராமப்புறங்களிலும் சந்தை நகரங்களிலும்தான் குழந்தை உழைப்பு மிக அதிகமாக உள்ளது. மொத்த குழந்தைத் தொழிலாளர்களில் ஏறத்தாழ 85% பேர் கிராமங்களில் விவசாயம்நெசவு சார்ந்த தொழில்களிலேயே கொத்தடிமைகளாக உழல்கின்றனர். பெரம்பலூர் மாவட்டக் கிராமப்புறங்களில் நிலப்பிரபுக்களின் பண்ணைகளில் சாணி அள்ள, ஆடுமாடு மேய்க்க, வரப்பு கழிக்க, களையெடுக்க, புல் பிடுங்க என கொத்தடிமைகளாகச் சிறுவர்கள் வதைபடும் அவலம் தொடர்கிறது. சிவகாசியில் தீப்பெட்டிபட்டாசுத் தொழில்களில் சிறுவர்கள் கொத்தடிமைகளாக உழலும் அவலம் இப்போது வேலூர் மாவட்டம் குடியாத்தத்திலும், தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் தீவிரமாகிவிடடது. தீப் பெட்டி தொழிலில்தான் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் கொடுமை தொடர்கிறது என்றிருந்த நிலைமைக்குப் பதிலாக அப்பளக் கம்பெனிகள், சோப்புக் கம்பெனிகள், ஆட்டோ பணிமனைகள், டீக்கடைகள், கல்குவாரிகள், அரிசி ஆலைகள், பீடி சுற்றும் கூடங்கள், கம்பளம்தரைவிரிப்பு நெசவுக் கூடங்கள், பட்டு நெசவுத்தறிகள் என இன்று எல்லாத் தொழில்களிலும் சிறுவர்கள் கொத்தடிமைகளாக உழலும் அவலம் கேள்விமுறையின்றித் தொடர்கிறது. ஏறத்தாழ 20 லட்சம் சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும் பலர் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாகவும் தேசிய மனித உரிமை ஆணையகமே தெரிவிக்கிறது.


ஆந்திராவில் கல்குவாரிகள், கர்நாடகாவில் செங்கற்சூளைகள், மகாராஷ்டிராவில் கடலைமிட்டாய் தொழிற்கூடங்கள் என பிற மாநிலங்களுக்குச் சென்று கொத்தடிமைகளாகித் தவித்த தமிழ்க் குடும்பங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக மீட்டுக் கொண்டு வந்த தன்னார்வக் குழுக்கள், இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் கொத்தடிமைத்தனம் தலைவிரித்தாடுவதைக் கண்டு கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றன. காஞ்சிபுரம் பட்டுத்தறிகளிலும் குடியாத்தம் தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும் கொத்தடிமைகளாக அவதிப்பட்ட சில சிறுவர்சிறுமிகளை முதலாளியிடம் காசு கொடுத்துமீட்டு, அவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வாங்கிக் கொடுத்துள்ளன, சில தன்னார்வக் குழுக்கள். ஒரு சிலரை இவ்வாறு காசு கொடுத்து மீட்கலாம். ஆனால், பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும் அவர்களது பெற்றோரும் இப்படி கொத்தடிமைகளாகச் சிக்கிக் கொண்டு சமுதாயமே இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளபோது அவர்களை மீட்க, இத்தகைய வழிமுறைகள் பலன் தருமா?


குழந்தைத் தொழிலாளர் உழைப்பு முறையிலும் கொத்தடிமைத்தனத்திலும் முன்னணியில் நிற்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் 2003ஆம் ஆண்டில் 70,344 குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தனர் என்றும், கடுமையான நடவடிக்கைகளால் 2005ஆம் ஆண்டில் 25,679 பேராகக் குறைந்துள்ளனர் என்றும் தொழிலாளர்துறை ஆணையர் கணக்குக் காட்டுகிறார். இதுவும் நகர்ப்புறங்களிலுள்ள குழந்தைத் தொழிலாளர்களின் மேலோட்டமான கணக்குதான்! கிராமப்புற குழந்தைத் தொழிலாளர்களின் கொத்தடிமைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் இதைவிட 10 மடங்கு அதிகமாகவே இருக்கும்.


நாடெங்கும் சிறு விவசாயிகள் கடன் சுமையாலும் விவசாய உற்பத்திப் பொருட்களின் விலை வீழ்ச்சியாலும் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். நெசவாளர்களோ வறுமையைப் போக்க வழி தெரியாமல் தங்கள் சிறுநீரகத்தையே விற்கிறார்கள். கூலிஏழை விவசாயிகளோ கொத்தடிமைகளாகிப் பரிதவிக்கிறார்கள். நகரங்களில் படித்த இளைஞர்கள் கால்சென்டர்களில் எவ்வித உரிமையுமின்றி நவீன கொத்தடிமைகளாக உழல்கிறார்கள். தொழிற்சங்க சட்டத்தைத் திருத்தி தொழிலாளர்களை சட்டபூர்வ கொத்தடிமைகளாக்க ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். பயங்கரவாத ""பொடா'' சட்டத்துக்கு இணையாக குற்றவியல் சட்டத் தொகுப்பையே மாற்றி எழுத ஆட்சியாளர்கள் கிளம்பியுள்ளனர். ஆட்சியாளர்களாலும் அனைத்து ஓட்டுக் கட்சிகளாலும் பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்படும் தனியார்மயமும் தாராளமயமும் நாட்டு மக்களுக்கு அளித்துள்ள "பரிசுகள்'தான் இவை.


இத்தகைய நாட்டுவிரோத மக்கள்விரோத ஏகாதிபத்தியக் கொத்தடிமைகள் ஆட்சியதிகாரத்தில் உள்ளவரை நாடெங்கும் பெருகிவரும் குழந்தைத் தொழிலாளர் உழைப்பு முறையையும் கொத்தடிமைத்தனத்தையும் ஒழித்துவிட முடியாது. கருகும் மொட்டுகளாக இளமையைத் தொலைத்துவிட்டு குழந்தைகள் கொத்தடிமைகளாகும் அவலத்தைத் தடுத்து நிறுத்திடவும் முடியாது. இந்த அவமானங்களுக்கும் கொடுமைகளுக்கும் காரணமான தனியார்மய தாராளமயக் கொள்கைகளையும் அவற்றைத் தீவிரமாகச் செயல்படுத்திவரும் பாசி ஆட்சியாளர்களையும் எதிர்த்துப் போராடுவதா? அல்லது அந்த அவலங்களைக் கண்டு வேதனையில் புலம்பிக் கொண்டிருப்பதா? தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனையும் உலுக்கும் கேள்விகள்தான் இவை.


மு தனபால்

Wednesday, August 2, 2006

'வல்லரசாகும்" இந்தியா கையேந்தியாகும் மக்கள்

'வல்லரசாகும்" இந்தியா கையேந்தியாகும் மக்கள்

""ந்தியா ஒரு பொருளாதார மேல்நிலை வல்லரசாக உருவாகி வருகிறது'' என்ற செய்தி, ஊடகங்களில் நிரம்பி வழிகின்றது. குலுக்கித் திறக்கப்பட்ட ""பீர்'' பாட்டிலைப் போல இந்தியப் பொருளாதாரத்தின் ""வளர்ச்சி'' குறித்த மகிழ்ச்சியில் பத்திரிகைகள் புள்ளி விவரங்களால் பொங்கி வழிகின்றன.


தொடர்ந்து நான்காண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதம். அடுத்தடுத்த மூன்றாண்டுகளாக ஏற்றுமதியின் அதிகரிப்பு 20 சதவீதம். கூட்டுப் பங்கு நிறுவனங்களின் கடன்கள் 30 சதவீதத்திற்கும் மேலாகும்.


முதலீடுகளின் அதிகரிப்பு 40 சதவீதம்; புதிய திட்டங்கள் பல்வேறு முக்கிய துறைகளையும் கடந்து பரவுகின்றன. 2006ஆம் ஆண்டுக்கான அடிப்படைக் கட்டுமானச் செலவுகள் 95,000 கோடி ரூபாய்கள் அதாவது இரண்டு மடங்கு.


கடந்த ஐந்தாண்டுகளில் உச்சபட்சமாக 2005இல் மட்டும் சம்பள உயர்வு 14 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 20052006 ஆம் ஆண்டில் மிகப் பெரும் அளவிலான வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு, நகர்ப்புறக் குடும்பங்களுக்கான வேலை மற்றும் நிதி உத்திரவாதங்களை அளித்துள்ளன.


வீட்டு வசதிக் கடன்களின் அதிகரிப்பு 56 சதவீதம்; நுகர்வோர் கடன் அதிகரிப்பு 40 சதவீதம்; பங்குச் சந்தையிலும் வீடு வீட்டுமனைத் தொழிலிலும் ஏற்பட்டுள்ள செழிப்பு, விருப்பம் போல செலவிடச் செய்துள்ளது.


உலகிலேயே இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியாவை மாறச் செய்யுமளவு செல்பேசிகளின் அதிகரிப்பு 53% சதவீதம். விமானச் சேவை மற்றும் மோட்டார் வாகன தொழில்களின் செழிப்பு, உலகிலேயே மிகவும் இளம்பிரிவு உழைப்புச் சக்தியும் இந்த முன்னேற்றத்தை சாதித்துள்ளன.


இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் பத்திரிகையாளர்கள் மேற்கண்டவாறு தொகுத்துள்ளனர்.


உலகின் முன்னணிப் பன்னாட்டுத் தொழில் கழகங்களின் தலைவர்கள் அனைவரும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பிரமித்துப் போயிருக்கிறார்களாம்.


""கடந்த 15 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் இந்தியா காட்டிய வேகம் அசாதாரணமானது'' என்கிறார் உலக வங்கியின் தலைவர் பால் வுல்போ விட்ஜ்.


""உலகமயமாக்கத்தின் குவி மையமாக இந்தியமாறுவதற்குத் தகுந்தவாறு அதன் நட்சத்திர பலன்கள் கூடி வருகின்றன'' என்கிறார் சர்வதேச நிதி நிறுவனத்தின் பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன்.


""மென்பொருள் தொழில் வித்தகர்களின் பிரமிக்கதக்க மையத்தை இந்தியா கொண்டிருக்கிறது. இதிலிருந்து உலகம் ஆதாயம் பெற வேண்டும்'' என்கிறார், உலக மென்பொருள் ஏகபோக முதலாளி பில்கேட்ஸ்.


""இந்தியா ஒருநாள் உலகிலேயே அதிவேக வளர்ச்சியுடைய நாடாக இருக்கும்'' என்கிறார் வெர்ஜின் அட்லாண்டிக் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் சர் ரிச்சர்டு பிரான்சன்.


""இந்தியா மிக வேகமாகப் பொருளாதார வளர்ச்சியுடைய டுகளில் ஒன்று; ஆசியாவின் வளர்ச்சியை உந்திச் செல்லக் கூடியது'' என்கிறார், ஜெர்மனியின் சீமன்ஸ் நிறுவனத் தலைவர் லாஸ் லெயின்ஃபீல்டு.


""உலகின் முன்னணி தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக இந்தியா உருவாகி வருகிறது'' என்கிறார் கணினித் தொழிலில் முன்னணி நிறுவனமான இண்டெல் தலைவர் கிரைக் பேரட்.


""ஏழை தேசங்களின் வளர்ச்சித் தீர்வுகளின் சோதனைச் சாலையாக இந்தியா விளங்க முடியும்'' என்கிறார் பிலிஃப்சு நிறுவனத் தலைவர் ஜிரார்டு லெய்ஸ்டர்லீ.


பன்னாட்டுத் தொழில் கழகங்கள் இந்தியப் பொருளாதாரம் குறித்து இவ்வாறான கருத்துக்கள் வைத்திருப்பதால் அந்நிய நேரடி முதலீடும், அந்நியத் தொழில் முதலீடும் ஏராளமாக வந்து குவிகின்றன. இதனால் பங்குச் சந்தைக் குறியீடு எண் 12,000 அளவைத் தாண்டிவிட்டது.


இதோடு அந்நியச் செலாவணிக் கையிருப்பு பல ஆயிரம் கோடி ரூபாயாகக் குவிந்திருக்கிறது. இதுவரை வெளிநாட்டிலவாழும் இந்தியர் அனுப்பி வைக்கும் தொகையே அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கியமாக இருந்தது. இப்போது மொத்தக் கையிருப்பில் இது மிகச் சிறிய அளவாகி விட்டது; ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதால் முக்கியமாக அந்நியச் செலாவணி கையிருப்பு மலையளவு உயர்ந்துவிட்டது.


இந்த ஆண்டு மட்டும் மென்பொருள் ஏற்றுமதியால் டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், சத்யம், விப்ரோ போன்ற மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள் ஒரு இலட்சம் கோடி ரூபாய் இலாபமீட்டக் கூடும். தகவல் தொழில் நுட்பம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் மட்டும் அடுத்த ஐந்தாண்டுகளில் 60 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கக் கூடும்.


இவையெல்லாம் உலகில் மிக வேகமாக வளரும் பத்து பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளதைக் காட்டுகின்றன.


இந்தப் புள்ளிவிவரங்கள் உண்மைதான் என்றாலும், இந்தியா உடனடியாக இல்லாவிட்டாலும், வளரும் நாடுகளில் முதலிடத்தைப் பிடிக்காவிட்டாலும், சீனாவுக்கு அடுத்து இரண்டாம் இடத்துக்கு உயர்ந்துவிடும் என்றாலும்இந்தியப் பொருளாதார வளர்ச்சி எத்தகையது? அதன் பலன்களை எந்தப் பிரிவினர் அறுவடை செய்து கொள்கின்றனர்? யாருடைய நலன்களுக்காக இந்தியப் பொருளாதாரம் திட்டமிடப்படுகிறது? என்பது முக்கியமானதாகும்.


கடந்த 2005ஆம் ஆண்டின் நவம்பருக்குள் 2.341 கோடி பேர் புதிதாக செல்பேசி வாடிக்கையாளர்களாகி இருக்கிறார்கள். இணையத் தளங்களில் மேயும் ஏழு இலட்சம் பேர் அகன்ற அலைவரிசை கணினி இணைப்புகள் பெற்றார்கள். 45 இலட்சம் கணினிகள் விற்கப்பட்டன. 53,982 கோடி ரூபாய் அளவு சேமிப்பு உயர்ந்திருக்கிறது. 9,000 பேர் புதிய கோடீசுவரர்களாகியிருக்கிறார்கள். கார்கள், இரண்டு சக்கர வாகனங்களின் உற்பத்தியும் விற்பனையும் பல்கிப் பெருகியுள்ளது.


தங்க நாற்கரச் சாலைகளால் இந்தியாவின் பெருநகரங்களை இணைப்பதும், விமான நிலையங்கள் நவீனப்படுத்தப்படுவதும், துறைமுகங்கள் விரிவுபடுத்தப்படுவதும் நிறைவுறும் நிலையை எட்டி விட்டன. சுற்றுலா, பொழுதுபோக்கு, ஃபாசன் பொருட்கள், கல்வி, மருத்துவம் எல்லாவற்றிலும் உலகத்தரம் வந்துவிட்டது.


எல்லாம் சரி; ஆனால் இவையாவும் நடுத்தர மேட்டுக்குடி மக்களுக்குச் சாதகமானவை, நாட்டின் மிகப்பெரும் தரகு அதிகார முதலாளிகள், பெரும் பண்ணையார்கள் ஆகியவர்களோடு, அந்நிய பன்னாட்டுத் தொழில், வர்த்தக மற்றும் நிதிக் கழகங்களின் கொள்ளையை விரிவுபடுத்தும் வகையிலானவைதாம்.


சீனா போன்ற நாடுகளில் பொருளாத வளர்ச்சி என்பது முதலீடு அடிப்படையிலானதாக இருக்கும் அதேசமயம், இந்தியப் பொருளாதார வளர்ச்சி நுகர்வோர் சந்தை சார்ந்ததாகவே இருக்கிறது. அதாவது, இந்தியாவின் 10 கோடி குடும்பங்களின் ஆண்டு வருமானம் இரண்டு முதல் 10 இலட்சம் ரூபாய் அளவுக்கு உள்ளது! இது பல ஐரோப்பிய நாடுகளின் சந்தையைவிடப் பெரியதாகும். இந்தக் குடும்பங்களின் நுகர்வுத் தேவைக்கான பொருளாதாரத் திட்டமிடுதல்கள் தாம் இப்போது நடக்கின்றன.


அதேபோல, கடந்த பத்தாண்டுகளில் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம்6.5 சதவீதத்திற்கு மேலிருந்தாலும், கிராமப்புற விவசாய வளர்ச்சி 2 சதவீதம் அளவுக்கு மிகக் குறைவாகவே உள்ளது. நாட்டின் 60 சதவீத உழைப்புச் சக்தியைக் கொண்டிருக்கும் கிராமப்புற விவசாய உற்பத்தி நாட்டின் மொத்த வருவாயில் 21 சதவீதம் மட்டுமேயாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீத அளவுள்ள வங்கி, இன்சூரன்ஸ், தொலைபேசி செல்பேசி, தகவல் தொழில் நுட்பச்சேவை ஆகிய சேவைத்துறையில் 27 சதவீதத்தினரே வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். ஆனால், விவசாயத் துறையில் இருந்து வேலையிழப்பவர்களை ஈர்க்கக் கூடிய ஆலை உற்பத்தியில் 17 சதவீதத்தினரே ஈடுபட்டுள்ளனர்.


இதுமட்டுமல்ல, இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது மக்கள் தொகை அதிகமுள்ள உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களில் அற்ப அளவுகூட கிடையாது. அவை தொடர்ந்து பின்தங்கிய மாநிலங்களாகவே உள்ளன. ஏற்கெனவே அடிப்படைக் கட்டுமான வசதிமிக்க மாநிலங்களில்தான் முதலீடும், உற்பத்தியும், சந்தையும் உருவாகிக் கொண்டே போகின்றன. குஜராத், மராட்டியம், தமிழகம், ஆந்திரம், கர்நாடகா, அரியானா பஞ்சாப் போன்ற மாநிலங்களின் வளர்ச்சியிலேயே ஆளும் வர்க்கங்களும் பன்னாட்டு முதலாளிகளும் குறியாக உள்ளனர். பீகாரின் சராசரி வருமானம் அரியானா, மராட்டியம் போன்ற மாநிலங்களின் சராசரி வருமானத்தோடு ஒப்பிடும்போது கால்பங்கு கூடக் கிடையாது.


தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத்துறையில் வேலைவாய்ப்புகள் பல்கிப் பெருகியுள்ளதாகக் கூறப்படும் அதேவேளையில், வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து வேலைதேடுபவர்களின் எண்ணிக்கை 4 கோடியாக உள்ளது. அரசு உட்பட அமைப்பு ரீதியிலான துறைகளில் வேலையோ கடந்த பதிமூன்று ஆண்டுகளாக 3 கோடி என்ற நிலையிலேயே தேங்கிப் போயிருக்கிறது. உலகிலுள்ள 177 நாடுகளில் மனித வளமேம்பாட்டில் இந்தியா 127வது இடத்தில் இருக்கிறது. 5 வயதுக்கும் குறைவான இந்தியக் குழந்தைகளிலபாதியளவு போதிய உணவின்றிக் கிடக்கின்றன. இந்தியப் பெண்களில் 46 சதவீதமானவர்கள் படிப்பறிவற்றவர்களாக உள்ளனர். அரசுப் புள்ளிவிவரப்படியே 25 கோடி இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். அரசு சாரா நிறுவனங்களின் புள்ளி விவரப்படி இதுவே 40 கோடியாகும்.


ஆக, எப்படிப் பார்த்தாலும் இந்தியப் பொருளாதாரம் வட்டார ரீதியாக, வர்க்க ரீதியாக, பாலியல் ரீதியாக, நகர்ப்புறகிராமப்புற வேறுபாடு ரீதியாக ஒரு சார்பாகக் கோணித்துப் போகிறது. அனைத்துத் தரப்புகளின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கானதாகப் பொருளாதாரம் திட்டமிடப்படுவதில்லை கருணாநிதியோ ஜெயலலிதாவோ, வாஜ்பாயோ மன்மோகன் சிங்கோ அவர்களது அக்கறையெல்லாம் ஒரு சார்பாகவே உள்ளது. இதற்கு ஈடுகட்டும் வகையில்தான் ஏழ்மைக் குறைப்பு, இலவசத் திட்டங்கள் வருகின்றவே தவிர, மக்களின் நலன்களுக்காக அல்ல.


மு ஆர்.கே.


Monday, July 31, 2006

அமெரிக்க - இஸ்ரேலிய பயங்கரவாதம்

அமெரிக்க - இஸ்ரேலிய பயங்கரவாதம்: பட்டினியில் பரிதவிக்கும் பாலஸ்தீகனம்

டந்த 58 ஆண்டுகளாக தமது சொந்த மண்ணை இழந்து கொடுந்துயரங்களை அனுபவித்து வரும் பாலஸ்தீன மக்கள் இன்று பேரழிவின் விளிம்பில் நிற்கிறார்கள். உண்ண உணவில்லை; குழந்தைகளுக்குப் பால் இல்லை; மருத்துவமனைகளில் மருந்து இல்லை; ஊழியர்களுக்குச் சம்பளம் இல்லை; தாங்கள் உழுது பயிரிட்டு விளைவித்த காய்கறிகளையும் கனிகளையும் சந்தைக்குக் கொண்டு செல்ல அனுமதியுமில்லை. திறந்தவெளிச் சிறைச்சாலையில் பட்டினியால் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் பாலஸ்தீன மக்கள்.


இது ஏதோ இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட கோரமல்ல; ஜனநாயகம் பேசும் நாகரிக உலகின் ஏகாதிபத்தியவாதிகள் பாலஸ்தீன மக்களுக்கு விதித்துள்ள தண்டனைதான் இது!


ஏன் இப்படி ஏகாதிபத்தியவாதிகள் பாலஸ்தீன மக்களைப் பட்டினி போட்டுக் கொல்ல வேண்டும்? பாலஸ்தீன மக்கள் அப்படி என்ன குற்றத்தைச் செய்து விட்டார்கள்?


கடந்த ஜனவரி மாதத்தில் பாலஸ்தீன அதிகார அமைப்புக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாலஸ்தீன மக்கள் ""ஹமாஸ்'' இயக்கத்தின் வேட்பாளர்களுக்குப் பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெறச் செய்துவிட்டார்கள். ஹமாஸ் இயக்கம் பாலஸ்தீன அதிகார அமைப்புக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது. இதுதான் பாலஸ்தீன மக்கள் செய்த "குற்றம்'! தாங்கள் விரும்பும் கட்சியைப் பாலஸ்தீன மக்கள் ஆட்சியில் அமர்த்துவது எப்படி குற்றமாகும் என்று உங்களுக்குச் சந்தேகம் எழலாம். ""ஆம்! குற்றம்தான்! ஏனெனில் ஹமாஸ், இசுலாமிய அடிப்படைவாத பயங்கரவாத இயக்கம்'' என்று குற்றம் சாட்டுகின்றனர் ஏகாதிபத்தியவாதிகள்.


பாலஸ்தீனத்தில் நடந்த தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்ற மறுநிமிடமே இனவெறி பிடித்த பயங்கரவாத இஸ்ரேலிய அரசு பாலஸ்தீன அதிகார அமைப்புடனான அரசியல் பொருளாதாரத் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துக் கொண்டது. இஸ்ரேலின் கூட்டாளியும் உலக மேலாதிக்கப் பயங்கரவாதியுமான அமெரிக்கா, ஹமாஸ் தலைமையிலான பாலஸ்தீன ஆட்சியைப் புறக்கணிக்குமாறு உலக நாடுகளுக்குப் பகிரங்கமாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவை அடியொற்றிச் செல்லும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஹமாஸ் ஆட்சியைப் புறக்கணிப்பதாக அறிவித்து பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன.


பாலஸ்தீன மக்களிடமிருந்து இஸ்ரேலிய அரசு சுங்கவரிகளையும் இதர வரிகளையும் வசூலித்து வருகிறது. பாலஸ்தீன அரசு நிர்வாகத்தை நடத்துவதற்கு இந்த வரிகளால் கிடைக்கும் நிதிதான் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதோடு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவிகளைக் கொண்டுதான் பாலஸ்தீன அரசு தனது பொருளாதாரத் தேவைகளை அரைகுறையாக ஈடு செய்து வந்தது.


இப்போது பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியதும், பாலஸ்தீன மக்களின் சொந்த வரிப்பணத்தையே பாலஸ்தீன அரசுக்குத் தர முடியாது என்று அடாவடித்தனம் செய்கிறது இஸ்ரேலிய அரசு. இதுதவிர, பாலஸ்தீன அதிகார அமைப்புக்குச் சேரவேண்டிய வெளிநாட்டு நிதியுதவிகளும் அமெரிக்கஇசுரேலிய அரசுகளால் முடக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இன்னும் ஒருபடி மேலே சென்று, பாலஸ்தீன அதிகார அமைப்பின் அமெரிக்க வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்கி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


இதன் விளைவாக, வறுமையிலும் பட்டினியிலும் பாலஸ்தீனம் பரிதவிக்கிறது. இன்று பாலஸ்தீன மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் கூட இல்லை. ஏறத்தாழ 1,60,000 அரசு ஊழியர்களுக்குப் பல மாதங்களாக சம்பளம் கொடுக்க முடியவில்லை. ஏறத்தாழ 12 லட்சம் பாலஸ்தீன மக்கள் பட்டினிச் சாவின் விளிம்பில் நிற்பதாக .நா. மன்றமே ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் பாலஸ்தீன அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வண்டிகளைத் தடுத்து இஸ்ரேலிய அரசு தொடர்ந்து அடாவடித்தனம் செய்து வருகிறது. இப்போது எரிபொருள், குடிநீர் விநியோகத்தையும் நிறுத்தப் போவதாக அச்சுறுத்துகிறது.


இதுமட்டுமின்றி, கடந்த 4 மாதங்களில் பாலஸ்தீன பகுதிகளின் மீது இஸ்ரேலிய இராணுவம் 38 முறை திடீர் தாக்குதல்களை நடத்தி 9 பேரைக் கொன்று பலரைப் படுகாயப்படுத்தியுள்ளது. 70க்கும் மேற்பட்டோரைப் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாகப் பொய்க்குற்றம் சாட்டி சிறையில் அடைத்துள்ளது. பாலஸ்தீன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலஸ்தீன பகுதியில் சுதந்திரமாக நடமாடக் கூட முடியவில்லை. பலமுறை அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இஸ்ரேலிய இனவெறி பயங்கரவாத அரசு தனது கொலைப் பட்டியலில் பாலஸ்தீன பிரதமர் இசுமாயில் ஹனியேவையும் சில ஹமாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்துள்ளதோடு, அதனைப் பகிரங்கமாகவும் அறிவித்துள்ளது.


ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டப் போவதாகப் பீற்றிக் கொள்ளும் பயங்கரவாத அமெரிக்க வல்லரசு, பாலஸ்தீனத்தில் நேர்மையாக நடந்த ஒரு ஜனநாயகத் தேர்தலையே ஏற்க மறுத்து, ""ஐயோ, பயங்கரவாதிகள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள்'' என்று ஊளையிடுகிறது. .நா. மன்றத்தின் மேற்பார்வையில் நடந்த பாலஸ்தீன தேர்தலைக் கண்காணித்தவர்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரும் ஒருவர். ""நேர்மையான முறையில் நியாயமாகவும் அமைதியாகவும் பாலஸ்தீன தேர்தல் நடைபெற்றது'' என்று அவர் நற்சான்றிதழ் கொடுத்துள்ளார். ஆனாலும் இத்தேர்தல் முடிவை ஏற்க மறுக்கின்றனர், அமெரிக்கஇஸ்ரேலிய பயங்கரவாதிகள். ஒரு பயங்கரவாத இயக்கம் ஆட்சிக்கு வந்திருப்பதை ஜனநாயக உலகம் எப்படி அங்கீகரிக்க முடியும் என்று இப்பயங்கரவாதிகள் கேள்வி எழுப்புகின்றனர்.


ஹமாஸ் இயக்கம் இசுலாமிய அடிப்படைவாத சித்தாந்தமும் பயங்கரவாத வழிமுறையும் கொண்ட அமைப்புதான். அதற்காக பாலஸ்தீன மக்களைப் பட்டினி போட்டு தண்டிப்பது எந்த வகையில் நியாயமாகும்? மௌனமாக நடக்கும் இப்படுகொலைக்கு எதிராக வாய்திறக்காமல் இருப்பது எப்படி ஜனநாயகமாகும்? ஏகாதிபத்திய காட்டுமிராண்டி உலகம் கிடக்கட்டும்; இசுலாமிய நாடுகள் கூட தமது பாலஸ்தீன இசுலாமிய சகோதரர்கள் பட்டினி போட்டுக் கொல்லப்படும் போது வாய்மூடிக் கிடக்கின்றன. வளைகுடா கூட்டுறவுக்கு (எஇஇ) நாடுகளான பல அரபு நாடுகள் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்குப் பணிந்து பாலஸ்தீன ஹமாஸ் அரசாங்கத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. உதவி கோரி வந்த பாலஸ்தீன வெளியுறவு அமைச்சரை எகிப்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் சந்திக்க மறுத்துள்ளார். பாலஸ்தீன குழந்தைகளைக் காப்பாற்றக் கோரி ஜோர்டான் சென்ற பாலஸ்தீன அமைச்சருடன் ஜோர்டான் மன்னர் பேச மறுத்துவிட்டார்.


நாமெல்லோரும் அல்லாவின் குழந்தைகள்; உலகெங்குமுள்ள இசுலாமியர்கள் அனைவரும் நமது சகோதரர்கள் என்றெல்லாம் மதவெறியர்கள் உபதேசம் செய்யலாம். ஆனால், பாலஸ்தீன இசுலாமிய சகோதரர்கள் பட்டினியால் வதைபட்டுக் கொண்டிருக்கும்போது எந்தவொரு இசுலாமிய அரசும் உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லை. இந்நாடுகளின் ஆளும் கும்பல்களுக்கு இசுலாமிய சகோதரத்துவ நலன் என்று எதுவும் கிடையாது. வர்க்க நலன் மட்டும்தான் உள்ளது. அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருப்பதுதான் தமது வர்க்க நலனுக்குப் பாதுகாப்பானது என்பதாலேயே, இந்நாடுகளின் ஆட்சியாளர்கள் பட்டினியால் பரிதவிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட உதவ முன்வரவில்லை. இருப்பினும், தமது மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இத்துரோகிகளை அம்பலப்படுத்தி எதிர்க்கக் கூட முன்வராமல், இசுலாமிய இயக்கங்களும் மக்களும் வாய்மூடிக் கிடக்கின்றனர்.


உண்ண உணவின்றி பட்டினிச் சாவின் விளிம்பில் நிற்கும் பாலஸ்தீன மக்களுக்கு கட்டார், ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே உதவ முன்வந்துள்ளன. இஸ்ரேலிய இனவெறி பயங்கரவாத அரசுடன் கூடிக் குலாவும் இந்திய அரசு தன்னை முற்போக்கு மனிதாபிமானியாகக் காட்டிக் கொள்ள அற்ப நிவாரணத் தொகை அளிக்க முன்வந்துள்ளது. உலகெங்குமுள்ள இசுலாமிய உழைக்கும் மக்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் பாலஸ்தீன மக்களுக்கு தம்மால் இயன்ற உணவு மற்றும் மருந்துப் பொருட்களைத் திரட்டிக் கொடுத்து வருகின்றன. இம்மனிதாபிமான உதவியில் பங்கேற்பதும் அமெரிக்க இஸ்ரேலிய பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதும் உழைக்கும் மக்களின் கடமை; நம் அனைவரது சர்வதேசியக் கடமை.


பட்டினிச் சாவின் விளிம்பில் பாலஸ்தீன மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, அதிபராக உள்ள முகமது அப்பாஸின் அல்ஃபதா குழுவும் அரசாங்கத்தை அமைத்துள்ள ஹமாஸ் குழுவும் அதிகாரப் போட்டிக்கான நாய்ச் சண்டையில் இறங்கி வெளிப்படையாகவே மோதிக் கொள்கின்றன. கைகலப்புகள், துப்பாக்கிச் சூடுகள், கொலைகள, நாடாளுமன்றத்துக்குத் தீ வைப்பது என்பதாக குழுச் சண்டைகள் முற்றி பாலஸ்தீனத்தில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயத்தில் உள்ளது. இந்த மோதலுக்கான காரணத்தை அறிய பாலஸ்தீன வரலாறை சற்றுப் பின்னோக்கிப் பார்ப்பது அவசியம்.


1948 முதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து தமது மண்ணை மீட்க பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து போராடி வந்த நிலையில், பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்குமிடையே இணக்கமாக உறவை ஏற்படுத்துவதாகவும், சுயாட்சிக்கான பாலஸ்தீன அதிகார அமைப்பைத் தோற்றவிப்பதாகவும் கூறிக் கொண்டு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ""ஆஸ்லோ ஒப்பந்தம்'' எனப்படும் துரோக ஒப்பந்தத்தைத் திணித்தன. அதை ஏற்றுக் கொண்டு தற்காலிகத் தீர்வைத் தேடியது, அராபத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கம். ஒப்பந்தப்படி, பாலஸ்தீன அதிகார அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், அது ஒரு பஞ்சாயத்துக்கு உள்ள அதிகாரம் கூட இல்லாமல் வெறும் கொலு பொம்மையாகவே இருந்தது. மறுபுறம், ஆஸ்லோ ஒப்பந்தத்தைக் கழிப்பறைக் காகிதமாக்கி விட்டு எல்லா வகையான பயங்கரவாத அட்டூழியங்களிலும் இஸ்ரேல் இறங்கியது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் வீடிழந்து வாழ்விழந்து உற்றார் உறவினர்களை இழந்து பரிதவித்தனர். ஏகாதிபத்திய உலகமோ வாய்மூடிக் கிடந்தது.


இஸ்ரேலிய பயங்கரவாத அடக்குமுறைகளை அதிபர் அராபத் தலைமையிலான பாலஸ்தீன அதிகார அமைப்பினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவரது வீட்டை இஸ்ரேலியப் படைகள் முற்றுகையிட்டு அவரை வீட்டுக் கைதியாக்கிக் கொக்கரித்தன. ஆஸ்லோ ஒப்பந்தம் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. பாலஸ்தீன அதிகார அமைப்போ, அவலத்தின் நடுவே ஊழலிலும் உல்லாசத்திலும் மூழ்கிக் கிடந்தது. இவற்றுக்கெதிராக எதுவும் செய்ய முடியாமல் உடல்நலம் குன்றி அராபத் மாண்டு போனார். அவரது மறைவுக்குப் பின், அவரது அல்ஃபதா குழுவைச் சேர்ந்த முகமது அப்பாஸ், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று பாலஸ்தீன அதிகார அமைப்பின் அதிபராக நீடித்து வருகிறார். மிதவாதியாகச் சித்தரிக்கப்படும் அப்பாஸ், இன்னமும் பயங்கரவாத இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாலஸ்தீன சுயாட்சி அதிகாரத்தை நிலைநாட்டிவிட முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்.


அல்ஃபதா குழுவின் சமரசங்கள், துரோகங்கள், ஊழல் மோசடிகளால் அதிருப்தியுற்று இருந்த பாலஸ்தீன மக்கள், பயங்கரவாத இயக்கமான ஹமாஸ் முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதும் அதற்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெறச் செய்து அல்ஃபதா குழுவினரைத் தோற்கடித்துள்ளனர். அல்ஃபதா குழுவின் ஊழல் துரோகத்தின் எதிர்விளைவுதான் ஹமாஸ் இயக்கத்தின் வெற்றியே தவிர, ஹமாஸ் இயக்கத்தின் இசுலாமிய அடிப்படைவாத சித்தாந்தத்தையும் பயங்கரவாத வழிமுறையையும் பாலஸ்தீன மக்கள் அங்கீகரித்து ஆதரிப்பதாகக் கருத முடியாது.


யாசின் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட ஹமாஸ் இயக்கம், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இணையாமல் அதற்கு வெளியே தனித்து இயங்கி வந்தது. இசுலாமிய அடிப்படைவாத பள்ளிகள் நடத்துவது, மருத்துவமனைகளைக் கட்டுவது, நிவாரண உதவிகள் செய்வது ஆகியவற்றோடு இஸ்ரேல் மீது பலமுறை தற்கொலைப் படைத்தாக்குதல்களையும் நடத்தி வந்தது. ஈராண்டுகளுக்கு முன்பு ஹமாஸ் தலைவர் யாசினை விமானத் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் கொன்றுவிட்டது. அதன்பிறகு போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட ஹமாஸ் குழு, அரசியல் நீரோட்டத்தில் கலந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளது. இருப்பினும், ஹமாஸ் குழுவின் படைகளை பாலஸ்தீன அதிகார அமைப்பினது படைகளுடன் இணைக்க அப்பாஸ் மறுக்கிறார். பயங்கரவாதிகளை பாலஸ்தீன இராணுவத்தில் சேர்க்க முடியாது என்கிறார்.


ஹமாஸ் இயக்கம், இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருப்பதையே ஏற்க முடியாது என்றும், அவர்களோடு பேச்சு வார்த்தையே கூடாது என்றும், ஆயுதப் போராட்டத்தின் மூலம் இஸ்ரேலை விரட்டியடித்துவிட்டு பாலஸ்தீன விடுதலையைச் சாதிக்க வேண்டும் என்றும் தனது கொள்கையாகக் கொண்டுள்ளது. இதைச் சாதிக்க மக்களைச் சார்ந்து நின்று அரசியல் ஆயுதப் போராட்டங்களை நடத்துவதற்குப் பதிலாக, பயங்கரவாத குழு சாகச நடவடிக்கைகளையே அது தனது வழிமுறையாகக் கொண்டுள்ளது.


ஆனால், அதிபரான அப்பாஸ், இஸ்ரேல் என்ற நாட்டை ஏற்றுக் கொண்டு ஆஸ்லோ ஒப்பந்தத்தை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிறார். இதற்காக, இஸ்ரேல் என்ற நாடு இருப்பதை ஏற்று, இருநாடுகளும் பரஸ்பர தாக்குதலை நிறுத்திவிட்டு, அமைதித் தீர்வு காண்பதற்கு விழைய வேண்டும் என்ற திட்டத்துடன் வரும் ஜூலை 26ஆம் தேதியன்று பாலஸ்தீன மக்களிடம் கருத்துக் கணிப்புத் தேர்தல் நடத்தப் போவதாக அவர் அறிவித்துள்ளார். இஸ்ரேல் என்ற நாடு இருப்பதையே ஏற்றுக் கொள்ளாத ஹமாஸ், இக்கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று மக்களிடம் எதிர்ப் பிரச்சாரம் செய்கிறது. இதுதவிர நிதி, நிர்வாகம், நிவாரணப் பொருட்களை விநியோகித்தல் முதலான பல்வேறு விவகாரங்களில் இருதரப்பும் தீராத மோதலில் இறங்கியுள்ளன. பாலஸ்தீனத்தில் தீவிரமாகிவிட்ட இக்குழுச் சண்டைகளைக் கண்டு இனவெறி பிடித்த பயங்கரவாத இஸ்ரேலும் அதன் பங்காளியான ஏகாதிபத்திய உலகமும் கைகொட்டிச் சிரிக்கிறது.


ஏகாதிபத்தியங்களுடன் சமரசம் செய்து கொண்டு போடப்படும் துரோக ஒப்பந்தத்தாலும் இடைக்காலத் தீர்வினாலும் தேசிய இன விடுதலையை ஒருபோதும் சாதிக்க முடியாது. பாட்டாளி வர்க்க சித்தாந்த தலைமையற்ற குட்டிமுதலாளிய போராளிக் குழுக்களாலோ, மத அடிப்படைவாத பயங்கரவாத இயக்கங்களாலோ தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் முடியாது என்ற உண்மையை உலகிற்கு உணர்த்திவிட்டு பாலஸ்தீனம் பேரழிவில் புதைந்து கொண்டிருக்கிறது.


மு மனோகரன்